Jeyamohan's Blog, page 1627
July 4, 2017
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 42
41. தனிநகை
விராடபுரியின் அரண்மனையில் திரௌபதிக்கு தனியறை ஒன்று ஒதுக்கப்பட்டது. அரசி சுதேஷ்ணையின் ஆணைப்படி அவ்வறையை அவளுக்குக் காட்டுவதற்கு அவளை அழைத்துச் சென்ற தலைமைச்சேடி பிரீதை அவளிடம் “இங்கு இளம் சேடியர் எவருக்கும் தனியறைகள் ஒதுக்கப்படுவதில்லை. அவர்கள் பொதுக்கூடங்களில்தான் அந்தியுறங்க வேண்டுமென்பது ஆணை” என்றாள். திரௌபதி திரும்பி அவளை பார்க்கவில்லை. அவள் மெல்லிய சிரிப்பொலியுடன் “எவர் எங்கு எவருடன் சென்றிருக்கிறாளென்ற கணக்கை தலைமைச்சேடி எடுக்கவேண்டுமல்லவா? அதற்கு உகந்த வழி அதுவே அன்றி, தனியறைகள்தோறும் சென்று கதவைத்தட்டவா முடியும்?” என்றாள்.
திரௌபதி அவளை நோக்காமலேயே நடந்தாள். எதையோ மிதித்து குழப்புவதுபோன்ற காலடிகளுடன் ததும்பும் தடித்த வெண்ணிற உடலை உந்தி உந்தி நடந்தாள் பிரீதை. உருண்ட முகமும் மின்னும் சிறிய கண்களும் கொண்ட பிரீதை முன்பொரு காலத்தில் அழகியெனக்கூட தோன்றியிருக்கக்கூடும். வாழ்வினூடாக ஊறி அவள் முகத்தில் தேங்கியிருந்த அறியமுடியாத நஞ்சு ஒன்று பார்த்த முதற்கணமே எரிச்சலையும் வெறுப்பையும் உருவாக்குவதாக இருந்தது. மூச்சிரைத்தபடி வியர்வை வாடை எழ அவள் நடந்தாள். அவள் மூச்சில் வெந்த ஊனின் கெடுமணம் இருந்தது.
“இந்த அறையில் முன்பு நான்தான் தங்கியிருந்தேன். என்னை அடுமனைக்கூடத்தின் தலைவியாக அமர்த்தியபோது இங்கிருந்து ஒழிந்து சென்றேன். அதிலிருந்து இங்கு எவரும் தங்குவதில்லை. உள்ளே பெட்டிகள்தான் இருந்தன. அரசி ஆணையிட்டதனால் இதை தூய்மை செய்யச்சொன்னேன்” என்று சொல்லி அவள் நீண்ட மூவெட்டுத் தாழ்க்கோலால் அதன் பூட்டை திறந்தாள். மும்முறை சுழற்றி உள்ளே தாழ்விலகும் ஒலியை கேட்டபின் கதவை தள்ளித்திறந்து “குனிந்து வரவேண்டும். தலை மேலே முட்டக்கூடும்” என்று சொல்லி உள்ளே சென்றாள்.
திரௌபதி மிகவும் குனியவேண்டியிருந்தது. மிகச்சிறிய அறை. இருகைகளையும் விரித்தால் இரு சுவர்களையும் தொடமுடியுமென்று தோன்றியது. சிறிய ஒரு சாளரம் மட்டுமே இருந்தது. கைகளை தூக்கினால் மச்சுப்பலகை முட்டியது. முழங்காலளவு உயரம் கொண்ட சிறிய மஞ்சம் ஒன்று அறையில் போடப்பட்டிருந்தது. அந்த மஞ்சம் அளவுக்கே இடம் எஞ்சியிருந்தது. “இங்கு ஒரு பெரிய மரப்பெட்டி உள்ளது. உங்கள் பொருட்களை வைத்துக்கொள்ளலாம். அதை மூடி தரையில் அமர்ந்து பெட்டி மேல் ஓலைகளை வைத்து எழுதவும் செய்யலாம்” என்று பிரீதை சொன்னாள். “நீங்கள் ஓலைகளில் எழுதுவதை விரும்புவீர்களென்று அரசி என்னிடம் சொன்னார்.”
மீண்டும் அந்தச் சிரிப்பு. அது வெறும் ஒலியாகவே அவளிடமிருந்து எழுந்தது. முகத்திலும் கண்களிலும் அச்சிரிப்பு தெரியவில்லை. “மலரையோ கணையாழியையோ அனுப்புவதைவிட ஓர் ஓலையில் இரண்டு வரி எழுதி அனுப்பினால் ஆண்கள் பெரிதும் மகிழ்கிறார்கள். நூல்கற்கத் தெரியாதவர்களுக்குக்கூட கற்ற பெண்ணொருத்தியுடன் கூடுவது பெருமிதத்தை அளிக்கிறது” என்றாள். “அடுமனைச்சேடியரில்கூட எழுத்து தெரிந்தவளுக்கு மதிப்பு மிகுதி. இங்கே அனிதை என்று ஒருத்தி இருந்தாள். காவியம் கற்றவள் என்பார்கள். புரவிச்சூதன் ஒருவனுடன் சென்றாள். அவன் அவளை அயலூர் விடுதியில் கைவிட்டுவிட்டுச் சென்றான் என்றார்கள்.”
திரௌபதி அவளை நோக்கி திரும்பி “என்னுடைய மரவுரிகளும் தலையணைகளும் எங்கே?” என்றாள். அவள் தடுமாறி “அங்கே வெளியே” என்றாள். நேருக்கு நேர் விழிநோக்கிப்பேசுவது அவளை நிலைகுலைய வைக்கிறது என்பதை திரௌபதி முன்னரே கண்டிருந்தாள். பிறரில் அவள் எழுப்பும் வெறுப்பும் கசப்பும் அவள் தனக்குச் சுற்றும் போட்டுக்கொண்டிருக்கும் அரண். “அவற்றை எடுத்துக்கொண்டு வந்து இந்த மஞ்சத்தில் வை” என்று திரௌபதி ஆணையிட்டாள். அறியாது “அவ்வாறே” என்றபின் பிரீதை சட்டென்று முகம் சிவந்து விழிகள் எரிய “சேடியர் தங்கள் பணிகளை தாங்களேதான் செய்துகொள்ளவேண்டும்” என்றாள்.
“நன்று! இப்பணிகளைச் செய்ய பிறிதொரு சேடியை அனுப்பும்படி நான் அரசியிடம் சொல்கிறேன்” என்றாள் திரௌபதி. பிரீதை தடுமாறி “இல்லை, நான் அவ்வாறு சொல்லவில்லை. இதோ எடுத்துக்கொண்டு வருகிறேன்” என்று சொல்லி வெளியே சென்றாள். அங்கு அவள் பிறிதொரு சேடியை நோக்கி “யாரடி? அங்கு என்ன செய்கிறாய்? இந்த மரவுரிகளையும் தலையணைகளையும் எடுத்து உள்ளே வைக்கவேண்டுமென்று உன்னிடம் பலமுறை சொல்லியிருந்தேனல்லவா? எழுதித்தந்தால்தான் செய்வீர்களோ? சவுக்கின் சுவை என்ன என்று உங்கள் தோல்களுக்கு இன்னும் தெரியவில்லை. நான் எப்போதும் இதேபோல பொறுமையாக இருக்க மாட்டேன்” என்று கூச்சலிட்டது கேட்டது.
மாநிற உடலும் நீண்ட முகமும் பெரிய கண்களும் கொண்ட சேடிப்பெண் ஒருத்தி மரவுரியையும் தலையணையையும் உள்ளே எடுத்துக்கொண்டு வந்து மரவுரிகளை சீராக விரித்து அவற்றில் தலையணையை வைத்தாள். திரௌபதி மரப்பெட்டிமேல் அமர்ந்து சாளரம் வழியாக வெளியே பார்த்துக்கொண்டிருந்தாள். முதற்கணம் மிகச்சிறிதென்று தோன்றிய அவ்வறை விரிந்துகொண்டிருந்தது. அவளுக்கு மட்டுமேயான ஒரு சிறிய இடம். அலைவிரிவில் ஓர் ஓடம்போல.
மரவுரிகளை விரித்து முடித்து நிமிர்ந்து நின்ற இளம் சேடி தாழ்ந்த குரலில் “பிறிதேதாவது…?” என்றாள். திரௌபதி திரும்பிப்பார்த்து “உன் பெயரென்ன?” என்றாள். அவள் முகம்சிவந்து விழி தாழ்த்தி மெல்லியகுரலில் “சுபாஷிணி” என்றாள். “நான் சூதப்பெண். இங்குதான் பிறந்து வளர்ந்தேன்.” திரௌபதி “இசை கற்றிருக்கிறாயா?” என்று கேட்டாள். “இல்லை, நாங்கள் அடுமனையாளர்கள்” என்று அவள் சொன்னாள். “என் அன்னை இங்குதான் பணியாற்றினாள். சென்ற ஆண்டு வயிற்றுச் சூலை நோயால் உயிர் துறந்தாள். தந்தை எவரென்று அவள் என்னிடம் சொன்னதில்லை.”
திரௌபதி “உன் குரல் நன்று, நீ பாட்டு கற்றிருக்கலாம்” என்றாள். “இங்கு அதற்கெல்லாம் பொழுதே இல்லை” என்றாள் சுபாஷிணி. அவள் செல்லலாம் என திரௌபதி விழிகாட்டி சாளரத்தை நோக்கினாள். அவள் அங்கேயே நிற்பதை விழிமுனையால் கண்டு புருவத்தை தூக்கினாள். அவள் தயங்கி “ஒன்று சொல்லவா?” என்றாள். “சொல்” என்றாள் திரௌபதி புன்னகையுடன். “தாங்கள் சூதப்பெண் அல்ல, ஷத்ரியப்பெண். சூதப்பெண்களுக்கு இவ்வாறு ஆணையிட முடியாது. தாங்கள் எங்கோ அரசொன்றை ஆண்டவர். அரியணை அமர்ந்தவர். அதை இங்கு அனைவருமே பேசிக்கொண்டிருக்கிறார்கள்” என்றாள்.
“நன்று” என்று திரௌபதி புன்னகைத்தாள். “தாங்கள் யாரென்று நான் கேட்கப்போவதில்லை. கேட்கக்கூடாதென்று பேரரசியின் ஆணை என்றார்கள்” என்று சுபாஷிணி சொன்னாள். “ஆனால்…” என்றபின் சொல்நிறுத்தி திரும்பிச் செல்ல முயன்றாள். “சொல், என்ன?” என்றாள் திரௌபதி. “ஒன்றுமில்லை” என்றாள் அவள். “சொல்! என்ன சொல்ல வந்தாய்?” என்றாள் திரௌபதி. “தாங்கள் ஏதோ மாற்றுருக்கொண்டு இங்கு வந்திருக்கிறீர்கள். மாற்றுருவேயானாலும் எங்கள் கூட்டத்தில் ஒருவர் இவ்வண்ணம் பேரரசியரின் தோற்றத்துடனும் நிமிர்வுடனும் இருப்பது மிகப்பெரிய உவகையளிக்கிறது” என்றாள்.
“ஏன்?” என்றாள் திரௌபதி. நாணப்புன்னகையுடன் “தனியறையில் அமர்ந்து பகற்கனவு காணும்போது தங்களைப்போல நானும் ஆவதாக கற்பனை செய்துகொள்ளலாம் அல்லவா?” என்று அவள் சொன்னாள். அவ்விளமையின் தூய சிரிப்பு திரௌபதியை மலரவைத்தது. “அருகே வா!” என்றாள். அவள் கால் உழற்றி தயங்கி சிறுமியைப்போல அருகே சென்றதும் அவள் கைகளைப்பற்றி இழுத்து அருகணைத்து “உனக்கு என்ன வயதாகிறது?” என்றாள் திரௌபதி. “பதினாறு” என்றாள் சுபாஷிணி.
“கனவுகள் காணும் வயது. கனவு காண்பதில் பிழையொன்றுமில்லை. குற்றவுணர்வோ நாணமோ கொண்டு அதை கட்டுப்படுத்த வேண்டியதில்லை. உன் வயதில் நானும் மிகப்பெரிய கனவுகளைக் கண்டேன். இன்று எண்ணுகையில் அக்கனவுகளுக்கு நடைமுறைப் பொருளென்று ஏதுமில்லை என்று தோன்றுகிறது. அக்கனவுகள் அளித்த இன்பம் மட்டுமே அவற்றின் பயன்” என்றாள் திரௌபதி. அவள் “தாங்கள் கண்ட கனவுகள் எதுவும் நிறைவேறவில்லையா?” என்றாள்.
திரௌபதி புன்னகையுடன் “கனவுகள் முழுக்க நிறைவேறும் வாழ்க்கை தேவர்களுக்கும் அமைவதில்லை. என் கனவுகளில் ஒரு பகுதி நிறைவேறியது. ஆகவே எஞ்சியவற்றை அடைந்துவிடலாமென்று எண்ணினேன். இப்போது கனவுகளைத் துரத்துவதைப்போல வாழ்க்கையை வீணடிப்பது பிறிதொன்றில்லை என்று தோன்றுகிறது. கனவுகளில் அமர்ந்து திளைத்து மகிழ்ந்து அவற்றிலேயே மூழ்கி மறைய முடியுமென்றால் அதுவே பெருங்கொடை” என்றாள்.
“நீங்கள் நூல்கற்ற விறலியைப்போல் பேசுகிறீர்கள்” என்றாள் சுபாஷிணி. “நான் நூல்கற்றிருக்கிறேன்” என்றாள் திரௌபதி. வெளியே பிரீதை “ஏய் சுண்டெலி, அங்கு என்ன செய்கிறாய்? உன்னிடம் நான் சொன்னதென்ன?” என்று குரலெழுப்பினாள். “அய்யோ… நான் செல்லவேண்டும்” என்ற சுபாஷிணி புன்னகையுடன் “சுண்டெலி என்பது நான்தான். என் முகம் கூரியது என்கிறார்கள்” என்றாள். சிறிய வாயிலுக்கப்பால் பிரீதை தோன்றினாள். திரௌபதியின் கைகளை உதறி பின்னால் நகர்ந்த சுபாஷிணி “நான் இவர்களிடம்…” என்று ஏதோ சொல்லத் தொடங்க அவள் “உன் தோலை உரிக்காமல் இன்று விடப்போவதில்லை. ஒருநாழிகையாக ஒரு வேலையை செய்கிறாயா? வா, வாடி” என்றாள்.
திரௌபதி பிரீதையிடம் “உள்ளே வா” என்றாள். “யாரிடம் சொல்கிறாய்? என்னிடமா?” என்றாள் அவள். “உன்னிடம்தான். உள்ளே வா” என்றாள் திரௌபதி. அவள் முகம் சிவக்க மூச்சு சீற “நான் இங்கே சேடியர்தலைவி… நான்…” என பேசத்தொடங்க “உள்ளே வா” என்றாள் திரௌபதி. அவள் கண்ணறியா சரடொன்றால் இழுக்கப்பட்டதுபோல உள்ளே வந்ததும் “உன்னிடம் ஒரு சொல் தனியாக நான் சொல்லவேண்டும்” என்றாள் திரௌபதி. “என்ன சொல்லப்போகிறாய்?” என்று ப்ரீதை படபடப்புடன் கேட்டாள். அவள் உடலே சிவந்து வியர்வை பொடித்தது. “என்ன சொல்லப்போகிறாய்? நான் யார் என்று அறிவாயா?” என்றாள்.
“அறிந்த பின்தான் இதை சொல்கிறேன். இனி எனக்கெதிராகவோ எனக்கு வேண்டியவர்களுக்கு எதிராகவோ ஓர் எண்ணம் உன் உள்ளத்தில் எழுந்ததென்று நானறிந்தால் உன்கழுத்தில் குறுவாளைப் பாய்ச்ச தயங்கமாட்டேன். என்னால் அது மிக எளிதாக இயலும் என்பதை நான் சொல்ல வேண்டியதில்லை” என்றாள் திரௌபதி. பிரீதை இருகைகளும் தளர்ந்து தொடைமேல் உரசி விழ தொங்கிய முலைச்சுமைகள் எழுந்தமைய “நான் இங்கு…” என்று தடுமாறினாள். “இனி இந்த அகத்தளம் முழுவதும் என் ஆணைகள் மட்டுமே செல்லும். மறுசொல் எடுக்கவோ எண்ணவோ எவருக்கும் ஒப்புதல் இல்லை. அவ்வாறு என் சொல் கடந்து செல்லும் எவரும் இங்கு உயிர் வாழமாட்டார்கள்” என்றாள் திரௌபதி.
அவள் விழிகளை கூர்ந்து நோக்கி “ஏனெனில் ஐந்து கந்தர்வர்களால் காக்கப்படும் பெண் நான். உனது அத்தனை கரவுச் செயல்களையும் நன்கறிந்தவள். இனி அறியவேண்டுவதும் ஏதேனும் இருந்தால் ஓரிரவுக்குள் என்னால் அறியவும் இயலும்” என்றாள் திரௌபதி. அவள் கால் தளர்ந்து கைநீட்டி சுவரை பற்றிக்கொண்டு “கரவு என்று எதை சொல்கிறீர்கள்? நான் ஏதுமறியேன்” என்றாள். திரௌபதி “இவ்வரண்மனையிலிருந்து கீசகருக்கு செய்திகளை கொண்டு செல்லும் சிலரில் ஒருத்தி நீ. இங்கு நான் வந்த முதல்நாள் நானும் அரசியும் தனித்திருந்து பேசுகையில் அவ்வறைக்கு வெளியே நீ நின்றிருந்தாய். அரசி பேசுவது உனக்கு காதில் விழவில்லை. ஆனால் அரசியிடம் நான் எத்தனை பொழுது பேசினேன் என்பதை உடனடியாக கீசகனிடம் சென்று சொன்னாய்” என்றாள்.
கையசைத்து முகம் பதறி “இல்லை…” என்று சொல்லத் தொடங்கிய பிரீதை “நான் என்ன செய்வேன்? சொல்லும்படி எனக்கு ஆணையிட்டால் அதை செய்துதான் ஆகவேண்டும்? கீசகரின் ஆணையை மீறும் ஆற்றல் கொண்ட எவரும் இந்த நகரில் இல்லை” என்றாள். திரௌபதி “ஆம், நீ சொல்லக்கூடாதென்று நான் ஆணையிடவில்லை. நீ சொல்வது எனக்குத் தெரியும் என்று மட்டும்தான் சொன்னேன். செல்க!” என்றாள். அவள் கைநீட்டி “நான் எளியவள். நினைவறிந்த நாள்முதலாய் இங்கு அண்டிப்பிழைப்பவள். எவருக்கும் உளமறிந்து எந்தத் தீங்கும் செய்ததில்லை. வாழ்வதின் பொருட்டு எதையோ செய்கிறேன்” என்றாள். “ஆம், எந்தத் தீங்கும் செய்யாமலிருக்கும் வரை உனக்கும் எத்தீங்கும் நிகழாது” என்று திரௌபதி சொன்னாள். கைகூப்பியபின் கண்ணீரைத் துடைத்தபடி பிரீதை வெளியேறினாள்.
சுபாஷிணி அவள் செல்வதைப் பார்த்தபின் நெஞ்சில் கை வைத்து “ஐயோ” என்றாள். “என்ன?” என்றாள் திரௌபதி. “அவள் யார் தெரியுமா? அவளுக்கு நாவில் நஞ்சு. கண்களில் அதைவிடக்கொடிய நஞ்சு. இங்கு அவளை அஞ்சாத பெண்கள் எவருமே இல்லை” என்றாள். “இனி அஞ்ச வேண்டியதில்லை” என்றாள் திரௌபதி. “ஆம், நான் உங்கள் கண்களில் பட்டுவிட்டேன். இனி எதையும் நான் அஞ்சவேண்டியதில்லை” என்று சுபாஷிணி சொன்னாள். பிறகு தாழ்ந்த குரலில் “மெய்யாகவா?” என்றாள்.
“என்ன?” என்றாள் திரௌபதி. “ஐந்து கந்தர்வர்கள் இருக்கிறார்களா?” என்றாள். “ஆம், ஐந்துபேர். நான் ஐந்து கந்தர்வர்களை மணந்தவள்” என்றாள். அவள் மேலும் குரல்தாழ “எங்கிருக்கிறார்கள்?” என்றாள். கண்களில் சிரிப்புடன் “இங்கு” என்றாள் திரௌபதி. அவள் கழுத்திலும் தோளிலும் மெய்ப்பு எழுந்தது. அழுவதுபோன்ற குரலில் “இங்கென்றால்…” என்றாள். “இந்த அறைக்குள்” என்றாள் திரௌபதி. “ இந்த அறைக்குள்ளா?” என்று அவள் அறியாது பின்னடைந்தாள். “அஞ்ச வேண்டியதில்லை. அவர்கள் உன்னை பார்ப்பார்கள். உன்னால் அவர்களை பார்க்க இயலாது” என்றாள் திரௌபதி.
அவள் நீள்மூச்சுவிட்டாள். பிறகு “பொய்தானே?” என்றாள். “மெய்” என்று திரௌபதி சொன்னாள். “நான் யானைமேல் ஏறியதை நீ சாளரத்தின் அருகே நின்று பார்த்தாய் அல்லவா?” அவள் “அய்யோ இல்லை” என்றாள். “நீ ஒரு தூணை பற்றிக்கொண்டு நின்று பார்த்தாய். நான் பிரீதையுடன் வரும்போது எங்களுக்குப் பின்னால் வந்தாய். வரும்போது ஓசை கேட்காமலிருக்க சிலம்புகளைக் கழற்றி மடியில் கட்டிக்கொண்டாய். இப்போது அவை மடியில் உள்ளன. வெண்கலச் சிலம்புகள். உன் அன்னைக்குரியவை.”
அவள் “அய்யோ!’ என கன்னத்தில் கைவைத்து வியந்தாள். மடியில் இருந்து சிலம்பை எடுத்துக்காட்டி “என் அன்னையிடமிருந்த ஒரே அணி இதுதான். அன்னை இறந்தபின் இதை எனக்கு அளித்தார்” என்றாள். பித்தளையாலான பழைய சிலம்பின் செதுக்குகளில் களிம்பு படிந்திருந்தது. திரௌபதி “உனக்கு நேர்பின்னால் என் கந்தர்வன் ஒருவன் வந்துகொண்டிருந்தான்” என்றாள். “அவன் பெயர் என்ன?” என்றாள் சுபாஷிணி. “ஃபால்குனன். பெண்களை விரும்புபவன்” என்றாள் திரௌபதி. “யானைமேல் எப்படி ஏறினீர்கள்?” என்றாள். “விருகோதரன் என்ற கந்தர்வனின் ஆணைக்கு யானை பணிந்தது” என்றாள்.
“புரவிகளுக்கு?” என்றாள் சுபாஷிணி “புரவிகளை மாத்ரன் என்ற கந்தர்வனைக் கொண்டு ஆள்கிறேன்” என்றாள் திரௌபதி. அவள் பெருமூச்சுவிட்டாள். “வருவது உரைக்க நேமிகன் என்னும் கந்தர்வன் உதவுவான். நான் விரும்பிய நூலில் உள்ள வரிகளை எடுத்து அளிப்பவன் யமன் என்னும் கந்தர்வன்.” அவள் “உங்கள் ஆணைப்படி அவர்கள் நடப்பார்களா?” என்றாள். “ஆம், ஆணையிடவே வேண்டியதில்லை. எண்ணினால் போதும். அதை நிகழ்த்துவார்கள்.”
சில கணங்களுக்குப்பிறகு “அப்படியென்றால் உங்களை அவர்கள் ஏன் ஒரு பேரரசியென்று ஆக்கக்கூடாது?” என்று சுபாஷிணி கேட்டாள். “பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினியென்றே அவர்களால் என்னை ஆக்க முடியும். அதை நான் இப்போது விழையவில்லை” என்று திரௌபதி சொன்னாள். சிலகணங்கள் அவளை நோக்கி நின்றுவிட்டு “நீங்கள் மானுடப்பெண்ணே அல்ல. நீங்களும் ஒரு கந்தர்வப்பெண்ணோ என்று தோன்றுகிறது” என்றாள். திரௌபதி வெறுமனே சிரித்தாள். அவள் நெஞ்சில் கைவைத்து “சிரிக்கையில் மிக அண்மையில் வந்துவிட்டீர்கள். உங்களால் இப்படி சிரிக்க முடியுமென்றே என்னால் எண்ணமுடியவில்லை. கொற்றவைபோல தோன்றினீர்கள். சிரிக்கையில் திருமகள் போல ஆகிவிட்டீர்கள்” என்றாள்.
திரௌபதி புன்னகைத்து “உன்னிடம் எப்போதும் சிரித்துதான் பேசுவேன், சரியா?” என்றாள். “அய்யோ… நெடுநேரமாயிற்று, என்னை தேடுவார்கள். நான் வருகிறேன். பணிகள் உள்ளன” என்று சுபாஷிணி வெளியே சென்றாள்.
அரசியின் அறையிலிருந்து திரௌபதி நள்ளிரவில்தான் தன் அறைக்கு திரும்பிவருவது வழக்கம். அந்த அறை அவளுக்கு மிக அணுக்கமானதாக ஆகிவிட்டிருந்தது. அதற்குள் தனிமையில் அரையிருளில் சாளரம் வழியாகத் தெரியும் விண்மீன்களை நோக்கியபடி அவள் விழித்திருப்பாள். அறியாது துயிலில் ஆழ்கையில் கனவுக்குள் எப்போதும் ஒரு விண்மீனாவது எஞ்சியிருக்கும். அந்த அறை சிறிதாக இருப்பதனாலேயே அத்தனை அணுக்கம் கொள்கிறது என்று தோன்றியது. அவள் அணிந்த ஆடைபோன்றிருந்தது அது. கரவுத்தோற்றம் போல.
புலரியில் எழுந்து நீராடி ஆடையணிந்து அரசியின் அறைவாயிலை அடைவாள். அரசி துயிலெழுந்து அணிச்சேடியருக்காக காத்திருக்கும் பொழுது அது. அவளைக் கண்டதும் அரசி உடல் எளிதாகி பெருமூச்சுவிடுவாள். “வந்துவிட்டாயா?” என்பதுதான் எப்போதும் அவள் கேட்கும் முதல் வினா. திரௌபதி புன்னகைத்து “நன்றாகத் துயின்றீர்களா?” என்று கேட்பாள். “ஆம், நான் எப்போதுமே துயில்கிறேன். பகலில் சற்று ஓய்வெடுப்பதற்குக்கூட என்னால் முடிவதில்லை” என்று அரசி சொல்வாள்.
பின் எப்போதுமுள்ள அந்த வினா “நீ ஏனடி என்னுடன் இரவு தங்குவதில்லை? காவல்பெண்டு என்றால் இரவுதானே உடனிருக்கவேண்டும்?” அவள் புன்னகையுடன் “நான் என் கந்தர்வர்களை காணும்பொழுது இரவுதானே?” என்பாள். “நீ விளையாடுகிறாயா என்றே தெரியவில்லை” என்று அரசி சலிப்புடன் சொல்வாள். “இங்கு நான் உங்களுக்கு அமைத்துள்ள காவலர்கள் என்னால் தெரிவுசெய்யப்பட்டவர்கள். அவர்களை நீங்கள் என்னைப்போலவே நம்பலாம்” என்பாள் திரௌபதி. “இந்த அரண்மனையில் எவரையுமே நம்பமாட்டேன்” என்பாள் சுதேஷ்ணை.
ஆனால் பகலெல்லாம் நீளும் தொடர் அலுவல்களில் இருந்து முழுமையாக தன்னை விலக்கிக்கொள்ளும் ஒரு தருணம் அவளுக்கு வேண்டியிருந்தது. அவள் அரசியுடன் அவை அமரும்போதும் ஆலயங்களுக்குச் செல்லும்போதும் குடிக்கூடல்களில் நின்றிருக்கும்போதும் அரசியருகே வாளேந்தி நின்றிருந்தாள். அரசிக்குரிய நேரடிச் சிற்றேவல்களை செய்தாள். அரசியின் காவல்பணிகளை ஒருங்கிணைத்தாள். அவற்றைவிட முதன்மையாக ஓயாமல் புலம்பிக்கொண்டே இருந்த சுதேஷ்ணையின் சொற்களுக்கு செவியளித்துக்கொண்டே இருந்தாள். திரும்பத்திரும்ப கேட்டவை என்றாலும் அவளால் உளமளிக்காமலிருக்க இயலவில்லை. அவள் உளமளிக்கிறாள் என்பதனாலேயே மீண்டும் விரித்துரைத்தாள் சுதேஷ்ணை. “நான் அரசி அல்ல. கைவிடப்பட்ட அன்னை. எனக்கு எவருமே இல்லை” என்று அவள் திரௌபதியின் கைகளை பற்றிக்கொண்டு சொல்லும்போது கண்களில் நீர்ப்படலம் வந்து ஒளிரத்தொடங்கிவிடும்.
அவள் மைந்தர் இருவருமே அவள் சொல்வனவற்றை எவ்வகையிலும் பொருட்படுத்தவில்லை. உத்தரை நீர்த்தாமரைபோல ஒளியுடன் ததும்பிக்கொண்டிருந்தாள். ஆகவே அன்னையின் எளிய சொற்களைக்கூட எரிச்சலுடன்தான் எதிர்கொண்டாள். சினந்து கூச்சலிட்டாள். தன் தனிமைக்குள் அவள் அன்னையை விடவேயில்லை. உத்தரன் ஏற்கனவே அனைத்தையும் உணர்ந்து கனிந்தவனாக தோற்றம் சூடியிருந்தான். அன்னை பேசத்தொடங்கும்போதே குழவியின் குதலைப்பேச்சை கேட்கும் தந்தையின் முகத்தை சூடிக்கொண்டான். எளிய நகையாட்டுடனும் இனிய அணைப்புடனும் அவள் சொல்வதை கேட்டபின் அதை அக்கணமே தவிர்த்துவிட்டுச் சென்றான். அரசி அரசரை சந்திப்பதே மிக அரிதாக இருந்தது. ஆகவே அவள் எப்போதும் திரௌபதியிடம்தான் பேசிக்கொண்டே இருந்தாள்.
“அந்த ஆணிலியிடம் ஏதோ ஒரு மாயம் இருக்கிறது, சைரந்திரி. என்னால் அது என்ன என்று சொல்லக்கூடவில்லை. அவனை தொலைவில் பார்க்கையில் நிமிர்வுள்ள ஆண்மகன் என்றே தோன்றுகிறது. அணுகிவருந்தோறும் பெண் என்றாகி பேரழகியாக மாறி நிற்கிறாள். அவள் நடனமாடுவதை ஒருநாள் அவளறியாமல் நோக்கினேன். என்னதான் கற்பிக்கிறாள் என்று பார்க்கவேண்டுமே? என்னை அழைத்துச் செல் என்று உத்தரையின் அணிச்சேடியிடம் சொன்னேன். பக்கத்து அறையிலிருந்து சாளரம் வழியாக நோக்கினேன். சொல்லாமலிருக்கமுடியவில்லை. நான் எல்லாவற்றையும் மறந்துவிட்டேன். கேகயத்தில் வாழ்ந்த என் கன்னிநாட்களுக்கே சென்றுவிட்டேன். என் உளம்நிறைந்த ஆண் ஒருவருடன் இளங்காட்டில் நடனமிட்டுக்கொண்டிருந்தேன்.”
நீள்மூச்சுடன் “ஆம் எனக்கு அவ்வண்ணம் ஆண்கள் இருந்தனர். நானும் எத்தனை கதைகளை கேட்டுவளர்ந்தவள்! அவனுக்கு முகமோ உடலோ இல்லை. அவன் இறுதிவரை ஓர் உடலென என் முன் வரவேயில்லை. ஆனால் ஒருபோதும் என்னுள் இருந்து அவன் விலகியதுமில்லை” என்றாள் சுதேஷ்ணை. “இந்த ஆணிலி அக்கனவுகளை எழுப்புகிறான். தன்னைச்சூழ்ந்திருந்த அனைத்தையும் உடன் நடனமிடச்செய்கிறாள். மானுடரை மட்டுமல்ல. மெய், தூண்களும்கூட அவளுடன் ஆடுவதை கண்டேன். அவ்வாறு ஆட எளிய மானுடரால் இயலாது. அவன் உடல் புல்நுனியில் நின்றிருக்கும் பனித்துளியில் வானம் என நிலைகொண்டு பெருகியிருக்கிறது என்று ஒரு விறலி என்னிடம் சொன்னாள். மெய்.”
“அவன் அவளுக்கு எதை கற்பிக்கிறான் என்று நான் கேட்டேன். அதற்கு இவ்வுலகத்திலுள்ள அனைத்தையும்தான் என்கிறாள் உத்தரை. சினம்கொண்டு இவ்வுலகிலுள்ள அனைத்தையும் என்றால் அரசு சூழ்தலையுமா என்று நான் கேட்டேன். ஆம் அன்னையே அதையும்தான் என்றாள். அது மெய்யென்று நானே தெரிந்துகொண்டேன். உத்தரை புரவியேறுவதும் யானையேறுவதும் முழுமையாக மாறிவிட்டன. முன்பெல்லாம் இருவர் புரவிக்கடிவாளத்தையும் சேணத்தையும் பற்றிக்கொள்ள இருமுறை துள்ளி மூன்றாம்முறை கால்தூக்கி வைப்பாள். சென்ற நாளில் பார்த்தேன், பட்டாம்பூச்சி எழுந்து மலர்மேல் அமர்வதுபோல புரவிஏறினாள். யானைமேல் அமர்ந்திருக்கையில் முகிலில் ஊர்பவள் போலிருக்கிறாள்.”
“அவள் வாளேந்திச் சுழற்றுவதைப்பற்றி சேடி சொன்னாள் என்று சென்று பார்த்தேன். வாள் அவள் கையில் வெள்ளிமின்னல்போல ஒளிச்சுழிபோல வெண்ணிறமலர்போல இருந்தது. என்னால் விழிகளை நம்பவே முடியவில்லை. ஒற்றைக்கையால் நாணிழுத்து மூன்று அம்புகளை எடுத்துத் தொடுத்து மூன்று இலக்குகள்மேல் எய்தாள். கந்தர்வர்கள் எவரேனும் அவளுருவில் அங்கு வந்துவிட்டார்களோ என்றே ஐயுற்றேன். அவ்வித்தைகளை அவளுக்கு பிருகந்நளை எங்கே கற்றுக்கொடுத்தாள் என்று கேட்டேன். விந்தை, அவள் நடனமன்றி எதையுமே கற்றுக்கொடுக்கவில்லை. நடனத்தினூடாக இவையனைத்தையும் இவள் கற்றுக்கொண்டிருக்கிறாள்.”
“அவள் நிற்பும் நோக்கும் மாறிவிட்டன. தோள்கள் நிமிர்ந்து இடைநேராக அசைய இட்டகாலடிமேல் எடுத்தகாலை வைத்து நடக்கிறாள். ஆழ்ந்த குரலில் ஆணையிடுகிறாள். சொற்கள் ஒவ்வொன்றும் மும்முறை எண்ணி எடுத்தவைபோல் உள்ளன” என்றாள் சுதேஷ்ணை. “அது நல்லதுதானே? அவள் பேரரசியாவாள் என்றல்லவா நிமித்திகர் சொல்லியிருக்கிறார்கள்?” என்றாள் திரௌபதி. “நிமித்திகர் சொல்லவில்லை. சோலைக்கு வந்துள்ள அருகநெறிக் கணியர் சொன்னார். அதுதான் என் நம்பிக்கை. பேரரசர்களின் மைந்தர்கள் எவருக்கேனும் மகள்கொடை கேட்டு வருவார்கள் என்று நம்பிக்கொண்டிருக்கிறேன். இவள் செய்வதென்ன? இந்த ஆணிலியிடம்…”
திரௌபதி “ஆணிலிதானே?” என்று புன்னகையுடன் சொன்னாள். “அதுதான் எனக்கு ஐயமாக இருக்கிறது” என்றாள் சுதேஷ்ணை. “ஆனால் அதைவிட நான் அஞ்சுவது அந்த அரைமுனிவனை. அவன் யார்? முனிவன் போல மாற்றுருக்கொண்டவன். அறிஞன். ஆனால் அவன் கூர்வாளை பட்டில் சுற்றிவைத்திருப்பதைப்போலத் தோன்றுகிறான். வந்த முதல்கணமே அவன் கீசகனை வென்றதை நீ பார்த்தாய் அல்லவா? கீசகனைப்போன்ற அரசியல்சூழ்ச்சி தேர்ந்தவனே அவனை தன் அணுக்கனாக வைத்திருக்கிறான் என்றால் இவன் எப்படிப்பட்டவன்? நூல் தேர்ந்தவன் என்கிறார்கள். அவன் கற்ற நூல்களில் சூது கொடிய பிழை என்று இல்லையா என்ன? கீசகனுக்கு அரசியல் அறிவிக்காத பொழுதெல்லாம் அரசருடன் அகத்தளத்தில் அமர்ந்து சூதாடிக்கொண்டிருக்கிறான்.”
“அரசர் இப்போது பெண்களை மறந்துவிட்டார். குடியும் கூட குறைந்துவிட்டது. எழுந்ததுமே முதல்வினா குங்கன் எங்கே என்றுதான். குங்கன் கீசகனுடன் சென்றிருக்கிறான் என்றால் பதைபதைப்புடன் உலவியபடி அடிக்கொருமுறை வருகிறானா என்று பார்க்கிறார். வந்ததுமே காதலியைக் கண்ட இளையோன் போல கண்கள் சிரிக்க பாய்ந்துசெல்கிறார். தழுவிக்கொள்கிறார். பின்னர் ஒரு கணமும் பிந்துவதில்லை. சூதுக்களம் பரப்பியாகவேண்டும். அமர்ந்து பகடையுருட்டத் தொடங்கவேண்டும். உயிர்காக்கும் மருந்தை அள்ளி அருந்துவதுபோல. தெய்வங்களுக்கு பூசெய்கை இயற்றுவதுபோல.”
“அவன் உண்மையில் பகடையென வைத்தாடுவது அவரைத்தான். இன்று அவன் என்ன சொன்னாலும் அவர் செய்வார் என்ற நிலை. அதன் மாயம் என்ன என்று நான் ஒற்றர்களிடம் கேட்டேன். அரசருக்கு ஏன் இன்றுவரை சூதில் பித்து எழவில்லை என்றால் அவர் வெல்வது மிக அரிதென்பதனால்தான். அவரால் உளம்நிறுத்த முடியாது. தொடர்ச்சி பேணமுடியாது. குடியால் நனைந்து ஊறிய சித்தம். அதை நீருக்குள் மூழ்கி நுரையெழுப்பும் பெருவாய்த் தவளை என்று அவைச்சூதர் காமர் சொன்னார் ஒருமுறை. இவனுடன் ஆடத்தொடங்கிய அன்றே ஒருமுறை இவர் வென்றார். அது இவன் விட்டுக்கொடுத்து வென்றதும் அல்ல. மிகத்தற்செயலாக கூரிய நகர்வொன்றை அவர் நடத்தினார். அத்தருணத்தை பயன்படுத்திக்கொண்டான் அவன். அவரை வெல்ல விட்டான். தன்னால் மிகக்கூரிய நகர்வை நடத்த முடியும் என அவரை நம்பவைத்தான். பற்றிக்கொண்டுவிட்டார்.”
“அதன்பின் வெற்றி எப்போதும் அவர் அருகே இருக்கும்படி பார்த்துக்கொள்கிறான். எளிதில் அதை அளிப்பதில்லை. ஆனால் அது கையெட்டினால் தொட்டுவிடக்கூடியதென்றும் காட்டிக்கொண்டிருக்கிறான். பறவைகளின் ஆடல் அது. அருகே நின்றிருக்கும். பற்றமுயன்றால் பறக்கும். விழிவிலக்கினால் வந்து தோளில் அமரும். பெண்களின் வித்தையும் அதுதானே? அவரை அவன் பித்தனாக்கி தன் ஆட்டக்களத்தில் நிறுத்தியிருக்கிறான்” என்ற சுதேஷ்ணை பெருமூச்சுடன் “நான் உத்தரனிடம்தான் சொல்லிக்கொண்டிருந்தேன் இதையெல்லாம். அவன் சொன்னான் பிருகந்நளையை அவன் பொறுப்பேற்று நோக்கிக் கொள்வதாக” என்றாள்.
“யார்?” என்றாள் திரௌபதி. அதிலிருந்த நகைப்பை உணர்ந்த அரசி “உத்தரனால் இதையெல்லாம் செய்ய முடியும். சிறந்த ஒற்றன் வழியாக அவன் பிருகந்நளையை வேவுபார்த்து அவளுடைய கரவு என்ன என்பதை நோக்கி என்னிடம் சொல்வான். அவள் மாற்றுருக்கொண்டு வந்தவளா? தீயதெய்வங்கள் எவற்றையேனும் வழிபட்டு உடன்கொண்டிருக்கிறாளா? அதை அறியாமல் எனக்கு ஆறுதல் இல்லை” என்றாள். திரௌபதி “ஆம், அதை உத்தரர் அறிந்து சொல்லக்கூடும்” என்றாள். “அதன்பின்னர்தான் குங்கனையும் வேவுபார்க்கவேண்டும்” என்றாள் அரசி.
ஒவ்வொருநாளும் சலித்து களைத்து அவள் அந்த அறைக்குள் திரும்பினாள். உள்ளே நுழைந்து கதவை சாத்திக்கொண்டு ஆடைகளை கழற்றத் தொடங்கும்போது நிகழ்ந்த அனைத்தும் மீண்டும் அவள் உள்ளத்தில் ஓடத்தொடங்கும். புன்னகை வந்து இதழ்களில் அமையும். பின்னர் அவ்வறைக்குள் எப்போதும் அப்புன்னகை வந்தது. அறைக்குள் அப்புன்னகையை விட்டுவிட்டு காலையில் கிளம்பிச்சென்றாள். அதன் கதவை திறக்கையில் அப்புன்னகை தாவி வந்து அவளை தழுவிக்கொண்டது.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 39
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 38
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 37
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 36
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 26
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 19
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 28
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 27
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 62
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 35
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 30
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு– ‘நீர்க்கோலம்’ – 29
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 25
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 23
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ –21
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 18
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 17
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 15
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-5
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-3
July 3, 2017
பெரியசாமி தூரன்
பெரியசாமி தூரன்
முப்பத்தைந்தாண்டுகளுக்கு முன்னர் நயினார் என்று ஒரு பாடகரின் கச்சேரியைக் கேட்க நேர்ந்தது. குழித்துறை மகாதேவர் கோயிலில். அன்றெல்லாம் எங்களுக்கு சினிமா ஒரு பொருட்டே அல்ல. காரணம் படம்பார்க்க தொடுவட்டிக்குத்தான் செல்லவேண்டும். பணம் கொடுக்க வேண்டும். வீட்டில் அனுமதி பெரும்பாலும் கிடைக்காது. பள்ளியிறுதி வரை நான் பார்த்த மொத்த படங்களே பத்துக்குள்தான். சேர்த்து வைத்து புகுமுக வகுப்பில் பார்த்துத் தள்ளினேன். எங்களுக்கு கலை,கேளிக்கை எல்லாமே கோயில்திருவிழாக்கள்தான். பதினைந்து கிலோமீட்டர் வட்டத்தில் ஐம்பதுக்கும் மேற்பட்ட கோயில்களில் திருவிழாக்கள் உண்டு. திற்பரப்பு, திருவட்டாறு, குழித்துறை, பாறசாலை போன்ற பெரிய கோயில்களில் வருடத்தில் பத்துநாள் திருவிழா.
பெரும்பாலான பெரிய திருவிழாக்கள் மன்னர்காலத்திலேயே ஒழுங்குசெய்யப்பட்டவை. கதகளி, ஓட்டந்துள்ளல், திருவாதிரைக்களி போன்ற கேரளச் செவ்வியல் கலைகள் முக்கியமாக நடக்கும். கதகளியில் எனக்கு ஒரு பித்து உண்டு. சிறிய அம்மன், சாஸ்தா கோயில்களில் அவற்றை நடத்துபவர்களின் ருசியை நம்பலாம் கம்யூனிஸ்டுகள் அன்று பல கோயில்களைக் கையில் வைத்திருந்தார்கள். குறிப்பாக மஞ்சாலுமூடு கோயிலில் நடக்கும் மலையாள சமூக நாடகங்கள் மிகவும் பிரபலம். பாட்டு கச்சேரிகள் சில இடங்களில் இருக்கும். எங்கள் குழு மாதம் இரு திருவிழாவுக்குச் சென்றுவிடுவோம். அக்காலகட்டத்தின் களியாட்ட மனநிலையை பின்னர் நான் அறிந்ததே இல்லை. இளமையும் கலைகளும் கலந்து உருவான போதை அது
அப்போதுதான் நயினாரின் பாடலைக் கேட்டேன். தொழில்முறைப் பாடகர் அல்ல.வற்கலை ராதாகிருஷ்ணனின் கதாபிரஸங்கம் தொடங்குவதற்கு முன்பு ஒரு மணிநேரம் ‘சும்மா’ ஒரு பாட்டு, பக்கமேளம் உள்ளூரிலேயே. அவரது கணீரென்ற குரல் முதலியேயே என்னைக் கவர்ந்தது. சுத்தமான தமிழ்ப்பாடல்களை மட்டுமே பாடினார். ஒரு பாடலைக் கேட்டு என்னவென்றே தெரியாத மன எழுச்சிக்கு ஆளாகி நான் கண்ணீர் சிந்தினேன். ‘என்னடா? என்னடா?’ என்று நண்பர்கள் உலுக்கினார்கள். சொல்லத்தெரியவில்லை. மனம் பாகாக மாறி ஓடி மறைந்துவிட்டது. ”முருகா முருகா என்றால் உருகாதோ உந்தன் உள்ளம்!”
இன்றும் அவ்வனுபவத்தை என்னால் மீட்டெடுக்க முடிகிறது. நான் அன்றுகூட பக்தன் இல்லை. கடவுள் நம்பிக்கை எங்கொ இருந்தாலும் அது பகவதிமீது தானே ஒழிய முருகனோ சிவனோ விஷ்ணுவோ அல்ல. நவீன இலக்கிய வாசிப்பு அதி தீவிரமாக நடந்துகொண்டிருந்தது. கம்யூனிஸ்டுக் கட்சி தொடர்பும், ஈடுபாடும் இருந்தது. அப்படியும் ஒன்று என்னை மீறி நிகழ்ந்துவிட்டது. மனிதவாழ்க்கையின் மீட்பற்ற பிரம்மாண்டமான தனிமையையும் அதன் கையறுநிலயையும் நான் சட்டென்று உணர்ந்தேன் என்று சொல்லலாம். அந்த நிகழ்ச்சியை வைத்து என்னை நெடுங்காலம் நண்பர்கள் கிண்டல்செய்வார்கள்.
மேலும் நாலைந்து வருடம்கழித்து பழைய குமுதம் இதழில் ஒரு செய்தியை வாசித்தேன். கோவையில் ஓர் அரங்கில் மதுரை சோமு அந்தப்பாடலை பாடினார். ”முருகா முருகா என்றால் உருகாதோ உந்தன் உள்ளம்” சோமு எப்படிப் பாடியிருப்பார் என்பதை இசைரசனை உள்ளவர்கள் ஊகிக்க முடியும். அதைக் கேட்டுக்கொண்டிருந்த குள்ளமான, கண்ணாடி போட்ட, ஒரு மனிதர் கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருந்தாராம். அந்த மனிதர் பெயர் பெரியசாமி தூரன். அவர்தான் அந்தப்பாடலின் ஆசிரியர்.
*
பெரியசாமி தூரன் சிறுபிள்ளைகளுக்கெல்லாம் தெரிந்த பெயர். ஆரம்பப்பள்ளிமுதல் சிறுவர்கள் அவர் எழுதிய பாடல்களைப் பாடித்தான் வளர்ந்திருப்பார்க்ள். பெ.தூரன் என்றபெயரை நானெல்லாம் பேத்தூரன் என்று நெடுநாள் சொல்லிக்கொண்டிருந்தேன். சமீபத்தில் நண்பரின் குழந்தையும் அவ்வாறே சொல்வதைக் கேட்டேன். குழந்தைகள் வாயில் பெயர் ஒலிப்பதென்பது பெரிய அதிருஷ்டம். தூரனுக்கு அந்த யோகம் இருந்தது.
ஆனால் கணிசமான தமிழர்கள் ஆரம்பப்பள்ளிக்கு பிறகு தூரனைப்பற்றி எதையுமே கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். தூரனுக்கு மூன்று முகங்கள் உண்டு. குழந்தையிலக்கிய ஆசிரியர், தமிழிசைப்பாடலாசிரியர். இவ்விருதளங்களிலும் இன்றும் அவரது பெயர் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. மகாராஜபுரம் சந்தானத்தின் இசை நிகழ்ச்சிகளில் பெரும்பாலும் சுத்தானந்த பாரதியார், பெரியசாமி தூரன் இருவரில் ஒருவர் இயற்றிய கீர்த்தனைகளில் ஒன்று வந்துவிடும். சஞ்சய் சுப்ரமணியம், அருணா சாய்ராம் போன்றவர்களின் கச்சேரிகளிலும் தூரனின் கீர்த்தனைகள் ஒலிக்கும்.
ஆனால் தூரனின் வாழ்க்கையின் பெரும்பகுதி வேறுவகையான பிரம்மாண்டமான அறிவுச்செயல்பாடுகளுக்காகவே செலவிடப்பட்டது. தமிழகம் கண்ட மாபெரும் அறிஞர்களில் ஒருவர் அவர்.
கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை
எஸ்.வையாபுரிப்பிள்ளை
நவீனத்தமிழின் அடிப்படைக் கட்டுமானங்களை உருவக்கியவர்கள் கவிமணி தேசிகவினாயகம் பிள்ளை எஸ்.வையாபுரிப்பிள்ளை, பெ.தூரன், என்ற மூவரைச் சொல்லலாம். தேசிகவினாயகம்பிள்ளையின் கல்வெட்டு ஆராய்ச்சி முறைமை, வைபாபுரிப்பிள்ளையின் தமிழ்ப்பேரகராதி, பெ.தூரனின் கலைக்களஞ்சியம் ஆகியவை முன்னோடிப் பணிகள். வழிகாட்டிக கொடிகள்.
அறுபதாண்டுகால சுதந்திர இந்திய வரலாற்றில் மிக அதிகமாக தமிழுக்குப் பங்களிப்பாற்றிய ஆட்சி தொடக்க இருபதாண்டுக்கால காங்கிரஸ் ஆட்சியே என்பதே உண்மை. தமிழை ஒரு நவீன மொழியாக உருவாக்கவும், அன்றாடப்பயன்பாட்டுக்குக் கொண்டுவரவும் தொலைநோக்குள்ள திட்டங்கள் உருவாக்கப்பட்டன. பேரறிஞர்கள் அவற்றில் பொறுப்பில் அமர்த்தப்பட்டு போதிய நிதியும் ஒதுக்கப்பட்டது. தமிழகம் முழுக்க நூலக இயக்கம் பரவலாகக் கொண்டுசெல்லப்பட்டது. இந்தச்செயல்பாடுகளில் அன்றைய கல்வியமைச்சர் தி.சு.அவினாசிலிங்கம் செட்டியார் அவர்களின் தலைமையும் வழிகாட்டலும் மிக முக்கியமானவை.
.
தி.சு.அவினாசிலிங்கம் செட்டியார்
விளைவாக தமிழர்கள் பெருமிதம் கொள்ளும் முயற்சிகள் தமிழில் நிகழ்ந்தன. இன்றும் நாம் புழங்கும் பலநூறு ஆட்சிச்சொற்கள் அப்போது ஆட்சிச்சொல்லாக்க குழுவினரால் உருவாக்கப்பட்டவை. இந்திய மொழிகளில் முன்னோடி முயற்சியாக ஒரு முழுமையான பேரகராதி உருவாக்கப்பட்டது. எஸ்.வையாபுரிப்பிள்ளையின் அந்தப் பேரகராதிக்கு இன்றுவரை உரிய முறையில் மறுபதிப்பு கொண்டுவரக்கூட பிறகுவந்த ஆட்சிகளால், மொழிக்கென அவர்கள் செலவழித்த கோடானுகோடிகளால் முடியவில்லை. இதை தீவிர திராவிட இயக்க ஆதரவாளரான தமிழாய்வாளர் ஆ.இரா.வெங்கடாடலபதியே குறிப்பிட்டிருக்கிறார். பிறகு அகராதி முயற்சிகள் பல நடந்தன. அவையெல்லாம் திறனற்ற நகல் முயற்சிகளாக நீண்டு முடிவடையாமலேயே நின்றுவிட்டன.
அதேபோல முக்கியமானது தூரனின் பெரும் கலைக்களஞ்சியம். ஒரு மொழியின் முதல் பேரகராதியும் முதல் கலைக்களஞ்சியமும் எத்தகைய மகத்தான சாதனைகள் என்பதை இன்று பலரும் எண்ணிப்பார்ப்பதேயில்லை. கலைக்களஞ்சியத்துறையின் தலைவராக இருந்த போதிலும் கிட்டத்தட்ட தனியாளாகவே அவர் அப்பெரும்பணியை செய்து முடிக்கவேண்டியிருந்தது என்பதை தமிழ்ச்சூழலை வைத்துப் பார்ப்பவர்கள் புரிந்து கொள்ள முடியும்.
தூரன் தன் கலைக்களஞ்சியத்தை உருவாக்கிய நாட்களில் அவரது உழைப்பைப்பற்றி சமகால அறிஞர்களான கி.வ.ஜகன்னாதன் போன்றவர்கள் பெரிதும் குறிப்பிட்டிருக்கிறார்கள். ஏறத்தாழ 20 வருடங்கள் ஒவ்வொருநாளும் விழித்திருக்கும் நேரம் முழுக்க அவர் அதில் ஈடுபட்டிருந்தார். நகலெடுக்கும் வசதிகளும் பிற வசதிகளும் இல்லாமலிருந்த அக்காலகட்டத்தில் அனைத்து தகவல்களையும் கையாலேயே குறித்துக்கொண்டு எழுதி அகர வரிசை அட்டைபோட்டு வேலைசெய்துகொண்டே இருந்திருக்கிறார். ஒரு சாதாரண உரையாடலின் போது சில நிமிடங்கள் பேசிவிட்டு ஓரமாக நகர்ந்து தன் வேலையில் மூழ்கிய தூரனைப்பற்றி கி.வ.ஜ சொல்கிறார்.
கலைக்களஞ்சியத்துக்குப் பின்னர் குழந்தைகள் கலைக்களஞ்சியம் ஒன்றையும் தூரன் உருவாக்கினார். இக்கலைக்களஞ்சியங்களின் அருமையை அறிய வேண்டுமென்றால் கால் நூற்றாண்டு கழித்து பெரும் நிதியுதவியுடன் பலநூறு பேர் எழுத தஞ்சை தமிழ் பலகலைக்கழகம் உருவாக்கிய வாழ்வியல் களஞ்சியம் என்ற கலைக்களஞ்சியத்துடன் ஒப்பிட வேண்டும். பெரும்பாலும் தூரனின் கலைக்களஞ்சியத்தை நீர்த்துப்போன மொழியில் நகலெடுத்திருக்கிறார்கள் ஆசிரியர்கள். அவற்றின் பெரும்பாலான கட்டுரைகள் கலைக்களஞ்சியம் என்ற தகுதிக்குள் வராதவை.
தூரனின் கலைக்களஞ்சியத் தொகுதிகளின் பயன் என்ன? எளிமையாக ஒன்றை கவனித்துப் பார்க்கலாம். அவரது கலைக்களஞ்சியங்கள் வரத்தொடங்கியபின்னரே தமிழில் பொது அறிவு துறைசார்ந்த பல்லாயிரம் நூல்கள் எழுதப்பட்டன. மருத்துவம் இயற்பியல் போன்ற துறைகளில் கூட அடித்தள மாணவர்களுக்கு உதவக்கூடிய எளிய நூல்கள் முதல் பலவகையான நூல்கள் வெளிவந்தன. அவற்றை பெரும்பாலும் தமிழாசிரியர்கள் எழுதியிருக்கிறார்கள். அவையெல்லாமே தூரனின் கலைக்களஞ்சியத்தின் மறு பிறப்புகள். தூரனின் கலைக்களஞ்சியம் நூறாக ஆயிரமாக பிளந்து பரவி தமிழ் அறிவுலகை உருவாக்கியது என்றால் மிகையல்ல.
அத்துடன் அனைத்து தளங்களுக்கும் தமிழைக் கொண்டு போக தூரன் செய்த ஆரம்பகால கடும் முயற்சி கலைச்சொற்களை தேவையாக்கியது. பலவகையான சொற்றொடர் முறைகளை தேவையாக்கியது. அந்தச் சவாலை அவர் சத்தித்ததாலேயே அவரது கலைக்களஞ்சியம் நவீனத்தமிழுக்கு அடித்தளமாக அமைந்தது.
நான் என் உயர்நிலைப்பள்ளி வாழ்க்கையில் தூரனின் கலைக்களஞ்சியத்தொகுதியின் தீவிர வாசகனாக இருந்தேன். அக்காலத்தில் தொடர்ச்சியாக நடக்கும் கட்டுரை பேச்சுப்போட்டிகளுக்காக நாங்கள் நண்பர்கள் முண்டியடித்து, அக்கலைக்களஞ்சியங்களை நூலகமாக இருந்த ஆசிரியர் ஓய்வறையில் தரையில் அமர்ந்து படித்து குறிப்பெடுப்போம். வேறு கலைக்களஞ்சியங்கள் எதையுமே கண்டிராத அந்த வயதில் அந்தக் கிராமத்துப் பள்ளியில் அந்நூல்கள் மானுட அறிவின் பிரம்மாண்டத்தை உணர்த்துவனவாக இருந்தன.
ஈரோடு மாவட்டம் மஞ்சக்காட்டு வலசை என்ற கிராமத்தில் 1908ல் செப்டெம்பர் 26 ஆம் நாள் பிறந்தார் தூரன். தூரன் என்பது கொங்கு கவுண்டர்களில் ஓரு துணைப்பிரிவு. தந்தை பழனியப்பக் கவுண்டர். தாய் பாவாத்தாள். மொடக்குறிச்சியில் ஆரம்பப்பள்ளிக்கல்வி பெற்றபின் ஈரோடு மாசன உயர்நிலைப்பள்ளியில் பள்ளியிறுதி முடித்தார். அப்போது ஆசிரியராக இருந்த திருமலைச்சாமி அய்யங்காரால் அவருக்கு தமிழார்வம் உருவானது.
1939ல் காளியம்மாளை மணம்புரிந்துகொண்டார். மூன்று பெண்களும் ஒரு ஆணுமாக நான்கு குழந்தைகள்.தூரன் 1927 சென்னை மாநிலக்கல்லூரியில் அறிவியல்பாடங்களில் இண்டர்மிடியட் படித்து வென்றார். 1929ல் கணிதத்தில் எல்.டி பட்டம்பெற்று ஆசிரியர் பயிற்சியும் பெற்றார். 1929 முதல் நான்காண்டுகள் கோபிசெட்டிபபளையம் வைரவிழா உயர்நிலைப்பள்ளியிலும் பின்னர் போத்தனூர் மற்றும் பெரியநாயக்கன் பாளையம் பகுதிகளில் இயங்கிய ராமகிருஷ்ணா உயர்நிலைப்பள்ளியிலும் ஆசிரியராக பணியாற்றினார். இக்காலகட்டத்தில் அவர் முறைப்படி மரபிசையைக் கற்றுத்தேர்ந்தார்.
சிறு வயதிலேயே உறுதியான காங்கிரஸ்காரர். சுதந்திரத்துக்குப்பின் தி.சு.அவினாசிலிங்கம் அழைப்பை ஏற்று 1948 முதல் 1968 வரை இருபதாண்டுக்காலம் தன்னாட்சி உரிமையுடன் இயங்கிய தமிழ் வளர்ச்சிக்கழகத்தின் பொறுப்பில் இருந்து கலைக்களஞ்சிய வெளியீட்டில் ஈடுபட்டார். சராசரி 750 பக்கங்கள் கொண்ட 10 தொகுதிகளாக இந்நூல் வெளிவந்தது. அத்தகைய ஒரு கலைக்களஞ்சியம் இந்திய மொழிகளில் தமிழிலேயே முதலில் வெளிவந்தது. பின்னர் தன் சொந்த முயற்சியால் 1976 வரை உழைத்து சராசரி 100 பக்கங்கள் கொண்ட 10 தொகுதிகளாக குழந்தைகள் கலைக்களஞ்சியத்தை வெளியிட்டார்.
தூரனின் சாதனைகளில் முக்கியமானது பாரதியார் 1904 முதல் 1921 வரை சுதேசமித்திரன் இதழில் எழுதிய படைப்புகளைத் தேடி எடுத்து ஆவணப்படுத்தி காலவரிசைப்படி தொகுத்து ‘பாரதி தமிழ்’ என்ற பேரில் வெளியிட்டது. பாரதி ஆய்வுகள் தமிழில் தொடங்கப்படுவதற்கான வழிகாட்டி முயற்சி என்பதுடன் பாரதி படைப்புகள் அழிந்துவிடாமலிருக்க தக்க நேரத்தில் செய்யப்பட்ட பெரும்சேவையுமாகும். திரு.வி.கவின் ஆலோசனைப்படி இதை தூரன் செய்ததாகச் சொல்லப்படுகிறது.
தூரன் கவிதைகள், கதைகள், இதழியல்கட்டுரைகள், ஆய்வுக்கட்டுரைகள் என கிட்டத்தட்ட 20 நூல்களை படைத்திருக்கிறார். தூரனின் கவிதைகள் பாரதி கவிதைகளின் பாதிப்பில் எழுந்த நேரடியான மொழி எழுச்சி கொண்டவை. ஆனால் பாரதியிடம் இருந்த நவீன படைப்புத்திறன் அவரிடம் இல்லை. இலக்கியப் படைப்பாளியாக தூரனின் பங்களிப்பு முக்கியமானதல்ல.
தூரன் 1980 முதல் நோய்வாய்ப்பட்டிருந்தார். 1987 ல் ஜனவரி 20 ஆம் நாள் மரணமடைந்தார். கடைசிக்காலத்தில் கிட்டத்தட்ட முழுமையான புறக்கணிப்புக்கு உள்ளாகியிருந்தார். பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்களின் உதவி மட்டுமே இருந்தது. சிற்றிதழ் சார்ந்த சூழலில் மட்டுமே அவரது பெரும் சாதனைகளைப்பற்றிய மெல்லிய பிரக்ஞை எஞ்சியிருந்தது. ‘நான் செத்தால் ரேடியோவிலே கூட சொல்லமாட்டாங்களே ராமசாமி” என்று அவர் வாதநோய் கண்டு படுக்கையில் இருக்கையில் பார்க்கவந்த சுந்தர ராமசாமியிடம் கண்ணீர் மல்கச் சொன்னார்.
தூரனைப்பற்றிய தொகை நூல் ஒன்றை பாரதீய வித்யா பவன், கோவை மையம் வெளியிட்டிருக்கிறது. சிற்பி பாலசுப்ரமணியம் தொகுப்பாசிரியராகவும் பேராசிரியர் இராம இருசுப்பிள்ளை, டாக்டர் ஐ.கெ.சுப்ரமணியம் ஆகியோர் இணையாசிரியர்களாகவும் செயல்பட பொள்ளாச்சி நா.மகாலிங்கம் அவர்களின் முன்னுரையுடன் வந்திருக்கிறது இந்த நூல்.
தூரனின் நூற்றாண்டு முடிந்த பின்னர் இதை எழுத வேண்டுமென எண்ணியிருந்தேன். தான்சார்ந்த மொழிக்கும் பண்பாட்டுக்கும் தன் இறுதிச்சொட்டு உழைப்பை அளித்து மறைந்த அந்த எளியமனிதரைப்பற்றி சம்பிரதாயமாக ஏதும் சொல்லிவிடக்கூடாது என்ற எண்ணம் இருந்தது. எளிமை, தனக்குள் மூழ்கி உழைக்கும் அர்ப்பணிப்பு ஆகியவை அடிப்படை விழுமியங்களாக இருந்த ஒரு காலகட்டத்தின் பிரதிநிதி பெரியசாமி தூரன்.
தூரன் பற்றிய சுட்டிகள்
பெரியசாமி தூரன் பாடல்கள் –டி கெ சங்கரநாராயணன்
http://sanimoolai.blogspot.com/2008/10/blog-post.html
http://groups.google.com.br/group/minTamil/msg/9662f6db6f265c70
http://www.tamilonline.com/thendral/Auth.aspx?id=89&cid=14&aid=4786&m=c
http://entertainment.vsnl.com/thooran/Thooran_Biography.html
======================================
மறுபிரசுரம்/முதற்பிரசுரம் Oct 27, 2008
தொடர்புடைய பதிவுகள்
ஒரு மலரிதழை முளைக்க வைத்தல்
ஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி, வாசிப்பு குறித்து…
சுஜாதாவை காப்பாற்ற வேண்டுமா?
பாலகுமாரன் ஒரு கடிதம்
ஜெயகாந்தன்
வெ.நாராயணன் -ஒரு கடிதம்
பேரா.நா.தர்மராஜன்
ஜெயகாந்தன்,ஐராவதம் மகாதேவன்
திலீப்குமார்
திலீப்குமாருக்கு விருது
தூரன்:மேலும் சில கடிதங்கள்
நாஞ்சில் நாடனின் கும்பமுனி
சுஜாதாவின் அறிவியல் சிறுகதைகள்
அ.முத்துலிங்கம் நேர்காணல் – ஜெயமோகன்
புன்னகைக்கும் கதைசொல்லி – அ.முத்துலிங்கத்தின் படைப்புகள் குறித்து
இந்திய இலக்கியம் ஒரு விவாதம்
சதுரங்க ஆட்டத்தில்
நாட்டியப்பேர்வழி
புரட்சி இலக்கியம்
என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?
தொடங்குமிடம்
அன்புள்ள ஜெ ,
நம்மை சுற்றியிருக்கும் வறுமையையும், பாலின அத்துமீறலையும், குழந்தைகள் அனுபவிக்கும் வன்கொடுமைகளையும், எளியோர் ஏமாற்றப்படுவதையும் எப்படித்தான் பார்த்துக்கொண்டு கடந்துபோய்க்கொண்டிருக்கிறோம்? இன்று காலை இறந்த ஒரு தாயிடம் குழந்தை பால்குடித்து கொண்டிருந்தது பற்றி செய்தி படித்து மனம் கலங்கிப்போனேன்.
இந்த மாதிரி சோகங்களை தவிர்க்கவே மனம் நினைக்கிறது. வர வர படம் பார்த்தல் கூட ஜி.வி.பிரகாஷ் படம் தவிர்த்து வேறு எதுவும் பார்க்கப் பிடிக்கவில்லை. புத்தகங்களில் கூட நல்ல முடிவுடன் கூடிய சோக நிகழ்வுகள் இல்லாத புத்தகங்களையே படிக்கிறேன். இந்தியாவை விட்டு வெகு தொலைவில் இருப்பதால் பல துக்க செய்திகளை தவிர்க்க முடிகிறது. திரும்பி வந்து grass root level சமூக சேவைகளில் ஈடுபட ஆசை. குறைந்த பட்சம் இரண்டு குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்வி சொல்லிக் கொடுத்தாலும் மனம் நிறையும். ஆனால் பிறர் துன்பம் கண்டு ரொம்பவே கலங்கிப் போய்விடுகிறேன். என் சிறு வயது சோகங்கள் கூட காரணமாக இருக்கலாம்.
உங்கள் எழுத்துக்களில் (கட்டுரைகளில்)ஒரு நிதானம் என்னை வசீகரிக்கிறது.எனக்கு ஏதேனும் ஆலோசனை சொல்ல முடியுமா?
நன்றியுடன்,
ஸ்ரீ
***
அன்புள்ள ஸ்ரீ,
உங்கள் மிகையான உணர்வுகள் விலகியிருப்பதனால் வருபவை. களத்தில் உண்மையிலேயே பணியாற்றுபவர்களைப் பாருங்கள். அவர்கள் எளிதில் கலங்குவதில்லை. அனுபவங்கள் உணர்வுகளில் நிதானத்தை அளிக்கின்றன. பலகோணங்களில் பார்க்கச்செய்கின்றன. ஆகவே சமநிலையை அளிக்கின்றன.
மிகைக்கொந்தளிப்புகளை வெளிப்படுத்துபவர்களைக் கூர்ந்து நோக்கினால் அவர்கள் பெரும்பாலும் நேரடி யதார்த்தங்களுடன் சம்பந்தமற்றவர்கள். ஆகவே ஒற்றைநிலைபாடுகள் கொண்டவர்கள். தங்களைச் சார்ந்தே யோசிப்பவர்கள். தங்கள் பிம்பங்களை உருவாக்கிக்கொள்ளவே அந்த மிகையுணர்ச்சி. அது அவர்களுக்கு இரக்கமானவர் என்றும் நீதிசார்ந்தவர் என்றும் போராளி என்றும் கலகக்காரர் என்றும் பலவகையான தோற்றங்களை அளிக்கின்றன. அத்தோற்றங்களை நம்பி அவர் மேலும் மேலும் உணர்ச்சிக்கொந்தளிப்பு அடைகிறார். அதைத் தன்னையும் பிறரையும் நம்பவைக்க மேலும் பெருக்கிக்கொள்கிறார்.
ஆகவே உண்மையான ஆர்வமிருந்தால் சிறிய அளவிலேனும் எதையாவது செய்யத் தொடங்குங்கள். அதன் சிக்கல்களை சந்தியுங்கள். அது அளிக்கும் நிறைவையும் ஏமாற்றத்தையும் சந்தியுங்கள். எல்லாவற்றையும் சீராக்கியபின், தனக்குரிய இடத்துக்குத் திரும்பியபின், அதேபோன்ற பலவற்றுக்குப்பின் எவரும் எதையும் செய்வதில்லை. செய்ய விரும்பினால் மிக அருகே, அன்றாடவாழ்க்கையின் ஒருபகுதியாகவே, செய்வதற்குரியவை கண்ணுக்குப்படும்
ஜெ
***
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 41
40 குருதிமை
மூன்றாம்நாள் மழைவிட்டு துளிச்சொட்டலும் நீர்ப்பிசிறுக் காற்றுமாக நகரம் விம்மிக்கொண்டிருக்கையில் அரண்மனை முரசுகள் முழங்கின. அவ்வோசையை அவர்கள் இடியொலியாகவே கேட்டனர். நீர்த்திரை அதை ஈரத்துணிபோல மூடியிருந்தமையால் மிக மெல்ல அப்பாலெங்கோ என ஒலித்தது. பின்னர்தான் அது முரசெனத் தெளிந்தனர். ‘நோக்குக! நோக்குக! நோக்குக!’ என முழங்கியது முரசு. நிமித்திகன் உரத்த குரலில் அன்று அந்தியில் கலிதேவனுக்கான பூசனை நிகழப்போவதை அறிவித்தான். “நம் மூத்தவர் விண்புகுந்தார். மழைவிழுந்து நகர் தூய்மைகொண்டது. நாம் அளித்த பலிகளில் முதன்மையானதை நம் குடிகளுக்கிறைவன் ஏற்றுக்கொண்டார். வருக, இறையடி பணிக! அருள்பெறுக!”
நீர்க்காற்று நகரைச் சூழ்ந்து வீசிக்கொண்டிருக்க மரங்களின் இலைகளும் கூரைகளும் பளிங்குக் கற்களென சொட்டிக்கொண்டிருந்தன. பகல் முழுக்க நகரம் ஓசையடங்கி நனைந்த துணிபோல அசைவிலா அலைகளாக கிடந்தது. உச்சிப்பொழுதுக்குப் பின்னர் மெல்ல விழித்தெழுந்தபோதுகூட தோல்நனைந்த முரசின் ஓசையென்றே முழங்கியது. மூன்றுநாள் மழை அனைவருக்கும் உடலோய்ந்த உள்வாழ்க்கை ஒன்றை அளித்திருந்தது. விழிகள் ஒளிக்கு கூசின. புறவுலகை மறுத்தது உள்ளம். அவர்கள் நினைவுகளில் கனவுகளில் தனிமையில் திளைக்க விரும்பினர். தனிமை துயர் கொண்டது. அதன் இனிமை எஞ்சியிருந்த அவர்களின் உள்ளம் களியாட்டை வெறுத்தது. அவர்கள் அகத்தில் இனிய சிறு மின்னல்கள் எழுந்தமைந்துகொண்டிருக்க அவ்வப்போது மெய்ப்புகொண்டனர். விழியமைந்து மென்துயிலில் மூழ்கியபோது கரிய அலைகளின்மேல் நின்று ததும்பிய செந்தாமரையைக் கண்டனர். வெண்ணிற முகில் கரைந்தும் திரண்டும் யானை வடிவுகொண்டு வானில் மிதந்தது. அதை ஊடுருவிய ஒளி பாலென பளிங்கென கண்களை நிறைத்தது.
அன்று கதிர்முகம் தெளியவேயில்லை என்பதனால் பொழுதடைவதை உணரமுடியவில்லை. அரண்மனையில் அந்திமுரசு முழங்கியதும் பிற முரசுகளும் ஒலிக்கத் தொடங்கின. புற்றுவாய் திறந்து ஈசல்கள் எழுவதுபோல மக்கள் தங்கள் இல்ல வாயில்களில் இருந்தும் தெருமுனைத் திறப்புகளில் இருந்தும் எழுந்து சாலைகளை அடைந்தனர். துளிசேர்ந்து பெருக்காகி கரைதொட்டு நிரப்பியபடி நகர்மையத்தில் அமைந்த கலிதேவனின் ஆலயத்தை நோக்கி சென்றார்கள். அவர்கள் அணிந்திருந்த வண்ண ஆடைகளும் தலைப்பாகைகளும் கலந்த கொப்பளிப்பின்மேல் தெருமுனை மீன்நெய்ப் பந்தங்களின் தழலொளி அலையடித்தது.
சூழ்ந்திருந்த கூட்டம் அவர்களை தனிமையின் இனிய துயரிலிருந்து விடுவித்தது. பேச்சொலிகளும் முழவொலிகளும் கலந்த முழக்கம் அவர்களின் உள்ளே ஓடிக்கொண்டிருந்த மெல்லிய தன்மொழியை அணையச்செய்து அகத்தை கூச்சலாக ஆக்கியது. ஓசைமிகுதல் என்பது வெறி, களிப்பு, கொண்டாட்டம். தளர்வுடன் இருந்த அவர்களின் தோள்கள் நிமிர்ந்தன. தாழ்ந்து நிலம்நோக்கிய தலைகள் விரைத்தெழுந்தன. அடிநோக்கி அமைந்த சீர்நடை துள்ளலென்றாகியது. அப்பெருங்கூட்டத்தை அவர்கள் அறியாது அகநடனமிடச் செய்தது முரசின் தாளம். மேலிருந்து நோக்கிய காவலர்கள் அத்திரளில் நடனம் சிறிய அலைகளாக எழுந்து கொண்டிருப்பதை கண்டார்கள்.
நகரின் தென்மேற்கு மூலையில் இருந்த கலியின் சிற்றாலயத்தில் இருந்து பிடிமண் எடுத்துவந்து நகர்நடுவே அமைக்கப்பட்ட ஏழடுக்கு ஆலயம் அது. சுற்றிலும் மிக விரிவான செண்டுவெளி இருந்தது. அதிலிருந்து பதினெட்டு பெரிய படிகள் ஏறிச்சென்று கலியின் ஆலயச் சுற்றுக்கட்டை அடைந்தன. நூற்றெட்டு தூண்களால் தாங்கப்பட்ட கோபுரத்திற்குக் கீழே கருவறைக்குள் கலி கருநாகங்களும் காகங்களும் பொறிக்கப்பட்ட பீடத்தின்மேல் அமர்ந்திருந்தான். கோபுரத்தின்மேல் காகக்கொடி காற்றில் பறந்தது. அத்தனை தூண்களிலும் காகமுகம் கொண்ட விளக்குமகளிர் சிலைகளின் கைகளில் நெய்யகல்கள் பீதர்நாட்டுக் கண்ணாடியாலும் தீட்டப்பட்டச் சிப்பியாலுமான காற்றுமறைப்புக்குள் சுடர்கொண்டிருந்தன.
நான்கு எல்லையும் திறந்துகிடந்த செண்டுவெளிக்குள் பதினெட்டு சாலைகளிலிருந்து மக்கள் வந்து பெருகி நிறைந்தார்கள். அதன் நான்கு திசைகளிலும் அமைந்திருந்த முரசுமேடைகளில் பெருமுரசுகள் துள்ளுநடையில் துடித்துத்துடித்தொலிக்க கொம்புகளும் முழவுகளும் இணைந்துகொண்டன. உடுக்கோசையில் எழுந்துவரும் காட்டுத்தெய்வங்கள்போல விழிகளில் மதமும் வெறியும் தெரிய மக்கள் தோன்றினர். கைகளை விரித்து தொண்டை நரம்புகள் புடைக்க கூச்சலிட்டனர். அவிழ்குழல்கற்றைகளைக் சுழற்றியபடி வெறிகொண்டு ஆடினர் முதுபெண்டிர். சிலம்புகளும் கழல்களும் ஒலிக்க கால்கள் மண்ணை மிதித்து மிதித்து நடனமிட்டன.
நிஷதகுடிகளின் தலைவர்கள் அனைவரும் தங்கள் தொல்முறைப்படி இடைவளைத்து தோள்சுற்றிச் சென்ற ஒற்றைமான்தோலாடையும், தழல்வரிப்புலித்தோலாடையும், இருளலையும் கரடித்தோலாடையும் அணிந்து கழுகிறகும் காக்கையிறகும் காட்டுச்சேவல்இறகும் கொண்ட மரக்கொந்தைகளை தலையில் சூடி கைகளில் குடிக்கோல்களுடன் வந்து கலிதேவனின் ஆலயத்தின் முகமண்டபத்தில் நிரைகொண்டு நின்றிருந்தார்கள். உள்ளே பூசகர்கள் கலிவழிபாட்டுக்கென நீலமலர்களையும் காட்டுச்சுனையில் ஊறிய நூற்றெட்டு குடம் நீரையும் கொண்டுவைத்தனர். அடுமனைப்பூசகர் நுரைக்கும் கள்ளையும் இலையப்பங்களையும் பனையோலைச் சுருளப்பங்களையும் சுட்ட அப்பங்களையும் கொண்டு வைத்தனர்.
காளகக்குடிகளின் ஏழு மூத்தவர்களால் வழிநடத்தப்பட்டு புஷ்கரன் முழுதணிக்கோலத்தில் ஆலயமுகப்பிற்கு தேரில் வந்து இறங்கியபோது பெருமுரசுகளும் கொம்புகளும் முழங்கின. செண்டுவெளியை நிறைத்திருந்த குடிகள் வாழ்த்தொலி எழுப்பினர். இசைச்சூதர் மங்கல இசைமுழக்கி சூழ்ந்திருந்த காற்றை அக்காட்சிகள் அனைத்தும் வரையப்பட்ட ஓவியத்திரைச்சீலை என்றாக்கினர். புஷ்கரனுடன் உடனுறைத் துணைவனாக ரிஷபன் அணிச்செதுக்குப் பிடிகொண்ட உடைவாள் ஏந்தி வலப்பக்கம் நடந்து வந்தான். வாழ்த்தொலிகளும் குரவையோசையும் சூழ அவர்கள் வந்து கலிதேவனின் கருவறைக்கு முன்னால் பலிபீடத்திற்கு வலப்பக்கமாக நின்றனர்.
செந்திரைகள் அலைய அரசபல்லக்கு வந்து நிலம் அமைந்தது. அதனருகே மரப்பீடம் கொண்டுபோடப்பட்டது. திரைவிலக்கி கைகூப்பியபடி இறங்கிய மாலினிதேவி இடையிலும் தோளிலும் காளகக்குடிப் பெண்களுக்குரிய முழங்கால்வரை வரும் ஒற்றை மான்தோலாடை சுற்றியிருந்தாள் கல்மாலைகளும் கல்குழைகளும் அணிந்து புலித்தோல் கச்சை கட்டி தலையில் காகஇறகுகள் கொண்ட முடிவளை சூடியிருந்தாள். காளகக்குடியினரான ஏழு சேடியரால் சூழ்ந்து வழிநடத்தி அழைத்துவரப்பட்டு ஆலய முகப்பை அவள் அடைவதுவரை குடிகளின் வாழ்த்துக்களே அவளை ஏந்தி வந்தன.
காளகக்குடியின் மூத்த பெண்டிர் பன்னிருவர் நிறைநீர்க்குடங்களும் அகல்சுடர்களும் ஏந்தி உடன்வர புஷ்கரனின் அன்னை சம்புகை கலிங்க இளவரசியை எதிர்கொண்டு கல், மண், நீர், மலர், கனி என்னும் ஐந்து கான்மங்கலங்கள் கொண்ட தாலத்தை அளித்து நெற்றியில் பலிவிலங்கின் குருதி உலர்ந்த கருஞ்சாந்தால் பொட்டிட்டு வாழ்த்தினாள். அவள் குனிந்து அன்னையின் கால்தொட்டு சென்னி சூடினாள். அன்னையர் அவளை அழைத்துவந்து கலிதேவன் முன்னால் நிறுத்தினார்கள். பூசகக்குலத்து மூதன்னையர் எழுவர் செங்குருதி நிறைந்த குவளைகொண்ட கரித்தாலத்தை உழிந்து காட்டி கண்ணேறு கழித்தனர். கலியின் காலடியில் எழுபத்திரண்டு நாள் வைத்து வழிபட்டு எடுத்த கருந்தாலியை பூசகி எடுத்து நீட்ட புஷ்கரனின் அன்னை அதை மாலினியின் இடக்கையில் காப்பெனக் கட்டினாள். பிறிதொரு மூதன்னை அளித்த நெய்விளக்குடன் அவள் சென்று கலிதேவனின் கருவறை முகப்பில் பலிபீடத்தின் இடப்பக்கம் நின்றாள்.
சுநீதர் கைகாட்ட கலிதேவனின் தலைப்பூசகர் வழிபடுமுறைமைகளை தொடங்கினார். நூற்றெட்டு கலம் நீரால் கரியதேவன் முழுக்காட்டப்பட்டான். அதன்பின் பலிஎருமையின் செங்குருதி முழுக்கு. பின்னர் பால்முழுக்கு. தேன்முழுக்கு, நீறுமுழுக்கு. ஐம்முழுக்குகளுக்குப்பின் மீண்டும் பதினெட்டு கலம் நீரால் முழுக்காட்டு. கரிய ஆடையும், காகச்சிறகு மணிமுடியும், நீலமணிக் கழல்களும் கச்சையும் ஆரங்களும் வளையல்களும் பூட்டப்பட்டபின் நீலமலர்க்காப்பு அணிவிக்கப்பட்டது. பெண்டிரின் குரவை எழுந்து சூழ்ந்தது. கலிதேவனுக்குரிய குறுமுழவான உறுமி தோற்பரப்பில் பிரம்புக்கோல் வருட சினந்த புலி என ஓசையிட்டுக்கொண்டிருந்தது. அவர்கள் அனைவருக்குள்ளும் வாழ்ந்த தொல்குடி நினைவு ஒன்று பதறி கிளைநுனியில் தவித்து நின்றிருந்தது.
சிவந்த வெறிவிழிகளும் தோள்களில் படர்ந்த சடைவிழுதுகளும் ஏழு திரிகளாக நெஞ்சில் விழுந்த சடைத்தாடியும் கலிதெய்வத்தின் காகச்சிறகு சூட்டுத்தழும்பாக வரையப்பட்ட விரிந்த மார்பும் கொண்டிருந்த முதன்மைப்பூசகர் கையில் பொசுங்கி வெடித்து நீலச்சுடரசைய எரியும் நெய்ப்பந்தத்துடன் வீரிட்டலறி விதிர்த்த உடலுடன் கருவறையிலிருந்து வெளியே பாய்ந்து வந்தார். தன் கையிலிருந்த சாம்பலை மாலினிதேவியின் முகத்தின்மேல் ஊதியபின் அறியா விலங்கொன்றின் அமறல்போல் ஒலித்த குரலில் “பெண்ணே, இது கலிதேவனின் வினா. நீ நிஷதகுடிகளில் முதன்மையானதான காளகக்குடியின் வருமகள் என கற்குழையும் கருகமணியும் அணிந்து அமர ஒப்புகிறாயா?” என்றார்.
அவள் திகைக்க அருகே நின்ற முதுமகள் “ஆம் என்று சொல்க!” என்றாள். அவள் உதடுகள் மெல்ல அசைந்தன. இடத்தோள் விதிர்த்தது. “சொல், சொல்” என்றாள். அவள் மூக்குத் துளைகள் விரிந்து சுருங்கின. முலைகள் எழுந்தமைந்தன. “சொல், ஒப்புகிறாயா?” என்றார் பூசகர். “சொல்” என்றாள் மூதன்னை. அவள் தொண்டையை செருமினாள். “மூன்றாம்முறை இது… சொல்க!” என்றார் பூசகர். அவள் “ஆம், ஒப்புகிறேன்” என்றாள். “ஒப்புகிறாயா?” என அவர் மீண்டும் இருமுறை கேட்க “ஆம், ஒப்புகிறேன்” என அவள் தாழ்ந்த குரலில் விழிதாழ்த்தி மறுமொழி உரைத்தாள். அவள் இடத்தொடை ஆடியபடியே இருந்தது.
அதே வெறியுடன் புஷ்கரனை நோக்கித் திரும்பி அலறலுடன் அவன் முகத்தில் நீறை ஊதிய பூசகர் “கேள், மகனே. கலியின் சொல் இது. கேள்… இதோ நின்றிருக்கும் இச்சிறுமகளை மணம்கொண்டு மைந்தரை ஈன்று குடிசிறக்க ஒப்புகிறாயா?” என்றார். அவன் சுநீதரை நோக்கிவிட்டு “ஆம், ஒப்புகிறேன்” என்றான். அவர் மீண்டும் கேட்க அவன் மும்முறை அதை சொன்னான். பூசகர் இரு கைகளையும் விரித்து முழவுக்குரலில் “சொல், இவளுடன் அரியணை அமர்ந்து நிஷதகுடிகளை முழுதாள ஒப்புகிறாயா? என் தேவனென எழுந்தருளிய கலிதெய்வத்தை முழுமுதலோன் என்று இக்குடிகளுக்குமேல் நிறுத்த ஒப்புகிறாயா?” என்று கேட்டார். புஷ்கரன் கூப்பிய கைகள் நடுங்க உதடுகள் இறுகி அசைய தள்ளாடுபவன்போல நின்றான். “சொல்! ஒப்புகிறாயா?” என்றார் பூசகர். “ஆம், ஒப்புகிறேன்” என்று புஷ்கரன் முணுமுணுத்தான்.
“அருளினோம்! அருளினோம்! அருளினோம்!” என்று கூவியபடி பூசகர் கருவறைக்குள் ஓடினார். அவர் உடல் விதிர்த்து துள்ளியது. கருவறையில் கருங்கல்லில் செதுக்கப்பட்டு நெடுங்காலம் எண்ணை பூசப்பட்டமையால் முடியின் கருமையொளி கொண்டிருந்த கலிதேவனின் சிலையின் இரு பக்கமும் நின்றிருந்த காவல்தேவர்களின் வளைகோட்டுவாய் திறந்த முகங்களில் வெள்ளிவிழிகள் பதிக்கப்பட்டிருந்தன. தழல் நெளிந்த பந்தங்களின் வெளிச்சத்தில் அவை சினந்த நோக்குகொண்டு அசைந்துகொண்டிருந்தன. கலியின் கண்கள் நீலப்பட்டால் மூடிக் கட்டப்பட்டிருக்க திறந்த செந்நிற வாயில் வெண்பற்கள் தெரிந்தன. தொங்கிக் கிடந்த நீள்நாக்கில் தொட்டு வைக்கப்பட்ட குருதி வழிந்து துளித்து நின்றது.
சிலையின் காலடியில் இரு உயிருள்ள முதிய காகங்கள் சிறகு கோட்டி தோளுக்குள் தலைபுதைத்து அமர்ந்திருந்தன. அவற்றின் விழிகள் சோர்ந்து தழைந்து மீண்டும் விழித்தன. அவை எப்போதும் அங்கே இருந்துகொண்டிருப்பவை. இறகுகள் பாதி உதிர்ந்த காகம் பல ஆண்டுகளாக அங்கிருக்கிறது என குடியினர் அறிந்திருந்தனர். பூசகர் “எந்தையே, இறையே, சொல்க! உலகாளும் கருமையே சொல்க! வருநெறி சொல்க! எழுமுலகு என்னவென்று நற்சொல் தருக!” என்று கூவினார். காகங்களில் ஒன்று நீர் விழுந்ததுபோல சிலிர்த்து விழிப்புகொண்டு தலையைத் தூக்கி விழிகளை உருட்டி சுடர்களை நோக்கியபின் “காவ்!” என்றது. அடிவயிற்றில் வேல்குத்து பட்டதுபோல துடித்த பூசகர் “ஆ!” என அலறி இரு கைகளையும் விரித்தார். பிடரி சிலிர்த்து சடைவிரிந்து பறக்க சுழன்று ஆடினார்.
ஆட்டவிசையில் கலியின் காலடியிலிருந்த பள்ளிவாளை எடுத்து சுழற்றி மும்முறை துள்ளி நடனமிட்டுச் சுழன்று தன் நெற்றியில் ஓங்கி ஓங்கி வெட்டினார் பூசகர். உடற்தசைகள் இழுபட்டு அதிர விலங்குபோல ஊளையிட்டபடி சுழன்றார். பசுங்குருதியின் மணம் எழுந்தது. அவர் முகமும் நெஞ்சும் தோள்களும் குருதியால் செந்நிறம் கொண்டன. “அருளினேன்! குருதியருளினேன்! செங்குருதி! கொழுங்குருதி! வஞ்சக்கனல் எரியும் குருதி!” என்று கூவியபடி வெளியே வந்து கையை அவர்கள்மேல் உதறினார். குருதித்துளிகள் அவர்கள் இருவர் தலையிலும் முகத்திலும் தெறித்து துளிவழிவாகி இறங்கின. புருவங்களில் குருதி தொங்கி நோக்கு மறைக்க புஷ்கரன் கருவறையில் அமர்ந்திருந்த கரிய உருவத்தின் கண்களையும் திறந்த சிவந்த வாயையும் நோக்கினான்.
“நிகழ்க! கலிதேவனின் ஆணை இது! நிகழ்க!” என்று பூசகர் கூவினார். காளகக்குடி மூத்தார் திரும்பி “தாலி! தாலி எங்கே?” என்றனர். அன்று உச்சிப்பொழுதில் அவர்களின் குடியவை கூடி அமர்ந்து பனையோலையில் புஷ்கரனின் குடிநிரையும் பெயரும் குறியும் பொறித்து இறுகச்சுருட்டி எண்ணைக்கரி பூசி கருஞ்சரடில் கட்டி கொண்டுவந்திருந்த தாலி ஒரு கரிய கொப்பரையில் கட்டப்பட்டிருந்தது. அதை தாலத்தில் செம்மலர்களும் வெண்ணீறும் இட்டு வைத்திருந்தனர். தலைகளுக்கு மேலாக அது பறப்பதுபோல வந்தது. அதை சுநீதர் வாங்கி தாலத்துடன் துணைப்பூசகர் கையில் அளித்தார். கலியின் காலடியில் அதை வைத்து ஒரு துளிக் குருதியும் ஒரு மலரிதழும் வைத்து வணங்கி திருப்பியளித்தார் பூசகர்.
அதை வாங்கி சுநீதர் புஷ்கரனிடம் நீட்டி “அவள் கழுத்தில் இதை கட்டு. அவள் நம் குலக்கொடியென்றமைக!” என்றார். அவன் அதை எடுத்து முன்னகர மூதன்னையர் மாலினிதேவியை முன்னால் செலுத்தினர். அவள் கழுத்தும் தோள்களும் மெய்ப்புகொண்டு மயிர்நிரைகளாக தெரிந்தன. அவளை மூதன்னையர் விழாமல் தாங்கிப்பிடித்திருந்தார்கள். புஷ்கரன் கருந்தாலியுடன் அவளை நோக்கியபடி நின்றான். பெண்டிரின் குரவையோசையும் உறுமியின் அமறலும் இணைந்து சூழ்ந்தன. “கட்டுக!” என்றார் சுநீதர். அவன் கைநீட்ட அவள் விழிதூக்கி அவனை நோக்கினாள். திடுக்கிட்டு அவன் கைகளை பின்னிழுத்துக்கொண்டான். “கட்டுக, இளவரசே!” என்றார் சுநீதர். அவன் நெஞ்சு துடித்தது. ஒருகணம் அவன் தன் வலப்பக்கம் ரிஷபனின் உடல் வெம்மையை உணர்ந்தான். “கட்டுங்கள்” என்றான் ரிஷபன்.
புஷ்கரன் அந்தத் தாலியை அவள் கழுத்திலிட்டு முதல் முடிச்சை கட்டினான். இரண்டாவது முடிச்சை அவன் அன்னை கட்டினாள். மூன்றாம் முடிச்சை குலமூதாட்டி ஒருத்தி கட்டினாள். நான்காம் முடிச்சை ஆலயத்தின் பூசகி கட்ட ஐந்தாம் முடிச்சை அவர்களின் அணுக்ககுலத்தைச் சேர்ந்த மூதன்னை ஒருத்தி கட்டினாள். ஆறாவது முடிச்சை மலைத்தெய்வங்களின் பொருட்டு சிறுமி ஒருத்தி கட்ட ஏழாவது முடிச்சை மாலினியே கட்டிக்கொண்டாள். சுநீதர் “இளவரசே, உங்கள் உடைவாளை உருவி கலிதேவனின் காலடியில் தாழ்த்திவிட்டு வான்நோக்கித் தூக்கி மும்முறை ஆட்டுங்கள்” என்றார். ஒரு முதியவர் “அந்த மரபு இல்லையே?” என்றார். “அம்மரபு உருவாகட்டும்” என்றார் சுநீதர். “ஆனால்…” என அவர் முனக “இனி நமக்கு புஷ்கரரே அரசர்! புஷ்கரர் மட்டுமே அரசர்!” என்றார் சுநீதர்.
“ஆம்!” என்று ஒரு குலமூத்தார் கூவினார். “நம் அரசர் இவர் மட்டுமே. நாம் வெல்வோம். நம் குடிகள் நம் நிலத்தை முழுதாளும்.” குடிமூத்தார் அனைவரும் கோல்களைத் தூக்கி “ஆம் ஆம் ஆம்” என கூவினர். புஷ்கரன் திகைத்தவன்போல நின்றான். “வாளை உருவுக, இளவரசே” என்றார் சுநீதர். புஷ்கரன் தன் இடைவாளை உருவி கலியின் காலடிநோக்கி நீட்டினான். அது பாம்புநாக்கென நடுங்கியது. அதன்மேல் தன் கையில் வழிந்த குருதித்துளிகளைச் சொட்டி மலர் ஒன்றை இட்டு “பழிகொள்க! வெற்றிசூடுக!” என்று பூசகர் வாழ்த்தினார். அவன் வாளைச் சுழற்றித் தூக்கி தலைமேல் எழுப்பினான். “அமைதி… அமைதி” என்றார் சுநீதர். புஷ்கரன் கைகள் நடுங்க உடல் மெய்ப்புகொண்டது. “வஞ்சினம் உரையுங்கள், இளவரசே” என்றார் சுநீதர். “அது நம் தெய்வத்தின் ஆணை” என்றார் இன்னொருவர்.
அவன் மூச்சுவாங்கினான். வாள் கையில் காற்றுபட்ட கொடி என படபடப்பதாகத் தோன்றியது. “உம்” என்றார் சுநீதர். அவன் வாளை ஆட்டினான். வெளியே முரசுகள் முழங்க பல்லாயிரம் குரல்கள் வெடித்தெழுந்து “காளகக்குடி வெல்க! கலிமைந்தர் வெல்க! புஷ்கரர் வெல்க!” என ஓசையிட்டன. அவன் கண்கள் கசியும்படி மெய்விதிர்ப்புகொண்டான். “குருதியால் கழுவுவேன்! குருதி ஒன்றை மட்டுமே நிகர்வைப்பேன்! ஆணை! ஆணை! ஆணை!” என்றான். “ஆம், ஆணை! ஆணை! ஆணை!” என்றனர் சூழ்ந்திருந்த குடித்தலைவர்கள். வாளைத் தாழ்த்தியபின் உடலில் நுரைத்த ஆற்றல் அனைத்தும் ஒழுகி மறைய தலைசுற்றுவதுபோல உணர்ந்தான். பெருமூச்சுவிட்டபடி தோள்தளர்ந்தான்.
“மங்கலம் கொள்க!” என்றார் பூசகர். கலிக்குப் படைத்த அப்பம், மலர், சிறு பனைகொட்டையில் கள் மூன்றையும் ஒரு தாலத்தில் வைத்து அவனுக்கு அளித்தார். “இருவரும் ஓருடல் கைகளென கொள்க அதை” என்றார் சுநீதர். புஷ்கரனும் மாலினியும் கைநீட்டி அத்தாலத்தை வாங்கிக்கொண்டனர். பூசகர் பலிக்குருதி மையைத் தொட்டு இருவருக்கும் பொட்டு அணிவித்தார். “தெய்வம் துணைகொள்ளும். எதற்கும் அஞ்சேல். எங்கும் தளரேல். எந்நிலையிலும் பின்நோக்கேல். ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார் பூசகர். அவர்கள் இருவரும் அவரை வணங்கி விலகினர்.
சுநீதர் பெருமூச்சுடன் உடல் இயல்பாகி முகம் மலர்ந்து “மணவினை முடிந்தது. கலிங்க இளவரசி நம் குடிக்கு தலைவியென்றானாள். நிஷதகுலம் என்றும் இந்நாளை கொண்டாடட்டும். இத்தருணம் நம் கொடிவழிகளின் நினைவில் வாழட்டும்” என்றார். அனைவரும் ஒருவரை ஒருவர் தழுவிக்கொண்டு சிரித்து முகமன் பரிமாறிக்கொண்டார்கள். “செல்வோம்” என்று சுநீதர் புஷ்கரனை தொட்டார். எரிச்சல் கொண்டவன்போல, எதையோ எண்ணி தடுமாறுபவன்போல கைவிரல்களால் காற்றில் எதையோ சுழற்றியபடி புஷ்கரன் அவருடன் நடந்தான். ரிஷபன் வாளேந்தி உடன் வந்தான். சுநீதர் “நாம் அரண்மனைக்கு செல்கிறோம். ஊருண்டாட்டு ஒருங்கமைந்துள்ளது. அடுமனைப் புகையின் மணம் எழுகிறது” என்றார். ரிஷபன் “நம் தேர் மறுபக்கம் சென்று நின்றுள்ளது, அரசே” என்றான். புஷ்கரன் சினத்துடன் அவனை நோக்கி “தெரியும்” என்றான்.
“இருவரும் இணைந்து மக்கள் நடுவே செல்லவேண்டும். அவர்களின் நல்வாழ்த்துக்கள் பொழியட்டும்” என்றார் சுநீதர். புஷ்கரனின் இடப்பக்கம் மாலினிதேவி வந்து நின்றாள். அவர்களின் ஆடைமுனைகளை மூதன்னையர் சேர்த்துக்கட்டினர். வாழ்த்தொலி எழுப்பியபடி மக்கள் அரிசியையும் மலரையும் அவர்கள்மேல் தூவினர். மாலினியின் சுட்டுவிரலை தன் சுட்டுவிரலால் பற்றியபடி புஷ்கரன் மக்கள் நடுவே உருவான ஆழ்நெடும்பாதையில் நடந்தான். வாளுடன் ரிஷபன் உடன் வந்தான். மலர்களும் அரிசியும் உடல்மேல் விழுவது அவனுக்கு உளப்புரட்டலை அளித்தது. தலையில் தொங்கிநின்ற மலர்களை தட்டிவிட விரும்பினான். சூழ தெரிந்த பல்விரிந்த முகங்கள் கெடுகனவிலென இளித்தன. கண்கள் ஒவ்வொன்றிலும் வெறிப்பு. கொன்று உண்ணும் கான்விலங்கின் அறியாமை கலந்த உவகை.
தேர் வந்து நின்றது. சுநீதர் “அரண்மனைக்குச் செல்லுங்கள், இளவரசே. அரசஆடையில் உண்டாட்டுக்கு எழுந்தருளுங்கள். அரசியும் ஆடைமாற்றி வந்து சேரட்டும். அதற்குள் இங்குள்ள மக்கள் வழிபாடு முடிந்து ஊண்கூடங்களுக்கு வந்துவிடுவார்கள்…” என்றார். அவன் “நன்று” என்றபின் படிகளில் கால்வைத்து மேலேறினான். ரிஷபன் வாள் தாழ்த்தி வணங்கி மூன்று எட்டுவைத்து பின்னடைந்தான். மாலினிதேவி அவனுக்குப் பின்னால் படியிலேறி அவனருகே அமர்ந்தாள். தேர் மெல்லிய உலுக்கலுடன் உயிர்கொண்டது. புரவி ஒன்று சீறி மூச்சுவிட்டது. வெளியே அரசர் கிளம்புவதை அறிவிக்கும் முரசொலியும் கொம்பொலியும் எழுந்தன. தேர் நகர்ந்து உலுக்கி மெல்ல சாலையை அடைந்து விரைவுகொண்டது. குளிர்ந்த காற்று திரைச்சீலைகளை அசைத்தபடி உள்ளே பெருகிவந்தது.
அவன் மீண்டும் புரவியின் சீறலோசையை கேட்டான். ஆனால் அது அருகிலென சித்தம் உணர்ந்ததும் திரும்பிப் பார்த்தான். மேலாடையால் முகத்தை மூடியபடி மாலினிதேவி அழுதுகொண்டிருந்தாள். சில கணங்கள் அவன் அவளையே நோக்கினான். இருமுறை வாயும் கையும் அசைந்தன. சொல்லெடுக்காமல் திரும்பி கண்களை மூடிக்கொண்டான். சகடஒலியின் நேர்த்தியான தாளம் அவனை ஆறுதல்படுத்துவதாகத் தோன்றியது.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 33
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 31
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 40
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 34
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 32
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 28
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ –24
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 23
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 14
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 13
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 12
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 11
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 12
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 85
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 50
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 47
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 17
July 2, 2017
மு.வ
அன்புள்ள ஜெமோ அவர்களுக்கு,
டாக்டர் மு.வா பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன? (புனைவுகளை தவிர்த்துவிடுங்கள்) அவரது மொழி ஆராய்ச்சி, கல்வித்துறை பணிகள் குறிப்பிட தகுந்ததுதானா?
தங்கள் உளமறிந்த வாசகன்,
கு.மாரிமுத்து
அன்புள்ள மாரிமுத்து
மு வரதராசன் அவர்களின் பங்களிப்பு மூன்றுதளத்தில். அவர் ஒரு கல்வியாளர். இலக்கிய ஆராய்ச்சியாளார். நாவலாசிரியர். இந்த மூன்று கோணங்களிலும் அவரைப்பற்றி விவாதிக்கலாம்.
மு.வவின் முதன்மையான பணி என்பது கல்வியாளர் என்ற அளவிலேயே. பிற பணிகளை அவரது கல்விப்பணியின் ஒரு பகுதியாகக் காண்பதே பொருத்தமானது. மரபான முறையில் தமிழ் கற்றவர். அக்கால் முறைப்படி வித்வான் தேர்வு எழுதி சிறப்பாக வெற்றிபெற்று தமிழாசிரியரானார். சென்னை பச்சையப்பன் கல்லூரியிலும் சென்னை பல்கலைகழகத்திலும் தமிழ்த்துறைத் தலைவராக இருந்தார். பின்னர் மதுரைப் பல்கலை துணைவேந்தராக இருந்து ஓய்வுபெற்றார்.
முவவின் கல்வித்துறைச் சாதனைகளில் முதன்மையானது தமிழாசிரியர் என்ற பதவிக்கு மதிப்பு ஏற்படுத்தியளித்த பேராசிரியர்களில் ஒருவராக அவர் விளங்கியதுதான். அக்காலத்தில் தமிழாசிரியர்கள் ஒரு போட்டித்தேர்வு எழுதி வென்று ஆசிரியர்களாக ஆனவர்கள். பெரும்பாலும் ஆங்கிலம் அறியாதவர்கள். ஆகவே பிற துறைகளில் பட்டம்பெற்ற ஆசிரியர்கள் தமிழாசிரியர்களை ஏளனமாக அணுகும் நிலை இருந்தது. ஊதியத்தில்கூட பெரும் ஏற்றத்தாழ்வு இருந்தது. பல்கலைப்பதவிகளுக்கு தமிழாசிரியர்கள் வருவதும் அபூர்வம்.
தெ.பொ.மீனாட்சி சுந்தரம்பிள்ளை
அவ்வை துரைசாமிப்ப்பிள்ளை
மு.வ அவரது பதவிகளில் புகழ்பெற்றிருந்தார். அவரது அறிவுத்திறனும்,அனைவரையும் அணைத்துச்செல்லும் போக்கும், அபாரமான ஒழுக்கநோக்கும் அவருக்கு கடைசிவரை எங்கும் பெருமதிப்பை உருவாக்கியளித்தன. அவரது மாணவர்கள்ள் அரைநூற்றாண்டு தாண்டியும்கூட அவரை இன்றும் பக்தியுடன் நினைவுகூர்கிறார்கள். அவரது காலகட்டத்தில் தெ.பொ.மீனாட்சிசுந்தரனார், அவ்வை துரைசாமிப்பிள்ளை போன்ற பேரறிஞர்களால் அவரது இடம் ஒரு படி கீழேதான் இருந்தது. ஆனால் இன்று நோக்கும்போது தமிழ் கல்விவரலாற்றின் ஒளிமிக்க பெயர்களில் ஒன்று மு.வ.
ஒரு கல்வியாளர் என்றநிலையிலேயே அவரது ஆய்வுகள் அமைந்திருந்தன. அதாவது மரபிலக்கியத்தை கல்வித்துறைசார்ந்த தேவைகளுக்காக ஆய்வுசெய்யும் முறையில் அமைந்தவை அவை. தகவல்களை தேடி தொகுத்து வைக்கும்தன்மைகொண்ட ஆய்வுகள். சங்க இலக்கியத்தில் இயற்கை [The Treatment of Nature in Sangam Literature] என்ற தலைப்பில் மு.வ செய்த ஆய்வேடு சிறந்த உதாரணம். அந்த ஆய்வேட்ட்டை ஒட்டியே அவர் பின்னாளில் நெடுந்தொகை விருந்து, குறுந்தொகை விருந்து, நற்றிணை விருந்து முதலிய நூல்களை எழுதினார். அவை அப்பாடல்களில் என்ன சொல்லப்பட்டுள்ளது என்பதை எடுத்துச்சொல்பவை அவ்வளவே.
உதாரணமாக சங்க இலக்கியத்தில் இயற்கைகுறித்து ஆராயும் மு.வ சங்க இலக்கியங்கள் இயற்கையை அகக்குறியீடாக மாற்றும் நுட்பத்தை அறியவேயில்லை. பின்னாளில் அகநிலக்காட்சி [ Interior landscape] என்று ஏகே ராமானுஜன் உலகுக்கு அறிமுகம்செய்த அவ்வியல்பு சங்ககால அழகியலுக்கே உரிய தனித்தன்மை. உலகுக்கு தமிழின் கொடை. ஆனால் மு.வ. மிக எளிமையாக சங்ககால மக்கள் இயற்கையுடன் இயைந்து வாழ்ந்து அதை வர்ணித்துபாடினார்கள் என்ற அளவில் நின்றுவிடுகிறார். கச்சிதமான பள்ளி ஆசிரியராக!
மு.வவின் இலக்கிய ஆராய்ச்சிகளுக்கு ஆராய்ச்சிக் கோணத்தில் பெரிய மதிப்பு ஏதும் இல்லை. அவற்றை எஸ்.வையாபுரிப்பிள்ளை, கெ.என் சிவராஜபிள்ளை போன்ற முதல்தலைமுறை ஆய்வாளர்களுடனோ அல்லது அவரது சமகாலத்தவர்களான தெ.பொ.மீனாட்சிசுந்தரனார் போன்றவர்களின் ஆய்வுகளுடனோ ஒப்பிட்டால் இந்த வேறுபாடு புரியும். அவர்கள் மரபிலக்கியத்தின் உள்தொடர்ச்சியை கண்டறிவதிலும் காலக்கணிப்பிலும் புதிய கண்டறிதல்களை நிகழ்த்தி பெரும் பங்களிப்பை ஆற்றியவர்கள். முவ அப்படி ஏதும் செய்யவில்லை. வெறுமே நயம்பாராட்டி சில தகவல்களைச் சுட்டுகிறார்.
ஏனென்றால் மு.வவுக்கு இலக்கியமல்லாத துறைகளில் ஆர்வமும் பயிற்சியும் இருக்கவில்லை. தத்துவம், மெய்யியல், சமூகவியல், வரலாறு போன்ற துறைகளின் கோணங்களில் இலக்கியங்களுக்குள் சென்று கேள்விகளை உருவாக்கி முடிவுகளுக்கு வர அவர் முயலவில்லை. இலக்கிய ஆக்கங்களை வாழ்க்கை சார்ந்து அணுகவும் அவரால் முடிந்ததில்லை. ஆகவே அவரது மரபிலக்கிய ஆய்வுகளுக்கு இன்று எந்த மதிப்பும் இல்லை. இன்று அவை வாசிக்கப்படுவதும் இல்லை.
இலக்கியவரலாற்றாசிரியராக முவவுக்கு ஓர் இடம் உண்டு. ஆனால் அந்த இடம் மிகைப்படுத்தப்பட்டது. அவரது தமிழிலக்கிய வரலாறு நெடுங்காலம் கல்வித்துறையில் ஒரு பாடநூலாக இருந்தது. ஆனால் மரபிலக்கிய வரலாற்றை பொறுத்தவரை அவர் எதையும் புதிதாகச் சொல்லவில்லை. மு.அருணாச்சலம் போன்றவர்களின் நூல்களை ஒட்டி தொகுத்து தருவதுடன் சரி. அந்நூலில் நவீன இலக்கியம் குறித்த பகுதிகள் மனம்போனபோக்கில் தவறான, போதாத தகவல்களுடனும் வணிக எழுத்துக்கும் இலக்கியத்துக்கும் இடையேயான வேறுபாடுபற்றிய புரிதல் இல்லாமலும் எழுதப்பட்டுள்ளன.
உண்மையில் அப்பகுதிகள் அவரால் எழுதப்படவில்லை, அவரது சில மாணவர்கள் எழுதினார்கள் என சொல்லப்படுகிறது. நவீன் இலக்கியம்பற்றி பிழையான புரிதல்களை நெடுங்காலம் கல்வித்துறையில் நிலைநாட்டியது அது. நவீன இலக்கிய வரலாற்றுக்கு சிட்டி சிவபாத சுந்தரம் எழுதிய இருநூல்கள் [தமிழ் நாவல் நூற்றாண்டு வளர்ச்சி, தமிழ்ச்சிறுகதை வரலாறு] தான் இன்று ஆதாரநூல்களாகும். ஆனாலும் மு.வவின் நூல் ஒரு பாடநூலாக ஒருகாலகட்டத்திற்கு ஓரளவு பயன்பட்டுள்ளது என்பதை மறுக்கமுடியாது.
மரபிலக்கிய தளத்தில் மு.வவின் முக்கியமான சாதனை என்று சொல்லப்படவேண்டியது அவரது திருக்குறள் உரை. அவரது பெரும்புகழ்பெற்ற நூல் அதுவே. அவருக்கு பெரும்செல்வத்தையும் அது ஈட்டியளித்தது. அன்றுவரையிலான உரைகளை ஒட்டி எழுதப்பட்ட ஒரு எளிய நூல்தான் அது. ஆனால் அன்றைய முக்கியமான தேவை ஒன்றை அது நிறைவுசெய்தது. குறளுக்கு மதச்சார்பற்ற, பகுத்தறிவுக்கு ஒட்டிய, ஒரு நவீன உரை தேவையாக இருந்தது. அதை மு.வ.அளித்தார். இன்றும் ஒரு மாணவருக்கு பரிந்துரைக்கக்கூடிய நல்ல குறள் உரை அதுவே. நல்லாசிரியராக மு.வ தமிழுக்கு ஆற்றிய கொடை அது.
மு.வ அறுபதுகளில் கள்ளோ காவியமோ, நெஞ்சில் ஒரு முள், அகல் விளக்கு, கரித்துண்டு, செந்தாமரை, பாவை, அந்த நாள், மலர் விழி, அல்லி, கயமை, மண் குடிசை போன்ற நாவல்களை எழுதியிருக்கிறார். அந்தக்காலகட்டத்தில் அவை குறிப்பிடத்தக்க வணிக வெற்றியும் ஈட்டியிருக்கின்றன. இலக்கியவாதியாக அவருக்கு அன்று முக்கியமான இடம் இருந்தது. அகல்விளக்கு எனும் நாவலுக்கு 1961ல் சாகித்திய அகாதெமி விருது கிடைத்தது.
வி.எஸ்.காண்டேகர்
ஐம்பதுகளில் தமிழில் கா.ஸ்ரீ.ஸ்ரீ அவர்களின் மொழியாக்கத்தில் வி.எஸ்.காண்டேகர் எழுதிய மராத்தி நாவல்கள் வெளியாகி பரவலான வாசக ஆதரவைப் பெற்றன. அது சுதந்திரப்போராட்டத்தின் இலட்சியவாத அலை அடங்காத காலகட்டம். அதை நேருயுகம் எனலாம். இலட்சியவாதியின் காதலையும் போராட்டங்களையும் பற்றிய நாவல்களுக்கு அன்று பெரிய மதிப்பிருந்தது. சராசரி வாசகன் தன்னை இலட்சியவாதியாக எண்ணிக்கொண்டான், காதலிக்கப்படவும் ஆசைப்பட்டான். காண்டேகரின் படைப்புகள் அவர்களுக்கான இலட்சியவாத நாவல்கள்.
காண்டேகரின் நாவல்களுக்கு சில தனித்தன்மைகள் உண்டு. அவை ஒரு பாடநூல் போல சீரான கதையோட்டம் கொண்டவை. அத்தியாயங்களின் முகப்பில் எப்போதும் இலட்சியங்களைப்பற்றியும் மனித இயற்கையைப் பற்றியும் ஒரு குட்டிச் சொற்பொழிவு இருக்கும். கதைமாந்தர்கள் சில கொள்கைகளின் பிரதிநிதிகளாக நின்று முறையான வாதங்களைத்தான் உரையாடல்களாக முன்வைப்பார்கள். தியாகம் போன்ற விழுமியங்கள் போற்றப்படும். காண்டேகரை கையில் பென்சில் இல்லாமல் வாசிக்கக்கூடாது என்பார்கள்.
தமிழில் காண்டேகரின் பாதிப்பு என்பது மிக ஆழமானது. தமிழில் ஏற்கனவே ஒரு கேளிக்கை எழுத்து வேரூன்றியிருந்தது. அதன் நாயகராகிய கல்கியின் யுகம் அது. கூடவே தேவன், ஆர்வி, எல்லார்வி, மாயாவி என வணிக எழுத்தாளர்கள் உருவாகி வந்திருந்தனர். விகடன், கல்கி, கலைமகள் இதழ்களால் இவர்கள் உருவாக்கப்பட்டு முன்வைக்கப்பட்டார்கள். அவர்களுக்கு இலக்கிய அடையாளமும் அளிக்கப்பட்டது.
இலக்கிய எழுத்து சிற்றிதழ்களின் மிகச்சிறிய வட்டத்துக்குள் செயல்பட்டுக்கொண்டிருந்தது. அது எழுத்து போன்ற சிற்றிதழ்களின் காலம். க.நா.சு இலக்கியத்தை ஐரோப்பா நோக்கி திருப்பி வைத்த காலகட்டம். ’சரஸ்வதி’ ’தாமரை’ இதழ்கள் வழியாக முற்போக்கு இலக்கியம் உருவாகி வந்துகொண்டிருந்தது. அதற்கும் பிற இலக்கியவாதிகளுக்கும் விவாதங்கள் நிகழ்ந்தன. புதுக்கவிதை உருவாகிக் கொண்டிருந்தது. ஆனால் இவற்றை பரவலாக எவரும் அறியவில்லை. மு.வ போன்ற கல்வியாளர்களுக்குக்கூட நவீன இலக்கியத்தளம் பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை.
இந்நிலையில் அன்றைய வாசகர்களில் கணிசமானவர்களுக்கு வணிகக் கேளிக்கை எழுத்துமேல் அவநம்பிக்கை ஏற்பட்டிருந்தது. குறிப்பாக தேவன் முதலியோரால் எழுதப்பட்ட வெறும் வேடிக்கைக்கதைகளை அன்றைய இலட்சியவாத வாசகர்கள் நிராகரித்தார்கள். இலட்சியவாதப்பிரச்சாரமே இலக்கியத்தின் மையநோக்காக அவர்கள் எண்ணினார்கள். அவர்களே காண்டேகரின் வாசகர்கள் ஆனார்கள். காண்டேகர் அவர்களால் பேரிலக்கியவாதியாக கருதப்பட்டார்.
காண்டேகரைப் பின்பற்றி எழுத ஆரம்பித்தவர்களில் முதன்மையானவர் மு.வ. அவரது நாவல்களை வைத்து அவரை தமிழ்க்காண்டேகர் என்று சொல்லிவிடலாம். எந்த வணிக இதழின் ஆதரவும் இல்லாமலேயே மு.வ பெற்ற வெற்றி கவனத்துக்குரியதே. பின்னர் வணிக இதழ்கள் அந்த வகையான எழுத்தின் வணிகச் சாத்தியங்களை கண்டுகொண்டன. அகிலன்,நா.பார்த்தசாரதி போன்றவர்கள் காண்டேகரின் பாணியை வணிக எழுத்துக்குள் கொண்டுசென்று வெற்றிபெற்றார்கள்.
காண்டேகர், மு.வ போன்றவர்களின் நாவல்கள் அன்று பெற்றிருந்த ஆதரவை இன்று ஒட்டுமொத்தமாக புரிந்துகொள்ள முடிகிறது. நாடெங்கும் இலட்சியவாதம் அலையடித்த காலம். எழுபதுகளில்தான் பெரும் ஊழல்கதைகள் வெடித்து மெல்லமெல்ல ஜனநாயகம் மீதான அவநம்பிக்கை உருவானது. அவசரநிலைக்காலத்தால் அது முழுமையான கசப்பாக மாறியது. அந்த இலட்சியவாதக் காலகட்டத்தில் அதிகமாக வாசித்தவர்கள் பெரும்பாலும் ஆசிரியர்கள். அவர்களே இலட்சியவாதத்தை கிராமம் தோறும் கொண்டு சென்றவர்கள். மாணவர்கள் அடுத்தபடியாக. அவர்களுக்கான இலக்கியமாக இருந்தன இந்நூல்கள்.
அத்துடன் எனக்கு ஒன்றும் தோன்றுகிறது. அன்று மேடைப்பேச்சு ஒரு முக்கியமான ஊடகமாக பரவி விட்டிருந்தது. தமிழகத்தில் எங்கும் கூட்டங்கள் நிகழ்ந்த காலம் அது. கூட்டம் கேட்பதை தங்கள் இளமைக்காலத்து முக்கியமான பொழுதுபோக்காக இன்றைய முதியவர்கள்பலர் சொல்வதைக் காணலாம். எல்லா படித்தவர்களும் கூட்டங்களில் பேசவேண்டியிருந்தது. காண்டேகர் மற்றும் மு.வ நூல்களில் இருந்து மேற்கோள்களை உருவி சொற்பொழிவை அமைப்பது அன்றைய வழக்கம்.நான் மு.வ.நூல்களை சொற்பொழிவாளர்களிடமே அதிகம் கண்டிருக்கிறேன்.
மு.வவின் நாவல்களையும் பாடப்புத்தகநாவல்கள் எனலாம். பள்ளி கல்லூரிகளின் பாடத்திட்டத்துக்கு ஒப்ப எழுதப்பட்டவை என்று தோன்றும். பெரும்பாலும் பண்பாட்டுச்சிக்கல்களை கதைமாந்தர்களின் விவாதங்கள் வழியாக முன்னெடுக்கும் நாவல்கள் இவை. எளிதில் ஊகிக்கக்கூடிய முடிச்சுகளும் மரபான தீர்வுகளும் கொண்டவை. செயற்கையான உணர்ச்சிகர தருணங்கள் அமைந்தவை. ஆசிரியரின் சிந்தனைகளை நேரடியாகவும் உரையாடல்களிலும் முன்வைப்பவை. அத்துடன் மு.வவின் நாவல்கள் செந்தமிழ் நடையில் அமைந்தவை. உரையாடல்களும்கூட இலக்கணத்தமிழில் கல்லூரி நாடகங்கள்போலிருக்கும்.
இலக்கியக் கலை என எது உலகமெங்கும் கருதப்படுகிறதோ, எது தமிழில் சாதிக்கப்பட்டிருக்கிறதோ அந்த அளவுகோலின்படி மு.வவின் நாவல்களுக்கும் இலக்கியக்கலைக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. அவரை தமிழின் இலக்கியவாதிகளின் பட்டியலில் எந்த இடத்திலும் சேர்க்க முடியாது. இலக்கியம் என்பது ஒருவர் தான் நினைப்பதையெல்லாம் சீரான மொழியில் எழுதி வைப்பது அல்ல. அது தன்னுள் இறங்கிச்செல்லும் பயணம். அதன் வழியாக தான் வாழும் சமூக ஆழ்மனத்துக்குள் ஊடுருவிச்செல்லல். மொழியின் நேரடித்தொடர்புறுத்தலை அதன் கற்பனைச் சாத்தியங்களைக்கொண்டு மீறிச்செல்லுதல்.
வாசகனுக்கு விஷயங்களை தெரியப்படுத்துதல் அல்ல இலக்கியத்தின் வழி. வாசகன் கற்பனையை தூண்டிவிடுதல். வாசகன் தன்னுடைய சொந்த வாழ்க்கைக்கு நிகரான ஒரு கற்பனைவாழ்க்கையை தன் சொற்கள் வழியாக வாழச்செய்தல். அதன் வழியாக அவன் தன் சிந்தனைகளை தானே கண்டடையும்படிச் செய்தல். இலக்கியம் என்பது மொழி வழியாக சமகாலச் சிந்தனைகளை மீறிச்செல்லுதல். இலக்கியம் என்பது மொழிக்குள் உள்ள நுண்மொழி ஒன்றில் நிகழும் உரையாடல். மு.வவுக்கும் அந்த வகையான இலக்கியத்துக்கும் தொடர்பேதும் இல்லை.
இலக்கியத்தில் முவவின் பங்களிப்பு என்ன? அவரது காலகட்டத்தில் பொதுவாகப்பேசபப்ட்ட பொதுவான இலட்சியவாதச் சிந்தனைகளை அன்றைய இளம் வாசகனுக்கு கதைவடிவில் கொண்டுசென்றார், அவ்வளவுதான். அது ஜனநாயகப் பண்புகள் பரவலாக ஆரம்பித்த காலகட்டம். சமூகசீர்திருத்த எண்ணங்கள் முளைத்து வந்த வரலாற்றுச் சந்தர்ப்பம். பெண்சுதந்திரம், தனிமனித அறம், பொதுக்குடிமைப்பண்புகள் போன்றவற்றை பிரச்சாரம்செய்யும் ஆக்கங்களாக அமைந்தன மு.வவின் நூல்கள்.
மு.வவின் காலகட்டத்துக்குப் பின்னரும்கூட அவரது பாணி எழுத்து ஓரளவு செல்வாக்குடன் இருந்தது. கு.ராஜவேலு, ய.லட்சுமிநாராயணன், வெ.கபிலன், டேவிட் சித்தையா போன்ற பலர் அப்பாணியில் எழுதினார்கள். அவர்கள் காலப்போக்கில் காணாமலானார்கள்.நா.பார்த்தசாரதி, அகிலன் ஆகியோரின் அவருடைய எழுத்துமுறையின் பாதிப்பு உண்டு
மு.வ அவரது கல்வித்துறைப் பங்களிப்பு காரணமாக அவரது மாணவர்களால் இன்றும் கல்வித்துறைக்குள் நிலைநிறுத்தப்படுகிறார். ஆனால் அவர்களும் ஓய்வுபெற சமீபகாலமாக அவரது இடம் முற்றிலுமாக மறைய ஆரம்பிக்கிறது.
மு.வ ஓர் ஆசிரியர். ஓர் ஆசிரியராக அவரது காலகட்டத்துக்கு அவர் பணியாற்றினார். அவரது நூல்கள் ஆசிரியர் தன் மாணவர்களுக்காக எழுதிய பாடநூல்களைப்போன்றவை. அவரது நாவல்களுக்கு இலக்கிய முக்கியத்துவம் என ஏதும் இல்லை. ஆனால் ஒருகாலகட்டத்தில் அக்கால இலட்சியங்களை அவை ஒரு சாராருக்கு எடுத்துச் சென்றன. அந்த அளவிலேயே அவருக்கு தமிழ்ச் சிந்தனை மரபிலும் இலக்கிய வரலாற்றிலும் இடம்.
ஜெ
மறுபிரசுரம்/ முதற்பிரசுரம் Oct 24, 2010
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
இலக்கியநட்பு, புகைப்படங்கள்…
அன்பின்
ஜெ.மோ. அவர்களுக்கு
“எந்த ஒரு படைப்பிலும் ஈடுபடாமல், எந்த ஒரு படைப்பாளியிடமும் ஆத்மார்த்தமான உறவு இல்லாமல், எக்கருத்தையும் எதிர்கொள்ளாமல், வம்புகளை மட்டுமே பேசி புழங்கி வம்புகளின் பெருந்தொகுதியாக இருக்கும் சிற்றிதழாளர்கள் பலர் உள்ளனர். அது ஒரு வகையான மாபெரும் பிறவி வீணடிப்பு என்றே கருதுகிறேன்.” [ஒப்பீடுகளின் அழகியல் -தி. ஜானகிராமன் ]
மேற்படியான தங்களின் வரி இந்த ரம்ழான் மாத நோன்பு பிடிக்க எழுந்திருக்கும் இந்த அதிகாலைப் பொழுதில் என் 25 / 30 ஆண்டுகால வாசிப்பு பயணத்தின் பயனெதுவென கண்டுகொண்ட தரிசனத்தை தருகிறது. எல்லோரையும் போல பூந்தளிர், அம்புலிமாமாவில் ஆரம்பித்து இலக்கியம், சமூகவியல், தத்துவம், மதம் குறித்த பார்வை ஒரு முழு சுற்றுசுற்றிவிட்டு பிள்ளையாரைப் போல நின்ற இடமே என் புத்தகயாவாகிப் போனது. தமிழகத்தின் வட மாவட்டத்தைச் சேர்ந்த என் பால்யகால நண்பர்களான அரவிந்தனாகிய அழகியபெரியவன் – இராமபிரபுவெனும் யாழன்ஆதியுடன் தனிப்பட்ட முறையிலும், அவர்களின் ஒட்டுமொத்த படைப்புகள் மற்றும் செயல்பாட்டுக்காகவும் கொண்டிருக்கும் உறவு ஆத்மார்த்தமானது. இதொரு தொடக்கம், அங்கு தொடங்கியது கால, தேச இடைவெளி கடந்து எங்கெங்கோ வேர்விட்டு படர்ந்துவிரிகிறது. நன்றி – நமஸ்காரம்
கொள்ளு நதீம்
***
அன்புள்ள கொள்ளு நதீம்
இலக்கிய நட்புகள் பிறநட்புகளைப்போல எளிமையான கொடுக்கல் வாங்கல்கள் அல்ல. அறிவார்ந்த உறவுகள் என்பதனால் எப்போதும் மோதல்களும் இருக்கும். அப்பாற்பட்டு பேணினால் அவை திரும்பி நோக்கும்போது வாழ்ந்தோம் என்ற நிறைவை அளிப்பவை/. பிற உலகியல் உறவுகளில் அந்நிறைவு நிகழ்வதே இல்லை. இதை நான் பல பெரியவர்களின் உறவுகளில் கண்டிருக்கிறேன். வெங்கட் சாமிநாதனுக்கும் தி.க.சிவங்கரனுக்குமான உறவு ஓர் உதாரணம்.,
வாழ்த்துக்கள்
ஜெ
***
அன்பு ஆசானுக்கு ,
நான் ஜெயக்குமாரன். photographer . ஈரோடு வாசகர் சந்திப்பில் கலந்துகொண்டவன் . சந்திப்பு முடிந்தவுடன் நீண்ட கடிதம் ஒன்றை தொடர்ந்து எழுதி இன்னும் உங்களுக்கு அனுப்பாதவன். அடிக்கடி மனதில் தோன்றினவற்றை தொடர்ந்து எழுதி அக்கடிதத்தை முடிக்கும் போது ஏப்ரல் மாதம் ஆகியிருந்தது. 2 மாதம் கழித்து இதை அனுப்புவது சரியில்லை என விட்டுவிட்டேன். விஷயம் அதுவல்ல .
எனது முகநூல் பக்கத்தில் நம் வாசகர் சந்திப்பின் போது உங்களை எடுத்த படங்களை சமீபத்தில் பதிவிட்டேன். இன்று காலை ஆனந்த விகடனிலிருந்து அழைத்தார்கள். என்னுடைய பல படங்களை உபயோகிக்க கேட்டிருந்தார்கள் . அதில் உங்கள் படமும் ஒன்று. மற்ற படங்களை அனுப்பி விட்டேன் . அனுமதி இல்லாமல் உங்கள் படத்தை அனுப்புவது சரியல்ல என்று தோன்றியது. முகநூல் பதிவு கீழே .
https://www.facebook.com/jaidigitalworks/posts/850932815044885?pnref=story
அன்பும் நன்றிகளும் ,
ஜெயக்குமாரன்
***
அன்புள்ள ஜெயக்குமாரன்
வாழ்த்துக்கள். படங்களில் தொடர்ந்து நடிப்பது ஆர்வமூட்டுவதாகவே இருக்கிறது
ஜெ
***
திரு ஜெ அவர்களுக்கு,
தங்களின் வலைத்தளத்தில், அம்பேத்கரின் தம்மம் 1-4 கட்டுரைகளை வாசித்ததிலிருந்தே ‘புத்தரும் அவர் தம்மமும்’ நூலைத் தேடிக்கொண்டிருக்கிறேன்.ஓவ்வொரு புத்தகத்திரு விழாவின் போதும் NCBH ல் சொல்லி வைத்து இதுவரை மறுபதிப்பு வரவே இல்லை.
சென்னை அண்ணா சாலையிலுள்ள தமிழ் முழக்கம் புத்தகக் கடையில் சொல்லி வைத்ததில் டாக்டர் வீ சித்தார்த்தா (பெரியார் தாசன்) அவர்களின் மொழி பெயர்ப்பில் 1996ல் டாக்டர் பாபா சாகேப் அம்பேத்கர் பவுத்த ஆய்வு மையம் வெளியிட்ட பதிப்பு கிடைத்து வாசித்து வருகிறேன். நூலை வாசிக்க தங்கள் கட்டுரையே தூண்டுதலாக அமைந்தது. நன்றி. NCBH வெளியீடு மொழி பெயர்ப்பு யார் எனத் தெரிய ஆவல். அன்புடன்
சேது வேலுமணி
***
அன்புள்ள சேதுவேலுமணி,
அது ‘வாசிக்க’ வேண்டிய நூல் அல்ல. ஒரு மதமூலநூல் போல கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்கவேண்டியது. நூல் உங்களுடன் எப்போதுமிருக்கட்டும்
ஜெ
***
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
அபிப்பிராய சிந்தாமணி -கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன்,
பல ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு புத்தகத்தைப் படித்து ரசித்து ரசித்து சிரித்து மகிழ்ந்து இன்னும் சிரித்துக்கொண்டேஇருக்கின்றேன்.
அடேங்கப்பா! என்ன ஒரு கிண்டல்,நக்கல்,பகடி,எதார்த்தம்.
தென்குமரித் தமிழ் விளையாட்டு.அற்புதம்.கெட்ட வார்த்தைகள் வெகுஇயல்பு.எங்க ஊர் மக்கள் மாதிரியே சில குணாதிசயங்கள்.
இரண்டு மூன்று நாட்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்த
இரவில் உங்கள் எழுத்து உந்திய சிரிப்பு சத்தம் கேட்டு என் தம்பி ஓடிவந்து என்ன ஆயிற்று என்று கேட்டு அவனுக்கும் சிலவற்றைப்படித்துக்காட்ட ஒரே கலாட்டா.
அதுவும் அந்த ஏரிக்கரையின்மேலே போற பெண்மயில் அய்யோ!!.ஷெரீப் இருந்திருந்தால் சிரித்துக்கொண்டே இரண்டாம்முறை செத்திருப்பார்.
இன்னும் நிறைய.
உடல் தேறிவிட்டது.நன்றி நண்பரே.
இயகோகா சுப்பிரமணியம்.
***
அன்புள்ள இயகோகா அவர்களுக்கு
நலமாக இருக்கிறீர்கள் என நினைக்கிறேன். நானே அவ்வப்போது எல்லாவற்றையும் பார்த்துச் சிரிக்கவேண்டியிருக்கிறது. இல்லையேல் கடந்துசெல்ல முடியாது
ஜெ
***
அன்புள்ள ஜெ
அபிப்பிராயசிந்தாமணியின் பல கட்டுரைகளை இணையத்தில் வாசித்திருக்கிறேன். அபூர்வமான நகைச்சுவை. பல இடங்களில் வாய்விட்டு வெடித்துச்சிரித்தேன் [வாயுவிட்டு என்று டைப்போ வந்துவிட்டது] வாழ்த்துக்கள் ஜெ. உங்கள் இன்னொரு முகம். அதில் கிளாஸ் என்பது பத்தினியின் பத்துமுகங்கள். என் மனைவியிடம் வாசித்துக்காட்டி அவளுடைய பதினொன்றாவது முகம் தெரியவந்தது
மாதவன்
***
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 40
39. நிலைக்கல்
“ஒவ்வொரு தருணத்திலும் வாள்முனையில் குருதித்துளி என வரலாறு ததும்பி திரண்டு காத்திருக்கிறது. ஓர் அசைவு, ஒரு காற்று போதும்” என்று விறலி சொன்னாள். “அவ்வாறு நிகழ்ந்தது அந்த ஊண்மனைக் கொலை. நளன் வாள்தாழ்த்திய பின்னரே என்ன நிகழ்ந்தது என உணர்ந்துகொண்டார். மேலும் முன்னகர்வதே வழி என அவர் வாள் அவரிடம் சொன்னது. அவர் ஆணைக்கேற்ப காளகக்குடியினர் உணவை அள்ளி வாயிலிட்டு உண்ணத் தொடங்கினர். பெரும்பாலானவர்களுக்கு அன்னம் இறங்கவில்லை. மூச்சு திணறினர், இருமினர். நீரை எடுத்துக் குடித்து அதையும் விழுங்க முடியாது குமட்டல் கொண்டனர்.”
அகத்தளத்தின் சிற்றவையிலமர்ந்து சுதேஷ்ணையும் திரௌபதியும் விறலியின் கதையை கேட்டுக்கொண்டிருந்தனர். “அன்று பந்தியிலிருந்து எழுந்து சென்றவர்கள் பலரும் நடக்கமுடியாமல் படிகளில் கால்தளர்ந்து அமர்ந்தனர். சிலர் வெளியே வாயுமிழ்ந்தனர். சிலர் தேரிலேறி அமர்ந்ததும் கண்கலங்கி அழத்தொடங்கினர். செய்தி நகரெங்கும் பரவியதும் குடிகள் அனைவருமே நளனுக்கும் தமயந்திக்கும் எதிராகத் திரும்பினர். ஆனால் படைகளின் வாள்நிழலில் சொல்லெடுக்க எவராலும் இயலவில்லை. குடிக்கூடல்களில் முணுமுணுப்புகளாக, உறுமல்களாக எதிர்ப்புகள் எழுந்தன” என்றாள் விறலி.
புஷ்கரன் தன் அரண்மனைக்குச் சென்றதுமே கருணாகரர் சென்று அவனை வயப்படுத்த முயன்றார். மூத்தவனுக்கும் இளையவனுக்குமான பூசலை முடிந்தவரை சீரமைக்க எண்ணினார். ஆனால் புஷ்கரன் எவ்வகையிலும் செவிகொடுக்க சித்தமாக இருக்கவில்லை. குடித்தலைவரின் இறப்பு நிகழ்ந்த அந்நாளில் மணமங்கலம் நிகழமுடியாது என்று அவன் சொன்னான். காளகக்குடி மூத்தவர் எழுவர் சென்று தன் அகத்தளத்து அவையில் அவர்களை சந்தித்த தமயந்தியிடம் சீர்ஷரின் உடலை தங்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்று கோரினர். அவள் அவரை அரசமுறைப்படி சிதையேற்ற தானும் உடன் வருவதாக சொன்னாள். அவர்கள் அதற்கு ஒப்பாமல் அந்த உடலை தாங்களே தங்கள் குலமுறைப்படி சிதையேற்றுவதாக சொன்னார்கள். அவர்கள் ஒருவரோடொருவர் விழிதொட்டுக்கொள்ளவே இல்லை.
“அவர் குடித்தலைவர். அவருடைய உடல் அரசச்செங்கோல் தாழாமல் சிதையேற முடியாது” என்றாள் அரசி. “இங்கே தெற்கு மயானத்தில் அவரை சிதையேற்றுவோம். அனைத்து ஏற்பாடுகளும் செய்யவேண்டும் என்று நான் கருணாகரருக்கு ஆணையிடுகிறேன். அரசியென நான் வந்து சிதைமுன் முடிதாழ்த்துகிறேன்.” அவர்கள் சொல்லில்லா முகத்துடன் நின்றனர். “குடியவை கூடுக! அரசுமேல் எத்தகைய பழிநிகரை அவர்கள் ஆணையிட்டாலும் அதை ஏற்கிறேன்” என்றாள். அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டார்கள். கருணாகரர் “ஏதேனும் ஒரு வழியை நாம் கண்டடைந்தே ஆகவேண்டும், குடித்தலைவர்களே” என்றார். “அதன்பொருட்டு எதற்கும் நான் ஒருக்கமே” என்று தமயந்தி சொன்னாள்.
அவர்களில் மூத்தவரான சுநீதர் “அதை நாங்கள் கூடிப் பேசி முடிவெடுத்து சொல்கிறோம். அதற்குமுன் சீர்ஷரின் உடலை எங்களிடம் அளிக்க ஆணையிடுக! அவரை நாங்கள் எங்கள் குடிமண்டபத்திற்கு கொண்டுசென்று வைத்து பிழைநிகர் செய்யவேண்டும். அதற்கு பன்னிரண்டு நிலை சடங்குகள் உள்ளன என்கிறார்கள். அதன் பின்னர் நாளை புலரியில் சிதையேற்றம் நிகழட்டும்” என்றார். “ஆம், உங்கள் குடியவை கூடி ஆவன செய்யட்டும். அது ஆணையிடும் எச்செயலுக்கும் அரசு ஒருக்கமாகவே உள்ளது” என்றாள் தமயந்தி. அவர்கள் அதை ஏற்று பிறவற்றை பின்னர் உரைப்பதாக உறுதியளித்து திரும்பிச்சென்றார்கள்.
சீர்ஷரின் உடலில் வெட்டுண்ட தலையை சேர்த்துப்பொருத்தி தையலிட்டனர் மருத்துவர். அதை கஸ்தூரியும் புனுகும் சவ்வாதும் பூசி சந்தனப்பேழையில் நிறைத்த நறுமணநீற்றில் வைத்து ஏற்றி காளகக்குடிகளின் குடிமண்டபத்திற்கு அனுப்பி வைத்தார்கள். அரசின் சார்பில் நளனின் உடைவாளை ஏந்தி சிம்மவக்த்ரன் செல்ல மணிமுடியின் இறகொன்றை தன் தலையில் சூடியபடி நாகசேனர் உடன் சென்றார். சீர்ஷரின் உடல் அரண்மனை வளைவை விட்டு பெருஞ்சாலையை அடைந்ததும் அங்கு கூடியிருந்த மக்கள் குறுமுழவுகளையும் துடிகளையும் முழக்கி பெருங்குரலில் வாழ்த்தொலி எழுப்பினர். காளகக்குடியினர் நெஞ்சில் அறைந்து அழுதபடி தேருக்குப் பின்னால் ஓடினர்.
கருணாகரரை அழைத்த அரசி “அங்கே குடியவை கூடட்டும். அதற்கு நானே மணிமுடியும் செங்கோலுமாகச் சென்று அவை நிற்கிறேன். அவர்கள் என்னை எச்சொல்லால் பழித்தாலும் ஏற்றுக்கொள்கிறேன். இத்தருணத்தை நாம் கடந்துசென்றே ஆகவேண்டும், அமைச்சரே” என்றாள். “ஆம், ஆனால் உடல் அங்கு சென்றதும் குடிகளின் உணர்ச்சிப்பெருக்கு சற்று நேரம் அலையடிக்கும். அது சற்று அடங்கட்டும். மூத்தார் அவையமர்ந்துவிட்டார்கள் என்ற செய்தி வந்ததும் தாங்கள் கிளம்பலாம்” என்றார்.
“அவர்கள் அரசர் வந்து பிழைபொறுக்கக் கோரவேண்டுமென விரும்புவார்கள். அரசரிடம் பேசி அழைத்துவருகிறோம் என்போம். அதற்கு நமக்கு இரண்டு நாட்கள் பொழுது கிடைத்தால் போதும். இப்போதுள்ள உணர்வெழுச்சிகள் இரண்டு நாட்களுக்குள் நுரையடங்குமென நினைக்கிறேன்.” தமயந்தி பெருமூச்சுவிட்டு “எண்ணிப் பார்க்கையில் அச்சம் சூழ்கிறது. நாமறியா ஏதோ தீயூழ் சூழ்வதுபோல” என்றாள். கருணாகரர் வெறுமனே தலைவணங்கினார்.
ஆனால் சீர்ஷரின் உடலை அவர்கள் குடிமண்டபத்தில் மக்கள் முன் வைக்கவில்லை. அரசப்படைகளிடமிருந்து அதை பெற்றுக்கொண்டு அப்படியே தட்டுத்தேர் ஒன்றில் ஏற்றிக்கொண்டு நகரைவிட்டு வெளியேறினர். அவர்களுடன் காளகக்குடிகளின் பெருந்திரள் சூழ்ந்து வெறிக்கூச்சலும் போர்விளியும் முழக்கியபடி சென்றது. சிம்மவக்த்ரன் புரவியில் திரும்பி வந்து தன் அறையில் நிலையழிந்து காத்திருந்த தமயந்தியிடம் செய்தியை சொன்னான். கருணாகரர் “மிகச் சிறந்த சூழ்ச்சி. அவ்வுடலுடன் அவர்கள் விஜயபுரிக்கு திரும்பிச் செல்வார்கள் என்றால் செல்லும் வழியெங்கும் காளகர் அவர்களுக்குப்பின் திரள்வார்கள். பிற குடியினரும் அவர்களுடன் இணைவதற்கான வாய்ப்புகளே தென்படுகின்றன. இறந்த உடல்போல மிகச் சிறந்த படைக்கொடி பிறிதில்லை” என்றார். “அவர்களை தடுத்து நிறுத்துவோம்” என்றார் நாகசேனர். “இல்லை, இத்தனை பெருங்கூட்டம் உடன்செல்கையில் அதை செய்ய முடியாது” என்றான் சிம்மவக்த்ரன்.
நாகசேனர் “இந்த எண்ணம் எவர் உள்ளத்தில் எழுந்தது? இத்தனை தெளிவாக திட்டமிட அங்கு எவருமில்லையே?” என்றார். “அது கலிங்க இளவரசியின் திட்டம்” என்றார் கருணாகரர். “அவளை கலிங்க அரசவையில் நான் முதலில் கண்டபோது அந்தச் சூழ்ச்சி எதையும் உணரமுடியாத மெல்லியள் என்று எண்ணினேன். அவள் அவையில் எழுந்து நின்று நீர்படர்ந்த விழிகளுடன் புஷ்கரரை அவளுக்குத் தெரியாது என்று சொன்னபோது பிறிதொன்றாக அது இருக்கவியலாதென்றே எண்ணினேன். பதினேழு அகவை முடிந்ததும் எந்தை என்னை அமைச்சுப்பணிக்குள் கொண்டுவந்தார். இங்கே அமைச்சனாக ஆகி நாற்பதாண்டுகள் கடந்துவிட்டன. இத்தனை ஆண்டுகளில் நான் கண்ட முகங்கள் பல ஆயிரம். என் கணிப்பு முற்றிலும் பிழையானது இவளிடம்தான்.”
தமயந்தி கசப்பான புன்னகையுடன் “அவள் இதை வகுக்கவில்லை, அமைச்சரே” என்றாள். கருணாகரர் “அரசி, அவள்…” என சொல்லத்தொடங்க “அவளால் சிறிய அடுமனை சூழ்ச்சிகளை மட்டுமே எண்ண முடியும். இத்தனை விரிவாக அரசசூழ்ச்சிகளை வகுக்க முடியாது. அதற்கு நிஷதகுடிகளின் அடுக்குகளை, அவர்களின் உணர்வுகளை, இங்குள்ள அரசியல் தருணத்தை நன்கறிந்திருக்கவேண்டும். அவளுக்கு நூலாயும் வழக்கமே இல்லை” என்றாள் தமயந்தி. “அவளுடன் பிறிதொருவன் இருக்கிறான். ரிஷபன் என்பது அவன் பெயர். அவன் வகுத்தது இது.” கருணாகரர் தயக்கத்துடன் “அவனா? அவனைப்பற்றி…” என்றார். “ஒற்றர்செய்திகள் எனக்கும் வந்தன. அவளுடைய கரவுக்காதலன். ஆனால் அது மட்டுமல்ல அவன் பணி. அவன் அவளை அருகிருந்து இயக்குகிறான்” என்று தமயந்தி சொன்னாள்.
“அவ்வண்ணமென்றால் நாம் இனிமேல் அவனுடன்தான் கருநீக்கி களமாடவிருக்கிறோம்” என்றார் நாகசேனர். “யாரென்று அறியாத ஒருவனுடன். அவன் எதற்கு இதை செய்யவேண்டும்? மாலினிதேவியின் கொழுநனாக அவனால் முடிசூட்டிக்கொள்ளமுடியுமா என்ன? அவனை காளகர் ஏற்பார்களா?” தமயந்தி “அவளை ஏற்கலாமே? புஷ்கரன் போரில் இறந்தார் என்றால் முதிராமைந்தன் ஒருவனை முடிசூட வைத்து அவள் அரசாளலாமே?” என்றாள்.
கருணாகரர் “அவன் கலிங்க மன்னர் சூரியதேவருக்கு அவருடைய முதிய அகவையில் நாகர்குலத்து இளவரசி ஒருத்தியில் பிறந்த மைந்தன் என்கிறார்கள் ஒற்றர். அவன் பானுதேவரிடம் அணுக்கனாக இளமையிலேயே வந்து சேர்ந்துகொண்டிருக்கிறான். அரண்மனையில் அவருடைய மைந்தன் போலவே வளர்ந்திருக்கிறான். அப்போதுதான் அவனுக்கும் மாலினிதேவிக்கும் உறவு அமைந்திருக்கிறது. அது உடன்பிறந்தார் உறவு என்றே அரண்மனையினர்கூட எண்ணுகிறார்கள். பானுதேவருக்கே அதை குறித்து சரியாகத் தெரியுமா என்று தெரியவில்லை. ஆனால் அங்கே அவருடைய அரசின் முதன்மை அரசுசூழ்வோனாக அவனே திகழ்ந்தான்” என்றார்.
“புஷ்கரனை வென்றெடுக்கும் சூழ்ச்சியேகூட அவனிடமிருந்து தொடங்கியிருக்கலாம் என்கின்றனர் நம் ஒற்றர். அவனுக்கு மகதம், வங்கம், அவந்தி, மாளவம் என அனைத்து அரசர்களுடனும் நேரடித்தொடர்பு உள்ளது. அவர்களின் ஒற்றர்களை அவன் நாள்தோறும் சந்தித்துக்கொண்டிருந்தான் எனத் தெரிகிறது” என்று கருணாகரர் சொன்னார். தமயந்தி “அவனைப் பற்றிய அனைத்து செய்திகளையும் அறிந்துவர ஒற்றர்களை அனுப்பியிருக்கிறேன். அந்த நாககுலத்து அரசி என்பவர் யார் என்று அறிந்துவர தலைமை ஒற்றர் சமதரே சென்றிருக்கிறார்” என்றாள்.
செல்லும் வழியெங்கும் சீர்ஷரின் உடல் மன்றுவைக்கப்பட்டு காளகக்குடிகளால் அரிசியிடப்பட்டு வணங்கப்பட்டது. செல்லச்செல்ல அனைத்து நிஷதகுடிகளும் திரளலாயின. அவருடைய இறப்பைப்பற்றிய கதைகள் ஒன்றிலிருந்து ஒன்றெனக் கிளைத்து வளர்ந்தன. அனைத்து கதைகளிலும் எதிரியாக தமயந்தியே இருந்தாள். அவர் ஊண்நிரையில் தமயந்தியால் உரிய பீடம் அளிக்கப்படாது சிறுமைப்படுத்தப்பட்டார் என்றும் அதை எதிர்த்துப் பேசியபோது நளனால் கழுத்து வெட்டப்பட்டார் என்றும் எளிய கதையே முதலில் சொல்லப்பட்டது. அவர் கலிக்கு ஒரு பிடி அன்னம் எடுத்துப் படைத்து வணங்கியபின் உண்டதைக் கண்டு தமயந்தி சினந்து எழுந்து அவர் தலையை வெட்ட ஆணையிட்டாள் என்று அக்கதை உருமாறியது.
உணவுக்குமுன் அனைவரும் இந்திரனை வணங்கி அவன் மிச்சில் என எண்ணி அன்னத்தை எடுக்கவேண்டும் என்று புஷ்கரன் அறிவித்தபோது சீர்ஷர் மட்டும் வாளாவிருந்ததாகவும், அதைக் கண்ட புஷ்கரன் அவர் ஏன் இந்திரனை வணங்கவில்லை என்று கேட்டபோது கலியின் காலடிகளை அன்றி பிறிதொரு தெய்வத்தை அவர் வணங்குவதில்லை என்று அறிவித்ததாகவும், இந்திரனை அவர் வணங்கியாகவேண்டும் அது அரசாணை என புஷ்கரன் சொன்னதாகவும் ஒரு கதை சொன்னது. “என் தெய்வம் கரிநிறக் கலி. என் கொடி காகம். பிறிதொரு தெய்வமும் இல்லை. தலைக்குமேல் மற்றொரு கொடியும் இல்லை” என்று சீர்ஷர் சொன்னார். சினந்தெழுந்த தமயந்தி அவர் இந்திரனை வணங்காவிட்டால் அவர் தலை அப்போதே வெட்டி உருட்டப்படும் என அறிவித்தாள்.
“என் தலை உருளும், வணங்காது” என்றார் சீர்ஷர். அவருடைய தலையை வெட்ட அரசி ஆணையிட்டாள். வீரர்கள் எவரும் வாள் உருவவில்லை. நளனிடம் வெட்டும்படி சொன்னாள். அவன் திகைத்து நின்றான். “நீர் என் குழந்தைக்குத் தந்தை என்றால் வெட்டுக” என்று அரசி தன் மகன் தலைமேல் கைவைத்து ஆணையிட்டாள். “இல்லையேல் இக்கணமே இவனுக்கு நீர் தந்தை அல்ல என்று சொல்லிடுவேன்” என்றாள். நளன் வாளை உருவி சீர்ஷரை வெட்டினான். அவர் முகத்திலிருந்த புன்னகை வெட்டுண்ட தலையிலும் இருந்தது. அவர் உடல் அசையாமல் அப்படியே நின்றது.
அரசி அதை உதைத்துத் தள்ளும்படி நளனிடம் சொன்னாள். நளன் ஏழு முறை உதைத்த பின்னரே உடல் நிலத்தில் விழுந்தது. நளன் தலையை எடுத்து அரசியின் காலடியில் வைத்தான். அவள் அதை தன் கால்களால் தொட்டு உருட்ட அவள் பாதங்கள் குருதியால் சிவந்தன. “இந்திரனை வணங்கி அனைவரும் அன்னம் கொள்க!” என்று அரசி ஆணையிட்டாள். ஆனால் காளகக்குடித் தலைவர்கள் அனைவரும் ஒரே குரலில் “கலிதேவனே வாழ்க” என்று உரைத்து அவ்வுணவை எடுத்து உண்டார்கள். அதைக் கண்டு அரசி சினத்துடன் கூச்சலிட்டபடி எழுந்தாள். ஆனால் பிற குடிகளும் அதைப்போல கலியை வணங்கியபடி உண்ணத்தொடங்க அவளால் அங்கே நிற்கமுடியவில்லை. வெறிகொண்டு தன் ஆடையை கிழித்துவீசியபடி, அலறிக்கூச்சலிட்டபடி அவள் வெளியே ஓடினாள்.
அரண்மனை இடைநாழிக்கு ஓடி அவள் அங்கிருந்த வீரர்களிடம் “கலியை வணங்கும் அனைவரையும் கொல்லுங்கள்! அவர்களின் தலைகளை கொண்டுவாருங்கள்!” என்றாள். சிம்மவக்த்ரன் “கொல்லுங்கள். கலிவழிபாடு செய்பவர்களை கொன்று குவியுங்கள்” என வாளை உருவி ஆணையிட்டான். ஆனால் நிஷதவீரர்கள் அனைவரும் அசையாமல் நோக்கி நின்றனர். அரசி ஓசை கேட்டு ஓடிச்சென்று சாளரம் வழியாக நோக்கினாள். நகரில் உணவுண்ணக் குவிந்திருந்த பல்லாயிரம் குடிகள் ஒரே குரலில் “எங்கள் குலமாளும் தேவா, காகக்கொடி கொண்டவனே, கலிவீரனே வாழ்க!” என முழங்கி அன்னம் எடுத்து உண்ட ஓசை பெருமுரசுகளின் முழக்கமென எழுந்து அவளை சூழ்ந்தது.
தன் தலைமயிரைப் பிடித்து இழுத்து அவள் கூச்சலிட்டாள். தூண்களை ஓங்கி ஓங்கி உதைத்தாள். “எவரையும் விடப்போவதில்லை. கலிவணக்கம் செய்பவர் அனைவரையும் வேருடன் அழிப்பேன்” எனக் கூவினாள். அப்போது அவள் நிழலாக பின்பக்கச் சுவரில் ஒரு பேருருவம் எழுந்தது. அதைக் கண்டு அஞ்சி அவள் திரும்பி ஓடினாள். படிகளில் ஏறமுடியாமல் மயங்கி விழுந்தாள். “அவளை தூக்கிச்சென்றவர்கள் அந்த நிழல் சுவரில் அப்படியே ஓர் ஓவியமெனப் பதிந்து நின்றிருப்பதைக் கண்டு அஞ்சி ஓலமிட்டனர்” என்றாள் அக்கதையைச் சொன்ன முதிய விறலி. அதைக் கேட்டு நின்றவர்கள் கைகளைத் தூக்கி ஒரே குரலில் “குடிகாக்கும் கலிதேவனே, வாழ்க!” என கூவி வாழ்த்தினர்.
விஜயபுரிக்கான வழியில் சரபபதம் என்னும் ஊரில் சீர்ஷரின் உடல் வைக்கப்பட்டபோது வெறியாட்டு கொண்டெழுந்த முதிய பூசகர் ஒருவரில் சீர்ஷர் தோன்றினார். “என் குடி இந்நாநிலத்தை ஆளும். அதன்பொருட்டு முதற்பலியாவதற்காகவே நான் மண்ணில் எழுந்தேன். என் கடனை நான் விரும்பிச்சென்று முடித்தேன். என் குடிகளே, அஞ்சற்க! ஒருங்கு கூடுக! இனி நம் மூதாதையருக்கு மலரும் நீரும் தேவையில்லை. இனி படைக்கலமே உங்கள் வழிபாட்டுப்பொருளென்றாகுக! இனி நீங்கள் படைக்கும் அன்னம் எதிரிகளின் குருதி கலந்ததாக அமைக! இனி நிகழும் அத்தனை களத்திலும் என் குருதி உங்கள் காவல்தெய்வமென நின்றிருக்கும்” என்றார்.
நெஞ்சிலறைந்து அழுதனர் பெண்கள். ஆண்கள் வாள்களையும் வேல்களையும் தலைக்குமேல் தூக்கி போர்க்கூச்சலிட்டனர். அவை நடுவே நின்றிருந்த புஷ்கரன் தன் வாளை மும்முறை தலைக்குமேல் தூக்கி ஆட்ட அங்கிருந்த அத்தனை குடிகளும் கைகளையும் படைக்கலங்களையும் தூக்கி “நிஷதகுடி வெல்க! கலி வெல்க!” என்று முழக்கமிட்டனர். “இனி போர்! போர் மட்டுமே” என்றான் புஷ்கரன். “ஆம் ஆம் ஆம்” என்று அக்கூட்டம் அலைக்கொந்தளிப்பு கொண்டது. சீர்ஷருக்குப்பின் கோல்கொண்ட சுநீதர் தன் கைகளைத் தூக்கி “நம் குடி வெல்லும்! முதற்பலியைக் கொண்டது நம் குலதெய்வமே” என்றார்.
பன்னிரண்டாம்நாள் சீர்ஷரின் உடல் விஜயபுரியை சென்றடைந்தது. அதை மலைத்தேனிலிட்டு பதம் செய்து கொண்டுசென்றனர். அங்கே தெற்குக் காட்டில் அமைக்கப்பட்ட சிதையில் அவர் உடலை வைத்து நிஷதகுடிகளின் அத்தனை தலைவர்களும் வந்து வணங்கி கோல்தாழ்த்தினர். சுநீதர் தலைமையில் காளகக்குடியின் ஏழு முதியவர்கள் அவருக்கு நீரும் மலருமிட்டு வணங்க புஷ்கரனே அவர் மைந்தன் என்று அமைந்து அரிசியிட்டு அடிமலர் அணிவித்து துளைப்பானையால் சூழ்நீரூற்றி சடங்குகள் செய்தான். முடிமழித்து நீராடி வந்து எரியூட்டினான். எரியெழுந்ததை புகையினூடாகவே அறியும் அளவுக்கு நகரின் திறந்த வெளியெங்கும் நிஷதகுடிகள் செறிந்திருந்தார்கள். அவர்கள் எழுப்பிய வாழ்த்தொலி நெடுநேரம் எழுந்து அடங்கி அலையெனச் சூழ்ந்துகொண்டிருந்தது.
சீர்ஷரின் இறப்பு பதினாறுநாள் துயராட்டாக விஜயபுரியில் நிகழ்ந்தது. பெண்கள் வண்ண ஆடையும் அணியும் ஒழிந்து மலர்முடியாது ஒரு பொழுதுண்டு நோன்பிருந்தனர். ஆண்கள் முதற்புலரியில் எழுந்து நீராடி மலர் கொண்டுசென்று சீர்ஷரின் எரிகுழியிலிட்டு வணங்கினர். அவரைப் பற்றிய கதைகளும் பாடல்களும் பகலெல்லாம் அங்காடிமுனைகளிலும் தெருக்களிலும் திண்ணைகளிலும் அகத்தளங்களிலும் ஒலித்தன. அவற்றைக் கேட்டு அவர்கள் கண்கலங்கி நெஞ்சுபற்றி விம்மியழுதனர். சில தருணங்களில் அவர்களின் முதுபெண்டிரில் மூதன்னையர் வெறிகொண்டெழுந்து “குருதி! குருதி அளித்து தொழுக! கொடுஞ்சினம் கொண்டிருக்கிறோம்! குருதிவிடாய் கொண்டிருக்கிறோம்! குலமூத்தாரை பழி கொண்டவர்களின் குருதியுடன் எழுக நம் குலங்கள்!” என்று நின்றாடினர்.
ஒவ்வொரு நாளும் விஜயபுரியைச் சூழ்ந்திருந்த நிஷாதர்களின் ஊர்களிலிருந்தெல்லாம் மக்கள் நிரைநிரையாக கிளம்பி வந்து நகரின் அனைத்து வெளிகளையும் நிறைத்தனர். முன்னரே வந்தவர்கள் கோட்டைக்கு வெளியே மலையடிவாரம் வரை விரிந்திருந்த புதர்க்காடுகளை அழித்து குடிலமைத்து தங்க, அங்கே ஒரு நகரமே உருவாகிவந்தது. அந்நகரம் பெருகிச்சென்று மலைச்சரிவை தொட்டது. பகலில் கோட்டைமேல் நின்று நோக்குகையில் அங்கே ஒரு பெரும்படை பாடிவீடமைத்திருப்பதுபோலத் தோன்றியது. இரவில் காட்டுத்தீ பற்றி சூழ்ந்திருப்பதுபோல விழிமயக்கியது. இரவும் பகலும் அதன் அவியா முழக்கம் கோட்டை அலையாழியால் சூழப்பட்டிருப்பதுபோல் எண்ணச் செய்தது. அவர்களுக்குரிய உணவுப்பொருட்களுடன் வந்த வண்டிகள் ஒவ்வொருநாளும் இருமடங்காயின. அவற்றை விற்கும் சந்தைகள் உருவாயின. அவர்கள் வழிபட சிற்றாலயங்கள் எழுந்தன. அன்னநிலைகளும் அறச்சாவடிகளும் அமைந்தன. அந்த மக்கள்திரள் நகரமென்றே ஆகி அவ்வாறே நிலைகொள்ளுமென விழியுண்மையாகத் தெரிந்தது.
பதினாறாம் நாள் சீர்ஷரின் எலும்புகளை ஈமச்சடங்கு செய்யும் பூசகர் வழிகாட்ட புஷ்கரன் எடுத்து பசும்பாலில் கழுவி சிறு கலத்திலிட்டு அரண்மனையின் தென்மேற்கு மூலையில் அமைக்கப்பட்ட சிறு பீடத்தில் கொண்டுவந்து வைத்தான். அதன் அருகே அணையா விளக்கு பொருத்தப்பட்டது. நகரை நிறைத்திருந்த நிஷதகுடிகளிலிருந்து பெண்கள் தாலங்களில் அரிசியும் மலரும் நெய்விளக்கும் ஏந்தி பலநூறு நிரைகளாக அரண்மனை முற்றம் நோக்கி வந்தனர். அவர்கள் அரிமலரிட்டு வணங்கி மீள்வதற்காக நூற்றெட்டு பீடங்கள் அமைக்கப்பட்டன. மீண்டும் மீண்டும் அங்கே நிஷாதர்களின் குடித்தெய்வங்கள் வெறியாட்டென எழுந்தன. “போர்! போர்!” என அவை அறைகூவின.
நாற்பத்தோராம் நாள் புஷ்கரன் சுநீதர் வழிகாட்ட, குடிப்பூசகர் உடன் வர நீராடி உடலில் ஈரம் சொட்ட வெண்ணிற ஆடை அணிந்து சீர்ஷரின் எலும்புகள் அமைந்த கலத்தை தலைமேல் ஏந்தியபடி பத்ரை நதிக்கு நடந்துசென்றான். அவனைச் சூழ்ந்து வெண்ணிறத் துணியை சுவரெனப் பற்றியபடி பூசகர்கள் சென்றனர். முழவுகளை இசைத்தபடி சாவுச்சூதர் உடன்செல்ல காவல்நிலைகள் அனைத்திலும் அரசமுரசுகளும் கொம்புகளும் முழக்கமிட்டன. செல்லும் வழியெங்கும் அவன் கால் தரையில் படாமல் துணிகளால் வழிப்பாவாடை விரித்தனர். அவன் செல்வதை இருமருங்கும் திரண்டு நின்று நோக்கிய நிஷதகுடிகள் நெஞ்சிலறைந்து அழுதனர். “எந்தையே! மூதாதையே! விண்நிகழ்பவரே!” என குரல்கள் எழுந்தன. அவன் கோட்டைக்கு வெளியே சென்றபோது அவனுக்குப்பின் அக்கோட்டை இடியோசை எழுப்பி முழங்கியது.
சீர்ஷரின் எலும்புகளை புஷ்கரன் பத்ரையின் பெருக்கில் இறங்கி நின்று மூழ்கி கரைக்கையில் அதன் இரு கரைகளும் மானுடர்களால் ஆன மலைகள் போலிருந்தன. அவர்கள் எழுப்பிய வாழ்த்தொலிகள் நீரில் அலைகளை எழுப்பின என்று தோன்றியது. புதுக் கலத்தில் பத்ரையின் நீரை அள்ளி தலையில் வைத்து ஆடையிலும் குழலிலும் நீர் சொட்ட எழுந்து கரைமீண்ட புஷ்கரன் “எந்தையே, சென்றுவருக! உங்கள் குருதி முளைத்தெழுக!” என்றபோது நெடுநேரம் ஐம்புலன்களையும் மூடி கண்களுக்கு நடுவே ஒளியலைகளை எழுப்பிய ஒலிக்கொந்தளிப்பு அங்கே நிலவியது. தலையில் பத்ரையில் அள்ளிய நீருடன் நகருக்குள் நுழைந்தபோது நகரம் அன்னையை கன்றென ஓலமிட்டு அவனை எதிரேற்றது.
புஷ்கரன் காளகக்குடி மூத்தாரும், பூசகரும், அமைச்சரும், அகம்படியினரும் சூழ தலையில் நீர்க்கலத்துடன் தென்றிசை மயானக்காட்டுக்குள் சென்றான். சுநீதர் குடிக்கோல் ஏந்தி முன்னால் நடந்தார். பூசகர் சீர்ஷர் எரிந்த சிதைக்குழியை பத்ரையின் நீரை ஊற்றி மலரும் அரிசியும் இட்டு மூடினர். அதன்மேல் சிறிய மேடென மண்குவிக்கப்பட்டு கனிமரம் ஒன்று நடப்பட்டது. அருகே ஓர் ஆள் ஆழத்தில் தோண்டப்பட்ட குழியில் குடிமூத்தவர்களுக்குரிய நிலைக்கல்லை பன்னிரு பணியாளர்கள் இழுத்துவந்து அழுத்தி நட்டனர். நீரூற்றி இறுக்கி கல்லிட்டு நிறுத்தப்பட்ட நிலைக்கல்லுக்கு சிவப்பு ஆடை கட்டி மஞ்சளும் செந்தூரமும் பூசி மலர்மாலை சூட்டினர். அதன்முன் விரிக்கப்பட்ட காம்புடன் கூடிய முழு வாழையிலையில் பச்சை ஊனும், அப்பங்களும், நுரைக்கும் கள்ளும் படைக்கப்பட்டன. குடிமூத்தாரும் புஷ்கரனும் மலரும் நீரும் படைத்து நடுகல்லை வணங்கினர்.
அப்போது நகர் முழுக்க அனைத்து மணிகளும் முழக்கப்பட்டன. இல்லங்களில் இருந்த கைமணிகளையும் தட்டுமணிகளையும் தெருக்களில் கொண்டுவந்து ஒலித்தனர். நகரம் மணியோசையின் சரடால் நூறாயிரம் முறை என சுற்றிக் கட்டப்பட்டது. ஓசை அவிந்த பின்னரும் நெடுநேரம் அந்த மீட்டல் அவர்களின் செவிகளில் எஞ்சியிருந்தது. அன்றிரவு நகரில் எவரும் உணவுண்ணலாகாதென்று நெறி இருந்தது. அன்று நகரிலுள்ள அத்தனை விளக்குகளும் அணைக்கப்பட்டன. கரிய இருள் வந்து நகரை முழுமையாக மூடியது. இல்லையென்றே ஆகி இரவில் புதைந்தன கோட்டைகளும் காவல்கோட்டங்களும் மாளிகைகளும் மரங்களும். விழியென ஏதுமில்லை முகத்தில் என மயங்கிய சிறுவர் அழுதபடி அன்னையரை அணைத்துக்கொண்டனர். இருளுக்குள் அந்த மணியோசையின் கார்வை அலைகளாக எஞ்சியிருந்தது. தலைக்குள் தேனீ சுழல்வதுபோல ஓயாதொலித்தது. புலரிக்கதிர் எழுவதுவரை அவர்களனைவரையும் கரிய பட்டுநூலால் ஒன்றெனக் கட்டி வைத்திருந்தது.
நாற்பத்தொன்றாம்நாள் இரவு முழுத் துயில்நீப்புக்குப்பின் மறுநாள் புலரியில் ஏழு வகை இனிப்புகளும் ஐவகை கனிகளும் மூன்று வகை ஊனுமாக திரள்விருந்து நிகழ்ந்தது. மூன்று நாட்களாகவே அவ்விருந்தை ரிஷபனின் தலைமையில் விஜயபுரியின் அமைச்சர்களும் படைத்தலைவர்களும் ஒருங்கமைத்துவந்தனர். அன்றுவரை இருந்த துயரை அழுக்கு ஆடையை என கழற்றி வீசிவிட்டு உண்டாட்டில் திளைத்தனர் நிஷாதர். கூச்சலிட்டும் ஆர்ப்பரித்தும் ஒருவருக்கொருவர் உணவுப்பொருட்களை எடுத்து வீசியும் உண்டனர். உண்ணுதல் உணவின் மிகையால் ஊண்விளையாட்டென்று ஆகியது. உணவை அள்ளி ஒருவர்மேல் ஒருவர் வீசினர். உணவிலாடி உணவில் வழுக்கி விழுந்து உணவில் புரண்டனர். நகரம் புழு நிறைந்த உணவுக்கலம்போல மானுட உடல்களால் அலைநெளிபட்டது.
பின்னர் கள்மயக்கிலும் ஊண்மயக்கிலும் கால்தளர்ந்து கண்சரிந்த இடங்களிலேயே விழுந்து துயின்றனர். மறுநாள் முதலிருளில் அவர்களுக்குமேல் மென்மழைச் சாரல் ஒன்று பொழிந்தது. அதை குளிர்ந்த பட்டாடை ஒன்றின் வருடல் என, இறகுகளால் மூடும் பெரிய அன்னைப்பறவை என கனவுக்குள் கண்டு திகைத்து விழித்தெழுந்தனர். பின்னர் இடமும் காலமும் தெளிவுற களைத்துத் துவண்ட கால்களுடன் சென்று தங்கள் இல்லங்களுக்குள் படுத்துக்கொண்டனர். மறுநாள் பொழுது விடியவேயில்லை. வானைமூடி செறிந்த கருமுகில்களில் இருந்து தடித்த பட்டுச்சரடுகள்போல இறங்கிய மழை விழுதுகளென மண்ணில் ஊன்றி அசையாமல் நின்றது.
மழைபெருகி தெருக்கள் ஆறுகளென்றாயின. நகரெங்கும் குவிந்திருந்த மிச்சிலும் குப்பையும் கழுவிக்கொண்டுசெல்லப்பட்டன. அடுமனைக் கலங்கள் அனைத்தும் ஊறி தாங்களே தங்களை கழுவிக்கொண்டன. கூரைவிளிம்புகள் வெள்ளித் திரைகளென நின்று பொழிந்த நீர்ப்பரப்பை சூடியிருந்தன. தலைக்குமேல் மழையின் நில்லா பேரொலி. நீர்ப்பரப்பென்றான வானுக்குள் இடி மின்னி நீரை அனலென்றாக்கி அணைந்துகொண்டிருந்தது. இல்லங்களுக்குள் மரவுரிகளாலும் கம்பளிகளாலும் உடல்போர்த்தி அமர்ந்து விழிகள் மட்டுமே உயிருடன் எஞ்சியவர்கள்போல மழையை நோக்கிக்கொண்டிருக்கையில் அவர்கள் முன்பு நிகழ்ந்த அனைத்தையும் முற்றிலும் மறந்தவர்கள்போலத் தோன்றினர்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 34
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 32
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 31
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 16
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 14
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 11
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 28
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ –24
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 23
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 33
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 15
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 13
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 12
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-10
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-9
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-8
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 20
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 16
July 1, 2017
பார்ப்பனன் என்னும் சொல்
எஸ்.வையாபுரிப்பிள்ளை
அன்புள்ள ஜெயமோகன்,
‘பிராமணர்களின் சாதிவெறி’ என்ற உங்கள் பதிவில் உள்ள இந்த வரி முக்கியமானது, “ஆனால் பெரியாரிய மூர்க்கம் என்ன செய்கிறது? அவர்கள் அத்தனைபேரையும் அப்படியே பழைமைவாதத் தரப்பாக பார்த்து கண்மூடித்தனமாக வசைபாடுகிறது. அவர்களில் ஆக நவீனமானவர்களைக்கூட அது ‘பார்ப்பனர்கள்’ என இழிவுசெய்கிறது.”
சுபவீ ‘பார்ப்பான்’ என்பது வசைச் சொல் அல்ல என்கிறார். உங்கள் கட்டுரையில் நீங்கள் ‘பிராமணர்கள்’ என்றே எழுதியுள்ளீர்கள். மேலும், திராவிட இயக்கதினரின் பார்வையில் வந்து விழும் வசைகளைச் சொல்லும் போது ‘பார்ப்பான்’ என்று அடையாளப் படுத்துகிறீர்கள். உங்கள் பதிவு வலையேற்றம் செய்யப்ப்டுவதற்கு சற்று முன் நான் பேஸ்புக்கில் எழுதியக் குறிப்பில் இருந்து:
“ஒருச் சொல் காலப்போக்கில் வெவ்வேறு அர்த்தங்களையும் குறியீடுகளையும் அடையும். தொன்றுத் தொட்டு இலக்கியத்திலும் பொது வழக்கிலும் ‘பார்ப்பான்’ என்பது ‘பார்ப்பனர்’ என்பதும் வழக்கத்தில் இருந்தவையே. பாரதியே ‘பார்ப்பான்’ என்று தான் எழுயிருக்கிறான் என்பார்கள். ஆமாம். ஆனால் அதே பாரதி ‘செட்டி’, ‘பறையன்’ என்றும் எழுதியிருக்கிறான். இன்று தலித் சமூகத்தினரை பழங்கால வார்த்தையைக் கொண்டழைப்பது ஆபாசம், வக்கிரம், சட்ட விரோதம். அந்தச் சொல் தங்களை அவமதிப்பதாக அவர்கள் எண்ணுவதால் இன்றுத் தங்களை குறிப்பதற்கென்று வேறுச் சொல்லையே பயன் படுத்த அவர்களும் சட்டமும் கூறுகிறது.
ஈவெராவின் வெறுப்பரசியலால் இன்று பிராமணர்கள் ‘பார்ப்பான்’, ‘பார்ப்பனர்’ ஆகியவை வசைச் சொற்கள் என்றுக் கருதுகிறார்கள். ஒருச்சமூகம் எப்படி அழைக்கப்பட வேண்டுமென்று அவர்கள் தான் முடிவு செய்ய வேண்டும். இதனால் தான் இன்று தலித் சமூகத்திடையேக் கூட காந்தி உபயோகித்த ‘ஹரிஜன்’ எனும் பெயர் மறுக்கப்படுகிறது.”
அரவிந்தன் கண்ணையன்
***
அரவிந்தன் கண்ணையன்
அன்புள்ள அரவிந்தன்,
ஓர் எளிய விவாதத்தில் இருந்து தொடங்குகிறேன். 1926-ல் எஸ்.வையாபுரிப்பிள்ளை தலைமையில் தமிழ்ப்பேரகராதி ஒன்றை தயாரிக்கும்பணியை அன்றைய சென்னை மாகாணத்தின் காங்கிரஸ் அரசு தொடங்கியது. 1936லும் 1939லும் அதன் முதல்வடிவம் வெளியாகியது. 1954ல் தான் முழுமையான வடிவம் வெளியாகியது.
ஒரு மொழியின் முதல் பேரகராதி உருவாக்கம் என்பது எளிய பணி அல்ல. சொற்களைத் திரட்டுவதற்கும் தொகுப்பதற்கும் இன்றைய நவீன வசதிகள் இல்லை. தமிழ் மக்களிடையே புழங்கும் சொற்கள் அனைத்தும் தமிழ்ச்சொற்களே என்பது அவ்வகராதியின் முதல்கொள்கை. அச்சொல் தமிழிலக்கியத்தில் முதன்முதலாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதை ஆதாரமாக எடுத்து அளித்தார்கள்.
இன்றும் பிரமிப்பூட்டும் பணியாக அது உள்ளது. ஆலயம் தொழுவதுபோல் ஒவ்வொருநாளும் இந்த பேரகராதியின் அட்டையை பிரித்துக்கொண்டிருக்கிறேன். மிக அரிய, வழக்கொழிந்துபோன வட்டாரச்சொற்களைக்கூட அதில் காணமுடிகிறது. நானும் நாஞ்சில்நாடனும் சமீபத்தில் மலேசியாவில் இப்பணியைப்பற்றிப் பேசிக்கொண்டிருந்தபோது நாஞ்சில் உணர்ச்சிவசப்பட்டு கண்கலங்கினார்.
ஆனால் எஸ்.வையாபுரிப்பிள்ளை அன்றைய பலதரப்பினராலும் மிகமிகக் கீழ்த்தரமாக வசைபாடப்பட்டார். அவருடைய தாயின் கற்பே பெரும்பாலும் வசைக்குரியதாக இருந்தது. திராவிட இயக்கத்தவர் தேவநேயப் பாவாணர் தலைமையில் அதற்கு எதிரான பெரிய வெறுப்பியக்கத்தையே ஆரம்பித்தனர். அவர்கள் ஆட்சிக்குவந்தால் வையாபுரிப்பிள்ளையின் அகராதி கடலில் தூக்கிப்போடப்படும் என்றும், புதிய ‘சரியான’ அகராதி தயாரிக்கப்படும் என்றும் சொன்னார்கள்.
ஆனால் அவர்கள் ஆட்சியில் இருந்த ஐம்பதாண்டுக்காலத்தில் இன்றுவரை அப்படி ஒரு பேரகராதி முழுமையாகத் தயாரிக்கப்படவில்லை. பல திட்டங்கள் வகுக்கப்பட்டு பலகோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. பெரும்பாலான முயற்சிகள் பாதிக்கிணறு தாண்டின. பல முயற்சிகள் வையாபுரிப்பிள்ளை அகராதியின் எளிய நகல்கள். வையாபுரிப்பிள்ளை அகராதியே இன்றும் தமிழ்ப்பேரகராதியாக நீடிக்கிறது. அதற்கு மறு அச்சுதான் வந்திருக்கிறதே ஒழிய மறுபதிப்பு கொண்டுவர இன்று ஆளில்லை.
அந்த எதிர்ப்புகள் குவிமுனை கொண்ட இடம் என்ன தெரியுமா? அவ்வகராதியில் வையாபுரிப்பிள்ளை ‘முதலி’ ‘செட்டி’ என்று சொற்பொருள் கொடுத்திருந்தார். அது தங்கள் சாதியினரை இழிவுசெய்வது என்றும் முறையே முதலியார் என்றும் செட்டியார் என்றும்தான் இருக்கவேண்டும் என்றும் அச்சாதியினர் பொங்கி எழுந்தனர். அவர்களை ஆதரித்து களமிறங்கினர் திராவிட இயக்கத்தவர்.
வையாபுரிப்பிள்ளை செட்டி என்றும் முதலி என்றும்தான் நூல்களில் இருக்கிறது என்றும், அச்சாதியினர் தங்கள் பெயரை தாங்களே எழுதும்போது செட்டி என்றும் முதலி என்றும்தான் எழுதுகிறார்கள் என்றும், ஆர் விகுதி மதிப்புக்குரியவர்களைச் சுட்டும்போது பிறரால் சொல்லப்படுவது என்றும், தன் பெயரை தானே பிள்ளைவாள் என்று போட்டுக்கொள்வதில்லை என்றும் சொல்லிப்பார்த்தார். கண் உடையும் வசை. இன்றுகேட்டாலும் கூசும் சொற்கள்.
அவர்கள்தான் இன்று பார்ப்பனர் என்று சொல்லலாம் அது வசை அல்ல என்று சொல்கிறார்கள். வையாபுரிப்பிள்ளை பார்ப்பனன் என்னும் சொல்லை அகராதியில் சேர்த்திருக்கிறார். அது வசை அல்ல. ஆவணப்படுத்தல்.
தங்கள் தலைவர்களை பெயர் சுட்டிச் சொல்வதே அவமதிப்பு என எண்ணும் நிலப்பிரபுத்துவ மனநிலைகொண்ட கும்பல் இதைச் சொல்கிறது. பட்டப்பெயரால் தங்களைத்தாங்களே அழைத்துக்கொள்பவர்கள் உலகநாகரீகம் பற்றிப் பேசுகிறார்கள்.
அத்தனைக்கும் மேலாக சில சொற்கள் சொல்பவரால் வசை என பொருள் அளிக்கப்படும். கேரளத்தின் கீழோர் தமிழர்களை பாண்டிகள் என்பார்கள். நேர்ப்பொருள் பாண்டியநாட்டைச்சேர்ந்தவன் என்பதே. அவர்கள் அளிக்கும்பொருள் இழிந்தவன் என்பது. ஆகவே அது ஒரு வசைச்சொல்லே. சென்னையில் தெலுங்கர்களை கொல்ட்டிகள் என்கிறார்கள். வேடிக்கைச்சொல் அது. ஆனால் வசையாக அது பயன்படுத்தப்படும் என்றால் வசையே
ஒரு சாதி அல்லது குழு தங்களை ஒரு சொல் வசை எனக் கருதுகிறது என்றால் அதை சொல்வது வசையேதான். தமிழ்மரபில் முடவன் என்றும் நொண்டி என்றும் பெட்டை என்றும் பேடி என்றும் மூளி என்றும் எத்தனையோ சொற்கள் உள்ளன. அவை இன்று வசைகளாக ஆகிவிட்டன .அதைத் தவிர்ப்பதே நாகரீகம்.
ஆனால் அரசியல்நாகரீகத்திற்கும் வெறுப்பரசியலுக்கும் என்ன தொடர்பு? திராவிட இயக்க மேடைப்பேச்சாளர்கள் கடந்துசென்ற எல்லைகள் எல்லாம் மிகமிக அரியவை.
தங்களைத் தாங்களே வசைபாடிக்கொள்ளும்போதும் அவர்கள் அப்படித்தான் நடந்துகொண்டார்கள். அதன் தடயங்களை பாரதிதாசன் அண்ணாத்துரைபற்றிச் சொன்னபோதும் வை.கோபாலசாமி மு.கருணாநிதி பற்றி சொன்னபோதும் கண்டோம்.
ஜெ
***
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
அமுதம் – கடிதங்கள்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
“அமுதமாகும் சொல்“ சமீபத்தில் படித்தேன். அது தந்த ஆச்சரியங்களில், அதிசயங்களில் இருந்து இன்னும் மீளாமல் இருக்கிறேன். ஒரு சொல் திறந்து ஒரு பிரபஞ்சமாக விரியும் என்றால், நீங்கள் இதுவரை எழுதிய, பேசிய சொற்கள் எத்தனை எத்தனை பிரபஞ்சங்களை வாசகர்களுக்கு திறந்து காண்பித்திருக்கும் என்பதை நினைத்தாலே பிரமிக்கிறது. இது போன்ற எழுத்துக்களை ஒருஇருபது வருடம் முன்பே படித்திருக்க வேண்டும் என்ற ஆதங்கம் முதலில் எழ, பிறகு இப்போதாவது படிக்க முகூர்த்தம் வாய்த்ததே என்று மகிழ்ச்சியடைந்தேன்.
வேதங்கள், மந்திரங்கள் என்றாலே அது எனக்கானது இல்லை , வேறு யாருக்கோ என்ற மனநிலையில் இருந்தேன். இக்கட்டுரை படித்த பிறகு வேதங்களில் மந்திரங்களில் பொதிந்துள்ள பொக்கிஷங்களை தேடி செல்ல மனம் விரும்புகிறது. இப்பொழுதெல்லாம் ஒரு கதையோ, கவிதையோ, கட்டுரையோ படிக்கையில், அதன் மொத்த சாராம்சத்தை உள்ளடக்கிய ஒரு சொல் அதனுள் இருக்கிறதா என்று மனம் துழாவுகிறது. சமீபத்தில் அறம் தொகுதியில் உள்ள “மத்துறு தயிர்” சிறுகதையை மீண்டும் படிக்க நேர்ந்தது.
முதல் வாசிப்பில் இந்த சிறுகதை குரு சிஷ்யன் பற்றிய கதை என்று நினைக்க, இரண்டாம் வாசிப்பில் ‘ராஜபிளவை’ எனும் சொல் மேலும் மேலும் பிளந்து பிளந்து , விரிந்து விரிந்து பல பிரபஞ்சங்களை திறந்தது. குரு-சிஷ்யன் பிரிவு, காதலன்-காதலி பிரிவு, கணவன் (ராமன்) – மனைவி (சீதை) பிரிவு, மேய்ப்பனை பிரிந்த ஆட்டுக்குட்டி, பரமாத்மாவை பிரிந்து தத்தளிக்கும் ஆத்மா என்று பிரிவின் துயரத்தின் பல்வேறு பரிமாணங்களை , ஆழங்களை, அகலங்களை காண்பிக்கிறது “மத்துறு தயிர்”.
பால் தயிராக வேண்டும் என்றால் சிறிதளவு தயிர்/உறை மோர் எடுத்து பாலில் விடுகிறோம். அது போல் குருவின் சிறு பகுதி சிஷ்யனுக்குள் நுழைந்த பிறகு பல மாற்றங்கள் நிகழ்கிறது. பால்->தயிர்->நெய்->தீபம்->ஒளி எனும் அற்புத பயணம் சில சமயம் ஊழ்வினையால் முழுமை அடையாமல், பயணத்தின் திசை மாறி இருளில் முடிந்து விடுகிறது. கதையின் நாயகன் கடைசி வரியில் குருவை மானசீகமாய் வணங்கி விட்டு இருளில் சென்று மறைகிறார். இதிலிருந்து தப்பிக்க ஒரே வழி “இருளிலிருந்து ஒளிக்கு” என்கிற “அமிர்த சொல்” மட்டுமே என்று நம்புகிறேன்.
நன்றி.
அன்புடன்,
ராஜா,
சென்னை.
***
அன்புள்ள ராஜா,
ஒரு குறிப்பிட்ட மனநிலை அமைவதுவரை சில விஷயங்கள் திறந்துகொள்வதில்லை. அதற்காகக் காத்திருக்கவேண்டியதுதான். தொடங்குக
ஜெ
***
அன்புள்ள ஜெ
அமுதமாகும் சொல் சுருக்கமான அழகான கட்டுரை. விரிவான கட்டுரைகளை எழுதுபவர் நீங்கள் என்கிறார்கள்.குறைவான சொற்களில் ஒரு விஷயத்தை முழுமையாகவே விளக்கும் செறிவான கட்டுரைகள் பலவற்றை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள். காந்தியம் என்றால் என்ன என்ற சுருக்கமான கட்டுரை, தமிழ் தி ஹிந்துவில் வெளிவந்தது, அத்தகைய கட்டுரை. தடம் இதழில் வெளிவந்த உணர்கொம்புகள் கட்டுரையும் அப்படிப்பட்டது. ஆனால் அமுதமாகும் சொல் ஒரு கிளாஸிக் உதாரணம். மிகச்சுருக்கமான கட்டுரை இது. ஆனால் சொல்லவேண்டிய எல்லாமே சொல்லப்பட்டுள்ளது. சொல் எப்படி மந்திரமாக ஆகும் என்றும் அது நவீன வாழ்க்கையில் எப்படி நிகழ்ந்துகொண்டிருக்கிறது என்றும் சொல்லி இரண்டுவகையான மந்திரங்களையும் விளக்குகிறீர்கள். முக்கியமான திறப்பு அது
ராமச்சந்திரன்
***
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

