Jeyamohan's Blog, page 690

October 29, 2022

பின் தொடரும் நிழலின் குரலும் இருட்கனியும்

பின் தொடரும் நிழலின் குரல் வாங்க இருட்கனி வாங்க

அன்பு ஜெ,

பின்தொடரும் நிழலில்ன் குரல்’- நாவல் தொடங்கிய ஒரு சில பக்கங்களிலேயே அருணாசலத்தின் என்ன ஓட்டங்களில் ஒரு அனுபவம் வரும். ஒரு கல்யாணத்தில் அவன் மனைவி நாகம்மை தன் தங்கையின் கொழுந்தனிடம் சிரிச்சி பேசுவதை கண்டு இவன் உள்ளுக்குள் புகைத்துக்கொள்வான். ‘குழந்தையை கொஞ்சம் வைத்துக்கொள்ள முடியுமா?’ என்று அவள் கேட்டபோது ‘ஏன் அப்பத்தான் கல்யாணமாகாத கண்ணின்னு பயக்க நெனப்பாவளா!’ என்று வார்த்தையில் முல்லை வைத்து குத்துவான். உடனே தன் கீழமைக்கு வெக்கி குறுகிப்போவான்.

தன் கட்சியின் சித்தாந்தம் அளித்த மேதமை, களப்பணிகள், தீரா விவாதங்கள், அவனை தலைவனாக தொடரும் தொண்டர்கள் என… எவ்வகையிலும் அவன் ஒரு அறிவு ஜீவி. மனதின் மேல் இத்தனை அறிவுப்பூர்வமான விஷயங்களை போட்டு நிரப்பினாலும் மாறாத ஆதி இயல்பு ஒன்று இருந்துக்கொண்டு தான் இருக்கிறது.  என்னதான், இந்திர மாளிகையை கட்டி எழுப்பினாலும் .. அதன் அடியில் சாக்கடையில் இருந்து எலிகள் போல இவைகள் எட்டி பார்த்துக்கொண்டு தான் இருக்கின்றன. அதிலும், பெண் உறவுகளில் இதெல்லாம் வெடித்து வெளிவந்துக்கொண்டே இருக்கும். சீல் கட்டி வெடிப்பது போல் அப்படி இன்னுமொரு நிகழிச்சி இதே நாவலில் வேறு ஒரு கோணத்தில்… இன்னும் நுட்பமாக நீங்கள் அமைத்து இருப்பீர்கள்.

அது சுப்பையாவிற்கு வீரபத்திர பிள்ளை எழுதும் கடிதம். கட்சியை விட்டு விலகிய பிறகு அங்குள்ள தன் நண்பன் சுப்பையா மிக்க கடுமையான சொற்களில் எழுதிய கடிதத்திற்கு எதிர்வினையாட்டும் வீரபத்திரன்… சொற்களால் அவனை கிழித்தெறிய அந்த அனுபவத்தை ஞாபகப்படுத்துவான். என்ன அது? தீவிர இடது சாரியான சுப்பையாவின் பெண் பிள்ளைக்கு முடியெடுக்கும் சடங்கு. அங்கு சுப்பையா கண் கலங்கினதை குத்திக்காட்டுவதுடன் தொடங்கி…  அவன் தம்பி நாவிதரை ‘அடே’ என்று சாதி பெயர் சொல்லி அழைப்பதும், குழந்தையின் தாய் மாமன் போட்ட அரைப்பவுன் கம்மலை மாறி மாறி கையால் எடை போட்ட உறவினர்களும்… இப்படி சொல்லிக்கொண்டே போகும் வீரபத்திரன் அதன் உச்சமாக அந்த நிகழ்ச்சியையும் சொல்வான்.

அது வீரபத்ரனின் கண்களும் சுப்பையாவின் மனைவியின் கண்களும் சந்தித்து… பார்வை தீண்டி சட்டென்று விலகும் காட்சி. ஒரு பார்வைதான்… முன்பின் அறிமுகம் இல்லாத ஆணும் பெண்ணும் ஒரு சிறிய ஆர்வத்துடன் சந்தித்துக்கொள்வது. அதற்கு பிறகு அது மிகவும் சாதாரணமான அறிமுகமாகவே நின்று விடலாம். ஆனால், அது  சுப்பையாவின் மனதில் ஒரு எரிமலையை வெடித்து விடுகிறது.  அவன் பார்வை மாறுபடும். ஒரு சிறு காரணத்திற்க்காக சட்டென்று மனைவியை அடிப்பான்…! வீரபாத்திரனிடம் அதுவரைக்கும் தான் காப்பாற்றிக்கொண்டு இருந்த அந்த பிம்பத்தை சுப்பையா உடைத்து எரிவான்.

ஆண் இக்கீழ்மைகளை உணவின் பொருட்டோ, உறைவிடத்தின் பொருட்டோ வேண்டுமென்றால் மறைத்துக்கொள்ளலாம். ஆனால், பெண் உறவின் விஷயத்தில் சாத்தியமே இல்லை.  வெண்முரசு இருட்கனியில்…  கர்ணனிடம் தீவிர அவமானத்தை அடைந்த யுதிஷ்டரன் அர்ஜுனனிடம் காட்டும் கீழமையும் அத்தகையதே.

திரௌபதியிடம்… ஐவரும் வெவ்வேறு நாட்களில் உறவு கொள்ளும் நாட்களில் இருந்தே அர்ஜுனனின் விஷயத்தில் தர்மருக்கு அந்த புகைச்சல் இருந்துக்கொண்டு தான் இருக்கிறது. அவன் இந்த கால கட்டுப்பாடை மீறுகிறான் என்று! மற்ற மூவருக்கும் அந்த பிரச்சினையே இல்லை. மாமலரின் துவக்கத்தில் பல வருடங்களின் பயணத்திற்கு பிறகு வரும் அர்ஜுனன் திரௌபதியுடன் மகிழ… பீமன் வழிசெய்வான். நகுலனுக்கு, சகதேவனுக்கும் அவள் களி தோழியாகவும், சமயத்தில் அன்னையாகவும் அணைப்பவள். பிரச்னையெல்லாம்… யுதிஷ்டரனுக்குத்தான்…

ஏன்? அவன் அறிவுஜீவி என்பதாலா? அதை மட்டுமே தன் சுய அடையாளமாக ஆக்கிக்கொள்வதாலா?  போர், அரச சூழ்ச்சி போன்ற லௌகீக விஷயங்களில் அவரின் பொருந்தாமை வெளிப்படையாக தெரிய வருவதினாலா? அதற்காகத்தான், தன்னுடைய மெய்மையை முன்னிறுத்துகிறானா… அருணாச்சலத்திற்கும், சுப்பையாவிற்கும் மார்க்சியம் அந்த மெய்மைதானே?

இத்தனைக்கும் கந்தமாதன பர்வதத்தில் எரிந்து சத்தியத்தை தெரிந்துக்கொண்டவன் அல்லவா தருமன்! அறிவு ஜீவிகளுக்கே உள்ள நரகமா இது? கர்ணனின் உயிர் துறத்தலை பேசும் இந்நாவல்… போர் அறத்தின் வீழ்ச்சியை காட்டுகிறது. இதுவரை நான் படித்த மகாபாரதத்தில் எல்லாம்…  துச்சனின் மரணம் பீமனின் அசகாய வீரத்தால் தான் என்று சொல்வன. ஆனால், சர்வதனை கொள்ளக்கூடாதென்று கதையை ஓங்கி காற்றில் நிறுத்திய துச்சகனை இங்கு பீமன் கொள்கிறான். அதற்கு அடுத்துவரும் காட்சிகள் பீபத்ச ரசத்தின் உச்சங்கள்.

இந்த நாவலில் நான் மிகவும் ரசித்தது வால்மீகியின் கதை அமைத்துள்ள விதம். ‘மா நிஷாத’ என்ற சொல்லையோ… இணையான தமிழ் வார்த்தையையோ பயன்படுத்தாமல் குரங்குகளின் நாவால் கவிமுனிவரின் கதையை மிகவும் அழகாகக் கூறிவிட்டீர்கள்.

நன்றி ஜெ.

ராஜு.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 29, 2022 11:30

October 28, 2022

ம.ந.ராமசாமியும் மாதரார் கற்பும்

[image error]

ம.ந.ராமசாமி- தமிழ் விக்கி

ம.ந.ராமசாமி எழுதிய யன்மே மாதா என்னும் சிறுகதை நாற்பதாண்டுகளுக்கு முன் வெளிவந்து தமிழ் இலக்கியச் சூழலில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக விவாதிக்கப்பட்டது. வேதச்சடங்குகளை கடுமையாக நிராகரிக்கும் கதை. கதைச்சுருக்கம் இதுதான்.

சம்ஸ்கிருதம் அறிந்த ஒருவன் தன் அன்னைக்கு வைதிகர்களைக் கொண்டு நீத்தார்ச் சடங்குகள் செய்யவைக்கிறான். அதிலொரு மந்திரம் ‘யன்மே மாதா…’ என தொடங்கும். இதன் பொருள் ‘என் தாய் (அறிந்தும் அறியாமலும்) எந்த ஆடவருடன் உறவு கொண்டிருந்தாலும் என் தந்தையராகிய அவர்களுக்கு இந்த அன்னம் சென்று செல்லட்டும்’

பேராசிரியன் கொந்தளித்துவிடுவான். ‘என்ன ஆபாசமான மந்திரம். என் பெற்றோரை கேவலப்படுத்துகிறது. என் அம்மாவின் ஒழுக்கத்தை கீழ்மை செய்கிறது. ஏதோ காட்டுமிராண்டிக் காலத்தில் எவனோ எழுதிய மந்திரத்தை இந்த நாகரீக காலகட்டத்தில் சொல்வதா? எழுந்து வெளியே செல்லுங்கள்” என்று கூச்சலிட்டு வைதிகர்களை துரத்திவிடுவான்.

இந்த கதையின் கருப்பொருளும் உணர்ச்சியும் உண்மையில் குத்தூசி குருசாமி முன்னர் எழுதிய ஒரு கட்டுரையில் இருந்து எடுத்துக்கொண்டது. இந்த மந்திரத்தை வைத்து வேதங்களை இழிவுசெய்து மறுக்கும் பேச்சுகளை நானே தி.க. மேடையில் கேட்டிருக்கிறேன். ம.ந.ராமசாமி அந்த மேடைப்பேச்சை திரும்ப கதையாக்கினார். அன்று அதை இடதுசாரிகள் தலைமேல் கொண்டாடி வந்தனர்.

à®®.ந.ராமசாமி பற்றி பேசும்போது சுந்தர ராமசாமி இந்த கதை அவருடைய நல்ல கதை என்றார். ‘அது நேரடியான பிரசங்கமா இருந்தாலும் அதிலே உண்மையான உணர்ச்சிகள் இருக்கு’ என்றார். சுந்தர ராமசாமிக்கு வைதிகச் சடங்குகள் மேல் அருவருப்பே உண்டு. அவர் எச்சடங்கையும் செய்வதில்லை. அவருடைய கம்யூனிசப் பின்னணி, நவீனத்துவ மனநிலை இக்கதையை எழுதியவருக்கு ஒப்பானது. (பார்க்கக்கூட à®®.ந.ராமசாமி கொஞ்சம் சு.ரா சாயலில் இருக்கிறார்)

நான் அதை மறுத்தேன். “அந்தக் கதையிலே இருக்கிறது இன்னிக்கு ஒரு சராசரி மனிதன், இன்னிக்குள்ள ஒழுக்கநெறிகளை வைச்சு, வாழ்க்கையை பார்க்கக்கூடிய பார்வை. சர்வ சாதாரணமான ஒழுக்கப்பார்வை. ஒரு எழுத்தாளன் சாதாரணமான உணர்ச்சிகளை சாதாரணமா வெளிப்படுத்துறவன் இல்லை. ஒரு விஷயத்திலே ஒண்ணு அவன் தனக்குள்ளே ஆழ்ந்து போய் எதையாவது கண்டடைஞ்சு சொல்லணும். இல்லே,  உண்மையில் அந்த வரலாறையும் தத்துவத்தையும் ஊடுருவிப்போயி எதையாவது சொல்லணும். அரிதான பார்வைதான் இலக்கியம் ஆக முடியும்”

அன்று வேறு எவரோ கூட இருந்தார் என நினைவு. அவரும் சுந்தர ராமசாமியை ஆதரித்தார். ”என்னோட அம்மா ஒழுக்கம்தவறியிருந்தாலும்னு எப்டி ஒருத்தன் சொல்லலாம்?” என்றார். “அதிலே ஒழுக்கத்துக்கு இடமே இல்லியே… Morality வேற Reason வேற Wisdom வேற. அதிலே இருக்கிறது ஒரு தொன்மையான widsom .அதை நாம நம்ம reason ஆலத்தான் புரிஞ்சுகிட முடியும்” என்றேன். ஆனால் மேற்கொண்டு அதை விளக்க என்னால் முடியவில்லை.

இன்று யோசிக்கையில் இந்த விவாதம் எப்படி பொருள்படுகிறது? என் மகள் சைதன்யா பெண்ணியப்புலி. அவளிடம் இந்த விவாதத்தைச் சொன்னேன். “ரெண்டு ராமசாமிகளும் சொல்றதுதான் most regressive பார்வை. பொம்புளையோட ஒழுக்கத்தை எல்லாத்துக்கும் மேலே வைச்சுக்கிற ஆணாதிக்க அணுகுமுறை. என்னமோ அவங்களோட சொந்த அடையாளத்தை பாதுகாக்கிற பொறுப்பு பொண்ணுக்குன்னு நினைச்சுக்கிடறாங்க” என்றாள். ஆச்சரியமாக இருக்கவில்லை. நாற்பதாண்டுகளில் மொத்த பார்வையும் இங்கே தலைகீழாக ஆகிவிட்டிருக்கிறது.

அந்த சிரார்த்த மந்திரத்தைச் சுற்றி இங்கே இன்னமும் விவாதங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன. அதை எதிர்த்தும் ஆதரித்தும் பேசும் இருதரப்பும் பெண்களின் கற்பு விஷயத்தில் ஒரே கொள்கை கொண்டவர்களே. அந்த மந்திரம் பெண்களின் கற்பினை இழித்துரைக்கிறது என்று சொல்லி, சொல் சொல்லாக எடுத்து விளக்கமளிக்கின்றனர் எதிர்ப்பாளர்கள். அப்படி அல்ல, அது சொல்வதற்கு வேறு பொருள்  என்று விளக்கமளிக்கும் வைதிகர்களும் அது பெண்களின் கற்பை ஒன்றும் சொல்லவில்லை என நிறுவ முயல்கின்றனர்.

அந்த மந்திரத்துக்குச் சமானமான மந்திரங்களை பிராமணங்களில் காணமுடியும். அந்த மந்திரத்தின் உட்பொருளை விளக்கும் விரிவான பகுதிகள் மகாபாரதத்தில் உள்ளன. மகாபாரதத்தின்படி ஒருவன் எவருக்கெல்லாம் நீர்க்கடன் செய்யலாம்? அவனுடைய அன்னையுடன் எவ்வகையிலேனும் உடலுறவு கொண்டவர்கள் எல்லாரும் அவன் தந்தையரே. அவன் அன்னை எவருமறியாமல் உள்ளத்தால் வரித்துக்கொண்டவர்களும் அவன் தந்தையரே. அவன் தானாகவே ஒருவரை தந்தை என எண்ணிக்கொண்டால் அவரும் தந்தையே.

தொல்பழங்காலத்தில் திருமணங்களே பலவகையானவை. எல்லாவகை உறவுக்கும் ஏதோ ஒரு வகையில் ஏற்பு இருந்தது. மகாபாரதம் யாரெல்லாம் ஒருவனுக்கு மகன் ஆவான் என்னும் பட்டியலை அளிக்கிறது. தன் மனைவிக்கு எவரில் எப்படி பிறந்திருந்தாலும் எல்லா குழந்தைகளும் ஒருவனின் குழந்தைகளே. அவள் ரகசிய உறவில் குழந்தை பெற்றிருந்தால்கூட. அக்குழந்தைகளுக்கு அவன் பொறுப்பேற்றாகவேண்டும். அந்தப்பட்டியலை பார்த்தால் bastrard என ஒரு குழந்தைகூட அகற்றப்படலாகாது என்னும் தொல்குடி விவேகத்தையே காணமுடிகிறது.

அந்த விவேகம் ஒழுக்கம் சார்ந்த எளிமையான அன்றாட நெறிகளுக்கு அப்பாற்பட்டது. அன்றைய தொல்குடிச் சமூகத்தின் பரந்த பார்வையின் வெளிப்பாடு அது. ஒரு குழந்தையும் ‘தந்தையற்றது’ அல்ல. ஒருவனும் ’மைந்தன் இல்லாதவன்’ அல்ல. நினைவுகூரப்படுவது, நீர்க்கடன் அளிக்கப்படுவது இரண்டும் மறைந்த ஒவ்வொருவருக்கும் சமூகம் ஆற்றவேண்டிய கடன். அதை ஒழுக்கம் முதலியவற்றுக்கு மிகமிக அப்பால் ஒரு அதீதமான விழுமியமாகவே அந்தச் சமூகம் பார்த்தது.

மகாபாரதம் வழியாகப் பார்த்தாலே, அந்த தொல்குடிச் சமூகம் பாலியல் ஒழுக்கத்தை வாழ்க்கையின் அடிப்படை நெறியாக எண்ணவில்லை என்பதை காணலாம். மிகமிக நெகிழ்வான ஒன்றாகவே அது  பாலியல் ஒழுக்கத்தை பார்த்தது. மகாபாரதம் ஆதிபர்வத்தில் குந்திக்கும் பாண்டுவுக்குமான உரையாடல் தொடங்கி பல இடங்களில் பாலியல்நெறிகளின் பலவகை நெகிழ்வுகள் பற்றிப் பேசுகிறது. நாமெல்லாம் கதையாக அறிந்த குந்தி, திரௌபதி, தமயந்தி என எல்லா கதைகளுமே அதற்கான சான்றுகள்.

ஆனால் மகாபாரதத்திலேயே பாலியல் நெறிகள் மேலும் மேலும் இறுக்கமாகிக்கொண்டே வருவதை நாம் காண்கிறோம். ஏனென்றால் மண், செல்வம், குடியடையாளம் ஆகியவற்றின் மீதான ஆணின் உரிமை வலுப்பெற்றபடியே வருவதை மகாபாரதம் காட்டுகிறது. பெண்ணின் இடம் இல்லாமலாகிக்கொண்டே செல்கிறது. திரௌபதி போன்ற ஓர் அரசி மகாபாரத காலகட்டத்திற்கு பின் நிகழ முடியாது என தெரிகிறது. குந்தியும் திரௌபதியுமெல்லாம் பெண்ணுக்கும் மண்ணுரிமை, குலஉரிமை இருந்த காலத்தைச் சேர்ந்தவர்கள்.

சொல்லப்போனால் திரௌபதி சபையில் சிறுமை செய்யப்பட்ட நிகழ்வு இந்தியாவின் வரலாற்றுப் பரிணாமத்தில் பெண்களின் உரிமையும் அதிகாரமும் இல்லாமலான தருணத்தை குறிப்பிடுகிறது என்று தோன்றுகிறது. பிற்காலக் கதைகளில் திரௌபதி ஐந்துபேரை மணந்தது எப்படியெல்லாம் ‘சப்பைக்கட்டு’ கட்டப்பட்டுள்ளது என்பது வியப்புடன் கவனிக்கத் தக்கது. மேலும் வியப்பு அளிப்பது, இந்தியாவில் உருவான அத்தனை ’முற்போக்கு’வாதிகளும் குந்தியையும் திரௌபதியையும் பற்றி இழிவாக எழுதியிருக்கிறார்கள் என்பது. அவர்கள் பார்வையில் ‘கற்பு’ உள்ள பெண்ணே நல்லவள்.

நிலம் மீது, குலம் மீது, அரசின் மீது ஆணின் ஆதிக்கம் ஓங்கியிருந்த காலகட்டத்தின் பார்வையே பெண்ணின் ஒழுக்கத்தை அதீத புனிதப்படுத்தியது. அதையொட்டியே ஆணின் அடையாளத்தை அமைத்தது. அந்த மனநிலையே ’யன்மே மாதா’ என்று செவியில் விழுந்ததுமே ரத்தம் கொதிக்கச் செய்கிறது. அது முற்போக்கு என்று வேறு நம்பச் செய்கிறது. முற்போக்காளர்களின் அந்த நிலப்பிரபுத்துவகால விழுமியத்தை கடந்து நின்று இன்று பார்க்கையில் அதற்கு முந்தைய தொல்மரபின் விவேகமே உண்மையில் முற்போக்கானதாக, அரவணைக்கும் தன்மை கொண்டதாக தோன்றுகிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 28, 2022 11:35

ஸ்டெல்லா புரூஸ்

ஸ்டெல்லா புரூஸ் ஆனந்த விகடனில் அவர் எழுதிய கற்பனாவாதம் நிறைந்த கதைகளுக்காக பெரும்புகழ்பெற்றவர். இன்று அவ்வளவாக வாசிக்கப்படுவதில்லை. அவருடைய இன்னொரு முகம் கவிதை. நவீன இலக்கிய சூழலில் காளி -தாஸ் என்னும் பெயரில் அவர் எழுதிய கவிதைகள் முக்கியமானவையாகக் கருதப்படுகின்றன. ஸ்டெல்லா புரூஸ்ஸின் தனிவாழ்வும் கற்பனாவாதக் கதைகள்போலவே துயரில் முடிந்தது

ஸ்டெல்லா புரூஸ் 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 28, 2022 11:34

காந்தியைக் கண்டடைதல் -கடிதங்கள்

காந்தியை கண்டடைதல் – சிவராஜ்

அன்புள்ள ஜெ,

காந்தியை கண்டடைதல் ஓர் அருமையான ஆவணப்பதிவு. அனுபவப்பதிவு. இத்தனை எதிர்ப்புப் பிரச்சாரம், இவ்வளவு காழ்ப்புகளுக்கு நடுவிலும் இளம் உள்ளங்கள் காந்தியை கண்டுபிடித்தபடியே உள்ளன என்பது ஆழமான நிறைவை அளிக்கிறது. காந்தி வாழ்வார். வாழவேண்டும். அது நம் மனசாட்சிக்கு இன்னமும் இங்கே இடமுண்டு என்றுதான் பொருள் அளிக்கிறது.

சா.முத்தையா

அன்புள்ள ஜெ

காந்தியைக் கண்டடைந்த குழந்தைகளுக்கு என் அன்பு முத்தங்கள். காந்தி சிலைகளில் இல்லை. நாம் சந்திக்கும் மனிதர்களில் அவர் வெளிப்பட்டுக்கொண்டே இருக்கிறார். மோகன் தனிஷ்க் எடுத்த படங்களும் அற்புதமானவை

ராஜேந்திரன் எம்.ஆர்

உரையாடும் காந்தி வாங்க

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 28, 2022 11:33

ஒவைசி, கடிதம்

ஓரு நல்நிகழ்வு- ராஜு

அன்புள்ள ஜெ

ஒரு நல்நிகழ்வு என்னும் கட்டுரை துணுக்குறச் செய்தது. அக்கட்டுரை எம்.ஐ.எம் போன்ற ஒரு தீவிரப்போக்கு கொண்ட மதவாதக் கட்சியை ஆதரித்து எழுதப்பட்டுள்ளது. அஸருதீன் ஒவைசி போன்ற ஒருவரை ஆதரிப்பதென்றால் அதற்கு என்ன அர்த்தம் என்றே புரியவில்லை.

எஸ்.ராமன்

அன்புள்ள ராமன்,

அக்கட்டுரையை எழுதியவர் தெலுங்கானாவில் வாழ்பவர், அங்கே நாளிதழில் அரசியல் நோக்கராக பணிபுரிபவர், காந்தியப்பார்வை கொண்டவர், அரசியல்வாதி அல்ல. ஆகவே அக்கருத்து வெளியிடப்பட்டது.

நான் அக்கட்டுரையின் உள்ளடக்கத்தை தனிப்பட்ட முறையிலும் ஏற்கிறேன். இந்தியாவில் சாதி- மதக் கட்சிகள் உருவாவதை தடுக்க முடியாது. அவை தேவையில்லை என நினைக்கிறேன், ஆனால் அவை உருவாகிக்கொண்டே உள்ளன. அவை ஜனநாயக – தேசியப்பாதையை தேர்வு செய்கின்றன என்றால் அது வரவேற்கப்படவேண்டிய விஷயம்தான்.

ஒவைசியைப் பொறுத்தவரை அவர் வன்முறையை, பிரிவினையை ஆதரித்து எதையும் பேசியதாக நான் காணவுமில்லை.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 28, 2022 11:31

தெய்வங்களின் கதைகள்

தெய்வங்கள் தேவர்கள் பேய்கள் – வாங்க

தமிழகத்தில் எந்த ஊருக்கு சென்றாலும்  குறிப்பாக  கிராமங்களுக்கு  சென்றாலும் பல  சிறு தெய்வங்களை  கடந்து தான்  நாம் போக வேண்டி இருக்கிறது .நான் முதலில் பணியாற்றிய தஞ்சை மாவட்டத்தில் கடைக்கோடி பகுதி கிராமங்களில் ஒரு தெருவுக்கு ஒரு சிறு பீடமோ அல்லது அய்யனார் குதிரைகளோ இருக்கும் . சில பகுதிகளில் முனியசாமி சிலைகள்  எங்கு பார்த்தாலும் கண்கள் உருட்டி நம்மை மிரட்டும் பாவனையில் இருக்கும் .

அப்போதெல்லாம் இவ்வளவு  சாமிகள் எப்படி வந்தனர்? என்று எனக்கு ஆச்சர்யமாக இருக்கும் .பெருந்தெய்வங்கள் பற்றிய வரலாறு நமக்கு நிறைய படிக்க கிடைக்கிறது . தேவாரம் , நாலாயிர திவ்ய பிரபந்தம் என பெருந்தெய்வங்கள் பற்றி நமக்கு நிறையவே தெரியும் .ஆனால் சுடலை மாடன் பற்றியோ முனியன் பற்றியோ சிறு தகவலோ     தரவுகளோ  நமக்கு   ஏதும் பெரிதாக கிடையாது .ஒரு சில நட்டார் பாடல்கள் மட்டுமே கிடைக்கின்றன .நான் அந்த நாட்டார் பாடல்களை கூட  படித்ததில்லை . அனால் இந்த சிறு தெய்வங்களுக்கு பின்னால் உள்ள வரலாறு என்ன என்று தெரிந்துகொள்ள ஆர்வமாய் இருந்தேன் .

“தெய்வங்கள் பேய்கள் தேவர்கள் ”   நேற்று படித்தேன் குமரி மாவட்டத்தை சுற்றியுள்ள சிறு தெய்வங்கள் பற்றி வரலாற்று பின்புலத்துடன் எழுதியது மிகுந்த முக்கியத்துவம் பெறுகிறது . லக்ஷ்மி மணிவண்ணன் முன்னுரையில்  கோணங்கி அவரிடம்  ” உங்க ஊர்ல ரெண்டு கிலோமீட்டர் தாண்டுரதுக்குள்ள எட்டு சுடலைய தாண்ட வேண்டியிருக்கு ?” என்று சொன்னது இந்த புத்தகத்துக்கு சாலப்பொருத்தம். “இரண்டு கதையுலகங்கள்” தொடங்கி “வரலாறு அறியாத விழிகள் ” வரை பல கிராமிய தெய்வங்கள் பற்றியும் குல தெய்வங்கள் பற்றியும் பேசுகிறது இந்த புத்தகம் .

நமது வரலாறு புறவயமாக பிரிட்டிஷாரால் எழுதப்பட்டது ஆனால் அவர்கள் பார்வையில் சற்று இலக்கார தொனியில் . அவர்கள் ஆட்சி செய்த பகுதிகளில் உள்ள தெய்வங்களை பெரும்பாலும் பேய்களுக்கு நிகராகவே எழுதினர் .ஸ்ரீரங்கம் பெருமாளை கரிய சாத்தனை போல தான் அவர்கள் வருணித்தார்கள் .பிறகு சிறு தெய்வங்களை பற்றி சொல்லவே வேண்டாம்.

நமது சிறு தெய்வங்கள் தான் நமது உண்மையான வரலாறை சொல்வன. நமது வரலாறு எங்கோ டெல்லியிலோ அல்லது வேறு எங்கோ இல்லை நமது அருகில் தான் உள்ளது என்பதை நமக்கு உணர்த்துபவை இந்த சிறு தெய்வங்கள் .நமது தேவதைகள் நமது எதிரிகளுக்கு சைத்தான்கள் இது போல அடுத்தவர் தெய்வங்கள் நமக்கு பேய்கள் அவ்வளவே .இது தான் உலகம் முழுதும்  உள்ள போது புத்தி . முதல் கட்டுரை வசதி படைத்தவர்களுக்கு காமதேனுவும் கர்ப்பக விருட்சமும் இருப்பது போல ஏழைகளுக்கு பனை மரமும் எருமையும் தெய்வங்களால் வழங்கப்பட்டதை உணர முடிகிறது.

எந்த கதைக்கும் ஒரு வெள்ளை  வடிவம் இருப்பது போல் கருப்பு வடிவம் உண்டு என அறிய முடியும் .ஜியேஷ்டை  என்ற வேர் சொல்லில் இருந்தே சேட்டை என்ற பதம் வந்ததாக சொல்லி பத்மநாதபுரம் அரண்மனை அருங்காட்சியகத்தில்  சேஷ்டை என்ற சிற்பத்தை பார்த்த போது அவலட்சணமாக செதுக்கப்பட்டதை இதனுடன் தொடர்புபடுத்தியது அருமை .ஒவ்வொரு கட்டுரையும் ஆழ்ந்த வரலாற்ற்று பின்னணியிலும் ஆய்வு நோக்கிலும் எழுதப்பட்டது அருமை . சிலர் எல்லா தவறுகள் செய்தாலும் கடைசியில்  அவர்களால் பாதிக்கப்பட்டவர்களால்  வழிபடப்படுவது ஒரு முரண் ஆனாலும்   அதுவும் ஒரு நீதி தான் .சிலர் தான் செய்த தவறுக்கு பரிகாரமாக தன்னால் பாதிக்கப்பட்டவர்களை தெய்வமாய் வணங்குவதும் எல்லாவற்றுக்கும் அடிப்படை அறம் அன்றி வேறில்லை .இதை எழுதிய உங்களுக்கு மனமார்ந்த நன்றி ஜெ

அன்புடன் செல்வா

பட்டுக்கோட்டை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 28, 2022 11:30

October 27, 2022

ரிஷி சுனக்

அன்புள்ள ஜெ

ரிஷி சுனக் பிரிட்டிஷ் பிரதமராக ஆகியிருப்பது பற்றி நீங்கள் ஏதாவது எழுதுவீர்கள் என எதிர்பார்த்தேன். இந்தியர்கள் திறமையற்றவர்கள் என்று பிரிட்டிஷார் சொல்லிவந்தனர் (சர்ச்சில் சொன்னார்) இன்று இந்திய வம்சாவளியினர் ஒருவர் பிரிட்டிஷ் பிரதமர் ஆகியிருப்பது முக்கியமான நிகழ்ச்சி அல்லவா?

ஆர்.ரமணி

***

அன்புள்ள ரமணி,

இந்திய வம்சாவளியினர் ஒருவர் ஓர் உயர்பதவிக்கு வரும்போது அல்லது பரிசுபெறும்போது இங்கே உருவாகும் பரவசம் என்னைக் கூச்சமடையச் செய்கிறது.

அதிலுள்ள உணர்வு உண்மையில் என்ன? இந்தியர்களுக்கு தங்கள் இனம் சார்ந்து இருக்கும் தாழ்வுணர்ச்சியே. அது வெள்ளையர் உருவாக்கியது. வரலாற்றில் நமக்கு நிகழ்ந்த வீழ்ச்சியால் அடையாளமிடப்பட்டது.

அதை அகத்தே நாமும் நம்புவதனால்தான் ஓர் இந்திய வம்சாவளியினர் ஐரோப்பாவிலோ அமெரிக்காவிலோ வெற்றி அடையும்போது நாம் கொண்டாடுகிறோம். அது நம் வெற்றி என நினைக்கிறோம். ஏனென்றால் அது நம் தாழ்வுணர்ச்சியை கொஞ்சம் போக்குகிறது.

இந்த தாழ்வுணர்ச்சியால்தான் நாம் இங்குள்ள எந்த சாதனைகளையும் கண்டுகொள்வதில்லை. நம் சூழலின் அறிஞர்களை பொருட்படுத்துவதில்லை. எவரையும் அறியமுயல்வதுமில்லை. அரசியல்வாதிகள், கேளிக்கையாளர்களே நமக்கு முக்கியமானவர்கள். ஓர் அரசியல் கட்சியின் விசுவாசிகள்கூட அக்கட்சியின் சிந்தனைகளை உருவாக்கிய அறிஞர்களை பெயர்கூட அறியாதவர்களாக இருப்பார்கள். திகைப்பூட்டும் சூழல் இது.

அதேசமயம் எவருக்காவது ஓர் ஐரோப்பிய அங்கீகாரம் கிடைத்துவிட்டால் மிகையாகக் கொண்டாடுவோம். அறிஞர், ஆய்வாளர் என எவரையாவது கொஞ்சம் அறிமுகம் செய்துகொண்டாலே மிகையாக தூக்கி வைக்க ஆரம்பிப்போம். நம் பொதுவெளி ஆளுமைகளை எல்லாம் தெய்வங்களாகவே முன்வைப்போம்.

ஏனென்றால் உண்மையில் நம்மிலொருவர் அறிஞராக, ஆய்வாளராக எல்லாம் இருக்க முடியும் என்னும் நம்பிக்கையே அடிமனதில் நமக்கு இல்லை. அந்த அவநம்பிக்கையால்தான் நாம் அறிவுசார்ந்த அளவுகோல்களை மறுத்து மிகையாகக் கூச்சலிட்டு ஆர்ப்பாட்டம் செய்கிறோம்.

ரிஷி சுனக் அல்லது அதைப்போன்றவர்கள் இந்தியர்கள் அல்ல. இந்தியக் கல்விமுறையில் உருவானவர்கள் அல்ல. இந்தியர்கள் திறமையற்றவர்கள் என்று சொல்ல ரிஷி சுனக்கையே ஏன் ஓர் ஐரோப்பியர் சுட்டிக்காட்ட கூடாது? இந்தியப் பல்கலையில் பயின்று எவரும் உயர்நிலையை அடையமுடியாது, இந்தியாவை ஆளவேண்டுமென்றால்கூட ஐரோப்பியப் பல்கலையில் பயிலவேண்டும் என அவர் சொல்லலாமே? ரிஷி சுனக்கை உருவாக்கியது பிரிட்டிஷ் கலாச்சாரமும் கல்வியும்தான் என வாதிடலாமே? அது எவ்வளவு இழிவு நமக்கு?

எனக்கு அந்த தாழ்வுணர்ச்சி இல்லை. ஆகவே நான் சுந்தர் பிச்சை, இந்திரா நூயி என்றெல்லாம் நடனம் ஆடுவதில்லை. மெய்யாகவே இந்தியப் பண்பாட்டுக்கும் அதனூடாக உலகப்பண்பாட்டுக்கும் கொடையளித்த இந்திய மேதைகளைப் பற்றி எழுதுகிறேன். அவர்களை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்ல முயல்கிறேன். அவர்களே நம் பெருமிதம்.

ரிஷி சுனக் விஷயத்தில் என் ஆர்வம் ஒன்றே. பிரிட்டிஷ் பொருளியல் பற்றி படித்தேன். முழுக்கமுழுக்க தொழில்மயமாக்கப்பட்ட நாடு. தொழிலுற்பத்தி, ஏற்றுமதி, அதன் அன்னியச்செலவாணி வருகை வழியாக வாழ்கிறது. உணவுற்பத்தி மிகக்குறைவு. வேளாண்பொருட்களை இறக்குமதி செய்கிறது.

இந்த பொருளாதார ‘டெம்ப்ளேட்’ பிரிட்டனுக்கு பழைய தொழிற்புரட்சிகாலம் முதல் உருவானது. தொழிலுற்பத்திப் பொருட்களை விற்கும் ‘கட்டாயச் சந்தை’ ஆகவும் அதற்கான மூலப்பொருட்களை அளிக்கும் ‘கட்டாய வயல்’ ஆகவும் காலனிநாடுகளை பயன்படுத்தியது.

உலகப்போருக்குப் பின் காலனிகளை இழந்த பிரிட்டன் அமெரிக்க உதவியுடனும் பழைய தொழில்மயமாக்கலின் மிஞ்சிய வசதிகளுடனும் தாக்குப்பிடித்தது. அண்மைக்காலம் வரைக்கும்கூட காலனிகள் சிலவற்றை வைத்திருந்தது.

இன்று சீனாவின் தொழிலுற்பத்திப் பொருட்கள் பிரிட்டிஷ் தொழிலுற்பத்திப் பொருட்களை சந்தையில் இருந்து விரட்டுகின்றன. பிரிட்டன் அதன் ஊழியர்களுக்கு அளிக்கும் ஊதியத்தில் பத்திலொன்றைக்கூட தன் ஊழியர்களுக்கு அளிக்காத சீனாவின் ஏகாதிபத்தியப் பொருளியலுடன் பிரிட்டன் போரிடமுடியாது.

ஆகவே பிரிட்டனின் பொருளியல் தடுமாறுகிறது தொழிலதிபர்கள் சீனாவுடன் போட்டியிடவேண்டுமென்றால் வரிச்சலுகை வேண்டும் என்கிறார்கள். அதை அளித்தால் தொழிலாளர், அடித்தள மக்கள்மேல் வரிபோடவேண்டியிருக்கும். தொழில்கள் சோர்வுற்றால் தொழிலாளர் வேலையிழப்பு, ஊதியக்குறைப்பு பொருளியலை மேலும் வீழ்த்தும்.

பொதுவாக பொருளியல் வல்லுநர்கள் ‘திட்டமிட்டு’ பொருளியலை மேம்படுத்த முடியுமா என்றெல்லாம் எனக்குச் சந்தேகங்கள் உண்டு. பொருளியல் அறிந்தவர்கள் சொல்வதை எல்லாம் ஒரு சிட்டிகை உப்புடன் எடுத்துக்கொள்வதே என் வழக்கம். அந்த ஐயம் ஓர் எளிய பாமரனின் தரப்பு என்று கொள்க.

பிரிட்டனுக்கு ஒரே வழிதான். ஐரோப்பாவுக்கே ஒரே வழிதான். நுகர்பொருளுற்பத்தியில் சீனாவுடன் போட்டியிட முடியாது. உயர்தொழில்நுட்ப ஆயுதங்களை உருவாக்கி மூன்றாமுலக நாடுகள் தலையில் கட்டுவது. அந்த லாபத்தில் பொருளியல்மீட்சி அடைவது. அதற்காக எதையும் செய்வார்கள். வரும்நாட்களில் அதுதான் நிகழும். அதை ரிஷி சுனக் செய்தாலென்ன, போரீஸ் ஜான்ஸன் செய்தாலென்ன?

ஜெ

***

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 27, 2022 11:35

புஷ்பா தங்கத்துரை

முப்பது வயதுக்குக் குறைவான எவராவது புஷ்பா தங்கத்துரை (ஸ்ரீவேணுகோபாலன்) நாவல்களை வாசித்திருக்கிறார்களா என ஆர்வத்துடன் கேட்பது என் வழக்கம். பெரும்பாலான வணிகக்கேளிக்கை எழுத்தாளர்களையும்போல அவரும் அப்படியே மறைந்துவிட்டார். அவருக்கு முந்தைய யுகத்து வணிகக்கேளிக்கை எழுத்துக்களை எழுதியவர்கள் தேசபக்தி, இலட்சியவாதம் என கொஞ்சம் தொட்டுக்கொண்டு இன்னமும் நீடிக்கிறார்கள். ஸ்ரீவேணுகோபாலன் என்ற பெயரில் அவர் எழுதிய திருவரங்கன் உலாவுக்கு தமிழிலக்கியத்தில் முக்கியமான இடம் உண்டு.

ஸ்ரீவேணுகோபாலன் ஸ்ரீவேணுகோபாலன் ஸ்ரீவேணுகோபாலன் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 27, 2022 11:34

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.