Jeyamohan's Blog, page 1631
June 6, 2017
கூலிம் இலக்கிய விழா
கூலிம் நவீன இலக்கியக் களத்தின் ஏற்பாட்டில் கடந்த 2 ஜூன் தொடங்கி 4 ஜூன் வரை கூலிம் சுங்கை கோப் பிரம்மவித்யாரண்யம் மலைச்சாரல் ஆசிரமத்தில் எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களும் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் அவர்களும் வழிநடத்திய மூன்று நாள் நவீன இலக்கிய முகாம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது. நவீன இலக்கியக் களம் நண்பர்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக இலக்கியம், ஆன்மீகம், தத்துவம்,உளவியல், வாசிப்பு என்கிற வகையில் தொடர்ந்து கலந்துரையாடல், சந்திப்புகள், இலக்கிய நிகழ்ச்சிகள் நடத்தி வருகிறார்கள். அவ்வரிசையில் இவ்வாண்டும் நவீன இலக்கிய முகாம் இரண்டாவது முறையாகக் கூலிம் கெடாவில் நடைபெற்றுள்ளது. 91 பங்கேற்பாளர்கள் இம்முகாமில் கலந்து கொண்டனர்.
மூன்று நாள் நவீன இலக்கிய முகாம்- 2017
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
சபரிநாதன் கவிதைகள் 4
2017 ஆம் வருடத்திற்கான குமரகுருபரன் -விஷ்ணுபுரம் விருது பெறுபவர் சபரிநாதன். அவருடைய களம் ஆட்டம் காலம் தொகுதியில் இருந்து சில கவிதைகள்
விழா ஜூன் 10 ஆம் தேதி சென்னையில் நிகழ்கிறது
ஒரு மழைப்பூச்சியை அறிதல்
பழைய அலமாரியிலிருந்தெடுத்த
ஒரு கனத்த தத்துவப் புஸ்தகத்தினடியில்
நசுங்கிக் காய்ந்திருந்தது மழைப்பூச்சியொன்று
அருகே சென்று பார்த்தபோது தான்
அதற்கு ஒரு மண்டை இருப்பது தெரிந்தது
அதில் இரண்டு உணர்கொம்புகள் நீண்டிருந்தன
அதன்கீழே இரு பொடி கன்னங்கருவிழிகள்
வரிவரியாயிருந்த அதன் இரைப்பை புடைத்த பொற்பொதியென மினுங்கியது
சற்றும் எதிர்பார்த்திராதது
அதற்கு தன் உடலைப் போல் இருமடங்கு நீளமான சிறகுகள் இருக்குமென்பது
ஒளிகொள் சிறகுகள்
நின்று பார்வை அகலும்
கணத்தில் காண்கிறேன்
அதற்கு உயிர் இருக்கிறது
நம்மனோர் விதி
கட்டக் கடைசியாகச் சன்னலைத் திறந்துவைத்தது கோடை தான்
தொடர்ந்துவரும் ஒருவருக்கும் திரும்ப தைரியமற்ற ஒருவருக்கும்
இடையே நடந்துகொண்டிருந்தது மழை முன்னொருகாலம்
மீண்டும் சன்னலைத் திறந்தபோது கோடை வந்தது
பருவத்திற்கேற்ப கவிதைகளைப் பகுத்து அடுக்க அடுத்தநாளே அவை குழம்பிவிடுகிறது
மீண்டும் மீண்டும் முயல்கிறேன்
மனப்பாடச் செய்யுளைப் படிக்கும் ஒரு மக்குப்பையனைப் போல
*
இன்று கூதிருக்கான சமிக்ஞை புலப்படுகிறது என்
உள்ளங்கை பற்றக்கூடிய தானியத்தைச் சேகரிக்கிறேன்
இந்நீண்ட துயிலில் நாம் தனித்திருந்தாக வேண்டும்
கார்பொழுதினில் சூளைக்காரக் கிழவரோடும் ,வேனலில் காத்திருக்கும்
மீன்காரச்சிறுவனோடும் ஊறுகாயைப் பகிர்ந்துகொள்கிறேன்
என்றாவது ஒருநாள் அவசரஅவசரமாகக் குடைதைப்பவரைச் சந்திக்கவேண்டியிருக்கிறது
வேறொருநாள் பழைய போர்வையைச் சலவைக்குப் போடவேண்டியுள்ளது
அங்கிருந்த இன்னொரு நண்பர் கூறுகிறார்
‘நீ எழுதிக்கொண்டிருக்கும் இந்தக் கவிதை சுத்த அபத்தமானது’
பின்னிரவில் நடக்கும்படியானது மிதமான போதையில் இலைகள் சலசலக்கும் சாலையில்
முதிய புத்தகத்தின் காகிதங்களென உதிர்ந்த முள்வேலியிலைகள்
சன்னல் கதவை யாரோ ஓங்கியோங்கித் தட்டுகிறார்கள்.திறந்துபார்க்கிறேன்
வெளிர்நீல முழுக்கைச் சட்டையுடுத்தி
மிதிவண்டியில் அமர்ந்தபடி கையசைக்கிறது பசுவெயில்
நான் நம்பத்தொடங்குகிறேன் விதியை (நம் எல்லோரின் விதியும் ஒன்றுதான்)
குழிபறித்துப் பதுங்கின தவளைகள்
முக்குளிப்பானொன்று குளத்தைச் சிதறடித்து
தலைப்பிரட்டைகளை ஒளிக்கும் புளிமரப்பொந்தில்
ஆண்டு பல கழித்துச் சந்திக்கும் விவாகரத்தான ஜோடியைப் போல
நாரைகளும் மாடுகளும் கதிரறுத்த காடுகளில் பேசியபடி நடக்கின்றன பையப்பைய
நாம் காத்திருக்கிறோம் மஞ்சள் வைத்த புத்தாடையைப் பிரிப்பதற்காக
இதுதானே இளவேனில் என்று சந்தேகத்தைத் தீர்த்துக்கொள்வதற்காக
ஏனெனில் நாம் அறிவோம் வலசை விரையும் பறவைகளை அதன்
கூரிய அலகுகளை சின்னஞ்சிறிய வயிறுகளை.தவிர சன்னலோரத்தில்
பிடிவாதமாக நின்றுகொண்டு
காலாகாலத்தைக் கழிக்கும்
ஒரு மரத்தை
***
சிரிப்பு வரும் வரை
சுற்றுச்சுவருக்கு வெளியே கிடக்கும் மலர்களைப் பொறுக்குகிறாள் அம்மா
மினுமினுக்கும் வெள்ளாட்டுக்குட்டியொன்று
முன்னத்தங்கால்களை எழுப்பி இளஞ்செடியில் பசியாற யத்தனிக்கிறது
‘எடுபட்ட கழுத..’
திட்டியபடி கைகளிலிருந்த பூக்களை வீசியெறிகிறாள் அதன்மேல்
காற்று நுழைகிறது யாரோ ஒருவரால் துரத்தப்படுவதைப் போல
ஓடியோடி மீண்டும் குனிந்தெடுக்கிறாள் வீசிய பூக்களை
கழுத்துமணியை ஒரு குலுக்கு குலுக்கிவிட்டு
சாவகாசமாகக் கால்களை உயர்த்துகிறது குட்டி
இத்தனை நடந்துகொண்டிருக்கும் பொழுது அங்கே
அந்த உசந்து தடித்த செண்பகமரம் மலர்களை உதிர்க்கிறது அதுவும்
சுற்றுச்சுவருக்கு வெளியே
***
மூன்றே மூன்று காதல்கள்
1.அப்போது நான் அசைவப் ப்ரியனாக இருந்தேன்
இரண்டு ஜடைப்பின்னல்களுக்கிடையே வானவில்லைக் கட்டித்தொங்கவிடும் அவளும்
நானும் சாப்பாட்டு மேஜையில் எதிரெதிரே அமர்ந்துகொள்வோம்
எனக்குப் பிடித்தமானவை:
புறாக்குஞ்சு ரோஸ்ட்,நெய்யிட்டு வறுத்தெடுத்த ஆட்டு முன்தொடை,
வதக்கிய வெங்காயம் விரவிய சில்லி சிக்கன்,சிகப்புச் சாயம் பூசிய இதழ்கள்,
கோச்சைக்கறி,புழுக்கள், கைப்பற்றிக் கூட்டிச்சென்ற விரல்கள்
நண்டு வறுவல்,நெத்திலிக்கருவாட்டுக்குழம்புடன் பால்கருவாட்டுப் பொரியல்
பொடிப்பொடியாய் நறுக்கப்பட்ட சிறுமூளைத் துண்டுகள்,..
ஓரிரவு நான் அவள் காதைச் சத்தமில்லாமல் வேகவைத்து ருசித்துக்கொண்டிருந்தேன்
அவள் பார்த்துவிட்டாள்
அதற்குப் பிறகு நானவளைப் பார்க்கவில்லை
2.அவள் தான் எனக்கு கற்றுக்கொடுத்தது
பாசித்திரிகளை ஊதித்தள்ளி,கொடியிலைகளை ஒதுக்கிவிட்டு
வழுக்குப்பாறையில் கையூன்றி உடல்கிடத்தி
காட்டுச்சுனையில் நீரருந்த தவிர
அவள் தான் என் மூன்றாவது கண்ணைத் திறந்தாள்
அன்றிலிருந்து என் போஜனப் பட்டியிலை நிரப்பியவை:
தாளித்த கீரைக்கடையல்,கொத்தமல்லித் துவையல்,கத்தரிக்காய் காரக்குழம்பு
அழுகல் தக்காளி,வாழைக்காய் புட்டு,வறுத்த விதைகள்
காளான் குருமா,ஆரஞ்சுத் தொலிகள்,உரிந்துவிழுந்த பட்டைகள்…
துணிமணிகளை மடித்துவைத்த அவள்
ஒருநாள் எங்கள் தோட்டத்தையேக் கூட்டிக்கொண்டு போய்விட்டாள்
அதற்கு எந்தக் காரணமும் தேவைப்படவில்லை
3.அவள் எந்த வகையிலும் சுவாரசியமானவளில்லை ஆனால்
அவள் தான் எனது நான்காவது கண்ணைத் திறந்துவைத்தவள்
இப்போது நான்
முட்டையோடுகளையும்,துருப்பிடித்த ஆணிகளையும்,உடையும் காகிதங்களையும்
தின்றுகொண்டிருக்கிறேன்
***
மத்திமம்
ஏழுவருடங்களுக்கு முன் என் இயற்பியல் ஆசிரியர் சொன்னார்,இப்பிரஞ்சத்தில்
ஒவ்வோர் புள்ளியும் ஒவ்வோர் புள்ளியிடமிருந்து சமதொலைவில் உள்ளது
தப்பியோடும் மானும் துரத்திவரும் பசியும் இருப்பது போல
அப்படித்தான் வசிக்கிறது எனது ஊர்
இரண்டுவிரல்களில் ஒன்றைத் தொடச்சொல்லும் கரத்தின் முன் நின்றுகொண்டு
எனது வீட்டிலிருந்து சமதூரத்தில் இருக்கிறது
மூடப்பட்ட தீப்பட்டியாலையும் ஆளற்ற புதிய பேருந்துநிலையமும்
இதோ இங்கு மின்னோட்டம் அறுந்துபோக எங்கென்று தெரியாத
மெழுகுவர்த்திக்கும் இரண்டு காதலிகளுக்கும் மையத்தில் நான் எனது
சின்ன+சின்ன+சின்ன+சின்ன ஆசைகளும் பாவங்களும்
அப்படி அப்படியே.இந்நள்ளிரவில்
போய்ச்சேரவேண்டிய இடமும் புறப்பட்ட இடமும் சமதூரத்தில் இருக்க
இந்தப் பேருந்து எரிபொருளை முற்றாய்த் தீர்த்துவிட்டிருக்கிறது
சமதொலைவில் நின்றுகொண்டிருக்கும் நாங்கள் கால்சராய்க்குள் கைபுதைத்தபடி
ஒருவரையொருவர் பார்த்துக்கொள்கிறோம்
சொல்வதற்கு எதுவுமேயில்லை என்ற பாவனையில்
நீ சொல்ல வருவதைப் புரிந்துகொண்டேன் என்ற பாவனையில்
***
தூக்கமாத்திரைக்கு ஒரு பாடல்
துய்ய பெண்குரலினாலானது ஆதலால் துயரமானது
இறந்த காதலி வெண்சீலையில் வந்திசைக்கும் பாடலைப் போல் நிராசையானது
மைய்யலில் தோய்ந்தது அச்சமூட்டுவது அதனாலேயே துய்யதானது
தூக்கமாத்திரையை உள்ளங்கை நடுமத்தியில் வைத்துப் பார்ப்பதென்பது
மலைமுகட்டில் நின்று சிறுகுளமொன்றைக் காண்பதானது மேலும்
ஒரு நாளென்பது இருபத்துநான்கு மணிநேரத்தால் ஆனது
நான் முதன்முதலாக தூ.மா வைப் பார்த்த அன்று எந்த இழப்பும் நேர்ந்திருக்கவில்லை எந்தக்
காதலும் முத்தமும் தலைவலியும் இல்லை சின்ன
ஒரு ஆவல் தான் அன்றிலிருந்து
இமையசைப்பின் நீளமுள்ள இரவை ஆட்காட்டி விரலுக்கும் நடுவிரலுக்கும் இடையே
செருகிக்கொள்வேன்.சாம்பல் உதிரவுதிர மார்புக்கூடு ஆழமானது நான் லேசானேன்
அன்றிலிருந்து தூக்கமாத்திரைகளை எண்ணுகிறேன்
மனசுக்குள்
அப்படித்தான் எண்ணிக்கொண்டிருந்தேன்
வேதக்கோயில் மைதானத்தில் ஓர் எலுமிச்சைமாலை வரிசையில் நிற்கும்பொழுது
கிறிஸ்துமஸ் தாத்தா வந்துகொண்டிருந்தார் எனைநோக்கி
எழு ஆறு ஐந்து…
எனக்குப் பொறுமையில்லை இப்போதே பிரிக்கத் துவங்கிவிட்டேன் பரிசை
சிகப்பு குல்லா மங்கிக்கொண்டே வருகிறது.அவர் தந்த தேன்மிட்டாய்களை
விழுங்கித் தண்ணீர் குடிக்கத் தலைசாய்க்கும் ஒருவன் காண்பது
கொய்யெனும் விண்மீன்களை
***
வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்ளுதல்
ஒரு நல்ல குடிமகனை நாய் துரத்துகிறது
கையிலிருந்த மீன் துண்டத்தை எறிந்துவிட்டான்
கவிச்சிவீசும் இரண்டு விரல்களையும் சப்பிக்கொண்டே ஓடுகிறான்
சாவடியில் மக்கள் தங்களுக்குள்ளாகவே பெருமைப்பட்டுக்கொள்கின்றனர்
‘இதோ பாரடி நல்ல குடிமகன்’
அங்கே உயரமான ஒருவனது தலையில் வைக்கப்பட்டிருந்த வெங்காயத்தை
அம்புமுனையால் குறிபார்க்கிறார் சிலர்.அது மதியம்
சாம்பாருக்கடியில் கிடக்கும் கல்லைக்கட்டி மூழ்கடிக்கப்பட்ட மனிதர்களைப் போல
மடிப்புக்குலையாத முழுக்கைச்சட்டையை காற்சட்டைக்குள் சொருகிய அவன்
எனைக் கடந்தபோது
பழைய புத்தகக்கடையில் ஒரு வரலாற்றுப்பாடநூலைப் உருவினேன்
பாதி கிழிந்திருந்த கடைசிப்பக்கத்திலிருந்து அதை வாசிக்கத் துவங்கினேன்
ஒரு லட்சத்து தொண்ணூற்றய்யாயிரம் வருடங்களுக்கு முன் பூமி மனிதரற்று இருந்தது
என்ற வரியோடு நிறைந்த இரவில்
சொப்பனமற்ற ஒரு நீண்ட உறக்கம்
இப்போது தோன்றுகிறது
வரலாற்றிலிருந்து கற்றுக்கொள்வதற்கு மீதமிருப்பது ஒன்றுதான்:
வானம் தலையில் முட்டாமல்
நிலத்தில் கால்களிரண்டையும் பதித்து நடப்பது எப்படி
வரிசையில் நிற்கும் நம்மில் ஒருவன் கழன்றுசென்று
விறைத்துவீங்கிய மதிற்சுவர் மேல் சிறுநீர் கழிக்கிறான்
நாங்கள் அஞ்சுகிறோம் திட்டுகிறோம் பிறகு ஆவலோடு பார்க்கிறோம்
அவன் முடிந்தவரை உயரமாகப் பீச்ச விரும்புகிறான்
கைதட்டுகிறோம் வார்த்தைகளற்று வெறுமனே கூச்சலிடுகிறோம்
தளர்ந்து
கேவிக்
கேவி
இறுதியாகச் சொட்டும் பொழுது அறிகிறோம்
நாம் யாரென்பதை
***
முள்
கனிந்த குலைத்திராட்சையைக் கொய்யும் கரமென
தரையிறங்குகிறது இரவு கருவேலங்காட்டிற்குள்
பகல்முழுதும் எச்சமிட்ட குயில்கள் செட்டையடித்துப் போனபின்
ஓணான்முட்டைகளுக்கென நிழலற்றிய முட்செடி அசைவை நிறுத்துகிறது
முன் ஜென்மத்தில் அது மூன்றுபத்தி வீடு ஒன்றில் வாழ்ந்துவந்தது
பவளமல்லிக்கும் கொடிவீசும் பிச்சிக்கும் மஞ்சள்ரோஜாவிற்குமிடையே
அதிகாலையில் அவற்றோடு உசாவிச்செல்லுமது
களைத்து வீடுதிரும்பி சாய்வுநாற்காலியில் விழுந்து
தன்னுடல்பூத்த முட்கள் ஒவ்வொன்றாய் ஒடித்துப்போடும் ஒவ்வொரு ராவிலும்
இப்போது அதன் வேர்முடி ஒளியைக்கண்டு அஞ்சியோடுகிறது
எந்தச் சாளரமும் எட்டாத தொலைவில் அது தூக்கத்தை விளிக்கிறது
***
கூக்ளி
அவள் உன்னை வெளியேற்ற விரும்புகிறாள்
என நம்பிக் கொண்டிருக்கிறாய்
எத்தனை வேகத்திலும் மூர்க்கதிலும்
தாண்ட முடியாத கோட்டை
எழுப்பியிருக்கிறாய்
உன்னைப் பார்த்தபடியே முத்தமிடுகிறாள் பந்தை
அவள் ஓடிவந்து கொண்டிருக்கிறாள்
பாதுகாப்புக்கென்று கவசங்களைச் சேர்த்து சேர்த்து நீ
யாரெனத் தெரியாவண்ணம் மறைந்துகொண்டாய்
முதல் பந்தில் வெறியேறிவிட்டு நிதானமாக இசை கேட்டபடியே மாதுளம் பழச்சாற்றை
உறிஞ்சலாம் என்று கனாக் காண்பவனே அவளுன்னை வெளியேற்றவே விரும்புகிறாள்
என இன்னும் நம்பிக்கொண்டிருக்கிறாய்
ஓடிவந்துகொண்டிருக்கிறாள் அவள்
தலைக்காப்பு சொட்டிச் சொட்டி கரைய ஆரம்பித்துவிட்டது
பதற்றத்தில் நீ
கிரீஸிற்கு அங்கிட்டும் இங்கிட்டும் அலைந்துகொண்டிருக்கிறாய்
வாசத் திரைச்சீலையென
***
மே
கொசுத்தொல்லையால் அவஸ்தைப்பட்ட ஓரிரவு
எழுந்து வாசற்கட்டில் வந்தமர்ந்தேன்
முற்றத்தில் கட்டப்பட்டிருந்த ஆட்டுக்குட்டி
மே என்றது
நானும் மே என்றேன்
கயிறு இழுபட அருகில்வந்து நின்றது
நான் மே.. என்றேன்
அது மே மேமே என்றது
நிலவிலிருந்து பனி இறங்கிற்று.வெள்ளி சரியத்துவங்கிய பின்னரவில்
அதனிடம் மே சொல்லிவிட்டு வந்து படுத்தேன்
இருட்டுக்குள் நான் செல்வதைப் வெறித்தபடியே மெல்லிசாக
மே என்றது
இப்படியாக எங்கள் நட்பு தொடங்கியது
குலையொடித்துக் கட்டும் சமயங்களில்லாம் அது சிரித்துக்கொண்டே
மே சொல்லும்
வீட்டைவிட்டுக் கிளம்பும்போது நான் தவறாமல் மே மே சொல்லிவிட்டுத்தான்
நடப்பேன்,அதுவும் நெடுந்தூரம் ஓடிவந்து மே மே சொல்லியனுப்பும்
பொழுதுபோகாத மதியங்களில் அது சும்மா மே… என்று கூறும்
நானும் சும்மா மே.. என்பேன்
பிறகு அது மே..மே என்கும்
நானும் மே..மே என்பேன்
அது மேமே மே.. என்றால்
நானும் மேமே மே.. என்பேன்
இப்படியே நாங்கள் விளையாடிக்கொண்டிருப்போம்
அம்மா வந்து தலையில் குட்டுவைக்கும் வரை அல்லது
இலையுருவிய அகத்திக்குச்சியைக் காட்டும்வரை
கொஞ்ச தினங்களுக்கு முன் என் அறைத்தோழனும்
வீட்டைக் காலிசெய்துவிட்டுப் போய்விட்டேன்
இன்று இந்தவூரில் பார்த்தால் ஒரு சின்ன மே சொல்வதற்குக்கூட நாதியில்லை
நேற்று அம்மா தொலைபேசியில் சொன்னாள்
நம்ம குட்டி ராத்திரியெல்லாம் ஒரே ஊளை என்று
ஒத்துக்கொள்கிறேன்
அநேகரிடம் மே கேட்க வேண்டிய ஒரு மனிதன் தான் நான்
***
அக்கா ஒரு முதலை வளர்த்தாள்
வாய்கொப்பளிக்கும் தொலைவில் புழக்கடைக்குப் பின்புறம் ஒரு
கம்மாய் இருந்தது அதில் தான் அக்கா முதலை வளர்த்துவந்தாள்
பள்ளிக்கூடம் விட்டு வருகையில் நீர்ப்பரப்பில் சலனமறுத்த இரண்டு
கண்கள் முளைத்தன,யாருமற்ற வீட்டில் இரண்டு கொலுசுகள் கிடந்தன|
பண்டிகை தினமொன்றில் அக்கா என் விரல்களைப் பற்றி
முதலையின் கரடுமுரடான ஈர நெற்றியைத் தொடச்செய்தாள் நான் பதறியுதற அது
கண்ணைச் சிமிட்டிவிட்டு வாலால் என் கன்னத்தைத் தட்டியபடி முழுகிப் போனது
நான் எவ்வளவோ சொல்லினேன் எங்கள் துருவேறிய செவ்வக ரேடியோப் பொட்டியின்
அத்தனை இரைச்சலுக்குள்ளும் பாட்டைக் கண்டுபிடித்துவிடும் அவளுக்கு எப்படி
முதலைகளைப் பற்றி எதுவுமே தெரியாமல் போனது
சேக்காளிகள் சொர்க் அடித்துக்கொண்டிருக்கும் பொழுதும் எனக்கு
கம்மாய் முழுக்க முதலையின் கண்களே தளும்பும் இருந்தும்
அக்காவின் காலை முதலை கவ்வுவது போன்றும் நானதன் கண்ணைக் குத்தி
காப்பாற்றுவது போன்றும் கற்பனை செய்து செய்து தூங்கிப் போவேன்
அப்படியொரு கடையாமத்தில் பேய்மழை கொட்டக் கொட்ட
விழித்திருந்தேன் வீடு ஒழுக ஆரம்பித்தது, சன்னல்கதவுகள் பிய்ந்தோட
தாழ்வாரம் கரைந்துவிட்டது. மறுகாலை மினுங்கும் ஈரவிறகருகேயிருந்த
என் வீட்டிற்குச் செல்ல ஒரு படகு வேண்டியிருந்தது
மெல்ல உடைகளைக் கழற்றி வேலிப்பொடவில் வைக்க
கம்மாய் ததும்பிக் கிடந்தது
கம்புக்கூட்டில் கைகளை சொருகியபடி படித்துறையில் இறங்கினேன்
நான் அன்று
***
நானுக்கு சுதந்திரம்
சிறுவயதுமுதலே என் நாவை ஒரு கிளியைப் போல் வளர்த்துவந்தேன்
ஒருபோதும் தங்களுக்குள் தொட்டுக்கொள்ள முடியாத
நான்கு இணைகம்பிகளை அதன்முன்னே நட்டுவைத்தேன்
அதற்கு விரல்கள்மேல் அபாரப் பிரியமிருந்தது-கோதுமை மணிகளுக்காக மட்டுமல்ல
நான் அதற்குப் பல அழகான வார்த்தைகளைக் கற்றுத்தந்தேன்
உதாரணத்திற்கு:வணக்கம்,வாழ்க,மூன்றுசுழி அண்பு
வேறுசில எளிய சொற்களைக்கூட அது கஷ்டப்பட்டு கற்றுக்கொண்டது
எ.கா: தர்மம்-அதர்மம்,காலம்-அகாலம்,நேர்கோடு-அநேர்கோடு…
ஒவ்வொரு வாழ்நாளிலும் முக்கியச்செய்திக்கென்று
ஒரு நேரம் ஒதுக்கப்பட்டிருக்கிறது அப்படியொரு தருணத்தில் ஏதோ
ஒரு துச்சன் அதற்கு ஒரு புதுவார்த்தையை அறிமுகப்படுத்திவிட்டு ஓடித்தொலைந்தான்
அன்றிலிருந்து நான் வாசலைத்தாண்டும்போதெல்லாம் இது
‘நானுக்கு சுதந்திரம்…நானுக்கு சுதந்திரம்’ என்று கத்தத் தொடங்கிவிட்டது
வேறென்ன சொல்ல நான்
பைங்கிளியே சுதந்திரம் ஓர் ஈமொய்க்கும் பண்டம் என்பதைத் தவிர
இன்று மாலை நடையில் கண்டேன்
சணல்கயிற்றில் சிகரெட் பற்றவைத்துக்கொண்டிருந்தது ஒட்டகம்
நாக்கு கேட்டது- அதற்கு ஏன் இவ்வளவு உயரமான கழுத்து?
’ஏனெனில் பாலைக்கரையின் நீரோடை அதன் கண்ணுக்கு எங்கிருந்தும் தெரியவேண்டும்’
அருகில் ஒரு பருந்து அடிடாஸ் சப்பாத்துக்கயிற்றை முடிச்சிட்டபடியிருந்தது
‘எங்கே இவ்வளவு தூரம்’
‘சும்மா அப்டியே காத்து வாங்கதான்’
என்னவொரு மோசமான உச்சரிப்பென அலுத்துக்கொள்கிறது நாக்கு
’சகோதரா தண்ணீரைத் தவிர வேறு
எதுவும் எனக்கு வேண்டாம்
என்றெண்ணிய கணங்களில்தாம் நாம் எவ்வளவு ஆனந்தமாக இருந்தோம்’
‘நானுக்கு சுதந்திரம் நானுக்கு சுதந்திரம்’ (ஒற்றைக்காலில் நின்றுகொண்டு)
‘ம்ஹும்….இப்படிவா
வந்து இந்த கையடக்க வென்னிலா கோப்பையின் பாற்கடலுக்குள் குதி’
வேறுவழியில்லை
***
நீர்வழிப்புணை
இடைவேளையின் போது நண்பன் சிரித்துக்கொண்டே சொன்னான்
‘வரும் வழியில் பார்த்தேன்.செவ்வந்தித் தோட்டத்தின் நடுவே ஒரு எருமைமாடு
மும்முரமாக எதையோ தேடிக்கொண்டிருந்தது.ஒரு சாயலில் பார்ப்பதற்கு
உன்னைப் போலவே இருந்தது’
இரண்டு குளிர்பானத்திற்கான விலையை அவன் செலுத்தவேண்டியதாயிற்று
அன்றிரவு விருந்தின் போது நாங்கள் ஒரு முடிவுக்கு வந்தோம்,அதாவது
நம் அளவிற்கு நம் கால்கள் நம்பத் தகுந்தவையல்ல
நம் அளவிற்கு நம் கண்களுக்கு நிதானமில்லை
நம்மைப் போல் செய்துமுடித்தபின் எதையும் யோசிப்பதில்லை நம் கைகள்
ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் சாக்லெட்டுகளும் கரடிபொம்மையும் வாங்கும்
ஒரு மனிதர் குடியிருக்கிறார் (நமது நண்பர்தான்) பக்கத்து ஃப்ளாட்டில்
அவர் அடிக்கொருதரம் சொல்வார்
‘கிழிந்த உள்ளாடைகளைக் காயப்போடுவதுதான் சிரமம்’
அப்போது தன் கைகளிரண்டையும் உயர்த்திக்கொள்வார்
துப்பாக்கிமுனை முன் நிற்கும் ஒருவனைப் போல
பின் கைகளிரண்டையும் சேர்த்துப் பலமாகச் சப்தமெழுப்புவார்
அவ்வளவு தான் என்பதைப் போல
***
விடாப்பிடியான கறைகள்
அவள் தருகிறாள் இருமுனைகள் சீவப்பட்ட சிறு பென்சிலை
தொலைவில் அது பார்ப்பதற்கு அழகாக இருக்கிறது வாழ்க்கையைப் போல
அவன் வரைகிறான்
நான்கு அறைகளும் அநேக வாசல்களும் கொண்ட ஒரு
காலியான இருதயத்தை
தீர்ந்ததென வீசியும் மீண்டும் மீண்டும் பிதுக்கப்படும் பற்பசைக் குழாயைப்
பத்திரப்படுத்தும் ஒருவனுக்குக் காலம்
கண்டயிடமெல்லாம் பொத்தான்களைத் தைக்கும் ஒருத்தியை வழங்கும்போது
அண்ணாந்து விமானத்தை விரட்டியோடும் சிறார்கள் குதூகலிக்கிறார்கள்
நல்லவேளை அது ஒரு மனிதனின் முழுநிழலுக்கு இடம்போதாத சிறிய இதயம்
ஜொலிக்கும் நாணயங்கள் சப்தமிடும் நாணயங்கள் இரண்டு பக்கம் உடைய நாணயங்கள்
சிதறி விழுகின்றன கனமான நாணயங்கள்.அவன் ஓடிப்போய்
வாங்கினான்:ஒரு நூல்கண்டு,ஒரு பென்சில்,ஒரு மினுங்கும் வெள்ளி ப்ளேடு
நான் வெகுநேரம் பார்த்துக்கொண்டிருக்கிறேன்
அது ஒரு காலணி அடிப்புறத்தின் ஓவியம்
அவன் காதில் சொன்னான்
இது என் ஐயாவின் ஐயாவினுடையது
முட்கள் பொதிந்த ரப்பர் செருப்பைத் தவிர வேறெதையும் அது குறிக்கவில்லை என்று
அவள் துள்ளிக் கூச்சலிடுகிறாள்;ஊசியின் காதில் நூல் நுழைந்துவிட்டது போலும்
கிட்டப்பார்வையாளனான நான்
தினசரியின் ஒரு பக்கத்திலிருந்து அடுத்ததிற்குச் செல்வதற்காக
ஓடும் பேருந்தில் ஏறுகிறேன்
நதியில் இறங்குவதைப் போல
தீட்டுத்துணிகளை அடித்துச்செல்லும் நதியில் இறங்குவதைப் போல
***
நான் ஓர் ஆரஞ்சாக விரும்புகிறேன்
உறங்கும் என் சட்டையை அவிழ்ப்பது போல் அம்மா
அச்சுளையைத் திறந்தாள்.ஒரு விதையை எடுத்து
இது நீ என்றாள்.இன்னொரு விதையைக் காட்டி
இது நான் என்றாள்.மற்றொரு விதையும் அங்கிருந்தது
சற்று யோசித்துவிட்டு அவள் சொன்னாள்
‘இதுதான் ஆரஞ்சு விதை’.நாங்கள் அதை
வளாகச் செம்மண் தரையில் புதைத்தோம்.அது
துளிர்க்கவேயில்லை நிறைமனதொன்றின் மௌனமென
நான் முதன் முதலாக ஆரஞ்சைச் சந்தித்தது ஒரு
சாக்குத்துணி போர்த்திய துருவேறிய தள்ளுவண்டியில்
இரண்டு மலைகளுக்கிடையில் சூரியனைப் போல் அது
ஜம்மென்று அமர்ந்திருந்தது பலாக்காய்களின் மேல்
அம்மா அதை வாங்கினாள்;ஒன்று மூனேகால் ரூபாய்
நான் இரண்டு பழங்களைக் கண்களில் ஒற்றி,ஆரஞ்சு
வழியாக உலகத்தைப் பார்த்தேன்.ஆரஞ்சு வானத்தின்
கீழ் ஆரஞ்சுக் கூரைகளும் ஆரஞ்சுத் தெருவும்
முன்செல்லும் அம்மாவைப் பேர்சொல்லிக் கூப்பிட்டேன்.
திரும்பிய அவள் என்னை ஆரஞ்சு வழியாக முறைத்தாள்
வீட்டிற்கு வந்திருந்த ஒரு மாமாவிடம் பழச்சாற்றைக்
கொடுத்தேன்.அவர் அம்மாவின் கண்களைப் பார்த்தபடியே
சொன்னார் ‘ஆரஞ்சு ஓர் எரியும் நிழல்’.உடனே நான்
சொன்னேன் ஆரஞ்சு ஒரு கடல்.அவர் கேட்டார்
அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம்.நான் சொன்னேன்
ஆரஞ்சு ஒரு பாலைவனம்.அவர்களிருவரும் சிரித்தனர்
நான் கூவிக்கொண்டேயிருந்தேன்
ஆரஞ்சு ஒரு அதிகாலை,சாயங்காலம்,மத்தியானம்
கண்ணாடி பார்த்தபடி சீவிய தொலியெடுத்து தன் முகத்தில்
அரக்கித் தேய்த்த அம்மாவை முத்தமிட்டேன்
முகத்தில்.பழத்தைப் பிழிந்து நானென் உடல்முழுதும்
பூசிக்கொண்டேன்.கோபித்த அவள் எனையள்ளி முத்தமிட்டாள்
உடல்முழுதும்.அன்றிலிருந்து ஆரஞ்சைச் சுழற்றி விளையாடத்
துவங்கினேன்.தூங்குகையில் தொடைகளின் நடுவே ஆரஞ்சைப்
பதுக்கிக்கொள்வேன்.அதிலிருந்து கனவுகள் படரும் ராமுழுதும்
அதில் ஆரஞ்சிற்கென்று வனைந்தேன் இரண்டு முலைகளை
ஆரஞ்சு அளவிலான முலைகளை.ஒரு ஆகஸ்ட் மாதத்தில்
அம்மா ஓர் ஆரஞ்சு விதையைப் பெற்றெடுத்தாள்.
அழுகல் வாசம் நிறைந்த இருளறையில் கிடந்த அவளிடம்
சொன்னேன் ’அம்மா நீ ஒரு ஆரஞ்சு’
எனக்குத்தோன்றியது ஒரு கத்தியால் பிரிக்கப்பட்ட இரண்டு
அரைக்கோளங்கள் தாம் நாங்கள் என்று.துமி வித்தியாசமும்
இல்லாத அவை ஒன்றையொன்று பார்த்துக்கொள்கிறதென்று
நான் வேறு நிலத்திற்குச் செல்லவிரும்பினேன்
கையில் எஞ்சிய ஆரஞ்சை சுழற்றினேன்
நான் சொல்லிக்கொண்டேன் இது சுற்றட்டும்
நான் எரியும் நிழலாகும் வரை,காற்றின் தோளேறி
பருவங்கள் போய்த்திரும்பட்டும்.நான் காத்திருக்கிறேன்
காதலறியாத நெஞ்சம் சதா உணரும் பிரிதலோடு
ஒரு புதுப்பொழுதில் ஒளித்துகள் ஒன்று ’ம்..
ஆகட்டும்’ என்று சொல்லும் வரை.அக்கணமே
பாலை போர்த்திய கடலாக இரண்டு முலைகளுடன் அதி
காலையாக மத்தியானமாக சாயும்காலமாக
இரு மலையிடைதனில் சூரியனாக கைக்கெட்டாத
உயரத்தில் தனியாக அழுதுகொண்டும் சிரித்துக்கொண்டும்
நிலத்தை வெறித்து இருக்கும் ஓர் ஆரஞ்சாவேன்.
***
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
வெற்றி -கடிதங்கள் 6
அன்பு ஜெ,
வணக்கம். தங்கள் சமீபத்திய வெற்றி சிறுகதை முன்வைத்து என் பார்வைகள் கீழே:
என் இயல்பு மற்றும் சிறுகதை வாசிப்பின் போதைமையால் பிழையிருக்க வாய்ப்புண்டு.
ஜமீந்தார் காலத்து புனைவு ஆயினும் தங்கள் ஆற்றலால் கிளப் விவரணைகளும், எஸ். ஆர். நமச்சிவாயம் என்ற விற்பனை பிரதிநிதியின் மனவோட்டங்களும் புனைவின் உள்ளே வாசகனை உள்ளே இழுக்க வல்லது. ஆணின் மனோவோட்டம் பதிவாகிய அளவுக்கு அப்பெண்ணின் மனவோட்டம் பதிவாகாமல் இருப்பது பாதி கதையிலேயே முடிவின் போக்கை வாசிப்பவன் உணர்வதால் வாசிப்பில் தொய்வு ஏற்படுவதை தவிர்க்க இயலவில்லை.
கதையே அப்பெண் போவாளா மாட்டாளா என்ற வினாவை வைத்துள்ளதால் இம்முடிவு யூகிக்கும் போக்கிற்கு வாசகன் தள்ளப்படுகிறான, யூகித்தல் சரியான வாசிப்பிற்கு தடை என்றபோதிலும்.
கதையை முடித்தபின் ஏனோ தங்கள் தளத்தில் வந்த கட்டுரை “சில நேரங்களில் சில மனிதர்கள், மீள்பரிசீலனை-சுசித்ரா” உள்ள வரிகள் ஞாபகத்திற்கு வந்தன. “இன்றைய படித்தப்பெண் அவ்வளவு அசடல்ல என்றும், சமூகத்தின் சட்டகங்களுக்குள் தன்னை குறுக்கிக்கொள்பவள் அல்ல என்றும், தனக்கு வேண்டியவற்றை, பாலியல் உட்பட, அமைதியாக, சமூகத்தின் கண்ணில் ஒரு படி கூட இறங்காமல் அடையக்கூடிய சாமர்த்தியம் உடையவளாகவே பார்க்கிறேன். “
சாமர்த்தியத்தில் இன்றைய படித்த பெண் என்ன? அன்றைய பெண் என்ன? காரணங்கள் தான் வேறு!
எனக்கு புரியாதது அந்த இறுதி வரியின் தேவை என்ன என்பதில் தான். “எங்கிருந்தோ ஒரு தனி ஒளி அவள்மேல் விழுந்து கொண்டிருப்பது போலிருந்தது. ” என்ற வரியிலேயே முன்னரே உணர்த்தப்பட்டிருக்கும் ஆசிரியரால்.
தான் இறக்கும் தருவாயில் கூற வேண்டிய அவசியமென்ன? கூறியபின் அல்லது கூறியதாலேயே அவள் வாழ்ந்த 40 ஆண்டு கால வாழ்க்கையின் பொருள் என்ன?
ஆனால் அவள் கூறியதாக சொன்னபின் வாசக மனம் நமச்சிவாயத்தின் மனைவி இறந்ததிற்கு பிந்தைய வாழ்க்கையை அதிர்ச்சியோடு பார்ப்பதற்காகவே இறுதி வரி அமைக்கப்பட்டதா?
கிளப் நண்பர்களிடம் பகிரும் நமச்சிவாயம் இதை நோயில் பிழைத்த மகனிடம் பகிர்ந்தாரா? கதையே அவன் நோயை வைத்துத்தானே ..
அவள் கூறாமல் சென்றிருப்பின் வாசகனுக்கு விடப்பட்ட இடம் அதிகம் இருக்குமா இல்லை கம்மியாகவா?
தங்களின் ஆகச்சிறந்த கதையா என்று கேட்டால், இல்லை ஆசானே என்பதே என் பதில். அது ஏன் என்பதற்கு பதிலை தேடிக்கொண்டிருக்கிறேன்.
அகங்கார விளையாட்டில், முடிவை நோக்கிய கதை வகைமையில் “கெய்ஷா” என் முன்னே நிற்கிறாள்.
நன்றி.
ரமணா சந்துரு
***
அன்புள்ள ஆசிரியருக்கு,
வெற்றி சிறுகதையை இன்று வாசித்தேன். ஒரு வகையில் இப்படித்தானா என்று சாேர்வை அளிக்கிறது. படைப்புகளை வெறும் கதைகளாக அப்புறம் தள்ளி வைக்க முடிந்தால் தேவலை. ஆனால் இயலாது… அது நிகர் வாழ்க்கை. வாசிக்கையில் என் மனம் முதல் முடிவை நாேக்கியே இருந்தது. உங்கள் சூப்பர் ஈகாே விரும்பியது முதல்முடிவு, உங்கள் இட் விரும்பியது இரண்டாம் முடிவு எனக் காெள்ளலாமா? சில தலைமுறைகளுக்கு முந்தையக் கதை என்றாலும் நாம் மனநிலை அளவில், அதுவும் ஆண்பெண் பற்றிய கருத்தாேட்டங்களில் அந்த மனநி லையிலிருந்து வெகுவாக மாறவில்லை. நடைமுறை சாெல்கிறது. அதில்வெகுசில பெண்கள் நல்லவர்கள் எனக் குறிப்பிடுவதிலிருந்து ஆண்களும் அப்படியானவர்கள் என்று புரிகிறது. அப்படியெனில் மானுடமே அப்படியானதா? ஆண்கள் உதவிக்கரம் நீட்டுவது பற்றி ஏமாற்றமே ஏற்படுகிறது. குறிவைத்து அடிக்கும் பாேது இரை என்ன செய்யும்? எந்த நேரமும் பறவையின் கண் எச்சரிக்கை காெள்ள முடியுமா? கதையைப் வாசித்தப்பின் ஆண்கள் பற்றி பாட்டிகள், அம்மாக்கள், அக்காக்கள்… எச்சரித்ததை விட மேலும் எச்சரிக்கை வேண்டும் பாேல. எனில் பார்வை எப்பாேது மாறும்… இல்லை இப்படியனவர்கள் தான் நாமா? ஆதிகுணம். கதையாய் மட்டும் எடுத்துக் காெள்ள முடிந்தால் பரவாயில்லை. நன்றி ஏனெனில் தந்தை இடத்திலிருந்துபெண்களுக்கு அழுத்தமான எச்சரிகை.
அன்புடன்,
கமல தேவி
***
அன்பு ஜெ,
நலம் என்று அறிகிறேன்…
உங்கள் “வெற்றி” சிறுகதையை படித்தேன், பொதுவாகவே பெண் வெறுப்பு அதிகம் உள்ள இந்த சமூகத்தில் – சமீபமாக அவ்வெறுப்பினால் பெண்கள் அடையும் பாதிப்புகள் தான் எத்தனை – இப்படிப்பட்ட ஒரு கதை பெண்களைப்பற்றி மேலும் ஆழமாக எதிர்மறை எண்ணங்களை இச்சமூகத்தில் உருவாக்காதா?
அந்தக்கதையிலுள்ளது போல் நிகழ்வதற்கான சாத்தியங்களைப்பற்றியோ, அது சரியெனவோ தவறெனவோ நான் விவாதிக்க விரும்பவில்லை.. எதைப்பற்றியும் எழுத எவருக்கும் உள்ள உரிமையைப்பற்றியும் நான் சந்தேகிக்கவில்லை… ஆனால், நீங்கள் பேசும் அறத்தின் கீழ் இப்படியாகப்பட்டவை வருமா வராதா என்று நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். ” பொதுவாகவே பெண் வெறுப்பு அதிகம் உள்ள இந்தச் சமூகத்தில் இப்படியான ஒரு கதை தேவைதானா? ”. அல்லது அறம் என்பதும் பெண்களை ஒதுக்கி வைத்து நீங்களெல்லாம் தனியாக இயங்கும் மற்றும் ஒரு தளமா?
என் சிறு எதிர்ப்பை பதிவு செய்ய விரும்புகிறேன்.
அன்புடன்,
மோகனா
***
அன்புள்ள ஜெயமோகன்,
“வெற்றி” நான் வாசித்த சிறந்த சிறுகதைகளில் ஒன்று மட்டுமல்ல, “இதை ஏன்
வாசித்தோம்” என்று நான் சங்கடப்பட்ட சிறுகதைகளிலும் ஒன்று.
சங்கடம். இது கதை முழுவதும் என்னைப் படுத்தி வைத்த ஒரு உணர்வு. மூன்று மாத காலக் கெடு முடிவது வரை நமச்சிவாயத்துக்கு மட்டுமல்ல ;வாசகனுக்கும் சங்கடம்தான். உண்மை அழகானது;உண்மை அருவருப்பானதாக இருக்காது என்று பயிற்றுவிக்கப் பட்டிருக்கிறோம். அனைவரின் முன்னாலும் நிர்வாணமாய் நிற்க நேர்ந்தது போல் சங்கடம்.
மனித மனம் எப்படியெல்லாம் செயல்படக் கூடும் என்று தோலுரித்துக் காட்டியிருக்கிறீர்கள். ஏழைகள் தன்மானம் மிக்கவர்கள்;எதன் பொருட்டும் தன்மானத்தை இழக்க மாட்டார்கள். என்று பேசி குடி போதையில் நமச்சிவாயம் தன் மனைவியின் கற்பை பணயம் வைத்து பந்தயம் வைத்தபின் கதை பதற்றம் கொள்ள வைக்கிறது. மனைவி மீது மரபு சார்ந்த நம்பிக்கை ஒரு புறம். ஐந்து லட்சம் (அரை நூற்றாண்டுக்கு முன்) கிடைத்தால் என்னவெல்லாம் செய்யலாம் என்ற வாய் பிளப்பு ஒரு புறம், மனைவி மேல் துளி சந்தேகம் வந்து போவதும், வென்றாலும், தோற்றாலும் பெரும் பணம் கிடைக்கும் என்று கணக்குப் போடுவதும் எதார்த்தமாக இருக்கிறது. அண்ணன் வீட்டில் பிளக்கப் போகும் வாய்கள் சுகமான கற்பனை.
சில விஷயங்களை சோதித்துப் பார்க்காமல் இருக்கும் வரை நல்லது. நிம்மதி. மனைவிகற்புள்ளவளா? எது வரை தாக்குப் பிடிப்பாள்? தாய் உத்தமியா? நான் இந்த அப்பாவுக்குத் தான் பிறந்தேனா? பெண்ணின் கற்பின் தாங்கு திறன் எவ்வளவு? கடவுள் உண்மையில் உண்டா? இந்த சோதனைகள் எல்லாம் செய்யாமல் இருப்பது நல்லது. எல்லாரையும், எல்லாவற்றையும் இழந்து விடக் கூடும் என்று தர்மருக்குத் தெரியாதா, என்ன? சுய நலம், ஆசை, அப்பாவித்தனம் என்ற மானுட பலவீனங்கள் மட்டுமல்ல-ஊழ். அரசியல் சரி நிலைகள் போல் அறம் சார்ந்த சரி நிலைகளும் உள்ளன.
வெற்றி என்ற தலைப்பே கிண்டல் போல் தோன்றுகிறது. கதையில் ஒவ்வொருவரும் வெற்றி பெற்று விட்டது போல் தோன்றுகிறது. நமச்சிவாயம் தன் மனைவியின் கற்பின் திறத்தால் வெற்றி பெற்றதாக நினைக்கிறார். போனசாக ஐந்து லட்சம் வேறு. லதாவுக்கு மகன் பிழைத்ததில் வெற்றி. , கணவனின் சமூக நிமிர்வைக் காப்பாற்றிய தோற்றத்தை ஏற்படுத்தியதில் வெற்றி. ரங்கப்பருக்கு பிறன் மனை கொண்டதில் வெற்றி. தன் பெண் புரிதல் ரகசியமாகவாவது மீண்டும் சரியானதில் வெற்றி.
ஒரு கோணத்தில் பார்த்தால் எல்லோருமே தோல்வி அடைந்தவர்களாகவும் தோன்றுகிறது. நமச்சிவாயத்துக்கு கற்புக்கரசியின் கணவன் என்ற பெயரும் பெரும் பணமும் கிடைத்தாலும் மனைவி இறக்குந் தறுவாயில் சொன்ன உண்மையால் நொறுங்கிப் போகிறார். தன் சாமர்த்தியத்தால் மகனையும் பிழைக்க வைத்து, தன்னையும், கணவனையும் சமூகத்தின் முன் பொய்யாகவாவது கௌரவமாக நடக்க வைத்த லதாவால் அந்த தகிக்கும் உண்மையைத் தாங்கிக் கொள்ள முடியாமல் தான் சாகுந் தறுவாயில் உண்மையை வெளிப்படுத்துகிறாள். ரங்கப்பருக்கு
அடுத்தவன்மனைவியை அடைவதை விட, அதைப் பற்றி பிறரிடம் பீற்றிக் கொள்வதுதான் பெரிதாக இருக்கும். இந்த கேசில் அந்த பெருமையும் போயிற்று.
எல்லோரும் நல்லவரே. ஒவ்வொருவரிடமும் கொஞ்சம் நேர்மையும். இருக்கிறது. . நமச்சிவாயம் தன் மனைவி மீதுள்ள அசைக்க முடியாத நம்பிக்கை மற்றும் மது போதையால் தான் பந்தயத்துக்கு ஒத்துக் கொள்கிறார். அவ்வப்போது அந்த நம்பிக்கை அசைந்து கொடுத்தாலும் உண்மையை மனைவியிடம் சொல்லி, எச்சரித்து, குறுக்கு வழியில் வெற்றி பெற அவர் விரும்பவில்லை. நேர்மையாக வெற்றி பெறவே விரும்புகிறார். இறுதியில் நண்பர்களிடம் உண்மையைச் சொல்லாமலே விட்டிருக்கலாம் . யாரும் சரி பார்க்கப் போவதில்லை. ஆனாலும் உண்மையைச் சொல்கிறார். சூதாட்டத்தில் மனைவியை பணயம் வைத்த குற்ற உணர்வுக்கு சிறிது ஆறுதல் கிடைக்கிறது போலும். வயதானவர்களால் ரகசியங்களைக் காப்பாற்ற முடியாது. ஏனென்றால் அவர்களுக்கு இழப்புகள் ஏதுமில்லை மகனுக்கு காச நோய் இல்லாவிடில் லதா உண்மையில் வென்றிருப்பாள். ஆனால்களும் இருந்தால்களும் வாழ்வைக் கட்டமைப்பதில்லை. இல்லாவிடில்கள் இதமாகத் தடவிக் கொடுக்க மட்டுமே பயன்படும். தன் ஈடிணையற்ற சாமர்த்தியத்தால் மகனையும், தன்னையும், தன் கணவனையும் குடும்ப கௌரவத்தையும் லதா காப்பாற்றி விடுகிறாள்.
ரங்கப்பர் பணக்கார பொறுக்கி என்றாலும் லதாவின் வேண்டுகோளை நிறைவேற்றுகிறார். கடைசி வரை ரகசியத்தைக் காப்பாற்றுகிறார். நமச்சிவாயத்துக்கு 90 வயது. சுமார் 60 வருடங்களுக்கு முற்பட்ட கதை இது. மேலோட்டமான வாசிப்பில் இது ஏழைகளைக் கொச்சைப் படுத்தும், பெண்களைக் கொச்சைப் படுத்தும் கதை போலத் தோன்றலாம்.. அது உண்மையல்ல.
ரங்கப்பர் கோமளவல்லியை வென்றதைப் பற்றிய உரையாடல் நிகழும் போதுதான் பந்தயப்பேச்சு தொடங்குகிறது. கோமளவல்லியை நாட் ராயன் என்ற பணம்படைத்த ஜமீந்தாரிடமிருந்துதான் ரங்கப்பர் அபகரிக்கிறார். பிரச்னை பணம் மட்டுமல்ல. ரங்கப்பரின் பார்வை நுட்பமானது. “பணத்தால் வெல்ல முடியாத பெண்ணென்று யாருமில்லை. அந்த பணத்தை எப்படி அவளுடைய ஆணவம் புண் படாதபடி கொடுக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்””ஒரு பணக்காரன் நினைத்தால் அடைய முடியாத பெண் என்பவள் பல லட்சங்களில் ஒருத்திதான்”.
அந்தக் காலத்தில் பொருளாதார தற்சார்பு இல்லாததால் பெண்கள் ஆண்களையே சார்ந்து வாழ வேண்டியிருந்தது. கிட்டத்தட்ட பண்டங்கள்தான். பெண் பொறுக்குதல் பணக்காரர்களின் பொழுது போக்காகவே இருந்திருக்கிறது என்பதை நாச்சிமுத்து பாத்திரமும் உணர்த்துகிறது. நமச்சிவாயம் மட்டுமென்ன, உத்தமரா? ஏழைகளின் தன் மானத்தைப் பற்றி பெருமிதம் பேசும் அவருடைய ஐந்து லட்சக் கனவில் ஒரு துளி:”ஐந்து லட்சம் இருந்தால் என் தெருவில் நிற்கும் பெண்கள் அத்தனை பேரையும் நான் வெல்ல முடியும். ஐந்து லட்சத்துக்கு வராதவளாக ஏதாவது பெண் இங்கே இருப்பாளா, என்ன? “
ஆண்களையும் வீழ்த்தி விட முடியும். சதவீதம் தான் வேறுபாடு. காரணம், ஆண்களுக்கு ஆசையை விட ஆணவம் முக்கியம். காஸ்மோபாலிட்டன் க்ளப்பில் பணக்கார பெரிய மனிதர் கள் எல்லோருமே பொறுக்கிகளாகத்தான் இருந்திருக்கிறார்கள். இப்போது மட்டுமென்ன? பெரும் பணக்காரர்கள்தான் பெரும் பொறுக்கிகளாக இருக்கிறார்கள். ஏழைகளுக்கு பொறுக்கித்தனம் கட்டுப் படியாவதில்லை. பொறுக்கித்தனம் இல்லையென்றால் பணம் சேர்ப்பதனாலாய பயனென் கொல்? கஷ்டமாகத் தான் இருக்கிறது. என்ன செய்ய? இப்படி உண்மைகளைத் துகிலுரிந்தால் சங்கடமாக இருக்காதா?
எனக்கு ரங்கப்பர் எவ்வளவோ பரவாயில்லை என்று தோன்றுகிறது. பணக்காரத் திமிர், பெண்களை கிள்ளுக் கீரையாக நினைத்தல், எச்சில் பண்டத்தை விழைதல் போன்ற இழிவுகள், கீழ்மைகள் இருந்தாலும் அவருள்ளும் சில நல்ல தன்மைகள் உண்டு. இவள் படியா விட்டால் நல்லது என்று பல பெண்கள் பற்றி நினைக்கிறார். உறவுக்குப் பின் ஏமாற்றம் தாங்காமல் அழுகிறார். லதாவை அணுகும் போதும் எளிய காமுகனாக இல்லை. லதாவின் வேண்டுகோளை ஏற்கிறார். கடைசி வரை ரகசியத்தைக் காப்பாற்றுகிறார். பந்தயம் போடும் போது மட்டுமே வேட்டைக்குக் கிளம்புகிறார் ராவணனும் எச்சில் பண்டத்தை இச்சித்தவன். நமச்சிவாயமும் இச்சிக்கக் கூடியவன்.
நல்ல சிறுகதை அருளியமைக்கு நன்றி.
ஜெ. சாந்தமூர்த்தி,
மன்னார்குடி.
***
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 14
13. அவைநிற்றல்
விதர்ப்பத்தின் அரண்மனை மிகச்சிறியதென்று முன்னரே உரையாடல்களில் இருந்து புஷ்கரன் அறிந்துகொண்டிருந்தான். விதர்ப்பத்திற்கு வரும்வழியில் சுனைக்கரையில் ஓய்வெடுக்கையில் அவர்கள் பேசுவதை கேட்டுக்கொண்டிருந்தான். “இத்தகைய பெருநிகழ்வை அங்கெல்லாம் எப்படி நிகழ்த்த இயலுமென்று தெரியவில்லை” என்றார் ஸ்ரீதரர். “அது தொன்மையான அரண்மனை அல்லவா?” என்று அவன் கேட்டபோது “தொன்மையான அரண்மனைகள் அனைத்துமே மிகச்சிறியவை” என்றார் நாகசேனர். “ஆனால் தொன்மையான காலங்களில் அனைத்து நிகழ்வுகளும் பெரிதாக அல்லவா நிகழ்ந்திருக்கின்றன?” என்று அவன் கேட்க நாகசேனர் “அவையெல்லாம் தொன்மையான நிகழ்வுகள், அரசே. மரங்கள் வளர்வதைப்போல நிகழ்வுகளும் வளர்ந்து பெரிதாகின்றன” என்றார்.
“அது எப்படி?” என்று கேட்டபின் அவர் தன்னை ஏளனம் செய்கிறார் என்றெண்ணி “சொல்லிப் பெருக்குகிறார்கள் என்கிறீர்களா?” என்றான். “எவரும் அதை பெருக்குவதில்லை. அவை பெருகிக்கொண்டே இருக்கின்றன” என்றபின் நாகசேனர் “பழைய அரண்மனைகளைச் சுற்றி பெரிய முற்றங்கள் இருக்கும். இரண்டு அரண்மனைகளுக்கு நடுவே செண்டுமுற்றம் நன்கு பெரியது என்கிறார்கள். அங்கே விழவை நிகழ்த்தத் திட்டமிட்டிருக்கிறார்கள் என்று எண்ணுகிறேன்” என்றார். “மணத்தன்னேற்புக்கு பந்தல் தேவையல்லவா? இவர்களால் அவ்வளவு பெரிய முற்றத்தை நிரப்பி பந்தலிட இயலுமா என்ன?” “இயன்றிருக்கக்கூடும். அவர்கள் இத்தனை விரைவாக நிகழ்வை ஒருங்கிணைத்திருப்பதனால் பந்தலமைக்க பொழுதிருக்காது. நமது ஒற்றர்கள் சென்றபோது அம்முற்றத்தில் ஒரு தூண் கூட நட்டிருக்கவில்லை” என்று நாகசேனர் சொன்னார்.
புஷ்கரன் எண்ணிய காட்சி உலைந்தது. “திறந்தவெளியில் எப்படி மணத்தன்னேற்பு வைக்க முடியும்?” என்றான். “ஏன்?” என்று நாகசேனர் கேட்டார். “விண்ணிலிருந்து கந்தர்வர்களோ தேவர்களோ வந்து அரசர்களுடன் கலந்துகொள்ளக்கூடுமல்லவா?” என்றான் புஷ்கரன். “வாய்ப்புண்டு. அவ்வாறு விண்ணிலிருந்து எவரேனும் வந்து இளவரசியை கொண்டு சென்றாலும் நன்றுதானோ?” என்றார் நாகசேனர். அவர்கள் தன் சொல்லை ஒரு பொருட்டாக எண்ணவில்லை என்று தோன்றவே புஷ்கரன் சினத்துடன் திரும்பி தன் புரவியை நோக்கி சென்றான்.
ஆனால் நளனுடன் தேரில் அமர்ந்து செல்கையில் தொலைவில் அரண்மனையைப் பார்த்ததும் புஷ்கரன் உணர்வெழுச்சியடைந்தான். அது அவன் எண்ணியதையும்விட மிகச்சிறியதாகவே இருந்தது. அமைச்சர்கள் பலவாறாக சொல்லியபின்னரும்கூட முகடுகளின் நிரைகளும் உப்பரிகைகளும் சாளரங்களும் கொண்ட ஏழடுக்கு மாளிகையை அவன் எதிர்பார்த்திருந்தான். ஆனால் ஒரு ஆள் உயரமுள்ள செங்கல் சுவரால் வளைக்கப்பட்ட அவ்வரண்மனை இரண்டு முகடுகள் கொண்டதாக இருந்தது. உப்பரிகைகளே இல்லை. மரச்சட்டமிடப்பட்ட ஏழு சிறு சாளரங்கள் பெருமுற்றத்தை நோக்கி திறந்திருந்தன. முகப்பு முற்றம் மிகப் பெரிதாக அமைந்து அவ்வரண்மனையை மேலும் சிறிதென பின்னுக்கு தள்ளியது. ஆனால் முதல்கணத்தில் இதுவா என்ற எண்ணம் எழுந்தபின் இங்குதான், இங்குதான் என அவன் உள்ளம் துள்ளத்தொடங்கியது.
செங்கல் பரப்பப்பட்ட முற்றம் நெடுங்காலம் புழக்கத்திலிருந்து கருமை கொண்டிருந்தது. அதில் நடக்கும் வழிகள் தேய்ந்து செந்நிற புண்வரிகள் எனத்தெரிந்தன. முன்னரே வந்துவிட்டிருந்த அரசர்களின் தேர்களும் பல்லக்குகளும் புரவிகளும் நிறைந்து வண்ணம் குழம்பி கொடிகளின் அலைவில் விந்தையான சோலை ஒன்று காற்றில் ததும்புவதாகத் தோன்றியது. தேர் சகட ஒலி மாறுபட அரண்மனை முகப்பை அடைந்ததுமே புஷ்கரன் பதற்றத்துடன் தேரின் நிலைத்தூணைப் பற்றியபடி வெளியே பார்த்தான். அவன் மொத்த உடலும் அருவிக்குக்கீழே நிற்பது போல் அதிர்ந்துகொண்டிருந்தது. விழுந்துவிடக்கூடாதென்ற எண்ணமே அவன் சித்தத்தை நிறைத்திருந்தது.
விதர்ப்பத்தின் சிற்றமைச்சர் ஒருவர் வந்து தேருக்கு கீழே நின்று பணிந்து முகமனுரைக்க நளன் புஷ்கரனை பார்த்தான் புஷ்கரன் மெல்ல நடுங்கிக்கொண்டிருப்பதைக் கண்டு புன்னகையுடன் அவன் தோளில் கைவைத்து “வெளியே சென்று முறைமைச்சொற்களை சொல்க!” என்றான். “ஆம் ஆம்” என்றான் புஷ்கரன். “இறங்குக!” என்றான் நளன். ”என்ன?” என்று புஷ்கரன் கேட்டான். “இறங்கு, இளையோனே” என்று சொன்னதும் பதறி விழுவதுபோல தேரிலிருந்து பாய்ந்திறங்கி தரையில் நின்றான். விதர்ப்பத்தின் சிற்றமைச்சர் சௌபர்ணிகர் அவனுக்கான முறைமைச்சொற்களைச் சொல்லி தலைவணங்கினார். விழித்துக்கொண்டவன் போல திடுக்கிட்டு சுற்றும் நோக்கியபின் “வணங்குகிறேன், உத்தமரே” என்றான். வேறெந்த சொல்லும் எண்ணத்தில் எழவில்லை.
நளன் கைகூப்பியபடி தேரிலிருந்து இறங்கி சௌபர்ணிகரை நோக்கி முகமனும் வாழ்த்தும் உரைத்தான். அவர் அவனை மும்முறை வணங்கி “நிஷதத்தின் அரசரையும் இளவரசரையும் மணம் சூழ் முற்றத்திற்கு வரவேற்கிறோம்” என்றார். நளன் தன் உடைவாளை எடுத்து புஷ்கரனிடம் நீட்ட புஷ்கரன் திரும்பி “இதை நான் இடையில் அணியவேண்டுமா, கையில் உருவிப்பற்றிக்கொள்ள வேண்டுமா, மூத்தவரே?” என்றான். “இடையில் அணிந்துகொள்க! எனது வலப்பக்கமாக நின்றிரு. இனி நீ எச்சொல்லும் உரைக்கவேண்டியதில்லை” என்று தாழ்ந்த குரலில் நளன் சொன்னான்.
புஷ்கரன் விழிகளை சுழலவிட்டபிறகு “மற்ற அரசர்களின் அணுக்கர்கள் வாளை உருவி கையில் பற்றியிருக்கிறார்கள்” என்றான். “ஆம், சிலர் அப்படி செய்கிறார்கள்” என்றான் நளன். “நானும் வாளை உருவிக்கொள்கிறேனே?” என்றான் புஷ்கரன். “அவர்கள் அரசகுடி அணுக்கர்கள் அல்ல” என்றபின் நளன் முன்னால் நடந்தான். புஷ்கரன் ஓரிரு எட்டு நடந்தபின் ஓடிவந்து சேர்ந்துகொண்டு “நம் அமைச்சரும் பிறரும் உடனில்லையா?” என்றான். “அவர்கள் பெருங்குடிகளின் நிரையிலிருப்பார்கள். நாம் செல்லப்போவது அரசநிரைக்கு” என்றான். “அரசநிரை கிழக்கு வாயிலில் அல்லவா?” என்றான் புஷ்கரன். நளன் மறுமொழி சொல்லவில்லை.
புஷ்கரன் நீள்மூச்சுடன் தன்னை எளிதாக்கிக்கொண்டு நாற்புறமும் விழிகளை ஓட்டியபடி நடந்து வந்தான். நடுவே தரையிலிருந்த சிறுகுழியில் கால்புரள நிலை தடுமாறினான். அனிச்சையாக நளன் திரும்பிப்பார்க்க பதறி எட்டு வைத்து அருகே சென்று இணையாக நடந்தான். அப்பால் பெருமுற்றம் முழுக்க ஷத்ரியர்களின் தேர்களே நின்றிருந்தன என்று கொடிகளிலிருந்து தெரிந்தது. அவர்களின் அமைச்சர்கள் பட்டு மஞ்சலிலும் அரசகுடிப் பெண்டிர் வெள்ளிப்பல்லக்குகளிலும் வந்திருந்தனர். படைத்தலைவர்கள் வந்த புரவிகள் பளபளக்கும் இரும்புக் கவசங்கள் அணிந்திருந்தன. கவசம் பூண்ட காவலர்கள் அப்புரவிகளின் அருகே நிரை வகுத்து நின்றிருந்தனர். உலோகக் கவசங்களின் நீரொளி நெளிவுகளில் வண்ணங்கள் கலங்கின.
தெற்கு வாயில் அருகே இருநிரையாக நின்றிருந்த அணிக்காவலர் தலைவணங்கி அவர்களை அணுகிய சுதமகுலத்து சிற்றரசனையும் அவனது இரு அணுக்கர்களையும் அழைத்துச் சென்றனர். அவர்களுக்குப்பின் நளன் சென்றதும் மீண்டும் அதே முகமனும் வாழ்த்தும் உரைக்கப்பட்டது. சிற்றமைச்சர்கள் வணங்கி உள்ளே அனுப்ப நிமித்திகன் “நிஷதர் நளன் அவைபுகுகிறார்” என்று உரக்க அறிவித்தான். புஷ்கரன் “என்ன இது?” என சொல்ல வாயெடுக்க நளன் விழிகளால் அவனை தடுத்தான். அவைக்கு உள்ளே நின்றிருந்த அறிவிப்பு நிமித்திகன் அதை ஏற்று முழங்குவதை புஷ்கரன் கேட்டான்.
அவையில் நிமித்திகர்களின் அறிவிப்பொலியும் அரசர்கள் அவைபுகும் சங்கொலியும் அங்கு நிறைந்திருந்தவர்களின் பேச்சொலியும் சேர்ந்த கார்வை நிறைந்திருந்தது. அந்த ஒலி அவன் அடிவயிற்றை கலங்கச் செய்தது. அது அச்சமா பதற்றமா எதிர்பார்ப்பா என்று அவனுக்குத் தெரியவில்லை. ஆனால் பிறிது எத்தருணமும் தன்னை அத்தனை கிளர்த்தியதில்லை என்று தோன்றியது. இது வரலாற்றுத் தருணம். அவனை உலகம் அறியப்போகும் இடம் இந்தக்களம். நளன் தாழ்ந்த குரலில் “நேர்நோக்கி நட” என்றான். “ஆம்” என்றபின் அவன் இறுக்கமாக உடலை அமைத்து நோக்கை நேராக திருப்பியபடி நடந்தான். இருவரும் மணத்தன்னேற்பு வளாகத்திற்குள் நுழைந்தனர்.
நீள்வட்ட வடிவில் அமைக்கப்பட்டிருந்த அந்த அரங்கிற்கு மேல் பந்தலில்லாமல் வான்திறந்திருந்தது. கிழக்கு வாயிலினூடாக வந்து ஷத்ரியர்கள் அவையமர்ந்து தங்கள் இருக்கை நிரைகளை நிறைத்துக்கொண்டிருந்தார்கள். மேற்கு வாயிலினூடாக விதர்ப்ப அரச குடியினரும் பிறரும் வந்துகொண்டிருப்பதை அறிவிப்புகள் காட்டின. வடக்குவாயிலினூடாக அந்தணர்கள் உள்ளே தங்கள் குருமரபின் கொடிகளுடன் அறிவிப்பு பெற்று உள்ளே வந்தனர். தெற்கு வாயிலினூடாக வந்த பெருவணிகர்களும் குடித்தலைவர்களும் அவைக்குள் இட்டுச்சென்று அமரவைக்கப்பட்டனர். அப்பாலிருந்த நான்கு சிறுவாயில்கள் வழியாகவும் விதர்ப்பத்தின் குடிகள் பெருகிவந்து சூழ்ந்து முகங்களாக நிறைந்துகொண்டிருந்தார்கள். அவர்கள் ஒருவரை ஒருவர் நெருக்கி உரத்த குரலில் ஒருவரையொருவர் அழைத்தும் பேசியும் சிரித்துக்கொண்டிருந்த ஓசையும் வெளியே திரண்டிருந்த வீரர்களின் ஆணைகளும் சகட ஒலிகளும் கலந்த முழக்கம் தன் தோலை முரசுப்பரப்பென அதிரச்செய்வதை புஷ்கரன் உணர்ந்தான்.
நளனை இட்டுச்சென்ற அவைநிலை சிற்றமைச்சர் “தங்கள் பீடம்” என்று ஒன்றை சுட்டிக்காட்டினர். திகைப்புடன் திரும்பிப் பார்த்த புஷ்கரனை நோக்கி விழியமர்த்தியபின் நளன் அந்த எளிய பீடத்தில் சென்று அமர்ந்துகொண்டான். அதில் அவனுடைய கொடியோ குடிச்சின்னமோ இருக்கவில்லை. அவனுக்கு வலப்பக்கமும் இடப்பக்கமும் இரு மச்சர் குடித்தலைவர்கள் அமர்ந்திருந்தனர். எளிய தோலாடை அணிந்து தலைப்பாகைக்குமேல் பறவை இறகுகளைச் சூடி தங்கள் குலஇலச்சினை கொண்ட வளைகோல்களுடன் அமர்ந்திருந்தவர்கள் அரைக்கணம் நளனை திரும்பி நோக்கியபின் விழிகளை விலக்கிக்கொண்டனர்.
நளன் அருகே சிறுபீடத்தில் அமர்ந்த புஷ்கரன் “இது அரசர்களுக்கான நிரை அல்ல, மூத்தவரே” என்றான். “ஆம்” என்றான் நளன். “அப்படியென்றால் தாங்கள் எழுந்து இளவரசியை கோர முடியாது” என்றான் புஷ்கரன். நளன் “பார்ப்போம்” என்றான். “இளவரசி மாலையுடன் அவை நுழைகையில் எதிரில் நிரைநின்றிருக்கும் மணவேட்பர்களில் ஒருவராக தாங்கள் இருக்கமுடியாது” என்றான் புஷ்கரன் மீண்டும். விழிகளைத் தாழ்த்தி மீண்டும் “பார்ப்போம்” என்று நளன் சொன்னான். புஷ்கரன் பெருமூச்சுவிட்டு தன் உடலை தளர்த்தியபடி அவையை நோக்கத்தொடங்கினான்.
புஷ்கரனால் அவைநிகழ்வுகளை முழுமையாக நோக்கமுடியவில்லை. ஏதேனும் ஒரு நிகழ்வை அவன் கூர்ந்து நோக்கத் தொடங்கியதுமே அதில் முழுமையாக ஈடுபட்டு நெடுநேரம் கழித்து பிறிதொரு அசைவாலோ ஒலியாலோ விழித்துக்கொண்டு அங்கு தன் நோக்கை திருப்பினான். அங்கிருந்தவர்களிலிருந்து நோக்கை விலக்க அவனுக்கு பிறிதொன்று தேவைப்பட்டது. தான் எதையும் நோக்கவில்லை என்ற எண்ணமே பதற்றத்தை அளிக்க அவன் மேலும் மேலும் அலைபாய்ந்தான். வேதியர் குழு கூடிநின்று எதையோ பேசிக்கொண்டதை, அனல்கொடைக்கான ஏற்பாடுகளைச் செய்வதில் அவர்கள் அடைந்த பலவகையான குழப்பங்களை நோக்கியவன் விதர்ப்பத்தின் அமைச்சர்கள் கூட்டமாக எங்கோ ஓடுவதை நோக்கி திரும்பினான். அயோத்தியின் அரசன் மாளவனை வணங்கியதும் எழுந்த ஓசை அத்திசை நோக்கி அவனை இழுத்தது.
நிமித்திகன் மேடையேறி வெள்ளிக்கோலை தூக்க அமைதி பரவியபோது அவன் கலிங்கனை நோக்கிக்கொண்டிருந்தான். கலிங்கனின் மணிமுடியில் இருந்த செந்நிற வைரம் அனலென மின்னிக்கொண்டிருந்தது. நெல்லிக்காய் அளவிருக்கும் அது என அவன் எண்ணிக்கொண்டிருக்கையில் நிமித்திகனின் அறிவிப்பு ஒலித்தது. அவன் நிமித்திகனின் மிகப்பெரிய தலைப்பாகையையும் தொண்டைமுழை அசைவதையும் நோக்கிக்கொண்டிருக்கையில் பேரிகைகள் முழங்க கொம்புகள் பிளிறி இணைந்தன. அவன் இசைச்சூதர்களை நோக்கினான். ஒவ்வொருவரும் அரசர்களைப்போல ஆடையணிந்திருந்தனர். நகைகள் அசைவுகளில் ஒளிவிட்டன. “என்ன ஒரு வெறி! பித்தர்களைப்போல. ஆனால் அனைத்து ஓசையும் இணைந்து ஒன்றென ஒலிக்கின்றது” என எண்ணி அவன் விழிதிருப்பியபோது விதர்ப்பன் தன் அரசியுடன் அரியணையில் அமர்ந்துவிட்டதை கண்டான்.
பீமகர் களைத்திருந்தார். கண்களைச்சுற்றி மெல்லிய தசைவளையங்கள் தொங்கின. உதடுகள் உள்மடிந்திருந்தன. அரசியும் துயிலில் இருப்பவள்போல் தோன்றினாள். அமைச்சர்கள் பதற்றத்துடன் அரசரிடம் ஏதோ கேட்டபின் திரும்பி ஓடினர். படைத்தலைவன் வந்து குனிந்து ஏதோ சொன்னான். இன்னொருவனிடம் அவன் ஆணையிட அவன் விரைந்து அகன்றான். பீமகர் ஓர் அமைச்சரை அழைத்து ஏதோ கடிந்துகொண்டார். அரசி அடிக்கடி தன் மேலாடையை சீரமைத்தாள். ஒவ்வொன்றும் பிழையாகவும் குழப்பங்களுடனும் நடந்துகொண்டிருப்பதை காணமுடிந்தது. “எதையும் முழுமையாக திட்டமிடவில்லை இவர்கள்… வெளியே நகரம் இடிந்து விழுந்ததுபோல கலைந்தே கிடக்கும்” என அவன் எண்ணினான். குனிந்து நளனிடம் “ஆணையிட எவருமில்லை என எண்ணுகிறேன்” என்றான். “ஆணையிட பலர் இருக்கிறார்கள்” என்றான் நளன்.
அமைச்சர் மேடையேறி அரச நிகழ்வுகளை அறிவித்தார். அது தொலைவிலிருந்த அவர்களுக்கு கேட்கவில்லை. குரல்பெருக்கவைக்க எந்த அமைப்பும் செய்யப்படவில்லை. காலைவெயில் ஏறிக்கொண்டிருந்தது. இப்படியே போனால் இவர்கள் எரியும் உச்சிவெயிலில்தான் மணத்தன்னேற்பை நிகழ்த்துவார்கள் என்று புஷ்கரன் எண்ணிக்கொண்டான். விதர்ப்பத்தின் எட்டு தொல்குடித்தலைவர்கள் அரசரை வாழ்த்தி தங்கள் கோல்களை அவர் காலடியில் தாழ்த்தினர். அந்தணர் எழுவர் அரசரை கங்கை நீர் தெளித்து தூய்மைசெய்ததும் பொற்தாலத்தில் கொண்டுவரப்பட்ட விதர்ப்பத்தின் மணிமுடியை குடித்தலைவர்கள் எடுத்து அரசருக்கு அணிவித்தனர். முரசுகளும் கொம்புகளும் ஓசையிட்டு சூழ விதர்ப்ப குடிகளின் வாழ்த்துக்கள் அலையலையாக ஒலித்தன. அந்தணர் அரசரை வேதம் ஓதி அரிமலரிட்டு வாழ்த்தினர்.
தொடக்கத்தில் இருந்த ஆர்வம் விலக புஷ்கரன் சலிப்புடன் சாய்ந்து அமர்ந்தான். பீமகரும் அரசியும் ஏழு முனிவர்களின் கால்களை கழுவிய நீரை தலைமேல் தெளித்துக்கொண்டனர். வைரங்களும் பொன்மணியும் கலந்த அரிசியை ஏழு அந்தணர்களுக்கு அளித்து வாழ்த்து கொண்டனர். ஏழு புலவர்களுக்கு பொன் எழுத்தாணியும் ஏழு சூதர்களுக்கு பொன்வளையலும் பரிசளித்தனர். ஒவ்வொரு செயலுக்கும் முரசுகள் நடைமாற்றி ஓசையிட வாழ்த்தொலிகள் எழுந்தன. சடங்குகள் முடிந்து அனைவரும் சென்று அமர்ந்ததும் நிமித்திகர் மணநிகழ்வு நடைபெறப்போவதை அறிவித்தார். மூத்த அமைச்சர் எழுந்து மணத்தன்னேற்பின் நெறிகள் தொன்மையான மகாவாருணஸ்மிருதியின் அடிப்படையில் அமைந்திருப்பதாக அறிவித்து அவற்றை விளக்கினார்.
முதுசூதன் ஒருவன் மேடைமேல் ஏறி வணங்கி ஓங்கிய மணிக்குரலில் விதர்ப்ப இளவரசி தமயந்தியின் சிறப்புகளை சொல்லத்தொடங்கினான். எல்லா பாடல்களிலும் தேவியரைப்பற்றி சொல்லப்படும் சொற்களாகவே அவை ஒலித்தன. விதர்ப்ப அரசகுடியின் பதினெட்டு மூதன்னையர் நிரையின் பெயர்களைச் சொல்லி தமயந்தியின் பெயர் ஏழாவது மூதன்னையாகிய தமையின் நீட்சி என்றும் அம்மூதன்னையரின் வடிவென எழுந்த அவளை மணப்பவரே விதர்ப்பத்தின் மணிமுடிக்குரிய மைந்தனின் தந்தை என்றும் அறிவித்தான். புஷ்கரன் திரும்பி நளனை பார்த்தான். உறைந்த முகத்துடன் அவன் நோக்கி அமர்ந்திருந்தான். முதுசூதன் தமயந்தி அவைபுகவிருப்பதை அறிவித்ததும் அவை பெருங்குரலில் வாழ்த்தொலி எழுப்பியது.
அனைவரும் ஒரு திசையை நோக்குவதை தன்னருகே அமர்ந்திருந்தவர்களின் விழிகளிலிருந்தே புஷ்கரன் உணர்ந்தான். அவன் அத்திசை நோக்கி விழிசெலுத்துவதற்குள் தமயந்தி அவைக்குள் நுழைந்துவிட்டிருந்தாள். விதர்ப்பத்தின் கொடியுடன் மார்புக் கவசமும் தலையில் இறகுமுடியும் அணிந்த சேடி முன்னால் வர, மங்கலத்தாலங்களுடன் ஏழு அணிப்பரத்தையர் தொடர்ந்துவந்தனர். அவையில் நின்றிருந்த இசைச்சூதர் மங்கல இசையெழுப்பினர். தமயந்தியை பார்ப்பதற்காக அனைத்துத் தலைகளும் வெவ்வேறுவகையில் அசைவதை நோக்கி புஷ்கரனின் விழிகள் திரும்பின. அவனருகே அமர்ந்திருந்த மச்சர்கள் அவர்களின் மொழியில் ஏதோ சொன்னார்கள். அது அவன் மொழி போல ஒலித்து, சொற்கள் வேறாக இருந்தன. அவன் மீண்டும் திரும்பியபோது தமயந்தியை கண்டான். வாழ்த்தொலிகளே காற்றாகச் சென்று அவள் அணிந்திருந்த இளநீலப் பட்டாடையை அலையடிக்கச் செய்வதாகத் தோன்றியது.
அவள் அவன் அதுவரை பார்த்திருந்த பெண்கள் எவரிலிருந்தும் முற்றிலும் மாறுபட்டிருப்பதாக முதல் எண்ணம் எழுந்தது. அது என்ன என்று அவன் எண்ணத்தை ஓட்டி சலித்து மீண்டும் அவளையே நோக்கினான். கருஞ்சிலை போல பளபளக்கும் தோல்நிறம். தோழியர் அனைவரைவிடவும் அவள் உயரமாக இருந்தாள். அவள் திரும்பியபோது கன்னவளைவிலும் கழுத்திலும் ஒளிமின்னியது. தோள்கள். அவன் நெஞ்சு படபடத்தது. திரும்பி நளனை நோக்கிவிட்டு சிலகணங்கள் கழித்து மெல்ல விழி திருப்பி அவளை மீண்டும் நோக்கினான். அவள் தோள்கள் மாமல்லர்களுக்குரியவை போல அகன்று பணைத்திருந்தன. இடையும் அவ்வாறு விரிந்திருக்கவில்லை என்றால் அவளிடம் பெண்மையே இல்லை என்று ஆகிவிட்டிருக்கும். அவள் மிக நேராக நடந்தாள். அவன் தன் நெஞ்சோசையை அனைத்து ஒலிகளுக்கும் மேல் கேட்டான். அதுதான் அவளை தனித்துக்காட்டுகிறது. இடை ஒசிகிறது. பெரிய தொடைகள் ஆடைக்குள் எழுந்தமைகின்றன. ஆனால் அலையற்ற நீரில் செல்லும் அன்னம்போல அவள் நடந்தாள்.
அவன் அவையிலமர்ந்திருந்த அரசர்களை பார்த்தான். அனைவர் விழிகளும் அவளை நோக்கி நிலைகொண்டிருந்தன. மகதன் மெல்ல அசைந்து மீசையை இடக்கையால் நீவினான். அவர்கள் ஒருவரை ஒருவர் ஓரவிழியால் நோக்கிக்கொண்டிருந்தனர் போலும். அவ்வசைவால் கலைந்து கலிங்கனும் அசைந்தமர்ந்தான். வங்கன் தன் குழலை அள்ளி தோளுக்குப்பின் சரித்தான். கலிங்கன் மெல்ல சரிந்து தன்னருகே அமர்ந்திருந்த மைந்தனிடம் ஏதோ சொன்னான். அவன் தலையசைத்தான். தமயந்தி அவைநடுவே வந்து நின்று மூன்று திசைகளையும் நோக்கி கைகூப்பி வணங்கினாள். அமைச்சர் அவளருகே சென்று அவள் செய்யவேண்டியவற்றை சொல்ல அவள் பீமகரையும் அரசியையும் வணங்கிவிட்டு தனக்கான பீடத்தில் அமர்ந்தாள்.
வைதிகர்கள் மேடையேறிச்சென்று வேதம் ஓதி கங்கை நீர் தெளித்து அவளை தூய்மைப்படுத்தினர். குடிமூத்தவர் அரிமலரிட்டு வாழ்த்த அவள் அவர்களை வணங்கி மலர்கொண்டாள். மூதன்னையர் அவளுக்கு நெற்றியில் குங்குமம் இட்டு வாழ்த்துரைத்தபோது சேடியர் குரவையிட்டனர். புஷ்கரன் அதற்குள் சலித்துவிட்டிருந்தான். நிஷதத்திலும் அன்றாடம் அவன் அரசநிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுண்டு. குலக்குழு வழிபாட்டுச் சடங்குகள் நீளமானவை. ஆனால் அவை இதைப்போல சலிப்பை அளிப்பதில்லை. அவற்றுடன் உணர்வுபூர்வமான ஈடுபாடில்லை என்றால் இப்படி சலிக்குமோ? ஆனால் இச்சடங்குகள் அனைத்தும் ஏறத்தாழ ஒன்றுபோலிருக்கின்றன. அனைவரும் ஏதோ ஒருகாலகட்டத்தில் ஒன்றாக இருந்திருக்கவேண்டும் என அவன் எண்ணிக்கொண்டான்.
குடிமூத்தார் மூவர் கொண்டுவந்து நீட்டிய தாலத்தில் இருந்து செம்மலர்மாலை ஒன்றை அரசரும் அரசியும் சேர்ந்து கைதொட்டு எடுத்து தமயந்தியின் கையில் அளித்தனர். புஷ்கரன் அவள் அந்த மாலையை கையிலேந்தியபடி இரு படிகளில் கால் வைத்து இறங்குவது வரை ஒன்றையும் எண்ணவில்லை. ஒரு கணத்தில் அதுதான் மணமாலை என உணர்ந்ததும் அவன் உடல் மெய்ப்பு கொண்டது. நெஞ்சு உறைந்து கல்லென்றாகி அதற்குள் சொற்களும் மூச்சும் சிக்கிக்கொண்டன. நளன் அவனை அழைப்பதை சில கணங்களுக்குப்பின்னர்தான் அவன் அறிந்தான். செவிகுனித்து “ஆணையிடுங்கள், மூத்தவரே” என்றான். நளன் சொன்னது அவனுக்கு கேட்கவில்லை “என்ன?” என்றான்.
“நான் எழுந்து வெளியேறும் வாயிலருகே சென்று நிற்பேன். இளவரசி இந்த இடத்துக்கு வந்ததும் நீ என் உடைவாளுடன் சென்று அவையில் நில். இது நிஷதமன்னனின் உடைவாள் என்று சொல். அவள் என் உடைவாளுக்கு அந்த மாலையை சூட்டுவாள். நீ உடைவாளை உருவிக்கொண்டு அவையில் நின்று தொடர்பவர்களை செறு. உன்னுடன் வஜ்ரகீர்த்தியும் சேர்ந்துகொள்வான். அவைக்குள் காவலர் வாள் உருவமாட்டார்கள். ஆகவே அரசர்களை மட்டும் நீ சிறுபொழுது எதிர்கொண்டால் போதும். இளவரசி ஓடி என்னருகே வருவாள். நான் அவளை அழைத்துக்கொண்டு வெளியே செல்வேன். முற்றத்தில் நாகசேனர் என் புரவிகளுடன் காத்திருப்பார்” என்றான் நளன். அவன் தன் நெஞ்சிடிப்பை முதன்மையாக கேட்டுக்கொண்டிருந்தான். “நான் அவையில் நின்றிருக்கவேண்டுமா?” என்றான். “ஆம், என்ன நிகழ்கிறதென்பதை அரசர்கள் உணர்வதற்குள் நான் அவை நீங்கிவிடவேண்டும். என் புரவியை சென்றடைந்துவிட்டால் எவரும் என்னை பிடிக்கமுடியாது” என்றான் நளன்.
“ஆனால் அரசர்கள் பெருந்திறல் வீரர்கள்… நான் தனியாக எப்படி?” என்றான் புஷ்கரன். “அஞ்சவேண்டியதில்லை. இளைஞர்களை அவர்கள் கொல்ல மாட்டார்கள். அவர்களுக்கு அறைகூவல் விட்டவன் நீயும் அல்ல” என்றான் நளன். “அச்சமில்லை” என்றான் புஷ்கரன். “அவர்கள் விரைவில் என்னை வீழ்த்திவிடுவார்கள்” என்று விழிகளை விலக்கியபடி சொன்னான். “எனக்குத்தேவை மிகச்சிறிய பொழுது. முற்றத்தை அடையவேண்டும். சூதர்கள் புரவிகளை கொட்டகைக்கு கொண்டுசெல்லும் குறுக்கு வழி ஒன்றுள்ளது. அதனூடாக நான் இந்நகரின் கூரைகளுக்குமேல் ஏறிவிடுவேன்.”
மூச்சை ஊதி ஊதி விட்டு நெஞ்சிலிருந்த கல்லை கரைக்கமுயன்றபடி புஷ்கரன் “ஆனால்…” என்றான். “செல்…” என்றான் நளன். “நீ கோரிய வரலாற்றுத்தருணம் இது.” புஷ்கரன் “ஆம்” என்றான். “அவள் காசிமன்னனை கடந்துவிட்டாள்” என்றான் நளன். புஷ்கரனால் எதையுமே பார்க்கமுடியவில்லை. நோக்கு நிலைக்காமல் அத்தனை காட்சிகளும் ஒற்றை அசைவுப்பரப்பென கலந்த வெளி அவன் முன் நின்றது. “செல்” என்றபின் நளன் எழுந்து நடந்து விலகினான். அத்தனை விழிகளும் தமயந்திமேல் இருந்தமையால் எவரும் அவனை நோக்கவில்லை. தமயந்தி மிகமெல்ல நடந்துவந்தாள். கண்ணுக்குத்தெரியாத ஒழுக்கு ஒன்றில் மிதந்துவரும் அன்னம். நான் இப்போது எழவேண்டும். என் குரல் இத்தனைபெரிய அவையில் ஓங்கி ஒலிக்கவேண்டும். என் குரலை மகதனும் கலிங்கனும் மாளவனும் கேட்பார்கள்.
ஆனால் அவனால் அசையமுடியவில்லை. கால்கள் குளிர்ந்திருக்க தொடைகள் மட்டும் துள்ளிக்கொண்டிருந்தன. ஏன் எனக்கு இந்தப்பொறுப்பை அளிக்கிறார்? என்னை அவையில் அவர்கள் வெட்டிப்போடக்கூடும். ஆம், அதுதான் நிகழவிருக்கிறது. மகதனின் அணுக்கப்படைகள் மிக அருகே உள்ளன. தேர்ந்த போர்வீரர்கள் அவர்கள். நாலைந்துபேர் பாய்ந்துவந்தால் அவன் என்ன செய்யமுடியும்? ஏன் வஜ்ரகீர்த்தியை அனுப்பியிருக்கக் கூடாது? தமயந்தி மாளவனைக் கடந்தபோது அவையில் வியப்பொலி எழுந்தது. அங்கனையும் வங்கனையும் அவள் கடந்தாள். மாளவனைக் கடந்த்போது கலிங்கமன்னன் சூரியதேவன் புன்னகையுடன் மைந்தன் அர்க்கதேவனிடம் ஏதோ சொல்ல அவன் சிரித்தான். அவள் கலிங்கனையும் கடந்து நடந்தபோது அவர்கள் திகைப்புடன் பீடங்களின் பிடியைப்பற்றியபடி அமர்ந்திருந்தனர். மகதத்தின் வேளக்காரப்படையினர் சொல்லில்லா உவகைக்குரலெழுப்பினர். அவள் மகதனை ஏற்கவிருக்கிறாள் என எண்ணிய மக்களின் குரல்களும் கலைவொலியாக எழுந்தது.
புஷ்கரனால் எழமுடியவில்லை. கையில் இறுகப்பற்றியிருந்த உடைவாளின் பிடி வியர்வையில் வழுக்கியது. எழுந்தால் அதை நழுவவிட்டுவிடுவோம். எழுந்தால் காலூன்ற முடியாமல் விழுந்துவிடவும்கூடும். அவன் விழிகளுக்கு முன் நீருக்குள் தெரிவதுபோல அக்காட்சி நெளிந்தது. அவள் மகதனை கடந்தபோது அவைமுழுக்க எழுந்த வியப்போசை பெரிய முழக்கமாக சூழ்ந்தது. அவந்தியின் அரசன் அவள் தன்னை நோக்கி வருகிறாள் என எண்ணி எழுந்தான். அவள் அவனையும் கடந்துசெல்ல கூர்ஜரன் தன்னை நோக்கியா என வியந்து அருகிருந்த அமைச்சரை நோக்கினான். அத்தருணத்தில் நளன் வலக்கையை தூக்கி “நான் நிஷத அரசனாகிய நளன். இளவரசிக்கு முன் மணம்கோள் சொல்லுடன் நிற்கிறேன்” என்று கூவியபடி அவைக்குச் சென்று சேதிநாட்டரசனுக்கும் காமரூபனுக்கும் நடுவே நின்றான்.
புஷ்கரன் உடல் நடுங்கிக் குறுக கண்களை மூடியபடி தன் பீடத்தில் அமர்ந்திருந்தான். அவன் கையுடன் சேர்த்து உடைவாளும் அதிர்ந்துகொண்டிருந்தது. அவனைச்சூழ்ந்து பலவகையான குரல்கள் ஏதேதோ கூவின. “இளவரசே, கிளம்புக!” என நாகசேனரின் குரல் கேட்டது. அவன் எழுந்து நோக்கியபோது தமயந்தி தன் மணமாலையை நளன் தோளில் அணிவித்துவிட்டிருப்பதை கண்டான். நளன் அவள் வலக்கையை பற்றிக்கொள்ள அவள் நிமிர்ந்த தலையுடன் அவனுக்கு இடமாக நின்றாள். வஜ்ரகீர்த்தி உருவிய வாளுடன் ஓடிவந்து நளன் அருகே நின்றான்.
ஷத்ரிய அரசர்கள் பெரும்பாலானவர்கள் பீடங்களிலிருந்து எழுந்து நின்றனர். ஆனால் மகதனும் கலிங்கனும் மாளவனும் அசையாமல் நோக்கி அமர்ந்திருந்தனர். அவர்கள் ஏதேனும் சொல்லக்கூடும் என பிறர் எதிர்பார்த்தனர். பீமகர் திகைப்புடன் இரு கைகளும் விரிந்து அசைவழிந்து நிற்க திறந்த வாயுடன் அரசமேடையில் எழுந்து நின்றார். அவரது அமைச்சர்களும் அவரைப்போலவே சமைந்துவிட்டிருந்தனர். அரசி பீமகரின் தோளைப்பற்றி உலுக்கி ஏதோ சொன்னாள். நளன் மகதனை நோக்கியபடி தானும் திகைத்து நின்றான்.
மகதன் எழுந்து “நன்று, நான் விதர்ப்பினி ஓர் ஷத்ரியப்பெண் என எண்ணியே மணம்கொள்ள வந்தேன். அவள் உள்ளத்தால் நிஷாதகுலத்தவள் என அவைமுன் அறிவித்துவிட்டாள். தனக்குரியவனை அவள் அடைந்துள்ளாள். அவளை வாழ்த்துகிறேன்” என்றபின் செல்வோம் என அமைச்சர்களிடம் கைகாட்டியபடி திரும்பினான். அவைநிறைந்திருந்த ஷத்ரியர்கள் வேண்டுமென்றே உரக்க நகைத்தனர். மாளவன் “நிஷாதனே உன் பெண்ணுடன் ஒருநாள் அரண்மனைக்கு வா. உனக்கு அன்னமும் ஆடையும் பரிசிலாக அளிக்கிறோம்” என்றான்.
நளன் தன் உடைவாளை ஓங்கி தரையில் அறைந்த மணியோசை சிரிப்பொலியை வெட்டி அமைதியை உருவாக்கியது. “நான் அனல்குலத்து ஷத்ரியனாகிய நளன். இந்திரகிரியின் அரசன். இங்குள்ள அத்தனை அரசர்களையும் அறைகூவுகிறேன். ஆண்மையுள்ள எவரும் என்னுடன் போரிட்டு இவளை கைக்கொள்ளலாம்” என்றான். “நிஷாதர்களுடன் ஷத்ரியர் நிகர்நின்று போரிடும் வழக்கமில்லை, மூடா. உன்னை தெரிவுசெய்த இழிமகளை இனி ஷத்ரியர் எவரும் அரசியென ஏற்கப்போவதுமில்லை” என்றான் மாளவன். வங்கன் “ஆம், செல்க! உனக்கு உயிர் பரிசளிக்கப்பட்டுள்ளது” என்றான்.
நளனின் கையிலிருந்த வாள் பாம்பின் நாவென துடிப்பதை புஷ்கரன் கண்டான். அவன் மேலும் ஏதோ சொல்ல வாயெடுக்கையில் பீகமர் “முறைப்படி நீ பெண்கொண்டாய். உன்னை இங்கு எவரும் அறைகூவவும் இல்லை. நீ செல்லலாம்” என்றார். தமயந்தி நளன் கையை பற்றியபடி “செல்வோம்” என்றாள். அவர்கள் இருபக்கமும் விலகி வழிவிட்ட குடிகள் நடுவே நடந்தனர். உடல் சினத்தால் நடுங்கிக்கொண்டிருக்க நளன் நடந்தான். அவன் கையைப்பற்றியபடி தமயந்தி தலைதூக்கி அசைவற்ற தோள்களுடன் சென்றாள். வஜ்ரகீர்த்தி உருவிய வாளுடன் தொடர்ந்தான்.
நாகசேனர் புஷ்கரனின் தோளைத் தொட்டு “செல்வோம் இளவரசே” என்றார். “நான்…” என புஷ்கரன் பேசத்தொடங்க “அனைத்தும் எளிதாகவே முடிந்துவிட்டன. பிறகு பேசுவோம்” என்றார் அவர். அவன் கையில் இருந்த வாளை நோக்கினான். அதை வீசிவிட்டுச் செல்லவேண்டும் என எழுந்த எண்ணத்தை அடக்கினான். சூழ்ந்திருந்த விழிகளிலெல்லாம் நகைப்பு இருப்பதாகத் தோன்றியது. ஆனால் அவனை அங்கு எவருக்கும் தெரியாது. அவன் ஆற்றத்தவறியதென்ன என்றும் தெரியாது. அவன் தலைநிமிர்ந்து விழிகளைச் சுழற்றியபடி நடந்தான். ஆனால் முற்றம் வரை செல்வதற்குள் அம்முயற்சியாலேயே களைப்புற்று தோள்தளர்ந்து பெருமூச்சுவிட்டான்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 12
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 13
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 11
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-10
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-9
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-8
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 9
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 16
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 34
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 19
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 31
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-7
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-6
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-5
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-4
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 48
‘வெண்மு
June 5, 2017
ஒளிகொள்சிறகு – சபரிநாதன்கவிதைகள் -ஏ.வி.மணிகண்டன்
பகுதி 1
பொதுவாக தமிழ் இலக்கிய சூழலில், கவிஞர்களுக்கும் எழுத்தாளர்களுக்கும், தத்துவம் மற்றும் கோட்பாடுகளின் மீது ஒரு விதமான விலக்கம் இருக்கிறது. நாம் அதை விட்டு விலகி போனாலும் கூட எங்கோ நிகழும் அந்த விவாதங்கள் நாம் புழங்கும் மொழியை, சூழலை பாதித்து நம் மொழி வெளிப்பாட்டை பாதித்துக் கொண்டுதான் இருக்கின்றன. அப்படி உருவாகும் ஒரு விவாதம் பத்து வருடங்கள் கழித்து இங்கே அலையாக வருவதன் பாதிப்பைதான் சில வருடங்கள் கழித்து நம்மையறியாமலேயே நாம் மொழியில் தொழிற்படுத்துகிறோம். தவிர்க்கவே இயலாத இந்த அலைகளின் விளைவாக இரண்டு விஷயங்கள் நடக்கின்றன. ஓன்று அந்த அலைகளால் நம்மால் பாதிப்படைய மட்டுமே முடிகிறது, தேவைப்பட்டாலும் கூட அதை மீற முடிவதில்லை. இரண்டாவது நாம் அடையும் பாதிப்புகள் குறித்தே நமக்கு எந்த அளவுக்கு தெளிவிருக்கிறது என்பது. தமிழில் ஒரு போதும் இந்த அலை உலகோடு ஒட்டி, சமகாலத்தில் உருவாகியதில்லை என்பதற்கு அறிவுத்துறைகளுடனான இந்த விலக்கமே காரணம். இப்பொழுது முறையான வாசிப்புடனும் அதன் காரணமாக தெளிவான பார்வையுடனும் ஒரு குரல் அப்படி ஒலிக்கத்துவங்கி இருக்கிறது. அந்தக் குரலில் இருக்கிறது இனி வரும் காலத்தின் தமிழ் கவிதையின் முக்கியமான ஒரு திருப்பம் என்று நினைக்கிறேன்.
சென்ற வருடம் இசையை பற்றி ஒரு கட்டுரை எழுதி இருந்தேன். அதை முடிக்கும் பொழுது, “வரலாற்றின் மீதான சிரிப்புடன் இப்படியே கழிய வேண்டிடையதுதானா நம்மடைய வாழ்கை, நமெக்கென்று சொல்வதற்கும் கொள்வதற்கும் ஏதும் இல்லாமல் எதிர்வினையாகவே கழிந்து விடுமோ இருப்பு?” என்று கேட்டு முடித்திருந்தேன். அதற்கு பிறகான இந்த ஒரு வருடமும் இந்த கேள்விகளுக்கான விடைகளை தேடுவதிலேயே சென்றது. நான் வைத்த கேள்விகள் இசையின் கவிதைகளை மட்டுமே முன் வைத்து அல்ல, என்னுடைய தனிப்பட்ட தேடல் சார்ந்ததும் கூட. உண்மையில் நான் படைக்க வேண்டிய அனைத்தும் இசையின் உலகிலிருந்து அதன் மறு முனையில் இருக்கின்றன. மனமோ இசையின் கவிதைகளை மந்திரம் போல உச்சரித்துக் கொண்டே இருக்கிறது. அப்படியெனில் இந்த இரு நுனிகளுக்கும் நடுவே இருப்பது என்ன என்பதை நான் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் இருந்தது. இந்த வாசிப்புகள் வழியே நான் தெளிந்து கொண்டவைக்கும் சபரிநாதனின் கவிதைக்கும் ஒரு கோடு நீள்கிறது. மேலும் சமகால தமிழின் முதன்மை கவிஞன் என்று நான் நம்பும் இசையிலிருந்தும், அவர் பிரதிநித்துவம் செய்யும் பள்ளியை முன்வைத்தும் சபரிநாதனை அணுகுவது சிறப்பானதாக இருக்கும்.
மேற்குறிப்பிட்ட சிக்கல், இரண்டாயிரம் வருடத்துக்கு மேலாக அழகியலை ஆன்மீகத்துக்கு [ a priori ] நெருக்கமாக முன் வைத்து வரும் செவ்வியல் தன்மை கொண்ட, கீழை நாடுகளிலிருந்து வரும் அனைத்து இளங்கலைஞர்களுக்கும் பொதுவான ஓன்று. மேற்கத்திய அறிவுத்துறை சார்ந்த பார்வைகள், அழகியல் உட்பட அனைத்தையும் அரசியல், சமூக, பொருளாதார, உயிரியல் மற்றும் அடிப்படை இச்சை சார்ந்த ஒன்றாக அணுகும் [ஹரால்ட் ப்ளூம் ‘school of resentment’ என்று குறிப்பிடும்] தன்மை கொண்டவை. இந்த இரண்டு மரபுகளும் மோதும் கணம், புதிதாக எழுத வரும் ஒருவனுக்குள் உருவாக்கும் தடுமாற்றம் என்பது, பொது போக்கிற்காக தன்னுடைய அழகியலில், மரபில் சமரசம் செய்து கொள்ளாமல், தனக்கான கதவை தேர்ந்து அதை திறப்பதற்கு முன்பு கொல்லப்பட வேண்டிய வாயில் பூதம்.
மேற்கத்திய மரபை அறிவுச் சோம்பலால், இவையெல்லாம் ஏதோ சுத்தியல் ஸ்பானர் சமாச்சாரம் என்று முற்றிலும் ஒதுக்குவது அல்லது “புதிதாக அப்டேட் வந்திருச்சு, பழசை அன்னின்ஸ்ட்டால் பண்ணிடலாம்” என்பது போன்ற கூச்சல்கள் அல்லது படைப்பு என்பது அதிகாலையில் ஆற்றில் தலை மேல் எலுமிச்சை வைத்து பயிற்சி செய்வதால் வருவது, எனவே அதை அப்படி எல்லாம் விளக்கி விட முடியாது என்று முன்வைக்கும் மாந்திரீக அழகியல் ஆகிய அணுகுமுறைகளுக்கு நடுவே மையமாக தன் இருக்கையை போட்டு அமர்ந்திருக்கும் அந்த வாயில் பூதத்தை கொலை செய்பவர்கள் மட்டுமே உள்ளே இருக்கும் இளவரசிக்கு மாலை சூடமுடியும் என்பதுதான் இன்று இருக்கும் சவால்.
[2]
முதல் வாசிப்பில் சபரிநாதனின் கவிதைகள் இரண்டு வகை கொண்டவையாக இருக்கின்றன. ஓன்று குறுஞ்சித்தரிப்பு [narative poems] மற்றது அரூப மனநிலை கொண்ட சித்திரங்கள் [lyrical poems]. “களம் காலம் ஆட்டம்” தொகுதியில் பெரும்பாலானவை சித்தரிப்பு வகை. இந்த வடிவம் புத்தாயிரத்திற்கு பிறகான நவீன கவிதையை பின் தொடரும் வாசகனுக்கு நெருங்கிய ஓன்று, பகடி அல்லது அங்கத மொழி கொண்டவை. இரண்டாவது வகை கொஞ்சம் பழையவை போல தோன்றுகின்றன. எந்த அம்சம் அப்படி தோன்ற செய்கிறது, எவ்வளவு பழையவை என்று மீண்டும் வாசித்து பார்க்கும் பொழுது, கொஞ்சம் அல்ல ரொம்ப பழையவை என்று தோன்றுகிறது. சுமார் 2500 வருடங்கள் பழையவை.
புத்தாயிரத்திற்கு பிறகான கவிதைகளை விவாத வசதி கருதி பின் நவீனத்துவ கவிதைகள் என்று வரையறுத்துக் கொள்ளலாம். இந்த கவிதைகளின் அம்சங்களை வரையறுத்துக் கொள்வது இந்த விவாதத்தின் துவக்கப் புள்ளியை வரையறுத்துக் கொள்வதும் கூட. ஞானகூத்தனின் அரசியல், தேவதச்சனின் தத்துவம், கலாப்பிரியாவின் அன்றாடம் குறித்த சிரிப்புகள் அனைத்தும் நவீனத்துவதில் விழுந்த விரிசல்கள், அவற்றை விட்டுவிட்டு அவர்களுக்கு பிறகான கவிதையிலிருந்து துவங்கலாம். நவீனத்துவம் கல்லில் செதுக்கிய பலூனுக்கு காற்றடித்து துவக்கி வைத்தது முகுந்த் நாகராஜன். காற்றில் அசைய துவங்கிய பலூன்களை நடுவழியில் நின்று மெய் மறந்து பார்ப்பதன் புன்னகையை, பிறகு தான் செல்ல வேண்டிய தூரம் குறித்து நினைவு வந்த பின்பு வரும் மெல்லிய துயரத்தை குரலாக கொண்டவை சங்கர ராம சுப்ரமணியன் கவிதைகள், பின்பு போகா விட்டால் மயிரே போச்சு என்று பலூனோடு சேர்ந்து ஆடத்துவங்குபவை இசையின் கவிதைகள். இப்படியாக வந்து சேர்ந்திருக்கிறது பின் நவீன தமிழ் கவிதை. இவர்கள் மூவரையும் முறையே “துயரத்திற்கு பதிலாக சிரிப்பை, சிரிப்பின் மெல்லிய நடுக்கத்தை, அனைத்தையும் உதறிய ஆகவே அனைத்தையும் ஏற்றுக் கொண்ட விடுதலையை” என்று வெளிப்பாட்டை வைத்து உருவகப்படுத்தலாம்.
முகுந்த் நாகராஜனின் உலகில் இருப்பது முற்றிலும் இன்றைய வாழ்க்கை. பெரும்பாலும் ரயில்களில் கழிபவை. ஷங்கரில் இருப்பதும் அதுவே, கூடுதலாக நேற்றின் நினைவுகள் இன்றின் பின் மாலையிலும் முன் இரவுகளிலும் மிதந்தெழுவதன் மெல்லிய உணர்வு. அதை துயரம் என்றும் சொல்ல இயலாது. melancholy என்று சொல்லலாம். இசையில் இருந்து உள்ளே வந்து விடுகிறது மரபு. இந்த வரிசையில் யோசித்து பார்க்கும் பொழுது ஷங்கரின் கவிதையில் இருக்கும் மெல்லுணர்வு சங்கப்பாடல்களில் வரும் நள்ளென்ற யாமத்தின் முன் மலை பொழுது என்று விளங்குகிறது. [துரதிஷ்டவசமாக நகரம் துயரத்தின் உற்பத்தி சாலை என்ற நவீனத்துவ பொது அழகியல் ஷங்கரின் மெல்லுணர்வை நகரத்தின் துயரமாக புரிந்து கொள்ள வைத்து விட்டதோ என்று இப்பொழுது தோன்றுகிறது.] சங்க பாடல்களின் கைப்பை முன் வைத்து வாசிக்கும் பொழுது அவற்றின் வீச்சு இன்னும் அதிகமாகிறது.
சபரிநாதனின் கவிதைகளை பற்றி பேச ஆரம்பித்து இவர்களை எல்லாம் பேசுவதன் காரணம் இந்த வரிசையில் ஒரு சீரான நகர்வு இருப்பதாக தோன்றுவதால்தான். இன்று [ தனிமை], தனிமையிலிருந்து நேற்றின் ஏக்கம் [ மரபின் பிணைப்பை /துண்டிப்பை எண்ணி ] பின்பு நேற்றும் இன்றும் [ மரபுடனான கலகமும் சமரசமும்] என்று அந்த நகர்வை புரிந்து கொள்கிறேன். இனி என்ன என்ற என் கேள்விக்கு நான் கண்டைந்த பதில் மரபை தொடர்வதுதான். மரபு என்று இங்கு நான் குறிப்பிடுவது நவீனத்துவத்திற்கு முன்னனான மரபை. ஆனால் அதை நவீனத்துவத்திற்கும் பின் நவீனத்துவத்திற்கும் பிறகான மரபாக தொடர்ச்சியாக முன்னெடுப்பதுதான். அறிவொளிக்காலம், கற்பனாவாதம், வரலாற்றுவாதம், நவீனத்துவம் என்ற வரிசையில் பின் நவீனத்துவமும் தன் ஆட்டத்தை முடித்து விட்டு சென்று அமரும் காட்சியை காண்கிறேன்.
பின் நவீனத்துவத்தின் குழந்தையாக கொஞ்சப்பட்ட புகைப்படக் கலை தன் சிதறுண்ட தன்மையிலிருந்து மொழிபு [narration] நோக்கி நகர்வதையும், வெவ்வேறு வடிவங்களை ஒன்றாக்கி, எது தனித்தன்மை என்றும் எது பொது தன்மை என்றும் விளையாடிக் கொண்டிருந்த காண்பியல் கலை அவற்றை எல்லாம் கீழே போட்டு விட்டு புது கருத்தாக்க [அனுபவத்திலிருந்து மொழிபு நோக்கி] கலையை கையில் எடுத்துக் கொண்டதையும், தத்துவத்தில் பின் நவீனத்துவத்திற்குள் வந்த புது வரலாற்றுவாதத்தையும் இப்படிதான் புரிந்து கொள்ள முடிகிறது.
இப்பொழுது நாம் தொடர வேண்டிய மரபு, நவீனத்துத்துக்கு முன்பிருந்த அதே மரபுதான் ஆனால் பின் நவீனத்துவத்திற்கு பிறகான மரபும் கூட. [ இந்த வேறுபாட்டை காட்ட கலையில் பயன்படுத்தப்படும் முறையை பின் நவீனத்துவம் இரட்டை சங்கேத அமைப்பு என்கிறது. தமிழில் இதற்கு சிறந்த உதாரணம் வெண்முரசில் வரும் சங்க இலக்கிய, சிலப்பதிகார மற்றும் திருக்குறள் வரிகள்.] இந்த சூழலை சற்று விரிவாக பார்ப்பது முக்கியம். பின் நவீனத்துவத்தில் சூழலை எதிர் கொள்வதில் மூன்று முக்கிய சிந்தனை பள்ளிகள் உள்ளன. ஓன்று போத்ரியார்ட் [baudrillard] முன்வைத்தது. இரண்டாவது, லியோடார்ட் [jean francois lyotard] முன்வைத்தது, மூன்றவாது மார்க்சிய பின்நவீனத்துவரான பிரெடெரிக் ஜேம்சன் [fredric jameson] போன்றவர்கள் முன் வைப்பது.
போத்ரியார்ட் முன் வைக்கும் முதல் வகையில் நம்மை சுற்றி இருக்கும் பல்வகைப்பட்ட மொழிபுகள் எல்லாம் சேர்ந்து [தீவிரமான கலை வெளிப்பாடு முதல் நாளிதழ் மொழி வரை அனைத்தும்] நம்முடைய சிந்தனையை வடிவமைக்கின்றன, இவற்றின் ஊற்று முகம் பன்னாட்டு நிறுவனங்களும் அதிகாரமும் சேர்ந்து உருவாக்கும் ஒரு கட்டமைப்பு. இதற்கு எதிராக தனி மனிதன் செய்வதற்கு ஏதும் இல்லை காலத்தோடு ஓட்டி செல்வதை தவிர.
லியோடார்ட் முன்வைக்கும் இரண்டாம் வகையில் மானுடமளாவிய கனவுகளை உருவாக்கிய பெருங்கதையாடல்கள் [தத்துவம். அறிவியல்] போன்றவை தங்கள் நம்பிக்கையை இழந்து போனதால் இனி ஒற்றை சரடில் மானுடத்தை [மானுடம் என்ற சொல்லே இதற்கு எதிரானது] கட்டி எழுப்ப இயலாது. நம்முடைய எதிர் வினையாக சிறிய கதையாடல்களை மட்டுமே உருவாக்க முடியும் என்பது.
பிரெடெரிக் ஜேம்சன் முன் வைக்கும் மூன்றாவது வகையில் மார்க்சிய வரலாற்று கோணமும் இருக்கிறது. மொழியும் போதமும் சிதறிக் கிடக்கும் சூழலில் இந்த துண்டுகளை கற்பனையால் இணைத்துக் கொள்ளுவது ஒன்றே இவற்றின் நடுவே அடையாளம் கண்டு நகர வழி என்பது. இதை அவர் cognitive mapping என்கிறார். இதன் மீது வைக்கப்படும் பின் அமைப்பியலாளர்களின் குற்றச்சாட்டு அப்படி உருவகிப்படும் எதுவும் மீண்டும் ஒற்றை அடையாளத்தை உருவாக்கி பிறனை நசுக்கும் என்பது. இது குறித்து விவாதிக்க இங்கு இடமில்லை எனினும் ஒன்றை மட்டும் சுட்டி காட்ட வேண்டி இருக்கிறது. இந்த துண்டுகளை இணைப்பது கலையில் நிகழும் ஓன்று, அது செல்லுபடியாவது கலையை உள்வாங்கும் சக மனிதனின் அந்தரங்கத்தில் மட்டுமே. நவீனத்துவத்திற்கு முந்தைய கலை போல தேசிய கலையுமல்ல, நவீனத்துவம் முன் வைத்தது போல உலகமயமாக்கலும் அல்ல, பிரபஞ்சகரமானது. [not global but universal].
முதல் வகைதான் பின் நவீனத்துவம் என பரப்பியல் கலைகளிலும் ஊடகங்களிலும் பரவலாக முன் வைக்கப்பட்டது. இரண்டாம் வகைதான் பொதுவாக நாம் அறிந்த பின்நவீனத்துவ கலையில் அதிகமும் வெளிப்படுத்தப்பட்டது. இந்த இரண்டாம் வகையில் ஒரு சிக்கல் இருக்கிறது. அடிப்படையில் அது எதிர்வினை மட்டுமே.
நவீனத்துவம் கலையிலும், தத்துவத்திலும் தூய உருவவாதம் நோக்கி நகர்வதன் வழியாக ஒரு உலகப் பொதுமையை உருவாக்க முனைந்தது. நவீனத்துவத்தின் இந்த உருவாவதத்தின் பொருட்டும், படைப்பை மட்டுமே முன் வைக்கும் போக்கை மறுத்தும், இரண்டாவது வகை பின்நவீனத்துவர்கள், புறவயமான கருதுகோள்கள் மட்டுமின்றி பிற கருதுகோள்களும் [உள்ளுணர்வு, வரலாறு, மொழி இன்னபிற] ஒன்றாக இணைந்தேதான் படைப்பு உருவாகிறது என்பதை மட்டுமே தங்கள் குரலாக முன்வைத்தனர். மேற்குறிப்பிட்ட அனைத்து கருதுகோள்களும் ஒன்றாக இணைந்து உருவானாலும் கூட படைப்பை பிரபஞ்சகரமானதாக கருதவில்லை. எந்த வகையான தூய்மைவாதமும் எளிமைப்படுத்தலும் துருவப்படுத்தலுமே என்றே கருதினர். ஆகவே, உருவம் x அருவம், நோக்கம் x விளையாட்டு, ஒழுங்கு x ஒழுங்கின்மை, ஆழம் x மேற்பரப்பு, மையப்படுத்துதல் x சிதற்றுதல் என நவீனத்துவம் முன் வைத்த அனைத்துக்கும் எதிர்வினையாக மட்டுமே தன்னை முன்வைத்துக் கொண்டனர் . விளைவாக நவீனத்துவம் முன் வைத்த ‘உலகளாவிய பொதுமை’ என்ற கருதுகோளுடன் ‘சாராம்சமாக்கல்’ என்ற கலையின் ஆதாரத்தையும் சேர்த்தே நிராகரித்து விட்டனர். இந்த சாராம்சப்படுத்தல் புவியியல் சார்ந்தோ அரசியல் சார்ந்தோ இனி மேல் இருக்க வாய்ப்பில்லை என்றாலும் கூட, தன்னிலை சார்ந்தோ அழகியல் சார்ந்தோ கூட இருக்க கூடும் என்று கூட ஏற்கவில்லை.
[3]
பின் அமைப்பியல் கோட்பாடை சுருக்கமாக சொல்வெதென்றால், பிரதியை ஆய்ந்து இருமையை கண்டறிவது, அவற்றின் உறவை அலசுவது, மையத்தை, விளிம்பை கண்டறிவது, விளிம்பை மையமாக்குவது, இதன் விளைவாக அர்த்த உருவாக்கம் தலைகீழாவது. அதற்கு பிறகு தலையென்றும் கீழேன்றும் இல்லாமலாவது, ஆகவே மொத்த அணுகுமுறையையும் விளையாட்டாக ஆக்குவது. இந்த கோணத்தில் விளிம்பை மையமாக்குவதையே இரண்டாம் வகை பின் நவீனத்துவம் செய்து வந்திருக்கிறது. ஆனால் அதுவே தொடர்ந்தால் விளிம்பு மையமாக மாறும் ஆபத்திருக்கிறது. ஆகவேதான் அடுத்த கட்டமாக பிரதியை விளையாட்டாக ஆக்குவதை முன் வைக்கிறது பின் அமைப்பியல். கண நேரம் இதுவென்றும் கண நேரம் அதுவென்றும் மாறி மாறி தோற்றம் காட்டும், இரண்டுக்கும் சம வாய்ப்புள்ள தோற்றம். கடைகளில் இருக்கும் நியான் விளக்குகளாலான எழுத்து போல. சற்று முன்பு வரை சிவப்பில் எரிந்து கொண்டிருந்த அதே பெயர் இப்பொழுது நீலத்தில் எரிந்து கொண்டிருக்கும். அது சிவப்பு எழுத்துமில்லை நீல எழுத்துமில்லை. சிவப்பும் நீலமுமாக மாறி மின்னும் எழுத்து மட்டுமே. மையமுமில்லை விளிம்புமில்லை.
இந்த விவாதத்தில், விளிம்பென்பது மரபின் இந்த முனையில் நின்று மரபை பார்த்து சிரிப்பது. சிரித்து சிரித்து இப்பொழுது அந்த சிரிப்பு ஓயத் துவங்கி விட்டது. இனி முதலில் இருந்த இறுக்கத்துக்கு போக முடியாது, சிரித்துக் கொண்டே இருக்கவும் முடியாது, சிரிப்பின் எஞ்சிய புன்னகையோடு விவாதத்தை தொடரக்கூடும் என்ற இடத்தில நின்று கொண்டிருக்கிறது பின் நவீனத்திற்கு பிறகான கவிதை. இங்கே மரபு என்பது நம்முடைய செவ்வியல் மரபு [அழகியலாக மட்டுமே இங்கு எடுத்து கொள்ள வேண்டும்], அதை பின் தொடரும் பொழுது நமக்கு இருக்கும் வாய்ப்பு இரண்டு. ஓன்று, அதை இது வரையிலான பிற அறிவுத்துறைகளின் வளர்ச்சியை கொண்டு மறு பரிசீலனையும் மறு உருவாக்கமும் செய்து முன்நகர்வது. இரண்டு, இன்றை நேற்றோடு உரையாடச் செய்வது.
முன்னதை செய்வது நாவலுக்கே சாத்தியம், தமிழின் சமகால உதாரணம் வெண்முரசுதான். அத்தனை விரிவும் ஆழமும் தற்கால கவிதைக்கு சாத்தியமில்லை இதுவரை. [இப்படி சொல்லும்பொழுதே ஒரு கவிஞன் வந்து அதை மாற்றும் சாத்தியம் திறந்தே இருக்கிறது]. இப்பொழுது கவிதை இரண்டாவதையே செய்கிறது. இனி அந்த உரையாடலின் ஆரம்ப கால குழப்பங்கள் [அதுதான் நமக்கு பகடியை தருகிறது] முடிந்து முன்னகர, நேற்று வரை நம் மரபு அடைந்த தரிசனங்களையும், அழகியலையும் தனதாக்கி கொள்ள வேண்டும். அப்படியெனில் மீண்டும் ஒற்றை மானுட கனவா என்ற கேள்விக்கு, அப்படி இல்லை என்றே தோன்றுகிறது. ஒவ்வொரு கவிஞனுக்கும் தனி தனி தரிசனங்கள் அவற்றின் பொருட்டு யாரும் உயிர்கொடுக்க தேவையில்லை, கவிஞன் உட்பட. யாரும் அவற்றை நம்ப வேண்டாம், அதை நிரூபிக்கவும் முடியாது. உணர்ந்து கொள்ளலாம். புன்னகைத்துக் கொள்ளலாம். கவிஞனுக்கும் வாசகனுக்குமான அந்தரங்கமான ஆன்மீகமான உரையாடல்.
நிலப்பிரபுத்துவ கால கட்டத்தில் கலைகள் அனைவர்க்கும் பொதுவான தளத்தில் இயங்கின. அந்த கலைகளின் பொது பின்புலம் அனைவரும் அறிந்தது. [கூத்தில், மஹாபாரதம் போன்று. ஏற்கனவே தெரிந்த கதை, நிகழ்த்து முறை மட்டும் புதிது]. நவீனத்துவம் தனித்தனி பின்புலத்தை கொண்டு வந்தது, ஆகவே ஆலயங்கள், ஊர் மன்றுகள் போன்ற இடங்களிலிருந்து கலை காட்சிக்கூடங்களுக்கு சென்றது, அங்கே வருபவர்கள் இன்னும் நுட்பமான பயிற்சி கொண்டவர்கள் என்பதால் கலையும் ஆழமாக உரையாட முடிந்தது. இந்த காட்சிகூடங்களும் கூட ஒரு நிறுவனத்தையும், தேர்ந்த பயிற்சி கொண்டவர்கள் என்ற போதிலும் கூட ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையிலேனும் பார்வையாளர்களை சார்ந்திருக்க வேண்டி இருந்தது. இன்றைய ஊடக காலம் கலைஞனும் வாசகனும் அந்தரங்கமாக இன்னும் சிறிய குழு அளவில் உரையாட சாத்தியங்களை திறந்து வைத்திருக்கிறது. இதில் ஒரு அமைப்பை நடத்த வேண்டிய, குறைந்த அளவிலேனும் உள் கட்டமைப்பை எதிர்பார்க்க வேண்டிய அவசியமின்றி போய் விட்டது.
சிறுபத்திரிகைகளையே உதாரணமாக கொள்ளலாம். எந்த சிறுபத்திரிகையும் கூட குறைந்தது முன்னூறு பிரதிகள் அடித்து விநியோகித்து உரையாடும் சுமை கொண்டிருந்தது. இணையம் அவற்றை தகர்த்திருக்கிறது. உலகளாவிய அளவில் வரும் புகைப்படக் கலை சார்ந்த சிறுபத்திரிகைகளில் ஐந்தை பின் தொடர்கிறேன். எண்ணிக்கை சார்ந்த கட்டாயம், விநியோகம் இவை ஏதுமின்றி இணையத்திலேயே இயங்குவதால் இன்னும் தீவிரமாக இயங்க முடிகிறது இவற்றால். அநேகமாக மூவாயிரம் பேர் பின் தொடர்வார்களாக இருக்கும் உலகம் முழுவதிலிருந்தும். [புகைப்பட நூல்கள் அச்சிடப்படுவது ஆயிரம் பிரதிகளே, உலகளாவிய சுற்றுக்கு கூட.] இவர்கள்தான் புகைப்படக் கலையின் போக்கை தீர்மானிப்பவர்களாக இருப்பார்கள். கவிஞர்களே எழுதி கவிஞர்களே வாசித்து கவிஞர்களே விவாதித்து கொள்வதை போல. வரும் காலங்களில் கவிதையும் கூட இன்னும் சிறிய வட்டங்களில் இன்னும் சுதந்திரமாக உரையாட துவங்கும், அப்பொழுது இன்னும் இன்னும் என நுட்பமாக இயங்க முடியும். சங்க காலத்து பாணன்கள் போல.
கலை நிறுவனங்களை சார்ந்து இல்லாமலாகும்பொழுது, சமூகத்தோடு நிறுவனங்கள் உரையாடும்பொழுது கடைபிடிக்க வேண்டிய அரசியல் சரிநிலைகள் இல்லாமலாகிறது. [அரசியல் சரிநிலைகளை கொண்டு இலக்கியத்தை புரிந்து கொள்பவர்களிடம், “நான் சொல்ல வருவது அது இல்லை ஐயா” என்று படைப்பை போல பத்து மடங்கு விளக்கம் எழுத வேண்டி இராது.] கலை தனது சமூக பொறுப்பிலிருந்து வெளியேறி முற்றிலும் அந்தரங்கமான உரையாடலாகிறது. எனவே இரண்டாம் வகை பின் நவீனத்துவத்தின் பேசு பொருளான “பிறன்” படைப்பில் மையமாக இருக்க வேண்டும் என்ற அழகியல் சுமையை கலை கடந்து வருகிறது. இனி அரசியல் சரி நிலைக்காக நான் வெளியே சென்று வேறு ஒன்றை தேடி கலையாக்க தேவையில்லை. எல்லோரும் பூர்ஷ்வாக்கள் அல்லது எல்லோரும் பயனர்கள் தான் எனில் நான் அழகியல் குறித்தோ ஆன்மிகம் குறித்தோ என் கலையில் வெளிப்படுத்தலாம் என்ற சூழல் உருவாகி வந்திருக்கிறது.
கீழை மரபில் அழகியல் என்பது வியப்பே, கலையின் பேசுபொருள் என்பது எப்பொழுதும் சாராம்சம் நோக்கி செல்வதே, வடிவமென்பது சமநிலையே [உலகளாவிய அளவிலும் கலையின் நோக்கம் என்பது இதுவே என்பது என் தனிப்பட்ட கருத்து, படைப்பு, மேலோட்டமாக எத்தனை அரசியல் நோக்கம் கொண்டதாக இருந்தாலும் கூட, இது கலைக்கு மட்டுமே பொருந்தும், கோஷங்களுக்கு அல்ல]. இன்று இந்த மரபின் தொடர்ச்சியாக வரும் ஒரு இளம் கலைஞன் தன் வாழ்வு சார்ந்தும், வாழ்வின் அடிப்படையான கேள்விகள் சார்ந்தும் எதையேனும் உருவாக்கி கொள்ள, மேற்குறிப்பிட்ட இரண்டு வகையான பின் நவீனத்துவ அழகியல்களிலிருந்தும் விலகி செல்ல வேண்டி இருக்கிறது. இரண்டாம் வகை அலை இன்று மெல்ல பின் வாங்குகிறதோ என்று இது வரையிலான என் வாசிப்பிலும் நவீன கலை மீதான அவதானிப்பிலும் எனக்கு தோன்றுகிறது. பிரெடெரிக் ஜேம்சன் முன் வைத்த காக்னிடிவ் மேப்பிங் மேலெழுந்து வருகிறது என்று நம்புகிறேன். இந்த புதிய வகை அழகியலின் தேவை என்ன? நவீனத்துவமும் பின் நவீனத்துமும் தராத எது ஒன்றை இது தந்து விடக் கூடும் என்பதில் இருக்கிறது சபரிநாதனின் அழகியல்.
[4]
மேலே முன் வைக்கப்பட்ட மரபின் அழகியல், நவீனத்துவத்திற்கும் பின் நவீனத்துவத்திற்கும் பிறகு வரும் பொழுது அவற்றில் எதை எடுத்து கொள்கிறது எதை விடுத்தது செல்கிறது என்று பார்க்கலாம். நவீனத்துவத்திற்கு முந்தைய கவிதையில் கவிதை தனக்கென்று கொண்டிருக்கும் சில பேசுபொருட்களில் இருந்து விலக்க முடியாததாக இருந்தது. தனி மனிதனின் குரலுக்கு அதில் இடமில்லை, சமூகத்தின் அங்கமாக வெளிப்பட்டால் தவிர. நவீனத்துவம் பேசுபொருட்களின் பட்டியலிலிருந்து கவிதையை விடுவித்து, சொல்லும் விதத்தால் கவிதையே தவிர சொன்ன பொருட்களால் அல்ல என்று பட்டியலிலிருந்து விடுதலை வாங்கி தந்தது.
பின் நவீனத்துவம் கவிதையின் மொழியில் கவிதைக்கான மொழி மட்டுமில்லை, மொழியின் எந்த வடிவமும் கலையால் கையாளப் படலாம் என்ற பெரிய வாய்ப்பை தந்தது. மேலும், கவிஞனின் கவிதை சார்ந்த அணுகுமுறை, பொது பேசுபொருள் சார்ந்ததாகவோ [நவீனத்துவத்திற்கு முன்பு] பொது வடிவம் சார்ந்ததாகவோ [நவீனத்துவத்தில்] இருக்க வேண்டியதில்லை, தனக்கென ஒரு கவிதையியலை கவிஞன் உருவாக்கிக்கொள்ளலாம் என்று மிக பெரிய வாய்ப்பை தந்தது. ஆனாலும் இதிலும் கூட வடிவம் சார்ந்த சில வரைமுறைகள் இருக்கின்றன. அந்த வரைமுறை பின் நவீனத்துவத்தின் தத்துவ பார்வையிலேயே இருக்கிறது. உதாரணமாக பின் நவீனத்துவ கவிதை உன்னதமான எதையும் மேற்கோள் ஆக மட்டுமே சொல்ல முடியும். சந்தேக குரலில் அன்றி எதையும் உறுதியாக முன் வைக்க முடியாது. நேரடியாக உணர்ச்சி வசப்பட முடியாது. மரபில் ஏற்கனவே வெளிப்படுத்தப்பட்ட ஒரு உணர்ச்சியை மேற்கோள் காட்டி சற்று கோணலாகவே அணுக முடியும். மரபை கோணலாக அணுக முடியும் என்பது பெரிய சலுகை என்றாலும் கூட, கோணலாக மட்டுமே அணுக முடியும் என்பது கவிஞனின் மீது சுமத்தப்பட்ட சுமை.
ஒவ்வொரு இலக்கிய போக்கும் ஒரு சலுகையை தரும் அதே நேரத்தில், எந்த வகை கோட்பாடும் அது பேச விரும்பும் விஷயத்தை மட்டும், அதன் எதிர் தரப்பை நோக்கி மட்டுமே பேச அனுமதிக்கும் தன்மையை தன்னியல்பிலேயே கொண்டிருக்கிறது. இதுவே இவற்றின் போதாமையும் கூட. நவீனத்துவத்தில் பேரானந்தத்திற்கோ, மரபின் தொடர்ச்சியாகவோ தன்னை வெளிப்படுத்தவோ இடமில்லை, பின் நவீன கவிதையிலோ முழுமையான கண்ணீருக்கும் சாராம்சத்திற்கும் இடமில்லை என்பது சிறந்த உதாரணம். அந்த இலக்கிய போக்கு எதிர் கொள்ள விரும்பும் விஷயங்களையே படைப்பாக்க முடியும் என்பதே அதன் சிக்கல்.
இன்று அடுத்த தலை முறை மேலெழுந்து வரும் பொழுது இந்த எதிர் வினைகள் பொருளற்றவையாக தோன்றுகின்றன. இவ்வளவு சவுகரியமான வாழ்க்கையில் எதற்கு இப்படி அவநம்பிக்கையை முன் வைக்க வேண்டும் என்று விழிக்கிறது. காரணம், கோட்பாடுகளையும் இயக்கங்களையும் உருவாக்கும் எல்லா சமூக அரசியல் சூழல்களும் ஓரிரு தலைமுறைக்குள் காலாவதியாகி விடுகின்றன. காலாவதியாகாமல் இருப்பது வாழ்வு சார்ந்த அடிப்படை கேள்விகள் மற்றும் அடிப்படை உணர்ச்சிகள் மட்டுமே. இவற்றை குறித்து எழுதப்படும் எந்த வரியும் பிரபஞ்ச ரீதியாக மட்டுமே முன் வைக்கப்படக் கூடும். கவிதை இந்த பிரபஞ்ச தன்மையையே முதன்மையான தேடலாக கொண்டிருக்கிறது. வேறு எந்த கலையை விடவும் கவிதையே உணர்ச்சிகரமான சந்தர்ப்பங்களில் நினைவில் மேலெழுந்து வருவதை காணலாம். ஆக இந்த குறிப்பிட்ட காலகட்டத்தின் பார்வைக்கு எதிராக பதில் சொல்லி, தலை கீழாக்கி, சிரித்து கொண்டிருக்கும் சூழலிலிருந்து வெளியேறி, வாழ்வு குறித்து தன்னுடைய இரண்டு வரிகளையும் எதிர் வினையாக அல்லாமல், சுயமானதாக, காலத்தின் மீது எழுதி வைக்க வேண்டும் என்ற ஆவல் கொண்ட கவிஞனுக்கு புதிய அழகியல் தேவையாக இருக்கிறது. வாழ்வை எந்த கோட்பாடுகளும் சாராமல் நான் என் மரபில் நின்று சுயமாக அழகியல் சார்ந்து பார்க்கின்றேன் என்ற விழைவு இருக்கிறது. இதுவரையிலான கோட்பாட்டு விவாதங்களிலிருந்து தனக்கு தேவையான உபகரணங்களை மட்டுமே எடுத்துக் கொள்கிறது.
இரு நூற்றாண்டுகளாக நிகழ்ந்த இந்த மாற்றத்தை ஒரு வரியில் சொல்வதானால், சமூகம் பொங்கி எழுந்து சமூகத்தை மாற்றும் சித்திரத்திலிருந்து, சமூகத்தின் உச்சங்களை மட்டுமே தேர்ந்து தனி மனிதனின் பரிசீலனைக்கு பின் எஞ்சியவற்றை கொண்டு, தனி மனிதன், சக மனிதன் முன்னும் தன் அந்தரங்கத்தின் முன்னும் வைக்கும் மெல்லிய, நம்பிக்கை அவநம்பிக்கைக்கு அப்பாற்பட்ட, அவதானிப்புகளால் மட்டுமே ஆன ஒரு கலை வெளியாக இருக்கும் என்று தோன்றுகிறது. அத்தனை மெல்லியது எனவே அத்தனை நுட்பமாக பின் தொடரும் அந்தரங்க வாசகனை கோருவது.
ஆகவே, பின் பின்நவீனத்துவ கவிதை, சமூகத்தை மாற்றிவிடக் கூடும் என்று நம்பும் அளவுக்கு அப்பாவியாக இருக்காது, எனவே அவநம்பிக்கை கொள்ளவும் செய்யாது. எத்தனை கத்தினாலும் ஒட்டுமொத்த சமூகமும் பார்க்க போவதில்லை என்பதனால் எதையும் வலியுறுத்தவோ உரைக்கவோ செய்யாது. கேட்க கூடிய முந்நூறு பேரிடம் அந்தரங்கமான குரலிலேயே உரையாடக் கூடும். அதன் அழகியல் என்பது செவ்வியல் அமைதியும் புன்னகையும் ஒருங்கே கொண்டதாக இருக்கும் என்று தோன்றுகிறது.
பகுதி 2
[1]
முன்பு குறிப்பிட்டது போல சபரிநாதனின் முதல் கவிதை தொகுதி களம் – காலம் – ஆட்டம் முழுக்க சித்தரிப்பு கவிதைகளால் [narative poems] நிறைந்திருக்கிறது. கவிதை மொழியோ வெவ்வேறு குரல்களால் ஆனதாக இருக்கிறது. நம்மனோர் வீதி, கண்படுதல், போல செவ்வியல் தன்மை கொண்டவை. ஒரு நல்ல அதிகாலை, மத்திமம் போல நவீனத்துவ தன்மை கொண்டவை. வெள்ளரிக்காய், தூக்கமாத்திரைக்கு ஒரு பாடல், கூக்ளி, மே போல பின் நவீனத்துவ தன்மை கொண்டவை. ஓரிரு பிரபஞ்ச தன்மை கொண்டவை, பிரமிள் தேவதேவன் போல. அனேகமாக எல்லா கவிஞர்களின் முதல் தொகுப்பையும் போலவே. ஆனாலும் இரண்டு அம்சங்கள் முக்கியமாக தனித்து தெரிகின்றன. ஓன்று சித்தரிப்பு கவிதைகளும் கூட பகடிக்கு பதிலாக மென் புன்னகையையே தரும் சம நிலையை கொண்டிருக்கின்றன. இரண்டாவது வார்த்தைகளில் தெரியும் செவ்வியல் தன்மை. ” நமது பழைய ஊரில் தொடுவானத்தில் காற்றாலைகள் சுழலும் / இங்கும் சுழல்கிறது / இரண்டு பெட்ரோல் நிலையங்களுக்கிடையிலிருக்கும் ஊரர் நாம்” என்பது போன்ற வரிகள். வடிவ ரீதியாக கூட நீண்ட வரிகளுடன் கிட்டத்தட்ட வெண்பாக்களை போன்ற வடிவத்தில் இருக்கின்றன. தொகுப்பை முடித்த பின்பு கவிஞன் சிரித்ததை போல தோன்றவில்லை, துயரமாகவும் எதுவும் இல்லை.
சிலைகளின் சிரிப்பை போன்ற, இருக்கிறதா இல்லை நம் பிரமையா என்ற இந்த அம்சம் இரண்டாவது தொகுதியான வாலில் இன்னுமும் துலங்குகிறது. மேலும், வடிவமும் சித்தரிப்பு கவிதைகளிலிருந்து அரூப கவிதைகளுக்கு நகர்கிறது. இங்கே ஒன்றை சொல்ல வேண்டும். இந்த அரூப கவிதைகள் எதுவும் நவீனத்துவ கவிதைகள் போல படிமங்களை அடுக்கி மூச்சு திணறச் செய்வதில்லை. மலை நின்ற அதிகாலையில் கூரையிலிருந்து எழும் மெல்லிய ஆவியை பார்த்து நிற்கும் அனுபவத்தை தருகின்றன. அதை வகைப்படுத்த முயலும் பொழுது தவறி விடக் கூடிய அளவுக்கு மெல்லியவை.
இந்த கவிதைகளை தனித்தனியாக எடுத்து விவாதிக்க முடியாது. இவற்றின் அழகியல் கூறுகளை தொட்டு காட்டி விட்டால் பிறகு அவரவர் நேரடியாக கவிதையோடு உரையாடலாம். “வால்” தொகுதியின் அழகியல் அம்சங்கள் என்று சிலவற்றை பட்டியலிடலாம். பின் நவீனத்துவ கவிதைகள் பெரும்பாலும் சொல்லி செல்கின்றன, சித்தரிப்பதேயில்லை, மாறாக இந்த கவிதைகள் காட்சி சித்தரிப்பு கொண்டவையாக இருக்கின்றன, இந்த காட்சி சித்தரிப்புகள் வழியே உணர்வு நிலைகளை உருவாக்குகின்றன. கவிஞனின் குரல் உணர்வுகளை வெளிப்படுத்துவது என்பது அநேகமாக முழுத்தொகுதியிலும் இல்லை. கோழிகளும் ஆடுகளும் உலவுகின்றன. அநேகமான கவிதைகள் பதின்பருவத்து சிறுவன் ஒருவனின் பார்வையில் உலகை பார்ப்பது போன்ற உணர்வை தருகின்றன. இசைத்தன்மை கொண்ட வரிகள்.பருவ நிலை மாற்றங்கள் குறித்த விவரணைகள். அவை சட்டென்று ஒரு பகைப்புலத்தை தந்து விடுவதால் கவிதை காட்சியாக விரிந்து விடுகிறது. கூடவே மேற்சொன்ன அகச்சம நிலையும், வெண்பா வடிவமும். அனைத்தும் சேர்ந்து ஒரு தார்கோவ்ஸ்க்கியின் திரைப்படத்தை இசையின்றி பார்க்கும் செவ்வியல் அனுபவத்தை தருகிறது. இந்த பட்டியலில் இருக்கும் கூறுகள் அனைத்தும் நம் செவ்வியல் கவிதைகளின் கூறுகள் என்பதே இந்தக் கவிதைகளின் சிறப்பு.
விழி என்ற கவிதையில் வரும் இந்த வரிகள் சபரிநாதனின் அழகியலை முழுமையாக வெளிப்படுத்துகின்றன, மார்கழியின் அந்தி சாய்கையில் மெல்ல கவியும் இருட்டில் தனிமையும், கண்கள் பழக பழக துலங்கும் உலகமும் “நிமிர்கையில் தென்படுவது / தொடுவான மலைத்தொடரின் வரைகோடு / பைய்ய பைய்ய வெளிவருவன/ மரங்கள்,தெருக்கள், கோபுரங்கள்,வீடுகள் / அம்மக்கள், அப்பாக்கள், அக்கா தம்பிகள் / அணிற்பிள்ளைகள், கோழிக்குஞ்சுகள்…” என்று உருவாகும் இந்த சித்திரத்தில் இருப்பது எந்த கூற்றும் இல்லை, தன்னுணர்வும் இல்லை. தன்னுணர்வு மயங்கும் இடம். சித்திரங்களின் பிரவாகம் மட்டுமே. இவற்றை வாசிக்கும்பொழுது தோன்றுவது படிமங்களின் உக்கிரத்தில் நவீன கவிதை இழந்தது காட்சிகளின் வழியாக உணர்வு நிலைகளை உருவாக்கும் சங்க கால கவிதையின் மென்னிலையை என்று தோன்றுகிறது. இத்தனை விரிவான பின்புலத்தில் வைத்து பார்க்காத பொழுது, சம கால கவிதையின் அருகே நிற்பதால் இவை சற்று பழைய கவிதை போல தோன்றி விடும் சிக்கல் இருக்கிறது.
முன்பு குறிப்பிட்டது போல இந்த அழகியலின் வழி செவ்வியல் தன்மை கொண்ட விஷயங்களை மட்டுமேதான் சொல்ல முடியுமோ, இன்றைய வாழ்க்கையை சொல்ல இயலாது என்று தோன்றக் கூடும், இந்த சிக்கலை அபாரமாக எதிர் கொள்கின்றன சபரிநாதனின் கவிதைகள். “அறைகலன்களுடனும், பெட்டி படுக்கைகளுடனும் போய்க்கொண்டிருக்கின்றேன் / கொட்டும் மழையில் குட்டி யானையில் / எனக்கு தெரியவில
சபரிநாதன் கவிதைகள் 3
இளங்கவிஞர்களுக்கான குமரகுருபரன் –விஷ்ணுபுரம் விருதைப்பெறும் சபரிநாதனின் கவிதைகள். அவருடைய வால் என்னும் தொகுதியில் இருந்து.
விருது விழா ஜூன் 10 அன்று சென்னையில் நிகழவிருக்கிறது.
விழிப்படைந்த கத்தி
நாளிதழில் பொதித்து எடுத்துச் செல்லப்பட்ட கத்தி
தவறி விழுந்த போது சுயநினைவிற்குத் திரும்பியது
இப்போது அது ஒரு பசித்த புலி,யாராலும் தொடமுடியாது.
இனி அதற்கு எதுவும் தேவை இல்லை
தனக்கு வேண்டிய பழங்களை தானே நறுக்கிக்கொள்ளும்
குளிர்பருவத்தில் உறையுள் குனிந்து சென்று உறங்கும்
சட்டென உற்ற விழிப்பு,திடுமென நுரைத்த கருணை;
பளிச்சிடலைக் கைவிளக்காக ஏந்தியபடி
சுற்றுச்சுவரற்ற தன் இருண்ட கிணற்றை பாதுகாக்க வேண்டும் ராமுழுதும்.
நெருப்பிலும் கல்லிலும் உரசி நலம் பேணும் அது
மழை ஓய்ந்த கருஞ்சாம்பல் மாலைகளில் நடந்துசெல்லக் காணலாம்
காவி உடுத்திய சாதுவென கடுந்தேனீருக்காக.
***
பதினொரு காதல் கவிதைகளில் ஒன்று
என் வாசலில்
மகத்தான விடியல் போல
ஒரு பெண்
அறுபடாது ஆயிரம் இரவுகள் நகர்ந்து தீர்ந்த பின் வந்துறைந்தது போல்…
அப்படி ஒரு விடியல்
அதைக் காண்பது எவராயினும் அழுதிடுவோம்.
அது போலொரு காட்சியால் மீட்படையாத ஒருவரை
யாராலும் ரட்சிக்க முடியாது
கண் திறந்து நாழிகையே ஆன புதுக்காற்றின் கோர்வைக்கு
ஒலி செய்யும் பறவைகள் முன் பின் அறியாத கீதங்களை.
சிறிதும் பெரிதுமான பொற்கூடுகளில் குஞ்சுகள் எழும் தருணம்
மரங்கள் நிற்கின்றன ’எமக்கு முன்னமே தெரியும்’ என்பதைப் போல.
இங்கு உள்ளே,
ஒளி நோக்கித் தவழும் குழந்தைகளாய் கவிதைகள்
உலுக்கி அவை சொல்லட்டும்:இன்னும் ஓர் இரண்டு அடி எடுத்து வை கண்ணே
நான் வீடு சேர்ந்திடுவேன்.
என் வாசலில்
மகத்தான விடியல் போல
ஒரு பெண்
அறுபடாது ஆயிரம் இரவுகள் நகர்ந்து தீர்ந்த பின் வந்துறைந்தது போல்…
அப்படி ஒரு விடியல்
***
சொல்ல வருவது என்ன என்றால்…
இங்கு இல்லை
கொஞ்சம் தள்ளி..இன்னும் கீழே
இல்லை அங்கு இல்லை
இல்லை இது வலியே இல்லை டாக்டர்
இது ஒரு குமிழ் ஊத்தைக் குமிழ்
திசுச்சுவர்களில் மோதி மோதி உடைய முயலும்
வெறும் குமிழ்
இல்லை அதுவும் இல்லை
ஏதாவது புரிகிறதா தந்தையே
இல்லை அச்சம் இல்லை
மூடுபனி ததும்பும் பள்ளாத்தாக்கைப் பார்ப்பதல்ல
உறக்க முகப்பில் நிலம் நழுவுமே..அது அல்ல
ஒரு விதமான குளிர் தான் ஆனால்
இது கூதிர் இல்லையே
தொட்டுப் பாரும் அன்னையே
முதலில் எனை வெளியே விட்டிருக்கவே கூடாது
நான் கண்டதை எல்லாம் எடுத்து வாயில் வைத்து விட்டேன்
அப்போது ஓடி வந்த தாங்கள்
எனை அள்ளி விழுங்க முயன்றிருக்கக் கூடாது
புரிகிறதா
நான் கண்டது மிளா இல்லை
கானகக் கண்கள்,செம்பழுப்பு சிறகுகள்,பருந்திமில்
புராதன உயிரி அன்று
பேரம் பேசத் தெரியாத ஒருவன்
குருணைகளையும்,போலிப் பவழங்களையும்,பாதுகாப்பு உத்திகளையும்
கொடுத்து வாங்கிய விலைமதிப்பற்ற பண்டம் அது
இல்லையா அது இல்லையா
இது நீ தானா
இல்லை இது மரப்பு இல்லை
இன்னும் உணர முடிகிறது
படுகுழி எனும் சொல்லருகே அமர்ந்திருக்கையில் கோதிப்போகும் தென்றலை
நெம்ப முடிகிறது கனவில் ஆடும் முன்னம் பல்லை
இல்லை நான் அறிந்தது மந்திரம் இல்லை
ஆசை கூட அல்ல
அற்புத ஜீவராசியின் குரலா என்ன
தீக்காய வார்டின் சாமத்து ஒலிகளா
தெரியவில்லை
நடை சாத்திய நள்ளிரவுக் கோயிலினுள்
நடுங்கும் சுடர் முன்னில் நான் கண்ட இருள்
இல்லை அது இல்லை
சடலங்களை அறைந்து எழுப்பும் ஒளி
இல்லையா அதுவும் இல்லையா
புரிகிறதா அன்பே
புரிகிறது தானே
எனக்குத் தெரியும் உனக்குப் புரியும் என்று.
***
அர்த்த மண்டபம்
நஞ்சுறங்கும் மிடறு கடற்குகையின் அலைவாயில்
காட்டுக் கற்றளியில் கரந்து காத்திருக்கும்
மாந்தருசி கண்ட வேங்கைப்புலி
சதைநினைவு தசைநார்த் தூண்கட்டு
சுவரெங்கும் உதிரம் படியெங்கும் நிணநீர்
தொல்லெலும்புகளின் உத்தரம் தாங்க
விதானமென லட்சோப லட்ச விழிப்பாவைகள்
கீறலுற்று சீதளமற்று கிலி முற்றிய அடிச்சுவடுகளது
உபானமென விரிந்த கபாலப் பாட்டை
வெட்ட வெளி நிறைய எரிமூச்சு இளநாடித்துடிப்பு
சித்தம் குலைத்தலம்பும் நிச்சலனத்துச் சிலாரூபம்
கொதிமணலில் கடந்தகால முடிவிலியின் பாதரேகை
காற்றலைச்சலில் தோன்றியடங்கும் வேற்றுலக அட்சரம்
திருத்துயர் மறந்து மடப்பீடச் சத்திரத்தண்டை
முகமூடிப் பொய்யுறக்கம் போர்த்திய ஊர்
மலர்ச்சகதி பூசனச்சந்தனம் கிழிந்த பைம்பட்டுக்குடை
நிறையலங்காரம் தரித்து நிலையில் குடிகாரத் தேர்
வலை பிண்ணி வலை பிண்ணி ஓயும் அற்பச்சிலந்தி
கோடான கோடி விறைநாண்களின் மௌனம்
மகோந்நதப் பொதி அணுவுறைந்து கோளியக்கி
திறந்த வெட்புலத்தில் மறைந்து வாழும் ஊழ்
அசேதனத்துள் குடியேறிய தன்னிச்சைத் தாளம்
விடையேதும் பெறாது வீழ்ந்த சரற்கால உதிரிகள்
வேதிப்புனல்களின் வெஞ்சினப் பெருக்குடைக்கும்
எண்ணிறந்த ஆடிகளின் அபத்த நிழற்கூத்து
சூன்யகனம் தாளாது சரிந்து நொறுங்கிய மாகோபுர
இடிபாடுகளின் பாறைக்குவையில் மூச்சுத்திணறி முடியும்
முதுநிகண்டு நற்காட்சி முலைக்கருணை நிமிர்வடம்
வெடிப்பின் விசும்பலின் எதிரொலிப்பின் காதகாதம்
காணாமற்போன தெய்வங்களின் ஓடுபாதையாய்க் காலகாலம்
அந்தோ மந்தை மந்தையாய் மூழ்கடிக்கும் சாம்பற்கனவு
நீரடி வண்ணங்களூடே நட்சத்திரமீன் நீந்தும் பொற்கனவு
ஒளியறியா பேராழி அதன் ஆழாழத்தில்
உருக்கொண்ட எண்ணமது தீதோ நன்றோ
நான் நீ அது இது நாம்
இருப்புக்கு முந்திய இன்மைக்கு முந்திய
இருப்பு இருப்போ இன்மையோ கனவிதுவோ நிஜமே தானோ
வென்று வினைமுடித்து அரசாண்டு பகல் நரைத்துக் கருக்கையில்
சரியும் பரிதி ஏந்தி முன்னநகர்ந்து வருகுது மகிடக்கொம்பிரண்டு
வீண் வீண் என்றிரையுது ஆளிலாத் தீவின் அநாமதேய பட்சி
ககன மடிப்பில் தட்டழிந்து பாயும் அநந்த பிறவிகளின்
மருந்தெனப் பிறந்தவொரு சொல்
மணிநாத ஓய்வில் மர்மச்சிறு நகை
ஒற்றைக் கல்லில் குடைந்தெடுத்த இருளினுள்ளே
சிறகொடுக்கி எழுந்தமர்ந்த செந்நீலச்சுடர்
இருட்சக்தியுள் கண்டறியா ஓரை மண்டலத்தின் கீழே
சூல் கொண்டு பாழ் துளைத்து கிளைத்து விண்நிறைக்கும்
ஒற்றையொரு தன்னந்ததனி வெண்பெருங்கேள்வி:ஏன்?
***
தானியங்கி நகவெட்டி
முதன்முதலாக அறிமுகப்படுத்தப்பட்ட தானியங்கி நகவெட்டி விரலைக் கடித்தது
சீர் செய்யப்பட்ட இரண்டாவது ரகத்திற்கு சதை என்பது என்னவெனத் தெரியும்
ஆக அது மொத்த நகத்தையும் தின்றது.படிப்படியாக நகவெட்டிகள் மேம்படுத்தப்பட்டன
சமீபத்தில் வெளியான அதிநகவெட்டி முழுமுற்றான தானியங்கிகள்
விலை அதிகம் தான் எனில் அவற்றுக்கு நகம் தவிர வேறெதன் உதவியும் தேவையிராது
என்பதால் நகம் வளர்க்க வேண்டும் நாம் எல்லோரும்
அதன் உலோகப்பற்களின் மினுமினுப்பைச் சிலாகிக்க வேண்டும்.
மீனவர்கள் கடலுக்குள் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்ட இரவுகளில் அது
அலறும்:நான் ஏ..ன் பிறந்தேன்?
நகம் வெட்டத்தான் என்றால் நம்பாது.
***
சமவெளி
ஒரு தற்கொலைக்குப் பின்னர் கைவிடப்பட்ட பொதுநீர்த்தொட்டி விளிம்பில்
கதிர் நோக்கி வட்டம் கட்டி நிற்கும் புறவுகள்
இன்றிற்காய் நிரப்பிக்கொள்கின்றன தம் மின்கலன்களை.
பல்துலக்கியும் கையுமாய் படிக்கட்டில் மெய்மறந்த சிறுமிகள்.
நாலாயிரம் மைல்கள்,இரண்டு பெருங்கடல்கள்,ஏழு தேசங்கள்,
ஐம்பத்து சொச்ச ராப்பகல்கள்…காலை வணக்கம் திருமதி.பழுப்பு கீச்சானே!
இன்று நம் முன்னே ஏறிக்கடக்க வேண்டிய குன்றுகள் ஏதுமில்லை
நான் எப்போதுமே நம்பிய அதல,விதல,சுதல,பாதாள லோகங்கள் யாவும்
இவ்வெளிர் வெயிலில் வெறும் மனப்பிரமைகள் தானோ.
பூமி தெரிகையில் நடக்க வேண்டும் போலிருக்கிறது வெறுங்காலுடன்
இந்நீநிலம் ஓர் ஆயுட்கைதியின் கனவு தான் என அறிந்ததும்,நண்பா
உனக்காக நான் நடந்துகொண்டே இருப்பேன்.
குளக்கரைச் சத்திரத்தில் கழுதைகள் தியானிக்கும் மதியம் இப்போது
ஒருவர் காதலிக்கலாம் பழம்பெரும் நடிகைகளை அல்லது
பிரிக்கப்படும் தேக்கிலை புளிசாதக் கட்டுகளின் வாசத்தில் அப்படியே கால் நீட்டலாம்.
கழுவப்படும் தூக்குவாளிகள்,சாந்து கரண்டிகள்,மண்வெட்டிகள்
நடை திறந்து மணி ஒலிக்கிறது ஆம் ஆம் ஆம் என்று
கருவறை வாசலில் நிற்கும் பதின்மரில் ஒருவன் விழித்துக் கொள்கிறான்.
அடுக்குப்பானைகள் ஏதுமற்ற அரங்குவீட்டின் இருட்டு இது
கோடாங்கி கிளம்பும் ஏழாம் சாமத்தில் சிலிர்க்கின்றன பனந்தோகைகள்
அவை,படுக்கையில் சாய்ந்ததும் உறங்கிவிடுபவளின் நினைவுகள்.
சாந்தி கிட்டா ஆவிகளே தவிப்பாறுங்கள்
சூட்டுக்கோல்களே மனமிறங்குங்கள் என்
பெரும்பேராசைகளே இன்று போய் நாளை வாருங்கள்.
***
ஆச்சர்யக்குறி
பிராயத்து கவிதைகளில் நிறைய ஆச்சர்யக்குறிகளைப் பயன்படுத்தியிருக்கிறேன்
முதிர்ச்சியற்ற உள்ளரங்கு வடிவமைப்பாளனைப் போல நடந்து கொள்வேன்
இப்போது அப்படியில்லை
இருந்தும் நான் விரும்புகிறேன்
என் கவிதைகளுக்குள் ஆச்சர்யக்குறிகள் தாமாகவே முளைப்பதை
நடை வழி காளானென
காட்டு புல் இதழென
குழந்தை கண்ட மின்னலென
***
நீரும் ஒளியும்
நள்ளிரவு.சோடிய மஞ்சள் நீத்த ஆழத்தில் தெருமுனை.வந்து நிற்கின்றன
கிரேட்டிசிய யுகத் தொல்லுயிர்களை நினைவூட்டும் எந்திரங்களும் சேணமிட்ட கனரக
வாகனங்களும்.
எனக்கவற்றின் பெயர் தெரியாது.அவை எதற்கென்றும் தெரியாது.
சில கணங்கள் ஒரு சில்லிடும் திகில்.
தூங்க முடியவில்லை.அங்கே,அவையருகே யாரும் இல்லை
சட்டென யாவும் தாமே இயங்கத் துவங்குகின்றன
சுழலும் திருகாணிகள் இறங்கும் இரும்புருளைகள் விரிந்த உலோகக்கரங்கள்
ராமுழுதும் இரைய தூங்க முடியவில்லை
புழுதிக்கோளத்தில் குனிந்து நிமிர்ந்து உரசி நகரும் கிழட்டு பூதங்களை
எப்படி நிறுத்துவது? சாவி யார் கையில்? கட்டுப்பாட்டு அறை எங்கே?
காலையில் தடைச்சாய்ப்புகள் சுற்றி நிற்க ஒரு பெரும்பள்ளம்.சற்று தள்ளி
செடி ஒன்று பணி செய்துகொண்டிருக்கிறது தன்னந்தனியாக
அதன் வேர்களோ நீர்த்தேடலின் மும்முரத்தில்
கருங்கண்ணாடி அணிந்த கட்டடங்களைத் தாண்டி அது வளரும்.
அண்ணாந்து பார்க்கும் தனிஒருத்தி அறிவாள்:
அதன் கிளைகள், ஆ… அவை தான் ஒளியைத் தேடுவோர்க்கான வரைபடம்.
***
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
வெற்றி -கடிதங்கள் 5
அன்பு ஜெமோ,
வெற்றி சிறுகதை- எல்லா பக்கமும் சுவரிடிந்து விழும் உணர்வு. முதலில் நடை கொஞ்சம் இடறினாலும், மைய முடிச்சு வந்தவுடன் முழுதாக உள்ளிழுத்துக்கொண்டது. ஒவ்வொருவரின் சொல்லிலும் செயலிலும் உள்ள நெருடல்களே கதையின் ஆழம்.
ரங்கப்பர் போன்ற ஒருவருக்கு பணம் ஒரு பொருட்டல்ல. வெளியில் அவரைப்பற்றி பொதுவாக என்ன நினைக்கிறார்கள் என்பதும் ஒரு பொருட்டாகத் தெரியவில்லை என்றே தோன்றுகிறது. அவர் அதைத்தாண்டி பற்றிக்கொள்ள ஏதுமுள்ளதா என்று தேடுபவராகவே தெரிகிறார். அப்படி ஒன்றை லதாவிடம் கண்டுகொண்டதனால் இரண்டையும் இழக்கத் தயாராகிறார்.
கற்பைப்பற்றி வெளியில் உரக்கப்பேசும் நமச்சிவாயம், உள்ளூர எப்படியாவது பணம் வந்தால் சரிதான் என்று நினைக்கிறார். தன்கையில் ஐந்து லட்சம் வந்துவிட்டதாக கற்பனை செய்யும் போது பெண்களை எப்படிப்பார்க்கிறார் என்பது அவருக்கே பெரிய திறப்பு. தோற்றுவிடுவோம் என்ற எண்ணம் வந்தவுடனேயே, ரங்கப்பரின் வெற்றி மோகத்தைப்பற்றி நினைத்து ‘எப்படியும் வெல்ல எண்ணுபவர் 3 லட்சம் வரைக்குமாவது செலவு செய்து வெல்லத்தானே எண்ணுவார்’ என்று நினைத்துக்கொண்டு அதை பூடகமாக மனைவியிடமும், அண்ணனிடமும் சொல்கிறார். மனைவிக்கு வரும் பணமெல்லாம் தன்னுடையதுதானே என்றும் நினைக்கிறார்.
அவர் பார்வையில், லதா மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிய பிறகு நடந்துகொள்ளும் விதம், தெளிவாகவே ஏதோ நடந்திருப்பதை காட்டுவதாகவே வருகிறது. அந்த உறுத்தலுடன்தான் அவர் வாழ்ந்தாக வேண்டும். அதையும் தாண்டி, ரங்கப்பர் வெளியில் சொன்னதையே உண்மையென்று நம்பி அந்த உறுத்தலைக் கடக்கிறார் நமச்சிவாயம். அதனால்தான் லதா கடைசியில் அந்த ஓட்டையும் உடைக்கிறாள் என்று நினைக்கிறேன்.
எந்தவித மரியாதையும் தரப்படாமலேயே தன் கடமைகளை செம்மையாகச் செய்கிறாள் லதா. அவளுடைய நோயாளி மகன் வலிந்து உருவாக்கப்பட்டிருப்பதாக சில வாசகர்கள் எழுதியிருந்தார்கள். ரங்கப்பரின் பக்கம் சாய, அவளுக்கு நோயாளி மகனெல்லாம் தேவையே இல்லை. ரங்கப்பரின் மேல் நன்றியுணர்வு இருந்திருக்கலாம்; ஆனால் அவளை மனுஷியாகப் பார்க்கும் கண்கள் போதும்.
அன்புடன்,
ராஜன் சோமசுந்தரம்
***
அன்புள்ள ஜெ,
வெற்றி சிறுகதை பற்றி,
கதை எனக்கு பிடித்திருந்தது, எனக்கு ஒரு இடத்தில மட்டும்தான் குழப்பம், ஏதன் காரணமாக ரங்கப்பருடன் அவள் சென்றாள் என, பணம் எல்லாம் காரணமாக இருக்காது, கண்டிப்பாக இதில் வந்த ரங்கப்பரின் இயல்பின் படி அவர் பணம் பற்றி அந்நேரத்தில் அவளிடம் பேசியிருக்க (பேரம் )மாட்டார். நான் இவ்வாறு புரிந்து கொண்டேன், அவளது மகன் மீதான அந்நேர மன அழுத்தம் அதன் எல்லைக்கு சென்றிருக்கும், பின்பு அதிலிருந்து விடுபட, மறக்க ரங்கப்பர் உடனான நெருக்கத்தை தேடியிருக்கும்.
சமூக கட்டுப்பாடுகள் எல்லாம் பொது ஒழுங்கு சார்ந்த பிடிப்பிலிருந்து மனம் சிதறாமல் இருக்க உருவானவை, மனம் அழுத்தம் காரணமாக உச்சத்தை அடையும் போது கட்டுப்பாடுகள் எல்லாம் மறந்து விடும், அதாவது உடலின் விருப்பத்திற்கு மனம் தன்னை ஒப்பு கொடுத்து விடும், ஒப்புக்கொடுத்தல் என்பது நதியில் இலை தன் எதிர்ப்பினை காட்டாது நதியின் போக்குடன் செல்வது போன்றது, அவள் ரங்கப்பருடன் அன்றிரவு அப்படி சென்றிருப்பாள் (கொஞ்சம் ஓவரா தான் யோசிக்கிறேன், ஆனா எனக்கு இந்த கதையை பாசிட்டிவாக எடுத்துக்கணும்னு விருப்பம், அதனால இப்படி பொருள் எடுத்துக்கிட்டேன் :) )
இந்த கதை பற்றி நிறய எழுதலாம் னு தோணுது, அவளும் ரங்கப்பரம் சந்தித்த முதல் சந்திப்பின் முடிவிலேயே நமசிவாயம், போய் படுத்துக்க, 5 லட்சம் கொடுப்பாரு னு சொன்னது, நீங்க முடிவை முன்னாடியே கதைல சொல்லிட்டீங்க :) சொல்லப்படும் வார்த்தையை மனம் உள்வாங்க விட்டாலும் உடல் உள்வாங்கிடும் போல :)
அந்த பொண்ணு தெய்வம் மாதிரியான பொண்ணுதான், முக்கியமா அந்த இரவுக்கு பிறகும் அவள் மீது விழும் பொன்னிற ஒளி அதை தான் சொல்கிறது என நினைக்கிறேன்.
இன்னொரு முக்கியமான விஷயம் நமசிவாயத்திற்கு துவக்கத்திலேயே பணம் (பென்ஸ்) வரும்படி ரங்கப்பர் செய்வது, இது எதோ ஒரு விதத்தில் முடிவிற்கான மனநிலையை நமசிவாயம் ஏற்று கொள்ளும் மனநிலையை கொடுக்கும் அல்லது அது போன்ற எதோ ஒரு விஷயத்திற்காக என தோன்றுகிறது.
இன்னொன்று ரங்கப்பரை இந்திரனுடன் ஒப்பிடலாமா என்று தோன்றுகிறது, jk வின் (பிரபு -கங்கா ) கதையை போல, ஆனா அது போல யோசித்தால் சிவாகி அண்ணா ‘ டே கொல்லாத ‘ என்னை திட்டுவார் என்பது வேற ஞாபகத்திற்கு வருகிறது :)
தேவையை, விருப்பத்தை நிறைவேற்றுவதன் வழியாக எந்த பெண்ணையும் ஈர்த்து விடலாம் என்பதை (கசப்பை) எப்படி ஜீரணித்தேன்னா, ரங்கப்பர்க்கும் ஒரு மனைவி இருப்பாள், அவளுக்காகவும் வெளியில ஒரு தேவேந்திரன் காத்திட்டு இருப்பான் னு நினைச்சு :))
ராதாகிருஷ்ணன்
***
திரு ஜெயமோகன் அவர்களுக்கு,
உங்கள் வெற்றி சிறுகதை பற்றி என் www. agnikuyil. blogspot. com என்ற BLOG -இல் ஒரு விமரிசனம் எழுதியிருக்கிறேன். அது கீழே.
வெற்றி – ஒரு எதிர்வினை
தினமும் காலையில் எழுந்ததும் மொபைலில் ஜெயமோகனின் சைட்டில் உள்ள வெண்முரசு மற்றும் கட்டுரைகளை விரைவாக ஒரு முறை படிப்பேன். இரவு சாவதானமாக லேப்டாப்பில் மீண்டும் ஒருமுறை அனுபவித்து படிப்பேன். அப்படிதான் வெற்றி சிறுகதையையும் படித்தேன். முதல் முறை படிக்கும்போது மனதில் அதிர்வலைகளை உருவாக்கியது. இரவில் படிக்கும் போதும்.. முதலில் கோபம். சாதாரணமாக மனதில் எழும் பாமரத்தனமான கேள்விகள்தான் எழுந்தது. மீண்டும் சில முறை நிதானமாக படித்தபோது சில உள்ளடுக்குகள் புலனானது. அதை எழுததோன்றியது.. எழுதும் முன் ஜெயமோகனின் வாசகிகளின் எதிர்வினை என்ன என்று பார்க்க தோன்றியது. காரணம் அவர்கள் தேர்ந்த வாசகிகள். ஞாயிறு காலை வரை இரண்டு எதிர்வினைகள் தான் வந்திருந்தது. இரண்டும் எதிர்மறை தான்.
CSK வின் விமரிசனமும் படித்தேன்
CSK இது அந்த பெண்னின் ராஜதந்திரத்தின் வெற்றி என்று எழுதியிருந்தார். எனக்கு சிறுவயதில் படித்த ஒரு குட்டிக்கதை ஞாபகம் வந்தது. ஒரு கழைக்கூத்தாடி தினமும் குரங்குகளை வைத்து விளையாட்டு காட்டி பிழைப்பு நடத்திக்கொண்டிருந்தான். அவனுக்கு ஒரு பையன் இருந்தான். ஒருநாள் பையனை அழைத்து உனக்கு வயதாய்விட்டது. வந்து வித்தை கற்றுக்கொள் என்று கூட்டிக்கொண்டு போனான். நன்றாய் பார்த்துக்கொள் என்று பையனிடம் சொல்லிவிட்டு கையை தட்டினான். குரங்கு ஒரு கரணம் அடித்தது. உடனே அதற்கு ஒரு பழம் கொடுத்தான். பார்த்தாயா எப்படி குரங்கை பழக்கி வைத்திருக்கிறேன் என்றான் பையனிடம். கரணம் அடித்து திரும்பிய குரங்கு அருகிலிருந்த குட்டியிடம் பார்த்தாயா, ஒரு கரணம் அடித்தால் பழம் கொடுப்பான். அப்படி பழக்கி வைத்திருக்கிறேன் அவனை என்றதாம். யார் சரி?
வெற்றியில் யார் வென்றது? கற்பை இழக்காமல், மகனை காப்பாற்றிய தாயா, பந்தயத்தில் வென்று பணக்காரனான நமச்சிவாயமா, ஐந்து லட்சத்தை இழந்து, நினைத்த பெண்ணை அடைந்து, தன் நம்பிக்கையையும் தக்க வைத்துக்கொண்ட ரங்கப்பரா, எல்லோரும் எதோ வென்றிருக்கிறார்கள். ஏதோ இழந்திருக்கிறார்கள். வெற்றி என்பது எது அவர்களுக்கு முக்கியம் என்பதைப்பொறுத்தது.
விஷயம் அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆணோ பெண்ணோ அனைவருமே பலவீனமானவர்கள்தான். காமம் என்கிற விஷயத்தில் 99.9% ஆண்கள் வீழ்ந்து விடுவார்கள் என்பதில் பெரிய அபிப்ராய பேதம் இருக்காது என்று நினைக்கிறேன். பெண்களிலும் ஒரு கணிசமான அளவினர் ஏதோ ஒரு பலவீனத்தில், ஒரு தருணத்தில் வீழ்ந்து விடுவார்கள் என்பதும் எல்லா ஆண்களுக்கும் தோன்றும். எவ்வளவு சதவிகிதம், எதற்காக என்பதில் தான் சர்ச்சை.
எல்லாப் பெண்களும் ஒரு குறைந்த எண்ணிக்கை தவிர பணத்திற்காக விழுந்து விடுவார்கள் என்ற தொனி வருவதால்தான் சிக்கல்.
எல்லா ஆண்களும் காமத்தில் விழுந்து விடுவார்கள் என்று எழுதினால் சிக்கல் இல்லை. காரணம் இந்த சமூகத்தில் ஒரு ஆண் எத்தனை பெண்களை வீழ்த்தினான் என்பதிலே வெற்றி என்று காண்பிப்பதில் சிக்கல் இல்லை. ஆனால் ஒரு பெண் எத்தனை ஆண்களை வீழ்த்தினாள் என்பது வெற்றியாக கருதப்படுவதில்லை. எவ்வளவு ஆண்களின் முயற்சிகளை தடுத்தாள் என்பதை வைத்து தான் அவள் வெற்றியை காண்பிக்க முடியும். இந்த கதையில் கூட அவள் தன பெயர் கெடாமல், மகனையும் காப்பாற்ற்றினாள் என்பது தான் அவள் வெற்றியாக கருதப்படுகிறது.
உலக சுகங்களுக்காக பெண்கள் வீழ்ந்து விடுவார்கள், ஆண்கள் தங்கள் ஆணவத்திற்காக எதையும் தியாகம் செய்வார்கள் என்பது எவ்வளவு தூரம் உண்மை? அழகிற்காகவோ, கிடைக்காத அன்பிற்க்காகவோ, சொத்து சுகங்களை துறந்து ஓடுகிற எத்தனை பெண்களை கண்டிருக்கிறோம். விரும்பிய பெண்ணிற்காக அதிகாரத்தையே துறந்த ஆண்கள் எத்தனை? ராமராவ் ஞாபகம் வருகிறார்.
ஜெயமோகனின் படைப்புகளை தொடர்ந்து படித்து கொண்டிருப்பதால் எனக்கு ஜெயமோகனின் ஒரு இயல்பாக தோன்றுவது இரண்டு முரணியக்கங்கள். அவர் பெண்கள் ஒருபக்கம் உலக சுகங்களில் பலவீனம் உள்ளவர்கள் என்று எண்ணுகிறார்.. மறுபக்கம் தாய்மையின் மகத்தான சக்தி பற்றி மிகுந்த நம்பிக்கை வைத்திருக்கிறார். அவர் படைப்புகளில் தாய்மையின் சக்தி திரும்ப திரும்ப வருகிறது.
ரங்கப்பரிடம் பெற்ற அனுபவத்தைப்பற்றி லதா என்ன நினைக்கிறாள் என்று தெளிவாக தெரியவில்லை. ஜெயகாந்தனின் சூயிங்கம் போல எதாவது இருக்கிறதா என்று பார்த்தேன். ஒரே நாளில் பத்து பதினைந்து வயது கூடியது போல இருந்தாள். எங்கிருந்தோ ஒரு தனி ஒளி அவள் மேல் வீழ்ந்தது போல இருந்தது என்று எழுதியிருக்கிறார். அந்த ஒளி தியாகத்தின் ஒளியா, இதுவரை கிடைக்காத பரிவு இப்போது கிடைத்ததின் ஒளியா என்று தெரிய வில்லை.
இந்தக் கதையில் காச நோய் பிடித்த மகனை காப்பாற்ற அவள் வீழ்வதாக காட்ட வேண்டிய தேவையே இல்லை. ரங்கப்பர் வீசிய பனத்திற்கெல்லாம் மயங்காமல், ஆனால் அவர் காண்பித்த அன்பிற்காக, நமச்சிவாயத்தின் புறக்கணிப்பிற்கு பழியாக அவள் தன்னை ரங்கப்பரிடம் சமர்ப்பித்தாக அமைந்தால் லதாவின் பாத்திரம் மோசமடையுமா? இல்லை என்றே தோன்றுகிறது. ரங்கப்பர் லதா பணத்திற்காக வீழவில்லை, தன் அன்பிலேயே வீழ்ந்தாள். ஆகவே பெண்கள் பணத்தில் வீழ்வார்கள் என்ற தன் சித்தாந்தம் தோற்றுப்போனதை ஒத்துக்கொண்டு பணம் கொடுப்பதாக முடித்தாலும் சரியான முடிவாகத்தான் இருக்கும்.
அப்புறம் எதற்கு ஜெயமோகன் ஒரு காச நோய் மகனை உருவாக்கி, தாய்மைக்காக அவள் வீழ்வதாக எழுதியிருக்கிறார்.? இது ஒரு சீரியல் எழுத்தாளரின் உத்தி என்று அவருக்கு தெரியாதா?
அவர் சுமதி என்ற பெண் வாசகருக்கு எழுதிய பதில் சுவாரசியமானது. இது தான் என் தரப்பா என்றால் இல்லை என்கிறார். ஆனால் எந்த எழுத்தாளரும் தான் அந்தரங்கமாக நம்பாததை எழுத மாட்டான். அதை அடுத்த வரியிலேயே ஒத்துக்கொள்கிறார். இவ்வுண்மையை கண்டு அஞ்சி அறம் போன்ற கதையில் ஒளிந்து கொள்வேன் என்று எழுதுகிறார். அந்த பெண் வீழ்வாள் என்று அவர் உள் மனம் நம்புகிறது. இது பெரும்பாலான ஆண்கள் உண்மையாக உணர்வது. அந்தராத்மாவை உண்மையாக நம்பும் எந்த எழுத்தாளரும் அதை எழுதாமல் தப்ப முடியாது. இதனால் பெரும் திட்டுகளை சந்திக்க வேண்டும் என்று உணர்ந்த பிறகும் கூட. ஆனால் தாய்மையை ஆராதிக்கிற ஜெயமோகனுக்கு அதை தாங்கிக்கொள்ள முடியவில்லை. ஆகவே அதை ஒரு தாய்மையின் தியாகமாக மாற்றி ஆறுதல் கொள்கிறார். ஒரு உத்தியாக அது ஒரு தோல்வி என்ற போதும் கூட. அது அவர் அறம். இது அவர் வெற்றியா, தோல்வியா என்பது அவரவர் கோணத்தைப் பொறுத்தது.
ஆனால் கதை ஒரு வாசகனாக என்னை வென்றிருக்கிறது.
ஏ.ராமகிருஷ்ணன்
***
அன்புள்ள ஜெ அவர்களுக்கு,
உங்கள் வெற்றி சிறுகதை பேருந்துப் பயணத்தில் படிக்க ஆரம்பித்து நான் முதன் முதலில் படித்த உங்கள் யானை டாக்டர் போலவே இறங்க வேண்டிய நிறுத்தத்தைத் தவற விடச் செய்தது..
அதன் பின் இரு நாட்களாக அன்றாட வேலைகளின் நடுவே அதன் ஒரு பகுதி சில கேள்விகளை எழுப்ப அதற்கான பதிலை அதன் மற்றொரு பகுதி வழங்குவதாகத் தோன்றுகிறது. அதன் பொருட்டு எழுதப்பட்ட சில கடிதங்கள்/விமர்சனங்களையும் படித்த போது பெண்கள் சற்று காயமுற்றிருப்பது புரிந்து கொள்ளக் கூடியதே. ஆனால் கொஞ்சம் ஆழ்ந்து யோசித்தால் அது உண்மையல்ல, அது அந்த கதாபாத்திரங்களின் மன அமைப்பு என்பதும் கதை நடக்கும் ஜமீன்தார் கால ஆண்களின் பொதுப்புத்தி என்பதையும் கண்டு கொள்ளலாம். கூடவே பெண்களிலும் பலவீனர்கள் எல்லா காலத்திலும் உண்டு என்பதையும்..
அந்தக் கதையின் ஆரம்பத்தில் சொல்லியது போல காஸ்மாபாலிடன் கிளப் என்பது தேவர்களும் அசுரர்களும் சந்தித்துக் கொள்ளும் இடம். ஆனால் தேவர்கள் அசுரர்கள் என்று தனித்தனியாக யாரும் அங்கு இருப்பதாகத் தோன்றவில்லை. அங்கு வரும் ஆண்கள் ஒவ்வொருவரும் தேவர்களாகவும் அசுரர்களாகவும் ஒவ்வொரு நாளும் பாத்திரம் மாற்றி நடிக்கிறார்கள்.. ஆம் நடிக்கிறார்கள்.!
ஒருவன் அசுரனாகி ஒரு கருத்தை சொன்னால் மற்றொருவன் தன் ஆணவம் சீண்டப்பட்டு தன்னை தேவனாகப் பாவித்து எதிர் கருத்தை சொல்கிறான்.. அடுத்த முறை அவர்கள் பாத்திரங்களை மாற்றிக் கொள்ளுகிறார்கள். ஆண்களுக்கு அவர்கள் ஏற்றிருக்கும் பாத்திரம் அசுரனா தேவனா என்பதை விட அதில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆணவமே முக்கியமாகிறது.. நட்ராயன் வைர வைடூரியங்களை வாரி இறைத்து வைத்திருக்கும் கோமளவல்லியை வீழ்த்த முடியாது என்று ஒரு ஆணவத்தில் (அவள் காதல் மேல் கொண்ட நம்பிக்கை தரும் ஆணவம்) சொல்லும்போது ரங்கப்பர் பணத்தினால் பெண்களை வீழ்த்தி விடலாம் என்று தன் ஆணவத்தால் சொல்கிறார் (இதற்குப் பின்னும் ஒரு பெண் தந்த நம்பிக்கை இருக்கலாம்)..
இந்த முறை நட்ராயன் தோற்கிறார். இது போன்ற பலவீனமான பெண்களிடத்தில் அவர் கொள்ளும் வெற்றி தரும் ஆணவத்தில் ரங்கப்பர் எல்லோருக்கும் விலை வைக்கிறார்.
வெற்றி மட்டுமல்ல தோல்வியும் தாழ்வுணர்ச்சியும் தரும் வன்மம் கூட சந்தர்ப்பம் கிடைக்கும் போது ஆணவமாக மாறக்கூடியது, அதுவே நமச்சிவாயத்தை தேவர்கள் பாத்திரம் ஏற்று நடித்து “என் வீட்டு பெண்கள் ஏழைப் பெண்கள் நல்லவர்கள்” என்று எதிர் சவால் விடச் செய்கிறது..
தனக்கு ஐந்து லட்சம் கிடைத்தால் அதை கொண்டு தெருவின் எந்த பெண்ணையும் வாங்கலாம் என்று அவர் நினைக்கும் கணம் அந்த வேஷம் கலைந்து போகிறது..
நமச்சிவாயத்தின் அண்ணன் “விடுபட்ட இரு பேப்பர்களை எழுதினால் இவன் இருக்கும் இடம் என்ன என்பது தெரிய வேண்டாமா” என்று அக்கறையோடு பேசுவதும் கூட நான் உன்னைவிட உயர்ந்தவன் என்னும் ஆணவத்தால் ஏற்று நடித்த ஒரு வகையான தேவர்கள் பாத்திரம்.. நமச்சிவாயத்திற்கு வரப் போகும் எதிர்காலத்தைப் பற்றி கேட்டு் துணுக்குறும் கணம் அது கலைந்தும் விடுகிறது..
இதில் உள்ள முரண், நமச்சிவாயம் அடிப்படையில் மூர்க்கர் அல்லர். தன் மனவோட்டங்களை அதன் அபத்த சிந்தனைகளை உணர்ந்தே இருக்கிறார் என்பதும் கூடத் தெரிகிறது. ரங்கப்பர் அந்த கணத்தில் அவ்வாறு தோன்றியதால் மட்டுமே சவால் விட்டார் என்று கூட இவர் அவரையும் புரிந்து கொள்பவராகவே இருக்கிறார். ஆனாலும் அவை பின்னே தள்ளப்பட்டு இரு வகை வெற்றிகள் (ஆணவங்கள்)அவரைத் துரத்துகின்றன. முக்கியமாக கிடைக்கப் போகும் பெரும் பணம் கொண்டு அவர் அடையப் போகும் லௌகீக வெற்றி அதன் மூலம் அவர் திரட்டப் போகும் பேராணவம். அந்த இடைப்பட்ட நாட்களில் அவர் வரப்போகும் பணத்தை குறித்தே அதிகம் சிந்திக்கிறார்.. ஆண் மனம் இவ்வளவு மூர்க்கமாக வெற்றி பெறத் துடிப்பது என்பதே அச்சம் தர செய்வதாக உள்ளது..
கோமலாவைப் பதினைந்து தினங்களில் கவர்ந்து கொண்ட ரங்கப்பர் எழுபத்தைந்து நாட்கள் முடிந்து மீதம் பதினைந்து நாட்களே உள்ள நிலையில் லதா நல்லவர் என்று சான்றளிக்கிறார். ஆனால் அழுத்தங்களுக்கு வளைவார்கள் என்று அவர் சொல்லும் போதே புரிந்து விடுகிறது அவரளவில் அவர் தோற்று விட்டார் ஆனால் ஒரு வகையில் அவர் பார்க்க விரும்பிய, பணத்திற்கு வளையாத பெண்ணைப் பார்த்து விட்டார். அந்த வகையில் அவருக்கு அது வெற்றியே.
கடைசி தினத்தில் எதுவும் நடந்திருக்கலாம். தான் உயிரெனக் கருதிய குழந்தைக்காக அவள் அழுத்தத்திற்கு வளைந்திருக்கலாம். அதுவே அவளுடைய அன்றைய தின குற்ற உணர்வுக்கு காரணமாய் இருந்திருக்கலாம்.. ரங்கப்பரும் அதே குற்ற உணர்வு கொண்டு தான் தோற்றுவிட்டதாக அறிவித்து ஐந்து லட்சத்தை அளித்திருக்கலாம்..
அல்லது ரங்கப்பரின் நோக்கம் கண்டு அவள் அவர் மேல் வைத்திருந்த மிகப்பெரிய மரியாதை எனும் நம்பிக்கைப் பொய்த்துப் போனது கூட காரணமாயிருக்கலாம்.
தன்னை அடைவதற்காக ஒருவன் செய்யும் உதவி என்று தெரிந்திருந்தால் எந்த பெண்ணும் அவரைக் கடவுளோடு ஒப்பிட்டு தன் கணவனிடமே அவ்வளவு இயல்பாக பேச மாட்டாள்.
மற்றபடி அவள் ஒன்றும் மகிழ்ச்சியான வாழ்க்கையை நமச்சிவாயத்துடன் வாழவில்லை என்பது அவர் வார்த்தைகளின் வழியே தெரிகிறது. அவரும் தொடர்ச்சியாக அவளைக் காயப்படுத்துகிறார்..
அதனால் அவள் தனக்கு கிடைத்த ரசனையான பாராட்டுகளை சமூகத்தில் கிடைக்கும் மதிப்பை (மருத்துவமனை தாதி பற்றி சொல்லும் இடம்) மகிழ்ச்சியாகவே ஏற்றுக் கொள்கிறாள் என்று எண்ணத் தோன்றுகிறது.. அதை தன் கணவனிடமும் பெரும்பொருட்டே அதை நமச்சிவாயத்திடம் சொல்லவும் செய்கிறாள்.
ஒரு வேளை நமச்சிவாயம் அந்த ஐந்து லட்சத்தோடு தன் ஆணவப் போக்கைத் தொடர்ந்து (தொடர்ந்திருக்க வாய்ப்புகளே அதிகம் அவர் அதை கனவு கண்டவர்), கடைசியில் அதை சிறுமைப் படுத்த வழி தெரியாமல் கூட லதா அது தன்னால் சாத்தியப்பட்டது என்று பொய் சொல்லியிருக்கலாம்.
ஒரு வேளை தான் அவ்வாறு வெல்லப்பட்டிருக்க ஆசைப் பட்டிருக்கலாம் கூடத்தான்..
எது எப்படியாகினும் நானும் ஒரு ஆண் மனத்துடன் படிக்கிறேன் என்பதை இந்த கதை சில இடங்களில் இயல்பாகவே நினைவூட்டியது. அந்த குற்ற உணர்வே இது குறித்து இரு நாட்களாக இடையிடையே இம்சை செய்தது.. இதை எழுதுவதின் மூலம் அது பெருமளவு குறைந்து விட்டது.
ஆம், நான் தேவர்கள் பாத்திரம் ஏற்றுக் கொண்டு விட்டேன். என்னை அசுரனாக்க இன்னொரு ஆண் முயலாதிருப்பானாக..!
அன்புடன்,
ஞானசேகர் வே
***
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 13
12. சகடத்திருமை
அந்திப் பொழுதில்தான் அவர்கள் குண்டினபுரியை சென்றடைந்தனர். அதன் புறக்கோட்டை வாயில் இரண்டு ஆள் உயரமே இருந்தது. அடித்தளம் மட்டுமே கற்களால் கட்டப்பட்டு அதன் மேல் மண்ணாலான சுவர் அமைந்திருந்தது. பசுவின் வயிறென வளைந்து நீண்டு சென்ற அச்சுவர் சில இடங்களில் தாவிக்கடக்குமளவே உயரமிருந்தது. அதன்மேல் மழைக்காலத்தில் வளர்ந்த புல் வெயிலில் காய்ந்து இளமஞ்சள் நிறத்தில் காற்றிலாடியது. கோட்டை வாயிலின் மேல் அமைந்த காவல்மாடம் ஈச்சை ஓலையால் கூரையிடப்பட்டிருந்தது. கோட்டைக்குள்ளிருந்த மரத்தாலான மூன்றடுக்குக் காவல் மாடத்தின் உச்சியில் நடுவே வடுவுடன் கரிய தோல் பரவிய இரு முரசுகளும் நான்கு காவல் படையினரும் அமர்ந்திருந்தனர்.
கோட்டையை பழுது பார்க்கவோ முரசுகளை சீரமைக்கவோ மரச்சட்டங்களில் வண்ணம் பூசவோ அவர்கள் முயலவில்லையென்று தெரிந்தது. முந்தைய மழைக்காலத்தில் சேறாக இருந்த சாலை அப்போது புழுதியாக மாறிவிட்டிருந்தது. அவ்வழியில் மிகச்சிலரே கோட்டைக்குள் சென்றுகொண்டிருந்தனர். நளன் “நாம் முன்னரே வந்துவிட்டோமா?” என்று கேட்டான். “இல்லை அரசே. சாலை வழியாக இந்நகருக்குள் புகுபவர் மிகச்சிலரே. சாலைவழி காட்டுக்குள் குளம்புப்பாதையாக மாறிவிடுகிறது. எனவே வரதாவினூடாக படகுகளில் வருவார்கள்” என்றார் ஸ்ரீதரர்.
பொதி சுமந்த அத்திரிகளும் கழுதைகளும் தலையாட்டி மணியோசை எழுப்பியபடி சென்றன. கோட்டை வாயிலில் அவை ஒன்றுடன் ஒன்று முட்டி தயங்கி நின்றன. சிறுவணிகர்கள் மரத்தாலான தங்கள் சுங்க இலச்சினைகளைக் காட்டி ஒப்புதல்கொண்டு உள்ளே சென்றனர். அங்கே மிகச்சிலரே இருந்தமையால் நெடுநேரம் காத்திருக்கவேண்டியிருந்தது. நிஷதநாட்டின் கொடியை அவர்கள் பொருட்டாக நினைக்கவில்லை. “நம்மை எதிர்கொள்ள அரசகுடியில் எவரும் வரவில்லை” என்றான் புஷ்பாகரன். அவனுக்கு எவரும் மறுமொழி சொல்லவில்லை.
நளன் கோட்டையை நெருங்கியதும் கோட்டைக்காவலன் இறங்கி வந்து அவன் கொடியைப் பார்த்ததும் குழம்பி பின் தலை வணங்கி எந்த உணர்ச்சியுமின்றி மரபான முகமன் சொன்னான். நளன் மறுமுகமனுரைத்து உள்ளே சென்ற பின் “அவன் நோக்கில் நம்மை அவன் விரும்பவில்லையென்று தெரிகிறதே?” என்றான். ஸ்ரீதரர் “ஆம் அரசே, சில நாட்களுக்குள்ளாகவே குண்டினபுரியின் மக்களின் மனநிலை முற்றிலும் மாறிவிட்டது. நெடுநாட்களாக இளவரசிக்கு திருமணம் ஆகாதிருந்தபோது தங்களையும் அவரையும் நினைத்து அவர்கள் எண்ணி மகிழ்ந்ததுண்டு. இன்று தன்னேற்புக்கு கலிங்கனும் மாளவனும் மகதனும் வருகிறார்கள் என்று தெரிந்தபின் அவர்களில் ஒருவரே தங்கள் அரசியை கொள்ள வேண்டுமென்று எண்ணுகிறார்கள். தங்கள் வரவை எவரும் இங்கு விரும்புவதற்கு வழியில்லை” என்றார்.
குண்டினபுரியின் தெருக்கள் முழுக்க யானைத்தோல் இழுத்து கட்டப்பட்ட கூடாரங்கள் தோள்முட்டி நெருங்கி பரவியிருந்தன. அவற்றில் படைவீரர்களே தங்கியிருந்தனர். “பாடிவீடுகள் அமைக்காமல் கூடாரங்களில் வீரர்களை தங்கவைத்திருக்கிறார்கள். அவர்களின் இல்லங்களை விருந்தினருக்கு அளிப்பார்கள்போலும்” என்றார் நாகசேனர். வணிகர்களின் கடைகள் ஓரளவிற்கே இருந்தன. “இங்கு கடை வீதி மிகவும் சிறியது. வரதாவின் கரையோரமாக வணிகர்களின் பண்டகசாலைகள் உள்ளன” என்று ஸ்ரீதரர் சொன்னார்.
“எந்த வகையிலும் ஒரு மணநிகழ்வுக்கு இந்நகரம் சித்தமாகவில்லை. மணம்நாடி அணுகும் அரசர்களுடன் இணைந்து வரும் படைகளுக்கு பொருள் வழங்கும் கடைகளோ அவர்களை தங்கவைக்க கூடாரங்களோ இருப்பதாக தெரியவில்லை” என்று நளன் சொன்னான். வஜ்ரகீர்த்தி “ஆம், ஓராண்டுகாலம் எடுத்துக்கொண்டு அனைத்தையும் அமைத்தாலும் இவர்களால் சரியாக நிகழ்த்த முடியாது. ஓரிரு நாட்களில் முடிவெடுத்து அமைத்திருக்கிறார்கள். இங்கு பெருங்குழப்பமே நிகழவிருக்கிறது” என்றான். நளன் “அவ்வாறல்ல. பல தருணங்களில் நிகழ்வுகள் தாங்களே முட்டி மோதி ஓர் ஒழுங்கை கண்டுகொள்ள வாய்ப்புள்ளது நாம் விரும்பியபடி அவற்றை அமைக்க முயல்கையில் மட்டுமே குழப்பங்கள் எழுகின்றன” என்றான்.
அவர்கள் முதல் அரணின் காவல்மாடத்தை அடைந்தபோதுதான் விதர்ப்பத்தின் ஆயிரத்தவர்களில் ஒருவனாகிய ருத்ரன் தன் இரு உதவியாளர்களுடன் வந்து வணங்கி “நிஷத அரசர்க்குரிய தங்குமிடம் ஒருக்கப்பட்டுள்ளது. வருக!” என்றான். அவன் உடல் மொழியிலும் குரலிலும் வணங்காமை இருந்தது. முகமன் உரைத்து அவனுடன் செல்கையில் ஸ்ரீதரர் “ஒரு துணையமைச்சரை அனுப்பும் மதிப்பை விதர்ப்பம் அளித்திருக்கலாம்” என்றார். நளன் புன்னகையுடன் “தாழ்வில்லை, சில ஆண்டுகளுக்குப்பின் நம் மைந்தன் இங்கே கோல்சூடி அமர்வான்” என்றான். ஸ்ரீதரர் புன்னகை செய்தார்.
அவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இல்லம் சூதர்களின் தெருவில் அமைந்திருந்தது. தலைமைக் கணியரான ஜீமுதரின் இல்லம் அது. அவர் அதன் வாயிலில் கைகூப்பி நின்றிருந்தார். அவர்கள் புரவிகளில் இருந்து இறங்கியதும் அவர் முகம் மலர்ந்தபடி அணுகி “கிரிப்பிரஸ்தத்தின் அரசர் என் இல்லத்தில் கால்வைத்தது என் மூத்தோரின் நல்லூழ்ப்பயன். என் பிந்தையோருக்கு நான் அளிக்கும் கொடை. இத்தருணம் போல என் வாழ்க்கையில் இனி ஒரு பெருநிகழ்வு வரப்போவதில்லை” என்றார். உணர்வெழுச்சியால் அவர் குரல் தழைந்தது.
நளன் அவரை வணங்கி “தாங்கள் முதற்கணியர் ஜீமுதர் என்று எண்ணுகிறேன்” என்றான். “தங்களுக்கு என் பெயர் எப்படி தெரியும்? எண்ணவே இல்லை” என்றார் ஜீமுதர். “திறனுடையோரை நான் அறிந்து வைத்திருப்பேன். இங்கிருந்து செல்வதற்குள் அடுமனைத்தலைவர் வீசிகரையும் புரவிச்சாலை தலைவர் சுப்ரரையும் சந்திக்க விழைகிறேன்” என்றான். அவர் பேருவகையுடன் “தங்கள் நாவால் பெயர் சொன்னீர்கள் என்றறிந்தால் அவர்கள் நெஞ்சுருகி இறக்கவும் கூடும்… பாரதவர்ஷத்தின் அடுமனைத்திறனாளர்களில் முதல்வர் தாங்களே என அறியாதவர் எவர்? புரவிகளின் தெய்வமாகிய ஹயக்ரீவரின் வடிவம் நீங்கள் என்று சூதர் சொல்லி கேட்டிருக்கிறேன்” என்றார்.
அவர் கைகளை பற்றிக்கொண்டு “நாம் இன்றிரவு பேசுவோம்… நான் எங்கும் செல்வதாக இல்லை” என்றான் நளன். அவர் கூப்பிய கையை பிரிக்காமலேயே நளனை தன் இல்லத்திற்குள் அழைத்துச்சென்றார். சிறிய இல்லமாயினும் அதை நன்கு தூய்மைசெய்து அணிக்கோலமிட்டு அழகுறுத்தியிருந்தார். அவரது இளையோரும் மைந்தரும் இல்லமகளிரும் சிறுவரும் புத்தாடைகளுடன் வாயிலின் இருபக்கமும் கைகூப்பி நின்றனர். நளன் வாயிலை அடைந்ததும் அவர்கள் வாழ்த்தொலி கூவினர். மூதாட்டி ஒருத்தி நிறைகுடமும் பொலிமுறமும் ஏந்தி எதிரே வந்தாள். நளன் வலக்கால் எடுத்து வைத்து உள்ளே நுழைந்தபோது பெண்கள் குரவையிட்டார்கள்.
நீராடி ஓய்வெடுக்க அமர்ந்தபோது நாகசேனர் “சூதர் மனையை நமக்காக தெரிவுசெய்ததில் அவர்களின் வஞ்சம் ஒளிந்துள்ளது, அரசே” என்றார். “ஆம், அதை இதற்கு அப்பால் அவர்களால் காட்டமுடியாது” என்றான் நளன். உரக்க நகைத்து “நான் விரும்பிய மறைவிடமும் இதுவே” என்றான். புஷ்பாகரன் “நாம் அரண்மனைகளில் தங்கவைக்கப்படுவோம் என எண்ணினேன்” என்றான். அவனை அனைவரும் திரும்பி நோக்கினர். “அவ்வாறு வழக்கமில்லையா?” என்றான். ஸ்ரீதரர் வெறுமனே புன்னகைமட்டும் செய்தார். நளன் “நாம் அரண்மனைக்குச் செல்ல சற்று பிந்தும், இளையோனே” என்றான். தான் எதையோ புரிந்துகொள்ளவில்லை என உணர்ந்த புஷ்பாகரன் “ஆம்” என்றான்.
நளன் ஓய்வெடுக்க புஷ்பாகரன் வெளியே சென்று குண்டினபுரியை சுற்றிப்பார்த்துவிட்டு வந்தான். அந்நகர் முதல்நோக்கில் மிகச்சிறிதாக இருந்தது. சுற்றச்சுற்ற வளர்ந்து விரிந்தது. அதன் ஒவ்வொரு தெருவையும் மாளிகையையும் அவன் நினைவில் நிறுத்திக்கொள்ள முயன்றான். அவற்றை அவன் மறக்கவே கூடாது என சொல்லிக்கொண்டான். அவற்றை சூதர் எப்படி பாடுவார்கள்? ஆனால் அதற்கு முன் அங்குள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை அவன் சரியாக உளப்பதிவு செய்துகொள்ளவேண்டும். வீரர்களின் எண்ணிக்கைகளை, படைக்கலங்களை, காவல்கோட்டங்களை. தப்பிச்செல்ல ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளை கண்டு வைக்கவேண்டும். ஏதோ ஒரு சாலையில் அவன் வாளுடன் திரும்பி நிற்கக்கூடும். வெட்டுண்டு மண்ணில் விழுந்து கிடக்கக்கூடும்.
அவன் உடல் முதல்முறையாக அவ்வெண்ணத்தை உணர்ந்து சிலிர்ப்படைந்தது. அச்சம் வயிற்றில் குளிராக எடையாக அழுத்த அவன் அதை வேறு எவரேனும் உணர்கிறார்களா என்பவன் போல திரும்பிப்பார்த்தான். எண்ணங்கள் உடலுக்குள்ளேயே இருப்பது எத்தனை நல்லது! இறந்துவிட்டான் என்றால் அவன் புகழ்ப்பெயராக எஞ்சுவான். நடுகல்லாக நீடிப்பான். ஆனால் இந்த எண்ணங்களுடன் இவ்வுணர்வுகளுடன் இருக்கமுடியாது. முற்றிலும் இல்லாமலாகிவிடுவான். அப்பால் என்ன? இருளா? விண்ணுலகா? ஆழமா? அறியமுடியாமை. அவன் உடல் மீண்டும் சிலிர்த்தது.
ஏன் இறக்கவேண்டும்? நான் இன்னும் எதையும் நுகரவில்லை. பெண்? ஓரிருமுறை. ஆனால் நான் விரும்பும் பெண், என்னை அடையும் தகுதிகொண்டவள் இன்னும் என் கண்ணெதிரே வரவில்லை. எங்கோ அவள் கனிந்து ஒளிகொண்டபடி இருக்கிறாள். நான் வெல்லப்போகும் களங்கள் பெறப்போகும் சொற்கள் அனைத்தும் அறியாவெளியில் உருத்திரள்கின்றன. நான் சாவதைப்பற்றியே ஏன் எப்போதும் எண்ணிக்கொள்கிறேன்? களம்படுபவன் பெரியோன். அவனை மூதாதையர் வாழ்த்துகின்றனர். உண்மை, ஆனால் வென்று வாழ்பவனுக்கே அரசலட்சுமி அளிக்கப்படுகிறாள். அவன் குலமே வாழ்கிறது. அவர்களுக்கு அவன் தெய்வம்.
ஆம், சாகவேண்டியதில்லை. செறுத்து நின்று போரிட்டு வெல்லவேண்டியவன் அவன். உண்மை, அவன் வெல்பவன் மட்டுமே. சாகவேண்டியவர்கள் எளிய படைவீரர்கள். அரசர்கள் வாளுடன் முன்னின்று போரிடுவதில்லை. அவர்கள் களம் அமைத்து கருநிலைகளை அமைத்தபிறகு பின் அமைந்து போர் சூழ்பவர்கள். அவர்கள் மானுடரை வைத்து ஆடுபவர்கள். கருக்கள் அல்ல, கைகளே பேரரசர்கள்.
அவன் திரும்பி வந்தபோது நகருக்குள் சென்றிருந்த காவலர்கள் திரும்பி வந்து நளனுக்கு செய்தியறிவித்துக்கொண்டிருந்தார்கள். மகதனும் வங்கனும் கலிங்கனும் மாளவனும் முன்னரே வந்துவிட்டிருப்பதை வஜ்ரகீர்த்தியின் காவலன் நளனிடம் சொன்னான். “எவருக்கும் தனியாக பாடிவீடுகள் எதுவும் அமைக்கப்படவில்லை, அரசே. கலிங்க அரசரையும் வங்க அரசரையும்கூட பெருவணிகர்களின் இல்லங்களிலேயே தங்க வைத்திருக்கிறார்கள். அவர்களுடைய காவல் படைகள் திறந்தவெளியில் தோல்கூடாரங்களில்தான் தங்கியிருக்கின்றன” என்றான்.
நளன் ஸ்ரீதரரை நோக்கி புன்னகைத்து “வங்கப்படைகளும் கலிங்கப்படைகளும் ஒருவரையொருவர் விழிநோக்கும் தொலைவில் போரின்றி தங்கியுள்ளது இதுவே முதல் முறையாக இருக்கக்கூடும். சாளரம் வழியாக நோக்கினேன், சற்று அப்பால் மகதனின் கொடி பறக்கிறது. பாரதவர்ஷத்தில் ஒரு போரற்ற பொன்னுலகம் பிறந்துவிட்டதோ என்ற மயக்கத்தை நான் அடைந்தேன்” என்றான். ஸ்ரீதரர் “ஒவ்வொன்றும் இயல்வதற்கு வாய்ப்புள்ள அத்தனை பிழைகளுடனும் நிகழ்கின்றன. நெடுங்காலம் பொறுத்திருந்து செய்யப்படும் செயல் சிலசமயம் முழுமையாக அமையும். பெரும்பாலும் ஆர்வம் குன்றி சிதறிப்போகும்.”
நளன் நாகசேனரை அழைத்து “மாமன்னர்கள் அனைவருக்கும் நமது குலவழக்கப்படி பரிசுகளை அளித்து வணங்கி மீள்வோம்” என்றான். புஷ்பாகரன் குழப்பத்துடன் “நாம் இங்கு அவர்களுடன் போட்டியிட வந்திருக்கிறோம். அவர்களை வென்று மகள்கொள்ளும் பொருட்டு. அவர்களைச் சென்று கண்டு பணிந்து கொடையளித்து மீள்வதற்கு இங்கு எந்த்த தேவையுமில்லை” என்றான். “ஆம், முறைப்படி தேவையில்லை. நாம் நிஷாதர், பேரரசர்களின் கருணை எப்போதும் நமக்குத் தேவை” என்றான் நளன். “கருணையா? நாம் அவர்களை வாள்முனையில் வெல்லப்போவதில்லையா?” என்று புஷ்பாகரன் உரக்க கேட்டான். “வாள்முனை தேவையென்றால் உறை மீளட்டும். அதுவரை அவர்களின் கருணையே நம்மிடம் இருக்கட்டும்” என்றபின் நளன் ஆவன செய்யும்படி நாகசேனரிடம் சொல்லிவிட்டு எழுந்து சென்றான்.
புஷ்பாகரன் சினத்துடன் “என்ன நிகழ்கிறது? நாம் எதற்காக இங்கு வந்துள்ள அரசர்களைச் சென்று பார்த்து வணங்கி மீளவேண்டும்?” என்றான். ஸ்ரீதரர் “அது சூழ்ச்சி மட்டுமே, இளவரசே” என்றார். “நாம் இளவரசியை மணம் கொள்ளக்கூடும் என்று அவர்கள் எண்ணவே கூடாது. இங்கு நாம் வந்தது பேரரசர்களைக் கண்டு முறைமை செய்து அவர்களின் கருணையைப் பெறுவதற்காக மட்டுமே என்று அவர்கள் எண்ணலாம். இங்கு வந்துள்ள சிறிய அரசர்கள் எல்லோரும் அதையே செய்வார்கள். நாம் அதை செய்யவில்லையென்றால் ஐயத்திற்கிடமாகும். அவர்கள் இங்கு வந்ததுமே சூதர்கள் நாவில் விதர்ப்ப இளவரசியையும் நிஷத அரசரையும் குறித்து உலவும் கதைகளை தாங்களும் கேட்டிருப்பார்கள்” என்றார்.
“சூழ்ச்சியா?” என்று முகம் மலர்ந்த புஷ்பாகரன் “ஆம் நாம் அவர்களை ஏமாற்றுகிறோம் அல்லவா?” என்றான். பின் உரக்க நகைத்து “நாம் சென்று பணிந்து நிற்கையில் அவர்களுக்குத் தெரியாது, அவர்கள் நாடி வந்ததை கவர்ந்து செல்லப்போகும் வீரர்கள் நாம் என்று. நான் செல்கிறேன், கலிங்கனைக்கண்டு முழந்தாளிட்டு பணிந்து சொல்கிறேன். கடல்சூழ் கலிங்கத்தை ஆளும் பேரரசரே, உங்கள் அளிக்கொடை தேடி வந்துள்ள எளிய மலைநிஷாதன் நான், உங்கள் காலடிகளை என் தலையில் மணிமுடியென சூட விரும்புகிறேன் என்று. என் உடைவாளை உருவி அவர் காலடியில் தாழ்த்தி எனது வீரமும் உயிரும் உங்கள் பணிக்கே அளிக்கிறேன் என்று வஞ்சினம் உரைக்கிறேன். அவன் நம்பிவிடுவான். ஐயமே வேண்டாம். இவற்றை சிறப்பாக என்னால் செய்ய முடியும். மூத்தவரிடம் சொல்லுங்கள், திறைக்கொடையுடன் நானும் சில அரசர்களை பார்க்கிறேன் என்று” என்றான்.
ஸ்ரீதரர் புன்னகைத்து “பேரரசர்களான அங்கனையும் வங்கனையும் கலிங்கனையும் மாளவனையும் அரசர்கள் சென்று பார்ப்பதுதான் முறைமை. மேலும் இங்கு அரசர்கள் வந்துகொண்டே இருக்கிறார்கள். நீங்களும் நானும் சென்று பார்க்கவேண்டிய பலர் உள்ளனர்” என்றார். புஷ்பாகரன் முகம் சுருங்கி “நான் கலிங்கனையோ மாளவனையோதான் சென்று பார்க்க விரும்புகிறேன். அவர்களைத்தானே நான் நாளை களத்தில் சந்திக்கப்போகிறேன்? பின்பு நான் திறையுடன் சென்று அவர்களைச் சந்தித்து மீண்ட காட்சியும் சூதர்களால் திறம்பட நடிக்கப்படும் அல்லவா?” என்றான்.
“தாங்கள் சென்று பார்க்கவில்லையென்றாலும் அதை திறம்பட நாடகமாக்கும்படி சொல்லிவிடலாம்” என்றார் ஸ்ரீதரர். அருகில் நின்ற நாகசேனர் புன்னகையுடன் வேறு பக்கம் திரும்ப புஷ்கபாகரன் ஆவலுடன் ஸ்ரீதரர் கையை பற்றிக்கொண்டு “மெய்யாகவா? உண்மையில் நிகழவில்லை என்றாலும் எழுதச்சொல்லிவிடலாமா…?” என்றான். “மெய்யாகவே சொல்லிவிடலாம். அதிலென்ன ஐயம்? ஆனால் நீங்கள் ஏதேனும் ஓர் அரசரை சந்திக்கவேண்டும். அது மகதனைத்தான் என்று சொன்னால் யார் மறுக்கப்போகிறார்கள்?”
“மகதனை சந்திப்பதுதான் எனக்கு உகந்தது. ஆயினும் மூத்தவரின் ஆணைப்படி நிகழட்டும்” என்று புஷ்பாகரன் சொன்னான். “ஏனென்றால் நான் அவருக்கு கட்டுப்பட்டவன். அவரை காத்து நிற்கவிருப்பவன். அமைச்சரே, இப்போது நான் செய்தவை என்ன தெரியுமா? நகரை மும்முறை சுற்றிவந்து அத்தனை படைசூழ்கையையும் என் உள்ளத்தில் பதியச்செய்திருக்கிறேன். உரிய தருணத்தில் எனக்கு பிறந்த மண்ணுக்கு நிகராக இந்த நகரம் அறிமுகமாகியிருப்பதைக் கண்டு நீங்களே வியப்படைவீர்கள்.”
புஷ்பாகரன் தனது தோற்றத்தை சிறிய ஆடிமுன் நின்று திரும்பி நோக்கிக்கொண்டிருந்தான். ஒவ்வொரு முறை நோக்குகையிலும் உவகையும் நிறைவும் எழுந்தது. சில கணங்களுக்குள் குறையொன்று தென்பட்டது. பதற்றம் கொண்டு அணிச்சேவகரை அழைத்து கூச்சலிட்டான். அவர்கள் அதை செம்மை செய்ததும் நிறைவடைந்து மீண்டும் ஆடி முன் சுழலத்தொடங்கினான். பீதர் நாட்டு பொன்னூல் பணி செறிந்த பட்டாடையும், பொன்வளையங்களிட்ட பட்டு அரைக்கச்சையும், மார்பில் மாலைகளும் ஆரங்களும் சரப்பொளியும், விரிந்த தோளணிகளும் அணிந்திருந்தான். தலையில் நிஷதநாட்டு இளவரசனுக்குரிய காக்கை இலச்சினை பொறித்த தலைப்பாகையும் அதில் வலப்பக்கமாக நின்று காற்றில் குலைந்த செம்பருந்தின் இறகும் சூடியிருந்தான்.
அவன் உருவம் அவன் நோக்கில் ஓவியத்தில் தென்படுவதுபோல் இருந்தது. சுவரில் நின்று காலத்திற்கப்பால் எங்கிருந்தோ நோக்கிக்கொண்டிருக்கும் மூதாதையரின் ஓவியங்களை அவன் கிரிப்பிரஸ்தத்தின் அரண்மனையில் கண்டதுண்டு. ஒவ்வொரு ஓவியத்தின் முன்னாலும் நின்று அவ்விழிகளை நேருக்கு நேர் சந்தித்து அவர்கள் சொல்லி நிற்கும் அச்சொல் என்ன என்று எண்ணியபடி பகல் கடத்தியதுண்டு. இப்போது அவ்வோவியங்களில் ஒன்றாக தான் ஆகிவிட்டது போலத் தோன்றியது. காலவெளிக்கப்பாலிருந்து இடவலமாக திரும்பித் தெரியும் உலகை நோக்கி வியந்து கொண்டிருப்பதாக.
திரும்பி அருகே நின்ற ஏவலர்களிடம் தன் முகக்குறியால் தன் கச்சையை ஏற்றிக் கட்டும்படி சொன்னான். அவர்களுக்கு அது புரியவில்லை. மீண்டும் இருமுறை முகக்குறி காட்டியபோதும் அணியன் வெறுமனே தலைவணங்க மட்டுமே செய்தான். ஆம், இப்போது என் சொற்கள் இவர்களுக்கு கேட்காது. நான் ஓவியங்கள் வரையப்பட்ட திரைச்சீலைக்கு அப்பால் இருக்கும் ஆடியுலகில் வாழ்கிறேன். விருத்திரனும் ஹிரண்யனும் மாவலியும் வாழும் உலகில். இவர்கள் என்னை படையலிட்டு மலர்செய்கை செய்து மட்டுமே அணுகமுடியும். சன்னதம் கொண்டெழும் ஒருவர்களினூடாகவே நான் இவர்களுக்கு ஆணை பிறப்பிக்க முடியும்.
அவ்வெண்ணத்தில் முகம் விரிய தன் குழலை தலையால் நீவி அழுத்தியபடி சாளரம் வழியாகத் தெரிந்த வரதாவின் பெருக்கை நோக்கி புன்னகைத்தான். ஸ்ரீதரர் வந்து நின்று “கிளம்புவோமா அரசே? பொழுதாகிவிட்டது…?” என்றார். “தேர்கள் ஒருங்கிவிட்டனவா?” என்று புஷ்பாகரன் கேட்டான். “நமக்கு ஒரு தேர் மட்டுமே அனுப்பப்பட்டுள்ளது” என்றார் ஸ்ரீதரர். “அரசரும் தாங்களும் அதில் செல்லலாம். நாங்கள் மெல்ல நடந்தே அங்கு வந்துவிடுவோம்” என்றார். “அமைச்சர்கள் நடந்து வருவதா…? என்று புஷ்பாகரன் சினத்துடன் கேட்க கண்களைச் சிமிட்டி “அரசுசூழ்தல்” என்றார் ஸ்ரீதரர்.
புஷ்பாகரன் புன்னகைத்து “ஆம், நாம் எளியவர்களாக தோற்றமளிக்க வேண்டும். நன்று!” என்றான். அவர்கள் படியிறங்கி முற்றத்திற்கு வந்தபோது நளன் தன் முழு அரசத்தோற்றத்தில் அமைச்சரும் காவலரும் சூழ நின்றுகொண்டிருந்தான். புஷ்கரன் அருகே சென்று தலைவணங்கி “வணங்குகிறேன், மூத்தவரே. இத்தருணத்தை இனி நம் குலதெய்வங்கள் ஆளட்டும். தங்களை வெற்றி தேவி உடனிருந்து வாழ்த்தட்டும்” என்றான். “நன்று! நீயும் உடனிரு” என்றபின் அவன் தோளில் கைவைத்து ஸ்ரீதரரிடம் “சரியான சொற்களை சொல்லக் கற்றுவிட்டிருக்கிறான் அல்லவா?” என்றான்.
ஸ்ரீதரர் அவனை ஒருமுறை நோக்கியபடி புன்னகைத்து “அணிக்கோலமும் மிகச்சிறப்பாக இருக்கிறது. மணத்தன்னேற்புகளில் அவையமரச் செல்வதற்கும் தகுதியடைந்துவிட்டார்” என்றான். புஷ்பாகரன் நாணி “என்ன சொல்கிறீர்கள்?” என்று சிரித்தான். நளன் அவன் தோளில் கைவைத்து “வருக, இளையோனே” என்றான்.
அவர்கள் தேரிலேறிக்கொண்டதும் ஸ்ரீதரர் “நீங்கள் தெற்கு வாயிலுக்குத்தான் செல்லவேண்டியிருக்கும், அரசே” என்றார். புஷ்பாகரன் “கிழக்கு வாயிலில்தானே அரசர்கள் நுழைவார்கள்?” என்றான். “அது ஷத்ரிய அரசர்களுக்கு. பிறர் தெற்கு வாயிலினூடாகத்தான் உள்ளே நுழைய ஒருங்கு செய்யப்பட்டுள்ளது” என்றார் நாகசேனர். “பிறர் என்றால்…?” என்றான் புஷ்பாகரன். “பிறர் என்று அவர்கள் வகுத்த குடிகள்” என்றார் ஸ்ரீதரர். “நாம் குடிகளிலொருவராக இங்கு கப்பம் கட்ட வரவில்லை. அரசகுடியாக வந்திருக்கிறோம்” என்று புஷ்பாகரன் உரக்க சொன்னான். “அரசுசூழ்தல், இளவரசே” என்றார் ஸ்ரீதரர்.
புஷ்பாகரன் சினத்துடன் “அரசுசூழ்தல் என்றாலும் நமது முறைமையை அவர்கள் பொருட்படுத்தவில்லை. நம்மை அரசராகவே எண்ணவில்லை” என்றான். அவன் தோளில் தட்டி “எண்ணவைக்கும் பொருட்டுத்தானே நாம் இங்கு வந்துள்ளோம், இளையோனே?” என்றான் நளன். அவன் கையசைக்க தேர் கிளம்பும்படி ஸ்ரீதரர் ஆணையிட்டார். தேருக்குள் அமர்ந்து இருவரும் திரைகளை மூடிக்கொண்டனர். நளன் தேர்த்தட்டில் சாய்ந்தமர்ந்து கைகளை மார்பில் கட்டிக்கொண்டான்.
புஷ்பாகரன் நின்றபடி “எதை எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள், மூத்தவரே?” என்றான். “இவர்களின் தேர்கள் மிகத் தொன்மையானவை. தேர்த்தட்டு அமையும் எடைவிற்களை இன்னும் இவர்கள் கண்டடையவில்லை. இருசக்கரங்களுக்கு இடையே ஒத்திசைவு இருக்க வேண்டுமென்பதையும் புரிந்துகொள்ளவில்லை. ஆகவே புரவியின் ஆற்றல் முழுக்க தேரின் பிழையான அசைவுகளுக்காக சிதறடிக்கப்படுகிறது” என்றான் நளன்.
“இதையா எண்ணிக்கொண்டிருக்கிறீர்கள்?” என்றான் புஷ்பாகரன். “ஆம். ஏன்?” என்றான் நளன். விதர்ப்ப இளவரசியைப்பற்றி எண்ணிக்கொண்டிருப்பீர்கள் என்று நினைத்தேன். அல்லது நிகழவிருக்கும் போரைப்பற்றியாவது…” “அவற்றைப் பற்றி எண்ணுவதில் என்ன பயன்? எண்ணித்துணிந்த பின் தானே இங்கு கிளம்பி வந்துள்ளோம்?” என்றான் நளன். “இருப்பினும்… என்ற புஷ்பாகரன் “என்னால் நேற்றிரவு ஒரு கணம்கூட அவ்வெண்ணத்தை விட்டு விலக முடியவில்லை, மூத்தவரே. பிறிதொன்றை எண்ணாமல் இரவெல்லாம் இந்தச் சிறிய இல்லத்தின் இடைநாழிகளில் சுற்றிவந்துகொண்டிருந்தேன்” என்றான்.
“ஆம், உனது காலடியோசை கேட்டது” என்றான் நளன். “நானும் அப்பருவத்திலிருந்திருக்கிறேன். அதை கடந்து வந்துவிட்டேன்.” “கடந்துவந்துவிட்டீர்கள் என்றால்?” என்றான் புஷ்பாகரன். “இத்தகைய நிகழ்வு உங்களை கிளறவைப்பதில்லையா?” சிரித்து “இல்லை” என்றான் நளன். “ஏன்?” என்று வியப்புடன் கேட்டபடி அவன் பீடத்தின் மேல்வளைவை பற்றியபடி குனிந்து “இவை அரிய நிகழ்வுகளல்லவா? வரலாற்றின் திருப்புமுனைகள் அல்லவா?” என்றான். “இளையோனே, நாம் வாழ்ந்து சலித்து முதிரும்போது இவையனைத்துமாகிய இவ்வொழுக்கிலுள்ள தற்செயல்களின் பொருளின்மையே நம்மில் எஞ்சுகிறது. ஒரு மாபெரும் இளிவரல் நாடகம் போல அனைத்தும் தோற்றமளிக்கத் தொடங்குகின்றன. அவை வியக்கவும் நகைக்கவும் வைக்கின்றன கிளர்ந்தெழச்செய்வதில்லை.”
“பொருளின்மைதான் எஞ்சுவது என்றால் அதில் வியப்பதற்கு என்ன?” என்றான் புஷ்பாகரன். “பல்லாயிரம் பொருளின்மைகள் கூடி உருவாகும் ஒத்திசைவு. அந்த ஒத்திசைவினூடாக தெரியவரும் மையப்பொருள். அது வெறும் தோற்றமே எனக்காட்டும் ஆழ்பொருள். அது ஒரு துளிமட்டுமே என விரியும் மெய்ப்பொருள். அது வெறும் வியப்பு, வேறொன்றுமல்ல” என்று நளன் சொன்னான். “தாங்கள் அதை அறிந்துவிட்டீர்களா, முற்றாக?” என்று புஷ்பாகரன் கேட்டான். “அறிந்துளேன் உணர்ந்து கடக்கவில்லை. அறிந்ததனால் இத்தருணத்தில் கிளர்ச்சியடையாமலிருக்கிறேன். உணர்ந்திருந்தேனானால் பற்றின்றி ஈடுபட்டிருப்பேன்” என்றான் நளன்.
“இளையோனே, இன்று வெற்றியை விழைகிறேன், தோல்வியை அஞ்சுகிறேன். சிறுமையை விலக்கி பெருமை கொள்ள நினைக்கிறேன். இந்த அலைக்கழிப்பு இந்த கணத்தின் அமைதிக்கு அடியில் ஓடிக்கொண்டிருக்கிறது. இவ்விருநிலையால் என் சொல்லும் செயலும் சிதறடிக்கப்படுகின்றன. நான் இறங்கி அவைக்களத்தில் நடந்து செல்லும்போது என் உடலின் எளிய அசைவைக்கொண்டே முனிவர்கள் நான் இரண்டாக பகுக்கப்பட்டிருக்கிறேன் என்று உணர்வார்கள். இந்த தேரைப்போல எனது ஆற்றலும் ஒத்திசைவின்மையால் வீணாகிக்கொண்டிருக்கிறது” என்றான் நளன்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 12
‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 11
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-10
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-9
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-8
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-7
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-6
June 4, 2017
சபரிநாதன் கவிதைகள் 2
2017 ஆம் வருடத்திற்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது பெற்ற சபரிநாதனின் கவிதைகள். அவருடைய வால் என்னும் தொகுப்பில் இருந்து
வகுப்பிலேயே மிக அழகான பெண்
அவளை நாங்கள் எல்லோருமே காதலித்தோம்
சீனியர் பலரும் ஆசிரியர் சிலரும் கூட.
அவளுக்குத் தெரியும் தான் அழகாய் இருப்பது ஆனால் ’அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது’
என்பது போலத் தான் நடந்துகொள்வாள்.
பூச்செண்டுகளோ வாழ்த்தட்டைகளோ எது கொடுத்தாலும் முகம் சுளிக்காது
வாங்கிக்கொள்வாள்.எங்கு அழைத்தாலும் பிகு செய்யாமல் வந்திடுவாள்.
நான் அவளோடு சுற்றியதில்லை காதல் கடிதம் தந்திருக்கிறேன்.மறுநாள் காலை எனை
அழைத்து கடிதம் நன்றாக வந்திருப்பதாகவும் தொடர்ந்து எழுதித் தருமாறும் கூறினாள்.
பிறகவள் என்ன ஆனாள் என்று யாருக்கும் தெரியாது.
கல்லூரி விரிவுரையாளருடன் ஓடிப்போனதாகவும்,மேற்படிப்பிற்கு லண்டன் சென்றதாகவும்
ஒரு பேச்சு இருந்தது.சிலர் கூறினர்
அவள் பாலிவுட்டில் நடிக்க முயற்சிக்கிறாளென,சிலர் கூறினர்
மார்பகப் புற்றுநோயுடன் கடற்கரை சிற்றூர் ஒன்றில் ஒண்டியாய் வசித்து வருகிறாளென.
நேற்று,முன்னால்-மாணவர்-கூடுகைக்கு வந்திருந்த அவளைக் கண்டபோது நான்
நினைத்தேன் ஒருவேளை எல்லா வதந்திகளும் உண்மையாக இருக்குமோவென
தவிர இப்போது அவள் கிடையாது
வகுப்பிலேயே மிக அழகான பெண்.
ரெட்டைப் பின்னலிட்டு சீருடை அணிந்தே வந்திருக்கலாம்;பொருத்தமற்ற
சிங்காரமும் மிகையான உடல்மொழியும்…
முடி கொட்டி முடித்த நண்பன் கூறினான் “அவள் ஏன் அலுப்பூட்டும் மேஜிக் ஷோவை
அரங்கேற்றுகிறாள்”
கூலர்ஸும் குழந்தைகளுமாய் வந்திருந்த சகமாணவிகள் கண்டுகொள்ளவே இல்லை.
மேஜை மேல் நிற்பதைப் போல,நின்ற படியே மே ஐ கம் இன் கேட்பவளைப் போல
காட்சியளித்தவள் சொல்லிக்கொள்ளாது கிளம்பிவிட்டாள் இடையிலேயே.
பள்ளியில் இருந்து ரயில்நிலையம் செல்லும் பாதையில்
அவள் ஒரு சரக்கு லாரியை வாயில் கட்டி இழுத்து நடந்ததை
என் வாழ்நாளில் மறக்கமுடியாது.
ஆரோக்கிய மாதா ஆலயம்
எனக்கு கிராமத்து தேவாலயங்களைப் பிடிக்கும்.
முற்றத்தில் கோழிக்குஞ்சுகள் விளையாடித் திரிய,
படிகளில் பெண்பிள்ளைகள் பேன் பார்த்து பொழுதோட்ட,
உலரும் ரத்தச்சிவப்பான வற்றல்களின் திருமுன்னில்
அநேகமாய் பூட்டியே கிடக்கும் சிறுகூடங்கள்.
அசமந்தமாய் வாயிலில் சருகுக் குருத்தோலைத் தோரணம்
ஓட்டுச்சாய்ப்பில் குடித்தனம் செய்பவை போக்கிரி அணில்கள்.
போன வருடக் குடிலில் குட்டிகளைப் பத்திரப்படுத்திய வெள்ளைப்பூனை
நெட்டி முறிக்கும் நீலப்புள்ளிகள் சிதறிய மஞ்சள் நட்சத்திரம் நோக்கி.
வில்மாடம்,அலங்கார விளக்கு,நிலையிருக்கை,எதுவும் இல்லை
குளிர் செங்கற் தளத்தில் அங்கங்கே மிதக்கும் ஒளித்தீவுகள் மட்டுமே.
பழைய ஓடுகளை மாற்ற வேண்டும்.வாரம் ஒருமுறை தூத்துப் பெருக்கவேண்டும்.
மின்சாரம் அற்றுப்போன சாமங்களில் எல்லா வீடுகளையும் போலவே அங்கும்
ஓர் இளைத்த மெழுகுதிரி ஒளி வீசிக் கொண்டிருக்கும்.
எவரும் எழுந்தருளவில்லை அவ்விடம்;தந்தையின் வீட்டில்
வேலையில்லாப் பட்டதாரியென,அவ்வப்போது எடுபிடி வேலைகள் செய்துகொண்டு
-கட்டிக்கொடுக்க வேண்டிய வயதில் தங்கைகளுடன்-வசித்து வருகிறார் ஏசு.
காட்டு வேலை ஓய்ந்து வந்த மரியாள் குளித்து முடித்து
கங்கு வாங்கப் போகிறாள்.மழை வரும் போல் இருக்கிறது.
பேராசான்
எனது தந்தை தான் பூமியை மிதிக்கக் கற்றுத் தந்தார்
நன்றாக அழுத்தி இன்னும் இன்னும் வலுவாக
எனது தந்தை தான் எழுந்து நிற்கக் கற்றுத் தந்தார்
எதையாவது பற்றிக்கொண்டு உதாரணத்திற்கு ஒரு நீர்த்தொட்டியை
வாசலுக்கு வெளியே அல்லது பேருந்து படியில்
எனது தந்தை தான் நடக்கக் கற்றுத்தந்தார்
அவர் சொன்னார்
ஒரு மனிதன் ஓயாது நடப்பது எதன் மீதும் சாயாதிருப்பதற்கு
நடுரோட்டில் தெருவோரத்தில் சமைந்து நில்லாதிருப்பதற்கும் தான்
நீ நட
விடுதியிலிருந்து பணியிடத்திற்கு
பணியிடத்திலிருந்து விடுதிக்கு
திரும்பி நட
பரிசோதனை அறிக்கையைப் பெற்றுக் கொண்டு
தனது பெயர் இது தானா என ஆராய்ந்து கொண்டு
எனது தந்தை தான் நீந்தக் கற்றுத்தந்தார் பிறகு
ஒரே நேரத்தில்
நீரிலொன்றும் நிலத்திலொன்றுமாய் வீடுகள் கட்டி
இழுபடும் மிருகம் ஆனேன்
நீரிலும் ஊர வேண்டியிருந்தது தரையிலும் நீந்த வேண்டியிருந்தது
சுவாசிப்பதற்காக எம்பி எம்பி தவ்வும்படியானது
எனது தந்தை தான் மிதிவண்டி விடக் கற்றுத்தந்தார்
இப்படித்தான் இப்படியேதான்..
நானும் இங்குதான் விழுந்தேன்,இப்படித்தான்
திரும்பித் திரும்பிப் பார்த்தபடி ஓட்டினேன் இப்படித்தான்
எனது மிதிவண்டியையும் மூலைவீட்டில் துருப்பற்றவிட்டேன்
என்னை தன் சாயலில் பிறப்பித்த அவர் மட்டும் இல்லையென்றால்
தவழ்ந்து தவழ்ந்து
இரு மென் தொடையிடையில் முட்டி மோதியாவது
தப்பிச் சென்றிருப்பேன்
எனது தந்தை
அதோ அவர் தான்
யான்
அறிந்தது
அறியாதது
மறந்தது
மறதிக்கு அப்பாற்பட்டது
எல்லாவற்றையும் கற்றுத் தந்தார்
ஒன்றைத் தவிர,அது
மண்ணைத் தின்று
புழுதியில் புரண்டு
சுவற்றில் மோதி
மலை மீதேறி
அங்கிருந்து குதித்து
மீண்டும் ஏறி
மீண்டும் குதித்து
நாமே கற்றுக்கொள்ள வேண்டியது
இதையும் அவரே சொன்னார்.
அதிகாலையில் ஒரு ரவுண்டானா
கிழக்கு கடற்கரை சாலை வடகிழக்காகக் கிளை பிரியும்
ரவுண்டானாவில் சிக்னல் செயல்படவில்லை தொப்பிவாசி யாருமில்லை.
எதையோ அசைவெட்டியபடி சந்தியில் நிற்பது ஓர் எருமை மாடு.
காதுகளால் துடுப்பிடும் பழக்கத்தைக் கைவிடமுடியாதது
திடிரெனத் தும்முகிறது திடீர் திடீரென கோளை வடியக் கத்துகிறது.
அவ்வப்போது வாலாட்டி வெட்கமில்லாமல் சாணி போடுகிறது
மெதுநகர்வில் கொம்பசைத்து இங்கிட்டும் அங்கிட்டும் பார்க்க
இருசக்கர வாகனங்களும் இறக்குமதி செய்யப்பட்ட கார்களும்
தாவா ஏதுமின்றி தத்தமது வழியில் போகின்றன.
சில தருணம் யாவுமே அத்தனை எளிதாகிவிடுகிறது இல்லையா?
மலைக்கோட்டையின் கொத்தளத்தில் இருந்து
செவ்வகச் சிறுபுழை வழியாகக் காண்கிறேன்
இருத்தலின் ஒரு வாய்க்கடி,நிகழ்தலின் சிறுபனித்துண்டம்.
மாரிப்பருவம் முடிந்து,கொழுத்த விருந்திற்குப் பின்
உறங்கச் சென்றுள்ளது வரலாறு,இந்நிலையில்
வந்து கதவு தட்டுகிறது இன்றைய இன்று
இளவெளியிலோடு ஈரப்பதம் மிகுந்த ஒரு சாதா தினம்.
செவ்வகச் சிறுபுழை வழியாகக் காண்கிறேன்
வேடிக்கையான துதிக்கைகளால் வணங்கியவாறு
திரும்பிப் போய் விட்டன பீரங்கிகள்
முன்னைப் போல் கனைப்பதில்லை குதிரைகள்,அவை
பக்கத்து ஊர் கொட்டகையில் ஒரு
பொற்கூந்தலாள் பேச்சைக் கேட்டு
எட்டு வைத்து நடக்கின்றன பின்னோக்கி.
செவ்வகச் சிறுபுழை வழியாகக் காண்கிறேன்
தொடுவானக் கரையில் படை திரட்டி நிற்கிறது கூதிர்
இக்கவசத்தையும் கேடயத்தையும் இலச்சினைகளையும்
(எனக்கே சிரிப்பு வருகிறது)
எடைக்குப் போட்டாக வேண்டும்
கம்பளி வாங்கிக் கொள்ளலாம் கூடவே தேநீர்க் குடுவை
முடிந்தால் சுருட்டுப் பொட்டலமும் கருப்பு நிறத்தில் ஜாக்கெட்டும்.
எல்லா வாழ்விலும் வருமொரு தருணம் அப்போது
காட்சிக்கு மீதமிருப்பது செவ்வகச்சிறுபுழை மட்டுமே.
அது வழியே காண்கிறேன்
பழைய இருட்டும் பழைய காற்றும்
தெக்கெட்டு ஊரணியில் துணி துவைக்கும் ஓசை.
நீர்வளையங்களே..பாசிப்படிவுகளே
ஏன் கோட்டைகள் இடிகின்றன?
ஏன் குரங்குகள் ஈரெடுக்கின்றன?
இன்னும் ஓர் அதிகாலை
நம்பமுடியவில்லை.இன்னமும்
பார்க்கமுடிகிறது.இப்போதும்
காது கேட்கிறது-செடிங்காட்டில் இருந்து செம்போத்து விக்கல்.
படுக்கை விட்டெழுகையில்
நம் ரத்த ஓட்டத்தின் உஷ்ணத்தை நாமே உணர முடிகிறது.
தோட்டச் செடிகளுக்கு நீரளிப்பதற்கான கட்டளை
இறங்கி நடப்பதற்கான கட்டளை
சென்று புத்தம் புது காய்கறிகளை வாங்குவதற்கான கட்டளை
வெண்டை கால்கிலோ,முள்ளங்கி இருநூறு,முருங்கை ஐந்து
வெங்காயம் அரைகிலோ,மிளகாய் நூறு,கரிமசால் பட்டை,
ஒரு மூட்டு பொன்னாங்கண்ணி,ஒரு கொத்து மல்லி இலை
=உயிர்வாழ்தலின் எடை.
பூஜ்யத்தில் இருந்து தொடங்குவதாக ஒரு பிரமை
நேற்று தான் பெருவெடிப்பு நிகழ்ந்தது என்றால் நம்பி விடுவேன்.
இருந்தும் நான் அறிவேன்
மீண்டும் இரவுகள் வருகை தரும்
பெறுநர் அற்ற பதிவுத்தபால்களென
கிழிந்துவிடக்கூடும் என்ற குறிப்புடன் ஒப்படைக்கப்படும் சலவைத்துணியென.
முன்னர் புலப்படாத கறைகள் உருப்பெறத் துவங்குகையில்
ஒருவர் எதற்கும் தயாராக இருக்க வேண்டும்.
இருட்டறையில் நிழற்படங்களை அலசுபவர்களைப் போல்
துயில் பொருட்டு உழைக்க வேண்டும்.
ஏனெனில் காலையில் கண் திறவும் பொழுது
வீடு ஒதுங்க வைக்கப்பட்டிருக்கும்,நமக்கு பதில்
யாரோ ஒருவர் பாத்திரங்களை விளக்கி வைத்திருப்பார்.
கடவுளே
என் அன்புமிகு சகோதரன் ஒரு பொறுப்பான நல்ல பையன்
அவனது மூளைக்குள் கடினமான மங்கலான சிந்தனைகளை மூட்டாதேயும்
இன்று நாள் முழுக்க அவன் யோசிக்கட்டும்
நாளை நடக்கவிருக்கும் ஒருநாள் ஆட்டத்தைப் பற்றி
அவனது விடைத்தாளை
நிறைய கருணையோடும் கொஞ்சம் நகையுணர்ச்சியோடும் திருத்தித் தாரும் சுவாமி.
சகமாணவர்கள் இருவர்
ஒருவர் மரியாளின் மகன் ஈஸா
ஒருவர் மாயாவின் மைந்தன் சித்தார்த்
இருவரது உருவமும் மேஜையில்
ஒருவர் சிலுவையில் தொங்குகிறார்
ஒருவர் தியானத்தில் அமர்ந்துள்ளார்
ஒருவர் முடிவை நெருங்குகிறார்
ஒருவர் இப்போது தான் பிறந்துள்ளார்
ஒருவர் முகத்தில் நிச்சலனம்
ஒருவர் முகத்தில் வேதனை
ஒருவர் ஆன்மா இல்லை என்கிறார்
ஒருவர் அவ்வினோத ஜந்துவின் பொருட்டு விழுந்து விழுந்து மன்றாடுகிறார்
ஒருவர் மாப்பிள்ளை பெஞ்சின் வாடிக்கையாளர்
ஒருவர் முதல் வரிசையில் அமர்ந்து குறிப்பெடுப்பவர்
ஒருவருக்கு கால்குலஸ்ஸில் ஆர்வம்
ஒருவர் ஆய்வறையில் கவிதை எழுதுபவர்
ஒருவர் காதல் கடிதத்தைத் திருப்பித் தருகிறார்
ஒருவர் உதிர்க்கிறார்
’காதலில் தோல்வியுற்றவன் முன்னெப்போதும் இத்தனை அழகாயிருந்ததில்லை’
ஒருவர் விடுதிவாசி
ஒருவர் தினக்கூலி
பழைய பத்தாம் வகுப்பு புகைப்படத்தில்
நெருக்கியடித்து முழிக்கும் மாணவர்களிடையே
அருகருகே நிற்கின்றனர் இருவரும்:
திருஅரசருகே எளிய அத்தி!
ஒரு கணமுமில்லை
இரு தருக்களும் தொட்டுக் கொளாது
ஒரு கணமுமில்லை
தளிரிலையேனும்
வீழ்சருகேனும்
கருநிழலேனும்…
திருவான்மியூர் மேகங்கள்
இவ்வாண்டின் உறுதிமொழிகளை உடைக்க நான்கு நாட்கள் போதுமானதாக இருந்தது
ஒரு கிரகம் இத்தனை வேகமாக சுற்றினால் என்ன செய்ய?
அண்டை வீட்டாருக்கு இதைப் பற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது
அவ்வளவு பிரியமாக அவர்கள் கார்களைக் கழுவுகிறார்கள்
ஒருவர் இங்கே கழுத்துப்பட்டைகளை உயர்த்திவிட்டு பீட்டர்ஸ்பர்க்கில் நடந்து செல்லலாம்
யாரும் கேட்க முடியாது ‘வெட்கமாயில்லை உனக்கு?’ என்று
ஏனெனில் இந்த வருடம் திருவான்மியூரில் யாரது உறுதிமொழியும் நிறைவேறவில்லை.
சறுக்குக்கட்டைகளோடு கிளம்பிச் செல்லும் சிறுவர்கள்.
கலியுகம் என்றால் கொசுக்கள் உற்பத்தியாகும் இடம் தான் கண்ணில் வரும் அவர்களுக்கு
எனக்கு வேண்டாத யாரோ ஒருவர் என் பாதை அனைத்திலும் மஞ்சள் நிற விரைவீக்க
சுவரொட்டிகளை ஒட்டி வைத்துள்ளார்
ஆனால் எல்லா சறுக்குக்கட்டைகளும் இங்கு தான் வந்தாக வேண்டும்
அதாவது காலணி கழற்றி வைக்கும் இடத்திற்கு,வாசலில் ஒரு மூதாட்டி அமர்ந்திருப்பாள்
பார்த்தால் தெரியாது எனினும் அவளுக்கு மருந்தீஸ்வரரிடம் நம்பிக்கை கிடையாது.
இறகுப்பந்தை குனிந்தெடுக்கும் இயற்கை மார்பகங்கள் இடையே சிலுவை ஜொலிக்கும்
இங்கு கண்ட கண்ட இடங்களில் இருந்தெல்லாம் சூரியன் உதிக்கும்.
மதிய வெயிலில் உண்மையான காதலர்களை வேடிக்கை பார்ப்பது போல் அலுப்பூட்டுவது
ஒன்றே ஒன்று தான்-தயிர் பச்சடி தொட்டு சைவ பிரியாணி சாப்பிடுவது.
அதற்கு நீங்கள் கடற்கரைகளை மூடிவிடலாம்
மூப்பினால் குழிநண்டு பொறுக்குபவர்களை பட்டினி கிடக்க சொல்லலாம்.
மீண்டும் மீண்டும் மூத்த பெண்களை மையலிப்பதற்கும் இந்த வானிலைக்கும்
ஏதோ தொடர்புள்ளது.அது உங்களை அதிகப்பிரசங்கியாக மாற்றும்:
மனிதன் கீரைத்தோசையாலும் கலக்கியாலும் மட்டும் உயிர் வாழ்வதில்லை
அவனுக்கு சோகப்பாடல்கள் வேண்டும் புதிய புதிய நகைச்சுவைத் துணுக்குகள் வேண்டும்
நான் மனிதன் என்பது உறுதியானால் எனக்கு சில்லி பீஃப் வேண்டும்
கலாக்ஷேத்திராவில் தப்பாக கைத்தாளம் போடுபவர் கூறினார்;எதிரே சோடா விற்பவரும்
வழிமொழிந்தார்.இவ்வூரின் மேகங்கள் எதுவும் இவ்வூரைச் சேர்ந்ததில்லையாம்.
இருவரும் நம்பவில்லை யாரும் நம்பப் போவதுமில்லை
இம்மீபொருண்மை பதார்த்தங்களிடையே நானொரு பறக்கும் தட்டைக் கண்டேன் என்பதை.
எனதருமை ரகசியங்களே
நான் உமை காப்பது போல்
நீவீர் எனை காப்பீராக.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
விஷ்ணுபுரம் கடிதம்
அன்புள்ள ஆசானுக்கு,
நலம் தானே, விஷ்ணுபுரம் நூலை கடந்த பத்து நாட்களாக படித்து கொண்டு இருந்தேன் இப்போது தான் முடித்தேன்.
மணிமுடி படித்து விட்டு ஒரு வெறுமை தான் மனதில், பின் விஷ்ணுபுரம் என்னும் கனவில் இருந்து புரண்டு எழும் போது வெறுமை உணர்வு ஏற்படாடதா என்ன? ஸ்ரீபாதத்திலும், கௌஸ்துபத்திலும் இருந்த ஒரு மாநகரம் இப்படி இடிபட்டு அழிந்தால் வெறுமை உணர்வு தான் எற்படும். மணிமுடியை முடிக்கும் போது காலச்சக்கரத்தை உணர்ந்து இது முடிவில்லாமல் செல்லும் ஒரு மகாகாவியம் என்று உணர்ந்து அமைதி கொண்டேன்.
முடிவின்மையை நீங்கள் கண்டடைந்த நாவல் விஷ்ணுபுரம் என்றீர்கள். உங்கள் மூலம் அந்த முடிவின்மையை நாங்களும் சிறிது தரிசித்தோம்.நீங்கள் விஷ்ணுபுரத்தை முடிவில்லாமல் சுற்றி வரும் காலசக்கரம் என்ற முடித்துள்ளீர்கள் இந்த பிரபஞ்சமும் முடிவில்லாமல் ஒரு சுழற்சியில் இருப்பது தானே. அழிந்தும் பிறந்தும் இந்த பிரபஞ்சம் முடிவில்லாமல் இயங்கி கொண்டு இருப்பதை கூறும் போது பெரு வெடிப்பு கொள்கையும், பெரு சுருக்கக் கொள்கையும் விளக்கும் ஒரு விஞ்ஞானியாகவும் .மெஞ்ஞானியாக இருத்தலியல் பற்றி, காரண காரிய விவாதம், சார்பு நிலை கொள்கை இதை எல்லாம் பற்றி அறிந்து கொள்ள துவங்கும் ஒரு தரிசனம் கிடைக்கும் பேரு பெற்றேன்.
ஆனால் அடுத்த அத்யாயங்களில் அதை மறுத்து எளிய விஷியங்கள் பற்றிய வாதங்கள். ஒரு இடத்தில் மாகவிஷ்ணுவின் பாதங்கள் பற்றி என்றால் அடுத்த அத்யாயத்தில் அதை ஒரு நோயாலியின் பாதம் போல காட்டுவது. ஒரு இடத்தில் ஒன்றை சொன்னால் அதை மறுத்து அடுத்த இடத்தில் வேறு வாதம் .பின் நீங்களே மணிமுடியில் “எல்லா தரிசனங்களும் இதில் நிலை நாட்ட பட்டும் பிறகு மறுக்கபடுகின்றன “என்று கூறுகிறீர்கள்.
ஸ்ரீபாதம் முடித்து கௌஸ்துபம் தொடங்கும் போது அட என்ன இது இங்கே ஒரு கதையை விட்டு பின் நோக்கி செல்கிறார் என்று பட்டது பின் மணிமுடி தொடங்கும் முன் அங்கு இருந்து முன் நோக்கி செல்கிறீர்கள் .முதலில் நான் இதை மீண்டும் படிக்கும் போது முதலில் கௌஸ்துபம் முதலிலும் பின் ஸ்ரீபாதமும் பின் மணிமுடியும் என்று படித்தால் தான் சரியாக எனக்கு விளங்கும் என்று தோன்றியது இதை நீங்களே மணிமுடியில் கூறியும் இருந்தீர்கள்.
அப்புறம் தான் அட முதலில் மனிதனின் தேடல் தொடங்குகிறது ஸ்ரீபாதத்தில் அதில் எல்லாரும் ஏதோ ஒரு தேடலை நோக்கியே சென்று கொண்டு இருக்கிறார்கள்.பின் ஞான உபதேசங்கள் அது கௌஸ்துபம் முழுதும் நிரம்பி வழிகிறது. பின் கடைசியில் எல்லாம் ஒன்றும் இல்லை என்று பிரளயம் வந்து அனைத்தையும் அழிக்கிறது .அட இது அப்படி தான் சரியாக பொருந்தியுள்ளது என்று உங்கள் விளக்கம்.
சாதாரண மனிதர்களை எப்படி தெய்வங்களாகவும், ஞானிகலாகவும் காலம் மாற்றுகிறது என்பது மெல்லிய அங்கத தன்மை உடன் இருத்ததாக எனக்கு பட்டது. இப்படி தான் காவியங்களும்,தெய்வங்களும் உருவாணர்களோ.
பின் சங்கர்க்ஷணன் தன் படைப்பை தானே விமர்சித்து சொல்வது எல்லாம் நீங்கள் விஷ்ணுபுரம் குறித்து நீங்களே விமர்சித்து சொல்வது போல் இருந்தது.
பல படிமங்களை விட்டு விட்டு சென்றீர்கள் அதை இன்னும் பல வாசிப்புக்கு பின் தான் அடைய முடியும் என்று தோன்றுகிறது. அஜிதரின் மரணம், கடைசியாக அவரும் தண்ணீருக்காக கேட்கும் தருணம், அந்த கிழவியை விஷ்ணுபுரத்திலே விட்டு விட்டு செல்வது. பின் அந்த மூன்று கணிகைகள் பத்மாச்சி, லலிதாங்கி, சாருகேசி மூன்று பேரும் பல விடைகளை தேடியவர்களுக்கு கண்டடைய உதவினார்கள் இவர்களும் அந்த தேடலில் பங்கு கொண்டு தாங்களும் தேடி கண்டுகொண்டனர்.
வடிவமற்ற வடிவமாக முடிவின்மையை தாண்டியும் விஷ்ணுபுரம் என்றும் நிலை நிற்கும்.
பின் சிற்பங்கள் பற்றி நீங்கள் சொல்லி இருக்கும் தகவல்கள் சிற்பங்கள் பற்றிய உங்கள் பார்வை எங்களுக்கும் சிறிது தந்து சென்றீர்கள் இதை வைத்துக்கொண்டு இனி சிற்பங்களை பார்க்கும் பார்வையும் வேறுபட்டு இருக்கும். இன்று தாரமங்கலம் சென்று இருத்தேன் அங்கு இருந்த அத்தனை சிற்பங்களையும் நான் என்றும் பார்த்து ரசிப்பதுண்டு இன்று வேறு மாறி இருந்து. ருத்ரதாண்டவம் ஆடும் சிவனின் சிலை பேரழிவை குறிக்கும் தத்துவார்த்த குறியீடு என்றீர்கள் அந்த சிலையின் தீவரத்தை அப்போது தான் முதல் முதலில் கண்டேன் சுழற்சியின் ஒரு கனம், இது வரை பல முறை பார்த்தாலும் இன்று தான் அதன் தீவரத்தை காண முடிந்தது.
அஸ்வசாஸ்திரம் பற்றி ககஜசாஸ்திரம் பற்றி இது எல்லாம் புதிதாக இருந்தது. பின் ஒரு சந்தேகம்
கௌஸ்துபம் 31 அத்யாயம், மணிமுடி3 அத்யாயம் இரண்டின் கூட்டு தொகை 62 வருகிறது ஸ்ரீபாதம் 62 அத்யாயங்கள் ஏதேனும் காரணகாரியம் உள்ளதா? விஷ்ணுபுரத்தை இன்னும் பல முறை படிக்க வேண்டும்.மீண்டும் ஒரு முறை படித்து விட்டு கடிதம் எழுதுகிறேன்.
ஏனோ தெரியவில்லை இந்த கடிதத்தை ஆரம்பிக்கும் போது தொடங்கிய நான் இதை எல்லாம் எழுத வேண்டும் என்று என்ன வில்லை என்ன என்னமோ எழுதி விட்டோம் என்று படுகிறது. ஏதேனும் தவறாக நான் கூறி இருந்தால் சுட்டி காட்டி மணிக்கவும்.
இப்படிக்கு,
உங்கள் மாணவன்,
பா.சுகதேவ்
மேட்டூர்.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

