Jeyamohan's Blog, page 684

November 10, 2022

டி.பி.ராஜீவனும் கவிச்சந்திப்பும் – கடிதம்

குற்றாலம் கவிதையரங்கு தேவதேவன், வீரான்குட்டி, கல்பற்றா நாராயணன், பி.ராமன், டி.பி.ராஜீவன், நான், யூமா வாசுகி, அருண்மொழி, சைதன்யா, யுவன் சந்திரசேகர்- புகைப்படம் கலாப்ரியா டி.பி.ராஜீவனின் இறுதிக் கவிதை அஞ்சலி, டி.பி.ராஜீவன்

அன்புள்ள ஜெ,

டி.பி.ராஜீவன் மரணச்செய்தி அறிந்து வருந்தினேன். அவரை விஷ்ணுபுரம் விழாவில் பார்த்திருக்கிறேன். அவருடைய கவிதைகளிலுள்ள நையாண்டியும் அதன் வழியாகவெளிப்படும் பார்வையும் மிக ரசனைக்குரியவை.

டி.பி.ராஜீவனை போல பல மலையாள எழுத்தாளர்களை இங்கே அறிமுகம் செய்திருக்கிறீர்கள். ஏராளமான அஞ்சலிகள் கண்ணில் பட்டன. இதேபோல கன்னட தெலுங்கு கவிஞர்கள் நமக்கு அறிமுகமாகவில்லை.

நீங்கள் குற்றாலம் ஊட்டி ஒகேனேக்கல் பகுதிகளில் நடத்திய தமிழ் மலையாள கவியரங்குகளின் பயன் என்ன என்று இப்போது உணரமுடிகிறது. அந்நாட்களைப் பற்றிய நினைவுகளே அபாரமாக இருக்கின்றன

ஏன் அதைப்போன்ற அரங்குகளை இப்போது நடத்த முடியாது? நீங்கள் முயற்சி செய்யலாமே?

செல்வராஜ்

 

அன்புள்ள செல்வா

இன்று இரண்டு விஷயங்கள் தடையாக உள்ளன. ஒன்று, குடி. இன்று எந்த கவிதைச் சந்திப்பும் கவிதை ஒரு சொல்கூட பேசப்படாமல் வெறும் குடிக்கேளிக்கையாகவே மாறிவிடும். அதாவது கவிதை எழுதும் பத்துபேர் சேர்ந்து குடிக்க நாம் இடம் ஏற்பாடு செய்து கொடுப்பது மட்டும்தான் அது.

இன்னொன்று, அன்று நான் நடத்திய அரங்குகள் அருண்மொழிக்கு கிடைத்த ‘இன்சென்டிவ்’ காசில் நடத்தப்பட்டவை. கவிஞர்கள் சொந்தச் செலவில் வந்தனர். இன்று பயணப்படி மட்டுமல்ல, ஊதியமும் எதிர்பார்க்கிறார்கள்.

இன்று அன்றிருந்த தீவிரம் எங்குமில்லை. சமூகவலைத்தளங்கள் இன்றைய கவிஞனுக்கு போலியான ஒரு மிதப்பை அளிக்கின்றன. அதுவே போதுமென நினைக்கிறான். (ஆத்தா நான் வைரலாயிட்டேன்!)

சமூக வலைத்தளங்கள் உருவாக்கிய இன்னொரு மனநிலை, அதை நீங்களே கண்கூடாகப் பார்க்கலாம். எந்த ஒரு நேர்நிலை முயற்சியையும் சமூகவலைத்தளங்களில் புழுப்போல பெருகியிருக்கும் உதிரிகள் வசைபாடி, திரித்து, கசப்பை கொட்டி ஒட்டுமொத்தமான எதிர்மனநிலைக்கு இட்டுச்செல்கிறார்கள். பல கவிஞர்களும் அச்சூழலில் கும்மியடிப்பவர்களாக மாறியிருக்கிறார்கள்.

அன்றுபோல உற்சாகமான, நம்பிக்கையான ஒரு கவிஞர் சந்திப்பை இன்று ஒருங்கிணைப்பது கடினம். தமிழகத்தில் எங்குமே அப்படி ஒரு சந்திப்பு நிகழாத நிலை உள்ளது. கேரளத்தில் பெருநிறுவனங்களே ஒருங்கிணைக்கின்றன.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 10, 2022 10:30

வெண்முரசு உள்ளடக்க அட்டவணை

அன்புமிக்க ஜெயமோகன் அய்யாவிற்கு மதிப்பிற்குரிய வணக்கங்கள்.

நான் இவ்வருட மே மாதம் முதல் வெண்முரசும், உங்கள் இணைய  தளத்தை தவிர வேறொன்றும் படிப்பதில்லை. இப்போது ‘குருதிசாரலில்’ 15ஆம் அத்தியாயம் வந்திருக்கிறேன்.

முதல் மூன்றோ நான்கோ வெண்முரசு நாவல்களை படித்த பின், ஏதோ ஒரு சம்சயத்தை தெளிவுபடுத்த வேண்டி, திரும்பி நோக்கி, பல பக்கங்கள் தேட வேண்டி வந்தது.

ஆகவே ‘பிரயாகை’ முதல், எனக்கு பிடித்த அத்தியங்களின் சாரத்தை குறித்து வைத்திருக்கிறேன். உதாரணம்: எனக்கு பரசுராமர் கர்ணனை வெளியேற்றியதை மறுபடியும் படிக்க தோன்றினால், உடனே என்னுடைய குறிப்பை பார்த்தால் போதும் (Karnan parting with teacher Parasuramar (the bee feeding on him) – https://venmurasu.in/prayagai/chapter-74/).

ஒரு நூறு வருடங்களுக்கு முன் வெளிவந்த நாவல்களில், ஒவ்வொரு அத்தியாயத்திற்கு முன், அதன் தலைப்போடு அதனை விவரித்து  பற்றிய ஓரிரு வரிகள் அதை பற்றி இருக்கும். இது குறிப்பிற்கு (reference) மிகவும் உதவும் கருவியாக கருதப்பட்டது.

இது மாதிரி  வெண்முரசு சார்ந்து ஒரு தேவை உள்ளது என்று உங்களிடம் யாராவது கூறி இருக்கிறார்களா? என்னுடைய குறிப்பெல்லாம் ஆங்கிலத்தில். தான் உள்ளது. மேலும் எனக்கு பிடித்தமான பகுதிகளை மட்டும் தான் இப்போது நோட் பண்ணியிருக்கிறேன். வெண்முரசு மறுவாசிப்புகளில்  (கண்டிப்பாக இது நடக்கும்) மேலும் அதிகம் குறிப்புகள் வர வாய்ப்புண்டு.

நான் செல்லும் வேகத்தில், வெண்முரசை நவம்பர் முடிவதற்கு முன்னால் முதல் வாசிப்பு முடியும்  என்று நினைக்கிறேன். இது ஒரு வித நிம்மதியையும்,  சாதனை செய்த உணர்வையும் தருகிறது.

தாங்கள் வெண்முரசை எழுதியதற்கு வாழ்நாள் எல்லாம் கடமை பட்டிருக்கிறேன். நான், என் வாழ்க்கையில் முதல் தடவையாக ஒரு குறிக்கோளை கண்டடையும் நிலையில் இருக்கிறேன். எனக்கு 72 வயது. நன்றி. நன்றி. நன்றி.

இப்படிக்கு,

ராஜாமணி

*

அன்புள்ள ராஜாமணி,

தனிப்பட்ட உபயோகத்துக்காக அவ்வாறு எவரேனும் செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. பொதுவெளியில் எவருமில்லை. உண்மையில் அவ்வாறு ஓர் அட்டவணை இருக்குமென்றால் நல்லது. அகரவரிசையில் (அகராதி போல) விரிவான விவர உள்ளடக்க அட்டவணைகூடச் செய்யலாம்தான்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 10, 2022 10:30

வெண்முரசு உள்ளடக்க அட்டவணை

அன்புமிக்க ஜெயமோகன் அய்யாவிற்கு மதிப்பிற்குரிய வணக்கங்கள்.

நான் இவ்வருட மே மாதம் முதல் வெண்முரசும், உங்கள் இணைய  தளத்தை தவிர வேறொன்றும் படிப்பதில்லை. இப்போது ‘குருதிசாரலில்’ 15ஆம் அத்தியாயம் வந்திருக்கிறேன்.

முதல் மூன்றோ நான்கோ வெண்முரசு நாவல்களை படித்த பின், ஏதோ ஒரு சம்சயத்தை தெளிவுபடுத்த வேண்டி, திரும்பி நோக்கி, பல பக்கங்கள் தேட வேண்டி வந்தது.

ஆகவே ‘பிரயாகை’ முதல், எனக்கு பிடித்த அத்தியங்களின் சாரத்தை குறித்து வைத்திருக்கிறேன். உதாரணம்: எனக்கு பரசுராமர் கர்ணனை வெளியேற்றியதை மறுபடியும் படிக்க தோன்றினால், உடனே என்னுடைய குறிப்பை பார்த்தால் போதும் (Karnan parting with teacher Parasuramar (the bee feeding on him) – https://venmurasu.in/prayagai/chapter-74/).

ஒரு நூறு வருடங்களுக்கு முன் வெளிவந்த நாவல்களில், ஒவ்வொரு அத்தியாயத்திற்கு முன், அதன் தலைப்போடு அதனை விவரித்து  பற்றிய ஓரிரு வரிகள் அதை பற்றி இருக்கும். இது குறிப்பிற்கு (reference) மிகவும் உதவும் கருவியாக கருதப்பட்டது.

இது மாதிரி  வெண்முரசு சார்ந்து ஒரு தேவை உள்ளது என்று உங்களிடம் யாராவது கூறி இருக்கிறார்களா? என்னுடைய குறிப்பெல்லாம் ஆங்கிலத்தில். தான் உள்ளது. மேலும் எனக்கு பிடித்தமான பகுதிகளை மட்டும் தான் இப்போது நோட் பண்ணியிருக்கிறேன். வெண்முரசு மறுவாசிப்புகளில்  (கண்டிப்பாக இது நடக்கும்) மேலும் அதிகம் குறிப்புகள் வர வாய்ப்புண்டு.

நான் செல்லும் வேகத்தில், வெண்முரசை நவம்பர் முடிவதற்கு முன்னால் முதல் வாசிப்பு முடியும்  என்று நினைக்கிறேன். இது ஒரு வித நிம்மதியையும்,  சாதனை செய்த உணர்வையும் தருகிறது.

தாங்கள் வெண்முரசை எழுதியதற்கு வாழ்நாள் எல்லாம் கடமை பட்டிருக்கிறேன். நான், என் வாழ்க்கையில் முதல் தடவையாக ஒரு குறிக்கோளை கண்டடையும் நிலையில் இருக்கிறேன். எனக்கு 72 வயது. நன்றி. நன்றி. நன்றி.

இப்படிக்கு,

ராஜாமணி

*

அன்புள்ள ராஜாமணி,

தனிப்பட்ட உபயோகத்துக்காக அவ்வாறு எவரேனும் செய்திருக்கிறார்களா என்று தெரியவில்லை. பொதுவெளியில் எவருமில்லை. உண்மையில் அவ்வாறு ஓர் அட்டவணை இருக்குமென்றால் நல்லது. அகரவரிசையில் (அகராதி போல) விரிவான விவர உள்ளடக்க அட்டவணைகூடச் செய்யலாம்தான்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 10, 2022 10:30

November 9, 2022

எது அரங்கு?

THE CREATOR – CHANDRA SHEKHAR KATWAL

ஜெ,

இலக்கிய அரங்குகளில் நான் படைப்பாளி அல்ல… விமர்சகனும் அல்ல… நாடக விழாவில் நாடகத்துடன் எந்த வகையிலும் தொடர்பற்றவன்… இப்படி எல்லா அரங்குகளிலும் பார்வையாளனாகவே இருக்கிறேனே..,, எனக்கான அரங்கு எது?

சந்தோஷ்

அன்புள்ள சந்தோஷ்

இந்த வினா எல்லா இளம்பருவத்தினருக்கும் எழுவது. இதற்கான முதற்பதில் நீங்கள் எதில் முழுமையாக இருக்கிறீர்கள் என்பது. எண்ணிப்பாருங்கள். தமிழக மக்கள்தொகையில் பத்தாயிரத்தில் ஒருவரே எந்த கலையிலக்கியச் செயலிலாவது ஈடுபாடும் தொடர்பும் கொண்டவர்கள். அந்தச் சிறிய வட்டத்திற்குள் ஒருவர் வந்துசேர்வதென்பதே மிகமிக அரிதான செயல். பெரும்பாலும் தற்செயல். அதற்கே ஒருவர் மகிழவேண்டும். நன்றிசொல்லவேண்டும்

உள்ளே வந்தபின் அதை எப்படி முன்னெடுக்கிறீர்கள். எந்த களத்தில் உளம் ஒன்றுகிறீர்கள். எங்கே முழுமையாக உங்களை அளிக்கிறீர்கள். அது அடுத்தபடி. அவ்வாறு அளித்து, பங்காற்றி, தன் அடையாளத்தையும் இடத்தையும் வென்றபின் கேட்கவேண்டிய கேள்வி இது.

பொதுவாக இருவகையினர் உண்டு. ஒன்று, இரண்டாம்கட்டத்தவர். அவர்கள் ஏதேனும் பங்காற்றியிருப்பார்கள். வாய்ப்புகள் தற்செயலாக, அல்லது பிரதிநிதித்துவம் காரணமாக வரும். அடையாளமும் அமையும். இரண்டு, முதல்நிலையினர். அவர்கள் எதையும் தேடிச்செல்லவேண்டியதில்லை. எல்லாமே அவர்களை தேடிவரும். ஏனென்றால் அவர்கள் செயல்படும் துறைகளில் அவர்களே முதன்மையானவர்கள். அவர்கள் இல்லாமல் அத்துறைகளின் எந்த அவையும் பொருளுள்ளதாகாது.

இரண்டாம் வகையினர் அடையாளம் தேடுவதில்லை. வாய்ப்புகளை பொருட்படுத்துவதில்லை. தன் இடம் பற்றி கவலைகொள்வதில்லை. அவர்கள் தங்களுக்கு உகந்த களத்தில் செயலாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். பிறிதொன்றே இல்லாமல், முழுமையான தன்னளிப்புடன். அவர்களின் இன்பம் என்பது அந்த செயலில் இருப்பதே ஒழிய அதன் ;வெற்றி;யில் அல்லது அது அளிக்கும் ‘அடையாளத்தில்’ இருப்பது அல்ல.

ஐன்ஸ்டீன் வேலைசெய்யவில்லை, அவர் கடைசிவரை விளையாடினார் என்பார்கள். வேலை செய்வதென்பது ஆற்றலை செயற்கையாக வெளிப்படுத்துவது. விளையாடுவது என்பது ஆற்றலை வெளிப்படுத்துவது இயல்பாக நிகழ்வது. ஆற்றல் வெளிப்படுவதே அதில் இன்பம் என்றாகிறது. அவ்வாறு செயல்படுபவர்களே எத்துறையிலும் முதல்வர்கள். அவர்களை எவரும் ஏற்க வேண்டியதில்லை. மதிக்கவேண்டியதில்லை. அவர்கள் கண்கூடாகவே சாதனையாளர்கள். எந்த மறுப்பும் அவர்களை ஏதும் செய்யாது.

முதல் தொடக்கம் என்பது ஒன்றில் முழுக்கவே இறங்குவதுதான். பெரும்பற்றுடன் ஈடுபடுவது.ஓர் அறிவியக்கத்தின், செயலியக்கத்தின் பெருக்கில் தன்னை வீசிக்கொள்வது. ஒவ்வொன்றையும் வெளியே நின்று அரை அக்கறையுடன் வேடிக்கை பார்ப்பவர்கள், வம்பு மட்டுமாகவே அணுகுபவர்கள் ஒருபோதும் அவ்வியக்கத்தில் இடம்பெற முடியாது.

ஆக, நீங்கள் கண்டடையவேண்டியது உங்கள் களம் என்ன என்று மட்டுமே. எல்லாவற்றையும் செய்துபாருங்கள். எதில் முழுமையாக உங்கள் உள்ளம் படிகிறது என்று கவனியுங்கள். எங்கே முற்றிலும் ஒன்றிச் செயலாற்ற முடிகிறது என்று கவனியுங்கள். அதன்பின் அதைமட்டுமே செய்யுங்கள். செயலே இன்பம் என கொள்ளுங்கள். அதிலேயே இருங்கள்.அதுவே நிறைவுற்ற வாழ்க்கை.

செயலின் விளைவுகளை எண்ணினால் அச்செயல் ஒருபோதும் இன்பம் அளிக்காது. அச்செயல் யோகம் என அமையவேண்டுமென்றால் அச்செயலும் செய்பவனும் ஒன்றென்று ஆகும் தருணங்களால் ஆனதாக இருக்கவேண்டும் செய்பவனின் வாழ்க்கை. பிற அனைத்தும் தொடர்ந்து வரும்

ஆம், கீதையேதான்.

ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 09, 2022 10:35

ஆர்.எஸ்.ஜேக்கப், கிறிஸ்தவ இலக்கியம்

[image error]

வெளியே பொதுவாசகர்களுக்கோ உள்ளே இலக்கியவாதிகளுக்கோ அதிகம் தெரியாத ஓர் உலகம் தமிழில் செயல்பட்டுவரும் கிறிஸ்தவ இலக்கிய இயக்க்கம். கிறிஸ்தவ இலட்சியவாதம் ஒன்றை முன்வைப்பது. பெரும்பாலும் போதனைத்தன்மை கொண்டது. அந்த எழுத்துவகைமையின் குறிப்பிடத்தக்க ஆளுமைகளில் ஒருவர் ஆர்.எஸ்.ஜேக்கப். நான் அவருடைய நூல்களை என் புகுமுக வகுப்பு நாட்களில் மார்த்தாண்டம் (நேசமணி நினைவு) கிறிஸ்தவக்கல்லூரியில் அன்றிருந்த அபாரமான நூலகத்தில் இருந்து வாசித்திருக்கிறேன். அன்று அவருக்கு ஒரு கடிதமும் எழுதி பதில் பெற்றிருக்கிறேன்

ஆர் எஸ். ஜேக்கப் ஆர்.எஸ். ஜேக்கப் ஆர்.எஸ். ஜேக்கப் – தமிழ் விக்கி
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 09, 2022 10:34

மு. இளங்கோவனுக்குத் தமிழக அரசின் விருது!

மு.இளங்கோவன் – தமிழ் விக்கி

பேரா. மு. இளங்கோவனை நான் பதினைந்தாண்டுகளுக்கு முன் சந்தித்தேன். அன்று தமிழ் கல்லூரிகளிலும் பள்ளிகளிலும் கணிப்பொறியை அறிமுகம் செய்ய கடுமையான முயற்சியை மேற்கொண்டிருந்தார். இளங்கோவனின் தமிழ்ப்பணிகள் பலவகையானவை. தமிழறிஞர்களை தேடித்தேடி ஆவணப்படுத்துகிறார். தமிழிசை மரபை பதிவுசெய்கிறார். வி.ப.கா.சுந்தரம் போன்ற மேதைகளின் பலநூறு மணிநேர இசையை சேகரித்துள்ளார். நூல்களை பதிப்பிக்கிறார். சென்ற தலைமுறை தமிழறிஞர்களின் தளரா ஊக்கம் கொண்டவர்

மு. இளங்கோவனுக்கு வாழ்த்துக்கள்

பேராசிரியர்   மு இளங்கோவனுக்குத்

தமிழக அரசின் தூய தமிழ் ஊடக விருது!

 

 

தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம் ஆண்டுதோறும் ஊடகத்துறையில் சிறப்புத் தமிழ்ப்பணி செய்பவர்களுக்குத் தூய தமிழ் ஊடக விருதினை வழங்கி வருகின்றது. புதுவை அரசின் காஞ்சி மாமுனிவர் அரசு பட்டமேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத் தமிழ்ப் பேராசிரியர் மு.இளங்கோவனுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான காட்சித்துறை ஊடக விருது இன்று (08.11.2022) சென்னையில் நடைபெற்ற விழாவில் வழங்கப்பட்டது. இந்த விருது ஐம்பதாயிரம் ரூபாய் ரொக்கமும், தங்கப் பதக்கமும், தகுதியுரையும் அடங்கியது ஆகும்.

 

தமிழகத்தில் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில், தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் பிற நாடுகளிலும்  இணையத் தமிழ்ப் பயிலரங்குகளை நடத்தி, தமிழ் இணையத்துறையில் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய மு. இளங்கோவன் தம் வலைப்பதிவு வழியாக (http://muelangovan.blogspot.com) ஆயிரத்து ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட தூய தமிழ்க் கட்டுரைகளைப்  பல்லாயிரம் பக்கங்களில் எழுதியுள்ளார். இதனை உலக அளவில் 7,95,820 பேர் பார்வையிட்டு, பயன்படுத்தி வருகின்றனர். இக்கட்டுரைகளில் தமிழகத்து மக்கள் அறியப்பட வேண்டிய மூத்த தமிழறிஞர்களின் வாழ்க்கை வரலாறு அடங்கி உள்ளன.

 

தமிழின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியத்தின் சிறப்பினை உலக அளவில் கொண்டுசேர்க்கும் முயற்சியில் உலகத் தொல்காப்பிய மன்றம் கண்டு, அதற்கெனத் தனி இணையதளம்(https://tholkappiyam.org) உருவாக்கி அதில் தொல்காப்பியம் குறித்த அனைத்து அரிய செய்திகளையும் மு.இளங்கோவன் பதிவேற்றியுள்ளார். மேலும் தமிழகத்தில் உள்ள மூத்த தமிழறிஞர்களைத் தொல்காப்பியம் குறித்து உரையாற்றச் செய்து இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட காணொலிகளை இணையத்தில் பதிவேற்றம் செய்துள்ளார் (https://www.youtube.com/channel/UCH39TKckc3dl8Bi42kDpKnw/videos)

இதனை உலக அளவில் 4, 51,109 பேர் பார்வையிட்டு, பயன்பெற்றுள்ளனர்.

 

தமிழிசைக்குத் தொண்டாற்றிய பண்ணாராய்ச்சி வித்தகர் குடந்தை ப. சுந்தரேசனார், யாழ் நூல் ஆசிரியர் விபுலாநந்த அடிகளார் ஆகியோரின் வாழ்வியலையும், பணிகளையும் ஆராய்ந்து, ஆவணப்படமாக்கி, உலகத் தமிழர்களின் பாராட்டினைப் பெற்றுவரும் மு. இளங்கோவன் இணைய ஊடகம் வழியாக ஆற்றிவரும் பணியைப் பாராட்டிச் சிறப்பிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு 2021 ஆம் ஆண்டுக்கான தூய தமிழ் ஊடக விருதினை அளித்துள்ளது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 09, 2022 10:31

புரிசை, சந்தோஷ் சரவணன்

எனது சொந்த ஊர் எது என கேட்கப்படும் பொழுதெல்லாம், புரிசை என ஊர் பெயருடன், தெருகூத்து கலையில் புகழ்பெற்ற கண்ணப்ப தம்பிரான் அவர்களின் ஊர் என்பதையும் சேர்த்தே கூறுவேன். அதில் ஒரு பெருமிதம். ஆனாலும் தெருக்கூத்தை பார்க்கும் வாய்ப்பு அமைந்ததில்லை.

மிக சிறிய வயதில் பார்த்த நினைவு மங்கலாக இருக்கிறது. ஊர் திரௌபதி அம்மன் கோவிலின் 20 நாள் திருவிழாவில் முதல் நாளில் இருந்தே தினம் மாலை பாரதம் சொல்வார்கள்… பத்தாம் நாள் திரௌபதி சுயம்வரம் அன்றிலிருந்து இரவு கூத்து தொடங்கும். தொடர்ந்து வாரணவதம், வஸ்திராபகரணம், பகாசுர வதம், அர்ஜுனன் பாசுபதம் பெறுவது, கீசக வதம், விராட பர்வம் (ஆநிரை ஓட்டுதல்), கண்ணன் தூது, அரவான் பலி, அபிமன்யு வதம், கர்ண மோட்சம் என விழா சடங்குகளில் ஒரு பகுதியாக தினம் கூத்து நடைபெற்று பதின்னெட்டாம் நாள் இரவு துரியோதன வதத்துடன் கூத்து முடிவடையும். பத்தொன்பதாம் நாள் தீ மிதி, இருபதாம் நாள் தர்மராஜா பட்டாபிஷேகம் என திருவிழா நிறைவுக்கு வரும்.

ஆனால் நினைவு தெரிந்து (குறைந்தது கடந்த பத்து ஆண்டுகளாகவாவது) ஊர் திருவிழாவில் கூத்து நடைபெறவில்லை. திருவிழாவிற்கு வெளியே நடக்கும் கூத்து விழாக்கள் பற்றிய தகவல்கள் எதுவும் ஊர் நண்பர்கள் / உறவினர்களிடம் இருந்து வருவதும் இல்லை. இம்முறை சந்தர்ப்பவசமாக கலைமாமணி கண்ணப்ப தம்பிரான் நினைவு நாடகக்கலை விழா மற்றும் கலைமாமணி கண்ணப்பத் தம்பிரான் நினைவு வாழ்நாள் சாதனை விருது வழங்கும் விழா குறித்த அறிவிப்பை இணையத்தில் பார்த்தேன். எனது ஊரில் நடக்கும் நாடக விழா, அவசியம் கலந்து கொள்வது என முடிவு செய்தேன்.

புரிசை துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றம் ஐந்து தலைமுறைகளாக தெருக்கூத்து கலையில் ஈடுபட்டு வருகிறது. சித்தர், மந்திர ஜாலம் அறிந்தவர் என சொல்லப்படும் வீராசாமி தம்பிரான் ஒரு தோல்பாவை கூத்து கலைஞர். அவர் பரதம், இசை போன்றவற்றில் தேர்ச்சி பெற்றவர். தேவதாசிகளுக்கு பயிற்சி அளிக்கும் நட்டுவனாராகவும் இருந்தார் என குறிப்புகள் தெரிவிக்கின்றன. அவர் தோல்பாவை கூத்தில் இருந்து விலகி கம்ச சம்ஹாரம் என்ற தனது முதல் தெருக்கூத்தை அரங்கேற்றுகிறார். புரிசை தெருக்கூத்து மரபின் தொடக்கம் அது தான்.  தெருக்கூத்தில் அவரது முன்னோடிகள் / குரு யார் என்பது குறித்த தகவல்கள் இல்ல. வீராசாமி தம்பிரானுக்கு பிறகு ராகவ தம்பிரான், துரைசாமி தம்பிரான் இரண்டாம் தலைமுறையாகவும், கிருஷ்ண தம்பிரான் மூன்றாம் தலைமுறையாகவும், கண்ணப்பத் தம்பிரான், நடேச தம்பிரான் நான்காம் தலைமுறையாகவும், கண்ணப்ப சம்பந்தன், கண்ணப்ப காசி ஐந்தாம் தலைமுறையாகவும் இந்த கலையை பயின்று நிகழ்த்தி வருகிறார்கள்.

கண்ணப்பத் தம்பிரான் ஊமை திரைப்படங்கள் வெளிவரத் தொடங்கிய காலத்தில் சங்கரதாஸ் சுவாமிகளின் நாடகங்களை மேடை நாடகங்களின் பாணியிலேயே நிகழ்த்தியுள்ளார். ஆனால் தெருக்கூத்தையும் கைவிடவில்லை. இந்த மேடை நாடக அறிமுகம் பின்னாளில் அவர் நவீன நாடக குழுகளுடன் இணைந்து செயல்பட உந்துதலாக அமைந்திருக்கலாம். மரபார்ந்த மகாபாரத கதைகளுடன் நின்றுவிடாமல், பாரதியின் பாஞ்சாலி சபதத்தை தெருக்கூத்தாக அமைக்க கண்ணப்பத் தம்பிரான் முயன்ற போது அவரது குடும்பத்தில் அதற்கு எதிர்ப்பு இருந்தது. எனவே அவர்களிடமிருந்து பிரிந்து வந்து ‘புரிசை துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றத்தை’ நிறுவுகிறார். திரௌபதி அம்மன் திருவிழாவுடன் இணைந்து மகாபாரத கூத்து பரவலாக இருந்தாலும், தமிழகத்தில் ராமாயண கூத்து வழக்கொழிந்து விட்டிருந்தது. அதை மீட்கும் வகையில் அனுமன் தூது, இந்திரஜித், வாலி மோட்சம் போன்ற கூத்துக்களையும் கண்ணப்பத் தம்பிரான் இயக்கினார். சிறுதொண்டர் புராணம், தெனாலிராமன் கதைகளையும் கூத்து வடிவில் நிகழ்த்தியுள்ளார்.

கண்ணப்ப தம்பிரானுக்கு 1975ல் நா முத்துசுவாமியின் அறிமுகம் கிடைக்கிறது… 1977ல் கூத்துப்பட்டறை தொடங்கப்பட்டது முதல் அதனுடன் இணைந்து செயல்பட்டுள்ளார்.

காப்ரியேல் கார்சியா மார்க்கேஸ்ன் (Gabriel García Márquez) Un señor muy viejo con unas alas enormes (The old man with huge wings) என்ற கதை பெரிய சிறகுடைய ஒரு வயோதிக மனிதன் என்ற பெயரில் Mapa theatre of Colombiaவின் உதவியுடன் தெருகூத்து வடிவில் நிகழ்த்தப்பட்டது. அதேபோல் ஜெர்மானிய எழுத்தாளர் ப்ரெக்ட்டின் Bertolt Brecht’s “Caucasian chalk circle” தமிழில் வெள்ளை வட்டம் என்ற நாடகமாக அரங்கேறிய போது அதற்கு கண்ணப்பத் தம்பிரான் பாடல்கள் எழுதியுள்ளார். இப்படி தெருகூத்தின் சாராம்சம் அழியாமல் நவீன போக்குகளுடனும் இணைந்து செயல்படும் அவரது பண்பு இன்று வரை தொடர்கிறது. இந்த விழாவில் நிகழ்த்தப்பட்ட வீர அபிமன்யு கூத்து இந்தியநோஸ்ட்ரம் தியேட்டர், புதுச்சேரியுடன் இணைந்து நடத்தப்பட்டது. பொதுவாக தெருக்கூத்துகளில் பெண் நடிகர்களுக்கு இடம் இல்லை என்றாலும், இந்த கூத்தில் சரிசமமான கதாபாத்திரங்களாக பெண்களே நடித்தனர்.

மாற்றங்கள் நிகழ்ந்தாலும், கூத்து முறையில் எந்த மாறுதலும் இல்லை என கலைஞர்கள் கூறுகிறார்கள். ஆட்டம், அடவுகள், அலங்காரம், முகபூச்சு, புஜகீர்த்தி என அனைத்துமே நூற்றாண்டுகளாக மாறாமல் பின்பற்றப்படுகின்றன. இன்று வடக்கத்தி பாணி தெருகூத்தின் முதன்மை மாதிரியாக புரிசை கூத்தை கூறலாம் எனவும் தெரிவிக்கிறார்கள்.

கண்ணப்பத் தம்பிரான் 2003ல் மறைந்த பிறகு ஆண்டுதோறும் புரிசையில் அவரது நினைவாக நாடக விழா மற்றும் வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கும் விழாவினை ஒருங்கிணைத்து வருகிறார்கள். இவ்வருட விழா அக்டோபர் 1&2ம் தேதிகளில் நடைபெற்றது. விழாவில் கலைமாமணி கண்ணப்ப தம்பிரான் வாழ்நாள் சாதனையாளா் விருது நா்மாபள்ளம் கிராமத்தைச் சோ்ந்த மூத்த தெருக்கூத்து கலைஞா் எம். பலராமப் பிள்ளைக்கு வழங்கப்பட்டது. தெருக்கூத்து பனுவல் ஆசிரியர் பெரிய செங்காடு எஸ்.எம். திருவேங்கடம் எழுதிய வாலி மோட்சம் என்ற கூத்து பனுவல் வெளியிடப்பட்டது.

தொடர்ந்து கண்ணப்ப காசி மற்றும் முனுசாமி அவர்களின் நினைவேந்தல். திரு கண்ணப்ப காசி கட்டியக்காரனாக நடித்தவர். உலகெங்கும் கூத்துக்களை நிகழ்த்தியுள்ளார். National School of Dramaவில் ஆசிரியராக பணிபுரிந்துள்ளார். நவீன நாடக குழுக்களுடன் தொடர் உரையாடலில் இருந்தவர். சித்தாமூர் திரு.முனுசாமி கட்டியக்காரன், கர்ணன், துரியன், இராவணன் என்று பல பாத்திரங்களை ஏற்று நடித்துள்ளார்.

இரு நாள் நிகழ்வுகள்:

1.     வேலூர் சாரல் கலைக்குழு வழங்கிய கிராமிய இசை. கிராமிய இசை பாடல்கள் என தனியாக கேட்டதில்லை. முதல் முறை இந்த நிகழ்வில் கேட்டேன். இவர்கள் அப்படி தேர்வு செய்தார்களா அல்லது அவை அப்படி தானா என தெரியவில்லை ஆனால் எல்லா பாடல்களுமே தலைவன் தலைவிக்கோ தலைவி தலைவனுக்கோ பாடும் பாடலாகவே அமைந்தன…

2.     தொடர்ந்து புரிசை மாணவர்களுக்கு கூத்து மன்றத்தை சேர்ந்த கங்காதரன் மற்றும் நெல்லை மணிகண்டன் அவர்கள் பயிற்சி அளித்து அறங்கேற்றிய தப்பாட்டம் மற்றும் கழியல் ஆட்டம். நகர வாழ்க்கையில் தப்பாட்டம் கேட்க வழியில்லை. சினிமாவில் பின்னணி இசை அல்லது சாவு வீடுகளில் பறை சத்தம் என குறைவாகவே கேட்டுள்ளேன். இங்கு மேடையில் கிட்டத்தட்ட 30 நிமிடங்கள் இடைவெளி இல்லாமல் தப்பு இசை மற்றும் கலைஞர்களின் கால் சிலம்பு ஒலி. குதிரை குளம்பு… இடி.. கொட்டும் மழை… இளம்சாரல்… பெரும் இடி என ஓசைகளாலான ஒரு உலகிற்குள் நுழைந்தது போலிருந்தது. மேற்கத்திய வாத்திய இசையை ஒலிக்க விட்டு, அதில் ஒன்ற பலமுறை முயன்றதுண்டு. ஆனால் இயன்றதில்லை. இங்கு எந்த முயற்சியும் இல்லாமல் இசை உணர்வுகளாக உருமாறியது நிறைவான அனுபவமாக அமைந்தது.

நாடகங்கள்…

3.     சென்னை ராஜீவ் கிருஷ்ணன் நடத்தி வரும் பெர்ச் நாடக அரங்கும் புதுவை இந்தியநோஸ்ட்ரம் குழுவும் இணைந்து வழங்கிய கிந்தன் சரித்திரம். நடிகர்கள்: காளி, தரணி & டேவிட்.

மரபான சபாக்களின் மேடை நாடகங்களை பார்த்து பழகிய எனக்கு மாற்று நாடகங்கள் / நவீன நாடகங்களுக்குள் நுழைய நல்ல திறப்பாக இந்த நாடகம் அமைந்தது. பெருந்தொற்று காலத்தில் எளிமையாக மக்களை மகிழ்விக்கும் நோக்கில் எழுதப்பட்ட இந்த நாடகம் திரைப்பாடல்களுடன் இணைந்து கிந்தன் என்பவனின் வாழ்வை விவரிக்கிறது. பெரிய கதையம்சம் நீதி போதனை என எதுவும் இல்லாமல் கதை ஓட்டத்தின் மூலம் சுவாரஸியமாக நகர்த்திச் செல்கிறார்கள். கதாபாத்திரங்களே கதை சொல்பவர்களாகவும் மேடை பொருட்களாகவும் (props) மாறுவது, தங்களுக்குள்ளும் பார்வையாளர்களுடனும் பேசிக்கொள்வது என fourth wallயை இல்லாமல் செய்தது புது அனுபவமாக இருந்தது. தொடர்ந்து பார்த்த பல நாடகங்களும் இந்த தன்மையை கொண்டிருந்தன. இதில் நடித்த காளீஸ்வரி சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்தில் விமோசனம் சரஸ்வதியாக நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

4.     திருபத்தூர் முகத்திரை நாடகக்குழு வழங்கிய கிரிஷ் கர்னாட்டின் நாகமண்டலா. இயக்கம் அறிவழகன்.

5.     சிவப்பு யானை நாடக நிறுவனம் திருநெல்வேலி வழங்கும் இந்திரா பார்த்தசாரதி அவர்களின் ஔரங்கசீப். இயக்கம் சந்திரமோகன்.

இவை இரண்டுமே மரபான மேடை நாடகங்கள். பல முறை பலரால் மேடையேற்றப்பட்டவையும் கூட. இரண்டையுமே நான் பார்ப்பது முதல் முறை. பிறகு இணையத்தில் தேடி இவற்றின் வேறு நாடக வடிவங்களையும் பார்த்தேன். தெளிவாக எழுதப்பட்ட நாடக காட்சி குறிப்புகள் இருந்தாலும் நாடகப்படுத்தலில் இவ்வளவு வித்தியாசங்கள் சாத்தியப்படும் என எதிர்பார்க்கவில்லை.

நாகமண்டலா மேடை அமைப்பு, தேர்ந்த நடிப்பு என மிக அருமையாக இருந்தது. குறிப்பாக நாயாக & வயதான மூதாட்டியாக நடித்தவர்கள் சிறப்பாக நடித்திருந்தார்கள். ஔரங்கசீப் நாடகம் என்னை அதிகம் கவரவில்லை.

6.     தியேட்டர் பிளமிங்கோ வழங்கிய பாதல் சர்க்கார் அவர்களின் அட்டமலச்சிய பல்யாட். நடிகர்கள் Shravan Fodnekar, Pranav Tengse and Parajkta Kavlekar

மராட்டிய மொழியில் அமைந்த இந்த நாடகம் சிக்குராம் மற்றும் விக்குராம் என்ற இரு திருடர்களை பற்றியது. எனக்கு இந்தி தெரியும் என்றாலும் மராட்டி வசனங்கள் மிக குறைவாகவே பிடிகிட்டின. இந்த நாடகத்தில் மேடை உபகரணங்களின் உபயோகம் மிக கச்சிதமாக இருந்தது. இரண்டு சட்டகங்களை மட்டுமே வைத்து அவற்றை ஊராக, கடையாக, காடாக, நதியாக என மாற்றி அமைத்துக் கொண்டனர். கையில் பிடிக்கும் வகை முகமூடி கொண்டு ஒருவர் இரண்டு கதாபாத்திரங்களாக மாறி மாறி நடிக்கும் முறையும் புதிதாக இருந்தது. இந்த நாடகம் புகழ்பெற்ற பெங்காலி நாடக ஆசிரியர் பாதல் சர்க்காரின் ஹொட்டொமலர் ஒப்பாரெ (Hottomalar oparey) என்ற நகைச்சுவை நாடகத்தின் மராட்டி தழுவல். பணம், கொடுக்கல் வாங்கல் எதுவும் இல்லாத, அனைத்து அனைவருக்கும் என மக்கள் வாழும் ஒரு உலகில் மாட்டிக் கொள்ளும் இரு திருடர்கள் எதை திருடுவது, எதை அபகரிப்பது என புரியாமல் குழம்பி தவிப்பதை குறித்த நாடகம்.

7. திரு. சி. இராமசாமி இயக்கத்தில் வெளிப்படை அரங்க இயக்கம் புதுச்சேரி வழங்கிய நடபாவாடை – நடிகர்கள் மாணிக் சுப்ரமணியன், கலைச்செல்வி மற்றும் அர்ச்சனா

புதுச்சேரி குருவிநத்தம் கிராமத்தில், இறப்பு சடங்குகளை செய்த ஆண்கள் அனைவரும் உயிரிழந்த நிலையில், அந்த குடும்ப பின்னணியை கொண்ட ஒரு விதவை பெண் அதே பணிக்குள் தள்ளப்படுகிறாள். அவளை மையப்படுத்தி இந்த நாடகம் நகர்கிறது.

நாடகம் என்பதை விட ஒரு காட்சித்தொடராக நம்முன் நிகழ்கிறது. இறுதிசடங்கின் உணர்வு கொந்தளிப்புகளை கண் முன் கொண்டு வந்து இறுதியில் பார்வையாளர்களையும் பங்குபெற அழைக்கிறது.  மிக அழுத்தமான தருணங்கள் நிறைந்த நாடகம்.

8.     மணல்மகுடி நாடக நிலம் வழங்கும் இடாகினி கதாய அரத்தம். எழுத்து இசை & இயக்கம் – ச. முருகபூபதி

இருநாள் விழாவில் மிகவும் புதுமையான நவீன நாடகம். கதை என ஒன்று வெளிப்படையாக இல்லாமல் காட்சிகளை கொண்டு பார்வையாளர்கள் தங்களுக்கான கதையை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என எதிர்பார்க்கிறது. குழந்தைகளின் உலகம் குறித்து பேச தொடங்கும் நாடகம் போர், அடிமைத்தனம், அகதி, இடபெயர்வு என பலதையும் தொட்டுச் செல்கிறது. உலகெங்கும் உள்ள பழங்குடிகளின் இசை கருவிகளை உபயோகித்துள்ளார்கள். நடிகர்களின் உடல் மொழி, அவர்கள் உபயோகப்படுத்தும் props, முகமூடிகள் என அனைத்தும் மிக விரிவான உலகிற்குள் நம்மை இட்டுச் செல்கிறது. மேடைக்குள் அடைபடாமல் நாடக வெளி மேடைக்கு முன்பும் பின்னும் விரிந்துச்செல்கிறது. நாடகம் முழுதும் திரைச்சீலைகளும் நாடக மாந்தர்களாகவே முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ் விக்கிக்கு வெளியே சயாம் மரண ரயில் பாதை குறித்து நான் கேள்விப்படும் முதல் தருணம் இதுதான். நாடகத்தில் இரு குழந்தைகள் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்கள். கச்சிதமான நடிப்பு.

இந்த நவீன நாடகங்கள் எதிலுமே பதிவு செய்யப்பட்ட இசை உபயோகிக்க படவில்லை. இசை கலைஞர்கள் நேரடியாக வாசித்து பின்னணியை உருவாக்கினார்கள்.

9,10. அட்டப்பாடி இருளர் சமூகத்தினர் வழங்கிய பாரம்பரிய பழங்குடி நடனம் மற்றும் ராமர் கூத்து.

இரு தனி நிகழ்வுகளாக நடந்தது. நமக்கு நாமே கலை மற்றும் பழங்குடி கலாச்சார குழு ஒருங்கிணைத்தது. அட்டப்பாடிக்கு வெளியே முதல்முறை இந்த மக்கள் பங்கேற்ற நிகழ்வு இது.  பாடலாக இல்லாமல் இசைக்கருவிகள் மற்றும் ஒலி குறிப்புகளால் ஆன இசைக்கு இருளர் மக்களும் உடன் பார்வையாளர்களும் இணைந்து மேடையில் நடனமாடினர்.

பிறகு அவர்களின் பாரம்பரிய ராமர் கூத்து. பாரம்பரியமாக வாலி, அரிச்சந்திரன், ராமன் மற்றும் கண்ணகி கூத்துகள் நிகழுமாம். தற்பொழுது கூத்து நிகழ்த்துபவர்கள் குறைந்துவிட்டனர். பல இடங்களில் அவை சடங்காக பெயரளவில் நிகழ்ந்து வருகிறது. பொன்னையன் (பொன்னன் ரங்கன்) குருவின் முயற்சியில் இந்த குழு பாரம்பரிய வகையில் கூத்தை முன்னெடுத்து வருகிறது. கூத்திற்கான உடைகளணிகலன்கள் வாங்க கூட பொருள் வசதி இல்லை என கையில் இருந்த பொருட்களை கொண்டு உடைகளை வடிவமைத்திருந்தனர். அட்டப்பாடியின் பல்வேறு நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்களின் மொழிகள் வேறு வேறாக இருக்கும். அவர்களின் மொழிக்கு எழுத்துரு கிடையாது என தெரிவித்தனர்.

அவர்களின் கூத்தில் நடன அம்சம் மிக குறைவாக இருந்தது பாடல் முக்கிய பங்கு வகித்தது. கூத்தின் மொழி எனக்கு புரியவில்லை. நடனத்திலும் உணர்வு வெளிப்பாடு குறைவாக இருந்ததால் கதையை சுத்தமாக பின் தொடர இயலவில்லை. ஆனாலும் இசை மற்றும் நடனத்தின் லயம் நீண்ட நேரம் கழித்தும் மனதில் ஒலித்துக்கொண்டு இருந்தது.

11. வாலி மோட்சம் – தெருக்கூத்து

தெருக்கூத்தை முழுதாக முதல் முறை பார்க்கிறேன். இதுவரை ஆங்காங்கு காணொளிகள் பார்த்ததில் அதன் பாடல்கள் புரிந்ததில்லை, வசனமும் சில இடங்களில் தான் புரிந்தது என்பதால் புரியுமா என்ற சந்தேகம் இருந்தது. நல்லவேளையாக அன்று வாலி மோட்சம் கூத்து பனுவலை வெளியிட்டு விற்பனைக்கு வைத்திருந்தனர். அதை வாங்கி உதவிக்கு வைத்துக் கொண்டேன். முதல் நாள் இரவு நாடகங்கள் முடிந்து கூத்து தொடங்க 2:30 மணிக்கு மேல் ஆகிவிட்டது. விடியும் பொழுது முடிக்க வேண்டும் என்பதால் பனுவலில் இருப்பது போல் இல்லாமல் கொஞ்சம் சுருக்கி நடித்தார்கள். முதலில் பக்கங்களை தேடி தேடி பின்தொடர முயன்று கொண்டிருந்தேன். பிறகு பாடல்கள் தானாகவே முக்கால்வாசி பிடி கிடைக்க தொடங்கி விட்டது. பாடல்களை விவரிக்கும் வகையில் தொடர்ந்து வரும் வசனங்கள் அமைந்திருந்தன.

நான் கேள்விப்பட்ட ராமாயண கதையிலிருந்து இந்த கூத்து மாறுபட்ட இடங்களை மட்டும் சுட்டிக்காட்டுகிறேன்.

சபரி என்னும் மூதாட்டி சுக்கிரீவனின் உதவி இருந்தால் சீதையை மீட்கலாம் என கூற, சுக்கிரீவனை தேடி ராம, லட்சுமணர்கள் வருகிறார்கள். ராமனிடம் அடைக்கலம் கேட்கும் சுக்கிரீவன் அவரது பலத்தை குறித்து ஐயம் கொள்கிறான்.  முன்பு வாலி தந்துபி என்ற அசுரனை கொன்று அவன் எலும்புக்கூட்டை காலால் தூக்கி வீசியுள்ளான். அந்த எலும்புக்கூட்டை ராமனும் எடுத்து எறிகிறான். ஆனாலும் முழுமையாக சுக்கிரீவனின் தயக்கம் அகலவில்லை.

அங்கிருக்கும் ஆச்சா மரங்களை வாலி ஒவ்வொன்றாக முறித்தான் என கூறி தயங்குகிறான். அதை கேட்ட ராமன், ஒரே அம்பில் ஏழு ஆச்சா மரங்களை துளைத்து சுக்கிரீவனுக்கு நம்பிக்கை அளிக்கிறான்.

இந்நிலையில், சகோதரனை கொன்றால் தான் உதவி கிடைக்கும் என கூறும் சுக்கிரீவனை நம்பலாமா என லட்சுமணன் கேட்கிறான். விவேகமில்லாத விலங்குகளிடம் சகோதர வாஞ்சையை எதிர்பார்க்கலாமா என ராமன் கேட்கிறான். முன்பு வேதங்கள் பயின்றதாலும் சிறந்த ஞானமுள்ளதாலும் இவற்றை குரங்கு என கூறக்கூடாது என்றீர்கள், இன்று குரங்கிடம் ஒழுக்கத்தை எதிர்பார்க்கக் கூடாது என்கிறீர்கள் இந்த முரண்பாடு உங்களுக்கு தெரியவில்லையா என லட்சுமணன் கேட்கிறான்,

ராமன் இதற்கு சரியான பதில் சொல்லவில்லை. நமக்கு துணையாக கிடைப்பவர்களிடம் தேவையான உதவியை பெற்றுக் கொள்ள வேண்டும்.  சரணடைந்த சுக்கிரீவனுக்கு உதவ வேண்டும். பிறர் மனைவியை கவர்ந்த வாலி தண்டிக்கப்பட வேண்டும் என கூறி விடுகிறான்.

சுக்கிரீவன் வாலியை இரண்டாம் முறை போருக்கு அழைக்கும் பொழுது, தாரை வாலியை போருக்கு செல்ல வேண்டாம் ராமன் சுக்கிரீவனுக்கு துணையாக இருப்பதாக ஒற்று செய்தி வந்துள்ளது என்கிறாள். நாட்டை தம்பிக்கு கொடுத்த ஒழுக்கசீலன் ராமன். உடன்பிறப்பை விட உயர்ந்த செல்வம் இல்லை என நினைப்பவன். யாருடைய உதவியையும் எதிர்பார்க்கும் நிலையில் இல்லாதவன். அவனா சுக்ரீவனுடன் சேர்ந்து என்னை கொல்வான். இதை என்னால் ஏற்க முடியாது என கூறி வாலி போருக்கு கிளம்புகிறான்.

வாலி தன் மீது அம்பு பட்ட பின்… எனது வீரத்திற்கு இப்படி எவரோ எறிந்த அம்பில் மடிவது தான் அழகா என சிவனிடம் முறையிடுகிறான். பிறகு இந்த அம்பை ஏய்தது யாராக இருக்கும் என எண்ணுகிறான். இந்திரனாக இருக்குமோ? இல்லை அவர் எனது தந்தை ஆயிற்றே! திருமாலா? அவருக்கும் எனக்கு எந்த பகையும் இல்லையே! சிவனா? நான் சிவனின் பக்தன் ஆயிற்றே! முருகனின் வேலாயுதமாக இருக்குமோ? ஆனால் அவருக்கு நான் எந்த அபச்சாரமும் செய்யவில்லையே! என யோசித்து பிறகு அது ராமனின் அம்பு என காண்கிறான்.

ராமன் வாலியிடம் நீ தம்பியை கொல்ல துணிந்தாய்.. தம்பி மனைவியை உனதாக்கிக்கொண்டாய் அதானால் தான் இந்த தண்டனை என கூறுகிறான்.

பதிலுக்கு வாலி, இப்பொழுது ஊர்மிளை அயோத்தியில்  பரதனின் பாதுகாப்பில் இருக்கிறாள், அதனால் பரதன் ஊர்மிளையை கைப்பற்றிக்கொண்டான் என கூறமுடியுமா என கேட்கிறான்.

பிறகு மறைந்திருந்து தாக்குவது உங்கள் குல வழக்கமா? உன் தந்தையும் இப்படி தான் மறைந்திருந்து சிரவணன் மீது அம்பு எய்தார் என கூறுகிறான்.

பிறகு ராமன் கடைசியாக, வேறு வழியில்லாமல் காலம் இப்படி என்னை என் வசமிழக்க செய்துவிட்டது என கூறுகிறான். ராமன் இப்படி கூறியதும் இதுவரை பேசியதற்கு மன்னிப்பு கேட்டு ராமனை கடவுளாக கருதி வாலி பேசத் தொடங்குகிறான்.

வாலி பேசி முடித்து இறுதி மூச்சு பிரியும் வேளையில் வானம் நன்றாக விடிந்திருந்தது….

12. இந்தியநோஸ்ட்ரம் தியேட்டர் புதுச்சேரி & புரிசை துரைசாமி கண்ணப்பத் தம்பிரான் பரம்பரை தெருக்கூத்து மன்றம் வழங்கிய வீர அபிமன்யு.

இங்கும் வழக்கமான கதையிலிருந்து மாறுபட்ட விஷயங்களை மட்டும் கூறுகிறேன்.

துரியன் மகன் லக்னகுமாரனை அபிமன்யு தேரில் கட்டி தோல்வியடைய செய்துவிட்டான்… அதற்குப் பழிவாங்க தர்மனை தேரில் கட்டி இழுத்து வரவேண்டும் என துரியோதனன், கர்ணன் மற்றும் சகுனி விரும்புகிறார்கள். அப்படி கட்டி இழுத்து வருபவர்களுக்கு நேர் பாதி ராஜ்யத்தை அளிப்பதாக துரியோதனன் கூறுகிறான். இதற்கு துரோணரின் உதவியை நாடுகிறார்கள்.

மறுநாள் போரில் துரோணர் தர்மனை போருக்கு அழைக்கிறார்.. தர்மர் தோற்று ஒளிந்துக்கொள்கிறார்… அப்பொழுது அங்கு வரும் அபிமன்யு துரோணருடன் போருக்கு செல்ல தருமனின் ஆணையை கோருகிறான்…. குழந்தையை எப்படி அனுப்புவது என தர்மன் தயங்க மீண்டும் மீண்டும் தனது வீரத்தை எடுத்து கூறுகிறான் அபிமன்யு. ஒரு கட்டத்தில் தர்மர் என்ன சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறாய்..  போடா போ.. என கூறிவிடுகிறார்.

வென்று வா என கூறாமல் போடா போ என தந்தை கூறிவிட்டாரே என அபிமன்யு மனம் கலங்குகிறான்..  பிறகு துரோணருடன் போருக்கு சென்று அவரை தோற்கடிக்கிறான்.

மீண்டும் ஆலோசனை செய்யும் துரியோதனன், சைந்தவனை அழைத்து வருவோம்.. அவனது கதை மற்றும் கொன்றை மாலையை கொண்டு அபிமன்யுவை வீழ்த்த முடியும் என நினைக்கிறார்கள்.

ஜயத்ரதனோ, பீமனை கொல்ல இந்த கதையையும் மாலையையும் பெற்றேன் என கூறுகிறேன். ஆனால் அபிமன்யு செய்யும் சேதத்தை காமித்து தனக்கு உதவுமாறு துரியன் கேட்டதால் அபிமன்யு மீது மாலையை உபயோகிக்க சைந்தவன் ஒப்புக்கொள்கிறான்.

போருக்கு அபிமன்யு வரும் பொழுது, அவனை சுற்றி அந்த கொன்றை மாலையை வீசிவிடுகிறார்கள்.

என்னை சுற்றி சிவனுக்கு உகந்த கொன்றை மாலையை தூவி விட்டானே….. ஈசனே உனக்கு உகந்த மாலையை நான் எப்படி தாண்டுவேன் என அபிமன்யு யோசிக்கிறான்… அதை தாண்டினால் அந்த சிவனையே பழித்ததாக ஆகுமே என தயங்குகிறான்.

தந்தை இருந்தால் இந்த மாலையை தூக்கி என்னை காப்பாற்றுவார்… எல்லா வித்தையையும் கற்ற நான் என் தந்தையிடம் இந்த கணை தொடுக்க மட்டும் (மாலையை தூக்க) கற்கவில்லையே என துயரப்படுகிறான். ஆனாலும் இந்த மாலைக்குள் நின்றுக்கொண்டே உங்கள் அனைவருடனும் வாள் சண்டை புரிவேன் என ஒரே நேரத்தில் துரியன், சகுனி, கர்ணன், சைந்தவன் என நால்வருடனும் போர் புரிகிறான்.

முதலில் அவனது கைகள் வெட்டப்படுகின்றன.. கால்களை வைத்து போர் புரிகிறான்… அவனது கால்களும் வெட்டப்பட்டதும்.. கர்ணனிடம் கேட்டதை கொடுக்கும் வள்ளலே என் பல்லுக்கு ஒரு கத்தியை தாருங்கள் என கேட்டு ஒரு கத்தியை வாங்கி போர் புரிகிறான்… கடைசியில் தலையும் வெட்டப்பட்டு இறக்கிறான்.

இந்தியநோஸ்ட்ரம் தியேட்டருடன் இணைந்து நிகழ்த்திய இந்த கூத்தில் பெண்கள் பலரும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர்… இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நடிகர்கள் பங்குபெற்றதாக தெரிவித்தனர்.

இவரது நடிப்பு நன்றாக இருந்தது என்றோ.. இது நன்றாக இருந்தது.. இது சரியில்லை என விமர்சனம் கூறும் இடத்தில் நான் இல்லை. இரு இரவுகள்… இரண்டு கூத்துகள்… மிக புதுமையான அனுபவம்.

தெருக்கூத்தை பொறுத்தவரை.. ஒவ்வொரு கதாபாத்திரமும் தன்னை விரிவாக அறிமுகம் செய்துக் கொள்கிறது.. ராமனே வந்தாலும்.. இப்படி பட்ட ராமனாகிய நான் என தனது அருமை பெருமைகளை கூறி தான் தொடங்குகிறது. சிகை அலங்காரங்கள்… புஜகீர்த்திகள்… என பார்த்தால்.. அரசர்கள் வாலி, சுக்கிரீவன், துரியன், கர்ணன், சகுனி, தர்மன் ஆகியோர்க்கு கிரீடமும் புஜகீர்த்தியும். காட்டில் இருக்கும் ராமன், லட்சுமணன் மற்றும் சைந்தவனுக்கு இறகு கிரீடம். துரோணருக்கு கிரீடம் மட்டும். கூத்து அலங்காரங்கள்  எதுவும் இல்லை. அபிமன்யுவிற்கு புஜகீர்த்தி மட்டும் என அமைத்திருந்தனர். துரியன், சகுனி, கர்ணன் & சைந்தவனுக்கு கருப்பு நிறம். தர்மனுக்கும் அபிமன்யுவிற்கும் சிவப்பு.

பாடல்கள் வசனங்கள் இரண்டிலுமே பல குறிப்புகள் வந்துகொண்டே இருந்தன. புராணங்கள் குறிப்பாக வாய்மொழி புராணங்களில் பரிச்சயம் உடையவர்களுக்கு அவை புரியும் என நினைக்கிறேன்.

இரண்டு நாட்களுமே அரங்கு (மைதானம்?) நிறையும் கூட்டம். உள்ளூர் / அருகிலுள்ள கிராம மக்கள் ஒரு பக்கம், வெளியூரிலிருந்து பார்வையாளர்களாக வந்திருந்தவர்களும் அதிகம். எங்கள் ஊரில் இவ்வளவு நகர கூட்டத்தை பார்ப்பது புதிதாக இருந்தது. நேரடி / எளிய பேருந்து வசதி.. தங்கும் / உணவக வசதி என எதுவும் இல்லாத ஊரில் இத்தனை முகங்கள். பெரும்பாலும் நவநாகரீக யுவயுவதிகள். அனைவருமே நண்பர் குழுக்களாக வந்திருந்தனர். தீவிரத்துடனும் உற்சாகத்துடனும் பங்குபெற்று, உரையாடி, விவாதித்துக் கொண்டிருந்தனர். அவர்கள் புது இடத்திற்கு வந்தது போல் தெரியவில்லை, புரிசை ஒரு நாள் அவர்களின் உலகிற்குள் நுழைந்து மீண்டது என்று தான் கூற வேண்டும்.

இலக்கியம் வாசிக்கிறோம்… இலக்கிய விவாதங்களில் பங்கேற்கிறோம் என்பதாலேயே தமிழ் அறிவியக்கத்தில் புழங்கிக் கொண்டிருப்பதாக நம்பிக்கொண்டிருந்தேன். ஆனால், அதற்கு வெளியேவும் பல உலகங்கள் இருக்கிறது என்பதை இந்நிகழ்வு காட்டியது… தெருக்கூத்து நமது பண்பாட்டின் பிரதி என்றால்.. இடாகினி கதாய அரதம் நவீன நாடகத்திற்குள் மட்டும் அல்லாமல் எல்லா வகையிலுமே முக்கியமான கலைப்படைப்பாக தோன்றுகிறது. ஆனால் தமிழ் சூழலில் இது குறித்து ஒரே ஒரு விமர்சனம் (ரசனை குறிப்பு) மட்டுமே வெளிவந்துள்ளது (கனலியில்). அதிர்ச்சி மதிப்பை பிரதானமாக கொண்டிருந்தாலும் பேசப்பட வேண்டிய முயற்சி நடபாவாடை.

இங்கு புதிதாக கண்டுக்கொண்ட நவீன நாடகம் போல் தமிழில் / தமிழகத்தில் இன்னும் எத்தனை கலைகள் மற்றும் அறிவுதுறைகள் செயல்பட்டு வருகின்றனவோ…? மேலும் அவை ஏன் ஒன்றுடன் ஒன்று உரையாடலில் இல்லை?

சந்தோஷ் சரவணன்

படங்கள் 
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 09, 2022 10:31

க.நா.சு . உரையாடல் அரங்கு – தாமஸ் ஹிட்டோஷி புரூக்ஸ்மா 

[image error] தாமஸ் ஹிட்டோஷி புரூக்ஸ்மா – தமிழ் விக்கி

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம் !  க.நா.சு உரையாடல் அரங்கு இலக்கிய விவாத வரிசையில் எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான தாமஸ் ஹிட்டோஷி  புரூக்ஸ்மா  அவர்களை அழைத்து உரையாடவிருக்கிறோம்.  இந்த இணைய நிகழ்வில் முதலில் 100  நண்பர்கள் zoom வழியாக கலந்துகொள்ளலாம். YouTube நேரலையிலும் நண்பர்கள் கலந்துகொண்டு தங்கள் கருத்துக்களை , எண்ணங்களை முன்வைக்கலாம்.

.நா.சு உரையாடல் அரங்கு 

தாமஸ் ஹிட்டோஷி புரூக்ஸ்மாசந்திப்பு

சனிக்கிழமை, நவம்பர் 12  2022, இரவு 9:00 மணி IST / காலை 9:30 மணி CST

யூட்யூப் நேரலை :  https://www.youtube.com/channel/UCnKBkYCgGW5MPqp_yBRVf4g

Zoom  நிரல் :  https://us02web.zoom.us/j/87051345476?pwd=bVRubGlqNFZZZFk3L0pySWJ3M2dHZz09

(முதலில் இணையும் 100 நண்பர்களுக்கு மட்டும்)

 

நிகழ்ச்சி நிரல் :

9:00 PM IST / 9:30 AM CST      : வாழ்த்துப்பா – விஷ்ணுப்ரியா கிருஷ்ணகுமார்

9:05 PM IST / 9:35 AM CST      : அறிமுகம் / வரவேற்பு –  ஜா. ராஜகோபாலன்

9:10 PM IST / 9:40 AM CST      : தாமஸின் ஆங்கில மொழியாக்கத்தில் வந்துள்ள  திருவள்ளுவரின் திருக்குறள்  நூலை முன்வைத்து –  R.S. சஹா

9:20 PM IST / 9:50 AM CST      : தாமஸின் ஆங்கில மொழியாக்கத்தில் வந்துள்ள ஒளவையின் கவிதைகள் நூலை  முன்வைத்து – ஜெகதீஸ் குமார்

10:00 PM IST / 10:30 AM CST  : கேள்வி பதில் நேரம்

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா)

தொடர்புக்கு vishnupuramusa@gmail.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 09, 2022 10:30

வெண்முரசின் நாகங்கள்

 

முதற்கனல் மின்நூல் வாங்க முதற்கனல் அச்சுநூல் வாங்க

அன்புள்ள ஆசிரியர் ஜெயமோகன் அவர்களே

வணக்கம். மூன்று மாதங்களுக்கு முன்பு தங்களை கோவை புத்தக கண்காட்சி நிகழ்வில் சந்தித்து உரையாட வாய்ப்பு கிடைத்தது. தங்கள் வாசகர்களாக நாங்கள் இன்னமும் வெண்முரசு படிப்பதில் இருந்து விலகவில்லை. ஒரு நாளில் ஒரு பதிவாவது வாசிக்காமல் அந்தி சாய்ந்தது இல்லை. மேலும் தங்களின் தற்செயல்பெருக்கின் நெறி பற்றிய பதிவையும் படித்திருக்கிறேன்.

என் வாழ்வில் சமீபத்தில் நிகழ்ந்த அத்தகைய நிகழ்வை தான் இங்கு குறிப்பிட விரும்புகிறேன். சமீபத்தில் இந்த வருடத்திற்கான இயற்பியலில் நோபல் பரிசு for experiments with entangled photons, – தமிழில் சொல்வது என்றால் சிக்கிக்கொண்ட, அடைபட்டு கொண்ட ஒளித்துகள்கள் குறித்த ஆய்வுகளுக்கு கிடைத்தது. மூன்று அறிவியல் அறிஞர்களுக்கு பரிசுத்தொகை பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. சுருக்கமாக சொன்னால் quantum entanglement நிலையில் இரு மிக சிறிய துகள்கள் தங்களுக்கு இடையில் தங்கள் நிலை குறித்த தகல்வல்களை பரிமாறிக்கொள்ள முடியும். குறிப்பாக அகண்ட வெளியில் பலகோடி மைல்கள் தொலைவு இருந்தாலும் இது சாத்தியம் என்பது தான் இதன் விளக்கம்.

In this bizarre situation, an action taken on one of the particles can instantaneously ripple through the entire entangled assemblage, predicting the other particles’ behavior, even if they are far apart. If an observer determines the state of one such particle, its entangled counterparts will instantly reflect that state—whether they are in the same room as the observer or in a galaxy on the opposite side of the universe.

இந்த விளைவு குறித்து முதன் முதலில் படித்தவுடன் எனக்கு ஏற்பட்ட திகைப்பு இது தான் ஜடப்பொருள்கள் -எவ்வாறு தங்களின் நிலையை பிறிதொரு ஜடப்பொருள் நிலை குறித்த தகவல் பெற்று, மாற்றிக்கொள்ள முடியும்? இதற்கு அறிவியல் பூர்வமான விளக்கத்திற்கு Hidden variable theory என்றோரு கருத்துரு மூலமாக விளக்கம் தந்தனர். மேலும் இயற்பியல் மேதை ஐன்ஸ்டீன் அவர்களும் இதனை “spooky action at a distance” – தொலைவில் இருந்தாலும் நிகழும் – பயமுறுத்தும் செயல் என அங்கதமாக குறிப்பிட்டார்.

இந்த இயற்பியல் கருத்துக்களை வரிசைப்படுத்தி படிக்கும் பொழுது, வாசிப்பின் நடுவில், அன்றைய நாளில் தான் தங்களின் ’வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 72 படிக்க நேர்ந்தது. அதில் வைசம்பாயனன் – ஜைமினி உரையாடலில் – “நாகங்களுக்கான அச்சம் அவற்றின் ஆழத்திலேயே பொறிக்கப்பட்டுள்ளது. முன்பு ஒரு தெருவித்தையன் முட்டை ஒன்றை என் கையில் தந்தான். அதை படம்கொண்ட நாகத்தின் அருகே நீட்டும்படி சொன்னான். நாகம் மெல்ல அதைநோக்கி குனிந்தபோது என் கையிலிருந்த முட்டை மெல்ல அதிர்வதை உணர்ந்தேன்” என கண்டேன்.

குறியீடாகவே அந்தப்பகுதியை நான் வாசித்தேன். நாகம் இருப்பு குறித்த அச்சங்கள் புலம் ( Field) -like gravitational field, magnetic field – வாயிலாக அதனை சுற்றிப்பரவுவதை பறவைகள் முட்டைகள் கூட உணர்ந்து தங்களின் அதிர்வை வெளிப்படுத்துகின்றன என்று உருவகித்துக்கொண்டேன்

ஜைமினி “நாகங்கள் மரங்களின்மேல் சுற்றி ஏறும் பொழுது. அவற்றைக் கண்டபின்னர்தான் பறவைகள் ஒலியெழுப்புகின்றன” என்றான். பார்வை உணர்வின் மூலம் பறவைகள் ஓசையிடுகின்றன. ஆனால் முட்டைக்கு பார்வை நோக்கு சாத்தியம் அல்ல. இருந்தாலும் நாகத்தின் இருப்பை தன்னை தொட்டு விடாத நிலையிலும் (no tactile) உணரமுடிவதாய் எழுதியிருந்தீர்கள். இது quantum entanglement இயற்பியல் கருத்துடன் ஒத்துப்போவதாக எனக்கு தோன்றியது. ஒருவகை அக அறிதலாக குவாண்டம் கொள்கையையே படிப்பதுபோலிருந்தது.

அள்ளஅள்ள குறையாத அமுதசுரபியாக விளங்கும் வெண்முரசு எங்கள் எண்ணங்களின் விசாலத்திற்கு என்றும் துணையாய் நிற்கிறது. நன்றி ஆசிரியரே

முனைவர் தி. செந்தில்

ஸ்ரீவில்லிபுத்தூர்

*

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 09, 2022 10:30

November 8, 2022

வெந்து தணிந்தது காடு, 50 நிகழ்வு

வெந்து தணிந்தது காடு ஐம்பதாவது நாள் வெற்றிக் கொண்டாட்டம் 9-11-2022 அன்று சென்னை சத்யம் சினிமா அரங்கில் மாலை 6 மணிக்கு நிகழ்கிறது. அதற்குள் இன்னொரு படம் (பொன்னியின் செல்வன்) வெளிவந்து அதுவும் மாபெரும் வெற்றியடைந்துவிட்டது. இரண்டு மாதங்களுக்குள் காலம் நெடுந்தொலைவு சென்றுவிட்டதுபோல.

இன்று நானே ஒரு சாதாரணப் பார்வையாளனாக வெந்து தணிந்தது காடு படத்தை ஒடிடி தளத்தில் பார்த்தேன். எப்போதும் எடுத்த படத்தில் எடுத்தவர்களுக்கு பிழைகளும், பிசிறுகளும் கண்ணுக்குப்படும். இப்போதும்தான். ஒரு சினிமாவை எழுத்தில் இருந்து காட்சியாக ஆக்குவது பல படிகளாக நிகழ்வது. கோப்பைக்கும் வாய்க்கும் இடையே நிகழும் சமர் அது. எண்ணியதில் ஒருபகுதியே படத்தில் இருக்கும்.

ஆனால் இப்போது பார்க்கையில் எனக்கு படம் இன்னும் பிடித்திருக்கிறது. வழக்கமான சினிமாவுக்குரிய ஒரே புள்ளியை பல திருப்பங்களுடன் வளர்த்துச் சென்று பரபரப்பான கிளைமாக்ஸில் முடியும் கதையோட்டம் கொண்டது அல்ல. நாவல் போல பல புள்ளிகளை தொட்டுச் செல்கிறது. ஆகவே ஒற்றைப்படையான அதிவேகம் இல்லை. அதேசமயம் தொடர்ச்சியாக ஓடும் ஒரு வாழ்க்கைச் சித்திரம் உள்ளது. படிப்படியாக விரிகிறது. இதன் கிளைமாக்ஸ் ’தெரியாது’ என்னும் ஒற்றைச் சொல்தான். அது முத்துவின் விதி அவனில் உருவாக்கிய மாற்றத்தைச் சொல்லிவிடுகிறது.

பொதுவாக இன்று சினிமா பார்ப்பது என்பது பலவகையான மனநிலைகளில் நிகழ்கிறது. நாம் எந்தவகை சினிமாவுக்கு தயாராக இருந்தோம் என்பது சினிமா பார்ப்பதில் பெரும் பங்கு வகிக்கிறது. நாம் படத்துடன் கூடவே ஒரு கதையை நாமும் உருவாக்கிக் கொண்டே செல்கிறோம். அதைக்கொண்டே சினிமாவை புரிந்துகொள்கிறோம். நாம் ஒரு படத்தை எதிர்பார்ப்பதில், நம் கதையை உருவாக்குவதில் அந்த சினிமா பற்றிய பேச்சுக்கள் பெரும்பங்கு வகிக்கின்றன. அத்துடன் பலவகையான கோபங்கள், கசப்புகளும் சேர்ந்துகொள்கின்றன. பெரும்பாலும் படங்களை கவனமில்லாமலேயே பார்க்கிறோம்.

ஆனால் கொஞ்சம் பிந்தி ஒரு படத்தைப் பார்க்கையில் அதன் மீதான நம் எதிர்பார்ப்புகள் இல்லாமலாகி எளிய மனநிலைக்கு வந்துவிடுகிறோம். அப்போது எந்தப் படமும் அதன் சரியான முகத்தை காட்டும். இப்போது படம் பார்த்துவிட்டு எழுதுபவர்கள் ஆரம்பத்தில் எழுதியவர்களைவிட மேம்பட்ட புரிதலுடன் இருப்பது அப்படித்தான். ஆரம்பத்தில் படத்தை பிழையாகப் புரிந்துகொண்டவர்களெல்லாம் நிறையப் படம் பார்த்து சட்டென்று படம் பற்றி முடிவுக்கு வந்துவிடுபவர்கள்.

இன்று பார்ப்பவர்கள் இது ‘கேங்ஸ்டர்’ படம் அல்ல என புரிந்துகொள்ள முடியும். வெறிகொண்ட பழிவாங்குதல் மற்றும் சாகசங்களின் கதை அல்ல. வன்முறை இதில் ஒரு பெருந்துன்பமாகவே சொல்லப்பட்டுள்ளது. ஒரு களியாட்டமாக அல்ல. பெரும்பாலும் உண்மையான நிழல் உலகின் கதை. ஒரு துப்பாக்கியே பெரிய விஷயமாக இருக்கும் அடித்தள நிழல் உலகின் சித்திரம். அங்கிருப்பவர்களுக்கு உண்மையில் தலைக்குமேலே என்ன நடக்கிறதென்றே தெரியாது. ஆகவே அதெல்லாம் கதையிலும் இல்லை.

அந்த உலகில் மாட்டிக்கொள்ளும் ஒருவனின் கதை. அதிலிருந்து வெளியேறத் துடிப்பவன். வெளியேற முயற்சி செய்யும் போதெல்லாம் மேலும் மாட்டிக்கொள்கிறான். அந்த விதி இரண்டுபேரை இரண்டு பக்கமாகக் கொண்டுசெல்கிறது. ஒருவனை கொலைகாரனாக்குகிறது. இன்னொருவனை வேறொருவனாக்குகிறது. அந்த விதி அவர்களுக்கு உள்ளேயே, அவர்களின் தனிக் குணமாகவே உள்ளது. அவர்கள் அதைத்தான் செய்திருக்க முடியும்.

ஒரு கமர்ஷியல் சினிமாவின் டெம்ப்ளேட்டுக்குள் நிற்கும், ஆனால் கமர்ஷியல் சினிமாவில் சாதாரணமாக எழுதப்படாத பல தருணங்களைக் கொண்ட படம் இது. அதை தொடர்ச்சியாகப் பல்லாயிரம் பேர் உள்வாங்கி ரசிப்பது நிறைவளிக்கிறது. ஒருநாளுக்கு சராசரியாக இருபது கடிதங்கள் இன்றும் வந்துகொண்டிருக்கின்றன.

இந்த வெள்ளிவிழாவில் அது நிறைவூட்டும் ஓர் அனுபவம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 08, 2022 10:36

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.