Jeyamohan's Blog, page 1067

January 8, 2021

குற்றவுணர்வும் கலையும்-கடிதம்


தன்னை வரையறை செய்தல்
உடல், குற்றவுணர்வு, கலை

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய உங்களுக்கு,


வணக்கம்.இரண்டு தினங்களாக “உடல் குற்றவுணர்வு கலை”,”தன்னை வரையறை செய்தல்” தலைப்புகளில் நீங்கள்எழுதி வருகிற கடிதங்கள் மிகவும் முக்கியமானவை.அனைவரும் படித்திருக்க வேண்டியவை.இதில் எனக்கு விஷேசமாகத் தென்பட்டது , இதுபோன்ற பொருள்களை மேலைநாட்டுக் கட்டுரைகளைப் போலன்றி ;சொந்த குருதிக்குள் இருந்து பேசும் தன்மை.இதனை ஏதேனும் ஒருவிதத்தில் தொடர்ந்து செல்ல இயலுமாயின் மேலும் உபயோகமாக இருக்கும்.இங்கே ஒவ்வோருவரும் தன்னைத்தானே திறந்து கொள்வதற்கு வழி உண்டாகும்.


ஒரு குற்றபோதத்திலிருந்து மீளும் ஒருவர்,மீண்டு அதனினும் பெரிதான குற்றத்திற்குள் நுழைவதைக் கண்டிருக்கிறேன்.குற்றவுணர்ச்சி அதுவொரு போலி தகவமைப்பே ,சமாதானம் சொல்லுதலே என எனக்கு தோன்றியிருக்கிறது.தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்வதற்கான நாடகமே.குற்றபோதத்தை அபாயமாக உணர்ந்திருக்கிறேன்.அதன் அனைத்து பக்கங்களையும் இதில் பேசிச் செல்கிறீர்கள்.


இந்திய பெண்கள் அதிகம் உடலால் கட்டுண்டிருக்கிறார்கள்.மிகவும் மூர்க்கமாக தாக்கி உடைத்து அல்லாமல் வெளியேறும் வழி அவர்கள் அறிந்து  வைத்திருக்கவில்லை. அதிலிருந்து விடுவித்துக் கொள்ளுதல் எப்படி என்பதற்குரிய படிப்பினைகள் இல்லை.பாடங்கள் சொல்லித் தரப்படுவதில்லை.பிறகு அதனை துயராக மாற்றுகிறார்கள்.தங்கள் சுயநரகை உருவாக்கி அதனுள் புகுந்து கொள்கிறார்கள். சுயநரகின் ருசியை வாழ்நாள் முழுவதும் குடிக்கிறார்கள். சார்ந்தவர்களுக்கும் அதே சுயநரகை பரிசளிக்க விரும்புகிறார்கள்.மறுத்தால் வில்லங்கமாகிவிடும்.இதில் விடுதலை காணாதவரையில் ஆன்ம பயணம் இல்லை. நம்முடைய பெண் சம்பந்தபட்ட அக்கறைகள் இதிலிருந்து தொடங்க வேண்டியவை என்றே நினைக்கிறேன்.


இங்கே இன்று ஆசாரவாதிகள் ,ஆன்மீக உணர்வை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.இது இப்போது வேகம் பெற்றிருக்கிறது.பழைய தடைகளைக் கொண்டு வந்து மீண்டும் மீண்டும் பெண்ணுடலில் பொருத்துவது.அதனை ஆன்மீகமாக நாடகமாடுவது.இதனை தெளிவுபடுத்துகிறீர்கள்.இத்னை ஆழத்தில் இருந்து எடுத்து உரைத்து வழி உண்டு பண்ண வேறு ஒருவரால் ஆகாது.இன்னும் இன்னும் அதிகமாக நீங்கள் இது குறித்துப் பேச முடியும் என்று நினைக்கிறேன். மையமான சரடு ஒன்றில் நின்று இந்த கடிதங்களில் நுட்பமாக உரையாடிக் கொண்டிருக்கிறீர்கள்.


உங்களுக்கு என்னுடைய அன்பு


அன்புடன்,


லக்ஷ்மி மணிவண்ணன்


அன்புள்ள மணிவண்ணன்


நான் சொல்பவை நான் நம்பும் மரபிலிருந்து பெற்றவை. வேதாந்தத்தின் பதில்கள் இவை. ஒரு புதிய வாழ்க்கைச்சூழலுக்கு ஏற்ப, அதை புதிய சொற்களில் சொல்கிறேன் என்பது மட்டுமே என்னுடைய பங்களிப்பு என நினைக்கிறேன்


நவீன உளவியல் இத்தகைய சிக்கல்களைப் பரிசீலிக்கிறது என்பது உண்மை, வழிகாட்டவும் செய்கிறது. ஆனால் முழுமையான வாழ்க்கைத் தத்துவம் ஒன்றை அது அளிப்பதில்லை. அந்த குறிப்பிட்ட சிக்கலை கடந்துசெல்ல மட்டுமே அது வழிகாட்டுகிறது. அதன் உள்ளுறையும் வாழ்க்கைப்பார்வை என்பது வாழ்க்கை உடலின்பம், புலனின்பங்களுக்கானது என்பதே. அதை குற்றவுணர்வால் இழக்கவேண்டாம் என்பதே


அதற்கப்பால் ஒரு வழிகாட்டல் வேதாந்தத்தில் உண்டு. அது முழுமைநோக்கு. வாழ்க்கையின் ஒட்டுமொத்த இலக்கு என்ன, அதற்கான வழி என்ன என்று சொல்வது அதையே முன்வைத்தேன்


ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 08, 2021 10:31

வெண்முரசும் தேசியங்களும்


அன்புள்ள ஜெ


நான் இடதுசாரி அரசியல் கொண்டவன். உங்கள் அரசியல் கருத்துக்கள் பலவற்றுடன் எனக்கு உடன்பாடு கிடையாது. அதைப்பற்றி பதினைந்து ஆண்டுகளாகவே நமக்குள் உரையாடல்கள் நடந்து வந்திருக்கின்றன. இப்போது நான் சில களப்பணிகளில் இருக்கிறேன். ஆகவே பயணங்கள் மிகுதி. தமிழ்த்தேசியமும் பொதுவுடைமைக்கொள்கைகளும் இணைந்த ஓர் அரசியலே இன்றைய தேவை என்பது என் எண்ணம்


ஆனால் நான் தொடக்கம் முதலே உங்கள் புனைவுகளின் அணுக்கமான வாசகன். வழக்கமான இடதுசாரிகள் போல ’அவை என்ன சொல்கின்றன?’ என்று நான் பார்ப்பதில்லை. அவ்வாறு ஏதாவது ஒன்றை கண்டுபிடித்தால் அது நான் சொல்வதுதானே ஒழிய படைப்புக்கள் சொல்வது அல்ல என்ற தெளிவு எனக்கு தொடக்கம் முதலே உண்டு. ஒரு காலத்தில் ராஜேந்திர சோழன் இதை திருப்பித்திருப்பிச் சொல்லியிருக்கிறார்


நான் கொற்றவையைத்தான் முதலில் வாசித்தேன். அதன்பிறகு விஷ்ணுபுரம். இப்போது வெண்முரசு. எனக்கு இவை மனிதர்களின் முடிவில்லாத நிறங்களையும் நிறமாற்றங்களையும் சொல்லும் படைப்புக்கள். வாழ்க்கையும் வரலாறும் ஊடாடிக்கிடப்பதைக் காட்டும் அனுபவங்கள். ஆகவே இவற்றை திரும்பத்திரும்ப வாசிக்கிறேன்.


அதிலும் வெண்முரசு இந்தியாவின் பரிணாமத்தையே ஒட்டுமொத்தமாக காட்டும் ஒரு படைப்பு. பொருளியல் அரசியல் பண்பாட்டு வளர்ச்சிப்பரிணாமத்தை அதிலே காணமுடிகிறது. ஒரு தேசியவாதி அதில் இந்திய பெருந்தேசியத்தின் உருவாக்கத்தையும் அதற்கான காரணங்களையும் நியாயங்களையும் கண்டடையலாம்.


அதேசமயம் ஒரு தமிழ்த்தேசியவாதி, அதாவது பண்பாட்டுத்தேசியவாதி இந்நாடு எப்படி ஒரே நாடாக இல்லாமல் வெவ்வேறு தேசியங்களின் உரையாடலாக இருந்துள்ளது என்பதையும் காணலாம். வெண்முரசில் வெவ்வேறு தேசியங்களை காணமுடிகிறது


இதைப்போன்ற செவ்வியல்படைப்புக்கள் தங்கள் அளவில் அரசியல்முனை கொண்டிருப்பதில்லை. அவை ஓர் உலகத்தைத்தான் உருவாக்கிக் காட்டுகின்றன அவற்றிலிருந்து நம் அரசியலை நாம் காணலாம். நான் தமிழ்த்தேசியத்தின் முதன்மை பிரதி என்று கொற்றவையைத்தான் சொல்வேன்


வெண்முரசில் பால்ஹிகநாடு மணிபூரகநாடு போன்றவை எப்படி மையத்துடன் உரையாடியும் போராடியும் நிலைகொள்கின்றன என்பது தேசியங்களின் போராட்டத்தைப் பற்றிய புரிதலுக்கு மிகவும் இன்றியமையாதது.


வெண்முரசுகாட்டும் சித்திரம் இங்கே தொன்மையான காலகட்டத்தில் ஒற்றைப்பண்பாடு இருக்கவில்லை என்பதுதான். பண்பாடுகளின் ஒருமைப்பாடுதான் இருந்தது. அவற்றுக்கிடையே ஒரு வகையான ஒத்திசைவு தொடர்ச்சியாக எட்டப்பட்டது. அவ்வாறு ஒத்திசைவு உருவாகாத போது போர் நிகழ்ந்தது. மகாபாரதக் களமே தேசியங்களின் போர்க்களமாகத்தான் உள்ளது. அந்தப்போர் அதன்பிறகு நுண்ணிய வடிவில் வரலாறு முழுக்க நீடித்தது.


வெண்முரசில் இருந்து நான் பல செய்திகளை தெரிந்துகொண்டேன்.அவற்றை பின்னர் மகாபாரத மூலங்களில் போய் சரிபார்த்தேன். உதாரணமாக அங்கம், வங்கம், கலிங்கம், பௌண்ட்ரம் போன்ற நாடுகள். இவற்றை ஒரு வகை cluster என்று சொல்லலாம்.ஒரே பிரஜாபதியான தீர்க்கதமஸில் இருந்து அவை உருவாயின. அந்நாடுகளுக்குள் சண்டை இருந்தாலும் அவற்றை ஒட்டுமொத்தமாக ஒரு கூட்டுத்தேசியமாக கொள்ளமுடியும்


அதேபோல பால்ஹிகக்கூட்டமைப்பு. அவர்களும் ஒரு தேசியமாகவே தங்களை தொகுத்துக்கொள்கிறார்கள். அதற்கும் அவர்களுக்கு ஆதிபிரஜாபதி ஒருவர்தான் என்பதே காரணமாக இருக்கிறது. இந்த ஒரே தந்தைவழி என்பது அன்றைக்கு ஒரு தேசிய அமைப்பின் அடிப்படையாக இருந்திருப்பது தெரிகிறது


அதேபோன்ற ஒரு கூட்டுத்தேசியம்தான் சதகர்ணிகள்.நூறு அரசுகளின் தொகுப்பு. அவ்வாறு அவர்கள் நூறு பெரும் ஒன்றாகத்திரள என்ன காரணம் என்பது வெண்முரசிலே இல்லை. அது ஒருவேளை தாய்வழியாகக்கூட இருக்கலாம். இந்திய நிலத்தை தேசியங்களின் அருங்காட்சியகம் என்று சொல்வார்கள். மகாபாரதம் அப்படித்தான் இருக்கிறது. அதை இன்னும் பிரம்மாண்டமாக காட்டுகிறது வெண்முரசு. குறிப்பாக வெய்யோன் இந்த ஆய்வுகளுக்கு மிக உதவியான நூல்


வெண்முரசில் நாகர்கள் தோற்றுக்கொண்டே இருக்கிறார்கள்.ஆனால் கடைசிவரை அவர்கள் முழுக்க தோற்கவுமில்லை. முழுக்க கரையவுமில்லை. மகாபாரதம் தொடங்குவதே நாகர்கள் மீண்டெழுவதிலிருந்துதான். அந்த உறுதிப்பாடு மெய்சிலிர்க்க வைக்கிறது. அதுதான் வெண்முரசு எனக்கெல்லாம் அளிக்கும் பாடம்


 


செம்மணி அருணாச்சலம்


அன்புள்ள அருணாச்சலம்


நீண்ட இடைவெளிக்குப்பின் கடிதம். வெண்முரசு அதன் மையமாக வேதாந்தத்தை, வேதாந்தரூபனை முன்வைக்கிறது. ஆனால் அதன் கிளாஸிக் இயல்பு அதற்கு எதிரான அனைத்தையும் முழுமையாக தொகுத்து முன்வைப்பதாகவும் இருக்கும். அதேபோல வெண்முரசின் அடிப்படை இயல்பு இந்தியப்பெருநிலம் பாரதவர்ஷமாக திரண்டதன் கதை. ஆனால் கூடவே வென்றவை, வீழ்ந்தவை எல்லாமே சொல்லப்பட்டிருக்கும்.


நீங்கள் சொல்வதுபோல வெண்முரசு ஒற்றை வரலாற்றுவாதத்தை முன்வைக்கவில்லை. ஒரு வரலாற்றுப்பரப்பையே முன்வைக்கிறது. அதிலிருந்து வரலாற்றுவாதங்களை வாசகர்கள் உருவாக்கிக்கொள்ள முடியும்


ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 08, 2021 10:30

January 7, 2021

பத்திபிரித்தல்

அன்பு ஜெயமோகன் அவர்களுக்கு, வண்க்கம்.


இன்று (22-03-20) கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சுயஅடங்கலில் வீட்டிலேயே இருக்க வேண்டிய நிலை.


பொழுது போகாமல் புத்தக அலமாரியை பார்வையிடும் போது விஷ்ணுபுரம் கண்ணில் பட்டது. சரி, மறுவாசிப்பு செய்யலாம் என்று படிக்கத் தொடங்கினேன்.


வாசிப்பின் வேகம் அங்கங்கே தட்டுப்பட்டது. என்ன காரணம் என்று புரியவில்லை. தொடர்ந்து வாசிக்கமுடியாமல் ஒரு சோர்வு வந்ததது. நடையும் பொருள் நுட்பமும் காரணம் இல்லை. ஆனால் வேறு ஏதோ ஒன்று.


நிதானமாக, என்ன காரணம் என்று ஆராய்ந்ததில் சட்டென்று கண்ணுக்குப்பட்டது, நீண்ட பத்திகள். பக்கம் பக்கமான பத்திகள். மூச்சு விடமுடியாத அளவிற்கு பாரத்தை சுமந்து கொண்டே செல்லவேண்டிய பத்திகள்.


இப்படி சொற்களை மூட்டைகட்டி சுமக்கும் அனுபவம் அசோகமித்திரன் கதைகளிலும் எனக்கு ஏற்பட்டது.


உதாரணத்திற்கு விஷ்ணுபரத்திலேயே, ஸ்ரீபாதம் தோற்றுவாயில் 14ம் பக்கம் முழுக்க ஒரே பத்தி. 26 தொடங்கி 28 வரை. 217 தொடங்கி 218, 219 -222 வரை ஒரே பத்தி. இதுபோல் ஏராளம். (தற்போது படித்தவரை குறிப்பிட்டுள்ளேன்)


இப்படி நீண்ட பத்திகள் உரைநடைக்கு அவசியமா? வாசகனின் நினைவு சுமையை இது கூடுதலாக்குவதால் ஒரு சலிப்பு மனநிலை உருவாகாதா? எளிய கேள்விதான், ஆனாலும் கேட்கத் தோன்றியது.


அன்புடன்,

எம்.எஸ்.ராஜேந்திரன்.

திருவண்ணாமலை.


அன்புள்ள ராஜேந்திரன்,

ஆம், வாசிப்புக்கு அது ஒரு தடைதான். ஆனால் உண்மையில் ஓர் எழுத்தாளன் ஒரு தடையை அங்கே நீங்கள் உணரவேண்டும் என விரும்பினால் என்ன செய்யமுடியும்? அதற்காகவே அப்படிச் செய்யலாம் அல்லவா?


நாம் இன்று காணும் அச்சுவடிவ நூல்கள் உருவாகி இருநூறாண்டுகளே ஆகின்றன. நம் வாசிப்புப்பழக்கம் சென்ற நூறாண்டுகளில் எப்படி உருவாகியது என்று பார்த்தால் இந்த விஷயத்தை ஆராயமுடியும். பத்தொன்பதாம் நூற்றாண்டு நூல்கள் பலவற்றில் பத்திகளே இல்லை. பலவற்றில் ஓர் அத்தியாயம் ஒரு பத்தி. உதாரணமாக மே.வீ.ராமானுஜாச்சாரியாரின் மகாபாரத மொழியாக்கம்.


அன்றைய எழுத்தாளர்களுக்கு பத்தி என்பது ஆச்சரியமான விஷயமாக இருந்திருக்கும். நாம் பேசும்போது பத்திபிரித்தா பேசுகிறோம்? தஸ்தயேவ்ஸ்கி நாவல்களில் நீண்ட தன்னுரைகள் வருகின்றன. எப்படி நாம் பேசுகிறோமோ அப்படியே ஒரே ஒழுக்காக, தங்குதடையற்ற போக்காக அவை உள்ளன. பத்திபிரிக்கப்படவில்லை.


ஐம்பதாண்டுகள் முன்புள்ள நிலப்பதிவு ஆவணங்களை பார்த்திருக்கிறீர்களா? பத்திகளே இருக்காது. என் அப்பா பத்தி பிரிப்பதே இல்லை. அவர் ஆவணப்பதிவாளர். அக்கால கடிதங்கள் பத்தியே இல்லாமல்தான் இருக்கும்.


சிறிய பத்திகளாக பிரித்து எழுதுவதை செய்தி ஏடுகளே உருவாக்கின. அது வாசிப்பதற்கு எளிதானது, செய்திகளை பல பிரிவுகளாக ஆக்கினால் நினைவிலும் நிற்கும் என்று ஏடுகள் கண்டுகொண்டன. பாரதி அவர் காலத்தில் சீராக பத்தி பிரித்து எழுதிய எழுத்தாளர்.


செய்திமொழி வழியாகத்தான்  பத்திபிரித்தல் இலக்கியத்திற்கு வந்தது. தொடக்ககாலத்தில் நீளமான பத்திகள்தான் எழுதப்பட்டன. வார இதழ்களில் கதைகள் வெளியிடப்பட்டபோது இதழியலின் தேவைக்காக சிறிய பத்திகளாக ஆக்கப்பட்டன. கல்கி இதழாளர், ஆகவே சீரான பத்திகள். ஆனால் சாண்டில்யன் நீண்டபத்திகளாகவே எழுதினார்.


பின்னர் மிகச்சிறிய பத்திகள் வந்தன. ஒருவரி ஒரு பத்தியாக அமையத் தொடங்கியது. ராணி வார இதழ் அடிமட்ட வாசகர்களுக்காக அத்தகைய ஒருவரி ஒரு பத்தி முறையைக் கொண்டுவந்தது. புஷ்பாதங்கத்துரை போன்றவர்கள் அப்படி எழுதினர்.


ராணி வாசகர் ஒருவர் பாலகுமாரனை வாசித்தால் நீண்ட பத்தி என நினைப்பார். பாலகுமாரன் வாசகர் சாண்டியல் நீளநீள பத்திகளாக எழுதுவதாக நினைப்பார். இதெல்லாம் உளப்பழக்கம், விழிப்பழக்கம் மட்டுமே. எழுத்தின் மாறாநெறிகள் அல்ல. அப்படி ஆக்கிக்கொள்ளக்கூடாது


நான் சொல்லவருவது இதுதான், பத்தி பிரிப்பது உரைநடையின் அடிப்படை விதி அல்ல. பொதுவான உரைநடையில் அச்சுப்பக்கத்தின் காட்சியழகு, வாசகனின் வசதி ஆகியவற்றுக்காக உருவாக்கிக்கொண்ட ஒரு வழக்கம் மட்டும்தான் அது. அத்தகைய வழக்கங்களுக்கு இலக்கியம் கட்டுப்படவேண்டும் என்பதில்லை.


இலக்கியம் மொழிக்குள் தனக்கான மொழியை உருவாக்கிக்கொண்டு படைப்புகளை உருவாக்குகிறது. செய்திமொழி, கல்வித்துறை மொழி போன்றவற்றுக்கு ‘சீரான தரப்படுத்தல்கள்’ இருக்கலாம். புனைவெழுத்துக்கு அப்படி ஒரு சீரான இலக்கணமோ, வடிவமுறையோ இருக்கமுடியாது.


பத்திபிரிப்பது ஓர் எழுத்து உத்தி மட்டுமே. இரண்டு காரணங்களுக்காக பத்தி பிரிக்கப்படுகின்றன. ஒன்று, மொழியோட்டத்தை துண்டுகளாக ஆக்கி அளிக்கவேண்டும் எனும்போது. இரண்டு, அச்சுப்பக்கம் கண்ணுக்கு சலிப்பூட்டாமல் தெரியவேண்டும் என்னும்போது.


இலக்கியநூல்களில் இரண்டாவது காரணம் பொருட்டாக நினைக்கப்படுவதில்லை. அதையெல்லாம் கடந்துவந்தவர்களுக்காகவே இலக்கியநூல்கள் அச்சிடப்படுகின்றன. பொதுவாசகர்களின் உளநிலை கருத்தில்கொள்ளப்படுவதில்லை.


மொழியின் ஓட்டத்தை எதன்பொருட்டு துண்டுகளாக்க வேண்டும் என்று ஆசிரியன், அந்தப்புனைவின் தேவைக்கேற்ப முடிவுசெய்யவேண்டும். உதாரணமாக, ஒரு மனஓட்டத்தை ஆசிரியன் சொல்கிறான். தங்குதடையில்லாமல் உள்ளம் பெருகி ஓடுகிறது. அதை துண்டுகளாக ஆக்கினால் அந்த ‘பெருக்கு’ என்னும் அனுபவத்தை வாசகன் இழந்துவிடுவான்.


பொங்கிப்பெருகிச்செல்லும் உள்ளம் மொழியாக ஆவது என்னும் அனுபவம்தான் முக்கியம், அதில்சொல்லப்பட்ட கருத்துக்களோ நிகழ்வுகளோ அல்ல என்று ஆசிரியனுக்கு தோன்றலாம். அது அப்புனைவின் தேவையாக இருக்கலாம். விஷ்ணுபுரத்தில் தியான அனுபவங்கள் அவ்வாறு எழுதப்பட்டுள்ளன. உணர்வுக்கொந்தளிப்புகள் அவ்வாறு எழுதப்பட்டுள்ளன. ஆகவே நீண்ட பத்திகள், பத்தியே இல்லா பக்கங்கள் அதிலுள்ளன.


இதேபோல நீண்ட தன்னுரைகளுக்கு பத்தி தேவையில்லாமல் இருக்கலாம். இன்னும் பலவகையான தேவைகள் புனைவில் இருக்கலாம். உதாரணமாக, ஒருவன் ஒரேபார்வையில் ஒரு காட்சியைப் பார்க்கிறான். அது ஒரே பத்தியாக ஒட்டுமொத்தமாக இருந்தால்தான் அந்த உணர்வு வரும். மாறாக சிறுபத்திகளாக எழுதினால் தனித்தனியாக பார்ப்பதுபோலத்தான் வாசகனுக்குத் தோன்றும்.


அதேசமயம் ஒரு கதை வாசகன் தான் வாசிப்பதையே அறியாமல் ஒழுகிச்செல்லவேண்டும் என ஆசிரியன் விரும்பினால் அவன் வாசகனுக்கு வசதியான சிறுபத்திகளாக ஆக்குகிறான். ஓர் எண்ணம் அல்லது ஒரு கருத்து அதற்கு அடுத்த எண்ணம் அல்லது கருத்துடன் ஒட்டாமல் தனியாக நிற்கவேண்டும் என்று கருதினால் தனிப்பத்தியாக ஆக்குகிறான்.


நான் கட்டுரைகளில் ஒருகருத்தை பல அலகுகளாக பிரித்துக்கொள்கிறேன். ஒர் அலகு ஒரு பத்தி. அது ஒரு தனிக்கருத்தாக நிலைகொள்ளவேண்டும் என நினைப்பேன்.


இணையத்தில் எழுத ஆரம்பித்தபோது அச்சுப்பக்கத்திலுள்ள சில வசதிகள் இங்கில்லை என உணரத்தொடங்கினேன். ஸ்க்ரோல் செய்து வாசிக்கவேண்டும். நீண்டபத்திகள் அத்தகைய வாசிப்பில் நாம் விரும்பிய ஒழுக்கை அளிப்பதில்லை, ஏனென்றால் ஸ்க்ரோல் செய்தாலே ஒழுக்கு முறிந்துவிடுகிறது.


அத்துடன் கணிப்பொறியின் பக்கங்களில் சீரான இடைவெளியும் சீரான அமைப்பும் கொண்ட பத்திகள்தான் சரியாக வாசிக்க உதவுகின்றன. வெண்முரசு அத்தனை பத்திகளும் ஏறத்தாழ ஒரே அளவு கொண்டிருக்கும். ஒட்டுமொத்தமாக உணர்வுகள் பெருகியொழுகும்போதுகூட பத்திகளாக அதைப் பிரித்திருப்பேன்.


ஏனென்றால் வெண்முரசு தங்குதடையற்ற வாசிப்பை அளிக்கவேண்டும் என நான் நினைத்தேன். மிகநீளமான நாவல். அத்துடன் அது காட்சிவடிவ சித்தரிப்பு கொண்டது. வாசகன் சென்று மறைந்த ஒரு காலத்தையே அகக்கண்களால் பார்க்கவேண்டும். வாசிப்பதை மறந்து பார்த்துக்கொண்டிருக்கவேண்டும். அப்படிப் பார்க்கவேண்டுமென்றால் அது தன்னியல்பாக ஒழுகிச்செல்லும் வாசிப்பை அளிக்கவேண்டும். மொழியோ அமைப்போ தடையை அளிக்கலாகாது


ஆனால் நாளையே நான் இன்னொரு படைப்பை எழுதுகிறேன் என்று கொள்வோம். அதில் வாசகன் ஒழுகிச்செல்லக்கூடாது, நின்று நின்று வரிவரியாக வாசிக்கவேண்டும் என நினைக்கிறேன். அந்நிலையில் ஒரு வரி ஒரு பத்தியாக ஆகும் பாணியை கடைப்பிடிக்கலாம். வாசகன் மொழியில் சிக்கிச் சுழன்று சுழன்று அங்கேயே கொஞ்சநேரம் கிடக்கவேண்டும் என எண்ணினால் மிகநீளமான சொற்றொடர்கள் கொண்ட மொழியை உருவாக்கலாம். வாசகன் சட்டென்று மொழியில் ஏறி மிகமிக விசையுடன் சென்று மீளவேண்டும் என்று எண்ணினால் நீளமான பத்திகளை உருவாக்குவேன்.


பத்தி பிரிப்பது ஒருபக்கம் வாசகனின் வாசிப்பு வசதிக்காக. ஆனால் வசதிக்காக மட்டும் அல்ல. அதில் புனைவு உருவாக்கும் விளைவும் ஓர் அளவுகோல்.


ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 07, 2021 10:35

முருகவேலன்- கடிதம்


அறிவியக்கவாதியின் உடல்

அன்பு ஜெயமோகன்,


நடமாட இயலாத உடற்குறை கொண்ட நண்பர் சக்திவேலின் கடிதமும், அதற்கான தங்கள் பதிலையும் கண்டேன். அக்கடிதத்தில் எழுத்தாளர் மற்றும் வாசகர்களின் நிழற்படங்கள் வெளியிடுவது குறித்தான கருத்தையும் சுருக்கமாகத் தெரிவித்திருந்தீர்கள். அப்பதிவில் முருகவேலன் எனும் எனது பழைய பெயரைக் குறிப்பிட்டிருந்தது நினைவுகளைக் கிளறியது.


படைவீடு பண்பாட்டு அறக்கட்டளை எனும் பெயரில் முருக வழிபாடு தொடர்பான அறக்கட்டளை நிறுவி இருந்த காலம் அது. 2013-இலிருந்து 2015-க்குள் இருக்கும். என்னுடன் நண்பர் தியானேசுவரன் இணைந்திருந்தார். சக்திவேல் எனும் பெயருக்குப் பதிலாக முருகவேலனை முதன்மைப்படுத்தினேன். தமிழ் முருக வழிபாடு, தமிழ் முருகக் கோட்டம் போன்ற பிரம்மாண்டக் கனவுகள் கொண்டிருந்த காலகட்டம் அது. மூன்றரை கோடித் தமிழர்கள் “தமிழ் போற்றி முருகா போற்றி தமிழும் முருகனும் போற்றி போற்றி” எனும் முழக்கத்தைச் சொல்ல வேண்டும். அப்படியான நிலைப்பாட்டில் தீவிரமாய் இருந்த நேரம் அது. அச்சமயத்தில்தான் விஷ்ணுபுரம் தொடர்பான தொடர்கடிதங்களை எழுத நேர்ந்தது.


படைவீடு குறித்த எனது அனுபவங்களையும், புரிதல்களையுமே விஷ்ணுபுர விமர்சனக் கடிதங்களில் பகிர்ந்திருப்பேன். முருக வழிபாடு தொடர்பான தேடல் வழியாகவே சமயம் என்பது குறித்த குறைந்தபட்சத் தெளிவு கிடைத்தது. முதலில். விஷ்ணுபுரம் நாவலை வைதீக வைணவச் சமயத்துக்குக் கொடி பிடிக்கும் இந்துத்வா நாவலாகவே கருதி இருந்தேன். மேலும், இந்து மதம் என்பதே வைதீக வைணவச் சமயம் என்பதே எனது அறிதலாக இருந்தது. இராமாயணம், மகாபாரதம், கீதை போன்ற இந்துமதபிரதிகளின் மூலவர் கிருஷ்ணன். ஆக, வைதீக வைணவச் சமயமே இந்துமதம் என்பதான தருக்கப் புரிதலும் ஆசுவாசம் தருவதாய் இருந்தது. சைவ சித்தாந்தம்(தமிழர்) எதிர் வைதீக வைணவம்(ஆரியர்) எனும் முரண்பாட்டைக் கொண்டு சைவ சித்தாந்தத்தைத் தமிழருடையது என்றும், வைதீக வைணவம் என்பது ஆரியரால் நம் மீது திணிக்கப்பட்டது என்றும் நம்பவும் செய்தேன். என்றாலும், தனித்தமிழ் முன்னோடிகளின் தமிழ்த்தேசிய அரசியல் எனக்கு உவப்பானதாக இல்லை. இச்சமயத்தில்தான் அ.ச.ஞானசம்பந்தன், கி.வா.ஜெகநாதன், குன்றக்குடி அடிகளார், சோதிப்பிரகாசம், கோவை ஞானி, அஸ்வகோஸ்(இராசேந்திர சோழன்), அருணன், ஆ.சிவசுப்பிரமணியன், தேவ.பேரின்பன், ராஜ் கெளதமன், ஸ்டாலின் ராஜாங்கம், பிரேம், கோ.கேசவன், மெளனகுரு, தொ.பரமசிவன், ந.முத்துமோகன், எஸ்.வி.ராஜதுரை, பக்தவத்சல பாரதி, ஆ.செல்லப்பெருமாள், ச.பிலவேந்திரன், சுந்தர்காளி, எஸ்.என்.நாகராசன் போன்றோரின் கட்டுரைகளை நிதானித்து வாசிக்கும் சூழல். இணையாக, சமய நூல்கள் மற்றும் புராணங்களையும் முன்நோக்கங்களின்றி வாசித்தேன். விளைவாக, பெருந்திகைப்பும் பித்தும் என்னில் சுழன்றன. ஆசுவாசத்திற்கான திணறலில் விஷ்ணுபுர வாசிப்புக்கு வந்து சேர்ந்திருந்தேன்.


விஷ்ணுபுர வாசிப்பு இருள்வனத்தில் கருநிழல்களைத் துரத்துவதைப் போன்றே துவக்கத்தில் இருந்தது. நாவலின் புறவிவரணைகளில் மனம் நிற்கவே இல்லை; நாவலின் காலமுரண்களிலும் அது கவனம் கொள்ளவில்லை. அதன் தத்துவ விசாரணைகளையே மனம் சுற்றி வந்தது. இடையிடையே பாத்திரங்கள் பேசும் சில வாக்கியங்கள், தரிசனங்களாக எனக்குப் புலப்படத் துவங்கின. அத்தரிசன வாக்கியங்களை முகப்பாகக் கொண்டு முருக வழிபாட்டு அனுபவங்களைத் தொகுக்க முயன்றேன் அல்லது என் அலைக்கழிப்பை நிதானமாக்க விரும்பினேன். அவையே விஷ்ணுபுர வாசிப்புத் தொடர் கடிதங்களாக தளத்தில் பிரசுரமாயின.


சமீபமாய் விஷ்ணுபுர நாவல் வாசிப்புக்கு மேம்பட்ட திகைப்பை பேராசிரியர் டி.தருமராஜ் அயோத்திதாசர் வழி அளித்தார். அவரின் அயோத்திதாசர் நூல், வாசகப்பரப்பில் பெருங்கவனம் பெற்றிருக்க வேண்டும். ஆய்வுப்பேராசிரியரான அவரின் புனைவுப்பித்து வழியாகவே வரலாறு, வழக்காறு போன்றவை தொடர்பான தரிசனங்களைப் பெற்றேன். அபுனைவு, புனைவு எனும் பதங்களை ஒட்டிய நவீன அறிவின் மயக்கத்தை டி.த்ருமராஜ் திகைப்புக்கு உட்படுத்தினார்; பிரதியின் அச்சு மயக்கங்களின் திரிபுகளைக் கண்டுகொள்ளத் தூண்டினார். பல மணிநேரங்கள் அவருடன் உரையாடியதன் வழியாக கலை இலக்கியங்கள் குறித்த புரிதல் இன்னும் தீர்க்கமானது. எதிர்காலக் கனவு எனும் கானல் நம்பிக்கையைக் களைந்து நிகழ்காலச் செயல்பாடுகளில் காத்திரமாகப் பங்காற்றும் உறுதியை அவரே அளித்தார். உங்களை பலமுறை சந்தித்திருக்கிறேன்; தனிப்பட்டுப் பேசியதில்லை. தருமராஜ் அவர்களையோ நான் சந்தித்ததே இல்லை; மணிக்கணக்கில் பேசி இருக்கிறேன்.


கடந்த வாரம், தஸ்தயேவ்ஸ்கி குறித்து ஜி.என்.பணிக்கர் மலையாளத்தில் எழுதி இருந்த கட்டுரை நூலைத் தமிழில் வாசித்தேன். புனைவுத்தன்மை மிகுந்திருக்கும் சிறந்த கட்டுரை நூல் அது. மொழியாக்கம் உதயஷங்கர் என நினைக்கிறேன். தஸ்தயேவ்ஸ்கியின் வாழ்க்கைப் பின்புலத்தோடு அவரின் ஆக்கங்களைப் பொருத்திப்பார்க்கும் வாய்ப்பை பணிக்கர் ஏற்படுத்தித் தந்திருந்தார். அசடன், குற்றமும் தண்டனையும், கரமசோவ் சகோதரர்கள் போன்ற ஆக்கங்களை இன்னும் நெருங்க அக்கட்டுரை நூல் உதவியது.


முருகவேலனில் துவங்கி பணிக்கருக்கு வந்து நிற்கிறது. இப்படி எழுத்து நெளிந்து செல்வதைத் தவிர்க்க முடிவதில்லை. முருக வழிபாடு குறித்த தெளிவும், நடைமுறை அடையாள அரசியல் குழப்பங்களும் படைவீடு அறக்கட்டளைத் திட்டங்களைக் கைவிட உந்தின. சக்திவேல் எனும் இயற்பெயரிலேயே எழுதலாம் என முடிவு செய்தேன். அச்சமயத்தில், பல ஆண்டுகளுக்கு முன்பு சந்தித்த இளமுருகு (புஞ்சை புளியம்பட்டி மறைமலை அச்சகப் பொறுப்பாளர்) மற்றும் தமிழ் ஒலியன்களின் உச்சரிப்பைத் தெளிவுற விளக்கிய பெருமாள் ஐயா (கோபிசெட்டிபாளையம்) போன்றோரின்  நினைவு வந்தது. அவ்விருவருக்கும் தனித்தமிழ் பிடிக்கும். அவர்களுக்கான செய்நன்றியாய் சத்திவேல் எனும் பெயரைக் கொண்டேன். தொடர்ந்து அப்பெயரிலேயே எழுதவும் உறுதி பூண்டேன்.


இப்படியான சூழலில், நண்பர் சக்திவேல் எழுதும் கடிதங்களை நான் எழுதியதாக நினைத்து பல நண்பர்கள் வினவி இருக்கின்றனர். அக்கடிதங்களில் சக்திவேல் எனும் பெயர் மட்டுமே இருக்கும்; ஊர்ப்பெயர் இருக்காது. அவரை இன்று நிழற்படமாகக் கண்டபோது ஒருபுறம் அதிர்ச்சி; மறுபுறம் கிளர்ச்சி. இவரா அப்படி எழுதினார் எனும் அசட்டுத்தனமான யோசனையை இங்கு மறைக்க விரும்பவில்லை. சேலம் வானவன் மாதேவியிடம் (வானதி) ஏதாவது எழுதிக்கொண்டிருக்கும்படி அவ்வப்போது வற்புறுத்துவேன். சிரித்தபடியே உரையாடும் அவளின் மனச்சிடுக்குகள் மர்மமானவை; இலக்கிய ஆக்கங்களுகான வேர் கொண்டவை. ஏனோ, அவளால் இயலாமல் ஆயிற்று.


உடலியல் சோர்வைப் புறந்தள்ளி உற்சாகமாய்ச் செயல்பட்டுக் கொண்டிருக்கும் சக்திவேலை சகநண்பனாய் வாழ்த்துகிறேன். தொடர்ந்து எழுதிக் கொண்டிருக்கவும் கேட்டுக்கொள்கிறேன்.


சத்திவேல்,

கோபிசெட்டிபாளையம்.


 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 07, 2021 10:34

கதைகளை நினைக்கையில்…


அன்புள்ள ஜெ,

நான் 2020 ஆண்டு முடிவில் என் டைரியில் நூறுகதைகளின் ஆண்டு என்று எழுதி வைத்துக்கொண்டேன். ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு உலகில் என்னை சுழற்றியடித்தன. என் மனசில் மூதேவி என்ற வார்த்தையின் அர்த்தமே மாறிப்போனது. தெய்வங்கள் என்றால் எங்கோ இருப்பவை என்பது மறைந்து நமக்குள் இருப்பவை, நம்மில் தேவையின்போது நம்மை மீறி எழுபவை என்ற எண்ணம் வந்தது. என் வாசிப்பில் நான் முழுமையாகவே தோய்ந்து வாசித்தவை நூறுகதைகளும். எனக்கு அவற்றை வாசிக்க இருநூறுநாட்களுக்குமேல் ஆகியது. ஒரு முழு ஆண்டும் அதிலேயே முழுமை அடைந்தது


அர்விந்த் மகாதேவன்


அன்பின் ஜெ.

இன்று ராஜன் கதை படித்தேன்.நல்ல அரசியல் கதையும் கூட.பூதத்தான் நாயரிடம் மனது நின்று விட்டது.


நீங்கள் எனது முகநூல் பதிவிற்கான கடிதத்தில் கேட்டது போல, என்னிடம் அடிமனதில் இருக்கும் வெறுப்பு என்ன எனக் கேட்டுக் கொண்டேயிருந்தேன்.அது நீங்கள் நிற்கும் அரசியல் பொருளியல் நிலைகள் எனப் புரிந்து கொண்டேன்.


ஒரு காலத்தில் ஒரு சாதாரணன் தலைவனாக எழுந்து வந்த போது, ரூபாய்க்கு ஒரு படி அரிசி போடுவேன் எனச் சொன்னான்.அவனின் அரசியல் எதிரிகள், ஏன் மூணு படி போடேன் என்றார்கள்.அவனுக்கு வாய் அதிகம், ‘ மூன்று படி லட்சியம்; ஒரு படி நிச்சயம்’. என்றான்.


ஆனால், ஆட்சிக்கு வந்த பின்புதான் தெரிந்தது. அதைச் செயல்படுத்தத் தேவையான கட்டமைப்பு 3 நகரங்களில் மட்டுமே இருந்தது.அடுத்த வந்த ஆள், அந்தக் கட்டமைப்பை தமிழகமெங்கும் உருவாக்கினார்.  நான் சிறுவனாக இருந்த போது, அரிசியும், கோதுமையும், சர்க்கரையும், மண்ணெண்ணையும் வாங்கியிருக்கிறோம். எங்கள் வீட்டில் பூரியும், சப்பாத்தியும் வந்தது அப்படித்தான்.


அதற்கப்புரம் 20 ஆண்டுகளில் கழித்து, அரிசி 2ரூபாய்க்கும் பின்னர் இலவசமென்றும் வந்தது. முதல் தலைவன் சூளுரைத்த 40 ஆண்டுகளுக்குப் பின். இமயத்தின் ஒரு கதையில், மாலை ஒவ்வொரு வீடாகப் போய் உணவுக்காக தட்டேந்தும் வண்ணாரப் பெண் பற்றி நண்பர் வெங்கி சொன்னார். அதை இன்னும் படிக்க வில்லை. ஆனால், அந்தக் கதை இனிமேலும் சாத்தியமில்லை என்பது எனக்குப் புரிந்தது. என் அப்பாவுக்கு, கையெழுத்துப் போடும் அளவுக்குச் சொல்லிக் கொடுத்த பறையர் வாத்தியார், வருடத்தில் சிலமுறை வந்து, தன் வேட்டியில் தவசம் (தானியம்) வாங்கிக் கொண்டு போனதைச் சிறுவயதில் பார்த்திருக்கிறேன். அவர் உடல் மொழி இன்னும் மனதில் இருக்கிறது. இன்று உயிருடன் இருந்திருந்தால், அவர் என் அப்பா முன் அப்படி நின்று பிழைத்திருக்க வேண்டியதில்லை என்பது இன்றைய நிஜம்.அது ஒரு தரப்பு.


ஆனால்,  அறிவின் மொழிபோலத் தோன்றும் ‘சோ ராமசாமியிசத்தில்’ மயங்கித் தெளிந்த போது புரிந்து கொண்டேன் – அது இன்னொரு தரப்புஇரண்டு தரப்புகளும் என்றுமே மாறாது போல.கடந்த சில வாரங்களில், நீங்கள் கேட்ட கேள்வியை யோசித்துக் கொண்டேயிருந்தேன். கொஞ்சம் போலத் தெளிவு கிடைத்தது.


உங்கள் கதைகளின் தளமும், அவற்றின் விரிவும், நுட்பமும், அதில் நான் கற்றுணரும் விஷயங்களும் ஒரு வாசகனாக என்னைப் பெரும் சுகானுபவத்தில் ஆழ்த்துகின்றன. என் அரசியல் நிலைகளை மேலும் உறுதி செய்கின்றன. அவற்றைப் படைத்தமைக்காக உங்களுக்கு என்றும் நன்றியுடையவனாக இருப்பேன்.


பாலசுப்ரமணியம் முத்துசாமி


Dear Jeyamohan


Stories spinning around Guru Nitya’s ashram and the disciples are the best. ‘Sivam”  is about the “dharma” of when to save a life and when to let go. Amazing description of Varanasi. Your interpretation of the spiritual roots that are holding Varanasi with its past that nourish the new developments be it a new ruler, cultural or technological interventions is the best. The other stories where you bring out the views of the monks and Guru Nitya’s interpretations are great.


Yesterday I read “Karu”. Seven years in Tibet is my favorite book and movie. Visited monasteries in Sikkim and Bodh Gaya more as a tourist without any philosophical inclination.  The historical facts, seekers, and the books that you have introduced in the story made me to rush to google to learn more about those personas.  Actually, I journeyed with Mukta to those yonder mountains, valleys, villages and almost touched Shambala!


Your research and efforts kindle interest to read,learn and seek. The characters walk thru their experiences holding one’s hand. Thanks for your tireless writing. Happy to see the little birdies are getting ready to fly.


Warm regards

Sobana Iyengar


திரு ஜெ,

தற்போது வெளியாகும் கதைகளைப் படித்ததும் மேல் அதிக தகவல் களுக்கு  கூகிள் செய்வது வழக்கம். இந்திய சுதந்திர தினத்தன்று கொடி ஏறியதும் ராச ரத்தினம் பிள்ளை அவர்களின் நாதஸ்வரம் இசைத்தது, சிலப்பதிகார காலத்தில் உள்ள இட முறை, வல முறை வாசிப்பையும், நாதஸ்வர வடிவத்தை மாற்றியமைத்தது, தமிழிசை வளர்த்தது என மேல் அதிக தகவல் களுக்கு தேனீ கதை வாசிப்பு உறுதுணையாக இருந்தது.


அன்புடன்

சேது வேலுமணி,

ஜக்தால்பூர்.


100. வரம் [சிறுகதை]
99. முதலாமன் [சிறுகதை]
98. அருகே கடல் [சிறுகதை]
97. புழுக்கச்சோறு [சிறுகதை]
96.  நெடுந்தூரம் [சிறுகதை]
95. எரிமருள் [சிறுகதை]
94. மலைவிளிம்பில் [சிறுகதை]
93. அமுதம் [சிறுகதை]
92. தீவண்டி [சிறுகதை]
91. பீடம் [சிறுகதை]
90. சிந்தே [சிறுகதை]
89. சாவி [சிறுகதை]
88. கழுமாடன் [சிறுகதை]
87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]
86. தூவக்காளி [சிறுகதை]
85. சிறகு [சிறுகதை]
84. வண்ணம் [சிறுகதை]
83. ஆபகந்தி [சிறுகதை]
82. ஆமை [சிறுகதை]
81. கணக்கு [சிறுகதை]
80. சுக்ரர் [சிறுகதை]
79. அருள் [சிறுகதை]
78. ஏழாவது [சிறுகதை]
77. மணிபல்லவம் [சிறுகதை]
76. மூத்தோள் [சிறுகதை]
75. அன்னம் [சிறுகதை]
74. மலையரசி [சிறுகதை]
73. குமிழி [சிறுகதை]
72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]
71. செய்தி [சிறுகதை]
70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2
70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1
69. ஆகாயம் [சிறுகதை]
68. ராஜன் [சிறுகதை]
67. தேனீ [சிறுகதை]
66. முதுநாவல்[சிறுகதை]
65. இணைவு [சிறுகதை]
64. கரு [குறுநாவல்]- பகுதி 1
64. கரு [குறுநாவல்]- பகுதி 2
63. ‘பிறசண்டு’ [சிறுகதை]
62. நிழல்காகம் [சிறுகதை]
61. லாசர் [சிறுகதை]
60. தேவி [சிறுகதை]
59. சிவம் [சிறுகதை]
58. முத்தங்கள் [சிறுகதை]
57. கூடு [சிறுகதை]
56. சீட்டு [சிறுகதை]
55. போழ்வு [சிறுகதை]
54. நஞ்சு [சிறுகதை]
53. பலிக்கல் [சிறுகதை]
52. காக்காய்ப்பொன் [சிறுகதை]
51. லீலை [சிறுகதை]
50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]
49. கரவு [சிறுகதை]
48. நற்றுணை [சிறுகதை]
47. இறைவன் [சிறுகதை]
46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]
45. முதல் ஆறு [சிறுகதை]
44. பிடி [சிறுகதை]
43.. கைமுக்கு [சிறுகதை]
42. உலகெலாம் [சிறுகதை]
41. மாயப்பொன் [சிறுகதை]
40. ஆழி [சிறுகதை]
39. வனவாசம் [சிறுகதை]
38. மதுரம் [சிறுகதை]
37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]
36. வான்நெசவு [சிறுகதை]
35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]
34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]
33. வான்கீழ் [சிறுகதை]
32. எழுகதிர் [சிறுகதை]
31. நகைமுகன் [சிறுகதை]
30. ஏகம் [சிறுகதை]
29. ஆட்டக்கதை [சிறுகதை]
28. குருவி [சிறுகதை]
27. சூழ்திரு [சிறுகதை]
26. லூப் [சிறுகதை]
25. அனலுக்குமேல் [சிறுகதை]
24. பெயர்நூறான் [சிறுகதை]
23. இடம் [சிறுகதை]
22. சுற்றுகள் [சிறுகதை]
21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]
20. வேரில் திகழ்வது [சிறுகதை]
19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]
18. தங்கத்தின் மணம் [சிறுகதை]
17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]
16. ஏதேன் [சிறுகதை]
15. மொழி [சிறுகதை]
14. ஆடகம் [சிறுகதை]
13. கோட்டை [சிறுகதை]
12. விலங்கு [சிறுகதை]
11. துளி [சிறுகதை]
10. வேட்டு [சிறுகதை]
9. அங்கி [சிறுகதை]
8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]
7. பூனை [சிறுகதை]
6. வருக்கை [சிறுகதை]
5. “ஆனையில்லா!” [சிறுகதை]
4. யா தேவி! [சிறுகதை]
3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]
2. சக்தி ரூபேண! [சிறுகதை]
1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 07, 2021 10:31

துரியோதனன் காதல்


தன் முடிவில் உறுதியாயிருப்பவன் தன்னைச் சூழ்ந்திருப்பவர்கள் இதயத்தையும் மிக எளிதாக அவ்வுறுதியாலேயே தன் முடிவை ஏற்றுக் கொள்ள வைக்கிறான். கர்ணன் கூடாது என்று உறுதியாகத் தடுத்திருந்தால் துரியன் மீறியிருக்க மாட்டான் தான். ஆனால் கர்ணன் அந்த எல்லை வரை செல்லவேயில்லை. சொல்லுவதை சொல்லுவோம் என்ற வகையிலேயே அவன் கருத்தைச் சொல்கிறான்.


துரியோதனன் காதல்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 07, 2021 10:30

January 6, 2021

இருவகை இலக்கியங்கள்

அன்புள்ள ஜெ வணக்கம்.


தங்களின் அறம் தான் நான் வாசித்த முதல் புத்தகம். அதன் பின்னர் தான் தங்களின் சிறுகதைகள் வாசிக்க ஆரம்பித்தேன். குக்கூ சிவராஜ் மூலம் தங்களின் கட்டுரைகள் பெற்று எம் மாணவர்களுக்கு வாசிக்க கொடுத்தோம். அறம் புத்தகம் சார்ந்து எம் மாணவர்கள் அப்புத்தகம் தங்களை எப்படியெல்லாம் பாதித்தது என்று பதிவிட்டார்கள்.


ஆனால் எனது பதினோரு வயது மகள் அர்ஷா சோற்றுக் கணக்கு தனக்கு ஏன் பிடித்தது என்பதுடன் அக்கதையை பற்றி சுவராஸ்யமாக விவரித்தார். எனக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. தங்களின் சிறுகதைகள் வாசிக்க ஆரம்பிக்கிறார்.


ஆனால் எனக்குத்தான் வாசிக்கிற சிறுகதைகள் சில புரிந்து கொள்ள முடியவில்லை. சிறுகதைகள் என்ன சொல்ல வருகிறது என்று புரிந்து கொள்ள கஷ்டப்படுகிறேன். மௌனியின் சிறுகதைகள் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் என்ன வாசிக்க வேண்டும் எப்படி வாசிக்க வேண்டும் என்று தாங்கள் எழுதிய கட்டுரை அல்லது பேசிய வீடியோ இணைப்பு அனுப்பினால் எனக்கு பேருதவியாக இருக்கும்.


தங்களின் அறம் என்னை பாதித்த அளவிற்கு வேறு யாரும் பாதிக்கவில்லை. மேலும் வாசிப்பில் மிகவும் பின்தங்கி உள்ளதால் புத்தகம் தேர்வு செய்வதிலும் புரிந்து கொள்ளும் நிலையிலும் கஷ்டப்படுகிறேன். தயவுசெய்து எனக்கு உதவி செய்யுங்கள் ஜெ.


தாங்கள் காந்திகிராமம் வந்த போது நான் தான் உங்களையும் குக்கூ சிவராஜ் அண்ணாவையும் கவனித்து கொள்ள தன்னார்வலராக விருப்பம் தெரிவித்தேன். ஆனால் அன்று எனக்கு அலுவலக பணி சார்ந்து சென்னைக்கு அனுப்பப்பட்டேன். எனவே அரிய வாய்ப்பை இழந்தாலும் என் மாணவர்களை அனுப்பி வைத்தேன்.


தங்களை மீண்டும் எனது மாணவர்களோடு சந்திக்க விரும்புகிறேன். அதற்கு முன் தங்களின் படைப்புகளை   அனைவருமே வாசித்து வருகிறோம்.


சந்திப்பு நடைபெறும் என்று நம்புகிறேன். நன்றி.


வின்சென்ட் ராஜசேகர்


 


அன்புள்ள வின்செண்ட்


குக்கூ நிகழ்ச்சிகள் எதிலாவது சந்திப்போம்


இந்த கொரோனா காலம் சந்திப்புகளை மிகவும் குறிக்கிறது


மௌனி கதைகள் தொடக்க கால வாசிப்புக்கு உரியவை அல்ல. அவை முதிர்ந்த வயதிலுள்ளவர்களுக்கு, வாசிப்பில் சற்று பழக்கம் உடையவர்களுக்கு உரிய கதைகள்.


கதைகள்  இருவகை உண்டு. வாழ்க்கையை நோக்கிச் சுட்டக்கூடியவை, தன் வடிவிலேயே வாழ்க்கையின் ஒரு பகுதியை முழுமையாக வைத்திருப்பவை ஒருவகை. சோற்றுக்கணக்கு அத்தகையது. கெத்தேல்சாகிப், அவருடைய வாழ்க்கைச்சூழல், அவருடைய பணி எல்லாமே அக்கதையில் உள்ளது. அது வாழ்க்கையிலுள்ள முன்னுதாரணம் ஒன்றிலிருந்து எடுக்கப்பட்டது


ஆனால் சிலவகைக்கதைகள் வேறு இலக்கியப்படைப்புகளைச் சுட்டுபவை. இலக்கியங்களிலிருந்து உருவாக்கப்பட்டவை. அந்த இலக்கியப்படைப்புக்களை நீங்கள் படித்திருந்தால்தான் அவற்றை புரிந்துகொள்வதற்கான களம் அமையும். அந்த கதையில் அது சுட்டும் இலக்கியப்பரப்பை குறிப்பாலுணர்த்தும் விஷயங்கள் தான் இருக்கும். அது வாழ்க்கையைச் சுட்டாது


மௌனி கதைகளில் அவை நிகழும் களம், அவற்றின் மனிதர்கள் எதுவுமே சொல்லப்படுவதில்லை. அவை வாசகன் கற்பனைக்கே விடப்படுகின்றன. அவன் தான் வாசித்த பலகதைகளில் இருந்து அதை கற்பனையால் உருவாக்கிக்கொள்ளவேண்டும். மௌனியின் கதைகள் பிரிட்டிஷ் கற்பனாவாதக் கவிதைகள் மற்றும் கதைகளின் நீட்சியாக அமைந்தவை. அவற்றை ஒட்டி தமிழில் எழுதப்பட்ட கதைகளையும் அவை குறிப்புணர்த்துகின்றன.


அவற்றில் பழக்கமுள்ள வாசகர்களே இவற்றை உண்மையாக வாசிக்கமுடியும். நகுலன் எழுதும் கதைகளும் இத்தகையவை இவற்றை எழுத்திலிருந்து எழுத்து எனலாம். ஒருவகை metawriting என்று வரையறை செய்யலாம். இவை வாழ்க்கையப் பற்றி பேசுவதில்லை, வாழ்க்கையைப் பற்றி ஏற்கனவே பேசியவற்றை சில நுட்பங்களுடன் மீண்டும் பேசுகின்றன.


இலக்கிய வாசிப்பின் தொடக்கத்தில் நேரடியாக வாழ்க்கையிலிருந்து எழும் இலக்கியங்களையே நாம் வாசிக்கவேண்டும். அறம் போன்றவை. இலக்கிய வாசிப்பு முதிர்ந்து நாமே இலக்கியநூல்களை ஒட்டிச் சிந்திக்க ஆரம்பிக்கும்போது நாம் இலக்கியத்திலிருந்து உருவாகும் இலக்கியங்களை பற்றி வாசிக்கலாம். அவற்றைப்பற்றி கேட்டு அறிந்தபின் நூல்களை தெரிவுசெய்யலாம்


ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 06, 2021 10:34

அபயா கொலைவழக்கு,சட்டமும் நடைமுறையும்- கடிதம்


இரு நாயகர்கள்

திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,


நான் அப்போது திண்டுக்கல்லில் 9ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். ஒரு தனியார் பள்ளியில் 10 வகுப்பு மாணவன் ஒருவன் பள்ளி வளாகத்தில் இருந்த ஒரு பயனற்ற கிணற்றில் பிணமாகக் கிடந்தான். அவன் தற்கொலை செய்து கொண்டதாக பள்ளி நிர்வாகம் தெரிவித்தது. அம்மாணவன் தேர்வில் காப்பியடித்ததாகக் கூறி தலைமையாசிரியர் அறையில் வைத்து ஆசிரியர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டதால் மூர்ச்சையாகி உயிர் இழந்ததாக மாணவர்கள் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ‘நீதி விசாரனை தேவை’ என திண்டுக்கல்லில் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. ஆனால், அம்மரணம் மறக்கப்பட்டது.


திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரை சுற்றி இன்றும் பல துணியாலைகள் செயல்படுகின்றன. 15 வயது முதலான சிறுமிகள் அங்கேயே தங்கி பணிபுரிகிறார்கள். அவற்றில் ஒரு மில்லில் ஒரு 17 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்து கிடக்கிறாள். ஆடைகள் கலைந்த நிலையில் அவள் இறந்து கிடந்த போதும் அது சந்தேக மரணம் என்றே போலீசில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. புலன் விசாரணைக்குப் பிறகு அவள் ‘சூப்பர் வேஸ்மால்’ கேசத் தைலத்தை தவறுதலாக தண்ணீர் என்று அருந்தியதால் மரணம் என்று வழக்கை முடித்து அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. அச்சிறுமியின் பெற்றோர் அவ்வாறு வழக்கை முடிப்பதில் தங்களுக்கு ஆட்சேபனையில்லை என்று எழுதித் தருகிறார்கள்.


ஒரு தொழிற்சங்கத் தலைவர் மட்டும் அம்மரணம் தற்செயல் மரணமில்லை என்றும் அச்சிறுமி அந்த ஆலையைச் சேர்ந்த சிலரால் கற்பழித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் ஆட்சேபனை செய்கிறார். அப்பெண்ணின் ஏழைப் பெற்றோருக்கு ஒரு தொகை ஆலை நிர்வாகத்தால் கொடுக்கப்பட்டு பிரச்சனை பேசிமுடிக்கப்பட்டதாகவும் அக்கொலைக்கு நீதி வேண்டும் என்ற அந்த தொழிற்சங்கவாதி இன்றளவும் நீதிமன்ற படிகளில் தவம் கிடக்கிறார்.


அபயாக்கள் கொலை செய்யப்பட்டார்கள். இன்றளவும் கொலைகுள்ளாகிறார்கள். இனியும் நடக்கும். நம்மால் கொலைகளைத் தடுக்க இயலாது. ஆனால் இத்தகைய மறைகொலைகளை முறையாக விசாரித்து குற்றவாளிகளைத் தண்டிக்கும் பொறுப்பிலுள்ள காவல்துறையும், நீதித்துறையும் சந்தேக மரணம் தொடர்பான வழக்குகளை அதீத கவனத்துடனும் நேர்மையுடனும் அணுக வேண்டும்.


பொதுவாக சந்தேக மரணம் தொடர்பான வழக்குகளில் காவல் ஆய்வாளர் நிலையில் இறுதியறிக்கை தாக்கல் செய்கிறார்கள், அதனை குற்றவியல் நடுவர் நிலையில் ஏற்றுக் கொள்கிறார்கள். சந்தேக மரண வழக்குகளில் பெரும்பாலும் நேரடியான புகார் மற்றும் சாட்சியம் இருப்பதில்லை. எனவே பணம் மற்றும் அதிகாரம் கொண்ட குற்றவாளிகள் அதனை ஏற்கும் பக்கம் இறைத்து எளிதில் தப்பிவிடுகிறார்கள். இதனைத் தடுக்க சந்தேக மரண வழக்கின் இறுதியறிக்கையை காவல் ஆய்வாளர் தயாரித்து அதனை காவல் கண்காணிப்பாளர் அங்கீகரிக்க வேண்டும் என்றும் அதன் பின்பே அந்த இறுதியறிக்கை குற்றவியல் நடுவர் முன்பு தாக்கல் செய்யப்படவேண்டும் என்றும் விதிவகுக்கலாம்.


அதே போல அத்தகைய வழக்குகளில் குற்றவியல் நடுவர் உத்தரவானது மாவட்ட அமர்வு நீதிபதியால் சீராய்வு செய்யப்பட்டு அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் விதிகள் செய்யலாம். இதற்கு சட்டத்திருத்தம் தேவையில்லை, அத்தகைய விதிகளை உத்தரவிட உயர்நீதிமன்றத்துக்கு அதிகாரம் உண்டு. அத்தகைய படிநிலைகளை உயர்த்தினால் ஒவ்வொரு வழக்கும் நான்கு நபர்களின் பார்வைக்குச் சென்று முடிக்கப்படும். அதில் ஒருவர் உத்தமராக இருந்தால் கூட நீதி காக்கப்பட வாய்ப்புள்ளது.


எனினும் பொது மக்கள் இன்றளவும் நம் நாட்டின் குற்றவியல் சட்டத்தின் அடிப்படைகளை புரிந்து கொள்ளவில்லை. சட்ட விவாதம் நடத்தும் ஊடகங்களுக்கு சட்டத்தின் அரிச்சுவடிகூட தெரியவில்லை. ஒரு குற்றவாளி எப்போதும் நிரபராதி என்று நம் நீதிமன்றங்களால் விடுதலை செய்யப்படுவதே இல்லை. இது புரியாமல் ஒவ்வொரு குற்றவழக்கிலும் விடுதலை செய்யப்பட்டவர் தான் நிரபாதி என்று மார்தட்டுகிறார். ஊடகங்கள் அப்போது யார் குற்றவாளி ஒரு சிறு இடைவேளைக்குப் பிறகு என கோமாளித்தனமான விவாதங்கள் வைக்கிறார்கள்.


ஒவ்வொரு குற்ற வழக்கிலும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் ஐயம் திரிபற நிரூபிக்கப்படவில்லை என்ற அடிப்படையிலேயே விடுதலை செய்யப்படுகிறார்கள். ஒரு குற்ற வழக்கில் எதிரி மீதான குற்றச்சாட்டில் சிறு சந்தேகம் இருந்தால் கூட அவர் விடுதலை செய்யப்பட வேண்டும் அவரை தண்டிக்கலாகாது என்பதே நம் சட்டம். இதை அடியொட்டியே ஆயிரம் குற்றவாளிகள் தப்பலாம் ஒரு நிரபராதி கூட தண்டிக்கப்படக்கூடாது என்பது பழமொழியாயிற்று. ஆனால் ஆயிரம் குற்றவாளிகள் தப்பினால் அதன் விளைவுகள் என்ன என்பதை நம் சட்டம் இயற்றும் அமைப்புகளும் நீதிமன்றங்களும் சிந்திக்க வேண்டிய எல்லையில் நாம் நிற்கிறோம். தீர்வு காணும் வரை அபயாக்களின் அபயக்குரல் ஒலித்துக் கொண்டே இருக்கும்.


அன்புடன்,


ஆர். பிரேம் ஆனந்த்.       

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 06, 2021 10:33

சிற்பக்கலை பற்றி அறிய

சரஸ்வதி சோழர்காலம்

அன்புள்ள ஆசானுக்கு,


நலமா!


சிற்பக்கலையறிய ஓர் முயற்சி எடுத்துக் கொண்டிருக்கிறேன். அதன் படி முதலில்  குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்களின் சோழர்கால வரலாற்று சிற்ப்பங்களும் ஓவியங்கள் ஆரம்பித்து, குடவாயில் பாலசுப்பிரமணியம்  அவர்களின் திருவாரூர் திருக்கோயில் நூலில் அடியெடுத்து வைத்தேன் (எனது சொந்த ஊர்  திருவாரூர்) அங்கிருந்து தோன்றிய வினா.


திருவாரூர் திருக்கோயிலை உணர சேக்கிழார் பெரியபுராணம் தேவை என உணர்கிறேன்.  திருவாரூர் திருக்கோயிலை பற்றி அறிந்து கொள்ள குடவாயில் பாலசுப்பிரமணியம் அவர்களின் பெரியபுராணம் மேற்கோள்கள் போதும் எனினும் அந்த மேற்கோள்களில் போதிய பரிச்சயம் இல்லாததால் கோவிலை உணர்வதில்லை ஒர் மனசங்கடம் உள்ளது. மேலும் பல செறிவான தகவல்கள்.


இந்த முயற்சி இரு உலகுக்கு அழைத்துச்செல்கிறது. ஒன்று அந்த சிற்பக்கலைப்பற்றிய  நூல்கள் (அதன் அமைப்பை அறிய). மற்றொன்று அந்த சிற்பகலை உணர்த்தும் நிகழ்வுகள் அல்லது குறிப்புகளை அறிய உதவும் நூல்கள் (எ.கா. பெரியபுராணம்)


முதலாவது நதிக்கரை என்றால் இரண்டாவது அந்த நதி கரையினுடையே செல்லும் நீரோட்டம். இந்த நதி கரையில் பாலத்தை உருவாக்கி, அந்த பாலத்தின் நடுவில் நின்றுதான் அந்த அழகிய நதியை முழுவதும் வரலாற்று தரிசனம் செய்ய முடியும் போல தோன்றுகிறது. இங்கிருக்கும் சாவல் எனக்கு அந்த பாலத்தை கட்டமைப்பதில். அதற்கான பல கட்டுரைகளும், நூல் அறிமுகங்களும், உங்கள் தளத்தில் உள்ளன.


இதை விரிவாக விவாதிக்க ஏதேனும் குழுமம் உள்ளாதா, அப்படி இருந்தால் அவர்களிடம் என் அறிமுகம் சாத்தியமாகுமா?


நன்றி!


அன்புடன்,


விஜி.


அன்புள்ள விஜி


இந்தியச் சிற்பக்கலை மற்றும் இந்தியவியல் பற்றிய விவாதங்கள் மற்றும் உரைகளுக்காக இரு குழுமங்கள் செயல்படுகின்றன. என் தளத்தில் அவைபற்றிய செய்திகளை வெளியிட்டிருந்தேன்.


கீழ்க்கண்ட மின்னஞ்சல்களில் நீங்கள் தொடர்புகொள்லலாம்


ஜெ


  jaybaradwaj@gmail.com


  ramkij@gmail.com

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 06, 2021 10:31

வெண்முரசின் வாசகர்களை கணக்கிடுவது…

ஓவியம்: ஷண்முகவேல்

அன்புள்ள ஜெ,


வெண்முரசு பற்றி நான் நண்பர்களுடன் உரையாடும்போதெல்லாம் இடதுசாரி நண்பர்கள் அதை இப்போது அதிகம்பேர் படிப்பதில்லை என்றும் உங்கள் வாசகர்களில் ஒரு சின்ன வட்டம் மட்டுமே அதை வாசிக்கிறது என்றும் சொல்வார்கள். உங்கள் வாசகர்களிலேயே பெரும்பாலானவர்கள் அதை வாசிப்பது குறைவு என்பதும் சொல்லப்படுகிறது.


இன்னும் சிலர் வெண்முரசு மதவிஷயங்களில் ஈடுபாடுள்ள நடுத்தரவயதினரும் முதியவர்களும் வாசிப்பது என்பது உண்டு. என்னிடம் சிலர் ‘அதை நாற்பது வயசுக்குள்ள யாருமே வாசிக்கிறது இல்லை” என்று ஆவேசமாக சொல்வார்கள்


பொதுவான பேச்சுக்களில் இலக்கியவாதிகள் சிலரும் இதைமாதிரி சொல்லியிருக்கிறார்கள். வெண்முரசு நவீன இலக்கிய வாசகனுக்கு பிடிக்காது, அது பழைய எழுத்து என்று ஒரு எழுத்தாளர் சொன்னார். நீங்கள் வாசித்திருக்கிறீர்களா என்று கேட்டேன். இல்லை என்று சொன்னார்.


சரி நானறிந்தே நூறு இளைஞர்கள் வெண்முரசு படிக்கிறார்கள், அனைவருமே இலக்கியம் அறிந்தவர்கள் என்றேன். நவீன இலக்கியவாசகனுக்குரியது வெண்முரசு என்று சொன்னேன். நீங்கள் ஜெயமோகன் ஃபேனா என்று என்னிடம் திருப்பிக்கேட்டார்


இது எப்போதும் நடப்பது. வெண்முரசுக்கு வாசகர்களே இல்லை என எவரேனும் சொன்னால் உடனே அங்கேயே ஒருசில வாசகர்கள் இருப்பது தெரியவரும். உடனே அவர்கள் வாசகர்கள் அல்ல ,ஃபேன்கிளப் என்பார்கள். ஃபேன்கிளப் என்றே வைத்துக்கொள்வோம், இந்த ஃபேன் கிளப்பில் இருப்பவர்கள் அளவுக்கு இலக்கியவாசிப்புள்ளவர்கள் வெளியே எவராது இருக்கிறார்களா, இருந்தால் சுட்டிக்காட்டுங்கள், நானும் பார்த்துக்கொள்கிறேன் என்றுதான் நான் சொல்வேன்.


இத்தனை மகத்தான வாசகர்கள் ஒரு பெரிய குழுவாக திரண்டுவாசிக்கிறார்கள் என்றால் அந்த படைப்பு எப்படிப்பட்டது என்று நான் கேட்டதுண்டு. ஓர் எழுத்தாளரிடம் ‘சரிங்க, இந்த ஃபேன்கிளப்பின் ஒரு சாதாரண வாசகர் அளவுக்கு தரமான ஒரு வாசகராவது உங்களுக்கு உண்டா?” என்றே ஒரு முறை கேட்டேன்.


டிவிட்டரிலேயே ஏராளமானவர்கள் வெண்முரசு வாசித்து அதைப்பற்றி எழுதிக்கொண்டிருக்கிறார்கள். வெண்முரசு டிவிட்டரில் பேசப்படாத நாளே இல்லை.  பூங்குன்றன் [ PS@D10SPS ] என்பவர் டிவிட் செய்வதை இப்போது பார்த்தேன். வெண்முரசு படிக்கிறார். மிகுந்த ரசனையுடன் பதிவுசெய்கிறார். அவருடைய குறிப்புகளே முக்கியமான பார்வையை அளிக்கின்றன.அவர் தேர்ந்தெடுத்து அளிக்கும் வரிகள் வழியாகவே ஒரு வெண்முரசு வாசிப்பை அடையமுடியும்.


இவர்கள் சொல்லும் எல்லாவற்றுக்கும் அவரே பதிலாக சுட்டிக்காட்டலாம்.அவர் மிகவிரிவாக உலக இலக்கியப் பெரும்படைப்புகளை படித்திருக்கிறார். அடுத்த தலைமுறை இலக்கியவாசகரின் சரியான உதாரணம் அவர். அவரளவுக்கு படித்த எவரும் இங்கே பேசிக்கொண்டிருப்பவர்களில் இல்லைஅவரைப்போன்ற ஒரு வாசகர் அமைவது எந்த எழுத்துக்கும் பெருமை.


அவரைப்போன்றவர்கள் படிப்பதனால்தான் இந்த மாதிரியான மனம்புழுங்கிய வெளிப்பாடுகளாக உள்ளது என நினைக்கிறேன்


எம்.ராஜேந்திரன்


 


அன்புள்ள ராஜேந்திரன்,


வெண்முரசு போன்ற படைப்பின் பெருஞ்சிக்கல் என்னவென்றால் அது பெரிய எடைகொண்டது, எழுதியவனை அதில் கட்டி அசைவில்லாமலாக்கிவிடும். நான் அதிலிருந்து வெளியேறவே நூறு கதைகளை எழுதினேன். மேலும் கதைகளுக்குள் செல்லவே விரும்புகிறேன். சென்ற சில மாதங்களாக இவையனைத்தையும்விட முக்கியமான பெருமுயற்சிகள் சிலவற்றிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறேன்


இந்நிலையில் வெண்முரசை வாசிக்கிறார்களா என்று நான் கணக்கிட்டுக்கொண்டிருந்தால்  அதிலேயே சிக்கிக்கொள்வேன். ஆகவே அதை எண்ணுவதே இல்லை. அது முடிந்துவிட்டது. அது இங்கே இருக்கிறது. அதை ஒருவருமே வாசிக்கவில்லை என்றாலும் ஒன்றுமில்லை, எவரேனும் எப்போதேனும் வாசிப்பார்கள்.


பேராலயங்கள் பெருங்கோபுரங்கள் பல தமிழ்நாட்டில் உள்ளன. அவற்றை எழுப்பியவர்கள் அவற்றை எவர் ரசிக்கிறார்கள், எத்தனைபேர் பார்க்கிறார்கள் என எண்ணியதில்லை. அவை தியானங்கள், பிரார்த்தனைகள். வெண்முரசும் அப்படித்தான். அது தமிழிலக்கியம் அடைந்த முதன்மை உச்சம், கம்பராமாயணம் ஒன்றுடன் மட்டுமே ஒப்பிடத்தக்கது. அது தமிழ்ப்பண்பாட்டின் வெற்றி. அது எனக்கு தெரியும், தமிழ்நாட்டில் ஒருவருக்குக்கூட அப்படி தோன்றவில்லை என்றாலும் அது அவ்வண்ணமே நிலைகொள்ளும்.


இத்தகைய ஆக்கங்களுக்கு எப்போதுமே ஏற்பு சிக்கலானதுதான். வெளிவரும்காலகட்டத்தில் சிலருக்கே அவற்றை அறியும் கூர்திறன் இருக்கும். ஆகவே தேர்ந்த வாசகர்கள், தங்களுக்கு நிகழ்காலமும் இறந்தகாலமும் அளிக்கும் வரையறைகளைக் கடக்கக்கூடியவர்கள் மட்டுமே அதன் வாசகர்கள். அவர்களின் எண்ணிக்கையால் அல்ல, தகுதியால்தான் அப்படைப்பு நிலைகொள்ளும்


மேலும் இதன் அளவும் ஆழமும் எக்காலத்திலும் பெருமளவு வாசகர்களை அடையாமல் செய்யும். என்றும் சில ஆயிரம்பேர் மட்டுமே இதன் வாசகர்களாக இருப்பார்கள். எண்ணிக்கையே அளவுகோல் என்றால் எப்போதுமே இது இப்படித்தான் இருக்கும். ஆகவே எழுதியதுமே வெளியேறிவிடுவதுதான் நாம் செய்யக்கூடியது. அதை எழுதிக்கொண்டிருக்கையிலேயே என் ஆசிரியர்கள் சொன்னார்கள்


வாசிக்கும் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள், வணக்கங்கள். பிறகெப்போதாவது நானும் வாசகனாக வந்து கலந்துகொள்கிறேன்


ஜெ


 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 06, 2021 10:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.