Jeyamohan's Blog, page 1625
June 18, 2017
ஒரு கதைக்கருவி
அன்புள்ள ஜெ..
அவ்வப்பொழுது கண்டு பிடிக்கும் தொழில் நுட்பத்தின் பிரயோகம் (?), ஊக்குவிக்கும் கட்டில்லா கருவியாக…
http://jamesharris.design/periodic/
கதைகளுக்காக ஒரு அட்டவணை.
மெண்டலீவின் பீரியாடிக் அட்டவணையை கருத்தில் கொண்டு அமைத்தது. கதைகளின் மூலக்கூறுகளை இப்படியும் புரிந்தது கொள்ளலாமே என்று தோன்றியது.
மிக எளிய தளத்தில், கதை எழுதுபவர்களுக்கு உபயோகமாக இருக்கலாம் என்று தோன்றியது.
அன்புடன்.
முரளி
***
அன்புள்ள முரளி
இந்தக்கருவியை பயன்படுத்தி கதை எழுத முயல்வதைப்பற்றி ஒரு சோக கதை எழுதலாம். காமெடியாக வரும்
என்ன சிக்கல் என்றால் இந்தவகையான கணித முறைமைகளை மூளையில் ஏற்றிக்கொள்பவர்களால் ஒருபோதும் கற்பனை செய்யமுடியாது. அவர்கள் வேண்டுமென்றால் கோட்பாட்டுவிமர்சனம் எழுதலாம்
ஜெ
***
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
கலையும் அல்லதும் -கடிதங்கள்
கலையும் அல்லதும்- ஒருகடிதம்
கலையும் அல்லதும் –ஒரு பதில்
ஜெ,
உங்கள் விரிவான பதில் கண்டதில் மகிழ்ச்சி. நான் அதனை எழுதும் போது நாவல்களையும் திரைப்படங்களையும் மையப்படுத்தியே எழுத ஆரம்பித்தேன். நாவல்களைப் பற்றி எழுதும் போது, அது நான் நினைத்திராத தளங்களுக்குச் சென்று வேறு சில புதிய சாத்தியங்களைக் காட்டியது. அதனை விரிவாக எழுத வேண்டுமென்று தோன்றியமையால், நண்பர்களுடனான அப்போதைய உரையாடலுக்காக திரைப்படத்தினை உதாரணம் கொள்ளும்படியாயிற்று.
ஆமாம், நீங்கள் சொல்வது போல் நான் முதன்மையாக திரைப்பட ரசிகன் அல்ல. ஆனால் சிலசமயம் சில வணிகத் திரைப்படங்களை எவ்வாறு மாற்றம் செய்தால் அது கலைப் படைப்பாக மாறும் என்பதை ஒரு விளையாட்டாக கற்பனை செய்வதுண்டு. நாவல்களுக்கு அவ்வாறு செய்வதில் மனம் ஒப்பவில்லை. உங்கள் பதிலையொட்டி எனக்கு தோன்றிய எண்ணங்களை சிறிய இடைவெளிக்குப் பிறகு உங்களுக்கு எழுத வேண்டுமென்று நினைத்திருக்கிறேன்.
கூடுதலாக ஓர் விண்ணப்பம்.
உங்கள் தளத்திலுள்ள எண்ணுடைய அந்தப் புகைப்படம் மூன்று நான்கு வருடங்களுக்கு முன்னாலானது. அதில் பழம் மாதிரி இருக்கிறேன். இம்மடலுடன் இணைத்திருக்கும் புகைப்படத்தினையே இனிவரும் காலங்களில் பயன்படுத்துவதற்கு தாங்கள் ஆவணம் செய்ய வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். மின்னஞ்சல் முகவரியை இணைத்தால் கூடுதல் மகிழ்ச்சி.
ஒப்பம்,
ரியாஸ்
***
அன்புள்ள ரியாஸ்,
சிங்கப்பூர் மைனர் போலிருக்கிறீர்கள்.
சொந்த அனுபவங்களில் இருந்து வாசிப்பை மதிப்பிடுவதற்கான தொடக்கமாக அமையட்டும் இது. நல்ல விவாதம்
ஜெ
***
அன்புள்ள ஆசிரியருக்கு,
கலையும் அல்லதும் பதிலில் வரலாறு, பண்பாட்டு பின்புல சார்ந்த அறிவு பற்றி எழுதியிருந்தீர்கள்.அவை சார்ந்த அறிவுபெற எந்த நூல்களை வாசிக்கலாம்.அதே வகையில் தமிழகம், ஆந்திரகேரள தென்னிந்திய அறிதலுக்கு உதவும் நூல்கள் பற்றி தெரிந்து காெள்வது எப்படி?.எதிலிருந்து துவங்குவது அல்லது வாசிக்கும் நூல்களில் துவங்கிவிட்டேனா? எனத் தெரியவில்லை.உங்களுக்கு நேரமிருப்பின் நூல்களைக் குறிப்பிட்டால் உதவியாக இருக்கும்.
அன்புடன்,
கமல தேவி
***
அன்புள்ள கமலதேவி,
அவ்வாறு குறிப்பிட்ட சில நூல்களைச் சொல்லமுடியாது. ஆடு மேய்வதைப்போலத்தான். அது சுவைதேடித்தான் மேயும். ஆனால் அதன் நாவுக்குச் சுவையாக இருப்பது அதன் உடலுக்கு நல்லது
நான் விரிவாகவே எழுதியிருக்கிறேன். வரலாறு, பண்பாடு சார்ந்து தமிழில் எழுதப்பட்ட முக்கியமான நூல்களை எல்லாம் என் தளத்தில் குறிப்பிட்டிருப்பேன். அவற்றை வாசித்தாலே போதுமானது என நினைக்கிறேன்
ஜெ
***
அன்புள்ள ஜெ
கலையும் அல்லதும் முக்கியமான கட்டுரை. எனக்கே நான் எதை கலை என்று எண்ணுகிறேன் என்ற சந்தேகம் இருந்தது. பெரும்பாலும் எனக்கு எதில் அதிக வேலை இருந்ததோ அதை கலை என நினைப்பது என் வழக்கமாக இருந்திருக்கிறது. நான் கலை எனக்கண்ட பல படைப்புகளுக்கும் நீங்கள் சொல்லும் critique of culture and history என்னும் அம்சம் மிகக்குறைவு என இப்போது உணர்கிறேன்
சரவணன்
***
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 26
25. அழியாநாகம்
முக்தன் பகல் முழுக்க அந்தக் காவல்மேடையில் அமர்ந்து வெயில் பரவிய காட்டின் இலைப்பரப்பின் அலைகளை பார்த்துக்கொண்டிருந்தான். எப்போதாவதுதான் புல்லிடைவெளிகளிலும் திறந்த பாறைகள் மீதும் இளவரசியின் சேடிகளிலொருத்தி வண்ணச் சிறுபூச்சியெனத் தோன்றி சிறகு என ஆடை பறக்க சுழன்று மீண்டும் மறைந்தாள். அவர்கள் அக்காட்டுக்குள் நிகழ்ந்துகொண்டிருக்கும் பல்லாயிரம் உயிர்ச்செயல்பாடுகளில் ஒன்றெனக் கலந்துவிட்டது போலவே மேலிருந்து நோக்கியபோது தோன்றியது. வண்ணத்துப்பூச்சிகளைப்போல, பொன்வண்டுகளைப்போல, புள்ளிமான்களையும் குழிமுயல்களையும் துள்ளும் வெள்ளிமீன்களையும் போல.
ஒவ்வொரு நாளும் காவல்மாடத்தின் உச்சியில் அமர்ந்து காட்டின் பசுமையை பார்த்துக்கொண்டிருக்கையில் தன் கற்பனையால் அவன் கீழே நிகழ்வனவற்றை தீட்டி விரித்துக்கொள்வதுண்டு. இலைத்தழைப்பின்மீது எழுந்து அமர்ந்து சுழன்ற பறவைகளை, உச்சிக்கிளையில் வந்திருந்து கதிரெழுவதையும் வீழ்வதையும் நோக்கி ஊழ்கத்தில் அமர்ந்திருக்கும் கருங்குரங்குகளை, கிளைகளுடன் ஒட்டி தேன்கூடுபோல அமர்ந்திருக்கும் மரநாய்களை, கம்பத்தில் கயிற்றில் இழுக்கப்படும் கொடி மேலேறுவதுபோல வந்துகொண்டிருக்கும் தேவாங்குகளை, உச்சிக்கிளை வரை வந்து வானம் நோக்கி மண்விழி சிமிட்டித் திகைக்கும் பழஉண்ணிகளை, காற்றிலாடும் கிளைநுனிகளில் இருந்து தெறிக்கும் நீர்த்துளிகள்போல பறக்கும் அணில்களை அவன் விழிகள் தவறவிடுவதில்லை.
“இங்கு கிடைப்பது எப்போதும் வெள்ளிதான் அங்கிருக்கையில், பின் மீள்கையில் அது பொன்னென்றாகிறது” என்றொரு முறை அவன் தீர்க்கனிடம் சொன்னான். அவன் புன்னகையுடன் “நீ சூதர்பாடல்களை நிறைய கேட்கிறாய். பிழையில்லை… கேட்டவற்றை நினைவில் கொள்ளலாகாது” என்றான். “ஏன்?” என்று அவன் கேட்டான். “நதியென்பது நீர்ப்பெருக்கே. ஆனால் முகில்களும் இலைத்தழைப்புகளின் பாவைகளும் மூடியதாகவே அது எப்போதும் நம் கண்களுக்குப் படுகிறது. காடென்றும் விண்ணென்றும் நாம் அவற்றை ஒருபோதும் மயங்குவதில்லை” என்றான். “இதுவும் பிறிதொரு சூதர் சொல் போலிருக்கிறது” என்று முக்தன் புன்னகைத்தான்.
அங்கு அவர்கள் என்ன விளையாடுவார்கள் என்று முக்தன் எண்ணிக்கொண்டான். நகர்களில் அவர்கள் ஆடும் பலவகையான ஆடல் உண்டென்று அவன் கண்டிருக்கிறான். பட்டுநூல் சுருள்களை எறிந்தாடும் மலர்ப்பந்தாடல். ஒலிக்கும் அரிமணியுருளைகளை ஒருவர் மேல் ஒருவர் எறிந்து ஆடும் மணிப்பந்து. நீர்ப்பரப்பின் மீது சுரைக்காய்க் குடுவைகளை வீசி எறிந்தும் நீந்திப் பற்றியும் ஆடும் அலைப்பந்து. மரங்கள்மேல் கொடிகளைக் கட்டி பற்றித் தொங்கி ஆடி ஒருவரை ஒருவர் துரத்தும் குரங்காடல். அவையனைத்திலும் ஆடுநெறிகள் உண்டு. வெற்றி தோல்வியை வகுப்பதற்கென்று அமைந்தவை அவை. வெற்றி என ஒன்று இருப்பதனால் அதுவே உவகையென்று ஆகிறது. தோல்வி துயரமென்றும் தேர்ச்சி ஆற்றலென்றும் தவறுதல் வீழ்ச்சி என்றும்.
இக்காட்டிற்குள் வருகையில் அந்நெறிகளனைத்தையும் துறந்துவிடவேண்டும். அக்கணங்களில் எது தோன்றுகிறதோ அதை செய்யவேண்டும். மரங்களிலிருந்து நீருக்கு தாவலாம், புல்வெளிகளில் ஓடி கால்தடுக்கி விழுந்துருளலாம். அனைவரும் வெல்லும் ஓர் ஆடல். உவகையன்றி பிறிதில்லாத ஒரு களியாட்டு. அதை இப்பெண்டிருக்கு எவரேனும் கற்றுக்கொடுத்திருப்பார்களா? அங்கு நெறி வகுக்கப்பட்ட ஆடல் சலித்துத்தான் இங்கு வருகிறார்கள். இங்கு நெறிகளை அவர்கள் உதறிவிட்டாலே போதும். பிற அனைத்தும் கைகூடிவிடும். விளையாடுவதற்கு மனிதர்களுக்கு எவரும் கற்றுத்தர வேண்டியதில்லை. மனிதர்கள் குரங்கெனவும் முயலெனவும் மானெனவும் மீன் எனவும் அணில் எனவும் புள்ளெனவும் தாங்கள் மாறக் கற்றவர்கள். பிற எவ்வுயிரும் பிறிதொரு இருப்பென உளம் மாறுவதில்லை. மானுடன் அவ்வாறு மாறக் கற்றபின்னரே அவன் இன்று கொண்டிருக்கும் அனைத்தையும் அறிந்தான். ஊர்களை அரசுகளை குடிகளை அறிவை தவத்தை.
என்ன எண்ணிக்கொண்டிருக்கிறோம் என்று உணர்ந்தபோது அவன் புன்னகைத்தான். எப்போதும் மூத்தவர்கள் அவனிடம் சொல்வது அதுதான். ஒரு காவலனாக பணிபுரியும் தகுதியை காவலனுக்கு மீறிய கல்வியாலும் எண்ணங்களாலும் இழந்தவன் அவன். ஒதுக்கு உன் எண்ணங்களை. காவலன் வெறும் கண். படைக்கலத்துடன் நுண்சரடால் பிணைக்கப்பட்ட கண் மட்டுமே அவன். ஆம், கண்ணென்றே இங்கிருப்பேன். நாள் செல்லச்செல்ல என் உடலில் கண் மட்டுமே செயல்படும். பிற அனைத்தும் அணைந்து இருளும். முதுகாவலர் அப்படித்தான் இருக்கிறார்கள். கண்களுக்கு அப்பால் காட்சியை அள்ளிக்கொள்ளும் ஏதுமில்லை.
தொலைவில் ஓர் அலறலைக் கேட்டு அவன் திடுக்கிட்டு எழுந்தான். முதல் மெய்யுணர்விலேயே அது இளவரசியின் குரல் என்று அவனுக்கு எப்படி தோன்றியது என்பதை பிறிதொரு உள்ளத்துள் வியந்தான். அவள் தோழியர் கூவிக் கலைவதை சிலர் அங்குமிங்கும் ஓடுவதை காணமுடிந்தது. அவன் செய்ய வேண்டியதென்ன என்பதை சில கணங்களுக்குள் சித்தம் ஆணையிட கயிற்றுப்படிகளில் கால் தொற்றி ஏறி முரச மேடையை அடைந்து முழவுத்தடியை எடுத்து “இளவரசிக்கு இடர்… இளவரசிக்கு இடர்…” என்று அறையத் தொடங்கினான். அவ்வொலி கேட்டு மேலும் பல இடங்களில் முரசுகள் முழங்கின. காவலர் படையொன்று அம்புகளும் விற்களும் வேல்களும் ஏந்தி ஆணைக்கூச்சல்களுடன் அணிக்காட்டின் வெளிமுற்றத்திலிருந்து ஒன்றையொன்று தொடர்புகொண்டு சரடென நீண்டு வலையென வளைந்து காட்டுக்குள் சென்றது.
இறங்கி அவர்களுடன் செல்லவேண்டுமென்று அவன் விழைந்தாலும் காவல்சாவடியை விட்டுச்செல்லக்கூடாதென்ற கடமையை எண்ணி அங்கு நின்று தொலைகூர்ந்தான். அக்காட்டுக்குள் என்ன நிகழ்ந்திருக்கக் கூடும்? அங்கு கொலை விலங்குகளோ நச்சு நாகங்களோ இல்லை. ஆனால் காட்டில் எதுவும் நஞ்சாகலாம். நஞ்சு பிறப்பது கொம்புகளில், பற்களில், நகங்களில், அலகுகளில், கொடுக்குகளில், முட்களில், கற்களில், வேர்களில், மலர்களில் என நூற்றெட்டு இடங்களில். நாகத்தின் நச்சுப்பல் என ஒவ்வொன்றும் ஏதோ ஒரு முனையில் நஞ்சு கொண்டுள்ளன என்று அவன் கற்றிருந்தான். என்ன நிகழ்கிறதென்று தெரியாமல் அங்குமிங்கும் தெரிந்த அசைவுகளை விழியால் தொட்டு அறிய முயன்றபடி காவல் மாடத்திலேயே சுற்றி வந்தான்.
படையின் வலை காட்டுக்குள் ஊடுருவிச்சென்று மறைந்தது. தீர்க்கன் “என்ன? என்ன நிகழ்கிறது?” என்றபடி மேலேறி வந்து “என்ன நிகழ்ந்தது?” என்று உரத்த குரலில் கேட்டான். “அறியேன்… நானும் நோக்குகிறேன்” என்றான் முக்தன். மதுமயக்கு தெளிந்த மூத்த காவலன் அவன் பின்னால் வந்து “இளவரசியின் குரலல்லவா அது?” என்றான். தொடர்ந்து ஏறிவந்த பிறிதொரு காவலன் “கந்தர்வர்கள். ஐயமே இல்லை. இப்படைகள் சென்று எவரிடம் போரிடப்போகின்றன?” என்றான். “கந்தர்வர்களாயினும் போர் புரிந்து இறப்பது காவலர்களின் கடன்” என்றான் தொடர்ந்து ஏறிவந்த பிறிதொருவன்.
“நான் சென்று பார்க்கிறேன்” என்றபடி முக்தன் நூல்படிகளில் ஊர்ந்தவனாக இறங்கினான். “அதற்கு உனக்கு ஆணையில்லை” என்றான் தீர்க்கன். “ஆம். ஆயினும் இத்தருணத்தில் இங்கு வாளாவிருக்க என்னால் இயலாது” என்றபடி அவன் கீழிறிங்கி காட்டுக்குள் செல்லும் பாதையில் நுழைந்தான். பாதை முனையில் ஒருகணம் திகைத்து நின்று பின்னர் அருகிலிருந்த நீண்ட வேலை கையிலெடுத்துக்கொண்டு உள்ளே புகுந்தான். அதன் கூர்விளிம்பால் முட்செடிகளை வெட்டி அகற்றியபடியும் சிறிய புதர்களை அதன் கோலை ஊன்றி தாவிக்கடந்தும் பாறைகளிலும் விழுந்த மரங்களிலும் காலூன்றி உள்ளே சென்றான். முற்றிலும் திசைமறக்கச் செய்யும் நிழலிருளுக்குள் செல்ல அங்கு கேட்ட பெண்களின் குரல்களே வழிகாட்டின. மீண்டும் மீண்டும் பசுந்தழைகள் அவன் முன் சரிந்து வழிமறிக்க கிழித்துக் கிழித்து முடிவிலாமல் சென்றுகொண்டே இருப்பதுபோல் தோன்றியது.
பின்னர் ஒரு சதுப்பு வளையத்தை அடைந்தபோது அங்கு தேங்கி நின்றிருந்த வெயிலொளியில் கண்கூசி விழி தாழ்த்தி ஒருகணம் நின்றான். குரல்களின் கலவை வந்து செவிசூழ நிமிர்ந்து நோக்கியபோது ஒரு பெண் இளவரசியை கைகளில் தூக்கியபடி வர அவளுக்குப் பின்னால் மற்ற பெண்கள் அலறியும் அழுது அரற்றியும் ஓடி வருவதைக் கண்டான். மறு எல்லையிலிருந்து ஒரே தருணத்தில் தோன்றிய விராடநாட்டுப் படைவீரர்கள் முள்ளம்பன்றி சிலிர்த்துக்கொள்வதுபோல் நூற்றுக்கணக்கான அம்பு முனைகளாக எழுந்தனர்.
காவலர்தலைவன் வேலை நீட்டியபடி “யார் நீ? அரசியை கீழே விடு” என்றான். அவளுக்குப் பின்னால் ஓடி வந்த சேடி “இளவரசியை நாகம் ஒன்று தீண்டியது. இப்புதியவள் அந்த நச்சை முறித்து இளவரசியை காத்தாள். இளவரசி இன்னமும் மயக்கில் இருக்கிறார்” என்றாள். இளவரசியை கையில் வைத்திருந்தவள் “அஞ்சுவதற்கு ஏதுமில்லை” என்றாள். அவளுக்குப் பின்னால் வந்த பிறிதொருத்தி காட்டுக்கொடியில் கட்டி சுருட்டி பொதிபோல் மாற்றப்பட்டிருந்த பெரிய நாகத்தை நீண்ட கழியொன்றின் நுனியில் கட்டித் தூக்கி வந்தாள். அது அப்பொதிக்குள் உடல் நெளிய வெட்டி எடுக்கப்பட்ட நெஞ்சுக்குலையின் இறுதி உயிரசைவுபோல் தோன்றியது.
வேலை தாழ்த்தாமல் “யாரிவள்? எப்படி உள்ளே வந்தாள்?” என்றான் காவலர்தலைவன். “நான் ஒரு அயலூர்ப்பெண். இவ்வழி சென்றேன். மலை உச்சியிலிருந்து இக்காட்டைக் கண்டபோது இது தவம் செய்ய உகந்ததென்று எண்ணி இங்கு வந்தேன்” என்றாள் இளவரசியை கையில் ஏந்தியிருந்தவள். இளங்கருமை நிறம் கொண்டிருந்தாள். வெண்செந்நிறத்தில் பட்டாடை சுற்றி கல்மாலைகளும் ஒளிரும் மணிக்குண்டலங்களும் அணிந்திருந்தாள். அவள் குரல் பெருங்குடம் கொண்ட யாழின் முதல் தந்திபோல இனிய கார்வை கொண்டிருந்தது.
“தவமா? இங்கென்ன தவம்?” என்று மேலும் ஐயத்துடன் கேட்டபடி தலைவன் முன்னால் வந்தான். “நான் ஆட்டக்கலை தேர்ந்தவள். அதையே தவமென கொண்டிருக்கிறேன். அதில் முழுமை அடையும்பொருட்டு இங்கு வந்தேன்” என்றாள் அந்தப் பெண். “இளவரசியை கீழே விடு. இரு கைகளையும் விரித்தபடி பின்னால் செல்” என்றபடி தலைவன் வேலை நீட்டிக்கொண்டு முன்னால் வர எண்ணியிராக் கணமொன்றில் ஒரு கையால் இளவரசியைச் சுழற்றி தோளுக்கு மேல் கொண்டு சென்று மறுகையால் அவ்வேல் முனையைப்பற்றி சற்றே வளைத்து அதன் கீழ் நுனியால் காவலர் தலைவனின் நெஞ்சுக்குழியில் ஓங்கிக் குத்தி அவனை மல்லாந்து விழச்செய்தாள். பிற படைவீரர்களின் விற்கள் நாணொலி எழுப்பியதும் வேலைத் திருப்பி அதன் நுனியை தலைவன் கழுத்தில் வைத்து “வேண்டியதில்லை. வில் தாழ்த்துக! இளவரசியையும் உங்கள் தலைவனையும் இழக்க வேண்டாம்” என்றாள்.
தேள்கொடுக்கென விழியறியா விரைவில் நிகழ்ந்து முடிந்த அவள் கைத்திறனைக் கண்டு வியந்த வீரர்கள் ஒருவரை ஒருவர் நோக்கினர். கீழே கிடந்த தலைவன் மூச்சொலியுடன் “வில் தாழ்த்துக!” என்றான். பின் “நீ எவராயினும் இளவரசிக்கு தீங்கிழைத்தால் இங்கிருந்து அகல முடியாது” என்றான். “தீங்கிழைப்பவள் அவளை காப்பாற்ற வேண்டியதில்லை, மூடா!” என்றபடி அவள் முன்னால் நடந்தாள். அவளைச் சூழ்ந்து இறுகி கூர்கொண்டு நின்ற அம்புகளுடன் வீரர்கள் உடன் சென்றனர். இளவரசியின் கால்கள் நடையில் அசைய வெண்பரல் சிலம்பு குலுங்கும் ஒலி அவர்களின் காலடியோசையுடன் சேர்ந்து எழுந்தது.
அணிக்காட்டுக்கு வெளியே ஆற்றின் கரையில் நின்றிருந்தவர்கள் இளவரசியைத் தூக்கியபடி வந்த அவளைக் கண்டு வியப்பொலியுடன் மேலும் சூழ்ந்து கொண்டனர். இளவரசியை மென்மணலில் படுக்க வைத்து திரும்பி “அந்த பாம்பை கொணர்க!” என்றாள். கொடிகளில் கட்டப்பட்டு நெளிந்துகொண்டிருந்த பாம்பை வாங்கி அதன் முடிச்சுகளை அவிழ்த்தாள். சீறி படம் தூக்கி எழுந்த அதன் விரைவை மிஞ்சும் கைத்திறனுடன் அதன் கழுத்தை பற்றிக்கொண்டாள். அது வால்சொடுக்கி வளைந்து அவள் கைகளைச் சுற்றியது. அருகிருந்த இலையொன்றை பறித்து கோட்டிக்கொண்டாள். நாகத்தின் வாய்க்கு அடியில் சுருங்கி விரிந்துகொண்டிருந்த நச்சுப்பையை கட்டை விரலால் அழுத்தி சொட்டும் இளமஞ்சள் சீழ் போன்ற நஞ்சை இலைக்குமிழியில் எடுத்தாள்.
இயல்பாக கைசுழற்றி அந்தப் பாம்பை நீர்ப்பரப்பில் எறிந்தாள். நீர்மேல் அது சாட்டை சொடுக்கென நெளிந்து பின் ஒளிரும் பரப்பின்மேல் தலையை மட்டும் வெளியே நீட்டி சுட்டுவிரல்கோடு செல்வதுபோல் நீந்தி அகன்றது. அருகிருந்த மூங்கில் குவளையை எடுத்து அதில் நதிநீரை அள்ளி அந்த நஞ்சை அதில் கலந்து கொண்டு வந்தாள். இளவரசியின் தலையைத் தூக்கி தன் மடியில் வைத்தாள். அவள் விழிகள் பாதி விரிந்து வெண்மை காட்டின. உலர்ந்த உதடுகள் வெண்பல்முனைகளால் கடிக்கப்பட்டிருந்தன. இடையிலிருந்த சிறுகத்தியை எடுத்து இறுகியிருந்த அவள் பற்களுக்கு நடுவே செலுத்தி நெம்பிப் பிளந்து திறந்து அந்நச்சுக்கலவை நீரை ஊட்டினாள். மூன்றுமுறை அதை அருந்தியபின் மூச்சுவாங்கினாள் உத்தரை. மேலும் இருமுறை அவள் அந்நீரை ஊட்டினாள். இமைகளைத் திறந்து கண்களுக்குள்ளும் காதுகளிலும் மூக்கிலும் நச்சுநீரை சொட்டினாள்.
மணலைக் குவித்து தலை சற்று மேலே தூக்கி நிற்கும்படி செய்து படுக்கவைத்தபின் “இன்னும் சற்று நேரத்தில் எழுந்துவிடுவார். அஞ்சுவதற்கொன்றுமில்லை” என்றாள். இளவரசி ஒருமுறை விக்கி நுரையை வாயுமிழ்ந்தாள். சேடியர் அருகே நின்று அவள் வாயை நீரால் கழுவினர். மீண்டுமொரு முறை அவள் வாயுமிழ்ந்தாள். அவள் காலில் நாகம் கடித்த இடத்திற்கு மேல் காட்டுக்கொடியால் கட்டப்பட்டிருந்த முடிச்சை அவிழ்த்து சற்று தள்ளி மீண்டும் கட்டினாள். கடிவாயை குறுக்கு நெடுக்காக அம்பு முனையால் கிழித்திருந்தாள். அதிலிருந்து வழிந்த குருதியை அவள் பிழிந்திருந்த பச்சிலைச்சாறு நிணமென்றும் நீரென்றும் தெளியவைத்திருந்தது.
இளவரசியின் கண்கள் அகன்று பின் விரிசலிட்டு திறந்தன. ஒளிக்குக் கூசி மீண்டும் மூடிக்கொண்டபோது இரு முனைகளிலும் நீர் வழிந்தது. பின்னர் ஓசைகளால் தன்னுணர்வு கொண்டு கைகளை ஊன்றி அமர்ந்து சுற்றும் நோக்கினாள். “அஞ்சவேண்டியதில்லை, இளவரசி. தாங்கள் நலமுடனிருக்கிறீர்கள்” என்று அவள் சொன்னாள். “யார் நீ?” என்று இளவரசி கேட்டாள். “என் பெயர் பிருகந்நளை. ஆடற்கலை தேர்ந்தவள். ஆடற்தவத்தின்பொருட்டு இக்காட்டுக்குள் வந்தேன். நாகம் தீண்டி தாங்கள் எழுப்பிய குரல் கேட்டு வந்து காப்பாற்றினேன்” என்றாள். “நான் நாகர்களுடன் இருந்திருக்கிறேன். அவர்களின் நச்சு முறிகளை அறிவேன்.”
உத்தரை “நாகர்களுடன் நீ எதற்கு இருந்தாய்?” என்றாள். புன்னகைத்து “ஆடற்கலையை நெளியும் நாகங்களிடம் அன்றி வேறெங்கு கற்றுக்கொள்ள முடியும், இளவரசி?” என்று அவள் கேட்டாள். “நீ ஆண்மை கலந்தவள் போலிருக்கிறாய்” என்றாள் உத்தரை. “ஆம், நான் இருபாலினள்” என்று அவள் சொன்னாள். சுற்றி நின்றவர்களில் மெல்லிய உடலசைவாக வியப்பு வெளிப்பட்டது. முக்தன் அதை முன்னரே தன் அகம் அறிந்திருந்ததை உணர்ந்தான்.
காவலர்தலைவன் “இளவரசி, தாங்கள் அரண்மனைக்கு திரும்பலாம். தேரிலேயே படுத்து ஓய்வெடுத்தபடி செல்லலாம். அங்கு மருத்துவர்கள் சித்தமாக இருக்கும்படி சொல்கிறேன்” என்றான். “ஆம்” என்றபடி உத்தரை எழுந்து தோழியரின் தோள் பற்றி நின்றாள். “சற்று தலைசுற்றும். விழிநோக்கு அலையடிக்கும். பொழுதுசெல்ல மெல்லிய வெப்பமும் உடலில் தோன்றும். அஞ்சவேண்டியதில்லை” என்றாள் பிருகந்நளை. உத்தரை தேரை நோக்கி நடந்தாள். படியில் கால்வைத்த பின்னர் திரும்பி “நீயும் அரண்மனைக்கு வருக!” என்றாள். “ஆம், வருகிறேன். தங்கள் நஞ்சுமுறி மருந்துகள் மூலிகைகள் சிலவற்றை இக்காட்டிலிருந்து எடுத்தாக வேண்டியிருக்கிறது” என்றாள் பிருகந்நளை.
தேர் சென்றதும் காவலர்தலைவன் “இளவரசியின் உயிர்காத்தமைக்காக நாங்கள் உனக்கு கடன்பட்டிருக்கிறோம்” என்றான். “அதற்கான வாய்ப்பு அமைந்தது” என்றாள் பிருகந்நளை. அவள் திரும்பி முக்தனை நோக்கி “நீர் காவலரா?” என்றாள். “ஆம்” என்றான். “என்னுடன் காட்டுக்குள் வருக!” என்றாள். அவன் உடன் சென்றபடி “நாகங்களே இல்லாத காடென்றால் நாகமுறி மருந்துமட்டும் எப்படி முளைக்கிறது?” என்றான். பிருகந்நளை புன்னகைத்தபோது அம்முகத்திலெழுந்த அழகைக்கண்டு அவன் உளம் மலர்ந்தான். அவள் “நன்று, இளைஞரே! எந்தக் காடும் நாகமெழ வாய்ப்புள்ள ஒன்றே” என்றாள்.
காட்டுக்குள் புகுந்து பச்சிலைகளையும் சில வெண்காளான்களையும் பறித்து இலைப்பொதிக்குள் கட்டிக்கொண்டு வெளியே வந்த பிருகந்நளை முக்தனிடம் “தங்களிடம் புரவிகள் இருக்கின்றனவா, வீரரே?” என்றாள். “ஆம், காவல் புரவிகள் உள்ளன. என் பணி முடிந்தது. இனி சின்னாள் நான் ஊருக்குச் செல்ல முடியும்” என்றான். “என்னுடன் வருக! நான் அரண்மனைக்குச் செல்ல விரும்புகிறேன்” என்றாள். அவன் இன்னொரு புரவியை பெற்றுக்கொண்டு வந்ததும் பிருகந்நளை அதில் ஏறிக்கொண்டாள். அவன் வியந்து நோக்க ஓரவிழியில் நோக்கி “என்ன?” என்றாள். “இத்தனை இயல்பாக புரவி மேல் ஏறும் ஒருவரை பார்த்ததில்லை” என்றான் முக்தன். “இத்தனைக்கும் இது புரவிகளின் நாடென்று பெயர் பெற்றது.”
பிருகந்நளை புன்னகைத்து “சௌவீரமும் புரவிகளின் நாடே. இங்கு புரவிகள் சிட்டுக்களைப்போல. அங்கு அவை செம்பருந்துகள்” என்றாள். “ஆம், சௌவீரம் பெரும்பாலையும் மலைச்சரிவுகளும் கொண்டது என்று அறிந்திருக்கிறேன்” என்று முக்தன் சொன்னான். “அங்கு புரவியே கால்களென்றான மக்கள் வாழ்கிறார்கள்” என்றாள் பிருகந்நளை. அவர்கள் காட்டுப்பாதையில் இணையாகச் சென்றனர். பிருகந்நளையின் புரவி தன் மேல் எடையில்லாததுபோல சீரான தாளத்துடன் முன்னால் சென்றது. அவன் மீண்டும் வியப்புடன் திரும்பிப்பார்க்க “காவடியின் நெறியேதான். இருபுறமும் எடை நிகரென்றாகும் தோளில் எடை குறைவாக இருக்கிறது. உடலை முற்றிலும் சமன் செய்கையில் புரவிக்கு முழு விடுதலை அளிக்கிறோம்” என்றாள். “புரவிக்கலையை நீங்கள் ஏன் பயில வேண்டும்?” என்றான் அவன். “நடனம், போர், புரவியூர்தல் மூன்றும் ஒரு கலையின் மூன்று முகங்கள்தான். உடலை பயிற்றுவித்து முற்றிலும் நேர்நிலையும் சீரமைவும் கொள்ளச் செய்தல்” என்றாள் பிருகந்நளை.
அவர்கள் விராடநகரியின் கோட்டைக்குள் நுழைந்தபோது முன்னரே அவளைப்பற்றி கேட்டிருந்த வீரர்கள் கோட்டை வாயிலில் கூடி நின்று முட்டி மோதியபடி வியப்புடனும் உவகையுடனும் நோக்கினர். ஒரு முதியவர் “இருபாலினத்தவரில் இப்படி ஓர் அழகியை பார்த்ததில்லை” என்றார். அருகிலிருந்த சூதர் “இருபாலினமே தேவர்களுக்குப் பிடித்த மானுட உடல். பெரும்பாலான இருபாலினத்தோர் ஆணின் அழகின்மையும் பெண்ணின் அழகின்மையும் கலந்தவர்கள். சிலரில் இரு அழகுகளும் இருக்கும். ஒத்திசைவின்மையால் அவை அழகின்மையென்றாகியிருக்கும். ஓருடலில் ஈரழகுகளும் நிகரென அமைந்து முற்றிலும் ஒத்திசைவு கொண்டிருந்தால் அதுவே மானுடப்பேரழகாகும்” என்றார். “ஆம், பூசகர் இதைச் சொல்லி கேட்டிருக்கிறேன். இப்போதுதான் விழியால் பார்த்தேன்” என்றான் ஓர் இளைஞன். “இருபாலினத்தவர் இரு பக்கமும் நிகர்செய்யப்பட்ட காவடிகளைப்போல” என்று அப்பால் ஒரு குரல் எழுந்தது.
தன்மேல் இருந்த நோக்குகள் எதையும் பிருகந்நளை அறிந்ததுபோல் தோன்றவில்லை. சற்றே கள்மயக்கில் இருப்பதைப்போல் சிவந்த நீண்ட விழிகள். காற்றிலாடும் மரக்கிளையில் சிறகு குலையாமல் அமர்ந்திருக்கும் சிட்டுபோல தன்னியல்பான புரவியூர்தல். கலையும் ஆடையையும் குழலையும் சீரமைப்பதில் பயின்ற அசைவின் ஆடலழகு. நகரினூடாக அவள் சென்றபோது மாளிகைகள் அனைத்திலும் பெண்கள் முண்டி அடித்து ஒருவரையொருவர் உடலுரசிக்கொண்டு செறிந்தனர். “அவ்வுடலில் எதை பார்க்கிறோம்? பெண்ணையா? ஆணையா?” என்று ஒருத்தி கேட்டாள். “ஆண்கள் பெண்களையே நோக்குவர். பெண்கள் ஆணுடலையும் பெண்ணுடலையும் நோக்குவார்கள். இரண்டிலும் அவர்கள் மகிழும் அழகுகளுண்டு. இரண்டும் ஓருடலில் அமைந்திருக்கையில் நோக்கு விலக்குவதெப்படி?” என்றாள் விறலி ஒருத்தி.
“அவர்களில் அழகென வெளிப்படுவது எது?” என்று ஒருத்தி கேட்டாள். “பெண்ணின் உச்ச அழகென்பது பெண்ணென்ற அசைவுகொண்டு ஆண் இயல்பு வெளிப்படுவது. ஆணில் அவ்வண்ணம் பெண் வெளிப்படுவது. இவள் ஒருகணம் ஆணென்றும் மறுகணம் பெண்ணென்றும் ஒழியாத ஆடலொன்றை ஒவ்வொரு அசைவிலும் நிகழ்த்திச்செல்கிறாள்” என்றாள் விறலி.
அவர்கள் அரண்மனையின் மைய முகப்பை அடைந்ததும் முக்தன் பிருகந்நளையிடம் “நான் காவல் வீரன். இதற்கப்பால் வருவதற்கு எனக்கு ஒப்புதல் இல்லை” என்றான். “வருக, நான் அழைத்துச் செல்கிறேன்” என்று பிருகந்நளை சொன்னாள். அவன் அஞ்ச “என் ஆணையை ஏற்காதவர்களை நான் பார்த்ததே இல்லை, காவலரே. வருக!” என்று புன்னகைத்தாள். அவன் பிறிதொரு எண்ணமில்லாமல் அவளுடன் சென்றான். முதற்காவல்நிலையிலேயே உத்தரையின் இளமருத்துவன் ஒருவன் அவளைக் காத்து நின்றிருந்தான். “தங்களை மருத்துவர்கள் அங்கு அழைத்து வரச்சொன்னார்கள். இளவரசி நலமடைந்துவிட்டார். ஆயினும் கடித்த பாம்பும் நச்சு நிறைந்தது. நாளையோ பின்னாளிலோ நரம்புகள் அதிர்வுகொள்ளக்கூடும். பேச்சோ விரலசைவோ குறைகொள்ள வாய்ப்புண்டு என்கிறார்கள்.”
“ஆம், அதற்காகவே இம்மருந்துளை கொண்டு வந்தேன்” என்றாள் பிருகந்நளை. திரும்பி முக்தனிடம் “வருக!” என்று சொல்லிவிட்டு உள்ளே சென்றாள். அவன் அவள் இடையின் அழகிய உலைவை, தோள்களின் அசைவை, கைவீசலை நோக்கி விழி பிறிதொன்றை அறியாமல் உடன்சென்றான். இளமருத்துவன் அவளை இட்டுச்சென்றான். இடைநாழிகளைக் கடந்து சிறுசோலை ஒன்றுக்கு அப்பாலிருந்த மருத்துவநிலைக்கு அவர்கள் சென்று சேர்ந்தார்கள். காவலர் இருவர் நின்றிருப்பதைக் கண்டு இளமருத்துவன் “அரசர் வந்திருக்கிறார் போலும்” என்றான். “நீங்கள் வெளியே நில்லுங்கள். நான் சென்று கேட்டு வருகிறேன்” என உள்ளே சென்றான். அவள் அடிமரத்தில் கொடி என இயல்பாக அத்தூணில் சாய்ந்து நின்றாள். இளமருத்துவன் அவர்களை உள்ளே அழைத்தான். உள்ளே விராடரும் அரசியும் பீடங்களில் அமர்ந்திருக்க நடுவே தாழ்ந்த மஞ்சத்தில் மான்தோல்மேல் உத்தரை படுத்திருந்தாள்.
பிருகந்நளை கைகுவித்து இடை வளைத்து வணங்கி “விராடப் பேரரசரை வணங்கும் பேறு பெற்றேன். நான் சௌவீர நாட்டைச் சேர்ந்த பிருகந்நளை. ஆடற்கலை தேர்ந்தவள். கலைதேரும்பொருட்டு எப்போதும் சென்றுகொண்டிருக்கிறேன்” என்றாள். அவர் தன் பழுத்த விழிகளால் அவளை நோக்கியபின் “உன்னைப்பற்றி சொன்னார்கள்” என்றார். “என் மகளை காப்பாற்றியதற்காக நான் உன்மேல் அன்புகொண்டிருக்கிறேன். நீ விழைவதை கோரலாம்.” பிருகந்நளை “நான் விழைவது இங்குள்ள ஆடற்கலைகளை கற்றுத்தேர்ந்தபின் விட்டுச்செல்வதை மட்டுமே” என்றாள். “நன்று, அரண்மனையிலேயே நீ தங்கலாம்” என்றார் விராடர்.
அரசி “இவளுக்கு நாகக்குறை உண்டு என நிமித்திகர் பலர் சொல்லியிருந்தனர். இங்கு வந்த புதிய கணியர் அதற்கு மாற்றே இல்லை என்றார். அதையும் மீறி காட்டுக்குச் சென்றிருக்கிறாள். நல்லூழாக ஒன்றும் நிகழவில்லை” என்றாள். “நாகம் காட்டில்தான் இருக்கிறதென்றில்லை” என்றாள் பிருகந்நளை. “ஆம், அதைத்தான் நானும் சொன்னேன். அவள் பேரரசரைப் பெறுவாள் என ஊழ்நெறி உள்ளது என்றார் அமணக் கணியர். அவ்வூழ் அவளை காக்கும்” என்றார் விராடர். “ஊழை நம்பி இருப்பவர் அரசர் அல்ல” என்றாள் அரசி. “என்ன சொல்கிறாய்? நான் ஊழை நம்பி இருக்கிறேனா?” என அவர் சினத்துடன் அரசியை நோக்கி திரும்ப பிருகந்நளை “அரசரைப்பற்றி நான் நன்கறிவேன். தங்கள் வீரத்தையும் நெறியையும் உணர்ந்தே இந்நாட்டுக்குள் வந்தேன்” என்றாள்.
முகம் மலர்ந்த விராடர் “நீ இங்கு விரும்புவதை கற்கலாம். இவள்கூட ஆடல் கற்கிறாள். நீ அறிந்தவற்றை இவளுக்கு கற்பிக்கலாம்” என்றார். அரசி “இளவரசிக்கு எதற்கு ஆடல்? அவளை மணக்கவிரும்பி கலிங்கத்திலிருந்தே ஓலை வந்துள்ளது” என்றாள். “ஓலையா? கலிங்கத்திலிருந்தா? அவர்கள் நம்மை கொல்லைப்பக்கம் கூடையுடன் வந்து நிற்பவர்கள் என்கிறார்கள்” என்றார் விராடர் சினத்துடன். “உங்களை அப்படி சொல்வார்கள்போலும். எங்கள் குலமென்ன என்று அவர்களுக்குத் தெரியும்” என்றாள் அரசி. ஊடே புகுந்த மருத்துவர் சினம்கொண்டு பேசத்தொடங்கிய அரசரைக் கடந்து “இளவரசி சற்று ஓய்வெடுக்கவேண்டும். இவள் கொண்டுவந்த மருந்துகளை எப்படி அளிப்பதென்று பார்க்கிறேன்” என்றார்.
“ஆம், அதை நோக்குக!” என விராடர் எழுந்துகொண்டார். பிருகந்நளையிடம் “அவைக்கு வந்து நான் அளிக்கும் பரிசிலை பெற்றுக்கொள்க!” என்றார். அரசி “அகத்தளத்திற்கும் வா. நானும் உனக்கு பரிசில் அளிக்கவேண்டும்” என்றாள். விராடர் “கலிங்கத்தைப்பற்றி எதன் அடிப்படையில் சொன்னாய்?” என்றார். “என் இளையோன் சொன்னான்” என்றாள் அரசி. “உன் இளையோனுக்கு ஏதும் தெரியாது. அரசுசூழ்தலென்பது உண்டு கொழுத்து தோள்பெருப்பதல்ல.” அவர்கள் பேசியபடி விலகிச்செல்ல புன்னகையுடன் மருத்துவர் பிருகந்நளையை நோக்கி “காய்ச்சல் உள்ளது. இம்மருந்துகள் அதை தடுக்குமா?” என்றார். “ஆம், நாளையே இளவரசியை முன்பென மீட்டுவிடும் இவை” என்றாள் பிருகந்நளை.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 25
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 19
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–56
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–55
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 62
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 3
June 17, 2017
வெண்முரசு புதுவை கூடுகை – 5
அன்புள்ள நண்பர்களுக்கு. வணக்கம்.
நிகழ்காவியமான “வெண்முரசு கலந்துரையாடல்” புதுவையில் சென்ற பிப்ரவரி 2017 முதல், மாதந்தோறும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
புதுவை கூடுகை மூன்றாம் வியாழக்கிழமைகளில் நிகழ்வது வழமை. இம்முறை திரு. பாவண்ணன் அவர்கள் புதுவைக்கு வருகைதரும் சந்தர்ப்பத்தை நழுவவிடாது, வெண்முரசு கலந்துரையாடலை 26 ஜூன் 2017 திங்கட்கிழமை காலை 10:30 மணிக்கு தொடங்கவிருப்பதை மகிழ்ச்சியாக தெரிவித்துக்கொள்கின்றோம்.
26 ஜூன் மாதத்தில் கூடவிருக்கிற ஐந்தாவது கூடுகை, ஒரு சிறப்புமிக்க கூடுகையாக நிகழவிருக்கின்றது. இலக்கிய உலகின் ஆளுமைகளில் ஒருவரான திரு.ஜெயமோகன் அவர்களின் மதிப்பிற்குரிய நண்பரும், வெண்முரசின் தொடர் வாசகருமாகிய மதிப்பிற்கினிய திரு.பாவண்ணன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, வெண்முரசின் சொல்மடிபில் கரந்துள்ள அர்த்தவிசேஷங்களை விரித்தெடுக்க இருப்பது, அதன் பிற பரிமாணங்களில் ஒளிரும் தருணங்களை நம்முள் நிகழ்த்தலாம்..
திரு. பாவண்ணன் அவர்கள் சிறுகதை, நாவல், கட்டுரை, குறுநாவல், கவிதை, குழந்தைப்பாடல்கள் என பலதளங்களில் முப்பதாண்டுகள் மேலாக இயங்கிவரும், தமிழின் முக்கிய எழுத்தாளரும், மகாபாரததத்தை ஒரு புதிய கண்ணோட்டத்துடன் அணுகி புனையப்பட்ட கன்னட எழுத்தாளர் திரு எஸ்.எல்.பைரப்பாவின் பர்வா நாவலை தமிழ்ப்படுத்தியவரும் கன்னடத்தின் முக்கிய இலக்கிய நூல்களின் ஆகச்சிறந்த தமிழ் மொழிபெயர்ப்பாளருமாவார் என்பதை நாம் அனைவரும் அறிவோம். இந்தக் கூடுகை அனைத்துவிதத்திலும் மிக முக்கியமானதாக நிகழவிருக்கிறது.
அதில் பங்குகொள்ள நம் கூடுகை உறுப்பினர்கள், வெண்முரசு வாசகர்கள் மற்றும் வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்.
நாள்:- திங்கட்கிழமை (26-06-2017) காலை 10:30 மணிக்கு தொடங்குகிறது.
இடம்:- கிருபாநிதி அரிகிருஷ்ணன், ” ஶ்ரீநாராயணபரம்”, முதல்மாடி, 27, வெள்ளாளர் வீதி,
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
வாஞ்சியும் தலித்துக்களும்
அன்புள்ள ஜெ,
வாஞ்சிநாதன் ஆஷ் துரையைக் கொன்றது ஆஷ் துரை தலித்துக்களுக்கு ஆதரவாக நடந்துகொண்டமையால்தான் என்று ஒரு வாட்ஸப் செய்தி நேற்றும் இன்றும் சுற்றிவருகிறது. அதில் உண்மை என்ன?
முருகேஷ்
***
அன்புள்ள முருகேஷ்,
தமிழ் அறிவுத்துறையில் இதைப்பற்றி விரிவாக எழுதி விளக்கி கடந்துசென்று நெடுநாட்களாகிறது. இதற்குமேல் இதைப்பேசுகிறார்கள் என்றால் அவர்கள் எழுத்து -வாசிப்பு தளத்தில் எந்த அறிமுகமும் இல்லாதவர்கள். செவிவழிச்செய்திகள் , வாட்ஸப் உதிரிச்செய்திகளில் உழல்பவர்கள். அவர்களை எந்த நூலும், எந்த வரலாற்று விளக்கமும் மாற்றாது. அது ஒருவகை மூடநம்பிக்கை.
சுருக்கமாகச் சொல்கிறேன். வாஞ்சி காலகட்டத்தில் இந்திய சுதந்திரப்போராட்ட மரபில் இரு கருத்தியல்போக்குகள் இருந்தன. ஒர் அணி இழந்துபோன பாரதப்பெருமையை மீட்டு, அதை அன்னிய அடிமைத்தளையிலிருந்து வெளியே கொண்டுவரவேண்டுமென விரும்பியது. திலகர் அதன் முகம். இன்னொரு அணி ஐரோப்பாவில் உருவாகி வந்துகொண்டிருந்த நவீன ஜனநாயக சமூகம் ஒன்றை இந்தியாவில் உருவாக்க வேண்டும் என விரும்பியது. கோகலே அதன் முகம்
வாஞ்சி முதல் அணியைச் சேர்ந்தவர். அவர்கள் அன்றைய தீவிரவாதிகள். இரண்டாம் தரப்பினர் அன்றைய மிதவாதிகள். அந்தக் கருத்தியல்பூசல் காங்கிரஸில் தொடர்ந்து நடந்தது. நேரடி நாற்காலிவீச்சு வரை காங்கிரஸ் கூட்டங்களில் சாதாரணமாக நடந்தது.
பின்னர் காந்தி வந்தார். அவர் கோகலே அணியைச் சேர்ந்தவர். அணிகளை கடந்து நேரடியாக அவரால் எளிய மக்களிடம் பேசி அவர்களை அணிதிரட்டமுடிந்தது. அவர் அடைந்த அரசியல் வெற்றி என்பது அவ்வாறு வந்தது. இது முதல் அணியை மெல்ல தேம்பி மறையச்செய்தது. அவர்களில் கணிசமானவர்களுக்கு கடைசிவரை காந்திமேல் கடும் கசப்பு இருந்தது.
முதல் அணியைச்சேர்ந்தவர்களே அன்று வன்முறையை நம்பினார்கள். அவர்களில் ஒருவராகிய வ.வே.சு.அய்யரால் தூண்டுதல் பெற்றவர் வாஞ்சி. அவரது கடிதம் அந்தக் கருத்தியலைக் காட்டுகிறது.
அன்றைய தலித்தியக்கத்தினர் பலருக்கு ஆங்கில ஆட்சி தங்களை விடுதலைசெய்ய வந்தது என்னும் எண்ணம் இருந்தது. ஆகவே அவர்கள் மிகத்தீவிரமாக ஆங்கிலேயரை ஆதரித்தனர். சுதந்திரப்போராட்டத்தை தங்களை விடுவிக்க வந்த ஆங்கிலேயருக்கு எதிரான உயர்சாதியினரின் போராட்டமாகவே அவர்கள் பார்த்தனர் [ஆங்கில ஆட்சியே பஞ்சங்களுக்குக் காரணம் என்ற எண்ணமெல்லாம் அன்று இல்லை. அத்தகைய விரிவான பொருளியல்நோக்கு உருவாகி வருவதெல்லாம் மேலும் பல ஆண்டுகள் கடந்துதான்]
இதுதான் அன்றைய கருத்தியல்தரப்புக்கள். ஒரே செயலை இவர்கள் வெவ்வேறு கோணங்களில் பார்த்தனர். தீவிரத்தரப்பினர் வாஞ்சியை ஒரு தியாகியாக அணுகினர். மிதவாதிகள் அவரை அத்துமீறியவர் என்று எண்ணினர். தலித் தரப்பினர் அவரை உயர்சாதிவெறியர் என எண்ணினர்.
இதில் இன்னொரு பலவீனமான தரப்பு உண்டு, அது நீதிக்கட்சி. அது ஆங்கிலேயருடன் ஒத்துழைத்து அரசியலதிகாரத்தை கையாண்டவர்களால் ஆனது. பெரும்பாலும் நிலச்சுவான்தார்கள் குத்தகைதாரர்கள் போன்ற உயர்குடியினரால் ஆனது அது. அவர்களுக்கு வாஞ்சி ஒரு கொலைகாரனாகவே தோன்றினான். நீதிக்கட்சியின் நீட்சியே திராவிடர் கழகமும் திராவிடக் கட்சிகளும்.
ஆஷ் துரையின் கொலை அன்று ஆங்கிலேயர் நடுவே பெரிய பதற்றத்தை உருவாக்கியது. ஏனென்றால் முன்னர் நிகழ்ந்த சிப்பாய்ப்புரட்சி ஆங்கிலேயரை பெருமளவில் கொன்றழித்தது வாஞ்சியின் கடிதம் அப்படி ஒரு கிளர்ச்சி நெல்லையில் உருவாகக்கூடும் என்ற [பொய்யான] சித்திரத்தை அவர்களுக்கு அளித்தது
ஆகவே ஆங்கிலேய ஆதரவாளர்கள் அனைவரும் பதறியடித்து வாஞ்சிக்கு எதிராக கடும் கண்டனங்களைப் பதிவுசெய்தனர். ஆங்கிலேயருக்கு ஆதரவாக அறிக்கைகளை விட்டனர். அதில் ஆங்கிலேயர் வானளாவப் புகழப்பட்டிருந்தனர். ஆஷ் துரையும். ஆனால் அது எவ்வகையிலும் உண்மை அல்ல.
சென்னை கவர்னர் ஆக இருந்த கோல்ட் அவர்களின் காலம் முதல் இந்தியாவின் சாதிப்பிரச்சினைகளில் தலையிடுவதில்லை என்பதே ஆங்கிலேயரின் நிலைபாடாக இருந்தது. அது அவர்களின் வணிகம், ஆட்சி இரண்டுக்கும் வசதியானது.நேரடியாகவே ஒன்று சொல்லலாம். நெல்லையில் இந்தியா சுதந்திரம் பெறும் காலம் வரை பல கிறித்தவ தேவாலயங்களில் தலித்துக்கள் அனுமதிக்கப்படவில்லை. அனுமதிக்கப்பட்ட தேவாலயங்களில் பிறசாதியினர் கண்களில் அவர்கள் படாமலிருக்க தனி தடுப்புச்சுவர் கட்டப்பட்டிருந்தது. ஆங்கில அரசு அதை தடுத்திருக்கலாமே? [ஆ.சிவசுப்ரமணியம் கிறித்தவமும் சாதியமும் என்னும் நூல்]
உண்மையில் பிரிட்டிஷ் காலகட்டத்தில் பெரும்பகுதி நிலம் அவர்களுக்கு கப்பம்கட்டும் ஜமீன்தார்களின் ஆட்சிக்குக் கீழே இருந்தது. ஜமீன்தார்கள் மிகப்பழைமையான சாதிவெறி ஆட்சியே நடத்தினார்கள். அவர்களுக்கு முழுமையான ராணுவ ஆதரவை பிரிட்டிஷ் ஆட்சி அளித்தது. வரலாற்றில் வெள்ளை ஆட்சிக்காலம் அளவுக்கு ஜமீன்தார்கள் அதிகாரத்துடன் என்றும் இருந்ததில்லை. இது அவர்களை கேட்பாரற்ற கொடூர ஆட்சியாளர்களாக ஆக்கியது. கிராமங்களில் சாதியமைப்பு நெகிழவிடாமல் அவர்கள் பார்த்துக்கொண்டனர்
பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தின் உச்சகட்ட சுரண்டல், உணவு ஏற்றுமதி இரண்டும் இணைந்து பெரும்பஞ்சங்களை உருவாக்கியது. இந்திய தலித்துக்களில் பெரும்பகுதி பஞ்சத்தில் இறந்தனர். ஆனால் பிரிட்டிஷார் அந்தப்பஞ்சத்திற்குக் காரணம் என்னும் உணர்வு அன்றிருக்கவில்லை. அவர்கள் செய்த எளிய நிவாரண உதவிகள் பெரிய கொடையாக கருதப்பட்டன
பிரிட்டிஷ் ஆட்சி நேரடியாக நடந்த பகுதிகளில் பிரிட்டிஷ் சட்டம் தலித்துக்கள் மீதான கொடுமைக்கு எதிரான காப்பாக அமைந்தது உண்மை. பஞ்சம் தலித்துக்களை கூட்டம்கூட்டமாக இடம்பெயரச் செய்து நகர்களை நோக்கி வரச்செய்தது. அங்கே அவர்களின் உடலுழைப்புக்கு மதிப்பிருந்தது. அது அவர்களில் ஒருசாராரை பிரிட்டிஷ் ஆதரவாளர்களாக ஆக்கியது. நகர்ச்சூழலில் தலித்துக்கள் கல்விபெற்றனர். அரசியல் உரிமைகளைப்பற்றிய விழிப்புணர்வை அடைந்தனர். தலித் இயக்கம் உருவாகி வந்தது.
இதுதான் அன்றைய சூழல். இதில் கவனிக்கவேண்டியவை சில. ஒன்று ஆஷ் துரை எவ்வகையிலும் இந்தியர்கள்மீதோ தலித்துக்கள் மீதோ கருணையுடன் நடந்துகொள்ளவில்லை.. அவர் தலித்துக்களின் காவலன் என்ற செய்தி எங்கும் எப்போதும் பதிவானதில்லை. அது ஒரு கட்டுக்கதை. அவர் பெரும்பாலான வெள்ளைய அதிகாரிகளைப்போல தனிப்பட்ட லாபநோக்கு கொண்ட, கறாரான ஒரு மனிதர். ஆ.இரா வேங்கடாசலபதி மிக விரிவாக ஆய்வுசெய்து இவற்றை எழுதியிருக்கிறார் [ஆஷ் அடிச்சுவட்டில்]
இரண்டாவதாக, வாஞ்சி ஆஷ்துரையைக் கொல்ல வரவில்லை. தீவிரவாத தரப்பினர் இலக்காக்கியவர் திருநெல்வேலி கலெக்டராகிய விஞ்சு துரைதான். ஆஷ் துணை கலெக்டர்தான். விஞ்சு அந்த ரயிலில் வரவில்லை. ஆகவே அவர் சிக்கிக்கொண்ட ஆஷ் துரையைக் கொன்றார். ஒரு வெள்ளை அதிகாரியைக் கொல்வது மட்டுமே அவரது நோக்கம்
மூன்றாவதாக, அது போதிய அரசியல் பிரக்ஞையோ பயிற்சியோ இல்லாத ஒரு தனிநபர் முயற்சி. அதன் விளைவாக, குறிப்பாக அந்த அசட்டுத்தனமான கடிதத்தின் எதிரொலியாக, திருநெல்வேலியின் சுதந்திரப்போராட்டத்தை மூர்க்கமாக ஒடுக்க பிரிட்டிஷாருக்கு ஒரு வாய்ப்பு கிடைத்தது. அதன்பின் இந்திய விடுதலை வரை திருநெல்வேலி எழுச்சி பெறவே இல்லை
நான் வாஞ்சிநாதனின் ‘தியாகத்தை’ போற்றவில்லை. எனக்கு அம்மாதிரி சில்லறைக் கலவரங்களில் நம்பிக்கை இல்லை. அது போன்ற நிகழ்வுகளுக்கு சுதந்திரப்போரில் ஒரே ஒரு மதிப்புதான் உண்டு, அவை மக்களின் கவனத்தைக் கவர்ந்து சுதந்திரப்போர் குறித்த செய்தியை கொண்டுசெல்கின்றன. ஆனால் ஏற்கனவே பஞ்சத்தில் நொந்து அஞ்சிப்போய் கிடக்கும் மக்களுக்கு அவை மேலும் அச்சத்தை ஊட்டி சுதந்திரப்போராட்டத்தை மேலும் பின்னுக்கிழுத்தன. ஆம், பகத்சிங் மீதும் , படுகேஷ்வர் தத் மீதும் சந்திரசேகர ஆஸாத் மீதும் எனக்கு இதே அபிப்பிராயம்தான்.
ஜெ
***
பழைய கட்டுரைகள்
வாஞ்சி,ஆஷ்,வேங்கடாசலபதி
மிஷனரி வரலாறு, வாஞ்சி, சக்கிலியர்
***
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
எனது கணவனும் ஏனைய விலங்குகளும்
இனிய ஜெயம்,
வீ எஸ் ராமச்சந்திரன் அவர்களின் வழிகூறும் மூளை, தியடோர் பாஸ்கரன் அவர்களின் கல்மேல் நடந்த காலம் நூல்களைத் தொடர்ந்து, இவ்வாண்டின் தமிழின் சிறந்த வரவுகளில் ஒன்று பாரதி புத்தகாலய வெளியீட்டில் ஜானகி லெனின் எழுதிய எனது கணவனும் ஏனைய விலங்குகளும் எனும் நூல்.[படிங்க நல்லாருக்கு என்று சொல்லி அதை எனக்கு த ந்தவர் காந்தி டுடே சுனில்].
ராமும் அவரது மனைவி ஜானகியும் கோஸ்டாரிகாவில் தேடல் பணியில் இருக்கிறார்கள். யாரும் புகுந்து தேடும் பல தங்க சுரங்கங்கள் அங்கு உண்டு. ராம் தம்பதியரும் ஒரு சுரங்கத்தை தேர்ந்தெடுத்து, தேடி சலிக்கிரார்கள். இறுதில் ஒரு தேவ கணத்தில் இதோ இதோ என ராம் கெட்டவார்த்தை சொல்லி மகிழ்ச்சியில் கூவுகிறார். அவர் தேடியதை கண்டடைந்து விட்டார். போவா எனும் அந்த நிலத்தில் மட்டுமே காணக்கிடைக்கும் அபூர்வ நச்சரவம்.
கர்நாடகாவில் ராம் தம்பதியர் இரு நாகங்கள் ஒரு மணிநேரத்துக்கும் மேலாக மல்யுத்தத்தில் இருக்கும் நிலையை வேடிக்கைபார்த்தபடி நிற்கின்றனர். யுத்தத்தில் தோற்ற நாகம் விரைவில் பின்வாங்கும் பாதையில், தடையாக ராம். அவரது கால்களுக்கு இடையே புகுந்து எழுந்த அரவம், ராமின் புட்டத்தை கடித்து விட்டு ஓடி விடுகிறது. அவசரமாக ராம் உடைகளை களைகிறார்.. ஜீன்ஸ் முரட்டு துணி, அல்லது பலவீனமடைந்த அரவத்தின் தாக்குதல், அரவத்தின் பற்கள் பதியவில்லை. ”நல்லவேளை என் புட்டத்தை கடித்து குருதி உருஞ்சும் துர்பாக்கியம் உனக்கு நிகழவில்லை ” என்றபடி ஜானகியை நோக்கி சிரிக்கிறார் ராம்.
ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபது ராம் ஆகும்பே இலிருந்து சென்னை ரயில் ஏறுகிறார். ஒரு சிறுவன் அவரது பையின் சிறிய ஓட்டை வழியே தலையை நீட்டுவது என்னவாக இருக்கும் எனும் ஆவலோடு பார்க்கிறான். அவனது கண்ணின் ஆவலைக் கொண்டு ராம் பையை பார்க்கிறார். வெளியே தலை நீட்ட முயன்று கொண்டிருக்கிறது கரு நாகம். சூ என்றபடி அதனை மூக்கில் தட்டி உள்ளே தள்ளி விட்டு, சிறுவனை சும்மா அது ஒரு நாய்க்குட்டி என சமாதானப்படுத்துகிறார். சென்னை பாம்புப் பண்ணையின் பல பாம்புகளில் ஒன்று இவ்வாறு பயணித்து வருகிறது.
ராம் என்று அறியப்படும் ராம்லஸ் ஏல் விட்டேகர் சென்னை பாம்பு மற்றும் முதலை பண்ணைகளின், ஆகும்பே ராஜ நாக ஆராய்ச்சி மையத்தின், மழைக்காடுகள் பாதுகாப்பு கூட்டமைப்பு, தமிழ்நாடு இருளர் கூட்டமைப்பு ஆகிவற்றின் தோற்றுவாய்களின் மூலமுதல்வன். இந்தியப் பாம்புகள் அடிப்படைக் கையேடு நூலின் ஆசிரியர்.[தமிழில் தேசிய புத்தக நிறுவன வெளியீடாகவும் கிடைக்கிறது] இந்திய ராஜ நாகங்கள் ஆவணப் படத்தின் மூலவர். இவரது மனைவி ஆங்கிலத்தில் எழுதிய நூலின் தமிழாக்கமே [தமிழில் கே ஆர் லெனின்] எனது கணவனும் ஏனைய விலங்குகளும் என்ற வாழ்வனுபவங்களின் தொகுப்பு நூல்.
சென்னைக்கு வெளியே செங்கல்பட்டில், ஊருக்கு வெளியே புதர்க்காட்டில் நிலம் வாங்கி, இருளர் குடியின் நட்பு சூழ, எளிய பண்ணை வீடு கட்டி அதில் ஜானகி குடி வருவதில் துவங்குகிறது நூல். நூலின் வெவ்வேறு தருணங்களில் அந்தப் பண்ணை வீடு, உலர்நில பசுமைக்காட்டு மரங்கள் சூழ, சிப்பிப்பாறை, ஜெர்மன்ஷெப்பெர்டு உள்ளிட்ட ஆறு நாய்கள், லப்பி எனும் வராகி, மூன்று கீறி, பலவகை பாம்புகள், எலிகள், தவளைகள்,தேரைகள், குளவிகள், குரங்குகள்,பறவைகள் குடியேறி மெல்ல மெல்ல உயிர் கொண்டு வளர்கிறது.
பண்ணை வீட்டில்அலமாரிகளில் தேரைகள், நூல் அடுக்குகளில் தேள்கள், ஜன்னல் மற்றும் இன்ன பிற இடங்களில் பாம்புகள் இவைகள் மத்தியில் இனிக்க இனிக்க ராமும் தானும் வாழும் வாழ்வை விவரித்து செல்கிறார் ஜானகி. ஸ்லைடு காட்சி போல சட்சட் என காட்சி மாறும் அனுபவக் கட்டுரைகளின் வழியே, ராமின் வம்ச வரலாறு தொட்டு [ராமின் அப்பா, ராம்லஸ் ஏல் விட்டேகர் ஜுனியர், ராமின் தாத்த்தா ராம்லஸ் ஏல் விட்டேகர் சீனியர்] முதலைப்பண்ணை, அதன் முதலைகள், பாம்புகள், மரங்கள், சிறுத்தைகள், வேறு பல ஊர்வன பறப்பன, ஆளுமைகள், உணவுகள், பயணங்கள், நிலங்கள், மையமாக ராம் என தனித்துவமான நிகழ்வுகளை சுவாரஸ்யமாக சொல்லிச் செல்கிறார் ஜானகி.
சிறுவனாக மும்பையில் கைக்காசுக்காக குருவிகள் பிடிப்பதன் வழியே வாரம் மூன்று ரூபாய் சம்பாதிக்கிறார் ராம். [இன்று குருவி அபூர்வ உயிரினம்], வியட்நாம் போர் முடிந்து இந்தியா திரும்ப காசு குறைய, ராம் அங்கும் பாம்புகள் பிடித்து விற்கிறார், அங்கே ஒரு பெண், இந்த ஆளைக் குறித்து அறியாதவள், ராமின் பையை திருடி, தலைகீழாக கவிழ்த்துகிறாள், பொத்தென ஒரு நச்சரவம் கீழே விழுந்து, அதன் வால் கிலுகிலுப்பையை சிலுசிலுவென சிலம்ப, இவள் பீதியில் அலற, சயாம் பாம்புப் பண்ணை நிறுவனர் வில்லியம் பில்ஹாஸ்ட், கொஞ்சம் கொஞ்சமாக தனது குருதியில் நஞ்சு கலந்து, தன்னை பாம்பின் நஞ்சுக்கு ஆட்படாதவராக மாற்றிக் கொண்டவர், நிறைய பாம்புக் கடி வாங்கியவர், முதிய வயதிலும் வேலியை துள்ளி சாடும், துடிப்புள்ளவர், நூறு வயது கண்டவர். இவரே ராமின் குரு. இவர் போலவே ப்ளோரிடாவின் அட்டிலர் அரவங்கள் குறித்த விர்ப்பன்னர் ராமின் நண்பர். அட்டிலர் பாம்பு இருக்கும் இடங்களை துல்லியமாக கணிக்கும் சுவாரஸ்யமான அத்யாயம் ஒன்று நூலில் வருகிறது. அட்டிலர் யூகத்தின் படி ராம் மரமேறி, ஒரு ஆரஞ்சு வண்ண அபூர்வ பாம்பை பிடிக்கிறார்.
முன்பின்னாக ஆங்காங்கே , பாம்புகளை மிக அருகே வைத்து, [ராஜ நாகமே எனினும்] அதன் விழியோர செதில்கள், தலை மேல் செதில்கள், உடல் செதில்கள் கொண்டு பாம்புகளை துல்லியமாக வகைப்படுத்தும் முறைமைகள் குறித்த சித்திரங்கள் வருகிறது. பாம்புகள் பெரும்பாலும் இருபால் புணர்ச்சியாளர்கள். ஆண் பாம்புகளுக்கு இரண்டு ஜனன உறுப்புகள் உண்டு [அநியாயம்], புணர்ச்சி நிறைந்ததும் ஆண் பெண்ணின் ஜனனவாயை தனது உறுப்பில் இருந்து வெளியாகும் திரவம் கொண்டு சீல் செய்து விடும்.[கற்பு அரண்] குருதிச் சுத்தம் கொண்ட அடுத்த தலைமுறை. என பலப்பல சுவாரஸ்ய தகவல்கள்.
பண்ணைக்கு வரும் முதலைகள் கொண்டு, வித் விதமான முதலைகளின் அவற்றின் குணாதிசயங்களின், சித்திரங்கள் நூல் நெடுக. எண்பத்து ஐந்தில் ஒரு பெரிய புயல் வெள்ளம். முதலைப்பண்ணையின் முதலைகள் எல்லாம் வெளியேறி விட்டன என ஊருக்குள் வதந்தி பரவுகிறது. அப்போது, அந்த புயல் பொழுதில் அந்த பண்ணைக்குள் ராம், முதலைகள் வெளியேறா வண்ணம் நடத்தும் போராட்டம் இந்த நூலின் தனித்துவமான பல தருணங்களில் ஒன்று.
பாம்புகளையும், முதலைகளையும் தேடி உலகெங்கும் அலைகிறது இந்த ஜோடி. அந்தமானுக்கு ஒரு குறிப்பிட்ட முதலையை காண செல்ல விழைகிறார் ராம். அங்கே வெளிநாட்டினர் செல்ல சில சிக்கல்கள். அதை எத்ர்கொள்ள ராம் அமெரிக்க குடியுரிமையை துறந்து, இந்தியக் குடியுரிமையை பெறுகிறார். மெக்சிகோ பாலை நிலத்தில் பாம்பு தேடுகையில், ராம் ஒரு காவலதிகாரியால் விசாரிக்கப்படுகிறார். ராம் ஒரு அமெரிக்கன். ஆனால் இந்தியன். இந்த குழப்பத்தை அந்த அதிகாரியால் இறுதிவரை விளங்கிக் கொள்ளவே இயலவில்லை.
போதை, மிருகங்கள் கடத்துபவர்கள் முதல் சத்யஜித் ரே வரை முதலைப் பண்ணைக்கு வந்த சென்ற வித விதமான ஆளுமைகள், ஆரோவில் நிலத்தில் ட்ராப்பிக்கல் ட்ரை எவர்க்ரீன் பாரஸ்ட் எனும் வனத்தை உருவாக்கிய பால், பல்வேறு உயிர் சூழல் சார்ந்த ஆளுமைகள், இந்திய, இந்தோனேஷிய,தமிழ் பழங்குடிகள் என இவர்களை தொட்டு விரிகிறது நூல்.
இரண்டு வருடம் மனிதர்கள் கண்ணில் தென்படாமல் நகருக்குள் நடமாடிய அஜோபா எனும் சிறுத்தை, பண்ணைக்கு வந்து பண்ணையை தனது ஆளுகைக்கு கொண்டு வரும் பதினெட்டு அடி நீள ஜாஸ் என பெயரிட்ட முதலை, யானைச்சொரியன் என்ற விஷச் செடி, பறவைகளை, ஊர்வனவற்றை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் ஒட்டுண்ணிகள், விஷக் காய்ச்சல் கொண்டு வரும் கிருமிகள் என ஒரு வண்ணமயமான உயிர் உலகை முன்னிருத்துகிறது இந்த நூல்.
நமது கோழிமுட்டை வாழ்வுக்கு, வெளியே உயிர்த்துடிப்பு கொண்டு விளங்கும் ஒரு பல்லுர்யிர் இயக்கத்தை வண்ணமயமாக முன்வைக்கிறது இந்த நூல். சர்க்கஸில் இருந்து கிடைக்கிறது ஒரு முள்ளம்பன்றிக் குட்டி. நாட்களுக்குப் பிறகு முகாமை காலி செய்யும் தருணம், அந்த முள்ளம்பன்றிக் குட்டி வெளியேறி காட்டுக்கு செல்ல மறுக்கிறது, எங்கு கொண்டு விட்டாலும், திரும்ப அவர்களிடமே வருகிறது. ஜானகி நினைவாக சேர்த்து வைத்திருக்கும் பலவற்றில் மயிர் சுருள் அடங்கிய சிறிய பையும் ஒன்று. தான் ஆசை ஆசையாக வளர்த்து, சிறுத்தைக்கு பலி கொடுத்த ஜெர்மன்ஷெப்பெர்டு நாயின் முடிச் சுருள் அது. இப்படி பல உணர்சிகர தருணங்கள்.
முதலையின் இரக்கமே அற்ற கொல்லும் தன்மையை ஒரு அத்யாயத்தில் விவரிக்கும் ஜானகி, பிரிதெங்கோ,வேறொரு அத்யாயத்தில் முதலை டொமஸ்டிக்கேட் ஆகும் அழகை, அதன் அறிவை விவரித்துப் போகிறார். பாம்புகள், தவளைகள், முதல் எறும்புகள் வரை இந்த நூலுக்குள் வரும் அத்தனை உயிர்களையும் இந்த எதிர் எதிர் நிலையின் சமன்வயத்தில் வைத்தே சித்தரித்துக் காட்டுகிறார்.
மானுடம் மேல், உயிர்த் தொகுதி மேல் எந்த விலக்கமும் கொள்ளாத ஜானகியின் அகத்தை ஒரு வாசகன் இந்த நூலில் சென்றடைய முடிகிறது. நூலின் தலையாய அத்யாயங்கள் இரண்டு. ஒன்று இந்தோனேஷியாவில் ராம் கலந்துகொள்ளும் கிறிஸ்துமஸ் விருந்து. இரண்டு அந்த செங்கல்பட்டு புதர்க்காட்டில் படையெடுக்கும் ஈசல் கூட்டத்தை விருந்தாக்கி மகிழும் ஊர்வன மற்றும் பறப்பன குறித்த சித்திரம்.
ஈசல்களை ஒரு பெரு விருந்தென அள்ளி அள்ளி உண்கின்றன ஊர்வனவும் பறப்பனவும். மாபெரும் களியாட்டம், உயிர் சுழலின் ஊற்று முகம், மெல்ல மெல்ல ஓய்கிறது, ஒரு செந்தேளின் வாயில் எஞ்சி நிற்கிறது ஈசல் ஒன்றின் இறக்கை. எந்தப் புனைகதை எழுத்தாளனுக்கும் சவால் விடும் சித்தரிப்பு.
தொண்ணூறு சிறிய சிறிய கட்டுரைகள். பக்கக் கட்டுப்பாடுகளாக இருக்கக் கூடும். ஆகவே நிலம் மற்றும் ஆளுமைகளின் சித்தரிப்புபை சட சட என சில கோட்டு இழுப்புகளில் சித்தரிக்கிறார் ஜானகி. சிற்சில கோடிழுப்புகள் பார்த்தாலே சொல்லி விடுவோம் இது காந்தி, இது சே குவேரா என, அந்த மாயம் இந்த எழுத்தளிலும் நிகழ்ந்திருக்கிறது. இந்த நூலின் உணர்வுக் கட்டமைப்பின் வெற்றியில் முக்கிய பங்கு இதில் அவ்வப்போது தெறிக்கும் நகைச்சுவை. ஆ. முத்துலிங்கத்தின் அதே நகைச்சுவை.
ஜானகி ஒருவரை நான்சென்ஸ் என சொல்கிறார். அந்த நபர் மிக மிக புன்பட்டுவிடுகிறார். ஜானகிக்கு இதில் இந்த அளவு புண்பட என்ன இருக்கிறது என்றே புரியவில்லை. வெளியே, மிக, மிக வெளியே, நேரு திராவிட நாடு கோரிக்கையை நான்சென்ஸ் எனும் ஒற்றை சொல்லில் நிராகரிக்கிறார். அந்த நான்சென்ஸ் திமுகா வழி இங்கே பாமரனுக்கும் பரவுகிறது. மிக மிக பிந்தி இதை ஜானகி அறிய வருகிறார்.
முக நூலில் மட்டுமே உயிர்த்துக் கிடக்கும் ஜீவராசிகள், இந்த நூலை படிக்க நேர்ந்தால், நெஞ்சிடிப்பு கூட சாத்தியம். [என்னது முகநூலுக்கு வெளியே உலகம் இவ்ளோ பெரிசா?] சரளமான மொழிபெயர்ப்பில் மிக சுவாரஸ்யமான, தனித்துவமான நூல்.
கடலூர் சீனு
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
பெண்களின் எழுத்துக்கள்
அன்புள்ள ஜெமோ
சற்றுமுன்புதான் உங்கள் தளத்தில் கங்கா ஈஸ்வர் எழுதிய சிலநேரங்களில் சில மனிதர்கள் பற்றிய ஆழமான ஆய்வை [கங்கை எப்படிப் போகிறாள்? — கங்கா ஈஸ்வர் ] வாசித்தேன். உண்மையிலேயே ஜேகே பற்றி எழுதப்பட்ட மிகச்சிறந்த கட்டுரை இதுதான். ஆசிரியரின் நோக்கம் என்ன என்பதை பற்றிய எந்த எண்ணமும் இல்லாமல் எழுதப்பட்ட கட்டுரை என்பதுதான் அதன் மிகச்சிறந்த அம்சம் என நினைக்கிறேன். அதை ஒரு வாழ்க்கை மட்டுமே என்றுதான் கங்கா ஈஸ்வர் நினைக்கிறார். ஆகவே உண்மையான மனிதர்களைப்புரிந்துகொள்ள முயல்வதுமாதிரி கங்காவையும் பிரபுவையும் வெங்குமாமவையும் புரிந்துகொள்ள முயற்சி செய்கிறார். இதுதான் மிகச்சரியான வாசிப்பு.
இங்கே தமிழில் இலக்கியம் என்பது அந்த ஆசிரியரால் cobble செய்யப்படுவது என்ற எண்ணம் உண்டு. அதனால் எந்த எழுத்தையுமே ஆசிரியன் ஏன் இதைச்செய்கிறான் என்றே பார்க்கிறார்கள். அந்த அறிவிஜீவிநோய் இல்லாமல் நேரடியாக எழுதப்பட்டிருப்பதனால்தான் அவர்கள் எவரும் செல்லமுடியாத ஆழங்களுக்கு இக்கட்டுரை சென்றிருக்கிறது. வாழ்த்துக்கள்
சத்யமூர்த்தி
அன்புள்ள ஜெ,
உங்கள் இணையதளத்தில் பொதுவாகவே பெண்கள் அபாரமான வீச்சுடன் எழுதுகிறார்கள். அல்லது அவர்களை நீங்கள் முன்வைக்கிறீர்கள். நான் தனிப்பட்டமுறையில் சுசித்ராவின் வாசகன். ஒருநாள் முழுக்க அமர்ந்து சுசித்ரா வாசித்து எழுதிய கட்டுரைகளை வாசித்தபோது தமிழில் அவருக்கு சமானமாக எழுதும் அறிவுஜீவிகள் மிகக்குறைவாகவே இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை அடைந்தேன். ஆழமான விரிவான வாசிப்பும் படைப்புக்களைக் கூர்ந்து வாசிக்கும் கவனமும் உள்ளன. அதேசமயம் சில்லறை அரசியலை அல்லது கோட்பாடுகளை நோக்கிச்ச் செல்வதும் இல்லை. அரசியல் இல்லாத வாசிப்பு என்பதனாலேயே அவை மிகமிகப்புதுமையாக உள்ளன. அதேபோல பிரியம்வதாவின் வாசிப்பும் சாரதாவின் வாசிப்பும் மிக நுட்பமானவை. சமீபமாக எழுதிய கங்கா ஈஸ்வரின் கட்டுரையையும் அவ்வாறே சொல்லலாம். இந்த வாசகிகள் தொடர்ந்து பொதுவெளியில் எழுதவேண்டும்,
எஸ், ஆறுமுகம்
***
அன்புள்ள ஜெ,
சுசித்ராவின் கடிதங்களையும் குறிப்புகளையும் ஒரே தொகுப்பாக அளித்திருக்கிறீர்கள். அது மிக உதவியாக இருந்தது. அவருடைய பார்வையை முழுமையாகவே பார்க்கமுடிந்தது. நிதானமான அணுகுமுறையும் கூர்மையான பார்வையும் அவரிடமிருக்கிறது. சொல்லவந்ததை மிகத்தெளிவான மொழியில் சொல்கிறார்கள். உங்கள் தளத்தில் சுபஸ்ரீ, சாரதா, பிரியம்வதா, கங்கா போன்றவர்கள் தொடர்ந்து எழுதுவதைப்பார்க்கிறேன். இவர்கள் வேறு இதழ்களிலும் தொடர்ச்சியாக எழுதவேண்டுமென விரும்புகிறேன்.
திவ்யா மகாதேவன்
***
=================================================================
சில நேரங்களில் சில மனிதர்கள், மீள்பரிசீலனை-சுசித்ரா
=================================================
சிலநேரங்களில் சிலமனிதர்கள் _ ஒரு கழுவாய்
===================================================
சுசித்ரா கடிதங்கள்
செவ்வியலும் இந்திய இலக்கியமும்
கன்யாகுமரி 1-ஆண்மையின் குரூரம்
கன்னியும் கொற்றவையும் (“கொற்றவை” பற்றிய பதிவுகள் – மேலும்)
நமது பிரச்சனை குற்றாலத்தில் உள்ள தடுப்புச்சுவர் அல்ல!
==============================================================
ஜெயகாந்தன் , கங்கா ஈஸ்வர்- கடிதங்கள்
கங்கை எப்படிப் போகிறாள்? — கங்கா ஈஸ்வர்
ஜெயகாந்தனைப்பற்றிய ஆகச்சிறந்த கட்டுரை
============================================
மேலும் இரு சிறுகதைகளைப் பற்றி…
மீண்டும் புதியவர்களின் கதைகளைப்பற்றி.. பிரியம்வதா
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 25
24. கரவுக்கானகம்
விராடபுரிக்கு வடக்கே மலைச்சரிவில் கோதையை நோக்கி இறங்கும் தப்தை, ஊர்ணை என்னும் இரு காட்டாறுகளுக்கு நடுவே இருந்த செழித்த சிறுகாடு அரசகுடிகளின் வேட்டைக்கும் களியாட்டுக்குமென ஒதுக்கப்பட்டிருந்தது. அங்கு வேடர்களோ வேட்டையர்களோ நுழைவது தடுக்கப்பட்டிருந்தது. மாமன்னர் நளனின் ஆட்சிக்காலத்தில் இரு ஆறுகளிலிருந்தும் நூற்றுக்கணக்கான சிற்றோடைகளை வெட்டி ஒன்றுடன் ஒன்று பின்னிக் கலந்து உருவாக்கப்பட்ட அந்த ஈரநிலத்தில் மலர்மரங்களும் கனிமரங்களும் கொண்டு ஒரு அணிக்காடு அமைக்கப்பட்டது. பின்னர் காலத்தால் மறக்கப்பட்டு விராடபுரி உருவானபோது சுவடிகளிலிருந்து கண்டடையப்பட்டு மீட்டெடுக்கப்பட்டது அது.
தப்தோர்ணம் சிறு யானைக்கன்று சினம் கொண்ட வேழம் என்றாவதுபோல செறிந்த பச்சை நுரைக்குவியலென வானின் கீழ் நின்றிருந்தது. வெய்கதிர்க் கொடிகள் நுழைந்திறங்கமுடியாத பச்சை இருள் நிறைந்த அந்த அடர்வுக்குள் வாழ்ந்திருந்த யானைகளும் கரடிகளும் சிறுத்தைகளும் அரசப்படையினரால் வேட்டையாடப்பட்டும் துரத்தப்பட்டும் முழுமையாக அகற்றப்பட்டன. விழிக்கினிய மான்களும் முயல்களும் அன்னங்களும் மயில்களும் கிளிகளும் கொண்டுவந்து நிரப்பப்பட்டன. ஓடைக்கரைகளில் அரசகுடியினர் தங்குவதற்குரிய கொடிமண்டபங்களும் கிளை விரித்த மரங்களின் கவர்களில் இரவு துயில்வதற்குரிய ஏறுமாடங்களும் அமைக்கப்பட்டன.
அங்கு விண்ணுலாவிகளான கந்தர்வர்களும் தேவர்களும் வந்திறங்கி நிலவிலாடி நீர்விளையாடி இசைமுழக்கி மலர்ப்பொடி சூடி புலரிக் கதிரெழுவதற்கு முன் மீள்வதாக கவிஞர்கள் பாடினர். அங்கு நிகழ்ந்தவை என பல தெய்வக்கதைகள் சூதர்களால் பாடப்பட்டன. பின்னர் அந்நகரின் இனிய கரவு எண்ணம்போல அந்தக் காடு மாறியது. அந்நகர் குறித்த அனைத்துக் கவிதை வரிகளிலும் அக்காடு தொற்றி வந்தது. அவ்வரிகளில் உணர்த்தப்பட்ட சொல்லாப்பொருளை விராடநாட்டுக் குடிகள் ஒவ்வொருவரும் இளமையிலேயே உணர்ந்திருந்தனர். தங்கள் ஆழத்துக் கனவுகளில் அவர்கள் அங்கே உலவினர். அங்கு அறிந்து திளைத்தவற்றை ஒருபோதும் அவர்கள் பகிர்ந்ததில்லை. அங்கு ஆற்றியவற்றை அவர்களின் நாக்கு அவர்களின் செவிக்கு உரைப்பதில்லை என்றும் அங்கு அவர்களின் ஒரு விழி பார்த்ததை பிறிதொரு விழிக்கு காட்டுவதில்லையென்றும் சூதர்கள் பாடினர்.
விராடபுரியின் ஒவ்வொருவரும் உடல் முதிர்ந்து உளம்வற்றி உட்கரந்தவை அணுவெனச் சுருங்கி இறப்பு நோக்கி கிடக்கையில் ஓசையின்றி உலர்ந்த உதடுகள் அசைந்து சொல்லும் சொற்களில் ஒன்று அக்காட்டின் பெயர். அவர்கள் தெற்கு நோக்கிச் செல்கையில் பதைக்கும் உயிரென பின்தொடர்ந்து செல்லும் எஞ்சிய விழைவுகள் அவர்கள் சிதையிலெரிந்து நீரென்றும் புகையென்றுமாகி புடவியில் கலந்த பின்னர் நீள்மூச்சுடன் திரும்பி அந்தப் பசுங்காட்டுக்கே சென்றன. அங்கு தாங்கள் வாழ்ந்து கண்டெடுத்து கரந்துவைத்த ஒவ்வொன்றையும் தேடிச்சென்று தொட்டுத் தொட்டு மீண்டன. எதையும் எடுத்து வெயிலுக்கும் காற்றுக்கும் காட்ட அப்போதும் அவை துணிவுகொள்ளவில்லை. அவை விரலறியா யாழுக்குள் காத்திருக்கும் இசை என கரந்து அங்கிருந்தன.
நாற்பத்தொன்றாவது நாள் விண்ணிலிருந்து குளிர் காற்றுகள் என மூதாதையர் இறங்கி வந்து அவர்களை கைபற்றி மேலெடுத்தனர். மண்ணில் அவர்களின் கொடிவழியினர் வைத்த அன்னமும் நீரும் அவர்களை கீழிருந்து உந்தி மேலேற்றின. முதல் வானில் நின்று இறுதியாக நோக்கி விலகிச் செல்கையில் அக்காட்டையே அவர்கள் கூர்ந்தனர். அவ்விறுதி விழைவே மீண்டும் புவிப்பிறப்பென சொட்டி முளைக்க வைத்தது அவர்களை.
தப்தோர்ணம் ஒருவராலும் பார்க்கப்படாமல் விராடபுரியின் உள்ளங்களை ஆட்சி செய்தது. சொல்லில் எழுந்தவை சொல்லை உண்டு வளர்ந்து சூழ்வதன் முடிவிலா மாயங்கள் தப்தோர்ணத்தை வரைந்தன. அக்காட்டின் எல்லைகளுக்கு வெளியே அதற்குள் நுழையும் பன்னிரண்டு கைவழிகளின் தொடக்கத்திலும் விராடமன்னன் அமைத்த காவல் மேடைகளில் வில்லில் தொடுத்த அம்புகளுடன் வீரர்கள் நோக்கியிருந்தனர்.
பின்புலரியின் வெள்ளி வெளிச்சத்தில் தொலைவில் பல்லக்குகளின் குவைமுகடுகள் ஆயர்பெண்களின் பால்குட நிரை என ஒளியுடன் அசைவதைக் கண்ட காவலன் ஒருவன் எழுந்து விழிமேல் கைவைத்து கூர்ந்து நோக்கியபின் தன் இடையிலிருந்த கொம்பை எடுத்து மும்முறை ஊதினான். அதற்கு மறுமொழியாக பல்லக்கு நிரையின் காவலர்தலைவன் ஊதிய கொம்பு இளவரசி உத்தரையும் சேடியரும் கானாடுவதற்கு வந்து கொண்டிருப்பதை அறிவித்தது. பிறிதொரு கொம்பூதி மறுமொழி அளித்தபின் இளவரசியின் வருகையை பிறகாவல் மாடங்களுக்கு அறிவிக்கும் பொருட்டு நூலேணியில் தொற்றி காவல் மாடம் அமைந்திருந்த மரத்தின் ஏழாவது கவருக்குச் சென்று அங்கிருந்த சிறிய மரத்தட்டின்மீது நின்றபடி நீள்கொம்பை வாயில் பொருத்தி அடிவயிற்றிலிருந்து காற்றெடுத்து மூன்று முறை பிளிறலோசை எழுப்பினான். அவ்வோசைக்கு எதிர்வினையாக அடுத்த காவல் மாடம் ஆம் ஆம் ஆம் என்றது.
அச்செய்தி அனைத்து காவல் மாடங்களுக்கும் சென்று சேர்ந்தபோது எதுவும் நிகழா நாள்காவலில் ஒவ்வொரு புலரியிருளலும் பிறிதொன்றே என காலத்தை அளாவிய காவலர்கள் முகம் மலர்ந்தனர். எட்டாவது மாடத்தின் காவலர் தலைவன் நிகும்பன் “இக்காட்டிற்குள் இதற்கு முன் இளவரசி வந்தது ஏழாண்டுகளுக்கு முன்பு. அன்று அவருக்கு வயது பதினொன்று. நாகமொன்றைக் கண்டு அஞ்சி அன்று அவருக்கு வலிப்புநோய் வந்தது. அதன்பின் இங்கு வந்ததே இல்லை” என்றான். “நாகமா?” என்றான் ஒருவன். “நீரில் இறங்கி அலையிலாடிய வேர் அது என தெரிந்தபோது இளவரசியின் வலிப்பு உச்சம்கொண்டிருந்தது” என்றான் நிகும்பன்.
மூத்த காவலனாகிய கிரணன் “அன்று இந்தக் காட்டின் கந்தர்வர்களும் கின்னரர்களும் அவரை பார்த்திருக்க மாட்டார்கள். வண்ணத்துப்பூச்சிகளையும் பொன்வண்டுகளையும் மட்டுமே பார்த்துவிட்டு திரும்பிச் சென்றிருப்பர்” என்றான். “ஏன்?” என்று இளங்காவலன் முக்தன் கேட்டான். கிரணன் அவனை நோக்கி சிரித்து “மலர்களில் நீ இதழ்களை மட்டுமே பார்க்கிறாய். கந்தர்வர்களும் கின்னரர்களும் பெண்களில் பெண்மையழகை மட்டுமே பார்க்கிறார்கள்” என்றான். பிற காவலர்கள் சிரிக்க அவர்களை மாறி மாறி நோக்கியபின் முக்தன் “அதில் என்ன பிழை?” என்றான். “பிழையேதுமில்லை என்றுதான் சொன்னேன்” என்றான் முதியவன். மீண்டும் காவலர் சிரித்தனர்.
குடிகாரர்களுக்குள்ள விழிகளும் நரம்புகள் புடைத்த தளர்ந்த உடலும் கொண்டிருந்த சூதனாகிய சர்விதன் “இளையோனே, பெண்களின் குழலுக்கு நீளத்தையும் ஒளியையும், விழிகளுக்கு மலர்வையும், உதடுகளுக்கு செம்முழுப்பையும் அளிப்பவர்கள் கந்தவர்கள். அவர்களின் உடலில் முலைகள் கனிந்தெழுவதும் இடை மெலிந்து ஒழிவதும் தொடை பெருத்து விரிவதும் அவர்களால்தான். அது பனைச்சாறு நிறைந்த கலத்தில் ஒரு கிண்ணம் பழைய கள்ளை உறைகுத்தி மூடி வைப்பதுபோல. கன்னியருக்குள் நேற்று வரை வாழ்ந்த கன்னியர் கொண்ட கனவுகளின் ஒரு கைப்பிடி ஊற்றப்படுகிறது. பின்பு சுவைதுழாவும் நாக்குகளுடன் கின்னரரும் கந்தர்வர்களும் சூழ்ந்து நின்று காத்திருக்கிறார்கள். கன்னியின் இனிமை நொதித்து வெறிதிகழ் கள்ளென்றாகி மூடியைத் திறந்து நுரைத்தெழுகிறது. அவ்வெண்புன்னகையைக் கண்டு அவர்கள் மகிழ்ச்சிக் குரலெழுப்புகிறார்கள். அவர்கள் அவளில் பெய்து விளைய வைப்பவை அனைத்தும் அவர்கள் நுகர்வதற்குரியவைதான்” என்றான்.
“திரும்பத் திரும்ப இக்கதைகளைக் கேட்டு சலித்திருக்கிறேன்” என்றபடி முக்தன் எழுந்தான். “கன்னியர் கந்தர்வர்களால் புணரப்படுகிறார்கள் என்றால் ஆண்கள் எதற்கு?” என்றான். கிரணன் உரக்க நகைத்து “கந்தர்வர்களுக்கு உடல் ஏது? அவர்கள் காமம் கொண்ட ஆணுடலில் புகுந்து பெண்களை அடைகிறார்கள்” என்றான். “ஆண்கள் பெண்களை அடைவதேயில்லையா?” என்றான் முக்தன். “அடைவதுண்டு. மைந்தரைப்பெற்று வளர்ப்பதுண்டு. ஆணும் பெண்ணும் கொள்ளும் எளிய காமமே இங்கு நம்மைச் சூழ்ந்து மிகுதியும் நிகழ்கிறது. ஆணுடலிலும் பெண்ணுடலிலும் கூடி தெய்வங்கள் அடையும் காமம் பிறிதொரு இடத்தில் பிறிதொரு முறையில் நிகழும் வேள்வி.”
“அப்பெற்றி கொள்ளும் மானுட உடல்கள் சிலவே. அதைப் பெற்றபின் அக்கணமே அதிலிருந்து விலகி அதை சுடரெனப் பேணி நிறைவடையும் தகைமை கொண்டவர் மிகச் சிலர். பிறர் அதை தங்கள் எளிய உடல்களில் மீண்டும் நிகழ்த்த எண்ணி முயன்று ஏமாற்றம் கொண்டு சினந்து மேலும் கீழிறங்கி விலங்குகளென்றாகி மாய்கிறார்கள்” என்றான் சர்விதன். “பல்லாயிரம் சிப்பிகளில் ஒன்றில் மட்டும் முத்து விளைவதுபோல. இறைநிகழ்ந்த காமம் தவம் நிறைந்த முனிவரின் சித்தத்திற்கு நிகரானது.”
“வெறுங்கதை. ஒருபோதும் நாம் நமது மெய்யான உவகைகளை அடைவதில்லை. இதோ, மூன்றாண்டுகளாக இக்காவல் மாடத்துடன் நான் கட்டப்பட்டிருக்கிறேன். எனது தந்தை கோட்டையில் ஒரு காவல் மாடத்துடன் கட்டப்பட்டிருந்தார். அங்கு இல்லத்தில் நம் மகளிர் அடுமனைகளுடன் கட்டப்பட்டிருக்கின்றனர். கட்டுத்தறியில் சுற்றிச் சுற்றி வந்து சூழ்ந்திருக்கும் பெருங்கானகமொன்றை கனவு காண்கிறோம். அப்பால் பெரிய வட்டமென தொடுவான் வேலி” என்றான் முக்தன் கசப்புடன் துப்பியபடி. “நமக்கு அனைத்தும் கனவுகளிலேயே அளிக்கப்பட்டுள்ளது. கனவுகளிலேயே நம் உச்சமும் நிகழமுடியுமென்று சூதர்கள் நம்மிடம் சொல்கிறார்கள்” என்றான்.
குடிகாரச்சூதன் நகைத்து “அது மெய். ஆனால் அதனுடன் இணைத்துக்கொள்ள வேண்டியது இரண்டு. அரசர்களும் முனிவர்களும்கூட கட்டுத்தறியில் சுற்றிவருபவர்களே. மானுடராகப் பிறந்த அனைவருக்கும் அவர்கள் ஈட்டி எய்தி நிறைய வேண்டிய அனைத்தும் கனவுகளிலேயே உள்ளன” என்றான். முக்தன் அவனை ஒருகணம் பார்த்துவிட்டு சலிப்புடன் முகம் சுளித்தான். “நீ விரும்பினால் அக்கனவுகளில் ஒரு மிடறை என்னிடமிருந்து அருந்தலாம். இது சூதர்களின் கனவு உறைகுத்தப்பட்ட இன்கடுங்கள்” என்றான் சர்விதன். முக்தன் சினத்துடன் திரும்பி நூலேணியில் இறங்கி கீழே சென்றான். “மிக இளையோன். ஏதுமறியாதவன்” என்றான் கிரணன். “இளமை தனக்கு முடிவிலா வாய்ப்புகள் உள்ளது என்னும் மாயையால் வாழ்த்தப்பட்டிருக்கிறது” என்றான் சர்விதன்.
முக்தன் கீழிறங்கி அந்த அணிக்காட்டின் தளிர்களையும் மலர்களையும் நோக்கியபடி நின்றான். எங்குமுள்ளன தளிர்களும் மலர்களும். இக்காட்டிற்குள் அவை ஒவ்வொன்றும் சொற்களும் அணிகளுமாக நிற்கின்றன. இங்குள்ள ஒவ்வொன்றும் பொருள் கொண்டதாகின்றன. இது முன்பெப்போதோ கவிஞர் சொல்லில் எழுப்பி பின்னர் தெய்வங்களால் மண்ணில் இயற்றப்பட்டது என்கின்றனர். சொல்திரண்ட பெருங்காவியமென ஒற்றை மெய்மையை உணர்த்தி நிற்கிறது என்கின்றன.
இரண்டாண்டுகளாக அக்காட்டின் எல்லையினூடாக அவன் சுற்றி வந்தும் கூட ஒருமுறையேனும் உள்ளே சென்றதில்லை. அதன் மேல் தெற்குக் காற்று அலையெழுப்பிச் சுழன்று வருவதைக் கண்டதுண்டு. நிலவு குளிர்ந்து இறங்கி சூழ்வதை, பனிவெண்மை மூடி காடு முற்றிலும் மறைவதை, அனைவரும் துயில முழங்கால் கட்டியமர்ந்து முழு இரவும் நோக்கி அமர்ந்ததுண்டு. முதற்புலரி ஒளியில் இலைநுனிகள் வேல்கூர் கொள்வதை, மலர்கள் அனலென பற்றிக்கொள்வதை, சுனைகள் விழிதிறப்பதை பார்த்து நிற்கையில் ஒருமுறையேனும் அனைத்துத் தளைகளையும் உடைத்துக்கொண்டு அதற்குள் இறங்கிச் செல்லவேண்டுமென்று தோன்றியதுண்டு.
“அது தடை செய்யப்பட்டுள்ளது” என்று அவன் தோழனாகிய தீர்க்கன் சொன்னான். “அரசத்தடை மட்டுமல்ல, தெய்வங்களின் தடையும் கூட. அரசத்தடையை மீறி அதற்குள் சென்ற பல குடிகளுண்டு. அவர்கள் அனைவரும் சித்தம் பிறழ்ந்து சிரிப்பும் அழுகையும் என கொந்தளிக்கும் நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளனர். அவர்களை அரசர்கள் தண்டித்ததில்லை. இங்கிருக்கும் தெய்வங்கள் ஆணையிடுவதென்ன என்பதை பிறர் அறியட்டும் என்பதற்காகவே அவர்கள் விட்டு வைக்கப்படுவார்கள்.”
“நமது தெருவிலேயே பத்தாண்டுகளுக்கு முன்பு ஒருவர் இருந்தார். பதறும் விழிகளுடன் சிரித்தும் அழுதும் கொப்பளித்தபடி கைகளை வீசி நடனமிட்டபடி தெருக்களை சுற்றி வருவார். சற்றேனும் சித்தம் மீள்கையில் மது தேடி அலைவார். குடித்து மூக்கு வழிவார சாலையோரத்தில் கிடக்கையில் புரியாத மொழியில் எதையோ சொல்லி கைசுட்டுவார். அந்தப் பெரும் பித்து அவ்வாறே உறைந்து நிற்க ஒருநாள் தெருமுனையில் இறந்து கிடந்தார். காட்டின் களி மயக்கால் கொல்லப்பட்டவர் அவர் என்று என் தந்தை எனக்கு சுட்டிக்காட்டி சொன்னார்” என்றான். “அங்கு செல்வது அடாது என்றார் எந்தை. ஆயிரம் கைகளால் அது நம்மை அள்ளி இழுக்கையில் அன்னையை தந்தையை குடியை குலத்தை எண்ணி ஒழிய வேண்டும் என்றார். நான் அது ஏன் நம்மை இழுக்கிறதென்று தந்தையிடம் கேட்டேன். ஏனெனில் நாம் அங்கிருந்துதான் வந்துள்ளோம் என்று தந்தை சொன்னார்” என்றான் தீர்க்கன்.
காட்டின் எல்லையென அமைந்த ஊர்ணையின் உயர்ந்த கரையின் நீர்மருத மரங்களின் வேர்களினூடாக தாவிச் சென்றுகொண்டிருக்கையில் முக்தன் அச்சொற்களை நினைவு கூர்ந்தான். அங்கிருந்துதான் கிளம்பி இருக்கிறோமா என்ன? ஒரு கணம் ஏதோ அயல் தொடுகையென உளம் சிலிர்க்க அவன் திரும்பிப் பார்த்தான். மலைகளை முலைகளாகக்கொண்டு கோதையை ஆடையென அணிந்து நீரோடைகள் நரம்புகளென பின்னிப்பரவியிருக்க மல்லாந்து கிடந்த அந்நிலமகளின் தொடைஇடை சிறுகருங்காடு என்று அது அவனுக்கு தோற்றமளித்தது. ஓயா ஊற்றுகள் சதுப்பென அமைந்த நிலத்திற்கு மேல் எழுந்த வறனுறல் அறியா பசுஞ்சோலை.
மூன்றாவது காவல்மாடத்தை அடைந்தபோது மேலிருந்து தீர்க்கன் கையசைத்து அழைத்தான். முக்தன் இரு கைகளையும் வாய் அருகே குவித்து “என் பணி முடிந்தது” என்றான். “மேலே வா!” என்று தீர்க்கன் கூவினான். முக்தன் தொங்கவிடப்பட்டிருந்த வடத்தைப்பற்றி அதன் முடிச்சுகளில் கால்வைத்து விரைந்தேறி காவல் மாடத்தை அடைந்தான். அங்கு இருவர் வாய்திறந்து எச்சில் கோடுகள் பாறையின் காய்ந்த ஓடைகளென வெளுத்துத்தெரிய துயின்றுகொண்டிருந்தனர். தீர்க்கன் “நேற்றிரவு எனக்கு துயில் நீக்கப்பணி” என்றான். “இவர்கள் விழித்தெழவில்லையா?” என்று அவன் கேட்டான். “நேற்று மாலையே கள்ளருந்தத் தொடங்கினர். நள்ளிரவில் ஒருமுறை விழித்துக்கொண்டு மீண்டும் அருந்தினர். வெயில் முகத்தில் படத்தொடங்கிவிட்டது. உண்மையில் இப்போதுதான் ஆழ்துயிலுக்குள் சென்றிருப்பர். எனக்கு வேறு வழியில்லை” என்று தீர்க்கன் சொன்னான்.
கைகளை நெளித்து சோம்பல் முறித்து “நான் காலைக்கடன்களை கழிக்க வேண்டும். சற்று உணவருந்த வேண்டும்” என்றான் தீர்க்கன். “சென்று வரவேண்டியதுதானே? இவ்வேளையில் ஒரு காவல் மாடத்தில் எவருமில்லையென்றால் என்ன?” என்றான் முக்தன். “இங்கு நான் பணிக்கு வந்து ஒன்றரை ஆண்டுகளாகின்றன. இன்றுவரை இக்காட்டிற்குள் எவரும் நுழைந்ததில்லை. கீசகர் நான் இங்கு வருவதற்கு மூன்று மாதங்களுக்கு முன்புதான் வேட்டைக்கு வந்தார் என்கிறார்கள். நான் எதையும் பார்த்ததில்லை” என்றான் தீர்க்கன் சலிப்புடன். “காட்டிற்கு காவலிடப்பட்டிருப்பது பாரதவர்ஷத்திலேயே இங்குதான் என்று எண்ணுகின்றேன். ஆனால் எப்படியாயினும் இது அரசப்பணி. ஆணையிடப்பட்டதை நாம் நிறைவேற்றியே ஆகவேண்டும்.”
முக்தன் “ஆம். அந்த உணர்வுக்கு பழகியிருக்கிறோம்” என்றான். “இன்று காலை நானும் இந்த வீண்நடிப்பை ஏன் தொடரவேண்டும், இவர்களைத் துயிலவிட்டு கீழிறிங்கிச் சென்று நீராடி உணவுண்டு நிழலில் சற்று ஓய்வெடுப்போம் என்றுதான் எண்ணினேன். அவ்வெண்ணம் எழுந்த சில கணங்களுக்குள்ளேயே இளவரசி கான்நுழையும் கொம்போசை எழுந்தது” என்றான் தீர்க்கன். “அதைத்தான் நானும் எண்ணிக்கொண்டேன். இத்தனை ஆண்டுகளுக்குப்பின் இது என்ன ஒரு புதிய நிகழ்வு?” என்றான் முக்தன். “இவர்கள் நிமித்திகர்களை நம்பியே வாழ்பவர்கள். இளவரசி இந்நாளில் இத்தனை பொழுது இந்தக் காட்டில் கழிப்பது நன்று என்று ஏதேனும் நிமித்திகன் சொல்லியிருக்கக்கூடும்” என்றான் தீர்க்கன்.
முக்தன் “இங்கு அவர்கள் என்ன செய்யப்போகிறார்கள்?” என்றான். “நீராடலாம். மலராடை புனைந்து விளையாடலாம். இங்கிருந்தே பார்த்தாயல்லவா? எத்தனை அழகிய சுனைக்கரைகள், ஓடைமருங்குகள், மலர்ச்சோலைகள்!” முக்தன் “விந்தைதான். இத்தனை அழகிய இடம் பெரும்பாலும் எவராலும் பார்க்கப்படாமல் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இங்கு மலரும் கோடிக்கணக்கான மலர்கள் எவ்விழிகளாலும் பார்க்கப்பட்டிருப்பதில்லை” என்றான். தீர்க்கன் நகைத்து “மூடா, மண்ணில் விரியும் மலர்களில் மிக மிகச் சிலவே மானுடரால் பார்க்கப்படுகின்றன. அழகுணர்வுடன் விழிகளால் மலர்கள் பார்க்கப்படாமல் உதிர்வதை எண்ணி வருந்திய ஏதோ கவிஞன்தான் கந்தர்வர்களையும் கின்னரர்களையும் கற்பனை செய்தான். நலம் நோக்கப்படாத ஒரு மலர்கூட உதிர்வதில்லை என்று கவிதை யாத்தான்.”
முக்தன் “நீ கீழே சென்று வா. நான் அமர்ந்திருக்கிறேன்” என்றான். “உன் சலிப்பை புலரியில் என்மேல் ஏற்றிவிடுவாய்.” தீர்க்கன் நகைத்து “மீண்டும் ஒரு கொம்பொலி எழக்கூடுமென்று எதிர்பார்த்திருக்கிறேன்” என்றான். “ஏன்?” என்றான் முக்தன். “இளவரசி உள்ளே சென்றிருக்கிறார். அங்கு கொடிமண்டபங்களும் தளிர்க்குடில்களும் ஏறுமாடங்களும் என்ன நிலையில் இருக்கின்றன என்று அறியோம். அவற்றைப் பேணுவதற்கு பணிக்கப்பட்டுள்ள ஏவலர்கள் எழுபது பேர். இங்கு நான் காவலுக்கு அமர்ந்தபின் ஒருவரைக்கூட பார்த்ததில்லை. பெரும்பாலும் உள்ளே சென்றதுமே சினங்கொண்டு கூச்சலிடப்போகிறார். குடில்களில் முயல்களும் மான்களும் இருக்கும். ஏறுமாடங்களில் மலைப்பாம்புகள் துயிலக்கூடும்” என்றான்.
முக்தன் நகைத்தபடி “நன்று… அவர்கள் தேடிவருவது அங்கு அரண்மனையில் இல்லாத சிலவற்றைத்தானே? நீ சென்று வா” என்றான். தீர்க்கன் எழுந்து கைகளை விரித்து மீண்டும் நன்றாக நெளிந்து “அமர்ந்திருக்கையில் நம் உடல் பிறிதொன்றாகிறது. அதனுள் நீர்கள் உறைந்து நார்போலாகின்றன” என்றான். பின்னர் கைகளை வீசி “புதையல் காக்கும் பாம்புகளைப்போல ஒரு பணி” என்றான். முக்தன் “அச்சொல்லையே இங்கு உரைக்கலாகாது. இளவரசி நாகப்பிழை கொண்டவர் என்கிறார்கள். இப்போது வந்துள்ள அமணக் கணியனும் அதையே சொல்லியிருக்கிறான்” என்றான். “சொல்லாதபோது மேலும் ஆற்றல்பெறுவதே நாகம், அறிவாயா?” என்றான் தீர்க்கன். “அது வேர்களில் விழுதுகளில் கொடிகளில் வால்களில் ஓடைகளில் எல்லாம் தன்னை தோன்றச்செய்யும் மாயம் கொண்டது.”
சிரித்துக்கொண்டே அவன் இறங்கிச்சென்ற பின்னர் கைகளை முழங்கால் மேல் வைத்து கால் மடித்தமர்ந்து முக்தன் காட்டை நோக்கிக் கொண்டிருந்தான். ஏன் காட்டை பார்க்கவேண்டும்? காவலனாக நான் பார்க்க வேண்டியது இதன் வெளிப்பக்கத்தைத்தான். இணையாக ஓடும் ஊர்ணையின் அலைகளை, இதைக் கடந்து யானையோ கரடியோ வருகின்றனவா என்று. எதிரிப்படைவீரர்களின் படைக்கலன்களின் ஒளி எங்கேனும் திரும்புகின்றதா என்று. ஆனால் வந்த நாள் முதல் பெரும்பாலான தருணங்களில் காட்டை நோக்கியே திரும்பியிருக்கிறேன். எதுவோ என்னில் பிழையென உள்ளது.
அவன் தொலைவில் இலைத்தழைப்புகளுக்கு நடுவே அசைவுகளை கண்டான். எழுந்து நின்று கூர்ந்து பார்த்தபோது அங்கு சுனையின் கரையில் தேர்கள் நின்றிருப்பது தெரிந்தது. உத்தரையும் அவள் சேடியரும் ஆற்றுக்கரையில் ஆடைமாற்றி இளைப்பாறிவிட்டு காவலர் தொடர காட்டுக்குள் சென்று மறைந்தனர். பொன்னிறப் பட்டாடைகள் அணிந்த அவர்களின் உருவங்கள் மிகச்சிறிய வண்டுகள்போல மின்னி ஊர்ந்து மறைந்தன. பின்னர் தேர்களைத் திருப்பி காட்டின் எல்லையைக் கடந்து ஆற்றின் கரையில் இருந்த மரநிழல்களில் அணைத்து நிறுத்தினர். புரவிகள் அவிழ்க்கப்பட்டு இளைப்பாறும் பொருட்டு விடப்பட்டன. தேரோட்டிகளும் ஏவலர்களும் ஆங்காங்கே நிழலில் அமர்ந்து ஓய்வு கொள்ளத்தொடங்கினர்.
காட்டிற்குள் அப்பெண்கள் மட்டும் தனியாகச் செல்கிறார்கள் என்று எண்ணியபோது அவனுள் சிறிய அமைதியின்மை உருவாகியது. கதைகள் சொல்லும் கந்தர்வர்களையும் கின்னரர்களையும் உள்ளூர தானும் நம்புகிறேனா என்று கேட்டுக்கொண்டான். கந்தர்வர்களையல்ல என்று தானே சொல்லிக்கொண்டான். இக்காட்டிற்குள் அஞ்சுவதற்கென ஏதுமில்லை. நச்சுப்பாம்புகள்கூட. பாம்புகளை தேடித்தேடி அழித்திருக்கிறார்கள். பாம்பு கடக்க முடியாதபடி சுற்றிலும் நீர் வேலியிட்டிருக்கிறார்கள். மிஞ்சி பாம்பு வருமென்றால் வேட்டையாட கீரிகளை வளர்த்து நிரப்பியிருக்கிறார்கள்.
தன் நிலையழிவை விந்தையென உணர்ந்தபடி அவன் எழுந்தான். ஒருமுறை உடல் விரித்து சோம்பல் முறித்தான். எப்படியும் ஒரு பாம்பு எஞ்சிவிடும் என்று எங்கோ ஏதோ சூதர் பாடலில் கேட்ட வரி நினைவுக்கு வந்தது.
“எனது பெரிய தந்தை கருவூலத்தில் காவலராக இருந்தார். அவருக்கு மணமாகவில்லை. குடியில்லாமையால் எங்களுடன்தான் இருந்தார். ஒவ்வொரு நாளும் பெரிய தோல் மூட்டைகளில் பொன் நாணயங்கள் உள்ளே வந்துகொண்டும் வெளியே சென்றுகொண்டும் இருக்கும். ஆண்டுக்கு மூன்று வெள்ளி நாணயங்களை ஊதியமாகப்பெற்று நாற்பதாண்டுகாலம் பணியாற்றி முதிர்ந்து இறந்தார்” என்றான் தீர்க்கன். “இந்த அணிக்காட்டின் காவலனாக நான் வந்தபோது பெரியதந்தையைத்தான் எண்ணிக்கொண்டேன்.” முக்தன் புன்னகை செய்தான். அவர்கள் இருவரும் மட்டும் காவல்மாடத்தின்மேல் அமர்ந்திருந்தார்கள். உச்சிவெயில் எழுந்து அமைய இலைவாடும் மணம் காட்டின் மீதிருந்து வந்துகொண்டிருந்தது.
பெரியதந்தை இறப்புமஞ்சத்தில் என்னிடம் தன் இறுதி விழைவை சொன்னார். ஒரு பொன் நாணயத்தையாவது கையில் வைத்து பார்க்கவேண்டும் என்று. நான் ஓடிச்சென்று என் தந்தையிடம் சொன்னேன். “காவலர்களுக்கேது பொன் நாணயம்?” என்றார் அவர். “ஆனால் இறுதிவிழைவு… அதை நிறைவேற்றுவது நம் கடமை” என்றார் என் அன்னை. என் தாய்மாமன் “நம் குலக்கோவிலில் வீற்றிருக்கும் மூதாதையர் காலடியில் பொன்நாணயங்கள் வைக்கப்பட்டுள்ளன. பூசகரிடம் சொல்லி ஒன்றை பெற்றுகொண்டு வந்து அவரிடம் அளிப்போம். அதை தொட்டபின் இறக்கட்டும். தீட்டு கழித்து திரும்ப வைத்துவிடுவோம்” என்றார்.
நான் ஓடிச்சென்று ஆலயத்துப் பூசகரிடம் தாய்மாமன் சொன்னபடி கோரிக்கையை சொன்னேன். பொன்நாணயங்களை மூதாதையரின் காலடியிலிருந்து பெயர்த்தெடுக்க இயலாது என்று அவர் மறுத்துவிட்டார். நான் உண்மையில் அப்போதுதான் அவை பொன் நாணயங்கள் என்றே அறிந்தேன். கொன்றை மலரிதழ் அளவுக்கு சிறிய மஞ்சள் நாணயங்கள் மூதாதையரின் இரு கால்களுக்கும் நடுவே களிமண் பீடத்தில் பதிக்கப்பட்டிருந்தன. அங்கிருந்த இருவரிடம் பெரியதந்தையின் இறுதி விழைவு என்று சொன்னேன். அவர்களும் சினத்துடன் பொன்நாணயங்களை பெயர்த்தெடுப்பது மூதாதையரை சிறுமைப்படுத்துவது என்றார்கள். ஒருவர் சினமும் இளக்காரமுமாக “வேல் தாங்கி காவல்நின்ற மறவனுக்கு பொன் நாணயம் மேலென்ன விழைவு? அடுத்த பிறவியில் வைசியனாகப் பிறக்க திட்டமிடுகிறானா என்ன?” என்றார். பிறர் வேண்டுமென்றே உரக்க நகைத்தனர். அழுதபடி நான் திரும்பி வந்தேன்.
எந்தையிடம் சொன்னபோது “ஆம், நான் அதை எண்ணினேன்” என்றார். என் தாய்மாமன் எப்போதும் ஒரு படி கடந்து சென்று எண்ணுபவர். “ஒரு வெள்ளி நாணயம் கொடுங்கள்” என்றார். வெள்ளி அரைநாணயம் ஒன்றை எடுத்து மஞ்சளை அம்மியில் உரசி அவ்விழுதை அதில் நன்கு பூசி இருமுறை துடைத்து அன்னையிடம் அளித்தார். “விளக்கை சற்று தாழ்த்திவிட்டு இதை பொன் நாணயம் என்று அவர் கையில் கொடு” என்றார். என் அன்னை தயங்கினாள். “கொடு! அன்றி ஏங்கி அவர் உயிர் துறக்கக்கூடும்” என்றார் தாய்மாமன்.
அன்னை தயங்கிய காலடிகளுடன் சென்று பெரியதந்தை அருகே மண்டியிட்டு “மூத்தவரே, தாங்கள் கோரிய பொன்நாணயம்” என்றாள். இறுதி மயக்கத்திலும் அவர் உடல் ஒருமுறை விதிர்த்தது. வலது கால் இழுபட்டுத் துடித்தது. இரு கைகளையும் மலரவைத்து பல்லில்லாத வாயில் உதடுகள் படபடக்க “எங்கே?” என்றார். வலக்கையில் அந்த வெள்ளி நாணயத்தை வைத்தார் அன்னை. விழிகளை சரித்து ஒருமுறை அவர் அதை பார்த்தார். அந்த முகத்தில் விரிந்த புன்னகையை நான் ஒருபோதும் மறக்கமாட்டேன். ஆம் என்பதுபோல் இருமுறை தலையசைத்தபின் விழிகளை மூடிக்கொண்டார். சிறகுதிர்ந்து விழுந்த வண்டுகள்போல இருவிழிகளும் அசைந்தன.
அவரின் உடல் ஓய்ந்ததை நான் திகைத்தவன்போல நோக்கி நின்றேன். தந்தை பதறியபடி “அந்த வெள்ளி நாணயத்தை எடுத்துவிடு, உடனடியாக” என்றார். தாய்மாமன் “ஏன்?” என்று கேட்க “இப்போது அவர் மானுடரல்ல. இப்போது அவருக்குத் தெரியும்” என்றார். திகைத்தவர்போல தாய்மாமன் காலடி வைத்து வெளியே சென்று நின்றார். அன்னை பெரியதந்தையின் மூடிய விரல்களைப் பிரித்து அந்த நாணயத்தை எடுக்க முயன்றாள். இறுதி மூர்ச்சையில் அவர் தன் கைகளை முறுக்கிப் பற்றியிருந்தார். தாய்மாமன் அறைக்கு வெளியே நின்றபடி “சற்று போகட்டும்… உடல் தளரட்டும். நரம்புகள் இன்னும் இறக்கவில்லை” என்றார். “இல்லை இல்லை எடுத்துவிடு” என்றார் தந்தை.
அந்தத் தருணத்தின் அழுத்தத்தை தாள முடியாமல் நான் பின்னால் நகர்ந்து சுவரோடு ஒண்டிக்கொண்டேன். “முடியவில்லை. இறுகப்பற்றியிருக்கிறார்” என்றாள் அன்னை. தந்தை முன்னால் சென்று குனிந்து அவ்விரல்களைப் பிடித்து ஒடிப்பதுபோல விரித்து நாணயத்தை எடுத்தார். அவர் கைகளில் மஞ்சள் படிந்திருந்தது. பொன் நாணயம் மீண்டும் வெள்ளியென்றாகியிருந்தது. “அதை எங்கேனும் வீசிவிடுங்கள்” என்றாள் அன்னை. “இல்லை. அது இங்கிருக்கலாகாது. இங்கிருந்தால் அவர் மீண்டும் இங்குதான் வருவார்” என்று தந்தை சொன்னார். “இதை நாம் வடக்குக் காட்டில் வீசிவிடலாம்” என்று தாய்மாமன் சொன்னார். “என்ன சொல்கிறாய்?” என்று தந்தை கேட்க “அவர் அங்குதான் செல்வார்” என்றார்.
என் தாய்மாமன் அப்போது இந்தக் காட்டின் காவலராக இருந்தார். அந்த நாணயத்தை ஒரு சிறு மரக்குலுக்கையில் போட்டு குலதெய்வத்தின் கோயிலில் ஒரு மூலையில் கொண்டு ஒளித்து வைத்தார். மூத்ததந்தையை சிதையேற்றி நீராடி ஊண்நீத்து துயிலொழிந்து மறுநாள் பாலூற்றி நினைப்பொழிந்தபின் அந்தச் சிமிழை எடுத்து வந்து தன் காவல் மாடத்தில் நின்றபடி மும்முறை தலைக்கு மேலே சுழற்றி உள்ளே வீசினார். இந்தக் காட்டில் எங்கோதான் அது இருக்கிறது.
முக்தன் சிரித்தபடி “ஆம். அப்படி ஒரு வழக்கம் இங்குண்டு. இறந்தவர்களுக்குரியவை என்று கருதப்படும் பொருட்களை இங்கு கொண்டு வீசுகிறார்கள்” என்றான். தீர்க்கன் “சில நாட்களுக்குப்பின் என் அன்னைக்கு ஒரு கனவு வந்தது. பூத்துச் செறிந்த அணிக்காடொன்றுக்குள் அவள் சென்றுகொண்டிருக்கிறாள். இலைகளை விலக்கி புதர்களைக் கடந்து. தரையெங்கும் மஞ்சள் மலர்கள் பொழிந்து மூடியிருக்கின்றன. அந்த மலர்களை கைகளால் அகற்றி அகற்றி அவள் எதையோ தேடினாள். ஓர் இடத்தில் கொன்றைமலரொன்று கைக்கு சிக்கியது. கையில் எடுத்தபோது அது மலரல்ல உலோகம் என்று தெரிந்தது. ஒளிக்காக அங்குமிங்கும் திருப்பி அதை பார்த்தாள். கூர்ந்து நோக்க நோக்க அது மங்கலடைந்துகொண்டே சென்றது. ஆனால் கைகள் சொல்லின அது பொன் நாணயம் என்று.
விழித்துக்கொண்டதும் ஓடிவந்து தந்தையை உலுக்கி எழுப்பி அக்கனவை சொன்னாள். திண்ணையில் படுத்திருந்த தாய்மாமன் எழுந்து வந்து “ஆம், அது பொன்னாகிவிட்டது” என்றார். அவர்கள் மூவரும் உரக்க நகைத்து பேசிக்கொண்டிருந்தனர். பாயில் எழுந்தமர்ந்து நான் அவர்களின் உவகையை பார்த்துக்கொண்டிருந்தேன். பெரியவர் இறந்து பன்னிரு நாட்களுக்கு அவர்களை பேரெடையென ஏறி அழுத்திக்கொண்டிருந்த ஒன்று எழுந்து மறைந்ததன் விடுதலையை கொண்டாடிக்கொண்டிருந்தார்கள்.
அவர்கள் இருவரும் சிலகணங்கள் சொல்லின்றி வேறேங்கோ விழிநட்டு அமர்ந்திருந்தார்கள். தீர்க்கன் எழுந்து “இன்றிரவும் எனக்கே காவல்பணி… நான் சற்று துயில்கிறேன்” என்றான். “நான் விழித்திருக்கிறேன். நீ துயில்கொள்” என்றான் முக்தன்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 19
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–56
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–55
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 86
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 3
June 16, 2017
ஒரு விளக்கம், ஒரு வம்பு, ஓர் ஆரூடம்
அன்புள்ள ஜெமோ
மலேசியாவில் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதி குருகுலத்தைப்பற்றி எழுதும்போது மலேசியாவில் சுவாமி பிரம்மானந்தா அனைவராலும் முதன்மையான ஆளுமையாகக் கருதப்படுபவர். அவருடைய குருமரபு நீண்ட வரலாறுள்ளது. ராமகிருஷ்ண பரமஹம்சர், சிவானந்தர், சின்மயானந்தர், தயானந்த சரஸ்வதி என அவருடைய தொடர்ச்சியைச் சொல்லமுடியும் என எழுதியிருந்தீர்கள். அந்த குருகுலத்திலிருந்த படத்திலும் அதைக்காண முடிந்தது. அந்த தொடர்ச்சி என்ன என்று எனக்குப்புரியவில்லை. அதை ஓர் ஐயமாக முன்வைக்கிறேன்
ராமநாதன்
அன்புள்ள ராமநாதன்,
எனக்குச் சொல்லப்பட்டதுதான். சுவாமி சிவானந்தரின் ஆசிரியர் விஸ்வானந்த சரஸ்வதி ராமகிருஷ்ண பரமஹம்சரின் ஞானமரபில் வந்தவர். சுவாமி சின்மயானந்தர் சுவாமி சிவானந்தரின் மாணவர். சின்மயானந்தரின் மாணவர்தான் தயானந்த சரஸ்வதி. அவரது மாணவர் மலேசியாவின் சுவாமி பிரம்மானந்தர். அதையே நான் குறிப்பிட்டேன்.
ஜெ
*
பொ.வேல்சாமி விஷ்ணுபுரம் நூலைப்பற்றி எழுதியிருக்கும் ஒரு குறிப்பை இத்துடன் அனுப்பியிருக்கிறேன். அதை தகவல்கள் தவறான ‘ஆதாரமில்லாத’ நூல் என்கிறார். அதைப்பாராட்டி உங்கள் அடிப்பொடியினர் கூட்டம் போட்டபோது அவர் வந்து எதிர்த்தார் என்கிறார். உங்கள் கருத்து என்ன என அறிய விரும்புகிறேன்
ராஜ்
அன்புள்ள ராஜ்,
பொ.வேல்சாமி பயங்கரமாக உண்மை பேசுபவர். அவர் சொல்லும் அந்தக்கூட்டம் அ.மார்க்ஸின் அணுக்கர்களால் கூட்டப்பட்டது. அந்நூலை அக்காலத்தில் பாராட்டியவர்கள் அனைவருமே இலக்கிய முன்னோடிகள்.சில கிழட்டுப்பறவைகள் உங்கள் தோளில் வந்தமர்ந்திருக்கின்றன என அதை அ,மார்க்ஸ் அந்தக்கூட்டத்தில் குமுறலுடன் சொன்னார்.
அதற்கு எதிர்வினையாக கூட்டப்பட்ட அக்கூட்டத்தில் அன்று பேசியவர்களில் எவரும் அந்நூலை பாராட்டவில்லை. அ.மார்க்ஸ், அ.மங்கை, அதியமான் என அனைவரும் அதைக் கடுமையாக இகழ்ந்தே பேசினர்.
அக்கூட்டத்தில் ‘நான் ‘இங்கு ஏன் வந்தேன் என்றால் நீங்கள் என்னதான் சொல்கிறீர்கள் என்று பார்க்கத்தான். விஷ்ணுபுரத்திற்கு கண்ணேறு கழிந்தது’ என்று சற்று கிண்டலுடன் நான் பேச அ.மார்க்ஸ் கொதித்து அதைப்பற்றி மேலும் வசைபாடினார்.
அக்கூட்டத்தில் பொ.வேல்சாமி ஒரு கட்டுரைவாசித்தார். அவருடைய துரதிருஷ்டம் அது முன்னரே பிரசுரமும் ஆகியிருந்தது. அந்நாவலின் காலக்குழப்பங்கள் பற்றியது அக்கட்டுரை. என்ன பிரச்சினை என்றால் அந்நாவலின் கால ஒழுங்கு ஆ,அ,இ என்னும் வரிசையில் மாற்றப்பட்டிருப்பதை அவர் புரிந்துகொள்ளவில்லை. அ.,ஆ,இ என நேர்கோட்டு வரிசையில் அப்பாவித்தனமாக வாசித்து ’அம்புட்டும் தப்பு’ என எழுதியிருந்தார். அந்தக் கட்டுரை இப்போதும் கிடைக்குமென நினைக்கிறேன்
கூட்டம்முடிந்தபின் நான் அந்த மாபெரும் பிழையை பொ.வேல்சாமிக்குச் சுட்டிக்காட்டியபோது ‘ஆமாம் நான் சரியாக வாசிக்கவில்லை. திருத்திக்கொள்கிறேன்’ என்றார். ஆனால் அதே பழைய கட்டுரையை மீண்டும் ஒரு ஆசாமி அப்படியே இணையத்தில் ஏற்றினார்.
அதன்பின் நெடுங்காலம் எங்களுக்குள் ஒருவகை நட்பே நிலவியது.சரியான தகவல்களைச் சுட்டி அவர் எழுதியதாகச் சொல்லிக்கொள்ளும் அந்த நூலை எழுதும் காலகட்டத்தில் பலமுறை அதைப்பற்றிய செய்திகளை என்னிடம் பேசியிருக்கிறார். அவருடைய இல்லத்திற்குச் சென்று விவாதித்திருக்கிறேன். ஆனால் நூலை வாசித்தபின் அவருடைய ‘ஆய்வுநூலுக்கு’ எந்த வகை ஆய்வுமதிப்பும் இல்லை என்று அவரிடம் நான் சொல்லியிருக்கிறேன்.
நானறிந்தது அத்தகைய ஆய்வுநூலை எழுதத்தேவையான வாசிப்பு அவருக்கு இல்லை என்பதே. கல்வெட்டுகளையோ ஆவணங்களையோ வாசிக்கும் பயிற்சி இல்லை. இத்தளத்தில் எழுதப்பட்டுள்ள ஆங்கிலநூல்களை வாசிக்கும் மொழிப்பயிற்சியும் இல்லை. அவருடைய விருப்பக்கற்பனைக்கு ஆய்வுத்தளத்தில் எந்த மதிப்பும் இல்லை என நட்புடன் சொல்லியிருக்கிறேன். பலபத்தாண்டுகளுக்கு முன். இப்போது முகநூலில் ஏன் குமுறுகிறார் தெரியவில்லை. அதற்கும் அங்கே பத்துபேர் வந்து நிற்பார்கள் என நினைக்கிறேன்
பொ.வேல்சாமி ஆய்வாளரோ இலக்கியவாதியோ அல்ல. இரண்டிலும் ஆசை இருக்கிறது. ஆய்வாளருக்குரிய முறைமையும் நடுநிலைமையும் அவரிடம் இல்லை. இலக்கியவாதிக்குரிய ரசனையும் இல்லை.அவருடைய ஆய்வுகளனைத்துமே நாயக்கர் ஆதிக்கத்தை பிராமண ஆதிக்கத்தின் முன் நிறுத்தி வெள்ளைபூசும் பரிதாபகரமான முயற்சிகள் மட்டுமே. இத்தகைய சாதிய ஆய்வுகள் நாளைக்கு நாற்பதென்று இங்கே வெளிவந்து கொண்டிருக்கின்றன
ஒருவகையில் பாவம்தான். ஆனால் முகநூலில் ஒருமாதிரி ஜொலிக்க இதெல்லாமே போதுமென நினைக்கிறேன். வாழ்க
ஜெ
அன்புள்ள ஜெ
அ.மார்க்ஸ் நீங்கள் திமுக பாஜக இணைப்புக்காக திட்டமிட்டு ‘ஒற்றை இந்துத்துவா கருத்தரங்கை’ லட்சுமி மணிவண்ணன் உதவியிடன் நடத்தியிருப்பதாக எழுதியிருந்தார். வாசிப்புக்காக…
செல்வராஜ்
அன்புள்ள செல்வராஜ்,
அந்தப்பயம் எப்போதும் இருக்கவேண்டும். நாங்கள்லாம் யாரு! தமிழக அரசியலையே தீர்மானிப்போம்ல!
சரி, வழியே ஒரு அபிப்பிராயம். நான் இப்போதைக்கு ஸ்டாலின் மட்டுமே தமிழகத்தின் மீட்பு என நினைக்கிறேன். திமுக விரைவில் ஆட்சிக்கு வரும் என்றும் கணிக்கிறேன்
ஜெ
,.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
யானைகளின் மரணங்கள்- – எம்.ரிஷான் ஷெரீப்
உமர் லெப்பை – ரூபாயில்
கொம்பன். ரிஷான் ஷேரிஃப் எடுத்த படம்
[யானை என்னும் பெருமிதம் -படங்கள்]
அண்மையில், வரட்சியால் மாண்டு போன யானையைக் குறித்த பதிவு மிகுந்த கவலையைத் தோற்றுவித்தது. அப் பெருத்த உருவங்களின் உயிர் பிரியும் வலியை ஒருபோதும் இயற்கை தந்துவிட முடியாது. மனிதர்கள்தான் அவற்றைத் தோற்றுவிக்கிறார்கள். வரட்சி என்பது என்ன? அதைத் தோற்றுவிக்க நாம்தானே காரணமாகிறோம்? இயன்றவரை காடுகளை அழித்து, மழையைத் தடுத்து, மனிதக் குடியிருப்புக்களை உருவாக்கி விடுகிறோம். பாதைகளை, புகையிரதத் தண்டவாளங்களை நிர்மாணிக்கிறோம். அதுவரையில் தமது நிலங்களில் பத்திரமாக இருந்த யானைகள் இப் புதிய மாற்றங்களைக் கண்டு அரண்டு விடுகின்றன. அம் மிரட்சியே, அந்த ஜந்துக்களை முரட்டுத்தனமாகவும் மாற்றிவிடுகின்றன. தமது வாழ்வாதாரத்தைச் சிதைக்கும் எவற்றின் மீதும் இவ்விதமான முரட்டுத்தனங்களைப் பிரதிபலிப்பது, உயிர்ஜீவிகளின் இயல்பு இல்லையா?
இலங்கையில் பத்தொன்பதாம் நூற்றாண்டுகளிலிருந்து யானை வேட்டை எனும் விளையாட்டு மிகப் பிரசித்தமானதாக இருந்திருக்கிறது. அதன் சித்திரங்களை வெளிநாட்டு சஞ்சிகைகளில் பிரசுரித்த பிரித்தானிய ஆளுநர்கள், யானை வேட்டைக்கு வெளிநாட்டுவாசிகளை வரும்படி ஈர்த்திருக்கிறார்கள். இவ் வேட்டைக்கு உதவியாக கிராம மக்களைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இவ் வெள்ளையர்கள், கிராம மக்களின் உதவியோடு காட்டு யானைகளைக் கொன்று அதை ஒரு விளையாட்டாகவும், தம்மை வேட்டைக்கார வீரர்களாகவும் பிரதிபலித்து பெருமை கொண்டிருக்கிறார்கள்.
இலங்கையின் மலையகப் பிரதேசங்களில் ஒன்றான பதுளையில் பிரபலமான ‘St. Marks Anglican Church’ பள்ளியை நிர்மாணித்த Major Thomas William Rogers ( 1804 -1845) இலங்கையில் பாதைகளையும் நிர்மாணித்திருக்கிறார். என்றாலும், இப்போது அவர் இலங்கையில் 1400 இற்கும் அதிகமான யானைகளைக் கொன்ற ஒரு கொலைகார வேட்டைக்காரனாகவே மக்களால் அறியப்படுகிறார். விலங்குகளைக் கொல்வதற்காக வேட்டைத் துப்பாக்கியைப் பயன்படுத்தும் முறையை பாமர மக்களுக்குக் கற்றுக் கொடுத்ததும் இவரே. உயிர் கொல்லும் ஆயுதத்தைக் கையிலெடுக்கத் தயங்கிய ஊர் மக்களிடம், ‘இதனைப் பயன்படுத்துவதன் மூலம் காட்டு விலங்குகளிடமிருந்து விவசாய நிலங்களைப் பாதுகாக்கலாம்’ எனப் போதித்திருக்கிறார். 1834 முதல் 1845 வரையான 11 வருட காலப்பகுதியில் 1400 இற்கும் அதிகமான யானைகளைக் கொன்று அக் காலத்தில் பிரபலமான வேட்டைக்காரர் என அறியப்பட்ட இவர், இன்று வரலாற்றில் ஒரு கொலைகாரராகவே பதியப்பட்டிருக்கிறார். இவரது மரணமும் கூட, இயற்கை அளித்த தண்டனையாக, மின்னல் தாக்கியே நிகழ்ந்திருக்கிறது. இவரதும், இவரது யானை வேட்டைகள் குறித்த பிரசித்தமான சரித்திரங்களையும் ‘The Fate of Major Rogers: A Buddhist Mystery of Ceylon’, ‘The Wild Elephant in Ceylon’ ஆகிய தொகுப்புக்களில் வாசிக்கலாம்.
இப்போதும் கூட உலகில் யானை வேட்டை என்பது பணம் படைத்தவர்கள் பொழுதுபோக்காக விளையாடும் பெரும் விளையாட்டு. அண்மையில் இணையத்தில் ஒரு புகைப்படத்தைப் பார்க்க நேரிட்டது. உணவை மென்று கொண்டிருந்த யானையொன்றை துப்பாக்கியால் சுட்டுக் கொன்று வீழ்த்தி, அதனருகே பிள்ளைகளோடு பெருமையோடு நின்று புகைப்படமெடுத்து தம்மை வீரர்கள் எனச் சித்தரிக்க முயலும் ஒரு தம்பதியின் புகைப்படம் அதிர்ச்சியைத் தந்தது. இப் படுகொலை மூலம் இவர்கள் எதைச் சாதித்திருக்கிறார்கள்? தமது உயிருக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தாத ஒரு விலங்கைச் சுட்டிருக்கிறார்கள். அதன் உயிரைப் பறிக்க இவ்வாறானவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறது? உலகில் யானைகளின் எண்ணிக்கை அதிகமாகவே இருந்தாலும் கூட, அதனை மட்டுப்படுத்த அவற்றை வேட்டையாடுவது ஒன்றேதான் வழிமுறையா என்ன?
தனது சிறுவயது முதல் ஒரு நண்பனைப் போல, எனது வீட்டினருகே வளர்ந்து வந்த கொம்பன் யானை, சில வருடங்களுக்கு முன்னால் மின்னல் தாக்குதலில் பலியானது. தோட்டத்தில் அதைப் பிணைத்திருந்த சங்கிலியினூடாக மின்னல் பாய்ந்ததில் ஓர் மழை இரவில் அது மரித்து வீழ்ந்தது. அது மரணிப்பதற்கு சில தினங்களிற்கு முன்னர் நான் எடுத்த புகைப்படமே இங்கிருக்கிறது. அந்த யானை மரித்ததும், ஒரு விலங்கெனப் பார்க்காது, சடலத்தைப் பார்வையிட பல ஊர்களிலிருந்தும், பல இனங்களைச் சேர்ந்த மக்கள் திரண்டு வந்திருந்தார்கள். இறுதிச் சடங்குகள் மிகவும் சிறப்பாக சகல வித கௌரவத்தோடும் நடைபெற்றன. அனைத்து மக்களும் அந்தக் கொம்பனை நேசித்ததற்குக் காரணமிருக்கிறது.
[யானை செல்வந்தர்களின் கேளிக்கையும் வேட்டையும்]
குழந்தைகளை யானையின் மடியின் கீழால் கொண்டு சென்றால், அக் குழந்தைகளைப் பீடித்திருக்கும், பீடிக்கப் போகும் நோய், பிணி, இன்னல்கள் அனைத்தும் நீங்கிவிடும் என்பதாக மக்களிடம் ஒரு நம்பிக்கையிருக்கிறது. எனவே அதன் பிரகாரம் அந்த யானையின் பாதங்களுக்கிடையே ஊர் மக்களில் பெரும்பாலானோர் தம் சிறுவயதில் போய் வந்திருக்கிறார்கள். கண்ணீர் ததும்பிய முகங்களோடு அவர்கள் யானையின் இறுதிச் சடங்கில் கலந்துகொண்டமையானது, காலாகாலத்துக்கும் அவர்களின் இன்னல்களை நீக்கிய பெருமையை ஏதுமறியா அந்த அப்பாவி ஜீவன் கொண்டிருப்பதாக எண்ணத் தோன்றியது.
இலங்கையில் யானைகளை வருடந்தோறும் நடைபெறும் ‘பெரஹர’ எனும் பௌத்த மதச் சடங்குகளில் பயன்படுத்துகிறார்கள். கேரளத்தில் போலவே பட்டு வண்ணத் துணிகளாலும், பளபளக்கும் சிறு விளக்குகளாலும் யானைகளை அலங்கரிப்பார்கள். அவை பெருந்தெருவில் ஊர்வலமாகச் செல்லும். இந் நடைமுறை கேரளாவிலிருந்தே வந்திருக்கக் கூடும். ஒரு முரண்நகையாக இலங்கையின் பௌத்த மத ஊர்வலத்தின் முதல் யானைப் பாகன் ஒரு முஸ்லிம். உமர் லெப்பை பணிக்கர் என அறியப்படும் அவரதும், யானையினதும் புகைப்படங்களை இலங்கையின் ஆயிரம் ரூபாய் நோட்டுக்களில் அச்சிட்டதன் மூலம் கடந்த நூற்றாண்டு முதல் பல தசாப்தங்களாக கௌரவித்து வருகிறது இலங்கை அரசு.
[ரயிலில் கிணற்றில் யானைகளின் சாவு]
இலங்கையில் புகையிரதங்களில் மோதுண்டு இறந்துவிடுபவை, அதிவேகப் பாதை வாகனங்களில் மோதி இறப்பவை, பாதுகாப்பற்ற விவசாயக் கிணறுகளில் விழுந்து இறப்பவை, மக்கள் குடியிருப்புக்களில் அத்துமீறி நுழைவதால் மின்சார வேலியும், கண்ணிவெடிகளும், வெடிகுண்டுகளும் கொல்பவை என வருடத்துக்கு குறைந்தது நூறு யானைகளேனும் அகாலமாக மரணித்து விடுகின்றன. தந்தத்துக்காகக் கொல்லப்படுவது சம்பந்தமான யானைகளின் மரண அறிக்கைகள் முன்பு நிறைந்திருந்தன. தற்போது அந்த நிலைமை குறைந்திருக்கிறது. அறவே இல்லையென்று சொல்வதற்கில்லை.
ஆனால் தற்காலத்தில் இலங்கையில் யானைகளின் மரணங்கள் அதிகமாக நிகழ்வது ஆயுதங்களால் அல்ல. யாரும் பெரிதாக எடுத்துக் கொள்ளாத, நலிவடையாத குப்பைகள் அண்மைக்காலமாக யானைகளை மரணத்துக்கு இட்டுச் சென்று கொண்டிருக்கின்றன. இலங்கையின் வனங்களில் சஞ்சரிக்கச் செல்லும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு உல்லாசப் பிரயாணிகள் காடுகளில் விட்டு வரும் பொலிதீன் பைகள், பிளாஸ்டிக் துண்டுகள் போன்றவை யானைகளால் உணவாகக் கொள்ளப்படுகின்றன. யானைகளால் விழுங்கப்படும் அவை செரிக்காது, உடலிலிருந்து வெளியேறாது அடைத்துக் கொண்டு யானைகளைக் கொன்று விடுகின்றன. அண்மையில் இலங்கையில் அடுத்தடுத்து மரணித்த யானைகளின் வயிற்றைக் கிழித்துப் பார்த்து இதனை உறுதிப்படுத்த முடிந்தது.
[இறந்த யானை உடலின் பிளாஸ்டிக் கழிவுகள்]
என்னதான் பொலிதீன் மற்றும் பிளாஸ்டிக் பாவனையைக் கட்டுப்படுத்த வேண்டும் என பல அறிக்கைகள் விடப்பட்ட போதிலும், இலகுவையும் வசதியையும் கருத்திற்கொண்டு, எங்கேயோ வீசி விட்டு வருவதற்குத்தானே என்ற மனப்பாங்கோடு அநேகமான மக்கள் இன்னும் அவற்றைப் பற்றிப் பிடித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வலிய விலங்கு என்பதனால் யானையின் மரணம் எமக்குத் தெளிவாகத் தெரிகிறது. பொலிதீன், பிளாஸ்டிக்கை உட்கொண்டு தினந்தோறும் எத்தனை எத்தனையோ வன விலங்குகளும், பட்சிகளும், மீன்களும், ஆமைகளும் நாமறியாது மரித்துக் கொண்டேயிருக்கின்றன.
நான் ஆரம்பத்தில் சொன்னதுபோல, இயற்கையோடு இணைந்து வாழும் ஐந்தறிவு ஜீவன்களுக்கு கொடிய மரணத்தை ஒருபோதும் இயற்கை அளிப்பதில்லை. நாம்தான் அவற்றின் மரணத்துக்குக் காரணமாக இருந்துகொண்டிருக்கிறோம். மரிக்கும் அந்த உயிர்களின் மூலமாகப் பாடம் கற்று, இனி எந்தவொரு உயிரும் அவ்வாறு மரிக்காதிருக்க, நீதமான எந்தவொரு தீர்ப்பையும் வழங்க யாருமேயில்லை என்பதுதான் நிஜம். காட்டு யானைகளைக் கொல்தல் என்பது செல்வந்தர்களுக்கு ஒரு வீர விளையாட்டு. விவசாய நிலங்களைக் கொண்ட ஏழைகளுக்கு ஒரு ஆபத்து நீங்கல். படித்தவர்களுக்கு அக் கணத்தைக் கடந்துபோக ஒரு செய்தி மாத்திரமே.
- எம்.ரிஷான் ஷெரீப்
mrishanshareef@gmail.com
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers








