Jeyamohan's Blog, page 687
November 4, 2022
சினிமாவும் ஓவியங்களும்
அன்புள்ள ஜெ
பொன்னியின் செல்வன் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். உண்மையில் கட்டுரையை வாசிக்கும் வரை படத்தின் ஷாட்களில் இத்தனை நுட்பங்களுண்டு, இப்படி அவற்றை கவனிக்கவேண்டும் என்று நான் எண்ணியதில்லை. அதைப் படித்தபின்புதான் நான் படமே பார்க்கவில்லை என்ற எண்ணம் ஏற்பட்டது.
இவ்வளவு நுட்பமாகவும் ஆழமாகவும் ஷாட்களாக சினிமா உருவாக்கப் படும்போது அது பரபரவென்று ஓடவேண்டும் என எதிர்பார்ப்பதே சினிமாவுக்கு எதிரான அராஜகம் என புரிகிறது. அத்துடன் இங்கே சினிமா பற்றி எழுதுபவர்கள் பெரும்பாலும் கதைச்சுருக்கம் கொடுத்து கதையைத்தான் விவாதிக்கிறார்கள். அல்லது அதிலுள்ள அரசியலை நோண்டி எடுக்க முயல்கிறார்கள். சினிமாவிமர்சனம் என்பது இங்கே இல்லை என்றே தோன்றிவிட்டது. சினிமா அபிப்பிராயமே உள்ளது என்ற எண்ணம் வந்தது. இந்தக் கட்டுரைகள் மிக உதவியாக இருந்தன.
ஆராவமுதன் ஆர்
அன்புள்ள ஆராவமுதன்,
நான் சினிமா விமர்சனங்களை குறை சொல்லவில்லை. ஒவ்வொருவரும் அவரவருக்கு தோன்றியதை சொல்வதில் தவறில்லை. அக்கருத்துக்கள் வழியாகவே ஒரு சினிமா எப்படி ஏற்கப்பட்டது என்று சினிமாக்காரர்களுக்குப் புரிகிறது. பொழுதுப்போக்குச் சினிமா என்பதே ’ஃபீட்பேக்’ வழியாக உருவாக்கப்படும் கலைதான்.
நான் தீவிரசினிமாவை 1984 முதல் காசர்கோடு திரைப்பட சங்கம் வழியாக அறிமுகம் செய்துகொண்டவன். உலகசினிமாக்களை வாரந்தோறும் பார்த்த ஒரு காலம் இருந்தது. திரைவிழாக்கள் தோறும் சென்றுகொண்டிருந்தேன். அதை என் இலக்கியரசனையின் பகுதியாகவே கருதினேன்.
அதன்பின் திரைப்பட உருவாக்கத்துடன் தொடர்புகொண்டேன். இந்தியாவின் மிகச்சிறந்த இயக்குநர்கள் எனப்படுபவர்களின் சினிமாக்களில் பணியாற்றியிருக்கிறேன். திரைக்கதையை முறையாகவே பயின்றுமிருக்கிறேன். சினிமாவின் கோட்பாடும் தெரியும், அதன் நடைமுறைச் சமரசங்களும் தெரியும்.
ஆனால் சினிமா பற்றிப் பேசியதில்லை, பேசவேண்டியதில்லை என்பதே என் எண்ணமாக இருந்தது. இந்தியாவின் வரலாற்றிலேயே இரண்டாவது மாபெரும் வெற்றிப்படமும், தமிழ் சினிமா வரலாற்றிலேயே பெரிய வெற்றிப்படமும் ஆன 2.0 ஒரு தோல்விப்படம் என இங்கே அசடுகள் சொல்லிச் சொல்லிப் பரப்பியபோதுகூட ஒரு சொல் கூடச் சொல்லி நான் அதை விளக்கியதில்லை.
நான் சினிமா பிரமோக்களில் கலந்துகொள்வதில்லை. என் படங்களின் எந்த விழாக்களிலும் கூடுமானவரை பங்கெடுத்ததில்லை. அந்த நிலைபாட்டுக்கு மாற்றம் வந்தது அண்மையில் சினிமாவே மாற ஆரம்பித்தபோது. இன்று சினிமாவின் பிரமோக்களில் எல்லாருமே கலந்துகொண்டாகவேண்டும். கமல்ஹாசனே ஊர் ஊராகச் சென்று சினிமாவை விளம்பரம் செய்கிறார். ஆனாலும் இப்போதும் சினிமா வெற்றிவிழாக்களில் கலந்துகொள்ளவேண்டாம் என்றே இருக்கிறேன். இன்றும் நாளையும் என் படங்களின் வெற்றிவிழாக்கள். வெந்து தணிந்தது காடு, பொன்னியின் செல்வன் உட்பட எந்த கொண்டாட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை.
ஆனால் சினிமா பிரமோவுக்கு என முன்வந்தபோது அதை முழுமையாகவும் திறமையாகவும் செய்ய முயன்றேன். அவ்வாறு முழுமையாகச் செய்வதே என் வழக்கம். வெந்து தணிந்தது காடு மெல்லச்செல்லும் படம் என்பதை திட்டமிட்டு சொல்லி நிறுவியது என் உத்தியே. அப்படியல்ல, அது வேகமான படம் என திரையரங்கில் வந்து உணர்ந்த ரசிகர்கள் அதைப் பரப்பி படத்தை வெற்றியடையச் செய்தனர்.
பொன்னியின் செல்வன் தமிழ்ப்பெருமிதம் சொல்லும்படம் என்பதும் சரி, ஃபேண்டஸி படமான பாகுபலியையும் சரித்திரப்படமான பொன்னியின் செல்வனையும் ஒப்பிடுவது அபத்தமானது என்பதும் சரி, ஊடகத்தில் நான் சொல்லி நிறுவியவை. அவை அப்படத்தின் வெற்றிக்கும் பேருதவியாக இருந்தன.
இவ்வாறு செயலாற்றத் தொடங்கும்போதுதான் விமர்சனங்களைக் கவனித்தேன். அவற்றின் போதாமைகளைக் கண்டபின்னரே சினிமா பற்றிப் பேச ஆரம்பித்தேன். எவரையும் திருத்தும், இடித்துரைக்கும் நோக்கம் இல்லை. நான் பேசுவது என் வாசகர்களாகிய சிறு வட்டத்திடம் மட்டுமே. ஓரிரு சினிமா ரசிகர்களும் கவனிக்கக்கூடும். சினிமா என் களம் அல்ல என்பதே என் எண்ணம், இப்போதும். ஆனால் இங்கே சினிமா பற்றிப் பேசுபவர்களுக்கு நான் அறிந்ததில் சிறு பங்குகூட சினிமா தெரியாது என்று பட்டது.
இங்கே விமர்சனங்கள் என எழுதப்பட்டவை பெரும்பாலும் படத்துக்குள் செல்ல மறுத்து, தாங்களே ஒரு கதையை அல்லது திரைக்கதையை எண்ணிக்கொண்டு அது படத்தில் இல்லையே என பேசுவதுதான். அடுத்தபடியாக, ‘ஐஸ்வர்யா ராய்க்கு வயசாகிவிட்டதா?’ போன்ற எளிமையான ‘கமெண்டு’கள். அல்லது ‘எங்கே வில்லன்?யார் ஹீரோ?’ என்பதுபோன்ற டெம்ப்ளேட் ரசனைகள். இவற்றுக்கு உலகிலெங்கும் சினிமா விமர்சனம் என்னும் வகைமைக்குள் இடமே இல்லை என இவர்களுக்கு தெரிந்திருக்கவில்லை. இலக்கியரசனையிலேயே கூட ‘கமெண்டுகள்’ முதிர்ச்சியின்மையாகவே கருதப்படும்.
வரலாற்றுக் கற்பனை என்னும் வகைமைக்குள் பொன்னியின் செல்வன்தான் தமிழில் மட்டுமல்ல, இந்திய சினிமாக்களிலேயே முதன்மையானது. அதை நான் சொல்லவேண்டியதில்லை. இந்திய சினிமாவின் விமர்சகர்களில் எவர் முக்கியமானவர்கள் என நான் நினைக்கிறேனோ அவர்கள் சொல்லிவிட்டனர். ஆனால் இப்படி ஒரு படம் வந்தபின்னரும்கூட, அவற்றை தமிழ்மக்கள் பெருந்திரளாக ரசிக்கையிலும்கூட, சினிமா விமர்சகர்கள் என எழுதுபவர்களுக்கு அதை எளியமுறையில் அணுகும் ரசனைகூட இல்லை என்பதும், அவர்கள் சாதாரணமாகக்கூட பொன்னியின் செல்வனுடன் ஒப்பிடமுடியாத எளிய திரைமொழி கொண்ட பாகுபலி அல்லது பாஜிராவ் மஸ்தானியை கொண்டாடுகிறார்கள் என்பதும் திகைப்பூட்டியது. இப்போதேனும் சிலவற்றைச் சொல்லவில்லை என்றால் இன்னும் சில ஆண்டுகளில் இவர்கள் தமிழ் ரசனையை தெலுங்குசினிமாத் தரத்துக்கு கொண்டுசென்று விடுவார்கள். ஆகவேதான் இக்குறிப்புகள்.
நான் சொல்பவை சினிமா ரசனை பற்றிய சில அடிப்படைகள்தான். ஆனால் அவற்றை இப்படி பொன்னியின் செல்வன் போன்ற ஒரு சினிமாவுடன் இணைத்துச் சொல்லாவிட்டால் கவனிக்கப்படாது என்று நினைக்கிறேன். ஒரு கலையை முறையாக அறிவதற்குரிய வழிகள் இவை.
சினிமா விமர்சகர்கள் சினிமாவின் ‘வசூல்’ பற்றிப் பேசுவது இங்கு முக்கியமாக உள்ளது. சினிமாவின் வசூலைப் பற்றி சினிமாவுக்குள்ளேயே சரியான தரவுகள் கிடையாது. பெறவும் முடியாது. ஆனால் இணையதளங்களில் பேசிக்கொண்டே இருக்கிறார்கள். படம் வெற்றியா தோல்வியா என்று ஆராய்கிறார்கள். அது சினிமாவை மதிப்பிட அளவுகோலா என்ன? என்ன ஆச்சரியமென்றால் ஒரு படம் பிடிக்கவில்லை என்றால் அது மாபெரும் வசூல்படம் என்றாலும் அது தோல்வி என சலிக்காமல் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.
ஒரு சினிமா விமர்சகன் சினிமா பற்றி பேசவேண்டியது மூன்று அடிப்படைகளில்.
அ. அந்த சினிமாவை எப்படிப் பார்க்கவேண்டும், என்னென்ன கவனிக்கவேண்டும் என்று. அதற்கு அந்த சினிமா எந்த வகையானது, அதை எந்த படங்களுடன் ஒப்பிடவேண்டும், என்னென்ன பின்னணிகளை அறிந்திருக்கவேண்டும் என்று சொல்லவேண்டும். அந்தப்படத்தில் கவனிக்கவேண்டியதென்ன என்று சுட்டவேண்டும்.எந்த விமர்சனமும் ரசனைப்பயிற்சிதான்.
ஆ. அந்தப் படத்தின் மேல் தன் சொந்த ரசனையை முன்வைக்கவேண்டும். அதற்கு அந்த விமர்சகரின் தனிரசனையின் தரமென்ன என்பது சொல்லப்படவேண்டும் (பொன்னியின் செல்வன் தரமான படம் இல்லை என விமர்சித்த ஒருவர் பாஜிராவ் மஸ்தானி தரமானது என்றார் என்றால் சரிதான் என அவரைப்பற்றி முடிவுசெய்யவேண்டியதுதான்)
இ. மேலே சொன்ன இரண்டையும் செய்தபின், அதன் அடிப்படையில் விமர்சனங்களை சொல்லலாம். மதிப்பிடலாம்.
அந்த வகையான பயிற்சியளிக்கும் அம்சம் இங்குள்ள விமர்சனங்களில் இல்லை. ஒரு படம் வந்ததுமே முடிந்தவரை முண்டியடித்து உடனடியாக ஒற்றைவரி மதிப்பீட்டைச் சொல்வதுதான் நடக்கிறது. ஆகவேதான் இக்கட்டுரைகள்.
அத்துடன் ஒரு படம் வந்துசென்றபின் அதைப்பற்றி பேச்சே இல்லை. உண்மையில் சினிமா ரசனை என்பது அதன்பிறகுதான் ஆரம்பிக்கிறது.
உதாரணமாக, பொன்னியின் செல்வனில், அந்த படத்தின் ஷாட்களில் மணியம் வரைந்த ஓவியங்களின் பங்களிப்பு எவ்வளவு? எவராவது எழுதியிருக்கிறார்களா?
இரு ஷாட்களை உதாரணமாகச் சொல்கிறேன்
இவ்விரு ஷாட்களும் மணியம் 1951ல் பொன்னியின் செல்வனுக்கு வரைந்த எளிமையான கோட்டோவியங்களில் உள்ளவை. 70 ஆண்டுகளுக்குப்பின் அவை திரைவடிவமாகியிருக்கின்றன. ஒரு கதைச்சித்தரிப்பு ஓவியம் எப்படி சினிமா ஷாட் ஆகும், சினிமா ஷாட்களுக்கும் ஓவியங்களுக்குமான உறவாடல் என்ன, இதையெல்லாம் பேசுவதற்கான ஒரு சந்தர்ப்பம் இது. அமெரிக்க – இத்தாலிய காமிக்ஸ்களுக்கும் சினிமா ஷாட்களுக்குமான உறவு விரிவாகப் பேசப்பட்டுள்ளது. ஜப்பானிய காமிக்ஸ்கள் எப்படி சினிமாவை உருவாக்கின என பேசப்பட்டுள்ளது. தமிழில் இப்படி ஒரு சந்தர்ப்பம் இனி அண்மைக்காலத்தில் வரப்போவதில்லை. அதைப்பேசத்தான் சினிமா விமர்சகர்களே ஒழிய வசூல்கணக்கை பேச அல்ல.
உண்மையில் இதையெல்லாம் சினிமாக்காரர்கள் எங்களுக்குள் பேசிக்கொள்கிறோமே ஒழிய வெளியே எந்தப் பேச்சும் இல்லை. எவருக்கும் கவனமும் இல்லை. ஆகவேதான் இப்படிப் பேசலாமே என்று சுட்டிக்காட்டுகிறேன். மற்றபடி சினிமா பற்றிப் பேசுவது என் வேலை அல்ல.
ஜெ
பொன்னியின் செல்வன் தமிழ் விக்கிஜ.ரா.சுந்தரேசன்
ஜ.ரா.சுந்தரேசன் நாவல்கள் இன்று இணையத்தில் தேடினால் கிடைப்பதில்லை. ஆனால் அவர் பாக்கியம் ராமசாமி என்ற பெயரில் எழுதிய அப்புசாமி -சீதாப்பாட்டி என்னும் கதாபாத்திரங்கள் பரவலாக அனைவரும் அறிந்தவை. அன்றைய வார இதழுக்கான நகைச்சுவை கொண்டவை. அவர் எழுதிய நெருங்கி நெருங்கி வருகிறாள் ஒரு நல்ல ஆவிக்கதை
ஜ.ரா. சுந்தரேசன்
ஜ.ரா.சுந்தரேசன் – தமிழ் விக்கி
அப்புசாமி சீதாப்பாட்டி
அப்புசாமி-சீதாப்பாட்டி – தமிழ் விக்கி
விஷ்ணுபுரம் விருந்தினர்-5, கமலதேவி
[image error]விஷ்ணுபுரம் 2022 விழாவில் கமலதேவி வாசகர்களின் சந்திப்பில் கலந்துகொள்கிறார். நான்கு சிறுகதைத் தொகுதிகளை வெளியிட்டிருக்கும் கமலதேவி இப்போது அதிகமாக வாசிக்கப்படும் இலக்கியப்படைப்பாளிகளில் ஒருவர்
கமலதேவி தமிழ் விக்கி
விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா
விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி
டி.பி.ராஜீவனும் திருமதி யமதர்மனும், கடிதங்கள்
டிபி.ராஜீவனின் கவிதை அருமை. அந்தக் கவிதையில் எமன் யார் என்பதுதான் நுட்பமான விஷயம். அந்தக்கவிதையிலுள்ள எல்லா துன்பங்களையும் அளிப்பவர் அவர்தான். அவரை காதலித்து மணந்த மிஸிஸ் எமதர்மன் என்னும் சீமாட்டியின் கருணைச்சேவைகளுக்கான பணமும் மிஸ்டர் எமதர்மனிடமிருந்தோ அல்லது எமதர்மா லிமிட்டட் என்ற குளோபல் கம்பெனியிடமிருந்தோ அல்லது அவர்கள் ஸ்பான்சர் செய்யும் மசாசுசெட்ஸ் பல்கலையில் இருந்தோ வருகிறது என்று நினைக்கிறேன். பாவம் சீமாட்டி, எருமைச்சாணி வாடையில் தூங்கவேண்டும். ஆனால் எல்லாமே ஒரு நாடகத்தின் பல பகுதிகள்தானே?
ஸ்ரீனிவாஸ்
அன்புள்ள ஜெ
டி.பி.ராஜீவனின் கவிதை மனதை துயரில் ஆழ்த்தியது. அவரை நான் பார்த்ததில்லை. ஆனால் திடீரென்று வேண்டிய ஒருவரை இழந்ததுபோல் உணர்கிறேன். அந்தக்கவிதை அவரை அவ்வளவு அணுக்கமானவராக ஆக்கிவிட்டது. அந்தக் கவிதையை அவருடைய நோய் மற்றும் சாவின் பின்னணியில் வாசித்தபோது அதில் இருந்த நையாண்டியும் போட்டோவிலிருந்த அவருடைய சிரிப்பும் எல்லாம்சேர்ந்து அவரை மிகமிக வேண்டியவராக ஆக்கிவிட்டன.
ராமச்சந்திரன் எம்.ஆர்.
டி.பி.ராஜீவனின் இறுதிக் கவிதை அஞ்சலி, டி.பி.ராஜீவன்தீராநதி கட்டுரை
ஆசிரியர் ஜெயமோகன் அவர்களின் அறுபதாவது பிறந்தநாள் கொண்டாட்டாத்திற்காக நடைபெற்ற நிகழ்வினை குறித்த கட்டுரை தீராநதி இதழில் வெளியாகி உள்ளது இன்று.
அருள்செல்வன் அண்ணன் எழுதியுள்ள இந்த கட்டுரையில், ஜெயமோகன் அவர்கள் குறித்த பல்வேறு ஆளுமைகளின் மன ஓட்டங்களையும் பதிவு செய்துள்ளனர்.மிக எளிய வாசகனான எனது வார்த்தைகளும் இதில் வெளியாகி இருப்பது மகிழ்ச்சி..
அந்த நாளில் அத்தனை ஆளுமைகள் புடைசூழ கோவையில் நிகழ்வு நடைபெற்றது. வழக்கமாக கலந்து கொள்ளும் எந்த ஒன்றிலும் கலந்து கொள்ளாமல் யாரையும் சந்திக்காமல் வரும் நண்பர்களை வரவேற்பது அவர்களுக்கு தங்குமிடம் ஏற்பாடு செய்து அளிப்பதில் மட்டுமே செய்தேன்,ஆனால் அதனை பூரணமாக செய்தேன்.
எங்கோ தொலை தூரத்தில் இருந்து மனிதர்கள் அந்த நாளில் வந்து சேர்ந்து கொண்டே இருந்தனர். இளையோர்,மூத்தோர், குடும்பத்துடன் வந்திருந்த நண்பர்கள் எல்லோரின் முகம் பார்த்தே மகிழ்ந்து கொண்டு இருந்தேன்.பல்வேறு சூழல்கள் தாண்டி அந்த நிகழ்வில் வந்து கலந்து கொண்டவர்கள் முகத்தில் அத்தனை நிறைவையும் உற்சாகத்தையும் கண்டு கொண்டேன்.
இடைப்பட்ட நேரத்தில் வாய்ப்பு கிடைத்த எல்லோரிடத்திலும் சார் எப்படி உங்களுக்கு பழக்கம் எப்ப வாசிக்க துவங்கினிங்க இப்ப என்ன வாசித்து கொண்டு உள்ளிர்கள் என்று கேட்டு அறிந்து கொண்டேன்.எழுத்து எத்தனை மனிதர்களுக்கு ஆசுவாசம் அளிக்கிறது இந்த அதிவேக யுகத்திலும் என்று அறிந்து மனசுக்குள் வியந்து கொண்டு இருந்தேன்.
அரங்கில் நிகழ்வு முடிந்ததும் மீண்டும் காலை ஐந்து மணிக்கு எங்கு உட்கார்ந்து எல்லோருக்கும் அறை சாவி கொடுத்தேனே அங்கேயே போய் உட்கார்ந்து அந்த சிரித்த நிறைவான அன்றாடத்தின் சிடுக்குகள் தாண்டி வாழ்வு மீ்து நம்பிக்கை கொண்ட மனிதர்களின் முகம் பார்த்து கொண்டே இருந்தேன்…
அம்மாவையும் தற்போது அன்னையின் வடிவமான அருண் மொழி அக்காவையும் சொல்லி விட்டு தனது ஆசிரியர்களுக்கு இந்த வாழ்த்துக்கள் எல்லாவற்றையும் ஜெயமோகன் சமர்ப்பணம் செய்து விடைபெற்று கொண்டார். ஒரே வருத்தம் வண்ணதாசன் அய்யாவை பார்க்க முடியாமல் போனது தான்.
நான் மிகவும் நேசிக்கும் இயக்குனர் சீனு ராமசாமி அவர்களின் புகைப்படம் பக்கத்தில் என்னோட படமும் இந்த கட்டுரையில் வந்து இருப்பது மிகுந்த நிறைவு… அருள்செல்வன் அண்ணனுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்
ஸ்டாலின் பாலுச்சாமி
சியமந்தகம் வாங்க
November 3, 2022
டி.பி.ராஜீவனின் இறுதிக் கவிதை
டி.பி.ராஜீவன் எழுதிய இறுதிக் கவிதை இது. அவருடைய கவிதைகளில் எப்போதுமிருந்த அதே விடம்பனமும், ஆழமும் அமைந்த படைப்பு. இதை எழுதும்போது ராஜீவன் கடும் வலியில் இருந்தார். சிறுநீரகச் சுத்தி (டயாலிஸ்) செய்துகொள்வதென்பது கடுமையான வலியையும், சோர்வையும், விளைவான உளச்சலிப்பையும் அளிப்பது. அவருடைய கால் ஏற்கனவே பலமுறை வெட்டப்பட்டிருந்தமையால் நடமாட்டம் இல்லாமலாகிவிட்டிருந்தது.
நிதிச்சிக்கலும் இருந்தது. ராஜீவனின் குணம் அப்படிப்பட்டது. அவரால் ஆதிக்கம், ஆணை ஆகியவற்றை ஏற்கவியலாது. கோழிக்கோடு பல்கலையில் மக்கள் தொடர்பு அதிகாரியாக இருக்கையில் கல்லூரிகளை கையிலெடுத்துக்கொண்ட இடதுசாரிகளின் ஏதேச்சாதிகார மனநிலையை எதிர்த்தார். தனிநபராக அவர்களுடன் முட்டிக்கொள்வதென்பது அபாயகரமானது. தற்கொலைத்தனமான வீம்புடன் ராஜீவன் எதிர்த்து நின்றார். பணிநீக்கம் செய்யப்பட்டார். வழக்குகளை எதிர்கொண்டு நீதிமன்றம் சென்று வென்றார். ஆனால் திரும்ப பணிக்குச் சேர்ந்தபின்னரும் நீடிக்கவில்லை. அவர் மனைவியும் ஆசிரியை என்பதனால்தான் தாக்குப்பிடித்தார்.
ஓய்வுக்குப்பின் தன் சொந்த ஊரில், பாரம்பரியமான இல்லத்தில் குடியேறினார். ஆனால் சிறுநீரகச் சிக்கல் வந்தபின் அங்கிருந்து கோழிக்கோடு வந்து செல்வது கடினமாக ஆகியது. வீட்டை விற்கலாமென்றால் பழையபாணி வீட்டுக்கு உரிய விலை கிடைக்கவில்லை. சிகிழ்ச்சைக்கு மாதம் அறுபதாயிரம் வரை செலவு.
ராஜீவனுக்கு என் அறம் சிறுகதைகளின் ஆங்கில மொழியாக்கத்தை அனுப்பியிருந்தேன். அழைத்தபோது மலையாளத்தில் கிடைக்காத இரண்டு கதைகளை வாசித்துவிட்டிருந்தார். அதிலுள்ள காரி டேவிஸ் கதையை பாராட்டிப் பேசினார். சிகிழ்ச்சைக்கு நிதி திரட்டுவது சம்பந்தமாக சிலவற்றை கோரினார். ஆனால் வழக்கம்போல நையாண்டி, சிரிப்பு என்றே அவ்வுரையாடல் அமைந்திருந்தது. நான் அங்கே சென்று அவரை பார்ப்பதாகச் சொன்னேன். ”சீக்கிரம் வா. நான் பாஸ்போர்ட் எடுத்துவிட்டேன், விஸா வரப்போகிறது“ என்றார்.
சிரிப்புதான் ராஜீவன். எத்தனை இரவுகள் பகல்கள் சிரித்துச் சிரித்து நிறைத்திருப்போம். இறுதியாகப் பேசும்போது சொன்னார். ‘மலையாளத்தின் இன்றைய கவிதை வாசகர்கள் புதிய மொழியை கற்றுக்கொள்பவர்கள் போல இருக்கிறார்கள். அவர்கள் எல்லா போஸ்டர்களையும் போர்டுகளையும் வாசிப்பார்கள். எல்லாமே அவர்களை பரவசப்படுத்தும். ஏனென்றால் எல்லாவற்றையுமே அவர்களால் வாசிக்கமுடிவதே பெரிய விஷயம்”
ஓர் இளம்கவிஞரைப் பற்றி கேட்டேன். அவர் கவிதைகள் “ஸ்ரீமணிகண்டவிலாஸ் காபி சாப்பாடு ஓட்டல்” என்றார். இன்னொருவரைப் பற்றி கேட்டேன். “இங்கு சிறந்தமுறையில் தியானங்கள் பொடித்துக் கொடுக்கப்படும்” என்றார். ஒரு நகைச்சுவையை எங்கெங்கோ கொண்டுசெல்வார் ராஜீவன். தானியங்கள் என்பதை தியானங்கள் என ஆக்குவதுவழியாக அவர் உருவாக்கும் பகடிதான் அவர்.
எதையுமே சிரித்தபடி எடுத்துக்கொள்ளும் ஆளுமை அவர். தன்னியல்பான பணியாமை கொண்டவர். பணியாமலேயே அந்த இறுதிக்கணத்தையும் சந்தித்தார் என்பதற்கான சான்று ராஜீவனின் இந்த இறுதி நையாண்டி.
டி.பி.ராஜீவன்
பொதுமருத்துவமனையின்
தீவிரசிகிச்சைப்பிரிவில்
நேற்று
யமனின் மனைவி
தூமோர்ணையைச் சந்தித்தேன்
நம்பவே முடியவில்லை
கௌரவமான, நற்குடிப்பிறப்புள்ள,
அழகான
ஒரு பெண்மணி!
’சாகவைப்பதன் அறம்’
என்னும் தலைப்பில்
மசாசுசெட்ஸிலோ
ஹார்வார்டிலோ
ஆய்வு செய்யும் காலகட்டத்தில்
அறிமுகமாகி
திருமணம் செய்துகொண்டார்
யமதர்மனை.
இப்போது
தூக்குக் கயிறு கழுத்தில் சுற்றி
துடிப்பவர்களின்
நலனுக்காக
ஒரு என்.ஜி.ஓ நடத்துகிறார்.
தொண்டைநீர் இறங்காதவர்களுக்காக
ஒன்றோ இரண்டோ துளி குடிநீர்,
மூச்சு கிடைக்காமல் தவிப்பவர்களுக்காக
ஓருசில இழுப்புக்கான ஆக்ஸிஜன்,
அணுக்கமானவர்களை காணத்தவிப்பவர்களுக்கு
குறைந்தபட்சம் அவர்களின் சாயல்,
ஒன்றுமே பேசமுடியாதவர்களுக்காக
அவர்கள் உண்டுபண்ணும் சத்தங்களுக்கு
கேட்பவர்களுக்கு தோன்றும்
அர்த்தம்,
முதலியவை அளிப்பதுதான்
முதன்மையான சேவை.
எல்லா நாடுகளில் இருந்தும்
சேவைப்பணியாளர்களுண்டு.
அன்னிய நிதி தேவைக்கேற்ப
வந்துகொண்டிருக்கிறது.
ஆனாலென்ன,
இரவுணவுக்குப் பின்
தூங்கவேண்டுமென்றால்
அன்றாடம் கேட்டேயாகவேண்டும்
ஓர் எருமைக்கடாவின்
உறுமலை.
டி.பி.ராஜீவன் கவிதைகள்
குமுதம்
தமிழ் இதழியலில் குமுதம் ஒரு பாய்ச்சல். முன்னோக்கியது என்று சொல்லமுடியாது என விமர்சனம் உண்டு. அன்றுவரை வணிகக்கேளிக்கையை முதன்மையாக்கி வெளிவந்துகொண்டிருந்தாலும்கூட கலைமகள், ஆனந்தவிகடன், கல்கி போன்ற இதழ்கள் எல்லாமே இலட்சியவாதத்தையும் மரபான பண்பாட்டையும் கூடவே முன்வைத்தன. குமுதம் தன்னை முழுக்க முழுக்க கேளிக்கையிதழாக அறிவித்துக்கொண்டு விடுபட்ட இதழ்.
அத்துடன் மற்ற இதழ்களில் இல்லாத ஒரு நவீனத்தன்மை குமுதத்தில் இருந்தது. அந்த நவீனத்தன்மை முற்போக்கு கருத்துக்களாகவோ ஃபேஷன் ஆகவோ வெளிப்படவில்லை. ரசனையில் இருந்த நுண்ணிய அலட்சியமாக வெளிப்பட்டது. குமுதம் உருவாக்கிய அந்த நவீன அலட்சியபாவனையின் விஸ்வரூபமே சுஜாதா
குமுதம்
குமுதம் – தமிழ் விக்கி
விஷ்ணுபுரம் விருந்தினர்-4 , கார்த்திக் பாலசுப்ரமணியன்
விஷ்ணுபுரம் விருதுவிழா 2022 அரங்கில் வாசகர்களுடனான உரையாடலில் கார்த்திக் பாலசுப்ரமணியம் கலந்துகொள்கிறார். சில ஆண்டுகளுக்கு முன் அவர் எழுதிய தொடக்ககாலக் கதைகள் சில இந்த இணையதளத்தில் வெளியாகியிருக்கின்றன.
கார்த்திக் பாலசுப்ரமணியன்விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா
தற்கல்வியும் தத்துவமும்- கடிதங்கள்
அன்புள்ள ஜெ
தற்கல்வியும் தத்துவமும் ஓர் அருமையான கட்டுரை. பொதுவாக ஆன்மிக -தத்துவ நூல்களை தொடர்ச்சியாக வாசித்து தாங்கள் தத்துவ உச்சம் நோக்கிச் செல்வதாக எண்ணிக்கொண்டிருப்பவர்கள் இதை ஏற்கமாட்டார்கள். அவர்களே அந்த வாசிப்பின் எல்லையை புரிந்துகொண்டலஒழிய அவர்களால் வெளிவர முடியாது. நானும் அப்படித்தான் இருந்தேன். ஏனென்றால் அதை வாசிக்கும்போது அந்த ஆசிரியர் நம்மை, நம் நுண்ணுணர்வை அங்கீகரித்துவிட்டார் என்னும் பிரமை நமக்கு ஏற்படுகிறது. சரியான தத்துவக் கல்வியை அடைந்து, பிடரியில் நாலு அடிவிழுந்து, நம் ஆணவம் கலைந்த பிறகே நமக்கு உண்மை புரிகிறது. ஆனால் கலைந்தவர்களுக்கும் கலையும் நிலையில் உள்ளவர்களுக்கும் உதவியான கட்டுரை அது.
ராமச்சந்திரன்
*
அன்புள்ள ஜெ
நலமா?
தற்கல்வியும் தத்துவமும் நல்ல கட்டுரை. அதில் சத்சங்கம் – தத்துவக் கல்வி இரண்டுக்கும் இடையிலான வேறுபாடு சொல்லப்பட்டுள்ளதாகவே புரிந்துகொள்கிறேன். சத்சங்கம் நல்ல கருத்துக்களை அளிக்கிறது. மனநிறைவை அளிக்கிறது. ஆனால் அது தத்துவஞானம் அல்ல. தத்துவத்தை முறையாகவே கற்றுக்கொள்ளவேண்டும். கற்றுக்கொள்ளவேண்டுமா, தேவை உண்டா என்பது அவரவர் முடிவுசெய்யவேண்டியது.
ஆனந்த் ராஜ்
இந்து மெய்மை வாங்க
சைதன்யாவின் கட்டுரை -கடிதங்கள்
அன்புள்ள ஜெ
மானுட ஆற்றலுக்கு இருக்கும் ஆவேசத்தையும், உயிரியல் ஆன்மீகக் கேள்விகளையும் , அவற்றின் அத்தியாவசித்தையும் ஒருங்கே முன்வைத்திருக்கும் சிறந்த கட்டுரை. சைதன்யாவிற்கு வாழ்த்துகள்.
மலைச்சாமி அழகர்
*
அன்புள்ள மலைச்சாமி,
பெண்விடுதலை என்பது கல்விக்கான விடாயாகவே முதலில் உருவானது என்று அக்கட்டுரையிலிருந்து அறிந்தது எனக்கும் ஒரு செய்திதான்.
அதில் முக்கியமான அம்சம் என்பது விடுதலைக்குரலாக எழுந்த அன்னையிடமிருந்து புனைவாசிரியையான மகள் அடைந்த வேறுபாடு, அல்லது பின்னகர்வு, அல்லது சோர்வுதான். அந்த அவதானிப்பை முன்வைப்பதனால் அது ஒரு நல்ல கட்டுரை.
ஜெ
*
அன்புள்ள ஜெ
உங்கள் மகள் சைதன்யா கட்டுரையாளராக அறிமுகமாகியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. முதல்கட்டுரை என்று சொல்லமுடியாதபடி நேர்த்தியான செறிவான மொழி (உங்கள் பங்களிப்பு இருக்குமோ என்றும் தோன்றியது)
உங்கள் வீட்டில் இனி கட்டுரைகள் எழுத யாரும் இல்லை என நினைக்கிறேன். சைதன்யா தொடர்ந்து கட்டுரைகளையும் கதைகளையும் எழுதவேண்டுமென விரும்புகிறேன்
ஸ்ரீராம்
*
அன்புள்ள ஸ்ரீராம்,
சைதன்யாதான் எங்கள் வீட்டில் அதிகமாக இலக்கியம் வாசித்தவள், இலக்கியக் கோட்பாடுகளை முறையாகக் கற்றவள், வீட்டில் நடைபெறும் இலக்கிய விவாதங்களில் அறுதியாகப் பேசுபவள். அவளுக்கு இப்போதுதான் எழுதவேண்டுமென தோன்றியிருக்கிறது. முன்பு ஓர் அனுபவப்பதிவு எழுதியிருக்கிறாள். அதுவும் நல்ல கட்டுரைதான், புனைவுக்குரிய குறிப்பமைதி உடையது. (கிளென்மார்கன் ஒரு கடிதம் )
இக்கால இளைஞர்கள், குறிப்பாகப் பெண்கள், கொண்டிருக்கும் மனநிலை உங்களுக்கு தெரியாதென நினைக்கிறேன். அவர்களின் பார்வை, மொழிநடை எதிலும் நானல்ல எவரும் ஒரு துளிகூட சேர்க்கமுடியாது. விவாதிக்க மட்டுமே முடியும். அதுவும் பிரசுரிக்கப்பட்ட பின். அவர்களிடம் ஒரு irreverence உள்ளது. அது ’பேக்கேஜில்’ ஒரு பகுதி. ஒன்றும் செய்யமுடியாது.
ஜெ
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 842 followers

