Jeyamohan's Blog, page 1651

April 17, 2017

வாசிப்புக் குற்றமும் விமர்சனத்தண்டனையும்

dostoevsky


மதிப்பிற்குரிய ஜெயமோகன் ஐயா அவர்களுக்கு,


நலம்தானே. ஒரு உலகப்பேரிலக்கியத்தைப் படிக்க வேண்டும் என்று முடிவு பண்ணி “குற்றமும் தண்டனையும்” படிக்க ஆரம்பித்தேன். ஒரு வாரமாக வேறு எதிலும் எந்த ஈடுபாடும் இல்லாமல் படித்தேன், கல்லூரிக்கு சரி வர செல்லாமல் கூட படித்தேன். தஸ்தயேவ்ஸ்கியின் படைப்புலகம் மனதை மிகவும் வருடும் வண்ணம் இருந்தது, மனித மனதை மிக ஆழமாக கிழித்து பார்க்கும் அளவுக்கு நுட்பமாகவும், நேர்த்தியாகவும் எழுதி இருந்தார். எந்த அளவுக்கு மனித மனதை பற்றி விரிவாக ஆராய்ந்தும் கண்டறிந்தும் எழுதியுள்ளார் என்று நோக்கினால் வியப்பாகவே உள்ளது.


ஒரு தனிமனிதனின் உள்ளத்தில் இருக்கும் எண்ணங்கள், மனதில் வீசுகின்ற ஒரு புயல் போல அவனை அது மிகவும் திண்டாட செய்கிறது. ஒரு தத்துவார்த்தமான உளவியல் சார்ந்த சிறந்த ஒரு புத்தகம்.


ரஸ்கோல்னிகோவ் என்ற இளைஞனின் மனதில் உள்ள ஒரு போராட்டமே இந்த நாவல் தரும் ஒரு தரிசனம். ஒரு குற்றத்தை செய்த ஒருவனின் உள்ளத்தில் எழும் பல கேள்விகளுக்கு அவனாக தேடி கொண்ட பதில்கள், அவன் இறுதி வரை அதை ஒரு குற்றமாக எண்ணவும் இல்லை. அவன் கொண்ட கொள்கைகளின்படி பார்த்தால் ஒரு மாபெரும் நன்மைக்கு செய்யும் செயல் ஒரு குற்றம் ஆகாது என்று தனக்கு ஒரு விளக்கம் அளிக்கிறான். ஆனால் இறுதியில் தன் குற்ற உணர்வை சோனியா மூலம் அறிகிறான். அவனது மன நிலையை ஆசிரியர் நுட்பமாக சித்தரிக்கிறார்.


பின் சோனியா எப்படிப்பட்ட ஒரு பெண் அவள், ஒரு தேவதை போலவே அவள் எனக்கு தோன்றினாள். என்னைக் கவர்ந்த பாத்திரமும் அவள் தான். அவள் இல்லையேல் ரோட்யாவும் ஸ்விட்ரிகைலோவ் போலத்தான் இறுதியாகத் தன் முடிவைத் தேடி இருப்பான். சோனியாவின் பாத்திரம் எனக்கு மேரி மெக்த்தலின் போலவே அமைந்தது என்று பட்டது, பாவப்பட்ட அந்த ஜீவனின் நிலை என் மனதில் மிகுந்த ஒரு தாக்குதலை நடத்தி விட்டது.


பின் லூசினின் வஞ்சகம், தற்பெருமை இது எல்லாம் அவனை ஒரு குறுகிய உள்ளம் படைத்தவனாக காட்டியது. லூசின் என்ற பெயர் கிறிஸ்தவத்தில் சாத்தானின் ஒரு பெயர் ஆகிய லூசிபையர்(Lucifer), என்று தோன்றியது. அது போலவே மிகவும் கீழ்த்தரமான வஞ்சகத்தையும் சோனியாவுக்கு எதிராக செய்தான். இறுதியில் தோற்றும் போனான்.


நீங்கள் ஒரு பேட்டியில் பேரிலக்கியங்களை வாசிக்கும் போது நாம் கட்டி இருக்கும் மனக் கோட்டைகள் எல்லாம் இடிந்து விடும் மீண்டும் அதை அந்த இடிந்தவற்றைக் கொண்டு தான் கட்டி எழுப்ப வேண்டும் என்று சொன்னீர்கள் அதை நான் இந்த நாவல் படித்து முடித்து உணர்ந்தேன். வேறு ஒரு பார்வை கிடைத்தது போல உணர்கிறேன். இன்னும் பல இடங்கள் மிகவும் ஆழமான அர்த்தம் கொண்டதாக இருந்தது.


எனக்கு சில சந்தேகங்கள் நான் இதை படித்து விட்டு இந்த நாவல் குறித்த விமர்சனங்கள் சில வற்றை பார்த்தேன். அதில் பலர் மிகவும் நுட்பமான பல இடங்களைப் பற்றி சொல்லி இருந்தனர். நான் மேலே சொன்னது போன்ற மேரி பற்றியும் பின் நாவல் முழுக்க இடம் பெறும் மஞ்சள் நிறம் பற்றி எல்லாம் எழுதி இருந்தனர் பின் ரஸ்கோல்னிகோவ் மற்றும் ஸ்விட்ரிகைலோவின் ஒற்றுமை பற்றி இதைப் பார்க்கும்போது நான் பல இடங்களை விட்டு விட்டோமோ என்று தோன்றுகிறது பல நுட்பங்களை நான் தவற விட்டு விட்டேன் என்றும் தோன்றுகிறது. இது குறித்து உங்கள் கருத்தை அறிய விரும்புகிறேன். ஒரு நாவல் அல்லது கதையின் நுட்பங்கள் மற்றும் நுண்உணர்வுகளை விமர்சனம் மூலமாக அடைவதை குறித்து உங்கள் கருத்து? ஒரு கதையில் வரும் எல்லா நுண்உணர்வை, நுட்பங்களையும் அடைவது எப்படி. நீங்கள் வாசித்துக் கண்டடையும் முறை பற்றியும் சொல்லுங்கள்


நன்றி

இப்படிக்கு,

உங்கள் மாணவன்,

பா. சுகதேவ்.

மேட்டூர்.


***


அன்புள்ள சுகதேவ்,


பொதுவாக தஸ்தயேவ்ஸ்கி போன்ற மேலைநாட்டுப்புகழ்பெற்ற படைப்பாளிகளைப்பற்றி மிகவிரிவான ஆய்வுகள் நமக்குக் கிடைக்கும். மேலைநாடுகளில் ஒருநூறாண்டாக அவை எழுதப்படுகின்றன. இங்கே அவற்றைப்பார்த்தும் பலர் எழுதியிருப்பார்கள். அந்நாவலின் அமைப்பு, அதன் அக்காலப் பண்பாட்டுப் பின்னணி, அதன் உளவியல் சூழல், அதன் மதம்சார்ந்த குறியீட்டுக்குறிப்புகள் ஆகியவற்றைப் பற்றி நாம் ஓரளவு அறிந்துகொள்ளவேண்டும். அதற்கு விமர்சனங்களை நாடவேண்டும். ஆனால் அந்த நுண் ஆய்வுகளை மிதமிஞ்சி வாசிப்பது நம்மை வெறும் கணக்கெடுப்பாளராக ஆக்கிவிடும். நம் சொந்த வாசிப்பை அழிக்கும்.


நாம் ஒரு குறிப்பிட்டப் பண்பாட்டுச்சூழலில் நின்றுகொண்டிருக்கிறோம். நமக்கென்றொரு வாழ்க்கை இருக்கிறது. ஆகவே நம் வாசிப்பு ஐரோப்ப்பிய வாசிப்பின் தொடர்ச்சியாக இருக்கவேண்டியதில்லை. நாம் நம்முடைய சொந்த கண்களால் தஸ்தயேவ்ஸ்கியைக் கண்டடையலாம். அதற்கு எவ்வளவு தேவையோ அவ்வளவுக்கு நாம் வாசித்தால்போதும். அதற்கு முதல்தேவை நாம் அறிந்த நம் வாழ்க்கையைக்கொண்டு தஸ்தயேவ்ஸ்கியை மதிப்பிடுவது. ரஸ்கால்நிகாஃப் அவன் அக்காவுக்கு எழுதும் அந்தக்கடிதத்தைப் புரிந்துகொள்ள நமக்கு ஏதாவது மேலதிக விமர்சனத்துணை வேண்டுமா என்ன?


நம் வாசிப்பு ‘போதாதோ’ என்றெல்லாம் கவலைப்படவேண்டியதில்லை. படைப்பின் முன் திறந்த மனத்துடன் நல்லுணர்வுகளுடன் நின்றால்போதும். கூர்ந்துவாசித்தால், வாசித்தவற்றைப்பற்றி தொடர்ந்து சிந்தித்தால் போதும். காலப்போக்கில் அது திறந்துகொள்ளும். நுணுகி அர்த்தம்பார்க்கும் பலர் வெறும் அறிஞர்கள். அவர்கள் சென்று தொடாத இடங்களெல்லாம் நமக்குத் திறந்துகொள்ளும்.


ஆகவே வாசகனாக தாழ்வுணர்வோ தளர்ச்சியோ கொள்ளவேண்டியதில்லை. ஆசிரியனுக்கும் வாசகனுக்கும் இடையே இருக்கவேண்டிய தொடர்பு அறிவுபூர்வமானது அல்ல, உணர்வுபூர்வமானது. இலக்கியக்கொள்கைகள் சார்ந்தது அல்ல, வாழ்க்கை சார்ந்தது.


ஜெ


***



தொடர்புடைய பதிவுகள்

செவ்விலக்கியங்களும் செந்திலும்
தல்ஸ்தோய் மற்றும் தாஸ்தயேவ்ஸ்கி நூல்கள்
மிகையுணர்ச்சி, அலங்காரம் என்பவை…
ஓஷோ – உடைத்து வீசப்படவேண்டிய ஒரு பிம்பம் – 3
தமிழில் வாசிப்பதற்கு…
அசடன்
குற்றமும் தண்டனையும்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 17, 2017 11:33

ஏழாம் உலகம் -கடிதம்

PicsArt_10-22-01.25.41


வணக்கம் ஜெ…


உங்கள் ஏழாம் உலகம் புத்தகம் படித்தேன், எப்படி உங்களால் அவர்கள் வாழ்கையை ஊடுருவி கண்டு எழுதினிர்கள் என்று வியப்பாக உள்ளது, எத்தனை குறையிருந்தாதுல் எப்படி அவர்களால் அவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்கையை வாழ முடிகிறது, நமக்கு எல்லாம் இருந்தும் எதோ ஒரு குறை சொல்லி வருத்தப்பட்டு கொண்டே இருக்கிறோம். குறிப்பாக குய்யன். அவர்களுக்கு ஒரு காதல் இருக்கிறது, அவர்களுக்குள்ளும் ஒரு தாய் இருக்கிறாள், இதை நாம் எப்போதாவது உணர்ந்து இருக்கிறோமா?


உங்கள் புத்தகம் எனக்கு அந்த உலகத்தை காட்டியது, எங்கள் பகுதியில் ஒரு பிச்சைக்காரன் இல்லை ஒரு உருப்படி இருகிறார் அவர் எப்போதும் அம்மா, சித்தப்பா, பெரியப்பா, 2000 நோட்டு போடுங்க என்று நக்கல் அடிப்பார், நான் தினமும் அந்த வழியாகத்தான் போகிறேன் ஆனால் ஏழாம் உலகம் படித்த பிறகுதான் அவரின் கிண்டல் என் காதிற்கு எட்டியது. நாம்ம யாருக்கு என்ன பாவம் செஞ்சோம் என்று வெகுளியாக பண்டாரத்தின் மனைவியை சொல்வது எதிலும் நிறுத்தி எடை போடுவது என்றே தெரியவில்லை. எருக்குவை காவல்துறையே கற்பழித்தால் வேறு எங்கும் போய் முறையிடுவது? எருக்கு அதுக்கு காலு இல்ல, அதுக்கு எதுக்குடா காலு தூக்கி கேரியரில் வை என்று சொல்லும் காவல்துறை அதிகாரி என்றைக்கும் இருக்க தானே செய்கிறார்கள். (அதுவும் இடுப்பு ஒடையும் அளவுக்கு).


Ezham-Ulagam-Wrapper---final


இடையே வரும் பாடல்கள் அற்புதம். அதில் இந்த வரியை எனக்காக எடுத்து கொண்டேன்.


“சித்தம் உலையல்லோ

சீவன் தீயல்லோ

நித்தம் எரியுதடி-என் கண்ணம்மா

நின்று கொதிக்குதடீ. “”


மாங்காண்டி சாமியாரை கார்ப்பரேட் சாமியராக மாற்ற எவ்வளவு முயற்சிகள், எல்லாவற்றையும் மௌனம் என்னும் ஆயுதத்தால் முறியடித்து வெற்றுவிட்டாரே அகிம்சை எத்தனை உறுதியானது.


முத்தம்மை பீ காட்டில் கற்பழிக்கபடுகிறாளே, மனிதன் மகளிருக்கு என்று கண்டு பிடித்த மகத்தான ஒன்று அவளுக்கும் தானே இருக்கிறது, அது கற்பழிப்பு தானே? பதினெட்டு ஈனி இருக்காளே எத்தனை கற்பழிப்பு நடந்து இருக்கிறது, இந்த சமூகத்திற்காக எருக்கு, முத்தம்மை இருவரின் வாழ்க்கை என்ன செய்தி சொல்கிறார்கள் என்று நினைத்தால் சிந்தனை எங்கெங்கோ முட்டி மோதி உடைபட்டு போகிறது. உயிர் வாழ்வதன் மகத்துவத்தை இந்த ஏழாம் உலகத்து மனிதர்கள் இடம் கற்றுக் கொள்ள வேண்டும். இப்போது எல்லாம் சாலை ஓரம் இருக்கும் அந்த ஏழாம் உலகத்து மனிதர்களை பார்க்காமல் கடந்து போக முடியவில்லை. வட்டார வழக்கு சொல்லுக்கு அகராதி கொடுத்தது சிறப்பு…


ஏழுமலை


***


அன்புள்ள ஏழுமலை,


அந்நாவலில் இருந்து நீண்டதொலைவுக்கு வந்துவிட்டேன். திரும்பிப்பார்க்கையில் அதை எழுதியநாட்கள் எங்கோ தெரிகின்றன. ஆனால் அந்தப் பாடல்வரி வேறு எவரோ பாடிக்கேட்டதுபோல உளமுருகச்செய்கிறது


ஜெ


***


http://ezhumalaimfm.blogspot.in


தொடர்புடைய பதிவுகள்

ஏழாம் உலகம்- கடிதங்கள்
என்னை வாசிக்கத் தொடங்குதல்
கதைகளின் வழி
மின் தமிழ் பேட்டி 2
பிறழ்வுகள்
துணை இணையதளங்கள்
ஏழாம் உலகம்- கடிதம்
நூறுநாற்காலிகளின் யதார்த்தம்
வாசிப்பும் எழுத்தும் எதிர்வினையும்
ஒளியுலகம்
ஏழாம் உலகின் பண்டாரம்
ஏழாம் உலகம்-கடிதம்
ஏழாம் உலகம்-கடிதம்
ஏழாம் உலகம்-ஓர் விமர்சனம்
ஏழாம் உலகம் கடிதங்கள்
ஏழாம் உலகம்- ஒரு பதிவு
ஏழாம் உலகம் இன்று
சந்திப்புகள் – சில கடிதங்கள்
ஏழாம் உலகம் – ஒரு கடிதம்
ஏழாம் உலகம் – விமர்சனம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 17, 2017 11:32

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–77

77. துயரழிமரச்சாயல்


அசோகவனிக்கு பார்க்கவனுடன் கிளம்பியபோது யயாதி அமைதியிழந்திருந்தான். பார்க்கவன் “அனைத்தையும் விளக்கி அரசிக்கு விரிவான ஓலையை அனுப்பியிருக்கிறேன்” என்றான். யயாதி எரிச்சலுடன் “அவள் அரசு சூழ்தல் கற்றவள் அல்ல” என்றான். “ஆம், ஆனால் இத்தகைய நிலைகளில் பெண்டிர் அனைவரும் ஆண்களைவிட பன்மடங்கு நுண்ணுணர்வை காட்டுவர்” என்றான் பார்க்கவன். யயாதி பெருமூச்சுடன்  “ஆம், அதைவிட நுண்ணுணர்வை தேவயானியும் காட்டுவாள். வேட்டைவிலங்கு இரைவிலங்கைவிட நுண்மையும் விரைவும்கொண்டது என்பதனால்தான் காடு வாழ்கிறது” என்றான்.


“ஆம், ஆனால் என் நம்பிக்கை என்னவென்றால் பதினாறாண்டுகளுக்கு முன்பு அரசி சர்மிஷ்டைக்கு முதல் மைந்தன் பிறந்த செய்தியை ஒற்றர் சென்று சொன்னபோது நிகழ்ந்ததுதான்” என்றான் பார்க்கவன். அவர்கள் மாற்றுருவில் புரவிகளில் மலைப்பாதையினூடாக சென்றுகொண்டிருந்தனர். அந்தியெழுந்துகொண்டிருந்த வேளையில் அவர்களது புரவிகளின் குளம்போசை சொற்களுக்குத் தாளமென ஒலித்தது. முதுவேனிலின் வெம்மை தணியும்போது எழும் புழுதிமணம் இனிய தின்பொருள் எதையோ நினைவூட்டியது. தழையுடன் சேர்த்து அவிக்கப்படும் பொருள். காற்றிலா மரங்களில் தழைக்குவைகள் சோர்ந்து தொய்ந்திருந்தன. சிறகோய்ந்த பறவைகள் வழுக்கியவைபோல செல்லும் மங்கிய வானம்.


“அதை முழுமையாக நான் உங்களிடம்  இதுவரை சொல்லவில்லை. அனைத்தும் இயல்பாக சீரடைந்தன என்றே குறிப்பிட்டேன். அன்று செய்திகேட்டு சினந்து கொந்தளித்த பேரரசி தன் தோழி சாயையை அழைத்து அதை உசாவியறிந்து வரும்படி ஆணையிட்டார். அதற்கு மறுநாள் தீர்க்கதமஸின் குருதியில் எழுந்த ஐந்து தொல்குடி அரசர்களுக்கான தனி அவை ஒன்று அரண்மனையில் கூடவிருந்தது. அதையொட்டி விழவும் விருந்தும் ஒருங்கமைக்கப்பட்டிருந்தன. பேரரசியால் அதிலிருந்து உள்ளத்தை விலக்க இயலவில்லை.”


“ஓசையற்ற நுண்மையால் சாயை என்றும் எண்ணியிரா விரைவால் வியாஹ்ரை என்றும் அழைக்கப்பட்டவளாகிய அணுக்கத்தோழி காமவர்த்தினி பேரரசியின் தோற்றம்கொண்டு அசோகவனிக்கு வந்தாள். இங்கே காவலனின் அரண்மனையில் தங்கி அரசி சர்மிஷ்டையை அழைத்துவரச்சொல்லி அவள்பெற்ற மைந்தனின் தந்தை எவர் என்று உசாவினாள். அதை சொல்ல இயலாதென்று அரசி சொன்னபோது அவரை கைநீட்டி அறைந்தாள். கீழே விழுந்த அரசியை காலால் உதைத்தாள். கூந்தலைப்பிடித்துச் சுழற்றி சுவரோடு சேர்த்து நிறுத்தி உலுக்கி சொல்லாவிட்டால் அவரும் அவர் குழந்தையும் குருநகரியின் செண்டுவெளியில் கழுவிலமர நேரிடுமென அச்சுறுத்தினாள்.”


“அரசே, அருள்வடிவாக பேரரசி தோற்றமளிக்கையில் அவர்களின் கொடியமுகம் அணுக்கத்தோழி சாயையின் வடிவில் வெளிப்படுகிறதென்பதை அறிந்திருப்பீர்கள். பாரதவர்ஷமே இன்று அத்தோழியைத்தான் அஞ்சிக்கொண்டிருக்கிறது. நிகரற்ற கொடுமை நிறைந்த நெஞ்சம் கொண்டவள், அளியிலாதவள், எதையும் அஞ்சாதவள் அவள் என்கிறார்கள். சாயை என்று ஒரு தோழியே இல்லை என்றும் அது பேரரசியே அவ்வாறு உருமாறி வெளிப்படுவதுதான் என்றும் குடிகளில் பெரும்பாலானவர்கள் நம்புகிறார்கள். அரசி வாய்திறக்க மறுத்தபோது தன் ஏவலரை அழைத்து அவரையும் குழந்தையையும் தேரிலேற்ற ஆணையிட்டாள் சாயை.”


“அரசி அதன்பின்னரே நெக்குவிட்டார். கதறியபடி அவள் கால்களில் விழுந்து அங்கே வந்து தங்கிச்சென்ற முனிவர் ஒருவருக்கு இரவுப்பணிவிடை செய்யநேர்ந்தது என்றும் அதன் விளைவாகப் பிறந்த மைந்தன் அவன் என்றும் சொன்னார். அருகே இருந்த அகல்சுடரை எடுத்துக் காட்டி அனல்தொட்டு ஆணையிட சாயை கூறினாள். அவ்வாறே அச்சுடர்தொட்டு அரசி ஆணையிட்டார். அம்முனிவரின் பெயரென்ன என்று கேட்கவில்லை என்றும் கேட்கலாகாதென்று ஆணையிடப்பட்டதென்றும் அரசி சொன்னார். சாயை காவலர்தலைவனிடம் அந்த முனிவர் எவர் என்று கேட்டாள். அதை நான் மட்டுமே அறிவேன் என்று அவன் சொல்ல குருநகரிக்குத் திரும்பிவந்து என்னிடம் கேட்டாள்.”


“திருவிடத்தைச் சேர்ந்த அகத்தியரின் முதல்மாணவராகிய திருணதூமர் என்று நான் சொன்னேன். பிறர் அறியாமல் அசோகவனிக்கு வந்து தங்கி இமையமலைக்குச் சென்றார்கள் என விளக்கினேன். சாயை அதை நம்பவில்லை என்றே எண்ணினேன். புலியென விழிஒளிர உறுமிவிட்டு அவள் திரும்பிச்சென்றாள். அரசியை அங்கிருந்து உடனடியாக எங்காவது அறியாக்காட்டுக்கு கொண்டுசென்றுவிட ஆணையிடவேண்டுமென எண்ணினேன். ஆனால் ஓலையை பருந்திலேற்றுவதற்கு முன் என்ன நிகழ்கிறதென்று நோக்கலாமென்று தயங்கினேன்.”


“ஏனென்றால் பேரரசியின் ஒற்றர்வலையின் விரிவை நான் அறிவேன். அவர்விழிகள் செல்லாக் காடுகள் என ஏதுமில்லை. அஞ்சி முந்திச்சென்று அரசியை அனுப்பினால் அவ்வாறு அனுப்பியதே அனைத்துக்கும் சான்றென்று ஆகக்கூடுமெனத் தோன்றியது. பேரரசியிடம் சாயை என்ன சொல்லப்போகிறாள் என்று அறிய எவ்வழியும் இல்லை. குருநகரியின் பேரரசியின் தனியறைக்குள் செவிசெலுத்தும் ஒற்றர் எவருமில்லை. காத்திருப்பதன்றி வேறுவழியேதுமில்லை. அரசே, அந்த அரைநாள் பொழுதில் நான் நூறுமுறை இறந்தெழுந்தேன்.”


“பேரரசியிடம் சாயை பேசி முடித்தபின் இருவரும் கிளம்பி கொற்றவை ஆலயத்தில் அரசியரின் பூசனைவிழவுக்குச் சென்றனர். மறுநாள் காலையில் குடிப்பேரவை, அன்று மாலை செண்டுவெளிவிழா. அசோகநகரிக்கு ஆணைகள் ஏதும் செல்கின்றனவா என்று பார்த்துக்கொண்டிருந்தேன். கொலைவாளுக்குக் கீழே தலைவைத்து கண்களை மூடி காலத்தை எண்ணியபடி காத்திருப்பதுதான் அது. மூன்றுநாட்களுக்குப் பின்னரே ஒன்றும் நிகழவில்லை என்பதை என் உள்ளம் உணரத்தொடங்கியது. ஆயினும் ஒவ்வொன்றையும் நுணுகி நோக்கியபடி காத்திருந்தேன். எங்கோ அறியாவிழி ஒன்று நோக்கி காத்திருக்கிறது என்னும் உணர்வு. நீங்கள் மீண்டும் அசோகவனிக்குச் செல்வதைப்பற்றி பலமுறை பேசிக்கொண்டிருந்தீர்கள். மைந்தனை சந்தித்தாகவேண்டும் என்று துடித்தீர்கள். உங்களை காமரூபத்தில் நிகழ்ந்த பெருங்களியாட்டுக்கு இரண்டுமாதங்களில் திரும்பலாம் என பொய்சொல்லி அழைத்துச்சென்றது அதனால்தான்.”


“நாம் திரும்ப ஓராண்டாகியது. அதனால் சினம்கொண்டு நீங்கள் என் மேல் வசைபொழிந்தீர்கள். என் ஒற்றர்கள் செய்தியனுப்பிக்கொண்டே இருந்தனர். ஒன்றும் நிகழவில்லை என ஓராண்டுக்குப் பின்னரே உறுதிகொண்டேன். உங்கள் இரண்டாவது மைந்தனின் அன்னமூட்டு விழவுக்கான செய்தி வந்தபோதுதான் நாம் திரும்பிவந்தோம். ஒவ்வொன்றாக ஆராய்ந்தபின் உறுதிகொண்டேன், அரசி சொன்னதை சாயை நம்பிவிட்டாள் என. அவள் சொன்னதை பேரரசியும் ஏற்றுக்கொண்டார் என்று.”


“அந்த ஓராண்டு எனக்கு கற்பித்தது ஒன்றுண்டு. பெரும்பாலும் அஞ்சியும் பதறியும்தான் நாம் நம்மை வெளிக்காட்டிக்கொள்கிறோம். விழைவனவற்றால் மெய்மை மறைக்கப்படுவதிலிருந்து எந்நுண்மதியாளருக்கும் விலக்கில்லை. பேரரசி தன்னை பேரழகி என்றும் பாரதவர்ஷத்தில் நிகரகற்ற பெண் என்றும் எண்ணுகிறார்கள். அழகும் அறிவும் நிலையும் குறைந்த அரசி சர்மிஷ்டையை நீங்கள் விழையக்கூடுமென்ற எண்ணமே அவர்களின் நெஞ்சிலெழாதது அதனால்தான். அவர்களின் அந்த தன்னம்பிக்கையே நமக்கு காப்பு. பட்டுநூலென மிகமெல்லியது. ஆனால் உறுதியானது. நாம் அதன்மேல் நம்பி நடந்துசெல்லலாம்” என்றான் பார்க்கவன்.


“பதினாறாண்டுகளாக இது நிகழ்ந்துகொண்டிருக்கிறதென்பதே இது சீராக அமைந்துவிட்டது என்பதற்கான சான்று. பதினாறாண்டு என்பது நெடுங்காலம். நீர் ஓடித் தடம் கண்டு ஓடைகளாகி நிலவடிவென்றே ஆகிவிடுவதுபோல ஒவ்வொன்றும் அதன்போக்கில் முற்றமைந்துவிட்டிருக்கின்றது” என்றான்.


யயாதி சிலகணங்களுக்குப்பின் “தேவயானியின் அந்நம்பிக்கையே இப்போது எனக்கு அச்சமூட்டுகிறது. அது குலைந்தால் அவள் கொள்ளும் சினம் எப்படிப்பட்டதாக இருக்கும்?” என்றான். பின்னர் தலையை அசைத்து “சுக்ரரின் மகள்… இருளில் நாகத்தை கால்தொட்டது போன்றது அவ்வெண்ணம் அளிக்கும் அச்சச்சிலிர்ப்பு…” என்றான். பார்க்கவன் ஒன்றும் சொல்லவில்லை. இருவரின் புரவிக்குளம்போசைகள் மட்டும் கேட்டுக்கொண்டிருந்தன. அப்போது அவை அவர்களின் சொல்லின்மையின் தாளமாக ஆகிவிட்டிருந்தன.


tigerஓடையொன்றின் கரைக்குச் செல்வது வரை யயாதி ஒன்றும் சொல்லவில்லை. எண்ணங்கள் நிறைந்து ததும்பியவை மட்டுமே சொல்லாவது அவன் இயல்பென்பதை அறிந்த பார்க்கவனும் ஒன்றும் உரையாடாமல் காட்டை நோக்கியபடி வந்தான். ஓடையின் ஓசை தொலைவில் கேட்கத் தொடங்கியதுமே யயாதியின் புரவி விடாயை அறிவிக்க மெல்ல கனைத்தது. ஆம், நிறுத்துகிறேன் என்று சொல்ல அவன் அதன் நீள்கழுத்தை கையால் தட்டினான். நீரோடை சிறிய அருவியாகப் பொழிந்து மலையிறங்கியது. வேர்ப்புடைப்புகளில் அது வளைந்துவழிவதன் ஒளியலை இலைகளில் நெளிந்துகொண்டிருந்தது. யயாதி புரவியை நிறுத்துவதற்குள் அதுவே நின்றுவிட்டது.


அவன் இறங்கி ஓடையை அணுகினான். புரவி அணுகி பெருமூச்சுவிட்டபடி குனிந்து நீர் அருந்தி கழுத்தும் விலாவும் சிலிர்க்க வால் சுழற்றியது. பார்க்கவனின் புரவி அதனருகே வந்து தோள்சேர்ந்து நின்று நீர் அருந்தியது. ஓடைநீரை அள்ளி முகம் கழுவி தலையிலும் விட்டுக்கொண்டு வேர்மீது யயாதி அமர்ந்தான். பார்க்கவன் முழங்காலளவுநீரில் நின்று கால்களால் அளைந்துகொண்டிருந்தான். “எனக்கு ஏன் சர்மிஷ்டைமேல் காதலெழுந்தது என்பதைப்பற்றி நீ வியந்துகொண்டதில்லையா?” என்று யயாதி கேட்டான்.


அவ்வாறு எண்ணியிராதகணத்தில் கேட்பது அவன் வழக்கம் என்று அறிந்திருந்தாலும் பார்க்கவன் திடுக்கிட்டான். “அது எங்குமுள்ளதுதானே?” என்றான். “கிடைக்கும் பெண்களை எல்லாம் விரும்புபவன் ஆண் என்ற பொருளிலா?” என்று யயாதி கசப்புச் சிரிப்புடன் கேட்டான் யயாதி. “இல்லை என நீங்களே அறிவீர்கள், அரசே” என்றான் பார்க்கவன். “அஸ்வாலாயனரின் காவியங்களில் பெருநதிகளின் மிடுக்கைவிட சிற்றோடைகளின் எளிமையே அழகென்று சொல்லப்பட்டுள்ளது.” அதை கேட்காதவன்போல யயாதி “பெண்களை நாம் விரும்புவது ஆடைகளை விரும்புவது போலத்தான்” என்றான். “அணிமிக்கதாயினும் பெருமதிப்புகொண்டதாயினும் நமக்குப் பொருத்தமான ஆடையே நம்மை கவர்கிறது.”


“நல்ல ஆடை என்பது நம்மில் ஒருபகுதியென்றாவது. நம்மை நாம் விழையும்படி காட்டுவது. நம் குறைகளை மறைத்தும் நிறைகளை மிகையாக்கியும் சமைப்பது” என்றான் யயாதி. மீண்டும் எண்ணநீட்டம் அறுபட்டு கைவிரல்களை காற்றில் சுழற்றி எதையோ வரைந்தான். “பெண்ணழகென்று நான் விழைந்த எதையுமே இவளிடம் நான் காணவில்லை. மீண்டும் மீண்டும் நான் எண்ணி வியந்த ஒன்றுண்டு. அவளை நான் நெடுநாள் உளம்கொண்ட பின்னரே நேரில் கண்டேன். ஆனால் மீண்டும் கண்டபோது அவளை நான் அடையாளம் காணவே இல்லை. பிறிதொருமுறை எவரும் கண்டுகொள்ளாத தோற்றம். அவளை தேவயானி முழுமையாகவே மறந்துவிட்டமைகூட அந்தத் தோற்றத்தால்தான்” என்று தொடர்ந்தான்.


முதல்முறை அவளை ஆலயத்தில் சுடரொளியில் பார்த்துவிட்டு மீண்ட அந்நாளை நினைவுறுகிறேன். மண்ணகல் சுடரால் அழகுகொள்வதுபோல அவள் தன் விழிகளால் எழிலுற்றிருந்தாள். அவ்விழிகளையே அன்று முழுக்க எண்ணிக்கொண்டிருந்தேன். அரண்மனையில் அவ்விரவில் அந்த விழிகளை எண்ணி எண்ணி பிறிதொன்றையும் எண்ணவியலாதவனாக ஆகி தவித்தேன். உளக்காடி விழிமுன் அப்படி அழியா அணையா ஓவியமென நின்றிருக்கமுடியுமா என்று திகைத்தேன். எங்கும் நிற்கவோ அமரவோ படுக்கவோ முடியாத பெருந்தவிப்பு. அவ்வண்ணம் ஒன்றை அதற்குமுன் அறிந்திருக்கவே இல்லை.


நான் ஏங்கிய முதல்வசந்தம் அதுவா என வியந்தேன். அதுவெனில் நான் நல்லூழ் கொண்டவன் என மகிழ்ந்தேன். ஆனால் இரவு செல்லச்செல்ல அந்தத் தவிப்பு தாளமுடியாதவனாகி அதிலிருந்து வெளியேற முயன்றேன். எட்டுபக்கமும் கரிய கோட்டைச்சுவரால் முற்றிலும் மூடப்பட்டிருப்பவன்போல உளம் திணறினேன். இத்தனை ஆண்டுகளுக்குப் பின்னரும்கூட அவ்விரவின் கொந்தளிப்பை என்னால் துளிகுறையாமல் மீட்டெடுக்க முடிகிறது. காலம் செறிந்து பேரழுத்தம்கொள்ளும் அத்தகைய பொழுதுகள் வாழ்க்கையில் மிக அரிதாகவே எவருக்கும் நிகழும்.


கணங்களாக காலத்தில் இருப்பது. ஒவ்வொரு எண்ணத்தையும் தனித்தனியாக அறிவது. அப்போது அறிந்தேன் நாம் எண்ணங்களில் ஒழுகுவதில்லை என. நீர்த்துளிகள் உதிரும் ஒலிபோன்றவை எண்ணங்கள். ஒவ்வொரு ஒலியும் ஒன்றுபோல் பிறிதொன்று என முதலில்தோன்றும். மிகச்சிறிய மாறுபாடு கொண்டிருப்பது பின்னர் தெரியும். மாறுபாடுகள் பொருளற்றவை என்றும் ஒன்றே ஒழியாது நிகழ்கிறது என்றும் அதன்பின்னர் அறிவோம். உள்ளம் என்பது வெறும் மாளாச்சுழல்தான் என்றும் நம் இருப்பு என்பது பொருளற்ற மீள்நிகழ்வே என்றும் அறிகையில் நாம் தனிமையிலும் இருளிலும் இருக்கலாகாது. அத்தனிமை முழுத்தனிமையாகும். இருள் கடுவெளிப்பேரிருளென்றாகும்.


அந்த விடியலைப்போல் பிறிதொன்று எனக்கு அதன்பிறகு வாய்த்ததில்லை. முதல்பறவைக் குரலெழுந்தபோது இருளுக்குள் ஓர் ஒளிக்கீற்று கீறிச்சென்றதுபோல அதை கண்களால் கண்டேன். துயில்நீப்பும் நரம்புகளின் இறுக்கமுமாக நான் நோயா மயக்கா கனவா என்றறியா நிலையில் இருந்தேன். பின்னர் விடிவெள்ளியை கண்டேன். அது நுனிநாவால் கூரம்பின் முனையை தொடுவதுபோல சுவைத்தது, மெய்கூசச் செய்தது. பின்னர் உடல்குளிரப் பொழியும் குளிரென ஓர் இசை. அது புலரியின் செவ்வொளி.


பொற்கதிர்கள் இலைகள் நடுவே தோன்றி நீண்டு பரவியபோது நான் உருகிக்கொண்டிருந்தேன். காலை தூக்கி வைத்தபோது நெடுந்தொலைவு வரை வழிந்துகிடந்த என்னை இழுத்துக்கொண்டு செல்லவேண்டியிருந்தது. சோலைக்குள் இறங்கிச்சென்றேன். மரங்களினூடாக உலர்ந்த கசந்த வாயும் அனல்கண்ட விழிகளும் குடைச்சலெடுக்கும் மூட்டுகளுமாக தளர்ந்தநடையில் சென்றேன். என்மேல் இளங்கதிரின் ஒளி முழுமையாக பொழிந்தது. பற்றி எரிந்து சுடராகி தழைந்து குதித்தெழுந்து அலையாடி நின்றேன். பின்னர் நெடுநேரம் கழித்து என்னை உணர்ந்து மெல்ல அமர்ந்து கண்கசிந்து வழிய நெஞ்சு விம்மி விம்மி அதிர அழுதேன். அழுந்தோறும் என் முடிச்சுகளனைத்தும் அவிழ நெடுநேரம் அங்கு நின்று அழுதுகொண்டிருந்தேன்.


அதன்பின் பிறிதொருவனானேன். கண்கள்மேலிருந்து ஒரு மெல்லிய ஆடையை உரித்தெடுத்ததுபோல காட்சிகள் அனைத்தும் துலக்கம் கொண்டன. காற்றிலாடிய இலைகளின் வலைநரம்புகளை காணமுடிந்தது. இலைத்தண்டிலூர்ந்த பச்சைப்புழுவின் ஒவ்வொரு மயிரும் கண்ணுக்குத் தெரிந்தது. புலன்களனைத்தும் பன்மடங்கு கூர்மைகொண்டன. சருகின்மேல் சிற்றுயிர் ஒன்று ஊர்ந்து ஏறுவதை கேட்கும் செவிகள் வாய்த்தன. காற்றில் வந்த இளம்புழுதிமணமும் நீராவிமணமும் பச்சிலைமணமும் தனித்தனியாக நாசியை வந்தடைந்தன. என்னுள் வேட்டைவிலங்கொன்றும் இரைவிலங்கொன்றும் இருமுனைகளில் மயிர்சிலிர்த்து புலன்கூர்ந்து அமர்ந்து ஒன்றை ஒன்று கண்காணித்தன.


நான் அரசன். உடனே அவளை அழைத்துவரும்படி ஆணையிட்டிருக்க முடியும். நீ என்னிடம் அவ்வெண்ணம் என் உள்ளத்தில் எழுந்ததுமே அவளைப்பற்றி பேசத்தொடங்கிவிட்டிருந்தாய். ஆனால் என்னால் அவளை அணுகுவதைப்பற்றி எண்ணவே முடியவில்லை. எனவே நீ என்னிடம் அவளைப்பற்றி சொன்ன ஒவ்வொரு சொல்லும் கசந்தது. உன்னை கடிந்து விலக்கினேன். என் வாழ்வில் நீயில்லாது தனித்திருக்கவேண்டுமென நான் விழைந்த தருணம் அது ஒன்றே. ஆனால் தனித்திருக்கையில் என்னுள் எழுந்த அனலால் தவித்து மீண்டும் உன்னிடம் வந்தேன். அவளைப்பற்றி நீ பேச நான் விழையவில்லை. பிறிதெதையாவது நீ பேசினால் என் உள்ளம் அதில் ஒன்றவில்லை.


ஏன் அவளிடம் என்னை கொண்டுசென்று வைப்பதை அத்தனை அஞ்சினேன்? அவள் என்னுள் எழுந்த பேருருவை நேரில் கொண்டிருக்கமாட்டாள் என்பதனாலா? வெறுமொரு பெண்ணென அவளைக் காண்பது நான் தவமிருந்து பெற்ற அமுதை நீரென்றாக்கிவிடும் என்பதனாலா? அவளிடம் நான் என் விழைவை எவ்வண்ணம் சொல்லமுடியும்? தோழனோ பாங்கனோ சொல்வது என் தனிமைக்குள் ஊடுருவுவது. அவ்வெண்ணமே உளம்கூசச் செய்தது. அவள் தோழி சொல்லலாம். அது முறைமை சார்ந்தது. அது மேலும் கூசவைத்தது. கவிஞர் சொல்லலாம், அது வெறும் அணிச்சொல் என அப்போது பட்டது.


எப்படி சொன்னாலும் அது நானிருக்கும் நிலைக்கு வந்தடையாத வெற்றுச்சொல்லே. சொல் ஒன்றை எடுத்து அதற்கு நிகராக வைப்பதன் இழிவு என்னை குறுகச்செய்தது.   அவளிடம் என்னை சொல்லும் தருணத்தை நான் என்னுள் நிகழ்த்திக்கொள்ளவே இல்லை. அவ்வெண்ணம் எழுந்ததுமே பதறி விலகி பிறிதொன்றுக்கு செல்வேன். பெய்தொழியாது இடிமுழக்கி மின்னிக் கிழிபட்டுக்கொண்டே இருந்தது கருவுற்றுக் கருமைகொண்ட வானம். பின்னர் அவளிடம் அதை சொல்லவே போவதில்லை என எண்ணி அத்தன்னிரக்கத்தில் கரைந்து விழிநீர் வடிய அமர்ந்திருந்தேன். தன்னை உணர்ந்து எழுந்து  ‘எத்தனை இனிமை’ என வியந்தேன்.


உளமொரு நாவென தித்திப்பில் அளைந்தபடியே இருந்த நாட்கள். நான் விழைந்தது அதுவே என்றறிந்தேன். அக்கணங்கள் அரியவை, சிறிய அசைவில் மலர்க்கிளை ஏந்திய பனித்துளிபோல பொலபொலவென உதிர்ந்துவிடுபவை என உணர்ந்தேன். எனவே என் உள்ளத்தை பொத்திப்பொத்தி அசைக்காமல் கொண்டுசென்றேன். அக்கணம் பொழிந்தழியக்கூடும், அவ்வாறன்றி அமையாது, ஆனால் அதுவரை என் வசந்தம் நீடிக்கட்டும். எக்கணம் எக்கணம் என சிலநாட்கள். அங்கிருந்தால் ஏதேனும் ஆகிவிடும் என்று அஞ்சியே மீண்டும் அவளைப்பார்க்காமல் குருநகரிக்கு வந்தேன். பித்தன் என இங்கிருந்தேன். கேட்பதெல்லாம் இசையாகவும் கவிதையாகவும் ஆயின. நா உண்பதற்கு எப்போதும் இனிப்பை விழைந்தது. புலரியும் மாலையும் உச்சிப்பொழுதின் உருகும்வெயிலும்கூட பேரழகுடன் என்னைச் சூழ்ந்தன. இரவுகளில் விண்மீன்கள் வெளித்த வானம் என்னை மின்னிமின்னி நோக்கியது.


பின்னர் அக்கணம் உதிரவே போவதில்லை என எண்ணலானேன். அந்த நீர்த்துளி என் தளிர்முனையில் நின்று ஒளிநடுங்கி ததும்பிக்கொண்டே காலத்தை கடக்கும். இறுகி ஒரு முத்தாகும். தாமரையில் மூங்கிலில் மட்டுமல்ல, மானுடரிலும் முத்து விளைவதுண்டு. முத்து விளையக்கூடுமென்பதனால் அத்தனை சிப்பிகளும் முத்துச்சிப்பிகளாகின்றன. முத்து நிகழ்ந்தது பிறவற்றிலிருந்து பிரிந்து நிற்பதில்லை. அதன் அமைதி வலியிலும் தவத்திலும் எழுந்தது. அகல்விளக்குக்குள் புகுந்து சுடர் ஒளிந்திருப்பதே முத்துச்சிப்பி. ஒளியை அது மட்டுமே அறியும்.


ஆனால் எண்ணியிராதபடி அது நிகழ்ந்தது. நான் மீண்டும் மீண்டும் அசோகவனிக்கு சென்றுகொண்டிருந்தேன். குருநகரியில் சிலநாட்கள் நீளும்போது அவளை பார்க்கவேண்டுமென்று தோன்றும். என் உளம்கொண்ட அவள் ஓவியம் சற்றே மங்கலாகிவிட்டிருப்பதைப் போல. அல்லது இடையே உள்ள தொலைவு மிக அகன்றுவிட்டதைப் போல. கிளம்பவேண்டும் என்னும் எண்ணம் வந்ததுமே அதனுடன் போராடத் தொடங்குவேன். உளநடுக்குடன் அதை தவிர்ப்பேன் முதற்சிலநாட்கள். பின்னர் உருவளர்ந்து அருகணைந்திருக்கும் அதை உந்தி உந்தி அப்பால் நிறுத்துவேன்.


அதற்கு அடிபணியும் ஒருகணம் உண்டு. அப்போது அத்தனை சித்தக்கட்டுகளும் தெறிக்கும். காற்றில் அலைபாயும் சருகு எப்போது விண்ணிலெழ முடிவெடுக்கிறதோ அதை நிகர்த்த ஒருகணம். மறுகணமே உடலெங்கும் ஒரு துடிப்பு படர்ந்தேறும். வெளியே பாய்ந்து புரவியில் ஏறி பிறிதொரு எண்ணமில்லாமல் பாய்வேன். காற்றில் விழுந்துகொண்டே இருப்பேன். அசோகவனியில் சென்று மோதிவிழுவேன். அவளைப் பார்க்கும் கணம் வரை பெருகும் பதற்றம். அவளை நோக்க அரண்மனையின் உப்பரிகை ஒன்று உகந்தது. அங்கு சென்று நின்றிருப்பேன். நூறுமுறை உள்ளே வந்தும் வெளியே சென்றும் தவித்து எரிந்து. பின் அவள் தெரிவாள்.


எப்போதுமே அது ஓர் வண்ண அசைவுதான். உடைவண்ணம், உடல்வண்ணம். முதற்கணம் அவள் எளிய பெண். பின் நுரைபெருகியெழும் உள்ளம் அவளை அள்ளி அள்ளி நிரப்பிக்கொள்ளும். அதுவிழைந்த ஒருத்தியை வரைந்து அவள்மேல் பதிக்கும். அங்கு பேரழகி ஒருத்தி நின்றிருப்பாள். நெஞ்சைப்பற்றியபடி தூண்மறைவில் நோக்கி நின்றிருப்பேன். சிலதருணங்களில் விம்மி அழுதிருக்கிறேன். பின்னர் மெல்ல தளர்ந்து திரும்புவேன். அங்கு வந்து சேர்வதுவரை என் உடல் உதறி காற்றில் பறக்கவிட்ட எடை முழுக்க மீண்டுவந்து என் தோளில் இடையில் தொடையில் கணுக்கால்களில் அழுத்தும்.


உள்ளறைக்குச் சென்று மஞ்சத்தில் படுத்துக்கொள்வேன். எங்கோ விழுந்துகொண்டிருப்பேன். எங்கோ மிதந்துகொண்டுமிருப்பேன். இருப்பு என்பது இவ்வண்ணம் அலைசுடராக கலையும் புகையாக ஆகுமென்றால் உடலென்பதற்கு ஏது பொருள்? காதலை இளமையிலேயே அடையவேண்டும், இந்த முதிய உடல் அவ்வெம்மையையும் விசையையும் தாளமுடியாது. கிளைதாழக் காய்ப்பவை இளமரங்கள், முதுமரக்கனிகள் இனிமையும் கசப்பும் செறிந்து சிறுத்தவை.


ஈராண்டுக்குள் எட்டுமுறை அசோகவனிக்கு சென்றேன். முதலில் மாதம் ஒருமுறை. பின்னர் அவ்வுணர்வெழுச்சி அணைகிறதா என்னும் ஐயம் எழுந்தது. அது அணைந்தால் அவ்வினிமையை இழப்பேன் என்று தோன்றவே அடிக்கடி செல்லலாலேன். செல்லும்வழியின் ஒவ்வொரு மரமும் நன்கறிந்தவையாக ஆயின. அவற்றுடன் நான் பகிர்வதற்குரிய மந்தணம் ஒன்றிருந்தது. மந்தணம்பகிர்பவர்களின் நட்பு இறுகியது. அத்தொலைவு மிகக்குறுகிவந்து நான்கு பாய்ச்சலில் அங்கு சென்று சேர்வேன் என்றாகியது.


அந்நாளில் ஒருமுறை அரண்மனையின் பின்பக்கச் சோலையில் அசோகமரத்தின் அடியில் நின்றிருந்தேன். அங்கிருந்து அன்னையின் ஆலயம் செல்வதைப்பற்றி எண்ணிக்கொண்டிருந்தேன். புதர்கலையும் ஒலி கேட்டு திரும்பி நோக்கியவன் மிக அருகே நேர்முன்னால் அவளை கண்டேன். கையில் பூக்கூடையுடன் நின்றிருந்தாள். முள்ளில்சிக்கிய ஆடையை இழுத்த கையும் அதன்பொருட்டு திரும்பிய தோள்களும் அசைவிழந்து சிலைக்க விழிகள் விரிந்து திகைப்பு நிறைந்திருக்க.


என் உடல் பதறிக்கொண்டிருந்தது. எண்ணங்கள் என ஏதுமில்லை, விழிகளே உள்ளமும் ஆகிவிட்டிருந்தன. அவள் தோளில் மெல்லிய தோல்வரிகள் மணல்மின் கொண்டிருந்தன. வளைந்தெழுந்த சிறிய மேலுதடின் மீது வியர்வை பனித்திருந்தது.  அவள் விம்மினாள், அல்லது அவ்வொலி என் உள்ளத்தால் உணரப்பட்டதா? நான் விழிவிலக்கியதும் என் உடலும் அறியாது திரும்ப மீண்டுமொரு விம்மலை கேட்டேன். தீச்சுட்டதுபோல திரும்பியபோது அவள் விழிதாழ்த்தியிருந்தாள். கண்ணீர் வழிந்து கன்னங்களில் இறங்கிக்கொண்டிருந்தது. உதடுகளைக் கடித்து விம்மலை அடக்க கழுத்து குழிந்து குழிந்து எழுந்தது.


நான் என்ன செய்தேன் என பின்னரே உணர்ந்தேன். ஏன் செய்தேன் என இன்றும் அறியேன். பாய்ந்து அவளைப் பற்றி இடக்கையால் இடைவளைத்து என் உடலுடன் இணைத்துக்கொண்டேன். அவள் முகத்தை வலக்கையால் தூக்கி உதடுகளில் முத்தமிட்டேன். உரத்த முனகலுடன் அவள் கைகளால் என்னை இறுகப்பற்றிக்கொண்டு நடுங்கினாள். நாங்கள் ஒரு சொல்லும் பேசிக்கொள்ளவில்லை. உடல்தழுவி இறுகியும் மேலும் இறுகும்பொருட்டு நெகிழ்ந்தும் முத்தமிட்டும் மூச்சுக்கு ஓய்ந்தும் மீண்டும் முத்தமிட்டும் அங்கே நின்றிருந்தோம். பின்னர் அவள் விழிகளை நோக்கினேன். நாணத்துடன் அவை சரிந்தன. “நான் உன்னை ஈராண்டாக பார்க்கிறேன்” என்றேன். “ஆம், நான் அறிவேன். ஈராண்டுகளாக நான் கணந்தோறும் எரிந்துகொண்டிருந்தேன்” என்று அவள் சொன்னாள்.


tigerபார்க்கவன் யயாதி கூறிக்கொண்டிருந்ததை தலைகுனிந்தவனாக கேட்டுக்கொண்டிருந்தான். “செல்வோம்” என யயாதி எழுந்ததும் “ஆம், இருட்டிவிட்டது” என்று அவனும் எழுந்தான் அவர்கள் புரவிகளில் ஏறிக்கொண்டார்கள். “இவையனைத்தையும் உதிரிநிகழ்வுகளாக பலமுறை முன்னரே சொல்லியிருக்கிறீர்கள், அரசே” என்றான் பார்க்கவன். “இம்ம்முறை தொகுத்துச் சொல்கிறீர்கள். இது தொகுத்துக்கொள்ளும் தருணமென எண்ணுகிறீர்கள்.” யயாதி “இல்லை, நீ தொகுத்துச் சொன்னதனால்தான்” என்றான்.


“ஒன்றுமட்டும் தெரிந்துகொள்ள விழைகிறேன் அரசே, தாங்கள் உளம்திரிய மாட்டீர்கள் என எண்ணி” என்றான் பார்க்கவன். “சொல்!” என்றான் யயாதி. “அன்று அங்கே அரசி வந்தது தற்செயலாகவா? அதைப்பற்றி சொன்னார்களா?” யயாதி சிரித்து “முதல்மைந்தன் பிறந்து ஓராண்டுக்குப்பின் அவள் ஒருமுறை சிரித்தபச் சொன்னாள். அவள் நான் அங்கு நின்றிருப்பதைக் கண்டுதான் வந்தாள். காத்து, பொறுமையிழந்து, சினம்கொண்டிருந்தாள். எண்ணியிராக் கணத்தில் கிளம்பி என்னை நோக்கி வந்துவிட்டாள். ஆனால் எப்படி என்னை அழைப்பதெனத் தெரியவில்லை. அவள் எண்ணம் அறிந்ததுபோல் முட்செடி ஆடைபற்றி இழுத்தது.”


“நன்று!” என்றான் பார்க்கவன். “வருந்தருணத்தை எதிர்கொள்ளும் சூழ்திறன் அவர்களுக்குண்டா என்று அறியவே அதை கேட்டேன்.” யயாதி மேலும் சிரித்து “அது நிரம்பவே உண்டு. நான் அவளை அடைந்த முதல்நாள் இரவிலேயே அதை அறிந்தேன். அதன் களியாட்டு கொந்தளித்தெழுந்து மெல்ல குமிழிகள் உடைந்து நுரையடங்கும் தருணம். அலையமைகையில் ஆழத்துப் பாறை எழுவதுபோல தேவயானி என் உள்ளத்தில் தோன்றினாள். மிகச்சரியாக அத்தருணத்தில் அவள் கசனைப்பற்றி என்னிடம் சொன்னாள்” என்றான்.


“நேரடியாகவா?” என்றான் பார்க்கவன் புரவியைப் பற்றி இழுத்து நிறுத்தி. “இல்லை” என்றான் யயாதி. “நான் சுக்ரரை அஞ்சுகிறேனா என்று கேட்டாள். இல்லை என்று நான் சொன்னேன். பின்னர் மெல்ல அஞ்சாமலும் இருக்கமுடியாதல்லவா என்றேன். அஞ்சவேண்டியதில்லை, தன் மகளைக் கூடி கைவிட்டுச்சென்ற கசனையே அவர் ஒன்றும் செய்யவில்லை என்றாள்.” பார்க்கவன் “நீங்கள் அதை முன்னர் அறிந்திருக்கவில்லை அல்லவா?” என்றான். “ஆம், எவரும் என்னிடம் சொல்லவில்லை. நான் உசாவியறிய முயலவுமில்லை. தேவயானியைப்பற்றி அவ்வண்ணமொரு எண்ணமே என்னுள் எழவில்லை. மானுடத்தொடுகைக்கே அப்பாற்பட்ட அனல்மணி எனவே அவள் எனக்குத் தோன்றினாள்.”


பார்க்கவன் புன்னகைத்தான். “உண்மையில் அச்செய்தி என்னை நிலைகுலையச் செய்தது. பாய்ந்தெழுந்து சர்மிஷ்டையின் குழலைப்பற்றி உலுக்கி ’என்ன சொல்கிறாய்? பழிச்சொல் கூறுகிறாயா, இழிமகளே?’ என்று கூவினேன். அவள் அழுதபடி என் கைகளைப் பற்றிக்கொண்டு ‘அறியாது சொல்லிவிட்டேன். பேரரசரான தாங்கள் இதை அறிந்திருக்கமாட்டீர்கள் என நான் எண்ணவில்லை’ என்றாள். அவளைப் பிடித்து சேக்கையில் தள்ளிவிட்டு ‘பழிச்சொல்… வீண்சொல் இது. ஆம் நான் அறிவேன்’ என்று கூவினேன். ஆனால் அவள் விழிகள் விரிந்து ஈரம் மின்னித்தெரிய அப்படியே நோக்கி படுத்திருந்தாள்.”


பின்னர் மெல்ல மூச்சடங்கி மெத்தைவிளிம்பில் அவளுக்கு புறம்காட்டி அமர்ந்து “சொல்!” என்றேன். “என்ன சொல்ல, நீங்கள் விரும்புவனவற்றையா?” என்றாள். அவளால் அப்படி சொல்லமுடியுமென்றே நான் எண்ணியிருக்கவில்லை. “உண்மையை” என்றேன். “நான் அதை சொல்லக்கூடாது” என்றாள். “சொல்!” என்றேன். “என்னை கொல்லுங்கள், சொல்லமாட்டேன்” என்றாள். திரும்பி அவளை நோக்கினேன். அவ்விழிகளை நோக்கியதும் தெரிந்துவிட்டது, அவள் சொல்லமாட்டாள் என. பின்னர் ஒற்றர்களை அழைத்து உசாவி அறிந்துகொண்டேன்.


அது என்னை உண்மையில் எளிதாக்கியது. தேவயானி என்னிடம் மறைத்த ஒன்றுண்டு என்பது நான் அவளிடமிருந்து மறைப்பதை பிழையில்லாததாக ஆக்கியது. நான் அதை சொல்லிச்சொல்லி பெருக்கிக்கொண்டேன். அதனூடாக தேவயானியிடமிருந்து விலகினேன். அவ்விலக்கம் சர்மிஷ்டையிடம் அணுக்கத்தை வளர்த்தது. அவ்வாறு என் கட்டுகளிலிருந்து என்னை விடுவித்தமை சர்மிஷ்டை மேல் மேலும் விருப்புகொள்ளச் செய்தது. என் உள்ளத்தை அவள் நன்கறிந்திருந்தாள். நான் ஓடிச்சென்றடையும் இடங்களில் எல்லாம் முன்னரே சென்று காத்து நின்றிருந்தாள்.“இன்று அந்த வசந்தகாலம் வெறும் கனவென பின்னகர்ந்துவிட்டது. அந்த முதல்நாள் உறவுக்குப்பின் அனைத்தும் பிறிதொன்றென ஆகிவிட்டன. அலைகள் அடங்கின, ஆனால் எதுவும் குறையவில்லை” என்றான் யயாதி.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–64
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–69
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–68
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–66
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–75
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–74
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–73
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–67
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–72
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–65
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–63
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–61
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–60
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–59
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–58
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–57
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–56
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 17, 2017 11:30

April 16, 2017

அஞ்சலி மா.அரங்கநாதன்

maarangana4[10]


 


தமிழ்ச்சிறுகதையாசிரியர்களில் முக்கியமானவரான மா.அரங்கநாதன் மறைந்தார்.


 


குமரிமாவட்டத்தில் திருப்பதிச்சாரம் என்னும் திருவெண்பரிசாரம் இலக்கியரீதியாக முக்கியமானது. இங்கே மையமாக திருவாழிமார்பனின் ஆலயம் உள்ளது. இச்சிற்றூரிலிருந்து பல எழுத்தாளர்கள் உருவாகியிருக்கிறார்கள். எம்.சிவசுப்ரமணியம் [எம்.எஸ்], குமரித்துறைவன், அச்சுதன் அடுக்கா என. கிருத்திகாவின் கணவர் பூதலிங்கம் இவ்வூர்க்காரர். இதுதான் வாசவேஸ்வரமாக கிருத்திகாவின் நாவலில் வெளிப்பட்டது. திருப்பதிச்சாரத்தில் எம்.சிவசுப்ரமணியத்தின் தம்பியாகப் பிறந்தவர் மா.அரங்கநாதன்.


 


பெரும்பாலும் திருப்பதிச்சாரத்தைச் சுற்றியே மா.அரங்கநாதனின் கதைகள் அமைந்தன. அவருடைய கதாபாத்திரங்களில் தன்னிலையில் பேசுபவை முத்துக்கருப்பன் என்ற மாறாப்பெயரில் விளங்கின. மெல்லியநகைச்சுவையும் கசப்புகலந்த விமர்சனப்போக்கும் கொண்ட படைப்புக்கள் அவருடையவை.


 


நெடுங்காலம் இலக்கியவாசகராகவே விளங்கிய மா.அரங்கநாதன் பிந்திய வயதில்தான் எழுத வந்தார். குறுகியகாலமே எழுதினாலும் ஆழமான சிறுகதைகளினூடாகத் தமிழிலக்கிய மரபில் இடம்பெற்றார்.


 


மா.அரங்கநாதனுக்கு அஞ்சலி


 



 


 


மா அரங்கநாதன் கதைகளைப்பற்றி..


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 16, 2017 18:53

கொல்வேல் அரசி

kali


 


நேற்றுமுன்தினம் [14-4-2017]  என் மடிக்கணினிகளில் ஒன்றில் ஒரு சிக்கல் தொடங்கியது, அதில் எதை தட்டச்சு செய்தாலும் இரண்டுமூன்றுமுறை விழுந்தது. இன்னொரு மடிக்கணினி மென்பொருட்கள் இறுகி அசைவிழந்தது. அதை அழுத்தி மின்துண்டிப்பு செய்தேன். மீண்டும் தொடங்கியபோது ஒரு மங்கலான புன்னகையுடன் அப்படியே நின்றது எதுவுமே எழவில்லை


 


மறுநாளைக்கான வெண்முரசு கையிருப்பு இல்லை. ஒர் இலக்கம் தட்டச்சு செய்தே ஆகவேண்டும். ஒரு கணிப்பொறியைக் கொண்டுசென்று பழுதுநீக்குமிடத்தில் அளித்தேன். அங்கே புத்தாண்டும் துயர்வெள்ளியும் சேர்ந்தே வருவதனால் ஆளில்லை. ஒரு பையன் பார்த்துவிட்டு மறுஅமைப்பு செய்தாகவேண்டும், அதிலுள்ள அனைத்து தகவல்களும் போய்விடும் என்றான். அதில் என்னென்ன இருக்கிறதென்றே எனக்குத்தெரியாது. சரி, செய் என்றேன். எப்போது கிடைக்கும் என்றபோது ‘நாங்கள் எல்லாம் கிளம்பிக்கொண்டிருக்கிறோம். சனிக்கிழமை காலை கிடைக்கும்’ என்றான்


 


வேறுவழியில்லை. ஒர்  இணையநிலையம் சென்றேன். அங்கே தமிழ்ச்செயலி இல்லை. தரவிறக்கம் செய்ய ஒப்புதலும் இல்லை. சுரதா தளத்திற்குச் சென்று பத்தி பத்தியாக தட்டச்சு செய்தேன். ஒரு பத்தி எழுதவே அரைமணிநேரம். நாம் தட்டச்சு செய்வது ஆங்கில எழுத்தாகத்தான் தெரியும். ஆகவே பிழைகள். அதைத் திருத்துவது மிகப்பெரிய பணி. வெட்டிவெட்டி ஒட்டவேண்டும்.நான்கு மணிநேரத்தில் ஒருவழியாகத் தொட்டுத்தொட்டு ஒரு பகுதியைத் தட்டச்சுசெய்து இணையத்தில் ஏற்றிவிட்டு வந்தேன்


 


காலையில் இரண்டாவது மடிக்கணினியுடன் மீண்டும் பழுதுபார்க்குமிடம் சென்றேன். அங்கே காலை பத்துமணிவரை எவரும் வரவில்லை. இணையநிலையங்கள் எவையும் திறக்கவில்லை. பத்தரைமணிக்கு வந்த ஒருவரிடம் கணிப்பொறியை கொடுத்தேன். ஆட்கள் வரவில்லை, வந்து பார்த்துத்தர மதியம் ஆகும் என்றார்.


 


நகரில் இணையநிலையங்கள் எல்லாமே மூடிக்கிடந்தன. வெயில் கொளுத்தியது. இரவு மழை இருந்தமையால் கடுமையான வெக்கை. வியர்வை ஆறு. கடைசியில் ஓர் இணையநிலையத்தைக் கண்டடைந்து உள்ளே சென்றதுமே மின்சாரம் போய்விட்டது. “இனிமேல் சாயங்காலம்தான் சார் வரும். அதுவரை ஒன்றும்செய்யமுடியாது” என்றார்.இணையநிலையங்கள் எல்லாமே பழங்காலத்தின் இடிபாடுகள் இன்று. ஓட்டை விசைப்பலகைகள். நான் முந்தையநாள் தட்டச்சு செய்த விசைப்பலகையில் பல எழுத்துக்களை ஓங்கி குத்தி அழுத்திப்பிடிக்கவேண்டியிருந்தது.


 


என்ன செய்வதென்று தெரியவில்லை. சக்ரவர்த்தி திரையரங்கு சென்று காற்றுவெளியிடை பார்த்தேன். இடைவேளையில் கூப்பிட்டுக் கேட்டபோது கணிப்பொறியை பழுதுபார்த்துக்கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். படம் முடிந்து மீண்டும் கூப்பிட்டால் ”என்ன சார் பிரச்சினை? கம்ப்யூட்டரா? எங்க குடுத்தீங்க?” என்றார்கள்


 


வெறிகொண்டு ஆட்டோ பிடித்து பழுதுபார்க்கும் நிலையம் சென்றேன்.அங்கே ஒரு புதுப்பையன். அவனிடம் கேட்டால் “எனக்கு ஒன்றுமே தெரியாது சார், நான் கிளம்பிட்டிருக்கேன்” என்றான். உரிமையாளரிடம் சென்று முறையிட்டேன். அவர் அவனைக்கூப்பிட்டு நல்லவார்த்தை சொல்லி மன்றாடியபோது முறைத்தபடி எடுத்துச்சென்று ஒருமணிநேரத்தில் மறுஅமைப்பு செய்து தந்தான்.


 


வீட்டுக்கு வந்தபோது நாலரை மணி. பசி, புழுக்கம். அருண்மொழி மூடிவைத்துவிட்டுச் சென்றிருந்த சாம்பார், மோர் ,சோறு மூன்றையும் கலந்து நாலைந்து வாய் சாப்பிட்டேன். எலுமிச்சை பிழிந்து உப்பு போட்டு குடித்துவிட்டு அப்படியே படுத்துவிட்டேன். எழுந்தபோது மணி ஆறு. அருண்மொழி வந்துவிட்டாள். வெண்முரசு எழுதவேண்டும்.


 


ஆனால் உடற்களைப்பு படைப்பூக்கத்திற்கு மிக எதிரானது. களைத்திருக்கையில் எதையும் எழுதலாம், கதை மட்டும் எழுதமுடியாது. பொதுவாகவே மாலையில் எழுதுவது கடினம். அந்த முழுநாளின் வண்டலும் உள்ளே படிந்திருக்கும். காலையில் தன்னிச்சையாக வந்து அமையும் கதையை மாலையில் சொல் சொல்லாக உந்திக்கொண்டு செல்லவேண்டியிருக்கும். ஆனால் எழுதியாகவேண்டும். எழுத அமர்ந்தால் தொடங்குவதற்கே எட்டுமணி ஆகிவிட்டது.


 


எழுதி, நிறுத்தி ,கொட்டாவி விட்டு, மீண்டும் எழுதி, மீண்டும் சொல்சிக்கி, மீண்டும் எழுதி எழுதியதை முழுமையாகவே அழித்தேன். கைகளில் தலையைத் தாங்கியபடி காத்திருந்தேன். எழுதியே ஆகவேண்டும் , வேறு எவருக்காகவும் அல்ல- எனக்காக. இது எங்காவது நின்றுவிட்டால் பின்னர் தொடங்காமலேயே போய்விடக்கூடும் என்னும் அச்சமே என்னை சவுக்காலடித்துத் துரத்துகிறது. இது எவ்வகையிலும் என் கையில் இல்லை. இதோ நின்றுவிட்டது என ஒவ்வொரு இடைவெளியிலும் உளம் பதறுகிறது, எங்கிருந்தோ பறவை மீண்டும் வந்தமர்கிறது


 


நடந்ததை அறிவித்து ஒருநாள் வாய்ப்பு கோரலாம்.ஆனால் வெண்முரசு தொடங்கியபின் இதுவரை எழுதாமல் நின்றதில்லை. ஒரே ஒருமுறை வலையேற்றம் இரண்டுமணிநேரம் பிந்தியிருக்கிறது. ஒருமுறை சாக்கு சொல்லிவிட்டால் உள்ளம் அதையே நாடும். நானே எனக்கிட்டுக்கொண்ட இந்த ஆணை இல்லையேல் இத்தனை எழுதியிருக்கமாட்டேன். அத்தனை எழுத்தாளர்களும் அறிந்த ஒன்று உண்டு, இலக்கியம் தன்னிச்சையான வெளிப்பாடு. ஆனால் அதற்கு புற உந்துதல்தேவை. கடைசிக்கெடு கண்ணில்பட்டுக்கொண்டே இருக்கவேண்டும்


 


மீண்டும் எழுதிச்சென்றபோது ஓரு வரியில் அனைத்தும் தொடங்கியது – அந்த வரி எது என வெண்முரசின் வாசகர்கள் சொல்லிவிடமுடியும். சரசரவென எழுதி முடித்து வலையேற்றியபோது இரவு 1150. மெய்ப்பு நோக்கும் ஸ்ரீனிவாசனும் சுதாவும் தூங்கிவிட்டிருப்பார்கள், பாவம்


 


எல்லா இலக்கியப்படைப்புகளும் கொல்லிப்பாவைகளே. மயக்கி உயிர்குடிப்பவை உண்டு. நிழல்போல தொடர்ந்து திசைமாற்றுபவை உண்டு.  கெடுகனவுகளில் ஆழ்த்தி பித்தனாக்குபவை சில. இது ஆயிரம் கைகளுடன் என் மேல் எழுந்து நெஞ்சில் காலூன்றி நின்றிருக்கும் கொற்றவை.

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 16, 2017 11:36

ஏன் எல்லாவற்றையும்- ஒரு கடிதம்

130917-dog-elephant1


 


அன்பு ஜெ,


நீங்கள் சொல்வது எல்லாம் உண்மை. உண்மை மட்டுமே. உண்மை தவிர வேறு ஒன்றும் இல்லை


உங்கள் ராஜ்யம் இலக்கியம். அதனூடேயே தத்துவம், வரலாறு, காந்தி என அந்த ராஜ்யம் விரிகின்றது. இந்த பிரதேசத்திற்குள்  உங்கள் ஆளுமை மற்றும் விரிவு அளப்பரியது. அங்கே சமர் நின்று விவாதிக்க, பேச, மறுக்க ஆட்கள் குறைவு. எழுத்தாளன் என்று நின்று விடாமல், உயிர்ப்புடன் முன் செல்லும் விசை


ஆனால் ஐயன்மீர்,


கிராமங்களில் குப்பை மலை பற்றியோ, பேருந்துப் பயணம் பற்றியோ ,பண நோட்டு சமயத்தில் கண்ட மீடியா கொண்ட அதீதம்  பற்றியோ சொல்லும் போது உங்களின் மேல் சொன்ன உலகின் தாக்கத்தால் அதே போன்ற முழு விரிவு கொண்ட கட்டுரை போல எதிர்பார்ப்பு எழுவது இயல்பு என்று எனக்கு படுகிறது. நீங்கள் சொல்லலாம் – அவை தகவல் சார்பு இன்றியோ, தர்க்கம் இன்றியோ இருக்கக் கூடும் என்று. மிக ஆழமான தளத்தில் நின்று கொள்ளும் ஒருவன் ஏன் அவ்வாறு வெறும் வரிகளை எழுத வேண்டும்? பேசிக் கொண்டு செல்லும் கருத்துக்களை எழுத்தில் எழுதும் போது அவை “ஜெயமோகன்” வரிசையில் ஒட்டுவதில்லை. நுண்கருவை கொண்ட இந்த எழுத்தாளன் மேலும் யாரும் பார்க்காத பார்வையை வைப்பது தான் அதற்குப் பொருத்தம் என்பது என் பார்வை.


உதாரணம்,


 


ஏன் குப்பை மலைகள் வளர்கின்றன? பெருகி போன  வாங்கு வாங்கு எனும் வணிக சப்தமும், எல்லாமே தேவை ஆகி போன consumerism என்பவை தான் முதல் காரணம் என தோன்றுகிறது. குப்பை நுகர்வின் கழிவு ??? ….1 ரூபாய் ஷாம்பு முதல், துவைக்கும் ரின் ஏரியல் பவுடர் பாக்கெட்  போன்ற sachet வகைகள் கண்ணுக்கு படாத குப்பை வகைகள்.  துணி பைகளை துவைத்து வைத்து கொண்டு கடைக்கு போகும் போது எடுத்து கொண்டு சென்ற ஆட்கள் இன்னும் உண்டா என தெரியவில்லை, ஒவ்வொரு முறை வாங்கும் கருப்பு அல்லது வெள்ளை பிளாஸ்டிக் பைகள் அடுத்த வகை பங்களிப்பு.  தின்பண்டங்கள், தண்ணீர் பாக்கெட் முதல்ஒவ்வொரு மளிகை பொருளும் கொண்ட packing வகைகள் எப்படியும் குப்பை ஆகி தான் வீட்டை விட்டு வெளி வரும். திருவிழாவில் , கல்யாணத்தில், எந்த விதமான நிகழ்வுகளிலும் குப்பை ஒரு ஒதுக்க இயலா வைரஸ். எந்த கம்பெனிகாரனும் சோர்வதில்லை இப்படி தயாரித்து தள்ளுவதில். இந்த சிறிய கிராமங்களின் குப்பையை எங்கு கொண்டு சென்று எப்படி மாற்றுவது என்று எந்த முன்சிபாலிட்டி அல்லது அரசும் தூக்கம் கேட்டு சோர்வதில்லை…. கொண்டு சென்று எங்காவது கொட்ட தான் நமது மாநகராட்சி மற்றும் நகராட்சி அறிந்தது. எதையும் மாற்ற தான் முடியுமே தவிர அழித்தல் மிக அரிது. போலியோ போன்ற நோய்களை கட்டுகள் கொண்ட வந்த அரசின் இயக்கம் போல இந்த குப்பை பற்றிய விழிப்புணர்வு மற்றும் மேலாண்மை செய்ய அரசின் உந்துதல் மிக அவசியம். ( மழை நீர் சேகரிப்பு திட்டம் ஒரு நல்ல உதாரணம்  )


 


“நான்” என்ன செய்யக் கூடும்? கூச்சம் பாராமல் கடைகளுக்கு use & throw போல அன்றி, நிரந்தர சணல் போன்ற பைகளை கொண்டு செல்லலாம். கண்ணாடி பாட்டில்களை உபயோகிக்கலாம். அவசியம் இன்றி எதையும் வாங்காமல் இருக்கலாம். பிளாஸ்டிக் வாளி போன்றவைகளை விட்டு அலுமினியம் போன்ற பக்கெட் புழங்கலாம். செய்ய முடியுமா?


இந்த வகையான எளிய பார்வை கொண்டாவது இந்த நுண் கருவி கொண்டவன் எழுதுவது அவசியம் என்று தோன்றுகிறது. பயணம் போகும் போது குப்பைகளைத் தாண்டித்தான் போக முடியும் தவிர ஒரு பயணத்தை இந்த குப்பைகளை அள்ளுவதற்கு என்று ஒரு “செயல்” படுத்துதல் என்று  உதாரணம் காட்டியது போல செய்ய முடிந்தால் அந்த நுண் கருவி கொண்டவர்களுக்கு ராயல் சல்யூட் உண்டு.


2) சென்னைக்கு நான்கு மணி நேரம் மிச்சம் பிடித்து வேகமாக செல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக ஆம்னி பஸ் தான் வேண்டும்.   இன்னமும் விரைவு என்றால் கார்.. கட்டணம்  சற்று குறைந்த அரசு பேருந்துகளில் செல்பவர்கள் யாருக்கும் அது முக்கியம் அல்லாமல் இருக்கலாம். உருட்டி கொண்டு செல்லும் பேருந்தில் பயணம் அமைவது ஒரு மோச அனுபவம் மட்டுமே. எந்த தனியார் துறைகளிலும் இருக்கும் இந்த மேம்பாடு அவர்களின் survival மற்றும்  விற்கும் உத்தி.


மதுரை பேருந்து நிலையத்தில் நின்றால் அதிபட்சம் ஒரு மணி நேரம் குறைந்த பட்சம் 20,30 நிமிடம் ஒரு முறை 100-250 கி.மி தூரம் உள்ள ஊர்களுக்கு பேருந்துகள் செல்வது பற்றியும்  நுண் பார்வை பரவ வேண்டும்…. இத்தனைக்கும் பிற மாநிலத்தவர்கள் இயக்கும்  பல ரகம் பார்த்தவர் என்ற முறையிலாவது தயவு செய்து… 22000+  பேருந்துகள் அரசின் உறிஞ்சி ஊழல் தாண்டி, மாணவர்களின் இலவச பாஸ் தாண்டி, நஷ்டப்பட்டு கிராமங்களை சுற்றி கொண்டு இருக்கும் டவுன் பஸ்களை தாண்டி, 55-60 ஆயிரம் பணியாளர்கள் கொண்டு தீபாவளி, பொங்கல் போனஸ் கொடுத்து , அவர்கள் ஆற்றிய தனி பெரும் சேவைகளுக்கு PF கொடுத்து …. இருக்கும் பணத்தில் புது வண்டி வாங்கி ஓட்டுவதில் உள்ள இடர்கள் மற்றும் சாத்தியம் பற்றியும் இந்த நுண் உணர்வு கொண்ட நவீன இலக்கியவாதி எழுதலாம் .. 4 ,5 வருடங்களில் IAS அல்லது சுத்த கைகள் கொண்ட நிர்வாக தலைமை அமைந்தால் எளிதாக மாற்ற முடியும் என்பது நிதர்சனம் எனும்போது இதை “கருத்து” என்று சொல்லுவதில் புலம்புவதில் என்ன result?


3)நான் தினசரிகளில் வந்த பொங்கல் பற்றியோ, தொலைக்காட்சி சேனல் கொண்ட வெறி கூச்சல் பற்றியோ மாற்று கருத்து சொல்லவில்லை. Demonetization கண்டிப்பாக டிஜிட்டல் பணத்தையும் அதனால் வரியையும் மாற்றி விட்டது என்பது உண்மை. என் நினைவு தெரிந்து வெறும் பணத்தால் மட்டுமே வியாபாரம் செய்த 30 வருட துணி கடை இன்று card swiping மெஷின் வைத்துஇருக்கிறார்கள். அதே போல ஒரு பெட்ரோல் பங்க் கூட…..


ஆனால் அந்த 3 4  மாதங்கள்  தொய்வு அல்லது படுத்து விட்ட தொழில்கள்  பற்றியும் எழுத்து  தொட வேண்டும் அல்லவா?


மாருதி போன்ற பெரிய கம்பெனி  முதல் FMCG கம்பெனி எனப்படும் அன்றாட பொருள் தயாரிக்கும் கம்பெனி வரை விற்பனை குறைந்தது என்பது உண்மை. முழு பணத்தில் நடத்தப்படும் சிறு குறு தயாரிப்பு சேவை நிறுவனங்கள் விழுந்து தவித்து மீண்டும் ‘கொஞ்சம்  பேங்க்’ மற்றும் ‘புது நோட்டுகள்’ என february முதல்  நடக்க ஆரம்பித்தனர். நானும் பெரும்பாலும் பணத்தில் புழங்குவதில்லை … ஆனால் 2  மாதங்கள் எத்தனை மக்கள் பேங்க் வாசலில காய்ந்தனர் என்பதையும்  பணம் எடுக்க பல முறை சென்று வந்தனர் என்பதை பார்த்தவன் என்ற முறையில் இந்த வதை தேவை இன்றி தரப்பட்டது என்பதை சொல்லுவதில் உண்மையும் உண்டு


இந்தியாவின் MGR  போல “கருப்பு பணத்தை ” வெளி கொண்டு வருவேன் என்ற சூளுரை தந்த மயக்கம் மற்றும் நல்லது நடந்தால் சரி தான் என்கிற மனம் தான் இந்த மக்களை பொறுக்க வைத்தது. ஆனால் வெளிய வந்த கருப்பு பணம் என்பது இந்த மாபெரும் விளையாட்டுக்கு கிடைத்த பதக்கம் அல்ல. 500,1000 பழைய நோட்டுகள் -மொத்த கை இருப்புகள் பேங்க் சென்று தூங்கி விட்டு இப்போது மீண்டும் வெளியே செல்ல துவங்கி விட்டது என்பது தான் உண்மை. உள்ளெ போட்டவன் போட்டு விட்டு தூங்க அல்ல ..புது நோட்டாக மாற்றி எடுக்கவே. இந்த டிஜிட்டல் மாற்றங்களையும் அதை கொண்டு வருவதற்கு இந்த  மாபெரும் விளையாட்டுக்கு  வேலையை விட்டு பணத்தை மாற்ற/ புது நோட்டுகள் எடுக்க நடந்த பல கோடி சாதாரண மக்களின் சிறிய வலி பற்றியும் வீணாக்கிய மணித்துளிகள் நாட்கள் பற்றியும் எழுதவில்லை அல்லவா? ஊடகங்கள் விபசாரம் செய்ய ஆரம்பித்தது  ஒன்றும் புதிது அல்லவே ?


இந்த நுண் துப்பாக்கி கொண்டவர்களிடம், கேட்பது போன்ற சராசரி கேள்விகளுக்கு சொல்வது போன்ற கருத்துக்கள் ஒரு தீவிர இலக்கியவானின் தளத்தில் வருவது ஒரு தடுக்கென்ற சரிவு போல எனக்கு தோன்றுகிறது


எழுத்தாளன் கண்டிப்பாக சொல்ல வேண்டும். எழுத  வேண்டும்…. முடிந்தால்  கூரிய, பல தரப்பட்ட பார்வையில், ஜல்லிக்கட்டு போல ஒரு அலை எழுப்புமாறு கட்டுரைகளாக வர வைக்கும் படியாக எழுதுலாமே –  எழுத மாட்டேன் என் தளம் வேறு என்பது உங்கள் தரப்பு என்றாலும் கூட … சமூக விஷயங்கள் பற்றிய கருத்துக்கள் செயல் / செயல்படுத்தல்களை புதிய வழிகளைக் காண்பிக்கும்படியாக இருப்பது ஒன்றும் தவறு இல்லையே.??


அன்புடன்


லிங்கராஜ்


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 16, 2017 11:32

காடு– ஒரு கடிதம்

kadu2


அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு


தங்களது ‘காடு’ நாவலை இரண்டாவது முறையாக, ரசித்து வாசித்து முடித்தேன். முதல் முறை படித்த போது காட்டிற்குள் வழி தவறி வெளியே வந்தால் போதும் என்றாகி விட்டது. மனதிற்குள் எப்பொழுதும் உங்களுடன் விவாதித்து கொண்டு தான் இருக்கிறேன். வாசகன் ஒரு எழுத்தாளருக்கு கடிதம் எழுதுவது போல் தர்மசங்கடம் ஏதும் இல்லை.


கிரிதரன் நாவல் முழுதும் ஒரு இடத்தில் கூட, நான் உன்னை காதலிக்கிறேன் என்று நீலியிடம் சொல்லவில்லை. என்னுடைய மிகக்குறைந்த வாசிப்பனுபவத்தில் இந்தளவு மனதுருகி வாசித்து, சுவரை வெறித்து கொண்டிருந்தது வேறெப்போதும் இல்லை.


பொதுவாக கதைகளில், கதா பாத்திரங்கள் மனதை கவரும். ஆனால் முதல் முறையாக, அயினி மரத்தடியும், சந்தன மரக்காடும், நீலியும் கிரிதரனும் அமரும் பாறை, கொன்றை மலர்களும், தங்கம் போன்ற வேங்கை இலைகளும், மனதில் நிற்க முடியுமா? உங்கள் எழுத்து ஏன் வாசகனை இந்தளவு அலைக்கழிக்கிறது அல்லது நிம்மதி இல்லாமல் ஆக்குகிறது. காரணம், உங்கள் எழுத்தில் அவன் ஒவ்வொரு இடங்களிலும் தன்னை அடையாளம் காண்கிறான்.


போத்தியின் அக்காவின் பாலியல் வசவுகளை கேட்கும் கிரி, போற்றியிடம் ‘ எல்லார் மனதிலும் இது தான் இருக்கிறதா என்று கேட்க, போற்றி திரும்ப கேட்கிறார் ‘ உன் மனதில் என்ன இருக்கிறது என்று முதலில் சொல்’.


கிரிதரன் எவ்வளவு நல்லவனோ, அவ்வளவு நல்லவர் மாமா. தன் இளமை பருவத்தில் ஓவர்சீயரின் மனைவியிடம் தப்பித்து, நாடாரின் மாட்டு வண்டியில் இருந்து அழுகிறான். இங்கு யாரும் கெட்டவர்கள் இல்லை. கடவுள் மனிதர்களை வைத்து விளையாடுகிறார்.


ரெசாலம் தேவாங்கிடம், மக்களே! மக்களே! என்று உருகுகிறார். வாசகனுக்கு கடைசியில் தான் அறிமுகப்படுத்துகிறீர்கள், ரெசாலத்திற்கு மண்டை வீங்கிய மூளை வளர்ச்சி இல்லாத பெண் குழந்தை உள்ளது என்று. பிறகு நிம்மதி இழக்காமல் இருப்பது எப்படி?


நாட்டில் கவிஞர்கள் உரைநடையை மடக்கி கவிதை என்று விற்கும் போது, நீங்கள் கவிதையை உரைநடையாக எழுதுகிறீர்கள். (உ.ம்) நீலியுடன்நடக்கும் போது கிரிக்கு விரல்கள் எல்லாம் இதயம் படபடக்கிறது.


தெய்வீகக் காதல் என்று கேள்விப்பட்டுள்ளேன். ஒரு முறை கிரிதரன் மூலம் நானும் வாழ்ந்து விட்டேன். முதன்முறை அந்தி நேரத்தில் சந்தன காட்டில் மரத்தின் மேல் உள்ள நீலியின் குடிலில் இருந்து நீலியின் மயில் அகவல் போன்ற பாட்டை கிரிதரன் நிலை மறந்து கேட்கும் பொழுது, பக்கத்தில் நானும் நின்று அழுகிறேன்.


அய்யரைப் போல் ஒரு ரசிகனை உலகில் காண முடியுமா? நீங்கள் மறுத்தாலும் அதில் முக்காலும் நீங்கள் தான். தயவு செய்து ‘குறுந்தொகை’ படிக்க நல்ல உரையை சிபாரிசு செய்யவும்.


கீரைக்காதன் யானை சந்தன மரக்காட்டின் மணத்தில் மதம் கொண்டு தன் இனத்தை பிரிந்து அழிகின்றான். கிரிதரன் நீலியின் மணத்தால்……


சந்தனக் காட்டில் நீலியின் குடிலில் இருந்து வரும் மணத்தை விவரித்து கொண்டே வந்து, ஓரிடத்தில் நிறுத்தி அடுத்த பாராவில் கிரிதரன் முதன் முறையாக சுருட்டு புகைக்கும் இடத்தை அறிமுக படுத்துகிறீர்கள். சொர்க்கமும் நரகமும்.


காமத்தின் எல்லா நிலைகளையும் தொட்டு செல்கிறது நாவல். கிரியின் காமம், மாமியின் காமம், இரட்டையர்களின் காமம், குட்டப்பனின் காமம், அய்யரின் காமம், ரெஜினாவின் காமம், கிரியின் அம்மாவின் காமம்.


குட்டப்பன் போல் மனசாட்சியுடன் மிக இயல்பாக வாழ முடிவது எப்பேர்ப்பட்ட அதிஷ்டம். ஒரே நேரத்தில் அடுத்தடுத்து இரு பெண்களுடன் உறவு கொள்கிறான். அறியாப் பருவமுள்ள காட்டுவாசி பெண்களை கூட்டி கொடுத்த கிரியின் மாமாவை அடித்து நொறுக்குகிறான். கதை முழுவதும் அவன் யாரையும் பசியோடு விடுவதில்லை.


கிரியின் மாமாவிடம் இருந்து பணம் பெற மறுக்கும் நாடாரின் அறம் எத்தகையது?


தயவு செய்து இதைக் கடிதம் என்று நினைக்க வேண்டாம். காடு நாவலை வாசித்து விட்டு எனக்கு நானே பேசி கொண்டவையாக எண்ணி மன்னிக்கவும்.


அன்புடன்


பா. சரவணகுமார்


போடிநாயக்கனூர்



அன்புள்ள சரவணக்குமார்,



ஒரு படைப்பை வாசிக்கையில் நம்முள் எழும் கேள்விகள் எல்லாம் அப்படைப்பால் உருவாக்கப்படுபவை. ஆனால் அவை நமக்குச் சொந்தமானவை. அது நம்மை சீண்டி யோசிக்கவைக்கும் விதம் அது. அந்த வினாக்களுக்கெல்லாம் நாமே விடைகாணும்போதே நாம் அப்படைப்பை உண்மையில் வாசிக்கிறோம். காடு நாவலை உங்கள் அளவில் தொகுத்துக்கொண்டிருக்கிறீர்கள். அதன் அலகுகளை மறுதொகுப்பு செய்து மறுபடியும் பரிசீலித்து உங்களுக்கான நாவலை நீங்கள் உங்களுக்குள் அமைத்துக்கொள்கையில்தான் வாசிப்பு முடிவடைகிறது



ஜெ




தொடர்புடைய பதிவுகள்

காடு – பிரசன்னா
என்னை வாசிக்கத் தொடங்குதல்
அகக்காடு- கடிதம்
காடு- கடிதம்
குட்டப்பனுக்கு ஏன் தெரியவில்லை?
காடு- கடிதம்
காடு வாசிப்பனுபவம்
காஞ்சிரம்-கடிதம்
காடு- கே.ஜே.அசோக் குமார்
சுவை- கடிதம்
பிறழ்வுகள்
துணை இணையதளங்கள்
காமமும் காடும்
காடு – ஒழுக்கத்துக்கு அப்பால்…
காடு-கேசவ மணி
வாசிப்பும் எழுத்தும் எதிர்வினையும்
இரு கடிதங்கள்
ஒரு முதற்கடிதம்
காடு ஒரு கடிதம்
காடு-கடிதங்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 16, 2017 11:31

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–76

76. ஐம்பெருக்கு


“ஐந்து துணையாறுகள் இணைந்து பெருகி ஓடும் இந்த நதி கடலை அணுகுகையில் ஐந்து கிளையாறுகளென்றாகிறது. எந்தத் துணையாறு எந்தக் கிளையாறாகிறதென்று எவர் சொல்ல முடியும்? நதியறிந்திருக்குமோ? நீர் அறிந்திருக்குமோ? ஊற்றுமுகங்கள் அறிந்தனவோ? ஒற்றைமேலாடை என புவிமகள் இடையும் தோளும் சுற்றிய ஆழிநீலம் அறிந்திருக்குமோ? அதிலெழும் அலைகள் அறிந்திருக்குமோ? அதிலாடும் காற்றும் அதில் ஒளிரும் வானும் அறிந்திருக்குமோ? முந்நீரும் முழுப்புவியும் ஒருதுளியென தன் கால்விரல் முனையில் சூடிய பிரம்மம்தான் அதை சொல்லலாகுமோ?”


மாளவத்துக் கவிஞர் சாம்பவர் தன் குறுங்காவியத்தின் இறுதிச் செய்யுளை படித்து முடித்து ஓலை தாழ்த்தியதும் எதிரில் பீடத்தில் அமர்ந்திருந்த யயாதி தலையசைத்து “நன்று, மிக நன்று. இக்காவியம் முழுக்க எழுந்த கதையின் அனைத்துச் சரடுகளும் இந்தச் செய்யுளில் இணைகின்றன. விடையில்லா வினாவாக விண்ணை நோக்கி செலுத்தப்பட்டுள்ளது காவியம். நுண்ணியது என்பதனால் அரிது. நெஞ்சை நிறைப்பதென்பதனால் நன்கறிந்ததும்கூட” என்றான்.


சாம்பவர் முகம் மலர்ந்து தலைவணங்கி “சொல்லோடு சொல்கோத்து எழுதப்பட்ட எதுவும் குருநகரியின் பேரரசரின் அவையில் ஒலித்த பின்னரே கவிதையென்றாகிறது என்று இன்று பாரதவர்ஷம் முழுக்க கவிஞர் பாடத்தொடங்கிவிட்டனர். இவ்வொரு சொல்லுக்காகவே இத்தனை தொலைவு கடந்து வந்திருக்கிறோம். எங்கள் சொற்கள் காலத்திரை கடந்து செல்லுமென்று இப்போது உறுதி கொண்டோம்” என்றார்.  கைகூப்பியபடி அவர் எழுந்து நிற்க அவருக்குப்பின் அமர்ந்திருந்த இளைய மாணவனும் இரு கற்றுச்சொல்லிகளும் ஏடுகளை அடுக்கிக் கட்டி பிரம்புக்கூடையில் அடுக்கினர்.


யயாதி எழுந்ததும் அருகே நின்றிருந்த அரசப்பணியாளன் பரிசில்தாலத்தை நீட்டினான். சாம்பவரை அணுகி அந்தத் தாலத்தைப் பெற்று அவரிடம் அளித்து “கவிதைக்குப் பரிசில் என்பது தெய்வத்திற்கு காணிக்கைபோல. அது தெய்வத்தை அளவிடுவதில்லை, கொடுப்பவனை அளவிடுகிறது” என்றான். அவர் அதை பெற்றுக்கொண்டு  “அரசே, தாங்கள் மகிழ்ந்தளித்த சொற்கள் முதற்பரிசில். அது கருவூலத்திலிருக்கும் பொற்குவை. இப்பரிசில் அதை பணமென்றாக்கும் முத்திரைஓலை” என்றார். “குருநகரியின் யயாதியின் சொல்லால் இக்காவியம் ஒப்புபெற்றது என்பதை பாரதவர்ஷம் முழுக்க சென்று சொல்லி என் தலைமுறைகள் பொருள்பெற்றுக்கொண்டே இருக்கும்” என்றார்.


அவரது அருகிருந்த பன்னிரு வயதான சிறுவனை நோக்கி யயாதி “உரிய இடங்களில் சொல்லெடுத்து நீர் ஒழுக்கை நிறுத்தியதை கண்டேன். இக்கவிதையை நன்கறிந்திருக்கிறீர், சொல்லையும் பொருளையும்” என்றான். “என் மாணவன் சேந்தன்எழினி. தமிழ்நிலத்தைச் சேர்ந்தவன். தென்பாண்டிநாட்டின் தொன்மையான தமிழ்ப்புலவர்குடியைச் சேர்ந்தவன்” என்றார் சாம்பவர். அவன் தலைவணங்கி “முக்கடல்முனம்பின் பாணர்குலமாகிய முல்லையரில் வந்த எழினியாதனின் மைந்தன் சேந்தன்எழினி” என்றான். யயாதி முகம்மலர்ந்து “நெடுந்தொலைவு. வலசைப்பறவைபோல சொல் எல்லைகளில்லாத பிறிதொரு நிலத்தை காலடியில் காண்கிறது” என்றான்.


எழினி கரிய நிறமும் மின்னும் கன்றுவிழிகளும் கொண்டிருந்தான். அவனுடைய  மயிர்மழிக்கப்பட்ட தலைமேல் கைவைத்து “சொல்லை எவரும் பெற்றுக்கொள்ளமுடியும், இளங்கவிஞரே. அறியா ஆழங்களில் சொல் சென்று தைக்கும் இலக்குகள் சில உள்ளன. அவை எவையென கண்டறிபவன் கவிஞனாகிறான். உமக்கும் அது நிகழட்டும்” என்றான். அவன் தலைவணங்கி “தன் விழைவால் விதை பறவையின் வயிற்றிலும் விலங்கின் தோலிலும் காற்றின் அலைகளிலும் தொற்றிக்கொண்டு முளைக்கவிருக்கும் இடத்தை தெரிவு செய்கிறது. விதைக்கு இலக்கென்றாவது மிக எளிது, நாம் ஈரம் கொண்டிருந்தால் மட்டும் போதும்” என்றான்.


உவகையுடன் அவன் செவிகளைப் பற்றி உலுக்கி “நன்று, நன்று! நான் சொல்கிறேன் சாம்பவரே, ஒரு நாள்  இவருடைய ஆசிரியர் என்று அறியப்படுவீர்கள்” என்று யயாதி சொன்னான். அவன் திரும்பியதும் பணியாள் குறிப்பறிந்து பிறிதொரு தாலத்தை நீட்ட அதைப் பெற்று எழினியிடம் அளித்து “புகழ்சூடுக! வெற்புகள் பொடியாகும் காலத்திற்குப் பின்னரும் உமது சொல் வாழ்க! ஆழியலை என காலம் அமையா நாவுகொண்டு உம் சொல்லை உரைக்கட்டும்” என்றான். அவன் கைநீட்டிப் பெற்ற பரிசிலை கற்றுச்சொல்லியிடம்  அளித்து குனிந்து யயாதியின் கால்களைத் தொட்டு சென்னிசூடினான்.


யயாதி திகைத்து பின் அவன் தலைதொட்டு வாழ்த்தி “புலவர்கள் அரசரின் தாள் சூடுவதில்லை, இளங்கவிஞரே” என்றான்.  “நான் பாரதவர்ஷத்தின் முதன்மை சொல்சுவைஞரின் கால்களை தொட்டேன்” என்றான் எழினி. “கவிஞனுக்கு முதலாசிரியன் அவன்முன் அறியா இருப்பென விளங்கி சொல் தழைக்கவைக்கும் நுண்சுவைஞனே என்பார்கள். இன்றுவரை முகமிலா பேருருவனாக விளங்கியவன் தங்கள் வடிவில் மானுடத் தோற்றம் கொண்டு எழுந்திருக்கிறான். நான் வணங்கியது அவனையே.”


யயாதி “நன்று, வாழ்க!” என்று உளநெகிழ்வுடன் மீண்டும் அவன் தலையை தொட்டான்.  “இந்த அவையில் தாங்கள் எழுதப்போகும் பெருங்காவியத்திற்காக நான் காத்திருப்பேன், தென்னவரே. ஒருவேளை என் உடல் நீங்கினால் இங்கு என் செவிகளில் ஒன்று நுண்வடிவில் இருக்கும் என்று கொள்க! என் கைகள் என் மைந்தர் தோள்களில் அமைந்திருக்கும். ஒளிசூடிவரும் உங்கள் சொற்களுக்கு அவை பரிசளிக்கும். ஆம், அது நிகழும். அத்தருணத்தை இப்போது நன்குணர்கிறேன்” என்றான். சாம்பவர் கண்களில் நீர் வழிய உதடுகளை அழுத்தியபடி சற்று திரும்பிக்கொண்டார். எழினி “குருவருள் நிறைக!” என  மீண்டும் வணங்கினான். அவர்கள் புறம் காட்டாது அகன்றனர்.




tigerயயாதி இசைக்கூடத்தின் மூலையில் கைகட்டி நின்றிருந்த பார்க்கவனை அப்போதுதான் கண்டான். அவனை நோக்கி தலையசைத்தான். பார்க்கவன் அருகே வந்து வணங்கி “நான் இரண்டாவது களத்திலேயே வந்துவிட்டேன். காவியத்தில் மூழ்கியிருந்தீர்கள்” என்றான்.  “ஆம், அரிய காவியம். போர்க்களமொன்றின் உச்ச தருணம். மாயத் தெய்வமொன்று அத்தனை படைக்கலங்களையும் வீரர்களின் கைகளிலிருந்து விலக்கிவிட்டால் அங்கு அரியதோர் நடனம்தான் நிகழும். அக்காட்சியை பார்த்துக்கொண்டு இருப்பதாக எண்ணிக்கொண்டேன். ஊழ் உருவடிவுகொண்டு எழுந்து அலையடிப்பதுபோல. பிரம்மத்தின் சொல் ஒன்று உருகி உருகி சிற்பமாகிக்கொண்டிருப்பதுபோல. பல தருணங்களில் விதிர்ப்பு கொண்டு உளமிலாதவனானேன்” என்றான்.


“நான் இருமுறை எழுந்துசென்றேன், சொல்கொள்ள செவியிலாதிருந்தேன்” என்றான் பார்க்கவன். “ஒரு விந்தையான தொல்கதையிலிருந்து எழுந்தது இக்காவியம். இது பாரதத்தின் பல்வேறு பகுதிகளில் வெவ்வேறு வகையில் விளங்குகிறது. இங்கு நிகழ்ந்த பெரும்போர் ஒன்றைப் பற்றியது. அதை நிகழவிருக்கும் போர் என உருவகித்திருக்கிறார் சாம்பவர்”  என்றான் யயாதி. “ஐந்து உடன்பிறந்தார். அக்குலத்திலேயே அவர்களுக்கு எதிர்நிற்கப்போகும் நூறு உடன்பிறந்தார். சீதம் என்னும் நிலத்திற்காக பூசலிட்டு போருக்கு எழுகிறார்கள். பதினெட்டுநாள் நடந்த பெரும்போருக்குப்பின் நூற்றுவரைக் கொன்று ஐவர் வெல்கிறார்கள். வென்று அவர்கள் அடைந்த நாட்டை அவர்களால் ஆளமுடியவில்லை. நூற்றுவர் மூச்சுலகில் எஞ்சி பேயுருக்கொண்டு எழுகிறார்கள். கொடுங்காற்றுகளாக மரங்களை வெறிகொள்ளச் செய்கிறார்கள். அனல்மழையாகப் பெய்து ஏரிகளை சேறுலரச் செய்கிறார்கள். கருக்குழவிகளின் கனவுகளில் கண்ணொளிரத் தோன்றி அறியாச் சொல்லுரைத்து அச்சுறுத்துகிறார்கள்.”


“பன்னிரு குடிப்பூசகர் கூடி வெறியாட்டுகொண்டு வான்சொல் இறக்கி ஆவதுரைக்கின்றனர். அதன்படி ஐந்திறத்தார் அந்நிலத்தை நூறாகப் பகுத்து இறந்தவர் நூற்றுவரின் தெய்வங்களுக்கு படையலிட்டு தங்கள் மைந்தரை அத்தெய்வங்களிடம் ஒப்படைத்துவிட்டு காட்டுக்குச் சென்றுவிடுகிறார்கள். நூறு தெய்வங்களும் தென்றலும் குளிரொளியும் ஆகி அந்த மைந்தரை தழுவிக்கொள்கின்றன. அவர்களும் அவர்களின் கொடிவழியினரும் அந்நிலத்தை ஆள்கின்றனர்” என்று யயாதி சொன்னான்.


“மிகத் தொன்மையான ஒரு கதை இது” என்று பார்க்கவன் சொன்னான். “இக்கதையை தென்னகத் தொல்குடியினர் அனைவரும் வெவ்வேறுமுறையில் பாடுகிறார்கள். தொல்காலத்தில் ஆயிரம் மைந்தரைப்பெற்ற பெருந்தந்தை ஒருவர் இறந்து மண்மறைவுக்காக வைக்கப்பட்டிருக்கையில் உடல் பெருகத் தொடங்கியது. கைகால்கள் நீரோடைகள் போல இருபுறமும்  வழிந்தோடி நீண்டன. வயிறு உப்பி தலை உயர்ந்தெழுந்து சிறிய மலையளவுக்கு ஆகியது அவர் உடல். குடியினர் அவர் முன் வணங்கி  ‘தந்தையே, நாங்கள் செய்ய வேண்டியதென்ன?’ என்றார்கள். பூசகரில் சன்னதம் கொண்டு ‘பெருகும் விழைவுடன் இறந்தவன் நான். பெருகுதல் நிலைக்காது நான் விண்ணேக முடியாது. என்னை இரண்டாக வெட்டுங்கள்’ என்று அவர் சொன்னார்.”


அவர்கள் பெரிய கோடரியால் அவரை இரண்டாக வெட்டினார்கள். அவ்விரு துண்டுகளும் தனித்தனியாக பெருகி வளர்ந்தன.  ‘தந்தையே, நாங்கள் செய்ய வேண்டியது என்ன?’ என்று மீண்டும் குடியினர் மன்றாடினர். ‘என் உடலை துண்டுகளாக வெட்டுங்கள். அவற்றை இக்காடு முழுக்க பரப்புங்கள்’ என்றார் மூதாதை. அவர்களில் மூத்தவர்கள் தந்தையின் தலையும் நெஞ்சும் தோளும் அடங்கிய பகுதியை ஐந்து துண்டுகளாக வெட்டினார்கள். காட்டின் ஐந்து நீர்நிலைகளில் அவற்றை வீசிவிட்டு அவர்கள் திரும்ப வருவதற்குள் வயிறும் தொடையும் கால்களும் அடங்கிய பகுதியை அக்குடியின் இளைஞர்கள் நூறு துண்டுகளாக வெட்டியிருந்தனர். அவற்றை அக்காட்டின் சேற்றுநிலங்களில் விசிறியடித்த பின் அவருக்கு படையலிட்டு விண்ணேற்றம் செய்தனர்.


காட்டில் சிதறிய அவர் உடல் தனித்தனி குலங்களாக முளைத்தெழுந்தது. ஐந்து துண்டுகளிலிருந்து ஐந்து பெருங்குலங்கள் உருவாயின. அவர்கள் மழைக்காளான்களைப்போல வெளிறியநிறம் கொண்டிருந்தமையால் பாண்டவர்கள் என்று அழைக்கப்பட்டனர். நூற்றுவர் கரிய நிறம் கொண்டிருந்தமையால் கராளர் என்று அழைக்கப்பட்டனர். அவ்விரு குலங்களும் ஒருவரையொருவர் அஞ்சினர். எனவே ஆழ்ந்து வெறுத்தனர். வெண்ணிறத்தோர் கரியவரை சேற்றில் முளைத்தவர்கள், அழுக்குடல் கொண்டவர்கள் என எண்ணினர். கராளர் பாண்டவர்களை பாறைகளில் இருந்து எழுந்த சீழில் உருக்கொண்டவர்கள் என்றனர். பாண்டவர் பசுக்களையும், கராளர் எருமைகளையும் மேய்த்தனர். பாண்டவர்கள் நெல்லையும் கராளர் கேழ்வரகையும் பயிரிட்டனர்.


ஒவ்வொரு நாளும் இரு சாராரும் தங்களுக்குள் வெறுப்பை வளர்த்துக்கொண்டனர். அவர்கள் ஆற்றிய ஒவ்வொரு செயலும் வெறுப்பை வளர்த்தன. ஒவ்வொரு சொல்லும் நூறுமேனி பெருகி பிறரைச் சென்றடைந்தது. நூற்றெட்டு மூதாதையர் கூடி இருசாராரையும் ஒற்றுமைப்படுத்த நூற்றெட்டு முறை முயன்றனர். ஒவ்வொரு முயற்சிக்குப் பின்னரும் அவர்கள் மேலும் காழ்ப்பு கொண்டனர். நூற்றெட்டாவது முறை ஒற்றுமை முயற்சி எடுத்தவர்கள் அர்ஜுனராமன், கிருஷ்ணத் துவதீயன் என்னும் இரு உடன்பிறந்தார்.  அர்ஜுனராமன் வெண்சுண்ணநிறம் கொண்டிருந்தார். இளையவர் யானைக்கன்றுபோல் இனிய கரியநிறமுடையவர். மூத்தவர் மேழியோட்டினார், இளையவர் கன்று புரந்தார்.


காட்டின் மையமாக அமைந்த ஐங்குளத்துக்கரையில் அவர்கள் ஒருங்குசெய்த சந்திப்பு சொல்லேற்றத்திலும் படைமுட்டலிலும் முடிய மூதாதையர் இருவரும் தங்கள் பெரும் படைக்கலங்களை எடுத்து ஓங்கி விண்ணதிரும் ஒலியெழுப்பி அவர்களை அச்சுறுத்தி நிறுத்தினர். அக்கூடல் கலைந்தபின் இருவரும் ஐங்குளத்தருகே அமர்ந்து சொல்கொண்டனர்.    ‘ஏன் இப்பூசல் ஒழியாமலிருக்கிறது? தெய்வங்களை அழைத்து கேட்போம்’ என்றனர். சேற்றில் களம் வரைந்து அதில் வெண்சிப்பிகளும் கரிய கூழாங்கற்களும் பரப்பி தெய்வங்களை வந்தமையச் செய்தனர். சிப்பிகளை மூத்தவரும் கூழாங்கற்களை இளையவரும் ஆடினர். ஆட்டத்தின் ஒரு தருணத்தில் அவர்களின் கைகளை தெய்வங்கள் எடுத்துக்கொண்டன. அனைத்தும் அவர்களுக்கு தெளிவாயின.


‘இது விண்முகட்டுத் தெய்வங்களும் மண்ணாழத்துத் தெய்வங்களும் களம்காண மானுடரை கருவாக்கும் போர். மானுடரால் ஒருபோதும் நிறுத்தப்பட இயலாதது. எனவே இது உகந்த வழியில் நிகழ்வதே முறை. இதன் நெறி பேணுதல் ஒன்றே நாம் செய்யக்கூடுவது’ என்றார் மூத்தவர். ‘ஆம், காட்டெரி தளிர் வளர்ப்பது’ என்றார் இளையவர்.  ‘கரியவர்களை வெண்ணிறத்தோனாகிய நான் துணைப்பேன். வெண்ணிறத்தவரை கரியோனாகிய நீ துணை செய். அதுவே முறை’ என்றார் மூத்தவர். ‘அவ்வாறே’ என்று தலைவணங்கினார் இளையவர். இருவரும் சென்று அக்குலங்களுடன் சேர்ந்து கொண்டனர்.


ஐங்குளத்தின் கரையருகே முறைப்படி காடுதிருத்தி வெளிநிலம் அமைக்கப்பட்டது. கோள்கள் உகந்த நிலைகொண்ட நன்னாளில் இருசாராரும் தங்கள் முழு வீரர்களுடன் அனைத்துப் படைக்கலங்களுடன் திரண்டனர். மூத்தவர் மேழியைத் தூக்கி போர்க்குரலெழுப்பினார். இளையவர் வளைதடியை ஏந்தி போர்முகம் கொண்டார். முதற்கதிர் எழும் புலரியில் போர்முரசு ஒலித்ததும் அணைகள் உடைந்து நீர் பெருக்கெடுத்து எழுந்து  அறைந்து இணைந்து நுரை கொப்பளிக்க ஒன்றென ஆகி சுழிப்பதுபோல இரு படைகளும் மோதிக்கொண்டன.


அப்பெரும்போர் பதினெட்டு நாட்கள் நடந்தது. பதினெட்டாவது நாள் இருசாராரும் முழுமையாகவே இறந்து விழுந்தனர்.  இருகுடியிலுமாக ஓர் ஆணும் ஒரு பெண்ணும் மட்டுமே எஞ்சினர். குருதி வழிந்த அந்தக் களத்தில் வைத்து கராளகுலத்துக் கருநிற மங்கையாகிய கிருஷ்ணையை பாண்டவகுலத்து வெண்ணிற  இளையோனாகிய அர்ஜுனனுக்கு மூதாதையர் இருவரும் கைசேர்த்து வேதச்சொல் ஒலிக்க மணம் செய்து வைத்தனர்.  அவர்களிடம் அங்கிருந்து அகன்று தங்கள் நிலத்தைக் கண்டுபிடித்து அங்கு குருதி பெருக்கும்படி பணித்தனர்.  அந்தக் களக்குருதியைத் தொட்டு அவள் குழலில் பூசி அதை ஐந்துபுரியாகப் பிரித்து கட்டியபின் அவர்கள் தெற்கே சென்று குடியமைத்து மைந்தரை ஈன்று குடியென குலமெனப் பெருகினர்.


ஆயிரம் ஆண்டுகள் கழித்து அக்குலத்தினர் திரண்டு அந்தப் போர் நிகழ்ந்த இடத்தை நாடிவந்தனர். அங்கு பல்லாயிரம் எலும்புகள் மண்ணில் புதைந்துகிடக்க அவற்றின்மேல் வேர் சுற்றி எழுந்த மரங்கள் செறிந்த காடு செங்குருதிநிற மலர்களால் நிறைந்திருக்கக் கண்டனர். அக்காட்டில் நூற்றைவருக்கு கற்சிலைகளை நாட்டி படையலிட்டு வணங்கி வழிபட்டு மீண்டனர். குருதிப்பூவின் விதைகளைக் கொண்டுசென்று தங்கள் மண்ணில் நட்டு வளர்த்தனர். அவர்களின் குலத்தின் குறியாக அந்த மலர் அமைந்தது. இளவேனில் தொடக்கத்தில் அவர்களின் குலக்கன்னியர் ஐந்துபுரியென குழல்வகுத்து அதில் செங்காந்தள் மலர்சூடி இளையோருடன் காதலாடினர். அது இனிய புதல்வியரையும் வலிய மைந்தரையும் அளிக்குமென நம்பினர்.


“திருவிடத்திற்குத் தெற்கே தொல்தமிழ் நிலத்தின் தென்முனம்பில் முக்கடல்சந்திப்பின் அருகே மகேந்திர மலையில் வாழும் தொல்குடிகளின் கதை இது. தங்கள் மூதாதையர் வடக்கே இமயப் பனிமலைகளின் அடியில் வாழ்ந்த முதற்குடியினர் என்று அவர்கள் சொல்கிறார்கள். அவர்களிடமிருந்து இக்கதை பிற குடிகளுக்குப் பரவி வடிவ மாறுதல் அடைந்தபடியே உள்ளது” என்று பார்க்கவன் சொன்னான். யயாதி  “விந்தையான கதை. ஆனால் பாரதவர்ஷத்தின் வளர்ச்சிப்போக்கை எவ்வண்ணமோ அது சுட்டுவது போலும் உள்ளது. கருமையும் வெண்மையும் முடிவிலாது கலந்து கொண்டிருக்கும் ஒரு மாயச் சிறுசிமிழ் என்று இந்நிலத்தை சொல்லமுடியும்” என்றான்.




tigerஅவர்கள் அரசத்தனியறை நோக்கி நடக்கையில் பார்க்கவன்  “நான் இந்த அவைநிகழ்வு தொடங்குவதற்குள் தங்களை வந்து சந்திக்கவேண்டுமென்றிருந்தேன். அதன்பொருட்டே விரைந்தோடி வந்தேன்” என்றான். யயாதி “ஆம். நான் உச்சிக்குப் பின்னர்தான் இவர்களை சந்திப்பதாக இருந்தது. ஆனால் திடீரென்று எண்ணியிராதபடி பிறிதொரு திட்டம் எழுந்தது. மாலை அசோகவனிக்கு செல்வதாக இருந்தேன். முன்னரே கிளம்பி இன்றிரவே சென்றுவிடலாம் என்று தோன்றியது. ஆகவே இவர்களை உடனே கிளம்பி அவைக்கு வரும்படி அழைத்தேன்” என்றான்.


“நான் சொல்ல வந்த செய்தி இரு வகைகளிலும் தொடர்புடையதே” என்று பார்க்கவன் சொன்னான். அவன் குரலில் இருந்த மாற்றத்தை உணராமல் சாளரங்களை மாறி மாறி பார்த்தபடி நடந்த யயாதி “சொல்!” என்றான்.  “இந்தப் பாணர்குழு இன்று காலை பேரரசியின் அவை முன் தோன்றியிருக்கிறது. அங்கே எட்டு புலவர்க்குழுவினர் முன்னரே வந்திருந்தனர். ஆகவே எவரையும் முழுநூலையும் பாடுவதற்கு அரசியின் அமைச்சர்கள் ஒப்புதல் அளிக்கவில்லை.  அரசி அவர்கள் ஒன்பதுபேருக்குமாக அரைநாழிகைப் பொழுதையே ஒதுக்கியிருந்தார்கள்.” யயாதி “அவள் முழுக் கோபுரத்தின் எடையையும் தாங்கியிருக்கும் ஆணிக்கல்” என்றான்.


முதல் வாழ்த்துச் செய்யுளை மட்டுமே பாடினால் போதும் என்று அரசியின் முதன்மையமைச்சர் கிருபர் ஆணையிட்டிருக்கிறார். அதை ஏற்று அத்தனை புலவர்களும் தங்கள் நூல்களின் முதன்மைச் செய்யுள்களை மட்டுமே பாடியிருக்கிறார்கள். சாம்பவரும் அவ்வாறே பாடி பரிசிலை பெற்றுக்கொண்டார். பரிசில் பெற்றவர்கள் அரசியை அணுகி வணங்கி வாழ்த்தொலி கூறி புறங்காட்டாது பின்னகர்ந்தபோது தென்னகத்தின் இவ்விளைய புலவர் மட்டும் வாழ்த்தொலி கூறாது தலைவணங்கி திரும்பிச்செல்ல அரசி அவரிடம் “இவர் என்ன சொல்லற்றவரா?” என்று கேட்டார். சாம்பவர் திகைத்து சொல்வதறியாது இளையோனிடம் கையசைத்தார். இவர் அப்போதும் வாழ்த்துரைக்காமல் வெறுமே நின்றார். “வாழ்த்துரை கூற உமக்கென்ன தயக்கம்?” என்று அரசி அவரிடம் கேட்டார்.


இவர் “பேரரசி, நீங்கள் அளித்த பரிசிலை நான்  ஏற்றுக்கொள்ளவில்லை. ஆகவே முறைப்படி வாழ்த்தொலி சொல்லும் கடன் எனக்கில்லை” என்றிருக்கிறார். “ஏன் பரிசிலை ஏற்றுக்கொள்ளவில்லை?” என்று அரசி சினத்துடன் கேட்க இவ்விளைஞர்  “அது வரிசை அறியாது அளிக்கப்பட்டது. எங்கள் காவியத்தைக் கேட்டு மகிழ்ந்தளிக்கும் பரிசு மட்டுமே எங்களுக்குரியதாகும். நிரைநின்று தலைவணங்கிப் பெறுவது பரிசில் அல்ல, வறுமைக்கொடை.  அதைப் பெறுவதற்கு நாங்கள் இரவலரல்ல” என்றார்.


சினத்துடன் எழுந்த பேரரசி அமைச்சரிடம் “யாரிவன்? பேரரசியின் முன் எப்படி சொல்லெடுக்க வேண்டுமென்று இவனுக்கு சொல்லப்படவில்லையா?” என்றிருக்கிறார். சாம்பவர் அவனை இடதுகையால் தன்னுடன் அணைத்துக்கொண்டு  “பொறுத்தருளுங்கள், அரசி! தங்கள் கால்களில் சென்னி வைத்து மன்றாடுகிறேன். என் முதன்மை மாணவன். சொல்மகள் அமர்ந்த நா கொண்டவன். இவன்பொருட்டு நான் எத்தண்டத்தையும் ஏற்கிறேன்” என்றார். அரசி சினத்துடன்  “இச்சிறுவனைப் பொறுத்தருளவில்லையென்றால் இவனுக்கு நான் நிகர்நின்றதாக ஆகும். ஆகவே உங்களை விட்டனுப்புகிறேன். ஆனால் நீங்கள் இப்போதே இந்த அவை நீங்கவேண்டும். இன்றே இந்நகர்விட்டு அகலவேண்டும்”  என்றபின் உள்ளே சென்றார்.


காவலர்தலைவன் தீர்க்கபாதனும் காவலர்களும் சினத்துடன் புலவரை நெருங்க முதிய அந்தணரான சுஸ்மிதர்  “அவர்கள் சொல்லேந்தியவர்கள், வீரரே. எவ்வகையிலும் அவர்களுக்குத் தீங்கு நேர இந்நகரின் நெறியும் குடியும் ஒப்பாது. அரசி ஆணையிட்டபடி அவர்கள் நகர் நீங்கட்டும். இந்நாட்டின் எல்லைக்குள் இவர்களுக்கு ஒரு தீங்கும் நிகழாது பார்த்துக்கொள்ள வேண்டியது நமது கடமை” என்றார். அமைச்சர் கிருபர் சினத்துடன்  “அவ்வாறே செய்யுங்கள்” என ஆணையிட்டுவிட்டு உள்ளே சென்றர். இரு காவலர் அவர்களை அழைத்து வெளியே கொண்டுசென்று விட்டனர். “இச்செய்தி எங்கும் பரவக்கூடாது. அது பேரரசிக்கு இழிவு” என்று சுஸ்மிதர் சொன்னார்.


“அரசி அளித்த பரிசில்களை இவர்கள் அருகிருந்த கொற்றவை ஆலயத்தின் வாயிலிலேயே வைத்துவிட்டார்கள். அங்கிருந்து தங்களை சந்திப்பதற்கு இங்கு வந்திருக்கிறார்கள். உங்களைச் சந்தித்து ஒரு சொல் பெற்றுவிட்டே மீளவேண்டும், அதன்பொருட்டே அத்தனை தொலைவு கடந்து வந்திருக்கிறோம் என அவ்விளைஞர் தன் ஆசிரியரிடம் வற்புறுத்தியிருக்கிறார்” என்றான் பார்க்கவன்.  “அவர்கள் இங்கு வந்ததை நான் அறிந்தேன். அரசியால் விலக்கப்பட்டவர்களுக்கு நீங்கள் பெரும்பரிசு எதையும் அளித்துவிடக்கூடாதே என்று எச்சரிக்கும்பொருட்டே இங்கு ஓடிவந்தேன்” என்றான்.


யயாதி புன்னகைத்து  “அவர்களுக்கு நான் பெரும்பரிசு அளிப்பேன் என்று எப்படி தெரிந்தது?” என்றான். “பாரதவர்ஷத்தின் சக்ரவர்த்தினியின் எதிரே நிமிர்ந்து நின்று நீங்கள் என் சொல்லுக்குக் கீழ் என்று ஒருவன்  சொல்வான் என்றால் அவனிடம் இருக்கும் சொல் உலகளந்தோன் நெஞ்சில் சூடும் அருமணிக்கு நிகரானது. காலங்களைக் கடந்து செல்லும் பேராற்றல் கொண்டது.  தன்னுள் எழுந்த சொல்லின் தன்மை அறிந்தவன் மட்டுமே அப்படி உரைக்கமுடியும். பெருஞ்சொல் ஒருவனில் எழுந்ததென்றால் பிறர் அறிவதற்கு முன் அவன் அதை அறிவான்” என்றான் பார்க்கவன்.


யயாதி “ஆம், இதுவரை இந்த அவையில் அளிக்கப்பட்டதிலேயே மிகப்பெரிய பரிசிலை இவர்களுக்குத்தான் அளித்திருக்கிறேன். பன்னீராயிரம் கழஞ்சுப் பொன். பன்னிரண்டு அருமணிகள்” என்றான். பார்க்கவன் நின்று “உண்மையாகவா?” என்றான். “ஆம்” என்று யயாதி சொன்னான். பார்க்கவன் கவலையுடன் தன் நெற்றியைத் தடவியபடி  “நான் எண்ணினேன், ஆனால் இத்துணை எதிர்பார்க்கவில்லை” என்றான். யயாதி “அவர்களை யாரும் எதுவும் செய்யப்போவதில்லை. வேண்டுமென்றால் அவர்கள் உரிய பாதுகாப்புடன் நமது எல்லை கடக்கவேண்டுமென்ற ஆணையை நான் பிறப்பிக்கிறேன்” என்றான்.


“அது தேவையில்லை. பேரரசியின் சொல்லுக்கு அப்பால் இங்கு எவரும் எதுவும் எண்ணப்போவதுமில்லை. அவர்களின் விழியும் செவியுமில்லாத ஒரு கைப்பிடிமண் கூட நமது நாட்டுக்குள் இல்லை என்று எவரும் அறிவார்கள். சொல்தேர்பவனை பழிகொள்ளும் அளவுக்கு நெறியறியாதவரல்ல அரசி” என்று பார்க்கவன் சொன்னான். “பிறகென்ன?” என்றான் யயாதி. “அரசே, நீங்கள் விரிசலின் ஒலியை கேட்கவில்லையா?” என்றான்.


“ஆம். அது முன்பெப்போதோ தொடங்கிவிட்டது. நான் அவளை பார்த்தே நீணாள் ஆகிறது. இரண்டாவது மைந்தனின் படைக்கலமளிப்பு விழாவன்று அவள் அருகே அமர்ந்தேன். அன்று மாலை அவளுடனும் மைந்தனுடனும் சொல்லாடிக்கொண்டிருந்தேன். அதன்பிறகு ஓரிரு முறை அவைகளில் சேர்ந்தமர்ந்திருக்கிறோம். விழவுகளில் அருகே நின்றிருக்கிறோம். ஓரிரு முறைமைச் சொற்களை உரைத்திருக்கிறோம். உளமாடிக்கொண்டதே இல்லை” என்றான் யயாதி.  “என் ஆணைகள் எவையும் இந்நகரில் இன்று செயல்வடிவு கொள்வதில்லை. எனவே ஆணையென  எதையும் நான் இடுவதுமில்லை. திரிகர்த்தர்களையும் சௌவீரர்களையும் வெல்ல படைகிளம்பிய செய்திகூட அவர்கள் களம்வென்ற பின்னரே என் செவிக்கு வந்தது.”


“அரசே, தாங்களும் அரசியும் பிரிந்து நெடுநாளாகிறது. இப்போது எதிர்நிற்கத் தொடங்கிவிட்டிருக்கிறீர்கள்”  என்றான் பார்க்கவன். “நான் அஞ்சுவது நிகழவிருக்கிறது என்று என் ஆழுள்ளம் சொல்கிறது.   வரும் முழுநிலவுநாளில்  பேரரசி அசோகவனிக்கு செல்லவிருக்கிறார்கள்.” யயாதி திகைத்து நின்று சிலகணங்கள் கழித்து “தேவயானியா? ஏதேனும் தெரிந்துவிட்டதா?” என்றான். “இல்லை” என்றான் பார்க்கவன். யயாதி நீள்மூச்சுவிட்டு “நன்று” என்றான்.   “ஆனால் தெரிவதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன” என்றான் பார்க்கவன். “அதைத் தவிர்ப்பதைப்பற்றி பேசுவதற்கே நான் வந்தேன்.”


யயாதி நோக்கி நின்றிருக்க பார்க்கவன் “உங்கள் குலமுறையன்னை அசோகசுந்தரியின் பலிகொடைநாள் வருகிறது. அதைக் கொண்டாடும்பொருட்டு அங்கே ஒரு பெருவிழவை ஒருங்கமைக்கிறார்கள். அரசி அதற்காக அங்கு செல்கிறார் என்பது அரசின் அறிவிப்பு. ஆனால் நம் எல்லையில் வாழும் தொல்லரக்கர்குடிகளில் ஏழு நம்முடன் அரசுமுறைத் தொடர்பு கொள்ள ஒப்புக்கொண்டிருக்கிறார்கள்” என்றான். யயாதி “அதாவது கப்பம் அளிக்கப்போகிறார்கள்” என்றான். “ஆம், அதை முறைப்படி செய்வதென்றால் அவர்கள் அரசியிடம் வந்து பணியவேண்டும். அரசியின் அவையில் அமரவேண்டும். அரசி அவர்களுக்கு தலைப்பாகையும் கொடியடையாளமும் அளிப்பார்கள். அரசியின் குடித்தலைவர்களாக அவர்கள் அமைவார்கள். அந்த அடையாளம் அவர்களுக்கு பாதுகாப்பு, பிற குடிகளை வெல்வதற்கான படைக்கலம். அதற்கீடாக அவர்கள் திறை செலுத்துவார்கள்” என்றான் பார்க்கவன்.


“அதை ஏன் அங்கே நிகழ்த்துகிறாள்?” என்றான் யயாதி. “மேலும் பதினெட்டு தொல்குடிகள் அக்காடுகளில் உள்ளன. ஏழு குடிகள் நம்மவர்களாவதை அவர்கள் அறியவேண்டும். எதிர்ப்பதற்கு அஞ்சவேண்டும், பணிந்தால் நலனுண்டு என விழைவுகொள்ளவேண்டும்” என்றான் பார்க்கவன். “அவர்கள் எவரும் இதுவரை கண்டிராதபடி மிகப் பெரிய குடிவிழவாக அதை அமைக்க எண்ணுகிறார்கள். தொல்குடிகளின் போர்க்களியாட்டுகள், நடனங்கள், விருந்துகள் என ஏழு நாட்கள் நீளும் கொண்டாட்டம்.” யயாதி “அப்படியென்றால் அவள் பதினைந்து நாட்களுக்குமேல் அங்கிருப்பாள்” என்றான்.  “சர்மிஷ்டையை உடனே அங்கிருந்து அகற்றவேண்டும்.”


“இளைய அரசியை அங்கிருந்து விலகச் செய்வது பெரும்பிழை. பேரரசிக்கு பல்லாயிரம் செவிகள்” என்று பார்க்கவன் சொன்னான். “இளைய அரசி அங்கிருந்து அகற்றப்பட்டார் என்றால் ஐயம் எழும். அரசி அங்கிருக்கட்டும். அரசி தங்கியிருக்கும் மாளிகையையும் மாற்றவேண்டியதில்லை. அங்கே காவலர்தலைவன் தன் குடும்பத்துடன் தங்கியிருக்கட்டும்.” யயாதி “அவனுக்குச் சேடியாக சர்மிஷ்டை இருக்கிறாள் என்றாகவேண்டும் அல்லவா?” என்றான். “ஆம்” என்றான் பார்க்கவன். “இளவரசர் மூவரையும் வெளியே அனுப்பிவிடுவோம். அவர்கள் அங்கிருந்தால்தான் இடர். அவர்கள் காட்டுக்குள் சென்று தங்கட்டும். விழவு முடிந்து மீள்வது நன்று.”


நெடுநேரம் யயாதி ஒன்றும் சொல்லவில்லை. பின்னர் “ஒன்றும் நிகழலாகாது என்று தெய்வங்களை வேண்டிக்கொள்கிறேன்” என்றான். பார்க்கவன் “பேரரசியின் உயரத்தில் இருந்து இத்தனை சிறியவற்றை அவர்களால் இன்று நோக்கவியலாது. அவர்களின் இலக்கு மலைக்குடிகளை வென்றடக்கியபின் எல்லைகளை வலுப்படுத்திவிட்டு தென்னகம் நோக்கி படைகொண்டு செல்வது. அதன் நடுவே பிறவற்றை அவர்கள் அறிய வாய்ப்பில்லை. யானை நடக்கும் பாதையில் எறும்புகள் நாமெல்லாம்” என்றான்.  யயாதி “ஆம், நன்று நிகழவேண்டும்” என்றான்.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–75
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–74
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–73
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–69
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–68
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–72
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–66
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–64
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 34
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 29
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 75
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 59
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 29
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 12
அணிவாயில்
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 4
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 47
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 27
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 22
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 9
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 16, 2017 11:30

April 15, 2017

நித்யாவின் இறுதிநாட்கள்

nithyachaithanyayathi.jpg.image.784.410


 


திரு. ஜெயமோகன் அவர்களுக்கு வணக்கம்.


 


திரு. நித்ய சைதன்ய யதி அவர்களின் இறுதிக் காலம் எப்படி இருந்தது என்பது பற்றி ஏதாவது கட்டுரை வெளியாகி உள்ளதா?


 


நன்றி.


 


ஆர். ராதா கிருஷ்ணன்,


சென்னை.


nitya


 


அன்புள்ள ராதாகிருஷ்ணன்,


நித்ய சைதன்ய யதியுடன் இருந்த எவரும் எழுதியதாகத் தெரியவில்லை. இதழாளர்கள் எழுதிய குறிப்புகள் இருக்கலாம்.நித்ய சைதன்ய யதியின் வாழ்க்கை வரலாறு Love and Blessings என்ற பேரில் நூல்வடிவாக உள்ளது. அவரே எழுதியிருக்கிறார். அவருடைய வாழ்க்கையின் இறுதிநாட்களில் எழுதப்பட்டதென்பதனால் அதற்குப்பின் அவருடைய வாழ்க்கை சிறிய காலஅளவுதான்.


 


நித்யசைதன்ய யதி 19 April 1999 அன்று சமாதியானார். அவருக்கு முன்னரே முதுகுத்தண்டுவட அறுவை சிகிழ்ச்சை நடந்திருந்தது. அவரது உடல்நிலையில் பெரிய சரிவுகள் ஏதுமிருக்கவில்லை என்றாலும் அவர் மேலும் மேலும் அமைதியடைந்தபடியே வந்தார். எழுதிக்கொண்டிருந்த ஒரு நூலை முடித்தபின் இன்னொரு நூலை முடிக்கப்போவதில்லை என்று அறிவித்து அமைந்தார்.  அன்றாட வகுப்புகளில் பெரும்பாலும் தியானம் மட்டுமே வழக்கமாகியது


 


அக்காலங்களில் நான் மாதமிருமுறை சென்று அவரைச் சந்தித்துக்கொண்டிருந்தேன். தருமபுரியிலிருந்து நாகர்கோயிலுக்கு மாற்றலாகி வந்தபின் அவ்வாறுசெல்வது குறைந்தது. செல்லும்போதெல்லாம் நித்யா ஆழ்ந்த அமைதியில் இருப்பதைக் கண்டேன். ஓரிரு சொற்கள் மட்டுமே சொல்வார். வகுப்புகளில் மடிமேல் கைவைத்து விழிமூடி அமர்ந்திருப்பார். நெடுநேரம் கழித்து ஓம் என்னும் ஒலியுடன் விழித்தெழுந்து ஒரு சொல்லும் உரைக்காமல் தன் அறைக்குச் செல்வார்


 


அவருக்குப் பக்கவாதம் வந்திருக்கும் செய்தி எனக்கு குருகுலத்தில் இருந்து தெரிவிக்கப்பட்டது. ஊட்டியில் அப்போது நல்ல குளிர். ஆகவே மசினகுடிக்குச் சென்றிருந்தார். அங்கே பக்கவாதம் வந்து கையும் காலும் செயல்படாமலாகியது. கோவையில் டாக்டர் ரிதுபர்ணனின் இல்லத்தில் தங்கியிருந்தார். அவரைக்காண நான் ஊட்டி குருகுலத்திற்குச் சென்றேன். அங்கே அவர் இல்லை என்று தெரிந்து சேலம் குப்புசாமியுடன் [ஆர்.கே] கோவை வந்தேன். அவரை எவரும் சந்திக்கமுடியாது என்று டாக்டரின் வீட்டில் சொன்னார்கள் . ஆனால் நித்யா தொலைபேசியை வாங்கி  “வா, வந்து பார்த்துவிட்டுப்போ” என்றார். நான் உள்ளே சென்று அவரை பார்த்து ஒரு சொல்லும் இல்லாமல் வணங்கி மீண்டேன்


 


உடல்நிலை சற்று தேறியதும் நித்யா மீண்டும் குருகுலத்திற்கே மீண்டார். நான் அவரைப்பார்க்கச் சென்றேன். அங்கே உஸ்தாத் ஷௌகத்அலி, ராமகிருஷ்ணன், டாக்டர் தம்பான் [சுவாமி தன்மயா] ஆகியோரின் பராமரிப்பில் இருந்தார். அந்தரங்க மாணவர்களுக்கு மட்டுமே வகுப்புகள். கடைசிக்காலத்தில் வீணை கற்றுக்கொள்ளத் தொடங்கியிருந்தார். அதை மீண்டும் தொடங்கி ஒரு கீர்த்தனையாவது வாசிக்கவேண்டும் என முயன்றுகொண்டிருப்பதாக புன்னகையுடன் என்னிடம் சொன்னார்


 


அப்போது விஷ்ணுபுரம் வெளிவந்துவிட்டிருந்தது. அதைக்கொண்டு காட்டுவதற்காகவே சென்றேன். முன்பு பலமுறை சென்றும் அதைக்கொண்டுசெல்லமுடியவில்லை. அந்நாவல் அவருக்கு அது சமர்ப்பணம் செய்யப்பட்டிருந்தது. “So huge’ என சிரித்து அதை புரட்டிப்பார்த்தார். அவருக்குத் தமிழ் தெரியாது. அவர் காலடியில் அன்று அமர்ந்து பொதுவாகப்பேசிக்கொண்டிருந்தேன். அன்று முழுக்க சிரிப்புதான். எதைப்பேசினாலும் நகைச்சுவையாக ஆக்கிக்கொண்டிருந்தார் குரு


 


நான் ஊர்திரும்பிய பின் பதினைந்துநாளில் குருகுலத்தில் இருந்து எனக்கு ஒரு கார்டு வந்தது- குரு என்னைச் சந்திக்கவிரும்புவதாக. அருண்மொழி அதற்குமுன் குருவைச் சந்தித்ததில்லை. அஜிதன் கருவிலிருந்த போதுதான் முதலில் அவரைச் சந்திக்க வந்தேன். அவன் குழந்தையாக இருந்தமையால் அருண்மொழி அவனைக் கவனித்துக்கொள்ளவேண்டியிருந்தது. அடுத்து உடனே சைதன்யா. அவள் அவரை சந்திப்பது ஒத்திப்போடப்பட்டுக்கொண்டே இருந்தது.அப்போது சைதன்யாவுக்கு ஒருவயதாகியிருந்தது. அஜிதனை மட்டும் ஒருமுறை அழைத்து வந்திருந்தேன்.


 


அருண்மொழி குருவைச் சந்திக்க விரும்பினாள். நான் நித்யாவை அழைத்தேன். அவளை அழைத்துவரும்படிச் சொன்னார். “வா, இனிமேல் பார்க்கமுடியுமென தோன்றவில்லை” என்றார். நான் அஜிதன், சைதன்யாவுடன் அருண்மொழியை கூட்டிக்கொண்டு பஸ்ஸில் நாகர்கோயிலில் இருந்து ஊட்டி சென்றேன். நான் எதிர்பார்த்துச் சென்றது வேறு. அங்கே குருகுலம் திருவிழாக்கோலம் கொண்டிருந்தது. குரு அவருடைய பழைய நண்பர்கள் மாணவர்கள் அனைவருக்கும் கடிதம்எழுதி வேடிக்கையான வரிகளில் அவர் செல்லவிருப்பதாகத் தெரிவித்திருந்தார்..


 


குருகுலத்தில் குருவின் எதிர்காலச் சமாதிக்கட்டிடம் பற்றிய விவாதம் நிகழ்ந்துகொண்டிருந்தது. கட்டிடவரைவாளர்கள், பொறியாளர்கள் வந்திருந்தனர். குரு மிக உற்சாகமாக இருந்தார். அஜிதனிடம் விளையாடினார். ஷௌகத் அலியின் தோளைப் பற்றியபடி நடைசென்றார். அஜியுடன் நான் உடன் சென்றேன். அன்றுமுழுக்க இலக்கியம், தத்துவம் பற்றிய பகடிகள். வெடிச்சிரிப்புகள்.


 


அன்றைய வகுப்பில் வேடிக்கையாக குரு அவரது சமாதி அமையவேண்டிய விதம் பற்றிச் சொன்னார். “நூலக அறைக்கு அப்பால் சமாதி அமையவேண்டும், நூலக அறைக்கும் சமாதிக்கும் ஒரு ரகசியவழி இருக்கவேண்டும். அதனூடாக வந்து நூல்களைப் பார்த்துச்செல்லமுடியும்” என்றார். ”சமாதிக்குள் செம்புக்கம்பிகளால் ஆன ஒரு சுருள்யந்திரம் அமைக்கவேண்டும். அதற்குமேல் என்னை வைக்கவேண்டும். என் ஆன்மீகமான ஆற்றல் அதில் இறங்கி அதன்வழியாக பூமியில் பரவும்” என்றார்.


 


சிரிப்பாக இருந்தாலும் கொஞ்சம் வருத்தமும் இருந்தது. ஏதோ விளையாடுகிறார் என்றே தோன்றியது. குருகுலம் எப்போதுமே அறிவார்ந்த மையம். அங்கே ஆசாரங்கள், மதநம்பிக்கைகள், சடங்குகளுக்கு முற்றிலும் இடமில்லை. ஆனாலும் அதை நம்பிவரும் மக்கள் எப்போதுமே அற்புதங்களை எதிர்பார்ப்பார்கள். அவர்களுக்கு ஆன்மிகம் என்றால் இயற்கைவிதிகள் மீறப்படவேண்டும். வானத்திலிருந்து பொன் பொழியவேண்டும். தேவதூதர்கள் வந்திறங்கவேண்டும். மாயமந்திரங்களினூடாகவே கட்டமைக்கப்பட்ட பழங்குடி மனங்கள். வையத்தில் வாழ்வாங்கு வாழ்ந்து நிறைவதன் ஞானமே அத்வைதம் என்பதை ஆயிரத்தில் ஒருவருக்குக் கூடச் சொல்லிப்புரியவைக்க முடிவதில்லை. ஆகவேதான் அத்வைதம் கோடிப்பிறவியில் ஒருவருக்கு எனச் சொல்லப்பட்டிருக்கிறது.


 


அந்த அறியாமையை பெரும்பாலும் பரிவுள்ள நகைச்சுவையுடன்தான் குரு எதிர்கொள்வார். அவரது மாணவர்கள் என ஏற்கப்பட்டவர்கள் மட்டுமே கடிந்து திருத்தப்படுவார்கள். அன்றும் அப்படித்தான் மென்மையாக நகைத்துக்கொண்டிருந்தார். அதையும் ஒருசாரார் கைகூப்பி பக்தியுடன் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அன்றிரவு நான் மட்டும் அவருடன் அரைமணிநேரம் தனியாகப் பேசிக்கொண்டிருந்தேன்.


 


நான் மறுநாள் விடைபெற்றுக்கொண்டேன். அஜிதன், சைதன்யா தலையில் கைவைத்து வாழ்த்தினார். “சாப்பிட்டுவிட்டுப்போ” என்றார். நான் விடைபெற்றுச்செல்கையில் எனக்கு உறுதியாகத் தெரிந்திருந்தது, அவரை மீண்டும் பார்க்கமாட்டேன் என்று. ஊர்சென்று சேர்ந்த மறுநாள் அவர் சமாதியான செய்தி வந்தது.


wpid-wp-1492257966674.jpeg


குருவின் சமாதிநிகழ்வுகளுக்கு நான் செல்லவில்லை. மறுநாளே அது ஊட்டியில் நிகழ்ந்தது. நான் உடனே கிளம்பிச்செல்லமுடியாத நிலையில் இருந்தேன். மேலும் அது மிகப்பெரிய நிகழ்வாக இருந்தது. கேரளத்தின் கலாச்சாரப் பிரமுகர்கள் பலர் வந்திருந்தார்கள். அது அவ்வளவு முக்கியமல்ல என்று எனக்குத் தோன்றியது.


 


நித்யாவின் குருபூஜைநாளில் நான் பேசினேன். பின் அவருடைய நினைவுநாட்களிலும் பேசியிருக்கிறேன். அவர் இப்போது இல்லை என்று எனக்கு ஒருகணம்கூடத் தோன்றியதில்லை என்பது உண்மையிலேயே எனக்கு விந்தையாக இருக்கிறது. ஒருநாள்கூட அவரை நினைக்காமலிருந்ததில்லை. அவர் முன்னிலையில் 1994 முதல் ஊட்டி குருகுலத்தில் இலக்கியச் சந்திப்புகளை ஒழுங்குசெய்யத் தொடங்கினேன். இவ்வாண்டுவரை அது நீடிக்கிறது.


 


இங்கு இயற்கையாகவும், அவ்வியற்கை ஒருசிறு துளியாகச் சென்றமையும் பெருவெளியாகவும் நிறைந்திருப்பதை ஒன்றென்று அறிவது, அது தான் என்று உணர்வது, அதுவாகி பிறிதிலாது நிற்பதுதான் அத்வைதம். அது ஒரு முழுநிலை. வேறு அத்தனை மானுடநிலைகளிலும் ஒழியாது எஞ்சும் ஒர் இடைவெளி அப்போது முற்றிலும் இல்லாமலாகிறது. .


 


அப்பெருநிலை நோக்கி அறிந்து, உணர்ந்து, ஆகி, கனிந்து சென்றமைந்த ஒருவரின் பயணத்தில் மிகச்சிறியதூரம் உடனிருந்திருக்கிறேன். அவ்வண்ணம் ஒன்று உண்டு, அது மானுடருக்குச் சாத்தியம் என்பதற்கான சான்று எனக்குக் கிடைத்தது. அந்த நல்லூழுக்காக குருவடிவாக வந்து உறைந்து மீண்ட அதற்கு என்றும் என் வணக்கம்.


 


 


ஜெ


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 15, 2017 11:37

நித்யா காணொளிகள்

nitya


 


நித்ய சைதன்ய யதியின் வகுப்புகளின் காணொளிகள் சில வலையேற்றம் செய்யப்பட்டிருப்பதை இப்போதுதான் கண்டேன். அவருடைய அழகிய முகமும் தளர்ந்த மென்மையான சொற்களும் எத்தனை அழுத்தமாக என்னுள் பதிந்துள்ளன. அதனால்தான் போலும் ,இந்த காணொளிகள் எவ்வகையிலும் எனக்கு புதியனவாக இல்லை


 


நித்யா காணொளிகள்

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on April 15, 2017 11:32

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.