Jeyamohan's Blog, page 688

November 2, 2022

அஞ்சலி, டி.பி.ராஜீவன்

மலையாளக் கவிஞரும், நண்பருமான டி.பி.ராஜீவன் இன்று (3-11-2022) மறைந்தார். அவருக்கு சென்ற ஓராண்டாகச் சிறுநீரகக் கோளாறு இருந்தது. பாரம்பரியமாக வந்த கடுமையான சர்க்கரைநோய் அதற்குக் காரணம். நடுவே ஒரு சிறு விபத்தில் காலில் ஏற்பட்ட  புண் ஆறுவதற்கு நீண்டநாட்களாகியது. அதற்கு நீண்டகாலம் எடுத்துக்கொண்ட மருந்துகளும் சிறுநீரகக் கோளாறுக்குக் காரணமாக இருக்கலாம். சர்க்கரைநோய்தான் தொடக்கம், ஒன்றிலிருந்து இன்னொன்று.

ராஜீவனின் உடல்நிலை மோசமாகிக்கொண்டேதான் இருந்தது. டயாலிஸிஸ் செய்துகொண்டிருந்தார். அதற்கானச் செலவுகள் மிகுதியாக இருந்தன.நண்பர்கள் உதவினோம். ஆனால் மருத்துவர்கள் அவர் தேறுவது ஐயமென்றே சொல்லிவந்தனர். சிறுநீரக மாற்று செய்யவேண்டும், ஆனால் சர்க்கரை நோய் மிகுதியாக இருந்தமையால் அதற்கு வாய்ப்பிருக்கவில்லை. இறுதியாக மஞ்சள்காமாலையும் சேர்ந்துகொண்டது.

ராஜீவனுக்கு இரண்டு மகள்கள். கோழிக்கோடு பல்கலையில் மக்கள்தொடர்பாளராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர். மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் எழுதினார். கவிதைத் தொகுதிகளுடன் இருநாவல்களும் எழுதியிருக்கிறார்.பாலேரி மாணிக்யம், ஒரு பாதிரா கொலபாதகத்தின்றே கதா.  கே.பி.என் கோட்டூர், எழுத்தும் ஜீவிதமும். பாலேரி மாணிக்யம் சினிமாவாகவும் வெளிவந்துள்ளது. இருநாவல்களுமே ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

டி.பி.ராஜீவனை எனக்கு 1988 முதல் தெரியும். ஆற்றூர் ரவிவர்மாவின் அணுக்கமான மாணவர்களில் ஒருவர். அவர் குடும்பத்துக்கும் நான் அணுக்கமானவன். 1998 முதல் குற்றாலத்திலும் ஊட்டியிலும் நான் ஒருங்கிணைத்த எல்லா தமிழ் -மலையாளக் கவிதை அரங்குகளிலும் கலந்துகொண்டிருக்கிறார்.  விஷ்ணுபுரம் விருதுவிழாவிலும், குமரகுருபரன் விருதுவிழாவிலும் கலந்துகொண்டிருக்கிறார். அவருடைய கவிதைத் தொகுதிகளையும் நாவலையும் வெளியிட்டு நான் உரையாற்றியிருக்கிறேன்.ராஜீவன் என் குடும்பத்திற்கும் அணுக்கமானவர்.

டி.பி.ராஜீவன் கவிதைகள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 02, 2022 11:42

‘அங்கே ஏன் போனாய்?’

வணக்கம் சார்.

சரவண கார்த்திகேயனின் ‘ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு’ நூல் அறிமுகக் கூட்டத்தில் நான் பேசிய உரை தொடர்பாக நீங்கள் உங்களது தளத்தில் வெளியிட்டிருந்த கட்டுரையை வாசித்தேன். அந்த நிகழ்வுக்கு நான் போயிருக்கக்கூடாது என்றும் பெண்ணியத்திற்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்துவிட்டேன் என்றும்  கடுமையான கண்டனங்களும் எதிர்வினைகளும் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. இவர்களில் பலரும் நான் பேசியதை கேட்டிருக்க மாட்டார்கள், இவர்களது எதிர்வினைகள் முன்முடிவில் எழுதப்பட்டவை. அதனால் பதிலளிக்கத் தகுதியில்லாத பதிவுகள் என எதற்கும் விளக்கம் தரவில்லை.

இந்தச் சூழலில் நீங்கள் உங்கள் தளத்தில் எனது உரை குறித்து எழுதியது ‘சரியாத் தான் பேசியிருக்கோம்’ என நம்பிக்கையை இன்னும் உறுதிபடுத்தியது. நீங்கள் புரிந்து கொள்வீர்கள் என்பதை அறிவேன். அதை நீங்கள் வெளிப்படுத்தியது மகிழ்ச்சியைத் தருகிறது.

எனது நன்றிகள்.

அன்புடன்

ஜா.தீபா

அன்புள்ள ஜா.தீபா,

அந்த விவாதங்களை என் கவனத்திற்கும் கொண்டுவந்தனர். இவற்றை எப்படி எதிர்கொள்வது என்பது ஒரு சிக்கல். முன்பு இச்சிக்கல் அரசியல் கட்சிகளுக்குள், குறிப்பாக இடதுசாரிக் கட்சியின் கலாச்சார அமைப்புகளுக்குள் இருந்தது.

நாகர்கோயிலில் நாங்கள் இலக்கியக்கூட்டம் நடத்தினால் கலையிலக்கியப் பெருமன்றத்தின் தலைவர் பொன்னீலன் வருவார். ஆனால் மற்ற எவரும் வரக்கூடாது என அவர்களே ’ஃபத்வா’ போட்டுவிடுவார்கள். ஒருவர் அந்த அமைப்புகளுக்குள் சென்றதுமே எவருடன் பேசலாம், எந்தக்கூட்டத்திற்குச் செல்லலாம் என்னும் வரைமுறைதான் முதலில் அளிக்கப்படும். பல இடதுசாரி அமைப்புகளில் ‘வாசிக்கக்கூடாத’ நூல்களை பட்டியல்போட்டு கொடுப்பார்கள்.

நான் என்ன நினைத்தேன் என்றால் அப்படி ஒரு பட்டியல் கொடுத்தால் அதைத்தான் முதலில் படிப்பார்கள் என்று. ஆனால் அப்படி இல்லை. அண்மையில் ஒருவர் விஷ்ணுபுரம் படித்துவிட்டு எழுதினார். 20 ஆண்டுகளாக இடதுசாரி அரசியலில் இருந்தவர். அவர்கள் தடைசெய்தமையால் என் நூல்கள் எதையும் படிக்கவில்லை, இப்போது வெளிவந்தமையால் படித்தேன் என்று எழுதியிருந்தார். வியப்பாக இருந்தது. அவ்வளவு கட்டுப்பாடு, அடக்கம்!

இதுவே  ‘குழு மனப்பான்மை’ என சுந்தர ராமசாமி அடிக்கடிச் சுட்டிக்காட்டுவது. இன்று சமூக வலைத்தளங்களில் அது ’கும்பல் மனநிலை’யாக மாறிவிட்டிருக்கிறது. எழுத்தாளர் என்பவர் எல்லாவகை சமூகப்போராட்டங்களிலும் கலந்துகொள்ளலாம். எல்லாவகை அமைப்புகளிலும் பங்கெடுக்கலாம். ஆனால் எந்த புற அமைப்புக்கும் முழுக்க கட்டுப்படலாகாது, எந்தக் கும்பலிலும் முழுமையாக உறுப்பினர் ஆகிவிடலாகாது என்பதே நான் என் முன்னோடிகளிடமிருந்து கற்றது.

முப்பதாண்டுகளுக்கு முன்பு சுந்தர ராமசாமியை பிரமிள் மிகக்கடுமையாக தாக்கிவந்தார். ஆனால் ராஜமார்த்தாண்டன், வேதசகாயகுமார், கட்டைக்காடு ராஜகோபாலன் என சுந்தர ராமசாமியின் அணுக்கர்கள் அனைவருமே பிரமிளுக்கும் வேண்டியவர்களே. சுந்தர ராமசாமிக்கும் வெங்கட் சாமிநாதனுக்கும் முட்டிக்கொண்டபோது வெங்கட் சாமிநாதனின் யாத்ரா இதழை வெளியிட்டுவந்த அ.கா.பெருமாள் சுந்தர ராமசாமி இல்லத்தில் வைத்து  அவ்விதழை மெய்ப்பு பார்ப்பார். அதில் சுந்தர ராமசாமியை கண்டித்து எழுதப்பட்ட கட்டுரை இருக்கும். சுந்தர ராமசாமி அதை படிக்க மாட்டார். நான் எடுத்து படித்துப்பார்த்திருக்கிறேன். இலக்கியம் செயல்படுவது வேறொரு தளத்தில்.

அரசியல்கட்சிகள் அல்லது அதேபோன்ற மனநிலை கொண்ட கும்பல்கள் எழுத்தாளர்களைப் பற்றி அவர்களே ஒரு பிம்பத்தை கட்டமைக்கிறார்கள். அவர்கள் எவரும் அந்த எழுத்தாளரை வாசிப்பவர்கள் அல்ல. ஆனால் அந்த அவர்கள் தங்கள் அரசியல் சார்ந்தோ, தங்கள் கூட்டான காழ்ப்புகள் சார்ந்தோ மேலோட்டமாக அணுகி உருவாக்கிக்கொண்ட பிம்பத்தை அந்த எழுத்தாளரை உண்மையாகவே வாசிக்கும் எழுத்தாளர்களும் ஏற்கவேண்டும் என கட்டாயப்படுத்துகிறார்கள். ஏற்காவிட்டால் அவர்களையும் ‘எதிரி’ பட்டியலில் சேர்க்கிறார்கள். அவர்களையும் சேர்த்து வசைபாடுகிறார்கள்.

இன்று சமூகவலைத்தளங்கள் எளிதாக கும்பல்கள் கூடவும், செயல்படவும் வழியமைக்கின்றன. ஆகவே கும்பல்களின் அதிகாரம் கண்கூடானது. அந்த கூட்டான எதிர்ப்பையும் அதில் வெளிப்படும் உச்சகட்ட காழ்ப்பையும் சந்திப்பது எழுத்தாளர்களுக்குக் கடினமானது. தனிநபராகச் செயல்படும் எழுத்தாளர்கள் பெரும்பாலும் அந்த கூட்டான மிரட்டலுக்கு அஞ்சி பணிந்து ஒடுங்கிவிடுவதே நிகழ்கிறது.

இது இங்கு மட்டுமல்ல, உலகமெங்கும் உண்டு. அமெரிக்காவில் தீவிரமாக இயங்கிய மக்கார்த்தியிசத்தின் செயல்முறை இதுவே. இன்று உலகமெங்கும் அரசியல்சரிநிலைகளை எழுத்தாளர்களுக்கு நிபந்தனையாக விதிக்கும் ‘தீவிர’க் குழுக்கள் உள்ளன. அவர்களின் நடைமுறைகளும் இத்தகையவையே. இந்தியாவில் இடதுசாரி, வலதுசாரி இருசாராரின் குழுக்களும் இதே மனநிலையை நிலைநிறுத்துகின்றன. அவர்களின் ஆற்றல் என்பது நம் பொதுச்சூழலில் உள்ள ஒரு குறிப்பிட்ட உளநிலையில் இருந்து எழுகிறது. இங்கே எவர் எதன்பொருட்டு எந்த எழுத்தாளரை வசைபாடினாலும் ஒரு பெருங்கும்பல் வந்து சேர்ந்துகொண்டு தாங்களும் வசைபொழிய ஆரம்பித்துவிடுவார்கள்.

எழுத்தாளர் என்பவர் தனக்கு எதிரான எந்த அதிகாரத்தையும் ஏற்காதவராகவே இருக்கவேண்டும். தன் தனிவாழ்வில் எத்தகையவராக இருந்தாலும் தன் எழுத்தை அவர் இன்னொரு அதிகாரத்திற்கு கட்டுப்பட்டதாக அமைத்துக்கொள்ளக் கூடாது. அது அவர் ஆளுமையை வெகுவாகப் பாதிக்கும். அவருடைய எழுத்துக்குள் அது எப்படியோ ஊடுருவும். மனிதாபிமானம், முற்போக்கு, அறம், கருணை  போன்ற விழுமியங்கள்கூட எழுத்துக்கு முன்நிபந்தனைகள் ஆகக்கூடாது. எழுத்து என்பது ஆழ்மனவெளிப்பாடு மட்டுமே. அதை எதுவுமே தடுக்கலாகாது.

ஒருவேளை ஓர் எழுத்தாளர் எழுதுவது அவர் வாழும் காலத்தில் முற்றிலும் எதிர்மறையானதாக கருதப்படலாம். ஒழுக்கமீறலாக, அறமீறலாக மதிப்பிடப்படலாம். அவர் நசிவுசக்தியாக எண்ணப்படலாம். ஆனால் அவர் தனக்கு அதுவே உகந்தது என எண்ணுவாராயின், அவருடைய ஆழத்தின் வெளிப்பாடு அது என நினைப்பாராயின் அதை அவ்வண்ணமே வெளிப்படுத்தலாம். கும்பல்களால் அவர் வசைபாடப்படுவார். வேட்டையாடவும்படுவார். ஆனால் அனைத்துக்கும் மேலாக தனக்கு உண்மையாக இருத்தலே எழுத்தாளனின் கடமை. அதன்பொருட்டான எல்லா வசைகள், தாக்குதல்கள், ஒடுக்குமுறைகளையும் அவன் எதிர்கொண்டாகவேண்டும்.

சென்ற காலங்களில் அவ்வாறு ஃபாஸிஸ்ட் என்று ஒட்டுமொத்தச் சூழலாலும் வசைபாடப்பட்ட பலர் புத்துயிர்கொண்டு எழுந்து உலகசிந்தனையின் சிற்பிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். இரு உதாரணங்கள் நீட்சேயும் போர்ஹெஸும்.  அவ்வாறு காலம் தனக்கான மீட்பை அளிக்கும் என அவன் நம்பிக்கொள்ளவேண்டியதுதான். இல்லையென்றாலும் மானுடசிந்தனையின் மாபெரும் முரணியக்கத்தில் தன் பங்களிப்பை ஆற்றிவிட்டதாக நிறைவுகொள்ள வேண்டியதுதான். கும்பல்கள் என்றுமே படைப்பியக்கத்துக்கு எதிரானவர்கள். அவர்களிடம் இதையெல்லாம் எவரும் சொல்லிப் புரியவைக்க முடியாது.

ஒரு கட்டத்தில் இன்னொரு விசித்திர நிலையும் உருவாகும். எழுத்தாளர் அதுவரை அவரே எழுதி உருவாக்கிக்கொண்ட கருத்துநிலைக்கு அடிமையாக தன்னை உணர நேரிடும். தன் பொதுப்பிம்பத்தை தானே சுமந்தாகவேண்டிய கட்டாயத்துக்கு ஆளாகவேண்டியிருக்கும். உள்ளம் அதை விலக்கி முன்சென்றாலும் அந்த கருத்துநிலையின் அதிகாரத்தை, தன் சாதனைகள் உருவாக்கிய பிம்பத்தை துறந்து செல்ல முடியாமல் ஆகும். அப்போதும் எல்லா இழப்புகளையும் எதிர்கொண்டு தன் ஆழுள்ளம் செல்லும் வழியில் செல்வதே எழுத்தின் இயல்பாக இருக்க முடியும்.

நீங்கள் அடைந்துள்ள அரசியல் உங்கள் அவதானிப்புகள் வழியாக அடைந்தது, உங்கள் எழுத்துக்களில் இயல்பாக வெளிப்படுவது. பெண்ணியமோ இடதுசாரிக் கருத்துக்களோ அவ்வண்ணம் தனிப்பட்ட முறையில் வெளிப்படும்போதே அதற்கு இலக்கிய மதிப்பு. நீங்கள் எந்தக் குழுவின் குரலும் அல்ல. எந்த அமைப்பின் பிரதிநிதியும் அல்ல. எவருக்கும் கட்டுப்படவேண்டிய பொறுப்பு உங்களுக்கு இல்லை.

இங்கே இலக்கியம் என்றும் பல கருத்துத் தரப்புகள், அழகியல் தரப்புகளாகவே செயல்படும். அறிவியக்கத்தின் இயல்பே அதுதான். அவற்றுக்குள் ஓயாத விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டேதான் இருக்கும். அந்த விவாதத்தில் தன் தரப்பைச் சொல்லுவது மட்டுமே சிந்தனையாளர்களும் எழுத்தாளர்களும் செய்வது. நேரடியாகச் சொல்லலாம். அல்லது எழுத்துக்கள், படைப்புக்கள் வழியாக வெளிப்படுத்தலாம். அது எந்நிலையிலும் விவாதப்புள்ளிகள் வழியாகவே நகரும்.

அரசியல்கட்சியின் தொண்டர்களின் மாறிமாறி பழிக்கும், விலக்கும் மனநிலைகளுக்கு இங்கே இடமில்லை. ஒரு குழுவுக்குள் அடங்கி, அக்குழுக்களுக்குள் பேசிக்கொள்ள எழுத்தாளன் தேவையில்லை. தன் கருத்துக்களில் நம்பிக்கை கொண்ட எழுத்தாளர் எங்கும் சென்று தன் தரப்பைச் சொல்லலாம்.

செல்லாமலிருக்கவும் அவருக்குச் சுதந்திரமுண்டு. மரியாதையாக எதிர்வினை அமையாது என எண்ணும் இடத்திற்கு எழுத்தாளர் செல்லாமலிருப்பது நன்று என்பது என் எண்ணம். அதேபோல எழுத்துக்குச் சம்பந்தமே அற்ற அரசியல் மேடைகளில் தோன்றுவதை நான் விரும்புவதில்லை. தன் கருத்தை முழுமையாகச் சொல்ல அனுமதியிருக்காது என எண்ணுமிடத்தையும் தவிர்க்கலாம். தன் பார்வைக்கு முற்றிலும் எதிரானவர், தன்னால் ஏற்கவே முடியாததைச் சொல்பவர்கூட இந்த அறிவியக்கத்தில்தான் செயல்படுகிறார் என்றும், இதன் முரணியக்கத்தில் அவரும் ஒரு பங்களிப்பாற்றுகிறார் என்றும் உணர்வதே அறிவுச்செயல்பாட்டின் அடிப்படை. காழ்ப்பிலேயே உழன்று, கசப்பிலேயே திளைக்கும் தலையெழுத்து கொண்ட சாமானியர்களுக்கு அது புரியவாய்ப்பில்லை.

’அங்கே போகாதே’ என்னும் கூச்சல்களை இடுபவர் எவர்?

அ. பெரும்பாலும் இலக்கியவாசிப்போ அடிப்படை அறிவுத்தளப்பயிற்சியோ இல்லாமல் வெறுமே சமூகவலைத் தளங்களில் புழங்குபவர்கள். நான் எதையும் வாசிப்பதில்லை என அறிவித்துக்கொள்பவர்களே அவர்களில் உண்டு. அங்கே இங்கே கிடைக்கும் உதிரிச்செய்திகளைக்கொண்டு தங்கள் நிலைபாடுகளை உருவாக்கிக் கொண்டு உரக்கக் கூச்சலிட்டு தங்கள் இருப்பை அங்கே நிறுவிக்கொள்வது மட்டுமே அவர்களின் நோக்கம்.

ஆ. கவனம்பெறாத திறனற்ற எழுத்தாளர்கள். அவர்கள் விமர்சனங்களை அஞ்சுபவர்கள். எளிமையான பாராட்டுதல்களுக்காக அலைபவர்கள். சொல்லும்படி எதையும் எழுதாமல், எழுதமுடியுமென்னும் நம்பிக்கையும் இல்லாமல் செயல்படுபவர்கள். ஒருவகை புண்பட்ட ஆளுமைகள். தங்களைப்போலவே புண்பட்ட சிலரை சேர்த்துக் கொள்கிறார்கள். இவர்கள் எந்த எழுத்தாளர் பற்றிய எந்த வசையுடனும் சேர்ந்து கொள்வார்கள்

இ. எழுத்தாளர்களை தங்கள் அரசியலின் படைவீரர்களாக மட்டுமே கருதும் அரசியலாளர்கள். பெரும்பாலும் எந்த இலக்கியமும் புரியாதவர்கள். எதிலும் அரசியல் மட்டுமே கண்ணுக்குப்படுபவர்கள். அந்த அரசியலும் வெறும் அதிகார அரசியல். அன்றாட அரசியல். அதில் கொள்கை என ஏதுமில்லை. அதிகாரத்துக்கான எல்லா சமரசங்களும் இவர்களுக்கு ஏற்புடையதே. அதைச் சார்ந்த நிலைபாடுகளை எடுத்து அதனடிப்படையில் காழ்ப்புகளை உருவாக்கிக்கொள்பவர்கள். அதைப் பரப்புவதையே இரவுபகலாகச் செய்பவர்கள். அதை எழுத்தாளர்கள் அப்படியே ஏற்கவேண்டுமென நினைப்பவர்கள்.

எண்ணிப்பாருங்கள். மூன்று தரப்பினருமே எழுத்து, எழுத்தாளர்மேல் மதிப்பற்றவர்கள். வாசிக்காதவர்கள். எழுத்துக்களைப் பற்றி ஒரு நல்ல வார்த்தை பேசாதவர்கள். ஆனால் எழுத்தாளர்கள் தங்கள் சொல்லுக்கு கட்டுப்படவேண்டும் என நினைக்கிறார்கள். கட்டுப்படாவிட்டால் வசைபாடுகிறார்கள். அதை ஒரு மிரட்டலாக ஆக்கி அதிகாரத்தை அடைகிறார்கள். அந்த அதிகாரம் தங்கள்மேல் இருக்கவேண்டுமா என எழுத்தாளர்கள்தான் முடிவெடுக்கவேண்டும்.

நீங்கள் எங்கு சென்றாலும் உங்கள் கருத்தைச் சொல்லலாம். அதை உறுதியாக, ஆனால் மென்மையாகச் சொல்லும் ஆற்றல் உங்களுக்கு இருக்கிறது. அந்த தற்செறிவு ஒரு பெரிய கொடை. அதை நம்புங்கள்.

சி.சரவணக் கார்த்திகேயன் ஒரு பெண்வெறுப்பாளர் என்றே ஒரு பேச்சுக்கு இருக்கட்டும். ஆகவே அவர் எழுதலாகாது என ஃபத்வா விதிக்கமுடியுமா? அவரை வாசிக்கலாகாது என ஆணையிட முடியுமா? அவரை எழுத்தாளர் அல்ல என்று சொல்லிவிடமுடியுமா? அது ஒரு தரப்பு என்றே கொள்ளமுடியும். அப்படி ஒரு கருத்துத் தரப்பு இங்கே இருந்தால் அதை ஓர் எழுத்தாளர் ஏன் வெளிப்படுத்தக்கூடாது? அத்தனை எழுத்தாளர்களும் சீருடை அணிந்து கைகளில் கொடியுடன் ஒரே அணியாம சீர்நடை போடவேண்டும் என எதிர்பார்க்கும் கும்பல் எழுத்தாளர்களையும் அறிவுச்செயல்பாட்டையும் பற்றி உண்மையில் என்னதான் நினைக்கிறது.

ஒரு மாற்றுத்தரப்பை முழுமையாகவே எதிர்க்கலாம், நொறுக்கலாம், அதற்கான எல்லா உரிமையும் எல்லாருக்கும் உள்ளது. நான் தனிப்பட்டமுறையில் உங்கள் சமூகவியல் கருத்துக்கள், உங்கள் அரசியல் நிலைபாடுகளுக்கு ஏற்பு கொண்டவன் அல்ல. உங்களை எனக்கு முன்னரே தெரியும், தொடக்ககாலத்தில் நீங்கள் பல கதைகளை என்னிடம் காட்டியிருக்கிறீர்கள். நீங்கள் தொகுப்பு போட்ட பின்னரும்கூட நான் உங்களை வெறுமே கவனித்துக் கொண்டுதான் இருந்தேன். புதியதாக, தீவிரமாக, ஒரு படைப்புடன் நீங்கள் வெளிப்பட்டபோதுதான் உங்களை படைப்பாளி என அடையாளம் கண்டு கவனப்படுத்தி எழுதினேன். அந்தக் கதையை நானாகவே கண்டடைந்தேன். அது என் அழகியல் நிலைபாடு. அதில் எப்போதும் உறுதியாகவே இருப்பேன்.

சரவண கார்த்திகேயனின் அரசியலுக்கும் நான் எதிரானவன். அவரது அந்நூலில் அறுதியாக வெளிப்படும் வரலாற்றுப் பார்வையும் எனக்கு உகந்தது அல்ல. அதனாலென்ன? அப்பார்வை இன்று பலரிடம் உள்ளது .என் நண்பர் பவா செல்லத்துரை முப்பதாண்டுகளில் என் ஒரு கருத்தையும் ஏற்றுக்கொண்டவர் அல்ல. விஷ்ணுபுரம் அமைப்பிலேயே திராவிடக் கருத்தியலில் அழுத்தமான நம்பிக்கை கொண்ட, அதை எழுதிக்கொண்டே இருக்கிற, பலர் உண்டு. ஏன், என் வீட்டிலேயே சைதன்யா தனக்கான எல்லா மறுப்புகளுடனும்தான் இருக்கிறாள். அவளுடைய கருத்துலகமே வேறு. பல விஷயங்களில் அஜிதன் எனக்கு முற்றிலும் எதிரான நிலைபாடுள்ளவன் என நண்பர்களுக்கு தெரியும்.

விஷ்ணுபுரம் விருதுக்கு விருந்தினராக வரும் அ.வெண்ணிலா, கார்த்திக் புகழேந்தி போல பலர் உறுதியான இடதுசாரிகள். விருது பெறும் சாரு நிவேதிதா பல ஆண்டுகளாக என்னை எதிர்த்து வருபவர், எனக்கு நேர் எதிரான அழகியலும் வாழ்க்கைநோக்கும் கொண்டவர். அதனால் அவர்கள் விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கு வருவதில் தடை உண்டா? சாரு எழுத்தாளர் இல்லை என ஆகிவிடுமா?

விழாவுக்கு வருபவர்களில் ஒருவரிடம் சொன்னேன், அவர் என்னை நிராகரித்து அல்லது மறுத்துப் பேசினாலும் தடை ஒன்றும் இல்லை. அது வம்பு அல்லாமல் ,இலக்கியம் சார்ந்ததாக, விவாதமொழியில் இருந்தால் மட்டும் போதும்.

இந்த முரண்பாடுகள் இருக்கும் வரைத்தான் இங்கே இலக்கியம் செயல்படும். ஆகவே உங்கள் வழியில் துணிந்து செல்லுங்கள். பொதுவான சூழலுக்குமேல் தலைநிமிர்ந்து நிற்கையிலேயே எழுத்தாளரின் ஆளுமை வெளிப்படுகிறது.

ஜெ

ஜா.தீபா சிறுகதைகள் வாசிப்பனுபவம்: கல்பனா ஜெயகாந்த்

https://www.jadeepa.in/

ஜா.தீபா- ஜெயமோகன் தளம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 02, 2022 11:35

கலாமோகினி

கலாமோகினி என்னும் இதழ் பற்றி இலக்கியவாதிகளும் அறிந்திருக்க மாட்டார்கள். மணிக்கொடி என்னும் மறுமலர்ச்சி இதழ் நின்றுவிட்டபின் அதைப்போல ஒன்றை உருவாக்க முயன்ற சாலிவாகனன் என்னும் எழுத்தாளரின் கனவு அம்முயற்சி. ஆனால் அது வெல்லவில்லை. அவருடைய சொத்துக்கள் கரைந்தன. அவர் மறைந்தார். ஆனால் உயர்ந்த இலக்கின் பொருட்டு அழிபவர்கள் நினைவுகூரப்பட வேண்டும். அவர்களாலேயே கலையும் இலக்கியமும் வாழ்கின்றன

இப்போது என்னை ஆச்சரியப்படுத்துவது அவ்விதழின் தலைப்பு. சாலிவாகனனுக்கு அது மோகினியேதான்.

கலாமோகினி கலாமோகினி கலாமோகினி – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 02, 2022 11:34

ஜெயா டிவி பேட்டி

அன்புள்ள ஜெ

ஜெயா டிவியில் உங்கள் சிறு பேட்டியை பார்த்தேன். சற்று சலிப்புடன், களைப்புடன் பேசுவதாகப் பட்டது. முந்தைய சினிமா பேட்டிகளில் இருந்த உற்சாகம் இல்லை. நீங்கள் அளித்த பேட்டிகளிலேயே சிறந்தது என்றால் பாரதி பாஸ்கர் – பட்டிமன்றம் ராஜாவுக்கு அளித்த பேட்டிதான். இந்தப்பேட்டியில் கேள்விகள் சம்பிரதாயமானவை, பதில்களும் அப்படியே. இன்று குற்றங்கள் பெருகிவிட்டன என்ற வழக்கமான பேச்சுக்கு பதிலளிக்கும் இடம் மட்டுமே ஆர்வமூட்டும்படி இருந்தது. எல்லா பேட்டிகளும் ஒரே இடத்தில் எடுக்கப்பட்டவை போல் இருக்கின்றன. ஒரே நாற்காலி.

ராஜ் கண்ணன்

*

அன்புள்ள ராஜ் கண்ணன்,

ஆம், இந்த பேட்டியின் சம்பிரதாயங்கள் சலிப்பூட்டுபவை. இன்று மிக எளிதாக ஒளியமைப்பு செய்ய முடியும். முன்புவந்த கலாட்டா டிவியின் ஒளியமைப்பாளர்கள் சாதாரணமாக அதைச் செய்தனர். மரபான டிவிக்காரர்கள் கொஞ்சம் பொறுமையாகவும் சம்பிரதாயமும் செய்கிறார்கள். பேட்டி ஆரம்பிக்கும்போதே சலிப்பும் விலக்கமும் உருவாகிவிட்டது.

நான் தொலைக்காட்சி பேட்டிகளை ஒப்புக்கொள்வதில்லை. தொலைக்காட்சிகளில் கூடுமானவரை தோன்றியதில்லை. இனிமேலும் அதுவே எண்ணம். ஆனால் சினிமா பிரமோக்களை இன்றெல்லாம் தவிர்க்க முடியாது. இவர்கள் பொன்னியின் செல்வன் அணி சொல்லி தொடர்புகொண்டார்கள் என நினைத்துவிட்டேன்.

ஜெ

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 02, 2022 11:31

சாம்ராஜும் சினிமாவும்

அன்பு நிறை ஆசான் அவர்களுக்கு,

எங்கள் ஊரில் ஒரு சொலவடை உண்டு..தடி எடுத்தவன் எல்லாம் தண்டல்காரன்…அது போல ,இந்த சமூக ஊடக உலகத்தில்,அலைபேசி வைத்திருப்பவன் எல்லாம் விமர்சகர்கள் ஆகிவிட்டனர்… யூட்யூப் தளத்திற்கு சென்றால் ,பல்வேறு வகையான விமர்சனம்..தாங்க முடியவில்லை…இந்த அபத்த உலகில்,அத்தி பூத்தார்போல,சில விதிவிலக்குகள் உண்டுதானே..

தற்பொழுது நடந்த ,சிவரஞ்சனியும்,சில பெண்களும் திரை விமர்சனம் சொற்பொழிவுகளை கேட்டேன்…அத்திப் பூக்களை காணும் பாக்கியம் கிடைத்தது.. எழுத்தாளர் அருண்மொழி பற்றி ஏற்கெனவே பலபேர் கூறிவிட்டதால்,சாம்ராஜ் உரையினைப் பற்றி கண்டிப்பாக குறிப்பிட்டே ஆகவேண்டும்..மிகச் செறிவான உரை..சினிமாவை நேசிப்பவர்,எழுத்தாளராக மேலும் கவிஞராக இருத்தல் கூடுதல் சிறப்பு…உரையை மேற்கோள் கொண்டு தொடங்கி, நல்ல இலக்கியம் சினிமாவில் என்ன பாடுபடும் என்பதை சுஜாதாவின் புத்தகத்திலிருந்து சில சம்பவங்களை குறிப்பிட்டு ,சாய் வசந்தின் மூன்று கதைகளை சினிமா மொழியில் காட்சியப் படுத்தியதை விளக்கி சென்றது அருமை..குறிப்பாக அ.மி யின் விமோசனம் கதையின் திரைமொழியில் நாம் கவனிக்க தவறிய காட்சிகளை குறித்து பேசியது மிக நன்றாக இருந்தது..சாம்ராஜ் சினிமா உலகில் வாழ்பவர்…எந்த அளவுக்கு நேசிப்பவர் என்பதை உரையின் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது..

அவர் எழுதிய மலையாளத் திரைப்படங்கள் விமர்சன தொகுப்பு புத்தகம்  நிலைக் கண்ணாடியுடன் பேசுபவன் ,தமிழில் எழுதப்பட்ட மிக முக்கியமான திரை விமர்சனம் புத்தகம்..விமர்சனம் என்பதை விட திரை ஆராய்ச்சி கட்டுரை என்றே சொல்வேன்..குறிப்பாக ரஞ்சித் (மலையாள ) இயக்கத்தில் வெளிவந்த படங்களை பற்றிய குறிப்புகள்,ஒரு திரை விமர்சனக் கட்டுரை எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு தமிழில் உள்ள நல்ல உதாரணங்கள் ( என்னுடைய சிறு வாசிப்பு அனுபவத்தில் )

அந்த புத்தகத்தை பற்றிய எனது குறிப்பு

நிலைக்கண்ணாடியுடன் பேசுபவன்

நன்றி

ஆனந்தன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 02, 2022 11:31

விஷ்ணுபுரம் விருந்தினர்-3, அகரமுதல்வன்

விஷ்ணுபுரம் 2022 விருதுவிழா அரங்கில் வாசகர்களைச் சந்திக்கும் எழுத்தாளர்களில் ஒருவர் அகரமுதல்வன். ஈழத்தை பிறப்பிடமாகக்கொண்டு சென்னையில் வசிப்பவர். இன்று தமிழில் பரவலாக வாசிக்கப்படும் படைப்பாளிகளில் ஒருவராக உள்ளார்

அகரமுதல்வன். தமிழ் விக்கி

விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி  

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 02, 2022 11:31

November 1, 2022

தூக்கம், கவனம்

அன்புள்ள ஜெ

இந்த புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்து நீங்கள் ஜா.தீபா பேசும்போது தூங்கியதாக இணையத்தில் ஒரு கோஷ்டி கெக்கலி கொட்டிக்கொண்டிருக்கிறது. சும்மா ஒரு தகவலுக்காக.

அர்விந்த்

*

அன்புள்ள அர்விந்த்

மகிழ்ச்சி எல்லாருக்கும் நல்லதுதானே? இந்த எளிய மக்களின் மகிழ்ச்சி என்பது அவர்களைப்போல பிறரையும் கற்பனை செய்துகொள்வதில் உள்ளது. அதன் வழியாக தங்கள் வாழ்க்கையை நரகமாக்கும் தங்கள் சர்வசாதாரணத் தன்மை பற்றிய உணர்வை கடக்க முயல்கிறார்கள்.

இது மிகச் சங்கடமான காலம். சமூக வலைத்தளங்கள் சர்வசாதாரணமானவர்களை படைப்பாளிகளுடனும் சாதித்தவர்களுடனும் புகழ்பெற்றவர்களுடனும் இணையாகப் பழக அனுமதிக்கின்றன. போலியான ஒரு சமத்துவத்தை அவை அவர்களுக்கு அளிக்கின்றன. சாதாரணமானவர்களுக்கு அந்த சமத்துவம் உள்ளீடற்றது என்று உள்ளூரத் தெரியும். தாங்கள் வெறும் சாமானியர் என்பதும் தெரியும். ஒவ்வொருநாளும் அவர்களின் அன்றாட வாழ்க்கை அதை அவர்களிடம் ஆணியடித்ததுபோலச் சொல்லிக்கொண்டே இருக்கிறது. ஆகவே படைப்பாளிகளுடனும் சாதித்தவர்களுடனும் தங்களை ஒப்பிட்டுக்கொண்டே இருக்கிறார்கள். கசப்பு கொள்கிறார்கள். புண்படுகிறார்கள். அகத்தே எரிந்துகொண்டே இருக்கிறார்கள். அது நரகம்.

அந்த தீராத வதையில் இருந்து தப்பும்பொருட்டு அவர்கள் அவதூறுகளை உருவாக்குகிறார்கள். வசைபாடுகிறார்கள். துணிவு குறைவானவர்கள் போலிப்பெயர்களில் அவற்றைச் செய்கிறார்கள். சிலர் அவதூறுகள் அல்லது வசைகள் நிகழுமிடங்களுக்குச் சென்று சிரித்துவிட்டுச் செல்கிறார்கள். சமூக ஊடகமே இவர்களுக்கான வெளியாக ஆகிவிட்டது. ஆகவேதான் எத்துறையிலேனும் சாதித்தவர்கள்,  தெரிந்த ஆளுமைகள் இணையவெளிக்கு வரமுடியாத சூழல் உள்ளது. சராசரிக்குமேல் செல்வம் கொண்டவர்கள் கூட வரமுடியாது. மனிதரை நம்பி அங்கே முகம்காட்டியவர்களெல்லாம் தெறித்து ஓடிவிட்டார்கள்.

(அரசியல்வாதிகளும் தொழிலதிபர்களும் நடிகர்களும் அலுவலகம் வைத்து தங்கள் சமூகவலைத்தள கணக்குகளை நடத்துகிறார்கள். ஒரு வடிகட்டலுக்குப் பின் அன்றி எதுவுமே அவர்கள் வரைச் சென்று சேராது)

இணையம் ஒரு சாதாரண நபருக்கு எவருடனும் தொடர்பு கொள்ள வழியளிக்கிறது. சென்ற தலைமுறையில் ஒருவர் சுந்தர ராமசாமியுடனும் பாலசந்தருடனும் உரையாடுவதென்பது மிக அரிதான வாய்ப்பு. இன்று அது எளிதாக அமைகிறது. ஆனால் அதை தன் மகிழ்வுக்காக, தன் கல்விக்காக, தன் முன்னேற்றத்துக்காகப் பயன்படுத்திக் கொள்பவர்கள் அரிதினும் அரிதானவர்கள். பெரும்பாலானவர்கள் அந்த ஆளுமைகளால் சொந்த தன்முனைப்பு சீண்டப்படுபவர்கள். அதன் விளைவாக துன்பத்தில் எரிந்துகொண்டே இருப்பவர்கள். அதை ஆற்றிக்கொள்ள அந்த ஆளுமைகளை இழிவுசெய்ய, ஏளனம் செய்ய முயல்பவர்கள்.

இந்த நஞ்சை சந்திக்காத புகழ்பெற்ற எவருமே இல்லை. எல்லாருக்குமே இது தெரியும். தனி உரையாடல்களில் இதை கசப்புடனும் ஏளனத்துடனும் சொல்லிக் கொள்வார்கள். நான் எழுத்தாளன், உரையாடலை உருவாக்குபவன் என்பதனால் பொதுவெளியில் சொல்கிறேன்.

ஆளுமைகளை ஏளனம் செய்வது, சிறுமைசெய்வது வழியாக சாமானியர்கள் அந்த ஆளுமைகளையும் தங்கள் தரத்துக்கு கொண்டுவந்துவிட்டோம் என கற்பனை செய்கிறார்கள். ஆனால் என்ன செய்தாலும் செயலியற்றி வென்றவர் வென்றவரே என்னும் உண்மை கற்பாறை போல் கண்முன் நிற்கிறது. ஆகவே சாமானியரின் அகத்துயருக்கு முடிவே இல்லை. அவர்களுக்குச் சமூக வலைத்தள உலகம் பெரும் வதையாகவும், கூடவே விட்டுவிட முடியாத போதையாகவும் உள்ளது. அவ்வப்போது பெரும்பாலானவர்கள் விட்டுவிட்டுச் செல்கிறார்கள். உடனே திரும்பி வந்துவிடுகிறார்கள். போதையடிமைகள்தான்.

சமூக வலைத்தளங்களில் ஈடுபடுவது சாமானியரைச் சீண்டிக்கொண்டே இருக்கிறது. ஆகவே உள்ளம் அலைக்கழிந்து அன்றாடச்செயல்களில் கவனம் சிதறுகிறது. எதையும் உருப்படியாகச் செய்ய முடிவதில்லை. தொடர்ச்சியாக பத்துபக்கம் வாசிப்பதே கடினமாகிறது. குடும்ப உறவுகளையே பேண முடிவதில்லை. ஆகவே அவ்வப்போது இணைய உலகை விட்டுவிட்டுச் செல்வதாக அறிவிக்கிறார்கள். ஆனால் விட்டுவிட்டால் அவர்களுக்கு இருக்கும் எளிமையான ஓர் இருப்பு கூட இல்லாமலாகி, அவர்கள் உலகில் இல்லை என்றே ஆகிவிடுவதாக உணர்கிறார்கள். பெயர் அறிந்த நாலு பேரை வசைபாடும் போதும் எள்ளிநகையாடும் போதும் வரும் ரகசியமான ஒரு ஆணவநிறைவுதான் அவர்களுக்கு எஞ்சும் ஒரே அடையாளம். அந்த சில்லறை அடையாளம் கூட அவர்களுக்கு வெளியுலகில் இருப்பதில்லை. அவர்களின் தொழிலில், குடும்பத்தில் அவர்கள் மிகமிக எளியவர்கள். கண்ணுக்கே தென்படாதவர்கள். ஆகவே திரும்ப வருகிறார்கள்.

அத்துடன் இன்னொன்று. இது சாமானியர்களின் ரகசியக் களிப்பு மட்டும்தான். ஆனால் சாமர்த்தியமாக இதற்கு அரசியல் சார்ந்து ஒரு சாயம் பூசிக்கொள்ளலாம். அரசியல்சரிநிலைகள், ஒழுக்கச்சரிநிலைகள் சார்ந்து நியாயம் கற்பித்துக் கொள்ளலாம். இன்னார் சொல்வது அரசியல் ரீதியாக தவறு, ஆகவே எதிர்க்கிறேன், மற்றபடி நமக்கு என்ன பகை என சொல்லிக் கொள்ளலாம். இவர் பேசியது ஒழுக்கம் அல்லது சமூக அறத்துக்கு எதிரானது, ஆகவே எதிர்க்கிறேன் என்று பாவலா காட்டலாம். ஆனால் இதெல்லாமே தற்பாவனைகள், இந்த வகையான உறுதியான நிலைபாடுகள் ஏதும் உண்மையில் தனக்கு இல்லை என அதைச் சொல்பவரே அறிவார்.

ஏனென்றால் சாமானியர் எவரும் உறுதியான கொள்கைகளின்படி வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்கள் அல்ல. கிடைக்கும் வாய்ப்புகளினூடாக அங்கே இங்கே ஒட்டியும் ஊடுருவியும் சிறு வாய்ப்புகளை கண்டடைந்து தங்கள் எளிய வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர்களே. கொள்கையின் பொருட்டும் அறத்தின் பொருட்டும் கூச்சலிடுபவராக சமூகவலைத் தளங்களில் தங்களைக் காட்டிக்கொள்ளும்போது, அந்த பொய்ப்பிம்பத்தை கொஞ்சம் கொஞ்சமாக தாங்களே நம்ப ஆரம்பித்துவிட்டால், தான் ஒரு சாமானியனாக இருப்பதன் சிறுமையில் இருந்து கற்பனையிலேனும் மீளமுடிகிறது. ஆனால் இந்த பாவனை மிகமிக கடினமான திரை. ஒருவர் தானாகவே இதைக் கிழித்துக்கொண்டால்தான் உண்டு.

அந்த மனநிலைக்குச் சென்ற நடுவயதான ஒருவர் மீள முடியாது. இளைஞர்கள் தங்களுக்குள் அந்த மனநிலை செயல்படுவதை தற்பரிசீலனை வழியாக உணர்ந்து விடுபட்டாகவேண்டும். இல்லையேல் எதையுமே கற்க முடியாது. எவராயினும் தங்களைவிட மேலான, தங்களைவிட முன்சென்றவர்களிடமிருந்தே எதையாவது கற்க முடியும். அதற்கு நேர்மனநிலையுடன் அவர்களை கவனிப்பதும், உரையாடுவதும் அவசியமானது.

சாமானியர் என்பது ஒரு இழிநிலை அல்ல. அது எவருக்கும் இயல்பான நிலையும் அல்ல. எவருக்கும் அவருக்கான செயற்களம் ஒன்று இருக்கும். அதைக் கண்டடைந்து, அதில் செயலாற்றி, முதல் வெற்றியைக் கண்டுவிட்டாலே இந்த தாழ்வுணர்ச்சியும் அதன் விளைவான காழ்ப்புகளும் எவ்வளவு அர்த்தமற்றவை என தெரியும். இந்த தாழ்வுணர்ச்சிக் கூட்டத்தை ஒருங்குதிரட்டி, ஓர் கருத்துத்தள சக்தியாக ஆக்கி, தங்கள் அற்ப அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்பவர்களின் சூழ்ச்சிகளும் தெரியவரும். அது ஒரு பெரிய விடுதலை. அதை அடைந்த பலர் நம் நட்புக்கூட்டத்தில் உள்ளனர்.

*

இனி இந்த தூக்கம் பற்றிய அலர். இந்த விவாதத்தையே இவற்றைச் சொல்லத்தான் பயன்படுத்திக் கொள்கிறேன். சிலருக்கு உதவலாம்.

நான் பொதுவாக பகலில் எங்கும் தூங்குவதில்லை. ஏனென்றால் ஒருநாளில் குறைந்தது 8 மணிநேரம், சாதாரணமாக 9 அல்லது 10 மணிநேரம் தூங்குபவன் நான். இரவில் ஆறுமணி நேரம் பகலில் மூன்று மணிநேரம் என்பது கணக்கு. எந்த நிலையிலும் தூக்கத்தைத் துறப்பதில்லை. எதன் பொருட்டும். காரில் செல்லும் நீண்ட இந்தியப் பயணங்களில்கூட எட்டுமணி நேரத் தூக்கம் என்பது கட்டாயம் என்பது என் கொள்கை என்பது நண்பர்களுக்குத் தெரியும்.

தூக்கத்தை தவிர்த்துச் செய்யப்படும் செயல்கள் பெரும்பாலும் பயனற்றவை. உழைப்பை அவ்வாறு செய்யலாம். படைப்புச் செயல்களைச் செய்ய முடியாது. ஒருநாளில் குறைந்தது 10 மணிநேரம் கடும் மூளையுழைப்பு செய்பவன் நான். எல்லாமே தீவிரமான, செறிவான வேலைகள். அந்த ஆற்றல் துயிலில் இருந்து வருவது.

சுவாரசியமான விஷயம் என்னவென்றால், அன்று மேடையேறுவதற்கு முன் பா.ராகவனிடமும் சமஸிடமும் அதைத்தான் சொல்லிக்கொண்டிருந்தேன். பா.ராகவன் நீண்டநேரம் இரவில் விழித்திருப்பார், தூங்குவது குறைவு என்றார். அவருடையது எழுத்துப்பணி என்பதனால் துயில் குறைவது எவ்வகையிலும் உகந்தது அல்ல என்று சொன்னேன். அதற்கு முந்தையநாள் சங்கர்ஸ் ஐ.ஏ.எஸ் அக்காடமி உரையிலும் அதை விரிவாகச் சொன்னேன்.

என்னைப் பொறுத்தவரை தூங்கி எழுந்தபின் உடனடியாக அமர்ந்து பணியாற்றுவதே மிகமிகச் சிறந்த வழி. எனக்கு இரண்டு காலைகள். இரவுத்துயிலுக்குப் பின், மதியத்துயிலுக்குப் பின். வேலைகள் முடிந்தபின் அந்தியில் நேரம் கிடைக்கலாம். ஆனால் அன்றைய நாளின் எச்சம் மூளையில் இருக்கும். அது புதியன செய்ய உகந்த பொழுது அல்ல. துயில் மூளையை கழுவி விடுகிறது. தூயதாக செயலுக்கு சித்தமாக இருக்கிறது மூளை.

தூக்கம் குறைவது நினைவுத்திறனை பாதிக்கும். மூளை தோல்சுருங்குவதுபோல பருவடிவிலேயே சுருக்கங்களை அடைகிறது என்கிறார்கள். மூளை களைப்படைந்திருக்கையில் அதை உழைக்கச் செய்வதும் பிழை. ஊக்கமடைந்திருக்கையில் அதற்கு வேலை கொடுப்பது அதை வளர்க்கிறது. மூளை ஒரு குதிரை. அதற்கு ஓய்வும் பயிற்சியும் தேவை.

நூறு வயது வரை நினைவுமயங்காமல் இருந்த கி.ராஜநாராயணனிடம் அதைப்பற்றி கேட்டபோது அவர் சொன்னது ஒரே சொல். ‘தூக்கம். சுகமா நல்லா தூங்கினாலே போதும்…நான் பத்து மணிநேரம் தூங்கிருவேன்’

மூளை ஓர் அரிய பொருள். அதன்மேல் அதை மயங்கச்செய்யும் எதையும் போடுவதில்லை என்பது நான் எடுத்த முடிவு. ஆகவே மதுவை தொடுவதில்லை. அலோபதி மாத்திரைகளிலேயே மயங்கச்செய்யும் எதையும் எடுப்பதில்லை. மிகமிகமிக அரிதாகவே மருந்துகள் உட்கொள்கிறேன். சாதாரணமான சளி, காய்ச்சல் எதற்கும் எந்த மருந்தும் எடுப்பதில்லை. ஏராளமான வெந்நீர் மட்டுமே. அரிதாக கொரோனா போன்றவை வந்து மருந்துகள் உண்ணும்போது டாக்டரிடம் இது மூளையில் ஏதாவது மயக்கத்தை அளிக்குமா என்று கேட்டுக் கொள்வேன். மிக நீண்ட விமானப் பயணங்களில் மட்டும் இருமல் மருந்து இரண்டு மூடி சாப்பிட்டிருக்கிறேன். அதற்கே பதினெட்டு மணிநேரம் தூங்குவேன். அலோபதிக்கு என் உடல் பழகாததனால் எந்த மாத்திரையிலும் தூக்கம் வந்துவிடும்.

இதை தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டே இருக்கிறேன். என் மகன் உட்பட இளைய தலைமுறையினர் தூங்குவது மிகக்குறைவு. காரணம் சமூகவலைத்தளங்கள், இணையம். இன்று ‘தூக்கம் வந்தால் தூங்குவோம்’ என்னும் மனநிலை தவறானது. தூங்குவதற்கு ஒரு நேரத்தை முடிவுசெய்து, எது வந்தாலும் அந்நேரத்தில் தூங்கிவிடுவதை ஒரு நெறியாக கொண்டாகவேண்டும். எழுதி ஒட்டிவைப்பதுகூட நல்லது. சினிமாவில் பலர் அதையே செய்கிறார்கள். என் நண்பர் ஒருவரின் கம்ப்யூட்டர் ஸ்க்ரீன்சேவர் தூங்கும்நேரம் பற்றிய அறிவிப்புதான்.  நீங்கள் தூங்கும் நேரம் என்ன என்பதை உங்களுக்கு அணுக்கமான அனைவருமே அறிந்திருக்கவேண்டும். (சினிமாவில் இது மிக முக்கியமானது)

இல்லை என்றால் தூக்கம் வரும்போது ‘சரி, கடைசியாக வாட்ஸப் மட்டும் பார்த்துவிட்டு தூங்குவோம்’ என ஆரம்பிப்பீர்கள். அது தொட்டுத்தொட்டு இரண்டு மணிநேரத்தை விழுங்கிவிடும். உடலின் இயல்பு என்பது காலப்பிரமாணம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பொழுதில் தூங்குபவர்களுக்கு காலப்போக்கில் இயற்கையான தூக்கம் வராமலாகும். மலையாள சினிமாவின் பிரச்சினையே இதுதான். அங்கே இரவுபகலாக படப்பிடிப்பு உண்டு. ஆகவே நடிகர்கள் செட்டில் இருந்து செட்டுக்கு ஓடுவார்கள். விளைவாக இயற்கையான துயிலும் பசியும் இல்லாமலாகும். குடியும் மிகையுணவும் வழக்கமாகி உடல்நிலை கெடும்.

தூக்கம் சரியாக இல்லாமலிருக்க இன்னொரு காரணம் மூக்கு. மூக்கின் வளைவு, பாலிப்ஸ் என்னும் மென்சவ்வு அடைப்பு ஆகியவற்றால் மூச்சு சீராக இல்லாமல் ஆவதன் விளைவாக தீவிரமான தூக்கம்  அமையாமலாகும். உடல்பருமன், வயதாவது ஆகியவற்றால் தாடைத்தசை தளர்ந்து மூச்சுக்குழாயை அடைப்பதனாலும் ஆழ்ந்த தூக்கம் இல்லாமலாகும்.

அதாவது பலமணிநேரம் தூங்குவதுபோல் இருக்கும். ஆனால் காலை எழும்போது சரியாக தூங்கவில்லை என்று தோன்றும். பகலில் சிறு தூக்கங்கள் வந்துசெல்லும். அது ஆழ்துயில்குறைவின் அடையாளம். துயில் என்பது உண்மையில் ஆழ்துயில்தான். அரைத்துயில் என்பது துயில் அல்ல. உள்ளம் மட்டுமல்ல, உடலும் ஓய்வடைவதில்லை. அரைகுறைத் துயில் நெடுநேரம் படுக்கையில் இருக்கவைக்கும். ஆனால் மூளை ஓய்வடையாது.

அதற்கு முறையான சிகிழ்ச்சை எடுத்தாகவேண்டும். திருவனந்தபுரம் ஸ்ரீசித்ரா மருத்துவநிலையில் இதற்கென்றே ஒரு பிரிவு உள்ளது. (பார்க்க COMPREHENSIVE CENTER FOR SLEEP DISORDERS (CCSD) ) இங்கும் பல மருத்துவமனைகளில் துயில்சிகிழ்ச்சை பிரிவுகள் உண்டு. ஆனால் அவை செலவேறியவை என்கிறார்கள். திருவனந்தபுரத்தில் செலவு மிகக்குறைவு. மறைந்த ஸ்ரீ சித்திரைத்திருநாள் மகாராஜாவின் கொடை அமைப்பு அது. ஐம்பது வயது கடந்தவர்கள், பருமனானவர்கள் எவராயினும் சரியாகத்தான் துயில்கிறோமா என ஒரு முறை சோதனை செய்து கொள்வது நல்லது. (பார்க்க பழைய கட்டுரைகள் தூக்கம்  ,  தூக்கம் குறித்து மேலும் )

தொடக்கநிலை துயில்சிக்கல் கொண்டவர்களுக்கு படுப்பதன் ‘போஸ்’கள் பற்றிய எளிய பயிற்சிகள் போதும். அடுத்த கட்டத்தில் வாயில் மாட்டும் சிறிய கிளிப் போன்ற கருவிகள். தீவிரமான தூக்கச்சிக்கல் உடையவர்களுக்கு பேட்டரியுடன் இணைந்த ஒரு கருவி உண்டு. மேலதிக காற்றை அது உந்தி நுரையீரலுக்கு அனுப்பும். அது குறையும் மூச்சை ஈடுகட்டும். அக்கருவியை பயணங்களில் கொண்டுசெல்லலாம். இருபதாயிரம் ரூபாய் வரை ஆகுமென நினைக்கிறேன். எனக்கு தெரிந்து பலருடைய வாழ்க்கையையே அந்த கருவி மாற்றியிருக்கிறது. பல ஆண்டுகளாக இந்த எளிய சிகிழ்ச்சை இல்லாமல் வாழ்க்கையை வீணடித்ததாக உணர்ந்திருக்கிறார்கள். எட்டாண்டுகளுக்குப்பின் ஒவ்வொரு நாளும் கண்கள் தெளிந்து, மனம் தெளிந்து விழித்தெழுவதாகச் சொன்ன ஒரு மலையாள சினிமா இயக்குநர் கண்கலங்கிவிட்டார்.

ஒழிமுறி படத்தின் இணை இயக்குநர் உண்ணி தூக்க சிகிச்சை எடுத்துக்கொண்டபோது நானும் ஸ்ரீசித்ரா தூக்க மருத்துவமனைக்குச் சென்றேன். என் தூக்கத்தையும் சோதனை செய்துகொண்டேன். உடலில் எலக்ட்ரோடுகள் பொருத்தி அங்கேயே தூங்கவைப்பார்கள். காமிராக்கள் தூக்கத்தில் நம்மை படம்பிடிக்கும். நம் உடலசைவுகளை பதிவுசெய்யும். என் தூக்கம் ‘பெர்பெக்ட்’ என்றார் அங்கிருந்த பெண்மருத்துவர். ஐம்பது வயதுக்குமேல் மல்லாந்து படுத்து தூங்கக்கூடாது, தாடைச்சதை மூச்சுவழியை அடைக்கும். அதைமட்டும் எனக்கு பரிந்துரைத்தார். நான் காலையில் எப்போதுமே தூக்கம் விழித்ததும் சட்டென்று எழுந்துவிடுவதை, நேரடியாகவே உற்சாகமாக பேசவோ எழுதவோ தொடங்குவதை நண்பர்கள் கண்டிருக்கலாம். தூக்கம் விழித்த ‘சடைவு’ இருப்பதில்லை. அது இருக்கக்கூடாது. அது இல்லாமலிருப்பதே நல்ல துயிலுக்கான சான்று.

இன்று ரயிலில் பலர் தூங்கும்போது படும் அவஸ்தைகளை காண்கிறேன். திடுக்கிட்டு திடுக்கிட்டு விழித்துக்கொண்டும், கனைத்துக்கொண்டும் இருப்பார்கள். ஒரே கேள்விதான். காலையில் எழுந்தால் சோர்வாக இருக்கிறதா? முகம் அதைத்ததுபோல, தொண்டை வரண்டு அடைத்ததுபோல உணர்கிறீர்களா? கண்கள் களைத்து ஒளிக்கு கூசுகின்றனவா? எங்கு எப்போது அமர்ந்தாலும் ஓரிரு நிமிடங்கள் தூங்குகிறீர்களா? மருத்துவரை அணுகியாகவேண்டும்.

தூக்கம் வருங்காலத்திலும் பெரிய பிரச்சினையாகவே இருக்கும். செல்பேசி போல எப்போதும் உடனிருக்கும் ஒரு கருவி நம்மை தூங்க விடாது. நாம் எப்போது வேண்டுமென்றாலும் எவரால் வேண்டுமென்றாலும் அழைக்கப்படலாம் என்பதைப்போல அபத்தமான நிலை வேறு இல்லை. அதையே அன்று சமஸ், ராகவன் இருவரிடமும் சொன்னேன்.

நான் செல்பேசியில் பேசுவது எனக்கு வசதிப்படும்போது மட்டுமே. நடை செல்லும்போது மட்டுமே செல்பேசியில் பேசுவேன் என்பது ஒரு தன்நெறியாகக் கொண்டிருக்கிறேன். தொழில்செய்பவர்களுக்கு அது இயல்வதல்ல. ஆனால் இரவில் எந்தப்பொழுதில் செல்போனை அணைக்கவேண்டும் என்று தெரிந்திருக்கவேண்டும். அதை வெளிப்படையாக அறிவிக்கவேண்டும்.

சரி, நீங்கள் கேட்டதற்கே வருகிறேன். அன்றல்ல, என்றுமே எங்குமே தூங்கும்நேரம் தவிர எப்போதும் தூங்குவதில்லை. தூங்கும் நேரம் என்றால் அதை அறிவித்துவிட்டு இருபதுபேர் அமர்ந்து பேசிக்கொண்டிருக்கும் அறையிலேயே ஓரமாக படுத்து ஆழ்ந்து தூங்கிவிடுவேன் என்பதையும் நண்பர்கள் கண்டிருக்கலாம். ஆகவே பகலில் மிக மெல்லிய அளவில்கூட மூளை மயங்குவதில்லை.

நான் ஆழமாக ஒன்றை உள்ளத்தில் வகுத்துக்கொள்ளும்போது, அல்லது கவனிக்கும்போது கண்களை மூடிக்கொள்வதுண்டு. என் வரையில் அரைக்கவனம் என்பது இல்லை. அதேபோல கவனிக்கத் தேவையில்லை என்ற சலிப்பு உருவானாலும் கண்களை மூடிக்கொண்டு வேறு உலகில் நுழைந்துவிடுவேன்.

அப்போது ஒரு மொத்த குறுநாவலையும் மனதிலேயே ஓட்டி அழித்துவிடமுடியும். என் தனிப்பட்ட பொழுதுபோக்கு என்பதே வெறுமே என் சுவாரசியத்துக்காக எனக்குள் கதைகளை உருவாக்கி ரசிப்பதுதான். கட்டுரைகளை பல படிகளாக விரிவாக உருவாக்கிக் கொள்வதும் உண்டு. (அதற்கான சில வழிமுறைகளும் உண்டு. அதைப்பற்றி தனிவகுப்புகளில் விரிவாக பேசியிருக்கிறேன்) எங்கிருந்தாலும் நம்மால் சூழலை விலக்கி நம்முள் ஆழ்ந்து நம் சிந்தனைகளை ஒருங்கிணைக்க முடியும். அதைச்செய்யாதவர்களால் என் அளவு எழுதமுடியாது.

தன்னுள் கற்பனையிலாழ்தல் என்பது எழுத்தாளனின் அந்தரங்கமான ஓர் இன்பம். (பதின்பருவத்தில் எல்லாருக்கும் அந்த உலகம் இருக்கும். இறுதிவரை நீடித்தால் நீங்கள் எழுத்தாளர்) இருநாட்களுக்கு முன் ரயில் பயணத்தில் ஒரு துப்பறியும் கதையை நானே அத்தியாயம் அத்தியாயமாக உள்ளத்தில் கற்பனைசெய்தேன். ரயில் இறங்கும்போதும் அதை முடிக்கவில்லை. மேம்பாலத்தில் நின்று அதை முடித்துவிட்டு மேலே சென்றேன். சுந்தர ராமசாமிக்கு அந்த வழக்கம் உண்டு. யுவன் சந்திரசேகருக்கு அந்த வழக்கம் உண்டு என்று சொல்லியிருக்கிறான்.

*

இந்த நீண்ட விவாதத்தின் ஒரு பகுதியாக கவனம் என்பது பற்றியும் சொல்ல விரும்புகிறேன். இப்படி ஒரு விவாதத்தின் பகுதியாக இளைஞர் சிலருக்கு இது சென்று சேர்ந்தால் நல்லது. காழ்ப்பாளர்கள் இதைப் பரப்பட்டும். அவர்களால் அப்படியேனும் ஒரு நன்மை விளையட்டும்.

கவனிப்பது என்பது அறிவுத்துறைச் செயல்பாடுகளின் அடிப்படைத் தகுதி. நான் கவனிப்பவற்றை முழுமையாகவே கவனிப்பேன். கவனித்த எதையும் எப்போதும் மறப்பதுமில்லை. என்னுடன் எப்போதுமே பெருந்திரளாக நண்பர்களும் இளைஞர்களும் இருக்கிறார்கள். நான் அரங்குகளில் பிறர் உரைகளை, கட்டுரைகளை, கதைகளை கூர்ந்து கேட்டு முழுமையாகவே திரும்பச் சொல்லி, என் கருத்தைப் பேசுவதை பலர் கவனித்திருக்கலாம். மொத்த உரையாடலையும் கவனித்து, அதை அப்படியே திரும்ப சொல் சொல்லாக மொழியாக்கமும் செய்வேன். இதை சியமந்தகம் கட்டுரைகளில் பலர் வியப்புடன் பதிவுசெய்துள்ளனர். யுவன் மேடையிலும் சொன்னான்.

ஆனால் இது ‘அதீத’ திறன் அல்ல. பயின்று அடையத்தக்கதுதான். ஒன்றைக் கவனித்து, பின் அதை மறக்கிறோம் என்றால் அந்த கவனிக்கும் நேரமே வீணானதுதான். மறதிக்கு எதிரான போர்தான் சிந்தனை என்பது. தத்துவ வகுப்புகளில் ’மறந்துவிட்டேன்’ என்பது ஒரு சாக்கு அல்ல, குற்றம். மரபான வேந்தாதக் குருநிலைகளில் சென்றதுமே கூர்ந்து கவனிப்பதையே முதலில் கற்பிப்பார்கள். அந்த வகுப்புகளுக்குப் பின்னரே தத்துவம். கவனிப்பதற்கான வழிமுறைகள் உள்ளன.

இதை தத்துவ வகுப்புகள் உட்பட அனைத்திலும் தொடர்ந்து சொல்லி வருகிறேன். நம் சந்திப்புகளில் இதற்கான பயிற்சிகளும் நடைபெற்று வருகின்றன. அதாவது ஓர் உரையை கவனிப்பதென்றால் அந்த உரையை முழுமையாகவே திரும்ப சொல்ல முடியவேண்டும். பலமுறை நான் அவ்வண்ணம் பிறர் உரைகளைச் சொல்லிக்காட்டி நண்பர்களுக்கு அந்த நம்பிக்கையை அளித்திருக்கிறேன். இன்று பல நண்பர்கள் அதேபோல சொல்லும் திறன்கொண்டிருக்கிறார்கள்.

அந்த அரங்கில் அன்று உண்மையில் நான் மட்டுமே ஜா.தீபாவின் உரையை முழுமையாக கவனித்திருப்பேன். ஜா.தீபாவே மறந்துவிடலாம். இருபதாண்டுகள் கழித்து என் எண்பது வயதில் அந்த உரையை ஏறத்தாழ முழுமையாகவே என்னால் திரும்பச் சொல்ல முடியும்.

மரபான வேதாந்த குருகுல முறைகளில் தத்துவக் கல்விக்கு முன் அளிக்கப்படும் இப்பயிற்சி ஒருவகையான அடித்தளம். முழுமையாகக் கவனித்தல் என்பது நம் உள்ளத்தை ஒழுங்குபடுத்தல்தான்.  அதற்கான வழிமுறைகளை, அதிலுள்ள பிழைநிகவுகளை முறையான வகுப்புகளாக நானும் அண்மைய தத்துவ வகுப்புகளில் நண்பர்களுக்கு பயிற்றியிருக்கிறேன். (தத்துவ வகுப்புக்கு வந்தவர்கள் அங்கே சொல்லப்பட்ட நான்கு வகை fallacy களை நினைவுகூரவும்) பலர் அத்திறனை என்னைவிட எளிதாக அடைந்ததையும் கண்டேன்.

ஆனால் போதைப்பழக்கம் உடையவர்கள், அலோபதி மருந்துகள் (குறிப்பாக ரத்த அழுத்த மாத்திரைகள்) உண்பவர்களால் அந்த பயிற்சியை அடைய முடியாது. போதைப்பழக்கம் இருந்து அகன்றாலும்கூட அது சாத்தியமில்லை என்றுதான் முன்னோடிகள் சொல்லியிருக்கிறார்கள். தனிநபரின் அதீத முயற்சியால் கைகூடலாம். பொதுவாக சாத்தியமில்லை.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 01, 2022 11:35

சிவசங்கரி

[image error]சிவசங்கரி ஒரு காலகட்டத்தில் தமிழில் கல்விக்கும் வேலைக்கும் வீட்டைவிட்டு வெளிக்கிளம்பும் பெண்களின் ஆதர்ச பிம்பமாக இருந்தார். தமிழ்ச்சூழல் உகக்கும்படி, குடும்பத்தைவிட்டு விலகாத ஒரு பெண்ணியத்தை முன்வைத்தார். உடலின் எல்லையை மீறாத ஒரு பாலியல் விடுதலையை பேசினார். அவை தமிழ்ச்சூழலின் சிந்தனையில் தாக்கத்தை உருவாக்கின. அன்றைய பெண்களுக்கு நம்பிக்கையும் உறுதியும் அளித்தன. சிவசங்கரியை நம்பி தன் வாழ்க்கையை அமைத்துக்கொண்ட நடுவயதுப் பெண்கள் பலரை இன்று சந்திக்கிறேன்.

அன்று வணிக எழுத்துக்கு எதிராக இலக்கியத்தை முன்வைத்தபோது சிவசங்கரி போன்றவர்கள் இலக்கியவாதிகளால் விமர்சிக்கப்பட்டனர். இன்று எழுத்தாளர்கள் பொதுச்சிந்தனையை உருவாக்கிய காலகட்டம் ஒரு பொற்காலம் என தோன்றத் தொடங்கிவிட்டது. வணிக ஊடகங்களில் பொதுவாசிப்புக்குரிய படைப்புகளை எழுதியவர்கள் என்றாலும் சிவசங்கரி போன்றவர்கள் கல்வி கற்றவர்கள், பண்பாட்டை அறிந்தவர்கள், முற்போக்கானவர்கள்.

இன்று சமூக ஊடகங்களைக் கைப்பற்றிக்கொண்ட அறிவிலிகளும் அரசியல்பிராணிகளும்  சமூகச்சூழலின் சிந்தனையை வடிவமைக்கிறார்கள். அவர்கள் பேசுவதுதான் பெரும்பான்மையினருக்கு புரிகிறது, பிடித்திருக்கிறது. தொடுசிகிழ்ச்சை முதலிய மோசடிகள். இலுமினாட்டி சதி போன்ற அசட்டுத்தனங்கள். வரலாற்றிலும் பண்பாட்டிலும் அடிப்படை அறிவே இல்லாதவர்கள் கொட்டும் ஆய்வுக்குப்பைகள் ஆகியவை எங்கும் பரவியிருக்கின்றன. நம் வார இதழ்கள் அவற்றின் மிகமிகக் கீழெல்லையில்கூட அவற்றை வெளியிட்டிருக்க வாய்ப்பில்லை.

இப்போது யோசிக்கையில் சிவசங்கரி முதலியவர்கள் எவ்வளவு பெரிய நேர்நிலை ஆற்றல்கள் என எண்ணத் தோன்றுகிறது.

சிவசங்கரி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 01, 2022 11:34

யோகப்பயிற்சி முகாம்

குருஜி சௌந்தர் நடத்தும் யோகப்பயிற்சி முகாம் சென்ற அக்டோபர் இறுதியில் நடைபெறுவதாக இருந்தது. அது கடும் மழையால் ஒத்திவைக்கப்பட்டு நவம்பர் 4,5.6 தேதிகளில் நடைபெறுகிறது. முதல்வாரம் ஆகையால் சிலர் வர இயலாத நிலை என தெரிவித்தனர். ஆகவே மேலும் சிலருக்கு இடமுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் எழுதலாம்

ஜெயமோகன்

jeyamohan.writerpoet@gmail.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 01, 2022 11:33

நீலி மின்னிதழ்

நவம்பர் 2022 – நீலி (neeli.co.in)

ஜெ,

சைதன்யாவின் முதல் படைப்பும், சதீஷ்குமார் சீனிவாசனின் கவிதை பற்றிய முதல் முறையான விமர்சனக் கட்டுரையும், ஜெயராம் எடுத்த முதல் நேர்காணலும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நண்பர்கள் விக்னேஷ் ஹரிஹரன், சுரேஷ் பிரதீப், சாம்ராஜ், இசை, நரேன், பார்கவி, நந்தகுமார் ஆகியோர் பங்களித்துள்ளனர். ”நண்பர்கள் இணைந்து செய்யும் தொகுத்தல் பணி” என்பதையே அவர்களின் சிரத்தையான கட்டுரைகள் வெளிப்படுத்துகின்றன. மேலும் செறிவாகக் கொணர முற்படுகிறோம் ஜெ.

ரம்யா.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 01, 2022 11:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.