Jeyamohan's Blog, page 1666

March 13, 2017

ராணுவம், தேசியம், ஷர்மிளா

Sharmila1


 


ஜெ


 


ஐரோம் ஷர்மிளா பற்றிய உங்கள் கட்டுரை வாசித்தேன். அதன் அடிநாதமாக இருப்பது இந்திய ராணுவ ஆதரவு, இந்திய தேசியவெறி என நினைக்கிறேன். இந்திய தேசியத்தின் பெயரால் இந்திய ராணுவம் இழைக்கும் அநீதிகளை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?


 


அருண்குமார் செல்வம்


 


அன்புள்ள அருண்குமார்,


 


கட்டுரைபோட்ட எட்டாவது நிமிடம் வந்த எதிர்வினை – ஆகவே நீங்கள் இக்கட்டுரையையும் வாசிக்கவில்லை.


 


நான் எந்த ராணுவத்தையும் ஆதரிப்பவன் அல்ல. நூறுமுறையாவது இந்தத் தளத்தில் எழுதியிருப்பேன். சீருடை அணிந்த எந்த ராணுவமும் ஒன்றே. ராணுவம் சிவில் ஆட்சியின் கட்டுப்பாட்டில் பாரக்குகளுக்குள் மட்டுமே இருக்கவேண்டும்.


 


ராணுவத்துக்கு அதிகாரமளிக்கப்பட்டால் அது பொதுமக்களை கிள்ளுக்கீரையாகவே நடத்தும். வன்முறையே அதற்குப் பயிற்றுவிக்கப்பட்ட வழி. அது பிறிதொன்றை ஆற்றமுடியாது. இதில் நம் ராணுவம் அவர்களின் ராணுவம் என்னும் பேதம் இல்லை. புரட்சிராணுவம் அரசுராணுவம் என்னும் பேதமும் இல்லை. இதுவே வரலாறு, உலகெங்கும் இக்கணம் வரை அப்படித்தான்


 


ராணுவம் என்பது அரசின் ஆயுதம். அரசு  மக்களின் எண்ணத்தை பிரதிநிதித்துவம் செய்வது. ஆகவே ராணுவமும் மக்களின் முகமே. அது மக்களிடமிருந்தே உருவாகிறது. மக்களின் ஆதரவுபெற்ற அரசால் நடத்தப்படுகிறது. மிக அபூர்வமான வரலாற்றுத்தருணங்களில் மிகச்சில சர்வாதிகாரிகள் மட்டுமே மக்களின் எண்ணத்துக்கு நேர் எதிரான அரசை அமைத்து நடத்துகிறார்கள்.


 


அரசு என்பது   மக்களிடம் நிலவும் கருத்தியலின் அதிகார முகம். ஆகவே அக்கருத்தியலை மாற்றும்பொருட்டு செய்யப்படும் தொடர்ச்சியான நீடித்த கருத்துச்செயல்பாடு மற்றும் சேவையே அரசியல் மாற்றத்துக்கான வழியாக அமைய முடியும். அது ஒன்றே உண்மையான அரசியல்மாற்றத்தை உருவாக்கும்.


 


இப்படிச் சொல்லலாம்,இருவகை புரட்சிகள் உள்ளன. மக்கள் விருப்பத்திற்கு மாறாக மக்களை அடக்கி ஆளும் சர்வாதிகார ராணுவ அரசுக்கு எதிரான ஆயுதக்கிளர்ச்சிகள் வரலாற்றில் சிலசமயம் தேவையாக இருந்துள்ளன. சிலசமயம் வென்றும் உள்ளன. அவ்வெற்றிகளுக்குப்பின்னால் பெரும்பாலும் இன்னொரு நாட்டின் ஆதரவு இருக்கும். அல்லது போரால் அரசும் ராணுவமும் பலவீனமாக இருக்கும் தருணம் வாய்த்திருக்கும். இல்லையேல் வெற்றி அனேகமாக சாத்தியமில்லை என்பதே உலக வரலாறு.இது ஆயுதப்புரட்சி.


 


இரண்டாவது புரட்சி என்பது மக்களின் கருத்தியலை மெல்லமெல்ல மாற்றி அரசின் அடித்தளத்தை அகற்றி இயல்பாகவே அது மாறும்படிச் செய்வது. காந்திமுதல் மண்டேலாவரையில் செய்திகாட்டிய புரட்சி அதுவே. அதுவே நீடிப்பது, உண்மையான மாற்றத்தை உருவாக்குவது. ஆனால் அது மெல்லமெல்ல நிகழ்வது. தொடர்ச்சியான முன்னகர்வும் பின்னகர்வும் கொண்டது. சோர்வளிக்கும் காலகட்டங்கள் நிறைந்தது. தொடர்ச்சியான சுயசோதனைகள், சுயதிருத்தங்கள், தகுந்த இடங்களில் பின்வாங்குதல் போன்ற கவனமான முயற்சிகள் வழியாக நிகழ்த்தப்படவேண்டியது. அதையே ஜனநாயகப்புரட்சி என்கிறோம்.


 


ஜனநாயகப்புரட்சியின் விளைவுகள் உடனடியாக கண்ணுக்குத்தெரியாது. மாற்றம் என்பது வளர்சிதை மாற்றம் என்பதனால் அதை அது நிகழ்ந்தபின்னர் திரும்பிப்பார்க்கையில்தான் கண்ணால் காணமுடியும். நாடகீயத்தன்மை அதில் மிகமிகக்குறைவு. ஆகவே அது பயனற்றது என ஆயுதத்தை நம்புகிறவர்களாலும் பொறுமையிழந்த இளைஞர்களாலும் அரைவேக்காடு அறிவுஜீவிகளாலும் எப்போதும் கேலிசெய்யப்படும்


 


ஆயுதப்புரட்சி என்பது நாடகத்தன்மைகொண்டது. வெறுப்பரசியல் சார்ந்தது. வெற்றி பெற்றால்கூட அதன் நிகர நன்மையைவிட நிகர அழிவே அதிகம்.  அரசுக்கு மக்களின் கருத்தியல் அடித்தளமாக இருக்கும் நிலையில் அரசுடன் ஆயுதமேந்திப்போரிடுவதென்பது நேரடியாகவே தற்கொலை. அதை நோக்கி எளிய மக்களைச் செலுத்துவது படுகொலை. சென்ற காலகட்டங்களில் உலகவரலாற்றில் நிகழ்ந்த பெரும்பாலான ஆயுதப்புரட்சிகள் மக்களை அழிக்க மட்டுமே செய்துள்ளன. வென்ற இடங்களில் போல்பாட் போல மேலும் கொடூரமான ஆட்சியாளர்களையே அளித்துள்ளன


 


கணிசமான இடங்களில் நிகழும் ராணுவவன்முறையின் பின்னணி என்ன என்று பாருங்கள். மக்களாதரவுகொண்ட அரசின் ராணுவத்தை அம்மக்களில் ஒரு குறிப்பிட்ட சாரார் ஆயுதம்தாங்கி எதிர்க்கிறார்கள். அதற்கு வெளிநாட்டு ஆதரவைப் பெற்றுக்கொள்கிறார்கள். அச்சமூகத்தையே முடக்கிவைக்கிறார்கள். வாக்களிப்பு நிகழ்ந்தால் மிகச்சிறிய அளவுக்கு ஆதரவே பெறச்சாத்தியமான தரப்பு இது, ஆனால் அச்சமூகத்தை வன்முறைமூலம் அச்சுறுத்தி தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்து வைத்திருக்கிறது.


 


அதற்கு எதிராக அரசு ராணுவத்தை பயன்படுத்தும் ,ஏனென்றால் அந்த எதிர்ப்பு அரசின் இருப்பையும் அதன் அடிப்படைப் பணியையும் எதிர்க்கிறது. ஓர் அரசின் இருப்பை ஆயுதம் வழியாக எதிர்ப்பதற்குப்பெயர் போர். போரை தொடங்கியபின் எதிர்த்தரப்பு வன்முறையை கையாள்கிறது என்பதில் பொருளே இல்லை.


 


ராணுவம் வன்முறையால் ஆனது. ராணுவத்திடம் நிர்வாகம் செல்வதென்பது வன்முறையைத்தான் உருவாக்கும்.அரசை எதிர்த்து சமூகத்தை அச்சுறுத்திக் கட்டுப்படுத்தும் ஆயுதமேந்திய அமைப்புகளுக்கு எதிராக ராணுவம் வன்முறையில் இறங்கியதும்  அந்தக்குழுக்களின் அறிவுஜீவிகளே ராணுவத்தின் வன்முறையை சுட்டிக்காட்டி  ‘அரசு ஒடுக்குமுறை! ராணுவக்கொடுமை பாரீர்’ என பிரச்சாரம் செய்ய ஆரம்பித்திருப்பார்கள்


 


பொதுவாகவே போர்ச்சூழலில் உச்சகட்ட உணர்ச்சிகர பிரச்சாரம் நிகழும்.அதை அனைவரும் கவனிப்பார்கள் என்பதனால் அதன் பாதிப்பு மிகமிக அதிகம். அச்சூழலில் ஒவ்வொருவரும் தன்னை, தன் குழுவைச் சார்ந்தே யோசிப்பார்கள் என்பதனால் நடுநிலைநோக்குக்கோ சமநிலைப்பார்வைக்கோ அறச்சார்புக்கோ அங்கே இடமே இருப்பதில்லை..இதுவே திரும்பத்திரும்ப வரலாற்றில் நடக்கிறது.


 


போர்ச்சூழலில் வன்முறைப்பின்னணியில் உருவாகி நிலைகொள்ளும் கருத்துக்களை  எதிர்கொள்வது மிகமிகக்கடினம்.ஏனென்றால் அவர்கள் வெளிப்படுத்தும் உணர்ச்சிகள் உண்மையானவை. அடக்குமுறை நிகழ்ச்சிகளும் பெருமளவுக்கு உண்மையானவை. ஆனால் அவை வரலாற்றுத்திரிபு கொண்டவை. அந்த உணர்ச்சியைக் கடந்து, ராணுவம் உண்மையிலேயே ஒடுக்குமுறைத்தன்மைகொண்டதுதான் என்னும் உண்மையை ஓப்புக்கொண்டு, அந்த வரலாற்றுத்திரிபைச் சுட்டிக்காட்டி ஒட்டுமொத்தமான உண்மையுயையும் நிகரமதிப்பைச் சொல்வது மிகமிகக் கடினமானது. ஊடகங்களில் அதைப்பற்றிபேசுவதோ மக்களிடம் விளக்குவதோ மிகக்கடினம். ராணுவத்தின் ஆதரவாளன் என்றும் அடக்குமுறையை ஆதரிப்பவர் என்றும் முத்திரை வந்துச்சேரும்


 


உதாரணமாக காந்தி 1925 ல் அன்றைய இந்தியாவின் 30 சதவீத மக்களை பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக ஆயுதமெடுக்க தூண்டிவிட்டிருக்கமுடியும். ஆனால் 70 சதவீத மக்கள் பிரிட்டிஷ் ஆதரவாளர்கள் என்பதனால் மக்களின் ஆதரவின் மேல் அமர்ந்திருந்தது அன்றைய பிரிட்டிஷ் அரசு. மக்கள் ஆயுதம் எடுத்திருந்தால் பிரிட்டிஷ் அரசு மக்களை கொன்றுகுவித்திருக்கும். .ஏனென்றால் போர் என வந்துவிட்டால் இருபக்கமும் இருப்பது ராணுவம் என்றாகிறது. போரில் கொலை இயல்பானது


 


பிரிட்டிஷார் இந்தியமக்களைக் கொல்ல ஆரம்பித்ததுமே காந்தி பிரிட்டிஷ் ஒடுக்குமுறை அது என உணர்ச்சிகரமாக பிரச்சாரம் ஆரம்பித்திருக்கலாம். பல லட்சம்பேரை பிரிட்டிஷ் ராணுவம் கொன்ற வரலாறு அவருக்கு ஆதாரமாக இருக்கும்.பிரிட்டிஷாரை கொடூரர்கள் கொலைக்காரர்கள் என சித்தரிக்கமுடியும். அவர்களின் அரசுக்கு எதிராக ஆயுதமெடுத்த தன் செயலை உணர்ச்சிகரமாக அந்த அடக்குமுறைகளைச் சுட்டிக்காட்டியே நியாயப்படுத்தவும் முடியும்.


 


காந்தி அதைச்செய்யவில்லை என்பதனால்தான் அது அகிம்சைப்போராட்டம். பிரிட்டிஷ் ராணுவத்திற்கு எதிராக அவர் மக்களைக்கொண்டுசென்று நிறுத்தவில்லை. இருபத்தைந்து ஆண்டுக்காலம் தொடர்ச்சியான ஜனநாயகப் போராட்டம் வழியாக மக்களின் கருத்தியலை மாற்றினார். அக்கருத்தியலை ஓர் அமைப்பாகத் தொகுத்தார். தேர்தலரசியல் வழியாக மக்களுக்கு ஜனநாயகப்பயிற்சி அளித்தார். பிரிட்டிஷார் வெளியேற வேண்டியிருந்தது.


 


மக்களின் கருத்தியலாதரவு கொண்ட அரசின் ராணுவத்திற்கு எதிராக மக்களில் ஒருசாராரைத் தூண்டிவிடுவதும் ராணுவம் பதிலுக்குஅடக்குமுறையை ஏவும்போது அதை ராணுவக்கொடுமை எனக்குற்றம்சாட்டுவதும் மிகப்பெரிய அரசியல்மோசடி. அதைச் சுட்டிக்காட்டுவது ராணுவத்தின் ஒடுக்குமுறையை நியாயப்படுத்துவது அல்ல. ராணுவத்தை ஆதரிப்பது அல்ல. அப்படி வாதிடுவது உண்மையைச் சொல்பவரை எதிரிக்கு ஆதரவாளர்கள் எனா முத்திரைகுத்தி ஒழிக்க முயலும் கருத்துலக வன்முறைதான்.


 


ஐரோம் ஷர்மிளா மணிப்பூரின் இனக்குழுத் தீவிரவாதத்தின் முகமாகவே இருந்தவர். அதன் குரலாக ஒலித்தவர். அவர் இந்திய ராணுவத்தின் அத்துமீறலை எதிர்த்தார் என்பது சர்வதேச அளவில் ’மனிதாபிமான’ ஆதரவுபெறுவதற்கான ஒரு உத்தி மட்டுமே. அவர் எளியமக்களை வன்முறைப்பாதையில் தள்ளி அவர்களின் அழிவுக்கு வழிவகுத்தவர்களை ஆதரித்தார், அவர்களுக்காக வாதிட்டார்.


 


இந்திய ராணுவம் அடக்குமுறையில் ஈடுபட்டதா? கண்டிப்பாக ஈடுபட்டிருக்கும். ஈடுபடும். ஈடுபடாத ராணுவமே இல்லை. ஏன் மணிப்பூரின் பிரிவினைவாதத் தரப்பினரின் ராணுவங்களும் அதேபோல அம்மக்கள்மேல் அடக்குமுறையை வன்முறையைச் செலுத்தியவை, செலுத்துபவைதான். அந்த உண்மைகளை மறைத்து ‘இந்தியராணுவ அத்துமீறல்’ என ஒரே குரலை ஒலித்த ஐரோம் ஷர்மிளா அந்த பிரிவினைவாத வன்முறைத்தரப்பின் குரலே ஒழிய அகிம்சைப்போராட்டத்தின் குரல் அல்ல.


 


இப்படிப்பாருங்கள். 1940களில்  பகத்சிங் குழுவினர் ஜெர்மனியின் ஆதரவைப்பெற்று பெரிய குழுவாக ஆகி பிரிட்டிஷ்காரர்களை கொன்றுகொண்டே இருக்கிறார்கள். இந்தியாவையே முடக்கி வைத்திருக்கிறார்கள். மக்களில் 70 சதவீதம்பேரின் ஆதரவுடன் பிரிட்டிஷார் அவர்களை அடக்க  வன்முறையை மேற்கொள்கிறார்கள். காந்தி பிரிட்டிஷ் அடக்குமுறையை மட்டும் சுட்டிக்காட்டி அதற்கு எதிராக உண்ணாவிரதப்போராட்டம் மேற்கொண்டால் அது அகிம்சைப்போராட்டம் ஆகுமா? அவர் முதலில் கண்டிக்கவேண்டியது பகத்சிங்கை அல்லவா? உண்மையில் அதைத்தானே அவர் செய்தார்?


 


ராணுவம் வன்முறையின் வடிவம். அது ஒடுக்குமுறைக்கான கருவியேதான் –. எந்த ராணுவமும். ராணுவத்தைத் தாக்கி அது களமிறங்கியபின் அதன் வன்முறையை அரசியல்பிரச்சாரத்திற்கு பயன்படுத்துவதென்பது அகிம்சையின் வழி அல்ல. அது அரசியலின் கீழ்மையான உத்தி. இன்று புரட்சி என்றபேரில் பலரும் செய்வது. நதை நாம் மிகமிகக் கவனமாகவே அணுகவேண்டும். அவர்கள் உருவாக்கும் உணர்ச்சிக்கொந்தளிப்பில், மனசாட்சி அறைகூவல்களில் அவர்கள் செய்யும் அரசியலின் தந்திரத்தை மறந்துவிடக்கூடாது. ஐரோம் ஷர்மிளா பற்றி நான் சுட்டிக்காட்டுவது இதை மட்டுமே.


 


நான் தேசியவாதியா? ஆம். இந்தியாவின் தேசியத்தை நம்புபவன், ஏற்பவன். அது இந்துத்துவர் சொல்வதுபோல எனக்கு ஒரு உணர்ச்சிகர நம்பிக்கை அல்ல. அது ஒரு புனிதக் கட்டமைப்பும் அல்ல. ஒரு நடைமுறை யதார்த்தம் அது. வேறுவழியே இல்லாதது. இந்தியப்பெருநிலத்தில் அனைத்துவகை மத, இன,மொழி மக்களும் கூடிவாழ்வதாகவே அனைத்துப் பகுதிகளும் உள்ளன. ஆகவே ஒருதேசமாக தொகுப்புத்தேசியமாக வாழ்ந்தே ஆகவேண்டும் நாம். இல்லையேல் அழிவோம்.


 


இங்கே பேசப்படும் அத்தனை பிரிவினைவாதங்களும் மத, இன,மொழி அடிப்படைவாதங்களின் மேல் அமைந்தவை. அவை ஒவ்வொரு பகுதியிலும் நேர்ப்பாதிப்பங்கு மக்களை அன்னியரும் அகதிகளுமாக ஆக்கும். ஆகவே அவை பேரழிவை  மட்டுமே விளைவிக்கும். ஆகவே வேறுவழியே இல்லை, இன்று இந்தியா ஒரேநாடாகவே விளங்க முடியும். நான் முன்வைக்கும் இந்தியதேசியம் காந்தி நேரு அம்பேத்கர் போன்றவர்கள் காட்டிய வழி. அவர்களின்பெயர் சொல்லும் எவரும் ஏற்றாகவேண்டிய தீர்வு


ஜெ.


 


ஐரோம் ஷர்மிளாவின் படுதோல்வி

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் – 1


ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்- 2


ஐரோம் ஷர்மிளாவின் மனமாற்றம்

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 13, 2017 11:34

சில கேள்விகள்


 


 


Dear Sir, Thanks much for http://www.jeyamohan.in/96156  I am based in Chennai and part of this team of comics called ‘Evam standup Tamasha’. We would love to have you in one of our live shows. In case you are free on March 26, there is a big show here. If you are able to come, let’s know.. I am attaching info about the show


Alexander

***


அன்புள்ள அலக்ஸாண்டர்


நன்றி. வாழ்த்துக்கள். நான் அந்தத் தேதியில் நாகர்கோயிலில் ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளவேண்டியிருக்கிறது. உங்கள் நிகழ்ச்சி சிறப்புறுக


ஜெ


***


ஜெ,


வெற்றி என்னும் குறுநாவலை உங்கள் தளத்தில் பார்த்தேன். அது நீக்கப்பட்டுள்ளது. ஏன் என சொல்லமுடியுமா?


கணேஷ்


***


அன்புள்ள கணேஷ்,


வெற்றி சிறுகதையாக எழுதி நீளமாக ஆகிவிட்டது. அதை காலம் [கனடா] இதழுக்கு அனுப்பினேன். நீளம் என்று சொன்னார்கள். கே.என் .செந்தில் கேட்டார் என்று கபாடபுரம் இணைய இதழுக்கு அளித்தேன். 3 மாதமாகியும் அவ்விணையதளம் வெளியாகவில்லை. ஆகவே ஏதோ சிக்கல்போலும் என வெளியிட்டுவிட்டேன்


அதிகாலையில் கே.என்.செந்தில் கூப்பிட்டு ஓரிருநாளில் கபாடபுரம் இதழ் வெளிவரவிருப்பதாகவும், அக்கதைக்கு படம் வரைந்துவிட்டதாகவும் சொன்னார். ஆகவே இங்கே நீக்கிவிட்டேன். கபாடபுரம் இணைய இதழில் அது வெளிவரும்


ஜெ


***


ஜெ


ஊட்டி காவியமுகாம் இவ்வருடம் நிகழவிருக்கிறதா? அதைப்பற்றிய தகவல்கள் உண்டா? முன்னரே தெரிவிப்பது அவசியம் ஆகவே எழுதுகிறேன்


மணிகண்டன்


***


அன்புள்ள மணிகண்டன்,


ஊட்டி முகாமை வரும் ஏப்ரல் மாதம் 28,29,30 தேதிகளில் நிகழ்த்தலாமென எண்ணியிருக்கிறோம். நண்பர்களின் வசதிக்காக மின்னஞ்சல் அனுப்பப் பட்டுள்ளது. தகவல்கள் கிடைத்தபின் உறுதிசெய்யப்படும்


ஜெ


***


ஜெ


ஊட்டி வியாசப்பிரசாத் அவர்களுடனான தத்துவ வகுப்புகள் மீண்டும் நிகழுமா? பிறர் பங்கெடுக்கலாமா?


செல்வராஜ்


***


அன்புள்ள செல்வராஜ்


ஊட்டியில் முந்தைய வகுப்பில் கலந்துகொண்டவர்கள் 13 பேர். அவர்கள் ஓர் அணி. அது அப்படியே தொடர்வதே நல்லது. அடுத்த ஒர் அணியை வேண்டுமென்றால் உருவாக்கலாம். 13 பேர் தேறவேண்டும்


ஜெ


***

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 13, 2017 11:31

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–42

42. இன்குருதி


ஹுண்டனின் படைகளை நகுஷனின் படைகள் குருநகரிக்கு வெளியே அஸ்வமுக்தம் என்னும் குன்றின் அடிவாரத்தில் சந்தித்தன. குருநகரிக்கு பத்மனின் தலைமையில் காவலை வலுவாக்கிவிட்டு நகுஷன்  தன் படைத்தலைவன் வஜ்ரசேனன் துணையுடன் படைகளை நடத்தியபடி வடமேற்காக சென்றான். “அவன் படைநீக்கம் செய்து நம் நகரைச் சூழவைப்பதே உகந்தது. நாகர்களுக்கு விரிநிலத்தில் படைநடத்துவதிலோ நகர்களை முற்றுகையிடுவதிலோ முன்பயிற்சியே இல்லை. அவர்களை மிக எளிதில் வெல்லமுடியும்” என்றான் படைத்தலைவன்.


நகுஷன் மறுமொழி சொல்வதற்குள்ளாகவே பத்மன் “ஆம், அது மிக எளிது. ஆனால் குருநகரியின் ஷத்ரிய அரசன் நாகர்களின் படைகளுக்கு அஞ்சி படைசூழ்கை வகுத்தான் என்பதே இழிவு. அவர்களுக்காக படைகளுடன் காத்திருந்தான் என்று சூதர் பாடலாகாது. புழுவை அடிக்கக்கூடாது, சுண்டவேண்டும்” என்றான். நகுஷன் “ஆம், இந்நகரில் அவர்கள் வருவதற்காகக் காத்திருப்பது என்னால் இயலாதது. நான்  ஒரு தருணத்திலும் எண்ணிக் காத்திருந்து போரிடப்போவதில்லை. எப்போதும் எழுந்துசென்று தாக்குவதே என் வழி” என்றான். “ஆம், புலியும் சிம்மமும் பதுங்கும். யானை ஒளிய காட்டில் மறைவில்லை” என்றான் பத்மன்.


பாறைப்பிளவிலிருந்து எழும் அரசநாகம் மெல்ல தலைநீட்டி நாபறக்க வெளிவந்து ஓசையின்றி ஒழுகிச் செல்வதைப்போல நகுஷனின் படை  வடகிழக்கு வணிகச்சாலையை நிறைத்து ஒழுகியது. உச்சிவெயிலில்  நீரலை ஒளிகள் என வேல்நுனிகளும், வாளுறைகளும், கவசங்களும், தேர்முகடுகளும், யானைகளின் பொய்மருப்புகளும் மின்னிமின்னி ததும்பின. குறடுகளும் குளம்புகளும் சகடங்களும் மண்ணில் பதிந்த ஒலி கலந்து எழுந்த முழக்கம் சூழ்ந்திருந்த காடுகளை கார்வை கொள்ளச்செய்தது.


அன்று மாலை அவர்களின் படையெழுந்த செய்தி ஹுண்டனைச் சென்றடைந்தது. தன் படைகளுடன் கிளம்பி ஜம்புமுகம் என்னும் சிறிய மலையின் அடிவாரத்தை அடைந்து அங்கே பாடியமைத்திருந்த ஹுண்டன் ஒற்றர்கள் கொண்டுவந்த செய்தியைக் கேட்டதும் தொடையிலறைந்து உரக்க நகைத்தான். “நன்று, முற்றுகையிட்டு பொறுமையிழக்கவேண்டுமே என கவலைகொண்டிருந்தேன். நமக்கு உகந்த மலைச்சரிவுக்கே வந்து சேர்கிறார்கள். வெட்டவெளிக்கு வந்துவிடும் எலி நாகத்திற்கு நல்லுணவு” என்றான். அவனருகே நின்றிருந்த படைத்தலைவர்கள் சிரித்தனர்.


கம்பனன்  தலையை அசைக்க “என்ன சொல்கிறாய்?” என்றான் ஹுண்டன். “அவர்கள் விரிநிலத்திற்கு வருகிறார்கள் என்றால் என்ன பொருள் அதற்கு? அது காப்பற்றது என அவர்கள் அறியமாட்டார்களா என்ன?” என்றான். ஹுண்டன் “சொல் உன் தரப்பை” என்றான். “நம்மை இடக்காலால் தட்டி எறியவேண்டுமென விழைகிறார்கள்” என்றான் கம்பனன். “முடிந்தால் செய்யட்டுமே” என்று ஹுண்டன் சீற்றத்துடன் சொல்ல “அவ்வாறு பொருட்டிலை என்று காட்டிக்கொண்டாலும் அவர்கள் உள்ளே கருதியிருப்பார்கள். விரிநிலத்தில் நம்மை எதிர்கொள்ளும் வல்லமையை மும்மடங்கு வைத்திருப்பார்கள்” என்றான்.


ஹுண்டன் “என்ன சொல்கிறாய்?” என்றான் புரியாமல். “அரசே, நம்மை விளையாட்டென எதிர்கொள்கிறார்கள் என்று பிறர் எண்ணவேண்டுமென விழைகிறார்கள். ஆகவே தங்கள் முழு வல்லமையையும் முற்றிலும் வெளித்தெரியாது மறைத்தபடிதான் வருவார்கள்” என்றான் கம்பனன். ஹுண்டன் சில கணங்கள் விழித்து நோக்கிவிட்டு மீசையை நீவியபடி “அதை எண்ணி என் உள்ளத்தை சிடுக்காக்கிக்கொள்ள நான் விழையவில்லை. களம்காண வந்துவிட்டேன், இனி எது வரினும் என்ன? போரில் வெற்றியும் தோல்வியும் ஊழே. ஊழை எண்ணிக் கணக்கிடுவதென்பது அலையெண்ணியபின் நீராடுவோம் என்று கருதுவதே” என்றான்.


இருபடைகளும் ஒன்றையொன்று நெருங்கி எட்டு நாட்களுக்குப்பின் அஸ்வமுக்தத்தை வந்தடைந்தன. இரு சாராரும் சூழ்ச்சி எதையும் எண்ணவில்லை. இரு நதிகள் வெள்ளப்பெருக்கெடுத்து இரு திசைகளிலிருந்து வருவதைப்போல அவை   அணுகின. “பெருங்காதல் கொண்ட இரு நாகங்கள் போல” என்றான் நகுஷனுடன் வந்த படையமைச்சனாகிய காலகன். “வெறும் விசையாலேயே நிகழவிருக்கிறது இப்போர். எந்த அரசுசூழ்தலும் இரு தரப்பிலும் இல்லை. ஹுண்டன் கல்கதையைச் சுழற்றியபடி தோள்தட்டிவரும் காட்டாளன்போல வருகிறான்” என்றான் வஜ்ரசேனன். நகுஷன் “ஆம், அவ்வாறே நாமும் செல்வோம். வெறும்போர்” என்றான்.


அஸ்வமுக்தம் மூன்றுபுறமும் செங்குத்தான பாறைக்குன்று. உச்சியில் முளைத்திருந்த ஆலமரத்தின் அருகே உருண்ட பாறை ஒன்று ஏதோ எண்ணித்தயங்கியதென அமர்ந்திருந்தது. ஹுண்டனின் ஒற்றர்கள் மூவர் மேலேறிச்சென்று தொலைவிலேயே நகுஷனின் படைகள் அணுகுவதை நோக்கிவிட்டனர். அவர்கள் கொடியடையாளம் காட்ட முந்தையநாள் அந்தியிலேயே வந்து பிறைவடிவில் அமைவு கொண்டிருந்த ஹுண்டனின் படைகளில் முரசொலி எழுந்தது. துயில் கலைந்து யானை எழுவதுபோல படை விழிப்புகொண்டது.


மேலிருந்து நோக்கிய ஒற்றர்கள் ஒழுகும் ஆற்றின் நீர்நுரை உருமாறுவதுபோல நாகர்படை குவிந்து இழுபட்டு சுடர்வடிவம் கொள்வதை, பின்னர் அதற்கு இரு கைகள் முளைத்து நண்டு என மாறுவதை கண்டனர். அதன் முகப்பில் கேடயமேந்திய வீரர்கள் வந்து நிரைகொண்டு ஒரு கோட்டையென மாறினர். அதற்கு அப்பால் வில்லவர்கள் நச்சுமுனைகொண்ட அம்புகளுடன் நிரந்தனர். ஐந்து நிரைகளாக கவசமணிந்த புரவிகளின் தொடர்  ஒருங்கியது. அதற்குப் பின்னால் நீண்ட வேல்களுடன் காலாள்படையினர் நண்டின் கால்களென நான்கு பிரிவுகளாக  நின்றனர்.


ஒவ்வொரு படைப்பிரிவின் நடுவிலிருந்தும் கழையேறிகள் ஊன்றப்பட்ட நீள்கழைகளில் தொற்றி மேலேறி வண்ணக்கொடிகளை ஆட்டி செய்தியறிவித்தனர். காளைகள் இழுத்துவந்த பெரிய சகடமேடைகளில் போர்முரசுள் இருந்தன.  முழைதடியேந்திய வீரர்களும் கொடியசைக்கும் செய்தியாளர்களும் கொம்பூதிகளும் அதன்மேல் அமர்ந்திருந்தனர். தொலைவிலேயே ஹுண்டனின் பாடிவீடு தெரிந்தது. அதன்மேல் சுருளவிழ்ந்து எழுந்த நாகம் பொறிக்கப்பட்ட மிகப்பெரிய கொடி காற்றில் எழுந்து பின் மெல்லத் துவண்டது.


தொலைவில் செந்நிறத் தீற்றலென முதலில் நகுஷனின் படை தெரிந்தது. பின்னர் அதன்கொடிகள் காற்றில் பறக்கும் வண்ணப்பறவைகள் என துலங்கின. வேறு எங்கிருந்தோ என படைநகரும் ஓசை எழுந்துவந்து காற்றில் செவிதொட்டுத் தேய்ந்து மறைந்துகொண்டிருந்தது.  பின்னர் திரும்பும் உலோகங்களின் ஒளிகள் கண்களை கீறிக்கீறி சென்றன. கண்கூசும்படி ஒளியலை எழத்தொடங்கியபோது உடலே படையோசையை கேட்கத்தொடங்கியது. “எளிய படைதான்” என ஒருவன் சொன்னான். “ஆனால் நம்மிடம் புரவிகள் மிகக்குறைவு. தேர்களே இல்லை. நம் வீரர்கள் புரவிக்கலை தேர்ந்தவர்களும் அல்ல” என்றான் அவன் தோழன்.


“ஆம், நாம் மரக்கிளைகளில் பறக்கும் கலையறிந்தவர்கள்… இந்த விரிவெளியில் நமது திறன்களுக்கு பொருளில்லை” என்றான் இன்னொருவன். “நாம் எதையும் முடிவு செய்யமுடியாது. போர்கள் நமது ஆற்றலால் வெல்லப்படுபவை, பிறனுடைய ஆற்றலை நாம் போர்நிகழும்வரை அறியவே முடியாது” என முதியநாகன் ஒருவன் சொன்னான். அவர்கள் கொடிகளால் செய்திகளை சொல்லிக்கொண்டே இருந்தனர். அணுகிவரும் படையின் தொலைவு, அளவு, அமைப்பு, படைசூழ்கை என விளக்கிக்கொண்டே இருந்தனர்.


“அவர்கள் நம் படைகளை அறிகிறார்களா? எங்கிருந்து?” என்றான் ஒருவன். “எவ்வகையிலும் அறியமுடியாது. அங்கிருந்து அவர்கள் பார்ப்பதற்கான எந்த வழியும் இல்லை” என்றான் இன்னொருவன். “பார்க்காமலேயே போருக்கு எழுகிறார்கள் என்றால் அவர்களின் துணிவு என்ன?” என்று ஒருவன் கேட்டான். “நாம் நாகர்கள் என்பது மட்டுமே…” என்றான் ஒரு முதியவன். “கான்குடிகள் போர்வெல்வது அரிதினும் அரிது. நாம் தனித்தனிக் குலங்கள். எதன்பொருட்டும் நாம் ஒன்றாவதில்லை. இதோ நாகர்களின் இப்பெரும்படை ஒரு சிறு அச்சம் எழுந்தால் முந்நூறுகுடிகளாக சிதறிவிடும்.”


“அவர்கள் அவ்வாறல்ல. ஆயிரம்குடிகளை இணைத்து நான்குவருணங்களாக ஆக்கியிருக்கிறார்கள். இதோ படையெனத் திரண்டுவந்து நின்றிருப்பவர்கள் பல்லாயிரம் குடிகள், பலநூறு குலங்கள், ஆனால் ஷத்ரியர் என்னும் ஒரே வர்ணம். அவ்வர்ணத்திற்குரிய அறங்களை இளமையிலேயே அவர்களின் உள்ளத்தில் செதுக்கிவிட்டிருக்கிறார்கள்” என்றான் அம்முதியவன். “ஒரு வர்ணம் என்பது தன் தனியடையாளத்தையும் தான் என்னும் ஆணவத்தையும் கொண்டு தன்னைத் தொகுத்துக்கொண்ட ஒரு திரள். தன் அடையாளத்திற்காகவும் ஆணவத்திற்காகவும் அது தன்னை முற்றழிக்கவும் சித்தமாகும்.”


“நம்மிடம் இல்லாது அவர்களிடம் இருக்கும் படைக்கலம் அதுவே, ஆணவம்” என அவன் தொடர்ந்தான். “இந்தக் களத்திலிருந்து ஓடினால் நாகர்களால் ஐந்தே நாட்களில் அனைத்தையும் மறந்து தங்கள் குடிகளில் இணையமுடியும். இனிதே வாழவும் முடியும். இங்கிருந்து தோற்றோடும் ஷத்ரியன் இழிவுபட்டு எஞ்சியவாழ்க்கையை அழிக்கவேண்டும். புண்ணின்றித் திரும்புபவன் கருநரகிற்கு இணையான பேரிழிவை சூடவேண்டியிருக்கும்.” அவர்கள் பெருமூச்சு விட்டனர்.


இளம்வீரன் ஒருவன் “அவர்கள் நெடுந்தொலைவு வந்துள்ளனர், நாம் இங்கே பாடியமைத்திருக்கிறோம். போரை நாளைவரை ஒத்திவைக்கும்படி கோர அவர்களுக்கு உரிமையுண்டு” என்றான். “ஆம், ஆனால் அவர்கள் கோரமாட்டார்கள். ஏனென்றால் நாம் ஷத்ரியர்கள் அல்ல. இதை அவர்கள் ஒரு போரென்றே சொல்லமாட்டார்கள். இது அவர்களுக்கு வேட்டை மட்டுமே” என்றான் முதியவன். அப்பால் கொம்போசை எழுந்தது. நிலைக்கழை ஒன்றில் குருநகரியின் அமுதகலக் கொடி மேலேறியது. மிகமெல்லிய அதிர்வாக முரசோசை எழுந்தது.


“படைசூழ்கை… அப்படியென்றால் போர்” என்றான் இளையவன். “ஆம், உச்சிப்பொழுதிலேயே போரைத் தொடங்குகிறார்கள் என்றால் அந்திக்குள் இப்போரை முடிக்க எண்ணுகிறார்கள்” என்றான் முதியவன். “அந்திக்குள் நாம் தோற்பதா?” என்றான் இளைஞன். கீழே நகுஷனின் படை கழுகுவடிவம் கொண்டது. அதன் முகப்பில் அலகு என புரவிப்படை ஒன்று கூர்கொண்டது. உகிர்கள் என விற்படை அமைய சிறகுகள் என தேர்ப்படை நிலைகொண்டது.


செய்திகளை மேலிருந்து அவர்கள் அனுப்பிக்கொண்டே இருந்தனர். ஆனால் ஹுண்டனின் படையில் எந்த மாற்றமும் தெரியவில்லை. அவர்கள் நகரப்போவதாகவும் தெரியவில்லை. “கழுகை நண்டு எதிர்க்குமா?” என்றான் இளைஞன். “நாம் அதை அறியவே முடியாது. நமக்கு எதற்கு அக்கவலை?” என்றான் இன்னொருவன். நாகர்படையில் முரசொலிகளும் கொம்புகளும் முழங்கின. கொடிகள் எழுந்தசைய அதன் வலக்கை விரிந்து நீள இடக்கை அசைவற்றிருந்தது. “என்ன செய்கிறார்கள்?” என்றான் முதியவன். பலர் புரவிகளில் ஓடுவது தெரிந்தது.


முரசுகள் மாறி ஒலி எழுப்ப விலகிச்சென்ற படை வந்து இணைந்துகொண்டது. “அவ்வளவுதான், போர் முடிந்துவிட்டது” என்றான் முதியவன். “எப்படி சொல்கிறீர்கள்?” என்று இளைஞன் சீறியபடி எழுந்தான். “ஆணை பிழையாக வந்துவிட்டது. இனி படைகள் தலைமையின் ஆணையை ஐயமின்றி ஏற்காது” என்றான் முதியவன். “பிழையாக வந்துவிட்டதனாலேயே எச்சரிக்கை கொள்ளலாமே?” என்றான் ஒருவன்.  “அது எண்ணித்துணிவது… படை எழுந்தபின் எண்ணமில்லை. எது உடலறிந்ததோ அதுவே அங்கு நிகழும். காமத்தைப்போல” என்றான் முதியவன். அவர்கள் அமைதியடைந்து மெல்லிய சோர்வுடன் நோக்கியிருந்தனர்.


நகுஷனின் படைகள் காற்றில் பறந்துவரும் சருகுக்குவை போல எளிதாக விரைவாக ஹுண்டனின் படைகளை அணுகின. புரவிகளின் சுழலும் கால்களும் அவற்றின் நீட்டிய தலைகளுக்குப் பின்னால் வில்லேந்தியமர்ந்த கவசவீரர்களும் தெரியலாயினர்.  மிகவிரைவிலேயே குதிரைப்படைகள் மட்டும் பிரிந்து முன்னால் வந்து அவர்கள் இருந்த குன்றை அணுகி கடந்துசென்றன. முதலில் வில்லவர் அமர்ந்த அலகு செல்ல வாளோர் அமர்ந்த இறகும் வேலோர் அமர்ந்த உகிரும் தொடர்ந்து சென்றன.


அப்பால் நாகர்களின் படை அப்போதும் ததும்பிக்கொண்டிருந்தது. “சந்தையில் ஒன்றோடொன்று கால்கட்டிப்போடப்பட்ட பறவைகளைப்போல” என்றான் முதுநாகன். “மூத்தவரே, இனி தாங்கள் ஏதும் சொல்லவேண்டியதில்லை” என்றான் இளைஞன். “நான் எண்ணுவதையே சொல்லென செவி அறிகையில் சுடுகிறது.” முதுமகன் “நாம் பார்த்துக்கொண்டிருப்பது ஒரு போரை அல்ல மைந்தா, இந்தத் தொல்நிலத்தில் பல்லாயிரமாண்டுகளாக நிகழ்ந்துவரும் ஒன்றை. அது எப்போதும் இவ்வண்ணமே மாற்றமில்லாது தொடர்கிறது” என்றான்.


நாகர்படைகளின் முரசுகளும் கொம்புகளும் இணைந்து பிளிறலாயின. அவர்களின் வில்லவர்கள் தரையிலமர்ந்து விற்களை இழுத்து அம்புகளை எய்ய அவை வானிலெழுந்து வயலில் அமரும் கிளிக்கூட்டம்போல பாய்ந்து வரும் குருநகரிப்படைகள் மேல் அமைந்தன. அம்புபட்ட வீரர் சிலர் விரையும் புரவியிலிருந்து தெறித்து விழ நன்கு பயிற்றுவிக்கப்பட்ட அப்புரவிகள் அசையாமல் நின்று திரும்பி படைநோக்கி ஓடின. அவர்களில் பெரும்பாலானவர்கள் எடையில்லாத ஆமையோட்டுக் கவசம் அணிந்திருந்தனர். நாகர்களின் புல்லம்புகளின் புறாவலகுக் கூர் அவற்றை கடக்கவில்லை. புரவிகளும் கவசமணிந்திருந்தன. விரைவிலேயே நகுஷனின் படை நாகர்படைகளை அணுகி அவற்றின் முகப்பை மோதி பலபகுதிகளாகப் பிளந்தது.


நாகர்களின் வில்லவர்படை பொருளிழந்தது. பின்னால் அவர்கள் நிறுத்தியிருந்த வேல்படையை முன்னால் செலுத்த வில்லவர் அணிபிளந்து வழியமைக்கவேண்டியிருந்தது. ஆனால் முன்னால் வந்த நகுஷனின் வில்லவர் முதலிலேயே அத்தனை முரசுமேடைகளையும் தாக்கி அங்கிருந்த அனைவரையும் கொன்றனர். செய்தியில்லாமல் தடுமாறிய வில்லவர்களால் வேலேந்திகள் தடுக்கப்பட்டனர். அக்குழப்பத்தில் வாளுடன் நுழைந்த இரண்டாவது புரவியணி வெறியுடன் நாகர்களை வெட்டிவீழ்த்தலாயிற்று. பயனற்ற விற்களுடன் வாளோர் முன் அகப்பட்ட நாகர்கள் இறந்து விழுந்தனர்.


“போரல்ல, படுகொலை” என்றான் முதியவன் கசப்புடன். “நீங்கள் சற்று வாயைமூடுங்கள்” என்றான் இளைஞன். கழுகின் உடல் வந்து நாகர்படைகளை அடைந்தது. வேலேந்திய காலாள்படையினர் புரவிப்படை உருவாக்கிய விரிசல்கள் வழியாகப்புகுந்து வெட்டியும் குத்தியும் கொன்றுகுவிக்கலாயினர். “முதலில் வேல்படை நின்றிருந்ததென்றால்…” என்றான் இளைஞன். “நாம் ஒவ்வொருமுறையும் இவ்வாறுதான் எண்ணி எண்ணி ஏங்குகிறோம்” என்றான் முதுநாகன். “பார், நம் படைகள் வெறும் கும்பல். இட்டுதலைகுவிக்கிறார்கள் ஷத்ரியர்.”


நாகர்படைகளின் பின்னிரை புகைக்குவை காற்றில்கரைவதுபோல சிதையத் தொடங்கியது. “அவ்வளவுதான்…” என்றான் முதியவன். “வாயை மூடுங்கள்!” என்றான் இளைஞன். “இன்னும்கூட வாய்ப்புள்ளது… நாம் மீண்டும் ஒருங்கிணைய முடியும்… நம்மில் மூன்றிலொரு எண்ணிக்கையே அவர்களிடம்… அதை நம் படைகள் உணர்ந்தாலே போதும்.” முதுநாகன் “அவர்கள் திரும்பிவிட்டார்கள்” என்றான். “இல்லை, அவர்கள் இன்னும் அதை அறியவில்லை… பின்னாலிருப்பவர்களை அவர்கள் அறிய வழியே இல்லை” என்றான் இளைஞன். “செய்தி அழிந்திருப்பதேகூட நல்லதுதான்.”


“படை என்பது ஒற்றை உடல். உடல் தன்னைத் தானே அறியும் ஒற்றைப்பெரும்புலன்” என்றான் முதுநாகன். நாகர்களின் மொத்தப்படையும் பஞ்சுப்பரப்பு துகள்களாக ஆவதுபோல சிறு குழுக்களாக ஆகி சிதறிப்பரவத் தொடங்கியது. “கொன்றுகுவிக்கப்போகிறார்கள். சிறுகுழுக்களாக ஓடுவதுபோல தற்கொலை வேறில்லை” என்றான் இளைஞன். “கொல்லமாட்டார்கள்” என்றான் முதுநாகன். “ஏன்?” என அவன் திரும்பிநோக்கினான். “ஒருமுறை போரில் திரும்பி ஓடுபவர்களை கொன்றார்கள் என்றால் அடுத்தபோரில் திரும்பி ஓட அஞ்சுவர். இறுதிவரை நின்று பொருதுவர். திரும்பி ஓடுபவர்களை உயிரளித்து விட்டுவிட்டால் எந்தப்போர் தொடங்கும்போதும் முடிந்தவரை பார்ப்போம், முடியாதபோது ஓடிவிடுவோம் என்றே எண்ணுவர். அது அவர்களின் போர்நுணுக்கம்” என்றான் முதுநாகன்.


இளைஞன் “ஆம், போரை நிறுத்திவிட்டார்கள்” என்றான். கீழே குருநகரியின் வெற்றிமுரசு ஒலிக்கத் தொடங்கியது. “அவர்கள் நம்மை அவர்களது நாடகங்களின் நடிகர்களாக்கிவிட்டிருக்கிறார்கள்” என்றான் இளைஞன். “அவர்கள் நம்மை நோக்கி நகைக்கிறார்கள். அதைவிட நம்மை அவர்கள் கொன்றிருக்கலாம்.” முதுநாகன் “ஒருமுறையேனும் எதிர்த்து நின்று அனைவரும் உயிர்துறந்திருந்தால் நாம் நம்மை தளைத்திருக்கும் அனைத்திலிருந்தும் விடுதலைபெற்றுவிடுவோம். நாமும் இவர்களுக்கு நிகரானவர்களே என நம் தன்னாழம் நம்பத் தொடங்கிவிடும். அதன்பின் நாம் இவர்களை வெல்லக்கூடும்” என்றான் முதுநாகன்.


“ஆனால் அவர்கள் அதற்கு நமக்கு வாய்ப்பளிப்பதே இல்லை. அவர்கள் நம்மை கூர்ந்து நோக்கி புரிந்துவைத்திருக்கிறார்கள். இதோ பெருகிப்படைகொண்டுசென்று களமாடும் ஷத்ரியர்கள் அல்ல இப்போரை வடிவமைத்தவர்கள். அங்கே அரண்மனையில் அமர்ந்து கையில் ஏடு கொண்டு சொல்தேரும் அந்தணர்கள்தான் இதை நடத்துகிறார்கள். நாம் தோற்றுக்கொண்டிருப்பது அவர்களிடமே” என்றான் முதுநாகன். “நாம் ஏன் தோற்கிறோம் ஏன் அவர்கள் வெல்கிறார்கள் என்றால் ஒரே மறுமொழிதான், நாம் அவர்களை புரிந்துகொள்ளவில்லை, அவர்கள் நம்மை புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆகவே இதோ நிகழும் இந்தக் களம் படைக்கலங்களால் நிகழவில்லை, எண்ணங்களால் நிகழ்கிறது.”


“ஒற்றுக்கலை பயில இவர்களின் குருநிலைகளில் நான் பன்னிரண்டு ஆண்டுகள் மாணவனாக இருந்தேன். இவர்களைப்போல உருமாறி நாற்பதாண்டுகள் இவர்களுடன் வாழ்ந்தேன். நான் அறிவேன் இவர்களை” என அவன் சொன்னான். கீழே நோக்கியபடி “உயிர்தப்பி ஓடும் ஒவ்வொரு நாகனும் நூறு கோழைகளை தன் குடிகளில் உருவாக்குகிறான். அவர்கள் நம்மைக் கொன்றால் நாம் பழிவெறி கொள்ளக்கூடும். நம் தலைமுறைகள் வஞ்சம் பெருக்கக்கூடும். அவர்கள் நம்மை ஓடவிடுந்தோறும் நாம் வெற்று காட்டுமானுடராகிறோம்.” அவன் கசப்புடன் சிரித்து “அதை அவர்கள் அறமென்றும் இரக்கமென்றும் சொல்கிறார்கள். அதன்பொருட்டும் ஆணவம்கொள்கிறார்கள்” என்றான்.


“போர் முடிந்துவிட்டது” என்றான் ஒருவன். முதியவன் தன் மேலாடையால் முகம்துடைத்து “நாமும் திரும்பவேண்டியதுதான். அவர்கள் நம்மை அறிவார்கள். நம்மை எளிதில் அவர்களால் பிடிக்கவும் முடியும். ஆனால் நாம் சென்று இக்காட்சியை நம் குலத்தவரிடம் சொல்ல அவர்கள் விழைவார்கள். ஆகவே நம்மை விட்டுவிடுவார்கள்” என்றான். இளைஞன் “அரசர்…” என்றான். “என்ன?” என்றான் முதியவன். “நம் அரசர் ஓடவில்லை. தன் மெய்க்காவலருடன் களத்திலேயே இருக்கிறார். அதோ அவர் கொடி!” முதியவன் கையை கண்மேல் வைத்து நோக்கி “ஆம்” என்றான். “என்ன செய்கிறார்?” கூர்ந்து நோக்கி “அடிபணிகிறாரா? அவர் இயல்பல்ல அது” என்றான். இளைஞன் “தனிப்போர்… ஆம், அரசர் நகுஷனை தனிப்போருக்கு அறைகூவியிருக்கிறார். அதுதான்…” என்றான்.



tigerநகுஷனின் தேரைநோக்கி புரவியில் பாய்ந்துவந்த படைத்தலைவன் “அரசே, நாகர்குலத்து அரசன் களம்நிற்கிறான்” என்றான். நகுஷன் “யார்?” என்றதுமே புரிந்துகொண்டு “ஹுண்டனா? களத்திலா? அடிபணிகிறானா?” என்றான். “தனிப்போர் கோருகிறான். அவன் அமைச்சன் கம்பனன் தேர்த்தட்டில் எழுந்து நின்று அதை அறிவித்தான்.” நகுஷன் விழிகளை நோக்கியபின் “ஆனால் இழிகுலத்தோரிடம் ஷத்ரியர் தனிப்போரிடும் வழக்கமில்லை. அது அவர்களுக்கு நாம் அளிக்கும் நிகர்மதிப்பென்று கொள்ளப்படும்… ஒருவேளை…” என்றான். அச்சொல் நாவிலெழுந்ததுமே அதன் பெரும்பிழையை உணர்ந்தவனாக “நான் சொல்லவருவது…” என்றான்.


“நானும் கான்மகனே” என்றான் நகுஷன். “அவனை நேரெதிர்கொள்ள என்னால் இயலும். அவன் விரும்பும் படைக்கலம்கொண்டே.” படைத்தலைவன் “அறைகூவுபவன் அவன். படைக்கலம்…” என்று மேலும் சொல்லெடுக்க “நான் அவனுடன் தனிப்போருக்கு சித்தமாக இருப்பதாக சென்று சொல்லுங்கள்.” என்றான். படைத்தலைவன் வரும்போதே அதை குருநகரிப்படைகள் உய்த்தறிந்திருந்தன. செல்லும்போது அதன் மறுமொழியையும் உணர்ந்துவிட்டன. அவன் செல்லும் வழியில் படைகளில் எழுந்த ஒலியே அதை காட்டியது. நீரில் கனல்விழுந்து மூழ்குவதுபோல படைத்தலைவன் திரளில் மறைந்தான்.


அப்பால் ஹுண்டனின் கொடி மேலேறியது. அவன் படைவீரர்கள் கொம்புகளை ஊதினர். குருநகரிப்படைகளில் பேரோசை எழுந்து அதைச் சூழ்ந்தது. தன் தேரை அங்கே செலுத்தும்படி சொன்ன நகுஷன் தேர்த்தட்டில் புன்னகையுடன் கைகட்டியபடி நின்றான். தொலைவிலேயே அவன் ஹுண்டனைக் கண்டான். தன் தேர்த்தட்டில் கரியபெருந்தோள்களுடன் இடையில் புலித்தோலாடை மட்டும் அணிந்து யானைத்தோல் காலணிகளுடன் அணிகள் ஏதுமின்றி அவன் நின்றிருந்தான். தாடியை தோல்நாடாவால் கட்டி மார்பிலிட்டிருந்தான். குழலை பெரிய கொண்டையாகக் கட்டி இடத்தே சரித்திருந்தான். அம்புவிடுவதற்குரிய தோலுறைகள் கைகளில் இருந்தன.


நகுஷனின் தேர் சென்று அவன் தேருக்கு முன்னால் நின்றது. இருவருக்கும் நடுவே இருந்தவர்கள் ஊதப்பட்ட மாவு என விலகி முற்றமொன்றை அமைத்தனர். மெல்ல படைகள் இணைந்து சூழ்ந்து ஒரு பெரும் வளையமொன்று அமைந்தது. முகங்களாலான சுவர் என அது எழுந்தது. குருதிதோய்ந்த முகங்கள். போர்க்களியில் சிவந்த கண்கள். பலர் கவசங்களைக் கழற்றி கைகளில் வைத்திருந்தனர். வாள்களையும் வேல்களையும் ஊன்றி அவற்றின்மேல் உடலெடையை தாங்கி நின்றனர்.


கம்பனன் முன்னால் வந்து நின்று “எங்கள் அரசர் இக்களம்விட்டு ஓடவோ அடிபணியவோ விழையவில்லை. ஆகவே இறப்புவரை தனிப்போரை விழைகிறார். வெறும்கைப்போர் அவர் விழைவது. அரசர் விழைந்தால் அவர் விழையும் படைக்கலத்தை கொள்ளலாம். நாகர்குல நெறிகளின்படி தனிப்போரில் வென்றால் அவர் குருநகரியை வென்றதாகவே பொருள். குருநகரியின் அரியணையை அவர் விரும்பவில்லை. ஆனால் தன் அன்னையின் எரியிடத்திலிருந்து ஒருபிடி எரிமண் கொண்டுசெல்ல அவருக்கு குருநகரியின் குடித்தொகை ஒப்புதலளிக்கவேண்டும்” என்றான்.


படைத்தலைவன் ஏதோ சொல்வதற்குள் நகுஷன் கைநீட்டி தடுத்து “அவ்வண்ணமே” என்றான். தன் கைகளிலிருந்த அம்புறைகளைக் கழற்றி பாகனிடம் அளித்தபடி “இறப்புவரை போர். வெறும்கைகளால்” என்றான். படைத்தலைவன் “அரசே, அவர்களின் நகங்களில் நாகப்பல்நச்சு உண்டு” என்றான். “அவன் கான்மகன்” என்று நகுஷன் சொன்னான். “இங்கே கான்நெறி திகழ்க!” என்றபடி தேரிலிருந்து குதித்தான். தன் கையுறைகளை கழற்றிவிட்டு ஹுண்டன் மண்ணில் குதித்தான்.


கம்பனன் ஹுண்டனின் காலணிகளை கழற்றி வாங்கிக்கொண்டான். நகுஷனின் அணுக்கக்காவலர்கள் அவன் அணிந்திருந்த மணிமாலையையும் கணையாழிகளையும் இடைக்கச்சையையும் உடைவாளையும் கழற்றி எடுத்துக்கொண்டனர். மான்தோலாடையை இடையில் அணிந்து அதன்மேல் தோல்கச்சையை இறுக்கியபின் குனிந்து மண்ணைத்தொட்டு சென்னிசூடினான். உள்ளங்கைகளை மண்ணில் பதித்து உரசிக்கொண்டு முன்னால் சென்று நிலைமண்டிலத்தில் நின்றான். ஹுண்டன் அவன் அசைவுகளை கூர்ந்து நோக்கியபடி வந்து நின்று மண்ணைத் தொட்டு வணங்கி ஒரு துளி நாவிலும் இட்டுக்கொண்டான்.


கம்பனன் “நெறிகள் இல்லை, காட்டுமுறை” என்றான். “ஆம்” என்றான் நகுஷன். இருவரும் ஒருவரை ஒருவர் நோக்கியபடி சுற்றிவந்தனர். ஹுண்டனின் தோள்தசை துடித்தபடியே இருப்பதை நகுஷன் கண்டான். அதைநோக்கி விழிநட்டான். அவனும் அதை உணர்ந்ததும் அவன் விழிகள் நிலைபிறழத்தொடங்கின. நகுஷன் “உம்” என ஓர் ஒலியை எழுப்பினான். அவன் பாயப்போகிறான் என எண்ணி ஹுண்டன் பாய்ந்ததும் அவன் பாயாமல் பின்னகர்ந்தான். ஹுண்டன் நிலைபிறழ்ந்து தடுமாற அவன் புறங்கழுத்தில் ஓங்கி அறைந்தான். மண்ணில் விழுந்து கையூன்றி எழுந்த ஹுண்டன் ஓர் அடி தடுமாறி நின்றான். அவன் நிகர்நிலை சற்று பிறழ்ந்துவிட்டது என உணர்ந்ததும் குருநகரியின் விரர்கள் வாழ்த்தொலி எழுப்பினர்.


அந்த ஒலி ஹுண்டனை சினம்கொள்ளச்செய்தது. பன்றிபோல உறுமியபடி அவன் பாய நகுஷன் அவனைத் தடுத்து பற்றிக்கொண்டான். இருவரும் தழுவிக்கொண்டு நிலமறைந்து விழுந்து உருண்டனர். கால்கள் மண்ணில் துழாவி திளைத்துப்பின்னி விடுவித்துக்கொண்டு மீண்டும் இறுகின. ஹுண்டன் நகுஷனைத் தூக்கி அறைந்தான். புரண்டு எழுந்து ஹுண்டனைப் பற்றி பக்கவாட்டில் வீழ்த்தி அவன் விலாவெலும்புகளில் ஓங்கியறைந்தான் நகுஷன். ஹுண்டன் வலியில் மெல்ல முனகினான்.  ஹுண்டன் எழுவதற்குள் நகுஷன் அவனை மேலும் மேலுமென அறைந்தான்.


ஹுண்டன் பாய்ந்தெழுந்து நகுஷனை தன் கைகால்களால் கவ்விக்கொண்டு மண்ணில் வீழ்த்தினான். அவனைப்புரட்டி மேலேறிவிட ஹுண்டன் முயல நகுஷன் அதற்கு இடம்கொடாமல் புரண்டுகொண்டே இருந்தான். இருவரும் மண்ணில் புழுக்களைப்போல உருண்டனர். மென்மையான குருதியில் ஓருடலென இருவரும் திளைப்பதைப்போல என்று நகுஷன் உணர்ந்தான். விழிகளில் நழுவிக்குழைந்து அகன்று அணுகிய காட்சிகள் எது தன் கை எது பிறன் கால் என்று அறியமுடியவில்லை. நான்குகால்களும் நான்கு கைகளும்கொண்ட விந்தை உயிர் என தன்னை எண்ணினான். அத்தனை எண்ணங்களும் அப்போருக்குள் எங்கே நிகழ்கின்றன? எப்படி அவை அடிபடாமல் நசுங்காமல் ஊடுருவுகின்றன?


ஒருகணம் மிகமிக விரிந்து ஒருபகலென தெரிந்தது. அதில் ஹுண்டனின் கழுத்து நரம்பு புடைத்த வளைவு மிக அருகே வந்து அதிர்ந்து காத்து நின்றது. அவன் எம்பி தன் வாயால் அந்நரம்பைக் கவ்வி இறுக்கினான். ஹுண்டனின் உடல் துடித்து அதிர்வதை அவன் உடலெங்கும் உணரமுடிந்தது.  குருதியை நாவில் வெம்மையென, உப்புச்சுவையென உணர்ந்தான். ஹுண்டன் தன் கைகளை விடுவிக்கும்பொருட்டு முழு உயிர்விசையாலும் திமிற ஆற்றலையெல்லாம் திரட்டி அவனை அடக்கியபடி கடித்தபற்களை விலக்காமல் தலையை அசைத்து அத்தசையை வாயில் நெளியும் நரம்புடன் கவ்வி இறுக்கிக்கொண்டான்.


ஹுண்டன் உச்சகட்ட திமிறலுடன் ஒருமுறை அதிர்ந்தபின் மெல்ல தளர்ந்தான். அவன் மூச்சு நகுஷனின் கன்னத்தில் ஆவிவெம்மையுடன் குருதித்துளிகளுடன் தெறித்தது. அவன் கைகள் நகுஷனின் தோளில் எடையுடன் அமைந்து வியர்வையில் வழுக்கி சரிந்தன. கால்கள் கவ்வலை விடுத்து பக்கவாட்டில் அகன்றன. நகுஷன் அவனை புரட்டிப்போட்டு மேலேறி அமர்ந்து நோக்கினான். கடிவாய் சிதைந்து திறந்திருக்க அதில் மூச்சுக்குமிழிகள் குருதியுடன் வெடித்தன. மூக்கிலும் வாயிலும் குருதித்துளிகள் தெறித்தன. அவன் உதடுகள் எதையோ சொல்லிக்கொண்டிருந்தன.


தன் வாயிலிருந்த குருதியை அவன் துப்பப்போனபோது அச்சொற்கள் சித்தத்தில் உறைத்தன. “உண்க… என்னை உண்க!” அவன் திகைத்து அமர்ந்திருந்தான். “உண்க… உண்க…” என்றான் ஹுண்டன். “என்னை உன்னுடன் சேர்த்துக்கொள்க!” நகுஷன் கைகள் தளர்ந்தன. மயங்கி ஹுண்டன் மேலேயே விழுந்துவிடுபவன்போல் உணர்ந்தான். பின் அந்தக்குருதியையும் நிணத்தையும் உறிஞ்சி உண்டான். நாவால் வாயை நக்கியபடி கைகளால் ஹுண்டனின் கழுத்தைப் பற்றி அவன் மோவாயை மேலே தூக்கி வலப்பக்கமாகத் திருப்பி ஒரே மடிப்பில் கழுத்தெலும்பை மேல்நோக்கி உடைத்தான். உடல் இருமுறை துள்ளி அதிர்ந்தது. கைகள் மண்ணை அள்ளி இழுபட்டன.


நகுஷன் எழுந்து தள்ளாடி நின்றான். காட்சிகள் மயங்கி அலையடிக்க விழுந்துவிடுவோமென எண்ணி மீண்டும்மீண்டும் இமைகளை மூடித்திறந்து நிலைமீண்டான். திரும்பி அருகே நின்ற கம்பனனிடம் “இவன் உடலை குருநகரியின் கொடி தொடர கொண்டுசெல்க!” என்றான். ஓடிவந்த படைத்தலைவன் தோளைப்பற்றியபடி நின்று “நம் கோல்தாழ்த்தி இவன் உடல் மண்ணுக்கு அளிக்கப்படவேண்டும். நம் குடிகள் நாற்பத்தொருநாள் சிதைநோன்பு கொள்ளவேண்டும்” என்று ஆணையிட்டான்.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–41
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–33
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–40
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–39
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–37
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–36
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–35
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–34
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–30
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–38
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–32
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–29
வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 28
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 12
‘வெண்முரசு’ – நூல் மூன்று – ‘வண்ணக்கடல்’ – 19
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 55
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 7
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 47
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 28
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 27
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 13, 2017 11:30

March 12, 2017

ஐரோம் ஷர்மிளாவின் படுதோல்வி

Sharmila1


 


 


ஜெ,


 


ஐரோம் ஷர்மிளாவின் படுதோல்வி குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.  [வெறும் 90 வாக்குகள். நோட்டாவை விடக்குறைவு] முற்போக்கின் தோல்வி என்னும் கட்டுரையே ஒருவகையில் முன்னுரைப்பது போல இருந்தது.


 


ஐரோம் ஷர்மிளா பற்றி நீங்கள் முன்னர் எழுதிய கட்டுரைகளை வாசித்திருக்கிறேன். ஆனாலும் ஓர் இலட்சியவாதியின் தோல்வி உங்கள் கொண்டாட்டத்திற்கு உரியதாக இருக்காதென்றே நினைக்கிறேன்


 


எஸ்.ஜெயசீலன்


 


*


 



ஜெ


மே 2017ல், ஐரோம் ஷர்மிளா பற்றி கட்டுரை எழுதியிருந்தீர்கள்.


http://www.jeyamohan.in/89753#.WMXZCHqnyBZ


பொது ஜன ஆதரவு பெற்றவர் அல்ல. பத்திரிக்கைகளால் முன்னிருத்த படும் ஒரு பிம்பம் மட்டுமே, சமயம் வரும் பொழுது தெரியவரும் என்று எழுதியிருந்தீர்கள்.


இதோ மணிப்பூர் சட்ட மன்ற தேர்தலில வெறும் 90 வாக்குகள் வாங்கியிருக்கிறார். பரிதாபமாக இருக்கிறது.


சதீஷ்குமார் கணேசன்


 


*



 


அன்புள்ள ஜெயசீலன்,


 


ஐரோம் ஷர்மிளா எதன்பொருட்டு கொண்டாடப்பட்டார் என்பதிலிருந்து நாம் பேசத்தொடங்கவேண்டும். அவர் சூழியலுக்காக, ஊழலுக்கு எதிராக, மக்களைப்பிரிக்கும் இனவாதத்திற்கு எதிராக, பழங்குடிசபைகளால் ஆளப்படும் மணிப்பூரின் தேங்கிப்போன அரசியலுக்கு எதிராக இதே போன்ற போராட்டத்தை நடத்தியிருந்தால் என்ன ஆகும்? அதிகபட்சமாக நான் ஓரிரு கட்டுரைகள் எழுதியிருப்பேன். இன்று அவரைப்பற்றிப் பேசும் எவரும் அவரை தியாகி என்றோ இரும்புப்பெண்மணி என்றோ சொல்லியிருக்க மாட்டார்கள்


 


அவர் இந்தியாவெங்கும், இந்தியாவிற்கு வெளியிலும் கொண்டாடப்பட்டது இந்திய தேசியத்தை எதிர்க்கும் சக்திகளால். இதை அவரைப்பற்றி எழுதப் பட்ட நூல்களை லேசாகப் புரட்டிப்பார்த்து அவற்றில் இந்தியா எந்தெந்த அடைமொழிகளுடன் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்று பார்த்தாலே போதும். இந்தியதேசியமும், இந்திய அரசும் ஈவிரக்கமற்ற அடக்குமுறைச்சக்திகள் மட்டுமே எனச் சித்தரிக்க விரும்பும் குழுக்களின் அடையாளக்கொடியாக ஆகிவிட்டவர் அவர். அவருடைய பெரும் புகழுக்கான காரணம் அதுவே,


 


இவர்கள் எவர்? ஒன்று இந்தியா என்பது மாபெரும் தொகுப்பாக உருவாகி வந்த தேசம். தொகுப்பைநோக்கிச்செல்லும் விசையே இங்கு மையமானது, முதன்மையானது. ஆனால் அதற்கு எதிர்விசைகளும் உண்டு, அது இயல்பு. ஒவ்வொரு பகுதியிலும் இந்தியதேசியம் என்னும் தொகையடையாளத்திற்கு எதிராக தனியடையாளத்தை முன்வைக்கும் அரசியல்தரப்பு உண்டு. அவர்கள் ஷர்மிளாவைத் தங்களவராகக் கண்டனர்


 


சென்ற பல ஆண்டுகளாக இந்தியாவின் பொருளியல்வளர்ச்சிக்கு எதிரான அன்னியசக்திகளால் தொடர்ச்சியாக இங்கே பிரிவினைவாதம் ஊக்குவிக்கப்படுகிறது. [ இந்தியாவும் இதேபோல இலங்கையிலும் பாகிஸ்தானிலும் பிரிவினைவாதிகளை ஊக்குவிக்கிறது என்பதும் உண்மைதான் . அது சர்வதேச அரசியல்] மற்றநாடுகளை விட நாம் பலமத, பல்லினத் தேசியம் என்பதனால் பிரிவினைவாதம் வளர்வது எளிது. சுதந்திரப்பேச்சுரிமைகொண்ட நாடு என்பதனால் அது கருத்தியல்தரப்பாக திகழவும் வாய்ப்பு அதிகம்.


 


இவ்வாறு சென்ற ஐம்பது ஆண்டுகளாக வளர்ந்து பரவும் பிரிவினைப்போக்கு கொண்டவர்களால் ஐரோம் ஷர்மிளா பெரும் தியாகியாக கட்டமைக்கபப்ட்டார். அவருடைய அரசியலைப்பற்றிப் பேசுவதே பெரிய தப்பு என்பது வரை அந்த பிம்ப உருவாக்கம் சென்றது.


 


என் கட்டுரையில் நான் இப்படிக் கேட்டிருந்தேன். நம் ஊடகங்கள் ஐரோம் ஷர்மிளாவை தொடர்ந்து முன்னிறுத்தியும், சர்வதேசக் கவனத்திற்கு கொண்டுவந்தும் பெருமுயற்சி எடுக்கின்றன.  ஆனால் ஏன் மணிப்பூரில் அவரது அந்த மகத்தான தியாகம் அலைகளை கிளப்பவில்லை?அதற்கு மணிப்பூரே ஐரொம் ஷர்மிளாவின் பின்னா ஒருங்கிணைந்து நின்றிருக்கிறது என்றும் நான் அவரை அவதூறுசெய்கிறேன் என்றும் இங்கே பலர் எழுதிக்குவித்தார்கள்


 


நான் சுட்டிக்காட்டியது அவருடைய அரசியலின் எதிர்மறைத்தன்மை, ஜனநாயகவிரோதமான மூர்க்கம், பழங்குடி இனவாத அரசியலின் பிற்போக்குத்தன்மை ஆகியவற்றைப்பற்றி மட்டுமே. மணிப்பூர் உட்பட வடகிழக்குப்பகுதிகளில் இருப்பது இந்தியதேசியத்திற்கு எதிரான வட்டார தேசியங்களின் எழுச்சி அல்ல.  தங்கள் நிலம் தங்களுடையது மட்டுமே என மூர்க்கமாக வாதிடும் பழங்குடி அரசியல் அது.


 


வெறுமே இணையத்தில் தேடினாலே இந்த அத்தனைபழங்குடிகளும் தங்கள் பூர்வீக நிலம் என்றும் தங்கள் நாடு என்றும் தனித்தனியாக பிரிவினைகோரும் நிலம் பொதுவானஒன்றே என்பதைக் காணமுடியும். அங்கே குக்கிகள் மீய்ட்டிகள் நாகாக்கள் அங்கமிகள் அத்தனை பேருக்கும் தனிநாடுகள் வேண்டும். ஆனால் அந்நாடு ஒரே நிலத்தில் உள்ளது. ஒவ்வொரு பழங்குடிக்கும் மற்ற அனைத்துப் பழங்குடிகளும் தங்கள் நாட்டில் அத்துமீறிய அன்னியர்கள்.


 


இந்திய அரசு இவர்கள் மேல் அரசுவன்முறையைச் செலுத்தி அங்கே அரசு ஒன்றை நிலைநாட்டியிருக்கிறது. அதன் ஆற்றல் குறையும்போதெல்லாம் அப்பழங்குடிகள் ஒருவரை ஒருவர் கொன்று குவித்த வரலாறே உள்ளது. அரசுடன் மோதி இறந்தவர்களின் எண்ணிக்கையைவிட இவ்வாறு செத்தவர்களின் எண்ணிக்கை அதிகம். அதையும் இணையத்தை சாதாரணமாகப்பார்த்தாலே தெரிந்துகொள்ளமுடியும்.


 


அதாவது மதுரையில் தேவர்கள் தனிநாடு கேட்டு ஆயுதப்போரில் ஈடுபடுகிறார்கள் என்று கொள்வோம். மற்றசாதியினரை தங்கள் தயவில் விட்டுவிட்டு அரசு வெளியேறவேண்டுமென கோருகிறார் என்று கொள்வோம். அது எந்தவகை அரசியல்? ஐரோம் ஷர்மிளா போன்ற ஒருவர் மதுரையில் அரசு வெளியேறும்வரை உண்ணாவிரதம் இருப்பார் என்றால் அது அகிம்சைப்போராட்டமா என்ன?


 


அகிம்சைப்போராட்டம் என்பது ஆயுதமில்லா வன்முறையோ, கட்டாயப்படுத்தும் உத்தியோ அல்ல. அது தன் கோரிக்கையை ஒருமுகப்படுத்தும் ஓரு வழிமுறை. தன் தரப்பை பொதுமக்களிடையே உத்வேகத்துடன் எடுத்துச்செல்லும் பிரச்சார முறை. ஒருவர் அதில் தான் எந்த அளவுக்கு தீவிரமாக இருக்கிறேன் என்பதை காட்டும் ஒரு நேரடிக் களச்செயல்பாடு.  அதனூடாக மக்களின் ஆதரவை பெற்று மேலும் மேலுமென போராட்டத்தை முன்னெடுப்பதே காந்திய வழிமுறை.


 


மக்களின் தேவைகள், வரலாற்றுச்சந்தர்ப்பங்களை ஒட்டி அந்தக் கோரிக்கைகளையும் போராட்டங்களையும் காந்தி வளர்த்தெடுப்பதை, தேவையென்றால் நிலைமாற்றம் செய்துகொள்வதை , வலுப்பெறும் வரை ஒத்திப்போட்டு மீண்டும் தொடங்குவதை காணலாம். மூர்க்கமான கண்மூடித்தனமான பிடிவாதமாக எந்த உண்ணாவிரதப்போராட்டத்தையும் அவர் செய்யவில்லை. அவருடைய எல்லா போராட்டங்களும் மக்களிடம் செல்லும் பாதைகள்தான்.


 


ஐரோம் ஷர்மிளாவுக்கும் மணிப்பூர் யதார்த்தத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என நான் பலமுறை ஆணித்தரமாகச் சொல்லியிருக்கிறேன். ஐரோம் ஷர்மிளா மணிப்பூரில் ஒர இனக்குழுவின் பிரதிநிதி. அக்குழுவுக்குள்ளே கூட அவருக்கு பெரிய ஆதரவு இல்லை, வரும்காலத்தில் அது தெரியவரும். இது நான் முன்பு எழுதியது.


 


அன்று அவரை ஒட்டுமொத்த மணிப்பூரின் அடையாளமாக, இரும்புப்பெண்மணியாக, பெண்காந்தியாக இங்கே சொல்லிக்கொண்டிருந்தவர்கள் நான் பொய்சொல்கிறேன் என வெறுப்புரை செய்தனர். இன்று அப்பட்டமாக உண்மை கண்ணெதிரே தெரிந்தபின்னரும்கூட அவர்கள் அந்தர்பல்டிகள் அடிக்கவே முயல்வார்கள். அரசியல்சார்புநிலை என்பது பலசமயம் ஒருவகை மனநோய்.


 


இலட்சியவாதத்தின் தோல்வி இது என சிலர் சொல்கிறார்கள். டிராஃபிக் ராமசாமி போன்ற ஒரு இலட்சியவாதி தேர்தலில் நின்றாலும் இதே கதிதான் வரும், ஆகவே ஐரோம் ஷர்மிளாவின் தேர்தல்தோல்வியை வைத்து அவர் தோற்றுவிட்டதாகச் சொல்லக்கூடாது என்று வாதிடுகிறார்கள்


 


அந்த ஒப்பீடே பிழையானது. இலட்சியவாதிகள் ஒருசமூகத்தின் உயர்ந்த இலட்சியங்களை பிரதிநிதித்துவம் செய்பவர்கள். இலட்சியங்கள் எல்லாகாலத்திலும் எங்கும் சிறுபான்மையினருக்குரியவைதான். சமூகத்தின் கூர்முனைகளில் மட்டுமே இருக்கும் ஒளி அது. இலட்சியவாதிகள் பொதுமக்களை நோக்கிப் பேசுவதில்லை, பொதுமக்களைத் திரட்ட முயல்வதுமில்லை. அவர்கள் தனிப்பயணிகள். ஆகவே கொஞ்சம் அந்நியர்கள். கொஞ்சம் ‘எக்ஸண்டிரிக்குகளும்’கூட


 


ஐரோம் ஷர்மிளா மணிப்பூரின் இலட்சியவாதம் எதற்கும் பிரதிநிதி அல்ல. அங்குள்ள இனக்குழு,பிரிவினை அரசியல் ஒன்றின் உலகளாவிய முகம் அவர். அவர் மக்களைநோக்கித்தான் பேசிக்கொண்டிருந்தார். மக்களை ஒருங்கிணைக்கவே முயன்றார். இருபதாண்டுகளுக்கும் மேலாக அவருடைய உடன்பிறந்தவர் உட்பட ஒரு பெரிய கூட்டமே அமைப்பாகத் திரண்டு அரசியல்நடவடிக்கைகளில்தான் ஈடுபட்டுவந்தது


 


ஆகவே ஐரோம் ஷர்மிளாவின் தோல்வி என்பது அவருடைய அரசியல்தரப்பின் தோல்வியேதான். இலட்சியவாதத்தை அதை எத்தனைபேர் ஏற்றுக்கொண்டார்கள் என்பதை வைத்து மதிப்பிடமுடியாது. ஆனால் அரசியலை அதை எத்தனைபேர் ஏற்றுக்கொண்டார்கள் என்பதை வைத்துத்தான் மதிப்பிடவேண்டும்.


 


அப்பட்டமாகச் சொன்னால் ஐரோம் ஷர்மிளா அங்கே இந்திய அரசால் மணிப்பூர் மக்கள் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை உலகுக்குக் காட்டத்தானே உண்ணாவிரதம் மேற்கொண்டார். அவர் பெற்ற ஓட்டுகளில் இருந்து அவர் சொன்னதை அந்த மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றுதானே அர்த்தம்? அவர் முன்வைத்தது பொய்யான ஒரு சித்திரமென்பதற்கான ஆதாரம்தானே அது?


 


இல்லை அவர் இலட்சியவாதி . அவர் பட்டினி கிடந்தார், ஆகவே அவரை ஆதரித்திருக்கவேண்டும் அம்மக்கள் என நாம் இங்கிருந்து சொல்வோமென்றால் அது எவ்வளவு பெரிய அபத்தம்!


 


ஐரோம் ஷர்மிளாவின் படுதோல்வி –அதை தோல்வி என்பதை விட மாபெரும் அவமதிப்பு என்றே சொல்லவேண்டும் – அவர் மணிப்பூரின் மக்களின் யதார்த்தத்தில் இருந்து மிகமிக விலகி எங்கோ நிற்பதைத்தான் காட்டுகிறது.  முகநூலிலும் ஊடகங்களிலும் உள்நோக்கம் கொண்ட அரசியல்கூச்சலிடும் கும்பலை தவிர்த்துவிட்டு நம்மூரில் வேலைபார்க்க வந்திருக்கும் நான்கு மணிப்பூர் பையன்களிடம் பேசினாலே நாம் அங்குள்ள உண்மையை தெரிந்துகொள்ளமுடியும் நேரில் மணிப்பூரில் ஒரு சுற்றுசுற்றி நான்குபேரிடம் பேசினால் முகத்தில் வந்து அறையும் அந்த உண்மை.


 


மணிப்பூர் மக்கள் நவீனவாழ்க்கையை விரும்புகிறார்கள். அங்கே எல்லாச் சுவர்களிலும் பொறியியல், மருத்துவக் கல்லூரி விளம்பரங்கள்தான், [நம்மூர் எஸ்.ஆர்.எம் கல்லூரி, மணிப்பால் மருத்துவக்கல்லூரி] சிற்றூர்களில்கூட போட்டித்தேர்வுப் பயிற்சிநிலையங்களின் டியூஷன் நிலையங்களின் கணிப்பொறிப்பயிற்சி நிலையங்களின் விளம்பரங்கள் நிறைந்துள்ளன, செல்பேசிகள், சட்டைகள், செருப்புகளின் விளம்பரங்கள்.


 


ஆனால் சீனாவால் பேணிவளர்க்கப்படும் தீவிரவாதம் அங்கே வாழ்க்கையை முடக்கிவைத்துள்ளது. அயலூர் லாரிகள் மேல் தாக்குதல். சாலை மற்றும் பாலங்கள் போடும் குத்தகைதாரர்கள் மேல் தாக்குதல். பெரிய நிறுவனங்கள்மேல் உச்சகட்ட கப்பவசூல். சந்தைகள் சூறையாடுதல். ஆகவே பொருளியல் உறைந்து நிற்கிறது. ஒவ்வொருநாளும் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அங்கிருந்து இந்தியாவெங்கும் வேலைதேடிக் கிளம்புகிறார்கள். கடைக்கோடியில் நாகர்கோயில் ஓட்டல்கள் வரை வந்திருக்கிறார்கள் என்றால் அவர்களின் தவிப்பும் தேவையும் என்ன என்று புரிந்துகொள்ளலாம்.


 


ஐரோம் ஷர்மிளா பிரிவினைவாதக் கோரிக்கையை முன்னெடுத்த சில செயல்பாட்டுக் குழுக்களால் உருவாக்கப்பட்ட அடையாள முகம். அவர்களின் நோக்கம் மணிப்பூரின் நலனோ மக்கள் வாழ்வோ அல்ல. அவர்கள் பெரும்பாலும் நிதிபெற்றுச் செயல்படும் அன்னியக்குழுக்கள். அவர்கள் ஒருகட்டத்தில் ஐரோம் ஷர்மிளாவை கைவிட்டனர். அவர்கள் பேசிய அரசியல் மணிப்பூரை பொருளியல்ரீதியாக திவாலாக்கிவிட்டு தானும் அழிந்துகொண்டிருக்கிறது. சீனாவால் நடத்தப்படும் மறைமுகப்போராக மட்டுமே அங்கே இன்று தீவிரவாதம் நீடிக்கிறது. ஐரோம் ஷர்மிளா தன் அந்தர உலகில் மீண்டும் தீவிரவாத ஆதரவு, இந்திய எதிர்ப்பு அரசியல் பேசிக்கொண்டிருக்கிறார்


 


ஐரோம் ஷர்மிளா ஓய்வெடுக்கட்டும். அவரது அரசியல்  பெரிய அழிவை உருவாக்கிவிட்டு ஓய்ந்துவிட்டது. மணிப்பூரின் இளைய தலைமுறை வாழ்வதற்கு இனியாவது ஐரோம் ஷர்மிளா அனுமதிக்கவேண்டும்.


 


உண்மையில் எத்தனை புரிதலற்ற மூர்க்கமானதாக இருந்தாலும், எத்தனை எதிர்மறைத்தன்மைகொண்டதாக இருந்தாலும் , அந்தப்போராட்டத்திலுள்ள அர்ப்பணிப்பும் அவர் அடைந்த துன்பங்களும் என்னை நெகிழவே வைக்கின்றன. எதன்பொருட்டாக இருந்தாலும் ஒருவர் தன்னை முழுமையாக அர்ப்பணித்துப் போராடுவது ஒரு உயர்விழுமியம் என்றே என் எழுத்தாளனின் அகம் சொல்கிறது. காலாகாலமாக வீரர்களை பரணிபாடி ஏத்திய புலவர்களின் மரபு நான்


 


ஆயினும் இந்த  தேசம் இனக்குழுக்களின் பண்பாடுகளின் மதங்களின் தொகுப்பு. வரலாற்றுப்போக்கில் இது ஒன்றாக இணைந்து மாபெரும் பக்கள்பரிமாற்றம் ஒன்று நிகழ்ந்துவிட்டிருக்கிறது.ஆகவே இது ஒன்றாகவே நீடிக்கமுடியும். பிரிவது அழிவை மட்டுமே உருவாக்கும்.


 


பிரிவினையை எதன் பொருட்டு பேசுபவர்களும் அழிவை வரவேற்பவர்கள். தவறான அரசியலின்பொருட்டு தவறான போராட்டமுறை ஒன்றை மேற்கொண்டவர் என்றே ஐரோம்ஷர்மிளாவை வரலாறு நினைவுகொள்ளும். அது பிறருக்கும் முன்னுதாரணமாக அமையவேண்டும்.


 


ஐரோம் ஷர்மிளா வென்றிருந்தால் உருவாகியிருக்கக்கூடியது அராஜகமும் அழிவும். ஆகவே அவர் வெல்லவில்லை என்பது வரவேற்புக்குரியது


 


ஜெ


 


 


 


 


ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும் – 1

ஐரோம் ஷர்மிளாவும் அண்ணா ஹசாரேவும்- 2


 


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 12, 2017 11:34

நிழற்தாங்கலில் “ஜெயமோகனுடன் ஒரு நாள்’

11


நாகர்கோயில் “நிழற்தாங்கல் படைப்பிற்கான வெளியின்” சிறப்பு நிகழ்வாக மார்ச் 26 ஞாயிறு “ஜெயமோகனுடன் ஒரு நாள் ” சந்திப்பு நடைபெற உள்ளது. காலை அமர்வு 8 மணிக்கு கவிஞர் பா. தேவேந்திரபூபதி Devendhira Poopathy Bhaskarasethupathy கவிதைகள் வாசித்து இந்நிகழ்வைத் தொடங்கி வைப்பார். மதிய உணவு இடைவேளைக்குப் பின்னர் என்னுடைய Lakshmi Manivannan சில கவிதைகள் வாசிப்புடன் மதிய அமர்வு தொடங்கும்.


நாங்கள் ஏற்பாடு செய்த சில நிகழ்வுகளில் ஜெயமோகனுடன் சரியாக உரையாட இயலவில்லை என்கிற குறை வாசகர்களுக்கும், சக படைப்பாளிகளுக்கும் உள்ளது. அவர்கள் பலமுறை இதுகுறித்துத் எங்களிடம் தெரிவித்து விட்டார்கள். அக்குறையை அகற்றும் விதமாகவும் நிழற்தாங்கல் இந்நிகழ்வை ஏற்பாடு செய்து வருகிறது. ஆசை பலமடங்கு இருப்பினும் கூட ஐம்பது பேருக்கும் அதிகமாக இப்போது இந்நிகழ்வில் பங்கேற்பாளர்களை அனுமதிக்கும் சூழ்நிலை இல்லை. ஐம்பது பேருக்கு உரிய ஏற்பாடுகளை செய்து வருகிறோம். இந்நிகழ்வில் கலந்து கொள்வதற்கு கட்டணங்கள் ஏதும் கிடையாது. வருகை தர விரும்புபவர்கள் காலையுணவை முடித்து விட்டு வாருங்கள். மதியம் சிறப்பான சைவ உணவிற்கு நாங்கள் ஏற்பாடு செய்திருக்கிறோம். அதுபோல இருவேளைகள் தேநீருக்கும் ஏற்பாடு செய்திருக்கிறோம். வருகை தர விரும்புபவர்கள் தங்கள் வருகையை முன்கூட்டி எங்களுக்கு உறுதி செய்து தெரிவிக்க இயலுமேயானால் ஏற்பாடுகளை கூடுமானவரையில் குறைவின்றி செய்ய அது எங்களுக்கு உதவியாக இருக்கும்.


இலக்கியம், கலை, தத்துவம், அறிவு, பின்நவீனத்துவம் என்று எது பற்றி வேண்டுமாயினும் இந்நிகழ்வில் ஜெயமோகனுடன் மனம் திறந்து உரையாடலாம்.


ஜெயமோகனுக்கும் எனக்குமான உறவு தொண்ணூறுகளில் தொடங்கியது. இருவருக்கும் மையமாக அப்போது சுந்தர ராமசாமி வாழ்ந்த காலம் அது. இப்போது நினைத்துப் பார்க்கையில் ஒருவருக்கொருவர் ஆச்சரியபடத்தக்க வகையில் அப்போது நிறைய கால அவகாசம் இருந்தது. அது ஒரு சூக்குமமான இணைப்புதானோ என்னமோ? சுராவை சந்திக்காமல் இருந்திருந்தால் என்னைப் பொறுத்தவரையில் தடம் தெரியாமல் அழிந்திருப்பேன் என்பதே உண்மை.


சாராம்சமாக தலைகீழாக உள்ளிறங்கியிருப்பவர் அவர். தெய்வம்தான் இந்த வாய்ப்புகளை சூது செய்திற்றோ என்கிற ஐயம் எப்போதும் எனக்கு உண்டு. அவரோடு நெருங்கியிருந்த காலங்கள் எட்டு வருடங்கள். ஜெயமோகனுக்கு இன்னும் அதிகம் இருக்கும். அவரோடு இணைந்திருந்த காலங்களில் அவர் கூற்றுகளில் பலதும் எனக்கு விளங்கவில்லை என்பதே உண்மை. ஆனால் அவை எதுவுமே மனதிலிருந்து விட்டுப் போயிருக்கவில்லை. பௌதீகமாக அவரை இழந்த பிறகுதான் அவர் எனக்கு அர்த்தமாகத் தொடங்கினார். ஜெயமோகனுக்கும் அவருக்கும் வாழுங்காலத்தின் எங்கள் சந்திப்பின் தொடக்க காலத்திலிருந்தே புரிந்து கொள்ளுதலில் இடைவெளிகள் இருந்ததில்லை. ஜெயமோகன் அவரோடொப்பம் அவர் யார் என்பதை கணிசமாக புரிந்து கொண்டிருந்தார்.


எம்.கோவிந்தன், பி.கே.பாலகிருஷ்ணன், டி டிகோசாம்பி போன்றோர் விஷயங்களில் இருவருடைய பார்வைகளிலும் அதிக இடைவெளிகள் கிடையாது. ஜெயமோகன் என்னுடைய மனவேகத்திற்கும் முப்பது வருடங்களுக்கும் அதிகமான தொலைவில் சிந்திப்பவராகவே அப்போதும் இருந்தார். இப்போதும் இருக்கிறார். சுராவை அவர் கடந்து செல்லும் போது சுராவின் நிழல் உறுதியாக என்னில் கட்டியாக பற்றிற்று. சுராவை என்னிலிருந்து கழற்றுவது அவ்வளவு எளிதான காரியமல்ல.


சுராவின் போதாமைகள் குறித்து பேச்சு வரும்போதும் அதன் நீட்சியாகத் தான் ஜெயமோகனைப் பார்க்கிறேன். அதன் பிரம்மாண்டமானதொரு நீட்சி. கழிந்த சந்திப்பில் சுரா நம்மை காப்பாற்றியிருக்கிறார் என்று ஜெயமோகன் சொன்னதைக் கேட்க நெகிழ்ச்சியாக இருந்தது. அதுதான் உண்மை. எல்லோரையும் போல கெட்டி இறுக்கமடைந்தோ, சமய சார்புகளிலோ மோதிவிடாமல், மோதிக் சிதறாமல் படைப்புப் பார்வைகளில் நின்று அவர் எங்களை பாதுகாத்திருக்கிறார்.


ஜெயமோகனைப் பொறுத்தவரையில் ஆரம்பத்திலிருந்து இன்றுவரையில் அவர் என்னுடைய பார்வைகளில், கண்ணோட்டங்களில் புதிதாக சிலவற்றை திறந்து விடுபவராகவே இருந்து வருகிறார். ஒவ்வொரு சந்திப்பிலும் அது நிகழ்கிறது. என்னை எந்த இடத்தில் திறக்கிறார் என்பது எனக்குத் தெரிவதை போன்றே அவருக்கும் தெரிந்திருக்கும் என்றே நம்புகிறேன். அதனாலோ நேரடி தொடர்பினாலோ மட்டுமல்ல. உடன் வாழும் காலத்திலேயே அவர் டால்ஸ்டாய். தாஸ்தெவெஸ்கி போன்றதொரு அபூர்வமாக அவர் உருவெடுத்திருக்கிறார். அவருடைய பெறுமதிகள் அனைத்துமே அதனால் ஆனவை. பலருக்கும் அவர் நம்முடன் உடனிருப்பதால் அவர் இருப்பின் ரூபம் கண்மறைக்கிறது.


ஜெயமோகனுடன் சந்திப்பது எல்லோருக்கும் எப்போதும் உத்வேகமளிப்பதாகவே இருக்கும். எதிர்மையாகத் தோன்றுவோருக்கும் கூட உத்வேகமளிக்கும். அந்த உத்வேகம் குறுக்கும் நெடுக்குமாக நம்மை படைப்பின் திசை நோக்கி உந்தக் கூடியது.


வாருங்கள் சந்திப்போம்.


வருகையை அறியத் தாருங்கள்


நிழற்தாங்கல் படைப்பிற்கான வெளி


லட்சுமி மணிவண்ணன்


 


7 / 131 E பறக்கை @ போஸ்ட், நாகர்கோயில் குமரி மாவட்டம்


தொடர்பு எண் – 9362682373


மின்னஞ்சல் – slatepublications @gmail. com


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 12, 2017 11:34

இரு கடிதங்கள்

saravanan


 


மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,


உங்களை சந்திக்க வேண்டும் என்ற சந்தர்ப்பம் டெல்லிக்கு நீங்கள் சாகித்திய அகாடமி விழாவிற்கு வந்திருந்த போது கிடைத்தது. உவகை தரத்தக்க மகிழ்ச்சியான நேரங்கள், நான் விரும்பும் ஆதர்ச எழுத்தாளருடன் 2 மணி நேரம் என்பது எளிதாக கிடைக்க பெறாத ஒன்று.


இலக்கியம் அல்லாத பொது தகவல்களை சார்ந்தே இந்த சந்திப்பு அமைய வேண்டும் என்று விரும்பினேன். இலக்கியம் சார்ந்த அறிவார்ந்த உரையாடல் உங்களுடன் நிகழ்த்த குறைந்தபட்ச தயாரிப்போடு உங்களை அணுக வேண்டும் என்பதை உங்களிடமிருந்து கற்று கொண்டிருந்தேன். சராசரி மனிதர்களுக்கும், எழுத்தாளர்களுக்கும் இடையே உள்ள வேறுபாடு நாம் அறிய விரும்பும் ஒரு பொது தகவலின் மேல் 100 சதவீத உண்மை தரவுகளும், வரலாற்று பின்புலமும் அந்த விஷயத்தின் மேல் நுண்ணிய அவதானிப்புகளும் இல்லாமல் உங்களிடமிருந்து எந்த செய்தியும் கிடைக்காது என்பதே.


மனைவியின் ஊர் பெயர் சொல்ல வந்து, திருக்குறுங்குடிக்கு உள்ள வரலாற்று இடமும். அந்த ஊரின் ஒழுங்கிற்கான காரணமும், நம்பி மலையின் குதிரை பாதையும் அதன் தேவையும் பற்றி அறிய முடிந்தது.


புலிநக கொன்றை நாவலில் வரும் திருநெல்வேலியின் சுதந்திர போராட்ட அரசியல் நிகழ்வுகள் குறித்து நீங்கள் தந்த விரிவான பார்வை, காங்கிரஸ் பேரியக்கத்தின் முதல் மாநாடு நெல்லையில் நடைபெற்றது பற்றி நீங்கள் சொன்னது. 100 ஆண்டு நிகழ்வாய் கொண்டாடப்பட வேண்டிய திருநெல்வேலி சுதந்திர செயல் திட்டத்தின் நிகழ்ச்சியை தவற விட்டதன் அறியாமையை நினைத்து வருத்தமுற்றேன். கம்யூனிஸ்ட் அரசியலின் வளர்ச்சி மீண்டும் திருநெல்வேலியில் 1940-1950 களில் உருவாக துவங்கியதையும், மொத்த தமிழ்நாட்டில் அதன் இடத்தை திராவிட காட்சிகள் நிரப்ப துவங்கியதையும். அதற்க்கு பின்னால் இருந்த பிராமண வெறுப்பு முழக்கமும், இன்று வரை அதை மட்டும் திரித்து பொய்யுரைத்து அவர்கள் நடத்தும் அரசியல் இயக்கம் பற்றியும் கூறினீர்கள். திராவிட அரசியல் ஒரு ஜனரஞ்சக திரைப்படம் போல் தன்னை வடிவமைத்து கொண்டதையும், அதனால் அறிவுத்துறையில் அக்கறை இல்லாத, பொறுப்பற்ற இரண்டு தலைமுறைகளை விலை கொடுத்துள்ள தமிழக மக்களின் அடிப்படை பொது அறிவை பற்றி சொன்னீர்கள்.


சகோதரத்துவம் பற்றி நான் கேட்ட கேள்விக்கு விளக்கம் அளிக்கும் வகையில் அந்த உறவு நிலையின் புரிதல் பொருட்டு நீங்கள் சொன்ன சம்பவங்கள் அதன் மொத்த சித்திரத்தையும் எனக்குள் உருவாக்கி தந்தது. எல்லைக்கு உட்பட்ட, எல்லைக்கு உட்படாத உறவின் தளங்களை வாழ்வின் உதாரணங்கள் வழியாக விளக்கினீர்கள். சகோதரர்களுக்கு இடையே உள்ள கட்டுபாடுடைய பொறுப்பும், கட்டுப்பாடற்ற சுதந்திரமும் சீசா விளையாட்டின் இரண்டு இருக்கைகள் போல் நிகழ்கிறது.  பெரும்பாலும் அண்ணன் கீழிருக்க தம்பி உயரத்திலே இருக்கிறான். அண்ணன் உருவாக்கும் தந்தையின் இடம் ஒட்டு மொத்த சமூகத்தின் பொது சிந்தனை வழியாக உருவாகி வருகிறது. உண்மை தான், ஆனால் இந்த வளர்ப்பு முறை திடமாய் முடிவெடுக்கும் ஒருவித பொறுப்பு மனநிலையுடைய ஒருவனையும். ஊசலாடும் மனம் நிறைந்த சார்ந்து ஒழுகும் தன்மையுடைய ஒருவனையும் உருவாக்கி விடுகிறது. இது தனிப்பட்ட முறையிலும், நான் ஆராய்ந்த வரையிலும் பெரும்பாலும் இந்த வேறுபாடு ஒரு பரிணாம மாற்றம் போல் எல்லா அண்ணன் தம்பிகளிடமும் இருக்கிறது.


நான் கேட்க நினைத்தது இந்த கேள்வியை தான். நீங்கள் விளக்கிய அத்தனை உதாரணங்களும் இந்த கேள்வியை தாண்டிய ஒரு புரிதலை எனக்கு தந்தது.  கடமையும் பொறுப்பும் கொண்ட ஒருவரிடத்தில் அதிகாரத்தின் குரல் சேர்ந்தே ஒலிக்கும். இது குடும்பம், சமுதாயம், நிர்வாகம் என எங்கும் அப்படிதான். இந்த புரிதல் ஒரு இலக்கிய வாசகனை அவன் நுண்ணுணர்வு வழியாக எளிதாக அடையும் என்று நீங்கள் சொல்லியது என்னை ஒரு நிமிடம் உணர வைத்தது. ஒரு இலக்கிய வாசகன் எந்த நிகழ்வையும் அசட்டு தனமாக சட்டை செய்யாமல் அதன் இயல்பின் தீவிரத்தை உணர்ந்து கொள்வான் என்ற உங்கள் வார்த்தை எனக்கு இந்த குணாதிசயத்தை மேல் உள்ள வரலாற்று பார்வையை உருவாக்கியது. இந்த கடமை என்பது நம் குடி கொண்டுள்ள அறம். அந்த இடம் அதன் இயல்பை எல்லாரிடத்திலும் இருந்து எடுத்து கொள்கிறது. அந்த புள்ளி தான் அந்த குடும்பத்தின் துவக்கம். இப்போது உணர்கிறேன் எங்கள் வீட்டில் அண்ணன் முதலில் வாங்கி குடுத்த கைபேசி என்பது அவனின் முதல் வெற்றி, அது எங்கள் அனைவராலும் கொண்டாடப்பட்டது. உங்கள் மொத்த பயணங்களையும் திருவட்டாரு வீட்டில் இருந்து பின்தொடர்ந்து கொண்டே இருக்கும் அண்ணனின் கண்கள் தான், யாவரும் கைவிட்டு தனிமையில் நிற்கும் போது நம் வருகையை நோக்கி காத்திருக்கும் கண்கள்.


என்றும் வாசிப்புடன்


சரவணன்


***


அன்புள்ள சரவணன்


சந்திப்பு மிக மகிழ்ச்சியாக இருந்தது. டெல்லியில் சற்றே தனிமையில் இருந்தேன். உங்கள் வருகை அம்மனநிலையை மாற்றியமைத்தது.


மீண்டும் சந்திப்போம்


ஜெ


***


sipi


 


வணக்கம்,


நான் சிபி சென்னையிலிருந்து, நேற்று இரவு சுமார் பதினோரு மணியளவில் என் மனைவி, ” ‘தஞ்சாவூர் சந்திப்பு’னு போட்டு ஒரு மெயில் வந்துருக்கு என்று கூறியவுடன் வேகமாக வீடடைந்து அம்மின்னஞ்சலை வாசித்தேன்; பல நாள் கணா நனவாகும் என பூரித்தேன்; வெற்றி என்பதை தன் பார்வதிபுரம் தமிழால் வெற்டி என கூறுபவரை காணபோகிறோம் என அகமகிழ்ந்து அலாரம் அலறியது கூட தெரியாமல் தூங்கினேன்.


இன்று கல்லூரி அடைந்ததும், என் சகா ரிச்சர்ட் அந்த குண்டை சுமந்து தேநீர் இடைவேளையில் வந்தார், “சார் அடுத்த சனி லீவ, இந்த சனிக்கு ப்ரிபான்ட் பண்ணீட்டாங்க சார். 15க்கு மேல எப்பவேனாலும் இன்ஸ்பெக்ஸன் இருக்கும் சார்” என்றார்.


உணவு இடைவேளையின் பொழுது திரு. கிருஷ்ணன் அவர்களை அழைத்து என்னை பற்றிய குறு அறிமுகத்துடன், “சார், 18 வர முடியாது, 19 காலை வந்துடரேன், அவர பாக்கணும்” என்றேன். அவர் பண்பாக மிரட்டும் மிலிடரி அதிகாரி போல, “அப்படியெல்லாம் முடியாது சார், அனௌன்ஸ் பண்ணுணதுலயே போட்டுருக்கே, உங்க பேர சொல்லுங்க லிஸ்டுல இருந்து தூக்கிடலாம் என்றார்.


“சார், அவர பாக்கரதுக்கு மட்டுமாவது வரனே” என்றேன் மீண்டும்.


“இன்னொரு அக்கேஷன்ல பாத்துக்குங்க, வீட்ல கூட போய் பாருங்க” என்றார், இந்த முறை நம் வீட்டு டாக்டர் மாமா போல பேசினார்.


இராணுவத்திலிருந்து வரும் அப்பாவுக்காக காத்திருக்கும் குழந்தைக்கு, இம்முறை அப்பாவுக்கு விடுப்பு கிட்டவில்லை என வரும் கடிதம் போல இருந்தது எனக்கு. அடுத்த வாசகர் சந்திப்பிர்க்கு காத்திருக்கிறேன்.


சரி தஞ்சை என்றால் தஞ்சை, ஹரிதமென்றால் ஹரிதம், சந்தித்தே தீர வேண்டும்.


சிபி


***


அன்புள்ள சிபி


சில கட்டுப்பாடுகளை ஏன் அமைக்கிறோம் என்றால் அது பிறருடைய இடத்தை நேரத்தை அபகரிக்கக்கூடாது என்பதனாலும் சந்திப்பு வீணாகிவிடக்கூடாது என்பதனாலும்தான். நானே நேரத்தையும் பணத்தையும் செலவழித்தே வருகிறேன்


மீண்டும் சந்திப்போம்


ஜெ


***


தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 12, 2017 11:33

ஒற்றைக்காலடி

Kanyakumari


 


 


ஒற்றைக்காலடியைத் திரும்ப திரும்ப மீட்டுருவாக்கம் செய்து கொண்டிருந்தேன். அப்பா காலையில், மக்கா! நைட் ஃபுல்லா ஒரே கனவு என்றார். ஒத்தைக் காலடியில தவம் செய்யுதா அம்மை. எதுக்கு? யாருக்கு? கொற்றவை! கொற்றவைனு காதுல உழுந்துட்டே இருக்கு. என்னதுனு சொல்லத் தெரியல. அரங்குக்குள்ள போய் கன்னியாரி அம்மைய பாத்தேன். என்னத்துக்குட்டி இப்படி நிக்க. உனக்கு காலு வலிக்கலியான்னேன். அவ உனக்கு கடைசி தங்கச்சி மக்கா! அப்படித்தான் தோணுகு.


இத்தனைக்கும் அப்பா அந்த நாவலின் அட்டைப் புத்தகத்தை மட்டுமே பார்த்திருந்தார். தீயெரியும் காகிதம் வழி. அம்மைக்கு என்ன வேண்டும்? அவளுக்கு கால் வலிக்காதுடா? என் அம்மா சொன்னாள். என்னால் நம்ப இயலவில்லை. உங்கள் மகள் அவதானித்ததை என் அம்மையும் சொல்கிறாள்.


korravai


 


ஏன் என்று கேட்டேன். அவ அம்மைலா மக்கா. அம்மைக்கு வேறேன்ன வேணும். என் பிள்ளைகள் நல்லா வாழணும். அதுக்கு தானே அவள் உடல் பொருள் ஆவியெடுத்து வந்துருக்கா. அதுக்காக அவ என்னமும் செய்வா? ஏன்னா! அதுதான் அம்மை. அவ தனக்கு ரத்தத்த உட்டாக்கும் உருவாக்கிருக்கா இந்த மொத்த ஒலகத்தையும். அவ செய்யெதெல்லாம் பிள்ளைகளுக்காக்கும். பிள்ளைகளுக்கு செய்யதுக்கு எந்த அம்மைக்காது வலிக்குமாலெ.


அப்பா கனவின் விளிம்பில் இன்னும் நகராமல் இன்னும் கனவுக்கண்களுடன் முழித்துக் கொண்டிருந்தார். அம்மை அடிக்கடி சொல்லுவா! உங்கப்பா எனக்கு கடைசி பிள்ளையாக்கும். நான் போய்ட்டன்னாலும் அப்பாவ நல்லா பாத்துக்குவீங்களாலனு என்னிடம் தம்பியிடமும் அடிக்கடி கேட்பார்கள். அம்மைக்கு ஒலகம் பிள்ளைகளாலானது.


ஆம். அந்த அம்மைக்கு வலி இல்லை. காலமில்லை. எந்த விதிகளுமில்லை. அவள் கருணையே அனைத்துமாய் பூமி முழுதும் இடைவிடாது நிரம்பிக்கொண்டிருப்பவள். கிழித்து நிரப்புங்கள் பிள்ளைகளே. பிரபஞ்சம் முழுமைக்குமாய் வளர்ந்து நிறையுங்கள். அதற்காகவே தவமிருக்கிறேன். என்னுள் நிறைத்து சிந்தும் குருதியை உண்டு அனைத்திலும் இடைவெளியின்றி நிரப்புங்கள்.


இத்தனையும் நிகழ்ந்தது. இரண்டு நாள் முன்பு கன்னியாகுமரிக்கு போய் வந்த பிறகு. சின்ன வயதில் ஒவ்வொரு சுசீந்திரம் தேரோட்டத்துக்கும் குமரியன்னையைப் பார்க்க சென்றிருக்கிறேன். அவளின் இள நகையில் மூக்குத்தி ஜொலிப்பில் சந்தனக்காப்பு சாத்திய வட்ட முகத்தில் நான் எப்பொழுதும் ஒன்றை தேடிக்கொண்டிருந்தேன். என்ன அது என்று சொல்ல வழியின்றி. பார்த்துக் கொண்டிருக்கிறேன்.


srinarayani2


ஜோ.டி. க்ரூஸ். அவள் தான் முதல் பரத்தி என்றார். அவளை நானும் பார்க்கிறேன். என் தங்கையை போல அறிகிறேன் இப்பொழுது. என் வீட்டின் கன்னியவளா? அவள் ஏன் கன்னியாகவே இருக்கிறாள். திரும்பவும் காலத்தில் பின்னோக்கி செல்கிறேன். அன்று எங்கள் தெரு விடுமாடன் கோவில் கொடை. கார்த்திகை மாசம் எல்லா வருடமும் நடக்கும். தப்பட்டை விடாமல் அடித்துக் கொண்டிருக்க, துர்க்கம்மை வந்த அவ்வையார் மஞ்சனையை வாயில் விழுங்கி கமுகம் பூவால் தலையில் அடித்துக் கொண்டு தலைவிரி கோலமாய் உறுமிக் கொண்டிருந்தாள்.


எனக்கோ இந்த சாமியாடிகளிடம் பெரிதாய் நம்பிக்கை இல்லை. சும்மா நடிக்குதுகோ என்று பார்த்துக் கொண்டிருந்தேன். சுந்தர மாமாக்கு விடுமாடன் வந்து ஆடி ஓஞ்சி திருனார் கொடுத்திட்டிருந்தார். ஆள் நல்ல உயரமும் தொப்ப தள்ளுன உடம்பும் பாக்கதுக்கு விடுமாடன் மாரித்தான் தோணும். ஆனா அவருக்கு கடா மீசை இல்லைன்னால சாமின்னு தோணல இருந்தாலும் திருனார் பூசி விடும் போது கொஞ்சம் பயந்துதான் நின்னேன்.


\ராத்திரி பூசைக்கு சாமி ஒழுகினசேரி சுடுகாட்டுக்கு போய்ட்டு வந்து ஆட்டம் நடக்கு. தப்பட்டையு,ம் நாதஸ்வரமும் கொட்டும் ஒரே முழக்கமா மேலயும் கீழயும் போய்ட்டிருக்கு. உச்சக்கட்டமா சாமிக்கு ஊட்டுப்படையல் வச்சு தீவாரண நடக்க போகு. மாடத்தியா ஆண்டாள் மாமா கெடந்து திங்கு திங்குனு சாடி காலெல்லாம் ரத்தம் கொட்டுகு. மஞ்சனைய வாயில தேச்சிட்டுக்கிட்டு நாக்க நீட்டி சாடுகாறு. ஒரே களேபரம். எனக்கு பெருசா ஈடுபாடில்லாட்டாலும் கொட்டுசத்தம் ஒரு மாறி கெளப்பி உடம்பெல்லாம் புல்லரிச்சு போய் நிக்கேன்.


பக்கத்துல என் ஃப்ரெண்டு சண்முகம் சும்மதான் நின்னுகிட்டுருந்தான். திடீர்னு அலறுகான். காலு கைலாம் வெட்டு வந்தா கனக்க ஆடுகான். அப்ப அவன் குரல் அவன மாறியே இல்ல. வேறேதோ குரல். உறுமலும் சத்தமும் ஒரு பெண்ணைப்போல இருந்தது. நான் பயந்து பத்தடி பின்னால போய் எங்க சித்திக்கு புறத்தால போய் ஒளிஞ்சுகிட்டேன். அவன் அடங்கதுக்குள்ள சுந்தர மாமா ஆடிக்கிட்டே அவன் கிட்ட வந்தார். சிரிச்சார். மாடனுக்கு குரலுல்ல. உறுமிக்கிட்டே திருனார அவன் நெத்தில அழுத்தி அடக்கினாரு. கொஞ்சம் தண்ணியக் கொடுத்து அவன உட்கார வச்சிருந்தாங்க.


 Kanyakumari


நான் பயந்துட்டு அவன் கிட்டயே போகல. சித்தி ஏங்கிட்ட வந்து. லேய் கன்னியாக்கும். கொட்டு சத்தமும் தப்பட்டையும் அடிச்சுல்லா அதான் வந்துட்டா. அவளுக்கு ஒழுங்கா செஞ்சிருக்க மாட்டானுங்க. அதாக்கும் இப்படி ஏறிட்டா என்றாள். எனக்கு ஒன்னும் புரியவில்லல். கன்னியா> அது யாரு சித்தி? லேய் அவா குடும்ப வழில பிராயத்துல செத்து போயிருக்கும். அவளுக்கு ஒடுக்கத்தி வெள்ளிகெழம தோறும் வெளக்கு கொழுத்தி கும்பிடனும். அவளாக்கும் அவங்களுக்கு கொலதெய்வம். ஒழுங்கா செய்யாம விட்டா இப்படித்தாம்ல வந்து கேப்பா.


எனக்கு உடல் சிலிர்த்து சிறு நீர் துளிர்த்தது. அன்னைக்கு படுக்கும் போது அம்மைட்ட கேட்டேன். நமக்கு யாரும்மா குலதெய்வம். லேய்! சீமாட்டி அம்மைதாம்ல எனக்கு கொலதெய்வம். அங்க ரயில் பாதைக்கு போக வழில பழையாத்தப் பாத்து ஆலமூடுல இருக்காள்ளா! உனக்குன்னா அப்பாக்கு வேறயா? ஆமாலே. அப்பாக்குள்ளதுதான் உனக்கும் நமக்கும் என்றாள். அவள் எங்கோ கேரளாவில் விழிஞ்சம் பக்கதிலென்றாள். நாம ஏம்மா அங்க போகல லேய் அப்பாக்கு அப்பா இருக்கார்லா நம்ம தாத்தா கிருஷ்ணபிள்ளை அவர் சின்ன வயசுல வீட்ட விட்டு ஓடி வந்துட்டார்ல இங்க நாகர்கோவிலுக்கு. அவரும் அப்பாட்ட சொல்லல. நமக்கும் தெரியாது. அதாம் போகல.


எனக்கு பீதி நெஞ்சையடைத்துக் கொண்டது. இனி மேளம் அடிக்கும் பக்கமே போகக்கூடாது. என்று முடிவெடுத்துக் கொண்டேன். கனவில் சிவந்த அந்த மாடத்தியின் நாக்கு பயமுறுத்தியது. அம்மைட்ட சொன்னேன். அழுதேன். இரவில் கனவில் பயந்து கெடைல மோண்டேன்.


பிறகுதான் அம்மை சொன்னாள். லேய் அவ நமக்கு அம்மையாக்கும். அவளுக்கு ஏம்லெ பயப்படுக. அதற்கு பிறகுதான் தெரிந்தது அம்மா எல்லா ஒடுக்கத்தி வெள்ளிக்கிழமைகளிலும் விளக்கு தனியாக தென்மேற்காய் கொழுத்தி வைத்து பால் பழம் படைத்து வணங்குகிறாள். நினைவு தெரிந்த பின் நானும் அந்த தெரியாத அம்மையை வணங்க தலைப்பட்டேன். அவள் கன்னியாகவே இருக்கிறாள்.


காந்தி சொன்னது போல இந்த கடலும் கன்னிதான். ஊரில் நடுனாயகமாய் எல்லையில் இருக்கும் எங்கோடி கண்டன் சாஸ்தாவையும் வணங்குவாள். நமக்கென்னாவது உண்டும்னா அவர்தான் செஞ்சுதரணும் கேட்டியா. அவர் வழி செய்யாம நமக்கு ஒன்னும் வழிகெடைக்காது என்பாள்.


தெய்வங்கள் யார்? நமக்கவர்கள் என்ன தருகிறார்கள். அவர்களை நாம் ஏன் படைக்கிறோம். எல்லா கேள்விகளும் பதில்களின்றி அந்தரத்தில் மிதந்து கொண்டிருந்தன. அம்மையுடன் சீமாட்டியம்மைக்கு பூஜை செய்ய போகும் போதெல்லாம். அம்மையின் உடல் அதிர்வதும் ஊசலாட்டமாய் அங்கிங்கு நகர்ந்து முணங்கி உறுமுவதையும் கண்டிருக்கிறேன். இப்பொழுதும் அப்படித்தான் அம்மைக்காகிறது.


இது என்ன? இவர்கள் ஏன் நம்மிடம் முயங்கிறார்கள். இவர்கள் நம் வழி இங்கு வந்து நம்மிடம் படையல் வாங்கி கொள்கிறார்களே ஏன்? எங்கோ தனிமையில் ரத்தக்கண்களுடன், அரக்கப் பற்களுடன் சிவந்த நாக்கு நீட்டி நம்மிடம் வந்து ஆட்டுவிக்கும் இவர்கள் யார்? இவர்களெல்லாம் நான் தானோ?


எங்கோ எப்பொழுதோ என் மூதாதை இடியின் நாட்டியத்தில் மின்னலின் அலைக்கீற்றில் நடனமாடிக் கொண்டிருப்பதையும், கடலின் ஆழத்தில் அலைகளின் இடைவிடாத அரற்றலில் கருமையின் மோனத்தில் நீலத்தின் மென் நகையில் வானமும் பூமியும் முயங்கும் அனல் பரப்பில் மோனமாய் அமர்ந்திருந்தவன் நான் தானா?


 


இவர்களையெல்லாம் பரப்பி இன்னும் இன்னும் ஆற்றலாய் ஆதியந்தமில்லா குறையா நிறை சக்தியாய் என்னுள் நீக்கமுற ஆட்டுவிக்கும் அம்மையை அவளின் குறைவில்லா கருணையை அனல் கக்கும் வன்மத்தை வாழ்வின் நித்தியமான இன்பத்தை களித்துள்ளும் அனந்தத்தை எப்படி நிரப்பினும் நிரம்பா அல்குலை குமரிக்கோட்டின் உச்சிப்பாறையில் ஒற்றைக்காலடியில் மண்ணில் விழுந்து அவளின் எண்ணிலடங்கா துகளில் துளியாக ஏங்கினேன்.


என் அம்மை மெல்ல தலைத் தடவி, எல்லாம் நல்லா நடக்கும் மக்கா. கவலைப்படாத என்று ஒட்டைப்பல் தெரிய சிரித்தாள். ஆம்! அம்மைக்கு எப்பொழுதும் விதிகளில்லை காலமுமில்லை. கிழித்து நிரப்புவோம்.


நன்றி ,


நந்தகுமார்


***


தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 12, 2017 11:32

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–41

41. எழுபடை


கம்பனன் ஹுண்டனின் அறையை அடைவதற்கு முன்னர் இடைநாழியிலேயே அவன் உவகைக் குரலை கேட்டான். கதவைத் திறந்ததும் அக்குரல் பெருகி வந்து முகத்தில் அறைந்தது. “அடேய் கம்பனா, எங்கு சென்றிருந்தாய்? மூடா, மூடா” என ஹுண்டன் நகைத்தான். கையை சேக்கையில் அறைந்தபடி “என்ன நிகழ்ந்தது தெரியுமா? நேற்று இரவு நான் ஒரு கனவு கண்டேன். என் கால்களைக் கட்டிவைத்திருந்த கொடிகள் நாகங்களாக மாறி வழுக்கிச்செல்வதை உணர்ந்து நோக்கினேன். வலக்காலை அசைக்க முடிந்தது. அப்போது அருகே இருளுக்குள் ஓர் அழுகையோசை கேட்டது. பெண்குரல் அழுகை. விழித்துக்கொண்டேன். விழித்ததுமே என் வலக்காலை மெல்ல அசைத்துப்பார்த்தேன். மூடா, என் கால் அசைந்தது… இதோ பார்!” அவன் தன் காலை மெல்ல அசைத்தான். “கல் நெகிழ்கிறது, கல் நெக்குவிடுகிறது” என்று கூவினான்.


கம்பனன் நெடுமூச்சுடன் “நன்று அரசே, நான் சில செய்திகளுடன் வந்துள்ளேன்” என்றான். “சொல்!” என்றான் ஹுண்டன். ஆனால் அவன் தன் காலை அசைத்து நோக்குவதிலேயே ஈடுபட்டிருந்தான். “தங்கள் பட்டத்து அரசியார் இன்று மண்நீங்கினார். சற்றுமுன்னர். செய்தியை இன்னமும் நகருக்கு அறிவிக்கவில்லை.” ஹுண்டன் “ஆம், அவள் சில நாட்களில் இறக்கக்கூடுமென சொன்னார்கள். நகர்அறிவிப்பு செய்க! குலங்கள் கூடுக! முறைப்படி ஈடேற்றம் நிகழ்க! ஆவன செய்!” என்றபின் “உயிர்கொண்டதுமே கால் தன் இருப்பை எனக்கு அறிவித்தது. குளிரோ வெம்மையோ அல்ல. வலியல்ல. தொடு உணர்வுகூட அல்ல. அது இருக்கிறது என என்னிடம் அந்த இருப்புணர்வாலேயே அறிவித்தது” என்றான்.


“இன்னொரு செய்தி” என்று கம்பனன் தொடர்ந்தான். “குருநகரியின் அரசன் நகுஷன் உயிருடனிருக்கிறான். மகவாக இருக்கையில் நாம் அவனை கொல்லும்படி ஆணையிட்டு கொடுத்தனுப்பினோம். அரசியர் அவனை கொல்லவில்லை.” ஹுண்டன் விழிதூக்கி நோக்கி “எங்கிருக்கிறான்?” என்றான். “அவர்கள் குழவியை ஓர் ஒற்றனிடம் கொடுத்தனுப்பினர். அவன் அதை காட்டில் விட்டுவிட்டான். அக்குழவி வசிட்ட குருநிலையில் வளர்ந்து ஆற்றல்மிக்க இளைஞனாகியதாக சொல்கிறார்கள். படைகொண்டுசென்று அவன் குருநகரியைக் கைப்பற்றி முடிசூடினான். ஆயுஸின் மைந்தன் அவன் என அறிவித்தான். இப்போது அங்கே அரசனென அமர்ந்திருக்கிறான்.”


ஹுண்டன் சற்றுநேரம் கூர்ந்து நோக்கியபின் “ஆம், அது இயல்பே. அவர்கள் அவனை எதிர்பார்த்திருந்திருப்பார்கள்” என்றபின் “என் இடதுகாலிலும் அசைவு எழும் என ஓர் உள்ளுணர்வு சொல்கிறது” என்றான். “ஆம், இது தொடக்கமே” என்றான் கம்பனன். “குருநகரியில் அவன் என்ன செய்கிறான்?” என்றான் ஹுண்டன் காலை அசைத்து நோக்கியபடி. அவனிடம் அதிர்ச்சியோ வியப்போ வெளிப்படவில்லை என கம்பனன் கண்டான். அது அவனுக்கும் வியப்பை அளிக்கவில்லை. அனைவரும் அறிந்த ஒன்று எப்படி மந்தணமாக நீடிக்கமுடியும் என அவன் எண்ணிக்கொண்டான். அனைவரும் வெறுக்கும் ஒன்றென அது இருக்குமென்றால் இயல்வதே என பின்னர் தோன்றியது.


“அரசே, அவன் அசோகசுந்தரியை மணம் செய்துகொண்டிருக்கிறான்” என்றான் கம்பனன். “யார்?” என்று ஹுண்டன் தலைதூக்கி கேட்டான். “நகுஷன்… குருநகரியின் அரசன்.” ஹுண்டன் காலை மெல்ல அசைத்து “நினைக்க நினைக்க மேலும் உயிர் ஊறுகிறது” என்றபின் “யாரை?” என்றான். கம்பனன் சற்று சினத்துடன் “குருநகரியின் அரசன் உங்களால் விரும்பப்பட்ட அசோகசுந்தரியை மணம்புரிந்துள்ளான்” என்றான். ஹுண்டனின் வாய் திறந்தபடி நின்றது. “எப்போது?” என்றான். “சில நாட்களுக்கு முன்… செய்திகள் வந்திருக்கின்றன. இங்கே குலத்தலைவர்களின் பூசல் தலைக்குமேல் இருந்தமையால் நான் எந்தச் செய்தியையும் நோக்கவில்லை. சற்றுமுன்னர்தான் அனைத்தையும் அறிந்தேன்.”


ஹுண்டன் பெருமூச்சுவிட்டான். அவன் விழிகள் மாறிவிட்டதை உணர்ந்த கம்பனன் அக்கணம் தோன்றிய எண்ணத்தை அப்படியே சொல்லாக்கினான். “நேற்றிரவுதான் அவர்களின் மணக்கூடல். அவளை அவன் புணர்ந்தபோதுதான் உங்கள் உடலில் உயிர் வந்துள்ளது.”  ஹுண்டன் “என்ன சொன்னாய்?” என்ற கூச்சலுடன் கைகளை ஊன்றி எழப்போனான். கை தளர்ந்து மஞ்சத்திலேயே சரிந்தான். “என்ன சொல்கிறாய்?” என்று தளர்ந்த குரலில் கேட்டான். “அவள் கன்னிமையை இழந்ததுமே அவளிட்ட தீச்சொல் விலகத் தொடங்கிவிட்டது” என்றான் கம்பனன்.


“ஆம், உண்மை” என்றான் ஹுண்டன். “ஆனால் அவள் ஏன் அழுதாள்?” கம்பனன் புரியாமல் “யார்?” என்றான். “அவள்தான். நான் கனவில் கேட்டது அவள் அழுகையைத்தான்.” கம்பனன் “அது உங்கள் விழைவு. அவள் மகிழ்ந்துகொண்டாடியிருக்கவே வாய்ப்பு” என்றான். “அல்ல, அவள் அழுதாள். வலியோ துயரோ இல்லாத அழுகை… ஏக்கம்கொண்டு அழுவதுபோல.” கம்பனன் அவனை நோக்கிக்கொண்டு நின்றான். “அவள் அழுதாள், உண்மையிலேயே நான் அதை கேட்டேன்” என்றான் ஹுண்டன். “ஓரிரு சொற்களும் என் காதில் விழுந்தன.” கம்பனன் “என்ன சொற்கள்?” என்றான். “நான் போகிறேன்… நான் போய்விடுகிறேன் என்று அவள் சொன்னாள்” என்றான் ஹுண்டன்.


கம்பனன் பெருமூச்சுடன் “நாம் ஏதறிவோம்? எவ்வண்ணமாயினும் நமக்கு நன்றே நிகழ்கிறது. நீங்கள் எழப்போகிறீர்கள்” என்றபின் திரும்பி நடந்தான். “அமைச்சரே” என பின்னால் அழைத்த ஹுண்டன் “இன்று தண்டனைக்குரிய அனைவரையும் விடுதலை செய்துவிடுங்கள்…” என்றான். அவன் விழிகளை நோக்காமல் “அவ்வண்ணமே” என்றான் கம்பனன். அவன் மேலும் சொல்லுக்காக காத்து நிற்க “என் கல்தன்மை எப்போது முற்றிலும் விலகும்?” என்றான். “நாம் எதிர்பார்ப்போம்… இது தொடக்கம்தான் என என் உள்ளம் சொல்கிறது” என்றான் கம்பனன்.


திரும்பி அமைச்சுநிலைக்கு நடக்கையில் அவன் உள்ளம் குழம்பி அலைபாய்ந்தது. தானாகவே அத்தருணத்தில் நாவிலெழுந்த சொற்றொடர் என்றாலும் அது உண்மையாக இருக்கக்கூடும் என உள்ளம் உறுதிகொள்ளத் தொடங்கியது. அதைமட்டும் உறுதிசெய்யவேண்டும், அவர்களின் மணஇரவு நேற்றா? ஆமெனில் ஏதோ தொடங்கவிருக்கிறது. அமைச்சுநிலைக்குச் சென்று அமர்ந்து குருநகரி குறித்த அனைத்து  ஓலைகளையும் வரவழைத்து படித்துப்பார்த்தான். ஓர் ஓலையில் நகுஷனும் தேவியும் தங்க காமக்குடில் அமைக்கும் செய்தியிருந்தது. அவன் மணஇரவு நாளை தேடினான். பிறிதொரு ஓலையில் அதுவும் இருந்தது. முந்தையநாள்தான் அந்நிகழ்வு நாள்குறிக்கப்பட்டிருந்தது.



tigerவிபுலையின் இறப்புச்சடங்கு நாகநகரியில் எந்தப் பரபரப்பும் இல்லாமல் நடந்து முடிந்தது. அவள் உடலை கொண்டுவந்து அரண்மனை முற்றத்தில் நகரின் வணக்கத்திற்காக  படுக்கவைத்திருக்கையில் கம்பனன் அதன் பெருக்கம் கண்டு உளம் அதிர்ந்தான். மானுட உடலின் அனைத்து அமைப்புக்களையும் அது இழந்து தசைத்திரளாக வழிந்து சரிந்து பிதுங்கி உப்பிக் கிடந்தது. அதை நோக்கி நின்றபோது உள்ளிருந்து ஒன்று தன் உருவை தானே சிதைக்க முற்பட்டது போலிருப்பதாக நினைத்துக்கொண்டான். அல்லது உள்ளிருக்கும் அது எட்டுத்திசையிலும் திமிறி முட்டி வெளிக்கிளம்ப முயன்றதா?


அந்த உடலை ஒன்றென எண்ண முடியவில்லை. அந்தத் தோல்பைக்குள் அவள் பலவாக இருந்திருக்கிறாள். ஒவ்வொன்றும் பிரிந்துசெல்லத் துடித்து உள்ளே பூசலிட்டு தளர்ந்து அமைந்திருக்கின்றது. ஓரிரு தோல்கட்டுகளை மெல்ல வெட்டிவிட்டால் அவள் அப்படியே பன்றிக்கூட்டம் போல பரவி அகன்றுவிடுவாள் என்று தோன்றியது. அவளை நோக்கிய அத்தனைபேரிலும் அந்தத் திகைப்பே முதன்மைகொண்டிருந்தது. “உள்ளங்கால்கள் எத்தனை சிறியவை, நாய்நாக்கு போல!” அவள் பாதங்கள் செந்நிறமாக நடைதெரியா குழந்தைகளுக்குரியவை போலிருந்தன. மணிக்கட்டின் தசைமடிப்புகளுக்குப்பின் உள்ளங்கைகளும் மிகச்சிறியவையாக இருந்தன.


அவளமைந்த பாடையை எட்டுபேர் கொண்ட குழு மாறிமாறி சுமந்து சிதைக்கு கொண்டுசென்றது. ஹுண்டன் தொட்டு அனுப்பிய அனல் அவளை எரியூட்டியது. “எரிந்து முடிய நாளையாகும்போல” என எவரோ சொன்னபோது வந்திருந்த சிறிய கும்பலுக்குள் சிரிப்பொலி எழுவதை கம்பனன் கேட்டான். மனிதர்கள் இறப்பின்போது சிரிப்பார்கள் என அவன் அறிந்திருந்தான். அவர்களுக்கு இழப்பென்று தோன்றவில்லை என்றால், சூழலில் பெருந்துயரென பரவிநிற்கவில்லை என்றால், இறப்பு என்பதும் ஒரு கொண்டாட்டம் மட்டுமே.


ஹுண்டன் அவளை ஒரு கணமும் நினைக்கவில்லை. எரியேற்றிய பின் திரும்பிவந்து சந்தித்த கம்பனனிடம் “என் இடதுகாலிலும் அசைவு தெரிகிறது. ஆம், இன்னும் அதன் தசைகளை நான் அசைக்கமுடியவில்லை. ஆனால் அசைக்கமுடியும் என அது என்னிடம் சொல்கிறது. அது இருப்பதை இப்போதுதான் நான் உள்ளிருந்து உணர்கிறேன். அது குழவிபோல என்னை தூக்கு தூக்கு என அடம்பிடிக்கிறது” என்றான். கம்பனன் “நான் ஒற்றர்களிடம் கேட்டேன், அரசே. அவர்களின் மணஇரவு நேற்று. இரவுக்குப்பின் நோயுற்றிருக்கும் அவளை திருப்பி அகத்தளத்திற்கு கொண்டுவந்திருக்கிறார்கள். மருத்துவச்சிகள் அவளை நோக்கிக்கொண்டிருக்கிறார்கள்” என்றான்.


“அவளுக்கு என்ன ஆயிற்று?” என்றான் ஹுண்டன். “அறியேன், அவள் இளம்கன்னி போன்றவள். அச்சம் கொண்டிருக்கலாம்” என்றான் கம்பனன். “அவன் எப்படி இருக்கிறான்?” என்றான் ஹுண்டன். “அதைப்பற்றி செய்தி இல்லை. பிழையாக ஏதுமில்லை என எண்ணுகிறேன்” என்றான் கம்பனன். “அவன் கல்லாகிவிட்டானா?” என்று ஹுண்டன் கேட்டான். திகைத்துநோக்கிய கம்பனன் “ஏன் அவ்வாறு கேட்கிறீர்கள்?” என்றான். ஹுண்டன் “ஒன்றுமில்லை, அவன் கல்லாகவில்லை என்றால் அவன் என் எதிரி, அவனை நான் கொன்றாகவேண்டும்” என்றான். “நான் செய்திகளை அறிந்து சொல்கிறேன்” என்றான் கம்பனன்.


ஒற்றர்களிடம் செய்திகளை உடனடியாக பறவைத்தூதாக அனுப்ப ஆணையிட்டான் கம்பனன். நகுஷன் நலமாக இருப்பதாக செய்தி வந்தது. ஆனால் அசோகசுந்தரி நாளுக்குநாள் நோய்கொண்டிருப்பதாக, நலிந்துகொண்டே செல்வதாக செய்திகள் வந்தன. பின்னர் தெளிவாக அனைத்தும் வந்துசேர்ந்தன. கம்பனன் அகத்தளத்திற்குச் சென்று ஹுண்டனை கண்டான். அவன் இருகால்களும் அசைவுகொண்டிருந்தன. படுக்கையில் புரளவும் கால்களை மடித்து எழுந்தமரவும் அவனால் முடிந்தது. அந்த உவகையில் அவன் கூச்சலிட்டுக்கொண்டே இருந்தான்.


கம்பனனைக் கண்டதும் “இன்று இரு கால்களையும் மடித்தேன். இச்சிதையிலிருந்து உயிர்கொண்டு எழுந்துவிட்டேன்” என்று அவன் கூச்சலிட்டான். கரியமுகத்தில் வெண்பற்கள் மின்ன “என் கால்கள் மீண்டு வந்துவிட்டன. இன்னும் சில நாட்கள்தான்… கம்பனா, மூடா, நான் மீண்டுவிட்டேன். தேர்ச்சகடம் ஏறிச்சென்ற நாகம் தன் எஞ்சிய உடலை விழுங்கி உணவும் மருந்துமென்றாக்கி அதிலிருந்த உயிரை தான் பெற்று மீண்டெழும் என்பார்கள்… இதோ நான்” என்றான்.


“ஆம் அரசே, இன்னும் சில நாட்களில் நீங்கள் மீண்டெழுவீர்கள்” என்றான் கம்பனன். “எப்படி சொல்கிறாய்?” என்றான் ஹுண்டன். “அங்கே அசோகசுந்தரி இறந்துகொண்டிருக்கிறாள். அவள் நலியுந்தோறும் நீங்கள் ஆற்றல்கொள்கிறீர்கள்” என்றான் கம்பனன். ஹுண்டன் விழிகூர்ந்து நோக்கி “அவள் எப்படி இருக்கிறாள்?” என்றான். “அவள் முதுமைகொண்டபடியே செல்கிறாள். ஒவ்வொருநாளும் பல ஆண்டு அகவை கடந்துசெல்கிறது. நடுவயதாகி முதுமகளாகிவிட்டாள். உடல்வற்றி உயிர் அணைந்துகொண்டிருக்கிறது. இன்னும் சிலகாலமே…” ஹுண்டன் கண்களை மூடி படுத்திருந்தான். அவன் உடலில் தசைகள் இறுகி நெளிந்தன. தாடை அசைந்தது.


விழிகளைத் திறந்து “அவள் உயிர்?” என்றான். “ஆம், அரசே” என்றான் கம்பனன். “அவ்வாறெனில் அவள் என் அன்னை” என்றான் ஹுண்டன். கம்பனன் என்ன சொல்வதென்று அறியாமல் நோக்கினான். “அவள் என்னை ஈன்றிருக்கிறாள். அவள் மைந்தன் நான்” என ஹுண்டன் உரக்கக் கூவினான். “என்ன நடந்தது? அவள் ஏன் இறந்தாள்? அவள் அழுதது எனக்கு மட்டும் ஏன் கேட்டது?” அவன் இரு கைகளாலும் தன் மார்பை அறைந்தான். “அவள் என்னிடம் முறையிட்டாளா? எனக்கு ஆணையிட்டாளா என்ன?” கம்பனன் “தங்கள் எண்ணம் மிகையானது, அரசே” என்றான்.


“அவளுக்கு நிகழ்ந்தது என்ன? அதை சொல்க!” என்றான் ஹுண்டன். “அவள் வல்லுறவுகொள்ளப்பட்டாள். அந்த அதிர்ச்சியால்தான் இறந்தாள்” என்றான் கம்பனன். சில கணங்கள் ஹுண்டன் அப்படியே உறைந்தான். பின் நாகச்சீறலுடன் மூச்சிரைத்து மீண்டான். “ஆம், அவ்வாறே எண்ணினேன்… அமைச்சரே, நாம் குருநகரியை வெல்லவேண்டும். அவனை கொல்லவேண்டும். அவளுக்கு நாம் செய்யும் கடன் அது.” கம்பனன் “அரசே, அது எளிதல்ல. நம் குலங்கள் சிதறுண்டிருக்கின்றன. நாம் ஆற்றலின்றி இருக்கும் காலம் இது. அவனோ பெருவலிமை கொண்டிருக்கிறான்” என்றான்.


“எண்ணிக் கணக்கிட்டு மைந்தர் அன்னைக்காக எழுவதில்லை” என்றான் ஹுண்டன். “நான் ஏன் கல்லானேன் என்பதற்கான விடை இன்று கிடைத்தது. இப்படுக்கையில் கிடந்து நான் இதுவரை உழன்றது அதை எண்ணியே… ஒரு படைவீரனும் உடன்வரவில்லை என்றாலும் நான் செல்வேன். களம்படுவேன்.” கம்பனன் “தங்களுக்கு உரைக்கவேண்டியது என் கடமை. ஆணையென்றால் தலைகொடுப்பது அடுத்த கடமை” என்றான். “எழுக, நம் படைகள்!” என்றான் ஹுண்டன்.


நினைத்திருந்ததற்கு முற்றிலும் மாறாக நாகர்குடிகள் அனைத்து வஞ்சங்களையும் மறந்து ஹுண்டனின் கொடிக்கீழ் அணிநிரந்தன. அது ஏன் என எத்தனை எண்ணியும் கம்பனனால் உணரமுடியவில்லை. அன்றிரவு தன் இல்லத்தில் உடல்தளர்ந்து படுத்திருந்த தந்தையிடம் மஞ்சத்தின் அருகமர்ந்து அவன் “குடிகள் எண்ணம் என்ன எந்தையே? இதில் சூது ஏதேனும் உண்டோ என்றுகூட உள்ளம் ஐயுறுகிறது” என்றான். மூச்சிரைப்பால் மூக்கு சற்றே மேல்நோக்கி இருக்க படுத்திருந்த அவர் தளர்ந்த குரலில் “அவர்கள் அரசனையும் குடித்தொகையையும் விட்டுப்பிரிய விரும்பவில்லை. இது அதற்கு உகந்ததாகத் தெரிகிறது போலும்” என்றார்.


“அவர்கள் வஞ்சம் கொண்டிருந்தனர்” என்றான் கம்பனன். “ஆம், ஊடாக அன்பும் கொண்டிருந்தனர். அரசன் மீண்டுவிட்டான் என அவர்கள் அறிந்ததுமே அவ்வஞ்சம் மறைந்துவிட்டது. அவர்கள் அவன்மேல் வஞ்சம் கொண்டமைக்கு வருந்துகிறார்கள். அறம்முகிழ்த்த ஒன்றை ஆற்றி அதிலிருந்து மீள விழைகிறார்கள்” என்றார் முதியவர். “மைந்தா, தொல்குடிமக்களின் வீழ்ச்சி அவர்கள் அறத்தால் அன்றி பிறிதொன்றுக்காக எழுவதில்லை என்பதனால் அமைகிறது. அவர்கள் அருகுபோல் வேரோடி வாழ்வது அவர்களுடன் என்றும் அறம் வாழ்கிறதென்பதனால் நிகழ்கிறது.”



tiger


ஹுண்டனின் தலைமையில் நாகர்குலத்தின்  பதினெட்டு பிரிவுகளும் ஒன்றிணைந்து குருநகரிமேல் படைகொண்டுவரும் செய்தியை அறிந்ததும் நகுஷன் திகைத்தான். “எப்போதுமே மலைக்குடிகள் நேரடியாக அரசுகளின்மேல் படைகொண்டு வந்ததில்லை… அவர்களுக்கு எப்படி அத்துணிவு வந்தது?” என்று பத்மனிடம் கேட்டான். “அரசே, மலைக்குடிகள் நிலம்வெல்ல ஒருபோதும் ஒருங்கிணைவதில்லை. அவர்களின் எல்லைகள் தாக்கப்பட்டாலொழிய அவர்கள் போருக்கிறங்க மாட்டார்கள்” என்றான் பத்மன். நகுஷன் “நாம் எங்காவது எல்லைமீறிவிட்டோமா?” என்று கேட்டான். “இல்லை, நாம் நம் எதிரியரசர்களைக்கூட இந்நாட்களில் எண்ணியதில்லை” என்றான் பத்மன்.


இரண்டு நாட்களில் அதற்கான விடை தேடிவந்தது. ஹுண்டன் அனுப்பிய போர் அறைகூவல் மலைக்கழுகு ஒன்றின் காலில் கட்டப்பட்ட ஓலையென குருநகரியை வந்தடைந்தது. அதை நகுஷனிடம் கொண்டுவந்து தந்த பத்மன் “அவன் அசோகசுந்தரிக்காக படைகொண்டுவருகிறான்” என்றான். “அரசிக்காகவா? அவன் ஏன் எழவேண்டும்?” என்றான் நகுஷன் திகைப்புடன். “ஓலையை வாசித்து நோக்குக!” என்றான் பத்மன். வாசித்தபின் அதை மீண்டும் சுருட்டியபடி “என்ன சொல்கிறான்? அவன் எப்படி அவளுக்கு மைந்தனாவான்?” என்றான் நகுஷன். “அவர் இழந்த உயிரை அவன் அடைந்திருக்கிறான் என நம்புகிறான்” என்றான் பத்மன்.


“விந்தைதான். பழங்குடிகளின் உள்ளங்கள் எப்படி செல்கின்றன என்பதை எண்ணவே கூடவில்லை” என்றான் நகுஷன் சிரித்தபடி. “அவருக்கு நீங்கள் இழைத்த பிழைக்கு நிகர்செய்யவேண்டுமென போருக்கு எழுந்துள்ளான். உங்களை வென்று உங்கள் குருதிதோய்ந்த வாளை அரசியின் எரியிடம் மீது வைத்து வணங்கி அவர் எரியிடத்து மண்ணில் ஒருபிடி எடுத்துச்சென்று அவன் ஆளும் நாகநகரியில் ஒரு ஆலயம் அமைக்கப்போவதாக சொல்லியிருக்கிறான்” என்றான் பத்மன். “ஆம்” என்று நகுஷன் மீசையை நீவியபடி சொன்னான். “அது பொய்யோ மெய்யோ, அச்சொற்கள் குடிகளின் உள்ளங்களை வெல்லும். நாகர்குடிகள் அவனுடன் ஒருங்கிணைந்து போருக்கெழுந்தது அதன்பொருட்டே” என்றான் பத்மன்.


“ஆம், அதற்காகவே இந்த சூழ்ச்சியைச் செய்கிறான் என ஐயுறுகிறேன்” என்றான் நகுஷன். “அச்சூழ்ச்சிவலையில் சிக்கவிருப்பது நம் குடிகளும்கூடத்தான்” என்று பத்மன் சொன்னான். “இச்செய்தியை எப்படி நம் குடிகள் அறிவார்கள்?” என்றான் நகுஷன் பொறுமையிழந்தவனாக. “அரசே, அரண்மனைச்செய்திகள்போல மக்கள் உடனே அறிவது பிறிதில்லை” என்றான் பத்மன். நகுஷன் எழுந்து கைகளால் தொடையைத் தட்டியபடி “நன்று, ஒரு போர் நிகழ்ந்தும் நீணாளாயிற்று. நம் படைக்கலங்கள் துருப்பிடிக்கத் தொடங்கிவிட்டிருக்கின்றன” என்றான்.


எண்ணியதுபோலவே ஒரு நாளைக்குள் குருநகரியெங்கும் அசோகசுந்தரிக்காகவே ஹுண்டன் படையுடன் கிளம்பி வருகிறான் என்னும் சொல் பரவியது. “அவன் அவள் மைந்தன்… அவள் முற்பிறப்பில் ஈன்றவன்” என்றான் ஒரு சூதன். “அவனை ஈன்றபின் அவள் எரிபுகுந்து மீண்டும் பிறந்துவந்தாள். அவள் இங்கே இறந்ததும் அங்கே அவன் வணங்கிய அகல்சுடரில் தோன்றி தனக்கிழைக்கப்பட்ட தீங்கு குறித்து சொன்னாள். வஞ்சினம் உரைத்து மாநாகன் கிளம்பியிருக்கிறான்.” வெவ்வேறு கதைகள் கிளம்பி ஒன்றுடன் ஒன்று முயங்கி நாளுக்கொன்று என வந்துசேர்ந்துகொண்டிருந்தன.


“நம் படைகள் ஐயுற்றிருக்கின்றன” என்று படைத்தலைவன் வஜ்ரசேனன் சொன்னான். “எதன்பொருட்டு இப்போர் என்று என்னிடமே ஒரு முதிய வீரன் கேட்டான். அறத்தின்பொருட்டு அல்ல என்று அறிவேன். நிலத்தின்பொருட்டும் அல்ல. எனில் அரசனின் ஆணவத்தின்பொருட்டா, அல்லது அவன் இழைத்த அறமின்மையின்பொருட்டா என்றான். வாளை ஓங்கி அவன் கழுத்தை சீவ எண்ணினேன். ஆனால் அவன் விழிகளைப்போலவே ஆயிரம் விழிகள் என்னை சூழ்ந்திருந்தன. எனவே எது கடமையோ அதை செய்க. படைமுரசு ஒலித்தபின் ஐயுறுபவன் கோழையோ காட்டிக்கொடுப்பவனோ ஆவான் என்றே கொள்ளப்படும் என்று சொல்லி மீண்டேன்.”


பத்மன் விழிகளைச் சரித்து அமர்ந்திருந்தான். “என்ன செய்வது சொல்லுங்கள், அமைச்சரே! அரசர் நாளை படைப்புறப்பாடுக்கு அறைகூவல் விடுத்திருக்கிறார். புலரியில் அவர்  கோட்டைமுகப்பின் உப்பரிகையில் நின்று படைகளிடம் பேசப்போகிறார். அவருடைய முகத்துக்கு நேராக எதிர்க்குரல் எழுந்து வருமென்றால் பின்னர் போரை வெல்வதைப்பற்றி எண்ணிப்பார்க்கவும் வேண்டியதில்லை.” பத்மன் “நான் அரசரிடம் பேசுகிறேன்” என்றான்.


அன்று மாலையே பத்மன் சென்று படைக்கல நிலையத்தில் பயிற்சி செய்துகொண்டிருந்த நகுஷனிடம் தன் எண்ணத்தை சொன்னான். “அரசே, குடிகள் மறைந்த அரசியையே எண்ணிக்கொண்டிருக்கிறார்கள். இப்போர் அரசிக்காக நிகழ்வதென்று ஆகிவிட்டது. படைகளின் எண்ணிக்கை வல்லமையால் போர்கள் வெல்லப்படுவதில்லை, படைகள் கொண்ட உளவிசையின் ஆற்றலே வெல்கிறது. நம் முன் வழி ஒன்றே உள்ளது.” வியர்வையைத் துடைத்தபடி அமர்ந்து “சொல்க!” என்றான் நகுஷன். “நாளை உப்பரிகையில் தோன்றியதுமே நம் ஏழு முதன்மைக் குடிகளிலிருந்து நீங்கள் அரசியரை மணம் கொள்வதாக முதலில் அறிவியுங்கள். ஏழு குலத்தலைவர்களும் உங்களுடன் உப்பரிகையில் நிற்கட்டும். படைகளின் உள்ளம் அக்கணமே மாறிவிடும்” என்றான் பத்மன்.   “ஏனென்றால் மங்கல அறிவிப்பின்போது வாழ்த்தாமலிருக்க முடியாது. வாழ்த்தொலிகள் சூழ்ந்து பெருகி எழுகையில் அவ்வுணர்வால் ஒவ்வொருவரும் தூக்கிச் செல்லப்படுவார்கள்.”


“அது ஓர் எளிய சூழ்ச்சி அல்லவா? அரசன் என நான் அதை செய்தாகவேண்டுமா?” என்றான் நகுஷன். “அரசே, படைகொண்டு வருபவர்கள் நாகர்கள். நாகர்கள் இல்லாத நிலமே பாரதவர்ஷத்தில் இல்லை. ஒரு களத்தில் நாகர்கள் வென்றால் நாம் நாவலந்தீவெங்கும் நாகர்களை எழுப்புகிறோம் என்று பொருள்” என்றான் பத்மன். “அவர்கள் ஷத்ரியர்கள் அல்ல. அவர்களை நாம் போராடி வென்றாலும் இழிவே. புயல்காற்று சருகுகளை என நாம் அவர்களை வென்றாகவேண்டும்.” நகுஷன் ஆம் என தலையசைத்தான்.


அன்றே பத்மன் குருநகரியின் தொல்குடிகளை அழைத்து அரசனின் எண்ணத்தை சொன்னான். அவர்களும் அதற்காக காத்திருந்தனர். “ஆம், அதுவே முறை. இன்றைய நிலையில் அரசரின் கைகளென நிற்கவேண்டியவர்கள் அவர் குடிகளே. இன்று வென்றால் நாம் இனியும் வெல்வோம்” என்றார் குலத்தலைவர் ஒருவர். பேச்சுக்கள் முடிந்து உறுதிகளை பெற்றுக்கொண்டு பத்மன் நிறைவுள்ளத்துடன் புலரிக்கு முன்னர் சென்று நகுஷனை பார்த்தான். அனைத்தையும் விளக்கி நகுஷன் உப்பரிகையில் நின்று வீரர்களை நோக்கி சொல்லவேண்டியதென்ன என்று வகுத்துரைத்தான்.


“அரசே, நீங்கள் எழுந்ததும் வீரர்களின் வாழ்த்துரைகள் விசைகொண்டிருக்காதென்றே எண்ணுகிறேன். அதைக் கண்டு உங்கள் முகம் சுருங்கினால் அந்த எதிர்ப்பு மேலும் வீச்சுபெறும். வீரர்களை நோக்கி முகமலர்ச்சியுடன் வணங்கினீர்கள் என்றால் அவர்கள் குழப்பத்துடன் நோக்குவார்கள். உடனே ஏழு குடிகளிலிருந்து ஏழு அரசியரை மணக்கவிருப்பதை அறிவித்து குடித்தலைவர்களை அழையுங்கள். அவர்கள் உப்பரிகைக்கு வந்து உங்களருகே நிற்கட்டும்” என்று பத்மன் சொன்னான். “அவர்கள் தங்கள் கோலைத் தூக்கி ஆட்டி தங்கள் குலங்களை அறைகூவட்டும். வாழ்த்தொலிகள் எழுந்து சூழும்போது எதிர்ப்பு எண்ணம் அழிந்திருக்கும்.”


“அரசே, நம் மக்கள் நாமே பாரதவர்ஷத்தின் தொல்குடிகள் என்னும் பெருமைகொண்டவர்கள். அதிலிருந்து தொடங்குங்கள். எளிய பழங்குடிநாகர் நம் மீது படைகொண்டு வருவது நம் குடிமூத்தாருக்கும் தெய்வங்களுக்கும் இழுக்கு என்று கூறுங்கள். குருநகரியின் பெருமையை விளக்குங்கள். அதன் பெருமை காக்க எழுக என அறைகூவுங்கள். உங்களுடன் குருநகரியின் படைகள் எழும்.”


நகுஷன் “ஆம், அவ்வண்ணம்தான் செய்யவேண்டும்” என்றான். “அனைத்தும் சித்தமாக உள்ளன. நீங்கள் கவசம் பூணுக!” என்றான் பத்மன். கவசமும் அணிகளும் பூண்டு வந்த நகுஷனை அவனே கோட்டைமுகப்பு நோக்கி அழைத்துச் சென்றான். அரண்மனையிலிருந்து கோட்டைச்சுவர்மேல் அமைந்த மந்தணப்பாதை ஒன்றினூடாகவே அந்த உப்பரிகைக்கு செல்லமுடிந்தது. நிமிர்ந்த தலையுடன் எண்ணத்திலாழ்ந்து நடந்த நகுஷனின் அருகே நடந்தபடி அவன் சொல்லவேண்டிய சொற்களை பத்மன் மீண்டும் சொன்னான். “ஐயம் கொள்ளாதீர்கள். தயங்காதீர்கள். அரசன் என எழுந்து நில்லுங்கள். குடித்தலைவனாக குரல்கொடுங்கள்” என்றான்.


கோட்டைமுகப்பிலிருந்த பிறைவடிவ வெளியில் குருநகரியின் படைகள் அணிவகுத்து நிறைந்து நின்றிருந்தன. கரவுப்பாதைக்குள் அமைந்த சிறிய சாளரத்துளைகள் வழியாக வெளியே நோக்கியபடியே வந்தான் பத்மன். இருளில் பந்த ஒளியில் மின்னும் படைக்கலங்களின் முனைகள் இடைவெளியின்றி நிரந்த அம்முற்றம் ஓர் அலையிளகும் ஏரி எனத் தோன்றியது. அங்கிருந்து மானுடக்குரல்கள் இணைந்து உருவான முழக்கம் எழுந்தது. ஒரு பெருமுரசுக்குள் எறும்பென அகப்பட்டுக்கொண்டதுபோல என பத்மன் நினைத்தான்.


“பொறுங்கள் அரசே, குலத்தலைவர்களும் பிறரும் சித்தமாகிவிட்டர்களா என்று பார்க்கிறேன். அனைத்தும் சித்தமென்றால் நான் தங்கள் மெய்க்காவலனுக்கு கைகாட்டுகிறேன்…” என்றபின் அவன் ஓசையின்றி குனிந்து கரவுப்பாதையின் பெருங்கதவிலமைந்த திட்டிவாயிலைத் திறந்து வெளியே சென்றான். அங்கிருந்து நோக்குகையில் அப்பெரும்படை ஒற்றை உடலென தோன்றியது. பல்லாயிரம் தலைகள். பல்லாயிரம் விழிகள். பல்லாயிரம் கைகள். படையை விராடமானுடன் என ஏன் சொல்கிறார்கள் என அப்போது அறிந்தான்.


அரசன் தோன்றவிருந்த உப்பரிகைமேடைக்கு இரு பக்கமும் குலத்தலைவர்களை தங்கள் கோலுடன் நிற்கச்செய்தான். தீட்டப்பட்ட  இரும்புக்கலங்களால் ஆன குழியாடிகள் நான்கு எதிரே கோட்டைவிளிம்புகளில் அமைக்கப்பட்டிருந்தன. அவற்றுக்கு முன்னால் நெய்யூற்றப்பட்ட பந்தங்கள் சித்தமாக இருந்தன.  அவன் படைத்தலைவனை நோக்க அவன் அருகே வந்து பணிந்தான். “படைகளில் மேலும் கசப்பு எழுந்துள்ளது, அமைச்சரே. வாழ்த்தொலிகள் எழாமலிருக்கக்கூட வாய்ப்புள்ளது. நான் நூற்றுவர்களிலேயே பலரை சிறையிட்டு இந்த அணிநிரையை அமைத்துள்ளேன்” என்றான்.


“பார்ப்போம்” என்றான் பத்மன். “அனைத்தையும் சித்தமாக அமையுங்கள்” என்றபின் உப்பரிகைமேடையை நோக்கினான். மூச்சை இழுத்துவிட்டு அந்த முதற்புலரியிலும் தன் உடல் வியர்த்திருப்பதை உணர்ந்தான். அணுக்கக் காவலனின் விழிகளை சந்தித்தபின் கையசைத்தான். பின்னர் திரும்பி ஆடிக்காவலர்களை நோக்கி கையசைத்தான். அரக்கும் நெய்யும் விடப்பட்ட பந்தங்கள் பற்றி எரிந்து தழல்கொண்டன. ஆடிகள் அவ்வொளியை அள்ளிக்குவித்து உப்பரிகைமேல் பெய்தன.  முரசங்களும் கொம்புகளும் குழல்களும் பேரோசையுடன் முழக்கமிடத் தொடங்கின.


எரிகுளம் என சுடர்விட்ட உப்பரிகை மேடையின் கதவுகள் உள்ளிருந்து விரியத் திறந்தன. கைகளைக் கூப்பியபடி நகுஷன் வந்து ஒளியில் நின்றான். அவன் கவசங்களில் பட்ட செவ்வொளியின் தழலாட்டத்தில் அவன் இளஞ்சூரியன் எனத் தோன்றினான். அவனை நோக்கி விழிகள் மட்டுமே உயிர்கொண்டிருக்க ஓசையின்றி அசைவின்றி அமைந்திருந்தது படைத்திரள். தெய்வங்களுக்குரிய வெறித்த விழிகளுடன் அவன் தன் கையை தூக்கினான். “வீரர்களே, குருநகரியினரே!” என அவன் அழைத்தது கோட்டைமுகப்பின் குழிவுமுகடுகளால் அள்ளித் தொகுக்கப்பட்டு காற்றில் வீசப்பட்டு படையினர் அனைவருக்கும் கேட்டது. “நான் குருநகரியின் அரசன். இந்த பாரதவர்ஷத்தை வெல்வேன். இந்திரனின் அரியணையில் அமர்வேன்” என்றான்.


அப்பெரும்படை ஒற்றை உடலெனச் சிலிர்ப்பதை பத்மன் கண்டான். “என் படைவீரர் நீங்கள். என் உடல். பிறிதொன்றுமல்ல. என் ஆணைக்கு அப்பால் எண்ணமில்லை உங்களுக்கு என்று அறிக! வெற்றிக்கென படைக்கலம் கொண்டு எழுக! இது என் ஆணை!” என்றான் நகுஷன். மேலும் சில கணங்கள் படை ஓசையற்றிருந்தது. காற்றிலாடும் பாவட்டாக்களின் சிறகோசை. பின்னர் ஒற்றைப்பெருங்குரலில் “மாமன்னர் நகுஷன் வாழ்க! குருநகரியின் வேந்தன் வாழ்க! சந்திரகுலத்தோன்றல் வாழ்க!” என வாழ்த்தொலிகள் எழுந்து கோட்டைப்பரப்பை அதிர்வுகொள்ளச்செய்தன.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–33
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–40
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–39
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–37
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–36
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–35
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–34
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–38
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–30
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–29
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 47
‘வெண்முரசு’–நூல் பதின்மூன்று–‘மாமலர்’–32
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 7
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 27
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 22
வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 20
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 9
‘வெண்முரசு’ – நூல் ஒன்று – ‘முதற்கனல்’ – 6
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 12, 2017 11:30

March 11, 2017

காணொளிக்குடும்பம்

 




1


 


எழுத்தாளர் அவர்களுக்கு


 


கடந்த டிசம்பர் மாதம், காளிப்ரசாத் தனக்கு வந்த assignment களில் ஒன்றே ஒன்றை எனக்கு delegate செய்ய இணைப்பில் உள்ள காணொளியை செய்யும் வாய்ப்பு அமைந்தது. முதலில் பார்த்து விடுங்கள்.. (அப்பறம் கடிதம் முழுக்க முறையிடல் தான்)


 


https://youtu.be/rQuMeMrlm7E


 


எனக்கு வெறும் படங்களை பார்க்கவே குதூகலமாய் இருந்தது.


 


பாட்டும் தேடி காணொளியை உருவாக்குவதும் கூட அனுகூலமாய் முடிந்தது… ஆணால் அதில் உள்ள புகைப்படங்கள் சேகரிக்க 99.9% அளவு காலம் தேவைபட்டது. பல இணைப்புகள்/ சுட்டி மட்டுமே உள்ளன… உள்ளே சென்றால் காலியாக உள்ளன. விஷ்ணுபுரம் தளத்தில் இருந்தே நிறைய எடுத்தேன்.


 


சில விருது வாங்கியவர்கள், விருதை வாங்ககும் ஒரே ஒரு படம் தான் கிடைத்தது. இது போல சில சின்ன கிக்கல்கள்.


 


நம் குழுமம், அப்படியே ஒரு குடும்பம் தான், இதில் இக்ருகறதிலையே யார் அதிக செல்லம் என்பது முதல் எல்லாவிதமான சேஷ்டைகளும் உண்டு.. போலவே குடும்பமாக மட்டுமே செய்ய கூடிய சாதனைகளும் உண்டு. நீங்களுமே கூட அதை பல முறை அடிக்கோடு இட்டு காண்பித்து இருக்கின்றீகள்.


 


இந்த விழாக்கள் நம் செய்து வரும் முக்கியமான ஒரு செயல்பாடு. இவைகளின் தொகுப்பும்.. கூடவே நாம் பொது தொகுப்பாகவும் ஏதாவது ஒன்றை வைத்துகொள்ள வேண்டும். தேவையான பொது அது உபயோக படும் படி இருத்தலும், அதே சமயம்தை  பொறுப்பானவர்கள் மாற்றங்கள் (to edit and delete) செய்ய ஏய்துவதாக இருக்க வேண்டும். ஒரு கூகிள் டிரைவ் போலவோ.


 


குடும்பத்தில் சமீபமாக சேர்ந்தவன் தான், துள்ளி குதிக்கிறேன் என்றால் மன்னியுங்கள். இதையெல்லாம் போய் உங்களிடம் சொல்ல தேவையும் இல்லை தான் (அம்மா.. அம்மா… என்ன கையாலேயே கிள்ளிட்டான்!! )


 


நன்றி


வெ. ராகவ்


 


அன்புள்ள ராகவ்


செய்யவேண்டியதுதான். ஆனால் அதிலும் குடும்பம்தான் சிக்கல். “ஏன் அவன் செய்யமாட்டானா? எல்லாத்தையும் நானேதான் செய்யணுமா?”


 


ஜெ


 


 



எழுத்தாளர் அவர்களுக்கு 

முந்தய கடிதம் என் ஆர்வகொளாராலும் கூடவே அந்த காணொளியை மறுபடியும் மறுபடியும் பார்த்து, ஒழுங்காக செய்யவில்லை என்ற எண்ணத்தாலும், நடந்த விளைவு… மன்னிக்கவும். இது நமக்குள்ளேயே இருக்கட்டும்.

நேற்று இரெண்டாவது முறையாகவோ என்னவோ மத்தகம் படித்தேன்.. அதற்க்கு முந்தய தினம் இரு கலைஞ்கர்கள்… ‘அசடுய்யா நீ’ என்று என் காதில் கேட்டது.

சரி இதை ஒரு முறை பார்க்கலாம்
https://www.facebook.com/subhantariq.pk/videos/1162932730430667




தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 11, 2017 10:31

சிறுகதை என்பது…

sujatha-0002


சுஜாதாவின் முதல் சிறுகதை, அசோகமித்திரனின் முதல் சிறுகதை ஒப்பீடு http://www.jeyamohan.in/95659#.WLo8PNIrKUk


ரொபீந்திரநாத் தாகூரின் பார்வையில் சிறுகதையின் ‘இலக்கணம்.’


‘கர்ண பரம்பரை’யாகக் கேள்விப்பட்டது.


தாகூரை சிறுகதை என்றால் எப்படி இருக்க வேண்டும் என்று கேட்டார்களாம்.


அவர் கூறியது.


‘ சொடோ சொடோ துகோ


சொடோ சொடோ ஷுகோ


ஸேஷ் ஹோலேவு மோனே ஹோய்


ஸேஷ்  ஹோயெனி.’


பொருள்.



சிறுகதை என்பது வாழ்க்கையின் அன்றாடச் சின்னஞ்சிறு துக்கங்கள், சின்னஞ்சிறு சுகங்கள்/மகிழ்ச்சிகள் பற்றிப் பேச வேண்டும். கதையைப் படித்து முடித்த பின்பும் மனதில் சிறிது நெருடல் இருந்து கொண்டே இருக்க வேண்டும், மனதை ஏதோ அரித்துக் கொண்டே இருக்க வேண்டும். என்னடா, இந்தக் கதா பாத்திரங்களுக்கு பிறகு என்ன நேர்ந்தது, என்ன நேர்ந்திருக்க வேண்டும் என்று மனதில் கேள்விகள் எழுந்து கொண்டிருக்க வேண்டும்,


நா. கணேசன்


***


அன்புள்ள கணேசன் அவர்களுக்கு


அந்த வரையறை சிறுகதை உருவான காலகட்டத்திற்குரியது. அன்று ‘பெரிய’ விஷயங்களையே இலக்கியம் எழுதவேண்டும் என நம்பினர். ஆகவே சின்னவிஷயங்களின் கலையாக சிறுகதை இருந்தது


வளர்ச்சிப்போக்கில் அது இன்று சிறிய எல்லைக்குள் ஆழமான உருவக உலகை உருவாக்கும் கலை என மாறியிருக்கிறது. வெறும் அன்றாடவாழ்க்கையின் ஒரு படச்சட்டகம் இன்று கலையென ஆவதில்லை


ஜெ


Luigi

லூகி பிராண்டெல்லோ


 


அன்புள்ள ஜெ


சுஜாதா, அசோகமித்திரன் முதல்கதைகளைப்பற்றிய சீனுவின் குறிப்பு ஆச்சரியப்படுத்தியது. இருவருமே எழுதவந்தபோது எழுத்தாளனின் நிலைபற்றி முதலில் எழுதியிருக்கிறார்கள். கதாபாத்திரங்களுக்கும் எழுத்தாளனுக்குமான உறவைப்பற்றி பேசியிருக்கிறார்கள். ஆச்சரியமாக இருந்தது


சீனிவாசன்


***


அன்புள்ள சீனிவாசன்,


லூகி பிராண்டெல்லோ நான் விரும்பி வாசித்த எழுத்தாளர் நோபல்பரிசு பெற்ற இத்தாலிய படைப்பாளி. அவரைப்பற்றி முப்பதாண்டுகளுக்கு முன்னரே எழுதியிருக்கிறேன். என் முயற்சியில் இரு கதைகளும் தமிழில் வெளிவந்துள்ளன. ஒன்று நான் மொழியாக்கம் செய்தது


அவர் எழுதிய Six Characters In Search of an Author) என்னும் நாடகம் முக்கியமான ஒன்று. அதன் பல மேடைவடிவங்கள் அக்காலத்தில் கல்லூரிகளில் நடிக்கப்பட்டன. அதிலிருந்து ஊக்கம் பெற்று எழுதப்பட்ட பல கதைகள் வெளிவந்தன. ஆசிரியனைத்தேடி கதாபாத்திரங்கள் வருவதை க.நா.சு உள்ளிட்டோர் எழுதியிருக்கிறார்கள். எல்லா கதைகளுமே சுமாரானவையே


ஜெ



தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 11, 2017 10:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.