Jeyamohan's Blog, page 1069
January 3, 2021
வல்லினம் சிறுகதைச் சிறப்பிதழ்
வல்லினம் இணைய இதழ் ஒவ்வொரு ஆண்டும் முதல் இதழை சிறுகதைச் சிறப்பிதழாக கொண்டுவருகிறது. சென்ற ஆண்டு என்னுடைய யாதேவி என்னும் சிறுகதை வெளியாகியது. அது ஒரு தொடக்கம், அந்தப் பயணம் நூறுகதைகளில் முடிந்தது. இவ்வாண்டும் சிறுகதைச் சிறப்பிதழ் வெளியாகியிருக்கிறது. இவ்வாண்டின் என் முதல் சிறுகதை ‘எண்ணும்பொழுது’ வெளியாகியிருக்கிறது
ஷோபா சக்தியின் யானைக்கதை, சு.வேணுகோபாலின் ஆறுதல், ஜி.எஸ்.எஸ்.வி.நவீனின் நிசப்தத்தின் அருகில், மலேசிய எழுத்தாளர் அ.பாண்டியனின் தூமகேது, சிங்கப்பூர் எழுத்தாளர் லதாவின் தேக்காவில் ஒரு பாலம் இருந்தது, மலேசிய எழுத்தாளர் சண்முகசிவாவின் ஓர் அழகியின் கதை, சுரேஷ்பிரதீப்பின் முடிவின்மையின் வடிவம், சுனில் கிருஷ்ணனின் பசித்திரு தனித்திரு விழித்திரு, மலேசிய எழுத்தாளர் அர்வின்குமாரின் சிண்டாய், ஸ்ரீகாந்தனின் நான்னா, மலேசிய எழுத்தாளர் ம.நவீனின் ஞமலி ஆகிய கதைகள் இடம்பெற்றுள்ளன.
இவர்களில் பெரும்பாலானவர்கள் ஏற்கனவே நிலைபெற்றுவிட்ட படைப்பாளிகள். அர்வின்குமார், ஸ்ரீகாந்தன், ஜி.எஸ்.எஸ்.வி நவீன் ஆகியோர் இன்னமும் முகம் தெளியாத புதிய படைப்பாளிகள்.மூவரின் கதைகளுமே குறிப்பிடத்தக்க இலக்கிய படைப்புக்கள். புதியகளம் புதிய அணுகுமுறை கொண்டவை.
வல்லினம்- சிறுகதைச் சிறப்பிதழ்
பனிமனிதன் சிறுமியின் விமர்சனம்
அன்புள்ள ஜெ,
இணையத்தில் பனிமனிதன் நாவல் பற்றிய இச்சிறுமியின் காணொளி கண்டேன். என்னுடைய சூழலில் இருந்து இவ்வாறான வரவுகள் நிகழ்வது மகிழ்வைத்தருகிறது.
அன்புடன்
அனோஜன்
அன்புள்ள அனோஜன்
அருமையான ஈழத்தமிழ்.
எந்த தனி உச்சரிப்பு என்றாலும் அதை பெண்களோ குழந்தைகளோ பேசும்போதுதான் அழகு
ஜெ
வெண்முரசில் போர்க்கலை
ஓவியம்: ஷண்முகவேல்வணக்கம் சார்,
நலமா? வெண்முரசு படிக்க ஆரம்பித்த பிறகு வீரக்கலை சார்ந்த குறிப்புக்கள் வரும்போது அதை தனியா குறித்து வைக்க ஆரம்பித்தேன். இப்போது அதை தனியாக வெளியிடலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அதனால் நான் ஆரம்பித்த இணையத்தளத்தில் வெண்முரசில் வீரக்கலை என்ற தலைப்பில் மூன்று பாகங்களாக வெளியிட்டுள்ளேன். தங்களின் பார்வைக்கு.
https://jrkanth.com/2020/12/11/வெண்முரசில்-வீரக்கலை-1/
https://jrkanth.com/2020/12/12/வெண்முரசில்-வீரக்கலை-2/
https://jrkanth.com/2020/12/12/வெண்முரசில்-வீரக்கலை-3/
ஏதேனும் குறை இருந்தால் சுட்டி காட்டவும் சார்.
அன்புடன்,
ரஜினிகாந்த் ஜெயராமன்.
அன்புள்ள ரஜினிகாந்த்
சிறந்த தொகுப்பு. நன்றி
நான் வெண்முரசிலுள்ள போர்க்கலைச் செய்திகளை மூன்று இடங்களில் இருந்து எடுத்தேன். ஒன்று, இளமையில் ஒரு போர்க்கலைப் பயிற்சி எனக்கு இருந்தது. அது எங்களூர் வழக்கம். ஆனால் நான் தெரிந்துகொண்டதே மிகுதி, பயின்றது மிகக்குறைவு
கேரள களரி கலை சார்ந்த செய்திகளை களரி நூல்களிலிருந்தும் ஆசிரியர்களில் இருந்தும் பயின்றேன். களரி சார்ந்த ஒரு சினிமாவுக்கு எழுதவும் வாய்ப்பு கிடைத்தது. கன்னடப்படம்- தேஹி
மகாபாரதத்திலேயே உள்ள சஸ்த்ர- நிசஸ்த்ர வித்யைகள், [படைக்கலக்கலை, படைக்கலமில்லாப் போர்க்கலை] தனுர்சாஸ்திரம் [விற்கலை] ஆகியவை பற்றிய செய்திகளையும் எடுத்துக்கொண்டேன்
ஜெ
January 2, 2021
2021- புத்தாண்டில்
சென்ற புத்தாண்டு அட்டப்பாடியில் சத் தர்சன் அமைப்பில் நடைபெற்றது. அதற்கு முந்தைய ஆண்டுகளில் ஈரட்டியில். இவ்வாண்டு புத்தாண்டுக் கொண்டாட்டம் தேவையா என்னும் எண்ணம் இருந்தமையால் ஒத்திப்போட்டுக்கொண்டே வந்து இறுதியில் சரி கொண்டாடுவோம் என முடிவெடுத்தோம். கொண்டாடும் தருணங்கள் எதுவாக இருந்தாலும் எதன்பொருட்டும் ஒத்திப்போடவேண்டாம் என்று நானே பலமுறை எழுதியிருக்கிறேன்.
ஆனால் ஈரட்டி மாளிகை ஏற்கனவே இன்னொருவருக்கு அளிக்கப்பட்டுவிட்டது என்று நண்பர் விஸ்வம் சொன்னார். ஆகவே கோவை பெரியநாயக்கன்பாளையம் அருகே உள்ள நண்பர் பாலுவின் பண்ணைவீட்டில் நடத்தலாம் என்று முடிவெடுத்தோம். கோவையிலிருந்து ஒருமணிநேரத்தில் சென்றுவிடலாம் என்பது வசதி. அங்கே இருபதுபேர் தங்கமுடியும். ஆகவே இருபதுபேருக்கு மட்டும் நண்பர் கிருஷ்ணன் தகவல் சொன்னார். ஆனால் முப்பத்தைந்துபேர் வந்துவிட்டனர். திருச்சி, ஈரோடு,சென்னை,பெங்களூர் என பல ஊர்களிலிருந்து.
பெரியநாயக்கன் பாளையம் பண்ணைவீடு முப்பத்தைந்துபேருக்கு கொஞ்சம் நெரிசலானதுதான். ஆனால் உண்மையில் அசௌகரியமாக நெருக்கிக்கொண்டு இரவு படுத்திருக்கையில் உருவாகும் ஒரு நெருக்கமும் கொண்டாட்டமும் சிறப்பானவை. சென்ற ஆண்டுகளை விடவும் இவ்வாண்டு சிரிப்பும் கும்மாளமும் கூடுதலாக இருந்தன.
வேதசகாயகுமார் விழா முடிந்தபின் டி.பாலசுந்தரம் அவர்களின் ஏற்பாட்டில் அனைவருக்கும் காஸ்மாபாலிடன் கிளப்பில் மதிய உணவு ஏற்படு செய்யப்பட்டிருந்தது. அங்கிருந்து நேராக பெரியநாயக்கன் பாளையம் பண்ணைக்குச் சென்றுவிட்டோம். நண்பர்கள் பலர் மாலையில் வந்தனர். அந்திவரை வந்துகொண்டே இருந்தனர்.
பொதுவாக இத்தகைய புத்தாண்டில் ‘நிகழ்ச்சிநிரல்’ என எதுவும் வைத்துக்கொள்வதில்லை. உரையாடலை அதன்போக்கில் செல்லவிடுவோம். ஆனால் அரசியல் சினிமா சார்ந்து செல்லவிடாமல் கலை, இலக்கியம், ஆன்மிகம் சார்ந்து அவ்வப்போது திருப்பிவிட்டுக்கொண்டே இருக்கவேண்டும். அரசியல் சார்ந்து கொஞ்சம் நகர்ந்தால்கூட பெண்கள் சலிப்படைய தொடங்கிவிடுவார்கள். அது நல்லதுதான், அவர்கள் ஒருவகை கண்காணிப்பு சக்தி
இரவு பன்னிரண்டு மணிவரை உரையாடல்தான். இலக்கியம் அல்லது ஆன்மிகம் சார்ந்து ஒரு மணிநேரம் தீவிரமான உரையாடல் என்றால் அடுத்த ஒருமணிநேரம் நையாண்டி, சிரிப்பு, கொண்டாட்டம். செல்வேந்திரனும் அரங்கசாமியும் கொப்பளித்துக்கொண்டே இருப்பவர்கள். ஆனால் வேடிக்கையில் ‘டெவில்’ என அழைக்கப்படுபவர் திருச்சி நண்பர் சக்தி கிருஷ்ணன்.இம்முறை அவர் வரவில்லை.
இரவு 12 மணிக்கு நானும் செல்வேந்திரனின் பாப்பா இளம்பிறையுமாக கேக் வெட்டினோம். புத்தாண்டின் முதல் இனிமையை மாறி மாறி ஊட்டிக்கொண்டோம். இது ஒரு மேலைநாட்டுச் சடங்கு. இதுவரை எந்த முன்னேற்பாடும் இல்லாமல்தான் இந்நிகழ்ச்சிகளை நடத்திக்கொண்டிருக்கிறோம். இந்த கேக் வெட்டும் நிகழ்ச்சியே முதல்முறை. அடுத்த ஆண்டு முதல் இதையே ஒரு நல்ல நிகழ்ச்சியாக முறைப்படுத்திவிடவேண்டும். எவரேனும் முக்கியமானவர்கள் விளக்கேற்றி வைத்து தொடங்கலாம்
அது ஆங்கிலப்புத்தாண்டு என்பதனால் வேண்டுமென்றால் கேக்கையும் வெட்டிக்கொள்ளலாம். எதுவுமே விலக்கு அல்ல, எதுவுமே அயலானவையும் அல்ல. நல்லவை எவையும் வருகைக்குரியவைதான். அவ்வாறுதான் இங்கே எல்லா சடங்குகளும் உருவாகிவந்திருக்கின்றன.
இம்முறை விஷ்ணுபுரம் அமைப்பின் நண்பர்கள் பலருக்கு திருமணம் ஆகியிருக்கிறது. நண்பர் ராகவ், நண்பர் யோகேஸ்வரன், நண்பர் திருமூலநாதன். திருமூலநாதன் அவருடைய புதுமனைவியுடன் வந்திருந்தார்.
நள்ளிரவில் புத்தாண்டை தொடங்கிவைத்து நான் பத்து நிமிடம் பேசினேன். அதன்பின் மூன்றரை மணிவரை பேசிக்கொண்டிருந்தோம். காலை ஆறுமணிக்கே நண்பர்கள் எழுந்து குளத்தில் நீராடக் கிளம்பிவிட்டார்கள். ஏழரை மணிக்கு மீண்டும் ‘ஜமா’ சேர்ந்துவிட்டது.
என் இளம்வயது நண்பனும் ‘அடிபிடி’ கூட்டுகாரனுமாகிய கே.விஸ்வநாதனின் மகன் ஜெயராம் இப்போது என் வாசகன். சிலநாட்களாக என்னுடன் அவனும் இருக்கிறான். அவன் ஓவியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவன்.ஆகவே ஓவியக்கலை பற்றி ஒரு பேச்சு முன்னகர்ந்தது
எனக்கு நுண்கலைகளின் பண்பாட்டுப்பங்களிப்பு- வரலாற்றுப் பரிணாமம் பற்றித்தான் தெரியும். அவற்றின் அழகியலைப் பற்றி அதிகமாகப் பேசுவதில்லை. அன்று இந்திய ஓவிய- சிற்பக்கலையின் பரிணாமம் பற்றிய விவாதம் நடைபெற்றது. திட்டமிடாத பேச்சு என்றாலும் நன்றாக அமைந்தது
திருமூலநாதன் கணிதத்துறையில் முனைவர் பட்டம் பெற்று கான்பூர் ஐஐடியில் பணியாற்றுகிறார். கவனகம் என்னும் அஷ்டாவதானக்கலை தேர்ந்தவர்.ஒரே சமயம் எட்டு விஷயங்களை நினைவில் வைத்துக்கொண்டு நிகழ்த்துவது அது.அதை நிகழ்த்தினார்.நேரில் பார்க்கையில் திகைக்கவைக்கும் நினைக்கலை அது
கணவனின் அந்த திறனை மனைவி முதல்முறையாகப் பார்க்கிறார். அவர் திகைத்துப்போனது தெரிந்தது. அஷ்டாவதானியின் மனைவி! அதற்கு அவர் தனிப்பயிற்சி எடுத்துக்கொள்ளவேண்டும் என நினைக்கிறேன்.
மதியம் உணவுடன் கலைந்து செல்ல தொடங்கினோம். ஒவ்வொருவரும் தழுவி இன்சொல் உரைத்து உணர்வெழுச்சியுடன் விடைபெற்றனர். இந்த அமைப்பை இதுவரை ஒரு பெரிய குடும்பம் எனவே நிகழ்த்திக்கொண்டிருக்கிறோம். இவ்வாண்டு புதிய முயற்சிகளுடன் இது வளரவேண்டும்.
புத்தாண்டு2020
சிரிப்புடன் புத்தாண்டு
வெண்முரசும் புத்தாண்டும்
புத்தாண்டு, சத்- தர்சன் — கடிதங்கள்
ஈரட்டிப் புத்தாண்டு – கடிதங்கள் – 2
தீபம்- போகன் சங்கர்
இயற்கைப்பொருட்களின்மேல் மனிதன் தன் உடலையும் அர்த்தங்களையும் ஏற்றத் தொடங்கியபோது மொழி பிறந்தது. உணர்வுகளை ஏற்றத்தொடங்கியபோது கவிதை பிறந்தது. இரண்டும் ஒரு கண இடைவெளியில் பிறந்தன. எது முதலில் என்று சொல்லமுடியாது– நித்யாவின் உரையில் ஒரு வரி.
தொல்கவிதைகளை வாசிக்கையில் அவற்றின் முதன்மையான அழகியலென்பது மகிழ்ச்சி துயரம் எழுச்சி நிறைவு என்னும் மானுட உணர்வுகளனைத்தையும் இயற்கைமேல் ஏற்றுவதுதான் என்று படுகிறது. எமர்சன் அவருடைய கட்டுரை ஒன்றில் மானுட மொழி என்பதே இயற்கையின் பதிலீடு வடிவம்தான் என்கிறார். ஆகவேதான் உள்ளம் ’ஒளிர்கிறது’, நினைவு ‘இருள்கிறது’, சிந்தனை ’ஓடுகிறது’, ’படிப்படியாக’ நிகழ்கின்றன நம் எண்ணங்கள்.
சில தருணங்களிலேனும் கவிதை என்பது திரும்பத்திரும்பச் சொல்லுவதன் கலை என்று தோன்றுகிறது. சிறந்த கவிதை என்பது பெரும்பாலும் ஏற்கனவே சொல்லப்பட்டுவிட்டதுதான். பலமுறை. பலநூறுமுறை, பல்லாயிரம் முறை. அவ்வப்போது கவிஞர்கள் புதிதாகச் சொல்ல முயல்கிறார்கள். அவை வேறுபாட்டால் முரண்பாட்டால் மெல்லிய சுவை கொண்டிருக்கின்றன. எனக்கு அவை ஒவ்வாச்சுவையெனவே அமைகின்றன
என் கவிதையை மீண்டும் இப்படி வகுத்துக்கொள்கிறேன். ஆயிரம் முறை சொல்லப்பட்டபின்னரும் புதியதாகச் சொல்லப்படுவது. சொல்லச்சொல்ல மேலும் புதியதாக ஆகும் ஒன்றின் மொழிவடிவம்.
கற்பிக்கப்பட்ட உணர்வேதான்.
தீபம்,வாழத் துடிக்கும்
ஒரு உயிர் போல
நமக்குத் தோன்றுவது.
நம்மைப் போல என்றும்
நமக்குத் தோன்றுவது.
புயலில் படபடக்கும் தீபம்.
இருளில் தனியாய் நடுங்கும் தீபம்.
இவ்விதம்
எரிவதில் வாழ்வதில் சோர்ந்து
அவ்வப்போது சலிக்கும் தீபம்.
சலித்துச்
சடசடத்து சிடுசிடுத்து எரிந்தாலும்
மறுபடியும் முனைந்து
பழைய புன்னகையுடன்
பழைய அமைதியுடன்
மீண்டும் மீண்டும்
பிரகாசிக்க முயலும்
எல்லாவற்றின் மீதும் நம்பிக்கையுள்ள
நாய்க்குட்டி போன்ற முகம்கொண்ட
இந்த
குழந்தைத்தனமான தீபம்.
போகன் சங்கர்
திபெத்- ஓர் ஒற்றரின் கதை
கரு, இணைவு- கடிதங்கள்
அன்புநிறை ஜெ,
பயணம் ஒரு தெய்வம், அதை உபாசனை செய்பவர்களுக்கே அமையும் – இந்த வரி இன்றைய காலையை மிக அழகாக்கியது.
பயணங்கள் இல்லாத இந்த ஒன்பது மாதங்களை வெண்முரசின் பயணங்களை எழுதுவதிலும், பழைய பயணங்களை நினைவுகூட்டி சிறு குறிப்புகள் எழுதுவதிலும், நீண்ட கால பயணத்திட்டங்கள் இடுவதிலும், சிங்கையிலேயே இதுவரை சென்று பார்த்திராத சில பகுதிகளை சென்று பார்க்கவும், வேறு பல பயணம் சார்ந்த நூல்களை வாசிப்பதிலுமாக கழித்திருக்கிறேன். அவற்றில் ஒன்று சரத் சந்திர தாஸ் எழுதிய ‘A Journey to Lhasa and Central Tibet’.
பயணங்களில் மலைநிலங்கள் தரும் பித்து அலாதியானது. அதிலும் இமயப் பகுதியெனும் மீளமுடியாக் கனவொன்றில் அமைந்திருப்பது இனிது. இந்நூலை வாசித்து விட்டு மீண்டும் கரு, மற்றும் தங்கப்புத்தகம் கதைகளை வாசித்தேன். திபெத் எத்தனை எத்தனை மனிதர்களை ஈர்த்து அழைத்திருக்கிறது என எண்ணிக்கொண்டேன். அந்த ஈர்ப்பே ஒரு விசையாகி ஷம்பாலாவின் ஒளியாகி அனைவரையும் அழைத்துக் கொண்டே இருக்கிறது. அறிவியல் கொண்டு இப்புவியில் ஒவ்வொரு அங்குலமும் பதிவு செய்யப்பட்டு கைவிரித்து இங்கே ரகசியம் ஏதுமில்லை எனச் சொன்னாலும் கனவுகளில் வரும் இந்த நுண்நிலத்தை என்ன செய்வது! அந்த மாயவசீகரமின்றி, எப்படியாவது அறிந்துகொள்ள வேண்டுமென பித்துகொள்ளச் செய்யும் ஒரு உச்ச கனவு இன்றி என்ன செய்யும் மானுடம் என்று தோன்றியது.
பாரத நிலத்தின் ஒவ்வொரு மலையையும், நதிப்பெருக்கையும், அதன் ஊற்று முகங்களையும், கழிமுகங்களையும், ஒவ்வொரு வனத்தையும், பாலை விரிவெளியையும் அலைந்து திரிந்து பார்க்க வேண்டும். என்றோ ஒருநாள் ஒவ்வொன்றாய் அகல எங்கோ ஒரு வான் நோக்கிய விழியென மலர்ந்த சுனை ஒன்றின் கரையில் அந்த எல்லையற்ற வெளியில் அனைத்தையும் கரைத்துவிட வேண்டும். அதுவரை கணம் ஓயாது தேடித்திரிவதெல்லாம் தேன் என்ற ஒன்றை அறிந்துவிட்ட பித்தினாலேயே, அதைத்தேடுக என்று விதிக்கப்பட்ட ஆணையினாலேயே!
தங்கப்புத்தகம் சிறுகதையில் இவர் பெயரைப் பார்த்து இந்தப் புத்தகத்தைத் தேடிக் கண்டுபிடித்தேன். முதலில் பெயரை சரத் சந்திரர் எனத் தவறாகப் புரிந்து கொண்டேன். கிளி சொன்ன கதையில் அனந்தன் சொல்லும் சரத் சந்திர சட்டர்ஜி என நினைத்து விட்டேன்.
சரத் சந்திர சட்டர்ஜி அதைவிட நல்ல பெயர். பெரிய ஆளாக மாறியதும் அதைவிடபெரிய புஸ்தகம் எழுதவேண்டும் என்று அனந்தன் முடிவுசெய்தான். அந்த புஸ்தகத்தை தூக்கவே முடியாது. அதை தரையில் விரித்து வைத்து பக்கத்தில் ஒரு ஸ்டூல் போட்டு உட்கார்ந்துதான் படிக்க முடியும்- கிளி சொன்ன கதை. அனந்தனிடம் அடுத்த கனவு என்ன எனக் கேட்க வேண்டும்
புத்தகத்தில் ‘சரத் சந்திர தாஸ்’ புகைப்படத்தையும் பெயரையும் பார்த்ததும் இது அவரல்ல, இவர் வேறு எனப் புரிந்தது.சிட்டகாங்கில்(இன்றைய பங்களாதேஷ்) பிறந்த சரத் சந்திர தாஸ் கல்கத்தா ப்ரெசிடென்ஸி கல்லூரியில் படித்தவர். திபெத் மொழிப் புலமை கொண்டவர். டார்ஜிலிங்கில் பூட்டியா உறைவிடப் பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்திருக்கிறார். பிரெசிடென்சி கல்லூரியில் அவருக்கு அறிமுகமாகும் தத்துவத்துறைப் பேராசிரியர் சர் ஆல்ப்ரட் க்ராப்ட்டின் உதவியுடன் இந்த திபெத் பயணத்துக்கான அனுமதிகளைப் பெற்று திபெத்திய லாமா உக்யென் கியாட்ஸோவுடன் லாசாவுக்கு பயணமாகிறார்.
1879-ல் முதல் முறையும் பிறகு 1881-82ல் இரண்டாவது முறையும் திபெத் சென்று வருகிறார். இது 1881ல் அவரது இரண்டாவது திபெத் பயணத்தின் குறிப்புகள். அங்கிருந்த திபெத்திய மடாலயத்தில் மெய்யியல் படிப்பதற்கான அனுமதி பெற்று பயணம் செய்கிறார்.இவருக்கு முன்னர் இந்தியர்களில் நயன் சிங் ராவத், கிஷன் சிங் ஆகியோர் மட்டுமே லாசாவுக்குச் சென்று அப்பகுதியை ஓரளவு ஆய்ந்திருக்கிறார்கள்.
கரு, தங்கப்புத்தகம் கதைகளில் வருவது போல திபெத் அப்போது ரகசியங்களின் நிலம். அங்கே ஊடுருவுவது குறித்த கனவு ஆங்கிலேயர்களுக்கு இருந்திருக்கிறது. இதன் ஒரு முயற்சியாக அறியமுடியாமையின் வெளியாகிய திபெத் நிலப்பகுதி மேல் ஆங்கிலேயர்களின் கவனம் திரும்புகிறது. அதன் வணிகச் சாத்தியங்களை, பிரிட்டிஷ் மேல்கோன்மையை நிலைநாட்ட முயற்சிகள் மேற்கொள்கிறார்கள்.
1802-ல் இந்திய நிலத்தை அறிவியல் துல்லியத்தோடு முழுமையாக அளக்க முற்பட்ட “The Great Trigonometric Survey” என்ற முயற்சி வில்லியம் லாம்டன் என்பவர் தலைமையில் தொடங்குகிறது. முதலில் இந்த அளவீடு சென்னையில்தான் துவங்கியது என்பது கூடுதல் தகவல். இதன் அடுத்த நிலஅளவையராக ஜார்ஜ் எவரெஸ்ட்(எவரெஸ்ட் சிகரத்துக்கு இவர் பெயரே இடப்படுகிறது) பொறுப்பேற்கிறார். எவரெஸ்ட், கஞ்சன்சங்கா, கே2 என பல இமையச்சிகரங்கள் அப்போதுதான் அளவிடப்படுகின்றன. அதன் ஒரு பகுதியாக திபெத் பகுதி குறித்து நன்கறிந்த அப்பகுதியை சேர்ந்த நயன் சிங் ராவத், கிஷன் சிங் ஆகியோர் வேலை பார்க்கின்றனர்.
இதில் நயன் சிங் பிரிட்டிஷாருக்காக முதல் முறையாக நேபாளம்-திபெத் வணிகப்பாதையை ஆராய்ந்திருக்கிறார். பிரம்மபுத்திராவின் பெரும் பகுதியை ஆய்வு செய்திருக்கிறார். 1580மைல்கள் இவர் இதற்காக நடந்திருப்பதாகக் கூறுகிறார்கள். குமாவோன் பகுதியின் ஜோகர் பள்ளத்தாக்கை சேர்ந்த நயன் சிங் திபெத்திய மொழியை அறிந்திருந்தது ஆங்கிலேயர்களுக்கு மிக உதவிகரமாக இருந்திருக்கிறது. கிஷன் சிங் என்பவர் அப்பகுதிக்கான விரிவான வரைபடமும் தயாரித்திருக்கிறார். ஐந்து வருடங்களில் நிறைவேற்ற வேண்டியதாகத் தொடங்கப்படும் இம்முயற்சி எழுபது வருடங்களுக்கு நீடிக்கிறது. இம்முயற்சிக்கு இந்திய நிலவரைபடவியலில் பெரும்பங்கு இருக்கிறது.
சரத் சந்திரதாஸ் ஆறுமாத காலம் அங்கு தங்கி திபெத்தின் புவியியல் சார்ந்த தகவல்களையும், பால்டி ஏரியை முழுமையாக மிகத் துல்லியமாக நிலஆய்வு செய்து முடித்திருக்கிறார். அதைவிட முக்கியமாக பல திபெத்திய, சமஸ்கிருத நூல்களை அங்கே பல மடாலயங்களில் கண்டடைந்திருக்கிறார்.
திபெத் ஒரு விதைத் தொகுதி. இங்கே விதைகளை கலசங்களில் அடைத்து கோபுரங்களின் உச்சிகளில் சேமிக்கிறார்கள். அதைப்போல மானுட இனத்தின் உச்சிக்குமேல் சேமிக்கப்பட்ட விதைக் களஞ்சியம் அது. கரு சிறுகதையில் வருவது போல திபெத் மடாலயத்தின் நூலகங்களில் இருந்து, பல நூற்றாண்டுகளாக நாம் இழந்திருந்த பல சமஸ்கிருத புத்தகங்களை, கையெழுத்துப் பிரதிகளை, கொண்டு வந்து சேரக்கிறார். திபெத்தில் பௌத்தம் வேரூன்றுவதற்கும் முந்தைய காலகட்டத்தின் வரலாறையும், திபெத்தின் தொன்மையான ‘போன்’ மதம் குறித்த தகவல்களையும் அவற்றின் வழியாகவே அறிய முடிந்தது. திபெத்திய மொழிப் புலமை கொண்ட சரத் சந்திரர் திபெத்-ஆங்கில அகராதியும் (பௌத்த மறைச்சொற்களுக்கான சமஸ்கிருத-ஆங்கில பின்னிணைப்போடு) வெளியிட்டிருக்கிறார்.
இந்த ‘Journey to Lhasa and Central Tibet‘ என்ற புத்தகம் அவர் 1881 நவம்பர் டார்ஜிலிங்கில் துவங்கி லாசா சென்றடைந்து, 1882 டிசம்பரில் மீண்டு வருவது வரையுமான பயணம் குறித்த நூல்.
டார்ஜிலிங்கில் இருந்து தாஷிலம்போவுக்கு அவர் செல்லும் பயணப் பகுதி விரிவான இயற்கை வர்ணனை கொண்டது. டார்ஜிலிங் தாண்டியதும் சிறிது தூரத்தில் பிரிட்டிஷ் ஆட்சியில் இல்லாத சுதந்திர மாநிலமான சிக்கிம்( சரத் சந்திர தாஸின் பயணம் 1881-82. 1890ல் சிக்கிம் பிரிட்டிஷ் இந்தியாவின் ஒரு பகுதியாகிறது) எல்லை வந்துவிடுகிறது.வழியெங்கும் அந்த மலைக்குடியினரையும், அங்கு வளரும் தாவரங்களையும், அவர்களது உணவு மற்றும் வாழ்க்கை முறைகளுயும் குறித்த கூர்ந்த அவதானிப்புகளைப் பதிவு செய்கிறார்.வழியில் கிடைத்ததைக் கொண்டு சமைத்து, கிடைத்த இடத்தில் உறங்கி பயணம் செய்கிறார்கள். அந்த மலைப்பகுதிகளில் சமதளமற்ற தரையில், பூச்சிகள் மேலே ஊர்ந்து செல்லும் உணர்வோடு உறங்குவது மலைப்பயண அனுபவங்களை நினைவுறுத்தியது. இன்றைய பயணங்கள் எவ்வளவு வசதி நிரம்பியதாகிவிட்டது என ஒவ்வொரு கணமும் எண்ணிக்கொண்டேதான் இப்புத்தகத்தை வாசிக்க முடிகிறது.
டார்ஜிலிங்கில் ஓடும் ரங்கித் நதிக்கு நீர் கொணரும் ரம்மாம் நதி மேற்கு சிக்கிமின் சிங்லி மலைகளில் தொடங்கி, பிரிட்டிஷ் இந்தியாவுக்கும் அப்போது சுதந்திர சிக்கிமாக இருந்த நிலத்துக்கும் இடையே ஓடுகிறது. பொங்கிப் பெருகும் வெள்ளத்தின் மீது மூங்கில் கால்கள் பெரும்பாறைகளில் நடப்பட்டு அதன்மீது நடந்துசெல்லும் நடைபாலமாக இருக்கிறது. சால மரங்கள் நிறைந்த மலைச்சரிவில் ஏலமும் பருத்தியும் விளைந்து காத்திருக்கின்றன. மூங்கிலால் ஆன காவல் பரண்களில் குரங்குகளையும் கரடிகளையும் விரட்ட மூங்கில் கழிகளோடு காவலுக்கு அமர்ந்திருக்கிறார்கள். மண்ணின் குடிகளாகிய லெப்சர்கள், லிம்புக்கள், பூட்டியாக்கள் குறித்து பல தகவல்கள் தருகிறார். ஆங்காங்கே மலைக்குடிகளோடு பிராமணர்களும் சேத்ரிக்களும்(Chetris – நேபாள மொழியில் சத்ரியர்களும்) கிராமங்களில் பாலும் வெண்ணையும் விற்று வாழ்கிறார்கள். மலைச்சரிவில் ஏருழுது நெல் விளைக்கிறார்கள். பூட்டியாக்கள் பழமையான முறையில் ஓக் தடிகளால் ஆன மண்வெட்டி, களைக்கொத்திகளை பயன்படுத்தியே விவசாயம் செய்கிறார்கள். லிம்புக்கள் மூன்று தொடர் வருடங்கள் உழுது பயிரிட்டு அடுத்த மூன்று வருடங்கள் பயிரிடாமல் களைகளை எரித்து வெட்டி மீண்டும் வேளாண்மை செய்கிறார்கள்.ஒவ்வொரு குடியும் தங்களுடையதே மூத்த தொன்மையான குடி என்று சொல்லிக்கொள்கிறார்கள்.
பல சுவையான தகவல்கள் – உதாரணமாக லிம்புக்களின் திருமணம் குறித்த தகவல் மிக சுவாரசியமானது. ஒரு ஆண் தனக்கு மனதுக்குப் பிடித்த பெண்ணைத் திருமணம் செய்வதற்கு முதலில் வீட்டினர் அறியாமல் வேறொரு இடத்தில் அதே பெண்ணை விரும்பும் வேறு ஆண்மகன் இருப்பின் அவனோடு போட்டியில் ஈடுபட வேண்டும். போட்டி என்பது சாதுரியமான பாடல்கள் பாடி ஒருவரை ஒருவர் வெல்வதுதான். தோற்றவன் வெட்கி காட்டுக்குள் சென்று விட, வென்றவன் பெண்ணின் வீட்டாரிடம் சென்று மணம் பேசுவான். இன்னொரு முறை என்பது அவளது வீட்டுக்கு சென்று பன்றியின் இறைச்சியைக் கொடுத்து பெண் கேட்பது. அதில் மேலும் சில முறைமைகளும் பரிசுகளும் இருக்கின்றன.
டார்ஜிலிங் ஆங்கிலேயர்களால் ஒரு சானடோரியமாக முதலில் இருந்திருப்பது பற்றிய ஒரு அடிக்குறிப்பையும் தருகிறது.இப்புத்தகம் முழுவதும் மையப் பகுதி வர்ணனைகளுக்கு நிகராக இந்த அடிக்குறிப்புகள் வருகின்றன. மிக விரிவான செய்திகளைச் சொல்லும் அடிக்குறிப்புகள், Hooker எழுதிய Himalayan Journals போன்ற வேறு சில நூல்களையும் குறிப்பிடுபவை.
கூர்கா படையெடுப்பின்போது லெப்சர்கள் மலை மீதிருந்து பாறைகளை உருட்டி விட்டு எதிர்த்திருக்கிறார்கள் என்று வாசித்ததும் வெண்முரசின் கிராதத்தில் கின்னர ஜன்யர்கள் அதே போன்ற தாக்குதல் முறையைக் கையாள்வது நினைவு வந்தது. கிராத குடிகளைப் பற்றிய செய்திகளும் இப்புத்தகத்தில் வருகிறது.
உப்பு, கம்பளி, தேயிலை, திபெத்திய மண்பாண்டங்கள் போன்றவற்றை வாங்கவும் மலையில் விளையும் ராகி, சோளம், சாயக்கொடிகள் போன்றவற்றை விற்கவும் மலைக்குடிகள் டார்ஜிலிங் சந்தைக்கு செல்கிறார்கள். மலையில் உப்பு மிகவும் அரிய தேவையான பொருளாக இருக்கிறது. அங்கு கீழ்நிலத்தில் இருந்து வரும் பயணிகளிடம் உப்புக்கு பதிலாக தங்களிடம் உள்ள பொருட்களை விற்கத் தயாராக இருக்கிறார்கள். அங்கே மலைப்பகுதியில் தேன்கூடுகள் பெரிய வெண்ணிறக் காளான்கள் போல இருக்கின்றன. ஆழ்ந்த கருமையில் தேங்கிய நீருக்கடியில் பொன்னும் அருமணிகளும் இருப்பதாக கருதப்படும் செல்வவளத்தின் ஏரி, ஒரு மைல் சுற்றளவு கொண்ட அந்த ஏரியின் ஆழத்துக் கருநீரில் நீர்யானைகள் இருப்பதாக நம்பப்படுகிறது. மேலும் காங்க் லா சிகரங்களில் இருந்து வரும் நீரால் நிரம்பிய ஒரு அழகிய ஏரி, கருநீலக் கரையில் வெண்பளிங்கு போன்ற உறைபனிப்பாளங்களோடு இருப்பதால் மயக்கும் மயில் தோகை (TSO DOM-DONG-MA) என்றழைக்கப்படுகிறது. கர்னல் லாரன்ஸ் ஆஸ்டின் வாடேல் எழுதிய Among the Himalayas (1899) புத்தகத்திலும் இந்த ஏரி குறித்த குறிப்புகள் வருகின்றன. அந்த உறைந்த ஏரியை நடந்து கடக்கிறார்கள். அது சிக்கிம் மக்களுக்கு புனிதமான நீராக கருதப்படுகிறது. தாஷிலம்போ நெருங்கும் போது மண்ணின் நிறமும் மாற்றமடைகிறது. இந்திய இமயப் பகுதிகளில் காணப்படும் வெண்ணிறமான மண் நிறம் மாற்றமடைந்து திபெத்தின் ஆழ்ந்த கருஞ்சிவப்பு நிறமான மண் காணப்படுகிறது.
தாஷிலம்போவுக்கு அவர்களது சிறிய பயணக்குழு செல்லும் பாதை மிக ஆபத்தானதாக எந்நேரமும் உயிர் குடிக்கும் சாத்தியங்களோடு இமயத்தின் பருவநிலை மாற்றங்கள் தரும் அறைகூவல்களோடு இருக்கிறது. மிக எளிய உணவும், பனிக்காற்றில் குளிரில் போதிய குளிராடைகள் இன்றி கழியும் இரவுகளும், பொருட்களை சுமக்கும் பணியாட்கள் சிலசமயம் மனிதர்களையும் சுமந்து செல்வதும், அறியா நிலங்களில் உடல் நிலை மோசமாகி, முன்பின் அறியா மனிதர்களின் கருணையை நம்பி அவர்களது உதவி பெற்று அங்கேயே தங்கி அந்நிலத்துக்குரிய முறையில் சிகிச்சைகள் பெறுவதும் மிக அரிய அனுபவங்கள். யம்பங் லா என்னும் பனிப்பகுதியை இவர்கள் ஏறிக் கடப்பது மெய்நிகர் அனுபவத்தை தருகிறது. பல நாள் பயணத்துக்குப் பிறகு தாஷிலம்போவுக்கு சென்று அங்கு சில காலம் மடாலயத்தில் இருக்கிறார்கள். அதன் பிறகு மீண்டும் லாசாவுக்கான பயண ஆயத்தங்கள், அங்கே அவர் சந்திக்கும் மனிதர்கள், திபெத்திய ஷிகாட்சே-சீன அரசியல் நிலைகள் என அனுதினம் எழுதிய நாட்குறிப்புகள். அந்த மடாலயத்தில் அவருக்கு வாசிக்கக் கிடைக்கும் அரிய நூல்கள் – Dsam Ling Gyeshe (உலகு பற்றிய ஒரு பொதுக்குறிப்பு) எனப்படும் முக்கியமான நூலின் கையெழுத்துப் பிரதி கிடைக்கிறது. ஆச்சார்ய ஸ்ரீதண்டி இயற்றிய காவ்யதர்சம், சந்திரகோமின் எழுதிய சமஸ்கிருத இலக்கண நூலாகிய சந்திர வியாகரணம், ஆச்சார்ய ஆமி எழுதிய ஸ்வரஸ்வத் வியாகரணம் போன்ற சமஸ்கிருத நூல்களின் திபெத்திய விளக்கங்கள் கொண்ட நூல்கள் கிடைக்கின்றன.
வறுத்த பார்லி அல்லது கோதுமை மாவில் செய்யப்படும் ட்சம்பா (tsamba)வும் வெண்ணையிடப்பட்ட தேநீருமே பெரும்பாலும் காலை உணவு . அவர்களது அன்றாட உணவு வகைகள் குறித்தும், மாஹுவா பிஸ்கட் என்ற சீன வகை தின்பண்டம் குறித்தும், நீண்ட மலைப்பயணங்களுக்காக சேகரிக்கப்படும் உலருணவுகள் குறித்தும் பல தகவல்கள். லாமாக்களுக்குரிய மடாலயத்தேர்வு என்பது அவர்களது புனித நூல்களில் இருந்து பல நூறு பக்கங்கள் கொண்ட வரிகளை பிழையின்றி நினைவுறுத்திக் கூறுவது. லாமாவாக பயிற்சி பெற்று இதில் தேர்ச்சி அடைய முடியாமல் போகும் மனிதரையும் இப்புத்தகத்தில் சந்திக்க முடிகிறது. அந்த மடாலயத்தில் அவரது நாட்களை அந்த நூல்களை வாசிப்பதிலும் கைப்பிரதிகள் எடுப்பதிலும் செலவழிக்கிறார். அங்கு வருவதற்கான உதவிகள் செய்த அமைச்சருக்கு கடிதம் எழுதுவதன் முறைமைகள் சுவாரசியமானவை. கடிதம் எழுதப்படும் காகிதத்தின் வடிவம், கடிதத்தின் மேலேயும் கீழேயும் விடவேண்டிய இடம், அதில் பயன்படுத்தும் முறைமைச்சொற்கள் என அனைத்தும் கவனத்தில் கொள்ளப்பட்டு கடிதம் எழுதப்படுகிறது.
அந்த காலகட்டத்தில் லடாக் முதலான காஷ்மீரத்தின் பகுதிகளுடனான திபெத் உறவு குறித்த வரலாற்றுக் குறிப்புகளும் வருகிறது. அதற்கு முன்னர் காஷ்மீரோடு நிகழ்ந்த ஒரு போருக்கு பின்னர் உருவான ஒப்பந்தப்படி மூன்றாண்டுகளுக்கு ஒரு முறை ஒரு அரச முறையான ஊர்வலம் காஷ்மீரிலிருந்து கிளம்பி தலைமை லாமாவுக்கு பரிசுப்பொருட்களோடு லாசாவுக்கு வருவதை பதிவு செய்திருக்கிறார். நாட்குறிப்புகள் என்பதால் பலவிதமான கலவையான குறிப்புகள் – ஜோமோ என்ற யாக்-பசு கலப்பின வகை குறித்த குறிப்பு ஒன்று – யாக்கின் பால் இனிமையானாதாகவும் சத்துமிக்கதாகவும் இருப்பினும் யாக்கைப் போல இரு மடங்கு பால் தருகின்ற, பசுவைப் போல நாங்க மடங்கு பால் தருகின்ற ஜோமோ வகை மாடுகளையே அங்கு விரும்பி வளர்க்கிறார்கள். திபெத் முழுவதும் கடைகளில் பெண்களே அதிகமாக வியாபாரத்தில் ஈடுப்பட்டிருப்பதைப் பதிவு செய்கிறார்.
ஒரு தாய்க்குப் பிறந்த சகோதரர்களை ஒரே பெண் மணந்து கொள்ளும் வழக்கம் குறித்தும், அங்கு அவர் சந்திக்கும் ஒரு திபெத்திய அரச குடித் தொடர்புடைய ஒரு பெண், இந்தியப் பெண்களை விட இந்த வழக்கம் எவ்வளவு மேம்பட்டது என்று குறிப்பிடுவதையும் எழுதி இருக்கிறார். திபெத்தில் ஒரு அன்னை வயிற்றில் பிறந்த அனைத்து சகோதரர்களையும் ஒரே பெண் மணந்து கொள்வதன் வாயிலாக அக்குடும்பத்தின் அனைத்து செல்வங்களுக்கும், உடைமைகளுக்கும் உரிமையுடையவளாகிறாள். அவர்களைப் பொறுத்த வரை ஒரு வயிற்றில் பிறந்த சகோதரர்கள் ஒருவரே என்றும் அவர்களது ஆன்மாக்களே வேறு என்றும் கூறுகிறாள்.
அங்கிருந்து சரத் சந்திர தாஸ் டாங்சே, யாம்டோ சாம்டிங் வழியாக லாசாவுக்குப் பயணமாகிறார். டாங்சேவில் திபெத்திய பௌத்தத்தின் முக்கியமான காலசக்ர மண்டல உபாசனை தொடக்க நிகழ்வைக் காண்கிறார். அப்பகுதியெங்கும் பெரியம்மை முழுவீச்சில் பரவியிருக்கிறது. இவருக்கு செல்லும் வழியில் கடுமையான காய்ச்சலும் உடலையே உலுக்கும் தீவிரமான இருமலும் தொற்றிக் கொண்டு உடல் நிலை கெடுகிறது. வழியில் யாம்டோ ஏரிக்கரையில் சாம்டிங் மடாலயத்தில் சென்று சில நாட்கள் சிகிச்சை பெறுகிறார். திபெத்திய முறைமையிலான சிகிச்சை முறைகள், நோய்தீர்க்கும் பரிகாரங்கள் பரிந்துரைக்கப்படுகின்றன. பிரஞ்ஞான பரமிதாவை பாராயணம் செய்வது(8000 ஸ்லோகங்கள்), திபெத்திய இந்திரனுக்கும், அக்னிக்கும், வாயுவுக்கும் என பலவகையான தானங்கள் போன்றவை. மெல்ல குணமடைந்து மீள்கிறார். திபெத்தில் இறந்தவர்கள் உடலை கழுகுகளுக்கு படைத்துவிடும் வழக்கம் இருக்கிறது. அதே போல அந்த யாம்தோ ஏரியில் இறந்தவர்கள் உடலை விடும் பழக்கமும் இருந்திருக்கிறது. அந்த ஏரியில் சென்று முடியாது உயிர் பிழைத்து லாசாவுக்கு செல்வது குறித்து மகிழ்ச்சி அடைகிறார்.
அவர் லாசாவுக்கு சென்று சேரும் போது அங்கே பெரியம்மை முழுவீச்சில் பலருக்கும் பரவி இருக்கிறது. அதற்கிடையே அவருக்கிருந்த உயர் குடி நட்புகள் வாயிலாக அப்போதிருந்த எட்டு வயதே நிரம்பிய தலாய் லாமாவை நேரில் சந்திக்கிறார். தலாய் லாமாக்கள் எவ்விதம் அடையாளம் காணப்படுகிறார்கள் என்பது குறித்த விவரங்களும் வருகிறது. லாசாவில் இருந்து பீகிங் (பெய்ஜிங்) எட்டு முதல் பத்து மாத பயணத் தொலைவில் இருக்கிறது. எனவே லாசாவுக்கும் பீகிங்கிற்கும் இடையே விரைவு அஞ்சல் சேவை போன்ற பணியில் ஈடுபடுத்தப்பட்ட படையினர் குறித்த அரிய தகவல்களை பதிவு செய்கிறார். அந்தப் பணி- மிகக் கடுமையான வாழ்க்கை முறை, அளவு வரையறுக்கப்பட்ட உணவு, ஒரு நாளைக்கு மூன்றே மணி நேரம் உட்கார்ந்த நிலையிலேயே தூங்க அனுமதி, ஒவ்வொரு நாளும் பயணம் செய்து முடிக்கவேண்டிய தொலைவு என மிகக் கடுமையான வேலையாகத் தெரிகிறது.
அதன் பிறகு இரு அத்தியாயங்கள் லாசாவின் முறைமைகள், திருவிழாக்கள் குறித்தும், திபெத்தின் திருமணங்கள், இறப்புச்சடங்குகள், மருந்துகள், விழாக்கள் போன்ற பலவற்றைப் பற்றிய குறிப்புகளும் கொண்டிருக்கின்றன. குற்றங்களும், அதற்கான விசாரணை முறைகளும், தண்டனைகளும் பற்றிய விவரமான குறிப்புகள் வருகின்றன.
கைமுக்கு கதையில் வருவது போல கொதிக்கும் எண்ணெய் அல்லது நீரில் வெண்ணிறம், மற்றும் கருநிறம் கொண்ட கற்களைப் போட்டு, குற்றவாளியை கொதிக்கும் திரவத்தில் கைவிட்டு அந்தக் கல்லை எடுக்கச்செய்து, கை புண்ணாகாமல் வெள்ளை நிறக் கல்லை எடுத்தால் நிரபராதி என்றும், சிறிய கொப்பளங்களோடு வெள்ளை நிறக் கல்லை எடுத்தால் சிறிதளவு குற்றத்தில் பங்குண்டு எனவும், கை மிகவும் புண்ணாகி விட்டாலோ, கரிய நிறக் கல்லை எடுக்க நேர்ந்தாலோ குற்றம் செய்தவர் என்றும் தீர்மானிக்கிறார்கள். இதே போல இன்னும் சில முறைகள். அதே போல இறந்தவர் சடலத்தை கழுகுகளுக்கு படைக்கும் போது கழுகுகள் கூட்டமாக வந்தால் உயர்ந்த வாழ்வை மேற்கொண்டவர் என்றும், நாய்கள் கூட உண்ணவில்லை என்றால் பாவம் செய்தவர் என்றும் முடிவு செய்கிறார்கள். திபெத்தின் சிறை வர்ணனை மிகவும் கொடுமையானது. கதவை எடுத்துவிட்டு வாயிலை மொத்தமாக அடைத்துவிடுவார்கள். உணவுக்கு சிறு துவாரம். உள்ளே சேரும் கழிவை வெளியேற்றுவதற்கு கூரையில் சில துளைகள். பலரும் சில மாதங்களிலேயே உயிரிழந்து விடுவார்கள் என்றும், அரிதாக ஒரு சிலர் இதில் இரண்டு வருடங்கள் வரை உயிரோடிருந்தவர்களும் இருக்கிறார்கள் என்றும் குறிப்பிடுகிறார். எனில் இவை சற்று மிகையாக்கப்பட்ட குறிப்புக்கள் என்றும், செவி வழி அறிந்த செய்திகளே என்பதால் கூற்றின் உண்மைத்தன்மை சற்றுக் குறைவென்றும் அடிக்குறிப்புகள் இருக்கின்றன.
இத்தனை நெடிய பயணத்துக்குப் பிறகு இரண்டு வாரங்களே லாசாவில் இருக்கிறார். மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பி வருகிறார். அவர் பிரிட்டிஷார் அனுப்பி வைத்த உளவாளி என்றும், அவருக்கு இப்பயணத்தில் திபெத்தில் உதவியதாக அறியப்பட்ட அனைவரும் சீன அரசாங்கம் கொன்றழித்ததாகவும் வேறு கட்டுரைகள் சொல்கின்றன. “Journey to Lhasa: The Diary of a spy” என்றே மறுபதிப்பு வெளியாகி இருக்கிறது. வெளி உலகுக்கு எதுவுமே அறியப்படாமல் இருந்த நிலத்தின்மேல் முதல் வெளிச்சம் இந்தக் குறிப்புகள் என்ற வகையிலும், அதன் பிறகு 1903-ல் நிகழ்ந்த “Younghusband expedition”க்கு இவரது இந்தப் பதிவுகள் மிகவும் உதவின என்ற வகையில் இது ஒரு உளவுச் செயலாக கருதப்படலாம். ஆனால் இந்தப் புத்தகத்தில் அந்தப் பயணத்தை, அந்த மண்ணை ரசித்த ஒருவரது பார்வையாகவே இக்குறிப்புகள் இருக்கின்றன. அவர் ஒற்றறிந்தார் என்பது ஒரு உண்மையாக இருக்கலாம். அறிவுப்புலன் சார்ந்த தேடலுக்கு அப்பால் அவரை ஒரு ஒற்றர் என்றும் இந்தப் பயணத்தை ஒரு உளவறிதல் என்றும் வாசிப்பதில் ஏதோ ஒன்று குறைந்துவிடுவதாகத் தோன்றுகிறது. டார்ஜிலிங் மீண்டு வந்து அவர் தனது இல்லத்திற்கு “லாசா வில்லா” என்றே பெயரிடுகிறார். ஒரு மனதுக்கினிய கனவை டைரியில் குறித்து வைப்பது போன்றது அது. அவ்வளவே வாசகராக எனக்கு முக்கியமாகப் படுகிறது.
மிக்க அன்புடன்
சுபா
அன்புள்ள சுபா
இந்த நூலை இளமையில் வாசித்திருக்கிறேன். திபெத் பற்றிய கனவை உருவாக்கிய நூல் இது. 1985ல் டார்ஜிலிங் சென்றபோது இவருடைய இல்லத்தை நேரில் சென்று பார்த்தேன். பாதி இடிந்து மரச்சட்டங்கள்மேல் நின்றிருந்த்து. ஒரு மலைப்பாதை சுழன்று இறங்கும் சரிவில் இடப்பக்கமாக இருந்த பங்களாவைச் சுற்றி சருகுகள் குவிந்து மலைக்காற்று ஊளையிட்டுக்கொண்டிருந்தது.
நூறுகதைகளில் ஒன்றாக இதையும் எழுதினேன், முடிக்கமுடியவில்லை. சரத்சந்திர தாஸ் அந்த வீட்டில் நிறைவுறாத ஆவியாக இருப்பதாக கதை. ஏனென்றால் உண்மையில் சரத் சந்திரதாஸ் பிரிட்டிஷ் ஒற்றராகவே சென்றார். திபெத்தியரின் நம்பிக்கையைப் பெற அவரை பயன்படுத்திக்கொண்டனர்.அவர் அங்கே சென்று ஆராய பிரிட்டிஷாரி பயன்படுத்திக்கொண்டார்
கர்னல் யங்ஹஸ்பெண்டின் படையெடுப்புக்கு தேவையான அடிப்படைச் செய்திகளை அளித்தவர் அவர். அவர் அந்தப்படையெடுப்பால் மனமுடைந்தார். பிரிட்டிஷ் ஆட்சியை கண்டித்தார். அதனால் பிரிட்டிஷாரால் ஒதுக்கப்பட்டு தனிமையில் தன் திபெத் ஆய்வுகளுடன் முடங்கி கைவிடப்பட்டு மரணமடைந்தார்
ஜெ
நிறைவின் குரல்கள்
அன்புள்ள ஜெயமோகன் சார்,
இன்று தங்கள் தளத்தில் வெண்முரசு அடுத்த நாவலான “முதலாவிண்” என்னும் நாவலோடு நிறைவு பெறுகிறது என அறிவித்து இருந்தீர்கள். முதலில் அதை படிக்கும்போது ஒன்றும் புரியவில்லை. ஏனென்றால் வெண்முரசு நிறைவு அடையும் என நான் எண்ணி பார்த்ததே இல்லை. முதலில் ஒரு இடி இறங்கியது போல்,பிறகு ஒரு யாரையோ மயானத்தில் எரிக்க செல்வதுபோலவோ பிறகு மனமார நேசித்த காதலியை பிரிய போகிறோம் என முதலில் மனது அறியும் ஒரு தருணம் போலவோ தான் இருந்தது. ஏன் நீங்கள் வெண்முரசை எழுதி நிறுத்துகிறீர்கள் என எனக்கு இன்னும் புரியவே இல்லை? …எல்லாம் ஒரு நாள் வாழ்வைப்போலவே நிறைவுறும் தானோ ?
ஜெயமோகன் சார், 2013 ம் வருடம் கிறிஸ்துமசுக்கு முந்திய நாள் மிகுந்த மனகசப்பில் தற்கொலை நோக்கில் இருந்தேன். அப்போதுதான் நீங்கள் மகாபாரத்தை ” வெண்முரசு ” என்னும் நாவலாக எழுதப்போவதாக அறிவித்தீர்கள். மனம் அதை வாசித்தபோது பெரும் கிளர்ச்சி அடைந்தது இன்றும் நினைவில் இருக்கிறது. எனக்கு சிறுவயது முதல் மகாபாரதகதையின் மீது தனி மோகம். முதலில் “மகாபாரதம் ” என்னும் வாரத்தையை கேட்டது எனது ஆஸ்டல் பாதரிடம் இருந்து.ஆஸ்டல் பிரேயர் நேரத்தில் கிறிஸ்துவின் கதைகளோடு சின்ன சின்னதாக மகாபாரத கதைகளையும் கூறுவார். அது அப்படியே வளர்ந்து அவரிடம் முழு மகாபாரத்தையும் கூறும்படி கேட்டேன், அப்போது அவர் கூறியது ” மகாபாரதம் படிக்கிற அளவுக்கு உனக்கு இன்னும் வயசு ஆகலடே “. ஒருவேளை நீங்கள் வெண்முரசு எழுத தொடங்கிய நேரம்தான் வயசுக்கு வந்தேனோ என்னவோ? .ஆறரை வருடங்கள் ஓடிவிட்டது. வெண்முரசின் அனைத்து வரிகளையும் வாசித்து இருக்கிறேன் என்பதே பெரிய சாதனைபோல் தான் இருக்கிறது.
காண்டீபம், மாமலர், சொல்வளர்காடு முதலிய நாவல்களை வாசித்து எல்லாம் இந்த பிறவியின் கொடை என்றே சொல்வேன்.ஒட்டு மொத்த வெண்முரசும் என்னை எப்படி மாற்றி இருக்கிறது என்று எனக்கு மட்டும்தான் தெரியும். புது பிறவி எடுத்ததுபோலவே உணர்கிறேன்.இளையயாதவன்,பீஷ்மர்,விதுரர்,தர்மர்,அர்ஜுனன்,திருதாஷ்டிரர்,கணிகர்,அம்பா, குந்தி,திரௌபதி காந்தாரி,பானுமதி,தமயந்தி, தேவயானி பாத்திரங்கள் எல்லாம் சாகும் வரை கூடவே வருவார்கள்.
இப்போது எல்லாம் எனக்கு ஒரு கனவு அல்லது ஒரு உருவகம் அல்லது எதுவோ ஓன்று தோன்றுகிறது…. “இப்போது நான் எனது பிறந்த ஊராகிய பாரதவர்ஷத்தின் தென்முக்கில் இருக்கிறேன்,எனது கால்களுக்கு கீழே வேர்கள் நான்கு திசைகளிலும் பரவி பரவி ஒட்டு மொத்த உலகின் கீழேயும் முடிவே இல்லாமல் சென்று கொண்டே இருக்கிறது”… பிறகு ஒரு ஆழமான ஒரு விழிப்பு நிலை.இப்படி ஒரு நிலமையை வெண்முரசுதான் கொடுத்தது. அதாவது வாழ்விற்கான பொருள்.
இந்த மாபெரும் வெண்முரசு என்னும் கொடையை அருள உங்களை தேர்ந்தெடுத்த, உங்களுக்கு மன,உடல் நலத்தை அருளிய பிரமத்துக்கும் அதை எழுதி எங்களுக்கு அளித்த உங்களுக்கும் நன்றி.
வெண்முரசின் அனைத்து வரிகளையும் இந்த சிறிய வாழ்கையில் கொண்டுவரமுடியுமா என தெரியவில்லை.ஆனால் எனக்கான வியாசனை நான் கண்டுகொண்டேன் என்று என்னால் கூறமுடியும். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று எண்ணிக்கொண்டு எனக்கான கடமையை,தன்னறத்தை செய்வது மட்டும் தான் நான் உங்களுக்கு செய்யும் காணிக்கையாக இருக்கும். அதை செய்ய மனதிடத்தை, மன ஒருமையை,புத்திகூர்மையை, வாய் வாய்வல்லமையை, செயல்திறனை அருள இளையயாதவனை,கிறுஸ்துவை கண்ணில் நீர் கோர்க்கும் இந்த நேரத்தில் வேண்டிகொள்கிறேன்.
ஸ்டீபன் ராஜ் குலசேகரன்
அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம்! ‘முதலாவிண்’ நூல் தொடக்கம் பற்றிய உங்கள் அறிவிப்பைப் படித்தேன். நீங்கள் இளையராஜா அவர்களிடம் ஆசி வாங்கியதை அறிந்துகொண்டேன்.
தமிழில் பாரதம் எழுதி யாராலும் முழுமை செய்யமுடிந்ததில்லை என்பது எனக்குப் புதுத் தகவல். கொஞ்சம் அச்சத்தையும் தந்தது.
ஆனால் இதற்கு ஒரு தப்பித்தல் வழி இருக்கும். நீங்கள் தேர்ந்தெடுத்த குரு ஆசி என்ற வழி நிச்சயம் உதவும் என நம்புகிறேன்.
ஒரு கதையாடல் உத்தியையும் பின்பற்றலாம். கடைசிக் கதையில் ஏதோ ஒரு கட்டத்தைக் கொஞ்சம் மூளி செய்துவிடுங்கள். ஒரு விடுபடல், ஒரு குறை….கதையில் விட்டுவைக்கலாம் என்று தோன்றுகிறது. நான் கூறுவதை விளையாட்டாகவும் நீங்கள் எடுத்துக்கொள்ளலாம்.
அன்பு,
பெருந்தேவி
மூத்தவருக்கு
இதை எழுதும் எனக்கு அகவை நாற்பதற்கு மேலென்றாலும் இதற்கு மேலும் என்னால் பகிராமல் இருக்க இயலவில்லை. சொல்லும் இசையும் பகுதி 2 படித்த இன்று துயருற்றிருக்கிறேன். சிறு வயது முதல் என் நாயகன் அர்ஜுனனே. அவன் இழிவுக்குள்ளானது முதன் முதலில் வெண்முரசில்தான். எத்தனையோ முறை மறை பிரதியைத் தேடினாலும் முன் நிற்கும் அவலச் செயலைப் புறந்தள்ளுவது எளிதாயில்லை.மயிலிறகால் கர்ணனை, துரியனை, துச்சாதனனை வருடும் வெண்முரசு பார்த்தனை இழிவுகளுக்குள்ளாக்கி போதவில்லை மேலும் மேலும் என கூட்டிச் செல்கிறது
மகா யுத்தத்திலும் கர்ணனின் கரத்தால் கொல்லப்பட்டு பின் கிருஷ்ணனால் உயிர்ப்பிக்கப்பட்டு, இடையாடை அவிழ்க்கப்பட்டு, ஜயத்ரதனால், அஸ்வத்தமானால், மிகக் கீழிறங்கி சல்லியரால் கூட பந்தாடப் பட்டு அனைவருக்கும் முன் ஒற்றைச் சிறப்பு கூட இல்லாமல் அர்ஜுனன் நிற்கிறான். திசைப் பயணங்கள் செய்து தெய்வங்களை வென்று, முக்கண்ணனின் பாசுபதம் பெற்று, கீதாஉபதேசமும் கேட்டு அவன் அடைந்து அடைந்து பெற்ற அனைத்தையும் இழந்து இழந்து நிகர் செய்கிறான் போலும். அவன் புவியுலக வாழ்வின் இறுதியில். மீண்டும் ஒரு முறை கிடைத்த வாய்ப்பை துளிக்கூட வீணாகாமல் அனைத்து கீழ்மைகளையும் அவன் அனுபவிக்கிறான் நேமிநாதரைப் போல் முடிகளும் கூடப் பிடுங்கப்பட்டுவிட்டன.
இன்னும் என்ன? புத்திர பாசம் மட்டுமே எஞ்சி நிற்கிறது. அதையும் இழந்தால் உதிரலாம். இத்தனை பெரிய வெண்முரசில் என் நாயகன் இவன் என நான் உணர்ந்த தருணம், பீமன் இடும்பன் போரில் இடும்பனை வீழ்த்த சிறு மரக்கிளை ஒன்று போதும் பொறுத்திருக்க வேண்டும் என தர்மனிடம் கூறுமிடம் ஓரிடம்தான். அது போதும் எனக்கு.
அன்பு வணக்கங்களுடன்
இரா. தேவர்பிரான்
January 1, 2021
கல்லில் தழல்
அடிக்கடி என் கனவில் கற்சிலைகள் வருகின்றன. இது எப்போது தொடங்கியது என்று எண்ணிப்பார்க்கிறேன். சிறுவயதிலேயே கோயிலருகே வாழ்ந்தவன். அன்றே சிலைகளை தொடர்ந்து பார்த்துவந்தவன். அவை நானறியா இளமையிலேயே என் கனவுக்குள் நுழைந்துவிட்டிருக்கவேண்டும்
ஆனால் நினைவில் நிற்பது நான் எட்டாவது படிக்கும்போது நிகழ்ந்த ஒன்று. ஊருக்கு வெளியே ஓர் யக்ஷிகோயில். சிதிலமடைந்து , உடைந்த கூரைமேல் நாணல் செறிந்து, கோடையில் காய்ந்து சிங்கப்பிடரி என்றாகி, பிடாரி என நின்றிருக்கும். நேர் எதிரே ஒரு தாமரை படர்ந்த குளம். சுற்றிலும் தோப்புகளில் மனிதநடமாட்டமே அரிது.
அங்கேதான் நாங்கள் சிறுவர்கள்கூடுவோம். பாலியல் கதைகளை பரிமாறிக்கொள்வோம். திருடிக்கொண்டுவந்த பொருட்களை தின்போம். அங்கே கோயிலின் கல்திண்ணையில் ஆடுபுலியாட்டக் கட்டம் நிரந்தரமாக வரையப்பட்டிருக்கும். மாங்காய் தின்ன உப்புப்பொட்டலம் இருக்கும். அன்றெல்லாம் குடிகாரர்கள் இதுபோன்ற இடங்களைக் கைப்பற்றிக்கொள்ளவில்லை.
ஒருநாள் நானும் ராதாகிருஷ்ணனும் தனித்திருந்தோம். பேசிக்கொண்டே இருந்துவிட்டு நான் தூங்கிவிட்டேன். ராதாகிருஷ்ணன் சென்றுவிட்டான். நான் விழித்துக்கொண்டபோது அந்தி சாய தொடங்கியிருந்தது. மேற்குநோக்கிய கோயிலின் மேல் சூரியவெளிச்சம் நேரடியாக விழுந்தது. என் கண்களுக்குமேல் வெயில்விழுந்துதான் நான் விழித்துக்கொண்டிருந்தேன்
யாரோ என்னை பார்க்கும் உணர்வு ஏற்பட்டது. எங்கே என்று அங்குமிங்கும் பார்த்தபின் சட்டென்று கருவறைக்குள் யக்ஷியை கண்டேன். மாலையொளியில் சுடர்விடும் கரிய கற்சிலை. கண்களில் கனிவும் காமமும். பேரழகு முகம். பல்லாயிரமாண்டுகளாக சிற்பிகள் கனவுகண்டு கற்பனையில் வளர்த்து கையில் தேர்ச்சிகொண்ட கலைவடிவ தோற்றம்
நான் பிரமைபிடித்ததுபோல பார்த்துக்கொண்டிருந்தேன். பின்னர் அஞ்சி என் ஆழம் நலுங்கியது. ஓர் உளறலோசையுடன் எழுந்து ஓடினேன். இரண்டு இடங்களில் விழுந்து எழுந்து ஓடி தப்பிவிட்டேன். ஆனால் வீட்டுக்குச் சென்றபின் காய்ச்சல்வந்தது. விந்தையான நறுமணம் அல்லது நாற்றம் ஒன்று என்னை சிலநாட்கள் சூழ்ந்திருந்தது.
வெவ்வேறுவகையான கனவுகள் என்னை அலைக்கழித்தன. அக்கனவில் சிறுமியர், அழகிய கன்னியர், வெண்ணிற ஆடை அணிந்த முதுமகள் என தோன்றிக்கொண்டே இருந்தனர். இருமுறை இரவில் துயிலில் எழுந்து ஆற்றங்கரை வரைச் சென்று விழித்துக்கொண்டு ஓடி திரும்பிவந்தேன். அந்த அனுபவங்களின் கூர்வடிவம் நூறுகதைகளில் ஒன்றில் உள்ளது.
அதை எங்களூரில் ‘யக்ஷி அடித்தல்’ என்பார்கள். யக்ஷியின் மணம் கிடைத்தவன் அவளிடமிருந்து விலகமுடியாமல் விட்டில் தீயிலென அவளிலேயே சென்று முடிவான். நான் தப்பிவிட்டேன்.
ஆனால் மெய்யாகவே தப்பினேனா? இத்தனை ஆண்டுகளில் யக்ஷிகளைப்பற்றி எழுதிக்கொண்டேதான் இருக்கிறேன். அச்சொல்லே தமிழில் என்னால் புகழ்பெற்றிருக்கிறது.
அழகின் ஓர் உச்சக்கணம் யக்ஷி. அத்தனைகூர்கொண்ட எதுவும் ஆயுதம்தான். கொல்லும்பேரழகு. அந்த கற்பனை என்னை நெடுநாட்கள் பித்தெடுக்கவைத்துள்ளது. யக்ஷித்தன்மை கொண்ட பல கதைமாந்தரை நான் எழுதியிருக்கிறேன். விஷ்ணுபுரம், காடு, இரவு. வெண்முரசில் திரௌபதி அதன் விரிவான வடிவம்
தமிழகக் கோயில்களிலெங்கும் யக்ஷிகள் உண்டு. வாசலைக் காக்கும் புஷ்பபாலிகை அல்லது புஷ்பயக்ஷிகள் முதல் மோகினிகள் என்று பொதுவாக எழுதிவைக்கப்பட்டிருக்கும் யக்ஷிகள் வரை. யக்ஷி என்றால் விழிகொண்டவள் என்று பொதுப்பொருள் சொல்வார்கள்.
நோக்கநேரும் பெண்களின் அழகின் உச்சக்கணநேரத்தில் எழுந்து மின்னி மறைபவளாகவே நாம் யக்ஷிகளை காண்கிறோம். ஆனால் எப்படி நேரிலெழக் கண்டாலும் யக்ஷிகளின் அழகின் உச்சமென்பது கல்லில் அவள் எழும்போதுதான் என்று படுகிறது
காமம் நுண்ணுணர்வென எழுத சிற்றிளமைப்பருவம் முதல் தசையுடலை நோக்கிக்கொண்டே இருக்கிறேன்.எலும்பின் சட்டகத்தில் ஒட்டப்பட்ட தசைகள் கணந்தோறும் சரிந்தபடியே இருக்கின்றன. கண்களுக்குக் கீழே, முகவாய்கோடுகளில், வாயின் வளைவில், தாடைக்குக்கீழே, கழுத்துமடிப்புகளில் என தசைதளர்வையே நாம் முகங்களில் பார்த்துக்கொண்டிருக்கிறோம். முகம் உருகிவழியும் மெழுகாலான வடிவம்
அதை கணமென நினைவில் நிறுத்தியே நாம் அழகை நிலைகொள்ளச் செய்கிறோம். வரைகிறோம், புகைப்படம் எடுக்கிறோம். கவிதைகள் புனைகிறோம். ஆனால் முகமென்பதும் உடலென்பதும் ஓர் அமைப்பல்ல, நிகழ்வு என அறிந்திருக்கிறோம். சுடர் போல. கண்ணால் காட்சி சிறைப்பிடிக்கப்பட்டு அதை நாம் பொருளென நினைக்கலாம், அது கணந்தோறும் மாறுவதென்று கண்ணுக்குள் வாழும் பிரக்ஞை அறியும்.
கல்லில் அப்படியல்ல. காலமில்லாது நிறுத்தப்பட்டுவிடுகிறது பேரழகு. தளர்வில்லை, உருகுதலில்லை. அவ்வண்ணமே அதே கணத்தில் அதே நோக்கில் அதே மிளிர்வில் நின்றுவிட்டிருக்கிறது. அழிவின்மை என்று ஒன்றில்லை. மலைகளே அழிந்துகொண்டிருக்கின்றன. ஆனால் நாம் மானுடர், குமிழிகளென மறைவோர். நமக்கு கல்லே நிலைக்கோள் கொண்டது. கல்லில் எழுந்த மலர் உதிர்வதில்லை. கல்லில் எரியும் சுடர் அணைவதில்லை. கல்லில் நிகழும் நடனம் முடிவடைவதே இல்லை
நிறைவின்மையின் ஒளி
Toward the Light- Eva Macie“ஒருபோதும் சென்றடையவில்லை என்கிற நிறைவின்மையை அடைக”
தன்மீட்சி- கடிதம்
உத்திஷ்டத ஜாக்ரத!
என் அன்பு ஜெ,
நீங்கள் எனக்கெழுதியதை தியானிக்க வேண்டியிருந்தது. இந்த வரிகளை எனக்காக மாற்றிக் கொண்டேன். ஒவ்வொன்றாக, பொறுமையாக. அதனால் தான் பதில் எழுத தாமதமாகிவிட்டது. மன்னிக்கவும்.
நிறைவின்மையை அடைய பிரயத்தணப்பட வேண்டும் என்பது விஷ்ணுபுரத்தை வாசிக்கையிலேயே புரிந்திருந்தேன். ஆனாலும் அது எனக்கான தூதாக இல்லாது அஜிதன் போன்றோர்களுக்காகத்தான் என்றே நினைத்திருந்தேன் ஜெ. ஆனால், “ஒரு போதும் சென்றடையவில்லை என்ற நிறைவின்மையை அடைக!” என்ற தத்துவத்தை மானுடத்தை நோக்கி நீங்கள் வீசியபோது, அதை எனக்கானதாக மாற்ற முயன்று கொண்டிருந்தேன். அதற்காக நான் என்னுடன் வாதாடிய போது நீங்கள் இதுவரை சொல்லியிருக்கும் தத்துவார்த்த வரிகளை யாவும் துணைக்கு அழைத்துக் கொண்டேன். எனக்காக அதை பொருத்திப் பார்த்துக் கொண்டே இருந்தேன். ஆ! அந்த நிறைவின்மையை நான் அடைய எத்துனை தூரம் பயணிக்க வேண்டும், எவ்வளவு வாசிப்பனுபவம், வாழ்பனுபவம், ஞானம், அறம் தேவைப்படுகிறது! இன்னும் அதற்கு தேவைப்படுபவை என்ன என்பதைத் தெரியவும் கூட நான் பயணிக்க பல தூரம் செல்ல வேண்டியிருக்கிறது ஜெ.
இந்த என் பயணத்தில் உங்கள் எழுத்துகளும், சிந்தனைகளும், பேச்சுகளும் தான் எனக்கான பட்டறை. பைபிள், பகவத் கீதை இவையிரண்டையும் ஒரு புத்தகமாகப் படித்திருக்கிறேன். சலிக்க சலிக்க வாசித்து தருக்கத்துக்கு உள்ளாக்கியிருக்கிறேன். விஷ்ணுபுரத்தை அந்த வரிசையில் மூன்றாவதாக வைக்கிறேன். ஏனோ விஷ்ணுபுரத்தினால் மட்டும் நான் உள்ளிழுக்கப்படுகிறேன். அதில் நான் தருக்கப்படுவதற்கு முன்னறே நீங்கள் அனைத்து தருக்கங்களையும் செய்து பதிலளிக்கிறீர்கள். என் ஆன்மத் தேடலுக்கான நூலது. அதில் நீங்கள் பேசுவது யாவற்றாலும் அமிழ்ந்து அந்த எண்ணங்களாலேயே ஆட்படுகிறேன். கெளஸ்தூபம் அப்படித்தான் செய்தது. இன்னும் “மணிமுடி பாக்கியிருக்கிறது” (மேலும் விரிவாக விஷ்ணுபுரம் பற்றி எழுதுகையில் எழுதுகிறேன் ஜெ.)
நாம் என்ற நம்மை உதறும் தருணம் ஒரு முற்றும் தருணம் என்று சொல்லலாம் என நினைக்கிறேன் ஜெ. அப்படிப்பட்ட தருணத்தை அடையும் வரை நான் பயணிப்பது நிறைவின்மையாக இருக்க வேண்டும். அந்த நிறைவின்மை என்ன என்பதையும் நீங்கள் சொல்வது போல வகுத்துக் கொள்கிறேன். நிறைவின்மையை நோக்கியே பயணத்தைத் தொடர்கிறேன். இந்த விழிப்பு நிலையை நீங்கள் என்னில் விதைத்ததற்காய் நன்றி.
பொத்தாம் பொதுவாக ஒருவன் நிறைவின்மையை அடைக என்று செல்ல ஆரம்பித்தால் நீங்களே சொல்வது போல சலிப்பைத்தான் அடைவான். இயலாமை கொண்டவன் நிறைவினம்மையை அடைந்தேன் என்று சொல்லி நம்மை எரிச்சலடையச் செய்வான். ஆணவம் கொண்டவனோ அடுத்தவர்களை ஏளனம் செய்வான். நீங்கள் சொல்லும் நிறைவின்மையை அடைய எவ்வளவு பிரயத்தணப்பட வேண்டுமென்பதை, இந்த உலகில் மிகத்த் தீவிரமாக வினையாற்றிக் கொண்டிருக்கும் உங்களைப் பார்த்தாலே புரிகிறது. எழு எழு என்னும் உந்துதல் கொண்ட தவிப்பு; அந்த நிறைவின்மையை நோக்கி பயணித்துக் கொண்டிருக்கும் உங்களை முன்னிருத்தி தான் என் இந்த நிறைவின்மை என்னும் இலக்கை நிர்ணயித்துக் கொள்கிறேன். இந்த மேன்மையான புரிதல் என்னை வழி நடத்துவது திருப்தியளிக்கிறது ஜெ. இத்துனை விளாவரியாக எனக்கு விளக்கியதற்கு நன்றி அன்பு ஜெ.
கடைசியாக நீங்கள் விவரித்த விவேகானந்தரின் வரிகளை என்னுள் பதித்துக் கொண்டேன்.
அப்படியே இந்த வரிகளையும். ஆனால் சரியாக.
” ஒரு போதும் சென்றடையவில்லை என்ற நிறைவின்மையை அடைக!!!”
இரம்யா
அன்புநிறை ஜெ,
இன்று தங்கள் தளத்தில் ரம்யாவின் கடிதத்தை கண்டேன். ஒருபோதும் சென்றடையவில்லை எனும் நிறைவின்மையை அடைக எனும் ஒற்றை வரியைக் கொண்டு அந்த விவாதத்தை ஆரம்பித்தது நான்தான். தாங்கள் மிக தெளிவாக தங்கள் பதிலில் அந்த தொடருக்கான பொருளை தெரிவித்துவிட்டீர்கள். நான் உங்களின் பதில் எவ்வாறு இருக்கும் என்று உகித்தேனோ அவ்வாறே அமைந்தது.
அந்த வரிகள் செயலூக்கம் நிரம்பியவருக்கான வரி. எய்துதலில் நிறைவின்மை அடைந்தால்தான் மேலும் மேலும் என எழ முடியும். மிகச்சரியாக தாங்கள் விவரித்து உள்ளீர்கள் என்று ரம்யாவிடம் சொன்னேன். ஆனால் அவரால் அப்பொழுதும் இதை ஏற்க முடியவில்லை. அவரைப் பொருத்தவரை இதுவரை இருந்த இனிவரப்போகிற ஆன்மீகவாதிகள் ஞானிகள் அனைவரும் நிறைவின்மையுடன்தான் உள்ளார்கள், இருப்பார்கள் அதை யாரும் அடைய முடியாது என்கிறார். அவரிடம் என்னால் மேற்கொண்டு விவாதிக்க இயலவில்லை புரியவைக்கவும் முடியவில்லை. சூனியவாதத்தையும் நிறைவின்மையையும் இனைத்து பேசுகிறார். ஜெ வும் அவ்வாறுதான் சொல்கிறார் என்கிறார். ஆன்மிகத்தில் நிறைவை அடையமுடியாது என்பதில் அவர் ஆனித்தரமாக நம்புகிறார்.
ஆன்மிகத்திலும் செல்க செல்க எனும் ஊந்துதல்தான் நிறைவின்மை. வஜ்ராயன பௌத்தத்தில் முக்திநிலை அடைந்தவர்கள் மீண்டும் மீண்டும் என பிறவி எடுத்து மானுடர்கள் முக்திநிலை அடைய உதவுவார்கள். இவர்கள் போதிசத்வர்கள் என்று அழைக்கப்படுகின்றனர் இது நிறைவின்மையில் இருந்து வருவது. இயல்பானவர்கள் நிறைவை அடைநதுவிட்டால் எந்த செயலும் செய்ய முடியாது. ஆன்மீகவாதிகளின் நிறைவு என்பது நான் அதுவாகிறேன் என்பதுதான்.
அன்புடன்
ரா.பாலசுந்தர்
அன்புள்ள ஜெ
’ஒருபோதும் சென்றடையவில்லை என்ற நிறைவை அடைக’ என்ற வரி வாசிக்கும்போது ஏற்படுத்தாத அதிர்வை தொடர்ச்சியாக ஏற்படுத்திக்கொண்டே இருந்தது. பல எண்ணங்கள். ஏன் அப்படி? சென்றடைந்துவிடமுடியாதா என்ன? சென்றடைந்துவிடமுடியாது என்று தெரிந்தால் ஏன் முயலவேண்டும்? இப்படியெல்லாம் எண்ணிக்கொண்டிருந்தேன்
ஆனால் பின்னர் ஒரு நாள் ஒரு மின்னல்போலத் தெரிந்தது – சென்றடைந்துவிட்டோம் என்று தெரிந்தால் அதன்பின் இப்பேச்சுக்கே தேவையில்லையே. சென்றடைந்தவர் இதையெல்லாம் ஏன் யோசிக்கப்போகிறார்? சென்றடையவில்லை என்ற நிறைவின்மை ஒவ்வொரு சின்ன விஷயத்தையும் நாம் அடையும்போது கொள்ளவேண்டியது.அதுதான் மேலும் செல்லவைக்கும். மேலும் நம்மை விசைகொள்ளவைக்கும்
ஒருபோதும் சென்றடையவில்லை என்ற உணர்வை அவ்வாறு எண்ணமுடியும் காலம் வரை அடைக என்றுதான் அந்த வரிக்குப் பொருள். எங்கும் எளிதாக அமைந்துவிடாதே என்றுதான் அந்த வரி சொல்கிறது என்று எண்ணிக்கொண்டேன்
ரவிக்குமார்
வேதசகாயகுமார் அஞ்சலிக்கூட்டம்
2020 ஆம் ஆண்டின் இறுதிநிகழ்ச்சி வேதசகாயகுமாருக்கான அஞ்சலி. கோவை ரேஸ்கோர்ஸில் உள்ள ஸிய்மா அமைப்பின் அழகிய சிறிய கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. எண்பதுபேர் அமரலாம். ஆனால் நாற்பதுபேருக்கே அனுமதி. ஆகவே முன்னரே நிகழ்ச்சியை அறிவிக்கவில்லை. தளத்தில் மட்டும் ஓர் அறிவிப்பு போட்டோம். அணுக்கமான நண்பர்களே வந்திருந்தனர். 30 பேர்.
நானும் நண்பர்களும் யோகிஸ்வரனின் காரில் காஞ்சிகோயிலில் செந்தில்குமாரின் பண்ணைவீட்டில் இருந்து கிளம்பினோம். ஒன்பதரை மணிக்கு கோவையை சென்றடைந்தோம்.தொடர்ச்சியாக மழைத்தூறல் இருந்தது. நிகழ்ச்சி தொடங்கியதுமே மழை. ஒரு துயரநிகழ்வின் பின்னணியில் மழை அதை மேலும் ஆழ்ந்ததாக ஆக்கிவிடுகிறது.
நண்பர்கள் ஈரோட்டில் இருந்தும் கோவையிலிருந்தும் வந்து கூடினர். அரங்கு நிறைந்துகொண்டிருந்தது. அதுவரை நண்பர்களைச் சந்திப்பது ஓர் உற்சாகத்தை அளித்துக்கொண்டிருந்தது. பலரைச் சந்தித்து ஓராண்டு கடந்துவிட்டது. ஆனால் அரங்கின் முகப்பில் இருந்த வேதசகாயகுமாரின் முகம் அத்தனை உற்சாகத்தையும் அழித்து எடை ஒன்றை நெஞ்சில் ஏற்றி வைத்துவிட்டது.
வேலைநாள், முன்னரே அறிவிப்பு வெளியாகவுமில்லை என்பதனால் பலர் குறுஞ்செய்திகளில், அழைப்புகளில் வருத்தம் தெரிவித்துக்கொண்டே இருந்தனர். நினைவில் நின்றிருக்கும் கோவையின் நிகழ்ச்சிகள். நண்பர்களின் முகங்கள். வராத நண்பர்களின் முகங்களின் நினைவுகள்.
நண்பர் குவிஸ் செந்தில்குமார் விஷ்ணுபுரம் சார்பில் வரவேற்புரை சொன்னார். அவருக்கு வேதசகாயகுமாருடன் நெருக்கமில்லை. அவர் வேதசகாயகுமாரின் ஓருசில கட்டுரைகளையும் என் குறிப்புகளையும் வாசித்திருந்தார். ஆனால் எனக்கும் அவருக்குமான நெருக்கம் தெரியும்
நண்பர் ஈரோடு கிருஷ்ணன் வேதசகாயகுமார் போன்ற ஒருவர் நுண்ணிய அவதானிப்பால் எப்படி தன்னைப்போல ஒரு வாசகருக்கு அரிய வெளிச்சங்களை அளிக்கக்கூடும் என்று பேசினார். கால்டுவெல்லுக்கும் இரேனியஸ் அய்யருக்குமான ஒப்பீட்டினூடாக வேதசகாயகுமார் முன்வைத்த ஓர் அவதானிப்பிலிருந்து தொடங்கி நுண்ணிய பார்வைகள் ஒரு துறையிலிருந்து இன்னொரு துறைக்கு எப்படி கடக்கின்றன என்று விளக்கினார்
நரேன் வேதசகாயகுமாரின் சிறுகதை அவதானிப்புகளைப் பற்றியும் ஜி.எஸ்.எஸ்.வி நவீன் வேதசகாயகுமாரின் புதுமைப்பித்தன் ஆய்வுகளைப்பற்றியும் பேசினார்கள். சுருக்கமான அஞ்சலி உரைகள். ஆத்மார்த்தமான, போலிப்பூச்சுக்கள் இல்லாத சுருக்கமான மதிப்பீடுகள் மூன்று உரைகளுமே
இந்நிகழ்வில் பேசியவர்களில் கிருஷ்ணன் மட்டுமே வேதசகாயகுமாரை 2010ல் விஷ்ணுபுரம் விருதுவிழா நிகழ்ச்சியில் சந்தித்திருக்கிறார். பிறர் அவரை ஓர் அறிவியக்கவாதியாக மட்டுமே அறிந்தவர்கள். ஒருவகையில் அத்தகைய ஓர் அஞ்சலியே அவருக்கு அளிக்கப்படும் சிறந்த மறுகொடை என்று நினைத்துக்கொண்டேன்
நான் சுருக்கமாகவே பேசவேண்டும் என நினைத்தேன். ஆனால் பேசப்பேச நினைவுகள் பெருகின. அவருடைய ஆளுமை, அவர் கருத்துக்க்ளை முன்வைக்கும் முறை, அவருடைய கருத்துப்பரிணாமம் என்று அவ்வுரை பெருகிச் சென்றது. அதற்கு என் முன்னால் அமர்ந்திருந்த அத்தனை நண்பர்களும் எனக்குத்தெரிந்தவர்கள் என்பதே முக்கியமான காரணம்
இழந்த ஒருவரை சொல்லில் மீட்டுக்கொள்கிறோம். மறைவுகளின் போது துக்கம் விசாரிப்பது அதனால்தான். இழந்தவர்கள் இழக்கப்பட்டவரை சொல்லிச் சொல்லி மீண்டும் நிகழ்த்திக்கொள்கிறார்கள். மீண்டும் உயிர்ப்பிக்கிறார்கள். அவ்வாறு சொல்லில் எழுந்தவர்களுக்கு அதன் பின் சாவு இல்லை– நினைக்கப்படுவது வரை அவர்கள் வாழ்வார்கள்.
வேதசகாயகுமார் ஓர் அறிவியக்கவாதி. அவ்வாறன்றி வேறெவ்வகையிலும் அவர் தன் வாழ்க்கையை அமைத்துக்கொள்ளவில்லை. பிற எந்த அடையாளத்தையும் அவர் சூடிக்கொள்ளவில்லை. பேராசிரியர் என்றுகூட அவர் மேடையில் தன்னை முன்வைப்பதில்லை.முனைவர் பட்டத்தை போட்டுக்கொள்வதில்லை. அவர் அறிவியக்கம் என்னும் மாபெரும் சொல்வெளியின் ஒரு பகுதியாக ஆகிவிடுகிறார். அங்கே அழிவில்லாது வாழ்வார்
பேசி முடிந்ததும் விடுபட்டுவிட்டேன். முற்றிலுமாக. சிரிக்கவும் கேலிசெய்யவும் முடிந்தது. அதன்பின் வழக்கமான உரையாடல்கள், தழுவிக்கொள்ளல்கள். வேதசகாயகுமாரே ஏதோ வடிவில் உடனிருப்பதுபோல
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 845 followers

