Jeyamohan's Blog, page 1064
January 14, 2021
மழையால் மட்டுமே முளைப்பவை
2012ல் வெளிவந்த ஸ்பிரிட் என்ற படத்தில் ஒருபாடல். ரஞ்சித் எழுதி இயக்கிய படம். குடிக்குஅடிமையான செய்தியாளர், எழுத்தாளர் ரகுநந்தனன் [மோகன்லால்]. அவருடைய மனைவி அவரை திருத்த முற்பட்டு முடியாமல் விவாகரத்து செய்து மகனுடன் பிரிந்துசென்று அவருடைய நெருங்கிய நண்பனையே திருமணம் செய்துகொண்டு வாழ்கிறார். அவ்வப்போது மனைவியைச் சந்திக்கவரும் ரகுநந்தனன் குடித்திருந்தால் அவளுடன் பேசுவதில்லை
குடியை நிறுத்திவிட்டபின் மனைவியைப்பற்றிய ஏக்கம் மேலெழுகிறது. மனைவியைப் பார்க்க வருகிறார். அப்போது ஒரு பாடல். அதனூடாக அவர்களின் உள்ளம் வெளிப்படும் காட்சி. அந்தப்படத்தின் மிகச்சிறந்த காட்சியும் இதுவே.
இதில் வசனங்களும் கூர்மையானவை. மனைவி சொல்லும் வரி “இதுபோல ஒரு இரவுக்காக நான் என்னையும் சற்று மிச்சம் வைத்திருக்கவேண்டும்”
லால் சொல்லும் வரி “குடி நிறுத்தியது நல்லதாகப் போயிற்று. இல்லாவிட்டால் உன்னை ரேப் செய்திருப்பேன்”
கடைசி வசனம். “ஒரு காலத்தில் என் மனைவியாக இருந்தவளே, நாம் இன்னொரு பிறவியில் சந்திப்போம். பழைய ரோலில்”
மோகன்லால் என்னும் மகாநடிகனை இந்த ஒரு பாடலிலேயே காணலாம். கொந்தளிப்பு, பெரும்காதல், இழப்பின் ஏக்கம், தனிமை, துயரின் உச்சியில் மெல்லிய புன்னகை என வெறும் முகத்தாலேயே வெளிப்படுகிறார். ஆனால் ஒரு நடிகர் அதை நடிக்கிறார் என்று நமக்குநாமே சொல்லி நம்பவைக்க முயன்றாலும் முடிவதில்லை. இது பலபேர் கூடியிருக்க, ஒளியமைப்பும் கலையமைப்பும் செய்ய, துளித்துளி ‘ஷாட்’களாக எடுக்கப்பட்டது என்பதையே நம்பமுடியவில்லை. அத்தனை பிசிறற்ற உணர்வுத்தொடர்ச்சி. நடிப்பு சிலசமயம் உண்மையான வாழ்க்கையையே மிஞ்சி நின்றிருக்கிறது.
*
ரஃபீக் அகமதுமலையாளக் கவிஞர் ரஃபீக் அகமது எழுதிய பாடல். மலையாள நவீனக் கவிஞராக அறிமுகமான ரஃபீக் அகமது பி.ராமன், பி.பி.ராமச்சந்திரன் ஆகியோரின் தலைமுறை. குற்றாலத்தில் நிகழ்ந்த தமிழ் மலையாள கவிதை உரையாடலுக்கு வந்திருக்கிறார்.
ஷஹபாஸ் அமன்
விஜய் ஏசுதாஸ்
காயத்ரிஷஹபாஸ் அமன் இசை பாடலுக்கு போடப்பட்ட ஒரு ஆலாபனம் மட்டும்தான். விஜய் ஜேசுதாஸின் குரலில் பழைய ஜேசுதாசின் சாயலைக் கேட்கமுடிகிறது. மலையாளத்தின் புகழ்பெற்ற கவிதை-பாடல் இது. மலையாளம் கற்பனாவாதத்திற்குரிய இசைகொண்ட மொழி. அந்த மென்மை வெளிப்படும் ஒரு பாடல்.
மலையாளம்
எழுதியவர் ரஃபீக் அகமது
இசை ஷஹபாஸ் அமன்
பாடியவர் விஜய் ஏசுதாஸ், காயத்ரி
மழகொண்டு மாத்ரம் முளைக்குந்ந வித்துகள்
சிலதுண்டு மண்ணின் மனஸில்
ப்ரணயத்தினால் மாத்ரம் எரியுந்ந ஜீவன்றே
திரிகளுண்டு ஆத்மாவினுள்ளில்
ஒரு சும்பனத்தினாய் தாகம் சமிக்காதே
எரியுந்ந பூவிதள் தும்புமாயி
பறயாத்த ப்ரியதரமாம் ஒரு வாக்கின்றே
மதுரம் படர்ந்ந ஒரு சுண்டுமாயி
வெறுதே பரஸ்பரம் நோக்கியிரிக்குந்நு
நிற மௌன சஷகத்தினு இருபுறமும் நாம்
சமய கல்லோலங்கள் குதறுமீ கரையில்நாம்
மணலின்றே ஆர்த்ரமாம் மாறிடத்தில்
ஒரு மௌன சில்பம் மெனஞ்ஞு தீர்த்து எந்தினோ
பிரியுந்நு சாந்த்ய விஷாதமாயி?
ஒரு சாகரத்தின் மிடிப்புமாயி?
மழகொண்டு மாத்ரம் முளைக்குந்ந வித்துகள்
சிலதுண்டு மண்ணின் மனஸில்
ப்ரணயத்தினால் மாத்ரம் எரியுந்ந ஜீவன்றே
திரிகளுண்டு ஆத்மாவினுள்ளில்
தமிழில்
மழையால் மட்டுமே முளைக்கும் சில விதைகள்
சில உண்டு மண்ணின் மனதில்
காதலால் மட்டுமே எரியும் உயிரின்
சில திரிகளுண்டு ஆத்மாவின் உள்ளே
ஒரு முத்தத்திற்காக தாகம் அடங்காமல்
எரியும் பூவிதழ் நுனியுடன்
கூறாத இனியதொரு சொல்லின்
இனிமை படர்ந்த உதடுகளுடன்
வெறுமே ஒருவரை ஒருவர் பார்த்து அமர்ந்திருக்கிறோம்
நிறையும் மௌனக் கோப்பைக்கு இருபுறமும் நாம்
காலத்தின் நீரொலிகள் திமிறும் இந்தக் கரையில் நாம்
மணலின் ஈரமார்பில்
ஒரு மௌனசிற்பம் வனைந்து முடித்து
எதற்காகவோ பிரிகிறோம் இருளும் துயரத்துடன்.
ஒரு கடலின் துடிப்புடன்.
மழையால் மட்டுமே முளைக்கும் சில விதைகள்
சில உண்டு மண்ணின் மனதில்
காதலால் மட்டுமே எரியும் உயிரின்
சில திரிகளுண்டு ஆத்மாவின் உள்ளே
*
இசையமைப்பாளர்- பாடகர் ஷஹபாஸ் அமன் பாடிய வடிவம்
யமுனா ராஜேந்திரன், வாழ்க்கைவரலாற்று விமர்சனம்
அன்புள்ள ஜெ
அகழ் இதழில் ஷோபா சக்தி பற்றி எழுதப்பட்டிருந்த கட்டுரைக்கு நீங்கள் கண்டனம் தெரிவித்திருந்தீர்கள். யமுனா ராஜேந்திரன் அவருடைய முகநூலில் நீங்களே அந்த மாதிரி தனிப்பட்ட உடல்குறைகளைச் சொல்லி இலக்கியவிமர்சனம் எழுதியவர்தான் என்று சொல்லி ஒருமையில் வசைபாடியிருந்தார். மனுஷ்யபுத்திரனின் உடல்குறையைச் சுட்டிக்காட்டி நீங்கள் எழுதியிருந்தீர்கள் என்றும் கமலா தாஸ் அழகானவர் அல்ல என்று எழுதியிருந்தீர்கள் என்றும் சொல்லியிருந்தார்.
சா.திருஞானம்
அன்புள்ள திருஞானம்
ஏற்கனவே பலமுறை எழுதியிருக்கிறேன். ஆனால் தலைமுறை தலைமுறையாக வரும் வாசகர்களிடம் இதைச் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.ஆகவே மீண்டும்.
யமுனா ராஜேந்திரனிடம் எனக்கு எப்போதுமே பரிவான அணுகுமுறையே உள்ளது. அவரைப்பற்றி எப்போதுமே கனிவுடன்தான் எழுதுகிறேன். அவர் வேண்டுமென்றே எதையும் சொல்லவில்லை.அவருக்கு அவ்வளவுதான் புரியும். அவர் ஒரு பெஞ்ச்மார்க். அவருக்கு புரிந்தால் தமிழகத்தில் எந்தப் பாமரருக்கும் புரியும்.தமிழக முற்போக்கு எழுத்தாளர்களுக்கு அவர் ஒரு சுட்டுப்பழகும் இலக்குப்பலகை போல. அவரைச் சென்றடைந்தால் அது மக்கள் இலக்கியம்.
நான் மனுஷ்யபுத்திரனைப் பற்றி எழுதிய கட்டுரையும் கமலாதாஸ் பற்றி எழுதிய கட்டுரையும் இதே தளத்திலேயே உள்ளன. அவற்றை நீங்கள் படித்துப்பார்க்கலாம். மனுஷ்யபுத்திரனின் உடல்குறையைச் சுட்டிக்காட்டி அவரை இழிவுசெய்ய, குறைவுபடுத்த முயலும் கட்டுரை அல்ல அது. அவருடைய கவிதைகளைப் பற்றி எழுதப்பட்ட மிகப்பெரிய பாராட்டுக்கட்டுரைகளில் ஒன்று அது [கடவுளற்றவனின் பக்திக்கவிதைகள்]
நான் மனுஷ்யபுத்திரனின் கவிதைப்பணி தொடங்கும்போதே உடனிருந்தவன். அவரை ஒரு முதன்மைக்கவிஞராக தொடர்ந்து முன்வைப்பவன். அந்தக்கட்டுரையும் அப்படிப்பட்ட ஓர் ஆய்வுதான்.
மனுஷ்யபுத்திரன் அவருடைய இளமையில் அவருடைய உடல்குறை பற்றிய கவிதைகளை, தன்னிரக்கம் நிறைந்த வரிகளை எழுதிக்கொண்டிருந்தார். அன்று அத்தகைய கவிதைகளை பலர் பாராட்டினார்கள். அப்போதே அவ்வகை கவிதைகளை நிராகரித்து, அவை கவிஞனை ஓர் உடல் மட்டுமாக வாசகர் பார்க்க வைப்பவை என நான் அவருக்கு எழுதியிருக்கிறேன். கவிஞன் உடல் மட்டுமல்ல. அவன் ஓர் ஆளுமை, ஓரு பண்பாட்டு இருப்பு. அவனுடைய உடல் அவனுடைய அடையாளம் அல்ல. ஆகவே அத்தகைய தன்னிரக்கத்தை எவர் எழுதினாலும் எனக்கு உடன்பாடல்ல. அதை இன்று வரை சொல்லிக்கொண்டிருக்கிறேன்.
அந்த கட்டுரையில் ஆரம்பத்தில் தன் உடற்குறை சார்ந்த தன்னிரக்கத்துடன் எழுதிய மனுஷ்யபுத்திரன் பின்னாளில் அந்த உடற்குறையாளன் என்னும் தன்னுணர்வை சமூகத்தில் ஒடுக்கப்பட்ட, நிராகரிக்கப்பட்ட அனைவருடனும் அடையாளப்படுத்திக் கொள்வதாக எப்படி விரித்தெடுக்கிறார் என்றும், அது அவரை மேலான அறவுணர்வு கொண்டவராக எப்படி ஆக்குகிறது என்றும், அது அவருடைய அரசியலாக எப்படி ஆகிறது என்றும் விவாதித்திருக்கிறேன். அதை மீண்டும் பலமுறை விளக்கியிருக்கிறேன்.
கமலா தாஸுடன் நேரடியான மெல்லிய பழக்கமும் சில உரையாடல்களும் இருந்தன. அவருடைய கதைகள் தமிழில் கொண்டுவரப்படவேண்டும் என்று நான் முயற்சி எடுத்தேன். என்னுடைய முன்னுரையுடன், நண்பர் நிர்மால்யா மொழியாக்கத்தில், முதல் தொகுதி வெளிவந்தது.
கமலா தாஸ் பற்றி வாசிக்கப்புகுபவர்கள் அவர் தன்னைப்பற்றி எழுதியவை, பொதுவெளியில் கருத்துச் சொன்னவை ஆகியவை சார்ந்து அவருடைய படைப்பாளி என்னும் ஆளுமையை தொகுத்துக்கொள்ள முடியாது. தன் கட்டற்றகாமம் மற்றும் முறைமீறிய காதல் பற்றி அவர் எழுதிய ’என் கதை’ என்ற தன்வரலாறு தொடக்க கால படைப்பு. புகழ்பெற்றது. பின்னர் அது முழுக்கமுழுக்க பொய், பணத்துக்காக பிரசுரகர்த்தர் கோரியதை எழுதினேன் என அவரே எழுதினார்.
பின்னர் அவர் என்னென்னவோ சொல்லியிருக்கிறார். கிருஷ்ணபக்தையாக திகழ்ந்திருக்கிறார். இந்து மதவெறியர் போல பேசியிருக்கிறார். தேர்தலில் போட்டியிட்டிருக்கிறார். காந்தி, மார்க்ஸ், இஎம்எஸ் எல்லாரையும் வசைபாடியிருக்கிறார். நெருக்கடிநிலையை ஆதரித்திருக்கிறார். அவருடைய கருத்துக்களில் தொடர்ச்சியோ ஒழுங்கோ இருக்காது. கடைசியாக அவர் இஸ்லாமுக்கு மாறினார். சில ஆண்டுகளிலெயே இஸ்லாம் தன்னை ஏமாற்றிவிட்டது , மீண்டும் இந்துவாக மாறப்போகிறேன் என்று பேசினார். [அந்தப்பேச்சையே நான் கேட்டேன். அது செய்தியாகவும் வந்தது. அதைப்பற்றி கல்பற்றா நாராயணன் ஒரு குறிப்பு எழுதியிருக்கிறார்] அதன்பின் அதை மறுத்தார். சிலநாட்களில் மறைந்தார்
நான் அவருடைய அவரைப்பற்றி எழுதிய குறிப்பில் அவருடைய அந்த ஆளுமையை புரிந்துகொள்ள முயல்கிறேன். கமலாவின் தோற்றம் பற்றிய அவருடைய தாழ்வுணர்ச்சி அவரை அவருடைய உயர்குடிச்சூழலில் எப்படி அன்னியப்படுத்தியது, அதன் விளைவாக அவர் எப்படி ஒரு கலகக்காரியாகவும் மரபுமறுப்பு மனநிலை உடையவராகவும் மாற்றியது என்பதை விளக்கியிருந்தேன்.[ கேரளத்தின் புகழ்பெற்ற நாயர் குடும்பம் ஒன்றில் பிறந்தவர் கமலா.மாத்ருபூமி அவர்களின் குடும்பப் பத்திரிகை]
இது அவரே அவருடைய இளமைக்காலம் பற்றி எழுதியது. தான் கருப்பாகவும் குண்டாகவும் இருப்பது உயர்சாதி- உயர்குடிச் சூழலில் என்னென்ன அவமதிப்புகளை அளித்தது என்பதும் , அது எப்படி தன்னை சொந்த குடும்பத்தில் இருந்தே அன்னியப்படுத்தியது என்றும், தன் அன்னையே தன்ன அவலட்சணமானவள் என்று எண்ணினார் என்றும் கமலா தாஸ் எழுதியிருக்கிறார். எப்படி அவர்களை சீண்டும் படி நடந்துகொள்ள செய்தது என்றும் கமலா தாஸ் எழுதியிருக்கிறார். நான் அதைத்தான் எழுதியிருக்கிறேன்.
கவனியுங்கள், இவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை நான் தோண்டி எடுக்கவில்லை. அவர்களின் தனிப்பட்ட தோற்றத்தையோ குறையையோ நான் பேசுபொருளாக ஆக்கவில்லை. அவர்களே தங்கள் புனைவுலகிலும் வெளியிலும் எழுதியவற்றையே விவாதிக்கிறேன். அந்த செய்திகளைக்கொண்டு அவர்களை மட்டம்தட்டவில்லை, அவர்களை சிறுமைசெய்யவில்லை. அவர்களின் புனைவுலகை புரிந்துகொள்ள முயல்கிறேன்.புனைவை புரிந்துகொள்ளும்பொருட்டு படைப்பாளிகளாக அவர்களின் ஆளுமையை வகுத்துக் கொள்ள முயல்கிறேன்
மனுஷ்யபுத்திரன் உடற்குறை கொண்டவர் என்பதும், அவருடைய ஆரம்பகால கவிதைகளின் பொதுவான பேசுபொருளாக அதுவே இருந்தது என்பதும் அவர் கவிதைகளை மதிப்பிடும்போது தவிர்க்கவே முடியாத விஷயம். அதை தவிர்த்து பேசுவதே அரசியல் சரி என்றால் அது என் வழி அல்ல. கமலா தாஸ் ஒருங்கிணைவு கொண்ட கருத்துநிலையை வெளிப்படுத்திய ‘sane’ படைப்பாளி அல்ல. அவரிடம் இருந்த படைப்பூக்கம் என்பது கிறுக்குத்தன்மை கொண்டது. அந்த கிறுக்குத்தன்மையை புரிந்துகொள்ள அவரே எழுதிய வாழ்க்கைக்குறிப்புகளை கருத்தில் கொண்டாகவேண்டும். அவரைப்பற்றி எழுதிய முன்னுரையிலும் அதையே சொல்கிறேன்
இந்த அணுகுமுறையே வாழ்க்கைவரலாற்று விமர்சனம் என்பதன் வழி. அதற்கும் தனிப்பட்ட வாழ்க்கையைக் கொண்டு இலக்கியப்படைப்புக்களை நிராகரிப்பதற்கும், தனிப்பட்ட வாழ்க்கையை இலக்கிய வம்பாக மாற்றி அவதூறு செய்வதற்கும் மிகப்பெரிய வேறுபாடு உண்டு
பத்தாண்டுகளாக இதை யமுனா ராஜேந்திரனுக்குப் புரியவைக்க முயல்கிறேன். அவருக்கு புரியும்படி எழுத என்னால் முடியவில்லை. அடுத்த தலைமுறையில் மேலும் மொழித்திறன் கொண்ட எவராவது முயலவேண்டும். ஒரு சமூக சேவையாக. அது முற்போக்கு இலக்கியத்திலேயே ஒரு பெரிய புரட்சியாகக்கூட அமையலாம்.
ஜெ
அஞ்சலி:இளவேனில்
இளவேனில் கோவை ஞானியுடன் இணைத்து என் நினைவில் நின்றிருப்பவர். எழுபதுகளில் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் முகமாக அறியப்பட்டவர். ஞானிக்கும் அவருக்குமான மோதல்கள், நையாண்டிகள் ஞானி சொல்லியே எனக்கு தெரியும். அதிலொன்றுதான் ’தோழர் இளவேனில் நீங்கள் போரீஸ் பாஸ்டர்நாக்கை படித்திருக்கிறீர்களா?”என்ற கதை.[ ஞானி-1]
அவரை நான் ஒருமுறை நேரில் சந்தித்திருக்கிறேன். ஓரிரு சொற்கள் பேசியிருக்கிறேன். அது ஒரு மரியாதைச் சந்திப்பு. அவர் என்னுடைய எந்த படைப்பையும் படித்திருக்கவில்லை. சொல்லப்போனால் ஞானியின் சீடன் என்று மட்டும் பொதுவாக தெரிந்து வைத்திருந்தார்
இளவேனில் போல அன்று இடதுசாரி இயக்கங்களில் தீவிரமாக இருந்த பலரும் உள்ளூர திராவிட இயக்க ஆதரவாளர்கள். பலர் மாணவப்பருவத்தில் திராவிட இயக்க ஆதரவாளர்களாக இருந்து திராவிட இயக்கம் அரசதிகாரத்திற்கு வந்தபிறகு அதில் ஓங்கிய ஊழலைக் கண்டு மனம் கசந்து இடதுசாரிகளாக ஆனவர்கள். சிலர் இடதுசாரி இயக்கங்களின் உள்ளடி அரசியலால் வெளியேற்றப்பட்டு திராவிட இயக்கத்தை நாடியவர்கள். இளவேனில் இரண்டாவது வகை.
இளவேனில் இளமைக்கான இலட்சியவாத வேட்கையுடன் கம்யூனிஸ்டுக் கட்சியிலும் முற்போக்கு முகாமிலும் செயல்பட்டார். ஆனால் அவருக்குள் திராவிட இயக்கத்தின் பரபரப்பு அரசியலில் ஈடுபாடு இருந்தது. அவருக்கும் கங்கைகொண்டான், மு.மேத்தா, நா.காமராஜன் போன்ற அன்றைய இடதுசாரிக் கவிஞர்களுக்கும் சினிமாமோகம் பெருமளவுக்கு இருந்தது. ஓர் பொதுஆளுமையாக, நட்சத்திரமாக உயர்ந்துவிடவேண்டும் என்ற வேட்கை அவர்களை ஆட்கொண்டது. சொல்லப்போனால் இன்னொரு மு.கருணாநிதி ஆகிவிடவேண்டும் என்ற வேகம். அவர்கள் எவருமே அதில் வெற்றிபெறவில்லை. அவர்களுடைய இலக்கிய வாழ்க்கையில் அந்த வேட்கை திசைமாற்றத்தையும் வீழ்ச்சியையுமே கொண்டுவந்தது.
ஞானி என்னிடம் பேசும்போது இளவேனில் மேடையில் பேசுவதைப்பற்றி வர்ணித்தார். எழுந்து கைவீசி பேசிக்கொண்டே மக்கள் நடுவில் இருந்து மேடைக்குச் செல்வது, மேடையில் சட்டென்று பேசிக்கொண்டிருப்பவரை மறித்து ஆவேசமாக பேச ஆரம்பிப்பது போன்ற நாடகீயமான முறைகள் அவருக்கிருந்தன. “அவரு அப்டியே கார்க்கி நாவலிலே இருந்து எந்திரிச்சு வந்தமாதிரி இருக்கும். அவரு தான் ஒரு பாவெல் வ்லாசோவ்னும் புரட்சி சூழ்ந்திருக்குன்னும் நம்பினார்” அவர்கள் உள்ளூர விழைந்தது ஒரு வரலாற்று ஆளுமை என்னும் பாத்திரம்.
ஆனால் அன்றும் இன்றும் கம்யூனிஸ்டுக் கட்சிகள் அந்தவகையான தனிநபர் கனவுகளுக்கு இடமளிப்பவை அல்ல. அதன் தலைவர்களே தங்களை முன்னிறுத்துவதில்லை. தொண்டர்களுக்கு முகமே அனுமதிக்கப்படுவதில்லை. அத்துடன் பழைய நக்சலைட்கால பிரிவினை அனுபவங்கள் இருந்தமையால் கட்சி கலையிலக்கியச் செயல்பாடுகளை கடுமையாக கண்காணித்தது. கட்சியின் அதிகாரபூர்வ நிலைபாட்டுக்கு அப்பால் எதுவும் அனுமதிக்கப்படவில்லை. கட்சியின் ஊழியர் ஒருவர் நேரடியாக நியமிக்கப்பட்டு, கலையிலக்கிய அமைப்புக்களில் தலைமைவகித்து, அனைத்தையும் கண்காணித்தார்
அவ்வாறுதான் இளவேனில் கட்சியை விட்டு வெளியேறினார். நேராக திமுகவுக்குச் சென்று சேர்ந்தார். முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை கடுமையாக விமர்சனம் செய்தார். “முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திலே ரெண்டாயிரம் உறுப்பினர்னு சொல்றாங்க. அத்தனை எழுத்தாளர்களாய்யா தமிழ்நாட்டிலே? அத்தனை எழுத்தாளர் எழுதினா உருப்படுமாய்யா தமிழ்?” என்ற அவருடைய கேலி புகழ்பெற்றது.
ஆனால் திமுகவில் அவர் இடதுசாரிகளை எதிர்ப்பதற்கான கருவியாகவே பயன்படுத்தப்பட்டார். அன்றுமின்றும் அறிவியக்கவாதிகளை அவ்வாறு பயன்படுத்தும் தன்மை அக்கட்சிக்கு உண்டு. மு.கருணாநிதிக்கு மிகநெருக்கமானவராக இருந்தார் இளவேனில் – அல்லது அப்படி தோற்றமளித்தார். மு.கருணாநிதியை மேடைகளில் உச்சகட்டமாக புகழ்ந்தார். ஆனால் அவர் எதிர்பார்த்தபடி அரசியலில் அவருக்கு எந்த இடமும் அளிக்கப்படவில்லை. சினிமாவிலும் வாய்ப்புகள் அமையவில்லை. பொருளாதார வெற்றியும் கைகூடவில்லை. உளியின் ஓசை படத்துக்கு அவர் இயக்குநர் என்று என்னிடம் சொன்னார்கள். ஆனால் அதனால் அவருக்கு பொருளியல் லாபம் ஏதும் இல்லை என்றும் சொல்லப்பட்டது.
கடைசிக்காலத்தில் கைவிடப்பட்டவராகவும் கசப்பு நிறைந்தவராகவும் இளவேனில் இருந்தார். அவர் எண்ணியதுபோல இலக்கியத்திலும் அவரால் எதையும் சாதிக்க முடியவில்லை. இன்று இலக்கியத்தில், தமிழக முற்போக்கு இலக்கியத்தில்கூட இளவேனிலுக்கு எந்த குறிப்பிடும்படியான பங்களிப்பும் இல்லை.
இக்குறிப்பில் முன்னாள் மனஓசை குழு இடதுசாரி எழுத்தாளரான [பசலை] கோவிந்தராஜ் இளவேனில் பற்றி ஒரு சித்திரத்தை முன்வைக்கிறார். அது எந்த அளவுக்கு மெய்யானது என்று சொல்லத் தெரியவில்லை. இளவேனில் முற்போக்கு முகாமிலிருந்து வெளியேறி தீவிர இடதுசாரியாகச் செயல்படவில்லை, திராவிட இயக்கத்துக்கே சென்றார். ஆகவே அவருடைய முரண்பாடு இடதுசாரி கொள்கைநிலைபாடு சார்ந்தது அல்ல, அவருடைய இலக்கு புகழும் செல்வமும்தான் என்றுதான் சொல்லத் தோன்றுகிறது
கட்சியில் இருந்து இளவேனில் வெளியேறியமைக்குக் காரணம் அவருடைய தனிப்பட்ட ஆசைகளும், அவருடைய தன்னை முன்னிறுத்தும் இயல்பும்தான். மறுபக்கம் கம்யூனிஸ்டுக் கட்சி பரப்பியல் அணுகுமுறைகளை கடுமையாக நிராகரித்து தன்னை ஒரு கட்டுப்பெட்டியான தொண்டர்கட்சியாகவே முன்வைத்துக்கொண்டிருந்தது.அதன் ராணுவத்தனமே கலைஞர்களையும், தனிநபர் சார்ந்த இலட்சியவாதம் கொண்டவர்களையும், தனக்கென கனவுகள் கொண்டவர்களையும் வெளியேற்றியது.
இளவேனில் ஒரு மாயமான் வேட்டையில் தன்னை அழித்துக்கொண்டவர் என்றே சொல்லவேண்டும். அவர் பெயர் சொல்ல ஒரு படைப்பையாவது எழுதிவிட்டுச் சென்றிருக்கலாம்
இலட்சியவாதத்தின் கரைந்த நிழல்- கோவிந்தராஜ்
கவிஞர் இளவேனில் காலமானார் என்கிற செய்தியும் அதைத் தொடர்ந்து முகநூல் முழுக்க அஞ்சலி செய்திகளும் பரவலாகப் பேசப்படுகின்றன.ஒரு காலத்தில் அவரது எழுத்துக்களால் வசீகரிக்கப்பட்டவன் என்ற வகையில் அவர் குறித்த நினைவுகளைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று கருதுகிறேன்.
80, 90 களில் முற்போக்கு முகாமில் எழுந்த மிக நுட்பமான குரல் அவருடையது. திரு. அஸ்வகோஷ் [ராஜேந்திரசோழன்] அவர்கள் எழுதிய ‘வட்டங்கள்’ நாடகத்தைத் திருப்பூர் ‘யுக விழிப்பு’ பதிப்பகம் வெளியிட்டது. அதற்கு அட்டைப் படத்தை வரைந்தவர் இளவேனில்.அவருடைய அட்டைப்படங்கள் செம்மலர் பத்திரிகையில் முகப்பில் இடம் பெற்றன.அதைத் தொடர்ந்து அவர் ஏராளமான கவிதைப் புத்தகங்களுக்கு அட்டைப் படங்களை வரைந்திருக்கிறார்.மலையூர் மம்பட்டியான் பட எழுத்துக்களை உருவாக்கியதும் அவர்தான்.
இன்குலாப் கவிதைகள் புத்தகத்திற்கு அவர் எழுதிய முன்னுரை மிகவும் பிரபலமாகப் பேசப்பட்டது.”லட்சியங்களே நிச்சயமானவை, மனிதனின் கனவுகள் மரணம் இல்லாதவை!” “நான் இலக்கியவாதிதான் அதற்காக என் சாப்பாட்டுத் தட்டில் புத்தகத்தை வைத்துக் கொள்ள முடியாது.நான் இலக்கியவாதிதான் என் கட்டிலில் புத்தகங்களோடு தூங்கி விட முடியாது.எனக்கு நிஜமான வாழ்க்கை வேண்டும்!”
சாலையோரத்தில் நடந்த கண்மணி ராஜம் இறப்பு குறித்த அவருடைய கவிதைகள் உணர்ச்சிகளோடு இருப்பது.ராஜராஜசோழன் குறித்த இன்குலாப்பின் குரலோடு இணைந்து ஒலித்தது அவருடையது!
இந்தத் தீவிர இலக்கியவாதிகள் பின்னாட்களில் பொதுவுடைமை இயக்கங்கள் குறித்து வைத்த விமர்சனங்களும், அவர்களுக்கு எதிரான அவருடைய கருத்துக்களும் மிக முக்கியமானவை.பொதுவுடைமை இயக்கங்கள் பாராளுமன்றப் பன்றித் தொழுவத்தில் ஈடுபட்டு வாய்ச்சொல் வீரர்களாக பவனி வந்த காலகட்டத்தில் “லட்சியங்களே நிச்சயம் ஆனவை” என்கிற அவருடைய குரல் மெல்ல மெல்லத் தேய்ந்து போனது.
தமிழ்நாட்டில் தொடர்ந்து ஒருவன் முற்போக்காளர் ஆகவே வாழ வேண்டுமென்றால் சில அடிப்படைக் கட்டாயங்கள் தேவையாக இருக்கின்றன. அவன் அரசு ஊழியராக இருக்க வேண்டும்.அல்லது குறைந்தபட்சம் சொந்த வீட்டிலாவது வசிக்கிற பணக்காரனாக இருக்க வேண்டும்.அல்லது கட்சியில் தீவிரமான கட்டப்பஞ்சாயத்து ஆளாக இருக்கவேண்டும்.இவைகள் எல்லாம் இல்லாமல் ஒருவன் முற்போக்காக எழுதிப் பிழைப்பது என்பது அபத்தம்…!
“இந்த ஓநாய்களின் பள்ளத்தாக்கில் தான் உயிர் பிழைக்க ஓடினேனே…!”\
“வேலைவாய்ப்பு அலுவலகத்திற்கு போவது மட்டுமல்ல,முற்போக்கு எழுத்தாளர் சங்கத்திற்கு போவதும் முட்டாள்தனம்தான்” என்ற அவருடைய விமர்சனம் காத்திரமானது.
பின்னாட்களில் அவர் திமுக ஆதரவாளராகவும் அதற்கு சேவகம் செய்கிற ஆளாகவும் மாறி விட்ட போது கார்க்கி பத்திரிகையில் அவர் எழுதிய அந்தத் தீவிரமான வார்த்தைகள், இலட்சியவாதம் எல்லாம் எவ்வாறு சீரழிக்கப்படுகிறது என்பதற்கான சமகால சாட்சியங்கள்.
உண்மையில் பொதுவுடைமையாளர்கள் இதுபோன்ற பார்வை உடையவர்களை திட்டமிட்டு அமைப்பில் இருந்து வெளியேற்றினார்கள்.
எமர்ஜென்சி காலத்தில் கே.முத்தையா, ராமாயணம் உண்மையும் புரட்டும், மகாபாரதம் உண்மையும் புரட்டும் என்று எழுதிக் கொண்டிருந்த காலத்தில் இளவேனிலும், தணிகைச்செல்வனும், இன்குலாப்பும் அரசுக்கு எதிரான தீவிரமான இலக்கியங்களை உருவாக்கிக் கொண்டிருந்தார்கள்.
அஸ்வகோஷ் எழுதிய பல கதைகள் முற்போக்கு முகாமில் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. பாத்ரூம் போவதற்கு வழி இல்லாமல் சிக்கிக் கொண்ட ஒருவர் குறித்த அவருடைய கதை விமர்சிக்கப்பட்டது.”ஆய் போவதெல்லாம் பிரச்சினையா தோழர்…!என்ற கேள்வியை அவர் இளிவரலோடு சந்திக்க நேர்ந்தது.
கார்க்கி பத்திரிக்கைக்குப் பிறகு அவர் குறித்து எந்தச் செய்தியும் வாசிக்கவில்லை. கொஞ்ச காலம் தராசு பத்திரிகையில் தொடர் எழுதிக் கொண்டிருந்தார். அப்போது வி.பி.சிந்தன் இறந்தபோது அவர் குறித்த ஒரு கட்டுரையும் எழுதி இருந்தார்.
இளவேனிலுடைய இந்தப் பாதை மாற்றம் அவர் ஏற்றுக் கொண்டதா?அவருக்கு வேறு வழி இல்லை. முகத்தில் அறையும் வாழ்க்கை அவரை வழி நடத்தியது…!உளியின் ஓசை என்ற படம் அவர் இயக்கியது என்று சொன்னார்கள் நான் அதைப் பார்க்கவில்லை. அவர் இறந்த பிறகும் முற்போக்கு முகாமில் இருந்து வருகிற அஞ்சலிகள் அவருடைய எழுத்தைத் தவிர்க்கமுடியாமல், அந்த உணர்வுகளை மறைக்க முடியாமல் இருப்பதைக் காண முடிகிறது.
ஆனால் அவருடைய பாதை மாற்றத்திற்கு அவர் மட்டும்தான் காரணமா…?இவர் போன்ற எண்ணற்ற மனிதர்களுடைய கனவுகளைத் தீயிட்டுக் கொளுத்தியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளினுடைய திரிபுவாதம்…! பொய்யாய்ப் பழங்கதையாய் மெல்லப் போனதுவே….!என்ற பாரதியின் சுயசரிதை முன்னுரை கவிதையை ஞாபகப்படுத்திக் கொள்ள முடிகிறது…!
இளவெனில்… இது போல் கண்ணுக்குத் தெரியாத எண்ணற்றமனிதர்களை நம்மால் காண முடியும்.இந்தச் சமூகத்தின் நன்மையின் பொருட்டு தனது சொந்த வாழ்க்கைக்குத் தீ வைத்துக் கொண்டவர்கள் இவர்கள்.ஒரு 70 ஆண்டுகால நீண்ட வாழ்க்கையை பரிசீலிக்கும் போது நமக்குக் கிடைப்பது பெருமூச்சுகளும் கழிவிரக்கமும் தான்.லட்சிய வாதத்தின் கடைசிச் சுழி முகம் சமரசங்களோடு மையம் கொள்வதுதான்.வாழ்க்கைப் பயணத்தில் பெரும் சலிப்பைக் கண்டுணர முடிகிறது.இந்தச் சமூகத்தின் பொருட்டு சிந்தித்து வந்த ஒருவரின் பயணம் இவ்வாறாக நிறைவானது.
கற்றுக்கொள்ள இன்னும் இருக்கிறது.இருளிலிருந்து ஒளியை நோக்கி…! “அஸத்தோமா ஸத்கமய..!” சென்று வருக !!
கோவிந்தராஜ்/ முகநூலில் இருந்து
அஞ்சலி:சோலை சுந்தரப்பெருமாள்
சோலை சுந்தரப்பெருமாள் முற்போக்கு இலக்கிய முகாமில் நிறைய எழுதிய படைப்பாளிகளில் ஒருவர். தஞ்சை மாவட்டத்து விவசாயிகளின் வாழ்க்கைப்புலத்தை முற்போக்குப் பார்வையில் எழுதியவர். ஆசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர்.
நவீன இலக்கியப்பார்வையில் அவருடைய செந்நெல் மட்டுமே குறிப்பிடத்தக்க படைப்பு. கீழ்வெண்மணி நிகழ்வு குறித்த இடதுசாரிப் பார்வை அதில் பதிவாகியிருந்தது. ஆனால் அதையும் ஓர் இலக்கிய ஆக்கமாக கருத்தில்கொள்வது கடினம் – மார்க்ஸியர்களின் தரப்பு என்று எடுத்துக்கொள்ளலாம். அதில் வரும் உழைப்பாளி மக்களும் சரி, அப்பிரச்சினையும் சரி , வரையறைசெய்யப்பட்ட அச்சில் வார்த்தவையாகவே அதில் வெளிப்பட்டன.
சோலை சுந்தரப்பெருமாள் பின்னாளில் மார்க்சிய கம்யூனிஸ்டுக் கட்சியின் அரசியல் வகுப்புகளில் இருந்து, எளிமையான கட்சிப்பேச்சாளர்களான அருணன் போன்றவர்களை முன்னுதாரணமாகக் கொண்டு, ஒற்றைப்படையான ஆழமற்ற கருத்துக்களை எடுத்துக்கொண்டு கதைகளை எழுதினார். அவை அவருடைய தோழர்களால் விரும்பப்பட்டிருக்கலாம், பாராட்டும் பெற்றிருக்கலாம். அவர் குறிப்பிடும்படி ஏதும் எழுதவில்லை. தாண்டவபுரம் போன்ற அவருடைய கதைகள் வெறுமே சீண்டும் நோக்கம் மட்டுமே கொண்டவை.
எழுத்து என்பதை ஒருவர் எவ்வண்ணம் வகுத்துக்கொண்டிருக்கிறார் என்பது எப்போதும் முக்கியமானது. சோலை சுந்தரப்பெருமாள் அதை கட்சிப்பணி என்றே புரிந்துகொண்டார். இலக்கியத்தில் செந்நெல் ஒன்றின்பொருட்டு அவர் ஒரு பொதுவான வரலாற்றுச்சித்திரத்தில் இடம்பெறுவார்
சோலை சுந்தரப்பெருமாள் அவர்களுக்கு அஞ்சலி
செந்நெல் ஆசிரியருக்கு அஞ்சலி- முருகானந்தம் ராமசாமி
ரசனைசார் விமர்சன மரபின் முன்னோடியான வெங்கட்சாமிநாதன் தமிழக இடதுசாரி இலக்கியக்குழுக்களால் கடும் விமர்சனங்களுக்கு ஆளானவர். ஆனால் அவர் விடாப்பிடியாக தனது நிலையில் நின்றார். அதில் வினோதம் என்னவென்றால் அவர் அசோகமித்திரனை பெரும்பாலும் நிராகரித்தே வந்திருக்கிறார். அது துவக்ககாலத்தில் அவர் மீது எனக்கு பெரும் மனவிலக்கத்தை உருவாக்கியது.
ஆனால் அவர் தங்களை இடதுசாரிகளாகவே அடையாளப்படுத்திக்கொண்ட கு.சின்னப்பபாரதியின் “தாகம்” மற்றும் சோலை சுந்தரபெருமாளின் “செந்நெல்” இரண்டையும் வெகுவாக கொண்டாடினார். செந்நெல் ஐ அவர் தமிழின் முதல் சிறந்த 10 நாவல்களில் ஒன்றாக குறிப்பிட்டார். கடும் கோபமிருந்தாலும் வெ.சா வின் பரிந்துரைகளை அப்படி என்னதான் கிழிச்சிருப்பாங்க.. பார்ப்போம் என்ற மனநிலையில் படித்த காலம் அது.
அப்படித்தான் செந்நெல் படிக்கப்பட்டது. வெ.சா பரிந்துரைத்தவை பெரும்பாலும் அதற்கு நியாயம் செய்தவை.ஒரு கொந்தளிப்பான வரலாற்று நிகழ்வை எழுதுவது என்பது வெறும் ஆவணப்பதிவாகவே நின்று விடும் துரதிருஷ்டத்தை வெற்றிகரமாக தாண்டி அது வரலாற்றுபுனைவாக எழுந்து நின்றது.
ஜெயகாந்தனுக்கு பிறகு சோலை சுந்தர பெருமாள் தமிழ் முற்போக்கு அழகியலை அடுத்த இடத்திற்கு நகர்த்துவார் என்பதற்கான சான்றாக நின்றது செந்நெல்.. ஆனால் துரதிருஷ்டவசமாக அவரின் தொடர்ந்த படைப்புகளில் அது நிகழவில்லை. பல இலக்கியக்கூட்டங்களில் நான் செந்நெல்லையும் சோலை சுந்தரபெருமாளையும் முன்வைத்து எனது மனக்குறையை வெளியிட்டிருக்கிறேன்.
இன்று சோலை சுந்தர பெருமாளின் மறைவுச்செய்தி இனி அது அவர் வழியாக நிகழாது என முடிவாக உரைத்திருக்கிறது. செந்நெல்லுக்காக சோலை எப்போதும் நினைவு கூரப்படுவார்.
அவருக்கு என் அஞ்சலி..!
[இணையத்தில் இருந்து]
விசையுறு பந்து
ஓவியம்: ஷண்முகவேல்வெண்முரசில் துரியனின் குணச்சித்திரம் இரு எல்லைகள் கொண்டவையாக வந்து கொண்டிருக்கும். அவன் பீமனைக் காணும் வரை இறுகியவனாக, பாறைகளைக் கையால் அடித்து உடைப்பவனாக இருப்பான். பீமனுடன் பழகும் சில காலங்களில் அவன் நெகிழ்ந்தவனாக, அவன் பெருந்தன்மையை தயங்காமல் வெளிப்படுத்துபவனாக இருப்பான். பின்பு புண்பட்டு பீமனுடனும், யாரென்றறியா ஒன்றோடும் வஞ்சமடைந்து ஸ்தூனகர்ணன் முன் தன் மென்மையைத் துறந்த பிறகு நிகர்நிலை கூடிய முழுமையுடல் கொண்டவனாக, ஆழமானவனாக, தன்னுள் நிறைந்தவனாக, பேரழகுடையவனாக இருப்பான்.
விசையுறு பந்துJanuary 13, 2021
தொல்தமிழ் இலக்கியத்தில் பட்டாம்பூச்சி ஏன் இல்லை?
உங்களைச் சுற்றிலும் நலம் அமைய விழைகிறேன். எனக்கு உலக மற்றும் தமிழ் இலக்கியம் உங்களால் அறிமுகமானது. எனது வாழ்வை மாற்றிய படைப்புகள் உங்கள் மூலம் தான் என்னை அணுகியது. கேட்பதற்கு ஓராயிரம் கேள்விகள் இருந்தது. பெரும்பாலான என் கேள்விகளுக்கு முன்னரே உங்கள் தளத்தில் பதில் அளிக்கப்பட்டுள்ளது. என்னை ஒரு இலக்கிய வாசகனாக அடையாளப்படுத்த சற்று தயக்கமாக உள்ளது. செவ்விலக்கியங்கள் பற்றி செரியான கருத்துக்களை எழுதும்போது அந்த பட்டத்தை நோக்கி செல்வேன் என்று நம்புகிறேன்.
இங்கு என் கேள்வி ” சங்க இலக்கியங்கள் தொடங்கி பக்தி இயக்கப் பாடல்கள் வரை வண்ணத்துப்பூச்சியின் குறியீடை காண முடியவில்லை. இயற்கை வர்ணனைளில் வரும் பறவைகள் மற்றும் ஊர்வன பற்றிய குறிப்புகள் நான் சங்க இலக்கியங்களில் கண்டுள்ளேன். கம்பனின் பாடல்களில் மயில் அன்னம் மான் அரவம் போன்ற உயிரினங்களை காண்கிறேன். ஆனால் இன்று பாடல்களிலும் கவிதைகளிலும் நிரம்பி வழியும் வண்ணத்துப்பூச்சியின் குறிப்பை நவீன தமிழ் இலக்கியத்திற்கு முன்பு அடையாளம் கண்டுகொள்ள இயலவில்லை.
பண்டைய இந்திய தத்துவங்களிலும் இந்த பூச்சிகளை பற்றிய குறிப்பு ஏதும் தென்படவில்லை. ஆனால் மேற்கு உலக தத்துவங்களில், கதைகளில் கணிசமான இடத்தை பட்டாம்பூச்சி ஈட்டியிருக்கிறது. என் நண்பனிடம் இந்த அவதானிப்புகளை கூறியபோது, ” அந்தக்காலத்தில பட்டாம்பூச்சி எல்லாம் இருந்திருக்காதுடா”, என்றான். இந்த பதிலுக்கு பின்பு நான் எவரிடமும் இது தொடர்பாக பேச முயற்சிக்கவில்லை.
உங்களிடம் நான் வினவுவது, ” எதனால் வண்ணத்துப்பூச்சியை நம் புலவர்கள் விட்டுவிட்டனர்? வளர்ந்த நாகரீகம் எதன்பொருட்டும் ஒரு உயிரினத்தை குறிப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்க முயலுமா?”.
என் சிறிய வாசிப்பனுபவத்தை கொண்டே இக்கேள்விகளை முன் வைக்கிறேன். என் புரிதல் தவறாக இருந்தால் மன்னிக்கவும்.
ஆனந்த் குரு
அன்புள்ள ஆனந்த்
சங்க இலக்கியங்கள் மிகத்தொன்மையானவை. அன்று சொற்கள் எப்படி பொருள்கொள்ளப்பட்டன என்று தெரியவில்லை. பின்னர் வந்தவர்கள் பல சொற்களுக்கு தங்கள் குறைவுபட்ட அறிவைக்கொண்டு பொருள்கொண்டனர். ஆகவே நாம் இன்று வாசிக்கும் சங்க இலக்கியம் என்பது மிகமிக எல்லைக்குட்பட்டே நம்முடன் உரையாடுகிறது
குறைவுபட்ட பொருள் என ஏன் சொல்கிறேன் என்றால் சங்க இலக்கியங்கள் ஏட்டில் இருந்து மீட்டு எடுக்கப்பட்டு உரைகள் எழுதப்பட்டபோது அவை தமிழறிஞர்களுக்குள்தான் வாசிக்கப்பட்டன, விவாதிக்கப்பட்டன. அந்தத் தமிழறிஞர்கள் அறிந்த தமிழ் என்பது ஓரிரு நூற்றாண்டுகள் பழமைகொண்டது மட்டுமே. சங்க இலக்கியம் அவர்களிடமிருந்து மிகத்தொலைவில் இருந்தது.
அப்போதுதான் தமிழில் நவீன அறிவியக்கம் தொடங்கியிருந்தது. நூல்கள் அச்சுக்கு வரத்தொடங்கின. பொதுக்கல்வி அறிமுகமாகியது. நவீன அறிவியலின் பலதுறைகள் வந்துசேர்ந்தன. கல்வெட்டு ஆராய்ச்சி,தொல்லியல் ஆய்வு ,மொழியியல் ஆய்வு போன்றவை தொடக்கநிலையில் இருந்தன.தமிழக வரலாறே அப்போதுதான் எழுதப்பட்டுக்கொண்டிருந்தது.
இந்தியச்சூழலில் தாவரவியல், விலங்கியல் போன்ற அறிவுத்துறைகளின் தொடக்ககாலகட்டம் அது.இந்திய மொழிகளுக்கிடையே மொழியாக்கமும் முறையாகத் தொடங்கவில்லை. நவீன அகராதிகளும் உருவாகவில்லை.
இத்தகைய சூழலில் பழைய சொற்களுக்குப் பொருள்கொள்ளும்போது தமிழறிஞர்கள் தங்கள் நூலறிவின் எல்லையினுள் நின்றே செயல்படவேண்டியிருந்தது. நூல்களுடன் ஒப்பிடுவது, வெவ்வேறு வட்டாரத்து வாழ்க்கைமுறைகளை அறிந்துகொண்டு பொருள்கொள்வது, அறிவியல்செய்திகளை கொண்டு பொருள்கொள்வது எல்லாம் இயல்வது அல்ல.
ஆனால், பின்னர் வெவ்வேறு தளங்களில் பெருவளர்ச்சி நிகழ்ந்தபோதுகூட தொன்மையான இலக்கியநூல்களுக்கு மேலதிக வாசிப்போ பொருள்கோடலோ நிகழவில்லை. சொல்லப்போனால் தமிழாய்வே ஐம்பதுகளுடன் நின்றுவிட்டது. அதற்குப்பின் புதிதாக உரையெழுதப்பட்ட தொல்லிலக்கிய நூல்கள் அரிது. அதுவும் இன்றைய பிறதுறை அறிதல்களை கொண்டு தொல்லிலக்கியங்களுக்கு பொருள்கோடல் செய்பவர்கள் எவருமே இல்லை. இன்று எவரேனும் உரை எழுதினால் பழைய உரைகளை கொண்டு மீண்டும் உரையெழுதுகிறார்கள்.
இச்சூழலில் சங்கப்பாடல்கள் உள்ளிட்ட தொல்லிலக்கியங்களைப் பற்றி நாம் எந்த நம்பகமான கருத்தையும் உருவாக்கிக் கொள்ளமுடியாது. சங்ககாலத்தில் இன்னது இல்லை, இது உண்டு என்றெல்லாம் சொல்லிவிடமுடியாது. உதாரணமாக ஆய்வாளர் தொ.பரமசிவன் சங்ககாலத்தில் தென்னை இல்லை, அச்சொல் பயின்றுவரவில்லை என எழுதினார். தெங்கு, தாழை என்ற பெயர்களில் தென்னை சங்ககாலம் முதலே இருக்கிறது. அதை ஆய்வாளர் விரிவாக எழுதியுமிருக்கிறார்கள். அதை நாஞ்சில்நாடன் சுட்டிக்காட்டவேண்டியிருந்தது
இனி, உங்கள் கேள்விக்கு வருவோம். சங்ககாலத்தில் வண்ணத்துப்பூச்சி பற்றிய செய்திகள் ஏன் இல்லை?
முதலில் வண்ணத்துப்பூச்சி என்பது மிக அண்மைக்காலச் சொல். அதற்கு பொருள் சொல்லும் வையாபுரிப்பிள்ளை பேரகராதி அச்சொல் பயின்றுவரும் சொற்றொடரை பதினெட்டாம்நூற்றாண்டில் எழுதப்பட்ட ஈச்சரநிச்சயம் [சபாரத்தினம் முதலியார்] என்னும் நூலில் இருந்தே சுட்டிக்காட்டுகிறது.
சங்ககாலத்தில் வேறுசொற்கள் இருந்திருக்கவேண்டும். அச்சொற்கள் வெவ்வேறு அறிவுத்துறைகளுக்கு வெவ்வேறாக இருந்திருக்கலாம். பூச்சிகளைப் பற்றிய சொற்கள் மருத்துவம், வேளாண்மை சார்ந்த தளங்களில் புழங்கியிருக்கலாம். இன்று அந்நூல்கள் நமக்கு கிடைப்பதில்லை.சங்ககாலம் முதல் தொடங்கும் தமிழ்ப்பண்பாட்டின் மிகமிகச் சிறிய பகுதியே நமக்கு கிடைக்கிறது என்னும் தெளிவு நமக்கு தேவை.
சங்ககாலத்தை எடுத்துக்கொண்டால் அது ஏறத்தாழ ஐநூறு ஆண்டுகள் நீண்டது. இரண்டாயிரத்தி முந்நூற்றி எண்பத்தொரு பாடல்களே நமக்கு கிடைக்கின்றன. காப்பியகாலகட்டம் மேலும் இருநூறாண்டுகள் நீள்வது. மூன்று பெருங் காப்பியங்களும் ஒரு சிறுகாப்பியமும்தான் கிடைக்கின்றன. இவற்றைக்கொண்டு தமிழில் அன்றிருந்த அறிவியக்கம் என்ன என்று சொல்லிவிடமுடியாது. இவை எல்லாமே இலக்கிய நூல்கள். இலக்கியப் பயன்பாட்டுக்குள் என்னென்ன இருந்தனவோ அவை மட்டுமே இப்பாடல்களில் உள்ளன
நமக்கு கிடைக்கும் இந்தச் சிறிய இலக்கியநூல்களின் வட்டத்திற்குள் வண்ணத்துப்பூச்சி உண்டா? ஒரு சொல் காணக்கிடைக்கிறது. ‘தும்பி’. நமக்கு எல்லாருக்கும் தெரிந்த சங்கப்பாடல்
கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
செறியெயிற் றரிவை கூந்தலின்
நறியவும் உளவோ நீயறியும் பூவே –
குறுந்தொகை 2, இறையனார்
திருவிளையாடல் வசனத்திலேயே ‘தும்பி இனத்தைச் சேர்ந்த உயர்ந்தசாதி வண்டே’ என்று விளக்கம் அளிக்கப்படுகிறது. மிகப்பிற்கால அகராதியான திவாகர நிகண்டுவில் இருந்து அந்த பொருள் எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது
இதில் ஒரு வினா எழுகிறது. தும்பி என்பது வண்டு என்றால் இருசொற்களும் மாறிமாறிப் பயன்படுத்தப்பட்டிருக்கவேண்டும். ஆனால் வண்டு என்ற சொல் தனியாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.
வண்டு படத் ததைந்த கொடி இணர் இடையிடுபு
பொன் செய் புனை இழை கட்டிய மகளிர்
[ஓதலாந்தையார், குறுந்தொகை 21]
வண்டு பெண்களின் கண்களுக்கு உவமையாகச் சொல்லப்பட்டுள்ளது. தும்பி ஒருபோதும் அப்படிச் சொல்லப்பட்டதில்லை. வண்டு ஒரு தும்பியாகலாம், ஆனால் தும்பி என்றால் வண்டு மட்டும் அல்ல
தும்பி என்ற சொல் எப்படியெல்லாம் தமிழிலக்கியத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது? தும்பி என்னும் சொல் யானை என்று பயன்படுத்தப்படுகிறது. அதன் நீள்மூக்கு தும்பிக்கை எனப்படுகிறது. தும்பி என்பது ஒரு குறிப்பான சொல்லாக அல்லாமல் ஒரு பொதுச்சுட்டுச் சொல்லாக, ஒரு சிறப்புச் சொல்லாக இருந்திருக்கிறது
பழந்தமிழ்ச் சொற்கள் இயல்பாக புழக்கத்திலிருக்கும் மொழி மலையாளம். அங்கே தும்பி என்பது குழந்தைகளுக்கு இளமையிலேயே அறிமுகமாகும் சொல். இன்று அச்சொல் வண்டைக் குறிப்பது அல்ல. பேச்சுமரபில் தட்டாரப்பூச்சியை குறிப்பது. கவிதையில் அது பட்டாம்பூச்சி உட்பட எல்லா தேனுண்ணும் பூச்சிகளையும் குறிப்பது.
பளியர் போன்ற மலைக்குடிகளில் தும்பி என்ற சொல் தேனுண்ணும் பூச்சிகள் அனைத்தையும் குறிப்பிடுகிறது. தும்பிதுள்ளல் என்னும் ஆடல் அவர்களிடமுண்டு. அது இருகைகளையும் பட்டாம்பூச்சிபோல ஆட்டியபடி ஆடுவது [’நம்பியம்பதி மலைநிரையில் தும்பிதுள்ளுண தொடியிலு பம்பமுட்டணு பறமுழங்கணு சுவடு வைக்கடி தத்தச்சி’ -சினிமாப்பாடல். ]
குறிப்பாகச் சொல்லவேண்டும் என்றால் தேன் உண்பதற்கான வளைவான உறிஞ்சுகுழாய் கொண்ட பூச்சிதான் தும்பி. யானையிடம் இருப்பதும் அதுதான் என பழங்குடிமொழியின் எளிய கவித்துவம் உருவகித்துக்கொண்டது. ஆகவேதான் அது தும்பிக்கை.
ஆகவே சங்க இலக்கியத்தில் வரும் தும்பி என்பது வண்ணத்துப்பூச்சிகள் உட்பட தேனுண்ணும் உறுப்புகொண்ட பூச்சிகளை குறிக்கிறது. ‘அம்ம வாழியோ மணிச்சிறைத் தும்பி’ என்ற வரி அழகான வண்ணங்கள் கொண்ட சிறகுகளுடைய தும்பி என்று வண்ணத்துப்பூச்சியை குறிப்பிடுகிறது.அது ஒரு தொகைப்பெயர். வண்டும் தும்பிதான்.பல இடங்களில் இசைத்தபடி வரும் வண்டு தும்பி எனப்படுகிறது.
தும்பி சங்க இலக்கியம் முதல் மிக முக்கியமான குறியீடாகவே இருந்துவந்துள்ளது. மலர்களில் தேன் தேடி அலையும் தும்பியை காமவிழைவின் குறியீடாகவும் இன்னும் பலவாகவும் சங்கப்பாடல்கள் உருவகிக்கின்றன. பின்னாளில் தும்பிவிடுதூது ஒரு கவிதை உத்தியாகவே ஆகியது. ‘கோத்தும்பி’யை தூதனுப்பும் திருவாசகப்பாடல்கள் புகழ்பெற்றவை.
ஆனால் ஜப்பானிய கவிதைகளைப்போல பட்டாம்பூச்சி இங்கே முதன்மை இடத்தைப் பெறவில்லை. வண்ணங்களை விட இசைக்கே இந்த மரபு அதிக முக்கியத்துவம் அளித்தது. ஆகவே தும்பிகளில் யாழ்போல ஓசை இமிழும் வண்டுக்கே அதிக இடம் இருந்தது
அது இயல்பானதே. ஒர் இலக்கியச் சூழலில் சில உயிர்கள், சில பொருட்கள் மட்டுமே குறியீட்டுப்பொருள் கொள்கின்றன. அவையே மேலும் மேலும் கவிதையில் வருகின்றன. நாம் தொல்லிலக்கியமாக கொண்டிருப்பவை அனைத்துமே கவிதைகள் என நினைவில்கொள்ளவேண்டும். கவிதைகள் யதார்த்தச் சித்திரத்தை அளிக்க முற்படுவன அல்ல. அவை செய்திகளைச் சொல்வனவும் அல்ல. அவை அகவயமான ஓர் எழுச்சியைச் சொல்லவே புறவுலகை கையாள்கின்றன. புறவுலகிலுள்ளவற்றை அவை குறியீடுகளாக ஆக்கிக்கொள்கின்றன. அக்குறியீடுகளைக்கொண்டு நுண்ணிய அகநிகழ்வு ஒன்றை முன்வைக்கின்றன
அத்துடன் செவ்விலக்கிய மரபு என்பது புதியபுதிய குறியீடுகளை கண்டடைய முற்படுவது அல்ல. உலகமெங்குமே செவ்வியல் ஏற்கனவே சொல்லப்பட்ட குறியீடுகளைக்கொண்டே மீண்டும் தொடர்புறுத்த முயல்கிறது. நுண்மையாக்கம்தான் [improvisation] அதன் வழி. சொன்னவற்றை மிகநுட்பமாக சற்று மாற்றிச் சொல்லுதல். கைவளை கழல்தல் என்ற ஒரே விஷயம் எப்படியெல்லாம் மீளமீளச் சொல்லப்பட்டுள்ளது என்பதைப் பாருங்கள்.
தமிழ்ச்செவ்வியல் மரபில் தும்பிகளில் வண்டு சரியான குறியீடாக அமைந்துவிட்டது. காரணம் அதன் இசை. ஆகவே பெரும்பாலும் அதுவே பயன்படுத்தப்பட்டுள்ளது.
சம்ஸ்கிருத மரபில் சலஃபம் என்றும் பதங்கம் என்றும் பட்டாம்பூச்சி குறிப்பிடப்படுகிறது. அது தொடர்ச்சியாக வெவ்வேறு வகையில் கவிதைகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. தத்துவத்தில் ‘கம்பளிப்புழு பட்டாம்பூச்சியாவதுபோல’ என்னும் உருவகம் புகழ்பெற்றது. ஈச்சரநிச்சயத்தில்கூட சபாபதி முதலியார் சம்ஸ்கிருத அத்வைத மரபிலிருந்து அந்த உவமையைத்தான் பயன்படுத்தியிருக்கிறார். அது மெய்ஞானம் அடைவதைக் குறிக்கிறது
ஜெ
வசந்தம், மலர்
அன்புள்ள அப்பாவுக்கு,
நலமாக இருக்கிறீர்களா?
“அம்மா அத்தனை குழந்தைகளுக்கும் விதவிதமாக தீனி கொடுப்பாள். வேகவைத்த பயறில் கருப்பட்டி கலந்து கொட்டாங்கச்சியில் போட்டு கொடுப்பாள். பொதுவாக இட்லி, தோசை. வெறும் சோறில் பால்விட்டு கொடுப்பதும் உண்டு. எப்போதும் கருப்பட்டி. எங்கள் வீடு முழுக்க எங்கு வேண்டுமென்றாலும் பாதிசப்பிய கருப்பட்டி மிதிபடும். எல்லா அறைகளிலும் முற்றாச் சிறுநீர் மணம், பால்புளித்த பீமணம்.
ஒவ்வொரு குழந்தையும் தன்னால் முடிந்த எல்லையில் சென்றுதான் எதையாவது செய்யும். ஒருவயது ஆகியிருக்காது, சன்னல் கம்பியின் நாலாவது அடுக்குவரை தொற்றி ஏறி நின்று இரட்டைப்பல் காட்டி சிரிக்கும். அண்டாவுக்குள் நுழைந்து ஓசையுடன் உருளும். குடத்திற்குள் கைவிட்டு எடுக்க முடியாமல் அலறும். எந்த கைவேலையாக இருந்தாலும் அம்மா எல்லாவற்றையும் அறிந்திருப்பாள். ஒவ்வொன்றும் எங்கே எந்த நிலையில் இருக்கிறது என்று கணிப்பு இருக்கும். எந்நேரமும் கையில் ஏதாவது ஒரு பையை எடுத்துக்கொண்டு ‘ஊருக்குக் கிளம்பும்’ நெல்சன் என்ற ஒரு ஐட்டம் இருந்தது. அதற்கு மட்டும் தனியாக காவல் போட்டிருப்பாள். தங்கம்மா அதை தரதரவென இழுத்துக்கொண்டு வருவாள். தன்னை எவரேனும் வன்முறையாகக் கையாண்டால் ‘லேசுவே லேசுவே’ என்று மனிதகுமாரனை வேண்டும் வழக்கம் அதற்கு இருந்தது”
– ‘அருளப்படுவன’ கட்டுரையிலிருந்து… (ஜனவரி 23, 2020)
எனக்கு கர்ப்பம் உறுதியான சில நாட்களில் இந்தக் கட்டுரையை வாசித்தேன். என்றும் மனதைவிட்டு அகலாத ஒரு கட்டுரை இது. குழந்தையையும், குழந்தைமையும் வளர்க்கும் பொறுமை மற்றும் பொறுப்பு சிறிது கூடிவிட்டது எனக்கு. நோயச்ச காலத்திலேயே பெரும்பான்மையான கர்ப்ப நாட்கள் அமைந்தது எனக்கு ஒரு வரம்கூட. தங்கள் வலைதளம் வாசிப்பது, டாக்குமெண்ட்ரி சீரீஸ் பார்ப்பது என சிறப்பாக நாட்கள் நகர்ந்தன. ‘வெண்முரசு தினம்’ zoom கூடுகையில் பங்கேற்றது மற்றுமொரு தீராமகிழ்ச்சி.
என் முதல் கடிதத்திற்கு நீங்கள் எனக்களித்த பதில்கடிதமான ‘ஆயிரங்கால்களில் ஊர்வது’ கட்டுரையைப்பற்றி புதுநண்பர்கள் உரையாடுவது இதுநாள்வரையில் எனக்கு நிகழ்ந்துகொண்டே இருக்கிறது. இந்த சொல்லாசி உங்களால் நிகழ்ந்த ஒன்று. அதில் நீங்கள் காந்தியைப்பற்றி சொல்லுமிடத்தில் ‘ஒரு மளிகைக்கடைக்காரருக்குரிய வகையில் சலிப்புறாது அன்றாடச்செயலில் ஈடுபடுபவர் அவர் என அவரைப்பற்றி கோவை அய்யாமுத்து சொல்கிறார்’ என்கிற குறிப்பை எழுதியிருந்தீர்கள். ஆச்சரியம் என்னவென்றால் என் தந்தையும் ஒரு எளிய மளிகைக்கடைதான் வைத்துள்ளார். ஒரு மளிகைக்கடைக்காரரின் மகளுக்கு எழுதிய கடிதத்தில் அவ்வார்த்தைகளை நீங்கள் பயன்படுத்திருந்தது எனக்கு தற்செயலாக நிகழ்ந்த ஒரு அற்புதமெனவே மனங்கொள்ளத் தோன்றுகிறது.
நான் பிறந்த அதே மதுரை இராசாசி அரசு மருத்துவமனையில் கடந்த செப்டம்பர் மாதம் 19ம் தேதி, எனக்கு சுகப்பிரவத்தில் ஆண் குழந்தை பிறந்திருக்கிறான். ‘மாசிலன்’ என பெயரிட்டிருக்கிறோம். குக்கூ மனிதர்கள் தேர்வுசெய்து அளித்த பெயரிது. ‘மாசிலன்’ என்ற பெயரை என் குழந்தைக்கு உறுதிபடுத்த உங்களுடைய குறளினிது உரைகளும் ஒரு விருப்பக்காரணம். குறள்சொல் ஒன்று இனி குடும்பத்தில் நிதமொலிப்பதே ஆனந்தம்தான்.
ஒரு குழந்தைக்குத் தாயாக நான் மாறிநிற்கும் இத்தருணத்தில், உங்கள் மகள் சைதன்யாவின் குழந்தைப்பருவத்தை அவதானித்து நீங்கள் எழுதிய “ஜெ சைதன்யாவின் சிந்தனை மரபு” நூலானது தன்னறம் நூல்வெளி வாயிலாக மறுபதிப்பு அடையப்போகிறது என்பதை அறியநேர்ந்தது. என் மாசிலனின் சிந்தனை மரபை உடனிருந்து அவதானிக்கவே இந்த படைப்புத்துணையின் அருகாமை நிகழ்ந்தது என நான் நம்புகிறேன்.
இந்த மகிழ்ச்சியான செய்தியை ஒரு பரிசுடன் உங்களுக்கு தெரிவிக்க யோசித்து யோசித்து இரண்டு மாதங்கள் கடந்துவிட்டது, மன்னிக்கவும். தற்போது கிடைக்கப்பெற்ற நேரங்களில் ஒரு யானை பொம்மையைத் தைத்து (உங்களுடைய ‘ஆனையில்லா!’ கதைநினைவாக) கொரியரில் அனுப்பி உள்ளேன். புளியானூர் ‘துவம்’ தையல்பள்ளியில் தற்போது பெண்களுக்கான பருத்தி உள்ளாடைகள் தைப்பதோடு இதுமாதிரியான சிறுசிறு பொம்மைகளையும் தயாரித்து வருகிறோம்.
எடுத்துவைக்கும் காலடி சறுக்கிட நேர்கையில் எல்லாம் ‘ஆயிரம் கால்கள் இருந்தும் மெல்லவே செல்லும் அட்டைபோல அன்றாடத்தின் கால்கள்மேல் உங்கள் கனவு நிதானமாக ஊர்ந்துசெல்லட்டும்’ என்ற சத்தியச்சொற்களை நினைத்து உளவூக்கம் பெற்று முன்னகர்கிறோம். இனியும் அப்படியே! அடுத்து ஏதேனும் சந்திப்பு நிகழ்கையில் மாசிலனோடு உங்களை நேரில் பார்க்க காத்திருக்கிறேன் அப்பா. அம்மாவுக்கும், அஜிதன் மற்றும் சைதன்யாவுக்கும் என் அன்புகள்!
அன்பும் நன்றியும்,
பொன்மணி
குக்கூ காட்டுப்பள்ளி.
அன்புள்ள பொன்மணி
பின்னாளில் திரும்பிப் பார்க்கையில் வாழ்க்கையின் மிக இனிய நாட்களை கடந்துகொண்டிருந்தீர்கள் என உணர்வீர்கள். உலகியலுக்கு அப்பால் எதையாவது செய்வது, அதில் மகிழ்வதுதான் உண்மையிலேயே வாழ்க்கையை நிறைவுபடச்செய்கிறது. அத்துடன் குழந்தை. அது ஒரு பெரும் பரிசு. மாசிலனுக்கு என் முத்தங்கள்
ஜெ
எண்ணும்பொழுது- கடிதங்கள்
அன்புள்ள ஜெ,
மீண்டும் ஒரு கதைக்காலத்துக்காக ஏங்குகிறது மனசு. இப்போதெல்லாம் கொரோனாக்கால ஓய்வு முடிந்து வேலைக்கு செல்ல ஆரம்பித்தாகிவிட்டது. கொரோனா காலகட்டத்தின் சோர்வும் தனிமையும் இல்லாமலாகிவிடவில்லை. அதெல்லாம் அப்படியே இப்போதும் நீடிக்கிறது என்பதுதான் உண்மை. என்னவென்றே தெரியாத ஒரு சலிப்பு. நாம் பார்த்த உலகமே மாறிவிட்டது என்ற எண்ணம். அப்படி இல்லாமல் நாம் பார்த்த உலகின் சாராம்சமாக உள்ள விஷயங்களிலேயே திளைக்க வைத்தன கதாகாலத்தின் நூறு கதைகளும்
அந்த வரிசையில் வரும் கதை எண்ணும்பொழுது. எண்ண எண்ண குறையும் கூடும் சில விஷயங்களைப் பற்றிய கதை. ஆனால் இக்கதையில் அதெல்லாம் கோணச்சிக்குத்தான் சிக்குகின்றன. வாழ்க்கையை கோணலாகப்பார்த்தால் மட்டுமே பார்வைக்குச் சிக்கும் சில உண்மைகள் உள்ளன. நேராக வாழ்பவர்கள் அதைப் பார்ப்பதில்லை. அவர்களால் நேர்வாழ்க்கையை பார்க்கமுடியாது. நேராக இருப்பவர்கள் கோணலை பார்க்கிறார்கள். கோணச்சிகளே நேரான உண்மைகளைப் பார்க்கிறார்கள்.
கோணச்சி சொல்வன எல்லாமே ஆழமாக உள்ளன. பறக்கிறது நடக்க ஆரம்பித்தால் காலடிகளை எண்ணும் என்பதுதான் ஆதாரமான வரி. எங்கே நடக்க ஆரம்பிக்கிறோம் என்பது தெரியாது. நடக்க ஆரம்பித்ததுமே பதிந்த கால்களை எண்ண ஆரம்பிக்கிறோம். எண்ண எண்ண நல்லவை குறைய அல்லவை கூட கணக்குகள் எல்லாமே தவறிவிடுகின்றன
சரியான கணக்குகளைக்கூட தவறாக எண்ணி கணக்குபோடும் ஒரு வாசனாவைபவம் மனுஷனுக்கு உண்டுபோல
ஸ்ரீனிவாஸ்
அன்பு ஜெ,
கதையை முடித்ததும் மீண்டும் தலைப்பையும், முகப்பு படத்தையும் பார்க்க தொடுபேசியை தொட்டு சறுக்கிக் கொண்டே மேற் சென்றேன். கன நேரமும் தலைப்பின் ஆர்வம் மட்டுமே முடுக்கித் தள்ளியது. எப்பொழுதும் உங்கள் தலைப்பு கதையை சுருக்கி உள்வைத்திருப்பதாக எண்ணம் எனக்கு. “எண்ணும்பொழுது”… என்ற வார்த்தை எண்ணத்தை சொல்கிறதா அல்லது எண்ணிக்கையை எண்ணுவதைச் சொல்கிறதா என்று சிந்தித்திருந்தேன் ஜெ.
பின்னும் அந்த முகப்புப் படம்… குளிரைக் காணிக்கும் வெள்ளி நிறம் மற்றும் வெம்மையைக் காணிக்கும் தங்க நிறம்.. அதில் சில எண்கள்… வேறோர் எண்ணத்திற்கு இட்டுச் சென்றது.
போம்பளார் விரும்பியது என்பது தண்ணீரில் கண்ட கன்னியை தானே. பின்னும் அவர் அதிகம் விரும்பியது கண்ணாடியில் தெரிந்த பிம்பத்தின் கன்னியைத் தான். இரண்டிலுமே அவர் விரும்பியது கன்னியின் குளிர்ந்த பிம்பத்தைத் தான். ஆனால் திருவீட்டு கன்னியோ தீயின் தன்மையானவள். தீயில் தகித்து தீயினால் உயிரை விட்டவள். ஒருவேளை ஒன்றாய் காலம் முழுமைக்கும் சேர்ந்திருந்தாலும் அவரால் அந்த கனலின் கன்னியைக் கண்டிர இயலாது. போம்பளார் விரும்பிய கன்னியின் பிம்பத்திற்கும் அனலாயிருந்த அவளின் உடலுக்கு இடையில் இருந்ததும் கூட தீராத வானமும் மடங்காத காலமும் தான். ஆக அவர் இறப்பிற்குப் பின் சென்றடைந்ததும் அவர் விரும்பிய அந்த இடத்திற்குத் தான் என்று நினைத்தேன் ஜெ. பின்னும் குறுந்தொகைப் பாட லான “பூ இடைப்படினும் யாண்டு கழிந்தன்ன.. ” என்ற வரிகள் என்னை சூழ்ந்து கொண்டது. கூடவே நீங்கள் அதற்குக் கொடுத்த விளக்க உரையும் ஞாபகம் வந்தது. எண்ண ஆரம்பித்த கனம் பூ வந்து விழுந்தது போன்ற கற்பனையை நிகழ்த்திக் கொண்டேன். அந்த ஒற்றை எண்ணப்பூவால் மட்டுமே அவர்கள் இருவரையும் அந்த மடங்காத காலம் பிரித்து வைக்க முடியும் எனக் கொண்டேன்.
ஒரு கதையை விஷயத்தை, எதைப் பேசினாலும் ஆண் என்ன காரணத்திற்காக பேசுகிறான் என்பதையே பெண் மனம் முதலில் நாடுகிறது. முடிவிலா தர்க்கத்தை கனகனமும் நிகழ்த்தக்கூடியது பெண் மனது. இன்ன காரணாகாரியத்தோடு இன்ன நேரத்தில் இன்ன விடயம் நியாபகம் வருகிறது என்றறியாத பேதை ஆணுள்ளம் அந்தக் கேள்விக் கனைகளை எதிர்கொள்ளும்போது விக்கித் தான் தவிக்கிறது… ஆனால் இந்த இரண்டடுக்குக் கதையின் கதைசொல்லி அப்படியல்லாது ஏதோவொரு காரணத்திற்காகவும் கூறியிருப்பாரோ என்று எண்ணிப் பார்த்தேன். காமத்தை காதலை அதிகரிக்கும் பொருட்டு எழுப்பப்படும் ஒருவகை சந்தேகத் தொனியாக கதை இருக்குமோ என்று நினைத்தேன் ஜெ. “என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும்” என்ற ஒற்றைக் கேள்வியை தலைவன் எதிர்கொள்ளும் போது ‘இப்ப காமிக்கிறேன் பார்’ என்ற கர்சிணையோடு ஆரம்பிக்கும் தழுவல்களின் நெருக்கம், அது எண்ணாமலிருக்கும் போது குறைவு தான். கதையில் தலைவியின் தழுவல்கள் கூட அப்படிப்பட்டதாகத் தான் இருந்தது. அவன் தன்னை சந்தேகிப்பதாய் அமைந்ததோ என எண்ணிய தழுவலின் தகிப்பை அவனே உணர்ந்திருந்த தருணத்தையும் கண்டேன்.
பின்னும் இந்த வரிகளை “எண்ணி எண்ணிப் பார்ப்பதெல்லாம் எண்ணிக்கை தவறும். கணக்கிட்டுப் பார்ப்பதெல்லாம் குறைஞ்சுகூடும். ரெண்டுபேரையும் எண்ணவைப்போம், இழந்ததும் விட்டதும் எண்ணினால் கூடும். எடுத்ததும் வைச்சதும் எண்ணினால் குறையும்” ஓட்டிப் பார்த்தேன். அப்படியானால் அவர்கள் எண்ணியது எடுத்ததையும் வைத்ததையும் மட்டுமே. காதலில் தன் இணை இழந்ததையும் விட்டதையும் யோசிக்க அந்த காதல் பெருகிவருவதை நானே உணர்ந்திருக்கிறேன். என் காதல் அவன் மேல் பெருகிக் கொண்டே இருப்பது அதனால்தான் என்பதை இந்த வரிகளில் உணர்ந்தேன் ஜெ. அவன் இழந்ததையும் விட்டதையும் நினைக்கும்போதே என் கண்கள் பொங்கி என்னுள் அணைத்துக் கொள்ளத் தோன்றும் எனக்கு. அதற்கு நேர்மாறாக சில சமயம் உச்ச எரிச்சலில் நான் எண்ணிக் கொண்டது அவன் என்னிடம் எடுத்ததும் வைத்ததையும் தான் என்பதையும் உணர்ந்தேன். குறைவதும் கூடுவதும் அவரவர் எண்ணிக் கொள்வதைப் பொறுத்தே அமைக்கிறது. எண்ணிக்கையோ எண்ணமோ அல்லது இரண்டுமோ குறைவதும் கூடுவதும் அவரவர் எண்ணுவது பொறுத்தமைகிறது…
இன்னும் ஒருவரி என்னை ஈர்த்திருந்தது ஜெ. எப்பொழுது நாம் எண்ண ஆரம்பிக்கிறோம் என்ற புள்ளியை நீங்கள் சொன்ன போது… “பறக்கிறது நடந்தா பதிஞ்ச காலை எண்ணும்” என்ற வரிகள். ஆம்! அங்குதான் நாம் எண்ண ஆரம்பிக்கிறோம். எப்படி நீங்கள் எண்ணத்தின் ஆழம் வரை பயணிக்கிறீர்கள் என்று நான் எண்ணிக் கொண்டிருந்தேன். அருமையான கதை ஜெ. நன்றி.
அன்புடன்
இரம்யா.
எண்ணும்பொழுது- கடிதங்கள் எண்ணும்பொழுது- கடிதங்கள்Feeling Blue
The ‘love’ of Radha and Krishna is the bedrock of Neelam around which everything else happens. And this love as we know is not the earthly kind of love and I don’t know if it can even be called ‘love’ at all as we understand it. I merely use it for want of a better word. It’s a phenomenon that eliminates trifling limitations such as age, gender, custom, time, self, dimensions, manifestations…
Feeling Blue- Remitha Satheeshசென்னை வெண்முரசு விவாதக்கூட்டம்
நண்பர்களே..
இந்த மாத சென்னை வெண்முரசு கலந்துரையாடல் வரும் ஞாயிறு அன்று நிகழ்கிறது.
வெண்முரசு நாவல் வரிசையின் பதினாறாவது நாவலான
“குருதிச்சாரல்” நாவல் குறித்து திருமதி.விஜயலெக்ஷ்மி அவர்கள் உரையாடுகிறார். வரும் ஞாயிறு அன்று (17-01-2021) மாலை 5:00 மணிக்கு கலந்துரையாடல் நிகழும்.
வெண்முரசு வாசகர்களையும் வெண்முரசு குறித்து அறிய விரும்புபவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்
17-01-2021 மாலை 5 மணி முதல் 8 மணி வரை
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/4625258729
(Password தேவையில்லை)-
சென்னை விஷ்ணுபுரம் நண்பர்கள்,
தொடர்புக்கு: 9965315137
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers


