வெற்றி கடிதங்கள் 12

images


அன்புள்ள ஆசிரியருக்கு,


வணக்கம். வெற்றி சிறுகதை எனக்கு பிடித்தது. கதையில் இரண்டு முடிகளுமே உள்ளன. ரங்கப்பர் லதா தன்னை வென்று விட்டாள் என்கிறார். லதா ரங்கப்பர் தன்னை வென்று விட்டார் என்கிறார். ஆனால் முடிவை ஊகித்துவிட்டேன் என்பவர்கள் லதாவின் கூற்று மட்டுமே உண்மையாக இருக்கவேண்டும் என நினைக்கிறார்கள் போலும். எனக்கு கதையை படித்து முடித்தவுடன் எந்த முடிவும் தோன்றவில்லை. மனது அமைதியாக இருந்தது. பின்பு எப்போதாவது தோன்றும் என நினைக்கிறேன்.


நன்றி,


அன்புடன்,


சு.தீபப்பிரசாத்.


 


 


 





அன்பின் ஜெ….

அந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரமே அந்த சவலைக் குழந்தைதான். அவன் இல்லாவிட்டால் ரங்கப்பர் தான் லதாவை நெருங்கியிருக்க முடியுமா? திருஷ்யத்தில் மோகன்லால் எடுக்கும் முடிவுகள் போல லதா முடிவெடுக்கக் காரணமே  தன் குடும்பத்தைக் காப்பாற்றும் நோக்கம் தானே அன்றி வேறொன்றும் இல்லை.  ஆனால் தன் கணவர் தன்னிடம் காட்டிய அலட்சியம் மற்றும் கீழ்த்தர வார்த்தைகள் தாம் லதாவை அப்படிப் பழிவாங்குமாறு செய்தது. லதா சோரம் போகாமலேயே தான் போனதாகக் கூறி இருக்கலாம்! நமச்சிவாயம் தன் எஞ்சிய வாழ்நாள் முழுதும் தன் கீழ்மைத்தனத்துக்கான பலனை அனுபவிக்க அதுதான் வழி!  அந்தக் குழந்தை கதையில் இல்லாவிட்டால் இந்தக் கதையை எப்படி எழுதி இருப்பீர்கள்?

-பாலா.



8


 


ஆசான் அவர்களுக்கு,


போன  வாரம் ஒரு நாள்,  இந்த விலை குறைஞ்ச மொபைல் போன் வாங்கலமா, வேணாமா என்று யோசித்து இருக்கும்போதே, கடையில் என் பக்கத்தில்  தெரிந்த  வெள்ளைக்காரன்,  சேல்ஸ்  மேன் கிட்ட  புதுசா வந்த  $800 சாம்சங் போன் இருக்கானு கேட்டார் .


 


“ஐயம் கெட்டிங் திஸ் பார் மை கேர்ள் பிரின்ட் ” என்று அவரு  சொன்னவுடன், நான்  நிமிந்து அவர பாத்தேன்.


55-60 வயசு இருக்கலாம். 51/2 அடி உயரம். ஷர்ட் இன் பன்னி இருந்தார். சுத்தமா தொப்பை இல்லை.


முன் மண்டை வழுக்கையை சமன் செய்ய, நீளமா தல முடி விட்டு, கழுத்துக்கு கீழ்  வரை நீண்டு இருந்து.


அநேகமா எல்லா முடியும் நரை. ஒரு இளைஞண்ணுக்கு உரிய உடல். முகத்தில் அப்பிடி ஒரு கிழட்டு களை.


 


டேய், இந்த வயசுலுல உனக்கு கேர்ள் பிரின்டா? அப்பிடின்னு என்  மனம் பொறாமைல நொந்து அந்த ஜீவன  கொஞ்சம் நேரம் நோட்டம் விட்டேன். இந்த ஆளுக்கு பிரெண்டா இருக்க ஒகே சொன்ன அந்த பொண்னு யாருன்னு கண் சற்று அங்க இங்க அலைஞ்சது. தனியாதான் வந்து இருப்பார் போல.


அந்த பொண்ணு ரொம்ப சின்ன வயசா தான் இருக்கணும் என் மனம் முடிவு பண்ணிருச்சு. ஏன்னு தெரியல.


அத விட, நான் ரொம்ப உடைந்தது, வெறும்  ஒரு மொபைல் போன் வச்சு ஒரு பெண்ணின் கவனத்தை நம்ம பக்கம் திருப்ப முடியும்னு அந்த அமெரிக்க கிழம் எனக்கு உணர்த்திற்று.


 


நேற்று “வெற்றி” சிறுகதையை படித்தேன்.  ஒரு மாதிரி கொஞ்சம் தெளிவு கிடைத்த மாதிரி ஒரு எண்ணம்.


தோற்பதற்கு  சாத்தியம் உண்டு என்று தெரிந்தும் அந்த  கிளப்பில் நமச்சிவாயம் அத்தனை ஆண்களுக்கு முன் தாயத்தை உருட்ட முற்பட்டது, காலம் காலமா நடுந்து வரும் ஒன்னு போல..


ஒரு ஆண் மகனை , நிர்மூலமாக்கி, நம்ம முன் மண்டி போட வச்சு, நீயலாம் ஒன்னும் இல்லன்னு அவன் எண்ணத்தில் மண்ணை அள்ளி வீச, அவனுக்குரியவளை தூக்குனா போதும் போல… வெற்றியுள் வெற்றி அதுதான்!


” பிறன்மனை நோக்கா பேராண்மை ” ன்னு நம்ம பெரியவர் ஏன் சொன்னாருன்னு நெடுநாள் மண்டை குடைச்சல்.


பேராண்மைக்கும்,  பிறன்மனைக்கும் ஏன்  முடிச்சு போட்டு வைச்சுருக்கார்ன்னு அர்த்தம் கிடைத்த மாதிரி ஒரு நிறைவு.


அடுத்த ஆடவனை வெல்வது ஆண்மை என்றால், அந்த ஆண் தன்னையே வெல்வது பேராண்மை அன்றோ!


பெண்டிருக்கு ஆசையும் , ஆடவருக்கு ஆணவம் என்றால்,  எதோ ஒரு புள்ளியில் இந்த இரண்டும் ஒன்னுதானோ என்று தோன்றுகிறது.. அல்லது இன்னும் ஆழத்தில் இருக்கும் வேற ஒன்றின் இரு வேறு நிலை வடிவங்களா ?


 


-ஓம்பிரகாஷ்


 


8


 


இந்த கதையில தோல்வியன்றி வெற்றி முழுசும் அந்த ரங்கப்பர்க்குதான். அவர் தோற்றிருந்தால் அவர் பார்க்க நினைத்த பெண்ணின் கடாட்சம் கிடைத்திருக்கும். வெற்றி பெற்றிருந்தால் மற்றுமொரு வெற்றி அவ்வளவுதான். அவளை மதித்தானாலேயே நமச்சிவாயம் அவமானப்படாமல் தப்பித்திருக்கிறான். அவர் இயல்பை இழக்கவில்லை. அந்த பெண்ணோ நமச்சிவாயமோ தன்னுள் ஓடும் இயல்பிலிருந்து மாற்றப்பட்டுவிட்டார்கள். இயலாமை ஒரு மனிதனை எப்படியெல்லாம் ஆட்டிப்படைக்கிறது. தேவகுணம் அசுரகுணத்திற்குள்ளும் அசுரகுணத்திற்குள் தேவகுணமும் காணமுடிகிறது.


அந்தப் பெண்ணுக்கு வெற்றி என்பது அவளின் குடும்பம். குழந்தைகளின் வெற்றி கணவனின் வெற்றி அவள் அன்பின் அங்கீகரிப்பு. அவளுக்கு கிடைத்தது தோல்வி. அவள் பலவீனமானவள் என்றல்லாம் நினைக்க முடியவில்லை. அவள் தினமும் அன்றாட உதறல்களை வலிகளை எதிர்கொண்டு வெற்றி பெற்றவள். வெற்றி பெறுபவள்.


எப்பொழுதும் ஆண்களுக்கு பெண்களைத் தவிர ஒன்றுமே தெரியாது தன் மாற்றமுடியாத உரிமையாக கடமையாக. ஆனால் பெண்களுக்கு முழுஉரிமையோ முழுக்கடமையோ கூட இருக்கக்கூடாது என்றே விரும்புகின்றனர். அப்பறம் அவளோட வலிமை. அதாவது வலிமையின்மையால் இருக்கவேண்டிய வலிமை. பெண்ணுக்கென்று இருக்கிற இயலாமையை சொல்லியே வளர்க்கிறர்கள். இயலாமை சில நேரங்களில் வலிமையாகவும் சில நேரங்களில் வலிமையற்றதாகவும் மதிப்பிடப்படுகிறது. எப்பொழுதுமே இதான். மாற்றவே முடியாது. நமச்சிவாயத்துக்கு வலிமையே இல்லை. அவனுக்கென்று ஒண்ணுமேயில்லை. அவன் நம்பறதுல்லாம் பெண்ணின் வலிமை பணத்தின் வலிமை புகழின் வலிமை. ஆனால் அவன் வலிமையென்று நினைத்ததெல்லாம் அவனை வலிமையற்றவனாக ஆக்கியிருக்கிறது. அவன் ஆணவத்தை. பலவீனத்தையே தேடிக்கொண்டு பலவீனத்தையே கொடுத்துக்கொண்டு பலத்தை கேட்கிறான். அவ்வளவு பலவீனமாக தெரிகிறான்.


அவள் மருத்துவனையில் நடந்த விஷயங்களை சொல்லும்போது குழந்தைமாதிரி தெரிகிறாள்.


அவன் அவளை மருத்துவமனைலேந்து முதல் தடவை அழைச்சிட்டுவர இடத்துல அவனே அவன்மேல பரிதாபப்பட்டுவிட்டான்போல. அவன் சிந்நனையில் செயலில் மூர்க்கமில்லை.


அவள் தோற்றாள். இந்தப் பந்தயம் அவளுக்கு தெரிந்திருக்கிறது. அவள் இறுதியில் அவனிடம் சொல்லும்போது அவளின் வலியையே இழப்பையே சொல்லியிருக்கிறாள். நமச்சிவாயத்தின் வெற்றி அவள் அன்பில். தோல்வி முழுமையாக அவனிடத்தில். அவளால் மட்டுமே வெல்கிறான்.


அவன் தன் மறுபாதியான மனைவியை முண்டை ஒழுங்காருந்துட்டா பணம் கிடைக்கும்னு நினைக்கும்போது அவனின் மிக கீழ்த்தரமான எண்ணம் தெரிகிறது, அதோடு என்னமோ அவன்மேல் பரிதாபம் வருகிறது. இவ்வளவு தூரத்துக்கு ஒரு மனிதன் அறிவற்றவனாக இருக்க முடியுமா. அவன் எதற்கு அடிமைப்பட்டிருக்கிறான் என அவனுக்கே தெரியாத நிலை போல புரிகிறது. தெரிந்தும் அறியாதவன். அவனே அம்மனை சென்று வேண்டும் இடம் வெளிப்படையாக அவனின் ஒட்டுமொத்த மூடத்தனத்தை உணர்த்துகிறது. அதைத்தாண்டி பலவற்றையும்.


பெண் இந்த கதையில் மட்டுமல்ல எங்குமே வெற்றி பெறுபவள். ஆனால் தான் நேசிப்பவர்களால் தோற்பவள் என்று தோன்றியது.


பெரும்பாலும் பெண் குடும்பத்தின்பிடியில் இருக்கிறாள். ஆண் சமூகத்தின்பிடியில் இருக்கிறான். பாதி விரும்பியும் பாதி விரும்பாமலும் இல்லையான்னு தோணுது.


ஆணுக்கு தனக்கு முழுவிருப்பம் இல்லாவிட்டாலும் ஒரு இமேஜ் தேவைப்படுகிறது. இதை எப்போதும் பார்க்கிறேன். இதனால் அவன் இயல்பே மாறிவிடுகிறது. அவன் அதை உள்ளூர வெறுத்தாலும் வலியுடன் விரும்புகிறவனாகிறான்.


இன்னொரு குணம் ஞாபகம் வந்தது வாசிக்கையில். தன்னிருப்பை உணர்வதேயில்லை தொலைக்கவே விரும்புகிறார்கள்.தொலைத்து அதனால் இல்லாத ஒன்றை அடைதல் அல்லது அனைத்தையும் இழத்தல். அது சுகமாக தெரிகிறது. வெற்றியாகவும். என்ன முடிவில்.


 


(இதை கடைசியில் எழுதுவதற்கு காரணம் இதனால் யாரும் ஒரு அபிப்ராயத்துடன் வாசித்துவிடக்கூடாது என்பதற்காக. நான் நிறைய வாசித்தில்லை. எழுதியதுமில்லை. இதுவே முதல் பத்துக்குள் ஒன்று. திருத்தவும். )


 


அன்பு மற்றும் நன்றிகளுடன்


லட்சுமி வேதாந்த தேசிகன்

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 12, 2017 11:32
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.