Jeyamohan's Blog, page 1629
June 10, 2017
இரு காந்திகள்.
தொண்ணூறுகளின் தொடக்கத்தில் தமிழகத்தில் இறால்மீன்பண்ணைகளுக்கு எதிரான போராட்டம் ஒரு முக்கியமான சமூக நிகழவாக இருந்தது. வளமான தஞ்சை நிலப்பகுதியில் கடலோரமாக அரசு இறால் பண்ணைகளை உருவாக்க அனுமதி கொடுத்தது. உண்மையில் அது நல்லெண்ணத்துடன் மயிலாடுதுறையைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர் மணிசங்கர் அய்யரால் கொண்டுவரப்பட்டது. அப்பகுதி மக்களுக்கு வேலைவாய்ப்பை அளிக்கும் திட்டம் என்று அது சொல்லப்பட்டது. மனிசங்கர் அய்யர் பழைய மஹாலானோபிஸ் காலகட்டத்து தொழில்மயமாக்க நினைவுகளில் வாழ்பவர். அவருக்கு அத்திட்டத்தின் சூழியல் சிக்கல்கள் சொல்லபப்டவில்லை. அல்லது சொன்னாலும் உறைக்கவில்லை.
கீழத்தஞ்சைப்பகுதியின் இய்ற்கை அமைப்பு தனித்தன்மை கொண்டது. கடலை ஓட்டிய வரை வயல்வெளிகள். கடலோரமாக ஆற்றுவண்டலால் உருவாகும் சதுப்புநிலமே கடலின் உப்புநீர் வயல்வெளிக்குள் ஊறிவராமல் தடுக்கிறது. இந்த சதுப்புநிலம் ஒரு வீண்நிலம் அல்ல. ஒருவகையான இயற்கைக் கோட்டை. இதை அழித்துவிட்டு இங்கே இறால் பண்ணைகள் கொண்டுவருவதே திட்டம்.
இதன்படி இச்சதுப்புநிலங்கள் நிண்டகாலக் குத்தைகைக்கு இறால்முதலாளிகளுக்கு வழங்கப்பட்டன. இதை ஒட்டிய வயல்பரப்புகளையும் அவர்கள் விலைக்கு வாங்கிக்கொண்டார்கள். இங்கே உப்பளம்போல பெரிய பாத்தி கட்டி அங்கே கடலின் உப்புநீரை தேக்கி அதில் இறால்களை வளர்த்தார்கள். உப்பு நீர் ஊறி அதற்குப்பின்னால் உள்ள வயல்வெளிகளின் மண்ணை முழுக்க உப்பாக்கியது.
இதற்கெதிராக தன்னிச்சையான விவசாயிகள் எதிர்ப்பு உருவாகியது. இறால் பண்ணைகளின் முதலாளிகள் அரசியல்வாதிகள் என்பதனால் அனேகமாக எந்த அரசியல் கட்சியும் அப்போராட்டத்தை பெரிதாக ஆதரிக்கவில்லை. இந்தியக்கம்யூனிஸ்டுக்கட்சியின் ஆதரவு இருந்தாலும் அது போராட்டத்தை முன்னெடுக்கவில்லை.
இந்நிலையில் இடதுசாரி தீவிர இயக்கங்கள் உள்ளே புகுந்தன. இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சி ஊக்கமெடுக்காததன் இடைவெளியை பயன்படுத்துவதே அவர்களின் நோக்கம். தமிழகம் முழுக்க ‘இறால் பண்ணை அழிப்பு போராட்டம்’ என்று ஆளுயரத்திற்கு எழுதிப்போட்டார்கள். கூடவே பாராளுமன்றன் பன்றிகளின் தொழுவம், இந்தியதேசியம் ஒரு மாமாவேலை போன்ற வசைகள். தனித்தமிழ்நாடுக்கோரிக்கையையும் இறால்பண்ணை ஒழிப்பையும் இணைத்துக்கூட துண்டுபிரசுரங்களைக் கண்டிருக்கிறேன். ஆனால் ஒரு பெரிய வன்முறை வெடிக்கும் என்ற எண்ணம் சுவரெழுத்துக்கள் மூலம் உருவாக்கபப்ட்டது.
திருவாரூரில் அவர்கள் நடத்திய இறால்பண்ணை அழிப்பு போராட்ட நாளில் நான் அங்கே இருந்தேன். பதினேடு பேர் பேருந்து நிலையம் அருகில் இருந்து கிளம்பினார்கள். பல இடங்களிலும் தேடியபின் யாரோ கொண்டுவைத்திருந்த ஒரு மண்வெட்டியை ஒருவர் கையில் வாங்கிக்கொண்டார். கிளம்பி கோஷங்கள் போட்டபடி நடந்தார்கள். இந்தியாவே தமிழகத்துக்கு விடுதலைகொடு, காசுமீரத்தை நசுக்காதே, போன்ற பல கோஷங்கள் நடுவே இறால் பண்ணை பற்றியும் ஒலித்தது. இருநூறடி தூரத்துக்குள் அவர்களை போலீஸ் கைது செய்து வேனில் ஏற்றி கொண்டு சென்றுவிட்டார்கள்.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக்கொண்டு போலீஸ் இறால் பண்ணைகளுக்கு கடுமையான காவல் போட்டதுடன் அதற்கு எதிராகப் போராடிய விவசாயிகளை நக்சலைட் முத்திரை குத்தி கடுமையாக ஒடுக்கவும் ஆரம்பித்தது. இறால்பண்ணை எதிர்புப் போராட்டம் நின்றது. இடதுசாரி தீவிர இயக்கங்கள் தமிழிசை கோரி இசை எதிர்ப்புப் போராட்டத்துக்கு சுடச்சுட நகர்ந்தார்கள்.
இந்நிலையில்தான் சர்வோதயத் தலைவரான ஜெகன்னாதனையும் கிருஷ்ணம்மாளையும் கண்டு விவசாயிகள் தங்களுக்கு உதவும்படி அழைத்தார்கள். ஜெகன்னாதன் அவர்களிடம் தன்னுடைய போராட்டத்தால் அவர்களுக்கு இழப்பு ஏதும் இருக்காது, ஆனால் பலன் பெற சற்றே தாமதமாகும் என்றார். அதுவரை கட்சி பேதம் இல்லாமல் மனம் சோர்வுறாமல் கூடவே நிற்க வேண்டும், முடியுமா என்றார். விவசாயிகளுக்கு வேறு வழியே இல்லை.
முதலில் கிராமம் கிராமமாகச் சென்று கூலித்தொழிலாளர்கள் பெண்கள் போன்றவர்களை திரட்டி அவர்களிடம் விஷயத்தை விளக்கினார் ஜெகன்னாதன். உண்மையில் அதை அன்றுவரை எவருமே செய்யவில்லை. போராட்டத்தில் பாதிக்கப்பட்ட அனைவருமே, குழந்தைகள் உட்பட, கலந்துகொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். அதற்கு அம்மக்களின் ஆயிரம் பிரச்சினைகளை அவர் பஞ்சாயத்து செய்து தீர்க்க வேண்டியிருந்தது.
அதன் பின் ஒட்டுமொத்தக் கோரிக்கைகளை உருவாக்கி அரசுக்கு அனுப்பினார். எல்லா அதிகார வாசல்களையும் முறைப்படி தட்டினார். கோரிக்கைகளுக்கு அரசும் அதிகார வற்கமும் குறைந்தபட்ச வாக்குறுதிகளையாவது அளிக்க வேண்டியிருந்தது. இந்திய ஜனநாயகம் அளித்த எல்லா வாய்ப்புகளையும் பயன்படுத்திக்கொள்வது அவரது வழிமுறை. தங்களுக்கு ஆதரவான எல்லா சக்திகளையும் கூடவே சேர்த்துக் கொண்டார். குறிப்பாக இந்திய கம்யூனிஸ்டுக்கட்சி அவருக்கு உறுதுணையாக இருந்தது. ஊடகங்கள் அனைத்திலும் தொடர்ச்சியாக செய்திகள் வரச்செய்தார். உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தார்.
அன்று நாடெங்கும் நடந்துவந்த சூழியல் போராட்டங்களுடன் தன் போராட்டத்தையும் இணைத்து அதற்கு ஒரு தேசிய முக்கியத்துவத்தை உருவாக்கினார். தஞ்சைக்கு வந்தனா சிவா, மேதாபட்கர், சுந்தர்லால் பகுகுணா போன்றவர்கள் வந்தார்கள். அதன் பின் முன்னைப்போல ஒரு மாவட்டப்போலீஸ் அதிகாரியோ ஆட்சியரோ அவரது விருப்பப்படி தீர்மானிக்கும் விஷயமாக அது இருக்கவில்லை
தொடர்ச்சியான மக்கள் போராட்டங்களை நிகழ்த்தினார் ஜெகன்னாதன். ஏராளமான மக்கள் குடும்பம் குடும்பமாக பங்கேற்கக் கூடிய முற்றிலும் வன்முறை இல்லாத போராட்டங்கள் அவை. அவற்றுக்கு வன்முறை முத்திரை குத்த அரசோ முதலாளிகளோ முடியாதவாறு பார்த்துக் கொண்டார். போராட்டம், பேச்சுவார்த்தை, வாக்குறுதிகளைப் பெறுதல், பெற்ற வாக்குறுதிகளுக்கு மேல் மீண்டும் போராட்டம் என்று விடாப்பிடியாக நிகழ்வது இப்போராட்டம்.
ஜெகன்னாதன் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் 1996ல் இறால்பண்ணைகளுக்கு தடை விதித்தது. அந்த தீர்ப்பை விளக்கும் கூட்டத்துக்கு சென்னையில் நான் சென்றிருந்தேன். சுந்தர்லால் பகுகுணாவை அங்குதான் சந்தித்தேன். அந்தக் கூட்டம் பற்றி தினமணியில் ஒரு குறிப்பும் எழுதினேன். சுந்தர்லால் பகுகுணாவுடன் ஒரு பேட்டி எடுத்தேன். ஆனால் அதை எந்த இதழும் அப்போது பிரசுரிக்கவில்லை. ஒரு வார இதழ் சிறிய குறிப்பாக மாற்றி அச்சிட்டது, அவ்வளவுதான்.
வழக்கை அமுல்படுத்தக்கோரி மீண்டும் போராட்டம் நடத்தினார் ஜெகன்னாதன். நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடுத்தார். அதற்குள் புதிய இறால்பண்ணைகளுக்கான பெரும் திட்டங்கள் கைவிடப்பட்டன. முதலீடுகள் செய்தவர்கள் வேறுவழியில்லாமல் சட்டத்தை பயன்படுத்தி போராடிக் கொண்டிருந்தாலும் இறால்பண்ணைகள் அனேகமாக நின்றுவிட்டன.
ஜனநாயகத்தில் எந்த ஒரு போராட்டமும் ஒரு சமரசம் மூலமே முடிய முடியும்.அந்த சமரசத்தின் விளைவு போராடுபவர்களுக்கு பெருமளவுக்குச் சாதகமாக இருந்தால் அதுவெ வெற்றி. தஞ்சைப்பகுதி விவசாயிகள் இன்றும் நினைவுகூரும் ஒரு போராட்டம் அது என சென்ற வருடம் திருவாரூர் சென்றபோது உணர்ந்தேன்.
இந்தப் போராட்டகாலத்தில் நான் ஜெகன்னாதனைச் சந்திக்கச் சென்றேன். அப்போது அவர் திருத்துறைப்பூண்டி அருகே ஓரு சிற்றூரில் தங்கியிருந்தார். அப்போதே மூப்பின் தளர்ச்சிக்கு ஆளாகியிருந்தார். கிருஷ்ணம்மாள் என்னிடம் சுருக்கமாகப் பேசினார். ‘போராட்டம்னு போயி அந்த ஜனங்கள் கையில வச்சிருக்கிறதை தொலைக்க விடப்பிடாதில்லியா? அவங்களுக்கு நெலம் வேணும். வெள்ளாமை செய்யணும். அதுக்குண்டானதை செய்ய வேண்டியதுதான்’
காந்தியப்போராட்டத்தின் மூன்று அடிப்படைகளைச் சுருக்கமான சொற்களில் கிருஷ்ணம்மாள் சொன்னார். ஒன்று ”நம்ம மறுதரப்புக்கும் அவனுக்கான நியாயங்களும் வாழ்க்கையும் எல்லாம் உண்டு. அவன் அழிஞ்சு நாம வாழவேண்டாம். நம்மளை அவன் அழிக்கவும் வேண்டாம். அவனுக்கு என்ன சொல்ல இருக்குன்னு கேப்போம்…”
இரண்டு, ”காந்தியப்போராட்டம்னா பிடிவாதமா தொடர்ச்சியா போராடிக்கிட்டே இருக்கிறது. போராட்டம் பின்னாடிப்போறதுன்னா அப்ப நிப்பாட்டிக்கிடறது. பேச்சுவார்த்தைக்கு எந்த சந்தர்ப்பம் கெடைச்சாலும் அதை விடுறதில்லை.பேச்சுவார்த்தையும் போராட்டம்தாங்க”
மூன்று”சட்டபூர்வமாத்தாங்க எல்லாத்தையும் செய்யணும். அப்பதான் பேசுறதுக்கு எடம் இருக்கும். ஒரு சட்டத்தை எதுக்கறதா இருந்தா அதுகுண்டான காரணங்களை சொல்லிட்டு திட்டவட்டமா எதுக்கணும். அதையும் சட்டபூர்வமா செய்யலாம். சட்டத்தை மீறணுமானா அதையும் ஒரு மக்கள் போராட்டமாத்தான் செய்யணும்”
கிருஷ்ணம்மாள் சற்று கறாரான பேச்சும் கடுமையான சொற்களும் கொண்டவராக இருந்தார். ஜெகன்னாதனின் உடல்நிலை சார்ந்து அதிகமான கவனம் எடுத்துகொண்டார். அவரை பத்து நிமிடங்களுக்கு மேலாகப் பேசவிடவில்லை. என்னையும் அரைமணிநேரத்தில் கிளப்பிவிட்டுவிட்டார். ஜெகன்னாதனுக்கு இறைநம்பிக்கை இருந்ததா என்று ஊகிக்க முடியவில்லை. கிருஷ்ணம்மாள் அடிக்கடி கடவுளைப்பற்றிச் சொன்னார். ஏராளமானவர்களிடம் தினமும் பேசிபெபெசி மிக தேவையான விஷயங்களை மட்டும் ரத்தினச்சுருக்கமாக பேசி அடுத்த ஆளை நோக்கி சென்றுவிடும் வழக்கம் இருந்தது.
கிருஷ்ணம்மாளுக்கு அப்போதே கைகளும் தலையும் சற்று நடுங்க ஆரம்பித்திருந்தன. ஜெகன்னாதனுக்கு மறதியும் இருந்தது. அந்த முதிய தம்பதிகள் அதிகம் பேசிக்கொள்ளாமல் ஒருவரோடொருவர் காட்டிய பிரியமும் அக்கறையும் — அதை அவர்கள் இயல்பாக ஒருவருக்கொருவர் ஒத்திசைவுகொண்டு வாழ்ந்த முறை என்று சொல்லலாம் — என்னை மிகவும் நெகிழச்செய்தன. அவர்களின் மிக எளிமையான அன்றாட வாழ்க்கை காந்திக்கு உகக்கும் விதமாகவே இருந்தது. காந்தியத்தின் சமகால முக்கியத்துவத்தை நான் அறிந்தது அப்போராட்டங்கள் மூலமே.
கிருஷ்ணம்மாளுக்கு இப்போது 82 வயது. [1926] மாற்று நோபல் என்று அழைக்கப்படும் வாழ்வாதார உரிமைக்காப்பு விருது அவருக்கு இவ்வருடம் அளிக்கப்பட்டிருக்கிறது. ஏழை தலித் குடும்பத்தில் பிறந்த கிருஷ்ணம்மாளை அவரது பெற்றோர் 10 வயதில் காந்தியவாதியும் சர்வோதய தலைவருமான சௌந்தரம் ராமச்சந்திரனிடம் கொண்டுசென்று விட்டுவிட்டார்கள். அவர் காந்திய இயக்கங்களிலேயே வாழ்ந்தவர். காந்தி நடத்திய போராட்டங்களில் கலந்து கொண்டவர். காந்தியுடன் ஒரே கூட்டமேடையில் அமர்ந்து பேசியவர்.
1950ல் சர்வோதய இயக்க போராளியான ஜெகன்னாதனை கிருஷ்ணம்மாள் திருமணம் செய்துகொண்டார். நிலமில்லா விவசாயிகளுக்காகப் போராடுவதகாக ‘காந்தி அமைதி நிலையம்’ என்ற அமைப்பை 1969ல் அவர்கள் இருவரும் சேர்ந்து அமைத்தார்கள். அவர்களுக்கு உபரி நிலங்களைப் பெற்றுத்தருவதற்கான இயக்கமாக LAFTI [Land For The Tillers Freedom] என்ற அமைப்பை 1981 ல் ஆரம்பித்தார்கள். ஆக்ரமிப்பில் இருந்த பல ஆயிரம் பொது நிலங்களைக் கண்டடைந்து சட்டபூர்வமாகப் போராடி நிலமில்லா விவசாயிகளுக்குப் பெற்றுத்தந்திதிருக்கிறார்கள். கிட்டத்தட்ட 13000 ஏக்கர்.
சங்கரலிங்கம் ஜெகன்னாதனுக்கு இப்போது 95 வயது. நினைவாற்றல் பெரும்பாலும் இழந்த நிலையில் உள்ளது. செல்வந்தக் குடும்பத்தில் பிறந்த ஜெகன்னாதன் 1930ல் காந்தியின் அறைகூவலை ஏற்று படிப்பை உதறி சுதந்திரப் போராட்டத்தில் குதித்தார்.உப்பு காய்ச்சும் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைசென்றார். பின்னர் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் சிறைசென்று சுதந்திரம் கிடைப்பதுவரை சிறையில் இருந்தார். சுதந்திரம் கிடைத்தபின்னரே திருமணம் செய்துகொள்வது என்ற எண்ணம் இருந்தமையால் 1950ல் பூதான் இயக்கத்தில் இருந்த கிருஷ்ணம்மாளை மணம் புரிந்துகொண்டார். வினோபா பாவேயின் பூதான் இயக்கத்திலும் பின்னர் சர்வோதய இயக்கத்திலும் தொடர்ந்து எழுபதாண்டுகளாக சமூகப்பணியில் ஈடுபட்டிருக்கிறார்.
சோலை எழுதிய ‘புரட்சியில் பூத்த மலர்கள்’ என்ற வாழ்க்கை வரலாறு ஜெகன்னாதன் கிருஷ்ணம்மாள் தம்பதியின் சலியாத போராட்ட வாழ்க்கையைப்பற்றிய சிறந்த ஆவணம். 1987ல் சுவாமி பிரணவானந்தா விருது, 1988ல் ஜம்னாலால் பஜாஜ் விருது, 1989ல் பத்மஸ்ரீ விருது, 1999ல் சுவிட்சர்லாந்து காந்தி அமைதிவிருது ஆகியவற்றை இத்தம்பதியினர் பெற்றுளனர். வாஷிங்டன் சியாட்டில் பல்கலை ஓபஸ் விருது அறிவித்திருக்கிறது. கடைசியாக ஸ்வீடனின் பெருமைக்குரிய விருது. [Rightlivelihood Award] சோமாலிய சமூகப்பணியாளர் ஆஷா ஹாகி, அமெரிக்கச் செய்தியாளர் அமி, ஜெர்மனிய டாக்டர் மோனிகா ஆகியோருக்கு இவருடன் சேர்ந்து பகிர்ந்து அளிக்கப்படுகிறது.
எல்லா விருதுகளையும் தங்கள் சேவையிலேயே செலவிட்டிருக்கிறார்கள் இத்தம்பதியினர். மாற்று நோபல் பரிசு கிட்டத்தட்ட 34 லட்ச ரூபாய் அடங்கியது. அதைக்கொண்டு ஒரு இலவச வீடுகட்டும் இயக்கத்தை ஆரம்பிக்கவேண்டும் என்று திட்டமிட்டிருக்கிறார் கிருஷ்ணம்மாள்.
என்ன காரணத்தால் காந்தி புத்தர் ஏசு வரிசைக்கு வைக்கப்படுகிறார்? என்னிடம் மறைந்த சிற்பி லாரி பேக்கர் சொன்னார் ‘புத்தர் நிறைய புத்தர்களை உருவாக்கினார். ஏசு பல்லாயிரம் ஏசுக்களை உருவாக்கினார். காந்தி ஏராளமான காந்திகளை உருவாக்கியிருக்கிறார்’ . லாரி பேக்கர் கூட காந்தி உருவாக்கிய ஒரு காந்திதான்.
நம் கண்முன் வாழும் இரு காந்திகள். காந்திக்கு மரணம் இல்லை.
***
மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Oct 23, 2008
***
links:
http://www.rightlivelihood.org/jagannathan_pictures.html
http://www.rightlivelihood.org/jagannathan.html
***
தொடர்புடைய பதிவுகள்
வெறுப்புடன் உரையாடுதல்
ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் – 1
காந்தியின் துரோகம்
ஹிட்லரும் காந்தியும்
காந்தியும் சுந்தர ராமசாமியும் (சு.ரா. நினைவின் நதியில் புத்தகத்திலிருந்து)
காந்தியைப் பற்றிய அவதூறுகள்
குடியரசுதினம்-கடிதங்கள்
வழிகாட்டியும், பாதசாரிகளும்விம
வந்தேமாதரம்
காந்திய தேசியம் 1
காந்தியும் தலித் அரசியலும் – 7
காந்தியும் தலித் அரசியலும் – 6
காந்தியும் சாதியும்
காந்தியும் இந்தியும்
சே குவேராவும் காந்தியும்
காந்தியின் பிழைகள்
சாருவுக்கு ஒரு கடிதம்
இ.எம்.எஸ்ஸும் கேரள தேசியமும் 2
இ. எம். எஸ்ஸ¤ம் கேரள தேசியமும்
காந்தியின் எளிமையின் செலவு
தாயார்பாதம்- கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
கடிதங்களின் பயனாக அறம் தொகுதியில் ஏழு கதைகள் வாசித்தேன். தெளிவான சித்தரிப்பு, சிந்தனைக்கு விருந்து.
1967-70இல் கோவை ரேஸ்கோர்ஸ் சாலையில் என் அலுவலக பணியறையை பகிர்ந்துகொண்டவர் D G R செல்வநாயகம். என் தந்தை வயது. நாகர்கோவில்காரர். முதல் முறையாக வீட்டை விட்டு வெளியே பணிக்கு வந்த எனக்கு அவர் நட்பு , வழிநடத்துதல் பெரிய பேறு.
தொடர்ந்த ஆண்டுகளில் குமரி மாவட்ட இனிய நண்பர்கள் பலர். அவர்கள் சொல்லத்தயங்கிய, சொல்லாமல் விட்ட தகவல்களை உங்கள் குமரிமாவட்டக் கதைகளில் சொல்லி விட்டீர்கள். பல புதிர்கள் விளங்கிவிட்டன.
சோற்றுக்கணக்கு, யானை டாக்டர், தாயார் பாதம் மூன்றும் ஒரு ரகம். சமூக கொடுமையால் வாழ்வின் விளிம்பில் ஊசலாடும் பாத்திரங்கள் மூன்றிலும் உண்டு .
இந்த மூன்றும் எனக்குள் கலந்து ஒன்றாகிவிட்டன. கோவில் யானைகள் நீண்ட காலம் வாழ்கின்றனவே என்று எழுத நினைத்தேன், உடன் நினைவு வந்தது. எனக்கு சிறு வயதிலேயே சில “தாயார் பாதம் பாட்டி”கள் தெரியும். அவர்களில் (அழகிலும், அறிவிலும் நிறைந்தவர்) ஒருவர் 94 ஆண்டு வாழ்ந்தார். மற்றவர்கள் முறையே 76,47 வயது வாழ்ந்தனர். கடைசி நபரை, தான் ஒரு வேண்டாத குழந்தை என்ற எண்ணமே குன்றவைத்துவிட்டது.
மூன்று கதைகளிலும் ஒரு குறுக்கிடும் தெய்வம் தேவை. யானை டாக்டரிடம் அன்பும், புரிதலும் ,நம்பகமும் பூரணம். ஆனால் மக்களின் பொறுப்பின்மையைப்பற்றி பொருமுகிறார். கெத்தல் சாயபு இன்னும் ஒரு படி மேலே. யார் பேரிலும் குறை இல்லை, தேவையானால் direct action! ஒரு சிறு சொல் ,செயல் விருந்தாளிகளிகளின் வயிற்றையும் உள்ளத்தையும் கண்களையும் நிறைத்துவிடும்.
தாயார் பாதத்தில் அந்த தெய்வம் தென்படவில்லை. இரண்டு கொடுமை பாத்திரங்களான தாத்தாவும், அவருடைய தந்தையும் இசைக்கலைஞர்கள், நாத உபாசகர்கள் அல்ல. மென்மையான கலை உணர்வும், மிருக உணர்வும் எப்படி சேரும் என்பதற்கு உளவியல் மற்றும் வேதாந்தம் இரண்டு விளக்கங்கள் கொடுக்கின்றன.
Johari window முறை நம்மை நான்கு கூறாக நோக்குகிறது. ஒரு முகம் நான் அறிந்தது, பிறருக்கும் வெளிப்படை. இரண்டாவது, எனக்கு மட்டுமே தெரிந்த, பிறர் சந்தேகப்படாத முகம். மூன்றாவது, உலகம் அறிந்த என் முகம், எனக்கு மட்டும் புலப்படாதது. இவை எல்லாவற்றையும் விட அபாயகரமானது நான்காவது, எனக்கும் பிறருக்கும் தெரியாத இருண்ட முகம். முதல் மூன்றையும் பெருக்கி, நான்காவதை சுருக்குவதே சுய அறிதலின் நோக்கம்.
வேதாந்தம் வாழ்க்கை சக்கரத்தின் சுழற்சியால் எழும் உணர்ச்சி அலைகளை காண்கிறது. ரஜஸ் என்கிற குணம் காம, க்ரோத, லோப உந்துதல்களை செய்கிறது. தமஸ் என்கிற குணம் மோக, மத, மாத்ஸர்ய விளைவுகளை செய்கிறது.இந்த ஆறும் ஷடூர்மிகள் என்று அழைக்கப்படும்.
தமஸ் இல்லாவிட்டால் ஓய்வு,உறக்கம், மறதி இவை இல்லாமல் மனிதன் அழிவான். மதம் என்ற பெருமிதம் புத்துணர்வு கொடுக்கும். மாத்ஸர்யம் என்ற பொறாமை, திருப்தியின்மை சலிப்பை போக்கும். ஆனால் மிகுதியான தமஸ் உலகை இருண்டதாக்கிவிடும். தமஸுக்கு ஒரே நிவாரணம் ரஜஸ்.
காமம் என்னும் இச்சைகள்தான் இவ்வுலகத்தின் இருப்புக்கும், வளர்ச்சிக்கும் ,அறிவுக்கும், அழகுக்கும், படைப்புக்கும், ஆன்மீகத்துக்கும்கூட காரணம். க்ரோதம் அதன் மறுவடிவம். லோபம் உலகியல் முன்னேற்றத்துக்கும், அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்யவும் தேவை. ஆனால் மிகுதியான ரஜஸ் ,மோகம் என்கிற தமஸ் நிலைக்கு தள்ளிவிடும். மோகம் என்பது மயக்கம், குழப்பம், துக்கம், சோகம், கவலை, பீதி, வெறுப்பு, போன்ற ஒரு கலவை கஷாயம்.
ரஜஸுக்கு நிவாரணம் ஸத்வம் எனும் தெளிந்த ஒடுங்கிய நிலை, தீவிர ஸாதகர்களால் எட்டப்படுவது.ஆனால் அறம் என்னும் moderator எல்லோராலும்
கடைப்பிடிக்கத்தக்கது.தர்மத்தின் வழியில் வாழ்க்கை சக்கரம் சுழலும், யாரையும் அறுக்காது.
அறம் வீட்டிலும் பள்ளியிலும் விடாமல் போதிக்கப்படவேண்டும். இளைய தலைமுறையினரின் அனைத்து உடல் உள்ள நோய்களுக்கும் இதுவே மருந்து.
அன்புடன்,
சாம கிருஷ்ணன்
***
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
வெற்றி -கடிதங்கள் 9
ஜெ,
படுப்பாளா?, எவ்ளளவு பணம் கொடுத்தால் படுப்பாள்?, பணக்காரனின் பண திமிரா? ஏழையின் தன்மானமா? ஆண்மகனின் ஆணவமா, பெண்ணின் கற்பா? வெற்றி பெறுவது எது? போன்ற அற்ப கேள்விகளுக்கு பதில் அல்ல “வெற்றி”.
முக்கிய கதாபாத்திரம் போல் தோன்றும் ரங்கப்பர் உண்மையில் போட்டியில் இல்லை. அவரை பயன்படுத்தி நமச்சிவாயமும், அவர் மனைவியும் தான் போட்டியிடுகிறார்கள். வெற்றி பெறுவது யார் என்பதுதான் கதை.
எந்த சூழ்நிலையிலும் பெண் கற்பு தவற கூடாது என்று ஆண் விரும்புகிறான். அதை நிலைநாட்டும் பொருட்டு தொடர்ந்து போராடுகிறான். ஆனால் நான் அறிந்த வகையில் ‘எந்த சூழ்நிலையிலும்’ என்பதை பெண்கள் ஏற்று கொள்ள தயாராக இல்லை. நான் இப்படி இருக்க வேண்டும் என்றால், நீ இப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று பெண் விருப்பப்படுகிறாள் அவள் எதிர்பார்ப்பு ஏமாற்றம் அடையும் போது, வெற்றி பெரும் வாய்ப்புக்காக காத்திருக்க தொடங்கி விடுகிறாள்.
பெரும்பாலான பெண்கள் ஏன் துறவு மேற்கொள்ள முடிவதில்லை என்ற வினாவின் மூலம், இந்த கதை காட்டும் தரிசனம் மிக முக்கியமானது.
-செந்தில்குமார்
***
வெற்றி சிறுகதைக்கு தற்போது கொஞ்சம் ஆக்கபூர்வமான விமர்சனங்கள் வருவது கொஞ்சம் ஆறுதல் தருகிறது (ஜெயமோகன் அவர்களே கதையின் மைய முடிச்சைப்பற்றியும், கதை எதை பேசுகிறது, எதைப் பேசவில்லை என்பது பற்றி குறிப்புகள் தந்த பிறகும்). இருந்தாலும் என் பங்குக்கு மேலும் சில பார்வைகளை முன்வைக்க விரும்புகிறேன்.
இந்தக்கதையை படிக்கும் வாசகர்கள் கருத்தில் கொள்ள வேண்டியவை:
இந்த எழுத்தாளர் இதுவரை என்ன செய்திருக்கிறார், இப்போது என்ன செய்கிறார்?
நம் இந்திய சமூகம் (ஆன், பெண் இருவருமே) இதுவரை பெண்களை எப்படி பார்த்திருக்கிறது, இப்போது எப்படி பார்க்கிறது?
கலை என்பது எதற்காக? அதன் உச்சம் என்பது எதை நோக்கி செல்ல வேண்டும்?
ஜெயமோகன் என்னும் எழுத்தாளர்…
நிறைய எழுதியிருக்கிறார், எழுதிக்கொண்டிருக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே. நான் சுட்டிக்காட்ட விரும்புவது இரண்டு விஷயங்களை:
அவருடைய பெரிய நாவல்களின் உணர்வுகளின்சாராம்சத்தை ஏதேனும் சிறுகதைகளிலும், மேலும் அடர்த்தியாகவும் அதே சமயம் துல்லியமாகவும் அவை வெளிப்பட்டிருக்கும். காடு, கொற்றவைநாவல்கள் சிறுகதைகளாகவும் எழுதப்பட்டுள்ளன, உங்களால் எளிதில் கண்டுபிடிக்கவும் முடியும்.
அவருடைய சமூக விமர்சனங்களில் எப்போதும் முற்போக்கு எண்ணங்களை மேலெடுத்து செல்ல விழைபவர், ஒரு சமுதாயத்தை மேலெடுத்து செல்வதில் கலைஞர்களின் பங்கு முதன்மையானது என்று நம்புபவர்.
இப்பொழுது வெண்முரசு எழுதிக்கொண்டிருக்கிறார், அதாவது ஆப்கானிஸ்தான் முதல் அருணாச்சல பிரதேசம் வரை, கன்னியாகுமாரி முதல் காஷ்மீர் வரை உள்ள அதனை வகையான நிலைக்காட்சிகளும், மனிதர்களும் அவர்கள் பண்பாடும், பழக்கவழக்கங்களும் துல்லியமாகவும் விவரமாகவும் அவரது ஆழ்மனம் தொகுத்து வைத்திருக்கிறது (அவரே வியக்கும் அளவுக்கு). இவ்வளவு நுட்பமான கலைமனம் எளியது போல ஒன்றை சொன்னாலும் அது உண்மையில் அவ்வளவு எளியதாக இருக்க முடியாது.
நம் சமூக மனநிலை…
கிருஷ்ணனுக்கு அறுபதினாயிரம் துணைவிகள், கிருஷ்ணைக்கு வெறும் ஐந்து தான். கிருஷ்ணன் இன்றும் கொண்டாடப்படுகிறான், பாஞ்சாலி இன்றும் இழிவாக பார்க்கப்படுகிறாள். இங்கு நான் சுட்டுவது துணைகளின் எண்ணிக்கையோ அல்லது அதற்குப்பின் உள்ள நமது தத்துவங்களையோ அல்ல, நமது பார்வை எப்படி இருக்கிறது என்பது மட்டுமே.
கலை என்பது..
ஜெயமோகன் அவர்களின் இணையதளத்தை தொடர்பவர்களுக்கு இது குறித்து மிக நல்ல தெளிவு இருக்கும், இருந்தாலும் சுருக்கமாக, நமது மனதின் நுட்பமான முடிச்சுகளால் நமது வாழ்க்கையின் காட்சிகள் அமைகின்றன. சில காட்சிகளை நிகர் வாழ்க்கையாக கட்டமைக்கையில் நமது மனதின் நுட்பங்களை (திரும்பி) சென்று தொடுவதை கலை என்று கொள்வோம் எனில் எவ்வளவு நுட்பமாக தொடுகிறதோ அதுவே அந்தக்கலையின் உச்சம்.
வெற்றி என்கிற இந்தக்கதை…
அவர் எழுதிக்கொண்டிருக்கிற மஹாபாரத நாவலின் சிறுகதை வடிவம் இது. கதை மாந்தர்களின் குணநலன்களையும் நினைவு கூர்க (ரங்கப்பர் – அர்ஜுனன் போல் தெரியும் கிருஷ்ணனா?) அது போக நச்சிவாயம், தன்னை தர்மபுத்திரனுடன் ஒப்பு நோக்குவதையும் ரங்கப்பரை அர்ஜுனனுடன் ஒப்பிடுவதையும் (ஒருவேளை வாசகர்கள் சரியாக கவனிக்க மாட்டார்களோ) இதில் இன்னுமொரு லாபம், இருப்பதிலேயே நமச்சிவாயம் தான் கெட்டவன் போல தோன்றுவது, அவனை தருமனோடு ஒப்பிட்டால் அந்த உணர்வு கொஞ்சம் மட்டுப்படும். என்னதான் பொண்டாட்டிய வச்சு சூதாடினவன் என்றாலும் நாம் தருமனை கெட்டவனாக நினைப்பதில்லை, பாவம் பலவீனமானவன் என்று மன்னித்துவிடுகிறோம்.
மேலும் வியாசர் தன் கதைக்கு வைத்த பெயர், ஜெயசரித, வெற்றியின் கதை.
யாரும் நல்லவரும் இல்லை, யாரும் கெட்டவரும் இல்லை. எல்லோருக்குள்ளும் தேவர்களும் இருக்கிறார்கள் அசுரர்களும் இருக்கிறார்கள், சில சமயம் நேருக்கு நேர் சந்தித்துக்கொள்ளவும் செய்கிறார்கள்.
இப்படி உருவகப்படுத்தினால், வாசக மனம் தான் cosmopolitan கிளப். எவ்வளவு பழையது, மகாபாரத காலம் தொட்டு இன்றும் மாறாமல், வெறும் பழம்பெருமைகளை சூடிக்கொண்டு..
ரங்கப்பர் லதாவின் சந்திப்பிற்கு பின் அவள் உடல் மொழியை அவ்வளவு நுட்பமாக சொன்ன ஆசிரியன் அங்கே என்ன நடந்தது என்று ஒரு வார்த்தையும் எழுதவில்லை. அந்த வெற்றிடத்தில் தான் வாசகனின் மனதில் இருப்பது அசுரனா தேவனா என்று முகம் எழுந்து வருகிறது. ஆசிரியர் மிகச்சரியான ஒரு கோணத்தில் மிகநுட்பமான ஒரு கண்ணாடியை நம் முன் நீட்டுகிறார், நாம் நம் நிஜ முகத்தைக்கண்டு அதிர்கிறோம்.
ஆசிரியர் ஒரு வார்த்தையும் எழுதவில்லை, கடைசியில் வரும் வரியும் லதாவின் கூற்றுதான், அவள் அதை நமச்சிவாயத்தை பழிவாங்குவதற்காக பொய்யாக கூட சொல்லியிருக்கலாம் என்ற சாத்தியக்கூறை கதை முழுவதும் எழுதியிருக்கிறார். ரங்கப்பர் ஒரு காமுகன் அல்ல என்பதையும் தனக்கு பணியாத ஒரு பெண்ணுக்காக ஏங்கி (கண்ணீர் விடுமளவுக்கு) நிற்பவன் என்றும் சொல்லியிருக்கிறார். இத்தனை இருந்தும் அந்தப்பெண் அங்கு சோரம் போனாள் என்று மட்டுமே எடுத்துக்கொள்ளும் நம் புத்தியை என்ன செய்வது?
வெண்முரசு தொடங்கும்போது, ‘என்னடா இது வியாசனுக்கு சவால் விடறாப்ல, கொஞ்சம் ஓவராத்தான் போகுது ‘ என்று நினைத்தேன். மகாபாரதத்தின் மைய உணர்வை அதே அளவு துல்லியத்துடன் சிறுகதையில் வைத்தபோது overtake பண்ணிவிட்டார் என்றே கருதுகிறேன்.
வெற்றி கதையின் பக்கங்களை (நீளத்தை) எண்ணுபவர்கள் தயவுசெய்து வெண்முரசின் பக்கங்களை எண்ணிப்பார்க்கவும்.
கதை எழுதியதன் தொழில்நுட்பங்களை அதிகம் அலச வேண்டாம் என்று நினைத்தாலும் கதை எழுத ஆசைப்படும் அனைவரும் இந்தக்கதையை பல முறை கூர்ந்து (உணர்வுகளை ஒதுக்கி விட்டு) படித்தால் கற்றுக்கொள்ள நிறைய கிடைக்கும் என்றே நினைக்கிறேன்.
அன்புடன்,
முரளிதரபாண்டியன்
***
அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,
திரு. ராஜா அவர்களின் கடிதமும் அதற்கு தங்கள் பதிலும் எனக்கு ஒரு திறப்பாக அமைந்தது. பல கடிதங்களிலும் அவ்வாறு கூறப்படும் போது அதன் பொருள் எனக்குப் புரியவைல்லை, “திறப்பாக” என்றால் என்ன? என்று என்னை நானே கேட்டுக்கொள்வேன். இப்போதுதான் புரிந்து கொண்டேன். தஞ்சை சந்திப்பின் போது ஒரு படைப்பை அதன் வரலாற்றுப் பின்புலத்துடன் நோக்குதல் பற்றி பேசினீர்கள். இந்திய மனம் தனக்கே உரித்தானதாக கொண்ட வாழ்கை முறைகள், ஒழுக்க மதிப்பீடுகள் பற்றிய எண்ணங்கள், உணர்வுகள் ஒரு புறம், பிரிட்டிஷ் – அமெரிக்கர்களின் தாக்கம் கொண்டவர்கள் மறுபுறம் என்று பார்க்க கதை தனி மனிதர்களைக் கடந்து அக்காலத்தின் பொது சூழலை சென்றடைகிறது. வெற்றி சிறுகதையை இப்படி பார்க்க – அட கதையின் பாத்திரங்கள் கை நழுவிச் சென்று விடுகிறதே ? தனிமனிதரில் யாருக்கு வெற்றி யாருக்கு தோல்வி என்று எவ்வாறு சொல்ல முடியும்? ஒருவர் எதை வெற்றி என்று கருதுகிறார் என்பதைப் பொறுத்து அது நபருக்கு ஏற்ப மாறுவதல்லவா? எதைச் சொன்னாலும் அது என் சொந்த மதிப்பீடு தானே ஒழிய வேறன்ன? அது சரி என்று எவ்வாறு கருத முடியும் ?. ஒரு படைப்புக்குள் சென்று அதன் வழியாக நாம் நேரடியாக அறிந்திராத ஒரு காலத்தின் பரப்புக்குள் செல்வது – இவ்வெண்ணம் உவகை அளிக்கிறது. ஒரு படகு போல படைப்பைப் கொண்டு கடந்த காலத்தின் கரை அடைந்து அங்கே படகை நீங்கி சென்றுவிடுதல். எனில், வரலாற்றுக்குள் செல்வது, அக்காலகட்டத்தின் அனைத்து அம்சங்களின் சாராம்சமான சிலவற்றை கிரகித்துக் கொள்வது. திசை காட்டும் கருவி கொண்டு அறிவது போல கடந்த காலத்தைக் கொண்டு நிகழ்காலத்தை, அவ்வாறே எதிர்காலம் சென்று கொண்டிருக்கும் திசையை அறிதல். சில காலம் முன்பு சவுதியில் ஒருவருக்கு தலையை வெட்டி மரண தண்டனை நிறைவேற்றப்படும் வீடியோவை நண்பர் ஒருவர் காண்பித்தார். “மிகவும் கொடூரம்.” என்றேன். “இதைவிட கொடூரம் இங்கு இருந்திருக்கிறது. இதிலாவது கொலைக் குற்றம் செய்தவருக்குத் தான் மரண தண்டனை. ஆனால் இங்கு அன்று கோவலனுக்கு திருட்டு குற்றச்சாட்டின் பேரில் அல்லவா மரண தண்டனை வழங்கப்பட்டது? என்ன நாம் அந்த காலத்தைக் கடந்து வந்து விட்டோம். இவர்கள் பெட்ரோலால் செல்வம் குவிந்திருந்தாலும் இன்னும் மனதளவில் வாட்களின் காலத்திலேயே இருக்கிறார்கள்.” என்றான். அவர்களும் மாறுவார்கள். மாறித்தான் தீர வேண்டும்.
இன்னொன்று, வெண்முரசு – மாமலர் -நீர்க்கோலம், உங்கள் தளத்தில் சில இடங்களில், இப்போது சபரிநாதன் நேர்காணலில் – “யாதும் ஊரே யாவரும் கேளிர்” சங்கப்பாடல் பாடலின் வரிகள் அல்லது அவற்றின் பொருள் வரக் காண்கிறேன். அனைத்தையும் அணைத்து அனைத்தையும் வளர்த்து அனைத்தும் தானென்றாகி நிற்கும் வேதமுடிபுக்கொள்கையே உங்கள் தளத்தையும் அத்தனை படைப்புகள்-விஷயங்களுடன் இணைத்து நிற்கிறதோ என்று எண்ணுகிறேன் “யாதும் ஊரே யாவரும் கேளிர்.”
அன்புடன்,
விக்ரம்,
கோவை
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 18
17. முகமுன்முகம்
மறுநாள் காலையில் முதலிருள் பொழுதிலேயே அர்ஜுனனும் தருமனும் பிறரிடம் விடைபெற்றுக் கிளம்பி காட்டுக்குள் சென்று மறைந்தனர். பீமன் அப்பால் துணைநிற்க திரௌபதி கண்ணீர் என ஊறி வழிந்த மலையிடுக்கு ஒன்றில் இலைகோட்டி நீர் அள்ளி உடலில் ஊற்றி நீராடினாள். குழல்கற்றைகளை ஐந்தாகப்பகுத்து தோளில் விரித்திட்டு அவள் மீண்டு வந்தபோது நகுலனும் சகதேவனும் விடைபெறும் பொருட்டு காத்து நின்றிருந்தனர். திரௌபதியின் பின்னால் வந்த பீமன் இளையவரைக் கண்டதும் “கிளம்பிவிட்டீர்களா?” என்றான். “ஆம், மூத்தவரே” என்றான் நகுலன். “நாங்கள் இருவரும் சூதர்களாக செல்லவிருக்கிறோம். எங்கள் பெயர்களை சுதன் அனுசுதன் என்று கூறலாமென்று இருக்கிறோம். எங்களைக் குறித்து செய்திகள் அப்பெயரில் உங்களை வந்தடையட்டும்.”
“நன்று!” என்று பீமன் தலையசைத்தான். பீமனை வணங்கி திரௌபதியிடம் தலையசைவால் விடைபெற்று அவர்கள் இருவரும் சென்றனர். “நாமும் கிளம்பவேண்டியதுதான்” என்றான் பீமன். “உனக்கு உணவு கொண்டு வைத்திருக்கிறேன். அருந்து!” திரௌபதி பெருமூச்சுடன் உணவருந்த அமர்ந்தபோது “நீ இன்னமும் பிங்கலரின் கதையில் இருந்து மீளவில்லை” என்றான் பீமன். “ஆம்” என்றாள் திரௌபதி. “எங்கிருக்கிறாய்?” என்றான் பீமன். “தமயந்தியின் காட்டில்” பீமன் புன்னகை செய்து “அது இந்தக்காடுதான்…” என்றான்.
கதிரெழத் தொடங்கவில்லையெனினும் வானொளி காட்டிற்குள் விழிதுலங்கச் செய்திருந்தது. கிளம்பும்பும்போது திரௌபதி அவர்கள் வந்த வழியை திரும்பிப் பார்த்தாள் பீமன் “செல்வோம்” என்றான். அவள் தலையசைத்தாள். பீமன் தண்ணீர் குடுவையும் கிழங்குகளும் கனிகளும் நிரம்பிய கூடையை தோளிலேற்றிக்கொண்டு நடந்தான். தனது மாற்றாடையை சுருட்டிக் கட்டிய மரவுரி மூட்டையை கையிலெடுத்தபடி திரௌபதி அவனுடன் சென்றாள். இருவரும் ஒருவரோடொருவர் உரையாடாமலேயே நடந்தனர்.
சற்று கடந்தபின் அந்த அமைதியால் உளம் அழுத்தப்பட்ட பீமன் “இன்னும் சிறிது தொலைவுதான்” என்றான். “ஆம், ஓசைகள் கேட்கின்றன” என்று திரௌபதி சொன்னாள். “நான் தோள்வலி வித்தை காட்டும் பால்ஹிக ஷத்ரியனாகவும் நீ என் துணைவியாகவும் அங்கு தோற்றமளிப்போம்” என்றான். அவள் புன்னகைத்து “முதல் மாற்றுரு” என்றாள். “ஒருசிறு பயிற்சி” என்று பீமன் சொன்னான். “இங்கு நம்மை கூர்ந்து நோக்காதவர்களுக்கு முன் மாற்றுரு கொள்வோம். இது நம்மை நாமே மறைத்துக்கொள்ளல் மட்டும்தான். மாற்றிக்கொள்வதல்ல.”
“தாங்கள் இதற்குமுன் மாற்றுருக்கொண்டதுண்டா?” என்று திரௌபதி கேட்டாள். “எல்லா நகரங்களிலும் மாற்றுரு கொண்டு செல்பவனாகவே என்னை உணர்கிறேன்” என்று பீமன் நகைத்தான். திரௌபதி “உடலை பிறிதொன்றாகக் காட்டுவதைக் குறித்து சொன்னேன்” என்றாள். “ஆம், நானும் அதைத்தான் சொன்னேன் நகரங்களில் என் உடலை நான் பிறிதொன்றாக காட்டுகிறேன்” என்றான். திரௌபதி “இந்த உரையாடல் எங்கும் செல்லப்போவதில்லை” என்றாள். பீமன் “ஆம்” என்றபின் சற்று கழித்து “இளையோர் இருவரும் இங்கு மிக அருகேதான் இருக்கிறார்கள்” என்றான்.
“எப்படி தெரியும்?” என்று திரௌபதி கேட்டாள். “என் உள்ளம் சொல்கிறது. எப்போதும் நானிருக்கும் இடத்தை என் சித்தம் சென்று தொடும் பெரிய வட்டமாகவே உணர்கிறேன். அவ்வட்டத்திற்குள் இருப்பனவும் வருவனவும் செல்வனவும் ஒவ்வொரு கணமும் எனக்கு தெரிந்துகொண்டிருக்கும். இளவயதில் இது என்ன என்று வியந்துள்ளேன். பின்னர் அறிந்தேன். இது குரங்குகளின் தன்னுணர்வு” என்றான் பீமன். “மானுடரின் உளவட்டம் பெரிது. அது வாழ்வட்டத்தை சிறிதாக்கிவிடுகிறது. நான் என் உளவட்டத்தைச் சுருக்கி நிகழ்வட்டத்தை நிலைநிறுத்திக்கொள்கிறேன்.” உரக்க நகைத்து “ஆகவே நீ இப்போது இருப்பதுபோல நான் கதையுலகில் கால் வைத்து நடப்பதில்லை” என்றான்.
அவர்கள் மையச்சாலைக்கு வந்தபோது பெரிய தலைப்பாகைகளுடன் புத்தாடையணிந்த சூதர்களின் குழு ஒன்று இசைக்கருவிகளும் தோல்மூட்டைகளுமாக சென்று கொண்டிருந்தது. அவர்களின் குடிப்பொருட்களை ஏந்திய இரு அத்திரிகளை இளம் சூதர்கள் கயிற்றைப்பிடித்து நடத்திச் சென்றனர். ஓர் அத்திரியின் மீது நிறைவயிற்றுடன் விறலி ஒருத்தி எதையோ மென்றபடி ஒருக்களித்தவள்போல அமர்ந்திருந்தாள். பிறிதொன்றில் இரு குழந்தைகளுடன் அன்னை விறலி அமர்ந்திருந்தாள். அவள் வாயிலிட்டு மென்ற எதையோ தன் குழவியின் வாய்க்குள் துப்பினாள். அது வாய் வழிய அதை குதப்ப இன்னொரு குழவி வாய் நீட்டி கைகளை வீசியபடி குருவிக்குஞ்சு போல எம்பியது.
அவர்கள் மலர்ந்த முகத்துடன் ஒருவருக்கொருவர் நகையாடியபடி சென்றனர். இருபொதி சுமந்த எட்டு அத்திரிகளுடன் வணிகர்களின் குழு அவர்களைத் தொடர்ந்து சென்றது. தோளில் தோல் மூட்டைகளை ஏந்திய இளம் வணிகர்கள் புழுதி படிந்த கால்களும் கலைந்து காற்றிலாடிய குழல் ற்றைகளுமாக சிரித்துப் பேசிக்கொண்டு நடந்தனர். இருமருங்கும் ஐயத்துடன் விழிகள் சுழல வேலேந்திய காவலர்கள் நால்வர் அவர்களைக் காத்து உடன் சென்றனர். வணிகர் குழுவுக்குப்பின்னால் திரௌபதியும் பீமனும் சென்று சேர்ந்துகொண்டனர்.
ஒரு காவல்வீரன் “எங்கு செல்கிறீர்கள், மல்லரே?” என்றான். “குண்டினபுரியின் வேனிற்சந்தைக்கு. நான் மற்போர்வித்தைகள் காட்டுபவன். இவள் என் துணைவி” என்றான் பீமன். “நீர் ஷத்ரியரா?” என்று ஒருவன் கேட்டான். “ஆம்” என்றான் பீமன். அவர்களிருவரும் அவனை கூர்ந்து நோக்கியபின் ஒருவன் “ஆனால் மிலேச்சர்களின் குருதி உம் உடலில் உண்டு என்பதில் ஐயமில்லை” என்றான். பீமன் நகைத்து “எனது குருதியை நான் இன்று வரை பார்த்ததில்லை” என்றான். அவர்கள் நகைத்து “அதுவரைக்கும் நன்று” என்றனர். “எது உம் ஊர்?” என்றான் இன்னொருவன். “பால்ஹிகநாடு” என்றான் பீமன். “அங்கே மிலேச்சகுருதி அற்றவர்கள் அரிது” என்றான் வணிகன்.
பெருஞ்சாலையில் மேலும் மேலும் மக்கள் வந்து சேர்ந்துகொண்டிருந்தனர். சிறுவணிகர்கள், மலைப்பொருட்களை சந்தைக்கு கொண்டு செல்லும் கானகர், சந்தைக்கு குடிப்பொருள் வாங்கச்செல்லும் சிற்றூர்குழுக்கள். அனைவருமே உரத்த குரல்களுடன் சிரித்து பேசிக்கொண்டனர். சிரிப்பு எழுந்துவிட்டால் எல்லா பேச்சும் சிரிப்பூட்டுவதே என பீமன் எண்ணிக்கொண்டான். மகிழ்ச்சியாக இருப்பதை பிறருக்கு அறிவிப்பதே சிரிப்பு. மகிழ்ச்சி என்பதே ஒருவகை வெளிப்பாட்டு முறையா? அவன் புன்னகையுடன் தருமனை எண்ணிக்கொண்டான். அவர் சொன்ன சொற்றொடரா அது?
ஒவ்வொரு வழிச்சந்தியிலும் வந்தவர்களை சென்றவர்கள் புதுமழைநீரை நதி என அலையெழுந்து சந்தித்தனர். ஒருவரை ஒருவர் கூவி அழைத்து அறிமுகம் புதுக்கினர். முறைமைச்சொல் அழைத்து உறவு அறிவித்தனர். நெடுங்காலத்துக்குப்பின் கண்டவர் ஓடிச்சென்று தோள்தழுவி குலநலம் உசாவினர். எவரும் அவர்களை தனித்துப் பார்க்கவில்லையென்பது பீமனுக்கு தெரிந்தது. அச்சாலையில் முற்றிலும் அயல் முகங்கள் தெரிவது வழக்கமென்று தோன்றியது.
விதர்ப்பத்தின் முதல் காவலரண் தொலைவில் தெரிந்தது. அங்கு நான்கு நிரைகளாக வண்டிகளையும் அத்திரிகளையும் நிறுத்தி கூர்நோக்கி குலமும் குடியும் ஊரும் அடையாளங்களும் தேர்ந்து சுங்கம் கொண்டு அப்பால் அனுப்பினர் காவலர். பணிக்காவலர்களுக்கு மேல் எழுந்த பீடத்தில் விதர்ப்பத்தின் அரசமுத்திரை கொண்ட வெள்ளிக்கோலுடன் நின்ற தலைமைக்காவலனின் செந்நிறத்தலைப்பாகை உயர்ந்து தெரிந்தது. அத்திரிகளும் வண்டிகளும் ஒன்றன்பின் ஒன்றாக சென்று இணைந்துகொண்டன. நடந்து சென்றவர்களின் நிரை எறும்பு வரிசை போல சாலையிலிருந்து விலகி தனித்து தெரிந்த காவல் கொட்டகை ஒன்றுக்குள் நுழைந்து மறுபக்கம் வெளியே சென்றது.
பீமன் விழிகளால் திரௌபதியிடம் எச்சரிக்கை காட்டிவிட்டு அந்நிரையில் இயல்பாக சென்று நின்றான். நிரையில் நின்றவர்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டே இருந்தனர். அவர்கள் காவல் கொட்டகைக்குள் நுழைய அரை நாழிகை நேரம் ஆயிற்று. உள்ளே இருந்த காவலர்கள் ஒருவருக்கொருவர் உரத்த குரலில் நகையாடியபடி தங்கள் அலுவல்களைப்பற்றிய பகடிகளைப் பேசியபடி ஒவ்வொருவராக அழைத்து முகங்களை கூர்ந்து நோக்கியபடி ஓரிரு வினாக்களைத் தொடுத்து பெயர்களை பதிவு செய்து அப்பால் அனுப்பினர். பீமன் உள்ளே சென்றபோது ஒருவன் உரத்த குரலில் “குண்டினபுரியை அவனுக்கே அளித்துவிடலாம். பழைய ஆடைகளை நாம் நிஷாதர்களுக்கு அளிப்பதில்லையா?” என்றான்.
முதிய வீரன் ஒருவன் “போதும், இது அரசசெவிகளில் விழுந்துவிட்டால் இதுவும் நிகழக்கூடும். நிஷாதர்கள் நமது தலைமேல் அமர்ந்து நம்மை கால்களால் ஆள்வதற்கு ஒரு வாய்ப்பு எழும்” என்றான். பிறிதொருவன் உரக்க “யாதவன் மேல் சினம் கொண்டு நிஷாதர்களை தூக்கிச் சுமப்பது நல்ல அரசாடல்” என்றான். பீமன் முன் நின்ற இளம் காவலன் அவன் உடலை நோக்கியபின் “தடியா, எந்த ஊர் உனக்கு?” என்றான் “பால்ஹிக நாடு. ஷத்ரியன், என் பெயர் வலவன்” என்றான் பீமன்.
அவனை ஏறிட்டு நோக்கியபின் எண்ணியிராப் பொழுதில் அவன் தோளை ஓங்கிக் குத்தி “பெருமல்லர் என்று எண்ணுகிறேன்” என்றான். “ஆம், பாறைகளை தூக்கி வித்தை காட்டுவேன். தாங்கள் விரும்பினால் இந்த பீடத்தை தூக்கிக் காட்டுகிறேன்” என்றான் பீமன். பீடத்தின் மேல் நின்றிருந்த முதிய தலைமைக்காவலனை பார்த்தபின் “பீடத்தில் நிற்பவரோடு தூக்க முடியுமா?” என்றான் காவலன். “ஆம்” என்றபடி பீமன் தூக்கப்போனான். அவன் தோளைத் தட்டி “நன்று! நன்று! நீ தூக்கக்கூடும். இது யார்?” என்றான் காவலன். “இது என் தேவி” என்றான்.
அவன் அவளை மேலும் கூர்ந்து நோக்கி “கரியவள், அழகி” என்றான். பின் அவளிடம் “உன் பெயர் என்னடி?” என்று கேட்டான். “சைரந்திரி” என்று அவள் சொன்னாள். “நீ என்ன வித்தை காட்டுவாய்?” என்றான் அவன். பின்னால் நின்ற ஒருவன் “இரவில் அவனை அவள் சுமப்பாள். அந்த வித்தைக்காகவே கூட்டிச் செல்கிறான். வேறென்ன?” என்று சொல்ல காவலர் அனைவரும் வெடித்து நகைத்தனர். பீமன் விரிந்த மூடச்சிரிப்புடன் “ஆம் வீரர்களே, அவள் என்னை தூக்குவதுண்டு” என்றான். திரௌபதி தலைகுனிந்து நின்றாள். “ஏன் கூந்தலை அவிழ்த்திட்டிருக்கிறாள்? கிளிகள் கூடுகட்டப்போகின்றன” என்றான் ஒருவன். “பால்ஹிக நாட்டு வழக்கம் இது. நாங்கள் குழல்கட்டுவதில்லை” என்று பீமன் சொன்னான்.
அதற்குள் பின்பக்கம் கிராதர்கள் நால்வர் கூடைகளில் அடைக்கப்பட்ட குரங்குக் குட்டிகளுடன் வந்து நின்றனர். அவர்களை திரும்பி நோக்காமலே “செல்க!” என்று கையைக் காட்டிய காவலன் “கூடையில் என்ன, உங்கள் மைந்தரா?” என்றான். “ஆம் வீரரே, விதர்ப்பத்தின் படைகளில் சேர்த்துவிட வந்திருக்கிறோம்.” வீரன் உரக்க “சிரிப்பா? சிரிக்கும் வாய்களை கிழித்து விரிப்பேன். மூடப்பதர்களா…” என்றான். “நாங்கள் சிரிக்கவில்லை, எங்கள் குரங்குகள்தான் சிரிக்கின்றன” என்றான் ஒரு கிராதன். “வாயை மூடு குரங்கே” என்றான் முதியகாவலர்தலைவன்.
மறுபக்கம் வந்ததும் பீமன் விழிகளால் திரௌபதியை சந்தித்தான். அவள் முகத்தில் உணர்வுமாறுதல் ஏதும் தெரியவில்லை. “இனி எவரும் கேட்கமாட்டார்கள் என நினைக்கிறேன். இந்த நெரிசலில் நீந்தியே நாம் குண்டினபுரியை கடந்துவிடமுடியும்” என்றான் பீமன். திரள்நெரிவாகச் சென்ற மக்களில் ஒருபகுதி பிரிந்து அப்பாலிருந்த சோலை நோக்கி செல்வதை பீமன் கண்டான். “அங்கு என்ன உள்ளது?” என்று கேட்டான். “விதர்ப்பத்தின் மூதன்னையர் ஆலயம். வணிகம் செய்பவர்கள் அங்கு சென்று செப்புக்காசுகளை காணிக்கையிட்டுச் செல்வது வழக்கம்” என்றான் ஒரு முதியவன்.
பீமன் திரௌபதியை நோக்க ‘சென்று பார்த்துவிட்டுச் செல்வோம்’ என்பதுபோல் அவள் தலையசைத்தாள். கிளைச்சாலை சென்று நுழைந்த சோலை உயரமற்று தாழ்ந்த கிளைகள் கொண்ட தழை மரங்களாலானதாக இருந்தது. தரையெங்கும் சருகுகள் உதிர்ந்து கிடந்தன. அவற்றின்மேல் சிற்றுயிர்கள் சலசலத்தோடின. அச்சோலையில் குடியிருக்கும் மான்கள் மக்களைக்கண்டு அஞ்சாமல் தலைதூக்கி நோக்கியபடி நின்றிருந்தன. சோலைக்குள் உடுக்கோசையும் முழவோசையும் மணியொலியும் கேட்டுக்கொண்டிருந்தன.
சோலை நடுவே சற்றுத்தாழ்வான பகுதியில் மூதன்னையரின் ஆலயம் அமைந்திருந்தது. மரத்தாலான கூரையிடப்பட்ட அரைவட்ட வடிவமான நீண்ட ஆலயநிரையின் கருவறைகளில் உயர்ந்த பீடங்களில் அமர்ந்திருந்த அன்னையரின் சிலைகளை தொலைவிலிருந்தே காண முடிந்தது. பன்னிரு அன்னையரின் கருவறை வாயில்களும் பொதுமுற்றம் நோக்கி திறந்திருந்தன. அதன் நடுவே இருந்த இடையளவு உயரம் கொண்ட அகன்ற பலிபீடத்தில் வழிபடச் சென்றிருந்தவர்களின் கையிலிருந்த மலரையும் கனிகளையும் வாங்கி வைத்து படையல் வைக்க பூசகர்கள் எண்மர் நின்றிருந்தனர். எண்மர் படையலிட்ட பொருட்களை எடுத்து அப்பால் கூடைகளில் வைக்க அதை ஊழியர்கள் சகடப்பலகைகளில் ஏற்றி தள்ளிக்கொண்டு சென்றனர். பீடம் ஒழிந்து நிறைந்து ஒழிந்துகொண்டிருந்தது.
மக்கள் நிரையாகச் சென்று பன்னிரு அன்னையரின் முன்னும் நின்று தொழுது அப்பால் சென்றனர். நிஷாதர்களும் கிராதர்களும் மலைமக்களும் வணிகர்களும் பலிபீடத்தின் மீது வைத்த காணிக்கைகளை நீட்டி “இங்கு!” “இதோ!” “காணிக்கைகளை பெறுங்கள், பூசகர்களே” என்றெல்லாம் கூவிக்கொண்டிருந்தனர். ஒருவரை ஒருவர் தோள்களால் உந்தியும் தள்ளியும் முன்னால் செல்ல முந்தினர். கூப்பிய கைகளுடன் முதல் அன்னையின் ஆலயத்தருகே சென்று நின்று திரௌபதி வணங்கினாள். அவளுக்குப்பின்னால் நின்றபடி உள்ளே அமர்ந்திருந்த அன்னையை பீமன் நோக்கினான்.
ஆலயவாயிலில் நின்றிருந்த பூசகர் உரத்த குரலில் “லோபாமுத்திரை! விதர்ப்ப குலத்தின் முதலன்னை. உலகு புரக்கும் அம்மையையும் அப்பனையும் அருகிருந்து வணங்கும் அகத்தியனின் அறத்துணைவி. அன்னையை வணங்குக! அருகிருந்து அருளும் அகத்தியரை வணங்கி அருள் பெறுக!” என்று கூவினார். பூசெய்கைகள் செய்பவர்கள் மலரும் செப்புப்பொற்காசும் கொண்ட தாலங்களை நீட்ட அவற்றைப்பெற்று உள்ளே சென்று மலராட்டும் நீராட்டும் சுடராட்டும் முடித்து மலரை திருப்பி அளித்தார் பூசகர்.
ஒவ்வொரு ஆலய முகப்பிலும் நின்று வணங்கி பன்னிரண்டாவது ஆலயத்தை அடைந்தனர். பூசகர் “விதர்ப்ப குலத்தெழுந்த பேரரசி. ஒரு கோல் கீழ் பாரத நிலத்தை ஆண்டவள். விதர்ப்பகுலப்பேரரசர் பீமகர் மகள். பேரரசர் நளன் மணந்த மங்கை, தமயந்தி” என்று கூவினார். “வணங்கி அருள் கொள்க! உங்கள் செல்வியர் விழிகளில் தெய்வமெழுக!”
தமயந்தியின் கற்சிலை இரண்டடி உயரமிருந்தது. விரித்த குழல் தோளுக்குப்பின் பரவியிருக்க நிமிர்ந்த முகம் நிலைகொண்ட நோக்குடன் அறியாச்சொல் ஒன்றை இதழ்களில் நிறுத்தி காலத்திற்கு அப்பால் அமர்ந்திருந்தது. பணைத்த பெரும் தோள்கள். ஒரு கால் மடித்த அரையோக அமர்வு. கழல்கள். காலுக்குக்கீழ் கைக்கூப்பிய வடிவில் கலிதேவன் அமர்ந்திருந்தான். அவன் இரு தோள்களிலும் காகங்கள். திரௌபதி கைகூப்பி விழிகள் நிலைகொள்ள தமயந்தியை நோக்கியபடி நின்றாள். மேலும் மேலும் வந்து கொண்டிருந்த நிரை அவளை முட்டி சென்றுகொண்டிருக்க ஆற்றொழுக்கில் கட்டப்பட்ட படகென அவள் உடல் அசைந்துகொண்டிருந்தது.
பீமன் அவள் தோளைத் தட்டி “செல்வோம்” என்றான். “ஆம்” என்று அவள் விழித்து “செல்வோம்” என்றாள். மீண்டும் நிரையில் இணைந்து நடந்து பெரும் சாலையை அடைந்தார்கள். பீமன் அவளிடம் “காலடியில் கலி. வெற்றி கொண்டுவிட்டாள்” என்றான். திரௌபதி புன்னகைத்தாள்.
குண்டினபுரிக்குச் செல்லும் சாலை மேலும் மேலும் காட்டு வழிகள் வந்திணைய மக்கள் பெருகி ஒரு படைநகர்வென சென்று கொண்டிருந்தது. “எட்டு பெருஞ்சந்தைகளில் முதுவேனிற் சந்தையே மிகப்பெரிது” என்று அவனருகே வந்த முதிய கானகன் சொன்னான். “அங்கு எதையும் வாங்கலாம் என்கிறார்கள். காட்டிலிருந்து குரங்குக் குட்டிகளை பிடித்துச்சென்று பழக்கி அங்கு கொண்டுசென்று விற்கின்றனர் கிராதர். பழகிய குரங்குகளுக்கு பொன் விலையளிக்கிறார்கள். அவற்றை கலிங்க மாலுமிகள் விரும்பி வாங்குகிறார்கள்.” வியப்புடன் “எதற்கு?” என்றான் பீமன். “அவர்களின் கலங்களுக்கு மேலே ஆயிரமிதழ் தாமரைபோல எழுந்திருக்கும் பாய்களைக் கட்டவும் அவிழ்க்கவும் இக்குரங்குகள் மிக உதவியானவை. சில பெருங்கலங்களில் ஐம்பது குரங்குகள் வரை பயணம் செய்கின்றன” என்றான் ஒருவன்.
“சில குரங்குகள் பல முறை பீதர் நாடு சென்று வந்தவை” என்கிறார்கள் என்றான் ஓர் இளைஞன். “ஆண்டுக்கு ஒரு முறை மலையிறங்கி இந்தச் சந்தைக்கு வந்து செல்வதே நமக்கு வாழ்வின் பெருநிகழ்வாக இருக்கிறது” என்றார் அப்பால் பிறிதொருவர். “நன்கு பழக்கிவிட்டால் எனது குரங்குகள் மாலுமிகள் இல்லாமலேயே கலம் நடத்தும்” என்றான் குரங்குப்பெட்டியுடன் சென்ற கிராதன். “ஆம், மேலும் சற்று பழக்கினால் அவை பீதர் நாடு சென்று வணிகம் செய்தே மீளக்கூடும்” என்றான் அப்பாலிருந்த இளைஞனொருவன். “அடுத்தமுறை வருகையில் பீதர்களின் மைந்தர்கள் குரங்குகளைப்போல வடம் தொற்றி ஏறுவார்கள்.”
பெருநகைப்பு எழுந்து பரவியது. ஒவ்வொருவரும் ஏதேனும் சொல்லி நகைக்க விரும்பினர். எதுவும் நகையாடலாக மாறிக்கொண்டிருந்தது. அனைவரும் உவகையில் ததும்பிக்கொண்டிருந்தார்கள். பெண்கள் பறவைகளைப்போல உடலெங்கும் நிலைகொள்ளாமல் திகழ தோழியரையும் குழவியரையும் கூவியழைத்தனர். ஒவ்வொன்றையும் விந்தையென குழந்தைகளுக்கு சுட்டிக்காட்டி அகவலோசை எழுப்பினர். கிளர்ச்சியடைந்த கோழிகளைப்போல முதியபெண்கள் தலையை நீட்டி தாடையை அசைத்தனர்.
பீமன் திரௌபதியிடம் “சந்தையைப்போல இம்மக்களுக்கு மகிழ்வு கொடுப்பது பிறிதில்லை. செல்லுமிடமெல்லாம் சந்தையைத்தான் விரும்பிப் பார்க்கிறேன். தாங்கள் கொண்டிருக்கும் ஒவ்வொன்றுக்கும் நிகர்மதிப்பு பிறிதொன்றுள்ளது என்று இவர்கள் கண்டுகொள்வது சந்தையில்தான். சந்தையில் ஒவ்வொரு மலைமகனும் தனது நூற்றுக்கணக்கான நிகர்மாற்றுக்களை கண்டடைகிறான். இதோ கையில் அரக்குடன் செல்லும் இவன் விரும்பினால் ஒரு படைக்கலத்தை வாங்கலாம். ஒரு புலித்தோலை, ஒரு பொதி வெல்லத்தை, ஒரு மரவுரியைக்கூட வாங்கிக்கொள்ளலாம். உலகம் அவ்வாறு அவன் தொடும் தொலைவில் வந்து சூழ்ந்துகொள்வது இங்குதான்” என்றான்.
திரௌபதி “ஆம், பொருள் ஒவ்வொன்றும் ஒரு புது வாழ்வு. சற்று முன் நான் நரித்தோல் ஆடையொன்றை பார்த்தேன். ஒரு கணம் அதை அணிந்து ஒரு கிராதப்பெண்ணாக வாழ்ந்து மீண்டேன்” என்றாள். தொலைவில் கொம்போசை எழுந்தது. நான்கு புரவிகள் கூட்டத்தை வகுந்தபடி குளம்போசையுடன் அணுகுவது தெரிந்தது. “விலகிக்கொள்! படைவீரர்கள்… அவர்கள் நம்மை பார்க்கலாகாது” என்று பீமன் திரௌபதியிடம் சொன்னான். “ஆம்” என்றபடி திரௌபதி கூட்டத்திற்குள் புகுந்து விலகி பெரிய நுணா மரத்தின் பின்னே பாதி உடல் மறைத்துக்கொண்டாள். அவளருகே முழுதுடலும் மறைத்தபடி பீமன் நின்றான்.
புரவிகள் பாய்ந்துசென்ற வழி நீரிலெழுந்த கோடுபோல அலையலையாக பின்பக்கம் விரிந்து அகன்றது. அது ஒரு பாதையாக மாற அதனூடாக மேலும் மேலும் புரவிகள் வந்தன. அவற்றில் மாட்டுத்தோல் கவசமணிந்த விதர்ப்பவீரர்கள். உறையணிந்த கையிலேந்திய நீண்ட ஈட்டிகளுடன் அமர்ந்திருந்தனர். ஒருவன் தன் கொம்பை வாயில் பொருத்தி மும்முறை ஊத தொலைவில் அதை கேட்டு மீண்டும் ஒரு கொம்பூதி பிளிறல்ஒசை எழுப்பினான். கொம்பொலிகளின் தொடர் மிக அப்பால் சென்று மறைந்தது. “அரச ஊர்வலமா?” என்று திரௌபதி கேட்டாள். “அரசரல்ல… ஆனால் அரசனுக்கு நிகரானவன்” என்றான் பீமன்.
குண்டினபுரியின் வீரர்நிரைகளுக்குப் பின்னால் நிஷாதர்கள் படைநிரை ஒன்று மாட்டுத்தோல் கவசங்களும் இரும்பாலான தலையணிகளும் முனை ஒளிரும் ஆளுயர ஈட்டிகளுமாக சீர்நடையிட்டு வந்தனர். அதற்குப்பின்னால் வெண்புரவி மீது ஒருவன் விற்கொடியை ஏந்தி வந்தான். “யாருடையது அக்கொடி?” என்றாள் திரௌபதி. “விற்கொடி மன்னர்கள் பலருக்கும் உரியதுதான். இதை நான் பார்த்ததில்லை. அதன் கீழ் ஒரு மீன் உள்ளது” என்றான் பீமன். முரசு வைக்கப்பட்ட தட்டுவண்டி ஒன்றை இருபுரவிகள் இழுத்துச்சென்றன. அதில் நின்றிருந்த முரசுக்காரன் குறுந்தடியைச் சுழற்றி அதை முழக்கினான். தொடர்ந்து வந்த திறந்த தேரில் ஏழு மங்கலச் சூதர்கள் குறுமுழவுகளும் யாழும் கைமணிகளும் ஏந்தி அமர்ந்திருந்தனர்.
அதற்குப்பின் மூன்று காவல்தேர்கள் தொடுத்த விற்களை ஏந்திய வில்லவர்கள் நாற்புறமும் ஏந்தி நின்றிருக்க வந்தன. அதற்குப்பின் பட்டுத்திரைச்சீலைகள் பறக்கும் அரசத் தேர் ஒன்று வந்தது. அதன் மீதும் அந்த விற்கொடி பறந்துகொண்டிருந்தது. “ஆம், ஓர் அரசன். நான் இதுவரை அறிந்திராதவன்” என்றான் பீமன். திரௌபதி “அவர் நிஷாத அரசர். அப்புரவி வீரர்கள் நிஷாதர்கள். நான்குவிரல்களால் அம்பு தொடுத்து பிடித்திருக்கிறார்கள்” என்றாள். பீமன் திரும்பி அவளை நோக்க “நிஷாதர்களில் விற்கொடி கொண்டவன் ஏகலவ்யன் மட்டுமே” என்றாள்.
பீமன் “ஆம்” என்று வியப்புடன் உரக்க சொன்னான். “நால்விரல் விற்கோள்… எப்படி இதை அறியத்தவறினேன்? ஏகலவ்யன்!” என்றான். அரசுத்தேர் அவர்களை அணுகி கடந்துசென்றது. அதன் பறக்கும் திரைகளினிடையே உள்ளே அரியணையில் உடைவாளை மடியில் சார்த்தி கைகளைக்கட்டி கண்களை மூடி சாய்ந்திருந்த ஏகலவ்யன் முகத்தை பீமன் கணநேர வாள்வீச்சுபோல மின்ன பார்த்தான். தேர் சென்று மறைந்ததும் புழுதி கிளப்பியபடி படைக்கலமேந்திய புரவி வீரர்களின் நிரை சென்றது.
“ஏகலவ்யனை ருக்மி தன் கோலுக்கு நிகரான கோலேந்திய மன்னராக ஏற்றுக்கொண்டிருக்கிறான். விந்தைதான்… இதைத்தான் அங்கு பேசிக்கொண்டார்கள்” என்றான் பீமன். “ஆம், இன்று களத்தில் இளைய யாதவருக்கு எதிராக முழுவஞ்சம் கொண்டு நிற்பவர்கள் இவர்கள் இருவருமே. இவர்கள் இருவரும் இணைவது இயல்பானது” என்றாள் திரௌபதி. பீமன் துயருடன் “மீண்டும் வஞ்சங்களின் உலகுக்குள் நுழைகிறோம். விட்டு வந்த காடு எத்தனை இனியதென்று எண்ணிக்கொள்கிறேன்”என்றான்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-5
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-3
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-2
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–45
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–12
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–9
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–8
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–7
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–6
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–5
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 60
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 55
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 54
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 23
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 17
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 16
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 12
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 3
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88
June 9, 2017
மின்மினியின் விடியல் – சபரிநாதன் கவிதைகள்- அருணாச்சலம் மகராஜன்
நான் இயல்பிலேயே கவிதை வாசகன் அல்லன். கவிதை பிடிக்கும், ரசிப்பேன். ஆயினும் தேடிச் சென்று வாசிப்பது கிடையாது. என் பிரியத்துக்கு உகந்த வடிவங்கள் சிறுகதையும், நாவலும் தான். இருப்பினும் ஒரு இளைப்பாறுதலுக்காக கவிதையை வந்தடைவது மீண்டும் மீண்டும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அவற்றிலும் ஒரு தேர்வு உள்ளது. பெரும்பாலும் சங்கக் கவிதைகள். குறிப்பாக குறுந்தொகை. அதை விட்டால் இருக்கவே இருக்கிறான் கம்பன். மின்னல் ஒளியில் தென்றல் கடந்து சென்ற ஒரு பெரும் புல்வெளியைக் கண்டால் வரும் அக எழுச்சிக்காகவே அக்கவிதைகளை சென்றடைகிறேன். இந்த ரசனையின் மறு எல்லையில் கவிதை என்பதை ஒரு ஆடியாக, சொல்லாக ஆகாத தருணங்களுக்கு அருகில் வரும் சொற்களைத் தந்து அத்தருணங்களைக் கடக்க உதவும் நாவாயாக கவிதைகளை அடைந்திருக்கிறேன். அவ்வகையில் பெரும்பாலான நவீன கவிதைகளை ஒருவித மௌனத்துடனே தான் கடந்து வந்துள்ளேன். அவற்றின் படிமங்கள், குறிப்பாக மூளையின் மடிப்புகளில் விழுந்து எழுந்து உருவாக்கப்பட்டவையாக இருக்கும் பட்சத்தில் ஒவ்வாமையே ஏற்படுத்தி இருக்கின்றன. அரூபமான ஒன்றைச் சுட்டி, என்னுள்ளில் இருந்து பிறிதோர் அரூபத்தை அடைபவையே என்னளவில் கவிதை என்பதன் இலக்கணம்.
குறுந்தொகை முதலான அகத்திணைக் கவிதைகளில் மிக விரிவான, நுணக்கமான நிலக்காட்ச்சிகள் வரும். அவை உண்மையில் புறக் காட்சிகள் அன்று. அவை ‘அக நிலக் காட்ச்சிகளாக’ப் பார்க்கப்பட வேண்டியவை. அந்த நிலக்காட்சிக்கும், கவிதைக்கும் இருக்கும் உறவைக் கண்டடைவதே அந்த வாசிப்பின் ஆனந்தம். அத்தகைய அகநிலக் காட்சிக் கோர்வைகளால் ஆனவை என சபரிநாதனின் கவிதைகளைக் கூறலாம். சபரிநாதன் சற்றும் தயங்காமல் மிக விரிவான, நுணுக்கமான காட்சி விவரிப்புகளை, சில சமயங்களில் காட்சி விவரிப்புகளை மட்டுமே கொண்ட கவிதைகளை படைத்திருக்கிறார். அதுவும் நாம் தினமும் கண்டு, கடந்த காட்சிகள். அவற்றைக் கூறுகையிலேயே புன்னகைக்க வைக்கும், சில சமயங்களில் வாய் விட்டு சிரிக்க வைக்கும் கோர்வைகள். உதாரணமாக ‘திருவான்மியூர் மேகங்கள்’ என்ற கவிதை. சற்றே நீளமான கவிதை. (இவர் இதை விடவும் நீஈஈஈளமான கவிதைகளை எழுதியிருக்கிறார்)
திருவான்மியூர் மேகங்கள்
இவ்வாண்டின் உறுதிமொழிகளை உடைக்க நான்கு நாட்கள் போதுமானதாக இருந்தது
ஒரு கிரகம் இத்தனை வேகமாக சுற்றினால் என்ன செய்ய?
அண்டை வீட்டாருக்கு இதைப் பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது
அவ்வளவு பிரியமாக அவர்கள் கார்களைக் கழுவுகிறார்கள்
ஒருவர் இங்கே கழுத்துப்பட்டைகளை உயர்த்திவிட்டு பீட்டர்ஸ்பர்க்கில் நடந்து செல்லலாம்
யாரும் கேட்க முடியாது ‘வெட்கமாயில்லை உனக்கு?’ என்று
ஏனெனில் இந்த வருடம் திருவான்மியூரில் யாரது உறுதிமொழியும் நிறைவேறவில்லை.
சறுக்குக்கட்டைகளோடு கிளம்பிச் செல்லும் சிறுவர்கள்.
கலியுகம் என்றால் கொசுக்கள் உற்பத்தியாகும் இடம் தான் கண்ணில் வரும் அவர்களுக்கு
எனக்கு வேண்டாத யாரோ ஒருவர் என் பாதை அனைத்திலும் மஞ்சள் நிற விரைவீக்க
சுவரொட்டிகளை ஒட்டி வைத்துள்ளார்
ஆனால் எல்லா சறுக்குக்கட்டைகளும் இங்கு தான் வந்தாக வேண்டும்
அதாவது காலணி கழற்றி வைக்கும் இடத்திற்கு,வாசலில் ஒரு மூதாட்டி அமர்ந்திருப்பாள்
பார்த்தால் தெரியாது எனினும் அவளுக்கு மருந்தீஸ்வரரிடம் நம்பிக்கை கிடையாது.
இறகுப்பந்தை குனிந்தெடுக்கும் இயற்கை மார்பகங்கள் இடையே சிலுவை ஜொலிக்கும்
இங்கு கண்ட கண்ட இடங்களில் இருந்தெல்லாம் சூரியன் உதிக்கும்.
மதிய வெயிலில் உண்மையான காதலர்களை வேடிக்கை பார்ப்பது போல் அலுப்பூட்டுவது
ஒன்றே ஒன்று தான்-தயிர் பச்சடி தொட்டு சைவ பிரியாணி சாப்பிடுவது.
அதற்கு நீங்கள் கடற்கரைகளை மூடிவிடலாம்
மூப்பினால் குழிநண்டு பொறுக்குபவர்களை பட்டினி கிடக்க சொல்லலாம்.
மீண்டும் மீண்டும் மூத்த பெண்களை மையலிப்பதற்கும் இந்த வானிலைக்கும்
ஏதோ தொடர்புள்ளது.அது உங்களை அதிகப்பிரசங்கியாக மாற்றும்:
மனிதன் கீரைத்தோசையாலும் கலக்கியாலும் மட்டும் உயிர் வாழ்வதில்லை
அவனுக்கு சோகப்பாடல்கள் வேண்டும் புதிய புதிய நகைச்சுவைத் துணுக்குகள் வேண்டும்
நான் மனிதன் என்பது உறுதியானால் எனக்கு சில்லி பீஃப் வேண்டும்
கலாக்ஷேத்திராவில் தப்பாக கைத்தாளம் போடுபவர் கூறினார்;எதிரே சோடா விற்பவரும்
வழிமொழிந்தார்.இவ்வூரின் மேகங்கள் எதுவும் இவ்வூரைச் சேர்ந்ததில்லையாம்.
இருவரும் நம்பவில்லை யாரும் நம்பப் போவதுமில்லை
இம்மீபொருண்மை பதார்த்தங்களிடையே நானொரு பறக்கும் தட்டைக் கண்டேன் என்பதை.
எனதருமை ரகசியங்களே
நான் உமை காப்பது போல்
நீவீர் எனை காப்பீராக.
காட்சிகள் மேலானதொரு அர்த்தத்தைத் தாங்கி நிற்கும் வகைக் கவிதைகளும் உள்ளன. வெறும் ஒரு காட்சி, சட்டென்று மனதை எளிதாக்கி புன்னகைக்க வைக்கும் திறத்த்தால் கவிதை என்று ஆகிய மாயக்கணங்களும் உள்ளன.
அதிகாலையில் ஒரு ரவுண்டானா
கிழக்கு கடற்கரை சாலை வடகிழக்காகக் கிளை பிரியும்
ரவுண்டானாவில் சிக்னல் செயல்படவில்லை தொப்பிவாசி யாருமில்லை.
எதையோ அசைவெட்டியபடி சந்தியில் நிற்பது ஓர் எருமை மாடு.
காதுகளால் துடுப்பிடும் பழக்கத்தைக் கைவிடமுடியாதது
திடிரெனத் தும்முகிறது திடீர் திடீரென கோளை வடியக் கத்துகிறது.
அவ்வப்போது வாலாட்டி வெட்கமில்லாமல் சாணி போடுகிறது
மெதுநகர்வில் கொம்பசைத்து இங்கிட்டும் அங்கிட்டும் பார்க்க
இருசக்கர வாகனங்களும் இறக்குமதி செய்யப்பட்ட கார்களும்
தாவா ஏதுமின்றி தத்தமது வழியில் போகின்றன.
சில தருணம் யாவுமே அத்தனை எளிதாகிவிடுகிறது இல்லையா?
ஆயினும் இவரது கவிதைகளின் அடிநாதமாக, இலங்குவது என்னவோ மானுடம் பிறந்தநாள் முதல் கொள்ளும் ஒரு முடிவற்ற தேடல். அதன் இறுதிப் பொருளின்மையை அறிந்தும், அதை உணர்வதற்காக அலையும் தேடல். அத்தேடல் இருக்கிறது என்பதை உணர்ந்த கணம் ஒரு மின்மினிப்பூச்சியாக மிதந்தலையும் மனம்.
மின்மினியே…
யார் தொட்டு எழுப்பியது உனை
எந்தக் கரம் உனக்கு பார்வை தந்தது
எவ்வுடல் நீங்கிப் போகிறாய் எவ்வுடல் நோக்கிப் பாய்கிறாய்
கனவா நனவா கருத்த வெட்ட வெளியில்
எதை நினைவுகூர்கிறாய் எதை மறக்கிறாய்
எதை நினைவுகூர்கிறாய் எதை மறக்கிறாய்
எதை நினைவுகூர்கிறாய் எதை மறக்கிறாய்
எத்தனை யுகங்கள் இருட்டில் அமர்ந்திருந்தாய் கண்ணே ஊமையாய்
பின் எத்தனை நூற்றாண்டு காய்ச்சலோடு சுருண்டு கிடந்தாய் நிலத்தடியில்
தன்னுள் இருக்கும் தேடலை அறிந்த ஒருவனே தன்னுடைய இருப்பை அறிய முடியும். இருத்தல் என்னும் தன்னுணர்வு வாய்க்கப்பெற்றவன் எந்த அளவு கொடுத்து வைத்தவனோ, அதே அளவு தீச்சொல்லும் இடப்பட்டவன். என்ன செய்வது மீட்பு எப்பொழுதுமே தீச்சொல்லுடன் தானே வருகிறது. அந்த இருத்தலின் துன்பம், அப்பொருளின்மை அளிக்கும் அச்சம், அந்த பறதி இவரது கவிதைகளில் மிக உக்கிரமாக, மிக மிக உக்கிரமாக வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. மின்மினியைப் போல மென்மையாக துவங்கும் அது
“புண்-பழுத்துவிட்டது;இருக்கட்டும்
அதை உணரும் நரம்பை மட்டும் வெட்டி விடு
கன்மம்-யாரும் தரவேண்டாம் நானே எடுத்துக்கொள்கிறேன்
யாவற்றையும் பதிவு செய்துவரும் இவ்வுறுப்பை மட்டும் அணைத்து விடு
இரையைச் சூழ்ந்திறுக்கும் குடற்சுவராகக்
கண்டதையெல்லாம் பற்றிக்கொள்ளும் இந்த உள்ளங்கையில் குழி பறி
இது கிடக்கட்டும்
என்னிடம் மட்டும் பேசும் இந்த நாக்கை அறுத்தெறி
இவை இருக்கட்டும்
என்னை மட்டும் காணும் இந்தக் கண்களை நுங்கெடு
அவை ஓடட்டும்
நின்று கவனித்திருக்கும் இக்கால்களைத் தறித்துப் போடு
இவனை விட்டு விடு
இவனைச் சதா துரத்திக்கொண்டிருக்கும் என்னை மட்டும் அழைத்துக் கொள்” என கவிதைக்காக ஏங்கும் ஒரு கவிஞனைப் பற்றிய ‘கவிஞனின் பிரார்த்தனை’ கவிதையில் உச்சம் கொள்கிறது. இது வெறும் ஒரு கவிஞனின் தேடல் மட்டுமல்ல. எந்த தேடல் கொண்ட உயிரும் அனுபவித்தாக வேண்டிய ஒரு துயர். ஜெ வின் ‘வெறும் முள்’ கதையின் நாயகனை உடலெங்கும் முள் கீறி, உடையவிழ்ந்து சென்று மீட்பன் முன் வீழ வைத்த அந்த உணர்வு இது. இந்த இருத்தலியல் துயர் இயல்பாகவே ஒரு கசப்பு மனநிலையில் கொண்டு ஒருவரைச் சேர்த்து விடும். அக்கசப்பு ஒரு வகை ‘கறுநகையாடலாக’ இவரது கவிதைகளில் வெளிப்பட்டுக் கொண்டே இருக்கிறது. “மனித மூளை தொடர்பாக சில சிந்தனைகள்” என்ற நீள் கவிதையின் துவக்கம் :
“நுரையீரலுக்கோ சிறுநீரகத்துக்கோ நன்கு தெரியும் தன் பணி என்ன என்று
இருதயத்திற்கோ எதுவும் ஒரு பொருட்டில்லை
நான் உட்பட.
ஆனால் இந்த மூளை இருக்கிறதே,தருமருக்கும் கூனிக்கும் பிறந்த குத்துச்சண்டை
வீரனின் கையுறையென காட்சியளிக்கும் இது நடுசாமத்தில் திடுக்கிட்டு விழித்தெழுந்து
தனக்குத் தானே கேட்டுக்கொள்கிறது ‘நான் யார்’ என்று.
அருகில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மயிர்கள் எல்லாம் என்ன நினைக்கும்?”
இதில் மூளையின் உருவுக்கு அவர் கொடுக்கும் உவமை பாருங்கள்…!!!
உயிருள்ள பொருட்களும், இயற்கையும் என்று தான் இல்லை, உயிரற்ற பொருட்களும் கூட இத்துயரத்தில் தான் உழல்கின்றன இவரது உலகில்.
தானியங்கி நகவெட்டி
முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட தானியங்கி நகவெட்டி விரலைக் கடித்தது
சீர் செய்யப்பட்ட இரண்டாவது ரகத்திற்கு சதை என்பது என்னவெனத் தெரியும்
ஆக அது மொத்த நகத்தையும் தின்றது.படிப்படியாக நகவெட்டிகள் மேம்படுத்தப்பட்டன
சமீபத்தில் வெளியான அதிநகவெட்டி முழுமுற்றான தானியங்கிகள்
விலை அதிகம் தான் எனில் அவற்றுக்கு நகம் தவிர வேறெதன் உதவியும் தேவையிராது
என்பதால் நகம் வளர்க்க வேண்டும் நாம் எல்லோரும்
அதன் உலோகப்பற்களின் மினுமினுப்பைச் சிலாகிக்க வேண்டும்.
மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்ட இரவுகளில் அது
அலறும்:நான் ஏ..ன் பிறந்தேன்?
நகம் வெட்டத்தான் என்றால் நம்பாது.
இது தேடலின் பறதி. இப்பறதியில் இருந்து வர தவம் ஒன்றே வழி. ஆயினும் அதுவும் அலைபாயும் மானுடருக்கு கண்ணாமூச்சி காட்டி, மேலும் மேலும் பறதிக்குள் அல்லவா தள்ளுகிறது.
தவம்
பனிமூட்டத்தினுள் மலைகள்,இன்னும் தீரவில்லை நித்திரை.
தூளிக்கு வெளி நீண்ட கைக்குழந்தையின் முஷ்டியென சிச்சில முகடுகள்.
உள்நின்று வந்தருளும் வரம் ஒன்றிற்காக தவம் இயற்றும் இலையுதிர்மரங்கள்
பொடிந்து நொறுங்க விண்ணோக்கி விரிந்த விரல்கள்,மூடப்பட்ட ஆலை,அதன்
வதன வறுமை.
அசையும் வண்ணமலர்கள் அவை இருட்டினின்று வந்துள்ள இன்றைக்கான முறிகள்.
தோல் உரிய நுரையீரற் தேம்பலூடே மலையேறிகள் ஒவ்வொருவராய்
அணையாது பொத்தி எடுத்துப் போகின்றனர் தம்
சொந்த மௌனத்தை.
யாரும் கவனிக்கவில்லை,யதேச்சையாய் திரும்பிப் பார்க்கிறாய்
பள்ளத்தாக்கில் வீற்றிருக்கிறது சோதியின் பேராதனம்.
இவர் இதன் மீட்பைத் தன்னுள் தானே தேடி அடைகிறார். ஆயினும் அத்தேடலின் முழுமை ஒரு முழு அன்பில், அன்பின் உருவான பெண்ணாகவே இருக்கக் கூடுமா?
பதினொரு காதல் கவிதைகளில் ஒன்று
என் வாசலில்
மகத்தான விடியல் போல
ஒரு பெண்
அறுபடாது ஆயிரம் இரவுகள் நகர்ந்து தீர்ந்த பின் வந்துறைந்தது போல்…
அப்படி ஒரு விடியல்
அதைக் காண்பது எவராயினும் அழுதிடுவோம்.
அது போலொரு காட்சியால் மீட்படையாத ஒருவரை
யாராலும் ரட்சிக்க முடியாது
கண் திறந்து நாழிகையே ஆன புதுக்காற்றின் கோர்வைக்கு
ஒலி செய்யும் பறவைகள் முன் பின் அறியாத கீதங்களை.
சிறிதும் பெரிதுமான பொற்கூடுகளில் குஞ்சுகள் எழும் தருணம்
மரங்கள் நிற்கின்றன ’எமக்கு முன்னமே தெரியும்’ என்பதைப் போல.
இங்கு உள்ளே,
ஒளி நோக்கித் தவழும் குழந்தைகளாய் கவிதைகள்
உலுக்கி அவை சொல்லட்டும்:இன்னும் ஓர் இரண்டு அடி எடுத்து வை கண்ணே
நான் வீடு சேர்ந்திடுவேன்.
என் வாசலில்
மகத்தான விடியல் போல
ஒரு பெண்
அறுபடாது ஆயிரம் இரவுகள் நகர்ந்து தீர்ந்த பின் வந்துறைந்தது போல்…
அப்படி ஒரு விடியல்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
சபரியின் ‘வால்’ -தூயன்
தாமஸ் டிரான்ஸ்டோமரின் கவிதைகளை மொழிபெயர்த்ததன் (உறைநிலைக்கு கீழே) வழியாகத்தான் சபரிநாதன் என்கிற பெயர் பரிச்சயம். அதன் பிறகு வால் தொகுப்பு வாசித்ததும் அவரின் முந்தைய தொகுப்பான களம் காலம் ஆட்டம் தேடி வாசித்தேன். இடையே ஜெயமோகன் தளத்தில் தேவதச்சம் கட்டுரை மற்றும் தேவதச்சன் பற்றிய உரை. சமீபத்தில் இடைவெளி இதழில் வெளிவந்த பிரவீண் பஃறுளி எடுத்த நேர்காணல். ஆக சபரிநாதனுடன் எந்தவித உரையாடலையும் ஏற்படுத்திக்கொள்ளாமல் எழுத்துகள் மூலகமாகத்தான் அவரைப் பற்றிய சித்திரத்தை உருவாக்கிக்கொள்ள முடிந்தது.
இரண்டாயிரத்தின் தொடக்கம் தமிழ் இலக்கியச் சூழலில் புதிய வாசல்களை அமைத்துக்கொண்டது எனலாம். நவீன கவிதையின் அகம் தன்னளவில் ஆழப்படுத்தியும் விரிந்தும் உருமாறியது இப்போதுதான். படைப்பூக்கம் பற்றிய சுயமதிப்பீடுகள் தோன்றியதும் வாசிப்பு, விமர்சன வெளியில் இணையத்தின் பங்கெடுப்புகளும் அதை நோக்கிய விவாதங்களும் பாசீலனைகள் என ஒரு மறுமலர்ச்சிக்கான சாத்தியங்கள் ஏற்பட்டன. பிந்தைய காலனியத்துவத்தும் பொருளீயல் நுகர்வு கலாசாரம் உலகமயமாக்கல், பொருளாதாரம் மற்றும் தாரளமயமாக்கல்; சார்ந்த மதிப்பீடுகள் என சமூகம் அதன் வரலாற்றின் அதன் ஒட்டுமொத்த அவநம்பிக்கைகளையும் ஏற்றுக்கொண்டும் விலகியும் இருக்க வேண்டியதாகியது. இச்சூழலில் தான் இணையத்தளமும் தொழில்நுட்பங்களும் ஒரு காலனிய மனோபாவத்துடன் நம்மை ஆக்கிரமிக்கின்றன. கிட்டத்தட்ட சுவாதீனமற்ற இருப்பு. இலங்கையின் போருக்கு பிந்தை வாழ்வின் அவலங்களையும் நிதர்சனங்களையும் குறித்த இலக்கியங்கள் தவிர்த்து தொண்ணூறுகளுக்கு முந்தைய வாழ்வில் பிரதிபலித்த அதிகாரத்தின் மீதான ஆவேசங்களோ நுகர்ச்சந்தைகளின் மீதான வெறுப்புகளோ அரசியலுக்கு எதிரான அவநம்பிக்கைகள் மாக்ஸியப் பார்வை சார்ந்த மதிப்பீடுகள் என இருப்பின் சகலமும் பாதிக்கின்ற படைப்புகள் இப்போது எழவில்லை. மாறாக குதூகலமனோபாவம், ஊடகங்கச் சுதந்திரம், பகடித்தனம் என முற்றிலும் நவீனத்துவத்தை சுதந்திரமாக சிருஷ்டித்துக் ஒருவித ‘இறுக்கமற்ற மனமே’ எடுத்துக்கொண்டது. .
இத்தகையச் சூழலில் தான் சபரிநாதன் போன்றவர்கள் எழுத் தொடங்குகிறார்கள். எண்பதுகளின் இறுதியில் பிறந்த என்னைப் போன்றவர்களுக்கு இரண்டாயிரத்தின் தொடக்கம் ஒருவகையில் குதுகலத்தையும் மனக்கிளர்ச்சிகளையும் ஆசைகளையும் கொடுத்ததெனச் சொல்லலாம். தொழில்நுட்பமும் இணையமும் ஹாலிவுட் படங்களில் வரும் இராட்சஸ வெளவால்களாக ஏகாந்தங்களின் கூரைகளைப் பிடித்து தொங்கவராம்பித்தன. பனையோலைக் குடிசைகளிலும் அலுமினியக் காளான்கள் மொட்டை வெயிலில் மினுங்கிக் கொண்டிருந்தன. கழுதைகள் காணாமல் போனதும் பன்றிகள் இனப்பெருக்கம் குறைந்ததும் குரங்குள் மரம் ஏற மறந்ததும் இந்த இரண்டாயிரத்தில் தான். கல்லூரி முடிந்து நான் பார்க்கும் கிராமம் கிட்டத்தட்ட முற்றாக தன்னை அழித்துக்கொண்டு வேறொன்றாக உருமாற்றிக்கொண்டு நின்றது. பிள்ளை பிராயத்து பொழுதுகள் விழுங்கப்பட்டு அங்கு வெற்று சூன்யமே நிரம்பியிருந்தது. இழந்துவிட்ட தொண்ணூறுகளின் வாழ்வைத் தேடி மனம் சஞ்சலம் கொள்கிறது. இத்தகைய சஞ்சலத்தைப் பிரதிபலிக்கு ‘நடுகல், ‘இது வெளியேறும் வழி அன்று போன்ற கவிதைகளில் என்னால் கண்டுணர முடிந்தது.
‘இது வெளியேறும் வழி அன்று கவிதையில் கேஸ் 1,2,3,4 என ஒவ்வொரு சாட்சியாகச் சொல்லிக்கொண்டே வருகிறார். அதன் முடிவில் இப்படியொரு வரி எழுகிறது. ‘எல்லாவற்றுக்கும் சாட்சியாக நான் இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறேன்?’ இது கவிதைசொல்லியின் ஆழ் மனச் சிக்கல்களில் எழுகின்ற வினா. குற்றவுணர்வின் மனப்பிம்பம் என்றே சொல்ல முடிகிறது. இது போன்று கவிதைகளுக்குள் எழும் குற்றவுணர்வும் கேள்விகளும் தர்க்கத்தோடு அக்கவிதை சொல்லியைத் துரத்திக் கொண்டே வருகின்றது.
‘1. 12. 12 என்றதொரு கவிதையின் கடும் குளிர்காலத்தைக் குறிப்புணர்த்திவிட்டு தன் பிறந்த ஊரின் வெப்பத்தை எண்ணிக்கொண்டிருக்கும் கவிஞனை ஆழ்ந்து வாசிக்கையில் மட்டுமே உணர முடியும். ஸ்தூலவுடலில் எஞ்சியிருக்கும் வெப்பத்தை நினைவுகளில் பத்திரப்படுத்தும் மனம் அங்கு காட்டப்படுகிறது.
நோபல் விருதுக்கான உரையில் நெரூதா இப்படிச் சொல்கிறார். ‘சாதாரண மக்களுடன் தவிர்க்க முடியாத வகையில் கொள்ளும் தொடர்புகளால் மட்டுமே, ஒவ்வொரு காலத்திலும் சிறிதுசிறிதாகக் கவிதை இழந்துவரும் மகத்துவத்தைத் திருப்பியளிக்க்க முடியும். ’ கவிதைகளில் வரலாற்றில் அதிகமும் சாதாரண மக்களின் நுண் அசைவுகளால் நிரப்பியதெனச் சொல்ல முடியும். ஏனெனில் இங்கு சாதாரண மக்களின் எளிய ஒரு செயல்பாடுகூட அழகிலாகச் சொல்லப்பட்டது. காரணம் அவர்கள்தான் நூற்றாண்டுகள் தோறும் குற்றச்சாட்டுகளை சுமந்தலைபவர்கள். காலானி மனோபாவத்திற்கு ஆட்படுகிறவர்கள். சபரியின் பல கவிதைகள் அன்றாட வாழ்வில் நடந்துகொண்டிருக்கும் சிறு சினுங்கல்களும் பொறுப்புகளும் அதனூடே எழும் சிரமங்களையும் சித்திரங்களாக்குகின்றன. இது தேவதச்சனின் அன்றாட வாழ்விலிருந்து சற்று வெளிவட்டத்தில் இயங்குகிறது எனலாம். தேவதச்சன் தன் அன்றாட நிகழ்வுகளை சித்தரிக்கும் பிரக்ஞை அல்ல சபரியினது. சமயங்களில் தேவதச்சனிடமிருந்து விலகி அதை அங்கதமாகவும் காட்டுகிறார். வீட்டுக்காரர் கவிதையில வரும் குடும்பஸ்தர்ää மூன்று குரங்குகள் கவிதை- ஏழைத் தந்தை, நாற்பது வயதைத் தாண்டிய தட்டச்சர் என அக்கதாப்பாத்திரங்களை காணலாம்.
சபரியின் கவிதைகளில் சுகுமாரனின் ‘பற்றி எரிவதையோ’, வெய்யிலின் கோபத்தையோ காட்டுவதில்லை மாறாக மெல்லிய தொனியை மட்டுமே கொண்டுள்ளது. அதே சமயம் மொழிபெயர்ப்புக்கான லயத்;தின் தோற்ற மயக்குமும் அத்தொனிக்கு உண்டு. இத்தகைய லயம் அக்கவிதைக்குள் அந்நியத்தன்மை உருவாக்கிவிடுகிறது. கீழிறங்கும் படிகள் கவிதையை உதாரணப்படுத்தலாம். புறவயமாக அக்கவிதை ஒரு மலையுச்சியின் பாதைகளையே கற்பனைப் படுத்துகிறது. மாறாக சொல் உத்தியில் வெளிப்படும் அந்நியப் பரப்புத் தன்மை, புறவுலகக் காட்சியை பார்க்கும் மோனநிலை என அக்கவிதையை நெருக்கமாக உணரத் தடை செய்துவிடுகிறது. இது போன்ற மொழிபெயர்ப்பு லயம் சபரியின் கவிதைகள் சிலவற்றில் சித்தரிப்புகளில் வழிய நுழைந்துகொள்கிறது.
சபரியின் கவிதைகளில் காமம்:
குறுந்தொகைக்கு நிகராக காமத்தை நான் அதிகம் ரசித்து வாசித்தது சங்கர்ராமசுப்ரமணியன் கவிதைகளில் மட்டுமே.
எனக்கு
நானே
அளிக்கும்
விருந்து
நாய் பெற்ற
தேங்கம்பழம்
எனது காமம்
என்கிற கவிதை மறுபடியும் மறுபடியும் எழுந்து அழியாச் சித்திரமாகவே என்னுள் உருவாகிவிட்டது.
கவிதை பற்றிய கட்டுரைகள் நூலில் ஆனந்த் இப்படி எழுதியிருப்பார்: ‘வெவ்வேறு தருணங்களில், வெவ்வேறு மனநிலைகளில்,வெவ்வேறு அகச் சூழலில் ஒரே கவிதை ஒரே வாசகனிடத்தில் வெவ்வேறு அகநிலைகளைத் தோற்றிவிக்க முடியும்’’ இதே போன்று சபரியின் மின்மினயே கவிதை உணர்ந்தேன். முதல் முறை தொகுப்பை வாசிக்கையில் எளிதில் கடந்து விட்டேனா அல்லது அதை வெறும் அழிகியல் காட்சியாக எண்ணிக்கொண்டேனாவெனத் தெரியவில்லை. பின் அந்திப் பொழுதில் மழை ஓய்ந்த தருணத்தில் சட்டென அக்கவிதை எனக்கு காமத்தை நினைவூட்டியது. சிறுவயதில் மின்மினியைக் கண்டு ஆர்பரித்திருக்கிறேன் பின்னாலில் வியந்திருக்கிறேன் இப்போதும் அது எனை இருளிலிருந்து தீண்டும் காமமாக இருந்து கொண்டிருக்கிறது. மின்மினி பேன்டஸியான கிரியேச்சர். பல்லூயிரியாளர்கள் அதைப் பற்றி ஆராய்ந்து சலித்திருக்கிறார்கள். மனித மனம் எப்போதுமே பறப்பதற்கு ஆசைக் கொண்டது. மின்மினி பறந்து கொண்டே சுடரும் ஓர் உயிர். அதிலும் இருளில் டார்ச்சைக் கட்டிக்கொண்டு பறப்பதே அச்சிறு பூச்சியின் மீதிருக்கும் பற்றுதலை அதிகமாக்குகிறது. கிட்டத்தட்ட எல்லா கவிஞர்களும் மின்மினியைத் தொட்டுவிட்டிருக்கிறார்கள். இக்கவிதை வரிகளை மனிதனின் தேடலாகப் பார்க்கலாம் ஆனால் இதை காமத்தினுள் தளும்பும் முற்றாத மனத்துடன் ஒப்பிடுகிறேன். ‘யார் தொட்டு எழுப்பியது உனை, எத்தனை யுகங்கள் இருட்டில் அமர்ந்திருந்தாய் கண்ணே ஊமையாய்’ என்னும் வரிகள் என் ஆழ்மனதைப் பார்த்து ஒரு கணம் வெட்கப்புன்னகை செய்கின்றன. ஆமாம் காhமம் விழித்துக்கொள்ளும் கணம் அது. அதற்கு முன்பு வரை காமம் ஊமையாய், குருடனாய்,ä முடவனாய் தான் தன் ஊனவுடலுடன் கிடந்திருக்கிறது. அது முளைவிடும் கணம் மறுபடியும் மறுபடியும் வாசிக்கையில் என்னால் உணர முடிகிறது.
மின்மினியே…
யார் தொட்டு எழுப்பியது உனை
எந்தக் கரம் உணக்கு பார்வை தந்தது
எவ்வுடல் நீங்கிப் போகிறாய் எவ்வுடல் நோக்கிப் பாய்கிறாய்
கனவா நனவா கருத்த வெட்ட வெளியில்
எதை நினைவுகூர்கிறாய் எதை மறக்கிறாய்
எதை நினைவுகூர்கிறாய் எதை மறக்கிறாய்
எதை நினைவுகூர்கிறாய் எதை மறக்கிறாய்
எத்தனை யுகங்கள் இருட்டில் அமர்ந்திருந்தாய் கண்ணே ஊமையாய்
பித் எத்தனை நூற்றாண்டு காய்ச்சலோடு சுருண்டு கிடந்தாய் நிலத்தடியில்.
சங்கர்ராமசுப்ரமணியனின் காட்டும் காண்பரப்பை சபரியிலும் உணர முடியும். ’அத்திசை
அக்காளும் தங்கையும் வருகிறார்கள் மச்சுக்கு
எங்கள் பக்கம் அவர்கள் குட்டிப்பிசாசுகள் என அழைக்கப்படுகின்றனர்
அக்கா எதையோ கை காட்டுகிறாhள் தங்கை திரும்புகிறாள் அந்தப்பக்கம்
எவ்வளவோ முடியுமோ அவ்வளவு நீட்டிச் சுட்டுகிறாள் மூத்தவள்
நுனிகாலில் எம்பி எம்பி அங்கிங்கசைந்து காணத் துடிக்கிறாள் சின்னவள்
மரகதவெயில், பசுந்பொழில்நீலமோனம்ம்
ஒத்திசைந்த நற்கணம் இருவரும் சேர்ந்து கைநீட்டிச் சிரிக்கிறார்கள்.
அறையில் இருந்து வெளிவந்தவன் பார்க்கிறான்.
அத்திசையில்
சிரிப்பதற்கு எதுவுமில்லை அவனுக்கு.
இந்த கவிதையில் காட்டப்படும் காண்பரப்பானது அழிகிய கோட்டோவியம் போன்றது. அவ்வளவு நீட்டிச் சுட்டுகிறாள் மூத்தவள்,ä நுனிகாலில் எம்பி எம்பி அங்கிங்கசைந்து காணத் துடிக்கிறாள் சின்னவள் என்கிற வரிகள் தங்கள் இருப்பிலிருந்து விடுபடுவோ அல்லது அழகியலின் விளிம்பைத் தொட்டுவிடவோ துடிக்கும் பெண்பிள்ளைகளின் சித்திரத்தை கற்பனையில் கூட்டுகிறது. அங்கு அவர்கள் காண்பதைத் தவிர வேறொன்றுமில்லை மற்றவர்களுக்கு. அது கணநேரச் சந்திப்பு மட்டுமே.
பொதுவாக நம்மில் பலருக்கு நவீனக் கவிதைகள் புரிபடாதவைகளாக இருப்பதற்கு காரணம் உரைநடைகளை வாசிப்பது போலவே கவிதைகளையும் எடுத்துக்கொள்வது. கவிதைக்கான மனநிலை என்பது அது தன்னளவில் உருமாறிக்கொள்வதே. கவிதைக் குறித்த ஆனந்தின் வரிகளை இங்கு நினைவுபடுத்தலாம்
வால் தொகுப்பிலிருக்கும் பல கவிதைகளில் ஓர் இளைஞனின் உருவத்தை என்னால் கற்பனை செய்துகொள்ள முடிந்தது. அவன் மிகவும் தனிமை விரும்பி, சோம்பலை கொண்டாடுபவன், தன்னைச் சுற்;றி உருளும் சருகைக்கூட உற்று நோக்குபவன். தன் பசிக்கான தேடுதலிலும் பொறுமையைக் கடைபிடிப்பவன், பெரும் இரைச்சலுக்கு செவிகளை இறுகப்பொத்திக்கொள்பவன், அழுத்தங்களை மீன் தொட்டி உடைப்பது போல தூர எடுத்துச் சென்று எரிய வேண்டுமென நினைப்பவன்(இது ஒருவிதமான குரூர அமைதியும் கூட) தட்டச்சருக்கு நேர்ந்தவை, தனிச்சாமரம்,ä ஹாரன், நிழலுள்ளிருந்து, பிரம்மச்சாரியின் சமையலறை போன்ற கவிதைகளில் அந்த இளைஞனை நினைவு கூர்கிறேன். கிட்டத்தட்ட சபரியின் ஏனையக் கவிதைகளிலும் இவனே கவிதைசொல்லியாகவும் சமயங்களில காணும் காட்சியாகவும் வருகிறான். ஆனால் அதே இளைஞன் சில இடங்களில் சுய எள்ளலுக்குள்ளாக்கப்படும் சுதந்திரத்தையும் கொண்டிருக்கிறான். ‘மறதி’ கவிதையை இதற்கு உதாரணமாகச் சொல்லலாம்.
காற்றில்லாத போதில் பூ மரம் என்றொரு கவிதை நீர் தளும்பலின் தனிமையைப் போல அழகான ஒன்று. எனக்கு எப்போதோ வாசித்த ஸ்ரீநேசனின் இலைச் சருகு கவிதையை நினைவுக்கு வந்தது.
ஓடைக்கரையில் கர்ப்பிணி காத்திருக்கிறாள்
எண்ணெய் பிசுபிசுக்கும் பவுடர் பூசிய முகத்தோடு
அவள் அம்மைக்காகவோ
வீட்டுக்காரருக்காகவோ. சுடுகுஞ்சியிலலாத பாதையில்
நிறைவயிற்றைத் தடவுகிறாள்
தன் குழந்தைக்காகத் காத்திருக்கிறாளோ என்னவோ
அதை விடத் துயரமானது
காற்றில்லாத இப்போதில்
பூத்துத் தளும்பும் நாட்டுவாகை மரம்
யாராவது அவளிடம் சொல்லுங்களேன்
கொஞ்சம் (கொஞ்சம்தான்) உன்னி அந்தத் தாழ்கொப்பை உலுக்குமாறு
யாரவாது சொல்லுங்களேன்
நான் அந்தக் குழந்தையிடம் சொல்வேன்
எத்தனை துடிக்கும் மஞ்சள் மலர்களுக்குக் கீழே அது பிறந்தது என்று
தன்னுணர்வையும் காணுதலையும் இணைக்கும் திரையாக இக்கவிதையில் நிகழ்வதை அறியமுடிகிறது. கர்ப்பிணி பெண்ணொருத்தியின் தனிமையை கவிதைசொல்லி காட்டுகிறார். அவள் எதற்கு நிற்கிறாளென்பது தெரியாது. ‘அதைவிடத் துயரமானது’ என்றொரு வரியில் அவளைப் போன்றே நிற்கும் பூத்துக் குலுங்கி ஈன்றுவிட்டிருக்கும் வாகையின் தனிமையைத் துணைக்கழைக்கிறார். அடுத்தவரியில் ‘அந்தத் தாழ்கொப்பை உலுக்குமாறு யாராவது சொல்லுங்களேன்’ என்கிறார். அப்போது அவர்கள் இருவருக்குமான(மரம், அவள்) அக்கணச்சூன்யத்தை களைக்க எத்தனிக்கும் கவிதைசொல்லியின் பிரக்ஞையைக் காட்டுகின்றன. கவிதை முடிக்கும் போது ‘நான் அந்தக் குழந்தையிடம் சொல்வேன் எத்தனை துடிக்கும் மஞ்சள் மலர்களுக்குக் கீழே அது பிறந்தது’ என்கிற வரிகள் பிரக்ஞை மனம் முழுமுற்றாக தன்னை நனவிலியிலிருந்து பிரித்துக்கொண்டு கவிதைசொல்லியின் யதார்த்தவுலகிற்குள் நுழைந்துவிடுகிறது. ஆனால் வாசகனின் பிரக்ஞைக்ப்பால் கடைசி வரிகளுக்கு முந்தைய கணமே எஞ்சி விடுகிறது.
Narrative poems எனச் சொல்லப்படும் சித்தரிப்பு பாணி கவிதைள் இன்று அதிகம் எழுதப்படுகின்றன. கிட்டத்தட்ட கதை போலவே. மனுஷ்யபுத்திரன் கவிதைகள் பெருப்பாலும் அப்படி கதை போல பிரக்ஞையில் எழுதப்படுபவை. சபரியும் இத்தகையப் பாணிக் கவிதைகளை எழுதியிருக்கிறார். அதில் சிலவற்றை சிறு குறிப்புகளோடு முன்வரைவு படுத்தி புதிய பரீட்சார்த்தத்தை செய்கிறார். ஜம்போ சர்க்கஸ், மீசைக்காரர், சூப் ஸ்டால் போன்ற கவிதைகளில் முதலில் சித்திரமொன்றை எழுப்பிவிட்டு பின் கவிதைசொல்லியின் குரல் எழும்.
சமீபத்தில் இரயில் பயணம் செய்கையில் இடம் கிடைக்காமல் லக்கேஜ் கேரியரில் ஏறி அமர்ந்துகொள்ள வேண்டியிருந்தது. அங்கு ஏழு எட்டு வயதுள்ள இரண்டு சிறுவர்கள் இருந்தார்கள். இரயிலை நிறுத்துவதோ அல்லது மேற்கூரையை தலையால் முட்டி உடைக்கவோ திட்டம் தீட்டிக்கொண்டிருந்தார்கள். கீழே பெரியவர்களைப் பார்த்து கூச்சலிட்டு சிரித்துக்கொண்டிருந்தார்கள். என்னிடமிருந்து தொடுதிரை செல்போனைக் கண்டதும் ‘கேம் இருக்கா’ என்றான் மிரட்டும் தோனியில் ஒருவன். கீழே விழுவது போல பாவனை செய்து எனை பதறச் செய்து விளையாண்டார்கள். அவர்களுக்கு இரயில் புறவையமாகப் பார்ப்பதுபோலவே அப்போதும் விளையாட்டு பொருளாகத்தான் இருந்தது. அதன் மீது பெரும் ஆச்சர்யமமெல்லாம் இல்லை. எல்லாவற்றையும் தெரிந்துகொண்டு தெரியாததுபோல பாவனைக் காட்டி ஒருவன் அமர்ந்திருந்தான். அதுபோன்ற ஒரு சிறுவன் சபரிநாதனின் பெரும்பாலான கவிதைகளில் வருகிறான். இச்சமூகத்தை நோக்கி குசும்பாகப் பரிகசிக்கும் அவனுக்கு இந்த வாழ்வின் அர்த்தங்கங்களும் அர்த்தமின்மையும் நன்றாகவே தெரியும் ஆனாலும் அதை கிள்ளிவிட்டு தூர நின்று சிரிக்க வேண்டுமென்கிற உணர்வு உண்டு. (அப்படி தூர நின்று தான் அதை சிரிக்க வேண்டியதாகவும் இருக்கலாம்)
சபரியின் கவிதைகளில் வரும் சிறுவன் குடும்ப உறுவுகளில் நடக்கும் விநோதங்களிலும் பங்கெடுப்பவன். தங்கை பிடித்த முயல் கவிதையில் புதுமாப்பிளையின் தோளைத் தட்டிக்கொடுத்து நகர்கிறான்.
சபரியின் கவிதையில் பெண் பாத்திரங்கள் :
சபரியின் பெண் பாத்திரங்கள் மிகவும் சாதாரணமானவர்கள். மத்யமர்கள். சமூகத்தை நோக்கி குரல் உயர்த்த சலித்துக்கொள்பவர்கள். வாழ்வின் ளயகந ளனைந ல் இருப்பவர்கள். மத்யமர்களுக்கே உரிய பாவனையான குடும்பத் தலைவனையும் சகோதரர்களையும் சக ஊழியர்களை மட்டுமே குற்றம் சொல்பவர்கள். அங்கு முலையை விலக்கிக் காட்டியழைக்கும் வேசிளோ, பிள்ளைக்கும் பசியை பங்கிடும் பஸ்ஸ்டாண்டு வாசிகளோ, கடை வேலை முடித்து பேருந்து விரையும் இளைஞிகளோ தோன்றுவது இல்லை. ‘ஓர் இந்திய விளம்பரக் குடும்பம்- மத்யமர்களைப் பற்றி சித்தரப்பு பாணியிலான அபாரமான ஒன்று. தமிழில் மத்யமர்களை இவ்வளவு அங்கதத்துடன் எழுதியவர்கள் மிகச் சிலரே. இக்கவிதையின் தலைப்பே அங்கதத்துடன் தொடங்கும்.
‘மனம் கட்டவிழும்போது, சுயம் விடுதலையையும் நேரடியான சுய அனுபவத்தையும் அடைகிறது. மகிழ்ச்சி கொள்கிறது. மனம் பலதளங்களைக்கொண்டது. ஒவ்வொரு தளத்திலும் பல நிலைகளை மேற்கொள்ள வல்லது. ஒரு குறிப்பிட்ட கவிதை எந்தத் தளததில் எந்த நிலையை மேற்கொள்கிறதோ அதே தளத்தில் அதே நிலையை வாகனின் மனமும் சுயேச்சையாக மேற்கொள்கிறது. ’ இதை மனம் கட்டவிழ்தள் என்கிறார்; ஆனந்து. ஆழ்மனம் கட்டவிழ்ந்தலில் எழுதப்படும் கவிதையை மேல் மனத்தால் எப்போதுமே உணர முடியாது. கவிதைகள் குறித்து நாம் உரையாடுவதற்கு காரணமும் இந்த ஆழ்மனத் தளத்தை சென்று தொடுவதற்குத்தான். என்னளவில் கவிதைக்குறித்த நிறைய உரையாடல்கள் அமைத்துக்கொள்வதுதான் அதனை புரிந்துகொள்ள வழிகளில் ஏற்படுத்திக்கொடுக்கும். நண்பர் துரைக்குமரனுடன் வால் குறித்த நிறைய உரையாடல்களை நான் ஏற்படுத்திக்கொண்டேன். இங்கு அத்தகைய உரையாடல்கள் அரிதாகவே அமைந்துவிட்டுள்ளது.
முதல் தொகுப்பில் பல கவிதைகளிலிருந்த தவிப்பும், நிராதரவும், கைவிடப்படுவதும், முதிரா மனமும் கொண்ட கவிதைசொல்லியின் குரல் ஊடுபாவியிருப்பது வால் தொகுப்பில் இல்லை. முற்றிலும் மேம்பட்ட மனோபாவம். ‘இது இப்படித்தான் நடக்கிறது’ என்கிற திடத்துடன், சாவகாசமாக எதிர்கொள்கிற உணர்வு, கோபமற்ற குரல் கிட்டத்தட்ட முதிர்ந்ததொருச் சித்திரத்தை நம்மால் காண முடியும். சமயங்களில் மேட்டிமைத்தனத்துடனும். அடுத்தத் தொகுப்பு இதற்கு எதிரானதாகவும் அமையலாம்.
விஷ்ணுபுரம்-குமரகுருபரன் விருது பெறும் சபரிநாதனுக்கு வாழ்த்துக்கள்
தூயன்
(சித்தனவாசல் இலக்கியச் சந்திப்புக்காக எழுதப்பட்டு வாசிக்கப்படாத கட்டுரையின் முழுமை)
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
வெற்றி -கடிதங்கள் 8
ஜெ,
வணக்கங்கள்
சமீபத்தில் கங்கா ஈஸ்வர் என்ற வாசகர் ஒருவர் சில நேரங்களில் சில மனிதர்கள் புதினத்தை அதன் பாத்திரங்கள் வாயிலாக மிகவும் வித்தியாசமான முறையில் அணுகி இருந்தார். அது என்னை மிகவும் சிந்திக்க வைத்த ஒரு அணுகுமுறையாகத் தோன்றியது. பொதுவாக பாடம் கற்பிக்கப்படும் முறையிலிருந்து இப்படியும் சிந்திக்கலாமே என்ற கங்கா ஈஸ்வரின் பரிந்துரை வாயிலாக நான் சிக்கலான ஆக்கங்களை அணுகும் முறை ஒன்றை கண்டு கொண்டேன். அதே பாணியில், கதாபாத்திரங்கள் வாயிலாக வெற்றி என்ற தங்களது சிறுகதையை ஒவ்வொரு கதாபாத்திரத்தின் வெற்றிகள் மூலமாக அணுகும் எனது முயற்சி இது. எந்த வித பிரதிபலனும் எதிர்பாராமல் எழுதினாலும் கூட, உணர்ச்சிகரமான விஷயத்தில் வாசகர்களிடமிருந்து ஆட்டும் துப்பும் ஏற்கும் தங்களுக்கும், சிந்திக்க கற்றுக்கொடுத்த கங்கா ஈஸ்வருக்கும் நான் செய்யும் ஒரு சிறிய நன்றிக்கடன்.
முதலில் ரங்கப்பர்:
பணத்தால் எந்தப்பெண்ணையும் வளைக்கும் ரங்கப்பர் கதாபாத்திரம் மீது எனக்கு துவக்கத்தில் ஒரு மனத்தாங்கல் தோன்றியது. ஆனால் வியாபாரத்தை பல மடங்கு விரிவாக்கிய, அமெரிக்காவில் படித்து விட்டு வந்த மனிதனின் கணிப்பு என்பதால் அதனைப் புறம் தள்ளவும் இயலவில்லை. அமெரிக்க படிப்பு- சுதந்தர சிந்தனை பயின்ற ஒரு மனிதனின் அவதானம், தமிழக பெண்களைக்குறித்தது. கட்டிக்காப்பதாக நம்ப வைக்கப்படும் கற்பை பற்றி, கேள்வியே கேட்காமல் அந்த கதாபாத்திரம் ஏற்றுக்கொண்டு இருக்காதுதான். சோதித்து பார்க்கும் தன பலமும் அந்த கதா பாத்திரத்துக்கு உள்ளது. சோதித்தும் பார்த்திருக்கிறது. அவள் அழகாக இல்லாததால் எனக்கு தங்கையாகி விட்டாள் என்பது போல் அவன் பணக்காரனாக இல்லாதததால் நான் கற்புக்கரசியாகி விட்டேன் என்னும் சாதாரணப் பெண்களை மிகச்சரியாக கண்டு கொண்டு இருக்கிறார். கோமளவல்லியை பதினைந்து நாளில் வளைத்துப்போட்டு ஏற்காடுக்கு கொண்டு செல்லும் தகவமைவு கொண்டவர். ரங்கப்பரின் வெற்றி என்பது அவரது சோதனையின் வெற்றி என்பதால் ரங்கப்பர் தோல்வியடையவில்லை.
அடுத்து எஸ்.ஆர்.என் கதாபாத்திரம்:
பணத்தேவை நிறைந்த சாதாரண வர்க்கத்தின் பிரதிநிதி. ஒண்டுக்குடித்தனக் காரன். ஒரு டிகிரி கூட முடிக்க இயலாதவன் என்று சொந்த அண்ணன் குடும்பத்தில் கூட மரியாதை கிடைக்காதவன். அண்ணன் குடும்பத்தில் மிகவும் அசிரத்தையாக நடத்தப்பட்டு அவமானம் அனுபவிப்பது, மெர்சிடஸ் வாகனத்தின் மூலம் தனக்கு கிட்டப்போகும் தனலாபம் குறித்து அவர்களிடம் பேச்சுப்போக்கில் பீற்றிக்கொண்டு அண்ணன் குடும்பத்தாரை கடுப்பேற்றுவது, என்ற எல்லா பலஹீனம் மற்றும் பலம் கொண்ட ஒரு லௌகீக மனிதன். ரங்கப்பரின் பணத்தைக் கொண்டு என்னென்னவோ சாதித்து காணும் வாய்ப்புக்கள் பெற்ற கதாபாத்திரம். ஒரு சவலை பிள்ளை வாயிலாக ரங்கப்பர் வழி கண்டு கொள்வது, தான் தோற்கும் வாய்ப்புதான் அதிகம் என்று புரிந்தும், பந்தயத்தை ஒப்புக்கொண்டு சோதனையை அனுமதிக்கிறது. சோதனையில் ஜெயித்தால் பணம், தோற்றால் ஆத்மஹத்தி என்ற தீர்மானம் என்னை மிகவும் கவர்ந்த ஒரு அம்சமாக முதலில் இருந்தது. ஆசுபத்திரியிலிருந்து ரங்கப்பரின் காரில் சென்று பிறகு ரங்கப்பர் வீட்டிலிருந்து திரும்பிய மனைவியின் தோற்றத்திலிருந்தே எஸ்.ஆர்.என் கதாபாத்திரத்துக்கு எல்லாம் விளங்குகிறது. அப்பொழுதே நாண்டுக்கிட்டு செத்திருக்க வேண்டும். ஆனால் சாகவில்லை. ரங்கப்பர் அதை அறிவிப்பதில்தான் எஸ்.ஆர்.என் கதாபாத்திரத்தின் வெற்றி தோல்வி அடங்கியுள்ளது. காலம் கடந்து, பந்தயத்தில் தான் தோற்றுப்போனது, மனைவி வாயிலாகவே உறுதியும் செய்யப்படுகிறது. அவர் அப்பொழுதும் சாகவில்லை. பிளாக் லேபல் அருந்தியவண்ணம் இளவட்ட பயல்களிடம் நடந்ததை சொல்பவருக்கு, தோல்வி முக்கியம் அல்ல, ரங்கப்பர் வாயிலாக தோல்வி அறிவிக்கப்படக்கூடாது என்பதுதான் முக்கியம் என்று நான் உணர்கிறேன். இவ்விதத்தில் எஸ்.ஆர்.என்னும் வெற்றி அடைந்தவர்.
அடுத்ததாக எஸ்.ஆர் என்னின் மனைவி:
ஒரு உரையாடல் வழியாக அவர் பெயர் லதாவாக இருக்கலாம் என்று குறிப்பு காட்டப்படுகிறது. எந்த பாட்டிக்கு லதா என்றெல்லாம் நாகரிக பெயர் இருக்கிறது என்ற கேள்வி எழாமல் இல்லை. காலத்துக்கு அப்பாற்பட்ட ஒரு கதாபாத்திரம் என்று எடுத்துக்கொள்கிறேன்.
ரங்கப்பரும், எஸ் ஆர் என்னும் சோதினையாளர்கள். லதா சோதனைப்பொருள். பணம் என்ற கிரியாஊக்கியைக் கொண்டு பதிலீட்டு வினையை நிகழ்த்திவிடலாம் என்ற தனது அனுமானம் மற்றும் சோதனைகள் வாயிலாக அறிந்திருக்கும் ரங்கப்பர், மற்றும் வெல்லுவிளித்த எஸ்.ஆர்.என்னின் சோதனை ரசாயனம். ரசாயனம் தேமே என்று பாட்டிலில் இருக்கலாம். மெதுவாக நீர்த்து வீரியம் குறைந்து போகலாம். சரியான சேர்மானங்களோடு சேர்ந்து நறுமணம் எழுப்பலாம், மருந்தாகலாம், அழகுசாதனமாகலாம். தவறாகக் கையாளப்பட்டால் சோதிப்பவருக்கு ஆகப்பெரிய விபத்து ஏற்படலாம். ரங்கப்பருக்கு இதெல்லாம் தெரிந்திருக்கிறது. ரசாயனத்தை சரியான முறையில் கையாளும் வித்தை அறிந்தவர். ரசாயனத்தின் வினைபுரியும் பகுதியை மிக எளிதாகக் கண்டுபிடித்துவிட்டார். லௌகீக ரீதியான ஒரு பெண்ணுக்கு, தான் இன்னும் குழந்தை பெற்றுக்கொள்ளும் பருவத்தில்தான் இருக்கிறோம், இந்த சவலைக்குழந்தைக்கு ஏதாவது ஆனால் அதுவே ஒரு திடமான சரீரத்தோடு தனது வயிற்றில் மறுசென்மம் எடுக்கும் என்ற அடிப்படை மரபார்ந்த மறுபிறவி நம்பிக்கை சார்ந்து சிந்தித்து சமாதானமாக இருக்க இயலாதுதான். அதுதான் ரங்கப்பரும் அவதானிப்பது. கற்புக்கரசியாகும் வாய்ப்பும் அங்ஙனம் சிந்திக்கும் திறனுக்குள்ள பெண்ணுக்கல்லவா சாத்தியம்? ஒழுக்கம் கற்பு என்று போதிக்கும் நம் சமூகத்தில் பெண் என்ற ஆயுதத்தை உபயோகித்து சலுகை வாங்காதே என்று சில வருடங்களுக்கு முன்னர் அறிவுறுத்திய தங்களுக்கு எதிராக படித்த பெண்கள் அல்லவா கையெழுத்து வேட்டை நடத்தினர். அதையெல்லாம் சிந்தித்தால் ரங்கப்பரின் அவதானத்தையும் புரிந்து கொள்ள இயல்கிறது. லதா ஒருவேளை மேட்டுக்குடி கூட்டத்தில் பட்ட பெண்ணாக இருந்திருப்பின் ரங்கப்பருக்கு காரியம் கோமளவல்லி அளவு எளிதாக இருந்திருக்கும் என்று தோன்றுகிறது. ஆனால் லதா விஷயம் அத்தனை எளிது அல்ல. வேதிவினைக்கு முயற்சிகள் சற்று அதிகம் தேவையாக உள்ளது.
இருந்தாலும், சரியான பருவத்துக்கு சோதனைப்பொருளைக் கொண்டுவந்து நிறுத்தி அதீத அழுத்தத்தில் வினையும் நிகழ்த்திக்காட்டுகிறார் ரங்கப்பர். எஸ்.ஆர்.என் கண்ணின் வாயிலாக கதாசிரியர் காட்டுவது, நிகழ்ந்தது பதிலீட்டு வினை (substitution reaction) அல்ல, அணுக்கரு வினையே (nuclear reaction) என்று. வெறும் பதிலீட்டு வினையை எதிர்பார்த்த ரங்கப்பருக்கே அது ஒரு எதிர்பாராத வினை முடிவாக இருக்கலாம். உச்சக்கட்டம் அனுபவித்த ஒரு பெண்ணை நான் அறிந்தவரை இதுவரை யாரும் இத்தனை செறிவான நடையில் வர்ணித்தது இல்லை. அந்த மூன்று மாதத்தில் கிட்டிய பரிவு, மகனின் சிகிச்சை குறித்த நம்பிக்கை அவள் வாழ்நாளில் கிட்டியிராதுதான். எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாக, அந்த ஒரு இரவில் அவளுக்கும் அவளது சவலைக்குழந்தைக்கும் புதுப்பிறவி கிட்டுகிறது. இந்த விதத்தில் வெற்றி பெற்றது அவளும்தான்.
அடுத்ததாக தொற்று:
அது மாத்திரம் இல்லாமல் போயிருந்திருப்பின்? ரங்கப்பர் வேறு வழி கண்டுபிடிக்கும் திறன் கொண்டவர்தான். ஆனால் அது மருந்தை எதிர்க்கும் வீரியம் கொண்டதாக ஏற்கனவே கொடுக்கப்பட்ட மருந்து வாயிலாகவே வீரியம் கொள்கிறது. பணம் அளவுக்கு அதுவும் வினையை நிகழ்த்தும் ஊக்க சக்தி கொண்டதாக உள்ளது. அதை முறியடிக்க உள்ளூரில் மருந்து இல்லை. லண்டனிலிருந்து வரவேண்டும். அதுவும் ஒரே வேளை தொற்றை முறியடிக்கலாம், அல்லது வேலை செய்யாமல் போகலாம், அவ்வளவுதான். பாதாளத்தில் தள்ளலாம் அல்லது ஆகாசத்தில் பறக்கவைக்கலாம் என்ற ஒரு உச்சவழுவில் (topslip ) எஸ் ஆர் என்னின் மனைவியை வைத்திருக்கிறது.
கா நா சு வின் கதை ஒன்று நினைவுக்கு வருகிறது; உடல் நிலை கவலைக்கிடமாக இருக்கும் உள்ள ஒரு மகனின் தந்தை, மகனின் உடல்நிலை குறித்து செய்தி கொண்டு வருபவனுக்காக காத்திருக்கிறார். அவனும் தொலைவில் வந்து கொண்டுதான் இருக்கிறான். நேராக வீட்டுக்கு வராமல் வழியில் யாரிடமோ பேசிக்கொண்டு நிற்கிறான். செய்தியைக் கேளாமல் அவர் சாய்வு நாற்காலியில் சாய்ந்து உறங்கத்தொடங்கி விடுவார். அழுத்தத்தின் உச்சியில் கிட்டும் ஒரு விடுதலை. அந்த நிலைக்கு மனிதரைத் தள்ளும் தொற்றின் சக்தியை எளிதாக எடைபோடவில்லை. குத்தாலத்தின் தொற்று ஒருவேளை பெரிய ஆசுபத்திரியின் ஆரம்பக்கட்ட சிகிச்சைக்கே கட்டுப்பட்டிருந்தால் கதை எப்படி சென்றிருக்கும் என்ற ஒரு சிந்தனை எழாமல் இல்லை. கதையை இவ்விதம் நிகழ்த்த இயன்ற தொற்றுக்கிருமியைப் பொறுத்தவரை லண்டன் மருந்தால் முறியடிக்கப்பட்டாலும் கூட கிருமியின் வெற்றியும் கூட.
அடுத்ததாக கதை: பொதுவாக ஆசானின் லௌகீக ரீதியான கதைகள் சிலவற்றில் ஒன்றை ஒன்று இட்டு நிரப்பும் சமநிலை இருக்கும். உதாரணம் காடு கதையில் தூயமையே உருவான அதன் காரணமாகவே கிட்டத்தட்ட அழிந்து போகும் ஒரு சமூகத்தை சேர்ந்த நீலி கதாபாத்திரமும், அந்தக் கதாபாத்திரத்தை சமனப்படுத்தும் மாமி மற்றும் இறுதியில் வந்து கதையை முடித்துவைக்கும் நாயர் பெண்மணி கதாபாத்திரமும். இந்தக்கதை லௌகீகம் சம்பந்தப்பட்டது என்பதால் பக்கத்து வீட்டு பாட்டியை லௌகீக ஆசா பாசங்களுக்கு அடிமைப்படாத ஒரு ஞானியாக சித்தரித்து இருந்திருக்கக்கூடும். ஆயிரத்தில் ஒருத்திக்காக என்னதான் செறிவான கதையாக இருந்தாலும் ஒரு பத்தி ஒதுக்குவதா பெரிய காரியம்? ஆனால் அப்படி ஒரு சித்திரம் வராத காரணத்தாலேயே கதையை நான் வேறு விதமாகப் புரிந்து கொள்கிறேன். வெற்றிகளுக்கு அடியில் கற்பு என்ற நம்பிக்கை குறித்த தோல்வி என்பதை கதைக்கு சமநிலை தருவதாக எடுக்கலாம்தான். ஆனால் கற்பு வெளுப்பெல்லாம் ஞானியாக மலரும் பெண்ணுக்குத்தான். லௌகீக உலகில் ஒரு ஒழுங்கு, லயத்துக்கு கற்பு குறித்த நம்பிக்கை தேவையே. அதுவே மூச்சு விடுவது போல் வாழ்வின் அடிப்படையான ஆதார விதியாக ஆக இயலுமா? அப்படியெனில் அது வெற்று நம்பிக்கைதானே என்று தோன்றுகிறது. பொய்யை பொய் என்று நிரூபணம் செய்வது கதையைப்பொறுத்த வரை கதையின் வெற்றி.
ஒரு விமரிசகர், கதையின் நீளம் அதிகம் என்று குறிப்பிட்டு இருக்கிறார். எனக்கு என்னவோ கதையின் தலைப்பு தொடங்கி, இறுதி வரை இது மிகவும் செறிவான கதையாகத்தான் தெரிகிறது.
இந்தக்கதைக்கு வெற்றி என்ற தலைப்பும் மிகவும் செறிவான தலைப்பு என்றே உணர்கிறேன். யாரும் நஷ்டப்படாத, அல்லது பரிபூரண வெற்றி என்று முதிர்ச்சியற்றவர்கள் தலைப்பு வைத்திருப்பார்கள் என்றாலும் வெற்றி என்ற தலைப்புதான் கதைக்கு ஒரு மர்மத்தையும், வசீகரத்தையும் நல்குகிறது.
நன்றி
கௌரி ஆர்
***
அன்புள்ள கௌரி,
கூர்வாசிப்புக்கு நன்றி. நான் எழுதும்போது யோசிக்கவில்லை, வழக்கம்போல ஒரே வீச்சு. இரண்டுமணிநேரம். திரும்பிப்படிக்கவுமில்லை. என்ன நிகழ்கிறது என்பதில் எனக்கும் ஆர்வமிருந்தது. நானே அத்தருணங்களை யோசிக்கையில் அந்த கதையைப்பற்றி சூழ்ந்திருந்து பலகோணங்களில் வாசிப்பதே சாத்தியம் என தோன்றுகிறது.
ஜெ
***
அன்புள்ள ஜெ
நலம்தானே? வெற்றி கதை படித்தேன். கதை எனக்குப் பிடித்திருந்தது. இது என் புரிதல். எனக்கு சாதகமாக வளைத்துக் கொண்டேனா எனத் தெரியவில்லை.
பல முறை லதாவை ஆஸ்பத்திரிக்கு ரங்கப்பர் தான் அழைத்து செல்கிறார். நமசிவாயம் கூட சென்றது இல்லை. லதா மனதில் ரங்கப்பருடன் செல்வது தவறான அர்த்தத்தில் பதியவில்லை. அதே போல இரவு முழுவதும் கண்விழித்து ஆஸ்பத்திரியில் இருந்த லதாவை வீட்டுக்கு சென்று ஓய்வெடுத்து வரலாம் என்று சொல்லியிருந்தால் கூட அவளுக்கு தவறாக புரிந்திருக்காது. ரங்கப்பர் லதாவை வீட்டிற்கு அழைத்து செல்லும் முயற்சியில் வெற்றி அடைந்திருக்கலாம். ஆனால் அங்கு அவருக்கு லதா பணிந்து போயிருக்க வேண்டிய அவசியம் இல்லையே.
ரங்கப்பர் முதலில் சொல்லியது போல் “கடவுளேம் இந்தப் பெண் கடைசி வரைக்கும் பணியவே கூடாது என்று வேண்டிக்கொண்டு பல பெண்களை முயற்சி செய்திருக்கிறேன். ஒரு கட்டத்தில் அவர்கள் பணியும்போது அவ்வளவு பெரிய ஏமாற்றத்தையும் வருத்தத்தையும் நானே அடைவேன். அவர்களிடம் உறவு கொண்ட பிறகு உப்பரிகையில் நின்று கொண்டு அழுதிருக்கிறேன். எந்த நம்பிக்கையில் வாழ்வது என்று தெரியாமல் இருந்திருக்கிறேன்.” லதா பணியாமல் இருந்தது, அவர் பார்க்க விரும்பிய பெண்ணாக லதா இருந்ததை எண்ணி மகிழ்ச்சி அடைந்திருக்கலாம் ( கதையின் ஆரம்பத்திலிருந்தே ரங்கப்பர் நியாயமானவராக, அனைவரையும் சமானவராக, உரிய மரியாதையுடன் நடத்துபவராகவே சித்தரிக்க படுகிறார் ). உண்மையை, பந்தயத்தை லதாவிடம் சொல்லியிருக்கலாம்.
தன் ஆணவத்திற்காக, பணத்திற்காக தன்னைப் பணயம் வைக்கும் தன் கணவனை லதாவால் ஏற்றுக்கொள்ள முடிந்திருக்காது. அதுவே அவளுக்கு அதிர்ச்சியாக, அவன் மேல் வெறுப்பாக கூட இருந்திருக்கலாம். இறுதி நாள் வரை தன்னை பணயம் வைத்த பணத்தில் ஆடம்பரமாக, கௌரவத்துடன், வெற்றிவாகை சூடி உலாவரும் தன் கணவனை முற்றாய் வெல்ல, ஏன் அது லதா சொன்ன ஒரு பொய்யாக இருக்கக் கூடாது?
அன்புடன்,
மஹேஸ்வரி
நியூஜெர்ஸி
***
அன்புள்ள மகேஸ்வரி,
அந்த வாசிப்புக்கு இடமிருக்கிறது. உண்மையில் என்ன நிகழ்ந்தது என்பது அக்கதையில் இல்லை. அவர்களுக்குள் என்ன பேசிக்கொண்டார்கள் என்பதுகூட. மொத்தக்கதையையுமே சொல்லாமல் ஒரு கதையை எழுதிவிடவேண்டும் என்றுதான் நானே நினைத்தேன். அக்கதையைச்சுற்றிச் சுழலும் பிறஉணர்வுகளை, சூழலை மட்டுமே கதையில் சொன்னது அதனால்தான்
ஜெ
***
அன்புள்ள ஜெ
என்னை பாதித்தது இந்த கதை.
ஆண்களின் வக்ரத்தையே எழுதினீர்களோ?பெண் இடர அவளின் பலகீனத்தை அறிய வேண்டும் என்கிறார் ஒருவர்.
இல்லை என்று சொல்லி தன்னையும் தன்னை நம்பி வந்தவளையும் வதைக்கிறார் இன்னொருவர்.இதற்கிடையில் அன்பில்லாத கணவனுடனும் நோயாளியான குழந்தையுடனுமான தாய் ஒருத்தி.என்ன அவஸ்தை தெரியுமா? படிக்கும் போது.முடிவை ஊகித்திருந்தேன்.
லதாதான் வென்றிருக்கிறாள் அந்த மூர்கன்களை. சந்தேகம் இல்லை
அந்த இரு ஆண் மகன்களும் அவளிடம் தோற்றே போயிருக்கின்றனர்.
பெண் வலிமையானவள் என்றே பெருமிதம் அடைந்தேன் வழக்கம் போல.
லதா ஒன்றும் பலகீனமானவள் அல்ல. ஆணவமும் அகந்தையுமே பலகீனமானது. இரு ஆண்களை அழித்த காளி லதா.
அன்புடன்
மாலா
சார் வண்க்கம்
தங்களின் வெற்றி கதையை வாசித்தேன் பலமுறை. மிக மிகப்பிடித்த கதைகளில் இதுவும் ஒன்று. சிறுகதை வந்ததிலிருந்து கதையையும் அது தொடர்பான பல கோணங்களிலான ஆண் பெண் இருபாலரிடமிருந்தும் வரும் விமர்சன மற்றும் கண்டனக்கடிதங்களையும் கூட தவறாமல் வாசிக்கிறேன்
என் கருத்தையும் பதிவு செய்கிறேன் சார். ஒருவேளை ஒரு பெண்ணாக நான் சொல்லும் இந்த கருத்து தவறோ என்னவோ, எனக்கு இந்த கதையிலிருந்தும், இன்னும் தினம் தினம் நான் பார்க்கும் பலவற்றிலிருந்தும் தோன்றியதை அப்படியே எழுதுகிறேன்
மனைவி என்பதெல்லாம் கதையில் சொல்லியது போல ஒரு பொதுச்சொல்லேதான் பூசாரியை போல. அது போலவே கணவன் என்பது நிச்சயம் ஒரு பொதுச்சொல்தான். யுகம் யுகமாக இப்படியான கணவர்களே மனைவியை இழிவு படுத்திவருகிறார்கள்
இந்த கதையிலும் லதாவின் இளமையையே அவள் கண்வன் ரங்கப்பரின் சவாலுக்குப்பின்னர்தான் கவனிக்கிறான், அவள் எவ்வளவு சிவப்பு என அவன் அதற்கு முன்னர் கண்டுகொண்டதேயில்லை, அவளையே அவனுக்கு கொஞ்சமும் தெரியாது காலையில் புறப்பட்டு போய் பாதிராத்திரியில் போதையில் வரும் கணவன் என்பதும் பூசா,ரி சாமி போல பொதுவிலான ஒரு பெயரெதான் பொதுவான ஒரு முகம்தான் அவனுக்கும். ஆயிரக்கணக்கில் கோடிக்கணக்கில் இப்படித்தான் இருக்கிறார்கள் இந்த உலகில் கணவர்கள்.
இந்தக்கதையைப் படித்து சிலராவது மனைவி என்பவள் அணுகி அறிந்து கொள்ளவேண்டிய, முறையாக நடத்தப்பட வேண்டியவள் என தெரிந்துகொண்டாள் போதும்.
அங்கீகரிக்கப்படாவிட்டாலும் குறைந்த பட்சம் மனைவிகள் அறிந்துகொள்ளப்படுவதற்காவது அருகதை உள்ளவர்கள் தானே சார்?
16 வயதில் திருமணம் முடிந்து 3ஆவது சவலைப்பிள்ளையின் மார்புச்சளியை தூக்கத்தில் கூட அனிச்சையாக தடவிக்கொடுத்துக்கொண்டு வீட்டைப்பராமரித்து சமைத்து, அவன் உடல்பசியையும் தீர்த்து, அவன் சாப்பிட வரும் போது எப்படி அவனுக்கு பிடித்த விரும்பிய உண்வொன்று தட்டில் இருந்த்ததோ அதைபோலவே அவனுக்கு உகந்ததாக வடிவமைக்கபட்ட 28 வயதே ஆன ஒரு மனைவி அவள்
உக்கிரமாக தெருநாயைபோல விரட்டப்பட்டவள், தேவடியா என சர்வ சாதாரணமாக அடிக்கடி விளிக்கபப்ட்டவள், காசநோய்ப்பிள்ளையின் சிகிழ்சைக்கு வழியின்றி வீட்டில் அவள் இருக்கையில் விஜயா கபேயில் வயிறுவெடிக்க தோசையும் அடையும் காபியும் சாப்பிடும் கண்வனுக்காக வீட்டில் சமைத்து வைக்கும் களிமண்ணால் செய்யப்பட்ட மனைவி என்னும் அச்சு அவள்,
இந்த கதையை நான் லதாவின் கோணத்தில் இருந்தும் வாசித்தேன் சார்,
மிக அலட்சியமாக குரூரமாக இழிவாக தெருநயைவிடக்கேவலமாக நடத்தபப்டும் ஒருத்தி, அடிக்கடி தேவடியா என்றும் வெட்டி கொன்னுடுவேன் அவன் கூட படுத்துக்கோ பணம் தருவான் என்பதையெல்லாம் கூட மிகச்சாதாரணாமன ஏச்சாக அவள் மேல் வீசும் கணவனை அடைந்தவள் ,காசநோய் பிள்ளைகாககூட எந்த முயற்சியும் எடுக்காத, ஏன் இரவில் மார்பை நீவிவிடும் குறைந்த பட்ச உணர்வுகூட் இல்லாத தகப்பனை கணவனாக பெற்றவள்
மாற்றுப்புடவை கூட மரியானதாக இல்லாதவள், கழுத்தில் காதில் ஏதும் பளிச்சென போட்டுக்கொள்ள வழியில்லாதவ்ள், ஆனால் முதலைத்தோல் பர்ஸும் கொம்பு பிரேமிட்ட கண்ணாடியும், பாலிஷ் பண்ணப்பட்ட ஷுவுமாய், இஸ்திரி போட்ட உன்னத உடையலங்காரமுமாய் தினமும் வெளியே போகும் கணவன் , கிடைத்தவள்
கதையின் இறுதியில் வென்றது ரங்கப்பரின் செல்வமோ அழகோ கல்வியோ அல்ல சார் என்னைப்பொறுத்தவரையிலும் லதாவை வென்றது அவரின் கருணை அன்பு கவனித்தல் இவையெல்லாம்தான் ஒரு காபியைக்கூட இது புதுப்பாலில் போட்டதா எனறு கேட்டவரின் அன்பு வென்றிருக்கலாம் அவள் கண்களின் வேதனையை உடன் உணர்ந்து மகனைக்காப்பாற்றிவிடலாம் என்று சொல்லும் கருணை வென்றிருக்கலாம்,, அவளும் நேர்த்தியாக் உடுத்திக்கோள்ளவேண்டும் என நினைத்து அதற்கு ஏற்பாடு செய்த மரியாதை வென்றிருக்கலாம்,, முறையான சிகிழ்சையின் மூலம் மகனைக்காப்பற்ற முயன்ற தெய்வ வடிவு வென்றிருக்கலாம். எட்டாம் வகுப்பு படித்திருப்பது, கூட சொல்லி பாராட்ட வேண்டியது என தெரிந்திருந்த புரிதல் வென்றிருக்கலாம்
பெண்ணை வெல்லவோ அணுகவொ கைக்கொள்ளவோ நீங்களே சொல்லி இருப்பது போல விசித்திரமாகவோ நுட்பமாகவோ ஏன் அசாதரணமாகவோ கூட ஏதும் செய்ய வேண்டியதில்லை அவளை அறிந்துகொண்டு அவளிடம் கருணையுடனும் புரிதலுடனும் அன்புடனும் மரியாதையுடனும் நடந்து கொண்டாலே போதும்.
லதா அன்பாலும் கருணையாலும் தாய்மையாலும் வெல்லப்பட்ட இது போன்ற அரிதான விஷயங்களுக்காக காலம் காலமாக காத்திருக்கும் பெண்களின் பிரதிநிதியாகவே எனக்கு தெரிகிறாள்
உலகில் கடவுள் என்றும் கற்பென்றும் எதுவும் இல்லாமல் இருக்கலாம் ஆனால் அன்பெனும் ஒன்று நிச்சயம் இருக்கிறது சார் அதனால்தான் இது போல கோடிகோடி ஆண்களுக்கும் கணவர்களுக்கும் பின்னரும் மானுடம் வாழ்வது தொடர்கின்றது
லோகமாதேவி
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 17
16. பசுந்தளிர்ப்புள்
விதர்ப்பத்தின் எல்லையை காட்டுப்பாதையினூடாக பாண்டவரும் திரௌபதியும் கடந்துசென்றனர். காட்டு விலங்குகளின் கால்களால் வரையப்பட்டு வேடர்களால் தீட்டப்பட்ட அப்பாதையில் எல்லைக்காவல் என ஏதுமிருக்கவில்லை. ஒருவர் பின் ஒருவரென காலடியோசை சூழ்ந்தொலிக்க உடலெங்கும் விழிக்கூர்மை பரவியிருக்க சொல்லற்றவர்களென நடந்து சென்றனர். வெண்வடுவென குறுக்கே கடந்துசென்ற நீரிலாத ஓடைதான் விதர்ப்பத்தின் எல்லை என்று முன்னரே அவர்களுக்கு விடைசொல்லி அகன்றிருந்த பிங்கலனும் குழுவினரும் உரைத்திருந்தனர். “அதற்கு அப்பாலும் அதே காடுதான். ஷத்ரியர்களின் காட்டுக்கும் நிஷாதர்களின் காட்டுக்கும் எந்த வேறுபாடுமில்லை” என்றான் பிங்கலன்.
தருமன் அவர்களை வணங்கி தன் கையிலிருந்து ஒரு வெள்ளி நாணயத்தை அளித்தார். அதை பெற்றுக்கொண்டு விழிகளில் ஒற்றிய பிங்கலன் “நல்வழி சூழ்க! எது தொடரினும் இறுதியில் வெற்றி உடனிருக்க தெய்வங்கள் அருள் புரிக!” என்றான். “நீங்கள் எங்களை உணர்ந்துவிட்டீர்கள் என்று இக்கதையின் போக்கிலேயே உணர்ந்துகொண்டேன், சூதரே” என்றார் தருமன். “ஆம். இக்கதையினூடாக ஏழைச்சூதன் பாரதவர்ஷத்தை ஆளப்போகும் சக்ரவர்த்தியிடம் சொல்ல வேண்டிய அனைத்தையும் சொல்லிவிட்டேன்” என்றான் பிங்கலன். “அவற்றை நான் முழுதுணரவில்லை. உணரும்படி அமையட்டும்” என்றார் தருமன்.
பிங்கலன் கைகூப்பி தலைவணங்க “ஒருநாள் நாம் மீண்டும் சந்திப்போம், சூதரே” என்றார் தருமன். “ஆம், அது தாங்கள் மாபெரும் வேள்விகள் முடித்து கருவூலம் ஒழியும்படி ஏழுவகைக் கொடைகளையும் அளிக்கும் பெருநாளாக இருக்கும். அங்கு இந்த யாழும் முழவும் வந்துநிற்கும். என்குரல் என் கொடிவழியினர் நாவில் ஒலிக்கும்” என்றான் பிங்கலன். சிலகணங்கள் சொல்லற்ற அமைதியில் நின்றுவிட்டு தருமன் நீள்மூச்சுடன் “தங்கள் சொல் திகழட்டும்” என்று உரைத்தார். அவர்கள் வணங்கி திரும்பி காட்டுக்குள் நுழைவதுவரை பிங்கலனும் அவன் குடியினரும் அங்கே நோக்கி நின்றிருந்தனர்.
பிங்கலன் சொன்ன நளதமயந்தி கதையினூடாக உளம் அலைய நீள்தொலைவு அகன்றபின் பீமன் “இந்தக் கதையில் முழுக்க மாற்றுருக்கொள்வதைப்பற்றியே பிங்கலர் பாடியதாக எனக்குத் தோன்றியது” என்றான். “ஆம், பிறிதொன்றென ஆகி அறியும் மெய்மைகளைப்பற்றி” என்றார் தருமன். “அதற்கு மேலும் அவர் உரைத்தார். அதை இன்று நாம் உணர முடியாது. அவர் அளித்தது உடன் வளரும் ஒரு கதையை. வருவனவற்றினூடாக மீண்டு வந்து தொட்டு எடுத்துக்கொள்ள வேண்டியதுதான்.”
சிறிது நேரத்திற்குப் பிறகு பீமன் “நாம் முற்றிலும் காட்டு வழியாக விதர்ப்பத்தை கடக்க முடியாது, மூத்தவரே. எங்கோ ஊர்களை கடந்தே ஆகவேண்டும். விதர்ப்பம் காடுகளை அழித்து இருதிசையிலும் பெருகி வளைந்திருக்கிறது. கிழக்கு திசைக்கு நகர்ந்து சென்றால் ஆளில்லாத மேய்ச்சல் நிலங்களையும் ஆயர் சிற்றூர்களையும் கடக்கலாம். இவ்வழி சென்றால் நாம் குண்டினபுரியின் புற எல்லை வழியாக செல்ல வேண்டியிருக்கும்” என்றான். தருமன் “அதைத்தான் நானும் எண்ணிக்கொண்டிருந்தேன்” என்றார். “ஆளில்லாத நிலமென்று ஒன்று இல்லை. ஆயர்கள் விரிநிலத்தை விழிகளால் கணக்கிட்டு வைக்க கற்றவர்கள் அவர்களின் நிலங்களினூடாக அறியாமல் எவரும் கடந்து செல்வது இயலாது.”
“அங்கு நாம் ஐவரும் ஒன்றாகவே செல்ல இயலும். ஐவரும் தேவியும் என்பதே நம்மை அறியச்செய்யும். நம்மை காணும் முதற்சூதர் நமது வரவை அறிவார். அவரது சொல் நம்மை சூழ்ந்துகொண்டதென்றால் எங்கும் ஒளிய இயலாது” என்றார் தருமன். அவர்கள் அவர் மேலும் சொல்வதற்காக காத்து நிற்க “நாம் குண்டினபுரியினூடாகவே செல்வோம்” என்று தருமன் சொன்னார்.
“நாம் மும்முறை இந்நகரத்திற்குள் முன்பு வந்திருக்கிறோம்” என்று பீமன் சொன்னான். “ஆம், அது இளையோராக. இளைய யாதவன் விதர்ப்பினியை பெண்கொண்ட பின்னர் நமக்கும் இந்நாட்டிற்கும் தொடர்பென ஏதும் இருந்ததில்லை. இவர்கள் நம்மைப்பற்றி தீட்டிவைத்திருக்கும் பதினான்கு ஆண்டு பழைய உளஓவியம் ஒன்றே இங்குள்ளது. அதிலிருந்து நாம் நெடுந்தொலைவு அகன்று வந்துவிட்டோம். நம்மை பிறருக்குக் காட்டுவது இன்று ஐவர் எனும் அடையாளமே அதை கலைப்போம். நானும் நகுலனும் தனியாக செல்கிறோம். சகதேவன் அர்ஜுனனை துணைக்கொள்ளட்டும். தேவி பீமனுடன் செல்லட்டும். மூன்று தனி வழிகள் தேர்வோம்” என்றார் தருமன்.
“குண்டினபுரிக்கு அப்பால் நிஷதநாடு செல்லும் காட்டின் தொடக்கத்தில் மீண்டும் சந்திப்போம். அங்கு புரந்தர முனிவர் முன்பு தங்கியிருந்த குருநிலை ஒன்றுள்ளது. இன்று அவர்களுடைய மாணவர்களே அங்கிருக்கிறார்கள். அது வேதமுடிபுக்கொள்கையை ஏற்ற குருநிலை. நம் மந்தணத்தை அவர்கள் காப்பார்கள்” என்றார் தருமன். “அங்கு ஒருங்கு கூடுவோம். எவர் முதலில் வந்தாலும் பிறருக்காக அங்கு காத்திருக்க வேண்டும்.”
அர்ஜுனன் “நன்று மூத்தவரே. ஆனால் ஒரு சிறு மாற்றம். தங்களுடன் நான் வருகிறேன்” என்றான். தருமன் ஏதோ சொல்ல வாயெடுக்க பீமன் “ஆம், அவன் வருவதே உங்களுக்குக் காப்பு, மூத்தவரே” என்றான். “நீங்கள் அரசர். நாங்கள் உங்களுக்காக மெய்க்காவல் சூளுறை கொண்டவர்கள்.” அக்குரலிலிருந்த உறுதியால் தருமன் “ஆகுக” என்றார். பின்னர் சில கணங்களுக்குப்பின் “இளையோர் இருவரும் தனித்து வருவதா?” என்றார். “இது சிறுபயணமே. அவர்கள் தனித்து வருவதில் இடரொன்றுமில்லை” என்றான் அர்ஜுனன். “இளையவனே, சிற்றன்னையின் மைந்தர்கள் அவர்கள். மறைந்த அன்னைக்கு நாம் மூவரும் அளித்த சொல் அவர்களின் காப்பு” என்றார் தருமன்.
“நான் பொறுப்பேற்றுக்கொள்கிறேன்” என்று பீமன் சொன்னான். தருமன் நோக்க “நான் தேவியுடன் வரும்போது இளையவரை எப்போதும் என் பார்வையில் வைத்திருப்பேன்.” என அவன் சொன்னான். “நன்று! உன் சொல்லை நம்பி அவர்களை நான் ஒப்படைக்கிறேன்” என்று தருமன் சொன்னார். பீமன் “நாம் தனித்தனியாகச் செல்வது பிறிதொருவகையிலும் நன்று. சேர்ந்துசெல்கையில் ஐவரும் ஓருள்ளமாகவே திகழ்கிறோம்” என்றான்.
விதர்ப்பத்தின் காடு இலைகள் உதிர்ந்து சோர்ந்து நின்ற உயரமற்ற மரங்களும், குற்றிலை செறிந்த முட்புதர்களும் கலந்து பரவி சருகுகள் காற்றில் ஓசையுடன் அலைய ஊடே காலடி ஓசைக்கு விதிர்த்து துள்ளிப்பாயும் மான்களின் சலசலப்புடன் சூழ்ந்திருந்தது. பாம்புகளும் கீரிகளும் கடந்தோடும் கலைவோசையும் தலைக்கு மேல் எழுந்து சிறகடித்துக் கூவிய பறவைகளின் கூச்சல்களுமாக அவர்களிடம் அது சொல்லாடியது. அதன் சீவிடு ஒலி சுழன்று சுழன்று உடன்வந்தது. நிழலிலும் மண்ணிலிருந்து எழுந்த வெம்மையின் அலைகள் உடலை தாக்கின. அந்திவரை நடப்பதற்குள் மூன்று மரநிழல்களில் அமர்ந்து நீர் அருந்தி ஓய்வெடுக்க வேண்டியிருந்தது.
இரவில் தங்குவதற்குரிய பாறை ஒன்றை பீமன் நெடுமரமொன்றின் மேலேறி நோக்கி கண்டடைந்தான். அங்கு சென்றதும் காட்டுக்குள் இறங்கி உலர் விறகு சேர்த்து வந்தான். பிளந்து நின்ற பாறையின் இடுக்குக்குள் வெளியே ஒளிதெரியாமல் அனல் மூட்டி தேடிக்கொண்டுவந்த கிழங்குகளையும் காய்களையும் நான்கு முயல்களையும் சுட்டு அவர்களுக்கு உணவு அளித்தான். பின்னர் புகையெழுந்த அடுப்பை மணலிட்டு முற்றாக மூடினான். அவர்கள் உணவுண்டதுமே விழிசோர்ந்து துயில்நாடலானார்கள்.
பாறை உச்சிவெயிலின் வெம்மை கொண்டிருந்தது. காடெங்கும் பரவிய குளிருக்கு அது இனிய அணைப்புபோலிருந்தது. திரௌபதியை நடுவே படுக்க வைத்து சுற்றிலும் ஐவரும் படுத்துக்கொண்டனர். விழிகள் திறந்து விண்மீன் வெளியை நோக்கியிருக்க வலக்கையருகே அம்பும் இடக்கையருகே வில்லுமாக அர்ஜுனன் படுத்திருந்தான். மறுஎல்லையில் அலுப்போசையுடன் தன் பெரியஉடலை சாய்த்த பீமன் “நாளை உச்சிக்குள் நாம் விதர்ப்பத்தின் மையச் சாலையை சென்றடையக்கூடுமல்லவா?” என்றான். அர்ஜுனன் “ஆம்” என்றான். “நாளை காலை பிரிகிறோம்” என்றான் பீமன் மீண்டும். அர்ஜுனன் “ஆம்” என்றான்.
பீமன் பேச விழைந்தான். “விதர்ப்பத்தில் பெருநிகழ்வெதோ எழுகிறது போலும். பகலெல்லாம் தொலைவில் சாலையினூடாக புரவிகளும் வண்டிகளும் சென்றுகொண்டிருப்பதை கண்டேன்” என்றான். அர்ஜுனன் “குண்டினபுரி இன்று விதர்ப்பத்தின் வணிகத்தலைநகர் மட்டுமே. ருக்மி போஜகடகத்திற்கு தன் தலைநகரை மாற்றிக்கொண்டபின் அவன் தந்தை பீஷ்மகர் சில காலம் இந்நகரை ஆண்டார். பின்னர் அவரும் போஜகடகத்திற்கே தன் அரண்மனையை மாற்றிக்கொண்டார். குண்டினபுரியில் நடந்த அரசப்பெருவிழாக்கள் அனைத்தும் போஜகடகத்திற்கு இடம் பெயர்ந்தன. அதை நிகர் செய்யும் பொருட்டு ஆண்டுக்கு எட்டு பெருஞ்சந்தைகள் இங்கு கூடும்படி அமைத்திருக்கிறான். முதுவேனில் காலத்து சந்தை இன்னும் சில நாட்களில் இங்கு கூடவிருக்கிறது” என்றான்.
“ஆனால் சாலைகளில் செல்லும் கவச வீரர்களை காண்கையில் சந்தை நிகழ்வு மட்டும் என்று எண்ணத்தோன்றவில்லை” என்றான் பீமன். “ஆம், நானும் அதை பார்த்தேன். முதுவேனிற் சந்தையை ஒட்டி பிறிதேதோ அரச நிகழ்வொன்று நடைபெற உள்ளது. ஆனால் பேரரசர்களின் வருகை எதுவுமல்ல. அத்தனை பெரிய ஏற்பாடுகள் தெரியவில்லை. சிறிய அரசநிகழ்வுதான்” என்று அர்ஜுனன் சொன்னான். “எதுவாயினும் வழிகளில் காவல் நிறைந்திருக்கும். முகங்களை கூர்ந்து நோக்குவார்கள். சந்தைக்குச் செல்லும் அயல்முகங்களின் திரள் மட்டுமே நமது காப்பு” என்று பீமன் சொன்னான். அர்ஜுனன் “ஆம்” என்றான்.
தங்கள் உரையாடலை திரௌபதி கேட்டுக்கொண்டிருப்பதை இருவரும் உணர்ந்தனர். பிறருடைய துயில்மூச்சுக்கள் ஒலித்துக்கொண்டிருந்தன. பீமன் இருமுறை கோட்டுவாயிட்டான். “சென்றுகொண்டே இருக்கிறோம். எங்கும் நிலைக்க முடியுமா இனிமேல் என்றுகூட எண்ணிக்கொண்டேன்” என்றவன் இருமுறை புரண்டுபடுத்தான். சற்று நேரத்திலேயே அவன் உரக்க குறட்டை விட்டு துயில் கொள்ளலானான்.
திரௌபதி தாழ்ந்த குரலில் “இளையவரே…” என்றாள். அர்ஜுனன் “சொல், தேவி” என்றான். “மாற்றுருக்கொள்வது அத்தனை கடினமானதா?” என்றாள் திரௌபதி. அர்ஜுனன் “நீ மாற்றுருக்கொண்டதே இல்லையா?” என்றான். இருளுக்குள் திரௌபதி சற்று நேரம் அமைதியாக இருந்தாள். பின்பு “உடலுக்குள் நாம் கொள்ளும் உருவங்களனைத்தும் நம் புறத்தோற்றத்தால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளன. புறத்தோற்றம் மாறுபடும்போது நம்முள் என்ன நிகழுமென்று அறியும்பொருட்டே கேட்டேன்” என்றாள்.
அர்ஜுனன் “நாம் புறத்தோற்றத்தை மாற்றிக்கொள்கையில் அதுவல்ல நாம் என்று உள்ளிருப்பது முரண்டுகிறது. நான் பிறிது என்று சொல்லிக்கொண்டே இருக்கிறது. ஆனால் நம்மை சூழ்ந்திருப்பவை அனைத்தும் நம் தோற்றமே நாமென நம்மிடம் மீளமீள கூறுகின்றன. நமது இருப்பும் இடமும் அவ்வாறு வரையறுக்கப்படுகின்றன. என்ன நிகழ்கிறதென்று நாம் அறியாதிருக்கையிலேயே நம்முள் இருப்பது மாறிவிடுகிறது. பிறகெப்போதோ ஒருமுறை அது நினைவுகளில் இருந்து தன் முந்தைய வடிவை கண்டெடுத்து அதை கனவென அணிந்து திரும்பிப்பார்க்கையில் துணுக்குறுகிறது, எப்படி மாறினோம் என்று” என்றான்.
“அக்கணத்திலெழுவது ஒரு பெரும் அச்சம் மட்டுமே. நாம் இனிமேல் மீள முடியாதோ என்று. உண்மையில் அக்கணமே நாம் கொண்டிருக்கும் தோற்றத்தை உரித்து வீசிவிடவேண்டுமென்று வெறியெழும். அதை கடப்பது எளிதல்ல” என்றான் அர்ஜுனன். திரௌபதி “நாம் நமது தோற்றமல்ல, பிறிதொருவர் என்பதை வெளிக்காட்டிக்கொண்டே இருக்கும் உந்துதல் ஏற்படுமா?” என்றாள். “ஆம், அது தொடக்க நாட்களில்தான். நீங்கள் பார்ப்பதல்ல நாம் என்று நாம் சொல்லிக்கொண்டே இருப்போம். ஆனால் அது எவ்வகையிலும் நமது மாற்றுருவை கலைப்பதில்லை” என்றான் அர்ஜுனன்.
“ஏன்?” என்றாள் திரௌபதி. “நாம் கொண்ட மாற்றுரு ஓர் ஆளுமையாக பிறரால் அறிந்து வரையறுக்கப்படும் தொடக்கப்பொழுது அது. அந்த மீறல் குரலும் நமது ஆளுமையின் ஒரு பகுதியென்றே எண்ணப்படும்.” மெல்ல சிரித்தபின் “நீ சூடப்போகும் பெயரென்ன?” என்றான் அர்ஜுனன். திரௌபதி “சைரந்திரி என்ற பெயர் எனக்குத் தோன்றியது” என்றாள் வியப்புடன். “எப்போது?” என்றான் அர்ஜுனன். “சற்று முன் விதர்ப்பத்தின் எல்லையை கடக்கும்போது நான் என் மாற்றுருவை நோக்கி ஒவ்வொரு அடியாக வைத்து நெருங்கிக்கொண்டிருக்கிறேன் என்று தோன்றியது. பெயரில்லாமல் அந்த மாற்றுருவை என்னால் கற்பனை செய்யமுடியவில்லை. என்ன பெயரிடலாம் என்று உள்ளத்தில் துழாவியபோது இப்பெயர் அகப்பட்டது.”
அர்ஜுனன் “இது எவருடைய பெயர்?” என்றான். “இதுவா? இளமையில் எனக்கொரு தோழி இருந்தாள். அவள் பெயர் அது” என்றாள். “அவள் இப்போது என்ன செய்கிறாள்?” என்று அர்ஜுனன் கேட்டான். “இப்போது அங்கு நிஷத நாட்டில் எனக்காக காத்திருக்கிறாள்” என்றாள் திரௌபதி. அவன் புரிந்துகொண்டு சிரித்தான். “என்னுடன் இருந்த மரப்பாவைக்கு நான் அந்தப் பெயரை இட்டேன். அது நான் கேட்ட ஏதோ ஒரு கதையில் இருந்த வனதேவதையின் பெயர். இளங்குழந்தையாகவே அவளை நான் கற்பனை செய்திருந்தேன். இன்று என்னுடன் அவளும் வளர்ந்திருக்கிறாள்” என்றாள். “என்ன கதை அது?” என்றான் அர்ஜுனன்.
“இன்று அக்கதை தெளிவாக நினைவில்லை. நான் அதை இப்போது தோன்றுவதுபோல் புனைந்து சொல்லமுடியும்” என்றாள் திரௌபதி. “அரசுரிமைப்பூசலால் காசி நாட்டின் இளவரசியை ஒற்றர்கள் தூக்கிக்கொண்டு சென்று விட்டார்கள். அவளுக்கு இரண்டு வயது அவள் பெயர்தான் சைரந்திரி. நஞ்சூட்டப்பட்டு துயின்றுகொண்டிருந்த அவளை கொல்லும்பொருட்டு காட்டு வழியாக கொண்டுசென்று கொண்டிருக்கையில் அவர்களில் இருவரை நச்சுப்பாம்புகள் கடித்துவிடுகின்றன. குழந்தையை நிலத்திலிட்டுவிட்டு அவர்கள் இறந்துவிடுகிறார்கள்.” அர்ஜுனன் பேசாமலிருக்க “கேட்கிறீர்களா?” என்றாள். “ஆம்” என்றான்.
“மறுநாள் குழந்தை விழித்தெழுந்து நோக்கியபோது படமெடுத்த பாம்புகள் சூழ்ந்த அடர்காட்டுக்குள் தன்னை உணர்ந்தது. பசித்து அழுதபடி எழுந்து சென்றபோது பசுங்கிளைகளுக்குமேல் ஒரு பச்சைநிறமான இலைதாவிப்புள்ளாக சென்றுகொண்டிருந்த கானகத்தெய்வம் ஒன்று அவளை பார்த்தது. அவள் அழுகையைக் கண்டு அது தன்னை அவளுடைய மாற்றுரு வடிவமாக ஆக்கிக்கொண்டு கீழிறங்கி அவளை நோக்கி வந்தது. தன்னைப்போன்ற இளந்தோழியைக் கண்டதும் இளவரசி முகம் மலர்ந்ததாள். இருவரும் தழுவிக்கொண்டார்கள். கைகோத்தபடி காட்டுக்குள் சென்றனர். இளவரசியை மரங்களில் தாவவும் உச்சி மரங்களில் சென்று கனிகளைப் பறித்து உண்ணவும் நிலவு பொழியும் இரவுகளில் மரக்கிளைகளில் அமர்ந்து வான் நோக்கி பாடவும் அந்தத் தோழி கற்பித்தாள். இளவரசி அங்கே அழகிய கன்னியாக வளர்ந்தாள்.”
“இளவரசி இறக்கவில்லை என்பதை நிமித்திகர்களின் குறிப்புகளிலிருந்து அறிந்த அரசர் ஒற்றர்களை அனுப்பி காடுகளெங்கும் தேடினார். அங்கு இறந்துகிடந்த இரண்டு எலும்புக்கூடுகளில் இளவரசி அணிந்திருந்த நகைகள் இருப்பதை ஒற்றர்கள் கண்டனர். அந்தக் காட்டில் தேடியபோது இளங்கன்னியாக மரக்கிளைகளில் பச்சைக்கிளிபோல பறந்தலைந்த இளவரசியை கண்டனர். அவள் தோற்றத்திலிருந்தே காசி நாட்டில் மறைந்த குழவிதான் அவள் என்று கண்டடைந்தனர். அவர்களைக் கண்டு அவளும் ஆவலுடன் கீழே வந்தாள். அவளை தங்களுடன் அரண்மனைக்கு வரும்படி அழைத்தனர். அவள் காட்டுக்குள் இருப்பது தனக்கு உவப்பானதென்றும் அவர்கள் கூறும் அந்நகரத்தை நினைவுகூர இயலவில்லை என்றும் அவள் சொன்னாள். அவர்கள் மன்றாடியும் அவள் அவர்களுடன் செல்லவில்லை. அவளை பிடித்துச்செல்ல அவர்கள் முயன்றபோது உச்சி மரக்கிளை நோக்கி பாய்ந்து இலைத்தழைப்புக்குள் மறைந்துவிட்டாள்.”
“அவர்கள் திரும்பிச்சென்று அரசரிடம் செய்தியை கூறினர். அரசர் தன் துணைவியுடன் காட்டுக்கு வந்து மரக்கிளைகளை நோக்கிக் கூவி அவளை அழைத்தார். அவள் அன்னை இளம் வயதில் அவளை அழைக்கும் பெயரை சொல்லி கண்ணீருடன் விளித்தாள். அப்பெயரைக்கேட்டு நினைவுகொண்டு மரக்கிளைகளிலிருந்து கிளிபோல பறந்து இறங்கிய இளவரசி அன்னையை உடனே அடையாளம் கண்டுகொண்டாள். கைகளை நீட்டியபடி ஓடிவந்து அன்னையை தழுவிக்கொண்டாள். தந்தை அவள் தோள்களைப்பற்றியபடி விம்மி அழுதார். எங்களுடன் வந்துவிடு மகளே, நீயில்லாமல் நாங்கள் வாழமுடியவில்லை என்று அன்னை அழைத்தாள். அன்னையைப் பிரிய உளமில்லாமல் இளவரசி அதற்கு ஒப்புக்கொண்டாள்.”
“அவர்கள் இளவரசியை நகருக்கு அழைத்துச் சென்றார்கள். குடிபடைகள் கூடி உவகைப்பேரொலி எழுப்பி வாழ்த்த இளவரசி நகர் புகுந்தாள். அவையில் பொன்னும் மணியும் இழைத்த அரியணையில் அமர்ந்து குலமுறைமைகளை ஏற்றுக்கொள்கையில் அவள் ஒளிமிகுந்த காட்டையும் பசுமை அலையடிக்கும் மர உச்சிகளையும் தன்னுள் கண்டுகொண்டிருந்தாள் . அவளுக்கு அந்த அவையும் நன்கு தெரிந்ததாக இருந்தது. அப்பால் காடு மேலும் அணுக்கமாக தோன்றியது.”
“அன்றிரவு அவள் தன் பட்டுமஞ்சத்தில் துயில் இல்லாமல் புரண்டுகொண்டிருந்தாள். சாளரம் வழியாக வெளியேறி மீண்டும் காட்டுக்குள் சென்றுவிட்டாலென்ன என்று எண்ணினாள். ஆனால் அன்னையும் தந்தையும் தன்னை காணாமல் துயருறுவார்கள் என்ற எண்ணம் அவளை தடுத்தது. நூறு முறை உளத்தால் கிளம்பியும் அவளால் உடலை எழுப்ப முடியவில்லை. சாளர விளிம்பில் அமர்ந்து அப்பால் தெரிந்த விண்மீன்களையும் மரக்கூட்டங்களின் நிழலசைவுகளையும் கண்டு கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருக்கையில் இருளுக்குள் ஒரு சிறகடிப்பை கேட்டாள். ஒரு பச்சைக்கிளி அவள் முன் வந்து அமர்ந்தது.”
“அது யாரென்று அவள் உடனே உணர்ந்துகொண்டாள். அதை கையிலெடுத்து ‘என்னைத் தேடி வந்தாயா?’ என்றாள் சைரந்திரி. ‘ஆம், நான் உன்னைப்பிரிந்து அக்காட்டில் இருக்க இயலாது’ என்றாள் காட்டணங்கு. ‘நீ உன் அன்னையை நோக்கி கைவீசியபடி கண்ணீருடன் சென்றதை பார்த்தேன். உன் பின்னால் நானும் அதைப்போல கைவிரித்து ஓடிவந்தேன். நீ அதை பார்க்கவில்லை’ என்றாள். ‘என்னால் இங்கு இருக்க இயலாது. நானும் வருகிறேன் நாம் மீண்டும் காட்டுக்கு சென்றுவிடுவோம்’ என்றாள் சைரந்திரி. ‘இல்லை அக்காட்டில் நீ இனி வாழமுடியாது’ என்றாள் காட்டணங்கு.”
“சைரந்திரி ‘அக்காடின்றி என்னால் இங்கும் வாழ முடியாது’ என்றாள். ‘அந்தக் காட்டை நான் உனக்காக கொண்டு வந்திருக்கிறேன். என்னுடன் வா’ என்று இளவரசியை காட்டணங்கு அழைத்தாள். இளவரசி அவளைத் தொட்டதும் தானும் ஒரு பச்சைக்கிளியாக மாறினாள். இருவரும் பறந்து அரண்மனை சோலைக்குள் நுழைந்தனர். நிலவு பெருகி இலை நுனிகளில் ததும்பிய மரக்கூட்டங்களுக்கு நடுவே இரு கிளிகளும் விடியும் வரை பறந்தலைந்தன. புலர்வதற்கு முன் மீண்டும் மஞ்சத்தறைக்கு இருவரும் திரும்பி வந்தனர். ‘என்னை உன் வளர்ப்புக்கிளியாக ஒரு கூண்டுக்குள் வைத்துக்கொள். எவருமறியாத இரவுகளில் என்னை மீட்டெடு” என்று காட்டணங்கு சொன்னாள். சைரந்திரி அந்தப்பச்சைக்கிளியை ஒரு புற்கூண்டில் அடைத்து தன் மஞ்சத்தறைக்குள்ளேயே வைத்துக்கொண்டாள்.”
“எப்போதும் அன்று மலர்ந்த இளம்பசுந்தளிர் போல அக்கிளி அவளுடன் இருந்தது. வேண்டும்போது அதை தொட்டு உயிர்ப்பிக்க அவளால் இயன்றது” என்று திரௌபதி சொன்னாள். அர்ஜுனன் நெடுநேரம் ஒன்றும் சொல்லவில்லை. பின்னர் “உருமாற்றம் உனக்கு அத்தனை கடினமாக இருக்காதென்று எண்ணுகிறேன்” என்றான்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-5
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-4
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-3
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-2
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–45
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–12
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–9
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–8
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–7
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–6
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–5
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 60
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 55
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 54
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 23
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 17
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 16
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 12
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 3
June 8, 2017
சபரிநாதன் நேர்காணல்
நேர்கண்டவர் : பிரவீண் பஃறுளி
சபரிநாதன் தமிழ் நவீன கவிதையில் அண்மையில் வெளிப்பட்டுள்ள ஒரு சுதந்திரமான குரல். இவரது கவிதைகள் தொண்ணூறுகளின் மாற்றங்களை ஒட்டி தமிழ்க்கவிதையில் நிகழ்ந்த புனைவுத்தன்மை, புறவயமான விரிவு, உரைநடைமொழிபு போன்ற இயல்புகளின் நீட்சியில் ஒருபுறமும் மறுபக்கம் செவ்வியல் ஒழுங்கு, உணர்வெழுச்சி, பாடல்தன்மை, கட்டிறுக்கம், மொழிச்செறிவு, ஒருமெய்யறிதலாகக் கவிதையின் ரகசியபாதைகள் என தனித்த ஒரு உணர்திறனிலும் இயங்குகின்றன. நமது காலத்தின் ஒரு உள்ளீடற்ற தன்மை, குழப்படிகள் மீது நுட்பமான அறிதல்களை நிகழ்த்துகின்றன. ’சமகாலம்’ என்பது போன்ற விமர்சன வழக்குச்சொல்லில் தன்னை பொருத்திக்கொள்ள விரும்பாத மனவியல்புடன், ஒரு கவிஞனாக தனது காலம் பல்வேறு காலங்களோடும் பல்வேறு மரபுகளுடனும் மயக்கம் கொண்டது என்கிறார். கவிதை சார்ந்த தனது நேரடிக்காலத்தின் அழுத்தங்களிலிருந்து விலகி தனதேயான மிகச் சுதந்திரமான பாதைகளை உருவாக்கிக் கொள்கிறார். மிகச் சாவதானமான ஒரு மயக்கமும் தற்போக்கான மனவெழுச்சிகளும், சுதந்திரமான எடுத்துரைப்புகளும் சபரிநாதன் கவிதைகளில் தனித்த அழகு சேர்க்கின்றன. தனது கவியுலகம் குறித்து தன் சுயம் சார்ந்து பேசுவதில் ஒருவித தயக்கமும் சந்தேகமும் கொள்கிறார். ’கவிதை தன் விளிம்பில் இருப்பதே அதன் தொழிலுக்கு உகந்ததாக இருக்கும்’ என்கிறார்.
1989 இல் பிறந்தவர். சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த கழுகுமலை. பொறியியல் பட்டதாரி. தற்போது உதகையில் அரசுப்பணியில் உள்ளார். களம் – காலம் -ஆட்டம்( புதுஎழுத்து வெளியீடு, 2011) வால் (மணல்வீடுவெளியீடு, 2016) ஆகிய இரு கவிதைத்தொகுப்புகள் வெளியாகியுள்ளன. உறைநிலைக்குக்கீழ் (கொம்பு வெளியீடு) என்னும் ஸ்வீடிஷ் கவிஞர் தாமஸ் ட்ரான்ஸ்ட்ரோமரின் கவிதைகளின் மொழியாக்கநூல் வெளிவந்துள்ளது. கவிதையியல் சார்ந்த ஆழ்ந்த விமர்சன கட்டுரைகளும் எழுதிவருகிறார். தேவதச்சன் கவிதைகள் குறித்த தேவதச்சம் கட்டுரை குறிப்பிடத்தக்கது.
இந்த நேர்காணல், ’இடைவெளி’ இதழுக்காக, மின்னஞ்சல் வழியே மேற்கொள்ளப்பட்டது.
***
கே : தொண்ணூறுகளின் இறுதி மற்றும் இரண்டாயிரத்தின் தொடக்கங்கள் தமிழ்க்கவிதையில் ஒரு உடைப்பு நிகழ்ந்தகட்டமாக இருந்தது. இருண்மை, அகவயத்தன்மை, சுயத்தின் ஆத்மபரிசோதனை, துக்கம், தத்துவார்த்த அழுத்தம் என்பதிலிருந்து விலகி வேடிக்கை, விளையாட்டு, உரைநடை, எளிமை, புனைவிய குதூகலங்கள், குறிப்பாக மற்றமை, சமூகம் எனபு றவயமாக, கவிதை ஒரு புதிய மனச்சூழலை அடைந்த கட்டமாக அது உள்ளது. கவிதைக்குள் குதூகலமான, புத்துணர்வான நம்பிக்கைகள் எழுந்த கட்டமாக அது இருந்தது. இதற்குபிறகான ஒரு தலைமுறையில் , ஒரு இடவெளிக்குப்பின் நீங்கள் எழுத வருகிறீர்கள். நீங்கள் எழுத வரும்போது கவிதைக்குள் என்ன ஒரு மனச்சூழலை உணர்கிறீர்கள். ? இன்று நீங்ங்கள் பொதுவான படைப்புச்சூழல், மனத்தளம் என்று உணரத்தக்கதாக ஒன்று உள்ளதா?
ப : நான் நவீனக்கவிதை எழுதத்துவங்கிய காலத்தில் சமகால தமிழ் இலக்கியச்சூழல் குறித்த பரிச்சயம் மட்டுமல்ல தோராயமான ஒரு அகவரைபடம் கூட என்னிடம் இல்லை. வானம்பாடி கவிதைகள் ஆசிரிய விருத்தங்களில் துவங்கி ஆங்கில கவிதை வாசிப்பின் மூலம் நான் எனதேயான ஒரு கற்பனை உலகில் வாழ்ந்தேன் என்று தான் கூறமுடியும். அத்தகைய கவிதைகளை அதிக அளவில் எழுதிக்கொண்டு கவிஞன் என்ற சுயவரையறையோடு இருந்தேன். அதனால் தொடக்கத்தில் தமிழ் இலக்கியச் சூழலின் எதார்த்தத்தை புரிந்துகொண்டு அதில் என்னை பொருத்திக் கொள்வதற்கான வாய்ப்பு எனக்கு அமையவில்லை. முழுபிரக்ஞையுடன் நான் நவீன தமிழ்க்கவிதையை அறிமுகம் செய்துகொண்டது 2009 வாக்கில். 2011 இறுதியில் என் முதல் தொகுப்பு வெளியானது. எனக்கு தமிழ் இலக்கியச் சூழல் குறித்து பெரிய அவதானிப்பெல்லாம் அப்போது இல்லை. அந்த சமயம் தமிழின் முக்கியமான நிறைய கவிஞர்களை வாசித்திருந்தேன் எனினும் தமிழ் நவீனக்கவிதை குறித்த ஒருமித்த சித்திரம் எனக்குள் இல்லை. இப்போதும் கூட சமகால கவிதைச் சூழலுக்குள் மட்டுமே நான் என்னை குடியிருத்திக் கொள்ள விரும்பவில்லை. எதார்த்தில் என் காலம் என்பது நான் வாழும் வருடக்கணக்காக இருக்கலாம். ஆனால் என் கற்பனையில் அப்படியில்லை. ஒரு எழுத்தாளனாக என் சமகாலம் என்பது நீண்டது அகண்டது என்றே நம்ப ஆசைப்படுகிறேன்.. அங்கு இளங்கோவடிகளோ மாணிக்கவாசகரோ மிலோஷோ எலியட்டோ என் சமகாலக் கவிஞர்களே..
சமகாலக் கவிதை என்பது ஒருவித விமர்சன மாதிரி அலகாக வேண்டுமானால் இருக்கலாம். ஒரு கவிஞனாக இத்தகைய கால வகைப்பாடுகள் எனக்கு துல்லியமானதாகத் தோன்றவில்லை. எல்லாவற்றையும் தொழில்நுட்பத்தோடு ஒப்பிட்டு நோக்கும் பாங்கு நாம் அறியாமலே நம்மை பீடித்திருக்கிறது. தொழில்நுட்ப சந்தை எப்படி அடிக்கடி தன்னைப் புதுப்பித்துக்கொள்கிறதோ அதே போல வாழ்வின் எல்லா பாதைகளும் தம்மை அடிக்கடி தகவமைத்துக் கொள்ளவேண்டும் என எதிர்பார்க்கிறோம். ஆனால் அது சாத்தியமில்லை. பொருளியல் மாற்றத்தைப் போல விழுமிய மாற்றங்களோ ஆழ்மன மாற்றங்களோ துரிதமாக ஏற்படுபவை அல்ல. அதேபோலத் தான் தொழில்நுட்பத்தின் இயங்குவிசை வேறு இலக்கியத்தின் உள்ளாற்றல் வேறு. கலை இலக்கியத்தின் மாற்றமானது அடிப்படையில் Organic ஆன ஒன்று. அது ஒரு நதியைப் போலத் தான் பயணிக்கும். ஸ்போர்ட்ஸ் காரைப் போல திரும்பமுடியாது அதனால். ஆனால் நாம் அப்படி எதிர்பார்க்கிறோம். இலக்கியச் சூழலிலும் டி20 ஆட்டங்களைப் போல் எதாவது நடந்துகொண்டே இருக்க வேண்டும் என விரும்புகிறோம். அப்படி இல்லை என்றால் இலக்கியம் தேங்கிவிட்டது என விசனிக்கிறோம்.
விமர்சன வகைப்பாடாகக் கொள்வதெனில் சமகாலத்தில் எழுதப்படும் கவிதைகள் பாடுபொருளிலும் பாணியிலும் பெரும்பாலும் தொண்ணூறுகளின் கவிதையின் தூரத்து மெல்லிய நீட்சி என்று தான் சொல்லவேண்டும். அது அப்படித்தான் இருக்கவும் முடியும். ஏனெனில் இப்போதைய எதார்த்தம் தொண்ணூறுகளில் ஏற்பட்ட பொருளியல் மற்றும் கலாச்சார உடைப்பின் மூலம் வார்க்கப்பட்ட ஒன்று தான். அதனின்றும் சமீபத்தில் எழுதப்படும் கவிதைகளை ஏதேனும் ஒருவகையில் தனித்துவப்படுத்த வேண்டுமெனில், முன்னெப்போதுமற்ற ஒரு வகை அளப்பரிய சுதந்திரத்தால் ஆட்பட்ட கவிதைகள் என்று கூறலாம். அதேபோல எண்ணிக்கைப் பெருக்கத்தாலும் மதிப்பீடுகளின் வெற்றிடத்தாலும் போலிவெள்ளத்தாலும் முன்னெப்போதையும் விட கவிதை ‘de-value’ செய்யப்பட்ட காலத்தில் எழுதப்பட்டவை என்றும் சொல்லலாம்.
*
கே : தமிழ் நவீனகவிதை அடிப்படையில் சிறுபத்திரிக்கை இயக்கம் வழியாகவே பரிணமித்து வந்துள்ளது. இன்று சிறுபத்திரிக்கை இயக்கம், அதன்மதிப்பீடுகள் ஒரு வெற்றிடத்திற்கு வந்துள்ளன. எழுத்து–வாசிப்பு என்னும் இடத்தில் , உற்பத்தியும் – நுகர்வும்வைக்கப்பட்டுள்ளன. சிற்பத்திரிக்கைச் சூழலின்அரசியல், கலை, கருத்தியல்கள் அனைத்தும் அவற்றின் சாராம்சங்கள் தூர்ந்து இன்று கவர்ச்சிகரமான நுகர்பொருள்களாக்கப்பட்டுள்ளன. திராவிட இயக்கமொழி, இடதுசாரிகள் உருவாக்கியமொழி, என அனைத்தும் ஒரு வரலாற்று சுற்று முடிந்து காலியாகியுள்ளது போலவே சிறுபத்திரிக்கை மொழியும் இன்று உள்ளீடு காலியாகி தேய்வழக்கான வடிவங்கள், மனநிலைகள், பிரதியெடுப்புகள் என சரிந்துகொண்டுள்ளது. இத்தகைய ஒரு வலுவான எதிர்மறைச்சூழலில் சிறுபத்திரிகை இயக்கம் சார்ந்த ஒரு மறுமலர்ச்சி, மொழிக்குள் ஓர் உள்ளார்ந்த புத்தியக்கம் என்பதற்கு இன்று நவீனகவிதை கொண்டிருக்கும் சாத்தியங்கள் எத்தகையவை?
ப : சிறுபத்திரிக்கையை எவ்வளவு தூரம் இயக்கம் என்று சொல்லமுடியும் என்று தெரியவில்லை. ஆனால் நவீன இலக்கியத்தை பொறுத்தளவில் கிட்டத்தட்ட ஒற்றைப் பெருந்தரப்பாக முன்னெடுத்தது சிறுபத்திரிக்கைகள் தான் என்பதில் சந்தேகமில்லை. உலகம் முழுக்கவே சிற்றிதழ்கள் ஒரு காலகட்டத்தின் தேவையை பூர்த்தி செய்வதற்காகத் தோன்றியவை. ரஷ்யாவிலோ ஐரோப்பாவிலோ செவ்வியல் நாவல்களின் காலத்தில் சிற்றிதழ்கள் இல்லை என்பதைக் கவனிக்கவேண்டும். அந்த விதத்தில் சிற்றிதழ்களை நவீனத்துவத்தின் சிருஷ்டி எனலாம். எல்லா மொழிகளிலும் நவீனத்துவத்தின் குறிப்பாக நவீன கவிதையின் வாகனமாக அது தான் இருந்து வந்தது. நவீனத்துவத்தின் எதிர்நிலை நோக்கை சிற்றிதழ்கள் சுவீகரித்துக் கொண்டன. சிற்றிதழ்களின் விமர்சனத் தரப்பு நவீனத்துவத்தை போஷித்தது. ஆனால் சிறுபத்திரிக்கைகளின் ஆரம்ப காலகட்டத்தோடு ஒப்பிட்டால் நாம் இப்போது இருப்பது முற்றிலும் வேறான ஒரு காலகட்டம் என்பதை ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும். இந்த காலகட்டத்தில் சிற்றிதழ்கள் எவ்வாறு இயங்கக் கூடும் என்பது குறித்து எனக்கு மட்டுமல்ல சிறுபத்திரிக்கை ஆசிரியர்களுக்கே கூட தெளிவான திட்டம் இருக்குமா என்பது சந்தேகமே. சிறுபத்திரிக்கைகளின் Crisisக்கு முக்கியமான காரணம் இணையத்தின் வரவு தான். நடுநிலை இதழ்களோடு சிற்றிதழ்களும் சேர்ந்து இயங்குவதற்கான வாய்ப்பு உண்டு. ஆனால் இணையத்தின் வரவு முற்றிலும் புதிய ஊடகத்தை உருவாக்கியுள்ளது. இதன் இயல்முறைகளோ வாய்ப்புகளோ முன்னுதாரமற்றவை. இப்போது நடுநிலை இதழ்களே கூட இணையத்தில் பரவியுள்ள வாசகப்பரப்பைத் தவறவிட விரும்புவதில்லை. அவர்களின் பிரதானமான கவனம் கூட அச்சுவெளி என்பதை விட இணையமாகத் தான் உள்ளது. தவிர இப்போது இலக்கியத்தின் மையமே இணையம் தான். இப்போது இலக்கிய சர்ச்சைகள் மட்டுமின்றி மதிப்பீடுகள் கூட அங்கு தான் உருவாகின்றன. ஒரு புத்தக வெளியிட்டின் புகைப்படத்தை நீங்கள் upload செய்தால் தான் அந்த புத்தகம் வெளிவந்ததாக அர்த்தம். இது எழுத்தாளர்களுக்கு மட்டுமில்லை சாமான்யர்களுக்கும் தான். விர்ச்சுவல் உலகில் அக்கவுண்ட் இல்லாத நபர் ஒருவித ‘non-exitent entity’ தான்.
அதே நேரம் இணைய இதழ்கள் அவ்வளவு மூர்க்கமாக செயலாற்ற முடியும் என்றும் நான் நம்பவில்லை. அதனால் இத்தகைய நிதர்சனத்திற்குள் சிற்றிதழ்களின் புத்தெழுச்சியில் எனக்கு நம்பிக்கை இல்லை என்று தான் சொல்லவேண்டும். சிற்றிதழுக்கான தேவை இருக்கிறதா என்றால் ஆமாம் அதற்கான சாத்தியம் இருக்கிறதா என்றால் அநேகமாக இல்லை. ஆனால் எல்லாவகை எதார்த்தத்திற்கும் கேள்வியின்றி தகவமைத்துக் கொள்வது trendy ஆக இருக்கலாம் ஆனால் அது ஆபத்தானது. நாம் இழந்தது என்னவோ அதிகம் தான். முக்கியமாக படைப்புத் தீவிரமும் ஆழ்ந்த வாசிப்பும். நீங்கள் சொல்வது போல் உற்பத்தியும் நுகர்வுமாக கலை அனுபவம் மாறியுள்ளது உண்மை தான். அது முன்னமே வால்டர் பெஞ்சமின் போன்ற கலாச்சார மார்க்சியர்கள் ஊகித்தது தானே. ஆனால் அதற்கு பின்னரும் அபாரமான படைப்புகள் எழுதப்பட்டன என்பதை மறந்துவிடக் கூடாது. இப்போதும் எழுதப்படுகின்றன. அதே நேரம் இலக்கியத்திற்குள் சந்தை மதிப்பீடுகள் முன்னெப்போதையும் விட ஆழமாக ஊடுருவியுள்ளது என்பது நிஜம். பின்நவீனவாதிகள் எல்லா மதிப்பீட்டு அடிப்படைகளையும் கேள்விக்குட்படுத்தி காலிசெய்து விட்டால் சுதந்திரம் கிட்டிவிடும் என்று நம்பினார்கள். ஆனால் உலகம் முழுதுமே அப்படி நடக்கவில்லை. அந்த வெற்றிடத்தை சந்தையும் மேலோட்டமான அரசியல் சரிநிலைகளும் கைபற்றின. high culture serious, art போன்ற விஷயங்கள் ரொம்ப நாட்களாகவே மேலை நாடுகளில் சரியத்துவங்கி விட்டது. சமீபத்தில் பாப் டிலனுக்கான நோபல் அச்சரிவின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு தான்(தனிப்பட்ட ரீதியில் பாப் எனது நாயகர்களில் ஒருவர் தான் எனினும்… )
அதற்காக இப்போது சும்மா இருக்க வேண்டியது தான் என்றில்லை. தீவிர இலக்கியத்தின் மரபார்ந்த மதிப்பீடுகளையும் அடிப்படைகளையும் தக்கவைப்பதற்காக எல்லா வழிகளையும் பயன்படுத்த வேண்டும் என்று தான் கூறுவேன். இலக்கியத்திற்கு தற்போது பொதுவெளியிலும் பிரபல ஊடகங்களிலும் கிடைத்திருக்கும் இடத்தை எதிர்மறையாக நோக்க வேண்டியதில்லை. அவற்றை நாம் பயன்படுத்திக் கொள்ளலாம். என்ன அவை இலக்கிய மதிப்பீடுகளை ஜனரஞ்சகத்தை முன்னிட்டு உருவாக்குவதற்கான ஆபத்தையும் கொண்டுள்ளன. ஒருவகையில் பார்த்தால் அத்தகைய காலகட்டத்தை நோக்கித் தான் நாம் சென்றுகொண்டிருக்கிறோமோ என்று அஞ்ச வேண்டியுள்ளது (இந்த இடத்தில் நான் எனது pessimism த்தை பிரச்சாரம் செய்ய வேண்டாம் என நினைக்கிறேன்) ஆயினும் எல்லாவற்றையும் விட முக்கியமான வழி நல்ல படைப்புகளை உருவாக்க முயல்வதுதான் இல்லையா.. சொல்லப் போனால் அது தான் எளிமையான வழியும் கூட.
இன்னொரு விஷயம் தொண்ணூறுகளின் நாவல் குறித்து நீங்கள் கூறியிருப்பதில் எனக்கு உடன்பாடில்லை. தொண்ணூறுகளில் உருவான நாவலின் எழுச்சி தமிழ் இலக்கியத்தின் பெருநிகழ்வுகளில் ஒன்று என்பது தான் எனது எண்ணம். அதற்கு முன் நல்ல நாவல்கள் வந்தன தான் எனினும் நாவல் வகைமையின் முழுச்சாத்தியத்தையும் அவை பயன்படுத்தவில்லை என்பது நிதர்சனம். இந்நிகழ்வை வெறும் சந்தைமயத்தின் அல்லது அச்சுத்துறையின் வளர்ச்சியின் விழைவாகக் கூறுவதெல்லாம் தத்துவார்த்த க்ளிஷேவில் சொல்வதென்றால் எந்திரவியக் குறுக்கல்வாதம். அப்படி பார்த்தால் ரஷ்ய செவ்வியல் நாவல்களை என்ன சொல்வீர்கள். மகாபாரதத்தையும் கம்பராமாயணத்தையும் எப்படி நியாயப்படுத்துவீர்கள். எல்லா செயல்பாடுகளைப் போலவே இலக்கியத்தின் மீதும் பொருளியல் எதார்த்ததின் தாக்கம் உண்டு தான். ஆனால் அது தான் இலக்கியப்ப்போக்கை தீர்மானிக்கிறது என்பது நடைமுறை உண்மையில்லை. பொதுச்சூழலை வேண்டுமானால் அவை பாதிக்கலாம். ஒரிஜினலான கலைஞர்களைப் பொறுத்தவரை அப்படி குறுக்கிவிட முடியாது. வேறெதையும் விட எழுத்தாளனின் படைப்பைத் தீர்மானிப்பது அவனது சொந்த கனவு தான். அது சொந்தமாகத் தான் இருக்கும் என்பதில்லை பெரும்பாலும் தனது முன்னோடிகளிடம் இருந்து அவன் ஆகர்ஷித்துக்கொண்டதாகக் கூட இருக்கலாம். தாந்தேயை நரகத்தினூடும் சொர்க்கத்தினூடும் வழிநடத்திச் சென்றது விர்ஜில் தானே. அது எப்போதுமே அப்படித்தான் இலக்கியம் சமூக வரலாற்றைக் காட்டிலும் இலக்கிய வரலாற்றுக்கே நெருக்கமானது.
*
கே: உங்கள் கவிதையில் ஒரு வேடிக்கைப்பையன், முதிராமனம், பிள்ளைமைப் பைத்தியநிலை என்பது ஒரு விசாரணைக்குரலாக, கலைத்துப்போடுதலாக, நையாயாண்டித் தரப்பாகவும், மறுபக்கம் மருட்சியும் மடமும் கொண்ட பீதியுற்ற மனமாகவும் வெளிப்படுகிறதே ?
ப : நிஜம் தான். எனக்கு அது போன்ற ‘boyish’ ஆன கவிதை சொல்லியின் குரல் மிகவும் பிடித்துள்ளது. முக்கியமானது அதில் உள்ள vulnerability கூடவே உற்சாகமும். அந்தக் குரல் தடுக்கி விழுந்த கண்டுபிடித்த ஒன்று தான், கவனமாக நெய்யப்பட்டதல்ல. அது தன்னளவிலேயே ஒரு விளிம்பு நிலையில் உள்ள குரல் என்பதால் அதால் பெரிய பாவனையெல்லாம் சுமக்க முடியாது. நம் காலத்தில் நடக்கும் எல்லாவற்றையும் பார்த்து சிரிப்பதற்கான ஒரு கோணம் உள்ளது என நம்புகிறீர்களா, ஒட்டுமொத்தத்தையும் ஒரு நையாண்டியாக மாற்றுவதற்கான வாய்ப்பு எப்போதுமே இருந்திருக்கும். ஆனால் இந்த காலகட்டத்தில் அந்த வாய்ப்பு அதிகம். அதற்காக என் கவிதைகள் American funny videos போன்றோ standup comedy போன்றோ அல்லது feel good moviesகளாகவோ ஆகிவிடக்கூடாது என்ற எச்சரிக்கை எப்போதுமே உண்டு, வாசகப் பொதுவெளி அதை விரும்பினாலும் கூட. அது போன்ற கவிதைகளை நிறைய வாசிக்கமுடிகிறது இப்போதெல்லாம். எனக்குத் தெரியாது நானே கூட அப்படிப்பட்ட சில கவிதைகளை எழுதியிருக்கலாம்.
களம் காலம் ஆட்டத்தில் நிறைய கவிதைகள் நீங்கள் சொல்வது போன்ற முதிராக் குரலில் எழுதப்பட்டிருந்தன என நினைக்கிறேன். ஆனால் வாலில் கணிசமான அளவு அந்த தன்மையை தாண்டியிருப்பதாகவே படுகிறது. ஆயினும் எப்போதும் அந்த பதின்வயது நேரட்டரை கூட கொள்ளவேண்டும் என்றே ஆசைப்படுகிறேன். ஏனெனில் விளையாட்டுத்தனம் படைப்பூக்கத்திற்கு அருகில் உள்ள ஒரு மனோபாவம் தான். அத்தகைய மனோபாவத்துடன் பார்க்கும் போது ரியாலிட்டியில் இல்லாத பல புதிய ரகசிய சுரங்கப் பாதைகளைக் காணமுடிகிறது. கூடவே விளையாட்டு என வரும் போது அதில் மற்றவை அவசியமாகிறது இல்லையா. அது மட்டுமல்ல அந்த மற்றமைக்கு உங்கள் சுயத்துக்குள்ள அதே சரிசமமான இடமும் வழங்கப்பட்டாக வேண்டியுள்ளது. போரில் எதிராளியை அழிக்க வேண்டியுள்ளது. விளையாட்டிலோ எதிராளி அவசியமாகிறான். முக்கியமான விஷயம் அதன் நோக்கம் எந்த எதிர்மறைத்தன்மையும் அற்றது. ஆனால் கவிதையின் நோக்கம் விளையாட்டு காட்டுவதல்ல. வாசகனுக்கு கிச்சுகிச்சு மூட்டுவதல்ல. படைப்பூக்கம் வற்றிவிட்டால் இந்த விளையாட்டுத்தனம் வெறும் கைவித்தையாக மாறிடலாம். பின் சலிப்பூட்டக்கூடிய ஒரு மேஜிக் ஷோ பார்ப்பதைப் போலாகிவிடும். அதில் மந்திரமும் இருக்காது விளையாட்டும் இருக்காது கவிதையும் இருக்காது.
*
கே: 2000த்திற்குப் பிறகு தமிழ்க்கவிதையில் புனைவம்சம் என்பது மேலோங்கி நிற்கிறது. நிறைய மாந்தர்களும், சம்பவ விவரணைச் சித்திரங்களும், காட்சித்தன்மையும் கூடிய கதைப்பரப்பாக இன்றைய கவிதை இருக்கிறது. பிரவர் கவிதை வருகை இதில் ஒரு பெரும்பாதையை திறந்துவிட்டது. உங்கள் கவிதையிலும் அதிஉரைநடைத்தன்மை, சம்பவவிவரணைகள், காட்சிப்புலத்தன்மை, கதைகூறல் அம்சம் மிகுந்து காணப்படுகிறது. பலவிதமான கதைமாந்தர்களும், புனைவுச் சந்தர்ப்பங்களும் நிறைந்த பரப்பாக அது உள்ளது. ஒரு சம்பவம் அடுக்கப்பட்டது போன்ற தோரணை இருந்தாலும், ஒரு விசித்திர ஒழுங்கு, தனித்த அறிதல் என்பது வழியாகவே கவிதைக்கான இணைபிரதி உருவாகிவிடுகிறது. இந்தக்கதை அம்சத்தை உங்கள் கவிதைகள் சார்ந்து கொஞ்சம் விளக்கமுடியுமா?
ப: கவிதையில் Narrative poem என ஒரு வகை உண்டு. விவரணைக் கவிதை எனக் கூறலாம். இது தமிழில் மட்டுமல்ல செம்மொழிகள் எல்லாவற்றிலுமே நீண்ட நெடுங்காலமாக வழக்கில் உள்ள ஒன்று. காப்பியங்களை கதைப்பாடல்களை இதன் வகைப்பாட்டிற்குள் தோராயமாக அடக்கலாம். ஆனால் காப்பிய வகைமைக்கென தனிக்கவிதையியலே உண்டு. ஆனால் சங்ககாலத்தின் ஒவ்வொரு கவிதைக்குப் பின்னும் ஒரு புனைவுத்தருணமும் ஒரு பாத்திரமும் உள்ளன என்பது முக்கியம். கலித்தொகை அகநானூறு போன்ற பழையபாடல்களிலேயே விவரணைக் கவிதைகள் தொடங்கிவிட்டன. அவை சங்கப்பாடல்களின் அழகியலை ஏற்றிருந்தாலும் அதை மீறிச் சென்று நாடகீய சுவாரஸ்யத்தையும் கொண்டிருப்பதைக் காணலாம். நவீனக்கவிதையைப் பொறுத்தவரை தொடக்கம் முதலே விவரணைக் கவிதைகள் எழுதப்பட்டுள்ளன. பிரபலமான உதாரணங்கள் என்றால் பாரதியின் சுயசரிதை, பிச்சமூர்த்தியின் பெட்டிக்கடைநாரணன் போன்றவை விவரணைக் கவிதைகள்தானே… ஞானக்கூத்தன் ஆத்மாநாம் போன்றவர்கள் ஒப்பீட்டளவில் அதிக விவரணைக்கவிதைகள் எழுதியவர்கள் எனலாம்.
கவிதை உரைநடைக்கு பல்லாண்டுகள் மூத்தது. ஆனால் ஆச்சர்யகரமாக நிறைய மொழிகளில் நவீனக்கவிதை உரைநடையுடன் ஒட்டிப் பிறந்ததாகவே உள்ளது. எலியட் ஓரிடத்தில் சொல்கிறார் நவீனக்கவிதை பேச்சுமொழியின் ஓசையைக் கைப்பற்ற வேண்டுமென. கூடவே ஜனநாயகம், நவீன அறிவியல் போன்றவற்றால் உருக்கொள்ளத் துவங்கியிருந்த நவீன உணர்திறனை செய்யுளுக்கு புகுத்துவது அசாத்தியமானதாக இருந்தது. ஒரு நவீனஅனுபவத்தை உரைநடை கலவாமல் செவ்வியல்மொழியில் கூறினால் அது தானாகவே பகடியாக மாறுவதைக் காணலாம். சி.மணி இப்படி நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். ஆக அது தவிர்க்க முடியாமல் உரைநடையை சென்று சேர்ந்தது. சொல்லப்போனால் உரைநடைக்கவிதைகள் ஆரம்பகால கவிஞர்களான பாதெலேர் மல்லார்மே ஆஸ்கர்ஒயில்ட் போன்றோராலேயே எழுதிப்பார்க்கப்பட்டவைதான். புதியமுயற்சிகள் அல்ல அவை.
ஆனால் கடந்த பத்து பதினைந்து ஆண்டுகள் தமிழில் இந்த விவரணைக் கவிதைகள், கவிதை என்றாலே இந்த வடிவம்தான் எனக் கருதப்படும் அளவுக்கு எழுதிக் குவிக்கப்பட்டுள்ளன. இதற்கு காரணம் என்ன என்று சரியாக ஊகிக்கமுடியவில்லை. வாசகமனோபாவமும் இலக்கியபோக்கும் பேரளவு புனைவை நோக்கித் திரும்பியதாலா அல்லது நவீனபுனைவு கவிதையை உட்செறித்துக்கொண்டதாலா.. அல்லதுசுவாரஸ்யத்தினாலா, பொதுச்சூழல் எனும் புதுச்சிக்கலாலா தெரியவில்லை. நவீனத்தின் தனிச்சுயம் தன்னை காலிசெய்து விட்டு மற்றமையில் ஆர்வம் கொண்டது முக்கியமான விஷயமாக இருக்கலாம். எனது கவிதைகளிலும் நீங்கள் கூறும் புனைவம்சம் நிறையவே உண்டு. எனக்கு தனிப்பட்ட ரீதியில் புனைவில் உள்ள ஆர்வம் கூட காரணமாய் இருக்கலாம். என் கவிதைகளில் இணைபிரதிகள் உருவாவது குறித்து எனக்கு சந்தோஷமே. ஆனால் அது திட்டமிட்டு செய்யப்படுவதில்லை என்பதுதான் உண்மை. அடிப்படையில் அதற்கான பொறுமை இல்லை எனக்கு. நான் பெரும்பாலும் உத்வேகத்தை நம்பி எழுதக்கூடிய ஒருவன். அதனால் இந்த கவிதைத் தொழில் நுட்பத்தில் எல்லாம் எனக்கு பெரிதாக ஆவல் இருந்ததில்லை. ஒரு விமர்சகனாகத்தான் அவை என் கண்ணில்படுகின்றன. அதேசமயம் ‘வால்’ தொகுப்பு குறிப்பிடத்தக்கஅளவில் lyric poemகளை கொண்டிருந்தது என நினைக்கிறேன்.
*
கே: தத்துவம், வரலாறு, மனிதன், விடுதலை, இலட்சியம், புரட்சி–இச்சொற்கள் சென்ற நூற்றாண்டில் ‘மந்திரத்தன்மை வாய்ந்தவை… இந்தநூற்றாண்டில் அவை உள்ளீடு தூர்ந்து காலிச்சொற்கள் ஆகிவிட்டன. நவீனத்துவத்தின் கண்டுபிடிப்பகளும், உழைப்பும், படைப்பூக்கமும் கொண்ட ஒரு வரலாற்றுக்கட்டம் முடிந்து உள்ளீடற்ற மாதிரிகளின் உற்பத்திக்கட்டமாக இது உள்ளது. சாராம்சமற்ற இந்தகாலத்தின், வெற்றிடத்தின் வினோத வேடிக்கைகளை ஒரு துயரமும் கொண்டாட்டமும் கலந்த மனநிலையில் உங்கள் கவிதைகள் அணுகுகின்றன எனலாமா?
ப : அப்படி சொல்லலாம் தான். ஆனால் முதலில் ஒன்றை சொல்லி விடுகிறேன். என் படைப்புகளை என்னால் புறவயமாகக் பார்க்க முடிந்ததில்லை. அவற்றைக் குறித்து நான் பெரிதாக சிந்தித்ததுமில்லை. தவிர கலை இலக்கியம் என்பது ஒருவரது தனிப்பட்ட ஆளுமையின் வெளிப்பாடாகக் கருதவில்லை நான். அதனால் என் உளக்கூறுகளோ நம்பிக்கைகளோ கருத்துக்களோ எவ்வளவு தூரம் என் கவிதைகளை பாதித்துள்ளது என்பது பெரிய சந்தேகமே. பலநேரம் எனக்கு ஒவ்வாத நான் நம்பாத பல விஷயங்களை கோணங்களை எழுதியிருக்கிறேன். எனவே என் கவிதைகள் சார்பாக ஓரெல்லைக்கு மேல் பேசமுடியாது என்பதை சொல்லி விடுகிறேன்.
நான் எப்போதுமே நேரெதிரான உள்விசைகளால் அல்லலுறுபவனாகவே இருந்திருக்கிறேன். வாழ்வின் பிரமாண்டமான அல்லது ஆழமான அடிப்படைகளை நோக்கி ஈர்க்கப்படுபவனாகவும் அதேநேரம் சின்ன சந்தோஷங்களிலும் சிறிய உண்மைகளிலுமே மீட்சி உள்ளதாக நம்புபவனாகவுமே இருந்து வருகிறேன். இந்த இரண்டு தரப்புகளுக்குமே எழுதியுள்ளேன் என நினைக்கிறேன். ஒருவேளை ஒப்பீட்டளவில் இரண்டாவது கட்சிக்கு கூடுதலாக வாக்களித்திருக்கலாம். சமீபத்தில் வெர்ரியர் எல்வின் பற்றி ராமசந்திரா குஹா எழுதிய நூலை ரொம்ப சீரியஸாக படித்துக்கொண்டிருக்கையில் அடுத்த அறையில் அம்மா சமையலில் ஈடுபட்டிருக்கும் சப்தத்தில் கவனம் சென்றது. ஈரப்பாத்திரங்களின் ஒலிகள் கடுகு வெடிக்கும் ஓசை கொத்தமல்லி அறுபடும் சத்தம் தோசை ஊற்றப்படும் நாதம்… நான் சிரித்தபடியே எனக்கு நானே சொல்லிக் கொண்டேன் நான் இந்த இரண்டையுமே எழுத கடமைப்பட்டுள்ளேன் என. புரட்சிக் கவிஞரான நெருதாவின் ‘ode to elementary things’ எவ்வளவு அற்புதமான புத்தகம், தமிழில் அரசியல் கவிஞராக அடையாளப்படுத்தப்படும் ஆத்மாநாம் இயற்கையையும் குழந்தைகளையும் குறித்து அழகான கவிதைகளை எழுதவில்லையா? பேரனுபவங்களையும் இலட்சியங்களையும் போலவே முக்கியத்துவமற்ற எளிய நிகழ்வுகளும் வாழ்வை அர்த்தப்படுத்துகின்றன தானே. புதுமைப்பித்தன் ஓரிடத்தில் எழுதியிருப்பார் ‘இலக்கியத்தின் பணி வாழ்விற்கு பொருள் அளிப்பது’என்று. எவ்வளவு எளிய துல்லியமான கூற்று. இதே போல பாரதி கவிதைத் தலைவியில் எழுதுகிறார் ‘லௌகிக வாழ்க்கையில் பொருளினை இணைக்கும் பேதை மாசக்தியின் பெண்ணே வாழ்க’ என்று.
உள்ளீடற்ற மாதிரிகள் எல்லாக் காலத்திலும் உற்பத்தி செய்யப்பட்டவை தான். என்ன இந்தக் காலத்தில் அவை கொஞ்சம் கூடுதலாக செய்யப்படுகின்றன. உற்பத்தி அளவிற்கு விமர்சன செயல்பாடு இல்லை என்பதால் எழுதுவதெல்லாமே ஆபத்தான மறதிக்குள் செல்ல நல்ல படைப்புகளை இந்த ’பொதுச்சூழல்’ என்ற உருவக எதார்த்தம் முழுங்கிவிடுகிறது. அதனால் தான் நான் ஒரேடியாக சூழலைக் குறித்தே உரையாடுவது பயனற்றது எனக்கருதுகிறேன். மாறாக நாம் தனித்தனிக் படைப்புகளைக் குறித்து பேசுவேண்டும். எல்லாக் காலத்திலுமே ஒரிஜினலான எழுத்தாளர்கள் குறைவாக இருப்பார்கள். முன்னர் நகல்களும் அதனால் மீடியாக்ரிடியும் குறைவாக இருந்தன இப்போது அது சூழலின் ஓர் அம்சமாக மாறியுள்ளது அவ்வளவு தான் வித்தியாசம்.
ஒரு சுவாரஸ்மான விஷயம் என்னெவென்றால் கவிதை நிரந்தரமாக அவசர சிகிச்சை பிரிவில் இருக்கக்கூடிய ஒரு நோயாளியைப் போலவே வாழ்ந்து வந்துள்ளது. பாரதிக்கு பின் வந்தார் பாடை கட்டி வச்சிவிட்டார் என்ற முன்னரே சொல்லியாயிற்று. பாரதியும் அவர் காலக் கவிதையின் நிலை குறித்து வருந்தியுள்ளதாக ஞாபகம். எழுத்தில் இருந்து எந்த சிற்றிதழ்களின் தலையங்கத்தைப் பார்த்தாலும் கவிதை குறித்த உற்சாகத்தை விட கவலையே மிகுந்துள்ளதைக் காணலாம். எழுத்தின் தொடக்க கால கட்டுரைகளில் மட்டும் தான் உற்சாகம் தென்படுகிறது. இப்போது கூட வருடத்தில் நாலைந்து பேராவது சொல்லிவிடுகிறார்கள் கவிதை முட்டுசந்தில் நிற்கிறது மூலையில் நிற்கிறது என. ஒருவேளை கவிதை எப்போதுமே முட்டுசந்தில் தான் நிற்கும் போல. ஒருவேளை எல்லா மொழிகளிலுமே இப்படி தான் போல. ஏனெனில் பொதுவான சூழலைப் பற்றி எண்ணுகையில் அத்தகைய மனநிலை மட்டுமே எஞ்சுவதாக இருக்கலாம். ஆனால் எல்லா சூழலிலுமே நல்ல கவிஞர்கள் தம் போக்கில் எழுதிக்கொண்டிருந்திருப்பார்கள் என்று தான் தோன்றுகிறது, விமர்சகர்கள் கவனித்தார்களோ இல்லையோ.
கலைக்கும் தத்துவத்திற்கும் ஆன உறவு ஒரு கோணத்தில் எதிரானது ஒரு கோணத்தில் நுட்பமானது. பிளேட்டோவின் சிந்தனை கவித்துவத்திற்கு நெருக்கமானது. ஆனால் அவர் கவிஞர்களை நாடு கடத்த விரும்பினார். ஏனெனில் கலை பெருமளவு உணர்ச்சிகளின் மீது வேலை செய்வது. தத்துவ மனதால் அதை ஆபத்தாகத் தான் எடுத்துக்கொள்ள முடியும். ஆனால் இரண்டும் பலநேரம் ஒரே விதமான அடிப்படைக் கேள்விகளை எதிர்கொள்பவை. தற்போது தத்துவம் கிட்டத்தட்ட ஒரு கல்விப்புலமாகச் சுருங்கிவிட்ட பின் அதன் பல கேள்விகள் அறிவியலின் தோளுக்கு மாற்றப்பட்ட பின் தத்துவார்த்தமான அக்கறைகளுக்கு இப்போது இருக்கும் ஒரே இடம் கலை இலக்கியம் தான். அதே நிலை தான் ஆன்மிகத்திற்கும்-ஆன்மிக சந்தையை கணக்கில் எடுக்காவிட்டால். ஆனால் எப்போதுமே இலக்கியம் ஆன்மிகம் தத்துவம் இரண்டிற்குமே மிக நெருக்கமான உறவையே பேணிவந்ததுள்ளது. அது எப்பவும் அப்படித்தான் இருக்கும். அதேநேரம் அவற்றுள் கரையாமல் இருந்து வருவதையும் கவனிக்க வேண்டும். ஏனெனில் அதனுடைய பணி வேறு.
புரட்சி விடுதலை.. இதைப்பற்றி என்ன சொல்ல. நாம் என்ன சொன்னாலும் புரட்சியின் நூற்றாண்டு முடிந்துவிட்டது. அதனால் தான் பகடி இல்லாமல் நம்மால் பொதுவிஷயங்களைக் குறித்து எழுதமுடிவதில்லை. அவநம்பிக்கை தான் சூழ்ந்துள்ளது இதில் பொய்த்தோரணை எல்லாம் காட்ட விருப்பமில்லை. உபயோகம் தான் முக்கியம், மோடி நமது பிரதமராகியுள்ளார் ட்ரம்ப் அமெரிக்க அதிபராகி உள்ளார். சமூக ஊடகங்களின் வருகைக்குப் பின் நாம் எல்லோருமே பிரபலங்கள் ஆகிவிட்டோம். போதும் மீண்டும் எனது பெசிமிஸத்தை பிரச்சாரம் செய்வதை நிறுத்திக்கொள்கிறேன். ஆனால் பிரதானமான விஷயம் கலாச்சாரத்தின் மீதும் சமூகத்தின் மீது நமக்கு அக்கறை உள்ளதா என்பது தான். அவநம்பிக்கையும் விமர்சனமும் இந்த அக்கறையின் பாற்பட்டதாக இருந்தால் ஒரு வகையில் அது அவசியமே.
மற்றபடி இலக்கியம் சமூக மாற்றத்தை உருவாக்க முடியும் என்றெல்லாம் தோனவில்லை. அது இலட்சியங்களைத் தோற்றுவிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பெல்லாம் ரொம்ப அதிகம். போன நூற்றாண்டின் பேரழிவுகளுக்குள் இருந்து எழுதிய கவிஞர்களின் அபிப்ராயம் கூட அது தான். ஏனெனில் கலைக்குள் இயல்பான ஒரு செயலூக்கமற்ற தன்மை இருக்கிறது என தோணுது. பங்குபெறாத ஒருவித பார்வையாளத்தனம். வியாசர் கூட முதலில் குருஷேத்திரப் போரை நிறுத்தத் தானே முயற்சித்தார் . ஆனால் அவரால் முடியவில்லை, அவர் பாரதம் பாடினார். ஏனெனில் அவரால் முடிந்ததெல்லாம் உலக நாடகத்தையும் மானுட மேன்மையையும் கீழ்மையையும் பதிவு செய்வது தான். பலநேரங்களில் அது தான் அனைவருக்கும் சாத்தியம் அதாவது சாட்சியமாக இருப்பது.
*
கே: நிரந்தர மோட்சங்கள், சாரமான அனுபவங்கள் என்பதை விட இனி தற்காலிகமான குதூகலங்கள், தருணஅனுபங்களே சாத்தியம் என்னும் பார்வை உங்கள் கவிதைகளில் ஓடுகிறது. இன்றைய ஸ்திதியில் நமக்கு எல்லாமே கிடைக்கக்கூடியனதான். ஆனால் எதுவும் அதன் சாரத்தில் இல்லாமல் ஒரு பின்னத்தன்மையில், ஒரு நகல் அனுபவம் தான் சாத்தியம் என்னும் பார்வை வெளிப்படுகிறதே?
ப : நிரந்தர மோட்சங்கள் எல்லாம் நமது நோக்கமில்லை. உரையாடல்களின் போது நண்பர்கள் சிலர் எனை சாரம்சவாதி என விமர்சித்ததுண்டு. ஓரெல்லை வரை அதை நான் ஒத்துக்கொள்ளத் தான் வேண்டும். அடிப்படைகளை குறித்த கவனம் இலக்கியத்திற்கு அவசியம். ஆனால் அவற்றைக் நேரடியாகக் கையாள்வது சாத்தியமில்லை. தவிர இப்போது மட்டுமல்ல எப்போதுமே பின்னமான நகல் அனுபவம் தான் மனித இனத்திற்கு வாய்த்துள்ளது. கேவல ஞானம் போன்ற சாராம்ச அனுபவம் நமக்கு வாய்ப்பில்லை. பிளேட்டோ கவிஞர்களை மெய்ம்மையில் இருந்து மூன்றடுக்கு விலக்கி வைப்பது ஒரு விதத்தில் சரிதான். ஏனெனில் அருவத்தைப் பற்றி பாடுவதென்றால் கூட உருவத்தை தான் பயன்படுத்த வேண்டும். நோக்கம் universal ஆக இருக்கலாம் ஆனால் எழுத்தின் பாதை particular இல் தான் இருக்கிறது. அதனால் வெள்ளரிக்காய்களைப் பற்றியும் தீயணைப்பானைப் பற்றியும் வீடு காலி செய்வதைப் பற்றியும் எழுதுவதை வேறொன்றின்றகான ஒரு வாய்ப்பாகத் தான் நான் கருதுகிறேன். வாழ்வு பெரும்
வாசிப்பின் வெற்றி
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
தங்களின் வெற்றி சிறுகதையை படித்து முடித்ததும் புதுமைப்பித்தனின் பொன்னகரம் நினைவுக்கு வந்தது. பொன்னகரம் கதை ஒரு பெண்ணின் கற்பு பற்றிய கதை மட்டும் அல்ல என்றே நினைக்கிறேன். புதுமைப்பித்தன் முதலில் பொன்னகரம் பற்றிய பகீர் வர்ணனை தந்துவிட்டு, அம்மாளு என்கிற ஒரு பெண்ணின் (Instance) கதைக்குள் செல்கிறார். அவர் ஒட்டுமொத்த பெண்குலத்தை பற்றியோ (Generalisation) அல்லது பெரும்பாலான பெண்கள் இப்படி அப்படி என்று புள்ளிவிவரங்கள் (Statistics ) எதனுள்ளும் செல்லவில்லை. ஆனால், கடைசி வரியில் “இதுதான் ஐயா உங்கள் பொன்னகரம்” என்று புதுமைப்பித்தன் சொல்லும்பொழுது ஒரு சமூக சாடல் தெறிக்கின்றது. ஒரு சமூகமோ அல்லது அரசாங்கமோ தனது பிரஜைகளை கல்வியற்ற, பாதுகாப்பற்ற, அங்கீகாரமற்ற, எதிர்காலமற்ற, சுகாதாரமற்ற சாக்கடைக்குள் தள்ளினால், அந்த சூழ்நிலையில் மனிதர்களும் அவர்களின் அறமும் தடம் புரளும் என்பதை எச்சரிக்கிறார் புதுமைப்பித்தன்.
வெற்றி சிறுகதை ஒரு Game Theory வடிவத்தில் செல்கிறது. ரங்கப்பர் லதா இருவருக்குள் நடந்த விஷயங்களை, “நீல ஜாடி” போல் சொல்லாமல் விட்டது, மிக சிறப்பு. ஆகவே கதையின் முடிவை (Win-Win, Win-Lose, Lose-Lose என ) வாசகர்கள் எப்படியும் வைத்துக்கொள்ளலாம். வெற்றி சிறுகதை லதாவின் கற்பு பற்றிய கதை மட்டும் அல்ல என்றே நினைக்கிறேன். கதையில் ரங்கப்பர் அமெரிக்காவில் படித்து வந்தவர் என்ற குறிப்பு வருகிறது. ரங்கப்பர் எனும் பாத்திரத்தை அமெரிக்கா போன்ற வளர்ந்த மேலை நாடுகள் என்று வைத்துக்கொண்டு, நமச்சிவாயம் பாத்திரத்தை இந்தியர்கள் என்று வைத்துக்கொண்டு, லதாவின் பாத்திரத்தை இந்திய மண் மற்றும் அதன் கலாச்சாரம் என்று நினைத்தால், வேறு ஒரு வடிவமும் முடிவும் கிடைக்கிறது. இந்தியர்களாகிய நாம் தருமனை போல் இந்தியாவை வைத்து சூது விளையாடிக்கொண்டு இருக்கிறோம். இந்த விளையாட்டில் நாமெல்லாம் வெற்றி பெருகிறோமா என்றால், ஆம், நாம் வெற்றி பெறுகிறோம். ஆனால் அந்த வெற்றிக்கு விலையாக நாம் இந்தியாவின் ஆன்மாவை கொன்று முன்னே செல்கிறோம். புதுமைப்பித்தனின் பொன்னகரம் போல் வெற்றி சிறுகதையும் அற மீறலை கண்டு வெளிப்படும் ஒரு எச்சரிக்கையே.
நன்றி.
அன்புடன்,
ராஜா.
சென்னை
***
அன்புள்ள ராஜா,
வெற்றி சிறுகதையின் நான் எதிர்பார்த்திருந்த ஒரு குரல் இது. நான் மலேசியாவில் இருக்கையில் வெற்றி வெளியாகியது. மறுநாள் நவீன் என்னிடம் இரவெல்லாம் விழித்திருந்து அக்கதையை வாசித்ததாகச் சொன்னார். ரங்கப்பர் கதாபாத்திரத்தின் தேடலும் தோல்வியுமே கதை என உணர்ந்ததாகச் சொன்னார். ”நான் நிறைவுகொள்ளும் வாசிப்பு அது. அக்கதையின் எளிய வாசகர்கள் அது ஒரு பெண்ணை ஆண் வெற்றிகொள்ள முடியுமா முடியாதா என்பதாக அக்கதையை வாசிப்பவர்கள். வெற்றி என்பது என்ன, எவருடைய வெற்றி அது என அக்கதை பேசுவதை புரிந்துகொள்பவர்களே அதன் மெய்யான வாசகர்கள். என் கதைகள் சுவாரசியமான வாசிப்பனுபவத்தை அளிக்கவேண்டும். ஆனால் அதன் மேலதிக வாசிப்புகள் நுண்வாசகர்களால் நிகழ்த்தப்படவேண்டும்” என்றேன்
”மேலதிகமாக என்ன வாசிப்பு வரக்கூடும்?” என்று நவீன் கேட்டார். “அந்தப்பெண் கணவனிடம் ஏன் அதைச் சொல்லிவிட்டுச் சென்றாள்? அதில் இருக்கிறது கதையின் உண்மையான சிக்கல். அதை வாசிப்பவர்கள் சில நாட்களுக்குப்பின் வருவார்கள்” என்றேன். “சரி, அதற்குப்பின்?” என்று கேட்டார். ஆறுமாதம் அல்லது ஓராண்டுக்குப்பின்னர், இந்த விவாதங்கள் அடங்கிய பின்னர் வாசிக்கும் ஒருவர் அதில் பிரிட்டிஷ் முறைமை காலாவதியாகி அமெரிக்க முறைமை வருவதைப்பற்றிய நீண்ட விவரணை ஏன் என்பதை யோசிக்கையில் அது நான் இன்று எழுதிவரும் அத்தனை கதைகளிலும் உள்ள ‘இந்தியநிலம் மீதான ஆதிக்கம்’ என்னும் உள்ளடக்கம் கொண்டது என்பதை புரிந்துகொண்டு அப்படி ஒரு வாசிப்புக்கு இடமிருப்பதை கண்டுகொள்வார் என்றேன். நேரடியான ஆதிக்கம் அல்ல ரங்கபருடையது. அந்தப்பெண் தேடும் ஒரு பாவனையை அளித்தபின் செய்யும் ஆதிக்கம். இன்னும் நுட்பமானது, ஆனால் முழுமையானது. அந்த வாசிப்பு இத்தனை விரைவாக அமைந்தது ஒருவகையில் பெரும் கிளர்ச்சி அளிக்கிறது. இன்று மலேசியாவிலிருந்து கிளம்புகிறேன். நவீனிடம் அந்த வாசிப்பு இத்தனை விரைவாக வந்ததைப் பற்றித்தான் பேசிக்கொண்டிருந்தேன்.
ஜெ
***
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

