Jeyamohan's Blog, page 1630
June 8, 2017
ஜெயகாந்தன் , கங்கா ஈஸ்வர்- கடிதங்கள் -
ஜெயகாந்தனைப்பற்றிய ஆகச்சிறந்த கட்டுரை
கங்கை எப்படிப் போகிறாள்? — கங்கா ஈஸ்வர்
அன்புள்ள ஜெமோ
உங்கள் தளத்தில் வெளிவந்த கங்கா ஈஸ்வர் எழுதிய கட்டுரையை இரண்டுமுறை வாசித்தேன். முதலில் அந்தக்கட்டுரையின் நீளமும் செறிவான மொழியும் நீங்களே எழுதியதோ என்று எண்ணவைத்தன. ஆனால் இன்னொரு முறை வாசித்தபோது அதில் பெண் என்னும் தன்னிலை இருந்தது. அது ஒரு பெண் எழுதியது என்பதை உறுதியாக உணர்ந்தபோதுதான் அக்கட்டுரை தமிழுக்கு எவ்வளவு முக்கியமானது என்று தெரிந்தது. இப்படி ஒரு அழுத்தமான மொழியில் ஆழமாக தன் மனம் ஒரு புனைவை எப்படி எதிர்கொள்கிறது என்று தமிழில் பெண்கள் எழுதியதில்லை. தமிழில் பெண்கள் விமர்சனமாக எழுதி நான் வாசித்தவை ஏதுமில்லை. எளிமையான மதிப்புரைகள் மட்டுமே எழுதப்பட்டுள்ளன. மீனாட்சி முகர்ஜி அவர்கள் யூ.ஆர்.அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா நாவலுக்கு எழுதிய விமர்சனத்தை முன்பொருமுறை வாசித்திருக்கிறேன். அப்போது தோன்றியது தமிழில் என்றைக்கு இப்படி ஒரு அசலான ஆழமான பெண்குரல் எழும் என்று. அதை இப்போது கண்டேன். கங்கா ஈஸ்வர் என்பது புனைபெயர் அல்ல என்றால் அவர் இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறார். உற்சாகத்துடன் தொடர்ந்து எழுதவேண்டும் அவர். அருமையான கட்டுரை. முழுமையானது. என் வாழ்த்துக்கள்
எஸ். ஆர்.கோமதிநாயகம்
***
அன்புள்ள ஜெ
கங்கா ஈஸ்வர் எழுதிய நீளமான கட்டுரையை கொஞ்சம் கொஞ்சமாக வாசித்து முடித்தேன். மிகமிக முக்கியமான கட்டுரை. அக்கட்டுரையின் தனிச்சிறப்பு என்ன என்று யோசித்தேன். அது சிலநேரங்களில் சில மனிதர்கள் என்னும் நூலுக்கு இன்றுவரை அளிக்கப்பட்டுள்ள வாசிப்புகளில் இருந்து ஒரு முக்கியமான அம்சத்தை நீக்கம்செய்துவிட்டது. அதாவது அது ஒழுக்கம் என்ற கோணத்தில் பேசவே இல்லை. தப்பா சரியா என்றே யோசிக்கவில்லை. Passion என்ற கோணத்தில் மட்டுமே அந்தக்கதையை வாசிக்கிறது. கங்காவுக்கு பிரபுவுடன் உருவாகும் உறவின் அடித்தளம் என்ன என்பதை மட்டுமே முக்கியமான கேள்வியாக எடுத்துக்கொள்கிறது. இது மிகமிக முக்கியமான ஒரு கோணம் என நினைக்கிறேன்
இது ஏன் நிகழ்கிறதென்றால் இந்தக் கட்டுரையாளர் தன்னை கங்காவுடன் மிக நுட்பமாக அடையாளம் கண்டுகொள்கிறார் என்பதனால்தான் .அவர் கங்கா பிரபுவை ஏற்றுக்கொண்டதை ஒரு வகை சுயம்வரமாகவே பார்க்கிறார். அல்லது காந்தர்வ மணமாக. ஏனென்றால் அவன்தான் அவளுடைய man. அவள் அவனை அப்போது அப்படி வெளிப்படையாக உணரவில்லை. அது ஓர் உள்ளுணர்வு. பின்னர் அப்படி உணர்கிறாள். அதை அவனும் புரிந்துகொள்ளவில்லை. முழுக்கமுழுக்க passion வழியாகவே செல்லும் இந்த வாசிப்பு தமிழுக்கு மிகமிக முக்கியமான ஒரு கோணத்தை திறந்து தருகிறது என நினைக்கிறேன்
மகாதேவன்
***
அன்புள்ள ஜெ,
கங்கா ஈஸ்வர் எழுதிய கங்கை எப்படி போகிறாள் மிகமிக முக்கியமான கட்டுரை. தமிழில் எந்த ஓர் இலக்கியப்படைப்பைப் பற்றியும் இப்படி ஒரு ஆழமான உணர்வுபூர்வமான அலசல் பெண்களிடமிருந்து வந்ததில்லை என நினைக்கிறேன். வழக்கமான முரண்பாடுதான். அன்புக்கும் ஒழுக்கத்துக்கும் நடுவே. ஒழுக்கமாக பிறர் பார்க்கிறார்கள். அன்பு என்று அவள் பார்க்கிறாள். அவள் fate ஆல் அப்படி ஆனாள் என்று நாம் வாசித்தோம். அது destiny என்று கட்டுரையில் கங்கா ஈஸ்வர் சொல்கிறார். கூர்மையான வாசிப்பு. அதோடு மையக்கதாபாத்திரத்தை அத்தனை பரிவோடு அணுகியிருக்கிறார் கட்டுரையாசிரியர்.
எம்.சிவசுப்ரமணியம்
***
அன்புள்ள ஜெ,
கங்கா ஈஸ்வரின் கட்டுரை மிகச்சிறப்பான ஒன்று. அவருக்கு என் வாழ்த்துக்கள். வழக்கமாக விமர்சகர்களில் நான் எப்படி கூர்மையாகக் கவனிக்கிறேன் பார் என்ற தோரணை இருக்கும். தீர்ப்புசொல்லும் முனைப்பும் இருக்கும். இரண்டுமே இல்லாமல் புனைவை ஒரு வாழ்க்கை மட்டுமே என எடுத்துக்கொண்டு அதில் மிகுந்த உணர்ச்சிபாவத்துடன் ஈடுபட்டுச்செல்கிறார் கட்டுரையாளர். அதுதான் இந்தக்கட்டுரையை ஒரு தனித்தன்மைகொண்ட சிறந்த கட்டுரையாக ஆக்குகிறது
மகேஷ்
***
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
சபரிநாதன் கவிதைகள் – காளி பிரசாத்
அன்புள்ள சார்,
சென்ற மே மாத இறுதியில் அதுவும் இருநாட்களில், மூன்று வெவ்வேறு திசைகளிலிருந்து சபரிநாதன் கவிதைகளைப் பற்றி கவனிக்கத்தக்க குறிப்புகள் கிடைக்கப்பெற்றேன். முதலில் குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது, மறுநாள் கவிஞர்.யுமாவாசுகி தன் உரையாடலில் கூறியது அடுத்து இம்மாத தடம் இதழில் கவிஞர். விக்ரமாதித்தன் பேட்டியில் தனக்கு பிடித்த கவிதைகளில் ”சனீஸ்வரனிடம் பயிற்சி பெற்ற அம்மாச்சி” யை குறிப்பிட்டிருந்தது.. அன்றுதான் இவரின் இரு கவிதை தொகுதிகளையும் வாங்கி படிக்கத்துவங்கினேன். இதுவரையில் சமூக வலைதளத்திலோ, வெகுஜன, இடைநிலை இதழ்களிலோ இவர் பங்களிப்பு அதிகம் இல்லை என்பதால் இவரைப்பற்றி அதிகம் அறிந்திருக்கவில்லை. அது சற்று வெட்கமாகத்தன் இருந்தது. இன்னும் என்னைத் தேடி வரும் தகவல்கள் சூழத்தான் வாழ்கிறேன் என்ன..
கவிதைகள் அளிக்கும் செய்தி பிடிபடாத நாட்கள் இருந்தன. கவிதைகளை வாசிக்கையில், அதன் அனத்தலே முன்வந்து நின்றிருக்கிறது. என்னிடம் சொல்வது ஒரு புலம்லைத்தான் என்பது போல. அதைக் கடக்க ஞானக்கூத்தனை மட்டுமே பற்றிக்கொண்டு வந்திருக்கிறேன். ஊட்டியிலிருந்து, தேவதேவனிடமிருந்து வாங்கி வந்த மாற்றப்படாத வீடு ஒருமாதமாகியும் இன்னும் முடிக்கப்படாத நிலையிலேயே, இரு கவிதை தொகுப்புகளை ஒரு வார காலத்தில் படித்து ஒரு கடிதமும் எழுத உட்கார்ந்திருக்கும் ஒரு தன்னம்பிக்கை பிரமிக்க வைக்கிறது
சபரியின் களம்-காலம்-ஆட்டம் தொகுப்பில் இருந்த பல்லிக்குஞ்சுகள் கவிதையிலிருந்தே அதை ஒழுங்காக படிக்கத் துவங்கினேன். அது ஞானக்கூத்தன் ஞாபகத்தை கொண்டு வந்து வைத்தது
/ஒருநாள் ராச்சாப்பாட்டின்போது அம்மா அப்பாவிடம் இன்னொரு மாடியெடுத்தால் என்ன/என்ற யோசனையைக் கூறினாள் அப்போது பார்த்து ஒரு கௌளி கத்தியது/எங்களுக்கு ஆச்சர்யம் அவனோ தான் பிய்த்த தோசையைக் கைவிட்டான்/மாடிகள் கூடக் கூட பல்லிகளுக்கு ஒரே குஷி இருட்டில் ஓடியோடிப் புணர்ந்தலைந்தன/கவிஞனுக்கோ தலைசுற்றலும் வாந்தியும் அதிகமாகி வருகிறது/அவனுக்குத் தெரியுமா கீழே விழுந்தால் தப்பிப்பதற்கான வாய்ப்பு குறைந்துகொண்டு வருவது..//
அதன் பின் அத்தொகுப்பில் இருந்த உயர்திரு ஷன்முகசுந்தரம் கவிதை அதை இன்னும் உறுதிசெய்தது. ஆனால் இவர் ஞானக்கூத்தன் வகையறா இல்லை என்பதையும் உணர்ந்திருந்தேன். சபரிநாதனுக்கு தன் கவிதை மரபு மீது நல்ல பயிற்சி இருக்கிறது. அவர் தேவதச்சம் கட்டுரையும், தேவதச்சன் உரையுமே அவர் தன் படைப்பு மீது எந்தளவு கவனம் கொள்வார் என்பதை உணர்த்துகிறது. ஐந்து வருடங்கள் கழித்து வந்த ”வால்” தொகுதியை படிக்கயில் அவர் அதை முழுவதும் உணந்திருக்கிறார் என்பது தெரிகிறது, ஒரு கவிஞனின் இரண்டாம் தொகுப்பே மிக முக்கியமானது அதில்தான் அவரது முழு ஆளுமை வெளியாகிறது என நீங்கள் சொல்வதுண்டு. வால் தொகுதியில் சபரியின் முதல் தொகுப்பில் இருந்த ஒரு இன்பாக்ஸ் கவிதை தன்மை போய் விட்டிருக்கிறது என்று நினைக்கிறேன் . அதுவே அவரை தனித்தும் காட்டுகிறது. கவனம் என்று சொல்வது அவர் தன் மொழிமீது கொள்ளும் கவனமும் தான். கன்மம், கூதல் என்று சொற்களைத்தேர்ந்தே கையாளுகிறார்.
இதற்கு முன் படித்த குமரகுருபரனின் கவிதைகளும் சொற்களை பேணுவதில் அங்ஙனமே இருந்திருக்கின்றன. குமரகுருபரன் தன் குடும்ப சூழலிலேயே இயல்பாக மொழியை அணுகும் வாய்ப்பை பெற்றிருக்கிறார். அதனாலே என்னவோ கவிதை முதலில் வாய்த்திருக்கிறது. அந்த கவிதை குறித்த அறிதலை/ அதன் வடிவத்தை/ நுட்பங்களை துவக்கத்தில் அறிந்திருக்கவில்லை. பின்னர்தான் அதை புரிந்து தொடர்திருக்கிறார். அதிலும் மதில் மேல் பூனையாகவே தன்னை உருவகிக்கிறார். ஆனால், சபரிக்கு அந்த தேற்றங்கள் முதலிலேயே இயல்பாகவே பழகியிருக்கின்றன. ஒரு எதிர்நிலை போலத்தான் தோன்றுகிறது இருவருக்கும். இருந்தாலும், இந்நூற்றாண்டில் கவிதை கொண்ட மாற்றத்தை ஒத்தே தனிமை /காமம்/ பிதற்றல்/ எக்கம் கொண்ட படைப்புகள் இருவருக்கும் பொதுவாகவே நிகழ்ந்திருக்கின்றன. மிக முக்கியமாக இருவரும் ஐந்தாறு பக்கங்கள் தாண்டும் நீள் கவிதைகளை எழுதுவதில்லை. ( என்பது எவ்வளவு பெரிய ஆறுதல்) . ஆனால் சபரியிடம் அதையும் கடக்க செய்யும் முயற்சிகள் இரண்டு இருக்கின்றன. :-)
இறுதிவரியில் தன் கவிதையின் திரண்ட கருத்து போல ஒரு வரியை குறிப்பிடுவது குமரகுருபரனின் பாணி எனலாம்…
//உண்மையில் நாம் மிகத் தெளிவாகவே ஆகிறோம்/ ஒரு மதுப்போத்தலின் முடிவில்// ( ஞானம் நுரைக்கும் போத்தல் )
// எனினும், புறக்கணிப்பை தாம் அறிந்த ஞானத்தின் பொருட்டும்/எருமைகள் பெரிதுபடுத்துவதில்லை//
//உண்மையில் யாரும் இறப்பதே இல்லை //
//மிருகங்களின் விழிகளால் இருட்டைக் கடக்கிறது மொழி எவ்வுலகிலும்// ( மறுபடியும் முதலிலிருந்து ஆரம்பிக்க முடியாது)
இவ்வாறு நாமும், யார்க்கும் எங்கும் என அவர் தான் உணர்ந்ததை சொல்லிக்கொண்டிருக்கிறார். இது பிறகு அனேக கவிஞர்களின் படைப்புகளிலும் காண முடிந்தது.
ஆனால் சபரியின் சமீபகால படைப்பான ”வால்” தொகுப்பில் அவர் வாசகனுக்கு என எதுவும் உரைப்பதில்லை. அது ஒரு முக்கியமான மாற்றமாக எனக்குத் தோன்றியது. இந்த தொகுப்பின் கவிதைகள் பெரும்பாலும் தனக்குள் பேசும் தன்மை அல்லது ஒரு பிரார்த்தனையைபோன்ற வடிவம் கொண்டுள்ளன
// இனி நான் வெறுங்கையுடன் பயணிக்கவேண்டும் ஓர்/ அலைசறுக்கு வீரனைப் போல// ( நல்வரவு -வால்)
// தேவனே, உண்மையில் நான் மறந்துவிட்டேன்/ நான் ஏன் புகைக்கிறேன் என்பதை// ( நான் ஏன் புகைக்கிறேன் – வால் )
அல்லது பகடிசெய்து கடக்கின்றன
// இது பஜனைக்கான நேரம்/ மூன்றும் தமக்குள்ளேயே சிரித்துக்கொள்கின்றன/ உலகமே வேடிக்கை பார்க்கிறது/ என்ன செய்யப்போகிறார் என் ஏழைத்தந்தை// ( மூன்று குரங்குகள் – வால் )
நான் தனித்து நின்று இந்த உலகை எதிர்கொள்கிறேன் அப்போது எனக்கு இங்ங்னம் தோன்றுகிறது என சொல்வதே அவரின் கவிதைகளின் நோக்கம். அதற்குள் இதுவரையில் நவீன கவிதை அடைந்துள்ள அத்துணை வடிவங்களையும், இவர் சோதித்து பார்க்கிறார். அதற்கான களம்-காலம் எல்லாம் வாய்த்திருக்கிறது. ஆட்டம் இன்னும் தொடர்ந்து, வரும் ஆண்டுகளில் தமிழின் மிக முக்கிய கவிஞராக அடையாளம் காணப்படுவார். இந்த குமரகுருபரன் -விஷ்ணுபுரம் விருது அதற்கான ஒரு துவக்கம்.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 16
15.கைக்கொளல்
ஆணும்பெண்ணும் கொள்ளும் உறவு நூற்றுக்கணக்கான சிறு பிணக்குகளினூடாக நாளும் நாளுமென துளித்துளியாக வரையறுக்கப்படுகிறது. முதல்நாள் பின்னிரவில் கைபிணைத்து உடலொட்டிக் கிடக்கையில் தமயந்தி நளனிடம் “நமது அரசில் சுங்கம் எப்படி கணக்கிடப்படுகிறது?” என்று கேட்டாள். அவன் அவள் தோளில் முகம்புதைத்து உடலோய்ந்து கிடந்தான். உதடுகள் அழுந்தியிருந்தமையால் “ம்?” என்று குழறினான். அவள் மீண்டும் கேட்டாள். “என்ன?” என்றான். அவள் அவன் முகத்தைப் பிடித்து விலக்கி “நம் அரசில் சுங்கம் எப்படி கணக்கிடப்படுகிறது?” என்றாள்.
“நெடுங்காலமாக இங்கே நிலவும் முறைமைப்படிதான்” என்றான் நளன். “அது என்ன என்றுதான் கேட்கிறேன். பெரும்பாலான தொல்குடிகளின் ஊர்களில் அவர்களின் ஊருக்குள் நுழையும் வணிகர்களுக்கு அவர்களின் ஊர்திகளைப்பொறுத்து சுங்கம் கொள்ளப்படுகிறது.” அவன் “ஆம், இங்கும் அப்படித்தான். தலைச்சுமைக்கு அரைப்பணம். அத்திரிகளுக்கும் கழுதைகளுக்கும் ஒருபணம். வண்டிகளுக்கு இரண்டு” என்றான். “அதைத்தான் அறியவிரும்பினேன். அந்தப்பொதிகளில் என்ன பொருள் இருந்தாலும் பொருட்டல்ல அல்லவா?” என்றாள். “பொதிகளை அவிழ்த்துப்பார்க்கமுடியுமா?” என்றான் நளன். “முடியும். பொருள்களின் மதிப்பை ஒட்டி சுங்கம் வகுக்கப்படுமென்றால் வணிகர்கள் அவர்களே பொருட்களை அவிழ்த்துக்காட்டும்படி கட்டிக்கொள்வார்கள். ஏனென்றால் உள்ளே வரும் பொருட்களில் பெரும்பகுதி உப்பு போன்ற மதிப்புக்குறைவான பொருட்களாகவே இருக்கும். எஞ்சிய பொருட்களை மட்டும் நாம் கண்காணித்தால்போதும்” என்றாள்.
குரல் கூர்மைகொள்ள “சுங்கநிகுதியை இரண்டாகப்பிரித்து மறுபாதியை விற்பனைசெய்யுமிடத்தில் கடைக்காணமாக பெறவேண்டும். இரண்டு கணக்குகளும் நிகராக அமையும் என்றால் சுங்கம் கட்டப்படாத பொருளை அங்காடியில் விற்கமுடியாது” என்றாள் தமயந்தி. நளன் சலிப்புடன் “ஆம்” என்றபின் மல்லாந்து படுத்தான். அவனால் அவள் சொல்லும் எதிலும் உளம்நிலைக்க முடியவில்லை. அதுவரை அவனைச் சூழ்ந்திருந்த அவள் உடலின் மென்மையும் மணமும் அவள் பேசப்பேச பிறிதொன்றாவதை உணர்ந்தான்.
அவள் அவனருகே ஒருக்களித்து தன் முலைகள் அவன் தோளில் படிய அவனை அணைத்து “வருபொருளுக்கு நிகுதி சுமத்துவது பிழையான வழக்கம். அந்தப்பணம் அப்பொருளை வாங்கும் நம்மிடமே மிகைவிலையென கொள்ளப்படும். செல்பொருளுக்கு நிகுதி சுமத்துவதே உகந்தது. அது நாம் விற்கும்பொருள் மேல் மிகைவிலையென்றாகி நம் மதிப்பை கூட்டும். வருபொருளுக்கு நிகுதி இல்லையேல் மேலும் பொருள் இங்கே வரும். இங்கு விற்கப்படும் பொருளின் விலைக்கு இணையாக நம்மிடம் பொருள்கொண்டு சென்றாலொழிய வணிகர்களுக்கு வரவுப்பொருள் மிகாது. எனவே நம் பொருட்கள் அவர்களால் மேலும் கொள்ளப்படும்” என்றாள்.
அவன் அவள் மீதிருந்த கையை விலக்கியபடி “இதையெல்லாம் சொல்வது எளிது. செய்வது கடினம். அத்தனை வணிகர்களையும் வழிகளில் செறுத்து நிறுத்தி சுங்கம் கொள்ளுமளவுக்கு நம்மிடம் ஊழியர்கள் இல்லை. கோட்டைவாயிலில் மட்டுமே இன்று சுங்கம் கொள்ளப்படுகிறது” என்றான். “அதுவும் பிழை. கோட்டைவாயிலில் வண்டிகளின் நீள்நிரையே உருவாகும். சுங்கம் கொள்வதற்கு வாயிற்காவலர்களை அமைத்தல் தவறு. அவர்கள் பொருளின் மதிப்பறியாதவர்கள். பொறுமையிழப்பார்கள். கடுஞ்சொல் எடுப்பார்கள். அதைவிட ஒருகட்டத்தில் எதையும் நோக்காமல் உள்ளே அனுப்பவும் தொடங்கிவிடுவார்கள். சென்று நோக்குங்கள், பெருவணிகர்கள் நம் வாயிற்காவலர் பொறுமையிழந்த பின்னரே உள்ளே வரத்தொடங்குவர்” என்றாள் தமயந்தி.
நளன் தலையை வெறுமனே ஆட்டினான். இருளில் அவன் முகத்திலெழுந்த எரிச்சல்குறிகளை அவள் காணவில்லை. “நிகுதிகொள்ள எப்போதும் வணிகர்களையே பொறுப்பிலமர்த்தவேண்டும். ஆனால் அவர்கள் மாறாப்பொருளுக்கு பணியாற்ற மாட்டார்கள். பணியாற்றும்தோறும் வருபொருள் வளருமென்றால்தான் செயலூக்கம் கொள்வார்கள். நிகுதிகோளில் அவர்களுக்கு நூறிலிரண்டு பங்கு என்று அறிவிப்போம். நிகுதி பலமடங்கு பெருகுவதை காண்பீர்கள்.” நளன் ஒன்றும் சொல்லாமல் கைகளை மார்பில் கட்டியபடி இருளை நோக்கிக் கிடந்தான்.
அவன் மார்பை தன் விரல்களால் நீவி மென்மயிர்ப்பரப்பை சுழற்றியபடி “நீங்கள் எண்ணுவதைவிட கூடுதலாக இங்கே வணிகம் நிகழ்கிறது. நகருக்குள் நான் நுழைந்ததுமே அதைத்தான் நோக்கினேன்” என்றாள். நளன் “கடைகளில் விரிந்துள்ள பொருட்களை நானும் நோக்குவதுண்டு” என்றான். “இன்னமும் இங்கே வெளிப்படையாக நிகுதி அறிவிக்கப்படவில்லை. ஆகவே அவர்கள் பொருட்களை கடைபரப்பவில்லை. ஆனால் வணிகர்கள் எக்குலத்தவர் என்று நோக்குங்கள். முதற்குலத்து வணிகர் பெரும்பொருள் இல்லையேல் இங்கு வரமாட்டார்கள்.”
நளன் ஒருகணத்தில் பற்றிக்கொண்ட சினத்துடன் “நீ என்ன இந்நகரின் கணக்கராகவா வந்தாய்?” என்றான். உணர்வுமாறுபாடில்லாமல் “கணக்கறியாதவர் நாடாளமுடியாது” என்றாள் அவள். “கணக்கு நோக்க இங்கு அமைச்சர்கள் இருக்கிறார்கள்” என்றான் நளன். “இல்லை, அவர்கள் நிஷதகுலத்தவர். பாரதவர்ஷத்தில் எங்கும் தொல்மலைக்குடிகள் வணிகத்தில் சிறந்ததாக வரலாறில்லை” என்றாள்.
நளன் எழுந்து அமர்ந்து “என்ன சொல்ல வருகிறாய்? கணக்கறியாத மூடர், காட்டுமானுடர், அதைத்தானே?” என்றான். “நான் அப்படி சொல்லவில்லை. ஆனால் இங்கு இன்றிருக்கும் நிகுதிமுறை மலைச்சிறுகுடியினருக்குரியது என்றேன்.” நளன் உரக்க “ஆம், மலைச்சிறுகுடியினரே. என் அன்னையர் கல்லணிகளை அணிபவர். என் தந்தையர் காட்டுமலர்களை தலையிலணிபவர். நாங்கள் மீன்வேட்டும் காட்டில் அலைந்தும் வாழ்பவர்… நான் மறுக்கவில்லை. நீ மணந்திருப்பது கான்மகனை. முடிசூடி வந்திருப்பது காட்டுக்குலமொன்றின் அரசியாக…” என்றான்.
அவள் சற்றும் சினம்கொள்ளாமல் “ஆம், அதை அறிவேன். ஆனால் நீங்கள் பரசுராமரால் அனல்குலத்து ஷத்ரியர் என்றானீர்கள் என அறிந்திருந்தேன்” என்றாள் தமயந்தி. “ஏன், ஐயமிருக்கிறதா?” என்றான் நளன். “இல்லை. ஷத்ரியர்களாக ஆனீர்கள். ஆகவே ஷத்ரியர்களின் அனைத்து வழிகளையும் கைகொள்ளுங்கள் என்கிறேன். நிகுதிகொள்வதே ஷத்ரியனை ஆற்றல்மிக்கவனாக ஆக்குகிறது” என்றாள்.
மேற்கொண்டு பேசமுடியாமல் நளன் உடல்நடுங்கினான். எழுந்து தன் மிதியடியை போட்டுக்கொண்டு வெளியே செல்லப்போனான். அவள் அவன் கையை எட்டிப்பற்றி “என்ன சினம்?” என்றாள். “உன் நோக்கில் நாங்கள் எவர் என இப்போது தெரிகிறது” என்றான் நளன். “ஏன் சற்றுமுன் தெரியவில்லையா?” என்றாள் அவள். அக்குரலில் இருந்த காமம் அவன் உளநிலையை மாற்றியது. அவன் உடல் தளர்வதை கையே வெளிக்காட்ட அவள் அவனை பற்றி இழுத்து அருகே மஞ்சத்தில் விழச்செய்தாள். “என்ன சினம் இது? சிறுவனைப்போல?” என்றாள்.
“உன் கைகள் மல்லர்களுக்குரியவை” என்றான் அவன். “நான் கதை பயின்றவள்.” அவன் அவள் தோள்களை தன் முகத்தால் வருடியபடி “கற்சிலை போல” என்றான். “நீங்கள் இதை விரும்பவில்லையோ?” என்றாள். “ம்?” என்றான் நளன். “விரும்பவில்லையா?” என செவியில் கேட்டாள். “இதைத்தான் விரும்பினேன்” என்றான் நளன். அவள் சிரிப்பு அவன் தலைக்குள் என ஒலித்தது.
அவன் காமத்தின் இயல்பை அவள் முதல்முறையிலேயே உணர்ந்துகொண்டிருந்தாள். தயங்கியபடி ஓரத்து ஓட்டத்தில் கால்நனைத்து கூசி நகைத்து மெல்ல இறங்கி மையப்பெருக்கில் பாய்ந்து மூழ்கித் திளைத்து மகிழ்பவன். அவனை அவள் சிறுமகவென தன் முலைகளின் மேல் சூடிக்கொண்டாள். இடைமேல் ஏந்தினாள். கைகளில் ஊசலாட்டினாள். தன் சுழிப்பிலும் பெருக்கிலும் அலைகளிலும் அமிழ்த்தி வைத்திருந்தாள். பிறிதொன்றையும் அவன் வேண்டவில்லை என்பதை மெல்ல அறிந்துகொண்டாள்.
முதற்புலரியில் அவள் எழுந்து குழல்முடியும் ஓசைகேட்டு அவன் விழித்துக்கொண்டான். “என்ன இப்போதேவா?” என்றான். “கருக்கல் முரசு ஒலிக்கிறது” என்றாள். “அது காவலர் இடம் மாறுவதற்காக. காதலர்களுக்கல்ல” என்றான். “இன்று நான் முதல்முறையாக அவையமரவிருக்கிறேன். குடித்தலைவர்களும் பெருவணிகர்களும் வருகிறார்கள். அவர்களனைவரையும் நான் சற்றேனும் முன்னரே அறிந்திருக்கவேண்டும். ஆகவே அமைச்சர்களையும் ஒற்றர்களையும் என்னை வந்து நோக்கும்படி சொன்னேன்” என்றாள் தமயந்தி.
“அதை மெல்ல செய்யலாம். முதல்நாள் சில எளிய சடங்குகளுடன் முடித்துவிடலாம்” என்றான் நளன். “நான் எதையும் ஒத்திப்போடுவதில்லை” என்றாள் தமயந்தி. “நான் ஒத்திப்போடுவதுண்டு” என நளன் சிறுசீற்றம் தெரிய சொன்னான். “அரசர்கள் கடமைகளால் கட்டப்பட்டவர்கள், நான் அரசி” என்றாள் தமயந்தி. “நீ சொல்லும் ஒவ்வொரு சொல்லும் என்னை சிறுமைசெய்கிறது” என்று கூவியபடி எழுந்து அமர்ந்தான் நளன். “நான் என் உளமுணர்ந்ததை சொல்கையில் அதை சிறுமை என்று உணர்கிறீர்கள் என்றால் பிழை என்னுடையதல்ல” என்றாள். “பிழை என்னுடையதா?” என்றான் நளன் சினத்துடன் எழுந்துகொண்டு. “அவ்வாறு நீங்கள் உணரக்கூடும் என நினைக்கிறேன்” என்றாள் தமயந்தி.
அவர்கள் விழிநோக்கி ஒருகணம் நின்றனர். அவள் விழிகளில் சினம் இல்லை, சிறிய சிரிப்பு மட்டும்தான் இருந்தது. விழிதிருப்பி “நான் வெற்றுச்சடங்குகளுக்கு என்னை அளித்ததில்லை. அவைநிகழ்வுகள் மாறா ஒழுங்குடன் தலைமுறைகளாக நிகழ்பவை” என அவன் சொன்னான். “நீங்கள் இளையவர். வீரர். உங்கள் விளையாட்டரங்கில் மகிழ்ந்திருங்கள். உங்கள் இளமையில் ஒருபகுதியை எனக்கு அளியுங்கள்” என்றாள். அக்குரலில் அவனை சிலிர்க்கவைக்கும் அணுக்கம் இருந்தது.
அவன் திரும்பி அவளை நோக்கி புன்னகைத்து “அதற்குத்தான் இங்கே இரு என்றேன்” என்றான். அவள் உதடுகளை மடித்து சிரித்தபடி “ஆனால் அதற்கு பொழுதிருக்கிறது. அப்போது…” என்றபின் அவன் காதைப்பிடித்து மெல்ல ஆட்டி “அதுவரை நல்ல குழந்தையாக இருக்கவேண்டும் என்ன?” என்றாள். அவன் “போடி” என்றான். அவள் புன்னகையுடன் வெளியே சென்றாள்.
முதல்நாளிலேயே அவையினர் கண்டுகொண்டனர், நிஷதநாட்டை ஆளப்போகிறவர் எவர் என. தமயந்தி நகர்நுழைந்தபோதே அவர்களின் பெண்டிர் அதை அறிந்துவிட்டிருந்தார்கள். நிஷதபுரியின் பட்டத்துயானையாகிய அங்காரகனின் மத்தகத்தில் அமைந்த பொன்பூசப்பட்ட அம்பாரிமேல் வலக்கையில் வெண்தாமரை மலரும் இடக்கையில் பொன்னாலான வாளும் ஏந்தி அவள் அமர்ந்திருந்தாள். தலையில் நளன் அவளுக்காக முன்னரே சமைத்து கருவூலத்தில் வைத்திருந்த மூன்றடுக்கு மணிமுடி அசைவுகளில் அருமணிகள் ஒளிவிட அமைந்திருந்தது. உடலெங்கும் மின்னிய அணிகளும் பொன்னுருகி சுழன்றுவழிந்ததுபோன்ற பட்டாடையுமாக அவள் விண்ணிலிருந்து இன்னமும் மண்ணுக்கு வராதவள் போலிருந்தாள்.
“இந்திராணியின் மண்வடிவம்!” என்றனர் மூதன்னையர். “தேவயானியின் விழித்திறம் கொண்டவள்!” என்றனர் நிமித்திகர். “உருமாற்றி திருமகளாக எழுந்த கொற்றவை!” என்றனர் சூதர். அவளை ஏந்திவந்த யானை கோட்டைக்குள் நுழைந்ததும் அதன் மணம் பெற்ற பிடியானைகள் இரண்டு கொட்டிலில் நின்று பிளிறின. தொடர்ந்து நகரமே ஒரு பிடி என மாறி பேரோசை எழுப்பியது. நகர்த்தெருக்களினூடாக அவள் அமர்ந்திருந்த அம்பாரிமேடை ஊசலாடியபடி சென்றபோது அரிமலர் மழை பொழிந்தது. வாழ்த்தொலிகள் அமையும்தோறும் மேலும் பொங்கின.
அமைச்சர்கள் இருவர் தாலத்தில் கொண்டுவந்த அரசமகுடத்தை குலமூத்தார் இருவர் எடுத்து அவள் தலையில் சூட்டினர். குலமூத்தார் ஒருவர் அளித்த செங்கோலை பெற்றுக்கொண்டு அவள் அரியணையில் அமர்ந்ததும் வைதிகர் கங்கைநீர் தெளித்து வேதம் ஓதி அவளை வாழ்த்தினர். அவை குரவையும் வாழ்த்தொலியுமாக மலர்தூவியது. ஒவ்வொரு சடங்கிலும் அவள் புன்னகை மாறா முகத்துடன் ஈடுபட்டாள். கருங்கல்லில் வடித்த சிலைமுகம் என தெரிந்தாள். அவை நிகழ்வுகளை அமைச்சர் அறிவித்ததும் அவள் ஒவ்வொரு குடித்தலைவரையும் பெயர்சொல்லி அழைத்து முறைமைச் சொல்லுடனும் உண்மையான வணக்கத்துடனும் செய்திகளை கேட்டறிந்தாள்.
தாங்கள் சொல்வன அனைத்தும் அவளுக்கு முன்னரே தெரிந்திருந்தது என்னும் உளமயக்கை அவர்கள் அடைந்தார்கள். ஒவ்வொன்றையும் மிகவிரைவாக சிறு அலகுகளாகப்பிரித்து அதன் மிக எளிய வடிவை சென்றடைந்தாள். அங்கிருந்தே தீர்வுகளை அடைந்து சுருக்கமான சொற்றொடர்களில் அதை முன்வைத்தாள். ஒவ்வொரு முறையும் குடித்தலைவர்களை நற்சொற்களில் பாராட்டினாள். அந்தப்பாராட்டு மிகையாகுமென்றால் அவள் அவர்களின் செய்கைகளை மறுஅமைப்பு செய்யவிருக்கிறாள் என்றே பொருள் என அவர்கள் புரிந்துகொண்டார்கள்.
தீர்க்ககுலத்தலைவர் சாமர் “எங்கள் குடிகள் மலையடுக்குகளுக்கு அப்பால் சிற்றூர்களில் சிதறிவாழ்பவர்கள், அரசி. அவர்களுக்கு இந்திரபுரியின் காவல் என ஏதும் அளிக்கப்படவில்லை. ஆகவே அவர்களிடம் நாம் நிகுதி கொள்வதும் அறமல்ல” என்றார். “நிகுதி என்பது அரசன் அளிக்கும் கோல்காவலுக்கான ஊதியம் என்கின்றன நூல்கள்.” தமயந்தி புன்னகையுடன் “ஆம், ஆனால் அவர்கள் நம் குடிகள் என தங்களை சொல்லிக்கொள்கிறார்கள். அச்சொல்லே அவர்களுக்கான காப்பென்றாகிறது. அவர்களின் குடிப்பூசல்களில் நாம் நீதி வழங்குகிறோம்” என்றாள். “குடித்தலைவரே, தங்கள் சொல் கூர்மையுடையது. ஆனால் நூல்நெறிகளின்படி அரசன் கொள்ளும் வரி என்பது அவன் அளிக்கும் நீதியின்பொருட்டே.”
முதல்நாளிலேயே நிகுதிமுறையில் மாறுதல் வேண்டுமென்பதை அவள் அவையில் முன்வைத்தாள். குடித்தலைவர்கள் எழுந்து அது எவ்வகையிலும் உகந்ததல்ல என்று கூவினர். “நம் தொல்குடியினரே இங்கே கோதையின் பெருக்கில் செல்லும் படகுகளில் நிகுதியும் வாரமும் பெற்றுவந்திருக்கிறார்கள். அரசி, இங்குள்ள அத்தனை வணிகர்களும் என்றேனும் இங்கு வந்துசேர்ந்தவர்களே. அவர்களிடம் வரிகொள்ளும் பொறுப்பை அளிப்பதென்பது எங்கள் குலத்திற்கு இழிவென்றே கருதப்படும்” என்றார் மச்சர்குலத்தலைவர் விகிர்தர்.
“அவர்கள் நம் ஏவலர்கள். துலாகொள்ளும் உரிமையை மட்டும் அவர்களுக்கு அளிப்போம்” என்றாள் தமயந்தி “அவர்களுக்கு காவல்நிற்க எங்கள் குடிகள் செல்லவேண்டுமா என்ன?” என்றார் விகிர்தர். “என்ன செய்யலாம்? அவர்களுக்கே வேல்கொள்ளும் உரிமையையும் அளித்துவிடலாமா?” என்றாள் தமயந்தி. அவர் “அதெப்படி?” என திகைக்க “விகிர்தரே, தங்கள் சொற்களை வணங்குகிறேன். பொன்னோ துலாவோ அல்ல வேலும் வாளுமே மெய்யான அரசு. அது என்றும் அனல்குலத்து ஷத்ரியர்களான நம் குடிகளிடம் மட்டுமே இருக்கும். வாளும் வேலும் நம்மிடமிருக்கையில் அவர்களிடமுள்ள துலா என்பதும் இவர்களிடமுள்ள மேழி என்பதும் வேழத்தின் மத்தகத்திலமர்ந்து விளையாடும் சிறுபுட்களைப்போல. அவை வேழத்தில் அமர்ந்து ஊரவில்லை, வேழத்திற்கு அவை பணிவிடை செய்கின்றன.”
அக்கணமே அந்தணர் உள்ளத்தை உணர்ந்து அவர்களை நோக்கி திரும்பி “அந்தணர் அந்த வேழத்தின் மத்தகம் சூடும் பொன்னாலான அம்பாரி. அதிலமர்ந்துள்ளது அறத்தின் தெய்வம்” என்றாள். “ஆம், அரசியின் சொல் மெய்மைகொண்டது” என்றார் மூத்த அந்தணரான பிரபர். அவையினர் ஒருவரோடொருவர் பேசிக்கொண்ட ஓசையால் கூடம் முழங்கியது. “நாம் மன்றுகூடி முடிவெடுத்தபின் அவைமுன் இதை பேசியிருக்கலாம் அரசி” என்றார் அமைச்சர். தமயந்தி புன்னகைசெய்து “இல்லை, அவையினர் தங்கள் எண்ணங்களனைத்தையும் சொல்லி முடிக்கட்டும். இம்முடிவை நாம் எடுத்ததாக அவர்கள் எண்ணலாகாது, அவர்கள் எடுத்ததாகவே இருக்கவேண்டும். ஏனென்றால் நாளும் நிகழவேண்டிய ஒரு செயல் நிகுதிகொள்ளல்” என்றாள்.
அவள் அவை நீங்கியபோது மூத்தகுடியினர் அனைவரும் எழுந்து கைகூப்பி நின்றனர். அவள் விலகியதுமே மலர்ந்த முகத்துடன் “ஆள்வதென்பது என்ன என்று இன்று அறிந்தோம். அது ஆயிரமிதழ் தாமரைமேல் திருமகள் என அமர்ந்திருப்பது மட்டுமே” என்றார் சகரகுலத்தலைவரான பிஞ்ஞகர். “புன்னகையை படைக்கலமாக ஏந்தியவர். நம் அன்னை ஒருத்தி அமர்ந்து ஆள்வதைப்போலவே உணர்ந்தோம்” என்றார் சூக்தர் குலத்தலைவர் முக்தர்.
வணிகர்கள் மட்டும் ஒருவரை ஒருவர் நோக்கியபடி எண்ணம்சூழ்ந்து நடந்தனர். பெருவணிகரான குபேரர் “ஒட்டுமொத்தமாக நோக்கினால் நாம் நிகுதி பெருக்கவேண்டியிருக்கும்” என்றார். மூத்தவணிகரான ரத்னர் “ஆம். அரசு வலுக்கொள்ளும்தோறும் நிகுதி வீங்குமென்பது வணிகநெறி. ஆனால் வலுக்கொள்ளும் அரசு வணிகத்தையும் பெருக்கும்” என்றார். “முதலில் இது நமக்கு எதிரானதே. ஆனால் நீள்காலத்தில் நலம்பயப்பது. இன்று நாம் கரந்துசெய்யும் வணிகத்தை கரம் அளித்து திறந்து ஆற்றப்போகிறோம். கரந்து செய்வதற்கு ஓர் எல்லை உள்ளது. இனி அதை நாம் கடக்கலாம்” என்றார். அவர்கள் அவரைச்சூழ்ந்து நடந்துசென்றார்கள்.
“அரசிக்கு நாம் அளிக்கும் நிகுதிச்செல்வம் படைக்கலமென்றாக வேண்டும். அவர் கலிங்கத்தை வென்று அதன் துறைமுகங்களை கைப்பற்றினார் என்றால் நம் கருவூலங்கள் நிறைந்து வழியும்” என்றார் ரத்னர். “கலிங்கத்தையா?” என வணிகர் கூவினர். “ஐயமே வேண்டியதில்லை. அரசி கலிங்கத்தை வெல்வார். வெல்லவேண்டுமென நாம் அவரிடம் சொல்வோம். வஞ்சத்தால் போரிடுவதல்ல அரசரின் வழி. பொருள்நோக்கில் படையெடுப்பதே அவர்களுக்குரியது. அரசி அறியாதது அல்ல அது” என்றார் ரத்னர்.
அந்தியில் அரசரும் அரசியும் அமரும் பேரவை கூடுவதற்கு முன்பாக அமைச்சர் மூவர் வந்து தமயந்தியை சந்தித்தனர். அவள் ஓய்வுக்குப்பின் நீராடி நீண்ட குழலை தோள்களில் விரித்திட்டு வெண்ணிற பட்டாடையை போர்த்திக்கொண்டிருந்தாள். நெற்றியிலும் வகிடிலும் குங்குமம் அணிந்திருந்தாள். அமைச்சர்கள் அவளை அக்கோலத்தில் கண்டதும் சொல்மறந்தனர். “அமர்க!” என்றதும் கனவிலென அமர்ந்தனர். நாகசேனர் “குருதிசூடிய கொற்றவை போல…” என்று எண்ணிக்கொண்டார்.
முகமன்களை உரைத்ததும் கருணாகரர் தணிந்த குரலில் “அரசி அறியாதது அல்ல. இக்குடியின் முதற்தெய்வமென்றிருந்தது கலி. தங்களின்பொருட்டு இந்நகரை அரசர் மாற்றியமைத்தார். இதன் குன்றின்மேல் இந்திரனின் பெருஞ்சிலை எழுந்தது. கலி தென்றிசைச் சோலைக்குள் சென்றமைந்தது. அரசனைத் தொடர்வதே குடிகளின் வழி. ஈராண்டுகளுக்குள்ளாகவே இந்நகரில் கலிவழிபாடு மறைந்தது. இந்திரனுக்குரிய விழவுகளை அரசே பெருஞ்செலவில் முன்னெடுத்தமையால் இளையோர் உள்ளமெல்லாம் அங்கே சென்றமைந்தது” என்றார்.
“ஆனால் தெய்வங்கள் மறைவதே இல்லை. தென்றிசைச் சோலையில் அமர்ந்த கலியை வழிபடுவதை ஒருநாளும் நிஷதகுடிகள் கைவிடவில்லை. பிறர் அறியாமல் செல்கிறார்கள். ஓசையும் திரளுமின்றி வழிபடுகிறார்கள். இன்றும் இந்நகர்மக்களின் உள்ளத்தை கலிதெய்வமே ஆள்கிறது” என கருணாகரர் தொடர்ந்தார். “குலமுறைப்படி தங்களை மணந்து நகர்புகுந்ததுமே அரசர் அங்குதான் சென்றிருக்கவேண்டும். ஆனால் இந்திரனின் ஆலயத்திற்குத்தான் சென்றீர்கள். அங்கே வைதிகமுறைப்படி அனல்கொடையும் இந்திரனின் அடிகளுக்கு பூசெய்கையும் நிகழ்ந்தது. அதை பிழையெனச் சொல்லவில்லை. பெருவிழவென நிகழ்த்தவேண்டும் என்றோ பலிகொடைகள் ஆற்றவேண்டும் என்றோகூட நான் சொல்லவில்லை. குடிகளின் விருப்பப்படி இருவரும் கலிதெய்வத்தின் அடிதொழுது மலர்கொண்டு அதன்பின் அரியணையில் வீற்றிருந்தால் நன்று.”
நாகசேனர் “அரசருடன் கானேகிய அரசி தன் தூதரிடம் சொல்லி அனுப்பியது இது” என்றார். தமயந்தி அவர்களை நோக்கியபோது விழிகளில் ஒரு மங்கல் இருந்தது. அவள் உள்ளம் எங்கே செல்கிறதென அறியக்கூடவில்லை. பின்னர் மெல்லியகுரலில் அவள் “அரசரிடம் உசாவினீர்களா?” என்றாள். “இல்லை அரசி. அவர் என்ன முடிவெடுப்பார் என எங்களால் எண்ணக்கூடவில்லை. அவர் உங்கள் எண்ணத்தையே நாடுவார். ஆகவே உங்களிடம் வந்தோம்” என்றார் நாகசேனர்.
“நான் என் விழைவென இதை முன்வைக்கமுடியாது” என்றாள் தமயந்தி. “ஆம், அதை அறிவோம். ஆனால் நீங்கள் உளம்கோணப்போவதில்லை என்பதை அவர் உணர்ந்தால்போதும்” என்றார் கருணாகரர். “அவர் என்னிடம் அதை சொல்வார் என்றால் எனக்கு மறுப்பில்லை என்கிறேன்” என்றாள் தமயந்தி. “அது போதும் அரசி. இது பேரரசியின் விழைவு. மூதரசர் உளம்விலகி கானேகிவிட்டார். ஆனால் அவர் முடிதுறந்து சென்றது கலியை நாம் துறந்தமையால்தான் என நாடறியும். மூதரசர் இன்னும் மக்கள் உள்ளங்களில் வாழ்கிறார்” என்றார் கருணாகரர். “ஆம், குறிப்பாக அவர்களின் குற்றவுணர்ச்சி அவரை வளரச்செய்யும்” என்றாள் தமயந்தி.
“அரசர் தங்களின்பொருட்டே தந்தை சொல் மீறி தெய்வத்தை அகற்றினார் என்பார்கள். தாங்கள் வந்தபின்னரும் அது நீடித்தால் என்றோ ஒருநாள் தாங்களே நிஷதரின் குலதெய்வத்தை அகற்றியவர் என்றே சொல் உருவாகும். அந்தச் சினம் நம் குடிகளின் உள்ளங்களுக்குள் ஆழ்நஞ்சென உறையும். ஏதேனும் தருணத்தில் முளைக்கவும்கூடும். தெய்வங்களை குடிகள் ஒருபோதும் முற்றாக விட்டுவிடுவதில்லை, தேவி” என்றார் கருணாகரர். “ஆம்” என்று சொல்லி புன்னகைத்து “நன்று செய்க!” என்றாள் தமயந்தி.
அவர்கள் வந்துசென்ற சற்றுநேரத்திலேயே நளன் அகத்தளத்திற்கு வந்தான். அப்போது அவள் அணிபுனைந்துகொண்டிருந்தாள். அணிச்சேடியர் அவனைக்கண்டதும் தலைவணங்கி விலகினர். அவன் அவளை நோக்கியபடி எண்ணிவந்த சொற்கள் அனைத்தும் உதிர்ந்து அகல வெற்றுள்ளத்துடன் நின்றான். அவள் அவன் வருவதை காலடியோசையிலேயே அறிந்தாள். அவ்வறிதல் அவள் உடலில் மிகச்சிறிய அசைவைக்கூட உருவாக்கவில்லை. அவன் தோன்றியதும் விழிகள் மட்டும் திரும்பி அவனை தொட்டுச்சென்றன. அவன் அவளுடைய அந்த கலைவின்மையைக் கண்டு மேலும் அழுத்தமாக தன்னை முன்வைக்க உளம் உந்தப்பெற்றான். அந்த அகவிசையால் அவன் உடல் மெல்ல விதிர்த்தது. அவளுடைய அடுத்த விழியசைவுக்காக அவன் அங்கே கணம் கணமாக காத்து நின்றான். அவள் குழல் அமைத்த முதுசேடியை ஆடியில் நோக்கி செல்லும்படி கையசைவால் பணித்தாள். மேலாடையை மீண்டும் ஒருமுறை சீரமைத்தாள். கணையாழியை இணைத்த பொற்சரத்தை இழுத்துவிட்டு மீண்டும் ஒருமுறை ஆடியில் நோக்கிவிட்டு அவனைப் பார்த்து புன்னகைசெய்தாள். அவன் பொறுமையின்மையின் உச்சிவரை வந்து அப்புன்னகையால் குளிர்ந்து மீண்டும் கீழிறங்கினான். என்ன சொல்வதென்று அறியாமல் “அவை நிகழ்வுகள் தொடங்கவிருக்கின்றன” என்றான். அவை என்ற சொல்லை பிடிப்பற்றாகக் கொண்டு “அமைச்சர்கள் வந்தனர்” என்றான். அரசுசூழ்தல் அவளுக்கு உகந்தது என உள்ளம் உணந்திருந்தது.
அவளை மகிழ்விக்கும்பொருட்டு ஏதேனும் சொல்ல விரும்பினான். “கலிதெய்வத்திற்கு ஒரு பூசெய்கை முடித்து அவையேறலாம் என்றார்கள். பெரிய விழாவாக அல்ல. சிறிய அளவில். அரசமுறைச் சடங்காக…” என்றான். அவன் முடிப்பதற்குள் அவள் “அரசர்கள் சடங்குகள் எதையும் மந்தணமாக செய்யமுடியாது” என்றாள். “ஆம்” என்றதுமே அவன் உள்ளம் சோர்வடைந்தது. “எனக்கு கலியை வணங்குவதில் மறுப்பேதுமில்லை” என்று அவள் சொன்னாள். அவன் குழப்பத்துடன் “ஆம், அதை அறிவேன்” என்றான்.
“ஆனால் பெருந்தெய்வங்களை வழிபடுபவர்களே பேரரசுகளை உருவாக்குகிறார்கள்” என்றாள் தமயந்தி. ஆடியில் நோக்கி காதோரம் தொங்கிய பொற்சரடு ஒன்றை சீரமைத்தபடி “தெய்வங்களை வானோக்கி கண்டுகொள்ளலாம். தான் வாழும் மண்நோக்கியும் கண்டுகொள்ளலாம். அறியாத ஆழங்களிலும் கண்டுகொள்ளலாம். வான்தெய்வங்கள் விழைவுகளை பெருக்குகின்றன. மண்தெய்வங்கள் பற்றை வளர்க்கின்றன. ஆழத்து தெய்வங்கள் அச்சத்தை எழுப்புகின்றன. பேரரசர்கள் பெருவிழைவுகளால் மட்டுமே ஆனவர்கள்.”
“நான் வானாளும் இந்திரனை மட்டுமே வழிபடுகிறேன்” என்றான் நளன். தமயந்தி “நான் நீங்கள் எத்திசை தேரவேண்டும் என சொல்லவில்லை. முடிவு உங்களுடையது” என்றாள். “நான் முடிவுசெய்து நெடுநாட்களாகின்றன. எனக்கு ஊசலாட்டமே இல்லை” என்றான் நளன். புன்னகையுடன் தமயந்தி எழுந்துகொண்டு “செல்வோம்” என்றாள்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 14
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 15
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 11
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-9
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-8
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 13
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 12
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-10
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-7
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-6
June 7, 2017
குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது இன்று!
மறைந்த கவிஞர் குமரகுருபரன் நினைவாக வழங்கப்படும் குமரகுருபரன் -விஷ்ணுபுரம் கவிதை விருது வரும் 10 ஜூன் அன்று கவிஞர் சபரிநாதனுக்கு வழங்கப்படுகிறது.
இடம் பீமாஸ் ஓட்டல் அரங்கம், நூறடி சாலை , வடபழனி [ மெட்ரோ ரயில்நிலையம் கீழே, SRM மருத்துவமனை எதிரே]
நாள் 10 ஜூன் 2017
நேரம் மாலை ஆறுமணி
வரவேற்புரை கவிதா ரவீந்திரன்
தலைமையுரை கவிஞர் தேவதேவன்
சிறப்புரை கவிஞர் மனுஷ்யபுத்திரன், அந்திமழை அசோகன், ஜெயமோகன்
விருது ஏற்புரை சபரிநாதன்
நன்றியுரை சௌந்தர் – விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்
அனைவரையும் அழைக்கிறோம்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது அழைப்பிதழ்
மறைந்த கவிஞர் குமரகுருபரன் நினைவாக வழங்கப்படும் குமரகுருபரன் -விஷ்ணுபுரம் கவிதை விருது வரும் 10 ஜூன் அன்று கவிஞர் சபரிநாதனுக்கு வழங்கப்படுகிறது.
இடம் பீமாஸ் ஓட்டல் அரங்கம், நூறடி சாலை , வடபழனி [ மெட்ரோ ரயில்நிலையம் கீழே, SRM மருத்துவமனை எதிரே]
நாள் 10 ஜூன் 2017
நேரம் மாலை ஆறுமணி
வரவேற்புரை கவிதா ரவீந்திரன்
தலைமையுரை கவிஞர் தேவதேவன்
சிறப்புரை கவிஞர் மனுஷ்யபுத்திரன், அந்திமழை அசோகன், ஜெயமோகன்
விருது ஏற்புரை சபரிநாதன்
நன்றியுரை சௌந்தர் – விஷ்ணுபுரம் இலக்கியவட்டம்
அனைவரையும் அழைக்கிறோம்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
பச்சைப்பாம்பும் சிவப்புக்கண்ணும்
மலேசியாவில் சுவாமி பிரம்மானந்தா அனைவராலும் முதன்மையான ஆளுமையாகக் கருதப்படுபவர். அவருடைய குருமரபு நீண்ட வரலாறுள்ளது. ராமகிருஷ்ண பரமஹம்சர், சிவானந்தர், சின்மயானந்தர், தயானந்த சரஸ்வதி என அவருடைய தொடர்ச்சியைச் சொல்லமுடியும் கெடா மாநிலத்திலுள்ள கூலிம் ஊரில் அவருடைய குருகுலம் ஆன்மிகப்பணியும் சமூகப்பணியும் செய்துவருகிறது. [உடனே இந்துத்துவா என ஆரம்பிப்பவர்களுக்கு, சுவாமி அவர்களை அ.மார்க்ஸே பாராட்டியிருக்கிறார்]
கூலிம் அருகே சுவாமி கட்டியிருக்கும் புதிய குருகுலத்தில் ஓர் இலக்கிய முகாமை நடத்தலாமென அவர் கருதினார். ஆகவே கொலாலம்பூரில் இருந்து நான் நாஞ்சில்நாடனுடன் நண்பர் ராவணன் வண்டி ஓட்ட கூலிம் கிளம்பினேன். வழியில் கேமரூன் மலையையைப் பார்த்துவிட்டுச் செல்வதாகத் திட்டம்.மாலையில் மலேசிய அமைச்சர் டத்தோ சரவணனைச் சந்தித்தோம். காலையுணவு அவருடன். மலேசிய அரசியல் சூழல், அவருடைய இலக்கிய ஈடுபாடுகள் குறித்து பேசினோம்.
கேமரூன் மலைக்குச் செல்லும் வழியில் மலேசியப்பழங்குடிகள் மூங்கில்குருத்து போன்றவற்றை வழியோரமாக விற்பனைக்கு வைத்துவிட்டு அமர்ந்திருந்தனர். மூங்கில்குருத்து சமைத்துச்சாப்பிட்டிருக்கிறேன். தாமரைத்தண்டு போலிருக்கும். இரண்டையும் சாப்பிடாதவர்களுக்கு கவிதை ஏதாவது எழுதித்தான் விளக்கவேண்டியிருக்கும்
கேமரூன் மலை மலேசியாவில் தேயிலை பயிரிடப்படும் ஒரே இடம். 1885ல் சர் வில்லியம் கேமரூன் என்னும் நில அளவையாளரால் அது வேளாண்மைக்குரியதாகக் கண்டடையப்பட்டது. அவர் பெயராலேயே அழைக்கப்படுகிறது.
இன்று ஊட்டியைப்போல ஒரு சுற்றுலாத்தலமாக கேமரூன்மலை மாறியிருக்கிறது. குறிப்பாக தோட்டத்தொழிலில் மிகமிக முன்னேறியிருக்கிறது. ரோஜா, ஸ்டிராபெர்ரி, மலைக்காய்கறிகள் போன்றவை மிக அதிகமாகப் பயிரிடப்படுகின்றன. தேயிலைத்தோட்டங்களும் உள்ளன. பெரும்பாலான கடைகள் சுற்றுலாவை நம்பியே அமைந்துள்ளன. மிதமான குளிர். அவ்வப்போது மழை.
நூறு வருடங்களுக்கு முன்னரே கேமரூன் மலையில் தமிழர்கள் குடியேறியிருக்கிறார்கள். மிகப்பெரும்பாலானவர்கள் கொங்குவேளாளக் கவுண்டர்கள். இந்த தொகுதியில் கவுண்டர்களே தேர்தலில் வெல்லமுடியும். இப்போதுகூட ஒரு கவுண்டர்தான் நாடாளுமன்ற உறுப்பினர். கொங்குமண்டலம் இட்ட முட்டை இது.
கவுண்டர்கள் இங்கே தோட்டம் தொழிலில் உச்சகட்ட வெற்றியை அடைந்திருக்கிறார்கள். உலகின் மிகப்பெரிய கவுண்டர்களில் ஒருசாரார் இங்குதான் இருக்கிறார்கள். நாங்கள் சில தோட்டங்களுக்குச் சென்று சேர்ந்தோம். மொத்த தோட்டமும் பசுமைக்குடிலுக்குள் அமைந்திருந்தது. அத்தனை செடிகளும் மண்ணிலிருந்து நாலடி உயரத்தில் மரத்தூள் நிறைக்கப்பட்ட கிண்ணங்களில் வளர்ந்தன. முழுமுழுக்க சொட்டுப்பாசனம். உரம் கலந்த நீர் நேராக வேருக்குச் சென்றுவிடும். தோட்டம் என்று பெயர், மண்ணுடன் எந்த தொடர்பும் இல்லை. இங்கிருந்து காய்கறிகள் சிங்கப்பூர் பாங்காங் ஹாங்காங் என உலகமெங்கும் ஏற்றுமதியாகின்றன
கேமரூன் மலையில் ஒருநாள் முழுக்க பேருந்தில் சுற்றிவந்து இடங்களைப் பார்த்தோம். தேனிவளர்ப்பு, தேனீர்வளர்ப்பு, மலர் வளர்ப்பு என விதவிதமான தோட்டங்கள். ஒரு தோட்டத்தில் கேமரூன் மலையின் பூச்சிகளையும் சிற்றுயிர்களையும் ஆராய்கிறார்கள். அங்கே ஒரு பச்சைப்பாம்பை தோளில் போட்டுக்கொள்ள கொடுத்தார்கள். அது என்னை நோக்கி முகத்தை நீட்டியது. சின்னவயதில் அது கண்ணைக்குத்தும் என்னும் நம்பிக்கை இருந்தது. அதற்கு அந்த உத்தேசம் இருப்பதுபோலத் தெரியவில்லை. வால் அமைதியிழந்து வளைந்தபடியே இருந்தது. கையில் எடுத்துப்பார்த்தால்கூட சருகு என்றே தோன்றும் ஒரு பெரிய பூச்சியை பூச்சி என நம்ப அரைமணிநேரம் பார்க்கவேண்டியிருந்தது
கொலாலம்பூரில் எனக்கு இடக்கண்ணில் சிறிய சிவப்பு இறங்கியது. கேமரூன் மலைக்குக் கிளம்பும்போது அது வலுத்தது. சொட்டுமருந்து வாங்கி கண்ணில் விட்டுக்கொண்டேன். மேலும் மேலும் உறுத்தல் வீக்கம் நீர்வழிவு. ஈரத்துணியால் ஒற்றியபடி சுற்றிவந்தேன்.
கூலிம் சென்றுசேர்ந்தபோது இன்னும் உறுத்தல். இடதுகண் ஓரளவு சரியாகிவிட்டிருக்க வலதுகண் பெரிதாக வீங்கி கலங்கியிருந்தது. கணிப்பொறித்திரையை பார்க்கவே முடியவில்லை. 29 அளவில் எழுத்தை வைத்தால்தான் தட்டச்சு செய்யமுடிந்தது. ஒவ்வொருநாளும் வெண்முரசு எழுதியாகவேண்டும். ஈரத்துணியால் ஒற்றியபடியே செய்யவேண்டியிருந்தது. ஒருமணிநேரம் ஆனதும் அரைமணிநேரம் ஓய்வு தேவை. இல்லையேல் திரையே நெளியத்தொடங்கிவிடும்.
ஊரிலிருந்து ஈரோடு கிருஷ்ணன், சக்தி கிருஷ்ணன், நரேன், செல்வராணி, சந்திரசேகர், ஈஸ்வரமூர்த்தி, நாமக்கல் வரதராஜன், மகேஷ் பாரதி இளங்கோ ஆகியோர் வந்தார்கள். ஒருநாள் கொலாலம்பூரில் தங்கிவிட்டு வந்திருந்தார்கள்.
கூலிம் இலக்கியவிழா மிகச்சிறப்பாக நடந்தது. நாஞ்சில் நாடன் இலக்கியப்படைப்பாக்கத்தை தன் சொந்த அனுபவம் சார்ந்து விளக்கினார். நான் இலக்கியவிமர்சன கோணத்தில் பேசினேன். கிட்டத்தட்ட நாள்முழுக்க பேச்சு. நடுவே கூலிமில் ஒரு மருத்துவரை இருமுறை சென்று கண்டேன். அவர் கண்களில் நோய்த்தொற்று என நோய் உயிர்முறி தந்தார். ஆனால் கண்கள் மிக அதிகமாக வீங்கி சிவப்பாகி நீர்வழியத்தொடங்கின. உரைகளை கண்ணீர் வழிய வழிய நடத்தவேண்டியிருந்தது.
விழாவின் இறுதி அரங்காக மலேசியப்படைப்பாளிகள் சீ.முத்துச்சாமி, கோ.புண்ணியவான், நவீன், யுவராஜன் ஆகியோரை அமரச்செய்து இந்திய வாசகர்கள் வினாக்கள் தொடுக்கும் ஒர் உரையாடல் நிகழ்ச்சி நடந்தது. மலேய இலக்கியம் பற்றிய ஒரு ஆய்வு அரங்காக அது அமைந்தது.
குமாரசாமி, புண்ணியவான், சுவாமி பிரம்மானந்தா
மறுநாள் டாக்டர் சிவா என்னும் கண்மருத்துவரைச் சென்று கண்டேன். என் கண்ணில் ஒவ்வாமைதான் என்றும் நோயுயிர்முறியை என் கண் எதிர்க்கிறது என்றும் சொன்னார். வெறுமே ஒவ்வாமையை விலக்கும் மருந்துக்களை அளித்தார். கண் ஓரளவு சரியாகியது. சிவப்பு குறைந்தாலும் உறுத்தலும் நீர்வழிதலும் நீடிக்கிறது.
கூலிம் இலக்கியவிழாவுக்கு பவா செல்லத்துரை தன் குடும்பத்துடன் வந்திருந்தார். ஷைலஜா, வம்சி. மானசி மூவரும் உற்சாகத்துடன் இருக்க பவா திருவண்ணாமலையை எண்ணிய ஏக்கத்துடன் காணப்பட்டார். கொலாலம்பூர் திருவண்ணாமலையாக இல்லாமலிருப்பது ஏன் என விளக்கலாமா என எண்ணினேன். கண்கள் ஒத்துழைக்கவில்லை. விழாவில் பவா இரு கதைகளைச் சொல்லி கதை என்பது வெவ்வேறுவடிவில் படைப்பூக்கத்துடன் மீளுருக் கொள்ளும் திறன்படைத்தது என்று காட்டினார்.
எனக்கும் நாஞ்சில்நாடனுக்கும் பவாவும் அவரது கொலாலம்பூர் உறவினரும் அங்குள்ள முதன்மையான ஓட்டலில் ஒர் இரவுணவு அளித்தனர். நோன்பு திறக்கும் மாதம் ஆதலால் பலவகையான உள்ளூர் உணவுகள். மூங்கிலில் அடைத்து வேகவைக்கப்பட்ட சோறு. இறைச்சி, மீன். மலேசியாவில் நோன்புமாதம் என்பது மாபெரும் உணவுக்கொண்டாட்டம். ஏழரை மணிக்குமேல் மொத்த மலேசியாவும் உணவகங்களுக்கு வந்துவிடுகிறது. வழக்கம்போல பவா எனக்கு பலவகையிலும் ஊட்டி எழுந்தபோது மூச்சுத்திணறியது.
கூலிம் இலக்கிய அமைப்பு சுவாமி அவர்களின் தலைமையில் மலேசிய மூத்த படைப்பாளியாகிய கோ புண்ணியவான், பேராசிரியர்கள் தமிழ்மாறன், குமாரசாமி ஆகியோரின் பங்களிப்புடன் நிகழ்கிறது. அவர்களால்தான் விழா ஒருங்கிணைக்கப்பட்டது. குமாரசாமி என்னை சலிக்காமல் மருத்துவரிடம் அழைத்துச்சென்றார். எனக்கே ஒருகட்டத்தில் அதுகுறித்து குற்றவுணர்ச்சி ஏற்பட்டது . குமாரசாமியின் இல்லத்திலும் புண்ணியவான் இல்லத்திலும் உணவருந்தினோம்.
திரும்பிவரும்போது என்னை விமானநிலையத்தில் நிறுத்திவிடுவார்களோ என அஞ்சினேன். தொற்றுநோய் அல்ல என டாக்டர் சிவா அவர்களிடம் ஒரு சான்றிதழும் வாங்கியிருந்தேன். ஆனால் சீனவம்சாவள்ப்பெண் மேலே விழிகளை தூக்கவே இல்லை. பிறர் நான் மலேய மதுக்களில் நீராடியிருப்பதாக நினைத்திருக்கக் கூடும். 6 ஆம்தேதி மாலை 330க்குக் கிளம்பி 5 மணிக்கு திருச்சி வந்தேன். விஜயகிருஷ்ணன் வீட்டுக்குச் சென்று தங்கி வெண்முரசு எழுதி வலையேற்றிவிட்டு நள்ளிரவு ஒன்றரை மணிக்கு நாகர்கோயில். வந்ததும் மீண்டும் வெண்முரசு. கண்ணீர் வழியத்தான்.
வீட்டில் அருண்மொழி இல்லை. திருவாரூர். அஜிதனும் நானும்தான். அவன் பகலில் விழித்திருக்கும் வழக்கமே இல்லை. மாலை மருத்துவரைச் சென்று கண்டேன். ஒவ்வாமை நீடிக்கிறது என மருந்துதந்தார். என்ன செய்கிறது என நாளை வந்து சொல்லும்படிச் சொன்னார். இப்போது கொஞ்சம் இடதுசாரிப்பார்வை வந்திருக்கிறது. நாலைந்துநாட்களில் சரியாகிவிடும்.
சபரிநாதன் கவிதைகள்- கடலூர் சீனு
இனிய ஜெயம்,
நமது கவிதை விவாதக் கூடுகைகளில் தொடர்ந்து பங்கு கொண்டும் தினமும் ஏதேனும் ஒரு கவிதையுடன், அது குறித்த கட்டுரை உடன், உறவாடிக்கொண்டிருந்ததன் பயன், கவிஞர் தேவதச்சன் அவர்களுடன் உரையாடுகையில் முழுமை கொண்டது என்பேன். அவருடனான உரையாடல் கவிதைகள் வாசிப்பு மீதான ”பிடி கிட்டிய ” தருணம்.
உள்ளே ஆணி அடித்து இறங்கிய முதல் பாடம் சும்மா ஓரிரு முறை ஒரு கவிதையை வாசித்து விட்டு புரியல என்று உதட்டை பிதுக்குவதோ புரிஞ்சது என்று கடந்து போவதற்கானதோ அல்ல கவிதை. ஒரு கவிமனம் ”பிறிதொன்றில்லா தனித்துவமான ஒன்றினை” காற்றில் இலங்கும் மகரந்தம் போல மொழியில் பொதிந்து கையளிக்கும் செயல்பாடே கவிதை. ஒரு கவிதை வாசகன் செய்ய வேண்டியது தனது அகம் ஏந்த அந்த மகரந்தச் சேர்க்கைக்காக காத்திருப்பதே.
உதாரணமாக பிரமிளின் ”பாதைதோறும் நிழல் வலைக் கண்ணிகள்” எனும் வரி. சும்மா நினைவுகளுக்குள் சிக்கி உழன்று கொண்டே இருந்த ஒன்று. நிழல் வலைக்கண்ணி என்பது பறவைகளைப் பிடிக்க நிழலில் தானியங்களை பரப்பி அதன் கீழே வலையை விரித்து வைக்கும் ஒரு உத்தி என மிக மிக பின்னால் விழுப்புரத்தில் ஒரு குறவர் வசமிருந்த அறிந்தேன்.
அதற்கும் மிக மிகப் பிந்தியே பறவைகளின் விரல்கள் குறித்து அறிந்தேன். பறவைகள் கிளைகளில் வந்து அமர இயல்பாக அதன் அனைத்து விரல்களும் பாதி வளையமாக அமைந்திருக்கும். அவற்றால் விரல்களை நீட்டி மடக்க இயலாது. பறவை தானியம் பொறுக்க தரை வந்துவெயிலில் சமதளத்தில் நிற்கவேண்டி அதன் விரல்கள் விரித்து தட்டை ஆகும். மீண்டும் அவை பறக்க எழுகையில் அதன் விரல்கள் மடங்கும். மடங்கும் விரல்கள் வலையில் சிக்கிக் கொள்ளும்.
பின்னொரு சமயம் விருப்பித் தேர்ந்து, இழைத்துக்கொண்ட அவமானத்தில் எரியும் அகத்துடன் அந்த கட்டிடத்தில் இருந்து வெளியில் வந்தேன். வன்மதியம், சிறு காற்றுமில்லா வெற்று வெயிலில் கட்டிடங்களும், மரங்களும், வாகனங்களும், சாலை தடுப்பரண்களும், அதன் நிழலில் அதுவே சிக்கி ஸ்தம்பித்து நின்றிருந்தன. எனது அகமும் புறமும் சிக்கி ஸ்தம்பித்த அந்த நொடியில் வந்து விழுந்தது பிரமிளின் வரி ”பாதைதோறும் நிழல்வலைக்கண்ணிகள் ” ஆம் ஆம் ஆம் என ஆயிரம் முறை அரற்றி இருப்பேன். அற்ப மானுடன் சிக்கி அலைக்கழிய அவன் பாதை எங்கும் கண்ணிகள், பேராசை, பெண்பித்து, வித விதமான நிழல் வலைக் கண்ணிகள். அவனால் சென்று அமராமல் இருக்க இயலாது. சென்றால் மீள வழி கிடையாது. ”பாதை தோறும் நிழல்வலைக் கன்னிகள் ”.
எனது கவிதை வாசிப்பை இவ்வாறு வகுத்துக் கொண்டேன். ஒரு நாளுக்கு ஒரு கவிதை. அந்த நாளின் கவிதை. குறிப்பிட்ட அனைத்து கவிதைகளையும் வாசிப்பேன். அது எழுந்து வந்த பின்புலம் உட்பட. அக் கவிதை சுட்டும் தனித்துவமான கணம் ”உள்ளே ” வரும் வரையில், அக் கவிதை சுட்டும் அக் கணம் பேசப்பட்ட வேறு சில புனைவுக் கணங்களை அக் கவிதையுடன் இணைத்து யோசிப்பேன். உணர்கொம்புகளை நம்பி காத்திருப்பேன். எல்லாவற்றுக்கும் மேல் எனக்குப் புரியாத, என் உணர்வு வட்டத்த்துக்குள் வராத கவிதைகளும் [ பெரும்பாலும் பலரும் பாராட்டும்] இருக்கும். ஒன்றும் செய்வற்றைக்கு இல்லை.
சபரி நாதன் கவிதைகளை அங்கொன்றும் இங்கொன்றுமாக இணையத்தில் வாசித்திருக்கிறேன். தற்போதுதான் தொகுதியாக கையில் எடுத்திருக்கிறேன்.
கொண்டு கூட்டி
கொள்ளமுயலுந்தோறும்
குழம்பிப் பொருள்மாறுமந்த சீரிளமைத் தேகம்
தளை தட்ட
துறைவிட்டகலாது மருகி நிற்கிறது
மல்லர்ப்பெறியாற்றின்
நீர்வழிப்படுவூம் எனது புணை.
என்ற மோகனரங்கன் கவிதையைத்தான் சொல்லவேண்டும் ஒரு வாசகனாக சபரிநாதன் கவிதையை தொகுதியாக அணுகுகையில் கிடைத்த அனுபவத்தை.
எனது வழமை போல தினம் ஒரு கவிதையாகத்தான் அணுகப் போகிறேன். இதில். , சபரிநாதனின் கவிதைகளை உள்வாங்க நமது கவிதை விவாத அரங்கு அளிக்கக்கூடிய அடிப்படையான தளம் போன்ற ஒன்றினை நண்பர் மணிகண்டனின் ஒளிகொள் சிறகு அளித்தது. அநேகமாக சபரிநாதனின் கவிதைகள் சாரத்தை, அழகியலை வகுத்து அளித்த முதல் கட்டுரையாக இது இருக்கக்கூடும்.
பின் சென்று அவர் தேவதச்சன் கவிதைகள் குறித்து பேசிய காணொளியை கண்டேன். உரையை விடுங்கள். கவிஞரை பாருங்கள். சபரிநாதன் அழகன். கம்பீரன். இசையமைப்பாளர் இளையராஜாவின் இடது கண் எப்போதும் ஒரு தீராத வியப்பை வெளிக்காட்டும் வகையில் விரிந்திருக்கும். மேடையில் இளையராஜாவையும், கவிஞர் தேவதேவனையும் அருகருகே காண்கயில் கண்டேன், தேவதேவனின் இடது விழியும் இளையராஜா போலவே வியப்பில் விரிந்த விழி. சபரிநாதனின் வலது விழி ஜிட்டு கிருஷ்ணமூர்த்தி வலது விழியை ஒத்தது. உருவிலும், உள்ளுறை தன்மை ஒன்றின் வெளிப்பாட்டிலும். ஜிட்டுவும் கவிதைகள் எழுதி இருக்கிறார் என நினைக்கிறேன். முதல் வாசிப்பிலேயே கவர்ந்த கவிதை விழி
விழி
அஸ்தமனம்-சாய்கதிர்கள் மெது மெதுவாக உருட்டி விரிக்கின்றன நிழற்பாய்களை.
வெண்ணிற இரவுகளின் நாயகனைப் போல நானும் அஞ்சுகிறேன்
‘எல்லோரும் எனை விட்டுப் போகிறார்களோ…’
இது மார்கழி. கருக்கலின் அடர்புதர் மறைவினின்று இரவு பாய்கையில் எனக்குத்
தோன்றுகிறது,
இப்போதிந்த மொத்த அந்தகத்தையும் நான் ஒருவனே குடித்தாக வேண்டுமென்று
ஆதலின் இருளில் மட்டும் பிரதிபலிக்கும் சொல்லை உச்சரிக்கிறேன்:தனிமை.
ஆயினும் இப்புராதன உடலோ விதிர்த்து, எனக்கெதிராய் காய் நகர்த்த,
இன்னும் இன்னும். . என விரிகிறது கண்மணி:உற்பவம்.
நிமிர்கையில் தென்படுவது
தொடுவான மலைத்தொடரின் வரைகோடு
பைய்யப் பைய்ய வெளிவருவன
மரங்கள், தெருக்கள், கோபுரங்கள், வீடுகள்
அம்மாக்கள், அப்பாக்கள், அக்கா தம்பிகள்
அணிற்பிள்ளைகள், கோழிக்குஞ்சுகள்……
எல்லோரும் என்னை விட்டுப் போகிறார்களே. . . வெண்ணிற இரவுகளின் நாயகன் போல புலம்பும் கவி மனத்தை சேர்ந்த எல்லோரும் ”பகலுடன் ” ”ஒளியுடன் ” இணைந்தவர்கள். பகலுடனும் ஒளியுடனும் இணைந்து எண்ணும் அனைவரும் போவதை விட தனிமைத் துயர் பிரித்துண்டா என்ன? இருளில் மட்டுமே பிரதிபலிக்கும் சொல் தனிமை. உச்சரிக்கப்பட்டதுமே உடல் விதிர்த்து எழுகிறது. இன்னும் இன்னும் என விரிகிறது கண்மணி. [ இரவு நாவலில் நாயகன் மெல்ல மெல்ல இரவுலாவி ஆக மாறும் பொழுது, இந்த சித்தரிப்பு விரிவாக வரும்]
நிமிர்கையில் தென்படுவது
தொடுவான மலைத்தொடரின் வரைகோடு
பைய்யப் பைய்ய வெளிவருவன
மரங்கள், தெருக்கள், கோபுரங்கள், வீடுகள்
துல்லியமான புறத்திலிருந்து துவங்கி,
அம்மாக்கள், அப்பாக்கள், அக்கா தம்பிகள்
அணிற்பிள்ளைகள், கோழிக்குஞ்சுகள்……
அகத்தில் முடியும் கவிதை. ஆசுவாசம் கொள்ளவைக்கும் கவிதை.
நியூ ஜம்போ சர்க்கஸ் கவிதை கம்பியில் நடக்க வேண்டும், மிருகங்கள் இரண்டு கால்களால் நடக்க வேண்டும். அந்த பிரயத்தனங்கள் மேல் மைய ஒளி பாய்ச்சப்பட வேண்டும். மக்கள் ”கவனிக்க ” இத்தனையும் வேண்டும். அத்தனை ”வித்தைகளும்” முடிந்து வெறித்த களத்தில் ஒருவராலும் ”கவனிக்கப்படாத” ”அதிசயம் ” அரங்கேறுகிறது. ஆம் மீண்டும் அங்கே புற்கள் முளைக்கின்றன. உயிர் என்பதைக் காட்டிலும் இப் புவியில் பெரிய அதிசயம் வேறில்லை. மின்மினி கவிதை முழுக்க முழுக்க உயிர் குறித்த கவிதையாகவே எனக்கு பொருள் பட்டது. பொருண்மயப் பிரபஞ்சத்தில் வந்து விழுந்த முதல் உயிர்த்துளி. ஆதி உயிர்த்துளி.
ஒரு மழைப் பூச்சியை அறிதல் கவிதை அளிப்பது ஒரு சொடுக்கும் அனுபவம். செத்து விட்டதாக அருகே சென்று புரட்டிப் பார்க்கையில் அந்தப் பாம்பு சட்ரென்று தலை தூக்கினால், உள்ளே ஒரு கணம் சொடுக்கும். அது உயிர்ப் பீதி அளிக்கும் சொடுக்கு. ஆனால் உணர் கொம்பும், ஒளிர்ச்சிறகும் கொண்ட பூச்சி, அதன் காலோ, உணர்கொம்போ ஒரு சொடுக்கின் வழி தனது உயிர் இருப்பை அறிவிக்கிறது. இந்த சொடுக்கு முற்றிலும் வேறானது. நமது ப்ரக்ஞயைக் கடந்து சித்தத்தை தீண்டும் சொடுக்கு இது. அந்தத் தீண்டலை வெற்றிகரமாக நிகழ்த்திக் காட்டிய கவிதை இது.
கவிஞனின் பிரார்த்தனை கவிதையின் இரண்டாம் பகுதி கவிஞன் மித்ரு தேவி வசம் பேசுகிறான். முதல் பகுதியில் தன்னை ஆக்கிய வாக்தேவி இடம் ப்ராத்திக்கிறான்.
கோபுர உச்சியில் நிற்கும் குருடன் உன் நிசப்தத்தைக் கேட்கிறான்
என்னையும் அவ்விடத்திற்குக் கூட்டிச் செல். ஆனால்
பார்வை எஞ்சுகிற வரை மண்ணில் பாதம் இழுபடுகிற வரை
என்னோடு பேசு.
வலி மிகுந்த வரிகள். எல்லா படைப்பாளிகளும் இறுதியில் கோபுரத்தின் மேல் நிற்கும் அந்தகன்தானா ? தந்தையர் சென்ற அதே கோபுரசிகரத்துக்கு தனயர்களும் செல்ல விழைவது, பார்வை எஞ்சும்போதே, மண்ணில் பாதம் தோயும் போதே, அவள் குரல் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, போதும் இதற்கு மேல் சொல்ல இயலாது.
***
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
வெற்றியின் நிகழ்தகவுகள்
அன்புநிறை ஜெ,
கண்களின் வலியும் செம்மையும் குறைந்திருக்கிறதா.
மூன்று நாள் வெண்முரசை எட்டிப்படித்துக் கொண்டிருக்கிறேன்.
‘வெற்றி’ தொடங்கி வைத்த விவாதம் நீர்க்கோலத்திலும் தொடர்ந்தது போல உணர்ந்தேன் – //திட்டமிட்டு ஓர் ஆண் தன்னை ஒரு பெண்ணுள்ளத்தில் செலுத்திவிடமுடியுமென்றால் பெண் உள்ளமென்பது வென்று கைகொள்ளத்தக்க வெறும் பொருள்தானா – தமயந்தியின் எண்ண ஓட்டம்//
நேற்று பினாங் சென்று சேரும் வரை சரணும் கணேஷும் நானும் இக்கதையை (வெற்றி) விவாதித்துக் கொண்டிருந்தோம்.
இக்கதைக்குள் வேறு சில கதைகள் நிகழ்தகவுகளாக (probabilities) ஒளிந்து கொண்டிருக்கின்றன.
நமச்சிவாயத்தின் மனைவி லதாவின் மனப்போக்கை நாம் சிறு சிறு வெளிப்பாடுகள் வழியாக மட்டுமே உணரமுடிகிறது – அதுவும் நமச்சிவாயத்தின் பார்வை வழியாக. தனக்கெனத் தனி விருப்புகளேதும் அற்றவளாக, எப்போதும் அடங்கிப் போக முனைபவளாகவே அவரளவில் அவரரிந்த மனைவி. எனில் ரங்கப்பருடனான பந்தயத்திற்கு பிறகு, அதுவரை தனது இருப்பு பொருட்படுத்தப்படாத ஒரு வாழ்வில், காரணங்களற்ற எரிச்சலும் வசையும் பொழியும் கணவனையும், கரிசனமும் கண்ணியமும் காட்டும் ஒரு பெரிய மனிதரையும் ஒன்றாகக் காண நேரிடுகிறது.
ரங்கப்பர் குறித்தும் அவர் திட்டம் குறித்தும் அவளிடம் கணவர் கூறாவிட்டாலும் கூட அவளை ரங்கப்பரோடு படுக்கத் தயாரனவள் போன்ற வசைகள் வாயிலாகத் தன் கணவனின் அகச்சிக்கலை அவள் மனம் உணர்ந்து கொண்டேதான் இருக்கும். அவள் இக்கதையின் ஆண்கள் நம்புவது போல உலகமறியாத பேதையாக இருப்பினும், தன் துணையின் வாயுரைக்காத குறிப்புகளை முன்னமே அறிந்து நடக்கும் திறன் உடையவள் என்பதை நமச்சிவாயத்தின் வாயிலாக முன்னரே அறிகிறோம். எனவே ஜமீன்தார் பெயரும் வருகையும் நமச்சிவாயத்தில் ஏற்படுத்தும் நிலைகொள்ளாமையும் பதட்டமும் அவள் உணர்ந்தே இருப்பாள். அந்நிலைகொள்ளாமையிலும் அவளை ரங்கப்பரோடு பழகும் வாய்ப்புகளை மேலும் மேலும் அமைத்துக் கொடுக்கும் அவளது கணவனின் ஒரு நுண்ணிய அகநாடகத்தை ஏதோ ஒரு வகையில் அறிந்தே அவளும் பங்கு கொள்கிறாள். மகனது உடல்நிலை என்ற பெரும் காரணம் இருப்பினும், ரங்கப்பருடன் மருத்துவமனை செல்லும்போது நிகழ்பவற்றை அன்றாடம் ஒப்பிப்பது போல தன் கணவரிடம் கூறிக் கொண்டே மெல்ல மெல்ல ஒரு வகையான விடுதலையை அடைகிறாள்.
என்றுமே ஏதோ ஒரு வகையில் எல்லை மீறுபவர்கள், தங்களது மீறல் தனது வேலிகளுக்கு மேலோட்டமாகவேனும் தெரியும் என்ற நிலையில் அடைவது போன்ற ஒரு மனவிடுதலை. யாரும் அறியாத மீறல் எனும் இறுக்கம் தளர்ந்து,
மனதளவில் நிகழும் கட்டுக்களின் முறுக்கவிழ்ப்பாகவே இருக்கும்.
பின்னர் மகனது உயிர்ப்போராட்ட நாளில் உச்சதருணத்தில் ரங்கப்பர் லதாவுக்கு இடையில் நிகழ்ந்தது என்ன என்பது கதைக்குள் இல்லை. அங்கே ஒரு கதை சில சாத்தியங்களோடு காத்திருக்கிறது.
1.கடமைகளின் அழுத்தத்தில் உணர்வுகளின் உச்சத்தில் ரங்கப்பரோடு சென்ற லதாவிடம் அந்தப் பந்தயம் குறித்து ரங்கப்பர் கூறியிருக்கலாம். அவளை சூதில் பணயம் வைத்த தருமனை அவளது மரியாதைக்குரிய அர்ஜுனன் முற்றாகக் கவரும் இடமாக அது இருந்திருக்கலாம். அச்சாத்தியத்தின் நீட்சியில் அந்த ஐந்து லட்சமும், அதன் பிறகு நமச்சிவாயம் கொள்ளும் புதுப்பணக்கார மோஸ்தர்களும் அவள் மனதுக்குள் அடக்கிய இளிவரலோடு ஒரு துளி விஷத்தோடு காலம் முழுவதும் பார்த்திருந்த வாய்ப்பு இருக்கிறது. அந்த விஷத்தையே தனது இறுதி நொடியில் நமச்சிவாயத்தின் கண்டத்தில் நிறுத்திவிட்டுச் செல்கிறாள்.
அன்று மருத்துவமனையில் மகனிருக்க, நமச்சிவாயத்தின் பந்தயம் குறித்து ரங்கப்பர் குறிப்பிட்ட பின்னர் அவள் கொள்ளும் மனவிலக்கமும் அதிர்ச்சியும் காரணமாக அவளுக்கும் ரங்கப்பருக்கும் அன்று உண்மையில் உறவென ஏதும் நிகழாதிருக்கவும் சாத்தியம் நிறைய உண்டு. அந்த சாத்தியத்தை நீட்டிப் பார்த்தாலும் அர்ச்சுனன் தருமனை மனதளவில் வென்றதும், அவளது இறுதி நஞ்சாக அது வெளிப்படுவதும் உகந்த முடிவே.
நமச்சிவாயம் கதையின் மைய நாயகனாக வருபவர். எதையும் சற்றுப் புராணம் கலந்து சொல்லும் தன்மை கொண்டவர். அவரும் அன்றாடம் இயங்கும் அவரது கர்ம மணடலத்தில் பெரும் பணக்காரர்களால் பொருட்படுத்தப்படாதவர். அவர்கள் மேல் எல்லாம் அவருக்கு ஏற்படாத ஒரு பொறாமை அவரை சமமாக நடத்தும் ரங்கப்பர் மேல் ஏற்படுவதும் மனித இயல்பே. ஆணவம் கொண்டவர்களை அவர்களது சமூக நிலை கருதி அப்படியே ஏற்றுக்கொள்பவர்கள், அம்மேல்தட்டுக்குள் தங்களை சமமென நடத்துபவர்களால் நுண்மையாக எங்கோ சீவப்பட்டு வஞ்சம் கொள்வதைக் காணலாம்.
ஒருவகையில் ரங்கப்பர் போல ஆக விரும்பும் கனவு அவரிடம் வெளிப்பட்டுக் கொண்டேதான் இருக்கிறது. தொண்ணூற்றாறு வயதிலும் தொடரும் ப்ளாக்லேபிள் ரசனை அதன் ஒரு அடையாளம். அப்பந்தயம் நமச்சிவாயம் பின்னர் உணர்வது போல ஆணவத்தின் ஒரு உச்சதருணம்.
எனினும் ஐந்து லட்சத்துக்குத் தன் தெருவில் இருக்கும் எந்தப் பெண்ணும் வருவாள் எனும் அவரது எண்ண ஓட்டம் அவருக்குள் முன்னரே இருக்கும் ரங்கப்பர் தரப்பையே காட்டுகிறது. ஐந்து லட்சத்துக்கான சாத்தியங்களையும் ஒருவேளை அவர் தோற்றாலும் பெறக்கூடிய பணவரவுகளையும் எண்ணும்போதும், பென்ஸ் கார் தேவை என்று ரங்கப்பர் கூறியதும், மொத்த எரிச்சலும்போய் அவர்மேல் பிரியம் வந்தது எனும் இடத்திலும் விலை போவது நமச்சிவாயம்தான்.
தன்னைப் பொருட்படுத்தாத அண்ணன் குடும்பத்தின் பதற்றத்தை ரசித்து ஐந்தாயிரத்தை இருபதாயிரம் எனச் சொல்லும் அவர் மனநிலை காட்டுவது – உண்மை எதுவாக இருப்பினும் சமூகத்தின் பார்வைக்கு மட்டுமே அவர் கொடுக்கும் மதிப்பைக் காட்டுகிறது. மனைவி திரும்பி வந்தபிறகு தான் தோற்றுவிட்டதாக முடிவு செய்து கொள்ளும் நமச்சிவாயம், பந்தயத்தின் இறுதியில் ரங்கப்பர் தான் தோற்றுவிட்டதாகக் கூறித் தரும் ஐந்து லட்சத்தை பெற்றுக்கொள்ள முடியாத ஒரு தருணத்தில் சில நிமிடங்கள் நிற்கிறார். எனில் சமூகத்தின் முன் இன்னும் முகத்தை இழக்காதவரை அது வெற்றியே என அதைக் கடந்து அப்பணத்தை மூலதனமாக்கி வாழ்வில் பொருளாதார ரீதியாக உயர்கிறார்.
அதன் பிறகான நமச்சிவாயம் – லதா வாழ்க்கையோ, ரங்கப்பர்-நமச்சிவாயம் சந்திப்புகளோ நமக்குக் கதையில் இல்லை. எனில் அவருக்கும் தனது நுட்பமான தோல்வி தெரிந்தே இருக்கும். மாமலரில் வருவது போல, புறக்கண்களுக்குப் பெரும் வெற்றிகளின் உச்சத்தில் நிற்கும் தேவயானி, தனது அடிமை நிலையை முற்றிலும் ஏற்றுக்கொண்டுவிட்ட சர்மிஷ்டையை அசோகவனியில் கண்டதும் உணரும் அம்முள்முனை – ஏதோ தானறியாத தளத்தில் தன்னை முற்றிலும் வென்று விட்டாள் சர்மிஷ்டையெனக் கண்டுகொள்ளும் அம்முள்ளை லதாவிடமோ ரங்கப்பரிடமோ நமச்சிவாயம் உணர்ந்து கொண்டேதான் இருந்திருக்கமுடியும். ஏதும் நிகழாதது போல உலவும் நம்ச்சிவாயத்தை உறங்குவது போல் நடிப்பவரை எழுப்புவதற்காக லதா தனது அந்திமத்தில் கூறியிருக்கலாம்.
இறுதியாக ரங்கப்பரின் தரப்பு. மிகுந்த தன்னம்பிக்கையோடு இறங்கி விளையாடும் அம்மனிதர் கோமளவல்லி போலல்லாது லதாவிடம் உணர்வுகளால் நெருங்குகிறார். அதனால்தான் மூன்று மாதம். எனில் உணர்வுகளால் ஆடப்படும் ஆடல் ஆடுபவனுக்கும் எதிர்விசையளிக்கும். எந்தப் பெண்ணையும் அவளது தன்மானம் புண்படாது அவள் விரும்புவதைத் தரவேண்டும் எனும் அவரது சித்தாந்தம் காரணமாகவே, இங்கு வெளிப்படையாக நமச்சிவாயத்தை வெற்றி அடைந்தவராக சமூகத்துக் காட்டுகிறார். அது அப்பந்தயத்தில் வெற்றி பெற அவர் கொடுக்கும் விலை. இந்தப் பெண்ணேனும் தோற்று விடக்கூடாது என்று விழைவதும் பின்னர் அதுவும் சரிந்து விழுகையில் தான் அழுதிருப்பதாகவும் கூறும் ரங்கப்பர், உண்மையில் அப்படி ஒரு பெண்ணை லதாவில் கண்டடைந்திருக்கவும் கூடும். அது அவரது பெண்கள் குறித்த சித்தாந்தத்தின் தோல்வியாக இருப்பினும், எதைத்தான் நம்புவது என ஏங்கும் மனதுக்கு வாழ்வின்மீது ஆதாரத்தைக் கொடுத்த லதாவின் வெற்றியாக இருக்கலாம்.
கதையைப் படித்ததும் முதலில் தோன்றியது – இது பெண்ணின் பலவீனம் குறித்த கதையல்ல, மானுடனின் பலவீனங்கள் குறித்த கதை என்பதே. எவருக்கும் ஓர் விலை அல்லது எல்லை உண்டு, அதையே வாழ்க்கை சோதிக்கிறது. அவ்வண்ணமெனில் அப்படியே எழுதியிருக்கலாமே, ஏன் பெண் என்பவள் எளிதில் வசப்படுபவள் என்று எழுதவேண்டும் என்ற கேள்விக்கு – ஆம் அதுவும் சாத்தியமே இக்கதையில் அது பெண்ணாக நேர்ந்திருக்கிறது என்பதே பதிலாகத் தோன்றுகிறது.
மிக்க அன்புடன்,
சுபா
***
அன்புள்ள ஜெ.
படித்து முடித்தவுடன் எழுத நினைத்தேன். மடிக்கணினி பழுதாகி, அதை சரி செய்ய இவ்வளவு நாள்..
பல தளங்களில் இயங்குகிறது என நினைத்தேன். பலர் முக்கியமானவைகளை எழுதி விட்டார்கள். சுபா அவர்களின் கடிதம் வேறொரு கோணத்தில் இருந்தது. நான் எதிர் பார்க்கவில்லை. எனக்கு தோன்றியது -
கண்ணியம் கருணையுடன் சேர்ந்த அதீத போட்டி (விளையாட்டு?) மனப்பான்மை, ரங்கப்பரை ஒரு வெல்ல முடியாத (அசுரன்?) வடிவமாக்கி விட்டது. எனினும், வெல்ல முடியாதவனின் கருணை அல்லது விட்டுக்கொடுக்கும் மனப்பான்மை இல்லாமல்… தெய்வத்தாலும் ஆகாது வெற்றி .. எனினும் முயற்சி தான் செய்து பார்க்க வேண்டும்.. :)
ரங்கப்பர் தன்னளவில் வெற்றி பெற – வெளியுலக தோல்வியை அறிவிக்க வேண்டும். எனினும், பிறரின் கையறு நிலையில் பேரம் பேசுவது, அவர் இது வரை தோற்றுவித்த பிம்பத்திற்கு நேர் எதிர்மாறான ஒரு மாற்றுரு. அந்த நிலையே கூட அவரது முடிவை கூட மாற்றி இருக்கலாம். வெற்றிக்கு அருகே உள்ள வெறுமை. ஒரு அபத்தம்.
(நிஜ) பாகுபலியின் கதை போல. அமெரிக்கன் பியூட்டி திரைப்படத்தில் ஒரு இளம்பெண்ணை நாடி தன்னை மாற்றிக் கொள்ளும் ஒரு நடுத்தர வயதினன் – அவளை நெருங்கும் நேரம், திடீரென அபத்தத்தை உணர்வது போல.
ரங்கப்பரின் வார்த்தைகளை கவனிக்கலாம் – என் தீவிரம்தான் எனக்கு சில உயர்வான விஷயங்களைக் கற்றுத்தந்தது…. எனக்கு ஒரு நம்பிக்கை வந்திருக்கிறது. அதற்காக நான் நமச்சிவாயத்திற்கு நன்றி சொல்லவேண்டும் – அவர் சொல்ல வருவது என்ன?
எதை நாம் கட்டுப்படுத்தி வெல்கிறோம் என்று நினைக்கிறோமோ அதுவே நம்மை ஆள்கிறது – என்பதா? மரப்பந்து விளையாட்டை – வண்ணக்கடல் விவரணம் போல – திடீரென பந்து நம்மை ஆட்டுவிப்பது போல
லதா ஏன் அதை இறக்கும் தருவாயில் சொன்னாள் ? எனக்கும் தோன்றியது. மதுசூதன் கூறியது போல வஞ்சமாக இருக்கலாம். அவள் சொல்லாதிருந்தால்.. அது சுவாரசியம்.. அவள் சொல்வதே ஒரு பொய்யாக இருந்தால் .. அது இன்னும் சுவாரசியம். ஜப்பானிய திரைப்படம் ரோஷோமோன் ஞாபகம் வந்தது.
லதாவிற்கு தெரியாமல் இருக்கும் என்றும் எனக்கு தோன்றவில்லை. முதிரா வயதில் புகை பிடித்து விட்டு மெல்லும் மென்தால் மிட்டாய்கள் மூலம் புகை பிடிக்கும் வழக்கத்தை பெற்றோரிடம் மறைப்பது போல. பெற்றோர்களுக்கோ கட்டாயமாகத் தெரியும். லதா ஊகித்து இருப்பாள்.
குழந்தைக்காக – என்பது லதாவிற்கு மீட்சி தரப்போவதில்லை. வெளியே சொல்லப்பட வேண்டியது அவரது தோல்வியையே என்கிற சூழ்நிலைக்கு ஒப்புக் கொள்ள நினைத்த மாத்திரம் ரங்கப்பர் மீட்சி அடைந்து விட்டார்.
தவிர.. சூதின் தன்மை. ஊழ் எப்படி வெகு விரைவாக காய்களை நகர்த்துகிறது. திடீர் தன்னம்பிக்கை அளிக்கிறது. எல்லாவற்றையும் இழக்கும் தருணத்திலும் – இதோ – எல்லாவற்றையும் மீட்டு விடுவேன் என்கிற வேகம் – எந்த அறிவுரையையும் ஏற்காத நிலை – கலி புருஷனோ?
தேவகி சித்தியின் டயரியில் ஒரு பெண். வெற்றியில் ஒரு பெண்.
தற்போதைய சூழ் நிலையில் – பெண் (அல்லது மனைவி) என்பதால் வெற்றி கதைக்கு ஒரு சில சிக்கல்கள் தோன்றுகின்றன. அதனை மற்ற வாசகர்கள் கவனித்து விட்டார்கள்.
காகேமூஷி ஜப்பானிய என்கிற திரைப்படத்தில், போலியாக ஊடுருவும் அரசனை கண்டு கொள்வது ஒரு குதிரை தான். மகனோ மகளோ, நண்பனோ, ஒரு செல்லப் பிராணியோ, மனதிற்கு உகந்த பொருளாக கூட இருக்கலாம். சூதில் வைத்தவுடன்.. இழக்க ஆரம்பித்து விடுகிறோம். மீட்டு எடுத்தாலும் கூட.. முன் போல் இருப்பதில்லை உறவுகள்.
பன்னிரு படைக்களம் .. மீண்டும் .. வேறொரு சமயம் .. வேறு சில பாத்திரங்கள் என்றும் தோன்றியது.
ஜப்பானிய உழவர் பழமொழி – போரில் வெல்வது எவரும் இல்லை..
பந்தயத்திலும் .. சூதிலும் ..
அன்புடன்
முரளி
***
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
சினிவா ஆச்சிபி
வணக்கம்
நைஜீரீய எழத்தாளர் ச்சினுவா அச்சேபே யின் இரண்டு கதைகளை மொழியாக்கம் செய்துள்ளேன். ஒரு கதை சொல்வனத்தில் வெளியாகியுள்ளது. இரண்டாவதை என் தளத்தில் வெளியுட்டுள்ளேன்
உங்கள் பார்வைக்கு
சதீஷ் கணேசன்
***
அன்புள்ள சதீஷ்
நேர்த்தியான வாசிப்பனுபவம் அளித்த மொழியாக்கம். தொடர்ந்து மொழியாக்கங்கள் செய்ய வாழ்த்துக்கள். சினுவா ஆச்சிபியின் Things Fall Apart, தமிழில் என்.கே.மகாலிங்கம் [கனடா] மொழியாக்கத்தில் காலச்சுவடு வெளியீடாக ‘சிதைவுகள்’ என்னும் தலைப்பில் வெளியாகியிருக்கிறது
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 15
14. அணிசூடுதல்
“நெடுங்காலம் காத்திருந்து அடையப்பட்ட மணவுறவுகள் பெரும்பாலும் நிலைப்பதில்லை” என்று பிங்கலன் சொன்னான். “ஏனென்றால் மானுடர் அறியும் காலமென்பது இழப்புகளின் அறுபடா தொடர். உலகியலில் இழப்புகளைக் கொண்டுதான் பெறுபவை அளவிடப்படுகின்றன. இங்கு ஒருவன் பெறுவது எதுவாக இருப்பினும் அது இழந்தவற்றுக்கு ஈடல்ல. ஏனென்றால் இழந்தவை வளர்கின்றன. பெறுபவை சுருங்குகின்றன.” தருமன் “தவம் என்பது காத்திருப்பது அல்லவா?” என்றார். “ஆம், தவமிருந்து பெறவேண்டியது இவ்வுலகு சாராததாகவே இருக்கவேண்டும். பெருநிலை, மெய்யறிவு, மீட்பு. இங்கு எய்துவனவற்றை தவமிருந்து அடைந்தவன் ஏமாற்றத்தையே சென்றடைவான்.”
சற்றுநேரம் அவர்கள் தங்கள் எண்ணங்களை தொடர்ந்தவர்களாக தலைகுனிந்து அமர்ந்திருந்தனர். தருமன் மணலில் சிறு குச்சியால் ஏதோ வரைந்து அழித்தபடி இருந்த திரௌபதியை நோக்கினார். அவள் கன்னம் அப்பால் ஓடிய ஓடையின் நீரொளியில் மெல்லிய அலையசைவு கொண்டிருந்தது. இமைசரிந்த விழிகளின் நீர்மை மின்னியது. பிங்கலன் “பன்னிரு ஆண்டுகள் நளன் தமயந்திக்காக தவமிருந்தான் என்கின்றன கதைகள்” என்று தொடர்ந்தான். “தன் பதினைந்தாவது அகவையில் அவன் அவளைப் பற்றி அறிந்தான். இருபத்தேழாம் அகவையில் அவளை மணத்தன்னேற்பில் கைப்பற்றி அழைத்து வந்தான்” என தொடர்ந்தான்.
தமயந்தி நளனைவிட எட்டாண்டு மூத்தவள். பதினெட்டு ஆண்டுகள் அவள் அரசியென ஓர் அரியணையில் அமர்வதற்காக காத்திருந்தாள். பீமகரின் அவையில் அவளே அரசியைப்போல் அமர்ந்து அரசுநடத்தினாள். அவை எண்ணுவதற்கு முன்னரே எண்ணவேண்டிய அனைத்தையும் எண்ணிக் கடந்து முற்றுச்சொல்லுடன் அமர்ந்திருப்பாள் என அமைச்சர் அறிந்திருந்தனர். பாரதவர்ஷத்தின் பெருநிலவிரிவை ஒற்றை விழியசைவால் ஆளும் ஆற்றல்கொண்டவள் என கவிஞர் பாடினர். படைநடத்தவும் புரம்வென்று எரிபரந்தெடுக்க ஆணையிடவும் அவளால் இயலுமென்றனர்.
அவள் பதினெட்டாண்டு அகவை முதிர்ந்து மணநிலை கொண்டபோது அவளுக்கென வரும் மாமன்னர் யார் என்ற பேச்சே விதர்ப்பத்தில் ஓங்கி ஒலித்தது. அதற்கேற்ப வங்கமும் கலிங்கமும் மாளவமும் அவந்தியும் அவளை பெண்கோரின. மகதம் முன்னெழுந்து வந்தபோது பாரதவர்ஷத்தை ஆளவிருக்கிறாள் என்றே அவைக்கவிஞர் பாடினர். ஆனால் ஒவ்வொரு மணமுயல்வும் பிறிதொன்றுடன் முட்டி அசைவிழந்தது. ஒவ்வொரு ஏமாற்றமும் நகரில் அலரென்றாகி அணைந்து மீண்டும் ஒரு எதிர்பார்ப்பென்றாகியது. என்ன நிகழ்கிறதென்றே எவருக்கும் புரியவில்லை. அரசியல்சூழ்ச்சியா, கோள்கள் கணிப்பை கடந்தாடுகின்றனவா? தெய்வங்களின் சூழ்ச்சியேதானா?
பெருநிலத்தை உரிமைகொண்ட கன்னியை கைத்தலம் பற்ற பேரரசர்கள் அனைவருமே விழைந்தனர் என்பது மெய். அவ்விழைவை கண்டமையாலேயே அவர்களின் அரசியரும் அவ்வரசியரின் குலங்களும் அம்முயற்சியைக் கடந்து எண்ணி வருவதை கணித்து அஞ்சினர். தமயந்தி எவருக்கு அரசியானாலும் அந்தக் கோலும் கொடியும் அவளாலேயே ஏந்தப்படுமென அவர்கள் அறிந்திருந்தனர். அவளை பிறிதொரு மாமுடிமன்னர் கொள்ளலாகாதென்பதில் ஒவ்வொரு மாமன்னரும் கருத்தூன்றினர். அவள் மேல் மாமன்னர்கள் குறி கொண்டிருக்கிறார்கள் என்ற பேச்சால் சிறுமன்னர்கள் ஒதுங்கிக்கொண்டனர்.
காத்திருக்கையில் பெண் பெருகிக்கொண்டே இருக்கிறாள். அவளுக்காக இழந்தவையும் ஆற்றியவையும் அவள் மதிப்பென்றாகின்றன. விழைபவன் அவளுக்காக தன்னை உருமாற்றிக்கொண்டே இருக்கிறான். தான் என பிறந்தவையும் தன்னவை என உணர்ந்தவையும் தன்னிலை என ஆனவையும் ஆன அனைத்தும் அவ்வண்ணம் உருப்பெற்றபின் அவளன்றி அவனுக்கு உலகமென்று ஒன்றில்லை என்றாகிறது. தன் குடிக்குறிகளையும் குலதெய்வத்தையும் அவளுக்காக மாற்றிக்கொண்ட நளன் பன்னிரு ஆண்டுகள் அவளை அன்றி பிறிதொரு பெண்வடிவை எண்ணியதுமில்லை. அவன் எண்ணங்களும் உணர்வுகளும் மட்டுமல்ல நோக்கும் சொல்லும் அசைவுகளும் கூட அவளுக்காகவே திரண்டிருந்தன.
அவன் பிறிதொன்றிலாதோனாக இருந்தான். அவளுடைய ஓவியத்திரைகளுடன் வாழ்ந்தான். நோக்கப்படுகையில் அழகாகாத பொருளென ஏதுமில்லை புவியில். விழைவுகொள்கையில் அவை பேரழகு கொள்கின்றன. முனிவர்களே, பொருளென இங்கு வந்து சூழ்ந்துள்ளது நாம் என்றுமறியா பிறிதொன்று. அது தன் முழுமையில் தான் நிறைந்து அமர்ந்துள்ளது. விழையும் மானுடன் அதன் தவத்தை தொட்டு எழுப்புகிறான். அது விழித்தெழுந்தால் கணம் தோறும் வளர்ந்து பேருருக்கொண்டு தானே உலகென்றாகி சூழ்ந்துகொள்கிறது. நம்மை ஒக்கலில் வைத்துக்கொள்கிறது. தன் உடலில் ஓரு சிறுநகையென சூடிக்கொள்கிறது.
தமயந்தி தவமிருந்தது மணிமுடிக்காக. சந்திரகுலத்துப்பேரரசி தேவயானியின் நாளில் பிறந்தவள். இந்திராணியின் மண்ணுரு. நினைவறிந்த நாள் முதல் அவள் தன் வலப்பக்கத்தில் ஒரு பேரரசனை உணர்ந்துகொண்டிருந்தாள். அவள் வளருந்தோறும் அவ்வுருவம் மாறிக்கொண்டிருந்தது. முதன்முதலாக கலிங்க இளவரசன் அருணவர்மனின் ஓவியத்தை பார்த்தபோது ‘இவனா?’. என்ற எண்ணமே எழுந்தது. அத்தனை ஷத்ரிய இளவரசர்களையும்போலத்தான் அவனும் இருந்தான். உடைவாளை உறையுடன் ஊன்றியபடி அணிமுடி சூடிய தலையை மிடுக்காகத் திருப்பி. குடிப்பிறப்பின், படைப்பயிற்சியின், செல்வத்தின், இளமையின் நிமிர்வு. நிமிர்வுக்கு அப்பால் அவனிடம் ஒன்றுமில்லை. அணிகலன்களை சற்றுநேரம் கூர்ந்து நோக்கினால் உருவாகும் விழிவெறுமையை அடைந்தாள்.
பின்னர் அந்த ஓவியத்தை அவள் நோக்கவே இல்லை. ஆனால் அந்த முகத்தை நினைவில் மீண்டும் மீண்டும் எழுப்பிக்கொண்டாள். தன் கற்பனையைத் தொட்டு அதை மீட்டி உயிர்கொடுத்தாள். ஏதோ ஒரு தருணத்தில் அவன் விழிகள் புன்னகை சூடின. “நீ ஓரு ஆண். அரசனென முடிசூடி அமரவேண்டியவன்” என்று அவள் அவனிடம் சொன்னாள். “நீ எனக்கு அளிக்கவிருப்பவற்றால் எனக்குரியவன் ஆகிறாய். முற்றளிக்கையில் நீ நிறைவுகொள்வாய்.”
மறுநாள் அவளிடம் அன்னை கேட்டபோது “ஓர் அரசனை நான் மணமுடித்தாகவேண்டும் என்பது நெறி. அவன் உருவப்பிழையோ குடிக்குறைவோ அற்றவனாக அல்லாமலிருப்பின் வேறென்ன நோக்கவேண்டும்?” என்றாள். அன்னை அவள் சொல்வதை புரிந்துகொள்ளாமல் நோக்க “இவனை ஏற்பதில் எனக்கு மறுப்பில்லை. அரசர்களில் பிறிதொரு இயல்புடையவன் இல்லை” என்றாள். அன்னை சினத்துடன் “அத்தனை கன்னியருக்கும் உரிய ஆணவம்தான் இது. இளமையில் தங்களை விண்ணிறங்கி மண்ணில் நின்றிருக்கும் தேவகன்னியரென எண்ணிக்கொள்கிறார்கள். அத்தனை ஆண்களையும் சுட்டுவிரலால் தட்டி வீசுவார்கள். அவர்கள் மண்ணிறங்க சற்று காலமாகும்” என்றாள்.
அவள் புன்னகையுடன் “நான் தட்டிவீசவில்லை, அன்னையே” என்றபின் எழுந்துகொண்டாள். அன்னை சினம்கொண்டு “அமர்ந்து பேசு… நீ அரசி அல்ல. நீ சொல்வதை சொன்னபின் பேச்சு முடிந்துவிட்டது என எழுந்து செல்ல. நான் அரசி, தெரிந்துகொள்” என்றாள். தமயந்தி மீண்டும் அமர்ந்துகொண்டு “சரி, அப்படியென்றால் நீங்கள் சொல்லுங்கள்” என்றாள். “என்ன சொல்ல? நீதான் எல்லாவற்றையும் சொல்லிவிட்டாயே” என்றாள் அரசி. “அதைத்தானே நானும் சொன்னேன்” என்றபின் அவள் புன்னகையுடன் எழுந்து நடந்தாள். அரசி “தருக்கி எழுபவர்களை தெய்வங்கள் குனிந்து நோக்குகின்றன. களத்தில் மேலுயர்ந்த தலையே அம்புக்கு இலக்கு” என்றாள். “அரசனின் தலை மேலேதான் நின்றிருக்கவேண்டும், இல்லையேல் அவனால் களத்தை முழுமையாக நோக்கமுடியாது, அன்னையே” என்றபின் அவள் நடந்து சென்றாள்.
அந்த மணப்பேச்சு பாதியில் முறிந்தது. அருணவர்மன் கோசலத்தின் மித்ரையை மணந்து வடகலிங்கத்தின் அரசனாக முடிசூடிக்கொண்டான். அவள் உளம்சோர்ந்திருப்பாள் என எண்ணி அரசி அவளிடம் வந்து “அவன் ஒருபோதும் பேரரசனாக இயலாது. அவன் தந்தை சூரியவர்மனுக்கு நீண்ட வாணாள் என நிமித்திகர் சொல்லியிருக்கிறார்கள்” என்றாள். அவள் சிரித்தபடி “அவனுக்காக நான் எவ்வகையிலும் துயருறவில்லை, அன்னையே. எனக்கு அவனும் பிறமுடிமன்னரும் நிகரானவர்களே. மாளவத்தின் அரசனின் செய்தி வந்துள்ளது என்று அமைச்சர் சற்று முன் சொன்னார். அவன் ஓவியத்தை நான் பார்த்தேன். எனக்கு வேறுபாடே தெரியவில்லை” என்றாள்.
அன்னை அவளை சிலகணங்கள் கூர்ந்து நோக்கிவிட்டு “சிலதருணங்களில் நீ அனைவரையும் எள்ளிநகையாடிக்கொண்டிருக்கிறாய் என்று தோன்றுகிறது” என்றாள். அவள் புன்னகைத்து “நான் நகையாடுவதே இல்லை” என்றாள். அன்னை பெருமூச்சுடன் “இது அரசியல்சூழ்ச்சி. சூரியவர்மனின் பட்டத்தரசி பிரபாவதி சேதிநாட்டவள். அவள் இளையோன் சந்திரவர்மன் கலிங்கத்திலேயே படைத்தலைவனாக இருக்கிறான். அவர்கள் நம்மை விரும்பவில்லை” என்றாள். “அரசகுடி திருமணங்கள் எல்லாமே அரசு சூழ்தல்கள்தானே?” என்றாள் தமயந்தி. அரசி எண்ணியிராத சீற்றத்துடன் “இது அரசியல் அல்ல. அவள் உன்னை விரும்பவில்லை. நீ ஆணவம் நிறைந்தவள் என அவளுக்கு சொல்லப்பட்டிருக்கிறது” என்றாள். தமயந்தி “அதை நான் பிறந்ததுமே நிமித்திகர் சொல்லிவிட்டார்கள் அல்லவா?” என்றாள். “ஆம், உன் ஆணவமே உனக்கு எதிரி. அனைவரும் அஞ்சுவது அதையே. முள்ளம்பன்றி போல உன் உடலில் அது சிலிர்த்து நிற்கிறது” என்றபின் ஆடையும் அணியும் ஒலிக்க அரசி திரும்பிச்சென்றாள்.
நாள் செல்லச்செல்ல முதுசெவிலியரின் முகங்களில் அவளைக் கண்டதுமே மெல்லிய கழிவிரக்கம் எழலாயிற்று. சேடிப்பெண்களின் விழிகளுக்குள் ஒரு ஏளனம் ஒளிவிடுவதை அவள் எளிதில் கண்டாள். அரசர் அவ்வப்போது சலிப்புடன் ஓரிரு சொற்கள் சொல்லும்போது திரும்பிப்பாராமலேயே அவையில் அவளைச்சூழ்ந்து அமர்ந்திருக்கும் அத்தனை பெண்களின் முகங்களையும் அவளால் காணமுடிந்தது. அவள் அவர்களை எவ்வகையிலும் பொருட்படுத்தவில்லை. அது அவளுடைய நடிப்பு என அவர்கள் எண்ணினர்.
ஆனால் அவளுக்கு அணுக்கமானவர்கள் அவள் உண்மையிலேயே எதையும் பொருட்டாக எண்ணவில்லை என்று கண்டு வியந்தனர். அவள் ஆணவத்தால் அரணிடப்பட்ட அறியாமையில் வாழ்வதாக பேசிக்கொண்டார்கள். “ஆம், பேரரசிக்குரிய பிறவிகொண்டவள். விழிமலைக்கும் அழகி. ஆனால் மூப்பு அதையெல்லாம் நோக்குவதில்லை. அவள் கண்களுக்குக் கீழே மென்தசைவளையங்கள் இழுபட்டுள்ளன. முகவாய்க் கோடுகள் அழுத்தமாகின்றன. தாடையின் தசை சற்று தளர்ந்துள்ளது. கழுத்தின் வரிகள் ஆழ்கின்றன. தோளில் பொன்வரிகள் எழுகின்றன. அகவை அவளை இழுத்துச்செல்கிறது. அதை அவள் என்றோ ஒருநாள் தன்னை நோக்கும் ஆண்மகன் ஒருவனின் விழிகளில் உணர்வாள். அன்று உளம் உடைந்து சிறுப்பாள். அதுவரை இந்த ஆணவம் அவளை காக்கட்டும்” என்றாள் முதுசெவிலி ஒருத்தி. அவள் ஒவ்வொரு முறையும் பேரரசர்களால் துறக்கப்படும்போது சேடியர் உள்ளங்களின் ஆழத்திலிருந்து உவகை கொள்ளும் ஒரு பெண் அச்சொற்களைக் கேட்டு முதல்முறையாக அஞ்சினாள். பெண்ணென்று தன்னை உணரும் உடல்கள் அனைத்தும் அஞ்சியாகவேண்டிய ஒழியாத்தெய்வம்.
நிஷாத மன்னன் நளனின் விழைவை அரண்மனை மகளிர் அறிந்தபோது முதலில் திகைப்படைந்தாலும் விரைவிலேயே அது உகந்ததே என்று எண்ணத்தலைப்பட்டமைக்கு அந்த அச்சமும் விளைவான சோர்வுமே அடிப்படையாயின. விதர்ப்பமும் மாளவமும் இரு அருகமை நாடுகள். அவை ஒரே நிலமாக இணையமுடியும். முதுசெவிலி ஒருத்தி மட்டும் ஆற்றாமையுடன் “பேரரசர்கள் தேடிவந்த கன்னி” என்றாள். “ஆம், ஆனால் அவர்கள் எவரும் அவளுக்காக துணிந்து படைகொண்டு எழவில்லை” என்றாள் இன்னொரு செவிலி. “அதற்கு நம் அரசரும்தான் பொறுப்பு. ஒவ்வொரு முறை ஒரு மன்னர் மணமுடிக்க சித்தமாகும்போதும் இன்னொருவரின் படைநீக்கம் நிகழும். அஞ்சி சொல்லை பின் எடுத்துக்கொள்பவர் இவரே” என்றாள் முதற்செவிலி. “இனி பேச ஏதுமில்லை. நம் இளவரசியின் நிமிர்வை அவர்களால் ஏற்கமுடியாதென்று உறுதியாகிறது. இவளருகே வாளேந்தி நின்றிருக்கும் ஒருவனையே ஊழ் தேடிக்கொண்டிருந்ததுபோலும். அந்நிஷதன் முப்புரமெரித்தவள் காலடியின் சிம்மம்” என்றாள்.
அப்பேச்சை அவளிடம் இளஞ்சேடி சொன்னபோது அதைத்தான் தானும் எண்ணினோமா என அவள் தனக்குத்தானே கேட்டுக்கொண்டாள். முதல் புறக்கணிப்புக்குப்பின் எப்படி அவன் தன்னுள்ளத்தில் வளர்ந்தான்? தன்னை முழுமையாக அவள்முன் வைத்துவிட்டிருப்பதை அவன் காட்டினான். பிறந்து எழுந்த இடத்திலிருந்து ஒவ்வொன்றாகத் துறந்து அவன் அவளை நோக்கி வந்துகொண்டிருந்தான். அந்த அன்னம் தன் அறைக்குள் வந்த நாளை அவள் நினைவுகூர்ந்தாள். இளம்புன்னகையுடன் அவள் சோலையில் அமர்ந்திருக்கையில் அன்னை அருகே வந்தாள். அவள் எழுந்து தலைவணங்க அருகே கல்பீடத்தில் அமர்ந்தாள். அவள் என்ன சொல்லவந்திருக்கிறாள் என்பதை நன்குணர்த்தியது முகம். தமயந்தி புன்னகை புரிந்தாள்.
“இத்தனைநாள் தெரியாத எதையோ அஞ்சி இந்த மணத்தன்னேற்பை தவிர்த்துவந்தோம். அமைச்சரவையைக்கூட்டி சொல்கேட்டால் ஆளுக்கொன்று சொல்வார்கள். ஷத்ரியர்பகை சூழும் என்ற சொல் உன் தந்தையை நடுங்கச்செய்யும், அனைத்திலிருந்தும் பின்வாங்கிவிடுவார். இன்று ஓர் இடர்ச்சூழலில் பாய்ந்து நெடுநாள் அஞ்சிநின்றதை மிக எளிதாக செய்துகொண்டிருக்கிறோம்” என்றாள் அன்னை. “முதலையை அஞ்சியவனுக்கு நீச்சல் கைவருவதுபோல என்பார்கள்.” தமயந்தி புன்னகைசெய்தாள்.
“நாளை மறுநாள் உன் மணத்தன்னேற்பு என அறிந்திருப்பாய். நாம் அஞ்சிய முடிமன்னர் அனைவரும் வருகிறார்கள் என செய்திவந்துள்ளது. நீ எவரை வேண்டுமென்றாலும் தெரிவுசெய்யலாம்” என்றாள் அன்னை. “ஆம்” என்றால் தமயந்தி. “உன் தந்தையின் விருப்பம் நீ கலிங்கனை தெரிவுசெய்யவேண்டும் என்பது. அர்க்கதேவன் அனைத்துவகையிலும் உனக்கு பொருத்தமானவன். கலிங்கம் நம் அணுக்கநாடு. அதன் துறைமுகங்களுடன் நாம் கொண்டுள்ள காடுகளும் இணைந்தால் மாபெரும் நாடு ஒன்று உருவாகக்கூடும் என்கிறார்கள் அமைச்சர்கள்.” தமயந்தி புன்னகை மட்டும் செய்தாள்.
எப்போதும்போல அப்புன்னகை அன்னையை சினம் கொள்ளச்செய்தது. “நான் உன் புன்னகையின் பொருளை அறிவேன். நீ அந்த நிஷதனை நினைத்திருக்கக் கூடும். அவனுக்கு அவைக்கு அழைப்பே இல்லை. அவன் வந்தாலும் அவைநிற்கவைக்கும் எண்ணம் அரசருக்கு இல்லை. அவன் எவ்வகையிலும் உனக்குரியவன் அல்ல. ஷத்ரியப்பெண்ணாகப் பிறந்தாய். நிஷாதனின் மைந்தரைப் பெற்றால் நம் குடிக்கு இழிவு” தமயந்தி சீண்டும் சிரிப்புடன் “அவர்கள் அனல்குலத்து ஷத்ரியர். பிருகுவின் வழிவந்த பார்க்கவராமனால் முடியளிக்கப்பட்டவர்கள்” என்றாள்.
“அதெல்லாம் அவர்கள் சொல்லிக்கொள்வது… அப்படிப்பார்த்தால் அத்தனை கிராதர்களும் தங்களை அரசர்கள் என்றே சொல்லிக்கொள்கிறார்கள்” என்றாள் அன்னை. “இருபத்தேழு தலைமுறைகளுக்கு முன்பு நாமும் கிராதர்களாகவே இருந்தோம்” என்றாள் தமயந்தி. “எவர் சொன்னது? அதெல்லாம் வெறும் கதை” என்று அன்னை சினந்து கூவினாள். “அப்படியே இருந்தாலும் நம் முன்னோர் ராஜசூயங்களும் அஸ்வமேதங்களும் ஆற்றி அடைந்த இட ம் இது… அத்தனை ஷத்ரியர்களும் வேர்பிடித்துப்போனால் கிராதர்களும் அசுரர்களும்தான்.” தமயந்தி “நிஷதர்களும் அவற்றை எல்லாம் ஆற்றலாமே?” என்றாள். “அப்படி என்றால் நீ அவ்வெண்ணத்தையே கொண்டிருக்கிறாய் அல்லவா? நிஷாதனை மணக்கவிருக்கிறாயா?” என்றாள் அரசி. “நான் எம்முடிவையும் எடுக்கவில்லை. பேச்சுக்காக சொன்னேன்” என்றாள் தமயந்தி.
அன்னை தணிந்து “ஆம், நான் உன்னை அறிவேன். அருணவர்மனை நீ மணந்திருந்தால் என்ன ஆகியிருக்கும்? பதினெட்டு ஆண்டுகளுக்கு முன்னரே கைம்பெண் ஆகியிருப்பாய். அவன் பீதர்களுடனான போரில் கொல்லப்பட்டான். இப்போது மணிமுடிக்குரியவனாக இருப்பவன் அர்க்கதேவன். ஆற்றல்மிக்கவன்… அவனை மணமுடித்தால் அனைத்தும் ஒழுங்குக்கு வந்துவிடும். நீ உன் நலம் நாடி எம்முடிவையும் எடுக்கக் கூடாது. நாட்டுக்காகவே ஷத்ரியர் வாழவேண்டுமென்பது ஸ்மிருதிகளின் கூற்று” என்றாள். அவள் புன்னகைத்தாள்.
அவர்கள் தனித்திருந்த முதல்நாள் நிலவிரவில் நளன் அவளிடம் அதைத்தான் கேட்டான். “நீ அர்க்கதேவனை தேர்ந்தெடுப்பாய் என்றே அனைவரும் எண்ணியிருந்தனர். எவ்வகையில் எண்ணி நோக்கினாலும் அதுவே அரசியலாடலில் சிறந்த முடிவு.” அவள் கைகளைப்பற்றி தன் கைகளுக்குள் வைத்தபடி “நீ எளியபெண்ணல்ல, ஒவ்வொரு சொல்லிலும் அரசியலாடுபவள் என்றார்கள்” என்றான். அவள் புன்னகையுடன் “நான் ஏன் அம்முடிவை எடுத்தேன் என நீங்கள் எண்ணுகிறீர்கள்?” என்றாள். “என் காதலின்பொருட்டு என்று எண்ணவே நான் விரும்புகிறேன்” என்றான் நளன். “ஆம், அதற்காகவே” என்றாள் தமயந்தி.
“நீ இதை எனக்காக சொல்கிறாய். இதுதான் அரசியல்சொல்” என்று அவன் சொன்னான். “பிறகு என்ன சொல்லவேண்டும்? நிஷதநாட்டை நான் அடைந்ததன் நலன்களை சொன்னால் நிறைவடைவீர்களா?” என்றாள். “விளையாடாதே” என்றான் நளன். “நான் என்ன சொல்லவேண்டுமென எதிர்பார்க்கிறீர்கள்?” என்றாள். “இது என்ன வினா?” என்று அவன் சினந்தான். அவள் அவன் பின்னிழுத்துக்கொண்ட கைகளைப் பற்றியபடி “நான் சொல்லவா?” என்றாள். “சொல்” என்னும்போதே அவன் முகம் சிவந்துவிட்டது. “நீங்கள் நெடுங்காலம் காத்திருந்து என்னை அடைந்தீர்கள். உங்களை முழுக்க எனக்கு உகந்தவராக ஆக்கிக் கொண்டிருக்கிறீர்கள். அந்த முழுப்படையலுக்கு மறுதுலாத்தட்டில் நான் எதை வைப்பேன் என்று அறிய விழைகிறீர்கள்.”
மூச்சுத்திணற “இதென்ன வணிகமா?” என்றான் நளன். “வணிகம் என்றால் என்ன? மானுட உறவுகளை பொருளில் நடித்துப்பார்ப்பதுதானே?” என்றாள் தமயந்தி. “கூரிய சொற்கள் எனக்கு சலிப்பை அளிக்கின்றன. நாம் இங்கு அரசியலாடவா வந்துள்ளோம்?” என்றான் நளன். “நீங்கள் கேட்டதனால் சொல்கிறேன்” என்றாள் தமயந்தி. “கேட்க விருப்பமில்லை என்றால் சொல்லவில்லை” என அவள் புன்னகைக்க அவன் சினம் கொண்டு “நான் என்ன உன் சொல்லை அஞ்சுகிறேன் என நினைக்கிறாயா? சொல்” என்றான். “நான் மறுதுலாத்தட்டில் என்னை முற்றிலும் படைக்கவேண்டும் என எதிர்பார்க்கிறீர்கள்.”
“இல்லை” என்று அவன் சொன்னான். “ஆம், அதை நீங்கள் உள்ளாழத்தில் கொண்டுள்ள நம்பிக்கையின்மை கரையும்படி கண்ணீருடன் சொல்லவேண்டுமென விழைகிறீர்கள். இப்போது நான் என்னை குழைத்து உங்கள் காலடியில் சாந்தெனப் பூசினால் கரைந்து விழிநீர் உகுப்பீர்கள். என்மேல் பேரன்புகொள்வீர்கள். எனக்கென அனைத்தையும் அள்ளி வைப்பீர்கள். ஆனால் சின்னாட்களில் மீண்டும் அந்த ஐயம் எழும். மீண்டும் இந்த நாடகம் தேவைப்படும். இது நிகழ்ந்துகொண்டே இருக்கவேண்டும், வாழ்நாள் முழுக்க.” நளன் அவளை கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தான். அவள் அவனை நோக்கி கனிவுடன் புன்னகைசெய்து “ஆனால் நான் உங்களுக்காக தவம்செய்யவில்லை” என்றாள்.
“ஆம்” என்றதுமே சோர்வு வந்து அவனை பற்றிக்கொண்டது. தலைகுனிந்து “நீ விழைந்தது என்னை அல்ல” என்றான். “இல்லை என நான் மறுக்கவேண்டுமென உங்கள் உள்ளம் விரும்புகிறது. அதை நான் பொய்யாக சொல்லப்போவதில்லை. நான் ஒருபோதும் ஆணுக்காக விழைந்ததில்லை. எளிய மானுடனுக்காக தவம்செய்வேன் என எண்ணவும் இயலவில்லை.” நளன் சீற்றத்துடன் “ஏன், எளிய மானுடப்பெண் அல்லவா நீ?” என்றான். “ஆம், மானுடப்பெண். ஆகவே என்னுள் எழும் நிறைவின்மைக்கு இன்னொரு மானுடன் விடையாக இயலாது” என்றாள் தமயந்தி.
“உனக்கு என்னதான் வேண்டும்?” என்று அவன் சீற்றத்துடன் கேட்டான். “தெரியவில்லை” என்றாள். “எனக்கே தெரியாத ஒன்றை முழு உளவிசையுடன் கணமொழியாது இப்பெருவெளியிடம் வேண்டிக்கொண்டிருக்கிறேன்.” அதற்குமேல் அவனுக்கு சொல்ல ஏதுமிருக்கவில்லை. கைகள் இரண்டும் இயல்பாகவே விலகிவிட்டிருந்தன. மீண்டும் நீண்டு அவை ஒன்றை ஒன்று தொட நெடுந்தொலைவு பயணம்செய்யவேண்டுமென்றும் முற்றிலும் அயலான ஒன்றென அதிர்வுடனும் ஒவ்வாமையுடனும்தான் அத்தொடுகை நிகழுமென்றும் தோன்றியது,
“அன்னத்தை ஏன் அனுப்பினீர்கள்?” என்று அவள் கேட்டாள். அவன் முகம் அக்கணமே மலர்ந்தது. “உன்னையும் அன்னத்தையும் என்னால் பிரித்துப்பார்க்க முடியவில்லை. உன்னுள் உள்ள மிகமென்மையான ஒன்றின் வடிவம் அது என்று தோன்றியது. இங்கு நானும் அன்னங்களை வளர்க்கலானேன். அன்னத்தூவியை மிகமெல்ல தொட்டு நீவும்போது உன்னை மிக அணுக்கமாக உணர்கிறேன் என்று தோன்றியது” என்றான். முகம் சிவக்க மூச்சுதிணற குரல் கம்ம “நான் அன்றிரவு தனித்திருந்தேன். அதுநாள் வரை எண்ணி எண்ணிக் குவித்தவை எல்லாம் அன்றிரவு கூர்கொண்டுவிட்டன. அன்றிரவு முழுக்க அந்த அன்னத்திடம் பேசினேன்.”
“பேசினீர்களா?” என்று அவள் கன்னங்களில் குழிகள் விழ சிரித்தாள். “மெய்யாகவே பேசினேன். விழிநீர் உகுத்தேன். பின்னர்…” என்று திணறி சொல்லை அடக்கியபின் கைகளை விரித்தான். “சொல்லுங்கள்” என்றாள். “என் விழிநீரை கைகளில் தொட்டு எடுத்து அதற்கு நீட்டினேன். அது அலகுநீட்டி அத்துளியை பருகியது.” அவள் வளையல்கள் ஒலிக்க கைதட்டி சிரித்துவிட்டாள். “சிரிக்கத்தக்கதுதான். ஆனால் அன்று எனக்கு அத்தருணம்…” என நளன் திணறினான். “என்ன செய்தீர்கள்?” என்றாள்.
“அழுதுகொண்டே இருந்தேன். காலையில் என் நெஞ்சு ஒழிந்துகிடந்தது. பல ஆண்டுகாலமாக சேர்ந்த சொற்கள் ஒன்றுகூட எஞ்சவில்லை. அத்தனை வெறுமையையும் விடுதலையையும் நான் அறிந்ததே இல்லை. என்னருகே என்னிலிருந்து வெளியே வந்து நின்ற என் உணர்வுகள் என அது நின்றிருந்தது. ஒற்றனை அழைத்து அந்த அன்னத்தை உன் அறைக்குள் விட்டுவிடவேண்டும் என ஆணையிட்டேன்.” அவள் “ஓ” என்றாள். “நீ அதைக் கண்டதுமே அறிந்துகொண்டாய் என ஒற்றன் சொன்னான். அதை நெஞ்சுடன் தழுவிக்கொண்டாய் என்றான்.”
“ஆம்” என்றாள். அவன் தாழ்ந்த குரலில் “ஏன்?” என்றான். “அது நீங்கள் அல்லவா?” என்றாள். “ஆம்” என்றான். அவர்களின் கைகள் இயல்பாக நீண்டு தழுவிக்கொண்டிருந்தன. “என்னை முதன்முதலாக பார்த்தபோது என்ன நினைத்தாய்?” என்று கேட்டான். அவள் புன்னகை செய்தாள். “ஏன்?” என்றான். “உலகின் மிகத்தொன்மையான வினா போலும் இது.” அவன் “இருக்கலாம், சொல்” என்றான். “மிக இளையவர் என்று” என்றாள். “ஏன்?” என்று அவன் கேட்டான். அவள் அவ்வாறு சொன்னது ஏன் தன் உள்ளத்தை கிளர்ந்தெழச்செய்கிறது என்று வியந்துகொண்டான். “நான் மூத்தவள் என்பதனால்தான்” என்றாள். அவன் சற்று சினந்து “சொல்” என்றான். “ஓவியங்களில் தெரிவது முகங்களின் ஒரு காட்சி மட்டுமே” என அவள் சொன்னாள். “பன்னிரண்டு ஆண்டுகாலம் நீங்கள் ஒரே உணர்வில் நின்றுவிட்டீர்கள். அகவை மிக அகன்று நின்றுள்ளது.”
அவன் உணர்வுமீதூர “ஆம், நான் பிறிதெதையும் எண்ணாமல் பன்னிரண்டு ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறேன். இந்நகரையும் என் குடியையும் என் உணர்வுகளுக்கேற்ப இழுத்துவந்தேன்” என்றான். “அரசனை குடிகள் தொடர்வது வழக்கம்தானே?” என்றாள். அச்சொல்லின் பொருளின்மையை உணர்ந்து அவள் விழிகளை அவன் ஏறிட்டுநோக்கியபோது அவை காமம் கொண்டிருப்பதை கண்டான். அவன் உடல் மெல்ல அதிரத் தொடங்கியது. விழிகளை விலக்கிக்கொண்டு “நான் பிறிதெதையும் நினைக்கவில்லை” என பொருளற்ற சொற்றொடர் ஒன்றை தானும் சொன்னான். அவள் கைகள் அவன் தோளில் படர உடல் அவன் மேல் ஒட்டியது. “உம்” என அவள் முனகியது அவன் காதில் ஒலித்தது.
அன்று முயக்கத்தினூடாக அவள் அவனிடம் “அன்னம் போலிருக்கிறீர்கள்” என்றாள். “நானா?” என்றான் அவன். “ஆம், அது நூறு வளைவுகளின் ஆயிரம் நெகிழ்வுகளின் உடல்கொண்டது.” அவன் “ஆம்” என்றான். “அன்று அறையில் உங்கள் அன்னத்தைப் பார்த்ததும் அதைத்தான் எண்ணிக்கொண்டேன்” என்றாள் தமயந்தி.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 14
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-8
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-6
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-5
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-10
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-9
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-3
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-2
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–95
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–45
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–12
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–9
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–8
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–7
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–6
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–5
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–3
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–2
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 60
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 57
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


