Jeyamohan's Blog, page 1661

March 25, 2017

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–54

54 குழவியாடல்


மறுநாள் காலை நீராடச் செல்கையில் கசனைக் கண்டதுமே முனிவர்களின் மைந்தர்களும் மாணவர்களும் முகம் திருப்பி விலகிச்சென்றனர். அவர்களை நோக்கி சிரித்தபடி தனக்குள் ஏதோ பாடலை முனகியபடி சென்று ஓடையிலிறங்கி அவன் நீராடினான். அப்படித்துறையிலேயே எவரும் இறங்கவில்லை. நீந்திச் சென்று ஓர் அல்லி மலரை பறித்துக்கொண்டு கரையேறினான். ஈரம் வழிந்த உடலுடன் சென்று சுக்ரரின் அறை வாயிலை அடைந்து படிமேல் அதை வைத்து நெற்றியால் அதைத் வணங்கிவிட்டு தன் குடிலுக்கு மீண்டான்.


அவன் நீராடிச் சென்று மறைவதுவரை ஒரு சொல்லும் உரைக்காமல் அவர்கள் அனைவரும் அவனையே நோக்கியிருந்தனர். அப்போது அவன் அழகையன்றி எவரும் எதையும் எண்ணவில்லை. நின்றிருக்கையில் அழகர்கள் அசைகையில் அழகர்களல்ல, அசைவில் அழகர்கள் பேசுகையில் அழகிழப்பர். எப்போதும் எந்நிலையிலும் அழகனென்று ஒருவன் அமையக்கூடுமென அப்போதே அறிந்தனர். ஆனால் அதைக் குறித்து தங்களுக்குள் பேசிக்கொள்ள எவரும் விரும்பவில்லை. சொல்லின்றி நீரிலிறங்கி மூழ்கி எழுந்தார்கள். வழக்கமாக சிரிப்பும் பேச்சும் சிறுபூசல்களும் ஒலிக்கும் படித்துறைகளில் அலைகளின் ஓசை மட்டுமே எழுந்தது.


அச்சொல்லின்மை உறுத்தவே அவர்களிலொருவன் மிக எளிய அன்றாடச்செயல் குறித்து எதோ சொன்னான். அதை பிறிதொருவன் மறுக்க இருவர் அதில் கருத்து சொல்ல தங்களை தங்களிடமிருந்தே மறைத்துக்கொள்ளும்பொருட்டு அச்சொல்லாடலை நாவால் தட்டித் தட்டி முன்னெடுத்துச் சென்று காற்றில் நிலைநிறுத்தினர். “அழகியவன் நம்மை கவர்கிறான். அதனாலேயே அவன் அஞ்சத்தக்கவன்” என அந்தத் திரையைக் கிழித்து ஒருவன் சொன்னான். “நம் சித்தத்தை நம்மையறியாமல் எடுத்துக்கொள்ளும் எதுவும் நம்மிடமிருந்து எதையோ கைப்பற்றுகிறது.” மீண்டும் சொல்லவிந்து அவர்கள் விழிமின்கள் மட்டுமென்றாயினர்.


சுக்ரரின் வகுப்புகளில் அவன் அமர்ந்தபோது அவனருகே எவரும் அமரவில்லை. அவனைக் கண்டதுமே முகம் மலர்ந்த சுக்ரர் எப்போதும் முதற்சொல்லை அவனை நோக்கியே தொடங்கினார். பின்னர் அச்சொற்களின் அனல் தன் விழிகளில் பற்றிக்கொள்ள அங்கிருக்கும் அனைவரையும் மறந்து அதில் நின்றாடி விண் தாவி எழுந்து வெளியென்றானார். அவர்கள் அவனை மறந்து அவருடன் சென்றனர். மீண்டு இடமுணர்ந்து  எழுந்து விலகுகையில் அவனை தவிர்த்தனர். அவரளித்த சொற்களின் வெம்மை விழிகளில் நிறைந்திருக்க பல மடங்கு எடை கொண்டவனாக அவன் தனித்து நடந்து சென்றான். அவனை விழிநோக்காது உடல் நோக்கியவர்களாக சிறு குழுக்களாக அவனைத் தொடர்ந்து சென்றனர்.


ஆனால் அவனழகு அனைவரையும் வென்றுகொண்டிருப்பதை ஒவ்வொருவரும் உணர்ந்தனர். அவனை கண்காணிக்க வேண்டுமென்றும் அவன் செய்யும் முதற்பிறழ்வை கண்டடைய வேண்டுமென்றும் அதைக் கொண்டே அவனை அங்கிருந்து விலக்க வேண்டுமென்றும் ஒவ்வொருவரும் உறுதிகொண்டிருந்தனர். அது அவனழகை கூர்ந்து நோக்குவதற்காக அவர்கள் அணிந்துகொண்ட நடிப்பென்பதை அவர்களே அறிந்தும் இருந்தனர். எப்போதோ ஒருவர் பொருந்தாமையால் உந்திநிற்கும் ஒரு கூற்றை உரைக்கையில் அதன் உள்ளடக்கம் அவனே என அறிந்து தாங்கள் சொல்லும் ஒவ்வொன்றிலும் அவனைப் பற்றிய உட்குறிப்பு இருப்பதை உணர்ந்தனர்.


அழகுக்கும் விழிகளுக்கும் விலக்கவொண்ணா ஒப்பந்தம் ஒன்று உள்ளது என்றார் சுஷமர். “அவனை நோக்காமலிருக்க இங்கு எவராலும் இயலாது. அதை எண்ணி நாணியே நாம் நம்மை திருப்பிக்கொள்கிறோம்.” பெண்கள் ஓரவிழியால் அவனை நோக்கி தனிமையில் உளவிழியால் மீட்டெடுத்து நோக்கி மகிழ்ந்தனர். கற்பனையால் வண்ணம் தொட்டுத்தொட்டு முழுமை செய்தனர். ஆண்கள் அவனை எண்ணாமலிருக்க முயன்று எண்ணத்தில் அவனே எழுவதைக் கண்டு எரிச்சலுடன் நோக்கி எண்ணியிராமல் தன்னை மறந்தனர்.


மலர்களுக்கு மட்டுமே உரிய முழுமை கொண்டிருந்தது அவன் உடல். “அழகு அனைத்துப் பொருட்களிலும் எழுந்துள்ளது. அழகிற்கென்று மட்டுமே அமைந்தது மலர் மட்டுமே” என்றார் சத்வர். “படைத்துப் படைத்து சலித்த பல்லாயிரம் கோடி மானுட உடல்களில் ஒன்றில் மட்டும் பிரம்மன் தன் மகிழ்ச்சியை பொறித்தனுப்புகிறான். செல்லுமிடங்களெங்கும் அவர்கள் உவகையை நிறைக்கிறார்கள்.” கிருதர் “நமது மாணவர்கள் அவன்மேல் பொறாமை கொள்ளக்கூடும்” என்றார். சத்வர் நகைத்து “இல்லை. தங்களைப்போல் இருந்தும்  தங்களைவிட ஒரு படி மேலாகச் சென்றவர்கள் மீதுதான் மானுடர் பொறாமை கொள்கிறார்கள். அவன் அழகு தெய்வங்களுக்குரிய முழுமை கொண்டது. எப்போதும் அதை தாங்கள் அடையப்போவதில்லையென்று அனைவரும் அறிவர். இளையவரே, மானுடர் எதைக் கண்டு பொறாமைப்படுகிறார்கள்? சற்று விழைந்திருந்தால் சற்று முயன்றிருந்தால் சற்று நல்லூழ் இருந்தால் தாங்களும் அடைந்திருக்கக்கூடும் என எண்ணுவனவற்றின் மீதே” என்றார்.


கிருதர் “ஆனால் ஒவ்வொருவரும் உள்ளூற அவனை விரும்புகிறார்கள் என்று தோன்றுகிறது” என்றார். சத்வர் “ஆம், அழகை விரும்பாத எவர் இருக்கிறார்கள்? மலர்களை நின்று நோக்குபவர்கள் குறைவு, ஆனால் அழகெனும்போது மலரே நினைவு வருகிறது. மலரொன்று எதிரில் வந்தால் அறியாது முகம் மலர்கிறது. மண்ணிலுள்ள விழிகள் அனைத்தும் அழகை அறியும். விழிகள் மலர்களை நோக்கி நோக்கி மலர்களைப்போல் ஆனவை  என தொல்கவிதை சொல்வதுண்டு” என்றார். அவர்கள் ஏடு நறுக்கிக்கொண்டிருந்தனர். சூழ எவருமில்லாமையால் நிலைவிட்டு உரைகொண்டனர். “அத்தனை பேர் அவன்மேல் காதல் கொள்கிறார்களா என்ன?” என்று கிருதர் கேட்டார்.


“பெண்கள் தங்கள் ஆழ்கனவுகளில் நிகரற்ற பேரழகிகளாகி அவனை அடைகிறார்கள். ஆண்கள் பேரழகர்களாக மாறி அவன் என நடிக்கிறார்கள். ஆணுக்குள் அமைந்த பெண் அவனிடம் காதல் கொள்கிறாள். பெண்ணுக்குள் அமைந்த ஆண் அவனுக்கு தோழனாகிறான். இளையவரே, மானுடன் ஊனுடல் கொண்டு இங்கு வாழ்வது ஒரு சிறு வாழ்வே. உள்ளம் பெருகி அவர்கள் வாழும் முடிவிலாக் கோடி உலகங்கள் இங்குள்ளன. நாம் கொண்ட நல்லூழால் அவை எடையிலாதுள்ளன. எடை கொண்டிருந்தன என்றால் இப்புவி தாங்கும் ஆமைகள் என்றோ நசுங்கி கூழாகிவிட்டிருக்கும்” என்று சத்வர் நகைத்தார்.


எந்தக் கணத்தில் அவர்கள் அவனை ஏற்றுக்கொண்டார்கள் என்பது எவருமே அறிந்திராத ஒன்றாக இருந்தது. ஆனால் ஒவ்வொருவரும் மேலும் மேலும் கூர்கொண்டு அந்த முனை நோக்கியே வந்து கொண்டிருந்தனர். தேவயானியும் அவனும் கொண்ட காதலை அறியாத எவரும் அங்கிருக்கவில்லை. அக்காதலை அவர்கள் ஒவ்வொருவரும் கொண்ட ஆழ்கனவுகளில் தங்களுள் நடித்தனர். அதனூடாக அவர்கள் அறிந்த அளவுக்கே அனைவரும் அக்காதலை அறிந்திருந்தனர். கசன் முன் அத்தனை பெண்களும் தேவயானியென்றாயினர். அத்தனை ஆண்களும் அவனென்றாயினர்.


மெல்ல மெல்லிய புன்னகைகள் அவனுக்கு அளிக்கப்பட்டன. கல்வியவையில் அவன் எழுத்தாணிக்காக துழாவினான் என்றால் எவரோ ஒருவர் அதை எடுத்து அவனுக்களித்தார். பசியுடன் அடுமனைக்கு அவன் சென்றால் எவரோ எழுந்து கலத்தை நன்கு கழுவி அவன் கையிலளித்தனர். ஒற்றைச் சொற்கள் எழுந்தன. பின் அவை தங்கள் உடன்பிறந்தாரை பெருக்கிக்கொண்டன. எளிய குறிப்புகள் வழியாக உரையாடல் தொடங்கியது. முதல் நகையாட்டு எழுந்ததுமே அனைத்து அணைகளும் உடைந்தன. சிரிப்பும் பகடியும் இன்றி அவனிடம் எவரும் பேசாமலாயினர்.


பெண்கள் மறைமுகமாக தேவயானியைச் சொல்லி அவனை களியாடினர். ஒவ்வொன்றையும் அவன் முழுமையுடன் செய்தான். வேள்விபோல், நடனம்போல் அவன் அசைவுகள் இருந்தன. அதனாலேயே அவை பெண்மைச்சாயல் கொண்டிருந்தன. அதைச் சொல்லியே அவனை சீண்டினர் பெண்கள். இளைஞர் அவனிடம் சொல்லாடுவதற்கென்று பேசுபொருட்களை கண்டடைந்தனர். அன்று கற்றவற்றை, அவற்றை கடந்துசெல்லும் உய்த்துணரல்களை, சூழ்ந்துள்ள காட்டை, வெயிலை, பனியை. ஆனால் அசுரரும் தேவரும் கொண்ட நில்லாப் போரைப்பற்றி ஒரு சொல்லும் அவர்கள் நாவில் எழவில்லை.


ஒவ்வொரு உரையாடலுக்குப் பின்னும் மேலும் அவனை நெருங்க முனைந்தனர். ஒவ்வொருவரும் அவனை தொட விழைந்தனர். செல்வோம் என அவன் கையை தொட்டனர் தோழர். இங்கு நோக்குக என அவன் தோளை தட்டினர். என்ன செய்கிறாய் என்று அவன் தோள்களில் கையூன்றினர். முதியவர் நீடூழி வாழ்க என அவன் தலையை தொட்டனர். மூதன்னையர் மட்டும் எந்தத் தயக்கமுமின்றி அவனை அணுகி இரு கன்னங்களைத் தொட்டு வருடி “காமதேவன் போலிருக்கிறாய், மைந்தா” என்றனர். அவன் கைகளை எடுத்து தங்கள் கன்னங்களிலும் கைகளிலும் வைத்து “நீடூழி வாழ்க!” என்று வாழ்த்தினர்.


அப்போது விழிதிகழ அகன்று நின்ற இளைய பெண்டிர் அம்மூதன்னையருக்குள் புகுந்துகொண்டு தாங்களும் அவனை வாழ்த்தினர். அவர்களின் கனவுகளில் அவன் மேலும் பெருகி நிறைந்தான். தனிமையிலிருக்கையில் அவன்மேல் உதிர்ந்த மலர்கள் அப்பெண்டிரே என அவன் அறிந்திருக்கவில்லை. ஓடையில் நீராடுகையில் அவன் உடலை உரசிச் சென்ற ஒளிமிக்க மீன்கள் எவரென்று அவன் உள்ளம் உணர்ந்திருக்கவில்லை. காற்றென வந்து அவன் குழல் கலைத்தனர். ஈரமண்ணென அவன் கால் கீழ் குழைந்தனர். சிட்டுக்குருவியென நாணம் தடுக்க தத்தித் தத்தி அவனை அணுகி மிரண்டெழுந்து மீண்டும் விலகினர். வண்ணச் சிறகுள்ள பறவையென அவன் முன் தங்களை விரித்து வைத்தனர். அவன் முன் இலைதெரியாது பூத்த கொன்றையென்றாயினர்.


அப்பெண்களனைவரிலும் தேவயானி நூறு விழிகளாக எழுந்து அவனை சூழ்ந்திருந்தாள். அவள் கொண்ட ஆணவம் அக்காதலை முற்றிலும் மறைத்து இறுகிய முகம் சூட வைத்தது. குறுகிய ஒற்றைச் சொற்களை மட்டுமே அவனுக்கு அளிக்க அவளால் இயன்றது. அவன் முன் வருகையில் தலை நிமிர்த்து நீள்குழல்புரிகள் அலைக்க அவள் நடந்தாள். சொல் சொல் என சிலம்பின கால்நகைகள். இனி இனி என ஒலித்தன வளையல்கள். அவன் முன் அமர்ந்திருக்கையில் உடல் அவனை நோக்கித் திரும்பி முகம் பிறிதொரு திசை நோக்க அமைந்தாள். அவன் கேட்க பிறருடன் உரையாடுகையில் அவள் குரல் இனிமையுடன் வலுத்தெழுந்தது. அவனுடன் உரையாடுகையில் தாழ்ந்து தனக்குள்ளென முழங்கியது.


அவனோ ஆசிரியரின் மகளென்னும் நிலையிலேயே அவளை அணுகினான். எப்பெண்டிரையும் நோக்கும் அதே விழிகளையே அவளுக்கும் அளித்தான். நலம் உசாவினான். நன்று சொல்லி வாழ்த்தினான். அன்றாட நிகழ்வுகளை உரைத்தான். எல்லை கடக்காது நகையாடினான்.  ஒருபோதும்  கடக்கவில்லை. அதுவே அவள் தன் சொல்லாலும் விழியாலும் வேண்டியதென்றாலும் அம்முறைமைச் சொல்லாடலுக்குப்பின் ஒவ்வொருமுறையும் சீண்டப்பட்டாள். சினம்கொண்டு பற்களைக் கடித்தபடி மட்டுமே அவன் முன்னிருந்து அகன்றாள்.


தனிமையில் இருக்கையில் அவள் உள்ளெழுந்த இளங்கன்னி ஐயமும் ஏக்கமும் கொண்டு தவித்தாள். தன் அழகும் நெகிழ்வும் அவனுள் சென்று பதியவில்லைபோலும் என ஐயுற்றாள். இல்லையேல் அவன் விழிகளிலும் சொற்களிலும் அத்தனை விலக்கம் எப்படி வந்தது? பெண்ணுக்கு முன் அப்படி முற்றிலும் நடிக்க இயலுமா? இல்லையில்லை என்று அவள் உள்ளம் சொல்லிக்கொண்டிருந்தது. அவனுள் வாழ்கிறேன் நான், ஐயமே இல்லை. ஆனால் மறுகணமே அது தன் விழைவு காட்டும் மாயம்தானா என்று எழுந்த ஐயத்திலிருந்து அவளால் விடுபடவும் முடியவில்லை. இக்கணம் இது மறுகணம் அது எனும் ஓயா ஊசலாட்டத்தில் திருகுகுடுமி உரசி அனல்கொண்டு உருகி தவித்தது.


இரவில் விழித்துக்கொள்கையில் அவ்வெண்ணம் எழுந்து அனல்கொண்டு நின்று தவித்தது. முறுகி முறுகி உட்டணம் கொண்டு மறுபுரி சுழன்று தளர்ந்து சோர்ந்து கண்ணீர் நிறைந்து  இரு கன்னங்களிலும் வழிந்து காதுகளை அடைய விசும்பலை அடக்கி இருட்டுக்குள் படுத்திருந்தாள். வெறி கொண்டெழுந்தோடி வாயிலைத் திறந்து முற்றத்தைக் கடந்து அவன் குடில் வாயிலைத் திறந்து உள்ளே சென்று அவனருகே அமர்ந்து தலைமயிரை பற்றித் தூக்கி உலுக்கியபடி “சொல், நான் உனக்கு எவள்?” என்று கூவவேண்டுமென்று  விழைந்தாள். ஒருபோதும் நிகழாத அதை ஓராயிரம் முறை நடித்து சலித்தாள். ஒவ்வொரு முறையும் அவ்வெண்ணம் எழுகையில் உடல் பதறும் மறைமுக உவகைக்கு ஆளானாள்.


தன் விழிகளால் அவன் இறைஞ்சவேண்டும், தன் இரங்கும் சொற்களை அவள் காலடியில் வைத்து கோரவேண்டும்,  முற்றிலும் காதலென்றாகி உருகி தன் முன் நின்றிருக்கவேண்டும். தன்னிடம் அவன் காதல் சொல்லும் காட்சிகளை மீண்டும் மீண்டும் கற்பனையில் நிகழ்த்திக் கொண்டிருப்பதே அவள் நாட்களை அமைத்தது. தனித்திருக்கும் அவளை அணுகி தயங்கி நின்று, விழிதூக்கி என்ன என்று அவள் கேட்க “என்னை கொல்லாதே! உன் சொல்லின்றி ஒரு கணமும் உயிர் வாழேன்” என்றான். நீராடி சுனைவிட்டெழுந்து வருகையில் அவளை சோலையில் மறித்து “உன் அழகு என்னை பித்தனாக்குகிறது. இப்புவியில் பிறிதொன்றும் வேண்டேன்” என்றான். இரவில் துயிலின்போது அவள் குடிலின் சிறு சாளரத்தருகே வந்து இரவெல்லாம் நின்று அவள் மென்துயில்விழிப்பில் கேட்கும்படி  நீள்மூச்செறிந்தான். எழுந்து நோக்கிய அவளிடம் “குலம் வேண்டேன், குடி நாடேன், உற்றார் சேரேன், உன் அருகொன்றே போதும். எங்கும் செல்வேன், எவ்விழிவிற்கும் சித்தமாவேன், உன் சொல்லொன்றே வேண்டும்” என்றான். “மன்று நிற்பேன். மடலூர்வேன். பிறிதொன்றும் தேரேன். உயிர் விடுவேன். கடுநரகில் உழலவும் ஒருங்குவேன்” என்றான். ஒவ்வொரு கற்பனைக்குப் பின்னரும் ‘என்ன இது? எத்தனையோ முறை கூத்திலும் காவியத்திலும் கண்டது’ என்று அவளே ஏளனத்துடன் எண்ணிக்கொண்டாள்.  மீண்டும் மீண்டும் அதற்குள் வந்துகொண்டுமிருந்தாள்.


எப்போதோ ஒருமுறை “என்ன அலைக்கழிவு இது! இரும்புச்சிலையென்று இங்கிருந்தவள்தானா நான்? நீர்ப்பாவை நெளிவென எப்போது மாறினேன்? இத்தனை எளிதாக ஓர் ஆண் முன் தோற்கக்கூடியவளா? இதுதான் என்றும் நிகழ்கிறதா?” என்று தன்னை கேட்டுக்கொண்டாள். “தோற்பது இவனிடமல்ல, காமத்திடம். அது பிறிதெங்கும் இல்லை.  என்னுள் எழுந்துள்ளது. சிலையில் எழுந்த தெய்வத்திடம் சிலை தோற்கலாகாதா என்ன?” அவன் முன் செல்லும்போது தருக்கி நிமிரவேண்டும் என ஒவ்வொரு முறையும் அவள் எண்ணுவாள். ஆனால் செயற்கையான மிடுக்காக அது மாறும். அந்த நடையும் தோற்றமும் பழக்கமற்றவை என்பதனால் ஏதோ ஒன்று பிழையென்று ஆகும். கால் தடுக்கும், கைகளில் இருந்து ஏதோ ஒன்று நழுவும், எங்காவது தோள் இடித்துக்கொள்ளும். அது அவனை திரும்பிப் பார்க்கச்செய்யும். பின்னர் எண்ணிக்கொண்டாள், அது அவனை திரும்பச் செய்யவேண்டும் என்றே தன்னுள் வாழும் பிறிதொன்று ஆற்றும் சூழ்ச்சியா என. தெய்வங்களே, மூதன்னையரே, எத்தனை பேரின் கலவை நான்? என்னென்ன சேர்ந்து சமைத்தது என் உள்ளம்? ஒரே தருணத்தில் எத்தனை களங்களில் ஆடிக்கொண்டிருக்கின்றேன்!



tigerவேங்கைகள் அவனிடம் பூனைக்குட்டிகளென்றாவதை அவள் பார்த்துக்கொண்டிருந்தாள். காட்டுக்குள் சென்ற அவனுக்காகக் காத்து அவை குருநிலையின் எல்லையில் அமர்ந்திருந்தன. அவன் வந்ததுமே செல்ல முனகலுடன் தாவி அவனை நோக்கி ஓடி எழுந்து கைவிரித்து அவனை அணைத்துக்கொண்டன. சுழன்று சுழன்று அவன் உடலை உரசி முத்தமிட்டன. என்ன செய்வதென்றறியாமல் பாய்ந்து ஓடி விலகி செவி பின்னுக்குச் சரித்து உடல்முடி காற்றில் அலைபாய கால்கள் ஒலிக்க அவனை நோக்கி பாய்ந்துவந்தன. அவனுக்கும் அவற்றுக்குமான உறவு குருநிலையிலேயே பேச்சென்றாகியது. அவனைக் கண்டதுமே வால் தூக்கி கால் பரப்பி உடல் குழைத்து கொஞ்சி அணுகும் வேங்கைகளைக் கண்டு பெண்கள் வாய்பொத்தி விழியொளிர நகைத்தனர். அவற்றின் கழுத்தையும் தலையையும் அவன் வருடிக் கொடுக்கையில் அவன் உடலில் தங்கள் உடல் சேர்த்து அவை நழுவிச்சுழல்கையில் ஆண்கள் முகங்களை இறுக்கி புன்னகையை கண்களில் மட்டுமே மின்னவிட்டனர்.


அவனுடன் விளையாடிக்கொண்டிருக்கையில் எங்கோ அவள் குரல் கேட்டு செவி திருப்பி மணம் கூர்ந்து தாவி அவளிடம் ஓடி பாய்ந்து அவள் உடலில் பற்றி ஏறி அவள் முகத்தில் முத்தமிட்டு தோளில் தலை வைத்து இடை பற்றி அணைத்து அவளை நிலை தடுமாற வைத்து அவை குலவின.  மெல்ல அவற்றின் நடத்தையில் ஒரு மாறுதல் நிகழ்வதை அவள் கண்டாள். அவளிடம்  சிறு குருளைகள்போலவே நடந்துகொண்டிருந்த அவை ஆண்மைமிடுக்கு கொள்ளலாயின. விழிகள் நிலைத்து கூர்ந்து நோக்க எண்ணி எடுத்து மெல்ல வைக்கும் கால்களுடன் நீட்டப்பட்ட வால்களுடன் அவளை நோக்கி வந்தன. அவளருகே அவளை நோக்காமல் தலைநிமிர்ந்து படுத்துக்கொண்டன. அவளருகே அயலவர் எவர் வந்தாலும் தோல்வாரைச் சுண்டுவதுபோன்ற மெல்லிய ஒலியெழுப்பி உறுமின. அவ்வொலியிலிருந்த எச்சரிக்கையை அத்தனை பேரும் அக்கணமே உணர்ந்து அஞ்சி விலகினர்.


இரவில் அவள் குடிலுக்கு வெளியே அவை ஒளிரும் விழிகளுடன் படுத்திருந்தன. விழிப்பு கொண்டு அவள் மஞ்சத்திலிருந்து மிகமெல்ல காலடி எடுத்துவைத்தாலும்கூட அந்த ஒலிகேட்டு மெல்லிய உறுமலுடன் அவற்றில் ஒன்று எழுந்து சாளரத்தினூடாக அவளை நோக்கியது. அவள் சோலையில் தனித்திருக்கையில் அவளை அணுகாமல் நோக்காமல் ஆனால் அவளுடன் என அவை சூழ்ந்து படுத்து பிறிதெதையோ செய்துகொண்டிருந்தன. பூச்சிகளை விரட்டியும் கைநகங்களையும் விலாவையும் நக்கி தூய்மைசெய்தும் சிறுகற்களை கைகளால் உருட்டிவிளையாடியும் அவளை அறியாதவையாக இருந்தன. அவள் அழைத்தால் ஒருகணம் கழித்தே அவை எழுந்து அருகே வந்தன. வாலை நீட்டியபடி ‘சொல்’ என நோக்கி நின்றன. அவற்றின் தலையிலும் கழுத்திலும் அவள் வருடியபோது அவற்றிலிருந்து அதுவரை அறிந்திராத மணம் ஒன்று எழுந்தது. அது பிற வேங்கைகளையும் அருகே வரச் செய்தது. அவை தன்னிடமிருந்து முற்றிலும் விலகிவிட்டன என்று அவளுக்குத் தோன்றியது. எப்போதும் உடனிருக்கையிலும் அவை அப்பாலிருந்தன.


அவற்றை அருகணையச் செய்ய அவள் செய்த முயற்சிகள் வீணாயின. அவற்றின் விழிகளை நேர்நோக்குகையில் அவள் நோக்கு சரிந்தது. அவற்றின் நோக்கு அவள்மேல் படிகையில் உள்ளுணர்வே அதை அறிந்தது. அவையறியாது அவற்றை நோக்கிக்கொண்டிருக்கையில்தான் வேங்கை எத்தனை நிமிர்வுகொண்ட விலங்கு என அவள் அறிந்தாள். யானையில் எடையாக புரவியில் விரைவாக காளையில் அமைதியாக வெளிப்படும் ஆற்றலே வேங்கையில் மென்மையென ஆகியது. ஓசையற்ற காலடிகள், வட்டக் குழவிமுகம், செவ்வுதடுகள், பால்படிந்த பைதல்விழிகள், மென்மயிர் தோல்நெளிவுகள். ஆனால் எழுந்து நடந்து அணுகுகையில் ஒவ்வொரு அணுவிலும் ஆண். சினந்து மூக்குநீட்டி செல்கையில் நூறுமுறை தீட்டிய வாள். கால்கள் படிய படுத்து கண்மூடித் துயில்கையிலும் நாணேற்றி அம்புபூட்டிய வில்.


சாளரம் வழியாக அவள் நோக்கி நின்றிருக்கையில் முற்றத்து சாலமரத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த பெரிய செம்பு அண்டா ஒன்றை ஐயத்துடன் அணுகி முகர்ந்து நோக்கியது ஒரு வேங்கை. அதன்பின் கையால் அதை அடித்துப் பார்த்தது. உளநிறைவுடன் சுற்றிவந்து கால்தூக்கி ஒரு சொட்டு சிறுநீர் கழித்தது. மீண்டும் சுற்றிவந்து அதன் விளிம்பில் காலை வைத்தது. அண்டா உருண்டு சரிந்து அதன் கால்மேல் விழ வீரிட்டு அலறியபடி அண்டாவின் விளிம்புக்கு அடியில் சிக்கிக்கொண்ட காலை இழுத்து எடுத்துக்கொண்டு மூன்று காலில் நொண்டியபடி ஓடி அவள் குடிலை நோக்கி வந்தது. அரற்றி அழுதபடி அவள் காலடியில் வந்து படுத்துக்கொண்டு அடிபட்ட காலை தூக்கிக் காட்டியது. அவள் சிரித்துக்கொண்டு அதன் காலைப்பற்றி நோக்கினாள். மெல்லிய வீக்கம் உருவாகத் தொடங்கியிருந்தது. அவள் அதை மெல்ல அழுத்தியபோது அது ஊளையிட்டபடி அந்தக் காலை நக்க வந்தது.


அவள் அடிபட்ட இடத்தை மெல்ல தடவிக்கொடுத்ததும் நா நீட்டி மூக்கை நக்கி காதுகளை சிலிர்த்தபடி அது ஒருக்களித்து படுத்தது. அவள் அதன் விலாவை தடவியபோது நான்கு கால்களையும் தூக்கி அடிவயிற்றைக் காட்டியது. அவள் வயிற்றைத் தடவியதும் பனையோலை கிழிபடும் ஓசையுடன் விழிசொக்கி சப்புகொட்டியது. அதன் இரு உடன்பிறந்தவையும் கால்தூக்கி வைத்து உள்ளே வந்தன. ஒரு வேங்கை அவள் அருகே வந்து படுத்து தானும் நான்கு கால்களையும் தூக்கி அடிவயிற்றைக் காட்டியது. அவள் அதையும் தடவிக்கொடுத்தபோது விழிசொக்கியது. அடிபட்ட வேங்கை ஒரு கண்ணை மட்டும் திறந்து உடன்பிறந்தவனை நோக்கியபின் மறுபக்கம் திரும்பிப் படுத்தது. மூன்றாம் வேங்கை ‘சரியான முட்டாள்கள்’ என முகம் காட்டி கண்களைச் சுருக்கியபடி வெளியே நோக்கி குடிலுக்குள் அமர்ந்தது. அவள் புன்னகையுடன் மல்லாந்த வேங்கையின் வயிற்றை வருடியபடி “என் செல்லம் அல்லவா? என் கண் அல்லவா? அமைதியாக உறங்கு…” என்று கனிந்த குரலில் சொன்னாள். அது கண்களை மூடிக்கொண்டு வாலைமட்டும் மெல்ல ஆட்டிக்கொண்டிருந்தது.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–53
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–52
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–51
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–49
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–48
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–14
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 37
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 13
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 75
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 2
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 58
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 72
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 67
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 89
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 31
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 26
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 25
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 12
‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 2
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 59
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 25, 2017 11:30

March 24, 2017

அசோகமித்திரன் அஞ்சலிக்கூட்டம்

ami


சிலேட் இதழ், படிகம் கவிதையிதழ், விஷ்ணுபுரம் இலக்கியவட்டம் சார்பில் அசோகமித்திரனுக்கு ஓர் அஞ்சலிக்கூட்டம் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.


 


நாகர்கோயில் ஏ.பி.என் பிளாஸா அரங்கில் மாலை ஆறுமணி


 


எம் வேதசகாயகுமார், லட்சுமி மணிவண்ணன், கார்த்திகைப்பாண்டியன், போகன் சங்கர், நட.சிவக்குமார்,ராம், ஜெயமோகன்


ஒருங்கிணைப்பு ரோஸ் ஆண்டோ [படிகம்]


 


அனைவரும் வருக


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 24, 2017 11:39

கல்வி – தன்னிலையும் பணிவும்

nitya


நான் லெளகீக வாழ்க்கையில் (படிப்பு, வேலை….) வென்று பழகியவள். ஒரு படி கீழே நிற்பதென்பது பழக்கப்படாத அனுபவம். இதை நான் ஆணவத்துடன் குறிப்பிடவில்லை. மற்றவர்கள் என் மீது வைத்திருக்கும் எதிர்பார்ப்பை விட நான் என் மீது சுமந்து செல்லும் எதிர்பார்ப்பு பல மடங்கு.


 


தஞ்சை சந்திப்பைக் குறித்து பிரியம்வதா எழுதிய கடிதத்தின்  மேலே குறிப்பிட்ட வரிகள்  என்னை கவர்ந்தன  அக்கடிதத்திற்கான பதிலில் அதை எழுதத் தொடங்கியபின் ஒரு தனிப்பதிவாகவே அதை எழுதுவது நன்று என்று தோன்றியது.


 


நாம் நெடுங்காலம் வேர் விட்டு வளர்ந்து நிலை கொண்ட நிலப்பிரபுத்துவ அமைப்பொன்றின் இறுதிக்காலகட்டத்தில் பிறந்தவர்கள். நமது தந்தையர் அந்நிலப்பிரபுத்துவ காலகட்டத்துக்குள் முழுமையாகத் திளைத்து வளர்ந்து வந்தவர்கள். அவர்கள் அவ்விழுமியங்களையே நமக்கு அளித்தனர். ஆகவே குடும்பம், பள்ளி, அலுவலகம் ,சமூகச் சூழல் அனைத்திலுமே அந்நிலப்பிரபுத்துவத்தின் மரபுகளும் நெறிகளும் நம்பிக்கைகளுமே மேலோங்கி நின்றன.


 


நிலப்பிரபுத்துவத்தின் அடிப்படை என்பது மாறாத மேல் கீழ் அடுக்குகளை உருவாக்கி நிலை நிறுத்துவதுதான். நிலப்பிரபுத்துவத்தைத் தாண்டி வந்திருக்கும் இச்சூழலில் இன்று அதைப்பார்க்கும்போது அந்த அடுக்கதிகாரம் நமக்கு சோர்வை அளிக்கிறது. அதன் அடக்குமுறையும் அடிமைப்படுத்தலும் சினத்தை எழுப்புகின்றன. ஆனால் அதற்கு முந்தைய பழங்குடிக் காலகட்டத்தின் கட்டற்ற தன்மைக்கு எதிராக மெல்ல மெல்ல மானுடம் உருவாக்கிக் கொண்ட ஓர் அமைப்பு  நிலப்பிரபுத்துவம்.


 


மார்க்சிய சிந்தனையை ஓரளவேனும் கற்ற ஒருவர் பழங்குடிகளின் கட்டற்ற பரவலான பண்பாட்டுவெளிக்கு நிலப்பிரபுத்துவம் பல வகையிலும் முற்போக்கான வளர்ச்சியையே அளித்தது என்பதை உணர்வார்கள். நிலப்பிரபுத்துவ அமைப்பு பழங்குடி சமுதாயங்களை ஒன்றுக்குமேல் ஒன்றென அடுக்கி உறுதியான பெரும்சமூகங்களை உருவாக்கியது, பேரரசுகளை கட்டமைத்தது. அதன் வழியாக உபரி தொகுக்கப்படவும் முறையாக பகுக்கப்படவும் வழிவகுத்தது. உபரியை உருவாக்கும் ஒருங்கிணைந்த வேளாண்மை, பாசனம், வணிகம் ஆகியவற்றை உருவாக்கியது. வலுவான அரசுகளை உருவாக்கி கொள்ளையும் சூறையாடலும் இல்லாமல் ஆக்கியது.


 


அதன் விளைவாகவே கலைகளும் இலக்கியங்களும் சிந்தனைகளும் தொழில்நுட்பங்களும் வளர்ந்து வந்தன. நிலப்பிரபுத்துவத்திற்குமேல் எழுந்து வந்த முதலீட்டியம்  நிலப்பிரபுத்துவத்தோடு ஒப்பிட்டு நோக்குகையில் மேலும் முற்போக்கானது. அது நிலப்பிரபுத்துவத்தில் பல வகையிலும் நிலத்தில் தேங்கிக் கிடந்த முதலீட்டை விடுவித்து ஒற்றைப்பெருந்தொகுப்பாக ஆக்குகிறது. அதை உற்பத்தியிலும் விநியோகத்திலும் ஈடுபடுத்துகிறது. முதலீட்டை கலைகளை வளர்க்கவும் ,இலக்கியங்களையும் சிந்தனைகளையும்  பெருக்கவும் தொழில் நுட்பத்தை வலுப்படுத்தவும் பயன்படுத்துகிறது.


 


நம் இந்தியாவில் நிலப்பிரபுத்துவத்தின் இறுதிக்காலமென்று இந்திய சுதந்திரப்போராட்ட காலத்தை சொல்லலாம். முதலீட்டியம் உருவாகி வந்த காலம். நமது தந்தையரின் காலகட்டத்தில் ஓங்கியிருந்த நிலப்பிரபுத்துவத்திற்குள் முதலீட்டியம் ஊடுருவத் தொடங்கியதென்றால் நமது காலகட்டத்தில் முதலீட்டியம் ஓங்கி அதற்குள் நிலப்பிரபுத்துவம் உள்ளடங்கியிருக்கிறது.  இன்று நம் வாழ்வில் நேரடியாக நிலப்பிரபுத்துவத்திற்கு இடமில்லை. நாம் முதலீட்டியத்தின் ஊழியர்கள். அதில் பங்களிப்பாற்றுபவர்கள்.


 


ஆனால் சென்ற காலம் பொருளியல்தளத்திலும் அரசியல்தளத்திலும் பின்னகர்ந்து விட்டாலும் கூட சமூகத் தளத்திலும் பண்பாட்டுத்தளத்திலும் நீடிக்கவே செய்யும். இன்று நம்மை ஆளும் மதிப்பீடுகள் நிலப்பிரபுத்துவக் காலத்தைச் சேர்ந்தவை .அவை இலக்கியங்களாக, நீதிநூல்களாக ,ஆசாரங்களாக, ஒழுக்க வரையறைகளாக ,அற மதிப்பீடுகளாக ஆழ்படிமங்களாக நம்மை நோக்கி வந்து கொண்டே இருக்கின்றன. தொடர்ச்சியாக அவற்றை உற்று நோக்கி ஆராய்ந்து மறுமதிப்பீடு செய்வதினூடாகவே நாம் அவற்றை கடந்து செல்ல முடியும். ஓரிரு தலைமுறைகளுக்குப்பின்னரே அம்மதிப்பீடுகளிலிருந்து முழுமையாக விடுபடவும் முடியும்.


 


அம்மதிப்பீடுகளில் அடுத்த கட்டத்திற்கும் பொருந்தக் கூடிய சாராம்சமான பகுதிகள் மறுஆக்கம் பெற்றுத் தொடரும். அவை பெரும்பாலும் அறமதிப்பீடுகளே ஒழிய ஒழுக்க மதிப்பீடுகளோ நெறிமுறைகளோ ஆசாரங்களோ அல்ல. அந்த மாற்றம் மிகமெல்ல வளர்சிதை மாற்றமாக, முரணியக்கத்தின் வழியாக மட்டுமே நிகழமுடியும். பெரும்பாலும் அது நிகழ்ந்தபின்னரே அதன் முழுச்சித்திரத்தை நாம் அடைவோம்.


 


இச்சூழலில் நாம் ஒவ்வொருவரும்அறியும் ஓர் இடருண்டு. நமது குடும்பத்தில் தந்தைக்கும், கல்வி நிலையங்களில் ஆசிரியருக்கும், தொழில் நிலையங்களில் மேலதிகாரிகளுக்கும், சமூகச் சூழலில் மூத்தவர்களுக்கும் முழுமையாக அடிபணியவே நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளால் கற்பிக்கப்பட்டிருக்கிறோம். இயல்பாகவே நாம் அதை செய்தும் வருகிறோம். இன்றைய தலைமுறையில் அந்த மதிப்பீடுகளை உதறி முன்னகரும் இயல்பு உருவாகிறது. பெரும்பாலும் நவீன தொழிற்சூழலில் இருந்து இது முளைவிடுகிறது.


 


முதலீட்டியம் வலுப்பெற்ற அமெரிக்க ஐரோப்பா நாடுகள் தொழில்துறையில் பழையகால நிலப்பிரபுத்துவப் பண்புகள் எதிர்மறை விளைவுகளை உருவாக்குபவை என்று கண்டடையப்பட்டுள்ளன. அங்கு முதலீட்டியத்தால் வரையறுக்கப்பட்ட உறவுகளும் உணர்வுகளுமே சிறப்பான பயனை விளைவிக்ககூடியவை என்று உணரப்பட்டிருப்பதால் அவை வலியுறுத்தப்படுகின்றன.


 


90களுக்குப்பிறகு உலகமயமாக்கம் இந்தியாவில் ஐரோப்பிய அமெரிக்கபாணி தொழில்- வணிகச் சூழலை உருவாக்கியது. குறிப்பாக கணிப்பொறித்துறை போன்றவற்றில் ஐரோப்பிய பாணி நிர்வாகிகளும் தொழில்உறவுகளும் உருவாயின. அங்கு மேல் கீழ் அடுக்கு என்பவை ஆசாரங்களாகவோ நம்பிக்கைகளாகவோ இல்லை. நிர்வாகத்தின் பொருட்டு உருவாக்கப்பட்ட தொழில்முறை உறவுகளே உள்ளன. அங்கிருந்து அந்த மனநிலை கல்வி நிலையங்களுக்கு வந்துள்ளது. மெல்ல குடும்பங்களுக்கும் வந்து சேர்ந்து கொண்டிருக்கிறது.


 


விளைவாக எவரும் தன்மேல் ஆதிக்கம் செலுத்துவதை அனுமதிக்காமலிருக்கும் மனநிலை இளைஞர்களிடம் இன்று வளர்ந்து கொண்டிருக்கிறது. தந்தையோ ஆசிரியரோ மேலதிகாரியோ மூத்தவர்களோ அவர்களிடம் ஆணையிட இயல்வதில்லை. மானுடனாக தான் பிறருக்கு முற்றிலும் சமானமானவன் என்ற உணர்வை இளமையிலேயே அவர்கள் அடைந்துவிடுகிறார்கள். எனக்கும் என் தந்தைக்குமான உறவல்ல எனக்கும் என் மகனுக்குமான உறவு. நான் என் தந்தைக்கு நிகராக நின்று ஒருசொல்லும் பேசியதில்லை.என் மகன் என்னை அஞ்சுவதில்லை, அடிபணிவதுமில்லை.


 


இது மிகப்பெரிய வாய்ப்பு என்பதை மறுக்க முடியாது. தனது அறிவார்ந்த தேடலையும் ஆன்மீகமான மலர்வையும் நோக்கி ஒவ்வொரு தனியாளுமையும் சென்று சேர்வதற்கான விடுதலையை இது அளிக்கிறது. அதற்கெதிரான சமூகத் தடைகள் அனைத்தையும் பெரும்பாலும் விலக்குகிறது. பிறிதொருவரின் வாழ்க்கைக்குமேல் நாம் செல்வாக்கு செலுத்துவது பிழை என்ற எண்ணம் இன்று வலுப்பெற்று வருகிறது. தன்மேல் பிறர் செலுத்தும் ஆதிக்கம் என்பது ஒருவகையில் அத்துமீறலே என்னும் எண்ணம் உருவாகி நிலைபெற்றுள்ளது. அனைத்து வகையிலும் முந்தைய நிலப்பிரபுத்துவ மதிப்பீடுகளிலிருந்து முற்போக்கானதென்றும் பயன் மிக்கதென்றும் இதை ஐயமில்லாமல் சொல்ல முடியும்.


 


ஆனால் அனைத்து தளங்களிலும் அல்ல. இதை ஒரு விவாதக்குறிப்பாகவே முன் வைக்கிறேன். கற்றுக் கொள்ளும் இடங்களில் இந்த ஆதிக்கஎதிர்ப்புமனநிலை என்பது பலசமயம் எதிர்மறை இறுக்கத்தை அளிக்கிறது. ஏற்றுக்கொள்வதற்கு எதிரான வீம்பாக மாறுகிறது. புதியவை உள்ளே வருவதைத் தடுக்கும் ஆணவத்தின் கோட்டை என ஆகிவிடுகிறது.


 


தந்தையிடம், நிறுவனம்சார்ந்த ஆசிரியரிடம், மேலதிகாரியிடம், மூத்தவரிடம் அதிகாரத்திலோ ஆளுமையிலோ முற்றிலும் நிகரென்று நிற்கலாம். அவர்கள் நம் மேல் செலுத்தும் ஆதிக்கத்தை முழுமையாகவே நம்  ஆளுமை கொண்டு எதிர்க்கலாம். அது விடுதலையளிக்கும். ஆனால் அதே எதிர்ப்பு நம்மை உடைத்து வார்க்கும் வாய்ப்புள்ள, நமக்கு முற்றிலும்புதிய ஒன்றைக் கற்பிக்கும் வழிகாட்டியான ஆசிரியனிடம் செலுத்தப்படும் என்றால் அங்கு கல்வி மறுப்பே நிகழும்.


 


கல்லூரியில் என்னுடைய பேராசிரியர்களிடம் நான் தலைவணங்கியதில்லை. ஆனால் என் குருநாதர்களிடம் தலைவணங்கவே செய்தேன். நித்ய சைதன்ய யதியிடம் முழுதாகப் பணிந்தேன். அதன்மூலம் பயன் பெற்றேன் என்றே சொல்வேன். எனது ஆணவத்தை அவர்கள் முன்னால் திறந்து வைத்தேன் என்பதை மறுக்கவில்லை. ஆனால் அதை அவர்கள் உடைக்கவும் அவர்கள் என்னுள் புகவும் நான் அனுமதித்தேன். அது எனக்கு இறப்புக்கு நிகரான அனுபவமாக இருந்தாலும் அதனூடாகவே நான் என் இளமையின் அறியாமை எனக்களித்த ஆணவத்திலிருந்து வெளியே வந்தேன்.


 


இதற்குக் காரணம், சிந்தனையைத்தான் நூல்கள் அளிக்கமுடியும் சிந்திப்பதை ஆசிரியர்களே கற்பிக்கமுடியும் என்பதுதான். நம் எண்ணங்களை தர்க்கபூர்வமாக மாற்றுபவன் முதன்மை ஆசிரியன் அல்ல. தன் ஒட்டுமொத்த ஆளுமையையே நம் மீது பதிப்பதன்மூலம் நம்மை உடைத்து உருமாற்றி வார்ப்பவனே முதன்மையாசிரியன். குரு என்னும் சொல்லால் அதை குறிக்கலாம். அவன் எங்கே எப்படி நம்மை பாதிக்கிறான் என நாம் எளிதில் அறியமுடியாது. நம் உலகநோக்கை, சிந்தனைமுறையை நம்மையறியாமலேயே அவன் மாற்றுகிறான்.


 


இது ஒரு நுட்பமான குறியீட்டுத் தொடர்பு என்றே என் அனுபவத்திலிருந்து எனக்குத் தோன்றுகிறது. ஆசிரியனுடனான நம் உறவில் நாம் அவனை மெல்லமெல்ல ஓர் அடையாளமாக ஆக்கிக்கொள்கிறோம். அவன் சொல்லாதவற்றையும் அவனிடமிருந்து பெற்றுக்கொள்கிறோம். அந்த நுட்பமான தொடர்புறுத்தலுக்கு தடையாக இருப்பது எப்போதும் தர்க்கபுத்தியை தீட்டி முன்வைத்திருப்பது, தன்னை முன்வைத்து எதிர்த்துக்கொண்டே இருப்பது


 


நம்மீது கருத்தியலாதிக்கத்தை செலுத்த எவரையுமே அனுமதிக்காத இறுக்கத்தை நாம் கொண்டோமென்றால் நாம் எங்கு நிற்கிறோமோ அங்கேயே இறுதி வரை நின்று கொண்டிருப்போம். நம்முள் எந்த புதுக்கருத்தும் உள்ளே வரவும் முளைத்து மேலெழவும் அனுமதிக்காமலிருப்போம்.


 


நம்மை முழுமையாக பிறருடைய கருத்துக்களுக்கு விட்டுக் கொடுத்து ஒரு கால்பந்தாட்டத்தின் பந்து போலாவது எவ்வளவு அசட்டுத்தனமானதோ அதற்கிணையாகவே இரும்புத்தூணென நின்ற இடத்திலேயே நின்று கொண்டிருக்கும் உறுதியும் அபாயகரமானது. அறிவுத்துறைகளிலோ கல்விநிலையங்களிலோ நிலவும் வெறும் மேலாதிக்கத்தை ஏற்றுக்கொள்வதைப்பற்றி நான் இங்கு சொல்லவில்லை. உண்மையிலேயே நமது தேடலைத் தொட்டு நமது ஆழ்தளங்களை விரியச்செய்யும் ஆசிரியனிடம் நாம் அதே வெற்றாணவத்தைக் காட்டக்கூடுமா என்பதைப்பற்றி மட்டுமே இங்கு சொல்லியிருக்கிறேன்.


 


இது பெரும்பாலும் தனிப்பட்ட தெரிவென்பதை மறுக்கவில்லை. தன் ஆளுமையாகவே தன்முனைப்பையும் கட்டமைத்து வைத்திருப்பவர்களிடம் இச்சொற்கள் எந்த விளைவையும் ஏற்படுத்தப்போவதில்லை.ஒருவர் தன் குருவை தானேதான் தெரிவுசெய்துகொள்ளவேண்டும். முதன்மையாசிரியர்களை, குருநாதர்களை, அணுகும் வழி என்று மட்டுமே இதைச் சுட்டிக்காட்ட விழைகிறேன். உதாரணமாக நான் நடத்தும் நவீன இலக்கிய விவாதங்களில் தன்னிலையைப் பேணிக்கொள்ளும் ஒருவர் நல்ல பங்களிப்பை ஆற்றமுடியும். ஆனால் சுவாமி வியாசப்பிரசாத் போன்ற குருநாதர்களிடம் அந்தமனநிலையுடன் அணுகினால் வெறும் ஆணவமே எஞ்சும்.நான் சுட்டிக்காட்ட விரும்புவது இந்த வேறுபாட்டையே.


 


சமூக வலைதளங்களைப்பார்க்கையில் இந்த தலைமுறையின் மிகப்பெரும்பாலானவர்கள் தங்கள் இளமையின் அறியாமை அளிக்கும் வெற்றாணவத்தை கடந்து செல்லும் ஓர் ஆளுமையைக் கூட எதிர்கொண்டதில்லையென்றும் அல்லது எதிர்கொண்டாலும் அவர்களை அவர்கள் தங்கள் மேல் அனுமதிப்பதில்லையென்றும்தான்  தோன்றுகிறது. எத்தகைய தகுதி கொண்டவரையும் தனக்கு நிகரெனக் கருதி அவர்கள் சொல்லாடுகிறார்கள். ஆகவே அவர்களிடமிருந்து ஒரு சொல்லைக்கூடப் பெற்றுக்கொள்வதில்லை. மிகப்பெரிய இழப்பு இது. ஆனால் அவர்கள் அந்த எல்லையைக் கடந்து உண்மையான அறிதலை அடையாதவரை தாங்கள் இழப்பது என்ன என்று அறியாமலேயே இருப்பார்கள். தாங்கள் உறுதியான தன்னிலையுடன்  தன்மதிப்புடன் இருப்பதாக எண்ணிக்கொள்வார்கள்.


 


அனைத்து புதிய கருத்துக்களையும் முன்னரே அறிந்தவற்றைக் கொண்டு எதிர்கொள்வது, தன்னை ஒரு பீடத்தில்வைத்துக்கொண்டு பிறவற்றைக் கிண்டல் செய்வது,  புறக்கணிப்பது  ஆகியவற்றைச் செய்பவர்கள் எங்கே தொடங்குகிறார்களோ அங்கிருந்து ஒருகணமும் முன்னகர முடியவில்லை என்பதைக் கானலாம். பத்தாண்டுகளாக சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துக்களை எதிர்கொண்டு பேசிக்கொண்டிருக்கும் ஒருவர் பத்தாண்டுகளுக்கு முன் எங்கு தொடங்கினாரோ அதே அறிவுத்தளத்தில் நின்றிருக்கிறார் என்றால் மிகப்பயனற்ற ஒரு செயலை பத்தாண்டுகளாக அவர் செய்து கொண்டிருக்கிறார் என்று தான் பொருள்.


 


இன்றைய முதலீட்டிய உலகில் பிற அனைத்து துறைகளிலும் சுதந்திரம், தனித்துவம், வணங்காமை, தன்முனைப்பு ஆகியவை  ஒருவகைப் பண்புகளாகவே நிலைகொள்கின்றன. கற்றுக்கொள்ளும் இடத்தில் மட்டும் உரிய இடத்தில் வணங்குதலும் உரிய முறையில் பணிதலும் அங்கே அவசியமானவை என்று தோன்றுகிறது. நாம் நமது வணக்கத்தின் மூலம், பணிதலின் மூலம் நாம் நம்து எல்லையைக் காணமுடியும். நமது பலவீனங்களையும் குறை பாடுகளையும் அளந்து அடையாளப்படுத்திக்  கொள்ள முடியும். அதன்பின்னரே நம்மை நாமே உடைத்து மறுவார்ப்பு செய்ய முடியும்.


 


நமது வெற்றிடங்களை அடையாளம் கண்டு மீண்டும் மீண்டும் நம்மை நிரப்பிக் கொள்ளும்போதே உண்மையில் கல்வி நிகழ்கிறது. அதனூடாகவே வெளியிலிருந்து வரும் சிந்தனைகளுக்கும் உணர்வுகளுக்கும் நம்முள் இடமளிக்க முடியும். அவற்றை நம்முள் நாமே வளர்த்து எடுக்க முடியும் அதனூடாக நாம் வளர்ந்து நாம் பணிந்தவர்களையும் வணங்கியவர்களையும் உண்மையிலேயே நிகரெனக்காணும் இடத்தை அடைய முடியும். கடந்து செல்லவும் கூடும்.


 


பிற உறவுகளிலிருந்து இவ்வுறவு வேறுபட்டது. பிற சமூக உறவுகள் அனைத்திலும் சற்றேனும் பொருளியல்சூழலின் கட்டாயங்கள் கலந்துள்ளன. அவை காலந்தோறும் நுணுக்கமான மாற்றங்களையும் அடைகின்றன. நிலப்பிரபுத்துவ காலகட்டக் காதலும் முதலீட்டியக் காலகட்டக் காதலும் வேறுபட்டவை. ஆனால் ஆசிரிய மாணவ உறவு எப்போதுமே காலாதீதமானது.


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 24, 2017 11:35

அ.மி

OLYMPUS DIGITAL CAMERA


 


இனிய ஜெயம்,


 


இந்நாள் வாசித்தேன்.  புரிந்துக்கொள்ள முடிந்தது.  உங்கள் இல்லத்தில் [ நூல் அலமாரி மேல் ]  அலங்கரிக்கும் ஒரே படம் அசோகமித்திரன் அவர்களுடையது.நீங்களே சொல்வது போல, தர்க்கப் பூர்வமாக  அதை வகுக்க இயலாது. ஒரு எழுத்தாளுமை மற்றொரு எழுத்தாளுமை உதிர்ந்து  மொழியில்,காலத்தில் கரைவதை அந்தரங்க நிலையில்  உணரும் கணம். தமிழில் ‘இதுவரை’ சொல்லப்படாத நிலை.


 


சரிஇதை தினசரிகள் எப்படி எதிர்கொள்கின்றன? பஜார் வழியில் தந்தி ,தினமலர் தலைப்பு பதாகைகள் கண்டேன். தந்தி  சசிகலாவுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டிருந்ததில் நிலை கொண்டிருந்தது. தினகரனுக்க்கு சம்பள சிக்கல் மேல் ஆர்வம். தினமலருக்கு  பின்நவீன  துக்கம் பன்னிரண்டு  வயதில் அப்பா ஆன சிறுவன் பின்னால் அது போனது. ஒரு காலக்கட்டத்து சமூகம் கண்ட  உயர் செல்வம் எழுத்தாளன். அந்த சொரணை  இத்தகு தினசரிகள் வசம் இருந்தால்  தமிழ் சமூகம் விளங்கித் தொலைத்து விடுமே.


 


சொல்லால், செயலால், மூச்சாவால், சாதி கடந்த அன்பர்களின்   முகநூலில்  அமி பிராமணராக பிறந்த ”பாவத்துக்கு” அவருக்கு கிட்டாமல் போன ஞான பீடம் குறித்த புலம்பலுடன் அஞ்சலி.


 


வாசகர்களுக்கு? நேற்று ஒரு நண்பர் தொலைபேசி இருந்தார். அமி வீட்டுக்கு போவீங்கதானே என்றார்.


 


மாட்டேன்.   எழுதிக்கொண்டிருக்கும் கரங்களை முத்தமிட வேண்டுமானால் செல்வேன்.  ‘எழுதிய’ கரம்  என்று காண அங்கே ஏதும் இல்லை.  ‘வழியின்  தனிமை’ பதிவு வழியே இன்று ஒரு வாசகன்  அந்த எழுத்தாளரின் அந்தரங்கத் துயரை சென்று தொடுவான் எனில், இன்னும் நூறு வருடம் கழித்து வரும் வாசகனும் அவ்வாறே அந்த எழுத்தாளனின் அகத்தை தொட முடியும்.  ஆக எழுத்தாளனுக்கு மரணம் இல்லை. சுரா இதையே ”சொல்லில் வாழ்பவன் அன்றோ நான்” என்கிறார்.


 


எழுத்தாளனை புறக்கணிப்பது, அவமதிப்பது, சாதி பெருமிதமாக ஆக்குவது இதுவே ஒரு எழுத்தாளனின் மரணம். அந்த மரணத்துக்கு மட்டுமே என் துக்கம்.


 


மொழிதான் எழுத்தாளனின் உயிர் . மொழி உள்ளளவும் எழுத்தாளன் வாழ்வான்.வாழ்வாங்கு வாழ்வான்.


கடலூர் சீனு


 


 


அசோகமித்ரன் சந்திப்பு


இரண்டரை வருடம் முன் ஐஐடியில் சேர்ந்த போது ’யானைடாக்டர்’ நூல் வேண்டி அரங்காவைத் தொடர்புகொண்டு, எனக்கு நண்பரானவர் பேராசிரிய நண்பர் பரத் பிகாஜி. இரண்டு வருடமும் இலக்கியம் பேச எனக்கு இனிய நண்பர். தான் புதிதாக வாங்கியுள்ள ஃப்ளாட்டிற்கு அடுத்த ஃப்ளாட்டில் தான் அசோகமித்ரன் இருப்பதாக கூறியிருந்தார்.  இருப்பினும் நேரில் பேசும் துணிவு இல்லை என்றார்.


இரு வாரத்தில் இந்தியாவை விட்டு கிளம்புவதால், கடந்த வெள்ளிக்கிழமை அசோகமித்ரனை சென்று பார்த்துவருவது என திட்டமிட்டோம். எதிர்பாராத வேலைகளில் பரத் சிக்கியதால் திட்டம் அடுத்த வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.


சனி இரவு அமியின் ‘நினைவோடை’ படித்துக் கொண்டிருந்தேன்.  ஞாயிறு முற்பகல் கூகுள் மேப்பில் 1A, 9th Cross Street, Dandeeswaram என அசோகமித்ரனின்  முகவரியைத் தட்டினேன்.  ஐஐடியின் கிருஷ்ணா ஹாஸ்டல் கேட்டிலிருந்து நடந்து சென்றால் பதினைந்து நிமிடத்தொலைவில் இருக்கிறது என்றது.


5 நிமிடத்தில் அவரது தெருவிற்கு அருகில் சென்று சேர்கையில் பெட்ரோல் இன்றி வண்டி அணைந்து விட்டது. வேர்த்துக் கொட்ட உருட்டிக்கொண்டே 8th Cross ஐயும்  9thCross ஐயும் இணைக்கும் குறுக்குத் தெருவில் இருந்த நடுவயதுடைய ஒருவருவரிடம் அட்ரசைக் கேட்டேன். அடுத்த தெருதான் என்றார். அவரது வீட்டம்மா உள்ளிருந்து எட்டிப்பார்த்து ”யாரைப்பார்க்கணும்?” என்றார். ”ரைட்டர் அசோகமித்ரன்” என்றேன். இங்க தான் ”ஃபர்ஸ்ட் ஃப்ளோரில் இருக்கார், பைக்க வெளியவே வச்சிட்டுப் போய்ப் பாருங்க என்றார்.


காலிங் பெல் “ப்ளீஸ் ஓபன் த டோர்” என முழங்கியது. உள்ளிருந்து வந்தவருக்கும் அசோகமித்ரனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லாததால் சரியாத்தான் வந்தோமா? என ஒரு குழப்பம்.


”என்ன வேண்டும்”?


அசோகமித்ரன் சார்…..


நீங்க?


அவரோட வாசகன்.


முன்னாலயே வரேன்னு சொல்லியிருந்திங்களா?


இல்ல..


இறுக்கமான பார்வையுடன் உள்ளே சென்று, ’ஒரு தம்பி உங்களைப் பார்க்க வந்திருக்கிறார்’ என்றார்.


பேசாமல், அப்படியே திரும்பிவிடலாமா என எண்ணிக் கொண்டிருக்கையில், திரும்பி வந்தவர் உள்ளே வாங்க என்றார்.


அறை வெளிச்சமின்றி அமைதியாக இருந்தது. உள்ளே இருந்து வேஷ்டியும், கலர் பாக்கெட் வைத்துத் தைத்த வெள்ளை முண்டா பனியனுடன் ஒரு முதியவர் மெல்லிய கூனலுடன் நடந்து வந்தார்.


அருகில் வரும் வரை அவர்தான் அசோகமித்ரன் என அடையாளம் காண இயலவில்லை. அவர் வந்ததும் உள்ளே இருந்து இரு முகங்கள் எட்டிப்பார்த்து மறைந்தன. மீண்டும் நிசப்தம்.


தப்புப்பண்ணிட்டோமோ? என மறுபடியும் எண்ணுகையில் ’உட்காருங்க’ என்றார்.


யார் நீங்க?


உங்க ரீடர்.


எதுக்கு வந்தீங்க?


சும்மா… உங்களைப் பார்த்துட்டு போகலாம்னு . . .


பற்களைக் கடித்தபடி கூர்ந்து நோக்கினார்.


கலக்கமாக இருந்தது..


”ஹ்ஹ்ஹேஹே’ என பரிவுடன் ஒரு நீண்ட சிரிப்பு. கலக்கம் குறைந்து, அவர்தான் அசோகமித்ரன் என்பது அப்போதுதான் உறுதியானது.


என்ன பண்றீங்க? அப்பா அம்மா என்ன பண்றாங்க? சொந்த ஊர் எல்லாம் கேட்டுக்கொண்டார்.


சரி சொல்லுங்க.. எது உங்களை இங்க அழைத்து வந்தது?


ஒரு உணர்ச்சிவேகத்தில் கிளம்பியதால் எந்த முன் தயாரிப்புமின்றி சென்றிருந்தேன். அழியாச் சுடரிலுள்ள அவரது சிறுகதைகள், அசோகமித்ரன் எழுத்துலகம் குறித்த ஜெயின் கட்டுரைகள், 18வது அட்சக் கோடு நாவல், ஒரு கட்டுரை நூல் இவ்வளவு தான் படித்திருக்கிறேன்.


என்ன சொல்லுவதெனத் தெரியவில்லை. தயக்கத்துடன் உங்க புத்தகங்கள்… இல்ல உங்க எழுத்து.. எனத் தடுமாறி.. ” 4 வருடங்கள் முன் ஜெயமோகன் தளத்தின் மூலம் உங்கள் எழுத்துக்களை அறிந்து கொண்டேன். இணையத்தில் உள்ள சில சிறுகதைகளும், ஒரு நாவலும், ”நினைவோடை” கட்டுரை நூலும் படித்திருக்கிறேன். இருவருடமாக அருகில் இருந்தும் பார்க்கத்துணிவில்லாமல் தள்ளிப்போய்க் கொண்டிருந்தது இப்போது இங்கிருந்து கிளம்புவதால் எப்படியும் பார்த்துவிட வேண்டும்” என வந்தேன் என்றேன்.


”ஹ்ஹ்ஹேஹே’ என மறுபடியும் இரண்டடி தூரத்தில் இருப்பவருக்கு மட்டுமே கேட்கும் மெல்லிய சத்தத்தில் சிரித்துவிட்டு ஜெயமோகனைப் படிக்க ஆரம்பிச்சு என்கிட்ட வந்திங்களா?


”ஹ்ஹ்ஹேஹே’ ”நினைவோடை படிச்சிங்களா, நல்லாயிருக்கா, என்றார்.


”ரொம்ப நல்லாயிருந்தது சார்.. காநாசு சுரா ஜெமோ என்ற ரசனை விமரிசக வரிசையின் அடிப்படையில் வாசிப்புப் பயிலத் தொடங்கிய எனக்கு நீங்க காட்டிய காநாசுவின் வலி மிக்க இலக்கிய வாழ்க்கை நான் அறியாதது” என்றேன்.


”தாமரையில் எழுதியதால் அவர் என்னையும் அவரது எதிரிகளின் கோஷ்டியைச் சேர்ந்தவன் என்றே எண்ணிவந்தார். அதனால் ஆரம்பத்தில் எல்லாம் ரொம்பப் பேச மாட்டார். பின்னர் என் நூல்களைப் படித்தபின் ரொம்பப் பிரியமாயிருந்தார்” என்றார்.


குடும்பத்துடன் வெளியே கிளம்பிக் கொண்டிருந்த அவரது மகனிடம் இவர் ஐஐடியில் இருந்து வருகிறார் என அறிமுகப்படுத்தினார். தற்போது பள்ளியில் உள்ள, அவரது பேத்தி ஐஐடியில் பயோலஜி படிக்கவிரும்புவதாகத் தெரிவித்தார். அதுவரை இருந்த இறுக்கம் தளர்ந்து அவர் மகன் சற்று முக மலர்வுடன் ஐஐடியில் பயோடெக் துறை குறித்து கேட்டறிந்துகொண்டு வெளியே கிளம்பினார்.


திரும்பிப் பார்க்கையில் அ.மித்ரன் கையில் BIO-BC28 என்ற ஒரு மருந்து டப்பா. ”பயோடெக் படிக்கிறாயே, இது என்ன தெரியுமா?” 12 Schussler cell salts என்றிருந்தது. இந்த உப்புக் குறைபாடு உள்ளவர்களுக்கு பயன்படும் என்று புன்னகையுடன்திருப்பிக்கொடுத்துவிட்டேன்.


”இது வயசானவங்களுக்கு தேவையான உப்பு சத்தக் கொடுக்கும்னு சொல்றாங்க. பயோனு போட்டிருக்கிறதால உன்னிடம் கேட்டேன்” என்றார். சரி வந்த விசயத்த பேசுவோம்.. ”உங்களுக்கு அப்ப ’நினைவோடை’ பிடிச்சிருக்கு இல்லையா? கவிதா பதிப்பக உரிமையாளர் அந்த நூல் அவ்வளவு ரசிக்கப்படவில்லை. பெரிதாக விற்பனையில்லை என்றார், அவரிடம் சொல்ல வேண்டும்” என்றார்.


இணையத்தில் இருந்த சில சிறுகதைகள் மட்டுமே படித்துள்ளேன், முதன் முதலில் படித்தது ‘பிராயாணம்’, திகிலும் வியப்பும் அமானுஷயமும் கலந்த கதை, அந்த ஒரே கதையில் உங்கள் எழுத்தில் பெரிய ஈர்ப்பு ஏற்பட்டது என்றேன்.


பிராயணம் படிச்சிங்களா, நல்ல கதையில்லயா…. ரொம்ப நல்லா இருக்கும். அந்த குரு ஒரு ஹடயோகி. சிஷ்யன் ஏன் அவரை கீழே கொண்டு செல்கிறான்னா ஈமச்சடங்குகளை எப்போதும் ஆற்றங்கரை அருகில் செய்வது தான் வழக்கம். காரியம் முடிஞ்ச உடன குளிச்சுரலாம். சுடுகாடு எப்பவும் ஆத்தங்கரையில தான் இருக்கும், இல்லனா கிணறாவது இருக்கும். இப்ப சென்னை சிட்டில அப்படிலாம் இருக்காது.  எல்லாம் மாறிடுச்சு இல்லையா….


நீங்க சென்னை நகரின் மாற்றத்தைக் குறித்தே ஒரு நூல் எழுதியிருக்கீங்க இல்லையா, அதன் தலைப்புத் தெரியவில்லை. புத்தக சந்தையில் தேடினேன். கிடைக்கவில்லை.


“ஒரு பார்வையில் சென்னை நகரம்” என்றவர், சென்னை நகரம் குறித்து பேசுகையில் பேச்சு அவரது பழைய இலக்கிய நண்பர்கள் என ஒரு நீண்ட எழுத்தாளர் வரிசையை சொன்னார். பெரும்பாலானோர் முன்னரே போய் விட்டனர், இருப்பவர்களில் ஞானக்கூத்தன், ஞாநி ஆகியோர் இன்றும் என் நலம் விரும்பிகள். ஞாநி என்னை விட வயதில் சிறியவர், ஆனால் என்னை விட அதிகம் நோயால் அவதிப்படுகிறார்” என்றார்.


தி நகரிலிருந்த அவரது வீட்டைப் பற்றி சொல்கையில், வீடு பஸ் ஸ்டாண்ட் அருகே. வெளியூர் பஸ் எல்லாம் அப்போது தி.நகர் வழி தான் செல்லும். அந்த வீட்டிற்கு வராத ஆளே இல்லை எனலாம். கோணங்கினு ஒருத்தன் இருந்தான். தெரியுமா?”, “தெரியும் சார்’. அதிகாலை 5 மணிக்கு பஸ்ஸை விட்டு இறங்கியவுடன் நேராக வீட்டிற்கு வந்து என்னை ஒரு பாடு படுத்திவிட்டு பின்னர் கிளம்பிவிடுவான்.


பின்னர் அவன் ஒரு பத்திரிக்கை ஆரம்பித்தான், நான் கட்டாயம் எழுத வேண்டும் என்றான். என்னுடைய கட்டுரைகளில் என்னுடைய சொந்த அவதானிப்புகளும், கருத்துக்களும், அசலானதாக இருக்கும். மற்றவர்கள் எழுதுவது வேறு யாரோ எங்கோ சொன்னதைக் கேட்டு எழுதியதாக இருக்கும். கட்டுரையோ கதையோ நான் என் எல்லா எழுத்துக்களையுமே சின்சியராகத் தான் எழுதியிருக்கேன். அப்படி இருக்கையில் அவன் என் கட்டுரைகளை பிரசுரிக்க இயலாது எனத் திருப்பி அனுப்பி விட்டான். அதன் பின் அவனுக்கு அனுப்புவதில்லை. ஆனால் அவனும் கொஞ்சநாளில் பத்திரிக்கையை நிறுத்திவிட்டான்.


எவ்வளவு நாள் தான் கோணங்கி கோணங்கியா இருக்க முடியும்? அவனும் மனுசன் தான.  ஏன் சொல்றேன்னா? எல்லாம் மாறிட்டே இருக்கும், நாம மட்டும் வித்தியாசமான ஆளா இருந்துட்டே இருக்க முடியாது. நாமளும் வாழணும்ல, மாற்றத்துக்கேற்ப மாறிக்கொண்டே தான் இருக்க வேண்டியது இருக்கும்.


ஒரு பார்வையில் ”சென்னை நகரம் கவிதா பதிப்பகத்தில் கிடைக்கும்” என்றார்.


”புக் ஃபேரில் தான் உங்கள் புத்தகங்கள் எல்லாம் வாங்கியுள்ளேன். இனிமேல் தான் படிக்கவேண்டும்” என்றேன்.


”உங்கள் சிறுகதைகள் சிறு சிறு தொகுப்புகளாக வந்துள்ளன. அவற்றில் சில கிடைக்கவில்லை. முழுத் தொகுப்பு வெளிவந்துள்ளதா?” என்றேன்.


நான் வருடத்திற்கு நான்கு சிறுகதைகளாவது எழுதிவிடுவேன். சமீபத்தில் கூட ’வைரம்’ என ஒரு சிறுகதை எழுதியிருந்தேன் என்றார். தி ஹிந்து பொங்கல் இதழில் வந்த அந்தக் கதையை பார்த்திருந்தேன் ஆனால் படிக்கவில்லை. படித்திருக்கலாமே என எண்ணிக் கொண்டேன்.


தொடர்ந்து எழுதிக்கொண்டு இருக்கும் ஆசிரியரின்”முழுத்தொகுப்பு என்பது அவரது ஆயுளுக்கு பின்னர் தான் வர வேண்டும்” என்றார்.


புக் ஃபேர் போனியா? என்ன புத்தகம் வந்துள்ளது என்றார். ஜெயமோகனின் ”வெள்ளையானை” வெளிவந்தது என்றேன்.


ஆமாம் கேள்விப்பட்டேன். அது ஏதோ “ஐஸ் பெர்க்” பத்தினதாமே..?


இல்ல அது ”ஐஸ் ஹவுஸ் கலவரம்” பத்தினது…


ஓ..  ஐஸ் ஹவுஸ்… ஐஸ்ஹவுஸ்!


உன்கிட்ட அந்த புத்தகம் இருக்கா? நான் படிக்கணும் நெனைச்சுருக்கேன். இருந்தாக் கொடு.. படிச்சிட்டு திருப்பிக் கொடுத்திடுரேன்.


”வீட்டில் இருக்கு சார்.. அடுத்தவாரத்தில் ஒரு நாள் கொண்டு வந்து தருகிறேன்” என்றேன். வெண்முரசு பற்றிக் கூறி அதையும் தருவதாகக் கூறினேன்.


பையோடு கொண்டு சென்ற அவரது நூல்களில் கையொப்பம் கேட்டேன். இதெல்லாம், ஏன் தூக்கிக் கொண்டு அலைகிறீர்கள். படிக்கிறபையனுக்கு இதெல்லாம் தேவையில்லாத சுமை அல்லவா என்றபடி,  இரு, பேனா எடுத்து வருகிறேன் என்று தள்ளாடியபடியே நடந்து சென்றார். விழுந்து விடுவாறோ என்ற பயம் எனக்கு.. அவரது அறையில் பெரிய பாரதி படம் ஒட்டியிருந்தது.


மாமி எழுந்து வந்து தண்ணீர் கொடுத்து நீங்கள் பேசிக்கொண்டிருந்ததைக் கேட்டுக் கொண்டுதான் இருந்தேன் என்றார்.


அவர் திரும்புகையில் ’எரியாத நினைவுகள்’ என்ற புத்தகம் கொண்டுவந்தார். இது எனக்கு ஃப்ரீ காப்பியா கொடுத்தா. உனக்கு இது என்  கிஃப்ட் என்றார்.


”நாங்க ஜெயமோகனோட வாசகர்கள் இணைந்து விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்புங்கற பேர்ல விருது விழா, இலக்கிய கூட்டங்கள்  நடத்துகிறோம். உங்களை சிறப்பு விருந்தினராக பேச அழைக்கவேண்டும் என்பது எங்கள் விருப்பம். உங்கள் உடல் நிலையைக் கருத்தில் கொண்டு அழைக்கத் தயக்கம்” என்றேன்.


அவன் (ஜெயமோகன்) எப்பவும் இப்படிதான். அவன் சின்ன வயசில இருந்தே, எதாவாது செய்துகொண்டே இருக்கவேண்டும் என்ற துடிப்போட இருப்பான். தொடர்ந்து அப்படி இருப்பது ஆச்சரியம்தான். பாவம் சின்ன வயசிலயே பெரிய சோகம் அவனுக்கு. அவங்க அப்பா அம்மா எல்லாம் சீக்கிறம் போய் சேந்துட்டா… அவன் மனைவி ரொம்ப நல்ல பொண்ணு. இரண்டு சிறு குழந்தைகள் இருக்கிறார்கள் அல்லவா? ஒனக்குத் தெரியுமா? என்றார்.


சார், அஜிதன் கல்லூரியே முடித்துவிட்டான் என்றேன்.


அப்படியா என்றவர்.


”அவர் சினிமாக்குப் போனது தான் கஷ்டமாக இருக்கிறது. அங்கே பணம் கிடைத்தாலும் எழுத்தாளர்களை அவமரியாதை செய்வார்கள். நான் நேராப் பாத்திருக்கேன். அதான் சொல்றேன். ஆனா ஓரளவுக்கு மேல் நான் சொல்ல முடியாதல்லவா?”


நான் ஒன்றும் சொல்லவில்லை. அவர் ஜெமினியில் பார்த்த சினிமா உலகில் ஜெ இன்று இல்லை, அவர் இருக்கும் நிலை வேறு என்பதை என்னால் அசோகமித்ரனுக்கு விளக்க முடியுமா எனத் தெரியவில்லை.


நிகழ்ச்சி எல்லாம் எங்க நடத்துறான்? நாகர்கோவிலில் அல்லவா?


இல்ல சார் கோவையில்.. சென்ற முறை உங்கள் பெயரை முன் மொழிந்த போது கூட ஜெமோ ”முதிய வயதில் அவரைத் தொந்தரவு செய்ய வேண்டாம், என்றார்” என்றேன்.


ஆமா, கடைசியா கோவை ஞானியின் ஒரு நிகழ்ச்சியிலே பார்த்தேன். அப்போ ரொம்ப முடியாமா இருந்தேன், அதான் அப்படி சொல்லி இருப்பார். இப்போ பரவாயில்ல.. ஆனா தனியா எங்கயும் போய் வர முடிவதில்லை. என் பையன் என்னை இன்னிக்கு ஞாயிற்றுக் கிழமை எதுவும் செய்யக் கூடாது, சும்மா படுத்து ரெஸ்ட் எடுத்தா போதும் என்று சொல்லியிருந்தான். அதான் நீ பார்க்க வந்தப்ப சங்கடப் பட்டான். அடுத்தமுறை வரும் போது முன்னரே போன் பண்ணிட்டு வா” என நம்பர் கொடுத்தார்.


சார் நாங்கள் கடந்த வருட விழாவிற்கு இ.பா.வை அழைத்திருந்தோம். அவருக்கும் முதுமை மற்றும் உடல் நலக் குறைவால் பயணம் செய்வதில் விருப்பம் இல்லை. அவருடன் கூடவே எங்கள் நண்பர் ஒருவரை துணைக்கு அனுப்பி ஃப்ளைட்டில் கோவைக்கு அழைத்து வந்து திருப்பி வழி அனுப்பினோம், கலந்து கொண்டபின் மிகவும் மகிழ்வுடன் சென்றார் என்றேன்.


கோவை வர இயலாது எனில் குறைந்தது சென்னையில் நடைபெறும் ஒரு நிகழ்விலாவது கலந்து கொள்ள வேண்டும் என்றேன்.


அப்படி துணைக்கு ஒருவர் உதவியாக வரக் கூடும் எனில் கோவையிலேயே தன்னால் கலந்து கொள்ள முடியும் என்றார்.


அடுத்த விழா எப்போது என்றார். டிசம்பரில் என்றேன். ”இன்னும் பல மாதங்கள் இருக்கிறதே, அவ்வளவு நாள் இருந்தால் வருகிறேன்” என்றார்.


நூல்களை ஆசையாக எடுத்துப் பார்த்தார். ”இன்ஸ்பெக்ட்ர செண்பகராமன்” நூலை எடுத்துக் காட்டி இது ரொம்ப நன்னா இருக்கும், என்றார். ”இந்திய முதல் நாவல்கள்” என்கிற நூலைக் காட்டி இந்த நூல் ரொம்ப முக்கியமானது. நிறைய நல்ல நாவல்களை உனக்கு அறிமுகம் செய்யும். நிறையா விற்றிருக்க வேண்டும். ஆனால் போகலை. உனக்குப் பிடிக்கலனா திட்டாதே” என்றார்.


நிச்சயம் எனக்கு இது பிடிக்கும் என்றேன்.  ஜெமோவின், இத்தகைய இலக்கிய அறிமுக நூல்கள், கட்டுரைகள் மூலமாகத்தான் என்னை போன்ற பலர் இலக்கியத்தையே அறிமுகம் செய்து கொள்கிறோம். அவ்வாறு தான் நான் உங்களைப் படிக்க ஆரம்பித்தேன்.


எந்தப் புத்தகம்?


உதாரணமாக இலக்கிய முன்னோடிகள் வரிசை.


நல்ல புத்தகம் இல்லையா. ரசிச்சு எழுதிருப்பாரு. உண்மையாவே அவர் நிறையா படிக்கிறார் இல்லையா. எனக்கு எப்படி இந்த சின்ன வயசில அவன் எப்படி இவ்வளவும் படிச்சு, எழுதவும் செய்றான்னு ஆச்சரியமா இருக்கும்.


சார் நான் திடீரென கிளம்பி வந்து விட்டேன். என் நண்பர் ’ பேராசிரியர் பரத்’ தான் நீங்கள் வேளச்சேரியில் அவர் வீட்டின் அருகே இருப்பதாக கூறினார். அவருக்கு உங்களை நேரில் சந்திக்க மிக விருப்பம் ஆனால் பயம் என்றேன். என்னைப் பார்க்க என்ன பயம், அவரை அடுத்தமுறை அழைத்து வா என்றார்.


”விஷ்ணுபுரம் நண்பர்கள் சென்னையில் மட்டுமே பத்து பேருக்கு மேல்  இருக்கிறோம். தெரிந்தால் அனைவரும் உங்களைப் பார்க்க விருப்பப் படுவார்கள்” என்றேன்.


”என்னை அவ்வளவு பேர் எதற்கு பார்க்க விரும்புகிறார்கள்” என்றார்.


சார் ”எங்களுக்கு நீங்கள் ஒரு “Legend” . உங்களை சந்தித்தது என் பாக்யம்” என்றேன்.


பதில் பேசாமல் அமைதியாக கூர்ந்து பார்த்தார், அவர் கண்களின் ஆழத்தை என்னால் சந்திக்க இயலவில்லை. சில நொடி மௌனத்திற்குப் பின், “அவ்வளவு பேர் வந்தால் வீட்டில் சந்திக்க வேண்டாம். நாம் மற்றவர்களைத் தொந்தரவு செய்யக் கூடாது இல்லையா? வேண்டுமெனில் ஒரு பொது இடத்தில் சந்திக்கலாம்” என்றார்.


கை நடுங்க பொறுமையாக, நூல்களில் ”வியப்பு கலந்த அன்புடன், அசோகமித்ரன்” என  கையொப்பம் இட்டார். ”குழந்தை மாதிரி எழுதுறேன்ல?” என்றார்.


”சரி டா கண்ணா, டயர்டா இருக்கு நான் போய் படுத்துக்கிறேன், நீ சாப்பிடுறியா” என்றார். இல்ல சார் நான் ஹாஸ்டலில் போய் சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று விடைபெற்றுக் கொண்டேன். இரண்டு மணி ஆச்சு ஹாஸ்டலில் சாப்பாடு இருக்குமல்லவா என இருமுறை கேட்டுக் கொண்டார்.


நீண்ட நேரம் சேரில் அசையாமல் உட்கார்ந்திருந்ததால் அவரால் உடனடியாக எழ முடியவில்லை. “ஹே ராம்” என்றபடி கைகளை அழுத்தி ஊன்றி எழுந்து மிக மெதுவாக தன் அறைக்குச் சென்றார்.


பைக்கைத் தள்ளியபடி கிளம்புகையில் விரைவில் விஷ்ணுபுரம் சார்பில் ”அசோகமித்திரனுடன் ஒரு வாசகர் சந்திப்பை” நடத்திட ஏற்பாடு செய்யவேண்டும் என மனம் அடித்துக் கொண்டது.


செந்தில்குமார் தேவன்


2014-02-25

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 24, 2017 11:32

பொய்ப்பித்தலும் ஃபேய்சியமும் –கடிதம்

karl p


 


அன்புள்ள ஜெ,


 


ராஜா எழுதிவரும் பொய்ப்பித்தல்வாதம் Vs. பேய்சியன் வாதம் கட்டுரைத்தொடர் மிகவும் முக்கியமானது. நம் குழுமத்தில் இரண்டாண்டுகளுக்கு முன்பு இவ்விவாதத்தை தொடங்கியபோது ஆர்வத்துடன் இரண்டொரு பதிவுகளை இட்டுவிட்டு வழக்கம்போல் காணாமல் போய்விட்டேன்.  அக்காலத்தில்தான் என் பல்கலையில் அறிவியலின் தத்துவத்தை மையமாகக் கொண்டு ஒரு சிறிய பாடத்திட்டத்தை முன்னெடுத்திருந்தேன். எழுத்தாளர்களுக்கு அறிவியலின் மைய தத்துவம் தெரியவில்லை என்று குறிப்பிட்டுள்ளீர்கள். அது மோசமில்லை. ஆனால், மிகப் பெரும்பாண்மையான, அறிவியலாளர்களுக்கே அது தெரியாது என்பதுதான் நகைமுரண். கார்ல் பாப்பர் பெயரே தெரியாதவர்கள் எல்லாம் மிகப்பெரிய அறிவியலாளர்களாக பெயர் பெற்றுள்ளார்கள். கருதுகோள், எதிர்கருதுகோள் என்பனவற்றை ஏன் வரையறை செய்கிறோம், அதில் எதிர்கருதுகோளை ஏன் மறுதலிக்க முயல்கிறோம் என்ற எந்தப் புரிதலுமில்லாமல் அவற்றை இயந்திரத்தனமாக அமைப்பவர்களே இன்றைய அறிவியலாளர்கள். ஆகவேதான் நான் அறிவியலின் தத்துவத்தை இளம் மாணவர்களுக்கு விளக்கி பாடம் நடத்துகிறேன். என் துறையான நோய்ப்பரவியல் (Epidemiology) துறையானது, பொது சுகாதார கோட்பாடுகளை உருவாக்குவதிலும், சான்று சார்ந்த மருத்துவத்திலும் பெரும்பங்கு ஆற்றுகிறது. அதில் பொய்ப்பித்தல்வாதமும், பேய்சியன் வாதமும் மிக முக்கியமானவைகளாகும். ஆகவே ராஜாவின் கட்டுரை எனக்கு மிகவும் முக்கியம்.


 


பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு திண்ணை இணைய இதழில் “சிரிக்கத்தெரிந்த மார்க்சிய அறிஞர்” மறைந்த சோதிப்பிரகாசம் கார்ல் பாப்பரின் வெங்காயம் என்ற தலைப்பில் ஒரு தொடர் கட்டுரை எழுதினார். கார்ல் பாப்பர் பொய்ப்பித்தலுக்கு மார்க்சியம் உடன்பட மறுப்பதால் அது அறிவியல் அல்ல என்று சொல்லியிருப்பதால் அதை மறுத்து  சோதிப்பிரகாசம் அக்கட்டுரைத்தொடரை எழுதினார் என்று ஞாபகம். பூர்ண சந்திரன் அவர்க்ளும் அறிவியலின் தத்துவம் என்று தமிழில் எழுதியிருக்கிறார். ஆனால், ராஜா எழுதிவருவது அவை எல்லாவற்றையும் விட, மிக முக்கியமாக அறிவியலின் தத்துவம் வளர்ந்த விதத்தை ஒரு பருந்துப்பார்வையில்  விளக்குவதாகும்.


 


 


தங்கவேல்


Jpeg


அன்புள்ள தங்கவேல்,


 


அது நான் கார்ல் பாப்பரை கண்டுகொண்ட ஆண்டு. கார்ல் பாப்பரின் அறிவியல்நெறிகளின்படி மார்க்ஸியத்தை அறிவியல் என்று சொல்லமுடியாது, அப்படிச் சொல்லலாம் என்றால் வேதாந்தமும் அறிவியலே என ஒரு கட்டுரையில் எழுதினேன். ஏன் மார்க்ஸியம் அறிவியலல்ல என்று விளக்கினேன். சோதிப்பிரகாசம் அதற்கு எழுதிய நீண்ட பதில்தான் கார்ல் பாப்பரின் வெங்காயம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அவர் கார்ல் பாப்பரை வாசிக்கவில்லை. அது முதலாளித்துவ அறிவியல் என்று நிராகரித்துவிட்டார். மார்க்ஸியம் அறிவியலை எப்படி வரையறுக்கிறதோ அதன்படி மார்க்ஸியம் ஒர் அறிவியல் என்பதே அவருடைய அந்த விளக்கத்தின் சாரமாக இருந்தது.


 


ஜெ

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 24, 2017 11:31

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–53

53. விழியொளிர் வேங்கைகள்


சுக்ரர் கசனை தன் மாணவனாக ஏற்றுக்கொள்வாரென்று கிருதர் உட்பட அவரது மாணவர்கள் எவரும் எதிர்பார்க்கவில்லை. பிரஹஸ்பதியின் மைந்தன் என அவன் தன்னை அறிமுகம் செய்துகொண்டதுமே அவன் வருகையின் நோக்கம் அனைவருக்கும் புரிந்துவிட்டது. ஒழியாது நிகழ்ந்துகொண்டிருந்த போரில் ஒவ்வொரு நாளுமென தேவர் படைகள் பின்வாங்கிக்கொண்டிருந்தன. சஞ்சீவினி நுண்சொல் இன்றி அவர்கள் அணுவிடையும் முன்னகர முடியாதென்பதை அறியாத எவரும் அக்குருநிலையில் இருக்கவில்லை. ஆயினும் முறைமைப்படி அவனுக்கு வாழ்த்துச் சொல்லி சுக்ரரிடம் அழைத்துச் சென்றனர்.


கசன் வாயிலில் கூப்புகையில் மலர்களுடன் நின்றிருக்க சுக்ரரின் தனியறைக்குள் நுழைந்த கிருதர் தலைவணங்கி அங்கே ஈச்சை ஓலைப்பாயில் கால்மடித்து அமர்ந்து விழிசுருக்கி நூலாய்ந்துகொண்டிருந்த அவரிடம் பிரஹஸ்பதியின் மைந்தன் கசன் வந்திருப்பதை அறிவித்தார். அப்போது சுக்ரர் கயிலை மலையில் அம்மையும் அப்பனும் ஆடிய இனிய ஆடலொன்றை விவரிக்கும் சிருஷ்டிநிருத்யம் என்னும் குறுங்காவியத்தை படித்துக்கொண்டிருந்தார். அதே முகமலர்வுடன் நிமிர்ந்து நோக்கி “யார், கசனா…! என் இளமையில் அவனை தோளிலேற்றி விளையாடியிருக்கிறேன். எங்கே அவன்?” என்றபடி கையூன்றி எழுந்தார்.


அம்முகமலர்வை எதிர்பார்த்திராத கிருதர் வந்திருப்பவனின் நோக்கம் பற்றி ஆசிரியரிடம் சொல்லலாமா என்று ஐயுற்றார். அப்படி சொல்வது ஒரு வேளை ஆசிரியரின் நுண்ணுணர்வை குறைத்து மதிப்பிடுவதாக பொருள்படுமோ என்ற ஐயம் அவரை தடுத்தது. அந்த இருமுனையில் அவர் உடலும் மெல்ல ததும்பியது. அவரைக் கடந்து சிற்றடிகளுடன் விரைந்துசென்ற சுக்ரர் படியில் மூன்று வெண்மலர்களுடன் வந்து நின்ற பேரழகனைக் கண்டு கைகளை விரித்து உரக்கக்கூவி அருகணைந்து தோள்களை தழுவிக்கொண்டார். உரத்தகுரலில் “வளர்ந்துவிட்டாய்! தோள்திண்மை கொண்ட இளைஞனாகிவிட்டாய்!” என்றார். அவன் குனிந்து அவர் கால்களில் வெண்மலர்களை வைத்துவிட்டு தொட்டு சென்னிசூடினான்.


தன் கைகளால் அவன் புயங்களையும் கழுத்தையும் வருடி முகத்தில் தொட்டு “மெல்லிய மீசை, மென்பட்டு போன்ற தாடி… நன்று! இளமையிலேயே நீ பேரழகு கொண்டிருந்தாய். இளைஞனாக இந்திரனுக்கு நிகராகத் தோன்றுகிறாய்… இளமையில் கண்களில் தெரியும் நகைப்பு… ஆம், இளமையில் மட்டுமே தெரிவது… வருக!” என்றபின் இரு கைகளையும் பற்றி “வருக!” என்று உள்ளே அழைத்துச் சென்றார். “கிருதரே, இவன் என் மைந்தனுக்கு நிகரானவன். பார்த்தீரா, இவனுக்கு நிகரான அழகனை கண்டதுண்டா நீர்?” என்றார்.


அப்போதே கிருதர் என்ன நிகழுமென்பதை உள்ளுணர்ந்துவிட்டார். முடிவுகள் எண்ணங்களால் அல்ல, எப்போதும் உணர்வுகளால்தான் எடுக்கப்படுகின்றன என்று அவர் அறிந்திருந்தார். சுக்ரர் உரத்தகுரலில் “அமர்க… யாரது, இன்னீர் கொண்டுவருக! அமர்க, மைந்தா!” என்றபடி அமர்ந்தார். “நான் ஒரு குறுங்காவியத்தை வாசித்துக்கொண்டிருந்தேன். கோடைக் குடிநீர் போல இனியது. வானம்தெரியும் சுனைபோல் ஆழம்கொண்டது. அம்மையிடம் அப்பன் சொல்கிறான், இனியவற்றை விரும்புபவன் இனியவற்றை விதைத்து வளர்க்கட்டும். காதலை விரும்புபவன் அதை காதலிக்கு அளிக்கட்டும் என… அஸ்வாலாயனரின் ஒப்புமைகள் மிக எளியவை. அணிச்செறிவற்றவை, ஆனால் நெஞ்சில் நிற்பவை… நீ காவியம் பயில்கிறாய் அல்லவா?


“ஆம், உண்மையில் வேதமெய்மைக்கும் தத்துவங்களுக்கும் மேலாகவே நான் கவிதையில் ஈடுபட்டிருக்கிறேன்” என்றான் கசன். “ஆம், அப்படித்தான். உன் அகவை அதையே நாடச்செய்யும்… கிருதரே, பார்த்தீரல்லவா?” கிருதர் சுக்ரரை அப்படி ஒரு உவகைநிலையில் கண்டதே இல்லை. பொருள்துலங்கா விழிகளுடன் “ஆம்” என்றார். “என்ன இளமை! இளமையில் எதையும் வெல்லவேண்டும் என எண்ணாது வாழ்பவன் நல்லூழ் கொண்டவன். அவன் அழகையும் இனிமையையும் முழுதாக அறிந்து திளைப்பான்….” என்றார். கிருதர் தலையசைத்தார்.


தன்முன் வந்து நின்ற அழகனைக் கண்ட சுக்ரரின் விழிகள் தேவயானிக்குரியவை என்னும் எண்ணம் கிருதருக்குள் எழுந்தது. கசனிடம் பேசிக்கொண்டிருந்த தேவயானியை தொலைவிலேயே நோக்கியபடி அவர் அணுகியபோது அவள் முகத்திலும், நோக்கிலும், துவண்டு ஒசிந்த இடையிலும் தெரிந்த பெண்மையை முன்பெப்போதும் அவளிடம் அவர் பார்த்ததில்லை. அவனை அழைத்துக்கொண்டு திரும்பி நடக்கையில் அவள் விழிகள் அவருள் மேலும் தெளிந்து எழுந்தன. அதிலிருந்தது காதல் என்பதை ஐயமிலாது உணர்ந்தார். சீற்றமென்றும் ஆர்வமின்மை என்றும் அகல்தல் என்றும் அது தன்னை நடிக்கிறது. ஆர்வமின்மை தன் காதலை பிறரிடமிருந்து மறைக்க, சீற்றம் அதை தன் உள்ளத்திடமிருந்தே விலக்க.  அகல்தல் தன் உடலில் இருந்து மறைக்க. காதல் அதை மறைத்துக்கொள்வதற்கான முயற்சிகள் வழியாகவே வெளிப்படுகிறது. அதைக் கடக்கும் முயற்சிகள் வழியாகவே வலுப்பெறுகிறது. மறுப்பதற்குரிய சொற்கள் வழியாகவே மொழியாகிறது.


அக்காதல் எவ்விளைவை உருவாக்குமென்று அவர் எண்ணமுனை  வருநிகழ்வுகளை துழாவிக்கொண்டிருந்தபோதுகூட எழும் காதலொன்றைக் காணும்போது உருவாகும் இனிமை அவருள்ளத்தில் நிறைந்திருந்தது. கசனை நோக்கி ஓடிச்சென்று தழுவிக்கொண்ட சுக்ரரிலும் அதே விழிகளை கண்டார். அச்சமும் ஐயமும் கொண்டு அவர் உள்ளம் தத்தளிக்கையில்கூட ஆழத்தில் நுண் நா ஒன்று அந்த இனிமையைத் துழாவி திளைத்துக்கொண்டிருந்தது. காதலை விரும்பாத உள்ளம் இல்லை. அது உயிர்கள் கொள்ளும் களியாட்டு. ஆனால் அதை மானுடரால் ஆடியிலேயே நோக்கமுடியும். நேர்நின்று நோக்கினால் அதன் பித்து அச்சுறுத்துகிறது. அதன் மீறல் பதைப்பை அளிக்கிறது.


“இங்கே நான் வந்தபின் உன்னை நினைத்ததே இல்லை. வஞ்சத்தால் கூர்கொண்டு முன்செல்பவன் நான். ஆனால் உன்னை மறந்ததே இல்லை என இப்போது உணர்கிறேன்” என்ற சுக்ரர் கிருதரிடம் திரும்பி  சிறுவர்களுக்குரிய கொப்பளிப்புடன் “எவ்வளவு வளர்ந்துவிட்டான்! இவனை மடியிலிருத்தி முதல் பறவையை சுட்டிக் காட்டியவன் நான். இவனுக்கு வேதமுதற்சொல்லை ஓதியவனும்  நானே. நெய்யை நெருப்பென வேதங்களை இவன் கற்கும் திறன் கண்டு வியந்திருக்கிறேன். ஆசிரியரின் மைந்தன் இவன். எனக்கு இவன் மைந்தனுக்கு நிகர் அல்லது ஒருபடி மேல்” என்றார்.


கசன் கைகூப்பி “என்னை உங்கள் மாணவனாக ஏற்றுக்கொள்ள வேண்டும், ஆசிரியரே. அதன்பொருட்டே இங்கு வந்தேன்” என்றான். இதுவே தகுந்த தருணம் என எண்ணி கிருதர் நாவெடுக்க சுக்ரர் பெருமகிழ்வுடன் அவன் கைகளைப்பற்றி “ஆம், இங்கு நூல் நவில்கையிலெல்லாம் நான் மேலுமொரு மாணவன் என்று நினைப்பதுண்டு. வேட்டைநாய்போல ஆசிரியன் சுட்டிய திசைக்கு பாய்பவனே நல்ல மாணவன். இப்போது உணர்கிறேன், நீயே என் மாணவனாக அமைய வேண்டியவன். எனக்கு நானே என சொல்லும் சொற்களை உன் செவிகளே கேட்க முடியும்” என்றார். “ஆம், அதை நானும் உணர்ந்தேன். தாங்கள் சென்றபின் எந்தையிடம் இத்தனை நாள் கல்வி கற்றேன். அவர் சொற்கள் என் அறிவை சென்றடைகின்றன. அங்கு அவை ஒரு களஞ்சியத்தில் நிறைகின்றன. ஆசிரியரே, அவை அங்கு முளைக்கவில்லை” என்றான்.


கைதூக்கி “நான் விதைக்கிறேன். நூறுமேனி விளையும்” என்று சுக்ரர் கூவினார். “உன்னை முழுமையறிவு கொண்டவனாக்குகிறேன். சென்று அவர் முன் நில்! அவரிடம் சொல், நான் சுக்ரரின் மாணவனென்று! இதுவும் அவர் மீது நான் கொள்ளும் வெற்றியென்றாகுக!” என்றார். கசன் கைநீட்டி மீண்டும் அவர் கால்களைத் தொட்டு சென்னி சூடி “இக்கணம் முதல் நான் தங்கள் அடியவன்” என்றான். அனைத்தும் கைகடந்து சென்றதை உணர்ந்து  மெல்ல தளர்ந்து கைகளைக் கோத்தபடி அக்காட்சியை நோக்கி அமர்ந்திருந்தார் கிருதர். சுக்ரர் திரும்பி “தேவயானியிடம் சொல்க! இவனைப்பற்றி முன்பொருமுறை அவளிடம் நான் சொல்லியிருக்கிறேன். என் ஆசிரியரின் மைந்தன் கசன் என்க! அவரை அவள் நன்கறிவாள், இவனையும் நினைவுகூர்வாள்” என்றார். “அவர்கள் முன்னமே பார்த்துக்கொண்டுவிட்டனர், ஆசிரியரே” என்றார் கிருதர். உரக்க நகைத்து “உண்மையாகவா? பார்த்துக்கொண்டார்களா? நன்று நன்று!” என்றார் சுக்ரர்.


அவர் எப்பொருளில் சொல்கிறார் என்று புரியாமல் ஒருகணம் நோக்கியபின் “தாங்கள் சொல்லாடிக் கொண்டிருங்கள். நான் பிறரிடம் தாங்கள் இவரை மாணவராக ஏற்ற செய்தியை சொல்கிறேன்” என்றார் கிருதர். அவர் சொல்வதற்கு செவிகொடுக்காமல் கசனிடம் “என் மகள் தேவயானி, பேரரசிக்குரிய தோற்றமும் உள்ளமும் கொண்டவள். ஊழும் அவ்வண்ணமே என்கிறார்கள் நிமித்திகர்” என்றார் சுக்ரர். திரும்பி கிருதரிடம் “இவனுக்கு நான் அடிப்படைகள் எதையும் கற்றுக்கொடுக்க வேண்டியதில்லை. விதைகள் அனைத்தும்  இவனிடம் உள்ளன. அவற்றை உயிர்கொள்ளச் செய்யும் நீர்  மட்டுமே என்னிடம் இவன் கற்க வேண்டியது” என்றார்.


தலைவணங்கியபடி வெளியே வந்த கிருதரை மாணவர்கள் சூழ்ந்துகொண்டனர். “என்ன சொல்கிறார்? இன்றே அவன் கிளம்பிச் செல்வான் அல்லவா?” என்றார் ஒருவர். இளையவன் ஒருவன் “இங்கு அவன் எதற்கு வந்திருக்கிறான் என்று எவரும் அறிவர். ஒருபோதும் நாம் இதை ஒப்ப முடியாது” எனக்கூவ பிறிதொருவன் “என்ன துணிவிருந்தால் அசுரர்களின் ஆசிரியரிடமே தேவகுருவின் மைந்தன் வந்து சேருவான்? இது சூழ்ச்சி” என்றான். “சூழ்ச்சி செய்யவும் அவர்களுக்கு தெரியவில்லை” என்றார் சுஷமர். ஒன்றோடொன்று இணைந்து எழுந்த குரல்கள் அவரைச் சூழ்ந்தன.


ஒவ்வொரு விழியையாக மாறி மாறி நோக்கிய கிருதர் ஒன்றை உணர்ந்தார். சுக்ரர் கசனை உறுதியாக ஏற்றுக்கொள்ளமாட்டார் என்று அவர்கள் எவரும் எண்ணவில்லை. ஒருவேளை ஏற்கவும் கூடும் என்னும் ஐயம் அவர்களுக்கு இருந்தது என்பதனால்தான் அவர்கள் காத்திருந்தனர். அவர் சொல்லப்போவதை அவர்கள்  முன்னரே கணித்து அச்சினத்தை திரட்டிக்கொண்டிருந்தனர். அச்சொற்களை அகத்தே சொல்லிக்கொண்டும் இருந்திருக்கலாம்.  எண்ண அடுக்குகளுக்கு அப்பால் ஆழத்தில் அவர் அறிந்த ஒன்றையே அவர்களும் அறிந்திருந்தனர். கனிந்த பழத்தில் மரம் தன் இனிமையையும் மணத்தையும் நிறைப்பதுபோல தந்தை தன் மகளின் உள்ளமென எழுந்திருக்கிறார்.


கிருதர் “பிரஹஸ்பதியின் மைந்தரை தன் முதல் மாணவராக நமது ஆசிரியர் சுக்ரர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். இனி மறுசொல் வரும் வரை கசன் இங்குதான் தங்குவான்” என்றார். அதை மேலும் அழுத்தி “நம்முடன் அமர்ந்து கல்வி கற்பான். அவனுக்குரிய குடிலையும் பிறவற்றையும் ஒருங்கு செய்ய ஆசிரியர் ஆணையிட்டிருக்கிறார்” என்றார். அனைவரும் திகைத்த விழிகளுடன் அமைதி அடைந்தனர். இளைஞனொருவன் “அவன் எதற்கு வந்தான் என்று ஆசிரியர் அறிவாரா?” என்றான். கிருதர் “ஆசிரியருக்கு கற்பிக்கும் இடத்தில் நாம் இல்லையென்று நான் எண்ணுகின்றேன்” என்றார். “இருந்தாலும் நமது ஐயத்தை சொல்ல வேண்டும். அவர் முதிர்ந்தவர். அக்கனிவால் சிறுமைகளை காணாது செல்லவும் கூடும்” என்றார் சுஷமர்.


சற்று முதிர்ந்த மாணவராகிய சாந்தர் “மிக அழகிய ஒன்று மிகக்கூரியதாகவே இருக்கும் என்கின்றன நூல்கள்” என்றார். கிருதர் “ஆம், ஆயினும் இத்தருணத்தில் நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை” என்று சொன்னார். கிருதர் குடில்களை நோக்கி நடக்க உடன்வந்த சுதமர் “எப்படி அவர் ஏற்றுக்கொண்டார்? இத்தனை வெளிப்படையாகத் தெரியும் ஒன்றை எப்படி அவரால் புரிந்துகொள்ளாமல் இருக்க முடிகிறது? என்ன நிகழ்கிறது அங்கே?” என்றார். கிருதர் “புரிந்துகொள்வது மிக எளிது, உத்தமரே. நமதுஆசிரியர் தனது ஆசிரியரை வழிபடுவதை ஒருகணமும் நிறுத்தியவரல்ல. இம்மைந்தன் அவ்வாசிரியனின் மறுவடிவம்” என்றார். சுதமர் அந்த உண்மையை உடலுருவெனக் கண்டவர்போல நின்றுவிட்டார்.


“மண்ணில் பலவகையான காதல்கள் மானுடருக்கு நிகழ்கின்றன. கன்னி மேல் இளைஞர் கொள்ளும் காதல், மைந்தர் மேல் பெற்றோர் கொள்ளும் காதல், தோழர்கள் கொள்ளும் காதல்… ஆனால் ஆசிரியரின்மேல் மாணவன் கொள்ளும் காதல் இவையனைத்திலும் முதன்மையானது. பிற காதல்கள் சுடர்கள் என்றால் ஆசிரியருக்கும் மாணவனுக்கும் இடையே உள்ள காதலை சூரியன் என்கின்றன நூல்கள்” என்றார் கிருதர். “அத்தனை காதல்களிலும் உள்ளாழத்தில் ஆசிரியனும் மாணவனுக்குமான காதலே அடங்கியிருக்கிறது. கன்னிக்கு ஆசிரியனும் ஆனவனே பெருங்காதலன். மைந்தனுக்கு ஆசிரியனாகிறான் தந்தை. தோழனுக்கு நல்லாசிரியன் தோழனே. கற்றலும் கற்பித்தலும் இன்றி பொன்றாப் பெருங்காதல் நிகழ்வதில்லை.”


“ஏனென்றால் விழைவின்பொருட்டும் வெல்வதன்பொருட்டும் கொள்ளும் காதல்கள் விரைவிலேயே சலித்து பொருளிழக்கும். எல்லையின்றி வெல்லவும் விழையவும் எவரால் இயலும்? கற்றலோ எல்லையற்றது. கற்கப்படுவது எதுவாயினும் எந்நோக்கம் கொண்டதாயினும் கல்வி என எழுந்து வந்து முன்னிற்பது முடிவிலியாகிய பிரம்மமே” என்று கிருதர் தொடர்ந்தார். “கூறுங்கள், எந்நிலையிலேனும் நமது ஆசிரியருடனான நமது காதல் அணுவிடை குறைபடுமா?” சுதமரும் அவருக்குப்பின் வந்த இருமாணவர்களும்  நெகிழ்ந்த முகங்களும் ஒளிவிடும் கண்களுமாக நோக்கி நின்றனர்.


“அது உருமாறக்கூடும். ஆயிரம் திரைகளை அள்ளி போர்த்திக்கொள்ளக் கூடும். பிறிதொன்றென தன்னை நடிக்கக்கூடும். ஆனால் அனல்போல ஒளிக்கும்தோறும் எரிந்தெழும். விதைபோல புதைக்கும்தோறும் முளைக்கும்” என்றார் கிருதர். “இங்கு மூன்று மலர்களுடன் படியேறி வந்தவன் கசனல்ல. பேரழகு மீண்டும் உடல்கொண்ட பிரஹஸ்பதியேதான். கால் நகக்கணு முதல் கூந்தல் இழை வரை அணுவணுவாக நம் ஆசிரியர் நோக்கி மகிழ்ந்து வணங்கி தன் அகத்தில் சூடிய ஆசிரியரின்  உருவையே இளந்தோற்றமென இங்கு கண்டு பேருவகை கொள்கிறார்.”


“நம் ஆசிரியர்  தன் ஆணவத்தால் தன் ஆசிரியரை எதிர்க்கலாம். இம்மைந்தனை தோள் தழுவுவதால் அச்சிறுமையை கடந்துசென்று மீண்டும் ஆசிரியரை சென்றடைகிறார்” என்றார் கிருதர். பின்னர் புன்னகையுடன் “உறவுகளில் விலகிச்செல்வதும் அணுகுவதற்கான பாதையே. ஏனெனில் அது ஒரு மாபெரும் வட்டம்” என்றார். அவர் அருகே மீண்டும் வந்து “அவன் சஞ்சீவினிக்காகவே வந்துளான்” என்றான் இளமாணவன். “ஆம், அவன் அதை கற்றுச்செல்வான். அவர்கொண்டுள்ள பேரன்பை அவன் அவ்வகையில் களவுக்கு கருவியென்றாக்குவான்” என்றான் இன்னொருவன்.


“ஆசிரியரிடமிருந்து அதை அவன் கற்கவியலாது. ஏனெனில் பிறிதெவருக்கும் அதை கற்பிக்க மாட்டேன் என்று விருஷபர்வனுக்கும் தைத்யர் குலத்துக்கும் அவர் வாக்களித்திருக்கிறார். அந்த நுண்சொல் நம் ஆசிரியருக்குரியதல்ல, அசுரர்களின் செல்வமது. அனைத்தையும்விட நம் ஆசிரியரை அவர் அளித்த அச்சொல்லே கட்டுப்படுத்தும்” என்றார் கிருதர். “அவ்வாறு எண்ணுவோம்” என்றார் சுஷமர். “ஆம், அவ்வாறே நடக்கவேண்டும்” என்றார் பிறிதொருவர். தயங்கிவர்களாக தங்களுக்குள் முழுத்துச் சொட்டும் சொற்களின் தாளத்தைக் கேட்டவர்களாக அவர்கள் கலைந்து சென்றனர்.


விரைவிலேயே கசன் சுக்ரரின் குருநிலையில் அனைவராலும் விரும்பப்படுபவனாக ஆனான். முதலில் அவன் மேல் ஐயமும் அதன் விளைவான சினமும் விலக்கமும் அனைவரிடமும் இருந்தது. அவனை சுக்ரரின் முன்னிலையில் இருந்து அவனுக்கென ஒருக்கப்பட்ட குடிலுக்கு அழைத்துச் செல்கையில் எண்ணி எடுத்த சொற்களால் மறுமொழியிறுத்தார் கிருதர். மாற்றாடை ஒன்று வேண்டுமென்று அவன் கேட்டபோது “மரவுரி அணிவீர்களா அல்லது மலராடையா?” என்று மெல்லிய ஏளனத்துடன் கேட்டார். அதை அவன் உணர்ந்தாலும் “மாணவர்களுக்குரியது மரவுரி அல்லவா?” என்று இயல்பாக மறுமொழி சொன்னான்.


“இங்கு அந்தணர்களுடன் அசுரர்களும் மாணவர்களாக உள்ளனரா?” என்று அவன் கேட்டபோது “இங்குள்ள அந்தணரும் அசுரரே” என மறுமொழி சொல்லிவிட்டு அவர் கிளம்பிச் சென்றார். அவன் “நானும் அசுரனென்றாக விழைகிறேன், கிருதரே” என பின்னாலிருந்து கூவி சொன்னான். அறியாமல் அவர் திரும்பிவிட அவன் புன்னகைத்து “என் மேல் சினம்கொள்ளவேண்டாம், கிருதரே. நான் நேற்றென ஏதுமிலாது வாழ்பவன்” என்றான். அச்சிரிப்பின் இளமையில் அவர் முகம் மலர்ந்தார். உடனே தன்னை இறுக்கிக்கொண்டு திரும்பிச் சென்றார். ஆனல் மீண்டும் அம்முகம் நினைவுக்கு வந்தபோது புன்னகைசெய்தார்.




tigerஅன்றிரவு கசன் தன் குடில்விட்டு வெளியே இறங்கி முற்றத்தில் நின்றபோது அப்பால் மைய முற்றத்தில் நின்ற வேங்கைகளில் ஒன்று அவனை நோக்கி மெல்ல உறுமியது. செவி கோட்டி மூக்கை நீட்டி அவனை கூர்ந்தபின் பின்னங்காலெடுத்து வைத்து உடலைக் குவித்து பதுங்கி முனகியது. அவன் புன்னகையுடன் கைகள் நீட்டி அதை அழைத்தான். அங்கு நின்று செவிகளை அசைத்தபடி அவனை மதிப்பிட்டது.  திரும்பி விலாவிலமர்ந்த பூச்சியை விரட்டிவிட்டு கையால் முகத்தை வருடிக்கொண்டது. ஆனால் அதன் உளக்கூர் அவனையே நோக்கியிருந்தது.


அதன் உடன்பிறந்தவை இரண்டும் எழுந்து வந்து அதற்குபின்னால் நின்றபடி அவனை நோக்கின. பிறைநிலா பெருக்கிய ஒளியில் அவற்றின் மென்மயிர்ப்பிசிறுகள் வெண்ணிறப் புல்விதைச் செண்டுகள்போல் ஒளிவிட்டன. ஒன்று மெல்ல திரும்பியபோது இருவிழிகளும் அனனெல சுடர்கொண்டு அணைந்தன. அவன் மீண்டும் ஒருமுறை அவற்றை அழைத்தான். ஒருவேங்கை ஒருமுறை உறுமியபின் திரும்பிச்செல்வதுபோல காட்டி தலைமட்டும் திருப்பிக்காட்டியது. அதை இன்னொன்று மெல்ல அடித்தது.


கசன் அவற்றை நோக்குவதைத் தவிர்த்து நிலவை நோக்கி இடையில் இரு கைகளையும் வைத்தபடி முற்றத்து செண்பக மரத்தடியில் நின்றான். மெல்லிய காலடிகள் கேட்டும் திரும்பி நோக்கவில்லை. அவனருகே வந்து சற்று அப்பால் நின்ற வேங்கை தாழ்ந்த ஒலியில் உறுமி அவனை அழைத்தது. அவன் திரும்பி நோக்காமல் வானையே நோக்கிக்கொண்டிருந்தான். அது மீண்டும் அருகே வந்து அழைத்தது. அவன் திரும்பி நோக்கி புன்னகைத்து அழைக்கும்பொருட்டு விரல் சொடுக்கினான். பூனைக்குட்டிபோல் முதுகை வளைத்து தூக்கி வாலை செங்குத்தாகத் தூக்கி கால் தூக்கிவைத்து அவனை நோக்கி வந்தது. மெல்ல முனகிக் கொண்டு அவன் கால்களில் தன் விலாவை தேய்த்துச்சென்றது.


அப்போது அதன் உடலிலிருந்து எழுந்த மணத்தை உணர்ந்த பிற வேங்கைகள் அங்கிருந்து செல்லத்துள்ளலுடன்  பாய்ந்து ஓடி வந்து அதை பொய்க்கடி கவ்வி விலக்கியபின் தாங்கள் அவன் மேல் உரசின. அங்கிருந்த சிறு கல்லொன்றில் அமர்ந்து அவன் அவ்வேங்கைகளை கொஞ்சத் தொடங்கினான். அவற்றின் காதுகளுக்குப் பின்னாலும் அடிக்கழுத்திலும் வருடினான். அவற்றிலொன்று உடனே அவன் முன் மல்லாந்து படுத்து நகமெழாத பூங்கால்களால் அவனை மெல்லத்தட்டி வால் குழைத்து விளையாடத்தொடங்கியது. இன்னொன்று அதன் அடிவயிற்றை முகர்ந்தது. பிறிதொன்று அவன் பின்னால் சென்று தன் முதுகை உரசியபடி சுழன்றது. எழுந்து தன் இரு கால்களையும் அவன் தோள்களில் வைத்து தலையை தன் தலையால் தட்டி விளையாடியது.


அவற்றின் ஓசை கேட்டு தன் குடிலில் இருந்து ஓடிவந்த தேவயானி விழிதுழாவி அப்பால் கசனின் குடில் முன் அவை அவனுடன் விளையாடிக்கொண்டிருப்பதை பார்த்தாள். தன் குடில் வாயிலிலேயே மூங்கில் தூணைத் தழுவியபடி கன்னத்தை அதில் பதித்து, குழல்கட்டு அவிழ்ந்து சரிய தலை சாய்த்து நின்று அவ்விளையாட்டை நோக்கிக்கொண்டிருந்தாள்.. அவள் நோக்கிக்கொண்டிருப்பதை ஆழ் புலன் ஒன்றால் உண்ர்ந்த கசன் திரும்பி அவளை பார்த்தான்.


அரையிருளிலும் மின்னும் அவள் கண்களுடன் நோக்கு கோக்க அவனால் முடியவில்லை. அவள் தன் ஆடையை திருத்துகையில் எழுந்த அணியோசை தொலைவிலிருந்து அவனை வந்தடைந்தது. அவள் நோக்குவதை அவன் நோக்கினூடாக அறிந்த வேங்கைகளில் ஒன்று எழுந்து நின்று அவளைப்பார்த்து உறுமி பின்னர் துள்ளி ஓடி படிகளில் தாவி ஏறி அவளருகே சென்று வாலைத்தூக்கியபடி அவள் உடலை தன் உடலால் உரசித் தழுவி சுழன்றது.


மீண்டுமொரு உறுமலுடன் அங்கிருந்து அவனை நோக்கி ஓடிவந்தது. அவனருகே படுத்திருந்த வேங்கை எழுந்து வால் தூக்கி அவளை நோக்கி உறுமியபடி இருகால்களையும் விரித்து இதோ ஓடிவிடுவேன் என்று சைகை காட்டியது. அவள் புன்னகைத்து அதை சுட்டுவிரலால் அருகழைத்தாள். அவ்விரலின் ஓரசைவுக்கும் அதன் உடலில் ஓர் அசைவு நிகழ்ந்தது. பின்னர் உவகையொலியுடன் அது பாய்ந்து அவளை நோக்கி சென்றது. கசன் அவளை நோக்கி புன்னகைத்தான். அவள் புன்னகையுடன் தன் அறைக்குள் செல்ல அங்கு நின்றிருந்த வேங்கை திரும்பி அவனை நோக்கி உடல்குழைத்தபடி ஓடிவந்தது.


தொடர்புடைய பதிவுகள்

வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–52
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–49
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–51
வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–48
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–14
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 37
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 13
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 75
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 2
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 58
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 72
‘வெண்முரசு’ – நூல் ஏழு – ‘இந்திரநீலம்’ – 67
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 89
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 31
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 26
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 25
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 12
‘வெண்முரசு’ – நூல் நான்கு – ‘நீலம்’ – 2
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 59
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 78
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 24, 2017 11:30

அசோகமித்திரனும் திருமாவளவனும்

thiruma


 


இன்று மாலை ஒரு மலையாள எழுத்தாளரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அசோகமித்திரனை மலையாளத்தில் வாசித்திருக்கிறார். “இங்கே அத்தகைய ஒரு மாபெரும் எழுத்தாளர் மறைந்தால் முதலமைச்சரே சென்று அஞ்சலி செலுத்தியிருப்பார் . அத்தனை அரசியல்கட்சிகளின் பிரதிநிதிகளும் சென்றிருப்பார்கள்” என்றார். “தமிழகத்தில் சினிமாநடிகர்கள் தவிர எவருக்கும் அந்த மரியாதை அளிக்கப்படுவதில்லை இல்லையா?” என்று கேட்டார்.


 


அது உண்மை. ஆனால் நிலைமை மிகமிக மாறிவிட்டிருக்கிறது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்புவரை எழுத்தாளர்கள் மறைந்தால் அது ஒரு செய்தியே அல்ல. நாலைந்து நாட்கள் கழித்து அந்த எழுத்தாளரின் உறவினர்கள் அளிக்கும் சிறிய ’நீத்தார்க்குறிப்பு’ விளம்பரம் வழியாகவே அவரது மறைவு தெரியவரும். மேலும் இரண்டுமாதம் கழித்து சிற்றிதழ்கள் சில கட்டுரைகளை வெளியிடும். மௌனி இறந்ததை ஒருவாரம் கழித்தே சுந்தர ராமசாமி அறிந்தார். தி.ஜானகிராமன், க.நா.சு போன்ற புகழ்மிக்கவர்களுக்கே அதுதான் நிலைமை. ப.சிங்காரத்தின் இறப்பு ந.முருகேசபாண்டியன் அறிந்து அவரிடமிருந்தே மற்றவர்களுக்குத் தெரியவந்தது.


 



எழுத்தாளர்களின் இறப்பைச் செய்தியாக்கும்போது மிகச்சுருக்கமான ஓரிருவரிகளையே நாளிதழ்கள் வெளியிட்டன. மிஸ்டர் கே.என்.சுப்ரமணியத்தின் இறப்பைச் சொன்ன தி ஹிந்துவின் செய்தி க.நா.சு என்னும் சகாப்தத்தைக் குறிக்கிறது என எவருக்கும் தெரிந்திருக்காது. 2007 லா.ச.ரா இறந்தபோது  உடன் லா.சு.ரங்கராஜன் என்பவரின் படத்தை தி ஹிந்து வெளியிட்டது.


 


அந்நிலைமையை மாற்றியவர் என்றால் தினமணியின் ஆசியராக வந்த ஐராவதம் மகாதேவனை ச் சொல்லவேண்டும். அவர்தான் எழுத்தாளர்களைப்பற்றிய செய்திகளை வெளியிடத்தொடங்கியவர். அவர்கள் இறக்கும்போதேனும். தினமணிக்கு இராம சம்பந்தம் ஆசிரியராக வந்தபின்னர்தான் இலக்கியவிழாக்களைப்பற்றிய செய்திகள் வெளிவரத் தொடங்கின.  எழுத்தாளர்களுக்கான அஞ்சலிக்கட்டுரைகள் வெளியிடப்பட்டன. பல அஞ்சலிக்கட்டுரைகளை நான் எழுதியிருந்தேன்.


 


இன்று இணையம் வந்தபின்னர்தான் இந்த ஆளுமைகளுக்கு இளையதலைமுறையினரிடம் ஓர் இடம் உள்ளது என்பது நம் ஊடகங்களுக்குத் தெரிகிறது. நாளிதழ்கள் செய்திகள் வெளியிடுகின்றன. தொலைக்காட்சிகள் செய்தியுடன் காணொளிகளையும் வெளியிடுகின்றன. இந்த அளவுக்கான ஒரு மாற்றம் தமிழில் நிகழுமென நான் பத்தாண்டுகளுக்கு முன்பு நினைத்தும் பார்த்திருக்கவில்லை. ஆம், அரசியல்வாதிகள் வரவில்லை. ஏனென்றால் இதில் வாக்குகள் உண்டு என அவர்கள் எண்ணவில்லை. அதற்கப்பால் பண்பாட்டுச்செயல்பாடு என ஒன்று உண்டு என்பதையே அவர்கள் அறிந்திருக்கமாட்டார்கள்.


 


தமிழகத்தின் அரசியல்வாதிகளில் தொல் திருமாவளவன் மட்டுமே நேரில் வந்து அசோகமித்திரனுக்கு அஞ்சலி செலுத்தியதாக அறிந்தேன். என்றும் அவர்மேல் நான் மதிப்பு கொண்டவன். இன்று அம்மதிப்பு மேலும் வளர்கிறது.


 


எளிய அரசியலுக்கு அப்பால் சென்று பண்பாட்டுச்செயல்பாட்டின் முக்கியத்துவத்தை காணமுடிபவர், கணக்குவழக்குகள் நோக்காமல் அதை மதிப்பவரே உண்மையில் அரசியல்வாதி என்னும் நிலைவிட்டு அரசாளர் என்னும் நிலைக்கு எழுபவர்.


 


அசோகமித்திரனின் வாசகன் என்ற நிலையில் திருமாவளவனுக்கு என் நன்றி

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 24, 2017 08:23

March 23, 2017

அவ்வளவு சிறியது…

aso


 


அவ்வளவு சிறியதுதான்

இந்த வாழ்க்கை

இல்லையா?


நாம் எதையும்

திரும்பபெற முடியாத அளவு

திருத்திக்கொள்ள முடியாத அளவு



எந்த அன்பையும்

எந்தப் பரிசையும்

பதிலுக்குத் தரமுடியாத அளவு


சொல்ல வந்தது

தொண்டையிலே நின்று விடும் அளவு


மின்மயானத்தில்

பத்து வினாடிகளில்

சாம்பலாகிவிடும் அளவு


ஒரு சிறிய ஸ்டாம்பின்

பன்புறம் எழுதக்கூடிய அளவு


எவரும் எவரிடமும்

திரும்ப வர முடியாத அளவு


அவ்வவு சிறியதுதான்

இந்த வாழ்க்கை எனில்

சிறிய அன்பும்

சிறிய வருத்தங்களும்

சிறிய திருட்டுகளும்

நமக்குப்

போதும்தானே..


 


மனுஷ்யபுத்திரன்


23.3.2017

இரவு 11.58


 



தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 23, 2017 18:32

இந்நாள்

asokamithran


 


நேற்று காலைமுதலே ஒருவகையான நிலைகொள்ளாமை இருந்துகொண்டிருந்தது. தர்க்கபூர்வமாக இதற்கெல்லாம் ஓரு அர்த்தமும் இல்லை. ஆனால் ஏதோ ஒன்றை எதிர்பார்த்துக்கொண்டிருந்தேன். எழுதமுடியாமல் கீழே சென்று படுத்துவிட்டேன். உடல் எடைமிகுந்து அசைக்கவே முடியாமலானதுபோல. விழிப்பு வந்தது. ஆனால் எழ முடியவில்லை. அருண்மொழி வழக்கம்போல பதினொரு மணிக்கு அழைத்தாள். நான் எடுக்கவில்லை. உண்மையில் தொலைபேசி அழைப்பை கேட்டுக்கொண்டே இருந்தேன். எழுந்து சென்று எடுக்கத் தோன்றவில்லை. நான் இறந்துகொண்டிருக்கிறேன் என்பதுபோல ஒர்  எண்ணம் இருந்துகொண்டிருந்தது. இப்போது எண்ணிப்பார்த்தால் திக்கென்கிறது. அசோகமித்திரனை மிக அருகே என உணர்ந்தேன். அவருடைய கடிதம் ஒன்று வந்திருக்கிறது. அதை வாசிக்கிறேன், சோஃபீஸ் சாய்ஸ் நாவல் பற்றி எழுதியிருக்கிறார். அந்நாவலை வாசித்து மிக ஆழமான உளச்சோர்வுக்கு ஆளாகி தற்கொலை செய்யும் மனநிலையிலேயே ஒருமாதம் வாழ்ந்ததைப்பற்றி. படபடப்புடன் அதை மீண்டும் மீண்டும் வாசித்தேன்.பின்னர் விழிப்பு கொண்டபோது தெரிந்தது, அக்கடிதம் இருபதாண்டுகளுக்கு முன் உண்மையிலேயே அசோகமித்திரன் எழுதியது. அது நீல இன்லண்ட் உறை. நான் இப்போது வாசித்தது வெண்தாள். மீண்டும் தூக்கம். அல்லது மென்மயக்கம். மீண்டும்மீண்டும் கூப்பிட்டுச் சலித்து அஞ்சிய அருண்மொழி பக்கத்துவீட்டு பாட்டியைக் கூப்பிட்டு நான் வீட்டில் இருக்கிறேனா என்று பார்க்கச்சொன்னாள். அவர்கள் உள்ளே வர டோரா விடவில்லை. அஜிதனை போனில் அழைத்து என்னைக்கூப்பிடும்படி அருண்மொழி சொல்ல அவன் நாலைந்துமுறை அழைத்தான். பின்னுச்சிப்பொழுதில் விழித்தேன். உடல் தள்ளாடியது. மிகமிக எடையுடன் இருந்த எண்ணம் இங்கிருந்து முற்றாக அகன்றுவிடவேண்டும் என்று. எதிலும் பொருளில்லை என்று. மேலும் ஒருசொல்லும் எழுதக்கூடாது என்று. ஏனென்றறியாத துயரம்போல கொல்லும்திறன் கொண்டது வேறில்லை. தனிமை. பிறிதொன்றிலா தனிமை. மேலே சென்று பழைய சேமிப்பில் எங்கோ இருந்த அசோகமித்திரனின் கடிதம் இருக்குமா என தேடினேன். பின் இணையத்தை தொடங்கி என்னைப்பற்றிய ஆவணப்படத்தில் அம்மாவின் முகத்தைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இல்லை, இது என்னை உறிஞ்சிவிடும் எனத் தோன்றியது. சாரு நிவேதிதாவின் தளத்திற்குச் சென்றேன். அங்கே கிரேடில் ஆஃப் ஃபில்த் இசைத்துணுக்கு. அதை பார்த்திருக்கக்கூடாது. மீண்டும்மீண்டும். ஊளை, உறுமல்,கர்ஜனை, விம்மல். மூளை துளைக்கும் ஓசைகள். நிலைகுலையச்செய்யும் தாளம். இத்தனை கீழ்மைநிறைந்த ஓசைகளில் எப்படி நிகழ்கிறது ஒத்திசைவு? ஒன்றரைமணிநேரம் அவர்களின் இசையையே தேடித்தேடிப்பார்த்தேன். எஞ்சிய ஆற்றலும் முழுமையாக அகன்றது. இருக்கையில் இருந்து எழுந்து படுக்கைநோக்கிச் செல்லவும் முடியவில்லை. சுவரைப்பற்றியபடிச் சென்று மீண்டும் படுத்துக்கொண்டேன். நெடுநேரம் கழித்து மீண்டும் மீண்டும் அருண்மொழியின் அழைப்பு. எழுந்து செல்பேசியை எடுத்தேன். அவள்குரல். மிகமிக ஆழத்திலிருந்து எழுந்து அந்தச் சரடைப்பற்றிக்கொண்டு மேலே வந்தேன். கிணற்றில் தொலைந்துபோனதை பாதாளக்கரண்டியால் துழாவித்துழாவி கொக்கியில் சிக்கவைத்து மீட்பதுபோல. எந்த இருளிலும் தேடிவந்துவிடுவாள் போலும். எப்படித்தெரிகிறது இபப்டி இருக்கிறேன் என்று?. என்ன செய்கிறது என்றாள். எனக்கு நாக்குழறியது. முழுமையாக ஒருசொல்லும் சொல்லமுடியவில்லை. அவள் பேசிமுடித்ததும் அப்படியே கைதளர மீண்டும் தூக்கம். முற்றிலும் அவிழ்ந்துபரந்த நிலை. பல்லைக்கடித்தபடி அறுத்துக்கொண்டு எழுந்து வெளியே சென்றேன். டோரா பாய்ந்து வந்தது. நாய்களின் முகத்திலிருக்கும் கனிவு மனிதன்மேல் இன்னமும் தெய்வங்கள் அன்புடன் இருக்கின்றன என்பதற்கான சான்று. அவளை கொஞ்சியபோதுதான் என் முகம் அத்தனைச் சோர்ந்திருப்பதை, தசைகள் தொய்ந்திருப்பதை நானே உணர்ந்தேன். மெல்ல முகம் மலர்ந்தது. அவளை இழுத்துச்சென்று குளிப்பாட்டினேன். பிறநாய்களைப்போலன்றி டோராவுக்குக் குளிப்பது பிடிக்கும். அவள் உடலில் நம் கைகள் ஓடுவது அவளை விழிசொக்கச்செய்யும். டாபர்மானின் கண்கள் சிறியவை. பால்மாறா குழந்தைகளுக்குரிய பாலாடைமங்கல்  படிந்தவை. மயங்குபவை. அவ்வப்போது என்னை முத்தமிட்டுக்கொண்டே இருந்தாள்.அவளை நீராட்டி முடித்தபோது விடுபட்டுவிட்டேன். அஜிதனைக் கூப்பிட்டேன். அம்மா அவனைக்கூப்பிட்டு என்னிடம் பேசச்சொன்னதாகச் சொன்னாள். பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தேன். கிரேடில் ஆஃப் பில்த் கேட்டதைப்பற்றிச் சொன்னேன்.  “அதெல்லாம் உனக்குள்ளதில்லை” என்றான். எதுவும்செய்யத் தோன்றவில்லை. வீட்டிலிருந்த அத்தனை பாத்திரங்களையும் கழுவி வைத்தேன். மீண்டும் கணிப்பொறிமுன் சென்று அமர்ந்தேன். அதை திறந்தால் நான் அம்மாவின் படத்தைத்தான் பார்ப்பேன். அம்மாவும் அசோகமித்திரனும் எப்படியோ கலந்துவிட்டிருக்கிறார்கள். அவரிடம் அம்மாவைப்பற்றிச் சொல்லியிருக்கிறேன், அம்மா சால்பெல்லோ பற்றிச் சொன்னதை. சிரித்தபடி “பெண்களுக்கு நம்மளைவிட ஜாஸ்தி தெரியும்” என்றார்.என்ன செய்கிறது எனக்கு? மிகமுக்கியமான எதையோ இழந்தவன்போலிருக்கிறேன். தூக்கமின்மைதான் காரணமா? ஆனால் எப்போதும் நன்றாகவே தூங்குகிறேன். வழக்கம்போல எலுமிச்சைப்பழத்தை பிழிந்து தலையில் தேய்த்தேன். அது உலர்ந்தபின் குளிர்ந்த எண்ணை. அதுவும் சற்றுக் காய்ந்தபின் வெந்நீரில் குளித்தேன். கணிப்பொறி முன் வந்தமர்ந்தபோது உடல் மீண்டும் எடைகொண்டு பக்கவாட்டில் சரிந்துகொண்டிருந்தது. ஆறரை மணிவரை அப்படியே அமர்ந்திருந்தேன். அருண்மொழி வந்து கதவைத்தட்டியது தெரியவில்லை. செல்பேசி அடித்ததும் தெரியவில்லை. அவள் மேலே வந்து ஜன்னலைத்தட்டித்தட்டி அழைத்தாள். ஒருகணம் கழிந்தபின்னர்தான் எங்கிருக்கிறேன் என்றே தெரிந்தது. உள்ளே வந்ததுமே “என்ன செய்கிறது?” என்றாள். எனக்குச் சொல்லத்தெரியவில்லை. சொல்லாக்கியிருந்தால் “இவையனைத்தும் வெறும் சொற்கள்” என்று சொல்லியிருப்பேன். “இவை வெறும் அலைகள் மட்டுமே” என்றிருப்பேன். இருவரும் ஒரு அந்திநடை சென்றோம். எட்டுமணிக்கு திரும்பிவந்தபோது மெல்ல மீண்டு வந்திருந்தேன். தோசை சாப்பிட்டேன். மேலே சென்றமர்ந்து வெண்முரசு அத்தியாயம் ஒன்று எழுதினேன். எழுதத் தொடங்கியதும் அதுவே உருகிவழிந்து வடிவம் கொள்கிறது. எனக்கு முற்றிலும் அன்னியமானதாக அங்கே தெரிகிறது. அதை திரும்ப வாசிக்கவே என்னால் முடியாது. அதை பிழைதிருத்துவதுகூட இயல்வதல்ல. பாட்டுக்கேட்க முயன்றேன். ஓரிரு ஒலிகளுக்கு அப்பால் செவிகூர முடியவில்லை. மீண்டும் மீண்டும் எதையோ வாசித்தேன். சொற்கள் அர்த்தமாகவில்லை. பன்னிரண்டரை மணிக்கு சென்றுபடுத்தேன். விழுந்துகொண்டே இருப்பதுபோலிருந்தது. இறப்பு என்பதை இந்நாவலில் மீளமீள எழுதுகிறேனா? இறப்பை எழுதுபவனை அது சூழ்ந்துகொள்கிறதா? எல்லா நரம்புகளிலும் அதுவே நுரைத்தோடுகிறதா? இறப்பை எண்ணும்தோறும் நாம் நம் ஒவ்வொரு செல்லுக்கும் அச்செய்தியைச் சொல்லிக்கொண்டிருக்கிறோம். பிறப்பும் இறப்பும் நம்மில் கணம்கோடி என நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. இறப்பு வாழ்கிறது உடலில். அது அறியும் சொற்களை. காலையில் எழுந்தபோது புத்துணர்ச்சியுடன் இருந்தேன். ஆம், அது ஒருநாள்.அவ்வப்போது வந்துசெல்லும் ஒர் எளிய சோர்வு. எழுதினேன். மின்வாரியம் சென்று கட்டணம் செலுத்தினேன். வங்கிக்குச் சென்றேன். மீன் வாங்கிவந்தேன். மசால்வடை வாங்கிவந்து ரசத்தை சூடுசெய்து போட்டுவைத்தேன். பாத்திரங்களைக் கழுவி வைத்தேன். ஆனால் மதியம் தூங்கமுடியவில்லை. படுத்ததுமே உள்ளம் எழுந்துவிட்டது. மாலையில் ஒரு நீண்ட நடைசென்று மீண்டேன். கிருஷ்ணனிடம் பேசினேன். அசோகமித்திரனின் முழுத்தொகையில் அப்பாவின் சினேகிதர் வரை வந்துவிட்டதைச் சொன்னார். “மிகஎளிமையான எழுத்து. ஒட்டுமொத்தமாக அது நிறைக்கிறது” என்றார். சையதுமாமாவை நினைவுகூர்ந்தேன். ஐநூறுகோப்பைத்தட்டுகள் கதையில் அறிமுகமாகிறார். மிகமிக ஆரம்பகாலக் கதை. தொடர்ந்து அசோகமித்திரனுடன் இருந்துகொண்டிருந்திருக்கிறார். அசோகமித்திரன் அவருடைய அப்பாவிடமிருந்து விலகியதே இல்லை. அப்பாவின் சினேகிதர் எப்படி அகலமுடியும்? முதல்முறையாகச் சவரம் செய்த அனுபவத்தை எழுதியிருக்கிறார். முகம்முழுக்க காயம். “நீ சரியாகச் சொல்லித்தரவில்லை. உன் பிளேடு பழையது” என்று அப்பாவிடம் சிணுங்குகிறார். அப்பா ஒன்றும் சொல்லவில்லை. இன்னும் எத்தனை காயங்களைக் காணப்போகிறாய் என நினைத்திருக்கலாம். பெருமூச்சுடன் அன்றி எண்ணமுடியாத வாழ்க்கையால் சூழப்பட்டவர். இழந்தவாழ்க்கை இனிமையாகத் தெரிந்தது என்றால் எந்தவாழ்க்கையில் வாழ்ந்தார்? திரும்பிவந்து தேங்காய் உரித்தேன். நெத்திலிமீனை ஆய்ந்துவைத்தேன். தி ஹிந்து கோலப்பன் அழைத்து அசோகமித்திரன் மறைந்துவிட்டதைச் சொன்னார். ஒருகணம் ஆழ்ந்த உறைநிலை. இதற்காகத்தானா? இல்லை, இதுவேறு. மிகைப்படுத்திக்கொள்ளவேண்டியதில்லை. ஆனால் இப்படியெல்லாம் ஊடுபாவாகப் பின்னப்பட்டுகிறது. அகமும் புறமும் என. அறிந்ததும் அறியாததும் என. இருப்பதும் இன்மையும் என. மீண்டும் முழு உடலும் எடைகொண்டது. படிகளில் நின்று நின்று ஏறவேண்டியிருந்தது. கணிப்பொறி முன் வந்து அமர்ந்து ஒரே வரி எழுதினேன். கைகளைக் கட்டிக்கொண்டு பார்த்துக்கொண்டிருந்தேன். எவ்வளவு எழுதியிருக்கிறேன். எவ்வளவு உரையாடியிருக்கிறேன். 1985ல் முதல்முறையாக அவரைச் சென்று கண்டேன். வாழ்விலே ஒருமுறை தொகுப்பை வாசித்திருந்தேன். தாமோதர ரெட்டி தெருவிலிருந்த அவருடைய ஓட்டுவீட்டில். “வீட்டுக்குள் முழுக்க மனுஷா…வாடகைக்கு விட்டிருக்கேன்…வெளியே போய் பேசலாமே” என்றார். வெளியே சென்று ஒரு சிறிய கடையில் காபி சாப்பிட்டோம். “வாசிக்கிறது நல்லதுன்னு நான் சொல்லமாட்டேன். எதுக்குன்னு தோணுது. எல்லாம் அர்த்தமில்லாத விஷயங்கள்” அதற்குப்பின் பலமுறை. ”ஒட்டுமொத்தமா பாக்கக்கூடாது. அதான் சிறுகதையே நன்னாருக்குன்னு நான் சொல்றேன். ஒட்டுமொத்தமா பார்த்தா ஒரு அர்த்தமும் கெடையாது. வார் ஆன்ட் பீஸ் வாசிச்சா என்ன மிஞ்சுது? ஒண்ணுமில்லை” இந்த இரவில் இதைத்தான் எண்ணிக்கொண்டிருக்கப்போகிறேனா? அரங்கசாமி அழைத்தார். கிருஷ்ணனின் குறுஞ்செய்தி. நான் இங்கிருப்பேன். முழுமையான தனிமையில். பின்னால்செல்வதே ஒரே வழி. அஞ்சுபவர்கள் பின்னால்தான் செல்லவேண்டும். பின்னகர்வதற்கான வழி இசை. பழைய பாடல்கள். கால இடத்துடன் நினைவுடன் பிரிக்கமுடியாதபடி பிணைந்தவை. எழுபதுகளின் மலையாளப்பாடல்களை கேட்டுக்கொண்டிருக்கிறேன். ஒவ்வொரு விளக்காக அணைந்து இருள்கிறது துறைமுகநகரம். கலங்கரைவிளக்கு மட்டும் அலைகடலை வீணாகத் துழாவிக்கொண்டிருக்கிறது.

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 23, 2017 11:43

‘பொய்பித்தல்வாதம் Vs பேய்சியன் வாதம்’ – 4 – இளையராஜா

 


uni


4 இழைகளின் இசை


 


1.நம் பிரபஞ்சத்தின் அடிப்படை கட்டுமானப் பொருட்கள் எவை?


2.நம் பிரபஞ்சம் எத்தனை பரிமாணங்களைக் கொண்டது?


3.இணை பிரபஞ்சங்கள் உள்ளனவா?


4.காலப்பயணம் சாத்தியமா?


5. நம் பிரபஞ்சத்தின் ஆதியும் அந்தமும் என்ன?


 


இவையெல்லாம் நாம் அறிவியல் மூலம் எழுப்பும் அடிப்படை கேள்விகளில் சில. இவைகளை விளக்க இயற்பியலில் இரு கோட்பாடுகள் உள்ளன. ஒன்று குவான்டம் இயற்பியல். அது மீச்சிறு உலகத்தின் அறிவியல். விழிகளால் காணமுடியாத சிறு துகள்களைப் பற்றி விவரிக்கிறது. நம் பிரபஞ்சத்தின் கட்டுமானப் பொருட்களைப் பற்றி பேசும் அறிவியல்.


இன்னொரு கோட்பாடு பொது சார்பியல் கோட்பாடு. இது விழிகளில் அடங்கா பிரம்மாண்ட அமைப்புகளைப் பற்றி பேசுகிறது. கோள்கள், கேலக்ஸி, பிரபஞ்சம் என விரிந்து அவற்றை விவரிக்கிறது.


அணுக்கரு மற்றும் எலக்டரான் போன்ற துகள்களின் கண்டுபிடிப்பும் அவற்றை மையமாகக் கொண்ட நிகழ்வுகளை விளக்க உருவாக்கப்பட்ட கொள்கைகளுடன் நவீன குவாண்டம் கோட்பாடு தொடங்கியது. இது நிகழ்ந்தது 1920 களில். அப்போது எலக்ட்ரான் மற்றும் புரோட்டான் போன்ற ஒரு சில துகள்களே கண்டறியப்பட்டு இருந்தன. ஆனால் அடுத்து   நாற்பது ஆண்டுகளில் தீபாவளி பூச்சட்டியில் இருந்து சடசடவென விழும் சிவந்த நெருப்புத்துளிகளைப் போல எண்ணற்ற துகள்கள் கண்டறியப்பட்டன.


அலைதுகள் இருமை பெரும் தத்துவப் பிரச்சனையை எழுப்பியது. ஆனால் நடைமுறையில் சிக்கல் ஒன்றும் இல்லை. ஏனெனில் எலக்ட்ரானும் ஒளியும் ஒத்த சோதனைகளில் ஒரே மாதிரி நடந்துகொள்கின்றன என்ற உண்மையின் அடிப்படையில் கோட்பாட்டை மேலும் விரிவாக்கினார்கள்.


நம் கண்ணுக்குப் புலனாகும் மின்காந்த அலையை ஒளி என்கிறோம். காந்தம் மற்றும் மின்சுற்று ஆகியவற்றின் அடிப்படையில் அமைந்த விதிகளை ஜேம்ஸ் கிளார்க் மேக்ஸ்வெல் (1831-1879) நான்கு அழகிய சமன்பாடுகளாக தொகுத்தார். ஆனால் அதன் தீர்வுகள் ஒளி போன்ற மின்காந்த அலையை விளக்குவதாக அமைந்தது. அதாவது மின்னியல், காந்தவியல் மற்றும் ஒளி (மின்காந்த அலைகள்) என வெவ்வேறாக தோற்றம் காட்டிய மூன்றும் ஒரு கோட்பாட்டின் கீழ் ஒருங்கிணைக்கப்பட்டது.


மின்காந்தவியல் கிளாசிக்கல் அறிவியல். காந்தப்புலம், மின்புலம் என புலம் (Field) என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. உதாரணமாக, நம் வீட்டின் உள்ள ஒவ்வொரு இடத்திலும் வெப்பநிலை என்ன என்று அளக்க இயலும். அடுப்பின் அருகிலுள்ள பகுதி சூடாகவும் பாத்திரம் கழுவும் தொட்டி, குளியலறை குளிர்ந்தும் மற்ற அறைகள் இடைபட்ட வெப்பநிலையிலும் இருக்கும். அதாவது நம் வீட்டின் முப்பரிமாண வெளியை புள்ளிகளாக பாவித்து அதன் ஒவ்வொரு புள்ளியுடனும் வெப்பநிலை ஒன்றை வரையறுக்கலாம். அதைப்போலவே மின்காந்தவியல் வெளியின் ஒவ்வொரு புள்ளியுடன் மின்விசை, காந்தவிசை போன்ற விசைகளை தொடர்புறுத்துகிறது.


நவீன நோக்கில் இதில் இரு சிக்கல்கள் உள்ளன. ஒன்று வெளி என்பதை அறுபடாத ஒன்றாக ஊகிக்கிறோம். இடைவெளி இன்றி அமைந்த சீரான அமைப்பு என்று கருதுகிறோம். இதில் வரையறுக்கப்பட்ட விசைகளை குவாண்டம் கொள்கையின்படி அமைக்கவேண்டும்.


இரண்டு துகள்களை துல்லியமாக விவரிக்க வேண்டுமெனில் அது சிறப்பு சார்பியல் கோட்பாட்டின்படி அமைந்திருக்க வேண்டும். ஏனெனில் துகள்களின் வேகம் ஒளியின் வேகத்திற்கு அருகில் வரவர அதன் இயக்கத்தின் கணிப்புகளில் சார்பியல் திருத்தம் செய்யப்படவேண்டும்.


இந்த இரு திருத்தங்களும் அமைந்த குவாண்டம் கோட்பாடு குவாண்டம் எலக்ட்ரோடைனாமிக்ஸ் (Quantum Electrodynamics) எனப்படுகிறது. இதை கிளாசிக்கல் மின் காந்தவியலின் நவீன குவாண்டம் அவதாரம் எனலாம். இது எலக்ட்ரான் மற்றும் ஒளி ஆகியவற்றின் ஊடாட்டத்தை துல்லியமாக விவரித்தது. அவற்றின் இயக்கத்திற்கு காரணமான விசையை மின்காந்த விசை என்றது.


ஆனால் குவாண்டம் எலக்ட்ரோடைனாமிக்ஸ் கோட்பாட்டால் அணுக்கருவை விளக்க முடியவில்லை. அணுக்கரு என்பது புரோட்டான் மற்றும் நியூட்ரான் ஆகிய துகள்களைக் கொண்டது. புரோட்டான் நேர் மின்னூட்டத் துகள். அருகருகே உள்ள நேர்மின்துகள்கள் ஒன்றை ஒன்று எதிர்க்கும் தன்மையைக் கொண்டவை என்பது மின்காந்தவியலின் பாடம். அப்படி இருக்க அணுக்கருவில் அவை எப்படி ஒரு பாலத்தீன் பையில் போடப்பட்ட பந்துகளை போல நெருக்கமாக நிலையான அமைப்பாக காணப்படுகின்றன?  அவற்றின் எதிர் விசையை வென்று அவற்றை கட்டி வைத்துள்ள விசை எது?


இந்த அணுக்கருவிசையை விளக்க இன்னொரு பிரத்தியோகமான கோட்பாடு உருவாக்கப்பட்டது. அது குவாண்டம் குரோமோடைனாமிக்ஸ் (Quantum Chromodynamics) எனப்படுகிறது. புரோட்டான் மற்றும் நியூட்ரான் ஆகிய துகள்கள் அடிப்படைத் துகள்கள் அல்ல. அவை குவார்க் (Quarks) என்ற அடிப்படை துகள்களால் ஆனவை என்று விளக்குகிறது. எலக்ட்ரான் ஒரு அடிப்படை துகள். எதிர் மின்னூட்டம் கொண்டது. ஆனால் குவார்க் இருவகை மின்னூட்டத்தைக் கொண்டது. ஒன்று குவார்க் 2/3 மற்றும் -1/3 போன்ற பின்ன மின்னூட்டத்தைக் கொண்டவை. இரண்டு குவார்க் நிற மின்னூட்டம் (Color charge) என்ற இன்னொரு சிறப்புவகை மின்னூட்டத்தைக் கொண்டது. இங்கு செயல்படும் விசையானது மிக குறைந்த தூரத்திற்கு மட்டுமே செயல்படும் வலிமையான விசை ஆகும். இது வன்விசை எனப்படுகிறது.


மூன்றாவது வகை விசை அணுக்கரு வினையான பீட்டா சிதைவில் (Beta decay) செயல்படுகிறது. இது அணுக்கரு மென்விசை எனப்படுகிறது. மின்காந்தவிசையும் அணுக்கரு மென்விசையும் பின் ஒருங்கிணைக்கப்பட்டது. அதாவது அவை துகள்கள் அதிக ஆற்றல் கொண்டிருக்கும் போது ஒரே விசைதான். குறைந்த ஆற்றல் நிலையில் அவை இரண்டு விசைகளாக  பிரிகின்றன என்று விளக்கினர்.


நான்காவது விசை ஈர்ப்பு விசை. ஈர்ப்புவிசை அண்டசராசரங்களை ஆளும் ராஜ விசை. ஆனால் ஊஞ்சலில் அமர்ந்திருக்கும் ஒரு மூன்று வயது குழந்தை அதை எதிர்த்து ஆட அனுமதிக்கும் எளிமையும் கொண்டது.


நியூட்டனை இயற்பியலின் ஒரு முக்கியமான திருப்புமுனை எனலாம். கோட்பாட்டு அறிவியலாளர்கள் இயற்கை நிகழ்வுகளை கணித மொழியில் விவரிக்கிறார்கள். நியூட்டனை முதல் கோட்பாட்டு அறிவியலாளர் எனலாம். ஏனெனில் நியூட்டனுக்கு முன் எண்களும் எளிய வடிவியல் விதிகளும் இயக்கத்தை விவரிக்கப் பயன்பட்டது. உதாரணம் கெப்ளரின் மூன்று விதிகள்.


இயக்கத்தை விவரிக்க நியூட்டன் ஒரு புதுவகை கணிதத்தை ஆரம்பித்து வைத்தார். அது நுண்கணிதம் எனப்படுகிறது. கிட்டத்தட்ட நிழற்படத்துக்கும் வீடியோவுக்கும் உள்ள தூரம் இது. நுண்கணிதம் ஒரு வீடியோ கேமரா போல (கணிதத்தின் அர்த்தத்தில்). மாற்றங்களை துல்லியமாக தொடரும் கணிதம் இது. பொருளின் இயக்கத்தை துல்லியமாக படம்பிடிக்க, தொடர உதவுகிறது. இயக்கம் பற்றிய தன் கூரிய அவதானிப்புகளை நியூட்டன் இயக்கத்தின் விதிகளாக  நுண்கணித மொழியில் முன்வைத்தார்.


மேலும், நியூட்டன் தன் இரண்டாம்விதியின் மூலம் இயக்கத்தையும் விசையையும் இணைத்தார். நியூட்டனின் இயக்கவிதிகள் பந்து, எறிபொருள் போன்ற மண்ணில் நிகழும் இயக்கத்தை விளக்குவதுடன் நின்றுவிடாமல் அது விண்ணில் நிகழும் கோள்களின் இயக்கத்தையும் விளக்குவதாக அமைந்தது. இரு நிறைகளுக்கிடையேயான விசை சமன்பாடு நியூட்டனின் முக்கிய பங்களிப்பு.  அதை ஈர்ப்பு விசை என்கிறோம்.


பின்பு, ஐன்ஸ்டீன் தன் சார்பியில் கொள்கையின் அடிப்படையில் ஈர்ப்பு விசையை விளக்கினார். அதன்படி ஒரு  நிறை தன்னைச் சுற்றியுள்ள கால வெளியை குலைக்கிறது. அதாவது சூரியன் தன் ராட்சச நிறையால் அதைச் சுற்றியுள்ள வெளியையே உருக்குலைக்கிறது. வெளியில் ஏற்படும் இந்தக் குலைவு பூமி போன்ற மற்ற நிறைகள் எப்படிச் சுழல வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது. எனவே ஈர்ப்புவிசை என்பது காலவெளியில் ஏற்படும் குலைவு என்றார்.


இயற்பியலின் நவீன நோக்கு இதுதான்.  நாம் காணும் பிரபஞ்சம் இரு முக்கிய அம்சங்களைக் கொண்டது. அவை அடிப்படை விசைகள் மற்றும் துகள்கள்.


நம் பிரபஞ்சத்தை ஆளும் விசைகள் நான்கு. ஈர்ப்பு விசை, மின்காந்தவிசை, அணுக்கரு வன்விசை மற்றும் அணுக்கரு மென்விசை. ஒவ்வொரு விசை செயல்படும் தூரமும் வலிமையும் வேறுபடுகின்றன. வன்விசை மற்றும் மென்விசைகள் மிக குறுகிய தூரத்திற்குள் அதாவது அணுக்கருவில் மட்டும் செயல்படும் விசைகள். ஆனால் ஈர்ப்பு விசையும் மின்காந்த விசையும் மிக பிரம்மாண்டமான தூரத்திற்கு செல்லும் விசைகள்.


எந்தக் கூறும் அற்ற துகளை அடிப்படை துகள் என்கிறோம். பிரபல உதாரணம் எலக்ட்ரான். இவை லெப்டான் (Leptons) என்ற துகள்


வகையைச் சார்ந்தது. மொத்தம் ஆறு லெப்டான்கள் உள்ளன. ஒவ்வொரு லெப்டான் துகளுக்கும் எதிர் லெப்டான் துகள் உண்டு.


புரோட்டான், நியூட்ரான் போன்ற துகள்கள் அடிப்படைத் துகள்கள் அல்ல. ஏனெனில் அவை பிற துகள்களை கூறுகளாகக் கொண்டவை. உதாரணமாக, மூன்று குவார்க் துகள்கள் இணைந்து புரோட்டான் மற்றும் நியூட்ரான் உருவாகின்றன. மொத்தம் ஆறுவகை குவார்க் துகள்கள் உள்ளன. ஒவ்வொரு குவார்க் துகளுக்கும் எதிர் குவார்க் துகள் உண்டு.


அடிப்படை விசை ஒவ்வொன்றுடனும் இன்னொரு விசேஷமான துகள்கள் இணைந்துள்ளன. அவை விசைத் துகள்கள். இந்த விசைத் துகள்களுக்கு போசான்கள் (Bosons) என்று பெயர் உதாரணம் ஃபோட்டான். இது மின்காந்த விசையின் துகள். இரு மின்னூட்டம் பெற்ற துகள்கள் ஃபோட்டான்  என்ற விசைத்துகளின் வழியே விசையை பரிமாறிக்கொள்கின்றன. வன்விசையின் துகள்கள் குளுவான் (Gluons) எனப்படுகின்றன.  அவை குவார்க் துகள்களுக்கிடையே விசையை கடத்துகின்றன. W மற்றும் Z போசான்கள் மென்விசையின் துகள்கள். ஈர்ப்பு விசையின் துகள் இதுவரை கண்டறியப்படவில்லை. அது கிராவிட்டான் என்று ஊகிக்கப்படுகிறது.


நவீன அறிவியலின் இன்றைய பார்வை இதுதான். இதுதான் துகள் கொள்கை (Standard model) எனப்படுகிறது.


துகள் கொள்கையையும் பொது சார்பியல் கோட்பாட்டையும் ஒருங்கிணைப்பது நவீன அறிவியலின் இலக்குகளில் ஒன்று. நான்கு அடிப்படை விசைகளும் ஒரே விசையின் நான்கு முகங்களே என காட்டவேண்டும் என்பது நவீன அறிவியலாளர்களின் விழைவுகளில் ஒன்று. ஒரே கோட்பாட்டின் மூலம் பிரபஞ்சத்தின் அனைத்து ஆடல்களையும் விளக்க வேண்டும் என்பது அவர்களை துரத்தும் கனவுகளில் ஒன்று.


இங்குதான் இழை கோட்பாடு வருகிறது. அது பிரபஞ்சத்தின் அனைத்து ஆடல்களையும் தன் சமன்பாட்டின் மூலம் விளக்க முயல்கிறது. துகள் கொள்கையையும் பொது சார்பியல் கொள்கையையும் ஒருங்கிணைக்கும் கோட்பாட்டை குவாண்டம் கிராவிட்டி கோட்பாடு என்கிறார்கள்.


***


இசையில் பிறக்கும் துகள்கள்


இழை கோட்பாடு ஐந்து முக்கிய அம்சங்களைக் கொண்டது.



நமது பிரபஞ்சம் அதிர்வுறும் இழைகளால் ஆனது.
குவாண்டம் இயற்பியல் மற்றும் பொது சார்பியல் என்ற இரு கோட்பாடுகளை ஒருங்கிணைக்க முற்படுகிறது.
பிரபஞ்சத்தின் நான்கு அடிப்படை விசைகளையும் இணைத்து அவை ஒற்றை விசையின் விளைவுகளே என்று காட்ட முயல்கிறது.
நமது பிரபஞ்சத்தில் உள்ள போசான்கள் மற்றும் ஃபெர்மியான்களை சீர்மை (Supersymmetry) என்ற கொள்கையின் மூலம் இணைக்கிறது.
நமது பிரபஞ்சம் நான்குக்கும் மேற்பட்ட காலவெளிப் பரிமாணங்களை உடையது என்று கணிக்கிறது.

இழை கோட்பாடு 1968-ல் பிறந்தது. துகள் முடுக்கி எந்திரங்களில் புரோட்டான், நியூட்ரான் போன்ற துகள்களின் சிதறல்களை விளக்க முதன்முதலில் முன்வைக்கப்பட்டது. அவற்றின் நிறைக்கும் சுழற்சிக்கும் இடையே உள்ள உறவை கண்டறிய முற்பட்டது. இது போசானிக் இழை கோட்பாடு (Bosonic string theory) எனப்பட்டது.


இதன் அடிப்படை கொள்கையானது துகள்கள் என்பவை அதிர்வுறும் இழைகள். உதாரணமாக, புரோட்டான் என்ற துகள் மூன்று குவார்க் இழைகளை உள்ளடக்கியது. புரோட்டான் என்பது இந்த மூன்று இழைகளின் முடிச்சு. இந்த இழைகள் அதிர்வுறும் ஆற்றல் இழைகள்.


கிடார் கம்பிகளில் இருந்து எழும் இசையைப் போல அதிர்வுறும் இழைகளில் இருந்து துகள்கள் பிறக்கின்றன. கிடார் கம்பியின் நீளம், இறுக்கம், அடர்த்தி, வாசிக்கும் விதத்தை பொறுத்து மிகச் செறிவான இசையை அது உருவாகிறது. அதுபோல இழைகளும் நீளம், இறுக்கம் போன்ற பண்புகளைக் கொண்டிருக்கின்றன. அவை அதிர்வுறும் விதத்திற்கு (Excitation modes) ஏற்ப வெவ்வேறு துகள்கள் உருவாகின்றன. ஆனால் போசானிக் கோட்பாட்டால் துகள்களின் சிதறலை வெற்றிகரமாக விளக்கமுடியவில்லை.


பின்பு சீர்மை என்ற கொள்கையின் அடிப்படையில் இழை கோட்பாடு மீள்உருவாக்கம் செய்யப்பட்டது. இது சீர்மை இழை கோட்பாடு எனப்படுகிறது (Supersymmetric string theory). இதன்படி,


ஒவ்வொரு ஃபெர்மியான் துகளுக்கும் ஒரு போசான் இணைத்துகள்.


ஒவ்வொரு போசான் துகளுக்கும் ஒரு ஃபெர்மியான் இணைத்துகள்.


இந்தச் சீர்மை கொள்கை மிக அழகான தீர்வை அளித்தது. போசான்கள் அதாவது ஃபோட்டான், கிராவிட்டான், Z, W போசான்கள் போன்றவை விசையின் அலகுகள். ஃபெர்மியான்கள் அதாவது எலக்ட்ரான், குவார்க், நியூட்ரினோ போன்ற துகள்கள் பொருண்மையின் அலகுகள். இந்தச் சீர்மை கொள்கை விசையையும் பொருண்மையையும் இணைத்தது.


இது இழை கோட்பாட்டின் பரிமாணங்களை இருபத்தி ஆறிலிருந்து பத்தாக குறைத்தது. மேலும் ஈர்ப்பு விசையின் துகள் கிராவிட்டான் என்று ஊகிக்கிப்படுகிறது. அதை இன்னும் சோதனை மூலம் கண்டறியவில்லை. இந்த துகளை இழை கோட்பாட்டு இயல்பாக உள்ளடக்கி இருந்தது.


அதிர்வுறும் இழைகள் திறந்த இழைகளா? அல்லது சுருள் இழைகளா? போசான்கள் மட்டும் உள்ளனவா? அல்லது ஃபெர்மியான்களையும் உள்ளடக்கியதா? என்பதை பொறுத்து இழை கோட்பாட்டை பலவகைகளில் அமைக்கமுடியும். மொத்தம் ஐந்துவகை இழை கோட்பாடுகள் உள்ளன.


இழை கோட்பாடு நான்குக்கு மேற்பட்ட பரிமாணங்களைக் கொண்ட கோட்பாடு. உண்மையில் மூன்றுக்கும் மேற்பட்ட வெளி பரிமாணங்கள் சுருங்கிய நிலையில் உள்ளன. அதனால் நமக்கு அது புலனாவதில்லை என்கிறது இந்தக் கோட்பாடு.


1995 வரை இழை கோட்பாட்டில் ஐந்து வெர்ஷன்கள் இருந்தன. அவற்றை ஒருங்கிணைக்க M கோட்பாடு (M Theory) முன்வைக்கப்பட்டது. இது இழையுடன் மெம்பரேன் (Membranes simply known as Branes) என்ற இன்னொரு அடிப்படைக் கூறை அறிமுகப்படுத்தியது. இழை போலல்லாமல் இது ஒன்றுக்கு மேற்பட்ட பரிமாணங்களைக் கொண்டது.


அதாவது பூஜ்ய பரிமாண மெம்பரேன் புள்ளி. ஒரு பரிமாண மெம்பரேன் இழை. இரு பரிமாண மெம்பரேன் 2-Branes. முப்பரிமாண மெம்பரேன் 3-Branes என ஒன்பது பரிமாணங்கள் வரை விரிகிறது.


மெம்பரேன்கள் மின்னூட்டம் மற்றும் இறுக்கம் ஆகிய பண்புகளைக் கொன்டது.  அதிர்வுறும் இழைகள் துகள்களை உருவாக்குவது போலவே இவையும் துகள்களை உருவாக்குகின்றன. மேலும், பிரேன்கள் ஒருவகை கருத்துளையின் அம்சங்களை விளக்க உதவுகின்றன.


இழை கோட்பாட்டின் மீதான விமர்சனங்கள்.


விமர்சகர்கள் இழை கோட்பாடு உண்மையில் ஒரு அடிப்படை கோட்பாடே அல்ல. அது பயனளிக்கும் ஒரு தோராயமான கோட்பாடு. அவ்வளவுதான் என்கிறார்கள். சோதனை செய்து உறுதிச் செய்யவோ அல்லது பொய்பிக்கவோ கூடிய எந்த கணிப்பையும் இழைகோட்பாடு முன்வைக்கவில்லை. இழைகோட்பாட்டில் எந்த ஒரு கருத்தையும் இணைக்கலாம் என்ற அளவுக்கு அது மிகவும் தெளிவில்லாமல் உள்ளது. அது திட்டவட்டமான உறுதியான கொள்கைகளின் அடிப்படையில் அமையவில்லை போன்ற விமர்சனங்கள் இழை கோட்பாட்டின் மீது வைக்கப்படுகின்றன.


புரோட்டான், நியூட்ரான் போன்ற துகள்களின் சிதறல்களை விளக்க முதன் முதலில் இழை கோட்பாடு முன்வைக்கப்பட்டது. ஆனால் அவற்றின் சிதறலை இழை கோட்பாட்டால் வெற்றிகரமாக விவரிக்க முடியவில்லை. தெளிவான விளக்கங்களுக்குப் பதிலாக பல முரண்களை மட்டுமே முன்வைவைத்தது. இந்தக் கோட்பாட்டின் படி,



எலக்ட்ரான் போன்ற துகள்கள் இருக்க முடியாது.
பிரபஞ்சம் 26 பரிமாணங்களைக் கொண்டது
டேக்யான் (Tachyons) என்ற ஒளியை விட அதிக வேகத்தில் செல்லும் துகள்கள் உள்ளன.
பல நிறையற்ற துகள்கள் உள்ளன.

இழை கோட்பாடு பின்பு சீர்மை என்ற கொள்கையின் அடிப்படையில் மீள் உருவாக்கம் செய்யப்பட்டது. ஒவ்வொரு துகளுக்கும் இணைத் துகள் உண்டு என்பது இதன் கொள்கை. இதன் சிக்கல் என்னவென்றால் இதுவரை சோதனையின் மூலம் கண்டறியப்படாத இணைத் துகள்களை முன்வைக்கிறது.


இந்தச் சீர்மை கோட்பாடு கிராவிட்டான் போன்ற ஒரு  ஈர்ப்பு துகளை கணிக்கிறது.  துகள்களை விவரிக்க ஆரம்பிக்கப்பட்ட கோட்பாடு சட்டென்று குவாண்டம் கிராவிட்டி கோட்பாடாக பரிணமித்தது.


உண்மையில் இழை கோட்பாடு என்பது ஒரு வெர்ஷன் மட்டும் அல்ல. அதற்கு ஐந்து வெர்ஷன்கள் உள்ளன. இவை அனைத்தும் ஒரு தாய் கோட்பாட்டின் தோராயமான குட்டி கோட்பாடுகளே என்று இன்னொரு பெரும் கோட்பாடு ஊகிக்கப்பட்டது.  இது எம் கோட்பாடு எனப்படுகிறது. ஆனால் அது என்ன கோட்பாடு என்று யாருக்கும் தெளிவில்லை.


ஒரு கோட்பாடு வெற்றிகரமாக அறிவியலில் ஏற்றுக்கொள்ளப்பட உண்மையில் அந்தக் கோட்பாடு நாம் காணும் பிரபஞ்ச நிகழ்வுகளை சரியாக விளக்க வேண்டும். (Explanatory power). அது சோதனை மூலம் கண்டறியச் சாத்தியமான கணிப்புகளை முன்வைக்க வேண்டும். (Predictive power). இந்தக் இரு கூறுகளும் ஒரு விரிவான அறிவியல் கோட்பாட்டுக்கு மிக அவசியம்.


நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக இழை கோட்பாடு தெளிவான எந்த கணிப்பையும் முன்வைக்கவில்லை. பல விமர்சகர்கள் இழை கோட்பாட்டுக்கும் சோதனைக்கும் தொடர்பே இல்லை என்கிறார்கள். அதற்கும் புற உலகுக்கும் சம்பந்தமே இல்லை. அது தன்னை உள் முகமாக திருப்பிக்கொண்ட கோட்பாடு என்று சொல்கிறார்கள்.


1998-ல் இழைகோட்பாட்டுக்கு இன்னொரு சிக்கல் சோதனை வடிவில் வந்தது. நமது பிரபஞ்சம் விரிவடையும் வேகம் அதிகரிக்கிறது என்று சோதனை மூலம் அறியப்பட்டது. இந்த அவதானிப்பையும் கருத்தில் கொண்டு இழை கோட்பாட்டை அமைத்தால் அதற்கு கணக்கற்ற தீர்வுகள் வருகின்றன. அதாவது 10 க்கு பின் 500 பூஜ்யங்கள் அளவிலான தீர்வுகள்.


கோடிக்கணக்கான தீர்வுகளைக் கொண்ட ஒரு தீர்வு வெளி. அதன் சிக்கல் என்னவென்றால் உண்மையில் அவை எவையும் நம் பிரபஞ்சத்தை விவரிக்கவேயில்லை. சில idealized பிரபஞ்சங்களை விவரிக்கிறது. இழை கோட்பாட்டை பற்றிய விமர்சனங்கள் இன்னும் அதிகமாகின.


சீர்மை இழை கோட்பாடு பத்து பரிமாணங்களைக் கொண்டது. எம் கோட்பாடு பதினொரு பரிமாணங்களைக் கொண்டது. ஆனால் நம் பிரபஞ்ச வெளி மூன்று பரிமாணங்களை மட்டுமே கொண்டது. காலத்தையும் சேர்த்தால் நான்கு. அதற்கு மேல் உள்ள பரிமாணங்களைக் எப்படி விளங்கிகொள்வது என்று தெரியவில்லை.


பொதுசார்பியல் கோட்பாட்டுடன் குவாண்டம் கோட்பாடை இணைப்பதுதான் இழை கோட்பாட்டின் மிக முக்கிய இலக்கு. ஆனால் அது உண்மையில் பொது சார்பியலின் அடிப்படை கொள்கைக்கே எதிரானது. பொது சார்பியல் காலத்தையும் வெளியையும் அடிப்படையிலே உள்ளடக்கிய கோட்பாடு. ஆனால் இழை கோட்பாடு அவ்வாறு அல்ல. இது ஒரு முக்கியமான முரண்.


இன்னொரு முக்கியமான விமர்சனம் இழை கோட்பாட்டாளர்கள் ஒரு கல்ட் போல செயல்படுகிறார்கள். மீடியா கவனமும் நிதியும் பெறுகிறார்கள். இதனால் குவாண்டம் கிராவிட்டிக்கான மாற்று கோட்பாடுகளின் சாத்தியங்களைக் குறைக்கிறார்கள்.


இழை கோட்பாட்டை இதுவரை சோதனைக்குள்ளாக்க முடியவில்லை. துகள் ஆய்வு மையங்களில் அதிக ஆற்றல் கொண்டு செய்யப்படும் சோதனை முடிவுகள் இழை கோட்பாட்டின் சில கூறுகளை உறுதி செய்யப் பயன்படலாம் என்று எதிர்பார்ப்பு மட்டும்தான் இப்போதைக்கு உள்ளது.


பெரும் வினாக்கள்


பொது சார்பியல் கோட்பாட்டையும் குவாண்டம் கோட்பாட்டையும் இணைப்பது இன்றைய நவீன அறிவியலின் இலக்குகளில் ஒன்று. அப்படி இணைக்கும் கோட்பாடு இழை கோட்பாடாகவோ அல்லது வேறு ஒன்றாகவோ இருக்கலாம். ஆனால் அப்படி தன்னை முன்வைத்துக்கொள்ளும் ஒரு கோட்பாடு பின்வரும் வினாக்களுக்கு பதிலாக அமைய வேண்டும்.



பிரபஞ்சவியலின் படி கிட்டத்தட்ட பதினான்கு பில்லியன் ஆண்டுகளுக்கு முன் பெருவெடிப்பில் இருந்து நாம் காணும் பிரபஞ்சம் உருவாகியது. பெருவெடிப்பின் கணங்களுக்குப்பின் மிக துரித கதியில் உப்பி விரிந்தது. பின்பு உப்பல் குறைந்து இப்போது நாம் காணும் வேகத்தில் விரிவடைகிறது. இது இரு கேள்விகளை எழுப்புகிறது. ஆதி பெருவெடிப்பின் காரணம் என்ன? துரித கதி உப்பலை எதிர்த்த விசை எது?
பெருவெடிப்பின் பின் பிரபஞ்சம் குளிர்ந்து ஆற்றல் துகள்களாக மாறியது. அப்போது துகள்களும் எதிர்துகள்களும் சம அளவில் தோன்றி இருக்கலாம். துகளும் அதன் எதிர்துகளும் ஒன்றை ஒன்று தொட்டால் அது மீண்டும் ஆற்றலாக மாறும். அப்படி இருக்க இப்போது நம் பிரபஞ்சம் எப்படி உருவாகி இருக்க இயலும்? அப்போது துகள்கள் எதிர்துகள்களை விட மிக அதிக எண்ணிக்கையில் இருந்தனவா? அந்த சீர்குலைவு எப்படி ஏற்பட்டது?
குவாண்டம் கோட்பாடு விவரிக்கும் உலகை எப்படி விளங்கிக்கொள்வது?
உண்மையில் மிக அதிக அளவிலான துகள்களும் நான்கு விசைகளும் ஏன்? நம் பிரபஞ்சத்தை வடிவமைக்க இத்தனை செலவேறிய கூறுகளின் தேவை என்ன?
ஒளியின் வேகம், பிளாங்க் எண் போன்ற மாறிலிகள் குறிப்பிட்ட அளவுகளைக் கொண்டிருப்பதற்கான காரணம் என்ன? ஏனெனில் இவற்றின் அளவுகள் சிறிது மாறினாலும் நம் பிரபஞ்சத்தில் உயிர் தோன்றியிருப்பதற்கான வாய்ப்பு இல்லை. இத்தனை துல்லியமான இணக்கம் ஏன்?
வில்லில் இருந்து விடுபட்ட அம்பு போல காலம் முன்னோக்கி மட்டுமே ஏன் செல்கிறது? காலத்தின் மெய்மை யாது?
நம் கண்களுக்கும் கருவிகளுக்கும் சிக்கும் துகள்களைத் தவிர புலனாகாத துகள்கள் பிரபஞ்சத்தில் உள்ளனவா? புலனாகாத ஆற்றலின் பொருண்மையின் இயல்புகள் யாவை?
நம் பிரபஞ்சத்தின் அந்தம் எவ்வகையில் நிகழும்? அனைத்தும் விரிந்து உறையுமா? அல்லது அனைத்தும் சுருங்கி ஒரு புள்ளியில் அணையுமா? அல்லது ஆக்கமும் அழிவும் நிகழ்ந்து மீளமீள தோன்றி மறையுமா?

 


 


Jpeg

இளையராஜா


 


 


 


நான் எனது விவாத்தை இத்துடன் முடித்துக்கொள்கிறேன். எனது பார்வையை சுருக்கமாக இவ்வாறு தொகுத்து கூறுகிறேன்.



ஒரு கோட்பாடு முன்வைக்கும் கணிப்புகளின் மெய்மையைக் கொண்டு அந்த கோட்பாடு மெய் என்று தர்க்க ரீதியாக நிறுவ முடியாது. ஆனால் ஒரே ஒரு எதிர் கணிப்பை அவதானிப்பதன் மூலம் அந்த கோட்பாடு தவறு என்று தர்க்க ரீதியாக நிறுவ முடியும். இதை பாப்பரின் பொய்பித்தல் வாதம் என்கிறோம்.
கிளாசிக்கல் தர்க்க முறைமையின் மூலம் ஒன்றை உண்மையென்றும் பொய்யென்றும் தர்க்க ரீதியாக நிறுவ முடியும். இதை கருப்பு வெள்ளை தர்க்கம் எனலாம். இரு சாத்தியக் கூறுகளை மட்டுமே கொண்டது. முழுமுற்றான தகவல்கள் உள்ள எளிய சூழல்களில் செல்லுபடியாகக் கூடியது.
நவீன அறிவியலுக்கு இன்னும் விரிவான தர்க்கமுறைமை தேவை. ஏனெனில் அறிவியலின் கையில் இருக்கும் தரவுகள் முழுமையற்றவை. அதன் சோதனைகள் குறிப்பிட்ட பிழைத்தன்மை கொண்டவை. இந்த இயல்புகளை அடிப்படையாகக் கொண்ட தர்க்கமுறைமை தேவை.
இயற்கையைப் பற்றிய அறிவியல் கூற்றுகளை பெரும்பாலான சமயங்களில் முழுமுற்றான உண்மைகளாக முன்வைக்க முடியாது. ஆதார கூற்றுகளிலிருந்து முடிவுகளைத் தோராயமாகத்தான் பெறமுடியும். அவற்றை நிகழ்தகவின் மொழியில்தான் எழுத முடியும்.
பேய்சியன் வாதம் நிகழ்தகவை ஒரு தர்க்கமுறைமையாக முன்வைக்கிறது. இது ஒரு கருதுகோளின் அல்லது போட்டி கருதுகோள்களின் நிகழ்தகவை கணக்கிடுகிறது. அப்படி கணக்கிடுவதன் மூலம் சான்றின் அடிப்படையில் ஒரு கருதுகோளுடைய உண்மையின் வாய்ப்பை கணக்கிடுகிறது. கருதுகோளை நிகழ்தகவின் மொழியில் உறுதி செய்கிறது.
உண்மையில் பேய்சியன் தர்க்கமுறைமையை நவீன அறிவியல் ஒரு அறிதல் முறையாகக் காண்கிறது. பேய்சியன் தேற்றம்தான் பேய்சியன் அறிதல் முறையின் மையம். சார்புநிலை நிகழ்தகவின் அடிப்படையில் அமைந்த ஒரு கணித சமன்பாடுதான் பேய்சியன் தேற்றம் எனப்படுகிறது. இது தாமஸ் பேயிஸ் (1702-1761) என்ற பிரிட்டிஷ் புள்ளியல் மேதையால் கண்டறியப்பட்டது.
பேய்சியன் முறையில் தரவு அல்லது சான்று கிடைப்பதற்கு முன்பே கருதுகோளின் நிகழ்தகவை ஊகம் செய்கிறோம். இந்த நிகழ்தகவு அந்த அறிவுத்துறையில் இருந்து விளையும் ஊகம். அவ்வாறு ஊகிக்கப்பட்ட நிகழ்தகவு முன் நிகழ்தகவு (Prior probability). சோதனை மூலம் பெறும் தரவின் அல்லது சான்றின் அடிப்படையில் நிகழ்தகவு கணக்கிடப்பட்டு கருதுகோளின் நிகழ்தகவு பின்பு புதுபிக்கப்படுகிறது. சான்றின் அடிப்படையில் நாம் புதுப்பிக்கும் நிகழ்தகவு பின் நிகழ்தகவு (Posterior probability). தரவுகள் வர வர பின் நிகழ்தகவு iterative முறையில் மீண்டும் கணக்கிடப்படுகிறது.
ஒத்த அறிவு நிலையில் அல்லது அறிவுப்புலத்தில் நின்று கொண்டு செய்யப்படும் சோதனைகள் ஒத்த முடிவுகளை அளிக்க வேண்டும் என்பதுதான் அறிவியல் புறவயத்தன்மையின் நவீன வரையறை.
இன்று வானியல் துறையில் புள்ளியல் மிக அதிக அளவு பயன்படுத்தப்படுகிறது. பெரும் இரைச்சலின் நடுவே கிசுகிசுப்பு போன்ற நம் தகவலைக் கண்டறிய மிக பிரம்மாண்டமான புள்ளியல் பகுப்பாய்வுகள் செய்யப்படுகின்றன. இதுப்போன்ற சூழல்களின் பேய்சியன் முறைமை பயன்படுத்தப்படுகிறது. ஈர்ப்பு அலைகளின் சமீபத்திய கண்டுபிடிப்பு இதற்குச் சிறந்த உதாரணம்.
குவாண்டம் கோட்பாட்டையும் பொது சார்பியல் கோட்பாட்டையும் ஒருங்கிணைப்பது நவீன அறிவியலின் இலக்குகளில் ஒன்று. அந்தக் கோட்பாடு குவாண்டம் கிராவிட்டி கோட்பாடு எனப்படுகிறது. இழை கோட்பாடு தன்னை ஒரு குவாண்டம் கிராவிட்டி கோட்பாடாக முன்வைக்கிறது.
இழை கோட்பாடு பல முரண்களைக் கொண்டது. சோதனை செய்து உறுதிச் செய்யவோ அல்லது பொய்பிக்கவோ கூடிய எந்த கணிப்பையும் இழைகோட்பாடு முன்வைக்கவில்லை. துகள் ஆய்வு மையங்களில் அதிக ஆற்றல் கொண்டு செய்யப்படும் சோதனை முடிவுகள் இழை கோட்பாட்டின் சில கூறுகளை உறுதி செய்யப் பயன்படலாம் என்று எதிர்பார்ப்பு மட்டும்தான் இப்போதைக்கு உள்ளது.
இழை கோட்பாட்டின் மீது பல விமர்சனங்கள் வைக்கப்படுகின்றன. ஆனால் இழை கோட்பாட்டை முழுவதும் கைவிடவேண்டும் என்று முக்கியமான அறிவியலாளர்கள் யாரும் கூறவில்லை. ஏனெனில் ஒரு விரிவான கோட்பாடு நாளுக்கு நாள் உருவாக்கப்படுவதில்லை. கோட்பாடு மனித மனத்தின் அத்தனை பாய்ச்சல்களையும் கொண்டது. ஆனால் சோதனை யானை போலத்தான் அசைந்து வரமுடியும்.
நவீன அறிவியலுக்கும் தத்துவத்துக்கும் உள்ள உறவு மிகவும் மெல்லியது. நெகிழ்தன்மைக் கொண்டது. குவாண்டம் கோட்பாட்டை விளக்கும் தெளிவான தத்துவப் பார்வையை இன்றுவரை அடையமுடியவில்லை. 100 ஆண்டுகள் ஆகிவிட்டது. தத்துவத்தை நிராகரிக்கும் பல அறிவியலாளர்கள் நல்ல அறிவியல்தான் செய்தார்கள். செய்கிறார்கள். ஏனெனில் இயற்பியலின் சிக்கலான அம்சங்களை, நோக்கை தத்துவப்படுத்த முடியுமா என்ற சந்தேகம் 20-ஆம் நூற்றாண்டின் ஆரம்பித்தில் இருந்தே வலுக்கிறது.
கடந்த 2500 ஆண்டுகளாக புவியின் பல முனைகளில் ஆயிரக்கணக்கான மிகச் சிறந்த மனங்கள் தங்கள் வாழ்நாள் முழுக்க தொகுத்த ஞானம்தான் இன்றைய நவீன அறிவியல். அது இரு மொழிகளை மட்டுமே மெல்ல மெல்ல கற்றுகொண்டது. ஒன்று கணித்ததின் மொழி. புறவயமாக பிரபஞ்சத்துடன் உரையாட சோதனை என்ற இன்னொரு மொழி. இவை மட்டுமே அதை ஒரு துடிப்பான மெய்காண்முறையாக இன்றுவரை வைத்திருக்கின்றன.

முற்றும்.

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 23, 2017 11:34

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.