Jeyamohan's Blog, page 1649

April 22, 2017

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–82

82 எரிமலர்க்கிளை


உணவருந்தி முடித்ததும் முதுமகள் ஒருத்தி காட்டிய கொப்பரையில் இருந்த புல்தைலம் கலந்த வெந்நீரில் கைகளை கழுவிக்கொண்டு தேவயானி எழுந்தாள். வெளியே முன்முழுமைச் செந்நிலவு எழுந்திருந்தது. மரங்கள் நிழல்களென மாறிவிட்டிருந்தன. குடில்களனைத்திலும் ஊன்நெய் விளக்குகள் எரியத்தொடங்க அணுகிவரும் காட்டெரிபோல் குடில்நிரையின் வடிவம் தெரிந்தது. வானிலிருந்து நோக்கினால் தீப்பந்தம் ஒன்றை விரைவாகச் சுழற்றியதுபோல் அச்சிற்றூர் தெரியுமென்று அவள் எண்ணிக்கொண்டாள்.


“தாங்கள் இளைப்பாறலாமே, பேரரசி?” என்றாள் சாயை. “ஆம். உடல் களைத்திருக்கிறது. துயில் நாடுகிறேன். ஆனால் இந்த இளங்காற்றை விட உளமெழவில்லை. எழுந்து வரும் விண்மீன்களையும் முழுநிலவையும் சற்று துய்த்துவிட்டுச் செல்லலாம் என்று தோன்றுகிறது. பிறிதொருமுறை இப்படி ஒரு மலைச்சிற்றூரில் இயல்பாக தங்கும் வாய்ப்பு அமையப்போவதில்லை” என்றாள். “தாங்கள் விரும்பினால் முற்றத்தில் சென்று அமர்ந்து நிலவை நோக்கலாம். பீடங்களைக் கொண்டு அங்கு இடச் சொல்கிறேன்” என்றாள் சாயை.


“வேண்டியதில்லை. இந்த முற்றத்தை ஒருமுறை சுற்றி நடந்து வரலாமென்று எண்ணுகிறேன். பகல் முழுக்க தேரில் அமர்ந்திருந்ததின் அசைவு உடலில் எஞ்சியிருப்பதுபோல் உள்ளது” என்றபடி தேவயானி கைநீட்ட சாயை மேலாடையை எடுத்து அவளுக்களித்தாள். அதை தன் தோளிலிட்டபடி வெளியே சென்று வட்டப்பெருமுற்றத்தில் இறங்கி காற்றில் மேலாடையும் குழலும் எழுந்து பறக்க சற்றே முகவாய் தூக்கி விண்ணை நோக்கியபடி ஓய்ந்த உடலுடன் நடந்தாள்.


சாயை அவளையும் அந்தப் பெருமுற்றத்தையும் நோக்கிக்கொண்டு உடன் நடந்தாள். பறவைக்குரல்கள் அடங்கியமையால் குடில்களில் இருந்து மகளிரும் சிறுவரும் எழுப்பும் ஓசைகள் வலுத்து ஒலித்தன. சிறுகுழந்தைகள் குடில்களின் படிகளில் பாய்ந்திறங்கி அப்பால் இருந்த மரங்களில் தொற்றி ஏறி குதித்தும், ஒருவரை ஒருவர் துரத்தியும், பிடித்துத் தள்ளியும், கட்டி மண்ணில் விழுந்து புரண்டும் விளையாடிக்கொண்டிருந்தனர். மலைக்குடி மகவுகள் பொழுதுமுழுக்க விளையாடிக்கொண்டே இருப்பதனால் விளையாட்டில் தங்களை மறக்கும் இயல்பு கொண்டிருந்தன. நகரங்களில் எக்குழந்தையும் தன் இல்லத்தையும் ஆற்றவிருக்கும் கடமைகளையும் விளையாடுவதில்லை என்று அப்போது தோன்றியது.


விலங்குகள் விளையாடுவதுபோல என்று ஒரு சொற்றொடர் எழுந்தது உள்ளத்தில். வளர்ந்தபின்னரும்கூட அவர்கள் விளையாடுகிறார்கள். உடல் ஓய்ந்த முதியவர்களுக்குக் கூட விளையாட்டுகள் உள்ளன. விளையாடாத உயிர் எதை இழக்கிறது? ஏன் விளையாடுகிறார்கள்? அத்தனை விளையாட்டுக்களும் வாழ்க்கையின் போலிக்குறுநடிப்புகள். வேட்டைகள், புணர்தல்கள், சமையல்கள், பூசல்கள். வாழ்க்கையை தனக்குரிய நெறிகளுடன் தன் சொல்திகழும் எல்லைக்குள் அமைத்துக்கொள்வதே விளையாட்டு. தெய்வங்களும் ஊழும் அமைக்கும் இடர்களும் துயர்களும் இல்லாத பிறிதொரு வாழ்க்கை. விளையாட்டை இழந்தமையால்தான் அரசாடுகிறேனா?


இளையவரும் கன்னியரும்கூட நாணமோ ஒதுக்கமோ இன்றி ஒருவரை ஒருவர் கைபற்றி தோள்தழுவி விளையாடினர். அவள் நகர் நுழைந்தபோது வரவேற்புக்கு வந்து நின்ற மக்களைவிட பத்துமடங்கினர் அங்கிருப்பதாக தோன்றியது. குடில்களில் இருந்து இளையோரும் சிறுவர்களும் மகளிரும் மையமுற்றத்திற்கு வந்தபடியே இருந்தனர். அங்கே சிறு குழுக்களாக அமர்ந்து தங்கள் இல்லங்களிலிருந்து கலங்களிலும் தாலங்களிலும் உணவை கொண்டு வந்து வைத்து ஒருவருக்கொருவர் பரிமாறிக்கொண்டு உண்டனர். சிரித்தும் கூச்சலிட்டும் உவகை கொண்டாடினர். சிறு குழந்தைகள் சிறுகுருவிகள் என ஒவ்வொரு அன்னையிடமிருந்தும் ஒவ்வொரு வாயென வாங்கி உண்டு அக்கூட்டத்தினூடாக எழுந்தும் அமர்ந்தும் விளையாடிக்கொண்டிருந்தனர்.


இருட்டுக்கு மேலும் அழுத்தம் வந்தது. விண்மீன்கள் கம்பளம்போல ஒளியுடன் விரிந்தன. நிலவு எண்ணியதைவிட மேலெழுந்துவிட்டதை தேவயானி கண்டாள். முற்றத்தில் எவரும் விளக்குகளை வைத்திருக்கவில்லை என்பதனால் நிலவொளி ஈரத்தண்மையுடன் படிந்து குழல்களையும் ஆடைகளையும் ஒளிரச்செய்தது. கண்களும் பற்களும் மின்னின. தேவயானி “நாமும் இங்கு நம் உணவை கொண்டுவந்து அமர்ந்துகொண்டிருக்கலாம்” என்றாள். “அரசியர் உடன் உணவருந்துவதென்பது குருநகரியில் ஒரு பெரிய சடங்கென்றே கொள்ளப்படுகிறது. அதற்குரியவர்கள் ஓராண்டுக்கு முன்னரே தெரிவு செய்யப்பட்டு அதற்கென பயிற்சி அளிக்கப்பட்டு வந்து சேர்வார்கள். அவ்வாறு உணவருந்தியவர்கள் அதை ஒரு தகுதியெனக் கொள்ளவும் செய்வார்கள்” என்றாள் சாயை.


அவள் குரலில் இருந்த நகையாட்டை உணர்ந்து மெல்லிய எரிச்சலுடன் “ஆம், அது ஒரு அரசுசூழ்தல் முறை. இங்கு நாம் மலைக்குடிகளென ஓரிரவை கழித்திருக்கலாம். சில தருணங்களிலேனும் கவசங்களை கழற்ற வேண்டியுள்ளது” என்றாள் தேவயானி. பேசிபடி விழிதிருப்பியவள் ஒரு கணம் திகைத்து “யார் அது?” என்றாள். “எவர்?” என்றாள் சாயை. “அவ்விளைஞர்கள்… அங்கே செல்லும் அம்மூன்று இளையோர். மூவரில் இருவரின் நடையும் ஒன்று போலிருக்கிறது. அது நான் மிக நன்கறிந்த அசைவு” என்றாள். சாயை “அவர்கள் இக்குடியின் இளைஞர்கள். நாளை அவர் எவரென்று உசாவுவோம்” என்றாள்.


“அல்ல, அவர் இக்குடியினர் அல்ல” என்று கூர்ந்து நோக்கியபடி தேவயானி சொன்னாள். “மலைக்குடியினர் அனைவருக்கும் தனித்த நடையும் அசைவும் உள்ளன. இம்மலைச்சரிவில் பாறைகளினூடாக நடப்பதனாலாக இருக்கலாம். மரங்களில் தொற்றி அலைவதனால் உருவான தோளசைவுகள் அவை. அவர்கள் இங்கு வேட்டை விலங்குகள்போல் சூழலைக் கூர்ந்து எண்ணி காலெடுத்து நடக்கிறார்கள். இவர்கள் நிகர்நிலத்து ஊர்களில் வளர்ந்தவர்கள்” என்றாள். மீண்டும் விழிகூர்ந்து “நான் நன்கறிந்த அசைவு. நன்கறிந்த நடை” என்றபின் “அது அரசரின் நடை” என்றாள்.


“என்ன சொல்கிறீர்கள் அரசி?” என்று சாயை கேட்டாள். “ஆம், ஒளியில் அவர்களைப் பார்த்திருந்தால் இவ்வசைவு அத்தனை துலக்கமாக தெரிந்திருக்காது. நிழல் என அசைவு மட்டுமேயாகி செல்கிறார்கள். அது நன்றாக காட்டிக் கொடுக்கிறது. அவர்களில் மூத்த இருவரின் நடையும் அசைவும் நமது அரசர் யயாதிக்குரியவை” என்றாள் தேவயானி. “அவர்களை அழைத்துவா” என்றாள். சாயை அப்பால் நின்றிருந்த மலைக்குடி ஒருவனை அருகழைத்து தொலைவில் ஒருவரோடொருவர் பேசிச் சிரித்தபடி சென்றுகொண்டிருந்த அந்த மூவரையும் சுட்டிக்காட்டி அவர்களை அழைத்து வரும்படி சொன்னாள்.


“ஐயமே இல்லை” என்றாள் தேவயானி. “ஐயம் வில்லிலிருந்து விடுபட்ட அம்பு, வழியில் தடுத்து நிறுத்தஇயலாது” என்றாள் சாயை. “என்ன சொல்கிறாய்?” என்று அவள் சீற்றத்துடன் கேட்டாள். “இந்த ஐயம் அசோகவனிக்கு வருவதற்கு முன்னரே இருந்தது உங்களுக்கு.” தேவயானி “என்ன சொல்கிறாய்?” என்று மீண்டும் உரத்த குரலில் கேட்டாள். “ஏனெனில் நீங்கள் உங்களை அறிவீர்கள். இங்கிருந்து நீள்தொலைவுக்கு விலகிச்சென்றுவிட்டதை அறிந்திருப்பீர்கள். அவரையும் அறிவீர்கள்” என்றாள். “கலை காமத்தை எழச்செய்கிறது.”


தேவயானி உடல் நடுங்க இருகைகளையும் மார்பிலிருந்து கட்டிக்கொண்டு விழிநிலைத்து அணுகிவரும் அவ்விளைஞர்களை நோக்கினாள். மூவரும் அவள் அருகே வந்து முறைமைப்படி இடைவளைய வணங்கி நின்றனர். மூத்தவனிடம் “நீங்கள் யார் என்று நான் தெரிந்து கொள்ளலாமா?” என்றாள். மூத்தவன் “என் பெயர் திருஹ்யூ. இவர்கள் என் இளையோர். இவன் அனுதிருஹ்யூ, மூன்றாமவன் புரு. நாங்கள் அசோகவனியின் சேடியாகிய சர்மிஷ்டையின் மைந்தர்” என்றான். “உங்கள் தந்தை எவரென்று அறிவீர்களா?” என்று தேவயானி கேட்டாள்.


மூத்தவன் நாவெடுப்பதற்குள் முந்திக்கொண்டு “ஆம் அறிவோம்” என்று புரு மறுமொழி சொன்னான். “அவர் குருநகரியின் அரசர் யயாதி.” தேவயானியிடம் சிறுமாறுதலும் உருவானதாக உடல் காட்டவில்லை. சாயை அவள் மேலும் சொல்லெடுப்பதற்காக காத்து நின்றாள். தேவயானி மிக இயல்பான குரலில் “அதை உங்கள் அன்னை சொன்னார்களா?” என்றாள். “ஆம், ஆனால் அதைவிட நாங்களே தெளிவாக உணர்ந்திருந்தோம். எங்கள் அன்னையைப் பார்ப்பதற்காக அரசர் வந்து அசோகவனியின் காவலர் மாளிகையில் தங்குவதுண்டு. அங்கிருந்து கிளம்புவதற்கு ஒருநாள் முன்னர்கூட வந்திருந்தார். உடன் அவரது அணுக்கத்தோழர் பார்க்கவனும் இருந்தார்.”


தேவயானி தலையசைத்தபோது அவள் இருகுழைகளும் ஆடி கன்னங்களை தொட்டன. சாயை அவர்கள் செல்லலாம் என்று கையசைத்தாள். அவர்கள் திரும்பியதும் தேவயானி “பொறுங்கள்” என்றாள். புரு திரும்பிப் பார்த்தான். தேவயானி இருகைகளையும் விரித்து தலையசைத்து அவனை அருகே அழைத்தாள். அவன் ஐயுற்று நிற்க அவள் புன்னகை செய்து “நான் உங்கள் தந்தையின் முதல் மனைவி. உனது அன்னை… வருக!” என்றாள். தயங்கியபடி அருகே வந்த அவனுடைய மெலிந்த தோளில் கைவைத்து தன் உடலுடன் சேர்த்துக்கொண்டு வலக்கையால் அவன் குழலை வருடி “உன் பெயர் புரு அல்லவா?” என்றாள்.


“ஆம் அரசி” என்றான் புரு. “அன்னையே என்று சொல்க!” என்றாள். “ஆம் அன்னையே” என்றான் புரு. “அது உங்கள் மூதாதையர் புரூரவஸின் பெயர் என்று அறிவாயா?” என்றாள். “ஆம், அறிவேன்” என்றான் புரு. “அன்னை என என் பாதங்களைப் பணிக!” என்றாள் தேவயானி. அவன் குனிந்து அவள் கால்தொட்டு சென்னிசூட “நலம் திகழ்க! வெற்றியும் புகழும் விளங்குக! காலத்தில் படரும் கொடிவழி அமைக!” என்று தேவயானி அவன் தலையில் கைவைத்து வாழ்த்தினாள். பிற இருவரும் வந்து அவள் கால்களைத் தொட்டு வணங்கினர். அவள் அவர்கள் தலையில் கைவைத்து வாழ்த்தினாள்.


சாயையிடம் “இவர்களுக்கு பரிசுகள் அளிக்கவேண்டியிருக்கிறது” என்றாள். சாயை ஆணையேற்று குடிலுக்குள் சென்றாள். தேவயானி இருகைகளையும் விரித்து மூன்று மைந்தரையும் தன் உடலுடன் அணைத்துக்கொண்டாள். திருஹ்யூவின் தோள்களைத் தொட்டு “உங்கள் அன்னையின் தோள்கள் போலிருக்கின்றன. மைந்தா, அரசகுடிப்பிறந்தவர்கள் ஒருபோதும் வலுவற்ற உடல் கொண்டிருக்கலாகாது. உள்ளம் உடலை தான் என பதித்துவைத்துக்கொள்ளும். உடலின் வலுவின்மையை அது தானும் நடிக்கும். நன்கு உடல் தேர்க!” என்றாள். “ஆம் அன்னையே” என்று அவன் தலைவணங்கினான். அனுதிருஹ்யுவிடம் “மூத்தவனிடம் எப்போதும் உடனிரு மைந்தா. ராகவராமனின் உடன் அமைந்த இளையவனைப்போல” என்று அவள் சொன்னாள். அவன் வணங்கினான்.


புரு “தாங்கள் எங்களை ஒடுக்கக்கூடுமென்று அஞ்சினோம், அன்னையே” என்றான். அவள் அவன் விழிகளை நோக்கி “உண்மையிலேயே அவ்வச்சம் இருந்ததா?” என்றாள். அவன் “தாங்கள் அணித்தேரிறங்கி வருகையில் நேரில் கண்ட கணமே அது முற்றிலும் விலகியது. தாங்கள் பேரன்னை. அவ்வாறன்றி பிறிதெவ்வகையிலும் அமைய முடியாதவர். ஆகவேதான் நான் உணர்ந்த உண்மையை உங்களிடம் சொன்னேன்” என்றான். “அது நன்று. அன்னையிடம் பொய் சொல்லலாகாது என்று நீ எண்ணியதை உணர்கிறேன்” என்றாள் தேவயானி. “நீ வெல்பவன். உன் கொடிவழியினர் என்றும் உன்னை வழிபடுவர். பாரதவர்ஷத்தில் உன் குருதி பெருநதியென கிளைவிரிந்து பரவும்” என்றாள்.


சாயை உள்ளிருந்து மூன்று மணிமாலைகளையும் அரசக் கணையாழிகளையும் எடுத்து வந்தாள். அவற்றை தேவயானி அவர்களிடம் கொடுத்தாள். திருஹ்யூ “இவற்றை நாங்கள் அணிகையில்…” என்று தயங்கியபடி சொல்லத் தொடங்க “ஆம், நீங்கள் எவரென்ற வினா எழும். யயாதியின் மைந்தர், குருகுலத்து இளவரசர் என்றே சொல்லுங்கள்” என்றபின் சாயையிடம் “கிருபரிடம் கூறுக! இவர்கள் குருநகரியின் இளவரசர்கள். சூதர்களுக்குரிய கல்வியும் அடையாளங்களும் இனி இவர்களுக்கு இருக்கலாகாது” என்றாள். அவள் தலை வணங்கி “அவ்வாறே, பேரரசி” என்றாள். தேவயானி அவர்களிடம் “செல்க, நாம் மீண்டும் சந்திப்போம்” என்றாள். அவர்கள் மீண்டும் அவள் கால்தொட்டு வணங்கி விடைகொண்டனர்.




tigerகுடிலுக்குள் சென்றதுமே தேவயானி உடலசைவுகள் மாற பிறிதொருத்தி என்றானாள். அரவென சீறித்திரும்பி தன்னைத் தொடர்ந்து உள்ளே வந்த சாயையிடம் “உனக்குத் தெரிந்திருக்கிறது” என்றாள். “ஆம், முன்னரே தெரியும்” என்று சாயை சொன்னாள். “அவளுக்கு முதற்குழந்தை பிறந்ததுமே கண்காணிக்கத் தொடங்கினேன். அரசர் இங்கு வந்து தங்கிச் செல்லும் ஒவ்வொரு தருணத்தையும் நன்கு அறிந்திருந்தேன்.” தேவயானி உரத்த குரலில் “நீ இதை ஏன் என்னிடம் சொல்லவில்லை? என் நலனுக்காக என்று பொய் சொல்லமாட்டாய் என்று எண்ணுகிறேன்” என்றாள்.


“சொல்ல வேண்டாம் என்று தோன்றியது. உங்கள் நலனுக்காக அல்ல” என்றாள் சாயை. “ஏன்?” என்றாள் தேவயானி. “என் வஞ்சத்துக்காக” என்று சாயை சொன்னாள். தேவயானி திகைத்து பின் மீண்டு உடைந்தகுரலில் “நான் உன்னை நம்பினேன். உன்னை என் ஒருபகுதியென எண்ணினேன்” என்றாள். “உங்கள் ஒரு பகுதியாக இருப்பதனால்தான் சொல்லவில்லை. ஏனென்றால் உங்கள் மேல் நச்சுமிழ விரும்பினேன்” என்றாள். “முற்றிலும் உங்களுக்கு படைக்கப்பட்ட உள்ளம் கொண்டவள் நான். ஆனால் என்னுள் இவ்வஞ்சத்தின் நச்சுப்பல் இருந்துகொண்டே இருந்தது.”


“துயில்கையில் பலமுறை உடைவாளை உருவி உங்கள் கழுத்தில் பாய்ச்ச வேண்டுமென்று எண்ணியிருக்கிறேன். பின்னர் அறிந்தேன், இது இன்னும் கூரிய உடைவாள். இன்னும் குளிர்ந்தது, குருதி சிந்தாதது, அமைதியானது. எனவே இதை தேர்வு செய்தேன்” என்றாள் சாயை. அவள் விழிகளில் தெரிந்த வெறுப்பைக் கண்டு அஞ்சி தேவயானி பின்னடைந்தாள். “ஏன் இதை செய்தாய்?” என எழாக்குரலில் கேட்டாள்.


அவளை அசையாவிழிகளுடன் நோக்கி சாயை அணுகிவந்தாள். “என்னை அறியமாட்டீர்களா, அரசி? என்னையன்றி நீங்கள் நன்கறிந்த எவருளர்?” அவள் மூச்சுக்காற்று தேவயானிமேல் நீராவியுடன் பட்டது. “நான் வேங்கை. கசனின் குருதிச் சுவையை அறிந்தவள். உனது குருதிச் சுவையையும் அறிய வேண்டாமா?” சன்னதமெழுந்த வாயிலிருந்து கிளம்பும் தெய்வக்குரல் போலிருந்தது அவள் உரை.


தேவயானி மேலும் பின்னடைந்து பீடத்தில் முட்டி, சுவரை நோக்கிச் சென்று சாய்ந்து நின்றாள். “நிழல் கருமையாக இருப்பதே தெய்வ ஆணை” என்றாள் சாயை. “நிழல் எழுந்து உருவை விழுங்கும் தருணம் ஒன்றுண்டென்று உணர்க! நீ சென்று நின்ற உச்சம். அசோகவனிக்குள் நுழைவதற்கு முன் அதை நீ உணர்ந்திருந்தாய். ஆனால் உன்னுள் ஒன்று வீழ்ச்சியடைய விழைந்தது. விந்தை அது, அழிவதற்கு மானுடர் கொள்ளும் விழைவு. தங்கள் நெஞ்சிலேயே ஈட்டியை பாய்ச்சிக்கொள்கையில் அவர்கள் கொள்ளும் உவகை.” அது உளமயக்கா கனவா என தேவயானி வியந்தாள். தன் கால்கள் நடுங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்ததும் உடலை இறுக்கி விழாமலிருக்க முயன்றாள்.


“என் கடன் அவ்வுச்சத்திலிருந்து இழுத்து உன்னை இருள் நிறைந்த ஆழங்களுக்குத் தள்ளுவது. இது அத்தருணம்” என்றாள் சாயை பிறிதெங்கோ இருந்து என ஒலித்த குரலில். தேவயானி இருகைகளும் நடுங்க எதையாவது பற்றிக்கொள்ளத் துழாவி மீண்டுவந்த கைகளை ஒன்றோடொன்று சேர்த்து நெஞ்சோடு அழுத்திக்கொண்டு திறந்த வாயுடனும் ஈரம் நிறைந்த விழிகளுடனும் சாயையை நோக்கி நின்றாள்.


“இப்போது உன்னுள் கொதிக்கும் நஞ்சனைத்தையும் உமிழ்ந்து ஒழிக! அதன் பின்னரே உனக்கு மீட்பு” என்ற சாயை தன் கைகளை கழுத்துக்குப் பின் கொண்டுசென்று அணிந்திருந்த மணியாரத்தின் பட்டு நூல் முடிச்சை இழுத்து அறுத்து வீசினாள். கூரையிலிருந்து நாகக்குழவி விழுந்ததுபோல அது தரையில் நெளிந்து கிடந்தது. சரப்பொளி ஆரத்தையும் கண்டமாலையையும் மேகலையையும் அறுத்து மணிகளும் காசுகளும் சிதற நிலத்தில் எறிந்தாள். கடகங்களையும் வளையல்களையும் சிலம்புகளையும் கழற்றியிட்டாள். இடையணிந்த பொன்னூல்பின்னிய பட்டு நூலாடையையும் களைந்தபின் அங்கிருந்த பேழையொன்றின் மீது கிடந்த மரவுரி மேலாடையை எடுத்து இடைசுற்றி அணிந்தபின் “நான் செல்கிறேன். மீண்டும் நாம் காண ஊழிருந்தால் அது நிகழ்க!” என்றாள்.


அவள் திரும்பியதும் தேவயானி கைகள் காற்று உலைக்கும் மரக்கிளைகள் என பதறிச் சுழல உடைந்த குரலில் “உன்னை கொல்வேன். உன் தலை கொய்து உருட்டுவேன். இழிமகளே… உன்னை கழுவேற்றுவேன்” என்றாள். சாயை திரும்பி புன்னகையுடன் “என்னை உன்னால் எதுவும் செய்ய முடியாது. நான் உன் மறுபாதி” என்றபின் வெளியே இறங்கி இருளில் அமிழ்ந்து மறைந்தாள். அவளைத் தொடர்ந்து ஓடிச்சென்று வாயில்சட்டத்தில் கைபற்றி நின்று வெளியே நோக்கிய தேவயானி அவள் முற்றத்தில் காற்றில் சருகுகளென சுழன்று உலைந்து அலைகொண்டிருந்த தலைகளுக்கு நடுவே புகுந்து அறிய முடியாதபடி கடந்து மறைவதைக் கண்டாள்.




tigerசில கணங்களுக்குப்பின் மீண்டு உடல் எடை மிகுந்தவள்போல தள்ளாடி மெல்ல நடந்து மஞ்சத்தை சென்றடைந்தாள். அதன் இழுபட்ட கயிறுகள் முனகும்படி விழுந்து இறகுத் தலையணையில் முகம் புதைத்துக்கொண்டாள். அவள் உடல் துள்ளி விழுந்தது. உள்ளங்கால்கள் இரண்டும் அனலில் நின்றவை போலிருந்தன. பின் உள்ளங்கைகளும் எரியத் தொடங்கின. நாவும் மூச்சும் விழியும் கண்களும் அனலென கொதித்தன. தழலெழுந்து வயிற்றை நெஞ்சை உருக்கி பற்றி எழுந்தாடத்தொடங்கியபோது முற்றிலும் காலம் இல்லாதாயிற்று.


அவள் தன்னை உணரத் தொடங்கியபோது களைத்து கைகளும் கால்களும் தனித்தனியாக உதிர்ந்து கிடக்க சித்தம் கம்பத்தில் கொடியென தனித்து படபடத்தது. கொடி கிழிந்துவிடுவதுபோல் துடித்தது. நெய்யில் சுடரென தனித்தெழுந்து வெறும்வெளியில் நின்று தவித்தது. தலையை இருபக்கமும் அசைத்தபோது கண்கள் பெருகி வழிந்து காதுகளை அடைந்திருப்பதை உணர்ந்தாள். ஓங்கி அறைந்து நெஞ்சை உடைக்க வேண்டும் என்று வெறி கொண்டாள். ஆனால் இமைகளை அசைப்பதற்குக்கூட எண்ணத்தின் விசை எதுவும் எஞ்சியிருக்கவில்லை.


அந்த இரவு தன்னை என்ன செய்கிறதென்று அவளால் உணர முடியவில்லை. பளிங்குக் கலம் விழுந்து உடைந்து பலநூறு துண்டுகளானதுபோல் உள்ளம் வெறும் சொற்களின் தொகையாக இருந்தது. ஒன்றோடொன்று இணையாதபோது சொற்கள் முற்றிலும் பொருளற்றிருந்தன. பொருள் தேடி அவை ஒன்றையொன்று முட்டி மோதி குழம்பின. அந்த ஒழுங்கின்மையின் வலி தாளாமல் அவள் எழுந்தமர்ந்தாள். குடிலுக்குள் உலவினாள். சாளரத்தினூடாக குருதிநிறைந்த தாலமென எழுந்துவந்த நிலவை பார்த்தாள். முற்றமெங்கும் எழுந்தமர்ந்து விளையாடியும் உண்டும் குடித்தும் களித்துக்கொண்டிருந்த மக்களை நோக்கினாள். காட்சிகளில் உளம் பொருளேற்றாவிட்டால் அவற்றுக்கு ஒன்றுடனொன்று தொடர்பும் இசைவுமில்லை என்று அறிந்தாள்.


மீண்டும் வந்து சேக்கையில் படுத்து முகத்தை புதைத்துக்கொண்டாள். உடல்நோய் எளிது, நோயுறா உடல்பகுதியால் நோயை வெல்லமுயலலாம். உள்ளம் நோயுறுகையில் நோயே உள்ளமென்றாகிவிடுகிறது. இச்சொற்கள் அனைத்தையும் ஒன்றோடொன்று பொருள் கொள்ளும்படி இணைத்துவிட்டால் மட்டும் போதும். உள்ளமென்ற ஒன்று மீண்டு வந்தால் போதும். ஆனால் ஒரு சொல்லை பற்ற முயல்கையில் ஒரு நூறு சொற்கள் கிளைகளிலிருந்து பறந்து எழுந்து கலைந்து கூச்சலிட்டு சுழன்று பறந்தன. பற்றிய சொல் வெறித்த விழிகளுடன் செத்துக் குளிர்ந்திருந்தது.


இவ்விரவை தான் கடக்கவே போவதில்லை என்று தோன்றியது. ஆடைகள் அணிகள் அனைத்தையும் கழற்றிவிட்டு வெறுமொரு விலங்கென இவ்விருளில் பாய்ந்து திசை எல்லைவரை ஓடினால் இவையனைத்திலிருந்தும் விடுதலை பெறக்கூடும். அந்த முடிவின்மையின் பொருளிலாமை அளித்த அச்சம் பெருகி திரும்பி வந்து ஊருக்குள் இல்லத்திற்குள் உடைகளுக்குள் புகுந்து கொள்ளச்செய்தது. நானென்பது ஓர் இன்மை என உணர்வதே துயரத்தின் உச்சம். அவ்வின்மையின் மேல் சூடிக்கொண்டவையே பெயர், குலம், தன்னிலை, ஆணவம், உடல், அணிகள், உறவுகள் அனைத்தும்.


ஏன் இத்தனை துயருறுகிறேன்? இழந்தது எதை? எண்ணியிரா வஞ்சத்தை முன்னரும் சந்தித்திருக்கிறேன். புழுதியென சருகென உதிர்க்கப்பட்டிருக்கிறேன். ஆணவமென ஒரு துளியும் எஞ்சாது கவிழ்ந்து தரையில் சிந்திய அழுக்குக்கீற்றென கிடந்திருக்கிறேன். அவ்வின்மையிலிருந்துதானே முளைத்தெழுந்தேன்? பின்னர் வென்றடைந்து அள்ளிச் சுற்றிக்கொண்ட அனைத்தும் அவ்வெறுமையின்மீது அமைந்தவையே என்று உள்ளூர அறிந்திருந்தேன் அல்லவா? இவையனைத்தும் உதிர்ந்து மீண்டும் அந்த வெறுமைக்குச் செல்லும்போது நான் இழப்பதென்ன?


இழப்பல்ல, தோற்கடிக்கப்படுதல். முற்றாக வீழ்த்தப்படுதல். முழுத் தோல்வியில் இருந்து மீண்டு எழுவது எளிதல்ல. ஆணவத்தை ஆயிரம் மடங்கு பெருக்கி எழுந்து மண்ணில் ஆழ வேரூன்றி விண்ணைப்பற்றி முகில்தொட்டு உலாவும்படி தலைதூக்கி நிற்கவேண்டியிருக்கிறது. அங்கிருந்து மீண்டும் சரிவதென்பது பெருவீழ்ச்சி. எதை இழந்தேன்? இத்தருணத்தில் அரசனென அமர்ந்திருக்கும் அவனை சிறைபிடித்து கழுவிலேற்ற என்னால் ஆணையிடமுடியும். அவை நடுவே நிற்கச்செய்யலாம். காடேகும்படி சொல்லலலாம். இல்லை, அவை இயல்வதல்ல என்று அவள் உள்ளம் அறிந்திருந்தது. தன் மைந்தருக்குத் தந்தை என்பதனால், குருநகரியின் சந்திரகுலத்துக் கொடிவழியின் குருதி என்பதனால்.


நான் அடைந்ததனைத்தும் அவன் உவந்து அளித்ததே என்று அறிந்துகொண்டதே இத்தருணத்தின் தோல்வியா? அவன் அளிக்காத ஒன்றும் என்னில் எஞ்சவில்லை என்று எண்ணும் தன்னிரக்கமா? உயிரை மாய்த்துக் கொள்ளலாம். அது இத்தருணத்தின் தோல்வியை மீண்டும் வலியுறுத்துவது. இப்புள்ளியிலிருந்து சீறி மேலெழுவது எப்படி? இக்கணத்திலிருந்து விண்ணளாவ எழுவது எப்படி? இனி ஒளி உண்டு வளர இயலாது. இருள் குடித்து மண்ணுக்குள், பாதாளங்களில் விரிவதே வழியென்றாகும். பெருவஞ்சமே சுக்ரரின் மகளுக்கு தெய்வங்கள் வகுத்ததென்பதாகும்.


தெய்வங்களே, மூதன்னையரே, எத்தனை வெறுக்கிறேன்? கடுங்கசப்பன்றி ஒரு சொல் இல்லை. இத்தனை தொலைவுக்கு ஓர் உயிரை பிறிதொன்று வெறுக்கலாகுமா? தெய்வங்கள் சினக்குமோ? ஆனால் செய்வதொன்றுமில்லை. என்றும் அவனை வெறுத்துக்கொண்டுதான் இருந்தேன். என் உடலை கைப்பற்றியவன். என் உடலை அவன் ஆள்கையில் உள்ளிருந்த கசப்பு நொதித்து நுரைத்து பெருகியது. அவனுக்கு நான் என்னை அளித்தேன்? அன்று என் அகம் களித்திருந்தது. இவனை ஒருகணமும் விரும்பியதில்லை. அதனால்தானா? ஆம் அதனால்தான். தன் உடல்வெம்மை சேக்கையை கொதிக்கச்செய்வதை உணர்ந்து எழுந்தமர்ந்தாள். எழுக இருள்! எழுக நஞ்சு! எழுக ஆழுலகங்கள்! இருகைகளின் நகங்களும் கைவெள்ளையை குத்திக்கிழிக்க விரல்சுருட்டி பற்கள் உதடுகளில் குருதியுடன் இறங்கின.


புற்றுவாய் திறந்தெழும் ஈசல்களென என்னிலிருந்து கிளம்பி இவ்வறை நிறைத்து சுழன்று பறந்து சிறகுதிர்ந்து ஊர்ந்துகொண்டிருக்கும் இவ்வெண்ணங்கள் எவை? ஒவ்வொரு தருணத்திலும் மானுட உள்ளத்தில் எண்ணங்களைப் பெய்யும் தெய்வங்கள் விழி அறியாதபடி சுற்றிலும் காத்து நிற்கின்றன. முன்பு இத்தருணத்தை எதிர்கொண்ட மானுடர் நுரைத்து பெருக்கி இங்கு விட்டுச்சென்ற சொற்களா இவை? என்றும் இங்குள்ளனவா? மானுடர் பிறந்து வந்து இவற்றில் பொருந்தி பின் விலகி மறைகின்றார்களா? நதியென காற்றென கடலென மலைகள் என இச்சொற்கள் முடிவிலி வரை இருந்துகொண்டிருக்குமா என்ன?


அவள் தன்னினைவு அழிய விரும்பினாள். மது அருந்தலாம். அகிஃபீனாவுக்கு ஆணையிடலாம். கிருபரை அழைத்துச் சொன்னால் விரைவிலேயே அவை இங்கு வரும். ஆனால் அவள் இருக்கும் நிலை அவர்களுக்கு தெரிந்துவிடும். மூவரையும் இளவரசர்கள் என அவள் அறிவித்துவிட்டதை இப்பொழுது குருநகரியின் அகம்படியினரும் காவலரும் அறிந்திருப்பார்கள். இவ்விரவு முழுக்க அவர்கள் அதைப்பற்றித்தான் பேசி சலிக்கப்போகிறார்கள். அனைத்தையும் களைந்து வெறும் பெண்ணென அவர்கள் முன் சென்று நிற்பது என்பது சுட்டுப்பழுத்த வாள் ஒன்றை நெஞ்சில் தைத்துக்கொள்வதற்கு நிகர். பிறிதொன்றில்லை. இவ்விரவுதான்… இதைக்கடப்பதொன்றுதான் வழி. அந்தக் கீழெல்லையில் ஒரு கீற்று ஒளி எழுவது வரைதான்.


ஒழுக்கு எத்தனை எடைகொண்டதாக ஆயினும், கணங்கள் சுட்டுப்பழுத்து வெம்மை கொண்டிருப்பினும், சென்றவையும் வருபவையும் குருதி சுவைக்கும் முட்பெருக்கென்று சூழினும் காலத்தால் நின்றுவிட முடியாதெனும் அருளைக் கொண்டுள்ளது மானுடம். கணம் பிறிதொரு கணம் மீண்டும் ஒரு கணம் என அது உருண்டு முன்சென்றே ஆகவேண்டும். அள்ளி தானளிக்கும் அனைத்தையும் இறந்தகாலம் என்று ஆக்கியே ஆகவேண்டும். தேர் கடந்து சென்றபின் நிலைத்திருக்கும் திறன் புழுதிக்கு இல்லை.


வெளியே முற்றத்திலிருந்து ஒவ்வொருவராக எழுந்து கடந்து சென்றனர். சூழ்ந்திருந்த குடில்களில் விளக்குகள் அனைத்தும் அணைந்தன. மறுஎல்லையில் மேடைப்பணியின் குறை தீர்க்கும் தச்சர்களின் ஓசை மட்டும் கேட்டுக்கொண்டிருந்தது. பேச்சுக்குரல்கள், மரை திருகும் ஒலிகள். அங்கிருந்து நெய்விளக்குகளின் ஒளி செந்நிறக்கசிவாக பரந்து முற்றத்து மண்ணில் நீண்டிருந்தது. ஒளியை அங்கு சென்று தொட்டு காலால் கலைக்க முடியுமென்பது போல. இப்பெருவலியை நானே எனக்கு அளித்துக்கொள்கிறேன். ஆணவம் மிக்கவர்கள் தங்களை துன்புறுத்துவதில் பெருந்திறன் கொண்டவர்கள்.


எத்தனை இனிது குருதிச் சுவை? தன் குருதிச் சுவை. தன் சிதைச் சாம்பலைத் தொட்டு நெற்றியிலிடும் வாய்ப்பு ஒருவனுக்கு அளிக்கப்படுமென்றால் அவனடையும் பெருநிறைவுதான் என்ன? பேரரசி இங்கு இறந்தாள். வெளியே சென்று அப்பெருமுரசின் முழைதடி எடுத்து மும்முறை முழக்கி உலகுக்கு அறிவிக்க வேண்டும் அதை. இம்மேடையில் இதுவரை நடந்த நாடகம் முடிவுக்கு வருகிறது. பெருநதி மீண்டும் ஊற்றுக்குத் திரும்புவதுபோல சுக்ரரின் சிறு குடிலுக்குச் சென்று அமையவேண்டும். அங்கு அவள் விட்டு வந்த இளமை காத்திருக்கக்கூடும். கற்று நிறுத்திய காவியத்தின் இறுதிச்சொல் நுனி துடித்து காத்திருக்கக்கூடும்.


கிளம்புவதொன்றே வழி. உளம் உளத்தின்மேல் செலுத்திய பெருவிசையாலேயே அவள் களைப்புற்றாள். மஞ்சத்தில் சென்று படுத்தபோது ஒன்றோடொன்று முட்டிக்கொண்ட நூறு சொற்றொடர்கள் இறுகி அசைவிழந்து நின்றன. பின் அவள் உளநெருக்கடி மட்டுமே அளிக்கும் ஆழ்துயிலில் அமிழ்ந்தாள்.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–79
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–81
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–80
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–77
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–69
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–68
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–67
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–66
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–65
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–64
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 75
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 47
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–78
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–75
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–74
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–73
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–72
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–63
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–62
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–61
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 22, 2017 11:30

April 21, 2017

டைரி

dairy


ஜனவரி பதினாறாம் தேதி காலையில்தான் நான் இவ்வருடத்திய டைரியை வாங்கினேன்.  மலிவானதும் அதேசமயம் அதிக பக்கங்கள் வருவதுமான டைரி. நூறு ரூபாய். வழக்கமாகவே நான் டைரி எழுத தாமதமாகும். நாஞ்சில்நாடன் அவரது ‘பிராடி ஆண்ட் கம்பெனி’ டைரியை ஜனவரி பத்து வாக்கில்தான் தருவார். இப்போது அவர் ஓய்வு பெற்றுவிட்டார்– அதாவது ‘நாஞ்சில் ஏஜென்ஸீஸ்’ உரிமையாளராக ஆகிவிட்டார். இவ்வருடம் நான் சென்ற டிசம்பர் பதினெட்டு அன்று ஊரைவிட்டு கிளம்பியபின் பதினாறாம்தேதிதான் வந்துசேர்ந்திருக்கிறேன். அதாவது எனக்கு இப்போதுதான் இவ்வருடம் ஆரம்பிக்கிறது.


நான் பலவருடங்களாக டைரி எழுதுகிறேன். 1986ல் சுந்தர ராமசாமியைச் சந்தித்தபோது அவர் என்னிடம் ‘எழுத்தாளர்கள் கண்டிப்பா டைரி எழுதணும். அவனோட மனநிலைகளை அவனே அப்ஸெர்வ் பண்றதுக்கு அது அவசியம். ரொம்ப அந்தரங்கமா எழுத ஆரம்பிக்கிறப்பதான் நம்ம மொழி எவ்ளவு போதாமைகளோட இருக்குங்கிறது தெரியும். டைரி எழுதறப்ப யாருமே வாசிக்கப்போறதில்லைங்கிற ஒரு சுதந்திரம் வருது. அதில நாம் இன்னும் கொஞ்சம் சகஜமா இருப்போம். எந்த எழுத்தாளனோட டைரியும் அவனோட கிரியேட்டிவ் லேங்வேஜிலே இருக்காது…அது பாட்டுக்கு இருக்கும்…”என்றார்.


சுந்தர ராமசாமி உண்மையில் தொடர்ச்சியாக டைரி எழுதுபவரல்ல. எழுதுவார், எழுதாமலும் இருப்பார். அவரது டைரியை அவரே தந்த சில பக்கங்களை நான் படித்திருக்கிறேன். அவரது வழக்கமான நடையில்தான் அவை இருக்கும். தன்னால் தான் நினைத்ததுபோல நாட்குறிப்புகள் எழுத முடியவில்லை என்று சுந்தர ராமசாமி வருந்துவது உண்டு.


நான் டைரி எழுத ஆரம்பித்தபின் எனக்கு அது ஒரு இன்றியமையாக ஆகிவிட்டது. என் டைரியில் அந்தரங்கமாக ஏதும் இருக்காது. அந்தரங்கமாக நேரடியாக எழுத முடியாது என்பதே என் எண்ணம். ஏனென்றால் அந்தப் பார்வை நம்மை பலவகையான சங்கடங்களை நோக்கித்தள்ளக்கூடியது. நம்முடைய அந்தரங்கத்தை நாம் நேரடியாகச் சொல்ல முடியாது என்ற கட்டாயமே நம்மை புனைவெழுத்தை நோக்கி கொண்டுசெல்கிறது.  நம் அந்தரங்கத்தை நாம் ஒரு புனைவுச்சூழலுக்குக் கொண்டுபோனால் சுதந்திரமாக எழுத முடியும்.


ஆகவே நான் என் நாட்குறிப்புகளை மிகவும் பொத்தாம் பொதுவாக , அவசியமான நினைவுகள் மற்றும் நிகழ்வுகளைச் சுருக்கமாகவும் மிகமிக அலட்சியமாகவும் சொல்வதற்காகத்தான் எழுதியிருக்கிறேன்.பெரும்பாலும் கதைகளை எழுதியது, பிரதி எடுத்தது, அனுப்பியது, வாசித்த நூல்கள், அவற்றின் மீதான கருத்துக்கள், பயணங்கள், நண்பர்களைச் சந்தித்தது இப்படித்த்தான் இருக்கும். மிக அபூர்வமாகவே உணர்வெழுச்சிகள். படைப்பு சார்ந்த மன எழுச்சிக்கு ஆளாகி தூக்கமிழந்த இரவுகளில் விரிவான குறிப்புகளை எழுதியிருக்கிறேன்.


தியானம் பழகிய நாட்களில் அந்த அனுபவங்களை மட்டும் தனியாக ஒரு குறிப்பேடாக எழுதிவந்தேன். அவற்றில் தியானத்தைப்பற்றி மட்டுமே இருக்கும். அந்த குறிப்புகள் மிகத்தீவிரமான மொழியில், பலசமயம் உச்சகட்ட கவித்துவத்துடன், ஆனால் கட்டற்ற நடையில் இருக்கின்றன. அவற்றை என்றாவது பிரசுரம்கூட செய்யலாம். இந்த டைரிக்குறிப்புகள் எனக்கு என் நினைவுகளை மீட்டுவதற்கு மட்டுமே உதவக்கூடியவை.


ஆனால் எனக்கு டைரி ஒரு குறிப்பிட்ட காரணத்துக்காகவே மிக முக்கியமானது. என் வாழ்நாளை நான் பயனுள்ளமுறையில் செலவிட்டிருக்கிறேனா என்று அதன் வழியாக நான் கண்காணிக்கிறேன். என்னுடைய டைரிக்குறிப்புகள் எல்லாமே ஒரே கேள்வியுடன் தான் ஆரம்பிக்கின்றன. அந்த நாளை நான் எப்படிச்செலவிட்டேன்? எழுதுவது, படிப்பது, பயணம்செய்வது ஆகியவற்றைச் செய்யும் நாளை மட்டுமே நான் என்னுடைய நாளாக எண்ணிக்கொள்கிறேன்.


பிற நாட்கள் எல்லாமே வீண்தான் எனக்கு. வீடுகட்டும் வேலைகள், அலுவலகவேலைகள், உறவுகளைப்பார்க்கப்போவது, கல்யாணங்கள், சடங்குகள் எல்லாமே என் நோக்கில் நாளை வீணடித்தலாகவே பொருள்படுகிறது. அவ்வகையில் நான் நன்றாகப் பயன்படுத்திக்கொண்ட நாளைப்பற்றி மகிழ்ச்சியுடன் குறித்திருக்கிறேன். அப்படி அல்லாத நாட்களைப் பற்றி சோர்வுடன் எழுதியிருக்கிறேன்.


இப்போது என் டைரிகளை எடுத்துப்புரட்டும்போது ஆச்சரியமாக இருக்கும் விஷயம் ஒன்று உண்டு. மிகப்பெரும்பாலான நாட்களை ‘இன்று உற்சாகமான நாள். இன்று …. எழுதினேன்.’ என்ற வகையான சொற்றொடருடன்தான் ஆரம்பித்திருக்கிறேன்.  கடந்த பதினைந்து வருடங்களில் நான் உற்சாகமில்லாமல் இருந்த நாட்கள் மிகமிகக் குறைவு. எழுதாமல் வாசிக்காமல் பயணம்செய்யாமல் அன்றாடவாழ்க்கையில் வீணடித்த நாட்கள் ஒருசதவீதம் கூட இருக்காது. மகிழ்ச்சியின் பரப்பிலேயே இந்நாட்களை முழுக்கக் கழித்திருக்கிறேன் என்பதை எண்ணும்போது ஆச்சரியமாக இருக்கிறது.


அதற்கு நான் முக்கியமாக அருண்மொழிக்குத்தான் நன்றி சொல்ல வேண்டும் என்பதையும் இந்த டைரிகள் காட்டுகின்றன. எனக்கும் அருண்மொழிக்கும் இடையேயான பெரிய மனக்கசப்பு அல்லது பூசலின் நாட்கள் ஒன்றுகூட பதிவுபெறவில்லை. அப்படி ஒரு குறிப்பிடத்தக்க மோதல் எதுவும் இந்த பதினேழு வருடங்களில் எங்களுக்கிடையே நிகழவேயில்லை. பெரும்பாலான தருணங்களில் அன்றாடவாழ்க்கையின் சிக்கல்கள் என் வரையில் வந்துசேராமல் அவளே பார்த்துக்கொண்டிருக்கிறாள். என்னுடைய உறவினர்கள் அனைவரிடமும் மிக நல்ல உறவை தெளிவாக மேற்கொண்டு அதன் விளைவான மனச்சிக்கல்கள் ஏதும் விளையாமல் பார்த்துக்கொண்டிருக்கிறாள்.


இரண்டாவதாக, இந்த வருடங்கள் முழுக்க கீதை எனக்களித்திருக்கும் ஊக்கத்தைச் சுட்டிக்காட்டவேண்டும். 1987 ல் நான் காஸர்கோட்டில் இருக்கும்போது  என் யோகசாதனையில் முழுமை கைநழுவிப்போய்க்கொண்டே இருந்ததனால் கடும் மனஉளைச்சலுக்காளாகி ஊரைவிட்டுக் கிளம்பி நெடும் அலைச்சலை அடைந்து சோர்ந்து கர்நாடக மாநிலத்தில் தார்வாட் அருகே ஒரு ஊரில் இருக்கையில் கீதையை மீண்டும் வாசித்தேன். அங்கிருந்து வேறு ஒருமனிதனாக எழுந்த நாள்முதல் இக்கணம் வரை என்னுடன் கீதை இருந்துகொண்டிருக்கிறது


இந்த இருபதுவருடங்களாக எனக்கு சோர்வென்பதே இல்லை. நான் ஒரு கணம்கூட சலிப்பையும் விரக்தியையும் உணர்ந்ததில்லை. எந்த விளைவுக்காகவும் நான் மனம் தளர்ந்ததில்லை. இந்த இருபது வருடங்களில் எத்தனையோ எதிரிகள் உருவாகி இருக்கிறார்கள், மறைந்திருக்கிறார்கள், மீண்டும் எதிரிகள் உருவாகியிருக்கிறார்கள். என் மீது வசைகள் கொட்டப்பட்டிருக்கின்றன. அவதூறுகள் பொழியப்பட்டிருக்கின்றன. அவற்றையெல்லாம் எப்போதும் நகைச்சுவையுடன் மட்டுமே எடுத்துக்கொண்டிருக்கிறேன். என்னுடைய இந்த டைரிகளில் நான் ஒருமுறைகூட ஒரு தாக்குதலைக்கூட பொருட்படுத்தி ஏதும் எழுதியதில்லை என்பதைக்காண எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது. என்னை ஓயாது தாக்கி எழுதிய பலரின் பெயரையே இந்த டைரிகளில் காணமுடியவில்லை.


என்னுடைய கர்மங்களின் தளத்தில் எப்போதும் தீவிரமாக இருந்துகொண்டிருப்பவன் நான். தீவிரம் இன்றி எதையுமே சாதிக்க முடியாதென உணர்ந்தவன்.ஆனால் உள்ளூர இந்த ஆட்டம் ஒருவகை விளையாட்டு மட்டுமே என்ற உணர்வுடன்தான் இருந்துகொண்டிருக்கிறேன். ஆகவேதான் இதை உள்ளூரப்பொருட்படுத்தாமல் இருக்கிறேன்.


இந்த டைரிகளைப் புரட்டும்போது என் பார்வையில் முக்கியமாகப்பட்டிருப்பதைப் பார்க்கையில் என்னை எனக்கு பார்க்க முடிகிறது. குழந்தைகளைப்பற்றி எழுதித்தள்ளியிருக்கிறேன். நாய்களைப்பற்றி குறிப்பு இல்லாத நாளே இல்லை. இந்த டைரிகளை வைத்தே என் நாய்களுக்கு எப்போதெல்லாம் வயிறு சரியில்லாமல் இருந்தது என்று பட்டியலிட்டுவிடலாம் என்றாள் அருண்மொழி. இந்த டைரிகளில்  பல இடங்களில் வெயில், மழை, இனிய காலை நேரங்கள் பற்றிய உணர்ச்சிகரமான சித்திரங்கள் உள்ளன. பயணம்போன ஊர்களைப்பற்றிய அற்புதமான வர்ணனைகள் உள்ளன. தற்கொலைக்குத்தப்பிய் ஒருவருக்க்கே இந்த பூமி என்பது எத்தனை பெரிய ஆனந்தவெளி என்பது புரியும்.


அத்துடன் அருண்மொழியைப்பற்றிய வர்ணனைகள் நெகிழ்ச்சிகள் மீண்டும் மீண்டும் பதிவாகியிருக்கின்றன. என்னை மணம் செய்யும்போது அவள் மிக்ச்சிறிய பெண். இருபது அப்போதுதான் முடிந்திருந்தது. மன அளவில் பதினெட்டு எனலாம். அவளுடைய வளர்ச்சியின் சித்திரத்தை முழுமையாக இந்த டைரிகளைக் கொண்டு உருவாக்கிவிடலாம்.


சென்ற 2008 ஜனவரி பதினாறு அன்று கன்யாகுமரி எக்ஸ்பிரஸில் சென்னையில் இருந்து திரும்பி வந்திருக்கிறேன். நாகர்கோயில் வந்ததே தெரியாமல் தூங்கி யாரோ ஒருவரால் தட்டி எழுப்பப்பட்டு பதறியடித்து இறங்கியிருக்கிறேன். ஆதிமூலம் இறந்த செய்தி இரவில் ரவி சுப்ரமணியத்தின் குறுஞ்செய்தியாக வந்திருக்கிறது. காலைவில் வீடுவந்துசேர்ந்தபோது அதைக் கண்டேன் அவரைப்பற்றிய நினைவுகள் அலைந்தன மனதில்


ஆதிமூலம் பற்றி ஒரு குறுங்கட்டுரை எழுதி என் இணையதளத்தில் போட்டிருக்கிறேன். நாகார்ஜுனனுக்கு அவரைப்பற்றி நான்  நகைச்சுவையாக எழுதியது ஒருவகை எழுத்துமுறையே ஒழிய அவர்மீதான விமரிசனம் அல்ல என்று ஒரு நீள்கடிதம் போட்டிருக்கிறேன். அலுவலகம் சென்று சுரேஷிடமும் பாலாவிடமும் ஷாஜியிடமும் பேசியிருக்கிறேன். ‘தி மாஸ்டர் கிறிஸ்ட்டியன்’ என்ற நாவலையும் ‘சீவசிந்தாமணியை’யும் படித்திருக்கிறேன்.


பழைய டைரிகளை எடுத்து வெறுமே புரட்டிக்கொண்டிருந்தேன். சென்ற நாட்கள் வழியாக உலவுவது ஓர் இனிய அனுபவம். சென்ற காலம் போல கனவுத்தன்மை கொண்ட ஒன்று வேறு இல்லை. நாம் தொடமுடியாத ஓர் உலகம். ஆனால் நாம் இருந்துகொண்டிருக்கும் உலகமும் கூட.


1991ல் டைரி ஆரம்பிக்கும்போதே ஒரு கவிதைவரி. ‘பூத்த ஜோதி வதனம் திரும்புமேல் புலனழிந்தொரு புத்துயிர் எய்துவேன்’  அருண்மொழியின் காதல் வெறியுடன் இருந்த காலகட்டம் அது. ஏராளமான கவிதைகள். ஜனவரி 15 ஆம் தேதி ஒரு கவிதை. தலைப்பில்லாதது

மௌனமாய் பார்த்துக்கொண்டிருக்கிறேன்


சிறு குருவி போல இயல்பான எச்சரிக்கையுடன்

கவனிக்கப்படாத அழகின் அத்தனை நளின சலனங்களுடன்

கோயில்சிற்பத்தின் சலனமில்லா முழுமையுடன்

அமர்ந்திருக்கிறாள்

ஒரு பெண் மட்டுமல்ல அவள் என்பதுபோல


மௌனமாய் பார்த்துக்கொண்டிருக்கிறேன்

முடிவற்ற இந்தக்கணத்தில்

இப்படியே ஸ்தம்பிக்க வேண்டும் இந்த மாலை

என் கண்கள் என் சித்தம் என் தூய இளமை..


மானுடக்கனவின் முடிவிலாத திரையில்

இப்படியே படிந்திருக்கவேண்டும் இவள் வடிவம்

நிரந்தரமாய்


நிலையற்றதென ஒவ்வொருகணமும் கூவியபடி .


*

அனேகமாக இக்கவிதையை இதுவரை அருண்மொழி மட்டுமே படித்திருப்பாள் என நினைக்கிறேன்.


அதற்கு அடுத்தநாள், ஜனவரி 16 அன்று காலிப்பக்கம். முந்தையநாள் அடைந்த மன எழுச்சியின் மறுபக்கம் அது.  பொங்கிய கடல் அடங்குகிறது. ஒருவரிகூட எழுத முடியாத வெறுமையின் இன்பம். அவ்வருடம் ஆகஸ்ட் 8 அன்றுதான் அருண்மொழியை மணம்புரிந்துகொண்டேன்.


1992ல் ஜனவரி 16 ஆம்தேதி அருண்மொழி ஜனவரி 17 அன்று அவள் அம்மாவீட்டுக்குச் செல்லப்போகும் மனநிலையில் உற்சாகமாக இருக்கிறாள். அவள் பிரிவை விசித்திரமாகக் கற்பனைசெய்துகொண்டு சற்று சீண்டப்பட்டு நான் எழுதியிருக்கிறேன். என்னைப்பிரிந்துபோவது அத்தனை உற்சாகமா அவளுக்கு என்ற தொனியில். ஆனால் தாயைப்பார்க்கப்போவது யாருக்கும் உற்சாகமானதுதானே என்ற சமாதானமும் எழுதப்பட்டிருக்கிறது. விஷ்ணுபுரத்தை எடுத்து படித்துப்பார்த்து சில பகுதிகளை திருப்பி எழுதியிருக்கிறேன்.


1993ல் ஜனவரி 16 அன்று மதுரை பெருங்குடி கிராமத்தில் இருந்தேன். அருண்மொழி தபால்துறையில் வேலைகிடைத்து பயிற்சிக்காக வந்திருந்தாள். அஜிதனைக் கருவுற்றிருந்தாள். எட்டு மாதம். சுரேஷ்குமார இந்திரஜித் பிடித்துக்கொடுத்த வீடு. அருண்மொழியின் அப்பாவும் அம்மாவும் வந்து அவளுடன் அங்கே தங்கியிருந்தார்கள். நான் நேற்று பெருங்குடி வந்து அங்கே தங்கியிருந்தேன். பகலில் அருண்மொழி வகுப்புக்குச்செல்ல நான் பகலெல்லாம் வீட்டில் இருந்து கன்னடநாவல் ‘ஒருகுடும்பம் சிதைகிறது’ [எஸ்.எல்.பைரப்பா] வாசித்துக்கொண்டிருந்திருக்கிறேன். மாலையில் செம்பிழம்பாக சூரியன் அஸ்தமிக்கும் பெருங்குடி ஏரிக்கரை ஓரமாக நானும் அருண்மொழியும் நடந்துசென்றிருக்கிறோம்.


1994ல் ஜனவரி 16 ஆம்தேதி மதுரையில் இருந்திருக்கிறேன். வைகை சிவராமன் வீட்டில். சுந்தர ராமசாமியும் கூட இருந்தார். இரவெல்லாம் பேசிக்கோண்டிருந்துவிட்டு காலையில் எழுந்து மீண்டும் பேசி பின்மதியத்தில் நான் அங்கிருந்து கிளம்பினேன். இரவு பன்னிரண்டு மணியளவில் பட்டுக்கோட்டைக்கு வந்தேன். எடித் வார்ட்டன் என்ற நாவலாசிரியரைப்பற்றி சிவராமன் சொல்லி அவரது ஒரு சிறுகதைத்தொகுதியைத் தந்தார். அந்த நூலை பஸ்ஸில் படித்துக்கொண்டே வந்தேன். சுந்தர ராமசாமியுடனான என் உரையாடல்களை ஒரு தொகுப்பாக எழுதினாலென்ன என்ற எண்ணத்தை எழுதியிருக்கிறேன். அது முழுக்க முழுக்க என் அனுபவம் சார்ந்ததாக இருக்க வேண்டும். என்னுடைய எதிர்கொள்ளல்களும் அதில் இருக்க வேண்டும்.


1995 ல் ஜனவரி 16 ஆம் தேதி காலையில் பட்டுக்கோடையிலிருந்து நானும் அருண்மொழியும் அஜிதனும் என் மாமனாருமாக கிளம்பி புதுக்கோட்டை அருகே அருண்மொழியின் அத்தை விஜயலட்சுமியின் வீட்டுக்குச் சென்றோம். மதியம்தான் சென்றுசேர்ந்தோம். போகும் வழியில் அருண்மொழி அழகாக இருப்பதாக உணர்ந்து பரவசம் கொண்டதைப்பற்றி ஒரு பெரும் வர்ணனை


அஜிதனுக்கு அங்கிருந்த கீபோர்டு பொம்மை மிகவும் பிடித்துப்போக பகல் முழுக்க ஒரே கீய்ஞ் கீய்ஞ் என்ற ஒலி கேட்டபடியே இருந்தது. அஜிதனின் குணத்தில் ஒரு சிறப்பம்சத்தைக் கவனித்தேன். அருண்மொழியின் அத்தையின் மகன் மோகன் போடும் பந்தைப்பிடிக்க அஜிதன் முயல்கிறான். பிடிக்க முடியாதபோது வேணாம் என்று விட்டுவிட்டு திரும்பிக்கொள்கிறான். மோகனே பந்தைக் கொடுப்பான் என எதிர்பார்க்கிறான். பெரியவர்களிடம் மட்டுமே விளையாடியதனால் வந்த குணம் அது என்று எழுதியிருக்கிறேன்.


1996ல் ஜனவரி 16 ஆம் தேதி காலையில் பட்டுக்கோட்டையில் இருந்து தருமபுரி வந்தேன்.  அருண்மொழியின் பெரியப்பா ராஜப்பா தற்கொலை செய்துகொண்டமையால் அவர்கள் வீட்டில் அவ்வருடம் பொங்கல் இல்லை. சும்மா ஊருக்குப்போய் இருந்துவிட்டு பேருந்தில் திரும்பிவந்தோம். அருண்மொழி விடுப்பு எடுத்து படுத்துவிட்டாள். நான் தூங்கி எழுந்து கொஞ்சநேரம் வாசித்துவிட்டு மாலை நான்கு மணி நாற்பது நிமிடத்தில் தொடங்கும் வேலைக்கு வந்துவிட்டேன்.


1997ல் ஜனவரி 16 ஆம் தேதி முழுக்க சிறுகதை ‘தாண்டவ’ த்தை பிரதியெடுப்பதில் செலவாகியிருக்கிறது. கதையில் நிறைய கிளீஷேக்கள் இருப்பதாக அருண்மொழி சொல்லியிருக்கிறாள். ஆகவே சற்றே மனம் சோர்ந்து அதை உடனே தபாலில் சேர்க்க வேண்டாமென முடிவுசெய்து கதையை மறு அமைப்புசெய்தாலென்ன என்று எண்ணியிருக்கிறேன். ஆனால் ஒன்றும் தோன்றவில்லை. ‘கரியபறவையின்குரல்’ என்ற என்னுடைய கதை நன்றாக இருக்கிறதென்று செல்வம் என்ற மொரப்பூர் நண்பர் தொலைபேசியில் சொன்னார்.


1998 ல் ஜனவரி 16 ஆம் தேதி நான் ஆனந்த் என்ற நண்பருடன் பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சாவூர் சென்றிருக்கிறேன். ஆற்றூர் இருப்பாரெனச் சொல்லபப்ட்ட விடுதியில் ஆற்றூர் ரவிவர்மா வந்துசேர்ந்திருக்கவில்லை. ஆகவே அப்படியே திருவையாறுக்குச் சென்றிருக்கிறோம். ஆற்றூர் திருவையாறிலும் இல்லை. அருண்மொழியிடம் கிளம்பி தஞ்சை வரச்சொல்லி போன்செய்தேன். தனியாக எப்படி வருவது என்று அவள் சொல்ல கோபித்துக்கொண்டு ·போனை வைத்துவிட்டேன். ஆற்றூர் திருவையாற்றுக்கு வந்தார். காலையில் தஞ்சை பெரியகோயிலுக்குச் சென்றாராம்.


அருண்மொழியிடம் கோபித்துக்கொண்டு மதியம் சாப்பிடாமல் இருந்தேன். அருண்மொழியிடம் மீண்டும் ·போனில் பேசினேன். சாப்பிட்டாயா என்றாள். இல்லை என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டேன். மாலை ஆறுமணிக்கு அருண்மொழி தனியாகவே கிளம்பி வந்துவிட்டிருந்தாள். வந்ததுமே என்னை அழைத்துச்சென்று டிபன் சாப்பிட வைத்தாள். அவள் வந்த பிறகுதான் மனம் இசையில் சென்றது. ராஜ்குமார் பாரதி நன்றாக பாடினார். இரவு ஒன்பது மணிக்கு புல்லாங்குழல் ரமணி. இரவு 12 மணிக்குக் கிளம்பி இருவருமாக வீடு திரும்பினோம்.


2000 ஜனவரி 16 அன்று கன்யாகுமரி நாவலை மிகுந்த ஊக்கத்துடன் எழுதிக்கொண்டிருந்திருக்கிறேன்.பிந்தொடரும் நிழலின்   குரலுக்கு நல்ல எதிர்வினைகள் வரவில்லை என்ற மனக்குறையை அடுத்த நாவலைஎழுதுவதன் மூலம் தீர்த்துக்கொள்கிறேன் என்று எழுதியிருக்கிறேன். கன்யாகுமரி நன்றாக வந்துகொண்டிருக்கிறது என்ற திருப்தி பதிவாகியிருக்கிறது. வசந்தகுமாரிடம் அந்நாவலைப்பற்றி நிறையப்பேசியிருக்கிறேன்.


2006 ஜனவரி 16 ல் எர்ணாகுளத்தில் இருந்தேன். ‘ஹோட்டல் பெரியாறு’. லோஹித் தாஸ் ஒரு திரைப்படம் குறித்து யோசிப்பதற்காக வரச்சொல்லியிருந்தார். சிறுநீரகச்சிக்கலால் பிற்பாடு மறைந்த பிரமோத் என்ற நண்பர் காலையில் தேடிவந்தார். இசையைப்பற்றியும் மலையாளப்படங்களைப்பற்றியும் நிறைய பேசிக்கொண்டிருந்தோம். லோகித் தாஸ¤ம் அவர் மகன்களும் காரில் வந்தார்கள். அவர்களுடன் ஆலுவா அருகே இருந்த அவரது வீட்டுக்குச் சென்றேன். லோஹித் தாஸின் மனைவி சோர்ந்த நிலையில் இருந்தார். கஸ்தூரிமானின் நஷ்டம் அவர்களுக்கு மிகுந்த மனக்கஷ்டத்தை அளித்திருக்கிறது. இரவு ஊருக்குக் கிளம்பினேன்.


2007  ஜனவரி 16 ல் நானும் சண்முகமும் காரில் கொடைக்கானல் சென்றோம். 10 மணிக்கு ஆப்சர்வேட்டரி அருகே வித்ரா தங்கும் விடுதியை அடைந்தோம். அங்கே செந்தில் கிருஷ்ணன் சிவா ஆகியோர் இருந்தார்கள். அழகிய பங்களா அது. அதில் தங்கினோம். மதியம் சாப்பிட்ட பின் கிளம்பி மலையேறுவதற்காகச் சென்றோம். மாலையில் பங்களாமுன்பாக கேம்ப் ·பயர் போட்டுக்கொண்டு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். பாலாவும் கும்பலும் அலஹாபாத்தில் படப்பிடிப்பில் இருப்பதாகத்தகவல் வந்தது.


2008  ஜனவரி 16 ல் சென்னையில் பிரதாப் பிளாஸா ஓட்டலில் தங்கியிருந்திருக்கிறேன். புத்தகக் கண்காட்சி நடக்கிறது. புத்தகக் கண்காட்சிக்கு எஸ். ராமகிருஷ்ணனும் ஆர்தர் வில்சனும் வந்தார்கள். நண்பர் இளங்கோ கல்லானை, அவரது வட இந்திய மனைவி புதிய குழந்தை ஆகியோரை புத்தகக் கண்காட்சியில் பார்த்தோம். கெ.பி.வினோத் அன்பு ஆகிய நண்பர்களும் இருந்தார்கள். புத்தகக் கண்காட்சிக்கு வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்தோம்.,


பல டைரிகளை கண்டுபிடிக்க முடியவில்லை. எங்காவது  அருண்மொழி எடுத்து வைத்திருப்பாள். அருண்மொழியை திருமணம்செய்வதற்கு முன்பு எழுதிய எண்பதுகளைச்சேர்ந்த டைரிகள் நிலையான குடியிருப்பு இல்லாமல் அலைந்த காலத்தில் தொலைந்துபோய்விட்டன. ஒரு கத்தை டைரிகள் எலியால் சுரண்டப்பட்டு அழிந்தன. டைரிகள் கைப்பிரதிகள் அச்சுவடிவங்கள் நூல்கள் எவற்றையுமே நான் சேர்த்து வைப்பதில்லை.


டைரி எழுதுவது ஒரு எளிய கணக்கெடுப்பு மட்டுமே. கணக்கிடப்படுவது நமக்கு அளிக்கப்பட்ட வாழ்க்கை, நாம் செலவிட்ட காலம்..


 


[மறுபிரசுரம் முதற்பிரசுரம் Jan 19, 2009 ]

தொடர்புடைய பதிவுகள்

சதுரங்க ஆட்டத்தில்
அங்கே அப்பா காத்திருக்கிறார்!
அசைவைக் கைப்பற்றுதல்
மதம்
தன்னறம்
கலைக்கணம்
தோன்றாத்துணை
தெய்வ மிருகம்
பூதம்
வால்
அழிமுகம்
செய்தொழில் பழித்தல்
ஒரு பொருளியல் விபத்து
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (5)
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (4)
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (3)
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (2)
தாடகைமலையடிவாரத்தில் ஒருவர் – (1)
யாதெனின் யாதெனின்…
வேராழம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 21, 2017 11:35

விஷ்ணுபுரம்- இருபதாண்டுகள்

vish


 


விஷ்ணுபுரம் நாவல் வெளிவந்து இருபதாண்டுகளாகின்றது. அதையொட்டி குங்குமம் வார இதழ் என் பேட்டி ஒன்றை வெளியிட்டிருக்கிறது.


 


விஷ்ணுபுரம் வெளிவந்ததும் தமிழில் ஒரு தொடர் விவாதத்தை உருவாக்கி இந்நாள் வரை நிலைநிறுத்தியிருக்கிறது. அது முழுக்கமுழுக்க ஓர் இந்திய நாவல். நாவல் என்னும் வடிவை மட்டுமே மேலைநாட்டு அழகியலில் இருந்து எடுத்துக்கொண்டிருக்கிறது. அந்த வடிவை காவியங்களுடன் இணைத்து விரிவாக்கிக்கொண்டது.


 


அதன் பேசுபொருட்கள் இந்திய தத்துவமரபு,  விவாதங்களினூடாக எழுந்து வந்த  மெய்த்தேடலின் வரலாறு. . உருவகமாக அது இந்தியவரலாறேதான். இந்தியப்பண்பாட்டின் வரலாற்றுப்பெருக்கின் சாராம்சமாக உறங்கும் விராடபுருஷன் அதன் மையம்


 


அதேசமயம் அது என் தனிப்பட்ட தேடல், தத்தளிப்பு, கண்டடைதல்களின் மொழிபு. பல இடங்கள் மிகமிக அந்தரங்கமானவை என இப்போது வாசிக்கையில் உணர்கிறேன்.


 


நா.கதிர்வேலனுக்கும் கே.என்.சிவராமனுக்கும் நன்றி


 


விஷ்ணுபுரம் – அனைத்துவிவாதங்களும்

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 21, 2017 11:34

பிறந்தநாள் -கடிதங்கள்

bday dog gift2


 


இனிய ஜெயம்,


 


பிறந்தநாள் வாழ்த்துக்கள். விஷ்ணுபுரம் நாவலுக்கு இவ்வருடத்துடன் இருபது ஆண்டுகள் நிறைகிறது.  ஈரோடு கிருஷ்ணனை முதன் முதலாக சந்திக்கும்போது , ”ஒரு பயணம் கிளம்பிக்கிட்டு இருந்தோம்.அப்போ ஜெயமோகனுக்கு போன் பண்ணி இருந்தீங்க. அன்னைக்கு நீங்க பேசுனது. சார் இந்த வருடம் விஷ்ணுபுரம் வெளியாகி பத்தாவது ஆண்டு’ அப்போ பிடிச்சி இந்த கிராக் பாட்ட பாக்கணும்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன், நீங்கதானா அது ” என்றார்.


 


ஆம் ஒரு மாதிரி க்ராக்பாட் வாசகன்தான் நான் விஷ்ணுபுரத்துக்கு.  திருச்சி மலைக்கோட்டை சின்னக்கடை வீதியில் தைலா சில்க் அருகே இன்றளவும் இயங்கிக்கொண்டிருக்கும் தேவகி நூல்நிலையத்தில், பழுதுபட்ட நூல்கள் பகுதியில் [கைமாறி கைமாறி கந்தலான அந்த நூல் நிலையமே நடத்தும் லெண்டிங் லைப்ரரி நூல்] விஷ்ணுபுரம் நாவலை முதன் முதலாக கண்டெடுத்தேன். கயிரு அடையாளம் கிடந்த பக்கத்தை பிரித்து வாசித்தேன். அஜிதன் ஞான சபையை வென்று ,முதல்வனான பின் முதன் முதலாக விஷ்ணுபுர பிரஜைகளுக்கு அவன் காட்சி தரும் தருணம். அவனது அகம் அடைபட்டுப்போன பறவையாகித் தவிக்கும் தருணம். கடுமையான பேரத்துக்குப் பின் இருநூறு ரூபாய் விலையில் அந்த நூலை வாங்கினேன்.   இன்றும் அது பேசும் சில  விளங்கவே இயலா பல  ஆழ்மன சிக்கல்களை  ஆத்மீக இடர்களை, என்னால் வாசித்துக்  கடக்கப் படாமல் அந்த நாவல் தனது பிறந்தநாளைக் கொண்டாடிக்கொண்டு இருக்கிறது.


 


அந்த நூலுடன் எனது நீண்ட நெடிய தொடர்பில்  அந்த நாவலின் அனைத்து அலகுகளையும் உள்வாங்கிக்கொள்ள நான்கு முறை வாசித்து ,எனக்கு நானே அந்த நூலுக்கு நூறு பக்க அளவில் சாவி நூல் ஒன்றினை எழுதி வைத்துக் கொண்டேன். அந்த சாவி நூலில், அத்யாயம் அத்தியாயமாக  அந்த நாவலின் சினாப்ஸிஸ்,  மடித்து அடுக்கப்பட்ட அந்த நாவலின் நேர்க்கோட்டு வடிவம், கோவிலின் ஞான அதிகாரிகள், காவல் அதிகாரிகள் வரிசை, குரு சீட வரிசை, விவாதம் கொள்ளும் தத்துவங்களின் வரிசை, அதன் பிரபஞ்ச நோக்கு, தர்க்க முறை, விஷ்ணு என்ற படிமை மீது ஊடாடிச் செல்லும் கதை வரிசை, நகர வரைபடம் அனைத்தும் அடங்கும்.


 


குழந்தை உள்ளத்தை விகசிக்க வைக்கும் அளவு கற்பனையை விரியவைக்கும், உயிர் கொண்டு இயங்கும் காட்சி சித்தரிப்புகள் அந்த நாவல் என்னை உள்ளிழுத்துக் கொண்ட முதல் அம்சம்.


 


அடுத்து அது பேசும் உறவு சிக்கல்கள் குறிப்பாக பிள்ளைத் துயர். சங்கர்ஷணன் அவன் மகன் இறந்த பிறகு அவனுக்கும் அவன் மனைவிக்கும் இடையே நிகழ்வது என நாவலின் ஒவ்வொரு உணர்வு தளமும் அதுவரை நான் வாசித்தவற்றைக் கடந்த தனித்துவமும் கொந்தளிப்பும் கொண்ட ஒன்றாக இருந்தது.


 


மூன்றாவது நெல்லையோ, கடலூரோ ,அருணை மலையோ  என் தலைமேல் உயர்ந்து நின்ற அதன் கோபுரத்துடன் என்னை இணைத்தது. நமது பாரத்தப் பண்பாட்டை உருவாக்கி எடுத்த அத்தனை ஊடு பாவுகளையும் நாடகீயமாக என் முன் விரித்து, என் வேர்களுடனான எனது தொடர்பை [முன்ஜென்ம நினைவை] இந்த நாவல்   மீட்டளித்தது.


 


நான்காவது அடிப்படையானதும் மிக முக்கியமானதும். எனது ஆத்மீகமான தவிப்பு. அது எனக்களித்த [இன்னமும் அளித்துக் கொண்டிருக்கும்] அலைக்கழிப்பு . இவற்றுக்கெல்லாம் என்ன பொருள் என்ற அலைக்கழிப்பு.  இவற்றுக்கெல்லாம் எப்பொருளும் இல்லை, பொருளற்ற வாழ்வு என்று முடங்கி என்றோ அழிந்திருப்பேன்.  விஷ்ணுபுரம் நாவலே  என் கொந்தளிப்புகளுக்கு முகம் தந்தது. ஸ்ருஷ்டி கீதம் இயற்றிய ரிஷி முதல் , முகமறியா நான் வரை கட்டி வைத்த அந்த தேடலின் சாரத்தை நான் விளங்கி கொண்டது விஷ்ணுபுரம் வழியேதான்.


 


ஆம் அன்று தொட்டு என்னுடன் விஷ்ணுபுரமும், அதனுடன் நானும் வளர்ந்து வருகிறோம். அதனூடான பயணத்தில் எத்தனை எத்தனை சாரமற்ற விமர்சனங்களைக் கண்டிருக்கிறேன். எம் ஜி  சுரேஷ்  இந்த நாவலை  கட்டுடைத்த விதம் நான் இன்றும் நினைத்து நினைத்து சிரிக்கும் ஒன்று. அவர் அந்த நாவலை கட்டுடைக்காவிட்டால் இன்றுவரை நீங்கள் ஒரு பீ ஜெ பீ ஆதரவாளர், இந்துத்துவ ஆதிக்க கருத்தியலாளர் என்பதை என்னால் கண்டு இடித்திருக்கவே முடியாது.


 


அவரையும் மிஞ்சிய நகைச்சுவை சாரு நிவேதிதா பிரபல வார இதழில் விஷ்ணுபுரம் நாவல் குறித்து நிகழ்த்திய விவாதம். [விஷ்ணுபுரம் குறித்த சாருவின் எந்த பதிவிலும் அந்த நாவலின் ஒரு நாடகீய தருணமோ, ஏன் ஒரு கதாபாத்திரத்தின் ஆழமோ கூட விவாதிக்கப்பட்டதில்லை] . மையத்தை உடைப்பதே பின்நவீனத்துவம் இந்த நாவல் விஷ்ணுபுரம் எனும் இரும்புத்தனமான மையத்தை அடிப்படையாகக் கொண்டு இயங்குகிறது. இந்த நாவல் எப்படி பின்நவீனத்துவ நாவலாகும் என சிக்கி சின்னாபின்னம் ஆகும் கேள்வியை அந்த விவாதத்தில் எழுப்பி இருந்தார்.  அந்த விவாதத்தை வாசித்து முடித்ததும் நான் மனத்துக்குள் ”நாவலில் கட்டா கடைசீல விஷ்ணு புறத்தை ஜெமோ உடைச்சி கடாசிப் புட்டாரே அப்பால என்ன?” என கேட்டுக் கொண்டேன். அது போக அந்தந்த கோட்ப்பாட்டு விமர்சகர்களுக்கே பிடி கிடைக்காத அவர்களின் கோட்பாடுகளைக் கொண்டு, அவர்களுக்கே புரியாத மொழியில் விஷ்ணுபுரத்தை குடல் மாலை சூடிய பல கட்டுரைகள். எந்தப் பொருளுமின்றி காலப்புழுதியில் கரைந்து விட்ட விமர்சனத் தூசிகளை தட்டி விட்டபடி,நவீனத்துவத்தை வழியனுப்பி வைத்து , மரபுகளை மறுபரிசீலனைக்கும் ,விவாதத்துக்கும் உட்படுத்தி, காலாதீதம் கொண்டு    கம்பீரமாக நின்று கொண்டிருக்கிறது விஷ்ணுபுரம்.


 


இந்த நாவல் கொண்டு ஒன்றிணைந்த மனங்கள் கூடி உருவாகி வந்த விஷ்ணுபுரம் இலக்கிய விருது . இந்த நாவல் போலவே ஒரு பண்பாட்டு வரலாறு.


 


அனைத்துக்கும் மேல் விஷ்ணுபுரம் நாவல் ,இன்றைய விருட்சமான வெண் முரசு நாவலின் விதை. அந்த விதையின் வீர்யமே இன்று இந்த விருட்சத்தின் ஒவ்வொரு கணுவிலும் துலங்குவது .


 


இனிய ஜெயம்,


 


உங்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் உரைப்பதன் வழியே, நீங்கள்   கண்ட விஷ்ணுபுரம் என்ற  மொழியில் வாழும் மகத்தான  அழியாக் கனவுக்கு வாழ்த்துக்களை சொல்லிக் கொள்கிறேன்.


 


கடலூர் சீனு


 


அன்புள்ள சீனு,


 


குங்குமம் வார இதழ் விஷ்ணுபுரம் வெளியானதன் 20 ஆவது ஆண்டைக் கொண்டாடும் முகமாக ஒரு பேட்டியை எடுத்தது. இன்று வெளியாகியிருக்கிறது என நினைக்கிறேன்


 


ஜெ


அன்புள்ள ஜெ,

” இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.”

எனக்கு நாட்களெல்லாம் நினைவில் பொதுவாக நிற்பதில்லை.என் பிறந்த நாளே மறந்து போவது தான்.ஆனால் ஏப்ரல் மாதமென்றால் ஜெயகாந்தன்   பிறந்தநாள் மட்டும் எப்படியாவது நினைவில்  எழுந்து வந்து விடும்.அதன் பிறகு உங்கள் பிறந்த தினம் அப்படிச் சரியாக நினைவில் நின்றிருக்கிறது.இதெல்லாம் ஏதோ ஒரு உள்ளுணர்வு தான்.என் நினைவில் கலந்துவிட்ட எழுத்தாளுமைகளுக்கு என்னுள் உள்ள மரியாதை என்றே இதை நினைக்கிறேன்.வெற்று சம்பிரதாயமாக நான் இதைக் கருதவில்லை.


 


ஜேகே நல்ல நினைவுடன் இருந்த வரையில் என் தந்தையுடன் இணைந்து அவருக்கு தொலைபேசியில் ஒவ்வொரு ஆண்டும் வாழ்த்து  தெரிவித்திருக்கிறேன். அவர் உடல்நலம் குறைவதற்கு சில மாதங்கள் முன்பு ஒரு நாள் என் தந்தை தொலைபேசியில் “ஆலமரம் ஆலமரம்  … பாலூற்றும் ஆலமரம்,காலத்தின் கோலமெல்லாம் கண்டுணர்ந்து நிற்கும் மரம்” என்று பாடுவதைக் கேட்டு “என்னப்பா போன்ல பாட்டுப்பாடறீங்க என்றேன்.என் அப்பா,”ஜேகே திடீரென போன் பண்ணி ஆலமரம் பாடுடா என்கிறார்” என்றார்.ஜேகே பொதுவாக தொலைபேசியில் யாரையும் அழைக்க மாட்டார்.என் தந்தை மிக நன்றாகப் பாடுவார்.அன்று நானும் அவரிடம் பேசினேன்.எப்படியிருக்கீங்க ஜேகே என்றவுடன் அவருக்கே உண்டான உள்ளத்தைத் தொடும் அவர் சிரிப்பைக் கேட்டேன்”அது தான் அவருடன் நான் இறுதியாக பேசியது.

அவர் நினைவுடனே நீங்கள் என்றென்றும் ஆலமரம் போல் தழைக்க வேண்டுமென வாழ்த்துகிறேன்.

அன்புடன்

மோனிகா மாறன்.

அன்புள்ள மோனிகா


ஜெகே உட்பட நான் வழிபட்ட எழுத்தாளர்கள் அனைவரும் முதுமையில் வெறும் உடல்களாக ஆகி சிலநாள் இருந்தே மறைந்தார்கள். பிறந்தநாளில் அச்சுறுத்தும் எண்ணம் இதுவே


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 21, 2017 11:32

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–81

81. பூவுறைச்சிறுமுள்


அசோகவனிக்கு வந்த மூன்றாம் நாள்தான் தேவயானி சர்மிஷ்டையை சந்தித்தாள். முதல் இரண்டு நாட்களும் அசோகவனியிலிருந்தும் அதைச் சூழ்ந்திருந்த நூற்றுக்கும் மேற்பட்ட பழங்குடிச் சிற்றூர்களிலிருந்தும் வந்து அங்கே தங்கியிருந்த தொல்குடித்தலைவர்களும் குலமூத்தாரும் முறைவைத்து காலைமுதல் அந்திவரை அவளைச் சந்தித்து கோல்தாழ்த்தி முடியேற்பு செய்துகொண்டிருந்தார்கள்.


தேவயானி அவர்களுக்கு குடிப்பட்டங்களை அளித்து அவர்களின் குடிமுத்திரைகளை அவர்களுக்கு மட்டும் உரியவை என ஏற்று செம்புப்பட்டயங்களை அளித்தாள். அவர்களின் நிலங்கள் அவர்களுக்கு மட்டுமே உரியவை என்றும் அவற்றின் மீதான எத்தாக்குதலும் குருநகரிக்கு எதிரானவை என்றும் அறிவித்தாள். அதற்கு மாற்றீடாக அவர்கள் ஆண்டுதோறும் அரசுக்கு கப்பம் கட்டவும் அரசுநிகழ்வுகளில் பொருள்பங்கு கொள்ளவும் அரண்மனையின் பெருநிகழ்வுகளில் குடிகளெனத் திரண்டுவந்து அமையவும் தங்கள் கோல்தாழ்த்தி குலதெய்வங்கள் பெயராலும் மூதாதையர் நினைவாலும் சூள் உரைத்தனர்.


எண்ணியிராத வடிவுகளில் மலைப்பொருட்களும் அருங்கற்களும் அவளுக்கு அரியணைக் காணிக்கையாக வந்துகொண்டிருந்தன. அச்சிற்றூரைச் சூழ்ந்து அத்தனை செல்வமிருக்கிறதா என்ற வியப்பை அவையிலிருந்த ஒவ்வொருவரும் அடைந்தனர். அரியவை என்பவையே முடிவிலாத வேறுபாடுகள் கொண்டவை என்று அறிந்தனர். நெல்லிக்காய் அளவு இருந்த பெரிய நீலமணிக்கல்லை கையிலெடுத்து அமைச்சர் ஒருவர் “பாரதவர்ஷத்தின் முதன்மையான அருமணிகளில் ஒன்றாக இது இருக்கக்கூடும், பேரரசி” என்றார். “பழுதற்ற நீரோட்டம். முழுமையான வடிவம்.” தேவயானி விழிகளை மட்டும் திருப்பி நோக்கி சற்றே தலையசைத்து “நன்று” என்று மட்டும் சொன்னாள்.


மாகேதர் குலத்தலைவரால் கொடையளிக்கப்பட்ட புலிக்குருளைகள் ஏழு அவைக்கு கொண்டுவரப்பட்டன. ஒரே அன்னையின் மைந்தர்கள் ஒன்று பிறிதொன்றென முற்றிலும் ஒத்துப்போயிருந்தன. பிறந்து எட்டு நாட்களானவை. கூண்டுக்குள் ஒன்றுடன் ஒன்று ஒட்டிக்கொண்டு சிவந்த நுரைபோல தெரிந்தன. அதிலொன்றை பிடரித்தோலைப் பிடித்து தூக்கி தேவயானியின் கையில் கொடுத்த சுருத மாகேதர் “ஒற்றை அன்னை ஏழு குட்டிகளை ஈனுவது மிக அரிது. இவை உளம் ஒன்றாகி ஒற்றை உடலென இணைந்து வேட்டையாடும். சற்று பழக்கினால் மிகச்சிறந்த காவல்குழுவென்றாகும்” என்றார். தேவயானி அக்குருளையை கையில் வாங்கி அதை திருப்பி அதன் முகத்தை கூர்ந்து நோக்கினாள். சிறிய கூர்பற்களைக் காட்டி வாய் திறந்து அது உறுமியது. அதன் வெண்ணிற அடிவயிற்றில் தோல் பாலாடைபோலிருந்தது. சிறுகால்களின் விரல்களுக்கு நடுவே அவள் தன் விரலால் அழுத்திய போது விரல்களுக்குள்ளிருந்து மீன்முள் என நகங்கள் வெளிவந்தன. கால்களை வீசி அவள் முகத்தை அது அறைய முற்பட அவள் சிரித்து “சினம்கொள்கிறான்” என்றபடி திருப்பிக் கொடுத்தாள். அவர்கள் அதை வாங்கியபோது அதன் கீழ்இடக்கால் நகத்தில் அவள் ஆடை சிக்கிக்கொண்டது. சாயை குனிந்து அந்நகங்களிலிருந்து விடுவித்து ஆடையை சீர் செய்தாள்.


நீலப்பளிங்கில் செதுக்கப்பட்ட தாலம், சந்தனமரத்தில் செதுக்கப்பட்ட காளிசிலை, குடம்நீர் கொள்ளும் சுரைக்காய்க் குடுவை என வெவ்வேறு வகையான செல்வங்களை ஏழு கணக்கர் அமர்ந்து பட்டியலிட்டனர். அவற்றை முத்திரையிட்டு எண்பதிந்து பேழைகளில் அடைத்து கருவூலத்திற்கு கொண்டு சென்றனர் ஏவலர். ஒவ்வொரு நாளும் அவை முடிந்து அவள் எழுவதற்கு அந்தியாகிவிட்டிருந்தது. அதன் பின் அறைக்குச் சென்று நீராடி உடைமாற்றி உணவருந்தி மீண்டும் கலையவைக்கு வந்தாள். அங்கு குருநகரியிலிருந்து அவளுடனேயே வந்திருந்த சூதர்களும் மலைகளிலிருந்து வந்த தொல்குடிப் பாடகர்களும் ஆடியும் பாடியும் கலைநிகழ்த்தினர்.


தொல்குடி நடனங்கள் அனைத்தும் காட்டுவிலங்குகளின் அசைவுகளை மீள நிகழ்த்துவதாக இருந்தன. உறுமிப் பாய்ந்து உடல் பிடரிசிலிர்த்து வாய்திறந்து சீறிய சுதீர தொல்குடியின் கரிய இளைஞன் ஒருவன் மாற்றுரு ஏதும் கொள்ளாமல் மானுட உடலிலேயே சிம்மமென்றான விந்தையைக் கண்டு மெல்ல இதழ் வளைய புன்னகைத்து இருக்கையில் சற்று அசைந்தாள். அதை குறிப்புணர்ந்த அமைச்சர் பெரிய தாலத்தில் பொன்னும் ஆடையும் வைத்து அவளிடம் அளிக்க எழுந்து அவர்களிடம் அளித்து “சிம்மம் எழுந்ததேதான், நன்று” என்றாள். அவள் வாயிலிருந்து ஒரு சொல்பாராட்டைப்பெற்ற கலைஞன் அவன் ஒருவனே என்பதனால் அவன் கால்கள் நடுங்க நிலையழிந்து சற்றே சாய்ந்தான். அவனுடன் வந்த கலைஞர் இருவர் அவனை பற்றிக்கொண்டனர்.


அவள் “சிம்மமென எழுவது உம்முள் கல்லில் கனலென உறைகிறது. அது என்றும் அங்கிருக்கட்டும்” என்றாள். விம்மலோசையுடன் அவன் நிலத்தில் கால்மடித்து அமர்ந்து தன் தலையை அவள் காலில் வைத்து அமர்ந்து “தங்கள் கால்களை என் சென்னியில் வைக்க வேண்டும், பேரரசி. கொற்றவை முன் பணிந்த சிம்மம் நான்” என்றான். அவள் குனிந்து அவன் தலையைத் தொட்டு “என்றும் இங்கிருப்பேன்…” என்றாள். அவன் கண்ணீருடன் எழுந்து மும்முறை தொழுது விலகிச்சென்றான்.


மூன்றாம் நாள் பின்னிரவில் அவள் பன்னிரு கூத்துக்கலைஞர்கள் நிகழ்த்திய கள நாடகத்தை கண்டாள். விண்ணிலிருந்து மின்னலாக காட்டுக்குள் இறங்கிய புலி ஒன்று உடலெங்கும் தழல்நாக்குகள் எரிய விலங்குகளை வேட்டையாடி கொல்லத்தொடங்கியது. விலங்குகளும் மானுடரும் அப்புலியை வெல்லும்பொருட்டு அதையே அரசனாக்கினர். அரசனுக்கு நாளொன்றுக்கு ஒரு விலங்கென தலைகொடுத்து அதன் எரிதழலை கட்டுக்குள் வைத்திருந்தனர். இல்லங்களில் விளக்கேற்றவும் அடுப்புகளில் அனல்மூட்டவும் அதன் உடலை சுள்ளிகொண்டு தொட்டு பற்றவைத்தனர். காடு சிலிர்க்கும் கடுங்குளிரில் அதன் உடலிலிருந்த தழலில் வந்து வெம்மைபெற்றனர். எதிரிகளின் ஓசைகேட்டதும் தழலுடன் உறுமியபடி சென்ற புலி காட்டை எரித்து அவர்களைச் சூழ்ந்து அழித்தது.


அவள் அந்தப்புலியை நோக்கிக்கொண்டிருந்தாள். அந்தத் தொல்குடிக்கலைஞனின் கண்கள் புலிகளுக்குரிய நரைத்த நீள்கருவிழிகள் கொண்டுவிட்டிருந்தன. தழல்நெளிவுடன் எழுந்தாடிய புலி உறுமிச் சுழன்று விலங்குகளை அச்சுறுத்தியது. அவர்களில் ஒருவரை கிழித்து உண்டு குருதிக் கால்களை நக்கியபின் மல்லாந்து படுத்து மெல்ல கார்வையுடன் துயின்றது. அதன் இமைதாழ்ந்தபோது அவர்கள் அச்சம் அழிந்து மெல்ல அணுகி அதன் கால்களை தூய்மைப்படுத்தினர். அதன் உடலைத் துடைத்து பணிவிடை செய்தனர். தங்கள் குழவிகளைக் கொண்டுவந்து அதன் முன் வைத்து வாழ்த்துகளை பெற்றுக்கொண்டனர்.


வண்ணங்கள் கரைத்து தங்கள் உடல்களில் புலியுடலின் அனல் நெளிவுகளை வரைந்தனர். புலிக்கோடுகள் அணிந்த மைந்தர் புலியைப்போலவே காலடி வைத்து நடனமிட்டனர். புலி உறுமலைப்போலவே ஓசையிட்டு ஒருவரை ஒருவர் தாக்குவது போல நடித்து தாவியும் கட்டிச்சுழன்றும் விலகிச் சீறியும் பாய்ந்து மீண்டும் தழுவியும் விளையாடினர். புலி முதுமைகொண்டு உயிர்துறந்ததும் அதைச்சூழ்ந்து நின்று கண்ணீருடன் கதறியழுதனர். சிதை கூட்டி அதை ஏற்றி வைத்ததும் புலியின் உடலிலிருந்த தழல்கள் எழுந்து விறகு பற்றிக்கொள்ள அதன் உடல் எரிந்து விண்ணில் தாவி மறைந்தது.


அவர்கள் அத்தழலிலிருந்து ஒரு சிற்றகலை கொளுத்திக்கொண்டு வந்து தங்கள் இல்லங்கள் நடுவே ஓர் ஆலயம் அமைத்தனர். அத்தழலை சூழ்ந்தமர்ந்து புலியைப் புகழ்ந்து பாடினர். தழலுக்கு நெய்யூற்றி வளர்த்தனர். எழுந்த பெருந்தழலில் ஒருகணம் தோன்றிய புலி உறுமி அமைந்தபோது கைகளை மேலே தூக்கி “எழுபுலியே! எரிவடிவே! எங்கள் கோவே!” என்று கூவி வாழ்த்தினர். மெல்லிய புலிக்காலடிகளுடன் சுழன்று நடனமிட்டு அமைந்தனர். முழவுகள் ஓய்ந்தன. ஒற்றைமுழவுமேல் கோல் இழுபட புலியுறுமல் ஒலித்து அணைந்தது.


தேவயானி எழுந்து அவர்கள் ஒவ்வொருவராக அழைத்து பரிசுகளைக் கொடுத்தபின் தன் அறை நோக்கி நடந்தாள். அவளுடன் நடந்த சாயை “இன்றிரவு மிகவும் பிந்திவிட்டது பேரரசி. நாளை முதற்புலரியிலேயே நகரின் தெற்கு எல்லையிலுள்ள தொன்மையான இடுகாட்டில் அமைந்திருக்கும் சாமுண்டியின் ஆலயத்திற்கு குடித்தொகையின் பூசனைக்காக செல்கிறோம். இங்கு தேவிக்கு முழு எருமைகளை பலிகொடுக்கும் வழக்கம் உள்ளது. தங்கள் வருகையின் பொருட்டு பன்னிரு எருமைகளை பலிகொடுப்பதாக குடிமூத்தார் வேண்டிக்கொண்டிருக்கிறார்கள்” என்றாள்.


“நன்று” என்று சொன்னபடி தேவயானி மெல்ல நடந்தாள். தன் அறைக்குள் சென்று பீடத்தில் அவள் அமர்ந்ததும் அணிச்சேடியர் சூழ்ந்துகொண்டு அவள் உடலிலிருந்து முடிச்சுகளை அவிழ்த்து பட்டாடையையும் அணிகளையும் அகற்றத் தொடங்கினர். காதணியை கழற்றியவள் சற்று அழுத்த தேவயானி மெல்லிய சீறலொன்றை எழுப்பினாள். சினம் சுடர்ந்த முகத்துடன் நோக்கிய சாயை விழியசைவாலேயே அச்சேடியை அகலும்படி ஆணையிட்டாள். அவள் நடுங்கி மும்முறை வணங்கி தளர்ந்த கால்களுடன் வெளியேற பிறிதொரு முதுசேடி மெல்ல திருகி காதணியை கழற்றத் தொடங்கினாள்.


“இங்கு கலைபயின்ற சேடியர் எவருமில்லை” என்று சாயை சொன்னாள். “இங்கிருப்பவர்களில் உயர்ந்தவன் நூற்றுவர்தலைவன் மட்டுமே. பிறர் எளிய காவலர். அவர்களின் பெண்டிரும் சிற்றூர்களிலிருந்து வந்த சிறுகுடி ஷத்ரியர். உயர் வாழ்க்கை இல்லையென்பதால் அணியும் ஆடையும் சமையமும் பயின்றவர்கள் இல்லை.” தேவயானியின் கச்சைமுடிச்சை அவிழ்த்தபடி “இங்குள்ள சேடியர்களே பதினெண்மர் மட்டும்தான்” என்று குருநகரியிலிருந்து அவளுடன் வந்த முதுசேடி சுகன்யை சொன்னாள். “அவர்களை அழைத்து நேற்று உசாவினேன். எண்மடிப்புப் புடவை அணியக்கூட எவருக்கும் தெரிந்திருக்கவில்லை. அணிகளை முன்னரே நோக்கியவள் என்றுகூட ஒருத்தியை மட்டுமே சொல்ல முடிகிறது.”


“அவள் மட்டும் எங்கு பார்த்தாள்?” என்று தேவயானி கேட்டாள். சுகன்யை “அவளை குருநகரியிலிருந்து இங்கு கொண்டு குடியேற்றியிருக்கிறார்கள். இவ்வரண்மனையின் இணைப்புச் சிற்றில்லில் அவள் தங்கியிருக்கிறாள். மூன்று மைந்தர்கள் அவளுக்கு. அவள் பெயர் சேடியருக்குரியதல்ல” என்றாள். அவள் தேவயானியின் முலைகளுக்கு அடியில் நறுமணச்சுண்ணத்தைப் பூசியபடி “அவள் பெயர் சர்மிஷ்டை” என்றாள்.


தேவயானியின் கண்கள் திரும்பி சாயையை பார்க்க சாயை தலைவணங்கி விழிகளை அசைத்தாள். அணிப்பெண்டிர் அவள் இடையாடைகளையும் களைந்து வெற்றுடலாக்கினர். அவள் ததும்பும் பெருமுலைகளும் இறுகியசையும் இடைவிரிவும் சிற்றலை எழுந்த தொடைகளுமாக சென்று அவர்கள் ஒருக்கியிருந்த சிறு மரத்தொட்டிக்குள் அமர்ந்தாள். இளவென்னீரை அள்ளி அவள் மேல் விட்டு அவள் உடலை அவர்கள் கழுவத்தொடங்கினர். அவர்களின் மெல்லிய விரல்கள் தன் உடல் முழுக்க பரந்தலைவதை உணர்ந்தபடி அவள் விழிமூடி அமர்ந்திருந்தாள்.


அவள் கொண்டையிலிருந்த நூற்றுக்கணக்கான பொன்னூசிகளை ஒவ்வொன்றாக உருவி குழலை புரியவிழ்த்து விரல்களை உள்ளே விட்டு நீவி நீர்த்தொட்டிக்கு வெளியே அலையென பரப்பினாள் ஒருத்தி. அவள் கால்விரல்களை சிறிய கடற்பஞ்சால் ஒருத்தி தேய்த்தாள். நறுமண வெந்நீரை அவள் உடல்மேல் மெல்ல ஊற்றினர். ஆவியெழுந்து சூழ்ந்திருந்த ஆடிகள் பனிபடர்ந்து பட்டுபோலாயின. உடலெங்கும் நீர் சொட்ட நடந்து சென்று அவள் வெண்கல சிறுபீடம் ஒன்றில் அமர அவர்கள் மெல்லிய வெண்நுரை போன்ற பருத்தி ஆடையால் அவள் உடலை ஒற்றித் துடைத்தனர். கால்களையும் கைகளையும் பிறிதொரு மரவுரியால் துடைத்து உரசி தூய்மைப்படுத்தினர். ஈரம் படாத அவள் குழலை அகிற்புகையிட்டு ஐந்து புரிகளாக வகுந்து பின்புறம் நீட்டி நிலம் தொடுமாறு விட்டனர்.


சேடி கொண்டுவந்த வெண்ணிற ஆடையை தேவயானி இடையில் சுற்றி தோள்வளைத்து அணிந்துகொண்டாள். தளர்ந்த மேலாடைக்குள் அவள் பருத்த மார்புகளின் வளைவுவிளிம்புகள் சுடரொளிமின்ன தெரிந்தன. அணிப்பெண்டிர் வணங்கி வெளியே சென்றதும் அவள் விழிகள் மாறாமல் சாயையிடம் “இங்குதான் இருக்கிறாளா?” என்றாள். சாயை “ஆம், பேரரசி. பதினாறாண்டுகளாக இங்குதான் இருக்கிறாள். அவள் முதல் மைந்தனுக்கு இப்போது பதினைந்து முடிகிறது” என்றாள். தேவயானி விழிவிலக்கி “சேடியின் வாழ்க்கை அல்லவா?” என்று கேட்டாள். “மைந்தர் இருப்பது அதற்குத்தானே சான்று” என்று சாயை சொல்லி மெல்ல புன்னகைத்தாள்.


“அவளை நான் பார்க்க வேண்டும். இங்கு அழைத்துவரச்சொல்” என்றாள் தேவயானி. சாயை சற்று தயங்கி ”இன்றிருக்கும் நிலையில் அது தேவையில்லை என்று எண்ணுகின்றேன்” என்றாள். “ஏன்?” என்றாள் தேவயானி சினத்துடன் விழிதூக்கி. “அதனால் அவள் மேலும் இழிவெதையும் அடையப்போவதில்லை. பதினாறாண்டுகள் சேடிவாழ்க்கை வாழ்ந்தவளுக்கு சிறுமைகளோ சீண்டல்களோ எவ்வகையிலும் பொருட்டாக இருக்கப்போவதில்லை. அவள் துயருறவில்லையென்றால் தாங்கள் சினம் கொள்வீர்கள்.” தேவயானி அவள் விழிகளை சிலகணம் நோக்கிவிட்டு “அதையும் பார்ப்போம். அழைத்து வருக!” என்றாள்.


tigerஅறைக்கதவு மெல்ல திறந்து உள்ளே வந்த சாயை தலைவணங்கி அவ்வசைவாலேயே வெளியே சர்மிஷ்டை வந்து நிற்பதை உணர்த்தினாள். தேவயானி மிகச்சிறிய விழியசைவால் அவளை வரச்சொல் என ஆணையிட்டு திரும்பிக்கொண்டாள். இரு அன்னங்கள் எழுந்து பறந்த முனைகள் கொண்டிருந்தது அவள் சாய்ந்திருந்த பெரிய பித்தளைப்பீடம். திறந்த பெருஞ்சாளரத்தை நோக்கி அதை திருப்பி போட்டிருந்தாள். சாளரத் திரைச்சீலைகள் இழுத்துக்கட்டப்பட்டு நுனி துடித்துக்கொண்டிருந்தன. வெளியிலிருந்து வந்த காற்றில் அவள் நீள்குழல் தரை தொட்டு அலையிளகிக்கொண்டிருந்தது.


அறையில் முத்துச்சிப்பிகளை அடுக்கி உருவாக்கப்பட்ட வட்டத்தாலம்போன்ற ஒளிதிருப்பிகளுடன் மூன்று செண்டுவிளக்குகள் ஏற்றப்பட்டிருந்தன. அவற்றின் பதினெட்டுசுடர்கள் கொண்ட ஒளிக்கொத்துகள் ஒளிதிருப்பியின் முத்துச்சிப்பிக்குவைகளில் பட்டு நூற்றுக்கணக்காக மாறின. ஒவ்வொரு செண்டுவிளக்குக்கு இருபக்கமும் ஒன்றையொன்று நோக்க அமைக்கப்பட்டிருந்த நிலையாடிகள் அச்சுடர்களை எதிரொளிக்க அவ்வறை அனல் பற்றி எரிவதுபோல் தோற்றமளித்தது.


சர்மிஷ்டை மெல்ல உள்ளே வந்து பதிந்த காலடிகளுடன் அவளை அணுகி சேடியருக்குரிய முறையில் இடைவரைக்கும் தலைவணங்கி “குருநகரியின் பேரரசியின் கால்களில் என் சென்னி படுகிறது. பேரரசியின் அருளுக்காக எளியவள் உள்ளம் மன்றாடுகிறது” என்று முகமன் உரைத்தாள். தலையசையாமல் அவளை உணர்ந்தபடி அமர்ந்திருந்த தேவயானி கூரிய குரலில் “உனக்கெத்தனை மைந்தர்?” என்றாள். அதை எதிர்பாராத சர்மிஷ்டை திகைத்து சாயையை திரும்பி நோக்கியபின் மூச்சொலியில் “மூவர்” என்று அவள் சொன்னாள். “இங்கு அழைத்து வரச்சொல்!” என்று தேவயானி சாயையிடம் சொன்னாள். சாயை “அவர்களைப்பற்றி கேட்டேன். சூதர்களாகையால் புரவிக்கலை பயில்வதற்காக காட்டுக்கு அனுப்பியிருப்பதாக சொல்கிறாள்” என்றாள்.


தேவயானியின் இதழ்கள் சற்றே வளைய “அது நன்று! எத்தொழிலிலும் முறையான பயிற்சி தேவையானதே” என்றாள். சர்மிஷ்டை மீண்டும் தலைவணங்கி “பேரரசியின் அருளால் இங்கு பிறிதொரு குறையின்றி இருக்கிறோம். மைந்தர்கள் மகிழ்ந்து வாழ்கிறார்கள். தேர்ந்த புரவியாளர்களாக அவர்கள் வரும்போது மேலும் சிறப்புறுவார்கள் என்று எண்ணுகிறேன்” என்றாள். தேவயானி திரும்பி சர்மிஷ்டையை ஒருகணம் பார்த்தாள். அவள் விழிகளை சந்தித்ததும் தன்னுள் மெல்லிய குழப்பம் ஒன்று ஏற்பட இமைகளைச் சுருக்கி பின் முகம் திருப்பிக்கொண்டு “மைந்தர் பயின்று வந்ததும் குருநகரிக்கு வரட்டும். நல்ல தேர்ப்பாகர்களுக்கு அங்கு தேவை நிறைய உள்ளது” என்றாள். “தங்கள் ஆணை பேரரசி!” என்றாள் சர்மிஷ்டை. தேவயானி அவள் செல்லலாம் என இடக்கையை அசைத்தாள். மீண்டும் இடைவரை தலைவணங்கி சர்மிஷ்டை திரும்பி நடந்தாள்.


தேவயானி திரும்பி அவள் நடையை பார்த்தாள். புதர்விலங்குகளுக்குரிய பதுங்கல் அவள் அடிவைப்பில் தோள் குறுகலில் கை அசைவில் அனைத்திலும் இருந்தது. அவள் விழிகளை சாயையின் விழிகள் சந்தித்தன. சர்மிஷ்டை கதவைத் திறந்து மீண்டும் ஒருமுறை அவளைநோக்கி தலைவணங்கி வெளியே சென்ற கணம் தேவயானியின் உளம் அதிர்ந்தது. அவளை அறியாமலேயே எழப்போவதுபோல் ஓர் அசைவு உடலில் பரவியது. தடித்த மரக்கதவு ஓசையின்றி சென்று பொருந்திக்கொண்டது. அவள் மெல்ல தோள்தொய்ந்தாள்.


சாயை அவள் அருகே வந்து “நிலைகுலைந்தது தாங்கள் என்று தோன்றுகிறது” என்றாள். “இல்லை” என்றாள் தேவயானி தலையை திருப்பியபடி. “தாங்கள் கடுஞ்சொல் உதிர்க்க மாட்டீர்கள் என்று நானறிவேன். ஆனால் புண்படுத்தும்படி எதையோ ஒன்றை சொல்வீர்கள் என்று எண்ணினேன். நச்சு தோய்ந்த மென்மையான மிகக்கூரிய ஒரு முள். அதற்காக காத்திருந்தேன்” என்றாள் சாயை. தேவயானி சினத்துடன் நிமிர்ந்து அவள் விழிகளை நோக்கி “இனி அவளை நான் வெல்வதற்கு ஏதுமில்லை” என்றாள்.


“ஏதோ ஒன்று எஞ்சியிருந்ததனால்தான் தாங்கள் நிலை குலைந்தீர்கள், பேரரசி” என்றாள் சாயை. “யார் சொன்னது நான் நிலைகுலைந்தேன் என்று?” சாயை “தங்கள் உள்ளம் எனக்குத் தெரியும். தங்கள் உடல் அசைவுகள் அவ்வண்ணமே என்னிலும் நிகழ்வதுண்டு. ஏனெனில் நான் தங்கள் நிழல்” என்றாள் சாயை. சில கணங்கள் அசைவற்று இறுகி சாளரத்தினூடாக இருளை நோக்கி அமர்ந்து மெல்ல தளர்ந்து நீள்மூச்சுவிட்டு இருகைகளாலும் பீடத்தின் பிடியைத் தட்டியபடி தேவயானி எழுந்தாள். மேலாடையை சீர்படுத்தியபின் “அவளிடம் ஏதோ ஒன்று மறைந்திருக்கிறது. என்னவென்றறியேன். அது என்னை அமைதியிழக்கச் செய்கிறது” என்றாள்.


“மறைந்திருப்பது ஒன்றுதான். அவள் விருஷபர்வனின் மகள் என்பது. அந்த உண்மை இந்த அனைத்து நாடகங்களுக்கு அடியில் இருந்து கொண்டுதான் இருக்கிறது. அவள் விழைந்தால் இங்கிருந்து ஹிரண்யபுரிக்கு செல்லமுடியும். அசுரப்பெரும்படைகளை நமக்கெதிராக திருப்பவும் முடியும். ஆகவே இங்கு அவள் சிறைப்பட்டிருக்கவில்லை. தந்தையின் சொல்லுக்கு கட்டுப்பட்டிருக்கிறாள். அது நமது ஆணையல்ல. அவளது கொடை. சொல்லாமல் அவள் இங்கு உங்களுக்கு உணர்த்திச்சென்றது அதுதான்” என்றாள் சாயை.


“இல்லை, அதுவல்ல. அதுமட்டுமல்ல” என்று தேவயானி சொன்னாள். “அந்தக் கதவைத் திறந்து வெளிச்சென்ற கணம் அழுத்தப்பட்ட வில் நிமிர்வதுபோல் ஒரு சிறு அசைவு அவளில் கூடியது.” அறியாது திரும்பி அந்தக்கதவை நோக்கிவிட்டு சாயை “எப்போது?” என்றாள். “ஒருகணம். அல்லது ஒருகணத்திலும் துளி. அந்நிமிர்வு ஓர் அறைகூவல். அவள் எண்ணாத, அவள் உள்ளமும் ஆழமும் அறியாத ஒரு சொல் அவள் உடலால் எனக்கு உரைக்கப்பட்டது” என்றாள் தேவயானி. “என்ன அது? அதை அறியாமல் எனக்கு அமைவுநிலையில்லை.”


“தங்கள் உளமயக்கு அது. இன்றிரவு இதைக்கொண்டு இருள்விளையாட எண்ணுகிறீர்கள் போலும்” என்றாள் சாயை. “இல்லை, இது ஊசிமுனையளவு சிறியது. ஊசிமுனையால் தொட்டு எடுக்கப்படவேண்டியது. ஆனால் ஊசிமுனைக்கு அது பெரிதே.” சாயை “பேரரசி, தங்கள் உள்ளமும் உடலும் பேராற்றல் மிக்கவை. ஆகவே சிம்மத்துடனோ வேழத்திடமோ அரசநாகத்துடனோ விளையாட விரும்புவீர்கள். எவரும் ஒன்றும் செய்வதற்கில்லை” என்றாள்.


அவள் திரும்பிச்செல்லப் போனபோது தழைந்த குரலில் அழைத்த தேவயானி “நில்! இது உளமயக்கு அல்ல. அனைத்து உளமயக்குகளுக்கும் உள்ள தனித்தன்மையென்பது அவை உளமயக்கென்பது எங்கோ நமக்கு தெரிந்திருக்கும் என்பதுதான். ஆகவே பதறியும் அஞ்சியும் துயர்கொண்டும் நம்மில் ஒரு பகுதி நடிக்கும்போது பிறிதொரு பகுதி சற்று விலகி அதை நோக்கிக்கொண்டிருக்கும். அத்தனை கனவுகளுக்கும் அடியில் அது கனவென்றறியும் விழிப்பொன்றிருப்பது போல. இது அப்படியல்ல. இது ஒரு வலி போல. எத்தனை எண்ணம் மாற்றினாலும் எத்தனை விலகி கற்பனை செய்தாலும் வலியை ஒன்றும் செய்யமுடியாது.”


சாயை புன்னகையுடன் தலையசைத்து “ஒன்றுதான் நாம் செய்ய இருக்கிறது. அவளை இழுத்து வருகிறேன். குழல் சுற்றிப்பிடித்து சுழற்றி தங்கள் காலடியில் விழவைக்கிறேன். கணுக்கால்களை இருகால்களாலும் மிதித்து அழுத்தும் ஒரு கலை உள்ளது. உடலின் ஒவ்வொரு பூட்டும் தாளமுடியாத வலியால் அதிர்ந்து இழுபட்டு துடிக்கும். ஓரிரு கணங்களுக்குள் அனைத்தையும் அவள் சொல்லிவிடுவாள்” என்றாள். தேவயானி புன்னகைத்து “சொல்ல மாட்டாள். ஏனெனில் அவள் விருஷபர்வனின் மகள். சொல்லிவிட்டால் நான் வென்றேன். ஆனால் அத்தனைக்கும் பிறகு அவள் சொல்லவில்லையென்றால் அவள் காலடியில் புழுவென்று நான் கிடப்பேன். அதன் பிறகு நான் உயிர்வாழ முடியாது.”


“வேறு என்ன செய்வது?” என்றாள் சாயை. “இந்த நச்சுக்கோப்பையுடன் இன்றிரவு நீங்கள் தனித்திருக்கப்போகிறீர்களா?” தேவயானி “உச்சிக்கு செல்வதில் ஒருவழிப்பாதையே உள்ளது. முனைகூர்ந்து நுனிகொண்டு எழுவது. அதன் இடர் நாம் குறுகிக்கொண்டிருக்கிறோம் என்பதுதான். நம் உலகும் அறிவும் நின்று திரும்புவதற்கு இடமிலாதாகும். அக்கூம்புதல் சென்று முடியும் உச்சிப்புள்ளி ஒன்றுண்டு என செல்லும்தோறும் உணர்வோம். அப்புள்ளிக்கு அப்பால் வெறுமை. கடுவெளி. அப்புள்ளியில் நின்றிருக்க எவராலும் இயலாது” என்றாள். “இயலும். அதுவரை அள்ளிவந்த அனைத்தையும் உதிர்த்தால்” என்றாள் சாயை.


தேவயானி “வரலாறு அப்படி ஒருபோதும் நிகழ்ந்ததில்லையென்று காட்டுகிறது” என்றாள். “இப்போது உச்சிப்புள்ளியை உணர்கிறீர்களா?” என்றாள் சாயை. “நான் நின்றுதிகழ இடமில்லையென்று அறிகிறேன். ஒவ்வொரு இரவும் தனித்திருக்கையில் நாற்புறமும் நெருக்கி அடைத்த சுவர்களுக்கிடையே இருப்பதுபோல் உணர்கிறேன். செய்வதற்கொன்றே உள்ளது, அச்சுவர்களைப்பற்றி மேலே தெரியும் திறப்பினூடாக வெளியேறுவது. அது மேலும் சிறிய பிறிதொரு இடத்திற்கு செல்கிறது.” அவள் பெருமூச்சுவிட்டு “வென்றவர்கள் கடந்தவர்கள் எய்தியவர்கள் இக்குறுகலையும் இதற்கப்பால் எஞ்சும் வெறுமையையும் சென்றடைந்தே ஆகவேண்டும் போல” என்றாள்.


புன்னகையுடன் “மீண்டும் காவியங்களை நோக்கி திரும்பத் தொடங்கிவிட்டீர்கள் என எண்ணுகிறேன்” என்றாள் சாயை. தேவயானி சலிப்புடன் இல்லை என கையசைத்தாள். சாயை “முன்பொருமுறை சுவரில் பல்லிகளின் பூசலொன்றை பார்த்துக்கொண்டிருந்தேன். பெரும்பல்லி ஒன்றால் சிறுபல்லி ஒன்று துரத்தப்பட்டது. ஓடிக்களைத்து சுவர் மூலை ஒன்றை அடைந்து திரும்ப இடமின்றி அங்கு திகைத்து நின்று பெரும்பல்லிக்கு உணவாயிற்று. அது செய்திருக்கக்கூடிய ஒன்றுண்டு, சுவரிலிருந்த பிடிப்பை விட்டு உதிர்ந்திருக்கலாம். அது செல்வதற்கு முடிவற்ற வெளி எட்டுத்திசையிலும் திறந்து காத்திருந்தது. தன்னால் சுவரை விடமுடியுமென்று அது எண்ணவில்லை. அல்லது அதன் கைகள் அச்சுவரை விடும் இயல்புகொண்டவை அல்ல” என்றாள்.


“நான் துறந்து செல்ல வேண்டும் என்று எண்ணுகிறாயா?” என்றாள் தேவயானி. சாயை புன்னகைத்து “ஒருதருணம் உண்டு. அனைத்தும் முற்றாக உதிர்ந்தழிந்து வெறுமை எஞ்சும் கணம். அதற்கு முந்தைய கணத்தில் பின் திரும்பியிருந்தால் அனைத்தும் நன்றாக இருக்கும். ஆனால் மானுடரால் இயல்வதில்லை. அக்கணத்தைக் கடந்த பின்னரே அம்முந்தைய கணம் அளித்த பெருவாய்ப்பைப் பற்றி அவர்கள் உணர்வார்கள். வாழ்நாள் முழுக்க அதற்கென எண்ணி ஏங்கி விழிநீர் சிந்துவார்கள்” என்றபின் “நான் வருகிறேன்” என்று தலைவணங்கி திரும்பினாள்.


“சாயை” என்று தேவயானி மீண்டும் அழைத்தாள். அக்குரல் மிகத்தாழ்ந்து எளிய பெண்ணின் குரலென ஒலிக்க வியப்புடன் சாயை திரும்பிப் பார்த்தாள். “அவள் என்னை எங்கோ வென்றிருக்கிறாள்” என்றாள் தேவயானி. சாயை விழிகள் மின்ன நோக்கினாள். “என்னை மிக மிக ஆழத்தில் எங்கோ அவள் முழுமையாக வென்றிருக்கிறாள். அது அவளுக்கு மட்டும்தான் தெரியும். ஆனால் அதன்வழியாக நான் அவளுக்கு எவ்வகையிலும் ஒரு பொருட்டே அல்ல என்றாகியிருக்கிறேன்” என்றாள் தேவயானி.


சாயை ஒன்றும் சொல்லாமல் நின்றிருக்க தேவயானி விழிதிருப்பிக்கொண்டு “இங்கு எத்தனை பெருஞ்செல்வம்மீது நான் அமர்ந்திருந்தாலும் அவள் துயருறப்போவதில்லை. எத்தனை நஞ்சை அவள் மேல் கொட்டினாலும் அவளுக்கு வலிக்கப்போவதுமில்லை” என்றாள். சாயை  மீண்டும் ஒருமுறை தலைவணங்கி வெளியே சென்றாள்.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–80
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–79
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–77
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–68
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–67
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–66
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–65
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–64
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–78
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–75
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–74
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–72
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–69
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–63
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–73
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–71
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–70
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–62
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–61
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–60
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 21, 2017 11:30

April 20, 2017

பசுக்கொலை

ஜெ..


கடந்த சில வருடங்களாக தாத்ரியில் துவங்கி, இந்த விஷயம் மெல்ல மெல்ல உருவேறி, இன்று திரண்டு நிற்கிறது.


http://indianexpress.com/article/india/life-term-for-killing-cows-cm-vijay-rupani-says-want-vegetarian-gujarat-slaughterhouses-cow-protection-4594523/











Life term for killing cows, Chief Minister Vijay Rupani …
indianexpress.com
Life term for killing cows, Chief Minister Vijay Rupani says want ‘vegetarian’ Gujarat Rupani also described Gujarat as a “unique state”, which followed the …
















www.ndtv.com
Demanding ban on cow slaughter across the country, RSS chief Mohan Bhagwat today said that any violence in the name of cow protection ‘defames cause’.





http://indianexpress.com/article/explained/how-gau-rakshaks-can-derail-indias-white-revolution-4606852/











How gau rakshaks can derail India’s White Revolution
indianexpress.com
Rising cow vigilantism will impact not just the meat trade. These could even hurt the dairy industry.





http://economictimes.indiatimes.com/news/politics-and-nation/why-an-effective-ban-on-cow-slaughter-may-soon-banish-the-cow-itself/articleshow/58103569.cms


இதே ரீதியில் உங்களுக்கு ஓராண்டு முன்பு கடிதம் எழுதியிருந்தேன். நினைவு படுத்துகிறேன். இது நடக்கும் வாய்ப்புகள் இன்று அதிகம் எனத் தோன்றுகிறது. இதனால் பாதிக்கப்படும் மக்களின் வாழ்க்கை, நிகழ் காலத்தில் பலருக்கு மகிழ்வூட்டலாம். அரசு தர்ப்புக்கு எதிராக எதுவும் சொல்லவே கூடாது என்னும் ஒரு தேசிய வாதம் இருக்கும் காலம்.


பேசவே அயர்ச்சியாக இருக்கிறது. சொல்லி வைப்போம்.


வாழ்க


பாலா.


***


.அன்புள்ள பாலா,


நான் ஏற்கனவே இதைப்பற்றிய விரிவான பதிவுகளை எழுதியிருக்கிறேன். அதன்பேரில் என்மேல் ஏராளமான வசைகளும் காழ்ப்புகளும் சமூக ஊடகங்களில் பதிவாகியிருக்கின்றன


இது ஒர் அரசியல் பிரச்சினையாக, ஒரு சமூகப்பிரச்சினையாக இப்போது பார்க்கப்படவில்லை. முழுக்கமுழுக்க மதப்பிரச்சினையாக, உணர்வுசார்ந்ததாக ஆக்கப்பட்டுவிட்டது. இஸ்லாமியநாடுகளில் பன்றியுணவைப்பற்றிப் பேசுவதுபோல. இதைப்பேசுபவர்களும் இஸ்லாமியரிடம் பன்றியுணவைப்பற்றி பேசுவாயா என்றுதான் கொந்தளிக்கிறார்கள்


ஆகவே எந்தத்தரப்புடனும் எதுவும் பேசமுடியாத நிலை இன்றுள்ளது. எதைப்பேசினாலும் வன்மமும் காழ்ப்புமே எழுந்து வருகிறது. இந்த அடிப்படைவாதவெறியுடன் சேர்ந்து நில் இல்லையேல் தேசப்பிரிவினையைப் பேசும், மாற்றுமதவெறியை ஆதரிக்கும் போலிமுற்போக்குகளுடன் சேர்ந்துகொள் என்பதே இன்றைய சூழலின் கெடுபிடி


ஆனாலும் பொதுவாசகர்களுக்காக மீண்டும் சில அடிப்படைகள். இந்து மதத்தின் அமைப்பு சுருதி, ஸ்மிருதி என இருபாற்பட்ட முன்னோர்கூற்றுகளைச் சார்ந்தது. அடிப்படையான தத்துவங்களும், தரிசனங்களும் ஸ்மிருதிகள். அவையே ஆதாரமானவை. நம்பிக்கைகள், ஆசாரங்கள், நெறிகள் ஆகியவை ஸ்மிருதிகள்.


ஸ்மிருதிகள் காலத்திற்கேற்ப மாறுபவை. ஞானிகளால், சமூகச்சூழலால் மாற்றப்படக்கூடியவை. பல ஸ்மிருதிகள் இருந்துள்ளன. இன்று ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ள ஸ்மிருதி என்பது அம்பேத்கர் ஸ்மிருதி – இந்து சட்டம்


புலாலுண்ணாமை என்பது இந்துமரபில் ஒரு நெறியாக என்றும் இருந்ததில்லை. அந்தணரும் புலால் உண்டதையே நூல்கள் காட்டுகின்றன. சைவ உணவு என்பது தொல்பழங்காலத்தில் ஆஜீவக, சமணமதங்களில்தான் மையநெறியாக இருந்தது.


ஆனால் இந்துமதத்திற்குள் சைவ உணவும் அகிம்சையும் ஒரு சிறந்த விழுமியமாக முன்வைக்கப்பட்டன. இந்து ஞானிகள் மற்றும் அரசர்களில் சைவ உணவு உண்டவர்களை சிறப்பித்து தனியாக எடுத்துச் சொல்லியிருப்பதைக் காணலாம்


வேதகாலம் முதல் உபநிடதகாலம், மகாபாரத காலம் ஈறாக மாட்டுக்கறி உண்பது இந்துமரபில் பொதுவாக விலக்கப்படவில்லை. பல்வெறு இடைச்செருகல்களினூடாக பிற்காலத்தில் தடைகளும் விலக்குகளும் நூல்களுக்குள் புகுத்தப்பட்டன. பல விஷயங்கள் அகற்றவும்பட்டன. ஆனாலும் மூலநூல்கள் மாடு உண்ணப்பட்டமைக்கு ஏராளமான சான்றுகளை அளிக்கின்றன


கன்று ஈன்ற பசுவைக் கொல்வதைக்குறித்த சில விலக்குகள் சிலநூல்களில் உள்ளன. ஆனால் யாக்ஞவால்கியர் உட்பட அந்தணமுனிவர்களும் மாட்டுக்கறி உண்பதைப்பற்றிய செய்திகள் பல உள்ளன. ஒரு நீண்ட பட்டியலையே போடமுடியும். விவேகானந்தர் உட்பட இந்து ஞானியர் பலர் மாட்டுக்கறி உண்டவர்கள்தான்.


மாட்டுக்கறி உண்பதற்கான விலக்கு இந்தியச் சமூகம் மையப்பெருநிலங்களில் விரிந்து பரவத் தொடங்கியபின் மெல்ல உருவாகி வந்திருக்கலாம். சில பகுதியினரிடமிருந்த விலக்கு பிற அனைவரிடமும் பரவியிருக்கலாம். அதற்கு மக்கள்தொகைப் பெருக்கமும் விளைவாக உருவான பஞ்சங்களும் காரணமாக இருந்திருக்கலாம் என்கிறார் ஆய்வாளரான மார்வின் ஹாரீஸ். பஞ்சங்களின்போது கால்நடைகளைக் கொன்று உண்பதைத் தடுப்பதற்காக உருவான சமூகத்தடையாக இருக்கலாமென்றே நானும் நினைக்கிறேன்


இந்தத்தடை பின்னர் ஸ்மிருதிகளினூடாக மதத்தடையாக உருமாறியது. ஆழமான மதநம்பிக்கையாக வேரூன்றியது. அதற்கு சமண பௌத்த மதங்களின் விரிவாக்கமும் கருத்தியல்ரீதியாக உதவியிருக்கலாம்.


இன்று மதத்தை அரசியலுக்குள் நுழைக்கும் முயற்சியின் ஒருபகுதியாகவே இது கையாளப்படுகிறது. பசுவதைக்கு எதிரான உணர்வெழுச்சி என்பது இந்திய மறுமலர்ச்சியின்போதே எழுந்தது. காந்தியே இவ்வுணர்வெழுச்சியை ஆதரிப்பவராகவும் ஓர் அரசியல் நடவடிக்கையாக முன்வைப்பவராகவும் இருந்தார்.


நான் ஆதர்சங்களாக நினைப்பவர்களில் இருவர் காந்தியும் நாராயணகுருவும். இருவருமே அசைவ உணவை விலக்குபவர்கள், மாட்டிறைச்சி உண்பதை கடிந்தவர்கள். நித்ய சைதன்ய யதியின் நிலைபாடும் அதில் மிக உறுதியானது. ஆனாலும் என்னால் ஏற்றுக்கொள்ளமுடியாத ஒன்றாகவே இது உள்ளது. என்னால் தர்க்கபூர்வமாக இதை ஏற்கமுடியவில்லை. ஏற்கமுடியாதவற்றை ஏற்கமுடியாதென்று சொல்லும் சுதந்திரமே இந்துமதத்தில், என் குருமரபில் நான் காணும் சிறப்பு.


முதல் விஷயம் இத்தனை கன்றுகாலிகள் வளர்க்கப்படும் ஒரு நாட்டில் அந்த ஊனை உண்டே ஆகவேண்டும், ஒருபோதும் மட்கிப்போக விடமுடியாது. இந்தியாவின் மையத்தொழிலாக கன்றுமேய்ப்பு இருந்திருக்கிறது. அன்றும் இன்றும் அந்த கால்நடைகள் எவருக்கோ இறுதியில் உணவாகத்தான் செய்கின்றன. இதை மார்வின் ஹாரீஸ் சுட்டிக்காட்டுவதைக் காணலாம். அதை ஒரு பொருளியல் ஒருபோதும் தவிர்க்கமுடியது. எத்தனை மூர்க்கமாக வாதிட்டாலும் சரி


அப்படியென்றால் மாட்டிறைச்சி உண்பதைப்பற்றிய மூர்க்கமான தடையும் அது குறித்து உருவாக்கப்படும் காழ்ப்புகளும் அதை உண்பவர்களை இழிவுபடுத்துவதில் மட்டுமே சென்று முடியும்.உணவுப்பழக்கம் சார்ந்து மக்களை பிரிப்பதும் இழிவுபடுத்துவதும் சென்றகாலகட்டதின் குரூரமான சாதிக்காழ்ப்புகளை வேறுவகையில் கொண்டுவந்து நிலைநாட்டுவதாகவே ஆகும்.


மாடுகள் வளர்க்கப்பட்டால் அவை உண்ணப்படும், ஐயமே வேண்டியதில்லை. உள்நாட்டில் உண்பதைத் தடைசெய்தால் இறைச்சிக்காக அவை வெளிநாட்டுக்கு விற்கப்படும். என்ன வேறுபாடு? உற்பத்திசெய்யப்பட்ட உணவு முற்றிலும் வீணாவது உலகில் எங்கும் நிகழவாய்ப்பில்லை. இயற்கையில் வேட்டையாடுவதை தடுப்பதற்கும் இதற்கும் பெரும் வேறுபாடுண்டு.


உயிர்க்கொலைபற்றிய பேச்சுக்கு இங்கே இடமில்லை. உலகமெங்கும் மானுடன் உண்ணும் உணவில் பெரும்பகுதி ஊனுணவே. நிலநடுக்கோட்டுப் பகுதிகளில் தாவரப்புரதம் நிறைய கிடைக்கும் இடமான இந்தியாவில் மட்டுமே சைவ உணவு ஒரு கொள்கையாகவேனும் நிலைகொண்டது. மலைகளுக்குச் சென்றபோது பௌத்தமே அசைவத்தை ஏற்றுக்கொண்டது.


விலங்குபுரதம் வழியாகவே பூமிமேல் மானுடம் நிலைகொண்டது. வளர்ந்து இன்றைய வடிவை அடைந்தது என்பது வரலாறு..மானுடப்பண்பாடே ஊனுணவின் கொடை என்றால் அது மிகையல்ல. நாம் வழிபடும் ஞானிகள் கலைஞர்கள் மிகப்பெரும்பாலானவர்கள் ஊனுணவுக்காரர்களே. ஊனுணவு உண்பவர்கள் பாவிகள், கீழோர் என்பவர்கள் மட்கிப்போன மூளையுடன் வாழும் கரிபடிந்த ஆத்மாக்கள்.


உணவுப்பழக்கத்தை, ஒழுக்கநெறிகளைச் சொல்லி பிறரை தாக்குபவர்கள், அவமதிக்கமுனைபவர்கள் பண்பாட்டின் மிகக்கீழ்நிலையில் உள்ளவர்கள். ஒருவகையான தேக்கநிலை மாக்கள். உலகம் அதன் எல்லைகளை களைந்து ஒன்றாகி வரும் காலம் இது. ஒவ்வொருநாளும் நம் பண்பாட்டுடன் வாழ்க்கைமுறையுடன் நம்பிக்கைகளுடன் முற்றிலும் முரண்படும் உலகில் பிறபகுதியைச் சேர்ந்த ஒருவரைச் சந்திக்கும் வாய்ப்புள்ள வாழ்க்கை இந்தத் தலைமுறையில் நமக்கு அமைகிறது. குளிக்கும்பழக்கமே இல்லாத சமூகங்கள் உண்டு, நாம் தழுவி நட்பு பரிமாறியே ஆகவேண்டும். மனத்தடைகளை பண்பாட்டுவிலக்குகளை கடக்காமல் அது இயலாது. அப்படிக் கடப்பவனே உலகக்குடிமகனாக ஆகிறான். அந்தமனவிரிவைத்தான் நாம் நம் தலைமுறைகளுக்குக் கற்பிக்கவேண்டியிருக்கிறது இன்று


பொருளியல்காரணங்களுக்காக, நல்ல மாடுகளைக் காப்பதற்காக, இத்தடை என்றால் அதற்கு அதை மதத்துடன் எவ்வகையிலும் பிணைக்கவேண்டியதில்லை.சட்டபூர்வமான கட்டுப்பாடுகளே போதும். ஈனும்நிலையிலுள்ள பசுக்கள், பால்பசுக்கள், பயன்படும் மாடுகள் கொல்லப்படாதவாறு காத்தாலே போதும்


இந்த மூர்க்கமான தடை , தெருப்பொறுக்கிகளுக்கு அதிகாரத்தை அளிப்பது, மக்களை பிளவுபடுத்தும். இந்தியா என்னும் நவீன ஜனநாயகத் தேசிய அமைப்பை வலுவிழக்கச்செய்யும். அதன் சடலத்தை உண்ண வெளியே வல்லூறுகள் வட்டமிடுகின்றன. உள்ளே பாக்டீரியாக்கள் இப்படி அதை நோயுறச்செய்கின்றன


இது ஒரு அரசியல் உத்தி மட்டுமே. இது வட இந்தியாவில் மக்களைத் திரட்டி வாக்குகளாக ஆக்க உதவுகிறதென்றே தோன்றுகிறது. காங்கிரஸ் கொள்ளும் மௌனம் அதற்குச் சான்று


ஆனால் இந்தியாவெங்கும் இது ஒருபோதும் சாத்தியமாகாது. வடகிழக்கிலோ கேரளத்திலோ தமிழ்நாட்டிலோ. இங்குள்ள உணவுப்பழக்கம் மீதான தாக்குதலை பாரதிய ஜனதாவோ அதன் ஆட்சியோ கொண்டுவர இயலாது. அரசியல்ரீதியாக அம்முயற்சி தோற்கடிக்கப்படும்.


அரசியல்ரீதியாக செல்லுபடி ஆகும் மாநிலங்களில் பசுவதைத்தடை திகழும். செல்லாத இடங்களுக்கு அங்கிருந்து பசு இறைச்சி வந்து சேரும். இது ஓர் அரசியல் உத்தி. அரசியல் ரீதியாக இது தோற்கடிக்கப்படாதவரை நீடிக்கும் என்றே நினைக்கிறேன்.


ஜெ


***



மாட்டிறைச்சி அரசியலும் பண்பாடும்


மாட்டிறைச்சி கள் -முடிவாக


கள்ளுக்கடை காந்தி


கள்ளுக்கடை காந்தி எதிர்வினைகள்



கள்ளுக்கடை காந்தி எதிர்வினைகள் மேலும்


கள்ளுக்கடையும் காந்தியும் கடிதம்



தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 20, 2017 11:37

காலடி ஓசையிலே

mohammad-rafi-aug8

முகம்மது ரஃபி


இரண்டுபேருடைய காலடியோசைகள் மட்டுமே எனக்குத் தெரியும். எத்தனை ஓசைகளிலும். எத்தனை ஆயிரம் காலடிகளிலும். எப்படி என்று விளக்க முடியாது. ஏன் என்றும் சொல்லிவிடமுடியாது. அவற்றை நினைவில் வைத்திருப்பது என்னுள் வாழும் தூய விலங்கு ஒன்று. ஒன்று அம்மா, இன்னொன்று அருண்மொழி.


இரு காலடியோசைகளுடனும் உணவுகளின் நினைவும் எப்படியோ கலந்துள்ளது. அருண்மொழி வரும் ஓசை கேட்டால் பத்துநிமிடத்திற்கு முன்னர் சாப்பிட்டுவிட்டு வந்திருந்தால்கூட சாப்பிடுவதற்காக உள்ளம் தயாராகிவிடும். அதன்பின்னரே நிலைமை புத்திக்குத் தட்டுப்படும். வலிகளில் தனிமைகளில் வெறுமைகளில் அக்காலடியோசைகளை நானே கற்பனைசெய்துகொள்வேன். அஞ்சி ஒளிந்துகொள்ளும். தப்பியோடும், சிக்கிக்கொள்ளும் கனவுகளில் அவை அப்பால் ஒலித்து என்னைக் காப்பாற்றுகின்றன. அவர்களின் மொத்த ஆளுமையையே காலடிகளாக்கிக் கொண்டுவிட்டேனா என்ன? இருக்கலாம். தேவியின் காலடிகளைப்பற்றி மட்டுமே பாடிய மரபு கொண்ட கேரளப் பண்பாடு என்னுடையது.


அக்காலடிகளிலிருந்து விழியொளிகளை பிரிக்கமுடியாது., இருவருக்கும் கருணை மிக்க பெரிய விழிகள் என்பது என் நற்பேறு. எழுதுக என ஆணையிட்ட தெய்வங்களின் அருள். அம்மாவின் பெயர் அகல்விழி. இவள் சுபாஷிணி. விசாலாக்‌ஷியும் அருண்மொழியும் இரு மொழிகள். நான் நாளும் சுவைக்கும் இரு அமுதப்பெருக்குகள் . இந்த மொழிகளின் அழகில் என்னை இழக்காது நினைவறிந்தபின் ஒருநாளும் கடந்துசென்றதுல்லை.


காலடிகள் விழியசைவுகளாக மாறும் சில உளமயக்கத் தருணங்கள் உண்டு. அம்மா இறந்துபோன பின்னரும் அவள் காலடிகளைக் கேட்பதுண்டு. ஒரு ஒரு மழைநாளில் காசர்கோட்டில் என் தன்னந்தனிய வீட்டில் அவள் காலடிகளை ஈரத்தரையில் கண்டதுமுண்டு. அருண்மொழியின் காலடிகள் கனவிலெழுந்தால் விழிக்கையில் காலையில் ஒளி மேலும் துலக்கம் கொண்டிருக்கும்.


அவ்வனுபவம் ஒரு வரியென அமைந்ததனால் எனக்கு மிகவும் பிடித்தபாடல்களில் ஒன்று ஓராயிரம் பார்வையிலே. ‘உன் காலடி ஓசையிலே உன் காதலை நானறிவேன்’. அப்பாடலின் உச்சவரி அது. காலடியை அறியமுடியும். விளக்கமுடியாது. அம்மாவின் காலடிகளில் அவள் எனக்கெனக் கொண்டுவருவன கூட தெரியும். அருண்மொழியின் காலடிகளில் அவளுடைய உளநிலை தெரியும். அவள் நினைத்துக்கொண்டிருக்கும் பாடலைக்கூடச் சொல்லிவிடமுடியுமெனத் தோன்றும்


எனக்கு ஒருவயதிருக்கும்போது இந்தியில் வெளிவந்த உஸ்தாதோன் கி உஸ்தாத் என்றபடத்தில் இடம்பெற்ற சௌபார் ஜனம் லேங்கே என்னும் பாடல்தான் அதற்கு மூலம் என்றும் அற்புதமான மலையாளப்பாடல்கள் வழியாக என் உள்ளத்திற்கு அணுக்கமானவரான ரவி பாம்பே அதன் இசையமைப்பாளர் என்றும் மிகப்பின்னர்தான் அறிந்துகொண்டேன். [ரவிசங்கர் சர்மா] ரவி இசையமைத்த பாடல்கள் பல மலையாளத்தின் உணர்வுநிலைகளாகவே மாறிவிட்டவை. ஆழ்ந்த துயர்கொண்ட மெட்டுக்கள் அவருடையவை.


ravi

ரவி


தமிழில் அந்தப்படம் வல்லவனுக்குவல்லவன் என்னும் பேரில் மறு ஆக்கம்செய்யப்பட்டபோது அதே பாடல் அதே மெட்டுடன் கண்ணதாசன் வரிகளில் டி.எம்.சௌந்தர ராஜன் குரலில் அமைக்கப்பட்டது இசை வேதா.
 முகமது ரஃபியின் பெரும் ரசிகன் நான். மூலத்தைக் கேட்டபின் என் உள்ளம் இயல்பாக சௌந்தரராஜன் குரலை நீக்கம் செய்து ரஃபி சாகிபின் குரலாக அந்தப்பாடலை மாற்றிக்கொண்டுவிட்டது. என் நினைவில் எப்போதுமே அப்பாடல் ரஃபி சாகிப் குரலாகவே கேட்கும் மாயம் நானே எண்ணி வியப்பது. ஆகவே செவிகளில் ஓராயிரம் பார்வையிலே என டி.எம்.எஸ் பாடிக் கேட்கையில் ஒரு சிறு அதிர்ச்சி எழும். ஆனால் இரண்டாவது வரிக்குள் ரஃபி சாகிப் தோன்றிவிடுவார்.
துயரம் ஒரு குரல் ஆகுமென்றால் அது ரஃபி சாகிப்.  அவர் குரலில் கம்பீரம் இல்லை. ஆனால் அவரைப்போல குரலில் ஆன்மாவை வெளிப்படுத்திய பிறிதொரு பாடகர் இந்தியத்திரையிசையில் இல்லை என்றே எனக்குத் தோன்றுகிறது. ரஃபியை நினைவுறுத்தும் துயரச்சாயல் கொண்டது என்பதனால் கண்டசாலாவும் என் விருப்பத்திற்குரியவர். என் ரசனை ஜேசுதாஸை கேட்டுவளர்ந்தது. அவர்கூட எனக்கு இரண்டாம்பட்சமே.
யூடியூப் உதவியால் இரு பாடல்களைக் காணவும் இன்று முடிகிறது. வல்லவனுக்கு வல்லவன் அபத்தமான கோணங்களும் அசட்டுத்தனமான ஒளிப்பதிவும் கொண்டது உஸ்தாதோன் கி உஸ்தாத் படத்தில் பக்கவாட்டில் பெருகிச்செல்லும் அந்த அருவிப்புகையும், அதன் கொப்பளிப்பும், அலைகள் இரவின் நிலவொளியில் கொந்தளிப்பதும் தெரிந்து தெரிந்து மறையும் உருவெளித்தோற்றமும் சிறப்பாகப் படமாக்கப்பட்டிருக்கின்றன.ஒளிப்பதிவாள ராஜேந்திர மலோன்
நூறுமுறை பிறந்தாலும்
நூறுமுறை பிறந்தாலும்

நூறுமுறை இறந்தாலும்

உனைப் பிரிந்து வெகுதூரம் – நான்

ஒருநாளும் போவதில்லை

உலகத்தின் கண்களிலே

உருவங்கள் மறைந்தாலும்

ஒன்றான உள்ளங்கள்

ஒருநாளும் மறைவதில்லை!

ஓராயிரம் பார்வையிலே

உன் பார்வையை நான் அறிவேன்

உன் காலடி ஓசையிலே

உன் காதலை நான் அறிவேன்


இந்த மானிடக் காதலெல்லாம்

ஒரு மரணத்தில் மாறி விடும்

அந்த மலர்களின் வாசமெல்லாம்

ஒரு மாலைக்குள் வாடி விடும்

நம் காதலின் தீபம் மட்டும்

எந்த நாளிலும் கூட வரும்


இந்த காற்றினில் நான் கலந்தேன்

உன் கண்களை தழுவுகின்றேன்

இந்த ஆற்றினில் ஓடுகின்றேன்

உன் ஆடையில் ஆடுகின்றேன்

நான் போகின்ற பாதையெல்லாம்

உன் பூமுகம் காணுகின்றேன்





kanna

இப்பாடலைப்பற்றி இணையத்தில் தேடினேன். ஒருவர் தமிழ்ப் பாடலைப் பற்றி எழுதியிருந்ததை வாசித்தேன். நல்ல பாடல் என கண்ணதாசனுக்குச் சான்றிதழ் அளிக்கிறார். ஆனால் ‘உன் காலடியோசையிலே உன் காதலை நானறிவேன்’ என்னும் வரி மட்டும் பொருந்தாமலிருக்கிறது. அதற்கு என்ன அர்த்தம் என்று கடவுளுக்குத்தான் தெரியும் என்கிறார்.
இத்தனைக்கும் நல்ல இசைரசிகர் அவர் என நினைக்கிறேன். இதை ஒரு விந்தையாகவே நான் கவனித்திருக்கிறேன். நுட்பமான இசைரசனை கொண்ட பலர் அனைத்துவகையிலும் நுண்ணுணர்வற்றவர்களாக இருப்பார்கள். அவர்களைக் கூர்ந்து நோக்கினால் ஒன்று தெரியும்.. இசையை அவர்களால் உணர்ச்சிகளாக, படிமங்களாக ஆக்கிக்கொள்ள முடியாது. அவர்கள் கேட்பது ஒரு கணக்குக் கட்டுமானத்தின் அழகை மட்டுமே. என்னசெய்வது, அளிக்கப்படவில்லை அவ்வளவுதான்.
மீண்டும் ஓராயிரம் பார்வையிலே. மூலத்தின் வரிகளின் மொழியாக்கம்தான் தமிழிலும் தொகையறாவாக. தொடர்ந்த வரிகளில்தான் கண்ணதாசனின் கவிதை வெளிப்படுகிறது.
நூறு முறை பிறப்பேன்  நூறுமுறை இறப்பேன்

எனினும் அன்பே நாம் உள்ளத்தால் பிரிவதே இல்லை

நாம் இணைவதை எத்தனைகாலம் தான் விதியால் தடுக்கமுடியும்

காதலின் களத்தில் கடமை எத்தனைகாலம்தான் தடை அளிக்க முடியும்?

இந்த அழகின்மேல் பரவியிருக்கும் பெருந்துயர்தான் என்ன?

நாம் பிரியவே இல்லை. பிரிந்தோம் என்பது வெறுமேதான்

எதிர்பார்க்கும் இதயங்கள் ஒருநாள் இணையவே செய்யும்
பிறந்திறந்து செல்லும் இந்த அறியாப்பயணத்தில் உடன்வரும் ஏதோ தாளம் போலும் காலடிகள். உடலின் எடையும் நிகர்நிலையும் அசைவுகளின் இசைவும் காலடிகளில் தெரியும் என்பார்கள். உள்ளம் பருவடிவுகொண்டதுதான் உடல் என்பதால் அது உள்ளுறைவதன் ஓசை என்று தோன்றுகிறது. ஓசையல்ல, ஒரு நுண்மொழி



http://anondogaan.blogspot.in/2014/07...


தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 20, 2017 11:35

கல்மேல் நடந்த காலம் -கடலூர் சீனு

theo

இனிய ஜெயம்,


இவ்வாண்டின் முக்கிய நூல் வரவுகளில் மற்றொன்று, கல்மேல் நடந்த காலம் எனும் தலைப்பில் வரலாறு சார்ந்த கட்டுரைகள் எனும் பொது வகைமைக்குள் தொகுக்கப்பட்ட தியடோர் பாஸ்கரன் தனது எழுத்தின் துவக்க காலம் தொட்டு தற்போது வரை வெவ்வேறு ஆண்டுகளில் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு.


சிந்து நாகரீகம்;


சமீபத்தில் பத்ம விருது அறிவிக்கப்பட்ட ஆளுமைகளில் மிஷேல் தானினோ அவர்களும் ஒருவர். [ கிழக்கு வெளியீடாக வந்த அவரது சரஸ்வதி ஒரு நதியின் மறைவு ஆய்வு நூலுக்கு உங்கள் தளத்தில் உங்கள் வாசகர் ஒருவர் மிக நீண்ட முக்கியமான கட்டுரை ஒன்றினை எழுதி இருக்கிறார்] அந்த அறிவிப்புக்குப் பின் நிகழ்ந்த சூழலின் சுமட்டுத்தனத்தை இன்று திரும்பிப் பார்க்க பெருத்த ஆயாசமே எஞ்சுகிறது. தொண்ணூற்று எட்டு விழுக்காடு மௌனம், மீதம் இரண்டு சதவீதம் அசட்டுத்தனமான எதிர்வினைக் கருத்துக்கள்.


இந்த இரண்டு சதமானத்துக்கு சொந்தக்காரர்கள் எழுத்தாளர்கள். இந்த இரண்டு சதமானத்திலும் கருத்தியல் ரீதியாக இரண்டு தளம் உண்டு. முதல் தளத்தை சேர்ந்த எழுத்தாளர்களுக்கு சிலுக்கு சுமிதாவை தெரியும், நளினி ஜமீலாவை தெரியும், எங்கேயோ அவிந்து போன கண்டத்தில் உறையும் காராபூந்தி எனும் தேசத்தில், பக்கோடா எனும் மொழியில் எழுதும் ஓமக்குச்சி எனும் எழுத்தாளரின் காராசேவு எனும் பெருங்காவியம் குறித்து தெரியும், இங்கிருக்கும் மிஷேல் தானிதோ யாரென்று தெரியாது அவரது வாழ்வும் பணியும் என்ன என்று தெரியாது. யாரென்றே தெரியாதவருக்கெல்லாம் பத்ம விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது என மிஷேல் பெயரை குறிப்பிட்டு கருத்து கொந்தளிப்பு நிகழ்த்துவார்கள்.


இரண்டாவது தளத்தினர் ”அதுல ஒரு அரசியல் இருக்குதுங்க” வகைப்பாட்டை சேர்ந்தவர். மிஷேல் இங்கிருக்கும் இந்துத்துவ கருத்தியலால் கரப்ட் ஆகியவர் இந்துத்துவ சார்பான ஆய்வு நூலுக்கு பிஜேபி அளித்த விருது அது. என்பதே இவர்களின் உண்மை விளம்பல். இந்த இரண்டு தரப்புமே [அவர்களைப்போலவே] வாசிப்போ நுண்ணறிவோ அற்றவர்கள் வாசகர்கள் எனும் தெளிவில் நின்றே இத்தகு அசட்டு கருத்துக்களை சூழலில் உலவ விடுகிறார்கள். [யாருக்கு தெரியும் வெரியார் எல்வினுக்கு பத்ம விருது வழங்கும் போதும் இதே போல ஒரு அசட்டு கூட்டம் அசட்டு கருத்துக்களை கக்கி இருக்கும்].


கல் மேல் நடந்த காலம் நூலில் அஸ்க்கோ பர்ப்பொலா அவர்களின் பேட்டியை வாசிக்கும் போது மனம் இயல்பாக மிஷேல் அவர்களை நினைத்துக் கொண்டது. உண்மையில் இவர்கள் பாரதத்தில் எதன் பொருட்டு தங்கள் ஆயுளை கரைக்கிறார்கள்? அஸ்க்கோ ஃபின்லாந்து நாட்டின் தலைநகரில் அதன் பல்கலைக்கழகத்தில் பணி புரிந்து ஓய்வு பெற்றவர். மொழியியலாளர். ஃபின்னிஷ் மொழியை தாய்மொழியாகக் லாண்டவர். கிரேக்கம், லத்தீன் அறிந்தவர், சமஸ்க்ருதம் கற்றவர் ஜைமினி சாமவேதம் முறையாகப் பயின்றவர், தமிழில் சரளமாக உரையாடக் கூடியவர். மொழி இயல் நோக்கில் சிந்து நாகரீகத்தின் முத்திரை தரவுகளை ஆயிரத்து தொள்ளாயிரத்து எழுபது முதல் ஆய்வு செய்து வருபவர். அவரை தியோடர் அவர்கள் கண்ட பேட்டி இந்த நூலின் தலையாய அம்சம்.


பார்ப்பொலா அவர்களுக்கு கிரேக்க தொல்லியல் ஆய்வுகளில் கிடைத்த சிந்து நாகரிக தடயம். அப்போது கிரேக்க தொல்லியலில் புதிர் அவிழ்க்கப்பட்ட பண்டைய மொழி இவை கூடி அவருக்கு சிந்து நாகரிக தொல்லியலில் மொழி குறித்த ஆர்வத்தை உருவாக்குகிறது. சிந்து நாகரீகத்தின் முத்திரை மொழிகளை அறிய உதவும் அனைத்தயும் கற்கிறார். டோலாவீரா ஆய்வுகளில் கிடைத்த முத்திரைகள் உட்பட பன்னிரண்டு வெவ்வேறு இடங்களில் கிடைத்த சிந்து நாகரீகத்தின் தொடர்பு முத்திரைகள் யாவும் ஒரு வரிசையில் வலமிருந்து இடமாக அமைவதை அவதானிக்கிறார்.


அது மொழி அல்ல எனும் ஆதாரங்களைக் கொண்ட அமெரிக்க மொழி இயல் ஆய்வாளருடன் விவாதித்து தனது அறிதலில் இன்னும் ஸ்திரம் கொள்கிறார். ஆண்டுகள் பிடிக்கும் ஆய்வுகள் வழியே அவர் இங்கு வந்து சேர்ந்திருக்கிறார். வேறு ஆய்வுகளும் இனைய ஒரு நாள் இந்த மொழி நிச்சயம் வாசித்து அறியப்படும் எனும் பரவசம் பார்ப்பொலா வின் பெட்டியை வாசிக்கையில் கிடைக்கிறது. எத்தனை ஆளுமைகளை தங்களை கரைத்து நமக்கு விட்டு செல்லும் ஞானம் இது?


பௌத்தம்;


சார்லஸ் ஆலன் எழுதிய அசோகா எனும் நூல் குறித்த பாஸ்கரன் அவர்களின் கட்டுரை ஒன்று, [சமீபத்தில் இந்த நூலின் தமிழ் மொழிபெயர்ப்பு பேரரசர் அசோகர் எனும் தலைப்பில் எதிர் வெளியீடாக வந்திருக்கிறது].


ஆயிரத்து எண்ணூறுகள் துவங்கி இந்தியாவில் பல இடங்களில் அசோகரின் கல்வெட்டுக்கள் கிடைக்கின்றன. முதலில் கிடைத்தும், முதலில் வாசிக்கப்பட்டதும் குஜராத் கிர்னார் மலை அடிவாரத்தில் கிடைத்த கல்வெட்டே. வெவ்வேறு இடங்களில் கிடைத்த பியதாசி என்பவரின் கல்வெட்டுக்களை தொகுத்து ஒரு வரைபடமாக்கி அந்த பியதாசி எதோ ஒரு சிங்கள மன்னனாக இருக்க வேண்டும் எனும் யூகத்துக்கு வருகிறார்கள். இக் கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு பல வருடங்கள் கழித்தே இந்த பியதாசி தான் மன்னர் அசோகர், இவை அசோகரின் கல்வெட்டுக்கள் என கண்டு பிடிக்கப்படுகிறது.


யாழ்ப்பாணத்தில் பணியில் இருக்கும் ஜான் டர்னர் தனது பணி ஒன்றின் ஆய்வின் போது [இவர்தான் பாலி மொழியில் இருந்து மகாவம்சம் நூலை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர். இலங்கையின் வரலாற்றை மொழிந்தவர்களில் முக்கியமானவர் என தியடோர் குறிப்பிடுகிறார்] பண்டைய பாலி மொழிப் பனுவலின் புத்தர் உள்ளொளி அடைந்த இருநூற்றி பதினெட்டு ஆண்டுகளுக்குப் பிறகு பிந்துசாரரின் மகனும், சந்த்ரகுப்தரின் பேரனுமான பியதாசி பட்டத்துக்கு வந்தார் எனும் செய்தியைக் கொண்டு, இங்கே நிகழ்ந்த அனைத்து மர்மங்களையும் ஜான் துலக்கினார். தேவருக்கு பிரியமான பியதாசி அது அசோகர்தான். அசோகன் என்ற மன்னன் கல்வெட்டுகள் வழியே அறிமுகமாக இரண்டாயிரம் ஆண்டுகள். அவன் அசோகன்தான் என அறியப்பட மேலும் பல ஆண்டுகள். எத்தனை ஆண்டுகள். . எத்தனை ஆளுமைகள் கூடி செய்த பணி இது?


இங்கே சூழலை கொஞ்சம் திரும்பிப் பார்க்கலாம். கீழடி அகழ்வாய்வு. அதன் முதல் வரலாற்று மொழிபை முன்னெடுத்தவர் காவல்கோட்டம் எழுதிய தொல்லியல் அறிஞர். அதன் பண்பாட்டு ஆழத்தை உரத்து பேசிய பண்பாட்டு ஆய்வாளர் பருத்தி வீரனின் இயக்குனர். சிந்து முத்திரை மொழி துவங்கி, அசோகர் கல்வெட்டு வரை ஒரு வரலாற்றை ஊகித்தும் ஒப்பு நோக்கியும் ஆய்ந்தும் அறிய எத்தனை முறைமைகளும் ஆளுமைகளும், உழைப்பும், ஆண்டுகளும் தேவை? இந்த அடிப்படை அறிவு கூட இல்லாத ஆட்கள்தான் இன்றைய ”பண்பாட்டு விளம்பரதாரர்கள்”.


சமணம்;


குறள் குறித்த ஆய்வு நூல் ஒன்றுக்கு தியடோர் எழுத்திய கட்டுரையில் குறள் ஒரு சமண நூல் எனும் அடையாளத்தை தமிழில் போவோர் வருவோர் எல்லாம் குறளுக்கு உரை எழுதும் கலாச்சாரம் வழியே அதை அழிக்கும் சித்திரத்தை சுட்டுகிறார். குறள் உருவாகி வந்த வரலாற்று பண்பாட்டுப் பின்னணியில் அதனை பொருத்தி சீர் தூக்கி பார்க்கும் வகைமை சொல்கிறார். ஐந்தவித்தான் என குரளில் பயின்றுவரும் சொல் மேரு புராணம், சீவகசிந்தாமணி என பூரண சமண நூல்களில் மட்டும் புழங்கி, வேறு நூல்களில் புழங்காத நிலையை சுட்டுகிறார்.


வேறொரு கட்டுரையில் மா கலி கோசலரால் நிறுவப்பட்ட ஆசீவகம் சமணம் அளவுக்கே இங்கே திகழ்ந்ததை, கண்ணகிக்குப் பிறகு அவர்களின் பெற்றோர் ஆசீவகர்கள் ஆனதை, கணியன் பூங்குன்றனார் ஒரு ஆசீவகர் என்பதை க நெடுஞ்செழியர் ரா விஜயலட்சுமி போன்ற ஆய்வாளர்கள் நிறுவுவதை விவரிக்கிறார்.


நாம் சென்ற பார்த்த வேலூர் ஆர்மா மலை சமணக் குகையை தியடோர் எழுபதுகளில் பலமுறை சென்று பார்த்திருக்கிறார். சமையல் புகை கரி படிந்து ஏழுக்கு நாலு எனும் அளவில் ஓவிய விரிவை பார்த்திருக்கிறார். மையத்தில் நாம் பார்த்த சதுர அரை போன்ற அமைப்பின் அடித்தளம் ஒரு கோவில் என்கிறார். அவர் வருகையில் அக் கோவில் வாசலின் இரு துவாரபாலகர்களும் அக் குகைக்குள் கிடந்திருக்கிறது. எழுபத்தி ஆரில்தான் அக் குகை தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் வருகிறது. நாம் பார்த்த ”வரலாறு அழிந்த” ஆர்மா மலை குகை தொல்லியல் துறைக்கு கீழே வந்த பிறகுதான் அந்த லட்சணத்துக்கு வந்திருக்கிறது.


பல்லவர்கள்.


உங்களது குறள் உரைக்குப் பிறகு இனைய வெளியில் சிறிய அடி தடி நடந்தது. அடியாட்களில் ஒருவர் களப்பிரர்கள் எவ்வாறு கொடுங்கோல் தன்மை பூண்டிருந்தார்கள் என்பதை எதோ ஒரு அரசி திருநீற்றை நெற்றியில் பூச பயந்து, மறைவாக ஆடைக்குள் உடலில் பூசிக்கொண்டு திரியும் நிலையை எதோ ஒரு பதிகத்தை சுட்டி நிறுவி இருந்தார். காஞ்சி கைலாச நாரதர் கோவிலில் நிற்கயில் அந்த மட ஆய்வாளரைத்தான் நினைத்துக் கொண்டேன். அப்படி களப்பிரர் கழுத்தறுக்கும் ஆட்சியை நடத்தி இருந்தால், சைவத்தின் அத்தனை விஷயங்களையும் தொகுத்த காஞ்சி கோவில் எழுந்து வந்த சூழலில் அது எங்கேனும் எவ் வடிவிலேனும் பதியப்படாமல் போய் இருக்காது. மேலும் இத்தனை நெடிய கலைப் பாரம்பரியம் கொண்ட தமிழ் நிலத்தில் மூளையே அற்ற மன்னனும் தான் இருந்தேன் என்பதற்கு அடையாளமாக ஒரு கலை மேன்மையை விட்டு செல்ல எண்ணும் வாய்ப்பே அதிகம், அந்த அளவு அறுபடாமல் கொண்டும் கொடுத்ததும் வளர்ந்த கலைப் பாரம்பரியம் நம்முடையது.


அடுத்து வரும் பல்லவர்கள் இத்தனை கொடுங்கோல் பாரம்பரியம் கொண்ட களப்பிரரை வென்று தன்னை நிறுவிக் கொண்டவர் என்றால், அந்த வெற்றி ஒரு மீட்சியாக எங்கேனும் பாடலிலோ, தொன்மக் கதைகளிலோ, குறைந்த பக்ஷம் பெரிய கோவிலின் எதோ ஒரு புடைப்பு சிற்பமாகவோ வெளிப்பட்டிருக்கும். அப்படி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.


தியடோர் மாமல்லபுரத்தில் இலங்கும் மகேந்திர வர்ம பல்லவன், நரசிம்ம பல்லவன் படிமைகள் குறித்து விளக்குகிறார். அப் படிமைகள் மேல், இது இன்ன இன்ன மன்னர் என பொறிக்கப்பட்ட கல்வெட்டு, அக் குடைவரைக் கோவில் கட்டி பல ஆண்டுகளுக்கு பிறகு எழுதப்பட்டது எனும் நிலையை விளக்குகிறார். பல கடவுளர்களின் உருவை அக் கோவில் கட்டிய மன்னர்களின் உருவை ஏற்றி வடிக்கப்பட்ட படிமைகள் என்பது குறித்த ஆய்வுகளை சுட்டுகிறார். கங்கை கொண்ட சோழபுர கோவிலின் சண்டேச அனுகிரக மூர்த்தி சிலையில் சண்டேசர் ராஜேந்திர சோழன்தான் என்பதற்கான தரவுகள் உருவாகி வந்த விதம் சொல்கிறார்.


மாமல்லபுரத்தில் அதிகமாக யாரும் சென்று பார்க்காத சப்த கன்னியர் சிலை குறித்த கட்டுரை இதில் முக்கியமானது. தமிழகத்தின் மிக தொன்மையான சிலை வரிசை இது [ஏழாம் நூற்றாண்டு] இது. ராபட் கிளைவ் காலத்தில் தனித்தனியாக எடுத்து செல்லப்பட்ட சப்த கன்னியர்கள் சிலைகளை சென்னை ஜெர்மனி அமேரிக்கா என வெவ்வேறு அருங்காட்சியகங்களில் தியோடர் பார்க்கிறார். கட்டுரை துவக்கத்தில் சப்தமாதர் குறித்த தொன்மத்தையும் பேசுகிறார். [சப்தமாதர் குறித்து அரவிந்தன் நீலகண்டன் ஆழி பெரிது நூலில் விரிவாக பேசி இருக்கிறார்]


சோழர்கள்


அதிகம் பேசப்படாத மூவர் கோவில் என்று அழைக்கப்படும் இருக்கு வெளிர் கலை செல்வமான கொடும்பாளூர் கோவில்கள் பற்றி ஒரு கட்டுரையில் அடிப்படை சித்திரம் ஒன்றினை அளிக்கிறார். கட்டுரையின் ஒரு பகுதியில் அன்று [பத்தாம் நூற்றாண்டு] அங்கு செழித்திருந்த காளாமுக மார்க்கம் குறித்த தரவுகளை அளிக்கிறார்.


இந்த நூலின் வேறொரு கட்டுரை ஜோப் தாமஸ் எழுதி காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கும் தமிழக ஓவிய வரலாறு நூல் மீதானது. அந்த நூலை வாசிக்கையில் ஜோப் தாமஸ் மதுரா விஜயம் நூலில் மதுரைக்கு வெளியே எல்லை கட்டி அதற்குள் நிலவும் காளாமுக வாழ்வு குறித்த செய்திகளை சுட்டுகிறார்.


கேதார்நாத் காளாமுக மார்க்கிகள் உயிர் விடும் இடமாக இருந்திருக்கிறது. விக்ட்டோரியா ராணி கட்டுப்பாட்டின் கீழ் பாரதம் வந்த பிறகு, பிரிட்டிஷார் அதை சட்டம் போட்டு தடுத்ததாக இணையத்தில் படித்திருக்கிறேன்.


ஆயிரத்து தொண்ணூற்று அறுபத்தி ஆறில் வரலாற்று ஆய்வாளர் திரு சுரேஷ் பிள்ளை, தஞ்சை கல்வெட்டுக்கள் வழியே உருவாகி வரும் அன்றைய வரலாற்று சூழலை, பண்பாட்டு சூழலை வரையறுத்து மலேஷிய உலகத்தமிழ் மாநாட்டில் அவர் சமர்ப்பித்த ஆய்வை தமிழில் மொழிபெயர்த்து இந்த நூலின் இறுதியில் அளித்திருக்கிறார் தியோடர்.


சுரேஷ் கல்வெட்டுக்கள் வழியே, அன்று உருவாக்கப்பட்ட நில பகுப்பு முறை, உபரி கோவிலுக்குள் கொண்டு வரப்பட்ட நிர்வாக முறை, கோவிலுக்குள் தனித்தனி உரிமைகளைப் பெற உயர்ந்து வந்த வலங்கை இடங்கை பிரிவினை முறை, ராஜராஜன் அனைத்தையும் சமன் செய்த்து அதைக் கொண்டு சென்று இணைத்த ஆகம முறை, என அன்றைய சூழலின் வழியே உருவாகி வந்த நேர் நிலை மற்றும் எதிர்மறை அம்சங்களை கல்வெட்டுகளின் செய்திகள் வழியே இணைத்து ஒரு சித்திரத்தை அளிக்கிறார். மேலும் ஏன் இக் கோவில் பணி நிறைவடையாமல் போனது, இக் கோவிலை நிறைவு செய்யும் பணியை விடுத்து ஏன் ராஜேந்திரன் புதிதாக வேறு கோவில் கட்டினான் என்பதையும் ஆராய்ந்து பார்க்கிறார்.


தஞ்சாவூர் பெரிய கோவில் புத்த சிற்பம் எனும் கட்டுரை மிகுந்த சுவாரஸ்யம் கூடியது. தஞ்சை கோவிலில் மூன்று புடைப்பு சிற்பங்கள். முதல் புடைப்பு சிற்பத்தில் புத்தர் நின்றிருக்கிறார் எங்கோ கிளம்பும் கோலம். அடுத்த புடைப்பு சிற்பத்தில் சிலர் புத்தர் வசம் மன்னிப்பு கேட்டிறார்கள். மூன்றாவது சிற்பத்தில் தஞ்சை கோவில் விமானம் பக்தர்கள் கோலாகலத்துடன் விண்ணிலிருந்து [புத்தர் இருந்த இடம்] அந்த இடத்துக்கு வந்து இறங்குகிறது.


சுரேஷ் கல்வெட்டுக்கள் வழியே ஆகம மயமாக்கம், சமஸ்க்ருத மயமாக்கம் எனும் சித்திரத்தை அளிக்கிறார், தியடோர் இந்த மூன்று சிற்பங்கள் வழியே அங்கு முன்பு இருந்த பௌத்தம் வழியனுப்பப்பட்டு சைவம் நிறுப்பட்ட யூகத்தை முன்வைக்கிறார்.


உலகப் போர்


மிக சமீபம் வரை எம்டன் மகன் என ஒரு திரைப்படத்துக்கு பெயர் வைக்கும் வகையில் எம்டனின் பதிவு தமிழ் நிலத்தில் நிலைத்திருக்கிறது. தியடோர் ஆஸ்திரேலியாவில் சிட்னி நகரில் இங்கே சென்னையில் குண்டு போட்ட எம்டனின் பீரங்கி ஒன்றினை காண்கிறார். அங்கிருந்து துவங்கி எம்டன் கட்டப்பட்ட நாள், ஜெர்மனுக்கு ஆதரவாக அது நேச நாட்டு கப்பல்களை துவம்சம் செய்த விதம், அதன் கேப்டன் மட்டும் போர் கைதியாக சிக்க, அதன் படை வீரர்கள் தப்பி தேசம் தேசமாக பல்லாண்டுகள் ஓடி இறுதியாக ஜெர்மனியை அடைந்த விதம், விடுதலை அடைந்த பிறகு அதன் கேப்டன் ஜெர்மனியில் ஒரு மாவீரராக கொண்டாடப்பட்ட விதம், போரில் அழிக்கப்பட்ட எம்டன் பிரித்து கரைக்கப்பட்டு கண்காட்சிப் பொருளாக ஆன விதம் என எம்டனின் கதை ஒரு கட்டுரையில் சுவாரஸ்யமாக விரிகிறது.


உலகப்போரில் கைதியாகி இலங்கையில் இருக்கிறார் ஒரு ஜெர்மானியர். விடுதலை ஆன பிறகும் இலங்கையியிலேயே தங்கி விடுகிறார். சென்னையில் குண்டு போட்ட எம்டன் பின் இலங்கை வருகிறது, அங்கே உணவு நிரப்பிக்கொண்டு அடுத்த இலக்கு செல்கிறது. விசாரணையில் ஆங்கிலேய அரசு அந்த முன்னாள் ஜெர்மானிய போர் கைதியை சந்தேகித்து கைது செய்து தண்டிக்கிறது. பல ஆண்டுகள் கழித்தே அவர் குற்றமற்றவர் எனத் தெரிகிறது.


சென்னை உயர்நீதிமன்றம் அருகே எம்டனின் குண்டு விழுந்தது குறித்த கல்வெட்டு நிறுவப்பட்டு இருக்கிறது. பார்த்து இருக்கிறேன். பாஸ்கரன் எழுதுகிறார் இரண்டு எண்ணைக் குடோன்கள் பற்றி எரிந்து அடங்கி இருக்கிறது. அதை யாரோ ஆவணப்படம் எடுத்திருக்கிறார்கள். அக் கால சிந்து பாடல் எம்டன் தாக்குதல் குறித்து பாடுகிறது. ஒரு பாடலில் வீட்டு வாசலில் அரிசி புடைக்கும் கிழவி காயமடையும் கண்ணீர்க் கதை வருகிறது.


சுதந்திர தினம்.


ஒரு கட்டுரையில் அமராவதி நதிக் கரையில், தாராபுரத்தில் உருவாகி வந்த தனது பால்யம் அங்கே அவர் கண்டு கடந்து சென்ற வரலாறு [இந்தியாவின் இறுதிப் பிரபு அவ் வழியே போகையில் தியடோர் மக்களுடன் சேர்ந்து டாட்டா காட்டுகிறார்] மௌனப் பட டாக்கீஸ், காமராஜர் உரை, சுதந்திர கொடி ஏற்றி கை தட்டிவிட்டு லட்டு சாப்பிட்டது வரை என பலவற்றை சுவையாக சொல்கிறார்.


குறிப்பாக அவரது பள்ளி நாட்களின் கணக்கு வாத்தியார் குறித்து அவர் அளிக்கும் சித்திரம். அடிப்பார். அவர் மழுங்க சிரைத்துக் கொண்டு வரும் நாளில் வலிக்கும் வகையில் அடிப்பார்.


நாய்கள்


தியடோர் அவர்களின் பிரியத்துக்கு உரிய நாய்களுக்கும் நூலில் இடம் உண்டு, கர்நாடகத்தில் போரில் ஈடுபட்டு இறந்த நாயின் நடுகல் கல்வெட்டு, வேலூர் அருகே கொள்ளைக் கும்பலுக்கு எதிராக போராடி இறந்த நாயின் நடுகல் கல்வெட்டு தொடர்ந்து, திருச்சி மலைக்கோட்டை குடைவரை கோவில் கங்காதரர் கையில் ஏந்திய நாய் வரை பல சுவாரஸ்யங்களை நூலில் தொடுக்கிறார்.


நூல் குறித்த கட்டுரைகள், ஆவணப்படம் குறித்த கட்டுரை, [ரோஜா முத்தையா செட்டியார் போன்ற] ஆளுமைகளை சந்தித்து அது சார்ந்த கட்டுரைகள், ஆளுமைகளின் பேட்டிகள், மொழிபெயர்ப்பு, அனுபவம் என பல வகைமைகளில் இருபது கட்டுரைகள். அனைத்தையும் இணைக்கும் பொது சரடு வரலாறு என்பதால் வரலாறு சார்ந்த கட்டுரைகள் என தலைப்பின் கீழ் குறிப்பிட்டிருக்கிறார்கள். முதலில் ஆசீவகம், அடுத்து குரள் ஆய்வு நூலுக்கான கட்டுரை, அடுத்து ஆர்மா மலை குகை, அடுத்து பார்ப்பொலா நேர்காணல், அடுத்து பல்லவ அரச உருவ சிற்பங்கள், அடுத்து ஆனந்த் குமார சாமி ஆவணப் படம் மீதான கட்டுரை என நான் லீனியர் முறையில் கலந்தது கட்டி வரும் இருபது கட்டுரைகள்.


இந்த நூலை எனக்குள் செரித்துக்கொள்ள இதை முதலில் கால வரிசை என்றும், அடுத்து ஆளுமைகள் என்றும் பகுத்து வாசித்தேன். சரியான இடங்களில் படங்கள், தேவையான இடங்களில் மேலதிக வாசிப்பு நோக்கி செல்ல உதவும் நூல்களுக்கான சுட்டிகள், துணை நின்ற நூல்களின் பட்டியல், கட்டுரை பேசும் அடிப்படை சொற்களின் பொருள் விளக்க அகராதி, என முழுமையான, செறிவும், தீவிரமும் கூடிய சரளமான நூல். இவ் வருடம் வெளியான முக்கியமான நூல்


தியடோர் பாஸ்கரன்:கடிதங்கள்
மீசை
பறக்கும் புல்லாங்குழல்

.



தொடர்புடைய பதிவுகள்

தியடோர் பாஸ்கரன் -சுட்டிகள்
தியடோர் பாஸ்கரனுக்கு இயல் விருது
தியடோர் பாஸ்கரன்:கடிதங்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 20, 2017 11:33

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–80

80. நகரெழுதல்


அசோகவனியின் எல்லைக்குள் நுழைந்தபோதே தேவயானி உளச்சுளிப்புக்கு ஆளானாள். தொலைவில் தோரணவாயில் தென்பட்டதும் அவளுடைய பேருடல் என சாலையை நிறைத்து இரு எல்லைகளும் மறைய பெருகிச் சென்றுகொண்டிருந்த அணியூர்வலத்தின் முகப்பில் ஏழு தட்டுத்தேர்மீது எழுந்த மூன்று நிமித்திகர்கள் தங்கள் பெருஞ்சங்கங்களை முழக்கினர். பதினெட்டு அகல்தேர்களில் தேனீ என மொய்த்திருந்த இசைச்சூதர்கள் தங்கள் முரசுகளுடனும் கொம்புகளுடனும் குழல்களுடனும் எழுந்து மங்கலஇசை பெருக்கினர்.


நூற்றெட்டு தாமரைத்தட்டுத் தேர்களில் பொன்வண்டுகளென, பட்டுப்பூச்சிகளென செறிந்திருந்த அணிச்சேடியர் குரவை ஒலி எழுப்பியபடி மங்கலத் தாலங்களை கைகளில் ஏந்தி எழுந்து நின்றனர். இரும்புக் கவச உடைகள் நீரலைவொளி எழுப்ப சீர்நடையில் சென்ற வேல்நிரையினரும் பெருநடையின் தாளத்தில் சென்ற புரவிப்படையினரும் நாண்தொடுத்த விற்களுடன் வில்லவர் அணியும் வழிச்சென்றனர். ஆணைகளும் அறைதல்களும் ஊடாக ஒலித்தன.


தோரணவளைவை அணுகியதும் தேவயானியின் தேருக்கு முன்னால் சென்றுகொண்டிருந்த விரைவுத் தேரிலிருந்த துணையமைச்சர் சங்கிரமர் படிகளில் இறங்கி ஓடி அவளை அணுகி தலைவணங்கி “திரையை மேலேற்றவா, பேரரசி…?” என்று கேட்டார். சாயை மெல்ல கையசைக்க அமைச்சர் ஓடி தேருக்குப் பின்னால் தொற்றி நின்றிருந்த காவலரிடம் கைகளை வீசி வீசி ஆணையிட்டார். அவர்கள் பட்டுச்சரடை இழுக்க செந்தாமரை மலரிதழ் நிறத்தில் தேரைச் சூழ்ந்து காற்றில் நெளிந்துகொண்டிருந்த பொன்னூல் அணிப்பின்னல் கொண்ட பட்டுத்திரைகள் ஏதோ எண்ணம் கொண்டவைபோல அசைவற்றன. பின் அனல்பட்ட தளிர்போல் சுருங்கத் தொடங்கின. பின்வாங்கும் அலையென சுருண்டு மேலெழுந்து தேர்க்கூரைக்கு அடியில் மறைந்தன.


பன்னிரு அடுக்குகொண்ட பொன்மகுடமும் அதன் மேல் படபடக்கும் காகக்கொடியும் கொண்ட அப்பொற்தேர் தேவயானி ஆறாண்டுகளுக்கு முன்னர் அஸ்வமேதமும் ராஜசூயமும் முடித்து சத்ராஜிதை என தன்னை பாரதவர்ஷத்தின்மீது நிறுத்தியபோது அவ்விழாவின் இறுதிநாள் நூற்றெட்டு அரசர்கள் அகம்படி வர அவள் நகருலா சென்ற அணியூர்வலத்திற்காக கலிங்கச்சிற்பி சுதீரரால் வார்க்கப்பட்டது. பாரதவர்ஷத்தில் அதற்கு முன் பிறிதொன்று அவ்வாறு சமைக்கப்பட்டதில்லை என்று சூதர்கள் பாடினர். அதற்கிணையான தேர் விண்ணில் அமராவதியின் அரசன் ஊர்வது மட்டுமே என்றனர்.


அத்தேரைப்பற்றி அவைக்கவிஞர் சூர்யஹாசர் இயற்றிய காஞ்சனயானகீர்த்தி என்னும் குறுங்காவியத்தில் அதை நோக்கும்பொருட்டு நுண்விழிகளுடன் தேவர்கள் சூழ்ந்திருப்பதனால் சூரியனோ விளக்குகளோ அளிக்காத ஒளியொன்று அதை எப்போதும் சூழ்ந்திருக்கும் என்றார். கந்தர்வர்களும் கின்னரரும் வித்யாதரரும் உடனிருப்பதனால் அத்தேர் செல்லும் வழியெங்கும் இசை முழங்கும், மரக்கிளைகளில் பொன்னிறப் பறவைகளையும் சிறகொளிரும் தேனீக்களையும் மணிவண்டுகளையும் பார்க்க முடியும் என்றார்.


பிழையற்ற நேருடல்கள் கொண்ட பன்னிரு வெண்புரவிகள் நிமிர்ந்த தலையுடன் நீண்ட கழுத்தில் பால்நுரையென குஞ்சியலைய வெள்ளிக்கோல்கள் முரசுத்தோலில் விழுவதுபோல குளம்புக்கால்கள் சீராகச் சுழல அத்தேரை இழுத்தன. ஏழடுக்காக அமைந்த இரும்புச் சுருள்விற்களின் மேல் அமைந்த அத்தேர் நீரலைகளின் மீது அன்னம் என சென்றது. அதன் நடுவே அரியணையின் மீது முகம்நிமிர்ந்து நேர்விழிகளால் எதையும் நோக்காது தேவயானி அமர்ந்திருந்தாள். அவள் அருகே நின்ற சாயை மணிச்சரங்களும் முத்தாரங்களும் சுற்றிய பெரிய கொண்டையிலிருந்து மீறிய குழல்கற்றைகளை குனிந்து சீரமைத்தாள். தோளில் படிந்திருந்த இளஞ்செம்பட்டாடையை மடிப்பு எடுத்து அமைத்தாள்.


பொதுமக்களின் விழிகளுக்கு முன் தோன்றுவதற்கு முந்தைய கணத்தில் எரிதழல் செம்மணியென உறைவதுபோல அவளில் ஒரு அமைதி எழுவதை சாயை எப்போதும் கண்டிருந்தாள். பின்னர் எத்தனை பொழுதாயினும் அவ்வண்ணமே வார்த்து வைத்த அருஞ்சிலையென அவள் அமர்ந்திருப்பாள். நோக்கில் விழியும், காலத்தில் இமையும், மூச்சில் கழுத்தும் அன்றி உயிர்ப்பென எதையுமே அவளில் காண இயலாது. பேரவைகளில் கொள்ளும் அந்த அசைவின்மையை மெல்ல காலப்போக்கில் தனித்திருக்கையிலும் அவள் கொள்ளத்தொடங்கினாள். அத்தனை பீடங்களும் அரியணைகள் ஆயின என.


அவள் வருகையை அறிவிக்க முரசுமேடைகளில் பெருமுரசுகள் பிளிறி பெருகின. கொம்புகள் கனைத்தன. முழுக் கவச உடையுடன் முகப்பில் காத்து நின்றிருந்த காவலர்தலைவன் உக்ரசேனனும் குருநகரியிலிருந்து முன்னரே வந்து அச்சிற்றூரை நிறைத்திருந்த காவலர்களும், புத்தாடையும் மலர்மாலைகளும் அணிந்திருந்த அசோகவனியின் ஐங்குடித் தலைவர்களும் அவர்களின் சுற்றமும் கைகளையும் குலக்கோல்களையும் மேலே தூக்கியும் படைக்கலங்களை நிலம்நோக்கி தாழ்த்தியும் அவளை வாழ்த்தி குரலெழுப்பினர்.


அவளை எவ்வண்ணம் வாழ்த்தவேண்டுமென்பதுகூட முன்னரே கவிஞர்களால் எழுதப்பட்டு ஒலி வகுக்கப்பட்டு அவள் செல்லுமிடத்துக்கு அவளுக்கு முன்னரே சென்றுவிட்டிருக்கும். எனவே எங்கும் ஒரே வாழ்த்தொலிகளே எழுவது வழக்கம். எந்தப் புதுநிலத்திற்கு சென்றாலும் அந்நிலம் முன்னரே அவளால் வெல்லப்பட்டுவிட்டது என்ற உணர்வை எழுப்பியது அது. மீண்டும் மீண்டும் ஒரே நிலத்தில் ஒரே முகங்கள் நடுவே ஒரே பொற்தேரில் சென்று கொண்டிருப்பதாக சாயை எண்ணிக்கொள்வதுண்டு.


வாழ்த்தொலிகள் தேவயானியில் எந்த நலுக்கத்தையும் ஏற்படுத்துவதில்லை. நீரென எண்ணி மலர்கள் பளிங்குப்பரப்பில் உதிர்வதுபோல என அதை அவைக்கவிஞர் சுதாகரர் ஒரு பாடலில் சொல்லியிருந்தார். பல்லாயிரம் பேர் கண்ணீரும் கதறலுமாக நெஞ்சறைந்து கொந்தளிக்கையில் நடுவே கல்முகத்துடன் ஒழுகிச்செல்லும் கொற்றவை சிலை என்றார் பெருஞ்சூதராகிய மாகத சாலியர். முன்னரே நிகழ்ந்து முடிந்து காவியமென்றாகிவிட்ட தலைவியா அவள் என அத்தோற்றத்தை வியந்திருந்தார் தென்னகத்துக் கவிஞரான ஆதன் பெருங்கொற்றன்.


தேர் தோரணவாயிலை அணுகியபோது சரளைக்கற்களுடன் மண்கலந்து விரித்து நீர்தெளித்து கல்லுருட்டி இறுக்கிய புதிய தேர்ப்பாதையில் கண் அறியாதபடி ஆழத்தில் ஓடிச்சென்ற முயல்வளை ஒன்றுக்குள் அவள் தேரின் சகடம் ஒன்று இறங்க நிலைதடுமாறி அசைந்து தோளால் சாயையின் விலாவை முட்டிக்கொண்டாள். ஒரு கணம் அனைத்துக் குரல்களும் திடுக்கிட்டு ஓசையழிந்தன. அந்த அமைதி வாளால் வெளியையும் காலத்தையும் ஓங்கி வெட்டி அகற்றியதுபோல் எழ தன் தேரில் எழுந்த கிருபர் கைகளை விரைவாக வீசி வாழ்த்தொலிகள் தொடரட்டும் என்று ஆணையிட்டார். அச்சமும் கலந்துகொள்ள வாழ்த்தொலியும் மங்கல இசையும் இருமடங்கு ஓசையுடன் உயிர்த்தெழுந்தன.


சாயை அவ்வண்ணம் ஒன்று நிகழ்ந்ததை அறியாதவள் போலிருந்தாள். நீர்போல நிகழ்ந்ததை விழுங்கி முந்தைய கணத்தில் முற்றிலும் இணைந்துகொண்டாள் தேவயானி. ஆனால் சாயை பேரரசி சினம்கொண்டிருப்பதை அவள் உடல் வழியாகவே அறிந்திருந்தாள். தோரணவாயில்களைக் கடந்து பேரலையெனச் சென்று கோட்டையை அறைந்து அதன் பெருவாயிலினூடாக உள்ளே பெருகி கிளை பிரிந்து அச்சிற்றூரின் அனைத்து தெருக்களையும் நிரப்பியது தேவயானியின் அணி ஊர்வலம்.


கோட்டையின் உப்பரிகை மேலிருந்து நோக்கிய வீரர்கள் வண்ண மலர்கள் மட்டுமே நிறைந்த நதி ஒன்று அலை கொந்தளித்து வந்து அந்நகரைப் பெருக்கி கரைவிளிம்பு தொட்டு நுரைகொள்வதைக் கண்டனர். அவர்களிடமிருந்த அனைத்து முரசுகளின் தோல்களும் ஒலியால் அதிர்ந்துகொண்டிருந்தன. தூக்கிய வாள்பரப்புகள்கூட ஒலியால் அதிர்வதை கைகள் உணர்ந்தன. பெருந்திரளில் ஒழுகிய தேரில் ஒரு பொற்துளி என அவள் அமர்ந்திருந்தாள். உறைந்து நகையென்றான பொன்னல்ல, உருகி அனலென ததும்பிக் கொண்டிருப்பது.


tigerகோட்டை வாயிலில் நூற்றெட்டு முதுமகளிர் கூடி நின்று தேவயானியை வரவேற்றனர். அசோகவனியின் பெருங்குடிகளிலிருந்து காவலர்தலைவன் உக்ரசேனன் நேரில் நோக்கி நோக்கி தேர்ந்தெடுத்த பெண்டிர் அவர்கள். அவர்கள் அணியவேண்டிய அணிகளும் ஆடைகளும் அரசிலிருந்தே அவர்களுக்கு அளிக்கப்பட்டிருந்தன. அவர்கள் நிற்கவேண்டிய முறை, சொல்ல வேண்டிய உரை, நோக்கு, நகைப்பு அனைத்துமே முன்னரே வகுக்கப்பட்டு பலமுறை பயிற்றுவிக்கப்பட்டிருந்தன.


அரசி நகர்புகுவதை முதலில் அவர்கள் விந்தையான ஒரு செய்தியாகவே எடுத்துக்கொண்டனர். அது எவ்வண்ணம் நிகழுமென அவர்கள் அறிந்திருக்கவில்லை. பின் ஒவ்வொரு நாளுமென சிற்பிகளும் தச்சர்களும் காவலர்களும் பணியாட்களும் வணிகர்களும் வண்டிகளும் நகருக்குள் நுழையத்தொடங்கியதும் வியப்பும் திகைப்பும் அடைந்தனர். கண்ணெதிரே அவர்களின் ஊர் மாறிக்கொண்டிருந்தது. ஒரு தருணத்தில் மொத்த ஊரே உடைந்து சிதறி மரப்பாளங்களாகவும் கற்தூண்களாகவும் சூழ்ந்து கிடந்தது.


‘இவ்விடிபாடுகளுக்குள்ளா அரசி நுழையப்போகிறாள்?’ என்று திகைப்புடனும் ஏளனத்துடனும் பேசிக்கொண்டனர். ‘நம் ஊருக்கு அவள் வரவில்லை. இங்கு தான் நுழையவிழையும் ஊரை அவள் உருவாக்குகிறாள். அதற்குள் நுழைந்து அவையமர்வாள்’ என்றார் முதியவர் ஒருவர். அரசியின் வருகைநாள் நெருங்க நெருங்க புதிய மாளிகைகள் எழுந்தன. கோட்டை வளர்ந்து பெருகி பிறிதொன்றாகி தோரணவாயில்கள் மழைக்காளான்கள்போல் முளைத்தெழுந்தன. இறுதி ஏழு நாட்களில் மொத்த நகரும் பணிக்குறை தீர்ந்து வண்ணம் பூசப்பட்டு புத்தரக்கு மணத்துடன் பிறந்து வந்ததுபோல் ஒளிகொண்டு நின்றது.


“பழம்பெரும் கதைகளில் ஓரிரவில் பூதங்கள் நகரை கட்டி எழுப்புவதைப்பற்றி கேட்டிருக்கிறேன், இப்போதுதான் பார்த்தேன்” என்று முதுமகள்களில் ஒருத்தி சொன்னாள். “பணியாற்றும் கைகளுடன் காணாக் கைகள் பல்லாயிரம் சேர்ந்துகொண்டதுபோல.” விண்திரையை விலக்கி எடுக்கப்பட்டதுபோல அந்நகரம் காற்றில் தோன்றியது. அரசி சென்றபின் நுரையடங்குவதுபோல் அது மீண்டு பழைய சிற்றூராக ஆகிவிடுமென்றுகூட சிலர் எண்ணினர். சிறுகுழந்தைகள் “அரசி சென்றபின் இது நமக்கே உரியதாகிவிடுமா?” என்று கேட்டனர். அப்பால் அமர்ந்திருந்த முதியவர் “இந்நகரம் இனி எப்போதும் நம்முடையதல்ல. இது இனி ஆயிரம் வருடங்களுக்கு அரசிக்கு உரியது” என்றார். “அப்படியென்றால் நாம்…?” என்றான் சிறுவனொருவன். “நாம் அரசியின் குடிகள்.”


அனைத்தையும் விளையாட்டென மாற்றிக்கொள்ளும் முதிராச் சிறுவரன்றி பிறர் நகரில் எழுந்த மாற்றங்களை விழையவில்லை. அவர்கள் வாழ்ந்த ஊரின் கட்டடங்களும் தெருக்களும் மரங்களும் காற்றும் வானும் ஒளியும் நிலமும் ஒவ்வொரு கணமும் மறைந்துகொண்டிருந்தன. கண்காணா பெருக்கொன்றில் அவ்வூர் மெல்ல மெல்ல மூழ்கி மறைவதைப்போல. அவர்களின் கனவுகளில் மீண்டும் மீண்டும் பெருவெள்ளம் ஒன்று வந்தது. நிறைத்து மூழ்கடித்து மேலேறிக்கொண்டே வந்து போர்த்தி தான் மட்டுமே என்றாகியது. வீடுகள் அடித்தளம் கரைந்து விரிசலிட குத்துபட்ட யானைபோல சிலிர்த்து திடுக்கிட்டன. தூண்கள் முறிந்து முனகலோசையுடன் சரிந்து சிற்றலைகளை எழுப்பியபடி மூழ்கின. குமிழிகளை வெளியிட்டு அலைகளாகி எஞ்சி அவையும் அமைய இருந்தனவோ என்று விழிதிகைக்க மறைந்தன.


பின்னர் அசைவற்று விரிந்த குளிர்நீர்ப் பரப்பில் புதிய பெருநகரொன்றின் நீர்ப்பாவை வண்ணக் குழம்பலாக நெளிந்தாடியது. ஒவ்வொரு கட்டடமும் புத்துயிர் கொண்டபோது அவர்கள் அரியதொன்றை இழந்ததாகவே உணர்ந்தனர். பொருளென அமைந்த ஒவ்வொன்றும் எண்ணங்களையும் கனவுகளையும் தன்னுள் பூசிக்கொண்டவை என்றுணர்ந்தனர். மண்மேல் அவை மறைந்த பின்னரும் தங்கள் உள்ளத்தில் எஞ்சுவது கண்டனர். எனினும் கண்ணுக்கு முன் அவை இல்லையென்றானால் ஒவ்வொரு நாளுமென கருத்துக்குள்ளும் கரைந்து மறைவதையும் தெரிந்துகொண்டனர்.


ஆனால் வணிகர்நிரை வழியாக ஊருக்குள் பெருகி வந்த புதுப்பொருட்கள் அளித்த களிப்பு பெண்களை மெல்ல மாற்றி அனைத்து அழிவுகளையும் மறக்கச் செய்தது. ஒரு மாளிகை அழிந்த இடத்தில் ஒரு மரச்செப்பை வைத்து களியாட அவர்களால் இயன்றது. ஒரு சோலையை அழித்தபின் எஞ்சும் வெறுமையை புதிய ஆடையொன்றால் நிகரீடு செய்ய முடிந்தது. வாழ்வென்பது இறந்தகாலம் மட்டுமே என்றான முதியவர்கள் எதைக் கொண்டும் ஈடு செய்ய முடியாத தங்கள் சென்ற வாழ்க்கையை இழந்து சாவின் மணம்கொண்ட ஆழ்துயர் எய்தினர்.


களைத்து வெறித்த கண்களுடன் இல்லத் திண்ணைகளில் அமர்ந்து அறியா வண்ணக் கொப்பளிப்பாக தங்கள் முன் நிகழ்ந்துகொண்டிருந்த புதிய வாழ்க்கையை பார்த்தபோது உருவாகி வரும் அப்புதுநகரியில் தங்கள் நினைவுகளும் எஞ்சாதென்று அவர்கள் உணர்ந்தனர். எஞ்சுவது ஏதுமின்றி மறைவதே இப்புவியில் எழுந்த அனைத்திற்கும் தெய்வங்கள் வகுத்த நெறியென்று அறிந்திருந்தும்கூட இருக்கவேண்டும் என உயிர்கொண்டிருந்த வேட்கை எஞ்சவேண்டுமென்று உருமாற்றம் கொண்டு துடிக்க துயருற்ற நெஞ்சுடன் தனிமையில் அமிழ்ந்தனர். ஒருவரோடொருவர் துயர் பரிமாறி சொன்ன சொற்கள் அனைத்தும் பொருளிழந்துபோக பின்னர் பிறர் விழிகளை நோக்குவதையே தவிர்த்து அமர்ந்தனர்.


முதுபெண்டிரை திரட்டுவதற்கு வந்த அரண்மனை ஊழியர்களிடம் “நாங்கள் எதற்கு வரவேண்டும்? அரசியை நாங்கள் அழைக்கவில்லையே?” என்றாள் முதுமகள் ஒருத்தி. “உங்கள் நகருக்கு எழுந்தருள்பவர் திருமகளின் வடிவமான பேரரசி. உங்கள் குறைகளை வந்து சொல்லுங்கள் அவரிடம்” என்றான் உக்ரசேனன். “நாங்கள் இங்கு உழைத்து உண்கிறோம். மண்ணுக்கு விண் கொடுத்தால் எங்களுக்கு அவள் கொடுப்பாள்” என்றாள் ஒரு கிழவி.


“பேரரசியின் எழிலுருவை நேரில் காண்பதுவரை இப்படி எதையெல்லாமோ எண்ணுவீர்கள். நேர் கண்ட அனைவரும் சொல்வதொன்றே, தெய்வங்கள் மானுட உடல்கொண்டு மண்ணில் தோன்றமுடியும். உங்கள் குலம் தழைக்க, கன்றுகள் பெருக, நிலம் குளிர, களஞ்சியம் நிறைய திருமகள் நோக்கு உங்கள் மேல் படியட்டும்” என்றார் அமைச்சர் கிருபர். ஒரு களியாட்டென அவர்கள் அதற்கு ஒப்பினர். அழைக்கப்பட்ட முதுமகளிர் ஆடையும் அணியும் சூடி ஒருங்கியபோது பிறரும் ஆர்வம் கொண்டனர். அவர்களும் அணிகொண்டு கிளம்பினர்.


தேவயானி கோட்டைவாயிலைக் கடந்ததும் உப்பரிகைகள் அனைத்திலுமிருந்து மலர்க் கடவங்களை எடுத்து கவிழ்த்தனர். மலர்மழையினூடாக அவளது தேர் கோட்டைக்குள் நுழைந்து நின்றது. முரசுகளும் கொம்புகளும் மணிகளும் வாழ்த்தொலிகளும் எழுந்து சூழ அவள் கைகூப்பியபடி எழுந்தாள். நகர்க்குடிகளின் உவகை கட்டின்றி பெருகியது. வேலோடு வேல் தொடுத்து அமைத்த காவலர்களின் வேலி அவர்களை தடுத்தது. அதற்கப்பால் அவர்கள் ததும்பிக் கொந்தளித்தனர்.


தேவயானி தேர் தட்டிலிருந்து காவலர் கொண்டு வைத்த பொன்னாலான படி மேடையில் கால்வைத்து இறங்கி அசோகவனியின் மண்ணில் நின்றதும் வாழ்த்தொலிகள் எழுந்து உச்சத்தை அடைந்தன. கோட்டை மேல் எழுந்த பெருமுரசு துடிதாளத்தில் முழங்கி அமைந்து கார்வையை எஞ்சவிட்டு ஓய்ந்தது. பேரொலி மட்டுமே எழுப்பும் அமைதி எங்கும் நிலவியது. அமைச்சர் கிருபர் “மாமங்கலையர் வருக! நம் மண்ணை கால் தொட்டு வாழ்த்திய பேரரசிக்கு மங்கலம் காட்டி உங்கள் குடித்தெய்வமென்று அழைத்துச் செல்க!” என்று ஆணையிட்டார்.


நிரைவகுத்து நின்றிருந்த மங்கலத்தாலங்கள் ஏந்திய முதுபெண்டிர் கிளம்பியதுமே கலைந்து ஒருவரோடொருவர் முட்டிக்கொண்டனர். இரு தாலங்களில் இருந்து வெள்ளிச்செம்புகள் கீழே விழுந்தன. மூவர் அவற்றை குனிந்து எடுக்க முயல அதிலொருத்தி பிறரால் முட்டித்தள்ளப்பட்டு கீழே விழுந்தாள். அவளை காவலர் இழுத்து பின்னால் கொண்டுசென்றனர். கிருபர் அவர்களிடம் “நிரை… நிரை… ஒருவர் பின் ஒருவராக” என சொல்லிக்கொண்டே இருந்தார்.


முதன்மை மாமங்கலையினர் மூவர் பேரரசியின் எதிரே சென்று நின்று ஐம்மங்கலங்கள் நிரம்பிய தாலத்தை நீட்டி உரத்த குரலில் முன்னரே பயிற்றுவிக்கப்பட்ட சொற்களை சொன்னார்கள். “திருமகளே, மண்ணாளும் கொற்றவை வடிவே, கலைதேர்ந்த சொல்மகளே, எங்கள் சிற்றூர் அசோகவனிக்கு வருக! எங்கள் குலம் விளங்க, இந்நகர் மலர் உதிரா மரம் என்று பொலிய தங்கள் வரவு நிகழட்டும்” என்று மூத்தபெண்டு முறைமை சொல்ல தேவயானி முகம் மலர்ந்து “ஆம். இந்நகர் பொலியும். அது தெய்வங்களின் ஆணை” என்றாள்.


அடுத்த முதுமகள் தான் பலமுறை சொல்லி உளம் நிறுத்தியிருந்த சொற்களை மறந்து நினைவிலெடுக்க முயன்று தத்தளித்து வாய் ஓய்ந்து நின்றாள். தேவயானி அவளிடம் “உங்கள் மங்கலமுகத்தோற்றம் என்னை நிறைவுகொள்ளச் செய்கிறது, அன்னையரே” என்றாள். அம்முதுமகள் சொற்களை நினைவுகூர்ந்து “வெற்று அகலென இங்கிருந்தது எங்கள் சிற்றூர். இதில் நெய்யென்றாகிறது எங்கள் உள்ளம். ஒளிரும் சுடரென தாங்கள் தோன்றியிருக்கிறீர்கள். விண் நிறைந்த மூதாதையருக்கு முன் இது வைக்கப்பட்டிருக்கிறது. இங்கு அனைத்து தெய்வங்களின் அருளும் பொழியவேண்டும்” என்றாள்.


“ஆம், தெய்வங்கள் அனைத்தையும் கொடையும் பலியும் கொண்டு மகிழ வைப்போம். நம் மூதாதையர் அனைவரும் இந்நாட்களில் இந்நகரில் எழட்டும்” என்று தேவயானி சொன்னாள். பின்னர் முன்னால் நின்ற மூதன்னையின் தோளில் கைவைத்து “என் அன்னையே நேரில் வந்து அணிமங்கலத்துடன் என்னை வரவேற்றதுபோல் உணர்கிறேன். அன்னையை நான் கண்டதில்லை. தங்களைப்போல் முகம் மலர்ந்த எளிய மூதாட்டியாக பழுத்திருப்பாளென்று தோன்றுகிறது” என்றாள்.


அந்தத் தொடுகையையும் நேர்ச்சொல்லையும் எதிர்பாராத முதுமகள் தத்தளித்து “அரசி தாங்கள்… நான்… நான்… இங்கே… எளியவள்” என்று உடைந்த சொற்களுடன் விம்மும் தொண்டையுடன் நிலையழிந்தாள். தேவயானி அவள் கைகளைப்பற்றி “வருக அன்னையே, நம் அரண்மனைக்குச் செல்வோம். நம் மைந்தர் இங்கு நிறைந்து வாழ ஆவன செய்வோம்” என்றாள். அவள் சொற்களிலிருந்த மெய்யுணர்ச்சியின் அணுக்கத்தால் அனைத்து எச்சரிக்கைகளையும் கடந்துவந்த இரண்டாவது முதுமகள் கைநீட்டி தேவயானியின் கைகளை பற்றிக்கொண்டு “மகளே, நான் முதியவள். உன்னிடம் இதை சொல்லியாக வேண்டும். நீ பேரரசியே ஆனாலும் பொன் மேல் கால் வைத்திறங்கலாமா? பொன்னென மண்ணுக்கு வந்தது விண் வாழும் திருமகள் அல்லவா? அது புலரியையும் அந்தியையும் காலால் மிதிப்பதல்லவா?” என்றாள்.


தேவயானி ஒருகணம் சற்றே கலைந்து ஆனால் முகம் மாறாமல் அச்சொற்களை கேட்காதவள்போல காலடி வைத்து முன்னால் சென்று பிறிதொரு மூதன்னையிடம் முகமலர்வுடன் “அரண்மனைக்கு வருக, அன்னையே!” என்றபின் கிருபரிடம் “செல்வோம்” என்றாள். சாயை விழிகள் மாற திரும்பி உக்ரசேனனை பார்த்தாள். அவன் கைகளைக் கூப்பியவனாக உள்ளம் அழிந்து தோள்களில் முட்டிய திரளால் ஆடியபடி நின்றான்.


சாயையின் விழிகளால் ஆணை பெற்ற காவலர் முதுமகளின் தோளில் கைவைத்து தள்ளியபடி “வருக மங்கலையே” என்றார்கள். “இல்லை, நான் அரசியிடம் தவறாக ஒன்றும் சொல்லவில்லை. பொன்னை மிதிக்கும் பழக்கம் எங்கள் குலத்தில் இல்லை” என்றாள் முதுமகள். “ஆம், வருக அன்னையே” என்று காவலர் அவளை இழுத்தார்கள். அவளுக்குப் பின்னால் நின்ற இன்னொரு முதுமகள் “இங்கு நாங்கள் நெல்லையும் மலரையும்கூட கால்களால் தொடுவதில்லை. மலரென்றும் நெல்லென்றும் பொலிவது பொன்னல்லவா?” என்றாள். அவளையும் வீரர்கள் இழுத்து கூட்டத்திற்குள் புதைத்து அமிழ்த்தினர்.


அணித்தேர் வந்து நின்றது. தேவயானி அதை நோக்கி நடக்கையில் அவளுக்குப் பின்னால் பெண்களும் படைவீரர்களும் அடங்கிய குழு சுவரென்று எழுந்து முதிய மாமங்கலைகளை அவளிடமிருந்து முற்றாக விலக்கி அகற்றி கொண்டுசென்றது. தேவயானி சாயையிடம் “அம்முதுபெண்டிரை ஒன்றும் செய்யவேண்டியதில்லை. எளியவர்கள்” என்றாள். “ஆம்” என்றாள் சாயை. தேவயானி மட்டும் தேரில் ஏறிக்கொண்டாள். சாயை கிருபரை நோக்கி பிறிதொரு நோக்கு சூடிய விழிகளுடன் திரும்பினாள்.


நகரின் தெருக்களினூடாக அவளுடைய தேர் சென்றபோது இருபுறமும் கூடி நின்ற மக்கள் அரிமலர் தூவி வாழ்த்துரைத்தனர். தெருக்களில் மலர்தரைமேல் மலர்காற்றினூடாக சென்ற அவள் தேர் அரண்மனை வாயிலை சென்றடைந்தபோது முன்னரே புரவிகளில் அங்கு சென்றிருந்த கிருபரும் பிற அமைச்சர்களும் அவளுக்காக காத்து நின்றிருந்தனர். துணைக் கோட்டைத் தலைவனாகிய சித்ரவர்மன் கவசஉடையும் அரசமுத்திரையுமாக வந்து தலைவணங்கி உடைவாளை தேவயானியின் காலடியில் தாழ்த்தி வணங்கி வாழ்த்து கூவினான். தேவயானி அவன் வாழ்த்தை ஏற்று அமைச்சர்களால் வழிநடத்தப்பட்டு அரண்மனைக்குள் நுழைந்தாள்.


சாயை திரும்பி கிருபரிடம் “முந்தைய காவல் தலைவனை நான் உற்றுசாவவேண்டும். அவனுக்கு பிற நோக்கங்கள் இருந்தனவா என்று அறிந்த பின்னர் வேண்டியதை செய்யலாம்” என்றாள். “ஆணை” என்றார் கிருபர்.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–79
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–77
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–69
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–68
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–67
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–66
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–65
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–64
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–78
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–75
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–74
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–73
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–72
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–63
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–62
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–61
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–60
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–59
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–58
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–57
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 20, 2017 11:30

April 19, 2017

செவ்வியலும் இந்திய இலக்கியமும்

bloom

ப்ளூம்


ஜெ,


என் விவாதத்தின் நீட்சியாக இக்கடிதம்


ஒரு வகையில் விமர்சனத்தின் அத்தியாவசியத்தை ரசனை மனம் உணர்கிறது. ரசனை மனம் என்று ஒன்று இருந்தால் விமர்சனம் என்னும் ஒன்றை தவிர்க்க இயலாது என்று புரிகிறது. அதே நேரத்தில், (புறவயமான அளவுகோல்கள் இல்லாத (இருக்கமுடியாத?)) விமர்சன நோக்குகளால் இயல்பாக உருவாகும் போட்டிமனப்பான்மை எனக்கு தனிப்பட்ட முறையில் ஏனோ உவப்பாக இல்லை. விமர்சனம் செய்ய வேண்டும் என்றால் ஏதோ வகையில் யாரையோ நிராகரிக்க வேண்டும். அப்படி நிராகரிப்பது முற்றும் நடுநிலையானச் செயலா? புறவயமான அளவுகோல்கள், புறவயமான ரசனை அளவீடுகள் இல்லாமல் போட்டி வைக்கலாமா, அது நியாயமான போட்டியா என்ற கேள்வி அது.


இந்த ‘போட்டிமனப்பான்மை’ கேள்வியை பரிசீலிக்கும் போது எதேச்சையாக ஹரோல்ட் ப்ளூமுன் இந்த நேர்காணலை இன்று வாசித்தேன். அதில் அவர் உரைக்கும் இவ்வரிகள் எனக்கே அளித்த பதிலாக பட்டது.


“Criticism starts—it has to start—with a real passion for reading. It can come in adolescence, even in your twenties, but you must fall in love with poems. You must fall in love with what we used to call “imaginative literature.” And when you are in love that way, with or without provocation from good teachers, you will pass on to encounter what used to be called the sublime. And as soon as you do this, you pass into the agonistic mode, even if your own nature is anything but agonistic. In the end, the spirit that makes one a fan of a particular athlete or a particular team is different only in degree, not in kind, from the spirit that teaches one to prefer one poet to another, or one novelist to another. That is to say there is some element of competition at every point in one’s experience as a reader. How could there not be? Perhaps you learn this more fully as you get older, but in the end you choose between books, or you choose between poems, the way you choose between people. You can’t become friends with every acquaintance you make, and I would not think that it is any different with what you read.”

இவ்வரிகளின் ஆதார உண்மையை என் வாசக மனம், ரசனை மனம் அறிந்தாலும், என் தர்க மனம் அதை ஏற்க மறுக்கிறது. என் ரசனையை நான் முற்றும்முதலாக நம்புகிறேன், ஆனால் அதன் அடிப்படையில் போட்டியிட, என் ரசனையை பிரதான ரசனையாக முன்வைக்க, மனம் இணங்கவில்லை. ஆனால் போட்டி என்று வந்தால், என் ரசனையை யாரேனும் கேள்விகேட்டால், அதை ஆதரித்து வாதாடுவேன் என்றும் நினைக்கிறேன். இந்த முரண் எனக்குப் பிடிபடவில்லை.


இந்த வரிகளை படிக்கையில் இன்னொரு கேள்வி எழுகிறது. நல்ல வாசகருக்கு தெரியும், தங்கள் ரசனை என்னவென்று. அப்படியென்றால், ஒரு அடிப்படை வாசிப்புக்கல்விக்கு பிறகு, அப்படிப்பட்ட வாசகர் தனக்கான ஆக்கங்களை மட்டுமே படித்தால் போதுமா?


 (இன்று மறுபடியும் என் பட்டியலை பரிசீலித்தேன். ஆண்டாள் உள்வட்டத்திற்குள் வந்தாள். அவளுடைய கவிதைகள் பேசும் பொருளின் அடிப்படையில் அல்ல. அக்கவிதைகளின் அழகியல் திறக்கும் உலகங்கள் என் தேடல்கள் அத்தனையும் மலர் சுடரை அணைப்பது போல் அணைக்கிறது என்று இன்று உணர்ந்படி இருந்தேன். பக்தி கூட ஒரு hyperaesthetic experience தானா? இலக்கியம் ஆக இது போதுமா?)


சுசித்ரா


***


manik

மாணிக் பந்த்யோபாத்யாய


அன்புள்ள ஜெ.,


என்னுடைய கேள்விக்கு பதிலுரைத்தமைக்கு நன்றி. நான் மேரி கெரெல்லியை வாசித்ததில்லை. கூடிய விரைவில் வாசிக்கிறேன்.


ஆம், இதுவரை நான் வாசித்ததை வைத்துப் போட்ட பட்டியலில் தல்ஸ்தோயும் தஸ்தயேவ்ஸ்கியும் ஷேக்ஸ்பியரும் கண்டிப்பாக எனக்கு முக்கியமானவர்களாக இருக்கிறார்கள். கூடவே வியாசனும் கம்பனும் இளங்கோவும், எமர்சனும் தாகூரும், ஆண்டாளும் பஷீரும் மேரி ஷெல்லியும் எமிலி டிக்கின்சனும் இன்னும் பலரும். பொதுப்பட்டியல்களோடு பெரும்பாலும் ஒத்துப்போகிறது என்பது உண்மை தான்.


அதே நேரத்தில், தனிப்பட்ட முறையில், ஒரு எழுத்தாளரோ ஆக்கமோ ஏன் எனது பட்டியலில் இருக்கிறார்/ இருக்கிறது என்று சுயகேள்வி எழுப்பிக்கொள்வது முக்கியமானதாக தோன்றுகிறது. உதாரணத்திற்கு, சமீபத்தில் நண்பர் ஒருவருடன் பேசிக்கொண்டிருக்கையில், அவருக்கு லா.ச.ரா.வின் ‘ஜனனி’ கதை மிகவும் பிடித்த கதை என்று சொல்லியிருந்தார். நான் அதற்கு, எனக்கு அதை விட கி.ரா.வின் ‘பேதை’ கதை பிடிக்கும் என்று சொன்னேன். இன்று அதை சிந்தித்து பார்க்கையில், அவ்வாறு ஏன் சொன்னேன் என்ற கேள்வி முக்கியமாகப் படுகிறது. சுருக்கமாக சொன்னால், ‘பேதை’யின் கிராமிய அழகியலும், இயல்பான நடையும், உலகளாவிய பார்வையும், அது முன்வைக்கும் உக்கிரத் தாய்மையின் சித்திரமும் ஏதோ வகையில் எனக்கு ‘ஜனனி’ முன்வைக்கும் சாக்த சௌந்தர்ய-அழகியலை விட, ஜீவன்-பரமன் முடிச்சுகளை விட முக்கியமாகப்படுகிறது. இந்த வேறுபாட்டை ஆராய்வதில் என் ரசனையை புரிந்து கொள்ள முடியும் என்றும் தோன்றுகிறது.


தற்போது ஹரோல்ட் ப்ளூமின் ‘தி வெஸ்டர்ன் கேனன்’ என்ற புத்தகத்தை படித்துக் கொண்டிருக்கிறேன். முழுக்க முழுக்க அழகியல் சார்ந்த விமர்சனத்தை பிரதானப்படுத்துகிறார். மேற்கின் அதிமுக்கிய இலக்கிய மேதையாக அவர் ஷேக்ஸ்பியரை முன்வைக்கிறார். (தமிழில் ஷேக்ஸ்பியர் அதிகம் விவாதிக்கப்பட்டுள்ளாரா?)


அந்நூலை பரிசீலிக்கையில், வெஸ்டர்ன் கேனனைப்போல இந்திய இலக்கியம் என்று எடுத்துக்கொண்டால் ஒட்டுமொத்த வரலாற்றில் இன்றியமையாத செவ்வியல் நூல்கள்/படைப்பாளிகள் எவை/யார் என்ற ‘கேனன்’ வகை பட்டியல் போட முடியுமா என்ற கேள்வி எழுந்தது. பல மொழிகளை சேர்க்க வேண்டும் என்றாலும் இந்திய நிலப்பரப்பின் சிந்தனை, அழகியலின் ஒற்றுமையின் அடிப்படையில் செய்யலாம் என்று நினைக்கிறேன். அவ்வாறு இதுவரை போடப்பட்டுள்ளதா?


மிகுந்த உற்சாகத்தில் வாசித்துக் கொண்டிருக்கிறேன். உங்களுடைய பதில் ஊக்கமளிக்கும்படி இருந்தது. மிக்க நன்றி.


புத்தாண்டு வாழ்த்துக்கள்.


சுசித்ரா



புதுமைப்பித்தன்


அன்புள்ள சுசித்ரா,


ஹரால்ட் ப்ளூமின் அந்நூல் குறித்து நான் முன்னரே எழுதியிருக்கிறேன்.- ஹரால்ட் ப்ளூமிற்கு இலக்கிய சிந்தனையில் உள்ள இடம், அவருடைய மேலைச்செவ்வியல் சார்ந்த கருத்துக்களின் இடம் ஆகியவற்றைப்பற்றி இன்றைய தலைமுறையினருக்கு மேலதிகமாக எடுத்துச் சொல்லவேண்டியிருக்கிறது.


எழுபதுகள் முதல் உருவாகி வந்த மொழியியல்சார்ந்த பின்நவீனத்துவ இலக்கியவிமர்சன அணுகுமுறைகள் [அமைப்புவாதம், பின்அமைப்புவாதம்] அழகியல்நோக்கு என்பதை கடுமையாக நிராகரித்து அது ஒருவகையான தனிநபர்வாத அணுகுமுறை மட்டுமே என வாதிட்டன. அழகியல்விமர்சனம் என்னும் சொல்லே அபத்தமானதாக குறிப்பிடப்பட்டது. உண்மையில் கூரிய விமர்சனம் வழியாக அன்றி பகடி கேலி வழியாகவே இக்கருத்து நிறுவப்பட்டது என்பது இன்று திரும்பி நோக்கும்போது ஆச்சரியமூட்டுவது


அந்த அலைக்கு எதிராக எழுந்து நின்ற பெருங்குரல்களில் தலையாயது ஹரால்ட் ப்ளூமுடையது. அழகியல்விமர்சனத்தை ஆணித்தரமாக நிறுவி மொழியியல்சார்ந்த அணுகுமுறைகளின் அடிப்படையான பயனின்மையை நிறுவ அவரால் இயன்றது. தனிப்பட்டமுறையில் என் அணுகுமுறைசரியானதே என்னும் நம்பிக்கையை அவரே எனக்கு அளித்தார்,


அவரைப்பற்றி தமிழில் ஒருசொல் கூட நான் வாசித்ததில்லை, நித்ய சைதன்ய யதி அவரை எனக்கு அறிமுகம் செய்தார். நித்யாவிடமிருந்து விலாசம் பெற்று ப்ளூமுக்கு ஒருகடிதமும் எழுதி ஒருவரி பதிலும் பெற்றிருக்கிறேன்


bibhutibhushan_bandopadhyay_300

விபூதிபூஷன் பந்தியோபாத்யாய



[இதேபோல பின்நவீனத்துவம் கருத்துக்களின் வரலாறு குறித்தும், வரலாற்றுவாதம் குறித்தும் உருவாக்கிய அவநம்பிக்கையை எதிர்கொண்டு வென்ற செவ்வியல் மார்க்ஸிய சிந்தனையாளரான எரிக் ஹாப்ஸ்வம் மிக முக்கியமான சிந்தனையாளர். அவரைப்பற்றியும் எழுதியிருக்கிறேன்]


மேலைச்செவ்விலக்கியத்தொகை குறித்த ப்ளூமின் நூல் பின்நவீனத்துவ இலக்கியவிமர்சன அணுகுமுறைகள் காலாவதியானபின்னர் வந்து திட்டவட்டமாக இலக்கியத்தில் அழகியல் நோக்கின் இடத்தை நிறுவியது. இலக்கிய அழகியல் நோக்கு என்பது தனிநபர் சார்ந்தது அல்ல. அதற்கு ஒரு வரலாறு உள்ளது. அது நெடுங்கால விவாதத்தின் விளைவாக செவ்விலக்கியம் என ஒன்றைத் திரட்டி முன்வைக்கிறது. அச்செவ்வியல் தொடர்ந்துவரும் படைப்புக்களை வழிகாட்டி வடிவமைக்கிறது, மதிப்பிடுகிறது. இலக்கியத்தின் இன்றியமையாத தொடர்ச்சியை நிலைநிறுத்துகிறது


பின்நவீனத்துவத்தால் மறுக்கப்பட்ட செவ்வியல் என்னும் கருத்துநிலையின் மறு எழுச்சியின் திட்டவட்டமான உதாரணம் ஒன்றைச் சுட்டுகிறேன். பின்நவீனத்துவக் கருத்துநிலையின் குரலாக நின்று செவ்விலக்கிய மரபை முற்றாக மறுத்தவர்களில் தமிழில் சாருநிவேதிதா முக்கியமானவர். இன்று தமிழின் செவ்விலக்கிய மரபை வகுத்து ஆழமாக நிறுவும் முக்கியமான நூல்களில் ஒன்றான பழுப்புநிறப் பக்கங்கள் அவரால் எழுதப்பட்டுள்ளது.


செவ்விலக்கியம் திரண்டு உருவாவதை பலவகையான முரணியக்கங்களின் விளைவாக நிகழ்கிறது என்று சொல்லலாம். அவ்வியக்கத்தை புறவயமாக வகுத்துக்கொள்வது கடினமானது. அத்தனை சிக்கலானது அது. உதாரணமாக சில முரணியக்கங்களைச் சொல்லலாம். தனிநபர் வாசிப்புக்கும் சூழலின் பொதுவாசிப்புக்குமான முரணியக்கம். அறிவுத்தளவாசிப்புக்கும் பொதுமக்கள் வாசிப்புக்குமான முரணியக்கம். செவ்வியல் தொகைக்கும் நவீனப்படைப்புகளுக்குமான முரணியக்கம். அழகியலுக்கும் தத்துவத்துக்குமான முரணியக்கம்.


ஆனால் ஒட்டுமொத்தமாக செவ்வியல்மையம் ஒன்று திரண்டு வருகிறது என்பது கண்கூடு. அதைத்தான் செவ்வியலாக்கம் என நான் சொல்கிறேன். ஒர் இலக்கிய அறிவுச்சூழலில் நிகழும் ஒட்டுமொத்த விவாதத்தையும் செவ்வியலை திரட்டி நிலைநிறுத்துவதற்கானது என்று சொல்லத் துணிவேன். உங்கள் தனிப்பட்ட பட்டியல் அந்தச் செவ்வியலாக்கத்தின் ஒருபகுதி. அதிலிருந்து தொடங்கி தனிப்பட்ட ரசனையும் தேடலும் சார்ந்து விலகி விரிந்து அதைநோக்கிச் செல்வது.


*


Basheer

வைக்கம் முகமது பஷீர்



இந்தியத் தொல்லிலக்கிய மரபில் சம்ஸ்கிருதத்தில் ஒரு செவ்விலக்கியத் தொகை பல நூறாண்டுக்கால வரலாற்றினூடாக உருவாக்கப்பட்டு நிலை நின்றது. மேலைச் செவ்விலக்கிய மரபில் ஷேக்ஸ்பியரின் இடம் காளிதாசனுக்கு. அனேகமாக அது மறுக்கப்பட்டதே இல்லை. தொல்செவ்வியல் மரபு இதிகாசங்களை மையமாக்கியது.


இந்தியாவின் பிறமொழிகள் அனைத்திலுமே இவ்வாறு செவ்விலக்கியத்தொகை திரட்டி நிலைநிறுத்தப்பட்டது. தமிழில் கம்பன், இளங்கோ, வள்ளுவரின் இடம் மறுப்புக்கு அப்பாற்பட்டது.


இந்திய மறுமலர்ச்சிக் காலத்தில் இந்தத் தொன்மையான செவ்விலக்கிய மரபு புதிய உத்வேகத்துடன் மறுபடியும் கண்டடையப்பட்டது. சம்ஸ்கிருதத்தில் இருந்து ஆங்கிலம் வழியாக இந்திய இலக்கியச்சூழலில் காளிதாசனின் மறுபிறப்பு நிகழ்ந்தது.


Sharat

சரத் சந்திர சட்டர்ஜி



தமிழில் பாரதியின் பட்டியல் அந்த எழுச்சியைக் காட்டுகிறது. கம்பனை நவீன ஐரோப்பிய விமர்சன அணுகுமுறைகளின்படி மறுவரையறை செய்ய முயன்ற வ.வே.சு.அய்யரின் ஆங்கிலக்கட்டுரைகள் நவீனகாலகட்டத்தின் தமிழ்ச்செவ்வியல் உருவாக்கத்தின் மிகமுக்கியமான தொடக்கம். எஸ்.ராமகிருஷ்ணன் [கம்பனும் மில்டனும் ஓர் ஒப்பாய்வு] குறிப்பிடத்தக்க இன்னொரு பாய்ச்சல்.


இந்தியநவீன இலக்கியம் 1880களில் இந்தியமொழிகளில் ஏறத்தாழ ஒரே காலகட்டத்தில் தோன்றி 1920களில் காந்திய இயக்கத்தின் எழுச்சியை தான் பெற்றுக்கொண்டு வளர்ந்தது. அப்போதே இந்திய இலக்கியத்தின் நவீனச்செவ்வியல் ஒன்றை உருவாக்குவதற்குரிய தேசிய அளவிலான பெருவிவாதம் தொடங்கியது.


இந்த விவாதத்தில் இருவகையில்தான் இந்தியமொழிகளின் இலக்கியம் இடம்பெற முடியும். ஒன்று ஆங்கிலம் மற்றும் இந்தியில் வரும் மொழியாக்கங்கள். இன்னொன்று தங்கள்மொழியின் இலக்கியம் குறித்து இந்தியிலும் ஆங்கிலத்திலும் பேசும் இலக்கிய அறிவுஜீவிகளின் இருப்பு. தமிழுக்கு இருவகையிலுமே பெரிய பின்னடைவுதான் உள்ளது


இங்கிருந்து இலக்கியவிருதுகள் வழியாக இந்தியிலும் ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்யப்பட்டு அறியப்படுபவர்கள் எவ்வகையிலும் தமிழிலக்கியத்தின் வெற்றிகளை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் அல்ல. மிகமிக மொண்ணையான வணிக எழுத்தாளர்கள் அவர்கள். உதாரணமாக, அகிலன். அவருடைய ஆக்கங்கள் மொழியாக்கம் செய்யப்பட்டமை வழியாக தமிழ் மேல் உருவான இளக்காரம் இந்தியப்பொதுச்சூழலில் இன்றும் வலுவாக நீடிக்கிறது. இன்று வைரமுத்து அவ்விழிவை பலமடங்கு கூட்டிவருகிறார்.


இவர்களுக்கு விருதுவழங்கப்படுகையில் வலுவான எதிர்ப்பு உருவாகவேண்டும் என தமிழின் இலக்கியமுன்னோடிகளில் இருந்து என்னைப்போன்றவர்கள் வரை தொடர்ந்து வலியுறுத்துவதற்குக் காரணம் இதுவே. இவர்கள் இந்தியச் செவ்வியலுருவாக்கத்தில் தமிழின் பங்களிப்பாக சென்று அமைவார்கள். அதனூடாக நம் மரபை நாமே தோற்கடித்தவர்களாவோம்.


Tamil_Literati_Rajanarayanan_KiRa


.


[ஒவ்வொரு முறை இந்த இலக்கியவிமர்சனக்குரல் விருது வழங்கும் போதும் எழும்போது மொண்ணைகளின் சமரசக்குரல்கள் எழுந்து எரிச்சலைக் கிளப்பும். ஒருத்தர் விருது வாங்கினால் இன்னொருவர் குறை சொல்லக்கூடாது, பாராட்டும் பெருந்தன்மைவேண்டும். தமிழனுக்கு ஒற்றுமை இல்லை. அவரவருக்குப் பிடித்ததை அவரவர் வாசிக்கட்டுமே- இவ்வாறெல்லாம். இந்த மொண்ணைக்குரலைக் கடந்து ஒன்றும் பேசமுடியாத நிலை இங்குள்ளது]


தமிழிலக்கியம் குறித்து இந்தியப் பொது அறிவுச்சூழலில் பேச நமக்கு அறிஞர்கள் இல்லை. க.நா.சு, வெங்கட் சாமிநாதன் என இருவர் அளித்த பங்களிப்பால் மட்டுமே சற்றேனும் நமக்கு மரியாதை எஞ்சியிருக்கிறது. ஆனால் அவர்கள் இங்குள்ள கல்வித்துறை அமைப்புக்களால் புறக்கணிக்கப்பட்டவர்கள். எந்தப் பின்புலமும் அற்றவர்கள். ஆகவே வலுவான குரலாக அவர்கள் தேசிய அளவில் எழ முடியவில்லை. மலையாளத்திற்கு சர்தார் கே.எம்.பணிக்கர், கெ.எம்.ஜார்ஜ், சச்சிதானந்தன் போன்றவர்களோ கன்னடத்திற்கு ராமச்சந்திர ஷர்மா, டி.ஆர்.நாகராஜ் போன்றவர்களோ வங்கத்திற்கு காயத்ரி ஸ்பிவாக், மீனாட்சி முகர்ஜி போன்றவர்களோ அளித்த பங்களிப்பை தமிழுக்கு ஆற்றும் ஒருவர் நமக்கு அமையவில்லை.


அதேசமயம் கீழ்மை நிறைந்த கல்வித்துறை மொண்ணைகளால் இங்குள்ள அசட்டு எழுத்துக்கள் முன்வைக்கப்பட்டு மிகப்பெரிய சேதம் விளைவிக்கவும்பட்டது. இன்றும் அதே நிலைதான். இந்திய இலக்கியத்திற்கான தேசிய அரங்குகளில் பங்கெடுக்கும் எந்தத் தமிழ் எழுத்தாளனுக்கும் தெரியும் வங்கம் உட்பட எந்த மொழியின் நவீன இலக்கியத்தை விடவும் தமிழிலக்கியம் ஒருபடி மேலானது என்று. ஆனால் இந்திய நவீனச்செவ்வியல் என திரட்டபட்ட தொகையில் தமிழுக்கு எவ்வகையிலும் இடமில்லை என்பதே இன்றைய நிலை.


TARAS

தாராசங்கர் பானர்ஜி



அப்படி திரண்டுவந்த ஒரு செவ்வியல் இன்று பொதுவாக எல்லா மொழிகளிலும் சென்று சேர்ந்துள்ளது. அதில் தாராசங்கர் பானர்ஜி, விபூதிபூஷன் பந்த்யோபாத்யாய, மாணிக் பந்தியோபாத்யாய, சரத்சந்திர சர்ட்டர்ஜி ஆஷாபூர்ணா தேவி, மகாஸ்வேதாதேவி, அதீன் பந்த்யோபாத்யாய போன்ற வங்கப்படைப்பாளிகள் இருப்பார்கள். பிரேம்சந்த், யஷ்பால், அக்ஞேய், கிரிராஜ் கிஷோர், ஸ்ரீலால் சுக்லா போன்ற இந்திப் படைப்பாளிகள் இருப்பார்கள்.


ராஜேந்திரசிங் பேதி, அம்ரிதாபிரீதம், இஸ்மத் சுக்தாய் போன்ற உருதுப் படைப்பாளிகளும் வி.ஸ.காண்டேகர், புபேன் கக்கர், நாமதேவ் தசால் போன்ற மராத்தியப் படைப்பாளிகளும், சிவராம காரந்த், எஸ்.எல்.பைரப்பா, அனந்தமூர்த்தி போன்ற கன்னடப் படைப்பாளிகளும் தகழி சிவசங்கரப்பிள்ளை, பஷீர், எஸ்.கே.பொற்றெக்காட், ஓ.வி.விஜயன். எம்.டி.வாசுதேவன் நாயர் .போன்ற மலையாளப் படைப்பாளிகளும் இருப்பார்கள் புதுமைப்பித்தனும் மௌனியும் சுந்தர ராமசாமியும் அசோகமித்திரனும் கி.ராஜநாராயணனும் இருக்கமாட்டார்கள். நாம் அவர்களைக் கொண்டு சேர்க்கவில்லை. நாம் கொண்டு சேர்த்தவர்கள் இந்திய அளவில் கேலிக்குரியவர்கள்.


K-M-George-

கே.எம்.ஜார்ஜ்


ஞானபீடப் பட்டியல் இந்தியநவீன செவ்விலக்கியம் என்றால் என்ன என்னும் வினாவுக்கான மிகச் சரியான விடை. மிகப்பெரும்பாலும் முக்கியமான படைப்பாளிகளுக்கே இது வழங்கப்பட்டுள்ளது. தமிழில் நம் பெரும் படைப்பாளிகளைக் கொண்டு சென்று சேர்க்க மிகப்பெரிய தடை இங்குள்ள திராவிடக் கருத்தியலால், சாதியரசியலால் சூழப்பட்டுள்ள நம் கல்வித்துறை. அசோகமித்திரன், கி.ரா போன்ற பெரும்படைப்பாளிகள் இங்குள்ளனர். அவர்களுக்காக ஒரு தேசியக் கருத்தரங்கோ ஒரு தொகை மலரோ எந்தப் பல்கலையாவது வெளியிட்டிருக்கிறதா என்று நோக்கினால் தெரியும் நாம் ஏன் இந்திய அளவில் கவனிக்கப்படவில்லை என.


என் தளத்தை ஓரிரு ஆண்டுகள் வாசிப்பவர்களே ஒர் இந்தியச் செவ்விலக்கியத் தொகையை இது முன்வைப்பதைப் புரிந்துகொள்வார்கள். இது இந்திய அளவில் சென்ற ஐம்பதாண்டு காலத்தில் திரண்டு வந்த செவ்விலக்கியத் தொகையில் இருந்து சிறிய ரசனை மாறுபாடுகளுடன் உருவாக்கப்பட்டது. நான் ‘கண்ணீரைப் பின் தொடர்தல்’ என ஒரு நூல் எழுதியிருக்கிறேன். அதுவே ஓர் இந்தியச் செவ்வியலை உருவாக்கும் முயற்சிதான்.


sachi

கெ.சச்சிதானந்தன்


தேசிய அளவில் கே.எம்.ஜார்ஜ் இந்திய நவீனச் செவ்விலக்கியத் தொகை என நான்கு பெருந்தொகுதிகள் வெளியிட்டிருக்கிறார். பேரா.இந்திரநாத் சௌதுரி, கே.சச்சிதானந்தன் போன்றவர்களின் கட்டுரைகள் மற்றும் தொகைநூல்கள் வழியாக தொடர்ந்து இந்தத் தொகைப் பணி நிகழ்ந்துவருகிறது. சாகித்ய அக்காதமி முன்னெடுக்கும் தேசியக் கருத்தரங்குகள் உண்மையில் இப்பணியையே ஆற்றுகின்றன.


ஆனால் இந்திய அளவில் இன்று இயல்பாகவும் தன்னிச்சையாகவும் இது நிகழவில்லை. தரமான இலக்கியங்களின் மொழியாக்கங்கள் அரசு சார்ந்த அமைப்புகளுக்கு வெளியே மிகக் குறைவாகவே நிகழ்கின்றன. அதையொட்டிய விவாதங்களுக்கான இடம் இன்றைய ஆங்கில நாளிதழ்கள் மற்றும் இதழ்களால் அளிக்கப்படுவது குறைந்தபடியே வருகிறது. ஆகவே நூல் விற்பனையகங்களால் உருவாக்கப்படும் விளம்பரப்பெருக்கு தான் இன்று இந்திய இலக்கியத்தின் தொகை என இளைய தலைமுறைக்கு அளிக்கப்படுகிறது.


இதைக் கடந்து ஒரு இந்திய இலக்கிய விவாதக்களம் உருவாகியாக வேண்டும். ஆங்கிலம் வழியாக இணையவெளியில் அது உருவானால் நன்று.


ஜெ


***


கால்கள் பாதைகள்


பட்டியல்கள்…



தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 19, 2017 11:36

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.