Jeyamohan's Blog, page 1068

January 5, 2021

குமரப்பாவும் மொண்ணைப்பொருளியலும்

மொண்ணைச்சிந்தனை என ஒன்று உண்டு. எந்த அடிப்படைப் புரிதலும் இல்லாமல் எதையாவது வாசித்து தன்னம்பிக்கையுடன் எதையாவது பேசுவது, எழுதிவைப்பது. அப்படிப்பட்ட கட்டுரைகளில் ஒன்று தமிழ் ஹிந்துவில் வந்த ஜே.சி.குமரப்பா இன்றும் ஏன் தேவைப்படுகிறார்? காந்திகிராம கிராமியப் பல்கலைக்கழக பேராசிரியர் வ.ரகுபதி, என்பவர் எழுதியிருக்கிறார்.


ஜே.சி.குமரப்பா எனக்கு எப்போதுமே ஆர்வமூட்டும் மெய்யான பொருளியல் சிந்தனையாளர். ஆகவே அக்கட்டுரையை படித்தேன். ஒருவரி என்னை எரிச்சலின் உச்சத்துக்கே கொண்டுசென்றது.  “ஆண்டுதோறும் சுமார் 25 லட்சம் இந்தியர்கள் போதிய உணவின்றிப் பட்டினியில் சாகின்றனர் என்ற தகவல்களும் வருகின்றன”.


ஆமாம்,இன்றைய இந்தியாவில்! ஆண்டுக்கு 25 லட்சம் பேர், கால்கோடி மனிதர்கள், பட்டினியால் சாகிறார்களாம்! இது உண்மையென்றால் உலகிலேயே அதிகமானவர்கள் பஞ்சத்தில் சாகும் நாடு இந்தியாதான். எத்தியோப்பியப் பஞ்சம், உகாண்டாப் பஞ்சமெல்லாம் இதைவிடச் சிறியவைதான். என்ன ஒரு கணக்கு! இதன்படி இந்தியாவில் சுதந்திரத்திற்குப்பின்பு மட்டும் பதினைந்துகோடிபேர் பட்டினியால் செத்திருக்கிறார்கள். இதைத்தான் புள்ளிவிபரம் என நம் தலையில் இவர்கள் கட்டுகிறார்கள்.


இந்த மொண்ணைச் சிந்தனையாளர் ஏதோ சில பாடநூல்களை புரட்டி இந்த வாந்தியை எடுத்திருக்கிறார். தரவுகள் என மேடைப்பேச்சு செய்திகளை தட்டிவிடுகிறார். அல்லது ஒருவேளை ஏதாவது அரைவேக்காட்டு வெள்ளையன் அமெரிக்காவிலிருந்துகொண்டு ஆராய்ச்சி செய்து இந்த ‘உண்மையை’ கண்டுபிடித்தானோ என்னவோ.


காந்தியும், குமரப்பாவும் கள ஆய்விலிருந்து மட்டுமே சிந்தனை செய்தவர்கள். இந்தப்பேராசிரியர்கள் தங்கள் வீட்டிலிருந்து கல்லூரி செல்வதற்கு அப்பால் வெளியுலகையே அறியாதவர்கள். கல்லூரி வகுப்புக்காக, பல்வேறு நிதியுதவிகளுக்காக, கருத்தரங்குகளுக்காக வாழ்நாள் முழுக்க ஒரே ஆரம்பநிலைக் கட்டுரையை முடிவில்லாமல் திருப்பித்திருப்பி எழுதுவதற்கு அப்பால் ஏதுமறியாதவர்கள். காந்திய சிந்தனையின் தலையெழுத்து.


வெறுமே ஒரு காரில் இந்தியாவைச் சுற்றிவந்தாலே தெரியும் காட்சிவடிவ உண்மை ஒன்று உண்டு, இந்தியாவில் பட்டினி மறைந்துவிட்டிருக்கிறது. இன்று இந்தியாவின் அனேகமாக எல்லா மாநிலங்களிலும் இலவச தானியம், அல்லது ஒரு ரூபாய்க்கு உணவுத் தானியம் ரேஷனில் வழங்கப்படுகிறது. பெரும்பாலும் எல்லா மாநிலங்களிலும் பள்ளிகளில் மதிய உணவு வழங்கப்படுகிறது. எங்குமே அடிப்படை உணவுத்தேவை இல்லை. இந்தியாவின் உபரி தானிய உற்பத்தி இந்தியாவெங்கும் இலவச தானியம் அளிக்கப்பட்டபின்னர் மிஞ்சுவது.


இன்று ஒருவர் ஒருநாள் வேலைசெய்தால் இந்தியாவில் எந்த இடத்திலும் குறைந்தபட்சம் 300 ரூ கூலி உள்ளது. இமாச்சலப்பிரதேசத்தில் அதிகபட்சமாக 1500 ரூபாய். கேரளத்தில் 1000 ரூபாய். தமிழகத்தில் 700 ரூபாய். பிகாரிலும் வங்கத்திலும் தான் ஆகக்குறைவு. அந்த 300 ரூபாயிலேயே ஐந்துபேர் கொண்ட குடும்பத்திற்கு ஒருவாரத்திற்கு தேவையான ரேஷனை வாங்கிவிடமுடியும் ஒரிசாவில் அரிசி மட்டுமல்ல பருப்பும் இலவசம்!


இந்தச் சாதனை நரசிம்மராவ் காலம் முதல் சீராக கொண்டுவரப்பட்ட பொருளியல் சீர்திருத்தங்களின் விளைவு. தொழில்துறை வரிகள் கூடுகின்றன. அந்நிதியால் அரசு உபரி தானியத்தை கொள்முதல் செய்து ரேஷனில் இலவசமாக, அல்லது கிட்டத்தட்ட இலவசமாக ,அளிக்கிறது. தனிப்பட்ட முறையில் நான் இதை நரசிம்மராவின் சாதனை என்றே காண்கிறேன்


திரும்பத்திரும்ப இந்தியாவில் அலைந்துகொண்டிருக்கிறேன். செல்லுமிடமெல்லாம் அடிப்படைச் செய்திகளை நேரில் கேட்டுக்கொள்கிறேன். ஆனால் இங்கே ’இடதுசாரிகள்’ கூசாமல் புள்ளி விவரங்களை எடுத்துவிடுகிறார்கள். ஒரு சராசரி இந்தியனின் ஒருநாள் வருமானம் 12 ரூபாய் என்று ஒர் இடதுசாரி பேச்சாளர் நேற்று பேசக்கேட்டேன். இந்தியாவில் ஆண்டுவருமானம் 12000 ரூபாய்க்கு குறைவாக வாழ்பவர்கள் 70 கோடிபேர் என்று இன்னொருவர் முழங்குகிறார். இதுவும் அதேபோன்ற ‘தரவு’தான் ஆண்டுதோறும் 25 லட்சம் பேர் இந்தியாவில் பட்டினியால் சாகிறார்களாம்! இந்த கேனப்பொருளியலை செவிபுளிக்க கேட்டுக்கொண்டிருக்கிறோம்


பட்டினி அகன்றிருக்கிறது, ஆனால் வறுமை அகன்றிருக்கிறதா? வறுமையின் இலக்கணம் மாறியிருக்கிறது. இன்றைய வறுமை என்பது உணவு,ஆடை ஆகியவற்றில் இல்லை. செயற்கைத்துணி உற்பத்தி ஆடைத்தேவையை தீர்த்துவிட்டிருக்கிறது. உத்தரப்பிரதேசத்தின் சிற்றூரில்கூட நூறுரூபாய்க்குள் விற்கப்படும் ஆடைகள் குவிந்துகிடப்பதை கண்டிருக்கிறேன்.


இன்றைய வறுமை குடியிருப்பில் உள்ளது. கணிசமானவர்கள் இன்றும் மிகச்சிறிய, வசதியற்ற இல்லங்களில் குடியிருக்கிறார்கள். ஆனால் சென்ற சில ஆண்டுகளில் பிகாரின் மிகப்பிற்பட்ட கிராமங்களில்கூட சிறிய கான்கிரீட் வீடுகள் அரசு நிதியுதவியுடன் ஏராளமாக உருவாகி வந்திருப்பதை காண்கிறேன். பரிதாபமான குடிசைகள் இருப்பது நகர்ப்புறங்களிலேயே.


தூய்மையான சூழல் உரிய மருத்துவ வசதிகள் ஆகியவற்றில் வடஇந்தியாவில், குறிப்பாக பிகார், உத்தரப்பிரதேசம், மேற்குவங்கம் போன்ற பிற்பட்ட மாநிலங்களில் பெரிய குறைபாடு உள்ளது. உத்தரப்பிரதேசம் பிகார் மேற்குவங்கம் மத்தியப்பிரதேசம் போன்ற மாநிலங்களில் அரசுப் போக்குவரத்துவசதி மிகக்குறைவு.


மையநில மாநிலங்களில் மிகக்கடுமையான புரோட்டீன் பற்றாக்குறை உள்ளதை குழந்தைகளைப் பார்த்தால் காணலாம். அவர்கள் பால், ஊனுணவு மிகக்குறைவாகவே உண்கிறார்கள். தென்மாநிலங்களிலுள்ள பால்புரட்சி, பிராய்லர் புரட்சி அங்கில்லை. அவர்களின் மதநம்பிக்கைகளும் ஊனுணவுக்குத் தடையாகின்றன.


ஜார்கண்டின் மலைப்பகுதிகள், பிகார் உத்தரப்பிரதேசம் போன்ற மாநிலங்களின் உட்பகுதிகளில் பள்ளிக்கல்வி முறையாக இல்லை. தனியார் பள்ளிகள் பெருகி நடுத்தர வர்க்கத்தினர் அங்கே செல்கின்றனர். ஏழைகளுக்கான அரசு பள்ளிகள் சீரழிந்த நிலையில் உள்ளன. பல பள்ளிகளில் ஆசிரியர்களே இருப்பதில்லை. உள்ளூரில் எவரையாவது வேலைக்கு வைத்துவிட்டு ஆசிரியர்கள் நகரங்களில் இருந்துவிடுகிறார்கள்.


இந்தியா முழுக்க பார்க்கக்கிடைக்கும் ஒரு விஷயம், கிராமங்களில் விவசாயம் தவிர வேறு தொழிலே இல்லை என்பதுதான். கிராமங்களில் நிகழ்ந்த நெசவு, மரவேலை, இரும்புவேலை போன்ற நூற்றுக்கணக்கான தொழில்கள் தொழிற்சாலைகளுக்குச் சென்றுவிட்டன.


மறுபக்கம் விவசாயமும் அதிகமாக வேலைவாய்ப்பை அளிக்கும் இடத்தில் இல்லை. சென்ற நூற்றாண்டுபோல இன்றைய விவசாயக்கூலிகளுக்கு உணவும் குடிலும் போதாது. அவர்களுக்கு இன்றைய வாழ்க்கை கோரும் தேவைகள் பல. அதற்குரிய வருமானம் தேவை. அந்த ஊதியத்தை விவசாயத்தொழிலில் இருந்து அளித்தால் விவசாயம் நஷ்டமடையும்.


ஆகவே இந்தியாவெங்கும் விவசாயத்தில் இயந்திரங்கள் வந்துவிட்டன. கங்கைவெளி வயல்களெங்கும் டிராக்டர்கள்தான். இமாச்சலப்பிரதேச மலைச்சரிவு விவசாயத்திலேயே ஓரளவு மக்கள் உழைப்பு தென்படுகிறது. விளைவாக கிராமங்களிலிருந்து மக்கள் வெளியேற நேரிடுகிறது. தொழில் மற்றும் நகர்ப்புற கட்டுமானத்துறைக்கு கூலியாட்களின் தேவை ஏராளமாக உள்ளது


இவ்வாறுதான் இந்திய நகரங்கள் உப்பிப்பெருக்கின்றன. மாபெரும் சேரிப்பகுதிகளாக ஆகின்றன. எந்த வசதியும் இல்லாமல் புழுக்களைப்போல மக்கள் வாழ்கிறார்கள். இந்த வாழ்வில் அவர்களுக்கு எந்த கொண்டாட்டமும் இல்லை. மதம், பண்பாடு சார்ந்த எல்லா கொண்டாட்டங்களும் இடம்பெயர்கையில் மறைந்துவிடுகின்றன. அந்த இடத்தை குடி எடுத்துக்கொள்கிறது. குடியால், பலவகை போதைகளால் மட்டுமே நகர்ப்புற புலம்பெயர் தொழிலாளர்கள் அந்தவாழ்க்கையைத் தாக்குப்பிடிக்கிறார்கள்.


வடஇந்தியக்கிராமங்களுக்குச் சென்றால் எங்கும் மக்கள் நிகழ்த்தும் பஜனை ஒலித்துகொண்டே இருப்பதைக் கேட்கலாம். அது ஓர் உச்சம் என்றால் ஜாத்ரா என்ற கேலிக்கூத்து நிகழ்ச்சி இன்னொரு எல்லை. அந்த கேளிக்கைகளை நகர்ப்புறத்தில் காணமுடியாது. அந்த வெறுமை உழைப்பாளர்களை வெற்றுவாழ்க்கையை வாழச்செய்கிறது


இதுதான் இன்றைய ‘இந்திய வறுமை’ இதை என்ன செய்வதென்றே இங்கே பொருளியலாளர் சொல்லவேண்டும். அதற்கு மிக அதிகமாக பங்களிப்பாற்றக்கூடியவர்கள் குமரப்பாவின் வழிவந்தவர்கள். ஆனால் அவர்கள் 1940களின் புள்ளிவிவரங்களில் இருந்து வெளிவரவில்லை. இன்றைய இந்திய வறுமை நகர்ப்புறத்தின் செறிவு, வீழ்ச்சியுமே ஒழிய கிராமங்களில் பட்டினியால் செத்துக்கொண்டிருக்கும் ‘கண்ணுக்கே தெரியாத’ கால்கோடிபேர் அல்ல.


இதெல்லாம் எவருக்கும் சும்மா சென்று பார்த்தாலே தெரியும் நடைமுறை உண்மைகள்.நான்கு பாடநூல்களையும் அரைவேக்காட்டு வெள்ளையர்களின் ‘ஆய்வேடுகளை’யும் புரட்டிப்பார்த்து இந்தியாவில் ஆண்டுக்கு இருபத்தைந்து லட்சம்பேர் பட்டினியால் சாகிறார்கள் என எழுதுபவர்கள் உண்மையில் பிரச்சினைகளில் இருந்து பார்வைகளை திசைதிருப்புகிறார்கள். எந்த அடிமுட்டாளுக்கும் இவர்கள் எழுதுவது அபத்தம் என்று தெரியும். அதை எவரும் பொருட்படுத்தவும் மாட்டார்கள். பிறகென்ன?


அனைத்துக்கும் மேலாக மக்களின் மனநிலையில் உள்ள வறுமையை சுட்டிக்காட்டவேண்டும். பெரும்பாலான இந்திய கிராமவாசிகளுக்கு தூய்மை பற்றிய பிரக்ஞையே இல்லை. கிராமங்கள், தெருக்கள் குப்பைமலைகளாலானவை. ஆண்களில் பெரும்பாலானவர்கள் ஏதேனும் போதைக்கு அடிமையானவர்கள். தெற்கே குடி, வடக்கே மாவா. ஆகவே சேமிக்கும் வழக்கம் அடித்தளங்களில் அனேகமாக இல்லை. கணிசமானோர் குழந்தைகளை படிக்கவைப்பதில்லை. அக்கறையே காட்டுவதில்லை


இதெல்லாம்தான் இந்தியா சந்திக்கும் சவால்கள். இச்சவால்களை எதிர்கொள்ளும்படி அரசையும் மக்களையும் செலுத்துவதே பொருளியலறிஞர்கள் செய்யவேண்டியது. ஆனால் இங்கே பொருளியல் பேசுபவர்கள் இதைப்போல கேனப்பொருளியலாளர்களாக உளறிக்கொண்டிருக்கிறார்கள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 05, 2021 10:35

புத்தாண்டு- கடிதங்கள்


2021- புத்தாண்டில்

அன்புள்ள ஜெ,


புத்தாண்டுக் கொண்டாட்டங்களை கண்டேன். நான் இந்த கொண்டாட்டங்களில் எப்போதுமே மானசீகமாக கலந்துகொள்பவள். இவ்வாண்டு கொண்டாட்டங்களில் பல பெண்களின் முகங்கள் தெரிந்தது ஆச்சரியமாக இருந்தது. ஆண்களும் பெண்களும் கலந்துகொள்ளும் ஒரு புத்தாண்டுக்கொண்டாட்டம், குடும்பச்சூழலுக்கு வெளியே தமிழ்நாட்டில் நடக்கமுடிவதே ஆச்சரியம்தான். வரும் ஆண்டுகளில் கலந்துகொள்ளவேண்டும்


லட்சுமி ராம்


 


அன்பு ஜெ,


உங்களுக்கு வாரமொரு கடிதம் எழுதப் போகிறேன் என்று அறிவிக்கிறேன். அதற்கு இப்போதே மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.


நண்பர் ஆஸ்டின் சவுந்தருடன் அவ்வப்போது தொடர்பில் உள்ளேன். செம்மையாக விஷ்ணுபுர இலக்கிய வட்ட செயல்பாடுகளை ஒருங்கிணைக்கிறார். எப்போதுமே நீங்கள் திறமையான செயலாக்கமுள்ள ஆர்வலர்களை ஈர்த்து வருகிறீர்கள். 2009’ல் இருந்து நான் இதனைக் கவனித்து வருகிறேன். ஒரு சிலர் வந்து போனாலும் தொடக்கம் முதல் இருக்கும் ஒரு குழு முதல் இப்போதும் செயல்படுகிறது. வியப்பிற்குரியது அது. சவுந்தர் வெகு காலம் உங்களுடன் இணைந்து செயல்படுவார் என்று நிச்சயம் சொல்ல முடியும்.


உங்களுக்கும் உங்கள் நண்பர் குழுவினருக்கும் புத்தாண்டு வாழ்த்துக்கள்.


 


ஹியூஸ்டன் சிவா


 


 


என் அன்பு ஜெ,


இந்த வருடத்தின் என்னுடைய இறுதி கடிதம் இது. நாளை இன்னொரு நாளேயானாலும் காலம் என்ற பரிமாணத்தில் “நான்” என்பதைத் தொகுத்துக் கொள்ளும் கருவியாக இந்த வருடக் கணக்குகள் பயன்படுகின்றன. பள்ளிப் பருவத்தினின்று ஒவ்வொரு வருடமும் என்னைத் தொகுத்துக் கொண்டு நீண்ட கடிதங்களை எனக்கே எழுதிக் கொள்வது வழக்கமெனக்கு. பெரும்பாலும் உணர்வுகளும், ஆசைகளும், இலக்குகளும் நிரம்பி நான்’ என்ற ஒன்று எப்படி இனி இருக்க வேண்டும் என்பதாக எழுதுவேன். ஒவ்வொரு வருடமும் எழுதுவதற்கு முன் பழையதையெல்லாம் படித்துப் பார்ப்பேன். கடந்த மூன்று வருடங்களாக நான் அவ்வாறு ஏதும் எழுதவில்லை. எழுதியவைகள் சிலவும் ஒரிரு பத்தியில் இலக்கடவதைப் பற்றி மட்டுமே. பள்ளியில் கல்லூரியில் எழுதிய உயிரோட்டமான வரிகள் கூட இந்த ஐந்து வருடங்களில் நான் ஒரு முறையேனும் எழுதவில்லை. திரும்பத்திரும்ப தேர்வுக்கான புத்தகங்களையே தொடர்ந்து படித்து ஒரு சுழற்சியில் சிக்கி சற்றே சித்தமிழந்தேன். போதாக்குறைக்கு குடும்பமும் சுற்றமும் கொடுத்த அழுத்தத்தின் ஆழத்திற்கு தள்ளப்பட்டு மன அழுத்தத்தை அணுவணுவாக உணர்ந்தேன். ஒருமுறை அறையிலிருக்கும் அனைத்து புத்தகத்தையும் கீழே தள்ளிவிட்டு கதறி அழுது கொண்டிருந்திருக்கிறேன். “படிப்பதையும் எழுதுவதையும் தவிர எனக்கு நீ ஒன்னுமே குடுக்கலையே. இதுல நான் வெற்றி பெற முடியலனா நான் வேற எதுக்கும் லாயக்கில்லை” என்று கடவுளிடம் கூறி அழுது கொண்டிருந்தேன். கூடவே இருந்து அனைத்து உதவிகளையும் பெற்றுக் கொள்ளும் நண்பர்கள், வெற்றி பெற்றதும் ஏளனம் செய்வதும், தொடர்பைத் துண்டிப்பதையும் பார்த்து வியந்து போயிருந்தேன். தேவைகளுக்காக மட்டுமே பழகி துரோக போலி அன்புகளை உதிர்க்கும் மனிதர்களைப் பார்த்திருந்த உலகியல் அதிர்ச்சி ஒருபுறம். இன்னும் ஆழமான நான் அறிந்த ஓர் உணர்வுகளின் வீழ்ச்சியின் ஆழத்திலிருந்து என்னை மீட்டெடுத்து அணைத்துக் கொண்டவை உங்கள் எழுத்துக்கள் தான் ஜெ.


அதுநாள்வரை நான் எழுப்பிக் கொண்ட தத்துவார்த்த ரீதியிலான கேள்விக்கு சாவியாக, எழுப்பிக் கொள்ளாத கேள்விக்கான வாசலாகவிஷ்ணுபுரம் அமைந்தது. எத்துனை எளிமையாக எனக்கு என் வாழ்வை விளங்க வைத்தீர்கள் ஜெ. விஷ்ணுபுரத்தின் எத்துனை தெரு முனைகளில் கதறி அழுதிருந்தேன். என்னை நான் அஜிதருக்கு ஒப்பிடுமளவு ஞானமில்லை எனினும் இந்த வாழ்க்கையில் கடவுள் எனக்கு கொடுத்தது கல்வி ஒன்று தான். முதல் மதிப்பெண் எடுப்பது ஞானமில்லை எனினும் அதை ஞானமெனவே கொண்டேன். அசிதரின் தருக்கங்களில் தான் எது ஞானமென்றுணர்ந்தேன். “அறிவது எதை” என்ற வரிகள் எனக்கு நீங்கள் கொடுத்த ஞானமொழி. பின்னும் அதில் உங்களை சித்தனாகவும் என்னை காசியபனாகவும் உருவகித்திருந்தேன். காசியபன் தேடி அடைந்த ஞானமான சித்தனைப் போலவே உங்களின் எழுத்துக்கள் எனக்கு. எழுத்துக்களைத் தாண்டியும் உங்களை நான் உணர்கிறேன். நீங்கள் என்னிடம் பேசாமலேயே கூட எனக்கான சொற்களை உங்களிடமிருந்து உணர்கிறேன். அசிதர் ஞானமுள்ள தர்ககத்தை


முன்வைத்து அதில் வெற்றி பெற்று அதன்பின் நிறைவின் உச்சியில் நிறைவின்மையைப் பற்றி பேசிக் கொண்டிருந்தபோதெல்லாம் சித்தர் என்ற சூன்யம் சிரித்துக் கொண்டிருப்பதாகக் கண்டேன். விஷ்ணுபுரம் முடிக்கையில் என் ஒட்டுமொத்த வாழ்வைச் சுற்றி காலம் என்பது வெறும் ஒரு பரிமாணமாக நின்று பகடிசெய்து கொண்டிருப்பதைக் கண்டேன். நான் சென்று சேர வேண்டியது சூனியமெனவும் அது சென்றடையும் வரை நிறைவின்மையும் இருக்க வேண்டுமென்று கொண்டேன். இந்த இரண்டின்மையிலும் நிறைவின்மையிலும் எங்குமே நீங்கள் செயலற்ற தன்மையை போதிக்கவில்லை. தீவிர செயல்! ஒன்றே அது சென்று சேரும் புள்ளி என்று கொண்டேன்.


அங்கிருந்து இந்த வருடம் முழுவதுமாக நீங்களே நிறைந்திருக்கிறீர்கள் என் இந்த வாழ்வுப் பயணத்தில். மேலும் மேலும் உங்களை எடுத்து நிறைத்துக் கொண்டிருக்கிறேன். உலகியல் ரீதியாக இனியும் யாரும் எதிர்பாராத அளவு பொருளாதார சுயாதினத்திற்காகவும் என் இலக்கை ஒட்டிய ஒரு சிறு வெற்றி என்பது எனக்கு உலகதுக்க விடுதலையை


அளித்திருக்கிறது. இதற்கு மேலும் உலகயல் இலக்கை  நிறுத்திக் கொள்வதைப் பற்றி இன்னும் முடிவெடுக்கவில்லை. ஆனால் அது ஒரு அழுத்தமாகவும் இல்லை. இந்த ஆண்டின் எனக்கு மிகப் பிடித்த, திருப்தியான விடயம் உங்களை அதிகம் வாசித்ததும் உங்களுக்கு எழுதியது மட்டுமே.


இறுதியாக நற்றுணை என்ற சிறுகதையைப் பற்றி எழுதி இந்த வருடத்தை நிறைவு செய்கிறேன் ஜெ.


எனக்கு மிகவும் நெருக்கமான சிறுகதை. இந்த நூறு சிறுகதைகளில் நீங்கள் எழுதிய சாதனைப் பெண்களில் ஒருவர் அம்மிணி தங்கச்சி. இரண்டாவது என்று வரலாற்றியல் சாதனைகளில் இடம் பெற்றாலும் தான் கட்டுடைத்த பெரும்பாலான விடயங்களில் முதல் ஆளாக இருந்திருப்பவர். நீங்கள் சொல்வது போல மகத்தான முதல்காலடி, ஒருவகை எல்லை மீறல், வரலாற்றின் விசை அவர். ஆனால் கேசினியைப் பற்றி கதைசொல்லி குழம்புவதாகக் காட்டிய இடத்தில் சற்றே நின்றேன். பின்னும் நீங்கள் சொன்ன இந்த வரிகளை “வரலாறு என்பது ஒரு மாபெரும் சக்தி. அது நம் வழியாகச் செல்கிறது. நாமனைவரும் பெருந்திரளாக அதை நம்மில் ஏற்றிக் கடத்துகிறோம். அம்மிணித் தங்கச்சி போன்ற சிலர் தன்னந்தனியாக அதை தாங்கி கடத்துகிறார்கள். பல்லாயிரம் வால்டேஜ் அழுத்தமுள்ள மின்சாரம் அந்த சிறு கம்பிகள் வழியாகச் செல்கிறது. அந்தக் கம்பி கொதிக்கும், உருகும், அறுந்துவிடக்கூடும். அது தொடுபவர்களை கொல்லும், அருகிருப்பவரை தகிக்க வைக்கும். அது ஒரு கொடூரமான தெய்வத்தால் ஆட்கொள்ளப்படுவதுபோல.”


ஓட்டிப் பார்த்தேன். சிறுவயதிலிருந்தே நான் தனியன் தான். அல்லது அப்படி என்னை நானே ஆக்கிக் கொண்டேன். பெற்றோரிடமிருந்தே என்னை துண்டாக்கிக் கொண்டேன். படிப்பதைத் தவிரவும் எந்த ஒன்றும் எனக்கு முக்கியமில்லை எனக் கொண்டேன். விடுதியில்தங்கிக் கொள்கிறேன் என்று அடம் பிடித்து சொந்த ஊருக்கு குடும்பமே செல்லும்போது ஊட்டியில் தங்க ஏழாவதில் முடிவெடுத்தேன். இன்றும் அந்த வயதில் எப்படி முடிவெடுத்தேன் என்பது ஆச்சரியமே. அம்மிணி அளவுக்கு சாதனைகள் இல்லை எனினும் படிப்பில், பேச்சில், எழுத்தில் என பள்ளி வாழ்வின் சாதனைகள் என நான் கொண்டவை யாவும் கேசினியைப் எனும் யஷியை உணரவைக்கக் கூடியது. அப்படி ஒரு யஷியை எனக்கு “காவல் சம்மனசு/தேவதை” என்ற பெயரில் சிஸ்டர் மார்செலின் அவர்கள் எனக்கு அறிமுகப் படுத்தினார்கள். அது எனக்கான நான் உருவாக்கிக் கொள்ளக் கூடிய தேவதையாக எனக்கு அறிமுகப்படுத்தினார். நான் நித்தமும் பேசிக் கொண்டிருப்பேன், என்னை அதிகாலை எழுப்புவதும், சிறந்த முடிவெடுப்பது ம், அதற்கு உடனிருப்பதும், நான் கேட்கும் அனைத்து வெற்றியையும், கிடைக்காத அன்பைத் தருவதும் அது தான். என் அழுகையும், சிரிப்பும், பகிர்வும் அதனுடன் தான் இருந்திருக்கிறது. தனியனான எனக்கான கேசினி அது. பின்னாளில் உளவியல் ரீதியாக,  நாத்திக கேள்விகளுக்கு அதை உட்படுத்தி அதன் இருப்பையும் கேள்விக்குள்ளாக்கி தொலைத்து விட்டேன். என் கேசினியை இந்த வருடம் நீங்கள் மீட்டுத்தந்திருக்கிறீர்கள். கடந்த ஐந்து வருடங்களாக என்னை விட்டு விலகியிருந்ததே அந்த உள்ளுணர்வின் ஞானம் தான். வெற்றிகளை ஈட்டவோ, அசாத்திய சாதனைகளைப் புரியவோ, வரையறுக்கப்பட்ட ஒன்றைத் தாண்டி வெளிவரவோ, தோல்விகளைச் தாங்கவோ, இயலாமையைப் போக்கவோ மட்டும் அல்ல…. என்னையே நான் ஆழமாக அவள் வழி உணர்வதற்கான கேசினியை மீட்டுத்தந்திருக்கிறீர்கள். என்னிலிருந்து பிரிந்த இன்னொரு “நான்” ஐ என்னிடம் சேர்த்தார் போல அமைந்தது நற்றுணை சிறுகதை.


நற்றுணைக்கு மட்டுமல்ல ஜெ. இந்த வருடத்தின் அனைத்து சிறுகதைகள் கட்டுரைகள் அனைத்திற்கும் நன்றி. மேலும் மேலும் உங்களுக்குள் ஆழ பயணிக்க விரும்புகிறேன். நன்றி.


இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஜெ.


என்றும் அன்புடன்


இரம்யா.


 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 05, 2021 10:34

விஷ்ணுபுரம் விருதுவிழா காணொளி


விஷ்ணுபுரம் விருதுவிழா 25-12-2020 அன்று நடைபெற்றது. சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு 11 ஆவது விஷ்ணுபுரம் விருதை வழங்கினோம். அந்நிகழ்வின் காட்சிப்பதிவு.


ஒளிப்பதிவு படத்தொகுப்பு: ஆனந்த் குமார் [ananskumar@gmail.com]

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 05, 2021 10:34

பூரிசிரவஸின் கதாபாத்திரம்


அன்புள்ள ஜெ


வெண்முரசின் நாவல்களை இப்போதுதான் வாசித்துக்கொண்டிருக்கிறேன். சின்னஞ்சிறிய கதாபாத்திரங்கள் எப்படியெல்லாம் வளர்கின்றன என்று பார்க்கிறேன். அதில் பூரிசிரவஸ் முக்கியமானவன். அவனை சோமதத்தி என்று ஒரே இடத்தில் மகாபாரதம் சொல்கிறது. அதன்பின்னர் செய்தியே இல்லை. ஆனால் இறுதியில் போர்க்களக்காட்சியில் மிகமுக்கியமான திருப்புமுனை அவனுடைய சாவில்தான் நிகழ்கிறது.


அந்தக் கதாபாத்திரத்தை நீங்கள் ஏன் அவ்வாறு பிரம்மாண்டமாக கட்டிக்கொண்டுவருகிறீர்கள் என்று பார்த்தபோதுதான் நான் மூலமகாபாரதத்தை எடுத்து அந்தக் கதாபாத்திரத்தின் பரிணாமத்தைப் பார்த்தேன். நீங்கள் கதாபாத்திரங்களை எப்படி அமைக்கிறீர்கள் என்று புரிந்துகொண்டேன். நீங்கள் கடைசியிலிருந்து ஆரம்பிக்கிறீர்கள். கடைசியில் போரில் அவர்கள் எந்த வகையில் முக்கியமானவர்கள் என்று பார்க்கிறீர்கள். அங்கிருந்து முன்னால் வந்து அந்தக்கதாபாத்திரத்தை அமைக்கிறீர்கள்.


ஒட்டுமொத்தமாகவே எல்லா கதாபாத்திரங்களும் conceive செய்யப்பட்டுள்ளன. என்னைப்போன்றவர்கள் வாசிக்கும்போது கூடவே கங்கூலி மகாபாரதத்தையும் சென்று பார்க்கிறோம். இது அங்கே இல்லையே, இது மாறியிருக்கிறதே என நினைக்கிறோம். ஏனென்றால் முழுமகாபாரதத்தையும் நானெல்லாம் வாசிக்கவில்லை. எந்தக்கதாபாத்திரத்துக்கும் முழுச்சித்திரமும் எங்கள் மனதில் இல்லை.  இந்த சிக்கல் மகாபாரதத்தை ‘கொஞ்சம் கொஞ்சம்’ தெரிந்துகொண்டு வெண்முரசை வாசிப்பவர்களுக்கு இருக்குமென நினைக்கிறேன்


பூரிசிரவஸ் பாரதப்போரின்போது கொல்லப்படுகிறான். அங்கே அவன் ஒரு tragic hero . ஒரு வகையான பரிதாபமான சாவு. அர்த்தமே இல்லாத சாவு. அந்த எல்லையிலிருந்தே இங்கே அவனுடைய தொடக்கம் அமைக்கப்பட்டிருக்கிறது. பூரிசிரவஸ் இளைஞனாக இருக்கிறான். மலைக்குடிகளில் பிறந்து தன்னுடைய குடியின் வெற்றிக்காக கனவு காண்கிறான். ஒரு நகரை கட்டி எழுப்புகிறான். ஆனால் வீண்சாவு அடைகிறான்


பூரிசிரவஸின் தத்தளிப்புகளும் அலைக்கழிப்புகளும் ஆழமானவை. அவனுக்கு வாழ்க்கையின் எந்தச் சந்தர்ப்பத்திலும் சொந்தமாக தெளிவான முடிவு எடுக்க முடியவில்லை. இன்றைய இளைஞனைப்போல இருக்கிறான். அங்குமிங்கும் அலைந்துகொண்டே இருக்கிறான். பெரியவீரன், ஆனால் வயதே ஆகாத சின்னப்பையன் போலவும் இருக்கிறான்


அவன் ஏன் சின்னப்பையன் போல இருக்கிறான் என்று சிந்தித்தபோது எனக்கு இரண்டு விடைகள் வந்தன. ஒன்று, அவன் மலைக்குடி. அவர்கள் இன்னும் முழுமையாக பண்பாட்டுக்குள் வரவில்லை. சதி சூழ்ச்சி அரசியல் எதுவும் அவர்களுக்கு தெரியவில்லை. ஆகவே அவர்கள் ஒரு குடியாகவே வயதே ஆகாத இளைஞர்களாக இருக்கிறார்கள்


இன்னொன்று சொல்லவேண்டுமென்றால் அவன் தன் வாழ்க்கையின் கடைசியில் பரிதாபமாகச் சாகப்போகிறான். ஒரு டிராஜிக் ஹீரோ. அவ்வாறு அவன் இருக்கவேண்டுமென்றால் அவனை இப்படி lovable youth என்று காட்டுவது அவசியம். உண்மையில் மகாபாரதத்தில் அப்படி இல்லை. அதில் சோமதத்தி சாஸ்திரங்கள் அறிந்தவனாகவே இருக்கிறான். நியாயம் சொல்கிறான். ஆனால் இங்கே பூரிசிரவஸ் இளமையான துடிப்பான அப்பாவியான கதாபாத்திரமாக இருக்கிறான்


பூரிசிரவஸும் சாத்யகியும் விதியால் கட்டப்பட்டிருக்கிறார்கள். அது போரில்தான் தெரியவருகிறது. அது போரில் நடந்த தற்செயல்தான். ஆனால் அதை விதி என்று கொண்டு அவர்கள் இருவரையும் தொடக்கம் முதலே இணைத்து இணைத்து பின்னிக்கொண்டே இருக்கிறது வெண்முரசு. பூரிசிரவஸின் விதி சாத்யகியால் முடிவதை அறிந்தபின் படிக்கும்போது ஒவ்வொரு காட்சியிலும் ஒரு பதற்றம் வருகிறது


பூரிசிரவஸின் கதாபாத்திரம் எனக்கு ஏன் இந்த அளவுக்கு ஒரு பதற்றத்தை அளித்தது என்று எண்ணிப்பார்த்தேன். முக்கியமான காரணம் அவன் என்னைப்போலத்தான். சாமானியனான ஒருவன். மகாபாரதத்தில் எல்லாருமே வீரர்கள் ஞானிகள். நடுவே சர்வசாதாரணமான ஒருவனாக அவன் இருக்கிறான். அவனுக்கு எந்த வஞ்சமும் இல்லை. எந்த பேராசையும் இல்லை. அவன் ஆசைப்படுவதெல்லாம் நாட்டின் நலன் மட்டும்தான்


மகாபாரதம் போன்ற மாபெரும் அழிவுகளின்போது பூரிசிரவஸ் போன்றவர்கள் அடித்துச்செல்லப்பட்டுவிடுவார்கள். அந்த climax twist அவனுக்கு அமையாமல் இருந்திருந்தால் கதையில் அவனுக்கு ஒரு பெயர் மட்டும்தான் மிஞ்சியிருக்கும். இப்போதுகூட மகாபாரத டிவி சீரியல்கள் எதிலும் பூரிசிரவஸ் இருப்பதுபோலத் தெரியவில்லை. இதுதான் பூரிசிரவஸின் கதாபாத்திரமா என நமக்கு தெரியாது. ஆனால் அவனை இந்தக்கதை இந்த வடிவில் immortalize செய்துவிட்டது


நான் இப்போது சொல்வளர்காடு படித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் இதுவரை வந்த கதாபாத்திரங்களில் என் மனசுக்கு மிக உகந்த கதாபாத்திரமென்றால் அது பூரிசிரவஸ்தான்


ஜி.சரவணன்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 05, 2021 10:30

ஆ.மாதவன் -அஞ்சலி


மூத்த தமிழ்ப்படைப்பாளி ஆ.மாதவன் இன்று காலமானார். காலமானார் என்ற சொல் அறிவியக்கவாதிக்கே மிகவும் பொருந்துவது. இனி அவர் தமிழிலக்கியம் என அறியப்படும் காலத்தின் ஒரு பகுதி.


திருவனந்தபுரம் சாலைத்தெருவை மையமாக்கி கதைகளை எழுதிய ஆ.மாதவன் கடைத்தெருவின் கலைஞன் என அழைக்கப்படுகிறார். 2010 ஆம் ஆண்டில் விஷ்ணுபுரம் விருது நிறுவப்பட்டபோது முதல் விருது அவருக்கு வழங்கப்பட்டது. அவரைப்பற்றி நான் எழுதிய கடைத்தெருவின் கலைஞன் என்னும் நூலும் வெளியிடப்பட்டது


ஆ.மாதவனுக்கு அகவை87 .சென்ற சில ஆண்டுகளாகவே நோயுற்றிருந்தார். அவருடைய மருமகன் எனக்கு அனுப்பிய செய்தி இது


பெருமதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு,


வணக்கம். எங்கள் தாய்மாமா – திரு. ஆ. மாதவன் அவர்கள், திருவனந்தபுரத்தில்

இன்று பிற்பகல் 12.30 மணியளவில், உடல் நலக் குறைவால், காலமாகி விட்டார்கள்.


நாளை (06.01.2021) காலை 10 மணியளவில் நல்லடக்கம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.


அவரின் மகள் (கலா)  – மருமகன் (மோகன்) தொடர்புக்கு : 0091 80862 34370 /



0091 99461 08350.


அன்புமிக்க மரியாதையுடன்,

சி. கோவேந்த ராஜா.

கோ.சி. ஆனந்த ராஜா.




ஆ.மாதவன் விஷ்ணுபுரம் விருது 2010- நினைவுகள்


திராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி
திராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி 2
திராவிட இயக்கத்தில் இருந்து நவீனத்துவம் வரை…ஆ.மாதவன் பேட்டி 3
விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா 2010
மாதவம் 2
மாதவம்
தெரு மனிதர்கள்
தெருவெனும் ஆட்டம்
காந்தளூர்ச்சாலையின் கலைஞன்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 05, 2021 05:32

January 4, 2021

அரசன்


பனிப்பிரதேசங்களில் ஸ்டெஜ் என்னும் இழுவைவண்டி ஏன் பயன்படுத்தப்படுகிறது, ஏன் சக்கரங்கள் இல்லை? அதே போன்ற இன்னொருவினாதான் ஏன் குதிரைகளுக்குப் பதிலாக நாய்கள்?


அதற்கான விளக்கத்தை நெடுநாட்களுக்கு முன் யாக்கவ் பெரெல்மானின் நூலில் படித்தேன். ஆனால் அறிவியல்விளக்கம் என்னதான் கற்பனையை விரித்தாலும் ஓர் எல்லைவரைத்தான். அது வாழ்க்கையில் எங்கோ நம் அனுபவமென நிகழ்கையில்தான் அது ஒரு இயற்கைத்தரிசனமாக விரிகிறது.


ஊற்றுகளின் அருகே நீரை மிகையாக உறிஞ்சி ஓங்கிவளரும் மரங்கள் இருப்பது நீர் அங்கே கிடைப்பதனால்தான் என்பது நம் இயற்கையான புரிதல். நீர்ச்சுனைமேல் நிழலைப்பரப்பி நீரை ஆவியாகாமல் பாதுகாக்க காடு எடுக்கும் முயற்சி அது என்பது சூழியல் அறிவு. ஆனால் ஈரட்டிக்காட்டில் சுனை ஒன்றைச்சுற்றி நீர்மருதமரங்கள் அடிமரம் செழித்து, கிளைகோத்து,இலைக்கூரை பரப்பி நீரூற்றை இருட்டுக்குள் மறைத்து வைத்திருப்பதைக் கண்டபோது காடு அதை கைகளால் பொத்திவைத்திருப்பதாகத் தோன்றி மெய்சிலிர்ப்படைந்தேன்


உருளும் சக்கரங்கள் இழுவிசையை பின்னுக்கு உந்தும் விசையாக மாற்றித்தான் முன்னகர்கின்றன. அந்த விசை பனிப்படலம்மீது வண்டியின் எடையுடன் கூடுதல் எடையாக சேர்ந்துவிடுகிறது. குதிரைகள் குளம்புகளின் மிகச்சிறிய பகுதிக்குள் உடல் எடையை செலுத்துகின்றன. பனிப்பாளத்தை அவை பிளந்துவிடும் என்கிறார் யா பெரெல்மான்.


டிஸ்னியின் டோகோ என்ற படத்தை பார்த்துக்கொண்டிருந்தேன். ஸ்லெட்ஜ் வண்டியை நாய்கள் இழுத்துச் செல்கின்றன.வரைகலையின் சாத்தியங்களை திரைப்படச்செயல்பாட்டாளனாக இன்று அறிந்திருக்கிறேன். ஆனாலும் என்னை ஒரு நேரடியனுபவம் என உள்ளிழுத்துக்கொண்டது அந்தக்காட்சி. நான் படம்பார்த்துக்கொண்டிருப்பதையே உணரவில்லை. இசையை கேட்கவில்லை, சூழலைக்குட உணரவில்லை.அங்கிருந்தேன், அவர்களுடன்.


உறைந்த ஏரியின் பனிப்பாளம் சவுக்கடிச் சொடுக்கின் ஓசையுடன் நீண்ட கோடுகளாக விரிசலிட்டுக்கொண்டே இருக்கிறது. அந்த அறைகூவலை எச்சரிக்கையை எதிர்கொண்டு நாய்கள் விரைந்தோடுகின்றன. ஒரு மாபெரும் சதுரங்கக் களத்தில் நாய்களும் மனிதர்களும் தங்களையே காய்களென வைத்து கண்ணுக்குத்தெரியாத மாபெரும் ஆற்றல் ஒன்றுடன் விளையாடுகிறார்கள். வெல்கிறார்கள்.


திரைப்படம் என நிபுணர்கள், அறிவுஜீவிகள் அவ்வப்போது சிலவற்றைச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். நான் அவ்வாறு கொண்டாடிய பல படங்களை இன்று பேசுவார் இல்லை.காலத்தில் நீடிப்பவை நிகர்வாழ்வனுபவமாக ஆகிய, வாழ்வனுபவத்தை கனவால் கடந்து சென்ற சிலபடங்களே. இன்று கண்ணை நிறைப்பதே சினிமா என நினைக்கிறேன். டோகோ அத்தகைய படம்.


லியனார்ட் செப்போலா, தன் நாய் டோகோவுடன்

அலாஸ்காவின் பனியில் சறுக்குவண்டிகளை இழுக்கும் டோகோ என்ற நாயின் கதை இது. இதன் வரலாற்றுப் பின்னணி, அதை திரைப்படம் ஒட்டியும் வெட்டியும் செல்லும் விதம் பற்றியெல்லாம் ஆங்கிலத்தில் மிக வரிவாகவே எழுதிவிட்டார்கள். டோகோ உண்மையாகவே வாழ்ந்த நாய். 1913 முதல் 1929 வரை வாழ்ந்தது. லியனாட் செப்பாலா என்னும் நாய்பயிற்றுநரால் வளர்க்கப்பட்டது.


மெய்வாழ்க்கையில் டோகோ ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில் முதன்மை வகித்தது. 1925ல் அலாஸ்காவில் நோம் என்ற ஊரில் டிப்தீரியா நோய் தாக்கியது. அவர்களுக்குரிய உயிர்முறி மருந்தை எவ்வகையிலும் கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்பட்டது.20 நாய்வண்டிகளால் ஐந்தரை நாட்களில் 1085 கிலோமீட்டர் தொலைவுக்கு அந்த மருந்து ஜனவரி மாதத்தின் உறைந்த பனிப்பாளங்களாலான அலாஸ்காவின் நிலம் வழியாக கொண்டுசெல்லப்பட்டது. இது அலாஸ்கா சீரம் விரைவுப்பயணம் என்று செய்திகளில் புகழ்பெற்றது. அந்த பயணத்தின் முதன்மைநாய் என டோகோ இன்று கருதப்படுகிறது


இந்த தொடரோட்டத்தில் பங்கெடுத்த இன்னொரு நாய் பால்டோ. கடைசியாக நோம் நகரைச் சென்றடைந்தது அந்த குழுதான்.அதன் ஓட்டுநர் கன்னர் காசனும் பால்டோவும் பெரும்புகழ்பெற்றனர். நியூயார்க் நகரில் பால்ட்டோவுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இந்தப்படம் அந்த வரலாற்றில் விடுபட்ட டோகோவுக்கு உரிய இடத்தைக் கொடுக்கும் நோக்கம் கொண்டது. இது டோகோவையும் அதன் பயிற்றுநரான லியனாட் செப்பாலாவையும் கதைநாயகர்களாக முன்வைக்கிறது.


டோகோவின் மெய்வரலாறு இணையத்தில் உள்ளது. இன்று டோகோ ஓர் அரிய நாய்வம்சாவளியாக கருதப்படுகிறது. இந்தப்படத்தில் டோகோவாக நடித்திருக்கும் நாய் உண்மையிலேயே டோகோவின் குருதிவழி வந்தது. டோகோவைபோலவே தோற்றம் கொண்டது. நாய்களை பற்றி நமக்கு அந்த பிரமை எப்போதுமுண்டு, அவை சாவதில்லை. உடல்களிலிருந்து உடல்களுக்குச் சென்றுகொண்டிருக்கின்றன என்று. உண்மையில் மனிதர்களும் அவ்வாறுதான்.



டோகோ படத்தின் கதை எளிமையான ஒரு சாகசம்தான்.அதன் அழகு பனிவெளியை காட்சிப்படுத்தியதில் இருக்கிறது. இயற்கை தெய்வப்பேருரு என நின்றிருக்க மனிதன் எது அவனை இதுவரை கொண்டுவந்து சேர்த்ததோ அந்த உள்ளாற்றலுடன் அதை எதிர்த்து நிற்கிறான். இயற்கை தன் மைந்தனை எண்ணி எங்கோ கனிகிறது, வழிவிடுகிறது


டோகோவில் என்னை கவர்ந்தது அந்த நாயின் குணச்சித்திரப் பரிணாமம். அது பிறவியிலேயே தலைவன். ஆகவே கட்டுப்படாதவன், தன் வழியை தானே கண்டடைபவன், புதிய வழிகள் தேடுபவன், தன்னைத்தானே வரையறைசெய்துகொள்பவன்.ஆனால் அன்பானவன், கடமையை உணர்ந்தவன். தலைவனை தலைவன் என நாம் கண்டுகொள்ளும் கணம்வரை அவன் எரிச்சலையும் ஒவ்வாமையையும்தான் உருவாக்குகிறான்.


இதை பெரிய ஆளுமைகளின் வாழ்க்கையில் எப்போதுமே காண்கிறோம். ஞானிகளாக கனிந்தவர்கள் கூட  இளமையில் அடங்காதவர்களாக முரடர்களாகவும் கிறுக்குகளாகவும் இருந்திருக்கிறார்கள். எந்த நெறிகளுக்கும் பணியாதவர்களாகவும் எவ்வகையிலும் புரிந்துகொள்ளமுடியாதவர்களாகவும் திகழ்ந்திருக்கிறார்கள். ஏன் சுடலைமாடன்கதை, மாயாண்டிச்சாமி கதை போன்றவற்றில்கூட அவர்களின் இளமைக்காலத்தை பாடல்கள் சொல்லும்போது அடங்காமையையே விரித்துப்பாடுகின்றன.


அதை ஓஷோ ஓர் உரையில் விளக்குகிறார். அதை அடிப்படை ஆற்றல் [ Elemental power] என வகுக்கிறார். அது வெறும் ஆற்றல் மட்டும்தான்.படைப்பாற்றலோ செயலாற்றலோ அல்ல. அது முட்டித்ததும்புகிறது. வெளிப்பட வழிதேடி துடிக்கிறது. காமம், வன்முறை என அது வெளிப்படலாம்.சாகசம், அத்துமீறல் என வெளிப்படலாம்.அது சரியான பாதையை கண்டடைந்துவிட்டால் அறிவாக, சேவையாக, ஞானமாக தன்னை உருவமைத்துக் கொள்கிறது. பெருங்கொலைகாரனிலும் பெருங்கலைஞனிலும் ஞானியிலும் வெளிப்படுவது ஒரே விசைதான் என்று ஓஷோ சொல்கிறார்.


உயிர்த்துடிப்பே உருவாக இருக்கிறது குட்டி டோகோ. அதை எங்கும் கட்டிப்போட முடியாது. அதை எதுவுமே கட்டுப்படுத்தாது. அதற்கு அனைத்தும் விளையாட்டுதான். துள்ளிக்குதிக்கிறது. ஓடிக்கொண்டே இருக்கிறது. செப்பாலாவின் வண்டிக்கு குறுக்காக பாய்கிறது. பிறநாய்களை அலைக்கழிக்கிறது.அதை பயிற்றுவிக்கவே முடியவில்லை. அது அடங்காதது, அதற்குச் செலவழிக்கும் உழைப்பு வீண் என்று செப்பாலா கருதுகிறான்.


“நான் நாய்களைப் பயிற்றுபவன். எனக்கு அவை செல்லப்பிராணிகள் அல்ல. அவற்றுடன் எனக்கு மெல்லுணர்வுகளும் இல்லை. அவற்றுக்குச் செலவழிக்க எனக்கு நேரமில்லை” என்கிறான். டோகோவை எங்காவது ’தள்ளிவிட’ முயல்கிறான். ஆனால் டோகோ தன் உரிமையாளர் எவர் என்று முடிவெடுத்துவிட்டது. எங்கே கொண்டு சென்றுவிட்டாலும் மறுநாள் காலை அது வாசலில் மகிழ்ச்சியுடன் துள்ளிக்கொண்டு நின்றிருக்கிறது. அதைக்கண்டு செப்பாலா அடையும் எரிச்சலும் அவர் மனைவியின் புன்னகையும் அழகான தருணங்கள்.


செப்பாலாவின் மனைவி அவளுக்குள் இருக்கும் தாய்மையால் டோகோவின் அடங்காமைக்குள் இருக்கும் உயிராற்றலை அடையாளம் கண்டுகொள்கிறாள். எப்போதுமே அது அப்படித்தான், அன்னையர் ரசிப்பது அதைத்தான். அவர்கள் கருவுற விரும்புவதும் அந்த ஆற்றலைத்தான். முன்னரே வகுக்கப்பட்ட நெறிகளின் அடையாளமான தந்தைக்கு அந்த ஆற்றலின் மீறல் எரிச்சலை அளிக்கையில் அன்னையர் அந்த மீறலை ஊக்குவிக்கிறார்கள். ஏனென்றால் அது அவர்கள் வழியாக நிகழும் ஒரு முன்னகர்வு


டோகோ ஒரு தலைவன் என செப்பாலா புரிந்துகொள்ளும் கணம் ஒரு தரிசனமாகவே அவனில் நிகழ்கிறது. தலைவன் முன்னால் மட்டுமே செல்லமுடியும். வழிகாட்ட மட்டுமே முடியும். அதற்குக் குறைவாக எதையும் அவனால் ஏற்கமுடியாது. பிறப்பிலேயே டோகோ தலைவன். அதை மற்றநாய்கள் உடனடியாக புரிந்துகொள்கின்றன. டோகோ செப்பாலாவின் ஸ்லெட்ஜின் முகப்பில் நிலைகொள்கிறது.


வாழ்நாள் இறுதி வரை டோகோ தலைமைக்கு குறைந்த ஒருநிலையை ஏற்றுக்கொள்வதே இல்லை. கால் உடைந்து ஓடமுடியாமலாகும்போது அதை வீட்டில் விட்டுவிட்டுச் செல்கிறான் செப்பாலா. அது தடைகளை உடைத்து மீறி ஓடிச்சென்று தன் இடத்தை பிடித்துக்கொள்கிறது.தலைமைப்பண்பு என்பது உயிர்களுக்கு இயற்கை உருவாக்கி அளித்த ஒன்று. அது ஒரு கலாச்சாரப்படைப்பு அல்ல, உயிரியல் ஆக்கம்.டோகோ ஓர் அரசன். இளவரசனாகபிறந்து அரசனாகி, முதிய தந்தையாகி இளவரசர்களை பிறக்கவைத்து நிறைவாழ்வு வாழ்ந்து மறைகிறது.


இந்தப்படம் முழுக்க டோகோவின் கம்பீரமான அசைவுகளை, அமைதியை, உறுதியை, தன்னை யாரென தானே முடிவெடுத்துக்கொள்ளும் அதன் நிமிர்வை இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தேன். இப்பண்புகள் மானுடன் தன் கற்பனையால் விலங்குமேல் ஏற்றுவதல்ல. தன்னிலும் விலங்கிலும் மானுடன் கண்டடைவது. ஒருவகையில் இயற்கையின் ரகசிய நெறியொன்றை, தெய்வ ஆணை ஒன்றை கண்டடைவதற்கு நிகரானது. நாயை அறிந்தவர்கள் டோகோவின் மேலிருந்து ஒருகணமும் கண்களை நகர்த்தாமல் இப்படத்தைப் பார்ப்பார்கள்.


டோகோ வெல்கிறது, வெற்றிக்கென பிறந்தது அது. ஆனால் அந்த வெற்றி அதன் ஆளுமையின் வெளிப்பாடு. அதன்பொருட்டு மானுடர் அளிக்கும் எதுவும் அதற்கு தெரியாது. அதன் உலகம் வேறு. அது கௌரவிக்கப்படவில்லை, இன்னொரு நாய் அப்புகழைப் பெற்றது என்பவை செய்திகளாக படிக்கையில் வேறுவகை உணர்வை உருவாக்கலாம். நேரில் என டோகோவை பார்த்துக்கொண்டிருக்கையில் அந்த அரசனுக்கு இவையெல்லாம் என்ன பொருட்டு என்ரே எண்ணத்தோன்றுகிறது


இத்தகைய படங்களில் நாய்கள் ‘தியாகம்’ செய்து உயிர்விடுவதைக் காட்டுவார்கள். அதிலும் போர்களில் நாய்கள் உயிர்விடுவதை காட்டும் சில படங்களுண்டு, அவை போல எனக்கு ஒவ்வாமையை அளிக்கும் பிறிதில்லை. இந்தப்படத்தில் டோகோ ஆற்றுவது ஆற்றி மைந்தருடன் பெருகி வாழ்ந்து நிறைவடைகிறது.


பார்த்து முடித்தபின்னரும் நெடுநேரம் சினிமாவிலேயே அமர்ந்திருக்கும் அனுபவம் அரிதாகவே எனக்கு நிகழ்கிறது. அப்படிப்பட்ட திரையனுபவங்களில் ஒன்று டோகோ


 



அய்யா!
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 04, 2021 10:35

விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) – மேலும்…


விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) – கடிதம்

அன்புள்ள ஜெயமோகனுக்கு,


நலம். நலம் அறிய ஆவல். தளத்தில், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம்(அமெரிக்கா) கடிதத்தை வெளியிட்டிருந்தீர்கள். அதை வாசித்துவிட்டு, அங்கங்கே இருந்து புதுப்புது நண்பர்களிடமிருந்து அழைப்புகள் வந்துகொண்டுள்ளன. மகிழ்ச்சி! மொட்டைமாடியில் படுத்துக்கொண்டு, விண்மீன்களை பார்த்துக்கொண்டு, தனியாளாகவோ, குழுவின் ஒரு உறுப்பினராகவோ தமிழ் இலக்கியத்திற்கு அல்லது மொத்த இலக்கியத்திற்கு, எதாவது செய்ய முடியுமா என்று யோசித்த காலங்கள் உண்டு.


[அமெரிக்காவில் ஏதாய்யா மொட்டை மாடி என்று கேட்காதீர்கள். ஏணி இல்லாமல், ஆழ் கிணறு வெட்டமுடியும் என்று புனைவு எழுதியவரின் படைப்புகளை வாசிக்க ஆரம்பித்து, சீரான தோள்கள் கொண்ட, மின்னும் கருமை நிற அழகியைப் படைத்தவரின் எழுத்துக்களை அன்றாடும் வாசிப்பவனுக்கு கற்பனை இருக்கும் என்று வைத்துக்கொள்ளுங்கள்]


ஒன்றுமே சாதிக்காமல் அப்படியே மேலே போய்விட்டால் என்ற ஒரு பயம் இருந்துகொண்டே இருக்கும். 2020-ல் வீட்டில் உட்கார்ந்து வேலை செய்ய, நிறைய யோசிக்கவும், இலக்கியம் சார்ந்த விஷயங்களை அலசவும் நேரம் அமைந்ததால், 2020-ஐ இலக்கியத்திற்கான ஆர்வத்தை முன்னெடுத்துச் செல்லும் வருடமாக எடுத்துக்கொண்டேன். மார்ச்சில் ஆரம்பித்து இன்று வரை, ஒரு நாள் கூட, குறைந்தது ஒரு மணி நேரமாவது, ஒரு நண்பரிடம் புத்தகம், வாசிப்பு, இலக்கியம் என்று பேசாமல் நாள் கழிவதில்லை.


கல்லூரி படிப்பை முடித்துவிட்டு , ஒரு தமிழக அரசாங்க வேலைக்காக, தேர்வு எழுதச் சென்றிருந்தேன். எனக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு அறைக்குச் சென்றால், அங்கே  நாற்பது சௌந்தரராஜன்கள் இருந்தார்கள். அதற்கு அப்புறம், நானே என்னுடன் பேசிக்கொண்டால்தான், சௌந்தருடன் பேசினேன் என்று சொல்லலாம். கோவிட்-19 கொடுத்த வீடடங்கில், குருஜீ சௌந்தரிடம், பேசும்பொழுது, அவரை சௌந்தர் என்று அழைத்தால் எனக்கு சிரிப்பு சிரிப்பாக வரும். சிரிப்பை அடக்கிகொண்டு அவரிடம் வெண்முரசு, வெண்முரசு விவாதக்கூட்டம், நண்பர்கள் அதற்குத் தயாராகும் விதம் என்று பேசி பேசி அவ்வளவு அறிந்துகொண்டேன்.


சௌந்தர், ஜெயந்தி என்பவர் , வெண்முரசுவில் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற இருக்கிறார். என்று சொல்ல, எங்கே அவரது எண் கொடுங்கள் என்று கேட்டு வாங்கிக்கொண்டேன். அவர் கொடுத்த எண்ணில் அழைத்துப் பேசினால், நான் ஜெயந்தி இல்லை என்று வைஜயந்தி பேசினார். வைஜயந்திக்கு ஜெயந்தியைத் தெரிந்திருந்ததாலும், அவரும் நல்ல வாசகி என்பதாலும் எங்கள் உரையாடல் நீளத்தான் செய்தது.


பெண்கள் எழுதவேண்டும் என்று அன்றே அறிமுகமான அவருக்குக் கூட என்னால் ஒரு அன்புக்கட்டளை வைக்க முடிந்ததற்கு காரணம் வாசிப்பில் ஒன்றியிருக்கும் இரண்டு உள்ளங்கள் கொடுத்த அணுக்கம். முடிவில், ஜெயந்தியிடமும் பேசத்தான் செய்தேன். அவர், ‘வெண்முரசில் உபபாத்திரங்கள்’ என்ற தலைப்பில் ஆராய்ச்சி செய்வதற்கு எழுதிப்போட்டுவிட்டு ஒப்புதலுக்கு காத்திருந்தார். கண்ணனின் ரசிகையான அவரிடம், நீலம் பற்றி பேச நிறைய இருந்தது.


திருச்சியில் படிக்கும்பொழுது, ஆஞ்சனேயர் பக்தனாக,  ஜங்ஷன் அருகில் இருக்கும் கல்லுக்குளியில் அவரைப் பார்க்கச் செல்லும் வழக்கம் என்னிடம் இருந்தது..  நான் சென்ற காலங்களில், வழக்கறிஞர் செல்வராணி, ஒரு சிறு பெண்ணாக இருந்திருப்பார். குட்டி ஜடையுடன் குட்டியாக புன்னகைப் பூவுடன் நின்றுகொண்டிருந்த குழந்தை ஒன்றை, பிற்காலத்தில் சந்திக்கவிருக்கிறேன் என்று தெரியாமல் நான் கடந்திருக்கலாம்.


நான் அவரை அழைத்துப் பேசிய நாள், திரு கமல்ஹாஸன் அவர்கள், வெண்முரசுவைப் பற்றி விஜய் டிவி-யில் பேசிய வாரம். கமலின் ரசிகையான செல்வராணிக்கு, விஷ்ணுபுரம் பற்றி அவர் டிவி-யில் சொல்லப்போய்த்தான் ஜெயமோகன் அறிமுகம் என்பதாக சொன்னார்.


திருச்சி மாவட்டத்தில் , ஏன் வெண்முரசு விவாதக்கூட்டம் நடத்தமுடியாது என்று கேட்டதற்கு, அவருக்குத் தெரிந்து மூன்று வாசகர்கள்தான் இருக்கிறார்கள் என்று சொன்னார். நம் நண்பர்களுக்கு ஒரு சவாலான ஏரியா காத்திருக்கிறது என்று எடுத்துக்கொண்டேன்.


சிங்கப்பூர் வாசகி, சுபஸ்ரீ-யை விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் விழாக்களில் பார்த்திருந்தாலும், புன்னகையை கைமாற்றிக்கொண்டதைவிட வேறு அதிகம் பேசியதில்லை. அவரது பரந்த வாசிப்பை , இந்த இக்கட்டான நாட்களில் அறிந்துகொண்டேன். வெண்முரசு வரிசை நூல்களை மூன்று மாதங்களில் மீள் வாசிப்பு செய்த சாதனையாளரான அவர்,


“வெண்முரசு,ஆயிரம் பேர் முன் நின்று கண்டாலும் அவரவர் முகம் காட்டும் ஆடி” என்றார். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் மற்றும் தளத்தின் வாசகர்களில் படைப்பாளிகளும் அடக்கம். சில நண்பர்களின் ஓரிரு கதைகளை , கட்டுரைகளை வாசித்துவிட்டு, அவர்களை பிறகு கூர்ந்து வாசித்து கவனிக்கவேண்டும் என்று குறித்து வைத்திருந்தேன். கோவிட்-19, காலத்தைப் பிரித்து அவர்களின் படைப்புகளை வாசிக்க ஒரு துண்டை என்னிடம் கொடுத்ததை உபயோகப்படுத்திக்கொண்டேன்.


காளிப்ரசாத்தின் கதைகளை வாசித்துவிட்டு, அவருக்கு மிகவும் அணுக்கமானவனாக உணர்ந்தேன். அவர் எடுத்துக்கொண்ட கதைக்களங்கள், அவரது அன்றாட வேலையையும் அனுபவங்களையும் தாண்டி இருந்தது.  அவர் எழுதியுள்ள பத்துக் கதைகளில், ஒரே ஒரு கதையைத் தவிர, மற்ற அனைத்தும் கற்பனை என்று அறிந்துகொண்டேன்.


‘ஜெயமோகன்’ எனும் விமர்சகரை விட்டுவிட்டால், இப்பொழுது நல்ல விமர்சகர்கள் இல்லாமல் போய்விட்டார்கள். காளிப்ரசாத் முயற்சித்தால், அந்தத் துறையிலும் நுழையலாம் என்பது எனது கருத்து.


எனக்குத் தெரிய, GSSV நவீன், மூன்று கதைகள் எழுதியிருந்தாலும், மூன்றும் எனக்குப் பிடித்திருந்தன, அ.கா. பெருமாளின் நூல்களை ஆழ்ந்து வாசிக்கும் அவருக்கு,தொல்கதைகளை புரிந்து எடுத்து கலந்து  நவீனக் கதைகளை உருவாக்க முடிகிறது. அவரது எழுத்தில் வெண்முரசின் தமிழ்த்தாக்கம் இருப்பதும் தெரிகிறது. அது நல்லதுதானே! மதுரைப் பயணம் சென்றுவிட்டு, நீங்களும் அவரை எழுத்தாளர் GSSV நவீன் என்று குறிப்பிட்டிருந்தீர்கள். அவரை, ஒரு நாள் போனில் அழைத்து, “தம்பி நல்லாருப்பா, நிறைய எழுதுப்பா !” என்று சொல்லும் வாய்ப்புக் கிடைத்தது.


நம் குழுவில் சேர்ந்த நாள் முதல், தொடர்ந்து தொடர்பில் இருப்பவர் லோகாமா தேவி. அவர் எனக்கு எழுதும் கடிதங்கள் எல்லாம், ஏழு பக்கங்களுக்கு குறையாமல் இருக்கும். சில கடிதங்களில் நல்லதொரு கதை புதைந்திருக்கும். அவரது துறையான தாவரவியல் சம்பந்தமாக, நல்ல கட்டுரைகள் எழுதி வந்தாலும், புனைவுகளை கோர்க்க அவரிடம் நிறைய இருக்கிறது என்று அவர் உரையாடலிலும், எழுத்திலும் தெரியவரும்.


தான் நினைத்த, கண்டடைந்த உண்மையை அப்படியே சொல்வதற்கு ஒரு தைரியம் வேண்டும். அது லோகாவிற்கு உள்ளது என்பது சிறப்பு. நானும் லோகாவும், ‘சிறப்பு’ என்று சொல்லுமிடத்திலெல்லாம், ‘வெண்முரசு’ என்று சொல்லும் வழக்கத்தைக் கொண்டுள்ளோம்.


ஸ்வேதா ஷண்முகம், மொழிபெயர்ப்பு சம்பந்தமாக எழுதிய கட்டுரையை வாசித்துவிட்டு, நான் பாராட்டி எழுதிய கடிதம் தளத்தில் வந்தது. அவர் எழுத்துக்களை அறிந்து உணர , அவரது தனிப்பட்ட வலைப்பூ சென்று வாசித்தேன். ஆங்கிலம் , தமிழ் இரண்டிலும், விமர்சனக் கட்டுரையாகட்டும், கதையாகட்டும் அவரால் எழுதமுடியும் என்பது தெரிகிறது. நீங்களும், ‘பெண்கள் எழுதுதல்’ கட்டுரையில் அவரின் தனித்துவத்தைக் குறிப்பிட்டு எழுதியிருந்தீர்கள்.


2013-ல், புதியவர்களின் கதைகள் என்று நீங்கள் பன்னிரெண்டு எழுத்தாளர்களின் கதைகளை வெளியிட்டிருந்தீர்கள். அவர்களில் சிலரைக் கையில் எடுத்துக்கொண்டு, இப்பொழுது என்ன செய்கிறார்கள் என பின் சென்று பார்த்தேன். அதில் அறிமுகமான , சுனீல் கிருஷ்ணனும், திரைத்துறையில் இருக்கும் தனசேகரும் வெளிச்சத்தில் இருக்கிறார்கள் என்று நான் சொல்லி நண்பர்களுக்கு தெரியவேண்டியதில்லை.


நமது zoom நிகழ்வுகளில் ஜாம் ஜாமென்று அசத்தும் ஜாஜா, அதில் கதையெழுதிய ராஜகோபால்தான் என்று பின்னர் புரிந்துகொண்டேன். அவரிடம் இருந்து இப்பொழுது படைப்புகள் எதுவும் இல்லைதானே? மரபு இலக்கியம் முதல், இன்றைய எழுத்துக்கள் வரை வாசிக்கும், விமர்சன கருத்தை ஆழமாக வைக்கும் அவர் எழுதாமல் யார் எழுதுவது? அவரிடம் பேசும் வாய்ப்பு அமையும்பொழுது எல்லாம், அவரிடம், ‘எழுதுங்க ஜாஜா! எழுதுங்க!’  என்று சொல்லிக்கொண்டே உள்ளேன்.


புதியவர்களின் கதைகளில், ஆறாவது கதையான ‘பீத்தோவனின் ஆவி’ எழுதிய வேணு தயாநிதியும் அமைதியாகிவிட்ட ஒரு கடல் என்றே முதலில் நினைத்தேன்.  நவம்பர் முதல் வாரத்தில் , பதாகை மற்றும் சொல்வனம் இணைய இதழ்களில் வந்த அவரது படைப்புகளை குழுவினர் அனைவரும் வாசித்துவிட்டு, இவருக்கு ஒரு தனி இணைய நிகழ்வு அமைத்து கேள்வி கேட்போம் என்று முடிவு செய்தோம்.  நினைத்ததுபோல் அவர், அமைதியாக இல்லை. இடையில் நிறைய நல்ல கவிதைகள் எழுதியுள்ளார். அவர்தான், காஸ்மிக் தூசி என்பது நமக்குத் தெரிந்து இருக்க வேண்டும்.


‘சுடோகுயி’ என்ற அறிவியல் சிறுகதையை, புத்தம் புதிய பேசுபொருளில் சொல்வனம் இதழில் எழுதியுள்ளார். வாசிப்பே இல்லாமல் போய்விட்ட ஒரு காலத்தில் வாசிப்பின் அவசியத்தை  தெளிவாக்க  ‘சுடோகுயி’ விளையாட்டில், சரியான சொற்களை கண்டு சேர்த்து வரிகளை / கதையை உருவாக்கச் சொல்லும் கதை.  நிகழ்வின் முடிவில், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் (அமெரிக்கா) நண்பர்களின் ஒருமித்த கருத்து, இவரிடமிருந்து ஒரு நாவல் எதிர்பார்க்கலாம் என்பதே. அவரும் ஆமாம், எழுதிக்கொண்டிருக்கிறேன் என்று சொல்லியுள்ளார்.


எல்லாவற்றிர்க்கும் உச்சமாக, மாபெரும் ஆளுமைகளை அழைத்து இணையவழி நிகழ்வுகள் நடத்தியது, 2020-ஐ மறக்கமுடியாத இலக்கிய வருடமாக மாற்றியது. ஆறு நிகழ்வுகளும் அது அதெற்கென்று சிறப்பு பெற்றிருந்தன. நமது நிகழ்வில் முதல் நிகழ்வில், சிறப்பு விருந்தினராக பங்கு கொண்டு, பிறகு பார்வையாளராக வந்த எழுத்தாளர் அ.முத்துலிங்கம் , அ.கா. பெருமாள் நிகழவின் முடிவில், அனுப்பிய குறுஞ்செய்தி – “அ.கா. பெருமாள் நிகழ்வை சிறப்பாக நட்த்தினீர்கள்.அருமையான தகவல்கள். தொடருங்கள். மிக்க நன்றி”.


மிச்சிகன் மாநிலத்தை மையமாகக் கொண்டு இயங்கும், ‘தமிழ் ஆர்வலர்கள் குழு’-வைச் சேர்ந்த லட்சுமணன் என்பவர், எனக்கு அனுப்பிய குறுஞ்செய்தியில் இப்படிக் குறிப்பிட்டிருந்தார். “உங்கள் குழுவின் முன்னெடுப்பு நிகழ்வுகள், நாங்கள் நிகழ்வுகள் நடத்தக் கற்றுக்கொடுத்தன. வெண்முரசு முடிவில் ஜெ நிகழ்த்திய உரைகள், கேள்வி பதில்கள், முத்துலிங்கம் அய்யா அவர்களின் உரையாடல் போன்றவை. தனிப்பட்ட முறையில் நாஞ்சில் நாடன் அவர்களின் நிகழ்வு என் மனதிற்குள் இன்றும் அலையாடுகிறது.”


விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம், இனி யார் நினைத்தாலும் நிறுத்தமுடியாத, அமெரிக்காவிலும் இலக்கியப் பயணம் செல்லவிருக்கும் தேர்! அமெரிக்கத் தேரில் பயணம் செய்ய விரும்பும் நண்பர்கள் தொடர்பு கொள்ளவேண்டிய மின்னஞ்சல்


vishnupuramusa@gmail.com.


தொலைபேசி எண் – 1-512-484-9369.


அன்புடன்,


ஆஸ்டின் சௌந்தர்


 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 04, 2021 10:34

விஷ்ணுபுரம் விருது விழா-கடிதங்கள்


ஜெயமோகன் அவர்களுக்கு


வணக்கத்துடன் ஆத்மார்த்தி


பொன் வைக்கும் இடத்தில் பூவை வைப்பதாகப் பன்னெடுங்காலமாக ஒரு உபயோகமொழி உண்டல்லவா.? அப்படி வைக்கப்பட்ட பொன்பூ நேற்றைய நிகழ்வு. இதுவரை விஷ்ணுபுரம் இலக்கிய அமைப்பு நிகழ்த்திய விழாக்களை அவைகள் குறித்த பின்னிணைப்புச் செய்திகள் புகைப்படங்கள் மூலமாகவே அறிந்திருக்கிறேன். கலந்து கொண்ட நண்பர்கள் அதன் க்ராண்டியர் மற்றும் இயல்பு இரண்டையும் கலந்தே பாராட்டுவர்.


கோவையில் நிகழ்கிற விழாவில் கலந்து கொள்ள வேண்டுமென்ற ஆவலைக் கடந்த சில வருடங்களாகவே சிறு ஏக்கமாகிற வகையில் சேகரித்துக் கொண்டிருந்தேன்.  இந்த ஆண்டின் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் விருது  மதுரையில் வாழும் எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித்துக்கு அறிவிக்கப்பட்டது. இந்த வருடத்தின் தேதிகளைக் கொரோனா என்ற பேரையணிந்த கொடும்பூச்சி தன்னால் ஆனமட்டிலும் அரித்துத் தின்றுவிட்டது. காலம் வழமைக்கு மாறான ஒப்பனையும் சப்தமுமாகக் கிளைத்துக் கொண்டிருக்கிறது. இந்த வருடமே இன்னும் சில தினங்களுக்குள் தீர்ந்து விடப் போகையில் மதுரைக்கே வந்து சுரேஷூக்கான விருதினைத் தந்து செல்வதாக விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் நிகழ்தலின் இயல்பை நெகிழ்த்திக் கொண்டு முடிவெடுத்தது உயர்ந்த ஆதுரம்.


நேற்றைய நிகழ்வு இனிமையாகவும் அருமையாகவும் நடந்ததை உணர முடிந்தது. முக்கியமாக அந்த ஆவணப்படம் அது அபாரம். இந்த விழாவில் ஒரு பார்வையாளனாகக் கலக்கிற வாய்ப்பு எனக்குக் கிடைத்ததற்கு மனம் மகிழ்கிறேன். விழாவில் தங்களது உரையும் அதன் பின் மாலையில் கிடைத்த உரையாடலும் நிஜமான கொடுப்பினை.


நன்றியும் அன்பும் வாழ்தல் இனிது


பேரன்புடன்

ஆத்மார்த்தி



அன்புள்ள ஜெ


விஷ்ணுபுரம் விருதுவிழா மிகச்சிறப்பாக நடைபெற்றது என்றே நான் நினைக்கிறேன். கூட்டம் கொண்டாட்டம் எல்லாம் தேவைதான். ஆனால் அதெல்லாம் ஒருபக்கம். மறுபக்கம், இந்தப்பக்கம் நாம் நம் தரப்பைச் சரியாகச் செய்திருக்கிறோமா என்பதே முக்கியம். அப்படிப்பார்த்தால் நாம் மிகச்சிறப்பாக நடத்தியிருக்கிறோம். நான் 2011 முதல் விஷ்ணுபுரம் விழாவுக்கு வந்துகொண்டிருக்கிறேன். என் வாழ்க்கையின் முக்கியமான நிகழ்வு அது. விழாவை நானும் சேர்ந்து நடத்துவதாகவே எண்ணிக்கொள்கிறேன். இந்த ஆண்டும் நானும் உடனிருந்ததாகவே என் மனதில் ஓடுகிறது


அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்


இரா.ஆடலரசு


விஷ்ணுபுரம் விருது விழா-2020
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 04, 2021 10:34

வெண்முரசில் மலர்கள்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,


வணக்கம் வெண்முரசைத் துவங்கின முதற்கனலின் முதலத்தியாயத்தின்   செண்பகமரத்திலிருந்து, முதலாவிண்ணின் இறுதி அத்தியாயத்தின் அருகும், ஆலும், இன்கிழங்கும் செங்கீரையுமாக  26 நாவல்களையும் தொடர்ந்து வாசிக்கையிலேயே அவற்றில் குறிப்பிடப்பட்டிருக்கும் தாவரவகைகளை, தாவரப்பொருட்களை, மலர்களை, தாவரங்கள் தொடர்பான தகவல்களையெல்லாம் மனம் தனித்தனியே கவனித்தபடியே இருந்தது. இவை தொடர்பான  ஏராளமான குறிப்புகளையும் எழுதி வைத்திருக்கிறேன்


முதலாவிண் முடிந்ததும் வெண்முரசு காட்டும் தாவரவியல் தகவல்களில், மிகமுக்கியமானவற்றையும், முன்பிருந்து இப்போது இல்லாத Extinct வகைகளையும், அரியவற்றையும் மட்டும் தொகுத்து கட்டுரையாக்க நினைத்தேன், மீண்டும் முதற்கனலிலிருந்து வாசிக்கவும் செய்து மழைப்பாடல் வரை மீள் வாசிப்பை முடித்தேன்


குறிப்பெடுத்துக் கொள்ளத் துவங்கியதிலிருந்தே, தாமரை, அரசு, ஆல், தர்ப்பை, நாணல், வேங்கை, ஊமத்தை, புல்லரிசி, மருதம், ஸாமி, பிலு, ருத்ராக்‌ஷம், தாவரப்பொருட்கள், பலவகை மலர்கள், தாவர உணவுகள், மரப்பட்டை கூரையிடப்பட்ட அரண்மனைகள், சுரைக்கமண்டலங்கள், பலாச விறகு, ஆலின் விழுது, முளைத்தெழும் வாழை, கரும்பனையின் தடி, அரணிக்கட்டைகள், கோரைப்புல்பாய்கள், மூங்கில் காடுகள் மரமல்லிகள், மந்தாரங்கள்,  செண்பகங்கள், வேம்பு கமுகு, வேங்கை  என  வெண்முரசின் தாவரங்களும், மலர்களும், மரங்களும், பசுங்காடுகளுமே  என்னைச்சுற்றி நனவிலும் கனவிலும் நிறைந்து இருக்கின்றது



விழித்தெழுந்ததுமே இரவெல்லாம் சிந்தித்துக்கொண்டிருந்த மலர்களை,  மரங்களைப்பற்றிய நினைவுதான் மீண்டெழும். ஆனாலும் இப்படி தகவல்களை திரட்டுவதன் மூலம் வெண்முரசென்னும் மாபெரும் இலக்கியப்படைப்பை அணுகுதலென்பது சரியல்ல என்றும் தோன்றுகிறது. இப்படியான தகவல் சேகரிப்பை இதற்கென பிரத்யேகமாக வடிவமைக்கபட்ட ஒரு மென்பொருள் செய்துவிடமுடியும். எனினும் மீள்வாசிப்பில் தாவரஅறிவியல் குறித்த  புதிய புதிய திறப்புக்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. இப்படி இருக்குமா, இதுவாக இருக்குமா அல்லது ஒருவேளை அதுவா? இதுவேதானா என்று எப்போதும் அந்த குறிப்புக்களிலேயே மனம் சுழன்றுகொண்டு இருக்கிறது. அத்தனை அரிய தகவல்கள்  நிறைந்துஇருக்கிறது வெண்முரசில்.


அர்ஜுனனுக்கு உரியதான மருதமரத்தின் தாவரஅறிவியல் பெயர் Terminalia arjuna என்றிருப்பது வியப்பளிக்கின்றது. அதுபோலவே  காந்தாரியின் திருமணதிற்காக தேடிச்சென்ற பெண்களில் ஒருத்தி கண்டடையும் தாலிப்பனை “ஒருமலைச்சரிவில் பூத்துநின்ற தாலிப்பனையைக் கண்டு பிரமித்து கண்ணீர்மல்கினாள். அந்த இளம்பனை தரைதொட்டு பரவிய பச்சை ஓலைகள் உச்சிவரை பரவியிருக்க மண்ணில் வைக்கப்பட்ட மாபெரும் பச்சைக்கூடை போலிருந்தது. அதன்மேல் மாபெரும் கிளிக்கொண்டை போல அதன் வெண்ணிற மலரிதழ்கள் விரிந்து நின்றிருந்தன.  நுண்ணிய சரங்கள் கொத்துக்கொத்தாகத் தொங்கிய கிளைகளுடன் நின்றிருந்த அந்த மலர் மாபெரும் நாணல்கொத்துபோலிருந்தது. நாரையின் இறகுகளைக் கொத்தாக்கியது போலிருந்தது.”  என்ற விவரிப்பு பலநாட்கள் என்னை தாலிப்பனையின் பின்னே செல்லவைத்தது.


இந்த தாலிப்பனையைக்குறித்து தனியாகவும் நீங்கள் எழுதியிருக்கிறீகள் அது கொடப்பனை எனப்படும்  Corypha umbraculifera என்று. அந்த அத்தியாயத்தில் ஷண்முகவேலின் சித்திரமும் அடுக்கடுக்கான வெண்மஞ்சள் மலர்களினாலான கிளைந்த மஞ்சரியுடனிருக்கும் கொடப்பனை/குடைப்பனையைத்தான் காட்டுகிறது. இப்படியான மிகப்பெரிய கிளைத்த மஞ்சரிகளை கொண்ட மரங்கள்  உலகில் இரண்டே இரண்டு அதில் ஒன்று குடைப்பனை மற்றோன்று Corypha  taliera  என்னும் மற்றோரு தாலிப்பனை. இதன் இணையறிவியல் பெயரான Taliera tali    என்பதில் பேரினம் சிற்றினம் இரண்டுமே தாலி என்றிருக்கிறது.


குடைப்பனை இப்போது பல இடங்களில் இருக்கிறது ஆனால் இந்த தாலிப்பனை  இப்போது அதிகம் இல்லையென்பதால்  பலநாட்கள் இதன்வேர்களை தேடிபோனேன்.  இப்போது இந்த தாலிரா தாலிப்பனை இயற்கையாக எங்குமே வளர்வதில்லை. வங்காள தேசத்தின் தொன்மையான பல்கலைக்கழகமான தாக்கா பல்கலைக்கழகத்தின்  80 வயதான ஒற்றை மரம் 2012ல் பூத்து காய்த்து அழிந்தபின்னர் வேறெங்கும் இந்தப்பனை காணப்படவில்லை. அதுவும் அந்த வளாகத்தில் விதைத்து முளைக்கவைத்து வளர்ந்ததுதான். எனவே சர்வதேசஇயற்கைப் பாதுகாப்புச் சங்கமான IUCN இந்த தாலிரா பனையை Extinct in Wild என்றுதான் பட்டியலிட்டிருக்கிறது.



இப்போது  தாக்கா பல்கலைக்கழக மரத்திலிருந்து எடுக்கப்பட்ட விதைகளிலிருந்து வளர்க்கப்படும் சுமார்  300 இளம்பனைகள் உலகில் ஃப்ளோரிடா உள்ளிட்ட பல இடங்களில் வளர்ந்து வருகின்றன அவையெல்லாம் பூக்க இன்னும் நெடுங்காலம் இருக்கிறது. வெண்முரசு காட்டும் மஞ்சரியின் விவரணைக்கு இந்தப்பனையின்  மஞ்சரி மிகப்பொருத்தமாக இருப்பதுபோலவும் தோன்றியது. இப்படி ஒன்றிலிருந்து ஒன்றாக தொட்டுத்தொட்டு  தேடிச்செல்வது சலிப்பில்லாத செயலாகிவிட்டிருக்கிறது எனக்கு இப்போது.


அப்படியேதான் வெண்முரசில் வரும்  நீலச்செண்பகங்களும், செண்பகத்தின் நீலம், நீல செண்பக மலர்கள், என பல இடங்களில் வருகிறது. எனக்குத் தெரிந்து செண்பகத்தில், பொன்மஞ்சள், பழுப்பு, தூயவெள்ளை, இள மஞ்சள் தவிர பிற வண்ணங்களில் மலர்கள் இல்லை . எனவே  நீலசெண்பகங்களைக் குறித்து தேடிச்செல்ல துவங்கினேன் பலநாட்கள் தேடலில் பலவாயில்களை திறப்பதும் மூடுவதுமாக இருந்தேன். எந்த தகவலும் நீல செண்பகங்களை குறித்து கிடைக்கவேயில்லை ஆனால் அப்படியொன்று இருக்காது என்னும் முடிவுக்கு மட்டும் நான் வரவேயில்லை நிச்சயம் எங்கோ இருக்குமென மனம் நம்பியது. ஒருவேளை வனச்செண்பகம்    எனப்படும்  மனம் மயக்கும் நறுமணத்துடனிருக்கும் Spermadictyon suaveolens     என்னும் தாவரத்தின்  இளநீல மலர்களாக  இருக்கலாமென்றும் தோன்றியது.


காப்பிச்செடியின் குடும்பத்தைச்சேர்ந்த  இதன் சிற்றினப்பெயரான suaveolens  என்பதே நறுமணத்தைத்தான் குறிக்கும். அலரி எனப்படும் frangipani மலர்களில் பித்துக்கொண்டிருக்கும், கிடைக்கும் போதெல்லாம் அவற்றை தலையில் சூடிக்கொள்ளும், தற்போது  பாலித்தீவில் வசிக்கும்,   அமெரிக்கத்தோழி ஜாய் (Joi) சில நாட்களுக்கு முன்னர்   கிருஸ்துமஸ் வாழ்த்துச்சொல்ல அழைத்திருந்தபோது, வீட்டுவேலைகளில் அவளுக்கு உதவும் இபுசுச்சி என்னும் பெண்ணின் மகன் விபத்தில் இறந்துபோன துக்கநிகழ்வுக்கு அவர்களின் பழங்குடி கிராமத்துக்கு சென்றிருக்கையில் அங்கு நீல அலரி பூத்திருந்த மரமொன்றை பார்த்ததாக சொன்னாள். அலரிக்கு காட்டுசெண்பகமென்றும் ஒரு பெயரிருக்கிறது.   ஒருவேளை வெண்முரசில் வரும் நீலச்செண்பகம்  Blue frangipani யாகவும் இருக்கலாம்


அறிவியல் தகவல்கள் மட்டுமல்லாது அழகிய தாவரவியல் சித்தரிப்புக்களும் உவமானங்களும், ஊமத்தைச்சாறு கலந்த அப்பங்கள் என்பதுபோன்ற அரிய பழங்குடித்தாவரப்பயன்பாட்டியல்(Ethnobotany) தகவல்களுமாக வெண்முரசு ஒரு அரிய தாவர அறிவியல் களஞ்சியம். தருமன் பிறக்கையில் சித்ரவனக் குறுங்காட்டில்  பூத்த வேங்கை மரத்தடியில் உடல்மேல் மஞ்சள் நிறமான மலர்கள் பொழிந்து மூடிக்கொண்டிருக்க உறங்கிக்கொண்டிருந்த பாண்டுவிடம் மாத்ரி  தருமன் பிறக்கவிருப்பதைச் சொல்லுவாள். அதுவரையிலும் ஆண்மையற்றவனாக Sterile என்றே குறிப்பிடப்பட்டுவந்த பாண்டு அப்போது அந்த வேங்கையைப் போலவே முழுக்கப்பூத்து fertile  ஆகிவிட்டதை சொல்லும் அழகிய காட்சி அது


வெண்முரசு நாவல் நிரையின் அனைத்துப்பகுதிகளையும் வாசித்தாலும் நீலத்தை மட்டும் தொடவேண்டாமென்று கவனமுடன் இருந்தேன், அது ஒரு மாயச்சுழல் போல என்னை இழுத்துக்கொள்ளும் என்பதால். நீலசெண்பகத்தை குழலில் சூடிக்கொண்டிருந்த அசலையிடம் தாரை சொன்னதுபோல “பிறவண்ணங்கள் நம்மை நோக்கி வருகின்றன. நீலம் நம்மை இழுத்து தன்னுள் ஆழ்த்துகிறது”


இருந்தும் ஒரு கட்டுரையின் பொருட்டு  கருவிளை மலர்களைப்பற்றி வெண்முரசு சொல்லியிருப்பவற்றை தேடுகையில் நீலத்தின் ஆழத்தில்  மீண்டுமிறங்கினேன் ” வெண்முறுவல் பூத்தது முல்லை. கண்சிவந்தது அரளி. செம்முத்துகொண்டது தெச்சி. பால்துளித்தது தும்பை. பொன்கொண்டது கொன்றை. பூத்து பட்டணிந்தது வேங்கை.. நாணிக் கண்புதைத்தது செண்பகம். நாணிலாது பொதியவிழ்ந்தது பகன்றை. அஞ்சி விழிதூக்கியது அனிச்சம். குறுநகை எழுந்தது பாதிரி. வழியெங்கும் விழிகொண்டது ஆவாரம். நானும் அவனே என்றது குவளை. நானுமல்லவா என்றது நீலத்தாமரை”


இவ்வரிகள் காட்டும் இயற்கை அழகை,  அவை  சொல்லப்பட்டிருக்கும் மொழியின் அழகை, அவ்வரிகளில் இருக்கும் தாவரவியல் உண்மைகளை என்ணி எண்ணி மலைக்கிறேன். ஓராயிரம் முறை இவற்றையே மீள மீள  வாசித்திருப்பேன். ஆம் முல்லை அப்படித்தான் சின்னஞ்சிறு இதழ்களை மெல்லப் பிரித்து முறுவல் செய்யும், அரளியின் இளஞ்சிவப்பு கண் சிவந்தது போலத்தான் இருக்கும். தெச்சியின் கூரிய மொக்கு செம்முத்தேதான். தும்பையின் நீண்ட ஒற்றை வெண்ணிதழ் பால்சொட்டுத்தான், பொன்னேதான் கொன்றை, பட்டணிந்துபோலவேதான் பளபளக்கும் பூத்தவேங்கை , இதழ் நுனிகளை ஒன்றாக குவித்து நாணிக்கொண்டுதான் இருக்கின்றது செண்பகம், சிறு வெண் பொதியை அவிழ்த்தது போலத்தானிருக்கும் பகன்றை, அஞ்சிக்கொண்டிருப்பது போலத்தானிருக்கும் அனிச்சத்தின் சிறுமென்மலர்கள்.  பொன்மஞ்சளில் செந்தீற்றலுடன் புன்சிரிக்கும் பாதிரி, கண்ணனின் கருநீலமேதான் குவளையும் , நீலத்தாமரையும்.


இப்படி சில வரிகளிலேயே சிக்கிக்கொள்வதால், மேலும் முன்னகரவோ, நீலத்திலிருந்து வெளியே வரவோ மிகுந்த முயற்சி செய்யவேண்டி இருந்தது. தீயின் எடையில் கிருபர் நாகருலகிலிருந்து  மீண்டு வரும் குறுங்காட்டில் இருக்கும் செடிகளில் நீர் நிறைந்த வன்பூசணியும் இருந்தது. அதன் பின்னேயும் நான்  பல நாட்களாக சென்று கொண்டிருக்கிறேன். இப்போது பயிரடப்படும் அனைத்து முக்கிய பயிர்களுக்கும்  காட்டுறவுப்பயிர்களெனப்படும் crop wild relatives (CWR) முன்பிருந்திருக்கும். அவற்றைக்குறித்த  தேடல்களும் ஆய்வுகளும் நடந்துகொண்டே இருக்கின்றது. அவற்றில் இந்த வன் பூசணியைக்குறித்தும் தேடினேன்.


1965ல் கடைசியாக காணப்பட்ட பத்தாயிரமாண்டுகளுக்கு முன்பு தோன்றியிருக்கலாமென்று கருதப்படும்  Cucurbita ecuadorensis  என்னும் வன்பூசணிக்கொடி  உலகில் வேறெங்குமே பயிரிடப்பட்டதில்லை. அந்தக்கொடியும், அதன் விதைகளும் பசிபிக் பெருங்கடலின் ஓரத்தில் அமைந்திருக்கும்  Machalilla National Park  ல்  இப்போது பத்திரப்படுத்தப் பட்டிருக்கின்றன. Plants, People, Planet (PPP) என்னும் தாவரவியல் ஆய்வுக்கட்டுரைகளுக்கான சஞ்சிகை கடந்த 2019 டிசம்பரில்  பல்லாயிரமாண்டுகளுக்கு முன்பிருந்திருக்கும் காட்டுபூசணிகளின் 16 வகைகளை குறித்த கட்டுரையில் மெக்சிகோவை பிறப்பிடமாக கொண்ட  வெள்ளி நிற விதைகளும், வரிகளோடிய மேற்புறமுள்ள ஒரு வன்பூசணியையும் குறிப்பிட்டிருக்கிறது. இதுவும் பத்தாயிரமாண்டுகளுக்கு  முன்பே தோன்றியது.


கிருபர் சென்ற வழியில் இவற்றிலொன்று இருந்திருக்கும் வாய்ப்புமிருக்கின்றது. வெண்முரசு காட்டும் தாவரங்களைக்குறித்து  எழுதவேண்டுமென நினைக்காத கணமே இல்லை. அது உள்ளே என்னை சொடுக்கிக்கொண்டே இருக்கிறது இப்படி பல தகவல்களையும் சேகரித்திருக்கிறேன் மீண்டும் மீண்டும் அவற்றை சரிபார்த்துக்கொண்டுமிருக்கிறேன். இந்த குறிப்புக்களை, வெண்முரசின்  தகவல்களோடு இணைக்கும் அந்த சரடு, அது இன்னும் புலப்படவில்லை அதற்காகத்தான் காத்திருக்கிறேன் அது வரையிலும்  இன்னும்  இன்னும் என தேடிச்சென்று கொண்டேதானிருப்பேன்.


மாமலரை கொண்டு வந்த பீமன் திரெளபதியிடம் சொல்லுவான் “மாமலரின் இந்த மணத்தை நோக்கி செல்லும் வழியில் பலவகையான மணங்களினூடாக என் அகமும் மூக்கும் கடந்துசென்றன.” என்று. அப்படி வெண்முரசின் தாவரங்களைக்குறித்த   தேடலில்  நான் கண்டறிந்து கொண்டிருப்பவையே  இந்த பிறவியில் எனக்கு கிடைத்திருக்கும் ஆகச்சிறந்த கல்வியறிவு. மிக்க


அன்புடன்


லோகமாதேவி


அன்புள்ள லோகமாதேவி


மலர்களைப் பற்றியும் செடிகளைப் பற்றியும் நான் எழுதுவதெல்லாம் இளமைக்கால நினைவுகளிலிருந்து. குமரிமாவட்டம், மேற்குமலைகள் மலர்களால் நிறைந்தவை. பத்துநாட்கள் மலர்களை தேடிச்செல்லும் ஒரு கொண்டாட்டம் இங்கே உண்டு. ஓணக்கொண்டாட்டம். வெவ்வேறுவகையான மலர்களை அதிகமாக சேர்ப்பவர்கள் வெல்வார்கள். அதற்காக மலர்தேடி அலைவோம்


அ.நீலச்செண்பகம் என்பது காணிக்காரர் பாட்டில்தான் பெரும்பாலும் இருக்கிறது. ஒரு இஞ்ச் நீளமுள்ளது. அரளிக்கும் செம்பகத்துக்கும் நடுவே இருக்கும் வடிவம். நீலமும் அல்ல. வெண்மைதான். இதழ்களின் விளிம்பில் நீலப்பூச்சுபோல் இருக்கும். நீங்கள் அளித்த பூவின் படம்போல.


ஆ.குடைப்பனை இப்போது வெட்டித்தள்ளப்படுகிறது. ஆகவே அனேகமாக இல்லாமலாகிவிட்டது. பொதுவாக ரப்பர் வந்ததுமே மலர்கள் அழியத்தொடங்கின. இன்று குமரிமாவட்டத்தில் ஒரே தாவரம்தான், ரப்பர். குடைப்பனைக்கு யட்சிப்பனை என்றும் பெயருண்டு. யட்சிகோயில்கள் கான்கிரீட் கட்டிடங்களாக ஆனதும் குடைப்பனையும் மறைந்துவிட்டது


இ.உலத்தி என்ற வகை பனை உண்டு. அதுவும் இப்போது இல்லையோ என நினைத்தேன். ஆனால் சமீபத்தில் குடகு சென்றிருந்தபோது காட்டில் உலத்திப்பனை குலைதள்ளி நிற்பதைக் கண்டேன்


ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 04, 2021 10:30

January 3, 2021

மலை மாதேஸ்வரர் கோயில்


மீண்டும் ஈரட்டியில் மூன்றுநாட்கள் இருந்தேன். திருச்சியில் இருந்து பச்சைமலை வழியாக ஈரோடு சென்று அங்கிருந்து ஈரட்டி பங்களா சென்றோம். என்னுடன் கதிர்முருகன், ஜெயராம், யோகேஸ்வரன், அந்தியூர் மணி ஆகியோர் இருந்தார்கள்.


ஈரட்டியில் மழைக்காலம் இன்னும் முடியவில்லை. வானம் இருண்டு உறுமிக்கொண்டே இருந்தது. நாங்கள் கிளம்பிய அன்று மழை வந்துவிட்டது. மழைவெம்மை இருந்தமையால் குளிர் ஒப்புநோக்க குறைவுதான்.



பங்களாவின் முன்னால் இருந்த நிலத்தில் புதர்களை வெட்டிப்போட்டிருந்த விறகுகளைக்கொண்டு ‘காம்ப்ஃபயர்’ அமைத்தோம். முதல்நாள் சரியாக வெட்டி அடுக்காததனால் தீ எரியவில்லை. விறகும் கொஞ்சம் பச்சை. இருந்த மண்ணெண்ணையை விட்டு ஓரளவு எரியசெய்தோம்


மறுநாள் உள்ளே இருந்த எண்ணையை கொட்டி எரியச் செய்தோம். முன்பு தங்கியிருந்தவர்கள் சிக்கன் வறுத்த கடலை எண்ணை குருதிக்குழம்பு போல் இருந்தது. எதற்கும் பயன்படாது. கொழுந்தாடிய தீ விறகில் இருந்த ஈரத்தை ஆவியாக்கியபின் நாக்கு சுழற்றி உண்டு கூத்தாடியது.


நெருப்பு அணைந்தபின் நிலவு. கன்னங்கரிய காட்டின் இருளில் முழுநிலவு எழுவது ஒரு பெருந்தோற்றம், கலை, இலக்கியம் பற்றிய பேச்சுக்கள். வழக்கமான கிண்டல் கேலி. தூங்குவதற்கு சிலபேய்க்கதைகள்.



ஒரு நடை மாதேஸ்வரன் மலை சென்று வரலாம் என்றனர். ஈரட்டியிலிருந்து மாதேஸ்வரன்மலை செல்ல ஒரு புதிய வழி இப்போது உள்ளது.மாதேஸ்வரர் கன்னடத்தில் மலெ மாதேஸ்வரா என அழைக்கப்படும் ஒரு மெய்ஞானி. உத்தரராஜம்மாவுகும் சந்திரசேகர மூர்த்திக்கும் மகனாக ஆதி ஜாம்பவ குடியில் பிறந்தவர். லிங்காயத் மரபைச் சேர்ந்தவர். சுத்தூர் மடத்திலும் குந்தூர் மடத்திலும் இருந்தவர். அவர் ஸ்ரீசைலம் பகுதியைச் சேர்ந்தவர், அங்கிருந்து தெற்கே மைசூர் பகுதிக்கு வந்தார் என்று கருதப்படுகிறது


ஒரு புனிதராக மலைக்குடிகளால் கருதப்படும் மலே மாதேஸ்வரர் வேங்கைப்புலி மேல் ஏறி இங்கே வந்ததாகவும் இங்கே பலவகையான பேய்கள் வாதைகளை விரட்டி நோய்களை அகற்றி மக்களை காப்பாற்றியதாகவும் செய்திகள் சொல்கின்றன. மைசூர் பகுதி மலைகளில் வாழ்ந்த பழங்குடிகளை லிங்காயத்துகளாக ஆக்கியவர் அவர்தான். இன்று மைசூர் முதல் சத்யமங்கலம் வரையிலான மலைகளில் சோளகர் உட்பட பல குடிகளில் இருந்து வந்த லிங்காயத்துக்களே மிகுதி. அவர் அம்மக்களுக்கு தன்னம்பிக்கையை, உயர்வுணர்வை அளித்தார். அவர்கள் இன்று மிக ஆசாரமான சைவக்குடியினர்



மலை மாதேஸ்வரர் பற்றிய தொன்மம் அவரை பற்றிய மலேமாதெஸ்வர சரிதா என்னும் வாய்மொழிக் கதையில் உள்ளது. இன்று நூலாகியிருக்கிறது. மாதேஸ்வரர் வருவதற்கு முன்பு இம்மலைமக்களின் எல்லா தேவர்களையும் ஷ்ராவன என்ற பூதம் பிடித்து ஏழு மலைகளிலாக கட்டி வைத்திருந்தது. தன் தவ வல்லமையால் அவர்களை விடுவித்த மாதேஸ்வரர் மலைமக்களுக்கு தெய்வங்களை திருப்பி அளித்தார். அவர்களின் நிலங்கள் மீண்டும் செழிப்படைந்தன


[இந்தக்கதை அப்படியே திபெத்திய பௌத்தத்தின் முதல் ரிம்போச்சே எனப்படும் பத்மசம்பவர் கதைக்குச் சமானமாக உள்ளது. அவரும் புலிமேல் சென்று பூட்டானில் இறங்கி ஏழு மலைகளில் இருந்த ஏழு பூதங்களை வென்று பூட்டான் மக்களை விடுவித்து பௌத்தத்தை நிறுவினார். புலிமேல் அவர் வந்திறங்கிய இடம்தான் புலிக்குகை விகாரை.வடகிழக்கு நோக்கி 9, ஒரு மாவீரரின் நினைவில்]


இந்த ஏழு மலைகளில் ஒன்று மேட்டூருக்குமேலே இருக்கும் மாதேஸ்வரன் மலை. ஈரட்டி, தாமரைக்கரை , தேவர்மலை பகுதிகளிலேயே மூன்று மாதேஸ்வரர் ஆலயங்கள் உள்ளன. இந்த ஆலயங்கள் மாதேஸ்வரர் நிறுவிய சாலூர் மடத்தின் பொறுப்பில் இருந்தன. இன்று அரசு நிர்வாகத்தில் உள்ளன. மாதேஸ்வரர் பொயு பதினாறாம் நூற்றாண்டில் வாழ்ந்திருக்கலாம்.



மாதேஸ்வரர் ஆலயம் மலைக்குடிகளால் எப்போதும் மொய்க்கப்பட்டிருக்கும். மொட்டைபோடுதல் வழக்கம். கொரோனோ காலமாக இருந்தாலும் நல்ல கூட்டம் இருந்தது. சிறிய கற்கோயில். சமீபகாலமாக அதை கான்கிரீட்டில் விரிவாக்கி கட்டியிருந்தனர். சென்ற செப்டெம்பரில் சென்ற மலைமாதேஸ்வரா கோயில் [பி.ஆர்.ஹில்ஸ்] போலவே தோன்றியது. ஒரு மலையுச்சியில் காடு சூழ அமைந்த கோயில் இது


மாதேஸ்வரர் ஆலயத்தின் பூசகர்கள் மலைக்குடிகளில் இருந்துவந்தவர்கள். மையப்பிரதிஷ்டை சிவலிங்கம். பூசனை முறைகளும் முழுமையாகவே வீரசைவ மரபைச் சேர்ந்தவை. ஆனால் இன்று இது லிங்காயத் மரபுக்குள் ஒரு தனிமரபாக நிலைகொள்கிறது. மிகப்பெரிய பொதுக்கூடம், அன்னதான சத்திரம்.


நாங்கள் சென்றபோது நல்ல வெயில். அந்த கொதிக்கும் தரையில் ஒருவர் உருள்வேண்டுதல் செய்துகொண்டிருந்தார். உடன் அவருடைய மகனும் உருண்டுகொண்டிருந்தான். மனிதன் தனக்கு நேர்ந்த துயரை தண்டனை என நினைக்கிறான். தன்னைத்தானே தண்டித்துக்கொள்வதன் வழியாக தன்னை மேற்கொண்டு தண்டிக்காதபடி செய்கிறான். மூடநம்பிக்கை எனலாம், ஆனால் உலகம் முழுக்க இவ்வழக்கம் உள்ளது. கனடாவில் மாண்ட்ரியல் குன்றில் முழந்தாளிட்டே மேலேறும் வெள்ளையரை கண்டிருக்கிறேன்


மாதேஸ்வரரை தரிசித்துவிட்டு மீண்டும் ஈரட்டிக்கு திரும்பினோம். மலைக்காடுகளின் வழியாக சுழன்று சுழன்று சென்று வானில் இருந்த ஓர் ஆலயத்தை வழிபட்டு திரும்பிவந்ததுபோல் உணர்ந்தோம்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 03, 2021 10:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.