Jeyamohan's Blog, page 685
November 8, 2022
அதிமானுடரின் தூக்கம்
டெஸ்லாதூக்கம், கவனம்அன்புள்ள ஜெ,
கடந்த ஈரோடு வாசகர் முகாமில் ” யாரெல்லாம் இரவு நேரம் கழித்து உறங்குகிறீர்கள்?!” எனக் கேட்டுவிட்டு, என்ன பண்றீங்க அதுவரை?! என விசாரித்துவிட்டு,தூங்காமல் share market பார்த்து இறந்த ஒருவரை பற்றியும் குறிப்பிட்டீர்கள். அன்றே இதைப்பற்றி உங்களிடம் கேட்கவேண்டும் என இருந்தேன்.
“Uberman sleep cycle” என்பது ஒரு நாளுக்கு இரு மணி நேரம் மட்டுமே உறங்குவது,அதையும் ஒரு நாளுக்கு ஆறு முறை இருபது நிமிட power nap ஆக உறங்குவது.இதை Da Vinci மற்றும் Nikola Tesla இருவரும் கடைபிடித்தார்கள் என நம்பப்படுகிறது. நான் திருநெல்வேலி அரசினர் பொறியியல் கல்லூரியில் Electrical Engineering படித்தேன்.மிசோரம் மாநிலத்தில் இருந்து படித்த senior எனக்கு Tesla பற்றிய அறிமுகத்தை கொடுத்தார்.கரன்டை கண்டுபிடித்த பெருமை இந்நாள் வரை பல்பை கண்டுபிடித்த எடிசனயே சேர்கிறது,Teslaவும் கிட்டதட்ட அதே நேரத்தில் கண்டுபிடித்ததாகவும் அவருக்கு அங்கிகாரம் கிடைக்க கால தாமதம் ஆனது.Tesla கண்டுபிடித்தது AC ,எடிசன் கண்டுபிடித்தது DC. ACயின் பயன்பாடே மிகுதி எனிலும் Tesla நம் நினைவில் இருப்பதில்லை. இவ்வாறு அவர் கூறிய பின் ,நான் பதிலாக Magnetic field Intensityயின் unit Tesla வாக இருக்கிறது என பதிலளித்தேன்.அது மட்டும் தான் இருக்கிறது என சலித்துக்கொண்டார்
இந்த பேச்சு நடத்து இரு வருடங்கள் கழித்து war between AC and DC என இந்த முரண் ஒரு படமாக வந்துள்ளது.எனக்கு அந்த சீனியரிடம் இருந்த டெஸ்லா பைத்தியம் எனக்கும் தொற்றிக்கொண்டது.Tesla Uber man sleep cycle-ஐ கடைபிடித்தார்.Uber man sleep cycle மிகவும் ஆபத்தானதே,இதை பற்றி என் புரிதல்- எட்டு மணி நேர தூக்கத்தில் ஆழ் உறக்கம் இரண்டு முதல் மூன்று மணி நேரமாக மட்டுமே இருக்க முடியும்.அதனால் ஒரு நாளுக்கு இரு மணி நேர ஆழ் உறக்கம் போதுமானது.ஒரு நாளுக்கு16 மணி நேரம் போதாதவர்கள் இதை கடைபிடித்தாரகள் என்பது மேலோட்டமான பார்வை.
தூங்காமல் ஏதோ சாதிக்க வேண்டியது இருந்திருக்கலாம்.இதன் மூலம் மூளை செயல்பாட்டை அதிகரிக்கலாம் எனவும் நம்பப்படுகிறது.இதை பற்றி தங்கள் கருத்து என்ன?!.
நன்றி,
அன்புடன்,
சரவணப் பெருமாள்.செ
நீட்சே
அன்புள்ள சரவணப்பெருமாள்,
நான் கல்லூரியில் படிக்கும்போதும் எங்களிடம் பேரா.மனோகரன் அதிமானுடரின் தூக்கம் பற்றி நீங்கள் சொன்னதைச் சொன்னார். ’எறும்புகள் துயில்வதே இல்லை என்பதைப்போல மனிதனுக்கு ஊக்கமூட்டும் முன்னுதாரணம் ஏதும் இல்லை’ என்ற எமர்சனின் வரியையும் கூறினார். மேதைகள் தூங்குவதில்லை, சாதனையாளர் தூங்குவதில்லை என்று அவர் சொன்னதை நான் நீண்டநாள் கடைப்பிடித்தேன். ஒரு காலத்தில் நான் நான்குமணி நேரம் தூங்கினால் அதிகம்.
பதினெட்டாம் நூற்றாண்டுமுதல் இருபதாம் நூற்றாண்டு வரை உலகசிந்தனையில் ஆட்சி செலுத்திய ஒரு கருதுகோள் அதிமானுடன் (Uberman) என்பது. உலகமெங்கும் சர்வாதிகாரிகள் உருவாக வழிவகுத்தது அதுவே.
மன்னராட்சியில் இருந்து ஜனநாயகத்துக்கான பாதையில் சர்வாதிகாரிகளின் ஆட்சி ஒரு காலகட்டமாக இருந்தது. இரு உலகப் போர்களை உருவாக்கி உலகை பேரழிவுக்கு கொண்டுசென்றவர்கள் சர்வாதிகாரிகள். தங்களை அவர்கள் அதிமானுடன் என முன்வைத்தனர். அதை மக்கள் நம்பினர். அவர்களிடம் முற்றதிகாரத்தை ஒப்படைத்தனர்.
இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர்தான் அதிமானுடன் என்னும் கருத்தின் மேல் அவநம்பிக்கை உருவாகியது. அதிமானுடர் என அறியப்பட்டவர்கள் ஆணவமும் அச்சமும் சரிவிகிதமாகக் கலந்த எளிய மானுடர் மட்டுமே என தெளிவாகியது. அதிமானுடர் என்னும் கருத்துநிலை மெல்ல மெல்ல மறைந்தது.
அதிமானுடன் என்னும் கருதுகோள் அதற்கு முன்பிருந்த இரண்டு கருதுகோள்களில் இருந்து உருவானது. ஒன்று புனிதர் என்னும் நிலை. இரண்டு, அரசன் என்னும் நிலை. இரு சாராருமே தெய்வ அருள் பெற்றவர்கள், அதீத திறன்கொண்டவர்கள் என கருதப்பட்டனர்.
பழங்கால மதமும், பண்பாடும் அவ்விரு ஆளுமை உருவகங்களையும் உருவாக்கி நிலைநிறுத்தின. அவர்களை நம்பியே அன்றைய சமூகம் செயல்பட்டது. மதம், அரசு இரண்டுக்கும் அவர்களே மையங்கள்.
நீட்சேக்கு முன்னரே அதிமானுடன் என்னும் நவீனக்கொள்கையை உருவாக்கியவர் ஜெர்மானியக் கவிஞர் கதே. நெப்போலியனை அவர் ஓர் அதிமானுடனாகக் காண்கிறார். அடிப்படைவிசையின் வெளிப்பாடு என்கிறார். (Elemental power) அவரிடமிருந்து நீட்சே வழியாக ஹிட்லர் வரை வந்தது அந்த கருத்துநிலை.
இன்றைய யுகத்தில் அதிமானுடர் என்னும் கருத்துக்கு எந்த இடமும் இல்லை. இன்று மூளை பற்றி, சிந்தனையும் படைப்பூக்கமும் அதில் நிகழும் விதம் பற்றி ஏராளமான ஆய்வுமுடிவுகள் வெளியாகி பொதுப்புரிதல்கள் உண்டாகிவிட்டன.
கதேமானுடத்திறன் பலதரப்பட்டது. மூளையின் திறனிலும் பெரும் வேறுபாடுகள் உள்ளன. அதை மறுக்க முடியாது. ஆனால் எவரும் அதிமானுடர்கள் அல்ல. பெருஞ்சாதனையாளர்கள் என்பவர்கள் மூன்று அம்சங்களின் கலவையால் உருவாகிறவர்கள்.
அ. இயல்பான மூளைத்திறன். அவர்களின் மரபு வழியாகவே மூளையின் திறன் கூடுதலாக இருக்கும். நினைவுத்திறன், கற்பனைத்திறன், தர்க்கத்திறன், மொழியுணர்வுத்திறன் என அந்த தனித்திறன்கள் மாறுபட்டவை. ஆனால் அவை ஒன்றும் அதீதத் திறன்கள் அல்ல
ஆ. குவிதல் .ஒரு குறிப்பிட்ட களத்தில் அந்த மூளைத்திறனை முழுமையாகவே செலுத்துதல். அதற்கான பயிற்சிகளை இளமைமுதல் எடுத்துக் கொள்ளுதல். முழுவாழ்க்கையையும் அதற்கென்றே செலவிடுதல்.
இ. வரலாற்றுச் சூழல். தனிமனிதனின் திறன் எத்தகையதாக இருந்தாலும் ஒரு பண்பாட்டுச் சூழலின், ஒரு சமூகத்தின் , ஒரு காலகட்டத்தின் ஒரு பகுதியாகவே அவன் வெளிப்படமுடியும். அக்காலகட்டத்தின் தீவிரமும், படைப்பூக்கமும் அவனில் வெளிப்படுகின்றன.
இம்மூன்றும் இணையும் புள்ளிகளில் உருவாகும் பேராளுமைகளை நாம் நம் சாமானியத் தன்மையால் மதிப்பிடும்போது அவர்கள் அதிமானுடர் என எண்ணத் தலைப்படுகிறோம். வழிபடத் தொடங்குகிறோம்.
அதிமானுடர் இல்லை என்னும்போது அதிமானுட வாழ்க்கைமுறை அல்லது பயில்முறை என ஏதும் இல்லை என்றே சொல்லலாம். ஒவ்வொரு சாதனையாளருக்கும் அவரே உருவாக்கிக் கொண்ட செயல்பாட்டுமுறையும் வாழ்க்கைநெறிகளும் இருக்கும். அவற்றுக்கிடையே பொதுத்தன்மை என பெரிதாக ஏதும் இருக்காது. இருக்கும் ஒரே பொதுத்தன்மை என்பது அவர்கள் தங்கள் செயற்களத்தில் முழுமையாக குவிந்துவிடுவார்கள் என்பது மட்டுமே.
சென்ற நூற்றாண்டுவரை தூக்கத்தை எதிர்மறையாக பார்க்கும் கோணம் உலகசிந்தனையாளர்களிடம் இருந்தது. கிறிஸ்தவ, இஸ்லாமிய நோன்புமரபுகளில் (Asceticism) தூக்கம் துறத்தல் ஒரு முக்கியமான கூறு. அவர்களுக்கு தூக்கம் ஒருவகை பாவம்.
தொடர்ச்சியாகத் தூக்கம் விழித்தல் வழியாக உருவாகும் மூளைச்சலிப்பு விழிப்புமனத்தை ரத்துசெய்து ஒருவகை போதைநிலையை உருவாக்குகிறது. ஆழுள்ளம் வெளிப்படும் நிலை. கனவுகளும் எண்ணங்களுமாக அகம் பீரிடுகிறது. அதை தொடர்ச்சியான இறைவழிபாடு, பிரார்த்தனை, கூட்டான வழிபாடுகள், தொடர் இசை போன்றவற்றினூடாக கட்டுப்படுத்தும்போது ஆன்மிக அனுபவம் உருவாகிறது என நம்பப்பட்டது.
அதேபோல இந்திய யோகமுறைகளில் ஒரு சாரார் (வாம மார்க்கிகள்) தூக்கத்தை தமோநிலை (இருள்நிலை) என நம்பினர். தூக்கத்தை தவிர்க்கும் நோன்புகளும் சடங்குகளும் அவர்களால் செய்யப்பட்டன. பின்னாளில் நவீனச்சூழலில் அந்த வாமமார்க்க யோகப்பயிற்சிகள் மீட்டெடுக்கப்பட்டபோது தூக்கம் தவிர்த்தல் ஒரு பயிற்சியாக அளிக்கப்பட்டது. ஓஷோ ஓர் உரையில் அவ்வாறு பலநாட்கள் துயில் நீத்து கொடுங்கனவுகளுக்கு ஆட்பட்டு, உடல்நலிந்து நடுக்கம் கொண்டிருந்த ஒருவர் தன்னிடம் வந்ததைப் பதிவுசெய்கிறார்.
ஆனால் பதஞ்சலி யோகமரபில் நல்ல தூக்கம் மிக அவசியமானது. யோகப்பயிற்சியில் தூக்கம் ஊடாடவே கூடாது. அதுவே பிழை. ஆகவே ஒழுங்கான வாழ்க்கை நெறிகள், உடல்சார்ந்த யோகப்பயிற்சிகள் வழியாக செறிவான நல்ல தூக்கம் கட்டாயமாக ஆக்கப்படுகிறது.
இந்த வாம மார்க்க மரபுகளின் விளைவாக சாமானியர்களில் தூக்கம் ஒரு பிழையான விஷயம் என்னும் எண்ணம் உருவாகியிருக்கிறது. அதிமானுடர் துயிலமாட்டார்கள் என்று நம்புகிறார்கள். பெரும்பாலான யோகிகளைப் பற்றி அவர்கள் தூங்குவதே இல்லை என்னும் தொன்மம் உள்ளது. யோகவிழிப்பு பற்றி சித்தர்கள் சொல்லும் வரிகளை நேரடியாகப் பொருள்கொண்டு தூக்கம் ஞானத்துக்கும் ஊழ்கத்திற்கும் எதிரானது என்று புரிந்துகொள்கிறார்கள். (உலகம் துயில்கையில் யோகி விழித்திருக்கிறான் என்னும் கீதை வரியை நேரடிப்பொருள் அளித்து எழுதப்பட்ட ஏராளமான உரைகள் உள்ளன)
இதையே பின்னர் எல்லா சாதனையாளர்களுக்கும் பலபடிகளாக நீட்டிக்கொள்கிறார்கள். அதிமானுடர் தூங்குவதில்லை என்னும் கருத்தின் அடிப்படை இதுவே.
உண்மையில் எந்த மூளைக்கும் அதன் உழைப்புக்கு ஏற்ப ஓய்வு தேவை. கூரிய உழைப்பு மேலும் ஓய்வை தேவையாக்குகிறது. ஓய்வில்லா உழைப்பு என்பது உழைப்பல்ல, நேர வீணடிப்பு.
நமக்கு தேவை ’பொழுது’ அல்ல, ’கூரிய பொழுது’தான். எவ்வளவு நேரம் செலவழிக்கிறோம் என்பதல்ல, எப்படி செலவழிக்கிறோம் என்பதே முக்கியம்.
எண்ணிப் பாருங்கள், நம் வாழ்க்கையில் நம் முழுப்புலன்களும் குவிந்து, மொத்த உள்ளமும் கூர்கொண்டு, எதையாவது செய்த பொழுதுகள் எவ்வளவு? கற்ற பொழுதுகள் எவ்வளவு? மெய்மறத்தல் என்று அந்நிலையையே சொல்கிறோம். எங்கிருக்கிறோம் என்றே தெரியாமல், காலபோதமே இல்லாமல் கவனித்தல், செயலில் ஈடுபடுதல். எவ்வளவு நேரம் அதற்கு நம்மால் செலவிடப்பட்டிருக்கும்?
மிகக் கறாராகப் பார்த்தால் ஒரு சாமானியரின் வாழ்வில் முப்பதாண்டுகளில் ஏழெட்டு மணிநேரம் கூட அவ்வாறு செலவிடப்பட்டிருக்காது. சில நிமிடங்களே அந்தக் கூர்நிலை நமக்கு நீடிக்கிறது. உடனே உள்ளம் சிதறிவிடுகிறது. அந்த கூர்நிலையில் கற்றவற்றை நாம் மறப்பதே இல்லை. அந்தக் கூர்நிலை நிகழ்ந்ததுமே நாம் புதிதாக எதையேனும் கற்றிருப்போம். அகத்தே ஒரு படி மெலேறி இருப்போம்.
அந்தக்கூர்நிலையை ஒவ்வொரு நாளும் ஓரிரு மணிநேரம் அடைபவர் எவரோ அவர்தான் பெருந்திறனாளர். அவர்தான் அதிமானுடர். அவர் ஒருநாளில் எவ்வளவு நேரம் உழைத்தார் என்பது கணக்கே அல்ல. அவரைவிட உழைக்கும் வணிகர்கள், தொழிலாளிகள் உண்டு. அவர் உழைக்கவில்லை, உள்ளம் கூர்கிறார்.
ஒரு கழிக்கும் ஈட்டிக்குமான வேறுபாடு. கழிக்கு கூர்மை இல்லை. அதன் விசை பரந்து விழுகிறது. ஈட்டியின் முழு விசையும் ஒரு சிறு புள்ளியில் கூர்கொள்கிறது.
அந்த வகையான கூர்மைக்கு மூளைக்கு ஓய்வு இன்றியமையாதது. ஓய்வெடுக்கும்தோறும் மூளை கூர்மைகொள்கிறது. ஓய்வில்லாமல் மூளையை அவ்வாறு செயற்கையாக விசைகூட்டினால் அது உளச்சிதைவுக்கே கொண்டுசெல்லும்.
உங்கள் வினாவின் இறுதிக்கேள்வி, ஆழ்துயில் பற்றி. துயில் பற்றிய ஆய்வுகள் அதை விரிவாக இன்று விளக்கியுள்ளன. இமையசைவு (REM- Rapid Eye Movement ) கொண்ட தூக்கம் இருபது நிமிடம் என்றால் அடுத்த நாற்பது நிமிடம் ஆழ்துயில் அமையும். அதன்பின் மீண்டும் இமையசைவு துயில். இப்படித்தான் மனிதர்கள் துயில்கிறார்கள்
அதை அறிதுயில் என்று சொல்லலாம். அது வீணான துயில் அல்ல. அதில்தான் நாம் சூழலுணர்வை அடைகிறோம். ஒலிகளைக் கேட்கிறோம். வாசனையை உணர்கிறோம். அவற்றை ஒட்டி கனவுகள் நிகழ்கின்றன. எண்ணங்கள் ஓடுகின்றன. எல்லாம் சரியாக உள்ளது என ஆழுள்ளம் நிறைவுகொள்கிறது. அதைத் தொடர்ந்தே ஆழ்துயில் அமைகிறது. அது உயிரின் பரிணாமத்தால் உருவான மூளையின் தகவமைவு.
அறிதுயிலை ரத்துசெய்து எவரும் ஆழ்துயிலை மட்டும் அடையமுடியாது. ஒருவர் ஒரு மணி நேரம் மட்டும் துயின்றால் அவருக்கு நாற்பது நிமிடம் ஆழ்துயில் வாய்க்கும், அவ்வளவுதான். மனித மூளை தன் விழிப்புணர்வை, சூழலுடனான உறவை ரத்து செய்யவே செய்யாது. அது அதன் இருப்புக்கே அபாயமானது.
மேலும் அறிதுயிலில்தான் நாம் உடலை இலகுவாக்கிக் கொள்கிறோம். புரள்கிறோம். தசைகளை இடமாற்றி ஓய்வெடுக்கச் செய்கிறோம். ஒருவர் தொடர்ச்சியாக நான்கு மணி நேரம் ஆழ்துயிலில் மட்டுமே இருந்தால் ஒரே வகையில் படுப்பதனால் தசைகள் இறுகி உடல் வலி கொள்ளும். தாடையும் கழுத்தும் இறுக்கமாகிவிடும். அது துயிலே அல்ல. அறிதுயில் என்பது துயிலை ஒரு கரண்டியால் கிண்டி கிண்டி விடுவதுபோல. கிண்டாவிட்டால் அடியில்பற்றி கரிந்து போய்விடும்.
அறிதுயிலை நாம் நினைவுகூர்வதில்லை. ஆழ்துயில் நேரத்தை மட்டும் இணைத்துக் கொள்கிறோம். ஆகவே எட்டு மணிநேரத்தில் ஏறத்தாழ மூன்று மணிநேரம் அறிதுயிலில் இருந்தாலும் நாம் எட்டுமணிநேரம் ஆழ்துயிலில் இருந்ததாகவே எண்ணிக்கொள்கிறோம்.
ஆகவே ஒருவருக்கு ஐந்து மணிநேரம் மூளைத்துயில் அதாவது ஆழ்துயில் வேண்டும் என்றால் எட்டுமணிநேரம் தூங்கியே ஆகவேண்டும்.
ஜெ
விந்தியா
இலக்கியத்தில் மிக இயல்பாகவே சில அநீதிகள் நடைபெறுவதுண்டு. அதிலொன்று முதன்மையான இலக்கிய ஆளுமைகள் வெவ்வேறு காரணங்களால் சில எழுத்தாளர்களை முற்றிலும் தவிர்த்துவிடுவது. விந்தியா என்னும் இலக்கியவாதியை தமிழ் விக்கி இல்லையேல் நான் அறிந்துகொண்டிருக்கப்போவதில்லை. ஏனென்றால் அவரைப்பற்றி நவீனத் தமிழிலக்கியக் களத்தில் ஒரு சொல்கூட எழுதப்படவில்லை. காரணம், க.நா.சுப்ரமணியம், சி.சு.செல்லப்பா முதல் சுந்தர ராமசாமி, வெங்கட் சாமிநாதன் வரையிலான விமர்சகர்கள் அவரைப்பற்றி ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. ஏனென்றால் அவர்கள் அனைவருக்குமே கி.வா.ஜகந்நாதனின் கலைமகள் இதழ்மேல் முழுமையான புறக்கணிப்பு இருந்தது
விந்தியாவிலா எலும்புகளின் பிரகடனம் -விக்னேஷ் ஹரிஹரன்
மேலைநாட்டுச் சிந்தனையாளர்களை இங்கே அறிமுகம் செய்து எழுதுவதில் ஒரு சில வழக்கமான ‘மாதிரி’கள் உள்ளன. ஒன்று, தான் மட்டுமே அவர்களை கண்டடைந்ததுபோல ஒரு பரவசத்துடன், இங்கே இதெல்லாம் எவனுக்கு தெரிகிறது என்னும் பாவனையில் முன்வைப்பது. இரண்டு, மேற்கே எழுதப்பட்ட கட்டுரைகள் சிலவற்றை அப்படியே தழுவிக்கலந்து எழுதுவது. மேலைநாட்டு சிந்தனையாளரை தனக்கு புரிந்தபடி அள்ளி, தோதானபடி வளைத்து எழுதப்படும் அரைகுறைக் கட்டுரைகள் மூன்றாம் வகை.
ஒரு மேலைநாட்டுச் சிந்தனையாளரை இங்கே பேசும்போது கருத்தில் கொள்ளவேண்டியவை என சில உண்டு.
அ. இங்கே நிகழ்ந்துகொண்டிருக்கும் ஒரு மெய்யான சமூக, இலக்கிய, அரசியல், பண்பாட்டு விவாதத்தின் ஒரு பகுதியாக அறிமுகம் செய்தல். அந்த அறிமுகத்திலேயே அந்த சிந்தனையாளர் இங்கே புதிதாக என்ன சொல்லவிருக்கிறார் என்று தெரியும். சம்பந்தமற்ற ஒருவரை கொண்டுவந்து நிறுத்துவதில் பொருளில்லை. அவர் நம் சிந்தனைக்கு எவ்வகையில் தேவை என்பதே முக்கியமானது.
ஆ. எந்தச் சிந்தனையாளரும் காலப்போக்கில் தொகுப்பும் சுருக்கமும் அடைவார். அந்த சுருக்கமான வடிவை மறுதொகுப்பு செய்து அளிக்கவேண்டும். அவர் எழுதிய சூழலில் விரிவான விவாதங்கள் நடைபெற்றிருக்கும். நுணுக்கமான உள்ளூர் விவாதக்கூறுகளும் இருக்கும் அவற்றை அப்படியே இங்கு கொண்டுவரலாகாது.
இ. எந்த ஒரு மொழிச்சூழலுக்கும் அதற்குரிய அறிவியக்க மொழிநடை இருக்கும். அந்த மொழிநடையில் அச்சிந்தனையாளர் முன்வைக்கப்படவேண்டும். எளிய பொதுஅறிமுகம் முதல் அறிவுத்தள அறிமுகம் வரை அதற்குரிய நடைகள் மாறுபடும். அந்த நடை கைக்கொள்ளப்படவேண்டும். வாசிக்கப்படாத எழுத்து பயனற்றது
ஈ. அறிமுகம் செய்பவரின் மதிப்பீடும் கருத்தும் இடம்பெறலாம். தன் எல்லைக்குள் நின்று அவர் அதைச் சொல்வாரென்றால் அதற்கொரு மதிப்புண்டு.
சிமோன் த பூவா நான் கல்லூரி மாணவனாக இருக்கையில் ஒரு பெரிய மோஸ்தராக இருந்தார். ’அவ பெரிய சிமோன் த பூவா பாஸ்’ என சுஜாதா கதையிலேயே வசந்த் சொல்வார். நித்ய சைதன்ய யதி மலையாளத்தில் அவரைப்பற்றி ஒரு நூல் எழுதியிருக்கிறார். தொகுக்கப்பட்ட இரண்டு நூல்களை நான் வாசித்திருக்கிறேன்.
சிமோன் த பூவா பிரிட்டனிலும் பிரான்ஸிலும் உருவான பெண்ணியச் சிந்தனைகளின் தொடர்ச்சியாக வந்தவர்.மேரி வோல்ஸ்டோன்கிராஃப்ட் முதல் ஒரு சிந்தனைமரபை நீட்டிக்கொண்டுவந்துதான் அவரை அடைய முடியும். ஆனால் அக்காலத்தில் சிமோன் த பூவா நேரடியாக, எந்த பின்புலமும் இல்லாமல்தான் இங்கே பேசப்பட்டார்.
நீலி மின்னிதழில் சைதன்யா எழுதிய அந்த விடியலின் பேரின்பம் கட்டுரையையும், விக்னேஷ் ஹரிஹரன் எழுதிய விலா எலும்புகளின் பிரகடனம் கட்டுரையையும் ஒரு சிந்தனைமரபின் இரு புள்ளிகளாக வாசிக்கலாம். விக்னேஷ் ஹரிஹரன் நான் மேலே சொன்ன நான்கு அடிப்படைகளும் பொருந்தும்படிச் சிறப்பாக எழுதியிருக்கிறார்.
ஆழமான பெண்ணிய இதழாக நீலி வெளிவருவது மகிழ்ச்சி அளிக்கிறது. பெண் எழுத்தும் பெண்ணியம் பற்றிய எழுத்தும் நிறைந்துள்ளன. அதில் பெண்கள் இன்னும்கூட பங்களிப்பாற்றலாம்.
ஜெ
அமைப்பும் மதமும், கேள்வி
அன்புள்ள ஜெ,
மதம் பற்றி தொடர்ந்து தளத்தில் நல்ல கட்டுரைகள் வந்தன. மனிதன் சமூகமாக வாழ்பவன். ஏதோ வகைகளில் குடும்பம் சமூகம் போன்ற அமைப்புகள் அவனின் வேவ்வேறு தேவைகள் நிறைவேற்றுகின்றது. மதம் என்பதும் ஒரு குடும்பம். வெளியில் ஒருவனுக்காக இருக்கும் குடும்பம். அது ஒரு குடும்பமாக இருக்கும் பொழுதே அது மதமாக ஆகிறது. ஆன்மீகம் குறீயிடு உளவியல் போன்றே இன்னும் மதத்திற்க்கு வேறு முக்கியதுவங்களும் அடிபடை பொறுப்புகளும் உண்டு. குக்கூ அமைப்பென்பது ஒரு குடும்பம். விஷ்ணுபுரம் அமைப்பென்பது ஒரு குடும்பம். இந்து மதம் என்று சொல்லபடுவதும் ஒரு குடும்பமாக இருக்குபொழுதான் அது உயிர் ஓட்டமானதாக இருக்கிறது என்று பொருள். மக்களின் துயர் நிங்க எண்ணியவரே புத்தர். போர் புரிந்தவரே கிருஷ்ணர். அன்பை பரப்பியவர் ஏசு.
நவீன வாழ்க்கை மனிதனை தனிமனிதானக ஆக்கும் தோறும் அவன் மதம் அற்றவனாகிறானா என்பது அடுத்த வினா. மனிதர்களுக்கு என்று பொது இலக்கும் பொது திசையும் (God) இல்லாமல் ஆகும் போது அவற்கள் மதம் அற்றவர்களாக உனர்கிறார்களா என்பது அடுத்த வினா.
நவீன சிந்தனை உருவாகி “மனிதநேனயம்” “Humanity” போன்று உருவாக்கி வந்த கருத்துகளும் இன்று ஒரு மதமாகி வந்து உள்ளதா என்பது என்பது இன்னொரு வினா. மனிதானா இருப்பதற்க்கு என்று norms and roles உறுவாகி விட்டது என்பதனால் அதை ஒரு மதம் என்று கருத முடியுமா. நவீன இலக்கியம் முயற்றி செய்வதேகூட ‘மனித மதம்’ ஒன்றை உருவாக்கதானா.
நன்றி
பிரதீப் கென்னடி
அன்புள்ள பிரதீப்,
நீங்கள் சொல்வது ‘அமைப்பாக’ செயல்படும் மதங்களைப் பற்றி. அவற்றை மட்டுமே மதம் என அறிந்திருக்கிறீர்கள். இது இங்கே பொதுப்புத்தியிலுள்ள பதிவு. நான் என் கட்டுரையையே அந்த பொதுப்புரிதலை மறுத்து, நேர் எதிராக விளக்கித்தான் எழுதியிருந்தேன்
மதம் அமைப்புத்தன்மை இல்லாமலும் செயல்படும் என்பதே என் கட்டுரைகளின் மைய இழை. இருவகை மதங்கள் என்றே பிரித்து அதைத்தான் பல பக்கங்களுக்குப் பேசியிருக்கிறேன். மதம் என்னும் சொல்லை இங்கே அமைப்பாகச் செயல்படும் மதங்களைச் சார்ந்தே உருவகித்துள்ளோம் என்றும் அதை அப்படியே இந்துமெய்மரபுக்குப் போடும்போது என்னென்ன சிக்கல்கள் உருவாகின்றன என்றுதான் விவாதித்திருந்தேன்.
அமைப்பாகச் செயல்படாத மதம், அதாவது தனிமனிதனின் ஆன்மிகத்தை அவனுக்கான தனிப்பட்ட தேடலாக அனுமதிக்கும் மதம் கொண்டுள்ள இயல்பே வேறு. அது எவருக்கும் ’குடும்பம் சேர்ந்த உணர்வை’, அதாவது ஒரு கூட்டுணர்வை அளிப்பதில்லை. அது அவனுக்கு அளிப்பது ஆழ்படிமங்களையும் நம்பிக்கைகளையும், தத்துவங்களையும்தானே ஒழிய எந்தவகையான புறவயமான அமைப்பையும் அல்ல. அவன் அதை அந்தரங்கமாகக் கண்டடையவேண்டும், தனக்குள் அவற்றைக்கொண்டு தன் பயணத்தைச் செய்யவேண்டும். அங்கே பிறர் என்பதே இல்லை. அதையே அக்கட்டுரைகளில் விரிவாகப் பேசியிருந்தேன்.
அதாவது மதம் என்பதை ஒருவகை அமைப்பு, அதிகாரம் மட்டுமாகவே பார்க்கும் பார்வையை மறுத்தே அவ்வளவு எழுதியிருந்தேன். அது தீர்க்கதரிசன மதங்களுக்கு மட்டுமே பொருந்தும், இயற்கை மதங்களுக்கு அல்ல . மதம் என்பதை ஓர் எளிய அமைப்பாகவோ, திரளாகவோ பார்க்கும்பார்வைதான் இங்கே பொதுவெளியில் சாதாரணமாகப் புழங்குவது. எவருக்கும் உடனடியாக வந்துசேர்வது அது. அதைக் கடந்தாலொழிய இந்துமரபு போன்றவற்றை புரிந்துகொள்ளமுடியாது என்று வாதிட்டிருந்தேன். மதத்தை அமைப்பு மட்டுமாகப் பார்க்கும் பார்வை இந்துமெய்மரபை குறுக்குகிறது, தவறாக சித்தரிக்கிறது என்று சொல்லியிருந்தேன்.
இந்து மரபை நவீன காலகட்டத்தில் நாம் மதம் என்கிறோம். ஆனால் அது இங்கே ஒரு மெய்மரபாகவே இருந்தது, இருக்கிறது என்பதே நான் பேசுவது.அதாவது இந்து மரபு என்பது ‘கருத்துக்களின் தொகுப்பு’ அல்ல. ஒரு குறிப்பிட்ட தரப்பு அல்ல. ஆகவே அதை இன்றைய கருத்துத் தரப்புகளுடன் ஒப்பிட முடியாது.
இந்து மெய்யியல் மரபு என்பது பழங்குடிக்காலம் முதல் மானுட பிரபஞ்சத்தேடல் உருவாகி வளர்ந்து வந்ததன் விளைவான ஆழ்படிமங்களின் தொகுப்பு. அவற்றிலிருந்து உருவான படிமங்களின் வெளி. அவை முன்வைக்கும் தரிசனங்கள் மற்றும் தத்துவங்களே நம்மால் மதம் என்னும் சொல்லில் இந்தியாவில் சுட்டப்படுகின்றன என்றுதான் விளக்கியிருந்தேன். அவை வெறுமே கருத்துக்கள் அல்ல, வழிகாட்டல்களோ நெறிகளோ அல்ல என கூறியிருந்தேன்.
மனிதாபிமானம், மானுட சமத்துவம், இயற்கைபேணல் போன்றவை எல்லாமே கருத்துநிலைகள். அக்கருத்துநிலைகளுக்கான சில படிமங்களை அவை கொண்டுள்ளன. அவை மதங்களாக ஆகவேண்டுமென்றால் அவற்றில் ஒட்டுமொத்த பிரபஞ்சப்பார்வை இருக்கவேண்டும். வாழ்க்கை முழுமைக்குமான தரிசனங்கள் இருக்கவேண்டும். அவற்றையொட்டிய வாழ்க்கைமுறை உருவாகி வந்திருக்கவேண்டும். நம் சூழலில் ஏராளமான கருத்துநிலைகள் உருவாகியுள்ளன. அவை வாழ்க்கைமுறைகளாக மாறவில்லை.
இன்று ஒரு தனிமனிதனுக்கு இயற்கையுடனும் பிரபஞ்சத்துடனும் ஓர் உறவு அந்தரங்கமாக தேவைப்படுமென்றால், அதற்கு பல்லாயிரமாண்டுக்கால மானுடப் பரிணாமத்தின் சரடுடன் அவனுக்கு ஓர் உறவு தேவை என்றால், அவனுக்கு மதம் என நாம் இங்கே சொல்லும் மெய்யியல் மரபு தேவையானது என்றே நான் சொன்னேன். அவன் அந்நிலையில் தன் அகத்தை தொன்மையான ஆழ்படிமங்கள் வழியாக மேலும் ஆழமாக அறிந்துகொள்ள முடியும்.
அதாவது நான் சொன்னது மனிதனுக்கு ஒரு குழுவாகவோ திரளாகவோ அமைப்பாகவோ ஆவதற்கு எப்படி இந்துமெய்யியல் தேவை என்று அல்ல. நேர் மாறாக அவனுடைய அந்தரங்கமான தனித்தேடல், மீட்புக்கு அவை ஏன் தேவை என்றே. மாறாக நீங்கள் ஏற்கனவே சூழலில் உள்ள மதமென்றால் ஒரு குடும்பம், மதமென்றால் ஒரு அரசாங்கம், மதமென்றால் ஒருவகை கூட்டுச்செயல்பாடு என்றெல்லாம் உள்ள பொதுப்புரிதலை ஒட்டி சிலவற்றைச் சொல்கிறீர்கள்.
நவீன இலக்கியம் அல்லது கலை என்பது ஒரு தரப்பாக செயல்படுவதில்லை. எல்லா தரப்புக்கும் உரிய ஒரு விவாதவெளியாகவே அவை உள்ளன. சமகாலச் சூழலில் உள்ள எல்லா கருத்துநிலைகளும் அந்த விவாதப்பரப்பில் உள்ளன. நவீனக்கலை அல்லது நவீன இலக்கியம் மனிதனை திரளாக ஆக்கவில்லை. அவனை தனிமனிதனாகவே அவை அணுகி, அவன் ஆழுள்ளத்துடனேயே பேசுகின்றன.
மீண்டும் இப்படிச் சொல்கிறேன், தொல்ஞானத்தின் மறுஆக்கமோ நீட்சியோ ஆக அல்லாமல் உருவாகும் எதுவும் மதம் என செயல்படுவதில்லை. மதம் முழுக்கமுழுக்க ஆழ்படிமங்கள் வழியாகவே செயல்படுகிறது.
ஜெ
இந்து மெய்மை வாங்க
—————————————————
November 7, 2022
இந்துமதமும் சாத்தானும்
அன்புள்ள ஜெ
வராக ரூபம் கொண்ட பஞ்சுருளி தெய்வமெழும் காந்தாரா படம் பார்த்தேன். அதில் வரும் நிறைய வசனங்கள் உங்கள் நாவலில், கதைகளில் வருவது என்று பேசிக் கொண்டிருந்தோம். அரசுக்கும், வனத்தில் வசிப்பவர்களுக்கும் வரும் மோதலும் தணிவும் மீதமைந்த காட்சிகள், ஆவேசம் கொண்டும், அன்பு கொண்டும் மண்ணில் தெய்வம் எழுதல் போன்றவை உங்கள் சொல்லைத்தான் நினைவுப்படுத்தியது. தெய்வங்கள், சடங்குகள் குறித்து பல விளக்கங்கள் எழுதி உள்ளீர்கள்.
படம் பார்த்து விட்டு தெய்வங்களையும், கடவுளையும் பிள்ளைகள் கேட்க அதை பற்றி பேசினோம். நீர்க்கோலம் நாவலில் வரும் வேனன் கதையை சொன்னேன். முப்பெரும் தெய்வமான̀ பிரம்மனால் கொடுக்க மறுத்த வரத்தினை அவரது கால் கட்டை விரலில் இருந்து எழுதும் கலித் தெய்வம் கொடுத்ததினையும், அதன் வாக்கினை மீறியதால் வேனனுக்கு விளைந்ததும் கேட்டாள். தெய்வம் வரமும் கொடுக்கும், மீறுகையில் பலியும் எடுக்கும் என்பதை அறிய செய்த கதை.
நம் இந்து மரபில் சாத்தான் உண்டா என என்னிடம் மகள் கேட்டாள். அப்படி இல்லை என சொல்லி இமைகணத்தில் வரும் காலபுரி காட்சியை மகளிடம் சொல்ல உத்தேசித்து உள்ளேன்.
“ஒன்றுக்குள் ஒன்றென்று அமைந்த நூற்றெட்டு தெருக்களால் ஆனது காலபுரி. முதல் தெருவில் பன்னிரண்டாயிரம் இல்லங்களில் காய்ச்சலின் தெய்வமான ஜ்வரை, வலிப்பின் தெய்வமான அபஸ்மாரை, புண்ணின் தெய்வமான க்ஷதை முதலான தெய்வங்கள் தங்கள் பல்லாயிரக்கணக்கான படைக்கணங்களுடன் வாழ்ந்தன. அதற்கடுத்த தெருவில் சினத்தின் தெய்வமான குரோதை, வஞ்சத்தின் தெய்வமான பிரதிகாரை, வெறுப்பின் தெய்வமான விரோதிதை முதலிய பதினொன்றாயிரம் தெய்வங்கள் தங்கள் எண்ணற்ற ஏவலர்களுடன் வாழ்ந்தன. தொடர்ந்தமைந்த தெருவில் ஸ்கலிதை, விஃப்ரமை, தோஷை முதலிய பிழைகளின் தெய்வங்கள் பத்தாயிரம் இல்லங்களில் குடியிருந்தன.”
*
இந்து மரபின் அசுரர்கள் பற்றிக் கேட்ட பொழுது கிராதத்தில் வரும் அசுர,தெய்வ தன்மை விளக்கத்தினை படித்துக் காட்டினேன். நவீன கல்வி கொண்டவர்களுக்கும் மரபின் பார்வையை விளக்க உங்கள் சொல் உதவுகின்றது.
“விழைவே அசுரரின் முதலியல்பு. அவ்விழைவு மூன்று முகம் கொண்டது. சூழ்ந்திருக்கும் அனைத்தையும் வென்று தன் உடைமையென்றாக்கிக்கொள்ளும் திருஷ்ணை. தன்னை முடிவிலாது பெருக்கிக்கொள்ளும் ஆஸக்தி. அறிந்துகொள்வதற்கான ஜிக்ஞாஸை. மூன்று முனைகளில் அவர்கள் அதை பெருக்கிக்கொண்டனர். வீரத்தால், பாலின்பத்தால், தவத்தால் அவர்களில் எழுந்தனர் மண்ணையும் விண்ணையும் முழுதாண்ட பேரரசர்கள். ஒன்றுநூறெனப் பெருகும் பெருந்தந்தையர். ஒற்றைச்சொல்லில் பிரம்மத்தை திறந்தெடுத்த முனிவர். அவர்கள் தங்களை கூர்படுத்தி கூர்படுத்திச் சென்று வேதத்தை தொட்டனர்”
“வேள்வியென மானுடர் இன்று இயற்றுபவை தன்னியல்பாக அன்று செய்யப்பட்ட நற்செயல்களின் சடங்கு வடிவங்களே” என்றார் சனாதனர். “ஒருபோதும் தோற்காமலிருத்தலுக்குரிய விக்ரமம், அனைத்தையும் அடைவதற்குரிய திருஷ்ணம், பெருகிக்கொண்டே இருப்பதற்குரிய கிராந்தம் என அசுர வேள்விகள் மூன்றே. அவற்றை இயற்றி அசுரர் வெற்றிகளையும் செல்வங்களையும் ஈட்டினர். குலம்பெருக்கினர்” என்றார் சனாதனர். சனத்குமாரர் “இன்று மண்ணில் அரசர்கள் இம்மூன்று மறவேள்விகளில் இருந்து எழுந்த வேள்விகள் பலவற்றை இயற்றுகிறார்கள். ராஜசூயமும் அஸ்வமேதமும் விக்ரமம் எனப்படுகின்றன. பொருள்நாடிச் செய்யும் பூதவேள்விகள் திருஷ்ணம் போன்றவை. புத்ரகாமேஷ்டி போன்றவை கிராந்தமரபைச் சேர்ந்தவை” என்றார்.
“வென்று வாழ்ந்து நிலைகொண்டபின்னரும் எஞ்சுவதென்ன என்று அவர்களின் முனிவர்கள் உளம்கூர்ந்தனர். அவர்கள் ஏழுவகை அறவேள்விகளை உருவாக்கினர். அனைவருக்கும் பகிர்ந்தளித்து உண்ணுதல் ஃபாஜனம், அளித்தவற்றுக்கு நன்றி சொல்லுதல் பிரதிநந்தனம், எடுத்தவை மேலும் வளரவிடுதல் அஃபிஜனனம், அளித்த விண்ணவர்க்கே திருப்பி அளித்தல் நிவேதனம், அறியாதவருக்கும் அன்னமளித்தல் அஃப்யாகதம், சிற்றுயிர்களையும் ஓம்புதல் உபகாரம், இங்கிருப்பவற்றின் ஒழுங்கு குலையாது நுகர்தல் ருதம். இந்த ஏழு தொல்வேள்விகளுக்கு அசுரர்களில் ஒருசாராரான ஆதித்யர்கள் கட்டுப்பட்டனர். ஆகவே அவர்கள் வேள்விக்குரியவர்களாயினர். தைத்யர்களும் தானவர்களும் அறவேள்வியை மீறிச்சென்றவர்கள். வேள்வியிலமர்ந்து அவிகொள்ளத் தொடங்கியதும் ஆதித்யர்கள் ஒளிகொண்டனர். அழிவின்மையை அடைந்தனர். விண்ணாளும் தேவர்களென்றானார்கள். தைத்யர்களும் தானவர்களும் தங்கள் ஆசுரத்தால் முழுக்கக் கட்டுண்டிருந்தனர். எனவே இருண்டு புவியை நிறைத்தனர்” சனகர் சொன்னார்.
அன்புடன்
நிர்மல்
*
அன்புள்ள நிர்மல்,
இந்து மதத்தையோ அல்லது அதைப்போன்ற தொல்மதங்களையோ அறிய தடையாக அமைபவை இரண்டு. இரண்டுமே எளிமையான இரட்டைமை (binary) களால் ஆனவை.
ஒன்று, அந்த மதங்கள் பின்னர் பெருமதங்களாக உருவானபின்னர் திரண்டுவரும் புராணத்தன்மை. அவை அந்த மதத்தின் தொன்மையான கூறுகளை எளிய உருவகங்களாக ஆக்கிவிடும். நன்மை தீமை என தெளிவாக அடையாளப்படுத்திவிடும். இந்து மதத்தின் அரக்கர், அசுரர் போன்ற உருவகங்கள் பிற்கால புராணக்கதைகளில் அப்படி மிகமிக எளிமையாக்கப்பட்டிருப்பதைக் காணலாம். ராமாயணத்தின் ராவணன், மகாபாரதத்தின் துரியோதனன் எல்லாம் ‘கெட்டவர்கள்’ அல்ல. ஆனால் பிற்கால புராணக்கதைகளில் அவர்கள் ‘வில்லன்’களாக ஆக்கப்பட்டிருப்பார்கள்.
இரண்டு, அந்த மதங்கள் மீது மிகப்பிற்காலத்தைய நவீனத்துவப் பார்வை (modernist approach). அது மதங்கள்மேல் போடப்படும்போது மிகமிக எளிமையான புரிதல்கள் உருவாகின்றன. அவை பெரும்பாலும் அரசியல் சார்ந்த எளிமைப்படுத்தல்கள். எல்லாவற்றுக்கும் ஒரு மையத்தையும், அந்த மையத்திற்கு ஒரு உலகியல் சார்ந்த தர்க்கத்தையும் நவீனத்துவப் பார்வை உருவகிக்கும். நவீனத்துவர்கள் தங்கள் அறிவில் நம்பிக்கை கொண்டவர்கள். மனிதகுல பரிணாமத்தையே தங்களால் அறுதியாக வகுத்துவிட முடியும் என நினைப்பவர்கள். ஆகவே வரலாற்றுக்கும் பண்பாட்டுக்கும் தாங்கள் அளிக்கும் விளக்கமே வரலாறும் பண்பாடுமாகும் என நம்புகிறவர்கள். இவர்கள்தான் அரக்கர் என்றால் பழங்குடிகள், அசுரர் என்றால் திராவிடர் என்றெல்லாம் அசட்டு எளிமைப்படுத்தல்களைச் செய்வார்கள்.
இது பின்நவீனத்துவ யுகம். (post modern age) இந்த யுகத்தின் முதல் நிபந்தனை இரட்டைமைகளுக்கு அப்பாற்பட்டு யோசிப்பது. இரண்டாவது நிபந்தனை, தர்க்கபூர்வ அறிதலின் எல்லைகளை உணர்ந்து அதற்கு அப்பாலும் சென்று யோசிப்பது. தொல்மதங்களை அவ்வண்ணம் சென்று யோசித்தாலொழிய புரிந்துகொள்ள முடியாது.
அப்படி யோசித்தால், தொல்மதங்களை உருவாக்கிய பழங்குடி மனநிலையிலுள்ள சில அடிப்படைக்கூறுகளை நாம் கண்டடைவோம். அதிலொன்று, அறுதியான இரட்டைமைகளை உருவாக்காமலிருப்பது. முரணியக்கம் (Dialectic) பற்றிய புரிதல் அவர்களுக்கு உண்டு. அதன்பொருட்டு இரட்டைமைகளை கற்பனை செய்திருப்பார்கள். கூடவே அந்த இரட்டைமைகளை ரத்துசெய்துமிருப்பார்கள். ஆண்-பெண் வேறுபாடுடன் ஆணும்பெண்ணும் இணைந்த வடிவம் இருக்கும். விலங்கு- மனிதன் வேறுபாட்டுடன் விலங்கும் மனிதனும் இணைந்த வடிவமும் இருக்கும்.
அந்த மனநிலைதான் தூயதீமை என்பதை உருவகிக்க அவர்களால் இயலாமலாக்குகிறது. கூடவே தூயநன்மை என்பதும் அவர்களிடமில்லை. அப்பல்லோ, தோர், இந்திரன் போன்ற எவரும் முழுக்க நல்லவர்கள் அல்ல. இந்திரன் வருணன் குபேரன் எல்லாம் அசுரர்களாக ஆதியில் இருந்து வேள்விகளால் தேவர்கள் ஆனவர்கள். வேள்வி குறைந்தால் தீயவர்களாக ஆகக்கூடியவர்கள். பொறாமை போன்ற எல்லா எதிர்க்குணங்களும் கொண்டவர்கள். மாயாண்டிச்சாமி, சுடலைமாடன் எல்லாம் அப்படித்தான்.
அதன் மறுபக்கமே எதிர்ப்பண்பு கொண்ட தெய்வங்கள். அவர்களும் நன்மை கொண்டவர்களே. சாவின் அதிபனும் நரகத்தின் ஆட்சியாளனுமான யமன் அறத்தின் காவலன் என தொல்புராணம் கூறுகிறது. நீங்கள் சுட்டிக்காட்டிய அந்த வெண்முரசுப்பகுதியில் சொல்லப்பட்டிருப்பதற்கு இணையானது செமிட்டிக் (பிற்காலத்தில் கிறிஸ்தவ- இஸ்லாமிய) தொன்மத்தின் சாத்தான் ஒரு ‘வீழ்ச்சியடைந்த’ தேவன் என்பது. தொல்பழங்காலத்தில் லூசிபர் முழுக்க முழுக்க கெட்ட தெய்வமாக இருந்திருக்கவில்லை என்பதற்கான சான்று அது.
பிற்காலத்தில் ‘நன்மை மட்டுமே கொண்ட’ தெய்வ உருவகங்கள் உருவாயின. பெருமதங்களுக்கு அத்தகைய தூயநன்மை கொண்ட தெய்வங்கள் இன்றியமையாதவை. பெருமதங்களே பேரரசுகளை உருவாக்கும் கருத்தியல் அடித்தளத்தை உருவாக்கமுடியும். ’நன்றும் தீதும் அதுவே’ என வேதாந்தம் இறைச்சக்தியை உருவகிக்கையில் பிற்காலத்தைய சைவ வைணவப் பெருமதங்கள் ‘தீதிலன்’ ‘மாசிலன்’ ‘அருட்பெருங்கடல்’ என இறைவனை வரையறை செய்கின்றன.
அன்பும் கருணையும் நன்மையும் மட்டுமே கொண்டவனாக இறைச்சக்தி, இறைச்சக்தியின் தூதன் அல்லது மகன் உருவகிக்கப்படும்போது அதற்கு எதிர்ச்சக்தி இரக்கமே அற்ற, அழிவை மட்டுமே அளிக்கக்கூடிய, தீமை மட்டுமேயான ஒன்றாக உருவகிக்கப்படுகிறது. லூசிபர் ‘சாத்தான்’ ஆனது அப்படித்தான். பிற்காலப் புராணங்களில் அசுரர்களும் அரக்கர்களும் தீயோர் ஆனதும் அவ்வண்ணமே.
நாம் பிற்காலப் பெருமதங்களின் எளிய இரட்டைமையில் இருந்து பின்னோக்கிச் சென்று புராணங்களை படிக்கையில் திகைப்படைகிறோம். கிருஷ்ணனின் மகன்களும், பேரன்களும் அசுரர்களின் குடியிலிருந்து திருமணம் செய்துகொண்டனர் என்பதையோ, ராவணன் சாமவேத ஞானி என்பதையோ நம்மால் உள்வாங்கிக்கொள்ள முடிவதில்லை. அதற்கு நம் எளிய தர்க்கத்தால் சமூகவியல் அல்லது அரசியல் விளக்கங்கள் அளிக்க ஆரம்பிக்கிறோம்.
நாம் அனைத்தையும் அறியும் வல்லமைகொண்ட ஞானிகள் என்றும், தொல்காலம் குறித்து நாம் எண்ணுவதே உண்மை என்றும் நம்பும் மடமைகளைக் கொஞ்சம் கைவிட்டு, அறிதலுக்கு அடிப்படைத்தேவையான பணிவுடன், தொல்காலம் என்னும் நாமறியாத பெரும்பரப்பை அணுகினோம் என்றால் நம்மால் அன்றிருந்த நம் மூதாதையரை கொஞ்சம் புரிந்துகொள்ள முடியும். அது நாம் நம் ஆழத்தை, நம் சொந்த உணர்வுகளையும் கனவுகளையும் புரிந்துகொள்ளும் வழியாக அமையும். அதற்கு நமக்குத் தேவை நம் முன்னோர் நமது உருவாக்கங்கள் அல்ல, அவர்களின் உருவாக்கமே நாம் என்னும் தெளிவு.
ஜெ
ஜெயமோகன் நூல்கள் இந்து மெய்மை வாங்க
—————————————————
தெளிவத்தை ஜோசப்
தெளிவத்தை ஜோசப் 2013 ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது பெற்றவர். அதன் வழியாகவே தமிழகத்தில் பரவலாகக் கவனிக்கப்பட்டார். யாழ்ப்பாணத்தை மையமாகக் கொண்ட ஈழ இலக்கியத்தை மலையகத் தமிழர்கள்பால் ஈர்த்தவர் அவர். அரசியல் அலைகளுக்கு ஆட்படாமல் தன் அகமறிந்ததை எழுதியமையால் தனித்துவம் கொண்டவராகத் திகழ்ந்தார்
தெளிவத்தை ஜோசப்
தெளிவத்தை ஜோசப் – தமிழ் விக்கி
நல்லாசிரியர்- கிருஷ்ணன் சங்கரன்
பள்ளிக்கூடங்களின் இன்ஸ்பெக்டரான ஸ்ரீமான் ஈ.ஸி.கால்டுவெல் அவர்களுக்கு,
இப்பொழுது ஸ்ரீரங்கம் தாலுகா பள்ளிக்கூடத்தில் உபாத்தியாயராக இருக்கும் தியாகராச செட்டியார் சிறந்த தமிழ்ப் புலவரென்றும், நல்லாசிரியரென்றும் கேள்விப்பட்டிருக்கிறேன். சில காலத்திற்குமுன் ஸ்ரீகோபாலராவ் அவரைப் பரீட்சித்து வேலைக்குப் பூரண தகுதியுடைவரென்று அறிந்து கொண்டாரென்று தெரிவித்துக் கொள்கிறேன்.
ஸ்ரீரங்கத்தில் அவருடைய ஸ்தானத்தைப் பூர்த்திசெய்வதில் ஏதாவது சிரமம் ஏற்பட்டால் இப்போது இங்கே உள்ள முன்ஷி அவ்வேலைக்கு முற்றும் தகுதியுடையவராதலின் அவரை அங்கே மாற்றலாம்.
டபிள்யூ.ஏ. போர்ட்டர்
தலைமை ஆசிரியர்
இப்படியாக 1865 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 3 ஆம் தேதி முதல் கும்பகோணம் பள்ளிக்கூடத்தில் (Provincial School) தமிழ்ப்பண்டிதராக நியமிக்கப்பட்டார் தியாகராச செட்டியார். போர்ட்டர் துரையிடம் சொல்லி அவரை நியமனம் செய்த கோபால்ராவுக்கு முதலில் “என்னடா, முன்பின் அறியாதவரை பணியில் அமர்த்திவிட்டோமே, தன் பேரையும் காப்பாற்றிக்கொண்டு, நம் பேரையும் காப்பாற்றவேண்டுமே” என்று பதைபதைப்பாகத்தான் இருந்தது. நேரம் கிடைக்கும்போதெல்லாம் இவர் சந்தேகம் கேட்பதுபோல் அவர் தமிழறிவைச் சோதிப்பதும், அவர் வகுப்பு நடத்தும்போது திடீரென்று போய்ப் பரீட்சிப்பதுமாக இருந்தார். இதெல்லாம் முதல் சில நாட்கள்தான். ஒரு வாரத்திலேயே ‘சரியான ஆளைத்தான் போட்டிருக்கிறோம்’ என்று போர்ட்டர் துரையிடம் சான்றிதழ் கொடுத்துவிட்டார் கோபால்ராவ். பள்ளி கல்லூரியாகத் தரமுயர்த்தப்பட்டபோதும் அங்கேயே ஆசிரியராகத் தொடர்ந்தார் செட்டியார்.
வாரம் தவறாமல் மாயூரம் சென்று ஆசிரியர் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையுடன் பழைய நூல்கள் குறித்து அளவளாவுவதும், ஆசிரியருடன் திருவாவடுதுறை மடத்திற்குச் சென்று அங்கு ஆதீன கர்த்தர்களுடன் சல்லாபிப்பதுமாக தமிழில் தொடர்ந்து தோய்ந்துகொண்டிருந்தார் தியாகராச செட்டியார். தன்னுடைய ஆசிரியர் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மூத்த மாணவராகத்தான் உ.வே.சாமிநாதய்யருக்கு அறிமுகமாகிறார் செட்டியார். கற்கும்போது மட்டுமே மாணவர். ‘யார் கேட்டாலும் தராதரம் பார்க்காமல் உடனே சிறப்புப் பாயிரம் (Forward) கொடுத்துவிடுகிறீர்கள். அவன் நேராக என்னிடம் வந்து ‘என்னமோ அலட்டிக் கொண்டீர்களே? உங்கள் ஆசிரியரே கொடுத்து விட்டாரே?’ என்று கூறிவிட்டுச் செல்கிறான். உங்கள் கருணை என்னைத் தர்மசங்கடத்துக்கு உள்ளாக்குகிறது’ என்று ஆசிரியரையே மட்டுறுத்தவும் அவர் தயங்குவதில்லை. அதே ஆசிரியரை கல்லூரிக்கு அழைத்துச்சென்று தன் நாற்காலியில் அமரச்செய்து காலில் விழுந்து வணங்குவதும் அதே செட்டியார்தான். ஆசிரியரும் மாணவரும் பேசிக்கொள்வதை அறியாதவர்கள் பார்த்தால் சண்டைபோடுவது போல இருக்கும் என்கிறார் உ.வே.சா. வாக்குவாதம் மிகவும் முற்றினால் பிள்ளையவர்கள் ‘என்ன, பட்டாளத்தான் திமிரைக் காட்டுகிறாயோ’ என்பாராம். முதலில் ராணுவத்தினருக்கான பள்ளியில் தமிழாசிரியராகப் பணி செய்திருக்கிறார் செட்டியார். இப்பிடிச் சண்டைகள் போட்டாலும் தான் இயற்றிய புராணங்கள், பாடல்களை உ.வே.சா விடம் கொடுத்து ‘தியாகராசு என்ன சொல்கிறான்’ என்று கேட்டுக்கொண்டு வரச்சொல்லுவதும் அவர்தான். ஒருவேளை பிள்ளையவர்கள் செட்டியாரிடம் பேச்சுக்கேட்டபின், ‘இனிமேல் கறாராக இருக்கவேண்டும்’ என்று நினைத்துத்தான், கோபாலகிருஷ்ண பாரதிக்கு சிறப்புப் பாயிரம் கொடுக்காமல் அலையவிட்டாரோ என்னவோ?
ஒருமுறை தலைமைக் கல்வி அதிகாரி இவர் வகுப்பறைக்கு திடீரென்று மேற்பார்வையிட வந்திருந்தார். மாணவர்களைப் பலவிதமாகக் கேள்விகளால் குடைந்தெடுத்தார். எல்லோரும் சிறப்பாக பதிலிறுத்தனர். செட்டியாருக்கும் வெகு திருப்தி. நியாயமாகப் பாராட்டவேண்டிய அதிகாரி அப்போது கேட்டாராம் “ஏன் பிள்ளைகளுக்கு வேண்டாத பாடங்களையெல்லாம் சொல்லிக்கொடுத்து சிரமப்படுத்துகிறீர்கள்?” என்று. செட்டியார் அஞ்சாமல் “நீங்கள் சொல்வது ஆச்சரியமாக இருக்கிறதே? கற்பிக்க வேண்டிய பாடங்களை கற்பிக்காமல் இருப்பதல்லவோ குற்றம். ஒரு மாதத்தில் படிக்கவேண்டிய வேண்டிய பாடங்களுக்கு ஒரு வருடத்தையா வீணாக்குவது? இவர்களுக்கு இந்த விஷயங்களைக் கற்றுக்கொள்வது சிரமமாக இருந்தால் இவ்வளவு திருத்தமாக விடையளிப்பார்களா?” என்று சரமாரியாகக் கேள்விகள் கேட்கவும் அதிகாரி வாயைமூடிக்கொண்டு போகவேண்டியதாகி விட்டது. அந்த வகுப்பில் மாணவராக இருந்த திருச்சியின் பிரபல வக்கீல் ஸ்ரீராகவாச்சாரியார் உ.வே.சா விடம் கூறியது இந்நிகழ்ச்சி. “நன்னூலை இவரைப்போல பாடம் சொல்லுகிறவர்களைப் பார்ப்பது அரிது. இலக்கணக்குறிப்புகளுக்கு இவர் காட்டுகிற உதாரணங்கள் கூட மற்றவர்களது போல இருக்காது.எல்லாக் கல்லூரி ஆசிரியர்கள் பெயரும் அந்தக் கல்லூரியைத் தாண்டித் தெரியாது. இவர் கும்பகோணம் கல்லூரித் தமிழாசிரியர் என்பது தமிழ்நாடு முழுவதும் தெரிந்திருந்தது ” என்கிறார் உ.வே.சா.
புலிக்குட்டித்தம்பிரானை (புலி போல நகம் வளர்த்துக்கொண்டு தூங்குபவர்களையும், மற்றவர்களையும் ‘நறுக்நறுக்’ கென்று கிள்ளி வைப்பதால் இந்தப்பெயர்) அவர் செய்த சில அபசாரச்செயல்களுக்காக திருவாவடுதுறை மடத்திலிருந்து விலக்கிவைத்து விடுகிறார்கள். செட்டியார்தான் சென்று மத்தியஸ்தம் செய்து வைக்கிறார். இது போன்ற பல சுவாரசியமான செய்திகளைத் தன்னுடைய “வித்துவான் தியாகராச செட்டியார்” நூலில் எழுதியுள்ளார் உ.வே.சா. சிறப்புப்பாயிரம் கேட்டுச்சென்றபோது அவமானப்படுத்தியதாக ஒரு வித்துவான் தொடர்ந்த வழக்கில் செட்டியார் வெற்றி பெற்றது, தப்பான உரை எழுதியவர்களைக் கண்டித்தது, தன்னுடைய முரட்டு அடியாளையும் கவிராயராக்கியது, திருக்குறளைத் திருத்த முயன்ற ஆங்கிலேய பாதிரியாரை அடிக்காத குறையாக விரட்டிவிட்டது, முத்துக்குமாரத் தம்பிரான் செருக்கை அடக்கியது, ‘கல்லூரியில் பாடம் சொல்லுவது மடத்தில் பாடம் சொல்வதுபோல எளிதானதல்ல’ என்று சொன்ன செட்டியாரைப் பிள்ளையவர்கள் ‘பழி’வாங்குவது, சிந்தாமணிப் பதிப்பிற்குப் பிறகு செட்டியாரும் உ.வே.சாவும் சந்திக்கும் உணர்ச்சிகரமான சந்திப்பு, செட்டியார் பதிப்பித்த நூல்கள், செட்டியாரின் சென்னை விஜயம் (“யாராக இருந்தாலும் ‘என்னாங்க’ என்று ஸ்வரத்துடன் பீடிகையோடு பேச ஆரம்பிக்கிறார்கள்” – உடனே நினைவுக்கு வருவது ஏ.வி.எம் மின் ‘சபாபதி’ படத்தில் வேலைக்காரனாக வரும் காளி.என்.ரத்தினம்) என்று எத்தனையோ சுவையான செய்திகள்.
1880 – ல் உடல் நலிவின் காரணமாக விருப்பஓய்வு பெற்ற செட்டியாருடைய ‘போட்டோக்ராப்’ பை எடுத்து அனுப்பும்படி ஒரு நண்பருக்குக் கடிதம் எழுதுகிறார் உ.வே.சா. அதற்கு செட்டியாரின் பதில் ஒரு கடிதத்தில் இப்படி இருக்கிறது ” …………என்னுருவத்தை பொட்டகிராப் எடுக்கும்படி தாங்கள் உத்தரவு செய்தீர்களாம். யான் குரூபம் அடைந்த காலத்தில் எடுக்க எனக்குச் சம்மதம் இல்லை. அன்றியும் நல்ல உடை உடுத்துக்கொண்டு ஒரு நாழிகை அசையாதிருக்கச் சற்றும் பலமில்லை. ஆதலால் நான் செவ்வையாய் இருந்த காலத்தில் காலேஜ் ஸ்தம்பத்தில் என் உருவம் செய்யப்பட்டிருக்கிறது. தெற்குத் தாழ்வாரத்தில் கீழ்ப்புறத்தில் இருக்கிறது. ஒரு பக்கம் கோபாலராயர் குதிரையில் இருப்பதுபோலச் செய்யப்பட்டிருக்கிறது. நல்ல மொச்சியன் ஒருவன் அகப்பட்டால் அந்த உருவத்தைக் காண்பித்து ஒரு படம் எழுதிக்கொண்டால் அதைவைத்து வேண்டியபடி பொட்டகிராப் எடுத்துக்கொள்ளலாம்……படம் எழுதும் மொச்சியன் என்னைப் பார்த்திருந்தால் உத்தமம்” . காலேஜில் தச்சன் செதுக்கியுள்ள சிலையை செட்டியார் கூறியபடியே ‘போட்டோ’ எடுத்து, ஒரு ஓவியரையும் கொண்டு ஒரு ஓவியத்தையும் வரையச் செய்கிறார் உ.வே.சா. ஆனாலும் அவருக்குத் திருப்தி இல்லை. “இவைகளையெல்லாம் பார்த்தால் செட்டியாரின் நினைவு வருகிறது என்பது உண்மைதான். ஆனால் என் மனத்தில் இருக்கும் செட்டியாரின் உருவம் வேறு. நான் ஒரு நல்ல மொச்சியனாக இருந்தால்தான் அதை எழுத முடியும்” என்கிறார் உ.வே.சா.
ஒருமுறை செட்டியார் தன் சொந்த வேலைகளை கவனிப்பதற்காக பூவாளூர் செல்ல முடிவுசெய்து, ஒரு ஆறு மாதகாலம் விடுப்பு எடுத்துக்கொண்டார். அப்போது செட்டியாருடைய வேலையைப் பார்ப்பதற்காக சந்திரசேகர கவிராஜ பண்டிதர் என்பவர் தமிழாசிரியராக நியமிக்கப்பட்டார். அவர் சிறந்த பண்டிதராக இருந்தாலும் மாணவர்களுக்குத் திருப்திகரமாக பாடம் சொல்லவில்லை. அவர்களைக் கண்டித்து அடக்கவும் துணியவில்லை. ஒருவாறு ஒப்பேற்றி ஆறுமாதகாலத்தை முடித்தார் பண்டிதர்,. செட்டியார் ஆறுமாதம் விடுப்பு முடிந்து வேலையை ஒத்துக்கொண்டபோது சந்திரசேகர கவிராஜ பண்டிதர் பிரின்சிபாலிடம் நன்மதிப்புச் சான்றிதழ் ஒன்று கொடுக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அதுபோல அவரும் ஒன்று ஆங்கிலத்தில் எழுதிக்கொடுக்க, அவரும் தலைவரிடம் விடைபெற்றுக்கொண்டு மற்றஆசிரியர்களிடம் விடை பெற்றுக்கொள்ளும் பொருட்டு அவர்களுடைய அறைக்குச் சென்றார். அங்கே இருந்த சுந்தரராவ் என்ற ஆசிரியர் எப்போதும் வேடிக்கையாகப் பேசக்கூடியவர். நன்மதிப்புச் சான்றிதழைப் படித்துப்பார்த்த அவர் செட்டியாரைப் பார்த்து “தங்களுக்கு போர்ட்டர் துரை ஏதாவது நன்மதிப்புப் பத்திரம் தந்திருக்கிறாரா?” என்று கேட்டார். “இல்லையே, அவரிடம் நான் இதுவரை கேட்டதில்லை. இத்தனை வயதுக்கப்புறம் அதை வைத்து நான் என்ன செய்யப்போகிறேன்” என்றார் செட்டியார். “இதோ இருக்கிறதே, இதற்கு ஒரு பிரதி வைத்துக்கொள்ளுங்கள், உங்களுக்கு மிகவும் பயன்படும்” என்றார் சுந்தரராவ். அப்போது சந்திரசேகர கவிராஜ பண்டிதர் திடுக்கிட்டு “தலைவர் எனக்கல்லவா கொடுத்தது?” என்றார். சுந்தரராவின் இயல்பை உணர்ந்த செட்டியார் “என்ன சமாச்சாரம்? இதில் என்ன எழுதியிருக்கிறது? ஏன் இந்தப் பெரியவருக்கு மனக்கலக்கத்தை உண்டாக்குகிறீர்கள்?” என்று கேட்க சுந்தரராவ் மொழிபெயர்த்துக் கூறினார் ” மாணாக்கர்கள் மனத்தைக் கவர்ந்து போதிப்பதில் வல்லவரும், சிறந்த வித்வானுமாகிய தியாகராச செட்டியார் பார்த்துவந்த வேலையை இவர் ஆறுமாதம் பார்த்தார்”
உ.வே.சா தன்னுடைய நூலின் முன்னுரையில் கூறுகிறார் ” என் ஆசிரியரிடம் எனக்கு முன் படித்தவராதலின் இவர் எனக்கு முன்னவர். என்பால் அன்பு வைத்துப் பழகியமையின் என் நண்பர். இன்னின்னபடி மாணாக்கர்களிடம் நடந்துவரவேண்டுமென்பதையும், சில நூற்பொருள்களையும், வேறு சில விஷயங்களையும் எனக்கு அறிவுறுத்தியமையின் எனது ஆசிரியர்களில் ஒருவர். எனக்குத் தம் உத்தியோகத்தை அளித்துப் பிறர் கையை எதிர்பாராமல் செய்தவகையில் ஒரு வள்ளல். தியாகராசர் என்று இவருக்கு வாய்த்த பெயர் என்னளவில் பொருளுடையதாகவே நிற்கின்றது. இவரை நான் மறவேன். காலேஜில் தம் இடத்தைத் தந்து உதவிய இவர் பெயரை நான் தங்கியிருக்கும் இடத்திற்கு வைத்து அங்கு வாழ்ந்து வருகிறேன். ‘தியாகராஜ விலாசம்’ இவருக்கும் எனக்கும் உள்ள அன்புப் பிணைப்பிற்கு அடையாளமாக நிற்கிறது.”
தமிழின் தனி அடையாளமாக நின்றிருக்கவேண்டிய நூறாண்டு கடந்த ‘தியாகராஜ விலாசம்’ 2014ல் ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சிக்காலத்தில், தமிழறிஞர்களின் கண்டனங்களுக்கு நடுவே, இடித்துத் தள்ளப்பட்டது. இன்றைக்கு செட்டியார் இருந்திருந்தால் அவருக்கு நல்லாசிரியர் விருது கிடைத்திருக்குமா?
கிருஷ்ணன் சங்கரன்
விஷ்ணுபுரம் சிறப்பு விருந்தினர். போகன் சங்கர்
போகன் சங்கர் விஷ்ணுபுரம் விருதுவிழா சந்திப்புகளில் பலவகையில் கலந்துகொண்டிருக்கிறார். இம்முறை 18 ஆம் தேதி நிகழும் விருதுவழங்கும் விழாவில் கலந்துகொண்டு பேசுகிறார்.
போகன் சங்கர். தமிழ் விக்கிவிஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா
விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி
விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்
விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்
விஷ்ணுபுரம் விருந்தினர்-6, கமலதேவி
ரத்தசாட்சி
வெந்து தணிந்தது காடு, அதற்குப் பின் பொன்னியின் செல்வன். பொன்னியின் செல்வன் அலை இன்னும் அடங்கவில்லை. அதற்குள் இன்னொரு படம்.
இதன் மூலக்கதை மட்டும்தான் நான். கமல்ஹாசனின் நண்பரும் ராஜ்கமல் தயாரிப்புநிறுவனத்தில் ஒருவருமான மகேந்திரன், ராஜ்கமல் நிறுவனத்துடன் தொடர்புள்ள டிஸ்னி இருவரும் தயாரிக்கிறார்கள். ரஃபீக் இஸ்மாயில் இயக்குகிறார். ரத்தசாட்சி என பெயரிடப்பட்டுள்ளது.
சென்ற வாரம் டிஸ்னியும் ரஃபீக்கும் என் அறைக்கு வந்து போஸ்டர்களைக் காட்டினார்கள். நான் அதுவரை ஏதோ சிறிய படம் என நினைத்திருந்தேன். ஒரு பெரிய படத்துக்கான உழைப்பும் செலவும் செய்யப்பட்டுள்ளது இதற்கு.
ரத்தசாட்சி என்னும் கருத்துருவம் கிறிஸ்தவ மதம் சார்ந்தது. ஒரு கொள்கைக்கு தன் ரத்தத்தால் சாட்சியாதல். கிறிஸ்தவப் புனிதர்களை ரத்தசாட்சிகள் என்று சொல்வது வழக்கம். அச்சொல்லை கேரளத்தில் கம்யூனிஸ்டுகள்தான் அதிகமும் பயன்படுத்துகிறார்கள். இது ஒரு ரத்தசாட்சியின் கதை.
இக்கதைக்கு ஆதாரமான நிகழ்வுகளை 1991ல் தர்மபுரி -திருப்பத்தூர் சாலையில் ஒரு சிற்றூரில் ஒரு நாட்டார்ப்பாடகி பாடிக்கேட்டேன். ரத்தத்தால் எழுதப்பட்ட கதை அது. அந்தப் பெண்மணியின் குரலில் இருந்து நவீன இலக்கிய மொழிக்கு உருமாறி வந்தமைந்த கதை. நவீன சினிமாவாக இன்னொருவரிடம் சென்று சேர்ந்துள்ளது.
என்னைப் பற்றிய ஒற்றைவரி அறிதல் கொண்டவர்களுக்கு திகைப்பாக இருக்கும். என் கதைகளை வாசித்தவர்களுக்கு இயல்பாகவும் தெரியும். இலக்கியவாதியாக நான் என்னை ஒரு தொன்மையான குலக்கதைப் பாடகன் (bard) என்றே எண்ணிக்கொள்பவன், ஒரு சூதன், ஒரு பாணன். கதைகளுக்கு என்னை ஒப்புக்கொடுப்பதே என் வழக்கம். கதைகள் வாழ்விலிருந்து எழுகின்றன. மக்கள் மொழியில் வாழ்கின்றன. நான் அவை என் மேல் படர்ந்தேற அனுமதிக்கிறேன்.
யானை டாக்டரும், நூறு நாற்காலிகளும், கோட்டியும் அப்படிப்பட்ட கதைகளே. ஓநாயின் மூக்கும் துணையும் பலிக்கல்லும் அப்படிப்பட்ட கதைகளே. அவை என் வழியாக நிகழ்பவை. இலக்கியம் என்பது ஒரு வகை சூழ்ச்சி என நம்பும் எளிய அரசியல் உள்ளங்களுக்குப் புரியாதது இந்த உருமாற்ற நிலை. அந்த உருமாற்றம் நிகழாமல் எத்தனை கருத்தியல் தூண்டுதல் அடைந்தாலும் கலை உருவாவதில்லை. அந்த உருமாற்றத்தை நிகழ்த்திக் கொண்டவன் தன்மேல் பெருமிதம் கொண்டிருப்பான், தன்னைமீறியவற்றின்மேல் பக்தியும் கொண்டிருப்பான்.
அறம் வரிசைக் கதைகளில் ஒன்றாக எழுதிய கதை கைதிகள். முதல்வடிவில் சரியாக வரவில்லை. பின்னர் அதில் ஒரு குருவி வந்ததும் சரியாகியது. வெண்கடல் தொகுப்பில் இடம்பெற்றது.
ரஃபீக் இஸ்மாயிலுக்கும் தயாரிப்பு அணிக்கும் வாழ்த்துக்கள்.
ஜெயமோகன் நூல்கள் வெண்கடல் வாங்க வெண்கடல் மின்னூல் வாங்கNovember 6, 2022
அஞ்சலி, விழி.பா.இதயவேந்தன்
விழி. பா.இதயவேந்தன் அடித்தள மக்களின் வாழ்க்கையை யதார்த்தவாத அழகியலுடன் சொன்ன படைப்பாளிகளில் ஒருவர். அஞ்சலி.
இப்போது படிப்பதும் எழுதுவதும் – தி ஹிந்து
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers


