Jeyamohan's Blog, page 1658

March 31, 2017

இணையதளம் வருவாய்

dog


அன்புள்ள ஜெயமோகன் அண்ணா,


தினமும் மாமலர் படிப்பதால் அடுத்தடுத்த அத்தியாயங்களுக்கு ஆவலுடன் காத்திருப்பது எனக்கு வாடிக்கையாகி விட்டது. கடந்த பிப் 16 – வியாழன் அன்று தங்கள் இணையதளம் அப்டேட் ஆக தாமதம் ஆனது. பிறகு நேற்று இரவு. இதன் பொருட்செலவு பற்றி குறிப்பிட்டிருந்தீர்கள். சந்தாவாக கட்டணம் நிர்ணயிக்கப்படுமாயின் மகிழ்வேன்.


தஞ்சை சந்திப்பின் போதும் குறைந்தபட்ச கட்டணம் நிர்ணயிக்கபட்டிருக்கலாம் என்று தோன்றியது. மாமலர் நூலாக வரும் முன்னரே அதை முழுவதுமாக படித்து முடித்திருப்பேன். இது உங்கள் உழைப்பு. இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் புத்தகம் படித்து வருகிறேன். ஒவ்வொரு நூலையும் புதிதாகவே வாங்குகிறேன். இணையத்தில் நீங்கள் கட்டணம் அற்று வழங்கினாலும் ஓசியில் படிக்கிறோம் என்ற எண்ணம் ஏற்படவே செய்கிறது – அத்துடன் கேபிள் டிவிக்கு கட்டணம் செலுத்தி பெற்றுக்கொண்டு எழுத்து இலக்கியம் இலவசம் வேண்டும் என்பது எழுத்துக்கு ஒரு அவமதிப்பாகவும் தோன்றுகிறது.


பத்திரிகைகள் – வார இதழ்கள் பெரும்பாலும் தரமுடையவையாக இல்லை. தேடுபவர்கள் இயல்பாக வந்தடையும் இடமாக உங்கள் இணையதளம் உள்ளது. கட்டணம் நிர்ணயிக்க விருப்பம் இல்லாவிட்டால் விருப்பமுடையவர்கள் நன்கொடை அளிக்கலாம் என்று அறிவியுங்கள் என்று கோருகிறேன். உங்கள் இணையதளம் எப்போதும் நிலைநின்று (உங்களுக்குப் பிறகும் கூட) தொடர்ந்து வளர்ந்து செல்லவேண்டும் என்பது என் பிரார்த்தனை.


அன்புடன்,


விக்ரம்


கோவை


***


அன்புள்ள விக்ரம்,


கட்டணம் அல்லது நன்கொடை நிர்ணயிக்கவேண்டுமா என்னும் குழப்பம் கொஞ்ச நாட்களாகவே சுழன்று கொண்டிருக்கிறது. கட்டணம் என எதையும் வைப்பது சரியல்ல, அது இதை ஒரு வணிகமாக ஆக்கிவிடுகிறது, இதைப் பற்றிக் கேள்விப்பட்டு உள்ளே வந்து வாசிப்பவர்களைத் தயங்கச் செய்கிறது என்று ஓர் எண்ணம்.


நன்கொடை வைக்கலாம், ஆனால் பெரிய எதிர்வினை ஏதும் இருக்காது, அப்படியெல்லாம் நம்மவர் பணம் கொடுத்துவிடமாட்டார்கள் என்று நண்பர்கள் சொன்னார்கள். அதேசமயம் நன்கொடையாக லட்சக்கணக்கில் வசூல் என்று கெட்டபேரும் எஞ்சும். விளம்பரம் போடலாம். தொடர் விசாரிப்புகள் உள்ளன. ஆனால் அது தளத்தை வாசிக்க முடியாததாக ஆக்கிவிடும்.


அத்துடன் நம்மூரில் எல்லாவற்றையும் இலவசமாக அளிப்பதே நல்லவன் செய்யும் வேலை, கலைஞனும் இலக்கியவாதியும் வறுமையில் இருந்தாகவேண்டும் என்றெல்லாம் பல முன்முடிவுகள். காப்புரிமை பேசினார் என்று இளையராஜாவை ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகத்தின் முதன்மை எதிரி என்ற அளவில் வசைபாடித் தள்ளினார்கள் நம்மவர்கள்.


பார்ப்போம், ஓடும்வரை ஓடட்டும். ஆனால் எனக்குப்பின் இந்தத் தளம் இருக்கும் என்றெல்லாம் எனக்கு எண்ணமில்லை. ஆனால் தொழில்நுட்பவளர்ச்சி காரணமாக இந்த உள்ளடக்கம் மிகச்சுருக்கமாக அழுத்தப்பட்டு எங்கேனும் இருந்துகொண்டிருக்கும்


ஜெ


***


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 31, 2017 11:33

கல்வி, தன்னிலை -கடிதம்

rishi(1)



டியர் சார்,


கல்வி- தன்னிலையும் பணிவும் வாசித்தேன். மிக நுட்பமான கட்டுரை. தன் ஆளுமையைச் சிறிதளவும் சீண்டிப்பார்க்க விரும்பாத மாணவர்களை அதிகம் என் வகுப்பில் பார்த்திருக்கிறேன். பாடத்தைத் தாண்டி பேசப்படும் எதையும் அவர்கள் வறண்ட நகைச்சுவையின் மூலமே எதிர்கொள்ள விரும்புகிறார்கள். பாடமல்லாது பேசப்படும் எதிலும் காந்தியை துணைக்கு அழைத்துக்கொள்வது வழக்கம்.


ஆனால் ‘அவரு வெள்ளக்காரியோட டான்ஸ் ஆடறமாதிரி பேஸ்புக்ல இருக்கே சார்’ போன்ற எதிர்வினைதான் பெரும்பாலும் வரும். காந்தி முதல் மோடி வரை அவர்களிடம் அசைக்கவேமுடியாத ஒரு கருத்துண்டு. இதை அவர்கள் உருவாக்கிக்கொண்டிருப்பதற்குப் பின்னிருப்பது சமூகவலைத்தளங்கள் மட்டுமே. ஆளுமையை உருவாக்கும் இடத்தில் தொழில்நுட்பம் வந்துசேர்ந்திருக்கிறதோ என்று தோன்றுகிறது. கல்விக்கூடங்களில் ஆளுமையை உருவாக்கும் ஆளுமைகளுக்கு நிறையவே பஞ்சம் இருக்கிறது. முதலீட்டியம் வலுப்பெற்ற பிறகு அடுக்குகளோடு சேர்ந்து கல்விநிலையங்களில் ஆசிரியதரமும் காணாமல் போயிருக்கிறது. அந்த இடத்தைத் தொழில்நுட்பம் இட்டு நிரப்புகிறதா என்ற கேள்வி எனக்குள்ளது.


கல்வியின் மீதும், கல்வி நிலையங்களின் மீதும் மாணவர்கள் கொண்டிருக்கும் அதீத வெறுப்பையும் மீறி ஒரு மாணவனுடன் உறவை பேணுவது உண்மையிலேயே பெரிய சவால். தன் கண்முன்னே அப்பாவோ, அம்மாவோ குறுகிநின்று பணத்தை கட்டும்போது உருவாகும் வெறுப்பை தீர்த்துக்கொள்ள பயிலும் மூன்று, நான்கு ஆண்டுகளிலும் சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறான். அந்த வெறுப்பு ஆசிரியர்கள் மீதும் திரும்புகிறது.


ரிஷி,


ராசிபுரம்


***


அன்புள்ள ரிஷி


என்ன சிக்கல் என்றால் நம் கல்விக்கூடங்கள் கல்விக்கானவை அல்ல, பயிற்சிக்கானவை என்பதுதான். வேலைவாய்ப்புக்கான பயிற்சியைப் பெறும்பொருட்டு மட்டுமே அங்கே மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். வேலைக்கு உதவாத எதையும் அவர்கள் கற்க தயாராக இல்லை. அவர்கள் பணம் கட்டி வாங்கிய பொருள் அக்கல்வி, ஆசிரியர் ஒரு ‘டெலிவரிமேன்’


மாணவர்களின் மனநிலையைப்பற்றி என்னிடம் பல ஆசிரியர்கள் மனம் வருந்திச் சொல்லியதுண்டு. தேவையில்லாம பேசாதீங்கசார், பாடத்தை எடுங்க என்றே மாணவர்கள் சொல்கிறார்கள் என்று சொன்னார்கள். சென்ற தலைமுறையில் ஆசிரியர் பாடத்திட்டத்தைக் கடந்து தன் இலட்சியவாதம், தன் ரசனை ஆகியவற்றை வகுப்பறையில் முன்வைக்க இடமிருந்தது. இன்று அந்த வாய்ப்பு பெரும்பாலும் இல்லை.


கல்லூரிகளில் உள்ள உதாசீனமனநிலை, நையாண்டி ஆகியவை கண்டு உருவான தயக்கம் காரணமாகவே நான் கல்லூரிகளுக்குச் செல்வதைத் தவிர்க்கிறேன்


ஆனால் அந்தக்கூட்டத்திலும் சிலர் இருக்க வாய்ப்புண்டு. தனிப்பட்ட முறையில் அவர்களைக் கண்டுபிடிக்கவேண்டியதுதான்


ஜெ


***




தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 31, 2017 11:31

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–60

60. கனவுக்களப் பகடை


அன்றும் தேவயானி பின்காலையில் படுத்து உச்சிப்பொழுதுக்குப் பிறகுதான் துயின்றெழுந்தாள். முந்தைய நாள் துயின்ற பொழுதை உடல் நினைவில் பதித்திருக்க வேண்டும். அந்த நேரம் வந்ததுமே இனியதோர் சோர்வு உடலில் படர்ந்தது. முந்தையநாள் துயின்றபோதிருந்த இனிமை நினைவில் எழுந்தது. வெளியே ஒளியென, காட்சிகளென, அசைவுகளென வண்ணங்களெனப் பரந்திருந்த புற உலகை முற்றிலும் வெளித்தள்ளி அனைத்து வாயில்களையும் அடைத்துக்கொண்டு தன் உள்ளே இருக்கும் மிக நுண்மையான ஒன்றை வருடியபடி தனித்திருக்க வேண்டுமென்று தோன்றியது.


அது ஒரு கூரிய முள். அதன் முனையில் தன்னுணர்வின் மிக மென்மையான பகுதியொன்றை வைத்து உரசிச்செல்லும்போது ஏற்படும் சிலிர்ப்பூட்டும் நெகிழ்வு. முற்றிலும் இருள் நிறைந்த விரிந்த வெளியொன்றில் தனித்து வைக்கப்பட்டிருக்கும் அருமணியின் ஒளித்துளி. பிறிதொன்றும் வேண்டியதில்லை என்று தோன்றியது. எழுந்து சென்று மஞ்சத்தில் படுத்து கண்களுக்கு மேல் துணியொன்றைக் கட்டி இமைகசிந்து வரும் வெளிச்சத்தை மறைத்துக்கொண்டு உடல் சுருட்டி படுத்துக்கொண்டாள். வைரமுனையுடன் எழுந்து வந்தது அந்த முள்நுனி. அதன் நீல நிற நச்சு. மயக்குவது.


கூர்மையைச் சூழ்ந்து படபடத்துப் பறந்தது வண்ணத்துப்பூச்சி. தன் ஒற்றைக்காலை அதன் முனையில் ஊன்றி நின்று சிறகடித்தது. பறப்பதும் நிலைப்பதும் ஒன்றேயான அசைவு. அந்த இனிமை அவள் உடலுக்கும் பரவியது. நாவில் மட்டுமே அதற்கு முன் இனிமையை உணர்ந்திருந்தாள். நெஞ்சில் உணர்ந்தது இனிமையென்று கற்பனை செய்துகொண்டிருந்தாள். அப்போது இடது உள்ளங்கால் தித்தித்தது. தொடைகள் வழியாக அத்தித்திப்பு படர்ந்தேறியது. அது வெளிக்கசிந்து வீணாகிவிடக்கூடாதென்பதைப்போல உடலை இறுக்கிக்கொண்டாள். உள்ளத்தைக் கொண்டு உடலை கவ்வ முயல்வதுபோல. மெல்லிய புல்லரிப்புடன் உடல் எழுந்தெழுந்து அமைந்துகொண்டிருந்தது. புரண்டு படுத்து முகத்தை மென்சேக்கையில் அழுத்திக்கொண்டாள்.


பின் இனிமை ஓர் அலையென அவளை கடந்து சென்றது. காற்றலையில் சுடரென அவள் உடல் துடித்து அலைபாய்ந்து நீண்டெழுந்து ஒருகணம் வெட்டவெளியில் நின்று பின்பு வந்து இணைந்துகொண்டது. மெல்ல தளர்ந்து தன் வியர்வையின் மணத்தை தானே உணர்ந்தபின் கண்களுக்குள் அலையும் குருதிக் குமிழிகளை நோக்கியபடி படுத்திருந்தாள். ஒவ்வொரு சொல்லாக உதிர்ந்து மறைய வெளியே காற்று அடிப்பதை சித்தம் உணர்ந்தது. காற்று எனும் ஒற்றைச்சொல்லாக தன் இருப்பை உள்ளுணர்ந்தாள். பின்பு அதுவும் மறைந்தது.


காற்றின் ஒலிகேட்டே விழித்துக்கொண்டாள். அறைக்குள் அனைத்து துணிகளும் பறந்து கொண்டிருந்தன. சாளரம் வழியாக வந்த இலைகளும் சருகுகளும் உள்ளே சுழன்று சுவர் மூலைகளில் சுழிவளையங்களாயின. தன் முகத்திலும் உடம்பிலும் படிந்திருந்த மெல்லிய தூசியையும் சருகுப்பொடிகளையும் உதறியபடி எழுந்து அமர்ந்தாள். காற்று அடங்கி துணிகள் தங்கள் இயல்வடிவில் வந்தமைந்தன. இறுதியாக அவளுடைய மெல்லிய பட்டுமேலாடை புகையென தவழ்ந்திறங்கி நுனிமட்டும் சற்றே அலையடித்து அமைந்தது. அதை எடுத்து இடை செருகிச் சுழற்றி தோளிலிட்டபடி வெளியே வந்தாள்.


நன்றாக பசித்தது. கூரைவிளிம்பு நிழல் விழுந்திருந்ததைக் கொண்டு பொழுதென்னவென்று கணித்தாள். உச்சிப்பொழுது தாண்டி மூன்று நாழிகை ஆகியிருந்தது. அடுமனைக்குச் சென்று உணவுண்ணலாம் என்று எண்ணி செல்லும் வழியிலேயே மரத்தொட்டியிலிருந்து நீரள்ளி முகம் கழுவி ஈரக்கையால் குழலைத் தடவி அள்ளி கொண்டையாக முடிந்துகொண்டு நடந்தாள். தன் காலடி வைப்பிலும் இடையசைவிலும் இருந்த இனிய தளர்வையும் குழைவையும் அவளே உணர்ந்தாள். பிற பெண்களிடம் பல முறை அவளே கண்டதுதான் அது. அப்போதெல்லாம் ஏனிப்படி காற்றில் புகைச்சுருள்போல் நடக்கிறார்கள் என்ற ஏளனம் நெஞ்சிலெழுந்ததுண்டு. அப்போது அவ்வாறு ஒரு நடை அமைந்ததற்காக உள்ளம் நுண்ணிய உவகையையே கொண்டது.


அடுமனையின் படிகளில் ஏறி ஓசையுடன் கதவைத் திறந்து தலைநிமிர்ந்து உள்ளே நுழையும் வழக்கம்கொண்டிருந்த அவள் அன்று வாயிலுக்கு முன்னால் ஒரு கணம் தயங்கி மெல்ல கதவைத் தொட்டு சற்றே திறந்து உள்ளே பார்த்தபின் நுழைந்தாள். அவளைக் கண்டதும் அங்கு அமர்ந்து சிரித்து நகையாடிக்கொண்டிருந்த அடுமனைப்பணியாளர்கள் அனைவரும் எழுந்தனர். “வருக, தேவி! குடிலுக்குள் வந்து பார்த்தேன். தாங்கள் துயின்றுகொண்டிருந்தீர்கள். துயிலெழுந்து வரட்டும் என்று காத்திருந்தோம். இன்று உணவு சூடாகவே உள்ளது. அருந்துகிறீர்களா?” என்றாள் அடுமனைப்பெண். “ஆம், பசிக்கிறது. அதற்காகத்தான் வந்தேன்” என்றபடி அவள் அடுமனைக்குள் சென்றாள்.


ஊன் சோறின் மணம் எழுந்தது. “ஊன் சோறா?” என்று அவள் கேட்டாள். “ஆம், காட்டுஆடு” என்றபின் “சக்ரனும் அவர் தோழர்களும் ஆட்டுக்குட்டியொன்றைக் கொன்று அதன் ஊனை கொண்டுவந்தனர். அது ஆசிரியருக்கு மட்டுமே என்றனர்” என்றாள். “ஏன்?” என்றபடி அவள் மணையிலமர்ந்தாள். “நேற்று அவர் இளம்கன்றின் இறைச்சியை கேட்டிருக்கிறார்.” தேவயானி “ஆம், அதை பிறரும் உண்ணலாமே?” என்று கேட்டாள். “அவருக்கென்று அதை வேட்டையாடியிருக்கிறார்கள். அவருக்கான காணிக்கை அது. பிறர் உண்ணலாகாது என்றார்கள்.”


அவள் நிமிர்ந்து பார்த்தாள். மிகத் தொலைவில் காற்று எழுந்து சுழன்று மரக்கிளைகளை உலுக்கியபடி அணுகும் ஓசைபோல ஒன்று கேட்டது. “யார் கொண்டு வந்தார்கள்?” என்று கேட்டாள். “சக்ரன்” என்றாள் அடுமனைப்பெண். “அந்தக் கன்றையே கொண்டு வந்தார்களா?” அவள் “இல்லை, நன்றாகக் கழுவித் துண்டுபோட்ட ஊனைத்தான் கொண்டு வந்தார்கள்” என்றாள். தேவயானி மணை புரண்டு பின்னால்விழ பாய்ந்து எழுந்து கைகளை உதறியபடி “அந்த ஊனுணவு எங்கே?” என்றாள். “அதை சமைத்து ஆசிரியருக்கு அளித்துவிட்டோம். அவர் உண்டு ஒரு நாழிகை கடந்துவிட்டது” என்றாள்.


அவள் பாய்ந்து கதவைத்திறந்து முற்றத்தில் இறங்கி சுக்ரரின் குடில் நோக்கி ஓடினாள். அவளுக்குப்பின்னால் ஓடிவந்த அடுமனைப்பெண் திகைத்து நோக்கி நின்றாள். சுக்ரரின் குடிலுக்கு முன் சத்வரும் கிருதரும் அமர்ந்து மெல்லிய குரலில் ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். அவர் ஓடிவருவதைப்பார்த்து கிருதர் எழுந்தார். “என்ன ஆயிற்று, தேவி?” என்றார். “தந்தை! தந்தையை எழுப்புங்கள்!” என்றாள். “அவர் உணவுண்டபின் ஓய்வெடுக்கிறார்” என்றார் கிருதர். “இல்லை, இப்போதே நான அவரை பார்த்தாகவேண்டும்” என்றபின் படிகளில் ஏறி கதவுப்படலைத் தள்ளி குடிலுக்குள் நுழைந்தாள்.


இறகுச்சேக்கையில் சுருண்டு தூங்கிக்கொண்டிருந்த சுக்ரரின் கால்களைப்பற்றி உலுக்கி “தந்தையே! தந்தையே!” என்று கூவினாள். அவர் கையூன்றி மெல்ல எழுந்து “என்ன?” என்றார். “அவரை மீண்டும் கொன்றுவிட்டார்கள். இம்முறை அவர் திரும்ப வரமுடியாது!” என்றாள். “என்ன சொல்கிறாய்?” என்றார் சுக்ரர். “தந்தையே, அவரைக்கொன்று அந்த ஊனை உங்களுக்கு உணவாக்கிவிட்டார்கள்” என அவள் கூவினாள். தொண்டை அடைத்து அழுகை எழ விம்மினாள். சுக்ரர் அறியாது தன் வயிற்றில் கையை வைத்தார்.  ”உங்களுக்கு மட்டும் என ஊன் அளிக்கப்பட்டுள்ளது. அது அவர்தான், ஐயமே இல்லை! நானறிவேன், அவர்தான்” என்று சொன்னாள்.


“ஆம், எனக்கு மட்டும்தான் என்று சொன்னார்கள். இரு, நான் நூல்கணித்து பார்க்கிறேன்” என்றபடி சற்றே நிலைபெயர்ந்த காலடிகளுடன் நடந்து மணையை இழுத்துப்போட்டு அமர்ந்து கண்களை மூடினார் சுக்ரர். அவள் எழுந்து வாயில் வழியே வெளியே ஓடி கிருதரிடம் “சென்று சக்ரனும் அவனுடைய தோழர்களும் இங்கிருக்கிறார்களா என்று பாருங்கள். இருந்தால் தடுத்து வையுங்கள்” என்றாள்.  ”ஏன்?” என்றார் கிருதர். “இன்று அவர்கள் தந்தைக்கு ஊன் காணிக்கை அளித்திருக்கிறார்கள்” என்றாள். கிருதர் உடனே புரிந்து கொண்டு “பாவிகள்!” என்றார்.


சத்வர் “அவர்கள் மீண்டும் காட்டுக்கு சென்றுவிட்டார்கள்” என்றார். “மீண்டுமா?” என்றாள். “ஆம், மீண்டும் காட்டுக்குச் சென்று ஊன்தேடி வருவதாக சொன்னார்கள்.” கிருதர் “இப்பொழுது காட்டின் எல்லையைக் கடந்து ஊருக்குள் நுழைந்துவிட்டிருப்பார்கள். அவர்கள் ஒற்றர்கள், ஐயமே இல்லை. இருமுறையும் கசனைக் கொன்றவர்கள் அவர்கள்தான்” என்றார். “என்ன செய்வது? அவரை மீட்டாக வேண்டும்” என்றாள் தேவயானி. “இம்முறை மீட்கஇயலாது, தேவி. ஆசிரியரின் வயிற்றைப்பிளந்து அவர் வெளிவந்தாக வேண்டும்” என்றார் கிருதர்.


அப்போதுதான் முழு விரிவையும் உணர்ந்து மெல்ல பின்னடைந்து சுவரில் சாய்ந்தாள். கண்களிலிருந்து கண்ணீர் பெருகி வழியத்தொடங்கியது. உடலை அழுத்தியபடி நடுங்கும் கைகளால் மரச்சுவரைப்பற்றியபடி நின்றாள். “இருமுறை தோற்றபின் தெளிவாக திட்டமிட்டிருக்கிறார்கள். ஆசிரியர் அவனை மீட்டெடுக்க முடியாமல் செய்துவிட்டார்கள்” என்றார் கிருதர். “இல்லை, மீட்டெடுத்தாகவேண்டும். அவர் எனக்கு வேண்டும்” என்றபடி அவள் உள்ளே ஓடி சுக்ரரின் அருகே விழுந்து முழங்கால்களில் அமர்ந்து அவர் கால்களை பற்றிக்கொண்டு “தந்தையே, அவர் வேண்டும். அவர் திரும்பி வந்தாக வேண்டும். இல்லையேல் எனக்கு வாழ்க்கையில்லை” என்றாள்.


அவர் கண்களைத் திறந்து “அவன் உடல் என் வயிற்றுக்குள்தான் இருக்கிறது” என்றார். “அவன் ஊனின் எஞ்சிய பகுதியை அவர்கள் காகங்களுக்கு இரையாக்கிவிட்டார்கள். அவனை மீட்டெடுப்பதென்றால் நான் இறந்தாக வேண்டும்.” அறியாது நெஞ்சில் கூப்பி பதிந்த கைகளோடு தேவயானி விம்மினாள். “நீ விழைந்தால் நான் இறந்து அவனை மீட்டெடுக்கிறேன்” என்று சுக்ரர் அவர் விழிகளைப் பார்த்து சொன்னார். அவள் இல்லை இல்லையென்று தலையசைத்தாள். “அத்தனை பெண்களுக்கும் வாழ்வில் ஒருமுறை வந்தணையும் தருணம் இது. மகளே, இருவரில் ஒருவரை தெரிவு செய்தாகவேண்டும்” என்றார் சுக்ரர்.


அவள் நிமிர்ந்து அவர் விழிகளைப்பார்த்து “ஆசிரியரென தாங்கள் எனக்கு எதை பரிந்துரைப்பீர், தந்தையே?” என்றாள். “தந்தை உனது இறந்த காலம். கணவனே எதிர்காலம். நீ இளையோள். இளையோர்கள் எதிர்காலத்தையே தெரிவு செய்யவேண்டும்” என்றார். “நான் உங்களை, உங்கள் இறப்பிற்குப்பின்…” என்றாள். சொல்ல சொற்கள் நெஞ்சுக்குள் திமிற “என்னால் எப்பக்கமும் திரும்ப முடியவில்லை, தந்தையே” என்றாள். “இன்று வரை இவ்வுலகில் இத்தெரிவை செய்த அத்தனை பெண்களும் கணவனையே முன் வைத்திருக்கிறார்கள். நீ பிறிதொன்றாக ஆகவேண்டியதில்லை” என்றார் சுக்ரர்.


அவள் விரல்களால் கண்களை அழுத்தியபடி தலை குனிந்து தோள்களைக் குறுக்கி உடலை இறுக்கியபடி சில கணங்கள் அமர்ந்திருந்தாள். கண்ணுக்குள் ஒளிமின்னிச் சென்றதுபோல அவன் சிரித்தமுகம் வந்து சென்றது. சீண்டும் நகைப்பு கொண்ட விழிகள். அவள் கண்களைத் திறந்து “அவர் வேண்டும் எனக்கு. அவர் மட்டும் போதும், இவ்வுலகே அழிந்தாலும் சரி. மூன்று தெய்வங்களும் அழிந்தாலும் சரி. அவர் மட்டும் வேண்டும். நான் இறந்தாலும் அவர் வாழ வேண்டும்” என்றாள். “நன்று, நீ அவ்வாறே சொல்வாய்’ என்றபின் சுக்ரர் “அவ்விளக்கை அருகே கொண்டு வா!” என்றார். அவள் சரிந்தமர்ந்து கை நீட்டி அகலை தரை வழியாக  நகர்த்தி அவர் அருகே கொண்டு வந்தாள்.


குடிலுக்குள் வந்து நின்ற கிருதர் “தாங்கள் இறக்காமலேயே அவனை மீட்க முடியும், ஆசிரியரே” என்றார். “என்ன சொல்கிறீர்?” என்று சுக்ரர் கேட்டார். “தங்கள் வயிற்றில் வாழும் கசனை மைந்தனென ஏற்றுக்கொள்ளுங்கள். அங்கே அவன் கருவடிவு அடையட்டும். கருவுக்கு முதன்மை நுண்சொற்களை பயிற்றுவிக்கமுடியுமென்று நூல்கள் சொல்கின்றன. அக்கருவிலேயே சஞ்சீவினியை கற்றுக் கொண்டபின் அவனை உயிருடன் எழுப்புங்கள். உங்கள் வயிறு திறந்து அவன் வெளியே வந்தபின் நான் அவனிடம் நிகழ்ந்ததை சொல்கிறேன். அவன் உங்களை உயிர்ப்பிக்க முடியும். தேவிக்கு கணவனும் தந்தையும் திரும்ப கிடைப்பார்கள்.”


தேவயானி திகைப்படைந்து எழுந்து கிருதரின் கைகளை பற்றிக்கொண்டு “ஆம், அதை செய்யலாம். அது ஒன்றே வழி. தந்தையே, அது ஒன்றே வழி” என்றாள். சுக்ரர் புன்னகைத்து “இப்போது இந்த மாபெரும் நாற்களத்தின் வரைவும் இலக்கும் தெரிகிறது. இத்தனை நாட்கள் இதற்காகத்தானா என் சிறு சித்தத்தைக் கொண்டு துழாவிக்கொண்டிருந்தேன்? நன்று!” என்றபின் கிருதரிடம் “அவ்வாறே செய்கிறேன்” என்றார். தன் வயிற்றின் மீது கைவைத்து ஒலியாக ஆகாத உதடசைவுகளால் பீஜமந்திரத்தை சொன்னார். உயிர்த்துளி என அவர் வயிற்றுக்குள் உருக்கொண்ட கசனை ஆத்மாவின் வடிவாக எழுப்பி அவனை நோக்கி கர்ப்ப மந்திரத்தை உரைத்தார். பின்பு தாரண மந்திரத்தை சொன்னபோது அவர் வயிற்றுக்குள் அவன் சிறிய கருவாக உருவானான்.


அவர் வயிறு பெருத்து வருவதை தேவயானி கண்டாள். அச்சமும் உளவிலக்கமும் ஏற்பட்டு அங்கிருந்து எழுந்து வெளியேறி மீண்டும் தன் குடிலுக்குள் சென்று சேக்கையில் படுத்துவிட வேண்டும் என்று தோன்றியது. அதிலிருந்து எழும்போது அனைத்தும் வெறும் கனவென்றாகி இருக்கும் என்பது போல. கிருதர் கைகளைக்கூப்பியபடி மலைத்த நோக்குடன் நின்றார். சுக்ரரின் வயிறு பெருத்து வந்தது. கருமுழுத்த பெண்ணின் வயிறுபோல பளபளப்பையும் வலம் சாய்ந்த குழைவையும் கொண்டது. கிருதர் அவளிடம் “நீ வெளியே செல்லலாம்” என்றார். “ஏன்?” என்று அவள் கேட்டாள். “இது எப்போதும் தனிமையிலேயே நிகழ்கிறது. அவர் சஞ்சீவினியை அதற்கு உரைக்கட்டும். அவன் பிறந்தெழுந்த பிறகு நீ உள்ளே வரலாம்” என்றார்.


அவள் கையூன்றி எழுந்து தூணைப்பற்றியபடி தயங்கி நின்றாள். “நாம் இருவருமே வெளியே செல்வோம், தேவி” என்றார் கிருதர். இருவரும் வெளியே வந்ததும் அவர் படல் கதவை மெல்ல மூடினார். “சஞ்சீவினியை உரைத்து அவன் பிறந்தெழ சற்று பொழுதாகும். அதுவரை காத்திருப்போம்” என்றார். அவர்கள் வெளியே காத்து நின்றிருந்தனர்.


சற்று நேரத்திற்குப் பிறகு உள்ளே காலடியோசை கேட்டது. “யாரங்கே?” என்று கசனின் ஓசை கேட்டது. “அவர்தான்! அவர்தான்!”  என்று அவள் படலை அகற்ற பாய்ந்து சென்றாள். “இரு, நான் திறக்கிறேன்” என்று கிருதர் கதவை திறந்தார். உள்ளே நின்றிருந்த கசன் “நீங்களா? என்ன நிகழ்ந்தது இங்கே?” என்றான். “ஆசிரியர் அங்கே வயிறு திறந்து இறந்து கிடக்கிறார்.” கிருதர் தேவயானியிடம் “இங்கிரு” என்று தாழ்ந்த குரலில் சொல்லி குடிலுக்குள் சென்று கதவை மூடினார். அவள் கால் தளர்ந்தவளாக கையூன்றி மெல்ல திண்ணையிலேயே அமர்ந்தாள். முழங்காலை மடித்து முட்டுகளில் முகத்தை அமிழ்த்தியபடி பேரெடையுடன் தன்னை அழுத்திய காலத்தை கணம் கணமாக உணர்ந்து அமர்ந்திருந்தாள்.


மீண்டும் படல் ஓசையுடன் திறந்தது. அவள் திடுக்கிட்டு எழுந்தபோது தலை சுற்றி பக்கவாட்டில் விழப்போனாள். சுவரைப்பற்றியபடி “கிருதரே…” என்றாள். கிருதர் “எழுந்து உள்ளே வாருங்கள், தேவி. அனைத்தும் நன்றாகவே முடிந்துவிட்டன” என்றார். “என்ன? என்ன?” என்று அவள் கேட்டாள். “உங்கள் தந்தையும் கணவரும் முழு உடலுடன் முழுச்சித்தத்துடன் முன்பெனவே இருக்கிறார்கள். வருக!” என்றார். உவகையென எதுவும் அவளுக்குள் தோன்றவில்லை. இன்னதென்றறியாத அச்சம் மட்டுமே நெஞ்சை அழுத்தி கைகால்களை தளரவைத்தது.


கைகளைக் கூப்பியபடி கண்களில் நீர் வழிய மெல்ல குடிலுக்குள் நுழைந்து மேலும் முன்னகராமல் அப்படியே நின்றாள். மணை மேல் சுக்ரர் அமர்ந்திருக்க அருகே கசன் கால் மடித்து மாணவனுக்குரிய முறையில் அமர்ந்திருந்தான். சுக்ரர் அவளை நோக்கி “நீ விரும்பியதுபோல அதே பேரழகுடன் மீண்டு வந்திருக்கிறான், பார்!” என்றார். கிருதர் “அத்துடன் உன் தந்தைக்கிணையான மெய்யறிவையும் பெற்றிருக்கிறான்” என்றார். அவள் கண்ணீர் வழிய புன்னகைத்தாள்.




tigerதேவயானி மீண்டும் தன் குடில் நோக்கி செல்கையில் அடுமனைப்பெண்ணும்  பணியாளர்களும் அவள் குடில் வாயிலில் அவளுக்காக காத்திருந்தனர். புன்னகையுடனும் தளர்நடையுடனும் அவள் அருகே சென்று “ஒன்றுமில்லை” என்றாள். அவர்கள் கண்களில் குழப்பம் மாறவில்லை. “ஒன்றுமில்லை. பிரஹஸ்பதியின் மைந்தர் எங்கோ தொலைந்துவிட்டார் என்று எண்ணினேன். அவர் அங்கே தந்தையின் குடிலுக்குள்தான் இருக்கிறார்” என்றாள். அவர்கள் ஐயம் முற்றும் விலகவில்லை என்றாலும் ஒருவரை ஒருவர் நோக்கியபின் “நன்று தேவி. தாங்கள் ஓடியதைக் கண்டு அஞ்சிவிட்டோம்” என்றனர்.


“ஆம், இங்கு ஏதோ விரும்பத்தகாத ஒன்று நிகழ்கிறது என்று தோன்றிக்கொண்டே இருக்கிறது” என்றாள். “அந்த ஐயம் எங்களுக்கும் இருக்கிறது, தேவி. அதை எங்கு சொல்வது என்று தெரியவில்லை. இங்கே விறகுப்புரை அருகே அசுரமாணவர்கள் சக்ரனின் தலைமையில் கூடிநின்று பேசுவதை நாங்கள் பலமுறை கண்டிருக்கிறோம். வஞ்சமோ சூழ்ச்சியோ செய்கிறார்கள் என்று தோன்றியது. எங்களில் ஒருவன்தான் அவர்கள் பிரஹஸ்பதியின் மைந்தருக்கு எதிராகவே அதை செய்கிறார்கள் என்றான். அது அவன் கேட்ட ஓரிரு சொற்களில் இருந்து உய்த்தறிந்தது.  அதை எங்கு சொல்வதென்று தெரியாமல் இருந்தோம்” என்றாள் அடுமனைப்பெண்.


தேவயானி “நன்று! தந்தையிடம் நானே பேசுகிறேன். அவர்களைப் பிடித்து விசாரிப்போம்” என்றாள். தலையசைத்தபடி அவர்கள் கலைந்து சென்றனர். தன் குடில் வாயிலில் அமர்ந்தபடி அவள் கசன் வருவதற்காக காத்திருந்தாள் முதலில் உடலெங்கும் இருந்த களைப்பு மெல்ல விலக உள்ளம் இனிய காற்று பட்டதுபோல புத்துணர்ச்சி கொண்டது. தன் உதடுகள் மெல்லிய பாடல் ஒன்றை மீட்டிக்கொண்டிருப்பதை தானே கேட்டு புன்னகையுடன் மூங்கில் தூணில் தலை சாய்த்தாள். கன்னங்களில் கை வைத்தபோது கண்ணீரின் பிசுக்கு இருப்பதை உணர்ந்து எழுந்து சென்று முகம் கழுவி ஆடி நோக்கி குழல் திருத்தி ஆடையை உதறி நன்றாக அணிந்து மீண்டும் திண்ணைக்கு வந்தாள்.


கிருதரும் கசனும் சுக்ரரின் குடில்விட்டு பேசியபடி வெளியே வந்தனர். கிருதர் ஏதோ சொல்ல கசன் சிறுவனைப்போல் சிரித்துக்கொண்டிருந்தான். படியிறங்குகையில் அவனுடைய அசைவு அவளை திடுக்கிடச் செய்தது. ஏனென்று தன்னையே உசாவியபடி மீண்டும் அவன் உடலசைவுகளையே கூர்ந்து நோக்கினாள். நடந்து அவளருகே வந்ததும் கிருதர் அவன் தோளைத் தட்டியபின் “பார்ப்போம்” என்று கடந்து சென்றார். அவன் அருகே வந்து “வணங்குகிறேன், தேவி” என்றான். அவள் உள்ளம் மீண்டும் திடுக்கிட்டது. “உங்களுக்கு என்ன ஆயிற்று?” என்றாள். “தெரியவில்லை. இன்று நான் எங்கு சென்றேன் என்று நினைவில்லை. இறுதியாக நண்பர்களுடன் காட்டுக்கு ஊன் தேடச் சென்றேன். அங்கு மயங்கிவிட்டிருப்பேன் போலும். விழிப்பு வந்தபோது இங்கே ஆசிரியரின் அறைக்குள் இருந்தேன். என்னை இங்கு கொண்டுவந்துவிட்டிருக்கிறார்கள்” என்றான்.


“ஆம், மயங்கிவிட்டீர்கள். பிற மாணவர்கள் தங்களை இங்கு கொண்டுவந்தார்கள். தன் ஊழ்க நுண்சொல் வழியாக தங்களை தந்தை எழச்செய்தார்” என்றாள். “ஆம், அந்த மயக்கு ஒரு பெரிய கனவு போல. அக்கனவில் நான் தேவருலகில் இருந்தேன். இதோ இங்கு இவை நிகழ்வதுபோலவே இத்தனை தெளிவான நிகழ்வாக இருந்தது அது. மாளிகைகளை தொட முடிந்தது. குரல்களை கேட்க முடிந்தது. ஒவ்வொரு விழியையும் விழிதொட்டு புன்னகைக்க முடிந்தது.”


நான் பிரஹஸ்பதியை கண்டேன். அவர் காலடிகளைப் பணிந்து “தந்தையே, மீண்டு வந்துவிட்டேன்” என்று சொன்னேன். முகம் சுளித்து “சென்ற செயல் முழுமையடையாமல் நீ மீள முடியாது. செல்க!” என்றார். “எங்கு செல்வது?” என்று கேட்டேன். “மீண்டும் மண்ணுக்கே செல்!” என்றார். “தந்தையே, நான் மண்ணிலிருந்து வரவில்லை. நான் எப்போதும் இங்குதான் இருக்கிறேன்” என்றேன். “நீ அங்குதான் இருந்தாய், இது உன் கனவு” என்று அவர் சொன்னார். அவர் குரலிலும் முகத்திலும் இருந்த சினத்தைக் கண்டு புரியாமல் திரும்பி அவர் அருகே இருந்த பிற முனிவர்களை பார்த்தேன்.


சௌம்யர் என்னிடம் “ஆம் இளையவனே, அது உன் கனவு. அக்கனவுக்குள் கனவாக இங்கு வந்திருக்கிறாய்” என்றார். “இல்லை, அது கலைந்து இங்கு எழுந்திருக்கிறேன்” என்றேன். சிருஞ்சயர் “இல்லை, இன்னமும் அக்கனவுக்குள்தான் இருக்கிறீர்கள். இக்கனவைக் கலைத்தால் மீண்டு அக்கனவுக்குள்தான் செல்வீர்கள்” என்றார். “அது எப்படி, கனவுக்குள் ஒரு கனவு நிகழமுடியும்?” என்றேன். “கனவுகள் ஒன்றுக்குள் ஒன்றென அமைந்த நூறாயிரம் உலகங்களின் முடிவிலாச் சரடு போன்றவை. இக்கனவை உதறுங்கள், அதில் எழுவீர்கள்” என்றார் சப்தமர்.


அப்போது எவரோ என் பெயர் சொல்லி அழைப்பதை கேட்டேன். “எவரோ என்னை பெயர்சொல்லி அழைக்கிறார்கள்” என்றேன். “உங்களை சுக்ரர் அழைக்கிறார்” என்றார் சுதர்மர்.  எனக்கு சுக்ரர் யாரென்று தெரியவில்லை. “எவர்? எவர் அழைக்கிறார்கள்?” என்றேன். “உங்கள் ஆசிரியர் சுக்ரர் அழைக்கிறார். உங்கள் தந்தை பிரஹஸ்பதியின் முதல் மாணவர்” என்றார் சப்தமர். “ஆம், நினைவிருக்கிறது. அவரை சென்று பார்க்கும்படி என்னிடம் சொன்னீர்கள். ஆனால் அவரை நான் என் கனவில் மட்டுமே கண்டிருக்கிறேன்” என்றேன்.


“ஆம், அக்கனவுக்குள் இருந்துதான் அவர் அழைக்கிறார்” என்றார் பிரஹஸ்பதி. “கனவுக்குள்ளிருந்தா?” என்று சொல்லும் போதே சுக்ரரின் குரல் மேலும் மேலும் வலுத்து வந்தது. மிக அருகிலென அவ்வழைப்பை கேட்டேன். பின்னர் அவர் கை வந்து என் தோளைப்பற்றியது. நான் திமிறுவதற்குள் என்னை இழுத்து ஒரு வெண்திரை கிழித்து அப்பால் கொண்டு சென்றது. அந்த விசையில் தடுமாறி உருண்டு விழுந்தேன். எழுந்து அமர்ந்தபோது ஆசிரியரின் அறையில் இருந்தேன். மிக அருகே அவரது உடல் கிடந்தது.


அவருடைய வயிறு யானையின் வாய் எனத் திறந்து உள்ளே சூடான தசை அதிர்ந்து கொண்டிருப்பதை கண்டேன். அவ்வுடலில் உயிர் இருந்தது. கால்களும் கைகளும் மெல்ல இழுத்துக் கொண்டிருந்தன. என் தலை சுழன்றது. இக்கனவுக்குள்ளிருந்து பிறிதொரு  அறியா கொடுங்கனவுக்குள் நழுவி விழுந்துவிடுவேனென்று அச்சம் வந்தது. உடனே தூணைப்பற்றியபடி ஓடிவந்து உங்களை அழைத்தேன். கிருதர் வந்து என்னிடம் நான் கற்ற சஞ்சீவினி நுண் சொல்லைச் சொல்லி ஆசிரியரை எழுப்பும்படி சொன்னார்.


திகைப்புடன் “நான் எதையும் கற்கவில்லையே?” என்றேன். “நீங்கள் கற்றிருக்கிறீர்கள். கருவில்… உங்களுக்கு தெரியும்” என்றார். “இல்லை, எதுவுமே நான் கற்கவில்லை” என்று பதறியபடி சொன்னேன். “கற்றீர்கள். ஐயமே இல்லை. உங்கள் கருநினைவுக்குள் அது இருக்கிறது. அமர்ந்து கண்களை மூடுங்கள். ஊழ்கத்திலிருந்து அதை மீட்டெடுங்கள்” என்று கிருதர் சொன்னார். கால்களை மடித்தமர்ந்து நெற்றிப்பொட்டில் நெஞ்சமர்த்தினேன். பின்கழுத்தில் ஓர் அறை விழுந்ததுபோல முன்னால் உந்தப்பட்டு பிறிதொரு கனவுக்குள் சென்று விழுந்தேன். அங்கு மிகச்சிறிய அறையொன்றுக்குள் நான் உடல் ஒடுக்கி படுத்திருந்தேன். அது அதிர்ந்து கொண்டிருந்தது. என்னைச் சுற்றி இளம்குருதி நுரைக்குமிழிகளுடன் அசைந்தது. நான் கைக்குழந்தையாக, இல்லை கருக்குழந்தையாக, இருந்தேன். குழந்தையென்று சொல்லமுடியாது. ஊன் துண்டு.


வெளியே எங்கோ ஒரு குரல் கேட்டது. அக்குரல் குருதிக் குமிழ்களாக விழிக்கு தெரிந்தது. தசையதிர்வாக உடலுக்கு தெரிந்தது. உப்புச் சுவையாக நாவுக்கும் குருதி மணமாக மூக்குக்கும் தெரிந்தது. திரும்பத் திரும்ப ஒரே சொல். வெவ்வேறு ஒலி அமைதிகளுடன் வெவ்வேறு ஒலி இணைவுகளுடன் ஒற்றைச் சொல். என் வலப்பக்கம் நானிருந்த அச்சிறிய அறையின் தோல்பரப்பு கிழிந்தது. என்னைச் சூழ்ந்த குருதியனைத்தும் கிழிசலினூடாக வெளியே சென்றது. நான் அதை நோக்கி கையை நீட்டியபோது மொத்த அறையும் சுருங்கி அப்பிளவினூடாக என்னை வெளியே துப்பியது.


விழித்து ஆசிரியரின் அறைக்குள் எழுந்து “ஒரு சொல்! எனக்குத் தெரியும்!” என்றேன். “அதை சொல்லுங்கள்” என்றார் கிருதர். “அச்சுடரை நோக்கி கை நீட்டி அதை சொல்லுங்கள்” என்றார். அகல் விளக்கை என் அருகே கொண்டு வந்தார். நான் அதை நோக்கி கைநீட்டி அச்சொல்லை சொன்னேன். துயிலில் இருந்து விழித்தெழுந்ததுபோல் ஆசிரியர் தன்னுணர்வு கொண்டார். அவரது வயிறு முன்பெனவே ஆயிற்று. கையூன்றி எழுந்தமர்ந்து “என்ன நிகழ்ந்தது?” என்றார். “நீங்கள் எழுந்துவிட்டீர்கள். சஞ்சீவினி உங்களை மீட்டுவிட்டது” என்றார் கிருதர்.


“இவையனைத்துமே கனவா என உள்ளம் மயங்குகிறது” என்றான் கசன். “பித்துநிலை என்பது எத்தனைபெரிய துயர் என இப்போது உணர்கிறேன். முடிவின்மையிலிருந்து செதுக்கி எடுக்கப்பட்ட சிறிய இடம்தான் தன்னிலை. அவ்வெல்லைக்குள் மட்டுமே நாம் வாழமுடியும். உணர்வு அறிவு இருப்பு அனைத்துக்கும் அங்குமட்டுமே பொருள்… அவ்வெல்லை அழியுமென்றால் காற்றில் கற்பூரநிலைதான்.” அவள் அவன் கைகளைப்பற்றி “சென்று படுத்து இளைப்பாறுங்கள்.  இன்னீர் கொண்டுவரச்சொல்கிறேன், அருந்துங்கள். நாளை பார்ப்போம்” என்றாள். “ஆம், படுத்தாகவேண்டும். கனவுகளின்றி துயின்றாகவேண்டும்” என்று சொன்னபின் கசன் தலைகுனிந்து நடந்து சென்றான். அந்த நடை மீண்டும் அவள் அகத்தை சுண்டியது. அவள் நன்கறிந்த சுக்ரரின் நடை அது.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–59
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–58
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–57
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–56
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–54
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–53
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–52
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–49
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–55
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–51
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–48
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–14
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 37
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 13
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 2
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 67
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 89
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 31
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 26
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 25
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 31, 2017 11:30

March 30, 2017

ஆணவமும் சோம்பலும்

dog


ஜெ,


இந்த மாதிரியான தருணங்களில் தான் உங்கள் மேல் மதிப்பு கூடுகிறது. எல்லா தரப்பிலிருந்தும், இது தான் வாய்ப்பு என்று தூற்றிக்கொண்டிருக்கிறார்கள். அதனை எதிர்கொள்ளும் உங்கள் மன உறுதி தான் பிரமிப்பு கொள்ளச் செய்கிறது. Howard Roark தான் நினைவுக்கு வருகிறான்.


அன்புடன்

ரியாஸ்


***


அன்புள்ள ரியாஸ்,


இது என்னிடம் பலரும் கேட்கும் கேள்விதான். முதல் விஷயம், நான் என் தொடர்செயல்பாட்டுக்கு உதவாத எதையும் சென்று வாசிப்பதே இல்லை. வாசிக்க ஆரம்பித்தால் ஆற்றலில் பெரும்பகுதி உறிஞ்சப்பட்டுவிடும். உண்மையிலேயே பெரிய விஷயங்களைச் செய்யவிரும்புபவர்கள் பெரிய விஷயங்களில்மட்டும்தான் ஈடுபட்டிருக்கவேண்டும்.


இன்னொன்று இவர்களெல்லாம் எவர் என்னும் உணர்வு. மிகமிகச்சிறிய மனிதர்கள். மிகச்சிறிய குரல்கள். இவர்கள் என்ன செய்திருக்கிறார்கள். இவர்களின் பங்களிப்பு என்ன? இவர்கள் சிறியவர்கள் என இவர்களே கொண்டிருக்கும் தன்னுணர்வு இவர்களைப்போட்டுப் படுத்தி எடுக்கிறது.


அதேசமயம் என்னைப்பற்றி நான் அறிவேன். நான் வரலாற்றில் வாழ்பவன். என் காலகட்டத்தின் ஒட்டுமொத்தத்தைவிட நான் பெரியவன். என் சாதனைகள் மிகப்பெரியவை. ஆகவே என் வலிகளும் தத்தளிப்புகளும் பரவசங்களும் மிகப்பெரியவை. ஆம், என் அசட்டுத்தனங்களும் வீழ்ச்சிகளும் கூட பெரியவையாகவே இருக்கும்


எனக்கு அலைந்து திரிய இந்த மாபெரும்தேசம் போதவில்லை. உலகம்போதவில்லை. Howard Roark கிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டியது இந்தத் தன்னுணர்வைத்தான். தான் யார் என அவனுக்கு நன்றாகவே தெரியும்.


நான் Howard Roark என உணர்வது ஒற்றைப்புள்ளியில் இருந்தே, நான் உலகுக்கும் பண்பாட்டுக்கும் கொடுப்பவன், உலகிடமிருந்து எதையும் பெற்றுக்கொள்பவன் அல்ல. எங்கே முரண்படுகிறேன் என்றால் கொடுக்கமாட்டேன் என முடிவெடுக்கும் உரிமை ரோர்க்குகளுக்கு இல்லை என்பதே.


என்னால் ஈர்க்கப்பட்டு வரும் இளம்நண்பர்களுக்கும் இதையே சொல்வேன், நீங்கள் எவர் என உணருங்கள். அந்த ஆணவம் உங்களை நிமிரச்செய்யட்டும். சமகாலச் சிறுமைகளைக் கடந்துசெல்லமுடியும்


ஜெ


***


 


dog


அன்பு ஜெ.மோ அவர்களுக்கு,


உங்கள் எழுத்தை விட உங்களிடம் நான் பெரிதும் வியப்பது உங்கள் அயராத உழைப்பை. இளையராஜா அவர்கள் சொன்னது போல், கமலஹாசன் அவர்களும், இளையராஜா அவர்களும் தத்தம் துறையில் சாதித்ததை விட, நீங்கள் உங்கள் துறையில் தொட்ட சிகர நுனிகளின் எண்ணிக்கை அதிகம்.


நீங்கள் உங்கள் சோம்பலை எப்படி களைந்தீர்கள், அநேகமாக ஒவ்வொரு இளைஞனையும் ஒரு சராசரி மனிதனாக அழுத்தி வைப்பது இந்த சோம்பல். உதாரணத்திற்கு,


காலை 7 மணிக்கு எழ முயல்கிறேன், 9 ஆகிவிடுகிறது, பிறகு நாளிதழ், தேநீர், குளியல், காலை உணவு என அப்படியே 12.00 ஆகிவிடும், பிறகு இணையத்தில், யூ டியூப்பில் அப்படியே 2.30 பிறகு மத்திய உணவு, அப்படியே உறக்கம் என 5.30 வரை ஓடிவிடும். மறுபடியும் தேநீர் இணையம், தொலைக்காட்சி, வெட்டி அரட்டை, ஸ்மார்ட் போன்.


குறிப்பாக 3மாதங்களாக இந்த சோம்பல் என்னை அதிகம் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறது. இளம் வயதில் இப்படி நேரத்தை வீணடிக்கிறது. எப்படி நம்மை நீண்ட உழைப்புக்கும், அயராத உழைப்புக்கும் ஒப்புக் கொடுப்பது. இந். உளச் சோர்வை எப்படி களைவது/


உணவு உறக்கம் உழைப்பை நீங்கள் எப்படி வகுத்துக் கொள்கிறீர்கள், எப்படி கடைப்பிடிக்கிறீர்கள்.


உங்கள் இளவயது சோம்பலை எப்படி கடந்து வந்தீர்கள், 50+ வயதிலும் சோர்வின்றி இயங்குவது எப்படி.


இது எனக்கு மட்டுமல்ல, இந்த இளம் தலைமுறையை முடக்கிப் போட்டுக் கொண்டிருக்கும் மிகப்பெரிய வியாதி இந்த சோம்பல்.


இப்படிக்கு


கார்த்திக்.


***


அன்புள்ள கார்த்திக்


சோம்பல் என்பது பெரும்பாலும் இலக்கில்லாமல் இருப்பதிலிருந்து வருவதுதான். என்ன செய்யவேண்டும் என்று தெரிந்துவிட்டால் சோம்பல் குறைந்துவிடும். உங்கள் தன்னறத்தை, எதற்காக நீங்கள் வந்தீர்கள் என உணர்கிறீர்களோ அதை, உணர்ந்துகொண்டால்போதும். அது மிகமிக எளிய ஒரு செயல்.


வீண்செயல்பாடுகளை நம்மைச் சூழ வைத்திருக்கிறது நம் சமூகவெளி. அவற்றுக்கு நம்மை ஒப்புக்கொடுக்கக் கூடாது. தொலைக்காட்சி, சமூகவலைத்தளங்கள், பலவகையான அரட்டைக்கான அமைப்புக்கள், வெறும் உபச்சாரச் சந்திப்புகள், சம்பிரதாயமான நிகழ்ச்சிகள் ஆகியவற்றை மூர்க்கமாகத் தவிர்த்தாகவேண்டும்.


நான் இளம்வாசகர்களைச் சந்திக்கையில் அவர்களில் பெரும்பாலானவர்கள் சமூகவலைத்தளங்களில் முழுமையாகவே இல்லை என்பதை, தொலைக்காட்சி ஈடுபாடே இல்லை என்பதைக் கண்டு வியந்தேன். அல்லது அவர்கள் மட்டுமே என்னைத்தேடிவருகிறார்கள்.


இதற்கும் அப்பால் ஒன்றுண்டு. சோம்பல் என்பது ஓர் இயல்பான உளநிலை.சும்மா இருக்கத்தான் உள்ளம் விரும்பும். அதை உந்திச்செலுத்தித்தான் செயலுக்குக் கொண்டுசெல்லவேண்டும். அதை எப்போதும் செய்துகொண்டிருக்கவேண்டும். இயல்பாகவே மனம் சுறுசுறுப்பாக ஆகட்டும் என விட்டால் அது அசையவே அசையாது. சோம்பல் என்பது என்ன? மனம் தன்னைத்தானே அளைந்தபடி தன்னில் மூழ்கியிருப்பதுதானே?


கடைசியாக ஒன்று, முற்றிலும் சோம்பல் இல்லாமல் இருப்பதும் நல்ல விஷயம் அல்ல. முழுக்கமுழுக்க சுறுசுறுப்பாக இருப்பவர்கள் படைப்பூக்கம் இல்லாதவர்கள். கனவு காணாதவர்கள். சோம்பல்நிலை என்பது ஒருவகையில் நாம்நம்மை இயல்பாக நிகழவிடுவதும்கூட. சோம்பலுக்கும் வாழ்க்கையில் முக்கியமான இடம் உண்டு


ஜெ


***

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 30, 2017 11:35

காஷ்மீரும் ஊடகங்களும்

kash


பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,


 


வணக்கம்.


 


ஏற்கனவே ஒரு முறை – எனது கேள்விக்கு பதிலாக – நீங்கள் காஷ்மீரில்  நமது ராணுவத்திற்கும்,காவல்துறைக்கும் எதிராக நடக்கும் கல்லெறிதல் சம்பவங்களின் பின்னணி பற்றி  விரிவாக எழுதியிருக்கிறீர்கள்.நேற்று அதே போன்று ஒரு சம்பவம் நீண்ட நாள்களுக்கு பிறகு நடந்துள்ளது.ஆனால் இதில் மேலும்  ‘முன்னேற்றமாக’ (?!) இந்த தடவை ஒரு இடத்தில் பதுங்கியிருந்த தீவிரவாதியை கொல்வதற்காக நமது ராணுவமும் ,காவல்துறையினரும் சுற்றி சூழ்ந்தபோது அவனை காப்பாற்றி தப்ப வைப்பதற்காக ஒரு இளைஞர் கும்பல் கல் வீசி தாக்கியிருக்கிறது.எச்சரித்தும் கேளாததால் ராணுவம் துப்பாக்கி சூடு நடத்தியதில் கல்லெறிந்தவர்களில் 3 பேர் இறந்திருக்கிறார்கள்,அந்த தீவிரவாதியும் கொல்லப்பட்டிருக்கிறான்,பாதுகாப்பு படையினர் 60 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.இந்த செய்தியை விஷமத்தனமான தலைப்புடன் முன்னணி செய்தி நிறுவனங்கள் எப்படி வெளியிட்டிருக்கின்றன பாருங்கள்! -நமது தேசிய நாளிதழ் தி ஹிந்து உள்பட! -.


 



THE HINDU :  3 civilians, militant killed in J&K encounter
India Today: Kashmir: Shutdown over Budgam encounter civilian deaths disrupts normal life in Valley
First Post: Budgam encounter: Three civilians and a militant killed, separatists call for strike in Kashmir
DECCAN HERALD: 3 civilians, 1 ultra killed in anti-militancy drive

 


 


இதில் ஹிந்து நாளிதழ் இச்செய்திக்கான மூலம் ‘PTI’ என்று போட்டிருக்கிறது அவர்கள் செய்தி மட்டும் கொடுத்தார்களா அல்லது  இந்த விஷமத்தனமான தலைப்பையும் சேர்த்து கொடுத்தார்களா என்று தெரியவில்லை!.மேலும் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரசும், கம்யூனிஸ்டும் இந்த மாதிரியான ‘பொது மக்களை (ராணுவத்திற்கு எதிராக தீவிரவாதியை தப்பவைக்க கல்லெறிபவர்களை) கொல்வது அங்குள்ள அமைதிக்கான முயற்சியை மேலும் சீர்குலைக்கும் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார்கள்!.


எனக்குத் தெரிந்து இச்செய்தியை ஒழுங்கான தலைப்பில் விரிவாக வெளியிற்றுயிருக்கும் ஒரே செய்தி ஊடகம் “DNA” தான்.


 


DAILY NEWS AND ANALYSIS:  J&K: 3 stone pelters killed trying to obstruct anti terror operation


 


இந்தவகை ஆஷாடபூதிகளிடம் இருந்து நமது தேசம் என்றுதான் முழுமையாக மீளும்?


 


அன்புடன்,


அ .சேஷகிரி.


 


அன்புள்ள சேஷகிரி,


 


நம் அரசியலில் ஊடகங்கள் எதிர்க்கட்சிகளின் பங்கை வகிக்கின்றன. ஆகவே இயல்பாகவே அவை அரசுக்கு எதிரான செய்திகளை வெளியிடுகின்றன. அவற்றுக்கு அப்போதுதான் வணிக மதிப்பும் இருக்கும்.


 


அதேசமயம் கட்சிக்காரர்களால் நடத்தப்படாத அத்தனை ஊடகங்களும்  மாநில அளவில் வட்டார ஆட்சியாளர்களுக்குச் சாதகமாகவே செயல்படுவதைக் காணலாம். மத்திய அரசுக்கு எதிரான தி ஹிந்து சசிகலாவுக்கே ஆதரவு. இது இந்தியா முழுக்க இருக்கும் ஒரு நிலை


 


மத்திய அரசு எதிர்ப்பு என்பதை பலசமயம் தேச எதிர்ப்பாகவே இந்த ஊடகங்கள் எடுத்துச்செல்கின்றன. இத்தகைய செய்தித்திரிப்புகள் நீண்டகால அளவில் இந்தியாவில் மதவெறியை வளர்ப்பதில், சமூக அமைதியை குலைப்பதில் வகிக்கும் பங்கைப்பற்றி அவை அறிந்திருப்பதே இல்லை


 


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 30, 2017 11:33

பறக்கை நிழற்தாங்கல் 2017

Siva_Photo_Scan


அன்புமிக்க ஜெயமோகன் அவர்களுக்கு,


நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன்.


பறக்கை நிழற்தாங்கல் நிகழ்ச்சியில் பங்கேற்று, உங்க்ள அருகில் அமர்ந்து உரை கேட்டது பேருவைகையை தந்த்து. நிகழ்ச்சி மற்றும் எனது பயணம் தொடர்பான எனது பதிவு.


https://sivamaniyan.blogspot.in/2017/03/2017.html


 


 



 



 




 




தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 30, 2017 11:31

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–59

59. மலர்மருள் வேங்கை


தன் மஞ்சத்தில் கசனை துயிலவிட்டு அறைமூலையில் கால்களை நீட்டி அமர்ந்தபடி அவனையே பார்த்துக்கொண்டிருந்தாள் தேவயானி. அவன் பெருமூச்சுகள் விட்டபடி உடல் இறுகியும் அறியாது மெல்ல தளர்ந்தும் மீண்டும் இறுகியும் புரண்டுபடுத்தும் கைகால்களை நிலைமாற்றியும் துயிலிடம் மன்றாடிக்கொண்டிருந்தான். இமைக்குள் விழிகள் ஓடிக்கொண்டிருந்தன. பின்னர் மூச்சு சீரடையத்தொடங்கியது. அவன் துயில்கொள்வது வரை அசையாது அமர்ந்திருந்தாலும் அவளுக்குள் உள்ளம் நிலையழிந்துகொண்டிருந்தது. அவனுடைய சீர்மூச்சு வரத்தொடங்கியதும் அவள் முகமும் மெல்ல எளிதாகியது. பின்பு அவளும் துயின்றாள்.


பின்னிரவில் விழித்துக்கொண்டபோது அவன் உடல் நடுங்கிக்கொண்டிருப்பதைக் கண்டாள். சாளரங்கள் திறந்து கிடந்தமையால் அறைக்குள் குளிர்காற்று சுழன்றுகொண்டிருந்தது. மரவுரி இருக்கிறதா என்று அருகிலிருந்த மூங்கில் பெட்டியை திறந்து பார்த்தாள். வழக்கமாக அவள் போர்த்திக் கொள்வதில்லை. எந்தக் குளிரும் அவளை நடுங்க வைப்பதில்லை. அவள் குளிரை உணர்ந்தது முழுக்க கனவுகளில்தான். மரவுரிப்போர்வை எதுவும் அறைக்குள் இருக்கவில்லை. எழுந்து வெளியே சென்று  திண்ணையில் நின்று எவரையேனும் அழைக்கலாமா என்று பார்த்தாள். எவரும் கண்ணில்படவில்லை.


அப்பால் அவன் குடில் அவன் சாம்பலாக  மூங்கில் சட்டங்களுடன் எரிந்தணைந்த சிதைபோல் கிடந்தது. தீயணைந்த நிறைவில் களைப்புடன் அனைவரும் துயில்கொள்ளச் சென்றிருந்தனர். குளிர்ந்த இரவுக்காற்றில் கரிப்பிசிறுகள் பறந்து இறங்கிக்கொண்டிருந்தன. முற்றத்தில் மெல்லிய ஓசை கேட்டு வேங்கைகள் என எண்ணி மறுகணம் திடுக்கிட்டு திரும்பிப்பார்த்தாள். மரக்கிளையிலிருந்து சிற்றுயிர் ஒன்று இறங்கி அப்பால் சென்றது. திரும்புவதற்கு முன் அந்த ஒரு கணத்திலும் மூன்று வேங்கைகளும் முழுமையாகவே அங்கு இருப்பு கொண்டிருந்தன என்று உணர்ந்தாள்.


தலையைத் திருப்பி பின்பக்கம் அவை அவளை நோக்கியபடி படுத்திருக்கின்றன என்று கற்பனை செய்தாள். ஆனால் அவ்வொலி கேட்டபோது அவை உண்மையென இருந்தன. இப்போது கற்பனையென்று அவளுக்கு தெரிந்திருந்தது. அவற்றின் மெல்லிய மயிர்மணத்தை, வாயிலெழும் ஊன் வீச்சத்தை, பளிங்குருளைக் கண்களை, பஞ்சுக்கால்களை, உடல்கோடுகளை ஒவ்வொன்றாக நினைவிலிருந்தே மீட்டு அங்கிருந்த வெற்றிடத்தில் பொருத்தி அவற்றை வரைந்து மீட்டெடுக்க முயன்றாள். அவை முழுமையாக நினைவில் மீளவில்லை. அவ்வோவியத்தின் உறுமல் புகை போன்று காற்றில் கரைந்து கொண்டிருந்தது. இறங்கிச் சென்று காட்டில் கிடக்கும் அவற்றின் சடலத்தை பார்க்கவேண்டும் என்று தோன்றியது.


ஒருகணத்தில் பெரும் துயரொன்று வந்து நெஞ்சை மோத குளிர்ந்த எடையென அடைத்து நிறைத்தது. கால்கள் அவ்வெடை தாளாததுபோல மூங்கிலை பற்றிக்கொண்டு நின்றாள். எக்கணமும் வெடித்துக் கிளம்பி சிறுவழியினூடாக ஓடி காலைப்பனி ஈரமென படர்ந்த மென்மயிர் உடலுடன் இறந்து உறைந்து கிடக்கும் அவற்றை அணுகி அவற்றின் அசைவிழந்த சிறுகாதுகளின் நடுவே கழுத்தை, வெண்ணிறப் பனிமயிர் படர்ந்த அடிவயிற்றை தடவிக்கொடுக்கக்கூடும் அவள். அவை தங்கள் ஐம்பொதிக்கால்களை மெல்ல அழுத்தி கொஞ்சக்கூடும். அங்கு சென்று அவற்றைப்பார்த்தால் கதறி அழுதபடி அவற்றின் மேல் விழுந்துவிடுவோம் என்று தோன்றியது. மெல்ல தூணைப்பற்றியபடி திண்ணையில் அமர்ந்தாள்.


இருட்டுக்குள் சுள்ளிகள் ஒடிவது போன்ற ஒலி கேட்டது. ஏதோ சிற்றுயிர் என எண்ணி அவள் தலை திருப்பாமலிருந்தாள். பின்னர் மூச்சொலி கேட்டது. தலையை உலுக்கி காதுகளை  ஒலிக்கச் செய்தது வேங்கை ஒன்று. அவள் விழிதூக்கி பார்த்தபோது குருநிலையின் நுழைவாயிலில் நின்றிருந்த சாலமரத்தின் அடியில் பெரும்புலி ஒன்றை கண்டாள். அவளது உடன்பிறந்த மூன்று வேங்கைகளில் ஒன்றல்ல அது என்று முதல் கணத்திலேயே தெரிந்தது. நெஞ்சைப்பற்றியபடி மூச்சிறுக எழுந்து அது விழிமயக்கா என இருளை கூர்ந்து பார்த்தாள்.


மிக அருகிலென அதை கண்டாள். அக்கணமே அது ஏதென அறிந்தாள். மூன்று குட்டிகளை அங்கு விட்டுச்சென்ற அன்னைப்புலி. அங்கிருந்து சென்ற அதே முகத்துடன் மீண்டு வந்திருந்தது.  அதன் முகவாயின் நீள்மயிரைக் கூட காணமுடிந்தது. அவளை தன் மணிக்கண்களால் கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தது. அவள் முற்றத்திற்குச் சென்றதும் தலையைத் தாழ்த்தி இரு காதுகளை சேர்த்தது. முற்றத்தின் நடுவில் நின்றபடி அவள் அதை நோக்கிக்கொண்டிருந்தாள்.


கதறி அழுதபடி ஓடி அதன் காலடியில் சென்று விழவேண்டுமென்று தோன்றியது. அதன் பொருட்டு அவள் உள்ளம் அசைந்தபோதுகூட உடல் அங்கேயே நின்றது. பின்னர் அஞ்சிய சிறுமியைப்போல வீறிட்டபடி திரும்பி குடிலுக்குள் ஓடி அவனருகே மஞ்சத்தில் சென்று படுத்துக்கொண்டாள். திடுக்கிட்டெழுந்து “யார்?” என்றபின் “நீயா? என்ன?” என்று கேட்டான் கசன். “வெளியே… அந்த வேங்கை” என்றாள். “என்ன?” என்று அவன் புரியாமல் மீண்டும் கேட்டான்.


“அன்னைப்புலி. முன்பு எனக்கு அமுதளித்தது” என அவள் அஞ்சிய சிறுமியின் குரலில் சொன்னாள். அவன் கையூன்றி எழுந்து “எங்கே?” என்றான். அவள் “வெளியே வந்து நின்றிருக்கிறது” என அவனை இறுக பற்றிக்கொண்டாள். அவன் அவள் இடையை வளைத்து தன் உடலுடன் சேர்த்துக்கொண்டு “அது உன் உளமயக்கு” என்றான். “இல்லை, இல்லை” என்று அவள் சொன்னாள். அவள் கன்னங்களிலும் கழுத்திலும் தோள்களிலும் மென்மையாக முத்தமிட்டபடி “உன் உளமயக்கு. ஐயமே இல்லை. புலிகள் அத்தனை அகவை உயிர் வாழ்வதில்லை” என்றான். அவள் அவன் தோளில் தன் முகத்தை அழுத்தியபடி விம்மி அழத்தொடங்கினாள்.


அவன் அவளை தன் உடலுடன் இறுகச் சேர்த்தபடி உள எழுச்சியுடன் முத்தமிட்டான். “என்னை விட்டு சென்றுவிடாதீர்கள். என்னுடன் இருங்கள். என்னை விட்டு சென்று விடாதீர்கள்” என்று அவள் தாழ்ந்த குரலில் தலையை அசைத்தபடி சொல்லிக்கொண்டிருந்தாள். அது அவள் குரலாகவே அவளுக்கு தோன்றவில்லை. இருளில் எவரோ கைவிட்டுச் சென்ற குழந்தையொன்றின் மன்றாட்டு போலவே ஒலித்தது. அங்கு அவனுடன் மஞ்சத்திலிருப்பது தன் உடலா என்று அவள் வியந்தாள். ஆடையை விலக்கி அவன் அள்ளி தன் உடலுடன் பொருத்திக்கொண்டதும் அவளல்ல. அவ்வறைக்குள் இருளில் எழுந்து வேங்கையென ஒளிரும் விழிகளுடன் அக்கூடலை அவளே நோக்கிக் கொண்டிருந்தாள்.


காலை ஒளி இமைமேல் பட்டு குருதி நிறத்தில் உள்ளே விடிவதற்கு முன்பு வரை அவள் ஒரு வேங்கையுடன் மெய்தழுவி சேக்கையில் படுத்திருந்தாள். அதன் உயிர் நீர் அவள் உடலெங்கும் பிசுக்கென படர்ந்து உலர்ந்து ஆடையென ஒட்டி தோலை இறுக்கத் தொடங்கியிருந்தது. அவள் மூச்சு முழுக்க அதன் உப்புக் குருதி மணமே நிறைந்திருந்தது. கைகள் அதன் மென்மயிர் தோளையும் விலாவையும் கழுத்தையும் வருடிக்கொண்டிருந்தன. விழித்தெழ வேண்டுமென்ற எண்ணம் எழுந்ததும் பிறகு என்று அதைத் தவிர்த்து புரண்டு வேங்கையை மீண்டும் உடல் சேர்த்து அணைத்துக்கொண்டது. அதன் வாயிலிருந்து பச்சைக்குருதி மணம் எழுந்தது. அவள் முகத்தை தன் நுண்மையான நாக்கால் மெல்ல நக்கியபடி அது உறுமியது. வெம்மை கொண்ட காற்று அவள் கன்னத்திலும் தோளிலும் படிந்தது.


“எவ்வளவு வெம்மை கொண்டிருக்கிறாய்!” என்று அது கூறியது. மானுடக்குரலாக அல்ல, வேங்கையின் இரும்புக்குரல் அது. “அனல் கொண்டவள் போலிருக்கிறாய். உன்னை தொடும்போதெல்லாம் ஏனிப்படி கொதிக்கிறாய் என்னும் எண்ணமே எழுகிறது. எப்போதேனும் நீ குளிரக்கூடுமா என்ன?” அவள்  “ஏன் இந்த வெம்மை உங்களுக்கு ஒவ்வாததா?” என்றாள். “ஒவ்வாது என்றல்ல, விந்தையாக இருக்கிறது.” அவள் “என் உடல்கூறு அப்படி. நான் பிறந்த போதே இந்த வெம்மையுடன்தான் இருந்தேன்” என்றாள்.


“பொசுக்கிவிடுவாய் போலும்” என நகைத்தபின் விழிமாறி “ஒரு சிதையில் எரிவதாகவே தோன்றியது” என்றான். அவள் அவனை உடலால் கவ்வி இறுக்கொண்டாள். “என்னுடன் இருங்கள்” என்றாள். “உன்னுடன்தான் இருக்கிறேன்” என்றான் கசன். அவள் மெல்ல துயிலில் மீண்டும் ஆழ்ந்து பின் மீண்டபோது கண்களுக்குள் செவ்வொளி பரவியது. விழித்து அறைக்குள் நிறைந்த புலரியொளியைக் கண்டு சிலகணங்கள் கழித்து இடமுணர்ந்து நினைவு கொண்டு நெஞ்சு அதிர கைநீட்டி ஒழிந்த மஞ்சத்தை உணர்ந்தாள். அவன் எழுந்துசென்ற மெல்லிய குழி நார்ச்சேக்கையில் இருந்தது. கைகளால் அதை வருடிக்கொண்டிருந்தாள். உவகையா துயரா என்றறியாது வெறுமைகொண்டிருந்தது உள்ளம். விழிநீர் பெருகி கன்னங்களில் வழிந்து சொட்டிக்கொண்டிருந்தது.




tigerகசன் வேங்கையாக மாறிவிட்டிருந்தான் என்பதை அவளால் வெறும்விழிகளாலேயே பார்க்கமுடிந்தது. காற்றில் வெண்பனிக்குவை செல்வதுபோல அவன் ஒழுகிநடந்தான். தலைநிமிர்ந்து தொலைவை நோக்கிபடி அசைவிலாது அமர்ந்திருந்தான். இருளில் அவன் விழிகள் ஒளிவிடுவதைக்கூட அந்தியில் அவள் கண்டாள். முதல்நாள் இரவில் அவளுடன் இருந்தபின்னர் அவன் அவளைப்பார்ப்பதே மாறிவிட்டது. மறுநாள் காலையில் எழுந்ததும் அவள் தன் உடல் குறித்த தன்னுணர்வையே முதலில் அடைந்தாள். நெய்யில் எரி ஏறும் ஒலியுடன் நெஞ்சு பதைப்புகொண்டது. கைகளால் மார்பை அழுத்திக்கொண்டு சிலகணங்கள் கண்மூடி படுத்திருந்தாள். பின்னர் எழுந்து ஆடைதிருத்தி வெளியே நடக்கும்போது தன் உடலைத்தவிர எதையுமே எண்ணமுடியவில்லை அவளால்.


உடல் மிதமிஞ்சி மென்மைகொண்டுவிட்டதுபோல் தோன்றியது. ஆடைகளும் அணிகளும் அயல்தொடுகையென விதிர்க்கச்செய்தன. இடத்தோள் மெல்ல துடித்துக்கொண்டது. கால்களில் சிறுகற்களும் உறுத்தின. தோள்களைக் குறுக்கி உடலை ஒடுக்கியபடி சிற்றடி எடுத்துவைத்து நீரோடை நோக்கி சென்றாள். வழியில் எதிர்ப்பட்ட விழிகளனைத்தையும் தவிர்த்தாலும் அனைத்து நோக்குகளையும் அவள் உடல் உணர்ந்துகொண்டுதான் இருந்தது. ஓடைக்கரையின் தனிமையில் மீண்டும் தன்னிலை பெற்று பெருமூச்சுடன் சுற்றும் நோக்கினாள். ஒளிபரவிய இலைத்தகடுகளும் நீரின் நிழலாட்டமும் அலைச்சுடர்வும் நீலவானின் வெண்முகில் சிதறல்களும் அனைத்தும் புத்தம்புதியவையாக தோன்றின. தன் உடல் தோலுரித்து பிறந்தெழுந்த கூட்டுப்புழு என புதியது என.


நீரிலிறங்கி கழுத்துவரை மூழ்கியபோது உடலில் இருந்து வெம்மை ஒழியத்தொடங்கியது. அவள் நீராடுகையில் எப்போதுமே நீர் வெம்மைகொண்டு குமிழியெழுவது வழக்கம். அதை தன் உடலுக்கும் நீருக்குமான உரையாடலாகவே அவள் உணர்வாள். குமிழிகள் அடங்கியபின்னர்தான் அவளுக்குள் குளிர் பரவத்தொடங்கும். குளிர் சென்று எலும்புகளைத் தொட்டபின்னர் மெல்லிய நடுக்கமொன்று எழும். அதற்கு ஒருநாழிகைக்குமேல் ஆகும். அன்று நீரின் முதற்தொடுகையே  அவளை சிலிர்க்கச்செய்தது. நீரில் மூழ்கியதுமே உடல் நடுங்கத் தொடங்கியது. கண்களை மூடி தன் உடலையே உணர்ந்தபடி குழல் நீண்டு ஒழுக்கில் அலைபாய உடல்மூழ்கிக் கிடந்தாள்.


அதே உடல்தான். அவ்வுடலையே அவள் அகம் தானென உணரவும் செய்தது, ஆயினும் அது பிறிதொன்றென ஆகிவிட்டிருந்தது. எப்போதுமே அவள் தன் உடலில் முலைகளையும் இடையையும் இயல்பாக உணர்ந்ததில்லை. தானென்று உணரும்போதும் அவை பிறிதொன்றை கரந்துள்ளன என்ற உள்ளுணர்வு இருந்தது. அவற்றின் அசைவு அவள் அசைவுகளுக்கு அப்பால் வேறொன்றென நிகழ்ந்தது. அவற்றைத் தொடுகையில் அயலுணர்வு இருந்தது. அன்று அவை முற்றிலும் அகன்றுவிட்டன என்று தோன்றியது. அவளுடன் அவை ஓசையில்லாத ஒற்றர்கள்போல் உடனிருந்தன. அவற்றைத் தொடவே அவள் கை எழவில்லை.


நீராடி எழுந்து ஈர ஆடையுடன் குடில்நோக்கிச் செல்லும்போது எதிரே வந்த பெண்கள் ஓரிரு சொற்களில் முகமனும் வாழ்த்தும் உரைத்தனர்.  அவள் எவரையும் எதிர்விழி நோக்காமல் கடந்துசென்றாள். வழக்கமான குரல்கள், ஆனால் அவர்களுக்குத் தெரியும் என நன்றாக புலப்பட்டது. அது வெறும் உளமயக்கு அல்ல என்று அவள் அகம் முடிவுறச்சொன்னது. அது அறிவால் உளத்தால் அறிந்துகொள்வது அல்ல, உடலே உணர்வது. உடல் என்பது தனித்தனியாக உள்ளத்தால் பகுக்கப்படுவது. தசையாலான ஒற்றைப்பெருக்கு. கூட்டுநடனங்களில் போர்விளையாட்டுகளில் அதை அவள் கண்டிருக்கிறாள். அவளுக்கு எங்காவது இருட்டுக்குள் சென்று ஒளிந்துகொள்ளவேண்டும் போலிருந்தது.


ஆடைமாற்றிக்கொண்டு அவள் திண்ணைக்கு வந்தபோது வேங்கைகளின் காதுத்துடி ஓசை கேட்டு மெய்விதிர்ப்பு கொண்டு திரும்பிப்பார்த்தாள். அவை குருநிலையின் மாணவர்களால் இழுத்துச்செல்லப்பட்டு காட்டுக்குள் புதைக்கப்பட்டன என அவள் அறிந்தாள். சென்று அவற்றின் உடலை பார்த்திருக்கலாம். அவை அவள் உள்ளத்திலிருந்து முற்றாக விலகிவிட்டிருக்கும். குழலை முதுகில் பரப்பி காற்றில் காயவிட்டபடி திண்ணையில் அமர்ந்துகொண்டாள். காய்ச்சல்கண்டதுபோல உடலெங்கும் சோர்வும் கண்களில் வெம்மையும் வாயில் மெல்லிய கசப்பும் இருந்தது. அந்தக் களைப்பு இனிதாகவும் இருந்தது. சுருண்டு படுத்துவிடவேண்டும், உலகை முழுமையாக அப்பால் தள்ளிவிடவேண்டும்.


கிருதர் அவளை கடந்துசென்றபோது “அமைவுக்கு வரவில்லையா?” என்றார். “காய்ச்சல்போலத் தெரிகிறது” என அவள் தலைகுனிந்து சொன்னாள். “ஓய்வுகொள்ளுங்கள்” என்றபடி அவர் தாண்டிச்சென்றார். அப்படி ஒதுங்கியிருந்து பேசுபொருளாவதைவிட சொல்லமைவுக்குச் சென்று அனைவருடனும் அமரலாம். தத்துவத்தில் ஈடுபடுவது மிக எளிது. அதன் முதல் சொற்கண்ணியை ஒரு கேள்வியாக ஆக்கிக்கொண்டால் போதும். இன்று தந்தை பருப்பொருளுக்கு தன்னை மாற்றிக்கொள்ளும் விழைவு உண்டா என்று உசாவப்போகிறார். இல்லை இங்கே எதற்கும் தன்னை மாற்றிக்கொள்ளும் விழைவு இல்லை.


ஓரவிழியில் கசனின் அசைவு தெரிந்ததுமே அவள் உள்ளமும் உடலும் துடிப்புகொண்டன. எழப்போகும் அசைவெழ அதை அடக்கிக்கொண்டாள். கசன் அவள் முற்றத்தருகே வந்து “நான் ஊன்வேட்டைக்குச் செல்லவிருக்கிறேன். நல்ல மான் கொண்டுவரும்படி ஆசிரியர் சொன்னார்” என்றான். அக்குரல் மேலும் ஆழமும் கார்வையும் கொண்டிருக்கிறதென்று தோன்றியது. வழக்கம்போல விழிதூக்கி அவன் விழிதொட்டு நேர்ச்சொல் பேச அவளால் இயலவில்லை. உடல்தளர்ந்து தொண்டை அடைத்துக்கொண்டது. கைகளால் மூங்கில்தூணை சுரண்டியபடி “ம்” என்றாள். “ஆசிரியரின் இரவு வகுப்பிற்கு வந்துவிடுவேன்…” என்று அவன் சொன்னான். “ம்” என்றாள். பேசினால் குரல் தழுதழுக்கும் என தோன்றியது.


அவன் திரும்பப்போகிறான் என கீழே விழுந்த நிழலசைவைக்கொண்டு அறிந்து அவள் அறியாமல் விழிதூக்கி அவன் விழிகளை சந்தித்தாள். பதறி விழிதாழ்த்திக்கொள்ள அவன் “உன் தந்தையிடம் நானே பேசுகிறேன்” என்றபின் திரும்பிச் சென்றான். அவன் செல்வதை நோக்கி அவள் எண்ணங்களற்று நின்றாள். பின்புதான் அவன் நடை மாறிவிட்டிருப்பதை உணர்ந்தாள். வேங்கை என்னும் சொல் நெஞ்சிலெழுந்ததும் படபடப்பு தொடங்கியது. அவனையே நெடுந்தொலைவுக்கு விழிசெலுத்தி நோக்கிக்கொண்டிருந்தாள். அவன் மறைந்ததும் நீள்மூச்சுடன் மீண்டாள்.


ஏன் நான் தளர்வுகொள்கிறேன்? அவன் ஏன் நிமிர்வுகொள்கிறான்? அவனை தான் என எழவும் என்னை நான் என குழையவும் செய்த ஒற்றை நிகழ்வின் உட்பொருள்தான் என்ன? மீண்டும் ஒரு திடுக்கிடலுடன் அவள் காலையில் கண்ட கனவை நினைவுகூர்ந்தாள். வேங்கையென்று ஆகிவிட்டிருக்கிறானா? வேங்கையின் உள்ளே புகுந்து மீண்டவன் எதை கொண்டுவந்தான்? அதற்கு முன் ஓநாய்களிடமிருந்து பெற்றதை இழந்துவிட்டானா? என்னென்ன எண்ணங்கள் என அவள் தன்னை விடுவித்துக்கொண்டாள். எழுந்தபோது கையூன்றியதை எண்ணி அந்த அசைவை பல மனைவிகளிடம் இருப்பதைக் கண்டதை நினைவுகூர்ந்து புன்னகைசெய்தாள்.


அன்று காலையுணவுக்குப்பின் அவள்  தன்குடிலுக்குள் படுத்து துயில்கொண்டாள். உச்சிப்பொழுதுக்குப்பின்னர்தான் விழித்தெழுந்தாள். அப்போது அவளருகே வேங்கை ஒன்று அமர்ந்திருந்தது. ஓசையின்றி அமர்ந்திருக்க வேங்கைபோல் திறம்கொண்ட பிற உயிர் இல்லை. அசைவில்லாது முழுநாளும் அமர்ந்திருக்க அதனால் இயலும். அது காத்திருக்கிறது என எளிதாக சொல்லலாம், அது காலமுடிவிலியின் முன் ஒரு நாற்களக்காயை நீக்கி வைத்துவிட்டு எதிர்நகர்வைக் காத்து அமர்ந்திருக்கிறது. முடிவிலிக்காலத்தின் மறுமுனையை தன்னுள்ளும் கொண்டிருக்கிறது.


பெரிய வேங்கை. அதன் கன்னமயிர் நன்றாக நீண்டு முகம் கிடைநீள்வட்டமாக மாறிவிட்டிருந்தது. அனல்நெளிவென கோடுகள் கொண்டது. கழுத்தின் வெண்மென்மயிர்ப்பரப்பு காற்று சுழன்ற மணல்அலைகள் போல. அவள் அதன் தலையை தொட்டாள். மெல்ல தலைதாழ்த்தி அவள் மடியில் தலைவைத்தது. வேங்கைத்தலைக்கு இத்தனை எடையா? அதன் கண்களை கூர்ந்து நோக்கினாள். நீள்வடிவ உள்விழி. புலியின் விழியென அல்குல் என்னும் காவியவரி நினைவுக்கு வந்தது. புன்னகையுடன் அதன் காதைப்பற்றி இழுத்தாள். வேட்கையை விழிகளாகக் கொண்டது. இந்திரனுக்கு உடலெங்கும், உனக்கு விழிக்குள். இந்திரன் விழியாக்கினான், நீ மீண்டும் அல்குலாக்கிக் கொள்கிறாய். அதன் கண்கள் சொக்கி சரிந்தன. முலையுண்டு நிறைந்த மதலையென. அவள் அதை வருடிக்கொண்டே இருக்க அதன் குறட்டையொலி எழத்தொடங்கியது.


விழித்தெழுந்தபோது அவள் உள்ளம் உவகையால் நிறைந்திருந்தது. காலையில் இழந்தவளாக வாயில்கள் திறக்கப்பட்டவளாக உணர்ந்தவள் வென்றவளாக முடிவிலாத ஆழம் கொண்டவளாக உணர்ந்தாள். மெல்லிய பாடலொன்றை வாய்க்குள் முனகியபடி அடுமனைக்கு சென்றாள். அடுமனைப்பெண் “உணவருந்துகிறீர்களா, தேவி?” என்றாள். “ஆம், பசிக்கிறது” என்றாள். “ஊன்சோறு ஆறிப்போய்விட்டது. சற்று பொறுங்கள், சூடுசெய்து தருகிறேன்” என்றாள். “இல்லை, கொடு” என வாங்கி உண்டாள். வாழ்வில் எப்போதுமே அத்தனை சுவைமிக்க உணவை உண்டதில்லை என்று தோன்றியது. மேலும் கேட்டுவாங்கி உண்டாள்.


கொல்லைப்பக்கம் சென்று அங்கிருந்த மரத்தொட்டி நீரை சுரைக்குடுவையால் அள்ளி வாழைமரத்தடியில் கைகழுவியபோது வாழைத்தூண்களுக்கு  அப்பால் தெரிந்த காட்டை பார்த்தாள். பச்சைக்கடல் அலை ஒன்று எழுந்துவந்து எல்லைகொண்டதுபோல. துள்ளிக்குதித்து பாடியபடி காட்டை நோக்கி ஓடவேண்டும் என தோன்றியது. அதன்பின்னரே அவள் அங்கே பாறைமேல் கசன் அமந்திருப்பதை பார்த்தாள். அவன் ஒரு பாறை என்றே தோன்றினான். அவன்தானா என்று பார்த்துக்கொண்டிருந்தாள். அருகே வந்த அடுமனைப்பெண் “அவர்தான். இந்தக் காட்டு ஆடு அவர் கொண்டுவந்த ஊன். அதன்பின் அந்தப்பாறையில் சென்று அமர்ந்திருக்கிறார்” என்றாள். “எப்போது?” என்றாள் தேவயானி. “உச்சிப்பொழுதிலிருந்தே” என்றாள்.


அங்கே சென்று அவனை பார்த்தாலென்ன என்று எண்ணினாள். ஆனால் அவன் அமர்ந்திருக்கும் அத்தனிமையை கலைக்கமுடியாதென்று தோன்றியது. அடுமனைப்பெண் “அவருக்காக வேங்கைகள் அங்கேதான் வழக்கமாக காத்திருக்கும்” என்றாள். அவள் நெஞ்சு அதிர திரும்பிப்பார்த்தாள். “உச்சிப்போதிலேயே அங்கே சென்றுவிடும். அவர் வரும்வரை அங்கே காத்திருக்கும்” என்றாள் அடுமனைப்பெண்.  அவள் சற்றுநேரம் நின்று அவனை நோக்கிக்கொண்டிருந்தாள்.


தனிமை நிறைந்த நெஞ்சோடு தன் குடிலறைக்கு திரும்பினாள். எழுந்த எண்ணங்களை விலக்கியபின் சுவடியை எடுத்துக்கொண்டு தந்தையை பார்க்கச் சென்றாள். அவர் காவியங்களைக் கற்கும் உளநிலையில் இருந்தார். ஆகவே அவள் கொண்டுசென்ற கவிதைநூல் அவரை உவகைகொள்ளச்செய்தது. “சின்னஞ்சிறு வண்ணத்துப்பூச்சி. அதன் செம்மஞ்சள்வரிகளால் அது ஒரு பறக்கும் வேங்கை. இனியதேன் உண்பது. எடையற்ற அசைவுகளுடன்  காற்றலைகளில் ஓசையின்றி பரவுவது. அது எந்த வேங்கையின் கனவு? அல்லது அவ்வேங்கைதான் அதன் கனவா?” அவள் அவரையே நோக்கிக்கொண்டிருந்தாள். “சின்னஞ்சிறு கருவண்டு. தேனுண்ணும் துதிக்கை. கரிய பளபளப்புகொண்ட உடல். அது பாடுவது கருமதவேழம் தன்னுள் இசைக்கும் யாழைத்தானா? மென்மலரசைய அமர்ந்தெழுவதுதான் பேருருக்கொண்டு காட்டுமரங்களை வேருடன் சாய்க்கிறதா?”


அஸ்வாலாயனரின் பிரமோதமஞ்சரி. அவர் உசாவிய அத்தனை தத்துவங்களையும் சமன்செய்துகொள்ள துலாவின் மறுதட்டில் அவர் வைத்த கனவு. அக்கனவின் தட்டு கீழிறங்கி தரைதட்டியது. மறுதட்டை நிகர்செய்யத் தவித்து இந்தத்தட்டின் கனவிலேயே ஒரு துண்டு வெட்டி அதில் வைத்தார். அவள் எண்ணிக்கொண்டிருந்ததையே சுக்ரர் சொன்னார். அல்லது அவர் சொல்வதையே அவள் உடன் எண்ணங்களாக ஆக்கி தொடர்ந்துகொண்டிருந்தாள். அந்திப்பூசனைக்காக சத்வரும் கிருதரும் வந்தபோது அவள் வணங்கி விடைபெற்றுக்கொண்டாள்.


திரும்பி தன் குடில்நோக்கி நடக்கையில் அவன் அங்கே பாறைமேல்தான் அப்போதும் அமர்ந்திருக்கிறானா என்று சென்று பார்க்கவேண்டுமென எண்ணினாள். தயங்கி முற்றத்தில் நின்றபடி எண்ணியபின் அந்தியிருளுக்குள் நடந்து குடில்களை கடந்துசென்றாள். குடில்களுக்குள் ஏற்றப்பட்ட நெய்விளக்குகளின் ஒளி செந்நிற நடைபாவாடைகள்போல விழுந்துகிடந்தது. ஒவ்வொன்றையும் கடக்கையில் அவள் எரிந்து எரிந்து அணைந்துகொண்டிருந்தாள். இருளுக்குள் சென்று நின்று தொலைவில் தெரிந்த அவன் நிழல்வடிவை நோக்கினாள். அவனை அழைக்கவேண்டுமென்னும் உந்துதல் எழுந்தது. அழைக்க எண்ணி கையை தூக்கியபோது அதை தானே உணர்ந்ததுபோல் அவன் மெல்லிய அசைவுகொண்டு திரும்ப அவன் விழிகள் எரித்துளிகளென மின்னி அணைவதை அவள் கண்டாள்.




tigerமறுநாள் அவள் இருட்காலையிலேயே எழுந்து நீராடிவிட்டு  வரும்வழியில் எதிரே அவன் வந்தான். அப்பால் எரிந்த விளக்கொன்றின் மெல்லிய ஒளியில் அவள் நிழல் இடப்பக்கமாக விழுந்து இலைகள்மேல் எழுந்து துணையொன்று வருவதுபோல் தோன்றச்செய்தது. அந்நிழலுடன் அவள் மெல்லியகுரலில் உரையாடிக்கொண்டிருந்தாள். “ஆம், அவ்வாறுதான்” என்றாள். “எப்போதும் அவ்வாறுதான் போலும். அதற்கு மாற்றில்லை, பிறிதொருவழியில்லை. எனில் அவ்வாறே ஆவதில் என்ன பிழை? பெருநெறியைப்போல் பழுதற்றது ஏதுண்டு? என்றும் காலடிகள் விழுந்துகொண்டே இருப்பதல்லவா அது?”


அவனை பிறிதொரு நிழலென கண்டாள். நீண்டு வந்து அவள் நிழலருகே நின்ற அதை நோக்கியபின் திரும்பி அவனை பார்த்தாள். சொல்லொன்றும் எடுக்காமல் புன்னகைசெய்தாள். “இன்று புலரியிலேயே காட்டுக்குள் செல்கிறேன். நேற்று ஆடு கொண்டுவந்தேன். இன்று இளம் காட்டுமாடு கொண்டுவரச்சொன்னார் ஆசிரியர்.” அவள் அதற்கும் புன்னகைபுரிந்தாள். “விலங்குகளைப்பிடிப்பது இத்தனை எளிதென்று இதற்கு முன் அறிந்ததில்லை” என்றான் கசன். “அவை நம்மை காட்டின் பிற அசைவுகளிலிருந்து வேறுபடும் தனியசைவுகளைக்கொண்டே அறிகின்றன. காட்டின் அசைவுகளுடனும் அசைவின்மையுடனும் நம் உடலசைவுகளும் அமைதியும் முற்றிலும் இசையுமென்றால் விலங்குகளால் நம்மை கண்டடையமுடியாது.”


அவள் தலைகுனிந்து “அது வேங்கைகளின் வழி” என்றாள். அவன் நகைத்து “ஆம்” என்று சொல்லி அவள் கன்னத்தை தொட்டு “மாலை பார்ப்போம்” என்று கடந்துசென்றான். அவள் அவன் தொடுகையை ஒரு மெல்லிய இறகுபோல ஏந்தி நடந்தாள். கன்னத்தை தொடவிரும்பி அது அத்தூவலை கலைத்துவிடும் என அஞ்சி முகத்தை அசைத்தாலும் அது பறந்துவிடும் என்பதுபோல நடந்தாள். எதிரே வந்த முதியதாதி வாய்திறந்து சிரித்து கடந்துசென்றாள். பிறிதொருத்தியும் அவ்வாறே சிரித்தபோதுதான் அது தன் முகம் மலர்ந்திருப்பதால்தான் என்று உணர்ந்தாள்.


அவ்வெண்ணம் மேலும் மலரச்செய்தது அவளை. சிரித்தபடி செல்லும் வழியிலேயே பூத்துக்குலைந்து தாழ்ந்து ஆடி நின்றிருந்த வேங்கையின் கிளையை  துள்ளி எம்பி கையால் தட்டினாள். உதிர்ந்த மலர்களை கையால் பற்ற முயன்று சிதறடித்துச் சிரித்தபடி குடிலைநோக்கி சென்றாள். ஏதோ எண்ணம் தோன்றி திரும்பி நோக்கியபோது மஞ்சள்மலர்கள் உதிர்ந்த மரத்தின் அடி  வேங்கை என உடல் குவித்து எழுந்து சிலிர்த்தது.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–58
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–57
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–56
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–54
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–53
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–52
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–49
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–55
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–51
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–48
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–14
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 37
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 13
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 2
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 67
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 89
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 31
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 26
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 25
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 12
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 30, 2017 11:30

March 29, 2017

இஸ்லாமியர்களுக்கு வீடு

manush


வாடகைக்கு வீடு கிடைக்காதது குறித்து மனுஷ்யபுத்திரன் தமிழ் இந்துவில் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். மிகவும் அந்தரங்கமான கட்டுரை. அவர் என் நண்பர் என்பதனால் அது வருத்தம் அளித்தது. அவருக்கு வீடு கிடைக்கவேண்டும் என விரும்புகிறேன்


சில ஆண்டுகளுக்கு முன்பு இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் உருவாகிவரும் இடைவெளியைப்பற்றி அச்சத்துடனும் ஆதங்கத்துடனும் நான் ஒரு குறிப்பு எழுதியிருந்தேன். [வளரும் வெறி] சமூகவலைத்தளங்களில் கொதித்துக் கிளம்பினார்கள். இந்துக்களும் இஸ்லாமியரும் ஓருடல் ஈருயிராக மாமன்மச்சானாகப் பழகுவதாகச் சொல்லி பலநூறு கட்டுரைகள் வந்தன. அப்படி என்றால் நல்லதுதானே என நானும் எண்ணிக்கொண்டேன். இப்போது நான் சொன்னதையே வேறுவடிவில் ஹமீது சொல்லியிருக்கிறார்.


ஆனால் வாடகைக்கு வீடுகிடைப்பதைப் பற்றிய பிரச்சினையை இத்தனை எளிதாக இந்து -முஸ்லீம் பிரச்சினையாக ஆக்கிவிடமுடியுமா? உணர்ச்சிகரமாக அப்படி ஆக்கிக்கொண்டால் உண்மையான சிக்கலை நோக்கிச் செல்லமுடியுமா? மீண்டும் இந்துக்களைக் குற்றவாளிகளாக்க, இஸ்லாமியருக்கு இந்தத் தேசத்தில் இடமில்லை என்னும் வழக்கமான பாடலை இசைக்க, மட்டுமே அதனால் உதவும்


நான் நேரடியாக அறிந்த யதார்த்தத்தை மட்டுமே எழுதுகிறேன். வீடு வாடகைக்கு விடுவதில் ஏன் இத்தனை எச்சரிக்கை? ஏனென்றால் இங்குள்ள சட்டம் அப்படிப்பட்டது. அதில் வாடகைக்கு விடுபவருக்கு எந்தப்பாதுகாப்பும் இல்லை. ஒருவர் வாடகைக்கு எடுத்த வீட்டை திரும்பத் தரமாட்டேன் என உறுதியுடன் சொல்லிவிட்டால் வீடு வாடகைக்கு விட்டவர் பற்பல ஆண்டுகளுக்கு அந்த வீட்டை மீட்க முடியாது.


சட்டநடவடிக்கைகள் ஒரு பொருளை கையகப்படுத்தியவருக்கே சாதகமானவையாக உள்ளன இந்தியாவில். நிலமோ வீடோ. அதை மீட்க உரிமையாளர்தான் சட்டப்போர் செய்யவேண்டும். சட்டப்போர் என்பதை நீதிமன்றக் காத்திருப்பு என்றுதான் சொல்லவேண்டும். எந்த வழக்கையும் ஐம்பதாண்டுக்காலம் இழுத்தடிக்க முடியும் இங்கே.


நீதிமன்றம் சென்றால் ஒருதலைமுறைக்குள் தீர்ப்பு வராது. வாடகைப்பணம் நீதிமன்றத்தில் கட்டிவைக்கப்படவேண்டும். நான் அறிந்து நாகர்கோயில் மணிமேடைப்பகுதியில் உள்ள பலகடைகள் 1950 களிலிருந்தே ‘வாடகைக்கு’ எடுத்து வைக்கப்பட்டிருக்கின்றன. உள்வாடகைக்கு மாதம் இரண்டு லட்சரூபாய்க்கு விடப்பட்டுள்ள கட்டிடத்திற்கு நீதிமன்ற ரிசீவருக்கு மாதம் இருபது ரூபாய் வாடகை கட்டப்படுகிறது. நெல்லையில் நெல்லையப்பர் ஆலயத்தின் கட்டிடங்கள் ‘வாடகைக்கு’ எடுக்கப்பட்டு எழுபதாண்டுகள் கடந்துவிட்டன என்கிறார்கள்..


என் மாமா ஒருவர் திருவனந்தபுரத்தில் ஒரு வீட்டை வாடகைக்கு விட்டார், கட்டி முடித்து ஒருநாள்கூட அதில் குடியேறவில்லை. எட்டுமாத வாடகைக்குப்பின் வாடகையும் வரவில்லை, வீடும் திரும்பவில்லை. நீதிமன்றம் சென்று வீட்டை மீட்டு எடுத்தபோது அவர் இறந்து அவரது மகனுக்கும் அறுபது வயது. வீடு பழையதாக ஆகி உதிர்ந்துகொண்டிருந்தது. இடிக்கவேண்டியிருந்தது.நாம் ஒவ்வொருவரும் இத்தகைய பல கதைகளை அறிவோம். .


ஆகவே வேறுவழியில்லாமல் வன்முறைக்கு செல்லவேண்டும். தமிழகத்தின் குற்றக்குழுக்களில் பெரும்பகுதி ‘காலிசெய்ய’ வைக்கும் தொழிலையே செய்துகொண்டிருக்கின்றன. வாடகைக்கு விடுபவர் வன்முறைப் பின்னணி கொண்ட சாதி அல்ல என்றால், அவருக்கு பெரிய அமைப்புபலம் இல்லை என்றால் வன்முறைப் பின்புலம் கொண்ட சாதிக்கு அமைப்புபலம் கொண்ட சாதிக்கு வீட்டை வாடகைக்கு விடமாட்டார்.


இஸ்லாமியருக்கு மட்டும் அல்ல, இங்கே வீடு வாடகைக்கு பெறுவதில் பல்வேறு தொழிற்பிரிவினருக்குச் சிக்கல் இருப்பது இதனால்தான். டாக்டர்கள், வழக்கறிஞர்கள் போன்றவர்களுக்கு வீடு கிடைப்பது மிகக்கடினம். டாக்டர்கள் அந்த இடத்தை கிளினிக் ஆக ஆக்கிக்கொண்டார்கள் என்றால் அதன்பின்னர் அந்த இடமே அவர்களின் அடையாளம். காலிசெய்ய மாட்டார்கள். வழக்கறிஞர்களுக்கு சட்டம் என்ன செய்யும் என தெரியும். நிறுவனங்களுக்கு வீடு கிடைப்பது மிகக்கடினம். கொடுத்தால் மீட்பது அதைவிடக்கடினம்.


தென்மாவட்டங்களில் போர்க்குணம்கொண்ட சாதியினருக்கு பிறர் வீடு வாடகைக்குக் கொடுக்கமாட்டார்கள். கட்டைப்பஞ்சாயத்துக்கு வருவார்கள் என்னும் ஐயம். குமரிமாவட்டத்தில் பெந்தெகொஸ்துகளுக்கு கொடுக்கமாட்டார்கள். மிகவிரைவிலேயே அந்த வீட்டை ஜெபவீடாக ஆக்கிக்கொண்டு பேரம்பேச வந்து அமர்வார்கள். எங்குமே அரசியல் கட்சிப்பின்னணி கொண்டவர்களுக்கு வீடு வாடகைக்குக் கிடைக்காது


இலங்கைக்காரர்களுக்கு வீடு அளிக்க சென்னையில் எவருமே தயாராக மாட்டார்கள். இலங்கைப் பிரச்சினையில் அங்குள்ள தமிழர்களுக்காக மனம் பொங்குபவர்கள் கூட. இதை இலங்கைக்காரர்களாகிய பல நண்பர்கள் என்னிடம் கண்ணீருடன் சொல்லியிருக்கிறார்கள்


ஹமீது அவருக்கு வீடு கிடைப்பதைப்பற்றிச் சொல்கிறார். பாரதிய ஜனதாக் கட்சியின் பொறுப்பில் இருப்பவருக்கு மட்டும் பிறர் வீடு கொடுத்துவிடுவார்களா? ’அரசியல் ஆளுங்க, நமக்கு எதுக்கு வம்பு’ என்று பின்வாங்குவார்கள். இது என் இன்னொரு நண்பரின் அனுபவம்.


சென்னையில் சினிமாக்காரர்களுக்கு வாடகைக்கு வீடு கிடைக்காது. தனியாக வாழும் பெண்களுக்கு வீடு கிடைக்காது. இதெல்லாமே ஒழுக்கக் கவலைகள் அல்ல, ஏதேனும் பிரச்சினை வருமா என்னும் நடுத்தரவர்க்க பதற்றம், அவ்வளவுதான்.


ஏனென்றால் எந்த ஒரு பிரச்சினைக்கும் வீட்டு உரிமையாளரை காவல்துறை இழுத்தடிக்கும். குறிப்பாக அந்த வீட்டு விலாசம் பாஸ்போர்ட் எடுக்கவோ ரேஷன் கார்டு வாங்கவோ அளிக்கப்பட்டிருந்தால் பெரிய சிக்கல்கள் வரும். போலிபாஸ்போர்ட் எடுக்க ஒருவர் தன் வாடகைவீட்டு விலாசத்தை அளிக்க அந்த வீட்டு உரிமையாளர் கிட்டத்தட்ட வீட்டையே விற்குமளவுக்கு பணம் செலவழிக்க வேண்டியிருந்ததை ஒருமுறை கேட்டறிந்தேன்


இஸ்லாமியர்களில் இன்றுள்ள வலுவான வன்முறை அமைப்புகளை அனைவரும் அறிவார்கள். அவ்வமைப்புகளில் கணிசமானவர்கள் கட்டைப் பஞ்சாயத்தைத்தான் தொழிலாகச் செய்கிறார்கள். இஸ்லாமியர் மீது ஐயமோ விலக்கமோ எவருக்கும் இல்லை, இருந்திருந்தால் பொதுவெளியில் எல்லா தளங்களிலும் அது வெளியாகும் அல்லவா? விலகிச்செல்வது இஸ்லாமியர்தான், உடைகளால் பேச்சுகளால் மதவெறியால். இஸ்லாமியர் மேல் அச்சம் கண்டிப்பாக உள்ளது. அந்த அச்சமே வீட்டு விஷயத்தில் வெளியாகிறது


என்னை எடுத்துக்கொள்வோம், எனக்கு இஸ்லாமியர் மேல் அச்சம் உள்ளதா? கண்டிப்பாக ஆழமான அச்சம் உள்ளது. ஓர் இஸ்லாமியர் இஸ்லாமிய அமைப்புகளின் பின்புலம் உள்ளவரா என பலமுறை சோதித்துப்பார்க்காமல் நான் நெருங்கவே மாட்டேன். ஒருமுறை நான் பேசவிருந்த மேடைக்கு ஜவஹருல்லாவையும் அழைக்கலாமா என என்னிடம் கேட்டனர். என் முதுகுத்தண்டில் ஓர் அச்சம் சிலிர்த்தது. பதறி விலகிவிட்டேன்..


ஐ.எஸ்.ஐ.எஸ் பற்றிய ஒரு சாதாரணமான கருத்தை நான் எழுதியபோது நூற்றுக்கும் மேற்பட்ட அழைப்புகள் எனக்கு, ஜாக்ரதையாக இருங்கள், இதையெல்லாம் எழுதவேண்டுமா என. இந்தியப் பொதுச்சமூகம் இந்த நவவஹாபிய அமைப்புக்களை எண்ணி அஞ்சிக் கிடக்கிறது. அதை வலுப்படுத்துவது போலவே நாளும் செய்திகள் வருகின்றன. அதை காணாதது போல நடிப்பதில் பொருளே இல்லை. அது ஓரு சமூக உண்மை


அந்த அச்சத்தைப் பொதுச் சமூகத்தின் உள்ளத்தில் விதைத்த அமைப்புக்கள் எவை? பொதுச் சமூகத்தில் இத்தனை அச்சத்தை உருவாக்குபவர்களை விட்டுவிட்டு அஞ்சுபவர்களை மீண்டும் கூண்டிலேற்றுவதில் என்ன பொருள்?


இருபதாண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்தது இது, ஓர் இஸ்லாமியர் [மரைக்காயர்] சிறிய அளவிலான லஞ்சம் வாங்கிய செய்தி வந்தது. லஞ்சம் சாதாரணமாகப் புழங்கிய அலுவலகச்சூழலே அதிர்ச்சி அடைந்தது. “மரைக்காயர்களெல்லாம் இப்படிச் செய்வார்களா என்ன?” என பலர் கேட்டனர்.. ஏனென்றால் நேர்மையற்ற, பண்பற்ற மரைக்காயர்களை பலர் கேள்விப்பட்டே இருக்கவில்லை.


மனுஷ்யபுத்திரன் தொழில்துறையில் கொஞ்சம் விசாரித்துப் பார்க்கவேண்டும், இன்று முஸ்லீம்களுக்கு முழு முன்பணமும் பெற்றுக்கொள்ளாமல் முஸ்லீம்கள் அல்லாத எவரேனும் சரக்கு கொடுப்பார்களா என்று. அந்த மாற்றம் எங்கே வந்தது? இஸ்லாமியர்கள் நட்பானவர்கள், சொன்ன சொல்லுக்குள் நிற்பவர்கள் என்னும் பிம்பம் எப்படிச் சிதைந்தது? அதற்கு எவர் பொறுப்பு?


இஸ்லாமியர் பல நூறு ஆண்டுகளாக இங்கே ஈட்டிவைத்திருந்த நல்லெண்ணம் கடந்த இருபதாண்டுகளில் இங்குள்ள வஹாபியக் கும்பல்களால் அழிக்கப்பட்டுவிட்டது. துரதிருஷ்டவசமாக அவர்களே இஸ்லாமின் முகமாக பரவலாக அறியப்படுகிறார்கள். ஒவ்வொரு இந்துவும் அந்த பழைய இஸ்லாமியருக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறான். அதை இஸ்லாமியரில் சிலராவது உணரவேண்டும்.


ஜெ


***


பரவும் வெறி- எதிர்வினைகளைப்பற்றி


வளரும் வெறி



தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 29, 2017 11:37

கமல்ஹாசன்,மகாபாரதம்,மதம்

kamal


 


ஜெ,


நீங்கள் இந்துத்துவ அரசியல் கொண்டவர், ஆனால் இன்று உங்களுக்கு சினிமா வாய்ப்பு அளிக்கும் கமல்ஹாசனுக்காக இந்துத்துவர்களை எதிர்க்கிறீர்கள்- இது என் நண்பர் விவாதத்தில் சொன்னது. சமூகவலைத்தளத்திலும் இதை பலர் எழுதியிருந்தார்கள். உங்களுடைய ‘நிலைமாற்றத்தை’ கண்டித்தும் சினிமாவுக்காக சோரம்போகிறார் என்றும் உங்கள் இந்துத்துவ நண்பர்களும் எழுதியிருந்தனர். உங்கள் மறுமொழி என்ன? [இதை நல்லெண்ணத்தில்தான் கேட்கிறேன், சீண்டுவதற்காக அல்ல]


ஜெ. நாகராஜன்


***


அன்புள்ள நாகராஜன்,


தனக்கு மாறான ஒரு கருத்தை ஒருவர் சொன்னால் அவர் இழிவான நோக்கம் கொண்டவர் என்று ஆரம்பத்திலேயே நம்ப ஆரம்பிப்பது ஒரு மனநிலைச்சிக்கல். அதை அச்சிக்கல்கொண்டவர்கள்தான் தீர்த்துக்கொள்ளவேண்டும். நான் சொல்லும் கருத்துக்களை ‘சினிமாவுக்காகச் சொல்கிறான்’ என்று சொல்லிவிட்டால் யோசிப்பதை ஒத்திப்போடலாமே. சொல்பவரின் இழிவு மட்டுமே அதில் வெளிப்படுகிறது.


அதோடு பலசமயம் இதைச் சொல்பவர்கள் தாங்கள் சொந்தப்பிழைப்பின் பொருட்டே சிந்தனையை வடிவமைத்திருப்பவர்கள், பிறர் வேறுவகையில் சிந்திக்கமுடியும் , சமூகக்கவனம் அறவுணர்வு என சில உண்டு என்றே அவர்களுக்கு தெரிந்திருக்காது


ஆம், கமலஹாசனை நான் தனிப்பட்டமுறையில் நன்றாக அறிவேன். வெளிப்படையாகவே அவர் திராவிட இயக்க நம்பிக்கை கொண்டவர். அதேசமயம் உறுதியான நிலைபாடுகொண்டவரும் அல்ல. கலைஞர்களுக்கே உரிய தேடலும் குழப்பமும் கொண்டவர். அவருடைய கருத்துக்கள் மேல் எனக்கு முரண்பாடு வரலாம், அவருடன் அல்ல


இந்தத் தளத்தை ஓரளவேனும் வாசிக்கும் எவருக்கும் தெரியும் என் நிலைபாடு என்ன என்று. நான் இந்தியத் தேசியம் மீது நம்பிக்கை கொண்டவன். ஏனென்றால் இது வரலாற்றின்போக்கில் சீராக உருவாகி வந்த ஓர் அமைப்பு. இதன் குலைவு அழிவை அளிக்கும். இது வலுவாக நீடிப்பதே நம்மை வாழச்செய்யும் என நினைக்கிறேன்.


ஆனால் அந்த தேசியம் மதம்சார்ந்ததாக இருக்கலாகாது என்றும் காந்தி நேரு அம்பேத்கர் வழிவந்த நவீன தேசியமாக, அனைத்து மதத்தினருக்கும் உரியதாக இருக்கவேண்டும் என விழைபவன்.


இந்துமெய்ஞான மரபில் ஆழ்ந்த பற்றுகொண்டவன். இதிலுள்ள ஞானிகளின் மரபை அறிந்தவன். அம்மரபில் ஒரு சரடில் என்னை பொருத்திக்கொண்டவன். அத்வைத மரபில் நாராயணகுருமுறையில் ஒருவன் நான். இந்து மரபு அளிக்கும் மாபெரும் பண்பாட்டுத் தொகையை, ஞானக்கருவூலத்தை கற்றுவருபவன். அது உலகுக்கு ஒரு கொடை என நினைப்பவன்


அந்த மரபு அது அளிக்கும் கட்டற்ற சிந்தனைச் சுதந்திரத்தால், அதன் கிளைபிரிந்து முரண்பட்டு விவாதித்து வளரும் முறையால்தான் எனக்கு மகத்தான வாய்ப்புகளை வழங்குகிறது என நினைப்பவன். ஆகவே அதை அமைப்பாக ஆக்குவது, அதன் இயக்கமுறையை கட்டுப்படுத்துவது, அதன் மெய்ஞானப்போக்குகளை அன்றாட அரசியலால் முடக்க முயல்வது போன்றவற்றை எப்போதும் வன்மையாகக் கண்டித்தே வருகிறேன்.


இக்கட்டுரையும் இதே நோக்கில் எழுதப்பட்ட பல கட்டுரைகளின் வரிசையில் வருவதே. வெறுப்பையும் நக்கலையும் கக்குவதென்றால் தேவையில்லை, உண்மையில் அறிய ஆவலிருந்தால் வாசித்துப்பாருங்கள்.


ஜெ


***


சார்,


முன்பு போகன் னு ஒரு பதிவு போட்டீர்கள்.. பின் குற்றம் 23 படம், பிறகு கமல் பற்றி.. இவை அனைத்துற்குமான காரணங்கள் தெரிஞ்சுடிச்சி.. :-))


http://www.vikatan.com/news/article.php?aid=84857


அன்புடன்,


R.காளிப்ரஸாத்


***


அன்புள்ள காளி


நான் ஒரு இலுமினாட்டி என்பதை பலமுறை முன்னரே சொல்லியிருக்கிறேனே.


ஜெ


 


எம்.எஃப்.ஹுசெய்ன்


ஹூசெய்ன் இந்துதாலிபானியம்


எம்.எஃப்.ஹுசெய்ன் கடிதம்.


தேவியர் உடல்கள்


இரு எல்லைகள்


பரவும் வெறி- எதிர்வினைகளைப்பற்றி


வளரும் வெறி


பஷீரும் ராமாயணமும்


பஷீரும் ராமாயணமும்- கடிதம்


இந்தியா இஸ்லாம்-கடிதம்


முத்திரைகள்


அ மார்க்ஸின் ஆசி


மதமாற்றத்தடைச் சட்டமும் ஜனநாயகமும்


தீண்டாமைக்கு உரிமைகோரி -கடிதம்


காதலர் தினமும் தாலிபானியமும்


தீண்டாமைக்கு உரிமைகொரி


பகவத்கீதை தேசியப்புனிதநூலா?


  பெருமாள் முருகன் தீர்ப்பும் நம் அறிவுஜீவிகளும்


பெருமாள்முருகனுக்கு ஆதரவாக


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 29, 2017 11:31

விஷம் தடவிய வாள்

sukumaran3


அம்மா இறந்த அந்நாட்களில்தான் சுகுமாரன் பற்றி எரிந்துகொண்டிருந்தார். [நெடுங்காலம் புகைந்துகொண்டிருப்பதைவிட பற்றி எரிவது மேல், ஒருகணம் எனினும்] நான் அவர் கவிதைகளுடன் இருந்த அந்தக்காலத்தில் அம்மாவும் நினைவும் சுகுமாரன் வரிகளும் ஒன்றென இணைந்துகொண்டன. அவருடைய உக்கிரமான காதல் கவிதைகளை நான் உறவின் பிரிவின் மரணத்தின் கவிதைகளாகவே வாசித்துக்கொண்டிருந்தேன்.


இன்று காலையில் இருந்தே அம்மாவின் நினைவு. நேற்று அம்மாவுக்குப் பிடித்த ஒரு பாடலில் இருந்து ஆரம்பித்து இப்போது வரை நீண்டது அவ்வுணர்வு. அதைத் துயரம் என்றோ உளச்சோர்வு என்றோ சொல்ல முடியாது. இறப்பு வாழ்க்கையைச் சூழ்ந்துள்ளது. அதை அறியாது கொள்ளும் எளிய உவகைகளை விலகி நின்று நோக்கும் ஒரு நிலை. மனிதர்கள் அனைவரும் மிக அப்பால் இருந்தனர்


சென்னை செல்வதற்காக ரயில்நிலையத்தில் நின்றுகொண்டிருந்தேன். அம்மாவின் முகத்துடன் சுகுமாரனின் வரிகள் நினைவில் எழுந்தன, எப்போதும் போல


உன் பெயர்-


கபாலத்தின் உட்கூரையில் கிளைத்து


என் நாளங்களில் மிதக்கும் சங்கீத அதிர்வு


என் தனிமைப் பாலையில் துணை வரும் நிழல்


என் கதவருகில் நின்று தயங்கும் புன்னகை


காணி நிலத்தில் ததும்பும் நிலவின் ஒளி


மனப்பாடமான வரிகள். ஓரிரு நாட்களுக்கு முன்புதான் பறக்கையில் போகன் சங்கரை கண்டேன். ”ஏன் உங்கள் தலைமுறையினரின் கவிதைகள் வரிகளாகவே நினைவில் நீடிக்கவில்லை, சுகுமாரன் வரிகளைப்போல?” என்றுகேட்டேன். “அவர் மேற்கோள்தன்மையுடன் எழுதுகிறார். அவ்வியல்பு இருக்கவே கூடாது, ஒருவரிகூட மேற்கோளாகத் தெரியக்கூடாது என நாங்கள் கவனம் கொள்கிறோம்” என்றார்


இருக்கலாம். ஆனால் கவிதை என்பதே தன்னை நினைவில் வலுக்கட்டாயமாகச் செருகிக்கொள்ளும் சொல்லமைவு மட்டும்தான். அதன் தொடக்கம் அதை நம்மால் மறக்கமுடியாது என்பதுதான். பலசமயம் மிகச்சாதாரணமான வரிகள். ஆனால் தங்களை மறக்கமுடியாமலாக்கிக்கொள்வன என்பதனாலேயே அவை கவிதையாகிவிடுகின்றன


உன் பெயர்-


இன்று என் உற்சாகங்களை மூடும் வலை


என் காதை அறுத்துத் தரச்சொல்லும் வினோதக் கோரிக்கை


கொய்யப்பட்ட என் சிரசை ஏந்தும் சலோமியின் தாம்பாளம்


என் இதயத்தைத் துளைக்கும் அன்பின் விஷம் தடவிய வாள்


நீயே என் ஆனந்தம், அலைச்சலில் ஆசுவாசம், குதூகலம்


நீயே என் துக்கம், பிரிவின் வலி.


திரும்பி வீட்டுக்கே வந்து விடுகிறேனே என அருண்மொழிக்கு குறுஞ்செய்தி அனுப்பினேன். பரவாயில்லை சென்று திரும்பு, வேலை இருக்கிறது அல்லவா என அவள் பதில் அனுப்பினாள். என் தனிமையயும் சோர்வையும் குறுஞ்செய்திகளாக அனுப்பிக்கொண்டு நின்றிருந்தேன்.


கன்யாகுமரி எக்ஸ்பிரஸ் தாமதம். அனந்தபுரி முன்னரே வந்துவிட்டது. என் முன் அதன் பி2 பெட்டி நின்றது. அதிலிருந்து சுகுமாரனே இறங்கி எதிரில் வந்தார். முகம் மலர்ந்து சந்தித்து கைதொட்டுக்கொண்டோம். பேசிக்கொண்டோம். கொஞ்சம் முகமன், கொஞ்சம் இலக்கியம். ரயில் கிளம்பிச்சென்றது


நான் அவரிடம் அவர் கவிதைகளைத்தான் நினைத்துக் கொண்டிருந்தேன் என்று சொல்லவில்லை. அந்த அளவுக்கு அவர் நெருக்கமில்லை. அவர் கவிதைகள் இருக்கும் அந்தரங்கமான அந்த வெளிக்கு அவரை நான் அனுமதிக்கமுடியாது. அம்மா அவரைக்கண்டால் திடுக்கிட்டுவிடக்கூடும்.


சுகுமாரன் கவிதைகள்


***

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 29, 2017 11:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.