Jeyamohan's Blog, page 1656
April 5, 2017
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–65
65. பறந்தெழுதல்
தேவயானியின் வருகையால் சர்மிஷ்டை அகம்குலைந்தது அவள் முகத்தில் சொற்களில் நடையில் அனைத்திலும் வெளிப்பட்டது. “சுழல்காற்று கலைத்த தாமரைபோல” என்று விறலி ஒருத்தி அகத்தளத்தில் அமர்ந்து அவளை நகையாடினாள். அப்போது அவள் அங்கே வர அவள் அதே சொல்லொழுக்கில் பேச்சை மாற்றி “நீரலைகள் காற்று சென்றதுமே மீள்கின்றன. தாமரையோ மீள்வதே இல்லை” என்றாள்.
சர்மிஷ்டை வந்து அமர்ந்து “என்ன?” என்றாள். “ஒரு பாடல்” என்றாள் விறலி. “பிரிவுக்குப்பின் அனைத்தும் மீண்டுவிடுகின்றன. தலைவன் வளர்த்த காளையும், அவன் பேணிய வேங்கைமரமும், அவன் அமரும் பீடமும். காதல்கொண்ட அவள் உள்ளம் மட்டும் மீளவே இல்லை என்று கவிஞர் சொல்கிறார்.” அவள் வெற்றுவிழிகளுடன் “அப்படியா?” என்றாள். அவர்கள் விழிநோக்கி மென்னகை பரிமாறிக்கொண்டனர்.
எதையும் பயிலாத சிறுவீட்டுப் பெண் போலிருந்தாள் சர்மிஷ்டை. இளமையிலேயே அவளுக்கு மொழியும் கலைகளும் கற்பிப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தான் விருஷபர்வன். தென்குமரி முதல் பாரதவர்ஷத்தின் அனைத்துப் பகுதிகளையும் சேர்ந்த மிகச்சிறந்த ஆசிரியர்களைக் கொணர்ந்து அரண்மனை வளாகத்திலேயே தங்க வைத்திருந்தான். ஒவ்வொரு நாளும் அவர்கள் முறை வைத்து அரண்மனைக்கு வந்து சர்மிஷ்டைக்கு கலைகளும் காவியமும் நெறிநூல்களும் ஆட்சிமுறைமையும் கற்பித்தனர். ஆனால் அவள் எதையுமே கற்றுக்கொண்டிருக்கவில்லை. ஒவ்வொரு அறிவும் அவளுக்கு வெறும் செய்திகளாகவே சென்று சேர்ந்தது. ஒருசெய்தி பிறிதொரு செய்தியை அழித்தது.
“இளவரசி, இவை செய்திகள் அல்ல. மொழியில் பதிந்த நிலமும் வாழ்க்கையும் என்று உணர்க! மொழியிலிருந்து நிலமாகவும் வாழ்வாகவும் உயிர்ப்பித்தெடுத்து அதில் வாழுங்கள். கற்றவை அழியும், வாழ்ந்து அறிந்தவையே மெய்மையென தங்கும்” என்றார் காவிய ஆசிரியரான சுருதசாகரம் அஷ்டகர். “ஒவ்வொரு நெறியும் கண்ணீரால் குருதியால் கண்டடையப்பட்டது. பெருங்கருணையால் வகுக்கப்பட்டு வாளேந்திய சினத்தால் நிலைநிறுத்தப்படுவது. அவ்வுணர்வுகளாக நெறிகளை அறியாதவர்களுக்கு நெறிகள் வெறும் மொழியலைகள் மட்டுமே. நெறியை மொழியாக அணுகுபவர் நெறியின்மையையே சென்றடைவர்” என்றார் காமரூபத்து ஆசிரியரான மகாபத்மர்.
அவள் சிறுமியைப்போல மலர்ந்த விழிகளுடன் மாறாப்புன்னகையுடன் அமர்ந்திருப்பாள். “அப்புன்னகையால் அத்தனை அறிதல்களையும் அணைகட்டி இப்பால் நிறுத்திவிடுகிறீர்கள், இளவரசி” என்றார் இலக்கண ஆசிரியரான தண்டகர். “கல்வியால் சற்றேனும் வளர்பவரே கற்க முடியும் என்று இன்று அறிந்தேன். அடுத்த அடி வைத்த பின்னரே முந்தைய அடியை நாம் உண்மையில் புரிந்துகொள்கிறோம். திரும்பிநோக்கி அறிகையிலேயே அறிந்தவை செறிந்து அறிவென்றாகின்றன” என்றார் முறைமைகள் கற்பித்த சாந்தர்.
இயல்பிலேயே பாடுந்திறன் மட்டும் அவளுக்கு அமைந்திருந்தது. எனவே திருவிடத்தைச் சேர்ந்த பூர்ணர் கற்பித்த பண்களையும் பாடல்களையும் மட்டும் எளிதாக கற்றாள். அவற்றிலும் தேர்ச்சி என ஏதும் பெறவில்லை. உள்ளத்து உணர்வுகளை குரல் வழியாக வெளிப்படுத்தும் அடிப்படைப் பயிற்சிக்குப் பின்னர் அவ்வெளிப்பாடுகளின் ஒவ்வொரு அலகையும் ஒரு வண்ணமெனக் கொண்டு கலந்தும் மயங்கியும் அவற்றை வண்ண அடுக்குகளின் வெளியென்று ஆக்கும் திறன் நோக்கி செல்ல அவளால் இயலவில்லை. “குயில்பாடுகிறது, அது குயில்பாட்டு என அன்றும் இன்றும் அப்படியே இருக்கிறது. மானுடனின் இசை ஒவ்வொரு கணமும் மாறுபடுகிறது, விழியசைவுகளைப்போல. ஒவ்வொருவரின் உருவையும் செலவையும் பதித்திருக்கிறது, கால்சுவடுகளைப்போல” என்றார் பூர்ணர்.
“இளவரசி, உணர்வுகளை நேரடியாக இசைப்பதே நாட்டுப்புற இசை. அதுவே இசையின் அடித்தளம். இசையின் ஒருபகுதி குருதி போல மூச்சு போல நம்முள் இருந்து ஊறுவது. ஆனால் பிறிதொரு பகுதி இக்காற்று போல அப்பாறைகள் போல புறத்தே இலங்குவது. உள்ளிருப்பது புறமென்றாகி நின்றிருக்கும் விந்தையே இசை. புறம்திகழ்வது உள்ளமென ஆகும் மறுவிந்தையும்கூட” என்றார் பூர்ணர். அவள் விழிவிரித்து நோக்கி அமர்ந்திருந்தாள். “உங்கள் துயரங்களை எண்களாக்க முடியுமென்றால், கனவுகளை கோலப்புள்ளிகளாக போட முடியுமென்றால், பொங்கி எழும் உவகைகளை கற்களாக தொட்டு எடுத்து அடுக்கிவைக்க முடியுமென்றால் நீங்கள் இசையை நிகழ்த்துகிறீர்கள்” என்றார் பூர்ணர்.
“ஒவ்வொருவரும் தங்கள் துயரங்களையும் கனவுகளையும் உவகைகளையும் அதிலிட்டு நிறைத்து அருந்திக்கொள்கிறார்கள். ஒவ்வொன்றையும் உருக்கொள்ளச்செய்யும் அச்சு அது” என்றார் பூர்ணர். மெல்லிய குரலில் சர்மிஷ்டை “என் உணர்வுகளுக்கு என் இசையில் இடமில்லையா?” என்று கேட்டாள். “உண்டு, அதை தாங்கள் மட்டுமே அறிவீர்கள். இசை எவருடைய தனியுணர்வும் அல்ல, அது மானுடத்துக்குரியது” என்றார் பூர்ணர். அன்று அவள் சுட்டு விரலால் தரையில் சிறு கோலங்களை எழுதியபடி தலை குனிந்து நெடுநேரம் அமர்ந்திருந்தாள். அவள் அடுத்த சொல் எடுப்பதற்காக ஆசிரியர் காத்திருந்தார்.
பின்னர் அவள் விழிதூக்கி “என்னால் இசையையும் கற்றுக்கொள்ள முடியுமென்று தோன்றவில்லை, ஆசிரியரே. இவ்வரண்மனையில் எனைச் சூழ்ந்திருக்கும் அனைத்துமே நீங்கள் சொல்வதைப்போல எண்களும் புள்ளிகளும் கற்களும்தான். அலறல்களும் அழுகைகளும் நீள்மூச்சுகளும்கூட வெளிவந்ததுமே இங்கு அவ்வாறு ஆகிவிடுகின்றன. எனக்கென எஞ்சியிருப்பது இந்த இசை மட்டுமே. அறைக்குள் கதவுகளனைத்தையும் மூடிக்கொண்டு எனக்கு நானே விசும்பி அழுவதைப்போன்றது அது. அதையும் நான் இழந்துவிட வேண்டுமா?” என்றாள்.
மொழியில் கற்பிக்கப்பட்ட எதையும் மொழி கடந்து நோக்க அவளால் இயலவில்லை. நூறுமுறை அணியியல் கற்பிக்கப்பட்ட பின்னர்கூட மலர் மலரென்றும் தேனீ தேனீ என்றும் அதன் மீட்டல் வெறும் ஓசையென்றுமே அவளுக்குத் தெரிந்தது. ஒவ்வொன்றுக்கும் அடியில் உறைந்துள்ள ஒன்றை தொட்டுத் திறக்க தன்னால் இயலவில்லை என்று விரைவிலேயே உணர்ந்துகொண்டாள். “ஒரு தேனீயை ஏன் யாழென்றும் பறக்கும் சுடர் என்றும் எண்ணிக்கொள்ள வேண்டும்? அது தேனீ என்றே இருந்தால் என்ன குறைந்துவிடப்போகிறது?” என்று அவள் கேட்டாள்.
ஆறாண்டுகளாக அவளுக்கு காவியம் கற்பித்துக்கொண்டிருந்த அஷ்டகர் ஒருகணம் அவளை நோக்கியபின் சுவடிகளை மூடி கட்டிவைத்துவிட்டு “நன்று, முதல் கவிதை எழுதப்பட்ட நாள் முதல் கவிஞரிடம் கேட்கப்படும் கேள்வி இது. எக்கவிஞனும் இதற்கு நிலையான மறுமொழியை சொன்னதில்லை. ஏனென்றால் அவனும் அதே வினாவை தனக்குள் கேட்டுக்கொள்கிறான். இருந்தும் ஏன் அவன் கவிதை எழுதுகிறானென்றால் அவன் கவிஞன் என்பதனால், அவனால் எழுதாமலிருக்க இயலாதென்பதனால்” என்றார்.
அவளுக்கு ஆடலும் அணி நடையும் கற்பிக்க வந்த கலிங்கத்து ஆட்டரான சீர்ஷர் “உடலை உள்ளத்தால் அத்தனை இடுக்கிக்கொள்ள வேண்டியதில்லை, இளவரசி. அஞ்சும் அன்னைக்குரங்கு தன் சவலைக்குட்டியை என உங்களை நீங்களே அத்தனை அள்ளி பற்றியிருக்கிறீர்கள். ஒருகணம்கூட உங்கள் தோள்களில் தன்னுணர்வில்லாமல் இருந்ததில்லை. உடலை மறந்திருங்கள். இளஞ்சிறுமியென எப்படி மலர்த்தோட்டத்தில் பாய்ந்தோடினீர்களோ அப்படி இருங்கள்” என்றார். “நான் எப்போதும் அப்படி ஓடியதில்லை, ஆசிரியரே” என்றாள் சர்மிஷ்டை. “என்றும் என்னுடன் சேடியரும் செவிலியரும் இருந்தனர். நானறிந்த முதற்பேச்சே நீ இளவரசி என்பதுதான். எனைச் சூழ்ந்த விழிகளை உணராமல் துயின்றதே இல்லை.”
“விழிகளைச் சூழ உணர்வதேகூட உடலை விடுதலை செய்தலாகும்” என்றார் சீர்ஷர். “விறலியரும் பாணினியரும் விழிநடுவே பிறந்து விழிசூழ் மேடைகளில் வாழ்கிறார்கள். விழிகளே உலகம், விழிகளே காலம், விழியென மலர்ந்ததே பிரம்மம். விழிகள் முன் நம் உச்சத்தை நிகழ்த்தவேண்டும் எனும் எண்ணமே நம்மை சிறகுகொள்ளச்செய்யும்.” அவள் “என்னால் இயலாது” என்றாள். “ஆடல் என்பது உடலின் விடுதலை. விடுதலை கொள்கையிலேயே உடல் முற்றிலும் ஒத்திசைவை அடைகிறது” என்றார் சீர்ஷர்.
சர்மிஷ்டை “விழிமுன் திகழ்வதற்கு அழகிய உடல் வேண்டும். என் உடலை எவ்விழிக்கு முன்னும் தயக்கமின்றி முன்வைக்க என்னால் இயலவில்லை” என்று விழிதாழ்த்தி சொன்னாள். “என்னை நோக்கும் ஒவ்வொருவரும் பிறிதொருவரை நோக்குவதாக தோன்றுகிறது. என்னை அழைக்கும் ஒவ்வொரு குரலும் எனைக்கடந்து பிறிதொருவரை நோக்கி செல்வதாகத் தோன்றுவதுதான் எனது துயர்.”
“நீ எதை அஞ்சுகிறாய்? மண்ணில் எவரிடமும் பணியவேண்டியதில்லை நீ, எனினும் உன் உடல் எப்போதும் பணிந்திருப்பது ஏன்?” என்று எரிச்சலுடன் கேட்ட தன் அன்னையிடம் அவள் சொன்னாள் “பொருந்தாத ஆடைகளை அணிந்திருப்பவர்களின் தயக்கம் தாங்கள் அறிந்தது, அன்னையே. பொருந்தாத உடலை அணிந்திருக்கிறேனோ என்று நான் உணர்கிறேன்.” அன்னை சினந்து “இது நீ பயிலும் பயனற்ற காவியங்களின் விளைவு. அவையனைத்தும் சூதர்களின் வீண் கற்பனைகள். அவற்றிலுள்ள பெண்களின் அழகையும் ஆற்றலையும் உன்னுடன் ஒப்பிட்டுக் கொள்கிறாய். அவர்கள் மண்ணில் எப்போதும் வாழ்ந்ததில்லை “என்றாள்.
அவள் சினத்துடன் “வாழாதவர்களைப் பற்றியா இத்தனை காவியங்கள் எழுதப்பட்டுள்ளன? வெறும் கற்பனையையா இத்தனை மக்கள் சொல் பெருக்கி சித்தம் நிறைத்துக் கொள்கிறார்கள்?” என்றாள். “உனக்கென்ன தெரியும்? தான் இருக்கும் உடலில் தான் வாழும் இல்லத்தில் தன் குடியில் நிறைந்து வாழ்பவர் எவருளர்? விரிந்து கடந்து செல்ல வேண்டுமென்ற கனவு அல்லவா மனிதர்களை ஆட்டி வைக்கிறது? ஆகவேதான் மாவீரர்கள், பேரழகிகள், விண்ணுலாவும் தேவர்கள் சொல்லில் எழுகிறார்கள். அவர்களைப்போல் ஆகவேண்டுமென்று இளமையில் எண்ணிக்கொள்வதில் பிழையில்லை. இளமை முடிந்தபின்னும் அவ்வாறு ஆகவில்லையே என்று எண்ணி ஏங்குவது அறிவின்மை” என்று அரசி சொன்னாள்.
“காட்டுக்கனிகளில் சிறந்ததை உண்டு விதைபரப்பும் பறவைகள் போன்றவர்கள் சூதர்” என்று சர்மிஷ்டை சொல்ல “இல்லை, அனைத்தையும் பொன்னாக்கிவிடமுடியும் என்னும் கனவை மண்ணில் நிலைநிறுத்தும் பொய்யர்கள்” என்றாள் அன்னை. சிறுமிபோல தலையை அசைத்து சர்மிஷ்டை “ஷத்ரியர்கள் காவியங்கள் சொல்லும் அந்த அழகிய தோற்றமுடையவர்கள் என்று விறலி சொன்னாள்” என்றாள்.
“அவள் எங்கு கண்டாள்? அவ்வண்ணம் அவர்கள் அழகு கொண்டிருந்தாலும்கூட இன்று உன் தந்தையின் அரியணை முன் வந்து அவர் காலடியில் மணிமுடியை வைத்து வணங்கி வாழ்த்து பெற்றுச் செல்லும் இடத்தில் இருக்கிறார்கள். அவர்கள் வீட்டில் வளரும் எந்த அழகியையும் சுட்டுவிரல் சுட்டிக் காட்டி தன் மகளிரறைக்கு கொண்டுவர அவர் ஆணையிட முடியும். நோக்கு, பாரத வர்ஷத்தை ஆளும் எந்த ஷத்ரியச் சக்ரவர்த்தி உனக்கு கணவனாக வேண்டுமென்று எண்ணுகிறாய்? அவனை இங்கு வரவழைக்கிறேன்” என்றாள். “தந்தையின் ஆணைக்குக் கட்டுப்பட்டு அவர் என் கைபற்றலாம். என் அழகையோ நல்லியல்பையோ விரும்பி வரமாட்டாரல்லவா?” என்றாள் சர்மிஷ்டை.
சினங்கொண்ட அன்னை “இப்பேச்சுகளுக்கு மறுமொழி அளிக்க எனக்கு பொழுதில்லை. நீ பாரதவர்ஷத்தை ஆளும் விருஷபர்வனின் மகள். ஹிரண்யபுரியின் இளவரசி. அதை உன்னுள் கூசிச் சுருங்கும் அச்சிறுமியிடம் ஒவ்வொரு நாளும் நூறுமுறை சொல். ஏதோ ஒரு சொல் அவள் சித்தத்தை அடையும்போது உன் தோள்களில் நிமிர்வு வரும். உன் தலை மேலெழும். அதுவரை இவ்வாறு சுவர்மடிப்பில் ஒண்டி ஓடும் எலிபோலத்தான் இங்கு வாழ்வாய்” என்றபின் எழுந்து சென்றாள்.
உப்பரிகையில் நின்றபடி தொலைவில் வண்டியில் வந்துகொண்டிருந்த தேவயானியை முதலில் கண்டபோதே சர்மிஷ்டை தன்னுள் ஒரு திடுக்கிடலை உணர்ந்தாள். பின்னர் எங்கும் எச்சொல்லும் நிலைகொள்ளாத பதற்றத்தை அடைந்தாள். விரல் நுனிகள் அனைத்தும் குளிர்ந்து தளிர் முனைகளென நடுங்கும் உவகையையும் அறிந்தாள். அருகே நின்ற தோழியிடம் “காவியங்களில் வாழும் பெண்கள் பொய்யென்று அன்னை சொன்னாள், இதோ இவளைக் கண்டபின் என்னவென்பாள்?” என்றாள். “ஆம், நானும் அதையே எண்ணினேன். பெருங்காவியத்திலிருந்து எழுந்து வந்ததுபோல் இருக்கிறார்கள்” என்றாள் அவள்.
அவைமுற்றத்தில் தேவயானியின் உடலிலிருந்து தன் நோக்கை விலக்க அவளால் இயலவில்லை. கால் விரல்கள் முதல் தலைமயிர்ச் சுருள்கற்றை வரை ஒவ்வொன்றிலும் முழுமை கூடிய ஓர் உருவம் அமையக்கூடுமா என்ன? முற்றிலும் நிகர்நிலை. முற்றிலும் ஒத்திசைவு. அழகென்பது பிறிதொன்றிலாமை. இதுவொன்றே இங்கெங்கும் என்று சித்தமுணரும் உச்சம். அந்த முனையிலிருந்து அவளை நோக்கும் உள்ளம் ஒருகணமும் இறங்காதென்று தோன்றியது. துலாக்கோலென முற்றிலும் நிகர் நின்ற தோளகல்வு. நடுவே அசைவிலாத தலைநிமிர்வு. பிற பெண்களைப்போல் அவள் இடை குழையவில்லை, நடை ஊசலாடவில்லை. சீராக ஓடும் கண்ணுக்குத்தெரியாத ஆறொன்றில் மிதந்து செல்பவளைப்போல நடந்தாள். அமர்கையில் ஒவ்வொரு பீடமும் அவளுக்கென்றே முன்னரே வடிவமைக்கப்பட்டது போலிருந்தாள்.
எளிய இடையாடையும் பட்டு மேலாடையும் அணிந்திருந்தாள். அரண்மனையில் அணிசமைக்கும் பெண்கள் அவள் இடையாடைக்கும் மேலாடைக்கும் இடையே இருந்த அப்பொருத்தமின்மையை சுட்டிக்காட்டி நகைக்கக்கூடும். சீனப்பட்டாடைக்கு சற்றும் ஒவ்வாமல் காட்டுமலர்களை அணிந்திருந்தாள். ஆனால் ஒவ்வொன்றும் இயல்பாக அவளுடன் இணைந்து பிறிதொரு தோற்றத்தை அவள் கொள்ள முடியாதென்று எண்ண வைத்தன. அரண்மனை முகப்பில் அவள் இறங்குகையில் கூடத்தில் அரியணையில் நிமிர்ந்து அமர்ந்திருக்கையில் சூழ்ந்திருந்த அரசியரும் அரச குடிப்பெண்களும் அவளுக்கு பணிபுரிய வந்த எளிய சேடிகள்போல் தோன்றினர்.
வேறெங்கும் அமர்ந்ததில்லை என்பதுபோல் மையப்பீடத்தில் அமர்ந்து சுட்டுவிரல் காட்டி அருமணிகளைப் பதித்த நகைகளையும் நிகரற்ற விலைகொண்ட பட்டாடைகளையும் அவள் ஏற்றுக்கொண்டபோது முடிமன்னர் காலடியில் நிரத்தும் கப்பங்களை பெறுபவள் போலிருந்தாள். இயல்பாக அவற்றை கணக்கிட்டு அப்பால் திரும்புகையில் விழி திறந்த நாள் முதல் பெருஞ்செல்வத்தில் விளையாடியவளாகத் தெரிந்தாள். ஒவ்வொரு சொல்லும் காவியங்களிலிருந்து அப்போது எழுந்து வந்ததுபோல் அவள் நாவில் பிறந்தது. ஒவ்வொரு தருணத்துக்கும் உகந்த வரி எழவேண்டுமென்றால் எத்தனை கற்றிருப்பாள்!
தேவயானி அரண்மனைவிட்டு நீங்கியபின் தன் அறைமஞ்சத்தில் கால்மடித்தமர்ந்து அவளையே எண்ணிக்கொண்டிருந்த சர்மிஷ்டை அறியாது நெஞ்சுவிம்மி ஒரு துளி கண்ணீர் விட்டாள். “என்னடி?” என்று அறைக்குள் அமர்ந்து சேடியருக்கான ஆணைகளை ஓலைகளில் பொறித்துக்கொண்டிருந்த அவள் அன்னை கேட்டாள். “ஒன்றுமில்லை” என்றாள் சர்மிஷ்டை. எழுந்து அவள் அருகே வந்து “சொல், என்ன?” என்றாள் அரசி. “ஒன்றுமில்லை” என்று அவள் எழப்போனாள். அவள் தோளில் கைவைத்து அழுத்தி “நானறிவேன். நீ அதை உன் வாயால் சொல்!” என்றாள். அவள்மேலும் இருதுளி கண்ணீர் வழிய தலை கவிழ்ந்தாள்.
அவள் தலையை மெல்ல வருடி “ஆம், அவள் பேரரசிக்குரிய நிமிர்வு கொண்டிருக்கிறாள். அவள் முன் நீ எளிய பெண் போலிருக்கிறாய். ஆனால் ஒன்று எண்ணிக்கொள், எவ்வண்ணமிருப்பினும் அவள் அந்தணப்பெண். அந்தணர் ஒருவரையே அவள் மணங்கொள்ள வேண்டும். எப்படி உயர்ந்தாலும் பெருவைதிகன் ஒருவனின் இடம் அமர்ந்து வேள்விப்பந்தலில் தலைமை கொள்வதை மட்டுமே அவள் எட்ட முடியும். நீ பாரதவர்ஷத்தின் இளவரசி. பேரரசர்கள் உன் காலடிகளில் பணிவார்கள். உன் சொற்களுக்கென அசுரப்படைநிரைகள் காத்திருக்கின்றன.”
அவள் ஏதோ சொல்ல வாயெடுக்க மறித்து “ஆம், நீ சொல்ல வருவது எனக்கு புரிகிறது” என்றாள் அன்னை. “அவள் அருகே நிற்கையில் நீ பொருந்தாத உரு கொண்டவளாகத் தோன்றுகிறாய் அல்லவா? அறிக இளையவளே, இப்புவியில் எவரும் எந்தச் செயலுக்குமென பிறந்து வரவில்லை. பூண்ட உருவை நடித்து முழுமை செய்பவர்களே இங்குள்ளவர் அனைவரும். அரசியென்று அமர்க! அரசியென்றாகுக! அரசியென்றே அறியப்படுவாய்” என்றாள். பின்னர் அவள் தோளை மெல்ல வருடி “பிறிதொரு வழியில் எண்ணிப்பார். உன் தந்தைக்கு சுக்ரர் அமைந்ததுபோல் உனக்கு இவள் அமைந்திருக்கிறாள். இவளுடன் சென்று சேர். இவளிடம் இருந்தே நூலையும் நெறியையும் கலையையும் நீ ஏன் கற்றுக் கொள்ளக்கூடாது?”
“நானா? எனக்கு எதுவுமே உள்நுழையவில்லை, அன்னையே” என்றாள் சர்மிஷ்டை. “ஆம், ஏனென்றால் இதுவரை உனக்கு கற்பிக்கப்பட்ட அனைத்தும் வெறும் சொல்வடிவில் சொல்லுறைந்த நுண்வடிவில் இருந்தன. இன்று அவை ஒரு பெண் வடிவில் உன் முன் நின்றிருக்கின்றன. நீ ஆகவேண்டிய உருவம் அவளுடையது. அவளை நோக்கி செல்! அவளாக முயல்க! அவ்வழியில் நீ எவ்வளவு முன்னகர்ந்தாலும் அவ்வளவுக்கு நன்மையே” என்றாள் அன்னை. சற்றுநேரம் எண்ணியபின் மெல்ல கலைந்து சர்மிஷ்டை புன்னகைத்தாள்.
சர்மிஷ்டை நான்குநாட்கள் தேவயானியை சென்று பார்ப்பதைப்பற்றி எண்ணி அவ்வெண்ணத்தை ஒத்திப்போட்டு தன்னுடன் போராடியபின் அப்போராட்டத்தால் சலிப்புற்று அதை கடக்கும் வழி சென்று பார்த்துவிடுவதே என முடிவெடுத்தாள். அங்கே ஏதேனும் ஒன்று நிகழ்ந்து அவளை மேலும் சந்திக்காமலிருக்கும்படி தன்னை ஆக்குமென்றால், தன் வாழ்விலிருந்து அவள் உதிர்ந்துபோக வழி அமையுமென்றால் நன்று என்று அவள் எண்ணினாள். எவரிடமும் சொல்லாமல் அணுக்கச்சேடியை மட்டும் அழைத்துக்கொண்டு தேவயானியின் குடில்தொகையை நோக்கி சென்றாள்.
மையக்குடிலின் கோபுரம் போன்ற கூரை தொலைவில் தெரிந்ததுமே அவள் கால்தளர்ந்தாள். தேரிலிருந்து இறங்காமலேயே திரும்பிவிடலாமா என எண்ணி அதை சொல்லென ஆக்காமல் தேர்த்தூணைப்பற்றியபடி நின்றாள். தேர்முற்றத்தில் இறங்கி குடில்முகப்பு நோக்கி நடக்கும்போது எதிரே குளிர்காற்று ஒன்று எழுந்து தன்னை பின்னுக்குத்தள்ளுவதாக உணர்ந்தாள். குடில்முற்றத்தில் மலர்ச்செடிகளின் பழுத்த இலைகளைக் களைந்தபடி நின்றிருந்த சாயையைக் கண்டதும் முதலில் தேவயானி என எண்ணி உளம் அதிர்ந்தாள். அவளல்ல என மறுகணம் உணர்ந்தாலும் அந்தப் பதற்றம் உடலில் நீடித்தது.
மெல்ல அருகணைந்து படிகளில் ஏறியதும் சாயை தலைதூக்கி நோக்கி புன்னகைத்து “வருக இளவரசி, தாங்கள் வருவீர்கள் என அரசி எதிர்பார்த்திருந்தார்கள்” என்றாள். அவள் முற்றிலும் மாறிவிட்டிருப்பதை சர்மிஷ்டை உணர்ந்தாள். பேச்சும் நோக்கும் அசைவும் தேவயானியைப் போலவே இருந்தன. அவள் அத்தனை உயரமானவள் என்பதையும் அவள் தோள்களும் தேவயானியைப் போலவே திரண்டு அகன்றவை என்பதையும் அப்போதுதான் அத்தனை கூர்ந்து அவள் நோக்கினாள். உரு வந்துசேர்வது வரை நிழல் இங்கு காத்திருந்திருக்கிறது என எண்ணிக்கொண்டாள்.
தேவயானி எப்படி தன்னை எதிர்கொள்ளக்கூடும் என்று சர்மிஷ்டை கற்பனை செய்துகொண்டே வந்தாள். எளிய சிறுமியென்று இயல்பாக நடத்தக்கூடும். அறிவின்மையை நகையாடக்கூடும். அவள் தந்தையின் அரசுநிலையை எண்ணி சொல்கருதி உரையாடக்கூடும். அவளுக்குள் தேவயானி கதைகளின் அரக்கிகளைப்போல புதுப்புது முகங்களுடன் எழுந்து வந்துகொண்டே இருந்தாள். படிகளைக் கடந்தபோது தன் எண்ணங்களின் எடைதாளாமல் அவள் நின்றுவிட்டாள். பின்னர் உள்ளே நுழைந்தபோது கையில் ஏடுகளுடன் எதிரே வந்த தேவயானி அவளை நோக்கி புன்னகை செய்து “வருக!” என்றாள். அவள் முறைமைச்சொல் ஏதேனும் சொல்லவேண்டும் என எண்ணி அது எழாமல் வெறுமனே புன்னகைத்தபடி நின்றாள். தேவயானி அருகே வந்து அவள் கைகளை பற்றிக்கொண்டு “வருக, இளவரசி!” என அழைத்துச்சென்றாள்.
அவளுடன் அமர்ந்திருக்கையில் அவளை வெறுமனே நோக்கிக்கொண்டிருப்பதை மட்டுமே அவளால் செய்யமுடிந்தது. அவ்வாறு கைகள் எழவேண்டுமென்றால் தோள்கள் அத்தனை திரண்டிருக்கவேண்டும். தோள் அத்தனை திரண்டும் பெண்மை தோன்றவேண்டுமென்றால் இடை அவ்வளவு சிறுத்து இறுகியிருக்கவேண்டும். குரல் ஓங்கும்போதும் இனிமை குறையாதிருக்கவேண்டுமென்றால் அதற்கு பேரியாழின் ஆழ்ந்த கார்வை இருக்கவேண்டும். நேர்நோக்கு திகழ்கையிலும் விழியழகு வேண்டுமென்றால் இமைகள் இதழ்களாக விரிய மாமலர்கள் போலிருக்கவேண்டும் கண்கள்.
“என்ன நோக்குகிறாய்?” என அவள் இயல்பாக கேட்டபோது சர்மிஷ்டை உளம்பொங்க தலைகவிழ்ந்தாள். ஒன்றுமில்லை என தலையசைத்தாள். “ஏன் அஞ்சுகிறாய்?” என்று மீண்டும் தேவயானி கேட்டாள். “இந்த ஆடையில் அழகாக இருக்கிறீர்கள்” என்றாள் சர்மிஷ்டை. தேவயானி சிரித்து “இது சாயையின் தெரிவு” என்றாள். “எல்லா ஆடையும் உங்களுக்கு அழகே” என்றாள் சர்மிஷ்டை. தேவயானி அதற்கும் உரக்க நகைத்தாள். “நீ என்ன கற்கிறாய் இப்போது?” என சுவடிகளை கட்டிவைத்தபடி தேவயானி கேட்டாள். “நாளும் கல்விதான். எதுவும் என்னுள் நுழைவதில்லை” என்றாள் சர்மிஷ்டை. “கற்றவற்றைப்பற்றி உன் கருத்தை உருவாக்கிக்கொள், உன்னுள் முளைத்தவையே உன்னில் வளரமுடியும்” என்றாள் தேவயானி. சர்மிஷ்டை வெறுமனே தலைகவிழ்ந்து புன்னகை புரிந்தாள். அவள் தொடையை எட்டி மெல்ல அடித்து “என்ன நகைப்பு?” என்றாள் தேவயானி.
ஒவ்வொருநாளும் காலையிலேயே சர்மிஷ்டை தேவயானியின் குடிலுக்கு வந்தாள். அவளுடன் சேர்ந்து சுக்ரரின் வகுப்புகளில் அமர்ந்து விழிகள் விரிய கேட்டுக்கொண்டிருந்தாள். திரும்பி வரும்போது எளிய ஐயங்களைக் கேட்டு தேவயானியை நகைக்கச்செய்தாள். அன்னைத்தன்மை கொண்ட இளிவரலுடன் மட்டுமே அவளை தேவயானி அணுகினாள். அவள் பேசுவதை கண்களில் சிரிப்புடன் கேட்டு மெல்லிய பகடியுடன் மறுமொழி சொன்னாள்.
அதைக்கடந்து ஒருசொல்லும் அவளிடம் சொல்லிவிடமுடியாதென்று உணர்ந்தபோது சர்மிஷ்டை தன்னை அவ்வாறே ஆக்கிக்கொண்டாள். மழலைபேசவும் சிணுங்கவும் ஊடவும் சிரித்துவிளையாடவும் தொடங்கினாள். வேண்டுமென்றே பிழையான வினாக்களை கேட்டாள். புரிந்துகொண்டவற்றையும்கூட புரியவில்லை என நடித்தாள். பேதையாகும்தோறும் தேவயானியை மேலும் அணுகமுடியும் என்று கண்டு மேலும்மேலுமென தன்னை அவ்வாறு ஆக்கிக்கொண்டே இருந்தாள்.
அவளைப்போலவே சாயையும் சர்மிஷ்டையை குழவியென நடத்தலானாள். நீராடச்செல்கையில் அவள் இருவரின் ஆடைகளையும் தூக்கிக்கொண்டு சென்றாள். மரக்கிளைகளில் ஏறி குழலில் பூசுவதற்கான மலர்களை சாயை உலுக்கியிடும்போது கீழே ஓடி ஓடி பொறுக்கி சேர்த்தாள். மேனியில் மலர் விழ கூசிச் சிரித்து கைவிரித்து மழையாடினாள். “என்ன செய்கிறாய்? மலர் சேர்க்கச்சொன்னால்…” என சாயை அவளை அதட்டினாள். நீரில் பாய்ந்து மறுகரை நோக்கி சென்று மண்ணில் காலூன்றாமல் திரும்பிவந்து இங்கும் காலூன்றாமல் மீண்டும் திரும்பி ஏழுமுறை ஒழுக்குமுறித்துக் கடந்து தேவயானி திரும்பி வந்தபோது கைதட்டிக் கூச்சலிட்டுச் சிரித்தபடி குதித்தாள்.
“இறங்கு” என்றாள் தேவயானி. “அய்யோ, எனக்கு நீச்சலே தெரியாது” என்றாள் சர்மிஷ்டை. “இறங்கு, நான் சொல்லித்தருகிறேன்” என்றாள் தேவயானி. “இல்லை… இல்லை…” என சர்மிஷ்டை விலகி ஓட “அவளைப் பிடி” என்று தேவயானி கைநீட்டி கூவினாள். அவள் ஓடி புல்தடுக்கி விழ சாயை அவளைப்பற்றி அப்படியே தூக்கிக் கொண்டுவந்து நீரில் வீசினாள். மூச்சுபதற கைகால்கள் வீசி உதறிக்கொள்ள நீரில் மூழ்கி மூழ்கி அவள் எழுந்தபோது தேவயானி பாய்ந்து அவளருகே வந்து வயிற்றில் கை வைத்து மெல்ல உந்தினாள். நீர் அவள் கைகால்களை ஏந்திக்கொண்டது. அவள் கைகால்கள் வீசியும் அறைந்தும் நீரில் துடித்தன. பாசிமணத்துடன் நீர் வாய்க்குள்ளும் மூக்கினுள்ளும் சென்றது.
பின்னர் கைகள் ஓர் ஒத்திசைவை உணர்ந்தன. கால்களுடன் அந்த ஒத்திசைவு இணைந்துகொண்டபோது அவளுக்குள் இருந்த ஒன்று அந்த ஒத்திசைவை தன்னுடன் அடையாளம் கண்டது. அவள் நீந்திக்கொண்டிருப்பதை அப்போதுதான் உணர்ந்தாள். தேவயானி தன் கையை எடுத்திருப்பதை உணர்ந்ததும் அஞ்சி மூழ்கினாள். உடனே கால்களால் நீரை உதைத்து எம்பி கைவீசி நீந்தலானாள். தேன்சிட்டு போல பறந்துகொண்டிருப்பதாக உணர்ந்தாள். வாழ்க்கையில் பிறிதெப்போதும் அத்தகைய விடுதலையை அவள் உணர்ந்ததில்லை.
கரையில் ஏறி நின்ற தேவயானி “மேலே வா, பொழுதாகிறது” என்றாள். அவள் நீரை ஒளியாக உமிழ்ந்து “இதோ” என்றாள். “வாடி” என தேவயானி கூவினாள். “இதோ” என்றபின் மூழ்கி அப்பால் எழுந்தாள் சர்மிஷ்டை. தேவயானி கரையில் சுற்றும் நோக்கி காய்ந்த நெற்றுகளை பொறுக்கி அவள்மேல் எறிந்தாள். அவள் சிரித்தபடி மூழ்கி மூழ்கி விலகினாள். மீன் போல எம்பித்தாவினாள்.
சாயை நீரில் பாய்ந்து அவளை நோக்கி வர சிரித்தபடி அவள் விலகிச் சென்றாள். சாயை பெரிய கைகளை வீசி அவளை துரத்திப்பிடித்து அவள் குழல்பற்றி இழுத்து கரைநோக்கி நீந்தினாள். “நானே வருகிறேன்” என்று சர்மிஷ்டை கூவினாள். இருவரும் கரைநோக்கி நீந்தியபோது சாயையின் கைசுழற்சியும் காலலைவும் போலவே அவளுடையனவும் இருந்தன. சீராக நீரை முறித்து வந்து தாழ்ந்த புன்னைமரக்கிளைகளைப் பற்றி தொற்றி மேலேறினார்கள்.
உடலோடு ஒட்டிய ஆடைகளை கையால் நீவி நீர்களைந்தபடி சர்மிஷ்டை “நான் நீந்துவேன் என நினைத்ததே இல்லை” என்றாள். “என் உடல் நீந்துவதற்குரியதல்ல என்றார்கள்.” தேவயானி “மானுடருக்கு நீந்தத்தெரியும். மொழியால்தான் நாம் மூழ்குகிறோம் என்று எந்தை சொல்வதுண்டு. நம்மை மூன்றுகாலங்களிலும் இரண்டுவெளிகளிலுமாக சிதறடித்துக்கொண்டே இருக்கும் மொழியை விட்டுவிட்டால் நம் உடல் ஒத்திசைவுகொள்கிறது, நீந்திவிடலாம்” என்றாள்.
சர்மிஷ்டை நீந்தும்போது தன்னுள் சொற்கள் இருந்தனவா என எண்ணிநோக்கினாள். சொல்லின்மையில் திளைத்ததுபோல் தோன்றியது. சொற்களின் அலைகளில் ஆடியதுபோலவும் இருந்தது. உவகையுடன் மூச்செறிந்து கைகளால் நெஞ்சை அழுத்தி வானம்பெருகி ஓடிக்கொண்டிருந்த ஆற்றை நோக்கியபடி “நான் இதைப்போல விடுதலையை உணர்ந்ததே இல்லை” என்றாள் சர்மிஷ்டை.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–64
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–63
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–62
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–61
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–60
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–59
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–58
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–57
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–56
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–54
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–53
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–52
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 19
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 11
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 12
அசுரர்
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 59
April 4, 2017
பறக்கையில் ஒரு தோற்பாவை நிழல்கூத்து
நேற்று முன்தினம் [2-4-2017] மாலை அ.கா.பெருமாள் அவருடைய இளம்நண்பர் ராம் அழைத்துவர வீட்டுக்கு வந்திருந்தார். அவருடைய தோல்பாவை நிழல்கூத்து நூல் காவியா வெளியீடாக முழுமையான தொகுப்பாக வெளிவந்துள்ளது. பல்வேறு தருணங்களில் அ.கா.பெருமாள் எழுதிய தோல்பாவைநிழற்கூத்து குறித்த அனைத்துச்செய்திகளும் அடங்கிய ஆய்வுநூல் இது
அ.கா.பெருமாள் அவர்களைப்பார்த்து சிலகாலம் ஆகிறது. சென்னையிலும் நாகர்கோயிலிலுமாக மாறிமாறி இருக்கிறர். சற்று களைத்திருக்கிறார். பல்லாயிரம் கிலோமீட்டர்கள் குமரிமாவட்டத்திற்குள்ளேயே சுற்றிச்சுற்றிச் செய்திசேகரித்தவர். இன்று சொந்தமாக வண்டி ஓட்டுவதில்லை. ஆய்வுப்பணிகள் நடந்துகொண்டிருக்கின்றன என்றார். மறைந்த தமிழறிஞர்களைப்பற்றி அவர் எழுதிய தொடர் இன்னும் நூல்வடிவம் பெறவில்லை. கல்வெட்டுக்களைப்பற்றிய ஆய்வு ஒன்றும் தொடர்கிறது
பறக்கையில் தோல்பாவைநிழற்கூத்து நடப்பதாக அ.கா.பெருமாளுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. முன்பு பலமுறை அருண்மொழியைக் கூட்டிச்செல்வதாக அவர் சொல்லியிருந்தாலும் அது நடக்கவில்லை. இப்போது போகலாமா என்று அருண்மொழி கேட்க உடனடியாக முடிவெடுத்து கிளம்பிவிட்டோம். நானும் அருண்மொழியும் சைதன்யாவும் ஆட்டோவில். அ.கா.பெருமாளும் ராமும் இருசக்கரவண்டியில்
பறக்கை அந்திநேரத்தில் நாகர்கோயிலின் பரபரப்பாக தெருபோலிருந்தது. ஆனால் ஆலயச்சுற்று பழமையுடன் மாறாத்தன்மை கொண்டிருந்தது. நாங்கள் சென்றபோது மதச்சொற்பொழிவு நிகழ்ந்துகொண்டிருந்தது. தேர்த்திருவிழாவின் இரண்டாம்நாள். உள்ளே சென்று தரிசனம் முடித்து வந்தோம். அ.கா.பெருமாள் கோயிலில் இருந்த பாண்டியர் காலகட்ட கல்வெட்டுகளைச் சுட்டிக்காட்டினார்.
சுவாரசியமான அம்சம் ஒன்று அவர் சொல்லி உறைத்தது. மகபாராஜா பாலராமவர்மா ஆலயத்திற்குள் ஒரு நடராஜர் சன்னிதியை கட்டியிருக்கிறார். வைணவ ஆலயம் அது. அவரும் தீவிர வைணவர். கொடிமரத்திற்கு ராணி சேதுலட்சுமிபாய் பொன் வேய்ந்திருக்கிறார்
தோல்பாவைநிழற்கூத்து எட்டுமணிக்குத் தொடங்கியது.’தி ஹிந்து’ கோலப்பன் பறக்கையில் இருந்தார். பல்லாண்டுக்காலம் சென்னையில் ஆங்கில நாளிதழ்களில் பணிபுரிபவர். ஆனால் பறக்கையிலிருந்து அவர் வெளியே போனதே இல்லை எனத் தோன்றும் பேச்சு ,நடை , அக்கறை அனைத்திலும். மரபிசை நாட்டம் கொண்டவர். நாதஸ்வர, தவில் இசையில் ஆய்வாளர்.
ஐந்தாம்திருவிழாவின் நாதஸ்வரக்கச்சேரிக்கு பல ஆண்டுகளாக கோலப்பன் தான் புரவலர். தமிழகத்தின் தலைசிறந்த வாத்தியக்காரர்களை. அழைத்துவருவார்.. அது பறக்கையின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்று. சரியான ‘நாய்க்கோட்டி’. நானும் அவரும் தொலைபேசியில் நாய்பற்றி நிறையவும் இசைபற்றி கொஞ்சமும் பேசிக்கொள்வதுண்டு
அ.கா.பெருமாளின் ஊர் பறக்கைதான். அவரது தம்பி சொக்கலிங்கம்பிள்ளை அங்குதான் வாழ்கிறார். மருத்துவத்துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். அவர் நிகழ்ச்சிப்பொறுப்பாளரும்கூட.நான் பத்தாண்டுகளுக்குமுன் பறக்கையில் தோற்பாவைநிழற்கூத்து பார்க்க அ.கா.பெருமாளுடன் வந்திருந்தேன். அதே இடம். அன்று பரமசிவராவ் அந்நிகழ்ச்சியை நடத்தினார். மறக்கமுடியாத அனுபவம் அது.
தோல்பாவைநிழற்க்கூத்து அன்று சுந்தரகாண்டம். உச்சிக்குடும்பனும் உளுவத்தலையனும் வந்து அனைவருக்கும் வணக்கம் சொல்லி தோல்பாவைநிழற்க்கூத்து கலையைக்காக்கும் அ.கா.பெருமாள் அவர்களைப்பற்றி ராமனிடம் சிறப்பாக எடுத்துச் சொன்னார்கள்.
அனுமன் ராமனிடம் ஆணைபெற்று இலங்கைசென்று தேவியை கண்டு கணையாழி அளித்து இலங்கையை எரித்து மீண்டுவருவதுவரை கதை. இதே பறக்கையில் நான் முன்பு பரமசிவராவ் நிகழ்த்திய _க் கண்டிருக்கிறேன். இப்போது முத்துசந்திரன் நடத்துகிறார். இளைஞர். இன்னும் சிலகாலம் இக்கலை இவரால் வாழும். பெரும்பாலானவர்கள் இக்கலையிலிருந்து விலகிச்சென்றுவிட்டார்கள்.
அ.கா.பெருமாள்
மண்டிகர் என்னும் கலைஞர் இனக்குழுவால் தோல்பாவைநிழற்கூத்து நடத்தப்படுகிறது. இவர்கள் மராட்டிய மொழிபேசுபவர்கள். நாயக்கர் ஆட்சிக்காலத்தில் தமிழகம் வந்து தங்கியவர்கள். தென் தமிழகம் முழுக்க அலைந்து திரிந்த நாடோடிக்கலைஞர்களான இவர்களுக்கு ஆரல்வாய்மொழி அருகே திருமலாபுரம் என்னும் ஊரில் நிரந்தர வசிப்பிடம் அமைந்தது. தாழ்த்தப்பட்டவர்களுக்குரிய சாதிச்சான்றிதழும் பெறப்பட்டது. அதற்கு அ.கா.பெருமாளும் முயற்சி எடுத்துக்கொண்டிருக்கிறார்.
ஆனால் நிரந்தர வசிப்பிடமும் கல்வியும் அமைந்ததும் பலரும் தோல்பாவைக்கூத்தை விட்டுவிட்டார்கள். காரணம் இது புரவலர் இல்லாக் கலை. தமிழகம் சினிமாவெறியில் இருப்பதனால் வேறு எதற்கும் மக்கள் வருவதில்லை. குமரிமாவட்ட ஆலயங்கள் மற்றும் ஆர்வலர் முயற்சியால் இங்கே இக்கலை ஓரளவு நீடிக்கிறது
முத்துசந்திரனின் முன்னோர்கள் மாபெரும் கலைஞர்கள். தோல்பாவைநிழற்க்கூத்துக் கலையின் ஆசான் எனப்படும் கோபால் ராவின் மகன் சுப்பையாராவின் மகனாகிய பாலகிருஷ்ணனின் மகன் முத்துசந்திரன். இவரது சித்தப்பா பரமசிவ ராவும் பெருங்கலைஞர். இப்போது சோதிடராக மாறிவிட்டார். கூத்து நிகழ்த்துவதில்லை. முத்துசந்திரனும் அவர் மனைவி ராதாவும் இப்போது இக்கலையை நிகழ்த்துகிறார்கள். அவர் தம்பி முத்து முருகன் தோல்பாவைகளை வரைவதில் வல்லவர்
இளம் ஆட்டுத்தோலில் வரையப்பட்ட மென்மையான ஓவியப்பதாகைகளை விளக்கொளியில் காட்டி ஒரு வெண்திரைமேல் வண்ணநிழலாக ஆடவிடுவார்கள். குச்சிகளால் அந்த பாவையை இயக்கி குரல்கொடுத்து நாடகத்தை உருவாக்குவார்கள். தோல்பாவைநிழற்கூத்துக்கும் சினிமாவுக்குமான ஒற்றுமை திகைப்பை அளிப்பது.
முதல்முறை நான் தோல்பாவைநிழற்க்கூத்தைக் கண்டபோதே அதன் வண்ண ஓவியங்கள் திரையில் தெரியும் துல்லியத்தையும் அழகையும் கண்டு வியந்திருக்கிறேன். அவற்றிலிருந்து முகபாவனைகளைக்கூட நாம் ஊகிக்கமுடியும். அசைவுகளின் தர்க்கத்தைப்புரிந்துகொண்டால் நம்மால் நாடகத்தருணங்களை அடையவும் முடியும். ஒருவரே நிகழ்த்தும் கலை. முத்து சந்திரனுடன் உடன் அவர் மனைவி ராதா மத்தளம் மற்றும் பாடலுக்கு. முத்துசந்திரன் தன் பலகுரல்திறனால் அத்தனை கதாபாத்திரங்களுக்காகவும் பேசுகிறார்
குழந்தைகளுக்குரிய கலை. அவர்கள் குதூகலிப்பது தெரிந்தது. உச்சிக்குடும்பன் உளுவத்தலையன் நம் கவுண்டமணி செந்திலுக்கு முன்வடிவம். உச்சிக்குடும்பன் உதைத்துக்கொண்டே இருக்க உளுவத்தலையன் ‘சவிட்டாதீங்கண்ணே’ என்று சொல்லிக்கொண்டும் சாப்பிட்டுக்கொண்டும் இருக்கிறான். இருவரும் பார்வையாளர்களிடமும் கடவுள்களிடமும் ஒரே சமயம் பேசும் ஆற்றல் கொண்டவர்கள்.
இம்முறை பின்னணி இசையை பதிவுசெய்து பொருத்தமாகவே பயன்படுத்துவதுதான் வேறுபாடு. அனுமன் கடல்தாவும் காட்சிகளில் உள்ள காட்சிப்பகுப்பு இன்றைய சினிமாவின் செல்வாக்கு கொண்டதா, இல்லை முன்னரே அப்படித்தானா என்பது தெரிந்துகொள்ளப்படவேண்டியது.
அனுமன் விஸ்வரூபம் எடுப்பது, ராவணனைச் சீண்டுவது , அந்த ரணகளத்தை ‘ஒரு சின்னக் கொரங்கு அந்தால வந்திட்டுபோச்சு’ என ஊர்க்காரர்கள் புரிந்துகொள்வது என நுட்பமான நகைச்சுவையும் ”பச்சைப்புளியங்கா திங்கிற கொரங்கே” என ராவணன் அனுமனை அழைப்பதன் உள்ளூர் குறிப்பும் [அதாவது பசி தாங்காமல் புளியங்காய் தின்னும் குரங்கு. அதன் முகமாற்றம்] கொண்டாட்டமும் கொண்ட கலை. ஒன்றரைமணிநேரம் வேறெங்கோ இருந்தோம். மீண்டு முப்பரிமாண உலகுக்கு வந்தபோது கண்கள் கூசின
சொக்கலிங்கம்பிள்ளை வீட்டில் இரவுணவு. ரசவடை இட்லி என பறககையின் சிறப்புச்சுவை. அவரது நண்பரின் காரில் திரும்பி வந்தோம். அனுமன் சீதையிடம் அவளுக்கும் ராமனுக்கும் நடந்த அந்தரங்க உரையாடல்களைச் சொல்ல “நீ சொல்லுகது கரெக்டு” என்று சீதை மறுமொழி சொன்னதை எண்ணி சைதன்யா சிரித்துக்கொண்டே இருந்தாள்.
அ கா பெருமாள் தோல்பாவைக்கூத்து கடிதம்
என்ன ஓய் கத்திக்கிட்டு இருக்கீரு?
நாஞ்சில்நாட்டு மருமக்கள் வழிமான்மியம்
திருவட்டாறு பேராலயம்- ஒரு வரலாறு
அ கா பெருமாள் கருத்தரங்கு உரிய முன் பதற்றங்கள்
பண்டைய கழிப்பறைத் தொழில்நுட்பம் அ கா பெருமாள்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
நோட்டு,செல்பேசி, வாடகைவீடு- கடிதங்கள்
பெருமதிப்பிற்குரிய ஜெமோ. அவர்களுக்கு,
பெருநோட்டு அகற்ற நடவடிக்கையினால் “இந்தியப் பொருளியலே அழியும் என எத்தனை ‘ஆய்வாளர்கள்’ எழுதியிருக்கிறர்கள் என்று திரும்பிப்பார்த்தேன், ஆச்சரியமாக இருந்தது. அவர்களெல்லாம் அந்த விஷயத்தை அப்படியே விட்டுவிட்டு அடுத்தடுத்தவற்றுக்குச் சென்றுவிட்டார்கள்.” என்று அங்கலாய்த்திருக்கிறீர்கள். மற்றவர்களை விடுங்கள்.மாபெரும் பொருளாதார மேதை என்று போற்றப்படும் அமர்த்தியாசென்னோ பொருளாதார நிபுணரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன்சிங்கோ, அல்லது ப.சி.மோ என்னவெல்லாம் பேசினார்கள்? இந்த நடவடிக்கை நாட்டிற்கு ஒரு பேரழிவைக் கொண்டுவரும் என்றும் மோதி யாரையும் கலந்தாலோசிக்காமல் (தனது நிதியமைச்சரைக்கூட) முட்டாள்தனமான நடவடிக்கை எடுத்திருக்கிறார் என்றும், நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் கடுமையாக குறையுமென்றும், சகஜநிலைக்குத் திரும்ப வருடங்கள் ஆகும் என்று கூக்குரலிட்டார்கள்! அப்போதிருந்த தலைமை நீதிபதி ஒருபடி சென்று மக்கள் நாடெங்கிலும் கலகம் செய்வார்கள் என்று கூட பயமுறுத்தினார்! அவர்களெல்லாம் இன்று இருக்குமிடத்தை ஒளி பாய்ச்சித்தான் பார்க்கவேண்டும். இது பற்றி கருத்து கூறிய இவர்களில் ஒருவராவது இன்று வந்து தங்களது கணிப்புக்கள் சில பொய்த்துப்போய்விட்டன என்று நேர்மையாக ஒத்துக்கொள்வார்களா?
நன்றி.
அன்புடன்,
அ .சேஷகிரி.

இனிய ஜெயம்,
முன்பு ஒரு பயணத்தில் நானும் அஜியும் கர்ஜா எனும் ஊரில் நின்றிருந்தோம். அங்கே அருகில் கொண்டானா பௌத்த விகாரை தேடி என் ஆண்ட்ரைடை வாங்கி நெட்டில் துழாவினான் அஜி. நான் கல்தோன்றி மண்தோன்றா காலத்தே முன் தோன்றி, [இன்னமும் அங்கேயே உறைந்திருக்கும்] இணைய சேவையில் இருக்கும் பி எஸ் என் எல் இன் நிரந்தர கஸ்டமன். வேறு நெட்ஒர்க் இன்றுவரை நான் பயன்படுத்தியதில்லை. பி.எஸ்.என்.எல் அழகு மற்றும் தனித்தன்மை என்னவென்றால் அது உங்களுக்கு தேவையான நேரத்தில் உங்களுக்கு தேவையான வேலையை செய்யாது என்பதே.
அஜி எதிரே சென்ற ஒருவரை நிறுத்தி விசாரித்துவிட்டு வந்து ”சீனு இதோ இந்த மலைக்கு பேரு கலசகிரி. அதுக்கு கீழ ஓடுற இந்த ஆத்துக்குப் பேரு குண்டலிகா ” நான் வரலாற்று கதை கேட்கும் ஆவலுடன் உம் கொட்டினேன். ”உங்க நெட் ஒர்க்க தூக்கி இந்த ஆத்துல போடுங்க” என்றான் அஜி.
சென்ற பயணத்தில் டில்லி நெருங்கியதும். வெல்கம் டு பாரத் சஞ்சார் நிகாம் லிமிடேட் என குறுஞ்செய்தி வந்த மறு நொடி சிக்னல் மாயமானது. மைய டில்லி வந்த பிறகே உயிர் வந்தது. மகாராஷ்டிரா முழுதும். பி.எஸ்.என்.எல் பதிலாக டால்பின் எனும் பெயரில் சிக்னல் கிடைக்கிறது. இயக்கினால் மராத்தியில் இருக்கும் எல்லா தடங்களும் உபயோகத்தில் இருப்பதாக எந்திரன் இயம்பும்.
முந்தா நாள் பயணத்தில் இதோ இங்கிருக்கும் திருவெண்ணெய் நல்லூரில் சிக்னல் இல்லை. இருப்பினும் நான் எப்போதும் பாரத் மாதா கி ஜெய் சொல்லி பி.எஸ்.என்.எல் உடனே மட்டுமே வாழ்ந்து வருகிறேன். மொபைல் வழியே கணிப்பொறி இணைத்து அதன் வழியே இணையம் பயன்படுத்துகிறேன். நிற்க.
நேற்று ஊடக நண்பர் எனது இணைய பயன்பாட்டுக்காக ஜியோ வாங்கித் தந்தார். இந்தியாவுக்குள் எல்லா அழைப்புகளும் இலவசம் .முப்பது ஜிபி டேட்டா முன்னூறு ரூபாய். அதாவது ஒரு ஜீபி பத்து ரூபாய்க்குள். சில மாதம் முன்பு வரை அனைத்து நெட் ஒர்க்குகளும் ஒரு ஜிபி இருநூறு ரூபாய் வரை வசூலித்தன. இன்று ஜ்யோக்கு பிறகு அனைத்து நெட் ஒர்க் குகளும் ஜியோ விலைக்கு வந்து விட்டன.
மூன்று மாதத்துக்குள் இந்த நெட் ஒர்க் உலகில் நிகழ்ந்த கதகளி என்னவாக இருக்கும்? எத்தனை லாஜிக்கான கணக்கை அவை முன் வைத்தாலும் இருநூறுக்கும் பத்துக்கும் இடையே இருக்கும் பாரதூரம் பிரமிக்கவைப்பது. எத்தனை கோடி நுகர்வோர் எத்தனை கோடி நூற்று தொண்ணூறு ரூபாய்? இன்று அத்தனை நெட் ஒர்க்கும் செய்யும் ”தியாகத்துக்கு” பின்னணி என்ன?
இனிய ஜெயம் வசமாக ஏமாற்றப்பட்ட உணர்வில் இருக்கிறேன். ஏதேனும் சொல்லி என்னை ஆறுதல்படுத்தவும்.
கடலூர் சீனு
***
அன்புள்ள சீனு
இதைப்பற்றி எனக்குத்தெரிந்த ஒரே விஷயம் என் சாதாரண நோக்கியா செல்போனை அழுத்தினால் சிலரைக்கூப்பிட்டு பேசமுடியும், அவர்கள் என்னைக்கூப்பிட்டால் ஒரு பித்தானை அமுக்கினால் பேசமுடியும் என்பது மட்டுமே
ஜெ
***
அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்..!
ஹமீதுவின் வீடு வாடகைக்கு கிடைக்கவில்லை கட்டுரையை நான் 100 சதவீத அரசியலாகவேப் பார்க்கிறேன்.
தமிழில் இந்தியா டுடே வெளிவந்து கொண்டிருந்த போது தமிழகத்தின் அதிகாரமிக்கவர்களில் ஹமிது ஒருவர் என்று பட்டியலிடப்பட்டிருந்தார். சாரு அவர் துப்பாக்கி எல்லாம் வைத்திருக்கிறார் என்று தன் தளத்தில் எழுதி இருக்கிறார்.
அது மட்டுமல்ல திமுகவிற்காக ஹமீது தன் அடிவயிற்றிலிருந்து பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார். மேலும் ஒரு இணைய தளத்தில்
திமுகவின் தலைவரின் மகளிடம் பணம் பெற்றுக் கொண்டு உயிர்மை ஆரம்பிக்கப்பட்டதாகவும் அதன் பிறகு மொத்தமாக சுவாஹா செய்யப்பட்டதாகவும் ஹமீது பற்றி எழுதப்பட்டிருந்தது. இது அத்தனையும் சென்னை வாழ் மக்களுக்கு தெரியாமல் இருக்கமுடியாது.
வீடு கட்டி வாடகைக்கு விடுபவர்கள் கொஞ்சம் விஷய ஞானம் உள்ளவர்களாக இருப்பார்கள் என்றே கருதுகிறேன்.
ஹமீது தனக்கு வாடகைக்கு வீடு கிடைக்கவில்லை என்பதை அவரின் தனிப்பட்ட பிரச்சினையாகவே பார்க்கிறேன். ஆனால் அதை அழகாக அரசியலாக்கி இருக்கிறார் என்பது தான் நிதர்சனம்.
சென்னையில் முஸ்லிம்கள் வாடகைக்கு வசிக்கவே இல்லையா என்று கேட்டால் ஹமீது என்ன சொல்வார்? அவர்களுக்கு கிடைக்கிற போது இவருக்கு ஏன் கிடைக்கவில்லை? என்பதன் காரணத்தை அவர் நன்கு அறிந்திருப்பார்.
இருப்பினும் தன் பிரச்சினையை பொதுப்பிரச்சினையாக்கிய அவரின் திறமைக்கு சல்யூட் தான் அடிக்க வேண்டும். இது அரசியல் புத்தி.
அரசியலுக்கு அழகியலும், சகிப்புத்தன்மையும் முக்கியம். ஆனால் ஹமீதுவுக்கு புளிச்ச திராட்சைதான் கிடைக்கப்போகிறது.
அண்ணாதுரையின் குஷி கிளப்பும் பேச்சையும், நடிகைகளின் ஆட்டத்தையும் கண்டு ரசித்தவர்கள் இப்போது இல்லை. நெட்டில் எல்லாவற்றையும் பார்க்கும் மக்கள் தான் இங்கு இருக்கின்றார்கள். ஒவ்வொரு விஷயத்தையும் அலசி ஆராய்ந்து பார்க்கும் பக்குவம் பலருக்கு வந்து விட்டது. இவர் ஏன் அப்படிப் பேசுகிறார் என்று பல வித கோணங்களில் ஆராய்ச்சி செய்து விடுகின்றார்கள்.
ஹமீதுவின் இந்த அரசியல் கல் வீச்சு தமிழகத்தில் எடுபடாது என்றே நினைக்கிறேன். நீங்கள் வேண்டுமானால் அவரின் பதிப்பகத்துக்கு நன்றிக்கடன் பட்டவராக இருக்கலாம். உண்மை வேறு அல்லவா?
கவிஞர்களுக்குப் பொதுப்புத்தி வேண்டுமென்பார்கள். ஆனால் இன்றைய கவிஞர்களோ அரசியல் புத்தி கொண்டு உள்ளனர்.
Best Regards,
Covai M Thangavel B.Sc., DSIM.,
***
ஜெமோ,
தங்களின் இப்பதிவை பார்த்தவுடன் என் நண்பன் ஒருவனுக்கு பல வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம் ஒன்று நினைவுக்கு வருகிறது. அவனும் நாகர்கோவில்காரனே.
ஒரு நாள், தன் மனைவி, இரு குழந்தைகள் மற்றும் 70 வயது நிரம்பிய தன் பெரியம்மாவுடன் தாம்பரம் இரயில் நிலையத்தில் காத்திருந்தான், நாகர்கோவில் Express வருகைக்காக.
திடீரென்று, வயதான பெரியம்மா மயங்கி விழுகிறார். பேச்சு மூச்சு எதுவுமில்லை. என் நண்பன் ஒரு அவத்தப்பய. சிக்கனம் என்ற பேரில் மொத்த குடும்பத்தாரையும் பஸ்ஸில் அழைத்து வந்துள்ளான் வீட்டிலிருந்து. பத்தாக்குறைக்கு இரண்டு மூன்று உயரமான நடைமேடை வேறு ஏறி இறங்கியிருக்கிறார்கள்.
கிட்டத்தட்ட அப்பெரியம்மா இறந்துதான் போயிருக்கிறார். அங்கிருந்த நடுத்தர வயதுடைய இஸ்லாமியத் தம்பதியினர் நண்பனின் பதற்றத்தை தணித்துள்ளனர். அத்தம்பதியரும் நாகர்கோவிலுக்குச் செல்லும் அதே வண்டிக்காகத்தான் காத்திருந்தனர்.
அந்த முஸ்லீம் அன்பர், தன் மனைவியை மட்டும் வண்டியில் அனுப்பிவிட்டு என் நண்பனோடு சேர்ந்து அப்பெரியம்மாவின் பிரேதத்தை வீடு கொண்டு சேர்ப்பதிற்கு உதவியுள்ளார்.
இரயில் நிலையத்தில் இருந்து ஒரு பிரேதத்தை அவ்வளவு எளிதாக எடுத்துச் சென்று விட முடியாது. ஏகப்பட்ட சட்டநடைமுறைகள். அத்தனையும் சமாளித்து, Postmortem என்ற பெயரில் கூறுபோடப்படாத பெரியம்மாவை என் நண்பன் வீடு கொண்டு செல்ல உதவியிருக்கிறார். இத்தனைக்கும், அந்த முஸ்லீம் அன்பர் யாரென்றே என் நண்பனுக்குத் தெரியாது.
அந்த முஸ்லீம் அன்பரின் இடத்தில் நானிருந்திருந்தால், முன்பின் தெரியாத ஒருவருக்காக என் மனைவியைத் தனியாக இரயிலில் அனுப்பியிருப்பேனா? இவ்வளவு உதவிகளையும் கூடவேயிருந்து செய்திருப்பேனா? என எண்ணிப்பார்க்கிறேன். ம்ஹூம்…சந்தேகந்தான்.
“அன்பே சிவம்” வந்திருந்த நேரம் அது. கமலின் நடிப்பையும், அப்பட வசனஙளையும் நானும் என் நண்பணும் சிலாகித்துக்கொண்டிருந்த காலகட்டம் அது.
“முன்பின் தெரியாத ஒருவரின் கஷ்டங்களுக்காக உதவுபவரே கடவுள்” என்பார் கமல், மாதவனைப் பார்த்து.
என் நண்பனின் மொபைலில் அவரை GOD என்றே store செய்திருக்கிறான். நானாக இருந்தால் “நபி” என்று store செய்திருப்பேன்.
அன்புடன்
முத்து
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
முதன்மை எழுத்தாளர் -கடிதம்
ஜெமோ,
முதன்மையான எழுத்தாளர்களை அவர்களின் புத்தக விற்பனையை மட்டுமே கணக்கில்கொண்டு முடிவு செய்யும் பேதமையை என்னவென்று சொல்வது.?
இவர்களுக்கு என்ன வருத்தம்? உங்களின் புத்தகங்கள் அதிக பக்கம் என்பதா? இல்லை நீங்கள் எழுதுவதை புரிந்து கொள்ள முடியவில்லை என்பதா? இல்லை உங்களுடைய விமர்சனங்கள் கடுமையாக (அதாவது நேர்மையாக) உள்ளது என்பதாலா?
இதுவரை உங்களுடைய படைப்புகளை முழுமையாகப் படித்து நேர்மையாக விமசரித்த எந்த இணைய எழுத்தாளரும் என் கண்ணுக்கு அகப்படவில்லை. உங்களுக்காவது தெரிந்தால் எங்களுக்கு தெரியப்படுத்துங்கள்.
மேலும், நீங்கள் உங்களுடைய முன்னோடிகள் என்று கருதுவர்களைப்போல எழுதவில்லையாம். கலிகாலம்டா…ஆசிரியர்களையும் தலைவர்களையும் துதிமட்டுமே பாடும் கூட்டத்திலிருந்து வந்தவர்கள்தானே நாம்.
அன்புடன்
முத்துக்குமார்
***
அன்புள்ள முத்துக்குமார்,
எப்போதுமே எழுத்தாளர்களை அளக்க புறவயமான அளவீடுகள் இல்லை. அவரவர் வாசிப்பு, ரசனை சார்ந்தே மதிப்பீடுகள் அமைகின்றன. விற்பனை ஒருவகையில் புறவயமான ஓர் அளவீடுதான். உண்மையில் சர்வதேச அளவில் இன்று தரம், பாதிப்பு என்பதைவிட விற்பனையே அளவீடாகக் கொள்ளப்படுகிறது என நினைக்கிறேன். அத்தனை நூல்களின் பின்னட்டைகளும் அதைத்தானே கூவிச் சொல்கின்றன
ஜெ
***
அன்புள்ள ஜெ
கீற்று கட்டுரையை நீங்கள் பகிர்ந்திருப்பது ஒரு கணம் ஆச்சரியம் அளித்தது. பிறகு வேடிக்கையாகத் தோன்றியது.
தமிழில் எழுத்தாளர்கள் பெரும்பாலும் விற்பனையின் அடிப்படையில்தான் மதிப்பிடப்படுகிறார்கள் என நினைக்கிறேன். நீங்கள் எழுதிய இத்தனை ஆயிரம் பக்கங்களும் அச்சில் இருப்பதே தமிழ்ச்சூழலில் பெரிய ஆச்சரியம்தான் என்று நினைக்கிறேன்.
கீற்று இதழில் அந்த ஆராய்ச்சியாளரின் மெனக்கெடல் நல்ல விஷயம்தான். நிற்க விஷ்ணுபுரம் அகரம்1, கவிதா 3, நற்றிணை 1, கிழக்கு 1 என ஆறு பதிப்புகள் வந்துள்ளன இல்லையா?
செந்தில்வேல்
***
அன்புள்ள செந்தில்
நன்று, அவர்களின் கோணம் அது. அவர்கள் முன்வைக்கும் எழுத்தாளர்களை ‘பிரமோட்’ செய்ய அவர்களுக்கு உரிமை உண்டு இல்லையா? பதிப்பு விஷயங்களை கீற்று இதழிடம்தான் கேட்கவேண்டும். நான் நினைவு வைத்துக்கொள்வதில்லை
ஜெ
***
ஜெ
கீற்று கட்டுரையுடன் நீங்கள் கொடுத்திருக்கும் படம் மிகமிக அற்புதம். மிகச்சிறந்த சுயபகடி. இல்லை அது உங்கள் இணையதள நிர்வாகிகள் அளித்தது என்றால் உங்களை மிக அற்புதமாக கேலிச்செய்யும் நட்புடன் இருக்கிறார்கள். சிரித்து கவிழ்ந்துவிட்டேன்
லலிதா
***
அன்புள்ள ஜெ
பாவெல் என்பது நீங்கள் இடதுசாரி இயக்கத்தில் இருந்தபோது இடப்பட்ட பெயர் அல்லவா? ஏதோ பின்நவீனத்துவ கதை போல உங்கள் தளம் போதாமல் கீற்றிலும் எழுதுகிறீர்கள் என்று நினைத்தேன்.
தட்டு வைத்திருக்கும் நாய், தலையில் துண்டு கட்டியிருக்கும் நாய் என்ற தொடரில் அந்த அம்மா நாய் படம் ரொம்ப அழகு. பாக்கெட் நாவல் மாதிரி வசவசவென்று பெற்றுத்தள்ளியிருக்கிறது. நீலப்பட்டை கட்டியிருப்பது எல்லாம் புனைவு, இளஞ்சிவப்பு பட்டை அபுனைவு என்று வைத்துக்கொள்ளலாமா?
(உங்களை சுற்றி எப்போதுமே இருந்துகொண்டு ஞானப்பால் குடிக்கும் இளைஞர் பட்டாளத்தை குறிப்பிடுவதாகவும் குறியீட்டு ஆர்வலர்கள் தெரிவிக்கிறார்கள்)
மது
***
அன்புள்ள மது,
ஆமாம், பாவெல். மக்ஸீம் கோர்க்கியின் கதாபாத்திரம். ஒருவேளை நானேதான் எழுதித்தொலைத்துவிட்டேனா?
ஜெ
***
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–64
64. நிழல்வேங்கை
முறைமைச் சடங்குகள் முடிந்ததும் தேவயானியை தனியறைக்குச் சென்று ஆடைமாற்றி ஓய்வெடுக்கும்படி முதுசேடி சொன்னாள். அரசியரும் சர்மிஷ்டையும் குடிமூத்தபெண்டிரும் விடைபெற்று கிளம்பினர். தேவயானி எழுந்ததுமே ஓர் இளம்சேடி குனிந்து அவள் ஆடைகளை மடித்து சீரமைத்தாள். அவள் எதிர்பாராதபடி குனிந்தது தேவயானியை திடுக்கிட்டு பின்னடையச் செய்தது. “ஆடை…, தேவி” என்றாள் இளம்சேடி. தேவயானி புன்னகையுடன் “சொல்லிவிட்டு செய்!” என்றாள். “அரசியர் பல மடிப்புகள் கொண்ட ஆடையணிந்திருப்பார்கள். அவற்றை சேடியர் சீரமைப்பது ஒரு வழக்கம்” என்றாள் இளம்சேடி.
அவள் தன்னளவே உயரம்கொண்டவள் என்பதை தேவயானி அப்போதுதான் உணர்ந்தாள். “இங்கே உன்னளவு உயரம்கொண்ட எவருமில்லை” என்றாள். “ஆம், நான் இக்குடியில் அரிதாகப் பிறந்தவள். அதனாலேயே இவர்களுடன் இணைய முடியாதவள்” என்றாள் இளம்சேடி. “உன் தோள்களும் நடையும்கூட என்னைப்போல் உள்ளன” என்று தேவயானி சொன்னாள். அவள் சிரித்து “ஆம், அதை சற்றுமுன் முதுசேடி ஒருத்தி சொன்னாள்” என்றாள்.
அவர்கள் இடைநாழியில் நடக்கத் தொடங்கியதும் இளம்சேடி “பேரரசியர் உருவாவதில்லை, பிறக்கிறார்கள் என்பதை இப்போதுதான் கண்டேன்” என்றாள். தேவயானி திரும்பிநோக்க வணங்கி “சூரியன் எழுந்ததும் பிற சுடர்கள் ஒளியிழப்பதுபோல இன்றைய அவை” என்றாள். முகம் மலர்ந்தாளென்றாலும் பொய்ச்சீற்றத்துடன் “முகமன் கூறுகிறாயா?” என்று தேவயானி கேட்டாள். “இல்லை தேவி, இங்கே முகமன் உரைகளே சொல்லாடலில் பெரும்பகுதி. ஆனால் என் உள்ளத்திலிருந்து உரைக்கும் சொற்கள் இவை” என்றாள் இளம்சேடி. “நீங்கள் அரசகுலத்தில் பிறந்து அரசமுறையில் ஊறிவாழ்ந்தவரல்ல என்பதனால்தான் இதை நேரடியாகக் கூறவும் துணிகிறேன்.”
“இளமை முதலே இவ்வரண்மனையில் பணியாற்றுகிறேன். நூல் கற்றிருக்கிறேன். நெறிகள் அறிவேன். நானும் அழகியே. பேரரசிக்கோ இளவரசிக்கோ பிழையேதும் இன்றி பணியாற்றி வருகிறேன். ஆனால் என் உள்ளே ஒரு கூர்முனை ஒருபோதும் வளைந்ததில்லை. ஒரு சிறு முரண் நான் சொல்லும் அனைத்துச் சொற்களுக்கு அடியிலும் உண்டு. அதை அவர்களும் அறிவார்கள். அவர்கள் அறிவதனால் எவ்வகையிலோ என்னை மெல்ல புண்படுத்திக்கொண்டும் இருப்பார்கள்” என்றாள் இளம்சேடி. “என் அகம் அனைத்தும் முற்றிலும் பணியும் ஓர் ஆளுமை என உங்களை கண்டேன். உங்களுக்கு ஒரு பரிசுத்தாலத்தை கொண்டுவரும்பொழுது என் உளமெழுந்து பெருகிய உவகையை உணர்ந்தபோதுதான் நான் தேடிக்கொண்டிருந்தது உங்களைப்போன்ற ஒருவரை என்று உணர்ந்தேன்.”
தேவயானி கைநீட்டி அவள் தோளை மெல்ல தொட்டாள். அதில் மேலும் நெகிழ்ந்து அவளை அணுகி “என்னை உங்களுடன் அழைத்துச் செல்லுங்கள், தேவி. உங்களுடன் இருப்பின் நான் இப்பிறப்பில் நிறைவுடையவளாவேன்” என்றாள். “உன் பெயரென்ன?” என்று தேவயானி கேட்டாள். “காமவர்த்தினி” என்று அவள் சொன்னாள். “வர்த்தினி என என்னை அழைப்பார்கள். வியாஹ்ரை என்றும் சாயை என்றும் நகையாட்டுப் பெயர்கள் உண்டு.” தேவயானி “அது ஏன்?” என்றாள். “நான் ஓசையற்ற காலடிகொண்டவள். ஆகவே புலி என்றும் நிழல் என்றும் சொல்கிறார்கள்” என்றாள் காமவர்த்தினி.
“நன்று! நான் பேரரசியிடம் சொல்கிறேன்” என்றாள் தேவயானி. இளம்சேடி சாயை “இன்று பரிசுத்தாலத்தை எடுப்பதற்காக நான் உள்ளறைக்குச் சென்றபோது அத்தனை சேடியரும் பேசிக்கொண்டிருந்தது ஒன்றே. தாங்கள் வந்திறங்கியதுமே ஹிரண்யபுரியின் இளவரசிக்கு எது குறைகிறது என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது” என்றாள். தேவயானி புன்னகையுடன் “எது?” என்றாள். “அவள் இளவரசி அல்ல என்பது” என்றாள் வர்த்தினி. தேவயானி வாய்விட்டு நகைத்தாள். பின்னர் “எண்ணிச் சொல்லெடு. இங்கே அது அரசமறுப்பு என எடுத்துக்கொள்ளப்படும்” என்றாள். “அதனால் எனக்கென்ன? நான் எவருக்கும் குடியல்ல, உங்கள் ஒருத்திக்கே ஆள்” என்றாள் சாயை.
அரண்மனையில் தனக்கு அளிக்கப்பட்ட அறைக்குள் சென்று அங்கிருந்த ஒவ்வொன்றையும் விழியோட்டி நோக்கினாள் தேவயானி. தூயவெண்மஞ்சம், நாய்க்குட்டியின் தோல் என மென்பரப்பு கொண்ட மரவுரிகள், காற்றில் அலையிளகிய மென்பட்டு விரிப்பு. முகில்கீற்றென இறகுத்தலையணை. அணிகளைக் கழற்றி வைப்பதற்கான சந்தனப்பேழைகள் நான்கு பீடத்தின்மேல் இருந்தன. நீள்வட்ட வடிவிலான உலோகஆடியில் அவள் உருவம் பிறிதொரு அறையின் வாயிலுக்கு அப்பால் என தெரிந்தது. திறந்த சாளரத்தில் மெல்ல நெளிந்த கலிங்கத்து செம்பட்டுத் திரைச்சீலை. அவள் திரும்பத்திரும்ப நோக்கியபின் “இப்படியே எப்போதுமிருக்குமா?” என்றாள். “தேவி, காற்று கடந்துசென்ற நீர்போலிருக்கவேண்டும் அரசியர் அறை என்பது சேடியருக்கான நெறிக்கூற்று” என்றாள் சாயை.
தேவயானி “பகட்டு என்று சொல்லலாம், ஆனால் அழகென்பதே ஒரு பகட்டு அல்லவா?” என்று சொன்னபடி கைகளை விரித்து மெல்ல சுழன்றாள். “அழகின் உள்ளடக்கம் ஆனந்தம். இரு, நிறை, திகழ் என அது சொல்லிக்கொண்டிருக்கிறது.” சாயை சிரித்து “சார்த்தூல நிருத்யம்” என்றாள். தேவயானி வியப்புடன் “சாரங்கதரரின் காவியம், நீ கற்றிருக்கிறாயா அதை?” என்றாள். சாயை “ஆம், உளப்பாடம்” என்றாள். “எவரிடமிருந்து?” என்றாள் தேவயானி. “இங்கே நூல்மடம் ஒன்றுள்ளது. அங்குள்ள சுவடிக்காப்பாளர் என் தாய்மாமன்.” தேவயானி “ஆனால் கற்பிக்கப்படாமல் எப்படி காவியத்தை கற்கலாகும்?” என்றாள். சாயை “காவியப்பொருளை முன்னரே அறிந்தவர்களே காவியத்தை கற்கமுடியும், தேவி. காவியப்பொருளே இயற்கை என அழைக்கப்படுகிறது” என்றாள். தேவயானி அவள் தோளில் கைவைத்து “நான் எனக்கு நிகர்ச்சொல் கொண்ட பெண்ணை முதன்முதலாக சந்திக்கிறேன்” என்றாள்.
சாயை புன்னகைத்து “அணிகளைக் கழற்றி சித்தமாக இருங்கள், தேவி. நீராட்டுச் சேடியரை நான் அழைத்துவருகிறேன்” என்றாள். “நீராடி ஆடை மாற்றி அணி புனைந்து எழுங்கள். அரசர் தன் முதல் ஆசிரியருக்கு இன்று அவைச்சிறப்பு அளிக்கிறார். அவையில் அரசியர் நிரையில் தாங்களும் இருக்கவேண்டுமென்று அரசரும் விழைகிறார்” என்றாள். “எங்களுக்கான தவக்குடில் எங்குள்ளது?” என்றாள் தேவயானி. “நாளை காலையில்தான் ஆசிரியர் தன் தவக்குடிலுக்கு செல்வார் என்றார்கள். இன்று தாங்கள் இந்த மாளிகையில் தங்கவேண்டும்.”
மீண்டும் அறையை சூழ நோக்கியபடி “நன்று” என்றாள் தேவயானி. சாயை தலைவணங்கி மெல்ல பின்வாங்கிச் சென்று கதவை மூடினாள். கதவின் விளிம்பு சென்று பொருந்தியதுமே தன் உளம் சற்றே திசைமாறி அதுவரை இருந்த உவகையை இழந்து முள்நெருடலொன்றை அடைவதை தேவயானி உணர்ந்தாள். எழுந்து சாளரத்தருகே சென்று திரைவிலக்கி வெளியே பார்த்தபோது அது ஏன் என்று தெரிந்தது. சர்மிஷ்டையின் கண்கள். குழந்தைத்தன்மையைத் தவிர்த்து எவராலும் அவளை எண்ண இயலாது. அவள் அக்கண்களையே எண்ணிக்கொண்டிருந்தாள். திரும்ப தலையை அசைத்து தன்னைக் கலைத்து வெளியே இளங்காற்றில் ஆடிக்கொண்டிருந்த மரக்கிளைகளை நோக்கினாள்.
ஹிரண்யபுரிக்கு தென்கிழக்கே இருந்த சூக்தவனம் என்னும் குறுங்காட்டில் அதை வளைத்தோடிய பிரதமை என்னும் ஆற்றின் கரையில் சுக்ரருக்கான பெரிய தவக்குடில் அமைக்கப்பட்டிருந்தது. அரக்கும் மெழுகும் பூசிய மரப்பட்டைகளை வண்ணம் சேர்க்கப்பட்ட மூங்கில்களாலான கழுக்கோல்கள் மேல் கூரையாக வேய்ந்து கைசுற்றி பிடிக்கமுடியாதபடி பெரிய சித்திரத்தூண்கள் மேல் நிறுத்தி எழுப்பப்பட்டிருந்த பெரிய மூன்றடுக்குக் குடில் சுக்ரருக்கு. அதைச் சூழ்ந்து பிறைவடிவில் நூற்றெட்டு சிறுகுடில்கள். சுக்ரர் முகம் மலர்ந்து “அரண்மனை வளாகம் போலிருக்கிறது” என்றார்.
உடன் வந்த விருஷபர்வனின் அமைச்சர் சம்விரதர் “அரண்மனையேதான். ஆசிரியர்கள் அரண்மனையில் தங்கமாட்டீர்கள் என்பதனால்தான் குடில்வடிவம்” என்றார். “மையக்குடிலை ஒட்டி வலப்பக்கம் அமைந்த வேள்விச்சாலையில் ஆயிரம்பேர் அமரமுடியும். இடப்பக்கம் இருக்கும் கல்விச்சாலையில் முன்னூறு மாணவர்கள் அமர்ந்து பாடம் கேட்க முடியும். தாங்கள் பேசும் ஒவ்வொரு சொல்லும் அனைவருக்கும் நன்கு கேட்கும்படி ஒலியும் எதிரொலியும் தேர்ந்த கலிங்கச்சிற்பிகளால் அமைக்கப்பட்டது அக்கூடம்” என்றார்.
அவர்கள் உள்ளே நுழைந்தனர். குடில்களைக் கட்டிய கலிங்கச்சிற்பிகள் வந்து வணங்கி நின்றனர். தலைமைச்சிற்பி சிரத்தர் அவருடன் நடந்தபடி “இது தாங்கள் ஓய்வெடுப்பதற்கான இடம். தங்கள் மாணவர்கள் மட்டும் தங்களிடம் உரையாடுவதென்றால் இந்தச் சிறிய கூடம்” என ஒவ்வொன்றையும் அறிமுகம் செய்தார். “இங்கே இனிய தென்றல் எழும் என்பதை நோக்கி இடம் தேர்ந்தோம். இருப்பினும் இந்த தூக்கிவிசிறி மேலே அமைக்கப்பட்டுள்ளது. இதனுடன் இணைந்த கயிறு அங்கே ஆற்றின் சரிவில் ஓடிக்கொண்டிருக்கும் நீர்ச்சகடையுடன் இணைந்துள்ளதனால் மானுடக்கை இல்லாமலேயே ஆடி காற்றை அசைத்துக்கொண்டிருக்கும்.”
தேவயானியின் குடில் வலப்பக்கம் காட்டின் ஓரமாக அமைந்திருந்தது. சேடியருக்கான இரு சிறுகுடில்கள் அதன் இருபுறமும் இருந்தன. அவற்றிலிருந்து அவள் குடிலுக்குள் நுழைய கூரையிடப்பட்ட பாதை இருந்தது. அவளுடைய துயிலறைச் சாளரத்துக்கு வெளியே நாணல்கள் செறிந்த கரைகளுக்கு நடுவே நீலச்சிற்றலைகளுடன் பிரதமை சென்றது. மெழுகுபூசப்பட்ட மரத்தால் தளமிடப்பட்டிருந்த தரையில் சாளரப்பாவைகள் நீர்மையென ஒளிகொண்டு சரிந்துகிடந்தன. பின்பக்கம் ஆடைமாற்றும் அறையும் பொருள்வைப்பு அறையும் இணைக்கப்பட்டிருந்தன. திண்ணையில் அமர்ந்து ஆற்றையும் மறுபக்கம் சோலையையும் நோக்கிக்கொண்டிருப்பதற்காக பிரம்பு முடைந்த பீடங்கள் இடப்பட்டிருந்தன.
புதிய குடில் சுக்ரரைப்போலவே தேவயானியையும் உவகையில் ஆழ்த்தியது. சிறுமியைப்போல ஒவ்வொரு அறையாகச் சென்று நின்று கைகளை விரித்து அதன் அகலத்தை அறிந்து மகிழ்ந்தாள். சுவர்களை தட்டிப்பார்த்து அவற்றின் தடிமனை உணர்ந்தாள். அவற்றில் வரையப்பட்டிருந்த வண்ணமெழுகு ஓவியங்கள் அனைத்தையும் நின்று நோக்கினாள். பறக்கும் கந்தர்வர்கள், சிப்பி பதிக்கப்பட்ட விழிகள் ஒளிரும் யட்சர்கள், அவர்களைச் சுற்றி வளைத்து பின்னிப் படர்ந்திருந்த மலர்க்கொடிகள், அவற்றினூடாக சிறகசைத்தன வண்ணப்பறவைகள். பல கோணங்களில் மிரண்டு நோக்கி நின்றன மான்கள். உடல் ஒன்றுடன் ஒன்று பிணைத்துச் சென்றன களிற்றுயானை நிரைகள்.
ஓரிரு நாட்களிலேயே தேவயானி அவ்விடத்தை முழுமையாக நிறைத்தாள். என்றும் அங்கேயே இருந்தவள்போல உணர்ந்தாள். முதுசெவிலி “பெண்கள் நீர்போல, தேவி. அவர்கள் இருக்குமிடமளவுக்கு விரிவடைவார்கள்” என்றாள். குடில்தொகையிலும் சூழ்ந்த பூங்காட்டிலும் ஒவ்வொன்றையும் தனக்குகந்த முறையில் அவள் அமைத்துக்கொண்டாள். மலர்ச்செடிகள், ஊடாக சிறுபாதைகள், அமர்வதற்கான மரப்பீடங்கள், கொடிமண்டபங்கள், நிழல்மரங்களுக்குக் கீழே ஓய்வெடுப்பதற்கான இலைமஞ்சங்கள். ஒவ்வொன்றையும் அவள் முன்னரே அறிந்திருந்தாள். ஒவ்வொரு காவியத்திலும் ஒருபிறவிகொண்டு வாழ்ந்து மீண்டிருந்தாள்.
ஆணையிடுவதனூடாக அவள் தன்னை மேலும் மேலும் பெருக்கிக்கொண்டாள். அவள் குரலாலேயே அவ்வாணைகளை செங்கோலின் குரலென ஏற்றுப்பணிந்தனர் விருஷபர்வனின் ஊழியர்களும் காவலர்களும். அவள் குரலை காமவர்த்தினியும் அடைந்தாள். பின் அவள் குரலே அனைவருக்கும் ஆணையிடலாமென்றாயிற்று. தேவயானியின் நிழல் என்னும் பொருளில் அவளை அனைவரும் சாயை என்றே அழைக்கலாயினர். மெல்லிய பாதங்களுடன் அவள் வருவதைக் கண்டால் வாயசைக்காமல் ஒருவருக்கொருவர் “வியாஹ்ரை” என்றனர். அடுமனைமுதுமகள் தேவயானியிடம் நகையாட்டாக “உங்களை வியாஹ்ராரூடையாகிய துர்க்கை என்கிறார்கள், தேவி” என்றாள்.
அனைத்தும் எண்ணியவாறு அமைந்தபின் தன் குடில்முகப்பில் பீடத்தில் அமர்ந்து ஒளிவிடும் ஆற்றை நோக்கியிருந்தவள் திரும்பி சாயையிடம் “மீண்டும் புதிதாகப் பிறந்ததுபோல் உணர்கிறேன்” என்றாள். அவள் புன்னகைத்து “மெய்யாகவே மீண்டும் பிறந்திருக்கிறீர்கள், தேவி” என்றாள். “இங்கு ஓர் அரசியென உணர்கிறேன். எளிய குடில் வாழ்க்கையில் இருக்கையில் அதுவே நிறைவென்று தோன்றியது. மாளிகைக்கு வரும்போதுதான் நாம் இழந்ததென்னவென்று புரிகிறது. எளிமையென்பது அழகுக்கு எதிரானது” என்றபின் விழிவிலக்கி சாளரத்தை நோக்கியபடி “எளிமை என்பது ஒளி. விழியற்றோர் அதை அறியமுடியாது. செல்வம் மலைகளைப்போல. விழிமூடி எவரும் அதை புறக்கணிக்கமுடியாது” என்றாள்.
“அரசர்களுக்கன்றி எவருக்கும் மெய்யான செல்வம் இல்லை, தேவி” என்றாள் சாயை. “வணிகர்கள் செல்வம் ஈட்டலாம், செலவழிக்க இயலாது. அவர்கள் அதை வெளிப்படுத்தும்தோறும் இழக்க நேரும்.” தேவயானி “ஆம், நான் ஓர் அரசியாக வேண்டும். பேரரசியாக. எனக்குமேல் பிறிதொருவரை ஏற்க என்னால் இயலாது” என்றாள். “அங்கே அரண்மனையிலேயே அவ்வெண்ணம் வந்தது. இக்குடிலுக்குள் நுழைந்ததுமே அதை முடிவுசெய்தேன். என் பிறவி நூலில் பாரதவர்ஷத்தின் பேரரசியாக ஆவேனென்று எழுதப்பட்டுள்ளது. இளமையிலேயே அதைக் கேட்டுத்தான் வளர்ந்தேன். பின்னர் அது வெறும் விழைவென்று எண்ணி ஒதுக்கினேன். இப்போது அறிகிறேன், நான் செல்ல வேண்டிய இலக்கு அதுவே.”
“நான் தங்களை பிறிதொருத்தியாக பார்க்கவில்லை, தேவி” என்றாள் சாயை. “ஆகவே இன்றுமுதல் உங்களை நான் அரசி என்றே அழைக்கப்போகிறேன். கேட்பவர்களிடம் நீங்கள் எனக்கு பேரரசி என விளக்கம் அளிக்கிறேன்.” தேவயானி ஒளிகொண்ட பிரதமையை நோக்கிக்கொண்டிருந்தாள். “ஐயமே இல்லை. நான் பாரதவர்ஷத்தின் பேரரசியாக அரியணை அமர்வேன். என் நகருக்கு நிகராக அமராவதியும் என் மாளிகைக்கு நிகராக இந்திரன் மாளிகையாகிய வைஜயந்தமும் அமையலாகாது” என்றாள்.
“ஆம்” என்றாள் சாயை. “ஆனால் இன்று பாரதவர்ஷத்தின் அரசர்கள் அனைவருமே தங்கள் மணிமுடிகளைக் கொண்டுவந்து விருஷபர்வரின் காலடியில் வைத்து பணிந்து மீள்பவர்களே.” தேவயானி திரும்பி நோக்கி “அனைவருமா?” என்றாள். “அனைவருமல்ல. பணியாத சிலர் உள்ளனர். தேவர்களுடனான போர் நிகழ்வதனால் அவர்களை வெல்ல இயலவில்லை என்கிறார்கள் அசுரர்களின் பாணர்கள். ஆனால் அவர்கள் ஷத்ரியர்கள் என்பதும் தலைமுறைகள்தோறும் வேள்வியளித்து தேவர்களை தங்கள் காவலர்களாக நிறுத்தியிருக்கிறார்கள் என்பதும்தான் உண்மை. தேவர்களை வெல்லாமல் அவர்களை ஹிரண்யபுரி வெல்லமுடியாது” என்றாள் சாயை.
“யார் அவர்கள்?” என ஆர்வமற்றவள்போல விழிகளை ஆற்றின் ஒளியில் நட்டு இயல்பான அசைவால் நெற்றியில் சரிந்த குழல்கற்றையை ஒதுக்கியபடி தேவயானி கேட்டாள். “சந்திரகுலத்து ஷத்ரியர்கள். குருநகரி அவர்களின் நாடு. அசுரர்களுக்கும் அவர்களுக்குமாக பாரதவர்ஷம் பகுக்கப்பட்டுள்ளது. நடுவே கங்கை எல்லையென நீர்பெருகியோடுகிறது” என்றாள் சாயை. “சந்திரகுலத்தின் கதைகளைப் பாடும் சந்திரவம்சம் என்னும் பெருங்காவியம் சக்ரதரரால் இயற்றப்பட்டது. நான் அதை முழுமையாகவே கற்றிருக்கிறேன்.” தேவயானி அவளை நோக்கி “பாடு” என்றாள்.
“சந்திரனின் மைந்தன் புதன். புதன் மைந்தன் புரூரவஸ். புரூரவஸ் ஆயுஸைப் பெற்றான். ஆயுஸின் மைந்தன் நகுஷன் இந்திரனை வென்று அரியணை அமர்ந்து நகுஷேந்திரன் என்று புகழ்பெற்றான்” என்று சாயை பாடத்தொடங்கினாள். “நகுஷனின் மைந்தர் அறுவர். நகுஷனின் தனிமை யதி என்னும் மைந்தனாகப் பிறந்தது. அவன் துயரம் சம்யாதியாகியது. அவன் சினம் ஆயாதியாகியது. வஞ்சம் அயதியாகியது. விழைவு துருவனாக ஆகியது. அவன் கொண்ட காமம் யயாதியெனும் மைந்தனாகியது. கணுக்களில் கூர்கொள்வதே முளையென மரத்திலெழுகிறது. அறிக, தந்தையரில் கூர்கொள்வதே மைந்தரென்று வருகிறது.”
மெல்லிய காலடிகளுடன் தன் படுக்கையறைக்குள் நுழைந்தவளை தேவயானி முன்பு அறிந்திருக்கவில்லை. எழுந்து அமர்ந்து “யார்?” என்றாள். அவள் கண்கள் சற்று கலங்கியிருந்தன. ஆனால் அழுகையல்ல, கடுஞ்சினம் எனத் தெரிந்தது. “யார்?” என்று அவள் மீண்டும் கேட்டாள். அவள் நீள்மூச்சுவிட்டபோது நெஞ்சு எழுந்தமைந்தது. “எப்படி நீ உள்ளே வந்தாய்?” என்றாள் தேவயானி. “நான் வேறு எங்கோ இருக்கிறேன்” என்றாள். அந்த மறுமொழி முற்றிலும் பொருத்தமற்று இருந்தது. பிச்சியோ என ஐயுற்றாள். பகலா இரவா என்று தெரியவில்லை. மிக அப்பால் சாயையின் பேச்சொலி கேட்டுக்கொண்டிருந்தது.
“வருக!” என்று அவள் சொன்னாள். அவள் உதடுகள் அசைய ஒலி வேறெங்கோ இருந்து கேட்டது. “எங்கே?” என அவள் அச்சத்துடன் கேட்டாள். “வருக!” என்றாள் அவள் மீண்டும். அவள் அணிந்திருந்த ஆடைகள் அவளை அரசி என காட்டின. “எங்கே?” என்று கேட்டபடி தேவயானி எழுந்தாள். “இங்கிருந்து நாம் செல்லமுடியாது, நம்மை பிறர் பார்த்துவிடுவார்கள்” என்று அவள் சொன்னதை கேளாதவளாக அப்பெண் நடந்தாள். அவள் கால்களின் சிலம்போசையை அவள் மிக அண்மையில் என காதுக்குள் கேட்டுக்கொண்டிருந்தாள். “நீ யார்?” என்று அவளைத் தொடர்ந்தபடியே தேவயானி கேட்டாள். அவள் திரும்பிநோக்கவில்லை.
முற்றத்தில் நின்றிருந்த அனைவருமே அவளை முன்னரே அறிந்திருந்தனர். அவர்கள் கடந்துசெல்வதை அவர்கள் இயல்பாகவே நோக்கினர். அதற்குள் தேவயானி அது கனவு என உணர்ந்துகொண்டிருந்தாள். அவள் உள்ளே மஞ்சத்தில் படுத்துக்கொண்டிருப்பதையும் உணர்ந்தாள். அது கனவுதான் என்பது அவளுக்கு ஆறுதல் அளித்தது. எப்போது வேண்டுமென்றாலும் விழித்தெழ முடியும். கையை அசைத்தால் போதும். அவ்வெண்ணம் எழுந்ததுமே கையை அசைக்க முயன்றாள். கை மிகத் தொலைவில் எங்கோ கிடந்தது. உடலை பலமுறை சித்தத்தால் உந்தினாள். அவளால் அதை தொடவே முடியவில்லை.
அவள் பிரதமையின் கரையை அடைந்து திரும்பி நோக்கி அவள் தொடர்ந்து வருகிறாளா என்று நோக்கினாள். அவள் நடைவிரைவைக் கூட்டியதும் மேலும் நடந்தாள். இரு வளைவுகளுக்குப் பின் அவள் கண்ட ஆறு பலமடங்கு பெரிதாக கரைமரங்கள் செறிந்து வளைந்து நீரளாவும் கிளைகள் கொண்டிருக்க அலையிளகிச் சென்றுகொண்டிருந்தது. அதில் வந்து சேர்ந்த ஒரு சிற்றோடையருகே திரும்பி முன்னால் சென்றவள் நடந்தாள். அவளைத் தொடர்ந்து சென்ற தேவயானி ஒரு நோக்கில் திகைத்து நின்றாள். முன்னால் சென்றவளின் முகம் தன்முகம் போலவே இருப்பது அப்போதுதான் அவளுக்குத் தெரிந்தது.
ஓடை மேலும் மேலும் சிறியதாகியபடியே சென்றது. அவளை அழைத்துச்சென்றவள் அங்கே எவருக்காகவோ நின்றாள். ஓடையின் நீர் முற்றிலும் நிலைத்ததை தேவயானி அறிந்தாள். பாறை இடுக்குகள் வழியாக நுரையுடன் பீறிட்டு வந்த நீர் மெலிந்து வழிந்து நீர்த்தடம் வெண்ணிறமாகத் தெரிய ஓசை ஓய்ந்தொழிய தெரிந்தது. மரங்களுக்கு அப்பால் அவள் ஒருவனை கண்டாள். முதிரா இளைஞனாயினும் அவள் அதுவரை கண்டதிலேயே உயரமானவனாக இருந்தான். தலையில் கரியகுழல்களை மலைக்கொடியால் கட்டி முடிச்சிட்டிருந்தான். அவன் கையிலிருந்து அதிர்ந்த வில்லில் இருந்து எழுந்த அம்புகள் சீராகச்சென்று சேற்றிலும் பாறையிடுக்குகளிலும் ஊன்றி நின்று முடைந்த தடையில் சீப்பில் சிக்குவதுபோல ஓடையின் சருகுகளும் கொடிகளும் வந்து படிந்து உருவான இயற்கையான அணைத்தடுப்பு நீரை முழுமையாக நிறுத்தியிருந்தது.
அவள் ஓடையை நோக்கிய சரிவில் மெல்ல இறங்கி முன்னால் சென்றவளிடம் “யார் அவன்?” என்றாள். “குருநகரியின் அரசன், அவன் பெயர் யயாதி” என்று அவள் சொன்னாள். அவன் தோள்களும் புயங்களும் திரண்டு தசைஇறுகித் தெரிந்தன. அவன் வில்லை வைத்துவிட்டு நெற்றிவியர்வையை அம்பால் வழித்து சொட்டிவிட்டுத் திரும்பினான். அவர்களை அவன் காணவில்லை. இலைத்தழைப்பு மறைத்த அவன் முகத்தை அவள் கண்டாள். திடுக்கிட்டு அலறியபடி பின்னடைந்தாள். அது கசன்.
அவள் உடல் நடுங்கிக்கொண்டிருந்தது. அது கனவு என்று உணர்வு சொன்னது, இக்கணமே நான் எண்ணினால் என் படுக்கையில் எழுந்துவிடமுடியும். ஆனால் மரங்களும் மண்ணும் ஆறும் அனைத்தும் மெய்யென்றிருந்தன. “அவனை அறிவாயா?” என்று அவள் கேட்டாள். “ஆம், அறிவேன்” என்றாள் தேவயானி. “அவ்வண்ணமென்றால் அவனை கொல்…!” அவள் பின்காலடி வைத்து “இல்லை” என்றாள். “கொல் அவனை, இல்லையேல் அவன் மீண்டும் வெற்றுநெறி பேசி மீண்டுமொருமுறை பெண்பழி கொள்வான்.” அவள் “இல்லை இல்லை” என்றபடி பின்னடைந்தாள். “ஒரு சொல் உரை… இந்த ஓடை அனல்பெருக்காக ஆகும். இக்காடு பற்றி எரியும்.” அவள் மேலும் மேலும் பின்னால் நடந்தபடி “இல்லை, என்னால் இயலாது…” என்றாள். உடல் உலுக்கிக்கொள்ள அழுதபடி “என்னால் இயலாது… என்னால் இயலாது” என கையை அசைத்தாள். ஆனால் அப்போதும் அவள் தன் அறையின் படுக்கையில்தான் கிடந்தாள்.
“ஒரு சொல்… ஒரு சொல் போதும். நீ மீண்டும் மீண்டும் துறக்கப்படாமலிருப்பாய்” என்றபடி இரு கைகளையும் விரித்தபடி அவள் தேவயானியை நோக்கி வந்தாள். “இல்லையேல் இது முடிவிலாச் சுழற்சி. இங்கு அதை நிறுத்து!” தேவயானி “நீ யார்?” என்றாள். அவள் பன்றியின் ஒலியுடன் உறுமியபோது இரு கைகளின் விரல்களிலும் அனல்கொழுந்துகள் எழுந்தன. அவள் உடல் கருமைகொண்டது. முகம் நீண்டு பன்றிமூக்கும் வெண்தேற்றைகளும் விரிந்த செவிகளும் எழுந்தன. அவள் கைகளிருந்து காட்டுமரங்கள் பற்றிக்கொண்டன. நெய்மழை பெய்து நனைந்திருந்தவைபோல காட்டுமரங்கள் அனைத்தும் பேரொலியுடன் எரிந்தெழுந்தன.
தேவயானியின் ஆடைகள் பற்றிக்கொண்டன. அவள் காட்டெரியினூடாக உடலில் தீக்கொழுந்துகள் எழுந்து படபடத்துப் பறக்க ஓடினாள். மண்ணில் விழுந்து எழுந்து அலறியபடி ஓடினாள். “இல்லை இல்லை“ என்று கூவிக்கொண்டிருந்தாள். தொலைவில் அவள் தன் குடிலை கண்டாள். அதை நோக்கி ஓடி படிகளில் ஏறி உள்ளே சென்றாள். அங்கே செடிகளுக்கு நீர் இறைத்தபடியும் மலர்கொய்தபடியும் இருந்த சேடியரும் செவிலியரும் அவளை காணவில்லை. எரியும் தழல் படபடக்கும் ஒலி அவள் செவிகளில் இருந்தது. அவள் ஓடியபோது சிறகுபோல நீண்டது.
குடிலுக்குள் நுழைந்து தன் அறையை அடைந்து உள்ளே நோக்கினாள். உள்ளே காமவர்த்தினி தன் மஞ்சத்தில் படுத்து கைகளை சேக்கையில் அறைந்தபடி உடல்நெளிய தலையை அசைத்து “தழல்… தழல்… இல்லை… மாட்டேன்” என்று கூவிக்கொண்டிருப்பதை கண்டாள்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–63
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–62
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–61
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–60
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–59
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–58
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–57
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–56
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–54
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–53
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–52
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–49
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 59
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–55
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–51
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–48
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–14
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 37
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 19
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 12
April 3, 2017
ஒளிர்பவர்கள்
திரு ஜெயமோகன்
உங்களுக்கு வந்த கடிதம் எப்படி எழுதப்பட்டுள்ளது என்று தெரியவில்லை. நீங்கள் நகைச்சுவையாக ஆக்கி கடந்துசெல்கிறீர்கள். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக உண்மை தெரியத்தான் செய்யும். இதைவேண்டுமென்றால் வெளியிடுங்கள்.
உங்களை இலுமினாட்டி என்று யாரும் சொல்லவில்லை. நீங்கள் அந்தளவுக்கு பெரிய ஆள் இல்லை. இல்லுமினாட்டி என்பது ஒரு சிலந்தி. அதன் வலை உலகம் முழுக்க உள்ளது. அந்த வலையிலே ஒரு கண்ணி நீங்கள். தமிழக அளவிலே நீங்கள் அதிலே முக்கியமானவர்.
நீங்கள் இதுவரை மீடியாவிலேயே இருந்துகொண்டிருக்கிறீர்கள். உங்கள் முதல்நாவலுக்கே விருது. அந்த நாவலுக்கே அன்றைக்கிருந்த பெரிய பத்திரிக்கைகளில் நாலு பேட்டிகள் வந்தன. அப்போதே இவரை பெரிய அளவிலே தூக்கப்போகிறார்கள் என நான் எழுதினேன். நான் அன்றைக்கு மார்க்ஸிஸ்ட். உங்கள் கோவை ஞானிக்கு நெருக்கம்.
அதன்பின் என்னென்ன நடந்தது என்று பார்த்தால் தெரியும். சுபமங்களா ஆரம்பித்தபோது உங்கள் பெரிய படத்துடன் முதல் இதழிலேயே கதை [ஜகன்மித்யை என்றகதை என்னும் ஞாபகம்] உங்கள் எல்லா சிறுகதை நூல்களுக்கும் மிகநீண்ட விமர்சனங்கள் வந்தன. உங்களை எல்லாரும் கொண்டாடி எழுதினார்கள். மூத்த விமர்சகர்கள் அப்படிக் கொண்டாடியபோதே என்ன இது என ஆச்சரியப்பட்டேன். அன்றைக்கே சொன்னேன்.
அப்போதுதான் விஷ்ணுபுரம். அது முழுக்கமுழுக்க இலுமினாட்டி குறியீடுகளால் ஆனது. அந்நாவலின் தொடக்கத்தில் ஸ்ரீசக்கரம் என்று ஒரு சக்கர அடையாளம் வரைவதுபோல வருகிறது இல்லையா? அந்தச் சக்கரம் என்ன? அந்த சக்கரத்துக்கும் ஸ்ரீசக்ரததுக்கும் ஏதாவது ஸ்நானப்ராப்தி உண்டா என்பதை யாராவது ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறார்களா?
புகைமூட்டமாகச் சொல்லியிருக்கும் செய்திகளை ஒருவர் வரைந்து பார்த்தாலே அது இலுமினாட்டிகளின் சின்னம் என்பது தெரியவரும். அதை அத்துமீறி தோண்டி எடுப்பவர்கள் அதில் முட்டித் தலையுடைந்து சாகிறார்கள் இல்லையா? அந்தச்சடங்கு எந்த இந்துமதநூலிலே உள்ளது? அது பேகன் சடங்கு. அது இலுமினாட்டிகளின் சடங்கு. நேரடியாக அப்பட்டமாகவே அது சொல்லப்பட்டுள்ளது.
அதிலுள்ள விஷ்ணு சிலைக்கு இந்திய சிற்பமரபிலே என்ன இடம்? அது குறித்துவரும் குறியீடுகள் எல்லாம் என்ன? கடைசியிலே ஒரு சிற்பி அந்த கோபுரத்தின் உச்சியிலே உள்ள அந்த சிற்பமுடிச்சை அவிழ்க்கப்போகிறார். அந்த முடிச்சு என்ன? அவர் ஏன் அதை அவிழ்க்கவில்லை?
விஷ்ணுபுரத்திலே இலுமினாட்டிகளின் அத்தனை குறியிடுகளும் உள்ளன. அதன் வழியாக நீங்கள் மற்ற இலுமினாட்டிகளுக்குச் செய்தி சொல்கிறீர்கள். அவர்களால் நீங்கள் நிலைநிறுத்தப்படுகிறீர்கள். அது எப்படி என்பதை எளிதிலே கண்டுபிடிக்கலாம். நீங்கள் படிப்பை விட்டுவிட்டு அலைந்தபோது எந்த நிறுவனத்தில் எல்லாம் இருந்தீர்கள் என்பதை வெளிப்படையாகச் சொல்லவேண்டும். அதைப் பரிசோதனை செய்யவேண்டும்.
நீங்கள் மகேஷ் யோகி நிறுவனத்திலே இருந்திருக்கிறீர்கள். கோடிக்கணக்கான பணம் கையாண்டிருக்கிறீர்கள். மகேஷ் யோகி இலுமினாட்டி என்பதை நிரூபிக்கவேண்டியதில்லை. இன்றைக்கு அவருடைய வழிவந்தவர்களான ஜக்கி வாசுதேவ், ரவிஷங்கர் போன்றவர்கள் இருக்கிறார்கள். அவர்களைச் சேர்ந்தவர்தான் ஓஷோ. நீங்கள் அவர்களை எல்லாம் பாதுகாக்க முயல்கிறீர்கள். இன்றைக்குவரை உங்கள் வேலை அதுதான்.
ஐயா, இலுமினாட்டிகளுக்காக நீங்கள் செய்யும் பணி என்ன? நீங்கள் என்ன செய்கிறீர்கள். பாரம்பரியமான மதஞானத்தையும் பாரம்பரியமான சடங்குகளையும் குழப்பி இல்லாமலாக்குகிறீர்கள். இலுமினாட்டிகள் அதை எதிர்ப்பதில்லை. அதையெல்லாம் ஆழமாகப் படித்து அதற்குள் ஆதரவாளர் போலப்புகுந்து குழப்பி அடிப்பார்கள்.
அவர்கள் கிறிஸ்தவ போதகர் போலவோ இந்துஞானி போலவோ தெரிவார்கள். ஆனால் நடைமுறையில் அத்தனை அடிப்படைகளையும் கலந்துகட்டி எதுவுமே ஆழமாக நிலைகொள்ளாமல் செய்துவிடுவார்கள். எல்லாவற்றையும் அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் என்று எடுத்து எதுவுமே மிஞ்சாமல் செய்வார்கள்.
ஓஷோ செய்தது அதைத்தான். ஓஷோவை வாசித்தவர்களுக்கு உண்மையான பதஞ்சலியோகமோ தம்மபதமோ புரியாமல் போய்விடும்.
ஆதியோகி சிலை எதுக்காக? அது சிவன் என்ற ஞானரூபத்தை காலப்போக்கிலே குழப்பிவிடும். சிவன் என்றாலே ஆதியோகிதானே என்று நாளைய குழந்தைகள் கேட்பார்கள். இப்போதே கேட்கிறார்கள். ஆகவேதான் இத்தனை பணச்செலவில் அதைக் கட்டமுடிகிறது. அதற்கு பிரதமரையே கொண்டுவர முடிகிறது.
நீங்கள் செய்துவருவது அதைத்தான். காந்தியம் பேசுவீர்கள். ஆனால் கூடவே காந்தியின் பெண் தொடர்புகளை எல்லாம் பிரபலப்படுத்தி அவரை நுணுக்கமாக கவிழ்த்துவிடுவீர்கள். இந்துமெய்ஞானம் பேசுவீர்கள். ஆனால் உங்களை வாசிப்பவர்களுக்கு அதன்மேல் மரியாதையே வராது. எல்லா இந்து ஞானிகளையும் கட்டுடைக்கிறேன் என்று கவிழ்ப்பீர்கள்.
நீங்கள் இந்து சாஸ்திரம் பற்றிப் பேசியிருக்கும் எல்லாமே குழப்பம். நுட்பமான குழப்பம். எல்லாவற்றையும் பாதிசொல்லி மிச்சத்தை குழப்பிவிட்டிருக்கிறீர்கள். இதுதான் உங்கள் வேலை. இதற்காக ஆராய்ச்சி செய்கிறீர்கள். உங்களுக்கு ஒரு டீம் இருக்கிறது.
நீங்கள் முற்போக்கு பேசுவதுபோல தோன்றும். தீண்டாமையை எதிர்ப்பீர்கள். கூடவே சாதியமைப்பை எதிர்ப்பீர்கள். அந்த பாவனையில் சந்திரசேகரர் போன்ற ஞானிகளை வசைபாடுவீர்கள். ஹிந்து சம்ப்ரதாயங்கள் மேல் புழுதிவாரிப்பூசுவீர்கள்.அதிலெல்லாம் நம்பிக்கையை இழக்கவைப்பீர்கள்.
நீங்கள் யோகஞானம் பேசுவீர்கள். ஆனால் பலவகையான அறிவார்ந்த குட்டிக்கரணங்கள் அடித்து யோகத்தை நாஸ்திகவாதத்தின் ஒரு பகுதியாக ஆக்குவீர்கள். அதை நிரீஸ்வர ஸாங்யத்தின் ஒரு பகுதி என்பீர்கள்
நீங்கள் கீதையைப்பேசுவீர்கள். ஆனால் அது ஞானநூல் அல்ல, மதநூல் அல்ல, தியானநூல் அல்ல, புனிதமானநூல் அல்ல என்கிறீர்கள். அது ஒரு தத்துவநூல் அவ்வளவுதான் என்பீர்கள். அது கடவுளின் சொல் இல்லை. அது நாலாம் நூற்றாண்டு இடைச்செருகல் என்று சந்தடி சாக்கில் சொல்வீர்கள்.இப்படி எல்லாவற்றையுமே நுட்பமாக திரிக்கிறீர்கள்.
நீங்கள் ஆலயங்களை பற்றி எழுதுகிறீர்கள். ஆலயங்கள் தோறும் போகிறீர்கள். ஆனால் என்ன எழுதுகிறீர்கள்? ஆலய ஸம்ப்ரதாயங்களைப் பற்றியோ ஞான நுட்பங்களைப் பற்றியோ எழுதுகிறீர்களா? இல்லை. நீங்கள் எழுதுவது அவையெல்லாம் வெறும் பழமையான ஆர்ட் கேலரிகள் மட்டும்தான் என்ற அர்த்தத்திலேதானே?
உங்களுக்குச் சிற்பங்கள் முக்கியம். ஆனால் அதிலே உள்ள குறியீடுகள் மட்டுமே உங்கள் ஆர்வம். அதிலேயே உங்கள் அக்கறை என்னவென்று தெரிகிறது. எல்லா ஊர்களிலும் அங்குள்ள ஸம்ப்ரதாயங்களையும் அர்ச்சகர்களையும் கடுமையாக நக்கலடித்து திட்டி எழுதியிருக்கிறீர்கள். கோயில்களை பழுதுபார்ப்பதைக்கூட வசைபாடுகிறீர்கள்.
ஏன் திருக்குறளையே நுட்பமாகப் பேசுவீர்கள். ஆனால் அது தமிழ்வேதம் இல்லை. அது ஜைன நூல் என்பீர்கள். அதாவது எந்த நூலுமே எந்தச் சமூகத்திலுமே ஆழமாக வேரோடிவிடக்கூடாது என்பதே உங்கள் நோக்கம்.
உங்கள் எழுத்துக்களிலே மிக அபாயமானது நீங்கள் எழுதிய பனிமனிதன் இப்போது எழுதும் வெள்ளிநிலம். ரெண்டுமே குழந்தைகள் மனதில் இன்றைக்கு இருக்கும் மதங்கள் மேல் அவநம்பிக்கையையும் குழப்பங்களையும் அறிவுபூர்வமாக உருவாக்கும் நோக்கம் கொண்டவை.
இப்போது வெண்முரசு எழுதுகிறீர்கள். எதுக்காக இவ்வளவு பெரிய வேலை? எல்லா கதையையுமே மாற்றிவிட்டீர்கள். ஒருகதைகூட பழைய வடிவிலே இல்லை. எல்லாவற்றிலும் உங்கள் குறியீடு. இப்போது தேவயானி கதை. அதில் எப்டி புலி வந்தது? எத்தனை குறியீடுகள் அதிலே என பார்த்தால் மிக ஆச்சரியம்.
நீங்கள் என்ன சொல்லவருகிறீர்கள்? நிறையவேதம் இருந்தது, அதில் நான்குதான் இந்துவேதம் இல்லையா? இதுக்கு என்ன ஆதாரம்? அதாவது இந்த நூலின் நோக்கம் வேதங்களின் யூனிக்னெஸ், ஆதன்டிசிடி ஆகியவற்றை இல்லாமலாக்குவது மட்டும்தானே? அதைத்தான் விஷ்ணுபுரத்தில் மையமுடிச்சை அவுப்பது என எழுதியிருக்கிறீர்கள்.
இதைத்தான் கிறிஸ்தவ மதத்துக்கும் செய்தார்கள். பைபிளை ஆதண்டிக் இல்லை என்று பிரச்சாரம் செய்தார்கள். நாக் அம்மாதி என்னும் இடத்தில் கிடைத்ததாக சில ஸ்க்ரோல்களை உண்டுபண்ணி பரப்பினார்கள். தாமஸ் காஸ்பல், மேரி மக்தலீனா காஸ்பல் என்று பல பொய் காஸ்பல்களை எழுதினார்கள். அவற்றைச் சேர்த்து ட்ரூ பைபிள் என்று பரப்பி வருகிறார்கள். பைபிளின் தெய்வீகத் தன்மையையே அழித்தார்கள்.
பார்த்தீர்கள் என்றால் இந்த போலி பைபிள்கள் நிஜபைபிளின் வரிகளை கொஞ்சம் கொஞ்சம் மாற்றி குழப்பியடிப்பதுபோல இருக்கும். இந்த முயற்சி அங்கே மிகப்பெரிய வெற்றி. அங்கே ஜேம்ஸ் கேமரூன் மாதிரி பெரிய ஆட்கள் எல்லாம் அதைச் சொல்கிறார்கள். பல டாக்குமெண்டரிகள் வந்தன. டாவின்ஸி கோட் மாதிரி நாவல்கள் வந்தன. அந்த முயற்சி மிகப்பெரியவெற்றி.
அதைத்தான் இங்கேயும் செய்கிறீர்கள் நீங்களும் உங்கள் டீமும். இங்கே இனிமேல் அசுரவேதம் நாகவேதம் எல்லாம் தோண்டி எடுப்பீர்கள். இந்த வேலை சிந்தனையில் செய்யப்படும் ஒரு பெரிய இடிப்புவேலை. இதுக்குத்தான் இலுமினாட்டி உங்களை இங்கே உட்கார வைத்திருக்கிறது. அறிவுள்ளவர்கள் புரிந்துகொள்ளட்டும்.
என் பெயர் வேண்டாம். நான் புகழுக்காக இதைச் சொல்லவில்லை.
எஸ்
***
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
அ.மி – கடிதங்கள்
ஜெ,
அசோகமித்திரன் மறைந்தபோது நீங்கள் சொன்ன ஓர் உணர்வுபூர்வமான பேச்சின் எதிர்வினையாக வந்த செய்திகளைக் கேட்டு நானும் ஓர் உணர்ச்சிக்கொந்தளிப்பில் கடுமையாக வசைபாடி உங்களுக்கு ஓரு கடிதம் எழுதினேன்
ஆனால் சமீபத்தில் அசோகமித்திரன் பேட்டி ஒன்றில் இந்த வரிகளை வாசித்தேன்.
உண்மையில் பல விஷயங்களுக்கு நான் பொறுப்பாளியே அல்ல. வேறு பலவற்றைச் செய்துதான் நான் பிழைக்க வேண்டியிருந்தது. நான் சம்பந்தப்பட்டவரை தரம் இருக்க வேண்டும், கண்ணியம் இருக்க வேண்டும் என்று நினைப்பவன். ஆனால் பலமுறை அதில் தோற்றுப்போயிருக்கிறேன் என்றுதான் சொல்ல வேண்டும். என் வாழ்க்கையில் பல நிர்ப்பந்தங்கள் இருந்தன.
வேலைக்காக டிரைவிங் கற்றுக்கொண்டு லைசன்ஸ் எடுத்ததை, வேலைசெய்ததை எல்லாம் சொல்கிறார். சாதிரீதியாக இழிவுபடுத்தப்பட்டதைச் சொல்கிறார். வேலைதேடி அலைந்து சிறுமைகொண்டதை, எவருமே உதவிசெய்யாததை எல்லாம் பேட்டிகளில் சொல்கிறார்.பல்வேறு பேட்டிகளில் பலசெய்திகளைச் சொல்லியிருக்கிறார். அவர் எழுத்தின்மூலம் வசதியாக வாழ்ந்ததாக இவர்கள் உருவாக்கும் செய்திகளுக்கும் சம்பந்தமே இல்லை. ஃபேஸ்புக்கிலும் பலர் எழுதியிருக்கிறார்கள். சில கட்டிங்குகளை பாருங்கள்.
இப்போது நான் குற்றவுணர்ச்சியாக உணர்கிறேன். உங்கள் கடைசிக் கட்டுரையை வாசித்தேன். அதில் நீங்களே அவர் அளித்த பேட்டிகளை மட்டும் வாசிக்கச் சொல்லியிருக்கிறீர்கள். அதிலுள்ள முக்கியமான கேள்வி ஒன்றை இப்போதுதான் வாசித்தேன். பெரியவர் இங்கேதான் இத்தனைகாலம் வாழ்ந்திருக்கிறார். நீங்கள் 50 கட்டுரை எழுதியிருக்கிறீர்கள். இப்போது அவருடைய நண்பர்களாகச் சொல்லிக்கொள்பவர்கள் அவருக்காக ஒரு நிகழ்ச்சியாவது ஏற்பாடு செய்தார்களா? அவரைப்பற்றிஎழுதினார்களா? அவருக்காக இரண்டு மலர்கள் போட்டதாக சொல்கிறீர்கள், இவர்கள் ஏதாவது செய்தார்களா? பலர் இதழியலில் செல்வாக்கான பதவிகளில் இருந்திருக்கிறார்கள்.
வருத்தம்தான் மிஞ்சுகிறது
கோபிநாத் மகாதேவன்
***
அன்புள்ள கோபி
உங்களைப்போல 86 பேர் வசைபாடியிருந்தனர். இணையத்தில் நக்கல்கள் கிண்டல்கள் சிரிப்புகள். தமிழின் தலைசிறந்த மேதை ஒருவரின் இறப்பை ஜெயமோகனை கவிழ்ப்பதற்கான வாய்ப்பாக கருதி ஒருவகைக் கொண்டாட்டமாக ஆக்கிவிட்ட அவலம் நிகழ்ந்தது. அதில் பங்கெடுக்கலாகாது என்பதனால் விலகிக்கொண்டேன்.
அவருக்கு பணம் அள்ளியள்ளிக் கொடுக்கப்பட்டது என அயோக்கியர்கள் இன்றைக்குச் சொல்கிறார்கள். அந்தக்காலகட்டத்தில்தான் பையனுக்கு பள்ளிப்படிப்புக்கு அக்னிபுத்திரன் என்ற [அதி தீவிரமான பார்ப்பனிய எதிர்ப்பாளரான] கவிஞர் பண உதவிசெய்தார் என அசோகமித்திரன் எழுதியிருக்கிறார். தான் சந்தித்த இழிவுகள் கஷ்டங்கள் பற்றி அவர் எழுதிய நூற்றுக்கணக்கான வரிகள் தமிழில் பதிவாகியிருக்கின்றன. வாழ்ந்தபோது அவரை பொருட்படுத்தாமல் இன்று கூச்சலிடம் கும்பலிடம் அதைப்பற்றி என்ன விவாதிப்பது?
இனி இந்தத் தளத்தில் எதையும் பேசவேண்டாம் என நினைக்கிறேன். இந்தப்பேச்சே அவரைப்பற்றி எண்ணமுடியாதபடிச் செய்கிறது. அவருடைய புனைவுகள் இங்குள்ளன. அவற்றைப்பற்றிப் பேசுவோம்.
ஒருபக்கம் அவரை ஒருசாரார் வெறும் மைலாப்பூர் மாமாதான் என்றார்கள். மறுபக்கம் ஆமாமாம், அவர் எங்களைப்போல ஒரு மாமாவேதான் என்று இவர்கள் கொண்டாட்டமாக சொன்னார்கள். வெறும் ஒரு மாமாவாக அவரை நிறுவிவிட்டார்கள்
என் வருத்தம் அவருக்காக சென்னை, கோவை, மதுரையில் மூன்று அஞ்சலிக்கூட்டங்களை பிறமொழி எழுத்தாளர்களை பங்கெடுக்கவைத்து ஏற்பாடு செய்திருந்தோம். அவரை வைத்து நான் பணமும் புகழும் சம்பாதிப்பதாக பிரச்சாரம் செய்யப்பட்டது.. அனைத்தையும் ரத்துசெய்தோம். சரி, எழுத்தாளனுக்கு இறப்பில்லை. எனக்கு இன்னும் சிலகாலம், என்வழியாக அவரை அறிந்தவர்களுக்கு மேலும் நீண்டகாலம்.
அவருக்கு ஞானபீடம் கிடைத்திருக்கவேண்டும். அது அவருக்கு பெரிய விஷயம் அல்ல. கடைசியில் அதையெல்லாம் அவர் கடந்துவிட்டார். எனக்கு என் மூச்சுவிடும் செயல்மட்டுமே ஒரே அக்கறை என ஒரு குறிப்பை எனக்கு எழுதினார். ஆனால் இந்தியமொழிகளின் மிக முதிர்ந்த நவீனத்துவ எழுத்து தமிழில் நிகழ்ந்தது என்பதற்கான சான்றாக அது இருந்திருக்கும். நமக்கு ஓர் அடையாளமாக ஆகிவிட்டிருக்கும்.
அவர் படைப்புகள் பல கல்யாணராமன் அவர்களால் நல்ல ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டிருந்தமையால் அதற்கான பூர்வாங்கம் அமைந்தது. ஆனால் தமிழகத்தில் கல்வித்துறை அங்கீகாரம் அவருக்கு இருந்தாகவேண்டும் என்பது அதற்கான தேவைகளில் ஒன்று. அகிலனுக்கும் ஜெயகாந்தனுக்கும் ஞானபீடம் கிடைத்தது என்றால் அதற்கு முதன்மைக்காரணம் பல்கலைகள் அவர்களுக்கு நிகழ்த்திய கருத்தரங்குகள், வெளியிட்ட ஆய்வுமலர்கள்.
அதற்காக நான் தொடர்ந்து முயன்றேன். அது பல நண்பர்களுக்குத்தெரியும். பலர் உதவிகளும் செய்திருக்கிறார்கள். எதுவுமே நிகழவில்லை பலமுயற்சிகள் இறுதிநேரத்தில் முறியடிக்கப்பட்டன. வெளிப்படையாகவே சாதிதான் குறிப்பிடப்பட்டது. தமிழின் தலைசிறந்த மேதையை இங்குள்ள பல்கலைகள் பொருட்படுத்தவே இல்லை. சற்று அவர்கள் மனம்வைத்திருந்தால் அவர் கௌரவிக்கப்படாமல் சென்றிருக்கமாட்டார். கடைசியில் நான் அவரைப்பற்றிப் பேசியபோது இயல்பாக எழுந்து வந்தது அந்த ஆதங்கம் மட்டுமே.
அதை உடனடியாக அவருக்கு நான் தெரிவித்திருக்கக்கூடாது என இப்போது உணர்கிறேன். இப்போது பலபேட்டிகளில் மறைமுகமாக அவர் அதைக்குறிப்பிடுவதை வாசித்தபோது அவ்வாறு சொன்னதனால்தான் என தெரிகிறது. இயல்பாக சாதிசார்ந்த உணர்வுகள் இல்லாமல் தன்னை சாமானியனாக உணர்ந்த அவரை வருத்தமுறச்செய்ததே அதன் நிகரபயன் என்று இன்று தோன்றுகிறது.
ஜெ
***
அண்ணன் ஜெயமோகனுக்கு,
சென்ற வருடம் போலவே, இந்த வருடமும் தினமும் முக நூலிலும், இன்ஸ்டக்ராமிலும் ஒரு பதிவென – சிங்கப்பூர் தமிழ் மொழி விழா – 2017 ற்காக எனது ” வாசிப்பில் ஈர்த்த வரிகள்” தொடரினைத் தொடங்கியுள்ளேன் … ஏப்ரல் மாதம் முப்பது நாட்களும் தினம் ஒரு பதிவு. முதல் பதிவாக, எழுத்தாளர் அசோகமித்திரன் பல்வேறு கால கட்டங்களில் கொடுத்த பேட்டிகளில், நேர்காணல்களில்… என் வாசிப்பில் ஈர்த்த வரிகளைப் தேடித் தொகுத்துள்ளேன். படித்துப் பார்க்கவும்.
அன்புத் தம்பி
நெப்போலியன்
சிங்கப்பூர்.
https://www.facebook.com/kavingar.nepolian/posts/10210813937576568
***
அன்புள்ள ஜெமோ
அசோகமித்திரன் அவருடைய பேட்டிகளில் நீண்ட நாவல்களை ஒட்டுமொத்தமாக நிராகரித்திருக்கிறாரே, உங்களிடம் அதைப்பற்றிப் பேசியதுண்டா?
ஆர். மகேஷ்
***
அன்புள்ள மகேஷ்
விஷ்ணுபுரம் வெளிவந்தபோது அதை தமிழின் மாபெரும் இலக்கிய முயற்சி என பாராட்டி அசோகமித்திரன் இந்துவில் ஒரு மதிப்புரை எழுதியிருந்தார். நீண்ட நாவல்கள் ஏன் தேவை என்பதற்கான அழகிய சுருக்கமான விவரணை அதில் உண்டு.
ஆனால் மெல்லமெல்ல அவருடைய மனநிலை மாறத் தொடங்கியது. சுருக்கமான, நேரடியான, பூடகத்தன்மை அற்ற, மென்மையான, ஆசிரியக்கூற்று இல்லாத கதைகளை முன்னிறுத்தத் தொடங்கினார்.
தல்ஸ்தோய் கூட இறுதிக்காலத்தில் இதேபோல ஒரு மாற்றத்தை அடைந்து தன் குட்டிக்கதைகளையும் புத்துயிர்ப்பு நாவலையும் மட்டுமே முன்னிறுத்தினார். போரும் அமைதியும் நாவலை நிராகரித்தார்.
இதெல்லாம் எழுத்தாளனின் அழகியற்கொள்கையில் வரும் மாற்றமோ பரிணாமமோ அல்ல, அவரது மனநிலையில் உருவாகும் மாற்றம் அல்லது பரிணாமம். அவரைப் புரிந்துகொள்ளவே அது உதவும், அவரது கலையைப் புரிந்துகொள்வதற்கல்ல. தல்ஸ்தோய் நிராகரித்ததனால் போரும் அமைதியும் நாவலை விமர்சகர்கள் நிராகரிக்கவில்லை, அதன் இலக்கிய இடம் அழியவுமில்லை.
அசோகமித்திரன் என் பெருநாவல்களை நிராகரித்தும் கிண்டல் செய்தும் என்னிடமே சொல்லியிருக்கிறார். கடைசியில் வெண்முரசையும் அப்படிச் சொன்னார். ‘சரி, நீங்கள் வாசிப்பதெல்லாம் பெருநாவல்களைத்தானே, உங்கள் நினைவில் நிற்பவையும் அவைதானே?” என்று கேட்டேன். “தெரியலை” என்றார்
ஜெ
***
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
பாறை ஓவியங்களுக்காக…
இனிய ஜெயம்,
நேற்று ஒரு பன்னிரண்டு பேர் கூடிய நமது குழும நண்பர்களுடன் ஒரு சிறிய பயணம். முதல் காரில் நெல்லை வழக்கறிஞர் அவரது நண்பர் மற்றும் மயிலாடுதுறை பிரபு ,யோகிஸ்வரன் ஆகியோருடன் வந்தார். திருக்கோவிலூர் பேருந்து நிலையம் அருகே காலை உணவு.
நெல்லை வக்கீல் சக்தி கிருஷ்ணன் நடத்தும் பல தொழில்களில் ஒன்று பார்மசி. பார்மசி ஊழியை சம்பளம் கேட்டு தொலைபேசினாள். [பத்தாம் தேதி தரவேண்டியது இன்று இருபத்தி ஒன்பது] வக்கீல் கவலையே படாதம்மா ஓனர் சாயங்காலம் வந்துடுவார் பேசிடுறேன். அப்டின்னு ஆறுதல் சொன்னார். அவர்தான் தான் வேலை செய்யும் பார்மசி ஓனர் என அந்த பெண்ணுக்கு தெரியாது. இவரும் அந்த முகமறியா ஓனரின் ஊழியர்களில் ஒருவர் என்றே அந்த பெண்ணுக்கு ரீல் ஓட்டி வைத்திருக்கிறார். அந்த பெண்ணுக்கு ஆறுதல் சொல்லியபடியே காலை உணவை முடித்தார். ”ஜெயமோகன் சாரை கூப்டேன் பாவம் எதோ சினிமா வேலை வரமுடியாதுன்னு சினுங்கிகிட்டே சொன்னார்” என்றார். உணவு முடித்து உலகளந்த பெருமாள் கோவில் சென்று ஈரோடு குழுவுடன் இணைந்துகொண்டோம்.
பெருமாள் திருவிளையாடல் படத்தில் சாவித்திரி கலரில் இருந்தார். தாமரை வண்ண உள்ளங்கைகள் சங்கு சக்கரம். தூக்கிய பாதத்தை வணங்கும் பிரம்மன். பதிந்த பாதத்தின் கீழ் மூன்றடி மண் தந்தவர். சேவித்துவிட்டு வெளியே வர மூன்றாவது கார் நண்பர்களும் வந்து இணைந்து கொண்டனர்.
”நம்ம முதல் டெஸ்டிநேஷன் ஆலப்பாடி பாறை ஓவியங்கள் பாக்குறது.” என்ற ஈரோடு கிரிஷ்ணனை ”அங்க பாறை ஓவியம் எதுவும் இல்லன்னா?” என்ற வினாவுடன் ஒரு நண்பர் எதிர்கொண்டார்.
”வந்தத வேஸ்ட் பண்ணக்கூடாது நாமளே ஏதாவது பாறைய பிடிச்சி ஓவியம் வரைஞ்சிட்டு வந்துடுவோம்” என்றார் கிருஷ்ணன்.
திருக்கோவிலூர் விழுப்புரம் சாலையில் பன்னிரண்டு கிலோமீட்டரில் ஆலப்பாடி கூட்ரோடு.அதிலிருந்து மூன்று கிலோமீட்டர் உள்ளே சென்றால் ஆலப்பாடி. ஊரில் விசாரித்து ஓவியங்கள் இருக்கும் பாறையை கண்டடைந்தோம். சாலை ஓரமாகவே காணக் கிடைக்கிறது. தொல்லியல் துறை சார்ந்த எந்த அறிவிப்புப் பலகையும் இல்லை. உழுது புரட்டி, ஆனால் நடவு காணாத காய்ந்த வயல்கள் வழியே பாறையை அடைந்தோம். இற்று விழத் தயாராக பாறையை சுற்றிலும் கம்பி வலை. பாறை மேலே உச்சிக்கு செல்ல செய்து நிறுத்தப்பட்ட சிமின்ட் தூண்கள் மேல் படிக்கட்டு. புதைந்த பாறை மேல் நிற்கும் பாறையின் மேல் விதானத்தில் ஓவியங்கள். [யார் யாருக்கு தோழி, யார் யார் எல்லாம் காதலில் கலவியில் கிடக்கிறார்கள் எனும் அறிய வரலாற்று தகவல்கள் எல்லாம் பெய்ன்ட் கொண்டு குறிப்பிட்ட பாறை மேல் பொரிக்கப்ட்டிருந்தன] . பொக்கை வாய் போன்ற அமைப்புக்குள் குறுகிய எல்லைக்குள் இடைவெளிக்குள் மல்லாந்து படுத்தே ஓவியங்களை காண இயலும்.
முதலில் உள்ளே போய் செருகிக் கொண்டார் ராசுக்குட்டி. அடுத்தடுத்து நண்பர்கள் உள்ளே சென்று கிடைத்த வாக்கில் படுத்துக் கொண்டு ஓவியங்களை புரிந்து கொள்ள தலைப்பட்டனர். தேநீர் வண்ண பாறைப் பரப்பில் காவி வண்ண கோடுகளும் தீற்றல்களும் மெல்ல மெல்ல துலங்கி வந்தன. காவி வண்ண லே அவுட் .குழந்தை கிறுக்கும் சித்திரம் போன்ற வடிவங்களுக்குள் சாம்பல் வண்ண பூச்சு என்ன நோக்கு, என்ன வடிவ,என்ன வரிசை, என எதற்கும் பிடி கிடைக்காத வினோத ஓவியச் சிதறல். முதல் பார்வைக்கு ஒன்றுமே பிடி படவில்லை. கொஞ்சம் கொஞ்சமாக போதம் வடிவங்களுக்காகத் துழாவித் துழாவி, … ”அண்ணா இங்க பாருங்க சக்கரம்” என ராசுக்குட்டி துவங்க முதல் பிடி கிடைத்தது. அது சக்கரம், அல்லது கேடயம், அல்லது சூரியன்,அல்லது அவர்களின் குல அடையாளம். குழந்தை கிறுக்கிய உருவங்கள் போலவே மெல்ல மெல்ல துலங்கி வந்தது மான்கள். புதர் அருகே நின்றிருக்கின்றன. மாடுகள்.மயில். வேட்டைக்கு செல்லும் மனிதர்கள் போல உருவங்கள். உரிக்கப்பட்ட எதோ விலங்கின் தோலை லே அவுட் செய்த சில கோட்டு சித்திரங்கள். அருகே தோலுரிக்கப்பட்ட மாடு ஒன்றின் சித்திரம். முன்னறிவு இல்லாததால் குழம்பிய சித்திர வெளியை பொருள் கொள்ள இயலாமல் போதம் தவித்தது.
நண்பர்கள் இயல்பாக நகைச்சுவைக்குள் செல்ல. ஈரோடு கிருஷ்ணன் அமியின் குகை ஓவியம் கதையை நினைவு கூர்ந்தார்.
ஓவியங்களை அவதானிக்க பார்வைப் புலனுக்கு தேவையான குறிப்பிட்ட தொலைவு அங்கே சாத்தியப்படாததால் ஓவிய சிதறல் குழப்பமும் தெளிவுமாக மாறி மாறி தோற்றமளித்தது. சக்தி கிருஷ்ணன் போலராய்டு சண் கிளாஸ் வழியே பாறை ஓவியங்களை பாருங்கள். கோட்டு சித்திரம் மிக தெளிவாக தெரிகிறது என, அனைவரும் அவரது கண்ணாடி வழியே அந்த பதினைந்துக்கு பதினைந்து அளவில் இருக்கும் ஓவியக் களத்தை மீண்டும் விழிகளால் வருடினோம்.
நேரமாச்சி கிளம்புவோம் கீழ்வாலை அடுத்து இருக்கு என ஈரோடு வக்கீல் துவங்க, ”அண்ணா இங்க வரிசையா சூலம் பாருங்க. இந்தக் குடி ஆதி சைவக் குடிங்கன்னா” என்று தனது கண்டடைதலை முன்வைத்தார் ராசுக்குட்டி.கிளம்பினோம் .வெளியேற இயலாமல் அய்யய்யோ அய்யய்யோ என கதறிய ராசுக்குட்டியை எழுவர் இழுத்து வெளியே போட்டனர்.
மீண்டும் சக்தி கிருஷ்ணனுக்கு அந்த பெண்ணின் அழைப்பு .”ஒண்ணு பண்ணுமா நீ. ஒரு மூணு நாள் லீவு போட்டுட்டு .முதலாளி கண்டிப்பா கேப்பார். சொல்லி சம்பளத்த வாங்கி வெச்சுடறேன் சரியா” அந்தப் பிள்ளையும் சரி சரி என மண்டையை ஆட்டியது இங்கிருந்தே தெரிந்தது. ”யோவ் ஏன்யா இந்த அநியாயம் பண்ற” எனக் கேட்டேன் ”என்ன செய்ய சீனி. சம்பளம் தரனும் மனம் இருக்கு ,பணம் இல்லையே” என்றார் சக்தி.
கீழ்வாலை நோக்கி கிளம்பினோம். பிரபு யோகி இடையே விஷ்ணுபுரம் நாவலின் புக் மார்க் போல சிக்கி இருந்தேன். வெளியே அனலை வெளிச்சமாக பரப்பி விரிந்த வெயில் வெளி. விவசாயம் நலிந்து ஆட்கள் பெங்களூருக்கு கூலிக்கு சென்றுவிட்டதால் கைவிடப்பட்ட நிலங்கள். சுற்றிலும் வெய்யிலே பாறைகளாக உருண்டு, அந்தப் பாறைகளே மலைகளாக உயர்ந்த அனல் தொடர். குவிக்கப்பட்ட கோலிக்குண்டுகள் போல தோற்றமளிக்கும் மலைத்தொடர். ஒவ்வொரு பாறையாக நீக்கினால் மிச்சமின்றி காணாமல் போகும் மலை. ஆங்காங்கே குவாரிக்கு உணவான பாறைகள் வரிசை.
வழியில் ஒரு சிற்றூரில் மதிய உணவு முடித்து,கீழ்வாலை அடைந்தோம். கீழ்வாலை பெயர்ப்பலகைக்கு எதிரே விரியும் பாறைகள் செறிந்த திடலில் எங்கோ அந்த ஓவியப் பாறைகள் கிடக்கிறது. ஊரிலிருந்து ப்ளஸ் ஒன் படிக்கும் மாணவன் ஒருவன் வழிகாட்டியாக கிடைத்தான். உண்மையில் வழிகாட்டி இன்றி அந்தப் பாறை ஓவியங்களை அங்கு கண்டு பிடிப்பது கடினமே.
நான், சக்தி, பிரபு மூவரும் பேசிக்கொண்டே பாறைக் குவியல் ஊடே நடந்தோம். பேசிக்கொண்டே வந்த சக்தி ”நான் ஜெயில்ல இருந்தப்போ பல அல் உம்மா ஆளுக என்ன பன்னுவாங்கன்னா ” என தொடர சக்தியின் பின் புலம் அறியாத பிரபு முகத்தில் மெல்லிய பீதி.
”சக்தி நீங்க … ஏன் ஜெயில்ல? ” குரலில் மெல்லிய நடுக்கம்.
சக்தி மிக இயல்பாக ” கைதவறி ஒரு கொலை பண்ணிப்புட்டேன்” என்றுவிட்டு அல் உம்மா உளவியல் பற்றி பேசிக் கொண்டே போனார். முகத்தில் அய்யய்யோ வுடன் இரண்டடி பின்னால் வந்தார் பிரபு.
பையன் பாறைகள் குவிந்து உருவான புதிர்ப் பாதை அமைப்புக்குள் எங்களை அழைத்து சென்றான். நாற்ப்பது அடி உயர பாறைகள் ஒன்றின் மீது ஒன்று சாய்ந்து அமர்ந்த இடைவெளிப் பிலத்தின் புதிப் பாதைகள் வழியே நடந்தோம். வெளியே காய்ந்த தகிப்பு நேரெதிராக இந்தப் பாதை எங்கும் குளிர் தென்றல் பீரிட்டு உலவியது. வெளியேறி மீண்டும் வெயில் திடலுக்கு வந்து எதிர்பட்ட முதல் பாறையில் ஏறினால் ஓவியங்கள்.
ஆலப்பாடிக்கு மாறாக இங்கே அமர்ந்து பார்க்கும் வசத்தில் , வாகான தூரத்தில் ஓவியங்கள். பையன் கையில் இருந்த பாட்டிலில் இருந்து தண்ணீரை பாறை மேல் விசிறி அடித்தான். அதுதான் பாறை ஓவியம் துலங்கும் வழி போலும். துல்லியமாக துலங்கி வந்தது ஓவியங்கள். அதே சக்கரம். மாடுகள், மான்கள், ஆயுதம் தரித்த நிலையில், எதிர் எதிர் நிலையில் போருக்கோ, நடனத்துக்கோ நிற்கும் கழுகு தலை மனிதர்கள். குதிரை போலும் பிராணி ஒன்றினில் அமர்ந்திருக்கும், அதை வழி நடத்தும் மற்றொருவன் என இரு மனிதர்கள். காலையில் பார்த்த ஆலப்பாடி ஓவியங்கள் இங்கே முன்னனுபவமாக சித்திரங்கள் சட் சட் டென பிடி கிடைத்தன.
பாறை மேல் வீசி வீசி நீர் காலி ஆக, போதும் இனிமே இருக்க தண்ணி குடிக்க வேணும் என கதறினார் ஈஸ்வர மூர்த்தி. வியர்வையில் தெப்பலாக நனைந்து பரிதாபமாக தோற்றமளித்தார் ஈமூ .
என்னை பார்த்தவர் ”அது எப்படி சீனு உத்ராகான்ட் போயிட்டு வந்த மாதிரியே எழுதி இருக்கீங்க” என்று கேட்டார்.
”அதுல பாருங்க உண்மைக்கு மூன்று அலகுகள். சுருதி, பிரதிக்ஷம், அனுமானம்…..பிரக்திக்ஷம் இல்லன்னா கூட ஸ்ருதியும் அனுமானமும் போதும் ஒரு நல்ல பயணக் கட்டுரைய எழுதிப் புடலாம் ”என்றேன் . வந்தது வினை.
”அப்டின்னா இந்த பயணத்தையும் அது மாதிரியே எழுதுங்க எழுதுங்க . படிக்கறவங்க அடடா அந்த நிலத்த பாக்கலன்னா பொறந்ததே வேஸ்டு அப்டின்னு அந்த கட்டுரைய படிச்சு தவிக்கணும். இங்க வரணும். தண்ணி தவிச்சி சாகனும். ஆண்டவா மயக்கம் வருதே….” சரிந்தார் ஈமூ..
அடுத்தது செத்தவரை என்றார் ஈரோடு கிருஷ்ணன். யாரோ பேர் மங்களகரமா இருக்கு என்றார்.
செத்தவரை. உண்மையாகவே ஆமியின் குகை ஓவியம் கதையின் மூன்றாவது குகை நோக்கிய பயணம் போல , பயண சாகசம் அதிகரித்துக்கொண்டே போனது. செங்குத்தான பாறை உருண்டைகள் மேல் ஒரு கிலோமீட்டர் உயரவேண்டும். பிரபு ”மிடில சாமி” என்று கீழேயே அமர்ந்து விட்டார். அண்ணாமலை உச்சிக்கு நெம்புகோல் போட்டு போட்டே உயர்த்தி கொண்டு செல்லும் தீப அண்டா போல, எழுவர் நெம்புகோல் போட்டு போட்டு ராசுக்குட்டியை உயர்த்தினர்.
இங்கே கண்டவை முற்றிலும் தனித்துவம் வாய்ந்தது. உலகெங்கும் குகை ஓவியங்களில் காணப்படும் பொது அடையாளமான ”கை” அடையாளம் இங்கே பெரிதும் சிறிதுமாக நிறைய காணக் கிடைக்கிறது. சிறிய கைகள் கோட்டு சித்திரமாகவும் , பெரிய கை [ஆட்காட்டி விரல் இல்லை] முற்றிலும் காவித் தடமாகவும் காணக் கிடைக்கிறது. அனைத்துமே இடது கை. வித்யாசமாக இங்கே பெரிய பெரிய மீன்களும் சிறிய படகு ஒன்றும் வரையப்பட்டு இருக்கிறது. சிந்து சமவெளி ஒற்றை கொம்பு மிருகம் போலும் ஒரு மிருகத்தின் கோட்டு சித்திரம். அருகே தீயில் வாட்டப்படும் ஊண் குறித்த சித்தரிப்பு.
இந்த மூன்று நிலைகளில் கண்ட ஓவியங்கள் இன்றிலிருந்து இரண்டாயிரத்து ஐநூறு முதல் ஐயாயிரம் ஆண்டுகள் வரை என இணையம் சொல்கிறது. பெருங்கற்கால வேட்டை உணவு சேகரிக்கும் இனக் குழு ஒன்றின் பதிவுகள் இவை என முதல் பார்வையிலேயே புரிகிறது. வட்ட சின்னம் சூரியன், சக்கரம் அல்லது குல சின்னமாக இருக்கக் கூடும். கழுகு தலை [அல்லது அவ்வாறான கிரீடம்] கொண்டவன் முதன்மையானவன் என புரிகிறது. பழக்கம் செய்விக்கப்பட்ட மிருகம் ஒன்றின் மேல் [அனேகமாக குதிரைதான்] அமர்ந்திருக்கிறான். மிருகங்களை பழக்குவது அறிந்த குலம். தோலுரித்த மாட்டை கொண்டு, உரித்த தொலை கொண்டு, ஆயுத்தத்தை நுட்பமாக பயன்படுத்தி, சீராக பணி செய்ய கூடிய திறன் வாய்ந்த குலம் என்றும்,சேகரம் செய்ய தெரிந்த குலம், என்றும் ஊகிக்கலாம். சுட்டு சமைத்து உண்ட குழு. மீன் பிடிக்க, படகு சவாரி தெரிந்த குழு, மீன் பிடித்தல் செய்வோர் வேட்டை புரிவோர் காட்டிலும் உயர்ந்த நிலையில் அன்று மதிப்பிடப் பட்டிருக்கக் கூடும்.
அனைத்துமே கண்டு உருவாக்கிக்கொண்ட புரிதல் சட்டகம் மட்டுமே. இதற்க்கான முறையான கல்வி கற்று இதை விரித்துப் பொருள் கொண்ட வல்லுனர்கள் சொன்னவற்றை அறிந்தபிறகு இங்கே மீண்டும் வர வேண்டும் அது வரை இவை இங்கே இருக்க வேண்டும். தொல்பொருள் துறை கீழே இவை பாதுகாக்கப்பட்டு பராமரிக்கப்படுவதான எந்த ஒரு தடயமும் இங்கே கண்ட மூன்று ஊர்களிலும் இல்லை. உளுத்துப்போன வலை வேலியும் விழுந்து போனால். எஞ்சும் ஓவியங்கள் விரைவில் ஆவி ஆகும் எல்லா சாத்தியக்கூறுகள் அங்கே நிலவுகிறது.
குழு மொத்தமும் கைத்தாங்கலாக ராசுக்குட்டியை இறக்கியது. ”உயிருள்ளவரை மறக்க முடியாது இந்த செத்தவரை” என இறங்கியதும் பிரகடனம் செய்தார். மாலை வெயில் ஏந்தி பொன்னாகப் பொலிந்து கொண்டிருந்தன வெம்பாறைகள் சிதறிய வெளி.
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–63
63. இணைமலர்
சர்மிஷ்டையை ஹிரண்யபுரியின் அரண்மனைமுற்றத்தில் வந்திறங்கி அரச வரவேற்பை பெற்றுக்கொண்டிருந்தபோதுதான் தேவயானி முதலில் கண்டாள். ஆனால் கிளம்பும்போதே அவளைப்பற்றி சேடிகள் பேசிக்கொண்டிருப்பது காதில் விழுந்தது. “அழகி என்று சூதர்கள் பாடினால் போதுமா? சொல்லிச் சொல்லி அழகாக்க முடியுமா?” என்றாள் ஒரு முதுமகள். “அசுரகுலத்திற்குரிய அழகு அவளுக்கு உண்டு. அசுரர்களின் கண்களுக்கு அவ்வழகு தெரியும்” என்றாள் இளம்சேடி. “அவளை அசுரனா மணம்புரியப்போகிறான்? பாரதவர்ஷத்தை முழுதாளும் விருஷபர்வனின் மகள். பிறிதொரு சக்ரவர்த்தியை அல்லவா தேடுவார்கள்?” என்றாள் முதுமகள்.
“மணிமுடி சூடி அரியணையில் அமர்ந்து வெண்சாமரத்தால் வீசப்பட்டால் அழகு இயல்பாகவே கூடிவரும்…. எந்தச்சேடியைப்பற்றியாவது சூதர்கள் பாடியிருக்கிறார்களா? சேடியரில் அழகு இல்லையா என்ன?” என்றாள் அடுமனைப்பெண். “நம் தேவி அங்கே நுழையட்டும், அழகென்றால் என்னவென்று அவர்களுக்குத் தெரியும்” என்றாள் ஒர் இளம்பெண். “அழகு எங்கும் மதிக்கப்படுவதில்லை, மதிக்கப்படுவதே அழகென்றாகிறது” என்றாள் முதுமகள். அவள் மேலும் சொல்வதற்குள் தேவயானி அருகணைவதைக்கண்டு அவர்கள் பேச்சை நிறுத்தினர்.
தேவயானி அவ்வுரையாடலை ஓரளவு கேட்டிருந்தாள் என்பதை அவர்களும் அறிந்துள்ளார்கள் என அவர்களின் முகங்கள் காட்டின. “இளம்காலை ஒளியில் நகர்நுழைகிறோம், அரசி” என்றாள் முதுமகள். “ஆம், பேரரசர்களுக்குரிய வரவேற்பு ஒருங்குசெய்யப்பட்டிருப்பதாக வண்டியோட்டி சொன்னான்” என்றாள் அடுமனைப்பெண். தேவயானி ஒன்றும் சொல்லாமல் அவர்கள் தொடுத்துக்கொண்டிருந்த மலர்களை எடுத்து தானும் தொடுக்கலானாள். அவள் செய்துகொண்டிருந்த அணி அவர்களின் நோக்கைக் கவர்ந்து விழிபரிமாறிக்கொள்ளச் செய்தது.
“அங்கே நகர்முறை என்னவென்று நாம் அறியோம். நம்மால் மலரால் மட்டுமே அணிசெய்துகொள்ள இயலும்” என்று ஒரு பெண் சொன்னாள். “மலர்களைப்போல பிறிதொரு அணி ஏது? பொன்னணிகள் அனைத்தும் மலரை நடிப்பவை அல்லவா?” என்றாள் முதுமகள். அப்போதுதான் தேவயானிக்கு தன் அணிசூடுகை அங்கே நகரில் எப்படி பார்க்கப்படும் என்னும் உணர்வு எழுந்தது. சீதையின் அணிகளை கிஷ்கிந்தையின் குரங்குகள் அணிந்துகொண்டதைப்பற்றிய சூதர்பாடலின் வரிகள் நினைவிலெழ அவள் கைகள் தயங்கத் தொடங்கின. தயக்கமில்லா விரல்களால் மட்டுமே மலர்மாலை தொடுக்க முடியும். மலர்கள் விரல் தடுமாறி உதிர மாலையை வாழையிலையிலேயே விட்டுவிட்டு “நாம் கிளம்பவேண்டும் அல்லவா?” என்றாள்.
விருஷபர்வனின் அமைச்சர் சம்விரதர் கோட்டை முகப்புக்கே வந்து சுக்ரரை எதிர்கொண்டார். ஹிரண்யபுரியின் அமுதகலக் கொடியுடன் அவரும் ஏழு சிற்றமைச்சர்களும் படைத்தலைவர் மூவரும் குலமூத்தார் எழுவரும் காத்து நின்றிருந்தனர். அவர்கள் அணுகுவதைக் கண்டு கோட்டைக்குமேல் சுக்ரரின் காகக்கொடி மெல்ல ஏற முரசுகள் முழங்கின. அவர்கள் அணுகியபோது கொடிவீரன் ஒருவன் புரவியில் பாய்ந்துவந்து அதை சுக்ரரின் வண்டிக்கு முன் தாழ்த்தி “அரசகுருவுக்கு நல்வரவு. நகரும் நகர்வேந்தன் முடியும் தங்கள் முன் பணிகின்றன” என்றான். அவனை கைதூக்கி வாழ்த்தினார் சுக்ரர்.
வண்டிகள் கோட்டைக்குள் நுழைந்து ஹிரண்யபுரியின் மண்ணில் சுக்ரர் தன் வலக்காலெடுத்து வைத்தபோது மாமுனிவர்களுக்கும் பேரரசர்களுக்கும் மட்டுமே வழங்கப்படும் நூற்றெட்டு பெருமுரசுகளின் முழக்கம் எழுந்தது. ஆயிரத்து எட்டு கொம்புகள் வான் நோக்கி வளைந்து பிளிறின. கோட்டை மேல் இருந்த வீரர்கள் மலர்க்கடவங்களைக் கவிழ்த்து வண்ணமழை பெய்வித்தனர். சம்விரதர் அவரை வணங்கி எட்டுமங்கலங்களை அளித்து வரவேற்றார். அவர்கள் கொண்டுவந்த திறந்த தேரின் தட்டில் நின்று இருகைகளையும் விரித்து ஹிரண்யபுரியை வாழ்த்தியபடி சுக்ரர் நகர்த்தெருக்களினூடாக சென்றார்.
அவருக்குப்பின்னால் சென்ற கூண்டு வண்டிக்குள் அமர்ந்து சிறு சாளரத்தினூடாக அந்த பெரும் வரவேற்பை தேவயானி பார்த்தாள். இருபுறமும் மாளிகைகளின் உப்பரிகைகளில் நின்றிருந்த மக்கள் அரிமலர் அள்ளி வீசி வாழ்த்தொலி எழுப்பினர். இளைஞர்கள் இருகைகளையும் தூக்கி தொண்டை நரம்புகள் புடைக்க களிவெறியுடன் அவரைப் போற்றி கூவினர். அந்த வாழ்த்துகளிலும் கூச்சல்களிலும் இருந்த உண்மையான களிப்பு அவள் முகத்தை மலரச்செய்தது. ஹிரண்யபுரியின் வெற்றிக்கும் சிறப்புக்கும் சுக்ரரே அடிப்படை என அவளும் அறிந்திருந்தாலும் அம்மாபெரும் மக்கள் திரள் அவரை தங்கள் குலமூதாதைக்கு நிகராக, குடித்தெய்வமென்றே எண்ணுகிறது என்பதை அப்போதுதான் அவள் கண்ணெதிர் உண்மையாக தெரிந்து கொண்டாள்.
சுக்ரரின் தேர் மலர்த்திரையை அகற்றி அகற்றிச் சென்று அரண்மனையின் உட்கோட்டைக்குள் நுழைந்தது. அங்கும் மங்கல முரசுகளும் கொம்புகளும் ஒலித்தன. கைகூப்பியபடி சுக்ரர் தேர்த்தட்டில் நிற்க அரண்மனை முகமுற்றத்தில் தன் மூன்று தேவியருடன் அரசணிக்கோலத்தில் காத்து நின்றிருந்த விருஷபர்வன் கைகூப்பியபடி தேரை நோக்கி வந்தான். இரு அமைச்சர்கள் ஓடிவந்து சுக்ரரின் தேரை அணுகி முகமனுரைத்து அவரிடம் இறங்கும்படி சொல்ல தேரின்படிகளில் கால்வைத்து அவர் இறங்கினார். அரண்மனை முற்றத்தில் அவர் கால் படுமிடத்தில் ஒரு பொற்தாலத்தை வைத்தனர். வாழ்த்துக்கூவியபடி விருஷபர்வன் முன்னால் வந்து அவரை கைப்பற்றி அதில் நிற்கவைத்தான். அவனும் அரசியரும் மஞ்சள் நீரால் அவர் கால்களை கழுவினர். மலரிட்டு அதை வணங்கினர்.
விருஷபர்வன் தன் மணிமுடியைக் கழற்றி அவர் காலடியில் வைத்தான். சுக்ரர் வாழ்த்துரைத்தபடி குனிந்து அதை எடுத்து மீண்டும் அவன் தலையில் சூட்டினார். செம்பட்டுப் பாவட்டாவில் அவர் கால்வைத்ததும் அவர் கால் கழுவிய நீரை எடுத்து மூன்று பூசகர்களும் அங்கு கூடி நின்ற அமைச்சர்கள், படைத்தலைவர்கள், ஐங்குலத்து மூத்தவர்கள் அனைவரிடமும் கொண்டு சென்றனர். அவர்கள் அதைத் தொட்டு தங்கள் தலை மேல் தெளித்துக் கொண்டனர். பின்னர் அந்நீரைத் தொட்டு அரண்மனை மேல் தெளித்தனர் பூசகர். விருஷபர்வனும் அமைச்சர்களும் படைத்தலைவர்களும் இருபக்கமும் நின்று தலைவணங்கி முகமன் கூறி சுக்ரரை அரண்மனை நோக்கி அழைத்துச் சென்றனர்.
தேவயானியின் கூண்டு வண்டியை நோக்கி வந்த முதுசேடி ஒருத்தி திரையைத் திறந்து “வெளியே வாருங்கள், தேவி” என்றாள். அவள் கைகூப்பியபடி படிக்கட்டில் கால்வைத்து தரையில் இறங்கினாள். விருஷபர்வனின் மூன்று அரசியரும் அவளை அணுகி கைகூப்பினர். பட்டத்தரசி காஞ்சனை “ஹிரண்யபுரிக்கு நல்வரவு தேவி. தவம்தோய்ந்த உங்கள் கால் பட்டு இம்மண் பொலிவு பெறட்டும். நீங்கள் வாழ்ந்தது இந்நகரென்று புகழ் பெறட்டும்” என்றாள். இரண்டாவது அரசி சுபகை “சுக்ரரின் மகள் பேரழகியென்று அறிந்திருந்தேன். காவியங்கள் அழகை சொல்லி முடித்துவிட முடியாது என்று இப்போது தெரிகிறது” என்றாள். மூன்றாவது அரசி மாதவி சிரித்தபடி “பேரரசிக்குரிய நிமிர்வுடையவள் என்று சொன்னார்கள். நாங்கள் பேரரசியொருத்தியை இப்போதுதான் பார்க்கிறோம் என்றே தோன்றுகிறது” என்றாள்.
தேவயானி முகமன்களுக்கு பழக்கப்பட்டிருக்கவில்லை என்பதால் என்ன சொல்வதென்றறியாமல் சிவந்து விழிநீர்மை கொண்டு புன்னகைத்து ”ஆம், என்னை என் தந்தை அவ்வாறு சொல்வதுண்டு” என்றாள். காஞ்சனையின் விழிகளில் மெல்லிய திகைப்பும் உடனே ஏளனப்புன்னகையும் வந்தன. அதை மறைத்தபடி திரும்பி தன் பின்னால் நின்றிருந்த இளம்பெண் நிரையிலிருந்து சற்றே முன்வளைந்த சிறிய தோள்களும், மெலிந்த கைகளும், பெரிய விழிகளும் கொண்ட மாநிறமான பெண்ணைத் தொட்டு அழைத்து முன்னால் நிறுத்தி “இவள் என் மகள் சர்மிஷ்டை” என்றாள். தேவயானி “ஆம், அறிந்திருக்கிறேன். ஹிரண்யபுரியின் இளவரசி” என்றாள்.
சர்மிஷ்டை மெல்லிய நாணத்துடன் ஒரு கணம் தலை நிமிர்த்தி அவள் கண்களை நோக்கி “உங்களை சந்தித்ததில் பெருமை கொள்கிறேன், தேவி” என்று சொன்னாள். அதற்குள் அச்சொற்களின் வெம்மை தாளாது மெழுகுடல் உருகி நெளிவதுபோல் அசைந்து விழிதிருப்பிக்கொண்டாள். “வரும்போதுகூட என் சேடியர் உங்களைப்பற்றி சொன்னார்கள், அரசி” என்றாள் தேவயானி. “சூதர்கள் சொல்லை நான் கேட்பதே இல்லை” என்று சர்மிஷ்டை சொல்லி முடித்ததுமே உதடுகளை உள்மடித்து துடைத்தபடி சற்றே பின் நகர்ந்து அன்னையின் விரல்களை பற்றிக்கொண்டாள். அவள் முகம் சிவந்து கழுத்திலும் தோளிலும் நரம்புகளின் படபடப்பு தெரிந்தது.
முதுசேடி “உள்ளே செல்லலாம், தேவி” என்றாள். “நன்று” என்றபடி தேவயானி தலை நிமிர்ந்து பதினான்கு அடுக்கு மாளிகையை பார்த்தாள். “தேன்கூடு போலிருக்கிறது” என்றாள். உடனே அவ்வாறு வியப்பை வெளிக்காட்டலாகாது என உணர்ந்தவளாக “காவியங்கள் சொல்லும் மகோதயபுரம் குறித்த அணிச்சொல் அது” என்றாள். அவள் சொன்னதெல்லாமே பொருத்தமில்லாமல் இருந்தன என்பது அப்பெண்கள் என்ன எதிர்வினை காட்டுவதென்றறியாமல் திகைத்ததிலிருந்து தெரிந்தது. “பல அடுக்குகள் கொண்டதென்றாலும் மலரிதழ்களைப்போல எடையற்றிருந்தது அது என்கிறார் பார்க்கவர் தன் காவியத்தில்” என்றாள்.
அவர்கள் நிலையான முகமலர்வுடன் பொதுவாக தலையாட்டியதிலிருந்து அவர்களுக்கு காவிய அறிமுகமே இல்லை என்று அவள் உய்த்துணர்ந்தாள். அவளுக்குள் இருந்த பதற்றம் விலகி புன்னகை எழுந்தது. அப்புன்னகை முகத்திலும் விரிய “எடையின்மை என்பது எப்போதுமே உள்ளத்தை மலைக்கச் செய்கிறது. எடையின்மை கொள்பவை தாங்கள் இழந்த எடையை முழுக்க நோக்குவோன் உள்ளத்தில் ஏற்றிவைக்கின்றன என்று பார்க்கவரின் நூலுக்கு உரைசொன்ன சாம்பவர் கூறுகிறார்” என்றாள். அவர்கள் என்ன உணர்கிறார்கள் என எண்ணியபோது அவளுக்குள் சிரிப்பு நிறைந்தது.
அவர்கள் அனைவரைவிடவும் அவள் உயரமாக இருந்தாள். அத்தனை பெண்களுடைய தலைவகிடுகளும் அவளுக்கு தெரிந்தன. அவள் கைகள் அவர்களுடையதைவிட எடையும் நீளமும் கொண்டவையாக இருந்தன. இயல்பாகவே பிறருடைய தலையிலோ தோளிலோ கைவைத்துதான் அவளால் பேச முடிந்தது. அரண்மனை இடைநாழியினூடாக அவள் செல்லும்போது சேடியரும் ஏவல் பெண்டுகளும் தங்கள் அறைகளிலிருந்து வாசல்களினூடாகவும் சாளரங்களினூடாகவும் முட்டி நெரித்து தலைநீட்டி அவளை பார்த்தனர். அத்தனை விழிகளும் மலைப்பும் தவிப்பும் சூடின.
அவளை இருபுறமும் அகம்படி சமைத்து அறைக்கு கொண்டுசென்ற முதன்மைச்சேடி “அரண்மனையிலேயே தாங்கள் தங்கியிருக்கலாம் என்று ஆசிரியரிடம் சொன்னோம். அவரோ தாங்கள் அவருடன்தான் தங்கவேண்டுமென்று சொல்லிவிட்டார்” என்றாள். இன்னொரு சேடி “ஆனால் அங்குள்ள தவக்குடிலும் அரண்மனைக்கு நிகராகவே அமைக்கப்பட்டுள்ளது, தேவி” என்றாள். இடைநாழி நீண்டு இருபுறமும் சந்தனச்செதுக்குத் தூண்கள் நிரைவகுக்க அவற்றின் நிழல்கள் விழுந்து படிக்கட்டுகள்போல் தெரிந்தன.
அவர்கள் அவளை அமரவைத்த சிற்றவைக்கூடத்திற்குள் பதினான்கு பீடங்கள் இருந்தன. நடுவே மூன்று பீடங்கள் சாய்வுமகுடங்களுடன், பொற்கவசப் கைப்பிடிகளுடன், செம்பட்டு மெத்தையுடன், சிம்மக்காலடிகளுடன் அரசியருக்குரியவையாக அமைந்திருந்தன. பேசியபடியே இயல்பாக சென்ற தேவயானி மையத்திலிருந்த பட்டத்தரசியின் பீடத்தில் சென்றமர்ந்து நன்கு சாய்ந்து இருகைகளையும் கைப்பிடிமேல் வைத்துக்கொண்டாள். குழல்கற்றை தோளில் சரிய தலைதிருப்பி அவளுக்குப்பின்னால் சேடியர் உடன்வர உள்ளே வந்த பட்டத்தரசி காஞ்சனையிடம் “மூன்று அரசியருமே இங்குதான் தங்குகிறீர்களா?” என்றாள்.
சேடியர் பதற்றத்துடன் பேரரசியை நோக்க விழிகளை அசைத்து அவர்களை சொல்விலக்கிய பட்டத்தரசி அவள் அருகே வந்து வலப்பக்கம் இருந்த பீடத்தில் அமர்ந்தபடி “ஆம், இதுதான் மகளிர் மாளிகை. இங்கு ஒவ்வொரு அடுக்கும் ஒவ்வொரு அரசியருக்கு” என்றாள். இடப்பக்கம் இருந்த பீடத்தில் அமர்ந்த இரண்டாவது அரசி சுபகை “கீழ்த்தளங்கள் ஏவலருக்கும் சேடியருக்கும் உரியவை. இரண்டாவது தளத்தில் நீராட்டு அறைகள் உள்ளன. மூன்றாவது தளத்தில் சமைய அணியறைகள். அதற்குமேல் ஒவ்வொருவருக்கும் ஒரு தளம் ஒதுக்கப்பட்டுள்ளது” என்றாள். அவர்கள் அத்தருணத்தை இயல்பாக்கும்பொருட்டு பேசவிரும்பினர்.
சர்மிஷ்டை தன் மூன்றாவது அன்னை மாதவியின் தோள்பற்றி பாதி உடல் மறைத்து முகம் தோளுக்கு மேல் நீட்டி பெரிய விழிகளால் நோக்கி நின்றிருந்தாள். அவள் நோக்குபட்டதும் உடலில் மெல்லிய அசைவெழ அவள் விழிதாழ்த்தினாள். “இவள் ஏன் இவ்வளவு அஞ்சுகிறாள்? என்றாள் தேவயானி. காஞ்சனை சிரித்து “எங்கள் மூவருக்கும் சேர்த்து அவள் ஒருத்தியே மகள். ஆகவே இளவயதிலேயே கொஞ்சுதல் சற்று மிஞ்சிப்போய்விட்டது. குழந்தை நிலையிலிருந்து அவள் வளரவே இல்லை” என்றாள். தேவயானி நகைத்து “நன்று! எவ்வளவு காலம் குழந்தையாக இருக்கிறார்களோ அவ்வளவுக்கு மகளிர் மகிழ்ந்திருக்கிறார்கள்” என்றாள்.
மூதன்னையரும் அரசியரும் பீடங்களில் அமர்ந்துகொள்ள மூன்றாவது அன்னையின் பீடத்தின் பின்பக்கம் நின்று அவள் தோள்களை பற்றிக்கொண்டு தேவயானியையே விழிநட்டு நோக்கிக்கொண்டிருந்தாள் சர்மிஷ்டை. பட்டத்தரசி கைகாட்ட சேடியர்கள் உள்ளே சென்று தேவயானிக்கு பரிசுகள் கொண்டு வந்தனர். ஐந்துமங்கலப் பொருட்கள் வைத்த பொற்தாலம் முதலில் வந்தது. பீதர்நாட்டுப் பட்டாடைகளும், கலிங்கத்து மென்பருத்தி ஆடைகளும், அருமணிகள் பதித்த நகைகளும், சிமிழ்களும், விளையாட்டுப்பொருட்களும் என பதினெட்டு தாலங்களில் பரிசுப்பொருட்கள் அவள் முன் வந்தமைந்தன.
கண்களில் துணுக்குறலுடன் அவள் அவற்றை நோக்கி “இவையெல்லாம் எனக்கா?” என்றாள். “ஆம், முதல் முறையாக இவ்வரண்மனைக்கு வந்திருக்கிறீர்கள். தங்கள் தகுதிக்கு பரிசளிக்க எங்களால் இயலாது. இது எங்கள் தகுதியைக் காட்டும் பரிசு” என்றாள் பட்டத்தரசி காஞ்சனை. தேவயானி வாய்விட்டு நகைத்து “இவையனைத்தையும் நான் எங்கு கொண்டு வைப்பது?” என்றாள். “தாங்கள் இன்னும் குடில்கூட்டத்தை பார்க்கவில்லை. தங்கள் குடில் மூன்றடுக்குக் கூரையுடன் அரண்மனை போலவே கட்டப்பட்டுள்ளது. அங்கு தாங்கள் பேரரசிக்குரிய வாழ்க்கையை வாழ முடியும். விரும்பிய பணிசெய்ய சேடியர் உடனிருப்பர்” என்றாள் மாதவி. “இங்கிருந்து உரிய ஆடவனை தாங்கள் மணமுடித்துச் செல்லும்போது பேரரசியருக்குரிய பெண்செல்வத்துடன்தான் செல்ல வேண்டும்” என்றாள் சுபகை.
சிரித்தபடி தேவயானி சர்மிஷ்டையின் விழிகளை சந்திக்க அவள் பதறி தன் நோக்கை விலக்கிக்கொண்டாள். அதிலிருந்த மிரட்சி தேவயானிக்கு வேடிக்கையாக இருந்தது. அவள் தன்னையே நோக்கிக்கொண்டிருக்கிறாள் என்று உணர்ந்ததுமே தேவயானியின் உடல்மொழி மாறியது. மேலும் தருக்கி தலை நிமிர்ந்து தோள்களை விரித்தபடி ஒவ்வொரு பரிசுப்பொருளாக அருகே கொண்டுவரச்சொல்லி பார்த்தாள். ஒவ்வொன்றின் மேலும் சுட்டுவிரலால் தொட்டு அவற்றை ஏற்றுக்கொண்டாள். ஆனால் ஆடைகளையோ அணிகளையோ தன் கையிலெடுத்தோ உடல் மீது சேர்த்தோ நோக்கவில்லை.
அவை தனக்கொரு பொருட்டில்லை என்றே அவள் முகமும் உடலும் காட்டின. ஆனால் உள்ளத்திற்குள் அவள் பெரும் கிளர்ச்சி அடைந்திருந்தாள். இளமையிலேயே சுக்ரர் அணிகளும் ஆடைகளும் தனக்கென்றொரு எண்ணமோ கனவோ இல்லாதவர்கள் சூடவேண்டியது என்று அவளுக்கு கற்பித்திருந்தார். “வைரத்திற்கு எவரும் வண்ணம் பூசுவதில்லை குழந்தை. அதன் உள்ளொளியை அவ்வண்ணங்கள் மறைத்துவிடும். மெய்யொளி கொண்டவர்களுக்கு ஆடையும் அணிகளும் திரையேயாகும்” என்று சுக்ரர் சொன்ன சொற்கள் அவளுக்குள் ஆழப்பதிந்திருந்தன.
காவியங்களை கற்கையில் அதன் தலைவியர் அணிந்திருக்கும் அணிகளைப்பற்றிய செய்திகளை வெறும் சொல்லணிகள் என்றே அவள் கடந்துசெல்வதுண்டு. ஊர்வசி பரிணயம் காவியத்தின் ஆசிரியரான மகாபத்மர் ஊர்வசி அணிந்திருந்த நூற்றியெட்டு நகைகளின் விரிவான செய்தியை அளித்திருந்தார். ஒவ்வொன்றையும் மலருடனும் தளிருடனும் கொடிச்சுருளுடனும் ஒப்பிட்டு காட்சிப்படுத்தியிருந்தார். அவள் அதை ஒருமுறை வாசித்து கடந்துசென்றாள். மறுநாள் அவையமைவில் சுக்ரர் அவ்வணி நகைகளைப் பற்றி கேட்கையில் “நான் அவற்றை கடந்து சென்றுவிட்டேன். அவை எளியோருக்கான ஆழ்பொருளற்ற காட்சிப்படுத்தல்கள் அல்லவா?” என்று அவள் சொன்னபோது அவர் பதறி கைநீட்டி “அல்ல, அல்ல… பொருளற்ற காட்சிச்செய்திகளை சொல்பவர் காவிய ஆசிரியர் அல்ல. காவியத்தில் தலைவி அணிந்திருக்கும் அனைத்தும் பொருள்கொண்ட அணிகளே. சொல் ஓசையையும் இசைவையும் கொண்டு அழகு பெறுவது போன்றது அணிகளால் மானுட உடல் எழில்கொள்வது. ஆகவேதான் இரண்டையும் அணிகள் என்கிறார்கள்” என்றார்.
“அணிகள் என்பவை பிறிதொன்றின் அழகை ஒன்றின்மேல் ஏற்றிக்காட்டுபவை. அவ்வாறு இரண்டை இணைக்கையில் இரண்டுமே பொருள்விரிவுகொண்டு முடிவிலியை தொடுகின்றன. அருவியை அழகியின் சிரிப்புபோல என்னும்போது அருவியும் சிரிப்பும் முடிவிலாது அழகுசூடுகின்றன” என சுக்ரர் தொடர்ந்தார். “ஊர்வசியின் மூக்கில் ஒளிரும் மூக்குத்தி பொருளற்ற அணி அல்ல. அவள் முகமும் அகமும் கொண்ட இனிமை அனைத்தும் அவ்வணியென மையம் கொண்டுள்ளது. இளங்கன்னியாகிய தலைவி தலையை அசைத்து அசைத்து பேசுகையில் காதைத் தொட்டு நடனமிடும் குழை வெறும் அணி மட்டும் அல்ல. அவள் கொண்ட உளக் கொண்டாட்டத்திற்கு அடையாளமும் கூட” என்றபின் “நீரிலெழும் மலர் தன் நிழல்மலரை பீடமென கொண்டுள்ளது. இல்லை, நிழல்மலர் தன் தலையிலணிந்த அணிமலரா மேலெழுந்து மலர்ந்தது?” என அவர் அடுத்தவரிக்குள் சென்றார்
விழிகள் கூர்ந்து அவர் முகத்தையே நோக்கியபின் குனிந்து அந்த வரிகளில் நெஞ்சோட்டினாள். வகுப்பு முடிந்து திரும்பி தன் அறைக்குச் செல்லும்போதே வழியில் நின்று அவ்வணிகளை கூர்ந்து படித்தாள். அறையில் மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டிருந்தாள். சுவடியை மூடிவிட்டு அடுமனைக்குச் சென்றபோது அவ்வணிகளின் நினைவாகவே இருந்தாள். அங்கிருந்த காய்களும் கனிகளும் எல்லாம் நகைகளாகிவிட்டன. மீண்டும் தன் அறைக்கு வந்தபோது வரும் வழியில் பூத்து நின்றிருந்த சரக்கொன்றை அணி சூடி நிற்பதாகத் தோன்றியது. அறைக்கு வந்து சுவடியை எடுத்து அப்பாடல்களை மீண்டும் படித்தாள். பித்தெழுந்தவள்போல அவற்றையே திரும்பத் திரும்ப படித்துக்கொண்டிருந்தாள்.
அந்த அடிமைகொள்ளல் அவள் உள்ளுறை ஆணவத்தைச் சீண்டவே சலித்து சுவடியை மூடி கிருதரிடமே கொடுத்துவிட்டாள். ஆனால் எண்ணத்தில் பதிந்த அவ்வரிகள் எப்போது இயல்பாக பிறநினைவு ஓய்கிறதோ அப்போதெல்லாம் எழுந்து வந்துகொண்டிருந்தது. பின்னர் கனவில் அந்நகைகள் அனைத்தையும் அணிந்து அரியணையொன்றில் அமர்ந்திருக்கும் அவளை அவள் கண்டாள். ஒரு மலைமுடியின் உருளைப்பாறை மேல் அவ்வரியணை இருந்தது. அவளைச் சுற்றி எவருமிருக்கவில்லை. காற்று ஆடைகளையும் குழலையும் பறக்க வைத்தபடி கடந்துசென்றது. மிக ஆழத்தில் முகிற்படலம் படிந்த பெருநகரொன்று தெரிந்தது. அதன் கோட்டைச்சூழ்கையும் மாளிகைமுகடுகளும் மலர்ச்செடிவண்ணங்கள் கொண்ட உப்பரிகைகளும் முகிலுக்குள் தெளிந்தும் மறைந்தும் விரவிக்கிடந்தன. சிறிய தழல்கள் போல கொடிகள். கோட்டையைச் சுற்றி வளைத்த நீலஆறு மெல்ல திருப்பப்படும் வாள் என ஒளிசுடர்ந்தது.
படையொன்றின் முழக்கம் மெலிதாக கேட்டுக்கொண்டிருந்தது. வலப்பக்கம் ஆழத்திலெங்கோ மாபெரும் கண்டாமணியொன்று ஏழு முறை அடித்து ஓய்ந்தது. விழித்து எழுந்த பின் அக்கனவின் மலர்வால் முகம் நகை சூட மயங்கியவள்போல நெடுநேரம் படுத்திருந்தாள். கண்மூடி அக்காட்சியை மீண்டும் எழுப்ப முயன்றாள். அப்போதுதான் மலைமுடியிலிருந்து நகரைப் பார்க்கும் ஒருத்தியாகவும் அவ்வாறு அமர்ந்திருக்கும் ஒருத்தியை பார்க்கும் பிறிதொருத்தியாகவும் அக்கனவுக்குள் இருக்கும் தான் இருப்பதை உணர்ந்தாள்.
தன் முன் வந்த அணிகளை மிக விரைவிலேயே உள்ளம் கணக்கிட்டு விட்டதை, நூற்றெட்டு அணிகளுக்கும் மேலாகவே அத்தாலங்களில் இருந்ததை தான் அறிந்துவிட்டதை அவள் உணர்ந்தாள். மீண்டும் சர்மிஷ்டையை பார்த்தபோது அவள் உடம்பிலும் நூற்றெட்டு அணிகளுக்கு மேலிருப்பதை கண்டாள். கால் விரல்களில் அணியாழிகள், கணுக்கால்களில் சிலம்புகள், தொடையில் செறிமாலைகள் என நெற்றிச்சுட்டிவரை. அவ்வணிகள் அவள்மேல் கவ்வியும் தொங்கியும் சுற்றியும் பொருந்திக்கொண்டிருப்பதுபோல் தோன்றியது. கொன்றை மரத்தின் கிளை மலர்ச்சுமை தாளாது வளைந்து தாழ்ந்து நிற்பது போல.
அவள் மிகமெலிந்திருந்தாள். மாநிறம் சற்றே கருமைக்கு அருகே சென்றிருந்தமையால் நகைகளின் ஒளி அவளை மேலும் கரியவளாக காட்டியது. அச்சத்தாலும் நாணத்தாலும் உடலை ஒடுக்கி ஒடுக்கி முன்வளைவு கொண்டிருந்த தோள்களும், தசையற்ற புயங்களும், மெலிந்த கைகளுமாக அவள் எளிய வேளாண்குடிப்பெண் போலிருந்தாள். உள்ளூர் விழவொன்றில் முருக்கமரத்தில் செய்து வண்ணமிட்ட பொய்யணிகளை அணிந்து அரசியென உருக்கொண்டு வந்தவள் போல.
ஆனாலும் அவளை எண்ணமும் விழியும் மீண்டும் மீண்டும் நாடிச்சென்றுகொண்டிருந்தன. அவள் விழிகள். அவை இளங்குழந்தைகளுக்குரிய வியப்புடனும் உட்கரந்த நகைப்புடனும் முற்றிலும் புதியவையாக இருந்தன. அவள் உடலில் மின்னிய அத்தனை அருமணிகளை விடவும் அத்தனை மதிப்பு மிக்க மணிகள். திறந்திட்ட பொற்குவை மேல் வந்தமர்ந்து சிறகடிக்கும் இரு அழகிய வண்ணத்துப்பூச்சிகள் அவற்றை ஒளியிழக்கச்செய்பவைபோல.
தேவயானி விழிகளை திருப்பிக்கொண்டாள். ஏன் இவளைப்பற்றி எண்ணிக் கொண்டிருக்கிறேன் என வியந்தாள். தன் உடலின் நிமிர்வும் அழகும் அற்றவள். தன் அறிவும் ஆற்றலும் இல்லாதவள். உலகை வெல்லும் திறனுடைய தந்தையின் மகளும் அல்ல. அவர் அடிதொட்டு சென்னி சூடும் அரசன் ஒருவனின் மகள். அங்கு நின்று அவள் தன்னை கருவறை அமைந்த தேவியை நோக்கும் இளஞ்சிறுமிபோல் நோக்கி நிற்கிறாள் என்பதை உணர்ந்தாள். அவள் கொண்டுள்ள வியப்பிலுள்ள குழந்தைத்தன்மைதான் அவளை அழகியாக்குகிறதா?
புவி அனைத்தையும் ஆள்பவனின் மகள். அசுரேந்திரனின் குலக்கொடி. நாளை பட்டத்தரசியாக யாரோ ஒரு சக்ரவர்த்தியின் இடம் அமரப்போகிறவள். அவள் தன்முன் வியந்து நிற்கும்போது தருக்கி எழாமல் எது ஒன்று தன்னுள்ளிருந்து மீண்டும் மீண்டும் நிலையழிவு கொள்கிறது?
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–62
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–61
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–60
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–59
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–58
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–57
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–56
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–54
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–53
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–52
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–48
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–55
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–51
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–49
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–14
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 37
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 13
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 74
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 73
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 37
வெண்முரசு சென்னை சந்திப்பு
அன்புள்ள நண்பர்களுக்கு வணக்கம்,
இம்மாதத்திற்கான (ஏப்ரல் 2017) வெண்முரசு( சென்னை ) கலந்துரையாடல் வருகிற ஞாயிறு மாலை 4:00 மணி முதல் 8 மணி வரை நடைபெறும்.
ராகவ்.வெ “வெண்முரசில் இணைமாந்தர்கள்” என்கிற தலைப்பில் உரையாற்றுவார்.
வெண்முரசு வாசகர்களையும், வெண்முரசு குறித்து அறிய ஆர்வம் உடையவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்..
நேரம்:- வரும் ஞாயிறு (09/04/17) மாலை 4:00 மணிமுதல் 08:00 மணி வரை
இடம்:-
Satyananda Yoga -Centre
11/15, south perumal Koil 1st Street
Vadapalani – Chennai- 26
Contact:- +919043295217 / +919962524098
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

