Jeyamohan's Blog, page 1665

March 16, 2017

பறக்கை சந்திப்பு

ஜெ


 


முங்கிக்குளி குறித்து எழுதியிருந்தீர்கள். ஏனோ பறக்கை என்னும் ஊரும் நினைவுக்கு வந்தது. ஒரு சரியான நாஞ்சில்நாட்டுக் கிராமம் என்று தோன்றியது


 


சந்திரசேகர்


 


 


parakkai


 


அன்புள்ள சந்திரசேகர்


 


பறக்கை ஒரு சரியான நாஞ்சில்நாட்டு கிராமம். ஒசரவிளை போல. அருமநல்லூர் போல. எல்லா வீடுகளுமே வசதியானவை, புதியவை. தூய்மையான தெருக்கள். நகரின் அனைத்து வசதிகளும் கொண்டு நகரின் பரபரப்பு இல்லாமல் அமைந்தவை


 


பறக்கைதான் அ.கா.பெருமாள் அவர்களின் சொந்த ஊர். இந்து நாளிதழின் ஆசிரியர்குழுவில் ஒருவரும் இசைவிமர்சகருமான கோலப்பன் இவ்வூரைச் சேர்ந்தவர். பறவைக்கரசனூர். சம்ஸ்கிருதத்தில் பக்ஷிராஜபுரம். இங்கே ஜடாயுதான் முக்க்கியமான தெய்வம். மதுசூதனப்பெருமாள் ஆலயம் இங்குள்ளது. அ.கா.பெருமாள் பறக்கை மதுசூதனப்பெருமாள் ஆலயம் என்னும் நூலை எழுதியிருக்கிறார்.


 


ஒருகாலத்தில் முங்கிக்குளிக்கென்றே ஆன ஊர். அருமையான நீர் நிறைந்த குளம். சற்று அப்பால் மாபெரும் ஏரி. இந்த ஆண்டு குமரிமாவட்டத்தில் நல்ல வரட்சி. பறக்கைக்கு க.நா.சு அடிக்கடி வந்திருக்கிறார். இங்குள்ள ஓட்டலில் சிற்றுண்டி அவருக்குப் பிடிக்கும். நானும் நாஞ்சில்நாடனும் வேதசகாயகுமாரும் அ.கா. பெருமாளும் பத்தாண்டுகளுக்கு முன் சிற்றுண்டிக்காக அடிக்கடி செல்வோம்


 


ஜெ


 


*


குமரிமாவட்டம் நாகர்கோயில் அருகே பறக்கை என்னும் சிற்றூரில் லட்சுமி மணிவண்ணன் அமைத்துள்ள நிழற்தாங்கல் என்னும் அமைப்பில் நான் வாசகர்களைச் சந்திக்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. காலை முதல் மாலைவரை இருப்பேன்


 


நாள் 26 -3= 2017


ஞாயிறு


அனைவரும் வரலாம். குறிப்பிட்ட திட்டங்களேதுமில்லாத உரையாடல்


 


நிழற்தாங்கல் படைப்பிற்கான வெளி


லட்சுமி மணிவண்ணன்


 


7 / 131 E பறக்கை @ போஸ்ட், நாகர்கோயில் குமரி மாவட்டம்


தொடர்பு எண் – 9362682373


மின்னஞ்சல் – slatepublications @gmail. com


 


11

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 16, 2017 09:52

March 15, 2017

கருணை நதிக்கரை -3

[image error]


இரவில் மணிமுத்தாறு அணை அருகே உள்ள பேரூராட்சிக்குச் சொந்தமான தங்கும் விடுதிக்குச் சென்றோம். 2008-ல் நானும் கிருஷ்ணனும், சென்னை செந்திலும், சிவாவும் ,பாபுவும் ஒரு மலைப்பயணமாக இங்கு வந்திருக்கிறோம். இதே தங்கும் விடுதியில் தங்கியிருக்கிறோம். இதைப்போல பேரூராட்சியால் கட்டப்பட்ட விடுதிகள் வேறெங்குமில்லை என நினைக்கிறேன்.


தனித்தனி கட்டிடங்களாக சுமார் பதினைந்து அறைகள் உள்ளன. நவீனக் கழிப்பறை, குளிர்சாதன வசதிகளுடன் கூடியவை. அமைப்பு ஒரு நட்சத்திர விடுதியளவுக்கு வசதியாக இருந்தாலும் அந்தளவுக்கு தூய்மையாகப் பேணப்படவில்லை என்று சொல்லலாம். ஆயினும் அச்சிற்றூரில் வேறெங்கும் நினைத்துப் பார்க்க முடியாத வசதிகள் கொண்டது.


20170312_123226


நேரெதிரே இரண்டு மூன்று கடைகள் உள்ளன. அங்கே டீ காபி பலகாரங்கள் கிடைக்கும். உணவுக்கு முன்னரே சொல்லி வைத்திருக்க வேண்டும். பணியாட்கள் எவருமில்லை. பஞ்சாயத்தில் முன்னரே முன்பதிவு செய்து சாவியை வாங்கிக் கொண்டு தங்கவேண்டும்.


இத்தகைய தங்குமிடங்களில் உள்ள ஒரே சிக்கலென்பது எங்கும் எந்த இடத்தையும் மது அருந்துமிடமாக மாற்றிக் கொள்ளும் குடிகாரர்கள் வந்து உடன் தங்கக்கூடும் என்பது. தமிழக மக்களின் எண்ணிக்கையிலேயே குடிகாரர்கள்தான் பெரும்பான்மையாக இருப்பார்கள் என்று தோன்றுகிறது. எந்த இடத்திற்கானாலும் இவர்களையும் எண்ணித்தான் நமது தங்குமிடம், பயணம் போன்றவற்றை இங்கு முடிவு செய்ய வேண்டும். ஒரு வலுவான நிர்வாகம் இல்லாத இடங்களில் பெண்கள் பாதுகாப்பாகத் தங்கமுடியாது. ஏனென்றால் எந்த விதமான அடிப்படை மரியாதையோ எளிமையான அறஉணர்வுகளோ கூட இல்லாத வீணர்கள் தான் குடிகாரர்களில் பெரும்பான்மையானவர்கள்.


[image error]


 


நல்லவேளையாக அன்று அந்த விடுதித் தொகுதியில் நாங்கள் மட்டும் தான் தங்கியிருந்தோம். நடந்த களைப்பில் பத்தரை மணிக்கே நான் படுத்தேன். படுத்தபடியே பேசிக் கொண்டிருந்தோம். பதினொரு மணிக்கே நான் தூங்கிவிட்டேன். நண்பர்கள் பன்னிரண்டு மணிவரையும் பேசிக் கொண்டிருந்ததாகச் சொன்னார்கள்.


முன்பு வந்தபோது இரவு பத்து மணிக்கு வந்து தங்கிவிட்டோம். ஒரு சிறிய தூக்கத்திற்கு பிறகு ஒருமணிக்கு விழித்துக் கொண்டு கிருஷ்ணன் வெளியே சென்று விடுதிக்குமுன்னால் ஓடும் கால்வாயின் நீர்ப்பெருக்கை பார்த்துக் கொண்டிருந்தார். பிறகு ஒவ்வொருவராக எழுந்து அவரருகே வந்து நின்றார்கள். நள்ளிரவில் கால்வாயில் இறங்கி நீராடினோம். பின்னர் காலையிலும் நெடுநேரம் அதில் நீந்தி விளையாடினோம். கிருஷ்ணன் அதை நினைவுபடுத்தி நீந்தப்போகலாமென அடம்பிடித்தார். எனக்கு நல்ல களைப்பு. நீங்களே செல்லுங்கள் என்றேன். முகம் சுருங்கி அமர்ந்திருந்தார். காலையில் எழுந்து பார்த்தபோதுதான் கால்வாய் வற்றி வறண்டு இருப்பதைப் பார்த்தோம். மணிமுத்தாறு அணையிலேயே பெயருக்குத்தான் தண்ணீர் இருந்தது.


[image error]


மணிமுத்தாறு அணை 1957ல் அன்றைய முதல்வர் காமராஜரின் முயற்சியால் உருவாக்கப்பட்டது. தமிழகத்தின் மிகப்பெரும்பாலான அணைகள் காமராஜரின் தலைமையில் உருவானவை. வறண்ட தமிழகத்தின் முகத்தை அவரால் மாற்ற முடிந்தது. தமிழகத்தின் விளைநிலப்பரப்பை இரண்டுமடங்காக ஆக்கியவர் அவரே. இன்றைய கொங்குமண்டலம் காமராஜரின் சிருஷ்டி என்றால் மிகையல்ல. அதைச் சூழ்ந்திருக்கும் அமராவதி, பவானி. குந்தா, பரம்பிக்குளம் ஆழியார் அணைகளால்தான் அந்த வரண்ட மேய்ச்சல் நிலம் விளைநிலமாகியது. நெல்லை அடுத்தபடியாக.


தமிழகமெங்கும் அக்காலத்தில் அணைகட்டுதலே முதன்மைப்பணியாக நிகழ்ந்திருக்கிறது. வேளாண்மைபெருகி உருவான உபரியால் தொழில் வளர்ச்சி எழுந்தபோது அதை முறையாக வழிநடத்தி கோவை, நாமக்கல். ஓசூர். சிவகாசி, விருதுநகர் போன்ற தொழில்வட்டங்களை உருவாக்குவதில் ஆர்.வெங்கட்ராமனின் துணையுடன் காமராஜர் வெற்றிபெற்றார். நெ.து.சுந்தரவடிவேலுவின் உதவியுடன் ஆரம்பக் கல்வியிலும் பெரும்பாய்ச்சல் நிகழ்ந்தது. இன்றைய தமிழகம் அந்த இலட்சியவாதியின் கனவு. அவர் நட்டவை கனியாகி இன்று நம்மால் உண்ணப்படுகின்றன. இந்த அணைக்குமுன் நிற்கையில் அந்த மாபெரும் மூதாதையின் கால்களை மானசீகமாகத் தொட்டு வணங்கினேன்


800px-Manimuthar_Falls


மணிமுத்தாறு அணையின் முகப்பிலேயே லூர்தம்மாள் சைமன் திறந்துவைத்த கல்வெட்டு ஒன்று உள்ளது. காமராஜரின் அமைச்சரவையில் இருந்த லூர்தம்மாள் தமிழகத்தின் பொருளியல்வளர்ச்சியில் மிகமுக்கியமான பங்காற்றியவர். குமரிமாவட்டத்தைச் சேர்ந்தவர் அவருக்குப்பின் மீனவர்சமூகத்திலிருந்து முதன்மையான அரசியல்தலைவர்கள் எவருமே உருவாகிவரவில்லை.


முன்பு வந்தபோது மணிமுத்தாறு அருவியில் நீராடிவிட்டு மேலும் சென்று மாஞ்சோலை எஸ்டேட்டை அடையலாம் என்று இருந்தோம். வழியிலேயே வனத்துறை அனுமதி இல்லையென்று சொல்லி திருப்பி அனுப்பிவிட்டார்கள். இம்முறை பிரதாப் வனத்துறை அனுமதியை பெற்றிருந்தார். மணிமுத்தாறு அருவியில் நாங்கள் செல்லும் போது ஒரு காரில் வந்த பயணிகள் ஐவர் மட்டுமே இருந்தனர். நாங்கள் நீராடிக் கொண்டிருக்கையிலேயே அவர்கள் கிளம்பிச் சென்றுவிட்டார்கள்.


 Lourthammal Simon


லூர்தம்மாள் சைமன்


நீர் பெருகிக் கொட்டும் அருவியில் தனியாக நீராடுவதென்பது ஓர் அரிய அனுபவம். மணிமுத்தாறு அருவி அதிக உயரம் கொண்டதல்ல. ஆனால் நீர் நேரடியாகவே இருபதடி உயரத்திலிருந்து கொட்டுவதனால் அடிகள் மிக பலமாக இருந்தன. தரையிலும் காங்க்ரீட் ஓரளவு பெயர்ந்திருந்தது. கிருஷ்ணன், சக்தி கிருஷ்ணன் இருவருக்குமே கால்களில் காயமேற்பட்டது. சிறிது நேரத்திற்குள்ளேயே குளிர் விலகியது. போதும் போதும் என உளம் ஏங்கும் போதும் உடல் மீண்டும் மீண்டும் ஏறி அருவியை நோக்கிச் சென்று கொண்டிருந்தது.


மணிமுத்தாறு அருவிக்கு நேர் முன்னாலிருக்கும் தடாகம் மிக ஆழமானது எண்பதடி பள்ளம் அது. அதன் அடர் நீல நிறமே ஆழத்தைக் காட்டியது. பலர் அங்கு உயிரிழந்திருக்கிறார்கள். விதவிதமான சுழிகள் கொண்டது. ஆகவே நீச்சலடிக்க தடை உள்ளது. தடை இருந்தால் கூட அதை மீறுவதை ஒரு சாகசமாகச் செய்பவர்கள் மேலும் அங்கே உயிர் துறக்கத்தான் செய்வார்கள் என்று தோன்றியது.


[image error]


அந்தக் காலை நேரத்திலேயே பயணிகளை எதிர்பார்த்து குரங்குகள் சூழ்ந்திருந்தன. கார் கதவை திறப்பதற்குள்ளாகவே நகரப்பேருந்தில் நாம் இறங்குகையில் ஏற முண்டியடிக்கும் பயணிகளைப்போல அவை உள்ளே நுழைய முயற்சி செய்தன.


மாஞ்சோலை பெருந்தோட்டத்தில் உணவுவிடுதியிலேயே சிற்றுண்டிக்குச் சொல்லியிருப்பதாக பிரதாப் சொன்னார். இப்பகுதியின் சாலை இருபுறமும் செறிந்த காடுகளும் செங்குத்தாக எழுந்த கரிய பாறைகளும் கொண்டு அழகிய கனவு போல் இருந்தது. குறிப்பாக கோடையில் எங்கேனும் வெந்து சலித்திருக்கும்போது கண்மூடினால் உள்ளே எழும் ஏக்கக்கனவு.


கோடை தொடங்கிவிட்டிருந்தாலும் சென்ற சில நாட்களாக மழை பெய்து கொண்டிருந்ததனால் காடு புதிய பசுமை கொண்டிருந்தது. பல மரங்கள் மாந்தளிர் நிறத்தில் செம்பு நிறத்தில் தழல் நிறத்தில் தளிர் விட்டிருந்தன. மலரும் தளிரும் ஒன்றே என்று மயங்க வைக்கும் அழகு. பின்காலை மேலும் வெண்ணிற ஒளி கொண்டு கண் கூச விரிந்த போதும் கூட அங்கிருந்த பசுமையும் நீராவியும் அது முன்புலரி என்ற எண்ணத்தையே அளித்தன.


[image error]


மாஞ்சோலை எஸ்டேட் பரவலாக தமிழ்நாடு முழுக்க அறியப்பட்டது டாக்டர் கிருஷ்ணசாமி அவர்களின் ஒரு அரசியல் போராட்ட நிகழ்ச்சியின் வழியாக. 1999, ஜூலையில், மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள், தினக்கூலி, 150 ரூபாயாக உயர்த்தி தர வேண்டும் என, போராடினர். பெண்கள் உட்பட, 198 பேர் கைது செய்யப்பட்டனர்.


இதை கண்டித்து, ஜூலை 23ல் புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் நெல்லையில் பேரணி நடந்தது. இதில், கலவரம் வெடித்தது. போலீசார் தடியடி, துப்பாக்கிச் சூடு நடத்தினர். உயிர் பயத்தில் ஓட்டம் பிடித்த, 17 பேர், தாமிரபரணி ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர். ஓய்வு பெற்ற நீதிபதி மோகன் கமிஷன் விசாரணை நடத்தியது.ஆனால் எவரும் தண்டிக்கப்படவில்லை. அந்நிகழ்வைப்பற்றி ஆர்.ஆர். சீனிவாசன் எடுத்த நதியின்மரணம் என்னும் ஆவணப்படமும் புகழ் பெற்றது.


[image error]

சக்தி கிருஷ்ணனுடன்


8 ஆயிரத்து 934 ஏக்கர் பரப்பளவு கொண்ட மாஞ்சோலை தேயிலைத்தோட்டம் வெள்ளையர் காலத்தில் உருவாக்கப்பட்டது. நூறுவருடக் குத்தகைக்கு பிரிட்டிஷாரிடம் நிலத்தைப்பெற்று திருநெல்வேலியின் வரண்ட நிலப்பகுதி மக்களைக் குடியேற்றி அவர்களைக் கொண்டு காட்டை அழித்து தேயிலைத் பயிர்வெளிகள் உருவாக்கப்பட்டன. அங்கு ஒரு ஊர் உருவாகியது.


இன்று ஒட்டுமொத்தமாக தேயிலைத் தொழிலே நசித்திருப்பதால் இந்த மாபெரும் தோட்டம் இன்று சரிவு நிலையில் இருக்கிறது. மிகக் குறைவான கூலிக்கு வேறெங்கும் செல்ல இடமில்லாததனால் இங்கேயே அளிக்கப்பட்ட வீடுகளை ஏறத்தாழ முற்றுரிமை கொண்டிருப்பதனாலும் தொழிலாளர்கள் வாழ்கிறார்கள். அவர்களில் பலபேர் கீழே நகரங்களுக்கு வேலைக்குச் சென்றுவிட்டார்கள்.


[image error]

கிருஷ்ணன், ஈஸ்வரமூர்த்தி, பிரதாப்


மாஞ்சோலை தோட்டத்தின் குத்தகை 2018-உடன் முடிகிறது. அதன் பிறகு அது வனத்துறையால் கையகப்படுத்தப்பட்டு காடாக மாற்றப்பட்டுவிடும் எனறார் பிரதாப். வால்பாறை மூணாறு உட்பட பல பகுதிகளில் அவ்வாறு பல தோட்டங்கள் காடாக மாற்றப்பட்டுவிட்டன. கைவிட்டுவிட்டாலே பத்துவருடங்களுக்குள் அடர்காடுகள் உருவாகிவிடும். மாஞ்சோலை தோட்டத்தைச் சுற்றி இருப்பது களக்காடு முண்டந்துறை புலிக்காப்பகத்தின் பசுங்காடுதான்


மாஞ்சோலை வழியாக மறுபக்கம் ஏறி இறங்கினால் குமரி மாவட்டம் கோதையாற்றின் மேல்முகாமுக்கு செல்லலாம். அங்கிருந்து ஒரு தூக்கிவண்டி வழியாக கோதையாறு கீழ்முகாமுக்கும் செல்ல முடியும். அது ஒரு அரிய மலை நடை. ஆனால் இப்போது அனுமதி கிடைப்பது அனேகமாக சாத்தியமில்லை என்றார். அந்தப்பகுதி ராஜநாகங்களின் புகலிடம்


நாங்கள் செல்லும் போது பத்துமணி கடந்திருந்தது. கடையில் காலை உணவு இல்லையென்றார்கள். உற்சாகமான தொழிலாளர்கள் ஓய்வாக அமர்ந்து அரசியல்பேசிக்கொண்டிருந்தனர். ஒருவர் திராவிட இயக்கத்தையே நிராகரித்து இடதுசாரி அரசியல் பேச மற்றவர்களுக்கு மாற்றுக்குரல் இருக்கவில்லை. அருகிலிருந்த கடையில் இருபது நேந்திரம் பழங்களை வாங்கி அதையே காலை உணவாக உண்டுவிட்டு மாஞ்சோலைக்குள் ஒரு நடை சென்றோம்.


[image error]

நான், சக்தி கிருஷ்ணன்,பாரி


இயற்கையான கால்ஃப் மைதானமென்று அழைக்கப்படும் மிகப்பெரிய புல்வெளி ஒன்று அங்குள்ளது. அதை ஒட்டி சிறிய ஏரி. வெளியாட்கள் நுழைய அங்கு தடை இருந்த போதும் கூட வண்டியை நிறுத்திவிட்டு அப்புல்வெளியை பார்த்தபடி பேசிக் கொண்டிருந்தோம். பின்னர் அங்கிருந்து  காட்சி முனை ஒன்றுக்குச் சென்றோம்.


எங்கிருந்து பார்த்தாலும் பசிய மலைச்சரிவுகளன்றி இங்கு பார்ப்பதற்கு பிறிதொன்றுமில்லை. ஆனால் ஒருநாள் முழுக்க வெவ்வேறு கோணங்களில் அமர்ந்து பார்த்தாலும் பார்த்த நிறைவோ சலிப்போ வராதபடி இளம் குளிரும் அமைதியும் கொண்ட இடம் இது.


K._Kamaraj


தென்காசியில் வணிகம் செய்யும் மலையாளியான முகம்மது ஷாஜித் தன் தம்பிகளுடன் அங்கே வந்திருந்தார். உற்சாகமான மனிதர். எண் கொடுத்தார். கூப்பிட்டால் எடுப்பீர்களா என கிருஷ்ணன் நக்கலாக கேட்டார். “என்ன சார் நீங்க, நான் பிஸினஸ்மேன்சார், தெரிஞ்சநம்பரா இருந்தத்தான் யோசிப்பேன். தெரியாத நம்பர்னா எடுத்திருவேன்” என்று அவர் பதில் நக்கல் செய்தார்.


இரண்டு மணிக்கு திரும்பி வந்து அந்த உணவகத்தில் சொல்லி வைத்திருந்த உணவை உண்டோம். சாதாரண வீட்டுச் சாப்பாடென்றாலும் நடைக்களைப்புக்குப்பின் மிக சுவையாக இருந்தது. மீண்டும் மூன்று கிலோமீட்டர் நடை. ஒரு காட்சி முனையிலிருந்து விழிதொடும் தொலைவு வரை தெரிந்த பசுமலை அடுக்குகளைப்பார்த்தோம். தாமிரவருணி உற்பத்தியாகும் அகத்தியமலைமுடியையும் வெள்ளிவழிவென அது பசுமைநடுவே இறங்கிவருவதையும் முகில்குவைகள் ஒளிகொண்டு அதன்மேல் கவிந்திருப்பதையும் கண்டபோது அப்படியே தூங்கிவிடவேண்டும் என்றுதான் தோன்றியது


[image error]


மாஞ்சோலையிலிருந்து நாலரை மணிக்குத் திரும்பிவிட வேண்டுமென்று வனத்துறை ஆணை. நாங்கள் திரும்பும்போது ஐந்தரை மணியாகிவிட்டிருந்தது. மழை பெய்து துமிகள் காற்றால் அள்ளிச்செல்லப்பட்டு மீண்டும் ஒளிகொண்டன. ஒரு மழைப் பயணமேதான். குளிர் அதிகமில்லை என்பதனால் நாங்கள் நடப்பதைப் பொருட்படுத்தவில்லை.


அங்கிருந்த வாழ்க்கை மிகமிக மெதுவானது. காலம் யானை போல நடக்கிறது. “இதுதான்சார் முங்கிக்குளி வாழ்க்கை” என்றார் சக்திகிருஷ்ணன். ஆனால் அது நீடிக்கப்போவதில்லை. அங்கே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த இருவரைச் சுட்டிக்காட்டி கிருஷ்ணன் “இருபது முப்பது -ஆண்டுகாலம் ஒரு சின்ன கிராமத்தில் அப்படி எதைத்தான் பேசிக் கொண்டிருப்பார்கள் சார்?” என்றார்.


பொதுவாகவே நகரத்து லௌகீகர்கள் இதைக் கேட்பதுண்டு. அனுபவங்களை எழுதும் எழுத்தாளர்களிடம் “உங்களுக்கு மட்டும் ஏன் இவ்வளவு வாழ்க்கை அனுபவங்கள்? எனக்கெல்லாம் சொல்லும்படி இருபது அனுபவம்கூட இல்லை” என்று கேட்டபடியே இருப்பார்கள். என்னிடம் அப்படி ஒருவர் கேட்டபோது “நீங்கள் எங்கெல்லாம் சென்றிருக்கிறீர்கள்?” என்றேன். அவர் வாழும் ஒரு பெருநகரத்தில் மூன்று தெருக்களையும் அலுவலகத்தையும் விட்டு முப்பதாண்டுகள் பெரிதாக எங்கும் பயணம் செய்ததில்லை.


[image error]


”சரி எத்தனை மனிதர்களைத் தெரியும்?” என்றேன். உற்ற நண்பர்களென ஒரு இருபது பேருக்கு அப்பால் வேறு எவரையும் தெரியாது. “இந்நகரத்திலேயே வழக்கமான வழிகளிலிருந்து விலகிச் சென்றிருக்கிறீர்களா உங்கள் இல்லத்திற்கு அருகில் இருக்கும் சேரிக்கு ஒருமுறையாவது சென்றிருக்கிறீர்களா? இந்நகரத்தில் உள்ள தொன்மையான நினைவகங்கள் வரலாற்று இடங்களை உங்களுக்குத் தெரியுமா? நீங்கள் வாழும் வீட்டின் அருகே தான் குணங்குடி மஸ்தான் சாகிப் அவர்களின் சமாதி உள்ளது சென்றிருக்கிறீர்களா?” என்று கேட்டேன். எங்குமே சென்றதில்லை அவர்.


”இந்த சீலைப்பேன் வாழ்க்கை வாழ்ந்து கொண்டு உங்களுக்கு இருபது வாழ்க்கை அனுபவம் இருப்பதே அதிகம்” என்றேன். “ஆனால் இத்தனை சூம்பிப்போன வாழ்க்கையை வைத்துக் கொண்டு பிறருக்கு மட்டும் ஏன் வாழ்க்கை அனுபவங்கள் நிறைய உள்ளன என்று நீங்கள் கேட்டீர்கள் என்றால் அது ஒரு அசட்டுத்தனம் மட்டுமல்ல அசட்டுத்தனம் மட்டுமே உருவாக்கும் ஆணவமும் அதில் உள்ளது” என்றேன்..


[image error]


சென்ற முப்பத்தைந்தாண்டுகளாக நான் பத்து நாட்களுக்கு மேல் ஓர் ஊரில் தொடர்ச்சியாக தங்கியிருந்தது மிக அபூர்வம். இரண்டு வெளியூர் பயணங்கள் இல்லாது ஒரு மாதம் கூட என் வாழ்க்கையில் கடந்து சென்றதில்லை. ஒரு வருடத்தில் குறைந்தது மூன்று மாதங்கள் எப்போதும் பயணங்களில் தான் இருந்து கொண்டிருக்கிறேன்.  இன்று எண்ணிப்பார்க்கையில் எத்தனையோ ஊர்கள், எண்ணினால் மலைக்கும் இடங்கள், எத்தனையோ தருணங்கள்.


ஒரு பத்தாண்டுகள் எனது வலைத்தளத்தை தொடர்ந்து வாசிக்கும் வாசகர்களுக்கு இதிலிருக்கும் பயணங்களின் அளவும் தொலைவும் வியப்பூட்டலாம். உண்மையில் அனுபவங்களில் ஒரு சிறு திறப்பேனும் நிகழும்போது மட்டும்தான் அது இலக்கியமாக பதிவாகிறது. பதிவாகாத அனுபவங்கள்தான் மிகப்பெரும் பகுதி. உண்மையில் எந்த எழுத்தாளனும் தன் சொந்த வாழ்க்கையின் அனுபவங்களை எழுதி முடிப்பதே இல்லை.


[image error]


ஆனால் நான் அனுபவச்செறிவாக என் வாழ்க்கையை அமைத்துக்கொண்டது என்பது எனது பத்தொன்பது வயதில் ஆரம்பித்தது. வீடுவிட்டு நான் கிளம்பியது அப்போதுதான். துறவியாகவும் பிச்சைக்காரனாகவும் திரியத் தொடங்கினேன். ஆனால் அதற்கு முன்பு வெறும் கிராமத்து இளைஞனாக நான் பெற்ற அனுபவங்கள் இதே அளவுக்கு விரிந்தவை என்று இப்போது தோன்றுகிறது. ஒரே இடத்தில் வாழ்வதனால் அனுபவங்கள் ஒருபோதும் குறைவதில்லை. அனுபவங்களுக்கும் புறவுலகுக்கும் சம்பந்தமில்லை. அவை பெற்றுக்கொள்வதில்தான் உள்ளன. நான் திருவரம்பைத்தான் இத்தனை பெரிய உலகைக்கொண்டு நிரப்பிக்கொண்டிருக்கிறேன்.


திருவரம்பு என்ற சிற்றூர் கிட்டத்தட்ட மாஞ்சோலைதான். ஏறத்தாழ ஐநூறு வீடுகள் இருந்த என் ஊரில் அனவரையுமே எனக்கு நன்கு தெரியும். அவர்களின் மூன்று தலைமுறைக்கதைகளை கேட்டிருக்கிறேன். அங்குள்ள ஒவ்வொரு சிறு சம்பவமும் நீண்ட வாழ்க்கையின் ன்னணியில் வைத்துப்பார்க்கும்போது மிகப்பெரிய நிகழ்வாக மாறிவிடுகிறது. ஒருவருடைய எருமை குட்டிபோட்டதென்றால் அது வெறும் தகவல் அல்ல. அந்த எருமை எங்கு வாங்கப்பட்டது, அந்த எருமைக்கு அதுவ்ரை என்ன நிகழ்ந்தது, அந்த எருமையின் உரிமையாளரின் தந்தையிடம் எத்தனை எருமை இருந்தது , அவற்றின் குணாதிசயங்கள் என்ன எருமைகள் வழியாகவே ஒரு வரலாறு விரியும்


[image error]


ஒரு சிறு கிராமத்தில் பேசி முடிக்கப்படாத அளவுக்கு வாழ்க்கை நிறைந்து வழிந்து கொண்டேதான் இருக்கும். ஆகவேதான் பெரும்பாலான எழுத்தாளர்கள் கிராமங்களில் பிறந்துவளர்ந்தவர்களாக இருக்கிறார்கள். நகர்களில் அப்பார்ட்மெண்ட்களில் வாழ்பவர்களை எழுதமுடியுமா என்ற ஐயம் எனக்குண்டு. ஏனென்றால் அவர்களின் வாழ்க்கைப்பரப்பு மிககுறைவானது. அறிந்த மனிதர்கள் விரல் விட்டு எண்ணத்தக்கவர்கள். அவர்கள் சொல்வதற்கு மிக அன்றாட எளிய நிகழ்ச்சிகள் அன்றி வேறு ஏதும் இருப்பதில்லை. அவையும் திரும்ப திரும்ப அனைவருக்கும் ஒரேவகையாக நிகழக்கூடியவை. ஆயினும் அத்தகைய ஒரு உலகிலிருந்து அசோகமித்திரன் போன்ற ஒரு பெரும்படைப்பாளி எழுந்து வர முடிகிறது, முடிவற்ற வண்ணபேதங்களில் எழுதிக்குவிக்க முடிகிறது என்பது படைப்பிலக்கியத்தின் வீச்சைக் காட்டுவது.


பொதுவாக நாம் நகரங்களிலிருந்து செல்லும்போது இத்தகைய ‘தூங்கும்நிலங்களை’ கண்டதும் ஆழ்ந்த அமைதியை முதலில் உணர்கிறோம். பின்னர் ‘பார்ப்பதற்கு ஒன்றுமில்லை’ என உணரத் தொடங்குகிறோம். பின்னர் பெரும் சலிப்பு. கிளம்பிவிடுவோம் என்னும் எண்ணம். இவர்களெல்லாம் எப்படி இங்கே இருக்கிறார்கள் என்னும் வியப்பு. நகர்களில் வாழும் அன்றாட வாழ்க்கை என்பது கடிகாரத்திற்கு அடியில் தொங்கும் பெண்டுலத்தின் சுறுசுறுப்பு கொண்டது. வில்விரிந்து முறுகுவதன்றி ஏதும் எஞ்சாதது. இத்தகைய சிறியநிலங்களில் வாழ்பவர்களே மேலும் விரிந்த வாழ்க்கையை அடைகிறார்கள். நம் சிறிய அளவுகோல்களைக் கடந்துசென்றால் அதை நம்மாலும் சிலநாட்களுக்குள் உணரமுடியும்.


[image error]


”இந்தப் பயணத்தின் ஹைலைட் முங்கிக்குளிதான்” என்றார் சக்தி கிருஷ்ணன். அவருடைய வாழ்க்கையே அலாதியானது. காவலராகப் பணிக்கு சேர்ந்திருக்கிறார். கமாண்டோ பயிற்சி பெற்று பணியாற்றியிருக்கிறார். சிறைக்காவலராக இருந்தார். சட்டம் கற்று வெளிவந்து வழக்கறிஞராக ஆனார். கூடவே மூன்று தொழில்கள் செய்கிறார். செல்பேசி சிம்கள் விற்பது, மருந்து வணிகம், பொன்வணிகம். கூடவே நிலவியாபாரம் செய்திருக்கிறார். ஒரு கல்லூரியின் நெறியாளராகவும் இருக்கிறார். இத்தனைக்கும் மேலாக நெல்லையில் கலையிலக்கியத்திற்கான சக்தி கலைக்களம் என்னும் அமைப்பையும் நடத்துகிறார். மிஞ்சிய நேரத்தில் எங்களுடன் அத்தனை முங்கிக்குளிகளுக்கும் வந்துகொண்டிருக்கிறார்.


ஏதோ ஒருவகையில் என் இயல்புடன் ஒத்துப்போகும் சக்தியைப் போன்றவர்களே என்னுடன் நீடிக்க முடிகிறது.  என் நண்பர் கே.பி.வினோத் ஒரு கணிப்பொறி நிறுவனத்தில் முதன்மை அதிகாரி. பகலில் அங்கே வேலை. இரவில் மிஷ்கினின் உதவியாளராக மூன்று படங்களில் பணியாற்றி முடித்துவிட்டார். கூடவே இசை, இலக்கியவாசிப்பு. எங்கள் அத்தனை பயணங்களுக்கும் வந்திருக்கிறார். ஆனால் பயணங்களில் ஆழ்ந்த அமைதி கொண்டுவிடுவார்


“வாழ்க்கை வரலாற்றை எழுதித்தொலைத்துவிடவேண்டாம். சென்னைவாசிகள் நம்பமுடியவிலை , சக்திகிருஷ்ணன் என்ற நபரே இல்லை என்று சொல்லிவிடுவார்கள்” என்றேன். உண்மையில் அவரைப்போன்றவர்களுக்கு மிக எளிதில் மாஞ்சோலை போன்ற ஊரில் ஒன்றமுடியும். ஏனென்றால் வாழும் வாழ்க்கையில் இருந்து மிக அதிகமாக அள்ளக்கூடியவர் அவர். மாஞ்சோலையும் அவருக்கு குன்றாக்களஞ்சியமே. மாற்றமில்லாத அன்றாடவாழ்க்கையாளர்களுக்கு அந்நிலம் அளிக்கும் சலிப்பை அவரைப்போன்றவர்கள் அடைவதில்லலை


[image error]


இந்தப்பயணத்தில் உள்ளமெங்கும் பசுமையைத்தான் நிறைத்துக்கொண்டிருக்கிறேன் என தோன்றியது. பசுமையை உயிர்த்துடிப்பென்றும் பேரமைதி என்றும் மொழியாக்கம் செய்துகொள்ளமுடியும்.ஆறுமணிக்கு மணிமுத்தாறு வந்து சேர்ந்தோம். பிரியாவிடை பெற்றுக்கொண்டேன், ஐந்து நாட்களுக்குப்பின் தஞ்சையில் மீண்டும் சந்திக்கப்போகிறோம். அதற்கடுத்தவாரம் சென்னை, அதற்கடுத்தவாரம் மீண்டும் பயணம். இத்தனை பரபரப்பாக முங்கிக்குளிக்கும் ஒரு குழு தமிழகத்தில் இல்லை என நினைக்கிறேன்.


பேருந்தில் எட்டுமணிக்கு நாகர்கோவிலை நோக்கிக் கிளம்பினேன். கிருஷ்ணனும் பிறரும் ஈரோடுக்கு பேருந்து ஏறினர். ஜான் பிரதாப்பை தழுவி நன்றி என்று சொன்னேன். அது இப்பயணத்திற்காக மட்டும் அல்ல.


[ முழுமை ]


 


லூர்தம்மாள் சைமன் ஓர் அறிமுகக்கட்டுரை


மூன்று சிறுத்தைகளும் ஒரு புலியும்

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 15, 2017 11:36

சகரியாவின் ‘இதுதான் என்பெயர்’

zakariya


நாதுராம் கோட்சே, வரலாற்றின் அழியா பக்கங்களிலெல்லாம் கரும் புள்ளிகளில் விழிக்கும் பெயர். காந்தியும் கோட்சேயும் ஒன்றுக்கொன்று நிரம்பும் ஆடி பிம்பமா என்ற கேள்வி தோன்றியது. வெறுப்பின் சொட்டு கசப்பை நாக்கில் தீட்டி நாலா பக்கமும் பரப்பி மொத்தமும் கசந்த எச்சிலை இறக்குவதைப் போல காந்தியை மெல்ல தொண்டைக்குழியில் இறக்கி வைத்திருந்தேன். காந்தியை சுட்டுத் தள்ளத்தான் வேண்டுமா?


சந்திரசேகரனின் வெறி வந்து தொற்றிக் கொண்டது. ஒரு முஸ்லமான் மட்டும் காந்தியைக் கொன்றிருந்தால் என்னவாயிருக்கும். அகிம்சாவாதிகளால் அடிக்கப்படும் கோட்சேயின் உடல், ஆன்மாவிற்கு அழிவில்லை என்று தத்துவம் சொல்கிறது. ராமனின் காலடிகளில் மிதிபடும் வண்டாய், பின் சரயூ நதியில் அந்த நீலக் கால்களை குத்திக் கிழிக்கும் மீனாய், என்னவெல்லாம் பிறப்புகளெடுக்கிறான். பரமபதத்திற்கு கிழவனுக்கு வழி அமைத்துக் கொடுத்து விட்டேனே என்று குமுறுகிறான்.


ஆம். என் பெயர் மோகன் தாஸ். செத்துப் போன அந்தக் கிழவனிற்கு எதற்கு அந்த பெயர் என்று பிதற்றும் கோட்சேயிடம் காந்தியின் ஆவி எழுந்து வந்து மன்னித்து விட்டேன் என்று அறிவித்தால் அய்யோ? அதற்கும் அஞ்சுவதில்லை. நான் ஒரு பிராமணனாய் இருந்தும் சத்ரியனைப் போல் உங்களுக்காக நம் இந்து மதத்திற்காக நம்மை பிடித்த நோயையே அழித்தேன். நாம் வாழ்வோம் சுதந்திரமாக. அந்த நாறும் பிணத்தைக் கொண்டு ஏன் அழுது பிதற்றுகிறீர்கள். ஆம். காந்தியைக் கொல்வதே வழி போலும். ஆனால் காந்தியத்தை எப்படிக் கொல்வது.


இந்த காந்தியை எனக்கு பிடிக்கவில்லை. ரூபாய் நோட்டுகளில் இளித்துக் கொண்டிருக்கும் இந்த பாமரக் கிழவன் எனக்கு தேவையில்லை. பொறுமையின்றி சகிப்பின்றி நசுக்கத் தொடங்குகின்றேன், என் சுயத்தை. அன்னாவின் போராட்டத்தை கள்ளத்தனம் என்று வாதிட எத்தனை நண்பர்களைத் தேடிச் சென்றிருப்பேன். பைத்தியக்காரன்யா! இந்த சசிப்பெருமாள், கடைசில அந்தக் கிழவன மாறித்தான் செத்துப் போனான். இப்படிச் சாவதுக்கு எதுக்கு போராட்டம். அவன் பிள்ளைக் குட்டிகளுக்கு இனி வழியுண்டா? எல்லாம் போச்சா. சரியான வட்டுக் கேசுங்க கேட்டியா!



பின் நினைக்கிறேன். எத்தனை சுயநலம். எத்தனை பொறாமை. எத்தனை எத்துவாளித்தனங்கள். மன்றாடுவதற்கு கூட நாக்கு இல்லை. இன்று காந்தியை நினைவு கூர்வதில் நான் என்ன செய்து கொண்டிருக்கிறேன். ஒரு மகத்தான கொலை இந்துக்களுக்காக ஒரு சனாதன இந்துவைக் கொல்வோம். அந்த துரோகியின் முகத்தில் காறி உமிழத்தலைப்பட்ட ஒற்றைப்படையான வெறித்தனத்தில் என்ன உள்ளது. இன்றும் மாறாத கசப்பு சூழ்ந்து கொள்கிறது. அவனின் ஒரு சொட்டு ரத்தத்தை கொடுங்கள். என் நெற்றிப்பொட்டில் அணிந்து கொள்ள. கரிந்து மணத்தும் உள்ளத்தில் கேள்விகளை எழுப்புகிறேன்.


நான் என்ன செய்வது? ஒரு கொலை நிகழ்ந்தே விட்டது. இந்துக்களுக்காக? அப்படியா? ஒரு இந்துவா காந்தியைக் கொன்றான். இந்துவா? குற்ற உணர்வில் நொதிக்கிறேன். இந்துவின் துப்பாக்கி குண்டுகளா அவரைத் துளைக்க தலைப்பட்டது. அணுகுண்டுப்பிளத்தலில் வெடிக்கும்ஒற்றை அணு நான்? ஆதாமும் ஏவாளும் கடித்து தின்ற சாத்தானின் குழந்தை நான். காந்தி நம்மிடம் எதைக் கேட்டார். நம் பலவீனங்களை ஒழிக்கும் வழியை அல்லவா சுட்டிகாட்டினார்.


தனி நாட்டை காந்தி விரும்பியிருப்பாரா? நிச்சயம் இல்லை. பின் வற்புறுத்தப்பட்டாரா? அது ஒரு தேவையாக ஆகியதா? ஒற்றை ஆளாய் நவகாளியில் காந்தி நின்றிருந்த பொழுது, அந்த காளி கோவில் சாமியாரின் வாக்கியங்கள் காதை அடைத்தன. கர்மயோகியினால் செய்ய முடிந்தது என்ன? அய்யோ! பிதற்றிக் கொண்டே இருக்கிறேன். காந்தி! காந்தி! காந்தி! நீ எங்களிடம் எதைக் கேட்டாய்? அந்தக் கொலைகளுக்கு உன் பதில் என்ன?


பின் தொடரும் நிழலின் குரலின் டால்ஸ்டாய் என்ன செய்வார் அந்த அழுந்திப்பதிந்த ரத்தக்கைககளைப் பார்த்து. நான் பிரார்த்திகிறேன். என் பிதாவிடம் இறைந்து மன்றாடுகிறேன். இந்தக் கொலைகளுக்கும் போன உயிர்களுக்கும் என் கையாலாகாத் தனத்தை நான் என்ன செய்ய. அழுது கண்ணீர் விடுவதை தவிர்த்து. உன் கண்ணீர்த்துளிகள் தேவனின் காலடிகளுக்கு சென்றதா! குண்டடிகள் தெறிக்க கப்ரியேல் ஏந்திக் கொண்டானா? ஜய விஜயர்கள் வந்து தூக்கிக் கொண்டு சென்றார்களா!


கேள்விகளாய் அடுக்கிக் கொண்டிருந்தன. சத்தங்கள் மெல்ல அமிழ்ந்து கொண்டிருந்தன. காந்தியை அறிவது காந்தியாய் வாழ்வதனால் மட்டுமே முடியும். சசிபெருமாள் காந்தியாகவே செத்தார். அவரின் காலம் முடியாது. இன்று தகவல் அறியும் சட்டமும், லோக்பாலையும் எண்ணிக்கொள்கிறேன். ஊழலுக்கு எதிரான முதல் அடியை எடுத்து நமக்குள் தீக்கங்கை தெறித்து விட்ட காந்தியம். அதன் பொறி இன்றளவும் அணையவில்லை என்றே நம்புகிறேன். ஆனால் காலத்தின் கண்ணாடியில் வசைகளின் பெரும் பரப்பில் காந்தி துரோகியாகவும். கோட்சே யுக புருஷனாகவும் சித்தரிக்கப்படுவதை எங்கனம் ஏற்றுக்கொள்ள.


ஆம் எனக்குள் இருக்கும் கோட்சேவை நான் வழிபடும் வரை காந்தியெனும் கிழவன் கொல்லப்பட வேண்டியவனே. இன்னும் எத்தனை காந்திகள் வந்தாலும் கொல்வதை செய்வோம் என்பது தின்ணம்.


நன்றி,


நந்தகுமார்.


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 15, 2017 11:32

கருணைநதி -கடிதங்கள்

800px-Manimuthar_Falls


தங்களின் கருணை நதி கரை கட்டுரை படித்தேன், எனது சொந்த ஊர் ஆழ்வார்குறிச்சி. ஆழ்வார்குறிச்சி, கீழாம்பூர், சுற்றுவட்டார கிராமங்களுக்கு சிவசைலபதியும் பரமகல்யாணியும் அப்பன் அம்மையை போன்றவர்கள் அவ்வளவு எங்கள் கிராம மக்கள் இறைவனிடித்தல் பாசமுள்ளவர்கள். நான் எனது தாத்தா அத்ரி தீர்த்தம் சென்று வந்ததை சொல்ல கேட்டிருக்கிறேன் இதுவரை சென்றதில்லை தாங்கள் சென்று வந்த கட்டுரை மிகுந்த மனநிறைவு அளிக்கின்றது. கட்டுரையில் ஒரு சிறு திருத்தம் சிவசைலம் கோயில் ஒட்டியுள்ள நதி கடனா (கருணை) ஆறாகும். இந்த நதி முக்கூடல் அருகே தாமிரபரணியுடன் சங்கமிக்கிறது.


நன்றி,


ராம்குமாரன்


***


சார் வணக்கம்,


இன்று கருணாநதிக்கரை முதல் பதிவு வாசித்தேன். எப்பொழுதும் போலவே தொடரும் அடுத்த பதிவுகளையும் வாசித்தபின் உங்களுக்கு எழுதலாமென்னும் முடிவில் தோல்விதான். இப்போதே எழுதுகிறேன்.


//அருண்மொழி என் வாழ்க்கையில் நுழைந்தபின் அம்மாவை நினைவு கூர்வதென்பது சாதாரண ஒரு நிகழ்வாகவே இருந்தது.//


மிகச்சாதாரணமாக பெரிய விஷயத்தை சொல்லி இருக்கிறீர்கள். துயருற்றவர்களின் வாழ்வில் அன்புகொண்டவர்கள் இணைகையில் அது எத்தனை காயங்களுக்கு அருமருந்தாக இருக்கிறதென்பதை அனுபவத்தினால் மட்டுமே உணர முடியும்.


கருணாநதிதான் கடனாவாக” மருவிவிட்டதா சார்? இந்த காயும் கோடையில் நினத்துப்பார்க்கையில் எல்லா நதிகளுமே கருணை நதிகள்தான் எனத்தோன்றுகிறது.


உங்களின் எல்லா பயண அனுபவ பதிவுகளிலும் நாங்களும் உடன் வருவது போன்ற உணர்வே இதிலும் ஏற்படுகிறது. மலைகளில் ஏறி இறங்கி, நெடுக நடந்து சலித்து, அருவியிலும், சுனையிலும், நதியிலுமாக தூய நீரில் குளித்து, கிடைத்த உணவை சாப்பிட்டு என எல்லாமே வாசிக்கிறவர்களும் அனுபவிக்கிறோம்.


கூடவே அந்த இடம் பற்றிய எல்லா தகவல்களும் சொல்லி விடுகிறீர்கள். அதிலும் இந்த பதிவில் மழைக்காடுகள் குறித்து மிக அழகாக சொல்லி இருக்கிறீர்கள்: இலை மெத்தை மேல் வெள்ளிவட்டம் போல ஒளி, இலையை பிடித்தபடி மேலேறிச்செல்லும் ஒளிச்சட்டம், அனைத்து இலை நுனிகளிலும் எண்ணையென வழியும் ஒளி, ஒளி விழும் மழைக்காட்டுப்பகுதி உயிரின் மாபெரும் நாடகமேடையேதான் சார். உங்களின் இந்த பதிவை வாசித்தபின் அனைவருமே இதை உணருவார்கள். அதுவும் ஒளியை அமுது என்று சொல்லி இருக்கிறீர்கள். ஒளியமுதுதான், உலகம் முழுமையும் உயிருடன் இருப்பதற்கான ஒளியமுது. இந்த வார்த்தை மறக்க முடியத ஒன்றாக ஆகிவிட்டது


கோரக்கரின் ஆலயமும் கருணாநதியும், நடந்து களைத்தபின் காட்டில் உண்ணும் சுவையான உணவுமாக, பகலெல்லாம் நாற்காலியில் இருக்கும் எங்களைப்போன்றவர்களும் உங்களுடனே பயணித்தது போல இருக்கிறது உங்களின் இந்த பயணப் பதிவு


நன்றி சார்


அன்புடன்


லோகமாதேவி


***

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 15, 2017 11:31

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–44

44. வில்லுறு விசை


நகுஷேந்திரனின் ஆணைப்படி கந்தர்வனாகிய வஜ்ராக்‌ஷன் தன் துணைவர் எழுவருடன் சென்று இந்திராணி தவம் செய்துகொண்டிருந்த மகிழமரச் சோலையை அடைந்தான். தன் சொல்லால் அதற்கு அனல்வேலியிட்டிருந்தாள் இந்திராணி. அவர்களின் காலடியோசையிலேயே சாய்கதிர் பட்ட முகிலென சிவந்து எரியலாயிற்று அது. எல்லைக்கு வெளியே நின்று பெருங்குரலெடுத்து அவளை அழைத்தான். இந்திரனின் நலம்திகழும்பொருட்டு ஒவ்வொரு நாளும் ஐந்து வேளை பிரம்மனுக்கு பூசெய்கை ஆற்றிவந்த இந்திராணி சோலைக்குள் மலர் கொய்துகொண்டிருந்தாள். பலமுறை எழுந்த அக்குரலைக் கேட்டு அவள் அங்கிருந்து எழுந்து வந்தாள். பிற ஆடவரை ஏறிட்டும் நோக்கக்கூடாதென்று நெறி இருந்தமையால் புறம் திரும்பி நின்று அவர்களிடம் “எதன்பொருட்டு வந்தீர்கள்? இங்கு பிற ஆடவர் குரலெழுவதும் பிழையே” என்றாள்.


வஜ்ராக்‌ஷன் “பெண்ணே, கேள். மண்ணில் விளைந்து விண்ணில் இந்திரனாக அமர்ந்திருக்கும் நகுஷேந்திரனின் ஆணை இது. இந்திரன் என முடிசூடியமர்ந்த அவருக்கு இந்திராணி உரிமைப்பட்டவள். உன்னை அழைத்து வரும்படி பணிக்கப்பட்டிருக்கிறோம்” என்றான். அவள் எழுந்த சினத்தை அடக்கி “அவ்வரியணையில் அவர் இன்னும் முழுமையாக அமரவில்லை. இங்கு நீங்களே சொன்னீர்கள் அவர் நகுஷேந்திரன் என்று. மண்ணில் அவர் கொண்ட அடையாளங்களையும் நினைவுகளையும் முற்றிலும் துறக்காதவரை அவர் எப்படி இந்திரனாக முடியும்?” என்றாள். “நான் இந்திராணியென்றாகவில்லை என்பதே அவர் இந்திரனாகவில்லை என்பதைத்தான் காட்டுகிறது.”


வஜ்ராக்‌ஷன் “நான் இதை அறியவேண்டியதில்லை. உன்னை இழுத்துச்செல்லும்படி ஆணை. நான் வெறுமனே மீண்டால் மேலும் பெரிய படை எழும். மேலும் பெரிய சிறுமை நிகழும்” என்றான். “அவனிடம் சென்று சொல்லுங்கள், இங்கு இந்திரன் என அமர்ந்திருப்பது அங்கு குருநகரியில் அரசனென வீற்றிருந்து நிலம்புரக்கும் அவன் அகத்தில் நிகழும் கனவுமட்டுமே என்று” என்றாள் இந்திராணி. “நான் இங்கு அவனை கணவனெனக் கொண்டால் அங்கே வாழும் மானுடனுக்கும் கனவுத்துணைவியென்றாவேன். கனவுகள் அனைத்தும் கலைபவையே என அவனுக்கு புரியவையுங்கள்” என்று சொல்லி உள்ளே சென்றாள்.


வஜ்ராக்‌ஷன் திரும்பி வந்து நகுஷேந்திரனிடம் இந்திராணியின் சொற்களை சொன்னான். சினம்கொண்டு தன் அரியணையிலிருந்து எழுந்த நகுஷன் “என்ன? என்னிடம் சொல்விளையாடுகிறாளா அவள்? ராஜசூயங்களும் அஸ்வமேதங்களும் இயற்றி கொடை முழுத்து ஒளிகொண்டு விண்ணேறி நான் வந்த இடம் இது. இங்கு காலமில்லை. எனவே முடிவிலிவரை நானே இந்திரன். இது கனவென்று சொல்ல என்ன அடிப்படை அவளுக்கு? இது கனவென்றால் இக்கனவைக் கலைத்து என்னை மீண்டும் குருநகரிக்கே செல்லவைக்கட்டும் அவள்” என்றான். திரும்பி அமைச்சர்களை நோக்கி “மேலும் படைகள் எழுக… அவள் இன்றே என் அவைக்கு வந்தாகவேண்டும்” என்று கூச்சலிட்டான்.


“அரசே, தன் சோலையை அனலால் வேலிகட்டியிருக்கிறாள். அதை கடந்து செல்ல தேவர்களால் ஆகாது” என்றான் வஜ்ராக்‌ஷன்.  “எனில் நானே வருகிறேன். நான் கடக்கமுடியாத இடமொன்று இந்திர உலகில் இருக்கிறதா என்று பார்க்கிறேன்” என்று மின்படையை எடுத்துக்கொண்டு நகுஷேந்திரன் கிளம்பினான். கைநீட்டி அவனைத் தடுத்த அஸ்வினிதேவர்கள்  “அரசே, இந்திர உலகில் இவ்வண்ணம் நெறிமுறை மீறும் வழக்கமில்லை” என்றனர்.  “அரச நெறிமுறைகளை அரசனே வகுக்கிறான். இவ்வுச்சிவரை நான் ஏறிவந்தது ஒருபோதும் கூர்மடங்கா என் விழைவினால் என்றுணர்க! அது மேலும் விசைகொள்ளுமே ஒழிய ஒருபோதும் தங்கி அமையப்போவதில்லை” என்று சொன்னபின் அவர்களை விலக்கி அவன் நடந்தான்.


இந்திராணியின் சோலையை அவன் அடைந்ததும் பின்னால் ஓடிவந்த வஜ்ராக்‌ஷன்  “அதோ, அதுவே அனல் வேலி” என்றான்.  “எங்கு வேலி? நான் எந்த வேலியையும் காணவில்லை” என்றபடி நகுஷன் மதம்கொண்ட யானையென நடந்தான். கந்தர்வர்கள் வேலிக்கு மறுபுறமே திகைத்து நின்றுவிட அவன் தடை எதையும் அறியாது நடந்துசென்று சோலைக்குள் புகுந்தான். அவன் வருவதைக் கண்டு மலர் தொடுத்துக்கொண்டிருந்த இந்திராணி  திகைத்தாள். அலறியபடி எழுந்தோடி தன் குடிலுக்குள் சென்று ஒளிந்துகொண்டாள்.


குடில் வாயிலில் வந்து நின்று நகுஷன் உரக்க குரலெழுப்பினான்.  “பெண்ணே, உன் தடைகளேதும் என்னை விலக்காதென்று இன்று அறிந்திருப்பாய்… நான் இந்திரன் என்று அமர்ந்திருப்பதனால் நீ எனக்கு சொந்தமானவள். நெறிகளின்படி இந்திரன் மாறினாலும் இந்திராணி மாறுவதில்லை. சென்ற இந்திரனை நினைத்துக்கொண்டிருப்பது நீ எனக்குச் செய்யும் வஞ்சம். அதனாலேயே நீ கற்பிழந்தவளானாய்” என்றான். நடுங்கியபடி குடிலுக்குள் பதுங்கியிருந்த இந்திராணி அங்கிருந்தே கைகூப்பி அழும் குரலில் “அரசே, விண்ணுலகில் தாங்கள் செல்லமுடியாத இடமொன்றில்லை. உங்களை மீறி ஒரு நெறியும் இங்கு புலர்வதில்லை. அது இங்கு அறம் வாழ வைப்பதன்பொருட்டு உங்களுக்கு தெய்வங்கள் அளித்துள்ள நற்கொடை. அதை அறம்மீறிச் செல்ல பயன்படுத்த வேண்டாம்” என்றாள்.


“இந்திரனுக்கு அறிவுரை சொல்ல வேண்டுமென்றால் நீ வந்து அரண்மனையில் இந்திராணியாக அமர வேண்டும்” என்று நகைத்தபடி சொன்னான் நகுஷன்.  “வெளியே வா, நான் உன்னை கூந்தல்பற்றி இழுத்துச்செல்வதை இந்நகர் காணவேண்டியதில்லை.” அவள் குளிர்ந்து சொல்லிழந்தவளானாள். “வா, இப்போதே!” என அவன் உரக்க கூவினான். அவள் குரல்பெற்றபோது எண்ணத்தால் நெடுந்தொலைவு சென்றிருந்தாள். “அரசே, இச்சோலையில் மலர்களை பார்த்தீர்களல்லவா?” என்றாள். “இது தேவருலகு. இங்கே மலர்கள் வாடுவதில்லை. ஆனால் இங்கு நாளும் மலர்கள் மலர்கின்றன, அந்தியில் வாடி உதிர்கின்றன. அவை என் எதிர்பார்ப்புகள்.”


“இது ஒன்றே சான்று, நான் நீங்கள் ஆளும் தேவருலகில் இல்லை என்பதற்கு” என அவள் தொடர்ந்தாள். “கூந்தல்பற்றி நீங்கள் இழுத்துச்செல்லலாம், அவள் இந்திராணியல்ல. வெறும்பெண். அரசே, எண்ணிநோக்குக! நான் என் கொழுநனின் நினைவுடன் உங்களருகே வந்து அமர்வேன் என்றால் அது உங்கள் மணிமுடிக்கு சிறப்பாகுமா?” நகுஷன் அச்சொற்களால் உளப்பெருக்கு அடங்கி திரும்பி அச்சோலையில் கிளைதாளாமல் எடைகொண்டு மலர்ந்திருந்த வெண்ணிற மகிழமலர்க் கொத்துகளை கண்டான். கீழே அவை உதிர்ந்து வெண்ணிறக் கம்பளம் போன்றிருந்தது நிலம்.


அவன் உளம்கொண்ட இடைவெளியில் புகுந்து  “நான் ஏன் இக்காதலுடன் இருக்கிறேன் என எண்ணுக! ஏன் என் உள்ளத்தில் அவர் நினைவு அழியவில்லை?” என அவள் கேட்டாள். “ஏனென்றால் இன்னமும் எங்கோ இந்திரன் என்னை நினைத்துக்கொண்டிருக்கிறார். அவர் முற்றழியவில்லை. அவர் எங்கோ அவ்விழைவுடன் எஞ்சுவதுவரை இங்கு நானும் இப்படியே இருப்பேன். அவரை கண்டுபிடியுங்கள். அவர் உள்ளத்தில் இருந்து என்னை அழித்து மீளுங்கள். நான் நேற்று அழிந்து இன்று என்று இங்கிருப்பேன். என்னை நீங்கள் மலர்கொய்வதுபோல கொய்யலாம். மார்பில் அணியலாம்” என்றாள். “ஆம், அவன் எங்கோ எஞ்சுகிறான் என்றால் என் முடியும் கோலும் நிலைகொள்ளவில்லை என்றே பொருள். அவனை மிச்சமின்றி வெல்கிறேன். அவன் நெஞ்சழித்து மீள்கிறேன்” என நகுஷன் வஞ்சினம் உரைத்து மீண்டான்.


அரண்மனைக்கு திரும்பும்போதே மேலும் கீழுமென அமைந்த பதினான்கு உலகங்களிலும் இந்திரனைத் தேடி கண்டடைந்து வரும்படி நகுஷன் கந்தர்வர்களையும் கின்னரர்களையும் கிம்புருடர்களையும் தேவர்களையும் யக்‌ஷர்களையும் பணித்தான். அவர்கள் சிறகு சூடிய சிறுபூச்சிகளாகவும் இளங்காற்றுகளாகவும் வண்ண ஒளிக்கீற்றுகளாகவும் நறுமண அலைகளாகவும் இசைத்துளிகளாகவும் உருக்கொண்டு நூறுமுறை அவ்வுலகங்களை சுற்றி வந்தனர். எங்கும் இந்திரனை கண்டடைய முடியவில்லை.  அவர்கள் ஒவ்வொருவராக மீண்டும் அமராவதியில் வந்து சோர்ந்து அமர்ந்தனர். செய்தியை கொணர்ந்த வஜ்ராக்‌ஷனை நோக்கி பெருஞ்சினத்துடன் கூவியபடி வாளுடன் பாய்ந்தான் நகுஷன். “இல்லை, தேவர்களாலும் கண்டறியமுடியாத இடமென ஒன்றில்லை” என்று கூவினான்.


“நீங்கள் என்னை ஏளனம் செய்கிறீர்கள். மானுடனென ஒருவன் முதிர்ந்து இந்திரனாவதை உங்களால் தாள இயலவில்லை” என்று கூச்சலிட்டான். அவையில் அமர்ந்திருந்த தன்வந்திரி முனிவர் புன்னகைத்து  “இதற்கு முன் இங்கு வந்த எந்த இந்திரனும் மானுடராக இருந்த நினைவை கொண்டுவரவில்லை. ஒவ்வொரு சொல்லிலும் அது எழுவதொன்றே நீங்கள் யாரென காட்டுகிறது” என்றார். கைகளை முறுக்கி பற்களைக் கடித்து  “முனிவரே ஆயினும் இருளுக்குள் உங்களைச் செலுத்தும் ஆற்றல் எனக்குண்டு. நினைவுகொள்க, அமராவதியின் அரசன் நான்” என்றான் நகுஷன்.  “அதையும் நாளுக்கு நான்காயிரம் முறை நீங்கள் உங்களுக்கே சொல்லிக்கொள்ள வேண்டியிருக்கிறது” என்றார் தன்வந்திரி.


நகுஷன் தன் மின்படையை கையில் எடுக்க அவனை சனகரும் சனத்குமாரரும் சேர்ந்து பற்றி தடுத்தனர். “அரசே, சினம் அடக்குக! அவர் சொல்வதென்ன என்று செவிகொள்க!” என்றார் சனகர். வெறுப்பு நிறைந்த விழிகளுடன் தன்வந்திரி “எந்தக் கனவுக்குள்ளும் அது கனவே எனும் தன்னுணர்வு ஒரு துளி இருக்கும். கனவுகள் விந்தையெனத் தோன்றுவது அத்தன்னுணர்வால்தான்” என்றார்.  “யார் சொன்னது கனவென்று? சொல்லும், எப்படி சொல்கிறீர்கள் இது கனவென்று?” என்று சீறியபடி அவரை அணுகினான் நகுஷன்.  “சென்று பார்! அங்கே குருநகரியில் உன் முந்தைய வடிவம் அரசு வீற்றிருக்கிறது. அது அங்கில்லையென்றால் நீ இங்கு இருக்கிறாய் என்று கொள்!” என்றார் தன்வந்திரி.


சற்றுநேரம் அவரை நோக்கி நின்றபின் மெல்ல தளர்ந்து அவன் திரும்பினான். ஏளனத்துடன்  “சென்று பார்க்க வேண்டியதுதானே…?” என்றார் தன்வந்திரி. “இதுவல்ல, அதுவே என் கனவு” என்றான் நகுஷன். “அதை விட்டு இங்கு வந்தபோது என் மைந்தரை நான் முற்றுதறவில்லை. ஆகவே அது என்னுள் கனவென தங்கிவிட்டது.” மீண்டும் அரியணையில் அமர்ந்து “நான் சென்று அதை பார்க்கலாம். இங்கிருக்கும் நான் உருவாக்கும் மாயையாகவே அது இருக்கும். அது மெய்யல்ல” என்றபின் வெறியுடன் நகைத்து “இது நீங்கள் எனக்கு ஒருக்கும் பொறி. இதில் விழமாட்டேன்” என்றான். தன்வந்திரி உரக்க நகைத்தபின் எழுந்து அவை நீங்கினார்.


கொந்தளிப்புடன் தன் அரண்மனையின் உப்பரிகைகளில் உலாவிக்கொண்டும் சித்தமழிய மது அருந்திக்கொண்டும் சீற்றம் தணியும்படி மகளிருடன் காமமாடிக்கொண்டும் இருந்த நகுஷேந்திரனை அணுகிய வஜ்ராக்‌ஷன் உலகுலாவியாகிய நாரதர் வந்திருப்பதை அறிவித்தான். உடை திருத்தி முகம் செம்மையாக்கி அவன் அவைக்குச் சென்று அங்கே முனிவர்களுடன் தன் பயணக்கதைகளை சொல்லி நகையாடிக்கொண்டிருந்த இசைமுனிவரை கண்டு பணிந்து வணங்கினான். அவன் முகத்திலிருந்த துயரை நோக்கி மாறாப் புன்னகையுடன் அவர் “எதன்பொருட்டு இந்த நிலைகொள்ளாமை?” என்றார். “இந்திரன் என்றாலே நிலைகொண்டவன் என்றல்லவா பொருள்?”


தன் விழைவையும் இந்திராணியின் சொல்லையும் உரைத்து இந்திரனை கண்டுபிடிக்க முடியவில்லை என்பதை நகுஷன் சொன்னான். நாரதர் நகைத்து “ஈரேழு உலகங்களிலும் இருக்கும் அத்தனை வடிவையும் தானெடுக்கும் வல்லமை கொண்டவன் இந்திரன். தன் உள்ளம் உருவாக்கும் அனைத்து வடிவையும் புறத்தே அமைத்துக்கொள்ளும் ஆற்றல் அவனுக்குண்டு. உன் ஒற்றர்கள் எவ்வடிவில் அவனை தேடினார்கள்?” என்றார். அப்போதுதான் தன் பிழையை உணர்ந்த நகுஷன் சோர்ந்து தன் பீடத்தில் அமர்ந்து  “ஆம். ஒரு மணற்பருவாக, ஒரு கடல்துமியாகக்கூட அவனால் ஒளிந்துகொள்ள முடியும்” என்றான். “மட்டுமல்ல, மேல்கீழ் உலகுகளில் இதுவரை எழுந்த எவ்விழியும் அறியாத புதுத்தோற்றம் கொள்ளவும் முடியும்” என்றார் நாரதர்.


“உங்களையே பணிகிறேன், உலகறிந்தவரே. நான் செய்யவேண்டியதென்ன?” என்றான் நகுஷன். “அரசே, தேடும் விழிகளிலிருந்து நாம் ஒளிந்து கொள்ளலாம். அஞ்சும் விழிகளிலிருந்து தப்புவது மிகக்கடினம். அன்பு கொண்ட விழிகளிலிருந்து தப்புவது எவராலும் இயலாது” என்றார் நாரதர்.  “என்ன சொல்கிறீர்கள்?” என்று குழப்பத்துடன் நகுஷன் கேட்டான். அவர் சொல்லவருவது என்னவென்பதை அவன் உள்ளம் மெல்ல புரிந்துகொள்ளத் தொடங்கிவிட்டிருந்தது.  “தன் சோலையில் மலர்ந்துள்ள அத்தனை மலர்களையும் விழிகளென ஆக்கி கணவனுக்காக காத்திருக்கிறாள் இந்திராணி. அங்கு வாடி உதிரும் மலர்களை அள்ளிவரச் செய். உன் ஏவலர் கையில் ஒரு வாடிய மலருடன் தேடி அலையட்டும். எங்கு அம்மலர் மீண்டும் புதிதென மலர்ந்து ஒளிகொள்கிறதோ அங்கிருக்கிறான் இந்திரன் என்று பொருள்” என்றார் நாரதர்.


உளவிசை தாளாது தொடையில் தட்டி கூச்சலிட்டபடி எழுந்த நகுஷன்  “ஆம், இது ஒன்றே வழி! நன்று, முனிவரே! என் தலை தங்கள் முன் பணிகிறது. நன்று சொன்னீர்கள் எனக்கு!” என்றான்.  “அமைச்சர்களே, தேவர்களே” என்று கூவியபடி வெளியே ஓடி அனைவரையும் அழைத்தான். “இந்திராணியின் சோலையில் விழுந்து கிடக்கும் அத்தனை வாடிய மலர்களையும் கொண்டு வரும்படி மாருதர்களுக்கு நான் ஆணையிடுகிறேன். அம்மலர்களில் ஒன்றை எடுத்தபடி பதினான்குலகங்களிலும் செல்லுங்கள். இந்திரனை அந்த மலர்கள் அறியும்” என்று குரல் வீசினான். உளத்துள்ளல் தாளாமல் சுற்றிவந்தபடி “மலர்களிலிருந்து யார் தப்ப முடியும்? ஆம், மலர்களை எவர் ஒழிய முடியும்?” என்றான். நாரதர் “ஆம் அரசே, இருந்த இடத்திலிருந்தே பயணம் செய்பவை மலர்கள்” என்றார்.



tigerநூற்றியெட்டு மாருதர்கள் நகுஷனின் ஆணைப்படி இந்திராணியின் மகிழமரச் சோலைக்குள் புகுந்தனர். அங்கு உதிர்ந்து ஒளியழிந்து சருகென்றாகியும் பாதி மட்கியும் கிடந்த மலர்கள் அனைத்தையும் திரட்டி கொண்டுவந்து அளித்தனர். தேவரும் யக்‌ஷரும் கந்தர்வரும் கின்னரரும் கிம்புருடரும் கையில் ஒரு மலருடன் பத்து திசைகளையும் நோக்கி கிளம்பினர். அவர்களில் சூசிமுகன் என்னும் கந்தர்வன் மானசசரோவரை அடைந்ததுமே அவன் கையில் வண்ணமும் வடிவமும் இழந்து உலர்ந்து நத்தை எனச் சுருங்கியிருந்த மகிழமலர் பனிவிழும் புதுக்காலையிலென இதழ் விரித்து வண்ணமும் ஒளியும் கொண்டது. அதன் நறுமணத்தை உணர்ந்து நாற்புறமும் நோக்கிய பின்னரே தன் கையில் அது மலர்ந்திருப்பதை அவன் அறிந்தான். இளமைந்தனின் முதற்பல்லென அவன் கையில் அது வெண்ணிற ஒளிகொண்டிருந்தது. மானசசரோவரில் அவன் மேலும் தங்கவில்லை. எம்பி ஒளிவடிவு கொண்டு வானிலெழுந்து மின்னென வெட்டி அகன்றான். அவன் அமராவதிக்குத் திரும்புகையில் அணுகும்போதே அந்த மணத்தை உணர்ந்து  “என்ன மணம் அது? இதுவரை அறிந்திராத மணம்” என்றபடி நகுஷன் வெளியே வந்தான்.


சூசிமுகன் அவனை வணங்கி அந்த மலரைக் காட்டி  “அரசே, மானசசரோவரை அணுகும்போது இது மலர்ந்தது” என்றான்.  “ஒளிகொண்டு முகம் திருப்பி நீர்ப்பரப்பைக் காட்டியது.” நகுஷன் பாய்ந்து “கொடு அந்த மலரை!” என்று வாங்கி திரும்பி ஓடி தன் வியோமயானத்திலேறி மின்படைக்கலத்தை ஏந்தியபடி மானசசரோவரை நோக்கி சென்றான். அந்த மலரே அவனை வழிகாட்டி இட்டுச்சென்றது. மாருதர்கள் தேரென்றாகி அந்த மணத்தை தங்கள் மேல் ஏற்றிச்சென்றனர். “மகிழம் துயரிலாக் காத்திருப்பின் மலர், அரசே. இந்திராணி துயரிலியென அங்கிருந்தாள்” என்றான் ஒரு மாருதன். “மருதம் புணர்வின் மணம். குறிஞ்சி கண்டடைதலுக்கு. முல்லை கிளர்வுக்கு. நெய்தல் துயருக்கு. பாலை பெருவேட்கைக்கு. மணங்களால் ஆனது மானுட உள்ளம். மணங்கள் ஆள்கின்றன உறவுகளை.”


உளப்பெருங்குளத்தில் பிழைநிகர் தவம் புரிந்துகொண்டிருந்த இந்திரன் ஆயிரமாண்டு முற்றடக்கம் பயின்று உளம் கரைந்து இன்மையென்றானான். அலையடங்கி இழுத்துக்கட்டிய நீலப் பட்டுப்பரப்பென ஒளி கொண்டிருந்தது அந்நீர்நிலை. அதில் மாலை வானில் முதல் விண்மீன் எழுந்ததுபோல வெண்ணிறத் தாமரை மொட்டொன்று முகிழ்த்து வந்தது. அதன் முதல் இதழ் ஓம் எனும் ஒலியுடன் விரிந்தது. நான் எனும் ஒலியுடன் இரண்டாமிதழ் மலர்ந்தது. அது என மூன்றாமிதழ். இவை என நான்காவது இதழ். எல்லாம் என ஐந்தாவது இதழ். பொருள் என ஆறாவது இதழ். சொல் என ஏழாவது இதழ். நடனம் என எட்டாவது இதழ். நிலை என ஒன்பதாவது இதழ். ஒளியென்றும் இருளென்றும், இன்மையென்றும் இருப்பென்றும், எனதென்றும் பிறிதென்றும் கணந்தோறும் தன்னைப்பெருக்கி பல்லாயிரம் இதழ்கொண்ட வெண்தாமரையாக விரிந்தது இந்திரனின் அகம்.


அதன் நடுவே பொன்னிறப் புல்லிவட்டத்தில் ஒரு கருவண்டென எழுந்து அமர்ந்து அவன் தன்னை உணர்ந்தான். முடிவிலா மலர்தலின் மயக்கில் காலமிலியில் அமைந்திருந்தான். அப்போது விண்ணில் இருந்து ஓர் ஒளிக்கீற்றென சரிந்து வந்த வியோமயானம் அவனருகே அணுகி யாழொலியுடன் சுற்றிப்பறந்தது. அதில் மின்படைக்கலக் கருவியை கையிலேந்தி விரிந்த மகிழ மலரொன்றை மறுகையிலேந்தி அமர்ந்திருந்தான் நகுஷேந்திரன்.  “நான் உன்னை வெல்ல வந்தேன். இம்மின்படைக்கு எதிர் நில். அன்றேல் என் சொல்லுக்குப் பணி” என்று அவன் அறைகூவினான். புன்னகையுடன் கண்மலர்ந்து  “யார் நீ? நான் உனக்கு எவ்வண்ணம் எதிரியானேன்? எதன்பொருட்டு உனை நான் பணிய வேண்டும்?” என்று இந்திரன் கேட்டான்.


நகுஷன் “நீ அமராவதியின் அரசனாக முன்பிருந்த இந்திரன். அதை வென்று அரியணை அமர்ந்த நகுஷேந்திரன் நான். அங்கு என் வெற்றி முழுமையுறவில்லை. அதை நிறைவுறச் செய்யவே இங்கு வந்தேன்” என்றான். இந்திரன் முகம் மலர்ந்து  “ஆம், நீ சொன்னபின் உணர்கிறேன். விண்ணுலகை ஆண்ட இந்திரன் நான். பிழைநிகர் செய்யும்பொருட்டு என் உள்ளம் துறந்து பிறிதொன்றை சூடிக்கொண்டிருக்கிறேன். நீ என்னை எதன்பொருட்டு வெல்ல விரும்புகிறாய்?” என்றான்.  “உன் உள்ளத்தில் இந்திராணி வாழ்கிறாள். அமராவதியை அடைந்தவன் என்பதனால் அவள் எனக்குரியவள்” என்றான் நகுஷன்.


மேலும் அகம்விரிந்து புன்னகைத்த இந்திரன் “ஆம், இம்மாபெரும் மலருக்குள் நிறைந்திருக்கும் நறுமணம் எதைக் குறிக்கிறதென்று வியந்துகொண்டிருந்தேன். அது இந்திராணிமேல் நான் கொண்ட காதல். நறுமணத்தை மலர் இழக்க ஒப்புமா என்ன?” என்றான். அச்சொல்லால் சினம்கொண்டு “எழு என்னிடம் போருக்கு!” என்று நகுஷேந்திரன் அறைகூவினான். இந்திரன் சிரித்து  “போர் நிகழட்டும். ஆனால் வெற்றி என்று எதை கொள்வாய்? பொருளென்று என் கையிலிருக்கும் எதையோ ஒன்றை அடைவதே உன் வெற்றி என்றால் அது நன்று. மூடா, நீ வந்திருப்பது மலரிலிருந்து நறுமணத்தை மட்டும் அள்ளிச் செல்வதற்காக” என்றான்.


சொல்முட்டிய நகுஷன் மேலும் சினம்கொண்டு “நான் உன்னை போருக்கு அறைகூவுகிறேன். என் காலடியில் பணிக!” என்றான். “பணியலாம். துளியென்றும் தூசியென்றும் நான் ஆகலாம். அவள்மேல் நான் கொண்ட காதல் அழியுமா என்ன?” என்றான் இந்திரன். நகுஷன் தளர்ந்து  “எவ்வண்ணம் நான் அதை வெல்வேன்? நீயே கூறு!” என்றான்.  “சந்திரகுலத்து அரசனே, என்பொருட்டு அவள் தன் சோலையில் விரிய வைத்த அப்பல்லாயிரம் மலர்களின் நறுமணமே இங்கு இந்த மலரில் நிறைந்துள்ளது. நீ வெல்ல வேண்டியது என்னை அல்ல, அவளை. என்மேல் அவள் கொண்ட காதல் அழியுமென்றால், அச்சோலையின் மலர்களனைத்தும் மணமிழந்து உதிருமென்றால் பின் என்னிடமிருந்து நீ வென்றடைவதற்கு ஒன்றுமில்லை” என்றான்.  “ஆம், வென்று வருகிறேன். ஒருபோதும் அமையமாட்டேன்” என்றபின் நகுஷன் திரும்பி அமராவதிக்கு சென்றான்.


தவித்தும் குழம்பியும் தளர்ந்து அமராவதியை அடைந்த நகுஷேந்திரன் தன் அரண்மனைக்குள் நுழைந்ததும் பற்றி எரியலானான். சினமும் தவிப்பும் வெறுப்பும் விழைவும் ஒன்றையொன்று உந்த அலைகொந்தளிக்கும் உள்ளத்துடன் தன் அரண்மனையின் ஆயிரம் உப்பரிகைகளில் சுற்றி வந்தான். தன் அமைச்சர்களை அழைத்து  “சொல்லுங்கள், இந்திராணியின் உள்ளத்தை நான் வெல்லும் வழியென்ன?” என்றான்.  “அரசே, பெண்கள் பெரும்பரிசுகளை விரும்புவார்கள். அதைவிட பாராட்டை விரும்புவார்கள். அதற்கும் மேலாக பெருமதிப்பை விழைவார்கள். இவை அனைத்தையுமே இந்திரனென இங்கு அமர்ந்திருக்கும் உங்களால் அளிக்கமுடியும். இதற்கும் அப்பால் அவர் விழைவதென்ன என்று அறியேன்” என்றார் முதன்மை அமைச்சர்.


“அதை இந்திராணியிடமே கோரலாம்” என்றார் ஒருவர். “அவராலும் அதை சொல்லமுடியாது. தன் விழைவை தெளிந்துசொல்லும் பெண் என எவருமில்லை” என்றார் பிறிதொருவர். “அரசே, அதற்கும் நீங்கள் நாரதரையே நாடலாம்” என்றார் இன்னொரு அமைச்சர். “ஆம், அவரே எனக்கு வழிகாட்டுவார்” என்று கூறிய நகுஷன் ஐராவதம் மீதேறி ஏழாம் வானில் ஒரு முகில்மேல் அமர்ந்து விண்மீன்கள் உதிர்வதை நோக்கி மகிழ்ந்திருந்த நாரதரை சென்று கண்டான். “சொல்லுங்கள் இசைமுனிவரே, நான் இந்திராணியின் உள்ளத்தை எப்படி வெல்வேன்?” என்றான். “அவள் சோலையின் மலர்கள் என் காலடிகேட்டு மலரவேண்டும். அதற்கு வழி என்ன?”


“அவள் இந்திராணி. இந்திரனோ பெருவிழைவும் அதை ஊர்தியெனக்கொண்ட ஆணவமும் கொண்டவன். இந்திரன் இதுவரை இயற்றாத ஆணவச் செயலொன்றை செய்க! அவள் அதை காணட்டும். நீயே இந்திரன் என அவள் காதல்கொள்வாள்” என்றார் நாரதர். நகுஷன்  எண்ணி நின்றபின்  “அவள் அறியாத ஆணவம் எது?” என்றான்.  “அதை உன் அமைச்சரிடம் வினவியறிக!” என்றார் நாரதர். நகுஷன் அவைதிரும்பி அமைச்சர்களை அழைத்து “சொல்க, இந்திரன் செல்ல அஞ்சுமிடம் எது? செய்யத் தயங்கும் செயல் எது?” என்றான். “அரசே, முதல்தெய்வங்கள் மூவரை எதிர்ப்பதில்லை அவர். முனிவர் சொல்மீறுவதில்லை” என்றார் அமைச்சர்முதல்வர்.


தொடைதட்டி எழுந்த நகுஷன் “அழையுங்கள் எட்டு முனிவர்களை! என் பல்லக்கை அவர்கள் சுமக்கட்டும். நான் இந்திராணியை பார்க்கச் செல்கிறேன்” என்றான். திகைத்த அமைச்சர்கள் “என்ன சொல்கிறீர்கள்? அவர்களின் சொல் உங்களை பொசுக்கிவிடும்” என்றார்கள். “அதை பார்ப்போம். எங்கும் துணிந்தேறித்தான் இங்கு வந்துசேர்ந்தேன். இங்கிருந்தும் அவ்வாறே முன்செல்வேன்” என்றான் நகுஷன். “அழையுங்கள் முனிவர்களை… என் பல்லக்கை அவர்கள் சுமக்கவேண்டுமென நான் ஆணையிட்டேன் என அறிவியுங்கள்!”


சனகரும், சனாதனரும், சனத்குமாரரும், தன்வந்திரியும், சியவனரும், கௌதமரும், வசிட்டரும், உத்தாலகரும் மறுசொல்லின்றி வந்து அவன் பல்லக்கை சுமந்தனர். அதில் ஏறியமர்ந்து “செல்க மகிழமரச் சோலைக்கு!” என அவன் ஆணையிட்டான். தன் வலக்கையில் மின்படையை சவுக்காக ஆக்கி ஏந்தியிருந்தான். இடக்கையில் கல்பமரத்தின் மலரும் ஏந்தியிருந்தான். அவர்கள் நடக்கும் விரைவு போதாதென்று அவன் உள்ளம் தாவியது. “விரைக! விரைக!” என கூவினான். “நாகமென விரைக…!” என்று அவர்களை சவுக்கால் அடித்தான். எதிரே குறுமுனிவர் தன் ஏழு மாணவர்களுடன் வரக்கண்டதும் அவன் களிவெறி மிகுந்தது. “அவரிடம் சொல்லுங்கள், என் பாதைக்கு முன் வரவறிவித்து செல்லும்படி” என சூசிமுகனிடமும் வஜ்ராக்‌ஷனிடமும் ஆணையிட்டான்.


நிலமொழியில் “ஸர்ப்ப! ஸர்ப்ப!” என அவர்களை விரைவூட்டிக்கொண்டு அவன் செல்வதைக்கண்டு அகத்தியர் திகைத்து நின்றார். அவன் அருகே வந்து “என்ன நோக்கி நிற்கிறீர்? என் ஆணையை கேட்கவில்லையா நீர்?” என்றான். சீற்றத்துடன் கைதூக்கிய அகத்தியர் “உன் நாவிலிருந்து ஒலித்தவன் நாகன். அறிவிலியே, நீ மாநாகமென ஆகுக! மண்ணில் இழைக! ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் உன் குடிப்பிறந்தவனால் உன் ஆணவம் அழியும். அன்று மீண்டெழுந்து விண்ணவனாக வருக!” என தீச்சொல்லிட்டார். அக்கணமே பல்லக்கிலிருந்து புரண்டு  வானையும் காற்றையும் கிழித்தபடி  இறங்கி பேரோசையுடன் மண்ணில் வந்து விழுந்தான் நகுஷன். வரும்போதே அவன் உடல் நீண்டு வளைந்து ஏழு சுருள்கள் கொண்ட நாகமாக மாறியது. மண்ணில் விழுந்து தலை எழுந்து நா சீற அவன் நெளிந்தபோது தன் கீழுடல் கல்லென்றாகியிருப்பதை கண்டான். உடல் நெளித்து அந்த எடையை இழுத்தபடி சென்று அருகே இருந்த சிறிய குகைக்குள் புகுந்து இருளுக்குள் ஒளிந்து சுருண்டுகொண்டான்.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–43
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 72
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 61
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 58
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 54
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 51
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 46
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 45
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 41
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 40
‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 39
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 32
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 47
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–42
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–41
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–39
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–38
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–37
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–36
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–35
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 15, 2017 11:30

March 14, 2017

கருணை நதிக்கரை -2

[image error]


கோரக்கர்மலை முன்பு மிகச்சிறிய இடமாக இருந்திருக்கிறது. இணைந்த இருமரங்களின் நடுவே இயற்கையாக அமைந்த ஒரு பொந்துதான் ஆலயம். அதில் சிவலிங்கம் ஒன்று இருந்தது. அருகே இருக்கும் கோரக்க கங்கை என்னும் ஊற்றுக்குச் சுற்றும் நாயக்கமன்னர்கள் கட்டிய கல்லால் ஆன வளைப்பு இருந்தது, இப்போதும் சற்று சிதைந்த வடிவில் உள்ளது. அதற்கு முன்னால் அங்கே ஆலயம் இருந்திருக்கலாம். தொன்மையான சில்லுச்செங்கல் கட்டுமானங்களும் பெரிய கருங்கற்பாறைகளை வெட்டி உருவாக்கப்பட்ட தூண்களும் மண்ணில்புதைந்து கிடக்கின்றன.


 


நூறாண்டுகளுக்குமுன்னர்தான் இந்தத் தலம் மீண்டும் கண்டெடுக்கப்பட்டது. அத்திரிமுனிவர் பற்றிய தொன்மம் கோரக்கர் பற்றிய தொன்மம் இரண்டுமே ஒரேசமயம் உருவாகிப் பரவலாயின. இரு வெவ்வேறு உள்மத நம்பிக்கைகளின் மோதல், முயக்கம். இப்போதிருக்கும் கோயில் இருபதாண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது. இன்னமும் பணிமுடிவடையவில்லை. பக்தர்கள் வந்து தங்கி சூழலைச் சீரழிக்க ஆரம்பித்தபிறகுதான் கடுமையான கட்டுப்பாடுகள் உருவாக்கப்பட்டன.


[image error]


நெல்லையைச் சூழ்ந்துள்ள மலைகளில் எல்லாம் அகத்தியர் முதலான சித்தர்களுக்கான சிறிய கோயில்கள் உள்ளன. பெரும்பாலானவை ஐநூறாண்டு பழமைகொண்டவை. அவை நெடுங்காலமாக மிகச்சிறிய மலைப்பயணிகள்குழுவினரே செல்லக்கூடியவையாக இருந்தன. இன்று ஊடகங்களால் அவை பிரச்சாரம்செய்யப்பட்டு பெருங்கூட்டம் கிளம்பிச்செல்கிறது. அவர்களுக்குச் சூழியலுணர்வு இல்லை. ஆலயங்களை தூய்மையாக வைத்திருக்கும் வழக்கமே இல்லை. அவர்கள் சென்றுவந்தால் காடும் ஆலயமும் குப்பைமேடாக ஆகிவிடுகின்றன.


 


அதிலும் கோடையில் காட்டுக்குள் சென்றால் சமையல்செய்கிறோம் என காட்டையே கொளுத்திவிட்டுவிட்டு வருகிறார்கள். அடுப்புகளை அணைத்துச்செல்லவும் என மன்றாடிச் சலித்த வனத்துறை சமீபமாக அனைத்து ‘பக்தர்களை’யும் தடுக்க ஆரம்பித்திருக்கிறது. உண்மையில் மேலும் கடுமையான கண்காணிப்பும் கட்டுப்பாடும் தேவை என்றும் ஒருநாளில் அதிகபட்சம் ஐம்பதுபேருக்குமேல் மலைக்குமேல் காடுகளுக்கு செல்ல அனுமதிக்கலாகாது என்றும் நான் விரும்புகிறேன்.


 


குறிப்பாக மருத்துவாழ்மலை போன்ற மையச்சாலையிலேயே உள்ள மலைகளுக்கு இந்த கட்டுப்பாடுகள் இல்லை என்றால் அவை குப்பைமலையாகவே இருக்கும். சமீபத்தில் தருமபுரி அருகே தீர்த்தமலைக்குச் சென்றிருந்தோம். அது ஒரு மாபெரும் குப்பைமேடு. குப்பைலிங்கம் என்றே தொன்மம் உருவாகிவர வாய்ப்புண்டு


[image error]


மாலையில் சிவசைலம் ஆலயத்திற்குச் சென்றோம். கோரக்கர் ஆலய்த்தில் அத்ரி மகரிஷி சிவசைலத்தை நோக்கி கைகூப்பி இருப்பதாகத்தான் தொன்மம். சிவசைலம் என் நினைவுகளில் எங்கெங்கோ சொடுக்கல்களை உருவாக்கியது. நான் அதற்கு முன் அங்கு வந்தது 1986ல் முப்பதாண்டுகளுக்கு முன்பு. கேரள நண்பர் ஒருவர் ‘நோயின்றி வாழமுடியாதா” என்ற சிறிய தமிழ் நூலை மலையாள மொழிபெயர்ப்பு செய்து தரமுடியுமா என்று என்னிடம் கேட்டார். அது சிவசைலத்தில் வாழ்ந்த ராமகிருஷ்ணன் என்பவரால் எழுதப்பட்டது.


 


அவர் தமிழாசிரியராக இருந்தார். சிவசைலத்தில் நல்வாழ்வு ஆசிரமம் ஒண்றை அமைத்திருந்தார். இன்று இயற்கை உணவு முறை பிரபலமடைந்து கிட்டத்தட்ட ஒரு மதம் போலவே பரவிக்கொண்டிருக்கிறது. அப்போது ஒரு மிகச்சிறிய வட்டாரத்தில் கிட்டத்தட்ட துறவிகளாலும் சித்தர்மரபில் நம்பிக்கை கொண்டவர்களாலும் மட்டுமே கடைபிடிக்கப்பட்டது. ராமகிருஷ்ணன் அப்பகுதியில் தேங்காபழச்சாமி என்று அறியப்பட்டார். தேங்காய் வாழைப்பழம் ஆகியவற்றை முதன்மை உணவாகக்கொண்டு சமைக்கப்படாத உணவை மட்டுமே உண்பது அவர் வகுத்துக் கொண்ட நெறி. அந்நெறியின் பிரச்சாரகராகவும் அவர் தன்னை ஆக்கிக் கொண்டார்.


[image error]


 


அவருடைய நல்வாழ்வு ஆசிரமத்தில் யார் வேண்டுமானாலும் தங்கி வேலை பார்த்து சாப்பிடலாம். ஆனால் சமைக்காத உணவு மட்டுமே அங்கு கிடைக்கும். நோயின்றி வாழ முடியாதா என்னும் நூலில் அவர்து சமைக்காத உணவின் முக்கியத்துவத்தையும் அதன் மூலம் உடல்நலத்திற்கும் பொருளியலுக்கும் ஏற்படும் நன்மைகளையும் விரிவாக கூறியிருந்தார். அவர் சென்னையில் வாழ்ந்த இயற்கை உணவு நிபுணரும் தமிழறிஞருமான பாண்டுரங்கன் என்பவரின் மாணவர். தனது மகனை பிறப்பிலிருந்தே சமைக்காத உணவு மட்டுமே கொடுத்து அவர் வளர்த்துவந்தார். இப்போதும் அந்த ஆசிரமம் செயல்பட்டுவருகிறது


சிவசைலத்துக்கு வந்து அவரைச் சந்தித்த பிறகு தான் அந்த நூலை மொழிபெயர்க்க வேண்டும் என்று நான் முடிவு செய்தேன். ஆகவே அவரைப்பார்ப்பதற்காக இங்கு வந்தேன். அப்போது நான் பலவிதமான வட இந்திய பயணங்களின் காரணமாக முற்றிய அமீபியாசிஸ் நோய்க்கு ஆளாகியிருந்தேன். வருடத்திற்கு இரண்டு முறை அலோபதி சிகிச்சை எடுத்துக் கொண்டு இருமுறையும் குணப்படவில்லை. மூன்று மாதத்தில் மீண்டும் நோய் முதிர்ந்துவிடும். அலோபதி முறைப்படி அமீபியாசிஸ் நோயை முழுக்க சரிசெய்யவே முடியாது. அமீபா குருதியில் கலந்து குடல் பகுதி தூய்மையானவுடன் திரும்பி வந்துவிடும் என்றார்கள்.


nalvazvu

நல்வாழ்வு ராமகிருட்டினன்


 


ராமகிருஷ்ணனை சந்தித்து என் நோயைப்பற்றி சொன்னேன்.  ஒருவேளை மட்டும் சமைத்த உணவை உண்டால்கூட உங்களுக்கு குணமாகிவிடும் என்றார். நான் காலையிலும் இரவிலும் சமைக்காத உணவையும் மதியம் மட்டும் சமைத்த உணவையும் உண்டேன். ஒருமாதத்திலேயே அமீபியாசிஸ் குறையத்தொடங்கியது. அதன் பிறகு அந்நூலை மலையாளத்தில் மொழிபெயர்ப்பு செய்தேன். தொண்ணூறு வரைக்கும் கூட ஒருவேளை மட்டுமே சமைத்த உணவை உண்டு கொண்டிருந்தேன். திருமணத்திற்கு பிறகுதான் மீண்டும் பழைய வகையான உணவு முறைக்கு திரும்பினேன்.


 


சிவசைலம் என்னும்போது  என் நினைவில் மங்கலாக இருந்தது இடுங்கிய தெருக்களும் தூசி படிந்த தாழ்ந்த ஓட்டு வீடுகளும் கொண்ட ஒரு சிறிய கிராமம். அதையொட்டி மண்சாலை வழியாகச் சென்று நல்வாழ்வு ஆசிரமத்தை அடையவேண்டும். இப்போது சிவசைலம் முற்றிலும் மாறிவிட்டது. தமிழகத்தில் நிகழ்ந்துள்ள இந்த மாற்றத்தை எத்தனைபேர் கவனித்திருப்பார்கள் என்று தெரியவில்லை. கடந்த முப்பது ஆண்டுகளுக்குள் இங்குள்ள ஓட்டுக் கட்டிடங்கள் அனேகமாக மறைந்துவிட்டிருக்கின்றன. தஞ்சை போன்ற சில பகுதிகள் தவிர எங்குமே கூரைக்கட்டிடங்களை பார்க்க முடியவில்லை.


[image error]


ஒருகாலத்தில் வீட்டுக்கு கூரை வேய்வது என்பது மிக செலவு பிடிக்கும் ஒன்றாக இருந்தது.அதை வருடம் முழுக்க எண்ணி எண்ணி ஏங்குவார்கள். பணம் சேர்ப்பார்கள். கூரை பிய்ந்து போய் மழைக்காலத்தை எதிர்கொள்வதைப்பற்றிய கவலைகள் பழைய நாட்டுப்புற பாடல்களில் இருக்கும். நவீன இலக்கியங்களில் கூட அது பதிவாகியிருக்கிறது. ஓட்டுவீடு என்பது ஒரு பெரிய சமூக அந்தஸ்தாக இருந்தது. பின்னர் ஓட்டுவீடுகள் பெருகலாயின. இன்று சிமிட்டி கூரை வீடுகள் மட்டுமே உள்ள வீடுகளாக நமது கிராமங்கள் மாறிவிட்டன.


 


பரவலான பொருளாதார வளர்ச்சி ஒரு காரணம். அதற்கிணையான  காரணம் சென்ற பத்தாண்டுகளில் மத்திய அரசின் பலதிட்டங்கள் மக்களின் வீட்டுவசதியைப் பெருக்குவதற்கு மிகப்பெரிய அளவில் உதவியுள்ளன என்பது. அதிலும் சென்ற சில ஆண்டுகளாக கிராமப்புற வீட்டு வசதிகளுக்காக மத்திய அரசின் நிதி ஒதுக்கீடுகள் மிகப்பெரிய அளவில் மாற்றத்தை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. சென்ற ஆண்டு கொல்லிமலை சென்றபோதும் அங்கே பெரும்பாலானவை புதிய சிமிட்டிவீடுகள்தான் என்பதைக் கண்டேன்.


1


தமிழகம் ஒருவகையில் உணவு உடை உறைவிடம் ஆகியவற்றில் தன்னிறைவை நோக்கி சென்று ஏறத்தாழ அடைந்துவிட்டதென்ற எண்ணம் தமிழகத்தில் சுற்றுப்பயணம் செல்லும் போது ஏற்படுகிறது. இளவயதில் நான் கண்ட வறுமை எங்கும் இல்லை. வறுமை இருக்குமிடங்களில் கொடிய குடிப்பழக்கமே அதை உருவாக்குகிறது. இரண்டு நாள் ஏதேனும் உடலுழைப்பு வேலைக்குச் சென்றால் அந்த வாரத்திற்கான முழு உணவையும் ரேஷனில் பெற்றுக் கொள்ள முடியும் என்று இன்று ஆகிவிட்டிருக்கிறது. இரண்டு லட்சரூபாயை எப்படியும் தேற்ற முடிந்தால் ஒருதரமான சிமெண்ட் கூரை வீடை அமைத்துவிடமுடியும். அரசு பள்ளிக்கூடங்கள் பெரும்பாலும் காலியாகி உள்ளன. அடித்தள மக்கள் கூட குழந்தைகளை ஆங்கிலக்கல்விக்கு அனுப்புகிறார்கள்.


 


சிவசைலத்தின் ஆலயத்திற்கு அருகே தாமிரபரணி ஓடுகிறது. புதுமழையால் ஓரளவு கலங்கிய நீர் சென்று கொண்டிருந்தது. படிக்கட்டில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தோம். திருநெல்வேலி மாவட்டத்தில் சைவ ஆலயங்களில் உழவாரப்பணிகளைச் செய்யும் குழுக்கள் மிகத்தீவிரமாக இயங்கிவருகின்றன என்று சக்தி கிருஷ்ணன் சொன்னார். பெரும்பாலான ஆலயங்களை சென்ற இரண்டாண்டுகளில் முழுமையாக அவர்கள் தூய்மைப்படுத்தி செப்பனிட்டிருக்கிறார்கள். ஒருவகையான சமூக இயக்கமாகவே அது மாறிவிட்டிருக்கிறது என்றார்.


[image error]


படிக்கட்டில் அமர்ந்து தாமிரபரணியில் நீராடுபவர்களைப்பார்த்தபோது எங்களூரில் இன்றும் நிலவும் ஒருவாழ்க்கை முறையைப் பற்றிய சித்திரத்தை அளித்தேன். அந்தக் காலத்தில் பொறியியல் படித்துவிட்டு ஹொசூரில் சிலநாள் வேலைபார்த்துவிட்டு ஊர் திரும்பி ஊரிலே இருந்துவிட்ட அண்ணா ஒருவரிடம் பேசும்போது “சாயங்காலம் நீரில் மூழ்கிக் குளித்து இரவில் மீன்கறியுடன் சாப்பிடுவதும் வருஷத்தில் இரண்டு மழைக்காலமும் இல்லாமல் வாழ்வதில் என்ன அர்த்தம் ஆகவே திரும்பிவிட்டேன் இங்கிருப்பது எனக்குப்போதும்” என்றார். அவருடைய ‘தரிசனம்’ என்ன ?


 


காலை எழுந்தவுடன்  ‘கட்டன்’ காப்பி. வானொலி அல்லது டிவி. எட்டு மணிக்கு அபப்டியே மெல்ல நகர்ந்துசென்று டீக்கடையில் செய்தித்தாள் வாசித்துவிட்டு நேந்திரம் பழத்துடன் புட்டு.  காலார நடந்து வயல்களைச் சுற்றிப்பார்த்துவிட்டு வந்தால் அன்றையவேலை முடிந்தது. ஒருமதியம் வரை முத்தாலம்மன் கோயில்கல்மண்டபங்களில் தென்னங்காற்று ஏற்று இதேபோன்று வந்துகூடும் சுகஜீவிகளிடம் கதை பேசுவது, மூன்று சீட்டு ஆடுவது, சதுரங்கம் விளையாடுவது. திரும்பிவந்து தேங்காய்க்குழம்புடன் சம்பா அரிசிச்சோறு குழைத்து உருட்டிச் சாப்பிடுவது. விரிவான மதிய உறக்கம்.


 


மாலையில் தலைக்கு எண்ணை பொத்திக்கொண்டு பூவரசு இலையில் லைபாய் சோப்பை எடுத்துக்கொண்டு சென்று தாமிரபரணியில் தலைகுளிர மூழ்கிக் குளித்தல். கண்கள் சிவக்க  சோப்பை தென்னை ஈர்க்குச்சியில் குத்தி தூக்கிப்பிடித்துக் கொண்டு நடந்து சென்று கோயிலில் சாமி கும்பிட்டு சந்தன பிரசாதம் அணிந்து திரும்புதல். ஆலயத்தை ஒட்டிய கல்மண்டபத்தில் அமர்ந்து இரவு வரை மீண்டும் அரட்டை. எட்டுமணிக்கு வீடுதிரும்பி மீன்குழம்புடன் சோறு. ஒன்பது மணிக்கு படுத்து மீண்டுமொரு தடையற்ற உறக்கம். வருடத்திற்கு நாலைந்து திருவிழாக்கள் ஏழெட்டு சினிமாக்கள்.


 


இந்தவகை வாழ்க்கையை  ‘முங்கிக்குளி’ என்று சொல்லலாம் என்றார் சக்தி கிருஷ்ணன். அதிலிருந்து முங்கிக்குளி என்ற  சொல்லாட்சியை வைத்து ஒவ்வொருவரும் எத்தனை சதவீதம் முங்கிக்குளி வாழ்க்கையில் இருக்கிறோம் என்பதைப்பற்றி பேசிக் கொண்டோம். கிட்டத்தட்ட முங்கிக் குளி ஒரு லட்சிய வாழ்க்கை என்பது போல.


[image error]


சிவசைலம் ஆலயம் தூய்மையாக பேணப்பட்டு அழகாகவே இருந்தது. சொல்லும்படியான சிற்பங்கள் எதுவும் இல்லை. சுவர்களில் கொத்தனார்கள் வரைந்திருந்த கண்கொண்டு காணச் சகியாத ஏஷியன் பெயின்ட் ஓவியங்கள் அந்தக் குறையை நிவர்த்தி செய்யுமென்று சொல்ல முடியவில்லை. பரமகல்யாணி அன்னையின் ஆலயம் அருகிலேயே.


 


சிவசைலம் ஆலயத்தின் பெரிய கொடுமை திருப்பணி என்ற பேரில் செய்யப்பட்டிருக்கும் கோராமை. தரையில் செட்டிநாடு டைல்ஸ் ஒட்டி கருங்கல்தூண்களுக்கு தூணுக்கொரு வண்ணம்பூசி முடிந்தவரை நாறடித்திருக்கிறார்கள். எப்படியெல்லாம் ஒர் அரிய ஆலயத்தைச் சீரழிக்கமுடியும் என அறைபோட்டு யோசித்திருப்பார்கல்போலும் பாவிகள்.


 


கல்கட்டிடங்களில் செங்கல் சிமிண்ட் இணைப்புகள் அமைப்பது டைல்ஸ் ஒட்டுவது போன்றவற்றை தொல்லியல்துறை முற்றிலும் தடைசெய்துள்ளது. இவைபோன்ற வீட்டுக்கட்டுமானங்கள் ஐம்பது ஆண்டுகள்கூட நீடிக்காதவை. அதிலும் ஏராளமான மக்கள் வந்துசெல்லும் ஆலயங்களில் பத்தாண்டுகளில் அவை பாழடைந்துவிடும். அவற்றை இடித்து சுரண்டி அகற்றி மறுகட்டுமானம் செய்யும்போது ஆலயமே பழுதடைந்துவிடும். புண்ணியத்துக்காக இவ்வகை திருப்பணிகளைச் செய்பவர்களுக்கு உண்மையில் சிவன்கோயிலை இடித்த பாவமே சேரும் என்று சொல்லத் தோன்றுகிறது.


 


திருப்பணி செய்ய விரும்புபவர்கள் தொல்லியல் துறையை அணுகி அவர்களிடம் ஆலோசனைபெற்று அவர்களின் அளவுகோலின்படிக் கட்டவேண்டும். கொஞ்சம் மரபின் மீது ஈடுபாடும், கொஞ்சம் கலையார்வமும் கொண்ட அனைவரும் அதற்காக நம் பக்தர்களை கட்டாயப்படுத்தவேண்டும். நாத்திகர்கள் இதில் ஈடுபட்டாகவேண்டும், கலைச்செல்வம் அவர்களுக்கும் உரியதுதான்


sivasailam-temple


சிவசைலத்தின் மாகாளை நான் இதுவரை பார்த்தவற்றில் மிகமிகக் கலையழகுவாய்ந்த ஒன்று. மிகச்சிறந்த மாகாளகளை நான் கர்நாடகத்தில் ராஷ்டிரகூட, காகதீய பேரரசின் பகுதிகளிலேயே கண்டிருக்கிறேன். ஹொய்ச்சாள காளைகள் அவ்வழியே வந்தவை. அவை நுணுக்கமான செதுக்குகளுடன் நகைகளைப்போல் அமைந்தவை. இந்த மாகாளை அணிச்செதுக்குகள் குறைவானது. ஆனால் பின்னங்காலிலும் கழுத்திலுமுள்ள சதைமடிப்புகளும் ஓசைகேட்டு எழுந்த செவிகளும் மிக அழகாக செதுக்கப்பட்டிருந்தன. கருங்கல்லின் கரிய ஒளியில் நாம் கேட்கமுடியாத ஒலியில் விழியுருட்டி எழ எண்ணி படுத்திருந்தது. அதன் புள்ளிருக்கையும் தோளும் சிலிர்ப்பதுபோலப் பிரமை எழுந்தது.


 


இதில் ரத்தச்சிவப்போ பச்சையோ பூசிவைக்கவேண்டும் என்றும் சிவலிங்கத்தில் ஊதாநிறம் பூசலாமென்றும் எந்தச்சும்பனுக்காவது தோன்றிவிடக்கூடாதே என்று சிவசைலலிங்கத்தை வேண்டிக்கொண்டேன். இப்போதெல்லாம் ஆலயங்களில் வேண்டிக்கொள்வது ஒன்றே, இறைவா லௌகீகவெறியும் கலைமூடத்தனமும் கொண்ட ஆத்திகப்பதர்களிடமிருந்து உன் ஆலயத்தை நீயே காப்பாற்றிக்கொள்ளவேண்டும் என்று.


index


 


எட்டுமணிக்கு கல்லிடைக்குறிச்சி வந்து சேர்ந்தோம். கல்லிடைக்குறிச்சியில் உள்ள இலக்கிய நண்பர்கள் சிலர் என்னைச் சந்திக்க வந்திருப்பதாக ஜான்பிரதாப் சொன்னார். அபுபக்கர் வருவாய்த்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். அவர் நான் எழுதிய ’யானை டாக்டரை’ ஒருசிறிய பதிப்பாக முன்னரே வெளியிட்டிருக்கிறார். அவர்களின் குடும்பத்தை சேர்ந்த யானை ஒன்று அங்கிருக்கும் தர்க்கா ஒன்றுக்கு வாங்கி அளித்திருக்கிறார். அவர்களுக்குத் தெரியாமலேயே பாகன் அதை பல வேலைகளுக்குக் கொண்டு சென்றிருக்கிறார். செல்லும்போது ஒருமுறை வெறிநாய் கடித்துவிட்டது. அதைப்பாகன் உரிமையாளரிடம் மறைத்துவிட்டான். ஆகவே முறையான சிகிச்சை அளிக்கப்படவில்லை. யானை ரேபிஸ் நோயால் தாக்கப்பட்டு எட்டுவயதிலேயே இறந்துவிட்டது.


 


அந்த யானையின் அட்டைப்படத்துடன் கூடிய யானை டாக்டர் பதிப்பை எனக்குக் காட்டினார். ஓரிரு முறைக்கு மேல் அந்த யானையை பார்க்கவே முடியாத அளவுக்கு உள்ளம் துயர் கொண்டது. பரம கல்யாணி கல்லூரியில் உயிரியல் பேராசிரியராக வேலைபார்க்கும் விஸ்வநாதன் அவரது நண்பராகிய கிருஷ்ணன் ஆகியோரைச் சந்தித்தேன். இருவரும் கவிதைகளை எழுதுகிறார்கள். அவர் எழுதிய ஒன்றிரண்டு கவிதைகளைப் பார்த்தேன். கணையாழி அமுதசுரபி போன்ற இதழ்களில் அக்கவிதைகள் பிரசுரமாகியிருக்கின்றன.


nalvazvu


கல்லிடைக்குறிச்சி போல ஒரு சிறு ஊரில் கூட கவிதை ஒரு இயக்கமாக இருப்பது ஒருவகை நிறைவைத் தந்தது. பலர் தன்னந்தனியாக ரகசியமாக இக்கவிதைகளை எழுதி பிரசுரம் செய்து கொண்டிருப்பார்கள். உண்மையில் சிற்றூர்களில் இருந்து எழுதும் பலர் சேர்ந்து தொகை நூல்கள் கொண்டு வருவது மிகச்சிறந்தது. அந்த ஊரின் தனிப்பட்ட குணாதிசயமும் அங்கிருக்கும் ஒரு அறிவியக்கமும் வெளிப்படும்படி அத்தொகுதி இருக்கும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு திரும்பிப்பார்த்தால் அது ஒரு கால ஆவணமாகவும் இருக்கக்கூடும்.


 


கவிதை ஒரு பரவலான இயக்கமாக இருக்கும்போதுதான் அதில் உச்சகட்ட சாத்தியங்கள் உருவாகின்றன. ஹைக்கூ என்பது ஜப்பானில் ஒரு பெரிய மக்கள் இயக்கம் என்று நித்யா சொன்னது என் நினைவில் வந்தது.


 


அங்குள்ள சிறிய ஓட்டல் ஒன்றில் இரவுணவு அருந்தினோம். மதிய உணவே நெஞ்சை அடைத்துக் கொண்டிருந்தாலும் கூட நண்பர்களின் பொருட்டு இரவுணவு அருந்தலாமென்று முடிவு செய்தேன். நெல்லையின் இப்பகுதி எளிமையான சிற்றுண்டிக்கு புகழ் பெற்றது. இட்லி தோசை போன்றவை அலாதியான சுவையுடன் இருந்தன. கல்லிடைக்குறிச்சி அப்பளம் மிகப்புகழ் பெற்றது என்றார் அபுபக்கர்.




கருணை நதிக்கரை -1

 


 


நல்வாழ்வு ஆசிரமம் பற்றி ஒரு கட்டுரை



 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 14, 2017 11:35

பாஷாம் , மிஸ்திரி

ASOKAMITHTHIRAN-41


அன்புள்ள ஜெ,


உங்கள் “ஆளுமையை வரையறுத்தல்” கட்டுரையின் மையக் கருத்தை ஒப்புக் கொள்கிறேன். ஒரேயொரு நெருடல் அசோகமித்திரன் ஏ.எல்.பாஷமின் புத்தகத்தைக் கிண்டலிடித்தது. அசோகமித்திரன் இந்திய வரலாறு பற்றி எழுதிய கட்டுரைகள், அல்லது புத்தகம் அல்லது பேட்டிகளைப் படிக்க அவா. தேடிப் பார்க்கிறேன். கிடைத்தால் படிக்கிறேன். பாஷம் வரலாறு எழுதாமல் புனைவு எழுதியதாகச் சொல்லியிருக்கும் இந்தியாவின் உலகப் புகழ் பெற்ற வரலாறாசிரியரின் கறாரான வரலாறு எழுத்துகள் இது காறும் தெரியாமல் போனது என் துரதிர்ஷ்டம். எழுத்தாளரை சாமான்யனாகப் பார்ப்பது தவறு ஆனால் உலகப் புகழ் பெற்றதனாலேயே வெளிநாட்டில் இருந்து எழுதும் இந்திய எழுத்தாளர்களின் புத்தகங்களில் குறை கண்டு பிடித்து அதில் சுகம் காண்பதை எதில் சேர்ப்பது? குறைகள் இருந்தால் சுட்டிக் காட்டக் கூடாதென்று நான் சொல்லவில்லை. ஆனால் நோக்கம் விமர்சனம் என்பதல்லாமல் வேறாக இருந்தால்?


“நமது சினிமா எழுத்துக்கள்” கட்டுரையில் ருஷ்டியையும் ரோஹிண்டன் மிஸ்ட்ரியையும் பாசாங்கு எழுத்தாளர்கள் என்கிறீர்கள். ருஷ்டியின் புத்தகம் குறிப்பாக அதிகம் விமர்சிக்கப்பட்டது. இன்றும். அதில் தவறில்லை. மிஸ்ட்ரியின் புத்தகத்தைப் படித்த என் வெள்ளைக்கார மேலாளர் இந்தியாவில் நிலவும் சாதியம் பற்றிக் கேட்டார். குடியா முழுகிவிடும்? சென்ற வருடம் அமெரிக்காவில் மிக ஏகோபித்த பாராட்டைக் குவித்த நாவல் அமெரிக்காவில் நிலவிய அடிமை முறைப் பற்றிய காத்திரமான நாவல். பரிசும் வாங்கியது. அதற்காக அதை எழுதியவர் அமெரிக்காவை அவமதித்து விட்டார், பாசாங்கு எழுத்து, சமைத்துக் கொடுக்கப்பட்டது, இதைப் படித்து விட்டு உலகமே அமெரிக்காவைப் பற்றி என்ன நினைக்கும் என்று யாருமே கேட்கவில்லை. ஏன் நமக்கு மட்டும் ‘ஸ்லம் டாக் மில்லியனர்’ எடுத்த டேனி பாயில் விரோதியாகத் தெரிகிறார், மிஸ்ட்ரி என்னமோ தேசத் துரோகியாகத் தெரிகிறார் (உங்களைச் சொல்லவில்லை, பொதுவில். மிஸ்ட்ரியின் இன்னொரு புத்தகத்துக்குத் தடைக் கோரப்பட்டது).


மிஸ்ட்ரியின் நாவல் 500 பக்கம் கொண்டது, ஓரு எழுத்தாளர் மெனக்கெட்டு 500 பக்கம் எழுதி காசு பார்ப்பதற்காகவா பாசாங்குச் செய்வார்? ‘பாசாங்கு’ எனும் சொல் ஒரு செயல் செய்வதின் நோக்கத்தைக் கேள்விக்குள்ளாக்குகிறது இல்லையா? அவர் நாவல் குப்பை என்றால் அதைக் குப்பை என்று நிராகரித்து விடலாமே? அதற்கான முழுச் சுதந்திரமும் உரிமையும் எந்த வாசகனுக்கும் விமர்சகனுக்கும் உண்டு. உண்மையிலேயே ஏதோ உள் நோக்கம் இருந்தது தெரிய வந்தாலோ அல்லது படைப்பில் நேர்மையில்லாத உள் நோக்கம் நிரூபிக்கத்தக்க வகையில் இருந்தாலோ நாம் எழுத்தாளனின் நோக்கத்தைக் கேள்விக்குட்படுத்தலாம். அன்றாடம் உங்களின் ஒவ்வொரு பதிவுக்கும் உள் நோக்கம் கற்பிப்பதை நீங்கள் அறிவீர்கள்.


மேற்கண்ட இரு பதிவுகளிலும் சொல்லப்பட்ட இந்த இரு விஷயங்களும் நெருடியது. இரண்டும் ஒன்றொடொன்று தொடர்பும் கொண்டிருப்பதாகத் தோன்றியது.


நன்றி


அரவிந்தன் கண்ணையன்


Baptism-59


அன்புள்ள அரவிந்தன்,,


இரு விளக்கங்கள். இலக்கியத்தில் எப்போதுமே மெல்லிய கிண்டல்கொண்ட சொற்றொடர்களுக்கு முக்கியமான இடமுண்டு. அதேபோல முன்னரே சொல்லப்பட்டவற்றின் தொடர்ச்சியாக அமையும் ஒற்றைவரிகளுக்கு.


ஏ.எல்.பாஷாம் அசோகமித்திரனின் மிக விருப்பமான வரலாற்றாசிரியர். ஆகவேதான் நானும் ஞாநியும் அவரைப்பார்க்கச் சென்றபோது முதுமையிலும் கண்ணாடிபோட்டுக் கொண்டு குனிந்து அமர்ந்து அதை அவர் வாசித்துக்கொண்டிருந்தார்


ஆனால் அவர் யதார்த்தவாதி. வரலாற்றைப்பற்றி, வாழ்க்கையைபற்றி எந்த பொதுமைப்படுத்தல் சொல்லப்பட்டாலும் ‘அப்டியெல்லாம் சொல்லிட முடியாது’ என்று அவர் சொல்வதைப்பார்க்கலாம்.


ஏ. எல். பாஷாமின் நூலை நீங்கள் வாசித்தால் தெரியும் இந்தியவரலாறு, பண்பாடு பற்றி அவர் சொல்லும் மிக படைப்பூக்கம் கொண்ட ஒற்றைவரி ஊகங்கள் , முடிவுகள் முக்கியமானவை. நம்மை சிந்திக்கத் தூண்டுபவை.


ஏ எல் பாஷாம்

ஏ எல் பாஷாம்


அசோகமித்திரனும் அதற்காகவே அதை வாசிக்கிறார். ஆனால் அதை அவரால் ஏற்றுக்கொள்ளமுடியாது. ஏனென்றால் அவர் திநகர் விட்டுச் செல்ல விரும்பவில்லை. ‘அன்றாடவாழ்க்கையின் எளிமக்களின் புறவய யதார்த்தம்’ என்பதே அவர் காணும் மெய்மை.


அதைத்தான் அவர் sarcastic ஆகச் சொல்கிறார். அதை பாஷாமின் நூலை வாசித்த ஒருவர், அசோகமித்திரனை அறிந்த ஒருவர் புன்னகையுடன் புரிந்துகொள்ளமுடியும்.


அசோகமித்திரனை அமெரிக்க எழுத்தாளர்களில் வில்லியம் சரோயன், ஐசக் பாஷவிஸ் சிங்கர் போன்றவர்களுடன் பொதுவாக ஒப்பிடலாம். அது ஒரு மிகப்பெரிய எழுத்துப்பள்ளி. அவர்கள் ‘வரலாறற்ற’ ‘தத்துவங்களால் தொகுக்கப்பட முடியாத’ ஒரு தனிமனிதனை, இருபதாம்நூற்றாண்டில் நின்றுகொண்டிருக்கும் ‘சாமானியனை’ எழுதமுயன்றவர்கள்.


ஆனால் அசோகமித்திரன் தனிவாசிப்பில் மிகப்பெரிய கற்பனாவாதக் கதைகளை [உதாரணம் அலக்ஸாண்டர் டூமாவின் நாவல்கள், ] விரும்புபவர். வரலாற்றுநூல்களை வாசிப்பவர். இந்திய தத்துவம், யோகமரபு, தாந்த்ரீகம் ஆகியவற்றிலெல்லாம் ஆர்வம் கொண்டவர். இது படைப்பியக்கத்தின் பெரிய மர்மம்.


a.l.basham


 *


ரோகிண்டன் மிஸ்திரி நாவல்பற்றி. அது ஒரு தனிவிமர்சனக்கட்டுரை அல்ல. பலவற்றைத் தொகுத்துசொல்லிச்செல்லும் குறிப்பு. இந்திய ஆங்கில நாவல்களின் விற்பனை பெரும்பாலும் ஆங்கிலம்பேசும் ஐரோப்பிய அமெரிக்கர்களிடம். அவர்களே முன்னிலை வாசகர்கள். ஆகவே அவ்வெழுத்துக்களில் இயல்பாக உருவாகும் பாசாங்கு ஒன்று உண்டு. என் வாசிப்பில் அமிதவ் கோஷ் தவிர எவருமே அதிலிருந்து தப்பியதில்லை.


ஓர் அமெரிக்க, ஐரோப்பிய வாசகன் இந்திய வாழ்க்கையில் ஆச்சரியமாக, அதிர்ச்சியாக, உற்சாகம்கொண்டு அணுகும் விஷயங்கள் பல உண்டு. உதாரணமாக கைம்மைநோன்பு அல்லது தீண்டாமை அல்லது மதமூடநம்பிக்கைகள். ஆங்கிலேயனாக, அமெரிக்கனாக நின்று அவற்றை நோக்கி அவர்களின் பார்வையில் அவர்களின் ரசனைக்காக எழுதினால்மட்டுமே அந்த ஆக்கங்கள் ஆங்கிலத்தில் புகழ்பெறும். அதில் எள்ளலும் விமர்சனமும் இருக்கும். சிலசமயம் பூடகப்படுத்தலும் வழிபாட்டுத்தன்மையும்கூட இருக்கும். ஆனால் அவை மைய இந்திய இலக்கியம் அல்ல. இந்திய எழுத்தின் ஒருவகை, அவ்வளவே. ரோஹிண்டன் மிஸ்திரி அவ்வாறு எழுதியவர்.


தன் ஆன்மிகத்தை, உணர்வுநிலைகளை, தன் வாழ்க்கைக்கான முழுமைநோக்கை தேடி வாசிக்கும் இந்தியவாசகனுக்கு அன்னியமான, பயனற்ற எழுத்து இது. அவன் தெரிந்துகொள்ள வாசிப்பதில்லை, தெரிந்ததை கடந்துசெல்ல வாசிக்கிறான்.இலக்கியத்தின் சாரம் என்பது ஓர் அசல்தன்மை.


இந்தியாவின் இருட்டை இந்தியாவின் மாபெரும் எழுத்தாளர்கள் எழுதிய அளவுக்கெல்லாம் இந்திய ஆங்கில எழுத்தாளர்கள் எழுதியதில்லை. பிரேம்சந்த், பன்னலால் பட்டேல் போன்ற முதல்தலைமுறை எழுத்தாளர்கள் முதல் இன்று எழுதும் சகரியா வரை. அவர்கள் இங்கே கொண்டாடத்தான் படுகிறார்கள். சிவராம காரந்தின் சோமனதுடி அளவுக்கு தலித் வாழ்க்கையைச் சொன்ன ஆங்கிலநாவல் ஏதும் இல்லை. பிரிவினையைப்பற்றி மிஸ்திரியைவிட உக்கிரமாகவே இஸ்மத் சுக்தாயும் அம்ரிதா பிரீதமும் எழுதியிருக்கிறார்கள்.


இவர்கள் இந்திய வாழ்க்கையை பற்றி என்ன சொல்கிறார்கள் என்பதல்ல அளவுகோல். அதிலுள்ளது அந்த எழுத்தாளனின் உண்மையான அக எழுச்சி, அவனுடைய சொந்த ஆன்மிகத் தவிப்பு, அவனுடைய கண்டடைதல் அல்ல என்பதே. அவன் எவருக்காக எழுதுகிறானோ அவர்களே அவன் எழுத்தைத் தீர்மானிக்கிறார்கள் என்பதே. ஆகவே அவை பொய்கலந்தவை, போலியானவை என்கிறேன்


rohindom

ரோகிண்டன் மிஸ்திரி


இலக்கியத்தில் இந்த பொய்கலத்தல் என்பது மிகப்பெரிய சவால். இதை அரசியலில் உள்ள நேர்மையின்மையுடன் இணைத்துப் புரிந்துகொள்ள வேண்டியதில்லை எழுத்தாளனை அறியாமலேயே அது அவனில் படர்கிறது. நீங்கள் உங்கள் மகளிடம் உணர்ச்சிகரமாகப் பேசுகிறீர்கள் என்று கொள்வோம், அது ஒரு கருவியில் பதிவாகிறது என்றால் மெல்ல, உங்களை அறியாமலேயே ஒரு பொய் உங்கள் உணர்வுகளில் குரலில் குடியேறுகிறது அல்லவா? அதைப் போலத்தான். அறியாத ஒரு மாற்றம் அது


இலக்கியம் எதுவானாலும் பொய்மை கலந்தபடியேதான் இருக்கும் அதன் வடிவத்தை, ஒழுங்கை எழுத்தாளனின் கவனம்தான் முடிவு செய்கிறது. அது கொஞ்சம் பொய்யை கலக்கவைக்கும். சூழலில் உள்ள கருத்துக்களால், எழுத்தாளனின் அரசியல் நடவடிக்கைகளால், ஏன் ஃபேஸ்புக்கில் சம்பந்தமில்லாதவர்களிடம் தர்க்கம் செய்வதால்கூட, அவனிடம் அந்த பொய் குடியேறும்.


செம்பு இல்லாமல் வெறும் தங்கம் நகையாகாது. மிகப்பெரிய படைப்பாளிகளில் கூட. மிக முக்கியமான நூல்களில் மட்டுமே தங்கம் செம்பை விட அதிகமாக இருக்கும். ரோகிண்டன் மிஸ்திரி, ருஷ்தி போன்றவர்களிடம் செம்பு மிக அதிகம், தங்கம் மிகமிகக் குறைவு


ஜெ


தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 14, 2017 11:31

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–43

43. விண்ணூர் நாகம்


படைக்களத்திலிருந்து திரும்பும்போதே நகுஷன் பிறிதொருவனாக மாறிவிட்டிருந்தான். அவன் உடலுக்குள் மற்றொருவர் நுழைந்துவிட்டதைப்போல நோக்கும் சொல்லும் மட்டுமல்ல நடையும் உடலசைவுகளும்கூட நுட்பமாக மாற்றமடைந்திருந்தன. அரண்மனைமுற்றத்தில் தேரிறங்கிய அவனைக் கண்டதுமே பத்மனின் விழிகளில் திகைப்பு தோன்றி மறைந்தது. குருதி கருகிப்படிந்திருந்த உடலுடன் அரண்மனைக்குள் நுழைந்த நகுஷன் “என் உடன்பிறந்தானுக்குரிய அரசமுறைமைகள் அனைத்தும் ஹுண்டனுக்கு செய்யப்படவேண்டும், அமைச்சரே” என்று ஆணையிட்டான். பத்மன் தலையசைத்தான்.


ஹுண்டனின் உடலை வெள்ளித்தேரிலேற்றி வாழ்த்தொலிகளும் மங்கலமுழக்கங்களுமாக குருநகரியின் அணிப்படை நாகநாட்டுக்கு கொண்டுசென்றது. படைத்தலைவன் வஜ்ரசேனன் தலைமைதாங்கி அப்படையை நடத்திச்சென்றான். படை வரக்கண்டு ஊர்களை ஒழித்து அஞ்சி ஓடிய  நாகர்குடியினர் மெல்ல உண்மையை உணர்ந்து சிறு குழுக்களாக திரும்பிவந்து வழிதோறும் கூடிநின்று திகைப்புடன் அக்காட்சியை கண்டார்கள். குருநகரியின் படைகள் எழுப்பிய வாழ்த்தொலியை அவர்கள் ஏற்று கூவவில்லை. போரில் தோற்றுத் திரும்பி ஓடிவந்த நாகர்படையினர் உடற்புண்களுடன் படைக்கலங்களுடன் மரங்கள்மேலும் பாறைகள்மேலும் நின்று அந்த அணிநிரையை நோக்கினர்.


அவர்களுக்கு என்ன நிகழ்கிறதென்றே புரியவில்லை. விழிகள் ஒவ்வொன்றையாக நோக்கி அவற்றிலிருந்த ஏதோ ஒன்றை அடையாளம் கண்டுகொண்டு உளம் நடுங்கினர். “அந்த உடலுக்குள் இருப்பது நம் அரசர் அல்ல. அது வெண்தோலர்களின் இழிதெய்வம் ஒன்று” என்று ஒரு முதியவன் சொன்னான். “அதை அவர்கள் நமக்கு அனுப்பியிருக்கிறார்கள். அது நம் குடிகளில் பரவி நோயையும் பஞ்சத்தையும் கொண்டுவரும். நம் குழந்தைகளையும் கால்நடைகளையும் அழிக்கும். நம் மகளிரின்  கருப்பாதையை ஊற்றை பாறையென அமைந்து தடுக்கும்.”


அச்சொல் விரைவிலேயே பரவியது. அணியூர்வலம் நாகநகரிக்குச் சென்றபோது அங்கே நாகர்கள் எவரும் வந்து எதிரேற்கவில்லை. கோட்டைவாயிலை திறந்துபோட்டுவிட்டு நாகர்படைகள் பின்வாங்கி காடுகளுக்குள் பரவி ஒளிந்துகொண்டன. பெண்களும் குழந்தைகளும் இல்லங்களுக்குள் கதவுகளை மூடி ஒளிந்துகிடந்தனர். அரசமாளிகை முகப்பில் ஹுண்டனின் உடல் வைக்கப்பட்டபோது நாகர்குடிகளில் இருந்து எவரும் மலர்வணக்கம் செலுத்தவோ அரிநிறைவு அளிக்கவோ வரவில்லை. படைத்தலைவன்  “என்ன நிகழ்கிறது, அமைச்சரே? உங்கள் குடி ஏன் அரசனை புறக்கணிக்கிறது?” என்றான். கம்பனன் தலைகுனிந்து தணிந்தகுரலில் “நானறியேன். குடித்தலைவர்களிடம் பேசிப்பார்க்கிறேன்” என்றான்.


கம்பனன் தன்னந்தனியாக  மலையேறிச்சென்று குலத்தலைவர்களை சந்தித்துப் பேசினான். அவர்கள் அவன் அணுகிவரவே ஒப்பவில்லை. மலையடிவாரத்திலேயே அவன் நின்றிருக்கவேண்டுமென்றும் மேலேறி வந்தால் நச்சம்பு வரும் என்றும் எச்சரித்தனர். கைகூப்பி அவன் மன்றாடியபோதும் இரங்கவில்லை. அவன் அங்கே ஒரு பாறையில் கையில் நச்சம்பு ஒன்றை ஏந்தியபடி அமர்ந்தான். வடக்குநோக்கி அவ்வாறு அமர்ந்தால் அந்திக்குள் கோரியது நிகழாவிட்டால் கழுத்தை அறுத்துக்கொள்ளவேண்டும் என்பது நாகநெறி. மேலிருந்து நோக்கிக்கொண்டிருந்த நாகர்குலத்தலைவர்கள் ஐவர் நாகபடக்கோலுடன் இறங்கி வந்தனர். நாகத்தோல் சுற்றப்பட்ட அந்தக் கோல்களை அவனுக்கும் தங்களுக்கும் நடுவே போட்டுவிட்டு பேசத்தொடங்கினர்.


அவன் சொன்ன எதையும் அவர்கள் கேட்கவில்லை. “அவ்வுடல் எங்கள் அரசனுடையதல்ல. அதை எரித்து அழிக்கவேண்டும். நம் குலமுறைப்படி அதை மண்ணில் புதைக்கக் கூடாது. நம் மண் உயிருள்ளது. மூதாதையர் கரைந்து உறைவது. பல்லாயிரம் விதைகளில் உயிராக அவர்கள் எழுவது. அவ்வுடலில் வாழும் இழிதெய்வம் அதில் கலக்கலாகாது” என்றார்கள். திரும்பத் திரும்ப அதையே சொல்லிக்கொண்டிருந்தார்கள். “நீ இழிதெய்வத்தால் ஆட்கொள்ளப்பட்டவன்…” என அவர்களில் ஒருவர் கூவியதும் அவன் “என்ன சொல்கிறீர்கள்?” என்று உளம் பதைத்தான். “நம் குலத்திற்கென வாழ்ந்தவர், நம் குலநெறிப்படி உயிரிழந்தவர் என் தலைவர்.”


“இல்லை, அவன் வெண்தோலரின் மாயத்தால் கட்டுண்டவன்…” என்றார் ஒருவர். “அங்கே அடக்கம் செய்யப்பட்டால் அதை தோண்டி எடுத்து எரிப்போம்” என பிறிதொருவர் கூறியதும் கம்பனன் சீறி எழுந்து அந்த முதிய குலத்தலைவரை நோக்கி நச்சம்பை நீட்டியபடி முன்னால் சென்று “யாரடா அவன், என் தலைவனை இழிவுசெய்வேன் என்று சொன்னது? இதோ, நான் இருக்கிறேன், என் குருதித்துளி எஞ்சும்வரை அவரை எவனும் சொல்லெடுத்துப் பேச ஒப்பமாட்டேன்” என்றான். “அவ்விழிமகனின் உடல் எங்களுக்குத் தேவையில்லை…” என அவர் சொல்லிமுடிப்பதற்குள் தன் வாளை எடுத்து அவர் தலையை வெட்டி நிலத்திலிட்டு காலால் உதைத்து சரிவில் உருட்டிவிட்டான்.


திகைத்து விலகிய குலத்தலைவர்களிடம் “ஆம், நான் இருக்கும்வரை என் தலைவனைப் பழித்து ஒரு சொல் எழ முடியாது. விழைந்தால் என்னைக் கொல்லுங்கள். அன்னையரிடம் ஆணைபெற்று உங்கள் குலத்திலேயே மீண்டும் பிறந்து பழி தீர்ப்பேன்…” என மூச்சிரைக்க அவன் கூவினான். அவர்கள் நடுங்கும் உடலுடன் பின்னகர்ந்தனர். மரங்களெங்கும் ஆயிரம் நச்சு அம்புகள் அவனை நோக்கி கூர்திருப்பி வில்விம்மி நின்றன. “நான் இன்று என் தலைவன் உடலருகே எரிபுகுவேன்… அனல்வடிவமாகி என் உடல் அழியும். மண்புகாத உடல் இந்நகரியிலேயே வாழும். என் தலைவன் அமைந்த மண்ணுக்கு இனி நானே காவல். எல்லைமீறும் எவன் குலத்தையும் ஏழு தலைமுறைக்காலம் கருபுகுந்து அழிப்பேன். ஆணை! ஆணை! ஆணை!”  என்று அவன் கூவினான்.


அன்று குருநகரியின் படைகள் சூழ மங்கலப்பேரிசையும் வாழ்த்தொலிகளும் முழங்க  நாகநகரியின் தெற்கெல்லையில் அமைந்த இடுகாட்டில் ஹுண்டன் மண்கோள் செய்யப்பட்டான். தொலைவில் மரங்களில் ஒளிந்தபடி நாகர்கள் அதை நோக்கிக்கொண்டிருந்தனர். இல்லங்களின் இருளுக்குள் அவர்களின் பெண்கள் கண்களை மூடி மூதன்னையரை வழுத்தி உதடுகளை அசைத்துக்கொண்டிருந்தனர். நாகர்களின் குலமுறைப்படி பதினெட்டு அடி ஆழக் குழி வெட்டப்பட்டு அதன் தெற்கு திசையில் பக்கவாட்டில் எட்டுஅடி ஆழமுள்ள பொந்து துரக்கப்பட்டது. அதற்குள் செம்பட்டில் பொதியப்பட்ட ஹுண்டனின் உடலைச் செலுத்தி உப்பும் நீறும் கலந்த கலவையைப் போட்டு நிறைத்தார்கள்.


இடுகுழிக்குள் களிமண்ணாலான கலங்களும் மரத்தாலான இல்லப்பொருட்களும் வைக்கப்பட்டன. ஊர்வன, பறப்பன, நடப்பன என அனைத்துவகை உயிர்களிலும் ஏழுவகை மண்ணில் வனையப்பட்டு வைக்கப்பட்டன. ஏழுவகை படைக்கருவிகளும் ஒன்பதுவகை அருமணிகளும் ஒன்பதுவகை ஊண்மணிகளும் பன்னிருவகை மலர்களும் அடுக்கப்பட்டபின் மண்ணிட்டு மூடினர். அரசனின் உடலிருந்த மண்ணுக்குமேல் மானுடக்கால் படக்கூடாதென்பதனால் அப்போதே செங்கல் அடுக்கி கூம்புவடிவ பள்ளிப்படைநிலை கட்டப்பட்டு அதன் மேல் நாகர்குலக்கொடி நாட்டப்பட்டது.


முன்னரே தன் முடிவை கம்பனன் வஜ்ரசேனனுக்கு சொல்லியிருந்தான். குருநகரியின் படைகள் ஏனென்றறியா பதற்றத்துடன் காத்து நின்றிருக்க உடலெங்கும் அரக்கும் குங்கிலியமும் தேன்மெழுகும் பூசப்பட்ட துணியை இறுக்கிச் சுற்றிக் கட்டிக்கொண்டு கம்பனன் கைகூப்பியபடி நடந்துவந்தான். கழுத்தில் ஈரமலர்மாலையும் இடையில் மரவுரியாடையும் மட்டும் அணிந்திருந்தான். அவனுக்காக ஏழு அடி தொலைவில் தெற்கு தலைவைத்த வடிவில் நீள்குழிச்சிதை ஒருக்கப்பட்டு அதில் எரிந்தேறும் அரக்குள்ள விறகுகள் அடுக்கப்பட்டிருந்தன. அதில் மெழுகையும் அரக்கையும் அடுக்கி ஊன்நெய்யூற்றி எரிமூட்டினர்.


தழலெழுந்து கொழுந்தாடி வெறிகொண்டு வெடித்து சிதறி மேலெழத் தொடங்கியதும் கம்பனன் கைகூப்பியபடி சிதையை மும்முறை சுற்றிவந்தான். பின்னர் “எந்தையே, முதலோனே, நாகதேவர்களே!” எனக் கூவியபடி எம்பி தழல்மலரிதழ்களுக்கு நடுவே பாய்ந்தான். அனலின் எட்டு கைகள் எழுந்து அவன் உடலை அள்ளி அணைத்துக்கொண்டன. அவன் செந்நெருப்பாலான ஆடையணிந்து நடனமிடுவதாக படைவீரர்கள் கண்டனர். “எரிபுகுந்தோன் வாழ்க! நிலைபேறுகொண்டோன் வாழ்க!” என அவர்கள் குரலெழுப்பினர். பின்னர் எரி நிலைகொண்டு நீலச்சுடர்பீடம் மீது நின்றாடலாயிற்று.


நாற்பத்தொன்றாம்நாள் குருநகரியிலிருந்து நகுஷன் தன் படைகளுடனும் அமைச்சர்களுடனும் நாகநகரிக்கு வந்தபோது அங்கே நாகர்கள் எவரும் இருக்கவில்லை. அந்நகரை அப்படியே கைவிட்டுவிட்டு அவர்கள் மேலும் வடகிழக்காக நகர்ந்துசென்று காடுகளுக்குள் ஊர்களை அமைத்துக்கொண்டிருந்தனர். நகுஷன் ஹுண்டனுக்கு உடன்பிறந்தார் செய்யவேண்டிய விண்ணேற்றக் கடன்கள் அனைத்தையும் செய்தான். அங்கே ஹுண்டனுக்கு ஒரு பள்ளிப்படைக் கோயிலையும் அமைத்தான். குருநகரியின் அரசகுடியினர் ஆண்டுதோறும் அங்கே வந்து பலிகொடையும் பூசெய்கையும் நிகழ்த்தி மீள்வார்கள். நாகர்கள் அங்கே வருவதே இல்லை. அவர்கள் சொல்லில் இருந்தும் ஹுண்டன் முழுமையாக மறைந்துபோனான்.



tiger“அதோ, அந்தச் சோலைதான் முன்பு நாகநகரியாக இருந்தது” என்று முண்டன் கைகாட்டினான். பீமன் “பெருங்காடாக மாறிவிட்டதே!” என்றான். “ஆம், கைவிடப்பட்ட ஊர்களை காடு வந்து அள்ளி தன்னுள் எடுத்துக்கொள்ளும் விரைவு அச்சுறுத்துவது. அங்கு பெய்யும் கதிரொளியும் அங்கு மண்ணில் வேரடர்வு இல்லாமலிருப்பதும்தான் அதற்கு ஏது என்பார்கள். ஆனால் அங்கு வாழ்ந்த மானுடரின் எச்சங்களை அள்ளி அருந்தவே வேர்கள் வருகின்றன. அங்கு நின்றிருந்த வானை உண்டு நிறையவே இலைகள் தழைக்க கிளைகள் நீள்கின்றன” என்றான் முண்டன். “ஒவ்வொரு ஊரைச் சூழ்ந்தும் பசியுடன் காடு காத்திருக்கிறது.”


அவர்கள் அணுகியதும் அக்காடு விழிகளிலிருந்து மறைந்து இடிந்தும் சரிந்தும் கிடந்த வெட்டுக்கற்களை கவ்வித்தழுவி மேலெழுந்திருந்த வேர்ப்புடைப்புகள் மட்டும் தெரிந்தன. கழுகு உகிர் என கவ்வி எழுந்தவை. உருகிய மெழுகென பாறைமேல் வழிந்தவை. தசைக்கட்டின்மேல் நரம்புகள் என படர்ந்தவை. வேர்களின் வடிவங்களுக்குள் சென்றுகொண்டிருந்தபோது ஒரு தருணத்தில் விழிபழக  வேர்வடிவாகவே அந்நகரம் தெரியத் தொடங்கியது. இடிந்த கட்டடங்கள், சாலைகள், ஊடுபாதைகள், நடுவே அரண்மனை. அதன் தென்னெல்லையில் ஓங்கிய நான்கு மரங்களால் சூழப்பட்ட ஹுண்டனின் சிற்றாலயம் அமைந்திருந்தது.


 மறுமொழி அளித்ததும் அவை ஓசையடங்கி அவனை நோக்கின. ஒரு குரங்கு கிளைகளாலான படிக்கட்டில் தாவியிறங்கி கீழ்ச்சில்லை நுனியில் காய்த்ததுபோல தொங்கி அவனை விழியிமைத்தபடி நோக்கியது. பீமன் அதை நோக்கி கைகாட்ட மண்ணில் குதித்து கைகால்களால் நடந்து வால் வளைந்து எழ அவனை அணுகி அப்பால் நின்றது. அவன் ஏதோ சொன்னதும் அது மறுமொழி அளித்து திரும்பி குரல்கொடுக்க காய்கள் உதிர்வதுபோல குரங்குகள் நிலத்தில் குதித்து வந்து சூழ்ந்துகொண்டன.


இலைகள் சொட்டி ஈரம் வழிந்து பசும்பாசி படர்ந்து குளிர்ந்திருந்த அவ்வாலயத்தை அணுகிச் சென்றார்கள். பீமன் அதனருகே சென்று நின்று சுற்றிலும் நோக்கினான். “குரங்குகளால் பேணப்படுகிறது இவ்வாலயம்” என்றான். முண்டன் திரும்பி நோக்க “இங்கே பெருமரங்களின் விதை முளைத்ததுமே அவை கிள்ளி வீசிவிடுகின்றன” என்றான்.  ஆலயத்திற்குள் ஹுண்டனின் சிறிய கற்சிலை நாகச்சுருளுக்குள் பாதியுடல் புதைந்திருக்க இடுப்புக்குமேல் எழுந்து வலக்கையில் அம்பும் இடக்கையில் வில்லுமாக நின்றிருந்தது. நாகம் அவன் தலைக்குமேல் ஐந்துதலைப் பத்தியை விரித்திருந்தது.


வலப்பக்கம் ஹுண்டனை நோக்கி வணங்கிய தோற்றத்துடன் கம்பனனின் சிலை இருந்தது. இரு சிறகுகள் விரிந்திருக்க கால்கள் மடிந்து மண்டியிட்டிருந்தன. “இங்கு நாகர்கள் வருவதே இல்லையா?” என்றான் பீமன். “இல்லை, காட்டில் ஓர் ஆலயம் அமைக்கப்படுவதே அது மறக்கப்பட வேண்டுமென்பதற்காகத்தான்” என்றான் முண்டன். “மறக்கப்படும் ஆலயங்கள் நுண்வடிவில் வாழ்கின்றன. இந்த நகரமே மண்ணில் புதைந்து மறைந்தது. நோக்கினீர் அல்லவா? இதை வேர்கள் உண்கின்றன. தளிர்களாக மலர்வது இந்நகரின் உப்பே. மலர்களாக மகரந்தமாக ஆகிறது. வண்டுகளில் ஏறி பறந்துசெல்கிறது. அங்கே தொலைவில் நாகர்களின் புதிய ஊர்கள் உள்ளன. மாநாகபுரி எனும் தலைநகர் எழுந்துள்ளது. நாகர்குலத்து அரசனாகிய மகாதட்சன் அதை ஆள்கிறான். அவன் நகரின் அத்தனை மலர்களும் இம்மகரந்தங்களால்தான் சூல்கொள்கின்றன.”


பீமன் நீள்மூச்சுடன் அந்த சிறு ஆலயத்தை சுற்றிச்சுற்றி வந்தான். “அழிவின்மை என்பதற்கு என்ன பொருள் என்றே ஐயம் கொள்கிறேன். அழிந்து மறைவதும்கூட அழிவின்மைக்கான பாதையாக அமையக்கூடுமோ?” என்றான். முண்டன் “நகுஷனின் வாழ்க்கை சூதர்நாவில் வாழ்கிறது. அவர் எதிரியென ஹுண்டன் வாழ்க்கையும் இருந்துகொண்டிருக்கும். ஹுண்டன் இருக்கும்வரை கம்பனன் பெயரும் இருக்கும். மொழிப்பெருக்கின் அறியமுடியா மறுஎல்லையில் இப்பெயர்கள் சென்று சேர்வதை இங்கிருந்தே காண்கிறேன்” என்றான்.  பீமன் மீண்டும் பெருமூச்சுவிட்டான். பின்னர் “என் மூதாதையரின் கதைகள் எனக்கு கற்பிக்கப்பட்டுள்ளன. நகுஷனின் வரலாறும் தெரியும். ஆனால் அவை நீர் சொல்லும் கதைகளைப்போல அல்ல” என்றான்.


“குலக்கதைகளின்படி நகுஷன் பதினெட்டு மனைவியரைப் பெற்றார். அவர்களில் அவருக்கு யதி, யயாதி, சம்யாதி, ஆயாதி, அயதி, துருவன் என்னும் மைந்தர்கள் பிறந்தனர். ஆயிரத்து எட்டு பெருவேள்விகளை நிகழ்த்தி லட்சம் பசுக்களை அந்தணருக்கு அளித்தார். ஆயிரம் அன்னசாலைகளையும் ஆயிரம் பள்ளிச்சாலைகளையும் அமைத்தார். இறுதியாக நூறு அஸ்வமேத வேள்விகளையும் நூறு ராஜசூயவேள்விகளையும் நிகழ்த்தி மண்ணில் இந்திரனின் மாற்றுரு என அறியப்படலானார். அவரை புலவர்கள் தேவராஜன், தேவராட், ஜகத்பதி என்று வாழ்த்தினர். மாநாகன், நாகேந்திரன் என்றும் அவர் பாடல்கொண்டார்” என்றான் முண்டன்.


பீமன் ஐயத்துடன் “இங்கு அருகில் எங்கோ ஒரு மலர்ச்சோலை உள்ளது” என்றான். “நறுமணம் எழுகிறது. அதே மணம்.” முண்டன் புன்னகையுடன் “அசோகமா?” என்றான். “இல்லை, பாரிஜாதம். ஆனால் நீர் கேட்டதுமே அசோகமென மாறிவிட்டது” என்றான். முண்டன் “அருகே உள்ளது அசோகவனம். அங்கே நகுஷன் தன் அரசி அசோகசுந்தரிக்கு எடுத்த ஆலயமொன்றுள்ளது. அங்கு நின்றிருக்கும் மலர்மரம் ஒன்றும் கவிஞர்களால் கல்யாணசௌகந்திகம் என்று அழைக்கப்படுகிறது” என்றான். பீமன் அகவிரைவுடன் முண்டனின் கையைப் பற்றியபடி “அதுதான்… ஆம், நன்கு தோன்றுகிறது. அந்த மரமேதான்… இப்போது நறுமணம் மேலும் தெளிவடைந்துள்ளது” என்றான்.


“செல்வோம்” என்று முண்டன் முன்னால் நடந்தான். “மிக அருகிலேயே உள்ளது அந்தச் சோலை. நாம் முன்புகண்ட அச்சோலையைப்போலவே சுனைசூழ்ந்த மரங்களால் ஆனது. அங்குதான் மீண்டும் செல்கிறோமா என்னும் ஐயம் எழும்.” பீமன் விரைந்து முன்னால் செல்ல முண்டன் பேசியபடியே தொடர்ந்து வந்தான். “அசோகசுந்தரியின் எரிநிலையிலிருந்து சாம்பல் கொண்டுவந்து நகுஷன் கட்டிய ஆலயம் இது. ஆனால் அவர் நகுஷனாக நின்று இதைச் செய்யவில்லை.” பீமன் நின்று திரும்பி நோக்கினான். “குருநகரியின் தலைவனை, சந்திரகுலத்துப் பேரரசனை ஏன் மாநாகன் என்றும் நாகேந்திரன் என்றும் நூல்கள் சொல்கின்றன என்று எண்ணியிருக்கிறீர்களா?”


பீமன் செவிகூர்ந்து நின்றான். “நகுஷன் தன்னை நாகன் என மறுபிறப்புச் சடங்குவழியாக மாற்றிக்கொண்டார். நாகர்குலத்து அன்னையரின் மாதவிலக்குக் குருதியில் ஏழு சொட்டு எடுத்துக் கலந்த மஞ்சள்சுண்ணக் குருதி நிறைந்த மரத்தொட்டியில் மூழ்கி எழுந்து  நாகர்குலத்துப் பூசகர் பன்னிருவர் வாழ்த்த மறுபுறம் வந்தார். நாககர்ப்பம் என்னும் அச்சடங்குக்குப் பின் நாகர்குலத்து மூதன்னையர் எழுவரின் கால்களில் தன் தலையை வைத்து அரிமலர் வாழ்த்து பெற்றார். நாகபடம் பொறித்த கோல் ஏந்தி நாகபடக் கொந்தை சூடி  நாகர்குலங்களுக்குரிய கல்பீடத்தில் அமர்ந்து நாகர்குலப் பூசகர் மண்ணிட்டு வாழ்த்த அக்குடிக்கும் அரசராக ஆனார். மாநாகன் என்னும் பெயர் அப்போது வந்ததே.”


“முதலில் நாகர்குலங்கள் அவரை ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் நாகர்குலத்து மூதன்னையர் பூசகர்களின் உடலில் ஏறிவந்து அவரை தங்கள் மைந்தர் என்றனர். அவர் மறைந்தபின்னர் நாகர்குலங்கள் தங்கள் மூதாதையரில் ஒருவராக அவரையும் வணங்கத் தலைப்பட்டனர்” என்றான் முண்டன். “நகுஷன் தன் உடலின் கீழ்ப்பகுதி ஹுண்டனுடையது என எண்ணினார். குருநகரியின் அரசனாக சந்திரகுலத்து மணிமுடிசூடி அமரும்போதுகூட இடையில் நாகர்முறைப்படி கச்சையணிந்திருப்பார். அரையாடையும் குறடுகளும் நாகர்களுக்குரியவை.”


முண்டன் தொடர்ந்தான் “நாகர்களுக்குரிய தணியா விழைவை தானும் கொண்டிருந்தார். அவ்விழைவே அவரை பாரதவர்ஷத்தின் அத்தனை நாடுகளையும் வெல்லச் செய்தது. வேள்விகளை ஆற்ற வைத்தது. பலநூறு மகளிரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மைந்தரை பிறக்கச்செய்து பெருந்தந்தையாக அமர்த்தியது. மறுசொல் கேட்கவிழையா பெருஞ்சினம் கொண்டிருந்தார். பிறர் எவரும் இல்லாத தனிமையின் உலகில் வாழ்ந்தார். தன்னை காலமெனச் சூழ்ந்திருந்த அனைத்துக்கும் மேல் தலைதூக்கி மலைமுடியென அனைத்தையும் நோக்கி அமைதிகொண்டிருந்தார். ஆகவேதான் அவரை இந்திரனென்றாக்கினர் விண்ணவர்.”



tigerவிருத்திரனை வென்ற இந்திரன் அக்கொலையின் பழிக்கு அஞ்சி  பிரம்மனிடம் சென்று பழிநிகர் செய்வதெப்படி என வினவினான். “பழிகள் உடலில் படிவதில்லை, உள்ளத்திலேயே நிறைகின்றன. உன் உள்ளத்தை உதிர்த்து பிறிதொன்றென ஆக்கிக்கொள்” என்றார் பிரம்மன். “அதெப்படி?” என்றான் இந்திரன். “இமயத்தின் உச்சியில் உள்ளது மானசசரோவரம். அங்கு செல்க! அந்நீருக்குள் மூழ்கி ஆயிரமாண்டுகாலம் தவம் செய்க! நீ தொட்டதுமே அந்த நீர்ப்பெருக்கு அலைகொந்தளிக்கும். அங்கு அமர்ந்து ஒவ்வொரு அலையாக அடங்க வை. நீ இருப்பதையே அறியாமல் நீர்ப்பரப்பு ஆகும்போது முற்றிலும் உளமழிந்திருப்பாய். பின்னர் உன் உள்ளத்தை மீட்டெடு” என்றார் பிரம்மன்.


இந்திரபுரியிலிருந்து எவருமறியாது மறைந்த இந்திரன் உளப்பெருங்குளத்தில் தன் ஆயிரமாண்டு தவத்தை தொடங்கினான். அவனைத் தேடியலைந்து சலித்த தேவர்கள் என்ன செய்வதென்று அறியாமல் சோர்ந்தனர். விண்ணரசன் இல்லாமையால் அமராவதியின் நெறிகள் அழியலாயின. அரியணை அமர்ந்து கோல் கைக்கொள்ள அரசன் தேவை என்று உணர்ந்த தேவர்கள் அகத்தியரிடம் சென்று ஆவதென்ன என்று வினவினர். “கனி உதிர்ந்ததென்றால் காய் கனியவேண்டும். இந்திரனென்பவன் மண்ணில் விளைந்து விண்ணில் எழுபவன். மண்ணை நோக்குக” என்றார் அகத்தியர்.


தேவர்கள் மண்ணில் அலைந்தபோது குருநகரியின் நகுஷன் நூறு அஸ்வமேதங்களையும் நூறு ராஜசூயங்களையும் முடித்து சாம்ராட் என பட்டம்சூடி அரியணையமர்ந்த செய்தியை அறிந்தனர். அங்கே அவன் நூறு பெருங்கொடைகளை நிகழ்த்திக்கொண்டிருந்தான். அதை அவன் நிகழ்த்திமுடித்தானென்றால் அவன் இந்திரநிலைக்கு உரியவனாவான் என்று உணர்ந்தனர். விண்ணுலகுக்கு மீண்டு அகத்தியரிடம் “மாமுனிவரே, குருநகரியின் அரசன் மட்டுமே இந்திரநிலைக்கு அணுக்கமானவன். ஆனால் அவன் பாதியுடல் நாகன்.  அதனால்தான் இரு திசைகளில் விசைகொண்டு வந்து ஒன்றாகிய பெருநதி அவன்” என்றனர்.


“தேவர்களே, மண்ணில் எந்த நாகனும் பேரரசன் ஆகமுடியவில்லை. ஷத்ரியன் என்பதனால் அந்தத் தடை கடந்த மாநாகன் நகுஷன். எந்த ஷத்ரியனும் தேவனாக முடியவில்லை. நாகனென்று உளம் விரிந்து அவன் நம்மை நோக்கி எழுகிறான். ஒன்றை பிறிதொன்றால் நிரப்பி அவன் விண்பாதையில் அணுகிக்கொண்டிருக்கிறான். அதுவே இங்கு வரும் வழி போலும். அவனையே அரசனென்றாக்குக!” என்றார் அகத்தியர். அவரை வணங்கி மீண்டனர் தேவர்.


கொடைமுழுமை அடைந்து நகுஷன் தன் அரியணையில் அமர்ந்தபோது விண்ணிலிருந்து மலர்மழை பெய்யத் தொடங்கியது. பொன்னிற விண்வில் ஒன்று இறங்கி நகுஷனின் அரண்மனையை தொட்டது. அவன் உடல் ஒளிபட்ட மணி என சுடர்விட்டது. காலெடுத்து வைத்தபோது அவனால் ஒளியை படியாக்கி ஏறமுடிந்தது. தன் தந்தை ஆயுஸ் அளித்த உடைவாளை அவன் இடையிலணிந்திருந்தான். புரூரவஸின் மணிமுடியை தலையில் சூடியிருந்தான். குடிகள் வாழ்த்திக் கூவ, மங்கல இசை முழங்க அவன் காற்றிலேறி ஒளிகொண்டிருந்த முகில்களுக்குள் மறைந்தான்.


விண்நகர் புகுந்த நகுஷன் அமராவதியை அடைந்தபோது தேவர்களும் கந்தர்வர்களும் கிம்புருடர்களும் கின்னரர்களும் திரளாக நின்று வாழ்த்தொலி எழுப்பி வரவேற்று அழைத்துச்சென்றனர். அமராவதியின் நடுவே எழுந்த இந்திரனின் மாளிகையாகிய வைஜயந்தத்தில் அமைந்த சுதர்மை என்னும் அவையின் மையமெனச் சுடர்ந்த  அரியணையில் அவனை அமரச்செய்தனர்.  இந்திரன் சூடியிருந்த செந்தழல் முடியை அவன் தலையில் அணிவித்தனர். மின்னற்கொடியாலான செங்கோலை கையில் அளித்தனர். கல்பகமரமும் காமதேனுவும் ஐராவதமும் வியோமயானமும்  உச்சைசிரவமும் அவனுக்கு உரியனவாயின. அமுதத்தை உணவெனக்கொண்டு ரம்பை, ஊர்வசி, திலோத்தமை போன்ற தேவமகளிரின் கலைகளில் களித்து அவன் அங்கே வாழ்ந்தான். அஸ்வினிதேவரும் தன்வந்திரியும் அவனுக்கு பணிவிடை செய்தனர். அகத்தியர் உள்ளிட்ட முனிவர் வாழ்த்தளித்தனர். கிழக்குத்திசை அவன் கோலால் ஆளப்பட்டது.


விண்மகளிர் அனைவருடனும் காமத்திலாடினான் நகுஷன். அவன் நெஞ்சு சலிப்புற்றாலும் இடை மேலும்மேலுமென எழுந்தது. “நீங்கள் ஒரு நாகம்…” என்று அவனுடன் இருந்த மகளிர் சினந்தும் சலித்தும் சிரித்தும் சொன்னார்கள். “ஆம், நான் என்னைத் தொடர்பவர்களை, நான் ஊரும் மண்ணை, பறக்கும் விண்ணை வீசிச்சொடுக்கும் சவுக்கு. அவ்விசையால் முன்னகர்கிறேன்” என்றான். “நிகரின்மை என்பதல்லாமல் எதனாலும் அமையமாட்டேன் என்று அறிக… இனி எஞ்சுவதென்ன என்று மட்டுமே என்னிடம் சொல்க!” என்றான். அவன் தன்முனைப்பும் தன்னைக்கடந்த வேட்கையும் தேவர்களை முதலில் அச்சுறுத்தின. பின்னர் அவர்கள் கசப்புகொண்டனர். தாளமுடியாமலானபோது தங்களைத் தாங்களே நொந்துகொண்டு துயர்சூடினர்.


ஒருநாள் நகுஷேந்திரனின் அவைக்கு வந்த நாரதரிடம் அவன் “சொல்க, எஞ்சியுள்ளது என்ன எனக்கு?” என்றான். “மண்ணில் ஏதுமில்லை” என்றார் நாரதர். “விண்ணில்?” என்றான் நகுஷன். “விண்ணிலும் பெரும்பாலும் ஏதுமில்லை” என்றார். “அவ்வண்ணமென்றால் ஒன்று எஞ்சியிருக்கிறது அல்லவா? சொல்க, அது என்ன?” என்றான். நாரதர் “இந்திரன் இந்திராணியுடன் அல்லவா அவையமரவேண்டும்?” என்றார். நகுஷன் அதைக் கேட்டதுமே திகைத்து எழுந்து “ஆம், அவ்வாறுதான் தொல்கதைகள் சொல்கின்றன. எங்கே என் அரசி?” என்றான். “அழைத்து வருக அவளை என் அவைக்கு!” என ஆணையிட்டான்.


அவையில் இருந்த தேவர்கள் பதற்றத்துடன் “அரசே, அது முறையல்ல. இந்திராணி வடபுலத்தில் தன் தவக்குடிலில் தனித்து நோன்பிருக்கிறாள். கணவன் திரும்பிவருவதற்காக தெய்வங்களை வழிபடுகிறாள்” என்றார்கள். “அவள் என் தேவியாகவேண்டும். அதுவே முறை… அவளை அழைத்து வருக!” என்றான் நகுஷன். “அரசே, இந்திரன் இன்னும் அழியவில்லை. எங்கோ அவர் இருக்கையில் துணைவி அவருக்காக ஆற்றியிருந்தாகவேண்டும்” என்றார் சனத்குமாரர். “இந்திரனின் அரியணையில் அமர்ந்தவனே இந்திரன். இந்திரனுக்கு துணைவியாக அமர்பவளே இந்திராணி. அவளுக்கு முந்தைய கணம் என ஒன்று இருக்கலாகாது” என்று நகுஷன் சொன்னான்.


“ஆம், ஆனால் அவள் உள்ளத்தில் அவள் கணவன் இன்னும் அழியவில்லை. அது இந்திரன் எங்கோ இந்திரனாகவே உள்ளான் என்பதையே காட்டுகிறது. அவன் அவளுக்குள் இருக்கும்வரை அவள் உங்கள் துணைவியாக ஆக முடியாது” என்றார் சனகர். “அவ்வண்ணமென்றால் அவள் அவனை மீட்டுக்கொண்டுவர விழைகிறாள். என் இந்திரநிலையை அழிக்கவே தவமிருக்கிறாள். அதை நான் எப்படி ஒப்பமுடியும்?” என்று நகுஷன் சொன்னான். “அழைத்து வருக அவளை… அவள் மறுத்தால் இழுத்து வருக!” என தன் ஏவல்பணி செய்த கந்தர்வர்களிடம் ஆணையிட்டான்.


தன்வந்திரி பெருஞ்சினத்துடன் “விரும்பாத பெண்ணை இழுத்துவரச் சொல்லி ஆணையிடுவது அரசனின் முறைமையா?” என்று கூவ நாரதர் “பெருவிழைவே இந்திரன் என்னும் நிலை. இதை அறியமாட்டீரா?” என்றார். அவரை சிலகணங்கள் உற்றுநோக்கியபின் முனிவர் மெல்ல தணிந்து “ஆம், அதன் வழியை அதுவே தேர்க!” என தலைகுனிந்து தனக்குள் என சொல்லிக்கொண்டார்.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–42
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–41
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–14
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–33
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–29
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–16
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–13
’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 70
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 23
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–40
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–39
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–37
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–36
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–35
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–34
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–30
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–28
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–19
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–12
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–9
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 14, 2017 11:30

March 13, 2017

கருணை நதிக்கரை -1

u


1986ல் அம்மா தற்கொலைசெய்துகொண்டபின் முதல் முப்பதாண்டுகளாக நான் அம்மாவின் முகத்தை நினைவிலிருந்து மட்டுமே எடுத்து வந்திருக்கிறேன். அம்மாவின் படத்தை எங்கும் வைத்துக் கொண்டதில்லை. உண்மையில் அதிகப் படங்கள் இல்லை. அண்ணா வீட்டில் ஒரு படம் இருந்தது, அப்பாவும் அம்மாவும் சேர்ந்திருப்பது. அப்பா பணி ஓய்வு கொள்ளும்போது அலுவலக தேவைக்காக எடுத்துக் கொண்ட படம் அது. அவர்கள் இருவரும் சேர்ந்திருக்கும் இன்னொரு படம் என்பது நாங்கள் சின்னக்குழந்தைகளாக இருக்கும் போது வாவுபலி பொருட்காட்சியில் எடுத்துக் கொண்டது. அது எங்கள் சித்தப்பா வீட்டில் இருக்கிறது என்று நினைக்கிறேன்.


 


நான் அம்மாவின் சிறு படம் ஒன்றை வைத்திருந்தேன். அது என்னை கனவுகளில் ஆழ்த்தி படுத்தி எடுத்தது. துயில்நீக்கம் மற்றும் உளநிலைச்சிக்கல்களுக்குப்பின் அம்மாவின் படங்களை பார்ப்பதை முழுமையாகத் தவிர்க்க வேண்டும் என்று மணிப்பால் மருத்துவமனையின் உளவியலாளர் ஆலோசனை சொன்னார். பலவிதமான உளக்கொந்தளிப்புகளுக்குப் பிறகு நான் அம்மாவை எனது அன்றாட நினைவிலிருந்து ஆழ்மனம் நோக்கி தள்ளிவிட்டேன் என்று நினைக்கிறேன். அருண்மொழி என் வாழ்க்கையில் நுழைந்தபின்  அம்மாவை நினைவு கூர்வதென்பது சாதாரண ஒரு நிகழ்வாகவே இருந்தது.


[image error]


அஜிதன் நீர்நிலம்நெருப்பு  ஆவணப்படத்திற்காக அம்மாவின் புகைப்படத்தை அண்ணா வீட்டிலிருந்து எடுத்துக் கொண்டு வந்தான். அதைப்பார்த்தபோது பெரிய கொந்தளிப்பு எதையும் உணரவில்லை.இருபத்தெட்டு ஆண்டு இடைவெளிக்குப்பிறகு அரங்கசாமியும் கிருஷ்ணனும் உடன்வர எங்கள் சொந்த ஊருக்கு ஒருமுறை சென்றிருக்கிறேன். அந்த மண்ணுக்கு மீண்டும் என்னால் செல்லவே முடியாது என்றே எண்ணியிருந்தேன். ஆனால் அப்போது சென்ற போது அது பெரிய உளச்சிக்கல் எதையும் அளிக்கவில்லை. அப்பாவின் இளவயது நண்பராகிய நாராயணன் போற்றி வீட்டுக்குச் சென்றேன். பக்கத்து வீடுகளுக்குச் சென்றேன். கோயிலையும் படிக்கட்டையும் பார்த்துவிட்டு வந்தேன்.


 


ஆகவேதான் மீண்டும் ஆவணப்படம் எடுக்கும்போது அஜியுடன் அங்கு சென்று அங்கு நிகழ்ந்த அனைத்தையும் மீண்டும் நினைவில் மீட்டெடுத்தேன். அப்போதும் அது ஒரு சாதாரண நினைவு மீட்டலாகவே இருந்ததே ஒழிய உளக்கொதிப்பாக ஆகவில்லை. ஆனால் சில நாட்களுக்கு முன்பு ஒரு மனநிலையில் இரவெல்லாம் அம்மாவின் விழிகளை பார்க்க நேர்ந்தது. தர்க்கத்தால் சொற்களால் நான் கட்டிவைத்திருந்த ஆழ்மனம் பீறிட்டு வெளிவந்தது. அதற்கு முதன்மைக் காரணம் மாமலர். தொடர்ந்து அன்னையரின் கதையாகவே அது இருக்கிறது. மூகாம்பிகை ஆலயத்திற்குச் சென்று மாமங்கலையை தரிசித்துவிட்டு வந்த பிறகு தான் அதை எழுதவே தொடங்கினேன். அதில் விதவிதமாக வந்து செல்லும் பெண்களில் அம்மா மின்னி மின்னிச் சென்று கொண்டிருந்தாள். கலைடாஸ்கோப் போல அம்மாவை திருப்பி திருப்பி பலநூறு சித்திரங்களாக மாற்றிக் கொண்டிருக்கிறேன் என்று நினைக்கிறேன்.


[image error]


சட்டென்று உளம் கைவிட்டுப்போய் ஆழ்ந்த மனச்சோர்வுக்கும் தனிமைக்கும் துயருக்கும் ஆளானேன். அப்போதுதான் கிருஷ்ணன் ஒரு பயணம் முடித்து வருவோம், மீண்டுவிடுவீர்கள் என்றார். ஏறத்தாழ அதே நேரத்தில் வாசகர் ஜான் பிரதாப் சிங் திருநெல்வேலியிருந்து ஒரு மின்னஞ்சல் செய்திருந்தார். அம்பாசமுத்திரம் அருகே சிவசைலத்தில் களக்காடு- முண்டந்துறை புலிகள் சரணாலயத்திற்குள் கடனா நதி உற்பத்தியாகும் இடத்திற்கு ஒரு கானுலா சென்று வர ஏற்பாடு செய்கிறேன் வருகிறீர்களா என்றார். கிருஷ்ணன் பீர்மேடுக்கு ஒரு மழைப்பயணம் செல்லலாம் என்று சொல்லியிருந்தார். நான் ஜான் பிரதாப் சிங்கின் திட்டத்திற்கு ஒப்புக்கொண்டேன்.


 


வெள்ளிக்கிழமை ஈரோட்டிலிருந்து கிருஷ்ணன், பாரி, தாமரைக்கண்ணன்,ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் பேருந்தில் வந்து திண்டுக்கல்லில் சக்தி கிருஷ்ணனின் காரில் ஏறிக்கொண்டு நெல்லைக்கு வந்தனர். நாகர்கோவிலில் இருந்து நான் பேருந்தில் சென்று சக்தி கிருஷ்ணன் இல்லத்தில் தங்கினேன். இரவு பேசிக்கொண்டிருந்துவிட்டு பதினொருமணிக்கெல்லாம் படுத்துவிட்டோம்.


[image error]


சனிக்கிழமை காலை ஆறு மணிக்கு ஜான் பிரதாப் சிங் ஏற்பாடு செய்திருந்த வேனில் கிளம்பினோம். முந்தைய நாள் இரவும் எனக்கு தொந்தரவு தரும் கனவுகள் இருந்தன. பல முறை எழுந்து அமர்ந்து அது கனவுதான் என்று உறுதிப்படுத்திக் கொண்டேன். உள்ளம் போடும் நாடகங்கள் மிக நுணூக்கமானவை. கனவுக்குள் அம்மா வருகையில் அது பேரானந்தமாக இருக்கிறது. கனவுக்குள்ளேயே அடடா இவள் இறந்துவிட்டாளென்று நினைத்தோமே அது பொய், கனவு. உயிருடன் தான் இருக்கிறாள் என்று மனம் குதூகலம் கொள்கிறது. விழித்ததுமே தலைகீழாகத் திரும்பி ஆழ்ந்த மனச்சோர்வு ஏற்படுகிறது.


அத்துடன் சுவாரசியமான ஒன்று, கனவுக்குள் ஒவ்வொரு முறையும் அம்மா வெளியிலிருந்து வந்து எங்கோ ஓரிடத்திற்கு என்னை அழைத்துச் செல்வதாகத் தான் வருகிறது.ஆச்சரியம் என்னவென்றால் அம்மா உயிரோடிருந்த திருவரம்பின் பழைய வீடு நினைவுக்கு வரும்போது கூட அந்த வீட்டில் நான் இருக்க அம்மா வெளியிலிருந்துதான் வருகிறாள். வந்து ஏதேனும், ஒரு காரணத்தை சொல்லி என்னை வீட்டை விட்டு வெளியே அழைத்துச் செல்கிறாள். பசுமாடை பிடித்து வரச்சொல்கிறாள். யாரோ தேடி வந்திருக்கிறார்கள் என்கிறாள். எங்கோ செல்ல என்னை துணைக்கு அழைக்கிறாள். அல்லது முற்றத்தில் நின்றபடி வீட்டில் நான் இருக்கிறேனா என்று விசாரிக்கிறாள். இந்தக் கனவுகளையெல்லாம் எப்படி விளங்கிக் கொள்வதென்று தெரியவில்லை. ஏதோ ஒருகணத்தில் வீட்டை விட்டிறங்கி அவர்களுடன் நானும் சென்று விடுவேன் என்று விழித்தெழுந்ததுமே உளம் திடுக்கிடுகிறது.


 


[image error]


காலையில் அம்பாசமுத்திரம் சாலையில் செல்லும்போது பயணம் மெல்ல என்னை ஆறுதல் படுத்தியது. சேர்மாதேவி வந்ததும் வ.வே.சு அய்யரின் சேர்மாதேவி குருகுலம் நினைவுக்கு வர அதைப்பற்றிப் பேசிக்கொண்டோம். ஆழ்வார்க்குறிச்சி வந்ததும் வண்ணதாசன் – ஆழ்வார்க்குறிச்சி ஆயான் நினைவில் எழுந்தது. கடையம் வந்ததும் பாரதி. அது செல்லம்மாவின் சொந்த ஊர். அங்கேதான் பாரதி பாண்டிச்சேரியிலிருந்து திரும்பிவந்து புறக்கணிக்கப்பட்ட கஞ்சாக்கிறுக்கராக வாழ்ந்தார். கழுதையைக் கொண்டுவந்து அக்ரஹாரத்தில் வளர்த்தார். அதை ஒட்டித்தான் வெங்கட் சாமிநாதன் எழுதி ஜான் ஆபிரகாம் இயக்கிய அக்ரஹாரத்தில்கழுதை என்னும் சினிமா எடுக்கப்பட்டது. கீழாம்பூர் வந்ததும் யாரோ ஒருவர் நினைவுக்கு வந்தார். யாரென்று தெளிவும் வரவில்லை. சற்று நேரத்திற்குள்ளேயே முகம் மலர்ந்து நண்பர்களுடன் அளவளாவவும் சிரிக்கவும் தொடங்கிவிட்டேன்.


 


செல்லும் வழியில் அம்பாசமுத்திரத்தில் ஒரு உணவகத்தில் இருந்து புளிசாதம் தயிர்சாதம் இட்டிலி போன்றவற்றை பொட்டலங்களாக வாங்கிக் கொண்டோம். சிவசைலம் சென்று அங்கிருந்து கடனாநதி அணைக்கட்டுக்குச் சென்றோம். இது களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாலயம்த்தின் எல்லையாக அமைந்திருக்கிறது. அணைக்கட்டில் மிகக்கொஞ்சமாகவே நீர் இருந்தது. இவ்வருடம் மழை முழுமையாகவே பொய்த்துவிட்டிருந்தது. மார்ச் மாதம் பெய்த ஓரிரு மழைகளால்தான் காடு தப்பித்தது.


 


[image error]

ஜான் பிரதாப்


களக்காடு முண்டந்துறை புலிகள் சரணாயலம் தென்தமிழகத்தின் மிக முக்கியமான வனப்பகுதிகளில் ஒன்று. மேற்குத் தொடர்ச்சி மலையின் தமிழகச்சரிவு இது. மறுபக்கம் கேரளச்சரிவு. கேரளா அளவுக்கு இப்பகுதிகளில் மழை இல்லையென்றாலும் கூட தமிழகத்தின் இப்போதிருக்கும் மிகப்பசுமையான பகுதிகளில் ஒன்று. தென் தமிழகத்தில் ஓடும் மிகச்சிறிய ஆறுகள் இந்த மலைப்பகுதியின் உற்பத்தியாகின்றன. கடனா நதி அதில் ஒன்று. நதியென்று ஒரு மரியாதைக்கு சொல்கிறோம். இப்போது அது பெருவெள்ளம் வரும் மழைக்காலம் தவிர மற்ற காலங்களில் எல்லாம் சிற்றோடை தான்.


 


வனத்துறை அனுமதியை ஜான் பிரதாப் பெற்று வைத்திருந்தார்.அவர் அகில இந்திய வானொலி ஊழியர். முன்பு வருவாய்த்துறையில் நாகர்கோயிலில் பணியாற்றியிருக்கிறார். பார்வதிபுரம்சாலைக்கே பலமுறை வந்து என்னை சந்திக்க விரும்பி சந்திக்காமல் திரும்பியிருக்கிறார்.


[image error]


இந்த மலையில் மூன்று சிற்றாறுகளாக கடனா நதி தொடங்குகிறது.கருணைநதி என்றும் இது அழைக்கப்படுகிறது.அணைக்குள் இறங்கி மறுபக்கம் ஏறி நான்கு கிலோமீட்டர் மலையேறிச்சென்றால் அங்கு கோரக்கநாதர் ஆலயம் இருக்கிறது.செல்லும் வழியிலேயே பாறைகளினூடாக பெருகிவரும்  கல்லாறுஎன்னும் காட்டாற்றின் ஆழ்ந்த சுனை ஒன்றுக்குள் குளித்து நீராடினோம். பாறைகளினூடாக பீறிட்டு வரும் சிறிய அருவிகளில் நெடுநேரம் தலைகுளிர அமர்ந்திருந்தேன். அதிதூயநீரில் நீந்தி நீராடுவது என்பது இப்படி எப்போதாவது அமைந்தால்தான் உண்டு.


 


கோரக்கர் ஆலயம் காட்டுக்குள் பெருமரங்கள் சூழ அமைந்துள்ளது. பழைய சிறிய ஆலயம் சமீபமாக கான்கிரீட்டால் மாற்றிக்கட்டபட்டுள்ளது .அங்கு முன்பு அத்திரி முனிவர் அனசூயையுடன் வந்து  தங்கியிருந்ததாகவும் அங்கிருந்து பார்த்தால் தொலைவில் தெரியும் சிவசைலத்தை நோக்கியபடி அமர்ந்து தவம் செய்ததாகவும் தொன்மம் இருக்கிறது. பின்னர் அங்கே கோரக்கர் சித்தர் வாழ்ந்தாராம். கோரக்ககங்கை எனப்படும் ஆறு அங்கே சிறு ஊற்றாக எழுகிறது. குளிர்ந்த இனிய நீர் ஒரு பாறையிடுக்கில் உற்பத்தியாகிறது


[image error]


உண்மையில் அந்த ஊற்றுதான் அங்கே ஆலயம் அமைய காரணமாக அமைந்திருக்கும். அந்த ஊற்று புதைத்துவைக்கப்பட்ட ஒரு குழாயிலிருந்து எழுவதுபோல வருகிறது. அந்த அற்புதம் அங்கே தெய்வ இருப்பை உணர்த்தியிருக்கலாம். அங்கே சித்தர்கள் தங்கியிருக்கலாம். அப்பகுதியின் தனிமை ஓர் அரிய அனுபவம்தான்.


 


கோயிலுக்குச் செல்லும் வழியிலேயே கோத்தார் பாபாவின் தர்க்கா இருக்கிறது.  எது சித்தர்களை ஈர்த்ததோ அதுதான் சூஃபிகளையும் அங்கே கொண்டுவந்திருக்கிறது. இந்தியாவெங்கும் சித்தர்கள், சமணமுனிவர்கள் வாழ்ந்த இடங்களுக்கு அருகிலேயே சூஃபி ஞானிகளின் தர்காக்களும் இருப்பது இதனால்தான்.


[image error]


அப்பகுதியின் மாபெரும் சுண்ணப்பாறைகள் முற்காலத்தில் ஏதோ பூகம்பத்தில் தகர்ந்து சரிந்தது போல் கிடக்கின்றன. ஆலமரங்கள் பாறைகளுக்கிடையே விரிசல்களில் எழுந்து பெரிய உகிர்கள் கொண்ட கழுகுக்கால்களைப் போல அப்பாறைகளைக் கவ்வியிருக்கின்றன. ஒருபாறையில் குகை ஒன்று அமைந்ததற்குள் சுண்ணத்தூண் ஒன்று அமைந்துள்ளது. இங்கு வரும் பக்தர்கள் சுண்ணத்தை எடுத்து மருந்தாக உட்கொள்வதும் பூசிக் கொள்வதும் உண்டு என்கிறார்கள்.


 


கோரக்கநாதர் ஆலயத்தில் நாங்கள் செல்லும்போது ஐந்து பேர் கொண்ட குழு ஒன்று சமைத்துக் கொண்டிருந்தது. பூசகர் இருந்தார். செல்லும்போதே மழை பெய்ய ஆரம்பித்தது நனைந்து கொண்டுதான் சென்று சேர்ந்தோம். சிலகணங்களில் மழை கொட்டி ஓய்ந்தது. மழை ஓய்ந்து சற்று நேரத்திலேயே காற்று சுழன்றடித்து இலைகளை உதறி மழையின் சுவடின்றி மின்ன வைத்தது. மண்ணிலிருந்து எழுந்த நீராவியும் நனைந்த மண்ணின் மணமும் தான் மழையை நினைவுறுத்தின. கடந்த பல நாட்களாகவே மழை பெய்து கொண்டிருந்தாலும் கூட மண்ணில் இறங்கியிருந்த வெம்மை இன்னும் தணியவில்லை. மழைபெய்த சற்று நேரத்திலேயே நீராவி எழுந்து வியர்வை பெருகி சட்டை உடலுடன் ஒட்டத் தொடங்கிவிட்டது. உடைத்துக் கொட்டும் பெருமழையால் மட்டுமே கடந்த நான்கைந்து மாதங்களாக இருந்த மண் அனலை அவிக்க முடியும்போலும்.


[image error]


கோரக்க நாதர் ஆலயத்திலிருந்து மேலும் உள்காடுக்கு சென்றோம். அங்கு ஒரு கருப்ப சாமியின் ஆலயம் இருக்கிறது. என்னால் அவ்வளவு தூரம் ஏற முடியவில்லை. இதைவிடப்பல மடங்கு உய்ரமான மலைகளில் சாதாரணமாக ஏறி இறங்கியிருக்கிறேன். தூக்கமின்மையும் உடற்களைப்பும் வழியிலேயே ஒரு இடத்தில் அமரவைத்தன. நானும் கிருஷ்ணனும் பாரியும் மட்டும் தங்கினோம். பிறர் சென்று கருப்பசாமியின் ஆலயத்தை தரிசித்துவிட்டு மீண்டு வந்தார்கள். வெட்டவெளியில் மலைக்கருப்பசாமி ஒரு கற்சிலையாக அமர்ந்திருக்கிறார்.


 


இப்பகுதியின் காடு கன்னியாகுமரி மாவட்டத்தின் காடுகளைப்போல பசுமைமாறாக்காடு அல்ல. ஆண்டிற்கு ஒரு மழைக்காலம் தான். இப்போது பெய்தது போல உதிரி மழைகளினாலான ஆறுதல் உண்டு. ஆகவே மழைக்காடுகளின் அமைப்பு இங்கில்லை. மழைக்காடுகள் மூன்றடுக்கு தழைக்கூரை கொண்டவை.  ஆகவே மண்ணில் ஒரு சூரியக்கீற்று கூட விழுவதில்லை. இலை மெத்தை மேல் வெள்ளிக்காசு விழுந்தது போல அவ்வப்போது ஒரு ஒளிவட்டம் விழுந்திருக்கும். ஒளிச்சட்டம் ஒன்று இலைநுனிகளை பற்றி எரியச்செய்தபடி சாய்ந்து மேலே சென்றிருக்கும். அதை சூழ்ந்து பல்லாயிரம் பூச்சிகள் ஒளிகொண்டிருப்பதைக் காணலாம். அனைத்து இலை நுனிகளிலும் ஒளி எண்ணெயென வழிவதை காணலாம். சூரிய ஒளிக்கதிர் விழுந்த மழைக்காட்டுப்பகுதி உயிரின் மாபெரும் நாடகமேடை ஆனால் மிக விரைவிலேயே அங்கு அந்த ஒளியமுதை உண்ணுவதற்கான நாவுகளுடன் இலைகள் எழுந்து மூடிவிடும்.


[image error]


இப்பகுதி வெயில் நேரடியாகவே மண்ணில் விழுமளவுக்கு அடர்த்தி குறைந்த உயரமற்ற மரங்களால் ஆனது. ஆயினும் காட்டு மரங்களுக்கே உரிய கட்டற்ற திமிறல், கொடிகளும் மரங்களும் செடிகளும் ஒன்றுடனொன்று பிணைந்து ஓருடலாகி நின்றிருக்கும் உயிர் மூர்க்கம். காடு என் உளச்சோர்வு அனைத்தையும் இல்லாமல் ஆக்கியது.


 


மீண்டும் கோரக்கநாதர் ஆலயத்திற்கு வந்தோம். அங்கு முன்னரே சென்றவர்கள் சமைத்து உண்டு மிச்சம் வைத்திருந்த சோறும் சாம்பாரும் இருந்தது. நாங்கள் கொண்டு வந்த புளிசாதமும் தயிர்சாதமும் சோறுமாக உண்டோம். அந்தக் களைப்பிற்கு அவர்கள் செய்திருந்த சாம்பார் மிக சுவையாக இருந்தது. இளவயதில் காட்டில் வேலைக்கு செல்லும் தோழர்களுடன் நானும் சென்று வேலை செய்வேன். ஒருநாளின் எட்டு மணிநேர உடல் உழைப்புக்கு பிறகு உணவு அமுதென மாறிவிடும் வித்தையை அங்கு நான் அறிந்திருக்கிறேன். காடு என்றாலே சுவையான உணவு நினைவுக்கு வருவதற்கு காரணம் உடல் சலிக்காமல் காட்டில் நடமாடவே முடியாதென்பதாக இருக்கலாம். பகலெல்லாம் நாற்காலியில் அமர்பவர்களுக்கு உண்மையில் அந்த சுவை ஒருபோதும் தெரியவருவதில்லை.


 


மேலும்

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 13, 2017 11:37

பறக்கை நிழற்தாங்கல் –சந்திப்பு

11


 


குமரிமாவட்டம் நாகர்கோயில் அருகே பறக்கை என்னும் சிற்றூரில் லட்சுமி மணிவண்ணன் அமைத்துள்ள நிழற்தாங்கல் என்னும் அமைப்பில் நான் வாசகர்களைச் சந்திக்க ஏற்பாடுசெய்யப்பட்டுள்ளது. காலை முதல் மாலைவரை இருப்பேன்


 


நாள் 26 -3= 2017


ஞாயிறு


அனைவரும் வரலாம். குறிப்பிட்ட திட்டங்களேதுமில்லாத உரையாடல்


 


நிழற்தாங்கல் படைப்பிற்கான வெளி


லட்சுமி மணிவண்ணன்


 


7 / 131 E பறக்கை @ போஸ்ட், நாகர்கோயில் குமரி மாவட்டம்


தொடர்பு எண் – 9362682373


மின்னஞ்சல் – slatepublications @gmail. com


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 13, 2017 11:36

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.