Jeyamohan's Blog, page 1635
May 28, 2017
சங்கசித்திரங்கள் -கடிதம்
ஜெ அவர்களுக்கு,
வணக்கம்,
சங்கச் சித்திரங்கள் படித்தேன். விகடனில் தொடராய் வந்த போது முழுமையாய் வாசித்தேன் என்றாலும், இப்பொழுது படிக்கையில், சில சம்பவங்கள் மட்டும் நினைவில் இருந்து எழும்பி வந்தது.
மற்றபடி புதிதாய் வாசித்த அனுபவம். உண்மையிலேயே சங்கப்பாடல்களை, இறுகப்பூட்டி கண்ணாடிப் பெட்டியில் வைத்து, அருங்காட்சியகத்தில் வைத்திருந்தனர் தமிழாசிரியர்கள். உங்களின் கட்டுரைகள் அன்றாட வாழ்க்கையின் சம்பவங்களை சங்கப்பாடல்களுடன் பொருத்தி, அவற்றை காலம் கடந்த நிலைக்கு, இன்னும் பல்லாண்டு கழித்துப் படித்தாலும், புதிதாய் உணருமாறு செய்திருக்கிறீர்கள்.. இத்தனை வேகமாய்ப் படித்து, வெகுநாட்களாகி விட்டன.
என் வாழ்க்கையில், வாசிப்புத் தேடலில், காயசண்டிகையின் பசித்தீ தீர்க்க வந்த அமுதசுரபியென உங்கள் எழுத்துகளை உணர்கிறேன்.
பவித்ரா பாலு.
***
அன்புள்ள பவித்ரா
அந்நூலின் சாராம்சமான வரி ஒன்றே. கவிதை இசை போல ஓர் அழகியல் சட்டகம் அல்ல. வாழ்க்கையைக்கொண்டே அதை வாசிக்கவேண்டும். அத்தகைய வாசிப்பு அமைக
ஜெ
***
அன்புள்ள ஜெ
சங்கசித்திரங்கள் நூலை ஒரு நண்பர் தந்தார். ஏதோ கல்யாண வீட்டில் தேங்காய் பையுடன் கொடுத்திருக்கிறார்கள். நல்லுபதேசம் என்று அலட்சியமாக வாசிக்க ஆரம்பித்தேன். சங்க இலக்கியம் பற்றியும் கவிதை பற்றியும் நான் கொண்டிருந்த பொதுவான பார்வையையே மாற்றிவிட்டது. கவிதை என்றாலே சாதாரண விஷயங்களை பூடகமாகவும் அலங்காரமாகவும் சொல்வது என்பதே என் எண்ணமாக இருந்தது. கவிதை என்பது வாழ்க்கையனுபவங்களின் உச்சப்புள்ளியை மட்டுமே சொல்வது என்று புரிந்துகொண்டேன். குறிப்பாக அந்த சின்னக்குழந்தையின் இறப்பை யானையின் மறைவுடன் சம்பந்தப்படுத்திச் சொல்லியிருந்த கவிதை. உலுக்கிவிட்டது அது. இப்படி சங்கப்பாடல்களைச் சொல்லித்தந்திருந்தால் எங்கோ சென்றிருப்பேன்
ராமச்சந்திரன்
***
அன்புள்ள ராம்,
கவிதை வாசிக்க ஒரு வயதுமுதிர்ச்சியும் தேவைதானே. இனிமேல் ஆரம்பிக்கலாமே
ஜெ
***
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-5
4. கலிமுகம்
விடைபெறுவதற்காக முதற்புலரியில் பாண்டவர்களும் திரௌபதியும் தமனரின் குடிலுக்குள் சென்றார்கள். அவர் அப்போதுதான் துயிலெழுந்து முகம் கழுவிக்கொண்டிருந்தார். அவர்களைக் கண்டதும் “இப்பொழுதிலேயா? நீராடி உணவருந்தி கிளம்பலாமே?” என்றார். “நாங்கள் நடந்து செல்லவிருக்கிறோம். பெருங்கோடை. சூரியன் சினப்பதற்குள் பாதி தொலைவைக் கடந்து சோலை ஒன்றை கண்டடைந்துவிடவேண்டும்” என்றார் தருமன். “ஆம், அதுவும் மெய்யே. நான் நடந்து நெடுநாட்களாகின்றது” என்றார் அவர்.
வணங்கி முறைமைச்சொற்கள் உரைத்து எழுகையில் நகுலன் “நிஷத நாட்டுக்கும் விதர்ப்பத்திற்கும் இடையே பிறிதொரு பூசல்முனை உள்ளது என்றீர்களே? அதைப்பற்றி பேசக் கூடவில்லை. நேற்று பின்னிரவில்தான் அதைப்பற்றி எண்ணினேன்” என்றான். “அது அனைவரும் அறிந்த கதைதான். ஸ்ரீசக்ரரின் நளோபாக்யானம் என்னும் காவியம் சூதர்களால் பாடப்படுகிறது, கேட்டிருப்பீர்கள்” என்றார் தமனர். “ஆம், அரிய சில ஒப்புமைகள் கொண்ட காவியம்” என்றார் தருமன். “நிஷத மன்னனாகிய நளன் விதர்ப்ப நாட்டு இளவரசியாகிய தமயந்தியை மணந்து இன்னல்கள் அடைந்து மீண்ட கதை அது. அதற்கு இரு நாடுகளிலும் வெவ்வேறு சொல்வடிவங்கள் உள்ளன” என்றார் தமனர்.
தருமன் “ஆம், நானே இரு வடிவங்களை கேட்டுள்ளேன்” என்றார். “அதை வைத்து நான் சொல்வதற்கும் ஒன்றுள்ளது. சொல்லப்படாத ஏதோ எஞ்சுகிறதென்று நானும் உணர்ந்துகொண்டிருந்தேன். அக்கதையை ஏதேனும் வடிவில் கேளாமல் நீங்கள் விதர்ப்பத்தை கடக்கவியலாது. அக்கதையுடன் நான் சொல்லும் சொற்களையும் இணைத்துக்கொள்ளுங்கள். உருவென்பது ஓர் ஆடையே. உருவமைந்து அறிவதன் எல்லையை மாற்றுருவெடுத்து கடக்கலாம். பிறிதொன்றென ஆகாமல் எவரும் பிறிதெதையும் அடையவியலாது” என்றார் தமனர்.
அவர்கள் அவரை தாள்தொட்டு சென்னிசூடி நற்சொல் பெற்று கிளம்பினர். குருநிலையிலிருந்து கிளம்பி நெடுந்தொலைவுவரை தருமன் ஒரு சொல்லும் உரைக்கவில்லை. முதல் இளைப்பாறலின்போது பீமன் அவர்களுக்கு குடிக்க நீர் அளித்தபின் அருகே ஊற்றிருப்பதை குரங்குகளிடம் கேட்டறிந்து நீர்ப்பையுடன் கிளம்பிச்சென்றான். நகுலன் “ஆடைதான் என்றால் எதை அணிந்தால் என்ன?” என்றான். அவன் எண்ணங்கள் சென்ற திசையிலேயே பிறரும் இருந்தமையால் அச்சொற்கள் அவர்களுக்கு புரிந்தன. “ஆடைகளை உடலும் நடிக்கிறது” என்று தருமன் சொன்னார்.
“நாம் நிஷாதர்களின் விராடபுரிக்கு செல்லத்தான் போகிறோமா?” என்றான் சகதேவன். “வேறு வழியில்லை. எண்ணிநோக்கி பிறிதொரு இடம் தேர இயலவில்லை” என்றார் தருமன். “நாம் இடர்மிக்க பயணத்தில் உள்ளோம். இதை மேலும் நீட்டிக்கவியலாது. விதர்ப்பத்திலோ மற்ற இடங்களிலோ நம்மை எவரேனும் கண்டுகொள்வதற்கான வாய்ப்புகள் ஏராளம். உண்மையில் காசியில் என்னை ஒற்றர் சிலர் கண்டுகொண்டனர் என்றே ஐயுறுகிறேன்.” சகதேவன் மேலே நோக்கி “அதற்குள் உச்சி என வெயிலெழுந்துவிட்டது. பறவைகள் நிழலணையத் தொடங்கிவிட்டன” என்றான். “மண்ணுக்குள் நீர் இருந்தால் கதிர்வெம்மை கடுமையாக இருக்காது. ஆழ்நீர் இறங்கிமறைகையிலேயே இந்த வெம்மை” என்றான் நகுலன்.
மணியோசை கேட்க அவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். சூதர்குடி ஒன்று வண்ண ஆடைகளுடன் பொதிகளையும் இசைக்கலன்களையும் சுமந்தபடி நடந்து வந்தது. ஆண்கள் மூவர், இரு பெண்களும் இரு சிறுவரும். ஒருத்தி கையில் நடைதிகழா மைந்தன். அவர்களில் ஒருவனின் தோளில் ஒரு குட்டிக்குரங்கு இருந்தது. ஆண்களில் இருவர் மூங்கில்கூடைகளில் கலங்களையும் பிற குடிப்பொருட்களையும் அடுக்கி தலையில் ஏற்றியிருந்தனர். “சூதரா, குறவரா?” என்றான் சகதேவன். “சூதர்களே. குறவர்களுக்கு துணியில் தலைப்பாகை அணிய உரிமை இல்லை” என்றார் தருமன்.
அவர்கள் தொலைவிலேயே பாண்டவர்களை பார்த்துவிட்டிருந்தனர். அருகே வந்ததும் அவர்களின் தலைவன் முகமன் சொல்லி வணங்கினான். அவர்கள் தருமனை முனிவர் என்றும் பிறரை மாணவர்கள் என்றும் எண்ணினர். திரௌபதியை முனிவர்துணைவி என்று எண்ணி முதல் முகமன் அவளுக்குரைத்த சூதன் “நாங்கள் கலிங்கச்சூதர். விதர்ப்பத்திற்கு செல்கிறோம். தேன் நிறை மலர்களென நற்சொல் ஏந்திய முகங்களைக் காணும் பேறுபெற்றோம்” என்று முறைமைச்சொல் உரைத்தான். தருமன் அவர்களை “நலம் சூழ்க!” என வாழ்த்தினார்.
“என் பெயர் பிங்கலன். இது என் குடி. என் மைந்தர் இருவர். அளகன், அனகன். மைந்தர்துணைவியர் இருவர். சுரை, சௌபை. கதை பாடி சொல் விதைத்து அன்னம் விளைவிப்பவர்” என்றான். சகதேவன் “குரங்குகளை சூதர்கள் வைத்திருப்பதில்லை” என்றான். “ஆம், ஆனால் விதர்ப்பத்தைக் கடந்தால் நாங்கள் செல்லவேண்டியவை நிஷாதர்களின் ஊர்கள். மீன்பிடிக்கும் மச்சர்கள். வேட்டையாடும் காளகர்கள். அவர்களில் பலருக்கு எங்கள் மொழியே புரியாது. பாடிப்பிழைக்க வழியில்லாத இடங்களில் இக்குரங்கு எங்களுக்கு அன்னமீட்டித் தரும்” என்றான் முதுசூதன் பிங்கலன்.
“நாங்கள் விதர்ப்பத்தைக் கடந்து நிஷதத்திற்குள் செல்லவிருக்கிறோம்” என்றார் தருமன். “நீங்கள் ஷத்ரியர் அல்லவென்றால் அங்கு செல்வதில் இடரில்லை. ஷத்ரியரும் அவர் புகழ்பாடும் சூதரும் அவ்வெல்லைக்குள் நுழைந்தால் அப்போதே கொல்லப்படுவார்கள்” என்றான் அளகன். “நாங்கள் அந்தணர்” என்று தருமன் சொன்னார். “இவர் கைகளின் வடுக்கள் அவ்வாறு காட்டவில்லையே” என்றான் அனகன். “போர்த்தொழில் அந்தணர் நாங்கள். நியோகவேதியர் என எங்கள் குடிமரபை சொல்வதுண்டு” என்று சகதேவன் சொன்னான்.
அவர்களை ஒருமுறை நோக்கியபின் விழிவிலக்கி “மாற்றுருக்கொண்டு நுழையாமலிருப்பதே நன்று. ஏனென்றால் மாற்றுருக்கொண்டு நிஷதத்திற்குள் நுழையும் ஷத்ரிய ஒற்றரை அவர்கள் பன்னிரு தலைமுறைகளாக கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் படையினர் அனைவருக்குமே மாற்றுரு கண்டடையும் நுண்திறன் உண்டு” என்றான் பிங்கலன். “நிஷதத்தின் படைத்தலைவன் அரசியின் தம்பியாகிய கீசகன். தோள்வல்லமையில் பீமனுக்கு நிகரானவன் அவன் என்கிறார்கள். கடுந்தொழில் மறவன். தன்னைப்போலவே தன் படையினரையும் பயிற்றுவித்திருக்கிறான். அஞ்சுவதஞ்சுவர் அவனை ஒழிவது நன்று” என்றாள் சுரை. “ஆம், அறிந்துள்ளோம்” என்று தருமன் சொன்னார்.
“பசி கொண்டிருக்கிறீர்கள் என்றால் எங்களிடமுள்ள அன்னத்தில் சிறிது உண்ணலாம். அந்தணர் என்பதனால் எங்கள் கை அட்ட உணவை ஏற்பீர்களோ என ஐயுறுகிறோம்” என்றான் பிங்கலன். “போர்த்தொழில் அந்தணர் ஊனுணவும் உண்பதுண்டு” என்றார் தருமன். “நன்று, இதை நல்வாழ்த்தென்றே கொள்வேன்” என்றபின் பிங்கலன் விரியிலைகளை பறித்துவந்தான். சுரை மூங்கில் கூடையில் இருந்த மரக்குடைவுக்கலத்தில் இருந்து அன்ன உருளைகளை எடுத்து அவற்றில் வைத்து அவர்களுக்கு அளித்தாள். வறுத்த தினையை உலர்த்திய ஊனுடன் உப்புசேர்த்து இடித்து உருட்டிய உலரன்னம் சுவையாக இருந்தது. “நீர் அருந்தினால் வயிற்றில் வளர்வது இவ்வுணவு” என்றான் பிங்கலன். “அத்துடன் உண்டபின் கைகழுவ நீரை வீணடிக்கவேண்டியதில்லை என்னும் நல்வாய்ப்பும் உண்டு.”
சாப்பிட்டபின் தருமன் “கதை என எதையேனும் சொல்லக்கூடுமோ, சூதரே?” என்றார். “பாடவேண்டாம். செல்லும் வழியில் சொல்லிவந்தால் போதும்.” பிங்கலன் முகம் மலர்ந்து “கதை பாடாமல் தொண்டை சிக்கியிருக்கிறது. வழிநடைவிலங்குகளிடம் சொல்லத்தொடங்கலாமா என்று எண்ணிக்கொண்டிருந்தேன். எந்தக் கதை?” என்றான். “விதர்ப்பினியாகிய தமயந்தியின் கதை” என்றார் தருமன். “ஆம், விதர்ப்பத்திற்குள் நுழைகையில் சொல்லவேண்டியதுதான்… நன்று” என்றபின் திரும்பி தோளிலிட்டிருந்த குறுமுழவை எடுத்து அதன் தோல்வட்டத்தில் கையோட்டி மெல்ல தட்டிவிட்டு “சாரஸ்வத நாட்டின் பேரரசன் வேனனின் கதையை பாடுக, நாவே!” என்றான்.
நால்வகை நிலமும் மூவகை அறங்களால் பேணப்பட்ட அந்நாட்டை அவன் தன் தந்தையிடமிருந்து பெற்றான். சரஸ்வதி நதிக்கரையில் நாணல்புதர் ஒன்றுக்குள் ஊணும் துயிலும் ஒழித்து அருந்தவம் செய்து பிரம்மனை தன் முன் அழைத்தான் வேனன். அவன் முன் தோன்றிய படைப்பிறைவன் “உன் தவம் முதிர்ந்தது. அரசனே, விழைவதென்ன சொல்” என்று வேண்டினான். “தொட்டவை பொன்னென்றாகும் பெற்றி, சுட்டியவற்றை ஈட்டும் ஆற்றல், எண்ணியவை எய்தும் வாழ்வு. இம்மூன்றும் வேண்டும், இறைவா” என்றான் வேனன்.
பிரம்மன் நகைத்து “அரசே, தெய்வங்களாயினும் அவ்வண்ணம் எதையும் அருளவியலாது. இப்பெருவெளியில் ஒவ்வொன்றும் பிறிதொன்றால் நிகர்செய்யப்பட்டுள்ளது என்று அறிக! உனக்களிப்பதை அவர்கள் பிறிதெங்கோ வைக்கவேண்டும்” என்றான். “அதை நான் அறியவேண்டியதில்லை. நான் விழைவது இந்நற்சொல். அதை அருள்க தெய்வங்கள்” என்றான் வேனன். “உன் முற்பிறவியில் ஈட்டியிருக்கவேண்டும். அல்லது வருபிறவியில் நிகர்வைக்கவேண்டும். வெட்டவெளியில் விளையும் கனியொன்றில்லை, உணர்க!” என்றான் பிரம்மன். “நான் பிறிதொன்றும் வேண்டவில்லை. என் தவம் வீண் என்று சொல்லி செல்க!” என்றான் வேனன். “செய்யப்பட்டுவிட்ட தவம் உருக்கொண்ட பொருளுக்கிணையானது. எதன்பொருட்டும் அது இல்லை என்றாவதில்லை” என்றான் பிரம்மன்.
“நான் விழைவன பிறிதெவையும் அல்ல” என்று சொல்லி வேனன் விழிமூடி அமர்ந்தான். “நீ விழைவன அனைத்தையும் அளிப்பவன் ஒரு தெய்வம் மட்டுமே. அவன் பெயர் கலி. காகக்கொடி கொண்டவன். கழுதை ஊர்பவன். கரியன். எண்ணியதை எல்லாம் அளிக்கும் திறன் கொண்டவன். அவனை எற்கிறாயா?” என்றான் பிரம்மன். “ஆம், ஏற்கிறேன்” என்றான் வேனன். “அவ்வண்ணம் ஒரு தெய்வமிருக்கிறது என்றால் இதுவரை முனிவரும் அரசரும் அவனை எண்ணி ஏன் தவமிருக்கவில்லை? அவன் அருளால் ஏன் மானுடர் மண்ணுலகை முழுதும் வெல்லவில்லை? அதை எண்ணி நோக்கமாட்டாயா?” என்றான் பிரம்மன்.
“அவர்கள் என்னைப்போல் கடுந்தவம் செய்திருக்கமாட்டார்கள். எனக்கிணையான பெருவிழைவு கொண்டிருக்கமாட்டார்கள். அத்தெய்வத்தின் அருளால் உலகாளப்போகும் முதல் மானுடன் நான் என்பதே ஊழ்” என்றான் வேனன். புன்னகைத்து “நன்று, அவ்வண்ணமே ஆகுக!” என்று சொல்லி பிரம்மன் உருமறைந்தான்.
பிரம்மனின் இடக்கால் கட்டைவிரல் பெருகி எழுந்து கரிய உருக்கொண்ட தெய்வமென வேனனின் முன் நின்றது. அக்கொடிய உரு கண்டு அஞ்சி அவன் கைகூப்பினான். “என்னை விழைந்தவர் எவருமிலர். உன் ஒப்புதலால் மகிழ்ந்தேன். உன் விருப்பங்கள் என்ன?” என்றான் கலி. பன்னிரு கைகளிலும் படைக்கலங்களுடன் எரியென சிவந்த விழிகளுடன் நிழலில்லா பேருருக்கொண்டு எழுந்து நின்றிருந்த கலியனின் முன் தலைவணங்கிய வேனன் தன் விழைவுகளை சொன்னான். “அளித்தேன்” என்றான் கலி.
“ஆனால் என் நெறி ஒன்றுண்டு. நீ கொள்வனவெல்லாம் உன்னுடையவை அல்ல என்று உன் உள்ளம் எண்ணவேண்டும். நீ கொடுப்பவை எல்லாம் என்னுடையவை என்ற எண்ணம் இருக்கவேண்டும். கொடுத்த கையை நீரூற்றி மும்முறை முழுதுறக் கழுவி கொடையிலிருந்து நீ விலகிக்கொள்ளவேண்டும். ஒருமுறை ஒருகணம் உன் எண்ணம் பிழைக்குமென்றால் உன்னை நான் பற்றிக்கொள்வேன். நான் அளித்தவற்றை எல்லாம் ஐந்துமடங்கென திரும்பப்பெறுவேன். அழியா இருள்கொண்ட ஆழுலகுக்கு உன்னை என்னுடன் அழைத்துச்செல்வேன். ஆயிரம் யுகங்கள் அங்கு நீ என் அடிமையென இருந்தாகவேண்டும்.” வேனன் “அவ்வாறே இறையே. இது என் ஆணை!” என்றான்.
அரண்மனை மீண்ட வேனன் அரியணை அமர்ந்து செங்கோல் தாழாது ஆண்டான். எதிரிகளனைவரையும் கொடுங்காற்று சருகுகளை என வென்று ஒதுக்கினான். மண்ணில் புதைந்துள்ள பொன்னெல்லாம் அவன் கருவூலத்திற்கு வந்தன. மானுடர் எண்ணும் நலன்கள் எல்லாம் அவன் கைநீட்ட அருகமைந்தன. நல்லாட்சியால் பெரும்புகழ் கொண்டான். புகழ் சொல்லில் பற்றி எரிந்தேறும் நெருப்பு. நாள்தோறும் அவன் புகழ் அவனை வந்தடைந்துகொண்டிருந்தது. அவன் கொடைத்திறனும் வில்திறனும் நகர்ப்பெருமையும் குடிப்பெருமையும் அவன் செவிகளில் அறுபடாது ஒலித்து அவையே அவன் எண்ணப்பெருக்கென்றாயின. பிறிதொன்றை எண்ணாது அதிலமர்ந்தான்.
அந்த ஆணவத்தால் அவன் அறிவிழந்தான். வெல்பவன் வெற்றிக்கு நிகராக தெய்வங்களின் மறுதட்டில் வைப்பது அடக்கத்தை. முனிவர்களே, வெற்றியின் நிழல் ஆணவம். வெற்றி நாள் என சுருங்கும், ஆணவம் கணமெனப் பெருகும். கொள்பவை எல்லாம் தன் திறனாலேயே என்று வேனன் எண்ணலாலான். கொடுப்பவை தன் கருணையால் என்று மயங்கினான்.
அவன் அரண்மனைக்கு வெளியே வாயிலின் இடப்பக்கம் கலியின் சிலை நிறுவப்பட்டிருந்தது. அக்கற்சிலையில் கண்கள் மூடியிருக்கும்படி செதுக்கப்பட்டிருந்தன. நாள்தோறும் அச்சிலைக்கு நீராட்டும் மலராட்டும் சுடராட்டும் காட்டி படையலிட்டு வணங்குவது அரசனின் வழக்கம். அன்றொருநாள் வறியவன் ஒருவனுக்கு பொற்கொடை அளித்தபின் கைகழுவுகையில் அவன் விரல்முனை நனையவில்லை. நாள்தொறும் அவ்வாறு கைநனைத்துக் கொண்டிருந்தமையால் அவன் அதை பொருட்படுத்தவில்லை.
கற்சிலையின் பூசகர் மலர்மாலையுடன் திரும்பி நோக்கியபோது சிலையின் விழிகள் திறந்திருப்பதைக் கண்டு அஞ்சி அலறினார். நீரூற்றிய ஏவலன் அப்பால் செல்ல திரும்பி நோக்கிய அமைச்சர் கருநிழலொன்று அரசனின் கைவிரல் நுனியைத் தொட்டு படர்ந்தேறுவதைக் கண்டார். “அரசே!” என அவர் அஞ்சி அழைத்தபோது “என்ன?” எனத் திரும்பிய அரசனின் விழிகள் மாறியிருந்தன. அவன் உடலசைவும் சிரிப்பும் பிறிதொருவர் என காட்டின. அப்போது நகருக்குள் பசுக்கள் அஞ்சி அலறல் குரலெழுப்பின. காகக்கூட்டங்கள் முகில்களைப்போல வந்து நகரை மூடி இருளாக்கின. நரித்திரள்கள் நகருக்கு வெளியே ஊளையிட்டன. வானில் ஓர் எரிவிண்மீன் கீறிச்சென்றதைக் கண்டனர் குடிகள்.
கொடிய தொற்றுநோய் என குடியிருப்பதை உண்பதே கலியின் வழி. வேனன் ஆணவமும் கொடும்போக்கும் கொண்டவன் ஆனான். அந்தணரை தண்டித்தான், குடிகளை கொள்ளையிட்டான். எதிரிகளை சிறுமை செய்தான். மூதாதையரை மறந்தான். தெய்வங்களை புறக்கணித்தான். நாள்தோறும் அவன் தீமை பெருகியது. நச்சுவிழுந்த காடென்று கருகியழிந்தது சாரஸ்வதம். அங்கு வாழ்ந்த மலைத்தெய்வங்களும் கானுறைத்தெய்வங்களும் அகன்றபோது நீரோடைகள் வறண்டன. தவளைகள் மறைந்தபோது மழைமுகில்கள் செவிடாகி கடந்து சென்றன. வான்நீர் பெய்யாத நிலத்தில் அனல் எழுந்து சூழ்ந்தது.
அந்தணரும் முனிவரும் சென்று அவனுக்கு அறிவுரை சொன்னார்கள். நற்சொல் உரைத்த முனிவரை கழுவிலேற்றி அரண்மனைக்கு முன் அமரச்செய்தான். அந்தணரை பூட்டிவைத்து உணவின்றி சாகவைத்தான். சினம்கொண்டு எழுந்த மக்கள் அந்தணரை அணுகி அறம் கோரினர். அவர்களை ஆற்றுப்படுத்தியபின் அந்தணர் ஆவதென்ன என்று தங்கள் குலத்து முதியவரான சாந்தரிடம் வினவினர். நூற்றிருபது அகவை எய்தி நெற்றுபோல உலர்ந்து இல்லத்தின் திண்ணையில் அமர்ந்திருந்த சாந்தர் சீவிடுபோல ஒலித்த சிறுகுரலில் “அரசன் கோல் இவ்வாழியின் அச்சு. சினம்கொண்டு அச்சை முறித்தால் சுழல்விசையாலேயே சிதறிப்போகும் அனைத்தும். தீய அரசன் அமைந்தது நம் தீவினையால் என்றே கொள்வோம். தெய்வம் முனிந்தால் பணிந்து மன்றாடுவதன்றி வேறேது வழி?” என்றார்.
குழம்பி ஒருவரை ஒருவர் நோக்கிய அந்தணரிடம் “கொடியோன் என்றாலும் அவன் நம் குடி அரசன். அவனை அழித்தால் பிற குடியரசனை நாம் தலைமேல் சூடுவோம். மான்கணம் சிம்மத்தை அரசனாக்குவதற்கு நிகர் அது” என்றார் சாந்தர். “ஆம் மூத்தவரே, ஆணை” என்றனர் இளையோர். அச்சொல்லை அவர்கள் குடிகளிடம் கொண்டுசென்றனர். ஒவ்வொரு நாளும் ஒரு குடிக்குழு சென்று வேனனிடம் முறையிடுவதென்று முடிவெடுத்தனர். அவன் காலை துயிலெழுகையில் அரசமுற்றத்தில் நின்று தங்கள் துயர்சொல்லி கூச்சலிட்டனர். அவர்களை குதிரைகளை அனுப்பி மிதிக்கவைத்தான். கொதிக்கும் எண்ணையை அவர்கள்மேல் ஊற்றினான். சிறையிலிட்டான். சாட்டையால் அடித்தான். கொன்று தொங்கவிட்டான்.
விழிநீர் சொட்டச்சொட்ட வேனனால் ஆளப்பட்ட புவி வெம்மைகொண்டது. அனைத்து மரங்களையும் அது உள்ளிழுத்துக்கொண்டது. திருப்பப்பட்ட மான்தோல் என நிறம் வெளுத்து வெறுமையாயிற்று. புவிமகள் பாதாளத்தில் சென்று ஒளிந்துவிட்டாள் என்றனர் நிமித்திகர். அறம் மீள்வதறிந்தே அவள் இனி எழுவாள் என்றார்கள். புவியன்னை ஒரு கரிய பசுவென்றாகி இருளில் உலவுவதை விழியொளியால் கண்டனர் கவிஞர்.
ஒருநாள் பட்டினியால் உடல்மெலிந்த அன்னை ஒருத்தி பாலின்றி இறந்த பைங்குழவி ஒன்றை எடுத்துக்கொண்டு அவன் அரண்மனை முற்றத்தில் வந்து நின்றாள். “கொடியவனே, கீழ்மகனே, வெளியே வா! குழவி மண்ணுக்கு வருவது அன்னையை நம்பி. அன்னை வாழ்வது குடியை நம்பி. குடி கோலை நம்பி. குழவிக்கு உணவுதேடி உண்ணும் கையையும் காலையும் அருளாத தெய்வங்கள் மானுடம் மீது இட்ட ஆணை என்ன என்று அறிவாயா? பசித்து ஒரு குழந்தை இறக்கும் என்றால் அக்குடியின் இறுதி அறமும் முன்னரே வெளியேறிவிட்டதென்று பொருள். அக்குடி மண்மீது வாழும் தகுதியை இழந்துவிட்டது. அக்குடியில் பிறந்த நானும் இனி உயிர்வாழலாகாது. எரிக அனல்…” என்று கூவி தன் கையிலிருந்த கத்தியால் ஒரு முலையை அறுத்து அரண்மனை முன் வீசினாள். குருதி பெருக்கியபடி அங்கே விழுந்து இறந்தாள்.
அது நிகழ்ந்த அக்கணம் திண்ணையில் சாந்தர் முனகுவதை கேட்டார்கள் அந்தணர். ஓடி அவர் அருகே சென்று என்ன என்று வினவினர். “எழுக குடி. ஆணும் பெண்ணும் படைக்கலம் கொள்க! குருதியாடாத எவரையும் இனி குடியெனக் கொள்ளாதொழிக! நகரை நிறையுங்கள். பெருகிச்சென்று அரண்மனை புகுந்து அரசனையும் அவனை ஏற்பவர்களையும் கொன்றுகுவியுங்கள். அவர்களின் குருதியால் நகர்க்காவல் தெய்வங்களை மும்முறை கழுவுங்கள். வேனனைக் கொன்று அவன் வலக்கால்தொடைத்தசையை எடுத்து அதை மட்டும் அரசனுக்குரிய முறையில் எரியூட்டுங்கள். எஞ்சிய உடலை துண்டுகளாக ஆக்கி காட்டுக்குள் கூவியலையும் காகங்களுக்கும் நரிகளுக்கும் உணவாக்குங்கள். அரசனின் முதல் மைந்தனை அரசனாக்குங்கள். அவன் தன் தந்தைக்கு எரியூட்டட்டும். அவனே சென்று பாதாளத்தில் அலையும் புவிமகளை மீட்டு வரட்டும்” என்றார். மூச்சிரைக்க மெல்ல தளர்ந்து கைதூக்கி வாழ்த்தி “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார்.
அச்சொல் அரைநாழிகைக்குள் நகருக்குள் பரவியது. கடலலை போன்று ஓசைகேட்டபோது வேனன் திகைத்து சாளரம் வழியாக வெளியே நோக்கினான். நகரம் எரிபுகையால் நிறைந்திருப்பதைக் கண்டு வெளியே ஓடி தன் மெய்க்காவலரிடம் எழுபவர்களை கொன்றழிக்க ஆணையிட்டான். அந்தப் போர் ஏழு நாழிகை நேரம் நிகழ்ந்தது. கணந்தோறும் பெருகிய குடிபடைகளுக்கு முன் அரசப்படைகள் அழிந்தன. அவர்களின் குருதியை அள்ளி அரண்மனையெங்கும் வீசி கழுவினர். வேனன் தன் வாளுடன் ஆட்சியறை விட்டு வெளியே ஓடிவர அவன் குடிகளில் இளையோர் எழுவர் அவனைச் சூழ்ந்து வெட்டி வீழ்த்தினர். அவன் தொடைத்தசையை வெட்டியபின் துண்டுகளாக்கி காட்டில் வீசினர். அவன் உடலை உண்ட நரிகள் ஊளையிட்டபடி காட்டின் ஆழத்திற்குள் ஓடி மறைந்தன. காகங்கள் வானில் சுழன்று கூச்சலிட்டபின் மறைந்தன.
வேனனின் மைந்தன் பிருதுவை அந்தணர் அரசனாக்கினார்கள். தந்தையின் தொடையை எரியூட்டியபின் அவன் வாளுடன் சென்று புவியன்னையை மீட்டுவந்தான். அறம்திகழ தெய்வங்கள் மீள வேள்வி பெருகியது. வறுநிலத்தில் பசுமை எழுந்து செறிந்தது. ஒழியா அன்னக்கலம் என அன்னையின் அகிடு சுரந்தது. பிருதுவின் மகளென வந்து வேள்விச்சாலையில் புகுந்து அவன் வலத்தொடைமேல் அமர்ந்தாள் புவி. ஆகவே கவிஞரால் அவள் பிருத்வி என அழைக்கப்பட்டாள். அவள் வாழ்க!
பிங்கலன் சொன்னான் “முனிவரே, மாணவரே, இனிய விழிகள்கொண்ட தேவியே, கேளுங்கள். வேனனின் உடலில் இருந்து கலி அந்த நரிகளின் நெஞ்சிலும் காகங்களின் வயிற்றிலும் பரவியது. அவை அலறியபடி காடுகளுக்குள் சென்றன. காட்டுப்புதர்களுக்குள் பதுங்கியிருந்த நரிகள் புல்கொய்யவும் கிழங்கும் கனியும் தேரவும் வந்த கான்குடிப் பெண்களை விழிதொட்டு உளம் மயக்கி வென்று புணர்ந்தன. அவர்களின் கருக்களில் இருந்து நரிகளைப்போல் வெள்விழி கொண்ட, நரிகளின் பெரும்பசி கொண்ட மைந்தர்கள் பிறந்தனர். அவர்கள் மிலேச்சர்கள் என்றழைக்கப்பட்டனர்.”
“வேனனின் ஊன் உண்ட காகங்கள் பறந்து காடுகளுக்குள் புகுந்தன. அங்கே தொல்குடிகள் தங்கள் நுண்சொல் ஓதி தெய்வங்களைத் தொழுகையில் அருகே கிளைகளில் அமர்ந்திருந்து தங்கள் குரலை ஓயாமல் எழுப்பின. கனவுகளில் அந்நுண்சொற்களில் காகங்களின் ஒலியும் இணைந்தன. அவர்களின் தெய்வங்களுடன் காகங்களும் சென்றமைந்தன. காகங்களை வழிபடுபவர்கள் நிஷாதர் என்றழைக்கப்பட்டனர். நிஷாதர்களின் தெய்வநிரையில் முதல்தெய்வம் கலியே. ஆகவே அவர்கள் கலியர் என்றழைக்கப்பட்டனர். நிஷாதகுலத்தின் தென்னகக்கிளையே நிஷத நாடென்கின்றனர் நூலோர்.”
“இது விதர்ப்பத்தினர் விரும்பும் கதை அல்லவா?” என்று சகதேவன் கேட்டான். “ஆம், இதையே இங்கே பாடுகிறோம்” என்றான் பிங்கலன். தருமன் சிரித்து “மறுபக்க கதையை சொல்க! நிஷதரின் சொற்களால்” என்றார். “மறுபக்கத்தை கேட்கப் புகுந்தால் அனைத்துக் கதைகளும் அசைவிழந்துவிடும், முனிவரே” என்றான் பிங்கலன். உடலெங்கும் நீர்வழிய தோல்பையைச் சுமந்தபடி பீமன் அப்பால் வருவதைக் கண்டு “ஆ, அவர் மிலேச்சர்” என்றான். “அவன் என் மாணவன். பால்ஹிக நாட்டவன்” என்றார் தருமன். “அவர்கள் பெருந்தோளர்கள், அறிந்திருப்பீர்.” பிங்கலன் “இத்தகைய பேருடல் கீசகருக்கு மட்டுமே உரியதென்று எண்ணியிருந்தோம்” என்றான். அவன் மைந்தர்களும் பீமனையை கூர்ந்து நோக்கினர்.
“நெடுநேரமாயிற்று, செல்வோம்” என்றார் தருமன். “சூதர் நிஷதநாட்டின் கதையை சொல்லிக்கொண்டிருந்தார்.” பீமன் “நன்று” என்றான். “சொல்லிக்கொண்டே செல்லலாம். கதை இருக்கும்வரை வழித்துணைக்கு தெய்வங்கள் தேவையில்லை என்பார்கள்” என்றார் தருமன்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-4
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-3
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-2
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–45
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–12
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–9
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–8
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–7
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–6
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–5
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 60
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 55
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 54
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 52
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 23
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 17
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 16
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 12
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 3
வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-5
4. கலிமுகம்
விடைபெறுவதற்காக முதற்புலரியில் பாண்டவர்களும் திரௌபதியும் தமனரின் குடிலுக்குள் சென்றார்கள். அவர் அப்போதுதான் துயிலெழுந்து முகம் கழுவிக்கொண்டிருந்தார். அவர்களைக் கண்டதும் “இப்பொழுதிலேயா? நீராடி உணவருந்தி கிளம்பலாமே?” என்றார். “நாங்கள் நடந்து செல்லவிருக்கிறோம். பெருங்கோடை. சூரியன் சினப்பதற்குள் பாதி தொலைவைக் கடந்து சோலை ஒன்றை கண்டடைந்துவிடவேண்டும்” என்றார் தருமன். “ஆம், அதுவும் மெய்யே. நான் நடந்து நெடுநாட்களாகின்றது” என்றார் அவர்.
வணங்கி முறைமைச்சொற்கள் உரைத்து எழுகையில் நகுலன் “நிஷதநாட்டுக்கும் விதர்ப்பத்திற்கும் இடையே பிறிதொரு பூசல்முனை உள்ளது என்றீர்களே? அதைப்பற்றி பேசக் கூடவில்லை. நேற்று பின்னிரவில்தான் அதைப்பற்றி எண்ணினேன்” என்றான். “அது அனைவரும் அறிந்த கதைதான். ஸ்ரீசக்ரரின் நளோபாக்யானம் என்னும் காவியம் சூதர்களால் பாடப்படுகிறது, கேட்டிருப்பீர்கள்” என்றார் தமனர். “ஆம், அரிய சில ஒப்புமைகள் கொண்ட காவியம்” என்றார் தருமன். “நிஷதமன்னனாகிய நளன் விதர்ப்பநாட்டு இளவரசியாகிய தமயந்தியை மணந்து இன்னல்கள் அடைந்து மீண்ட கதை அது. அதற்கு இருநாடுகளிலும் வெவ்வேறு சொல்வடிவங்கள் உள்ளன” என்றார் தமனர்.
தருமர் “ஆம், நானே இருவடிவங்களை கேட்டுள்ளேன்” என்றார். “அதை வைத்து நான் சொல்வதற்கும் ஒன்றுள்ளது. சொல்லப்படாத ஏதோ எஞ்சுகிறதென்று நானும் உணர்ந்துகொண்டிருந்தேன். அக்கதையை ஏதேனும் வடிவில் கேளாமல் நீங்கள் விதர்ப்பத்தை கடக்கவியலாது. அக்கதையுடன் நான் சொல்லும் சொற்களையும் இணைத்துக்கொள்ளுங்கள். உருவென்பது ஓர் ஆடையே. உருவமைந்து அறிவதன் எல்லையை மாற்றுருவெடுத்து கடக்கலாம். பிறிதொன்றென ஆகாமல் எவரும் பிறிதெதையும் அடையவியலாது” என்றார் தமனர்.
அவர்கள் அவரை தாள்தொட்டு சென்னிசூடி நற்சொல் பெற்று கிளம்பினர். குருநிலையிலிருந்து கிளம்பி நெடுந்தொலைவுவரை தருமன் ஒரு சொல்லும் உரைக்கவில்லை. முதல் இளைப்பாறலின்போது பீமன் அவர்களுக்கு குடிக்க நீர் அளித்தபின் அருகே ஊற்றிருப்பதை குரங்குகளிடம் கேட்டறிந்து நீர்ப்பையுடன் கிளம்பிச்சென்றான். நகுலன் “ஆடைதான் என்றால் எதை அணிந்தால் என்ன?” என்றான். அவன் எண்ணங்கள் சென்ற திசையிலேயே பிறரும் இருந்தமையால் அச்சொற்கள் அவர்களுக்கு புரிந்தன. “ஆடைகளை உடலும் நடிக்கிறது” என்று தருமன் சொன்னார்.
“நாம் நிஷாதர்களின் விராடபுரிக்கு செல்லத்தான் போகிறோமா?” என்றான் சகதேவன். “வேறு வழியில்லை. எண்ணிநோக்கி பிறிதொரு இடம் தேர இயலவில்லை” என்றார் தருமன். “நாம் இடர்மிக்க பயணத்தில் உள்ளோம். இதை மேலும் நீட்டிக்கவியலாது. விதர்ப்பத்திலோ மற்ற இடங்களிலோ நம்மை எவரேனும் கண்டுகொள்வதற்கான வாய்ப்புகள் ஏராளம். உண்மையில் காசியில் என்னை ஒற்றர் சிலர் கண்டுகொண்டனர் என்றே ஐயுறுகிறேன்.” சகதேவன் மேலே நோக்கி “அதற்குள் உச்சி என வெயிலெழுந்துவிட்டது. பறவைகள் நிழலணையத் தொடங்கிவிட்டன” என்றான். “மண்ணுக்குள் நீர் இருந்தால் கதிர்வெம்மை கடுமையாக இருக்காது. ஆழ்நீர் இறங்கிமறைகையிலேயே இந்த வெம்மை” என்றான் நகுலன்.
மணியோசை கேட்க அவர்கள் திரும்பிப் பார்த்தார்கள். சூதர்குடி ஒன்று வண்ண ஆடைகளுடன் பொதிகளையும்ம் இசைக்கலன்களையும் சுமந்தபடி நடந்து வந்தது. ஆண்கள் மூவர், இருபெண்களும் இருசிறுவரும். ஒருத்தி கையில் நடைதிகழா மைந்தன். அவர்களில் ஒருவனின் தோளில் ஒரு குட்டிக்குரங்கு இருந்தது. ஆண்களில் இருவர் மூங்கில்கூடைகளில் கலங்களையும் பிற குடிப்பொருட்களையும் அடுக்கி தலையில் ஏற்றியிருந்தனர். “சூதரா, குறவரா?” என்றான் சகதேவன். “சூதர்களே. குறவர்களுக்கு துணியில் தலைப்பாகை அணிய உரிமை இல்லை” என்றார் தருமன்.
அவர்கள் தொலைவிலேயே பாண்டவர்களை பார்த்துவிட்டிருந்தனர். அருகே வந்ததும் அவர்களின் தலைவன் முகமன் சொல்லி வணங்கினான். அவர்கள் தருமனை முனிவர் என்றும் பிறரை மாணவர்கள் என்றும் எண்ணினர். திரௌபதியை முனிவர்துணைவி என்று எண்ணி முதல் முகமன் அவளுக்குரைத்த சூதன் “நாங்கள் கலிங்கச்சூதர். விதர்ப்பத்திற்கு செல்கிறோம். தேன் நிறை மலர்களென நற்சொல் ஏந்திய முகங்களைக் காணும் பேறுபெற்றோம்” என்று முறைமைச்சொல் உரைத்தான். தருமன் அவர்களை “நலம் சூழ்க!” என வாழ்த்தினார்.
“என்பெயர் பிங்கலன். இது என் குடி. என் மைந்தர் இருவர். அளகன், அனகன். மைந்தர்துணைவியர் இருவர், சுரை, சௌபை. கதைபாடி சொல்விதைத்து அன்னம் விளைவிப்பவர்” என்றான். சகதேவன் “குரங்குகளை சூதர்கள் வைத்திருப்பதில்லை” என்றான். “ஆம், ஆனால் விதர்ப்பத்தைக் கடந்தால் நாங்கள் செல்லவேண்டியவை நிஷாதர்களின் ஊர்கள். மீன்பிடிக்கும் மச்சர்கள். வேட்டையாடும் காளகர்கள். அவர்களில் பலருக்கு எங்கள் மொழியே புரியாது. பாடிப்பிழைக்க வழியில்லாத இடங்களில் இக்குரங்கு எங்களுக்கு அன்னமீட்டித்தரும்” என்றான் முதுசூதன் பிங்கலன்.
“நாங்கள் விதர்ப்பத்தைக் கடந்து நிஷதத்திற்குள் செல்லவிருக்கிறோம்” என்றார் தருமன். “நீங்கள் ஷத்ரியர் அல்லவென்றால் அங்குசெல்வதில் இடரில்லை. ஷத்ரியரும் அவர் புகழ்பாடும் சூதரும் அவ்வெல்லைக்குள் நுழைந்தால் அப்போதே கொல்லப்படுவார்கள்” என்றான் அளகன். “நாங்கள் அந்தணர்” என்று தருமன் சொன்னான். “இவர் கைகளின் வடுக்கள் அவ்வாறு காட்டவில்லையே” என்றான் அனகன். “போர்த்தொழில் அந்தணர் நாங்கள். நியோகவேதியர் என எங்கள் குடிமரபை சொல்வதுண்டு” என்று சகதேவன் சொன்னான்.
அவர்களை ஒருமுறை நோக்கியபின் விழிவிலக்கி “மாற்றுருக்கொண்டு நுழையாமலிருப்பதே நன்று. ஏனென்றால் மாற்றுருக்கொண்டு நிஷதத்திற்குள் நுழையும் ஷத்ரிய ஒற்றரை அவர்கள் பன்னிரு தலைமுறைகளாக கண்டுபிடித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களின் படையினர் அனைவருக்குமே மாற்றுரு கண்டடையும் நுண்திறன் உண்டு” என்றான் பிங்கலன். “நிஷதத்தின் படைத்தலைவன் அரசியின் தம்பியாகிய கீசகன். தோள்வல்லமையில் பீமனுக்கு நிகரானவன் அவன் என்கிறார்கள். கடுந்தொழில் மறவன். தன்னைப்போலவே தன் படையினரையும் பயிற்றுவித்திருக்கிறான். அஞ்சுவதஞ்சுவர் அவனை ஒழிவது நன்று” என்றாள் சுரை. “ஆம், அறிந்துள்ளோம்” என்று தருமன் சொன்னார்.
“பசிகொண்டிருக்கிறீர்கள் என்றால் எங்களிடமுள்ள அன்னத்தில் சிறிது உண்ணலாம். அந்தணர் என்பதனால் எங்கள் கை அட்ட உணவை ஏற்பீர்களோ என ஐயுறுகிறோம்” என்றான் பிங்கலன். “போர்த்தொழில் அந்தணர் ஊனுணவும் உண்பதுண்டு” என்றார் தருமன். “நன்று, இதை நல்வாழ்த்தென்றே கொள்வேன்” என்றபின் பிங்கலன் விரியிலைகளை பறித்துவந்தான். சுரை மூங்கில் கூடையில் இருந்த மரக்குடைவுக்கலத்தில் இருந்து அன்ன உருளைகளை எடுத்து அவற்றில் வைத்து அவர்களுக்கு அளித்தாள். வறுத்த தினையை உலர்த்திய ஊனுடன் உப்புசேர்த்து இடித்து உருட்டிய உலரன்னம் சுவையாக இருந்தது. “நீர் அருந்தினால் வயிற்றில் வளர்வது இவ்வுணவு” என்றான் பிங்கலன். “அத்துடன் உண்டபின் கைகழுவ நீரை வீணடிக்கவேண்டியதில்லை என்னும் நல்வாய்ப்பும் உண்டு.”
சாப்பிட்டபின் தருமன் “கதை என எதையேனும் சொல்லக்கூடுமோ, சூதரே?” என்றான். “பாடவேண்டாம். செல்லும் வழியில் சொல்லிவந்தால் போதும்.” பிங்கலன் முகம் மலர்ந்து “கதை பாடாமல் தொண்டை சிக்கியிருக்கிறது. வழிநடைவிலங்குகளிடம் சொல்லத்தொடங்கலாமா என்று எண்ணிக்கொண்டிருந்தேன். எந்தக் கதை?” என்றான். “விதர்ப்பினியாகிய தமயந்தியின் கதை” என்றார் தருமன். “ஆம், விதர்ப்பத்திற்குள் நுழைகையில் சொல்லவேண்டியதுதான்… நன்று” என்றபின் திரும்பி தோளிலிட்டிருந்த குறுமுழவை எடுத்து அதன் தோல்வட்டத்தில் கையோட்டி மெல்ல தட்டிவிட்டு “சாரஸ்வத நாட்டின் பேரரசன் வேனனின் கதையை பாடுக நாவே!” என்றார்.
நால்வகை நிலமும் மூவகை அறங்களால் பேணப்பட்ட அந்நாட்டை அவன் தன் தந்தையிடமிருந்து பெற்றான். சரஸ்வதி நதிக்கரையில் நாணல்புதர் ஒன்றுக்குள் ஊணும் துயிலும் ஒழித்து அருந்தவம் செய்து பிரம்மனை தன் முன் அழைத்தான் வேனன். அவன் முன் தோன்றிய படைப்பிறைவன் “உன் தவம் முதிர்ந்தது. அரசனே, விழைவதென்ன சொல்” என்று வேண்டினான். “தொட்டவை பொன்னென்றாகும் பெற்றி, சுட்டியவற்றை ஈட்டும் ஆற்றல், எண்ணியவை எய்தும் வாழ்வு இம்மூன்றும் வேண்டும் இறைவா” என்றான் வேனன்.
பிரம்மன் நகைத்து “அரசே, தெய்வங்களாயினும் அவ்வண்ணம் எதையும் அருளவியலாது. இப்பெருவெளியில் ஒவ்வொன்றும் பிறிதொன்றால் நிகர்செய்யப்பட்டுள்ளது என்று அறிக! உனக்களிப்பதை அவர்கள் பிறிதெங்கோ வைக்கவேண்டும்” என்றான். “அதை நான் அறியவேண்டியதில்லை. நான் விழைவது இந்நற்சொல். அதை அருள்க தெய்வங்கள்” என்றான் வேனன். “உன் முற்பிறவியில் ஈட்டியிருக்கவேண்டும். அல்லது வருபிறவியில் நிகர்வைக்கவேண்டும். வெட்டவெளியில் விளையும் கனியொன்றில்லை, உணர்க!” என்றான் பிரம்மன். “நான் பிறிதொன்றும் வேண்டவில்லை. என் தவம் வீண் என்று சொல்லி செல்க!” என்றான் வேனன். “செய்யப்பட்டுவிட்ட தவம் உருக்கொண்ட பொருளுக்கிணையானது. எதன்பொருட்டும் அது இல்லை என்றாவதில்லை” என்றான் பிரம்மன்.
“நான் விழைவன பிறிதெவையும் அல்ல” என்று சொல்லி வேனன் விழிமூடி அமர்ந்தான். “நீ விழைவன அனைத்தையும் அளிப்பவன் ஒரு தெய்வம் மட்டுமே. அவன் பெயர் கலி. காகக்கொடி கொண்டவன். கழுதை ஊர்பவன். கரியன். எண்ணியதை எல்லாம் அளிக்கும் திறன் கொண்டவன். அவனை எற்கிறாயா?” என்றான் பிரம்மன். “ஆம், ஏற்கிறேன்” என்றான் வேனன். “அவ்வண்ணம் ஒரு தெய்வமிருக்கிறது என்றால் இதுவரை முனிவரும் அரசரும் அவனை எண்ணி ஏன் தவமிருக்கவில்லை? அவன் அருளால் ஏன் மானுடர் மண்ணுலகை முழுதும் வெல்லவில்லை? அதை எண்ணி நோக்கமாட்டாயா?” என்றான் பிரம்மன்.
“அவர்கள் என்னைப்போல் கடுந்தவம் செய்திருக்க மாட்டார்கள். எனக்கிணையான பெருவிழைவு கொண்டிருக்க மாட்டார்கள். அத்தெய்வத்தின் அருளால் உலகாளப்போகும் முதல் மானுடன் நான் என்பதே ஊழ்” என்றான் வேனன். புன்னகைத்து “நன்று, அவ்வண்ணமே ஆகுக!” என்று சொல்லி பிரம்மன் உருமறைந்தான்.
பிரம்மனின் இடக்கால் கட்டைவிரல் பெருகி எழுந்து கரிய உருக்கொண்ட தெய்வமென வேனனின் முன் நின்றது. அக்கொடிய உருக்கண்டு அஞ்சி அவன் கைகூப்பினான். “என்னை விழைந்தவர் எவருமிலர். உன் ஒப்புதலால் மகிழ்ந்தேன். உன் விருப்பங்கள் என்ன?” என்றான் கலி. பன்னிருகைகளிலும் படைக்கலங்களுடன் எரியென சிவந்த விழிகளுடன் நிழலில்லா பேருருக்கொண்டு எழுந்து நின்றிருந்த கலியனின் முன் தலைவணங்கிய வேனன் தன் விழைவுகளை சொன்னான். “அளித்தேன்” என்றான் கலி.
“ஆனால் என் நெறி ஒன்றுண்டு. நீ கொள்வனவெல்லாம் உன்னுடையவை அல்ல என்று உன் உள்ளம் எண்ணவேண்டும். நீ கொடுப்பவை எல்லாம் என்னுடையவை என்ற எண்ணம் இருக்கவேண்டும். கொடுத்தகையை நீரூற்றி மும்முறை முழுதுறக் கழுவி கொடையிலிருந்து நீ விலகிக்கொள்ளவேண்டும். ஒருமுறை ஒருகணம் உன் எண்ணம் பிழைக்குமென்றால் உன்னை நான் பற்றிக்கொள்வேன். நான் அளித்தவற்றை எல்லாம் ஐந்துமடங்கென திரும்பப்பெறுவேன். அழியா இருள்கொண்ட ஆழுலகுக்கு உன்னை என்னுடன் அழைத்துச்செல்வேன். ஆயிரம் யுகங்கள் அங்கு நீ என் அடிமையென இருந்தாகவேண்டும்.” வேனன் “அவ்வாறே இறையே. இது என் ஆணை!” என்றான்.
அரண்மனை மீண்ட வேனன் அரியணை அமர்ந்து செங்கோல் தாழாது ஆண்டான். எதிரிகளனைவரையும் கொடுங்காற்று சருகுகளை என வென்று ஒதுக்கினான். மண்ணில் புதைந்துள்ள பொன்னெல்லாம் அவன் கருவூலத்திற்கு வந்தன. மானுடர் எண்ணும் நலன்கள் எல்லாம் அவன் கைநீட்ட அருகமைந்தன. நல்லாட்சியால் பெரும்புகழ் கொண்டான். புகழ் சொல்லில் பற்றி எரிந்தேறும் நெருப்பு. நாள்தோறும் அவன் புகழ் அவனை வந்தடைந்துகொண்டிருந்தது. அவன் கொடைத்திறனும் வில்திறனும் நகர்ப்பெருமையும் குடிப்பெருமையும் அவன் செவிகளில் அறுபடாது ஒலித்து அவையே அவன் எண்ணப்பெருக்கென்றாயின. பிறிதொன்றை எண்ணாது அதிலமர்ந்தான்.
அந்த ஆணவத்தால் அவன் அறிவிழந்தான். வெல்பவன் வெற்றிக்கு நிகராக தெய்வங்களின் மறுதட்டில் வைப்பது அடக்கத்தை. முனிவர்களே, வெற்றியின் நிழல் ஆணவம். வெற்றி நாள் என சுருங்கும், ஆணவம் கணமெனப் பெருகும். கொள்பவை எல்லாம் தன் திறனாலேயே என்று வேனன் எண்ணலாலான். கொடுப்பவை தன் கருணையால் என்று மயங்கினான்.
அவன் அரண்மனைக்கு வெளியே வாயிலின் இடப்பக்கம் கலியின் சிலை நிறுவப்பட்டிருந்தது. அக்கற்சிலையில் கண்கள் மூடியிருக்கும்படி செதுக்கப்பட்டிருந்தன. நாள்தோறும் அச்சிலைக்கு நீராட்டும் மலராட்டும் சுடராட்டும் காட்டி படையலிட்டு வணங்குவது அரசனின் வழக்கம். அன்றொருநாள் வறியவன் ஒருவனுக்கு பொற்கொடை அளித்தபின் கைகழுவுகையில் அவன் விரல்முனை நனையவில்லை. நாள்தொறும் அவ்வாறு கைநனைத்துக் கொண்டிருந்தமையால் அவன் அதை பொருட்படுத்தவில்லை.
கற்சிலையின் பூசகர் மலர்மாலையுடன் திரும்பி நோக்கியபோது சிலையின் விழிகள் திறந்திருப்பதைக் கண்டு அஞ்சி அலறினார். நீரூற்றிய ஏவலன் அப்பால் செல்ல திரும்பி நோக்கிய அமைச்சர் கருநிழலொன்று அரசனின் கைவிரல் நுனியைத் தொட்டு படர்ந்தேறுவதைக் கண்டார். “அரசே!” என அவர் அஞ்சி அழைத்தபோது “என்ன?” எனத் திரும்பிய அரசனின் விழிகள் மாறியிருந்தன. அவன் உடலசைவும் சிரிப்பும் பிறிதொருவர் என காட்டின. அப்போது நகருக்குள் பசுக்கள் அஞ்சி அலறல் குரலெழுப்பின. காகக்கூட்டங்கள் முகில்களைப்போல வந்து நகரை மூடி இருளாக்கின. நரித்திரள்கள் நகருக்கு வெளியே ஊளையிட்டன. வானில் ஓர் எரிவிண்மீன் கீறிச்சென்றதைக் கண்டனர் குடிகள்.
கொடிய தொற்றுநோய் என குடியிருப்பதை உண்பதே கலியின் வழி. வேனன் ஆணவமும் கொடும்போக்கும் கொண்டவன் ஆனான். அந்தணரை தண்டித்தான், குடிகளை கொள்ளையிட்டான். எதிரிகளை சிறுமை செய்தான். மூதாதையரை மறந்தான். தெய்வங்களை புறக்கணித்தான். நாள்தோறும் அவன் தீமை பெருகியது. நச்சுவிழுந்த காடென்று கருகியழிந்தது சாரஸ்வதம். அங்கு வாழ்ந்த மலைத்தெய்வங்களும் கானுறைத்தெய்வங்களும் அகன்றபோது நீரோடைகள் வறண்டன. தவளைகள் மறைந்தபோது மழைமுகில்கள் செவிடாகி கடந்து சென்றன. வான்நீர் பெய்யாத நிலத்தில் அனல் எழுந்து சூழ்ந்தது.
அந்தணரும் முனிவரும் சென்று அவனுக்கு அறிவுரை சொன்னார்கள். நற்சொல் உரைத்த முனிவரை கழுவிலேற்றி அரண்மனைக்கு முன் அமரச்செய்தான். அந்தணரை பூட்டிவைத்து உணவின்றி சாகவைத்தான். சினம் கொண்டு எழுந்த மக்கள் அந்தணரை அணுகி அறம் கோரினர். அவர்களை ஆற்றுப்படுத்தியபின் அந்தணர் ஆவதென்ன என்று தங்கள் குலத்து முதியவரான சாந்தரிடம் வினவினர். நூற்றிருபது அகவை எய்தி நெற்று போல உலர்ந்து இல்லத்தின் திண்ணையில் அமர்ந்திருந்த சாந்தர் சீவிடுபோல ஒலித்த சிறுகுரலில் “அரசன் கோல் இவ்வாழியின் அச்சு. சினம்கொண்டு அச்சை முறித்தால் சுழல்விசையாலேயே சிதறிப்போகும் அனைத்தும். தீய அரசன் அமைந்தது நம் தீவினையால் என்றே கொள்வோம். தெய்வம் முனிந்தால் பணிந்து மன்றாடுவதன்றி வேறேது வழி?” என்றார்.
குழம்பி ஒருவரை ஒருவர் நோக்கிய அந்தணரிடம் “கொடியோன் என்றாலும் அவன் நம் குடி அரசன். அவனை அழித்தால் பிறகுடியரசனை நாம் தலைமேல் சூடுவோம். மான்கணம் சிம்மத்தை அரசனாக்குவதற்கு நிகர் அது” என்றார் சாந்தர். “ஆம் மூத்தவரே, ஆணை” என்றனர் இளையோர். அச்சொல்லை அவர்கள் குடிகளிடம் கொண்டுசென்றனர். ஒவ்வொரு நாளும் ஒரு குடிக்குழு சென்று வேனனிடம் முறையிடுவதென்று முடிவெடுத்தனர். அவன் காலை துயிலெழுகையில் அரசமுற்றத்தில் நின்று தங்கள் துயர்சொல்லி கூச்சலிட்டனர். அவர்களை குதிரைகளை அனுப்பி மிதிக்கவைத்தான். கொதிக்கும் எண்ணையை அவர்கள்மேல் ஊற்றினான். சிறையிலிட்டான். சாட்டையால் அடித்தான். கொன்று தொங்கவிட்டான்.
விழிநீர் சொட்டச்சொட்ட வேனனால் ஆளப்பட்ட புவி வெம்மை கொண்டது. அனைத்து மரங்களையும் அது உள்ளிழுத்துக்கொண்டது. திருப்பப்பட்ட மான்தோல் என நிறம் வெளுத்து வெறுமையாயிற்று. புவிமகள் பாதாளத்தில் சென்று ஒளிந்துவிட்டாள் என்றனர் நிமித்திகர். அறம் மீள்வதறிந்தே அவள் இனி எழுவாள் என்றார்கள். புவியன்னை ஒரு கரியபசுவென்றாகி இருளில் உலவுவதை விழியொளியால் கண்டனர் கவிஞர்.
ஒருநாள் பட்டினியால் உடல்மெலிந்த அன்னை ஒருத்தி பாலின்றி இறந்த பைங்குழவி ஒன்றை எடுத்துக்கொண்டு அவன் அரண்மனை முற்றத்தில் வந்து நின்றாள். “கொடியவனே, கீழ்மகனே, வெளியே வா! குழவி மண்ணுக்கு வருவது அன்னையை நம்பி. அன்னை வாழ்வது குடியை நம்பி. குடி கோலை நம்பி. குழவிக்கு உணவுதேடி உண்ணும் கையையும் காலையும் அருளாத தெய்வங்கள் மானுடம் மீது இட்ட ஆணை என்ன என்று அறிவாயா? பசித்து ஒரு குழந்தை இறக்கும் என்றால் அக்குடியின் இறுதி அறமும் முன்னரே வெளியேறிவிட்டதென்று பொருள். அக்குடி மண்மீது வாழும் தகுதியை இழந்துவிட்டது. அக்குடியில் பிறந்த நானும் இனி உயிர்வாழலாகாது. எரிக அனல்…” என்று கூவி தன் கையிலிருந்த கத்தியால் ஒருமுலையை அறுத்து அரண்மனை முன் வீசினாள். குருதி பெருக்கியபடி அங்கே விழுந்து இறந்தாள்.
அது நிகழ்ந்த அக்கணம் திண்ணையில் சாந்தர் முனகுவதை கேட்டார்கள் அந்தணர். ஓடி அவர் அருகே சென்று என்ன என்று வினவினர். “எழுக குடி. ஆணும் பெண்ணும் படைக்கலம் கொள்க! குருதியாடாத எவரையும் இனி குடியெனக் கொள்ளாதொழிக! நகரை நிறையுங்கள். பெருகிச்சென்று அரண்மனை புகுந்து அரசனையும் அவனை ஏற்பவர்களையும் கொன்றுகுவியுங்கள். அவர்களின் குருதியால் நகர்க்காவல் தெய்வங்களை மும்முறை கழுவுங்கள். வேனனைக் கொன்று அவன் வலக்கால்தொடைத்தசையை எடுத்து அதை மட்டும் அரசனுக்குரிய முறையில் எரியூட்டுங்கள். எஞ்சிய உடலை துண்டுகளாக ஆக்கி காட்டுக்குள் கூவியலையும் காகங்களுக்கும் நரிகளுக்கும் உணவாக்குங்கள். அரசனின் முதல்மைந்தனை அரசனாக்குங்கள். அவன் தன் தந்தைக்கு எரியூட்டட்டும். அவனே சென்று பாதாளத்தில் அலையும் புவிமகளை மீட்டு வரட்டும்” என்றார். மூச்சிரைக்க மெல்ல தளர்ந்து கைதூக்கி வாழ்த்தி “ஆம், அவ்வாறே ஆகுக!” என்றார்.
அச்சொல் அரைநாழிகைக்குள் நகருக்குள் பரவியது. கடலலை போன்று ஓசைகேட்டபோது வேனன் திகைத்து சாளரம் வழியாக வெளியே நோக்கினான். நகரம் எரிபுகையால் நிறைந்திருப்பதைக் கண்டு வெளியே ஓடி தன் மெய்க்காவலரிடம் எழுபவர்களை கொன்றழிக்க ஆணையிட்டான். அந்தப்போர் ஏழுநாழிகை நேரம் நிகழ்ந்தது. கணந்தோறும் பெருகிய குடிபடைகளுக்கு முன் அரசப்படைகள் அழிந்தன. அவர்களின் குருதியை அள்ளி அரண்மனையெங்கும் வீசி கழுவினர். வேனன் தன் வாளுடன் ஆட்சியறை விட்டு வெளியே ஓடிவர அவன் குடிகளில் இளையோர் எழுவர் அவனைச் சூழ்ந்து வெட்டி வீழ்த்தினர். அவன் தொடைத்தசையை வெட்டியபின் துண்டுகளாக்கி காட்டில் வீசினர். அவன் உடலை உண்ட நரிகள் ஊளையிட்டபடி காட்டின் ஆழத்திற்குள் ஓடி மறைந்தன. காகங்கள் வானில் சுழன்று கூச்சலிட்டபின் மறைந்தன.
வேனனின் மைந்தன் பிருதுவை அந்தணர் அரசனாக்கினார்கள். தந்தையின் தொடையை எரியூட்டியபின் அவன் வாளுடன் சென்று புவியன்னையை மீட்டுவந்தான். அறம்திகழ தெய்வங்கள் மீள வேள்வி பெருகியது. வறுநிலத்தில் பசுமை எழுந்து செறிந்தது. ஒழியா அன்னக்கலம் என அன்னையின் அகிடு சுரந்தது. பிருதுவின் மகளென வந்து வேள்விச்சாலையில் புகுந்து அவன் வலத்தொடைமேல் அமர்ந்தாள் புவி. ஆகவே கவிஞரால் அவள் பிருத்வி என அழைக்கப்பட்டாள். அவள் வாழ்க!
பிங்கலன் சொன்னான் “முனிவரே, மாணவரே, இனியவிழிகள்கொண்ட தேவியே, கேளுங்கள். வேனனின் உடலில் இருந்து கலி அந்த நரிகளின் நெஞ்சிலும் காகங்களின் வயிற்றிலும் பரவியது. அவை அலறியபடி காடுகளுக்குள் சென்றன. காட்டுப்புதர்களுக்குள் பதுங்கியிருந்த நரிகள் புல்கொய்யவும் கிழங்கும் கனியும் தேரவும் வந்த கான்குடிப் பெண்களை விழிதொட்டு உளம் மயக்கி வென்று புணர்ந்தன. அவர்களின் கருக்களில் இருந்து நரிகளைப்போல் வெள்விழி கொண்ட, நரிகளின் பெரும்பசி கொண்ட மைந்தர்கள் பிறந்தனர். அவர்கள் மிலேச்சர்கள் என்றழைக்கப்பட்டனர்.”
“வேனனின் ஊன் உண்ட காகங்கள் பறந்து காடுகளுக்குள் புகுந்தன. அங்கே தொல்குடிகள் தங்கள் நுண்சொல் ஓதி தெய்வங்களைத் தொழுகையில் அருகே கிளைகளில் அமர்ந்திருந்து தங்கள் குரலை ஓயாமல் எழுப்பின. கனவுகளில் அந்நுண்சொற்களில் காகங்களின் ஒலியும் இணைந்தன. அவர்களின் தெய்வங்களுடன் காகங்களும் சென்றமைந்தன. காகங்களை வழிபடுபவர்கள் நிஷாதர் என்றழைக்கப்பட்டனர். நிஷாதர்களின் தெய்வநிரையில் முதல்தெய்வம் கலியே. ஆகவே அவர்கள் கலியர் என்றழைக்கப்பட்டனர். நிஷாதகுலத்தின் தென்னகக்கிளையே நிஷத நாடென்கின்றனர் நூலோர்.”
“இது விதர்ப்பத்தினர் விரும்பும் கதை அல்லவா?” என்று சகதேவன் கேட்டான். “ஆம், இதையே இங்கே பாடுகிறோம்” என்றான் பிங்கலன். தருமன் சிரித்து “மறுபக்க கதையை சொல்க! நிஷதரின் சொற்களால்” என்றார். “மறுபக்கத்தை கேட்கப்புகுந்தால் அனைத்துக்கதைகளும் அசைவிழந்துவிடும், முனிவரே” என்றான் பிங்கலன். உடலெங்கும் நீர்வழிய தோல்பையைச் சுமந்தபடி பீமன் அப்பால் வருவதைக் கண்டு “ஆ, அவர் மிலேச்சர்” என்றான். “அவன் என் மாணவன். பால்ஹிக நாட்டவன்” என்றார் தருமன். “அவர்கள் பெருந்தோளர்கள், அறிந்திருப்பீர்.” பிங்கலன் “இத்தகைய பேருடல் கீசகருக்கு மட்டுமே உரியதென்று எண்ணியிருந்தோம்” என்றான். அவன் மைந்தர்களும் பீமனையை கூர்ந்து நோக்கினர்.
“நெடுநேரமாயிற்று, செல்வோம்” என்றார் தருமன். “சூதர் நிஷதநாட்டின் கதையை சொல்லிக்கொண்டிருந்தார்.” பீமன் “நன்று” என்றான். “சொல்லிக்கொண்டே செல்லலாம். கதை இருக்கும்வரை வழித்துணைக்கு தெயங்கள் தேவையில்லை என்பார்கள்” என்றார் தருமன்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-4
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-3
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-2
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–45
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–12
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–9
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–8
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–7
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–6
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–5
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 60
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 55
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 54
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 52
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 23
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 17
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 16
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 12
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 3
May 27, 2017
மழையைத்துரத்துதல்
ஓவியம்: ஷண்முகவேல்
கொலாலம்பூரில் நண்பர் நவீன் வல்லினம் அமைப்பின் சார்பில் நிகழ்த்தும் சிறுகதை, குறுநாவல் பட்டறைக்காக மலேசியா வந்திருக்கிறேன். அருண்மொழி வருவதாக இருந்தது. அவள் கண்களில் சிறிய அலர்ஜி ஏற்பட்டமையால் தவிர்த்துவிட்டாள். நானே தனியாகச் செல்வதன் அலைக்கழிப்புக்களுடன் 26 அன்று காலை திருச்சியில் இருந்து கிளம்பி வந்து சேர்ந்தேன்.
திருச்சி வரை பேருந்தில் வந்தேன். அருண்மொழி வந்தால் காரில் வரலாம் என்றிருந்தேன். அவள் வராதபோது எதற்குச் செலவு என அரசுப்பேருந்து. மையத்தமிழகத்தின் வெயில் எத்தனை கொடூரமானது என அறிந்தேன். முதல்முறையாக பஸ்ஸின் ஜன்னல்களை காற்றுக்கு அஞ்சி மூடிவைத்தேன். நேரடியாக அனல்வாய் முன் அமர்வதுபோலிருந்தது. திருச்சி ஓட்டலில் தங்கி மறுநாள் காலை 930க்கு கொலாலம்பூர் விமானம்.
திருச்சி விமானநிலையத்தைப்போல மோசமாகப் பராமரிக்கப்படும் விமானநிலையம் பிறிதொன்று உலகில் எங்கேனும் சாத்தியமா என்றே சந்தேகம்தான். கழிப்பறைகள் கழுவப்பட்டு பல நாட்களாகிவிட்டிருந்தன. பலவற்றில் நீர் இல்லை. தரையும் கோப்பைகளும் உடைந்து நாற்றம் கொப்பளித்தது. ஒரு சர்வதேசவிமானநிலையத்தின் கழிப்பறைகள் கழுவப்படுவதில்லை என்பதை சொன்னால்கூட உலகம் நம்பாது. ஏடிஎம்களில் பணம் இல்லை. எந்த ஒழுங்கும் இல்லாமல் மக்கள் கூச்சலிட்டு முண்டியடித்து ரகளைசெய்துகொண்டிருந்தார்கள்.
நான் மலையாளத்தில் ஆண்டுக்கு ஒரு கதை அல்லது கட்டுரைதான் எழுதுவது. அது பாஷாபோஷிணி மாத இதழின் ஆண்டுமலரில் மட்டும். நூறுநாற்காலிகளுக்குப்பின் மூன்று வருடங்களாக எழுதவில்லை. ஆகவே கேட்டுக்கொண்டே இருந்தார்கள். யானை டாக்டரை மலையாளத்தில் எழுதிவிடலாம் என நினைத்து ஆரம்பித்தேன். மலையாளம் டைப் செய்ய வராது. பத்து பக்கத்துக்குமேல் கையால் தொடர்ச்சியாக எழுதவும் முடியவில்லை. மொழியாக்கம் முடிய 5 நாட்கள் ஆகியது. நடுவே அருண்மொழியின் உடல்நலப்பிரச்சினை.
24 ஆம் தேதி வெண்முரசு வலையேற்றுவதாக அறிவித்திருந்தேன். 25 மாலைதான் யானைடாக்டர் முடிந்து தபாலில் அனுப்பினேன். அதன்பின் இரவில் அமர்ந்து முதல் அத்தியாயத்தை எழுதி வலையேற்றினேன். ஓர் ஐந்துநாள் அவகாசம் கோரலாமா என்று தோன்றாமலில்லை. ஆனால் நான் அவகாசம் கோருவது காலத்துடன். அணுகிவரும் இறப்புடன். அது கொஞ்சம் குரூரமான யஜமானன். வேண்டாம் ,பார்ப்போம் என முடிவுசெய்தேன். இதுவரை அறிவித்தவை தவறவில்லை, ஆகவே இனியும் தவற வாய்ப்பில்லை என ஒரு தெனாவெட்டுதான்.
25 காலை இரண்டாம் அத்தியாயத்தை எழுதிவிட்டு கிளம்பினேன்.திருச்சி ஓட்டலில் அடுத்த அத்தியாயத்தை எழுதி விமானநிலையத்தில் காத்திருக்கையில் முடித்தேன். விமானம் கிளம்பவிருக்கிறது என பணிப்பெண் சொல்லிக்கொண்டே இருக்கையில் எழுதிக்கொண்டிருந்தேன். கடைசி வரிகள். தருமனிடம் பாஞ்சாலி சொல்லும் வரிகள். “சார் பிளீஸ்” என்றாள் பணிப்பெண். முடிந்துவிட்டது என்றபின் ஓடி உள்ளே சென்றேன். “என்ன சார் எழுதினீங்க?” என்றாள். புன்னகைசெய்தேன்.
பொதுவாக அவசரத்தில் பதற்றத்தில் எழுதும்போதெல்லாம் வியப்பூட்டுமளவுக்குத் துல்லியமாக அமைந்துவிடுகின்றது. அதற்குக் காரணம் அவசரம் நம் உள்ளத்தைக் கூர்மையாக்குகிறது என்பதுதான். போர்க்களத்தில் கொள்ளும் குவியம் அது. சாவகாசமாக வீட்டிலிருக்கையில்தான் ஆயிரம் திசைதிருப்பல்கள். சமவெளியில் நதி விரிகிறது. மலைச்சரிவில் அது பெருகிப்பொழியும் கூர்மை.
விமானத்தில் அடுத்த அத்தியாயம். அன்றிரவே அதை முடித்தேன். பருவமழையைத் துரத்துவது கேரளத்தின் முக்கியமான சுற்றுலாப்பொழுதுபோக்கு. இதுவும் அப்படித்தான்.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
மலம் ஒரு கடிதம்
மலம்
மலம்- கடிதம்
மலம் -கடிதங்கள்
அன்புள்ள ஜெ.,
ஆசாரமும் சுத்தமும் இணைக்கப்படும்போது ஆசாரம் காக்காதோர் அசுத்தமானவர்கள் என்ற எண்ணம் சாதாரணமாக வந்துவிடுகிறது. இது மிக ஆபத்தான போக்கு, இதை சுட்டிக்காட்டியிருந்தீர்கள். இதன் உளவியலை ஆராய்வது முக்கியமென்று படுகிறது.
சுத்த-சுகாதாரத்தையும் ஆசாரத்தையும் முடித்து போடுவது சிறுவயதிலேயே தொடங்கி விடுகிறது என்பது தான் உண்மை. தீவிர ஆசாரவாத குடும்பங்களில் சிறு பிள்ளைகளுக்கு அசைவ உணவு உண்ணத்தகாதது, உண்ணக்கூடாதது என்று புகுத்தப்படுகிறது. அசைவம் உண்பது அசுத்தம் என்று சொல்லித்தரப்படுகிறது. காலப்போக்கில், இயற்கையாகவே நமக்கு அசூயை உள்ள பொருட்கள் – பீ, மலம், புழுக்கள், அழுகல், பூஞ்சை – போன்றவை போல இதுவும் ஒவ்வாமை உணர்வை அளிக்கத் தொடங்குகிறது. அசைவ உணவகத்தை கடந்தாலோ, தொலைக்காட்சியில் கண்டாலோ, ‘உவாக்’ என்று வாந்தி ஒலிகள் செய்து முகம் சுளிக்கும் பெற்றோர்கள் இருக்கும் வரை இது தொடரும். இந்த புகுத்தலுக்கு இரண்டு காரணங்கள் இருக்கலாம். ஒன்று, அப்பெற்றோர்களுக்கு அந்த அருவருப்பு உள்ளது, அதையே பிள்ளைகளுக்குச் சொல்லித்தருகிறார்கள். இரண்டாவது, எங்கு பிள்ளைகள் அசைவ உணவை உண்ணத் தொடங்கிவிடுவார்களோ என்ற பயம்.
இந்த அடிப்படை உணர்வை என்னுள்ளேயே நான் கண்டுகொண்டிருக்கிறேன். வெளிநாட்டில் வசித்தாலும், சைவ உணவு அவ்வளவாக கிடைக்காத ஊர்களில் பயணம் செய்தாலும், நான் அசைவம் உண்பதில்லை. சூழியல் காரணங்களுக்காக அசைவம் தவிர்க்கும் நண்பர்கள் “நீ ஏன் அசைவம் உண்பதில்லை” என்று கேள்வி கேட்கும்போது, என்னால் இதுவரை கூற முடிந்த பதில், மரபடிப்படையில் நான் சைவம் உண்ணும் குடும்பத்தில் வளர்க்கப்பட்டேன், அசைவம் உண்ணத் தோன்றவில்லை என்பது மட்டுமே. ஆனால் அதுவும் முழு உண்மை அல்ல.
தினந்தோறும் அசைவம் உண்ணும் நபர்களுடன் ஒன்றாக சேர்ந்து சாப்பிடுகிறேன். அசைவம் சமைக்கும் வாசம் பழகிவிட்டது. ஆனால் ஒரு துண்டு ஊனை என்னால் வாயில் போட முடியாது என்று தான் நினைக்கிறேன். அந்த எண்ணமே குமட்டலாக இருக்கிறது. எவ்வளவு கற்பனைத்திறன் இருந்தாலும், எவ்வளவு நபர்களுடன் பழகினாலும், சின்ன அருவருப்பு இல்லாமல் அதை நினைத்துப் பார்க்க முடியவில்லை. அசைவம் உண்ணத்தகாத ஒன்று என்று என் மனதில் புகுந்துவிட்டது. அது உயிருடன் இருந்த ஒன்று என்பதால் மட்டும் அல்ல என்று நினைக்கிறேன். அது ஆசார சுத்தம் சார்ந்த எண்ணம். சுத்தத்துடன் பிணைக்கப்பட்டமையால் வலுவான, உடல் சார்ந்த எதிர்வினையாக மாறியிருக்கிறது. வாழ்க்கை முழுவதும் நான் அசைவம் உண்ணாமலேயே இருக்கலாம். ஆனால் அந்த உணர்வை ஒதுக்கலாகாது. அந்த உணர்வுடன் தான் என்னுடைய போராட்டம்.
இந்த உணர்வு தான் வெறுப்பின் அடிநாதம் என்று தோன்றுகிறது. இவ்வுணர்வு உள்ள சிறு பிள்ளைகள் கூட அசைவம் உண்ணும் தங்கள் நண்பர்களை அசுத்தமானவர்கள், கீழானவர்கள் என்று பேசி கேட்டிருக்கிறேன். ஊன் உண்பது மத, இன ஆச்சாரமாகவே இருக்கட்டும். ஆனால் சுத்தத்தோடு சமன்படுத்தி, உளவியல் ரீதியாக வெறுப்பு வளர்க்கும்போது அது வேறொரு பிசாசாக உருக்கொள்கிறது. மாட்டிறைச்சியோ பன்றி இறைச்சியோ உண்போரை கீழானவர்கள் என்று நம்பும் வெறுப்பின் அடிநாத உளவியலும் இது.
ஆசாரவாத கருத்துக்கள் ஒரு வித மேட்டிமைத்தனமாகவே இங்கு புழங்குகின்றன. தங்களை மேட்டுக்குடிகளாக காட்டிக்கொள்ள அதீத ஆச்சாரத்தில் ஈடுபடும் நபர்கள் நம்மை சுற்றி புழங்குவதை அறிவோம். நீங்கள் சுட்டிக்காட்டிய பத்தியின் குரலை அந்தச் சாராரின் குரலாகவே பார்க்கிறேன்.
சென்னையில் ஒரு பிரபல பொறியியற் கல்லூரியில் படித்த என் தோழி சமீபத்தில் சொன்னது என்னை கலங்க வைத்தது – இது கடந்த இரண்டு-மூன்று ஆண்டுகளின் நடைமுறை. அக்கல்லூரியில் படிக்கும் சென்னையைச் சேர்ந்த மாணவிகள் சிலர், தென் மாவட்டங்களில் இருந்து வரும் மாணவிகளை, ‘சூ-குட்டிக்கள்’ என்று தங்களுக்குள் அழைக்கும் வழக்கம் இருப்பதாக கூறுகிறாள். அப்படியென்றால் சூத்திர குட்டிகளாம். சிலர் அவர்கள் பயன்படுத்திய கழிப்பறைகளை உபயோகிக்கத் தயங்குவார்கள் என்கிறாள்.
இந்திய அரசியல் சாசனத்தாலேயே மண்டையில் போடவேண்டும் போல இருக்கிறது.
இவ்வாறு பெயர் சூட்டும் மாணவிகள் யாரென்றால், உயர்க்குடிகளை சேர்ந்த, வசதி படைத்த, கல்வி வாய்ப்புகள் கிடைத்த பெண்கள். எவ்வளவு உயர்குடி ஆங்கிலம் பேசினாலும் சாதிய வசைகள் மட்டும் தமிழில் உதிர்வது தான் விந்தை. எங்கிருந்து கற்றிருப்பார்கள்?
இவ்வகை மேட்டிமை மனநிலைகள் வெறுப்பையும் சோர்வையும் மட்டுமே உண்டாக்குகின்றன. இதை கண்ட பின் இவர்களின் படிப்போ திறமைகளோ கண்ணுக்குத் தெரிவதில்லை. அசிங்கமான மனிதர்களாகத் தெரிய ஆரம்பிக்கிறார்கள். வயதில் முதிர்ந்தவர்கள் என்றால் சரி தொலையுது கிழம் என்று விட்டுவிடலாம். என்வயதை ஒத்தவர்கள். கல்லூரி, பள்ளி மாணவர்கள். என்ன சொல்ல முடியும்? தஞ்சாவூர் ஜில்லாவில் இருநூறு ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த இவர்களின் முன்னோர்களுக்கும் இவர்களுக்கும் ஒரே வேறுபாடு, இவர்கள் தங்கள் காழ்ப்பை சாதுர்யமாக மறைத்து வாழ கற்றுக்கொண்டு விட்டார்கள், அவ்வளவுதான். சென்னையில் பிராமணர்கள் என்றால் அந்தந்த வட்டாரங்களில் அந்தந்த இடைநிலை சாதிகளுக்கும் இது பொருந்தும். பலர் தங்களது சமூக வழக்கங்களில் இல்லாத ஆசாரங்களை எல்லாம் பின்பற்ற தொடங்கியதையும் பார்க்கிறேன்.
இதெல்லாம் எல்லா இடங்களிலும் நடக்கவில்லையே, எல்லோரும் இப்படி நினைப்பதில்லையே, இப்போது எவ்வளவோ மாறிவிட்டது என்று சொல்லலாம். ஆனால் எண்ணத்தின் தளத்தில், உளவியல் ரீதியாக, இந்த வேறுபாடுகள் நமக்குள் இருப்பதாகவே எனக்குப்படுகிறது. இந்த போக்கை நம் மனதை கூறுபோட்டுத் தட்டிக்கேட்டே ஆக வேண்டும்.
உலகத்தின் எந்த மூலைக்குச் சென்றாலும் இந்த சுமையை கூட எடுத்துக்கொண்டு செல்கிறோம். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த எனக்குத் தெரிந்த பெண் ஒருத்தி, அமெரிக்க பாஸ்போர்ட் வைத்திருக்கும் அவளது பெற்றோரால், மாதவிடாய் நாட்களில் வீட்டில் ஒதுக்கிவைக்கப்படுகிறாள். வெளிநாடுகளில் இந்தியர்கள் கூடும் கூட்டங்கள் பல ஏதோ வகையில் சாதி, இன மேட்டிமையை முன்னிறுத்திப்பேசி தம்பட்டம் அடித்துக்கொள்ளும் கூட்டங்களாகவே இருக்கின்றன. அய்யோ பாவம் பிராமணர்கள் என்பார்கள். கறுப்பர்களை அசுத்தமானவர்கள் என்று தீவிரமாக நம்புவார்கள். அதை ‘சுகாதாரம் பேணுதல்’ என்று கூறுவது தங்களையே ஏமாற்றிக்கொள்ளும் செயல்.
நாமம், திருநீர் போன்ற தனிநபர் நெறிகளை பற்றி சொல்லியிருந்தீர்கள். எனக்கு அதில் ஐயம் உள்ளது. அவை குழும அடையாளங்களாக மாறுகின்றன என்று நினைக்கிறேன். அதே குழுமத்தைச் சேர்ந்தவர்களை கண்டடைய, ஒன்று கூட அது வழிவகுக்கிறது. “நல்ல _____ “-இன் – கோட்டை எந்த இனத்தின் பெயரை கொண்டும் நிரப்பிக்கொள்ளலாம் – அடையாளமாக பார்க்கப்படுகிறது. தமிழகத்தின் பலதரப்பட்ட சமூகங்களின் மரபார்ந்த குடும்ப வழக்கங்களில், சடங்குகளில் நிறைய ஈடுபாடு உள்ளது எனக்கு. ஆனால் ஊரிலிருந்தே, பெயரிலிருந்தே, பேச்சிலிருந்தே, பெண்களின் தாலியில், நகையிலிருந்தே சாதியை கண்டடையும் சமூகம் நம் சமூகம். இங்கு இது தேவைதானா என்ற ஐயம் உள்ளது.
தன்னுடைய தவத்தின் நினைவாக ஒன்றை தொடர்ந்து அணிந்து அதை பின்தொடர்வதன் மகத்துவம் புரிகிறது. ஆனால் பலரும் தங்கள் விழைவையோ மனதிடத்தையோ நினைவூட்ட இவ்வடையாளங்களை பயன்படுத்துவதில்லை என்பதும் உண்மை. அந்த அடையாளத்துக்காக, தன்னை ‘இப்படிப்பட்டவர்’ என்று காட்டிக்கொள்ள அப்படி அணிந்துகொள்பவர்களும் உண்டு. அதில் ஒரு அந்தஸ்து குறிப்பு பொதிந்துள்ளது. ஆகவே இது பொதுவில் தேவையா என்ற கேள்வி எழுகிறது.
அதே நேரத்தில் பிரான்சு போல ‘மதசார்பற்ற நாடு’ என்ற பெயரில் அடையாளங்கள் அற்று பொதுவில் புழங்கவேண்டிய நிர்பந்தத்தோடு நாம் வாழ்வதும் சரியாக இருக்கும் என்று தோன்றவில்லை.
வெளியில் உண்ணாமல் இருப்பது போன்ற நெறிகள் தனி நபர் நெறிகளாக இருக்கலாம். ஆனால் பல நேரங்களில் அதற்குப் பின்னாலும் ‘வெளி உணவு அசுத்தமானது’ என்ற எண்ணம் தான் உள்ளது. ஒரு வித “கலப்பு பயம்” இது என்று கொள்ளலாம். ‘என் இனத்தவர் சமைத்த உணவை மட்டுமே உண்பேன், அதனால் வெளியில் உண்ண மாட்டேன்’ என்று விதியிடும் நபர்களை அறிவேன். அதை நான் ஒருநாளும் அவர்களுடைய தனிப்பட்ட நெறி என்று ஏற்றுக்கொள்ளமாட்டேன்.
சுசித்ரா
***
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
தாமஸ் கிங் உரைகள்
ஆசிரியருக்கு,
வணக்கம். தாமஸ் கிங் பூர்விக அமெரிக்கர். மிக சிறந்த எழுத்தாளர். நண்பர் ஒருவரது பரிந்துரையின் பெயரில் அவரது உரைகளை கேட்டேன்.
அவரது உரைகள் உங்களை நியாயகப்படுத்துகின்றது
5 உரைகள். நேரம் இருக்கையில் கேட்டு பாருங்கள்.
அன்புடன்
நிர்மல்
***
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் -கடிதங்கள்
மதிப்பிற்குரிய ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு,
நலம் தானே. நீண்ட இடைவெளிக்குப் பிறகு ஒரு வாசகக் கடிதம். டெல்லிக்கு கல்லூரி சுற்றுலா சென்றுவந்தோம்.பயணத்தின் போது படிப்பதற்கு உங்கள் “நவீனத் தமிழிலக்கிய அறிமுகம்” எடுத்துச் சென்றேன்.தமிழ் இலக்கியம் குறித்து மிகவும் விரிவாக எழுதியிருந்தீர்கள். அதை படிக்க படிக்க ஒரு பெரும் மலைப்பு தான் வந்தது எப்படி இந்த மனிதர் இவ்வளவு படித்து தீர்த்து இருக்கிறார் என்று. இலக்கியம் குறித்து எனக்கு ஒரு தெளிவு எற்பட்டது உங்களால்.
இலக்கிய அடிப்படைகளில், இலக்கியம் மீது வைக்கும் எல்லா கேள்விகளுக்கும் விடை தந்தீர்கள்.
இலக்கிய வரலாறு பகுதி என்னை மலைக்க வைத்தது. தமிழ் இலக்கியம் எவ்வாறு வளர்ச்சி அடைந்து வந்துள்ளது என்பதை தெளிவுபடுத்தினீர்கள். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட எழுத்தாளர்கள், புத்தகங்கள் இவற்றில் பாதியைக்கூட கேள்வி பட்டது இல்லை என்னும் போது ஒரு வெட்க உணர்வு ஏற்படுகிறது.நீங்கள் எப்படி தான் இத்தனை எழுத்தாளர்களையும் அவர்களின் ஆக்கங்களையும் படித்தீர்கள் என்னும் போது உங்கள் திறனை கண்டு வியந்து நிற்கிறேன்.
நான் வானவன் மாதேவி,வல்லபி சகோதரிகள் மூலம் தான் தமிழ் இலக்கியத்தை உங்களின் எழுத்துகளில் கண்டு கொண்டேன், பின் ஒரு சில இலக்கிய படைப்பாளிகளை உங்கள் மூலம் அடையாளம் கண்டு கொண்டேன். இந்த புத்தகம் வழியாக தமிழ் இலக்கியத்தை பற்றிய ஒரு போது பார்வை கிடைக்கப் பெற்றேன்.இது நான் இன்னும் செல்ல வேண்டிய தூரத்தையும்,நான் என் நிலையில் உள்ளேன் என்பதையும் காட்டியது.தமிழ் இலக்கியத்தையும் தமிழ் இலக்கிய எழுத்தாளர்களையும் இந்த புத்தகம் எனக்கு அடையாளம் காட்டியது. பின் சில கலைச்சொற்கள் மிகவும் பயன் உள்ள ஒன்று.நான் இன்னும் படிக்க வேண்டியது மலைப்போல் இருக்கிறது என்பதை கடைசி பக்கங்களில் காட்டிவிட்டீர்கள்.
இந்த புத்தகம் எனக்கும் என் போன்ற ஆரம்ப நிலை வாசகர்களுக்கும் மிகவும் பயன் உள்ள ஒன்று.
நன்றி
இப்படிக்கு உங்கள் மாணவன்,
பா.சுகதேவ்,
மேட்டூர்
***
அன்புள்ள ஜெ,
நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் நூலை வாங்கி ஒருவருடம் ஆகிறது. ஒரு பைபிள் மாதிரி வைத்திருக்கிறேன். பல சந்தர்ப்பங்களில் அதை எடுத்துப்படிப்பது. அதைப்பார்த்து குறிப்புகள் எடுத்துக்கொண்டு நூலகம் சென்று தேடுவேன். அப்படித்தான் கரிச்சான்குஞ்சு எழுதிய பசித்தமானுடம் கிடைத்தது. பலநூல்கள் கிடைத்தன. நூல்களை வாசித்தபின்னர் அதிலே நீங்கள் சொல்லியிருப்பதுக்கும் என் கருத்துக்கும் இடையே சமானம் என்ன என்பதை பார்ப்பதுண்டு
அதேபோல பல சந்தர்ப்பங்களில் கலைச்சொற்களையும் கோட்பாடுகளையும் சுருக்கமாகப்புரிந்துகொள்ள அதைத்தான் வாசிப்பது. ஏதாவது சொல் புரியாமலிருந்தால் உடனே புரட்டி வாசிப்பேன். தெளிவு வந்துவிடும். இப்படி நாலைந்துமுறை வாசித்தபின் நமக்கே அதெல்லாம் நன்றாகத்தெரியும் என்னும் எண்ணம் வருகிறது. இது ஒரு பாடப்புத்தகம் மாதிரி இருக்கிறது. நன்றி
ஆர். மணிகண்டன்
***
அன்புள்ள ஜெ
நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் அற்புதமான நூல். ஆனால் 2000 த்திலேயே நின்றுவிடுகிறது. அடுத்த தலைமுறை வந்துவிட்டது. அதை இன்றையகாலகட்டம் வரைக் கொண்டுவந்து நவீனப்படுத்தலாமே?
முகுந்த்ராஜ்
***
அன்புள்ள முகுந்துராஜ்
எழுதவேண்டும். பலவேலைகள்
அதோடு அடுத்த தலைமுறை மேலும் எழுதி முகம் தெளிந்து வந்தபின் எழுதினால் விவாதங்கள் அதிகம் இருக்காது என்று ஓர் எண்ணம்
ஜெ
***
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-4
3. மெய்மைக்கொடி
“நிஷதமும் விதர்ப்பமும் ஒருவரை ஒருவர் வெறுத்தும் ஒருவரின்றி ஒருவர் அமையமுடியாத இரு நாடுகள்” என்றார் தமனர். “விந்தியமலையடுக்குகளால் அவை ஆரியவர்த்தத்திலிருந்து பிரிக்கப்பட்டுள்ளன. மகாநதியாலும் தண்டகப்பெருங்காடுகளாலும் தென்னகத்திலிருந்து அகற்றப்பட்டுள்ளன. நீண்ட பொது எல்லை. தவிர்க்கவே முடியாத வணிகப்புழக்கம். நிஷதத்தின் காடுகள் பாரதவர்ஷத்தின் எந்த நாட்டையும்விட பன்னிரு மடங்கு மிகையானவை. அவர்களோ காட்டாளரின் வழிவந்தவர்கள். வடக்கே சர்மாவதியின் கரைகளில் இருந்து தெற்கே சென்ற நிஷாதர்களின் முதற்குலம் அவர்கள் என சொல்லொன்று உண்டு. வணிகப்பொருட்களை அளித்து மலைப்பொருட்களை வாங்கிவரும் வணிகர்களால்தான் விதர்ப்பம் வாழ்கிறது.”
“விதர்ப்பம் ஷத்ரிய குருதிமரபு கொண்டது. யாதவர்களின் குருதிவழியான போஜர்களுக்கும் அவர்களுடன் ஓர் உறவுண்டு என்பார்கள். அவர்கள் கடக்க விரும்பும் அடையாளம் அது” என்று தமனர் தொடர்ந்தார். “விதர்ப்ப மன்னர் பீஷ்மகரின் மகள் ருக்மிணி இன்று இளைய யாதவரின் அரசி.” தருமன் “ஆம், தங்கையைக் கவர்ந்தவர் என்பதனால் இளைய யாதவர்மேல் பெருஞ்சினம் கொண்டிருக்கிறான் பட்டத்து இளவரசன் ருக்மி. அச்சினத்தாலேயே அவன் துரியோதனனுடன் இணைந்திருக்கிறான்” என்றார். “அவன் மகதத்தின் ஜராசந்தனுக்கும் சேதிநாட்டின் சிசுபாலனுக்கும் அணுக்கனாக இருந்தான்” என்றான் பீமன்.
“ஆம், அதையெல்லாம்விட பெரியது ஒன்றுண்டு. விதர்ப்பத்தின் குருதியில் உள்ள குறையைக் களைந்து தங்களை மேலும் தூய ஷத்ரியர்களாக ஆக்கிக்கொள்ள அவர்கள் எண்ணியிருந்தனர். இப்பகுதியில் நிஷத நாட்டவருடன் அவர்கள் தீர்க்கவேண்டிய கடன்களும் சில இருந்தன. ருக்மிணி பேரழகி என்றும், நூல்நவின்றவள் என்றும் பாரதவர்ஷம் அறிந்திருந்தது. முதன்மை ஷத்ரிய அரசர்கள் எவரேனும் அவளை மணம்கொள்வார்கள் என்றும் அதனூடாக விதர்ப்பம் தன் குறையை சூதர் நாவிலிருந்தும் அரசவை இளிவரல்களிலிருந்தும் அழிக்கலாம் என்றும் அவர்கள் கனவுகண்டனர். அது நிகழவில்லை. இளைய யாதவர் அவளை கவர்ந்து சென்றார். ஷத்ரியப் பெருமையில்லாத யாதவர். முன்னரே யாதவக்குருதி என இருந்த இழிவு மேலும் மிகுந்தது. ருக்மியின் சினம் இளைய யாதவருடன் அல்ல, அவனறியாத பலவற்றுடன். அவை முகமற்றவை. எட்டமுடியாதவை. முகம்கொண்டு கையெட்டும் தொலைவிலிருப்பவர் யாதவர். ஆகவே அனைத்துக் காழ்ப்பையும் அத்திசைநோக்கி திருப்பிக்கொண்டிருக்கிறான்” என்றார் தமனர்.
“விதர்ப்பம் அழகிய நாடு. பெருநீர் ஒழுகும் வரதாவால் அணைத்து முலையூட்டப்படுவது. வடக்கே முகில்சூடி எழுந்த மலைகளும் காடுசெறிந்த பெருநிலவிரிவுகளும் கொண்டது. அரசென்பதையே அறியாமல் தங்கள் சிற்றூர்களில் குலநெறியும் இறைமரபும் பேணி நிலைகொண்ட மக்கள் வாழ்வது. மலைத்தொல்குடிகளிலிருந்து திரண்டுவந்த குலங்கள் இவை. ஆரியவர்த்தம் கண்ட போர்களும் பூசல்களும் இங்கு நிகழ்ந்ததில்லை. இங்கு ஒவ்வொருவருக்கும் தேவைக்குமேல் நிலம் உள்ளது. எனவே காற்றுபோல் ஒளியைப்போல் நீரைப்போல் நிலத்தையும் இவர்கள் அளவிட்டதோ எல்லைவகுத்துக்கொண்டதோ இல்லை. இவர்களுக்கு தெய்வம் அள்ளிக்கொடுத்திருப்பதனால் இவர்களும் தெய்வங்களுக்கும் பிற மானுடருக்கும் அள்ளிக்கொடுத்தார்கள்” என்றார் தமனர்.
“அத்துடன் ஒரு பெரும் வேறுபாடும் இங்குள்ளது” என்றார் தமனர். “ஆரியவர்த்தம் படைகொண்டு நிலம்வென்ற அரசர்களால் வென்று எல்லையமைக்கப்பட்டது. அவர்களின் ஆணைப்படி குடியேறிய மக்களால் சீர் கொண்டது. இது ஆரியவர்த்தத்தின் அணையாத பூசல்களைக் கண்டு கசந்து விலகி தெற்கே செல்லத்துணிந்த முனிவர்களால் உருவாக்கப்பட்டது. வெல்வதற்கு நிகராக கொடுப்பதற்கும் பேணும் அனைத்தையும் கணப்பொழுதில் விட்டொழிவதற்கும் அவர்கள் மக்களை பயிற்றுவித்தார்கள்.”
“ஆனால் அத்தனை ஓடைகளும் நதியை நோக்கியே செல்கின்றன” என்று தமனர் தொடர்ந்தார். “குடித்தலைமை அரசென்றாகிறது. அரசுகள் பிற அரசை நோக்கி செல்கின்றன. வெல்லவும் இணையவும். பின்பு நிகழ்வது எப்போதும் ஒன்றே.”
தருமன் “ஆம், இப்போது விதர்ப்பம் நன்கு கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை எல்லை கடந்ததுமே உணர்ந்தேன். எல்லைகள் நன்கு வகுத்து அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. வணிகச்சாலைகள் காவல்படைகளால் முழுமையாக கண்காணிக்கப்படுகின்றன. பாலங்களும் சாவடிகளும் உரிய இடங்களிலெல்லாம் அமைந்துள்ளன. அனைத்து இடங்களிலும் விதர்ப்பத்தின் கொடி பறக்கிறது” என்றார்.
பீமன் “இங்கே விளைநிகுதி உண்டா?” என்றான். “விரிந்துப்பரந்த நாடுகள் எதிலும் விளைநிகுதி கொள்ளப்படுவதில்லை. அந்நிகுதியை கொள்ளவோ திரட்டவோ கொண்டுவந்துசேர்க்கவோ பெரிய அரசாளுகைவலை தேவை. சிறிய நாடுகளில் அவற்றை உருவாக்கிக்கொள்ளலாம். மகதம் போன்ற தொன்மையான நாடுகளில் அவை காலப்போக்கில் தானாகவே உருவாகி வந்திருக்கும். விதர்ப்பத்தின் பெரும்பகுதி நிலத்திற்கு சாலைகளோ நீர்வழிகளோ இல்லை. இங்கு பேசப்படும் மொழிகள் பன்னிரண்டுக்கும் மேல். தொல்குடிகள் எழுபத்தாறு. இதன் எல்லைகள் இயற்கையாக அமைந்தவை.”
“எனவே ஆட்சி என்பது அதன் குடிகளுக்கு பெரும்பாலும் தெரியாமலேயே நிகழ்ந்தது. வணிகப்பாதைகளிலும் அங்காடிகளிலும் சுங்கநிகுதி மட்டுமே கொள்ளப்பட்டது. அதுவே அரசுதிகழ்வதற்கு போதுமானதாக இருந்தது” என்றார் தமனர். “ஆனால் இன்று ருக்மி இந்நாட்டை ஒரு பெரிய கைவிடுபடைப்பொறி என ஆக்கிவிட்டிருக்கிறான். கௌண்டின்யபுரி இன்று இரண்டாம் தலைநகர். ஏழு பெருங்கோட்டைகளால் சூழப்பட்ட போஜகடம் என்னும் நகர் ருக்மியால் அமைக்கப்பட்டு தலைநகராக்கப்பட்டது. வரதாவின் கரையில் அமைந்திருப்பதனாலேயே பெருங்கோட்டைகளை கௌண்டின்யபுரியில் சேற்றுப்பரப்பில் அமைக்கமுடியாதென்று கலிங்கச் சிற்பிகள் சொன்னார்கள்.”
தமனர் தொடர்ந்தார் “இளைய யாதவரிடம் தோற்று மீசையை இழந்து சிறுமைகொண்டபின் பல ஆண்டுகாலம் அவன் எங்கிருக்கிறான் என்றே தெரியவில்லை. சிவநெறியனாக ஆகி தென்னகத்திற்குச் சென்றான் என்கின்றனர். இமயமலைகளில் தவம் செய்தான் என்றும் சொல்லப்படுகிறது. அவன் மீண்டபோது யோகி போலவே தெரிந்தான். முகத்தில் செந்தழல் என நீண்ட தாடி. கண்களில் ஒளிக்கூர். சொற்கள் நதியடிப்பரப்பின் குளிர்ந்த கற்கள். இளைய யாதவரின் குருதியில் கைநனைத்தபின் திரும்பி கௌண்டின்யபுரிக்குள் நுழைந்து அங்கு மூதன்னையர் முன் முடிகளைந்து பூசனைசெய்யவிருப்பதாக அவன் வஞ்சினம் உரைத்திருக்கிறான்.”
“இங்கிருந்த ஒவ்வொன்றையும் அவன் மாற்றியமைத்தான். என்ன செய்யவேண்டும் என நன்கறிந்திருந்தான். முதலில் ஆயிரக்கணக்காக சூதர்கள் கொண்டுவரப்பட்டனர். இன்றுள்ள விதர்ப்பம் என்னும் நாடு அவர்களின் சொற்களால் உருவாக்கப்பட்டது. அதன் எல்லைகள் வரையறை செய்யப்பட்டன. அதன் அழகும் தொன்மையும் தனிப்பெருமையும் வகுக்கப்பட்டன. ஒவ்வொரு நாளுமென தங்கள் நாடு வளர்ந்து விரிவதை மக்கள் கண்டனர். தாங்கள் கண்டறியாத நிலங்களெல்லாம் தங்களுக்குரியவையே என்னும் பெருமிதம் அவர்களை உளம்விம்மச்செய்தது.”
“கண்டறிந்த நிலமும் நீர்களும் மலைகளும் பயன்பாட்டால் மறைக்கப்பட்ட அழகுகொண்டவை. காணாத நிலமும் நீர்களும் மலைகளும் அழகும் பெருமையும் மட்டுமே கொண்டவை. எனவே தெய்வத்திருவுக்கள் அவை. அறிந்த மண்ணில் வேட்டையும் வேளாண்மையும் திகழவேண்டும் என்று வேண்டித் தொழுத குடிகள் அறியாத மண் என்றும் அவ்வாறே பொலியவேண்டுமென்று தொழுது கண்ணீர் மல்குவதை ஒருமுறை சுத்கலக் குடிகளின் படையல்நிகழ்வொன்றில் கண்டேன். புன்னகையுடன் வாழ்த்தி அங்கிருந்து மீண்டேன்” என்றார் தமனர். “காமத்தை விட, அச்சங்களை விட, கனவிலெழும் திறன் மிகுந்தது நிலமே. கனவுநிலம் மாபெரும் அழைப்பு. என்றுமிருக்கும் சொல்லுறுதி. தெய்வங்களும் மூதாதையரும் வாழ்வது. அதன்பொருட்டு மானுடர் எதையும் இழப்பார்கள். கொல்வார்கள், போரிட்டு இறப்பார்கள். மனிதர்களுக்கு கனவுநிலமொன்றை அளிப்பவனே நாடுகளை படைக்கிறான்.”
“ஆனால் நிலம் ஒன்றென்று ஆக அதன் நுண்வடிவென வாழும் அனைத்தையும் இணைத்தாகவேண்டும். ருக்மியின் சூதர் அதை செய்தனர். விதர்ப்பநிலத்தின் தெய்வங்களும் மூதாதையரும் தொல்லன்னையரும் மாவீரரும் ஒவ்வொரு குடிச்சொல்மரபில் இருந்தும் கண்டெடுக்கப்பட்டு பெருங்கதைகளாக மீள்மொழியப்பட்டனர். மாபெரும் கம்பளம்போல கதைகள் ஒன்றுடன் ஒன்று பின்னி முடையப்பட்டு ஒற்றைப்படலமென்றாயின. கன்றுகளுக்குப் பின்னால் பசுக்கள் செல்வதுபோல கதைகளுக்குப் பின்னால் சென்றது நிலம். கன்றுகளைக் கட்டியபோது காணாச்சரடால் தானும் கட்டுண்டது.”
“சபரகுடிகளின் தெய்வமாகிய மாகன் துந்துபகுடிகளின் தெய்வமாகிய தாபையை மணந்தார். சிபிரகுடிகளின் யானைத் தெய்வமான காளகேது அஸ்வககுடிகளின் மூதாதையான தாமஸரின் ஊர்தியாகியது. ஒவ்வொரு நாளும் அக்கதைகள் புதுவடிவு கொள்வதன் விந்தையை எண்ணி எண்ணி மலைத்திருக்கிறோம். ஒரு கதையின் வளர்ச்சியைக் கண்டு திகைத்து அதைப்பற்றி பேசியபடி இன்னொரு ஊருக்குச் சென்றால் ஐந்தே நாளில் அக்கதை மேலுமொரு வடிவு கொண்டிருக்கும்” என்றார் தமனர். “கதைகள் ஒன்றிணைந்தபோது தெய்வங்கள் இணைந்தன. குலவரலாறுகள் இணைந்தன. குருதிமுறைகள் ஒன்றாயின. மக்கள் ஒற்றைத்திரளென்றானபோது நிலம் ஒன்றானது.”
“நிலம் குறித்த பெருமை ஒவ்வொருவர் நாவிலும் குடியேறியபோது அதை வெல்ல நான்கு திசைகளிலும் எதிரிகள் சூழ்ந்திருப்பதாக அச்சம் எழுந்தது. பின்னர் எதிரிகள் பேருருக்கொள்ளத் தொடங்கினர். இரக்கமற்றவர்களாக, எங்கும் ஊடுருவும் வஞ்சம் கொண்டவர்களாக, இமைக்கணச் சோர்விருந்தாலும் வென்றுமேற்செல்லும் மாயம் கொண்டவர்களாக அவர்கள் உருமாறினர். எதிரிகள் மீதான வெறுப்பும் அச்சமும் அத்தனை குடிகளையும் ஒன்றெனக் கட்டி ஒரு படையென தொகுத்தது. எங்கும் எதிலும் மாற்றுக்கருத்தில்லாத ஒற்றுமை உருவாகி வந்தது. ஆணையென ஏது எழுந்தாலும் அடிபணியும் தன்மையென அது விளைந்தது.”
“நாடே ஒரு படையென்றாகியமை அரசனை மேலும் மேலும் ஆற்றல்கொண்டவனாக ஆக்கியது. செங்கோலை சற்றேனும் ஐயுறுபவர்கள் அக்கணமே எதிரியின் உளவுநோக்கிகள் என குற்றம் சாட்டப்பட்டனர். அவர்களைப் பழித்து வதைத்து கொன்று கொண்டாடினர் அவர்களின் குருதியினரும் குடியினரும். அவையெல்லாம் எதிரிகள்மேல் கொள்ளும் வெற்றிகள் என உவகையளித்தன. முதற்பாண்டவரே, எதிரிகளை அறிந்தவர்கள் பின் அவர்களில்லாமல் வாழ முடிவதில்லை. ஒவ்வொரு கணமும் சிதறிப்பரவும் நம்மை எதிரி எல்லைகளில் அழுத்தி ஒன்றாக்குகிறான். நம் ஆற்றல்களை முனைகொள்ளச் செய்கிறான். நம் எண்ணங்கள் அவனை மையமாக்கி நிலைகொள்கின்றன. எளியோருக்கு தெய்வம் எதிரிவடிவிலேயே எழமுடியும். அவர்களின் ஊழ்கம் வெறுப்பின் முழுமையென்றே நிகழமுடியும்” என்றார் தமனர்.
“பெரும்படையை இன்று ருக்மி திரட்டியிருக்கிறான். அப்பெரும்படைக்குத் தேவையான செல்வத்தை ஈட்டும்பொருட்டு விரிவான வரிக்கோள் முறைமையை உருவாக்கியிருக்கிறான்” என்று தமனர் சொன்னார். “ஐவகை வரிகள் இன்று அரசனால் கொள்ளப்படுகின்றன. சுங்கவரி முன்பே இருந்தது. ஆறுகளிலும் ஏரிகளிலும் இருந்து நீர்திருப்பிக் கொண்டுசெல்லும் ஊர்களுக்கு நீர்வரி. விளைவதில் ஏழில் ஒரு பங்கு நிலவரி. மணவிழவோ ஆலயவிழவோ ஊர்விழவோ கொண்டாடப்படுமென்றால் பத்தில் ஒரு பங்கு விழாவரி. எல்லைகடந்துசென்று கொள்ளையடித்து வருபவர்களுக்கு கொள்வதில் பாதி எல்லைவரி.”
“விந்தை!” என்றார் தருமன். “அவ்வரி தென்னகத்தில் பல மலைக்குடிகளின் அரசுகளில் உள்ளதே” என்றார் தமனர். “பல குடிகளின் செல்வமே மலைக்குடிகளை கொள்ளையடித்து ஈட்டுவதுதான்.” பீமன் “அது அரசனே கொள்ளையடிப்பதற்கு நிகர்” என்றான். “ஆம், கொள்ளையடித்து தன் எல்லைக்குள் மீள்பவர்களுக்கு காப்பளிக்கிறார்கள் அல்லவா?” என்றான் நகுலன். “விதர்ப்பம் கொள்ளையடிப்பது இரண்டு நாடுகளின் நிலங்களுக்குள் புகுந்தே. தெற்கே நிஷதநாட்டின் எல்லைகள் விரிந்தவை. பல மலைகளில் அரசப்பாதுகாப்பென்பதே இல்லை. கொள்ளையடிக்கப்பட்ட மக்கள் சிறுகுடிகளாகவும் சிற்றூர்களாகவும் சிதறிப்பரந்தவர்கள். கிழக்கே சியாமபுரியும் அரசமையம் கொள்ளாத நாடுதான்.”
“விதர்ப்பத்தின் வஞ்சம் இளைய யாதவருடன். எனவே நமக்கு எதிர்நிலைகொள்வதே ருக்மியின் அரசநிலை. ஆகவே நிஷதத்திற்குச் சென்று அவர்களின் நட்பை வென்றெடுப்பதே நமக்கு நலம்பயக்கும்” என்றான் சகதேவன். “ஆம், அவர்கள் ஷத்ரியர்களை அஞ்சுகிறார்கள். இன்று ஷத்ரியர்கள் என்றே உங்களையும் எண்ணுவார்கள். நீங்கள் ஷத்ரியர்களால் எதிர்க்கப்படுபவர்கள், இளைய யாதவரின் சொல்லுக்காக களம் நிற்பவர்கள் என்பதை அவர்களுக்கு தெரிவிக்கவேண்டும். அவர்களுடன் ஒரு குருதியுறவு உருவாகுமென்றால் அது மிக நன்று” என்றார் தமனர். தருமன் “ஆம், அதையே எண்ணிக்கொண்டிருக்கிறேன்” என்றார்.
“நான் அதைக் கூறுவது ஏனென்றால் நிஷாதர்கள் தென்காடுகளெங்கும் விரவிக்கிடக்கும் பெருங்குலங்களின் தொகை. அவர்களில் அரசென அமைந்து கோல்சூடியவை நான்கு. வடக்கே நிஷாதர்களின் அரசாக ஹிரண்யபுரி வலுப்பெற்றுள்ளது. நிஷாத மன்னன் ஹிரண்யதனுஸின் மைந்தன் ஏகலவ்யன் மகதத்தில் எஞ்சிய படைகளை தன்னுடன் சேர்த்துக்கொண்டு ஆற்றல் மிக்கவனாக ஆகியிருக்கிறான். மைந்தனை இழந்த சேதிநாட்டு தமகோஷனின் ஆதரவை அடைந்துவிட்டிருக்கிறான். விதர்ப்பத்திற்கு அவன் இன்னும் சில நாட்களில் அரசவிருந்தினனாக வரவிருக்கிறான். விதர்ப்பமும் ஹிரண்யபுரியும் அரசஒப்பந்தம் ஒன்றில் புகவிருப்பதாக செய்தி வந்துள்ளது” என்றார் தமனர்.
“தென்னகத்தில் ஆற்றல்மிக்க நிஷாதகுலத்தவரின் அரசு நிஷதமே. முன்பு கிரிப்பிரஸ்தம் என்று அழைக்கப்பட்டது அவர்களின் பெருநகராகிய விராடபுரி. நிஷாதர்களின் எழுபத்தெட்டு தொல்குலங்களில் பெரியது சபரர் குலம். அவர்கள் அஸனிகிரி என்றழைக்கப்பட்ட சிறிய மலையைச் சுற்றியிருந்த காடுகளில் வாழ்ந்தனர். கோதைவரி மலையிறங்கி நிலம்விரியும் இடம் அது. நாணலும் கோரையும் விரிந்த பெருஞ்சதுப்பு நிலத்தில் மீன்பிடித்தும் முதலைகளை வேட்டையாடியும் அவர்கள் வாழ்ந்தனர். தண்டபுரத்திலிருந்து படகுவழியாக வந்து அவர்களிடம் உலர்மீனும் முதலைத்தோலும் வாங்கிச்சென்ற வணிகர்களால் அவர்கள் மச்சர்கள் என்றழைக்கப்பட்டனர்.”
“கடல்வணிகம் அவர்களை செல்வந்தர்களாக்கியது. வணிகர்களிடமிருந்து அவர்கள் செம்மொழியை கற்றனர். பெருமொழியின் கலப்பால் அவர்களின் மொழி விரிந்தது. மொழி விரிய அதனூடாக அவர்கள் அறிந்த உலகும் பெருகியது. மலைவணிகர்களிடமிருந்து அவர்கள் புதிய படைக்கலங்களை பெற்றனர். அவற்றைக்கொண்டு பிற நிஷாதர்களை வென்று அரசமைத்தனர். அந்நாளில்தான் பதினெட்டாவது பரசுராமர் தென்னகப் பயணம் வருவதை அறிந்து மகாகீசகர் அவரை தேடிச்சென்றார், சப்தபதம் என்னும் மலைச்சரிவிலிருந்த அவரைக் கண்டு அடிபணிந்தார். அவர் கோரிய சொல்லுறுதிகளை அளித்து நீர்தொட்டு ஆணையிட்டார். அவர் மகாகீசகரை நிஷாதர்களின் அரசனாக அமைத்து அனல்சான்றாக்கி முடிசூட்டினார். அவர் அக்னிகுல ஷத்ரியராக அரியணை அமர்ந்து முடிசூட்டிக்கொண்டார்.”
“பரசுராமர் கோரிய சொல்லுறுதிகள் இன்றும் அக்குடிகளை கட்டுப்படுத்தும். ஒரு தருணத்திலும் அந்தணர்களுக்கு எதிராக படைக்கலம் ஏந்தலாகாது, அந்தணர்களை எதிர்ப்பவர்களுக்கு எதிராக அச்செய்தி கேள்விப்பட்டதுமே படைகொண்டு எழவேண்டும், ஷத்ரியர்களுக்கு கப்பம் கட்டி அடிமைப்படலாகாது, போரில் எக்குடியையும் முற்றழிக்கலாகாது, ஒரு போரிலும் பெண்களும் குழந்தைகளும் பசுக்களும் கொல்லப்படக்கூடாது, நீர்நிலைகளை அழிப்பதோ எரிபரந்தெடுத்தலோ கூடாது” என்றார் தமனர். “பரசுராமர் அளித்த இந்திரனின் சிலையுடன் மகாகீசகர் அஸனிமலைக்கு மீண்டார்.”
“அஸனிமலையின் உச்சியில் ஆலயம் அமைத்து சபரர்கள் வழிபட்டுவந்த அஸனிதேவன் என்னும் மலைத்தெய்வத்தின் அதே வடிவில் மின்படையை ஏந்தியிருந்தமையால் இந்திரனை அவர்களால் எளிதில் ஏற்கமுடிந்தது. அஸனிகிரியின் மேல் இருந்த குடித்தெய்வங்களில் முதன்மையாக இந்திரன் நிறுவப்பட்டான். அஸனிமலையில் ஏழு பெருவேள்விகளை மகாகீசகர் நிகழ்த்தினார். நாடெங்குமிருந்து அனல்குலத்து அந்தணர் திரண்டுவந்து அவ்வேள்விகளில் அமர்ந்தனர். நூற்றெட்டு நாட்கள் அஸனிமலைமேல் வேள்விப்புகை வெண்முகில் என குடை விரித்து நின்றிருந்தது என்கின்றன கதைகள்.”
“அதன் பின் நிஷதகுலத்து வேந்தர்கள் ஆண்டுதோறும் வேள்விகளை நிகழ்த்தும் வழக்கம் உருவாகியது. நாடெங்கிலுமிருந்து அந்தணர் அந்த மலைநோக்கி வரலாயினர். அஸனிகிரி கிரிப்பிரஸ்தம் என்று பெயர்பெற்றது” என்று தமனர் சொன்னார். “மெல்ல அனைத்துக் குலங்களையும் சபரர் வென்றடக்கினர். குலத்தொகுப்பாளராகிய சபரர்களின் தலைவனை விராடன் என்று அழைத்தனர். கிரிப்பிரஸ்தத்தின் அருகே கோதையின் கரையில் விராடபுரி என்னும் நகரம் உருவாகி வந்தது. இன்றும் அது மச்சர்களின் ஊரே. மீன்மணமில்லாத மலர்களும் அங்கில்லை என்றுதான் கவிஞர்கள் பாடுகிறார்கள்.”
“ஆம், அங்கு செல்வதே எங்கள் முடிவு. நாங்கள் நாளைப்புலரியில் கிளம்புகிறோம்” என்றார் தருமன். அவர்கள் சௌபர்ணிகையின் மணல்கரையில் அமர்ந்திருந்தார்கள். தமனருடன் அவருடைய மாணவர்கள் இருவர் மட்டுமே இருந்தனர். இருவர் உணவு சமைத்துக்கொண்டிருந்தனர். சௌபர்ணிகையின் சிறிய பள்ளங்களில் தேங்கிய நீர் பின்அந்தியின் வான்வெளிச்சத்தில் கருநீலத்தில் கண்ணொளி என மின்னியது நீலக்கல் அட்டிகை ஒன்று வளைந்து கிடப்பது போலிருந்தது. நீர் சுழித்த கயம் அதன் சுட்டி. திரௌபதி அதை நோக்கியபடி அமர்ந்திருந்தாள். அவள் எதையாவது கேட்டாளா என்பது ஐயமாக இருந்தது.
“செல்வோம், இன்னும் சற்றுநேரத்தில் வழிமறையும்படி இருட்டிவிடும்” என்று தமனர் எழுந்தார். தருமனும் உடன் எழ பீமன் மட்டும் கைகளை முழங்கால்மேல் கட்டியபடி அமர்ந்திருந்தான். அர்ஜுனனும் உடன் நடக்க நகுலனும் சகதேவனும் பின்னால் சென்றார்கள். தருமன் “மந்தா, வருக!” என்றார். பீமன் எழுந்துகொண்ட பின்னர் திரௌபதியை தோளில் தட்டி “வா” என்றான். அவள் சூரியன் மறைந்தபின்னர் கரியநீருக்குள் வாள்முனைபோல் தெரிந்த தொடுவானை நோக்கியபடி மேலும் சிலகணங்கள் அமர்ந்திருந்தபின் நீள்மூச்சுடன் எழுந்தாள்.
அவர்கள் நடக்கையில் பீமன் “முனிவரே, தங்கள் அரசுசூழ்தல் வியப்பளிக்கிறது” என்றான். தருமன் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்து “மந்தா” என்றார். “ஆம், என் அரசியல் தெளிவானது. நான் எந்நாட்டுக்கும் குடியல்ல. ஆனால் இளைய யாதவர் போரில் வெல்லவேண்டுமென்று விழைகிறேன்” என்றார். “ஏன்?” என்று பீமன் கேட்டான். “ஒரு போர் வரவிருக்கிறது. அதை தவிர்க்கமுடியாது. அதில் எது வெல்லும் என்பதே இன்றுள்ள முழுமுதல் வினா. வேதமுடிபுக்கொள்கை வெல்லவேண்டும். அதன் உருவம் இளைய யாதவர். அவரது படைக்கலங்கள் நீங்கள்.”
அவர்கள் மணல்மேல் நடக்கையில் தமனர் சொன்னார் “நான் சாந்தீபனி குருநிலையில் கற்றவன் என அறிந்திருப்பீர்கள். வேதக்கனியே என் மெய்மை. அந்த மரம் மூத்து அடிவேர் பட்டுவிட்டதென்றால் அக்கனியிலிருந்து அது புதுப்பிறப்பு கொண்டு எழட்டும். இனி இப்பெருநிலத்தை வேதமுடிபே ஆளட்டும்.” தருமன் “ஒவ்வொருவரும் தங்கள் கொள்கையை அவ்வாறு சொல்லக்கூடுமல்லவா?” என்றார். “ஆம், அது இயல்பே. வேதமுடிபுக்கொள்கையே பாரதவர்ஷமெனும் பெருவிரிவுக்கு உகந்தது என நான் எண்ணுவது ஒன்றின்பொருட்டே” என்றார் தமனர்.
நின்று திரும்பி சௌபர்ணிகையை சுட்டிக்காட்டி “அதோ அச்சிற்றொழுக்கு போன்றது அது என சற்று முன் எண்ணினேன். ஒரு குழியை நிறைக்கிறது. பின் பெருகி வழிந்து பிறிதொரு குழிநோக்கி செல்கிறது. பாரதவர்ஷம் பல குடிகளால் ஆனது. அவர்கள் வாழ்ந்து அடைந்த பற்பல கொள்கைகள். அக்கொள்கைகளின் உருவங்களான ஏராளமான தெய்வங்கள். அனைத்தையும் அணைத்து அனைத்தையும் வளர்த்து அனைத்தும் தானென்றாகி நின்றிருக்கும் ஒரு கொள்கையே இங்கு அறமென நிலைகொள்ளமுடியும். பரசுராமர் அனல்கொண்டு முயன்றது அதற்காகவே. இளையவர் சொல்கொண்டு அதை முன்னெடுக்கிறார்.”
“வேலின் கூரும் நேரும் அல்ல கட்டும் கொடியின் நெகிழ்வும் உறுதியுமே இன்று பாரதவர்ஷத்தை ஆளும் கொள்கையின் இயல்பாக இருக்கமுடியும்” என்றார் தமனர். “நிஷாதர்களும் அரக்கர்களும் அசுரர்களும் தங்களுடைய அனைத்தையும் கொண்டுசென்று படைத்து வணங்கும் ஓர் ஆயிரம் முகமுள்ள தெய்வம். அனைத்தையும் அணைத்து ஏந்திச்செல்லும் கங்கை. அது வேதமுடிபே. அது வேதங்கள் அனைத்திலும் இருந்து எழுந்த வேதம். வேதப்பசுவின் நெய் என்கின்றனர் கவிஞர்.”
“சில தருணங்கள் இப்படி அமைவதுண்டு” என்று தனக்குத்தானே என தமனர் சொன்னார். “நானும் நிலையா சித்தத்துடன் துயருற்று அலைந்தேன். பெரும்போர் ஒன்றின் வழியாகத்தான் அக்கொள்கை நிலைகொண்டாகவேண்டுமா என்று. இத்தெய்வம் அத்தகைய பெரும்பலியை கோருவதா என்று. அது ஒன்றே நிலைகொள்ளவேண்டும் என்றால், பிறிதொரு வழியே இல்லை என்றால் அதை ஊழென்று கொள்வதே உகந்தது என்று தெளிந்தேன்.”
“அது தோற்றால் இங்கு எஞ்சுவது நால்வேத நெறி மட்டுமே. இங்கு முன்னரிடப்பட்ட வேலி அது. மரம் வளர்ந்து காடென்றாகிவிட்டபின் அது வெறும் தளை. இன்று தொல்பெருமையின் மத்தகம்மேல் ஏறி ஒருகணுவும் குனியாமல் செல்லவிரும்பும் ஷத்ரியர் கையிலேந்தியிருக்கும் படைக்கலம் அது. அது வெல்லப்பட்டாகவேண்டும். இல்லையேல் இனிவரும் பல்லாயிரமாண்டுகாலம் இந்நிலத்தை உலராக்குருதியால் நனைத்துக்கொண்டிருக்கும். இப்போர் பெருங்குருதியால் தொடர்குருதியை நிறுத்தும் என்றால் அவ்வாறே ஆகுக!”
இருளுக்குள் அவர் குரல் தெய்வச்சொல் என ஒலித்தது. “சுனையிலெழும் இன்னீர் என எழுகின்றன எண்ணங்கள். ஒழுகுகையில் உயிர்கொள்கின்றன. துணைசேர்ந்து வலுவடைகின்றன. பெருவெள்ளமெனப் பாய்ந்து செல்கையில் அவை புரங்களை சிதறடிக்கவும் கூடும். அதன் நெறி அது. பாண்டவர்களே, வேதமுடிபுக் கொள்கை அனைத்துக் களங்களிலும் வென்றுவிட்டது. இனி வெல்ல குருதிக்களம் ஒன்றே எஞ்சியிருக்கிறது.”
நீள்மூச்சுடன் அவர் தணிந்தார். “இன்று நான் முயல்வதுகூட அக்களம் நிகழாமல் அதை வெல்லக்கூடுமா என்றே. இளைய யாதவரின் கொடிக்கீழ் ஷத்ரியர் அல்லாத பிறர் அனைவரும் கூடுவார்கள் என்றால், அவரது ஆற்றல் அச்சுறுத்துமளவுக்கு பெருகும் என்றால் அப்போர் நிகழாதொழியக்கூடும். ஆனால்…” என்றபின் கைகளை விரித்து “அறியேன்” என்றார். அவர் நடக்க பாண்டவர்கள் இருளில் காலடியோசைகள் மட்டும் சூழ்ந்து ஒலிக்க தொடர்ந்து சென்றனர்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-3
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-2
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–45
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–12
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–9
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–8
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–7
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–6
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–5
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 60
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 58
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 56
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 55
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 54
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 52
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 51
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 42
May 26, 2017
ஓரு யானையின் சாவு
வணக்கம்.
நேற்று காலையிலேயே அறிந்த ஒரு செய்தி இப்போதுவரை மனசைக் குடைந்துகொண்டிருக்கிறது. ஒரிசாவில் கோடை வெயில் தாளாமல் ஒரு யானை இறந்திருக்கிறது. கோடை வந்தால் மனிதர்கள் நூற்றுக்கணக்கில் வாடிவந்தங்கிச் சாவதை சமீப ஆண்டுகளில் கண்டுவருகிறோம். ஆனால், யானை என்னும் பேருயிர் அப்படிச் செத்துப்போனது என்பது எனக்குப் பெரிய அதிர்ச்சி. தாகம் தணிக்கவும் பசியாறவுமாக களக்காடு மலைக்கிராமங்களில் புகும் யானைகள் எனக்கு ஒருவித உற்சாகத்தை அளிக்கின்றன. அவை தன் தேவைகளை எளிதில் அடைகின்றன. அவற்றின் முன் பிற உயிர்கள் எல்லாம் ஒரு பொருட்டல்ல. காட்டில் உலவும் யானைக்கு மனித தலையீடு இல்லாமல் இறப்பு சாத்தியமல்ல என்பது இதுநாள் வரை என் நம்பிக்கை. அப்பது அப்படி அல்ல என்று இப்போது ஊர்ஜிதப்படுவது போல் இருக்கிறது. சூரிய உஷ்ணத்தில் வீழ்ந்த அந்த யானை ஒரு பெரும் சக்தியின் தோல்வி என்று தோன்றுகிறது.
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.
என்ற குறளும் இச்செய்தியின் பின்னணியில் மனதுக்குள் ஒலித்துக்கொண்டிருக்கிறது. வெயில்காய்ந்து கொன்ற யானை இக்குறளையும் எவ்வளவு வலுவானதாக்குகிறது! அறமென்னும் வெயில் கொஞ்சம் பயமளிக்கவும் செய்கிறது.
இன்றும் காலையிலேயே ஒரு செய்தி அத்தோடு ஒரு குறள் இதுவரை மனதை நிரப்பியுள்ள குறளுடன் இணைந்து நெருக்குகிறது. சேற்றில் சிக்கி ஐந்து நாட்களாக வெளியேறமுடியாமல் தவிக்கிறது அசாம் சரணாலயத்தில் உள்ள யானை ஒன்று. இதைப் படித்த கணம் முன்வந்து நிற்கும் குறள்,
காலாழ் களரில் நரியடும் கண்ணஞ்சா
வேலாள் முகத்த களிறு.
யானையின் வீழ்ச்சி ஜீரணிக்க முடியாத வலி. அதைத்தாங்கும் பயிற்சியை உங்கள் புனைவுகளின் மூலம் பழகிக்கொள்கிறேன். இயற்கையின் பெருவலியை உணர்த்துவதாயியும் மயக்குகிறேன்.
தேவதேவனின் மூன்று யானை கவிதைகள் நினைவில் மீள்கின்றன.
யானை
இப் பூமி ஓர் ஒற்றை வனம்
என்பதை உணர்த்தும் ஒரு கம்பீரம்.
வலம் வரும் நான்கு தூண்களுடைய
ஒரு பேராலயமாகி
வானுயரத் துதிக்கை தூக்கி
கானகம் அதிர ஒலிக்கும்
உலக கீதம்.
யானை
அப்பேர்ப்பட்ட கானகத்தைக் காட்டு விலங்கை
நான் கண்டதில்லை எனினும்
கண்டிருக்கிறேன் வேறு எங்கோ எவ்விதமோ
முறியும் பெருங்கிளைகள்
சாயும் குறுமரங்கள்
சிக்கித் தவிக்கும் உயிரினங்கள்
சரிந்த புதர்கள்
நடுவே
திடமாக
எதையோ
பூமியில் ஊன்றி விதைத்துப் போகும்
ஒரு விரல் போல்
யானை ஒன்று நடந்து செல்வதை
கோபம் கொண்ட யானையும் ஊரைவிட்டு ஒதுங்கிநிற்கும் அவனும்
ஒதுங்கியும் ஒதுக்கப்பட்டும்
ஊருக்கு வெளியே இருந்தான் அவன்
ஆற்றில் வெள்ளம் பெருகியபோதெல்லாம்
அடித்துச்செல்லப்பட்டது அவன் குடிசை
(அப்போது அவன் ஒரு சுட்டெறும்பைப்போல்
ஒரு மரத்தில் தொற்றிக்கொண்டான்)
கோபம் கொண்ட யானை
காட்டுக்குள்ளிலிருந்து இறங்கியபோதெல்லாம்
அவன் தோட்டம் சூறையாடப்பட்டது
கவனமாய் விலகி நின்று
அவன் அதைப் பாரத்துக்கொண்டிருந்தான்
மறுபக்கம்,
எப்போதும் தூய காற்று
அவனுள் புகுந்து வெளியேறியது,
மன்னிக்கத்தக்க
ஆகக் குறைந்த சிறு அசுத்தத்துடன்.
மிகுந்த ஆரோக்கியத்துடனும்
அச்சமற்றும் இருந்தன
அவனது தோட்டத்து மலர்கள்.
அவனது வானம்
எல்லையின்மைவரை விரிந்திருந்த்து
அந்த வானத்தை மீட்டிக்கொண்டிந்தன
பறவைகளின் குரல் விரல்கள்.
கண்கண்ட ஜீவராசிகள் அனைத்தும்
அவனைத் தங்கள் உலகோடு ஏற்றுக்கொண்டன
ஒரு கணமும் அவனைத் தனிமைப் பேய் பிடித்துக்கொள்ளாதபடி
பார்த்துக்கொண்டன விண்மீன்கள்
என்றாலும்
ஒரு பெரிய துக்கம்
அவனைச் சவட்டிக்கொண்டிருந்தது
அடிக்கடி
அன்று அது தன் பணிமுடித்துத்
திரும்பிக் கொண்டிருந்த காட்சியை,
அதன் பின்புறத்தை, பின்புலத்தை
அவன் பார்த்தபடி நின்றுகொண்டிருந்தான்
அதன் கோபம்
அதன் அழிமாட்டம்
அதன் பிறகு அது மேற்கொள்ளும்
நிதானம்
தீர்க்கம்
பார்வைவிட்டு மறையுமுன்
வாலசைவில் அது காட்டிய எச்சரிக்கை.
*
திருக்குறளும் ஒரு யானை இல்லையா! :-)
ஸ்ரீனிவாச கோபாலன்
***
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
நமது பக்திப்பாடல் மரபு– ஒரு வரலாற்று நோக்கு
பக்தி என்பது என்ன என்பதை முதலில் விளக்கியபிறகு மேலே செல்லலாம். ஐந்து இலக்க சம்பளத்தில் வேலை, பெண்ணுக்கு அமெரிக்க மாப்பிள்ளை, லட்ச ரூபாய் செலவிட்டும் தீரா வியாதி ஒரேநாளில் சரியாகப்போய்விடுதல் முதலிய பெரியவரவுகளுக்காக ஐந்து ரூபாய் ஊதுபத்தி பழம், நான்குரூபாய் தேங்காய், ஒரு ரூபாய் சூடம் முதலிய சிறிய செலவுகளைச் செய்வதும் நடுவே உள்ள இடைவெளியை உணர்ச்சிப்பெருக்கால் நிரப்பிக் கொள்வதுமாகும்.
இவ்வாறு உணர்ச்சிப்பெருக்கால் நிரப்புவது மனிதர்களால் இயல்பாக சாத்தியமற்றது என்பதனால் அதற்கு உதவும்பொருட்டு நாமாவளிகள், மந்திரங்கள், தோத்திரங்கள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. ஆயினும் தொன்று தொட்டே பாடல்களே அதற்கான சிறந்த வழிமுறையாக இருந்துள்ளன என்பதை நாம் காணலாம். பாடல் என்பது பொய்யான உணர்ச்சிகளை உண்மையானதாகக் காட்டுவதற்கான மிகச்சிறந்த வழிமுறை. பக்திக்கு அடுத்தபடியாக காதலுக்கே பாடல்கள் பயன்படுத்தப்படுகின்றன என்பதும் இதற்கு சான்று.
பக்திப்பாடல்களின் வரலாறு நெடியது. பண்டைத்தமிழகத்தில் பாணர்கள் தங்கள் யாழ்களையும் கிணைகளையும் மீட்டி ஊர் ஊராகச் சென்று அங்கே தலைக்குமேல் கூரையுடன் இலைபோட்டு சாப்பிடும் தகுதியில் இருந்த அனைவரையும் ‘பார்வேந்தே’ என்றழைத்துப் பாடல்கள் பாடி ,ஆமையிறைச்சியுடன் கள் அருந்தி, மேல்வரும்படியாகப் பரிசிலும் பெற்று மீளும் வழக்கம் இருந்தது. ஆகவே தமிழ்நிலமெங்கும் மக்களைவிட மன்னர்கள் பெரும்பான்மையினராக வாழ்ந்து வந்ததாகப் பிற்காலத்து நான்காம் தமிழ்சங்க அறிஞர்கள் மயங்கும் நிலை ஏற்பட்டதையும் குறிப்பிட்டாக வேண்டும்.
இவ்வகைப் பாடல்களே இன்றைய தமிழ் பக்திக்கவிதைகளின் அடிப்படை. அக்காலத்தில் உடனடி பலனளிக்கும் ‘அன்றன்றுகொல்லும்’ வேந்தர்களே தெய்வங்களாக இருந்தார்கள், கல்லாக ‘நின்று கொல்லும்’ வானுலக தெய்வங்கள் பெரிதாகப் பொருட்படுத்தப்படவில்லை என்பதற்குக் காரணம் சங்க காலத்துக் கவிஞன் தேறல் மாந்தாத நேரங்களில் தெளிவாக இருந்தான் என்பதே. வேந்தன் என்பதற்கே கடவுள் என்ற பொருளும் புழங்கிய காலம் இது.
மேற்கண்ட பக்திக் கவிதைகளின் இயல்புகளைப் பொதுவாக இவ்வாறு வகுத்துச் சொல்கிறார்கள் அறிஞர்கள். அவையாவன.
1. சுடு சோற்றை ஓரமிருந்தே அள்ளுவது போலப் பாடப்படுபவனின் ஊருக்குப்போகும் வழி அவனுடைய ஊர், அங்குள்ள கோட்டை ,அரண்மனை முதலியவற்றை விரிவாகப் பாடி முன்னே செல்வது . பெரும்பாலான நேரங்களில் பாடப்படுபவனைப்பற்றிப் பாடுபவனுக்கு ஒன்றும் தெரியாமலிருப்பது இயல்பாகையால் மையம் வரை செல்லாமல் போகும் வழியைப்பற்றியே பாடி பரிசில் பெற்று மீள்வதற்கான உத்தியாக பாவலர்களால் இது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் உயிருக்குப் பயந்து மன்னர்கள் அரண்மனைக்குள்ளேயே வாழ்பவர்கள் ஆதலால் எந்த மன்னரும் பாவலன் சொல்லை உண்மையா என்று சோதித்து அறிய வாய்ப்பில்லை.
இதன் முறைமைகள் கீழ்க்கண்டவை
அ. பாடல் பெறுபவன் பொதுவாக மூவேந்தர்களால் எளிதில் தேடிப்பிடிக்கப்பட முடியாதவன். ஆகவே அவனது ஊர் ஐவகை நிலங்களையும் தாண்டி செல்லும்படி இருக்கும். போகிற வழியில் குறவர், எயினர் முதலியவரிடம் மட்டுமல்லாமல் மயில், கடம்பமரம், மேகம் போன்றவற்றிடமும் வழி கேட்க வேண்டியிருக்கும்.
ஆ. பாடல்பெறுபவன் உயரமான மதிலுக்குள் இருப்பதைக் கருணையுடன் புரிந்துகொள்ள வேண்டும் கவிஞன். அந்த மதிலை மந்தியும் தாண்டாது. காகங்கள் முயலலாம். அதன் வாசல்கள் கவிஞர்களுக்கு அடையாத கதவு கொண்டவை, அதாவது வற்றி வதங்கிய பாணர்களைக் கண்டால் மட்டும் எட்டிப்பார்த்துவிட்டுத் திட்டிவாசலைத் திறப்பதுண்டு.
இ. அருகே சென்று மல்லாந்து படுத்த கோணத்தில் நோக்கி அவனது அரண்மனை வானுற ஓங்கிய மாடங்கள் கொண்டது என்று துணிந்து பாடலாம், அதை மக்கள் சரிபார்த்துக் கொள்ள வாய்ப்பே இல்லை
2 பாடல்பெறுபவனின் துணைவியை அடுத்தபடியாகப் புகழ்ந்து பாடுதல்வேண்டும். பெண் என்றாலே கொங்கை,அல்குல் மற்றும் கற்பு ஆகியவற்றின் தொகையே. முறையே முன்னது இரண்டையும் மறைத்துக்கொண்டு பின்னது பேணப்படுகிறது. அல்லது பின்னது முன்னது இரண்டையும் பேணுகிறது. அவற்றைப் புகழ்ந்து பாடவேண்டும். தோள்களையும் பாடலாம். சம்ஸ்கிருதத்திலே பாடினால் பின்னழகையும் வருணிக்கலாம், தமிழ்ப்பெண்கள் அவ்விடத்தை வரலாற்றில் பதியவைக்க விரும்புவதில்லை..
3 பாடப்படுபவனின் மக்கட்செல்வத்தையும் புகழ்ந்து பாடலாம், அத்துமீறிவிடக்கூடாது. தலையிருக்க வாலாடுதல் வழூஉ.
4 பாடப்படுபவனின் நாட்டுவளத்தையும் பாடலாம். அது அந்த நாடு பற்றியதாக இல்லாமலிருக்கும்தோறும் கவிதைக்கு எழில் ஏறுகிறதென்பதே கவியிலக்கணம் என்ப. அனைத்து அணிகளையும் ஒன்றன் மீது ஒன்றாக ஏற்றி அமரச்செய்யும் இயற்கை வருணனைகளுக்கு வாய்ப்புள்ள இடம் இஃதென உணர்வர் புலவர். “யானைகள் பாறைகள் போலத்தெரியும் உனது ஒங்கிய மலையின் கீழே காட்டில் இருந்து கிளிகள் பறந்து வந்து அமரும் வயல்வெளிகளில் மேய்ந்து விட்டு திரும்பும் எருமைகளை ஆய்ச்சியர் பால்கறக்கையி” என்று நால்வகைத் திணைகளையும் வயின் வயின் கலந்து பாடிய கலவைக்கிழார் என்பவர் முக்குறுணி நெல் பெற்று அதை முக்குறுணிப் பொன்பெற்றதாகப் பாடி மேலே ஒரு குறுணி கொசுறு பெற்றுக் கொண்டதை சரித்திரம் கூறும்.
5 பாடப்படுபவனின் கொடி , அவனுடைய ஆயுதம், அவன் ஏறும் யானை, ஊரும் குதிரை, வைத்திருக்கும் வைப்பு [நிதி] போன்றவற்றை ஏத்திப்பாடுதல் நன்று.
6 பாடப்படுபவனின் குலப்பெருமை, போர்த்திறம், கொலைநுட்பம், அவன் அடைந்த வெற்றிகள் ஆகியவற்றை விதந்தோதுதல் அழகு. பெரும்பாலான அவைகளில் அவைப்புலவரே அவற்றை தொகுத்து வருகைதரும் புலவர்களுக்கு அளிப்பர்
7.பாடப்படுபவனின் உடலுறுப்புகளைப் பாடுதல் மரபு. ஆண் என்பவன் தோள்களினாலானவன். அவற்றை பாடிப்பரவலாம். இரண்டுக்கும் நடுவேயுள்ள மார்புகளையும் பாடுவது உண்டு. தொப்பை, பிருஷ்டம்,தொடைகள் போன்றவற்றைப் பாடுதல் கூடாது.
8.பாடப்படுபவனுக்காக அரிவை, தெரிவை, பேரிளம்பெண் வரிசையினர் கைவளை கழல கலுழ்வதைப்பற்றிய வருணனைகள் தேவை.மேகலை ஆரம் முதலியவை நழுவுதலையும் பாட்டில் வடிக்கலாம். காமவசப்பட்ட பெண்டிர் தரையில் சிந்திய தண்ணீரையும் கதவு நிழலையும் எல்லாம் புடவையென எடுத்து அணிந்து விட்டு நடமாடுவதை வர்ணித்த கவிஞர் ஒருவர் யானையைப் பரிசில்பெற்று பாகனாக மாறியமை வரலாறு. பாடல்தலைவர்கள் மங்கையரின் உடல்களையே தங்கள் உடலுக்கு வாசனைத்திரவியங்களைப் பூசிக் கொள்ளப் பயன்படுத்திவந்தார்கள் என்பதையும் நூல்கள் நுவல்கின்றன.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் பாடப்படுபவனின் கொடைச்சிறப்பை அவனுக்கே எடுத்துச்சொல்லி அவன் அதை ஏற்கச் செய்வதில்தான் கவிஞனின் திறமையே இருக்கிறது. அதற்குத்தான் முந்தைய புகழ்ச்சிகள் உதவிகரமாகும். பழம் வேண்டும் கொட்டை வேண்டாம் என்று சொல்லும் அறிவாளிகளை முன்னரே உய்த்தறிதல் வேண்டும். இதற்குரிய வழிமுறைகள் கீழ்க்கண்டவாறு
அ. அவன் ஏற்கனவே கொடுத்த கொடைகளை நினைவுபடுத்துதல். அரிசியில் கிழாருக்கு அரிசி வாங்கப் பணம் கொடுத்த அரியல்லவா நீ என்கிற மாதிரி.
ஆ.அவனுடைய பக்கத்து நாட்டான் கொடுத்த கொடையைப் புகழ்ந்துபேசி இவனை உசுப்பேற்றுவது. மாசில் ஓரி வாரிக்கொடுத்தான். காசில் பாரி கைநிறையக் கொடுத்தான்.’ என்ற வகை வர்ணனைகள் பொதுவாக உதவுகின்றன.
இ.அண்டைநாட்டான் கொடுத்த கொடையை இகழ்ந்து இவனை மகிழச்செய்வது. ‘அவன் என்னாபெரிசா கொடுத்தான், நாலு யானை. அதுக்கு அம்பாரம். கட்டிப்பொன்னால அதுக்கு சங்கிலி. நீ குடுக்கப்போறதுக்குமுன்னாடி அதெல்லாம் என்ன பெரிசு?’ என்றவகை
ஈ. உன்னை நம்பி உலையில் அரிசி போட்டேனே போன்ற பிலாக்கணங்கள்.
உ. அற்றகைக்குச் செய்யவேண்டியது, அவன் கொடுக்கப்போகும் பொருட்களைப் பட்டியலிட்டு அவற்றைக் கொடுத்த உனக்கு என்ன வாழ்த்துச் சொல்லுவேன் என்று கண்ணீர் மல்கிவிடுவது. தப்பவே முடியாது.
இவ்வாறாகப் பரிசில்பெற்று வாழ்ந்த பாணர்கள் வரலாற்றின் பயங்கரத்திருப்பம் ஒன்றால் அழிந்துபடலானார்கள். நடுநாட்டு களப்பிரர் என்போர் தமிழ்நாடுமீது படைகொண்டுவந்தார்கள். அப்போது தென்னாட்டில் மண்ணெல்லாம் தமிழ்ப்பாடல்கள் நுரைத்து வழிந்திருந்தமையால் நம் வீரர்கள் பாட்டில் சொன்னபடி வேலும் வாளுமேந்தி, பாணர் பரணிபாட, முழவும் கிணையும் தாளமிட , செம்பொற்கழல்கள் கிண் கிண் என்றொலிப்ப, போருக்குச்சென்றார்கள். காட்டுமனிதர்களான களப்பிரர் எந்தத் தாளமும் இல்லாமல் கண்டபடி போரிட்டமையால் நந்தமிழர் போரில் தோற்காநின்றனர்.
அவ்வண்ணம் தமிழகத்தை வென்ற களப்பிரர் என்ற இசையிலா சமணர் கொழுவிய மானிறைச்சியும் கள்ளும் கொடுக்கப்படமாட்டாது என்று சொல்லி பாணர்களை விளிம்புநிலைக்குத் தள்ளினர்.அறம்பொருள் இரண்டையும் பாடியபின்னரே இன்பத்தைப்பற்றி பாட வேண்டும் என்று சொல்லிக் கொடுமை செய்து ந்ந்தமிழ் விறலிசூழ் பாணர்குலத்தை படிப்படியாக அழித்தனர்.
இதன்பின்னர் சமணர்களின் கொடுங்கோலாட்சியை ஒழிக்க ஆடியவனும் அளந்தவனும் சேர்ந்து முடிவெடுத்ததன் விளைவாகத் தென்னாட்டில் சமண இருள் களையப்பட்டது. களப்பிரரை விரட்ட என்ன வழியென திகைத்த சைவவைணவருக்கு தங்கள் ஆட்சியிலே களப்பிரர் தடுத்து வைத்திருந்த இசையும் பாடலும் தமிழ்க்கடவுள்களின் கருணைத் திறத்தாலே நினைவுக்கு வந்தன. ஆகவே அமண்சமணர் காதுகூசும்படி பாணர் பாடவும் விறலியர் ஆடவும் தலைப்பட்டார்கள். பாட்டுடைத்தலைவர்கள் முன்னரே பட்டுவிட்டிருந்தமையால் ஆங்காங்கே உறையும் இறைவர்களையே பாட்டுடைத்தலைவர்களாகக் கொண்டார்கள். இங்ஙனம் இந்நிலத்தில் உருவானதே பக்தி இயக்கமாகும்.
சமணர்களைத் துரத்த சில இலக்கிய முயற்சிகளும் செய்யப்பட்டன. பொதுவாக ஆறு அக்காலத்தில் அறிவுகெழு சான்றோள் ஆகக் கருதப்பட்டது. ஆகவே சுவடிகளை ஆற்றில் போட்டு எவை எதிரே வருகின்றன என்பதை வைத்து இலக்கிய நயம் தீர்மானிக்கபப்டும் அறிவார்ந்த முறை நிலவியது. சமணர் சுவடிகளுடன் பக்திச் சுவடிகளும் ஆற்றில் போடப்பட்டபோது சமணர் தியானம் செய்ய பக்தர்கள் ஆற்றில் இடுப்பளவில் இறங்கி எதிரே நின்று அடிவயிறதிர கிணைமுழக்கி பாடல்கள் பாட அவர்களின் சுவடிகள் மட்டும் சிற்றலைகளில் நீந்தி எதிரே சென்றன. சமணர்கள் சிதறி ஓடிப் பாடல்கள் காதில் விழாத காடுகளுக்குள் சென்று குடியேறினார்கள்.
பக்தி இயக்கத்தின் பாடல்கள் அனைத்துமே முன்னர் இங்கு சொல்லபப்பட்ட பத்து இலக்கணவிதிகளையும் துணை இலக்கணவிதிகளையும் அப்படியே கடைப்பிடிப்பவையாக இருந்தன என்பதனை ஆய்வறிஞர் அறியலாம். பரிசிலை உடனடியாக கையில் பெற்றுச் செல்வதில் மட்டுமே சிறு மாற்றம் உருவாயிற்று. இக்காலகட்டத்தில் ஆழ்வார்கள் நாலாயிரம் பாடல்களாக பிற்பாடு தொகுக்கப்படும் பாடல்களை பாட மறுபக்கம் சைவைத்திருமுறைகளும் உருவாயின. பழைய பாணர்களைப்போலவே சமயக்குரவர்களும் வழிதேடி விசாரித்து கோயில்கள் தோறும் போய் அங்கே இருக்கும் அரவணையானையும் விடையேறியானையும் பத்து விதத்திலும் துதித்துப்பாட பக்தி இயக்கம் அலைமோதி எங்கும் பரவியது.
இது முதற்பக்திகாலகட்டம் என்று ஆய்வாளர்களால் சொல்லப்படுகிறது. இதில் மூன்று கட்டங்கள் உள்ளன. முதல்காலகட்டம் குரவர் கட்டம். இக்காலகட்டத்தில் ஆழ்வார்கள் நாயன்மார்கள் முதலியோர் உருவாகி ஊர்தோறும் சென்றார்கள். அடுத்து, தொகுப்புக்காலகட்டம். இக்காலகட்டத்தில் சைவ வணைவ பக்தி நூல்கள் தொகுக்கப்பட்டு எண்ணிக்கை நிர்ணயிக்கப்பட்டது. அதன் பின்னர் வந்த ஆழ்வார்கள் உள்ளே அனுமதிக்கப்படவில்லை. புதிதாகக் கிளம்பிய நாயன்மார்கள் சிதையில் ஏறி எரிந்து சொர்க்கத்துக்குச் செல்லும்படி அறிவுறுத்தப்பட்டார்கள். பெரும்பாலானவர்கள் பின்வாங்கினாலும் நந்தன்சாம்பான் என்ற தீண்டப்படாத சாதி மனிதர் மட்டும் நம்பி மோசம்போனதாகத் தெரிகிறது.
அடுத்த காலகட்டம் புராணக் காலகட்டம். இக்காலகட்டத்தில் பக்தி இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆற்றிய அரியசெயல்களைப்பற்றி புராணங்கள் வனையப்பட்டன. ஒரு நாயனார் நெய்விட்ட அக்கார அடிசிலை தினம் நானாழி கொடுக்கவே எலும்பும்தோலுமாக மெலிந்திருந்த ஒரு பெண் பட்டினி நீங்கிப் பருத்ததை வெள்ளெலும்பைப் பெண்ணாக்கிய படலம் என்று பௌராணிகர் எழுதியதே தொடக்கம். பின்னர் படலம் படலமாகப் புராணங்கள். வேறு ஜோலியாகப் போன பார்வதியின் முலை உண்டு பாடல் பாடியது, கோயில் கதவு எளிதே திறக்க உயவுக்கு துளி ஆமணக்கெண்ணை போடலாகாதா என்று பாடிய பாடல் எனப் பல.
கடலைக் கடக்க கட்டுமரத்தில் ஏறுகையில் அலைபாயாமலிருக்க கட்டுமரத்தில் கனத்தகல் ஒன்றைக் கட்டிய மீனவன் செயல்கண்டு குலைபதறிய குரவரொருவர் ‘நமச்சிவாயம்’ என்று கதறி, பின்னர் அதையே ‘கற்றுணை பூட்டி கடலிற் பாய்ச்சினும் நற்றுணையாவது நமச்சிவாயமே’ என்று பாடி அழியாப்புராணமானார். திருமண முகூர்த்த்தில் வந்து பற்று ஓலையைக் காட்டி கலாட்டா செய்த கடன்கொடுத்த செட்டியைப்பற்றி பெண்வீட்டார் விசாரிக்கையில் அது செம்பொன்மேனி சோதியனே என்று சமாளித்த நாயனும் நயத்தக்கவரானார் என்பது வரலாறு.
இதன்பின் இரண்டாம் பக்திக் காலகட்டம் வந்தது ஐந்தாறு நூற்றாண்டுகள் தாண்டி.. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சிறிய தோசைக்கல் வடிவில் மெழுகுத்தட்டுகளில் பாடல்களை பதிவுசெய்து அவற்றை சிறிய இயந்திரங்களில் ஓடவிட்டு சீரான கீரீச் என்ற ஒலியையும், கற்பனைவளமுள்ளவர்கள் ஊடே பாடலையும் கேட்பதற்கான அறிவியல் வழி தோன்றியதே இந்த இரண்டாம் பக்திக் காலகட்டத்தின் தோற்றத்துக்கான காரணமாகும். இக்காலகட்டத்தில் பாணர்களும் குரவர்களும் வழகொழிந்து வெற்றிலை குதப்பிய வாயுடன் தொடையை அடித்துப் பாடும் பாகவதர்கள் என்ற இனம் உருவாகியிருந்தது.
கூடவே திருநெல்வேலி வட்டாரங்களில் ”வேய்! உறு தாளி, பன் கன்! வீடே முண்டக் கெண் டேன்!” என்று பாடும் ஓதுவார்களும் உருவாகியிருந்தார்கள். இவர்கள் பக்திப்பாடல்களைப் பாடி அவை தட்டுகளில் பரிமாறப்பட்டு நடுத்தெருக்களில் ஒலிக்கலாயின. பெரும்பாலான ஆலயங்களில் இப்பாடல்களைக் காலையிலும் மாலையிலும் ஒலிபரப்பினர். இக்காலகட்டம் தட்டுக்காலகட்டம் என அறிஞர்களால் அழைக்கப்படுகிறது.
இரண்டாம் பக்திக் காலகட்டத்தின் பொற்காலம் தொடங்குவது பாடல்களை நாடாவில் பதிவுசெய்து வெளியிடலாம் என்ற நிலை உருவானபோதுதான். இதை நாடாக்காலம் என்கிறார்கள். முதல் நாடாக்காலகட்டத்தில் தேரும் கொடியும் கொண்ட பெரிய தெய்வங்களே அதிகம் பாடப்பட்டன. இரண்டாம் காலகட்டத்தில் சபரிமலை சாஸ்தா, பல்வேறு அம்மன்கள், மாடசாமிகள், முனிய சாமிகள் கருப்பசாமிகள் பாடல்பெற்றனர். இக்காலகட்டத்தில் ஒருமணி நேரத்திற்கு சராசரி எட்டு பாட்டு வீதம் தமிழர்கள்கேட்டு பரவசமடைந்ததாகச் சொல்லப்படுகிறது.
இவ்விரு பாடல்வகைகளும் அதிகாலைகளில் ஏக காலத்தில் ஒலிப்பதனால் இவற்றுக்கு இடையேயான வேறுபாட்டைப் பாமரர் புரிந்துகொள்வது கடினம். இவை வெவ்வேறு வர்க்கங்களுக்கு உரியவை என்று மார்க்ஸிய அறிஞர் செந்தீபன் எழுதிய ஆய்வுக்கட்டுரை சொல்கிறது. ஆதாரமாக இவ்வர்க்கங்களின் பேச்சுமுறை சுட்டப்படுகிறது. உயர்குடியினர் ‘நீயெல்லாம் நல்லாயிருப்பியா? உன் மனசுல என்ன நினைச்சிருக்கே?..உன்னையெல்லாம் பெத்தேனே…என்னைய மதிக்காம நிக்கிறியே நஞ்சறுவானே… உருப்படுவியா?” என்றுதான் ஊனுருக வசைபாடுகிறார்கள். ஆகவே பக்திப்பாடல்களும் அவ்வண்ணமே ‘என்னக் கவி பாடினாலும் உந்தன்மனம் இரங்கவில்லை…’ என்றுதான் ஒலிக்கின்றன.
நேர் மாறாக அடித்தள மக்கள் ”பாரச்சனியனே,ஊத்த வாயி,கூமுட்ட, சிறுக்கிபெத்த நாயே..”என்றிங்ஙனம் பலபெயர் சொல்லி படுவேகமாக அழைப்பதை தங்கள் வசைமுறையாகக் கொண்டுள்ளமையால்தான் ”அங்காளம்மா கொப்புடையம்மா காளியம்மா நீலியம்மா சூலியம்மா” என்று அதிவேகமாக அடுக்கும் பாடல்களைப் பாடித்துதிக்கிறார்கள் என்று அக்கட்டுரையில் செந்தீபன் அவர்கள் சொல்கிறார்கள்.
இன்றும் சங்ககாலம் முதல் தொடர்ந்துவரும் பக்திப்பாடல்முறையே நம் மரபில் பின்பற்றப்படுகிறதென்றாலும் இன்றைய நவீன காலகட்டத்துத்தேவையை ஒட்டி மேலும் பல பாடுமுறைகளும் உருவாகி வந்துள்ளன. அவையாவன
1. சாமியை சடுதியாக வரச்சொல்லிப் பாடுதல். வரும்போது அடையாளம் காண வாகாக உரிய தோற்றத்துடன் தேவையான பொருட்களுடன் வரவேண்டும் என்ற விண்ணப்பம். ‘முருகா வா. வேலேந்தி வா. மயிலுடனே வா. வள்ளிக்குறத்தியுடனே வா’ சும்மா ஜீன்ஸ்பாண்டும் தெத்துப்பல்லுமாக வந்து நின்றால் போடா மயிராண்டி என்று நாம் பழனியாண்டவனை சொல்லிவிட மாட்டோமா என்ன?
2. பிறரிடம் சாமியின் புகழ்பாடி அருளுக்கு உத்தரவாதத்தை நாமே அளித்தல். ‘ஒருதரம் மருதமலைக்கு வந்து பாருங்க. சிவன் மகனோடு மனம் விட்டு பேசிப்பாருங்க. தீராத வினைகளெல்லாம் தீர்ந்து போகுங்க. அது தீராவிட்டால் வந்து என்னைக் கேளுங்க’. இத்தகைய பாடல்களை எழுதுபவர் முகவரியைக் கொடுப்பது வழக்கமன்று.
3. சாமியின் சொந்த பந்தங்களையும் சாதி சனத்தையும் புகழ்ந்துபாடுதல். ‘கந்தன் காலடியை வணங்கினால் கடவுள்கள் யாவரையும் வணங்குதல் போலே’. செந்தட்டிக்காளைச் சாமி கந்தனின் காவலன் வீரபாகுத்தேவரின் ஒன்றுவிட்ட மருமான் என்பதை ஒப்புக்கொள்ளலாம். கந்தனுக்கு ஏசு சித்தப்பா என்று சொல்லும் அதீதபாவனைகளை ஏற்றுக்கொள்வதில் சிக்கல்கள் உண்டு.
4..சாமியின் சகல பெயர்களையும் ஒட்டுமொத்தமாக வாய்ப்பாடு ஒப்பிக்கும் வேகத்தில் சொல்லுதல்.”கந்தா கடம்பா கதிர்வேலா முருகா. அத்தா அப்பா அறுமுக வேலா…” ஏதாவது ஒன்று அவரது உண்மையான பெயராக இருந்தாலும் திரும்பிப்பார்க்க மாட்டாரா என்ன?
5. சாமியின் ஊர்களை வரிசைப்படுத்திச் சொல்லுதல். அறுபடை வீடுகளைச் சொல்லி சலித்துப் போய்விட்டது.ஆகவே இப்போது சிற்றூர்கள் மற்றும் பஞ்சாயத்துகள் கவனத்துக்கு உள்ளாகின்றன. அடிக்குரலில் ஊர்பெயர்களை நீட்டிப் பாடுதலும் இசையே. ‘காட்டாங்குளத்தூரிலே கண்ணுடைய மாரியம்மா. காலுவச்சகண்மாயிலே காலடிஎடுத்தமாரியம்மா. புதுமாட்டுச்சந்தையிலே பூமாரியம்மா பொம்மநாயக்கன்கொட்டாயிலே காடுகாத்த மாரியம்மா….’
6..கூழ்குடிக்க மாரியம்மனையே அழைத்தல், மொட்டை போட முனீஸ்வரனையே அழைத்தல் போன்ற அதீத கற்பனைகள்.’ஆழாக்கு அரிசிய பாழாக்கிப் போடாம தின்னுப்புட்டு போடியம்மா’
7.திரைப்பாடல் மெட்டுகளுக்கு சுடச்சுட பக்திப்பாடல்களை அமைத்தல். ‘வள்ளிக் குறத்திக்கும் முருகன் சாமிக்கும் கல்யாணம், அந்த தேவர் குல கூட்டமெல்லாம் ஊர்க்கோலம்’ போன்ற மங்கலப் பாடல்கள். ‘கத்தாழ வேலாலே குத்தாயே மாரியம்மா.. இல்லாத அருளெல்லாம் தாராயே மாரியம்மா” ‘ போன்ற குத்து மெட்டுக்கள். பொதுவாக அய்யப்பன் சாமிக்கு மெட்டுமாற்றுப் பாட்டுகள் உகந்தவை என்ப.
8. சம்ஸ்கிருத சுலோகங்களைக் குத்து மதிப்பாக மொழியாக்கம்செய்தல். ‘சாந்தா ஆரம்போட தோளில் படுத்து’ [சாந்தாஹாரம் புஜங்க சயனம்] முதலிய வரிகள் தமிழுக்குப் புத்தெழில் ஊட்டுபவை.
எல்லா பக்திப்பாடல்களும் கடைசியில் ‘நீ குடுக்க மாட்டியா என்ன? சும்மா வெளையாடாதே. கண்டிப்பா கொடுப்பே. அதான் ஏற்கனவே அவனுக்குக் கொடுத்திருக்கியே. முன்னாடிகூட நெறைய குடுத்திருக்கே. நீ கொடுத்தா நான் உன்னையப் பாடுவேனாம். நீ என்னை சோதிச்சுப் பாக்கிறே. அதெல்லாம் விட்டுர மாட்டே. நீ கண்டிப்பா கொடுப்பே. ஏம்மா சும்மா நிக்கிறியே, உன் வீட்டுக்காரன் கிட்டே கொஞ்சம் எடுத்துச் சொல்றது. பிள்ளைங்களும் சொல்லுங்க. நான் எவ்வளவு தூரத்திலே இருந்து வாரேன். அங்க ஆயிரம் ஜோலி கெடக்கு. சட்டுன்னு குடுத்தா போய்ச் சேருவேன்ல. குடுத்திருங்க சாமி. எவ்ளவு நேரம்தான் பாடுறது? எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்குல்ல? குடுக்கிறவன் தான் நீ. இப்ப என்னமோ பிகு பண்றே. சரி, உனக்கு எம் மேல நம்பிக்கை வரல்லை. உன்னைய பாடின வாயாலே அவனைப் பாட மாட்டேன். அவனைப்பாடின வாய வேணுமானா கழுவிடறேன். உன்னைத்தவிர வேறு யாரைப் பாடுவேன்? நான்லாம் உன் அடிமையாக்கும். நாயேன். உன் காலடியில உக்காரக்கூட எனக்கு யோக்கியதை கெடையாது. இருந்தாலும் எனக்கு வேற யாரு இருக்கான்னு உங்கிட்ட வந்தேன். நல்லா பாடுவேன். இப்ப பார் நான் எண் சீர் விருத்தத்திலே பாடுறேன். சரி, இப்ப என்ன வேணுமாம்? சிரிக்கிறே, அதானே, நீ குடுத்திருவே. நீ குடுக்காம விட்டா உனக்குத்தானே கேவலம்? எவ்ளவு பெரிய ஆளு நீ? எவ்ளவு பெரிய கோட்டை கொடிமரம் ஆனை அம்பாரி. உன் பெஞ்சாதியும் அழகாய்த்தான் இருக்கா. அவளோட….சரி, நிப்பாட்டிடறேன். குடுத்திரு…” என்றவகையில் உச்சம் கொள்வதே சங்ககாலம் முதல் நம் மரபாகும்..இன்றும் பெரும்பாலான பாடல்களை நாம் இந்த வகைப்பாட்டுக்குள் அடக்கலாம்.
இக்காலகட்டத்தில் எழுதப்படும் அரசியல் பாடல்களையும், அரசியல் பாடல்களின் ஒரு பிரிவான திரைப்படநாயகனின் அறிமுகப் பாடல்களையும் நமது நெடிய பக்திப்பாடல் மரபின் ஒரு சிறு பகுதியாகவும் இன்றியமையாத நீட்சியாகவும் கருதலாமென்பது அறிஞர் கூற்று. ‘நீ நடந்தால் நடையழகு. அழகு?’ போன்ற லாலிபாப் பாடல்களும் ‘நீ கண்ணுறங்கா சீயெம். என் வாக்ஸினுக்கு ஸீரம்’ என்றவகையில் எழுதப்படும் வாலிபாப் பாடல்களும் இவ்வகைமையில் சேர்த்தியே.
அதேபோல மேடைகளில் பாடப்படும் வரவேற்புப் பாடல்கள், வாழ்த்தி அளிக்கப்படும் இதழ்விளம்பரங்கள், சுவரோவிய வரிகள், சுவரொட்டி வரிகள் ஆகியவையும் நமது பக்திப்பாடல் மரபின் வளமான நீட்சிகளே. தமிழ்ப்பண்பாட்டை பக்தியில் இருந்து பிரிக்க முடியாதென்பதனால் இன்னும் பெருமளவுக்கு பக்திப்பாடல் முறைகள் தமிழில் உருவாகுமென எதிர்பார்க்கலாம்.
மறுபிரசுரம் முதற்பிரசுரம் Aug 16, 2012
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

