Jeyamohan's Blog, page 1640

May 15, 2017

நீர்க்கோலம்

water


 


வெண்முரசு நாவல் வரிசையில் அடுத்தநாவலை இருபத்தைந்தாம் தேதி முதல் வெளியிடலாமென நினைக்கிறேன். நீர்க்கோலம் என தலைப்பு. இன்னும் எழுத ஆரம்பிக்கவில்லை. விராடநாட்டில் பாண்டவர்கள் ஆள்மறைவு வாழ்க்கை வாழ்ந்தகதை. அதை எப்படிக்கொண்டு செல்வேன் எனத்தெரியவில்லை. ஒவ்வொருவரும் இன்னொருவராக உருமாற்றம் அடைந்து வாழ்வது என்பதே அந்த பகுதியில் எனக்கு ஆர்வமூட்டும் நுண்கூறாக உள்ளது.


நீர்க்கோல வாழ்வை நச்சி நெடிதுநாள்வளர்த்துப் பின்னை

போர்க்கோலம் செய்துவிட்டார்க்கு உயிர் கொடாது அங்குப் போகேன்

தார்க்கோல மேனி மைந்த எனதுயிர் தருதியாயின்

கார்க்கோல மேனியானைக் கூடுதி கடுகின் ஏகி


என்ற கம்பராமாயணப் பாடலில் இருந்து தலைப்பு. நீர்க்கோலம் போன்ற வாழ்க்கையை விரும்பி என்னை வளர்த்து போர்வீரனாக ஆக்கிய ராவணனை விட்டுவிட்டுச் செல்லமாட்டேன் என கும்பகர்ணன் சொல்கிறான். ஆனால் நீ என் குருதியினன், நல்லவன். ஆகவே ராமனிடம் நீ செல் என விபீடணனிடம் ஆணையிடுகிறான். நீர்க்கோலம் என்ற சொல்லாட்சி ஒரு பெரும் கிளர்ச்சியை அளித்தது. நீரின் மேல் ஒளி ஆடும் கோலம். விழிமயக்கு. ஆனால் காண்பவை அனைத்தும் விழிமயக்குகள் அல்லவா? இந்நாவலில் அத்தனைபேரும் பிறிதொரு விழித்தோற்றம் கொள்ளப்போகிறார்கள்..


nitya


 


மாமலர் முடிந்தபின்னர் வழக்கம்போல நாவல்கள் முடிந்தபின் வரும் சோர்வும் தனிமையும் வரவில்லை. உவகையும் கொப்பளிப்புமான உளநிலை. அனுமன் அளித்தது அக்கொடை. கிருஷ்ணன், காங்கோ மகேஷ், நாமக்கல் வரதராஜன், நாமக்கல் வாசு, ஈஸ்வரமூர்த்தி, கடலூர் சீனு, சக்தி கிருஷ்ணன் ஆகிய நண்பர்களுடன் சென்ற 9,10 தேதிகளில் ஊட்டி சென்றேன். குருகுலத்தில் ஒருநாள் தங்கினேன். வியாசப்பிரசாத் சுவாமி இல்லை, பெங்களூர் சென்றிருந்தார்.


ஊட்டியில் நல்ல குளிர். ஒரு தூக்கம் போட்டுவிட்டு கண்காணிப்பு மேடை அமைந்த காடுவரை ஒரு மாலைநடை சென்றோம். பெருங்கூட்டமாக அன்றி இப்படி சிலநண்பர்களுடன் ஊட்டிக்கு நான் வருவது மிக அரிதாகவே நிகழ்கிற்து. தொடர்ச்சியாக ஒருவாரமோ பத்துநாளோ ஊட்டியில் தங்கவேண்டும் என நினைத்துக்கொண்டேன்.


நாங்கள் சென்ற அன்று சித்ராபௌர்ணமிக்கு முந்தைய நாள். பெருநிலவு. ஊட்டிப்பனியில் அது இளஞ்செந்நிறத்தில் முகில் அற்ற வானில் எழுந்து நின்றிருந்தது. வெளியே நாற்காலிகளை இழுத்துப்போட்டுக்கொண்டு அமர்ந்து நிலவைப்பற்றிய தமிழ், மலையாள, இந்தி, தெலுங்கு பாடல்களைக் கேட்டோம். பன்னிரண்டு மணிவரை இலக்கியம் ஆன்மிகம் வேடிக்கை என பேசிக்கொண்டிருந்தோம்.


மறுநாள் காலையில் நண்பர்கள் நல்ல தூக்கம். நான் மட்டும் ஒரு காலைநடை சென்றேன். லவ்டேல் தோட்டமருகே பள்ளத்தில் உள்ள பாலம் வரை சென்றேன். பச்சைப்பரப்புமேல் சூரிய ஒளி பரவும் பேரழகை ஒருமணிநேரம் நின்று நோக்கியபின் திரும்பிவந்தேன்


ootty


உள்ளம் நிறைந்த ஒரு புலரி. அங்கே நித்யாவுடன் நானும் வந்து நின்ற நினைவுகள். சூரியத்தோற்றம் நோக்க மிகசிறந்த இடங்களில் ஒன்று அது. தாடிமயிர்கள் பொன் என ஒளிர நித்யா விழிதூக்கி சூரியனை நோக்கி நிற்கும் காட்சி கண்முன் அப்போது நிகழ்வதுபோலிருந்தது. திரும்பிவருகையில் சொல்லற்ற ஒரு பொங்குதல் உடலையே தளரச்செய்தது.


கோவைக்குத் திரும்பி வரும்போது கோத்தகிரி அருகே ரங்கநாதர்திட்டு என்ற குன்றுமேல் ஏறி அங்கிருந்த சிறிய கோயிலைப் பார்த்து வழிபட்டோம். கருங்குரங்குகள் அறிவிப்புக்குரல் எழுப்பி தலைக்குமேல் தொடர்ந்துவர ஆழ்காடு வழியாக ஒரு நீண்ட நடை. மழைக்கார் இருந்துகொண்டிருந்தது. வானத்தில் உறுமலோசை எழுந்து எழுந்து அடங்கியது. காடு சீவிடு ஒலியுடன் பசுமையும் இருட்டுமாக சூழ்ந்திருந்தது.


வழக்கமாக ஒரு நாவல் முடிந்தபின்னர் எங்கேனும் ஒரு பயணம் மேற்கொள்வேன். மாமலருக்கு மூகாம்பிகை. கிராதத்திற்கு கேதார்நாத். இம்முறை அப்படி ஏதும் திட்டமிடவில்லை. இயல்பாகவே அமைந்தது அது. காட்டில் மலையுச்சியில் ரங்கநாதர் என்பதே கொஞ்சம் மாறுபட்ட அறிதலாக அமைந்தது. விண்ளந்தவனை அமர்ந்த பேரரசக்கோலத்திலோ அமைந்த அறிதுயில் வடிவிலோதான் நம் உள்ளம் எண்ணுகிறது. இது ஒரு முனிவரின் துறவமைவு என தோன்றியது.


கோவை வந்து மூன்றுநாட்கள் தங்கியிருந்தேன். மருதமலை அருகே உள்ள பங்களா கிளப் என்னும் கோடைவிடுதியில். ஒரு திரைப்பட விவாதம். அருண்மொழியும் அஜிதனும் வந்து கோவையில் அன்னபூர்ணாவில் தங்கியிருந்தார்கள். அவர்களுடனும் திரைவிவாதத்திலுமாக நாட்கள். ஞாயிறு மதியம் நண்பர்கள் காஸ்மாபாலிட்டன் கிளப்பில் ஒரு சந்திப்பை ஒருங்கு செய்திருந்தார்கள். அப்போதுதான் நினைவுவந்தது சாரு நிவேதிதாவின் மகன் திருமணம். மறந்தே விட்டேன்.


இந்தவகையில் இப்போதெல்லாம் மாதம் பத்தாயிரம் ரூபாய் இழப்பாகிறது. தவறான ரயில் விமான பயணப்பதிவுகள். விமானத்தையும் ரயிலையும் தவறவிடுதல். நினைவில் வைத்துக்கொள்வது மிகப்பெரிய சித்திரவதையாக இருக்கிறது. சென்றமாதம் டி.பி.ராஜீவன் மகள் திருமணம். இரண்டு சீட்டு முன்பதிவுசெய்தேன். ஒன்று உறுதியாயிற்று. திருவனந்தபுரம் சென்று ரயில் நிலையத்தில் காத்திருக்கையில் சட்டென்று அடாடா உறுதியாகாத சீட்டை ரத்துசெய்யவில்லையே எனநினைவுவந்து ரத்துசெய்தேன். ரயிலில் ஏறினால் உறுதியான இருக்கையை ரத்துசெய்திருக்கிறேன்.


அதற்கு முன் டெல்லி சென்றேன். திரும்பி வர விமான நிலையம் சென்றபின் தெரிந்தது. அந்தச்சீட்டும் திருவனந்தபுரம் முதல் டெல்லிவரைக்குமாகப் போடப்பட்டிருக்கிறது என்று. இனிமேல் நானே பயணமுன்பதிவே செய்வதில்லை என வஞ்சினம் உரைத்தேன். ஆனால் அடுத்தவாரமே சென்னை செல்ல முன்பதிவுசெய்து மறந்தே போனேன். அவசரமாக இண்டிகோ விமானத்தில் மதியம் 2 45க்கு விமானம் முன்பதிவுசெய்தேன். ஆனால் பத்துமணிக்கு கூப்பிட்டு அந்த விமானம் மாலை ஏழுமணிக்குத்தான் கிளம்பும் என்றார்கள். அதை ரத்துசெய்துவிட்டு மேலும் ஒருமடங்கு பணம் கொடுத்து ஏர் இண்டியா விமானத்தில் இடம்பிடித்தேன். நல்லவேளை, இம்முறை என் தப்பு இல்லை . அது ஓர் ஆறுதல்.


மாலை ஆறுமணிக்கு சென்னை. அப்படியே குளித்து ஆடைமாற்றி சாருவின் மகன் திருமண வரவேற்புக்குச் சென்றேன். நண்பர்கள், சக எழுத்தாளர்கள் என ஒரு பெருந்திரள். இலக்கியக்கூட்டம் அல்ல என்பதனால் உற்சாகம். பாலகுமாரன், இரா.முருகன், எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர், ஆர்.டி.ராஜசேகர், டி.ஐ.அரவிந்தன், அராத்து, மனுஷ்யபுத்திரன், லட்சுமி சரவணக்குமார், நடிகர் பார்த்திபன், இயக்குநர் வசந்த், தமிழ்மகன், அழகியசிங்கர், கணேசகுமாரன், சமஸ், பிரபு காளிதாஸ், உமாமகேஸ்வரன் அமிர்தம் சூர்யா ,ஜி குப்புசாமி, ராம்ஜி, சாம்நாதன், என ஏராளமான நண்பர்கள்.


யுவன் சந்திரசேகர் சிகெரெட் வாங்கப்போனான். அவனுடன் ஒரு நீண்ட நடைபோய் சிகெரெட் வாங்கி திரும்பிவந்தேன். ”நாம இப்டி நடந்து ரெண்டு வருஷம் ஆகுதுடா” என்றான் ஏக்கத்துடன். அரை கிமீ நடந்து தேடி வாங்கிய ஒற்றை சிகரெட் மென்தால் சுவை அடிக்கிறது என ஒரு புலம்பல். கேட்க நிறைவாக இருந்தது. பாலகுமாரனுடன் ஒரு தனிப்பட்ட உரையாடல். அவரை இன்னொருமுறை வீட்டுக்குச்சென்று சந்திக்கவேண்டும். நற்றிணை யுகன் வந்திருந்தார். உச்சவழு உட்பட என் நூல்கள் அச்சேறிக்கொண்டிருப்பதாகச் சொன்னார். இரவு சாப்பிடுவதில்லை என்றாலும் அக்கார அடிசில் என்னும் சொல்லுக்கு மயங்கி சாப்பிட்டேன். நல்ல வைணவமணம் உடைய அக்கார அடிசில்.


பேருந்தில் இன்று ஊருக்கு. அங்கே சென்று ஒருநாள் ஓய்வுதான். கிளம்பி ஒருவாரம் கடந்துவிட்டது. .நீர்க்கோலம் ஊறியெழவேண்டும், ரங்கநாதர் அருளால்.


*****

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 15, 2017 11:37

ஜெயகாந்தன் -கடிதங்கள்

jayakanthan_2161849f


சிலநேரங்களில் சிலமனிதர்கள் _ ஒரு கழுவாய்


அன்புள்ள ஜெ


நான் ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ நாவலைப் பல முறை முன்னரே வாசித்திருக்கிறேன்- தினமணிக்கதிர் தொடர்கதையாக வந்தபோது அதன் பக்கங்களை சேகரித்து என் அண்ணியார் பைண்டு செய்து வைத்திருந்தார் – அந்த பைண்டு நாவலைத்தான் பல முறை வாசித்தேன் – நான் ஜெயகாந்தனின் ரசிகன் – அவர் என் ஆசான்


அன்புடன்


சுரேஷ்குமார இந்திரஜித்


***


அன்புடன் ஆசிரியருக்கு


சில நேரங்களில் சில மனிதர்கள் குறித்த பதிவினை வாசித்தேன். ஒரு பக்கம் உற்சாகமும் மறுபக்கம் ஏமாற்றமும் ஒருங்கே எழுந்தது. உற்சாகம் கங்கை எங்கே போகிறாள் நாவலை வாசித்ததால். வருத்தம் சில நேரங்களில் சில மனிதர்கள் வாசிக்காததால்.


கங்கை எங்கே போகிறாள் முழுக்கவே கங்காவால் சொல்லப்படும் கதை தான். அக்னிப்பிரவேசம் படித்ததாலும் இந்நாவலுக்கான ஜெயகாந்தனின் முன்னுரையாலும் சில நேரங்களில் சில மனிதர்களின் ஓட்டத்தை ஓரளவு ஊகிக்க முடிந்தது. ஒரு வித சலிப்பான சற்றே கசப்பங்கதம் நிறைந்த ஒரு கங்காவின் கோணத்தைத் தான் இந்நாவலில் என்னால் பார்க்க முடிந்தது. எழுந்த உள்ள அலையை வென்று கங்கா தன்னையும் தன்னைச் சூழ்ந்திருப்பவர்களையும் மகிழ வைத்த பின் இறக்கிறாள் என எளிமையாக “சுபம்” போட்டுவிட்டு எழுந்து செல்லக்கூடிய வாய்ப்பை இந்நாவல் கொண்டிருக்கிறது தான். ஆனால் அதன் தொடக்க மற்றும் இறுதி வார்த்தை “கல்ப்”. முதல்முறை அது மது. இறுதி வரியில் அது கங்கை. “கல்ப்”. பிரபுவுடன் யாத்திரை புறப்படும் கங்கா கங்கையில் பிரபு பார்த்திருக்கவே மூழ்கிச் சாகிறாள். எல்லா வகையிலும் புறக்கணிக்கப்பட்டவள் எல்லா வகையிலும் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டவள் தன்னை சூழ்ந்து நடக்கும் வாழ்க்கையை மெல்லிய விழி விரிதலுடன் கடந்து செல்கிறவள் என மேலும் மேலும் வலியை மட்டுமே கொடுக்கிறது அந்த பாத்திரம். அர்ஜுன் – வசந்தா போல லட்சிய கதாப்பாத்திரங்களாக சித்தரிக்கப்பட்டிருப்பவர்களுக்கு அவர்களின் வழியே நடக்கும் “முற்போக்கான” சம்பாஷணைகளுக்கு இன்றைய தேதியில் எந்த முக்கியத்துவமும் இல்லை. ஆனால் இவர்களின் பெயரைத் தேடும் போது சட்டென ஒரு வரியை படித்துவிட்டு மனம் நின்று விட்டது. எத்தகைய மனநிலையில் ஜெயகாந்தன் இந்த வரியை எழுதியிருப்பார்.


சுபாஷ் கார் ஓட்டிண்டே திரும்பி பார்க்கிறான். முன்னெல்லாம் இவர் கண்ணுக்குள்ள பளபளக்குமே ஒரு பாம்பு பார்வை. அது அப்படியே அவன் கண்ல மின்றது”


உடைந்து நொறுங்கிவிட்ட ஒரு கனவினை சேகரிக்க முயல்கிறாள் கங்கா. தன்னை விட சிறுமியான சாந்தா குடும்பம் குழந்தை என இருப்பதையும் வசந்தா “முற்போக்காக” இருப்பதையும் வியப்புடன் கடந்து செல்கிறாள். ஆனால் அதற்கடியில் அவளுக்குத் தெரியும் அவள் கடந்துவிட்ட இழந்துவிட்ட ஒரு வாழ்க்கையை அவர்கள் வாழ்கிறார்கள் என. அவள் ஒரு கால மாற்றத்தின் முதல் பலியாடு. அவளை பலி கொடுத்தே அந்த தலைமுறை எழுந்திருக்கிறது.


பிரபுவினுடைய பாத்திர வார்ப்பு ஒரு எல்லையில் ஜெயகாந்தனின் மிகச்சிறந்த ஆக்கமான ஹென்றியை (ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்) நெருங்கினாலும் அவனையும் துரத்தும் ஒரு நெருடல் இருக்கவே செய்கிறது. அத்தனை தீவிரமாக அவன் குடும்பத்தை மறுப்பது கங்காவால் தான். ஹென்றியிடம் அத்தகைய நெருடல் கிடையாது. அவன் சுதந்திரமானவன் தான். ஆனால் அவனும் அந்த சுவாதீனமற்ற பெண்ணை ஒழுங்காக உடுத்தச் சொல்லும் போது மிக நுணுக்கமாக கீழே விழுகிறான். ஜெயகாந்தன் ஆண்களை ஒரு படி கீழே தான் நிறுத்துகிறார்.


அவள் மீண்டும் அமைத்துக் கொள்ளலாம் என்றெண்ணிய ஒரு கணம் இனி எக்காலத்திலும் திரும்பாது என்ற உண்மையை உணரும் கணம் தான் இருக்கத் தேவையில்லை என்ற முடிவை எடுக்கிறாள். அவள் இறுதியில் விழுங்குவது விஷம். இங்கிருக்கும் எதுவுமே ஆற்றுப்படுத்த முடியாத ஒரு அழல் அவளுள் எரிகிறது. அதுவே அவளை இறுதியில் எரிக்கிறது.


துயர் எனும் கசக்கும் பிஞ்சு பெருந்துயர் எனும் இனிய கனியாகிறது. ஆனால் பிஞ்சிலும் கனியிலும் துயர் துயர் தான்.


என்னைப் பொறுத்தவரை இந்த வரியில் நாவல் முடிகிறது.


“‘Gulp’ முழுங்கு , கொழந்தே , முழுங்கு…இது அசிங்கமோ கசப்போ , பத்திண்டு எரியறதோ , பார்த்தால் குமட்டிண்டு வருமே …அது போன்றதோ இல்லே… This is death இது பேரின்பமான மரணம் மகளே! கல்ப்..கல்ப்..இட் பேபி!”


நன்றி


அன்புடன்


சுரேஷ் பிரதீப்


***


அன்புள்ள ஜெமோ


இவ்வளவு காலம் கடந்து சிலநேரங்களில் சில மனிதர்கள் நாவலுக்கு ஒரு ‘மறுபிறப்பு’ உருவாகி இருப்பது மிகச்சிறந்த விஷயம் என நினைக்கிறேன். ஜெயகாந்தன் மீது சுமத்தப்பட்ட ஒற்றைவரி என்பது அவரது எழுத்துக்கள் ‘கூச்சலிடும் பிரச்சாரப் படைப்புக்கள்’ என்பவை. அப்படிப்பார்த்தால் எல்லா எழுத்தாளர்களிடமும் அத்தகைய கதைகள் உண்டு. ஜெயகாந்தனை பிரச்சாரப்படைப்பாளி என்று சொன்ன சுந்தர ராமசாமி கதைகளிலேயே பள்ளம், வாசனை, பிள்ளைகெடுத்தான்விளை போன்ற எவ்வளவோ படைப்புக்கள் அவருடைய பிரச்சாரங்கள்தானே?


ஜெயகாந்தனிடம் அத்தகைய கதைகள் கொஞ்சம் அதிகம். ஏனென்றால் அவர் பூடகமாக எழுத முயலவில்லை. அனைத்தையும் உடைத்துச்சொல்ல முயன்ற எழுத்தாளர் அவர். முற்போக்கு எழுத்தாளர். முற்போக்கு சிந்தனைகளைப்பரப்புவதே அவருடைய இலட்சியம். ஆனால் அதை மீறி அவர் தன் நல்ல கதைகளில் ஒரிஜினலான கலைஞனாக மேலெழுந்து வந்தார். நான் என்ன செய்யட்டும் சொல்லுங்கோ, எங்கோ யாரோ யாருக்காகவோ, நான் ஜன்னலருகே உட்கார்ந்திருக்கிறேன், குருபீடம், அக்னிபிரவேசம், சுயதரிசனம்,விழுதுகள் போன்ற பலகதைகளை கடந்துசெல்லவே முடியாது.


அவரது நாவல்கள் அறிவார்ந்தவை. உணர்ச்சிகள்கூட அறிவால்தான் முன்வைக்கப்படும். அது ஒரு எழுத்துவகை. அந்த வகையில் உலகப்புகழ்பெற்ற ஏராளமான எழுத்தாளர்கள் உண்டு. அவருடைய அந்த அறிவார்த்தம் டஸ்டயேவ்ஸ்கி முதல் உலகிலே உருவானது. தாக்கரே , தாமஸ் மன் போல அதுக்கு ஒரு பாரம்பரியம் உண்டு. இங்கே பலபேர் அதை சரியாகப்புரிந்துகொள்ளவில்லை. இலக்கியம் என்றால் ஒருவகையான சொகுசு, ஃபில்டர் காபி குடிப்பது போல என நம்பிய ஒரு தலைமுறை இங்கே இருந்தது. அவர்களால் உருவாக்க்கப்பட்டது ஒரு மாயை. அதுதான் ஜெயகாந்தனை வாசிப்பதற்கு பெரிய தடையாக இருந்தது. அடுத்த தலைமுறை அதிலிருந்து வெளிவரவேண்டும்.


அந்த அறிவார்ந்ததன்மை ஜெயகாந்தனின் நாவல்களை மேம்போக்கில் விவாதம் போல காட்டுகிறது. உள்ளே நுட்பமான ஆயிரம் சிக்கல்கள். வாழ்க்கையை அறிவால் எதிர்கொள்பவர்களின் சிக்கல்கள் அவை. நீங்கள் ஒரு நடிகை நாடகம் பார்க்கிறாளை விட்டுவிட்டீர்கள். என் வாசிப்பிலே அதுதான் அவரது மாஸ்டர்பீஸ்


சிவக்குமார் சண்முகம்


***


சிலநேரங்களில் சிலமனிதர்கள் _ ஒரு கழுவாய்


***

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 15, 2017 11:33

முதலாளித்துவப்பொருளியல் – கடிதங்கள்

ste


முதலாளித்துவப் பொருளியலும் விஜய் மல்லையாக்களும்


முதலாளித்துவப் பொருளியலும் விஜய் மல்லையாக்களும் 2


அன்புள்ள ஜெ.,


என்னுடைய அனுபவங்கள் சில


1) இன்றும் இடதுசாரி, வலதுசாரி இரண்டுக்கும் பலருக்கு அர்த்தம் தெரியாது. ஆம் ஆத்மி கட்சியில் முக்கிய இடத்தில் இருந்த என் நண்பனுக்கு, இந்தவேறுபாட்டை அறிவதன் முக்கியத்துவத்தைப் புரியவைக்க எனக்கு 3 ஆண்டுகள் ஆயின.


2) சோஷலிஸம், கம்யூனிசம் இரண்டுக்கும் உள்ள வேறுபாட்டைக் கேட்டாலே முகநூலில் பலர் ஓட்டம் எடுத்துவிடுவர். அதிலும் மோசம், சீனா ஒரு கம்யூனிச நாடு என நம்புவோர் இன்னும் பலர் இருக்கிறார்கள்.


3) என் நண்பர்கள் 80களின் வேலையில்லாத் திண்டாட்டத்தை நன்கு அறிந்தவர்கள். 94ல் நாங்கள் கல்லூரியில் சேரும்போதுகூட வேலை என்பது ஒரு உச்சகட்ட லட்சியமாகவே இருந்தது. ஆனாலும் அவர்களில் பெரும்பாலோர் இப்போது இந்த முதலாளிகளைத் திட்டித் தீர்க்கிறார்கள். இந்த மனநிலை எனக்குப்

பிடிபடுவதே இல்லை.


4) மென்பொருள்துறையில் லட்சங்களில் சம்பாதிக்கும் என் நண்பன் மிளகாய்ப்பொடியில் இருந்து குளிர்பானம் வரை எல்லாப்பொருட்களின் விலையையும் அரசே நிர்ணயிக்கவேண்டும் என்று எழுதியிருந்தான். கூடவே, மென்பொருள் சேவைக்கும் சம்பளத்திற்கும் கூட அரசு நிர்ணயம் வேண்டுமல்லவா என்று கேட்டேன். பதிலில்லை


இரண்டு காரணங்கள் – நம் பாடத்திட்டத்தில் பணவீக்கவிகிதம் போன்ற எளிய பொருளியல் விஷயங்கள் கூட சொல்லித்தரப்படுவதில்லை. (குறைந்தது நான் படிக்கும்போது).. அடுத்தது, இரட்டை மனநிலை. முதலாவது குறையைத் தங்கள் கட்டுரை தீர்க்கும். இரண்டாவதை ஒன்றும் செய்யமுடியாது, செவிடன் காது சங்குதான்


நன்று,

ரத்தன்


***


அன்புள்ள ஜெ,


நலமா ? நீண்ட நாட்களாகிவிட்டன தொடர்பு கொண்டு. முதலாளித்துவப் பொருளியலும் விஜய் மல்லையாக்களும், இரண்டு பகுதிகளும் அருமை. சில இடங்களில் முரண்பட்டாலும், மிக சிக்கலான விசியத்தை எளிதில் புரியும்படி தெளிவுபடுத்தியிருக்கிறீர்கள். வளர்ந்த நாடுகளை போல் இந்தியாவில் இன்னும் திவால், கடன் வசூலிப்பு சட்டங்கள் வலுவாக, தெளிவாக இல்லாததால் பல சிக்கல்கள். அமெரிக்காவில் லார்கர் ஏர்லைன்ஸ் நிறுவனம் திவாலான போது, இரண்டே தினங்களில், அந்நிறுவன சொத்துகள் அனைத்தும் கடன் கொடுத்த வங்கிகள் வசம் சென்று, திவால் என்று அறிவிக்கப்பட்டது. அத்தகைய எளிமையான, தெளிவான சட்ட முறைகள் இங்கு இன்னும் evolve ஆகவில்லை.


தாரளமயமாக்கல் கொள்கைகள், இந்தியாவில் வறுமையை வெகுவாக குறைத்து, வேலை. வாய்ப்புகளை அதிகரித்தது பற்றி விரிவாக சொல்லியிருக்கிறீர்கள். ஆனால் இத்தோடு இங்கு அடிப்படை ஜனநாயகமும் வலுவடைந்துள்ளது என்பதையும் பேச வேண்டும். 1970களில் இந்திரா காந்தி காலத்து சோசியலிச அழுத்தங்களில், உச்ச நீதிமன்றம், தேர்தல் கமிசன், மற்றும் இதர தூண்கள் அனைத்தும் மிருக பலம் கொண்ட மத்திய அரசின் முழுகட்டுபாட்டில், சுய அதிகாரம் இல்லாமல் கட்டுண்டு கிடந்தன. இந்திய பிரதமர்களில் இன்று வரை யாருக்கும் கிட்டாத பெரும் அதிகாரம், செல்வாக்கு, பயபக்தி கலந்த பொது மரியாதை இந்திரா காந்திக்கு தான் கிடைத்தது. இதற்க்கு அன்றை பொருளியல் கொள்கைகளும் முக்கிய காரணி. ஊடக சுதந்திரம் இன்று போல் அன்று சாத்தியமாகவில்லை. இதை பற்றி வரலாற்று தரவுகளுடன் நான் எழுதிய முக்கிய கட்டுரை இது :


 சுதந்திர சந்தை பொருளாதாரமும் ஜனநாயகமும்  http://nellikkani.blogspot.in/2013/01/blog-post_29.html இதை தமிழகத்தின் இடதுசாரி அறிவுஜீவிகள் அனைவருக்கும் மின்மடல் மூலம் அனுப்பியிருக்கிறேன். இன்று வரை ஒருவரும் மறுப்போ அல்லது ஒரு பதில் கூட அளித்த்ததில்லை !! ஒருவ்ரை திரையரங்கில் நேரில் சந்தித்த போது, நிறைய தரவுகளுடன் விரிவாக எழுதியிருக்கீங்க, ஆனா நேரமில்லை என்பதால் பதில் எழுதவில்லை என்று சொன்னார் ; கம்யூனிச வரலாறு பற்றி முக்கிய நூலைஎழுதியவர் !!


விமான சேவைகள் மிக மலிவடைந்துள்ளது பற்றி பேசினால் புரிந்து கொள்ளாமல, அதனால் ஏழைகளுக்கு என்ன பயன் என்று வறட்டுத்தனமாகவே பேசுவார்கள். அதை விட ஆடைகள் இன்று மிக மலிவாகவும், தாரளமாகவும் பரம ஏழைகளுக்கு கிடைப்பதை பற்றி பேசினால் எடுபடும். 1970களில் கந்தல் ஆடை மிக மிக சகஜம் என்பதை பற்றி நன்கு அறிவீர்கள். இன்று ஒரு நாள் கூலியில் ஒரு சட்டை அல்லது புடவையை எளிதில் வாங்க முடியும். லைசென்ஸ் கட்டுபாடுகளை நீக்கியவுடன் ஜவுளி உற்பத்தி துறையில் நடந்த அசுர மாற்றங்களின் விளைவு இது. ஆனால் இந்த மாற்றம் விவசாயத்தில் இன்னும் நடக்கவில்லை. இதை பற்றி எனது பதிவு :


உணவும், உடையும் http://nellikkani.blogspot.in/2011/07/blog-post.html


முகநூலில் முதலாளித்துவ பொருளிய அடிப்படைகள் பற்றி எழுத ஒரு 50 பேர்களாவது வேண்டும் என்று சொல்லியிருக்கிறீர்கள். நன்று. நான் அதை பல ஆண்டுகளாக விடாமல் முயன்று வருகிறேன். பல நேரங்களில் சக்கர வியுகத்தில் சிக்கிய அபிமன்யு போல் உணர்ந்திருக்கிறேன். ஒத்தை ஆளாக பல் முனை தாக்குதல்களை எதிர் கொள் வேண்டிய நிலை !! முன்பு போல் இப்ப அதிகம் ‘சண்டை’ இடுவதில்லை. பேசிட்டு போறாங்க, அதனால இப்ப என்ன ஆகப்போவுது என்ற தெளிவு பிறந்துள்ளது. ஆட்சி அதிகாரத்தில் எந்த கட்சி இருந்தாலும், இனி 1970களில் பொருளியல் கொள்கைகளை மீண்டும் யாரும் கொண்டுவரப் போவதில்லை. Irreversible process 1991க்கு பின் நடந்து வருகிறது.


1990க்கு முன்பு சாத்தியமாகத தலித் எழுச்சி இன்று சாத்தியமாகியுள்ளது. இதை பற்றி விரிவான தரவுகளுடன் எழுதிய இந்த பதிவை ‘முதலாளித்துவ வளர்ச்சியும், தலித் எழுச்சியும்’ http://nellikkani.blogspot.in/2015/06/blog-post.html  பல இடங்களில் பகிர்ந்தும், யாரும் நேர்மையாக இதை பற்றி விவாதிக்க மறுக்கின்றனர். Denial mode மற்றும் மூடிய மனம் கொண்டவர்களையே அதிகம் காண்கிறேன்.


ஆனால் தொடர்ந்து முயல்கிறேன்.


அன்புடன்


K.R.அதியமான்


***


அன்புள்ள ஜெயமோகன் சார்,


‘முதலாளித்துவ பொருளியலும், விஜய்மல்லையாக்களும்’ தலைப்பே அசத்தல். சுற்றி இளம் பெண்களுடன் ஷாட்ஸ் அணிந்து கொண்டு நிற்கும் மல்லையாவைப் பார்த்து நானும் பொறாமைப்பட்டதுண்டு. அது அவரின் விளம்பர உத்தி என்பது உங்கள் கட்டுரையை படித்தபின் தான் உரைத்தது. கலைஞர்களும், விஞ்ஞானிகளும் எப்படி தங்கள் இயல்பான திறமையால் வெளிப்பட்டு கொண்டாடப்படுகிறார்களோ, அதேபோல் தொழில் முனைவோரும் கொண்டாடப்படவேண்டும் என்பது ஒரு புதிய திறப்பு.


தொழில் முனைவோரின் முன் உள்ள சவால்களான மூலதனம், மூலப்பொருட்கள், உற்பத்தி, நிர்வாகம், வினியோகம் ஆகிய இந்த ஐந்து இனங்களையும் இடது சாரி அரசுகள் கையாண்டு தோற்றதும், இந்தியாவில் பொதுத்துறை நிறுவனங்கள் எனும் கம்பமாக்கள், அசட்டை மற்றும் ஊழலால் ஊற்றி மூடப்பட்ட விவரனையும் அருமை.


அதானி, அம்பானி, மல்லையா போன்றவர்கள் மீது கசப்பேறிய காழ்புகளை, ஊடகங்களும் – முகநூல் மொண்ணைகளும் கொட்டி வரும் இந்த வேளையில், இந்த துணிச்சலான கட்டுரை எழுதிய உங்களுக்கு என் வாழ்த்துக்கள்..


 (விஜய் மல்லையா லண்டனில் இருந்தபடியே உங்களுக்கு எத்தனை கோடி கொடுத்தார் என்கிற விவரங்களை, வழக்கமான உங்களின்


வசவாளர்களின் கட்டுரைகளில் பார்த்து தெரிந்து கொள்கிறோம்)


- எம். எஸ். ராஜேந்திரன்


திருவண்ணாமலை.


***


அன்புள்ள ஜெ


வலதுசாரி இடதுசாரிப்பொருளியலைப்பற்றிய அடிப்படைச் செய்திகள்தான். ஆங்கிலத்தில் கொஞ்சம் நாளிதழ்க்கட்டுரைகளை வாசிப்பவர்களுக்கு நன்றாகவே தெரிந்திருக்கும். ஆனால் இதைக்கூடத்தெரிந்துகொள்ளாமல்தான் இங்கே முகநூலில் அரசியல் பேசிக்கொண்டிருக்கிறார்கள். பொதுவாக அரசியலையே ஒருவகையான அக்கப்போராக மட்டுமே இங்கே பார்க்கிறார்கள். உண்மையான பிரச்சினை அதுதான். கொள்கையாகவோ அல்லது கோட்பாடாகவோ பார்ப்பதில்லை. பார்க்கத்தெரியாது. வெறும் வெறுப்பு விருப்பு. அதை ஒட்டிய சலம்பல்கள். இதனால்தான் இந்த மாதிரி எளிமையான அடிப்படைகளையே சொல்லவேண்டியிருக்கிறது


ராமச்சந்திரன்


***


தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 15, 2017 11:33

கிசுகிசு,நேரு,அரவிந்தன் கண்ணையன்

aravi


கிசுகிசு வரலாறு குறித்து…

அன்புள்ள ஜெயமோகன்,


இந்த மின்னஞ்சல் உங்களை வந்தடையும் என்று நம்புகிறேன். மீண்டும் விவாதத்துக்குள் செல்லத் தேவையில்லை. நம் தரப்புகள் வெவ்வேறு. ஆனால் உங்கள் மறுப்பில் இருக்கும் சில கருத்துகளுக்கு மட்டும் விடையளிக்க விரும்புகிறேன்.


பேஸ்புக் விவாதமாக இது முடிந்துவிடக் கூடாது என்பதற்காகத் தான் தனிப் பதிவாக எழுதினேன். மேலும், பதிவாக எழுதும் போது இன்னும் விரிவாகவும் எழுத முடியும் என்பதால். மற்றபடி உங்களை பேஸ்புக் விவாதத்திற்கு அழைப்பது நோக்கமல்ல.


“அவர் மானுடத்தை, மனிதர்களை நம்பியவர். தன்னைச்சூழ்ந்தவர்களுக்கு இனியவர்.  கடுமையான மறுப்புகளைச் சொல்லும் திராணியற்றவர்.அவரது ஆட்சியில் அவருடைய உறவினர்களின் செல்வாக்கு மிதமிஞ்சி இருந்தது. கிருஷ்ண மேனன் போன்றவர்களை நட்பின் பொருட்டே அவர் முதன்மைப்பதவிகளில் வைத்திருந்தார். அவருடைய காதலிகள் ஆட்சியில் பலவகையில் செல்வாக்கு செலுத்தினர்.தனிப்பட்ட உணர்வுகளை ஆட்சியுடன் கலந்துகொள்வது அவருடைய பலவீனமாக இருந்தது.”


மேலே இருக்கும் பத்திக்கு மட்டும் சுருக்கமான பதில்.


நேருவைப் போன்ற எதார்த்தவாதியை கான்பது அரிது. வரலாறின் மாணவன் அவர். நேரு கனவு நாயகன் (கராகா அவரை ‘Lotus eater from Kashmir’ என்றார்) என்பதும் லட்சியவாதிகளின் நாயகன் என்பதும் ஒருவகையான ‘back hand complement’. ராம் மனோகர் லோஹியா நேருவால் சிறைவைக்கப்பட்டார். அங்கிருந்து அவர் எழுதியக் கடிதத்தில் நேருவை ‘வசிஷ்ட பிராமணன்’ என்று சாடினார். உங்கள் குற்றச்சாட்டுகள் புதிதல்ல. காலம் காலமாக சொல்லப்பட்டவை தான். ஆனால் நேருவைப் பற்றி அநேகர் எழுதியதை இன்றும் வாசிப்பவன் என்கின்ற முறையில் அக்குற்றச்சாட்டுகளில் சாரம் இல்லை என்பதே முடிவு.  நேருவின் ஆட்சிக் காலத்தில் அவருடைய பழைய நண்பர்கள் பலரும் பல காரணங்களுக்காக அவரைப் பிரிந்தார்கள். ராஜாஜி, லோஹியா, ஜெயபிரகாஷ் நாராயன், ஆச்சார்யா கிருப்ளானி என்று அந்தப் பட்டியல் நீளும். எல்லோரிடமும் நற்பெயர் சம்பாதிக்க முனையும் ஒருவர் இத்தனை பகையை சம்பாதித்துக் கொள்ள மாட்டார். தன் நண்பன் என்ற போதிலும் இந்தியாவுக்கு ஊறு விளைவிக்க கூடும் என்று நினைத்து ஷேக் அப்துல்லாவை சிறை வைத்தார்.


அப்புறம் அந்த காதலிகள் விவகாரம். நேருவின் காதலிகள் இருவர். ஒருவர், எட்வினா. எட்வினா நேருவினால் எந்த பதவி சுகமும் அனுபவிக்காதவர். இரண்டாமவர், பத்மஜா நாயுடு. பத்மஜா பின்நாளில் மேற்கு வங்க ஆளுநர ஆனார். 20 வருடங்கள் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர் பத்மஜா. மீண்டும் சொல்கிறேன் நேரு அண்ணாதுரையோ, கருணாநிதியோ, எம்.ஜி.ஆரோ அல்ல.


பட்டேலை நிர்வாகத் திறன் மிக்கவர் என்று முன்னிறுத்துபவர்கள் மறப்பது பட்டேல் இறந்தப் பிறகு 14 வருடங்கள் நேரு ஆட்சி செய்தார். திறம்படவே. பட்டேல் ஒரு தளகர்த்தர் அவ்வளவே. அதை நன்கு உணர்ந்தவர் காந்தி. நேரு சீரிய நிர்வாகி. கனவுகளையும் லட்சியங்களையும் எதார்த்த நிதர்சனமாக்கத் தெரிந்தவர். நேருவின் பதவிக் காலத்தில் அவரால் உருவாக்கப் பட்ட ஸ்தாபனங்களின் பட்டியலை நோக்கினாலே அது தெளிவாகும்.


ஸ்ரீநாத் ராகவனின் புத்தகத்தில் நேரு வெளியுறவு அதிகாரிகளுக்கான அமைப்பை உருவாக்கினார் என்கிறார். அமெரிக்காவில் ப்ரூக்கிங்ஸ் ஆய்வகம் மிக மிக முக்கியமானது. அமெரிக்க ஜனாதிபதியும் அரசாங்கமும் முடிவுகள் எடுக்க வல்லுநர்களின் ஆய்வுகள் தேவை என்றுக் கருதி 1916-இல் நிறுவப்பட்டது. இந்தியாவில் அப்படி வெளியுறவுக்கு ஸ்தாபனம் அமைக்கப் பெற்று முதல் பட்டதாரிகள் 1948-இல் தான் வந்தார்கள். சுருங்கச் சொன்னால், ‘கனவு நாயகன்’, ‘லட்சியவாதி’ என்பது சரியல்ல.


போஸுக்கு நாஜியினைரையோ, ஹிட்லரையோ சரியாகப் புரிந்துக் கொள்ளவே முடியவில்லை. இரண்டாம் உலக யுத்தத்தின் முன் 1939-இல் ஆரம்பித்து நேரு இந்திய மற்றும் சர்வதேச பத்திரிக்களில் எழுதிய தொகுப்பை சமீபத்தில் படித்து அதுப் பற்றியும் எழுதினேன். உண்மையிலேயே நேருவுக்கு இருந்தப் புரிதல் சர்ச்சிலுக்கு கூட இல்லை என்பது தான் நிஜம். போஸ் பற்றி நல்ல வரலாறு புத்தகங்கள் உள்ளன. நேருவையும் போஸையும் ஒப்பு நோக்கி எழுதப்பட்ட ‘Nehru and Bose: parallel lives’ by Rudrangshu Mukherjee and ‘Her Majesty’s Opponent’ by Sugata Bose இரண்டும் நல்ல நூல்கள். தவிர, மேக்ஸ் ஹேஸ்டிங்ஸ் இரண்டாம் உலகப் போர் பற்றி சமீபத்தில் வெளியிட்டப் புத்தகத்தில் போஸின் ராணுவ அமைப்பின் போதாமை தெளிவாகச் சொல்லப்பட்டிருக்கிறது. நல்ல வரலாறுப் புத்தகங்களுக்கு இப்போது பஞ்சமில்லை. இந்திய ராணுவம் இரண்டாம் உலகப் போரில் ஆற்றியப் பங்கு பற்றி ஸ்ரீநாத் ராகவனும் யாஸ்மின் கானும் நல்ல நூல்களை எழுதியுள்ளனர்.


“அவரை தெய்வநிலைக்கு கொண்டுசெல்வதில், அவருடைய பிழைகளுக்கும் சரிவுகளுக்கும் சப்பைக்கட்டு கட்டுவதில் எனக்கு ஆர்வமில்லை.”


நானும் இது வரை நேருவை தெய்வமாக்கவில்லை. மேலும் அவரின் எந்த தவறுக்கும் சப்பைக்கட்டும் கட்டவில்லை. தரவுகள் என்னை இட்டுச் செல்லும் இடத்திற்கு நான் செல்கிறேன். சம கால எந்த உலகத் தலைவரோடும் ஒப்புமைச் சொல்லக் கூடியவர் நேரு என்பதில் எனக்கு இது வரை ஐயமில்லை.


அரவிந்தன் கண்ணையன்.


***



தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 15, 2017 11:31

May 14, 2017

கிசுகிசு வரலாறு குறித்து…

 


Nehru
அரவிந்தன் கண்ணையனின் கட்டுரை. கிசுகிசு வரலாறு குறித்து அவருடைய அவதானிப்புகள், [எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா, சசிகலா- ஒரு கிசுகிசு வரலாறு ]   மறுப்புகளுடன். நான் சொன்னது சம்பிரதாயமான வரலாற்று நோக்குக்கு அப்பால் நின்று பார்க்கும் ஒரு புதிய கோணம், ஒரு புதிய கருத்து. அதை அவர் புரிந்துகொள்ளாமல் அவரது கோணத்தில் எழுத்யிருக்கிறார். ஆகவே சில விளக்கங்கள்

நான் நேருவைப்பற்றிய அவதூறுகள், வசைகள் அனைத்திற்கும் எப்போதும் அழுத்தமான மறுப்புகளும் விளக்கங்களும் அளித்துவருபவன். நேரு நவீன இந்தியாவின் சிற்பி என்பதில், உலகமறிந்த மாபெரும் ஜனநாயகவாதி என்பதில், மாபெரும் மானுடத்தலைவர் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை. அவருடைய நேர்மையை, இலட்சியங்களை நான் எப்போதும் ஐயப்பட்டதில்லை.

அதேசமயம் நேருவை நல்ல நிர்வாகி அல்ல என்றே நான் நினைக்கிறேன். பெருங்கனவுகளை காண, சமூகத்தை வழிநடத்த அவரால் இயன்றது. இலட்சியவாதிகளை ஒருங்கிணைக்க, அதனூடாக பெருஞ்செயல்களைச் செய்ய முடிந்தது.. ஆனால் தனிப்பட்ட முறையில் அவர் திறமையற்ற நிர்வாகி என்றே நான் நினைக்கிறேன்.

 


அவருடைய பலவீனங்கள் என்பவை அவருடைய நல்லியல்புகளேதான். அவர் மானுடத்தை, மனிதர்களை நம்பியவர். தன்னைச்சூழ்ந்தவர்களுக்கு இனியவர்.  கடுமையான மறுப்புகளைச் சொல்லும் திராணியற்றவர்.அவரது ஆட்சியில் அவருடைய உறவினர்களின் செல்வாக்கு மிதமிஞ்சி இருந்தது. கிருஷ்ண மேனன் போன்றவர்களை நட்பின் பொருட்டே அவர் முதன்மைப்பதவிகளில் வைத்திருந்தார். அவருடைய காதலிகள் ஆட்சியில் பலவகையில் செல்வாக்கு செலுத்தினர்.தனிப்பட்ட உணர்வுகளை ஆட்சியுடன் கலந்துகொள்வது அவருடைய பலவீனமாக இருந்தது.


 


அதனால் விளைந்த பிழைகள் அவர் நிர்வாகத்தில் இருந்தன. பட்டேல் இருந்தவரை அவரால் அவற்றைக் கடக்கமுடிந்தது. பின்னர், சீனப்படையெடுப்புக்குப்பின்  அவருடைய வாழ்க்கையின் இறுதிக்காலத்தில் கைவிடப்பட்டவராக, தனித்தவராக உணரச்செய்யும் அளவுக்கு தோல்விகள அவரைச் சூழ்ந்தன. அவருடைய மரணத்துக்கே அது காரணமாகியது.


 


நான் அவரை வழிபடுபவன். ஆனால் அவரை தெய்வநிலைக்கு கொண்டுசெல்வதில், அவருடைய பிழைகளுக்கும் சரிவுகளுக்கும் சப்பைக்கட்டு கட்டுவதில் எனக்கு ஆர்வமில்லை. சென்ற முப்பதாண்டுகளாக நேருவை வெவ்வேறு கோணங்களில் தொடர்ந்து வாசித்து, அவதானித்து நான் அடைந்த புரிதல் இது.


m.o


நான் என் கட்டுரையில்  ‘கிசுகிசு வரலாறு’  எழுதியதை அரவிந்தன் கண்ணையன் புரிந்துகொள்ளவில்லை.. அது எளிதாகப்புரிந்துகொள்ளும் அளவுக்கு ஒரு சம்பிரதாயமான கருத்தும் அல்ல. நான் கிசுகிசுவை வரலாறு என்று சொல்லவில்லை. கிசுகிசு எழுத்துக்களை அடிப்படையாகக் கொண்டு வரலாற்றை உருவாக்கிக்கொள்ளலாம் என்றும் சொல்லவில்லை. மாறாக அந்த மதிப்பை அவற்றுக்கு அளிக்கக் கூடாது என்றே அக்கட்டுரையில் பல முறை சொல்கிறேன். கிசுகிசுவரலாற்றை எழுதுபவரின் ஆளுமை, நோக்கம் ஆகியவற்றை புரிந்துகொள்ளாமல் அதை கருத்தில்கொள்ளக்கூடாது.


 


ஆனால் அதற்கு ஓர் வரலாற்றுமுக்கியத்துவம் உண்டு என்பதே நான் சொல்லவந்தது. அது என்ன என்பதையே அக்கட்டுரையில் சொல்லியிருக்கிறேன். அக்கட்டுரையில் அதிகாரபூர்வ வரலாறு என்பது அரசாங்க வெளியீடான வரலாறு என்னும் பொருளில் அல்ல. அதையும் அக்கட்டுரையிலேயே வரையறை செய்திருக்கிறேன். அது அரசு அறிக்கைகள், செய்திகள் வழியாக வெளியிடப்பட்டு, அரசியல்சரிகளால் ஆமோதிக்கப்பட்டு, பொதுவாக ஏற்கப்பட்ட வரலாறு. அதன் சுருக்கமான வடிவமே பாடங்களில் கற்பிக்கப்படுகிறது


 


வரலாறு என்பது பொதுவாக அறியப்பட்ட செய்திகளாலும் தரவுகளாலும் தர்க்கங்களாலும் ஆனது அல்ல என்பது என் எண்ணம். அது தனிமனித பலவீனங்கள், தனிமனித உறவுகள் ஆகியவற்றாலும் ஆனது. தனிமனிதர்களின் ஆசைகள், வஞ்சங்கள் ஆகியவற்றாலான பல்வேறு ரகசிய உள்ளோட்டங்களும் கொண்டது. இவ்வெண்ணத்தை தல்ஸ்தோயின் போரும் அமைதியும் என்னும் நாவலில் இருந்தே நான் அடைந்தேன். எப்போதும் நான் வரலாற்றை அணுகுவது இந்தக்கோணத்தில்தான்


 


அரசியல்நோக்கர்கள், அரசியல் சித்தாந்திகள் இந்த அம்சத்தை பொருட்படுத்துவதில்லை. அதாவது பொதுமேடைகளில். அந்தரங்க உரையாடல்களில் முழுக்கமுழுக்க கிசுகிசுக்களையே அரசியலென்றும் வரலாறென்றும் பேசிக்கொண்டிருப்பார்கள். அதை நம்பியே முடிவுகள் எடுப்பார்கள். ஆனால் விவாதங்களில் புறவயமான தரவுகளால் ஆன ஒரு வரலாற்றுச்சித்திரம் மட்டுமே அவர்களால் பொருட்படுத்தப்படும். அதுவே முறையானதும்கூட. ஏனென்றால் அதைக்கொண்டே ஏற்றும் மறுத்தும் வாதிடமுடியும்


 


ஆனால் மனிதர்களாலானதாக வரலாற்றை அணுகும் எழுத்தாளனுக்கோ சமூகவியல்சிந்தனையாளனுக்கோ அவர்கள் ஆராயும் அந்தச் சித்திரம் போதுமானது அல்ல. மேலும் உள்ளே செல்லும் ஒரு பார்வையை அவன் நாடுகிறான். அதற்காகவே அவன் அந்த வரலாற்றுச்சூழல் சம்பந்தமான தனிப்பட்ட பதிவுகளை அணுகுகிறான். அந்தத் தனிப்பட்டப் பதிவுகளுக்கு புறவயமான ஆதாரங்கள் இருக்கமுடியாது. ஆகவெ அவை கிசுகிசுக்களாகவே வரலாற்றில் இருக்கும். அவை அவனுக்கு முக்கியமானவை, நான் சொல்லவந்தது அதையே.


 


அவற்றை கருத்தில்கொண்டே வரலாறு எழுதப்படவேண்டும் என நான் சொல்லவரவில்லை. வரலாற்றாசிரியன் நோக்கில் அவை ’ஆதாரமற்றவை’தான். ஆனால் வரலாற்றை மனிதகதையாக புரிந்துகொள்பவனுக்கு அவை தவிர்க்கமுடியாதவை. இந்தக்கோணத்திலேயே நான் எம்.ஓ.மத்தாயின் நேரு நினைவுகள் நூலை பார்க்கிறேன். அது கிசுகிசுவரலாறுதான். ஆனால் நேருயுகத்தின் விடுபட்ட பகுதிகளைப்புரிந்துகொள்ள அதைப்போல உதவும் இன்னொரு நூல் இல்லை. அந்நூலைப்பற்றிய விமர்சனத்திலேயே மத்தாயின் சிறுமையை, அவர் எழுதவிரும்பும் சித்திரத்தின் உள்ளடக்கத்தை சொல்லி அதைக்கடந்தே அதன் பல அம்சங்களைக் கருத்தில் கொள்கிறேன்.


Gen_P_N_Thapar


ஜெனரல் தாப்பர் பற்றிய சித்திரம் பலநூல்களில், மத்தாயின் நேருநினைவுகள் உட்பட, ஏறத்தாழ ஒரேவகையாகவே சொல்லப்பட்டுள்ளது. தாப்பர் அந்த இடத்துக்குக் கொண்டுவரப்படுவதற்குக் காரணம் விஜயலட்சுமி பண்டிட்டின் பிடிவாதம்தான் என்று மத்தாய் சொல்கிறார். எனக்கு அது நம்பகமானதாகவே தோன்றுகிறது. ஆதாரம் கொண்டுவா என்றுகேட்டால் அது ஆதாரபூர்வமானது அல்ல என்றே சொல்வேன். ஆதாரங்களுடன் மட்டுமே வரலாறு செயல்படமுடியும் என நம்புபவர்கள் நம்பிக்கொள்ளவேண்டியதுதான்.


 


உதாரணமாக இந்திராகாந்தியின் ஆட்சிக்காலத்தில் தீரேந்திர பிரம்மசாரி ஒரு மாபெரும் அதிகார மையம். வாஜ்பேயியின் ஆட்சிக்காலம் அவருடைய அத்தனை ஆளுமைக்கும் அப்பால் ரஞ்சன் பட்டாச்சரியா, பிரிஜேஷ் மிஸ்ரா ஆகியோரால் ஆட்டுவிக்கப்பட்ட ஒன்று. இதையெல்லாம் எந்த ஆதாரபூர்வ வரலாறு காட்டும்? ஆனால் அதை அறியாதவனுக்கு எந்த வரலாற்று உண்மை புலப்படும்? அது கிசுகிசு வரலாறாகவே எஞ்சும். அதைத்தவிர்த்து ஒருவரலாறு எழுதப்படட்டும். அந்தக் கிசுகிசுவரலாற்றையும் சேர்த்து வாசிப்பவனுக்கே வரலாற்றை மனிதகதையாகப் பார்க்கமுடியும்


 


aravi

அரவிந்தன் கண்ணையன்


 


நேதாஜியின் தலைமையில் இந்திய தேசிய ராணுவம் பிரிட்டிஷாரை எதிர்த்து நடத்திய வீரம்செறிந்த போர் ஒரு வரலாற்றுச்சித்திரம். ஆனால் அந்த ராணுவத்தில் பணியாற்றிய என்.என்.பிள்ளை எழுதிய நான் என்ற சுயசரிதை காட்டும் சித்திரம் முற்றிலும் வேறு. நான் இந்த தனிநபர் சார்ந்த வரலாற்றையும் கருத்தில்கொண்டுதான் நேதாஜியை மதிப்பிடுவேன். இதை அரசியல் நோக்கர்களுடன் அமர்ந்து வாதிட முடியாது. இது ஆதாரங்களை முன்வைத்து வாதிட்டு நிறுவவேண்டிய வரலாறு அல்ல, சொந்த வாழ்க்கைநோக்கால் அந்தரங்கமாகப் புரிந்துகொள்ளவேண்டிய ஒன்று.


 


வலம்புரி ஜானின் எல்லைகள், நோக்கங்கள் ஆகியவற்றைப்பற்றி அறிந்துகொண்டு அவ்வரலாற்றை வாசிப்பவனுக்கு தமிழக அரசியல் பற்றிக்கிடைக்கும் சித்திரம் மேலும் நுட்பமானது, யதார்த்தமானது. நான் சொல்லவருவது இதைத்தான். எம்ஜியார் ஜெயலலிதாவை வெறுத்தும் விரும்பியும் கொள்ளும் போராட்டத்தை வாசிக்கையில் நாம் அடையும் வரலாற்றுச்சித்திரம் ஒன்று உண்டு. அது எனக்கு முக்கியமானது. வந்து தொலைக்காட்சி விவாதத்தில் அல்லது முகநூலில் பேசி அதை நிறுவு என்றால் என் வேலை அதுவல்ல என்பதே பதில்.


 


வேண்டுமென்றால்இந்த   கிசுகிசு வரலாறு, மையப்போக்கு வரலாற்றால் அதை நம்பும் அரவிந்தன் கண்ணையன் வழியாக முறையாக மறுக்கப்பட்டுவிட்டது என்று கொள்வோம். அப்புறம் என்ன?


 


ஜெ


 




நேருவின்பொருளியல்கொள்கை பற்றி…
நேரு

நேரு x பட்டேல் விவாதம்
நேருவும் பட்டேலும் மதச்சார்பின்மையும்
காந்தி-இந்துத்துவம்- அரவிந்தன் கண்ணையன்

 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 14, 2017 11:35

வரலாற்றின் வண்டலில்…

subhash-chandra-bose1(1)


 


ஒரு நிலப்பிரபு தன் நான்கு பிள்ளைகளை பெண் வாசனையே படாமல் வளர்க்கிறார். அதில் இளையவன் காதல்வயப்படுகிறான். எந்த குடும்பத்தின் மீதான பகை காரணமாக அவர் அப்படி இருக்கிறாரோ அந்த குடும்பத்துப்பெண்ணையே காதலிக்கிறான். பின்னர் வழக்கமான திருப்பங்கள். நகைச்சுவைகள். தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுவந்த ‘காட்·பாதர்’ என்ற அந்ந்த மலையாளத் திரைப்படத்தை பலர் பார்த்திருக்கலாம். அதில் அஞ்ஞூறான் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்த முதியவருக்கு அப்போது 74 வயது. அவர் நடித்த கடைசிப்படமாக அது இருந்ததில் ஆச்சரியமில்லை.


அவரது மகன் விஜயராகவன் நெடுங்காலமாக மலையாளத்திரைப்படங்களில் நடித்துவருகிறார். பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்கள். ஜெயராஜ் இயக்கிய ‘தேசாடனம்’ என்ற மலையாளப்படத்தில் துறவியாக ஆக்கப்பட்ட மகனை எண்ணி வெதும்பும் தந்தையாக சிறப்பாக நடித்திருந்தார் அவர்.


அந்த முதியவரின் பெயர் என்.என்.பிள்ளை. மலையாள வணிக நாடக மேடையின் பிதாமகர்களில் ஒருவர். 1918 ல் கேரளத்தில் வைக்கத்தில் ஒரு நாயர் குடும்பத்தில் பிறந்தவர் என்.என்.பிள்ளை.  1953 ல் விஸ்வ கேரள கலாசமிதி என்ற நாடக அமைப்பை நிறுவினார்.அவரது நாடகக்குழு கேரளத்தை உலுக்கிய பல நாடகங்களை மேடையேற்றியிருக்கிறது. மனித மனத்தின் அடித்தளமாக உள்ள காமஇச்சையையும், உறவுகளின் உட்பொருளாக ஓடும் சுயநலத்தையும் திடுக்கிடும் நிகழ்வுகள் மற்றும் எரியும் கிண்டல் மூலம் வெளிப்படுத்தி அதிரச்செய்யும் அந்நாடகங்கள் அனைத்தையும் என்.என்.பிள்ளையே எழுதியிருக்கிறார். அவற்றில்  ஒரு மும்பை விபச்சாரியின் வாழ்க்கையைச் சொல்லும் ‘காபாலிகா’ பெரும்புகழ்பெற்றது. ‘கிராஸ் பெல்ட்’ , ‘ஆத்மபலி’ ‘பிரேதலோகம்’ ‘ போன்ற பல நாடகங்கள் திரைப்படங்களாகவும் புகழ்பெற்றவை. 1995 ல் என்.என்.பிள்ளை மரணமடைந்தார்.


என்.என்.பிள்ளை தன் குடும்பத்தையே ஒரு நாடகக்குழுவாக உருவாக்கி விட்டிருந்தார். அவரது மனைவி, தங்கை, தங்கை கணவர், மகன்,மகள், மருமகன் ஆகியோர் அடங்கியது அந்த நாடகக்குழு. அதுவும் அக்காலத்தில் ஒரு பெரிய ஆச்சரியமாக கேரளத்தில் விளங்கியது. நாடகம்மூலம் பெரும்பணம் சம்பாதிக்கவும் கலாச்சார விவாதங்களின் மையமாக விளங்கவும் அவரால் முடிந்தது.


என்.என்.பிள்ளை நாடக இலக்கணங்களைப்பற்றி ‘நாடக தர்ப்பணம்’ போன்ற முக்கியமான பல நூல்களை எழுதியிருக்கிறார். ஆனால் அவரது நூல்களில் மிகக்குறிப்பிடத்தக்கது அவரது சுயசரிதை. ‘ஞான்’ [நான்] என்றபேரிலான இந்தச் சுயசரிதையை நான் மிகச்சிறுவயதில் வாசித்தேன் வரலாறு என்பது பள்ளிப்பாடங்களால் ஆனது அல்ல , மானுட இயற்கையை வைத்துத்தான் அதைப்புரிந்துகொள்ள வேண்டும் என்று எனக்குக் கற்பித்தது இந்தச் சுயசரிதைதான். சிலநூல்கள் அந்நூல்களின் நடையாலும் தோரணையாலுமே முற்றிலும் உண்மையானவை என்று தோன்றச்செய்யும். அந்த உண்மையால் அவை மொத்த வரலாற்றுக்கும் மாற்று வரலாறாக நிலைகொள்ளும். அத்தகைய அபூர்வமான நூல் இது.


விசித்திரமான ஒரு துடுக்குத்தனம் அந்த தன்வரலாற்றின் தொடக்கம் முதலே முன்னிட்டு நிற்கிறது. தன் தந்தையைப்பற்றிச் சொல்லும்போது பொதுவாக அனைவருக்கும் நவத்துவாரங்கள் இருக்கும், என் தந்தைக்கு தசதுவாரங்கள் என்கிறார் என்.என்.பிள்ளை. அவருக்கு மலக்குடல் வெளியே திறக்கும் ·பிஸ்டுலா என்ற கொடிய நோய் இருந்தது. சிறுவயதில் தன்னை இடுப்பில் தூக்கி வளர்த்த பன்னிரண்டு வயது மூத்த சின்னம்மு என்ற அக்காவிடம் ரகசியக்காதல் கொள்கிறார். ஒருவகை ஈடிபஸ் ஈர்ப்பு. வாங்கிய கடனை அடைக்க முடியாமல் சிறைப்பட்டு துன்புற்று நோய் முற்றி அப்பா இறக்கிறார். ஊரில் ஒரு சண்டையில் ஒருவனை கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடி மலாயாவின் தோட்டங்களில் வேலைக்குச் செல்கிறார் என்.என்.பிள்ளை


மலாயா-பர்மாச் சித்தரிப்புதான் இந்த சுயசரிதையின் மிக முக்கியமான பகுதி. இந்தியாவில் இருந்து வந்த பலவகைப்பட மனிதர்களின் விவரணை உள்ளது. வங்காளிகள் ஓரளவு கல்வியறிவுகொண்டவர்களாகவும் தங்களை மேலானவர்கள் என்று கருதிக்கொள்வதனாலேயே ஒற்றுமை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள். ஆகவே அவர்கள் பிரிட்டிஷாருக்கு விசுவாசமானவர்களாக ஆகி கங்காணிகளாக பணியாற்றுகிறார்கள். அடுத்தபடியாக ஈழத்தமிழர்களான வேளாளர்கள் கங்காணிப்பணி ஆற்றுகிறார்கள்.


தெலுங்கர்களும் தமிழர்களும் அனேகமாக கல்வியறிவில்லாதவர்கள். பஞ்சம் பிழைக்க கிளம்பி வந்த அடிமை ஜனங்கள். குடிப்பழக்கத்தாலும் சாதிப்பிரிவினைகளாலும் சதா பூசலிட்டுக்கொண்டிருக்கிறார்கள். அவர்களை யார் என்ன செய்தாலும் கேள்விமுறையில்லை. அவர்களேகூட ஒன்றுசேர்ந்து எதிர்ப்பதில்லை. தமிழர்களில் ஒருபகுதியினரான செட்டிகள் இந்த பெரும் கும்பலுடன் இணையாமல் தங்களை பிரித்துக்கொண்டு வணிகம் செய்கிறார்கள்.


அங்கே உள்ள மலையாளிகளில் அனேகமாக அனைவருமே விதிவிலக்கில்லாமல் குற்றவாளிகள். இந்தியாவில் சிறிதும் பெரிதுமான குற்றங்கள் செய்துவிட்டு ஓடிவந்தவர்கள். புனைவுநுட்பத்துடன் அவர்களின் சித்தரிப்பை அளிக்கிறார் என்.என்.பிள்ளை. அவரைப்பார்த்ததுமே கோணலான உதடுடன் ”எந்த ஊர்?” என்கிறார் ஒருவர். சொன்னதுமே ” 1912ல் சேர்த்தலை சந்தையில் நடந்த அடிதடியைப்பற்றி கேள்விப்பட்டிருக்கிறாயா? இடியன் குட்டப்பனை ஒரே அடியில் வீழ்த்திய தேக்காட்டு சங்கரனைப்பற்றி?” . ”இல்லை” என்றதும் மேலும் இளக்காரம். பின்னர் ”நான்தான் சங்கரன்…என்னைப்பற்றிச் சொன்னால் சேர்த்தலையே நடுங்கும்…” ஒரு வக்கரித்த சிரிப்பு… அவர்கள்  எந்தக்குற்றமும் செய்யத் தயாரானவர்கள். நம்பிக்கைக்கு கொஞ்சமும் அருகதையில்லாதவர்கள்.


என்.என்.பிள்ளை அதிகமும் தமிழர்களுடன்தான் சேர்ந்துகொள்கிறார். அவரது காதலிகளும் தமிழ்ப்பெண்கள்தான். ஏராளமான அடிதடிகள். கத்திக்குத்துகள். தப்பி ஓட்டங்கள். அப்போதுதான் 1942 ஜூன் மாதம் ஜப்பானியசேனை மலாயா-பர்மாவைக் கைப்பற்றுகிறது. அதற்கு முன்னரே ஜப்பானில் சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய ராணுவத்தை உருவாக்கியிருந்தார். அதைப்பற்றிய தகவல்கள் தெரிந்திருந்தாலும் அதைப்பொருட்படுத்த வேண்டுமென்ற எண்ணமே எவருக்கும் உருவாகவில்லை. ஏன் என்றால் சர்வ வல்லமை வாய்ந்த பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தை வீழ்த்த எவராலும் முடியாது என்ற எண்ணம்தான்.


ஆனால் பர்மா வீழ்ந்ததுமே ஒரு பெரும் எழுச்சி ஏற்பட்டது. பிரிட்டிஷாரை துரத்தி இந்தியாவை மீட்பது சாத்தியம்தான் என்ற எண்ணம் வலுப்பெற்றது. நேதாஜியின் படைக்கு ஆள் சேர்க்கும் முயற்சிகள் ஏற்கனவே மிக ரகசியமாக நடைபெற்று வந்தன. இப்போது அவை ஜப்பானிய ராணுவத்தின் ஆதரவுடன் முழு வீச்சில் நடைபெற்றன. சாரி சாரியாக இளைஞர்கள் ஜப்பானிய ராணுவத்தில் சேர்ந்தார்கள். என்.என்.பிள்ளை யும் அவர்களில் ஒருவர்.


அவர்கள் சிங்கப்பூருக்குக் கொண்டுசெல்லப்பட்டு ராணுவப்பயிற்சி அளிக்கப்பட்டார்கள். மெல்ல மெல்ல அங்கே உள்ள உண்மை நிலவரம் என்.என்.பிள்ளைக்குத் தெரியவருகிறது. இந்திய தேசிய ராணுவத்தைப்பற்றி என்.என்.பிள்ளை அளிக்கும் சித்திரம் இளம் வயதில் என்னை கடுமையான மனச்சோர்வுக்கு உள்ளாக்கியது. போரில் சரணடைந்த பிரிட்டிஷ் ராணுவத்தைச் சேர்ந்த இந்தியச்சிப்பாய்களே அவர்களில் அதிகம். அவர்கள் பெரும்பாலும் சிறைக்கைதி வாழ்க்கையை தவிர்ப்பதற்காகவே அந்தப் படையில் சேர்ந்தார்கள். அவர்களுக்கு எந்தவகையான அரசியல் சிந்தனைகளும் கிடையாது. அவர்கள் பெற்றிருந்த கல்வி பிரிட்டிஷ் ராணுவம் அளித்த ராணுவக்கல்வி மட்டுமே. இந்தியதேசம் என்ற மனச்சித்திரமோ சுதந்திரப்போராட்டம் குறித்த எளிய புரிதலோகூட அவர்களிடம் இல்லை. பஞ்சம் பிழைக்க ராணுவத்தில் சேர்ந்து, தொடர்ச்சியான அடிமைப்பணி மூலம் மனம் மந்தப்பட்டு, கட்டுபாடையே குணாதிசயமாகக் கொண்ட மனித மிருகங்கள் அவர்கள்.


n.n.p

என்.என்.பிள்ளை


 


தோட்டத்தொழில் நசித்தபோது பிழைப்புக்கு வழியில்லாமலாகி இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தவர்கள் மீதிப்பேர். அவர்களுக்கும் இந்தியதேசம் என்ற மன உருவகம் கிடையாது. என்.என்.பிள்ளை இந்தியாவுக்குச் சுதந்திரம் கிடைத்தபிறகுதான் அந்த மனச்சித்திரம் எளிய அடித்தட்டு மக்களிடையே உருவானது என்று சொல்கிறார். சுபாஷ் சந்திர போஸ் மீது இனம்புரியாத ஒரு மதிப்பு அவர்களிடையே இருந்தது. அது அவரை பிரிட்டிஷார் அஞ்சுகிறார்கள், ஜப்பானியர் அவரை மதிக்கிறார்கள் என்பதனால் உருவானது. தேசவிடுதலை என்ற இலட்சிய வேகத்தால் இந்திய தேசிய ராணுவத்தில் சேர்ந்தவர்கள் மிகச்சிறுபானையினரே.


இந்தக்கலவையான ராணுவத்துக்கு முறையான, முழுமையான பயிற்சி அளிக்க ஜப்பானியருக்கு நேரமில்லை. ஆள்பலமும் இல்லை. உலகப் போர் முடிவை நெருங்கிக்கொண்டிருந்தது. ஜப்பானின் நெருக்கடி முற்றிக்கொண்டிருந்தது. ஆகவே ஏற்கனவே பிரிட்டிஷ் ராணுவத்தில் பயிற்சி பெற்றிருந்தவர்களுக்கே அவர்கள் முக்கியத்துவம் கொடுத்தார்கள். சுபாஷ் சந்திர போஸால் கவரப்பட்டு இலட்சிய வேகம் கோண்டு சேர்ந்தவர்களிடம் பயிற்சி இல்லை. அவர்களில் அசாதாரணமான திறமையைக் காட்டிய சிலருக்கு மட்டும் பொறுப்பு அளிக்கப்பட்டது. அவர்களில் ஒருவராக என்.என்.பிள்ளை காப்டன் பதவியை அடைந்தார்.


1943ல் சுபாஷ் சந்திர போஸ் சிங்கப்பூரில் இந்திய தேசிய ராணுவ அணிவகுப்பை நடத்தி இந்தியாவின் சுதந்திரத்தை அறிவித்தார். அதையொட்டி ஒரு பெரும் அதிரடித்தாக்குதல் மூலம் நேராக இந்தியாவை நோக்கி முன்னேறி மணிப்பூரில் நுழைந்து இம்பாலைக் கைப்பற்றி அங்கிருந்து வங்கம் வழியாக தென்னிந்தியா நோக்கி நகர்ந்து இந்தியாவை மீட்கும் ஒரு மாபெரும் திட்டம் வகுக்கப்பட்டது. அப்போது பர்மிய ஜப்பானிய ராணுவத்தின் தலைவராக இருந்தவர் ஜெனரல் முட்டாகுச்சி. இவரது படைப்பிரிவுகளுடன் இந்திய தேசிய ராணுவத்தின் படைப்பிரிவுகளையும் இணைக்க ஆணையிடப்பட்டது.


ஜப்பானிய ராணுவம் பர்மாவை ஊடுருவியதன் தகவல்களை நாம்  உலகப்போர் குறித்த எல்லா நூல்களிலும் காணலாம். ஆனால் அதன் நுண்ணிய அந்தரங்கச்சித்திரம் ஒன்றை அளிக்கிறது என்.என்.பிள்ளையின் தன்வரலாறு. சிங்கப்பூர் முதல் கல்கத்தாவரை நீளும் ஒரு பெரும் ரயில்பாதையை ஜப்பானியர் அமைத்தார்கள். மலாயா, தாய்லாந்து, பர்மா வழியாகச் செல்வது அந்தப்பாதை. கொடும் காடுகளின் வழியாக பல ஆறுகளையும் மலைகளையும் கடந்து போவது. அதை அமைக்க ஆறு வருடங்கள் ஆகும் என்று பொறியாளர்கள் சொன்னார்கள். எட்டு மாதங்களில் அதை அமைத்து முடிக்க ஜப்பானிய ராணுவம் முயன்றது. பல்லாயிரக்கணக்கான போர்க்கைதிகள் கடும் உழைப்பு முகாம்களில் அடைக்கப்பட்டு அந்த ரயில்பாதை அமைப்பதில் ஈடுபடுத்தப்பட்டார்கள். மலாயா, பர்மாவில் இருந்து ஆயுதம் மூலம் திரட்டப்பட்ட ஏழை தோட்டத்தொழிலாளர்கள் அந்த ரயில்பாதைப்பணியில் ஈடுபடுத்தப்பட்டார்கள்.


சயாம் மரணரயில்பாதை என்று பின்பு அழைக்கப்பட்ட இந்தப்பாதையின் கதை ஒரு மானுடசோகம். இந்தப்பாதையை தடுப்பதற்காக தங்கள் ராணுவத்தின் கைதிகள் மேல் பிரிட்டிஷ் விமானங்கள் குண்டு பொழிந்தன. மலேரியாவாலும் பாம்புகடியாலும் பசிபட்டினியாலும் பலர் செத்தார்கள். மொத்தம் மூன்றுலட்சம்பேர் இறந்திருப்பார்கள் என்றும் அதில் ஒருலட்சம்பேர் தமிழர்கள் என்றும் சொல்லப்படுகிறது. இந்தரயில்பாதைத்திட்டம் முடிவடையவில்லை.


மலாயாவிலும் பர்மாவிலும் ஜப்பானியர்களுக்கு கடுமையான எதிப்பு இருந்தது. கம்யூனிஸ்டுகளும் மலாய, பர்மியத் தேசியவாதிகளும் இணைந்து அந்த எதிர்ப்பை கெரில்லாப்போராட்டமாக நடத்தினர். ஆகவே ஜப்பானியப்படை ஓரு வழியைக் கைக்கொண்டது. அவர்கள் போகும்வழியெல்லாம் முழுமையாகக் கொள்ளையைத்து, வீடுகளையும் விளைநிலங்களையும் கொளுத்தி, கிட்டத்தட்ட எதுவுமே மிஞ்சாமல் ஆக்கியபடிச் சென்றார்கள். ஆகவே பசியில் துடித்த மக்கள் கூட்டம் கூட்டமாக அந்த ரயில்பாதையின் இருபக்கமும் குழுமினார்கள். ரயிலில்செல்பவர்களை நோக்கி கையேந்தி கெஞ்சியபடி பின்னால் ஓடினார்கள். ரயில்பாதையின் இருபக்கமும் பட்டினிப்பிணங்கள் குவிந்தன.


ரயிலில் சென்ற சிப்பாய்களின் வேடிக்கையே ரொட்டியைப்பிய்த்து அக்கூட்டம் மீது வீசுவதுதான். அவற்றுக்காக அம்மக்கள் பாய்ந்து, போராடி, ஒருவரை ஒருவர் மூர்க்கமாகத் தாக்கிக்கொண்டார்கள். அதைக்கண்டு படைவீரர்கள் மகிழ்ந்தார்கள். ரயில் நிலையக்கழிப்பறைகளில்  சில்லறைக்காசுகளுக்காகவும் ரொட்டிக்காவும் விபச்சாரம் செய்ய பெண்கள் கைக்குழந்தைகளுடன் வந்து முட்டி மோதினார்கள். கழிப்பறைகளில் கால்சராயை அவிழ்க்கும்போது குழந்தைகள் முண்டியடித்து வந்து கைகளைப்பற்றிக்கொண்டு கெஞ்சும் காட்சியை என்.என்.பிள்ளை எழுதுகிறார்.


இந்திய தேசிய ராணுவத்தின் உள்விவகாரங்களைப்பற்றிய பதிவுகளும் அதிர்ச்சி அளிப்பவை. பிரிட்டிஷ் நேர்மை பற்றி நமக்கு ஒரு பிம்பம் உள்ளது. என்.என்.பிள்ளை நேர் மாறாகச் சொல்கிறார். பிரிட்டிஷ் ராணுவம் என்பது ஊழலாலேயே ஒருங்கிணைக்கப்பட்டது என்பது அவரது கூற்று. சாதாரண பிரிட்டிஷ் அதிகாரிகள் பிரிட்டனில் மிக எளிய தொழிலாளர் குடிகளில் இருந்து வந்தவர்கள். பணம் சம்பாதித்து ஊர்திரும்பி ஒரு கௌரவமான வாழ்க்கையை உருவாக்கும் கனவு மட்டுமே கொண்டவர்கள் அவர்கள். ஆகவே அன்றைய பிரிட்டிஷ் அரசின் அதிகாரிகளுக்கு ஊழல் என்பது அன்றாடச்செயல்பாடு. ஒரு சிற்றூரில் காவல்துறை அதிகாரியாக வரும் வெள்ளையர் முதல் சிறு நீதிபதிகள், ராணுவ அதிகாரிகள் வரை அனைவருமே அதிகாரபூர்வ ஊழலிலேயே திளைத்திருப்பார்கள்.


அந்த ஊழலை நிகழ்த்தும்பொருட்டுத்தான் அன்றைய நிர்வாகத்தின் பிரமிட் அமைப்பு உருவாக்கப்பட்டிருந்தது. கீழ்மட்ட ஊழியர்கள் ஊழல்செய்வதன் ஒருபகுதி மேலே சென்று கொண்டே இருக்கும். இன்றுவரை சுதந்திர இந்தியாவில் அந்த பிரிட்டிஷ் ஊழலமைப்பே தொடர்கிறது. இந்திய ராணுவத்தில் ஊழல் நடைமுறைக்குப் பழகிய இந்திய தேசிய ராணுவத்தின்  பிரிட்டிஷ் சிப்பாய்கள் எல்லாவற்றிலும் காசு பார்க்க முயன்றார்கள். குறிப்பாக வங்காளிகள் பணம் திரட்டுவதை மட்டுமே செய்தார்கள். அவர்களைத்தட்டிக்கேட்க எவராலும் முடியவில்லை. சுபாஷ் சந்திர போஸை பலமுறை என்.என்.பிள்ளை சந்திக்கிறார். ஆனால் சுபாஷ் சந்திர போஸ் சிலரது ஆலோசனைப்பிடியில் இருந்தார்.


சுபாஷ் சந்திர போஸ் ராணுவ விஷயமாக ஒன்றுமே தெரியாதவராக இருந்தார். அவரை ஜப்பானிய ராணுவத்தின் கடைநிலை அதிகாரிகூட ஒரு பொருட்டாகவே கருதவில்லை. இந்தியாவைக் கைப்பற்றும்போது இந்திய மக்கள் ஜப்பானியருக்கு எதிராக திரும்பாமல் தடுக்கும் ஒரு கவசமாக, ஒரு எதிர்காலப் பொம்மை ஆட்சியாளராக, மட்டுமே ஜப்பானியர் சுபாஷை கண்டார்கள்.


கனவுஜீவியான சுபாஷ் சந்திர போஸ் தனக்கே உரிய இலட்சியக்கனவு ஒன்றில் ததும்பிக்கொண்டிருந்தார் என்று என்.என்.பிள்ளை சொல்கிறார். சயாம் மரண ரயில் திட்டத்தில் பல லட்சம்பேர் கொல்லப்பட்டதும் ஜப்பானிய ராணுவம் எளிய பொதுமக்கள் மேல் நிகழ்த்திய அட்டூழியங்களும் அவருக்குத்தெரியும். அவரது மானுடநேயம் மிக்க மனம் அதை எதிர்த்தது. ஆனால் அவர் கிட்டத்தட்ட ஜப்பானியரின் அடிமையாக, கைப்பாவையாக இருந்தார். இந்தியாவை மீட்பது என்ற பெருங்கனவைக்கொண்டு அந்த அவமானங்களை உண்டு செரித்துக்கொண்டு வந்தார்.


சுபாஷ் சந்திர போஸையே ஒரு பொருட்டாகக் கருதாத ஜப்பானிய ராணுவத்துக்கு இந்திய தேசிய ராணுவம் மீது முழுக்க முழுக்க இளக்காரம் மட்டுமே இருந்தது. போர்முனையில் இந்திய தேசிய ராணுவம் எதையாவது செய்யும் என்ற நம்பிக்கை கொஞ்சம்கூட ஜப்பானியரிடம் இல்லை. ராணுவத்தில் உள்ள காவல்வேலை, கருவிகளை பழுதுபார்த்தல், ஓட்டுநர் வேலை, கட்டுமான வேலைகள் போன்ற ஏராளமான வேலைகளுக்கு அவர்களுக்கு ஆள் தேவைப்பட்டது. ஆகவே தங்கள் ராணுவத்துக்கான ஒரு சேவகர்க்கும்பலாகவே அவர்கள் இந்திய தேசிய ராணுவம்த்தை நடத்தினார்கள்


பிரிட்டிஷாரை விட பலமடங்கு இனவெறி கொண்டவர்களாகவும் குரூரமானவர்களாகவும் பழமைநோக்குள்ள அடிப்படைவாதிகளாகவும் இருந்தார்கள் ஜப்பானியர். அவர்களைப் பொறுத்தவரை இந்தியா என்றல்ல, எந்த ஒரு தேசத்தின் விடுதலையும் அவர்களுக்கு ஒரு பொருட்டே அல்ல. உலகத்தை முழுக்க ஜப்பானியச் சக்கரவர்த்தியின் ஆட்சிக்குக்கீழே கொண்டுவருவது மட்டுமே அவர்களின் நோக்கம். ஒவ்வொரு நாளும் ஜப்பானியரின் அவமதிப்புகளைச் சந்திக்கிறார் என்.என்.பிள்ளை. போர்முனையில் இந்திய சுதந்திரத்துக்காகப் போராடும் கனவைக்கொண்டு அந்த அவமானங்களை எதிர்கொள்கிறார்.


ஜப்பானியர் இந்திய தேசிய ராணுவத்தை போரில் ஈடுபடுத்தவேயில்லை. இந்திய தேசிய ராணுவமும் ஜப்பானிய ராணுவமும் சேர்ந்து ஈடுபட்டதாகச் சொல்லப்பட்ட பெரும்பாலான போர்களில் இந்திய தேசிய ராணுவம் வெறும் உதவியாளர்பட்டாளமாகவே இருந்தது. கடைசியில் மூன்றே மூன்று போர்முனைகளில் இந்திய தேசிய ராணுவம் நேரடியாக பீட்டிஷ் ராணுவத்தை எதிர்கொண்டது. ‘வெட்கக்கேடு!” என்று சுயவெறுப்புடனும் கசப்புடனும் அதைப்பற்றி எழுதுகிறார் என்.என்.பிள்ளை. போர்க்களத்தில் இந்திய தேசிய ராணுவத்தில் இருந்த முன்னாள் பிரிட்டிஷ் இந்திய வீரர்கள் வெள்ளைக்கொடியுடன் பிரிட்டிஷ் ராணுவத்தை நோக்கிச் சென்றார்கள். அவர்களை நம்பாமல் பிரிட்டிஷ் ராணுவம் அவர்களை சுட்டு வீழ்த்தியது. பலர் திரும்பி ஓடிவந்தார்கள்.


ஒரு இடத்தில்கூட இந்திய தேசிய ராணுவம் உண்மையாகப் போரிடவில்லை. பயிற்சி இல்லாத புதிய இந்திய தேசிய ராணுவ வீரர்கள் அஞ்சி ஓடி சிறு சிறு கும்பல்களாகச் சிதறினார்கள். ஒருங்கிணைப்பு இல்லாமல் காடுகளில் தவித்து ஜப்பானிய ராணுவத்தால் மீட்கப்பட்டார்கள். போர்க்களத்தில் தனிநபர்வீரம் என்பதற்கு எந்த பொருளும் இல்லை என்று தல்ஸ்தோய் தன் ‘போரும் அமைதியும்’ நாவலில் சொல்கிறார். அதையே என்.என்.பிள்ளையும் சொல்கிறார். ஒருங்கிணைப்பும் கட்டுப்பாடும் மட்டுமே அங்கே முக்கியம். அதற்கு எந்தவகையான இலட்சியவாதமும் உதவாது. பலவருடங்கள் தொடரும் பயிற்சி மூலம் வாழ்க்கையே அப்பயிற்சியால் ஆனதாக இருப்பது மட்டுமே உதவும். அதாவது போர்முனையில் சிறப்பாகப் போரிடும் ராணுவமென்பது மனிதர்களை இயந்திரமாக ஆக்கிக்கொண்ட ஒன்று. அவசரகதியில் உருவாக்கப்பட்ட இந்திய தேசிய ராணுவம் ஒரு கேலிக்கூத்தாக ஆனதில் ஆச்சரியமே இல்லை


மேலும் இந்திய தேசிய ராணுவத்துக்கு உரியமுறையில் ஆயுதங்களும் உணவுகளும் ஜப்பானியரால் வழங்கப்படவும் இல்லை. இந்திய தேசிய ராணுவத்தின் அவலநிலையும் தோல்விகளும் சுபாஷிடம் சொல்லப்படும்போது அவமானமும் மனக்கசப்பும் மீதூற செய்வதறியாமல் அவர் எரிந்துவிழுகிறார். திட்டுகிறார். கண்ணீர் விட்டுக்கொண்டு அவர்களிடம் மேலும் போராடும்படி சொல்கிறார். என்.என்.பிள்ளை காட்டும் சுபாஷ் சந்திர போஸ் இலட்சியவாதத்தின் மேகமயமான கனவுலகில் இருந்து போர் என்ற அப்பட்டமான யதார்த்தத்தின் முள்காட்டுக்குள் விழுந்து தவிப்பவராகக் காட்சியளிக்கிறார்.


கடைசியில் போர் முற்றிலும் தோல்வியில் முடிகிறது. சுபாஷ் சந்திர போஸ் விமான விபத்தில் மரணமடைகிறார். சுபாஷ் சந்திர போஸைப் பொறுத்தவரை அந்த விபத்தும் மரணமும் அவருக்கு இயற்கை கொடுத்த பரிசு என்று என்.என்.பிள்ளை எண்ணுகிறார். அவர் ஜப்பானியரால் கொல்லப்பட்டிருக்கவும் வாய்ப்புண்டு என்று கருதுகிறார். சுபாஷ் சந்திர போஸ் ஏற்கனவே மன அளவில் உடைந்து மரணத்தை நெருங்கிவிட்டிருந்தார். ஜப்பானியர்களையும் ·பாஸிஸ்டுகளையும் நம்பியது எத்தனை பெரிய வரலாற்றுப்பிழை என அவர் நன்குணர்ந்துவிட்டிருந்தார்.


ஒரு நிகழ்ச்சியை என்.என்.பிள்ளை சொல்கிறார்.  இந்திய நிலப்பகுதியில் இந்திய தேசிய ராணுவம் கைப்பற்றிய முதல் நிலப்பகுதி அந்தமான். அங்கே சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசியக்கொடியை ஏற்றினார். ஆனால் அந்த தீவு ஜப்பானின் கைவசம்தான் இருந்தது. அங்கே சுபாஷ் சந்திர போஸ்யால் நியமிக்கப்பட்ட ஆட்சியாளரான மோகன்தாஸ் என்பவர் ஜப்பானியரால் சிறைப்படுத்தப்பட்டார். 1944ல் போர் முடியும் தருவாயில் அந்தமான் வந்த சுபாஷ் சந்திர போஸ் சிறையில் இருந்த மோகன்தாஸை சந்திக்கிறார். கடும் சித்திரவதைக்கு உள்ளாகி சிறையில் வாடிய அவரைக்கண்டு சுபாஷ் சந்திர போஸ் மனமுடைந்து கண்ணீர்விடுகிறார். ஆனால் அவரால் ஜப்பானியரை எதிர்த்து ஒன்றுமே செய்ய முடியவில்லை.


இந்திய தேசிய ராணுவம் கலைக்கப்பட்டபின்னர் இந்தியா திரும்பும் என்.என்.பிள்ளை கையில் ஒரு பைசாகூட இல்லாமல் கேரளம் வருகிறார். அவரிடம் இருக்கும் ஒரே திறமை என்பது இந்திய தேசிய ராணுவத்துக்காக சில நாடகங்களை பர்மாவின் தொழிலாளர் மத்தியில் போட்டதுதான். திருமணமாகி பின் கணவனைப்பிரிந்து இருந்த சின்னம்முவை அவர் திருமணம் செய்து கொள்கிறார். சுதந்திரப்போராளி என்ற சமூக அங்கீகாரம் எதையும் அவர் நாடவில்லை. சமூக எதிர்ப்புகளை துச்சமாகக் கருதும் ஆழமான கசப்பும் அங்கதமும் அவரிடம் குடியேறிவிட்டிருந்தது. நாடகநிறுவனத்தை தொடங்கினார். வெற்றிபெற்றார்.


”வருடம்தோறும் நான் பல ஆயிரம் ரூபாய்கள் நன்கொடையாகக் கொடுக்கிறேன். ஏழை எளியவர்களுக்கு அளிக்கிறேன்…அவையெல்லாம் கருணையால் அல்ல. சமூகம் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் அல்ல. அப்படிப்பட்ட எந்த நம்பிக்கையும் எனக்கு இல்லை. என் அப்பாவை சில்லறைப்பணத்துக்காக சிறையிலடைத்துக்கொன்ற கேரள சமூகத்தின் முகத்தில் அதன் வழியாக நான் காறி உமிழ்கிறேன்…”என்று என்.என்.பிள்ளை தன் தன்வரலாற்றின் இறுதியில் எழுதினார்.


சுயசரிதைகளை உண்மையாகவே எழுதினால் அந்த நூலை தொட்டால் கை சுடும் என்பார்கள். அப்படிப்பட்ட நூல்களில் ஒன்று இது. நம் கைவழியாக ஓடிச்செல்வதே வரலாறு. விழுமியங்கள் ஏற்றப்பட்டு கோபுரங்களாக ஆக்கப்பட்டு நம் தலைக்குமேல் எழுந்துநிற்கும் கட்டுமானம் அல்ல.


 


ஞான். சுயசரிதை. என் என் பிள்ளை [மலையாளம்]


 


முதற்பிரசுரம்/ மறுபிரசுரம்Jan 1, 2011


 

தொடர்புடைய பதிவுகள்

வெறுப்புடன் உரையாடுதல்
ஹிட்லரும் காந்தியும்
உலகத்தொழிலாளர்களே!
இமயச்சாரல் – 19
இமயச்சாரல் – 9
இமயச்சாரல் – 8
பாவ மௌனம்
ஒரு சந்திப்பு
இனிதினிது…
மேற்கு வங்க மார்க்ஸியமும், தலித்துக்களும்
ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் – 1
காந்தியைப் பற்றிய அவதூறுகள்
குடியரசுதினம்-கடிதங்கள்
திராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்? 2
திராவிட இயக்கத்தை நிராகரிப்பது ஏன்?-1
வந்தேமாதரம்
காந்தியும் தலித் அரசியலும் – 7
காந்தியும் தலித் அரசியலும் – 6
ஸ்டாலினியம், அழியாத எச்சரிக்கை.
நாடார்,நாயர்,மிஷனரிகள்…

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 14, 2017 11:33

ஊட்டி காவிய முகாம் – 2017 நினைவுகள்

 


siva


அன்பின் ஜெ,


 


சென்ற(2016) ஃபிப்ரவரியில், குருகுலத்திற்கு வருகையில், எங்கிருந்தென்று தெரியாமல், பசுஞ்சாணத்தின் மணத்தினை, உணர்ந்தேன். இம்முறையும், ஊட்டி பேருந்து நிலையத்தில் இறங்கும்போதே, இயல்பாக அதைத் தேடியது நாசி.


 


இரு சக்கர வாகனத்தில் வருவதாகத் திட்டமிட்டிருந்தேன். முதலிருநாள், கடுமையான ஜுரத்தினால், உடல் ஒத்துழைக்காமல், பேருந்திலேயே செல்ல முடிவெடுத்து, வந்து சேர்ந்தேன்.


[image error]


சென்ற முறை போல், முதல் நாளிரவு முழுக்க பயணித்து, மறு நாள் உடல் அலுப்புடன் அமரவேண்டிய தேவையில்லாமல், முகாமுக்கு முதல் நாள் மாலையே குருகுலம் வந்தடைந்தேன். அதற்கு மற்றொரு காரணமும் உண்டு. மாலை நடையில் உங்களுடன் கலந்து கொள்ள முடியுமே, என்பதுதான். ஆனால், நீங்கள் அடுத்த நாள் காலைதான் வருகிறீர்கள் என்ற தகவலையறிந்து, சற்றே சோர்வடைந்தேன், என்றாலும், நண்பர் சுஷில்(கோவை) அறிமுகம் கிட்டி, கடைசி பென்ச் மாணவனாய் அவர் வீட்டுப் பாடத்தை ஆரம்பித்தார். மறுநாள் அமர்வுக்கான, முன் தயாரிப்பை மேற்கொள்ள ஆரம்பித்தார், உடன் நானும் இன்னும் சிலரும் இணந்தோம். கோகோலின் மனைவியைப் பற்றிய விவாதம் முதல் நாளிரவே ஆரம்பித்தாயிற்று. பிறகு தண்ணீர் கதையைப் பற்றி ஒரு நீண்ட விவாதம் தொடங்குவதற்கான அறிகுறிகள் தெரிய, அடுத்த நாள் அமர்வில், உறங்கி விடக்கூடதென்பதற்காக, கம்பளி துணையுடன் சற்று நேரம் குளிருடன் போராடிவிட்டு உறங்க துவங்கினேன்.


[image error]


காலையில், நண்பர் சுஷில், முதல் நாளிரவே சொல்லியிருந்த விஷயம் நினைவுக்கு வர, விடியும் தருணம் எழுந்து, கோட்டை அடுப்பை பற்றவைக்க சிறிது நேரம் போராடி, முதலில் ஒரு அடுப்பை பற்ற வைத்தோம். அதிலேயே துவங்கியது, புதியன கற்றல். இரண்டு அடுப்பை பற்ற வைப்பதில், சுஷிலுக்கு நான் துணைபுரிய, மூன்றாவது அடுப்பை அவரே தனியாக சென்று பற்ற வைத்தார். வரும் நண்பர்களுக்கு, சுடச்சுட(?!) வெந்நீர் தயார். ஆனால், வெந்நீரை,  வாளிக்கு மாற்றிய சில நிமிடங்களிலேயே, அது தண்ணீர் ஆகும் மாயமும் நிகழ்ந்தது.


 


அமர்வில் எப்படி விவாதத்தை, மையக் கருத்திலிருந்து விலகாமல், செல்வது என்பதை, நேரடியாக கண்டும் கேட்டும் உணர்ந்தும் கொண்டேன், என்பதை தனித்து சொல்லத்தான் வேண்டும். ஏனென்றால், ’தண்ணீர்’ சிறுகதையை பற்றிய விவாதத்தில், இயல்பாக, உரையாடல், தற்கால வறட்சி மிகுந்த இடங்களைப் பற்றிய தகவல்களுக்கு தாவ, நீங்கள் இடைமறித்து, மீண்டும் மைய கருத்துக்கு கொண்டு வந்த விதம், பின் மனுஷ்யபுத்திரனின் கவிதை ஒன்றில்,(அப்படி ஆட்டு என் செல்லமே) அதை விவாதித்த விதம், போன்றவைகள், இயல்பாகவே, சிறுகதையை, கவிதையைப் பற்றிய விவாதம் இப்படித்தான் நிகழவேண்டும், என்பதை உணர்த்தின.


 


எதிர்பார்த்திருந்த மாலை நடையில், கற்றுக் கொண்ட விஷயங்களைப்பற்றி, ஒரு நீண்ட கடிதம் எழுத வேண்டும்.


[image error]


கம்பனைப் பற்றிய அமர்வில், நாஞ்சில் நாடனின், அற்புதமான சொல்லாடலோடு, சொற்களின் தாண்டவத்தைக் கண்டு ரசித்தோம். ஒரே பொருளுக்கு, எத்தனை விதமான சொற்கள், என்பதைப் பற்றிய விளக்கங்கள், அப்போது, இயல்பாகவெ, அரங்கினரால், வெண்முரசில் உபயோகப்படுத்தப்பட்டிருக்கும், புதிய சொற்கள், மற்றும் அதன் பொருள், பற்றியும், ஒவ்வொரு பகுதியிலும், வெண்முரசு பற்றிய உரையாடல் நிகழ்ந்தது பற்றியும் பகிர்ந்துகொள்ளப்பட்டது.


 


கம்பனை மீண்டும் மீண்டும் படிக்க, ஆர்வம் ஏற்பட்டது.


 


எத்தனை முறை, முகாமில் கலந்துகொண்டாலும், ஒவ்வொரு முறையும் புதிதாக கற்றுக்கொள்ள, நிறைய இருக்கும் என்ற நம்பிக்கையில், அடுத்த முகாமை எதிர் நோக்கி,


 


என்றும் அன்புடன்,


 


எழிலனின் தந்தை சிவக்குமரன்.


 


 


ஊட்டி புகைப்படங்களின் தொகுப்புகளின் லிங்க்குகள்


https://goo.gl/photos/6VmPDArPsMxtRsVe8


https://goo.gl/photos/5vt5CdAgpFqsJpTo8


https://goo.gl/photos/r6J3BuYjn9mUnWC2A


 


ஜானகிராமன்.


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 14, 2017 11:33

May 13, 2017

எம்.ஜி.ஆர்,ஜெயலலிதா, சசிகலா- ஒரு கிசுகிசு வரலாறு

dal

ஜான் தல்வி


 


 


கிசுகிசு வரலாறுகளின் மீது எனக்கு தனிப்பட்ட ஈடுபாடு ஒன்று உண்டு. கல்லூரி இரண்டாம் ஆண்டு படிக்கும்போது ஜான் தல்வி எழுதிய தி ஹிமாலயன் ப்ளண்டர் என்ற நூலை நான் படித்தேன். அப்போது அந்தப்போரைப்பற்றி எனக்குப்பெரிதாக ஏதும் தெரியாது. குறிப்பாக அப்போரின் கேலிநாயகனாய்கிய பி.என்.தாப்பரைப்பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. அந்நூல் ஒரு பரபரப்பான சித்திரத்தை அளித்தது.


 


தாப்பர் இந்திய முப்படைகளின் தலைவராக இருந்தார். தன் செயலின்மை காரணமாக சீனா இந்திய எல்லைகளை ஊடுருவியதை அறியாமல் கால்ஃப் விளையாடிக்கொண்டிருந்தார். நேருவின் குடும்பத்துடன் மணஉறவு கொண்டிருந்தவர். அக்காரணத்தால் ஜெனரல் திம்மையாவின் எச்சரிக்கையை மீறி , தகுதிகொண்டவரான ஜெனரல் தோரட்டை மறிகடந்து முப்படைத்தலைவரானவர்.போர் முடிந்தபின்னர் ராஜினாமா செய்யவைக்கப்பட்டார்.


 


தாப்பர் பதவியை ஒரு சுகபோகமாக மட்டுமே எண்ணியவர், விளைவாக வரலாற்றால் சுண்டி வீசப்பட்டு குப்பைக்கூடைக்குள் விழுந்த ஒருவர் என்பதே வரலாறு. ஆனால் இன்று அவருடைய அந்தச்செயலின்மைக்கு அவருக்கு சீனாவுடனோ இடதுசாரி அதிகார மையத்துடனோ இருந்த தொடர்புகள் காரணமா என்று வரலாற்று ஆய்வாளர்கள் ஐயப்படுகிறார்கள்.அவருடைய மகன்தான் தொலைக்காட்சி விவாதங்களை நடத்தும் கரன் தாப்பர். அவருடைய மருமகள்தான் பிரபல வரலாற்றாய்வாளரான ரொமீலா தாப்பர். இக்குடும்பமே அவர்களின் இடதுசாரி அரசியல், இந்திய வெறுப்பு, சீனத்தொடர்பு, சமையலறை அரசியல் வியூகங்களுக்கு இன்று பரவலாக அறியப்படுவது என்பது குறிப்பிடத்தக்கது


 


ஹிமாலயன் பிளண்டர் நூல் இந்திய அரசால் தடைசெய்யப்பட்டிருந்தது. ஆனால் ஒய்.எம்.சி.ஏ நூலகத்தில் அது கிடைத்தது. அது அளித்த அந்த கிசுகிசு வரலாறு நான் அறிந்த சீனப்படையெடுப்பு கதைகளுக்கு நேர்மாறாக இருந்தது. எனக்கு ஏழு வயதாக இருந்த போதுதான் சீனப் படையெடுப்பு தொடர்பான செய்திகளை வாரஇதழ்களில்  வந்த கட்டுரைகளின் தொகுப்புகளில் இருந்து நான் தெரிந்து கொண்டேன். அதன் பிறகு வெவ்வேறு கட்டுரைகளில் சீனப்படையெடுப்பு குறித்து வாசித்தேன்.  தல்வியின் கிசுகிசு வரலாற்றுக்கும் அதிகாரபூர்வ வரலாற்றுக்கும் மிகப்பெரிய முரண்பாடு இருந்தது. அது என்னை ஒருவகையில் உலுக்கியது. வரலாறென்பதே அது நமக்கு எவரோ எழுதி அளிப்பது தானோ என்ற எண்ணத்தை அந்த வயதிலேயே உருவாக்கியது.


 


மேலும் மேலும் குழப்பத்தை அடைந்து சீனப்போரின் பின்னணி, டெல்லியின் அரசியல் சூழ்ச்சிகளைப் பற்றி மட்டுமே மூன்று மாதங்களுக்கு மேலாகப் படித்துக் கொண்டிருந்தது நினைவு வருகிறது. நெவில் மேக்ஸ்வெல்லின் இந்தியாஸ் சைனா வார், கன்னர் மிர்டாலின் ஏஷியன் டிராமா,  செஸ்டர் பௌல்ஸின் சுயசரிதை என கலந்துகட்டி வாசித்தேன்.. இன்றைக்கு திரும்பிப் பார்க்கையில் எனக்கான வரலாற்றுச் சித்திரத்தை அப்போது உருவாக்கிக் கொண்டேன் என்று தோன்றுகிறது. தல்வியின்  நூலை மெதுவாக பிற நூல்களின் வழியாகப் புரிந்துகொண்டேன். ஒவ்வொன்றையும்பற்றி எனக்கான மதிப்பீட்டை உருவாக்கிக்கொண்டேன்.


Gen_P_N_Thapar

ஜெனரல்.தாப்பர்


 


அந்த பிற நூல்களின் முக்கியமானவை அனைத்துமே ஒருவகையில் கிசுகிசு நூல்கள் தான். கிசுகிசுவை முன்வைப்பவரை நாம் சரியாக மதிப்பிட்டுவிடும்போது கிசுகிசு வரலாற்றுக்கு ஒரு மதிப்பு ஏற்படுகிறது.  பின்னர் இந்திய கிசுகிசு வரலாறுகளின் உச்சமான எம்.ஓ.மத்தாயின் மை டேய்ஸ் ித் நேரு என்னை கவர்ந்தது. எனக்கு அது ஒருவகை வரலாற்று ஆவணம்


 


இன்று இருவகை வரலாறுகள் உண்டு என்று எண்ணுகிறேன். ஒன்று அதிகார பூர்வமாக வெளியிடப்படும் வரலாறு. அது அரசியல் சரிநிலைகளுக்கேற்ப வரலாற்றுத் தேவைகளுக்கேற்ப, அதிகார அமைப்பின் நோக்கங்களுக்கேற்ப உருவாக்கப்பட்டு பொதுவாக முன்வைக்கப்பட்டு பல்வேறு தரப்புகளால் ஏற்பும் மறுப்பும் கூறப்பட்டு காலப்போக்கில் ஏற்றுக் கொள்ளப்படுவது. அதுவே மைய ஓட்ட வரலாறு என்பதில் ஐயமில்லை. ஆனால் அந்த வரலாறு ஒருவகையில் உயிரற்றது. செங்கல் செங்கல்லாக கட்டி அடுக்கி எழுப்பப்படும் கட்டிடங்களைப்போல. அந்த வரலாற்றை மிக எளிய வடிவில் நாம் பள்ளிக்கூட பாடங்களில் படிக்கிறோம். பின்னர் அன்றாடம் படித்துக் கொண்டிருக்கும் நூற்றுக்கணக்கான செய்திக்கட்டுரைகளில், கல்வித்துறைசார்ந்த  ஆய்வுக்கட்டுரைகளில் அது பல கோணங்களில் குறிப்பிடப்படுவதை வாசிக்கிறோம். அதனூடாக நம் மனம் அதை ஒருவகையான வரலாறாக ஏற்றுக் கொள்கிறது. நம்மைச் சூழ்ந்திருப்பவர்களைப் பார்த்தால் ஒவ்வொருவரிடமும் இருக்கும் வரலாற்றுப் பிரக்ஞை என்பது இந்த மைய ஓட்ட வரலாறுதான்.


 


ஆனால் ஒவ்வொருவருக்கும் அந்த மைய ஓட்ட வரலாற்றில் எப்போதும் தவிர்க்கமுடியாமல் ஒரு சிறிய அடிக்குறிப்பு இருக்கும். ஒரு ”அரைப்புள்ளி” என்று அதைச் சொல்லலாம். கிசுகிசு வரலாறு அந்த இடைவெளியில் நிகழ்கிறது.  அது பிறிதொரு வரலாறு. வரலாற்றில் நேரடியாகச் சம்பந்தப்பட்டவர்களால் எழுதப்படுவது. வரலாற்றின் நாயகர்களோ அல்லது வெறும் சாட்சிகளோ பதிவுசெய்வது. பெரும்பாலும் அதில் தோல்வியுற்றவர்களே அவ்வரலாற்றை எழுதுகிறார்கள். வெற்றி பெற்றவர்களுக்கு அதிகாரத்தை தக்க வைத்துக் கொள்ள, கைகடத்திவிட, தங்கள் பிம்பங்களை நிலைநிறுத்த வேண்டிய அவசியம் உள்ளது. தோல்வியடைந்தவர்களும் புறக்கணிக்கப்பட்டவர்களும் பிறிதொரு வரலாற்றை எழுதுகிறார்கள்.


 


அவ்வரலாற்றை அவர்கள் எழுதுவதற்கான முதன்மைக்காரணம் என்பது அவர்களுடைய வன்மமும் கழிவிரக்கமும் சுயநியாயப்படுத்தலும் அடிபட்ட அகந்தையும்தான். வரலாறு என்னைப்பழிவாங்கிவிட்டது, திருப்பி நான் வரலாற்றைப் பழிவாங்குவேன் என்பது அந்த எழுத்தின் நோக்கமாக இருக்கிறது. அல்லது தனக்கு நழுவிப்போன வாய்ப்புகள் குறித்த ஏக்கம். அல்லது நானும் ஒரு முக்கியமான ஆள்தான் என்னும் டம்பம்.  மிக அபூர்வமாக தனது தோல்விக்கான காரணங்கள் என்ன என்று பார்க்கும் நேர்மையான நோக்கும் கிசுகிசு வரலாறுகளில் இருக்கலாம். வரலாற்றை திரும்ப எழுதி பார்ப்பதனூடாக தனக்கு உகந்த ஒரு வரலாற்றை அமைத்துக் கொள்ளும் முயற்சி இவற்றில் உண்டு.


m.o

எம்.ஓ.மத்தாய்


 


தமிழகம் குறித்த அத்தகைய பல சுவாரசியமான கிசுகிசு வரலாறுகளை இப்போது நினைவு கூர்கிறேன். முதன்மையானது கண்ணதாசனின் ‘வனவாசம்’தான். அது ஒரு கழிவிரக்க வரலாறு. சுத்தானந்த பாரதியின் தன்வரலாறு, கோவை அய்யாமுத்துவின் எனது நினைவுகள் போன்றவை நேர்மையான மாற்று வரலாற்றுப்பதிவுகள். முன்னாள் காவல்துறை ஆணையர் கெ. மோகன் தாஸின் எம்.ஜி.ஆர். மேன் ஆண்ட் மித் மிகச்சிறபான, நம்பகமான ஒருகிசுகிசு வரலாறு


 


இந்நூல்களின் ஆசிரியனுக்கு வழக்கமாக வரலாற்றாசிரியனுக்கோ காலப்பதிவாளனுக்கோ புனைவெழுத்தாளனுக்கோ அளிக்கும் கௌரவத்தை நாம் ஒருபோதும் அளிக்கலாகாது. அவர்கள் கிசுகிசு உரைப்பவர்கள் மட்டும் தான் அவர்கள் வெற்றி அவர்களுடைய தோல்வி அவர்கள் அதை எழுதுவதற்கான காரணம் அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கை விவரங்கள் ஆகியவற்றை நன்கறிந்த பின்னர் இவற்றிலிருந்து எடுத்த தகவல்களால் நாம் அறிந்த வரலாற்றின் இடைவெளிகளை நிரப்பிக் கொள்ள முடியும். அது வரலாற்றைப் பற்றிய புதிய நோக்கை நமக்கு அளிக்கும்.


 


அதிகாரபூர்வ வரலாற்றில் குறைவது என்ன? ஒற்றை வார்த்தையில் அதை மனிதக் கதை எனலாம். வரலாறு என்பது எப்போதுமே மனிதனின் கதைதான் ஆகவே அது உணர்வுகளின் கதை. நட்பு, துரோகம், நம்பிக்கை, ஏமாற்றம், கனவுகள், கசப்புகள் என பெருகி ஓடுவதாகத்தான் அது இருக்க முடியும். மனிதர்களின் சிறுமைகளும் பெருமைகளும் தான் வரலாறு. ஆனால் அனைவருக்கும் பொதுவான வரலாற்றை உருவாக்கும் போது அனைவராலும் உருவாக்கப்பட்ட செய்திகளின் தொடர்ச்சியாகவே அது இருக்கும். உணர்வுகள் அதில் கலக்க முடியாது. கலக்கப்படும்போது கூட அனைவரும் ஏற்கப்படும் உணர்வுகளே இருக்க முடியும்.


09moh3

மோகன் தாஸ்


 


அங்குதான் புனைகதைகளின் இடம் வருகிறது. புனைகதைகள் வரலாற்றை மனிதகதையாக மாற்றுகின்றன. அதன் பொருட்டு வரலாற்றில் பலவிதமான சுதந்திரங்களை அவை எடுத்துக் கொள்கின்றன. புனைகதை ஒருவகை இணை வரலாறாகவே ஓடிக்கொண்டிருக்கிறது. எண்ணிப்பாருங்கள், நாம் உலகப்போரை ,இந்திய சுதந்திரப்போராட்டத்தை அதிகார பூர்வமாக அறிந்திருப்பதை விடவும் அதிகமாக புனைவுகளினூடாகவே அறிந்திருக்கிறோம். ஹாலிவுட் கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக உலகப்போரை ஒரு மாபெரும் புனைவுப் படலமாக மாற்றிவிட்டிருக்கிறது. அது தவிர்க்க முடியாதது. ஏனெனில் காலம் தோறும் வரலாறு அப்படித்தான் மனித நினைவில் நீடிக்கிறது. அதிகார பூர்வமான முறையான வரலாறென்பது எப்போதும் இரண்டாம் பட்சமாகவும் அறிஞர்கள் நடுவில் உலவக்கூடியதாகவும் இருக்கிறது. ராஜராஜ சோழனையோ நெப்போலியனையோ புனைவாகவே நாம் அறிந்துள்ளோம்.


 


புனைவுக்கு மிக நெருக்கமாக நிற்கக் கூடிய ஒன்று என்று கிசுகிசு வரலாற்றைச் சொல்வேன். அது ஒருவகையான புனைவுதான் ஆனால் வரலாற்றை சொல்லக்கூடியவர் தன் நம்பகத்தன்மையை உருவாக்கவேண்டும் என்பதற்காக பெரும்பாலும் அனுபவங்களுக்கு அணுகி நிற்கிறார். மேலும் கிசுகிசு வரலாறுகள் இனிமேல் அடைவதற்கொன்றுமில்லை. என்று முழுமையாக உணர்ந்த பின்னரே எழுதப்படுகின்றன. ஆகவே அவற்றில் உண்மையின் குரல் மேலும் வலுத்து ஒலிக்கிறது இந்த மனித உணர்வு எனும் அம்சம் இருப்பதனால் கிசுகிசு வரலாறுகள் புனைவு அளவுக்கே அணுக்கமாகின்றன.


 


 


கிசுகிசு வரலாற்றில் ஒரு பார்வையாளன் இருக்கிறான், வரலாற்றில் ஒரு சாட்சியாக அவன் நின்று பார்க்கையில் எழும் சித்திரமே வேறு. அவன் தன்னுடைய உணர்வுகள் வழியாக  வரலாற்றைப்பார்க்கையில் வரலாற்றிலிருந்து உணர்வுகளையே முதன்மையாகத் தொட்டு எடுத்துக் கொள்கிறான். ஆகவே கிசுகிசு வரலாறுகள் மையவரலாற்றில் வடிகட்டப்பட்ட செய்திகளாலும் உணர்வுகளாலும் ஆனவை. மைய வரலாற்றில் விடுபட்டவற்றால் ஆன வரலாறாக அது ஆவது இப்படித்தான்.  எளிய கிசுகிசு ஆர்வத்துடன் இவற்றை படிப்பதும் கிசுகிசுவாகவே இவற்றை பேசிக்கொண்டிருப்பதும் பெரும்பாலானவர்களால்  செய்யப்படுகிறது. அதற்கப்பால் சென்று ஒரு வரலாற்று தரிசனத்தை இவற்றைக் கணக்கில் கொண்டு உருவாக்குவது வரலாற்று ஆய்வாளர்கள், அரசியல் நோக்கர்கள், எழுத்தாளர்கள் ஆகியவர்களின் கடமையாகும்.


 


mgr-3


[ 2]


 


தமிழில் எழுதப்பட்ட குறிப்பிடத்தக்க கிசுகிசு வரலாறுகள் என்று வலம்புரி ஜான் நக்கீரன் பதிப்பகத்திற்காக எழுதிய வணக்கம் என்ற நூலைச் சொல்வேன். இந்நூலை அவர் ஏறத்தாழ பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு எழுதியிருக்கிறார். நக்கீரனில் தொடராக வந்தபோது மிகக் கடுமையான சர்ச்சையை உருவாக்கிய நூல் இது. ஒரு வரலாற்று நூலுக்குரிய ஒழுங்கு இதிலில்லை. பெரும்பாலான அத்தியாயங்கள் சமகால அரசியல் சார்ந்த கருத்துடனும் எதிர்வினையுடனும் தொடங்குகின்றன. இந்த நூலை எழுதும்போது வந்த மிரட்டல்களும் இதற்குள்ளேயே பேசப்படுகின்றன. வலம்புரி ஜானின் தனிப்பட்ட உணர்வுநிலைகளும் கசப்புகளும் வெளிப்படுகின்றன. ஆகவே ஒவ்வொரு அத்தியாயமும் ஒருவகையான அலைபாய்தல் கொண்டுள்ளது. ஆயினும் அந்தக் காலகட்டத்தின் உயர் மட்ட சதியுலகொன்றை வலம்புரிஜானால் காட்டிவிட முடிகிறது என்பதனால் இந்த நூல் பலவகையிலும் முக்கியமானது.


 


ஜான் தன்னுடைய வாழ்க்கை வரலாறாக இதைத் தொடங்குகிறார். மிக இளம் வயதில் புகழ்பெற்ற வழக்கறிஞர் ஒருவரின் கீழே வழக்கறிஞர் தொழிலில் ஈடுபடும் வழக்கறிஞர் வலம்புரிஜான் சிறுபான்மை மீனவக் கிறித்தவ சமூகத்தைச் சேர்ந்தவர். அன்றைய அரசியல் சூழலில் ஆங்கிலத்திலும் தமிழிலும் மிகச்சிறப்பாக உரையாற்றுபவர். ஆகவே அன்றைய இளைஞர்களின் கவர்ச்சிமிகு இயக்கமாக இருந்த திமுகவில் அவருக்கு ஒரு இடம் அமைகிறது. அன்றைய முதல்வர் கருணாநிதி அவர்களால் தெரிவு செய்யப்பட்டு மிக இளம் வயதிலேயே டெல்லி மேல் சபைக்குத் தேர்வாகிறார். அப்போதே அவருக்கெதிரான சதிகள் தொடங்கிவிட்டன என்று வலம்புரி ஜான் பதிவுசெய்கிறார். அதைப்புரிந்து கொள்ள முடிகிறது.


 


 


ஒவ்வொரு அரசியல் பயணத்திற்கும் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ச்சியாக எதிர்விசையாக இருந்து கொண்டிருப்பது அவரைப்போலவே உடனோடுபவர்களின் எதிர்ப்பும், போட்டியும், சதிகளும் தான். வயதை திருத்தி ராஜ்ய சபாவில் போட்டியிட விண்ணப்பித்தார் என்னும் புகார் வலம்புரி ஜான் மேல் வருகிறது. இவர்  மழுப்பி மென்று எழுதுவதை வைத்துப்பார்த்தால் அக்குற்றச்சாட்டு உண்மை என்றே ஊகிக்க முடிகிறது. தான் பிறந்த பிற்பட்ட கிறித்தவ சமுதாயத்தில் வயதை முறையாக பதிவு செய்யும் வழக்கம் இல்லாததால் தானே தன் வயதை எழுதிக் கொண்டதாக சொல்கிறார். ஆனால் அது உண்மையல்ல கத்தோலிக்க கிறித்தவர்களின் பிறப்பு முறையாக திருச்சபைகளில் பதிவு செய்யப்பட்டிருக்கும்.


 


பின்னர் கருணாநிதியிடம் முரண்பட்டு எம்.ஜி.ஆரிடம் சென்று சேர்கிறார் ஜான். எம்.ஜி.ஆருக்கு அணுக்கமானவராகவும் ஆங்கிலத்திலும் அவர் உரைகளை எழுதிக் கொடுப்பவராகவும் மாறுகிறார். அதற்குப் பிரதிபலனாக அவருக்கு சிறிய பதவிகள் அளிக்கப்படுகின்றன. அப்பதவியை அவருக்கு அளிப்பதற்கே கடுமையான போட்டிகளும் காழ்ப்புகளும் கிளம்பி வருகின்றன. தனது அரசியல் வாழ்க்கையில் ஜான் அடைந்த உச்சம் என்பது தாய் பத்திரிக்கையில் ஆசிரியராக ஆனதுதான். அதற்கு ஒருவகையில் ஜெயலலிதா காரணம். ஜெயலலிதாவுடனான நெருக்கம் அவருக்கு பலவகையில் உதவி செய்தது.


jaya


ஜெயலலிதா அவரை ஒரு அறிவு ஜீவியாகவும் புத்தகங்களைப் பற்றி விவாதிப்பதற்கான ஒரு மறுதரப்பாகவும் எண்ணுகிறார். ஜெயலலிதாவைத் தொற்றிக் கொண்டு சற்று முன்னால் செல்லும் வலம்புரி ஜான் புதிதாக வந்து ஒட்டிக்கொள்ளும் நடராஜனால் வீழ்த்தப்படுகிறார். ஜெயலலிதாவுக்கு அணுக்கமானவர்கள் அத்தனை பேரையும் ஜெயலலிதாவிடமிருந்து விலக்கி ஒரு வலுவான மாய வலையத்தை உருவாக்கும் நடராஜன் மெல்ல வலம்புரி ஜானை சுண்டி வெளியே வீசுகிறார். அரசியலிலிருந்து முற்றாக வெளியேற நேர்ந்த வலம்புரி ஜான் தொலைக்காட்சிகளில் தலைகாட்டுவது, நக்கீரனில் தொடர் எழுதுவது என்று வாழ்ந்து எந்த முக்கியத்துவமும் இல்லாமல் மறைந்தார்.


 


இந்த நூலின் முக்கியமான இடம் என்பது எம்.ஜி.ஆரின் இறுதி நாட்களில் அவரைச் சுற்றி நடந்த பலவகையான சதிகளை வலம்புரி ஜான் பதிவு செய்திருப்பது தான். எம்.ஜி.ஆருக்கு ஜெயலலிதா மீதிருந்த வெல்லவே முடியாத ஈர்ப்பு, அதே சமயம் ஜெயலலிதாவின் ஆணவப்போக்கினால் அவருக்கு ஏற்படும் மனஉளைச்சல், அந்த மன உளைச்சலை வென்று செல்லும் மோகம் ஆகியவற்றை ஓரளவுக்கு துல்லியமாகவே ஜான் பதிவு செய்கிறார். மிகச் சங்கடமான ஒரு பின்னணியில் இருந்து வளர்ந்து வந்த ஜெயலலிதா வெற்றி ஒன்றின் மூலமே அதைக் கடந்து செல்ல முயல்வதையும் அதில் எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட முரண்பாடால் உருவான ஒரு பெரும் பின்னடைவையும் ஜான் சித்தரித்துக் காட்டுகிறார்.


 


சோபன்பாபுவுடன் கோயிங் ஸ்டெடி என்ற தலைப்பில் குமுதத்தில் வந்த கட்டுரை ஜெயலலிதா ஹைதராபாதில் சோபன்பாபுவுடன் குடும்பம் நடத்துவதை காட்டியது. திரும்ப சென்னை வரும் நோக்கத்துடன் எம்ஜியாரின் பொறாமையைத்தூண்டுவதற்காகவே அக்கட்டுரை ஜெயலலிதாவால் பிரசுரம் செய்யப்பட்டது என்கிறார் ஜான். ஆர்.எம்.வீரப்பனைப்பயன்படுத்தி ஜெயலலிதா மீண்டும் எம்ஜியாரின் கண்ணுக்கு முன் தோன்றுகிறார். அவரை வீழ்த்துகிறார். எம்ஜியாரின் பலவீனங்கள் ஜெயலலிதாவுக்கு மிக நன்றாகத்தெரியும். ஜானகி பயப்படுவதும் ஜெயலலிதாவை எண்ணி மட்டுமே.


 


எப்படியாவது வென்று பதவியில் அமர்ந்துவிட வேண்டுமென்ற ஜெயலலிதாவின் வெறி எம்.ஜி.ஆரை ஒரு பகடைக்காயாகவே பயன்படுத்துகிறது. ஒரு கட்டத்தில் எம்.ஜி.ஆர் செயலிழந்துவிட்டார் என்று சொல்லி ராஜீவ் காந்தியின் உதவியுடன் தான் முதல்வராக முயல்கிறார். தன் பாதையிலிருக்கும் அனைவரையும் மாறிமாறிப் பயன்படுத்துகிறார். பயன் முடிந்ததும் தட்டி வெளியே தள்ளுகிறார். ஆங்கிலம் பேசத்தெரிந்ததனால் தான் ஒரு அறிவு ஜீவி என்றும் தனக்கு அனைத்திலும் தேர்ச்சி உண்டு என்றும் நினைக்கிறார். ஆனால் தமிழக அரசியலைப்பற்றி அவருக்கு பெரிதாக எதுவுமே தெரிந்திருக்கவில்லை. குறிப்பாக மைதிலி சிவராமன் போன்ற இடதுசாரிப் பெண்களைப்பற்றி அவர் முதன் முறையாகக் கேள்விப்பட்டு திகைக்கும் இடம் , கக்கனை யார் என்று கேட்கும் இடம்போன்றவை ஒரு புன்னகையை வரவழைக்கிறது.


sasi


இந்நூலில் பிராமணர்களின் அரசியல் விளையாட்டு பற்றிய இடம் மிக விரிவாக வருகிறது. கருணாநிதியை விலக்குபவர் என்பதனால் பிராமணர்கள் எம்ஜியாரை முன்னிறுத்தினர். எம்ஜியார் அதை உணர்ந்திருந்தார். அவர்க்கு பிராமணர்கள் அபாயகரமானவர்கள் என்னும் எண்ணம் இருக்கிறது. ஆனால் அவர்களை பகைத்துக்கொள்ளக்கூடாது என்றும் நினைக்கிறார். அதோடு மலையாளிகள் நம்பக்கூடாதவர்கள் என்றும் எம்ஜியார் எண்ணுகிறார்– அல்லது அப்படி அவர் ஜானிடம் சொல்கிறார்.. ஆனால் தன்னைச்சூழ்ந்து அவர் மலையாளிகளையே வைத்திருந்தார். ஜெயலலிதவை காஞ்சி சங்கராச்சாரியார், சோ, பல்வேறு சோதிடர்கள் போன்ற பிராமணர்கள் அதிகாரம் நோக்கித் தள்ளுகிறார்கள். அவர் ராஜாஜிக்குப்பின் தங்கள் சாதிக்கான தலைவர் என நினைக்கிறார்கள்


 


ஆனால் கனி பழுத்ததும் பறவை கொண்டுசெல்வது போல நடராஜன் தலைமையில் தேவர் சாதி அதிகாரத்தைக் கைப்பற்றியது. பிராமணர்களில் ஒரு சாரார் சமரசம் செய்துகொண்டனர். எதிர்த்தவர்கள் நடராஜனின் கைப்பாவையாகிய  ஜெயலலிதா அரசால் பழிவாங்கப்பட்டனர். நடராஜனை அச்சம், காழ்ப்புடன்  மட்டுமே குறிப்பிடும் ஜான் கூட அவர் பிராமண ஆதிக்கம் மீண்டும் தமிழகத்தில் வேர்விடாமல் காத்தவர் என்பதற்காக தமிழகம் நன்றியுடன் இருக்கவேண்டும் என்கிறார்


 


ஜெயலலிதாவை வேவு பார்க்கும்பொருட்டு எம்.ஜி.ஆர் சசிகலாவை ஜெயலலிதாவுக்கு அணுக்கமாக நியமிக்கிறார். ஆனால் சசிகலா ஜெயலலிதாவுக்காக எம்.ஜி.ஆரையும் வேவு பார்க்கிறார். இவ்வாறு ஒரு இரட்டை ஒற்றராக அறிமுகமாகும் சசிகலா நடராஜனின் மிக முக்கியமான சதுரங்கக் காய். ஜான் சசிகலாவை முதலில் பார்ப்பது எம்ஜியாரின் ராமாவரம் தோட்டத்தில் எம்ஜியாரின் அந்தரங்க மாடியறையில் இருந்து இறங்கி வரும்போதுதான். சசிகலா மிகமிகத் தந்திரமான , சோர்வே அடையாத ஒற்றர் என்றுதான் ஜானின் நூல் காட்டுகிறது


 


இந்த நூலில் தமிழகத்தில் ராஜாஜிக்குப் பிறகு தோன்றிய மிகப்பெரிய அரசியல் சதுரங்க விளையாட்டாளராக நடராஜனைத்தான் வலம்புரிஜான் சித்தரிக்கிறார். ஜெயலலிதாவைச் சூழ்ந்திருந்த ஒவ்வொருவரையும் சசிகலாவைக் கொண்டு நடராஜன் விலக்குகிறார். ஜெயலலிதாவின் உள்ளத்தில் அரசியல் ஆசைகளைத் தூண்டிக்கொண்டே இருக்கிறார். மேலும் மேலும் ஜெயலலிதா வெறி கொள்ளும் பொருட்டு ஜெயலலிதா அவமதிக்கப்படுகிறார் என்ற சித்திரத்தை ஜெயலலிதாவிடமே உருவாக்குகிறார். அவமதிப்பின் வழியாக வாழ்ந்து வளர்ந்து வந்த ஜெயலலிதாவுக்கு ஒருவர் தன்னை அவமதிக்கிறார் என்ற செய்தியே போதுமானது. அவரை விலக்குவது மட்டும் அல்ல பழிவாங்கவும் வெறிகொள்வார்.


 


தாய் பத்திரிகையில் வெளிவரும் சிறிய செய்திகளைக்கூட எப்படியெல்லாம் எம்.ஜி.ஆரும் ஜானகியும் ஜெயலலிதாவும் புரிந்து கொள்கிறார்கள், எப்படியெல்லாம் அவற்றை திரித்து பிறர் அவர்களின் காதுகளுக்குப் போட்டுக்கொடுக்கிறார்கள் என்பது ஒவ்வொரு முறையும் புன்னகையுடன் வாசிக்க வைக்கிறது. ஜானகியும் எம்ஜியாரும்  இருக்கும் ஓர் அட்டைப்படத்தை தாயில் போடுகிறார் ஜான். அதை ஜெயலலிதாவுக்கு நடராஜன் போட்டுக்கொடுக்கிறார். அப்போது ஜானகியும் எம்ஜியாரும் கசப்புடன் இருந்த காலகட்டம்.  ஜான் அவர்களை ஜெயலலிதாவுக்கு எதிராக சமரசம் செய்துவைக்க முயல்கிறார் என்று நடராஜன் சொல்ல ஜான் ஜெயலலிதாவின் அணுக்கப்பட்டியலில் இருந்து விலகுகிறார். ஆனால் எம்ஜியார் இருந்ததுவரை இருவரும் மேலோட்டமான பார்வையில் நட்புடன் இருக்கிறார்கள். ஜெயலலிதாவை ஜானும் அவ்வப்போது எம்ஜியாருக்கு போட்டுக்கொடுக்கிறார். ஆனால் எம்ஜியாரின் மோகம் ஜெயலலிதாவை எந்நிலையிலும் கைவிடாது என பின்னர் புரிந்துகொள்கிறார்


 


இதில் வலம்புரி ஜானின் கதாபாத்திரம் முக்கியமானது. எந்த கொள்கையும் இல்லாமல் அரசியலில் ஏதேனும் ஒரு பதவியில் தொற்றிக் கொண்டு இருந்துவிடவேண்டுமென்ற எண்ணம் அன்றி வேறெதுவுமே உந்தாமல் இதற்குள் அவர் சுற்றி வருகிறார். மீண்டும் மீண்டும் அவமதிக்கப்படுகிறார். அவமதிப்புகளை எதிர்கொள்வது தாங்கிக் கொள்வது ஒரு கலை என்று சொல்லிக் கொண்டு அவமதித்தவர்களிடமே திரும்பிச் செல்கிறார். அவர்களைப் பற்றிய கசப்புகளைத் தேக்கிக்கொண்டு அவர்களிடம் மீண்டும் மீண்டும் இன்முகத்துடன் பழகுகிறார். மிதிபட மிதிபட செருப்பை முத்தமிட்டபடி அவர் முடிந்த வரை முயன்று பார்ப்பதை அவரே எழுதியிருக்கும் விதம் தமிழக அரசியலின் ஒரு பெரிய சித்திரத்தை காட்டுகிறது.


valam


இந்நூலின் ஒரு அகண்ட சித்திரம் என்பது தமிழக அரசியலின் முதன்மைக் கலையென்பது போட்டுக்கொடுத்தல் என்பதுதான் ஒவ்வொருவரும் பிறிதொருவரை தலைமைக்கு போட்டுக் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். திராவிட அரசியல் என்பது முழுக்க முழுக்க தனிநபர்களைச் சார்ந்தது. ஈவேரா,அண்ணாத்துரை, கருணாநிதி ,எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சசிகலா. பிறர் எந்த வகையிலும் முக்கியமானவர்கள் அல்ல. அவர்கள் இந்த தலைவர்களை அண்டி நயந்து அரசியலில் நீடிக்க நினைப்பவர்கள். அவர்களின் கருணையை இழந்தால் முழுமையாகவே வீட்டுக்குச் செல்ல வேண்டியவர்கள். ஆகவே ஒருவர் தலைமையை சற்று அணுகினால் அந்த இடத்துக்கு வரவிரும்பும் அத்தனை பேரும் அவரைப்பற்றி கோள்சொல்கிறார்கள். அகற்றி அங்கே தங்களை நுழைத்துக்கொள்ள  முயல்கிறார்கள்.


 


தலைவர்களும் தங்கள் கீழிருப்பவர்கள் பிற அனைவரையும் மாறி மாறி வேவு பார்க்க வேண்டும் என்றும் ,அவர்கள் தங்களிடம் வந்து கோள் சொல்ல வேண்டுமென்றும் எதிர்பார்க்கிறார்கள். அதன் வழியாக அமைப்பிலுள்ள அனைவரைப்பற்றியும் தாங்கள் வேவு பார்க்க முடியுமென்று அவர்கள் நினைக்கிறார்கள். ஒருலட்சம் உறுப்பினர்கள் கொண்ட ஒரு கட்சி ஒரு லட்சம் ஒற்றர்களையும் கொண்டிருப்பது போல. ஒவ்வொருவரையும் ஏறத்தாழ ஒருலட்சம் ஒற்றர்கள் கண்காணிக்கிறார்கள்! ஆனால் எங்கு தவறு எழுகிறது என்றால் இந்த தலைவர்கள் தாங்கள் தலைவர்களாக இருப்பதனாலேயே அசாதாரணமானவர்கள் என்றும், அனைவருக்கும் மேலே நின்றிருக்கும் அறிவுடையவர்கள் என்றும் நம்புவதுதான். அவர்களை அந்த கோள்சொல்லும் கும்பல் அலைக்கழித்து அடித்துச்செல்வதை அவர்கள் உணர்வதே இல்லை.


18NATARAJAN


இந்நூலில் எம்.ஜி.ஆர் ஒவ்வொருவரைப் பற்றியும் தன்னிடம் பிறர் கோள் சொல்ல வேண்டுமென்று விரும்புகிறார். அவ்வாறு ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் சொல்லும் கோள்களிலிருந்து ஒரு பொதுச் சித்திரத்தை அவர் உருவாக்கிக் கொள்கிறார். இவ்வாறு எல்லாரைப் பற்றியும் சரியான புரிதலை தான் உருவாக்கிக் கொண்டிருப்பதாக அவர் நினைக்கிறார். ஆனால் கோள் சொல்பவர்கள் பல சமயம் எம்.ஜி.ஆரை விட பலமடங்கு கூர்மையானவர்கள். உதாரணம் வலம்புரி ஜானேதான். பல்வேறு நபர்களைப் பற்றி வலம்புரிஜான் எம்.ஜி.ஆரிடம் சொன்ன கோள் முழுக்க இந்த நூலில் பதிவாகியிருக்கிறது. எம்.ஜி.ஆரே அதைக் கேட்கும் அளவுக்கு பொறுத்திருந்து எம்ஜியார் கேட்டபின்பு நீண்ட தயக்கத்துடன் ஒரு வம்பின் ஒரு முனையை மட்டும் சொல்லி மிச்சத்தை ஊகத்திற்கு விட்டு விட்டு வருகிறார் ஜான். உண்மையான தகவல்களை மட்டும் சொல்லி அவற்றை அடுக்கும் முறையால் மட்டுமே ஒரு கருத்தை உருவாக்குகிறார். ஏனென்றால் எம்ஜியார் தகவல்களைச் சரிபார்ப்பார் என ஜானுக்குத்தெரியும். இவ்வாறே இதைவிட திறமையாக பண்ருட்டி ராமச்சந்திரன், ஆர்.எம்.வீரப்பன், ராகவானந்தம் போன்றவர்கள் செயல்படுகிறார்கள். அவர்கள் எம்ஜியாரின் கருத்துக்கள மாறிமாறி உருவாக்குகிறார்கள்.


 


ஆகவே எம்.ஜி.ஆர் ஒருவகையில் சதுரங்கக் காய்களை ஆட்டுவித்த ஆட்டக்காரர் அல்ல. கால்களால் தட்டி விளையாடப்பட்ட ஒரு கால்பந்து போலத்தான் செயல்படுகிறார். அதேதான் ஜெயலலிதாவுக்கும் நிகழ்கிறது. ஏறத்தாழ இதுதான் விடுதலைப்புலி இயக்கத்திலும் நடந்தது என்பது புஷ்பராசாவின் ‘ஈழப்போரில் எனது சாட்சியம்’ தமிழினியின் ’ஒரு கூர்வாளின் நிழலில்’ போன்ற நூல்களால் நமக்குக் காணக் கிடைக்கிறது. இங்கு அதிகபட்சம் அதிகாரம்தான் பறிபோகிறது அங்கு சுட்டுத் தள்ளப்படுகிறார்கள். ஸ்டாலினுக்கும் ஹிட்லருக்கு நெருக்கமானவர்களுக்கும் இதே வாழ்க்கைதான் கிடைத்திருக்கும் என்று தோன்றுகிறது. இந்த வரலாற்றுச் சித்திரத்தை இன்னும் நுட்பமாக விரிவாக்குவதனால்தான் இந்த நூலைமுழுதாக கருதுகிறேன்.


 


 


இந்த நூலில் பதினாறாண்டுகளுக்கு முன்பு இரண்டு ஆரூடங்களை வலம்புரி ஜான் சொல்கிறார். ஒன்று சோதிடர் காழியூர் நாராயணன் 1996-ல் சொல்கிறார் 2016 வரைக்கும் பல்வேறு ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும் ஜெயலலிதா எந்த விதத்திலும் தோற்காமல் உச்சத்திலேயே இருப்பார் என.           இந்த ஆரூடம் ஆச்சரியப்படுத்துகிறது. ஏறத்தாழ அது உண்மையாகவே ஆகிவிட்டது. 2000 ல்- பத்து வருடங்களுக்குள் சசிகலாவோ நடராஜனோ தமிழகத்தின் முதன்மைப் பொறுப்பை ஏற்கக்கூடுமென்றும் ஜெயலலிதாவை அவர்கள் தோற்கடித்து ஆட்சியைக் கைப்பற்றக்கூடுமென்றும் வலம்புரி ஜான் ஊகிக்கிறார். மேலும் சில ஆண்டுகளுக்குப்பிறகு கிட்டத்தட்ட அத்தகைய சூழல் உருவாகியது.


 


ஜெயலலிதா உட்பட அனைவருமே  சோதிடர்களையும் மந்திரவாதிகளையும் நம்புவதும், ஆனால் வெளியே பகுத்தறிவு பேசுவதும்,  வெவ்வேறு சோதிடர்களின் கருத்தைக் கேட்டு அதன் அடிப்படையில் ஒரு கருத்தை தாங்கள் உருவாக்கிக் கொள்வதும் இந்நூலில் தெரிகிறது. ஜானுக்கும் அந்த நம்பிக்கைகள் வலுவாக உள்ளன.  அரசியல்வாதிகளை அவர்களிடம் அழைத்துச்செல்லும் வேலையை ஜான் தொடர்ந்து செய்கிறார். இலட்சியவாதக் கோஷங்கள், பொருளியல் சிக்கல்கள், சமூகப் பிரச்னைகள், கொள்கைகள் எதுவுமே இந்த அரசியலில் எவ்வகையிலும் முக்கியமல்ல. அனைத்துக்கும் அடியில் இருப்பது அதிகாரத்திற்கான மனிதர்களின் முட்டி மோதல்களும் ஒருவருக்கொருவர் கொள்ளும் காழ்ப்பும் வெறுப்பும், விளைவான சதுரங்க ஆட்டமும் மட்டும் தான்.


 


இந்நூலில் இருந்து சமகால அரசியலில் இருந்த உள்நாற்றத்தை நேரடியாகச் சென்றடைகிறோம். இன்று நாம் பேசும் அனைத்து விவாதங்களுக்குள்ளும் இந்த உண்மைச் சித்திரத்தை கொண்டு வந்து சேர்த்துக் கொண்டோம் என்றால் ஆளுமைகள் சார்ந்த  மூடநம்பிக்கைகள், ஒற்றை வரிக் கொள்கை கோஷங்கள் ஆகியவற்றுக்குப் பின்னால் போகாமல் மெய்யான அரசியலை நோக்கி நம்மால் செல்ல முடியுமென்று தோன்றுகிறது.


 


[வணக்கம். வலம்புரி ஜான், நக்கீரன் பதிப்பகம்]


எம்.ஓ.மத்தாயின் நினைவுகள்-1
எம்.ஒ.மத்தாயின் நினைவுகள் 2
தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 13, 2017 11:34

அபிப்பிராயசிந்தாமணி கடிதங்கள்

Abippiraya Sinthamani_9788184936490_KZK - W


 


அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு


 


நலமா?


 


தங்களது அபிப்பிராய சிந்தாமணியை இப்பொழுதுதான் படித்து முடித்தேன். (அபிப்பிராயம் சிந்தா மணி என முதலில் பாடபேதமாகப் பிரித்து விட்டேன். என்ன இவர் அபிப்பிராயம் சிந்த மாட்டாரா?   சூரியனுக்கு மேலே கீழே வலது இடது பக்கமுள்ள விஷயங்களையெல்லாம் பற்றி அபிப்பிராயங்களைக் கொட்டித் தீர்ப்பாரே என வியந்தேன். பிறகு சரிசெய்து கொண்டுவிட்டேன்)


 


மச்சம் வைத்துக் கொண்டுவந்தால் எம்ஜீஆரையே அடையாளம் தெரியாதது போல் நகைச்சுவை என்று டேக் செய்யவில்லை என்றால் சீரியஸாக எடுத்துக் கொண்டு நம்பக்கூடியவர்கள் அநேகம் பேர் இருக்கிறார்கள். அதேபோல் சீரியஸாக எழுதுவதை நகைச்சுவையாகப் பார்ப்பதும் உண்டு. (தமிழ் எழுத்துரு பற்றிய உங்கள் கட்டுரையைச் சேர்க்கச் சொன்ன சைதன்யாவை நான் வழி மொழிகிறேன்).


 


‘இந்தப் புத்தகத்தை எடுத்ததும் கீழேயே வைக்க முடியவில்லை’ என்று இந்தப் புத்தகத்தைப் பற்றிச் சொல்ல முடியாது. காரணம் புத்தகத்தைத் தூக்கவே முடியவில்லை. வழக்கமாகத் தலையணைகள் தருவீர்கள் . இது மெத்தை.  ஆயினும் திறந்த புத்தகத்தை மூடமுடியவில்லை எனத் தாராளமாகச் சொல்லலாம் . அவ்வளவு சுவாரஸ்யமாக இருந்தது.


 


சமூகம், தத்துவம், இலக்கியம், அறிவியல், அரசியல் என எல்லாத்தளங்களையும் கலாய்த்துத் தள்ளியிருக்கிறீர்கள். நீங்கள் பெரிதும் மதிக்கும் காந்தி, நித்யசைதன்ய யதி என்று யாரையும் விட்டுவிடவில்லை. தலையணைகளாக எழுதிக் குவிக்கும் நீலமேகன் உட்பட. குறிப்பாகக் காசிரங்கா யானை பற்றிய இலக்கிய தத்துவ விவாதங்கள் தீராநதியில் தொடராக வந்த போதே பெரிதும் ரசித்துப் படித்தவை.


 


மேலோட்டமாகப் பார்த்தால் நகைச்சுவையாகத் தோன்றினாலும்  பல்வேறுதளங்களைப் பற்றிய உங்கள் கூர்ந்த அவதானிப்பும் நீங்கள் குறிப்பிடும் நபர்கள் சம்பவங்கள் பற்றி ஓரளவு வாசிப்புப் பழக்கம் இருப்பவர்களுக்கே நன்றாக விளங்கக் கூடும்.   அந்த வகையில் நுட்பமான மறுவாசிப்பு செய்ய வேண்டிய நூல் இது. (சத்தியமாக இதை நகைச்சுவையாகச் சொல்லவில்லை)


 


பலசமயங்களில் உண்மையை அப்படியே எழுதினால் நகைச்சுவையாக மாறுகிறது என்று அசோகமித்திரன் சொன்னது எவ்வளவு பெரிய உண்மை எனப் புரிகிறது.


 


ஈகோவை ஒழிக்கப் பலவழிகள் உண்டு. சிக்மண்ட் ஃப்ராய்ட் போல் சோஃபாவில் படுக்க வைத்தும் ஒழிக்கலாம். இது போன்ற நல்ல நகைச்சுவைக் கிண்டல்களைப் படித்துச் சிரிப்பதும் ஒரு சிறந்த வழி. இருப்பினும் சம்பந்தப் பட்டவர்களில் சிலர் ஆட்டோவில் பார்வதிபுரம் வராமல் இருக்கப் பகவதியம்மன் துணை புரிய வேண்டிக் கொள்கிறேன்.


 


தமிழுக்குக் கிடைத்த அரிய நகைச்சுவைப் பொக்கிஷம் உங்களது நூல்.


 


வாழ்த்துக்கள்.


 


மிக்க அன்புடன்


 


டாக்டர் ராமானுஜம்

திருநெல்வேலி


 


 


அன்புள்ள ஜெ


 


அபிப்பிராயசிந்தாமணியை வைத்து வைத்து கொஞ்சம் கொஞ்சமாக வாசிக்கிறேன். உண்மையில் அதிலுள்ள கட்டுரைகளை முன்னாடியே வாசித்திருக்கிறேன். ஆனால் புத்தகமாக வாசிக்கும்போது வேறு ஒரு உணர்வு. அதில் எதை நக்கலடித்திருக்கிறீர்கள் என்பது இப்போது ஒரு இரண்டுவருடங்களாக நல்ல வாசிப்பு ஆரம்பமானபிறகுதான் தெரிகிறது. அதன்பின்னர்தான் சிரிப்பு வருகிறது. அது வழக்கமான வேடிக்கைகளை ரசிப்பவர்களுக்கு உரியது அல்ல. நீங்கள் வேதாந்தம் விஷிஷ்டாத்வைதம் எல்லாம் கிண்டலடிப்பதை வாசிக்க ஒரு காலம் தேவைப்படுகிறது. நான் மூன்றுமாதமாக வைத்து சிரித்துக்கொண்டே இருக்கிறேன்


 


ஆனந்த் பாஸ்கர்

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 13, 2017 11:31

காற்று கடிதங்கள்

aruna


ஆசிரியருக்கு வணக்கம்,


தங்களின் காற்று -பதிவை படித்தபோது உங்களை மிகவும் நெருக்கமாக உணர்ந்தேன்.வண்ணதாசனின் கதைகளை படித்து அவரின்மேல் பிரியம் இருந்தாலும், அவரது கடிதங்களின் தொகுப்பான ‘எல்லோர்க்கும் அன்புடன்’படித்தபின் அட இவரும் நம்மைப் போலவே இருக்கிறாரே என மிக நெருக்கமாக உணர்ந்ததைப் போல…


காற்று-என்ன ஒரு அருமையான தலைப்பு…கூடவே இருக்கும்வரை அதைப் பற்றி எதுவும் எண்ணாமல், இல்லாதபோது புழுக்கமாகவும் மூச்சு திணறலாகவும் அதைப்பற்றி மட்டுமே எண்ணிக்கொண்டு …காற்று வந்தவுடன்தான் நிம்மதி…


சிவசுப்ரமணியன் காமாட்சி


***


அன்புள்ள ஜெ


காற்று முக்கியமான பதிவு. போகிற போக்கிலே எழுதப்பட்டது. நீங்கள் எழுதும் பதிவுகளில் இந்தமாதிரி டைரி போன்ற பதிவுகள்தான் எனக்கு மிகவும் முக்கியமானவை என தோன்றுகிறது. இந்தப்பதிவுகளில் உள்ள சரளமான நகைச்சுவையும் உங்கள் சொந்த வாழ்க்கையின் சித்திரமும் அழகானவை


நாம் விரும்பும் எழுத்தாளருடன் நாமும் வாழ ஆசைப்படுகிறோம். கூடவே நடக்கவும் பேசவும். அதெல்லாம் இந்த டைரி வழியாகவே காணக்கிடைக்கிறது. கற்பனையில் உங்களுடன் இருப்பது மிகுந்த உற்சாகமான அனுபவமாக இருக்கிறது


செல்வக்குமார்


காற்று


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on May 13, 2017 11:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.