Jeyamohan's Blog, page 686

November 6, 2022

ராஜராஜனின் தாடி

அன்புள்ள ஜெ

இதை உங்களிடம் கேட்பதற்கு கொஞ்சம் தயக்கம்தான். ஆனால் இந்தத் தளம் எல்லாவற்றையும் பேசுவதற்குரியதாக உள்ளது என்பதனால் இதைக் கேட்கிறேன். ராஜராஜ சோழன் தாடி மீசை இல்லாதவராகத்தான் சிற்பங்களில் இருக்கிறார். ஆனால் பொன்னியின் செல்வனில் அரசகுடியினர் எல்லாருமே ஏன் தாடியுடன் இருக்கிறார்கள்? இன்றைய ஃபேஷனை அவர்கள்மேல் திணித்ததுபோல தோன்றவில்லையா?

சாந்தகுமார்

*

அன்புள்ள சாந்தகுமார்,

சோழர்களின் வரலாறு உள்ளிட்ட எல்லாவற்றையும் இதேபோல சாதாரணமான ஒரு சினிமா சார்ந்த ஐயத்தில் இருந்து தொடங்கி மேலே பேசுவதற்குத்தான் இங்கே வாய்ப்பு அமைகிறது. ஆகவே வேறு வழி இல்லை.

முதலில் நாம் தெரிந்துகொள்ளவேண்டியது இந்தியச் சிற்பவியலில் ‘யதார்த்தவாதம்’ இல்லை என்பது. உள்ளது உள்ளபடி காட்டும் வழக்கம் இங்கில்லை. அதாவது நம் சிலைகள் புகைப்படங்கள் அல்ல. ஆனந்த குமாரசாமி உட்பட பலர் இதை விரிவாக எழுதியுள்ளனர். நானும் இத்தளத்தில் பேசியிருக்கிறேன்.

நம் சிற்பக்கலை சாமுத்ரிகா இலக்கணம் கொண்டது. ஸ- முத்ரா என்றால், முத்திரைகளால் அதாவது அடையாளங்களால் ஆனது என்று பொருள்.அந்த அடையாளங்கள் வெவ்வேறு குணங்களின் வெளிப்பாடுகள் மட்டுமே. சத்வகுணம், ரஜோகுணம், தமோ குணம் என குணங்கள் அடிப்படையில் மூன்று.

ஆகவே வெவ்வேறு அக இயல்புகளின்படியே முகங்கள், தோற்றங்கள், அணிகள் ஆகியவை அமையும். அவர்கள் எப்படி இருந்தனர், என்ன அணிந்திருந்தனர் என்பதற்கான நேரடியான பதிவாக அமையாது.

இதைப்புரிந்துகொள்ளுதல் மிக எளிது. சிற்ப இலக்கணம்தான் இன்றும் ஆடப்படும் நம் செவ்வியல் கலைகளிலுள்ள அணிகள், வேடம் ஆகியவற்றின் இலக்கணமும்.

நம் சிற்ப இலக்கணப்படி தாடி என்பது தீட்சையின் அடையாளம். ஆகவே தீட்சை எடுத்துக்கொண்டவர்களுக்குத்தான் பெரும்பாலும் தாடி இருக்கும். துறவிகள் ஞானிகளுக்கு உரியது தாடி.

ஆனால் அர்ஜுனனுக்கு தாடி உண்டு. கர்ணனுக்கு தாடி இல்லை. அதன்பொருள் அர்ஜுனன் தாடி வளர்த்தியிருந்தான், கர்ணன் தினசரி சவரம் செய்துகொண்டான் என்பது அல்ல. அர்ஜுனன் யோகி என்பதுதான்.

நம் சிற்பங்களில் முகத்திலும் உடம்பிலுமுள்ள தசைகளின் நேரடியான பதிவு இல்லை என்பதை நீங்கள் கவனித்திருக்கலாம். அவை மிக அரிதாக குறவன் போன்ற சிற்பங்களிலேயே உள்ளன. தெய்வமுகங்கள், தெய்வத்தன்மை கொண்ட முகங்களில் அவற்றை வடிக்க தடை உள்ளது.

சிற்பமுகங்கள் அந்த ஆளுமை எந்த குணம் கொண்டவரோ அந்த குணத்தை வெளிப்படுத்தும்படி அமைக்கப்படும். அதாவது சத்வ குணம் வெளிப்படுவதற்கு ஒருவகை முத்திரைகள் உண்டு. ரஜோ குணமும் தமோ குணமும் வெளிப்படுவதற்கு அவற்றுக்குரிய அமைப்புகள் உண்டு. இக்குணங்களின் கலப்புக்கும் அதற்கான அமைப்புகள் உண்டு. அந்த முத்திரைகளே வெளிப்படும்.

சத்வ குணம் (நேர்நிலை குணம், சாந்தமும் கருணையும் கொண்டது) வெளிப்படும் முகத்தில் நீண்ட விழிகள், இணையான நேரான புருவங்கள், நேரான கூர்மூக்கு, சிறிய உதடுகள், குவிந்த கன்னங்கள் என முத்திரைகள் அமைந்திருக்கும். அதாவது எல்லா இலக்கணங்களும் மிதமாகவும் ஒத்திசைவுடனும் இருக்கும். ஆகவே பொதுவாக சத்வகுணமுள்ள சிலைகளில் பெண்மைச்சாயலும் இருக்கும். உறுதியான தசைகள் இருக்காது.

முகத்தின் தசைகள், நரம்புகளின் நுண்விவரிப்பு இல்லையென்றாலே உண்மையான முகத்தோற்றம் வெளிப்படாது. தஞ்சையிலுள்ள ராஜராஜசோழன் சிலை என்று பரவலாகச் சொல்லப்படும் சிலையை பாருங்கள். அந்த முகம் அப்படியே விஷ்ணுசிலைகளில் உள்ளதுதான். ராமன் கிருஷ்ணன் எல்லாமே அந்த முகம்தான். மணிமுடி அணிந்த புத்தர்சிலை என்றும் அதைச் சொல்லிவிடலாம் இல்லையா?

அதில் முகவாய் கோடுகள் உள்ளனவா? அதன் விழிகளையும் புருவங்களையும் பாருங்கள். அந்த உடல் பெண்ணின் உடல்போல மென்மையும் குழைவும் கொண்டதாகவே உள்ளது இல்லையா? அதுவா பேரரசரின் உண்மையான வடிவம்?

அரசன் என்றாலும் சத்வ குணம் (பக்தி, பணிவு) வெளிப்படும்படி இச்சிலை உள்ளது. உடலமைப்பும் சாமுத்ரிகா இலக்கணப்படித்தான் அமைந்துள்ளது. ஆகவே முதுமை, தசைகளின் தளர்வு, வடுக்கள் எவையும் இருக்காது. தசைகளின் முறுக்கமும் இருக்காது.

(மிகப்பிற்காலத்தில் நாயக்கர் காலச் சிலைகளில்தான் இந்த இலக்கணங்கள் மீறப்பட்டு ஓரளவுக்கு நேர்த்தோற்றம் சிலைகளில் வரத்தொடங்கியது. திருமலைநாயக்கர் தொப்பையுடன் இருப்பதை காணலாம்)

ஆகவே அச்சிலைகளும் ஓவியங்களுமே யதார்த்தமான ராஜராஜன், அவரை அப்படியே காட்டவேண்டும் என இந்திய மரபை அறிந்தோர் சொல்ல மாட்டார்கள். இந்திய மரபை அறிந்தோருக்கு இன்னொன்றும் தெரிந்திருக்கும். அன்றாடம் சவரம் செய்துகொள்வது இந்திய ஆசாரங்களின்படி அனுமதிக்கப்படவில்லை. பௌர்ணமி தோறும் சவரம் செய்வதுதான் மரபு. (இளையராஜா அந்த ஆசாரத்தைத்தான் இன்றும் கடைப்பிடிக்கிறார்)

புகைப்படங்கள் வரத்தொடங்கிய பின் பதிவான பிற்கால மன்னர்கள் பெரும்பாலானவர்கள் ஒருமாதத் தாடியுடன் இருப்பதைக் காணலாம். ஆகவே சோழர்களுக்கும் அப்படி தாடி இருந்திருக்கலாமென உருவகித்துக்கொள்வதில் பிழையேதுமில்லை.

உண்மையில் சோழர்காலத்தில் ஆண்கள் கூந்தலை வெட்டுவதே இல்லை. பின்னாலும் பக்கவாட்டிலும் மிகப்பெரிய கொண்டைகள் வைத்திருப்பதையே சிற்பங்கள் காட்டுகின்றன. அக்காலத்தைய போர்களில் தலைக்கவசம், முகக்கவசம் இருந்ததா என ஒரு விவாதம் பொன்னியின் செல்வன் தயாரிப்பின்போது நடந்தது. தலைக்கவசம் கண்ணுக்கு படவில்லை. தலைக்கவசமாக இருந்தவை பெரிய கொண்டைகள்தான். அவை வாள்வெட்டு தாங்குபவை.

அக்கொண்டைகளை அப்படியே இன்றைய சினிமாவில் காட்டினால் கேலிக்குரியதாக ஆகிவிடும். (நிறைய படங்கள் வந்து பழகிவிட்டால் அப்படி தோன்றாமலும் ஆகும். சீனாவில் ஆண்கள் போட்டிருந்த நீண்ட பின்னல்கள் எவருக்கும் கேலிக்குரியதாக தெரியவில்லை) ஆகவே காகபட்சம் (காக்கையிறகு) என்று வடக்கே காவியங்கள் சொல்லும் கூந்தல்முறையே ஆண்களுக்கு இருக்கலாமென முடிவு செய்யப்பட்டது (ஆராய்ச்சி செய்து எழுதுபவரான சாண்டில்யனும் தமிழக அரசர்களை எழுதும்போது காகபட்ச கூந்தல் இருந்ததாகவே எழுதுகிறார்)

இத்தகைய பல புரிதல்கள், பல சுதந்திரங்கள் வழியாகவே கதைமாந்தர் உருவகம் செய்யப்பட்டுள்ளனர்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 06, 2022 10:35

விஷ்ணுபுரம் விருந்தினர்-7, குளச்சல் மு.யூசுப்

குளச்சல் மு.யூசுப் 2022 விஷ்ணுபுரம் விருதுவழங்கும் விழாவில் வாசகர்களைச் சந்திப்பவர்களில் ஒருவர். யூசுப் மொழியாக்கம் செய்த முதல் நாவல் புனத்தில் குஞ்ஞப்துல்லா எழுதிய ஸ்மாரக சிலகள் (தமிழில் மீசான் கற்கள்). முதல் விஷ்ணுபுரம் விழாவில் 2011ல் புனத்தில் இக்கா கலந்துகொண்டார். பதிமூன்றாவது விழாவில் யூசுப் கலந்துகொள்கிறார்

குளச்சல் மு.யூசுப் – தமிழ் விக்கி

விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி  

விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6,  கமலதேவி 

விஷ்ணுபுரம் விருந்தினர்- 6,விஜயா வேலாயுதம்  

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 06, 2022 10:34

வைக்கம் முகமது பஷீர்

தமிழ் விக்கியில் இந்திய எழுத்தாளர்களைப் பற்றிய பதிவுகள் தேவையா என்னும் கேள்வி எழுந்தது. எல்லையை வகுத்துக்கொண்டுதான் ஆரம்பித்தோம். வெளியே செல்வது தேவைக்குமேல் விரிவதாக ஆகும். ஆனால் பஷீர் கிட்டத்தட்ட ஒரு தமிழ் படைப்பாளியாக ஆகிவிட்டவர். பஷீரின் நூல்கள் மட்டுமல்ல பஷீர் பற்றிய எழுத்துக்களே தமிழில் ஏராளமாக உள்ளன

வைக்கம் முகமது பஷீர் வைக்கம் முகமது பஷீர் வைக்கம் முகமது பஷீர் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 06, 2022 10:34

ஆ.ராசா, ஸ்டாலின், ராஜராஜசோழன்- கடிதம்

அன்புள்ள ஜெ,

சில நாட்களுக்கு முன் ஆ.ராசா ராஜராஜ சோழன் வெறிபிடித்த சாதி ஆதிக்கவாதி, தமிழகத்தில் பார்ப்பனியம் வேரூன்ற காரணமாக அமைந்தவன், தமிழ் விரோதி என்றெல்லாம் கடுமையாக விமர்சனம் செய்திருந்தார். அப்போது இணையத்தில் அதை ஆதரித்து ஏராளமானவர்கள் எழுதியிருந்தார்கள். நான் தனிப்பட்ட முறையில் பார்த்தபோது அவர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் மதவெறிக்கு அரசியல் சாயம் பூசிக்கொண்டு முன்வைப்பவர்கள்.

இப்போது தமிழக அரசு ராஜராஜனின் பிறந்த நாளை அரசுவிழாவாகக் கொண்டாடும் என அறிவித்திருக்கிறது. ராஜராஜன் தமிழர்களின் அடையாளம் என சொல்கிறது. இது பொன்னியின் செல்வன் படத்தின் மாபெரும் வெற்றியின் அடையாளம். இந்த ஆண்டு சதய விழாவுக்கு மக்கள் சாரிசாரியாகக் கிளம்பிச் செல்கிறார்கள். நானும் இரண்டு நாட்களாக பார்க்கிறேன். எந்த திமுக ஆளும் வாய் திறந்து முதல்வரை எதிர்க்கவில்லை. அ.ராசா சொன்னதுதான் சரி என்று சொல்லவில்லை.

இவர்களெல்லாம் முகநூலில் கொள்கைக்குன்றுகளாக வேஷம் போட்டுக்கொள்பவர்கள். திமுகவின் எதிரி என இவர்களே எவரையாவது லேபில் செய்துவிட்டால் அதன்பிறகு அவருடன் எவரும் அன்னம் தண்ணி புழங்கக்கூடாது என்று சொல்பவர்கள். சரி, ஆ.ராசா ஸ்டாலினின் முடிவைப்பற்றி என்ன சொல்கிறார்? அதுவும் மௌனம்தான்.

இங்கே நடக்கும் இந்த வம்புகளின் அரசியலைக் கூர்ந்து பார்க்க வேண்டும். ஆதித்த கரிகாலனை கொன்றது பிராமணர்கள் என்பதைச் சொல்லிக்கொண்டே இருப்பவர்களுடைய உள்நோக்கம் என்ன? ராஜராஜசோழனும் அக்கொலைக்கு உடந்தை என்று காட்டி, அவருடைய புகழை அழிப்பதுதான். அது தமிழருக்கு எதிரான மனநிலைதான். இது ஒரு நீண்டகாலச் சதி. ’ராஜராஜ சோழன் பிராமண் ஆதரவாளன். அவனுக்காக அவனுடைய அண்ணனை பிராமணர்கள் கொன்றனர். அவன் அவர்களை விடுவித்தான்’ – இதுதான் நமது மாமன்னனைப் பற்றி இவர்கள் கட்டிவிடும் கதை.

ராஜராஜன் கல்வெட்டு வழியாகவே நமக்கு ஆதித்த கரிகாலனின் கொலை  தெரியவருகிறது. இந்தக்கொலைக்கு பாண்டியநாட்டு ஆதரவாளர்களான பிராமணர்கள் உள்ளிட்ட ஒரு குழு காரணமாக இருந்திருக்கலாம். அன்றெல்லாம் பிராமணர்களுக்கே எங்கும் செல்லும் உரிமை இருந்தது. ஆகவே அவர்கள் கொலைக்கு உதவியிருக்கலாம். அதற்கு அவர்கள் பாண்டிய நாட்டின்மேல் கொண்ட பற்றும், மறைந்த பாண்டிய அரசன்மீதான விசுவாசமும் காரணமாக இருந்திருக்கலாம்.

அன்று தமிழகம் என்ற எண்ணம் இல்லை. சோழர்களுக்கு பாண்டியர்கள் அன்னிய நாடுதான். அன்றைக்கு பாண்டியநாட்டில் இருந்து வேறெந்த சாதியும் சோழநாட்டுக்குள் குடியேற முடியாது. வேளாண் குடிகளும் போர்க் குடிகளும் மண்ணில் வேரூன்றியவர்கள். மண்சார்ந்த அடையாளம் கொண்டவர்கள். அன்றைக்கு எவருமறியாமல் பாண்டியநாட்டு பிரஜைகள் சோழநாட்டுக்குள் செல்லமுடியாது. வெவ்வேறு ஊர்களுக்குச் சென்றுகொண்டிருந்தவர்கள் பிராமணர்கள்தான். ஆகவே பாண்டிய நாட்டிலிருந்து ஒரு குழுவை சோழநாட்டுக்கு அனுப்பி பகைமுடிப்பது என்றால் பிராமணர்களையே அனுப்பமுடியும்.

இந்த விஷயம் இந்தியா முழுக்கவும் இருந்தது. இந்தியா முழுக்க உளவறிதல் பிராமணர்கள் அல்லது பிராமணர்களாக வேஷம்போட்டவர்களைக் கொண்டுதான் செய்யப்பட்டது. அல்லது சாமியார் வேஷம் போடவேண்டும். சுதந்திரப்போராட்ட காலம் வரைக்கும்கூட இதுதான் நடந்தது. அயலூரில் இருந்து ஒருவர் குடிபெயர்ந்து வந்தால் பிராமணர்கள் என்றால் மட்டுமே சந்தேகம் வராது. பிராமணர்களிலேயே வேள்விகள் செய்யாத பிராமணர்கள் உண்டு. போர் புரியும் பிராமணர்கள் உண்டு. அவர்களை வேளாப்பார்ப்பார் என பழைய நூல்கள் சொல்கின்றன.

அப்படி ஒரு பிராமணக்குழுவுக்கு ஆதித்த கரிகாலன் கொலையில் தொடர்பு உண்டு என்று பின்னாளில் கண்டடையப்பட்டிருக்கலாம். அதுவும் வெறும் சந்தேகமாகவே இருந்திருக்கலாம். ஓரிரு சான்றுகள் கிடைத்திருக்கலாம். அன்று பிராமணர்களை அரசன் கொல்ல முடியாது. அது அரசர்கள் காட்டிய பாகுபாடு அல்ல. மக்களின் நம்பிக்கை. பிராமணர்களை கொன்றால் மழை பெய்யாது என்னும் எண்ணம் இருந்தது. பிரம்மஹத்தி பாவம் வரும் என்று நம்பினர்.  ஆகவே ஆதித்த கரிகாலன் கொலையில் சம்பந்தமுள்ளவர்கள் நாடுகடத்தப்பட்டனர். இருநூறு வருடம் முன்புகூட தமிழகத்தில் அதுதான் நடைமுறை.(வைசியர்களும் தண்டனையாகக் கொல்லப்படவில்லை. அவர்களின் சொத்துக்கள் பிடுங்கப்பட்டன. அதை அர்த்தசாஸ்திரம் சொல்கிறது. அதை அரசியல்வாதிகல் எவரும் சொல்வதில்லை)

கேரளத்திலும் இந்த நாடுகடத்தல் தண்டனைதான் பிராமணர்களுக்கு அளிக்கப்பட்டது. அதைப்பற்றி அ.கா.பெருமாள் எழுதியிருக்கிறார். நாடுகடத்தப்படும் பிராமணர்கள் புழுக்கப் பிராமணர் என அழைக்கப்பட்டனர். அவர்களின் நெற்றியில் பழுக்கக் காய்ச்சிய இரும்பால் புழுக்கப் பிராமணர் என்ற முத்திரை குத்தி நாடுகடத்தப் படுவார்கள். ஆனால் இது பிராமணர்களுக்குக் கொடுமையான தண்டனை. இதை அஞ்சி தற்கொலை செய்வதுண்டு. அப்படி சுசீந்திரம் கோயிலில் ஒரு நம்பூதிரி தற்கொலை செய்துகொண்டார். அதன் பிறகுதான் சுவாதித் திருநாள் மகாராஜா அந்த தண்டனையை ரத்துசெய்தார். ஏனென்றால் புழுக்கப் பிராமணனுக்கு எந்த பிராமண அதிகாரமும் அடையாளமும் இல்லை. அவனை அடிமையாகப் பிடிக்கலாம். விற்கலாம். உடனே அவன் அடிமையாக ஆகிவிடுவான். இதெல்லாம்தான் சரித்திரம். இதெல்லாமே புத்தகங்களில் உள்ளது.

இது எதுவும் தெரியாமல் ஒரு கூட்டம் முகநூலில் ராஜராஜசோழன்தான் ஆள்வைத்து ஆதித்தகரிகாலனைக் கொன்றிருக்கலாம் என்ற அளவுக்கு புகையை கிளப்பிக்கொண்டே இருந்தது. அப்பட்டமான தமிழர் வரலாறுத் திரிப்பு. தமிழர்மேல் காழ்ப்பு.

தமிழ்வரலாற்றை உலகமெங்கும் கொண்டுசென்று சேர்த்த பொன்னியின் செல்வன் சினிமா பற்றி எவ்வளவு காழ்ப்பு கக்கப்பட்டது. எத்தனை அவதூறுகள். எவ்வளவு திரிப்புகள். பலபேருக்கு ராஜராஜன் என்றாலே எரிந்தது. அது உண்மையான வரலாறு அல்ல, கல்கி பொய் சொல்கிறார், ராஜராஜசோழன் சாதிவெறியன் கொலைகாரன் என்று கத்திக்கொண்டே இருந்தார்கள்.

இன்றைக்கு அவர்கள் எல்லாம் வாயைப்பொத்திவிட்டார்கள். தமிழக முதல்வருக்கு நன்றி.

ஆர். சிவசண்முகபாண்டியன்

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 06, 2022 10:32

தத்துவம், மதம் – கடிதம்

இந்துமதத்தின் அரசியல்

இந்து என உணர்தல்

இந்து வெறுப்பை எதிர்கொள்வது

இந்து மதம், இந்திய தேசியம்

இந்து மதம் என ஒன்று உண்டா?-3

இந்து மதம் என ஒன்று உண்டா?- 2

இந்து மதம் என ஒன்று உண்டா?-1

வணக்கம் ஜெ

சமீபத்தில் நீங்கள் எழுதிய தத்துவம் மற்றும் மதம் பற்றிய கட்டுரைகள் மிக முக்கியமானவை. சூரிய ஒளியை வில்லையின் மூலம் குவிப்பதுபோல் உங்களின் வாழ்வனுபவங்கள் பயணங்கள்வழி அறிதல்கள் அனைத்தையும் கூர்மையாக கொண்டுள்ள எழுத்து.

வேதகாலத்தின் யஞ்னங்களிலிருந்து உபநிஷத காலத்தின் தத்துவம், இவற்றின் ஊடாக, பல சமயம் ஊற்றாக இருக்கும் நாட்டார் பண்பாடு- இங்கிருந்து ஒருவன் பயணிக்கதொடங்கினால் அவன் ஒரு ஒட்டுமொத்த காட்சியை காணமுடியும்.

ஒரு சராசரி மேற்கத்தியன் போலவே இன்று ஒரு இந்தியனும் கடவுள் என்றால் தாடி வைத்த ஒரு கிழவர், மேகங்களில் வசிப்பவர், உலகை சமைத்தவர் என சொல்லக்கூடும். அதன் காரணம் நூற்றாண்டுகளாக நமக்கு அளிக்கப்பட்ட கல்வி முறை. மேற்கில் படைத்தவனே இறைவன், அவன் ஒருவன், அவனையே வணங்குவோம் என்ற ஆபிரகாம மதங்களை போல் அல்லாமல், நம்மிடம் ஒரு சட்டமிடப்பட்ட உருவகம் கிடையாது. ரிக்வேதத்தில் கூட ஒரு திட்டவட்ட காஸ்மோகோனி தரப்படவில்லை, அதுவே அறியும் அல்லது அதுவும் அறியாது என்றே சிருஷ்டி கீதம் சொல்கிறது. படைத்தவனே இறைவன் என்றால் பிரம்மனை வழிபடுபவர் இன்று ஏன் யாருமில்லை என நம்மில் ஒருவன் கேட்டால் அவனை கண்டிக்க பலர் உண்டு, கற்பிக்க சிலரே. ஒரு குழந்தைக்கு இதை விளங்க வைக்க பெற்றோருக்கு இந்நுட்பம் விளங்கியிருக்கவேண்டும்.

அனைத்து வழிபாடுகளையும் கடவுள்களையும் தத்துவங்களையும் இணைத்து பெருகி செல்லும் நதி இது, மானுட அறிவின் ஒற்றை பெரு வெளியின் தரிசனங்களின் குறியீடுகள் இவை. நீங்கள் பலமுறை கூறுவதுபோல் ஒரு பொற்பட்டு நூல்.

மேற்கில் உள்ள மதங்கள் இன்று பெரும்பாலும் ஒரு சமூக கட்டமைப்பாக மட்டுமே உள்ளன. அவற்றில் ஒருவன் அவன் அக தேடலையும் அறிவையும் பெற பல தடைகளை தாண்டி வர வேண்டும். சிலர் அவ்வாறான ஒரு அக வாழ்க்கை பற்றிய சிறு சிந்தனை கூட இல்லாமல் ஆனால் தீவிர கடவுள் மத பற்று உடையவராக இருக்க முடியும். தினம் அவன் மதம் அளிக்கும் நூல்களை படித்து அதன்படி ஒரு சீரான வாழ்கையை வாழ முடியும். இந்து மதம் அவ்வாறான மூல நூல்களை வழங்குவதில்லை. அதன் அறிவு அக அனுபவத்தால் பெறப்படுவது. அவ்வறிவை அடைந்தவர்களையே ரிஷிகள் என அழைத்தனர். அக அனுபவங்களுக்கு உதவுபவை செவி வழியாக அறிந்தவை. அது ஒவ்வொரு மாணவனுக்கேற்ப ஆசிரியனால் அளிக்கப்படுவது. மேற்கின் நாஸ்டிக் மதங்கள் இந்து, பௌத்த அம்சங்களை சில இடங்களில் கொண்டிருந்தாலும் அவற்றை அதற்கான ஆசிரியர்கள் மூலம் தன்னளவிலேயே புரிந்து கொள்ள வேண்டும். மேற்கின் தத்துவ மத அடிப்படைகளை கொண்டு நம் மரபை விளக்கிக் கொள்ள முயல்வது கண்ணை கட்டிக்கொண்டு யானையை கையால் அறிவதுபோல தான்.

இக்கட்டுரைகள் விரித்தளிக்கும் பாதைகள் பல, அவை ஒளி நிரம்பியவை. நன்றி.

ஸ்ரீராம்

தற்கல்வியும் தத்துவமும்-5

தற்கல்வியும் தத்துவமும்-1

தற்கல்வியும் தத்துவமும்-2

தற்கல்வியும் தத்துவமும்-3

தற்கல்வியும் தத்துவமும்- 4

அன்புள்ள ஸ்ரீராம்,

நீங்கள் குறிப்பிடுவது உண்மை. இன்றைய சூழலில் தமிழில் மெய்யியல் பற்றிப் பேசுவதென்பது ஏற்கனவே இருக்கும் பல கருத்தியல் உறைநிலைகளை உடைத்து, அகற்றி, அதன் விளைவாக கிடைக்கும் சிறிய இடத்தில் நம் கருத்துக்களை வைப்பதாகவே இருக்கிறது. ஒரு மாபெரும் ‘கல்வி அழித்தல்’ நிகழாமல் இங்கே எதையும் கற்கமுடிவதில்லை. இந்து, இந்திய மெய்யியலை விரும்பிக் கற்பவர்கள், அவற்றை முழுமையாக நிராகரிப்பவர்கள் என இரு சாராருமே அத்தகைய பிழையான கல்வியை அடைந்து, முற்றிலும் தவறான உறுதிப்பாடுகளுடனேயே இருக்கிறார்கள். விடாப்பிடியாக ஒன்றைச் செய்வதற்கு ஒரு விளைவு காலப்போக்கில் உருவாகும் என நான் நம்புகிறேன். ஆகவே இதைச் சொல்லிக்கொண்டே இருக்கிறேன். அத்தனை திரிப்புகள், திசைமாற்றல்களைக் கடந்து சிலர் வந்துகொண்டும் இருக்கிறார்கள்.

ஜெ

ஜெயமோகன் நூல்கள்

இந்து மெய்மை வாங்க

ஆலயம் எவருடையது? வாங்கஇந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் வாங்க
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 06, 2022 10:30

November 5, 2022

இரண்டு நாட்கள்

தூக்கம் பற்றி எழுதியது ‘கண்பட்டிருக்கும்’ போல. இரண்டுநாட்களாகச் சரியாக தூக்கமில்லை. இரவு பன்னிரண்டு மணிக்கு படுப்பேன். ஒரு மணி நேரம் தூக்கம். விழித்துக்கொள்வேன். பின்னர் விடியற்காலை வரை தூக்கமில்லை.

நான் தூக்கம் விழித்துக்கொண்டால் உடனே எழுந்துகொள்வேன். எதையாவது எழுதவோ படிக்கவோ தொடங்குவேன். தொடர்ச்சியாக ஏதேதோ படித்து தள்ளினேன். பெரும்பாலும் வேதாந்த நூல்கள். முனி நாராயணப் பிரசாத் எழுதியவை.

ராஜீவனின் நினைவுகள்தான் காரணம். அவருடைய சாவு என்னால் பதினைந்து நாட்களுக்கும் மேலாக எதிர்பார்க்கப்பட்டதுதான். உண்மையில் அது விடுதலை. அவர் தொடர்ந்து அவஸ்தைப் பட்டுக்கொண்டிருந்தார். சாவை எவ்வகையிலும் அஞ்சவுமில்லை. சிகிழ்ச்சை செய்து பார்ப்போம், சரியானால் நல்லது என்னும் மனநிலைதான் இருந்தது.

ஆகவே சாவுச்செய்தி பெரிதாக ஒன்றும் செய்யவில்லை. நவம்பர் 2 ஆம் தேதி மாலை கே.சி.நாராயணன் வீட்டுக்கு வந்திருந்தார். நீண்டநாளாயிற்று அவர் இங்கே வந்து. என்னுடன் இரண்டுநாட்கள் இருக்கவேண்டும் என்று சொன்னார். பரசுராம் எக்ஸ்பிரஸில் மாலை எட்டு மணிக்கு வந்தார். அவரை ரயில்நிலையம் சென்று அழைத்துவந்தேன்.

அவருடன் சாப்பிட்டு பேசிச் சிரித்துக் கொண்டிருக்கும்போதே பலர் அனுப்பிய செய்திகள் வந்துகொண்டிருந்தன. ராஜீவன் நிலை மோசமாகிக்கொண்டே இருந்தது. இரவு 10 மணிக்கு செய்தி வந்தது. அதை கே.சி.நாராயணனிடம் சொல்லவில்லை. அவர் தூங்கச் சென்றுவிட்டார்.

கே.சி.நாராயணன் இருந்தமையால் அச்செய்தியை கடக்க முடிந்தது. அவருடன் 3 ஆம் தேதி திருக்கணங்குடி (திருக்குறுங்குடி) ஆலயம் சென்றுவந்தேன். அங்கே எங்களைத் தவிர எவருமில்லை . மழையின் ஈரமும் இருட்டும் நிறைந்த கல்மண்டபங்களில் அலைந்தோம். ஈரம் பரவிய ஒளியால் மூடப்பட்ட குளத்தையும் ஒற்றைப்பனைமரத்தின் தனிமைத்தவத்தையும் பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தோம்.

நான்காம் தேதி கே.சி.நாராயணனுடன் சுசீந்திரம் சென்று வந்தேன்.   சுசீந்தீரம் பரபரப்பான ஆலயம். நகருக்கு அண்மையில் இருப்பதனால். ஆனால் அங்கும் காசிவிஸ்வநாதரின் ஆலயம் அமைதியில் மூழ்கி தனித்திருந்தது.

இரண்டாம்தேதி இரவில் படுத்ததும் ஓர் அழைப்பு. எடுத்தால் பி.ராமன். ‘ராஜீவனைப் பற்றிய செய்தி பிழையானது. அவரை திருவனந்தபுரம் கொண்டு சென்றிருக்கிறார்கள். அதைத்தான் எவரோ தவறாகச் சொல்லிவிட்டிருக்கிறார்கள்’ என்றார். ஆறுதலும் பின்னர் மகிழ்ச்சியின் எக்களிப்பும்.

விடியற்காலையில் அடுத்த விழிப்பில் திகைப்பு உருவானது. மெய்யாகவே அழைப்பு வந்ததா? செல்பேசியை எடுத்துப் பார்த்தேன். எந்த அழைப்பும் இல்லை. அது கனவுதான். உள்ளம் போடும் நாடகங்கள்.

ராஜீவனை பற்றி கே.சி.நாராயணனுடன் கூடுமானவரை ஒன்றும் பேசவில்லை. இலக்கியம், மற்றும் நினைவுகள். ஆற்றூர் ரவிவர்மா, எம்.கோவிந்தன், பி.கே.பாலகிருஷ்ணன் அனைவருமே எனக்கும் அவருக்கும் பொதுவாக தெரிந்தவர்கள். இச்சந்திப்பு என்பது இருவருக்கும் கடந்தகாலத்தில் வாழ்வதுதான்

நவம்பர் 5 காலையில் கே.சி.நாராயணனை ரயில் ஏற்றி விட்டேன். சட்டென்று டி.பி.ராஜீவனின் நினைவு வந்து சூழ்ந்துகொண்டது. அறுபது கடந்தபின் இனி இச்செய்திகளுக்கு தயாராகத்தான் இருக்கவேண்டும். நாமே ஒரு செய்தியாக நண்பர்களைச் சென்றடைவது வரை.

வீடு திரும்பி அருண்மொழியுடன் பேசிக்கொண்டிருந்தேன். என்றுமே அவளுடைய குன்றாத உற்சாகம் எனக்கான பிடிமானம். எனக்கு அவளை பார்த்துச் சலிப்பதுமில்லை. இவ்வுலகம் அவள் வழியாக என்னைப் பற்றியிருப்பது போலிருந்தது.

மேலே வந்து தமிழ் விக்கிக்கான ஒரு பதிவை எழுதலானேன். மெல்லமெல்ல முற்றாக அடங்கி அமைதியானேன். இன்றிரவு நன்றாகத் துயில்வேன்.

திருக்கணங்குடியில் ஒரு காலபைரவர் சன்னிதி உண்டு. அருகே இருந்த ஏதோ ஆலயத்தில் எஞ்சிய சிலையை உள்ளே கொண்டு தனி ஆலயமாக நிறுவியிருக்கிறார்கள். பெருமாள்கோயிலில் பைரவர். அவ்வாலயத்தின் ஓர் அமைப்பு காரணமாக பைரவர் முன் எரியும் மூன்று தீபங்களில் தலையருகே உள்ள சுடரும் காலருகே உள்ள சுடரும் தத்தளித்து அலைந்தாடும். நடுவே உள்ள சுடர் அசையவே அசையாது. மலரிதழ்போல் நின்றிருக்கும்

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 05, 2022 11:35

கணேஷ் -வசந்த்

மேலைநாடுகளில் துப்பறியும் கதாபாத்திரங்கள் மெய்மனிதர்களை விட அழுத்தமான ஆளுமைகளாக, வரலாற்றில் இடம்பெறுபவர்களாக இருக்கிறார்கள். லண்டனில் பேக்கர் ஸ்ட்ரீட்டில் உள்ள ஷெர்லாக் ஹோம்ஸின் இல்லத்திற்கு நான் சென்றிருக்கிறேன். அங்கே அவர் இருப்பதாகவே உணரமுடியும்.

தமிழில் வடுவூர் துரைசாமி ஐயங்காரின் திகம்பர சாமியார் முதல் ஏராளமான துப்பறியும் கதாபாத்திரங்கள் வந்திருந்தாலும் முதன்மையான ஆளுமைகள் கணேஷ் வசந்த் இருவருமே. துல்லியமாக வகுக்கப்பட்ட கதாபாத்திரங்கள் அவை

கணேஷ் வசந்த் கணேஷ் வசந்த் கணேஷ் வசந்த் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 05, 2022 11:34

இந்துமதம் என ஒன்று உண்டா, கடிதம்

அன்புள்ள ஆசிரியருக்கு,

ஆசிரியரின் இந்து மதம் என்று ஒன்று உண்டா, இந்து வெறுப்பை எதிர்கொள்வது எப்படி போன்ற தொடர் கட்டுரைகளையும், அது சார்ந்த கடிதங்களையும் படித்து வருகின்றேன். மிக பயனுள்ளதாகவும், தெளிவு தருவதாகவும் உள்ளது.

மதங்களை இயற்கை மதம், தீர்க்கதரிசன மதம் என  சொல்வதை பற்றி  நண்பர்களிடம் உரையாடும் வாய்ப்பு கிடைத்தது.

ஐரோப்பிய காலனியவாத பார்வையில் “இயற்கை” என்பது மனிதனால் கட்டியாளப்படுவது,

இயற்கை பண்படாதது, இயற்கை மனிதன் நுகர பயன்படுத்தப்படுவது, இயற்கை பயமுறுத்தக் கூடியது. இயற்கை  மதம் என்பதை   பிரிமிட்டிவ் கலாச்சாரத்தில் கொண்டு போய் வைப்பார்கள். அவர்கள் பிரிட்டானியாவில் கீழ்கண்டவாறு வரையறுப்பார்கள்.

“primitive culture, in the lexicon of early anthropologists, any of numerous societies characterized by features that may include lack of a written language, relative isolation, small population, relatively simple social institutions and technology, and a generally slow rate of sociocultural change.”

இந்து மதம் இயற்கை மதம் என சொல்லாடல் வருகையில் இப்பொழுது ஐரோப்பிய கான்வெண்ட் கல்வி படிக்கும் இந்து நண்பர்களே ப்ரிமிட்ட்டிவ் என்ற பொருளில்தான் பார்க்கின்றார்கள்.

இந்து மரபில் இயற்கை ஞானம் கனியும் இடம். சொல் வளர் காடு என வெண்முரசில் ஒரு நாவலே உண்டு.  இயற்கை என்பது மனிதனுக்கு முரண் கொண்டது இல்லை.

உங்கள் கட்டுரைகளை அனுப்பி அதன் மேல் பேசுகையில் தெளிவை நோக்கி செல்ல முடிகிறது. மிக்க நன்றி.

நிர்மல்

அன்புள்ள நிர்மல்,

இயற்கை என்னும் natural என்ற சொல்லுக்கு இணையாக இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. அறிவுச்செயல்பாட்டினூடாக அன்றி, மக்களின் அன்றாடவாழ்க்கையினூடாக உருவாகி வந்த என்று பொருள்

ஜெ

இந்து மதம் என ஒன்று உண்டா? 1 இந்து மதம் என ஒன்று உண்டா?- 2 இந்து மதம் என ஒன்று உண்டா?-3

ஜெயமோகன் நூல்கள்

இந்து மெய்மை வாங்க

ஆலயம் எவருடையது? வாங்கஇந்து ஞானமரபில் ஆறு தரிசனங்கள் வாங்க
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 05, 2022 11:32

விஷ்ணுபுரம் விருந்தினர் 6, விஜயா வேலாயுதம்

விஷ்ணுபுரம் 2022 விருதுவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாகிய வாசகர் கருத்தரங்கில் கோவை விஜயா பதிப்பகம் நிறுவனரும் இலக்கிய ஆர்வலருமான விஜயா வேலாயுதம் கலந்துகொள்கிறார். விஜயா வேலாயுதம் சென்ற நாற்பதாண்டுகளாக இலக்கியவாதிகளைச் சிறப்பிக்கும் நிகழ்ச்சிகளை நடத்தி வருபவர். 1990 டிசம்பரில் என் முதல் நூல் ரப்பர் வெளிவந்தது. 1991 ஜனவரியில் எனக்கு முதல் வாசகர்கடிதம் வந்தது, விஜயா வேலாயுதம் அனுப்பியது. மார்ச் மாதம் அவர் கோவையில் எனக்காக ஒரு விழா ஏற்பாடு செய்தார். எனக்கு நடத்தப்பட்ட முதல் விழா அது.

விஜயா வேலாயுதம் தமிழ் விக்கி

விஷ்ணுபுரம் விருந்தினர்-1: அ.வெண்ணிலா

விஷ்ணுபுரம் விருந்தினர்-2. கார்த்திக் புகழேந்தி  

விஷ்ணுபுரம் விருந்தினர் 3- அகரமுதல்வன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-4- கார்த்திக் பாலசுப்ரமணியன்

விஷ்ணுபுரம் விருந்தினர்-6,  கமலதேவி 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 05, 2022 11:31

டி.பி.ராஜீவன் – சாம்ராஜ்

டி.பி.ராஜீவனின் இறுதிக் கவிதை டி.பி.ராஜீவன் கவிதைகள்

அன்புமிக்க ஜெயமோகன்

போன வாரம் இசை,நான்,இன்னும் சில நண்பர்களும் கோழிக்கோடு வரை  ஓரு பயணம் போகலாமென தீர்மானித்த பொழுது,ராஜீவன் சாரை பார்க்கலாம் என தீர்மானித்தோம்.அவரை தொடர்பு கொள்ள  முயற்சிக்க,மஞ்சள் காமாலை காரணமாக மருத்துவ மனையில் இருக்கிறார் என்றார்கள்.பயணத்தை மாற்றி கொச்சின் போய் விட்டு வரும் வழியில் பட்டாம்பி போய் பி.ராமனை வீட்டில் பார்த்து விட்டு திரும்பினோம்.

அப்பொழுதும் உரையாடலுக்குள் வந்து போனார் ராஜீவன்.

முன்பொரு முறை  பி.ராமன் பேசும் பொழுத ” ராஜீவனை என் தனிப்பட்ட அவதானிப்பில் பிரதானமாய் கவிஞர் என்றே சொல்வேன்.ஓரு வாசியில் தான் அவர் நாவல் பக்கம் போனார் .பின் பத்தாண்டுகளுக்கு பின் கவிதை பக்கம் திரும்பினார்”

இன்று காலை பி.ராமனிடம் அதையே மறுபடியும் சொன்னார் கூடுதலாக ” அவர் திரும்பி வந்த பின் எழுதிய மனோகரமானவை.பத்து நாடகளுக்கு முன்  பேசும் பொழுது,வரவிருக்கும் அவர் கவிதை தொகுப்பின் அட்டை குறித்து பேசிக் கொண்டிருந்தார்” என்றார்

2005 வாக்கில் டி பி ராஜீவனை கோழி கோடு பல்கலைக்கழக குடியிருப்பில்  மேல சேரியில் நாங்கள் அவரை பார்க்க  போன பொழுது  அவர் இல்லை.மழையோடு நாங்கள் சிறிய குன்றுகளின் கீழ .சேலாரிக் திரும்பினோம்.அப்பொழுது எனது  வீடு அங்கிருந்தது.இப்பொழுதும் அந்த குன்றுகள் அங்கு தான் இருக்கும்.மழை பெய்யவும் வாய்ப்பிருக்கிறது.ராஜீவன் மாத்திரம் இல்லை.

உங்கள் தளத்தின் வழியாக அவர் எனக்கு அறிமுகம்.பின்னதாக அவரின் இரண்டு நாவல்களும் இயக்குனர் ரஞ்சிதால் இயக்கப்பட, அவை இரண்டும் என் ஆதர்ச திரைப்படஙகள்.

பாலேறி மானிக்கம் ஓரு பாதிரா கொல பாதகம்,கே டி என் கோட்டூரின் எழுத்தும்,ஜீவிதமும் இரண்டு நாவல்களும் பாலேறி மானிக்கமாகவும்,ஞானாகவும் திரைப்படமாகின.அவை குறித்து நான் எழுதவும் செய்தேன்.

பாலேறி மானிக்கத்தை தமிழில் மொழி பெயர்ப்பது தொடர்பாக  ராஜீவன் சாரிடம் தொலை பேசியில் பேசும் பொழுது செய்யலாம் என்றார்.அவர் மகள் பார்வதி சென்னை கிறிஸ்துவ கல்லூரியில் படிப்பதாகவும்,அவரை பார்க்க வரும்  பொழுது சந்திக்கலாம் என்றார்.அந்த சந்திப்பு நிகழவேயில்லை.விரலிடுக்கில் நழுவிப் போகின்றன வாழ்வின் சாத்தியஙகள்.

அவரின் காய்கறிகளின் முயல் கவிதை எப்பொழுதும் என் ஓர்மையிலிருக்கிறது.நேற்று முழு தினமும் ராஜீவன் ஓரு வலி.போல நாள் முழுக்க நீடித்துக் கொண்டேயிருந்தார்.

மலையாள இயக்குனர் ரஞ்சித்தின் இனை இயக்குனரும்/ நடிகருமான சங்கர் ராமகிருஷ்னன் எப்பொழுதும் டி பி ராஜீவனை எனக்கு தோற்றத்தில் நினைவு ப்படுத்துவார்.ராஜீவன் வாழ்க்கையை யாராவது சினிமாவாக்கினால் இவரை  அதில் நடிக்க வைக்கலாம் என விளையாட்டாய் நினைத்துக் கொள்வேன்

போன வாரம் பார்க்கலாம்.என்று நினைத்தவர் இந்த வாரம் நினைவாய் மாத்திரம் எஞ்சுகிறார்.

பாலேறி மானிக்கம் திரைப்படத்தில் அவரும் ரஞ்சித்தும் சேர்ந்து வசனமெழுதியிருப்பார்கள்.கவித்துவமான வசனங்கள்.பாலேறியில் பிராந்தனை திரியும் ஓருவனை.குறித்து சொல்கையில் ”  இவன் தான் பாலேறியின் அபோத குமாரன்” என்றொரு வசனம் உண்டு.ராஜீவனும் ஓரு அபோத குமாரன் என்றே தோன்றுகிறது.போதத்தின் உச்சத்தில் வரும் அபோதம்.பித்தான கலையின் வழி எழுந்து வரும் அபோதம்.

அருமையான கவிதைகளையும்,நாவல்களையும் தந்த அவரிடம் என்ன சொல்ல.”போய் வாருங்கள் சார் உங்களின் புகழை இன்னும் கொஞ்ச காலம் பாடி விட்டு நாங்கள் வருகிறோம் “என்றே இத் தருணத்தில் சொல்லத் தோன்றுகிறது சார்

அன்புடன்

சாம்ராஜ்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 05, 2022 11:31

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.