Jeyamohan's Blog, page 1070

January 1, 2021

முதற்கனலும் நீலமும் – முனைவர் ப. சரவணன்



‘வெண்முரசு’ நாவல்தொடரில் முதல் நாவல் ‘முதற்கனல்’. இந்த நாவலைப் பொறுத்தவரை ‘கனல்’ என்பது, நெருப்பால் ஆனது அல்ல; வெறுப்பால் ஆனது. பெருந்துயருற்றவர் அடையும் வெறுப்பு அவருக்குள்ளாகவே மிகுந்து மிகுந்து அளவு மீறிச் செல்லும்போது, அது ஆலகாலவிஷமென அவரின் நெஞ்சில் இறங்கி, தங்கி விடுகிறது. அவரின் உடலைச் சிதையில் எரித்தபோதும்கூட அந்த வெறுப்பின் விஷம் மட்டும் காய்ந்து, அழியாமல் தாமரையிலையின் மீது உருளும் நீர்த்துளியென உயிர்ப்போடு, தான் உருப்பெற காரணமாக அமைந்தவர்களை அழித்தொழிக்கத் தருணம் பார்த்துக்கொண்டு, காலவெளியில் நிலைகொண்டிருக்கும்.


‘திரௌபதியின் கண்ணீர்தான் மகாபாரதம்’ என்று பொதுவாக நாம் புரிந்து வைத்திருப்போம். துரௌபதி போன்றே காலவெளியில் நிறைந்து ததும்பும் நூற்றுக்கும் மேற்பட்ட துரௌபதிகளின் நெஞ்சில் வடியும் கண்ணீரே ‘மகாபாரதம்’ என்பதை ‘முதற்கனல்’ நாவல் கோடிட்டுக் காட்டுகிறது. இந்தக் கனலை நாம் வள்ளுவரின் துணைகொண்டு அறியலாம்.


“அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண் ணீரன்றே

செல்வத்தைத் தேய்க்கும் படை.” (திருக்குறள், 555)


அரசன் அறம் செய்யாமையால் குடிகள் துன்பமுற்று அதனைப் பொறுக்க மாட்டாது அழுத கண்ணீரே, அரசனின் செல்வத்தைக் குறைக்கும் கருவியாக மாறிவிடுகிறது. அல்லற்படுத்திய பாவத்துக்குக் காரணமாகிய கண்ணீரைவிடக் கொடிது வேறு இல்லை. அந்தக் கண்ணீர் நீர்த்துளியாக வடிந்தாலும் நெஞ்சில் தீத்துளியாக நிலைபெற்றுவிடுகிறது. அது கனன்று கனன்று கடும் சூட்டுடன், தகித்து, கனலாகிறது. இது நெஞ்சில் கனல்வதால் அகக்கனலாகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட அகக்கனல்களின் மீதே மகாபாரதம் உருவாகி, தழலாடி இருக்கிறது.


மகாபாரதத்தில் ஓர் இழையாக மட்டுமே வந்து இணையும் ஒவ்வொரு பெண்ணும் ஏதோ ஒரு வகையில் அடக்க முடியாத கண்ணீருடன்தான் வாழ்ந்து மறைகிறார். ஒவ்வொரு கண்ணீர்த் துளிக்குப் பின்னாலும் சமாதானப்படுத்த முடியாத துயர் துள்ளிக் கொண்டிருக்கிறது.


‘மகாபாரதத்தின் முதற்கனல் எது?’ என்று கேள்வியை நாம் நமக்குள் எழுப்பிக் கொண்டால், அது ‘மகாபாரதத்தோடு தொடர்புடைய ஒவ்வொரு பெண்ணின் ஆற்ற முடியாத துயரங்களின் திரள்’ என்பதையே விடையாக ஏற்க நேரும்.


மகாபாரதத்தில் கண்ணீரை வெளிப்படுத்தும் பெண்களுக்கு நிகராகக் கண்ணீரைக் கட்டுப்படுத்திக்கொண்டு செய்வதறியாது திகைத்து நிற்கும் ஆண்களும் நம் கவனத்திற்கு உரியவர்களே. குறிப்பாக, மகாபாரதத்தில் இடம்பெறும் குரு வம்சத்து அரசர்கள், அவர்களுக்கு அணுக்கத் துணையாக நிற்கும் மதியமைச்சர்கள், அவர்களை உருகி உருகிப்பாடும் சூதர்கள், நிமித்தர்கள், அரசகுடியினருக்குத் தொண்டூழியம் செய்து தன் வாழ்வையே அவர்களுக்காக அர்ப்பணித்துள்ள எளிய மக்கள் போன்றோரைக் குறிப்பிடலாம்.


‘மகாபாரதத்தை ஒருவேள்வித்தீ’ என நாம் மனத்தில் கற்பனை செய்துகொண்டால், அந்த வேள்வித்தீயில் முதல் கனலாக இருப்பவர் ‘அம்பை’. அம்பை தனக்கு இழைக்கப்பட்ட அவமானங்களால் தன்னையே கனலாகவும் தன்னைத்தானே ஊதிப் பெருக்கித் தழலாகவும் மாற்றிக் கொண்டவர். தன்னைப் போலவே கண்ணீர்ச் சிந்துவோரையும் அணைத்து அவர்களுக்குள்ளும் தனது சினத்தீப் பற்றி எரியுமாறு செய்து, அவர்களும் தொடர்ந்து எரிய தன்னையே இடு பொருளாக ஆக்கிக் கொள்கிறார் அம்பை.



வாழ்நாள் தோறும் அழும் பெண்களுக்குத் தோன்றாத் துணையாகவும் அணைத்துத் தேற்றும் தோழியாகவும் ஆதரவு அளிக்கும் அன்னையாகவும் அம்பை விளங்குகிறார். அம்பை தனித்த ‘முதற்கனல்’ மட்டுமல்ல, மகாபாரதம் முழுக்கப் பற்றி எரியக் கூடிய அனைத்துத் திரிகளையும் ஏற்றி வைக்கும் முழு முதற்பெருங்கனலும் ஆவார்.


அணையாத் தீயாக நின்றெரியும் பெண்களின் கண்ணீருக்கு முடிவற்ற காலத்திடம்கூட விடை இல்லை. வரலாற்றில் ஆண்களின் கண்ணீர்த் தடத்தைக் காணமுடிகிறது. பெண்களின் கண்ணீர் இன்றும்  உருளும் துளியாகவே இருக்கிறது. ‘ஒட்டுமொத்த மகாபாரதமும் கண்ணீர்த் துளிகளால் எழுதப்பட்டதே!’ என்று உணரமுடிகிறது.


அரசு தன் அதிகார நிலைநிறுத்தத்திற்கு வெளிப்படையான பலிகளாகப் பெண்களின் மனதும் மறைமுகமான ஆகுதிகளாக ஆண்களின் குருதியும் தேவைப்படுகின்றன போலும். அறத்தை நிலைநாட்ட வேண்டி உருவாக்கப்பட்ட ஒவ்வொரு பேரரசும் அறமற்ற சக்கரங்களைக் கொண்டே நகருகின்றன. அந்தச் சக்கரங்களில் சிக்கிச் சிதைவுறும் பெண்களைக் கொன்று, தெய்வமாக்கி முன்னகர்கிறது பேரரசு. அம்பையும் அப்படித்தான் தெய்வமாகப்படுகிறாள். ‘மகாபாரதம்’ எனும் அறத்தேரின் நெடுவழியில் அம்பையைப் போன்ற எத்தனையோ தெய்வங்களைக் காண நேரும். அவர்களுக்குக் ‘கட்டியம்’ கூறுவதாகவே இந்த ‘முதற்கனல்’ நாவல் அமைந்திருக்கிறது.


அம்பையின் அகம் எந்த அளவுக்குப் பீஷ்மர் மீது சினம் கொள்கிறதோ அதே அளவுக்கு அவரை நேசிக்கவும் செய்கிறது என்பதை ஒரு குறிப்பின் வழியாக அறிய முடிகிறது.பீஷ்மர் காசிநகரின் மூன்று இளவரசிகளையும் சிறையெடுத்து, கங்கைநதியில் படகில் அஸ்தினபுரிக்குச் செல்லும்போது, அம்பைதான் சால்வரையே விரும்புவதாகக் கூறுகிறார். ஆனால், அப்போதே அவளின் அகம் பீஷ்மரை விரும்பத் தொடங்கிவிடுகிறது.


தன்னுடைய தாயகமும் தன்னைப் புறக்கணித்தபோது அம்பை கங்கையில் விழுந்து தற்கொலை செய்துகொள்ள நினைக்கிறாள். அப்போது ‘விருஷ்டி’ என்ற தேவதை, அம்பையிடம் ‘உன் அகம் பீஷ்மரை விரும்புகிறது’ என்பதைக் குறிப்புணர்த்துகிறது. அதனால்தான் அவள் பீஷ்மரை நாடிச் செல்கிறார். அவரும் புறக்கணித்தபோது அவர் மீது அவளுக்கு மாறாச் சினம் ஏற்படுகிறது. ஆனாலும் அவர் மீது அவளின் அகம் கொண்ட பற்று சிறிதும் குன்றவில்லை. இதனைப் பீஷ்மர் சப்தசிந்து நாட்டில் அதிதியாகத் தங்கும் இரவில் உர்வரை காணும் கனவிலிருந்து உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.


சிகண்டி வராஹியாக மாறி உர்வரையின் கனவில் வந்து பீஷ்மரைக் கொல்வதாகக் கூறப்படுகிறது. அதே கனவு சிகண்டிக்கும் வருகிறது. சிகண்டிக்குக் கனவில் வரும் உர்வரை தன்னுடைய அன்னை அம்பையாகவே தெரிகிறது. மறுநாள் விடியலில் உர்வரை பீஷ்மரை மணந்துகொள்ள விரும்புவதாகக் கூறுகிறாள். ‘நீங்கள் என்னை மணந்துகொண்டால் வராஹி உங்களைக் கொல்வதிலிருந்து தப்பிவிடலாம்’ என்று கூறுகிறார் உர்வரை.


சிவன் அம்பைக்குக் கூறிய அருளுரையின்படி, அம்பை தன் அகக் கனலை முழுமையாகச் சிகண்டியிடம் கையளித்து, பீஷ்மரைக் கொல்லுமாறு கூறுகிறாள். அதே அம்பைதான் பீஷ்மர் மீது தன் அகத்தில் இருக்கும் காதலின் காரணமாக உர்வரையின் கனவில் வந்து, பீஷ்மரை மணக்க விரும்புகிறாள். அதனால்தான் அவள் தன் மகன் சிகண்டிக்கும் உர்வரையின் வடிவில் தானே வெளிப்பட்டு நிற்கிறாள். ஒரு மனிதரை ஒரே நேரத்தில் முற்றிலும் கொல்லவும் முழுமுதலாக விரும்பவும் அம்பையால் மட்டுமே முடிகிறது.


அன்னையின் அல்லது தந்தையின் ஆணைகளைச் சிரமேற்கொண்டு செய்து முடிக்கும் மைந்தர்களாகப் பலரை நாம் இந்த நாவலில் காணமுடிகிறது. தன் தாயின் அல்லது தந்தையின் கனலைத் தன் நெஞ்சில் சுமந்து சென்று, ஏற்றுக்கொண்ட செயலை முடித்து அந்தக் கனலை அவிக்கும் மகன்களாக நாம் மனசாதேவின் மகன் ஆஸ்திகனையும் (நாகர்குலத்தைக் காக்கும் பொறுப்பு) பிரதீபரின் இரண்டாவது மகன் சந்தனுவையும் (கங்கர்களுடன் மணஉறவை ஏற்படுத்தும் பொறுப்பு), சத்யவதியின் மூத்தமகன் வியாசரையும் (அஸ்தினபுரிக்கு வாரிசுகளைத் தோன்றச் செய்யும் பொறுப்பு) குறிப்பிடலாம்.



அம்பையைப் போலவே வாழ்க்கையில் மிகுந்த சினத்தை ஏந்தி அலைபவராக நாம் சிகண்டியையும் (அம்பைக்கு ஏற்பட்ட இழிவு) பால்ஹிகரையும் (தன் அண்ணன் தேவாபிக்கு ஏற்பட்ட இழிவு), கங்காதேவியும் (சந்தனு தனக்குக் கொடுத்த வாக்கை மீறியதால்), வியாசரையும் (அவரின் அன்னை சத்யவதி மச்சகுலம் என்பதால் அவர் ஞானம் பெறுவதற்கு அதுவே தடையாக இருப்பதால்) எண்ணிக் கொள்ளலாம். அவர்களிடம் இறக்கி வைக்க இயலாத சினம் பெருகியபடியே இருக்கிறது. அது அவர்களின் மனத்தைப் பிறழச் செய்து, உயிரைக் குடித்துவிடுகிறது.


இந்த நாவலில் அம்பையின் கனல் அடிநாதமாக இருந்தாலும் எண்ணற்றவர்களின் அகக்கனல்களும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. ஆக மொத்தத்தில் இந்த நாவல் எண்ணற்றவர்களின் முதற்கனலின் தொகுப்பு என்றும் கூறலாம்.


நன்மையைச் செய்வதாலேயே எண்ணற்றவர்களின் அகக்கனல்களைத் தன் மீது ஏற்றிக்கொண்டு, வாழ்நாள் முழுவதும் பழிசூழ்ந்த மனிதராகவே இந்த மகாபாரதத்தில் வலம்வரும் தனிப்பெரும் ஆளுமையாகப் பீஷ்மர் காட்டப்பட்டுள்ளார்.


‘புகழையும் பழியையும் சமஅளவில் பெறுவதுதான் எட்டாவது குழந்தையாகப் பிறந்தோருக்கு விதிக்கப்பட்டுள்ளதோ!’ என்றும் நினைக்கத் தோன்றுகிறது. அதற்குச் சான்றுகளாக நாம் இருவரைக் குறிப்பிடலாம். ஒருவர் ஸ்ரீகிருஷ்ணர். மற்றொருவர் பீஷ்மர்.


‘முதற்கனல்’ நாவல் வழியாக நாம் அறியும் அறுதி உண்மை, ‘எந்தக் கனலும் தான் உருவாகக் காரணமானவரை அழிக்காமல் அவிவதில்லை’ என்பதே. பெருந்துயர்களுக்கு நீதிதேடி, கண்ணீர்த் துளிகளுக்குப் பெருமை சேர்க்கும் நாவலாக ‘முதற்கனல்’ நம் நெஞ்சில் கனலென எரியத் தொடங்குகிறது.



‘வெண்முரசு’ நாவல்தொடரில் நான்காவது நாவல் ‘நீலம்’. இந்த நாவலைப் பொறுத்தவரை ‘நீலம்’ என்பது, வெறும் நிறமல்ல; அது பரம்பொருள். பூமியில் மனிதர்களின் நிழல் உள்பட, எல்லாவற்றின் நிழலும் கரிய நிறத்தில் படிகிறது. அதுபோலவே, பரம்பொருளின் நிறம் இந்தப் பிரபஞ்சம் முழுவதும் நீலநிறத்தில் படிகிறது. தன் அகம் திறந்து, இயற்கையைப் பார்ப்போருக்கு அந்த நீல நிறம் தெளிவாகத் தெரியும். அதனை உணர்ந்து, அதன் அடிபணிவதே மானுடம் செய்யத் தக்க ஒரே செயல். மற்ற அனைத்தையும் அந்த நீலமே செய்துகொள்ளும். ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்பு முதல் அவரின் பதினைந்தாவது வயதுவரை நிகழ்ந்தவற்றை ஆழ்நிலைக் கண்ணோட்டத்தோடு எழுதியுள்ளார் ஜெயமோகன். ஸ்ரீகிருஷ்ணர் பிறந்து புலம்பெயர்வது தொடங்கி, மதுராவின் முடிசூடுவது வரையிலான நிகழ்ச்சிகளே இந்த நாவலின் மையச் சரடு. இதுவே, மையச் சரடாக இருந்தபோதிலும் ‘ஸ்ரீகிருஷ்ணர் இந்த நாவலில் வந்துபோகிறார்’ என்றுதான் கூறத் தோன்றுகிறது. அந்த அளவுக்கு இந்த நாவல் முழுக்க ராதையே நிறைந்திருக்கிறார். ராதையின் அகமும் புறமும் ஸ்ரீகிருஷ்ணரே நிறைந்திருக்கிறார். ராதையின் ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றிய நினைவுகள் மிகப்பெரிய நீர்க்கொடி போல இந்த ‘நீலம்’ நாவலைச் சுற்றிப் படர்ந்திருக்கிறது. ராதையின் வழியாகவே ஸ்ரீகிருஷ்ணரை நாம் அறியமுடிகிறது. அதுவே, ஸ்ரீகிருஷ்ணருக்கான ‘ராஜபாட்டை’.


இந்த நாவல் 12 பகுதிகளையும் அவற்றுனுள் 37 அத்யாயங்களையும் உள்ளடக்கி, 288 பக்கங்களில் புத்தகமாக உருப்பெற்றுள்ளது. ‘வெண்முரசு’ நாவல்தொடரில் இந்த நாவல் மட்டுமே பக்க அளவில் குறைந்தது. சங்க இலக்கியத் தொகுப்பில் பத்துப்பாட்டுத் தொகுதியில் ‘முல்லைப்பாட்டு’ அடிகளின் எண்ணிக்கை அளவில் சுருங்கியிருப்பது போல, இதுவும் பக்க அளவில் சுருங்கி இருக்கிறது எனலாம்.


முல்லைப்பட்டில், ‘இன்ன பருவகாலத்தில் வருவேன்’ என்று சொல்லிப் பிரிந்த தலைவனுக்காகத் தலைவி அந்தப் பருவகாலம் கடந்த பின்னரும் காத்திருத்திருக்கிறாள். நீளும் காத்திருப்பால் ஏற்படும் மனத்துயர் குறித்து முல்லைப்பாட்டில் நப்பூதனார் விரிவாகக் கூறியுள்ளார். ‘நீலம்’ நாவலில் ராதையின் ‘காத்திருப்பு’ யுகங்களைக் கடந்ததாகவும் அளக்க முடியாத விரிவும் ஆழமும் கொண்டதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்ரீகிருஷ்ணருக்காக ராதை கணந்தோறும் முடிவின்றிக் காத்திருக்க நேர்கிறது. மின்னி மின்னி மறையும் ஒளிபோல ஒரு கணம் ஸ்ரீகிருஷ்ணர் ராதைக்குப் புலப்படுகிறார். மறுகணம் மறைந்து மாயமாகியார். ஸ்ரீகிருஷ்ணரின் வருகைக்காகவே, அவரைப் பார்ப்பதற்காகவே ராதை தன் இருவிழிகளையும் இமைக்காமலிருக்க நேர்கிறது. ராதையின் மனத்திற்குள் ஓடும் முடிவற்ற கற்பனையில், கனவில் ஸ்ரீகிருஷ்ணரின் பாதச்சுவடுகளும் குழலிசையும் அழியாமல் இருக்கின்றன. அவற்றைப் பார்த்தபடியேயும் கேட்டபடியேயும் ராதை காத்திருக்கிறார்.


‘நீலம்’ நாவலைப் படிப்பது ஓர் இசைப்பாடலைப் படிப்பதுபோல இருக்கும். ‘திருப்புகழை வாசிப்பதுபோல’ என்றும் கூறலாம். ஸ்ரீகிருஷ்ணரின் புல்லாங்குழல் இசை போலவே, மனத்தை மயக்கும் தேர்ந்த செவ்வியற்தமிழ்ச் சொற்களால் மட்டுமே இந்த நாவல் எழுதப் பெற்றுள்ளது. இந்த நாவலின் அத்தனை வரிகளும் தேர்ந்த செவ்வியற்கவி வரிகளே! உவமைகளும் உருவகங்களுமாகச் சுழித்தோடும் ‘சங்கச்சொற்கவியாறு’ இந்த நாவல்.



ஒட்டுமொத்தத்தில், ‘வெண்முரசு’ நாவல்தொடரில் உள்ள பிற நாவல்களைவிடச் சொல்லாழத்திலும் பொருளாழத்திலும் மிகப் பெரியது இந்த நாவலே என்று கூறுவது பொருத்தமானதே. ஜெயமோகனுக்குப் பரம்பொருள் கையளித்துள்ள சொல்வளத்தை இந்த நாவலில் கண்டுணர்ந்து, வியக்க முடிகிறது. சங்க இலக்கிய வாசிப்புப் பயிற்சி இல்லாமல் ‘நீலம்’ நாவலை வாசிக்க இயலாது. அத்தகைய பயிற்சி அற்றவர்களுக்கு இந்த நாவல் வெறும் சொற்குவியலாகத்தான் தெரியும். தொடர்பயிற்சியாலும் முயற்சியாலும் இரண்டு செந்தமிழ்ச் சொற்கள் இணைவதால் உருப்பெறும் படிமத்தை உணரக் கற்றுக்கொண்டால், இந்த நாவல் கற்கண்டாக இனிக்கத் தொடங்கிவிடும்.


மகாபாரதத்துக்கும் இந்த நாவலுக்குமான நேரடித் தொடர்பு நான்கு வரிகள் மட்டுமே! ஆயர்குல மலைமருத்துவரும் நிமித்திகருமான ஒருவர் மதுராவின் அரசர் ஸ்ரீகிருஷ்ணரை அணுகி, அவரின் கையைப் பற்றி, நாடியைத் தொட்டு நோக்கி, தியானித்து, “பாண்டவர் முடிமீட்ட கைகள். பார்த்தனுக்கு உரைத்த இதழ்கள். பாரதப்போர் முடித்த கண்கள். அரசர்குழாம் பணியும் அடிகள். ஆற்றுவது ஆற்றி அமைந்த நெஞ்சம்” (நீலம், பக்கம் 286) என்று கணித்துக் கூறுகிறார். இந்த நான்கு வரிகள் கொண்டே, ‘இந்த நாவல் ‘வெண்முரசு’ நாவல்தொடரில் இணைகிறது’ என்று கூறுவது, நமக்கு வியப்பை ஏற்படுத்தும்.


ஒட்டுமொத்த மகாபாரதமும் உருவாகி, நிலைநிற்க மூலக்காரணம் ஸ்ரீகிருஷ்ணரே!. விதையை உருவாக்கி, அதிலிருந்து மரத்தை உருவாக்கி, அதிலிருந்து ஆயிரமாயிரம் விதைகளை உற்பத்தி செய்தது இயற்கை என்றால், அந்த இயற்கை செய்த பங்களிப்புக்கு நிகரானதுதான் மகாபாரதம் உருப்பெறுவதற்கு ஸ்ரீகிருஷ்ணரின் பங்களிப்பு. அவரின் அதிதிறனை வெளிப்படுத்தும் களமாகவே ‘நீலம்’ நாவல் திகழ்கிறது. அந்த வகையில் ஒட்டுமொத்த மகாபாரதத்துக்கும் அச்சாணியாக விளங்குவது இந்த ‘நீலம்’ நாவல்தான்.


“உருவுகண்டு எள்ளாமை வேண்டும் உருள்பெருந்தேர்க்கு

அச்சாணி அன்னார் உடைத்து” (திருக்குறள் – 667)


‘அச்சாணி’ அளவில் சிறியதாகத்தான் இருக்கும். ‘நீலம்’ நாவலும் பக்க அளவில் மிகச் சிறியதே! மிகக் குறைந்த வயதில் ஸ்ரீகிருஷ்ணர் மதுராவின் மணிமுடியைக் கைப்பற்றுகிறார். அச்சாணியின் முக்கியத்துவம் பெருந்தேரைக் குடைசாயாமல் உருளச்செய்வதிலும் நிர்ணயித்த இலக்கை அடையச் செய்வதிலுமே அடங்கி இருக்கிறது. ‘மகாபாரதம்’ என்ற உருள்பெருந்தேருக்கு ஸ்ரீகிருஷ்ணரே ‘அச்சாணி’. அவர் இல்லாமல், ‘மகாபாரதம்’ ஒரு வரி கூட நகர முடியாது.


ஸ்ரீகிருஷ்ணர் தன் குழந்தைப் பருவத்தில் செய்த கோடிக் குறும்புகளையும் அவர் வளர வளர புரிந்த அரும்பெருஞ்செயல்களையும் தொட்டு தொட்டு வளர்ந்துள்ளது இந்த நாவல். ஸ்ரீகிருஷ்ணரை மையமாகக் கொண்ட இந்த நாவலில் முழுக்க நிறைந்திருக்கிறார் ராதை. ஸ்ரீ கிருஷ்ணரின் மையம் ராதைதானே! ஸ்ரீ கிருஷ்ணரை நிறைத்ததும் அவருக்கு ஓர் அடி முன்னின்று, உலகுக்கே பேரன்னையாகத் திகழ்பவரும் அந்த ராதையே!


ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்க்கையில் நடந்த ஒரு நிகழ்ச்சியை இதனோடு தொடர்புபடுத்தினால், ‘ராதையே ஸ்ரீகிருஷ்ணரைவிட உயர்ந்தவர்’ என்பதை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.


‘கௌரிமா’ என்ற பக்தை ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரையும் அன்னை ஸ்ரீ சாரதாதேவியையும் தன்னுடைய தாய்-தந்தையராகவே எண்ணி, போற்றி வந்தார். ஒருமுறை கௌரிமா நகபத்தில் அன்னை ஸ்ரீ சாரதாதேவியுடன் தங்கியிருந்தார். அப்போது ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர் அங்குச் சென்றிருந்தார். பேச்சின் இடையில் அவர் கௌரிமாவிடம், “கௌரி! எங்கள் இருவருள் யாரை நீ அதிகம் நேசிக்கிறாய்? என்னையா? அவளையா? என்று கேட்டார் அதற்கு கௌரிமா நேரடியாகப் பதில் கூறாமல் பின்வரும் இனிய பாடலைப் பாடினார்.


“கண்ணா! நீ ஒன்றும் ராதையை விடப் பெரியவன் அல்ல.

துன்பத்தில் மக்கள் உன்னை அழைக்கின்றனர்.

உனக்குத் துன்பம் வரும்போதோ

‘ஓ! ராதே’ என்று நீ அவளை அழைக்கிறாய்”.

(கடவுளுடன் வாழ்ந்தவர்கள் பகுதி – 2, பக்கம் 324)



சங்க இலக்கியங்களுள் ஒன்றான திருமுருகாற்றுப்படையினை நக்கீரர் எழுதும்போது, அவர் முருகனின் செம்மைப் பேரெழிலைத் தன் மனத்தால் தொட்டு உணர்ந்திருப்பார். அதுபோலவே ஜெயமோகனும் இந்த ‘நீலம்’ நாவலை எழுதும்போது, ஸ்ரீகிருஷ்ணரின் நீலப் பேரெழிலைத் தம் சொற்களால் தீண்டியிருப்பார் என்று நிச்சயமாக உணரமுடிகிறது.


திருமுருகாற்றுப்படையினைப் படிப்பவர்கள் முருகனை நினைந்து நினைந்து பரவசமாகி, உருகுவது போலவே, இந்த ‘நீலம்’ நாவலைப் படிப்பவர்கள் கோடான கோடி மாயங்கள் ஒன்றுகூடி உறையும் ஸ்ரீகிருஷ்ணரையும் உலக அன்னையர்கள் அனைவரும் ஒன்றுகூடி உறையும் ராதையையும் மனத்தால் நினைந்து, உருகிப் பரவசமடைவர். அதற்கு வழிசெய்யும் வகையில்தான் சொல்லடுக்கி சொல்லடுக்கிச் சொல்லில் சொல்லிவிட முடியாத பரம்பொருளைச் சொல்ல முனைந்திருக்கிறார் ஜெயமோகன். எவர் நாவிலும் படாத பிரம்மத்தைத் தித்திக்கும் தமிழ்ச் சொற்களில் நனைத்துத் தந்திருக்கிறார்.


இந்த நாவல் முழுவதும் ஆயிரம் அன்னையர் வந்துசெல்கின்றனர். அனைவருமே ராதைதான். காலந்தோறும் உள்ளத்தாலும் கருத்தாலும் காதலாலும் கருணையாளும் மாறாத ராதையர்கள். ஆனால், வெவ்வேறு உருக்கொண்ட ராதையர்கள். அவர்களுள் ஒரு ராதையை மட்டும் எடுத்து, அவளுக்குள் உறையும் ஆயிரம் ராதைகளை நமக்குக் காட்டியுள்ளார் ஜெயமோகன்.


இந்த நாவலின் களங்கள் பர்சானபுரி, கோகுலம், விருந்தாவனம், மதுரா. முல்லைப்பாட்டிலும் கலித்தொகையில் முல்லைக்கலியிலும் நாம் காணும் அதே ஆயர்குலமே இங்கும் சூழந்துள்ளது. இதற்கு முன்னர் எந்த இலக்கியமும் விரிவாக எடுத்துரைக்காத ஆயர்குலத்தின் வாழ்வியல் பெருநெறியை இந்த நாவல் தன்போக்கில், கதைநகர்வுக்காகச் சொல்லிச் செல்கிறது. ஆயர்குலத்தின் வீரம், தொழில்நேர்த்தி, கற்புநெறி எனப் பலவற்றை விளக்கி, அந்தக் குலத்தினர் மீது நம்மைப் பொறாமைகொள்ளச் செய்துவிடுகிறார் ஜெயமோகன்.


இந்த நாவலில் ராதையில் உறையும் ஸ்ரீகிருஷ்ணருக்குத்தான் ‘திருப்பல்லாண்டு’ வாழ்த்து கூறப்பெற்றுள்ளது. ராதையே ஸ்ரீகிருஷ்ணர் உறையும் ஆலயமாகவும் ராதையே ஸ்ரீகிருஷ்ணரை நிறைக்கும் பெரும்பொருளாகவும் அமைகிறார். இந்த நாவல் ராதையின் அதிகனவுகளாலும் அவற்றை அவள் நினைவாக, சொல்லாக மாற்றிப் பார்க்கும் நிகழ்வுகளாலும் கட்டமைக்கப் பட்டுள்ளது. அதனால், ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்புக்கு முன்னரும் பின்னரும் நடந்த அனைத்தும் வரிசை மாறியே இந்த நாவலில் இடம்பெற்றுள்ளது. இந்த நாவலின் கதை பெரும்பாலும் ராதையின் மனப் போக்கிலும் இடையிடையே சூதர்கள், குறமகள்கள், நிமித்திகர்கள், முதுபெண்டிர்கள் போன்றோரின் சொற்களிலும் தேய்ந்து தேய்ந்து நகர்கிறது.


இந்த நாவலின் தொடக்கமே சில வாசகர்களைத் துரத்தியடித்துவிடும் தன்மையில்தான் அமைந்துள்ளது. அதாவது, தனக்குரிய வாசகரை மட்டுமே இந்த நாவல் தன்னுள் ஏற்கிறது. வாசிப்புப் பயிற்சி அற்றவர்களையும் சொற்களை அனுபவமாக மாற்றிக்கொள்ளப் பழகாதவர்களையும் இந்த நாவல் புறக்கணித்துவிடும்.


நீலம் நிழலாய், ஒளியாய் இந்தப் பிரபஞ்சத்தில் பட்டு, உலகம் தூக்கத்திலிருந்து மீள்வதில் தொடங்குகிறது இந்த நாவல். தூக்கம் நீங்கி எழும்போது ஏற்படும் சோம்பல் பர்சானபுரியில் உள்ள யாருக்கும் எவற்றுக்கும் ஏற்படுவதில்லை. காரணம், அவர்கள் ஸ்ரீகிருஷ்ணரின் அறாத குழலிசையில் மயங்கி, தியானத்தில் அல்லவா இருக்கிறார்கள்!.


பர்சானபுரியில் உள்ள ஒவ்வொரு உயிரும் மாயக் குழலிசையைக் கேட்டு, தியானத்தில் மூழ்கியுள்ளன. தியானத்தில் இருந்து எழுபவர்கள் சோம்பல் அடைவதில்லையே! இந்த நாவலின் தொடக்கம் உலகம் தியானம் கலைந்து எழுவதைக் காட்டுகிறது. தென்றல் தவழ்ந்து வந்து ராதையை எழுப்புகிறது.


ஆண்டாளின் திருப்பாவையில், விடியற்காலையில் ஆயர்குலப் பெண்களை எழுப்புவதாகப் பாடல் அமைந்திருக்கும். முன்னெழுந்தவர்கள் திருமாலின் புகழைப் பாடி உறக்கத்தில் உள்ள அனைத்து ராதையர்களையும் (பெண்களையும்) எழுப்புவார்கள். இந்த நாவலில் தென்றல் பர்சானபுரிக்குள் நுழைந்து, ஸ்ரீகிருஷ்ணருக்காகவே உடற்கனிந்துவரும் ராதையை, அவளுக்கு அவளின் அகவிழிப்பினை அறிவிக்க எழுப்புகிறது. காலந்தோறும் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்து, இறந்துபடும் எண்ணற்ற ராதையர் வரிசையில் அவளும் ஒருத்தி.


கிருஷ்ணரைக் கொல்ல கம்சன் பூதனையைப் பயன்படுத்துகிறார். பூதனையை நாம் அரக்கியாகத்தான் அறிந்திருக்கிறோம். ஆனால், ஜெயமோகன் பூதனையைப் பிள்ளைப் பித்தேறியவளாகக் காட்டுகிறார். அந்தப் பித்தினை நாம் ‘அதீத தாய்மைநிலை’ என்றும் கொள்ளலாம். அதாவது, பூதனையை நமக்கு அரக்கியாகக் காட்ட ஜெயமோகனுக்கு விருப்பம் இல்லை. அவளையும் தாயாகவே நம் முன் நிறுத்த அவர் விரும்பியுள்ளார்.


கோகுலத்திலுள்ள பெண்களும் பர்சானபுரியிலுள்ள பெண்களும் விருந்தாவனத்திலுள்ள பெண்களும் சிறுவன் ஸ்ரீகிருஷ்ணர் மீது பேரன்பு கொள்கின்றனர். அவனின் குறும்புகளை எண்ணி எண்ணி வெறுத்து ஒதுக்கும் மனங்களே மறுபுறம் திரும்பி, அவனை நினைத்து நினைத்து விரும்பி ஏங்குகின்றன. இதையே ‘ஸ்ரீகிருஷ்ணரின் திருவிளையாடல்’ (‘ஸ்ரீகிருஷ்ணலீலா’) என்றும் கொள்ளலாம்.


கலித்தொகை முல்லைக்கலியில் ‘ஏறு தழுவுதல்’ என்னும் முல்லை நில வழக்கம் இடம் பெறக் காணலாம். ‘ஆயர்மகள் தனது துணைவன் ஏறு தழுவ துணிவு கொண்டவனாக இருக்க வேண்டும்’ என்றே விரும்புவாள் என்று கூறப்படுகிறது.


“கொல்லேற்றுக் கோடு அஞ்சுவானை மறுமையும்

புல்லாளே ஆயமகள்.” (கலித்தொகை, 103; 63-64)



தன்மகள் தேவகியைக் கம்சனின் நண்பர் வசுதேவருக்குத் திருமணம்செய்து தர விரும்பாத தேவகர், சற்றுச் சிந்திக்கிறார். தன் மகளுக்குத் தன் மண ஏற்பினை நடத்த விரும்புகிறார். ‘வசுதேவருக்கு உடல்வலிமை இல்லை’ என்பதை நன்கு அறிந்தவர் என்பதால், தன் மகளின் திருமணத்திற்கு ‘ஏறுதழுவுதலை’ ஒரு விதியாக முன்வைக்கிறார் தேவகர். ஆனால், தன் மண ஏற்பு நிகழ்வின்போது, ஏறுதழுவும் களத்தில் முதுசேடி வேடத்தில் நுழையும் கம்சன், ஏறுதழுவி, காளையின் கொம்பில் சுற்றப்பட்டுள்ள மங்கல நாணை எடுத்து, “இது என் நண்பன் வசுதேவனுக்காக நான் வென்ற மங்கலநாண்!” என்கிறான்.


உடல் வலுமிக்க, நெஞ்சில் துணிவு மிகுந்த ஆண்மகனை திருமணம் செய்ய வேண்டும் எனப் மணப்பெண் விரும்புவதால்தானே ‘ஏறுதழுவுதல்’ நிகழ்ச்சியே, போட்டியே நடத்தப்படுகிறது!. அதில் ஒருவர் மற்றவருக்காக ஏறுதழுவுவதை எவ்வகையில் ஏற்க இயலும்?. ஒருவருக்குப் பதிலாக மற்றவர் தேர்வு எழுதுவதை ஏற்றுக்கொள்வதைப் போலல்லவா இது ஆகிவிடுகிறது?


ஆனால், இங்கு நிகழ்வது தேவகியின் ‘தன்மண ஏற்பு’. அதனால்தான், கம்சன் காளையை அடக்கியதும் சூதகர் வேடத்தில் ரதத்தில் அங்கு வந்த வசுதேவரை நோக்கி, ஓடிச் சென்று, அவரின் கைகளைப் பற்றிக் கொள்கிறாள் தேவகி.


‘மதுராவின் மணிமுடி யாருக்கு?’ என்ற நிலை ஏற்படும்போது, கம்சனின் சதித்திட்டத்தால் ஒரு யானைக்கு மது புகட்டப்படுகிறது. அந்த யானையின் துதிக்கையில் வரவேற்புமாலையைக் கொடுத்து ஸ்ரீகிருஷ்ணரின் முன்பாக அனுப்புகின்றனர். அந்த யானைக்கும் ஸ்ரீகிருஷ்ணருக்குமான சண்டையில் கம்சன் தன்னையே அந்த யானையாக மனத்துக்குள் நினைத்து, ஸ்ரீகிருஷ்ணருடன் சண்டையிடுவதாக அந்தக் காட்சியை உருவாக்கியுள்ளார் ஜெயமோகன்.


அந்தக் காட்சியில் உளவியல் அடிப்படையிலான மிகச் சிறந்த ‘நாடகீயம்’ அங்கு நிகழ்த்தப்பட்டுள்ளது. போர் என்பதும் சண்டை என்பதும் ஆயுதங்களில் இல்லை; மாறாக உள்ளத்தில்தான் மூர்க்கத்தனமாக நடைபெறுகின்றன. அவற்றின் நிழல்களைத்தான் நாம் களத்தில் போராகவும் சண்டையாகவும் காண்கிறோம்.


‘நீலம்’ நாவல் வழியாக நாம் அறியும் அறுதி உண்மை, ‘ராதை என்றுமே கன்னியும் அன்னையுமானவள்’ என்பதே. அதனால்தான், ‘ஸ்ரீகிருஷ்ணர் ஒருகணம் அவளை அணைத்தும் மறுகணம் அவளைத் தொழுதும் நிற்கிறார்’. பெண்மையைப் போற்றி, பெண்களுக்குப் பெருமை சேர்க்கும் நாவலாக ‘நீலம்’ நம் நெஞ்சில் நிலைகொள்கிறது.


முனைவர் ப. சரவணன், மதுரை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 01, 2021 10:30

December 31, 2020

குரு நித்யா எழுதிய கடிதம்

அன்புள்ள ஜெயமோகன்,


இரண்டு கடிதங்களுக்கும் சேர்த்து இந்த பதில். முதல் கடிதம் வந்து ஒரு மாதமாகியிருக்கும் என்று தோன்றுகிறது. அதில் தேதியில்லை. நான் அனுப்பி வைத்தவற்றை எல்லாம் தமிழில் மொழிபெயர்த்து விவாதம் செய்தீர்கள் என்பதை அறிந்து மகிழ்ச்சி.


முதலில் எழுதிய கடிதத்திற்கு முதலில் பதில். அடுத்து வந்த கடிதத்திற்கும் இதிலேயே பதிலளிக்கிறேன்.


புலன்கள் வழியாக நமக்குள் பாயும் புறவிஷயங்களுக்கான அறிகுறிகள் சில உண்டு. ஆன்மாவின் ஆழத்திலிருந்து பரவும் ஒளியும் உண்டு. புறத்திலிருந்து வரும் எல்லா அறிகுறிகளும் ஆங்கிலத்தில் encounter என்பதைப் போன்றவை. அதனை யோகிகள் ‘விதர்க்கம்’ என்பர். புற ஒளிக்கும் ஆத்மஒளிக்கும் இடையே தத்துவார்த்தமான ஒரு ஒப்புமை உண்டு. உப்புப் பரலை தண்ணீரில் கரைத்து அது நீர் வடிவம் பெற்றால் மட்டும் நாவில் நிகழும் வேதிவினை கொண்டு உப்புச்சுவையை அறிய முடியும். அதேபோல் கண்ணின் வழியாகவும் காதின் வழியாகவும் வரும் ஒளியையும் ஒலியையும் உள்ளொளியாய் இருக்கும் நனவில் கரைக்கும்போதுதான் உணர்தல் நிகழ்கிறது.


புறப் பொருள் ஒன்றை கண்ணாடியில் பிரதிபலித்துப் பார்க்கும்போது அப்பிரதிபலிப்பில் பொருளின் முப்பரிமாணமும் இயக்கமும் நமக்குத் தெரிவது நம் மூளைச்செயல்பாட்டில் ஒரு அற்புத நிகழ்வின் காரணமாகவே. அதாவது புறத்தில் இருக்கும் பொருளை அதன் பொருண்மையை நீக்கி சூட்சுமமானதாக்கி உணர்திறன் கொண்டதாக ஆக்க முடியாது. ஆனால் கண்ணாடியில் உருவாகியிருப்பதுபோல ஒத்திருக்கும் ஒன்றை காண்பிக்க முடியும்.


புறம் என்பதில் உள்ளடங்கிய காலம் இடம் (Time-Space) எனும் இவற்றையும் சேர்த்து நகல்வடிவம் கொடுத்து அனுபவம் நிகழ்கிறது. இந்த representation மூளையில் நிகழ்வதற்குக் காரணம் மூளைச் செல்களின் அணு அமைப்பில் உள்ள வேறுபாடுகள். ஆனால் நாம் காண்பது representation அல்ல. உயிராற்றல் அதனை புறத்தே கற்பனையாக நீட்டித்து (projection) அனுபவமாக்குகிறது. ஆகவே, விண்மீனை நாம் காணும்போது மூளையில் காணப்படுவது விண்மீன் இருக்கும் இடம் மட்டுமே. அறிவுக்கு தெரிவதாக நாம் காணும் விஷயம் நாம் நம்பும்படித்தான் அங்கே இருக்கிறதா என்று சொல்லிவிடமுடியாது.  அது மட்டுமல்ல, எல்லா உயிரினங்களும் உணரும் உலகமும் உலகத்துப் பொருட்களும் அந்தந்த  உயிரினம் அப்போதைக்கப்போது வளர்த்தெடுப்பதாகும். எனவேதான் உபநிடதம் அதை “யதா திருஷ்டி: ததா சிருஷ்டி:” என்கிறது.


இதற்கு ஒரு உதாரணம் கூறலாம்: அழகைப் போற்றும் ஒருவன் LSD, brown sugar போன்ற மயக்க மருந்துகளில் ஒன்றை நாவிலிட்டு, ஒரு மரத்தையோ, பூச்செடியையோ காண்பானேயானால், அவன் காண்பது இயற்கையில் இல்லாத அழகும் , ஒளியும் கொண்ட ஒரு அழகிய வடிவமாக இருக்கும். மரணபயத்தில் உள்ள ஒருவன் அதே மயக்கமருந்தை நாவில் தொட்டுக்கொண்டு ஒரு வண்டினையோ பூச்சியையோ பார்த்தால் அது அவனை தாக்க வரும் ஒரு பயங்கரமான உயிர் என்று நினைப்பான். இவற்றையெல்லாம் யோகிகள் ‘ஐயங்கொண்ட பார்வை’ என்பார்கள். வேதாந்திகள் ‘மனநோய் அனுபவங்கள்’ என்றும் உளவியலாளர் மருட்சி (hallucinations) என்றும் கூறுவர்.


நாம் ஒவ்வொருவரும் வேதியியல் மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டிருக்கும் உயிரியக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு இயந்திரத்தன்மையில் சிக்கியிருக்கிறோம் என்பதை நினைவில் கொள்க! எனவே, நீங்கள் சொல்வதுபோல ஒன்றை அதன் முழுமையிலிருந்து (wholeness) தனித்துப் பிரித்தெடுத்து அறியமுடியாது. ஏனென்றால், பெயர்-உருத் தொடர்புகள் உண்டாகி முழுமையென்பது சார்புடையதாக மாறிய பின்னரே அதை நம் நனவால் உணரமுடியும். இது விஷயத்தை (பொருளை) மட்டும் பாதிப்பதில்லை. அறிபவன் கூட சூழலின் சார்புநிலைகளால் தான் அறிபடுபொருளாகவும் ஆகிவிடுகிறான். ’ இதனால்தான் பெர்ட்ராண்ட் ரஸ்ஸலைப் போன்றவர்கள் we can make only piece meal annexation of relative empiricist information என்று சொல்கிறார்கள்.


அறிவை அறிவியல் உண்மையோடு (objective) பொருத்தவேண்டுமென்றால், காலம்-இடம் இவற்றில் இயல்பாக இருக்கக்கூடிய தகவமைப்பை உடைத்து, இப்போது இங்கே இந்தச் சூழலில் இன்னின்ன காரண காரியங்களோடு பொருந்தும் வகையில் நம் நோக்கு அமையவேண்டும். இவ்வளவும் செய்யும்போது fragmentation நிச்சயம் நிகழும். மேலை அறிவியலாளர் இதைத்தானே de-limitation என்றும் selective structuralism என்றும் சொல்கிறார்கள்?


Fragmented knowledge என்பது அறிவுக்கு முரணானது அல்ல. அறிவின் ஒரு சிறப்புக் கூறு (special aspect) அது. இப்படியொரு முரண்பாட்டை உருவாக்காமல் இருக்க முடியாது என்பதால்தான் வேதாந்திகள் சரீர ஞானம், சித்தேந்திரிய ஞானம், ஜீவஞானம், விசேஷாத்ம ஞானம், ஜகதாத்ம ஞானம், சர்வாத்ம ஞானம், பரமாத்ம ஞானம், ப்ரம்மம் என விஷயங்களை சார்புடைய பாகுபாடுகளிலிருந்து விலக்கி சார்பும் பாகுபாடுமற்ற நிலைமையில் வைத்து புரிந்துகொள்கிறார்கள்.


நீங்கள் கூறுவதை நான் எண்ணிப் பார்க்கிறேன். நாம் அறிவது அறிவை அல்ல; ஒவ்வொரு தருணத்தில் அதன் மேல் ஏற்றி வைக்கப்படும் அடையாளத்தையே. நான் ஜெயமோகன் மீது ஐயம் கொள்ளாமல் எண்ணிப்பார்க்கிறேன். நம் மூக்கின் மீது வந்தமரும் ஈயை ஓட்டும்போதும், புறங்கையில் கடித்து ரத்தம் குடிக்கும் கொசுவை அடித்துக்கொல்ல முயற்சிக்கும்போதும் நம்முடைய கவனம் ஆர்வம் எல்லாம், விஷயத்தையும் செயலையும் வினையையும் பயனுள்ளதாக்குவதில் மட்டுமே இருக்கின்றது. எங்கெல்லாம் தன்முனைப்புச் செயல்பாடு மேலோங்குகிறதோ அங்கெல்லாம் பயன்பாட்டுவாதம் உண்டு.


நான் எப்போதும் பேசுவது ஒரு முழுமையான அறிவைப் பற்றி அல்ல. ஒருவரது கண்ணில் வழியும் ஒரு துளி கண்ணீரைக் காணும் எனக்குள் ஒரு மன உளைச்சல் ஏற்படுவதற்குக் காரணம் அக்கண்ணீர்த் துளியில் ஒரு முழுமையான பொருளை/அர்த்தத்தை காண்பதால்தான். அந்த முழுமை சார்பற்றது அல்ல; சார்புடையது என்றாலும் அதில் சார்பில்லாத நிலை உள்ளது. உதாரணமாக, காலையில் தாகமும் பசியும் ஏற்படும்போது தேநீர் அருந்துகிறோம். உடன் பலகாரமும் சாப்பிடுகிறோம். அது காலைப் பசியை போக்குவதற்கு. அந்தப் பசி சார்புடையது. நண்பகலில் நன்றாகப் பசிக்கிறது. அதைப் போக்க நல்ல விருந்து சாப்பிடுகிறோம். அப்போதும் பசி தற்காலிகமானது. அப்படியென்றால் பிறந்தது முதல் சிறுசிறு இடைவேளைகள் விட்டு இறப்பு வரை பசித்துக்கொண்டே இருக்கிறது. அந்தப் பசி சார்பற்றது. என்றாலும் அதை காலைப் பசி, மதியப் பசி, இரவுப் பசி என்று பிரித்து ஒவ்வொரு பசிக்கும் அதற்குரிய தீர்வையே தேடுகிறோம்.


பின்னர், நீங்கள் கூறும் Absolute முழுமை அல்ல. அது பரமம் என்ற கற்பனையின் அடையாளமாக மனிதன் பயன்படுத்தும் ஒரு சொல் மட்டுமே. Absolution என்றால் முழுமையாக நீக்குதல் என்பது பொருள். அந்தச் சூழலில் அறிபவன், ஆற்றுபவன், கொள்பவன், கூறுபவன் என எவர் செயல்பாட்டுக்கும் தொடர்பில்லை. தூய அத்வைதவாதி சொற்களையும் சொற்றொடர்களையும் போட்டு குழப்புவான். நான் தூய அத்வைதவாதி அல்ல.  நனவை இழைபிரித்துப் பார்த்து தொடர்புடைய வடிவத்திற்கு அளிக்கவேண்டிய பொருளைக் (அர்த்தத்தை) கொடுத்து எப்போதும் பொறுப்போடு பேசக்கூடிய ஒருவன். நான் சொல்வது உங்களுக்கும் தெரியும். அதனால்தான், knowing என்பது புறத்தே நிகழும் செயல் அல்ல, அது நம்மை நாம் அதில் இருத்திக்கொள்ளும் செயல் என்று நீங்கள் சொல்கிறீர்கள். அந்தப் பார்வை சரியானதுதான்.


Peggy Kamuf பதிப்பித்த A Derrida Reader என்ற நூலில் வெளிப்பாட்டு  வகைமைகள் குறித்து முதலில் சொல்லப்படுகிறது. ஒரு நிகழ்வை மேலோட்டமாகவோ ஆழமாகவோ அறிந்துகொண்டு அதைப்பற்றி விளக்கும்போது ஏற்படும் சரி-தவறுகள் சுட்டிக்காட்டப்படுகின்றன. அதற்கென ஒலியியல், பொருளியல், தர்க்கம் போன்றவற்றையும் விளக்க வேண்டி வரும். ஒவ்வொரு நிகழ்விலும் அதை விவரிக்கப் பயன்படுத்தப்படும் சூழ்நிலையோடு இணைந்த நம்பகத்தன்மையை சுட்டிக்காட்டும் கையொப்பம் ஒன்று உண்டு.


இரண்டாவது பாகம் தத்துவத்தில் தவிர்க்கமுடியாமல் நிகழும் நிரூபணவாதத்தை விளக்குகிறது. மூன்றாவது பாகத்தில் மொழியில் எத்தனை வகையுண்டு என்பது பகுப்பாய்வு செய்யப்படுகிறது. நான்காவது பாகம் பேசுவது நாம், மனிதர்கள் என்றும் மானுடத்தின் அறியும்தன்மை என்றும் பேசும்போது நாமறியாமலேயே விட்டுவிடும் ஒரு முதன்மையான சிக்கலைப்பற்றி. எண்ணுவதும் சொல்வதும் எவர், ஆணா பெண்ணா என்பதில் நாம் காட்டும் அலட்சியம் பற்றி.ஐந்தாம் பாகத்தில் பல மாதிரிகள்/எடுத்துக்காட்டுகள் தருகையில் சாக்ரடீஸ் முதல் ஃப்ராய்ட் வரையும், ஃப்ராய்டுக்குப் பிறகும் என்ற ஒரு கட்டுரையும் கொடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இம்மாதிரி நூல்களை நான் புரட்டிப்பார்த்தாலும் அவற்றின் நம்பகத்தன்மை குறித்தெல்லாம் யோசிப்பதில்லை.


**


பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் ஒருமுறை ‘There is no Absolute Truth’ என்று சொன்னார். அவரால் உலகில் உள்ள எல்லா உண்மைகளையும் தனித்தனியாகப் பிரித்தெடுத்து ஆராய முடிந்திருக்கும் என்றால் அவரது அந்த அறிவிப்பே Absolute Truth-உடன் தொடர்புடையதாக இருக்கும். அப்படி ஒரு பொது உண்மை நிரூபணத்துக்குக் கொண்டுவரப்பட்டால் அதன்மூலமே ரஸ்ஸலுடைய கூற்றின் பொருத்தப்பாடு மறுக்கப்பட்டிருக்கும்.


எந்தக் கூற்றும் ஒரு நிலைபாட்டில் நின்றுகொண்டே சொல்லப்படக்கூடியது. There is only one God என்றொருவர் கூறுவாரேயெனில் அதனை எந்தப் பொருளும் பயனுமற்ற ஒரு கூற்றாகவே கொள்ளமுடியும். ஏனென்றால் God என்ற சொல்லின் வரையறை, அங்ஙனம் ஒன்று உண்டு என்று ஏற்றுக்கொள்ளும் ஒவ்வொரு மனதிலும், வெவ்வேறாக இருக்கும். இங்கே நாம் சொற்களின் அடுக்குகளை மட்டும் எடுத்துக்கொண்டு அவற்றில் பொருள்பொதிந்துள்ளதாக எண்ணிக்கொண்டு உரையாடிக்கொண்டிருக்கிறோம். அது தத்துவத்திற்கு ஒவ்வாத அணுகுமுறை.


புத்தகங்களில் சில வரிகளில் மட்டுமே என்னுடைய மனஓட்டத்தை பார்க்கிறீர்கள். அது குறுகியதாகவும் மேலோட்டமானதாகவும் உள்ளது. நானொரு சாரம்சவாதியோ சாராம்சமறுப்புவாதியோ அல்ல. ஒரு செறிவு வட்டம் (concentric circle) அல்லது செறிவு முறையை (concentric methodology) அடைய முயல்பவனுமல்ல. அதனாலேயே ஒரு கட்டுடைப்பாளன் (deconstructionist) அல்ல. அறிவியலாளன் அல்ல. நற்கூறுகளை தேர்ந்தெடுத்துக்கொள்ளும் தத்துவத்தை (eclectic philosophy) கண்டடைய முயல்பவன் அல்ல. ஒரு கட்டமைப்புவாதியோ (structuralist) தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டமைப்புவாதியோ (selective structuralist) அல்ல. புலனறிவுவாதி அல்ல. வேறு விதமாக கூறவேண்டுமென்றால் மூன்று இயல்புநிலைகளிலும் [அவஸ்தாத்ரயம்] அவற்றைக் கடந்த அதீதநிலையிலும் என் அனுபவத்திற்கு வரும் நிமிடங்களையெல்லாம் ஒருங்கிணைவுடன் பொருத்திப்பார்க்க தொடர்ந்து முயலும் ஒருவன் மட்டுமே இன்று வந்த உங்கள் கடிதத்தில் மனோரமாவில் அதன் செய்தியாளர் எழுதிய ஏதோ ஊகங்களைப் பற்றி படித்தேன். அது ஒருவரின் மனப்பதிவு மட்டுமே என்று கருதவேண்டும்.


இன்னும் நீங்கள் முதலில் எழுதிய கேள்விபதில்களுக்குள் போக வேண்டியுள்ளது. நான் இப்போது உலகியல் வினைகளில் இருந்து மிகவும் விலகி வாழ்கிறேன். அதனால் எதையும் கட்டாயம் செய்தாக வேண்டும் என்று மனம் முயல்வதில்லை. இப்போதைக்கு இவ்வளவே.


அன்புடன்,


குரு நித்யா


[பிகு]


சிலசொற்களை நாம் தேவைக்கு மிகுதியாக பயன்படுத்துகிறோம். அதிலொன்று  ‘தன்னே’ [தமிழில் ஏகாரம்] காண்பவனே காட்சியாக நிலைகொள்கிறான் என்ற சொற்றொடரின் ஏகரம் மிகக்கவனமாக பயன்படுத்தப்பட வேண்டிய ஒன்று


[குரு நித்யாவின் கடிதங்களின் தொகுதியாகிய ‘ஸ்னேகபூர்வம் நித்யா’ என்ற நூலில் உள்ளது இக்கடிதம். 1996ல் எழுதப்பட்டது. இதை ஸ்ரீனிவாசன் தமிழாக்கம் செய்திருக்கிறார்]

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 31, 2020 10:35

ஒரு வாழ்த்து

அன்பு நிறை ஜெ ,


கார்கில் நோக்கிய பயணம், ஜம்மு காஷ்மீருக்கு கொடுக்கப்பட்டுவந்த சிறப்பு அந்தஸ்து தொடர்பான ஒருவழக்கில் தீர்ப்பு வெளியான தினமென்பதால் ஸ்ரீநகரின் கடைத் தெருவில் அத்தியாவசிய பொருள்களுக்கான கடைகளை தவிர அனைத்தும் மூட பட்டு இருந்தன. அன்று முன் தினம் முடிவு செய்து  உங்கள் புகைப்படம் கொண்ட ஒரு குறிப்பை கணினியில் தயாரித்து வைத்திருந்தேன், அதை அச்சிட்டு கையில் வைத்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணம் தோன்றவே அவ்வாறு செய்தேன், வழி துணையாய் நீங்கள் இருப்பது போல் ஒரு உணர்வுக்காகவும்.


கார்கில் செல்லும் முன் அதை ஸ்ரீநகரிலேயே எங்காவது அச்சிட கடை இருக்குமா என்று தேடி அலைந்து கொண்டிருந்தேன், ஒரு வழியாக ஒரு கடையில் பிரிண்டர் இருப்பதை கண்டுபிடித்து என்னிடம் உள்ள அந்த ஆவணத்தை அச்சிட சொல்லி கடைக்காரரிடம் கேட்டேன், கடைக்காரர் முதலில் தயங்கினார். அது ஏதும் துண்டு பிரசுரம் என நினைத்திருப்பார் போல, பின்னர் ஒருவழியாக அதை அச்சு எடுத்து  கொடுத்தார், அதை கசங்காமல் என் வண்டியின் சேணப் பையில் வைப்பதில் தான் நிறைய மெனகிடல்கள்.


மூன்று நாட்கள் கழித்து லேஹ்விலிருந்து கார்த்துங்க லா நோக்கி பயணம், சட்டென்று எஸ்.ரா எழுதிய ஒரு பத்தி நினைவிற்கு வந்தது , “எவெரெஸ்ட்   சிகரத்தை முதலில் அடைந்த எட்மண்ட் ஹிலாரி உடன் சென்ற ஷெர்பா டென்சிங் நோர்கே எவெரெஸ்ட் உச்சியில் புதைத்து வைத்துவிட சில பொருட்களை தன்னுடன் எடுத்து சென்றார். அதில் சில இனிப்புகளும், தன் மகள் கொடுத்தனுப்பிய ஒரு எழுதுகோலும் இருந்தது.. ”


உலகத்தின் எந்த ஒரு தலை சிறந்த செயலையும் செய்ய வைப்பது ஒரு சொல், அந்த சொல்லை என்றும் அழியாததாக்கி, பதித்து வைத்துவிட்டு செல்வது ஒரு அறிஞனின் எழுதுகோல் .. உலகின் உச்சியில் உறங்கி கொண்டிருப்பது ஒரு அணு ஆயுதமோ, ஒரு போர் வாளோ , புதையல் பெட்டியோ அல்ல, அங்கே இருப்பது ஒரு பேனா… இதை மனதில் அசைபோட்டுக் கொண்டே சென்றபோது கடல் மட்டத்திலிருந்து எற தாழ 18,000  அடியை நோக்கி நான் சென்று கொண்டிருந்தேன்.


அதுவே முதன் முதலில் நான் செல்லும் மிக உயர்ந்த இடம். அங்கே நான் எதாவது எனக்கான ஒரு நினைவை உருவாக்கி வைத்துக்கொள்ள எண்ணினேன், வெறுமென நான் அங்கே நிற்பதுபோல் இருக்கும் புகைப்படம் என்னை என்றுமே திருப்திபடுத்தாது. அது நானில்லை அதிலிருந்து நான் என்றாவது ஒருநாள் மிகவும் விலகி வந்துவிடுவேன் என தோன்றியது.. என்றுமே மாறாத நிலை ஒன்று உண்டெனில் அது என் குருவின் ஆசி மட்டுமே என தோன்றியது, உடனே வாகனத்திற்கான அனுமதி கோப்புகளுடனிருந்த அந்த அச்சு செய்யப்பட்ட தாளை எடுத்து, கையில் ஏந்திக்கொண்டு  வித விதமாய் புகைப்படங்கள் எடுத்துக்கொண்டேன். அதை என்று பார்த்தாலும், “உலகில் நான் சென்ற உச்சிக்கு என்னை இட்டு சென்றதும், உச்சியில் என்னுடன் இருப்பதும், என்னை அங்கேயே இருக்க செய்வதும் என் குருவின் சொற்கள் மட்டுமே” என தோன்றும்.


நான் இந்த புகைப்படத்தை சட்டமிட்டு உங்களிடம் கொடுக்க வேண்டுமென ஆசை பட்டேன், சில நேரம் இது என்ன அற்ப விஷயம் இதெல்லாம் ஜெ விரும்ப மாட்டார் என நானே சொல்லி கொள்வேன். அனால் இன்று உங்களுக்கு கொடுப்பதற்கு இந்த எளிய  அன்பளிப்பு மட்டுமே என்னிடம் உள்ளது, உங்கள் மாணவனின் ஆசைக்காக  அதை ஏற்று கொள்ளுங்கள்..


திருவண்னாமலை சேஷாத்திரி ஆசிரமத்தில் கண்ட  ஒரு வரி நினைவிற்கு வருகிறது “அன்னை கூட அழுகின்ற பிள்ளைக்குத்தான் அமுது ஊட்டுவாள், நீயோ அமுதூட்டி அமுதூட்டியே அழவைக்கிறாய்”.


எங்களை அமுதூட்டியே அழவைக்கும் உங்களுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.. இன்னும் நீண்டநாட்கள் எங்களை உங்கள் கைகளில் ஏந்தி கொண்டு, அமுதும் ஊட்டி, அழவும் வைத்து, நீங்களே கண்களை துடைத்தும் விட்டு, கொஞ்சிக் கொண்டே இருக்க எம் நல்லூழை வேண்டிக்கொள்கிறேன்…



பாதை அறிந்தும் நாங்கள் தொலைந்து செல்வது,

எங்கள் மேய்ப்பாளனாகிய நீர் எம்மை  மீட்டெடுப்பீர்,

என்ற பெருநம்பிக்கையால் மட்டுமே,

நீர் என்றும் அதை செய்ய தவறியதில்லை.


உங்களை அடையும் பாதையான,

எங்கள் அறியாமையை விரும்பியே ஏற்கிறோம்..

செயலற்று, சோம்பித்துயருறும் எம்மை,

செயல் புரிக என்று மட்டும் சொல்லி,

ஒட்டு மொத்த ரட்சிப்பையும் பொழியும் ஆசானே,


அறத்தை அளவில்லாமல் அருளும்,

உந்தன் கரங்களுக்கு அன்பு முத்தங்கள் .. 


என்றும் பணிவன்புடன்,

இளம்பரிதி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 31, 2020 10:34

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) – கடிதம்

Vishnupuram Ilakkiya Vattam


அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,


நலம். நலம் அறிய ஆவல். கடந்த ஆண்டு தாங்கள் அமெரிக்கா வந்து சென்ற பிறகு, அட்லாண்டாவில் தங்களை சந்தித்த தங்கள் வாசகர்கள் இணைந்து விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) அமைத்துள்ளோம் என்று  கடந்த விஷ்ணுபுரம் விழாவில் தங்களைச் சந்தித்தபோது நான் கூறியது உங்கள் நினைவில் இருக்கலாம். இலக்கியம் பற்றிய கலந்துரையாடல் எதுவும் இல்லாமல் வறண்டு இருந்த எங்களது வாழ்க்கை, அப்படியொரு உரையாடல் இல்லாமல் ஒரு நாள் கழிவதில்லை என்றாகிவிட்டது. வாட்ஸப்பை ஆக்கப்பூர்வமாக உபயோகிக்கும் குழு என்று எங்களை சொல்லலாம். கோவிட்19 பற்றி ஒரு சின்ன சிணுங்கல் கூட இல்லாத குழு.


உறுப்பினர் வாசித்த புத்தகம், அதைப் பற்றிய கருத்து, தளத்தில் அன்று வந்த கதை , தத்துவம் என்றுதான் உரையாடல் இருக்கும். ஒவ்வொரு காலாண்டும் இத்தனை புத்தகங்கள் வாசிக்கவேண்டும், ஒரு கலந்துரையாடலாவது நடத்தவேண்டும் என்ற கட்டுப்பாடுகளுடன், ஆரம்பித்த குழு, இந்த ஏப்ரல் முதல் வாரத்தோடு இரண்டாவது காலாண்டை  நிறைவு செய்கிறது. ஒவ்வொருவரும் ஒரு மூலையில் இருப்பதால், முதல் காலாண்டு (oct-19 to Dec -19) முடிந்தபிறகு , ஜனவரியில் கூகிள் ஹேங்க் அவுட் மூலம் சந்தித்து உரையாடினோம்.  காணொளியில் முகங்களைப் பார்த்துக்கொண்டு, முதன்  முதல் கலை இலக்கிய கூட்டம் நடத்தியவர்கள் நாங்களாகத்தான் இருப்போம்.


அது முதல் கூட்டம், உறுப்பினர்கள் பற்றிய அறிமுகம், அவர்களுக்கு பிடித்த கலை, இலக்கியம் என்று சுருக்கமான  உரையாடல்கள் மட்டும் இருந்தன. குறிப்பிடப்படும்படி, ராஜன் சோமசுந்தரம், 2019 விஷ்ணுபுரம் விழா நாயகருக்கான  ஆவணப்படத்திற்கு இசை அமைத்ததை , சங்கப் பாடல்களுக்கு இசை அமைத்ததை  குறிப்பிட்டு அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தோம். இரண்டாவது காலாண்டின் நிறைவு கூட்டத்தின்போது, இரண்டு நபர்கள் அவர்கள் வாசித்ததை விவாதிக்கலாம் என்று முடிவு செய்து,  போர்ட்லேண்ட்  மதன், ‘இன்றைய காந்தி’ பற்றியும், ராலெ முத்து , ‘தண்ணீர்’ நாவல் பற்றியும் பேசுவது என்று முடிவாகியது. கனெக்டிகட் கிஷோர், இன்றைய காந்தி ,ஒரு கடல், அதில் சிறு துளி பருகவே நாள் வேண்டும் என்று எதிர்வினையாற்ற, எந்த வித மறுப்பும் இல்லாமல், மதன் முன்வந்து, ‘காந்தியின் போராட்ட வழிமுறை’ என்ற தலைப்பில் பேசுகிறேன் என்று ஒப்புக்கொண்டார்.


கூட்டம் ஏப்ரல் ஆறு என்று நாங்கள் முடிவு செய்தபொழுது, அனைவருக்கும் ஜூம்தான் கலந்துரையாடல் நடக்க ஏதுவான தளமாக இருக்கப் போகிறதென்று எங்கள் யாருக்கும் தெரியாது. வழக்கமான அறிமுகங்களுக்குப் பிறகு, முதலில், ‘தண்ணீர்’ நாவலைப் பற்றிய தனது அனுபவத்தையும், கருத்தையும், ‘அறம்’  நூலின் மூலம் தங்களை கண்டடைந்த முத்து முன் வைத்தார். அது இரண்டு பெண்களைப் பற்றிய நாவல் , வாழ்க்கை பற்றிய நாவல்  என ஆரம்பித்து ஜமுனா,  டீச்சர் இருவரையும் நாவல் வாசிக்காத வாசகர்களும், அவர்களை இனம் கண்டுகொள்ளுமளவு, நாவலின் துல்லியமான இடங்களையெல்லாம் தொட்டுச் சென்றார். ஒரு நாவல் பற்றி பேசினால், இன்னொரு நாவல் இடையில் வரத்தானே செய்யும். அசோகமித்தரனின், மானசரோவர் பற்றியும் உரையாடல் சென்று வந்தது. அசோகமித்தரன் கொடுக்கும் சென்னையின் சித்திரம், அவர் கதைகளில் எப்பொழுதும் இருக்கும் ஒரு மனநோயாளி, பெண்களின் மேல் அவருக்கு இருந்த அதீதிய பிரியத்தாலும்,  மதிப்பினாலும், அவர்களை அவர் எழுத்துக்களில் நுணுக்கமாக விவரிப்பது என  எதிர்வினை ஆற்றிய மற்ற உறுப்பினர்களும் (ராலே விவேக், அட்லாண்டா சிஜோ மற்றும் சிவா,  நியூ யார்க் அய்யப்பர்) ஆராய்ச்சி மாணவர்கள் போல் தங்கள் தரப்பை எடுத்து வைத்தனர்.


காந்தியின் போராட்ட வழிமுறை தலைப்பில் பேசிய மதன்,  தங்களின் எழுத்துக்களை ஒன்று விடாமல் வாசிப்பவர்.  விஷ்ணுபுரம் விழா முதன் முதல் கோயம்புத்தூரில் நடந்தபொழுது தாங்கள் எல்லாம் எப்படி, ஒருவர் எழுந்து மற்றவர் சேரில் அமர்ந்து உரையாட வேண்டி இருந்தது  என்ற தனது அனுபவத்தை எங்களிடம் பகிர்ந்துகொண்டார்.  இன்றைய காந்தி அல்லாமல், மேலும் ஐந்து புத்தகங்களை வாசித்து , நன்றாக தயாரித்து வந்த அவரது உரை கன கச்சிதமாக இருந்தது.  கொடுங்கோல் ஆட்சியாளர்களைவிட, காந்தியின் அஹிம்சைப் போராட்டமுறைதான், 1900-லிருந்து 2003 வரை இரண்டு மடங்கு வெற்றியடைந்தது என்று எரிகா செனாவெத்தின்  நூலான why Civil Resistence works –லிருந்து எடுத்து புள்ளிவிபரங்களுடன் தனது உரையை ஆரம்பித்தார்.


ஒரு போராட்டம் வெற்றி பெற,


1) வரையறுக்கப்பட்ட கோட்பாடு,


2) போராடவேண்டிய முறை


3) போராட்டத்தை எப்பொழுது ஆரம்பிப்பது, எப்பொது முடிப்பது, தடைபட்டால் எப்படி மீண்டெழுவது என்ற தெளிவு


என்னும் மூன்று அடிப்படைத் தகுதிகளைச் சுட்டிக்காட்டி, காந்தியின் அஹிம்சைப் போராட்டத்தை ஒரு தெளிவான கட்டமைப்போடு விவரித்தார்.  தாங்கள் குறிப்பிடும், சமணம், வைனவ புஷ்டி மார்க்கத்திலிருந்து காந்தி தனது ஆளுமையை வளர்த்துக்கொண்டவிதம், ‘காந்தி’ படத்திலிருந்து சில காட்சிகள் என தான் எடுத்துக்கொண்ட தலைப்பை,  சிறிதும் தடங்களில்லாமல் எங்களுக்கு அவர் பகிர்ந்ததை,   ஒரு நல்ல கட்டுரையாக வெளியிடலாம் என ராஜன் சோமசுந்தரம் தனது பாராட்டைத் தெரிவித்தார். மற்ற உறுப்பினர்களும், (வாஷிங்க்டன் விஜய் சத்யா,  மின்னஷோட்டா வேணு தயாநிதி, ராலெ விவேக், அட்லாண்டா சிவா), காந்தியைப் பற்றிய அவர்களின் புரிதல்களை குழுவுக்கு எடுத்துரைத்தனர். கூட்டத்தின் முடிவில் இன்றைய காந்தி-யை வெவ்வேறு தலைப்புகளில் வரும் நாட்களில் விவாதிப்பது என்றும், மூன்று மாதத்திற்கு ஒரு முறை நடக்கும் கலந்துரையாடலை இரு மாதத்திற்கு ஒரு முறையாவது  நடத்தவேண்டும் என்று குழுவினர் அனைவரும் ஒருமித்த கருத்து தெரிவித்தனர்.


மேலும் குழு வளரவும், தமிழ் இலக்கியத்தை, தாங்கள் வழிகாட்டி எடுத்துச் செல்லும் பாதையில் பின் தொடர்ந்து பயணிக்கவும் ஆர்வமுடன் இருக்கிறோம். இவ்வாண்டு விஷ்ணுபுரம் வட்டம் அமெரிக்காவில் முறையாக சட்டப்படி ஒரு லாபநோக்கற்ற அமைப்பாக பதிவுசெய்யப்பட்டிருக்கிறது


அன்புடன்,

ஆஸ்டின் சௌந்தர்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 31, 2020 10:31

வட்டவானவில்- கிராதம்

வெண்முரசு அர்ஜ்ஜுனன் பிறப்பு

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,


நான் சில நாட்களுக்கு முன்னர் கொடைக்கானலில் டால்ஃபின் நோஸ் வரை மலையேற்றம் சென்றேன. அங்கு துருத்தி நின்ற ஒற்றைக் கல் பாறை மேல் ஏறி கீழே பார்க்கும் பொழுது, ஒரு வட்ட வடிவ வானவில் ஒன்றை கண்டேன. அது என்னை மிகவும் வியப்பில் ஆழ்த்தியது. திரும்பி வரும்பொழுது அங்கு ஒரு பலகையில் அவ்விடம் “வட்டக் கானக்கல்” என்று பலகையில் எழுதி இருந்தது. அந்த நிமிடத்தில் இருந்து எனக்கு உங்களின் கிராதத்தில் அர்ஜுனன் இந்திர கீலத்தில் தவம் செய்ததும் நேமிநாதர் அவருக்கு வட்டவானவில் காண்பித்ததும் நினைவில் வந்தது. அந்தக் கிராமமும் வட்டவட்டமாக தான் இருந்தது. சில காட்டு எருதுகள் போய்க்கொண்டிருந்தன. ஆஹா இது கிராதத்தில் வந்த இடம் மாதிரியே இருக்கிறது என்று வியந்துகொண்டே வந்தேன் . அந்தப் பரவச நிலையில்  மேலே ஏறியதே தெரியவில்லை. ஓவியர் ஷண்முகவேல் வரைந்த அந்த ஓவியம் அந்தக் கல் மாதிரியே தோன்றியது. நீங்கள் அதில் எழுதியிருந்தது  உங்கள் கற்பனையா அல்லது அனுபவமா?


சரிதான் கூடிய சீக்கிரத்தில் நம்மளும் ஒரு ஆசிரமத்தை அமைத்து விடலாம் என்று சிரித்துக் கொண்டே தூங்க சென்றேன்.


மறுநாள் காலையில் இருந்து நான் பார்த்தது ஒன்றுமே என்னால் மனதில் இருந்து எடுக்க முடியவில்லை. வெண்முரசு வரிகளை படிக்கும்பொழுது கற்பனை செய்த காட்சிகளே என் மனக்கண்ணில் விரிகிறது. இது எனக்கு சிறிது சங்கடத்தை விளைவிக்கிறது. என் புலன்கள் பார்த்ததைவிட, எழுத்தாளர் ஒருவரின் அனுபவமோ கற்பனையோ அதை ஆக்ரமிக்க செய்யும் பொழுது, என் கண்களால் எனக்கு என்ன பயன்?


சிறுவயதில் படித்த பௌத்த/பைபிள் கதைகளில் வரும் வானவில் ஏன் முழுமையடயவில்லை என்ற செய்தி ஆழப்பதிந்து இருப்பதால் என் மனது முழு வானவில்லை ஏற்காமல், கதைகளில் படித்த முழு வானவில்லையே ஏற்றுக்கொள்கிறது என்று சமாதானம் செய்து கொண்டேன்.



வட்ட வானவில்லை பற்றிய செய்திகளை சேகரிக்க தொடங்கினேன். பெரிய மலை ஏறுபவர் களுக்கும், விமானம் ஓட்டுபவர்களுக்கு மட்டும் தான் தெரிந்துள்ளது. ஆனால் நான் பார்த்தது மிகச்சிறிய வட்டமே. பிறகு தான் தெரிந்தது நான் பார்த்த அந்த வட்ட வானவில், BROCKEN SPECTRE எனும் ஓர் optical phenomenon. மலைச் சிகரங்களில்  நுனியில் சூரியன் நமக்கு பின்னால் இருக்கும் பொழுது,  கீழே குனிந்து மேகங்களை பார்க்கும் பொழுது, மேகங்களில் உள்ள தண்ணீர் துளிகள் ஒரே அளவு உடையதாக இருந்தால், நம்முடைய நிழல் பூதாகரமாக, பெரிய அளவில் ஒரு வானவில்லைப் போன்ற தோற்றத்தில் தெரிவதுதான் இந்த BROCKEN SPECTRE/Mountain spectre.


இதற்கும் வட்டகானல்கல் என்று அந்த ஊரின் பெயருக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா?


எடுத்த புகைப்படங்களை இத்துடன் இணைத்துள்ளேன். ஒவ்வொரு இரவும் இதை பார்த்து விட்டு படுக்கச் செல்கிறேன். என்றேனும் ஒரு நாள் கிராதத்தில் ( ‘வெண்முரசு’ – நூல் பன்னிரண்டு – ‘கிராதம்’ – 14 / 15 )  அர்ஜுனன் பார்த்த வட்ட வானவில் அல்லாமல் நான் பார்த்த வானவில்லை ஒருநாள் என் கனவுகளில் காண்பேன என்கின்ற நம்பிக்கையோடு தினமும் தூங்க செல்கிறேன்.


அன்புடன்,

மீனாட்சி



அன்புள்ள மீனாட்சி


பொதுவாக வானவில்லை புகைப்படங்களில் எடுக்க முடியாது. இதைப்போன்ற காட்சிகளை காமிராக்களில் பதிவுசெய்யவே முடியாது. இது நமது கண் அளிக்கும் ஒரு மாயத்தோற்றம். உங்கள் புகைப்படங்களில் வானவில் இல்லை. அந்த பாறை மட்டுமே உள்ளது.


வழக்கமான வானவில்தான் இது. நாம் உயரத்திலிருப்பதனால் கீழே மழைபெய்யும்போது வட்டமாக தெரிகிறது. இமாச்சலப்பிரதேசத்தில் பல ஊர்களில் அப்படித்தெரியும். அருவிக்கு மிகவும் மேலே நின்று கீழே அருவியின் நீர்ப்புகையை பார்த்தாலும் தெரியும்


ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 31, 2020 10:30

December 30, 2020

திருச்சி, ஸ்ரீனிவாசபுரம், பச்சைமலை


விஷ்ணுபுரம் விருதுவிழா மதுரையில் முடிந்தபின்னர் ஒருநாள் மதுரையில் தங்கியிருந்தேன். பொதுவாக இம்மாதிரி விருதுவிழாக்கள் முடிந்தபின்னர் நண்பர்கள் விடைபெற்றுக் கிளம்புவது வலியூட்டும் ஓர் அனுபவம். ஒவ்வொருவராக சொல்லிக்கொள்வார்கள். கடைசியில் நாம் மட்டுமே எஞ்சுவோம். அதற்காக நாம் முன்னரே கிளம்ப முடியாது. அது அனைவரையும் விட்டுவிட்டு கிளம்புவதுபோல.



விஷ்ணுபுரம் விருதுவிழா முடிந்த மறுநாள் நண்பர்கள் தங்கும்பொருட்டு வாடகைக்கு எடுக்கப்பட்டிருந்த பல பங்களாக்களில் ஏதேனும் ஒன்றை மட்டும் ஒருநாள் மேலும் நீட்டித்திருப்போம். மண்டபத்தை மறுநாள் காலையிலேயே கொடுத்துவிடவேண்டியிருக்கும். பங்களாக்களில் ஒன்றில் கூடி அமர்ந்து பகலெல்லாம் பேசி சிரித்து அந்த நாளின் வெறுமையை கடப்போம். விழாவை அமைத்தவர்களுக்கு அது வெற்றியை கொண்டாட, சிறு பிழைகளை மதிப்பிட்டுக்கொள்ள, இளைப்பாற ஒருநாள்.



நான் வழக்கமாக அன்று கிளம்பி ஊட்டி செல்வதுண்டு. என்னதான் இருந்தாலும் அப்படி ஒன்றை நிகழ்த்தியபின் ஒரு தருக்கு உருவாகும். அதிலிருந்து விலகி மீண்டும் தணிவுகொள்ள நித்ய சைதன்ய யதியின் சமாதியிடத்தில் ஒரு நிமிடம் அமர்ந்திருந்தால் போதுமானது. ஆசிரியர் நம்மை பெருமிதம் கொள்ளவைக்கிறார், தேவையானபோது சிறியவராகவும் உணரச்செய்கிறார்.


இம்முறை மதுரையிலேயே இருந்தேன். நண்பர்கள் உடனிருந்தனர். அன்று இரவு 12 மணிவரை பேச்சும் சிரிப்புமாக சென்றது. நண்பர் இளங்கோவன் முத்தையாவும் ஆத்மார்த்தியும் வந்திருந்தனர். அவர்களுடன் இலக்கியத்தின் தொடர்ச்சி, ஏற்பும் மறுப்புமான உரையாடல் தன்மை ஆகியவற்றை பற்றியும் சென்றகால இலக்கிய நிகழ்வுகளைப் பற்றியும் தீவிரமான உரையாடலை நிகழ்த்தினேன்.



26 அன்று காலையிலேயே கிளம்பி திருச்சி சென்றோம். செல்லும் வழியில் கொடும்பாளூர் சென்று மூவர்கோயிலைப் பார்த்தோம். நான் பலமுறை அங்கே சென்றதுண்டு. தமிழக கோயில்கலை உருவான தொடக்க இடங்களில் ஒன்று கொடும்பாளூர். பல்லவர் கால கட்டிடக்கலையில் இருந்து சோழர்கால கட்டிடக்கலை கிளைத்தெழுந்த இடம்.


பொயு 9 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது. இவ்வூருக்கு அருகே இருக்கும் நார்த்தாமலை விஜயாலய சோளீச்வரம் ஆலயங்கள் இதே காலகட்டத்தைச் சேர்ந்தவை. சிறிய ஒற்றை அறைக் கோயில்கள். கருவறைமீதே கோபுரங்கள். நாற்புறமும் கோட்டங்களில் அழகிய சிற்பங்கள். இங்குள்ள உமாமகேஸ்வரர், அர்த்தநாரீஸ்வரர் சிற்பங்கள் மிக அழகானவை. மணற்பாறையால் கட்டப்பட்டவை. காலை ஒளியில் பொன்னென மின்னுபவை.



மதிய உணவுக்கு திருச்சி சென்றுவிட்டோம். அங்கே நண்பர் செந்தில்குமார் தேவனின் திருமணம். அறைக்கு திருச்சி நண்பர்கள் வந்தனர். அன்று மாலை திருமணநிகழ்ச்சிக்குச் சென்றோம். மறுநாள் காலை கிளம்பி மீண்டும் ஒரு பயணம். திருச்சி அருகில் இருக்கும் ஸ்ரீனிவாசநல்லூர் என்னும் சிற்றூர். அங்கிருக்கும் குறங்கநாதர் ஆலயம் தமிழ் ஆலயக்கலை வரலாற்றில் முக்கியமான ஒன்று.


விஜயாலய சோழர் காலத்தில் கட்டப்பட்டது. கொடும்பாளூர் மூவர் கோயில்களின் அதேகாலகட்டத்தைச் சேர்ந்தது. மூலக்கருவறையில் இப்போது சூரியனின் சிலையே உள்ளது. சூரியநாராயணர்கோயில் என அழைக்கப்படுகிறது. தமிழகத்திலுள்ள ஓரிரு சூரியன் ஆலயங்களில் ஒன்று இது. ஒன்பதாம் நூற்றாண்டில் சைவமும் வைணவமும் பேருருக்கொள்வதற்கு முன்பு தமிழகத்தில் சௌரம் பெருமதமாக திகழ்ந்தது என இந்த ஆலயம் சான்றளிக்கிறது.



சாஞ்சி ஸ்தூபி முதலிய ஆலயங்களில் உள்ளதுபோல மிகச்சிறிய புடைப்புச்செதுக்குச் சிற்பங்கள் கொண்ட சுற்றுச்சுவர் கலை ஆர்வலர் கவனத்துக்குரியது. ஓரிரு செண்டிமீட்டர் அளவுக்கே கல்லில் இருந்து புடைத்திருக்கும் இச்சிலைகளை ஓவியங்கள் என்றும் சொல்லலாம். இங்குள்ள சிற்பங்களின் தலையலங்காரத்தில் உள்ள காந்தார [கிரேக்க] சாயல் ஆச்சரியமூட்டுவது.


இங்குள்ள பல சிலைகள் அவற்றின் பின்னாளைய வடிவத்திலிருந்து வேறுபட்ட கைமுத்திரைகள், தோற்றங்களுடன் உள்ளன. ஸ்ரீனிவாசநல்லூரின் தட்சிணாமூர்த்தி சிலையும் சிறிய வேறுபாடுகள் கொண்டது. கலை ஆர்வலர் தமிழகச் சிற்பக்கலையை பயில தொடங்கவேண்டிய புள்ளிகளில் ஒன்று ஸ்ரீனிவாசநல்லூர்.



அருகே உள்ள பச்சைமலைக்குச் சென்றோம். அதை ஒரு கோடைவாசத்தலம் என்று சொல்லிவிட முடியாது. ஆனால் இதமான குளிர்காற்று இருந்தது. அங்கிருந்த மங்கலம் என்ற அருவிக்கு சுற்றுலாப்பயணிகள் வந்திருந்தனர். அருவியில் நீராடிவிட்டு துறையூர் வழியாக ஈரோடு சென்றோம். ஈரோட்டைச் சென்றடைய இரவாகிவிட்டது. செந்தில்குமாரின் பண்ணைவீட்டில் இரவுத்தங்கல். மறுநாள் ஈரட்டி வனவிடுதிக்கு பயணம்.


காலை எழுந்து மீண்டும் காரிலேறி ஈரட்டி நோக்கிச் சென்றபோது 24 ஆம் தேதி நண்பர்களுடன் நாகர்கோயிலில் இருந்து கிளம்பியதெல்லாம் மிகமிக தொலைவில், பழைய நினைவாக ஆகிவிட்டிருந்தது.


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 30, 2020 10:35

ஆண்டறுதிக் கணக்கு


ஆதவன் தீட்சண்யாவின் வழக்கறிஞர் அறிவிக்கை
கி.ரா- வன்கொடுமைச்சட்டம்- நீதிமன்றத்தீர்ப்பு
முற்போக்கு மிரட்டல்- கடிதங்கள்
அவதூறுகள்,முற்போக்கு எழுத்தாளர் சங்கம்
வசையே அவர்களின் உரிமைப்போர்
சட்டநடவடிக்கைகள் பற்றி அறுதியாக…
சட்ட நடவடிக்கை
பா.செயப்பிரகாசம் பற்றி

அன்புள்ள ஜெ


இந்த ஆண்டு முடியப்போகிறது. இந்த ஆண்டின் சாதனைகளில் கண்டன அறிக்கையும் வழக்கறிஞர் அறிவிக்கைகளும் எல்லாம் சேர்ந்துகொண்டன. வழக்கம்போல. எல்லா ஆண்டும் கணக்கெடுக்கையில் இப்படி ஒரு பெரிய கதை நிகழ்ந்து அடுத்த ஆண்டுக்கு ‘கேரி ஓவர்’ ஆகியிருக்கிறது. தமிழிலக்கியத்தின் நூறாண்டுகால வரலாற்றில் இப்படி இன்னொரு எழுத்தாளர் செயல்பட்டதில்லை என நினைக்கிறேன். உண்மையிலேயே ஒரு வரலாற்றுநிகழ்வுதான்.


’மேதை எரிச்சலூட்டுவார்’ என்பார்கள். நான் அதை  ’உண்மையான எழுத்தாளன் எரிச்சலூட்டவேண்டும்’ என்று புரிந்துகொள்வேன். உண்மையான எழுத்தாளன் தன் மனதுக்கு தோன்றியதைச் சொல்பவன். ஆனால் அமைப்புபலம் இல்லாமல் நிற்கும் தனியன். ஆகவே அவன்மேல் வழக்குகள், பூசல்கள், தாக்குதல்கள் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கும். இங்கே இடதுசாரிகள்தான் உங்களை கொஞ்சம் நாகரீகமாக தாக்குபவர்கள். இந்துத்துவ வலதுசாரிகளிடமிருப்பது அறிவார்ந்த எந்த அடிப்படையுமில்லாத நேரடியான காழ்ப்பு மட்டுமே.


இத்தனையையும் கடந்து சமகாலத்தில் வாசகர்களுடன் தொடர்பிலிருக்கிறீர்கள். அவர்களை வழிநடத்துகிறீர்கள். இந்த தளம் தொடங்கி பதிமூன்றாண்டுகள் ஆகின்றன. இந்த பதிமூன்றாண்டுகளில் உங்களை தொடர்ந்து எழுந்த, உங்களை ஆதர்சமாகக்கொண்ட எழுத்தாளர்கள்தான் தமிழ் நவீன இலக்கியத்தில் பெரும்பகுதியினர். வரலாறுகள் இப்படித்தான் உருவாகின்றன என்று தோன்றுகிறது


ஆனந்த்


 


வணக்கம் ஜெ

உங்களுக்கெதிரான கண்டன அறிக்கையில் கையெழுத்து போட்டவர்கள் பட்டியல் வியப்பளிப்பதாக உள்ளது. அதில் உள்ள பல பெயர்கள் உங்கள் தளத்தில் நீங்கள் பல்வேறு கட்டுரைகளில் குறிப்பிட்டுள்ள நபர்கள்; இன்னும் சில பதிப்பகத்தார்கள் உங்களுக்கு தனிப்பட்ட முறையில் அறிமுகமானவர்கள் என்றே கருதுகிறேன். அவர்களுக்கெல்லாம் உங்களைப்பற்றி தெரியாதா ? உங்களின் விமர்சனம் எப்போதும் தனிப்பட்ட காழ்ப்பாக இருந்ததில்லை என்பதை அறியாதவர்களா இவர்கள். உங்களின் விமர்சனத்தின் தரம் என்ன என்பது உங்களின் சாதாரண வாசகர்களுக்கே நன்கு தெரியும். அப்படியிருக்க இவர்களுக்குத் தெரியாதா ? இருந்தும் என் இந்தக் கூச்சல் ?


நீங்கள் எனக்குத் தெரிந்து தனியொருவராகத்தான் கருத்து சொல்லியும் விமர்சனம் செய்தும் வருகிறீர்கள். உங்கள் தளத்தை படிக்க ஆரம்பித்த நாட்களில் இருந்து நான் இதுவரை  ‘ஜெயமோகன் தலைமையில் கண்டன அறிக்கை’ என்பதாக ஒன்றைப் பார்த்ததில்லை. உங்களை விமர்சிப்பதென்றால் தனிப்பட்ட முறையில் விமர்சிக்கலாமே. கூட்டம் கூடி கண்டன அறிக்கை விடும் அளவுக்கு நீங்கள் என்ன அவதூறு செய்துவிட்டீர்கள்? அவதூறோ, கொடுமையோ நடக்கும் இடத்தில் கண்டன அறிக்கையெல்லாம் சரிதான். இதுபோன்ற சூழல் ஒருவித கசப்பையே ஏற்படுத்துகிறது. அரசியல்வாதிகள் போல  இலக்கிய உலகமும்  அப்படித்தான் போல.


சில ஆண்டுகளுக்கு முன் நீங்கள் பெண் எழுத்தாளர்களை அவமதித்து விட்டீர்கள் என்று பெண்ணியக்கூட்டறிக்கை ஒன்று வந்தது. அதிலும் ஒரு பெரிய கையெழுத்துப்பட்டியலும் இருந்தது. இதுபோன்ற கூட்டறிக்கைகள் எல்லாம் ஒருவகையில் ‘பாத்தியா எங்க வெய்ட்ட… ஜாக்கிரதையா இருந்துக்கோ…’ என்ற பாணியில்தான் இருக்கிறது.


விவேக்


 


அன்புள்ள ஜெ,

உங்கள் மீது பொழியப்படும் வசை இதுவொன்றும் புதிதல்ல. இதற்கு நீண்ட வரலாறு உண்டு என்றே நினைக்கிறேன். இப்போது இணையம் வந்த பிற்பாடு சமூக வலைத்தளங்களில் பல மொண்ணைத்தனமான இடுகைகளால் ஆள்பிடிப்புச் செய்வது அறிவுத்தளத்துக்கு எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை.


உங்களது தொடரியக்கம் தமிழ் இலக்கியம் விரும்பும் பயணம் என்றே நினைக்கிறேன். என்னுடைய நண்பர்களுக்கு நவீன இலக்கியப் பரீட்சயம் இல்லாது போனாலும் உங்களது எழுத்துக்களைப் பகிர்ந்து கொள்கிறேன். அதில் ஓரிருவர் உங்களது நூல்களைக் கற்கத் தொடங்கிச் சிலாகிக்கின்றனர். நான் இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜெயமோகனை எனது நண்பர்களிடம் அறிமுகப்படுத்தித் தோற்றுப்போனேன். ஆனால் இன்று உங்களைக் கொஞ்சம் கொஞ்சமாகப் புரிந்து கொள்கிறார்கள். அது இலக்கியம் அரசியல் என்ற அவரவர் நிலைப்பாடுகளுக்கு ஏற்ப.


இந்த செயப்பிரகாசகம் எல்லாம் உங்களுக்குத் தகுதியானவர் அல்ல என்று நினைக்கிறேன். அவரைக் குறித்த விளக்கங்களை நீங்கள் எழுதுவது அவர்களுக்கு புளகாங்கிதமாக இருக்கும். மொண்ணை இலக்கியம் எழுதிவிட்டு சர்ச்சைகளாலும் வசைகளாலும் முன்னேற முனைபவர்களைக் கண்டிப்போம் என்ற உங்களது கருத்தியல் ஏராளமானவர்களைச் சுடுகிறது. பொறாமைக் குழியில் இருந்து கத்துகிறார்கள்.


நீங்கள் எழுதாத ஒரு விடயத்தைப் பகிர்ந்தமைக்கு நீங்கள் எழுதியதாக இட்டுக்கட்டும் தமிழ் இலக்கிய உலகத்தின் அறியாமை இது ஒன்றும் புதிதல்ல. நாம் வாழும் காலத்தின் சாதனையாளன், மாஸ்டர் நீங்கள். இந்தப் புரிதல் காலம் அவர்களுக்குக் கற்பிக்கும். பாரதியார், புதுமைப்பித்தன் இருவரையும் உணர நம் தமிழ்ச்சமூகத்துக்கு கால் நூற்றாண்டாவது எடுத்திருக்கும் அல்லவா?


சுயாந்தன்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 30, 2020 10:33

விஷ்ணுபுரம் விழா- கடிதங்கள்


விஷ்ணுபுரம் விருது விழா-2020

அன்புள்ள ஜெ


விஷ்ணுபுரம் விருதுவிழா பற்றிய செய்தி மகிழ்ச்சியையும் ஏக்கத்தையும் அளித்தது. சென்ற எட்டு ஆண்டுகளாக விஷ்ணுபுரம் விருதுவிழாக்களில் நான் கலந்துகொண்டிருக்கிறேன். வைரமுத்து வாசகனாக இருந்த நான் இன்று நவீன இலக்கியவாசகனாக ஆகியிருக்கிறேன் என்றால் அது விஷ்ணுபுரம் விருதுவிழா நிகழ்ச்சிகளால்தான்.


அவை எனக்கு புதிய உலகை திறந்து காட்டுவனவாக இருந்தன. இலக்கியம் என்றால் என்ன என்ற அடிப்படைகளை அங்கே நடந்த விவாதங்கள் வழியாகவே கற்றுக்கொண்டேன். அங்கே வந்த படைப்பாளிகளில் இருந்தே தமிழில் என்னென்ன நடக்கின்றன என்று அறிந்தேன். அந்த விழா நடக்கும் இரண்டு நாளும் எனக்கு மிகப்பெரிய கொண்டாட்டமாக இருந்தன. எனக்கு அவை இல்லாமலான இந்த ஆண்டு மிகப்பெரிய இழப்பு



இலக்கியவிவாதம் என்றால் அதில் சமரசமே இல்லாத தீவிரம் இருக்கலாம் என்று அங்கேதான் கண்டேன். நான் நூற்றுக்கணக்கான இலக்கியக்கூட்டங்களில் கலந்துகொண்டிருக்கிறேன். கோவையிலும் சென்னையிலும். ஆனால் எங்குமே அந்த தீவிரமும் அர்ப்பணிப்பும் கண்டதில்லை. பொய்யான கோபம் சில இடங்களில் வெளிப்படும். உண்மையான அர்ப்பணிப்பு இல்லை.விஷ்ணுபுரம் விழாவில் ஒருவரை ஒருவர் மறுக்கும் பார்வைகள் வீச்சுடன் வெளிப்படும். அதேசமயம் எல்லா தீவிரமும் இயல்பான நட்புடனும் இருக்கமுடியும் என்பதையும் கண்டிருக்கிறேன்.


அத்தனை தீவிரமான விவாதங்களை கொஞ்சம் அனல் குறைக்க நீங்கள் தொடர்ந்து முயல்வதை கண்டிருக்கிறேன். ஆனால் விவாதம் முடிந்தபின் அனைவரும் கட்டித்தழுவி சிரித்துப்பேசி மகிழ்ச்சியான கொண்டாட்டமும் இருக்கும். இலக்கியம் என்பது அப்படித்தான் இருக்கவேண்டும் . சமரசமில்லாத தீவிரமும் நட்புணர்வும் என்பதை விஷ்ணுபுரம் அரங்கில் கண்டேன்.



விஷ்ணுபுரம் விழாவின் குளறுபடிகள் இல்லாத கச்சிதமான ஒழுங்கும் ஆச்சரியமளிப்பது. அந்த ஒழுங்கு ஒவ்வொருவருக்கும் பயன் இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் அமைந்தது. சரியான நேரக்கட்டுப்பாடு. அனைவருக்கும் பேசும் உரிமை. அதேசமயம் மைக்பிடுங்கிகளுக்கு இடமளிக்காத கறார்தன்மை எல்லாமே விஷ்ணுபுரம் விழாவில் சிறப்பம்சங்கள்.


இலக்கியவாசகர்களுக்கு இத்தகைய விழாக்கள் இனிமையான ஞாபகங்கள். நாம் அன்றாடம் கசப்பான பலவற்றை பார்க்கிறோம். அதை விட சலிப்பூட்டும் அன்றாடவேலையில் உழல்கிறோம். நமக்கு நம் மனசுக்குள் அழுத்தமாக உள்ள இலக்கியத்தை மட்டுமே கொண்டாடும் இரண்டு நாட்கள் என்பவை ஒரு பெரிய களியாட்டம். இந்த ஆண்டே வெறுமையாக முடிவதுபோல உள்ளது


வழக்கம்போல மிகச்சிறப்பானமுறையில் ஒழுங்குடனும் கச்சிதமாகவும் இந்த விழாவும் நடந்திருக்கும் என நினைக்கிறேன். சுரேஷ்குமார் இந்திரஜித் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். அடுத்த ஆண்டு விஷ்ணுபுரம் விழா மீண்டும் பழைய பெருமிதத்துடன் சிறப்பாக நடைபெறவேண்டும் என விரும்புகிறேன்


ஜி.செந்தில்குமார்



அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,


வணக்கம்


திரு சுரேஷ் குமார இந்திரஜித் அவர்களுக்கு  விஷ்ணுபுர விருது அளிக்கப்பட்ட தகவலை தளத்தில் கண்டேன். ஒரே சமயத்தில் நிறைவும், மகிழ்ச்சியும், ஏக்கமும், துக்கமுமாயிருந்தது. விஷ்ணுபுர விழா டிசம்பரில் வருவதற்கு ஜனவரியிலிருந்தே காத்துக்கொண்டிருப்பேன் வழக்கமாக.


வைரஸ் தொற்று காரணமாக இம்முறை இருக்குமா இருக்காதாவென்று சந்தேகமிருந்தாலும், இங்கு கல்லூரிகள் திறந்து வழக்கம்போல் பாடமெடுத்துக்கொண்டும், எல்லா பேருந்துகளும் ஓடும் சாலைகளில் பயணித்துக் கொண்டுமிருப்பதால் எப்படியும் நெறிகளுக்குட்பட்டு விழா நடந்துவிடுமென்றும் ஒரு நம்பிக்கை அல்லது நப்பாசையும் இருந்தது. விழா சுருக்கமாக முடிந்ததில் மனம் கனத்து விட்டிருக்கிறது.



விஷ்ணுபுரம் விழா வாசகர்களான எங்களுக்கு, குறிப்பாக எனக்கு பெரும் எதிர்பார்ப்பையும் மகிழ்ச்சியையும் அளிக்குமொன்று. உங்களையும் இன்னும் பல முக்கிய எழுத்தாளர்களையும், உலகின் எல்லா பக்கங்களிருந்தும் வந்திருக்கும்  நண்பர்களையும் சந்தித்து இரண்டு முழுநாட்களும் குடும்பமாக சேர்ந்து இருந்துவிட்டு இன்னும் ஒருவருடத்திற்கான ஒளியை நெஞ்சில் ஏற்றிக்கொண்டு வீடுதிரும்பிய கடந்தகால விழா நினைவுகளை இன்று அதிகாலையில் இருந்து மீள நினைத்துப்பார்த்துக் கொண்டிருந்தேன்.  இந்த தொற்றுக்காலத்தில் பல இடர்கள் இருந்தன ஆனால் எதையுமே பெரிதாக நினைத்துக்கொள்ளவில்லை. எனினும் விஷ்ணுபுர விழா வழக்கம்போல் நடக்காததும் அதில் கலந்து கொள்ள முடியாமல் போனதுமே இந்த தொற்றினால் ஏற்பட்ட ஆகப்பெரிய இழப்பெனக்கு


நீங்கள் “இன்னும் டிசம்பர்கள் வரும் மகத்தான தருணங்கள் அமையும்’’ எனச்சொல்லியிருப்பது நம்பிக்கை அளிக்கிறது . சுரேஷ்குமார இந்திரஜித் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்


அன்புடன்

லோகமாதேவி


 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 30, 2020 10:31

மகாபாரதம், வெண்முரசு, யுவால்

வணக்கம் ஜெ


தங்களுக்கு இது என் முதல் கடிதம், அறிமுகததிற்கு என் பெயர் ஸ்ரீநிவாசன். சொந்த ஊர் புதுவை, எனது அப்பா ஆனந்தன், தாய் மாமா அரிகிருஷ்ணன் உங்களுக்கு ஏற்கனவே அறிமுகம் ஆனவர்கள். புதுவை வெண்முரசு கூடுகை நடக்கும் மாமா வீட்டில் என் இளமைக்காலம் இருந்தது. பத்து ஆண்டுகளுக்கு முன் மேற்ப்படிப்புக்கு சிங்கப்பூர் வந்தேன், ‘IT’ துறையில் வேலை. திருமணமாகி ஒரு இரண்டு வயது மகன் உள்ளான், பெயர் வாசுதேவ கிருஷ்ணன். உங்கள் குறுநாவல்களில் தொடங்கி, பிறகு அறம், தற்போது வெண்முரசு வாசித்து கொண்டிருக்கிறேன். உங்கள் வலைதளம் மற்றும் பேச்சுகள் நிறைய படித்ததும் கேட்டதும் உண்டு. இன்று உங்கள் ‘சிங்கப்பூர் நாவல்பட்டறை’ நடக்கிறது, அதில் பங்கு பெறுகிறேன். உங்களிடம் சில கேள்விகள்..


1. சமீபத்தில் ‘Sapiens’ என்ற புத்தகம் படித்தேன். ஒரு சரித்திர ஆய்வாளரலால் எழுதப்பட்டது, சில வருடங்களுக்கு முன் வெளியாகி மிகவும் பிரபலமானது. 70,000 ஆண்டுகால மனித வராலாற்றை தொகுத்து கொடுக்கும் முயற்சி. ‘Yuval Noah Harari’ என்பவரால் எழுதப்பட்டது. அதில் கூறப்பட்ட சில விஷயங்கள் என்னை சீண்டின. பணம், மதம், இராஜ்ஜியங்கள், தொழில் நிறுவனங்கள் இவை அனைத்துமே ஒரு ‘Myth’ என்கிறார். பொதுவான சில மக்களின் நம்பிக்கை சார்ந்தது. காலத்திற்கு ஏற்றாற்போல் மாறுவது. ஆனால் இந்த பொது நம்பிக்கைகள் மனிதர்கள் இனைய வழி வகுத்தது. வெறும் ‘hunter gatherers’ ஆக இருந்து நாம் இன்று அடைந்திருக்கும் அனைத்து முன்னேற்றமும் அதன் மூலம் வந்தது. விவசாய சமூகமாக ஒரே இடத்தில் மனிதர்கள் வாழ ஒரு ‘Tribal’ கூட்டத்தை இணைக்க ஒரு கடவுளும், வழிபாட்டு முறைகளும் உதவின. அந்த கூட்டத்தின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பின் அரசுகளும் அதற்கான கொடிகளும் எல்லைகளும் உருவாகின. பல நூறு, பல்லாயிரம் மக்களை இணைக்கும் சக்தி கதைகளுக்கு இருந்தன. மதங்களும், இராஜ்ஜியங்களும் தங்களுக்கு ஏற்றவாறு கதைகளை உருவாக்கின, பரப்பின.


இதை மகாபாரத்தோடு இணைத்து பார்க்கிறேன். வெண்முரசில் சூதர்கள் செய்திகளையும் கதைகளையும் பரப்புகிறாரர்கள். அநேகமாக அவர்கள் வாழ்வாதாரம் இராஜ்யத்தையும், மதத்தயுமே சார்ந்திருக்கும். இந்தியாவின் பல பகுதிகளில் மகாபாரதம் சற்றே மாறுபட்டிருப்பதை ஒரு முறை நீங்கள் குறிப்பிட்டு இருந்தீர்கள். இதில் உண்மை எது, கற்பனை எது, திரித்து கூறப்படுவது எது, மிகைப்படுத்தி சொன்னது எது என்று அறிய முடியவில்லை. இராஜ்ஜியம் ஆண்டவர்களுக்கு உதவிய கதைகள் இன்று அதன் காலம் கடந்து நம் சிந்தனையில், நம் அடையாளமாக மாறி விட்டிருக்கிறதோ என நினைக்க வைக்கிறது. ஆனால் ஒரு மூன்று வயது பிள்ளையாக நான் தூர்தர்ஷனில் முதலில் அறிந்த மகாபாரதமும், ஒரு வைணவ மரபுசார் குடும்பத்தில் வளரும் போது உருவான தோற்றமும் இன்று வெகுவாக மாறி இருக்கிறது. தற்போது வெண்முரசை உள்வாங்கும் போது இதில் கடவுள் நம்பிக்கையை தனியாக பிரித்து அந்த நிகழ்வுகளை மட்டும் பார்க்க வைக்கிறது. பல ஆயிரம் ஆண்டுகளாக சொல்லப்பட்டு என்னிடம் வந்து சேர்ந்த மகாபாரதம், இன்னும் பல நூறு ஆண்டுகள் கழித்து வெண்முரசு கொண்டு பொய் சேர்க்கும். அதை படிப்பவனுக்கும் இதே  கேள்வி எழலாம். ‘Harari’யின் கருத்தை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள், அதை ஒப்புக்கொள்வீர்களா?


2. சிறு வயதில் மகாபாரதம் என்றால் எனக்கு பாண்டவர்களும், கண்ணணும், பீமனின் கதையும், அனுமன் கொடியிட்ட தேரும், அர்ஜுனனின் வில்லும், சகுனியும், துரியனும் முதலில் கண் முன் வருவார்கள். இப்போது மகாபாரதத்தை படிக்கையில் அதில் உள்ள பெண்களும் அவர்கள் ஆற்றும் செயல்களே கதையை கொண்டு செல்வது போல் உணர்கிறேன். சத்யவதி பீஷ்மரை நாடாள முடியாமல் செய்தது, காசியிலிருந்து இளவரசிகளை கவர்ந்து வர சொன்னது, தன் மற்றொரு மகன் வியாசரின் மூலமாக அம்பிகை மற்றும் அம்பாலிகை குழைந்தைகள் பெற வைத்தது , காந்தாரி மற்றும் குந்தி பெரும் முதல் பிள்ளை அரியணை ஏறும் சூழல், கௌரவர்கள் நூறு பேர் உருவாகுவது, பாண்டவர்கள் பிறக்கும் விதம்,  அவர்கள் ஐவரும் ஒரே பெண்ணை மணப்பது, பாஞ்சாலிக்கு நடந்த அநீதி, அதில் தூண்டப்பட்டு அவளும் பாண்டவர்களும் நிகழ்த்தும் போர். இப்படி அனைத்து முக்கிய நிகழ்வுகளுக்கு பின்னும் பெண்கள் எவ்வளவு அழுத்தமான காரணமாக இருக்கிறார்கள் என்று பார்க்கிறேன். சிறு பிள்ளையின் புரிதலில் இருந்த மகாபாரதம், இப்போது பெரியவன் ஆனதும் வேறு விதமாக பார்க்க வைக்கிறது. தாங்கள் மகாபாரததில் உள்ள பெண்களே கதையின் மய்ய புள்ளிகளாக இருக்கிறார்கள் என்று நினைத்தது உண்டா?


ஸ்ரீநிவாசன்


அன்புள்ள ஸ்ரீனிவாசன்,

யுவான் நோவா ஹராரியின் பார்வையை அடிப்படையாகக் கொண்டு அவருடைய கருத்துக்களைப் பற்றிச் சொன்னால் அவர் கூறுவதெல்லாம் குறுக்கல்வாதம் [Reductionism]. கடந்தகால உலகவரலாறு போன்ற தொகுத்துவிட முடியாத பிரம்மாண்டம் கொண்டவற்றை இப்படி ஏதேனும் ஒருசில பார்வைகளின் அடிப்படையில் சுருக்கித் தொகுத்துக்கொள்வது. உலகசிந்தனைகளில் பெரும்பாலானவை இத்தகைய சுருக்கங்களே. வரலாற்றை இப்படி தொகுத்துக்கொள்வதை வரலாற்றுவாதம் [Historicism] என்கிறோம்.


இந்தவகையான சிந்தனைகள் ‘உண்மைகளை’ உருவாக்குவதில்லை. ‘பயனுறுபார்வைகளை’ உருவாக்குகின்றன. இந்த பார்வைகளால் என்ன பயன் என்பதே இவற்றின் பெறுமதி. வரலாற்றை இந்த காலகட்டத்தில் இப்படி வகுப்பதன் வழியாக என்ன கிடைக்கிறது? ஒன்று, வரலாறு என்பது தெய்வங்களாலோ அல்லது வேறேதாவது மனிதனை விட மேம்பட்ட விசைகளாலோ இயக்கப்படவில்லை என்ற எண்ணம் உருவாகிறது. அதற்கு நேர்மாறாக வரலாறு குறித்து ஹெகல் – மார்க்ஸ் போன்றவர்கள் சொல்லிவந்த முரணியக்கப் பொருள்முதல்வாத அணுகுமுறை மாற்றமில்லா உண்மை அல்ல என்ற புரிதல் உருவாகிறது. இது மூன்றாவதொரு பார்வைக்கு வழியமைக்கிறது. முந்தைய இருபார்வைகளிலும் இருந்த குறைபாடுகளை தீர்த்துக்கொண்ட இன்னொரு கோணத்துக்காக முயல நமக்கு வாய்ப்பமைகிறது.


சுருக்கமாகச் சொல்லப்போனால் யுவால் நோவா ஹராரி வரலாறு என்பது அந்தந்த தருணங்களின் வாய்ப்புகளை ஒட்டி மானுடம் தன்னை உருமாற்றிக்கொண்டே வந்ததன் கதை மட்டுமே என்று சொல்லவருகிறார். அந்தந்த தருணங்களின் பலவாய்ப்புகளில் ஒன்று தேவையெனக் கருதியோ தற்செயலாகவோ கண்டடையப்படுகிறது. வரலாறு அவ்வழியே ஒழுகி வந்துள்ளது.


மகாபாரதம் உட்பட இன்று நமக்கு கிடைக்கும் கதைகள் உருவானதற்கு இப்படி ஒரு விளக்கத்தைச் சொல்லலாம்தான். தொல்குடிகள் தங்களை குடிகளாக தொகுத்துக்கொண்டு தங்களுக்கான அடையாளம், மரபு, நெறிகள் ஆகிய மூன்றையும் உருவாக்கவேண்டியிருந்தது. ஆகவே அவர்கள் நம்பிக்கைகளையும் கதைகளையும் உருவாக்கினார்கள். அந்த தொல்குடிகள் இணைந்து அரசுகளாக ஆனபோது தங்களை தொகுக்கவேண்டியிருந்தது. நம்பிக்கைகளைத் தொகுத்து மதங்களை உருவாக்கிக்கொண்டனர். கதைகளைத் தொகுத்துக்கொண்டு காவியங்கள் உருவாயின.


இன்றைய அரசு, நீதிமன்றம், பொதுநிறுவனங்கள், பங்குச்சந்தை போன்றவையும் இவ்வாறு உருவானவை. கூட்டாக நம்பப்படும் ஒரு நெறித்தொகையே அவற்றை உருவாக்கி நிலைநிறுத்துகிறது. உதாரணமாக கம்பெனிச்சட்டத்தின் ஷரத்துக்கள் காலாவதியாகும் ஒரு நாட்டில் கம்பெனி என்ற ஒன்று இருக்கமுடியாது. அந்த ஷரத்துக்களை மாறாநெறிகளாக அந்த நாட்டுமக்கள் ஏற்றுக்கொண்டதன் அடிப்படையிலேயே அவை நிலைகொள்கின்றன. அவை கூட்டான நம்பிக்கையின் அடிப்படையில் உருவான நிறுவனங்கள் மட்டுமே.


ஆனால் இது ஒரு பார்வை. இது சமூகவியல்நோக்கில் பார்க்கிறது. நான் ஆன்மிக – தத்துவநோக்கில் இப்படிப் பார்க்கிறேன். மானுட அகம் இப்பிரபஞ்சத்தின், இயற்கையின் உண்மைகளைத் தேடித்தேடி அலைந்தது. அன்றாடங்களில் ஒருவகை நெறியாகவும், அகவயமான ஒருவகை உணர்வாகவும் அந்த உண்மைகளை கண்டடைந்தது. நீர் பள்ளத்துக்குச் செல்லும் என்பது நெறி, இங்குள்ள எல்லா வெற்றிடங்களும் ஏதோ ஒன்றால் நிரப்பப்படுகின்றன என்பது ஓர் உணர்வுசார் அறிதல் என வைத்துக்கொள்வோம். இவ்விரண்டையும் இணைத்துக்கொள்கையில் நீர் ஒரு படிமம் ஆகிறது. ஒரு தொன்மம் ஆகிறது. ஒரு தெய்வம் ஆகிறது.


இப்படி அறியப்பட்ட மெய்யறிதல்கள் படிமங்களாக சிதறிப்பரந்திருந்தன. அவை ஒன்றுடன் ஒன்று இணைந்து ஒன்றை ஒன்று நிரப்பலாயின. மெய்மைகள் இணைந்து முழுமெய்மையாக மாறின. அறிதல்களின் இடையே நிகழ்ந்த மாபெரும் உரையாடலும் இணைவும்தான் மகாபாரதம் போன்ற பெரும்படைப்புக்களை உருவாக்கியது. அது உண்மைகளை அடுக்கி ஏறி பேருண்மையை தொட்டுவிடுவதற்கான முயற்சி. இதுவும் ஒரு கோணம்தான், இதுவும் சரிதான்.


யுவால் சொல்வதன்படி மகாபாரதம் வருங்காலத்தில் என்னவாக இருக்கும்? ஒவ்வொரு அறிதலும், ஒவ்வொரு கலைப்படைப்பும் எப்படியெல்லாம் தன்னை மாற்றிக்கொள்கிறது என்பதை பார்க்கிறோம்.திருக்குறள் சமணர்களின் கல்விக்கூடங்களுக்காக எழுதப்பட்ட நெறிநூல். ஆகவே அனைவருக்கும் உரியதாக எழுதப்பட்டது. ஆனால் பத்தொன்பதாம்நூற்றாண்டில் அது மதச்சார்பற்ற அறநூலாக வாசிக்கப்பட்டது. அப்படி ஒரு காலகட்டத்தில் ஒரு தேவைக்காக ஒரு கோணத்தில் வாசிக்கப்பட்ட நூல் இன்னொரு காலகட்டத்தில் வேறுவகை வாசிப்பைப் பெறக்கூடும்.


மகாபாரதமே இருநூறு ஆண்டுகளுக்கு முன்புவரை நெறிநூல்களின் தொகுப்பாகவே வாசிக்கப்பட்டது என ஆய்வாளர்கள் எழுதியிருக்கிறார்கள். அதன் கதையைவிட அதில் அடங்கியிருக்கும் வெவ்வேறு நீதி – நிர்வாக நூல்களே முக்கியமானவையாக கருதப்பட்டன. ஆனால் இன்று அது ஒரு மகத்தான மானுடநாடகமாக வாசிக்கப்படுகிறது. அதன் நெறிநூல்தொகைகள் பெரும்பாலும் வாசிக்கப்படுவதில்லை. அவை முழுமையாகவே பொருளிழந்துவிட்டன.


அதேபோல நாளை மகாபாரதம் எப்படி வாசிக்கப்படும் என்று சொல்ல முடியாது. இன்று வெண்முரசு அதை மனிதவாழ்க்கையின் சித்திரங்கள், தொல்படிமங்கள் வழியாக மீட்டுரு செய்கிறது. நாளை வேறுவடிவங்கள் வரலாம். ஆனால் எந்த நூலும் முழுமையாக இன்னொன்றாக ஆவதில்லை. அதன் ஒரு புறவடிவம் மாறிக்கொண்டே இருக்க சாராம்சமான ஒன்று தலைமுறையிலிருந்து தலைமுறைக்கு கடத்தப்படுகிறது. அது நிகழ்ந்தாகவேண்டும். அவ்வாறு தலைமுறை தலைமுறையாகக் கைமாறப்படும் சில தத்துவங்களும் விழுமியங்களும் நினைவுகளும்தான் பண்பாடு எனப்படுகின்றன.


மகாபாரதம் பெண்களின் கதையையும் உள்ளடக்கியதுதான். வெண்முரசிலுள்ள பெண்களின் சித்தரிப்பு பெரும்பாலும் மகாபாரதத்தை ஒட்டியதுதான், அது சற்று விரித்தெடுக்கப்பட்டுள்ளது. சென்ற காலங்க்களில் அது வீரர்களின் கதையாக முனிவர்களின் கதையாக மட்டுமே வாசிக்கப்பட்டது. பின்னர் அறத்தொகையாக மட்டுமே வாசிக்கப்பட்டது. இன்று புதிய வாசிப்பு பெண்களுக்கு, தோற்கடிக்க்கப்பட்டவர்களுக்கு, ஆற்றலற்றவர்களுக்கு இடமளித்து அதை வாசிக்கிறது.


ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 30, 2020 10:30

எம்.வேதசகாயகுமார் அஞ்சலிக்கூட்டம்,கோவை


மறைந்த இலக்கிய விமர்சகர் எம்.வேதசகாயகுமார் அவர்களுக்கு ஓர் அஞ்சலிக்கூட்டம் கோவையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. வேதசகாயகுமார் தமிழின் நவீனத்துவ அழகியலை முன்னெடுத்த முன்னோடி விமர்சகர்களில் ஒருவர். நவீனத்துவத்தின் எல்லைகளை கடந்து செவ்வியல் இலக்கியம், இலக்கியவரலாறு ஆகிய தளங்களில் ஆய்வுகளை நிகழ்த்தியவர்.


விழாவில் நான் கலந்து கொள்கிறேன். ஓராண்டுக்குப்பின் கோவை.


இடம்:

COINDIA , Coimbatore Industrial Infrastructure Association,

SIEMA Buildings II Floor,

8/4 Race Course


கோவை,


நாள்: 31-12-2020


பொழுது: காலை 10 மணி

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 30, 2020 00:53

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.