Jeyamohan's Blog, page 693
October 26, 2022
அ.முத்துலிங்கம் விழா, கடிதம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
நலம். கி.ரா. விருது – 2022-ஐ முன்னிட்டு, விருது பெற்றவரான அ. முத்துலிங்கம் படைப்புகளை சிறப்பிக்கும் பொருட்டு , விஜயா பதிப்பகம் பதிப்பித்த இரு நூல்கள் வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு சிறப்பித்ததற்கு அன்பும் நன்றியும். அருண்மொழி நங்கை அவர்கள் தொகுத்த அ. முத்துலிங்கம் அவர்களின் , வெவ்வேறு நாட்டு மக்களின் வாழ்வை பிரதிபலிக்கும் 13 கதைகள் அடங்கிய ‘நடுவே கடல்’ நூலை சிறப்பிக்கும் விதமாக ஜாஜா உரையாற்ற, முத்துலிங்கம் படைப்புகள் பற்றி வெவ்வேறு தளத்தில் நாட்டில் உள்ளவர்கள் எழுதிய கட்டுரைகள் அடங்கிய, நான் தொகுத்த ‘ஆறாம் திணையின் கதவுகள்’ நூல் பற்றி நீங்கள் உரையாற்ற விழா சிறப்புற நிகழ்ந்தது.
விழாவை தலைமை தாங்கி நூல்களை வெளியிட்ட கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அவர்களை நல்லதொரு வாசகனாக அறியும் தருணமாக அமைந்தது. ஒரே ஒரு கதையை (இராகு காலம்) எடுத்துக்கொண்டு அவர் பேசினாலும், கதையின் நுணுக்கங்கள் அறிந்தவராக, கதையில் லெக் பீஸ் (கருத்து) தேடுவதை தவறு என்றும் , subtle-ஆக சொல்வதின் தன்மையை எடுத்துச் சொன்னார். நான் டெல்லியில் மத்திய அரசாங்க வேலை செய்தபொழுது IAS முடித்த அதிகாரிகளுடன் பணியின் நிமித்தம் உரையாடியுள்ளேன். அவர்களில் ஒருவரேனும் புத்தகங்கள் பற்றி பேசி நான் கேட்டதில்லை. டாக்டர் சமீரன் அவர்கள் விதிவிலக்காக கோவை மேடைகளில் இலக்கிய உரையாற்றுவது ஆச்சரியமாக உள்ளது. 170 மேடைகளில் பேசியதாக தனது உரையில் குறிப்பிட்டார்.
நூல்களைப் பெற்றுக்கொண்ட காரமடை சவிதா மருத்துவமனை டாக்டர் சசித்ரா தாமோதரன் உரையும், சென்னை சில்க்ஸ் இயக்குனர் T.K.. சந்திரன் அவர்களது உரையும் அ. முத்துலிங்கம் படைப்புகளை மேலும் பல வாசகர்களுக்கு கொண்டு செல்வதாக அமைந்தது. சசித்ரா தாமோதரன் அவர்கள் அவரது மருத்துவ படிப்பின்பொழுது கிடைத்த மினி ராபின்ஸ் புத்தகம் உதவியாக இருந்தது போல, இந்த தொகுப்பு நூல்கள் புது வாசகனுக்கு அ. முத்துலிங்கத்தின் படைப்புகளுள் நுழைய நல்ல அறிமுகம் என்றார். டி.கே. சந்திரன் அவர்களுடன் , விழா ஆரம்பிப்பதற்கு முன்னர் பேசிக்கொண்டிருந்தேன். BSNL-ல் அவர் பணியாற்றியதையும், தங்கள் வான் நெசவு கதை அந்த அலுவலக வாழ்க்கையையும், அந்த டெலிபோன் டோனையும் எவ்வளவு துல்லியமாக சொல்கிறது என்று பாராட்டினார்.மேலாளராக, உயர் பதிவியில் உள்ள யாருக்கும், அ. முத்துலிங்கம் அவர்களின் திகிடசக்கரம் கதை பிடித்துவிடும். தன்னோடு இணைத்துப் பார்க்க வைக்கும். விழாவில் உரையாற்றிய T.K. சந்திரனும் சரி , நான் தொகுத்த நூலுக்கு கட்டுரை கொடுத்த பாரதி பாஸ்கரும் சரி, திகிடசக்கரம் கதையை அனுபவப் பூர்வமாக வாசிப்பனுவத்தை பகிர்கிறார்கள்.
திகிடசக்கரம் கதையை இவர்கள் அலுவலக வேலையுடன் ஒப்பிட்டு பேச, ஜாஜா தனது உரையில் இந்தக் கதையில் வரலாறு, புராணம், அறிவியல் என்று எல்லாம் கதையோடு கதையாக ஊடுபாவாக வருவதை (வலுக்கடடாயமாக திணித்ததுபோல் இல்லாமல்) குறிப்பிட்டு சொன்னார். ‘ஒரு சாதம்’ கதையை எடுத்துக்கொண்டு ஜாஜா அலசி ஆராய்ந்ததை கேட்டதும், இதற்காக அவர் சென்னையிலிருந்து பயணித்து வந்தது சரிதான் என்று நினைத்தேன். முத்துலிங்கம் கதைகள் , முதல் வாசிப்பிற்கு எளியவை போல் தோன்றி வாசகனை ஏமாற்றிவிடும். மீள் வாசிப்பில் அதன் ஆழம் புரியும் என்பதை கலெக்டரும் சொன்னார். ஜாஜாவும் குறிப்பிட்டு பேசினார்.
அருண்மொழி நங்கை அமெரிக்காவில் வான் கோ ஓவியங்கள் பார்த்த அனுபவத்தை சொல்லி தனது ஏற்புரையை ஆரம்பித்தது பொருத்தமாக இருந்தது. அ. முத்துலிங்கம் படைப்புகள் குறித்த கட்டுரைகள் தொகுப்பு நல்ல தொடக்கம் என்று பாராட்டிவிட்டு ,கி.ரா-வின் படைப்புகள் பற்றி ஒரு நூல் வரவேண்டும் என்று இன்னொரு பணிக்கு பிள்ளையார் சுழி போட்டுவிட்டீர்கள்
கி. ரா. விருது – 2022 விருது அறிவிப்பு வந்த நாள் தொடங்கி கடந்த நான்கு மாதங்களாக இந்த நூல்கள் அச்சிடும் வரை ரவிசுப்பிரமணியனுடன் பணியாற்றினேன். அவர் கே.வி. வெங்கட்ராமன் கதைகளை தொகுத்ததை பற்றி நண்பர்கள் கூறக் கேட்டிருக்கிறேன். கட்டுரைகளின் தரத்திற்கும் நூல்களின் வடிவமைப்பிற்கும் அவர் எதிர்பார்ப்பின்படி நிறைவுறச் செய்யும் சமயம் நண்பர்களின் கூற்றை நான் உணர்ந்தேன். அப்பாடா முடிந்தது என்று நினைக்கும் சமயம் , விழா அன்றும் ஒருங்கமைப்பாளர் என்ற பெயரில் சவுக்கை எடுத்துக் கொண்டார்.(அதில் எனக்கு மகிழ்வே).
இந்தப் பணியின் நிமித்தம் விஜயா பதிப்பக உரிமையாளர் வேலாயுதம் அவர்களை அறிந்துகொண்டது இன்னொரு பாக்கியம். தமிழில் நான் அறிந்த எழுத்தாளரெல்லாம் அவர் வீட்டில் இட்லி சாப்பிட்டுவிட்டு இலக்கியம் பேசியிருக்கிறார்கள். ஒரு சிறுகதையின் பெயரையோ நாவலின் பெயரையோ சொன்னால் அதன் சாராம்சத்தை நினைவிலிருந்து மீட்டெடுத்து சொல்கிறார். நூல் வெளியீட்டின்பொழுது அவர் எனக்கு போர்த்தியது இரண்டாவது பொன்னாடை. ஒரு வாரத்திற்கு முன்னர் ஊருக்கு வந்துவிட்டோம் என்று சொல்ல அவர் பதிப்பகத்திற்கு நானும் ராதாவும் சென்றோம். அன்றே எனக்கும் ராதாவிற்கும் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். முழு விழாவையும் சிறப்புற செய்த அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் எனது நன்றிகள். இதனுடன் விழாவின் காணொளியை இணைத்துள்ளேன்.
அன்புடன்,
ஆஸ்டின் சௌந்தர்
ஐந்துநெருப்பும் வெந்து தணிந்த காடும் -கடிதங்கள்
அன்புள்ள ஜெ
வெந்து தணிந்தது காடு எடுக்கப்பட்ட கதை அடங்கிய ஐந்துநெருப்பு தொகுப்பை வாசித்தேன். அற்புதமான கதைகள் கொண்ட தொகுப்பு அது. பலபேருக்கு அந்தக்கதையும், அந்தத் தொகுதியும் தெரியவில்லை. அந்த தொகுப்பிலுள்ள எல்லா கதைகளுமே முக்கியமானவை. குற்றம் என்பதன் மன அடுக்குகளைப் பற்றிச் சொல்பவை. நுணுக்கமான கதைகள். அதிரடிக்கும் காட்சிகள் ஏழாவது போன்ற சிலகதைகளில் இருந்தாலும் அக்கதைகளை கூர்ந்து வாசிக்கவைக்கும் பல சொல்லப்படாத விஷயங்கள் அக்கதைகளிலுள்ளன.
உதாரணமாக சுக்ரர் என்ற கதை. சுக்ரர் என்னும் கதையிலுள்ள அந்த வயதான போலீஸ்காரரின் மனநிலையைப் பற்றி நான் ஆழமாக யோசித்துக்கொண்டிருந்தேன். தன் மொத்த வாழ்க்கையையும் ஒருவர் குற்றவாளிகளை நினைவில் வைத்திருப்பதற்காகச் செலவிடுகிறார். அவர் அசுரகுலத்துக்கு குரு என சரியாகவே கதையில் சொல்லப்பட்டுள்ளது. அவர் எந்தக் குற்றமும் செய்யவில்லை. ஆனால் மானசீகமாக ஒரு குற்றவாளியாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறார். அவர் ரிஷிதான். ஆனால் அசுரர் உலகிலேயே வாழ்கிறார். அருமையான கதை. திகைப்பூட்டும் கதையும்கூட
ராகவேந்திரன்
***
அருமையான ஜெயமோகன்,
ஐந்துநெருப்பு தொகுப்பை வாங்கி வாசித்து முடித்துவிட்டு இதை எழுதுகிறேன். இந்தக் கொரோனாக்காலக் கதைகளை பலரும் இணையத்திலே வாசித்துவிட்டனர். ஆகவே நூல்களை குறைவாகவே வாசிப்பார்கள் என நினைக்கிறேன். நானும் அப்படி வாசித்தவனே. ஆனல் அந்த வாசிப்பு ரேண்டமாக வாசித்தது. அன்றைக்கு கதைகள் மழைபோலக்கொட்டிக்கொண்டிருந்தன. இன்றைக்கு நிதானமாக ஒவ்வொரு கதையாக வாசிக்கவேண்டியிருக்கிறது. அதற்காக அந்தக்கதைகளை அச்சில் வாசிக்க விரும்பினேன். இப்போதுதான் இந்தக்கதைகள் தொகுக்கப்பட்டிருக்கும் விதம் ஆச்சரியப்படுத்துகிறது. ஏறத்தாழ ஒரே தீம் கொண்ட கதைகள் ஒரே நூலாக உள்ளன. அந்த ஒரே தீம் ஒவ்வொரு சிறுகதைத் தொகுப்பையும் ஒரு வகையான நாவல் அனுபவம்போல ஆக்கிவிடுகிறது. ஏழாவது கதையையும் ஐந்து நெருப்பு கதையையும் சுக்ரர் கதையையும் பக்கம் பக்கமாக வைத்து வாசித்தால் குற்றம் என்பது என்ன என்ற மாபெரும் கேள்வி வந்து நம் முன் நிற்கிறது.
ரா. முகில்ராஜன்
ஆதித்த கரிகாலன் கொலை வழக்கு நாவல் வெளியீட்டு விழா
சி.சரவணக் கார்த்திகேயன் எழுதிய ஆதித்தகரிகாலன் கொலைவழக்கு நாவல் வெளியீட்டு விழா வரும் 29 அக்டோபர் 2022 அன்று சென்னை கவிக்கோ அரங்கில் நிகழ்கிறது. ரமேஷ் வைத்யா, ஜா.தீபா ஆகியோருடன் நானும் பேசுகிறேன். அன்று சென்னையில் பல இலக்கியவிழாக்கள் நடைபெறுவதாகத் தெரிகிறது. நம் நண்பர்கள் பலர் அவற்றில் பேசுகிறார்கள். ஆர்வமுள்ளவர்கள் இங்கு வரலாம்
ஜெ
ஒரிசா, பெண்களின் பயணம். ஓர் அறிவிப்பு
சிலிகா ஏரிஇனிய ஜெ,
இந்தியப் பயணம், குகைகளின் வழியே, சமணர்களின் பாதை, கதிரவனின் தேர் ஆகிய நூல்கள் அளித்தஊக்கத்தில் மகளிர் மட்டும் செல்லும் ஓர் ஒரிஸா பயணத்திற்குத் திட்டமிட்டுள்ளோம்.
5 பெண்கள் அடங்கிய குழு நவம்பர் 11ஆம் தேதி சென்னையிலிருந்து கிளம்பி 10 நாட்கள் கீழ்க்காணும்இடங்களுக்குச் செல்கிறோம்.
புவனேஷ்வர், பூரி, கட்டாக், கொனார்க்கில் உள்ள ஆலயங்கள் மற்றும் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்தஇடங்களுக்குச் செல்வது திட்டம். சென்னையிலிருந்து புவனேஸ்வர் வரை விமானம், பிறகு அங்கிருந்து காரில்இடங்களைச் சென்று பார்க்க இருக்கிறோம்.
தற்போது செல்வராணி, திருக்குறள் அரசி, ஜோசஃபின் ஆகியோர் பயணத்துக்குத் தயாராக இருக்கிறோம். இன்னும் இரண்டு பெண்களுக்கு இடம் இருக்கிறது. விருப்பமுள்ளவர்கள் எங்களை 9080562289 எனும்எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
மிக்க அன்புடன்,
திருக்குறள் அரசி
October 25, 2022
இந்து மதம், இந்திய தேசியம்
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,
வணக்கம்.
தங்களின் “இந்து மதம் என ஒன்று உண்டா?” பதிவை வாசித்தேன்.
இரண்டுவகை மதங்கள்
1) இயற்கைமதங்கள் : இயற்கையாக வரலாற்றுப்போக்கில் திரண்டு வந்த மதங்கள்
2) தீர்க்கதரிசன மதங்கள் : ஏதேனும் தீர்க்கதரிசிகள் அல்லது ஞானிகளிடமிருந்து தோன்றிய மதங்கள்.
உங்கள் பதிவு, மதங்கள் குறித்த தெளிவான விளக்கம் எனக்கு கொடுத்தது.
இந்து மதம் குரு வழிபாட்டையும் ஏற்று கொண்டிருக்கிறது. ஆகையால் ஒரு இந்து தீர்க்கதரிசிகள் அல்லது ஞானிகளையும் ஏற்று கொள்ள தடை இல்லை என்று நினைக்கிறன். இது சரியா ?
எளிய இந்து மக்கள், அவ்வாறு ஏற்று கொண்டு வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கும், நாகூர் தர்காவிற்கும் சென்று வருகின்றனர்.
மதம் (religion) குறித்து உண்மையான புரிதல் இல்லாமல் அரசியல் ஒன்று திரட்டலுக்காக மற்ற மதத்தினர் மீது வன்மம் வளர்ப்பது சமீபத்தில் அதிகரித்துள்ளது.
’ஐரோப்பியர் சொல்லும் religion என்பது நவீனக்கருத்து’ என்கிறீர்கள்.
மதம் (religion) போலவே இந்தியாவில் ஐரோப்பியர் சொன்ன தேசம் -அதிகார அமைப்பை ( nation-state ) நோக்கி சென்று கொண்டிருக்கிறோம் என்று கருதுகிறேன். ஐரோப்பியர்களே தற்போது தேசம் -அதிகார அமைப்பை ( nation-state ) விட்டு ஐரோப்பிய ஒன்றியம் நோக்கி நகர்ந்து விட்டனர். அது போல வருங்காலத்தில் ஒரு சர்வதேச ஒன்றியம் உருவாகலாம்.
தயவு செய்து தாங்கள் தேசம் -அதிகார அமைப்பை ( nation-state ) பற்றி தெளிவு படுத்த வேண்டுகிறேன்.
மிக்க நன்றி
அன்புடன்
சந்தானம்
அன்புள்ள சந்தானம்,
இக்கேள்விகளுக்கான பதில்கலையும் வெவ்வேறு சந்தர்ப்பங்களில் விரிவாகச் சொல்லியிருப்பேன் என நினைக்கிறேன். ஆயினும் இந்த விவாதத்தின் ஒரு பகுதியாக மீண்டும் சொல்கிறேன்.
இந்துமதத்தின் இரண்டு அம்சங்கள் பிற தரிசனங்களையும், பிற வழிபாட்டு முறைகளையும் ஏற்க உதவும் அடிப்படைகளாக உள்ளன. ஒன்று, பிரம்மம் என்னும் தத்துவ வடிவமான தெய்வ உருவகம். இரண்டு குருவழிபாடு.
பிரம்மம் என்னும் உருவற்ற, விளக்கத்த்திற்கெல்லாம் அப்பாற்பட்ட, எந்த வகையிலும் வகுத்துரைக்க முடியாத ஒரு கருத்துருவ தெய்வமே இந்து மரபின் மையம். அது இப்பிரபஞ்சமாக ஆகி நிற்பது, இப்பிரபஞ்சத்தின் முதல்வடிவமாக நிலைகொள்வது, இப்பிரபஞ்சத்தின் சாரமாகவும் இருப்பது. அது எந்த மதத்திற்கும், எந்த ஞானிக்கும், எந்த நிலத்திற்கும், எந்த சமூகத்திற்கும் உரிமையானது அல்ல. எல்லா ஞானியரும் பிரபஞ்ச சாரமாக உணர்வது அதையே. எல்லா சாமானியரும் ஏதேனும் ஒரு கணத்திலேனும் அதை உணர்ந்திருப்பார்கள்.
ஆகவே, எல்லாவகையான பிரபஞ்ச சாரம் பற்றிய தரிசனங்களும் பிரம்மத்தை உணர்வதுதான். எல்லா தெய்வங்களும் பிரம்மத்தின் வடிவங்களே. ஆறுகள் எல்லாமே கடலில் சென்றே சேரவேண்டும் என்பதைப்போல எல்லா அறிதல்களும் அதைப்பற்றிய அறிதல்களே என சாந்தோக்ய உபநிடதம் சொல்கிறது.
ஆகவே ஓர் இந்துவுக்கு கிறிஸ்து, அல்லா என எந்த தெய்வத்தை ஏற்பதும் பிழையல்ல. எதற்கும் தடையோ விலக்கோ இல்லை. அப்படிச் சொல்ல இங்கே எந்த அதிகார மேலிடமும் இல்லை. இந்து என உணர்பவர் சென்றகாலத்தில் பௌத்த, சமண ஆலயங்களுக்குச் சென்று வழிபட்டிருக்கிறார்கள் என்பதற்கு ஏராளமான நூலாதாரங்கள் உள்ளன. (சிலப்பதிகாரம் உட்பட)
இந்து என உணர்பவர் மாதாகோயிலுக்குச் செல்லலாம். மசூதிக்கும் செல்லலாம். நான் செல்வதுண்டு, வழிபடுவதும் உண்டு. தொடர்ச்சியாக பல ஆண்டுகளாக. நாராயண குருகுலம், ராமகிருஷ்ண மடம் போன்ற வேதாந்த குருகுலங்களில் எல்லா மதப்பிரார்த்தனைகளும் ஒலிப்பதுண்டு.
இந்து மதம் என நாம் இன்று அழைக்கும் இந்த மரபுக்குள் பல சம்பிரதாயங்கள் உண்டு. வைணவர்களின் ஸ்ரீசம்பிரதாயம் போல. அவர்கள் அந்தச் சம்பிரதாயத்திற்குரிய நெறிகளை, விலக்குகளை கடைப்பிடிக்கிறார்கள். அவர்களுக்கு ஆசாரியார்கள் எனப்படும் தலைமைக்குருநாதர்களும், நிர்வாக அமைப்புகளும் உள்ளன. அவர்களின் வழி இதற்குள் தனி. ஆனால் அப்படி ஏதேனும் சம்பிரதாயத்தைக் கடைப்பிடிப்பவர்கள் இந்துக்களில் அரைசதவீதம்பேர்கூட இருக்க வாய்ப்பில்லை.
எல்லா மெய்ஞானமும் பிரம்மஞானமே என்றால் எல்லா ஞானியரும் மெய்யாசிரியர்களே. ஆகவே குருவழிபாடு இந்துக்களுக்கு முக்கியமானது. கபீரும் ஷிர்டி சாய்பாபாவும் குருதெய்வங்களாக ஆனது அப்படித்தான். ஆகவே ஓர் இந்து சூஃபிகளை வணங்கலாம். நான் சவேரியார் ஆலயத்திற்கும் செல்வதுண்டு. சூஃபி தர்காக்களுக்கும் செல்வதுண்டு.
இவற்றை கட்டுப்படுத்தவும், தண்டிக்கவும் இன்றுவரை எந்த தலைமையமைப்பும் இல்லை. அவ்வாறு ஒன்றை உருவாக்கி கட்டுப்பாடுகளை விதிக்க ஆரம்பிக்கையில் இந்துமதம் அழியத் தொடங்கும். நாம் – பிறர் என்னும் பேதம் இந்துக்களுக்கு சமூகவாழ்க்கையில் இருக்கலாம், அது மனித சுபாவம், அதை தவிர்ப்பது கடினம். ஆனால் அதைக் கடக்காமல் இந்துமெய்மையை இந்துக்கள் சென்றடைய முடியாது.
நாம் – பிறர் என்னும் இரட்டைநிலையை, அதன் விளைவான காழ்ப்பை உருவாக்கிக் கொண்டே இருக்கும் அரசியல்வாதிகள் இந்துக்களின் ஆன்மிகப்பயணத்திற்கு தடையானவர்கள். இந்துக்கள் இன்று கடந்தேயாகவேண்டிய ஆன்மிகப்பெருந்தடை இந்த பிளவரசியலும் காழ்ப்புகளும்தான்.
ஆனால் இன்று இதை இந்து அரசியல்நோக்கிச் செல்லும் பெரும்பான்மையிடமும் சொல்லமுடியாது. மறுபக்கம் இந்துமெய்மையை ஒட்டுமொத்தமாகத் துறக்காதவர்கள் அனைவருமே இந்துத்துவர்கள் என்று கூச்சலிடும் இங்குள்ள அரைவேக்காட்டு முற்போக்காளர்களிடமும்
சொல்லமுடியாது. இந்துக்களை இந்துத்துவர்களாக ஆக்க பெரும்பாடுபடுபவர்கள் இரண்டாம் வகையினரே.
என் குரல் சிலரையே சென்றடைகிறது. இங்குள்ள இருமுனைப்பட்ட காழ்ப்புகளால் அது திரிக்கப்படுகிறது. ஆயினும் இங்கே ஒருவன் இதை நா ஓயாமல் சொல்லிக்கொண்டிருந்தான் என்றாவது இருக்கட்டும் என்றே இதை பதிவுசெய்கிறேன்.
*
மதம் என்பதைப் போலவே நவீனத் தேசம் என்னும் கருத்தும் ஐரோப்பிய வருகையே. ஆனால் ஐரோப்பியக் கருத்துக்களை வடிகட்டி விலக்கிவிட்டு நாம் இன்று சிந்திக்க முடியாது. நாம் இன்று புழங்கும் கருத்துக்களில் கணிசமானவை ஐரோப்பா நமக்களித்தவை.
இக்கருத்துக்களை நாம் பயன்படுத்தும்போது இரண்டு விஷயங்களை மட்டுமே கருத்தில் கொள்ளவேண்டும்
அ. அக்கருத்தின் ஐரோப்பிய அர்த்தத்தில் அக்கருத்து உருவாவதற்கு முன்பிருருந்த சிந்தனைகளையும், வரலாற்றையும் வகுத்துவிடக்கூடாது. உதாரணமாக மதம் என்னும் சொல் மேலைநாட்டுப்பொருளில் religion என்ற வகையில் இங்கே வந்து முந்நூறாண்டுகளே ஆகின்றன. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இங்கே எவையெல்லாம் மதம் என்று சொல்லப்பட்டனவோ அவற்றை எல்லாம் இன்றையபொருளில் religion என்று அர்த்தம்கொள்வது பிழையானது. அந்த எச்சரிக்கை நமக்கு வேண்டும்.
ஆ. ஒர் ஐரோப்பியக் கருத்தை நாம் கையாளும்போது அதன் ஐரோப்பிய வரலாற்றுப்பின்னணியை, தத்துவப்பின்னணியை விலக்கி இந்தியச் சூழலில் அது தனக்கென உருவாக்கிக்கொண்ட அர்த்தங்களுடன் கையாளலாம். அந்த பிரக்ஞை இருந்தால்போதுமானது. மதம், தேசம், தெய்வம், தனிமனிதன் என நாம் இன்று பயன்படுத்தும் பெரும்பாலான கலைச்சொற்களுக்கான அர்த்தங்களை இப்படித்தான் நாம் வகுத்துக்கொள்ளவேண்டும்.
இந்த அடிப்படையில் மதம் என்னும் சொல்லை நாம் இன்று பயன்படுத்தலாம். இந்து மதம் என்று சொல்லலாம். ஆனால் ஐரோப்பியப்பொருளில் அல்ல. ஐரோப்பியப்பொருளில் மதம் என்பது
அ. தெளிவாக வரையறை செய்யப்பட்ட தெய்வங்கள்
ஆ. மையப்படுத்தப்பட்ட தத்துவம்
இ. மூலநூல், அல்லது மூலநூல் தொகை
ஈ. மத அதிகாரம் கொண்ட அமைப்பு
உ. தெளிவாக வரையறை செய்யப்பட்ட வழிபாட்டுமுறைகள் மற்றும் ஆசாரங்கள்
ஆகியவை கொண்டதாக இருக்கும். அந்த நான்குமே இந்துமதம் என நாம் சொல்லும் அமைப்புக்கு இல்லை. நாம் இன்று இது மதம் என்று சொல்வது நேற்றுவரை தர்மம் என்று சொல்லப்பட்ட ஒரு மெய்ஞானப் பரப்பு. அதற்குள் பல மெய்ஞான வழிகள் உண்டு என்னும் புரிதல் நமக்கிருக்கவேண்டும்.
அதேதான் தேசம் என்னும் கருத்துருவிற்கும். நான் ஐரோப்பா பதினாறாம் நூற்றாண்டுமுதல் உருவாக்கி வந்த ‘பண்பட்டு அடிப்படையிலான தேசியம்’ என்னும் கருத்தை ஏற்றுக்கொள்பவன் அல்ல. அதை முப்பதாண்டுகளாக திரும்பத் திரும்பச் சொல்லி வருகிறேன். பண்பாடு என்னும்போது மதம், மொழி, இனம் ஆகிய அனைத்தையும்தான் குறிப்பிடுகிறேன்.
பண்பாட்டுத் தேசியம் ஒரு குறிப்பிட்ட மக்களை ஒரு நிலத்தின்மேல் அறுதி உரிமை கொண்டவர்கள் ஆக்குகிறது. எஞ்சியவர்களை சிறுபான்மையினர் ஆக்குகிறது. எந்நிலையிலும் நிலமற்றவர்களாக அவர்களை மாற்றுகிறது. அதுவே ஃபாஸிசம்.
அதாவது நான் தேசம் என்பது ‘உயிருள்ள’ ஓர் அமைப்பு இயல்பான ஓர் அமைப்பு (organic) என நம்பவில்லை. இந்தியா ஒன்றாகத்தான் இருக்கமுடியும் என்றோ தமிழகம் ஒன்றாகத்தான் இருக்கமுடியும் என்றோ நினைக்கவில்லை. தேசம் என்பது ஒரு நிலப்பகுதியின் மக்கள் ஒரே நிர்வாகத்தின்கீழ் இருக்கலாம் என அவர்களே முடிவெடுத்து உருவாக்கிக்கொள்ளும் ஓர் அமைப்பு மட்டுமே.
அவ்வாறு அவர்கள் முடிவெடுக்க காரணமாக அமைவது நிலப்பகுதியின் வாய்ப்புகளாக இருக்கலாம். வரலாற்றுக் காரணங்கள் இருக்கலாம். பொருளியல் காரணங்கள் இருக்கலாம். ஆனால் அந்த தேச அமைப்பின் கீழ் அதன் ஒவ்வொரு கூறும் வளர்ச்சிபெறவேண்டும். எதுவும் அழுத்தி அழிக்கப்படலாகாது.
இந்தியா ஏன் ஒன்றாக இருக்கவேண்டும்? அதற்கான வரலாற்றுக்காரணம் ஒன்றை பலகாலமாகச் சொல்லிவருகிறேன். இந்த நாடு வணிகத்தாலும், போராலும் நிகழ்ந்த மக்கள்பெயர்வுகளால் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக ஒன்றாகக் கலக்கப்பட்டுவிட்டது. இங்கே எல்லா நிலப்பகுதிகளிலும் எல்லாரும் வாழ்கிறார்கள். மொழி, இன, மத அடிப்படையிலான மக்கள்திரள் கலந்து வாழ்கிறது இங்கே.
ஆகவே இந்த தேசம் ஒன்றகாவே திகழமுடியும். இதில் எந்தப் பிரிவினைவாதமும் பேரழிவையே உருவாக்கும். அதற்குச் சமகாலத்தில் பெரிய சான்று கஷ்மீரும் வடகிழக்கும்தான். தனித்தேசியம் பேசுபவர்கள் அனைவருமே குறுகிய மொழித்தேசியமோ, இனத்தேசியமோதான் கொண்டிருக்கிறார்கள். அவை எல்லாமே முதிரா ஃபாசிசங்கள்தான்.
ஆனால் , இந்தியதேசம் என்பது அதுவே ஒரு மூர்க்கமான ஃபாஸிச அமைப்பாக ஆகி, அதன் உட்கூறுகளை எல்லாம் சிதைக்கும்தன்மை கொண்டிருக்கும் என்றால் இந்தியதேசியம் என்பதை மறுப்பதும் இயல்பானது என்றே கருதுவேன்.
ஜெ
கு.ப.ராஜகோபாலன்
தமிழ் இலக்கிய முன்னோடிகளைப் பற்றி எவ்வளவு குறைவான தரவுகள் கிடைக்கின்றன என்பது போல திகைப்பூட்டுவது வேறொன்றில்லை. பெரும்பாலானவர்களைப் பற்றி மேலோட்டமான அனுபவக்குறிப்புகளில் வரும் செய்திகளே உள்ளன. சாகித்ய அக்காதமி முதலிய அமைப்புகள் வெளியிடும் வாழ்க்கைவரலாற்று நூல்களிலேயே ஒரேயொரு அத்தியாயம் அளவுக்கு, சுருக்கமான செய்திகள் மட்டுமே இருக்கின்றன. எஞ்சியவை முழுக்க கதைகள் பற்றிய ஆய்வுகள்தான்.
தேடித்தேடிச் சேகரித்த இச்செய்திகளுடன் இணையும் தொடுப்புகள் வழியாக ஓரளவு அக்கால இலக்கியச் சூழலையும், அதில் கு.ப.ராவின் இடத்தையும் ஒருங்கிணைத்துக்கொள்ள முடியும்
கு.ப.ராஜகோபாலன்அரையர் சேவை, கடிதம்
அன்புள்ள ஜெ
தங்களின் “அரையர் சேவை” தமிழ் விக்கி பதிவைக் கண்டேன். அதற்கு தங்கள் எழுதிய குறிப்புரையில் உள்ள அனுபவம் எனக்கும் ஏற்பட்டது.அதன் காரணமாகவே தொடர்ந்து அரையர் சேவை காண ஸ்ரீரங்கம் சென்றுகொண்டிருக்கிறேன். பகல்பத்து, இராப்பத்து காலங்களில் அபிநயம் வியாக்யானத்துடன் நடைபெறும் அரையர் சேவை மற்ற உற்சவ காலங்களில் அபிநயம் வியாக்கியானம் இன்றி தாளத்துடன் பிரபந்த பாடல்களை நிறுத்தி நிதானமாக பாடுவதாய் அமையும். சித்திரை மாதம் நடைபெறும் உள்கோடை உற்சவத்தின் 5 நாட்களும் தினம் இருபது பாடல்கள் வீதம் பெருமாள் திருமொழி பாசுரங்களை இசைப்பார்கள். அவ்வுற்சவம் கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள மண்டபத்தில் நடைபெறுகிறது. அப்பிரகாரம் குலசேகரன் திருச்சுற்று என குலசேகராழ்வார் பெயரில் வழங்கப்பெறுவதால் அவர் இயற்றிய பாசுரங்கள் இசைக்கப்படுகின்றன
இதே போல் ஊஞ்சல் உற்சவத்தின் போது தாலாட்டு வடிவில் உள்ள பெரியாழ்வாரின் “மாணிக்கங்கட்டி” பாசுரங்களும் குலசேகராழ்வாரின் “மன்னு புகழ் கௌசலைதன்” பாசுரங்களும், ஸ்ரீகிருஷ்ண ஜெயந்தி திருமஞ்சனத்தின் போது கண்ணனின் பிறப்பு முதல் அனைத்தையும் பேசும் பெரியாழ்வார் திருமொழியும் ரேவதி திருமஞ்சனங்களின் போது தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் திருமாலையும் அரையர்களால் தாளத்துடன் உற்சவ மூர்த்தியின் முன் இசைக்கப்படுகிறது.
முதலில் ஸ்தானிகரால் “கோயிலுடைய பெருமாளரையர் ” என்றோ, வரந்தரும் பெருமாளரையர்” என்றோ, “மதியாத தெய்வங்கள் மணவாளப் பெருமாளரையர் என்றோ அல்லது “நாத வினோத அரையர்” என்றோ வெகு கம்பீரமாக அருளப்பாடு ஆகும். அரையர் “நாயிந்தே! நாயிந்தே!!” என்றபடி உற்சவ மூர்த்தியிடம் சென்று இறைவன் சூடிக்களைந்த ஆடையை பரிவட்டமாக கட்டி மாலையை ஏற்றுக்கொண்டு தீர்த்தம் சடாரி ஆனவுடன் தன்னுடைய இடத்தில் வந்து நிற்பார். மீண்டும் “அருளப்பாடு விண்ணப்பம் செய்வார்” என ஸ்தானிகர் முழங்கியதும் தாளமிசைத்து கொண்டாட்டம் சொல்ல ஆரம்பிப்பபார்.
இந்த அரையர் கொண்டாட்டம் என்பது ஒரு மன்னரை கட்டியக்காரன் புகழ்ந்து சொல்வதைப்போல ஸ்ரீரங்கநாதரின் பெருமைகளை அரையர்கள் நீண்டி முழக்கி சொல்வதாகும்.
உதாரணமாக பகல்பத்தின் முந்தைய தினம் திருநெடுந்தாண்டகத்துடன் உற்சவம் ஆரம்பமாகும்போது அரையர் கொண்டாட்டத்துடன் இவ்வாறு ஆரம்பிப்பார்
“பொங்குசீர் வசனபூடணமீந்த உலகாரியன் போற்றிடத் திகழும் பெருமாள்”
“போதமணவாள மாமுனி ஈடுரைப்பது கேட்டுப் பூரித்து நின்ற பெருமாள்”
இதில் முதலாவதாக குறிக்கப்படுபவர் ஸ்ரீவசனபூஷணம் என்ற நூலை இயற்றிய பிள்ளைலோகாச்சாரியர். தனது முதுமை வயதைப் பொருட்படுத்தாமல் படையெடுப்பின்போது உற்சவர் விக்ரகத்தை காப்பாற்றி அழகர் கோவில்வரை கொண்டு சென்றதால் முதன்மையாக ஆரம்பிக்கும்போதே நினைகூறப்படுகிறார். ஒருவருடம் அனைத்து உற்சவங்களையும் நிறுத்திவைத்து மணவாளமாமுனிகள் திருவாய்மொழிக்கு பொருள் சொன்னதை உற்சவர் பூரித்து கேட்ட வைபவம் இரண்டாவது கொண்டாட்டத்தால் சுட்டப்படுகிறது
ஏராளமான ராமாயண மகாபாரத நிகழ்வுகள்,ஆழ்வார் ஆச்சார்யர்களின் பெருமைகள், திருவரங்கத்து பெருமைகள் இந்த அரையர் கொண்டாட்டத்தின் போது கூறப்படுகின்றன.
உதாரணமாக
“பாஞ்சாலி குழல் முடித்து பரிபவம் தீர்த்த பெருமாள்
தடிபெற்ற கீர்த்தியால் கொடி பெற்ற ராவணன் முடி பத்து அறுத்த பெருமாள்
நலங்கொண்ட தோள் அசுரர் குலங்கொண்டு மாய்ந்திட பலங்கொண்டு எழுந்த பெருமாள்
சாய்த்ததொடு மரத்தினொடு தோய்த்த நறு தயிருண்டு பசுமேய்த்து அவனிகாத்த பெருமாள்
பஞ்சவர் தூதனாய் பாரதம் கைசெய்த பெருமாள்
ஆபரணங்களுக்கு அழகு சேர்க்கும் பெருமாள்
ஏழு மதில் சூழ் கோவிலுடைய பெருமாள்
ஏழ்பிறவித் துயர் அறுக்கும் பெருமாள்
ஏழைக்கு இரங்கும் பெருமாள்
ஏழிசையின் பயனான பெருமாள் “
இவ்வாறு பிரபந்த பாசுரங்களை பாடுவதற்கு முன்னரும் பின்னரும் அரையர் கொண்டாட்டம் சொல்லப்படுகிறது
நாலாயிர திவ்யபிரபந்தத்தில் ஒருவொரு ஆழ்வார்களின் பாடல்களுக்கு முன்பும் தனியன் எனப்படும் சுலோகங்கள் தமிழிலும் சமஸ்கிருதத்திலும் உள்ளன. அவற்றை அரையர்கள் பாடுவதில்லை. அதற்க்கு பதிலாக அரையர் கொண்டாட்டம் சொல்லப்படுகிறது. கிட்டத்தட்ட ஆயிரம் ஆண்டுகளாக நிகழ்ந்துவரும் இக்கலை முழுக்க முழுக்க தமிழுக்கானது. தமிழ் பாசுரங்களை ஏற்றம் பெறச்செய்வதாக அமைந்தது. இப்பாசுரங்களை பாடும் அரையர்களுக்கு இராப்பத்து உற்சவ கடைசியில் பிரம்மரத மரியாதை அளிக்கப்படுகிறது
இந்த அரையர் சேவையைப்போன்றே ஸ்ரீரங்கம் கோவிலில் நடைமுறையில் உள்ள மற்றொரு இசையுடன் இணைந்த கலைவடிவம் ” வீணை ஏகாந்தம்”
வீணை ஏகாந்தம்
கொஞ்சம் கலையார்வம் உள்ளவர்கள் “அரையர் சேவை” பற்றி கேள்விப்பட்டிருக்கலாம்.ஆனாலும் பெரும்பாலானவர்களுக்கு தெரியாத ஒரு கோவில் சார்ந்த இசைமரபு ஸ்ரீரங்கத்தில் நடைபெறும் வீணைஏகாந்தம்.
இது சித்திரையில் பூச்சாத்தி உற்சவத்தின் ஆறாம்நாள் தொடங்கி ஒன்பதாம் நாள் வரையிலும் (உள்கோடைதிருநாள்) வைகுண்ட ஏகாதசியிலிருந்து ஒன்பது நாட்களும் (இராப்பத்து) நடைபெறும். இந்நிகழ்ச்சியானது ஸ்ரீரங்கம்கோவில் உற்சவரான நம்பெருமாள் மண்டபத்திலிருந்து இரவு மூலஸ்தானத்திற்கு எழுந்தருளும்போது தங்கக் கொடிமரம் தாண்டி நாழிகை கேட்டான் வாசல் கடந்தவுடன் தொடங்கும்.
பெருமாள் வாசல்கடந்து மேற்குமுகமாக திரும்பியது வீணை வாசிப்பவர்கள் ஐந்துபேர் பெருமாளைப் பார்த்தபடி வந்து நின்றபடியே வாசிக்க ஆரம்பிப்பர்.ஆம் நாம் பார்த்த வீணைக்கலைஞர்கள் அனைவருமே அமர்ந்தபடிதான் வாசிப்பார்கள் அதுதான் வசதியும் கூட. ஆனால் இங்கே வீணையை நிறுத்திய வாக்கில் தோளில் கட்டிக்கொண்டு நின்றபடிதான் வாசிப்பார்கள்.
அங்கு முதலில் வீணையில் நீலாம்பரி,நாட்டை,கௌளை,ஆரபி,ஸ்ரீ ஆகிய ராகங்களில் ராகமாலிகையாக தானம் வாசிப்பார்கள்.அதைத்தொடர்ந்து பெருமாள் ஓர் நான்கு அடி முன்னேறுவார். அங்கு ஒரு கீர்த்தனை பாடியபடியே வாசிக்கப்படும். அந்த கீர்த்தனை கன்னடத்தில் புரந்தரதாசருடையதாகவோ, தெலுங்கில் தியாகராஜர் அல்லது ராமதாசருடையதாகவோ இருக்கும். அல்லது சமஸ்கிருதத்தில் முத்துஸ்வாமி தீட்ஷிதருடையது அல்லது ஆதிசங்கரர் இயற்றிய ரங்கநாதஷ்டகமாக இருக்கும்.அல்லது தமிழ் பாடலாக இருக்கும். இதில்குறிப்பிடத்தகுந்த விசயம் எந்த கீர்த்தனையாக இருந்தாலும் முழுமையாக பாடியபடியே வாசிப்பார்கள்.
மேடைக்கச்சேரிகளில் பெரும்பாலும் பெரியகீர்த்னைகளில் முதல் மற்றும் கடைசி சரணங்களைத்தான் பாடுவார்கள். ஆனால் இங்கு முழுமையாக வாசித்து பாடுவார்கள்.”ஏன் பள்ளி கொண்டீரைய்யா “என்ற அருணாச்சல கவிராயரின் பாடல் ,அது மேடைக்கச்சேரிகளில் முதல் பத்தி மட்டும்தான் பாடுவார்கள். அருணா சாய்ராம் மட்டும் இரண்டு பத்திகள் பாடுவார் ஆனால் பாடல் மூன்று பத்திகளை கொண்டபெரியபாடல். அவை அனைத்தையும் முழுமையாக இங்கு பாடக்கேட்டிருக்கிறேன்.
இந்த கீர்த்தனை முடிந்தவுடன் பெருமாள் வடக்குப்புறமாக திரும்பி நான்கு அடி முன்னேறுவார். அங்கு திவ்யபிரபந்தத்திலிருந்து பாரங்களை வீணை இசைத்துக்கொண்டே பாடுவார்கள். பெரும்பாலும் தொண்டரடிப்பொடியாழ்வார்,திருப்பாணாழ்வார்,நம்மாழ்வார்,திருமங்கையாழ்வார்,குலசேகராழ்வார்,ஆண்டாள் பாசுரங்களாக இருக்கும். குறைந்தது பத்துமுதல் பதினைந்து பாசுரங்கள் வீணை இசையுடன் பாடப்படும்.
இதைத்தொடந்து சிறிது முன்னகர்ந்து மூலஸ்த்தானம் செல்லும் படிகளை நோக்கி கிழக்குப்பக்கமாக திரும்பிநிற்பார். இதுவரை பெருமாளுக்கு நேராக எதிர்ப்புறம் நின்று வாசித்த வீணைக்கலைஞர்கள் தெற்கு நோக்கி படிக்கு ஒருவராக பக்கவாற்றில் நின்றவாறு யதுகுல காம்போதி ராகத்தில் “எச்சரிக சதன” என்ற கீர்த்தனையை பாடிக்கொண்டே வாசிப்பார்கள். அப்போது பெருமாளை தோளில்தாங்கிய ஸ்ரீபாதம்தாங்கிகள் தோளுக்கினியானை(பெருமாள் உள்ள சப்பரம்) வலப்புறமும் இடப்புறமும் ஊஞ்சல் போல் அசைத்துக்கொண்டே ஒவ்வொருபடியாக முன்னேறுவார்கள்
அவ்வாறு முன்னேறும் போது சாத்தாத ஸ்ரீவைஷ்ணவர் நம்பெருமாள் மீது பச்சைக்கற்பூரம் கலந்த மலர்களை மூன்று முறை தூவுவார். சரியாக வீணையுடன் பாடல் நிறைவுபெறும்போது பெருமாள் மூலஸ்தானத்திற்குள் சென்றிருப்பார்.இந்த இரு உற்சவங்களின் கடைசிநாளன்று வீணைக் கலைஞர்களுக்கு பெருமாள் மரியாதை செய்வார். இந்த வீணை ஏகாந்தத்தை நம்பெருமாளுக்கு மிக அருகிருந்து பொதுமக்களும் காணலாம் என்பது கூடுதல் சிறப்பு
கோவில் சார்ந்த இக்கலை வடிவங்களை பற்றி தங்களுடன் பகிர்ந்துகொள்ள வாய்ப்பு கிடைத்ததற்க்கு நன்றி
அன்புடன்
பார்த்திபன்
காந்தியை கண்டடைதல் – சிவராஜ்
அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,
சில நாட்களின் நினைவுகளை மனது எச்சிறு பிசிறுமின்றி துல்லியமாக ஞாபகம் வைத்துக்கொள்ளும். அவ்வகையில், ‘இன்றைய காந்தி‘ கட்டுரைகள் தொடர்ந்து உங்களது இணையதளத்தில் வெளியாகியதும்; அவை தொகுக்கப்பட்டு உரிய தலைப்புகளுடன் நூலாகத் உருமாற்றம் பெற்றதுமான காலகட்டங்கள் எனக்கு நினைவிலுண்டு. ஏனெனில், அந்தக் காலகட்டத்தில் காந்தியின் மீது என் தனிப்பட்ட உள்ளுணர்வு சார்ந்த ஆத்மார்த்தமான நேசிப்பு மட்டுந்தான் என்னுள்ளிருந்தது.
காந்தியை எதிர்மறையாக விமர்சிக்கும் தரப்புகளிடமிருந்து எழுகிற அவதூறுகளுக்கும், வரலாற்றுக் கேள்விகளுக்கும் எத்தகைய தெளிந்த பதில்களையும் முன்வைக்க முடியாமல் ஒருவகை அகச்சோர்வு உண்டாகியிருந்து காலம் அது. அந்நிலையில், ‘இன்றைய காந்தி‘ கட்டுரைகள் காந்தி எனும் வரலாற்று நிகழ்வின் வாழ்வியல் பின்புலத்தை, ஒவ்வொரு முடிவுகளின் பின்னார்ந்த தரவுகளை அகத்துக்கு அணுக்கமானதொரு மொழிநடையில் எனக்குணர்த்தியது. தேடித்தேடி கடைசியில் ஓர் உண்மையான பதிலைக் கண்டடைந்த நிறைவை அப்புத்தகம் எனக்கு வழங்கியது.
‘இன்றைய காந்தி‘ நூலின் கட்டுரைகளை வாசிக்கையில், பல நேரங்களில் வாசிப்பை நிறுத்திவிட்டு ஒருவித நடுக்கவுணர்வில் நான் தத்தளித்திருக்கிறேன். ஒரு மனிதன் எத்தனைச் சூழ்நிலைச் சவால்களைக் கடந்து எவ்வித அகந்தையுமின்றி ஆத்மப்பாதையின் சிற்றொளியோடு இத்தேசத்தின் அத்தனை உயிருக்காகவும் யோசித்திருக்க முடியும் என்பதே என்னை வியப்பில் ஆழ்த்தியது. வெறுமனே தரவுக்குறிப்புகளாக இல்லாமல் காந்தியின் அகம் அதனை எவ்வாறு அணுகியது என்கிற சூழ்நிலையையும் அதில் நீங்கள் விளக்கியிருந்தீர்கள்.
சமகால இளைய தலைமுறையினர் காந்தியை புரிந்துகொள்வதற்கும், இயன்றவர்கள் அவரின் தத்துவத்தைப் பின்தொடர்வதற்கும், தர்க்க வினாக்களைக் கடந்து ஆழ்ந்த ஏற்பை அடைவதற்கும் பெருங்காரணமாக உங்களது சொல் துணையமைந்தது. வசைகளின் குவியல்களில் காந்தியின் வரலாற்றுப் பங்களிப்பு அமிழ்ந்துவிடமால் உங்கள் கட்டுரைகள் அவரைத் துல்லியமாக நிலைநிறுத்தம் செய்தது எனலாம்.
அத்தகையக் கட்டுரைகளின் தொடர்ச்சியை அச்சில் நீட்சிக்கவே, ‘உரையாடும் காந்தி‘ நூலை தன்னறம் பதிப்பகம் வழியாக வெளியிட்டோம். இன்றைய காந்தி நூலுக்கு அடுத்தபடியாக உரையாடும் காந்தி நூலும் நிறைய கல்லூரி மாணவர்களின் காந்திசார்ந்த உரையாடல்களுக்கும் ஏற்புக்கும் காரணமாக அமைவதைக் கண்கூடாகக் காண்கிறோம். மாதத்திற்கு ஓரிரு கடிதங்களாவது காந்தியம் சார்ந்து இன்றளவும் தொடர்ச்சியாக உங்கள் தளத்தில் வெளியாகிறது. அறுபடுதலோ விடுபடலோ இல்லாத இந்த தொடர்ச்சிதான் இளையோர்களுக்கு காந்தியை மீளறிமுகம் செய்கிறது.
கிருஷ்ணம்மாள் – ஜெகந்நாதன் தம்பதி குறித்து நீங்கள் எழுதியிருந்த ‘இரு காந்தியர்கள்‘ கட்டுரையும் அதில் வெளிப்படுத்தியிருந்த ஆதங்கமுமே ‘சுதந்திரத்தின் நிறம்‘ நூலாக அதை நாங்கள் பதிப்பிக்கும் எண்ணத்தை உருவாக்கியது. அந்நூலின் உருவாக்கத்தையும், காந்திகிராமப் பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த அதன் வெளியீட்டு விழாவில் அம்மா கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதனோடு நீங்களும் பங்கேற்று ஆற்றிய உரையும் எந்நாளும் நெஞ்சில் எஞ்சுபவை.
இன்று (20.10.2022) காலையிலிருந்து அம்மா கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் அவர்களுடன் காந்திகிராமப் பல்கலைக்கழகத்தில் உடனிருக்கிறேன். ஏதோவொருவகையில், இந்நாளில் ஐந்தாறு முறையாவது உங்களைக் குறித்தும் உங்கள் படைப்புகள் குறித்தும் நீளுரையாடல் நிகழ்ந்தது. ‘சுதந்திரத்தின் நிறம்‘ புத்தக வெளியீட்டு நிகழ்வில் நீங்கள் நட்டமரம் அத்தனைப் பச்சையங்களோடு துளிர்த்து வளர்ந்தெழுந்து நிற்கிறது. அண்மையில், காந்தியின் பிறந்தநாளன்று எங்களுக்கு ஏற்பட்ட ஒரு அனுபவத்தை உங்களுடன் பகிரவே இக்கடிதம்.
கடந்த அக்டோபர் 2, காந்தி பிறந்தநாளன்று நண்பர்கள் மதுரையில் குழுமியிருந்தோம். அதிகாலையில் காந்தி அருங்காட்சியகம் செல்வதென முடிவுசெய்து அங்குசென்றோம். பொழுதுபுலர்ந்த தருணத்திலிருந்தே வயோதிகர்கள், அரசியல் தலைவர்கள், அரசதிகாரிகள், காந்தியவாதிகள் என எல்லாதரப்பு மக்களும் அங்குவந்து சிறுசிறு குழுக்களாக இணைந்திருந்தனர். அன்று காலை 8.30 மணியளவில் மதுரையைச் சேர்ந்த ஆசிரியர் சரவணன் அவர்கள், நாற்பதுக்கும் மேற்பட்ட கிராமத்துப் பள்ளிக்குழந்தைகளை காந்தி அருங்காட்சியகத்திற்கு அழைத்து வந்திருந்தார். நாடகம் மற்றும் கதைகள் வழியாகக் குழந்தைகளுக்கு கல்வியை போதிக்கும் மாற்றுச் சிந்தனையாளர் அவர்.
பறையிசைத்து வந்த அந்த குழந்தைகள் கூட்டம், காந்தி சிலைக்கு மாலையணிவித்து தங்கள் மரியாதையைத் செலுத்தினர். அக்கட்சியை நேரில் காண்பதற்கே மிகுந்த உயிர்ப்போடு இருந்தது. காரணம், காந்தி ஜெயந்தி அன்று குழந்தைகள் பறையிசைத்து வந்து அவரது சிலைக்கு மாலையிடும் காட்சியை இதுவரைக் கண்டதில்லை. சில மாதங்கள் முன்பு, ஆசிரியர் சரவணன் அவர்கள் முகநூலில் ஒரு குறிப்பு எழுதியிருந்தார். காந்தி சுடப்பட்டு இறந்தபோது அணிந்திருந்த, இரத்தக்கறை படிந்த வெண்துணி மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளது. அதைப் பார்த்துவிட்டு ஒரு பள்ளிச்சிறுமி தேம்பியழுத அனுபவத்தை அவர் தனது பதிவில் எழுதியிருந்தார்.
ஒரு ஆசிரியமனம், தனக்குக் கிடைக்கக்கூடிய காலத்தருணங்களை வாய்ப்பாக மாற்றி, பள்ளிக் குழந்தைகளுக்கு காந்தியை அண்மைப்படுத்தும் இத்தகைய செயல்பாடுகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாகத் தோன்றுகின்றன. எழுத்தாளர் சுந்தர ராமசாமி ஒருமுறை, இதே மதுரையில் ஒரு பள்ளிவளாகத்தில் தங்கியிருந்தபொழுது, அப்பள்ளிக்கூட தலைமையாசிரியர் காந்தி குறித்த எதிர்மறையான கருத்தை ஒரு பாடல் வடிவில் மாணவர்களுக்குச் சொல்லித்தருவதைக் கேட்டு அதிர்ச்சியும் கலக்கமும் அடைந்திருக்கிறார். இன்று, ஆசிரியர் சரவணனின் உள்ளம் குழந்தைகளுக்குள் நிகழ்த்தும் நல்லதிர்வுகள் நம்பிக்கைக்குரிய நகர்வென்றே எண்ணவைக்கிறது.
இந்நிகழ்வு நிகழ்ந்துகொண்டிருந்த அதே வளாகத்தில், இடதுசாரித் தோழமையினர் சிலர்கூடி ஒரு கூட்டம் நிகழ்த்தினர். அங்கு தோழர் அருணன் அவர்கள் உரையாற்றினார். எல்லாதரப்பு சித்தாந்த மக்களும் இச்சமகாலத்தில் காந்தியைப் புரிந்துகொள்ள அகம்திறப்பதும், தவறான அடிப்படைவாதிகளால் காந்தி அபகரிக்கப்பட்டுவிடாமல் தடுப்பதற்காக ஒன்றுகூடுவதும் குறிப்பிடத்தகுந்த வரலாற்று அசைவுகள் எனலாம். ஓர் ஒப்பற்ற நாளாக இவ்வாண்டின் காந்தி ஜெயந்தி நினைவில் எஞ்சிவிட்டது. காலையிலிருந்து மாலைவரை எத்தனையோ இசுலாமியப் பெண்கள் காந்தி அருங்காட்சியகத்திற்குள் வந்துசெல்வதை கண்ணுற்றிருந்தோம். இந்த தேசம் அதன் உள்நாளமாக இன்றளவும் ஒற்றுமையை மட்டும்தான் தக்கவைத்திருக்கிறது.
நிகழ்வுகளனைத்தும் முடிந்து புறப்புடுகையில், காந்தி வேடமிட்ட ஒரு மனிதர் நின்றிருந்தார். சுற்றியிருந்த மனிதர்களில் பலர் அவர் காலில் விருந்தனர்; சிலர் அவர் கைகளைப் பிடித்து கண்ணீர் சிந்தினர்; காந்தியை காண்கையில் வருகிற நெகிழ்ச்சியை அங்கு அவர்கள் வெளிப்படுத்தினர். அண்மையில் ஒரு நேர்காணல் காணொளியில் நீங்கள் சொல்லியிருந்தீர்கள், “எனது கதை ஒன்று மலையாளத்தில் திரைப்படமாக எடுக்கப்படுகிறது. ஆகவே, கதையில் வரும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தை ஏற்றுநடிக்கும் நாயகனை முதல்நாள் சந்தித்து அவருடன் அமர்ந்து இயல்பாக உரையாடினேன்.
ஆனால், மூன்று நாட்கள் கழித்து கதாபாத்திரத்தின் தன்மையை முழுதும் உள்வாங்கி, அதற்குரிய வேடமிட்டு அமர்ந்திருந்த அந்த நடிகரின் முன்னால் என்னால் அமர இயலவில்லை. காரணம், அந்தக் கதாபாத்திரம் என் தந்தை. அந்தக் கலைஞர் என் தந்தையின் உடல்மொழியாகவே வெளிப்படத் துவங்கிவிட்டார்“. காந்தி வேடமிட்ட யாரைக் கண்டாலும் நம் அகம் உண்மையான காந்தியையே சென்றடைகிறது.
காந்தயின் இரத்தக்கறை படிந்த ஆடையை இன்னொரு முறை பார்த்துவர எண்ணம்தோன்றி மீண்டும் காந்தி அருங்காட்சியகத்தின் முதல்தளத்திற்குச் சென்றோம். அங்கு அந்தக் கண்ணாடிப் பேழையைத் தொட்டு, வெகுநேரம் உற்றுப் பார்த்தபடி நின்றிருந்தாள் ஒரு பள்ளிச்சிறுமி. நிலைக்குத்தி நின்றிருந்த அவள் பார்வை, காந்தியக் காலத்திற்குள் அவளுடைய அகம் சென்றிருப்பதை உணர்த்தியது.
மேலும், புதுக்கோட்டையிலிருந்து ஐம்பதுக்கும் அதிகமான முதியவர்கள் வந்து காந்தியின் அஸ்தி பீடத்தை வணங்கியமர்ந்து தங்களுடைய அறச்செயல்பாடுகள் சார்ந்த செயற்திட்டங்களுக்கு உறுதிமொழி ஏற்றார்கள். குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை காந்தியால் ஓர் ஆத்மத்தொடர்பை வழங்கிவிட முடிகிறது, இறப்படைந்த பின்னும்.
இந்த ஒளிப்படங்கள் அனைத்தும் ஒளிப்படக்கலைஞர் மோகன் தனிஷ்க் அவர்களால் காட்சிப்படுத்தப்பட்டவை. நெகிழ்வும் நிறைவும் தருகிற இவைகளை கண்களுக்கு அண்மைப்படுத்திய படைப்புமனதிற்கு அறங்கூர்ந்த நன்றிகள்!
இத்தனை வருடங்கள் கழித்து ஓர் இந்தியா ஆன்மாவின் கதை நம்மை கரங்கூப்பச் செய்கிறதென்றால் எப்பேர்ப்பட்ட இறைநிகழ்கை அப்பிறப்பு!செயலையே ஊழ்கமென சிந்தைசெலுத்தி வாழ்ந்திட்ட நம் தந்தையின் எஞ்சிய சுவடுகளால், இன்னும் எத்தனையோ நூற்றாண்டுகளாயினும் இத்தேசம் அறத்தொடு நிமிர்ந்தெழும்! ஆம், அவ்வாறே ஆகும்!
நன்றியுடன்,
சிவராஜ்
குக்கூ காட்டுப்பள்ளி
புகைப்படங்கள் மோகன் தனிஷ்க்
அ.முத்துலிங்கம் விழா
அ.முத்துலிங்கம் அவர்களுக்கு கி.ரா. விருது வழங்கப்பட்டதை ஒட்டி இருநூல்கள் வெளியிடப்பட்டன. அருண்மொழி நங்கை அவளுடைய தேர்வாக முத்துலிங்கத்தின் கதைகளை தொகுத்து நடுவே கடல் என்னும் நூலாக்கியிருக்கிறாள். ஓர் அழகிய முன்னுரையும் எழுதியிருக்கிறாள். ஆஸ்டின் சௌந்தர் அ.முத்துலிங்கம் மீது வெவ்வேறு எழுத்தாளர்கள் எழுதிய கட்டுரைகளை தொகுத்து ஆறாம் திணையின் கதவுகள் என்னும் நூலாக்கியிருக்கிறார். இரு நூல்களும் விஜயா பதிப்பக வெளியீடு.
நான் சென்னையில் மணி ரத்னத்தின் சினிமா விவாதச் சந்திப்பில் இருந்து 21 மாலை விமானம் வழியாக இரவில் கோவை வந்து சேர்ந்தேன். 21 மாலை அருண்மொழியும் சைதன்யாவும் ரயிலில் கோவைக்கு கிளம்பி 22 காலை வந்து சேர்ந்தார்கள். ஃபார்ச்சூன் அப்பார்ட்மென்ட்ஸில் தங்கினோம். மாலை விழா.
இந்த விழா முதன்மையாக ஆஸ்டின் சௌந்தர் முன்னெடுப்பு. அவருடைய தேதிகள் ஒத்துவராத காரணத்தால் 22 அக்டோபர் முடிவுசெய்யப்பட்டது. தீபாவளிக்கு முந்தைய நாள். இலக்கியக்கூட்டத்திற்கு கொஞ்சமும் ஒத்துவராத நாள். பலர் ஊருக்குச் சென்றிருப்பார்கள். பலருக்கு தீபாவளி பொருட்கள் வாங்கும் பணி இருக்கும். பேருந்துகள் நிறைந்து வழியும். நிகழ்ச்சி நடந்த பிஎஸ்ஜி அரங்கு கொஞ்சம் ஊருக்கு வெளியே இருந்தது. கூட்டம் வராவிட்டாலும் நம் நண்பர்கள் ஐம்பதுபேர் இருப்பார்கள், நடத்திவிடலாம் என்று நான் சொன்னேன்.
ஆனால் நூற்றைம்பதுபேர் வந்திருந்தனர். நிறையரங்கில் நிகழ்ச்சி நடைபெற்றது. சிறந்த, சுருக்கமான உரைகள். ஒரு நல்ல நாள். மறுநாள் பொன்னியின் செல்வன் நல்ல அரங்கில் பார்க்கலாமென நினைத்தேன். கோவையில் எல்லா அரங்கும் நிறைந்து டிக்கெட் கிடைக்கவில்லை. ஊர் திரும்பியபின்னர் (25 அக்டோபர்) திருவனந்தபுரம் சென்று ஒரு பிவிஆர் அரங்கில் பொன்னியின் செல்வன் பார்க்கலாமென முடிவுசெய்தோம். உடனே பதிவுசெய்தமையால் இடம் கிடைத்தது.
October 24, 2022
பொன்னியின் செல்வன், ஓர் எதிர்விமர்சனம்.
பொன்னியின் செல்வன்: எதைத் தவறவிட்டார் மணிரத்னம்?-கோம்பை அன்வர்
கடைசியாக தமிழில் பொன்னியின் செல்வன் பற்றி பொருட்படுத்தத் தக்க ஓர் எதிர்விமர்சனம். பாராட்டுக்களை போலவே இதுவும் மதிப்பு மிக்கது.
கோம்பை அன்வர் சொல்லும் பல விமர்சனங்கள் உண்மையானவை, சினிமாவின் சாத்தியக்கூறுகள் சார்ந்து விவாதிக்கத்தக்கவை. வெறும் தனிநபர் வன்மங்கள், எளிய அரசியல் காழ்ப்புகள் மற்றும் சாதிக்காழ்ப்புகள், சினிமா அல்லது வரலாறு குறித்த முற்றிலுமான அறியாமை ஆகியவற்றில் இருந்து வெளிவரும் விமர்சனங்களால் நடைமுறைப்பயன் ஏதுமில்லை. சொல்லப்போனால் அவை படத்தின் மீதான மிகையான எதிர்பார்ப்பை சற்று குறையச்செய்து, படத்தை ரசிக்கச்செய்து, மாபெரும் வெற்றிப்படமாக ஆக்கிவிட்டன.
கோம்பை அன்வர் எழுதியதுபோன்ற இந்த வகையான விமர்சனங்கள் மிக முக்கியமானவை. இவை ஒரு படைப்புத்தரப்பிற்கு நேர் மறுமுனையில் ஏற்புத் தரப்பில் இருந்து எழுவன.விஷயமறிந்தவர்கள் பொறுப்பான மொழியில் எழுதும் இத்தகைய கட்டுரைகள் முன்வைக்கும் எதிர்பார்ப்பும் அதன் வழியாக உருவாகும் அழுத்தமும் படைப்புச் செயல்பாடு மேலும் கூர்மை கொள்ள வழிவகுக்கின்றன.
ஆகவே சால்ஜாப்புகளாக அன்றி, மெய்யாக இருக்கும் சவால்களாக இவற்றைச் சொல்ல விரும்புகிறேன்.
கோம்பை அன்வர்தமிழில் ஒரு பெரும்படம் தயாரிப்பதன் இரண்டு நடைமுறை எல்லைகள் பல போதாமைகளை உருவாக்குகின்றன.
ஒன்று, இந்தியா முழுமைக்குமான படமாக, இளையோருக்கான படமாக மட்டுமே இந்தப்படத்தை எடுக்க முடியும். வசூல்கணக்கை கண்டிருப்பீர்கள், இப்படத்தின் வசூலில் மூன்றிலொரு பங்கு மட்டுமே தமிழ்நாடு சார்ந்தது. அப்படி இந்திய ரசனைக்குரிய படமாக, சிறுவர்கள் ரசிக்கும் படமாக இதை எடுக்கவில்லை என்றால் இந்த முதலீட்டை திரும்ப எடுக்க முடியாது.
ஆகவே இப்படத்துக்கு இந்திய அளவில் சிறந்த பின்னணிக் கலைஞர்கள் தேவைப்படுகிறார்கள். முழுக்கமுழுக்க தமிழ்க் கலைஞர்கள் இதில் பங்கெடுக்க முடியாது. உண்மையில் இந்தவகை படைப்புகளில் தமிழ்ப்பண்பாட்டு அடையாளம் எந்த அளவுவரை இருக்கலாம் என்பதில் எப்போதும் ஓர் ஊசலாட்டம் இருக்கும்.
ஓர் உதாரணம் மலையாளத்தில் பெருவெற்றி பெற்ற பழசி ராஜா. அது முழுக்கமுழுக்க மலையாளப் பண்பாட்டு அடையாளம் கொண்டது. கேரளத்தில் பெருவெற்றிபெற்ற அப்படம் வெளியே படுதோல்வி அடைந்தது. ஒட்டுமொத்தமாக பெரிய இழப்பையும் சந்தித்தது. முதன்மைக்காரணம் கேரளபாணிக் குடுமி மற்றும் ஆடைகள்.பழசி ராஜா காட்டிய கேரளபாணி அரண்மனையை தமிழகத்திலேயே பல சினிமா விமர்சகர்கள் நையாண்டி செய்து எழுதியிருந்தனர்.
ஆகவே பின்னர் ‘மரக்கார் -அரபிக்கடலின் சிங்கம்’ படத்தை எடுத்தபோது மலையாள அடையாளம் மிகக்குறைவாக எடுத்தனர். (மலபார் இஸ்லாமியர் நீண்ட முடி வளர்ப்பதில்லை. மொட்டையடிப்பதே அவர்களின் வழக்கம். ஆனால் சினிமாவில் மோகன்லால் நீண்ட சடையுடன், பைரேட்ஸ் ஆஃப் த கரீபியன் சாயலில் இருந்தார்) அந்தப்படம் முற்றிலும் அன்னியமாகி அங்கும் ஓடவில்லை, வெளியிலும் கவனிக்கப்படவில்லை. மீண்டும் இழப்பு
இரண்டு எல்லைகள். நடுவே இந்த கத்திமுனை நடை என்பது ஒரு பெரிய சவால். பேசிப்பேசி , ஊசலாடி ஊசலாடி ஒரு மையப்பாதை கண்டடையப்படுகிறது. அது ஒரு சமரசப்புள்ளிதான். சுட்டப்படும் பல குறைகள் படத்தை எடுத்தவர்களும் அறிந்தவை. பலசமயம் அவை சமரசங்கள்.
எற்கனவே நான் பலமுறை குறிப்பிட்டதுதான். வரலாற்றுக்கு அணுக்கமாக, கூடுமானவரை யதார்த்தமாக, படத்தை எடுத்தோமென்றால் ஆடம்பரமும் காட்சிவிரிவும் இல்லாமலாகிவிடும். இத்தகைய சினிமாக்களை ரசிக்கும் சிறுவர்கள், உலகளாவிய பொதுரசிகர்கள் கண்களை விரித்துப்பார்க்கும் காட்சித்தன்மையை கொண்டுவரவேண்டிய தேவை உள்ளது. ஆகவே அரண்மனைகளும் கோட்டைகளும் அன்றைய தமிழக அரண்மனைகள் எப்படி இருந்திருக்குமோ அவற்றில் இருந்து பலமடங்கு பிரம்மாண்டமாகவே இப்படத்தில் காட்டப்பட்டுள்ளன. அதுவே சமரசம்தான்.
இந்த அம்சம் ஹாலிவுட் படங்களிலுள்ள பாணிதான். இது கலைப்படமோ ஆவணப்படமோ அல்ல. ஹாலிவுட் பாணியிலான கேளிக்கைப்படம். கண்மலைக்கும் காட்சிகளே இதன் வணிகவெற்றியை உருவாக்கும். கதையின்பெரும்பகுதி அரண்மனைகளுக்குள் நிகழ்கையில் யதார்த்தபாணி அரண்மனைகளை காட்டுவது படத்திற்கு உதவாது.
வெளிமாநிலக் கோட்டைகள் பயன்படுத்தப்பட்டபோது அவற்றிலுள்ள பல நுண்விவரிப்புகளும் காட்சிக்குள் வந்துவிட்டன. ஏனென்றால் அவற்றை விருப்பப்படி மாற்ற முடியாது. ஒரே ஒரு சோழர்கால அரண்மனை எஞ்சியிருந்திருந்தால்கூட மிகப்பெரிய வாய்ப்பு நமக்கு அமைந்திருக்கும். அது வரலாற்று விடுபடல்.
இந்தவகை கட்டாயங்கள் இல்லை என்பதனால் படத்திலுள்ள ஆடைவடிவமைப்பு, அணிகலன் வடிவமைப்பு இரண்டுமே நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காடு சோழர்காலச் சிற்பங்களை அடியொற்றியே அமைக்கப்பட்டுள்ளன ( பெண்கள் மேலாடை அணிந்திருந்தார்களா என ஒரு விவாதம் இருந்தது. மேலாடை இல்லாமல் படத்தில் பெண்களை காட்டமுடியாது என்பது வெளிப்படை) ஆண்கள் அணிந்துள்ள கவச உடைகளுக்கெல்லாம் மாதிரிவடிவங்கள் தாராசுரம் உள்ளிட்ட ஆலயங்களின் சிறிய சிற்பங்களிலுள்ளன.
(நம் பழைய சரித்திரப்படங்களிலுள்ள அரசர்களின் தோற்றங்கள்தான் மிகச்செயற்கையானவை. பார்சி நாடகக்குழுக்களிடமிருந்து நாம் பெற்றுக்கொண்டவை அவை. இன்று பலர் அவை ‘தமிழ்த்தன்மை’ கொண்டவை என நினைப்பதை காணமுடிகிறது)
ஆனால் இந்த ஊசலாட்டமும் சிக்கல்களும் எதிர்காலத்தில் அகலலாம். இப்போது பொன்னியின் செல்வன் ஈட்டும் வருவாய் இனி வருவோர்க்கு மேலும் நம்பிக்கையை அளிக்கலாம். முழுமையாகவே தமிழடையாளம் கொண்ட படங்கள், பெருஞ்செலவில் வரலாம். அதற்கும் பொன்னியின் செல்வனே வழிகாட்டியும் முன்னோடியுமாக இருக்கும். நாம் முதல்முறையாக தமிழ்மன்னனின் கதையை உலகம் பார்க்கச் செய்துவிட்டிருக்கிறோம். பேசவைத்துள்ளோம்.
(அதிலும் பல படிநிலைகள். தமிழ்ச்சூழலில் இருந்து என்னவென்றே தெரியாமல் முன்வைக்கப்பட்ட காழ்ப்புகள் பல வெளிவந்தன. என்ன காரணத்தினாலோ டிரையிலர் வெளியாகும்போது இருந்த ஏற்புநிலை மாறி படம் வெளிவந்தபோது தெலுங்கில் இருந்து உச்சகட்ட காழ்ப்புகள் வெளிப்பட்டன. படம் அங்கே போதிய அளவு ஏற்படையாமல் செய்ய அந்தக் காழ்ப்புகளால் இயன்றது. நேர்மாறாக கேரளம் படத்தை இன்னும் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.)
இரண்டாவது நடைமுறைச் சிக்கல், தமிழகத்தில் ஆலயங்கள், நீர்நிலைகள், காடுகள் உட்பட எந்தப் பொதுவெளியியிலும் சினிமா எடுக்க சட்டபூர்வத் தடை உள்ளது. தமிழகத்தை இன்று சினிமாவில் காட்டவே முடியாதென்பதே உண்மைநிலை. உலகில் எப்பகுதியிலும் அப்பகுதியை சினிமாவில் காட்ட இந்த அளவுக்கு தடைகள் இல்லை.
2010ல் முதலில் திட்டமிட்டபோது பொன்னியின் செல்வன் படத்தில் தஞ்சை கோட்டையாக முடிவுசெய்யப்பட்டது மன்னார்குடி ராஜகோபால சாமி ஆலயத்தின் கோட்டைச்சுவர். ஆனால் அதற்கு ஒப்புதல் கிடைக்கவில்லை. பல போராட்டங்களுக்குப்பின் படமே கைவிடப்பட்டது.
பொன்னியின் செல்வனில் காவேரியின் ஒரு காட்சிகூட காட்டப்பட முடியாது. அன்றைய நீர்ப்பெருக்குள்ள காவேரி இன்றில்லை. இன்றைய காவேரியின் எல்லா கரைகளும் கட்டிடங்கள் அல்லது குப்பைமலைகள் செறிந்தவை. காவேரிக்கரையின் சோலைகள் எங்கும் இல்லை. காவேரிக்கரை வழியாக நானும் மணி ரத்னமும் நடத்திய நீண்ட பயணத்திற்குப் பின் காவேரியை காட்டவே முடியாது என கண்டடைந்தோம்.
அத்துடன் சினிமாவுக்கே உரிய நடைமுறை நெருக்கடிகள். படம் கொரோனா காலகட்டத்தில் எடுக்கப்பட்டது. ஒரு இடம் முடிவுசெய்யப்பட்டு படப்பிடிப்பு தொடங்கவிருக்கையில் அனுமதி ரத்தாகும். உடனே இன்னொரு இடம் தெரிவுசெய்யப்படும். பெருமுதலீடு கொண்ட படங்களில் ஒருநாள் தாமதமும் இழப்பு உருவாக்கும். ஆகவே தொடர்ச்சியாக சமரசங்கள், விடாமுயற்சி வழியாக படம் நிறைவுசெய்யப்பட்டது.இனி வரும் படங்களில் இச்சிக்கல்கள் களையப்படலாம்.
*
இரண்டு விளக்கங்கள் மட்டும். ஒன்று, தஞ்சை கோட்டையாக படத்தில் காட்டப்படுவது ஒரு மேட்டின்மேல் உள்ளது. (மலைமேல் அல்ல). அவ்வாறு இருந்திருக்க வாய்ப்பு மிகுதி. ஆற்றங்கரையோர கோட்டைகள் சமநிலப்பரப்பில் இருந்து ஐம்பதடி வரை உயரமான செயற்கைமேடு, அல்லது இயற்கைமேட்டின்மேல் கட்டப்பட்டிருக்க வாய்ப்புண்டு. திருவட்டார் ஆலயம் அவ்வாறுதான் அமைந்துள்ளது. கர்நாடகத்திலும் தமிழகத்திலும் இன்று நாம் நிலப்பரப்பில் பார்க்கும் பல ஆற்றங்கரை ஆலயங்கள் பழங்காலத்தில் மேட்டின்மேல் அமைந்தவை. உதாரணம் சுசீந்திரம். ஆற்றங்கரை நிலம் சதுப்புப்படிவால் இன்று இருபதடி வரை மேலேறியிருக்கிறது.
அன்றைய காவேரி ஆண்டுதோறும் பெருவெள்ளம் வருவது. கொள்ளிடம் ஆறு அவ்வெள்ளத்தை கட்டுப்படுத்தும்பொருட்டு பிற்காலத்தில் சோழர்களால் விரிவாக்கம் செய்யப்பட்டது. வெண்ணாற்றுக்கு அருகே அமைந்திருந்த அன்றைய தஞ்சையில் அமைந்திருந்த கோட்டை ஒரு கல்மேட்டின்மேல் அமைந்திருந்தால் ஆச்சரியப்பட ஏதுமில்லை. அவ்வாறே படத்தில் உள்ளது. இன்று நமக்கு சோழர்காலக் கோட்டையோ, கட்டுமானமோ ஏதுமில்லா நிலையில் இக்கற்பனைக்கான வாய்ப்பு உள்ளது.
அதேபோல சிலர் சாளர முகப்புகளின் முகலாயபாணி வளைவுகள் பற்றி சுட்டிக்காட்டியிருந்தனர். நிபுணர்கள் அல்லாதவர்கள் அதீத தன்னம்பிக்கையுடன் சுட்டிக்காட்டியபோது அவர்களுடன் விவாதிக்க முயலவில்லை. அது வீண்பணி.
பொன்னியின் செல்வனில் அக்காட்சிகள் வடஇந்திய கோட்டையில் (ஓர்ச்சா) எடுக்கப்பட்டவை. அவ்வளவு பெரிய கோட்டை இந்தியாவில் அங்குதான் உள்ளது. வரைகலை வழியாக கோட்டைகளை உருவாக்கலாம்தான். பாகுபலி போல செயற்கையான படமாகத் தெரியும். மணி ரத்னம் உண்மைக்கோட்டையை விரும்பினார். ஆகவே வேறுவழி இல்லை.
அக்கோட்டை மற்றும் அரண்மனைகளில் இருந்த முகலாயக் கூம்புகள் நீக்கப்பட்டன. ஆனால் ஆராய்ச்சிக்குப்பின் சாளரத்தின் மேல்வளைவுகள் முகலாயர் கலைக்கு மட்டும் உரியவை அல்ல என்று முடிவுசெய்யப்பட்டது. செங்கல் கட்டுமானத்தில் மிக வலுவாக இயற்கையாக அமைவது அந்த வளைவுதான். அவை இந்தியாவில் முகலாயர் காலத்திற்கு முந்தைய செங்கல்கட்டுமானங்கள் பலவற்றில் உள்ளன.
சோழர்காலச் செங்கல் கட்டுமானங்கள் நமக்கு அனேகமாக கிடைக்கவில்லை. ஆகவே அன்று அத்தகைய மேல்வளைவுகள் இருந்திருக்கலாம் என முடிவெடுக்கப்பட்டது. அதுவும் ஒரு சுதந்திரம்தான்.
முதலில் நம் வரலாற்றை படமாக எடுக்குமளவுக்கு நிதி திரளுமா என்பதே ஐயமாக இருந்தது. இனி மேலும் முன்செல்லமுடியும் என தோன்றுகிறது
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

