Jeyamohan's Blog, page 1632

June 4, 2017

வெற்றி -கடிதங்கள் 4

images


 


அன்புள்ள ஜெ


 


சரவணகார்த்திகேயனின் பதிவு நன்றாக இருந்தது.


 


அப்படியாகப்பட்ட லதா ஏன் நடந்ததை சொல்லிவிட்டுப் போகிறாள் என்ற கேள்வியும் எழுகிறது. தன் இறுதி நாட்களில் குற்றவுணர்வை தாங்காமல் சொல்லியிருப்பாள் என்ற எளிய முடிவுக்கு வரலாம். ஆனால் அவள் எந்தவித மன்னிப்பும் கேட்டதாக நமச்சிவாயம் சொல்லவில்லை.


 


அவளைப் பொறுத்தவரை அது ஒரு ‘நாக் அவுட் பன்ச்’, அவர் எஞ்சிய வாழ்நாளை நரகத்தில் கழிக்கும்படி செய்த கடைசி வஞ்சம் என்று தோன்றுகிறது. விஷம் நமச்சிவாயத்தின் தொண்டையில் மாட்டிக்கொண்டுள்ளது.


 


மதுசூதன் சம்பத்


 


அன்புள்ள மதுசூதனன்,


 


உண்மையில் கதையின் மையமே அதுதான். அதை வாசகர் எவரேனும் சொல்லவேண்டுமென எண்ணியிருந்தேன். வெற்றி என்பது எவருடையது என்பதே கதை முன்வைக்கும் வினா


 


ஜெ


 


வெற்றி சிறுகதை வாசித்தேன்.


 


காஸ்மோபாலிட்டன் கிளப் வருணனை பாளையம்கோட்டை டிஸ்ட்ரிக்ட் கிளப் பற்றி சொல்வதைப்  போல் இருந்தது.


 


மனைவியிடம் பாரம்பரியம் சார்ந்த நம்பிக்கை,  ஒரு பெண்ணின் பொதுவான சார்ந்திருக்கும் மனோபாவத்தால் உருவாகும் அவநம்பிக்கை,  தான் ஜெயித்தால் மட்டும் கிடைக்கும் ஐந்து லக்ஷம், பணம் மேல் உள்ள ஆசை, தோற்றால் உண்டாகும் மானக்கேடு, இவைகளினால் அலைக்கழிக்கப் படும் ஒரு ஆணவ ஆணின் உளச்சிக்கலை நன்றாகக்  காட்டி இருக்கிறீர்கள்.


 


 


ஆனால் ஒரு விஷயம் நெருடுகிறது.  நமச்சிவாயம் மனைவி ஒரு மனைவி மட்டும் அல்ல,  ஒரு கொடிய நோய் தாக்கிய ஒரு மகனின் தாய்.  மகனை காப்பாற்ற வேண்டும் என சதா துடித்துக் கொண்டு இருக்கும் ஒரு மனம்.  லௌகீக வாழ்க்கையிலும் மகன் மீதுள்ள பாசத்தினாலும் மனம் நலிந்தவள்.  இந்த போட்டியில் அவளை பகடையாக வைத்தது அவள் ஜெயிக்கப் பட வேண்டும் என்பதினாலா?


 


இறுதியில் ரங்கப்பரின் செயல் அவருடைய உள் மன ஏக்கத்தின் வெளிப்பாடு.


 


சிவா சக்திவேல்


 


 


அன்புள்ள சிவா,


 


நன்றி


 


வெற்றி முன்வைக்கும் உண்மையான கதை ரங்கப்பருக்கும் லதாவுக்குமான உறவு. அது கதைக்குள் சொல்லப்படவே இல்லை. அதைச்சுற்றி உள்ள அனைத்தும் சொல்லப்பட்டு அது மட்டும் விடப்பட்டுள்ளது


 


ஜெ


 


அன்பிற்கினிய ஆசான் ஜெ அவர்களுக்கு,


வணக்கம்.


“உங்களைப்போன்ற வக்கிர புத்திகொண்ட மனநிலை பிறழ்ந்த ஒரு மனிதனை இதுவரை பார்த்ததே இல்லை….”


……என்ற மாபெரும் செய்தியுடன்தான் என் நண்பர் ஆரம்பித்தார்.


நான் சும்மாயிருக்காமல் “வெற்றி” சிறுகதையை அவரை கட்டாயப்படுத்தி படிக்கவைத்ததனால் வந்த வினை.


தனிப்பட்ட வசவுகள்….தரம் குறைந்தவைகளும் கூட….நிமிடத்திற்கொருமுறை தலையாட்டல்….பெருமூச்சு….உச்சுக்கொட்டல்….பாவம் அந்த மனிதர்……வழக்கமாக ஜொள் வடியும் அவரது வாய் வரண்டிருப்பதை காணும் அருங்கணம்……அட அட என்ன ஒரு ஆனந்தம்.


“Face-Book-கில சும்மாவிடமாட்டானுங்க…..மகளிர் அமைப்புங்கள்ளாம் பொங்கி எழுந்துடுவாங்க….கண்டிப்பா பெரிய ப்ரச்சனை ஆகும்” போன்ற ஆரூடங்கள்….பொங்கல்கள்….வடைகள்….இத்யாதி…..


சும்மாயிருக்கமாட்டாமல் “ஏன் பாஸ்…நீங்க நமச்சிவாயம் நெலமைல இருந்தா ஜெயிச்சிருப்பீங்களா?” – என்று வேறு கேட்டுத்தொலைத்து மேலதிக செந்தமிழ்த்தேன் மொழிகளை எனக்கும் பெற்றுக்கொண்டு மனம் மகிழ்வுற இப்படிக்கடிதம் எழுதிக்கொண்டிருக்கிறேன்.


 


சிலமணிநேரங்களுக்குப் பிறகு வழக்கமாக நேரத்தைக்கொல்லும் தேனீர்க்கடையின் மூலையில் சமநிலைக்கு வந்தார்.


“இருக்குற எல்லா நம்பிக்கையையும் ஒடச்சா ஒரு மனுஷன் எப்படித்தான் வாழ்றது?”..என்றார்.


“நம்பிக்கைனா என்னா பாஸ்?- ஒத்தையா ரெட்டையால ஒத்தைமட்டும்தான் நடக்கும்னு நாமளே நெனச்சிக்கறது தான….” – அடுத்த ஐந்து நிமிடங்களுக்கு மீண்டும் செந்தமிழ்த்தேன் மொழியாள் பாடல் என் காதுகளில் ஒலிக்க நான் சத்தியமாக கொடுத்து வைத்திருந்தேனா என்று தற்போதுவரை தெரியவில்லை.


 


ஆனால் கதை அவரை உலுக்கியெடுத்து விட்டது நன்றாகவே தெரிந்தது.


நெடுநாட்க்களுக்குப் பிறகு முற்றிலுமாக உள்ளிழுத்துக்கொண்ட ஒரு கதை.


என்னால் இறுதிவரை முடிவை ஊகிக்க முடியவில்லை அல்லது கதை அப்படி ஒரு இடைவெளியை எனக்குத் தரவில்லை.


 


சுஜாதாத்தனமான(??) முடிவு என்று நினைத்தாலும் அந்த முடிவிலிருந்துதான் எனக்கு கதை தொடங்குகிறது.


 


ஒட்டுமொத்த கதையைவிட கதையின் முடிவில் இருக்கும் அந்த சமரசம்…. லதாவிற்கும், ரங்கப்பருக்கும் எப்படி நடந்திருக்கும் என யோசிப்பதிலிருந்தே என் ஆச்சர்யமும்….ஆனந்தமும் அடங்கியிருக்கிறது.


எப்படிப்பார்த்தாலும் அதைக் கற்பனை செய்யமுடியவில்லை அல்லது ஒன்று குறைகிறது…..கடைசியில் அதைச்சொல்லித்தான் என் நண்பரை மீண்டும் என் பக்கம் இழுத்தேன். மீண்டும் ஒருமுறை அவரது ஜொள்ளுவாய் வரண்டிருப்பதை பார்க்கும் பாக்கியம்.


 


அப்புறமென்ன மறுபடியும் தலையாட்டல்….பெருமூச்சு….உச்சுக்கொட்டல்….அவரே சொந்தமாக தமிழ் சினிமா பாதிப்பில் அந்த சீனை நடித்துக்காட்டினார்….. சிவாஜியின் தீவிர ரசிகர்….. சுண்டன்……அவராலும் முடியவில்லை….பாவம்…


 


மூன்று பேருமே மேற்பார்வைக்கு வெற்றி பெற்றிருந்தாலும் மிகக் கீழ்மையான அல்லது பலன் குறைவான வெற்றி நமச்சிவாயத்திற்குத்தான்…..அவரையும் விட மேம்பட்ட ஆத்மார்த்தமான அல்லது அதற்கும் ஒரு மாற்றுக் குறைந்த வெற்றி ரங்கப்பருக்கு….லதா முழுமுற்றான வெற்றி பெற்றவள். தன்னை பகடைக்காயாகப்பயன்படுத்திய இரண்டு ஆண்கள், பிள்ளைகள், குடும்பம், தற்கால வாழ்வு, பிற்கால வாழ்வு ஏன் இறக்கும் தருணத்திலும் அதற்குப்பின்னாலும்………முழு வெற்றி.


 


தோல்வி என்று பார்த்தால் மேற்சொன்ன வரிசை பின்னோக்கிப் போவது ஆச்சர்யமளிக்கிறது. (லதா கொஞ்சமாவது தோற்றாள் என்று சொன்னால் மாத்திரம்தான் என் நண்பரை சமாளிக்க முடிகிறது….மற்றபடி அவரவர் சட்டங்கள் அவரவர்க்கு….என் சட்டத்தை அவள்மேல் திணித்து அவள் தோற்றாள் என்று சொல்ல நான் பெரும் ஒழுக்கவாதியாகவோ இல்லை தமிழ் வாத்தியாராகவோ தான் இருக்க முடியும்.)


 


ரங்கப்பர் ஒரு பெருங்காதலர் என்று என் அடுத்த குண்டைத் தூக்கிப்போட்டு….செந்தமிழ்த்தேன் மொழியாளை எதிர்பார்த்து ஏமாந்தேன்….. சிந்திக்க ஆரம்பிக்கும் நண்பர்களைப்போல நமது வெறுப்புக்குரியவர்கள் யாரும் இருக்கமாட்டார்கள் என்று ஒரு தத்துவார்த்தமான சிந்தனையோடு நிறுத்திக்கொண்டேன்.


நண்பர் மன உளைச்சல் அல்லது நமைச்சல் தாளாமல் மேற்படி சிறுகதையை அவரது வட்டத்திற்குள் சிக்கிய அனைவருக்கும் சொல்லும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் உங்களுக்கு மேலதிக ரசிகர்கள் அல்லது வசை வழங்குவோர் கிடைப்பர் என்றும் தெரிகிறது.


“மங்கிகேப்புல இருந்து மாதர் சங்கம்வரைக்கும் பாத்தவருங்க எங்காளு…” என்று மார்தட்டியிருக்கிறேன்.


 


இன்று காலை வாயெல்லாம் பல்லாக ஓடிவந்து அவர் சொன்ன செய்திதான் எந்த அளவு அவர் இதைப்பற்றி சிந்தித்திருக்கிறார் என்பதையும் ஏன் நான் உங்களுக்கு இந்தக்கதை குறித்து கடிதம் எழுதவில்லை என்பதையும் யோசிக்க வைத்தது.(அவர் என்னைவிட வயதிலும் அனுபவத்திலும் பலவருடங்கள் மூத்தவர்…..)


அவர் சொன்னது இதுதான்…..


‘இன்றளவும் இருக்கின்ற ஒரு புகழ்பெற்ற தொழிலதிபரின் கதை இந்த வெற்றி’.


அட இருந்துட்டுப் போகட்டும்……எங்காளு அப்ப சரியாத்தான சொல்லியிருக்காரு…


 


மீண்டும் ஒரு சிறந்தகதைக்காக…..


நன்றிகளும்….வாழ்த்துக்களும்….


அன்புடன்…..


பிரபு (சேலம்)


 


அன்புள்ள பிரபு


 


வெற்றி போன்ற கதைகளின் சிக்கலே அதன் சீண்டல்தன்மை மேலதிக வாசிப்பை தடுத்துவிடும் என்பது


 


ஆனால் எல்லா கதைகளும் நல்ல வாசகர்களுக்காகவே எழுதப்படுகின்றன


 


ஜெ


 


வெற்றி [சிறுகதை]


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 04, 2017 11:31

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 12

11. இளநாகம்


flowerபடைத்தலைவன் சிம்மவக்த்ரனிடம் எல்லைகளை காத்து நிற்கும் பொறுப்பை அளித்து தலைமை அமைச்சர் கருணாகரரிடம் அரசுப்பொறுப்பை ஒப்படைத்தபின் மூன்று சிற்றமைச்சர்களும் சிறுகாவல்படையும் உடன்வர நளன் விதர்ப்பத்திற்கு கிளம்பினான். எல்லை ஊரான சம்பகிரியில் இருந்து முந்தையநாள் இரவே கிளம்பி வந்து சேர்ந்துகொண்ட புஷ்பாகரன் உடன் வந்தான். நளன் அழைத்ததுமே மூத்தவனை பார்க்கும் ஆவலுடன் அவன் கிளம்பியிருந்தான். பொறுப்பான அரசுப்பணிகள் எதுவும் அதுவரை அவனுக்கு அளிக்கப்பட்டதில்லை என்பதனால் அதுவும் வெறுமனே உடன் செல்லும் அரசப்பணி என்றே எண்ணியிருந்தான்.


நகர் விட்டு வெளியே செல்வதுவரை அவனிடம் செல்லும் நோக்கமென்ன என்று சொல்லியிருக்கவில்லை. கிரிப்பிரஸ்தத்தின் எல்லையை கடந்த பின்னரே சிற்றமைச்சர் ஸ்ரீதரர் அவனிடம் அதை சொன்னார். அவன் முதலில் அதை சரிவர புரிந்துகொள்ளவில்லை. “நாம் விதர்ப்பத்திற்குச் சென்று அரசரிடம் பேசப்போகிறோமா?” என்று கேட்டுக்கொண்டிருக்கையிலேயே அவனுக்கு புரிந்துவிட்டது. மூச்சுத் திணற முகம் சிவக்க பேச்சை நிறுத்திவிட்டான். கிளர்ச்சியடைந்த முகத்துடன் அவன் தமையனை நோக்கிவந்து “நாம் விதர்ப்பத்தின் இளவரசியை கைப்பற்றச் செல்கிறோமா? சற்று முன் அமைச்சர் ஸ்ரீதரர் சொன்னார்” என்றான்.


“ஆம்” என்று நளன் சொன்னான். “நன்று மூத்தவரே, தாங்கள் அவரை மணம் கொள்ளக்கூடுமென்று நான் நெடுநாட்களாக எண்ணியிருந்தேன். இச்செய்தியை வெவ்வேறு சொற்களில் முன்னரே சொல்லி கேட்டுவிட்டேன். அதை நம் குடியின் வெறும் விழைவென்றே எண்ணினேன். தங்கள் அழகையும் ஆற்றலையும் கண்டு நமது குடிகள் கொள்ளும் பெருவிழைவு இயல்புதான் என கருதினேன். விதர்ப்பத்தின் இளவரசி தங்களை ஏற்றுக்கொண்டாரென்று கேட்டபோது முதல் கணம் அது என்னை திகைக்க வைத்தது. பின்னர் வேறெப்படி இயலுமென்று தோன்றியது” என்றான்.


என்ன பேசுவதென்று தெரியவில்லை அவனுக்கு. ஆனால் பேசாமலும் இருக்க முடியவில்லை. நாணம் கொண்டவன்போல கண்களில் நீர்மை படர உரக்க சிரித்துக்கொண்டு “தங்கள் ஓவியம் ஒன்றை கண்டபின் எந்த இளவரசியும் பிறிதொரு முடிவை எடுக்க முடியாது” என்றான். நளன் புன்னகைத்து “நன்று” என்றபின் எழுந்து காத்து நின்றிருந்த தன் புரவி நோக்கி சென்றான். அவனுக்குப் பின்னால் உடல் பதற நடந்து வந்த புஷ்பாகரன் “இதில் என்னையும் சேர்த்துக்கொண்டதற்கு நான் தங்களுக்காக உயிர் கொடுக்க வேண்டும், மூத்தவரே. நாளை இந்நிகழ்வை காவியங்கள் பாடும். அதில் என் பெயரும் இருக்கும். நான் வாள் கற்றதும் புரவி தேர்ந்ததும் இதற்காகவே என்று இப்போது உணர்கிறேன்” என்றான்.


நளன் “பார்ப்போம்” என்று புன்னகையுடன் சொன்னான். அவன் தன் புரவியில் ஏறிக்கொண்டு மூத்தவன் பின்னால் விரைந்தபடி “அங்கு போர் நிகழும் அல்லவா? மூத்தவரே, தாங்கள் இளவரசியை கைப்பற்றி புரவியில் விரைந்து கடந்து செல்லுங்கள். நான் என் படைவீரர்களுடன் எதிர்த்து வருபவர்களை செறுத்து நிறுத்துகிறேன். அக்களத்தில் நான் உயிர் துறப்பேன்” என்றவன் கை தூக்கி “ஆம், இப்போது எனக்கு தெரிகிறது. நான் உயிர் துறப்பேன். என்னைப்பற்றி சூதர்கள் பாடுவார்கள். என் பெயரில் காவியங்கள் எழும். தங்களின் பொருட்டு உயிர் துறந்தேன் என்ற பெருமை என் குலத்தை தலை நிமிரச்செய்யும்” என்றான்.


“மூடன்போல் பேச வேண்டியதில்லை” என்று அவன் தோளில் தட்டி நளன் சொன்னான். பின்னால் வந்த ஸ்ரீதரரிடம் “இளமை ஒருவகை மடமை. ஆனால் சில தருணங்களில் அதைப் பார்க்க அழகாகத்தான் இருக்கிறது” என்றான். புஷ்பாகரன் “நான் என்ன செய்யவேண்டும்? சொல்லுங்கள்…” என்றான்.  “நீ என் உடைவாள் தாங்கி அருகே நில். ஆம், இத்தருணத்தை நமது சூதர்கள் பாடுவார்கள். நீ என் உடைவாள் தாங்கினாய் என்ற செய்தி அதிலிருக்கும்” என்றான் நளன். “ஆம்” என்ற பின் அவன் உடைந்து குரல் நெகிழ கண்கள் கசிய தலைகுனிந்தான். “நான்…” என்றபின் மேலும் சொல்லெடுக்க முடியாமல் இரு கைகளாலும் விழிகளை அழுத்தி திரும்பிக்கொண்டான். “செல்வோம்” என அமைச்சர்கள் சொன்னபின் நளன் புரவியை விரைந்தோடச் செய்தான்.




flowerபுஷ்பாகரனால் நிலைகொண்டு புரவிமேல் அமரமுடியவில்லை. திரும்பி சிற்றமைச்சர்களிடம் “அங்கு போர் நிகழுமல்லவா? பதினாறு தொல்குடி ஷத்ரியர்கள் வந்திருக்கிறார்கள் என்றார்கள். எட்டு பேரரசர்கள். நால்வர் எதிரிகள். போர் நிகழாமலிருக்காது. நான் எவரிடம் போர்புரிவது?” என்றான். “அதை அங்கு சென்று பார்ப்போம். தாங்கள் சற்று அமைதியாக வரமுடியுமா?” என்றார் ஸ்ரீதரர். “போர் நிகழும். அதில் ஐயமேயில்லை. நான் அவரிடம் சொல்லிவிட்டேன். அவர் இளவரசியுடன் செல்கையில் நான் எதிர்த்து வருபவர்களை தடுத்து நிறுத்தி போரிடுவேன். என்னுடன் வரவேண்டியவர்களிடம் அனைத்தையும் பேசிவிடுகிறேன். அவர்களில் எவரும் எஞ்சப்போவதில்லை. புகழ் ஒன்றே அவர்கள் ஈட்டுவதாக இருக்கும்” என்றான் புஷ்பாகரன்.


“இதுவும் நாம் அங்கு சென்று நிலைமையை நோக்கி முடிவெடுக்க வேண்டியது. இப்போதே இத்தனை கிளர்ந்தெழுந்தால் நம் உடல்நிலைதான் பாதிக்கப்படும்” என்றார் சிற்றமைச்சரான சூக்தர். “ஆம், இப்போதே முடிவெடுக்க வேண்டியதில்லை. ஆனால் என்னால் வேறெதையும் எண்ண முடியவில்லை” என்றான் புஷ்பாகரன். “அங்கு வேறு ஏதாவது இளவரசி இருந்தால் நீங்கள் கவர்ந்து வரலாம். அதைப்பற்றி எண்ணுங்கள்” என்றான் காவலர்தலைவன் வஜ்ரகீர்த்தி. அதிலிருந்த பகடியை புரிந்துகொள்ளாமல் புஷ்பாகரன் அவர்களை உளக்கொந்தளிப்புடன் மாறி மாறி நோக்கினான்.


இன்னொரு சிற்றமைச்சரான நாகசேனர் “அரசிக்கு இளையவர்கள் இல்லையே?” என்றார். “இருப்பார்கள். பட்டத்தரசிக்கு பிறக்காத பெண்டிர்” என்று வஜ்ரகீர்த்தி சொன்னான். அவர்களின் விழியாடலைக்கூட உணராத புஷ்பாகரன் “ஆம், அங்கு அழகான பெண்கள் பிறர் இருந்தால் எனக்கென நான் கவர்ந்து வர எண்ணுகிறேன். அதுவும் காவியத்தில் இடம் பெறட்டும். பெண் கவர்ந்து வருவதென்பது எவ்வளவு சிறந்தது என்பதை நூல்களை படிக்கும்போதுதான் உணர்ந்தேன். கவர்ந்த பெண்ணையே மணக்க வேண்டும் என்று நெடுநாட்களாக நான் எண்ணியிருந்தேன்” என்றான். அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கி புன்னகைத்துக்கொண்டனர்.


புரவியை குளம்போசை விரைந்தொலிக்க ஓடவிட்டு நெடுந்தொலைவு முன்னால் சென்று அதே விரைவில் திரும்பி வந்தான். வால்சுழற்றி அது பாய உடல் முன்னால் செலுத்தி அம்புபோல் காற்றில் ஊடுருவ அருகே வந்து சுழன்று நின்று மூச்சிரைத்தபடி “ஏன் இத்தனை மெதுவாக செல்கிறோம்?” என்றான். “எத்தனை மெதுவாக சென்றாலும் ஒரு நாளுக்குள் சென்றுவிடும் தொலைவில்தான் குண்டினபுரி உள்ளது, இளவரசே” என்றார் நாகசேனர்.


“நாம் முன்னரே செல்வது நல்லதல்லவா?” என்றான் புஷ்பாகரன். “முன்னரே செல்லலாம். ஆனால் அரசர்கள் வந்துசேரத் தொடங்கியபின்னர் செல்வதுதான் நன்று. முதலாவதாக சென்று நின்றால் அங்கே பந்தல் கட்டவும் தண்ணீர் அள்ளி நிரப்பவும் நம்மிடம் சொல்லிவிடுவார்கள்” என்றார் ஸ்ரீதரர் சற்று எரிச்சலுடன். புஷ்பாகரன் உவகைப்பெருக்குடன் “ஆம். உண்மையிலேயே நாம் அதை செய்ய்லாம். பந்தல் கட்டுபவர் போலவும் தண்ணீர் அள்ளி நிரப்புபவர் போலவும் சென்று அங்கிருக்கும் தனிச் செய்திகளை நாம் அறிந்துகொள்வோம். முன்பு வங்க நாட்டு சம்புகன் அவ்வாறு மாற்றுருக்கொண்டு கலிங்கத்துக்கு வந்து இளவரசியை கவர்ந்து சென்றதாக சூதர் பாடி கேட்டிருக்கிறேன்” என்றான்.


இரு கைகளையும் அசைத்தபடி “நான் இதுவரை மாற்றுருக்கொண்டதே இல்லை, அமைச்சரே. மாற்றுருக்கொண்டு செல்வது மிகச் சிறந்த ஒன்று. ஏனென்றால் அப்போது நாம் இன்னொருவராக இருக்கிறோம். நம்மை சந்திப்பவர்கள் அனைவரும் நம்மிடம் ஏமாந்துகொண்டே இருக்கிறார்கள். நாம் மாற்றுருக்கொள்வோமா, மூத்தவரே?” என்றான். நளன் புன்னகைத்து “ஆம், பெரும்பாலும் நாம் மணம்கொண்டு திரும்பியதும் சிலகாலம் மாற்றுருக்கொள்ள வேண்டிருக்கும்” என்றான். அதிலிருந்த எள்ளல் அனைவரையும் சிரிக்கச் செய்தது.


ஆனால் புஷ்பாகரன் அதே உளப்பெருக்குடன் “எந்த மாற்றுருவை நாம் கொள்வோம்? என்னால் மிகச் சிறப்பாக மலைக்குறவனாக நடிக்க முடியும்” என்றான். “தாங்கள் நடிக்கவே வேண்டியதில்லை. இயல்பாகவே அவ்வசைவுகள் உங்களிடம் இருக்கின்றன” என்றார் நாகசேனர். அவர் அத்துமீறிவிட்டார் என பிறர் உணர்ந்தனர். காளகர்களை குறவர் என சொல்லும் வழக்கம் பிற குடிகளிடம் உண்டு. ஆனால் புஷ்பாகரன் சிரித்தபடி “ஆம், நாங்கள் குறவர்குடிகளைப் போன்றவர்களே. நான் மலைக்குறவனாக செல்லும்போது என்னை மலைக்குறவனென்றே எல்லாரும் நினைக்கிறர்கள் என்பார் கூஷ்மாண்டர்” என்றான்.


பகல் முழுக்க அவன் குண்டினபுரியில் ஆற்றப்போகும் வீரச்செயல்களை சொல்லிச் சொல்லி வளர்த்துக் கொண்டிருந்தான். பல நூறு முறை நடித்து ஒரு கட்டத்தில் அவை அனைத்தும் இறந்த காலம் என அவனுக்கு ஆயிற்று. ஒவ்வொரு சிறு நுட்பத்துடனும் அவன் இதுவரை பார்த்திராத அந்நகரைப்பற்றி பேசிக்கொண்டு வந்தான். அதன் தொன்மையான அகன்ற தெருக்கள். அங்கே புழுதி கிளப்பி பறந்து வரும் தேர்கள். புரவியில் அமர்ந்தபடியே காதுவரை நாண் இழுத்து அம்புகளை பறக்கவிட்டு அவன் வீழ்த்தும் வீரர்கள் அலறியபடி விழுந்து தரையில் துடிக்கிறார்கள். சகடம் உடைந்த தேர்கள் தெருக்களில் சிதறுகின்றன. அலறல்கள், குருதிமணம்.


அவனுடைய போர்த்திறனை உப்பரிகைக்கு ஓடிவந்து தூண்மறைந்து நின்று நோக்கி நெஞ்சில் கைவைக்கிறார்கள் அழகிய பெண்டிர். நீள்விழிகள் அவனை தொடுகின்றன. அம்புகள் பெண்கள் மேல் பட்டுவிடக்கூடாதென்பதில் அவன் மிகுந்த உளக்கூர் கொண்டிருக்கிறான். தெருக்களில் அவன் விரைகிறான். அவனுக்குப் பின்னால் சருகுச்சுழல்போல் குண்டினபுரியின் வீரர்கள் வருகிறர்கள். தெற்குக்கோட்டைமேல் அவன் புரவியில் இருந்து பாய்ந்து ஏறுகிறான். அங்கிருந்த காவல் மாடத்தில் நின்றிருந்த வீரர்களை வாளால் வெட்டி வீழ்த்தி மாடத்தில் இருந்த தொலைவில்லை கையிலெடுத்து நீண்ட அம்புகளால் துரத்தி வருபவர்களை வீழ்த்துகிறான்.


அவர்கள் உடைந்த தேர்களும் கால் முறிந்த குதிரைகளுமாக தெருக்களில் குவிய அவர்களுக்குப் பின்னால் வந்தவர்கள் அதனால் அணைக்கட்டப்பட்டு நிறுத்தப்படுகிறார்கள். அங்கிருந்து எழுந்த அம்புகள் எதுவும் அவனை வந்து அடையவில்லை. உரக்க நகைத்தபடி கோட்டையின் மறுபக்கம் குதித்து அங்கே காத்து நின்றிருந்த புரவிமேல் ஏறி விரைகிறான்.


புரவி காட்டில் அம்பென இலைப்புதர் தழைப்பினூடாக ஊடுருவிச் செல்கையில் மரங்களின் தழைப்புக்குள் ஒளிந்திருந்த ஒற்றன் நச்சு தோய்த்த அம்பை அவன் முதுகில் எய்கிறான். முதுகில் அம்பு பட்டு ஓடிவந்து நிலத்தில் விழுந்து துடித்து ‘மூத்தவரே!’ என்று சொல்லி முனகியபடி அவன் உயிர் துறக்கிறான்.


அவனது உடலை அப்புரவி சுற்றிச் சுற்றி வர அதைக் கண்டு ‘இளவரசே…’ என்று கூவியபடி திரும்பி வந்த அவன் வீரர்களையும் எதிரிகள் கொன்றனர். அவன் உடலை பீமகரின் படைவீரர்கள் கோட்டைக்குள் திரும்ப கொண்டு சென்றனர். அவன் உடலின் தலையை வெட்டி தொங்கவிடவேண்டும் என படைவீரர்கள் கொதித்தபோது கலிங்கமன்னன் சூரியதேவனும் மாளவமன்னனும் உரத்த குரலில் ‘அவன் தூயவீரன்! நின்று போரிட்டு களம்பட்டவன். அவனை ஷத்ரியனுக்குரிய முறையில் சிதையேற்றுவோம். விண்ணிலிருந்து தேவர் இறங்கிவந்து அவன் உயிரை கொண்டு செல்வார்கள்’ என்றார்கள். ‘ஆம்! ஆம்!’ என்று படைவீரர்கள் அனைவரும் தங்கள் வாள்களையும் ஈட்டிகளையும் உயரே தூக்கி குரலுயர்த்தினர்.


பீமகர் ‘ஆம், இம்மாவீரனை முறைப்படி சிதையேற்றுவோம். அங்கு அவனுக்கு ஒரு நடுகல் அமைப்போம். குண்டினபுரியின் மண்ணில் இவன் விழுந்தது நமக்கு பெருமை’ என்றார். அவனுடைய உடலை ஊர்வலமாக கொண்டுசென்றனர். அதைத் தொடர்ந்து பல்லாயிரம் படைவீரர்கள் உருவிய வாளுடன் நடந்தனர். அதில் கலிங்கனும் அங்கனும் வங்கனும் மாளவனும் கலந்துகொண்டனர். முடிமன்னர்கள் கைதூக்கி வாழ்த்த அவன் உடல் சந்தனச் சிதையில் ஏற்றப்பட்டு அவனுடைய மைந்தன் என சொல்பூண்ட இளஞ்சிறுவன் ஒருவனால் எரியூட்டப்பட்டது. ‘மாவீரன் விண்புகுந்தான்! அவன் வாழ்க!’ என்று பெருங்குரல் எழுந்தது.


விண்ணில் அப்புகழ் சென்று தொட்டபோது இளந்தூறல் விழுந்தது. பொன்னிற ஒளி மரங்கள்மேல் பொழிந்து இலைகளை ஒளிகொள்ளச் செய்தது. தேவர்கள் வந்து அவனை கொண்டு சென்றதைக் கண்டதாக சூதர்கள் பாடலாயினர். அவன் புகழை குண்டினபுரியில், கிரிப்பிரஸ்தத்தில், பின்னர் பாரதவர்ஷத்தில் அனைத்துப் பகுதிகளிலும் சூதர்கள் பாடினர். விதர்ப்ப விஜயம் என்று ஒரு காவியத்தை புலவர் ஒருவர் எழுதினார். அதில் அவன் பிறப்பிலிருந்து இறப்பு வரை நிகழ்ந்தவை அனைத்தும் சொல்லப்பட்டிருந்தது. அவன் மண் நிகழ்ந்தபோது ஏழு நிமித்திகர் ‘இவன் நிஷதகுடியின் மாவீரன். தன் குடியின் பெருமை காக்க உயிர்துறப்பான்’ என்று வரும்பொருள் உரைத்ததை முதல் படலத்திலேயே ஆசிரியர் சொல்லியிருந்தார்.


விதர்ப்பத்தின் இளவரசியை நிஷதபுரியின் அரசன் மணந்தபோது முதல் சில மாதங்கள் நிகழ்ந்த சிறு பூசல்களுக்குப்பின் இரு நாடுகளும் நிகர்நிலையில் நின்று ஒப்பந்தம் இட்டன. அதற்கு அவனுடைய பெருவீரமே முதன்மைத் தூண்டுகோலாக அமைந்தது. இரு படைகளும் புதிய ஆடைகள் சூடி ஒளிர் படைக்கலன்களுடன் ஒன்று கலந்து விழவு கொண்டாடின. சூல் கொண்ட வயிற்றுடன் தமயந்தி யானைமேல் அமர்ந்து குண்டினபுரிக்குள் நுழைந்தாள். மாளிகைகளிலும் உப்பரிகைகளிலும் தெருக்களிலும் கூடிய கூட்டம் அவளை வாழ்த்தி ஆரவாரம் செய்தது.


குண்டினபுரியின் கோட்டைவாயிலை அடைந்த அவள் ‘முதலில் நான் தென்திசை சென்று என் குலக்கொழுந்தின் நடுகல்லுக்கு மாலையிட்டு வணங்கிய பின்னரே நகர் நுழைவேன். அது என் வஞ்சினம்’ என்றாள். ‘ஆம், அவ்வாறே ஆகுக!’ என்றார் பீமகர். யானையிலிருந்து இறங்கி தென்திசைக் காடுகளுக்குச் சென்று அங்கு சிவந்த மலர்கள் சூழ நின்றிருந்த அவனது நடுகல்லில் செங்காந்தள் மலர்மாலையணிவித்து கள்ளும் ஊனும் படைத்து அவளும் நளனும் வணங்கினர். பின்னர் அங்கிருந்து அவன் நினைவாக துயர் மிகுந்த காலடிகளை எடுத்து வைத்து குண்டினபுரிக்குள் நுழைந்தனர்.


இரவில் விதர்ப்பத்தின் எல்லையில் சோலைமரத்தடியில் அமர்ந்திருந்த புஷ்பாகரன் நெஞ்சு உருகி கண்ணீர்விட்டான். ஊறி ஊறி வந்த மூக்கை உறிஞ்சி துடைத்துக்கொண்டான். அவ்வோசை அத்தனை உரக்க எழுமென்று அவன் எண்ணவில்லை. அருகே துயின்று கொண்டிருந்த அமைச்சர்களை திடுக்கிட்டு திரும்பிப் பார்த்தான். பின்னர் தன் மேலாடையால் தன் முகத்தை அழுத்தி துடைத்தான். தொலைவில் படைக்கலமேந்தி காவல் நின்றிருந்த வீரன் தன்னை திரும்பிப் பார்ப்பதை அறிந்து முகம் திருப்பிக்கொண்டு சால்வையால் முகத்தை நன்கு மூடி படுத்தான்.


இனிய வெம்மையான எண்ணங்கள். எத்தனை இனிமையான எண்ணங்களிவை! இவையெல்லாம் நிகழுமா? இவற்றில் ஒரு துளி நிகழ்ந்தால்கூட வாழ்க்கை எத்தனை பொருளுள்ளது. காமம் நிறைந்த எண்ணங்களில்கூட அவன் அடையாத அகக்கிளர்ச்சி. அவனால் படுத்திருக்கமுடியவில்லை. நெஞ்சில் குருதி நிறைந்து கொப்பளித்தது. எழுந்து நெஞ்சிலும் தலையிலும் அறைந்து ஓலமிடவேண்டும்போலத் தோன்றியது. கைகளை விரித்தபடி ஓடி சுற்றிவர வேண்டும். தலையை மரங்களில் முட்டி மோதி உடைக்க வேண்டும்.


இந்த எழுச்சியுடன் இவ்விரவை தன்னால் கடக்க முடியாது. இனிய எண்ணங்கள். இதைப்போன்ற இன்னொரு நாள் எனக்கு அமையப்போவதில்லை. ஆனால் இனிப்பும் ஒரு தவிப்பே. அது அமையும்போது முடிய வேண்டுமென்றுதான் உளம் தவிக்கிறது. எழுந்து சென்று விண்மீன்களை நோக்கி இடையில் கைவைத்து நின்றான். விண்மீன்கள் மண்ணை துழாவிக்கொண்டிருக்கின்றன. அவை இங்கு வாழ்ந்து அருஞ்செயல் இயற்றி விண்புகுந்தவர்களின் ஆத்மாக்கள். அவர்களில் ஒருவர் இங்கிருக்கிறார் என்று அவர்கள் அறிந்தால்…


அறிந்திருப்பார்கள். ஏனெனில் அங்கு காலமில்லை. நிகழ்வதும் வருவதும் அங்கு ஒன்றே. அவர்களைப் பொறுத்தவரை ஒருவேளை முன்னரே அவன் அங்கு சென்றுவிட்டிருக்கலாம். எழுச்சியுடைய எண்ணங்கள். எத்தனை ஒழுங்கற்றவை! ஒழுங்கற்றவையே விசை கொண்டவை. ஒழுங்கென்பதே விசையை அணைகட்டுதல். இவர்கள் இங்கு துயின்றுகொண்டிருக்கிறார்கள். எழுந்து இப்போதே விரைந்து குண்டினபுரிக்குள் நுழைந்தால் என்ன? விண்மீன்களை நோக்கி அவன் நீள்மூச்செறிந்தான்.




flowerகுண்டினபுரியின் தோற்றமே புஷ்பாகரனை சோர்வுறச் செய்தது. விதர்ப்பத்தின் எல்லையை நெருங்குந்தோறும் உளக்கொப்பளிப்புடன் அவன் புரவிமேல் கால்வளையங்களில் குதி ஊன்றி எழுந்து நின்று தொலைவு வரை நோக்கிக்கொண்டிருந்தான். “வந்துவிட்டோமா? வந்துவிட்டோமா, அமைச்சரே?” என்று திரும்பத் திரும்ப உசாவினான். “வரும்போது காவல்மாடம் தெரியும், இளவரசே” என்றான் வஜ்ரகீர்த்தி. “காவல்மாடங்கள் மரங்களுக்கு மேல்தான் தெரிவது வழக்கம் என்று அமைச்சர் சொன்னார். மிகப் பெரிய காவல்மாடம் என்று கேள்விப்பட்டேன்” என்றான் புஷ்பாகரன். “எங்கு கேள்விப்பட்டீர்கள்?” என்று ஸ்ரீதரர் சினந்து நோக்க “நூல்களில்” என்று அவன் விழிவிலக்கினான். “எந்த நூலில்?” என அவர் மேலும் கேட்டார். புன்னகைத்து “பல நூல்கள். எனக்கு நினைவில் இல்லை” என்றான்.


ஸ்ரீதரர் சலிப்புடன் தலையசைத்து திரும்பிக்கொள்ள புஷ்பாகரன் “காவல்மாடங்களை உயரமாக வைப்பதுதான் பேரரசுகளின் வழக்கம்” என்றான். “விதர்ப்பம் பேரரசு அல்ல” என்றார் அமைச்சர். “ஆனால் தொன்மையான அரசு அல்லவா?” என்று புஷ்பாகரன் மீண்டும் கேட்டான். எவரும் மறுமொழி சொல்லவில்லை. “அவர்களின் கோட்டையும் பெரிது என கேள்விப்பட்டேன்” என்றான். அதற்கும் எவரும் மறுமொழி சொல்லவில்லை. “அவர்களின் படைவல்லமையும் மிகைதான்” என்றான். அவனை எவரும் கேட்டதாகவே தெரியவில்லை.


ஒரு காவலன் “அதோ!” என்றான். திரும்பிப்பார்த்துவிட்டு “எங்கே?” என்றான் புஷ்பாகரன். “அதோ, நீங்கள் பார்ப்பதுதான் காவல் மாடம்” என்றான் காவலன். மரங்களுக்குமேல் மூன்று மரக்கிளைகளை இணைத்து கட்டப்பட்டிருந்த சிறிய மரக்குடிலைக் கண்ட புஷ்பாகரன் “அதுவா? குறவர் அமைக்கும் ஏறுமாடம்போல் அல்லவா இருக்கிறது?” என்றான். “அதுவேதான். காவலுக்கு இது போதும்” என்றார் அமைச்சர். “மகதத்தின் காவல் மாடத்தின்மேல் கழுகுகள் கூடுகட்டும் என்று கேட்டிருக்கிறேனே?” என்றான் புஷ்பாகரன். “அந்தச் சூதனுக்கு தங்க நாணயத்தை அளித்திருப்பீர்களே?” என்று ஒருவன் கேட்க மற்றவர்கள் புன்னகைத்தனர்.


அருகே நெருங்குந்தோறும் புஷ்பாகரன் நம்பமுடியாதவனாக ஒருவர் மாற்றி ஒருவரையாக நோக்கிக்கொண்டிருந்தான். அவர்கள் தன்னுடன் விளையாடுகிறார்கள் என்றே அவன் எண்ணினான். “இத்தனை சிறிதாக இருக்கிறதே?” என்று இறுதியில் நளனிடம் கேட்டான். “விதர்ப்பம் எளிய காவல் படையும் அதைவிட எளிய நகரும் கொண்ட அரசு, இளையோனே” என்றான் நளன். அவன் மெய்யாகவே சொல்கிறான் என்பதை முகத்திலிருந்து உணர்ந்துகொண்டு மெல்ல புரவிமேல் அமர்ந்து கடிவாளத்தை தளரப்பற்றி நோக்கியபடி வந்தான் புஷ்பாகரன்.


மூங்கில்களை இணைத்துக்கட்டிய சிறுவேலி ஒன்றே விதர்ப்பத்தின் எல்லையாக இருந்தது. அதுவும்கூட பாதையை மட்டுமே மறித்தது. இருபுறமும் காடு திறந்தே கிடந்தது. “எல்லையில் கோட்டையென ஏதுமில்லையா?” என்று அவன் கேட்டான். அதற்கு எவரும் மறுமொழி சொல்லவில்லை. “ஆம், ஒரு நாட்டின் எல்லை முழுக்க கோட்டை கட்டி காக்க முடியாதுதான்” என அவனே சொல்லிக்கொண்டான். எல்லைக்காவலன் வந்து தலைவணங்கி முகமன் சொல்லி “தங்கள் வருகை குறித்த செய்தி முன்னரே வந்தது, நிஷாத அரசே. இந்நகருக்கு தங்கள் வரவு சிறப்புறுக!” என்றான்.


குண்டினபுரிக்குச் செல்லும் பாதை மண்ணாலானதாக இருந்தது. புரவிக்குளம்புகள் கிளறிப்புரட்டிய மண்ணில் மீண்டும் குளம்புகள் விழும்போது சேற்றில் கல் விழுவதுபோல் ஓசையெழுந்தது. இருபுறமும் விரிந்திருந்த உயரமற்ற மரங்களாலான குறுங்காட்டுக்குள் புரவிக்குளம்படி ஓசைகள் எதிரொலிக்க பறவைகள் கலைந்தெழுந்து ஓசையிட்டன. புஷ்பாகரன் “வண்டிப்பாதை கூட இல்லை” என்றான். “வண்டிகள் செல்வதில்லை” என்றான் காவலன். “ஏன்?” என்று புஷ்பாகரன் கேட்டான். “நமக்கும் விதர்ப்பத்துக்கும் இடையே வணிகத் தொடர்புகள் இல்லை. நமது வணிகம் அனைத்தும் கோதாவரி வழியாகவே. விதர்ப்பம் மறுபுறம் மகாநதியினூடாகவே வணிகம் செய்கிறது” என்றான் நளன்.


“ஆம், அதை நானே வரைபடத்தில் பார்த்தேன்” என்று புஷ்பாகரன் சொன்னான். அவனுடைய ஏமாற்றம் மெல்ல விலகத் தொடங்கியது. சிறிய நாடென்றால் மேலும் நன்று, முழுநாட்டையே அவன் தன் வில்லால் வெல்வான். ஒரு நாட்டை முற்றாக வென்ற தனிவீரன் என அவனைப்பற்றி சூதர் பாடுவார்கள். விருத்திரன் நகரியை தனித்துச் சென்று அழித்த இந்திரனைப்போல. மீண்டும் அவன் உள்ளம் விம்மத்தொடங்கியது.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 11
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-10
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-9
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-8
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-7
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-6
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-5
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-4
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 48
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 57
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 53
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 7
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 04, 2017 11:30

June 3, 2017

சபரிநாதன் கவிதைகள்

இளங்கவிஞர்களுக்கான குமரகுருபரன் – விஷ்ணுபுரம் விருது இவ்வருடம் கவிஞர் சபரிநாதனுக்கு வழங்கப்படுகிறது. வரும் ஜூன் 10 அன்று குமரகுருபரனின் நினைவுநாள். அன்று சென்னையில் விழாவில் விருது வழங்கப்படும்.


 


வாசகர்களுக்காக அவருடைய வால் என்னும் தொகுப்பில் இருந்து சில கவிதைகள்


 


sapari


மின்மினியே


 


யார் தொட்டு எழுப்பியது உனை


எந்தக் கரம் உனக்கு பார்வை தந்தது


எவ்வுடல் நீங்கிப் போகிறாய் எவ்வுடல் நோக்கிப் பாய்கிறாய்


கனவா நனவா கருத்த வெட்ட வெளியில்


எதை நினைவுகூர்கிறாய் எதை மறக்கிறாய்


எதை நினைவுகூர்கிறாய் எதை மறக்கிறாய்


எதை நினைவுகூர்கிறாய் எதை மறக்கிறாய்


எத்தனை யுகங்கள் இருட்டில் அமர்ந்திருந்தாய் கண்ணே ஊமையாய்


பின் எத்தனை நூற்றாண்டு காய்ச்சலோடு சுருண்டு கிடந்தாய் நிலத்தடியில்


 


&





 


விழி


 


அஸ்தமனம்-சாய்கதிர்கள் மெது மெதுவாக உருட்டி விரிக்கின்றன நிழற்பாய்களை.


வெண்ணிற இரவுகளின் நாயகனைப் போல நானும் அஞ்சுகிறேன்


‘எல்லோரும் எனை விட்டுப் போகிறார்களோ…’


 


இது மார்கழி.கருக்கலின் அடர்புதர் மறைவினின்று இரவு பாய்கையில் எனக்குத்


தோன்றுகிறது,


இப்போதிந்த மொத்த அந்தகத்தையும் நான் ஒருவனே குடித்தாக வேண்டுமென்று


ஆதலின் இருளில் மட்டும் பிரதிபலிக்கும் சொல்லை உச்சரிக்கிறேன்:தனிமை.


ஆயினும் இப்புராதன உடலோ விதிர்த்து,எனக்கெதிராய் காய் நகர்த்த,


இன்னும் இன்னும்..என விரிகிறது கண்மணி:உற்பவம்.


 


நிமிர்கையில் தென்படுவது


தொடுவான மலைத்தொடரின் வரைகோடு


பைய்யப் பைய்ய வெளிவருவன


மரங்கள்,தெருக்கள்,கோபுரங்கள்,வீடுகள்


அம்மாக்கள்,அப்பாக்கள்,அக்கா தம்பிகள்


அணிற்பிள்ளைகள்,கோழிக்குஞ்சுகள்……


 


 





கவிஞனின்  பிரார்த்தனை


 


என்னோடு பேசு


ஏதாவது


என்னோடு பேசு


வாதிடும் அளவிற்கு அறிவிலி இல்லை நான்


என்னோடு பேசு


சுருக்கெழுத்தில்,குதலையில்,சைகையில்,நெடுமூச்சில்


பேசு


நினைவின் தொடுதிரையில் நின் கால் பெருவிரலை அழுத்து


நீ சொடுக்கினால் மட்டும் ஒளிரும் விளக்குகள் உண்டு என் வீட்டில்


நீ கைதட்டினால் மட்டும் நீர் கொட்டும் குழாய்கள் உண்டு


வளர்ப்பு நாயின் சொப்பனத்தினின்று எழுப்பும் சீட்டி உனது.


தனியே தூங்கிப் பழக வேண்டிய குழந்தை நான்


எப்போதாவது செருமு எனக்காக.


எவ்வளவு முடியுமோ அவ்வளவு பயன்படுத்து எனை


இருக்கும் ஒரே ஜீன்ஸ் அரையுடையென நைய்ய உடுத்து.


தொடர் புகைக்காரனின் தீப்பெட்டியென


பைக்குள்ளேயே வைத்திரு


ஒவ்வொரு குச்சியாக எரித்துக் காலி செய்யும் வரை


கோபுர உச்சியில் நிற்கும் குருடன் உன் நிசப்தத்தைக் கேட்கிறான்


என்னையும் அவ்விடத்திற்குக் கூட்டிச் செல்.ஆனால்


பார்வை எஞ்சுகிற வரை மண்ணில் பாதம் இழுபடுகிற வரை


என்னோடு பேசு.


 


*


 


புண்-பழுத்துவிட்டது;இருக்கட்டும்


அதை உணரும் நரம்பை மட்டும் வெட்டி விடு


 


கன்மம்-யாரும் தரவேண்டாம் நானே எடுத்துக்கொள்கிறேன்


யாவற்றையும் பதிவு செய்துவரும் இவ்வுறுப்பை மட்டும் அணைத்து விடு


 


இரையைச் சூழ்ந்திறுக்கும் குடற்சுவராகக்


கண்டதையெல்லாம் பற்றிக்கொள்ளும் இந்த உள்ளங்கையில் குழி பறி


 


இது கிடக்கட்டும்


என்னிடம் மட்டும் பேசும் இந்த நாக்கை அறுத்தெறி


 


இவை இருக்கட்டும்


என்னை மட்டும் காணும் இந்தக் கண்களை நுங்கெடு


 


அவை ஓடட்டும்


நின்று கவனித்திருக்கும் இக்கால்களைத் தறித்துப் போடு


 


இவனை விட்டு விடு


இவனைச் சதா துரத்திக்கொண்டிருக்கும் என்னை மட்டும் அழைத்துக் கொள்


 


*


 


மனநலங்குன்றிய குழந்தைகளின் தேவனே


அழுக்குத்துணிகளையும் ஞாபத்தில் தங்காக் கனவுகளையும் சிருஷ்டிப்பவனே


கருஞ்சிறுத்தைகளின் வரையாடுகளின் உபகாரியே


விபத்துப்பகுதிகளில் விடுமுறைகளில் காட்சி தருபவரே


நவ்வல்,கொய்யா,இலந்தை என எல்லாக் கனிகளிலும் நின்றிலங்கும் உள்ளானே


வாய் துர்நாற்றத்தை ஒளிக்க மனமில்லை எனக்கு


வாக்களிப்பதில் ஆர்வம் இல்லை


மரணமிலா வயோதிகக் கருத்துக்களான தாத்தா பாட்டிகளால் வளர்க்கப்பட்டேன்


நேசத்தின் திட்டவட்ட வடிவங்களில் மோதி சிராய்த்துக் கொண்டேன்


போலி முடிச்சுகளுடன் போரிட்டே களைத்துப் போனேன்.இருந்தும்


உலகை


வாழ்வை


உன்னை


போற்ற விரும்புகிறேன்


திக்குவாய் பையன் பாடுவதை போல் அது


கவிதையில் மாத்திரமே சாத்தியம்


எனவே


எம் பொருட்டு


நாள் தோறும்


நன்கு உழை.


 


 





 


எங்கிருந்து தொடங்குவது


 


முடிவிற்கு வருவது பலியாட்டின் இரவு.


 


கூண்டைச் சுற்றிலும் கூருகிர்த்தடம் குலையதிர்விக்கும் உறுமல் சிலைப்படுத்தும் பார்வை.


காணும் எவரும் ஊகிக்கலாம் ‘அது விதி விளையாடிய இடம்’ என்று


இறுகச் சார்த்தப்பட்ட குச்சுகளுக்குள் வளர்த்தோரும் வாங்கியோரும் சயனித்திருக்க


அக்கதியற்ற ஜீவன் சந்தித்துள்ளது


நேர் நேராய் காணத் தகாத


ஒளிந்து திரியும் ஒரு


மகத்தான உண்மையை!இதோ


தும்பு அவிழ வெளிவருகிறது ஆடு துறவைத் தேர்ந்தவரின் தோற்றத்தில்.


இனி அதனால் மந்தையோடு மேயவியலாது


மெதுவாக குரல் மாறத் துவங்கும்.பின்


பகல் தன் பாசறைக்கு மீளும் அத்தாழங்களில்


கொட்டிலுக்கன்று தனியாக தன் குகைக்குத் திரும்பும்.


 


இப்போதங்கே மிதமாகச் சலசலக்கும் ஓடை மௌனமாகப் பழுக்கும் ஆலம்பழங்கள்


 


சிறுத்தை சாலையைக் கடக்கும் முக்கில் இளைப்பாறும் குல்பி வண்டிகள்


 


ஏவல் பொம்மை தோண்டியெடுத்த வீதியில் ஆள் நடமாட்டமில்லை


மின்கம்ப உச்சியில் வெள்ளை முண்டா பனியன் காக்கி அரைடவுசர் உடுத்தியவரைத் தவிர.


 


நிழற்படத்திற்கு நிற்கமுடியாததை முன்னிட்டு வயிறெரியும் மலங்கயத்து ஆவிகள்.


 


அருகுள்ள சோற்றுப்பாறையில் கரித்துண்டால் மாணவர்களின் காதல் பிரகடனம்.


 


கீழே ஓர் ஊமைக்குசும்பன் ஆங்கிலத்தில் எழுதியுள்ளான்:Start the Music


 


மூங்கில் தோப்பிற்குள் விடியல் நுழைவதைப் போல்


ஆன்மாவிற்குள் எப்போதாவது வருகை தருகிறது துஆ.


 


 


 


அன்பின் வழியது


 


எனை நேசி என்பதை


எத்தனை சத்தமாக சொல்ல வேண்டியுள்ளது


தொலை மரத்திலிருந்து பட்சிகள் பதைத்து பறக்கும் அளவுக்கு


கார் கண்ணாடிகள் கீறல் விட


சீதனச் சின்னங்கள் விழுந்துடைய


மற்றெல்லோரும் காதைப் பொத்திக் கொள்ளும்படி


அத்தனை சத்தமாக,நாம் சொல்வதை நாமே கேட்கமுடியவில்லை.


 


ஒருவரை அடிமை செய்வதற்கு


எத்தனை முறை காலில் விழுவது


தாகத்தின் நீச்சு நமைத் தாண்டி உயர்கையில்


ஆக்ஸிஜன் உருளையைக் கட்டிக்கொண்டு சுவரேறி குதிக்கவேண்டும்


பரிசுப்பொருட்கள் குட்டிக்கரணம் உண்ணாவிரதம்


வாக்குறுதிகள் பொய்கள் அழுகை பாவனை அரக்கு முத்தங்கள்


ஒன்று அடிமையாக வேண்டும் அல்லது அப்படி நடிக்க வேண்டும்.


 


அன்பை பரிசோதித்துப் பழகியிராத


பால்கன்னி ஆடுகளின் காலம் அது


கால் ஊன்றிய பதமழை இரவு


நானும் தம்பியும் படுத்துக்கொண்டோம்.அம்மா வந்து


ஒரு பழைய சேலையால் எம்மிருவரையும் போர்த்தினாள்


அப்பொழுது நான் நினைத்தேன் இனி


எந்தப் பேய்களும் எமை அண்டமுடியாது என்று.


 


மனித மூளை தொடர்பாக சில சிந்தனைகள்


 


1


 


என் மூளையை யார் யாரோ பயன்படுத்துகின்றனர்,இங்கிதமே இல்லை


அது என்ன பொதுநீர்க்குழாயா அதுவும் இலவசத் தொடர்பு எண் வசதியுடனா


பாவம் ஒரு மனித மூளை ஏன் இவ்வளவு பாதுகாப்பற்றுத் திறந்து கிடக்கிறது


நடைவழிச் சத்திரமென.


கபாலமே சல்லாத்துணி முக்காடு தான் போல


 


என்பதால் பலநேரம் அது வெட்டவெளியின் கீழ் வாழ்கிறது தொலைநோக்கியென


 


நுரையீரலுக்கோ சிறுநீரகத்துக்கோ நன்கு தெரியும் தன் பணி என்ன என்று


இருதயத்திற்கோ எதுவும் ஒரு பொருட்டில்லை


நான் உட்பட.


 


ஆனால் இந்த மூளை இருக்கிறதே,தருமருக்கும் கூனிக்கும் பிறந்த குத்துச்சண்டை


வீரனின் கையுறையென காட்சியளிக்கும் இது நடுசாமத்தில் திடுக்கிட்டு விழித்தெழுந்து


தனக்குத் தானே கேட்டுக்கொள்கிறது ‘நான் யார்’ என்று.


 


அருகில் வசிக்கும் ஆயிரக்கணக்கான மயிர்கள் எல்லாம் என்ன நினைக்கும்?


 


2


 


பார்மலினில் மிதந்துகொண்டிருக்கிறது மனிதமூளை.இப்போது


அதுவொரு நெளிந்த பூஜ்யம்,எவரும் காணலாம் அக்கண்ணாடிப் பீங்கானுக்குள்


எடைகுறைந்த குதூகலத்தை,விடுதலை எனும் கருத்தாக்கத்தை.


பத்தொன்பதாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சீமாட்டியின் மூளை அது


(மேதகு ஆராய்ச்சியாளரின் இரண்டாவது மனைவி)


சரித்திரத்திற்கோ பரிணாமத்திற்கோ எந்த பங்களிப்பும் நிகழ்த்தியதில்லை,


யாவும் வழுக்கிச் சென்றுவிட்டன:நினைவுகள்,பகற்கனவுகள்,சதித்திட்டங்கள் யாவும்..


இன்று அந்தப் பெண்மணியே கூட


இதைப் பார்ப்பதற்கு வெட்கமுறமாட்டாள்;யாருக்குத் தெரியும் காற்றிழந்த காற்பந்தைப் போல


உருட்டி விளையாடவும் முயற்சிக்கலாம்.இருந்தும்


இன்னுமதில் உள்ளன ரகசியத்தின் கடவுகள்


நான் நான் என முட்டிப் படபடக்கும் சிச்சிறு பூச்சிகள் மட்டுமே வழியறிந்த கடவுகள்.


 


விளக்கணைக்கப் படுகிறது,ஆய்வறையின் கதவடைக்கப்படுகிறது.சட்டென


அம்மூளைக்கு குளிக்கவேண்டும் போலிருக்கிறது,குளிக்கும் போதே சூடாக ஏதாவது                                       குடிக்கவேண்டும் போலிருக்கிறது.


 


 


 


3


 


நான் தான் அவனிடம் சொன்னேன் தீயைத் தீண்டுமாறு பின்


நான் தான் அவனிடம் சொன்னேன் கையைத் தூர விலக்குமாறு பிறகும்


நான் தான் சொன்னேன் இனி ஒருபோதும் தொடக்கூடாது என்று


அவ்வப்போது அவனிடம் முணுமுணுத்து வருவதும் அடியேன் தான்


‘ஒரு முறை ஒரே ஒரு முறை தான்…தொட்டுப் பாரேன்’


அடர்சாம்பலும் வெண்மையுமாய் நான்கு மடல்களுடன் நான் தான் கவிஞனின் மூளை.


 


எனை தன் பெயர் சொல்லி அழைக்கும் அவன்


சிலபோது முணுமுணுக்கிறான் ‘எனக்கு மூச்சு முட்டுகிறது’


சிலபோது முழங்குகிறான் ‘செத்த வாயை மூடு’.


இன்று ஒரு முடிவுக்கு வந்தாகவேண்டும் என


நானும் அவனும் ஒரு நாள் தன்னந்தனியாக உரையாடினோம்


ஆனால் இந்த சமாச்சாரம் குழப்பமானது தவிர


அவனுக்கும் புரியவில்லை எனக்கும் புரியவில்லை,இது மிகவும் விசித்திரமானது தான்


ஒரு நாய் தன் வாலின் நிழலைக் கவ்வ முனைகையில் இன்னொரு நாய் அதைப் பார்த்து


குரைப்பதைப் போன்றது.


 


4


 


முகத்திற்கு சவக்காரம் போடுகிறேன்


உள்ளே பைத்தியக்கார பன்றி ஒன்று சாக்கடையை மொத்துகிறது


அது சலப்புவதை நிறுத்தும் வரை


நான் இப்படி


கழுவுதொட்டி மேல் குனிந்தவாறு அரக்கி அரக்கி தேய்த்துக் கொண்டே இருக்கப் போகிறேன்


இன்னும் ஓர் அரை மணிநேரம் ஆனாலும் பரவாயில்லை.


 


 


5


 


மனிதமூளை இன்னும் மனிதமூளை ஆகிவிடவில்லை,அதாவது


மனித வளம்,மனித வெடிகுண்டு…


இவை போன்று தெளிவான வரையறையை இன்னமும் வந்தடையவில்லை.


செயலிழந்த விளக்குகளிடையே சில விளக்குகள் அசந்தெரிய


சுரங்க நடைபாதையின் பாதி வழியில் தவங்குகிறது அது.


 


மண்டையோட்டிற்குள் ஒரே இருட்டு.கதவுகள் மெதுவாகத் திறந்து பலமாக


மூடுகின்றன.நாற்காலிகள் தாமாக ஆடுகின்றன.பொம்மைகள் சத்தமாகச்


சிரிக்கின்றன.விசும்பல் போலொரு ஓசை.சலங்கை போலொரு ஓசை.தாலாட்டு அல்லது


இடியின் முணுமுணுப்பு.


யாவற்றுக்கும் நடுவே


இளைத்த செம்புத் தகட்டையோ,சிறிய சிலுவையையோ பற்றிக்கொண்டு


உறங்கமுயலும் ஒரு கதாபாத்திரம்.


 


அப்படியும் சில தருணம்..


 


கீழக்கோபுரத்திற்கும் மேலக்கோபுரத்திற்கும் இடையே தொங்கும் பருத்த கருமேகத்தினின்று


வெண்விமானம் ஒன்று வெளிவருவதைக் காண்கையில்


அவ்வெளிய மனித மூளையின் சந்து பொந்துகள் எல்லாம்


குளம்பொலித்து விரைகின்றன


எரிகல்லென மின்மினிகள்…மின்னற் கொப்பளங்கள்…


 


 


தவம்


 


பனிமூட்டத்தினுள் மலைகள்,இன்னும் தீரவில்லை நித்திரை.


தூளிக்கு வெளி நீண்ட கைக்குழந்தையின் முஷ்டியென சிச்சில முகடுகள்.


உள்நின்று வந்தருளும் வரம் ஒன்றிற்காக தவம் இயற்றும் இலையுதிர்மரங்கள்


பொடிந்து நொறுங்க விண்ணோக்கி விரிந்த விரல்கள்,மூடப்பட்ட ஆலை,அதன்


வதன வறுமை.


அசையும் வண்ணமலர்கள் அவை இருட்டினின்று வந்துள்ள இன்றைக்கான முறிகள்.


 


தோல் உரிய நுரையீரற் தேம்பலூடே மலையேறிகள் ஒவ்வொருவராய்


அணையாது பொத்தி எடுத்துப் போகின்றனர் தம்


சொந்த மௌனத்தை.


யாரும் கவனிக்கவில்லை,யதேச்சையாய் திரும்பிப் பார்க்கிறாய்


பள்ளத்தாக்கில் வீற்றிருக்கிறது சோதியின் பேராதனம்.


 





 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 03, 2017 11:35

பின்தொடரும் நிழலின் குரல் – தத்துவமும் தனிமையும்

pin-thodarum-nilalin-kural-36851



ஜெமோ,


விஷ்ணுபுரம் தந்த மூளைக் களைப்பை போக்கிக்கொள்ள, பின்தொடரும் நிழலின் குரலை நாடியிருந்தேன். இன்னும் படித்து முடிக்கவில்லை.


ம்ஹூம்…விஷ்ணுபுரத்தை விட களைப்பைத் தருகிறது. ஒவ்வொரு அத்தியாயமும் போட்டுத் தாக்குகிறது. மிகச் செறிவானவை. செரித்துக் கொள்ள கொஞ்சம் கஷ்டமாகத்தான் உள்ளது. ஆனால் செரித்தபின் வரும் ஆற்றலும் அது தரும் உற்சாகமும்…அடடா…எங்கோ வானத்தில் மிதந்து செல்ல வைக்கிறது. அந்த உற்சாகம் தான் இக்கடிதத்தை என்னை எடுத்து எழுதிக்கொண்டிருக்கிறது.


விவரணைகள் போதும் என்று நினைக்கிறேன். விஷயத்திற்கு வருகிறேன். ஏனோ தெரியவில்லை இந்நாவல் முழுவதும் வரும் அருணாசலத்தையும், வீரபத்திரபிள்ளையும் விட கதிரே மிக அணுக்கமாக வருகிறார் எனக்கு. ஒருவேளை எக்காலத்திலும் இருக்ககூடிய இளமையான, புத்திசாலியான, விவேகமாக பிழைக்கத் தெரிந்த அரசியல்வாதிகளை கதிர் பிரதிபலிப்பதாலோ என்னவோ.


இலட்சியவாதிகளுக்கு அவர் புழு போலத் தெரியலாம். ஏனென்றால் நீங்கள் அருமையாக கட்டுடைத்ததைப் போல, இலட்சியவாதம் = நிகழ்கால அதிருப்தி + எதிர்கால கனவு + அதற்கான தியாகம். அதிருப்தியால் இயங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு, திருப்தியாக நிகழ்காலத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் கதிர் போன்றவர்களை புரிந்து கொள்ளமுடியாது தான்.‎


மேலும், அருணாச்சலம் வீரபத்திரபிள்ளையின் புத்தகத்தை திரும்பவும் படிக்கும் போது, முன் வாசித்த பக்கங்களை காணாமல் துணுக்குறுவது. ஆனால், அப்படி ஒரு பக்கங்களே இருந்திருக்கவில்லை என்று உணரும்போது, அருணாச்சலத்தை விடுங்கள், எனக்கு வியர்த்துக் கொட்டிவிட்டது. ஒன்றில் ஆழ்ந்து போதலை, இதைவிட நுட்பமாக சித்தரிக்கமுடியாதென்றே எண்ணுகிறேன்.


இதற்கெல்லாம் முத்தாய்ப்பாய், புகாரினுக்கும, அந்திரியானுக்கும் சிறையில் உள்ள குளியலறையில் நடக்கும் உரையாடல்.


தர்க்கமும் படிமமும் சேரும் புள்ளி. தத்துவமும் கவித்துவமும் இணையும் இடம், இவ்வுரையாடல்.


கவித்துவத்தின் கால்களாய் தருக்கம். தருக்கத்தின் சிறகுகளாய் படிமம்.


இவ்வரிகள் தத்துவமா, இல்லை கவிதையா?


படைப்பூக்கம் கொண்ட எழுத்தாளனுக்கு, இது தருக்கமும் படிமமும் ஒன்றையொன்று நிரவிக்கொள்ளும் இடம்.


இரு துருவங்கள் ஒன்றாக இணையும் இடம். இவ்விரு துருவங்களுக்கிடையே ஊஞ்சலாடும் போதே, ஒரு எழுத்தாளன் படைப்பூக்கத்துடன் இருக்கிறான்.


புஸ்கினும், மார்க்ஸூம் சந்திக்கும் புள்ளியே தஸ்தயேவ்ஸ்கி…Classic சாரே…it is Classic. புரியாத ஒன்று புரிந்து விட்டதாய் மனம் கிடந்து தடுமாறி குதூகலிக்கிறது.


ஒவ்வொரு எழுத்தாளனும், எழுதநினைக்கும் வாசகர்களும் தவற விடக்கூடாத அத்தியாயம் இது.


கடைசியாக, ஜெமோவே இந்நாவலில் ஒரு கதாபாத்திரமாக வருவது. அதுவும் எழுத்தாளனாக. அதிலும் அதிகப்பிரசங்கி எழுத்தாளனாக. உங்களுக்கே உரிய சுயபகடித் திறன்.


அன்புடன்


முத்து‎


***



தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 03, 2017 11:32

வெற்றி கடிதங்கள் 3

images


அன்பு ஜெ,


நலம் என்று அறிகிறேன்…


உங்கள் “வெற்றி” சிறுகதையை படித்தேன், பொதுவாகவே பெண் வெறுப்பு அதிகம் உள்ள இந்த சமூகத்தில் – சமீபமாக அவ்வெறுப்பினால் பெண்கள் அடையும் பாதிப்புகள் தான் எத்தனை – இப்படிப்பட்ட ஒரு கதை பெண்களைப்பற்றி மேலும் ஆழமாக எதிர்மறை எண்ணங்களை இச்சமூகத்தில் உருவாக்காதா?


அந்தக்கதையிலுள்ளது போல் நிகழ்வதற்கான சாத்தியங்களைப்பற்றியோ, அது சரியெனவோ தவறெனவோ நான் விவாதிக்க விரும்பவில்லை.. எதைப்பற்றியும் எழுத எவருக்கும் உள்ள உரிமையைப்பற்றியும் நான் சந்தேகிக்கவில்லை… ஆனால், நீங்கள் பேசும் அறத்தின் கீழ் இப்படியாகப்பட்டவை வருமா வராதா என்று நீங்களே யோசித்துக் கொள்ளுங்கள். ” பொதுவாகவே பெண் வெறுப்பு அதிகம் உள்ள இந்தச் சமூகத்தில் இப்படியான ஒரு கதை தேவைதானா?”. அல்லது அறம் என்பதும் பெண்களை ஒதுக்கி வைத்து நீங்களெல்லாம் தனியாக இயங்கும் மற்றும் ஒரு தளமா?


என் சிறு எதிர்ப்பை பதிவு செய்ய விரும்புகிறேன்.


அன்புடன்,


லைலா எக்ஸ்


***


அன்புள்ள ஜெ.,


“நல்ல பெண்கள் அழுத்தத்தால் வளைவார்கள்” – இந்த வரியை யோசித்துக்கொண்டே

இருந்தேன்.. தன் மகன் இறந்து உச்சகட்ட துயரத்தில் இருந்தபோது, தன்

மனைவியுடன் உடலுறவு கொண்டது குறித்து ஒரு நடிகர் எழுதியிருந்தார்…

என்னை மிகவும் பாதித்த கூற்று அது…


அன்னா கரீனினா நாவல் படித்துக்கொண்டிருக்கிறேன்.. மொத்தமாக வீழும்வரை கரீனினா தன் கணவனிடம் காட்டும் அந்த மோகினித்தனமான அலட்சியம்,வீழ்ந்தபிறகே மீண்டும் பெண்ணாகிக் குறுகி நிற்கிறாள்.. காமம் என்ற யட்சி

எப்போதும் நம் பின்னாலேயே நிற்கிறது, ஒருமுறை திரும்பிப் பார்த்தால்

போதும் போலும்..


நன்றி,

ரத்தன்


***


ஜெ,


‘வெற்றி’ சிறுகதை தந்த பாதிப்பில் இருந்து மீள முடியாத இந்த நொடியில் தான் உங்களுக்கு எழுதிக்கொண்டிருக்கிறேன். அவ்வளவு எளிதில் கடக்க முடியாத ஒரு விஷயத்தை இக்கதையின் வழியாகக்கடத்திவிடுகிறீர்கள். கதையின் இறுதியிலிருந்து கதையைத் துவக்கிக் கொள்கிறேன். நமச்சிவாயத்தின்மீதி நாட்களையும், அவர் மனைவி வாழ்ந்த நாட்களையும், மனைவியின் இறுதி நாட்களில் அவளைரங்கப்பர் வென்றதை நமச்சிவாயத்திடம் கூறும் நொடியையும், அதற்கான காரணம் என வளர்த்துச்செல்கிறேன். இப்படி வளர்ப்பது தானே அக்கதையிலிருந்து வெளியே வரும் வழி.

இக்கதையில் எனக்கு மிகவும் பிடித்த இடங்கள் இரண்டு,

“ஆனால். அர்ஜுனன் அத்தனை பெண்களையும் வென்றது அவன் பெரிய வில்வீரன் என்பதனால் அல்ல.அவன் அஸ்தினபுரியின் சக்ரவர்த்தியின் தம்பி என்பதனால்தான். அதை ரங்கப்பர்தான் ஒருமுறைசொன்னார்” என அந்த நிகழ்ச்சியைப் பற்றி ஆரம்பிக்கிறார் நமச்சிவாயம், ஆனால் அவ்வரிகளைமீண்டும் உரையாடலில் சொல்லவில்லை. இப்படி ஒரு வரியில் அந்த உரையாடலுக்குள் கொண்டுசெல்வதால் கதைக்குள் எளிதாகப் பயணம் செய்ய முடிகிறது. ஓர் ஆணின் வலிமையும் தாண்டி அவனின்புறவயமான வளமே ஓர் ஆணிடம் தன்னை ஒப்புக் கொடுக்க வைக்கிறது என ரங்கப்பரின் மனஓட்டத்தை ஒரே வரியில் வாசகனிடம் வெளிப்படுத்திப் பின் ஒரு விரிவான உரையாடலுக்குக் கூட்டிச்செல்வது கவர்ந்தது. ஏனோ இந்தப் பகுதியை கடக்கும் பொழுது, தி.ஜா.வின் ‘அம்மா வந்தாள்’இல்குருகுலத்திலிருந்து வரும் அப்பு, தன் தம்பியின் உருவத்தையும், சிவசுவின் உருவ ஒற்றுமையையும்கண்டு கொள்ளும் தருணம் ஞாபகம் வந்தது. வாசகனை ஓங்கி ஒரு அடி அடித்துவிட்டு, பின் மெதுவாய்கை பிடித்து அழைத்துச் செல்வது போல் இவை எனக்குத் தோன்றியது.

பின் இந்த வரிகள் “ஆண்களுக்கு ஆசையைவிட ஆணவம்தான் அதிகம். ஒரு இடத்தில் தோற்றுப்போகாமல் இருப்பதற்காகக் கொல்லவும் சாகவும்கூடத் தயாராக இருப்பார்கள். தான் எங்கும்தோற்காதவன் என்று நினைக்கும் ஆணவத்திற்காக எதை வேண்டுமானாலும் இழப்பார்கள்.” மறுபடி,மறுபடி சொல்லிக் கொள்கிறேன் இவ்வரிகளை.


நன்றி,

ஸ்ரீ சங்கர் கிருஷ்ணா


***


அன்பிற்கும், மதிப்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு,


நலம் என எண்ணுகிறேன். வெற்றி சிறுகதை பற்றிய என்னுடைய விமர்சனம்.


ஆணின் ஆணவத்திற்க்கும், பெண்ணின் கற்ப்புக்கும் போட்ட முடிச்சு இந்த சிறுகதை. கதை மிக கூர்மையாக இருந்ததால், படித்து முடிக்காமல் விலக முடியவில்லை. சில வார்த்தைகளின் மூலம் எளிதாக காலத்தையும், மனிதர்களின் வர்ணனையும் காட்டி, கதையை வாசனுக்குள் நிகழ வைத்துவிடுவது கதையின் மிக முக்கியமான வெற்றி. அதை ஜெ அவர்கள் மறுபடியும் நிகழ்த்திக் காட்டியிருக்கிறார்.


பெண்ணின் கற்ப்பு என்பது ஆண் ஆணவத்தின் உச்சிக் குடுமி. அதற்க்கு கதையின் நாயகன் எஸ்.ஆர்.என் போல பல காரணங்களை நாம் கற்ப்பித்துக் கொள்ளலாம். பெணணைக் கவர்தல் என்பது ஆணின் வெற்றி அல்லது தோல்வி என்றே நாம் நாடோடி காலத்திலிருந்து கருதிக்கொள்கிறோம். அது வெவ்வேறு காலகட்டத்தில் பல மாறுதல்கள் அடைந்து இங்கு மற்றோரு வழியில் வெளிப்படுகிறது.


கிளப்பில் நாயகன் போதையில் உளர ஆரம்பித்து, அந்த உரையாடல் அவன் ஆணவத்தை தொட்டதும், சுளுக்கென்று உரைத்து சவால் விடுகிறான். சவால் விட்ட பிறகு, தான் பயப்படுகிறேனா என அவன் தன்னையே கேட்டும் கொள்கிறான். ஆனால் வெளி உலகுக்கு தன்னால் அதைக் காட்டிக்கொள்ள முடியவில்லை. அது ஆணின் சுபாவம். இந்த அலைச்சலில் தொடங்குகிறது கதையின் முடிச்சு.


கதை முழுவதும் இந்த இரட்டை நிலையே அவனிடம் காணக்கிடைக்கிறது. உண்மையிலே அவள் மனைவியின் கற்ப்பு அவனுக்கு முக்கியமா? என்ற கேள்வியை முன் வைக்கும் போது அது கேள்விக்குறியே ஆகிறது.


நாச்சிமுத்து கவுண்டர் சொன்ன ஆலோசனையை அவனால் ஏற்க்க முடியவில்லை. காரணம் எல்லோர் முன்னிலையிலும் தான் தோற்க்க கூடாது என்பதுதான் முக்கியமாகப்பட்டதே ஒழிய மனைவியின் கற்ப்பு என்பது அதன் காரணமானவே காகப்பட வேண்டிய ஒன்று. ஒருவேளை அவன் ஆணவத்திற்க்கு எதுவும் பங்கம் இல்லை என்றால் அவன் உள்ளுர மனம் இப்படியும் நினைத்துக் கொண்டது, தன் மனைவியின் கற்ப்பின் விலை ஐந்து லட்சம் என்று. உடனே என்ன கீழ்மை எண்ணம் இது என்ன தன்னை தானே திட்டியும் கொள்கிறான். பல இடங்களில் இந்த நிலையிலேயே அவன் அலைகழிக்கப்படுவது கதையில் முடிச்சுகளை இறுக்கிக்கொண்டே வந்தது.


அண்ணனின் ஆணவம், தன் தம்பி தன்னை விட பெரியவன் ஆகிவிடுவானோ என்ற இடத்தில் பாதிக்கப்படுகிறது. தம்பியின் ஆணவம் சீண்டப்படுவது கண்டுகொள்ளாத அண்ணனின் பிள்ளைகளால், படிப்பைச் சொல்லி தன்னை கீழ்மைப்படுத்தும் அண்ணனால், பழைய பாலில் டீப் போடும் அண்ணியால். நாயகனோ தான் பென்ஸ் கார் ஆடர் வாங்கிவிட்ட தகவலைச் சொல்லி அவர்கள் ஆணவம் சீண்டப்படுவதை உள்ளுர இரசிக்கிறான். இந்த உலகமே ஆணவத்தின் விளையாட்டு. யார் வெற்றி பெறுகிறார்கள் என்பது வாழ்வா சாவ பிரச்சனை. ஒருவேளை எஸ்.ஆர்.என் தோற்றிருந்தால் நிச்சயம் தன் மனைவியை வெட்டிவிட்டு தானும் தூக்கில் தொங்கியிருப்பான். பல வருடங்களுக்கு பிறகு தனக்கு கிடைத்த ஐந்து லட்சம் பரிசின் இரகசியம் பற்றித் தெரிந்தும் அவன் சாகவில்லை.


அப்படியானால் வென்றது யார்? என்ற கேள்வி எழும். கதையின் முடிச்சு வென்றது ஆணவமே என அவிழ்க்கப்படுகிறது, காரணம் தான் தோற்க்கவில்லை என உலகிற்க்கு அவன் சூதில் வென்றதன் மூலம்,நிறைய சம்பாதித்தது மூலம் நிரூபிக்கிறான்.


அவள் மனைவி கற்பை இழந்தது ஒரு வகை குறீயிடாக கொள்ள வேண்டியிருக்கிறது. அது வாழ்க்கையின் தோல்வியை காட்டும் குறீயிடு. நாயகன் வாழ்க்கையில் தோற்று, ஆணவம் என்னும் போட்டியில் வென்றிருக்கிறான்.


அன்புடன்,

மகேந்திரன்.


***


வெற்றி [சிறுகதை]


***



தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 03, 2017 11:31

‘வெண்முரசு’ – நூல் பதினான்கு – ‘நீர்க்கோலம்’ – 11

10. படைகொளல்


flowerவிதர்ப்பத்தின் இளவரசி தமயந்திக்கு மணத்தன்னேற்பு அறிவிக்கப்பட்டிருக்கும் செய்தியை பிற மன்னர்கள் அறிவதற்கு முன்னரே நளன் அறிந்தான். அவனிடம் அதை சொன்ன ஒற்றன் “திடீரென்று எடுக்கப்பட்ட முடிவு, அரசே. அன்றைய நாள் அந்தி வரை அப்படி ஓர் எண்ணமே அரண்மனையில் இருக்கவில்லையென்று உறுதியாக நான் அறிவேன். அந்தி மயங்கியபின் ஏதோ செய்தி வந்திருக்கிறது. முன்னிரவில் அரசரை சென்று பார்த்து ஓலையில் இலச்சினை வாங்கி உச்சிக்குள் ஓலைகளை அனுப்பிவிட்டார்கள். மகதருக்கு அனுப்பப்பட்ட ஓலையைத்தான் நான் பார்க்க முடிந்தது. அத்தருணத்திலேயே நான் கிளம்பி இங்கு வந்தேன்” என்றான்.


தன் தனியறையில் சாளரத்தருகே நின்றிருந்த நளன் சில கணங்கள் வெளியே தெரிந்த கோதையின் பெருக்கை நோக்கி நின்றபின் “அதில் ஐயமேதும் இல்லையல்லவா?” என்று கேட்டான். “ஏனென்றால் அரசாடலில் அப்படி பல நுண்சூழ்ச்சிகள் நிகழ்வதுண்டு. அது எவரையோ ஏமாற்றுவதற்கான முயற்சியாக இருக்கலாம். ஒருவேளை நம்மை கூட.”


ஒற்றன் “இல்லை” என்றபின் புன்னகைத்து “அத்தகைய நுண்ணிய அரசாடலைச் செய்யும் திறன் கொண்ட எவரும் குண்டினபுரியில் இன்றில்லை” என்றான். நளனும் புன்னகைத்து “நன்று” என்றபின் திரும்பிவந்து மஞ்சத்தில் அமர்ந்து கால் நீட்டி உடல் தளர்த்தி கைகளை மார்பில் கட்டிக்கொண்டான். எண்ணம் பெருகியொழுக தலைதாழ்த்தி அரைவிழி மூடி தன்னுள் மூழ்கினான்.


அவன் முன் நின்றிருந்த ஒற்றன் நெடுநேரம் அவனை நோக்கி நின்றபின் மெல்ல கனைத்து “நாம் செய்வதற்கொன்றே உள்ளது, அரசே” என்றான். “சொல்!” என்றான் நளன். “இளவரசி உங்கள்மேல் காதல் கொண்டிருக்கிறார் என்பதில் ஐயமில்லை. இன்றே கிளம்பினால் சிறியதோர் புரவிப்படையுடன் சென்று இளவரசியை கவர்ந்துகொண்டு வரமுடியும். நம்முடன் அவர் கிளம்பி வருவார் என்பதிலும் எனக்கு எண்ணமாற்றில்லை.”


நளன் “ஆம். முதலில் எனக்கும் அதுவே தோன்றியது. ஆனால் பெண் கவர்தல் என்பது நேரடியாகவே போருக்கான அறைகூவல்” என்றான். “இன்று கலிங்கமும் மாளவமும் மகதமும் இணைந்து படைகொண்டு வந்தால் நிஷதநாடு இரண்டு நாட்களுக்கு மேல் போர்முனையில் நின்றிருக்க முடியாது” என்றான் “அனல்குலத்து ஷத்ரியர் அனைவரும் தங்கள் எதிரிகள் என்பதை ஷத்ரியர் நன்கறிவார்கள். தங்கள் பூசல்களை விடுத்து ஒருங்கிணைய முடியாததனால்தான் நம்மை அவர்கள் விட்டுவைத்திருக்கிறார்கள். இது அவர்கள் ஒருங்கிணைவதற்கான உகந்த தருணமாக நம்மால் அளிக்கப்படலாகாது.”


“ஆனால்…” என்று அமைச்சர் கருணாகரர் ஏதோ பேசத் தொடங்க “மணத்தன்னேற்பு நிகழட்டும். அதில் இளவரசி என்னை மாலையணிவித்து வேட்பாளென்றால் அதன் பின்னர் அதன்பொருட்டு என்னிடம் போருக்கு முரசறைய நூல்நெறி ஒப்பாது” என்றான் நளன். “அத்துடன் கலிங்கமும் மாளவமும் மகதமும் இன்று அவர்களைவிட தொன்மையான ஷத்ரியர்களிடம் மோதிக்கொண்டிருக்கின்றனர். இவர்களை இன்று எழுந்து வந்தவர்கள், தொல்நெறியறியாதவர்கள் என்று பண்டைய பதினாறுகுடி ஷத்ரியர்கள் ஏளனம் செய்கிறார்கள். அதன் பொருட்டு இவர்கள் அந்தணர்குடிகளை தங்கள் அரசுகளில் உருவாக்கி வேள்விகளை நாளும் நிகழ்த்துகிறார்கள். தாங்கள் செய்யும் ஒவ்வொன்றும் அந்தணர் அவையின் ஒப்புதல் பெற்றே என்று அனைத்து அறிவிக்கைகளிலும் குறிப்பிடுகிறார்கள். மணத்தன்னேற்பில் பெண்ணை கொண்டுசென்ற ஒருவன்மேல் அதன்பொருட்டு போர்தொடுக்க அந்தணர் அவைகள் ஒருபோதும் ஒப்பா.”


குழப்பத்துடன் “ஆம்” என்றார் கருணாகரர். தானும் மெல்லிய குழப்பத்துடன் எழுந்து அறைக்குள் கைகளை பின்னால் கட்டியபடி நடந்து சாளரத்தின் வழியே வெளியே சற்று நேரம் நோக்கி நின்று திரும்பி “ஆம். வேறு வழியில்லை. நாம் மணத்தன்னேற்பில் பங்குகொள்வதே ஒரே வழி” என்றான். கருணாகரர் “நமக்கு அழைப்பில்லை” என்று சற்றே சலிப்புடன் சொன்னார். “அவ்வழக்கம் இல்லை. விதர்ப்பம் இன்றுவரை நம்மை ஓர் அரசாக எண்ணியதே இல்லை. ஆனால் நூல் நெறிகளின்படி அழைக்கப்படாமலும் மணத்தன்னேற்பில் கலந்து கொள்ளலாம். முடிசூடி கொடியேந்திய பெருங்குடி ஷத்ரியர்களை மட்டுமே முறைப்படி அழைக்க வேண்டுமென்பது வழக்கம். மணத்தன்னேற்புகளில் அரக்கரும் அசுரரும்கூட கலந்து கொள்ளலாம் என்று பண்டைய நூல்கள் சொல்கின்றன” என்றான் நளன். “நாம் செல்வதற்கு நூலொப்புதல் உண்டு.”


பின்னர் தனக்குத்தானே என “நாம் செல்வதை அவர்கள் எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்று தெரியவில்லை. நான் அவள் உள்ளத்தில் இடம் பெற்றது இன்னமும் விதர்ப்பனுக்கு தெரியாது அல்லவா?” என்றான் நளன். “விதர்ப்பத்தில் மக்களிடையே அந்தப் பேச்சு சில நாட்களாக இருக்கிறது. அமைச்சரும் அரசரும் அதை அறியாதிருக்கமாட்டார்கள்” என்றான் ஒற்றன்.


நளன் நகைத்து “ஆனால் நான் மிகச் சிறியவன் என்பதனாலேயே அவர்கள் அதை நம்பமாட்டார்கள். வீணாக விரும்பி ஏளனத்துக்குள்ளாகும் பொருட்டே நான் நண்ணுவதாக எண்ணுவார்கள். அவ்வெண்ணமே நமது காப்பு. கலிங்கனும் மகதனும் மாளவனும் வங்கனும் யானைக்காலடியில் ஊரும் எறும்பென்று நம்மை கருதுவதனாலேயே நாம் எதிர்ப்பற்றவர்கள். நாம் நச்சுநா கொண்டு கடிக்கும்வரை விழிகளுக்குத் தெரியாத நாகம்” என்றான்.


அவனுக்குள் திட்டம் உருக்கொள்ள குரல் எழுந்தது. “அணிபடைகளும் அகம்படியும் இல்லாமல் எளிமையாக மணத்தன்னேற்புக்கு செல்லலாம். மணத்தன்னேற்பில் பங்கெடுப்பதை நிகழ்வுக்கு சில நாழிகைக்கு முன்னர் அறிவித்தால் போதும். அரசர்களுக்கு அடிபணியும் பரிசுகளுடன் சென்று அனைவரையும் ஒருமுறை கண்டு வணங்கிவிட்டால் நாம் அரசவையில் அமரும் வாய்ப்புக்கென வந்த எளியோர் என எண்ணுவார்கள் விதர்ப்பர். நிஷாதர்கள், அசுரர்களின் சிறுகுடிகள் அவ்வாறு மணிமுடி சூடுதல் முதலிய ஷத்ரியப் பெருவிழவுகளுக்குச் சென்று அவையமர்ந்து மீள்வது வழக்கம்தான். ஓர் அரசவையில் அமர்தல் தங்களவர்கள் நடுவே சிறு அரசகுடியென மதிப்பு கொள்ளுதல்தான் என்று அவர்கள் அறிந்திருக்கிறார்கள்.”


“ஆம். உண்மையில் ஒருமுறை அப்படி சென்று வருவது அவர்களின் குடிகளையும் அவர்களின் எதிர்குலங்களையும் அவர்கள் அரச ஆதரவுகொண்டவர்கள் என எண்ணவைக்கிறது. ஒரு நிஷத குடித்தலைவன் சென்று வங்கனையும் கலிங்கனையும் மகதனையும் கண்டு பரிசளித்து வணங்கி மீள்வதே பிற குடிகளுக்குமேல் ஒரு கொடி உயரத்தை அளிக்கிறது” என்றார் கருணாகரர். “ஆம். அதன் பொருட்டே நாம் செல்கிறோம். அவ்வாறே அவர்கள் எண்ணட்டும். அதுவே நமது வழியென்றாகட்டும்” என்றான் நளன்.


flowerமறுநாள் அமைச்சர்கள் கூடிய அவையில் அவன் தன் திட்டத்தை சொன்னபோது அமைச்சர்களும் படைத்தலைவர்களும் ஒருங்கே எழுந்து எதிர்ப்புக் குரலெழுப்பினர். படைத்தலைவன் சிம்மவக்த்ரன் “என்ன செய்கிறோமென்று எண்ணிச் சூழ்ந்துள்ளீர்களா, அரசே? நாம் செல்வது எளிது. அங்கு மணத்தன்னேற்பில் பலரில் ஒருவராக சென்று நிற்பதும் இயல்வதே. ஒருவேளை விதர்ப்ப இளவரசி தங்கள் கழுத்தில் மாலை சூட்டவும் கூடும். ஆனால் அதே நூல்நெறிகளின்படி அங்கு மணத்தன்னேற்புக்கு வந்திருக்கும் அரசர்கள் அனைவருக்கும் குண்டினபுரியின் எல்லை வரை உங்களை துரத்தி வரவும் கொன்று இளவரசியை சிறைபிடிக்கவும் உரிமை உண்டு. அந்நகரியின் எல்லைக்குள் உங்களை எவர் வேண்டுமென்றாலும் போருக்கு அழைக்கலாம்” என்றான்.


நளன் “மெய், அங்கிருந்து மிக விரைவாக நகரெல்லையைவிட்டு நீங்குவதற்கான ஒருக்கங்களை செய்த பிறகே நான் மணத்தன்னேற்புக்கு சென்று நிற்கவேண்டும்” என்றான். ஒற்றன் “குண்டினபுரியின் தெருக்கள் மிகக் குறுகியவை. சேற்றுப்பரப்புக்குமேல் மரத்தரை அமைந்தவை. வரதாவின் கரையிலமைந்த அந்நகரம் ஒரு குன்றுமேலிருந்து பலபடிகளாக கீழிறங்கி நதிக்கரைச் சதுப்பு வரை வரும் அமைப்பு கொண்டது. தெருக்களெல்லாமே படிக்கட்டுகள்தான். தேர்களில் விரைய அங்கே இயலாது. புரவிகள் மட்டுமே பாயமுடியும்” என்றான்.


NEERKOLAM_EPI_11


நளன் முகம் மலர்ந்து “ஆம், அதைத்தான் நானும் எண்ணினேன். அந்நகரின் வரைபடத்தை பலமுறை பார்த்தேன். அந்நகரில் எங்கும் அகன்ற தேர்ச்சாலை இல்லை. வரதாவின் பெருக்கினூடாகவே அவர்கள் தங்கள் வணிகப்பயணங்களை நிகழ்த்துகிறார்கள்” என்றான். “நகரை எவரும் தொடராமல் விரைந்து கடக்கும் வழி ஒன்று உள்ளது” என்றபின் எழுந்து மான்தோல் சுருளை விரித்து நகரின் வரைவு ஒன்றை காட்டினான். “அந்நகரின் அனைத்துத் தெருக்களும் படிக்கட்டுகளைப்போல் உள்ளன. கலிங்கர்களுக்கோ மகதர்களுக்கோ படிக்கட்டுகளில் துணிந்து தாவும் புரவிகள் இல்லை. நமது புரவிகளை நாம் தாவுவதற்கு பயிற்றுவித்திருக்கிறோம்.”


“அங்குள்ள மிகச் சிறந்த படிக்கட்டு ஒன்றை நான் காட்ட விழைகிறேன்” என்று நளன் சுட்டிக்காட்டினான். “அங்குள்ள இல்லங்கள் அனைத்தும் பட்டைக்கற்களை கூரைகளென அமைத்து அவற்றின்மேல் களிமண் நிறைத்து மலர்ச்செடிகள் நட்டு வளர்க்கப்பட்டவை. படிகளாக இறங்கும் பூங்காக்களால் ஆனது அந்நகர் என்று கவிஞர் பாடுகிறார்கள். அக்கூரைகள் மேல் பாய்ந்தே நாம் நகரை கடக்கமுடியும். அவர்களின் காவல்மாடங்கள், வில்லவர்மேடைகள் அனைத்தும் தெருக்களையே இலக்குகொண்டவை. கூரைமேல் பாய்பவர்களை நோக்கி வேலோ அம்போ தொடுக்க அவர்களுக்கு அமைப்பே இல்லை.”


அந்தக் காட்சி உள்ளத்திலெழுந்து அவர்களனைவரையும் ஓசையழிந்து அமையச்செய்தது. நகர்க்காவல் அமைச்சர் சுக்தர் “ஆம், நல்ல வழி அதுவே” என பொதுவாக சொன்னார். ஆனால் அது நளனால்கூட எளிதில் இயல்வதல்ல என்று தோன்றியது அவருக்கு. “குண்டினபுரிக்குத் தெற்கே உருளைக்கற்கள் மட்டுமே நிறைந்த பாதை உள்ளது. அதனூடாக நாம் வருவோமென்றால் எந்தப் புரவிப்படையும் நம்மை தொடர இயலாது” என்றான் ஒற்றன். “ஆம். அதுவே நமது வழி” என்று நளன் சொன்னான். பேச்சு முடிந்தது. எவ்வகையிலோ அது நிகழ்ந்துவிடும் என்னும் எண்ணம் அனைவருக்கும் எழுந்தது. எதிர்காலம் நிகழத்தொடங்க அவர்கள் அமைதியில் விழிநிலைத்து அமர்ந்திருந்தனர்.


மெல்ல அசைந்து கலைந்த அமைச்சர் கருணாகரர் “தாங்கள் மணமகனாக அவை நிற்கையில் உடைவாள் தாங்கி அருகே நிற்க வேண்டியது யாரென்பதையும் இப்போதே முடிவு செய்துகொள்ளலாம். நமது குடிகளுக்குள் பின்னர் அது ஒரு பேச்சென்று ஆகவேண்டாம்” என்றார். “ஏனென்றால் இது ஒரு பெருநிகழ்வு. இது சூதர்களால் பாடப்படும். தொல்கதையாக நம் குடிகளில் நிலைகொள்ளும். உங்களுக்கு இணையாகவே அவரும் பாடப்படுவார்.” பின்னர் தாழ்ந்த குரலில் செயற்கையான இயல்புடன் “எண்ணியிராது ஏதேனும் நிகழ்ந்தால் உங்கள் மைந்தர் அகவை எய்துவது வரை அவரே அரசுப்பொறுப்பேற்கவேண்டும் என நீங்கள் கருதுவதாகவும் அதற்கு பொருளுண்டு” என்றார்.


நளன் திரும்பி நோக்க இளைய அமைச்சரான நீரவர் “உடன்குருதியினன் உடைவாள் தாங்க வேண்டுமென்பது நெறி” என்றார். நளன் “பிறகென்ன, என் இளையோன் புஷ்பாகரன் உடைவாள் ஏந்தட்டும்” என்றான். அவர்கள் முகங்களில் மிகச் சிறிய மாறுதலொன்று வந்தது. கருவூல அமைச்சர் ஸ்ரீதரர் “நன்று! அதுவே முறை” என்றார். பின்னர் அதே குரல் தொடர “தங்கள் தந்தைக்கு நிஷதர்களின் பன்னிரு குடிகளின் துணைவியரில் பிறந்த மைந்தர்களில் அவரே மூத்தவர். ஆனால் அவர் காளககுடியைச் சேர்ந்தவர் என்பதை மறக்க வேண்டியதில்லை” என்றார்.


அவரை கூர்ந்து நோக்கி நளன் “நீங்கள் சொல்ல வருவதை உங்கள் முழு எண்ணத்துடன் புரிந்துகொண்டேன், அமைச்சரே” என்றான். “ஆம். தாங்கள் உணர்ந்துவிட்டீர்கள் என்று எனக்குத் தெரிகிறது. ஆனால் பிறர் உணர நான் சொல்ல வேண்டியுள்ளது” என்றார் அமைச்சர். “நிஷத குடியில் முதன்மையானது நமது குடி. இந்நகரம் தோன்றிய காலம் முதல் நாமே ஆண்டுவருகிறோம். பிற குடிகள் நம் தலைமையை ஏற்றுக்கொண்டவை.” அவர் சித்தம் பிழையாக சொல்லிவிடலாகாது என எண்ணி எண்ணி சொல்லெடுப்பது தெரிந்தது. “பாரதவர்ஷம் முழுக்க குடித்தொகைகளால் உருவான நாடுகளில் எண்ணிக்கையும் வடிவ அளவும் வல்லமையும் மிகுந்த முதன்மைக் குடியே ஆட்சி அமைப்பது வழக்கம். அவர்களுக்கு என்றும் எதிர்நிலையாக அமைவது இரண்டாவது பெருங்குடியே. அது இயல்பு. ஏனென்றால் அறமும் உணர்வுகளும் தனிமனிதர்களுக்குரியவை. குடிகளும் குலங்களும் ஆற்றலையும் வெற்றியையும் மட்டுமே நாடுகின்றன.”


“அந்த எதிர்ப்பு இருக்குமென்பதை உணர்ந்து அதன் பொருட்டே ஆட்சி செய்யும் முதற்குடியின் அரசர்கள் இரண்டாவது பெருங்குடியின் பெண்ணையே இணையரசியாக ஏற்றுக்கொள்கிறார்கள். தன் குடியிலிருந்தே பட்டத்தரசியை கொள்கிறார்கள். நம் அரசரும் அவ்வாறே செய்தார். மணிமுடி நம்  குடிக்குள் இருக்கையில் பிற அனைத்திலும் அரண்மனையிலும் அவையிலும் படையிலும் இரண்டாமிடம் அக்குடிக்குரியது” என ஸ்ரீதரர் தொடர்ந்தார்.


“உண்மையில் இப்படி இரண்டாமிடம் அளிப்பதே அவர்களை விழைவுகொண்டவர்களாக ஆக்குகிறது. இரண்டாமிடத்தில் அமைந்து அவர்கள் ஆட்சியின் ஆற்றலை, அதன் இன்பங்களை, அதன் வழியாக உருவாகும் மதிப்பை அறிந்துகொண்டிருக்கிறார்கள். அயல்நாட்டு அரசர்களுக்கும் பெருவணிகர்களுக்கும் அவர்களும் அறிமுகமாகிறார்கள். சூதர்கள் அவர்களையும் புகழ்கிறார்கள். அந்தச் சுவை ஒரு துளி அறிந்தபின் ஒழிவது இயலாது.”


“ஆனால் இரண்டாமிடத்தை அவர்களுக்கு அளிக்காமல் நாம் ஆளவும் முடியாது. ஆகவே சிம்மத்தை நம் குருதியையே கொடுத்து பழக்கி நாளும் உடன் வைத்திருப்பவர்களாகிறோம்” என்றார் ஸ்ரீதரர். “அரசே, அதை வெல்ல நாம் செய்வதற்கிருப்பது ஒன்றே. நம் எதிரியை அவன் ஆற்றலை பிரித்து நம்முடனேயே வைத்திருப்பது. காளககுடியை எட்டு படைப்பிரிவுகளாக்கி நம் எல்லையில் நிறுத்தியிருக்கிறோம். இன்றுவரை அக்குடியிலிருந்து அரசருக்கெதிராக ஒரு குரல்கூட எழுந்ததில்லையென்றாலும் அவர்களின் மூத்தோர் மன்றுகளில் என்றும் நமக்கு இரண்டாமிடமா என்றொரு குரல் எப்போதும் எழுவதை நாம் அறிவோம்.”


“புஷ்பாகரனை நாம் இப்பின்னணியில் நோக்கவேண்டும். புஷ்பாகரன் தங்களைப்போலவே வீரர் என்று அக்குடி உணரத்தொடங்கிய காலம் முதல் அக்குரல் வலுத்து வருகிறது. அவர் வீரமும் அறிவும் தமையனாகிய உங்களால் பயிற்றுவிக்கப்பட்டதென்பதை இன்று நாம் அவர்களிடம் சொல்ல முடியாது. அது அவர் முதுமூதாதை செங்கானகத்துத் துஞ்சிய காளகர் கோசிகரின் ஆற்றலின் குருதித்தொடர்ச்சி என அவர்கள் நம்புகிறார்கள்.”


அனைவர் முகங்களும் அச்சொற்களுக்கு ஆதரவாக மாறியிருந்தன. “ஆனால் அவனை நானறிவேன். அயோத்தியின் ராமனுக்கு இளவல்போல அவன் எனக்கு ஆட்பட்டவன்” என்றான் நளன். “உண்மை. இன்று அவரது உள்ளம் அவ்வண்ணமே உள்ளது. ஆனால் அது எப்போதும் அவ்வண்ணம் இருக்கவேண்டுமென்பதில்லை. அவ்வாறு மானுட உள்ளங்கள் மாறாநிலை கொண்டிருந்தமைக்கு வரலாற்றுச் சான்றுகளேதும் இல்லை” என்றார் அமைச்சர் ஸ்ரீதரர். “அவர் குடி அவரை சூழ்ந்துள்ளது. அவர்கள் பேசும் சொற்களே அவர் எண்ணமாக மாறி உள்ளே நிறைகிறது. உள்ளும் புறமும் என சூழ்ந்திருப்பவை உண்மையில் நம் சுற்றத்தின் எண்ணங்களே.”


“மீன் நீரை எதிர்த்து போராட முடியுமா? சில மீன்களால் இயலக்கூடும். அது அத்தனை எளிதல்ல, அரசே. ஓர் அரசன் தெய்வச்சொல்போல தன்னுள் மீண்டும் மீண்டும் சொல்லிக்கொள்ள வேண்டிய நுண்சொல் ஒன்று ‘மனிதர்கள் ஆற்றல் அற்றவர்கள், மனிதர்கள் எங்கோ ஒரு முனையில் முழுமையாக தோற்பவர்கள்’. எப்போதும் நின்று தெய்வங்களுக்கு இணையாக தலைதூக்கி எழும் மானுடர் உண்டு. அவர்கள் தலைமுறைகளுக்கு ஒருவர் மட்டுமே.”


நளன் “ஆனால் தம்பி என அவன் இருக்க பிறிதொருவன் வாள் சூடுவது அவனை சிறுமைப்படுத்துவது போலல்லவா?” என்றான். “ஆம், அப்படி எண்ண வாய்ப்புள்ளது. எண்ணாவிடிலும் அதை ஒரு ஐய விதையாக அவர் உள்ளத்தில் சிலர் தூவவும் கூடும்” என்றார் அமைச்சர் ஸ்ரீதரர். “நமது எல்லையில் கிழக்கிலிருந்து கலிங்கத்துப் படைகள் வந்து தாக்கக்கூடும் என்ற எண்ணத்தை உருவாக்குவோம். புஷ்பாகரன் தலைமையில் படையொன்றை கிழக்கெல்லையை நோக்கி அனுப்புவோம். எதிர்பாரா செய்தி கிடைத்து உடன் முடிவெடுத்து விரைவாக கிளம்பிச் செல்வதுபோல் நாம் விதர்ப்பத்துக்கு செல்வோம். அங்கு பிறிதொரு துணையின்றி நின்றபொழுதில் அப்போது தோன்றியதென நம் படைத்தலைவர்கள் எவரேனும் வாளேந்தி உங்கள் அருகே நிற்கட்டும்” என்றார் ஸ்ரீதரர்.


“அவ்வாறு வாளேந்துபவன் ஓர் எளிய படைத்தலைவனாகவே இருக்கவேண்டும். அங்கே நிகழும் போரில் அவன் கொல்லப்படவும் வேண்டும். அவனுக்கு நாம் நடுகல் நாட்டி படையலிட்டு நம் பெருவீரன் என கொண்டாடுவோம். ஆனால் அங்கு சூடிய வாளுடன் அவன் அரசுகோரி ஒருபோதும் வரக்கூடாது” என்றான் சிம்மவக்த்ரன். அவர்கள் அதை முன்னரே எண்ணித்தெளிந்திருந்தனர் என்பதை அமைச்சர்களின் முகக்குறிகள் காட்டின.


நளன் அமைச்சரை நோக்கியபடி சில கணங்கள் அமர்ந்திருந்தான். பின்பு புன்னகைத்து “புஷ்பாகரனாக நான் இருந்தால் இச்சூழ்ச்சியை உணர்ந்துகொள்வேனா என்று எண்ணினேன். உடனடியாக தெளிவாக புரிந்துகொள்வேன் என்று தோன்றியது. பின்னர் இதையொட்டிய என் உணர்வுகள் என்னவாக இருக்கும் என்று சூழ்ந்தேன். மூத்தவனால் நான் கைவிடப்படுகிறேன் என்றே எண்ணுவேன். ஐயத்திற்குரியவனாகிறேன் என உணர்பவனே முதல் எதிரியாகிறான். அது அவன் ஆண்மையை, நேர்மையை, அவன் கொண்ட அன்பை சிறுமைசெய்வது. உச்சவெறுப்பென்பது புறக்கணிக்கப்பட்ட அன்பின் மாற்றுரு.”


“நான் அவ்வெண்ணத்தை அவனுக்கு கொடுக்கலாகாது. அவன் எனக்கு இலக்குவனென்றால் நான் அவனுக்கு ராமனாக இருந்தாக வேண்டும். அவனே வந்து எனது உடைவாளை தாங்குக!” என்றான் நளன். அவன் இறுதியாக சொல்லிவிட்டான் என்னும் எண்ணம் அனைவருக்கும் எழ அவர்கள் தலைவணங்கினர். நளன் எழுந்து “எனக்குரிய புரவியை தெரிவுசெய்ய நானே வருகிறேன். நம் வெற்றி நாம் தெரிவுசெய்யும் புரவியிலேயே உள்ளது. விதர்ப்பினிக்கும் நிகரான ஒரு புரவி தேவை” என்றான். “அவர்கள் தங்கள் அளவுக்கு புரவித்திறன் கொண்டவர்களா என்று தெரியவில்லை” என்றார் அமைச்சர். “என் திறன்களை அவள் பெற்றுக்கொள்வாள். அதற்கான தருணம் அது” என்றான் நளன்.


அவர்கள் செல்வதற்காக எழுந்தபோது அமைச்சர் கருணாகரர் “பிறிதொன்றும் நான் சொல்லவேண்டும்” என தயங்கினார். “நாம் இந்திரனை நிறுவியது ஒரு அரசுசூழ்தலாகவே. உண்மையில் நம் தெய்வம் கலியே. கிளம்பும்போது நம் தெய்வத்திற்கு பலியும் பூசனையுமிட்டு செல்வதே உகந்தது.” நளன் “வேண்டியதில்லை. நாம் செய்வன நம் உள்ளத்தையும் மாற்றியமைக்கின்றன. வென்று எழுந்து நிற்கும் இந்திரனை வழிபட்டபின் கருமைகொண்டு ஒடுங்கிய கலியை வணங்க என் உள்ளம் ஒப்பவில்லை. நாம் கலியிலிருந்து விடுபட்டாகவேண்டும், அமைச்சரே. அன்றேல் ஒருபோதும் நம்மால் மெய்யான ஷத்ரியர்களாக ஆகமுடியாது. பரசுராமர் நமக்களித்த செய்தி அதுவே” என்றான்.


“ஆனால் கலி…” என சொல்லவந்த கருணாகரரை கையமர்த்தி “கலிக்குரிய பூசனைகள் செய்யப்படட்டும். நான் வழிபட முடியாது. இந்திரனை வணங்கிவிட்டு கிளம்புவதே என் திட்டம்” என்றான் நளன். தலைவணங்கி “அவ்வண்ணமே ஆகுக, அரசே!” என்றார் கருணாகரர்.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-9
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-10
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-8
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-7
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-6
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-5
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-4
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 48
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 57
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 53
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 7
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 03, 2017 11:30

June 2, 2017

குமரகுருபரன் –விஷ்ணுபுரம் விருது சபரிநாதனுக்கு

sapari


 


2017 ஆம் வருடத்திற்கான குமரகுருபரன் –விஷ்ணுபுரம் இலக்கிய விருது கவிஞர் சபரிநாதனுக்கு வழங்கப்படுகிறது. இன்று கவனிக்கப்படும் இளங்கவிஞரான சபரிநாதன் ஏற்கனவே எழுதிய தேவதச்சன் கவிதைகளைக்குறித்த நீண்ட ஆய்வுக்கட்டுரை வாசகர்களின் கவனத்திற்கு வரவேண்டிய ஒன்று


சபரிநாதன் கவிதைகளை குறித்த விவாதங்கள் இத்தளத்தில் தொடர்ந்து நிகழும். கவிதைகளும். அவரைக்குறித்து தமிழ்ச்சூழலில் ஒரு கவனம் உருவாகவேண்டுமென விரும்புகிறோம்


வரும் ஜூன் 10 அன்று மாலை சென்னையில் விழா.


 


 


தேவதச்சன் –சபரிநாதன் உரை


‘தேவதச்சம்’ – சபரிநாதன் -2


‘தேவதச்சம்’ – சபரிநாதன் -1


மணல்வீடு சபரிநாதன் கவிதைகள்

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 02, 2017 11:36

பட்டியல் போடுதல், இலக்கிய விமர்சனம்.

ka.na.su

செவ்வியலும் இந்திய இலக்கியமும்
கால்கள், பாதைகள்

அன்புள்ள ஜெ.,


இந்த விவாத வரிசையில் மற்றுமொரு கேள்வி.


எழுத்தை நோக்கி வரும் அனைவருமே ஏதோவகையில் லட்சிய உணர்வுகளும் அறவுணர்வுகளும் உள்ளவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்று நம்ப விழைகிறேன். சமகாலத்தின் லட்சிய அறத்தை ஒற்றை வரியில் சொல்லவேண்டும் என்றால், எளியோரை மிதியாதே என்று சொல்லலாம். சமூகத்தின் விசைகளால் புறக்கணிக்கப்பட்ட, ஒதுக்கப்பட்ட, தாழ்த்தப்பட்டவர்களை சுட்டிக்காட்டி, “இவர்களும் மனிதர்கள், இவர்களும் நாமும் ஒன்று” என்றுரைக்கும் லட்சியவாதம் அது. மார்க்சியமும் தலித்தியமும் பெண்ணியமும் எல்ஜிபிடி உரிமைக்கோரலும் கருத்தளவில் சமத்துவத்தை வலியுறுத்துகிறது. ஒரு லட்சியமாக, எல்லா விதங்களிலும் சமத்துவத்தை நோக்கிச்செல்லும் போக்கு தனிப்பட்ட முறையில் எனக்கு உவப்பளிகிறது. என்னுடைய அறவுணர்ச்சி, ஆம், இது சரி தான் என்று சமூக சமத்துவம் என்ற லட்சியத்தை ஏற்றுக்கொள்கிறது.


லட்சியவாதமாக, அரசியல் நிலைப்பாடாக, தனிமனித கோட்பாடாக இருப்பதைத்தாண்டி, இவை படைப்பெழுத்தை அளவிடும் கருவியாக மாறும் போக்கு இன்றுள்ளது. ஒரு குழுமத்துக்கு எதிராக நிகழ்த்தப்படும் சமூக அநீதியை முன்வைத்து பேசப்படுகிறது என்ற ஒரே காரணத்துக்காக ஒரு கதையோ கவிதையோ இலக்கியம் என்று கொள்ளப்படுகிறது. அப்படி ஏற்றுக்கொண்டாகவேண்டும் என்று அதை சுற்றி உருவாகிவரும் அறிவுத்தளம் தொடர்ந்து வலியுறுத்துகிறது. இந்த சமூகத்தை சேர்த்த எழுத்தாளர்கள் அதிகம் வாசிக்கப்படுவதில்லை, ஆகவே அவர்களை வாசிப்பதே அறம் என்று போதிக்கிறது. ஒரு நல்ல வாசகன் என்றால் எல்லா ஒடுக்கப்பட்ட சமூகத்தின் குரல்களாக எழுந்துவந்துள்ள படைப்பாளிகளை படித்திருக்கவேண்டும் என்று சொல்கிறது. அவ்வாறு எழுதிக்கொண்டிருக்கும் எழுத்தாளர்களையும் கவிஞர்களையும் வாசிக்கும் செயலே அவர்களுடைய சமூகத்துக்கு இழைக்கப்படும் அநீதிக்கு எதிரான புரட்சி என்றும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு வாசகன் தரும் ஆதரவு என்றும் கொள்ளப்படுகிறது.


வாசிப்பைத் தாண்டி, ஒருவேளை ஒரு வாசகர் இவ்வகையில் பிரபலமாக ஆகிவிட்ட நூல் ஒன்றை வாசித்து விமர்சித்தால், அது அந்த கருத்தியலுக்கு எதிரான பதிவாக எடுத்துக்கொள்ளப்படுகிறது. வாசகரின் தனிப்பட்ட அரசியல் கொள்கைகளும் செயல்களும் வாழ்க்கையும் எப்படியிருந்தாலும், அவருடைய அறநிலையை கேள்விக்குள்ளாக்குகிறது.


ஹரோல்ட் ப்ளூமின் தரப்பு; அதற்கு எதிர்வினை


ஹரோல்ட் ப்ளூம் இந்த போக்கை பற்றி அவருடைய புத்தகத்தில் மிகவும் விரிவாகவும் கடுமையாகவும் பேசுகிறார். அவருடைய குறை, இவ்வகை ‘பிரச்சார’, ‘கோட்பாட்டு’ எழுத்தாளர்கள் அமெரிக்க பல்கலைக்கழகங்களில் தூக்கி நிறுத்தப்படுவதும், அவர்களுடைய புத்தகங்கள் ஷேக்ஸ்பியருக்கும் டான்டேக்கும் இணையாக பாடநூல்களாக பரிந்துரைக்கப்படுகிறது என்பதே (அவர் புத்தகம் எழுதப்பட்டது 1990-ல், இன்று இந்த போக்கு வலுவடைந்துள்ளது). வயதான வெள்ளைக்கிழவர்களை தானே நூற்றாண்டுகளாக படித்து வந்துள்ளோம், அதையே ஏன் படிக்க வேண்டும் என்று அமைப்புக்கள் கேள்விகேட்கின்றன. கறுப்பின, பெண், முஸ்லீம், புலம்பெயர்ந்தோர் போன்ற சட்டகங்களுக்குள் விழும் குரல்கள் வெளியே கேட்டாகவேண்டும் என்று பெருக்கப்படுகிறது; இந்த போக்கை ப்ளூம் ரசனை விமர்சனத்தின் அடிப்படையில் கடுமையாக எதிர்க்கிறார். இவர்களுக்கு ‘School of Resentment’ என்று (சற்று கடுமையாக) பெயர்சூட்டியிருக்கிறார். உதாரணத்திற்கு பெயர்பெற்ற கறுப்பின எழுத்தாளர்களான அலிஸ் வாக்கரையும் டோனி மாரீசனையும் அவர் சாடுகிறார் (ஆனால் கறுப்பெழுத்தாளர் ரால்ப் எலிசனின் ‘இன்விசிபில் மான்’ என்ற புத்தகத்தை நல்ல படைப்பிலக்கியம் என்று பரிந்துரைக்கிறார்).


அதே நேரத்தில் ப்ளூமின் குரல் காலத்தில் கரைந்துவிட்டது என்பது தான் உண்மை. அமெரிக்காவின் சராசரி ஆங்கில இலக்கிய மாணவர்களால் இன்று ப்ளூமின் கருத்துக்கள் ஒரு வயதான வெள்ளைக்கார ஜு கிழவனின் மேட்டிமைதனத்தின் பிதற்றல்களாகவே பார்க்கப்படுகிறது. உதாரணத்துக்கு இன்று கறுப்பின எழுத்தாளர்கள் ஒடுக்கப்பட்டவர்கள் என்பதால் அவர்களினுடைய எழுத்தை அனைவரும் படிக்க வேண்டும், அவர்களுடைய குரல்கள் வெள்ளைக்கிழவர்களின் குரலுக்குச் சமமாக ஒலிக்க வேண்டும், அது தான் அறம் என்ற நிலைப்பாடே நிலவுகிறது. “இல்லை, ‘த கலர் பர்பிள்’ நல்ல எழுத்து இல்லை” என்று சொன்னால் அது இனவெறித்தனமாகவும், கறுப்பினத்தவர்களின் அனுபவ நிராகரிப்பு என்றும், ‘சொகுசான வாசிப்பை விரும்பும் எளிய வாசகரின் எரிச்சலுணர்வு’ என்றும் கொள்ளப்படுகிறது.


இது பொதுக்கருத்தாகவே உள்ளது. வாசிப்பு என்பதை ரசனை சம்மந்தமான செயல் என்று கொள்வதே அறமீறலாக பார்க்கப்படுகிறது. ரசனை என்பது ஒரு சமூகப்பின்னணியில் உருவாகி வருவது; ரசனை விமர்சனத்தை முன்வைப்பவர்கள் சமூகத்தை வசதியாக மறக்கடிக்க விரும்புகிறார்கள், அது தப்பித்துக்கொள்ளும் செயல் மட்டுமே என்று வாதிடப்படுகிறது. இந்தப் போக்கை எதிர்த்து ஒரு கருத்தை சொன்னால், “உனக்கே தெரியாமல் உனக்குள் இருக்கும் ஆதிக்கபுத்தியும் மேட்டிமைத்தனமும் உன்னை இப்படி பேசவைக்கிறது,” என்று பதில் சொல்லப்படுகிறது.


இந்த குற்றச்சாட்டு உண்மையாகக்கூட இருக்கலாம் என்று என்னுடைய மனித மனம் சொல்கிறது. நமக்குள் இருந்து நாமயறியாமல் நம்மை ஆட்டிவைக்கும் விசைகளை அறியவும் தான் நாம் இலக்கியம் படிக்கிறோம் என்பதும் உண்மை. நாமே அறியாமல் நம்மில் உறைந்திருக்கும் சாய்வுகளை தனிப்பட்ட சமூக மனிதர்களாக நாம் வென்றாகவேண்டும், ஐயமில்லை.


ரசனை வாசிப்பு


அதே நேரத்தில் என் வாசக மனம் மனித மனத்தை விட ஆயிரமடங்கு லட்சியங்கள் உடையது என்பதை அனுபவபூர்வமாக உணர்கிறேன். அதற்கு எழுத்து மட்டுமே குறி. நாடு, மொழி, நம்பிக்கை, பால், இனம் என்றெல்லாம் பார்ப்பதில்லை அது. காலத்தையும் இடத்தையும் வயதையும் கரைத்துவிடுகிறது. வாசிப்பின்வழி உலகவரலாற்றின் உச்சத்திலிருக்கும் மனங்களுடன் என்னை சரிசமமாக அமர்ந்து பேச அதுமட்டுமே வழிவகுக்கிறது. இந்த சமூகப்பின்னணியிலிருந்து வந்தால் உனக்கு ரசனை சாத்தியப்படாது என்று சொல்வதே அநீதி. பொய். ரசனை மனம் கோருவது எழுச்சி, விரிவு, திடம், மெய்மை. அது எல்லோருக்கும் சாத்தியம்.


இலக்கிய வாசகருக்கு தெரியும், தன்னளவில், தன் ரசனை அளவில் எது இலக்கியம், எது இலக்கியம் இல்லை என்று. ஒரு நல்ல வாசகர் ஒரு புத்தகத்தினுள் நுழையும் போது எழுத்தாளருடன் உரையாடாத் துவங்குகிறார். அவர் எழுத்தாளரை நேசிக்கவே விரும்புகிறார். அவருடன் அவர் காட்டப்போகும் உலகங்கள் வழியே பயணிக்க பெரும் பரபரப்புடன் ஆயுத்தமாக இருக்கிறார். மாயாஜால நிகழ்ச்சி ஒன்றில் பார்வையாளராக அமர்ந்திருப்பவரை ஒத்தவர் வாசகர். குழந்தையாக மாற இசைந்து தான் வந்துள்ளார். எழுத்தாளருக்கு அநேக வாய்ப்புக்கள் கொடுத்தபடிதான் புத்தகத்தை கடக்கிறார் வாசகர்.


ஆனால் அவர் முட்டாள் அல்ல. இலக்கிய வாசகரின் கழிவிரக்கத்தை பயன்படுத்திக் கையாள நினைத்தால் அவர் விழித்துவிடுவார். பொதுவாக ஒரு புனைக்கதை, “இவர்கள் பாவம், இவர்களுக்கு கண்ணீர் சிந்து. இல்லையென்றால் நீ இரக்கமற்ற அறமற்ற ஜீவன்,” என்று மிரட்டுமேயானால் அது சோம்பேறித்தனம். புத்தகத்தை மூடிவைத்துவிட்டு சென்றுவிடுவார் வாசகர். இலக்கிய வாசிப்பு போதனைப்பாடம் அல்ல. அதே நேரத்தில், ஒரு கதை, அது எந்த சமூகத்தை பற்றியோ குழுவை பற்றியோ மனிதரை பற்றியோ இருக்கட்டும், அது நாம் அறியாமல் நம்மிலிருந்து ஒரு சொட்டு ஈரத்தை பெற்றுவிட்டதென்றால் அது பெரும்பாலும் நாம் மறவாத கதையாகவே இருக்கும். அது நம்மை அறம் நோக்கி, விரிவு நோக்கி, லட்சியத்தை நோக்கி அனிச்சையாக இட்டுச்செல்லும். அது என் பார்வையில் நல்ல எழுத்து.


கேளாக் குரல்கள்


ஓர் ஆக்கத்தின் தரத்தைத் தாண்டி, அந்த ஆக்கம் இன்னார், இந்தக்குழு எழுதியது என்ற காரணத்தினாலேயே படிக்கவேண்டும் என்ற கோரிக்கைக்கு பின்னால் இருக்கும் எண்ணம், இதுவரை கேட்காமல் போன குரல்களை இனியும் கேட்காமல் போனால் அது அறமல்ல என்பது. இலக்கியம், எழுத்து என்பது ஒரு வித ‘குரல்’ என்ற புரிதலுடன் தொடங்குகிறது இந்த வாதம். எல்லா குரல்களும் ஒரே அளவுக்கு கேட்கப்படவேண்டும் என்ற சமத்துவ கோட்பாட்டை முன்வைக்கிறது. மறக்கப்பட்ட, மறைக்கப்பட்ட வரலாறுகளை தெரிந்துகொள்ள இந்தக்குரல்களை படிக்க அழைக்கிறது. எந்தக் குரலும் கேளாக்குரல் அல்ல, சமூகம் கேட்க மறுக்கும் குரல்களே என்கிறது. இந்த கோரிக்கை, விமர்சனத்தை எதிர்பார்க்கவில்லை. “நான் உன் குரலை கேட்கிறேன், மதித்து வாசிக்கிறேன்,” என்ற ஒப்புகையை எதிர்பார்க்கிறது. சமூக பிரக்ஞை இருப்பதனாலேயே, சமத்துவம் கோருவதனாலேயே அறம்வளர்க்கும் நல்லெழுத்து என்று கொள்ளப்படுகிறது. அதன் அடிப்படையில் அந்த ஆக்கத்தை கவிதை என்றும், இலக்கியம் என்றும் முன்னிறுத்தி பேசவேண்டும் என்றும் எதிர்பார்க்கிறது. சரிசமமாக அதனுடன் (அந்த அடைப்படைகளைக்கொண்டு) உரையாடக்கோருகிறது.


இதில் உள்ள விற்பனை உள்ளிட்ட அரசியல்களை, சர்ச்சைகளை நான் இப்போதைக்குப் பேசவில்லை. கேட்கப்படவேண்டிய ஒரு குரலை எந்நிலையிலும் கேட்காமல் இருந்துவிடக் கூடாது என்ற அறப்பிரக்ஞையை மட்டுமே ஒரு தரப்பாக முன்வைக்கிறேன்.


கேள்விகள்


ஒரு ஆக்கம், எதோ வகையில் ஒடுக்கப்பட்டவர்களின் தரப்பு என்பதனாலேயே அதற்கு இலக்கிய மதிப்பு இருக்கவேண்டுமா? இவ்வகை எழுத்துக்களை ‘குரல்கள்’ என்று கொள்ளவேண்டுமா? ஒரு தரப்பின் ‘குரல்’ என்பதற்காகவே ஒரு எழுத்துக்கு முக்கிய இடம் அளிக்க வேண்டுமா? இதன் இடம் என்ன?


ஒரு பிரச்சாரக்கட்டுரைக்கும் அதே பிரச்சாரத்தை கவிதை விடிவில் எழுதுவதற்கும் என்ன வித்தியாசம்? படைப்பெழுத்தையும் இவ்வகை எழுத்தையும் ஒரே தராசில் வைத்து விமர்சகர் ஒப்பிட முடியுமா? சமூக பொறுப்பை கருத்தில் கொண்டு விமர்சகர் தன் விமர்சன அளவுகோல்களை மாற்றவேண்டுமா?


படைப்பிலக்கியத்துக்கும் விமர்சனத்துக்கும் சமூக பொறுப்பு இருக்க வேண்டுமா? (திரை விமர்சனத்தில் இந்த போக்கு இன்று பிரபலம். ஒரு திரைப்படம் எப்படியெல்லாம் சமூக ஒடுக்குமுறைகளை பிரதிபலிக்கின்றன என்பதை பட்டியலிடுவதே இன்று ஒரு விமர்சன முறையாக கையாளப்படுகிறது).


கேளாக்குரல்களுக்கு இடம் தர வேண்டும் என்பதால், வாசகர், “இந்த வருடம் இவ்வளவு சிறுபான்மை எழுத்தாளர்களை வாசிப்பேன்”, “இந்த குழுவுக்கு ஆதரவு தர இந்த எழுத்தை வாசிப்பேன்”, என்று வாசிக்கும் அறப்பொறுப்பில் இருக்கிறாரா?


இந்தக்கேள்வியை எழுப்பக்காரணமே தனிப்பட்ட முறையில் என்னுடைய ரசனை மனத்துக்கும், சமூக மனிதரின் பொறுப்பான அறவுணர்வுக்கும் இடையே நான் உணரும் பிணக்கை புரிந்துகொள்ளத்தான். (நியாயமான அறவுணர்வைத் தாண்டி, அறவுணர்வு உள்ளவராக தன்னை சமூகத்திடம் காட்டிக்கொள்ளும் பொருட்டு சில எழுத்துகளை தூக்கிப்பிடிக்கும் போக்கு இன்றுள்ளது, அதை பற்றி நான் இங்கு பேசவில்லை). இது தொடர்பாக நீங்கள் இதற்கு முன்னால் நிறைய எழுதியிருந்தாலும், அறம் சார்ந்து இதை எப்படி புரிந்துகொள்வது என்ற கேள்விக்கு பதிலுரைக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.


சுசித்ரா



மலர் கனியும் வரை- சுசித்ரா


சில நேரங்களில் சில மனிதர்கள், மீள்பரிசீலனை-சுசித்ரா




தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 02, 2017 11:32

வெற்றி –கடிதம் 2

images



வணக்கம் ஜெயமோகன்


ரொறொன்டோவிலிருந்து சுமதி. நலமாக இருக்கின்றீர்களா? உங்கள் ”வெற்றி” சிறுகதை வாசித்தேன், ஒரு காலகட்டத்தின் பதிவை அதாவது காஸ்மபொலிட்டன் கிளப் இன் ஆரம்பம், அங்கு வந்து செல்லும் ஆண்கள் எப்படியிருப்பார்கள், அங்கே என்ன நடக்கும், என்ன பேசிக்கொள்வார்கள் போன்றவற்றைப் பதிவு செய்து வாசிக்கும் போது மிகவும் சுவாரஸ்யமாகக் கதையை நகர்திக் கொண்டு சென்றிருக்கின்றீர்கள்.


நமச்சிவாயத்தின் மனைவியின் அறிமுகத்தின பின்னர் கதை இப்படித்தான் முடியப் போகின்றது என்று நான் எதிர்பார்த்தது போலவே முடித்தும் உள்ளீர்கள். என்ன ஒரு வக்கிரம். உங்களிடம். முடிவு இப்படியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு காச நோய் மகனை அறிமுகப்படுத்தி, அவன் உயிருக்குப் போராடுவதயாய் கதையை நகர்த்தி, மகனின் உயிரைப் பகடக்காயாக்கி, நீங்கள் எழுத விரும்பியதை நியாயப்படுத்தியிருக்கின்றீர்கள்.


பெண்களை வெல்ல முடியும், வெல்ல முடியாது என்பது இங்கு வாதமல்ல. அது இருவர் மனம் சம்மந்தப்பட்டது, ஆனால் பணம் படைத்த எந்த ஆணும், கையறு நிலையில் இருக்கும் ஒரு பெண்ணை வெல்ல முடியும் என்ற உங்கள் கற்பனைதான் வலிப்பதாக உள்ளது. விளையாடிப் பார்க்கின்றீர்களோ என்ற கோவம் வருகின்றது. பணத்துக்கும் மீறிய ஒன்றுள்ளது. நீங்கள் ஆணாக இருப்பதனால் அதனை உங்களால் அடையாளம் காண முடியவில்லை.


நட்புடன்

சுமதி


***


அன்புள்ள சுமதி,


கடுமையான கடிதம். எனக்கு நண்பராக இருப்பது கொஞ்சம் கடினம்தான் என்ன?


நான் அக்கதையை வழக்கம்போல என் பாணியில் எழுதினேன். ஒரு களம், சில மனிதர்கள். ஆணும் பெண்ணுமாக அம்மனிதர்களின் வாழ்க்கையை நான் உணர்வுபூர்வமாக நடிக்கிறேன். அதுவே என் எழுத்து. அக்களத்தில் அவர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்பது அக்களமே முடிவெடுக்கிறது. அதற்கு வெளியே இருக்கும் நான் அல்ல. பலசமயம் என் எண்ணம், நிலைபாட்டுக்கு மாறாகவேகூட என் கதைகள் அமைகின்றன. அது அப்படித்தான்.


வெற்றி கதை எனக்குக்கூட கொஞ்சம் உறுத்தல்தான். ஆனால் நேற்று எழுதிய வெண்முரசில் அமைச்சர் அரசனிடம் சொல்கிறார். ‘அடிப்படையில் அத்தனை மனிதர்களும் பலவீனமானவர்கள். அதைத்தான் மந்திரம் போல அரசன் தனக்குத்தானே சொல்லிக்கொள்ளவேண்டும்’ அதுதான் அக்கதையின் சாரம் என எனக்கே நானே சொல்லிக்கொண்டேன். பெண்ணோ ஆணோ அல்ல. அக்கதையில் அத்தனை பேரும் பலவீனமானவர்களாகவே இருக்கிறார்கள்


இதுதான் என் தரப்பா என்று கேட்டால் இல்லை. இக்கதைக்குள் இப்படி நிகழ்ந்தது. இவ்வுண்மையைக் கண்டு அஞ்சி நான் ஓடி அறம் போன்ற ஒரு கதைக்குள் ஆறுதல் தேடவும் செய்வேன்


ஜெ


***


வெற்றி [சிறுகதை]


தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 02, 2017 11:31

‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-10

 9. ஊசலின் தாளம்


flowerஅரசவையில் புலவர்களுடன் அமர்ந்து நூலாய்கையில், அவைப்பணிகள் முடித்து நீராட்டறைக்குச் சென்று உடலை சேடியரிடம் அளித்துவிட்டு அமர்ந்திருக்கையில், அணிபுனைந்து மஞ்சத்தறைக்கு செல்லும்போது, அவ்வப்போது அவன் எண்ணமே வந்து கொண்டிருந்தது. ஏதோ ஒரு கணத்தில் மீள மீள வரும் அவன் எண்ணம் அவளை சினம் கொள்ளச் செய்தது. திட்டமிட்டு ஓர் ஆண் தன்னை ஒரு பெண்ணுள்ளத்தில் செலுத்திவிடமுடியுமென்றால் பெண் உள்ளமென்பது வென்று கைகொள்ளத்தக்க வெறும் பொருள்தானா? அப்படி வலைவீச முடியுமென்று ஒருவன் தன்னைப்பற்றி எண்ணுவதே சிறுமையல்லவா?


அம்முயற்சிக்கு ஆற்றவேண்டிய மறுவினையென்பது ஒருகணமும் அவனை எண்ணாமல் இருப்பது. அவன் பெயரை முழுமையாகவே மறந்து போவது. ஆனால் அது அவளால் இயலும் என்று தோன்றவில்லை. எண்ணம் எழுவதற்கும் உதிர்வதற்கும் காலப்பெருக்கை ஆளும் தெய்வமொன்றின் ஆணை தேவை. மானுடரால் அதை செய்ய முடியாது. அவ்வெண்ணத்தை உதறும்பொருட்டு அவள் வெவ்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டாள். மூன்று நூல்களை ஒரே தருணத்தில் பயின்றாள். இருபொழுது களம் சென்று படைக்கலம் ஆடினாள். அவையில் நீட்டி வைக்கப்பட்ட இடர் மிக்க வழக்குகளை எடுத்து ஆய்ந்தாள். இருந்தெண்ண பொழுது எஞ்சாதபடி தன் நாட்களை நிறைத்தாள். அன்னங்களுடன் அமையும் தருணங்களும் குறைந்தன.


அவ்வலைகளால் ஆழத்தை மறைக்கவும் இயன்றது. ஆயினும் பொழுது இருண்டபின் துயில்கொள்ளும் பொருட்டு சேடியர் ஆடையும் அணியும் களைய பீடத்தில் அமர்ந்து விழிமூடும்போது காத்திருந்ததுபோல் வந்து அவளை பற்றிக்கொண்டது அவ்வெண்ணம். பின்னர் அவள் உதற உதற அருகிலெங்கோ இருந்தது. அதை மறைக்க அவள் சேடியருடன் மிகையாக சொல்லாடினாள். சிரித்தும் சினந்தும் சொல் சூழ்ந்தாள். மஞ்சத்தில் துயிலும்பொருட்டு படுத்து படுக்கையில் சுடர்மணி நின்ற அகல்விளக்கின் மங்கிய ஒளியில் இறுதியாக தன்னை உணர்கையில் இயல்பாக உடனிருந்தது அவ்வெண்ணம். பின்னர் அதை விலக்கும்பொருட்டு புரண்டு படுப்பதும் எழுந்தமர்வதும் இருளில் எழுந்து வான்நோக்கி மீன்களை நோக்கி சலிப்பதும் இடைநாழியில் நடந்து களைத்து மீள்வதும் விழிஓயும் வரை நூல் பயின்று படுப்பதும் அறியாது துயின்று எழும்போது அவ்வெண்ணம் உடனிருப்பதைக் கண்டு சினப்பதுமாக அவள் நாட்கள் சென்றன.


அவளுக்குள் இருந்த விழைவே ஈர்த்து வந்ததுபோல் ஒவ்வொரு நாளும் அவனைப்பற்றிய செய்தி வந்துகொண்டிருந்தது. அல்லது முன்பும் வந்துகொண்டிருந்தவற்றில் இன்று அவள் உள்ளம் அவற்றை தொட்டுத் தேர்ந்தது. இந்திரனின் பெருநகரின் நடுவே இந்திரசிலையின் முகத்தைமட்டும் தனித்தெடுத்து வரைந்த ஓவியத்தை அவள் முன் காட்டிய சூதர் “இன்று பாரதவர்ஷத்தின் பெருஞ்சிலை இதுவே, இளவரசி” என்றார். அதை கையில் வாங்காமல் “நன்று, கருவூலத்தில் அது இருக்கட்டும்” என்றாள். “என்றேனும் நாம் அதைவிட பெருஞ்சிலை அமைக்கும்போது அளவுகளை அறிய பயன்படும்.” சூதர் தலைவணங்கி “அவ்வண்ணமே” என்றார்.


அன்றும் மறுநாளும் அத்திரைச்சீலையே அவள் எண்ணத்தில் எழுந்துகொண்டிருந்தது. பின்னர் சேடியை அழைத்து எடுத்து வரச்சொல்லி தனிமையில் அமர்ந்து அதை விரித்துப் பார்த்தாள். நோக்குகையில் ஏதோ ஒன்று விழிமறைக்க அது மங்கலாகியது விழி விலகுகையில் உளம் கூர்ந்து அதை இழைவரி தெளிய நோக்கியது. அதை பார்த்துக் கொண்டிருக்கையில் எங்கோ முன்பு அதை கண்டிருந்த நினைவெழுந்தது. சுருட்டி பீடத்தில் வைத்தபின் புருவம் சுளித்து ‘யார், எவர் முகம் அது?’ என்று தன்னுள் உசாவிக்கொண்டாள். அவளுள் அமர்ந்து அழியாது ஒலித்து அவைநிகழ்வின் ஊடாக வந்து சென்றது அவ்வெண்ணம்.


ஒருகணத்தில் அவள் உணர்ந்து கொண்டாள் அது அவன் முகம், வெவ்வேறு தருணங்களில் சேடியர் காட்ட அவள் ஓரவிழியால் ஒருகணம் நோக்கி விலக்கியது. ஐயத்துடன் எழுந்து சென்று அச்சுருளை எடுத்து விரித்து இந்திரனின் முகத்தை பார்த்தாள் அவன் முகமேதான். திட்டமிட்டு அவன் அதை உருவாக்கி இருக்கிறான் என்று முதல் கணம் தோன்றியது. அவ்வாறல்ல என்று பின் சித்தம் உணர்ந்தது. சிற்பியர் ஒருபோதும் அரசனின் ஆணைகளுக்கு கட்டுப்படுபவர்களல்ல. அவர்களின் கைகளை இயக்குவது கற்பனையில் குடிகொள்ளும் தெய்வங்களே. அத்தெய்வங்கள் அவன் முகமே இந்திரனுக்குரியது என்று சொல்லியிருக்கின்றன போலும்.


அவள் அவன் முகத்தை மீண்டும் பார்க்க விழைந்தாள். தன் உளமயக்கு அல்ல என்று தெளிவதற்காக மட்டுமே என்று சொல்லிக்கொண்டாள். சேடியரிடம் அத்திரைச்சீலையை கொண்டுவரும்படி ஆணையிட தயக்கமாக இருந்தது. வாழ்வில் முதல் முறையாக தயக்கம் என்பதை அவள் உணர்ந்தாள். உள்ளம் வெளித் தெரிவதற்கு அஞ்சி உள்ளத்தால் பொத்திக் கொள்ளும் அச்செயலை அவள் முன்பு செய்ததே இல்லை. அவள் உள்ளத்தில் பிறரறியாது எதையும் கரந்ததில்லை. அவள் விழையாத எதுவும் இதழ்களிலும் முகத்திலும் வந்ததுமில்லை.


கரந்து வைத்திருந்த அவ்வெண்ணம் அவள் உடல்அசைவுகளை முழுமையாக மாற்றியது. சேடியரின் முகம் நோக்கி விழியெடுக்க இயலாதவளானாள். அவர்களிலிருந்து தனித்திருக்க விழைந்தாள். அவளில் நிகழ்ந்த அம்மாற்றத்தை சேடியர் உடனேயே உணர்ந்தனர். “இளவரசி ஏன் நம் விழிகளையே நோக்க மறுக்கிறார்?” என்று ஒருத்தி இன்னொருத்தியிடம் கேட்டாள். “ஆம், நானும் அதை நோக்கினேன், அவர் தோள்கள் குறுகியிருக்கின்றன” என்றாள் இன்னொருத்தி. கேட்டு நின்ற முதிய சேடி புன்னகைத்து “இளவரசி காதல் கொண்டிருக்கிறாள்” என்றாள். இளம் சேடி திகைப்புடன் “எவரிடம்?” என்றாள். “அதை அறியேன். எவரிடமோ காதல் கொண்டிருக்கிறாள். ஐயமே இல்லை. பெண்டிர் தங்களிடமே மறைக்க விரும்புவதும் அது மட்டுமே. உலகத்திடமே மறைக்க முடியாததும் அதுவே” என்றாள் முதிய சேடி. இளம் பெண்கள் வாய்பொத்தி சிரித்தனர். அவர்கள் வியந்து அதனால் விலக்கி அதனூடாகவே அஞ்சிய ஒருத்தி பெண்ணென்றாகி அவர்களைப்போல் மாறியதன் உவகையை அவர்கள் கொண்டாடினர்.


நிலை கொள்ளாது தன் தனித்த அறையிலும் ஒளி விழுந்துகிடந்த இடைநாழியிலும் அன்னங்கள் மிதந்து சுழன்ற சுனைக்கரைகளிலும் மலர்கள் பூத்துப்பரவிய அணிக்காட்டிலும் எங்கென்றறியாதவள்போல தனித்து உலவும் அவளை சாளரங்களினூடாக நோக்கி ஒருவரையொருவர் விழிதொட்டு புன்னகைத்தனர். மறுநாள் தமயந்தி இயல்பாக செல்வதுபோல் கருவூலத்தில் நுழைந்து காப்பாளரிடம் ஓவியங்கள் அனைத்தையும் கொண்டுவரச்சொல்லி ஒவ்வொன்றாக பார்த்தாள். ஒவ்வொரு உடல்அசைவையும் நூறு முறை எண்ணியே இயற்றினாள். அவ்வெண்ணத்துடன் உடல் முரண்படவே விந்தையானதோர் நெளிவே அவளில் ஒளிவிட்டது. பெண் உடலை அறியாத முதிய காப்பாளரும்கூட என்ன நிகழ்கிறது அரசிக்குள் என்று எண்ணும்படி வெளிப்படையாக அமைந்திருந்தது அது.


அரண்மனை வரைபடங்களில் சிற்றாலயங்களின் ஓவியங்களை ஒவ்வொன்றாக எடுத்துப்பார்த்து அப்பால் வைத்தாள். கோட்டைகள் சிலைகள் என பார்த்துச்சென்று இயல்பாக “அயல்நாட்டு அரசர்களின் படங்கள் எங்கே?” என்று அவள் கேட்டாள். மகதனையும் கலிங்கனையும் அங்கனையும் வங்கனையும் பார்த்துச் சென்ற கைகள் பதறத் தொடங்கின. மேலுதடு வியர்க்க முலைகள் எழுந்தமைந்தன. அவளை நோக்கிக்கொண்டிருந்த முதிய காப்பாளர் ‘ஆம், பிறிதொன்றுமல்ல’ என்றார் தனக்குள். அவள் கழுத்து நரம்பொன்று பதற உதடுகள் எழுந்தமைய விரித்துப்பார்த்த அந்த ஓவியம் எவருடையது என்று அறியவேண்டுமென்று விழைந்தார். அவள் அதை மட்டும் எடுத்து சுருட்டிக்கொண்டு “நன்று” என்று திரும்பிச் சென்றாள்.


அவளது நடைவிரைவைக்கண்டு எழுந்து பின்னால் நோக்கி நின்றார். அந்த ஓவியம் எந்த அரசனுடையதென்று எளிதில் கண்டுபிடித்துவிட முடியும் என்று ஏன் அவளுக்கு தோன்றவில்லை என்று வியந்தார். எஞ்சியவற்றை எடுத்துநோக்கி அது நிஷத மன்னன் நளனுடையது என்று அறிந்ததும் “மெய்யாகவா…? இதுவும் நிகழுமா இப்புவியில்…?” என்றார். பின்னர் மெல்ல தளர்ந்து பீடத்தில் அமர்ந்து “ஆம். இவ்வாறுதான் எப்போதும் நிகழ்கிறது. மானுடரைக்கொண்டு புதிய நாடகங்களை இயற்றவே தெய்வங்கள் விரும்புகின்றன” என்று சொல்லிக்கொண்டார்.


எவரிடமும் அதை சொல்லலாகாது என்று தனக்கு ஆணையிட்டுக்கொண்டாலும் அன்றிரவே தன் முதிய துணைவியை அழைத்து “அது நிஷத மன்னன் நளன்” என்றார். அவள் வாய்பொத்தி “என்ன சொல்கிறீர்கள்?” என்று கேட்க “எவரிடமும் சொல்லாதே. நானறிவேன். இளவரசி அவன் ஓவியத்தை எடுத்துகொண்டு சென்றாள்” என்றார். “அது அவன்மேல் உள்ள காதலினால் என்று எப்படி அறிவீர்கள்? நஞ்சூட்டி அவனை கொல்லும்பொருட்டாகக்கூட இருக்கலாமே…?” என்றாள். “நான் கண்ணும் செவியும் மழுங்கிய முதியவன். ஆனால் இளமையில் தானறிந்த இளம்பெண்ணை எந்த ஆணும் மறப்பதில்லை. அவள் உடலிலும் விழிகளிலும் வந்த அந்நிகழ்வு காதல் என்றறியவில்லை என்றால் நான் வாழ்ந்ததில்லையென்றே பொருள்” என்றார் முதியவர்.


மறுநாளே குண்டினபுரி முழுக்க நளனே பேசுபொருளானான். அரண்மனையில் பெண்டிர் மந்தண ஒலியில் ஒருவரோடொருவர் “அவனா…? கரியவன்” என்றார்கள். “அடுமனைத் திறன் கொண்டவன். இனி அரசவை உணவுக்கு தாழ்வில்லை” என்று பேசி வாய்பொத்தி சிரித்துக்கொண்டனர். “அழகன்… அதில் ஐயமில்லை” என்றனர். “யார் பார்த்தது அவ்வோவியத்தை?” என்றாள் ஒருத்தி. “நான் பார்த்தேன். அவன் வடிவிலேயே நகர் மையத்தில் இந்திரன் சிலை எழுந்துள்ளது என்று எனக்குத் தோன்றியது” என்றாள் இன்னொருத்தி. “அவனேதான்” என்றாள் பிறிதொருத்தி. பட்டு கசங்கும் ஒலியில் அவன் பெயர் ஒலித்துக்கொண்டே இருந்தது அகத்தளத்தில்.


மகளிர் எவருக்கும் அது சினமூட்டவில்லை. அரசியின் உள்ளம் இயல்பெனச் சென்று படிந்தது என்ற செய்தியே அவர்களையும் நளனை ஏற்க வைத்தது. காவலரும் பிறரும் முதற்கணம் நிஷாதனா என வியந்தாலும் பின்னர் அவனுடன் தங்களை இணைத்துக்கொண்டார்கள். குடிப்பெருமையையும் தொல்பெருமிதத்தையும் கடந்து நிஷாதனை தங்கள் அரசனாக எண்ணிக்கொள்ளவும் செய்தது அந்த உளம்புகுதல்.


தமயந்தி மட்டும் அதை அறிந்திருக்கவில்லை. தன் அறைக்குள் கதவை தாழிட்டுவிட்டு மஞ்சத்தில் படுத்து அந்த முகத்தையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவள் எண்ணியிருந்த உள்ளக்காதலனின் முகமல்ல. சிறிய உருவம். கரிய கூர்முகம். அவன் ஒரு பறவை போன்றிருப்பதாக அவளுக்குத் தோன்றியது. அவளைவிட இளையவன். தன்னருகே நின்றால் உயரம் குறைந்தவனாக, தன் தோளைவிட சிறிய தோள்கொண்டவனாக அவன் இருக்கக்கூடும். அவளை வென்று வளைக்கும் பெருங்கைகள் கொண்டவனல்ல. அவளுக்கு நேர்நின்று வில்லோ வாளோ சுழற்றும் திறன் கொண்டவனல்ல. எவ்வகையிலும் அவனல்ல அவள் எண்ணியிருந்தவன்.


ஆனால் அவனையே எண்ணிக்கொண்டிருக்கிறாள். பெண்ணுள்ளம் கவரும் மாயங்களை நிஷதரும் அசுரரும் அறிவார்கள் என்று கேட்டிருந்தாள். அழகியரை தங்கள் மாயத்தால் கவர்ந்து செல்லும் அரக்கர்களின் கதைகள் நூறு. அவ்வண்ணம் இருக்குமோ இதுவும்? தன் உள்ளத்தில் அவன் செலுத்திய மாயச்சொல்லொன்று தூண்டில் முள்ளென குத்தியிருக்குமோ? மீண்டும் மீண்டும் அவ்வெண்ணத்தைச் சென்றடைவது பிறிதெவரோ ஒருவரா?


அன்றிரவு ஒரு தருணத்தில் அவ்வெண்ணத்தின் சுழலிலிருந்து ஒருகணமும் தான் மீளவில்லை என்று உணர்ந்தபோது எண்ணியிரா கணம் ஒன்றில் சினம் மூண்டெழ அவள் அந்த ஓவியத்தைக் கிழித்து சாளரத்தினூடாக வெளியே வீசினாள். இல்லை, இக்கணமே அவனை மறப்பேன், இனி ஒரு போதும் அவனை நினைக்க மாட்டேன், இதை என் மூதன்னையர் முன் ஆணையிடுவேன். என் குருதியால் உறுதிகொள்வேன்.


தன் மேலாடையை எடுத்து அணிந்தபின் பீடத்திலிருந்து உடைவாளை எடுத்துக்கொண்டு கதவைத் திறந்து வெளியே செல்லப்போனாள். உள்ளம் மூதன்னையரின் ஆலயத்தை அடைந்துவிட்டிருந்தது. கதவுநிலையைக் கடந்தபோது தன் அறைக்குள் ஒரு சிறகோசையை கேட்டாள். திகைத்து தயங்கி நின்று அறைக்குள் பார்த்தபோது அன்னப்பறவை ஒன்று தன் அறைக்குள் தரையில் நின்றிருப்பதை கண்டாள். அவள் அரண்மனையின் அன்னங்கள் அனைத்தையும் அவள் அறிந்திருந்தாள். அது எங்கிருந்தோ வந்தது என்று தோன்றியது.


NEERKOLAM_EPI_10-1


அருகணைந்து முழந்தாளிட்டு குனிந்து அதை பார்த்தாள். நெடுந்தொலைவு பறந்து அது வந்திருப்பது தெரிந்தது. கழுத்தை வளைத்து அலகை சற்றுத் திறந்து மூச்சிரைத்துக் கொண்டிருந்தது. அது எங்கிருந்து வந்ததென்று அவள் உள்ளம் நன்கறிந்திருந்தது.



flowerதமயந்தியின் மணத்தன்னேற்பை நிகழ்த்தலாமென்று பீமகர் முடிவெடுக்கவேண்டிய நெருக்கடி ஏற்பட்டது. பல ஆண்டுகளாக ஒரு முள்முனையிலிருந்து பிறிதொரு முள்முனைக்கு தத்தளித்து தாவிக்கொண்டிருந்தார். தமயந்தி திருமணத்திற்குரிய அகவையைக் கடந்து நெடுங்காலமாகிறதென்பதை அவள் அன்னை ஒவ்வொரு நாளும் அரசனுக்கு சொல்லிக்கொண்டிருந்தாள். ஒருமுறை கவலையுடன் “ஆம். உடனே முடித்துவிடவேண்டியதுதான்” என்பார். பிறிதொரு முறை எரிச்சலுடன் “நான் என்ன செய்வது? ஒவ்வொரு அமைச்சரும் ஒவ்வொன்றை சொல்கிறார்கள். எந்த முடிவெடுத்தாலும் எவருடைய வாளோ எனக்கெதிராக எழப்போகிறது” என்பார். சில தருணங்களில் சினந்தெழுந்து “அவள் தலையை வெட்டி வீசிவிட்டு அமைதியாக நாடாள்கிறேன். என் குடிக்கு பிறந்த தீச்சொல்லென இவள் இங்கு வாழ்கிறாள்” என்பார்.


அரசி சினத்துடன் “என்ன பேசுகிறீர்கள் என்று உணர்ந்திருக்கிறீர்களா? பேரரசர்களின் முடி பணியும் அடி என்று அவளை நிமித்திகர்கள் சொல்கிறார்கள். நம் குடியில் எழுந்த அருமணி அவள்” என்றாள். “ஆம். ஆனால் அருமணி விளைந்த நாகத்தை குழி தேடிப்பிடித்து வெளியே இழுத்து கொன்று மணியை கவர்ந்து செல்வார்கள்” என்றார் பீமகர். “எளிய பெண்ணொருத்தியைப் பெற்றிருந்தால் போதும். எவருமறியாமல் அவள் இங்கு இருந்திருந்தால் இத்தருணத்தில் அவள் மைந்தனே முடியேற்கும் அகவை அடைந்திருப்பான். படைபலமும் செல்வமும் குடிவல்லமையும் இல்லாத அரசனின் அரண்மனையில் அவள் பிறந்தது…” என்றபின் “கூரை மேலிட்ட நெருப்பு என அவள் என் குடியை அழித்துக்கொண்டிருக்கிறாள்” என்றார்.


“ஏன் இத்தனை அல்லாடல்? நம் முடிவை நாம் எடுப்போமே?” என்றாள் அரசி. “நூறுமுறை உன்னிடம் சொல்லிவிட்டேன். மகற்கொடை மறுப்பென்பது ஒரு எளிய செயல் அல்ல. பேரரசர்கள் அதை போருக்கான அறைகூவலாகவே எடுத்துக்கொள்ளவேண்டுமென்று தொல்மரபு உள்ளது. மகற்கொடை மறுக்கப்பட்டவன் வாளாவிருந்தால் அஞ்சினான் என்று இழிபெயரை சூடுவான். மகற்கொடை மறுப்பு என்று ஒரு காவிய வடிவை உருவாக்கி சிறிய அரசர்கள் அனைவரையும் கழுமுனைகளில் கொண்டு அமர வைத்திருக்கிறார்கள் இழிபிறவிகளாகிய புலவர்கள்” என்றார் பீமகர்.


அரசி முன்னரே பல கோணங்களில் அதை அறிந்திருந்தாலும்கூட ஒவ்வொரு முறை கேட்கும்போதும் பெருந்துயருற்று “ஆம். ஆனால் அவளை அவ்வாறு படைத்த விண்ணாற்றல்கள் அதற்கொரு வழி கண்டிருக்கும். அவள் சக்ரவர்த்தினியாவாள் என்றுரைத்த நிமித்திகர் அறிந்திருப்பார்கள் அதை” என்றாள். “நிமித்திகர்கள் என்ன சொல்ல முடியும்? அவளுக்கான கொழுநன் முன்னரே பிறந்துவிட்டான் என்கிறார்கள். எங்கிருக்கிறான் என்றால் ஊழ் அவனை கொண்டுவந்து நிறுத்தும் என்கிறார்கள். ஊழை எதிர்கொள்ள வேண்டும். ஊழுக்கு எதிர்நிற்றல் என்பது…” கசப்புடன் நகைத்து “அது காரிருளுக்குள் மதவேழத்தை எதிர்கொள்வதுபோல என்று ஒரு கூற்று உண்டு” என்றார் பீமகர்.


ஆனால் சில நாட்களுக்குள் அமைச்சர்கள் நால்வர் அவருடைய தனியறையில் வந்து சந்தித்தனர். இரவுணவுக்குப்பின் வெற்றிலை மென்றபடி இசைக்கலைஞர் யாழிசைப்பதை ஆர்வமில்லாமல் கேட்டபடி அமர்ந்திருந்தார் பீமகர். தலை மதுமயக்கில் அவ்வப்போது சரிந்துகொண்டிருந்தது. அரசி அருகே தரையில் விரித்திட்ட மரவுரித்தலையணைகளும் உருளைத் திண்டுகளும் துணையிருக்க அரைத்துயிலில் சரிந்துகொண்டிருந்தாள். சூதர்கள் வழக்கமாக வாசிப்பதை கைபோக்கில் வாசித்துக்கொண்டிருந்தார்கள். ஏவலன் வந்து அமைச்சர்களின் வரவை அறிவித்தான்.


அமைச்சர்களின் வருகை பீமகரை சற்று குழப்பியது. ஒருகணம் எண்ணியபின் கையசைத்து சூதர்களை வெளியே செல்லும்படி பணித்தார். அவர்கள் தங்கள் யாழ்களையும் முழவுகளையும் பொதிந்து எடுத்துக்கொண்டு தலைவணங்கி வெளியேறியபின் அமைச்சர்களை உள்ளே வரச்சொன்னார். அவர்கள் உள்ளே வந்து துயில் கலைந்து என்னவென்று அறியாமல் பார்த்த அரசியை வியப்புடன் நோக்கியபின் தலைவணங்கினர். பீமகர் “அமர்க!” என்றார். அவருக்கு முன் இடப்பட்டிருந்த மென்சேக்கை பீடத்தில் அவர்கள் அமர்ந்தனர்.


அமைச்சர் முகங்களில் கவலை தெரிவதைக் கண்டபின் பீமகர் திரும்பி அரசியிடம் “நீ சென்று துயில்க! நான் இவர்களிடம் பேசிவிட்டு வந்துவிடுகிறேன்” என்றார். வாயைத் துடைத்து “இளவரசியின் செய்தியென்றால் நான் கேட்கிறேனே” என்றாள் அரசி. “இல்லை அரசி, இது எல்லைப்போர் குறித்து” என்றார் அமைச்சர். “நன்று” என்றபின் அவள் சேடியின் தோள்பற்றி வெளியே சென்றாள்.


அரசி சென்றபின் அக்கதவை மெல்ல மூடிவிட்டு வந்தமர்ந்த அமைச்சர் பாஸ்கரர் “பொறுத்தருள்க, அரசே! இது இளவரசியை பற்றித்தான்” என்றார். “சொல்க!” என்றார் பீமகர். “கலிங்க மன்னர் படைகொண்டு வந்து நம் இளவரசியை கவர்ந்து செல்லக்கூடும். நம்புதற்குரிய ஒற்றுச்செய்தி இன்று மாலை வந்துள்ளது” என்றார். படபடப்பை மறைக்க விரல்களைக் கோத்து நெஞ்சில் வைத்தபடி வெறுமனே நோக்கினார் பீமகர். அதற்குள் ஓர் ஏப்பம் வந்து மதுநாற்றத்தை அறையில் பரப்பியது.


“மாளவனுக்கு நாம் இளவரசியை கொடுக்கவிருப்பதாக ஒரு செய்தி கலிங்கத்துக்கு சென்றிருக்கிறது. எத்தருணத்திலும் அது நிகழும் என்பதனால் முந்திக்கொள்ள வேண்டுமென்று எண்ணுகிறார் கலிங்கர்” என்றார் அமைச்சர் பாஸ்கரர். இன்னொரு அமைச்சர் மதுரர் “அவருக்கு வேறு வழியில்லை. இன்று கலிங்கத்தின் இரு துறைமுகங்களையும் வந்தணையும் பொருட்களின் பெரும்பகுதி விதர்ப்பப் பெருநிலத்திலிருந்து திரட்டப்படுவது. விதர்ப்பம் மாளவத்தின் ஆட்சிக்கு செல்லுமென்றால் இப்பொருட்களனைத்தும் மாளவத்தின் துறைமுகங்களுக்கே செல்லும்” என்றார்.


“ஆம். ஏற்கெனவே அவர்களுக்குள் அந்தப் போட்டி இருந்தது” என்றார் பீமகர். “நம்மை யார் கொன்று உண்பது என நம் கண்முன்னரே பூசலிட்டுக்கொண்டார்கள்.” அமைச்சர் மதுரர் “கலிங்கர் படைகொண்டு வருகிறார் என்றால் ஐந்து நாட்களுக்கு மேல் நமது படை எதிர்த்து நிற்கமுடியாது. கலிங்கரின் படைகள் பெருவல்லமை கொண்டவை. பீதர் நாட்டு படைக்கலங்களாலும் தென்னகத்து வில்லவர்களாலும் செறிவூட்டப்பட்டவை” என்றார். பீமகர் “நாம் என்ன செய்வது…?” என்றபின் கசப்புடன் நகைத்து “கலிங்கன் படைகொண்டு வரட்டும். நாம் பணிந்து கப்பம் கட்டுவோம். நம் மகளை அவன் சிறைபிடித்து செல்லட்டும். அதன் பின் போரிடுபவர் எவரானாலும் கலிங்கனுடன் அல்லவா அதை செய்யவேண்டும்?” என்றார்.


“இது வீண்பேச்சு, அரசே. விதர்ப்பம் இதுவரை எவருக்கும் கப்பம் கட்டாத தனியரசாகவே இருந்து வந்துள்ளது. தனியரசாக இருக்கும் வரைதான் உண்மையில் மதிப்பும் பாதுகாப்பும். ஒருமுறை ஒரு நாட்டுக்கு கப்பம் கட்டிய அரசு மீண்டும் பிறிதொரு நாட்டுக்கு கப்பம் கட்டுவதாகவே மாற முடியும். அது எவருக்கேனும் கப்பம் மறுத்து தனிக்கொடி நாட்டுவதை தங்களுக்கெதிரான அறைகூவலாகவே முடியுடை மன்னர் அனைவரும் எண்ணுவார்கள். இத்தருணத்தில் எளிய அச்சங்களால் நாம் தலை தாழ்வோமென்றால் நம் குலம் எழுவதற்கு பற்பல தலைமுறைகள் ஆகலாம். ஒருபோதும் எழமுடியாமலும் போகலாம்” என்றார் அமைச்சர் மதுரர்.


“கப்பம் கட்டுவது எளிய அரசியல் செயல் மட்டுமல்ல. நாம் கப்பம் கட்டும்போதே நமது படைகளின் குடிகளின் தன்மதிப்பை அழிக்கிறோம். தங்கள் நகர் மீதும் முடி மீதும் அவர்கள் கொண்டிருக்கும் பெருமிதம் இல்லாமலாகும். நம் பொருட்டு உயிர் துறக்க படைகளும் குடிகளும் சித்தமாக மாட்டார்கள். அவ்வுணர்வை வரலாற்றைக் கடந்து கால் வைத்துச் செல்லும் வீரன் ஒருவன் தூண்டினாலொழிய மாற்றவோ வெல்லவோ இயலாது” என்றார் அமைச்சர் சதகர்.


பீமகர் எரிச்சலுடன் “என்னதான் செய்யச் சொல்கிறீர்கள்? கலிங்கன் படைகொண்டு வந்தால் அடிபணிந்து நகர் காத்து ஒளிவதன்றி வேறென்ன செய்ய முடியும் என்னால்…” என்றார். “அதற்கு முன் நாம் இளவரசியின் மணத்தன்னேற்பை அறிவிப்போம்” என்றார் மதுரர். “என்ன சொல்கிறீர்கள்? குண்டினபுரியில் இன்று பேரரசர்கள் வந்து தங்குமளவுக்கு இடமுள்ளதா? அவர்களுக்கான பாதுகாப்பை நம்மால் செய்யமுடியுமா? அதை எண்ணித்தானே இத்தனை ஆண்டுகாலம் மணத்தன்னேற்பை ஒத்திப்போட்டோம்?” என்றார் பீமகர்.


“ஆம். ஆனால் இப்போது வேறு வழியில்லை. இன்னும் இருநாட்களுக்குள் கலிங்க  மன்னர் படையுடன் புறப்பட்டுவிடுவார். படை எழுச்சியை அவர் முரசறைந்துவிட்டால் ஒழிவது இழிவென்று எண்ணுவார். அதற்குள் மணத்தன்னேற்பு அழைப்போலை அவருக்கு சென்றுவிட்டதென்றால் அதை நாம் தவிர்க்க முடியும்” என்றார் பாஸ்கரர். “இங்கா…? மணத்தன்னேற்பா…?” என்றார் பீமகர். “ஆம். பிறிதொரு வழியில்லை. பேரரசர்கள் வரட்டும். போர் நிகழுமென்றால் அவர்களுக்குள் குருதி சிந்திக்கொள்ளட்டும். எதுவாக இருந்தாலும் இத்தருணத்தில் எவருக்கும் அடிபணியாமல் கடந்து போக பிறிதொரு வழியில்லை. இனி எண்ணுவதற்கொன்றுமில்லை, அரசே” என்றார் மதுரர்


பீமகர் “நன்று! அதையே செய்வோம்” என்றார். “இப்போதே தாங்கள் ஆணையிட்டால் நன்று” என்றார் இளைய அமைச்சர் கல்விதர். “இப்போதே ஆணை எழுதவேண்டுமா?” என்று எரிச்சலுடன் பீமகர் கேட்க “ஆணைகளை எழுதிக்கொண்டு வந்துவிட்டோம். தாங்கள் இலச்சினை இட்டுவிட்டால் இன்றிரவே தூதுப்பறவைகள் கிளம்பும். நாளை மறுநாள் கலிங்கத்திற்கும் மகதத்திற்கும் மாளவத்திற்கும் செய்தி சென்று சேரும்” என்றார் பாஸ்கரர்.


படபடப்புடன் “எப்போது மணத்தன்னேற்பு?” என்றார் பீமகர். “வரும் ஆவணி முழுநிலவு நாள். இன்னும் பதினாறு நாட்களே உள்ளன” என்றார் மதுரர். “பதினாறு நாட்களுக்குள் அவர்கள் தங்குவதற்கான பாடிவீட்டை அமைப்பதற்கே நேரமில்லையே…?” என்று பீமகர் கேட்டார். “வேண்டியதில்லை. இங்குள்ள பெருவணிகர் இல்லங்களை ஒழித்து அவர்களை சிறுவீடுகளுக்கு போகச் சொல்வோம். அரசர்கள் இல்லங்களில் தங்கட்டும்.” தயக்கத்துடன் “அது இழிவு” என்று சொன்னார் பீமகர். “ஆம். ஆனால் தோற்று கப்பம் கட்டுவதைவிட நன்று” என்றார் பாஸ்கரர்


பீமகர் சீற்றத்துடன் “என்னை என்ன செய்ய சொல்கிறீர்கள்? இச்சிறு நாட்டின் அரசனானது எனது தவறல்ல” என்றார். பின்னர் நீள்மூச்செறிந்து “இதை பெருநாடாக்கும் துணிவும் எனக்கில்லை” என்றபின் “இம்மகளைப் பெற்றதற்காக இத்தருணத்தில்…” என்று கையசைத்தார். எண்ணங்கள் ஒருநிலை கொள்ளாமல் உடல் தவித்த பின் “இலச்சினைகளை நீங்களே வைத்து அறிவிப்பை வெளியிடுங்கள். செய்வதென்ன என்று முடிவெடுத்துக் கொள்ளுங்கள். இனி எதையும் என்னை கலந்து பேசவேண்டியதில்லை” என்றார். எழுந்து சால்வையைத் திருத்தி மறுபக்கம் இருந்த சிறுவாயிலினூடாக வெளியே சென்றார்.


தலைவணங்கி அமைச்சர்கள் தங்களுக்குள் மெல்லிய குரலில் உரையாடியபடி வெளியேறினர். அரசியிடம் சென்று நிகழ்ந்ததை சொல்ல வேண்டுமென்றுதான் வெளியே வந்தார் பீமகர். ஆனால் அவள் நன்றாக துயின்று வழிந்துகொண்டிருப்பாள் என்று எண்ணியபோது சலிப்பாக இருந்தது. தன் தனிமஞ்சத்தறைக்குச் சென்று அமர்ந்தபின் ஏவலரை அழைத்து மது கொண்டுவரும்படி ஆணையிட்டார். ஏழு கோப்பை மதுவை அருந்தியபின் உடலில் வெம்மையும் தளர்வும் நிறைய மெதுவாக எழுந்து மஞ்சத்தில் படுத்தார்.


சேற்றுக்குள் புழு நெளிவதுபோல மணத்தன்னேற்பைக் குறித்த எண்ணங்கள் அவருள் நிகழ்ந்தன. என்ன நிகழ்கிறது? விதர்ப்பத் தலைநகரியில் போரா? என்ன வேண்டுமானாலும் நிகழட்டும் என்று எங்கிருந்தோ பிறிதொரு குரல் ஒலித்தது. “ஆம்” என்றபடி புரண்டுபடுத்து சேக்கையை உடலால் கவ்வியபடி அவர் துயின்றார்.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-9
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-8
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-5
‘வெண்முரசு’–நூல் பதினான்கு–‘நீர்க்கோலம்’-4
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 48
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 57
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 53
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 52
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 7
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 02, 2017 11:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.