Jeyamohan's Blog, page 1628
June 12, 2017
சபரிநாதன் கவிதைகள்: வாழ்க்கைக்குள் ஊடுபாய்ந்து செல்லும் வித்தை
2011ஆம் ஆண்டில் தமிழ்நாட்டுக்கு முதன்முறையாக வந்திருந்தபோது எழுத்தாளர் கோணங்கியின் வீட்டில்தான் இரண்டுநாள் தங்கியிருந்தேன். கோவில்பட்டியில் ஊர் முழுவதும் சுற்றி அலைந்துவிட்டு கழுகுமலை சிற்பங்கள், கொஞ்சம் உரையாடல் என பகல் நீர்த்துப் போய்க் கொண்டிருந்த நேரத்தில் மழையுடன் சபரிநாதன் வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டேன். என்னைவிட இளையவரான சபரிநாதனை அவர் வீட்டில் வைத்து நான், செல்மா, யவனிகா, கோணங்கி என நால்வரும் சந்தித்தோம். அப்பொழுது கோணங்கி மிகவும் உற்சாகத்துடன் சபரிநாதனின் ‘களம் – காலம் – ஆட்டம்’ எனும் கவிதை நூலைக் கொடுத்தார்.
இலக்கியத்தின் மீதான நாட்டம் காரணமாக மூன்றுமுறை தமிழ்நாட்டில் எழுத்தாளர்களின் வீடு வீடாகத் தேடி அலைந்தவன் நான். என் விடுமுறை காலம் மிகவும் குறுகியதுதான். ஆனாலும், மலேசியாவிலிருந்து தனியாகப் புறப்பட்டு 30க்கும் மேலான எழுத்தாளர்களை அவர்கள் ஊரிலேயே சென்று சந்தித்துள்ளேன். அதே துடிப்புடன் சபரிநாதனை அப்பொழுது பார்க்க நேர்ந்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. அதன் பிறகு அவருடன் தொடர்பில்லை என்றாலும் அன்று ஒரு தம்பி கிடைத்தான் என்ற மனநிலையுடன் தான் அந்த மழைநாளை நினைவுக்கூர்ந்துவிட முடிகிறது.
சபரிநாதனின் கவிதையில் இருக்கும் சொற்பிரயோகம் மிக நெருக்கமான உணர்வை ஏற்படுத்தக்கூடியது. அம்மாச்சி தன் கால்களின் மீது என்னைக் குப்புறப்போட்டுக் கதை சொல்லத் துவங்கும் அந்த நாட்களைச் சட்டென மனத்தில் ஊர்ந்திடச் செய்யும் அளவிற்கு அக்கவிதை தொகுப்பில் சில கவிதைகளைக் குறிப்பிடலாம். அவை கதையைப் போன்று ஒலிக்கும் கவிதைகள்.
காலத்தைக் கடத்திக் கொண்டு வரும் சொற்கள் அவை. அச்சொற்கள் அனைத்தையும் திரட்டி ஒரு காலத்தை உண்டு செய்யும் வித்தை சபரிநாதனின் கவிதைகளால் முடிகிறது. ஒரு பகற்கனவில் தோன்றும் நித்தியமற்ற உடைந்து சிதறி பின் கூடிநிற்கும் நடையாய் சபரிநாதன் தனக்கென ஒரு களத்தைக் கவிதையில் உருவாக்குகிறார்.
எனினும்
அப்பா எப்பொழுதுமே நம்ப முடியாதவராக இருந்தார்
வரும்போது திண்பண்டங்கள் குறிப்பாக ஓமப்பொடியும்
கடுப்பட்டிமிட்டாயும் வாங்கி வருபவராகவும்…
மார்க் அட்டைகளோடு போகும்போது
சாமியாடியாக மாறுபவராகவும்…
என அப்பாவைப் பற்றி சித்திரம் அவரின் மொத்த வாழ்வின் மிச்சங்களையும் எச்சங்களையும் ஊடுபாய்ந்து சொல்லிச் செல்லும் இடத்தில் அகநோக்குடைய கவிதைகளாக அவை பிரவாகமெடுத்துக் கொள்கின்றன. இதுபோன்று வாழ்வையும், திணையேக்கங்களையும், உறவுகளையும் அகநோக்குடன் மீட்டுணர்ந்து சொல்ல நேர்கிற இடங்களில் அவருடைய மொழி தன் கால்களை நீட்டி வழிக்கொடுத்து மிக நெருக்கத்துடன் கட்டியணைக்கிறது. சபரிநாதன் தன் காலத்தின் அனைத்து வாசகர்களையும் உள்ளிழுத்துக் கொள்வதற்கான சூட்சமம் இதுவே எனக் கருதுகிறேன். முதலில் ஒரு கவிஞன் அகநிலையிலிருந்து பேசக்கூடியவனாக இருந்தால் மட்டுமே கவிதை கூர்மைப்பெறும். நுணுக்கமான சொல்லாடல்களை அடையும். பாடுப்பொருள்களை உருவாக்கிக் கொண்டு வாழ்க்கைக்கு வெளியிலிருந்து கூவும் போக்கு சபரிநாதன் கவிதைகளில் இல்லை.
தமிழ் சூழலில் நிச்சயம் சபரிநாதனின் கவிதைகள் தனித்த இடம் பெறும். மேலும் அவருக்கு குமரகுருபரன் விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. வாழ்த்துகள் சபரி.
கே.பாலமுருகன், http://balamurugan.org
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
வெற்றி கடிதங்கள் 12
அன்புள்ள ஆசிரியருக்கு,
வணக்கம். வெற்றி சிறுகதை எனக்கு பிடித்தது. கதையில் இரண்டு முடிகளுமே உள்ளன. ரங்கப்பர் லதா தன்னை வென்று விட்டாள் என்கிறார். லதா ரங்கப்பர் தன்னை வென்று விட்டார் என்கிறார். ஆனால் முடிவை ஊகித்துவிட்டேன் என்பவர்கள் லதாவின் கூற்று மட்டுமே உண்மையாக இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள் போலும். எனக்கு கதையை படித்து முடித்தவுடன் எந்த முடிவும் தோன்றவில்லை. மனது அமைதியாக இருந்தது. பின்பு எப்போதாவது தோன்றும் என நினைக்கிறேன்.
நன்றி,
அன்புடன்,
சு.தீபப்பிரசாத்.
அன்பின் ஜெ….
அந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரமே அந்த சவலைக் குழந்தைதான். அவன் இல்லாவிட்டால் ரங்கப்பர் தான் லதாவை நெருங்கியிருக்க முடியுமா? திருஷ்யத்தில் மோகன்லால் எடுக்கும் முடிவுகள் போல லதா முடிவெடுக்கக் காரணமே தன் குடும்பத்தைக் காப்பாற்றும் நோக்கம் தானே அன்றி வேறொன்றும் இல்லை. ஆனால் தன் கணவர் தன்னிடம் காட்டிய அலட்சியம் மற்றும் கீழ்த்தர வார்த்தைகள் தாம் லதாவை அப்படிப் பழிவாங்குமாறு செய்தது. லதா சோரம் போகாமலேயே தான் போனதாகக் கூறி இருக்கலாம்! நமச்சிவாயம் தன் எஞ்சிய வாழ்நாள் முழுதும் தன் கீழ்மைத்தனத்துக்கான பலனை அனுபவிக்க அதுதான் வழி! அந்தக் குழந்தை கதையில் இல்லாவிட்டால் இந்தக் கதையை எப்படி எழுதி இருப்பீர்கள்?
-பாலா.
8
ஆசான் அவர்களுக்கு,
போன வாரம் ஒரு நாள், இந்த விலை குறைஞ்ச மொபைல் போன் வாங்கலமா, வேணாமா என்று யோசித்து இருக்கும்போதே, கடையில் என் பக்கத்தில் தெரிந்த வெள்ளைக்காரன், சேல்ஸ் மேன் கிட்ட புதுசா வந்த $800 சாம்சங் போன் இருக்கானு கேட்டார் .
“ஐயம் கெட்டிங் திஸ் பார் மை கேர்ள் பிரின்ட் ” என்று அவரு சொன்னவுடன், நான் நிமிந்து அவர பாத்தேன்.
55-60 வயசு இருக்கலாம். 51/2 அடி உயரம். ஷர்ட் இன் பன்னி இருந்தார். சுத்தமா தொப்பை இல்லை.
முன் மண்டை வழுக்கையை சமன் செய்ய, நீளமா தல முடி விட்டு, கழுத்துக்கு கீழ் வரை நீண்டு இருந்து.
அநேகமா எல்லா முடியும் நரை. ஒரு இளைஞண்ணுக்கு உரிய உடல். முகத்தில் அப்பிடி ஒரு கிழட்டு களை.
டேய், இந்த வயசுலுல உனக்கு கேர்ள் பிரின்டா? அப்பிடின்னு என் மனம் பொறாமைல நொந்து அந்த ஜீவன கொஞ்சம் நேரம் நோட்டம் விட்டேன். இந்த ஆளுக்கு பிரெண்டா இருக்க ஒகே சொன்ன அந்த பொண்னு யாருன்னு கண் சற்று அங்க இங்க அலைஞ்சது. தனியாதான் வந்து இருப்பார் போல.
அந்த பொண்ணு ரொம்ப சின்ன வயசா தான் இருக்கணும் என் மனம் முடிவு பண்ணிருச்சு. ஏன்னு தெரியல.
அத விட, நான் ரொம்ப உடைந்தது, வெறும் ஒரு மொபைல் போன் வச்சு ஒரு பெண்ணின் கவனத்தை நம்ம பக்கம் திருப்ப முடியும்னு அந்த அமெரிக்க கிழம் எனக்கு உணர்த்திற்று.
நேற்று “வெற்றி” சிறுகதையை படித்தேன். ஒரு மாதிரி கொஞ்சம் தெளிவு கிடைத்த மாதிரி ஒரு எண்ணம்.
தோற்பதற்கு சாத்தியம் உண்டு என்று தெரிந்தும் அந்த கிளப்பில் நமச்சிவாயம் அத்தனை ஆண்களுக்கு முன் தாயத்தை உருட்ட முற்பட்டது, காலம் காலமா நடுந்து வரும் ஒன்னு போல..
ஒரு ஆண் மகனை , நிர்மூலமாக்கி, நம்ம முன் மண்டி போட வச்சு, நீயலாம் ஒன்னும் இல்லன்னு அவன் எண்ணத்தில் மண்ணை அள்ளி வீச, அவனுக்குரியவளை தூக்குனா போதும் போல… வெற்றியுள் வெற்றி அதுதான்!
” பிறன்மனை நோக்கா பேராண்மை ” ன்னு நம்ம பெரியவர் ஏன் சொன்னாருன்னு நெடுநாள் மண்டை குடைச்சல்.
பேராண்மைக்கும், பிறன்மனைக்கும் ஏன் முடிச்சு போட்டு வைச்சுருக்கார்ன்னு அர்த்தம் கிடைத்த மாதிரி ஒரு நிறைவு.
அடுத்த ஆடவனை வெல்வது ஆண்மை என்றால், அந்த ஆண் தன்னையே வெல்வது பேராண்மை அன்றோ!
பெண்டிருக்கு ஆசையும் , ஆடவருக்கு ஆணவம் என்றால், எதோ ஒரு புள்ளியில் இந்த இரண்டும் ஒன்னுதானோ என்று தோன்றுகிறது.. அல்லது இன்னும் ஆழத்தில் இருக்கும் வேற ஒன்றின் இரு வேறு நிலை வடிவங்களா ?
-ஓம்பிரகாஷ்
8
இந்த கதையில தோல்வியன்றி வெற்றி முழுசும் அந்த ரங்கப்பர்க்குதான். அவர் தோற்றிருந்தால் அவர் பார்க்க நினைத்த பெண்ணின் கடாட்சம் கிடைத்திருக்கும். வெற்றி பெற்றிருந்தால் மற்றுமொரு வெற்றி அவ்வளவுதான். அவளை மதித்தானாலேயே நமச்சிவாயம் அவமானப்படாமல் தப்பித்திருக்கிறான். அவர் இயல்பை இழக்கவில்லை. அந்த பெண்ணோ நமச்சிவாயமோ தன்னுள் ஓடும் இயல்பிலிருந்து மாற்றப்பட்டுவிட்டார்கள். இயலாமை ஒரு மனிதனை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது. தேவகுணம் அசுரகுணத்திற்குள்ளும் அசுரகுணத்திற்குள் தேவகுணமும் காணமுடிகிறது.
அந்தப் பெண்ணுக்கு வெற்றி என்பது அவளின் குடும்பம். குழந்தைகளின் வெற்றி கணவனின் வெற்றி அவள் அன்பின் அங்கீகரிப்பு. அவளுக்கு கிடைத்தது தோல்வி. அவள் பலவீனமானவள் என்றல்லாம் நினைக்க முடியவில்லை. அவள் தினமும் அன்றாட உதறல்களை வலிகளை எதிர்கொண்டு வெற்றி பெற்றவள். வெற்றி பெறுபவள்.
எப்பொழுதும் ஆண்களுக்கு பெண்களைத் தவிர ஒன்றுமே தெரியாது தன் மாற்றமுடியாத உரிமையாக கடமையாக. ஆனால் பெண்களுக்கு முழுஉரிமையோ முழுக்கடமையோ கூட இருக்கக்கூடாது என்றே விரும்புகின்றனர். அப்பறம் அவளோட வலிமை. அதாவது வலிமையின்மையால் இருக்கவேண்டிய வலிமை. பெண்ணுக்கென்று இருக்கிற இயலாமையை சொல்லியே வளர்க்கிறர்கள். இயலாமை சில நேரங்களில் வலிமையாகவும் சில நேரங்களில் வலிமையற்றதாகவும் மதிப்பிடப்படுகிறது. எப்பொழுதுமே இதான். மாற்றவே முடியாது. நமச்சிவாயத்துக்கு வலிமையே இல்லை. அவனுக்கென்று ஒண்ணுமேயில்லை. அவன் நம்பறதுல்லாம் பெண்ணின் வலிமை பணத்தின் வலிமை புகழின் வலிமை. ஆனால் அவன் வலிமையென்று நினைத்ததெல்லாம் அவனை வலிமையற்றவனாக ஆக்கியிருக்கிறது. அவன் ஆணவத்தை. பலவீனத்தையே தேடிக்கொண்டு பலவீனத்தையே கொடுத்துக்கொண்டு பலத்தை கேட்கிறான். அவ்வளவு பலவீனமாக தெரிகிறான்.
அவள் மருத்துவனையில் நடந்த விஷயங்களை சொல்லும்போது குழந்தைமாதிரி தெரிகிறாள்.
அவன் அவளை மருத்துவமனைலேந்து முதல் தடவை அழைச்சிட்டுவர இடத்துல அவனே அவன்மேல பரிதாபப்பட்டுவிட்டான்போல. அவன் சிந்நனையில் செயலில் மூர்க்கமில்லை.
அவள் தோற்றாள். இந்தப் பந்தயம் அவளுக்கு தெரிந்திருக்கிறது. அவள் இறுதியில் அவனிடம் சொல்லும்போது அவளின் வலியையே இழப்பையே சொல்லியிருக்கிறாள். நமச்சிவாயத்தின் வெற்றி அவள் அன்பில். தோல்வி முழுமையாக அவனிடத்தில். அவளால் மட்டுமே வெல்கிறான்.
அவன் தன் மறுபாதியான மனைவியை முண்டை ஒழுங்காருந்துட்டா பணம் கிடைக்கும்னு நினைக்கும்போது அவனின் மிக கீழ்த்தரமான எண்ணம் தெரிகிறது, அதோடு என்னமோ அவன்மேல் பரிதாபம் வருகிறது. இவ்வளவு தூரத்துக்கு ஒரு மனிதன் அறிவற்றவனாக இருக்க முடியுமா. அவன் எதற்கு அடிமைப்பட்டிருக்கிறான் என அவனுக்கே தெரியாத நிலை போல புரிகிறது. தெரிந்தும் அறியாதவன். அவனே அம்மனை சென்று வேண்டும் இடம் வெளிப்படையாக அவனின் ஒட்டுமொத்த மூடத்தனத்தை உணர்த்துகிறது. அதைத்தாண்டி பலவற்றையும்.
பெண் இந்த கதையில் மட்டுமல்ல எங்குமே வெற்றி பெறுபவள். ஆனால் தான் நேசிப்பவர்களால் தோற்பவள் என்று தோன்றியது.
பெரும்பாலும் பெண் குடும்பத்தின்பிடியில் இருக்கிறாள். ஆண் சமூகத்தின்பிடியில் இருக்கிறான். பாதி விரும்பியும் பாதி விரும்பாமலும் இல்லையான்னு தோணுது.
ஆணுக்கு தனக்கு முழுவிருப்பம் இல்லாவிட்டாலும் ஒரு இமேஜ் தேவைப்படுகிறது. இதை எப்போதும் பார்க்கிறேன். இதனால் அவன் இயல்பே மாறிவிடுகிறது. அவன் அதை உள்ளூர வெறுத்தாலும் வலியுடன் விரும்புகிறவனாகிறான்.
இன்னொரு குணம் ஞாபகம் வந்தது வாசிக்கையில். தன்னிருப்பை உணர்வதேயில்லை தொலைக்கவே விரும்புகிறார்கள்.தொலைத்து அதனால் இல்லாத ஒன்றை அடைதல் அல்லது அனைத்தையும் இழத்தல். அது சுகமாக தெரிகிறது. வெற்றியாகவும். என்ன முடிவில்.
(இதை கடைசியில் எழுதுவதற்கு காரணம் இதனால் யாரும் ஒரு அபிப்ராயத்துடன் வாசித்துவிடக்கூடாது என்பதற்காக. நான் நிறைய வாசித்தில்லை. எழுதியதுமில்லை. இதுவே முதல் பத்துக்குள் ஒன்று. திருத்தவும். )
அன்பு மற்றும் நன்றிகளுடன்
லட்சுமி வேதாந்த தேசிகன்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
வெற்றி கடிதங்கள் 11
அன்பு ஜெ,
“வெற்றி” கதையும் அதை சார்ந்த கடிதங்களும் படித்தேன். இந்த ஆண் பெண் மீது கொள்ளும் வெற்றி எனும் பார்வை பல வகைகளாக மாறி மாறி சென்று கொண்டு இருப்பதாகவும், பெண் அதை எதிர் கொள்ளுதலும் , கால் ஊன்றல்களும், சுயம் கொள்ளுதலும் வளர்ந்து கொண்டு இருப்பதும் தெரிகிறது. சுமதியின் சீற்றம் இந்த பார்வையில் எடுத்து கொன்டேன்.
அந்த கால கதை பின்னணியில், வீட்டில் அடைந்து கிடைக்கும் ஒடுங்கிய ஒரு பெண்ணுக்கு ஜமீனின் திடீர் அன்போ பணமோ இழுக்க முடியாது என்று யோசித்து கொன்டேன். காச நோய் பையனோ , மகனின் படிப்புக்கோ என்று தான் கொக்கி முள் இருக்க கூடும் போல…. ஜெ, எனக்கு உண்மையில் ரங்கப்பர் தோற்று போனதாக தான் படுகிறது. ்அதை ஒத்து கொண்டு தட்டி விட்ட படி அவரின் லட்ச்சிய பெண் கண்ட ஆசையின் நிறைவேறுதல் தரும் திருப்தி, தோல்வி என்பதையும் கூட வெற்றி போல எடுத்து செல்லும் பணக்கார தானம் என்று தோன்றுகிறது. ரங்கப்பர் போன்ற ஆட்களுக்கு வெற்றியை விட்டு கொடுக்கும் பெருந்தன்மை எதிர்பார்க்க வேண்டாம் என்று தோன்றியது. ஆனால் தோல்வி வந்தால், ஏற்று கொண்டு முதல் தோல்வியை வெற்றி என்று எடுத்து செல்லும் வகை ஆட்கள் அந்த அமெரிக்க படிப்பு ஆட்கள். நாச்சிமுத்து வந்து பேசியது கூட அவளின் கணவனை பணிய வைப்பதற்கான வழி என்று எடுத்து கொன்டேன்.
இப்படி சூதில் வைக்கப்பட்டோம் என்பது தரும் வெம்மையும், மகனின் வைத்திய காரணம் கொண்டு உடல் தொடும் ரங்கப்பர் போன்ற ஆட்களின் பிம்ப வீழ்ச்சி ( மருதமலை முருகன் ஆகி ) தரும் வலியும், தான் வெறும் உடல் என்றும் பண்டம் என்றும் வரிகளாக உணரா விட்டாலும் அந்த தெரிதல் கொடுக்கும் வெறுமையும் தான் அவளுக்கு அந்த இறுகிய அமைதியை தந்து இருக்க கூடும். அப்படி இருந்தும் கணவனின் உயிர் இருப்பது வரை விஷம் கனிய வைத்து இறுதியில், அதை நமசிவாயத்திற்கு குடுத்து விட்டு செல்வது தான் அவள் வெற்றி என்று எடுத்து கொன்டேன்.
அந்த பணத்தில் தானே அவர் அடைந்தது எல்லாம். கட்டிய பின் தட்டி விடும் வெற்றி ஒரு உச்ச ருசி வகைகள். அவள் இறந்தது 40 வருடம் கழித்து ..
படித்த எல்லோருக்கும் நீங்கள் சொன்ன கடைசி வரி தான் ஒரு திருப்தி தந்து இருக்கும் போல ..ஆதி மனித உணர்வுகளின் அலைக்கழிப்புகளை புனைவுகளில் வைத்து விளையாடி, கற்பனையில் யோசித்து விரித்தபடி சென்று ( நான் சொன்னவை எல்லாம் கிறுக்கு வகையில் எடுத்து கொண்டாலும் கூட ) ,ஒரு நல்ல அனுபவம்
அன்புடன்,
லிங்கராஜ்
ஜெமோ அவர்களுக்கு,
தங்கள் வெற்றி சிறுகதையின் தாக்கத்திலிருந்து என் ஆசான் செந்தில் குமார் அவர்கள் மீளவில்லை என்பது அவர் நடையின் தொனியிலேயே தெரிந்தது. எங்கள் அலுவலகதிற்குள்ளேயே இப்படியும் அப்படியுமாக திரிந்துகொண்டிருந்தார். என் பார்வையில் ஒளிந்திருந்த காரணத்தை அவராகவே தெரிந்துகொண்டு சற்றுமுன் தான் வெற்றி சிறுகதை படித்ததாகவும் அக்கதையில் இருந்து என்னால் வெளிவரமுடியவில்லை என்றும் கூறினார். அவர் படும் அவஸ்தைக்கு ஏதோ நாட்டு மருந்து கொடுக்கும் நினைப்பில் ஜெமோ அவர்களுக்கு ஒரு மின்னஞ்சல் செய்துவிடுங்களேன் என்றும் கூறினேன். அப்பொழுது நான் நினைக்கவில்லை என் சொல்லே திரும்பி என்னை நோக்கி பாயும் என்று. படித்துகொண்டிருக்கும் போதே இடையூறுகள் பல என்னை சுற்றி மொய்த்துக்கொண்டிருந்தது. அலுவலகம் முடிந்து அனைவரும் விடைபெற்ற பின்பு தனி நபராய் தனிமையில் படிக்கலானேன். இக்கதையின் முடிவு எதுவாக இருக்கும் என்னும் ஆர்வம் தான் வாசிப்பின்னூடே சுவாரஸ்யத்தை புகுத்தி என் கரம் பிடித்து அழைத்து சென்றது. நகம் முளைக்காத விரல்களை கடித்துக்கொண்டும், பிடரியை சிக்கெடுத்துக்கொண்டும் அவதிபடும் நிலைமைக்கு புதைகுழிக்குள் தாங்கள் என்னை தள்ளிவிட்டதாகவே ஒரு எண்ணம். ஏழாம் உலகத்திலிருந்தே நான் மீண்டு எழ தவித்துக்கொண்டிருக்கும் இந்நேரத்தில் வெற்றி சிறுகதை என்னை மேலும் அழுதிக்கொண்டிருக்கிறது. நான் வீட்டிற்கு செல்லும் இரயில் பயண நேரங்களில் என்னால் வேறொரு படைப்பை புரட்டிக்கொண்டிருக்க முடியவில்லை. வாழ்கை ரகசியத்தை உடைத்து காட்டும் திருவுகோலாய் தான் மது இங்கே பல மனிதர்களுக்கு பழக்கப்படுத்திவிட்டது போலும் இக்கதை படித்த மது பிரியர்கள் பலர் நண்பர்களுடன் செல்லும் ஒவ்வொரு வினாடியும் எச்சரிக்கை மணியை தங்களுக்குள்ளே அடித்துக்கொண்டிருப்பார்கள் குறிப்பாக காஸ்மாபாலிட்டன் கிளப்பில் வலம் வரும் தொழில் முனைவர்கள். மகாபாரதத்தின் காதாபாத்திரங்கள் கூட ஏதோ ஒரு வகையில் நிகழ் மனிதனின் குணாதிசியத்தோடு பின்னைக்கபட்டிருப்பதை இக்கதை எனக்கு தெளிவுபடுத்திவிட்டது. பீமனோ, தருமனோ, லக்ஷ்மணோ சந்தர்ப்ப சூழ்நிலையே நாம் எந்த அளவிலான பிம்பத்தை சார்ந்திருக்கிறோம் என்பதை எடுத்துக்காட்டும். அப்பிடி ஒரு நிலையை தான் நமச்சிவாயம் எட்டியிருக்கிறார். தன் மனைவியை பகடை காயாக வைத்து விளையாட நினைக்கும் நமச்சிவாயமும் சரி, தன் பணத்திமிரை முதலீடாக வைத்து வேடிக்கைகாட்டும் ரங்கப்பரும் சரி வெற்றி பெற்ற நிலையிலும் கூட தோதாங்கோலிகளாக தான் மற்றவர் கண்களுக்கு தென்படுவார்கள். பயம், பலவீனம், ஆசை இவ்மூன்றும் ஒன்றின் மேல் ஒன்று சுழன்று மனித வாழ்க்கையில் தடம் பதித்துகொண்டே வெற்றியையும் தோல்வியையும் நிர்ணயம் செய்வதாக நான் கருதுகிறேன். இதை கொடுத்தால் இது கிட்டும் என்ற முன்னைப்பில் பந்தயத்தில் குதிக்கும் ரங்கப்பர் பெண்களை மயக்குவதில் கைதேர்ந்தவன் என்று சொன்னால் என்னால் ஏற்றுகொள்ள முடியாது. வாழையடி வாழையாக வளர்ந்து வரும் பணக்கார்களுக்கே உண்டான ஆணவம் அது. பணம் பத்தும் செய்யும் என்னும் பழமொழியை தான் இக்கதையில் பொருத்தி பார்க்க முடிகிறது. நோக்கம் அறியாது செய்யும் செயல்களை தான் பெண்கள் பலர் விரும்பிக்கொண்டிருகின்றனர் ரங்கப்பரின் நோக்கத்தை லதா கணித்திருந்தால் வேறொரு பாதையில் முடிவு அமைந்திருக்கும். எல்லாம் நடந்தும் நடகாதது போல் தோசை சுட்டு கொண்டிருக்கும் சராசரி பெண்கள் பட்டியலில் லதாவும் இணைந்தது கொஞ்சம் ஏமாற்றம் தான். வளர்ச்சி அடைந்து கொண்டிருக்கிறேன் என்பதை தன் அண்ணன் முன் பிரதிபலிக்க முயற்சி செய்வது, பந்தய பணத்தில் எதிர்கால வாழ்கையை கணக்கிடுவது, பந்தயத்திற்கு பலியாகப்படும் மனைவி மேல் எரிந்து விழுவது போன்ற நிகழ்வுகள் நமச்சிவாயம் உருவத்தில் திரிந்து கொண்டிருக்கும் மனிதர்களின் எதார்த்தநிலை. இக்கதையில் ஒன்று மட்டும் ஆணித்தரமாக புலப்படுகிறது வாழ்கை ரகசியங்களை அடைகாக்க நினைப்பது நம்பிக்கையின் பலபரீட்சை மட்டுமே அவை நாற்பது வருடம் கழித்தோ இல்லை அடுத்த வினாடியோ சிதறு தேங்காய் துண்டுகளாய் உடைத்தெரியபோவது நிச்சயம். இறக்கும் தருவாயில் லதா நமச்சிவாயதிடம் சொல்வதும், போதையின் கைபிடியில் தலை கவிழ்ந்த நிலையில் நமச்சிவாயம் உலறுவதும் ரகசியங்களை ஒரு போதும் காபாற்றலாகாது என்னும் விதியிற்குள் அடங்கும். இனி வரும் நாட்களில் வெற்றி சிறுகதையின் நினைவலைகள் இல்லாமல் அண்ணா சாலையை கடப்பதென்பது சிரமமான காரியம் தான் காஸ்மாபாலிட்டன் கிளப்பின் முகப்பு வாசலை பார்காமலிருந்தால் ஒழிய.
இப்படிக்கு
பிரவின் குமார்
அன்புள்ள ஜெ. வணக்கம்.
வெற்றிச்சிறுகதையில் பெண்கள் எளிதில் வளைந்துவிடக்கூடியவர்களா? என்று கேள்வி எழுப்பப்படுகின்றது. கதை அதைநோக்கித்தான் செல்கிறது. கதையின் திசை அதுவாக இருந்தாலும் அதன் நோக்கம் பெண்களைப்பற்றியப் பார்வையை மாற்றிக்கொள்ளச்செய்கின்றது.
பெண்களைப்பற்றி ஆண்கள் வரைந்துவைத்திருக்கும் சித்திரம் என்னவாக இருக்கிறது என்பதை நமச்சிவாயம், ரங்கப்பர். நாச்சிமுத்துவழியாக கதைக்காட்டுகிறது. இந்த மூவர்க்குள் மொத்த ஆண்வர்க்கத்தையும் அடக்கிவிடமுடியும்.
நமச்சிவாயம் வரைந்துவைத்திருக்கும் பெண் சித்திரம் புராணங்களின் பத்தினிகள் ஆனால் நடைமுறையில் அவள் தன் உள்ளத்தின் சலனங்களுக்கு வாலாட்டி வாசல்படியில் காத்திருக்கும் தெருநாய். தனது உடமை அப்படியே வார்த்து எடுக்கும் அச்சு. தன் இயலாமைகளின் கழிவுகளை அப்படியே தாங்கிக்கொண்டு தன்னை சுத்தமாக்கிக்காட்டும் குப்பைக்கூடை. அவளுக்கு வேண்டிய தருணத்தில் அவளே சுமைதாங்கியாகவும் சுமையாகவும் இருக்கவேண்டிய ஜென்மம்.
ரங்கப்பர் தன்னளவில் சீதைகளை திருடும் ராவணன், திருடப்பட்ட சீதைகள் சீதையாக இல்லாததற்காக கண்ணீர்விடும் ராவணன். இவர் வரைந்துவைத்திருக்கும் சித்திரம் பெண்கள் ஆசைகளுக்காகவும், கடமையின் அழுத்தங்களுக்காகவும் வளைந்துவிடும் எளியவர்கள்.
நாச்சிமுத்து ராவணன் இல்லாத ராவணன். அதனால் அவருக்கு சீதைகள் சீதைகளாக இருக்கவேண்டும் என்ற மானிடகருணை இருக்கிறது. இவர் பெண்களைப்பற்றி வரைந்துவைத்து இருக்கும் சித்திரம் என்பது பெண்கள் கஷ்டங்களில் இருந்து வெளிவர தெரியாத தன்னம்பிக்கை இல்லாதவர்கள், அறிவற்றவர்கள்.
பெண்ணைப்பற்றி பெண் வரைந்துவைத்திருக்கும் சித்திரம் என்ன? இருப்பதைக்கொண்டு அவளால் நேர்த்தியாக இருக்கமுடியும், தன்னை நெருக்கும் அழுத்தங்களுக்கு அப்பால் அவளால் விடுதலையை உணரமுடியும். கடமைகளுக்கு கவலைகளுக்கு இடையில் அவளால் கனிவுடன் இருக்கமுடியும். துன்பத்திற்கு இடையில் அவளால் துயில் கொள்ளமுடியும், துயிலிலும் அவளால் தனது குழந்தைகளை கணவனை குடும்பத்தை பேணமுடியும். அதைக்கட்டிக்காக்க முடியும்.
பெண்களை புராணமாக்கியவர்கள் நமச்சிவாயம்போன்ற ஆண்கள்தான். அவர்களை தெருநாயாக நடத்துபவர்களும் நமச்சிவாயம்போன்ற ஆண்கள்தான்.
பெண்களை ஆசைகளுக்கும் கடமைகளின் ஆழுத்தத்திற்கும் ஆளாக்குபவர்கள் ரங்கப்பர்போன்ற ஆண்கள்தான் ஆனால் அவர்களுக்கு அந்த குற்ற உணர்வு என்பது துளியும் இல்லை.
பெண்களை தன்னம்பிக்கை அற்றவர்களாகவும்,அறிவற்றவர்களாகவும் வைப்பவர்கள் நாச்சிமுத்துபோன்றவர்கள்தான் ஆனால் அவர்கள் சிறிது சிந்தித்தால் அந்த நிலையில் இருந்து பெண்களை மேல் எடுத்துவந்துவிடமுடியம் அதற்காக அவர்கள் தன் பணத்தை எந்தவிதத்திலும் இழக்கமாட்டார்கள். ஆனால் அவர்கள் அகங்காரம் வெல்வதற்காக எத்தனை லட்சத்தையும் இழப்பார்கள். தங்கள் குறைகளை அடுத்தவர் அறியாமையால் மறைப்பாார்கள்.
ஆண்களின் இந்த மனஓட்டத்தையும் பெண்களின் வாழ்க்கை விசித்திரத்தையும் கொண்டு இந்த கதையை புரிந்துக்கொள்ள முயற்சிக்கின்றேன்.
ஆணின் அகங்காரத்தின் தராசு மையத்தில் பெண் எப்போதும் நிறுத்தப்படுகின்றாள். ஆணின் அகங்காரத்தின் எடைக்கு ஏற்ப அவள் சமநிலையில் நிற்கமுடியாமல் தராசின் முள்போல் தத்தளித்து தவித்துக்கொண்டே இருக்கின்றாள். இந்த தத்தளிப்பு என்பது ஆண்களின் கண்களுக்கு பலவீனமாக தெரிகின்றது. அதுவே ஆண்களின் அகங்காரதின் வலிமையாகவும் கொள்ளப்படுகின்றது. உண்மையில் ஆண் அகங்காரத்தின் மூலம் வெள்ளும் அனைத்தையும் பெண் தனது கருணையைால் தோற்கடித்துக்காட்டுகின்றாள். ஆணின் வலிமை என்றும் பெண்ணின்மென்மை என்றும் நாம் பார்ப்பது உருவ உண்மை அன்றி, அருவ உண்மை இல்லை.
அகங்காரத்தால் வெல்வதற்கு ஏற்படும் வலிமையைவிட அன்பால் வெல்வதற்கு தேவைப்படும் வலிமை அதிகமாக உள்ளது. அதை அகத்தில் இருந்தே எடுக்கவேண்டி உள்ளது, அதை பெண்கள் எதையும் குலைக்காமல் சிதைக்காமல் காயப்படுத்தால் எடுத்து வெல்கிறார்கள்.அதனால் அவர்கள் வெற்றி என்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தாமல் நீரில் கல்போல் சலனமின்றி மூழ்கி கிடக்கிறது. அகங்காரம் தான் வெல்வதற்கான கருவிகள் அனைத்தையும் புறத்தில் இருந்து எடுத்து வென்று பரபரப்பை ஏற்படுததி விடுகின்றது. , அன்பின் கருவியும் கையும் வேறுவேறானது இல்லை.
நமச்சிவாயம் ஏழ்மையில் இருப்பவர். ரங்கப்பர் பணத்திமிரில் இரு்பபவர். இவர்கள் இருவரும் சமமாக ஆவது அவர்களின் அகங்காரத்தால்தான்.
ரங்கப்பர் வென்றும் தோற்றவர் என்று சொல்கின்றார். நச்சியப்பர் தோற்றவர் என்று மனைவியின் மாறுபட்ட வடிவத்தால் உணர்ந்தும் வென்றவர் என்று நம்புகின்றார். அப்படி என்றால் உண்மையில் யார்தான் இங்கு வென்றது. லதாதான் வென்று செல்கிறார். ரங்கப்பரின் சொல்லுக்கும் நமச்சிவாயத்தின் நம்பிக்கைக்கும் இடையில் நிற்கும் லதா எதுவும் சொல்லாமல் தனது செயலால் எங்கோ அவர்களை திருப்பி்ப்போடுகின்றாள். தான் வெல்வதற்காக அவள் அவர்களை திருப்பிப்போடவில்லை மாறாக அவர்களின் மனங்களை திரும்பி்ப்பார்க்க வைக்கிறாள்.
கதையின் படி அரக்கருக்கும் தேவருக்கும் இடையில் நிற்கும் மனிதனாக வரும் நமச்சிவாயம் கொஞ்சம் கொஞ்சமாக பணஆசையுடைய அரக்கனாக மாறுகின்றார்.
பெண்கள் அனைவரையும் இரண்டேவகையில் பிரித்து வீழ்த்திவிடமுடியும் என்று நம்பும், வெல்வதற்காக மட்டுமே வாழும் அரக்கனாகிய ரங்கப்பர் லதாவிற்காக கொஞ்சம் கொஞ்சமாக தேவனாக மாறுகின்றார். லதாதான் இன்று மனிதராக இருக்கிறாள்.
நான் உங்கள் கணவரின் தம்பிப்போல என்பதை நம்புகின்றாள். இடத்திற்கு தகுந்ததுபோல் வாழவேண்டும் என்பதற்காக நேர்த்தியாக இருக்கிறாள். அவரின் பரிசுகளை அன்பின் அடையாளமாகவே ஏற்கிறாள். தனது அழுத்தங்கள் குறைய குறைய விடுதலையை உணர்கின்றாள். ரங்கப்பரை தனது மகனை காப்பாற்றவந்த மருதமலை முருகனாக நினைக்கிறாள். அனைத்தும் மனித தன்மைகள்
.
ரங்கப்பரை போட்டி நாட்கள் இடையில் சந்திக்கும் நமச்சிவாயம் “ஐந்து லட்சத்தில் ஒரு அம்பாசிட்டர் ஏஜென்சி எடுப்பதைப்பற்றி ஓசிக்கின்றேன்“ என்கிறார். அப்போது ரங்கப்பர் நமச்சிவாயத்தின் விழியை உற்றுப்பார்க்கிறார். ஐந்து லட்சம் பணமும் தனால் வரும் வியபாரமும் பணக்காரவாழ்க்கையும் நமச்சிவாயத்தின் அடிமனதில் விரிந்துக்கொண்டுதான் இருக்கிறது அதை நமச்சிவாயத்தின் விழியின் வழியாக நமச்சிவாயத்தின் பலகீனம் அறிகின்றார்.
ரங்கப்பர் நமச்சிவாயத்தின் பலகீனத்தை வைத்துதான் லதாவை வளைக்கிறார் ரங்கப்பர். நமச்சிவாயம் ரங்கப்பராக மாற ஆசைக்கொண்டு உள்ளார். நமச்சிவாயம் குடிக்கும் பிளாக்லேபில் விஸ்கியின் ருசி ரங்கப்பரிடம் இருந்துவந்து தொற்றிக்கொண்டு தொடர்கின்றது இன்றுவரை தொடர்கின்றது. இறுதிநாளில் மனைவி மூலம் உண்மையை உணர்ந்தபின்னும் நமச்சிவாயம் பிளாக்லேபில் ருசியில் திளைப்பதுதான் உச்சம். நமச்சிவாயம் லதாவை திட்டும்போது அவனுடன் படுத்தாள் ஐந்தலட்சம் தருவான் என்ற உண்மையை உடைத்துவிடுகின்றார். இது வெறும் வசைஇல்லை என்பதை ரங்கப்பர் வாயிலிருந்து லதா அறிந்து இருக்கமுடியும். தான் பணயம்வைக்கப்பட்டவள் என்பதை ரங்கப்பர்தான் அவளுக்கு தெரிவித்து இருக்கிறார். இது லதாவிற்கு தெரியாது என்பதை உடைக்கத்தான் லதா இறுதியல் கணவனிடம் அதை சொல்கிறாள். குழந்தைக்காகதான் லதா வளைந்தால் என்றால் அதை நமச்சிவாயத்திடம் அவள் சொல்லவேண்டிய எந்த தேவையும் இல்லை. அப்படிச்சொல்லி இருந்தாள் அது அவளுக்கான தண்டனை, குற்றமனத்தின் உணர்ச்சி. இது நமச்சிவாயத்தின் மீது தொடுக்கப்பட்ட அஸ்திரம், அவரின் முகத்திரையை கிழிக்கும் பாணம்.
மனைவி என்பவள் அகம். அகத்தின் தூய்மையை இழப்பவன் மனைவியின் கற்பை எடைபோட தகுதியற்றவன் . இங்கு வேசியாக இருந்தது வாழ்ந்தது வாழ்வது எல்லாம் லதாவின் கணவனே. அதற்கான தண்டனைதான் மனைவியால் இறுதியில் சொல்லப்பட்ட உண்மை.
ரங்கப்பர் வென்றும் தோற்றேன் என்பது நமச்சிவாயம்மீது கொண்ட கருணையால் அல்ல, ஒரு குடும்பத்தை அழித்தபாவம் வேண்டாம் என்பதற்காக அல்ல. தனது அகத்தை எல்லாவகையிலும் வேசித்தனமாக வைத்துக்கொண்டு மனைவியை தூய்மையாக இருக்கவேண்டும் என்று கனவுகாணும் நமச்சிவாயத்தை வெல்வதற்காக ஒரு நல்ல மனைவியை வளைக்கசென்ற அவர் கொள்கை தவறாகும் கணத்தால்.
//“உங்க மனைவி நல்லவர்கள்” என்றார். கோணலாக வாய் இழுபட, “ஏன், வருகிறேன் என்று சொல்லிவிட்டாளா?” என்றேன். “இன்னும் இல்லை” என்று புன்னகை செய்தார். “இரண்டுவகையான பெண்கள் இருக்கிறார்கள். ஒரு வகையான் பெண்களை ஆசை இயக்கிக் கொண்டு செல்லும். இன்னொரு வகையான பெண்களை கடமைகளின் அழுத்தங்கள் கொண்டு செல்லும். நல்ல பெண்கள் அழுத்தத்தால் வளைந்துவிடுவார்கள். மற்றவர்கள் ஆசையால் வளைந்துவிடுவார்கள்” என்றபின் உரக்கச் சிரித்து “எப்படி இருந்தாலும் வளைவார்கள்” என்றார்.//
லதாவை வளைக்க அவர்க்கொடுக்கவேண்டிய விலை தோற்றவன் என்றவிலைதான். தோற்றுப்போனதாக சொல்லும் ரங்கப்பர் ஏன் பார்ட்டி வைக்கிறார்?. தான் உள்ளுக்குள் ஜெயித்தவன் என்ற ரகசிய இன்பத்தாலா? இல்லை. அவர் பெண்கள் எல்லாம் வளைக்கக்கூடியவர்கள் என்பதில் உறுதியாக இருந்தவர். வளையக்கூடாது என்று வேண்டிக்கொண்டு வளைத்தபோது வளைந்த பெண்களுக்காக அழுதவர். இன்று அவர் நமச்சிவாயம் இடம் “எனக்கு ஒரு நம்பிக்கை வந்திருக்கிறது அதற்காக நான் நமச்சிவாயத்திற்கு நன்றி சொல்லவேண்டும்“ என்கிறார். எந்த பெண்ணும் தராத ஒரு நம்பிக்கையை லதாவால் தரமுடிகின்றது என்பதுதான் ரங்கப்பர்மீது லதாவின் வெற்றி. லதா ரங்கப்பருடன் கலந்தது ஆசையால் இல்லை, மகன் உடம்பு குணமாகவேண்டும் என்ற கடமையின் அழுத்தத்தால் அல்ல, பெண்ணாக நச்சிவாயத்தை தோற்கடிக்கவேண்டும் என்பதற்காக, ரங்கப்பர் மட்டும் நினைத்தால் நமச்சிவாயத்தை தோற்கடிக்க முடியாது அதற்கு லதாவின் பக்கபலம்வேண்டும் அந்த பலத்தை லதாதான் ரங்கப்பருக்கு வழங்குகின்றாள், அதற்கு ரங்கப்பர்தரும் விலை தோல்வி. எல்லாவற்றுக்கும் ஒரு விலை இருக்கிறது என்ற நினைத்த ரங்கப்பர் அகங்காரத்திற்கும் ஒரு விலை இருக்கிறது என்பது புரியும் தருணம்.
மனைவி என்பது பதவிதான் அந்த பதவியில் அவள் ஜெயித்துக்காட்டிவிட்டாள். அவள் கணவன் ஊரறிய வென்றவர். கற்பில்கூட அவள் ஜெயித்தவள்தான். அவள் சொல்லாமல் இந்த உண்மை நமச்சிவாயத்திற்கு தெரியாது. ஒளி என்பது இருளை தள்ளிவைக்கும் கலைதான், இருளே இல்லாத நிலையல்ல.
ஆசை, சுடமை, கஷ்டம். தன்னம்பிக்கை இன்மை .அறிவு இன்மை என்று பெண்களை வேட்டையாட ஆண்வர்க்கம் நினைத்தாலும், பெண் தனது சுயத்தால் வாழ்க்கையில் வென்றுச்செல்கிறாள். அவள் தன்னை யாருக்காகவும் நிறுபிப்பது இல்லை வாழ்ந்துச்செல்கிறாள். ஆண் வாழ்வது இல்லை தன்னை நிறுபித்துக்கொண்டு இருக்கிறான். வெற்றியை பரிசு நிர்ணயம்செய்வதில்லை அதை அகம் தீர்மானிக்கிறது.
அன்புடன்
ராமராஜன் மாணிக்கவேல்.
அன்பு ஜெயமோகன்,
வணக்கம். நலமா?
வெற்றி என்று ஒரு கதையை எழுதினீர்கள். எண்ணக் குமிழிகள் கொப்பளிக்கின்றன. சில சிதறல்களை இங்கு தருகிறேன்.
1. பாணிக்ரகண மந்திரங்களில் ‘சோமன் உன்னை முதலாவதாக அடைந்தான்; கந்தர்வன் உன்னை இரண்டாவதாக அடைந்தான்; அக்னி உன்னை மூன்றாவதாக அடைந்தான். இவர்களின் அனுமதியுடன் நான் உன்னை நான்காவதாக அடைகிறேன்’ என்று மணமகன் சொல்வதாக வரும். இது ஏன் என்று நான் யோசிப்பதுண்டு. கற்பு என்கிற கற்பிதத்துக்கு புராண காலங்களிலும் தற்போது இருக்கிற வரை முறைகளில் நிறைய வித்யாசம் இருப்பதினாலேயே இது என்று எனக்குத் தோன்றும்.
2. சகல பாவங்களும் தொலைவதற்கு ‘அகல்யா திரௌபதி குந்தி தாரா மண்டோதரி ததா, பஞ்ச கன்யா ஸ்மரேன் நித்யம் மகா பாதக நாசனம்’ என்கிற பஞ்ச கன்யைகளின் ஸ்லோகத்தை பெண்கள் சொல்லக் சொல்வார்கள். அகல்யா இந்திரனால் வஞ்சிக்கப் பட்டு ராமனால் மோட்சம் அடைந்தவள்; திரௌபதி ஐவரைக் கலந்தவள்; குந்தி கர்ணனை ரகசியமாகப் பெற்றவள்; தாரா வாலிக்கும் சுக்ரீவனுக்கும் மனைவியாக இருந்தவள். சில ராமாயணங்களில் மண்டோதரி விபீஷணனை மணந்ததாக வருகிறது. இதில் கற்பு நெறி என்பது எது என்று சிந்திக்கத் தோன்றுகிறது.
3. பெண்களின் கற்பு நெறி பெண்கள் சம்மந்தப் பட்டது தானா? அதில் ஆண்களின் பங்கு ஒன்றும் இல்லையா?
4. வெற்றியின் நாயகி கற்பிழந்தவளா? அது உண்மையானால் அவள் எப்போது கற்பினை இழக்கிறாள்?
இதை தற்கால ஒப்பிடுகளுடன் வரைமுறைபடுத்த முடியாது என்பதனாலேயே இதை அந்தக் காலத்திலேயே துலாக்கோல் கொள்ளாமல் தான் வரைந்து வைத்திருக்கிறார்கள் என்று எனக்கு தோன்றுகிறது.
5. வெற்றியின் நாயகி கற்பை இழக்கும் தருணம் அவள் கணவன் அவளை பந்தய பொருளாக எந்தக் கணத்தில் வைத்தானோ அந்தக் கணத்தில் தான் என்று எனக்கு தோன்றுகிறது. காரணம் அவன் பௌருஷத்தின் மேல் அவள் கட்டமைத்திருந்த விசுவாசம் அவன் பணயம் வைத்த கணத்தில் தொலைந்தது. (சம்பந்தம் இல்லை ஆயினும் கூட ‘நாளை மற்றுமொரு நாளே’ பற்றி உங்களுக்கும் குவளைக் கண்ணனுக்கும் நடந்த சம்பாஷணை பற்றி நீங்கள் எழுதியிருந்தது நினைவுக்கு வருகிறது).
6. ஜெயகாந்தனின் ‘சீசர்’ சிறு கதையை நீங்கள் படித்திருக்க கூடும். ‘சீசரின் மனைவி சந்தேகத்திற்கு அப்பாற்பட்டவள்’ என்கிற பழமொழி உண்மையில் சீசரின் பௌருஷத்தைத் தான் சுட்டுகிறது என்று ஆணித்தரமாக நிறுவியிருப்பார் அவர்.
7. இதே காரணத்திற்க்காகத் தான் திரௌபதி பிரதிகாமியிடம் ‘தருமர் முதலில் என்னை வைத்துப் பின் தன்னை இழந்தாரா அல்லது தன்னை வைத்த பின் என்னை இழந்தாரா?’ என்று சீறுகிறாள். அவர் பௌருஷத்தின் மீது தான் வைத்திருந்த நம்பிக்கையை அவரே குலைத்த சிறுமை கண்டு பொங்கும் அறச் சீற்றம் தான் இது.
8. சந்தர்ப்பங்கள் தற்செயலாக ஏற்படும் போது ஏற்படும் தற்காலிக சறுக்கல்கள் கற்புடை மகளிரை புடம் போட்ட மாதிரி ஆக்கி விடுகிறது என்பதைத் தான் இலக்கியங்களும் புராணங்களும் சுட்டுகின்றன என்பதே உண்மை.
9. இதையே அவர்கள் மலை போல் நம்பியிருக்கும் ஆண்கள் விலை பேச முற்படும் போது அவர்களின் கற்புக்கான சாதாரண அளவு கோல்கள் அவர்களைக் கட்டுப் படுத்தாது என்பது தான் நிதர்சனம்.
10. கொஞ்ச நாட்களுக்கு முன் அக்னிப் பிரவேச நாயகியைப் பற்றி இது போல் தான் நீங்கள் எழுதியிருந்த நினைவு. ஜெயகாந்தனுக்கு இது குறித்து சந்தேகமே இல்லை. ஜெயகாந்தன் அளவுக்கு கங்கை நீர் கூட தேவைப் படவில்லை புதுமைப் பித்தனுக்கு. ‘கற்பு கற்பு என்று கதைக்கிறீர்களே இது தான் அய்யா பொன்னகரம்’ என்று ஒரே போடாகப் போட்டு விட்டார்.
11. நான் பார்த்த வரை ஒரு குறை தான். இந்தக் கதையை நீங்கள் அந்தப் பெண்ணின் மன நிலையிலிருந்து எழுதியிருந்தால் கதை இன்னும் சிறப்பாக வந்திருக்கும் என்று தோன்றுகிறது. எம்விவி ‘நித்திய கன்னி’யை அப்படித் தான் எழுதியிருக்கிறார். ஆனால் நீங்கள் வைத்த முடிவு மேற் கூறிய காரணங்களால் கதாநாயகியின் மேன்மையை உணர்த்திடுவதாகத் தான் கருத வேண்டியிருக்கிறதே ஒழிய சிறுமை படுத்துவதாய்த் தோன்றவில்லை.
அன்புடன்,
அஸ்வத்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
மிக்க நலமுடன் இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.
வெற்றி சிறுகதை வாசித்தேன். வெளியில் வேறு வேலைகளில் இருந்தாலும், மனதிற்குள் வெற்றி சிறுகதையால் அலைகழிக்கப்பட்டேன், . கிடைத்த இடைவெளியில் மீண்டும் மீண்டும் வாசித்தேன். காஸ்மொபாலிட்டன் கிளப்பில் நானும் சென்றமரந்து, கன்னத்தில் கைவைத்து, கதை கேட்டது போன்ற, நிகர்வாழ்க்கை அனுபவத்தை தந்தது.
கதையில் வரும் விவரணைகளை ரசித்தேன். அவைகளும் கதையின் போக்கிற்கு வலு சேர்த்தது.
பெரிய தண்ணீர்ப்பை போல எடை கொண்டிருந்த உள்ளம் நாற்காலியில் நிறைந்து படிந்திருந்தது.
காதுவழியே ஸ்க்ரூவை விட்டு மூளையைக் குடைவது போல,
பெரிய களிமண் பொம்மை போல அவள். நான் எப்படியும் பிசைந்து உருவாக்கிக் கொள்ளலாம். சோப்பில் சாவியை அழுத்தி எடுத்த அச்சுபோல என்னுடைய உடம்பின் பதிவு அவளில் இருக்கும்.
கதையில் சாகா வரம் தரும் அமுதத்தை பெற்று, தேடல் நிறைவடைந்த தேவர்களை, இன்னும் தங்களுக்கு கிட்டாத, அமுதத்தினை பெறும் போராட்டத்தில், எந்த எல்லைக்கும் சென்று , எதையும் இழக்க தயாரான, அசுரர்கள் , ஒயாமல் சீண்டுகிறார்கள். பாதாளத்தில் இருந்து ஏறி வரும் இந்த அசுரர்கள் ஒவ்வொருவரின் இயல்பின்படி அமுதம் வேறுபடுகிறது. அமுதத்திற்கு கீழாக கிடைத்த எந்த ஒரு வரமும் அவர்களுக்கு போதவில்லை. நிம்மதி இழக்கிறார்கள், பூசலிடுகிறார்கள்.
காஸ்மொபாலிட்டன் கிளப்பை நிறுவிய , ஒரு சிறிய தீவிலிருந்து சொற்ப ஆயிரம் எண்ணிக்கையில் வந்த வெள்ளையர்கள் , பீரங்கி, துப்பாக்கி, கப்பல்களின் துணை கொண்டு, மேற்கிலிருந்து , கிழக்கு வரை, வியாபாரம் செய்து, போரிட்டு, ராஜதந்திரத்துடன் பேசி, காலனிகளை அமைத்து, பேரரசான பின்னும் அமுதம் கிடைக்காத, அரக்கர்களாகவே, இருக்கிறார்கள்.
கதையின் துவக்கத்திலேயே நமச்சிவாயம், தன் தேடல் முடிந்து அமுதம் பெற்று ஆசுவாசமாக செட்டில் ஆன தேவர்களில் ஒருவர் போல தெரிகிறார். ஆனால் கதை நகரும் போதோ, முந்தைய கார் விற்பனையாளனான நமச்சிவாயம், தன் வேலையில் அவ்வப்போது, கிடைக்கும் வரமான சொற்ப பணம் போதாமல் அரக்கனாக இருக்கிறார். காஸ்மோபாலிட்டன் கிளப்பில் நிரந்தர உறுப்பினராக இருக்கும் தேவர்களில் ஒருவராவதே, அவர் தேடி அடைய நினைக்கும் அமுதம் என முதல் விவரனையிலேயே குறிப்பாக வருக்கிறது. அவருக்கு வரம் தரும் தேவராக ரங்கப்பர் அறிமுகமாகிறார். முரட்டு குதிரையில் இருந்து இறங்கி வரும், அமெரிக்காவில் படித்த ரங்கப்பரிடம், அரக்கர்களின் சாயல் இருப்பது போல தோன்றினாலும், அவர் நமச்சிவாயத்திற்கு வரம் தரும் தேவர். அப்படியென்றார் அரக்க குணமும் கொண்ட, ரங்கப்பர் தேடுவது என்ன? பெண்தான்.
ஆணவம் புண்படாமல் பணம் கொடுத்து, இதுவரை ரங்கப்பர் கட்டிலில் வென்ற பெண்கள் அதிகம்.இருந்தாலும். பணக்காரர்கள் நினைத்தால் அடைய முடியாத லட்சங்களில் ஒரு பெண் என்னும் அமுதத்திற்காக, ரங்கப்பரும் அரக்கன் போல தேடுகிறார்.பெண்களை வென்ற தருணங்களை பற்றி பீற்றி கொள்ளும் தொனி இருந்தாலும், ஒவ்வொரு முறையும் பணிந்த பெண்களை கண்டு, அந்த தேடலில் தோல்வியுற்று, உறவு கொண்ட பின் உப்பரிகையில் நின்று அழுகிறார். அவருக்கு தன் மனைவி லதா என்கிற அமுதம் தரும் தேவராக, நமச்சிவாயம் ரங்கப்பர் வாழ்வில் வருகிறார்.
இருவரும் ஒருவரை ஒருவர் சீண்டி, பந்தயத்தில் இறங்கும் தருணத்திற்காக, எதிர்பார்த்து காத்து இருந்தது போல, அறைகூவலிட்டு, சவாலினை ஏற்று பந்தயத்தில் இறங்குகிறார்கள். நமச்சிவாயத்தின் மனம், எல்லா சாத்தியங்களையும் யோசித்து, மனைவி கற்பினை இழந்து தோற்பது பற்றி முதலில் அமைதியிழக்கிறது, ரங்கப்பரோ தான் பழகி தேர்ந்த, பெண்களை கவரும் அணுகுமுறையினை கொண்டு, படி படியாக லதாவை நெருங்குகிறார். சவலை பிள்ளையின் உடல் நலகுறைவு, ரங்கப்பருக்கு தோதாக வருகிறது.
ரங்கப்பர் ஆர்டர் கொடுத்த பென்ஸ் காருக்கான முன்பணம் ஐந்தாயிரம் என்கிற வரம் அவருக்கு போதவில்லை. இருந்தாலும் அதை வைத்து மேலதிகாரி, அண்ணன் என பார்பவர்களை எல்லாம் சீண்டுகிறார். ஒருவேளை மனைவியால் ரங்கப்பர் நிரந்தரமாக ஈர்க்கப்ட்டால், அவர்கள் உறவின் மூலம் ஐந்து லட்சத்திற்கு மேல் கிடைக்கலாம் என்கிற எண்ணம் எழுந்தவுடன், காரினை பேசி பணக்காரர்களுக்கு விற்பது போல, மனைவியை ரங்கப்பருக்கு பணிய வைக்க, அவளை எரிச்சல் படுத்தி, அவள் வீழும் கணத்திற்காக, ஒவ்வொரு நாளும் காத்திருக்கிறார். நமச்சிவாயத்திற்கு மனைவியின் கற்பு இழத்தலை விட, தன் இரண்டாவது மகனின் தீராத காச நோயை விட, அல்பாக்கா கோட்டும், காலிகோ சட்டை வாங்குவதும், கிளப்பில் உறுப்பினராகி தேவராவதுதான் முதன்மை நோக்கம்.
அன்றிரவு, லதா, ரங்கப்பர் இடையே உடலுறவு நிகழ்ந்ததா , இல்லையா என்பதை வாசகனின் ஊகத்திற்கு விடப்படுகிறது. மூன்று பிள்ளைகள் பெற்று, எந்த வெளியுலகமும் தெரியாதிருந்த லதாவை, அர்ஜூனன் போன்ற அழகும், பெண்களை கவரும் அணுகுமுறையும் கொண்ட ரங்கப்பர் வெல்கிறார். ஒரு ஆண் , பெண்ணிடம் தன்னால் என்றுமே தர்க்கத்தால் அறிய முடியாத, ஈர்ப்பினை கண்டறியவே ஏங்குவான். முடிவில்லாமல் ஈர்க்கும் அந்த விசைக்கான காரணம் தெரிந்த கணம், நிறைவுணர்வின் உச்சத்தை கொடுக்கும். அது அவனுக்கு வெற்றிதான்.
என் வாசிப்பின்படி, லதா மீதான ரங்கப்பரின் வெற்றி என்பது, அவள் ரங்கப்பரிடம் கட்டிலில் வீழ்ந்து விட்டாள் என்று சுருக்குவதை விட, அங்கு நடந்த வேறொரு நிகழ்வு, பெரிய திறப்பாக இருவருக்கும் இருந்திருக்கலாம் என்கிற சாத்தியமே அதிகம். வெற்றி பெற்ற ஊரினை சூரையாடி, தீயிட்டு கொளுத்தி , பெண்களை வல்லுறவு செய்யும் ஆண் கூட்டம் நிரம்பிய போர்படையை போல, பந்தயத்தில் வெற்றி பெறும் ஆண் ஆணவத்தின் உச்சத்தில், தோற்றவனை நிர்மூலமாக்கும் அனைத்து வாய்ப்புகளையும் எந்த தயக்கமும் இல்லாமல் பயன்படுத்துவான். நமச்சிவாயத்தின் லட்சியம் என்னவென்று நன்றாக அறிந்து பந்தயத்தில் இறங்கிய, ரங்கப்பருக்கு, நமச்சிவாயத்திற்கு அவனை அங்கிருந்து அவமானப்படுத்தி விரட்டுவதே முதன்மை நோக்கமாக இருந்திருக்கும். ஆனால் அவரோ பந்தயத்தின் தோல்வியை ஒப்புகொண்டு ஐந்து லட்சம் தருகிறார். லதா ரங்கப்பர் இடையே நடந்த நிகழ்வின் உச்ச கணத்தில், தன்னுணர்வு சுத்திகரம் (Catharisis) அடைந்த ரங்கப்பருக்கு, அன்று முதல் உயர்ந்த விழுமியங்கள் மீது நம்பிக்கை தருகிறது. அது தந்த நிறையுணர்வில் அடுத்த 30 வருடம் வாழ்ந்து இறக்கிறார்.
என்றும் அன்புடன் உங்கள் வாசகன்,
சிவமணியன்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
குமரகுருபரன்- விஷ்ணுபுரம் விருதுவிழா கடிதங்கள்
ஜெ அவர்களுக்கு
வணக்கம்.
குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது விழாவில் உங்கள் உரை கேட்டேன்..
வித்தியாச அனுபவம். அமைதியாக பேசினீர்கள்.. கவிஞரின் வேடம் குறித்து பேசியது புதிய கோணமாய் இருந்தது. எனக்குள் பல கவிஞர்களின் கவிதையையும், புகைப்படத்தையும் மனதில் ஓட விட்டேன்.. சென்ற வருடம் குமரகுருபரன் கவிதை வெளியீட்டு விழாவில் நீங்கள் பேசியது, கவிதை பற்றிய மிகத் தெளிவான சித்திரத்தைக் கொடுத்தது.. இந்த விழா உரை வேறு ஒரு தளத்தில், கவிதைகள் பற்றி அமைந்தது.
புதிய கவிஞர்களை மனதார பாராட்டி பெருமைப்படுத்துவதில், அறிமுகப்படுத்துவதில் தமிழ் இலக்கிய உலகில் உங்கள் பங்கு முக்கியமானது. சபரிநாதன் பற்றி நீங்கள் கூறியது, அவருக்கு மட்டுமல்ல, இன்னும் பல இளையவர்களுக்கு உற்சாகமாய் இருக்கும்..
உங்களுடைய உரை, ஒரு சூத்திரம் போல, அழகான சித்திரம் போல் கச்சிதமாக அமைந்திருந்தது,
நன்றி..
பவித்ரா.
ஜெமோ,
ஆம். குமரகுருபன்-விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழாவில் உங்களை முதன்முதலாக நேரில் பார்த்ததும் எனக்குக் கிடைத்தது இந்த தரிசனம் தான். ஆடை, ஆபரணங்களற்ற அசலான சிற்பத்தைக் காண்பது தான் “நிர்மால்ய தரிசனம்” என்று நீங்கள் கவிஞர்களை அவதானிக்கும் விஷயத்தை இக்கூட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து தான் தெரிந்து கொண்டேன்.
நான் உங்களைப்பற்றி வைத்திருந்த எந்த ஒரு பிம்பத்தையும் கொஞ்சம் கூட தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்காமல் நிர்மால்யமாக காட்சியளித்தீர்கள். விஷ்ணுபுரத்தின், “சாதரணமானவர்களைத் தான் மக்கள் தலைவர்களாக்குகிறார்கள். பின்பு அவர்களை அசாதாரணமவர்களாக்கி வணங்குகிறார்கள்” என்ற வரிகள் தான் நினைவுக்கு வந்தது.
” ….என்ன எப்படி இருக்கீங்க?” என்று வாஞ்சையாக என் கையைப் பற்றிக் கொண்டதும், என் பக்கத்து வீட்டு நண்பர் போல் சாதரணமாக என்னுள்ளே அமர்ந்து விட்டீர்கள். கிட்டத்தட்ட ஒரு வாரமாக என்னுள் இருந்த படபடப்பின் உச்சமாக தண்ணீர் வற்றி உலர்ந்து போய் ஒட்டியிருந்த இரு உதடுகளையும் பிளந்து என் சொற்களை விடுதலை செய்தது என் நாக்கு. “….நல்லா இருக்கேன் சார் ( ஜெமோ என்றழைக்க அப்போது துணிவு வரவில்லை). நீங்க எப்படி இருக்கீங்க என்றேன்?”
உங்கள் தளத்தில் வெளியிட்ட என்னுடைய கடிதங்கள், என்னை எழுதத்தூண்டும் உங்களுடைய எழத்துக்கள் மற்றும் தடம் தொடர் குறித்து பேசியதில் சிறிது நேரம் பரவசம் நீண்டது. அதற்குள் என் தோளுக்குப் பின்னாலிருந்து இரு கைகள் உங்களுடன் குலுக்கிக் கொள்ள நீணடது. அவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நானகாவது வரிசையில் சென்று அமர்ந்து கொண்டேன்.
விழாவின் நாயகன் சபரிநாதன் வந்ததும் அவரோடு சென்று அமர்ந்து விட்டீர்கள். தேவதேவனும், அசோகனும் ஏற்கனவே அங்கிருந்தார்கள். மனுஷ்யபுத்ரன் வந்ததும் கூட்டம் தொடங்கியது.
முதல் கியரிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுக்கும் வணடியைப் போல நிகழ்வுகள் பயணிக்கத் தொடங்கின. கொஞ்சம் கொஞ்சமாக நான் உங்கள் மீது கொண்டிருந்த பிம்பங்களும் உங்களிடமிருந்து உயிர்த்தெழ ஆரம்பித்தன. மனுஷ் பேசுவதற்கு முன் சபரிக்கு விருது வழங்கச் செய்தது, மேடையில் இருக்கும் speaker deskல் Mike with stand போடச் சொன்னது, இடையில் ஒலித்த தேவதேவனின் mobile phoneஐ கோபமாக silent modeலோ அல்லது அணைத்தோ போட்டது என உட்கார்நது கொண்டே பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்தீர்கள்.
குமரகுருபனைப் பற்றி மனுஷ் பேச ஆரம்பித்ததும் மனம் கனத்து சோர்வு அடைய ஆரம்பித்தது. சபரியின் கவிதைகள் அவருடைய திரையை (canvass) வேகமாக விரிக்க முயலும் போது எழும் ஒலிகள் என மனுஷ் குறிப்பிட்டது அருமை. கவிதை இல்லா இடமில்லை என்றார் தேவதேவன். அசோகனின் பேச்சில் Bacardiன் நெடி அதிகமாக இருந்தது. கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
Top gearல் வேகமெடுக்க ஆரம்பித்தது நீங்கள் பேச ஆரம்பித்ததும். கவிஞர்களைப் பற்றிய உங்களுடைய பார்வை, குமரகுருபனுடைய கவிதைகள் மற்றும் சபரி எனும் இளம் ஆளுமை என உங்கள் உரையை அருமையாகத் தொகுத்திருந்தீர்கள். உரையினுள் செல்லச் செல்ல நான் முன்னர் கொண்டிருந்த பிம்பங்களையெல்லாம் தாண்டி விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியிருந்தீர்கள். சற்று முன் என்னிடம் வாஞ்சையாக கை குலுக்கியவர் தானா இவர் என்று எண்ணினேன். நீங்கள் அசாதாரணமவரும் கூட என உணர ஆரம்பித்தேன்.
“காட்டை நிரப்பும் மனது….” என்ற கவிதை வரிகள் வழியாக குமரகுருபனை நினைவு கூர்ந்தீர்கள். அதைப்போலவே அறை முழுவதும் சிதறிப் பரவி நிறைத்திருந்தீர்கள் உங்கள் உரை மூலம். “எவற்றின் மலரகள் நாம்…” என்ற குமரகுருபனின் வரியை நினைவு கூர்ந்தபோதெல்லாம் மௌனியின் “எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்….” எனற வரி என் முன் நிழலாடியது.
சபரிக்கு வழங்கும் இந்த விருது வளரும் கவிஞனை தட்டிக் கொடுப்பதற்காக அல்ல. வளர்ந்த கவிஞனை அங்கீகரிப்பதற்காக என்று ஆணித்தரமாக கூறியது விஷ்ணுபுரம் விருதுகளின் கறார்தன்மையை பறைசாற்றியது. இதைக்கேட்டதும் எழுந்த கைத்தட்டல்கள் அடங்க வெகுநரமாயிருந்தது.
சபரியின் கவிதைகளை உலோகத்தை தணணீரில் கலக்கும் ஆயுர்வேத வைத்தியத்தின் உவமையுடன் பொருத்தி விளக்கியது உங்களுக்கே உரிய புனைவுத் திறன். It is very analytical too. நீங்கள் பேசிய அனைத்தையும் இங்கே என்னால் கொணடுவர முடியவில்லை. அருவி மாதிரி பொழிந்து விட்டு போய்விட்டீர்கள். ஒன்றை எடுத்து அவதானிப்பதற்குள் மற்றொன்று. முழுவதையும் கிரகித்துக் கொள்ள முடியவில்லை. உங்கள் உரையின் காணொளி பதிவேற்றத்திற்காக காத்திருக்கிறேன்.
8
. குமரகுருபன்-விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழாவில் உங்களை முதன்முதலாக நேரில் பார்த்ததும் எனக்குக் கிடைத்தது இந்த தரிசனம் தான். ஆடை, ஆபரணங்களற்ற அசலான சிற்பத்தைக் காண்பது தான் “நிர்மால்ய தரிசனம்” என்று நீங்கள் கவிஞர்களை அவதானிக்கும் விஷயத்தை இக்கூட்டத்தில் ஆற்றிய உரையிலிருந்து தான் தெரிந்து கொண்டேன்.
நான் உங்களைப்பற்றி வைத்திருந்த எந்த ஒரு பிம்பத்தையும் கொஞ்சம் கூட தக்க வைத்துக் கொள்ள முயற்சிக்காமல் நிர்மால்யமாக காட்சியளித்தீர்கள். விஷ்ணுபுரத்தின், “சாதரணமானவர்களைத் தான் மக்கள் தலைவர்களாக்குகிறார்கள். பின்பு அவர்களை அசாதாரணமவர்களாக்கி வணங்குகிறார்கள்” என்ற வரிகள் தான் நினைவுக்கு வந்தது.
” ….என்ன எப்படி இருக்கீங்க?” என்று வாஞ்சையாக என் கையைப் பற்றிக் கொண்டதும், என் பக்கத்து வீட்டு நண்பர் போல் சாதரணமாக என்னுள்ளே அமர்ந்து விட்டீர்கள். கிட்டத்தட்ட ஒரு வாரமாக என்னுள் இருந்த படபடப்பின் உச்சமாக தண்ணீர் வற்றி உலர்ந்து போய் ஒட்டியிருந்த இரு உதடுகளையும் பிளந்து என் சொற்களை விடுதலை செய்தது என் நாக்கு. “….நல்லா இருக்கேன் சார் ( ஜெமோ என்றழைக்க அப்போது துணிவு வரவில்லை). நீங்க எப்படி இருக்கீங்க என்றேன்?”

உங்கள் தளத்தில் வெளியிட்ட என்னுடைய கடிதங்கள், என்னை எழுதத்தூண்டும் உங்களுடைய எழத்துக்கள் மற்றும் தடம் தொடர் குறித்து பேசியதில் சிறிது நேரம் பரவசம் நீண்டது. அதற்குள் என் தோளுக்குப் பின்னாலிருந்து இரு கைகள் உங்களுடன் குலுக்கிக் கொள்ள நீணடது. அவர்களுக்கு வழிவிட்டு ஒதுங்கி நானகாவது வரிசையில் சென்று அமர்ந்து கொண்டேன்.
விழாவின் நாயகன் சபரிநாதன் வந்ததும் அவரோடு சென்று அமர்ந்து விட்டீர்கள். தேவதேவனும், அசோகனும் ஏற்கனவே அங்கிருந்தார்கள். மனுஷ்யபுத்ரன் வந்ததும் கூட்டம் தொடங்கியது.
முதல் கியரிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வேகமெடுக்கும் வணடியைப் போல நிகழ்வுகள் பயணிக்கத் தொடங்கின. கொஞ்சம் கொஞ்சமாக நான் உங்கள் மீது கொண்டிருந்த பிம்பங்களும் உங்களிடமிருந்து உயிர்த்தெழ ஆரம்பித்தன. மனுஷ் பேசுவதற்கு முன் சபரிக்கு விருது வழங்கச் செய்தது, மேடையில் இருக்கும் speaker deskல் Mike with stand போடச் சொன்னது, இடையில் ஒலித்த தேவதேவனின் mobile phoneஐ கோபமாக silent modeலோ அல்லது அணைத்தோ போட்டது என உட்கார்நது கொண்டே பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்தீர்கள்.
விழா அமைப்பாளர்கள் சுரேஷ்பாபு, சௌந்தர், ராஜகோபாலன்- கவிதா சொர்ணவல்லியுடன்
குமரகுருபனைப் பற்றி மனுஷ் பேச ஆரம்பித்ததும் மனம் கனத்து சோர்வு அடைய ஆரம்பித்தது. சபரியின் கவிதைகள் அவருடைய திரையை (canvass) வேகமாக விரிக்க முயலும் போது எழும் ஒலிகள் என மனுஷ் குறிப்பிட்டது அருமை. கவிதை இல்லா இடமில்லை என்றார் தேவதேவன். அசோகனின் பேச்சில் Bacardiன் நெடி அதிகமாக இருந்தது. கொஞ்சம் குறைத்திருக்கலாம்.
Top gearல் வேகமெடுக்க ஆரம்பித்தது நீங்கள் பேச ஆரம்பித்ததும். கவிஞர்களைப் பற்றிய உங்களுடைய பார்வை, குமரகுருபனுடைய கவிதைகள் மற்றும் சபரி எனும் இளம் ஆளுமை என உங்கள் உரையை அருமையாகத் தொகுத்திருந்தீர்கள். உரையினுள் செல்லச் செல்ல நான் முன்னர் கொண்டிருந்த பிம்பங்களையெல்லாம் தாண்டி விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியிருந்தீர்கள். சற்று முன் என்னிடம் வாஞ்சையாக கை குலுக்கியவர் தானா இவர் என்று எண்ணினேன். நீங்கள் அசாதாரணமவரும் கூட என உணர ஆரம்பித்தேன்.
“காட்டை நிரப்பும் மனது….” என்ற கவிதை வரிகள் வழியாக குமரகுருபனை நினைவு கூர்ந்தீர்கள். அதைப்போலவே அறை முழுவதும் சிதறிப் பரவி நிறைத்திருந்தீர்கள் உங்கள் உரை மூலம். “எவற்றின் மலரகள் நாம்…” என்ற குமரகுருபனின் வரியை நினைவு கூர்ந்தபோதெல்லாம் மௌனியின் “எவற்றின் நடமாடும் நிழல்கள் நாம்….” எனற வரி என் முன் நிழலாடியது.
சபரிக்கு வழங்கும் இந்த விருது வளரும் கவிஞனை தட்டிக் கொடுப்பதற்காக அல்ல. வளர்ந்த கவிஞனை அங்கீகரிப்பதற்காக என்று ஆணித்தரமாக கூறியது விஷ்ணுபுரம் விருதுகளின் கறார்தன்மையை பறைசாற்றியது. இதைக்கேட்டதும் எழுந்த கைத்தட்டல்கள் அடங்க வெகுநரமாயிருந்தது.
சபரியின் கவிதைகளை உலோகத்தை தணணீரில் கலக்கும் ஆயுர்வேத வைத்தியத்தின் உவமையுடன் பொருத்தி விளக்கியது உங்களுக்கே உரிய புனைவுத் திறன். It is very analytical too. நீங்கள் பேசிய அனைத்தையும் இங்கே என்னால் கொணடுவர முடியவில்லை. அருவி மாதிரி பொழிந்து விட்டு போய்விட்டீர்கள். ஒன்றை எடுத்து அவதானிப்பதற்குள் மற்றொன்று. முழுவதையும் கிரகித்துக் கொள்ள முடியவில்லை. உங்கள் உரையின் காணொளி பதிவேற்றத்திற்காக காத்திருக்கிறேன்.
ஆனால் மனதில் நின்றவை, மரணம் தரும் சோர்வுகளிலிருந்து மீளும் உங்களுடைய உழைப்பு, குமரகுருபனின் “கனவுகளிலிருந்து மீளமுடியாதவனை” நினைவு படுத்தியது, சபரியை சமீப காலத்திய மிகச் சிறந்த கவி ஆளுமை என ஆணித்தரமாக நிறுவியது.
முதல் தொகுப்பு தேடல். இரண்டாம் தொகுப்பு தேடலைக் கண்டடைந்ததின் உச்சம். இது தான் வளர்ச்சி. இதற்கு மேல் சபரி வளர்ந்தாலும், அது ஊசி முனை தூரமாக மட்டுமே இருக்க முடியும் என்றது கவிஞர்களையும் எழுத்தாளர்களையும் உள்ளார்ந்து புரிந்து கொள்ளும் உங்கள் திறனைத் தான் வெளிப்படுத்தியது. சபரியின் இனி வரும் படைப்புகள், அவர் இதுவரை கணடடைந்ததின் நீட்சியாகத்தான் இருக்க முடியும் எனறது உங்களின் உச்சமான “விஷ்ணுபுரத்தையும்” “பின் தொடரும் குரலின் நிழலையும்” ஞாபகப்படுத்தியது.
வழக்கம்போல் எதிர்பாராமல் உரையை முடித்து அதி வேகத்தில் பயணித்த வணடியிலிருந்து குதித்து விட்டீர்கள். இனி சபரி முறை. மிக லாவகமாக “கவிதையால் என்ன பயன்” என்ற கவிதை வாசிப்பின் மூலம் driver seatல் அமர்நது கொண்டார். தனது பதற்றத்தை மறைத்த சன்னமான குரல் மூலம் படிப்படியாக வணடியின் வேகத்தைக் குறைத்து நிகழ்ச்சியை முடிவுக்கு கொணடு வநதார்.
வழக்கம்போல், விஷ்ணுபுரம் இலக்கிய வாசக வட்டத்தினரின் “செய்வன திருந்தச் செய்” attitude மொத்த நிகழ்வையும் தாங்கிப் பிடித்திருந்தது.
நிகழ்ச்சி முடிந்த மறு நொடியே ராஜபார்வை கமல் போல கறுப்பு நிற coolers அணிந்து கொண்டு நீங்கள் செய்த atrocity (உங்களின் மீசைக்கு விளக்கம் கொடுத்தது) மறுபடியும் உங்களை சாதரணமானவராக்கியது. என்ன மாதிரியான ஆளுமை நீங்கள் என்று வியக்கிறேன். உங்களை ஒரு சட்டகத்தில் பொறுத்திப் பார்க்க முடியவில்லை. நதி போல் பரவி நிறைந்து வழிந்து ஓடிக்கொண்டேயிருக்கிறீர்கள்.
அடுத்து உங்களை எப்போது காண்பேன் என்ற நினைவுகளோடு, விடை பெற மனதில்லாமல் விடை பெற்று, வடபழனி மெட்ரோ இரயில் நிலையத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.
அன்புடன்
முத்து
photos
சுதர்சன் ஹரிபாஸ்கர்
சுருதி டிவி
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 20
19. புறமெழுதல்
சகதேவன் தங்கியிருந்த சிறுகுடில் விராடநகரியின் தென்மேற்குமூலையில் அமைந்த பிருங்கவனம் என்னும் சோலைக்குள் அமைந்திருந்தது. நகருக்குள் வரும் தவத்தார் தங்குவதற்கான இடமாக அது நீண்டகாலமாக உருவாகிவந்திருந்தது. நகரிலிருந்து எந்த ஒலியும் அதை அடையவில்லை. நகரத்தின் தெற்குச் சுற்றுப்பாதையில் இருந்து பிரிந்த ஒற்றையடிப்பாதை இருபுறமும் எழுந்த மலர்ப்புதர்களின் நடுவே கொடியென வளைந்து சென்று அந்தச்சோலையின் வெளிவட்டமாக அமைந்த இலந்தை, நாவல், அத்தி, மா, பலா என்னும் பழமரக்கூட்டங்களுக்குள் நுழைந்தது. பின்னர் இருள்நீலச் சுனைக்குள் இறங்கி மறையும் ஓடைபோல குளிர்ந்த நிழலுக்குள் புதைந்தது.
எப்போதும் ஏதேனும் ஒரு பழமரம் கனிவுசெறிந்திருக்கும்படி அந்தச்சோலை திட்டமிடப்பட்டிருந்தமையால் தலைக்குமேல் பறவைகளும் குரங்குக்கூட்டங்களும் எப்போதும் ஒலியெழுப்பி நிறைந்திருந்தன. கோதையின் மேல்வளைவில் இருந்து வெட்டித் திருப்பி கொண்டுவரப்பட்ட நீரோடை எட்டு கிளைகளாகப் பிரிந்து அச்சோலைக்குள் நுழைந்து மேலும் பதினெட்டு சிற்றோடைகளாக ஆகி வழிந்தோடி மீண்டும் ஒன்றென்றாகி அப்பாலிறங்கி அருவியெனக்கொட்டி கோதை நோக்கி சென்றது. அந்நீரோடைகளின் ஓசை காட்டின் இலைப்பசுமையின் இருளுக்குள் எப்போதும் சூழ்ந்திருந்தது.
வேர்முனைகளின் செறிவாலும் நாணல்களாலும் வரம்பிடப்பட்ட நீரோடைகளில் நீர் காற்றைப்போல வண்ணமில்லாமல் நெளிவு மட்டுமேயாக சென்றுகொண்டிருந்தது. ஒவ்வொரு குடில்தொகையும் ஓர் ஓடையின் அருகே பிறவற்றை முற்றிலும் அறியாதபடி கட்டப்பட்டிருந்தது. அடர்காட்டில் தனித்துவிடப்பட்ட தவநிலை எனத்தோன்றினாலும் அத்தனை குடில்களும் அரசஏவலர்களால் நன்கு பேணப்பட்டிருந்தன. சிவப்படிவர்கள், விண்ணவனின் அடியார்கள், வேதியர், அருகநெறியினர் என அனைத்துவகையினரும் அங்கே தங்கியிருந்தனர். அவர்களின் இடங்கள் வெவ்வேறாக வகுக்கப்பட்டு கொடிகளாலும் மரங்களில் கட்டப்பட்ட துணியடையாளங்களாலும் சுட்டி அளிக்கப்பட்டிருந்தன.
அருகநெறியினருக்கான தவக்குடில்களின் இடது ஓரமாக அமைந்திருந்த சகதேவனின் சிறுகுடிலின் முன்னால் ஒளியுடன் நீரோடை எழுந்து வளைந்து விழுந்து ஒழுகியது. முந்தையநாள் அந்திசாய்ந்தபின்னர்தான் அவன் அங்கே வந்தான். அப்போது அந்த நீர்வளைவு இருளுக்குள் நிற்கும் புதரில் ஒரு வெண்மலர் இதழ் கொண்டிருப்பதுபோல தெரிந்தது. ஓசை காடெங்கும் நிறைந்திருந்தமையால் அது நீர் என சித்தம் உணரவில்லை. அவனை அங்கே விட்டுவிட்டு அனைவரும் சென்றபின் முற்றத்தில் அமர்ந்து சூழ்ந்திருந்த காட்டை கேட்டுக்கொண்டிருந்தபோது ஒருகணத்தில் நீரோசை வந்து அந்த நீரிதழுடன் இணைய அது நீரென்று தன்னை காட்டியது.
இதழ்மலர்ந்த நீரின் அருகேதான் அவன் அதன்பின் எப்போதும் அமர்ந்திருந்தான். நண்பகலில் நான்குநாழிகைப்பொழுது மட்டுமே துயின்றான். இரவெல்லாம் விழித்திருந்து விண்மீன்களை நோக்கிக்கொண்டிருந்தான். புலரியிலும் அந்தியிலும் பொழுது எழுவதையும் அமைவதையும் கணம் கணமென பார்த்தான். இரவுவானம் மாபெரும் சூதுக்களம் எனத்தோன்றியது. காய்களை அறியாக்கைகள் நீக்கி வைத்து ஆடிக்கொண்டிருந்தன. முதலில் அவற்றின் அசைவை பின் அதன் இசைவை அவன் அறிந்தான். ஒருகட்டத்தில் ஆட்டம் தெளிவுறத்தொடங்கியது. பின் அதன் சூழ்வுகளை உய்த்தறிந்தான். ஆடுபவன் ஒருவனே என்றும் தன் இருகைகளாலும் இருநிலை எடுத்து தனக்குத்தானே வென்றும் தோற்றும் அவன் ஆடுவதை கண்டான். அவன் எண்ணங்களையும் தயக்கங்களையும்கூட அவனால் காணமுடிந்தது. ஒரு அசைவைக்கூட விடமுடியாதவனாக அவன் நெஞ்சு கூர்ந்து விழிநிலைக்க வானை நோக்கிக்கொண்டிருந்தான்.
அவனிடம் தங்கள் பிறவிநூலைக்காட்டி ஊழணைவு உசாவும்பொருட்டு ஒவ்வொருநாளும் அரசகுடியினரும் பெருவணிகர்களும் வேளிர்களும் வந்துகொண்டிருந்தார்கள். ஒவ்வொரு பிறவிநூலையும் தனித்தனியாக கணித்து வருந்திறன் உரைத்து அனுப்பினான். பின்னர் தனக்குள் அவற்றை ஒன்றுடன் ஒன்று இணைத்துப்பின்னிப் பரப்பி ஒரு வலையென்றாக்கினான். வானிலெழுந்த களத்தின் கருநகர்வுகளுடன் இணைத்து அதை முடிவிலியாக ஆக்கிக்கொண்டான். அவனுள் மும்முகம் அழிந்து காலம் ஒற்றைப்பரப்பென்று நிலைகொண்டு அலையடித்தது.
ஒவ்வொரு முகத்திலும் வான்முழுமையின் ஆடலை அவன் கண்டான். அவர்களைக் கண்டதுமே அவன் முகம் மலர்ந்து கண்களில் சிரிப்பு ஒளிவிட்டது. நன்றையும் தீதையும் ஒன்றென்றே எண்ணி அவன் சொல்கோத்தான். துயர்கொள்பவர்களை பெருங்கருணையுடன் தொட்டு “எதிலும் பொருளில்லை என்று உணர்க! நாமறியும் பொருளென்று ஏதுமில்லை என்று அதற்குப்பொருள்” என்றான். “ஒப்புக்கொடுத்தலும் இயைந்திருத்தலுமன்றி வென்று நிலைகொள்ள, எஞ்சாது கடந்துசெல்ல வேறுவழியென்று ஏதுமில்லை மானுடனுக்கு” என்றான்.
அவன் சொற்களை அருமணி என நெஞ்சில் சூடி திரும்பிச்சென்றனர் மக்கள். அவன் புன்னகை தெய்வச்சிலைகளில் மட்டுமே திகழ்வது என்று சொல்லிக்கொண்டனர். “அனைத்துமறிந்தவன் ஏதுமறியாதவனின் சிரிப்பை அடையும் மாயமே ஞானமெனப்படுகிறது” என்றார் அவைக்கவிஞராகிய சிந்தூரர். “அவர் அமர்ந்திருக்கும் நிலம் வேர்களால் ஆனது. அவர் மேல் குவிந்த வானமும்தான்” என்றார் முதுசூதரான கண்டிதர். அவனை அவர்கள் விராடபுரி வாழ வந்த மெய்ப்படிவர் என்று வணங்கினர்.
வேதச்சொல்லை கடமையெனக் கொண்ட அந்தணர்களுக்கு உலகியலின்பொருட்டு நிமித்தநூல் நோக்க நெறியொப்பு இல்லை என்பதனால் வைதிகர் அவனை அணுகவில்லை. ஆனால் விராடபுரியில் பிற நகரிகளைவிட கூடுதலாகாவே வேளாப்பார்ப்பனர் இருந்தனர். அவர்கள் மணியொளி நோக்கவும் பட்டுநிலை கணிக்கவும் பயின்றிருந்தார்கள். படைக்கலத்திறன் முதல் வேளாண்நெறி ஈறாக பிற திறத்தோர் அறிந்த கலைகளையும் அறிவுகளையும் செம்மொழியில் நூல்களாக யாத்தனர். அதற்கு அரசக்கொடை நிறைய அளிக்கப்பட்டது. அங்கே நாளொரு நூல் என அறிவுபெருகியதை சகதேவன் கண்டான்.
பிறநாடுகளில் அந்தணரின் முதற்தொழில் வேதமே என்றும் அதை வழுவுவோர் வீழ்ந்தவர் என்றும் எண்ணப்பட்டனர். வேளாப்பார்ப்பனர்களுக்கு கோட்டைக்கு வெளியே வடக்குப்பக்கம் தனியான பார்ப்புச்சேரிகள் அமைக்கப்பட்டன. நன்னாட்களிலும் விழவுகளிலும் அவர்கள் நகர்புகுவது தடுக்கப்பட்டது. முடிசூடி அமர்ந்த அரசனின் அவையில் அவர்கள் தோன்றுவது விலக்கப்பட்டது. பிறர் அறியாத உலகொன்றில் அவர்கள் வாழ்ந்து மறைந்தனர். அறியா உலகென்பதனாலேயே அது ஐயத்துடனும் அச்சத்துடனும் நோக்கப்பட்டது. அந்த விலக்கமே அரண் என அமைந்து பிறர்விழிகளிருந்து காக்க நாளடைவில் அவர்களும் இயல்பான மந்தணத்தன்மை கொண்டனர்.
அந்த மந்தணத்தன்மையாலேயே அவர்களிடம் நிழல்படர்ந்த மெய்மைகளும் இருள்மூடிய நுண்திறன்களும் வளரத்தலைப்பட்டன. எளியமானுடர் அறியாது உலவும் படிவர்களும் அறிஞர்களும் அவர்களை நாடி வந்தனர். விழிகடந்து உளமறியும் கலை, உளம்பற்றி உருமாற்றி விளையாடும் கலை, புறப்பொருளை அகத்தால் ஆக்கி மறைக்கும் கலை என மாயக்கலைகள் அவர்களால் பயிலப்பட்டன. எரியுறையும் மருந்துகள், புயலை கருக்கொண்ட வேதியங்கள் அவர்களிடமிருந்தன. மின்னலையும் இடியையும் அவர்களால் தங்கள் மடியில் கட்டி எடுத்துச்செல்ல முடிந்தது. கற்பாறையை உருகச்செய்யும் கொடுநஞ்சுகளை, வெட்டிரும்பை தளிரென்று நெகிழச்செய்யும் குளிர்ந்த அனல்களை அவர்கள் கைக்கொண்டிருந்தனர்.
அவர்கள் மீது அச்சம் மிகுந்து மக்கள் துயர்சொன்னால் அவர்கள் அக்கணமே விலகிச்சென்றாகவேண்டும் என்று அரசர்கள் ஆணையிட்டார்கள். அவர்களேகூட எந்த அறிகுறியும் இல்லாமல் கிளம்பிச்செல்வதுமுண்டு. வேளாப்பார்ப்பனருக்கு நாடேதுமில்லை என்ற சொல் அவர்களை ஆண்டது. அவர்களுக்கு பிருஹஸ்பதியும் சுக்ரரும் முதலாசிரியர்கள். கணாதரும், பரமேஷ்டியும், அஜித கேசகம்பளரும் நெறியுரைத்த முன்னோடிகள். அவர்களின் மொழி ஒவ்வொருசொல்லும் திருகிக்கொண்டு ஒலியும்பொருளும் மாறுபட பிறர் அறியமுடியாததாக இருந்தது. அவர்களின் நூல்கள் முற்றிலும் மந்தண எழுத்துக்களில் எழுதப்பட்டன. மக்கள் பேசும் மொழியை அவர்களின் நா உரைக்கையில்கூட அவர்களில் ஒருவர் கேட்டால் அது பிறிதொரு பொருள் அளித்தது. அவற்றுடன் விரலசைவும் கண்சுழல்வும் இணைந்து மூன்றாம் மொழியொன்றை உருவாக்கியது. மானுடரை அறியாத வேறு தெய்வங்களால் புரக்கப்படும் மக்கள் அவர்கள் என்றனர் மூத்தோர்.
விராடபுரியில் வேளாப்பார்ப்பனர் வைதிகப்பார்ப்பனரைவிட மதிக்கப்பட்டனர். செல்வமும் குடிப்பெருமையும் கொண்டு நகர்நடுவே அவர்கள் வாழ்ந்தனர். அரண்மனைக்கு வலப்பக்கமாகப்பிரியும் பெருவீதி அவர்களுடையது. அங்கே இருபக்கமும் வெண்முகில்கள்போல மாடக்குவைகள் எழுந்த மாளிகைகளில் அவர்கள் வாழ்ந்தனர். முற்றங்களில் அவர்கள் ஊரும் பல்லக்குகளும் மஞ்சல்களும் காத்திருந்தன. அவர்கள் பயிலும் துறைக்கு ஏற்ப வாயில்களில் கொடிகள் பறந்தன. அவர்களின் குடிக்குறிகள் வாயில்களில் பொறிக்கப்பட்டிருந்தன. அவர்களின் அறிவுத்துணை நாடி அணைந்தவர்களும் மாணாக்கர்களாக நண்ணியவர்களும் வாயில்களில் காத்திருந்தனர்.
வேளாப்பார்ப்பனர்களின் தலைவரான வஹ்னர் தன் நான்கு மாணாக்கர்களுடன் சகதேவனை பார்க்க வந்தார். அவருடைய வருகையை அரண்மனைக்காவலன் வந்து அறிவிக்க சகதேவன் எழுந்து கைகூப்பி நின்று அவர்களை வரவேற்றான். நீரோடையருகே அவன் முன்னால் வெறும் மண்ணில் அமர்ந்துகொண்ட வஹ்னர் “தங்களைக்குறித்து ஊரெங்கும் பேச்சு பரவியிருக்கிறது, உத்தமரே. இருமுறை தங்களை முறைப்படி சந்தித்து வணங்கியிருக்கிறேன். இம்முறை நேரில் வந்து பணியும் நல்லூழ் அமைந்தது” என்றார். சகதேவன் புன்னகைபுரிந்து அது என் நல்லூழ் என நெஞ்சில் கைவைத்து செய்கை காட்டினான். “நான் வந்திருப்பது தங்கள் கணித்தொழிலுக்கு நெறிகளென எவையெல்லாம் உள்ளன என்று அறியும்பொருட்டே” என்றார் வஹ்னர். “தாங்கள் விரும்பினால் அவற்றை நூல்வடிவாகத் தொகுக்க நான் சித்தமாக உள்ளேன்.”
“சூரியதேவரின் பிருஹதாங்கப்பிரதீபமே என் முதல்நூல்” என்றான் சகதேவன். “வேதாங்கமான நிமித்தமெய்யறிவுக்கு அதுவே தொடக்கம் என அறிந்திருப்பீர்கள். பிரஸ்னதாசரின் உத்தராங்கஸ்வரூபம், சிபிரரின் ககனஸ்வரூபம், தௌம்ரரின் அஷ்டாத்யாயி போன்ற நாநூறு நூல்கள் உள்ளன. அவற்றிலிருந்தே என் நிமித்தநூலறிவை நான் அடைந்தேன்” என்றான் சகதேவன். “ஆம், அந்நூல்களை நிமித்திகம் கற்கும் அனைவருமே அடிப்படையாகக் கொள்கிறார்கள். ஆனால் அதிலிருந்து முன்சென்று நீங்கள் நிகழ்த்தும் நுண்ணிய உய்த்துணர்தல் ஒன்று உண்டு என அறிகிறோம். அதை நீங்கள் எவ்வகையிலேனும் அறிநெறிகளாக, சொற்கூட்டுகளாக ஆக்கமுடியும் என்றால் அதை நூலென்று ஆக்கி தலைமுறைகளுக்கு அளித்துச்செல்ல விழைகிறோம்” என்றார் வஹ்னர்.
சகதேவன் திகைத்து “ஆம், நான் எல்லைகளுக்கு அப்பால் செல்லும்போதே என் நுண்ணறிவை அடைகிறேன்” என்றான். “ஆனால் அதை மொழியென்று ஆக்கவியலுமா நெறியென்று வகுத்துரைக்கலாகுமா என ஐயுறுகிறேன்” என்றான். “அருகநெறியினரே, அறிதலென இங்குள்ள அனைத்தும் அவ்வாறு நுண்மையென அறியப்பட்டவையே. அவற்றை மொழியிலேறிச்சென்று தொட்டுவிடவும் அள்ளி வைக்கவும் முடியுமென்பதன் சான்றுகளே இங்குள்ள நூல்கள் அனைத்தும். தன் உளம் கவர்ந்த பெண்ணின் அழகைச்சொல்ல முதலில் முயன்றவனும் இதே திகைப்பைத்தான் அடைந்திருப்பான். பல்லாயிரம் காவியங்களுக்கு அப்பாலும் சொல்வதற்கு ஒவ்வொரு பெண்ணிலும் தனியழகு என ஒன்று எஞ்யிருப்பதனால்தான் காவியங்கள் இன்னும் எழுதப்படுகின்றன” என்றார் வஹ்னர்.
“உணர்ச்சிகளும் தத்துவமும் நுண்ணுணர்வும் மட்டும் அல்ல ஒரு கல்லின் இயல்பை சொல்வதுகூட மொழியை அதன் எல்லைவிட்டு உருகிமீறவும் சிறகுகொண்டு பறந்தெழவும் செய்வதே ஆகும். நுண்மை ஒன்றை பருமையால் உணர்த்துவதற்கென்று உருவானதே மொழி. எதையும் மொழியால் சொல்லிவிட முடியும் என்பதனாலேயே அது வாழ்கிறது. முழுக்க சொல்லிவிட முடியாதென்பதனாலேயே அது வளர்கிறது” என்றார் வஹ்னர். “நான் முயல்கிறேன். இனி என் அறிதல்முறையை சொற்களாலும் தொடரமுயல்கிறேன்” என்றான் சகதேவன்.
“உத்தமரே, பாரதவர்ஷத்தின் மெய்யறிஞர்கள் காலத்தை, கடுவெளியை, அறிதலை, இருத்தலை, இன்மையை தங்கள் மொழியால் சொல்லமுயன்றனர். நூல்களென ஆக்கி தொகுத்தனர். அந்த மெய்மைக்கு அவர்கள் அளித்த இடத்தை நம்மைச்சூழ்ந்துள்ள உலகை அறியும் ஆய்வுக்கு அளிக்கவில்லை. வேளாப்பார்ப்பனர் என்பது ஒரு குலப்புறனடை என்றே பாரதவர்ஷத்தில் கற்றறிந்தார்கூட நம்புகிறார்கள். அது ஒரு கொள்கை நிலை என்றறிக! அறியமுடியாததை நோக்கி அறிவை எய்து விளையாடும் வீண்செயலை முற்றாகத் தவிர்த்து திரும்பிக்கொண்டவர்கள் நாங்கள். இங்கு சூழ்ந்துள்ள பொருட்களே நாம் அறியக்கூடிய மெய்மை. அப்பொருட்களுடன் நாம் கொண்டுள்ள உறவு துயரற்றதாகுதலே விடுதலை. நோய், பசி, மிடிமை எனும் மூன்றையும் வெல்லுதல் மட்டுமே மீட்பு என நாங்கள் நம்புகிறோம்” என்றார் வஹ்னர்.
“நாங்கள் பரசுராமரின் பிருகுகுலத்தில் தோன்றியவர்கள். அனற்குடி அந்தணர். வேதமென்னும் பாறையை புணையென்று தழுவிக்கொள்ளும் அறியாமையிலிருந்து எங்களை விடுவித்தது இங்கு எழுந்த பெரும்பஞ்சம். பரசுராமர் அளித்த வேதத்துடன் இங்கே வந்த எங்கள் மூதாதை ஜஹ்னர் இங்கே மக்கள் பிடியுணவுக்காக போரிட்டுச் சாவதை கண்டார். வெறித்த கண்களுடன் கைவிரித்து வானோக்கி இரந்தபடி இறந்துகிடந்த குழந்தைகளைக் கண்டபோது அவருள் அனல் பற்றிக்கொண்டது. அன்னமும் மருந்தும் அரணும் ஆகாத அறிதலேதும் உளமயக்கே என அவர் அறைகூவினார். அன்று எங்கள் மூதாதையர் வேதம் ஒழிந்தனர். பொருளை அறியும் நோக்கு கொண்டனர்.”
“ஜஹ்னர் இங்குள்ள பன்னிரு கிழங்குகளையும் இருபது கீரைகளையும் நஞ்சுநீக்கி சமைத்து உண்ணும் வழிகளை கண்டடைந்தார். பஞ்சம் நீங்கி குடிகள் எழுந்ததும் வேளாண்மை செய்யவும் மீன்பிடிக்கவும் புதியவழிமுறைகளைக் கண்டறிந்து சொன்னார். அன்றுமுதல் இங்கே வேளாப்பார்ப்பனரின் குமுகம் ஒன்று உருவாகி அரசர்களால் பேணப்படுகிறது. இங்குள்ள அரசே எங்களால் உருவாக்கப்பட்டதுதான்” என்றார் வஹ்னர். “நிஷாதர்களின் முதற்பேரரசர் மகாகீசகர் எங்களுக்கு கிரிப்பிரஸ்தத்தின் கிழக்குச்சரிவில் தெரு அமைத்துக்கொடுத்தார். அவர் கொடிவழிவந்த நளமாமன்னரின் ஆட்சியின்போதுதான் நாங்கள் முழுவளர்ச்சி அடைந்தோம்.”
“நளமாமன்னரா?” என்று சகதேவன் வியப்புடன் கேட்டான். “ஆம், அனைத்து மானுட அறிவையும் நூல்களென ஒருங்கிணைக்கும்படி எங்களை ஏவியவர் அவரே” என்றார் வஹ்னர். “இளமையில் அவர் தன் குலதெய்வமாகிய கலியை துறந்தார். இந்திரனை தன் குன்றின்மேல் நிறுவி நகரத்தை இந்திரபுரி என்று பெயர்மாற்றம் செய்தார். அனைத்தையும் அவர் இயற்றியது விதர்ப்பத்தின் இளவரசி தமயந்தியை மணக்கும்பொருட்டே என்கிறார்கள்.” சகதேவன் “ஆம், அவ்வாறுதான் கதைகள் சொல்கின்றன” என்றான். “அது உண்மையென்றிருக்கலாம். ஏனென்றால் மிக விரைவிலேயே அவர் அவளிடமிருந்து விலகி அதே உளவிரைவுடன் எங்களை நோக்கி வந்தார்” என்று வஹ்னர் புன்னகைத்தார். சகதேவனும் சிரித்தான்.
“பெண்பற்று தளர்வது மண்பற்று வளர்வது என்பது சொல்” என்றார் வஹ்னர். தேவியின்மேல் மாளாக்காதல்கொண்டு பன்னிரண்டு ஆண்டுகாலம் தவமிழைத்தார் நளமாமன்னர். அவளுக்காக தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டார். மணம் முடித்த நான்காண்டுகாலம் அவர் ஒழுகும் நீரடியில் குளிர்ந்துறைந்த பாறை என அவள் காதலில் ஆடிக்கிடந்தார். பிறிதொரு நினைவில்லாமல் அகத்தளத்திலேயே வாழ்ந்தார். அரசப்பொறுப்பை முழுமையாக அரசியே எடுத்துக்கொண்டார். அரசர் ஆண்டுக்கொருமுறை இந்திரவிழவின் கொலுமேடையில் மட்டுமே அமரக் கண்டனர் குடிகள்.”
அரசி தன் மாயத்தால் அவரை சித்தமில்லாது ஆழ்த்தி வைத்திருந்தாள். அவளுக்கு இருமைந்தர் பிறந்தனர். அதைக்கூட அரசர் அறிந்ததாகத் தெரியவில்லை என்று நகையாடினர் சேடியர். ஒருமுறைகூட அரசர் மைந்தரை எடுத்து மார்பின் மீதிட்டு கொஞ்சவில்லை. அவர்களின் அகவையும் பெயரும்கூட அவருக்கு தெரிந்திருக்கவில்லை. அரசநிகழ்வுகளில் அக்குழவியரை சேடியர் அருகே கொண்டுவருகையில் திகைத்தவர் போல நோக்கி அறியாது பின்னடி எடுத்து வைத்தார். “மைந்தரை கொள்க, அரசே!” என முதுசெவிலி குழந்தைகளை நீட்டினால் நடுங்கும் கைகளுடன் வாங்கிவிட்டு மூச்சுத்திணற திருப்பி அளித்தார்.
அரசர் காமத்தில் நெஞ்சழிந்தார் என்கின்றன கதைகள். அது காமம் எனில் ஆம். ஆனால் காமம் என்பது ஒற்றை உணர்வல்ல. வென்றுநிற்பதென்றும் அடிபணிந்தமைவது என்றும் கொன்று உண்பதென்றும் சுவைக்கப்பட்டழிவதென்றும் அது ஒவ்வொருவரிலும் ஒன்று. அரசர் கொண்ட காமம் அரசியின் உடல் மேல் அல்ல. அவர் சூடிய பெண்மையெழில்கள்மீதும் அல்ல. அவரில் திகழந்த மூன்றுதெய்வங்கள் மீதுதான். சொல்மகளும் கொற்றவையும் திருமங்கையும் ஒவ்வொரு கணமும் மாறிமாறி குடிகொள்ளும் மானுட உருவென்றிருந்தார் அரசி. அனல் என பெண்ணில் கணம் ஒரு தோற்றம் கூடி அழிந்து உருக்கொள்ளும் விந்தையில் வீழ்ந்த ஆண்மகன் எளிதில் மீள்வதில்லை.
அவர் எப்போதும் ஓர் அரியணையில் செங்கோல் சூடி முடியணிந்து அமர்ந்திருக்கும் நிமிர்வு கொண்டிருந்தார். விழிதிரும்பினால் அங்கு நின்றிருப்பவர் அறியாது தோள் ஒடுக்கி தலைவணங்கும் பெற்றி திகழ்ந்தது அவரில். எளிய செண்பக மலர் ஒன்றைக்கண்டு ‘அய்யோ’ என கைகளால் கன்னம் பொத்திக் கூச்சலிட்டு வியப்பவளில் எழுபவள் பீமகர் பெற்று மடிமீதிருந்து இறக்கிவிடாத இளஞ்சிறுமி. நிலவொளியில் விழிமுனை நீர்மை கொண்டு ஒளிர கனவில் சமைந்திருப்பவள் அணுகமுடியாத பிறிதொருத்தி. ‘வேண்டாமே’ என காமத்தில் கன்னம் சிவக்க குரல் குழைபவள் ஒருத்தி. மறுகணமே அன்னையென்றாகி மடியிலேற்றிக்கொள்பவளும் அவளே.
ஆனால் ஒருநாள் ஒரு கணத்தில் அவர் அரசியிடமிருந்து விலகிவிட்டிருப்பதை தானே அறிந்தார். அதற்கு நெடுங்காலம் முன்னரே அவ்விலகல் தொடங்கிவிட்டிருந்தது. அதை ஆழம் அறிந்திருந்தது என அப்போது தெரிந்தது. அதன்மேல் முதலில் எரிந்தாடலாகவும் பின்னர் நெகிழும் சொற்களாகவும் மெல்ல வழக்கமான நிகழ்வுகளாகவும் அவருள் திகழ்ந்த காமத்தை அள்ளி அள்ளிச் சொரிந்து அவரே அறியாமல் மூடிவைத்திருந்தார். ஒவ்வொரு நாளும் ஒரு துளியென அவர் உளம் மாறிக்கொண்டிருந்தது.
அரண்மனையில் இருந்து குதிரைக்கொட்டில்கள் வழியாக நோக்குநடை செல்லத் தொடங்கினார். இளம்புரவிகளுடன் ஆடினார். கருவுற்ற புரவிகளை புரந்தார். காலை எழுந்ததும் கொட்டில் நோக்கி வந்தார். இரவு படுக்கும்போது நோயுற்ற புரவி ஒன்றை எண்ணிக்கொண்டு விழிசோர்ந்தார். அடுமனையில் சென்று அனல்நோக்கினார். அவர்களுடன் மடைத்தொழில் நுட்பங்களை பேசினார். ஒருநாள் அடுப்பிலேற்றிய உருளியில் கொதித்துக்குமிழியிட்ட வெல்லப்பாகின் முன் இன்கனித்துண்டுகளுடன் நின்றிருக்கையில் உணர்ந்தார் அவர் அரண்மனை விட்டு வெளியே வரும்போது அரசி துயின்றுகொண்டிருந்தாள் என்று. அவள் துயின்றபின்னரே முந்தையநாள் படுக்கைக்குச் சென்றதை நினைவுகூர்ந்தார். அப்போது தெரிந்தது அவள் தனக்கு நெடுந்தொலைவில் எங்கோ இருப்பதை.
அவ்வெண்ணம் வந்ததுமே ஒவ்வொன்றும் உருமாறலாயிற்று. சூடிய சொற்கள் அனைத்தையும் உதறிவிட்டு வந்து முன் நின்றது நெடுநாள் உடனிருந்த ஒன்று. உள்மறந்து புறத்திலாழ்ந்தார். மீண்டும் அடுதிறனரும் புரவியறிஞரும் என்றானபோதுதான் வேளாப்பார்ப்பனரைப் பற்றி அவர் அறிந்தார். தேர்ச்சகடத்தொழில் குறித்து சக்ரவாஹிகம் என்னும் சிற்பநூல் இருப்பதை முதுசூதர் பாலிகர் வழியாக அறிந்து எங்களைத்தேடி வந்தார். மானுட அறிதல்கள் அனைத்தையும் நாங்கள் நூல்களெனத் தொகுப்பதை அறிந்து மகிழ்ந்து எங்களை பரிசளித்து ஊக்குவித்தார்.
“பின் எங்களில் ஒருவரென்றே அவர் உடனிருந்தார். புரவிநுட்பங்களைப்பற்றிய அவருடைய அஸ்வரஹஸ்யம் என்னும் நூலும் அடுமனைக்கலை குறித்த நளபாகம், நளரசனா, நளபதார்த்தமாலிகா என்னும் மூன்று பெருநூல்களும் எங்கள் முன்னோடிகளால் யாக்கப்பட்டன” என்றார் வஹ்னர். “எங்கள் குடிகள் நடுக்காலத்தில் இங்கிருந்து சிதறி தென்னாடுகளில் குடியேறின. மீண்டும் நிஷாத அரசு விராடபுரி என திரண்டெழுந்தபோது இது எங்கள் நாடு என உணர்ந்து மீண்டு வந்தோம். இன்று தென்னாட்டில் நூறு நகர்களிலாக நாங்கள் பரவி வாழ்கிறோம். அமணநெறிக்கு அணுக்கமானவர்களாக இருக்கிறோம். எங்களில் பல குடிகள் அமணர்களாகவே ஆகியும் விட்டனர்” என்றார் வஹ்னர்.
“நாங்கள் தொழில்களும் கலைகளும் பயில்வதில்லை. தொழிலர் கலைஞர்களின் அறிதல்களைக் கேட்டறிந்து தொகுக்கிறோம். வேளாண்மை, ஆபுரத்தல், மீன்கொள்ளல், கலம்கட்டுதல் என நாங்கள் அனைத்துத் துறைகளையும் அறிந்து ஒற்றை மெய்மையென ஆக்க முயல்கிறோம். தச்சுத்தொழில், சிற்பத்தொழில், மருத்துவம் போன்ற துறைகளில் பல்லாயிரம் நூல்களை உருவாக்கியிருக்கிறோம். யானைகளைப்பற்றி மட்டும் எண்பத்தெட்டு நூல்கள் எங்களிடமிருக்கின்றன” என்றார் வஹ்னர். “அனைத்து நூல்களும் ஒரே மொழியில் ஒரே இடத்தில் வந்தமையும்போது அனைத்து அறிதல்களையும் ஒன்றெனப் பிணைக்கும் நெறிகளை நோக்கி செல்லமுடிகிறது. விண்மீன் உதிர்வதற்கும் விளைநலம் பெருகுவதற்கும் என்ன உறவு என்று நோக்கமுடிகிறது.”
சகதேவன் “என் அறிதல்கள் அனைத்தையும் அளிக்கிறேன், உத்தமரே. அவை நூலாகட்டும். மானுட அறிவின் பெருக்கில் அதுவும் துளியென்றாகட்டும்” என்றான். “எது வண்ணத்துப்பூச்சியின் சிறகை அசைக்கிறதோ அதுவே விண்மீனை பறக்கவைக்கிறது என்று ஓர் எண்ணம் இன்று என்னுள் எழுந்தது. அதுவே தொடக்கமென்றாகட்டும்”. வஹ்னர் “வணங்குகிறேன், கணியரே” என்று கைகூப்பினார்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-6
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 19
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 18
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 16
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 15
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 14
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 13
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 12
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 11
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-9
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-8
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-7
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-5
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-4
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-3
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-2
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–95
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–45
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–12
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–9
June 11, 2017
சீ.முத்துசாமிக்கு விஷ்ணுபுரம் விருது
இந்த ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருதை சற்று முன்னரே அறிவிக்கவேண்டிய சூழல் அமைந்தது. ஈராண்டுகளுக்கு முன்னரே மலேசிய எழுத்தாளர் சீ.முத்துசாமி அவர்களுக்கு விருது அளிப்பது என முடிவுசெய்திருந்தோம். இவ்வருடம் மலேசியாவில் கூலிம் நகரில் சுவாமி பிரம்மானந்தா அவர்களின் குருகுலத்தில் நிகழ்ந்த இலக்கியக் கருத்தரங்குக்கு சீ.முத்துசாமி வந்திருந்தார். கருத்தரங்கின் முடிவில் மலேசிய இலக்கியத்தின் தேக்கநிலை, சாத்தியங்கள் குறித்த கொஞ்சம் கறாரான விவாதம் நிகழ்ந்தது. நான் மலேசிய நவீன இலக்கியத்தின் தொடக்கப்புள்ளியாக சீ.முத்துசாமியை காண்கிறேன். கூடவே அவரது ஆக்கங்கள் பற்றிய, பங்களிப்பின் போதாமை பற்றிய குற்றச்சாட்டுகளும் எனக்கு உண்டு. அதை ப்பற்றிய விவாதத்தில் இவ்வருடம் சீ. முத்துசாமி அவர்களுக்கு விருதளிப்பது என முடிவ் செய்திருப்பதை அறிவித்தோம்.
இந்த ஆண்டு விஷ்ணுபுரம் விருதுவிழா மலேசிய நவீன இலக்கியத்தை மையப்படுத்துவதாக அமையும். விழாவை ஒட்டி சீ.முத்துசாமியின் நாவல் ஒன்று வெளியிடப்படும். அவரைக்குறித்து ஒரு விமர்சனநூல். கூடவே மலேசிய மூத்த படைப்பாளிகளான கோ.புண்ணியவான், சண்முகசிவா ஆகியோரின் தெரிவுசெய்த படைப்புக்களின் தொகுதிகள் வெளியாகும். சீ.முத்துசாமி, கோ. புண்ணியவான், சண்முகசிவா, சை.பீர்முகம்மது, ம.நவீன், சு.யுவராஜன், பாலமுருகன் போன்ற மலேசிய படைப்பாளிகள் வாசகர்களைச்சந்திக்கும் நிகழ்ச்சிகளும் ஒருங்கிணைக்கப்படும். மலேசியாவின் நவீன இலக்கியத்தின்மீது தமிழிலக்கியம் இதுகாறும் போதிய கவனம் செலுத்தியதில்லை. அந்தக்கவனம் இம்முறை உருவாக இவ்விருது ஒரு காரணமாக அமையவேண்டும் என்பதே எங்கள் எண்ணம்.
இலங்கை மலையக இலக்கியத்தில் தெளிவத்தை ஜோசப் போல மலேசிய இலக்கியத்தில் சீ முத்துசாமி ஒரு முன்னோடி. குறைவாகவே எழுதியிருக்கிறார். ஆனால் அவருடைய ஆக்கங்கள் மலேசிய அழகியல் ஒன்றின் கண்டடைதல்கள் கொண்டவை. ஆனால் முன்னோடிகளுக்குரிய குன்றாத ஊக்கத்துடன் அவர் தொடர்ந்து செயல்படவில்லை. பெரும்பாலும் பொது அரசியல்கருத்துக்களை ஒட்டிய எளிய எழுத்துக்கள் கொண்ட மலேசிய இலக்கியச்சூழலில் சீ.முத்துசாமியின் கலைப்பண்பு தனியாக அடையாளம் காணப்படவோ அங்கீகரிக்கப்படவோ இல்லை. அது அவரது சோர்வுக்கான காரணம். சொல்லப்போனால் அடுத்த தலைமுறை உருவாகி வந்து ம.நவீன், சு.யுவராஜன், பாலமுருகன் போன்றவர்களால் அவர் அடையாளம்காணப்பட்ட பின்னரே அங்கே கலைநோக்கு கொண்ட இலக்கியம் தொடங்கியது என நினைக்கிறேன்.
சீ.முத்துசாமிக்கு விருது அளிப்பதென்பது மலேசிய இலக்கியச் சூழலில் தமிழ் நவீன இலக்கியப்பரப்பு எவரை அடையாளம் கண்டு முன்னிறுத்துகிறது, எந்தவகை எழுத்து மெலேழுந்து தொடர விழைகிறது என்பதற்கான அறிவிப்பும்கூட.
சீ.முத்துசாமியின் நூல்களை வரும் கோவை புத்தகக் கண்காட்சியிலும் தொடர்ந்தும் கிடைக்கச்செய்வோம். அவரை வாசித்த ஓர் இளைஞர் வட்டம் டிசம்பரில் விழாவுக்கு வரவேண்டும். ஆகவேதான் முன்னரே அறிவிக்கிறோம். மலேசியா- தமிழ் நவீன இலக்கியங்களுக்குள் கு.அழகிரிசாமிக்குப்பின் விட்டுப்போன ஒரு தொடர்பு மீண்டும் வலுவாக உருவாகவேண்டும்.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
குமரகுருபரன்-விஷ்ணுபுரம் கவிதைவிருது- காணொளிகள்
சென்ற 10-6-2017 அன்று சென்னை பீமாஸ் ஓட்டல் வளாகத்தில் நிகழ்ந்த குமரகுருபரன் – விஷ்ணுபுரம் கவிதை விருது விழாவின் காணொளிகள். மறைந்த கவிஞர் குமரகுருபரன் நினைவாக இவ்விருது விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தால் அளிக்கப்பட்டது.
ஒளிப்பதிவு செய்த வெளியிட்ட ஸ்ருதி டிவி கபிலன் அவர்களுக்கு நன்றி
கவிஞர் தேவதேவன் உரை
கவிஞர் மனுஷ்யபுத்திரன் உரை
எழுத்தாளர் ஜெயமோகன் உரை
எழுத்தாளர் நா. அசோகன் உரை
Andhimazhai Asokan speech
கவிஞர் சபரிநாதன் ஏற்புரை
Poet Sabarinathan speech
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
லங்காதகனம் – கடிதம்
இணையத்தில் சிறுகதைகளை பற்றிய ஏதோ ஒரு கட்டுரையில் ஜெயமோகனின் லங்கா தகனம் மிக சிறந்த சிறுகதை என்று படித்தேன். ஜெயமோகனின் வலைத்தளத்திலும் சரி இணையம் முழுதும் சல்லடை போட்டு தேடியும் அந்த சிறுகதை கிடைக்கவில்லை. எந்த சிறுகதை தொகுப்பில் கிடைக்கும் என்பதும் தெரியவில்லை. அதை படிக்க வேண்டும் என்ற ஆவல் மட்டும் அதிகரித்துக் கொண்டே போனது.
இணையத்தில் இன்னுமொரு கட்டுரையில் அது கதகளி ஆட்டத்தை பற்றியது என்று குறிப்பு வேறு. ஏற்கனவே கதகளி நாடகம் ஒன்றில் கர்ணன்-குந்தி சந்திப்பு காட்சியை விவரிக்கும் கலைக்கணம் என்ற ஜெயமோகனின் கட்டுரையை படித்த பின்னரே எனக்கு பித்து பிடித்து விட்டது. இப்போது இது மேலதிக தகவல் ஆகி போனதும் தாங்கவில்லை. திசைகளின் நடுவே என்னும் சிறுகதை தொகுதியில் இந்த கதை உண்டு என்று அதை இணையத்தில் வாங்க முயற்சித்தேன், அச்சில் இல்லை என்று பதில்! அப்புறம் எங்கோ ஜெயமோகனின் குறுநாவல்கள் தொகுதியில் உண்டு என்று படித்ததும் மெரீனா புக்ஸ் தளத்தில் வாங்கினேன்.
அதை படித்த பின் கொஞ்சம் ஆன்டிகிளைமாக்ஸ் என்றே சொல்ல வேண்டும். ஜெமோவின் படைப்புகளில் வரும் நாகர்கோவிலில் காணப்படும் கேரள பின்னணி. அவரே கதை சொல்வது போன்ற அமைப்பு. நுணுக்கமான விவரிப்புகள், இயல்பான மற்றும் செறிவான கதை மாந்தர், கலைக் கணங்கள் எல்லாமே இருந்தன. அப்புறம் நான் தேடுவது என்ன……
சினிமாவின் அசுர வளர்ச்சி நாட்டுப்புறக் கலைகளை அழித்ததையும் அந்தக் கலைஞர்கள் நலிவுற்றதையும் எவ்வளவோ கதைகள் சொல்லி இருக்கின்றன. ஒரு முகைநரண் போல அவதாரம் என்னும் சினிமாவே அந்த அவலத்தை வெளிச்சம் போட்டு காட்டியது. ஆனால், எவ்வளவு சொன்னாலும் அது பத்தாது…. அவ்வளவு சீரழிவு நடந்துள்ளது!!
இந்த கதைக்கு எனக்கு இரண்டு கோணங்கள் புலப்பட்டது. நசிந்த கலையை பற்றிய கலைஞனின் ஏக்கம் ஒன்று. அந்த கலை உச்சத்தில் இருந்த போதும் சரி நசிந்து விட்ட நிலையிலும் சரி, என்றுமே எதிர்பார்த்த அங்கீகாரம் கிடைக்காத, கேலிக்கு உள்ளாக்கப்பட்ட ஒரு கலைஞனின் கோணம் இன்னொன்று. சிறு குழந்தைகள் அதிகம் குறும்பு செய்கையில் சொல்வது, “குரங்கு மாதிரி ஆடாதே” என்று தானே. சேட்டைக்கும் கேளிக்கைக்கும் நாம் எடுத்துக்காட்டாக வைத்திருக்கும் குரங்குக்கு இன்னொரு முகம் அனுமன்.
சூரியனையே நோக்கி பறந்தவன், சஞ்சீவி மலையை பெயர்த்து கையில் தூக்கி பறந்தவன், ஒரே எட்டில் சமுத்திரத்தை கடந்தவன், தன் வால் நுனியால் லங்கையை தகனம் செய்தவன்….. அந்த வேடம் கட்டும் ஒருவனை சமூகம் வெறும் குரங்கு என்றே அடையாளம் காட்டுகிறது. இராம தூது நாடகம் நடக்கும் பொதுமட்டுமே அவனுக்கு லங்கா தகனகொடுப்பினை. மற்ற நேரத்தில் கோமாளிவேடம். அனுமனின் உக்கிர ரூபம் கண்டு கொள்ளவே படவில்லை, கதகளி பெரும்பாலும் கரி வேடம் கொடுத்து கோமாளி கூத்து நடத்துகிறதே என்று ஒரு ஆற்றாமை.
பெரும்பாலும் நாம் அலுவலகத்தில் என்ன செய்கிறோம். மேலதிகாரி குறை கண்டுபிடிக்காத வகையில் வேலை செய்கிறோம். அதை விடுத்து, செய்யும் வேலையை திறம்பட செய்வோர் வெகுசிலரே. அதனினும் சிலர் அதில் மூழ்குபவர்கள். பெரும்பாலும், இது கலையிலேயே சாத்தியம்.மற்ற துறைகளில் அபூர்வம்!
லங்கா தகனம் அனந்த நாயர், கலையில் தன்னை மூழ்கிக் கொண்டவர். அனுமனை உக்கிர ரூபியாக மட்டுமே பார்ப்பவர். அவனை ராமனுக்கு தாசனாக மட்டுமே காட்டும் வால்மீகியையும், கம்பனையும் எழுத்தச்சனையும் திட்டுபவர். அந்த வேடம் கட்டுவதற்காக பிரம்மச்சரியம் பூண்டவர்.
வேடம் கட்டுவதோடு நிறுத்திக் கொள்ள முடியாதவர், அதனால் வருவது வினை என்று நமக்கு தோன்றுகிறது. ஆனால் அவருக்கோ அது…… எப்படி விவரிப்பது பூரணத்தை தேடுகிறார்.தன்னை கோமாளியாக நடத்துவதையும், சோற்றுக்கு காக்க வைப்பதையும் எதற்காக பொறுத்து கொள்கிறார். வயிற்று பாட்டிற்காக தானே. சும்மாவா சொன்னார் AP நாகராஜன், “சேர்ந்தே இருப்பது வறுமையும் புலமையும்…..”
சச்சின் டெண்டுல்கரின் புகழ் உலகம் அறிந்தது. அனால் அதே சமயம் ராகுல் திராவிடை யோசித்து பாருங்கள். அவர் தேடியது என்ன. கிரிக்கெட் ஆட்டம் அறிந்தவர்கள் சொல்வார்கள், பேட்ஸ்மானுக்கு முக்கிய தேவை. மூன்று — டெக்னிக், டைமிங், டெம்பரமென்ட். ராகுல் திராவிடின் ஆட்டத்தை பார்த்தவர்கள், அவர் பேட்டிகளை படித்தவர்களுக்கு தெரியும். அவர் தன்னை அந்த கணத்தில் முழுதுமாக ஒப்படைத்து விட்டிருந்தார். He wanted to move towards perfection. பூரணத்துவம்.
சாதாரணமாகவே பூரணத்துவம் தேடி அலைபவர்கள் சந்திக்கும் இன்னல்கள் ஏராளம், அவர்கள் முக்கியமானவர்களாக இருக்கும் போதிலும் கூட. அதற்கு தான் திராவிட உதாரணம் காட்டினேன். அப்படி ருக்கையிலே, குரங்கு வேடம் கட்டும் அனந்தன் நாயர் எம்மாத்திரம் எப்போதும் போல ஜெமோவின் விவரணைகள் உண்டு.
கட்டிடங்களை இவ்வளவு அழகாக விவரிப்பவர்கள் குறைவு. அதுவும் தமிழ் மக்களுக்கு அதிகம் தெரிந்திராத கேரளா பாணி கட்டிடங்களை நாம் புரிந்து கொள்ளும்படியாக விவரிப்பது சிறப்பு. கதை ஒரு கதகளி கலைஞனின் மன உளைச்சலை பற்றியது. அனால் அதன் ஓட்டத்தின் நடுவே கொட்டார(அரண்மனை) வாழ்வையும், தம்பிரானையும், அங்கே புழங்கும் பலதரப்பட்ட மனிதர்களையும் படம் பிடித்து காட்டி விடுகிறார்.
தம்பிரான் பருப்புச் சாதம் போட்டு வளர்க்கும் அல்சேஷன் நாய்களை கூட!! கதகளி கலைஞர்களுக்கு மத்தியில் நடக்கும் சம்பாஷணைகள் மிகவும் மிகவும் நுட்பமானவை. எல்லா துறையிலும் மூத்தவர்களின் நம்பிக்கைகளை, பயிற்சிகளை கேலி செய்யும் இளையோர் உண்டு. கலை என்பதெல்லாம் காலாவாதியாகிவிட்டது, வயிற்று பாட்டை ஒழுங்காக பார்த்தல் போதும் என்று என்னும் இளைய தலைமுறை….ஆடப் போவதில்லை என்று கூறும் ஆசான் திருவுள சீட்டு போட்டு பார்த்து திடீரென்று ஆட முடிவு செய்கிறார்.
அதிலிருந்து ஒரே சாதகம். அதை பலர் கழண்டு விட்டது என்று கேலி செய்ய சிலருக்கோ அதன் வீரியம் புரிகிறது. கதை சொல்லிக்கோ விபரீத எண்ணங்கள் மட்டுமே தோன்றுகின்றன. ஆசான் பூரணம் என்று எதை தேடுகிறார்……..நான் கடைசியில் என்ன தேடுகிறேன்……
தகனம் என்று இடுகுறி பெயர் போல கதை தலைப்பு. காற்று பலமாய் அடிப்பதால் வாண வேடிக்கை வேண்டாம் என்று முடிவு செய்தாகிவிட்டது. மேடையில் உள்ள குத்து விளக்குகளை அணைத்து விட்டு லாந்தர் மட்டுமே வைக்கலாமா என்று பதறும் காரியதரிசி…. லங்கா தகன நாடகத்திற்கு மேடை ஏறுகிறார் ஆசான்….
இல்லை இல்லை ஏறவில்லை… வேறேதோ செய்கிறார்….. ஆடுவது என்று முடிவெடுத்த பின்னர் அல்லும் பகலும் அனவரதமும் அதனுள் மூழ்கி கிடைக்கும் ஆசான், வேடக் குறை இருக்க கூடாது என்று பிரயத்தனப்படும் ஆசான், உடலசைவில் குரங்காகவே மாறிவிட்ட ஆசான், யாரிடமும் பேசாமல் தன்னுள் மூழ்கி கிடக்கும் ஆசான், பார்வை முகத்தின் உட்புறமாக திரும்பிவிட்ட ஆசான், சில நாட்களாக கிளை விட்டு கிளையும் மதில் சுவரும் தாவிக் கொண்டிருக்கும் ஆசான்….. அவர் அனாயசமாக தாவி மேடையில் ஏறும் இடத்தில் முடிந்து விடுகிறது கதை…..
நான் என்ன எதிர்பார்த்தேன்….. பூரணாகதி என்ற பெயரில் மேடையில் ஆசான் பற்றி எரிய வேண்டும் என்று தானே..கதை கிட்டத்தட்ட அதை தானே யூகிக்க வைக்கிறது….. அப்புறம் ஏன் அதை வெளிப்படையாக காட்ட வேண்டும் என்று எதிர்பார்க்கிறேன்….ஒரு வேளை… ஒரு வேளை, அந்த பூரணத்துவம் தப்பி இருந்தால்….. அந்த கற்பனைக்கு இடம் விட்டு முடித்து விட்டார் ஜெமோ….. அதனால் தானோ என்னமோ மனம் பதறுகிறது….
ஸ்வேதா.எஸ்.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
வெற்றி கடிதங்கள் 10
அன்புடன் ஆசிரியருக்கு
வாசிப்பின் வெற்றி பதிவினை படித்துவிட்டு கடுமையான ஏமாற்ற உணர்வு எழுந்தது. ஏனெனில் அது வேறொரு வகையில் நான் சொல்ல நினைத்தது. பெரும்பாலும் இது அடிக்கடி எனக்கு நடக்கும். தாமதப்படுத்துவதால் எழும் ஏமாற்றம்.
ரங்கப்பரின் பாத்திர உருவகம் ஒரு வகையில் டால்ஸ்டாயின் பீயர் தான். டால்ஸ்டாய் உயர்குடிகளின் மீது வெறுப்பும் தானும் அதைச் சேர்ந்தவன் என்பதால் மெல்லிய குற்றவுணர்வும் கொண்டவர். பீயர் நெஹ்லூதவ் என அவரை பிரதிநிதித்துவம் செய்யும் பாத்திரங்களில் அந்த குற்றவுணர்வையும் ஏளனத்தையும் காண முடியும். அதிலும் நெஹ்லூதவில் அது மிக அதிகம். ஆனால் ரங்கப்பரிடம் அது இல்லை.
வெற்றி வாசித்த போது நான் எண்ணிக் கொண்டது இதைத்தான். டால்ஸ்டாயின் எழுத்துக்களிலும் இந்த “பெண் கைப்பற்றல்கள்” நிகழ்கின்றன. அது குறித்த விளையாட்டுத் தனமான விவாதங்களும் நிகழ்கின்றன. ஆனால் வெற்றி மட்டும் ஏன் கொந்தளிக்கச் செய்கிறது. ஏனெனில் அது “இங்கு” நிகழ்கிறது என்ற எண்ணம். இப்படித் தோன்றியதுமே மனம் எளிமையடைந்து விட்டது.
நவீன சமூகத்துக்கு பெண்கள் பழகவே இல்லை என்பது என் எண்ணம். அல்லது பழகவிடப்படவில்லை.நன்கு படித்து நன்றாக சம்பாதித்து ஒரு வார்த்தை மறுசொல் உரைக்காமல் தன் ஊதியத்தை வீட்டில் அளிக்கும் பெண்கள் பலரை எனக்குத் தெரியும்.
ந.பிச்சமூர்த்தியின் கருப்பி புதுமைபித்தனின் அம்மாளு அசோகமித்திரனின் ஜமுனா ஜெயகாந்தனின் கங்கா உங்களின் தேவகி விமலா இப்போது லதா போன்றவர்களை மேற்சொன்னவர்களின் வரிசையில் வைக்க முடியாது. அவர்கள் ஜனநாயக யுகத்துக்கு தன்னை பழக்கிக் கொள்ளும் சமூகத்தின் பலியாடுகள். சுயம் என ஒன்று உருவானவர்கள். அதனால் நிலைகொள்ள முடியாமல் தடுமாறுகிறவர்கள்.
மரபான இந்திய ஆண் மனம் பெண்ணுக்கு சுயம் உருவாவதை மூர்க்கமாக எதிர்க்கவே செய்கிறது. அவளுக்கென அரசியலோ சமூகப் பார்வையோ இருப்பதை அது விரும்புவதே இல்லை. ஆண்கள் ஓரளவுக்கு ஏற்றுக் கொள்ளும் “ஆபத்து” இல்லாத சித்தாந்தம் பெண்ணியம் தான். ஏனெனில் அது ஒரு மோஸ்தர் மட்டுமே. பேராசிரியர் டி.தருமராஜ் சொல்வது போல அதுவொரு “விடலைத்தனம்”. அது இந்தியப் பெண்ணிடத்தில் எந்த மாற்றத்தையும் உருவாக்கிவிடாது.
கோடிக்கணக்கானவர்களை கொன்றழித்திருந்தாலும் மேற்கு ஜனநாயகத்தின் வாயிலை நோக்கி நம்மை இழுத்துச் சென்றிருக்கிறது. அமெரிக்கா அதை வலுப்படுத்தி இருக்கிறது. ஆகவே அச்சிந்தனைகளின் தாக்கம் இன்னும் கால் நூற்றாண்டாவது நம்மிடம் நீடிக்கவே செய்யும்.
வெண்முரசின் பெண்கள் குறித்து மட்டுமே தனியே எழுத வேண்டும் என்ற எண்ணமிருக்கிறது.
சத்யவதி தொடங்கி இன்று வாசித்துக் கொண்டிருக்கும் தமயந்தி வரை பெண்களின் நிமிர்வை சுயத்தை தான் சொல்கிறது வெண்முரசு. எம்.டி. வாசுதேவன் நாயரின் திரௌபதி மிகச் சிறியவள்.கணவருக்கென கானேகிய எளிய மனையாட்டி. ஆனால் வெண்முரசின் திரௌபதி அந்த ஆடலை நிகழத்தும் கரம். இந்த வேற்றுமை தான் வெண்முரசை நோக்கி என்னை ஈர்த்ததென இப்போது தோன்றுகிறது.
சகுனிக்கு இணையாக அரசு சூழும் சௌபாளினி கருவை கலைக்க வேண்டிய சூழலிலும் அரசியென நிமிரும் குந்தி பேரரசியன்றி பிறிதொன்றென தன்னை எண்ணாத திரௌபதி கதை பயிலும் சுபத்திரை போருக்கெழத் துடிக்கும் சத்யபாமை ஆணென்றே வாழும் சித்ராங்கதை நூறு குழந்தைகளை தூக்கிப் பிடித்து விளையாட நினைக்கும் துச்சளை ஒற்றைச் சொல்லில் துரியனை நிறுத்தும் பானுமதி என ஒரு பக்கம் அவர்களின் நிமிர்வைச் சொல்லும் அதே நேரம் அம்பை தொடங்கி திரௌபதி வரையிலான அவர்களின் வீழ்ச்சியையும் பிரம்மாண்டமாகவே சித்தரிக்கிறது வெண்முரசு. வேழம் சரிவது போல ஆலொன்று அடித்தூர் பறித்து எறியப்படுவது போல.
அம்பை தொடங்கி திரௌபதி அவர்களின் அத்தனை வீழ்ச்சிகளுக்கும் தங்களை சுயத்தை மதிக்கும் காத்துக் கொள்ளும் நிமிர்வே அடிப்படையாகிறது.
நன்றி
அன்புடன்
சுரேஷ் பிரதீப்
***
ஜெ.
வெற்றி படித்தேன்….
எனக்கென்னவோ இது ஆண்மையின் மரியாதையின் வெற்றி என படுகிறது….
தன்மானத்தை பொதுவில் ஏலம் வைத்தவன். தன் பெண்மையை சற்றும் மதியாதவன்… தன்னை இழந்து வசதிகளை கொண்டு வந்தால அதை ஏற்கதயாரானவன் ஒரு பறம்..
தன் கவுரவத்தை பொது வெளியில் விட்டுக் கொடுக்கமாட்டேன் என உறுதி அளிப்பவனிடம் இயல்பாகவே அவள மனம் சென்றிருக்கலாம்…இவளது உறுதியால் ரங்கப்பர் இயல்பாகவே இவள்பால் ஈர்க்கப்பட்டு இருக்கலாம்….
அந்த ஐந்து லட்சம் என்பது அவள் கவுரவததைக் காக்க அவர் கொடுக்கும் விலை…. அதனால்தான் சாகும்வரை இதை அவர யாரிடமும் சொல்லவிலலை… அவளை வெல்வது மட்டுமே மனதில் இருந்தால் இவ்வளவு கவனமாக இருந்திருக்க வாய்ப்பில்லை
இந்த குணம்தான் அவளை ஈர்த்திருக்கும்..
காசுக்காகததான் அவனுடன சென்றேன் என கணவனுக்குப்புரியும் வகையில் சொல்லி இருக்கலாம்…அல்லது அவன் அப்படி புரிந்து கொண்டிருக்கலாம்….. ஆனால் இதற்காக அவள் அப்படி செய்யக்கூடியவள் என்பதற்கான குறிப்புகள் கதையில் இல்லை
இது கண்டிப்பாக ஆண் என்ற வகையில் கணவனின் தோல்வி… ஆனால் அதை தன் மனைவியின் தோல்வியாக புரிந்து கொண்டிருப்பான்
இது ரங்கப்பரின் வெறறி…. ஆனால் அவளது வெற்றி என்றே அவர் நினைப்பார்…இதற்குமேல் ஒரு பெண் அவருக்கு அவர் வாழ்வில தேவைப்பட்டு இருக்க மாட்டாள்
தன் பெண்மையை விட்டுக் கொடுக்காதவனை தேர்ந்தெடுத்தது அவளது வெற்றி என்றாலும் அதை தன் தோல்வி என நினைத்தாளோ…அந்த குற்ற உணர்வை கடைசியில் இறக்கி வைத்தாளோ என தோன்றுகிறது
என்றென்றும் அன்புடன்
பிச்சைக்காரன்
***
அன்பு ஜெமோ சார்,
முதல் வாசிப்பில் பெண் பந்தயப் பொருள் மட்டும்தானா என்று சீற்றத்துடன் லதாவின் கூற்றாக இக்கதையை தங்களால் எழுத இயலுமா? இயன்றால் அது உங்கள் வெற்றி என்று சிந்தித்தேன். பின் கணவருடன் விவாதித்த பொழுது (செய்தித்தாள் தவிர்த்து மற்றையது வாசிக்காதவர் வாய்மொழியாக நான் கதை கூறிய பின்பு ) ரங்கப்பர் உயர்ந்தவர் லதா மேல் மட்டுமல்ல, நமச்சிவாயத்தின் மேல் உள்ள அன்பினாலும் தாம் வென்றதை மாற்றிச் சொன்னார்என்ற தன் கருத்தைச் சொன்னார்.சரியெனப் பட்டாலும்ஆனால் அதுவும் ஆணின் பார்வை மட்டுமே .
மீள்வாசிப்பில் முதலில் கதையின் நாயகியின் பெயர்,கதை நடக்கும் காலகட்டத்தில் லதா என்னும் பெயர் சற்றே நாகரிகப் பெயராகத் தோன்றுகிறது. அதற்கெனத் தனிப்பொருள் ஏதும் உள்ளதா தெரியவில்லை.(லதா மண்டபம் என்பதை வந்தியத்தேவன் நந்தினியைத் தனியே சந்தித்த போது வாசித்த நினைவு. லதா என்னும் பெயரின் பொருளை மகராஜன் அருணாசலம் சார் சொன்னால் தேவலை)
நமசிவாயத்திற்கு மனைவி தன் தேவைகளை நிறைவேற்றுகிற உடைமைப் பொருள் மட்டுமே.அதைத் தாண்டி அவளின் உணர்வுகள் அவருக்குப் பொருட்டே அல்ல.அவளின் விருப்பு வெறுப்புஎதுவுமே அறிந்தவராகத் தெரியவில்லை.அறிய முயன்றதுமில்லை. ஆனால் அவரின் உடல்மொழி மூலமே அவரின் மனநிலையை நன்குஅறிந்தளாகவே லதா இருக்கிறாள்.(இத்தனைக்கும் பொதியப்பட்ட உடல்) சவாலிட்ட இரவில் உடையைக் களையும் போதே மாறுபாட்டை உணர்தல் போன்றவை.அவருக்கு என்ன தேவையோ அதைத் தரும் மனைவி. அவர் நம்புவது அன்று இரவு எதுவோ நடந்தது என்பதை. நாற்பது வருடங்களுக்குப் பின் ‘ உனக்கு எப்படி வேண்டுமோ அப்படியே நான் ‘ என்று இறப்பதற்கு முன் பொய்யுரைத்து விட்டுச் செல்கிறாள். ஆனால் அவரால் பந்தயப் பொருளாக்கப் பட்டோம் என்ற உண்மை ரங்கப்பரின் மூலம் தெரிந்த அதிர்ச்சியால் வரும் நடத்தை மாறுபாடே அவளில் நிகழ்ந்தது. அவளின் கற்பு அவளுக்கானது.அது அவருக்குத் தேவையில்லை என்ற முடிபு லதாவுக்குமானது மட்டுமல்ல.எனக்கும் அதுவே.
சிவமீனாட்சி
***
அன்புள்ள ஜெ:
வெற்றி சிறுகதையைப் படிக்க ஆரம்பிக்கும்போது, இது நீங்கள் முன்பு எழுதி தளத்தில் மீண்டும் வெளியிடப்படும் கதை என்றே நினைத்தேன். அந்தக் காலத்துக் கதை என்பதால் மனம் இயல்பாகக் கற்பனை செய்துகொண்டதா என்று தெரியவில்லை. கதையைப் பற்றிய என் எண்ணங்கள்:
ரங்கப்பருக்கும், லதாவுக்கும் இடையில் நடந்தது நேரடியாகச் சொல்லாமல் விடப்பட்டுள்ளது; கதை நமச்சிவாயத்தின் பார்வையில் சொல்லப்பட்டுள்ளது. இதனால் கிடைக்கும் இடைவெளிகளை நிரப்பிக்கொள்ளும் உரிமை வாசகரிடம். கதையின் பிரதானச் சம்பவமும் அது வெளியிடப்படும் தருணங்களும் இரட்டைச்சாத்தியங்கள் கொண்டவை: ரங்கப்பர் தோற்றார்/ஜெயித்தார். ரங்கப்பர் சபையில் தான் தோற்றதாகச் சொன்னது உண்மை/பொய். சாகும்போது ரங்கப்பர் ஜெயித்ததாக லதா சொல்வது உண்மை/பொய். கதையில் உள்ள குறிப்புக்களின் படி ரங்கப்பர் ஜெயித்து, சபையில் பொய் சொல்லி அதை லதா சாகும்போது கணவனிடம் உடைக்கிறாள். இரட்டைச் சாத்தியங்களின் நீட்சியாக, சம்பவம் வெளியிடப்படும் இன்னும் ஒரு தருணம்: கதையின் முடிவில் சாகும்போது லதா தன்னிடம் இதைப்பற்றிப் பேசியதாக நமச்சிவாயம் கிளப்பில் நண்பர்களிடம் சொல்வது உண்மை/பொய். அவர் ஏன் பொய் சொல்ல வேண்டும்? இறுதிவரை அவரால் இந்த வெற்றியை முழுமையாக ஏற்றுக்கொள்ள முடியவில்லை. லதா சாகும்போது இதைப்பற்றிப் பேச முயற்சிக்கிறார். ஆனால் அவள் எதும் சொல்லாமல் இறக்கிறாள். தன் சிறுமையின் எடை அவரை அழுத்துகிறது. அவள் என்ன சொல்லவேண்டும் என்று எதிர்பார்த்தாரோ அதை அவள் சொன்னதாகவே கற்பனை செய்துகொள்கிறார்; ஒரு தண்டணையாக இது அவருடைய குற்ற உணர்ச்சியை நிகர் செய்கிறது. மனித மனம் செயல்படும் விதம் சிக்கலானது என்பதால் அனைத்துச் சாத்தியங்களும் சாத்தியமே. சூதர்கள் இந்தக் கதையைப் பாடிப் பெருக்கினால் எத்தனை வடிவங்கள் நமக்குக் கிடைக்குமோ தெரியாது!
இந்தக்கதையில், நமச்சிவாயம் சவாலுக்குள் இழுக்கப்படும் இடம் நுட்பமானது. பெரும் பணக்காரர்கள் நிரம்பிய சபையில் அவர்களுக்கு நிகராக நிற்க, அவர்களின் கவனத்தைக் கவர அவரிடம் என்ன உள்ளது? ஒழுக்கம், பண்பாடு என்று அவர்கள் விவாதிக்கும்போது, அவர் இந்த வாய்ப்பைப் பயன் படுத்திக்கொண்டு வாதத்தின் உள் நுழைகிறார்; ஆனால் அது விபரீதமான திசையில் சென்றுவிடுகிறது. இன்னொரு கோணத்தில், விவாதத்தின் பொருள் அவரது சுயமதிப்பைச் சீண்டுவதாக அமைகிறது. ரங்கப்பரின் வாதப்படி பணத்தால் எல்லாப் பெண்களையும் வாங்க முடியும். அங்கிருப்பவர்களில் இவரைத்தவிர அனைவரும் பணக்காரர்கள். சமமான ஆயுதம் தாங்கியவர்கள். தாக்குதல் நிகழ்ந்தால் அழிவு இரு பக்கமும் இருக்கும். எனவே தாக்குதல் நிகழ வாய்ப்புக் குறைவு. ஆனால், நமச்சிவாயத்திடம் பணம் இல்லாததால் அவரால் யாருடனும் இந்த விஷயத்தில் மோத முடியாது. ஆனால் அவர்கள் யாரும் அவரிடம் மோதி வெற்றி கொள்ள முடியும். எனவே இந்த வாதம் அவரது முகத்தில் அறைந்து அவரை உள்ளிழுக்கின்றது. அவரிடத்தில் நாம் இருந்திருந்தால் என்ன செய்திருப்போம் என்ற கேள்வியை எழுப்புகிறது.
அன்புடன்,
S பாலகிருஷ்ணன், சென்னை.
***
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 19
18. அரவுக்குறை
புரந்தர முனிவரின் குருநிலையிலிருந்து பாண்டவர்கள் ஐவரும் திரௌபதியும் தனித்தனியாக கிளம்பி நிஷத நாட்டிற்குள் செல்வது நன்று என்று தருமன் சொன்னபோது பீமன் உரத்த குரலில் “நானும் தேவியும் இணைந்தே செல்கிறோம். அல்லது நம்மில் ஒருவர் தேவியுடன் இருக்கட்டும். இதுவரை நாம் அவளை தனியாக விட்டதில்லை” என்றான். தருமன் முகம் சுருங்க “நானும் அதை எண்ணினேன். அவள் இதுவரை மாற்றுரு கொண்டதே இல்லை. தன் புதிய உருவுடன் விழிகளுக்குமுன் அவள் இறங்கிச் செல்லட்டும். இங்கிருந்து நிஷத அரண்மனை வரை சென்று சேர்வது தன்னை உருமாற்றிக்கொள்வதற்கான பயிற்சியாக அமையும்” என்றார்.
பீமன் மீண்டும் சொல்லெடுப்பதற்குள் திரௌபதி “அரசர் கூறுவதே உரியது என்று நானும் எண்ணுகிறேன். என் புதிய முகத்தை நான் தனித்தே பயில விரும்புகிறேன்” என்றாள். பீமன் “ஆனால்…” என்று சொல்லத் தொடங்க “சைரந்திரி ஆணை அறியாத கன்னி. உங்களை கணவனென எண்ணமாட்டாள், இளையவரே” என்றாள் திரௌபதி. பீமன் அவள் சொன்னதை முழுக்க உள்வாங்காமல் சிலகணங்கள் நோக்கிவிட்டு “நீ அவ்வண்ணம் எண்ணினால் நன்று” என்றான். “தன்னை காத்துக்கொள்ள அவள் பழகட்டும், இளையோனே” என்றார் தருமன். பீமன் தலையசைத்தான்.
குருகுலத்தின் முற்றத்தில் எரிந்த எண்ணெய் விளக்கின் ஒளிவட்டத்திற்கு அப்பால் மடியில் வில்லுடன் அமர்ந்திருந்த அர்ஜுனன் “நாம் அரண்மனைக்குத்தான் சென்றாக வேண்டும் என ஏன் எண்ணுகிறோம்?” என்றான். சகதேவன் “நேற்று மாலை அதை மூத்தவர் என்னிடம் கேட்டார். நாம் அரண்மனையில் மட்டும்தான் மறைந்திருக்க முடியும். குடிகளுடன் நம்மால் கலக்க முடியாது. நமது உடல்மொழியும் விழியொளியும் சொற்களும் சிலநாட்களிலேயே நம்மை வேறுபடுத்திக் காட்டிவிடும்” என்றான். “ஆனால் அரண்மனை என்பது அவ்வாறு வேறுபட்டவர்கள் மட்டும் சென்று சேரும் ஓரிடம். அவ்வேறுபாடு அங்கு ஒரு தனித்தகுதியாக கருதப்படும்.”
தருமன் “அதை இளையவன் சொன்னபோது நானும் முழுதுணர்ந்தேன், இளையோனே. பாரதவர்ஷத்தில் நீள்குழலை கால்வரை விரித்திட்டு செல்லும் வேறொரு பெண் இருக்க வாய்ப்பில்லை” என்றார். அர்ஜுனன் “மெய்” என்றபின் எழுந்து “நாம் ஒவ்வொருவரும் எவ்வடிவில் செல்லப்போகிறோம் என்பதை முடிவு செய்துவிட்டோம். எப்படி எங்கு சந்திப்பதென்பதை வகுத்துக்கொள்வோம்” என்றான்.
“நாம் ஒருவரோடொருவர் எவ்வகையிலும் தொடர்புகொள்ள வேண்டியதில்லை” என்றார் தருமன். “குங்கன் என்ற பெயரில் அரசரின் சூதுத் தோழனாகவும் மதியுரைப்பவனாகவும் சென்று சேரவிருக்கிறேன். எனது நூலறிவு அதற்கு உதவும். அங்கிருக்கையில் உங்கள் ஐவரையும் நான் கண்காணிக்கவும் இயலும். அதுவன்றி நம்மிடையே எவ்வித சொல் ஊடாட்டும் தேவையில்லை. ஒவ்வொருவரும் அவரவர் பாதையில் சென்று அங்கு வாழ்வோம். நாம் தனித்திருக்கையிலும் ஐவர் என்றே நம் உள்ளம் எண்ணுகிறது. நம் அசைவுகளில் எஞ்சிய நால்வர் எவ்வண்ணமோ வெளிப்படுகிறார்கள். ஐவரில் இருந்து உதிர்ந்து ஒருவரென்று ஆகாமல் நாம் மாற்றுரு கொள்ள இயலாது, இளையோரே.”
சகதேவன் “ஆம்” என்றான். தருமன் திரௌபதியிடம் “நீ அரசியின் அடையாளத்தை துறக்கலாம். எங்கள் துணைவியென்னும் அடையாளமே துறக்கக் கடினமானது. கன்னியென்றாகி சைரந்திரியென மாறி அதிலிருந்து விடுபட்டாயென்றால் முற்றிலும் பிறிதொருத்தியென்றாவாய்” என்றார். பின்னர் புன்னகையுடன் “ஒருவேளை மீண்டு வர விரும்பாதவளும் ஆகக்கூடும்” என்றார். திரௌபதி புன்னகையுடன் “நான் முயல்கிறேன்” என்றாள். அவர்கள் ஐவருமே அவள் முகத்தை திரும்பி நோக்கி விழிவிலக்கினர்.
சற்றுநேரம் கழித்து சகதேவன் “நாளை கருக்கிருட்டிலேயே நான் இங்கிருந்து கிளம்பலாம் என்று எண்ணுகின்றேன், மூத்தவர்களே” என்றான். “அரிஷ்டநேமி என்னும் பெயரை எனக்கு நான் சூட்டியுள்ளேன். தென்னாட்டுக் கணியர்கள் அமணர்களாகவோ ஆசீவகர்களாகவோதான் இருக்கிறார்கள். ஆகவே ஐயமெழாது.” நகுலன் “கிரந்திகன் என்று என்னை சமைத்துக்கொண்டிருக்கின்றேன். தேர்த்தொழிலும் புரவிநுட்பமும் தேர்ந்தவன், சௌவீரர்களின் நாட்டிலிருந்து வந்தவன்.” பீமன் புன்னகைத்து “ஆம். உன் முகத்தில் மத்ர நாட்டு வண்ணமும் கூர்மையும் உள்ளது. சௌவீரனன்றி பிற எந்த அடையாளமும் உனக்கு பொருந்துவதல்ல” என்றான். நகுலன் “மாற்றுரு கொள்வதற்குக்கூட குறைந்த வாய்ப்புகளையே நம் உடல் வழங்குகிறது” என்றான்.
“வலவன் என்ற பெயரில் அடுமனை புகுவேன். அங்கு மல்லன் என்றும் அறியப்படுவேன்” என்றான் பீமன். “மேலும் குறுகுகிறது மாற்றுருவின் எல்லை. தோள்களை மறைக்கமுடியாது. வயிற்றை பேணியாகவேண்டும்” என்றான் நகுலன் சிரித்தபடி. அவர்களின் நோக்குகளனைத்தும் அர்ஜுனனை நோக்கி திரும்பின. அர்ஜுனன் “எனது காண்டீபத்தை இங்கு எங்கேனும் விட்டுவிட்டு செல்லவேண்டும்” என்றான். “ஆம், அது இருக்கும் வரை நீ விஜயன்” என்றார் தருமன். “இதுவரை வில்லை நீங்கியதில்லை. வில்லில்லாதபோது என்னிலெஞ்சுவது என்ன என்று அறியும் ஒரு தருணம் இது. நன்று” என்றபடி அர்ஜுனன் எழுந்தான். “என்ன பெயர் சூடவிருக்கிறாய்?” என்றார் தருமன். “பிரஹன்னளை” என்றான் அர்ஜுனன். “நீண்ட நாணல் என்று பொருள். நாணலின் குழைவு என்னில் கூடவேண்டும். முதிர்கையில் அம்பென கூர்கொண்டு இலக்கு தேர்வது அது.” சகதேவன் “நளனில் இருந்து அப்பெயரை எடுத்துக்கொண்டீர்கள் என எண்ணினேன்.” என்றான். அர்ஜுனன் புன்னகைத்தான்.
சிலகணங்களுக்குப்பின் தருமன் “அத்தோற்றத்தில் என் முன்னால் வருவதை கூடுமானவரை தவிர்த்துவிடு” என்றார். அர்ஜுனன் “அத்தோற்றத்தில் ஆடியை நோக்கலாகாது என்று சற்று முன்பு வரை எண்ணிக்கொண்டிருந்தேன். ஆடியில் நோக்கி நோக்கித்தான் நான் அதுவாக முடியுமென்று இப்போது தோன்றுகிறது. மூத்தவரே, உங்கள் முன் தோன்றி உங்கள் விழிகளால் முற்றேற்கப்படுகையிலேயே நான் அதுவாக ஆவேன்” என்றான். தருமன் நீள்மூச்சுடன் “இது ஒரு தவக்காலமென்றே தோன்றுகிறது. இதில் உழன்று மறுகரை தொடுகையில் நாம் அறியக்கூடுவன அனைத்தையும அறிந்திருப்போம். அதைவிட துறக்க வேண்டியன அனைத்தையும் துறந்திருப்போம்” என்றார்.
சகதேவன் “நாம் மீண்டும் சந்தித்து விடைபெறப்போவதில்லை, மூத்தவரே” என்று எழுந்து சென்று தருமன் காலடிகளைத் தொட்டு சென்னி சூடினான். “அப்பெயர் சூட ஏன் தோன்றியது இளையோனே?” என்றார் தருமன். “நான் என்றும் அப்பெயரிலிருந்து விலகியதில்லை, மூத்தவரே” என்றான் சகதேவன். “இவையனைத்திலிருந்தும் நான் ஆற்ற வேண்டியதை முடித்துவிட்டேன் என்றால் இங்கிருந்து கிளம்பி அப்பெருந்தவத்தார் வாழ்ந்த ரைவதமலைக்கே செல்வேன். அவர் இருந்த குகைக்குள் சென்றமர்வேன். ஆற்றியவை அடைந்தவை அனைத்தையும் இன்மை செய்து அவரேறிய முழுமையின் ஒரு துளியையேனும் நானும் அடைவேன்.” தருமன் உளம் கனிந்து அவன் தோளில் கைவைத்து “நீ அதுவாவாய், இளையோனே” என்றார்.
இரவில் தங்கள் குடிலுக்குச் சென்றதும் சகதேவன் நகுலனிடம் விடைபெற்றுக்கொண்டான். இயல்பான குரலில் “புலரியில் நாம் சந்திக்கப் போவதில்லை” என்றான். நகுலன் குழப்பமாக “ஏன்? நானும் உடனிருக்க நீ விடைபெற்றாலென்ன?” என்றான். “நான் சூடிக்கொண்ட பெயருக்கேற்ப கிளம்பிச் செல்லவிருக்கிறேன், மூத்தவரே” என்றான் சகதேவன். நகுலன் சிலகணங்களுக்குப் பின்னால் “இளையோனே, அவ்வாறு முற்றறுத்து கிளம்பிச் செல்ல மானுடருக்கு இயலுமா என்ன?” என்றான். சகதேவன் “இயன்றிருக்கிறது. நேமிநாதர் அவ்வாறு கிளம்பிச் சென்றார்” என்று சகதேவன் சொன்னான்.
“ஆம். ஆனால் மெல்ல அவரை கதையென திருவுருவென மாற்றி நம்புவதற்கு அப்பால் எங்கோ வைத்துவிட்டார்கள். தெய்வமென அவரை நம்பலாம். மானுடரென ஏற்பது கடினம்” என்றான் நகுலன். சகதேவன் “அறியேன். ஆனால் இந்தப் பெயருடன் அவரென சிறிது காலம் என்னை நடிக்கலாமென்றிருக்கிறேன். அதனூடாக ஒரு சிறு சாயல் என்மீது படியுமென்றாலும் நான் ஈட்டும் பெருஞ்செல்வம் அது என்றே கொள்வேன்” என்றான். “நன்று சூழ்க!” என்றான் நகுலன்.
இரவு உணவுண்டபின் சகதேவன் நகுலன் அருகே படுத்துக்கொண்டான். ஒரு சொல்லும் உரையாடாமல் ஒருவரை ஒருவர் உணர்ந்தபடி அவர்கள் நெடுநேரம் படுத்திருந்தனர். பின்னர் சகதேவனின் துயிலோசையைக் கேட்டபடி நகுலன் தன் எண்ணங்களுடன் தனித்து விழித்திருந்தான். புலரியில் இவனை நான் பார்க்கப் போவதில்லை. அன்னையைப் பிரிந்த நாள் முதல் ஒருபோதும் பிரிந்திராதவன். நெடுநாள் பிரிவல்ல. விரைவிலேயே மீண்டும் ஒரே இடத்தில் சந்திக்கப் போகிறவர்கள். ஆனால் அன்று அவன் பிறிதொருவனாக இருப்பான். நானும் பிறிதொருவனாக இருப்பேன். இரு அயல் முகங்கள் ஒன்றையொன்று கண்டுகொள்ளும். ஒருவரையொருவர் வரைந்து எடுக்கும் அவர்கள் எவராக இருப்பார்கள்?
விந்தையான அவ்வெண்ணத்தை எண்ணி அவனே புன்னகைத்துக்கொண்டான். விடியும்வரை துயிலப்போவதில்லை என்றுதான் தோன்றியது. ஆனால் சகதேவனின் சீரான மூச்சு அவனையும் துயிலுக்கு ஆற்றுப்படுத்தியது. எப்போதுமே அவனுடைய உணர்வுகள் சகதேவனின் உணர்வுகளின் நிழலாட்டம் போலவே நிகழ்ந்தன. அல்லது தன் நிழல் அவன். கரிய உடலுக்கு வெண்ணிழல். இருவரும் சேர்ந்தே அடைவது வழக்கம். தனக்கென ஓர் உணர்வு உருவானதே இல்லையா? பின்னோக்கிச் சென்று தேடத்தேட அத்தனை உணர்வுகளிலும் இருவராகவே இருந்ததுதான் நினைவுக்கு வந்தது. சினம், துயர், உவகை அனைத்தும். ஏன் தனிமையைக்கூட. எண்ணத்தை ஓட்டும்தோறும் மிக தனிப்பட்ட ஓர் எல்லைக்குச் சென்று அவன் திடுக்கிட்டு பின்வாங்கிக்கொண்டான்
ஓராண்டு தனிமையில் இருக்கவேண்டும். பாதியாக. உள்ளத்தால். உடலாலும் கூடத்தான். புரண்டு புரண்டு படுத்து அதைக்குறித்தே எண்ணிக்கொண்டிருந்தான். தன் பெயர் என்ன? கிரந்திகன். நூலோன். ஏன் அப்பெயரை தெரிவுசெய்தேன்? அவன் அகம் ஒரு சிலிர்ப்பை அடைந்தது. அது அவனைவிட சகதேவனுக்கே பொருத்தமான பெயர். அவனுக்குத்தான் நான் பெயர் சூட்டியிருக்கிறேன். அவனைத்தான் நடிக்கப்போகிறேன். என்னுள் இருக்கும் நான் வெண்ணிற உடல்கொண்டவன். அவனுக்குள் கரிய சகதேவன் வாழ்கிறானா என்ன? நாளை அங்கே அரிஷ்டநேமிக்குள் கிரந்திகனும் கிரந்திகனுக்குள் அரிஷ்டநேமியுமென வாழவிருக்கிறோமா?
சலிப்புடன் மீண்டும் புரண்டு படுத்தான். இல்லை, அப்பெயரை நான் முழுமையாக ஓர் ஆளுமையாக ஆக்கிக்கொள்ள முடியும். அவன் இல்லாத ஓர் உடல், உள்ளம். புரவிகள் தேர்கள் சூதர்பெண்கள். அவ்வாழ்க்கையில் ஒரு சொல்லைக்கூட நான் இவனிடம் சொல்லப்போவதில்லை. ஓர் எண்ணத்தைக்கூட இவனுடன் இணைத்துக்கொள்ளப் போவதில்லை. ஆம், அதை முயன்றாகவேண்டும். தனித்திருக்க முடியுமா என்று அறிந்தாகவேண்டும். நான் என எஞ்சுவதென்ன என்று. ஒருவேளை போரில்… மெய்ப்பு கொண்டு அவன் உடலை இறுக்கிக்கொண்டு சிலகணங்கள் உறைந்தான். பின்னர் தன்னை மீட்டுக்கொண்டு தொடர்ந்தான். ஒருவேளை அவன் இறந்து நான் எஞ்சினால் எவ்வண்ணம் இருப்பேன் என பயின்றாகவேண்டும். காட்டுக்குச் சென்று மரத்தடி ஒன்றில் அமர்ந்து தவம்செய்து உயிர்விடுவதற்காவது எனக்கென ஏதும் எஞ்சுமா என்று பார்க்கவேண்டும். ஒரு விதையேனும்.
எஞ்சாமலிருக்காது. எவரும் ஆழத்தில் தனியர்களே. ஒரு துளித்தனிமை, தன்னுணர்வின் ஓர் அணு அங்கே எஞ்சியிருக்கும். அதை வளர்த்தெடுக்க முடியும். அந்த எண்ணம் மெல்ல தித்திக்கத் தொடங்கியது. முற்றிலும் தனியாக நடக்கும் அவனை அவனே நோக்கிக்கொண்டிருந்தான். அந்த உருவம் நிழலற்றிருந்தது. தயங்கி காலெடுத்து நீரா நிலமா என்றறியாததுபோல் நடந்தது. பின்னர் கைகளை வீசியது. தலை தூக்கி வானை நோக்கியது. கைகளில் காணாச்சிறகுகள் எழுகின்றன. அதன் கால்கள் தரையிலிருந்து தென்னித் தென்னி எழத்தொடங்குகின்றன. பஞ்சை மென்காற்றென சூழ்வானம் அதை அலைக்கழிக்கவும் தாலாட்டவும் தொடங்குகிறது. அவன் அதை உள்ளக்கிளர்ச்சியுடன் நோக்கிக்கொண்டிருந்தான். ஆனால் எங்கோ அறியாது ஒரு திடுக்கிடலை உள்ளம் அடைந்தது. உடல் பதறத் தொடங்கியது. அவன் திரும்பிப் படுத்து பெருமூச்சுவிட்டான்.
ஆனால் இவன் கிளம்பிச் செல்கிறான். கிளம்பிச் செல்லுதல் என்னும் கனவு நெடுங்காலம் உள்ளூர இருந்திருக்கிறது. இந்தப்பெயரையே முன்னர் தெரிவுசெய்து வைத்திருந்திருக்கிறான் போலும். நெடுங்காலம் இதை ஒரு கரவுப்படைக்கலம் போல கூர்முனையை வருடிக்கொண்டிருந்திருக்கிறான். ஒரு நச்சுச்சிமிழ் போல பட்டில் பொதிந்து வைத்திருக்கிறான். நாளை இருளில் அவன் கிளம்பிச்செல்வது என்னிடமிருந்தா? தான் என தனித்து இருக்க அவனால் இயலுமா? ஒருமுறை பிரிந்த எதுவும் கூடுவதே இல்லை என்பதே பொருள்களின் இயல்பென்று அவன் கற்றிருந்தான். அவ்வாறென்றால் இதுவே இறுதி இரவு. அவன் இருளுக்குள் சகதேவனை கூர்ந்து நோக்கினான். இவன் நாளை இருளில் கிளம்புவது என்னிடம் விடைபெற இயலாதென்று அஞ்சித்தானா? எழுந்து அவன் முன் எரியும் விழிகளுடன் நான் நின்றால் எப்படி கிளம்பிச்செல்வான்? தொப்புள்கொடி அறுத்த குருதி சொட்ட விலகுவானா என்ன?
விழித்தெழுந்தபோது அவன் அடைந்த முதலெண்ணமே அருகே சகதேவன் இருக்கிறானா என்பதுதான். கைநீட்டி தேடாமலேயே இல்லையென்று உணர்ந்து நெஞ்சு திடுக்கிட எழுந்து அமர்ந்தான். அவன் படுத்திருந்த ஈச்சையோலைப்பாய் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. சகதேவன் எப்படி அகன்றிருப்பான் என்று தன் உள்ளத்தில் எண்ணி நிகழ்த்திக்கொள்ள நகுலன் முயன்றான். அவ்வெண்ணத்தையே அகம் மறுத்தது. எழுந்து இருட்டு அடர்ந்துகிடந்த சூழ்சோலையை நோக்கிக்கொண்டிருந்தான். விழிதெளிந்தபோது மரங்களின் கருங்குவைகளும் இலைகளின் விளிம்புகளும் உருவாகி வந்தன. விண்மீன்கள் சரிந்த வானம் இலைத்தழைப்புகளினூடாக துலங்கியது. காற்றே இல்லை. ஒவ்வொன்றும் அசைவற்று ஓவியச் சுவரென சமைந்திருந்தன. நகுலன் நீள்மூச்செறிந்தான்.
கருக்கிருட்டிலேயே குருநிலையிலிருந்து வெளியேறி சோலைக்குள் புகுந்து விண்மீன்களைக்கொண்டு திசைதேர்ந்து தென்மேற்காக சகதேவன் நடந்தான். இருட்டு நரைத்து விழி துலங்க வண்ணங்களும் வடிவங்களும் கொண்டு புலரி எழுந்தது. முகில்களின் விளிம்புகளில் கசிந்த வெளிச்சம் மண்ணை தெளியவைத்தபோது கோதாவரிக்குச் செல்லும் சிற்றாறு ஒன்றின் கரையை அவன் அடைந்தான். அங்கு படித்துறை ஒன்றில் நீர்மருதமரத்தின் வேர்மடிப்புக்குள் அமர்ந்திருந்த முதிய நாவிதனை அணுகி அவனருகே அமர்ந்து “முழுமுடி களைதல்” என்றான். அவன் விழிகள் மாறுபட “தாங்கள் அமணர்த்துறவு கொள்ளப்போகிறீர்களா, உத்தமரே?” என்றான். “ஆம்” என்றான் சகதேவன். “வடக்குநோக்கி அமருங்கள், அதுவே மரபு” என்றான் நாவிதன். சகதேவன் வடக்குநோக்கி மலரமர்வில் கால்மடித்து அமர்ந்துகொண்டான்.
நாவிதன் “என் பெயர் சங்கன். நான் இதுவரை நூற்றுக்கணக்கான அமணர்களுக்கு முழுமழிப்பு செய்துள்ளேன்” என்றான். தன் தோல்பையை எடுத்து கத்தியையும் தேய்ப்புக் கல்லையும் எடுத்து பரப்பினான். படிகாரக்கல் பளிங்குபோல ஒளியுடன் இருந்தது. பனையோலையைப் போன்றிருந்த தேய்ப்புக் கல்லில் கத்தியை தீட்டிவிட்டு சொரசொரப்பான உள்ளங்கையிலதை மீள மீள நீவியபின் சகதேவனின் உச்சித்தலையில் வைத்து “அருகர் புகழ் ஓங்குக!” என்றழைத்துக் கொண்டு கீழ்நோக்கி இழுத்தான். சுருள் முடிக்கற்றையொன்று சகதேவனின் மடியில் உதிர்ந்தது. காட்டுத்தீயில் எரிந்த சருகின் கரிச்சுருள் போல.
மேலும் மேலுமென குழல்கற்றைகள் மடியில் விழுந்தன. காக்கைச் சிறகுகள். காய்ந்த வாகைநெற்றுக்கள். மடியில் கோழிக்குஞ்சுகள் கிடப்பது போலிருந்தது. உயிரின் நுண்துடிப்பு கொண்டது, முற்கணம் வரை நான் என எண்ணுகையில் இணைந்திருந்தது. இன்று பிறிதொன்று. அவன் அதை உதறினான். மண்ணில் விழுந்து கிடந்தது. இப்போதே மட்கத் தொடங்கிவிட்டிருக்கும். ஓரிருநாட்களுக்குள் நாற்றம் கொள்ளும். நாள் சென்றபின் தோண்டிப் பார்த்தால் உப்பென்று எஞ்சும்.
தன் முடியில் அத்தனை நரை இருப்பதை சகதேவன் அப்போதுதான் உணர்ந்தான். தலையை மழித்து முடித்ததும் நீர் அள்ளித்தெளித்து படிகாரத்தைக் கொண்டு வருடினான். மெல்லிய எரிச்சலுடன் வெறுந்தலையை உணர்ந்தான். காற்று அவன் தலையின் தோல் வளைவை தடவிச்சென்றது. தேவையே அற்ற இத்தனை எடையை தன்னுணர்வே இல்லாமல் தலையில் தாங்கியிருக்கிறோம் என்று எண்ணியபோது புன்னகை வந்தது. ஒவ்வொரு கணமும் முடியின்மையை தலையில், முகத்தில் தாடையில் உணர்ந்தான். ஆடைகளைந்த உடலின் விடுதலை போலிருந்தது.
“எழுந்து நில்லுங்கள், உத்தமரே” என்றான் நாவிதன். அவன் எழுந்து நின்றபோது அவன் இடையணிந்த ஆடையை நாவிதன் களைந்து அப்பாலிட்டான். அறியாது திடுக்கிட்டு கையால் அதைப்பற்ற “ஆடைகளைவதே அமணத்தின் முதல்படி, உத்தமரே” என முதுநாவிதன் கரிய பற்களைக்காட்டிச் சிரித்தபடி சொன்னான். “ஆம்” என அவன் திணறியபடி சொன்னான். “முழுதுடல்” என்றான் நாவிதன். “நீங்கள் தேர்ந்த போர்வீரர் என நினைக்கிறேன்.” சகதேவன் “படைக்கலம் பயின்றுள்ளேன்” என்றான். நாவிதனின் கத்தி அவன் உடல்மேல் வருடிச்சென்றது. தூரிகை ஓர் ஓவியத்தை வரைந்தெடுப்பதுபோல அவனை அது தீட்டியது. அவன் உருவம் காற்றில் திரண்டு வந்தபடியே இருந்தது.
“தங்களுக்கு உடன்பிறந்தார் உள்ளனரா, உத்தமரே?” என்றான் நாவிதன். “இல்லை” என்றான் சகதேவன். “இறந்துவிட்டனரா?” என்றான். “ஆம்” என்றான் சகதேவன். “உங்கள் தொப்புள் காட்டுகிறது, இரட்டையர் நீங்கள் என்று. அவர் எப்படி மறைந்தார்?” சகதேவன் சிலகணங்களுக்குப்பின் பெருமூச்சுடன் தன்னைப் பெயர்த்து “போரில்” என்றான். நாவிதன் அவன் முழங்கால்களை மழித்துக்கொண்டிருந்தான். “எவருடனான போரில்?” என்றான். “என்னுடன்” என்றான் சகதேவன். நாவிதன் ஏறிட்டுப்பார்த்தான். கையில் கத்தி கூர் ஒளிர நின்றிருந்தது. “அருகர் அடிபணிக! விடுதலைகொள்க!” என்றபின் அவன் மீண்டும் மழிக்கத்தொடங்கினான். தன் உடலைச் சூழ்ந்து பறந்த காற்றை சகதேவன் உணர்ந்தான்.
சகதேவன் விராடபுரிக்கு பின்னுச்சிப்பொழுதில் சென்று சேர்ந்தான். இடையில் மரவுரி ஆடை அணிந்து முண்டனம் செய்த தலையுடன் கையில் கப்பரையுடன் நடந்த அவனை அருகநெறி வணிகர் வணங்கி தங்களுடன் சேர்த்துக்கொண்டனர். ஒரு பொழுது உணவை உண்டு வெறும் மண்ணில் படுத்து உறங்கி அவன் அவர்களுடன் சென்றான். வணிகர்களில் சிலர் விராடபுரியை அப்போதும் கிரிப்பிரஸ்தம் என்றே சொன்னார்கள். “ஒருகாலத்தில் அந்த மலையின் பெயர் அஸனிகிரி. பின்னர் பரசுராமர் அளித்த இந்திரனின் சிலையை அங்கே நிறுவி அதை கிரிப்பிரஸ்தம் என்றழைத்தனர். நளமாமன்னர் நிறுவிய மாபெரும் இந்திரன்சிலை அங்கிருந்ததாகச் சொல்கிறார்கள். அப்போது அது இந்திரகிரி என்று பெயர் பெற்றது. அன்று மலைவணிகத்தின் மையம் இந்நகர்” என்றார் மூத்தவணிகரான பூர்ணசந்திரர்.
“நளமாமன்னருக்குப்பின் நிஷதகுடிகள் ஒருவரோடொருவர் போரிட்டு ஆற்றல் அழிந்தனர். கீழிருந்து சதகர்ணிகள் பெருகிவந்து அவர்களை வென்றனர். நிஷாதர்கள் சிதறிப்பரந்து பதினெட்டு பெருங்குடிகளாகவும் எழுபத்தி நான்கு சிறுகுடிகளாகவும் ஆகி சதகர்ணிகளுக்கு கப்பம் கட்டலானார்கள். நிஷாதர்களில் பெரியதான சபரர்குடி கிரிப்பிரஸ்தத்தின் கீழே கோதையின் கரையில் மீன்பிடிக்கும் மச்சர்குடியாக நீடித்தது. நூறாண்டுகளுக்குப்பின் அக்குடியில் பிறந்த இரண்டாவது மகாகீசகர் மீண்டும் பிற குலங்களை இணைத்துக்கொண்டு விராடநிஷதசம்யோகம் என்னும் அமைப்பை உருவாக்கினார். அவர்களின் ஊர் இந்திரனின் குன்றுக்குக் கீழே விராடபுரி என்னும் நகரமாக உருவாகி வந்தது. இன்று தென்னகத்தின் மிகத்தொன்மையான பெருநகர் இது. மலைவணிகமையமாகவும் திகழ்கிறது” என்றார் இன்னொரு வணிகரான நாகநாதர்.
விராடபுரி அவ்வளவு பெரியதாக இருக்கும் என்று சகதேவன் எதிர்பார்த்திருக்கவில்லை. முதற்காவல்கோட்டத்தைக் கண்டதுமே அவன் வியப்படைந்தான். மகதத்தின் காவல்மாடங்களுக்கு நிகராக பன்னிரு அடுக்குகளுடன் உச்சிமாடத்தில் ஏழு பெருமுரசுகளுடன், அதற்கடுத்த மாடத்தில் அம்பு தொடுக்கப்பட்ட விற்பொறிகளுடன் நின்றிருந்தது. அதன்கீழே சென்ற அகன்ற சாலை மரப்பாளங்கள் சீராக அடுக்கப்பட்டு சேறும் புழுதியும் எழாது உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அதன்மேல் சகடங்களும் குளம்புகளும் செல்லும் ஓசை அறுபடாது எழுந்துகொண்டிருந்தது.
விராடபுரியை சுற்றிச்சென்ற கோட்டை பனைமர உயரமான கல்லடுக்குக்குமேல் செங்கல்கட்டு கொண்டிருந்தது. அதன்மேல் முகப்புமுற்றத்தை நோக்கியபடி பன்னிரு காவல்மாடங்கள் மழையில் கரிந்த மரக்கூரைகளுடன் மாலைவெயிலில் ஒளிகொண்டு மின்னிச் சரிந்திருந்தன. அங்கு நின்றிருந்த காவலர்களின் வேல்முனைகளும் இரும்புக் கவசங்களும் மின்னின. எட்டு நிரைகளாக தேர்களும் வண்டிகளும் அத்திரிகளும் புரவிகளும் தலைச்சுமையர்களும் கால்நடையர்களும் உள்ளே சென்றுகொண்டிருந்தனர். ஒவ்வொரு நிரையும் வெவ்வேறு சுங்கச்சாவடிகளுக்குள் நுழைந்து மறுபக்கம் வெளியேறின.
சுங்கக்காவலன் சகதேவனைப் பார்த்ததும் ஒருகணம் விழிசுருங்கினான். “நீர் ஷத்ரியரா?” என்றான். “ஆம், படைக்கலம் பயின்றவன்” என்றான் சகதேவன். மேலும் சிலகணங்கள் நோக்கியபின் அவன் திரும்பி முதிய தலைமைக்காவலனிடம் ஏதோ சொன்னான். அவன் “மூடா, அவர் முகமே காட்டுகிறதே. நூலறிந்தவர், அறமுணர்ந்தவர், இங்கிருப்பினும் எக்கணமும் கடந்துசெல்லக்கூடியவர்” என்றபின் சகதேவனிடம் “உத்தமரே, எளியவனின் வணக்கத்தை பெற்றுக்கொள்க!” என்றான். “நலம் திகழ்க! அருகனருள் சூழ்க!” என்றான் சகதேவன். “தங்கள் பெயர் என்ன என்றறியலாமா?” என்றான் முதிய தலைமைக்காவலன். “அரிஷ்டநேமி என்னும் பெயரை சூடிக்கொண்டிருக்கிறேன்” என்றான் சகதேவன்.
சகதேவனின் அருகே நின்ற நாகநாதர் “அனைத்து நெறிநூல்களையும் கற்றிருக்கிறார். கணித்தொழில் சிறந்தவர். அரசர் இவரை சந்திப்பது நன்று” என்றார். அவன் தலைவணங்கி “அவ்வாறே நானும் எண்ணுகிறேன். உத்தமரே, இவரை உங்களுக்கு அணுக்கனாக அனுப்புகிறேன். எங்கள் அரண்மனை புகுந்து அரசரை சந்திக்க உளம்கொள்ளவேண்டும்” என்றான். சகதேவன் “அவ்வண்ணமே ஆகுக!” என்றான். நாகநாதர் “தங்கள் சொல்சூழ்திறம் விராடபுரியின் அரசருக்கு நலமுரைக்கட்டும், உத்தமரே. இத்தனை தூரம் எங்களுடன் தாங்கள் வந்தமைக்கு நாங்கள் நல்வினை ஈட்டியிருக்கிறோம்” என்றார்.
துணைவந்த வீரனுடன் சகதேவன் விராடபுரியின் தெருக்களினூடாக நடந்தான். ஆரியவர்த்தத்தின் பெருநகர் ஒன்றுக்கு நிகராக சீராக நிரைகொண்ட ஏழ்மாட அடுக்குகளும் இருமருங்கும் அணித்தோரணத் தூண்களும் நகர் முழுமையையும் நோக்கும்படி அமைந்த காவல்மாடங்களுமாக விரிந்துகொண்டே சென்றது விராடபுரி. வணிகத்தெருக்களில் வண்ணக்கொப்பளிப்பென நகர்மக்கள் நெருக்கியடித்தனர். விலைக்கூவல்களும் கொள்குரல்களும் உசாவலோசைகளும் கலங்களும் பொருட்களும் முட்டியும் இழுபட்டும் எழுப்பும் அரவங்களும் கலந்து செவிநிறைத்தன.
தெருமுனைகள் முழுக்க அன்னசாலைகள் நிறைந்திருந்ததை சகதேவன் கண்டான். அது உணவுண்ணும் பொழுதல்ல என்றாலும் கூட்டம் செறிந்து உண்ணொலி பெருகி எழுந்துகொண்டிருந்தது. அவை இரவலர்க்கும் அயலவருக்கும் மட்டும் உரியவை அல்ல என்று தெரிந்தது. அங்கே நகர்மக்களும் அன்னசாலைகளில்தான் கூடி உண்கிறார்கள் எனத் தோன்றியது. ஆரியவர்த்தத்தின் நகர்களில் விழவுக்காலங்களில் மதுக்களியாட்டின்போது மட்டுமே திகழும் உவகை அங்கே தெரிந்த அத்தனை முகங்களிலும் நிறைந்திருந்தது. வெண்மலர்கள் செறிந்த தேக்குக்காடு போல நகர்த்திரள் சிரிப்புகளாலானதாக இருந்தது.
அரண்மனைக் கோட்டையை அடைந்தபோது நெடுங்காலம் கடந்துவிட்டதைப்போல உணர்ந்தான். நகரம் என்பது காலப்பரப்பாக மாறியது. முகங்கள், இடங்கள், ஒலிகள் ஒன்றை ஒன்று கவ்வி நீண்டு சுற்றிச்சுற்றி ஒரு கண்டாக ஆகி நிற்பது. அரண்மனைக் கோட்டை வாயிலில் காவலன் அவனை சிற்றமைச்சர் தைவதரிடம் அழைத்துச்சென்றான். அவர் எழுந்து கைகூப்பி வணங்கி “அடிகள் முன் நிற்கும் பேறு பெற்றேன். எங்கள் அரசரை திருவிழிநோக்க உளமருளவேண்டும்” என்றார். “அவ்வாறே ஆகுக!” என்றான் சகதேவன்.
விராடபுரியில் வேதமாமுனிவர்களுக்கு நிகரான வணக்கம் அருகநெறியினருக்கு இருப்பதை சகதேவன் உணர்ந்தான். அவனை அரண்மனை அமைச்சர் முக்தர் எதிர்கொண்டு வரவேற்று கொண்டுசென்றார். “அரசவை கூடியிருக்கிறது, உத்தமரே. தாங்கள் அரசரைக் கண்டு அருட்சொல் உரைத்த பின்னர் தங்களுக்குரிய குடிலுக்குச் செல்லலாம். தாங்கள் விரும்பிய வண்ணம் அனைத்தும் இங்கே அமைத்தளிப்பதை எங்கள் நல்லூழாகக் கருதுவோம்” என்றார்.
அமைச்சர்களும் குடித்தலைவர்களும் கூடிய அவையில் அவன் வரவறிவிக்கப்பட்டதும் காவலன் அழைத்துச்செல்ல சகதேவன் உள்ளே நுழைந்தான். அவையினர் எழுந்து நின்று “அருகனடிகளுக்கு தலை தாழ்த்துகிறோம்” என்று வணக்கச் சொல்லுரைத்தனர். அரியணையில் அமர்ந்திருந்த மகாவிராடரான தீர்க்கபாகுவும் பட்டத்தரசி சுதேஷ்ணையும் எழுந்து “அருகனடி தொழுகிறோம், உத்தமரே” என்று. கைகூப்பி வணங்கினர். தலைமையமைச்சர் விருதர் வணங்கி முகமனுரைத்து அழைத்துச்சென்று அரியணைக்கு வலப்பக்கம் அருகநெறியினர் அமர்வதற்காக அமைக்கப்பட்டிருந்த சாணிபூசப்பட்ட மண்திண்டில் அமரச்செய்தார்.
“அடிகள் இவ்வவைக்கு எழுந்தருளியதனால் அருள்பெற்றோம். கருணைச்சொல் பெறக் காத்திருக்கிறோம்” என்றான் விராடன். சகதேவன் “அரசே, நான் அருகநெறியை ஏற்று சிலநாட்களே ஆகின்றன. நான் அதுவாக முனையும் எளியவன் மட்டுமே. அதற்கப்பால் நான் யாரென்று கேட்கவேண்டியதில்லை. இந்த வணக்கங்கள் அனைத்தும் இந்த உருவுக்கும் இவ்வுருகொண்டு இங்கு அமைந்து நிறைந்தவரும் திகழ்பவருமான அருகநெறியினருக்கே என்று கொள்கிறேன்” என்றான். விராடன் “ஆம், தங்கள் சொல்லை தலைக்கொள்கிறோம்” என்றான்.
“தாங்கள் கணியர் என்றார்கள். நல்லூழாக தாங்கள் அவை நுழையும்போது என் மகளைக்குறித்தே பேசிக்கொண்டிருந்தோம். அவள் வருவாழ்வை கணித்துரைக்கவேண்டும்” என்றாள் அரசி சுதேஷ்ணை. “ஆம்” என்றான் சகதேவன். அரசி திரும்பி தன்னருகே நின்ற சேடியிடம் “இளவரசியை வரச்சொல்க!” என்றாள். அவள் சென்று பட்டுத்திரைக்குப் பின்னால் சென்று அங்கு அமர்ந்திருந்த இளவரசியை அழைத்துக்கொண்டு வந்தாள். “என் மகள் உத்தரை, வரும் ஆவணியில் பதினெட்டு அகவை நிறைகிறது” என்றாள் அரசி.
உத்தரை ஆலிலைவடிவ முகமும், நீண்டுவளைந்த விழிகளும் சிறிய குமிழ்மூக்கும் சற்றே மேலெழுந்து வளைந்த சிவந்த சிற்றிதழ்களும் கொண்டிருந்தாள். மின்னும் கரியநிற உடல். வெண்பட்டாடை அணிந்திருந்தாள். வலச்சரிவுக் கொண்டையில் முத்துச்சரம் சுற்றி கழுத்தில் வெண்முத்து ஆரம் அணிந்திருந்தாள். கைகளில் சங்கு வளையல்கள். சிலம்புகளின் மென்சிணுங்கல் சொல்லழிந்து விழிகள் விரிந்து அமர்ந்திருந்த அவையில் தெளிவாக ஒலித்தது. அவள் வந்து கைகூப்பி நின்றாள். காற்றிலாடிய ஆடையில் அவள் உடலே மெல்லிய மலர்க்கொடி என துவள்வதாகத் தோன்றியது.
“அவள் பிறவிநூலை தங்களிடம் அளிக்கிறேன், உத்தமரே” என்றாள் சுதேஷ்ணை. “வேண்டியதில்லை, முகக்குறிகளே போதும்” என்றான் சகதேவன். “ஆவணிமாதம் ஆயில்யம் நாளில் ஞாயிற்றுக்கிழமை முதற்பொழுதின் முதல்நாழிகை ஏழாவது மணியில் பிறந்தாள். பிறந்த பொழுதுக்கு சற்றுமுன் அரண்மனை அகத்தளத்தில் நாகம் ஒன்று விழிப்பட்டது.”
“ஆம்” என்றாள் அரசி கைகூப்பியபடி. “நன்றும் தீதும் உண்டு அரசி. பெருங்குலம் ஒன்றுக்கு திருமகளாவாள். பெருவீரனை மணப்பாள். அவள் வயிற்றில் பிறக்கும் மகன் பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தி என்றமைவான். அவன் கொடிவழியினர் பாரதவர்ஷத்தை முழுதாள்வார்கள். இந்நிலம் இங்கு உள்ளளவும் இவள் பெயரும் இவள் குடிநிரையினர் புகழும் இங்கு பேசப்படும். இமையமலைகளைப்போல கங்கை நதியைப்போல முக்கடல்முனையைப்போல” என்றான் சகதேவன். அரசியின் கண்கள் கலங்கிவிட்டன.
“ஆனால் அரவுக்குறை கொண்டது இவள் பிறவிநூல். என்றும் இவளுடன் நாகவஞ்சம் தொடரும்” என்றான் சகதேவன். அரசி கூப்பிய கைகள் நடுங்க “அதற்கு மாற்றுசூழ இயலுமா, கணிகரே?” என்றாள். “இல்லை, ஊழ் மருந்தற்ற நோய்” என்றான் சகதேவன். “நாகம் இப்புடவி நெசவின் ஊடுபாவுகளில் ஓடும் அழியாச்சரடு.” பெருமூச்சுடன் “இறையருள் சூழ்வோம். வேறேது செய்ய இயலும்?” என்றான் விராடன். “ஆம், மூதன்னையர் அருளட்டும்” என்றாள் அரசி. விராடன் “உத்தமரே, இங்கு அரண்மனைச் சோலையின் குடிலில் தாங்கள் விரும்பும் காலம் வரை உறைக! உங்கள் சொற்கள் எங்களுக்கு பாதை வெளிச்சமாகுக!” என்றான். “நன்றுசூழ்க!” என சகதேவன் வாழ்த்தினான்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 18
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-5
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-3
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-2
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–45
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–12
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–9
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–8
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–7
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

