சொல்வளர்காடு செம்பதிப்பு -கடிதங்கள்

solvalarol


 


அன்புள்ள ஜெ,


 


ஒரு வார வெளியூர்ப்  பயணம் முடிந்து நேற்று (27-May) இரவு வீடு திரும்பினேன்.  சற்று நேரம் பயண விவரங்களைப் பேசிய பின் மனைவியும் பிள்ளைகளும் “நீங்க ஆர்டர் செய்த புத்தகம் வந்து விட்டது. ஜெயமோகன். உள்ளே புத்தக அலமாரியில் உள்ளது” என்றனர். புத்தகம் கட்டு பிரிக்கப்பட்டுத் தனியே எடுத்து வைக்கப்பட்டு இருந்தது. கட்டைப்பிரித்து அதைக் கண்டடையும் பரவசம் இழப்பு. பரவாயில்லை, புதுப் புத்தக வாசமும்,  வழவழப்பான அட்டையும் தாள்களும் அதை நிகர் செய்தன. புத்தகம் பதிவு செய்யும் போது, உங்கள் கையெழுத்து வேண்டுமென்றால் தனியாகக் குறிப்பிட வேண்டும் என்று சொல்லியிருந்தார்கள். குறிப்பிட்டிருந்தேன். ஆகவே உங்கள் கைழுத்து இருக்குமா என்ற படபடப்புடன் புத்தகத்தைத் திறந்தேன். “அன்புடன் ஜெயமோகன்” என்று கையெழுத்திட்டிருந்தீர்கள். சற்று நேர மகிழ்ச்சி, ஆராய்சிக்குப் பிறகு (கொஞ்சம் மலையாள எழுத்தின் சாயல் இருக்கிறதோ, மோகன் என்பது போகன் போல அல்லவா இருக்கிறது, மோகனில் புள்ளி இல்லையே), நீங்கள் இப்படி எத்தனை புத்தகங்களுக்குக் கையெழுத்திட வேண்டியிருந்ததோ என்று சற்றே குற்ற உணர்வு வந்தது.


 


சொல்வளர்காடு முழுவதும் இணையத்தில் அன்றன்றே படித்து முடித்ததுதான். எனவே புத்தக அறிவிப்பு வந்ததும் பதிவு செய்து வாங்க ஒரு தயக்கம் இருந்தது. மீள்வாசிப்புப்பழக்கம் இதுவரை இல்லாததும் இதுவரை வாங்கிப்படித்த புத்தகங்கள் வீட்டில் இருக்கும் நிலையும் யோசிக்கவைத்தது. தங்கள் தளத்தில் வாசகர்கள் மீள்வாசிப்பு செய்து விரிவான பதிவுகள் எழுதும்போது ஒரு ஆர்வம் ஏற்படும், ஆனால் செய்ததில்லை. எனவே தயக்கம். இதன் மறுபக்கமாக, ஒவ்வொரு நாளும் தவறாமல் உங்கள் தளத்தைப் படித்து வந்தாலும், அதை முற்றிலும் இலவசமா அனுபவிப்பதால் எழும் குற்ற உணர்ச்சி (சந்தா முறையைப் பரிந்துரைக்கும் வாசகர்களின் கருத்து சரி என்று நினைக்கிறேன். கட்டாய சந்தா இல்லை என்றாலும் விரும்பும் வாசகர்கள் மாத/வருட சந்தா செலுத்த ஏற்பாடு செய்யலாம்). படித்த புத்தகத்தை விலை கொடுத்து வாங்குவது இந்தக் குற்ற உணர்வை நிகர் செய்யும், மேலும்  உங்கள் கையெழுத்தோடு புத்தகம் கிடைக்கும் என்பதால் பதிவு செய்தேன்.


 


புத்தகம் கையில் கிடைத்ததும் இந்த மன உரையாடல்கள் எல்லாம் அர்த்தமற்றுப்போயின. புத்தகத்தைப் புரட்டி கடைசியில் இருந்து ஒவ்வொரு ஓவியமாகப் பார்த்துக்கொண்டே வந்தேன். முழு நாவலும் படங்களின் வழியாக நினைவில் எழுந்தது. நினைவில் வராத அத்தியாயங்களுக்கு, ஒரு சில வரிகளைப்படிப்பதே நினைவை மீட்கப்போதுமானதாக இருந்தது. ஷண்முகவேலின் ஓவியங்கள் கணிணி வடிவத்தைவிட அச்சு வடிவில் இன்னும் பார்த்து அனுபவிக்கத்தக்கதாக உள்ளன. ஒளி, நிழல், வண்ணங்களின் பிரமிக்கத்தக்க வெளிப்பாடுகள். மிகவும் பிடித்தது 228 பக்கத்தில் உள்ள கதாயுதம். நெருப்பைக்கக்கும் பீரங்கி, குருதிக் குழாயை அடைக்கும் ஒளிரும் தகடு, சாய்ந்து வீழ்ந்து விட்ட கொடிமரம், தாங்கிப்பிடிக்க முடியாத செங்கோல் என்று மனம் போனபோக்கில் கற்பனை செய்துகொண்டேன். ஒளிரும் குருதி படிந்த கதாயுதம் சற்றே அழுந்தியுள்ள நீர்த்தரை துரியனின் தொடையா? கதாயுதத்தின் இயல்புக்கு முரணாக, மேலே காற்றில் மிதக்கும் சிறகுகள் போருக்குப்பின் அமைதியின் வெளிப்பாடா? யாருக்கு அமைதி? அடித்தவனுக்கா? அடிபட்டவனுக்கா? களமான பாரத வர்ஷத்துக்கா?


 


இதுவரை உங்களை இணைய தளத்தில் மட்டும் வாசித்து வருகிறேன். சொல்வளர்காடு நான் வாங்கியுள்ள உங்களின் முதல் புத்தகம். மீள் வாசிப்பு ஒரு இனிய அனுபவமாக இருக்கும் என்று நம்புகிறேன். நன்றி.


 


அன்புடன்,


S பாலகிருஷ்ணன், சென்னை


 


 


அன்புள்ள பாலகிருஷ்ணன்


 


அத்தியயாயங்களாக வாசிக்கையில் ஒரு இன்பம் உள்ளது. துளித்துளியாக வாசிப்பது அது. நூலாக ஒட்டுமொத்தமாக ஓரிரு நாட்களில் ஆழ்ந்து அமர்ந்து வாசிக்கையில்தான் நாவலின் வடிவமே தெரிகிறது என பலர் சொல்லியிருக்கிறார்கள்


 


ஜெ


 


ஜெமோ,

கோடை விடுமுறை முடிந்த அயர்ச்சியோடு சென்னை திரும்பியிருந்தேன். அதிகாலை 4.15க்கெல்லாம் பழநி express சென்ட்ரல் ஸ்டேசனை அடைந்திருந்தது. எப்பொழுதுமே நேரம் தவறாத express. வெள்ளக்காரன் மாதிரி  on time தான்.


ஆனால், எப்பொழுதும் சரியான நேரத்திற்கு வந்து விடும் book செய்த fast track cab இன்னும் வரவில்லை. வருவதற்கான அறிகுறியும் தெரியவில்லை. அதிகாலையிலே வியர்க்க ஆரம்பித்திருந்தது. அங்கிருந்த taxi driver ஒருவரிடம் பேரம் பேசி மனைவி, மகள், இரண்டு பெரிய பெட்டி மற்றும் சிறு சிறு கட்டப்பைகளுடன் சின்ன மலையில் உள்ள என் apartmentஐ வந்தடைந்தேன். கிட்டத்தட்ட ஒரு முக்கால் மணி நேரத்தை நகட்டி கடிகாரம் 5 மணியைத் தொட்டிருந்தது.


மனைவி தன் கைப்பையிலிருந்து தயாராக எடுத்து வைத்திருந்த சாவி கொண்டு main gateஐ திறந்து உள்ளே நுழைந்தவுடன்,  alert Selvaraj முழித்துக் கொண்டார். apartmentன் watchman அவர்.  “…எல்லோரும் என்ன watchmanன்னு தான் சார் கூப்புடுறாங்க. என் பேரே மறந்துடும் போல…” என ஒரு நாள் வருத்தப்பட்டார்.  அதிலிருந்து அவரை Selvaraj என்று தான் கூப்பிடுவேன். அது என் மாமனாரின் பெயர் என்பதால், அதில் எனக்கொரு குரூர சந்தோசமும் கூட.


சிரித்த முகத்தோடு, “என்ன சார், ஊர்ல இருந்து எல்லாரும் வந்துட்டாங்க போல…” என்று கூறிக் கொண்டே lift வரை பெட்டிகளை இழுத்து வர உதவினார். நான் சொல்ல வாயெடுக்கும் முன்பே, “…ஆங் சார் நீங்க சொன்ன மாதிரியே ஒரு parcel நேத்து சாயங்காலம் வந்துச்சு..” என்று கூறி பத்திரமாக எடுத்து வைத்திருந்த கிழக்கு பதிப்பகத்திலிருந்து வந்திருந்த தங்களின் “சொல்வளர்காடு” நாவல் அடங்கிய parcel ஐ என்னிடம் கொடுத்தார்.


வியர்வையும் அயர்ச்சியும் அடங்கி ஒரு குதூகலம் தொற்றிக் கொண்டது. வேறு எந்த luggageஐயும் unpack செய்யாமல் அந்த parcelஐ unbox செய்ய ஆரம்பித்தேன், “சொல்வளர்காடு – unboxing” என்று ஒரு காணொளி எடுக்கலாம் போல எனறு நினைத்துக் கொண்டே. அவ்வளவு நேர்த்தியாக pack செய்யப்பட்டிருந்தது.


உறையிலிருந்து உருவியதுமே செம்பதிப்பு  எனறால் என்ன என்று தெரிந்து கொண்டேன். புத்தகத்தில் முதலில் தேடியது உங்கள் கையெழுத்தைத்தான். ஒரு சில நொடிகள் உங்கள் கையெழுத்தில் ஆழ்ந்து போயிருந்தேன். “…..ம்ம்ம் வந்த உடனேயே ஜெயமோகனாப்பா?” என்றாள் ஐந்தாவது போகப்போகும் என் மகள். “…..அவருக்கு வேலையென்ன” என்று என் மனைவியும் அவளுடன் சேர்ந்து கொண்டாள்.


மூவரும் சேர்ந்து பிரமிப்பூட்டும் ஷண்முகவேலுவின் ஓவியங்களை ஒவ்வொன்றாக புரட்ட ஆரம்பித்தோம். Spectacular work indeed. நாவலை வாசிக்க ஆரம்பித்தவுடன், இந்த மௌனமான ஓவியங்கள் பேசவும் ஆரம்பிக்கும் என்றே நினைக்கிறேன்.


இன்னும் ஒரு வாரத்தில் நான் தற்போது வாசித்து வரும் “பின் தொடரும் நிழலின் குரல்”  முடிந்து விடும் என்று எண்ணுகிறேன். வீரபத்திர பிள்ளையின் கடிதங்களில் மார்க்ஸியத்தை கேள்விக்குறியாக்கி, அதை ஜோணியின் கடிதங்கள் வழியாக மீட்டெடுக்கும் முயற்சியின் அத்தியாயங்களில் பயணித்துக் கொண்டிருக்கிறேன். நாவலை முடித்த பின் நான் அவதானித்த விஷயங்களை உங்களுக்கு விரிவாக எழுதலாம் என்று உள்ளேன். ஏற்கனவே ஒரு சிறு கடிதத்தை எழுதியிருந்தேன், அதுவரை நான் படித்ததை வைத்து. இந்நாவலுக்குப் பிறகு “கொற்றவை” வாசிக்கலாம் என்றிருந்தேன். ஆனால், “சொல்வளர்காடு” அவ்விடத்தை  எடுத்துக் கொள்ளும் என்றே நினைக்கிறேன்.


அன்புடன்

முத்து


 


அன்புள்ள முத்து


 


முப்பதாண்டுகளுக்கு முன் டால்ஸ்டாய் சிறுகதைகளும் குறுநாவல்களும் என்னும் வெண்ணிறமான சிறிய காகிதஅளவுள்ள நாநூறு பக்க நூல் வெளிவந்தது. ராதுகா பதிப்பகம், மாஸ்கோ. அந்நூலை கையிலெடுத்து குழந்தையைப்போல கொஞ்சியது நினைவுக்கு வருகிறது. புத்தகத்தை தொடுவதென்பது ஒரு களியாட்டம்


 


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on June 01, 2017 11:33
No comments have been added yet.


Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.