Jeyamohan's Blog, page 1066

January 10, 2021

விஷ்ணுபுரம் விருதுவிழா- கடிதங்கள்


அன்புள்ள ஜெ,


விஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகளைப் பார்த்துக்கொண்டிருந்தேன். இந்த ஆண்டும் சுரேஷ்குமார இந்திரஜித் ஆவணப்படம் சிறப்பாக இருந்தது. ஒவ்வொரு ஆண்டும் எண்ணிப்பார்க்கையில் இந்த ஆவணப்படங்கள் ஒரு பெரிய தொகுப்பாக மனதில் உள்ளன. பல எழுத்தாளர்களுடன் பழகிய அனுபவங்கள் உருவாகின்றன.


ஞானக்கூத்தன் ஆவணப்படத்தை மட்டும் நான் பலமுறை பார்த்திருப்பேன். அவருடன் அறிமுகமாகவேண்டும் என்றெல்லாம் நினைத்திருந்தேன். அவர் மறைந்தது எனக்கு அதிர்ச்சி. அதற்குப்பின் ஆவணப்படத்தை பார்க்கையில் அவர் இருப்பதுபோலவே ஒரு நினைப்பு


ஆவணப்படம் எதனால் தேவையாகிறது? நம் மனசைக்கவர்ந்த ஓர் எழுத்தாளரை நாம் பார்க்கவும் விரும்புகிறோம். ஏனென்றால் அவர் நம்முடன் பேசிக்கொண்டிருப்பதுபோல நாம் நிறையவே கற்பனைச் செய்திருப்போம். அந்த கற்பனையை வளர்ப்பவை ஆவணப்படங்கள். அவரை நேரில் சந்திக்கும் உணர்வை அளிக்கின்றன


சீ.முத்துசாமி, தேவதச்சன், வண்ணதாசன், ராஜ்கௌதமன், அபி ஆகியோரின் ஆவணப்படங்களும் மிகமுக்கியமானவை. ஆனால் ஆ.மாதவனுக்கு ஒர் ஆவணப்படம் தயாரித்திருக்கலாமோ என்ற எண்ணம் இப்போது ஏற்படுகிறது. பூமணி, தெளிவத்தை ஜோசப் ஆகியோருக்கும் ஆவணப்படங்கள் இல்லை. அதெல்லாம் பெரிய விடுபடல்களாக இப்போது தோன்றுகிறது


இன்றைக்கு வாழும் பல படைப்பாளிகளுக்கு நல்ல ஆவணப்படங்கள் இல்லை. அவர்களை பற்றி ஆவணப்படங்கள் எடுத்து ஒரு ஆர்க்கைவ் போல திரட்டி வைப்பது மிகமிக அவசியமானது. இன்றைக்குக் கூட அசோகமித்திரன் பற்றி இணையத்தில் கிடைப்பதாக ஒரு நல்ல ஆவணப்பபடம் இல்லை.


சுரேஷ்குமார இந்திரஜித் ஆவணப்படம் சிறப்பாக எடுக்கப்பட்டிருந்தது. அவருடைய வீடு, குடும்பம், நண்பர்கள், வேலைச்சூழல், அவருடைய குணஇயல்பு ஆகியவை அருமையாக வெளிப்பட்டிருந்தன. ஒளிப்பதிவும் சிறப்பாக இருந்தது


அன்புடன்


ரா.முருகேஷ்



அன்புள்ள ஜெ


விஷ்ணுபுரம் விருதுவிழா காணொளிகளைக் கண்டேன். விழா வழக்கம்போல முறையாக நடைபெற்றிருக்கிறது. சுருக்கமாக எல்லாருமே அவரவர் பணியை நிறைவேற்றியிருக்கிறார்கள். விஐபிக்கள் இல்லாமல் விஷ்ணுபுரம் நண்பர்களே விருதுவழங்கும் செயலை நிறைவேற்றியதுகூட நல்லதுதான். இப்படி ஒரு சூழல் இல்லை என்றால் இவ்வாறு நடைபெற்றிருக்காது இல்லையா?


சுனீல்கிருஷ்ணன், நீங்கள் இருவருமே சுருக்கமாக நன்றாகப் பேசினீர்கள். சுரேஷ்குமார இந்திரஜித்தின் பேச்சும் நன்றாக இருந்தது. இயல்பாக சிரித்தபடி தன் எழுத்தின் பல்வேறு அடுக்குமுறைகளைப்பற்றி அவர் பேசியதைக் கேட்க நிறைவாக இருந்தது. எந்த விதமான பதற்றமும் இல்லாதவராக தெரிகிறார்.


சுரேஷ்குமார் இந்திரஜித் ஆவணப்படமும் சிறப்பாக இருந்தது. சுரேஷ்குமார இந்திரஜித் சிரித்தபடியே அவரே அவரைப்பற்றி நம்மிடம் பேசுவதுபோல தோன்றியது. நல்ல ஆவணப்படம் என்பது நாமே அங்கே சென்று அவரை சந்தித்துவிட்டு வருவதுபோல தோன்றவேண்டும். அதிலும் இவையெல்லாம் ஒருவரைப்பற்றி முதல்முறையாக எடுக்கும் ஆவணப்படங்கள். அவை ஓர் அறிமுகத்தன்மையுடன்தான் இருக்கவேண்டும். இந்த ஆவணப்படங்கள் அப்படி ஓர் அறிமுகத்தன்மை கொண்டிருந்தன


முழுமையான அறிமுகம் என்றுதான் நினைக்கிறேன். ஐம்பது நிமிடங்களில் சுரேஷ்குமாரின் குணச்சித்திரம் அவருடைய மனைவி குழந்தைகள்  அலுவலகம் நண்பர்கள் எல்லாமே அறிமுகமாகிவிடுகின்றன. அவருடைய புனைவுலகைப்பற்றியும் ஒரு சுருக்கமான அறிமுகம் வந்துவிடுகிறது. அவருடைய பேச்சு முறையும் சிரிப்பும் கையசைவுகளும் எல்லாம் தெரிகின்றன. நெடுநாட்களாக தெரிந்தவராக அவர் ஆகிவிடுகிறார். நேரில் பார்த்தால் பல ஆண்டுகளாக அறிமுகமானவர்களைப்போல அருகே சென்று பழகமுடியும் என்று தோன்றியது


ஆவணப்படம் இயக்கிய கே.பி.வினோத், ஒளிப்பதிவாளர் ஆனந்த்குமார் ஆகியோர் பாராட்டுக்குரியவர்கள். ஆவணப்படத்தின் இசையமைப்பு வித்தியாசமாக இருந்தது. வழக்கமான கேட்ட மெலடிகள் இல்லாமல் மேலையிசைத்துணுக்குகளாக அமைந்திருந்தது காட்சிகளின் மென்மையான வண்ணங்களுக்கு ஒத்துப்போவதாக இருந்தது. திரு ராஜன் சோமசுந்தரம் அவர்களுக்கும் பாராட்டுக்கள்.


எம். சரவணக்குமார்


விஷ்ணுபுரம் விருது விழா-கடிதங்கள்
விஷ்ணுபுரம் விழா- கடிதங்கள்
விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள் -கடிதங்கள்
விஷ்ணுபுரம் ஆவணப்படங்கள்

 


 



ஞானக்கூத்தன் ஆவணப்படம் இலைமேல் எழுத்து


இயக்கம் கே.பி,வினோத்


 



தேவதச்சன் ஆவணப்படம் நிசப்தத்தின் சப்தம்


இயக்கம் சரவணவேல்


 



 


வண்ணதாசன் ஆவணப்படம் நதியின்பாடல்


இயக்கம் செல்வேந்திரன்


 



 


சீ முத்துசாமி ஆவணப்படம் ரப்பர்விதைகளுடன் விளையாடும் கலைஞன்


இயக்கம் ம.நவீன்



பாட்டும் தொகையும் ராஜ் கௌதமன் ஆவணப்படம்


இயக்கம் கே பி வினோத்



அந்தரநடை


அபி ஆவணப்படம்


இயக்கம் கே.பி.வினோத்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 10, 2021 10:32

எண்ணும்பொழுது- கடிதங்கள்


எண்ணும்பொழுது [சிறுகதை]

அன்புள்ள ஜெ


உங்கள் கதைகளை தொடச்சியாக வாசித்துக்கொண்டே இருக்கிறேன். நூறுகதைகளையும் ஒரு உயர்கல்வி வகுப்பு மாதிரியே வாசித்தேன். அதற்கு வந்த கடிதங்களையும் வாசித்தேன். ஒரு கதையிலிருந்து எவ்வளவுதூரம் மேலே செல்லமுடியும் என்று அப்போதுதான் தெரிந்தது. உங்கள் கதைகளில் நான் எளிதாக எந்த ஆழமும் போகமுடியும் என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் அந்த நம்பிக்கை எப்போதுமே அடிவாங்குகிறது. அப்படி ஒரு அடி அளித்த கதை எண்ணும்பொழுது


கதைக்குள் கதை. ஆணும்பெண்ணும் படுக்கையறைக்குள் பேசிக்கொள்கிறார்கள். அவர்கள் ஒரு கதையை விவாதிக்கிறார்கள். அது ஒரு நாட்டார்க்கதை. அந்தக்கதையை அவன் ஏன் அவளுக்குச் சொல்கிறான் என்பதில்தான் கதையே உள்ளது. அந்தக்கதையை அவன் வளர்த்திச் சொல்கிறான். அந்த வரிகள் எல்லாமே மந்திரம்போல ஆழமானவை


அவர்கள் இருவருக்கும் நடுவே ஓர் ஆண்பெண் விளையாட்டு உள்ளது. ஒரு லீலை. அவர்கள் பேசும் கதையில் ஓர் ஆண்பெண். அங்கும் ஒரு லீலை. போம்பாளரும் திருவீட்டில் கன்னியும் ஒருவரை ஒருவர் எங்கே சந்தேகப்படுகிறார்கள்? எந்தப்புள்ளியில் அந்தப்பிரிவு தொடங்குகிறது? அதை கண்டுபிடிக்கவே முடியாது. ஒரு நொடியின் ஒருபாதியில் அவளும் இன்னொரு பாதியில் இவளும் சந்தேகப்படுகிறார்கள் என்பது எவ்வளவு பயங்கரமானது. விதியைப்போல பயங்கரமானது. மனிதன் ஒன்றுமே செய்யமுடியாது


அந்தச் சந்தேகம்கூட காரணகாரியத்தாலோ தர்க்கத்தாலோ வருவது அல்ல. அவள் கெட்டவள் என்று அவர் நினைக்கவில்லை. அவள் கெட்டவள் என்று அவளும் நினைக்கவில்லை. பிரிந்துவிடுவாளோ என்று பதற்றம் அடைகிறார்கள். மிகையான அன்பால் வரும் பதற்றம்தான் அது. விலக்கம் வந்துவிடுமோ என்ற பயம். அதுவே எண்ணிப்பார்க்க வைக்கிறது. எண்ண எண்ண விரிசல் கூடுகிறது. எண்ணிப்பார்க்கையில் நல்லவை எல்லாம் குறைகின்றன. பொல்லாதவை கூடிவிடுகின்றன


அவர்களின் பிரிவும் அப்படிப்பட்டதுதான். அவள் தீயை நினைத்துக்கொண்டிருக்கிறாள். தீயிலேயே மறைகிறாள். அவர் தண்ணீருடன் போராடுகிறார், தண்ணீரிலேயே மறைகிறார். இருவேறு உலகங்கள். இருவரும் ஊழிமுடிவிலேகூட சந்திக்கமுடியாது.


அந்த பெரிய டிராஜடியை ஏன் சொல்கிறான்? சும்மா தற்செயலாகத்தான் சொல்கிறான். அவளும் அதை பெரிதாக நினைக்கவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் நீரும் நெருப்பும். அவள் அவனை நெருப்பு என்கிறாள்.அவள் நீர்போல குளிர்ந்தவளாக இருக்கிறாள். அவர்கள் இருவர் நடுவே அந்த பிரிவு இல்லை. ஒருவேளை பிரிவு வரப்போவதுமில்லை. ஆனால் ஒரு potentiality ஆக அது இருந்துகொண்டே இருக்கிறது. அதை எதிர்கொள்ள தயங்கித்தான் அவர்கள் செல்லப்பேச்செல்லாம் பேசிக்கொள்கிறார்கள்


பூமுள் என்று சொல்வார்கள். பூமுள்ளை ஊசியால் குத்தி எடுக்க முடியாது. பெரிய வலியும் இருக்காது. ஆனால் இருந்துகொண்டே இருக்கும். ஒரு நஞ்சுகொண்ட பூமுள்ளின் கதை இது.


ஆர்.ராஜசேகர்


 


வணக்கம் ஜெ


எண்ணும்பொழுது சிறுகதையை வாசித்தேன். அறிவின் வழிகளில் ஐயப்படுதல் முதன்மையானதாக இருக்கும். நீர்பிம்பத்தால் தெரியும் திருவீட்டுக் கன்னியின் அழகால் கவரப்படும் போம்பாளன் மெய்யில் அழகு குறைந்தவளாக இருக்கும் போது ஆடியில் அவள் அழகைக் காண்கிறான். சொப்பனத்தில் பெருகிய பூவைக் காண்பதும் நேரில் அதனை எண்ணி பூ குறைவதையும் காண்கிறான். அழகு, காதல் என நுண்ணியவைகளை அறிவிலும் தருக்கத்தாலும்  மட்டுமே மீட்டிக் கொள்கிறான். இன்னொரு புறத்தில், மோதிரத்தின் பளபளப்பை அறியா குறையுடையவளாகக் கன்னி இருக்கிறாள். இருவரும் கையளித்துக் கொண்டவை அவர்களின் உள்ளத்தின் பருவடிவே.


 


அரவின் குமார்


மலேசியா

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 10, 2021 10:31

சாத்யகி எனும் தந்தையும் பூரிசிரவஸ் எனும் சிறுவனும்

தள்ளி நின்று பார்க்கக்கூடியவன் அறிகிற உலகு வேறாகவே இருக்கிறது. வெண்முரசில் வண்ணக்கடல் அப்படி விலகி நின்று அறியக்கூடியவர்களால் சொல்லப்படும் கதை. ஆனால் அக்கதைகளை சொல்கிறவர்கள் சூதர்கள். நிகழ்வுகள் அவர்களுக்கு கதைகள் மட்டுமே. வெண்முகில் நகரத்தில் விலகி நின்று பார்க்கிறவர்களாக பூரிசிரவஸூம் சாத்யகியும் அறிமுகம் கொள்கின்றனர்


சாத்யகி எனும் தந்தையும் பூரிசிரவஸ் எனும் சிறுவனும்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 10, 2021 10:30

January 9, 2021

ஷோபா சக்தி- ஒரு விவாதம்


இணையவசதி இல்லாத இடத்தில் இருக்கும் காரணத்தால் அகழ் என்னும் இதழில் நட்சத்திரன் செவ்விந்தியன் என்பவர் ஷோபா சக்தியின் புதியநாவலான இச்சா பற்றி எழுதியிருந்த ‘மதிப்புரை’- மற்றும் அதன்மீதான ஷோபா சக்தியின் எதிர்வினையை காணநேரவில்லை.அதைப்பற்றி உரையாடலில் ஒருநண்பர் சொன்னார். இன்றுதான் அதை வாசித்தேன்.அதன்மேல் என் எதிர்வினையை அனோஜனிடம் தெளிவாக- கடுமையாகவும்- எடுத்துக்கூறிவிட்டேன்


ஆனால் இது ஒரு பொது விவாதம் என்பதனால் என் தரப்பை எதிர்காலத்திற்கென பதிவுசெய்வதும் தேவை என நினைக்கிறேன். ஆகவே இணையம் கிடைக்கும் இடத்தை தேடி வந்து அமர்ந்து இதை பதிவுசெய்கிறேன்


நட்சத்திரன் செவ்விந்தியன் என்பவர் எழுதியது மதிப்புரை அல்ல– நேரடியான அவதூறு, மொட்டைவசை. நான் அவர் இதற்கு முன் ஈழத்தவர் பலரைப்பற்றி  எழுதியவற்றை வாசித்திருக்கிறேன். அவருக்கு இலக்கியம், கருத்துச்செயல்பாடு பற்றி எந்த அடிப்படை அறிதலும் இல்லை. எந்தவகையிலும் இலக்கியத்துடன் தொடர்பில்லை. அவரால் இலக்கியம் பொருட்படுத்தும் ஒருவரியையேனும் எழுதுவது இயலாது.


நான் வாசித்தவரை அவர் ஓர் உளம் கலங்கிய நபர். மருத்துவ உதவி தேவையான இடத்தில் இருப்பவர். ஈழப்போர் அத்தகைய பல ஆழ்ந்த உளவியல்சிக்கல்களை உருவாக்கியிருக்கிறது. இலக்கியம் பற்றிய எளிய புரிதல் கொண்ட எந்த இதழும் அந்த மனிதர் எழுதிய ஒரு வரியையேனும் பிரசுரிக்காது. சில நாட்களுக்கு முன் இதே உளவியல்சிக்கல்களுடன் எழுதப்பட்ட அருண் அம்பலவாணர் என்பவரின் கட்டுரையை வாசித்து எவரென விசாரித்தேன். இதே மனிதர்தான்.


[இத்தகைய கவனமே இந்த உளச்சிக்கல் கொண்டவரின் இலக்கு. ஆகவே அவர் தன் முரசை கையிலெடுக்கக்கூடும். ஆனால் நானும் இனி மேல் அந்த மனிதர் குறித்து ஒருவரியும் எழுதுவதாக இல்லை]


ஓர் இதழின் ஆசிரியராக இருப்பதென்பது ஒரு பெரும்பொறுப்பு. அதில் வரும் எல்லா வரிகளுக்கும் அதன் ஆசிரியர்கள் தார்மிகமாக பொறுப்பேற்றுக்கொள்ளவேண்டும். அவ்வகையில் அனோஜன் பாலகிருஷ்ணன் சுரேஷ் பிரதீப் இருவரும் அக்கட்டுரையை திரும்பப்பெற்று மன்னிப்பு கோருவதே முறையாக இருக்கும் என்பது என் எண்ணம். இனி அந்த நபர், அல்லது அந்நபருக்கு இணையான உளவியல்சிக்கல்கள் கொண்டவர்களின் எழுத்துக்களை பிரசுரிப்பதில் இருந்து விலகிக்கொள்ளவும் வேண்டும்


ஒருவர் ஒர் இலக்கிய ஆக்கத்தை எழுதிவிட்டார் என்பதற்காக அவரை எவரும் வசைபாடலாம், அதற்கு விமர்சன சுதந்திரம் என்றும் கருத்துச் சுதந்திரம் என்றும் பெயருண்டு என்று நினைப்பதைப்போல அபத்தம் வேறில்லை. எந்த விமர்சனமும், எந்தக் கருத்தும் வாசகனை நோக்கி முன்வைக்கப்படுகிறது. அது வாசகனுக்கு சிந்திக்கவும் மதிப்பிடவும் உதவவேண்டும். ஒரு நெறியை, மதிப்பீட்டை, கருத்துத் தரப்பை நேர்மையாக முன்வைக்கவேண்டும். வாசகனுக்கு அதனால் என்ன பயன் என்பது மட்டுமே அது எழுதப்படுவதற்கான நியாயம்.


வெறும் காழ்ப்புகள், உளச்சிக்கல்களை எழுத்தில்கொட்டுவது வாசகனின் நேரத்தை வீணடிப்பது. அவனுடைய நுண்ணுணர்வை அவமானப்படுத்துவது. அத்தகைய சண்டைகளை ரசிக்கும் மனம்கலங்கிய வாசகர்களும் உண்டுதான். ஆனால் நல்ல நோக்கம் கொண்ட ஒர் இதழ் நல்ல வாசகனை மட்டுமே இலக்காக்கும்.


இணையவெளியின் வணிகம் ஒன்றை ஒவ்வொருவரிடமும் சொல்கிறது– இங்கே எல்லாரும் சமம்தான் என்று. ஆனால் அது ஒரு பாவனை. அது அரட்டைக்கு உதவலாம். எந்நிலையிலும் எல்லாரும் இணை அல்ல. ஒர் அறிவுச்சூழலில் கற்று எழுதி தன்னை நிறுவிய முதன்மைப்படைப்பாளிக்கு சமூகவலைத்தளங்களில் பெயர்பதிவு செய்துகொண்ட எல்லாரும் இணையானவர்கள் அல்ல.


எவர் என்ன எழுதினாலும் சமூக ஊடகம் இடம்கொடுக்கும் என்பதனாலேயே எழுதுபவர்கள் அனைவரும் சமம் அல்ல.  சாதனையாளர் சாதனையாளரே. கற்றவர் கற்றவரே. மற்றவர்கள் அவரவர் நிலைகளில்தான் இருக்கிறார்கள்.அவர்கள் தங்கள் தகுதியை மேம்படுத்திக்கொண்டு மட்டுமே ஒரு பொதுப்பேச்சுத்தளத்திற்கு வரமுடியும்.


அனைவரும் சமம் என்பது சமூக ஊடகம் உருவாக்கும் அசட்டு நம்பிக்கை. எந்த அறிஞனையும் ஒன்றும்தெரியாத முட்டாள் விமர்சனம் செய்யலாம் என அது இடம்கொடுக்கிறது. அதை கொஞ்சமேனும் அறிவும் நுண்ணுணர்வும் உடையவர்கள் நிராகரித்தேயாகவேண்டும். அந்த தரப்பிரிவு இல்லையேல் அறிவார்ந்த உரையாடல் சீரழியும். அறிவியக்கமே அழியும். அதை அனோஜன் போன்றவர்கள் உணரவேண்டும். எல்லாரும் சமம் என்பது ஜனநாயகம் அல்ல, எல்லாருக்கும் வாய்ப்பு என்பதே ஜனநாயகம். ஜனநாயகத்தின் பெயரால் முட்டாள்களின் குரல்களுக்கு இடமளிக்கலாகாது.


எவரும் விமர்சனம் செய்யலாம், ஆனால் ஷோபா சக்தி சமகாலத் தமிழிலக்கியத்தின் தலையாய ஆளுமைகளில் ஒருவர். ஈழம் உருவாக்கிய இலக்கியப்படைப்பாளிகளில் முதன்மையான மூவரில் ஒருவர். [அ.முத்துலிங்கம், மு.தளையசிங்கம்] அதில் ஐயமே இல்லை. எவராயினும் அந்த இடத்தை அவருக்கு அளித்தபின்னரே மேலே பேசமுடியும். அவருடைய கிறுக்குத்தனங்கள்கூட  அவ்வண்ணமே கருதப்படவேண்டும். அந்த மதிப்பு அடுத்த தலைமுறையினரிடம் இல்லை என்றால் அவர்கள் எதையும் பெற்றுக்கொள்ளவில்லை. அவர்கள் ஒருவகை தற்குறிகள்.


ஷோபாவை ஆராயலாம், விமர்சிக்கலாம், அவரைக் கடந்துசென்று எழுதிக்காட்டலாம். அதற்கான அறைகூவலே இலக்கியச் செயல்பாடு எனப்படுகிறது. சிறுமைசெய்வது நம்மை நாமே சிறுமைசெய்துகொள்வது.


 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 09, 2021 18:29

எண்ணும்பொழுது [சிறுகதை]


“தெற்குதிருவீட்டில் கன்னியின் கதை” என்று அவன் சொன்னான்.


அவள் கூந்தலை தூக்கி சுருட்டி முடிந்துகொண்டிருந்தாள். அவன் சொன்னதை அவள் கேட்கவில்லை. அவன் அவளுடைய புறங்கழுத்தை பார்த்துக்கொண்டிருந்தான்.அவள் நல்ல வெண்ணிறம். கழுத்து மென்மையான சருமப்பளப்புடன், சுருண்ட பிசிறுமயிர்ச்சுருட்களுடன், இரு சிவந்த மென்வரிகளுடன் தெரிந்தது


அவள் கண்ணாடியில் அவனைப் பார்த்தாள். கண்ணாடியிலேயே உதட்டை சுழித்து “என்ன பார்வை?”என்றாள்


“சும்மா”


”பாத்துப்பாத்துதான் கெடக்கே” என்று அவள் உதட்டை சுழித்தாள்


“பாக்கிறதிலே என்ன?”என்றான். “பாக்கிறதுக்காகத்தானே?”


“பாக்கிறது மட்டுமா?”


“பாக்கிறதுதான் முதல்லே… கண்ணாலேதான் மனசு… மத்ததெல்லாம் வெறும் உடம்பு”


“ம்க்கும், எதாவது கேட்டா  உடனே ஏதாவது சம்பந்தமில்லாமல் பேச ஆரம்பிச்சிடறது”


அவள் தங்கவளையல்களை கழற்றினாள். அவள் நகைகளை கழற்றும்போதும் மேஜை மேலிருந்த சிறிய பீங்கான் கிண்ணத்தில் போடும்போதும் அவை மெல்லிய உலோக ஓசையிட்டன. ஓசையிலிருந்தே எது வளையல் எது மோதிரம் என்று சொல்லமுடிந்தது.


“என்னமோ சொன்னீங்களே?” என்றாள்


”என்ன?”என்றான்


“என்னமோ கன்னின்னு?”


“அதுவா? அது ஒரு கதை… நான் முன்னாடி கேரளத்திலே வடகரைங்கிற ஊரிலே வேலைபாத்தப்ப ஒருநாள் ஒரு சின்னக்கோயிலிலே கதை கேக்கப்போனேன். நம்மூர் வில்லுப்பாட்டு மாதிரி அங்க ஒருவகை பாட்டு. பானைப்பாட்டுன்னு பேரு. பானைவாயிலே தோலைக்கட்டி அதிலே குச்சியாலே தட்டிட்டே பாடுறது…நீட்டி நீட்டி பாடுவாங்க… அப்ப எல்லாமே ஆச்சரியமா இருந்த காலகட்டம். அதனாலே அதை ரொம்ப ரசிச்சு கேட்டேன்”


“ஓகோ”என்று அவள் ஆர்வமில்லாமல் சொன்னாள். கண்ணாடியில் உடலைத் திருப்பி தன்னை பார்த்துக்கொண்டாள்


“தெக்குதிருவீட்டில் கன்னியோட பாட்டுகதை”


“அது எதுக்கு இப்ப ஞாபகம் வந்தது?”


“சும்மாதான்… ஏன் ஞாபகம் வந்தது, என்ன சம்பந்தம்னுதான் யோசிச்சிட்டிருக்கேன்”


”எப்ப பார் யோசனைதான்… ஒருநாள் மண்டையே ஷார்ட் சர்க்யூட் ஆகி புஸ்னு கருகிரப்போகுது”


அவன் புன்னகைத்தான்.


அவள் “இருங்க” என்று சொல்லிவிட்டு பாத்ரூமுக்குள் சென்றாள்.


அவன் தலையணையை எடுத்து மடியில் வைத்துக்கொண்டு காலை நீட்டி ஆட்டியபடி அந்த கண்ணாடியை பார்த்தான். அதில் அவள் இன்னமும் இருப்பதுபோல கண்ணாடிக்குள் அவள் கழற்றிவைத்த நகைகள் இருந்தன.


கண்ணாடிக்குள் அவள் ஆழத்தில் தோன்றினாள். நைட்டி அணிந்திருந்தாள். நீரிலிருந்து எழுவதுபோல கண்ணாடிப்பரப்பில் இருந்து எழுந்து அணுகி வந்து முகத்தை பார்த்துக்கொண்டாள். இப்பாலிருப்பது பிம்பம் என எண்ணிக்கொண்டான். அவள் கன்னத்தில் பூனைமுடி ஈரத்தில் ஒட்டியிருந்தது. நெற்றியிலும் முடி நனைந்திருந்தது. முகத்தை கையால் நீவிவிட்டாள். வெண்துவாலையால் முகத்தையும் கழுத்தையும் அழுத்தி துடைத்தாள்.


“ஏன் இங்கேயே டிரஸ் மாத்திக்கிடறது?”


‘இங்கியா?”


“மொத்தமாக் கழட்டுறே, அப்ற மாத்துறதுக்கு என்ன?”


“அதெல்லாம் மாட்டேன்”


“ஏன்னு கேட்டேன்”


”மாட்டேன், அவ்ளவுதான்”


“சரி, வா”


“என்ன அவசரம்?” அவள் தாலியை கழற்றி கண்ணாடிமுன் இருந்த கொக்கியில் மாட்டினாள்


“அதை மட்டும் ஏன் மாட்டுறே?”


“கீழே வைச்சா சிக்கிடுது” என்றாள் “அப்றம் அதை சிடுக்கெடுக்கிறது பெரிய ரோதனை”


“தாலிச்சிடுக்கு”


“என்னது?”


“இல்ல, ஒண்ணுமில்லை”


அவள் அருகே வந்தாள். இயல்பாக இரு கைகளையும் தூக்கி தலைமுடியை சீரமைத்தாள். இதை பெண்களுக்கு சொல்லிக்கொடுக்கவேண்டியதில்லை. இயல்பாகவே செய்கிறார்கள். அவள் மார்புகள் மெல்லிய வழுவழுப்பான நைட்டிக்குள் ஏறி இறங்கின. அவற்றின் உறுதியான வடிவை உணர்த்தியபடி. அவற்றின் நுனிகள் இறுகியிருக்கின்றன என்று காட்டியபடி


அவள் கட்டில் அருகே வந்து நின்று “சரண்யா அக்கா நாளைக்கு மலைக்கோயில் போலாமான்னு கேட்டாங்க… கார் போகுது. ஒரு சீட் இருக்குன்னு சொன்னாங்க”


“போயேன்… எங்கிட்ட கேக்கணுமா?”


“சொல்லணும்ல?”


இதுவும் ஒரு ஜாலம். உச்சிமுனைக்கு ஒருகணம் முன் தயங்கி நின்று இயல்பான அன்றாடப்பேச்சை எடுப்பது. வேறெங்கோ என நடிப்பது. உடலொன்று பேச சொற்கள் பிறிதொன்று பேசும் ஒரு நுண்ணியநடிப்பு. நடிப்பவரே அறியாத நடிப்பு போல அழகுடையதொன்றில்லை. அதைப்போல கூர்மையானதுமில்லை


“சொல்லிட்டேல்ல?”என்றான். அவள் கையைப்பிடித்து இயல்பாக அருகே அமரச் செய்தான்.


“நாளைக்கு கேஸுக்கு சொல்லணும்… எப்பவேணுமானாலும் தீந்துடும்” என்றாள்


”ஓகோ” என்றான் “அப்றம்?”


“என்ன அப்றம்?”


“மத்தபடி மளிகை,சமையல்… “


“வெளையாட்டா? டைமுக்கு வந்து உக்காந்துட்டு ஏன் லேட்டுன்னு கேக்கத் தெரியுதுல்ல?”


“சரி, இனிமே கேக்கலை” என்றான்


அவள் மீண்டும் கைகளை தூக்கி கொண்டையை அவிழ்த்து முடியை கைகளால் விரித்து தோளில் இட்டுக்கொண்டு மெத்தைமேல் காலை தூக்கி வைத்து அமர்ந்தாள்


“எல்லா தலைக்காணியையும் எடுத்து வைச்சுகிடணுமா”


“நீ வேணுமானா எடுத்துக்க”


எத்தனை சொற்கள் வழியாக…


அவள் தலையணையை எடுத்து வைத்து அதை கைகளால் அழுத்தி பதமாக்கினாள். “தலைகாணியிலே சாய்ஞ்சு உக்காந்தா குழிவிழுந்திடுது. அப்றம் காலையிலே எனக்கு கழுத்துவலி”


“நான் தெக்குதிருவீட்டில் கன்னி கதையப்பத்திச் சொன்னேன்ல?”


“ஆமா, அது என்ன கதை?”என்றபடி சாய்ந்து அமர்ந்தாள்


“தெக்குதிருவீட்டில் கன்னி ஒரு பெரிய அழகி. பெரிய குடும்பம். தெக்குதிருவீடுன்னா ஒரு குட்டி ராஜாவோட வம்சம். வடக்கே நாடுவாழிகள்னு சொல்லுவாங்க. அவளுக்கு பதினெட்டு வயசு இருக்கிறப்ப குளிக்கப்போறா. அப்ப போம்பாளர்னு இன்னொரு நாடுவாழி அந்தப்பக்கமா போறார். அவரோட பல்லக்குதூக்கிகளோட சத்தம்கேட்டு கன்னி குளப்புரையோட தூணுக்கு பின்னாடி ஒளிஞ்சுகிட்டா. ஆனா தண்ணியிலே அவளோட பிம்பத்தை போம்பாளர் பாத்துட்டார். அவள்மேலே காதலாயிட்டார்”


அவள் சிரித்து “இது நல்லாயிருக்கு” என்றாள்


“நானும் கொஞ்சம் மேலோட்டமான ஆர்வத்தோடத்தான் கதையைக் கேட்டேன். ஆனால் இந்த எடம் அப்டியே உள்ள இழுத்துட்டுது. சாதாரணமா இந்தமாதிரியான பாட்டுகளிலே இப்டி ஒரு சூட்சுமமான விஷயம் இருக்கிறதில்லை”


“அப்றம்?” என்றாள்


“அவர் வந்து பெண்கேட்கிறார். அவரு ஏழு கப்பலுக்கு உரிமையாளர். பெரிய படை வச்சிருந்தவர். அவருக்கு திருவீட்டுக்கன்னியை கட்டிக்குடுக்கிறாங்க. தண்ணியிலே பாத்த பெண்ணை அவர் நேரிலே பாக்கிறார். ஆனா அவளை கண்ணாடியிலே பாத்தாத்தான் அழகுன்னு நினைச்சு ஆறன்முளையிலே சொல்லி ஆளுயர கண்ணாடி செஞ்சு அதிலே நிக்கவைச்சு பார்க்கிறார்…”


“ஓகோ, வித்தியாசமா இருக்கே?”என்று அவள் புன்னகைத்தாள்.


“அவங்க பதினாறு வருசம் மனசு ஓப்பி சேந்து வாழுறாங்க”


“குழந்தைங்க இல்லியா?” என்றாள்


‘இல்லை…பதினாறு வருசம் கழிச்சு போம்பாளர் கப்பலிலே வியாபாரத்துக்கு கிளம்பறார். அஞ்சுவருசமாகும் திரும்பி வர்ரதுக்கு. அதுவரைக்கும் பிரிஞ்சிருந்தா ஆம்புளை மனசு மாறாதான்னு கன்னி கேட்டா. போம்பாளர் கன்னிகிட்டே ஒரு மோதிரத்தை குடுக்கிறார். அது பொன் மோதிரம். ஆனா அது மாயப்பொன். இந்த பொன்மோதிரம் எப்ப வெள்ளி மோதிரமா மாறுதோ அப்ப நான் உனக்கு துரோகம் பண்ணிட்டதா நினைச்சுக்கோன்னு சொல்றார்”


அவள் கையால் தலைமுடியை பிடித்துச் சுருள்களாகச் சுழற்றியபடி கேட்டுக்கொண்டிருந்தாள். கண்கள் மாறிவிட்டிருந்தன


“அவர் கிளம்பறப்ப அவள் ஒரு முல்லைக்கொடியை அவருக்கு கொடுக்கிறா. இந்த முல்லைக்கொடிக்கு நாளும் தண்ணி விடணும். எப்ப இது வாடுதோ அப்ப நான் துரோகம் பண்ணினதா நினைச்சுக்கிடுங்கன்னு சொல்றா. அவர் கெளம்பி போயிடறார்”


அவன் அவளுடைய உளம்கூர்ந்த முகத்தை பார்த்தான். என்ன நினைக்கிறாள்? கதையை புரிந்துகொள்கிறாளா, இல்லை வேறெதாவது யோசிக்கிறாளா?


“அப்றம்?”என்று அவள் கேட்டாள்


“கப்பல் பல மாதகாலம் கடலிலே போச்சு. பொருள் கொள்முதல் பண்ணிட்டு திரும்பி வர்ரப்ப புயல் வந்திட்டுது. கப்பல் திசைமாறி அலைகளிலே ஓட ஆரம்பிச்சிட்டுது. கப்பல் உடைஞ்சு போம்பாளர் கடலிலே விழுந்தார். ஆயிரம் அலை சேந்தடிச்சுது. பத்தாயிரம் அலை சேந்து அடிச்சுது. போம்பாளர் ஒரு கட்டையை புடிச்சுக்கிட்டு கடலிலே நீந்தினார். ‘திருவீட்டில் கன்னியின் கணவன் நான் கடலே, என்னை திரும்பி போகவிடு கடலே’ன்னு அவர் மன்றாடினார். ‘நஞ்சு மூத்த நாகராஜாவைபோல் படமெடுக்கும் கடலே, என் நெஞ்சு அழிஞ்சு நானே வந்தா எடுத்துக்கோ கடலே’ன்னு கூவி அழுதார்”


“அத்தனை அலையிலேயும் அந்த முல்லைச்செடியை அவர் விடவே இல்லை. முல்லைச்செடியை விட்டா ரெண்டுகையாலேயும் நீந்தலாம்னு தோணினாலும் விட மனமில்லை. முல்லைச்செடியை பிடிச்சிட்டிருக்கிற போம்பாளரை மூழ்கடிக்க கடலுக்கு அதிகாரமில்லை. கடல் அலையாலே அடிச்சடிச்சு பாத்தது. அதிலே இருந்து ஒரு முல்லைப்பூ கூட உதிரலை. அதனாலே கடல் அவர்மேல்  மனசிரங்கி அவரை கடலுங்கரைங்கிற ஒரு தீவிலே கொண்டு போய்ச் சேந்துது. அவர் அங்கே கரையேறினார். அவர் கையிலே அந்த முல்லைச் செடி இருந்தது”


“அங்கே கடலுங்கரை நாடுவாழி ஒருத்தர் இருந்தார். அவர் போம்பாளரை காப்பாற்றி ஒரு கடலோர வீட்டிலே தங்கவைச்சார். அவருக்கு ஒரு படகுகட்டி அதிலே ஏற்றி ஊருக்கு அனுப்புறதா வாக்குறுதி குடுத்தார். கடலுங்கரை தம்பிரானோட மகள் பெயர் கடலுங்கரை கன்னி. அவ பெரிய அழகி… திருவீட்டு கன்னிக்கு தண்ணியோட அழகு. கடலுங்கரை கன்னிக்கு தீயோட அழகு. திருவீட்டுக் கன்னிக்கு குழிமுயலோட அழகு. கடலுங்கரை கன்னிக்கு கருநாகத்தோட அழகு”


அவள் “உம்” என்றாள்


“கடலுங்கரைக் கன்னிக்கு போம்பாளரை கல்யாணம் பண்ணிக்கணும்னு ஆசை. கப்பல் வேலை முடியும் வரை அவர் அங்கேயே தங்கவேண்டியிருக்கு. அங்கேருந்து ஏழுகடல் தாண்டித்தான் போம்பாளரோட ஊர் இருக்கு. அவராலே வேற எங்கேயும் போகமுடியாது. ஏன்னா அது ஒரு தீவு. கடலுங்கரை கன்னி போம்பாளரை கவர முயற்சி பண்றா. கட்டாயப்படுத்திப் பாக்கிறா. கடலிலே துரத்திவிட்டிருவேன்னு பயமுறுத்தியும் பாக்கிறா. அவர் அவளை திரும்பிக்கூட பாக்கலை”


அவள் கண்களைப் பார்த்தபடி கதையை தொடர்ந்து சொன்னான். அவன் எப்போதுமே எதையாவது அப்படி பேசுவதுண்டு. படித்தது, பார்த்தது. ஆனால் எல்லாமே அவள் பார்வையில் கேலிக்குரியவைதான். ஆரம்பத்தில் அந்தக் கேலி ஓர் இனிய விளையாட்டாக இருந்தது. ஆனால் அதன்பின் அதில் பிடிவாதமாக நீடித்த புறக்கணிப்பு அவனை குத்தத் தொடங்கியது. அது இயல்பான புறக்கணிப்பு அல்ல, நான் புறக்கணிக்கிறேன் என்ற நிலைபாடு. அதை ஐயமில்லாமல் தெரிவித்தாகவேண்டும் என்னும் உறுதி. அதை தெரிவிக்க அவள் கண்டுகொண்டவழி கள்ளமற்ற, சிறுமித்தனமான கேலி. அறியாமையை தன் இளமையின் அடையாளமாக முன்வைப்பது. ஒருவகை தகுதியாகவே அதை நினைத்துக்கொள்வது. அதை எப்போது விளையாட்டல்ல என்று உணரத் தொடங்கினான்? அதைவிட அதை எப்படி விளையாட்டே என நம்பினான்?


“போம்பாளர் தன்னை புறக்கணிச்சதை கடலுங்கரைக் கன்னியாலே மறக்கவே முடியலை. நினைக்க நினைக்க அது தீயா படர்ந்து சுட ஆரம்பிச்சுது. ஊணும் உறக்கமும் இல்லாம அவள் மெலிஞ்சா. அவளோட தோழிகள் அவள் ஏன் அப்டி இருக்கான்னு கேட்டாங்க அவ பதில் சொல்லாம அழுதா. அவங்களுக்கும் புரியலை”


“அந்த ஊரிலே கோணச்சின்னு ஒருத்தி இருந்தா. அவளுக்கு ஒண்ணரைக்கண்ணு, காக்காய்நெறம், சோழிப்பல்லு, ஒண்ணரைக்காலு. அவ குரூபியா இருக்கிறதனாலே அவளை யாருமே பார்க்கறதில்லை. அந்த குரூபத்துக்குப் பின்னாலே அவ ஒளிஞ்சிட்டிருந்து எல்லாரையும் பாத்திட்டிருந்தா. அவ முன்னாலே யாரும் எதையும் ஒளிக்கலை. ஏன்னா அவளை யாரும் பாக்காததனாலே அவ அங்க இல்லைன்னே அவங்க மனசும் நினைச்சுக்கிட்டிருந்தது. அவ முன்னாடியே ஆம்புளைங்க நிர்வாணமா குளிப்பாங்க. பொம்புளைங்க கள்ளபுருஷனை பாப்பாங்க. ஆணும்பெண்ணும் கூடி இருப்பாங்க”


“கோணச்சி காணாத ஒண்ணுமில்லை. மனுஷனோட எல்லா கோணலும் அவளுக்கு தெரியும்.ஆனா அவளுக்கும் ஒரு குறையுண்டு. உடலிலே கொஞ்ச  கோணல் இருந்தால்கூட அவங்களை அவளாலே கூர்ந்து பாக்கமுடியாது. ஏன்னா  அவங்க அவளை பாத்திருவாங்க. அவங்க பார்வை பட்டாலே அவ ஒளிஞ்சுகிடுவா. ஆயிரம்பேர் போற மைதானத்திலே அவ கண்ணிலே கோணலான உடம்புள்ளவங்க மட்டும் தெரியவே மாட்டாங்க. அப்டிப்பட்டவ”


அவள் புன்னகைத்து “இதெல்லாம் அந்த கதையிலே இருந்திச்சா?”என்றாள்


“கிட்டத்தட்ட இப்டித்தான்” என்றான்


“அப்டியே அடிச்சு விடுறது… சரி சொல்லுங்க” என்றாள் சிரித்தபடி


“கோணச்சி வந்து கடலுங்கல் கன்னியை பாத்தா. உடனே அவளுக்கு தெரிஞ்சுட்டுது, கடலுங்கல் கன்னி காதலிலேதான் நோயாளி ஆயிட்டான்னு. அவளை பக்கத்திலே உக்காந்து கூர்ந்து பாத்தா. அவள் கட்டிலைச்சுத்தி கடலிலே எடுத்த கூழாங்கல்லு நாலஞ்சு கிடந்தது. உடனே ஆளைக் கண்டுபிடிச்சிட்டா. நேரா போய் போம்பாளரைப் பாத்தா. அவரோட மனசையும் தெரிஞ்சுகிட்டா. திரும்பி வந்து அவ கடலுங்கல் கன்னிகிட்டே சொன்னா.  ‘அம்மையே, கடலோடி போம்பாளன் ஏன் கன்னியை திரும்பிப் பாக்கலேன்னு தெரியுமா?’. கடலுங்கல் கன்னி அவளுக்கு எல்லாம் தெரிஞ்சிருக்குன்னு கண்டு ஆச்சரியப்பட்டா. ‘ஏன்?’ன்னு கேட்டா. ‘கோணச்சிக்கு தெரியும். பத்துபவுனுக்கு உபாயம் சொல்லித்தருவேன்’ன்னு கோணச்சி சொன்னா“


“கடலுங்கல் கன்னி ஆமாடப்பெட்டியை திறந்து பத்து பவுன் எடுத்துக் கொடுத்தா. கோணச்சி உபாயம் சொல்லிக்குடுத்தா.  ’போம்பாளன் எப்பவுமே ஒரு முல்லைச்செடி பக்கத்திலே போய் உக்காந்திட்டிருக்கான். அதிலே பூக்குற பூவையே எண்ணி எண்ணி பாத்திட்டிருக்கான். அந்த பூச்செடியை கொடுத்தவள் ஒரு கன்னியாத்தான் இருக்கணும். அது அவன் மனசிலே நிறைஞ்ச மங்கை. அவளை மறக்கமுடியாமல்தான் உன்னை ஏற்கமுடியாமல் இருக்கான். அவளை மறந்தால் உன்னை அணைப்பான்’. அதைக்கேட்டு கடலுங்கல் கன்னி அது உண்மைதான்னு புரிஞ்சுகிட்டா”


“கடலுங்கல் கன்னி இன்னும் பத்து பவுன் எடுத்து கோணச்சிக்கு குடுத்தா  ‘போம்பாளன் அவளை மறக்கவும் என்னை மணக்கவும் ஒரு மார்க்கம் சொல்லடி கோணச்சீ’ன்னு கடலுங்கல் கன்னி கேட்டா. கோணச்சி சொன்னா, ‘அவன் அவளை மறக்கணுமானா அவள் அவனுக்கு துரோகம் செய்யணும். அவள் அவனை மறக்கணுமானா அவன் அவளுக்கு துரோகம் செய்யணும்’. கடலுங்கல்கன்னி கேட்டா ‘ஒருமனசோடே உறவுகொண்ட ரெண்டுபேர் எப்படியடி கோணச்சி துரோகம் செய்வார்?’ கோணச்சி சொன்னா ‘மனுஷ மனசறிஞ்ச கள்ளி நான். மனசறிஞ்சு மனசறிஞ்சு கோணச்சியாய் போனேன்


கடலுங்கல் கன்னி அவள் கையைப்பிடிச்சுட்டு ‘மனசிலே அறிஞ்ச மர்மம் என்னன்னு சொல்லுடி கோணச்சின்’னா. கோணச்சி அறியாயாத ரகசியங்கள் இல்லை. ஏன்னா அவளோட வழியெல்லாம் குறுக்குவழி. அவளோட நடையெல்லாம் பதுங்கி நடை. அவளோட பார்வையெல்லாம் ஓரப்பார்வை. அவளோட குரலெல்லாம் காதோடத்தான்”


“கோணச்சி சொன்னா. ‘எண்ணக்கூடாது அம்மே. எண்ணி எண்ணிப் பார்ப்பதெல்லாம் எண்ணிக்கை தவறும். கணக்கிட்டுப் பார்ப்பதெல்லாம் குறைஞ்சுகூடும். ரெண்டுபேரையும் எண்ணவைப்போம், இழந்ததும் விட்டதும் எண்ணினால் கூடும். எடுத்ததும் வைச்சதும் எண்ணினால் குறையும்’.”


“கடலுங்கல் கன்னிக்கு சந்தேகம் ‘எண்ண வைக்கிறது எப்டியடி கோணச்சி?’ன்னு கேட்டா. ‘பறக்கிறது நடந்தா பதிஞ்ச காலை எண்ணும் அம்மையே’ன்னா. ‘சரி எப்டியாவது அவரை எண்ணவை. உனக்கு இன்னும் பத்துபவுன் பரிசா தாறேன்’னு கடலுங்கல் கன்னி சொன்னா”


“எப்டி?”என்று அவள் கேட்டாள். இப்போது அவள் கதையிலிருந்து வெளியே போய்விட்டது தெரிந்தது. கண்களில் ஒரு சுருக்கம்


“எப்டீன்னு சொல்லு” என்றேன்


“தெரியலை” என்றாள்


“கதையிலே இப்டி இருக்கு” என்றேன். “கோணச்சி அந்த முல்லைச் செடியை பாத்தா. இப்டி ஒரு செடி இங்க இருக்குன்னா அங்க போம்பாளரோட மனைவிகிட்டே வேற ஒண்ணு இருக்குன்னு கண்டுகிட்டா. அவ அங்கே எண்ணினாள்னா இவர் இங்க எண்ணுவா. இவ இங்க எண்ணினார்னா அவ அங்க எண்ணுவா. அதுக்கு ஒரு மந்திரம் உண்டு. கோணச்சி கோணமலை உச்சியிலே ஏறி அந்த மந்திரத்தை உச்சாடனம் செய்தா”


“ஏழுநாள் மந்திரம் போட்டுட்டு எட்டாம் நாள் கோணச்சி கீழே இறங்கி வந்தா. மந்திரம் பலிக்குதான்னு பாக்க கடலுங்கல் கன்னி கடலோரத்திலே போம்பாளர் தங்கியிருந்த வீட்டுக்கு போனா. அங்க போம்பாளர் முல்லைச்செடி பக்கத்திலே பதறிட்டு நிக்கிறதை பார்த்தா. என்னன்னு கேட்டா. ‘இதிலே பூத்த பூவிலே ரெண்டு பூவை காணலை…நேற்று இருந்த பூவொண்ணு இண்ணைக்கு மறைஞ்சிட்டுது. நேற்று இன்னொரு பூவும் மறைஞ்ச்சிட்டுது. பூவை கண்டால் சொல்லிடு’ன்னு சொன்னார் போம்பாளர்”


“கடலுங்கல் கன்னி போம்பாளரோட வேலைக்காரன்கிட்டே என்னன்னு கேட்டா. ‘பூவெல்லாம் ஒண்ணும் குறையல்லை. முந்தாநாள் ராத்திரியில் சொப்பனம் கண்டு எந்திரிச்சார். ஓடிப்போய் செடியிலே பூத்த பூவையெல்லாம் எண்ணிப்பார்த்தார். இப்படி பூவை எண்ணி பாத்ததே இல்லை. என்ன ஆச்சு இவருக்குன்னு நான் பக்கத்திலே போய் கேட்டேன். ஒரு பூ உதிர்ந்தமாதிரி சொப்பனம் கண்டேனடான்னு சொன்னார். பூ உதிர்ந்தா கீழே கிடக்குமேன்னு நான் சொன்னேன். சந்தேகம் போகாம பக்கத்திலே உக்காந்து எண்ணி எண்ணி பாக்க தொடங்கினார். பொழுது போய் பொழுது வளர சந்தேகம் கூடிட்டே இருக்கு’ன்னு வேலைக்காரன் சொன்னான்.சிரிச்சுகிட்டே கடலுங்கல் கன்னி திரும்பி வந்தா”


“அங்கே ஏழு கடலுக்கு அந்தப்பக்கம் திருவீட்டில் கன்னி கணவன் போனநாள் முதல் நோன்பிருந்து கும்பிட்டு காத்திருந்தா. பூவோட இதழெல்லாம் விளக்குச் சுடர் மாதிரி அவளைச் சுட்டது. அடுப்புத்தீயோ ஆயிரம் நாக்காலே உண்ணவந்தது. வெயிலையும் தீயையும் ஆடையா அணிஞ்சதுபோல் இருந்தது. ‘ஆறப்பொறுத்தாச்சு தீயே அமையப்பொறுக்க மாட்டயா’ன்னு அவ தீகிட்டே கேட்டா. அப்டி காத்திருந்தவ திடீர்னு நாளுக்கு நாற்பத்தொரு தடவை அந்த மோதிரத்தை எடுத்து வெளுத்திருக்கா வெளுத்திருக்கான்னு பாத்தா. ஊணில்லை உறக்கமில்லை. பார்த்துப்பார்த்து பொன்மோதிரத்தை வெளுக்கவைச்சா. ஒருநாள் காலையிலே மோதிரத்தை எடுத்து பாத்தா. அது வெள்ளிமோதிரமா இருந்தது. அவ நேராப்போய் காட்டிலே தீவைச்சு அதிலே குதிச்சு ஆடையும் அணியும் ஊனும் எலும்பும் எரிஞ்சு செத்தா”


அவள் பெருமூச்சுடன் அசைந்து அமர்ந்தாள்.


“இங்க முல்லைக்கொடியிலே எல்லா பூவும் உதிர்ந்திட்டுது. போம்பாளர்  கண்ணீரோட பாத்திட்டிருந்தார். கொடியே வாடினதும் ஓடிப்போய் கடலிலே குதிச்சு உயிர்விட்டார். ‘குளிர்கடலே, அலைகடலே, ஆழக்கடலே நானே வந்திட்டேன்’ன்னு சொல்லிட்டே குதிச்சார். கடலோட ஆயிரம் வாசல்கள் திறந்து அவர் ஆழத்துதுக்கு போய்ட்டார்”


“அப்றம்?”


“அந்த ரெண்டு ஆத்மாக்களும் சந்திக்கவே இல்லை. ஏன்னா திருவீட்டில் கன்னி தீயிலே போனாள். கப்பல்கார போம்பாளன் கடலிலே போனார். தீயிலே போனவ மேகங்களுக்குமேலே உள்ள சொர்க்கத்துக்கு போனா. கடலிலே போனவர் ஆழத்திலே இருக்கிற சொர்க்கத்துக்குப் போனார்…அவங்க ரெண்டும்பேருக்கும் நடுவிலே தீராதவானமும் மடங்காத காலமும் இருந்தது”


”அப்றம்?”என்றாள்


“அவ்ளவுதான் கதை”


“என்ன கதை? ஒருமாதிரி வாலும் தலையுமில்லாம?”என்றாள்


“இந்த மாதிரி கதையெல்லாம் இப்டித்தான். ஒரு டிராஜடி மட்டும்தான் இருக்கும். நீதியெல்லாம் இருக்காது”


“என்ன கதையோ” என்று சொல்லி தலையணையை மீண்டும் கையால் அடித்தாள். “நடுவிலே இவ்ளவு குழி… இதை வைச்சு உக்காராதீங்கன்னா கேக்கிறதில்லை”


அவன்  “இனிமேல் இல்லை” என்றான். அவள் வயிற்றின்மேல் கைபோட்டு “என்ன படுத்தாச்சு?”என்றான்


“ஆ, படுக்காம? பகல் முழுக்க வேலை. வீடு ஆபீஸ்னு பெண்டு எடுக்குது”


“எந்த பெண்டு?”


“சீ” என்று அவன் கையை தட்டிவிட்டாள்


நீண்ட கைப்பழக்கத்தால் அவன் அவளை மீட்டுவதெப்படி என அறிந்திருந்தான். உச்சுக்கொட்டல்கள், தட்டிவிடுதல்கள், புரண்டு படுத்தல்கள்,   ‘என்ன இப்ப?” என்ற சிணுங்கல்கள் வழியாக அவள் அவனை அணுகிக்கொண்டிருந்தாள்.


“இப்ப எதுக்கு அந்த கதை ஞாபகம் வரணும்?” என்று அவன் காதில் கேட்டாள்.


“சும்மா, வந்திச்சு… இந்த புக்லே கேரளா டூரிசம் படம் பாத்தேன். அதனாலேகூட இருக்கலாம்… இதென்ன?”


“அப்ளம் பொரிக்கிறப்ப ஒரு சொட்டு தெறிச்சிட்டுது”


அவன் அதன்மேல் முத்தமிட்டான்


“அய்யே”


“என்ன பெரிய இவ மாதிரி?”


“பெரிய இவதான்… அதானே தேடி வர்ரீங்க?”


“ஆமாடி, தேடித்தான் வர்ரோம்”


அவன் முரட்டுத்தனமாக அவளை அள்ளி அணைத்துக்கொண்டான். அவள் அது வரை அவனைக்கொண்டுவந்து சேர்த்திருப்பதை உணர்ந்தான்.


பெருமூச்சு கலந்த சொற்களால் உரையாடல். உடல்களால் உடலின் தொடுகையை உணர்தல். அதன்பின் உடல்களை பிணைத்துக்கொள்ளுதல். உடல் உடலை விழுங்கிவிட முயல்வதுபோல. உடல் உடலை ஆட்கொள்வதுபோல.


அந்த அசைவுகளின் புரளல்களின் துவளல்களின் நடுவே அவள் அவன் இரு செவிகளையும் பிடித்து , அவன் தலையை சற்றே பின்னுக்கு தள்ளி, அவன் கண்களை கூர்ந்து பார்த்து “என்ன கதை அது? மடத்தனமா?”என்றாள்


“ம்” என்று அவன் சொன்னான்


அவள் கண்கள் தீபட்டு வெம்மைகொண்டவை போலிருந்தன. முகமே கொதிப்பதுபோல


“அவ்ளவும் கிறுக்கு…. கிறுக்கு தவிர மண்டையிலே ஒண்ணுமில்லை”


அவள் வெறிகொண்டு அவனை இழுத்து அணைத்து அவன் உதடுகளை கவ்வி கடித்தாள். பற்கள் பதிந்தன. அவளுடைய அந்த வெறி மிக அரிதாகவே அவன் அறிந்தது. கைகளும் கால்களும் பரபரக்க மூச்சு சீறி ஒலிக்க ஊடே தொண்டையின் கமறல்போன்ற ஓசைகள் கலக்க அவள் மேலும் மேலும் கொந்தளிப்படைந்தபடியே சென்றாள்


பின்னர் மூச்சு சீராகிக்கொண்டிருக்க அவளுடைய உடல்மேல் அவன் குப்புறக் கிடந்தான். அவள் தோளின் வளைவில் முகம் அமைத்திருந்தான். அவள் மூச்சு அவன் தோள் மேல் பட்டுக்கொண்டிருந்தது. மென்மையான துணி ஒன்று தொட்டு அசைவதுபோல. அவன் முதுகில் அவள் கைநகங்கள் பதிந்ததன் எரிச்சல். தோளில் அவள் பற்கள் பதிந்த வலி


அவன் புரண்டு மல்லாந்து படுத்துக்கொண்டான். அவள் ஒருக்களித்து அவன்மேல் கையைப் போட்டுக்கொண்டு, இன்னொரு கையை மடித்து ஊன்றி அதில் தலைவைத்து எழுந்து அவனை பார்த்தாள். அவள் தோள்களில் கூந்தல் விழுந்து கிடந்தது. வெறுந்தோளில் சிறு தழும்பு ஒன்று. கழுத்தில் நீல நரம்பு ஒன்று புடைத்து மெல்ல துடித்தது. ஒரு மார்பு மெத்தையில் அழுந்தியிருக்க கரிய சுருக்கங்களுடன் காம்பு கூர்ந்திருக்க இன்னொரு மார்பு வெண்ணிற மென்மையுடன் ததும்பிச் சொட்ட முற்பட்டு நின்றதுபோல் தெரிந்தது


அவன் அதை தொடப்போக அவள் தோளை விலக்கி அவனை அகற்றினாள். “அந்தக் கதையிலே எனக்கு சந்தேகம்” என்றாள்


“என்ன?”


“ரெண்டுபேரிலே யாரு முதன்முதலா எண்ணிப்பாக்க ஆரம்பிச்சது?”


“ஏன்?”


”இல்ல கேட்டேன்”


“அது கதையிலே இல்லியே”


“யாரா இருக்கும்?”


“அதை கோணச்சிகூட சொல்லிட முடியாது” என்றான்


“அந்தாள்தான்”


“இல்லை… வேணுமானா இப்டி சொல்லலாம். ஒரே செகெண்டிலே. ஒரு செக்கண்ட்டோட ஒருபக்கம் இவ மறுபக்கம் அவர். ரெண்டுபேருமே சேந்து”


”சும்மா உளறிட்டு” என்று அவள் உதட்டைச் சுழித்து அவன் கையை தட்டினாள். உருண்டு மறுபக்கம்  எழுந்தாள். முதுகில் கூந்தல் கற்றைகள் விழுந்து அலைபாய பாத்ரூமுக்குச் சென்றாள்


அவன் செல்பேசியில் மின்னஞ்சல்களையும் குறுஞ்செய்திகளையும் பார்த்தான். அவள் திரும்பி வந்து “இந்த குழாய் எவ்ளவு மூடினாலும் சொட்டிக்கிட்டே இருக்கு. ராத்திரியிலே சிலசமயம் சத்தம் தூங்கவே விட மாட்டேங்குது” என்றாள்


“பாப்போம்” என்றான்


“என்ன பாக்கிறது? ராமையாவை பாத்து வந்திட்டு போகச் சொல்லுங்க… இங்க வாட்டர்டாங் பக்கம்தான் அவன் வீடு”


“சரி”


அவன் எழுந்து பாத்ரூம் சென்று வரும்போது அவள் நைட்டியை அணிந்து தலைமுடியை தலைமுடிக்குமேல் தூக்கி விட்டுக்கொண்டு படுத்திருந்தாள்


அவன் படுத்துக்கொண்டு செல்பேசியை எடுத்தான்


“படிக்கப்போறீங்களா?”


“அஞ்சுநிமிஷம்”


”லைட்டை ஆஃப் பண்ணிடுங்க… எனக்கு தூக்கம் வருது” என்று அவள் புரண்டு மறுபக்கம் நோக்கி படுத்துக்கொண்டாள்


அவன் விளக்குகளை அணைத்துவிட்டு செல்பேசியை இயக்கினான்.


 


[வல்லினம் சிறுகதைச் சிறப்பிதழ்-2021 ஜனவரி]

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 09, 2021 10:35

கதைகளின் உலகம்- கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார்,


“முதல் ஆறு ” சிறுகதையை படித்துகொண்டிருக்கும்போது காதல்கதையா? என்ற சலிப்பு வந்தது உண்மை. காமத்தை போல கொண்டாட்டமும் காதலை போல சலிப்பும் எதற்கும் வருவதில்லை.


ஆனால் முதல் காதல் கொஞ்சம் ஸ்பெஷல் தான். அதன் திரில்லும் தனி அனுபவம் தான்.  ஒரு இளைஞனின் பார்வையில் ஒரு ஏரியா நெரிசலான மக்கள் திரளோடு சொல்லபடுகிறது.அதற்குள் தொடங்குவதும்  வளர்வதும் ஆன காதல் இன்னொரு ஏரியாவில் தனிமையில்  ரம்மியமான இடத்தில் ஆனால் ஒரு பதட்டத்தில் இணைந்து கொள்கிறது. இப்படி தருணங்கள் வாய்ப்பதும் அதை பயன்படுத்தி கொள்வதும் தான்  ஆண்-பெண் உறவு தொடங்க அடிப்படை போலும்.


ஆனால் முதல் குளம் முதல் கடல் என்று தலைப்பு இருந்தால் நன்றாக இருந்திருக்கும் . ஒரு வேளை ஆறுமாதிரிதான் முதல் காதலும் ஓடிவிடுமா?


ஸ்டீபன் ராஜ் குலசேகரன்


அன்புள்ள திரு. ஜெயமோகன் அவர்களுக்கு


நலம் தொடர்க!


அந்தி எழுகை என்று பிப்ரவரி மாதத்தில் ஒரு பதிவிட்டிருந்தீர்கள்.  அதை இந்நாட்களில் வெகு அருகில் உணர்கிறேன். நீர்வீழ்ச்சியென்ற சொல்லை அகற்றி அருவியைத் தக்கவைத்துக்கொண்டிருப்பதைப்போல், இனி அஸ்தமனம் என்று சொல்லை அகற்றி அந்திஎழுகையைக் கைக்கொள்ளவேண்டும்.   அனுபவத்தோடு சேரும்போது அதன் ஆழம் மேலும் கூடுகிறது.


ஏற்கனவே ஒரு நியதிப் பட்டியல் தயார் செய்திருந்தேன்.  நகைச்சுவைக்கு முதலிடம்.  என் கணிணியில்  எனக்கு விருப்பமான் “மாடன் மோட்சமும்’  ‘ விசிஷ்டாத்வைதமும்’  மேற்திரையிலேயே வைத்திருக்கிறேன்.  அந்த வரிசையில் “ஆனையில்லா’வும், ” ‘நகைமுகனும்’ சேர்ந்துவிட்டன.  இடையில் ‘காடு’ பாதிக்குமேல்  மண்டையில் கேறிக்கிடப்பதால் வட்டார வழக்குகளை புரிந்துகொண்டு சிரிக்க முடிகிறது.  வாசகர்களை கிட்டத்தட்ட ஒரு பரீட்சைக்குப் படிக்கும் மாணவனின் மனநிலைக்குத் தள்ளுகிறீர்களென்று தோன்றுகிறது. மழைத்துளிகளின் தொடர்ச்சிபோல் வாசகர்களை துரத்தும் வேகத்தோடு சிறுகதைகள் வெளீயாகின்றன.


கதைகளின் பல உவமைகள் ஆழ்மனதில் தங்கி அதன் தருணங்களில் மீண்டெழுவது என் வாசிப்பனுபவத்தில் நிகழும் ஒன்று.  குதிரையின் மீது அரும்பிய குருதித்துளிக்கு தெட்சிப்பூ மொட்டை உருவகித்து வெண்முரசில் வரும்.  நீருற்றும்போது குருதிமொட்டென்ற சொல் மனதில் எழாமல் இருப்பதில்லை.  ‘நடுவு நோக’  குதிரைமேல் அமர்ந்திருக்கும் சுதைச்சிலைகளை இரண்டுமுறை சமீபத்தில் பார்த்தபோது சிரித்தேன்.  நகைமுகன் படித்தபிறகு, இருபுறமும் சற்றே புஸ்ஸென்று மீசை வைத்த நபரை பார்க்க நேர்ந்தால் எவ்வாறு எதிர்கொள்வேன்?  கடினம் தான்.


அலுவலகம் செல்லும் வழியில் ( அல்லது சில நேரங்களில் மரங்களுக்காக வழிமாற்றம்) கொன்றை மரங்களைக் கோடையில் தவறவிடுவதேயில்லை.  மிளிர்கொன்றை என்ற சொல்லாடல் தரும் பரவச அனுபவம் ஒரு உன்னதம்.  வெளியில் செல்ல இயலாத இந்நாட்களில் வந்தது ‘பொற்கொன்றை’ பதிவு.  மொட்டைமாடி வாய்க்கப்பெற்ற எனக்கு, கதிர் எழுகையைக் காணமுடியாவிடினும் மேற்குத் தெருவில் மாடி உயரத்தை மீறிய சரக்கொன்றைகளை அந்தி எழுகையில் பார்க்கும் பேரானந்தத்தை அனுபவிக்க முடிகிறது.  காற்றில்லாத பொழுதில் வானின்று இறங்கும் பொன் சரங்களின் கூட்டம் ஒருகணத்தில் உறைந்தது போல் அசைவற்றிருக்கிறது.  மெல்லிய மாலைக்காற்றில் நலுங்கும்போது கதிர்களை தன்னூடாக செல்ல அனுமதிக்கிறது.  கடைசிக்கதிரின் வெளிச்சமும் மறைந்து  கற்சிலைமேல்  எண்ணைஒழுக்கென இரவெழும் பொழுதிலும் மிளிர்கிறது பொற்கொன்றை.


வெளிநாடுகளில் உயர் பயிற்சிபெற்ற மனவியல் வல்லுனர்கள் நேரலைக்காணொளி மூலம் மனதின் திண்மையை இந்நாட்களின் வளர்த்துக்கொள்வதெப்படி என்று பல நிகழ்ச்சிகள் நடைபெறுவதாக அமெரிக்கா வாழ் உறவினர் மூலம் அறிந்தேன்.  அவர் அந்த இணைப்பை எனக்கு அனுப்பி ‘நீங்கள் எப்படி எதிர்கொள்கிறீர்கள்?” என்று கேட்டார்.  ‘ என் பட்டியலே வேறு.  இது பொதுவான மனநிலையுள்ளவர்களுகுப் பயனளிக்கலாம்.  சிறிதளவேனும் நுண்ணுணர்வை வளர்த்து விரித்துக்கொண்டு அதில் பயணிக்க இயலும் எவருக்கும் இது எவ்வைகையிலும் பொருந்தாது’ என்று புன்னகைத்தவாறே பதிலளித்தேன்.  அந்த நுண்ணுணர்வையும் அதைப் பேணுதலையும் தொடர்ந்து வலியுறுத்தும் உங்களுக்கு மனமார்ந்த நன்றி.


அன்புடன்


நா. சந்திரசேகரன்


சென்னை


100. வரம் [சிறுகதை]
99. முதலாமன் [சிறுகதை]
98. அருகே கடல் [சிறுகதை]
97. புழுக்கச்சோறு [சிறுகதை]
96.  நெடுந்தூரம் [சிறுகதை]
95. எரிமருள் [சிறுகதை]
94. மலைவிளிம்பில் [சிறுகதை]
93. அமுதம் [சிறுகதை]
92. தீவண்டி [சிறுகதை]
91. பீடம் [சிறுகதை]
90. சிந்தே [சிறுகதை]
89. சாவி [சிறுகதை]
88. கழுமாடன் [சிறுகதை]
87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை]
86. தூவக்காளி [சிறுகதை]
85. சிறகு [சிறுகதை]
84. வண்ணம் [சிறுகதை]
83. ஆபகந்தி [சிறுகதை]
82. ஆமை [சிறுகதை]
81. கணக்கு [சிறுகதை]
80. சுக்ரர் [சிறுகதை]
79. அருள் [சிறுகதை]
78. ஏழாவது [சிறுகதை]
77. மணிபல்லவம் [சிறுகதை]
76. மூத்தோள் [சிறுகதை]
75. அன்னம் [சிறுகதை]
74. மலையரசி [சிறுகதை]
73. குமிழி [சிறுகதை]
72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை]
71. செய்தி [சிறுகதை]
70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2
70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1
69. ஆகாயம் [சிறுகதை]
68. ராஜன் [சிறுகதை]
67. தேனீ [சிறுகதை]
66. முதுநாவல்[சிறுகதை]
65. இணைவு [சிறுகதை]
64. கரு [குறுநாவல்]- பகுதி 1
64. கரு [குறுநாவல்]- பகுதி 2
63. ‘பிறசண்டு’ [சிறுகதை]
62. நிழல்காகம் [சிறுகதை]
61. லாசர் [சிறுகதை]
60. தேவி [சிறுகதை]
59. சிவம் [சிறுகதை]
58. முத்தங்கள் [சிறுகதை]
57. கூடு [சிறுகதை]
56. சீட்டு [சிறுகதை]
55. போழ்வு [சிறுகதை]
54. நஞ்சு [சிறுகதை]
53. பலிக்கல் [சிறுகதை]
52. காக்காய்ப்பொன் [சிறுகதை]
51. லீலை [சிறுகதை]
50. ஐந்து நெருப்பு[ சிறுகதை]
49. கரவு [சிறுகதை]
48. நற்றுணை [சிறுகதை]
47. இறைவன் [சிறுகதை]
46. மலைகளின் உரையாடல் [சிறுகதை]
45. முதல் ஆறு [சிறுகதை]
44. பிடி [சிறுகதை]
43.. கைமுக்கு [சிறுகதை]
42. உலகெலாம் [சிறுகதை]
41. மாயப்பொன் [சிறுகதை]
40. ஆழி [சிறுகதை]
39. வனவாசம் [சிறுகதை]
38. மதுரம் [சிறுகதை]
37. ஓநாயின் மூக்கு [சிறுகதை]
36. வான்நெசவு [சிறுகதை]
35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை]
34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை]
33. வான்கீழ் [சிறுகதை]
32. எழுகதிர் [சிறுகதை]
31. நகைமுகன் [சிறுகதை]
30. ஏகம் [சிறுகதை]
29. ஆட்டக்கதை [சிறுகதை]
28. குருவி [சிறுகதை]
27. சூழ்திரு [சிறுகதை]
26. லூப் [சிறுகதை]
25. அனலுக்குமேல் [சிறுகதை]
24. பெயர்நூறான் [சிறுகதை]
23. இடம் [சிறுகதை]
22. சுற்றுகள் [சிறுகதை]
21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை]
20. வேரில் திகழ்வது [சிறுகதை]
19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை]
18. தங்கத்தின் மணம் [சிறுகதை]
17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை]
16. ஏதேன் [சிறுகதை]
15. மொழி [சிறுகதை]
14. ஆடகம் [சிறுகதை]
13. கோட்டை [சிறுகதை]
12. விலங்கு [சிறுகதை]
11. துளி [சிறுகதை]
10. வேட்டு [சிறுகதை]
9. அங்கி [சிறுகதை]
8. தவளையும் இளவரசனும் [சிறுகதை]
7. பூனை [சிறுகதை]
6. வருக்கை [சிறுகதை]
5. “ஆனையில்லா!” [சிறுகதை]
4. யா தேவி! [சிறுகதை]
3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை]
2. சக்தி ரூபேண! [சிறுகதை]
1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 09, 2021 10:31

உலோகம்- கடிதங்கள்


உலோகம் வாங்க

அன்புள்ள ஜெ.


உலோகம் நாவல் வெளிவந்தபோது , அது இயக்கங்களை விமர்சிக்கிறது , ஈழ போராட்ட வலியை சரியாக சித்தரிக்கவில்லை என்றெல்லாம் சிலர் பேசினார்கள்


இன்று படிக்கையில் தனக்கான எல்லைகளை தெளிவாக வகுத்துக் கொண்ட , சாகச வகை நாவல் என புரிகிறதுமுழுக்க முழுக்க இந்தியாவில் நடக்கும் கதை. அந்த சூழல் , அந்த பாத்திரங்களின் மனவோட்டம் என சுவாரஸ்யமான வாசிப்பு அனுபவத்தை தந்தது


கத்திக்கு பயப்படும் மக்கள் துப்பாக்கிக்கு பயப்படும் சாத்தியம் குறைவுதான் என கொலையாளி அலுத்துக் கொள்வது , விமானச்சத்தத்தின் அர்த்தம் இந்தியாவில் வேறு என ஆசுவாசம் அடைதல் போன்ற பல இடங்கள் வெகுவாக ரசிக்க வைத்தன.


ஒரு நாய் எப்போதும் நாய்தான். ஆனால் ஒரு மனிதன் புத்தராக உயரவும் முடியும். விலங்கினும் கீழ்மகனாவதும் சாத்தியம்அதுபோல , மனிதன் வெறும் ஒரு கொலை ஆயுதமாக செயல்படும் சூழல் வரலாம். எந்த கொலை ஆயுதமும் எட்டமுடியாத கீழ்மையையும் அடையலாம்


சித்தரவதையை ரசித்து செய்த தலைவர்கள் பலர் சித்தரவதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டதை எல்லாம் வரலாறு பதிவ செய்து கொண்டுதான் இருக்கிறதுமனிதனை துப்பாக்கியாக மாற்றி . அந்த துப்பாக்கியை இயக்குபவர்களாக நினைப்பவர்களும்கூட பிறரது துப்பாக்கிகளாக இருக்கும் சாத்தியங்களையும் நாவல் பதிவு செய்துள்ளது


http://www.pichaikaaran.com/2020/04/blog-post_30.html?m=1


என்றென்றும் அன்புடன்


பிச்சைக்காரன்


அன்புள்ள ஜெ


உலோகம் நாவலை இப்போதுதான் வாசித்தேன். உங்கள் பெருநாவல்கள், தீவிரமான நாவல்களின் வரிசையில் இதை வைக்கமுடியாது என்பது எத்தனை உண்மையோ அத்தனை உண்மை இதை வணிக எழுத்து என உதறமுடியாது என்பது. தமிழில் நீங்கள் எழுதவந்தது ஒரு திருப்புமுனைக்காலகட்டம். சிற்றிதழ்சார்ந்த யதார்த்தவாத எழுத்தே இலக்கியம், மற்றதெல்லாம் நச்சிலக்கியம் என்னும் மூர்க்கமான நிலைபாடு இங்கே இருந்தது. அது பின்நவீனத்துவ காலகட்டத்தில் அழிந்து இலக்கியத்தின் எல்லாவகையான எழுத்துக்களுக்கும் அவற்றுக்கான இடங்கள் உருவாகி வந்தன. எல்லாமே புனைவுதான், யதார்த்தமும்கூட என்ற எண்ணங்கள் வலுப்பட்டன.


கூடவே அன்று வரை இருந்துவந்த இலக்கியம் -வணிக இலக்கியம் என்னும் பிரிவினை இல்லாமலாகியது. ஏனென்றால் காட்சியூடகம் வணிக இலக்கியத்தை அழித்தது. எழுத்து- காட்சியூடகம் என்ற இருமைநிலை உருவானது. எழுத்தின் அடையாளம் ஒன்றாக ஆகியது. நீங்கள் எழுதிய பேய்க்கதைகள், அறிவியல்புனைகதைகள் ஆகியவை இந்த எல்லைகளை கடப்பதற்கான முயற்சிகள். அத்தகைய முயற்சி என்றுதான் உலோகம், கன்னிநிலம் ஆகியவற்றைச் சொல்வேன். அவை திரில்லர் வகைக்குள் வருபவை. கன்னிநிலத்தில் ஒரு மரபான திரில்லருக்குள் இலக்கிய அம்சமாக கூடசேர்ந்திருப்பது மஹுவா அல்லது ஷ்ர்ராய் லில்லி மலர்கள் உருவாக்கும் மகாபாரத அடிக்குறிப்பு.


அதே போல இந்த உலோகம் நாவலில் ஒருவகை இலக்கியக் கூட்டாக இருப்பது இதிலுள்ள துப்பாக்கி என்ற படிமம். கதைநாயகனே குண்டு லோட் செய்யப்பட்ட ஒரு துப்பாக்கி என்பது. அவன் சுட்டேயாகவேண்டும். மனிதனே ஓர் ஆயுதமாக ஆவது. உலோகம் என அவன் குறிப்பிடப்படுகிறான். உலோகம் என்றால் துப்பாக்கியின் குறியீடு


எதிர்காலத்தில் இந்நாவல் இந்தவகை எழுத்தில் ஓர் இலக்கியமுயற்சியாக கருதப்படும் என நினைக்கிறேன்


ராம்குமார் ஜெகதீசன்


மனித ஆயுதம்..  ‘உலோகம்’ . ஒரு பார்வை
ஜெயமோகனின் உலோகம் ஒரு பார்வை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 09, 2021 10:31

நாளை வரும் நிலவு


எல்லா நாகரீங்களும் நாளையைக் கணக்கில் கொண்டு வாழ்வதால், அதில் இயங்கும் மனிதர்களும் நாமும் இன்னமும் ஆயிரமாண்டு காலம் இங்கிருப்போம் என எண்ணி வாழ்கின்றனர். போர் அந்தக் கனவிலிருந்து ஒரு விழிப்பைத் தருகிறது. நீங்கள் உருவாக்கிய பொருளற்றவையும் கூட இங்கு எஞ்சியிருக்கும், நீங்கள் இருக்கப் போவதில்லை என்று. பூரிசிரவஸ் அந்த விழிப்பை அடையும் கணம்தான் துவக்க அத்தியாயத்தில் வருகிறது.


நாளை வரும் நிலவு
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 09, 2021 10:30

January 8, 2021

லீலை


இப்போதெல்லாம் பாதிநாட்களை ஈரட்டியில்தான் கழிக்கிறேன். ஒரே இடத்தில் இருப்பதன் சலிப்பு இல்லை. இயற்கையின் நடுவே இருப்பதன் நிறைவு.அதேசமயம் கொரோனாவிடமிருந்து முழுப் பாதுகாப்பு. ஈரட்டிப் பகுதியில் மக்கள்நடமாட்டமே குறைவு. அதிலும் நானிருக்கும் மாளிகையில் நான் மட்டும்தான்



வந்த முதல்நாளே நடக்கப்போனபோது ஒரு முனகல். அந்தக்காலத்திலெல்லாம் எங்கள் வெளியூர்ப் பாட்டிகள் எங்களை அவர்கள் ஊரில் கண்டால் அப்படித்தான் ஒருவகை ஒலியை எழுப்புவார்கள்.  “எனக்க மக்களே’ என்று அழைத்தபடி கைவிரித்து ஓடிவருவார்கள். அதைப்போல ஒரு அரற்றலுடன் நாலுகால் பாய்ச்சலில் ’கறுத்தம்மா’ ஒடிவந்தது. இங்கே அருண்மொழியும் குழந்தைகளும் தங்கியிருந்தபோது சைதன்யா போட்ட பெயர்


பிள்ளைகளை பலரும் தூக்கிப்போன நிலையில் மீண்டும் வேட்டையாடி உண்டு உடம்பைத்தேற்றிக்கொண்டு அரைக்காடுகளில் அலைந்துகொண்டிருந்தது. நான் வந்ததுமே வந்து வாசலில் இடம்போட்டுவிட்டது. அதன்பின் மொத்த வீட்டுக்கும் அவள்தான் பொறுப்பு. எவராவது வந்தால் உறுமி எச்சரிக்கை அளிக்கும். ஆனால் கடிப்பதெல்லாம் இல்லை. மனிதர்கள் நல்லவர்கள் என்று நம்பும் மனிதாபிமானியான நாய்



வந்துசேர்ந்ததுமே ‘மணம்’ பெற்று இளங்காதலன் ஒருவன் தேடி வந்தான். சற்று தொலைவிலேயே எச்சரிக்கை உறுமல். கறுத்தம்மா நல்ல கம்பீரமானவள். காதலன் சின்ன உருவம்கொண்டவன், நாட்டுவகை. ஆனாலும் ஆசை அச்சமறியாது. அங்கேயே நின்று வாலை குழைப்பது, உடல்வளைத்து நடனமிடுவது, பல்லைக்காட்டுவது என பலவகையான அசைவுகள் வழியாக ஒரு நடனம் ஆடினான்


மிகமெல்ல கறுத்தம்மா ஆவேசம் குறைந்து அருகே சென்றாள். அவன் அப்படியே படுத்துவிட்டான்.  ‘நின்னைச்சரணடைந்தேன்’ பாணி. அவனுடைய அடிவயிற்றை முகர்ந்து காதுகளையும் மோப்பம் எடுத்ததும் ‘பயல் பரவாயில்லை போலையே’ என்று ஒரு விதமான ஏற்பு. அவனை அப்படியே விட்டுவிட்டு வேறுபக்கம் திரும்பி படுத்துக்கொண்டாள்




வந்தவனுக்கு செவத்தான் என்று பெயரிட்டேன். ஒருவயதான கட்டிளங்காளை. நாய்களிலும் காளைகள் உண்டு. அவனுக்கு பெண்களை நல்ல அறிமுகம் இல்லை. வாலை ஆட்டியபடி ஓடிவந்து கறுத்தம்மாவின் அருகே நின்றான். அவள் சட்டென்று திரும்பி அப்போதுதான் அவனைப் பார்ப்பதுபோல சினந்து சீறி  பல்தெரிய ‘வள்ளிட்டு’ ஒரு கடி கொடுத்தாள். ’அய்யய்யோ’ என ஓர் அலறலுடன் அவன் ஓடி அப்பால் சென்று நின்றான்


கடுந்துயருடன் ஒற்றைமுன்காலை தூக்கியபடி நின்றான். கண்களை தாழ்த்தி தலையை தரைதொட வைத்துக்கொண்டு ‘என்ன தப்பு பண்ணினேன்?”என்று ஒரு பார்வை. பெண்மனம் இரங்கியது. ஆனால் திரும்பிப்பார்க்கவில்லை. வால் மட்டும் அன்பாக அசைந்தது. அதை நம்பி அருகணைய முடியுமா என பேதை ஆணுள்ளத்தின் பரிதவிப்பு




பின்னர் கறுத்தம்மாவே எழுந்து செவத்தான் அருகே சென்றாள். அப்படியே மல்லாந்து படித்து ‘இந்தா கொல்லு என்னை. வேணுமானா கொல்லு’ என்ற பாவனை காட்டினான்.  ‘சரி வந்து தொலை’ என்று கறுத்தம்மா திரும்பி வர அதற்குள், கணநேரத்தில் கணவனாக மாறிய செவத்தான் வாலை நீட்டிக்கொண்டு பாந்தமாக தொடர்ந்துவந்தான்


அதன்பின் இருவரும் வீட்டின் முகப்பில் இருமூலைகளிலாக அமர்ந்து காவல் காத்தனர். மனைவியிடம் கணவன் கிறிஸ்தவ முறைப்படி ‘தான் உண்ணாவிட்டாலும் அவளை ஊட்டுக’ முறைப்படி நடந்துகொண்டான். கறுத்தம்மா உண்டு நாக்கால் மோவாயை நக்கி அகன்றபின்னரே செவத்தான் உண்டான். பெரும்பாலான நேரங்களில் இருவரும் இருபக்கமும் அமர்ந்து கண்சொக்கி தூங்கினார்கள்.




எனக்கே சலிப்பாகப்போய்விட்டது. அப்படியென்றால் இந்த லீலைகள் எல்லாமே அணுகுவதற்காகத்தானா? அணுகியபின் ‘சரிதான் அதுகெடக்கு’ மனநிலைதானா? அடப்பாவமே.


ஆனால் இங்கே ஈரட்டியில் பயங்கரக் குளிர். ஊட்டி அளவுக்கே. காலையில் சூரியன் வரவே ஏழு ஏழரை ஆகும். வந்தபின் வேட்டிக்குள் விளக்குபோல பனிப்படலத்துக்கு அப்பால் தெரியும். இதமான வெயிலில் காய வந்து அமர்வது ஒரு நல்ல தியானப்பயிற்சி. ‘அகம் பிரம்மாஸ்மி’ என்பது ‘மயிரேபோச்சு’ என்ற மனநிலையின் நீட்சி என கண்டுகொண்டேன்.


இளவெயிலில் சட்டென்று ஒரு சிவசக்தி நடனம் தொடங்கியது. கணவனும் மனைவியும் கவ்வியும் துழன்றும் விளையாடினர். ஆயிரம்கோடிமுறை தழுவி ஆற்றொணாது மேலும் தழுவினர். பாய்ந்து மேலேறினர், விழுந்து கவ்விப்புரண்டனர், உறுமிக்கொண்டனர்.




ஓர் அற்புதமான பாலே நடனம் போல எழுந்து எழுந்து அமைந்தனர். முகங்களில் மெய்யாகவே அப்படியொரு சிரிப்பின் மலர்வு. வால்கள் சுழன்றபடியே இருந்தன. பாய்ந்தோடி துரத்திச்சென்று கவ்வி மீண்டுவந்து மேலும் தழுவி.


காமத்தில் உடலை என்ன செய்வதென்று தெரிவதில்லை. உடலே காமத்தின் நிலை, காமத்தின் ஊர்தி. ஆனால் உள்ளம் காமம் கொண்டபின் உடல் போதாமலாகிறது. அது சிறை, அதன் எல்லையைக் கடக்கமுடியாது. அதனூடாக உடலையன்றி பிறிதொன்றை  தொடர்புறுத்த முடியாது. ஒன்றாகும் பொருட்டு தழுவி ஒன்றாக முடியாது என்று உணர்தல். உண்டுவிட முயன்று கவ்வி உண்ணமுடியாது என்று உணர்தல். முத்தமென்பது துளித்துளியாக உண்ணுதலன்றி வேறென்ன.



இப்பால் நின்று பார்க்கையில் அது போர் போலவும் இருக்கிறது. வெல்லும் கொல்லும் முயற்சி என தோன்றுகிறது. கவ்வுதலும் தழுவுதலும் கொலைக்கென்றும் ஆகலாம். உயிர்களின் உடலுக்கு வேறு வாய்ப்புகளே இல்லை.


ஆனால் மானுடர் சலிப்பதுபோல விலங்குகள் சலிப்பதே இல்லை. அவை கொஞ்சிக்கொண்டே இருந்தன. வெயில் நன்கு மேலேறியது. மென்மையான வெப்பம் பரவியது, போர்வையை நீக்கலாம் என்ற அளவு. இரண்டு உயிர்களும் தங்கள் உடலை மீண்டும் சென்றடைந்தன. நாக்கை நீட்டி மூச்சிரைத்தபடி இரு திண்ணைகளிலுமாக விலகி அமர்ந்திருந்தன. தங்கள் வழியாக கடந்துசென்றதென்ன என்று அவை அறிந்திருக்கவேயில்லை.


பின்தொடரும் பிரம்மம்
ஊரென்றமைவன…
காடுசூழ் வாழ்வு
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 08, 2021 10:35

ஆ.மாதவன் கடிதங்கள்


ஆ.மாதவன் -அஞ்சலி

அன்புள்ள ஜெ


ஆ.மாதவன் அவர்களின் மறைவு என்னை துயரத்தில் ஆழ்த்தியது. நான் பத்தாண்டுகளாக இலக்கியம் வாசித்துக்கொண்டிருந்தவன். ஆனால் விஷ்ணுபுரம்விருது வழியாகவே அவரைப்பற்றி அறியவந்தது. ஏனென்றால் சிற்றிதழ்களின் சூழலிலோ பொதுவெளியிலோ அவரைப்பற்றிய பேச்சுக்கள் பெரும்பாலும் இருக்கவில்லை.


பிறகுதான் ஆ.மாதவனை நான் அணுக்கமாக புரிந்துகொண்டேன். ஆ.மாதவனின் புனைவுலகம் எனக்கு மிகவும் நெருக்கமானது. ஏனென்றால் என் அப்பா சிதம்பரத்தில் ஒரு மளிகைக்கடை வைத்திருந்தார். நான் சின்னவயசில் அந்த கடைவீதியை பார்த்தே வளர்ந்தேன்.


ஆ.மாதவனின் கதையுலகத்திற்கு அதற்குப்பிறகும் தொடர்ச்சி இல்லை. தமிழில் ஒரு நகரத்தின் குப்பைக்கூடையை மட்டுமே கதையுலகாக எழுதிய இன்னொருவர் இல்லை


எஸ்.ராமநாதன்



அன்புள்ள ஜெ


நாற்பதாண்டுகளாக சிற்றிதழ் சார்ந்த இலக்கிய உலகின் சகபயணி. வாசககன். 1973ல் ஆ.மாதவனை அவருடைய இல்லத்தில் சென்று பார்த்தேன். அப்போது ஷண்முகசுப்பையாவையும் சந்தித்ததாக நினைவு. அன்று அவர் ஆவேசமான உணர்வுகளுடன் இருந்தார். நிறைய எழுதவேண்டுமென்ற துடிப்பு கொண்டிருந்தார். அதன்பிறகும் நாலைந்து முறை போய் பார்த்திருக்கிறேன். சாலைதெருவில் உள்ள செல்வி ஸ்டோரின் உள்ளே மச்சுக்குள் இருந்து மோகபல்லவி என்ற சிறுகதை தொகுதியை எடுத்து கையெழுத்திட்டு அளித்தார்.


எழுபதுகளில் கவனிக்கப்பட்ட எழுத்தாளராக இருந்த ஆ.மாதவன் எண்பதுகளின் தொடக்கத்தில் எழுதுவதை மட்டுப்படுத்திக்கொண்டார். அவருடைய மகன் தவறிப்போனது அவரை மிகவும் சோர்வுக்கு தள்ளியது. அந்தச் சலிப்பில் இருந்து அவர் வெளிவரவே இல்லை.  தமிழிலும் நீங்கள் கோணங்கி போன்ற அடுத்த அலை எழுத்தாளர்கள் வந்து இலக்கியத்தின் அடிப்படைகள் மாற்றம் அடைந்தன. ஆ.மாதவனைப்பற்றிய கவனம் இல்லாமலாகியது அதனால்தான்.


அதன்பின் ஆ.மாதவனை இலக்கியச்சூழலுக்கு திருப்பிக்கொண்டுவந்தது தமிழினி வெளியீடாக வந்த ஆ.மாதவன் கதைகள் என்ற அழகான புத்தகம். அதன் அட்டையில் நீங்கள் இப்போது அஞ்சலியுடன் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இடம்பெற்றிருந்தது. அந்த நூலுக்கு வேதசகாயகுமார் முன்னுரையும் நீங்கள் மிக நீளமான ஓர் ஆய்வுரையும் எழுதியிருந்தீர்கள்.


தமிழில் ஒரு படைப்பாளியை எடுத்துக்கொண்டு அவ்வாறு ஒட்டுமொத்தமாக ஓர் ஆய்வுரை எழுதுவது பெரும்பாலும் நடைபெற்றதில்லை. புதுமைப்பித்தன் போன்ற படைப்பாளிகளுக்குக்கூட அப்படி ஓர் ஆய்வுக்கட்டுரை இலக்கியச்சூழலில் இருந்து வெளிவந்ததில்லை. ப.சிங்காரம், ஆ.மாதவன் இருவருக்கும் எழுதப்பட்ட ஆய்வுரைகள் அவர்கள் மேல் புதிய வாசிப்பை தொடங்கிவைத்தன


அதன்பிறகு விஷ்ணுபுரம் விருது தொடர்ச்சியாக சாகித்ய அக்காதமி விருது. மாதவன் கடைசிக்காலத்தில் அவர் விரும்பிய அங்கிக்காரத்தை பெற்றுவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும்.


ஆச்சரியம் என்னவென்றால் அறுபதுகளில் திராவிட இயக்க இதழ்களில் ஓரிரு கதைகளை எழுதிய அவர் எழுபதுகளில் திராவிட இயக்கத்து ஞாபகத்தையே கசப்புடன் காறி உமிழ்பவராக இருந்தார். லா.ச.ராவின் உபாசகர். அவருடைய ஆதர்ச எழுத்து தி.ஜானகிராமன் லா.ச.ரா தான். ஆனால் அவர் எழுதிய உலகம் சௌந்தரியத்தால் ஆனது அல்ல. ஆரியசாலை குப்பைகளில் இருந்து அவர் கதைகளை எடுத்தார்


அஞ்சலி


என்.கே.குமாரசாமி



இனிய ஜெயம்


எழுத்தாளர்ஆ .மாதவன் அவர்கள் இயற்கை  எய்தினார் எனும் செய்தி சற்று முன்பு அறிந்தேன். உடனடியாக நினைவில் எழுந்தது 2010ஆ.மாதவன் அவர்களுக்கான முதல் விஷ்ணுபுர விருது விழா நினைவுகளின் இனிமையே.


எப்படி ஒரு விழாவை அதற்கான விருந்தினர் வாசகர் வருகை நிர்வாகம் சார்ந்து  திட்டமிடுவது என்று கூட தெரியாமல் அன்று துவங்கினோம். வந்த வாசகர்கள் இரவில் கிடைத்த இடத்தில்  உறங்க, நாம் ஒரு பதினைந்து பேர் கட்டையை சாய்க்க இடமின்றி  இரவெல்லாம் உறங்காமல் இலக்கியம் பேசியபடி  கோவை சாலைகளில் நடந்து நடந்தே இரவை விடிய வைத்தோம். இரவெல்லாம் டீயாளந்த தெய்வம் கோபி “ஒரே கடைல இத்தனை பேர் திரும்ப திரும்ப போய் டீ குடிச்சா அவங்களுக்கு சந்தேகம்வரும்” என்று சொல்லி கடை கடையாக அழைத்து சென்று டீ வாங்கி தந்தார். ரயில்வே காண்டீனை  கூட நாம் விட்டு வைக்கவில்லை.


அறைக்குள் சொற்ப நாற்காலிகள் மட்டும். அவ்வளவுதான் வருவார்கள் என்று ஒரு நம்பிக்கை. அறை நிரம்பி வழிய, சிறப்பு விருந்தினர்களுக்கு மட்டும் நாற்காலி வசதி தந்து விட்டு எல்லோரும் தரையில் அமர்ந்து இலக்கியம் பேசினோம். நம்மோடு நமக்கான தயிர் சோறு பொட்டலத்தை பகிர்ந்து கொண்டு நம்முடன் தங்கி இருந்தார் இயக்குனர் மணி ரத்னம்.


ஆ மாதவன் கதைகளை வாசித்து விட்டு வந்திருந்தார். நான் இருட்டுல படம் எடுக்குறேன்னு சொல்லுவாங்க, ஆ மாதவன் இருட்டையே கதையா எழுதுறார். மனுஷங்க கிட்ட இருக்க இருட்டை எழுத்தால வெளிச்சம் போட்டு காட்டுறார் என்று ஆ மாதவனின் எழுத்து  அழகியலை தனது சினிமா அழகியல் வழியே கச்சிதமாக வரையறை செய்து பேசினார்.


அன்றைய நாளின் உணவுப்  பொழுதொன்றில் நானும் நாஞ்சிலும் மட்டும் தனியே பேசிக்கொண்டிருந்தோம், மகாராஷ்டிராவில் குறிப்பிட்ட உணவு வகை ஒன்று எவ்வாறு தயாரிக்கப்படும் என்று இப்பவே சாப்பிட்டுப் பார்க்க வேண்டும் எனும் ஆவல் எழும் வண்ணம் நுணுக்கமாக விவரித்தார். அங்கிருந்தது அந்த நிலத்தின் விவசாயம், அங்கே கழிந்த தனது வாழ்வு, மிதவை நாவல் என்று பலதும் பேசினார். ஆ மாதவன் பெரிதும் எவராலும் கவனிக்கப்படாமல் குறிப்பாக இடது சாரி எழுத்தாளர் முகாமில் இவரை யாரும் அங்கீகரித்த சுவடே இல்லை . கேட்டால் அப்படி எல்லாம் இல்லை  ஆ மாதவன் கதை எல்லாம் தாமரைலதான் வந்தது என்பார்கள். அவர்களுக்கு எதையும் சொல்லி புரிய வைத்து விட முடியாது என்றார்.


விழா நாளில்  விழாவின் சிறப்பு விருந்தினர்கள் நாஞ்சில் நாடன், இக்கா இருவருக்கும் இடையே அமர்ந்து ஆ மாதவன் அவர்களுடன் சாளை பட்டாணி குறித்து பேசியது இனிய நினைவுகளில் ஒன்று. ஆ மாதவன் உலகின் சரியான  அல்லது முதன்மைப் பிரதிநிதி  எட்டாவது நாள் கதையின் சாளை பட்டாணி. விழுமியங்களால் கட்டுப்படுத்தப்படாத , குற்ற உணர்வால் போர்த்தப்படாத தூய தீமையின் வெளிப்பாடு ஊர்தியே மனிதனும் அவன் கொண்ட வாழ்வும் சாவும் என்று சொல்லும் கதை.( இன்று எனக்குள்  சாளை பட்டாணி பின்வாங்கி பாச்சி முன் வந்து விட்டிருக்கிறது)


அந்தக் சாளை பட்டாணி யுடன்  இக்காவின் பூக்கோயா தங்கள் குணாதிசயம் இணையும் வேறுபடும் இடங்கள் குறித்து சொன்னேன். நண்பர் ஆங்கிலப் படுத்தினார்.


என்னை காண்ணாடிக்குள் உருளும் கோலிகுண்டு விழிகளால் நோக்கி  ”என் கதையையும்  படிச்சிருக்கியே உன்னைப் பாத்தா பாவமா இருக்கு” என்று ஆங்கிலத்தில் சொல்லி உச்சி கொட்டினார் இக்கா.


என் ஊர் குறித்து கேட்டார். சொன்னேன்.


”அது எங்க இருக்கு?”


”பாண்டிச்சேரி பக்கத்துல”


”ஹய்யா” என்று நிஜமாகவே உட்கார்ந்த வாக்கிக்கில் துள்ளி குதித்து சிரித்தார் .கடுக்கன் அரைக்கணம் மின்னி மறைந்தது.  மேஜை ஓரத்தில் கைகளை உயர்த்தி பகீரிட்டு சிரித்து  நிற்கும் குபேர புத்தர் உயிர் கொண்டு வந்தது போல இருந்தார்.


”அப்போ பாண்டி சேரில (குடி போல கட்டை விறல் காட்டி)  நிறைய கவிஞ்சர்கள் இருக்கணுமே.?”


”ஆமா சார் தடுக்கி விழுந்தா கவிஞ்சர் மேலதான் விழணும். அப்டி தடுக்கி விழறவரும் கவிஞ்சனாதான் இருப்பார்.”


முக்கி முக்கி உடைந்த ஆங்கிலத்தில் சொன்னேன்.


கஷ்டப்படாத, ஜோக்குன்னு  எனக்குப் புரியுது என்று விட்டு சிரித்தார் இக்கா.


அங்கே அந்த மூவர் வசம் வாங்கிய கையெழுத்து.


இக்கா மட்டும் எனது முகத்தை வரைந்து கையெழுத்து போட்டு தந்தார்.



கிளம்பும் முன்பாக எங்கே என்று தேடி “கடலூர் ச்சீனு வரட்டுமா” என்று தோளில் தட்டி விடை பெற்றார் மாதவன்.  இனிய நினைவுகளால் பொதியப்பட்ட நாளொன்றினை, அது என்னை வந்து சேர காரணமானவர்


கடலூர் சீனு


ஆ.மாதவன் விஷ்ணுபுரம் விருது 2010- நினைவுகள்


ஆ.மாதவன் கடிதங்கள்


விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா 2010


விஷ்ணுபுரம் இலக்கிய விருது கடிதங்கள்


விஷ்ணுபுரம் விழா பதிவுகள்


விஷ்ணுபுரம் விருது, விழா


விஷ்ணுபுரம் விருது விழா


 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 08, 2021 10:34

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.