Jeyamohan's Blog, page 1065

January 13, 2021

நண்பர்களே..இந்த மாத சென்னை வெண்முரசு கலந்துரையாடல் வரும் ...

நண்பர்களே..

இந்த மாத சென்னை வெண்முரசு கலந்துரையாடல் வரும் ஞாயிறு அன்று நிகழ்கிறது.

வெண்முரசு நாவல் வரிசையின் பதினாறாவது நாவலான

“குருதிச்சாரல்” நாவல் குறித்து திருமதி.விஜயலெக்ஷ்மி அவர்கள் உரையாடுகிறார். வரும் ஞாயிறு அன்று   (17-01-2021)  மாலை 5:00 மணிக்கு  கலந்துரையாடல் நிகழும்.

வெண்முரசு வாசகர்களையும் வெண்முரசு குறித்து அறிய விரும்புபவர்களையும் அன்புடன் அழைக்கிறோம்

17-01-2021 மாலை 5 மணி முதல் 8 மணி வரை

Join Zoom Meeting

https://us02web.zoom.us/j/4625258729

(Password தேவையில்லை)-

சென்னை விஷ்ணுபுரம் நண்பர்கள்,

 

தொடர்புக்கு: 9965315137

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 13, 2021 00:48

January 12, 2021

ஒரு மீறல்

சுப்ரபாரதிமணியன் ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்- சுப்ரபாரதிமணியன்

அன்புள்ள ஜெ.

முன்பொரு முறை இப்படி எழுதியிருந்தீர்கள்

“”சுப்ரபாரதி மணியனின் ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் என்னும் கதை அன்னம்விடுதூது என்னும் சிற்றிதழில் வெளிவந்தபோது நான் அறுபது பேருக்கு அக்கதையை வாசிக்கச்சொல்லி கடிதங்கள் எழுதி தபாலில் சேர்த்தேன்.””

அந்த அளவுக்கு உங்களை கவர்ந்த கதை அது.அதை மலையாளத்தில் மொழிபெயர்த்து இருக்கிறீர்கள்.

என்ன சுவாரஸ்யம் என்றால்சுஜாதா இந்த கதையை கலைவடிவம் கைகூடாத கதை என எழுதியிருக்கிறார்

சுஜாதாவுக்கு சுப்ரபாரதிமணியன் மீது மரியாதை உண்டு. அவரது மற்ற கதைகளை பாராட்டி விட்டு, ” ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் ” என்ற கதை , சிறுகதையே அல்ல என அதை மட்டும் நிராகரிக்கிறார். ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும் ” என்ற கருவுக்கு சம்பந்தமற்ற தகவல்கள் ஏராளமாக இருப்பதாக சொல்கிறார். மற்றகதைகளில் ஏராளமான சம்பவங்கள் இருப்பினும் அது கதைக்கு தேவைப்படுவதையும் சொல்கிறார்

ஆனால் அந்த கதை மட்டுமல்ல..  உங்களது மொழி பெயர்ப்புமேகூட பரவலான வரவேற்பை பெற்றது

சுஜாதாவின் விமர்சனங்களுக்கு ஒரு மரியாதை உண்டு என்ற நிலையில் , அவரது விமர்சனங்கள் சுவாரஸ்யம் என்பதை அளவுகோலாக கொண்டவை என நினைக்கிறீர்களா ?

அன்புடன்

பிச்சைக்காரன்

அன்புள்ள பிச்சைக்காரன்,

ஒவ்வொரு காலகட்டத்திலும் கதைகளுக்குச் சில வடிவச்சிறப்புகள் உருவகிக்கப்படுகின்றன. அவையே ’சரியான’ வடிவங்கள் என்று நம்பப்படுகின்றன. அவற்றை வாசகர்கள் எதிர்பார்க்கிறார்கள். அதைவிட விமர்சகர்கள் அவற்றில் உறுதியாக இருக்கிறார்கள்

ஆனால் புதியபடைப்பு அந்த எல்லையை மீறிச்செல்லும். புதியதாக வந்து நிற்கும். உள்ளடக்கத்தின் புதுமையை ஏற்பவர்களால்கூட வடிவத்தின் புதுமையை ஏற்றுக்கொள்ள முடியாமல்போவதை நாம் அடிக்கடிக் காண்கிறோம்

இருவகையினர் அவ்வாறு இறுகிவிடுகிறார்கள். ஒன்று, வாசிப்பை ஒரு வழக்கமாக ஆக்கிக்கொண்டவர்கள். எளிமையான வாசகர்கள். இரண்டு, ஒரு வடிவத்தை வலியுறுத்த முற்பட்டு காலப்போகில் அதில் மனம் அமைந்துவிட்டவர்கள்

தொடக்க காலத்தில் தமிழில் சிறுகதைவடிவம் என்பது அரிதாகவே எட்டப்பட்டது. உதாரணம் தி.ஜ.ர, பி.எஸ்.ராமையா என்னும் சிறுகதை ஆசிரியர்கள். அவர்கள் இருவரையும் தமிழின் மாபெரும் சிறுகதையாசிரியர்கள் என சி.சு.செல்லப்பா நம்பினார். அப்படி திரும்பத்திரும்ப எழுதினார். புதிய கதைக்கருக்களை அவர்கள் கையாளவும் செய்தனர். ஆனால் அவர்கள் கதைகள் எவற்றிலுமே சிறுகதையின் வடிவம் திரளவில்லை. அவை வெறுமே கதைகளாக, நிகழ்ச்சிகூற்றுகளாகவே நிலைகொண்டன

அதேதான் அழகிரிசாமிக்கும். தமிழிலக்கியத்தில் அவர் ஒரு மேதை. நல்ல கதைகளில் அவர் மிக இயல்பாக அடைந்திருக்கும் உச்சம் மிக அரிதானது. ஆனால் அவருடைய பெரும்பாலான கதைகள் சிறுகதைகளாக ஆகவில்லை. வாசகனுக்குரிய இடைவெளி இல்லாமல் அவரே சொல்லி முடித்துவிடுகிறார். கதைகள் முடியாமல் முடியும் வடிவம் எட்டப்படாமல் விரிவாகச் சொல்லி நிறுத்தப்பட்டவையாக உள்ளன.

ஆகவே எழுபதுகளில் சுந்தர ராமசாமி போன்ற விமர்சகர்கள் கதைகளின் வடிவை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்கள். சுந்தர ராமசாமி அவருடைய கட்டுரை ஒன்றில் [ கலைகள் கதைகள் சிறுகதைகள். ஆ.மாதவன் கதைகளுக்கான முன்னுரையாக வெளிவந்தது] சிறுகதை வடிவத்தை வலியுறுத்தி அதை மட்டுமே வைத்து தமிழ்ச்சிறுகதைகளை அளவிடுவதைக் காணலாம். இலக்கைச் சென்றடையாமல் சிறகுகளை கோதுவதிலேயே கதையைச் செலவிடுபவர் என வண்ணதாசனையும், சரியாக இலக்கைச் சென்றடைபவர் என்று அசோகமித்திரனையும் மதிப்பிடுகிறார்

சுந்தர ராமசாமி சிறுகதைவடிவை மிக ஆவேசமாக வலியுறுத்திவந்தார். தமிழ்ச்சூழலில் அவர் ஆழமான செல்வாக்கையும் செலுத்தினார். சிறுகதை என்பது வேகமான நேரடியான தொடக்கம், வீசப்பட்ட அம்பு இலக்கை நோக்கிச் செல்வதுபோன்ற வடிவம், எதிர்பாராத முடிச்சு அல்லது மேலும் கதையை ஊகிக்கவிடும் முடிவு ஆகியவை கொண்டதாக இருக்கவேண்டும் என்பது அவருடைய கருத்து.

எம்.கங்காதரன்

சிறுகதைக்குள் உள்விவாதங்கள், துணைக்கதை விரிவுகள், அது சென்றடையவேண்டிய இலக்குடன் தொடர்பற்ற செய்திகள் ஆகியவை இருக்கலாகாது என்று அவர் கருதினார். சிறுகதை யதார்த்தவாதத்தின் கலை என்றும் அதில் அலங்காரம், அணிகள் ஆகியவற்றுக்கு இடமில்லை என்றும் எண்ணம்கொண்டிருந்தார். ஆகவே லா.ச.ராவின் கதைகளையும் அவர் ஏற்கவில்லை.

ஆனால் சிறுகதைவடிவம் சரியாக எட்டப்பட்டதுமே ஒருபக்கம் அதன்மேல் சலிப்பு வரத்தொடங்கியது. வேறுவகையான கதைகள் எழுதப்பட்டன. அவ்வாறு எழுதப்பட்ட கதைகளில் ஒன்று ‘ஒவ்வொரு ராஜகுமாரிக்குள்ளும்’ அது கோழிப்போர், கோழிக்கறி ஆகியவற்றைப்பற்றிய செய்திகளாகவே சென்று அப்படியே முடிகிறது. கடைசிவரி மட்டும்தான் கதை.

அந்தவகையான ‘வடிவமீறல்’ அன்று ஏற்கப்படவில்லை. நான் அதை சிறுகதைவடிவின் புதிய நகர்வாக கண்டேன். மாறாக, சுந்தர ராமசாமி அதை முந்தையவடிவாக, அதாவது தி.ஜ.ர அல்லது பி.எஸ்.ராமையா காலத்துக் கதையாக கண்டார். சுஜாதா சிறுகதையின் செவ்வியல்வடிவில் நம்பிக்கை கொண்டவர். அவர் சுந்தர ராமசாமியை பலவகையிலும் பின்தொடர்ந்தவர்

ஆகவே சுஜாதாவுக்கு அக்கதை வடிவப்பிழையாக, தேவையில்லாமல் தகவல்களை சொல்லிக்குவிப்பதாகத் தோன்றியது. நான் அக்கதையை  முன்வைத்து சிறுகதையின் புதிய சாத்தியங்களைப்பற்றி அப்போது பேசினேன்

என் எண்ணங்கள் சரிதானா என்று அறிய அக்கதையை மலையாளத்தில் மொழியாக்கம் செய்து முக்கியமான கேரள இலக்கியவிமர்சகரான எம்.கங்காதரனுக்கு அனுப்பினேன். கங்காதரன் எம்.கோவிந்தனின் மாணவர், சுந்தர ராமசாமிக்கும் நண்பர். கங்காதரன் அது ஒரு நல்ல கதை என நினைத்தார். அவர் அப்போது தொடங்கிய ஜயகேரளம் என்னும் சிற்றிதழில் வெளியிட்டார்.

முப்பத்திரண்டு ஆண்டுகள் ஆகின்றன இப்போது.இன்று சிறுகதையின் வழிகள் மேலும் முன்னகர்ந்துவிட்டன

ஜெ

 

சுப்ரபாரதிமணியன் வலைப்பக்கம்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 12, 2021 10:35

ஆ.மாதவன் – கடிதங்கள்

ஆ.மாதவன் -அஞ்சலி ஆ.மாதவன் கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

ஆ.மாதவன் அவர்களுக்கு கேரள அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெற்றது என     தினமணியில் செய்தி ஒன்று படித்தேன்.  அது போன்ற சூழல் தமிழ்நாட்டில் நடைபெற வாய்ப்பில்லாமல் போவது அறிவுலகத்தை அங்கீகரிப்பதில் நாம் பின் தங்கியுள்ளோம் என்பதைக் காட்டுகிறது. பிரபஞ்சன் அவர்களுக்கு புதுச்சேரி அரசாங்கம் கூட அரசு மரியாதை வழங்கியது

எழுத்தாளன் என்பவன் அத்தகைய மரியாதையை எதிர்பார்ப்பதில்லை , அது ஒரு பொருட்டே அல்ல என்பதும் எனக்கு புரிகிறது. ஆனால் ஒர் எழுத்தாளனுக்கு செய்யும் மரியாதை அவர் படைப்புகளுக்கு செய்யும் மரியாதை. மொழிக்கு அந்த எழுத்தாளன் மூலம் கிடைத்த நற்பேறுக்குச் செய்யும் பிரதி உபகாரம்.

அத்தகைய ஒரு சூழல் தமிழ்ச் சூழலில் இயல்பாக  நடைபெறாமல் போவது வேதனைக்குரியது. எல்லவாற்றிற்கும் மேலாக எளிய வாசகன் எழுத்தாளருக்கு வழங்கும் மரியாதை உச்சபட்சமானது. எதிர்காலத்தில் அத்தகைய ஒரு கௌரவம் அரசின் வழியே நடைபெறும் என நம்புகிறேன். ஆனால் அதற்கான திறப்பு என் கண்ணில் தென்படவில்லை.

பா.இரமேஷ்.

 

அன்புள்ள இரமேஷ்,

பிரபஞ்சன் புதுச்சேரியின் படைப்பாளி. புதுச்சேரியில் இருந்து சாகித்ய அக்காதமி விருது பெற்ற ஒரே படைப்பாளி. ஆ.மாதவன் தமிழில் மட்டுமே எழுதியவர். மலையாளத்தில் அவருடைய படைப்புக்கள் அதிகம் வெளிவந்ததில்லை. அவர் மலையாள எழுத்தாளராக புகழ்மிக்கவரும் அல்ல. அவருக்கு கேரள அரசு ஒரு தமிழ் எழுத்தாளர் என்ற அளவிலேயே அந்த மரியாதையை வழங்கியிருக்கிறது. இது குறிப்பிடத்தக்கது.

அந்த முடிவை எடுக்க அவர்களுக்கு ஆதாரமாக இருந்தவை என்ன? ஒன்று அங்கே பண்பாட்டு- மக்கள் தொடர்புத்துறையில் இலக்கியம் தெரிந்தவர்கள் இருக்கிறார்கள். இது வெறுமே அதிகாரி மட்டத்திலேயே முடிவெடுக்கப்படக்கூடிய விஷயம். அத்தகைய அதிகாரிகள் தேவை. அப்படிச் சிலர் அங்கிருக்கிறார்கள். நமக்கு அப்படிப்பட்ட அதிகாரிகள் இல்லை. இருந்தால் அவர்கள் செல்வாக்காகவும் இல்லை.

இன்னொன்று, அவ்வாறு அவர்கள் முடிவெடுக்கத் தூண்டுவது அங்குள்ள நாளிதழ்களும் செய்தி ஊடகங்களும். அவர்கள் ஆ.மாதவன் மறைந்தபோது அந்த முக்கியத்துவத்தை அளித்தன. ஜெயகாந்தனும் சுந்தர ராமசாமியும் மறைந்தபோதும் அங்கே ஊடகங்கள் அந்த முக்கியத்துவத்தை அளித்தன.

ஆனால் ஊடகங்களுக்கு உண்மையிலேயே முக்கியமானவர்களை அடையாளம் காணும் திறன் இருக்கவேண்டும். அடையாளம் காணும் , வேறுபடுத்தும் தகுதி கொண்டவர்கள் ஊடகங்களிலும் அதிகாரிவர்க்கத்திலும் இருக்கவேண்டும்

ஓர் உதாரணம் சொல்கிறேன். சிலகாலம் முன்பு வரை மருத்துவ படிப்பு ஒதுக்கீடுகளில் ‘தமிழறிஞர்- எழுத்தாளர்’ கோட்டா ஒன்று இருந்தது. அதன்படி தங்கள் பிள்ளைகளுக்கு இடம் வாங்கிக்கொண்ட தமிழறிஞர்- எழுத்தாளர்களில் எத்தனைபேர் உண்மையில் தமிழறிஞர்- எழுத்தாளர் என்று பார்த்தால் திகைப்பாக இருக்கும்.

தமிழகத்தில் திமுக,அதிமுக இரண்டு கட்சிகளுக்குமே ‘இலக்கிய அணி’ உண்டு என்பதை அறிந்திருப்பீர்கள். மாவட்ட, வட்ட அளவில் அதற்கு உறுப்பினர்களும் தலைவர்களும் செயலர்களும் உண்டு. எல்லாருமே கவிஞர்கள்தான், இலக்கியவாதிகள்தான். இதைத்தவிர ஒவ்வொரு நகரத்திலும் எத்தனை பேர் மரபுக்கவிஞர்கள், தமிழறிஞர்கள், புதுக்கவிஞர்கள் என்று பாருங்கள். 

இலக்கியவாதி மறைந்தால் அரசு மரியாதை கொடுக்கவேண்டும் என்ற ஒரு மரபு தொடங்கிவைக்கப்பட்டால் என்னாகும்? அரசுமரியாதை கொடுப்பதற்கென்றே மாவட்டம்தோறும், வட்டம்தோறும் காவல்துறை பிரிவு உருவாக்கவேண்டியிருக்கும். பல குழுக்கள் நாள்தோறும் அரசு மரியாதையை அளித்துக்கொண்டே இருக்கவேண்டியிருக்கும். அதற்கு தனி பட்ஜெட் ஒதுக்கவேண்டியிருக்கும். அதற்கு சிபாரிசுகள், ஆள்பிடித்தல்கள், தரகர்கள், லஞ்சம், கமிஷன் வெட்டுதல்கள்… தேவையா?

நமக்கு இலக்கியத்தில் தேவையாக இருப்பது அரசு, ஊடகங்கள் இலக்கியத்தை அறிந்துகொள்வதும் மரியாதை செய்வதும் அல்ல. அவர்கள் வெளியே இருக்கிறார்கள். நாம் முதலில் நம் இலக்கியத்தை அறிந்துகொள்வதும், கட்சிச்சார்பு- கருத்துச்சார்புகளுக்கு அப்பால் நின்று இலக்கியவாதிகளுக்கு மதிப்பளிக்கும் அடிப்படை எண்ணம் கொண்டிருப்பதும், அதை எப்போதும் வெளிப்படுத்துவதும்தான் தேவை.

அப்படி இலக்கியச்சூழலில் மதிப்பு உருவாகும்போது, இலக்கியவாதிகள் என சிலர் மறுப்பில்லாமல் முன்வைக்கப்படும்போதுதான் வெளியே இருப்பவர்கள் மதிப்பார்கள்.

ஜெ

 

அன்புள்ள ஜெ

கேரளத்தில் ஆ.மாதவன் அவர்களுக்கு இடதுசாரி அரசு அரசமரியாதை அளித்தது பற்றி இங்கே சில தோழர்கள் எழுதினார்கள். அங்கே காங்கிரஸ் அரசு இருந்தபோதும் முக்கியமான படைப்பாளிகளுக்கு அரசமரியாதை அளிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சிக்கு எதிராகச் செயல்பட்ட இடதுசாரி எழுத்தாளர்களுக்கும் அந்த மரியாதை அளிக்கப்பட்டது

ஆ.மாதவனுக்கு அரசு மரியாதை அளிக்கப்படுவதற்கு திட்டவட்டமான காரணமாக இருந்தது என்றால் அது அவருக்குச் சாகித்ய அக்காதமி விருது அளிக்கப்பட்டதுதான். சாகித்ய அக்காதமி விருது அவருக்கு அளிக்கப்பட என்ன காரணம்? 2010க்கு முன் அவர் எழுதிக்கொண்டிருப்பதே எவருக்கு தெரியும்? 2010ல் அவருக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்பட்டது. தனக்கு கிடைத்த முதல் விருது மட்டுமல்ல தனக்காக நடத்தப்பட்ட முதல்கூட்டமும் அதுதான் என்று அவர் அந்த மேடையிலே சொன்னார். அந்த விருதை ஒட்டி எல்லா ஊடகங்களிலும் அவர் முன்வைக்கப்பட்டார். அவரைர பற்றி கட்டுரைகள் எடுக்கப்பட்டன [ஓர் ஆவணப்படம் எடுத்திருக்கலாம்] அந்த புகழ்வெளிச்சம் சாகித்ய அக்காதமி விருதுக்கு வழி அமைத்தது

எழுத்தாளர்களுக்கு சாவுக்கு மரியாதை அளிப்பது தேவைதான். ஆனால் வாழும்போது அவர்களை மதிப்பதும், அவர்களின் படைப்புக்களை படிப்பதும் விமர்சிப்பதும் கொண்டாடுவதும்தான் முக்கியமானது. அதைச் செய்கிறோமா? ஆ.மாதவனுக்கு இங்கே உள்ள இடதுசாரிகள் அதைச் செய்தார்களா?வேறு எந்த எழுத்தாளர்களுக்காவது செய்தார்களா? விஷ்ணுபுரம் அமைப்பு தவிர இன்று இங்கே இப்படி மூத்தபடைப்பாளிகளை அடையாளம் காட்டி பாராட்டி விமர்சனம் செய்து முன்வைக்கும் அமைப்பு வேறு உண்டா? விஷ்ணுபுரம் அமைப்பின் அந்தச் செயல்பாடுகளையே ஏளனம் செய்யவும் இருட்டடிப்பு செய்யவும்தான் இங்கே ஆளிருக்கிறது

ஆ.மாதவன் விருதுபெற்ற நிகழ்விலேதான் நான் விஷ்ணுபுரம் விழாவைப்பற்றி கேள்விப்பட்டேன். இப்போது அவருடைய மறைவை ஒட்டி எண்ணிப்பார்க்கையில் செய்யவேண்டிய ஒன்றை விஷ்ணுபுரம் செய்திருக்கிறது, நானும் கூடவே நின்றிருக்கிறேன் என்ற எண்ணம் உருவாகிறது

எஸ்.ராமநாதன்

 

அன்புள்ள ராமநாதன்,

நாம் போராடுவது நம் சூழலில் உள்ள மொண்ணைத்தனத்துக்கு எதிராக. அந்த மொண்ணைத்தனம் நம்மை ஏன் அங்கீகரிக்கவில்லை என்று கேட்பதுபோல அபத்தம் உண்டா என்ன? இங்கே பெரும்படைப்பாளிகள் அங்கீகரிக்கப்படவில்லை. அவர்கள் இருக்க சல்லிகளெல்லாம் கொண்டாடப்பட்டார்கள். சரியானவர்களை சுட்டிக்காட்டி, இவர்கள் உங்கள் சொத்து என தமிழின் புதியவாசகர்களை நோக்கிச் சொல்வதையே விஷ்ணுபுரம் அமைப்பு செய்கிறது. ஆ.மாதவனுக்கும் உரியவற்றைச் செய்தோம்.

இங்கே இன்னமும்கூட முறையாக முன்வைக்கப்பட்டால் உரைநடையாசிரியர்களை ஏற்றுக்கொள்ள ஆளிருக்கிறது. அவர்களுக்கு அங்கீகாரங்கள் அமைகின்றன. கவிஞர்களுக்கு அந்த ஏற்பு நிகழ்வதில்லை. அதை மெல்லமெல்லவேனும் மாற்றவேண்டும்

ஜெ ஆ.மாதவன் விஷ்ணுபுரம் விருது 2010- நினைவுகள் ஆ.மாதவன் கடிதங்கள் விஷ்ணுபுரம் இலக்கிய விருது விழா 2010 விஷ்ணுபுரம் இலக்கிய விருது கடிதங்கள் விஷ்ணுபுரம் விழா பதிவுகள் விஷ்ணுபுரம் விருது, விழா விஷ்ணுபுரம் விருது விழா
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 12, 2021 10:31

எண்ணும்பொழுது- கடிதங்கள்

எண்ணும்பொழுது [சிறுகதை]

அன்புள்ள ஜெ

நலம்தானே?

நூறுகதைகளின் ஆண்டுநிறைவு மனதில் நிறைந்திருந்தது. தமிழில் ஓர் எழுத்தாளர் தொடர்ச்சியாக ஒரே ஆண்டில் நூறு கதைகள் எழுதுவார் என்றும் நூறுகதைகளுமே வெவ்வேறுவகையில் கிளாஸிக் தகுதியுடன் இருக்கும் என்றெல்லாம் என்னிடம் சொல்லியிருந்தால் நாலைந்து ஆண்டுக்கு முன்பெல்லாம் நம்பியிருக்க மாட்டேன்.

நானெல்லாம் உங்கள் மேல் காழ்ப்புடன் இருந்தவன். காழ்ப்புடன் நிறைய எழுதியுமிருக்கிறேன். ஏன் அந்தக் காழ்ப்பு என்றால் நீங்கள் நான் மதிப்புடன் எண்ணிவந்த பல எழுத்தாளர்களை சிறியவர்களாக ஆக்கிவிட்டீர்கள்.மிகமிகச் சிறியவர்களாக. அதை என்னால் தாள முடியவில்லை. ஏனென்றால் அது என்னை சிறிதாக ஆக்குகிறது.

அப்புறம் அதில் கொஞ்சம் சாதிப்புத்தியும் உண்டு. என்ன இருந்தாலும் நம்மாள் போல வருமா என்ற எண்ணம் அடிமனதில் இருந்தது. ஆகவேதான் அந்த வெறுப்பு. நான் வெண்முரசை வாசிக்கவில்லை. வாசிக்காமலேயே நையாண்டியெல்லாம் செய்துகொண்டிருந்தேன்.

இந்த நூறுகதைகளையும் ஒரு சோர்வான மனநிலையில் வேறுவழியே இல்லாமல் வாசித்தேன். வாசிக்க வாசிக்க எல்லாமே உடைந்து நொறுங்கிவிட்டது. எல்லா ஆணவமும் போய்விட்டது. ஒவ்வொரு கதையிலும் வாழ்ந்தேன். பொலிவதும் கலைவதும் போன்ற கதையெல்லாம் கனவா கதையா என்றே அறியாத ஓவியம். இனி வீணாக திமிர் காட்டுவதில் அர்த்தமே இல்லை என்று எண்ணிக்கொண்டேன்.

இப்படித்தான் ஹ்யூமன் கிரியேட்டிவிட்டி ஏதோ ஒரு காலத்தில் ஏதோ ஒரு வழியை தேர்வுசெய்கிறது. அதன்வழியாக என்னென்னவோ பெருகி கொட்டுகின்றது. நம்மால் அதை புரிந்துகொள்ள முடியாது. அப்படி கொட்டும் வழியாக அமைந்தவன் அருள் உள்ளவன். அதற்கான துன்பமும் அவனுக்கு இருக்கும். ஈகோ இருக்கும். அதை சொல்லாமலும் இருக்கமுடியாது. ஆகவே சூழ்ந்திருப்பவர்களால் வெறுக்கப்படுவான். வசைதான் வந்துகொண்டிருக்கும்.

அப்படி அடிவயிற்றிலிருந்து நாம் வேறு எவரையுமே வெறுப்பதில்லை. கிரியேட்டிவிட்டி போல அஞ்சப்படுவதும் வேறு இல்லை. நம்மால் வெறுப்பது ஏன் என்றே சொல்லமுடியாது. வெறுப்பு வந்துகொண்டே இருக்கும்.ஏனென்றால் இங்கே வாழ்க்கையில் கிரியேட்டிவிட்டி மிகமிகக்குறைவு. பெரும்பாலும் மொனோடொனஸ் ஆன வாழ்க்கைதான். ஆகவே அதை நாம் அஞ்சுகிறோம். பொறாமை கொள்கிறோம்.

நூறுகதைகளை மீண்டும் படிக்கிறேன். ஒவ்வொரு கதையும் ஒரு உச்சத்திலே இருக்கிறது. ஒன்றிலிருந்து இன்னொன்றுக்கு எப்படி போகமுடிந்தது. போழ்வு ஒரு சரித்திர உச்சம் என்றால் கரு இன்னொரு புராண உச்சம். அப்படிக் கேட்டால் ஒவ்வொரு கதையின் உச்சம்தான் அடுத்த கதையை கொண்டுவருகிறது என்று சொல்லவேண்டும்.

ஒரு கதையின் உச்சம் நம்மில் ஒரு மின்சாரம் போல நிறைந்திருப்பதனால்தான் அடுத்த கதையின் உச்சத்தை மிகச்சாதாரணமாக போய் அடைய முடிகிறது. ஒரு சங்கீதகச்சேரியில் அப்படித்தான் எடுத்த எடுப்பிலேயே பிரதானமான ஒரு ராகம் அமைந்துவிட்டால் அதன்பிறகு பாடவே வேண்டாம். அதுவே வந்துகொண்டிருக்கும். பாடுவதெல்லாமே உச்சமாக இருக்கும். அதுதான் கேட்பவர்களுக்கும்.மனசு சங்கீதத்திலே குவிந்துவிடும். மிச்சம் என்று ஒன்றுமே இருக்காது. அப்படியே மனம் கொப்பளித்துக்கொண்டே இருக்கும்.

அப்படி ஒரு அனுபவம் அந்த நூறுகதைகளும். அப்பவே எழுதவேணும் என நினைத்தேன். ஆனால் என்ன எழுதுவது என்று அப்படியே ஒத்திப்போட்டேன். ஓராண்டு நிறைவில் கதைகளை மீண்டும் எடுத்துப்பார்த்தேன். கதைகளெல்லாமே அப்படி புதியவையாக இருந்தன. இப்போது வாசிக்கும்போது பலகதைகளில் புதிய புதிய கவித்துவங்கள் தென்படுகின்றன.

வாசித்துமாளவில்லை. மீண்டும் கதைகளிலே அமர்ந்திருக்கிறேன். நூறுகதைகளையும் முழுசாக வாசித்து கடப்பது எளிமையான விஷயமல்ல. நானும் வாசிக்கிறேன் என்று ஈகோவை திரட்டிக்கொண்டு சும்மா கதையோட்டங்களை மேய்ந்துவிட்டு எதையாவது சொல்லலாம். இலக்கியவாசகன் என்று ஒரு நினைப்பு வந்துவிட்டாலே அதுக்கான துணிவும் வந்துவிடும்.

இலக்கியவாசகர்கள் என்பவர்கள் எப்போதுமே எப்பவோ வாசித்தவற்றை ஞாபகம் வைத்துக்கொண்டு பிறகு வாசிப்பதையெல்லாம் அதிலே கொண்டுபோய் சேர்த்துக்கொண்டே இருப்பவர்கள். அலம்பித்துடைத்த மனசுடன் புதிய கதைகளை படிப்பது ஒரு யோகம். யோகானுபவம் என்றுதான் சொல்வேன்.

நூறுகதைகளில் பெரும்பாலும் எல்லா கதைகளுமே கதைக்கரு என்ற அளவிலேயே புதிசு. ஏழாவது போன்ற கதையெல்லாம் இதுவரை எவருமே யோசிக்காத புதிசு. அதையெல்லாம் உள்ளே போய் வாசிக்க ஒரு அபாரமான கவனம் தேவை.

இப்போதுதான் மீண்டும் தொடங்கியிருக்கிறீர்கள் என்று நினைத்தேன். இந்தக்கதை எண்ணும்பொழுது ஓர் அற்புதமான கதை. புராணமும் யதார்த்தமும் இரண்டு சரடுகளாகப்பின்னி ஓடுகின்ற கதை. கேட்டகேள்விக்கு பதில் உண்டு. இங்கே அவன் சொல்வது கேட்காத கேள்விக்கான ஒரு பதில்.

எண்ணும்பொழுது இல்லாமலாவதுதானா காதல் காமம் எல்லாமே? எண்ண எண்ண இனிக்கிறது. எண்ணாமல் இருக்கவும் முடியவில்லை. ஆனால் எண்ண எண்ண இல்லாமலாகிக்கொண்டும் இருக்கிறது. ஒன்றுமே செய்யமுடியாது. பாலக்காட்டு பக்கம் வெளுக்கத்தேய்த்தது பாண்டு [வடு] ஆகியது என்று ஒரு சொல் உண்டு. தேய்க்கத்தேய்க்க தங்கம் வெள்ளியாக ஆகும் அதிசயம்தான் இந்த உறவுகளெல்லாம்.

பூ உதிர்ந்திருக்கிறதா என்று காம்பைப்பார்த்தாலே தெரியும். ஆனால் மனசில் பூக்காத பூவெல்லாம் நிறைந்திருந்தால் அது உதிர்ந்திருப்பதாகவே தோன்றும். எண்ணி எண்ணி ஒருவர் தீயிலும் ஒருவர் நீரிலும் மறைகிறார்கள். இந்தக்கதை மறுபடியும் தொடக்கமாக இருக்கட்டும். இன்னும் ஒரு நூறு காத்திருக்கிறதோ என்னவோ யார் கண்டது?

 

ஜி.சுந்தர்

 

அன்புள்ள ஜெ

’எண்ணும் பொழுது’ கதையை வாசித்துக்கொண்டிருந்தேன். அதில் இரண்டு கதைகள் ஒன்றையொன்று சந்திக்கின்றன. சந்திக்கவில்லை, மெல்ல உரசிக்கொள்கின்றன. அப்படி ஒருகதை இன்னொரு கதையைச் சந்தித்துவிடக்கூடாது என்று கதையைச் சொல்பவரும் கேட்பவரும் கவனமாக இருக்கிறார்கள். அதற்காகத்தான் சாதாரணமாக பேசிக்கொள்கிறார்கள். சில்லறை சண்டை போடுகிறார்கள்.

ஆனால் அவர்களுக்குள் அந்தக்கதைகள் சந்தித்துக்கொண்டுதான் இருக்கும். அதை ஒன்றுமே செய்யமுடியாது. “வாலும் தலையும் இல்லாத கதை’ தான் என்றாலும் அதை அவர்கள் இருவருமே வாலும் தலையும் வைத்து உருவாக்கிவிடுவர்கள்.அவரவருக்கு பிடித்தது மாதிரி.

இந்தமாதிரி கதைகள் எப்போதுமே ஒரு கேள்வியாக அல்லது புதிராகவே வைக்கப்படுகின்றன. அந்தக்கேள்வியை அப்பெண் தவிர்க்கிறாள். அவள் எதிர்கொள்ளவேண்டுமென்றால் அவள் இன்னொரு கேள்வி கேட்கவேண்டும். அதை அவள் கேட்டாளா என்பது கதையில் இல்லை. இருவரும் மாறி மாறி அந்தக் கேள்வியை கேட்டுக்கொள்வார்கள்

பொன்னை வெள்ளியாக்குவதும் எல்லா பூக்களையும் உதிரவைப்பதும் சந்தேகம்தான். பொய் பற்றிய சந்தேகம் தெளிவு அடையலாம். உண்மையை பற்றிய சந்தேகம் என்றால் அதற்கு விடையே கிடையாது. முடிவின்மை வரை அப்படியே செல்லும் அது

ஆர்.சத்யமூர்த்தி

எண்ணும்பொழுது- கடிதங்கள் எண்ணும்பொழுது- கடிதங்கள்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 12, 2021 10:31

நச்சுமுள் மேல் நடக்கும் வேழம்.

தனக்குள் இருப்பது நச்சுமுள் என்பதை அறிந்து படை நடத்துவதை நிருத்தி கொண்ட கர்ணனும், தனக்குள் இருப்பது நச்சு முள்என்பதை அறியாமல் வாழும் துரியோதனும் அழிவின் திசைநோக்கி போவது காலத்தின் விதி.

நச்சுமுள் மேல் நடக்கும் வேழம்.
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 12, 2021 10:30

January 11, 2021

உண்மை எவ்வாறு உருக்கி வார்க்கப்பட்டது?

நிகலாய் ஒஸ்திரோவ்ஸ்கி

வீரம் விளைந்தது வாங்க

ஒரு சோஷலிச யதார்த்தவாத நாவலை வேறெவ்வகையிலேனும் வாசிக்கமுடியுமா? ஏன் இந்த கேள்வி என்றால் சோஷலிச யதார்த்தவாதம் என்றாலே ஆசிரியர் சொல்வதை அன்றி வேறெவ்வகையிலும் பொருள்கொள்ள வாசகனுக்கு இடமே அளிக்காதபடி முன்னகரும் ஒற்றைத்திசைப் பாதை கொண்டது. அதன்பொருட்டே உருவாக்கப்பட்டது. பிரச்சாரமே அதன் இலக்கு. ஆசிரியர் சொல்வதற்கு அப்பால் வாசகன் செல்லமுடியுமென்றால் அது பிரச்சாரம் அல்ல.

அதோடு சோஷலிச யதார்த்தவாதம் என்பது வேறெவ்வகையில் பொருள்கொள்ளப்பட்டாலும் ஆசிரியன் தலைக்கு கேடு வந்துவிடவும் வாய்ப்புண்டு. ஆசிரியன் எழுதியதையே வாசகன் புரிந்துகொள்ளவேண்டும், கமிசார் புரிந்துகொள்ளவேண்டும், கட்சி புரிந்துகொள்ளவேண்டும். பன்முகவாசிப்பு என்றால் அது ரகசியப்பிரதி என பொருள்கொள்ளப்படும். ரகசியப்பிரதிகள் எல்லாமே அரசியல் பிரதிகள். அரசியல் பிரதிகள் எல்லாமே எதிர்ப்புரட்சிப்பிரதிகள் என்பது ஸ்டாலினிய வாய்ப்பாடு.

நான் நிகாலாய் ஒஸ்திராவ்ஸ்கிய் எழுதிய வீரம் விளைந்தது என்னும் நாவலை மீண்டும் வாசிக்க எடுத்தபோது அந்த எண்ணம் இருந்தது. மூலத்தில்  “How the steel was tempered” என்ற தலைப்பு கொண்ட இந்நாவல் சோவியத் ருஷ்யாவின் ஆட்சிக்காலத்தில் உலகமெங்கும் 200 மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டு கொண்டுசெல்லப்பட்டது. ஆகவே மிகப்பரவலாகப் படிக்கப்பட்டது. உலக இலக்கியத்தில் ஆழ்ந்த செல்வாக்கையும் செலுத்தியது. இதை என் இருபதாவது வயதிலேயே படித்திருக்கிறேன்.

[இந்நாவலை மூத்த மார்க்ஸிய அறிஞர் எஸ்.ராமகிருஷ்ணன் வீரம் விளைந்தது என்ற பெயரில் 1950 களிலேயே மொழியாக்கம் செய்திருந்தார். அம்மொழியாக்கம் நீண்ட இடைவேளைக்கு பின் 2008ல்  நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் நிறுவனத்தால் மறு அச்சு போடப்பட்டிருக்கிறது.2017 லும் 2019 லும் மறு அச்சுகள் வந்துள்ளன. என் கையில் இருப்பது 2019 அச்சு. ஆனால் இந்நூலில் இதன் முதல் வெளியீடு பற்றிய செய்தி ஏதும் இல்லை]

இந்நாவலின் ஆசிரியர் நிகலாய் ஒஸ்திராஸ்வ்ஸ்கியின் தன்வரலாறு என இதைச் சொல்லலாம். 1904ல் பழைய சோவியத் ருஷ்யாவின் உக்ரைன் பகுதியில் பிறந்தார். 1917ல் சோவியத் ருஷ்யாவில் போல்ஷெவிக் புரட்சி நிகழ்ந்தபோது அவர் பதிமூன்று வயதான சிறுவன். சோவியத் புரட்சி என்பது 1917ல் ஜார் மன்னர் வீழ்த்தப்பட்டபோது தொடங்கி 1923ல் போல்ஷெவிக்குகள் அறுதியாக ஆட்சியைக் கைப்பற்றியபோது நிறைவடைந்தது. அந்த ஐந்தாண்டுகளில் நிகலாய் ஒஸ்திராஸ்வ்ஸ்கி தன் வாழ்க்கையை கண்டடைவதுதான் இந்நாவலின் முதற்சித்திரம். அதன்பின் 1930 வரை சோவியத் ருஷ்யாவில் கம்யூனிச கட்டுமானம் நிகழ்ந்தது அடுத்த சித்திரம்.

இந்நாவலில் நிகலாய் ஒஸ்திராவ்ஸ்கி பாவல் கர்ச்சாகின் என்னும் கதைநாயகனாக தோன்றுகிறார். மதப்பள்ளிக்கூடத்தில் துடுக்குக் கேள்விகேட்டு அடிவாங்கி வெளியேற்றப்படுகிறான் பாவல். அவன் தந்தை ஏற்கனவே இறந்துவிட்டார். அன்னை வீடுகளில் சமையல்வேலை செய்கிறாள். அண்ணன் ஆர்த்தியோம் மின்நிலையத்தில் கொல்லனாக பணிபுரிகிறான். பாவெலை ரயில்நிலைய உணவகத்தில் வேலையாளாக சேர்க்கிறார்கள். அங்குதான் அவன் வாழ்க்கையின் மெய்யான கொடுமையை காண்கிறான். கூடவே உழைப்பு அளிக்கும் தன்னம்பிக்கையையும் விடுதலையையும் கண்டடைகிறான். அவனுடைய குழந்தைப்பருவம் முடிந்து இளமைப்பருவம் தொடங்கும்போது நாவலும் தொடங்குகிறது

முதல் உலகப்போர் நடந்துகொண்டிருக்கிறது. உக்ரேனின் அந்த சிறிய ரயில்நிலையத்தில் போருக்குச் செல்லும் படைவீரர்களை ஏற்றிக்கொண்டு ரயில்கள் செல்கின்றன. போரிலிருந்து காயம்பட்ட படைவீரர்களுடன் ரயில்கள் திரும்பி வருகின்றன. சீமாட்டிகளும் சீமான்களும் ரயில்களில் வந்திறங்குகிறார்கள். உணவருந்துகிறார்கள். பணியாளர்களுக்கு பணத்தை வீசுகிறார்கள்.

அந்த இடம் ஒரு விபச்சாரவிடுதியும்கூட. அங்குள்ள பணியாட்கள் பெண்தரகர்கள். பணியாற்றும் பெண்கள் வலுக்கட்டாயமாக விருந்தினர்களின் படுக்கையறைகளுக்கு கொண்டுசெல்லப்படுகிறார்கள். பாவல் அங்கே தன்னை கண்டடைய ஆரம்பிக்கிறான். அப்போது ஒரு செய்தி வருகிறது- ஜார் வீழ்த்தப்பட்டார்.

அந்த செய்தியை அச்சிறிய நகரம் எதிர்கொள்வதன் சித்திரத்தில் இருந்து நாவல் விரிய தொடங்குகிறது. வெவ்வேறு படைகளால் அந்நகர் கைப்பற்றப்படுகிறது. செம்படைகள் நகரை கைப்பற்றுகின்றன. போல்ஷெவிக் எதிர்ப்பாளாரான பெட்லியூராவின் ராணுவம் அவர்களை துரத்தி மீண்டும் நகரை கைப்பற்றுகிறது. மீண்டும் செம்படை வருகிறது. அவர்கள் நகரை கைவிட்டுச் செல்ல போலந்து அரசப்படை நகரை கைப்பற்றுகிறது.

இந்த தொடர் அலைக்கழிப்புகள் நடுவே பாவல் அரசியலறிவு பெறுகிறான். தலைமறைவு போல்ஷெவிக் வீரரான ஷூஹ்ராய் அவனுக்கு போல்ஷெவிக் புரட்சியின் மேல் ஈடுபாட்டை உருவாக்குகிறார். நடுவே தோன்யா என்னும் உயர்குடி அழகியின்மேல் மெல்லிய காதல் கலந்த நட்பு உருவாகிறது. சின்னச் சின்ன சாகசங்கள், பூசல்கள். பாவல் செம்படையில் சேர்ந்து போர்வீரனாகிறான்

இந்நாவலை ஒஸ்திரோவ்ஸ்கிய் மிகவிரிவான தன்வரலாறாகவே எழுதினார். மெய்வாழ்க்கையில் இருமுறை போர்க்களத்தில் காயம்பட்டு மீண்டார். டைஃபஸ் காய்ச்சலால் பலவீனமடைந்தார்.முடக்குவாதத்தால் அசையமுடியாதவரானார். பார்வையையும் இழந்தார். 1930ல் அசையமுடியாமல் பார்வையற்று படுக்கையில் படுத்திருக்கும்போதுதான் இந்நாவலை ஸ்டென்சில்தாளில் ஒற்றி ஒற்றி எழுதி நகலெடுத்து வெளியிடலானார்.

பாவெல் பார்வையை இழந்து படுக்கையில் கிடந்தபடி “புயலின்மூலம் தோன்றியவர்கள்”என்ற நாவலை எழுத தொடங்கும்போது வீரம் விளைந்தது நாவல் முடிகிறது. இருபகுதிகளாக இது 1917 முதல் 1930 வரையிலான சோவியத் புரட்சியின் கதையை சொல்கிறது. போலந்துக்காரர்கள் உள்ளிட்ட எதிர்ப்புரட்சியாளர்களுடனான போராட்டம், லெனினின் மறைவு, தொழிற்சாலைகளையும் கூட்டுப்பண்ணைகளையும் அமைப்பது, புரட்சிகர அமைப்புகளுக்குள் உள்ள ஊடுபூசல்கள், கொள்கைக்குழப்பங்கள்.

இந்நாவல் ஸ்டாலினிஸ்ட் ரஷ்யாவில் இளந்தொழிலாளர்களுக்கான இலக்கிய அமைப்பாகிய ’மொலதாயா குவார்தியா’வால் இரு பகுதிகளாக வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட நாள்முதல் இது கம்யூனினிச பிரச்சார நாவல் என்ற அளவில் பெரிதும் முன்னிறுத்தப்பட்டது. ஒரு கம்யூனிஸ்டின் குன்றாத உளஆற்றலின் ஆவணம் என கொண்டாடப்பட்டது. அவ்வகையிலேயே தமிழுக்கும் கொண்டுவரப்பட்டது

ஆனால் இந்நாவல்கூட அன்றைய சோவியத் கமிசார்களால் கடுமையாக தணிக்கை செய்யப்பட்டே வெளியானது. இதில் பார்வையை இழந்தபின் தன் குடும்பம் எப்படி கொடிய வறுமைக்குச் சென்றது, தன் மனைவியும் தானும் மருத்துவ உதவிக்காக எப்படியெல்லாம் போராடவேண்டியிருந்தது என ஒஸ்திரோவ்ஸ்கி எழுதியிருந்தார். அவர் மனைவிக்கும் அவருக்கும் இருந்த கசப்பும் முரண்பாடும், இறுதியாக அது விவாகரத்தில் முடிந்ததும் எழுதப்பட்டிருந்தது.

அவையெல்லாம் வெட்டி அகற்றப்பபட்டபின்னரே நாவல் வெளிவந்தது. சோவியத் ருஷ்யாவின் உடைவுக்குப்பின்னரே முழுமையான வடிவம் வெளியாகியது. தமிழில் கிடைக்கும் இந்நாவலில் பாவலுக்கும் மனைவி தாயாவுக்குமான உறவு இலட்சியவாதத் தன்மை கொண்டதாக உள்ளது. பாவெல் அரசாலும் கட்சியாலும் மிகச்சிறப்பாக பேணப்பட்டு மாஸ்கோவில் மிக வசதியான முறையில் தங்கவைக்கப்படுகிறான். அங்கே ஓர் உதவியாளருடன் இணைந்து நாவலை எழுத ஆரம்பிக்கிறான்.

இந்நாவலில் இப்பகுதிகள் அவசரமாக, சுருக்கமாக எழுதப்பட்டுள்ளன “இப்போது தாயா சகல உரிமைகளும் கொண்ட கட்சி உறுப்பினராகிவிட்டாள். அவள் மிக நேர்த்தியான தொழிலாளியாக இருந்தாள். அவளுடைய சொந்த வாழ்க்கையில் சோகம் நிறைந்திருந்தபோதிலும் தொழிற்சாலையில் தலைசிறந்த முன்னணித் தொழிலாளர்களுக்கு சமமாக வேலைசெய்தாள்… உண்மையான போல்ஷெவிக்காக உருப்பெற்றுக்கொண்டிருந்த மனைவியைப்பற்றி பாவெல் பெருமை அடைந்தான். அந்த பெருமையுணர்வு தன் துன்பங்களை சகித்துக்கொள்ள அவனுக்கு உதவியது”என்பவை உண்மையில் ஆசிரியர் எழுதியவை தானா என்றே ஐயமெழும் அளவுக்கு குழந்தைத்தனமான வரிகள். ஏதாவது கட்சி கமிசார் கைவைத்திருக்கலாம்

இந்நாவல் காட்டும் எதிர்ப்புரட்சிச்சூழல் ஒன்றும் புதியது அல்ல. உக்ரேனின் பின்னணியில் மேலும் பிரம்மாண்டமாக மிகயீல் ஷோலகோவ் இதை எழுதிக்காட்டியிருக்கிறார். ‘டான் அமைதியாக ஓடுகிறது’ஒரு காவியத்தன்மை கொண்ட ஆக்கம். ருஷ்யப்பெருநாவல் மரபின் கடைசிச் சாதனை அதுதான்.

ஷோலக்கோவ்

கம்யூனிசத்தை கட்டி எழுப்புவதைப்பற்றியானாலும்கூட ஷோலக்கோவின் ’உழுதுபுரட்டப்பட்ட கன்னிநிலம்’ பலமடங்கு மேலான படைப்பு. அதிலுள்ள மனித குணத்தின் வண்ணவேறுபாடுகள் கலைஞனின் ஆக்கம் என அந்நாவலை காட்டுபவை. அதை ஷோலக்கோவ் கட்டாயத்தின்பேரில் எழுதினார், அதில் எவ்வகையிலும் உண்மையில்லை என்பதெல்லாம் பின்னர் வெளிவந்தது.தமிழிலேயே அவ்வாறு ரஷ்யக்கம்யூனிஸ்ட்டான தொ.மு.சி ரகுநாதன் எழுதியிருக்கிறார்.

அதனுடன் ஒப்பிடும்போது இந்நாவல் முதிரா முயற்சியாகவே தெரிகிறது. கதையொழுக்கு இல்லை. நிகழ்வுகளில் நுட்பங்கள் குறைவு. நினைவிலெழும் தன்வரலாற்றுக் காலம் இதிலுள்ளது. ஆகவே ஒழுக்கு முறிந்து தாவித்தாவிச் செல்கிறது நாவல். ஷோலக்கோவின் நாவல் பிரம்மாண்டமான காட்சிவெளியாக விரியக்கூடியது. இந்நாவலில் போர்க்களக்காட்சிகளைக்கூட சுருக்கமான செய்திகளாகவே ஆசிரியர் சொல்லிச் செல்கிறார்.

ஷோலக்கோவ் நெருக்கடிகளில் மானுட ஆளுமைகள் உருகி தன்னை மறுவார்ப்பு செய்துகொள்வதன் பெருஞ்சித்திரத்தை அளிக்கிறார்.இந்நாவலில் பாவெலின் அண்ணன் ஆர்தியேமின் குணச்சித்திரம் தவிர எதுவுமே ஆர்வமூட்டும் அளவுக்கு சொல்லப்படவில்லை. போல்ஷெவிக்குகள் எல்லாருமே மிகச்சரியாக ஒரே அச்சுவார்ப்புகள். அதாவது அப்பழுக்கற்ற புரட்சியாளர்கள். இந்நாவலின் நிகழ்வுகள், கதாபாத்திரங்கள் ஆகியவற்றை பார்க்கையில்  ஒரு ‘போல்ஷெவிக் ஏட்டு’ எழுதிய முதல்தகவல் அறிக்கை என்று சொல்லத்தோன்றுகிறது. இதனுடன் ஒப்பிடுகையில் உழுதுபுரட்டப்பட்ட கன்னிநிலத்தின் நாயகன் டாவிடோவ் ஒரு காவியநாயகன் என்று படுகிறது

ஒரு காலப்பதிவாக இந்நாவலுக்கு மதிப்பே இல்லை– ஏனென்றால் இது அதிகாரவர்க்கம் சமைத்த வரலாற்றின் மொழிவடிவம். கலையம்சம் என்றால் ஒரு இடத்தில்கூட வாழ்க்கையின்மேல் கலைஞனுக்குரிய தனித்தன்மை கொண்ட பார்வை விழவில்லை. தன் சொந்த வாழ்க்கையைச் சொல்லும்போதுகூட அதிகாரபூர்வ போல்ஷெவிக் கதையாடலையே ஆசிரியர் சொல்கிறார்.

வேறென்ன எஞ்சுகிறது?  ஒரு புனைவாக மட்டும் எடுத்துக்கொண்டால் இது ஒரு விசித்திரமான வாழ்க்கைச்சூழலை காட்டுகிறது. பதின்பருவத்தில் ‘வயதடைதல்’ நிகழ்வது அனைவருக்கும் உரிய பரிணாமம். உண்மையில் சமூகத்தின் கட்டமைப்பு, விதிகள், அதன் இயக்கமுறை, அதன் இருள், ஒளி ஆகியவற்றை ஓர் இளைஞன் முதன்முதலாக அறியும் திருப்புமுனைத்தருணம் அது. அறிதலின் கொந்தளிப்பு அடங்கும்போது அவன் முதிர்ந்தவனாகிவிடுகிறான்.

அந்த அறியும் தருணத்தில் அச்சமூகமே ஒட்டுமொத்தமாக இடிந்துசரிந்து உருமாறிக்கொண்டிருந்தால் என்ன ஆகும்? அவன் அறிவது எதை? அவன் எங்கே நிலைகொள்வான்? அந்த வினாவை இந்நாவல் முழுக்க எழுப்பிக்கொள்ள முடிகிறது. பாவல் அறியும் புறவுலகில் ஒன்று இடிந்துகொண்டிருக்கிறது, இன்னொன்று உருவாக துடிக்கிறது. இயல்பாகவே உருவாகிவருவதன்மேல்தான் இளைஞனின் ஆர்வம் திரும்பும், அதன் மெய்யான மதிப்பை அவனால் உணரவே முடியாது. வீழ்பவை அவை வீழ்ந்துகொண்டிருப்பவை என்பதனாலேயே அவனால் துறக்கவும்படும்.

சாகசம் இளைஞர்களின் இயல்பு. அவர்களுக்குள் இருந்து உந்தும் உயிர்விசையின் வெளிப்பாடு அது.கருத்துக்கள் அல்ல, சாகசத்துக்கான வாய்ப்புகளே அவர்களை நிலைபாடுகொள்ளச் செய்கின்றன. போல்ஷெவிக் புரட்சி முதல் நக்சலைட் புரட்சி, ஈழப்போராட்டம் வரை திரும்பத்திரும்ப நிகழ்கிறது இது. உலகம் முழுக்க அரசியல் எழுச்சிகளில் முதிரா இளைஞர்களின் வெற்றுச்சாகசமோகம் என்ன பங்கை வகிக்கிறது என்று இந்நாவலை வாசிக்கையில் நினைத்துக்கொண்டேன்.

உண்மை, அந்த முதிரா இளைஞனின் உணர்வுகளில் கற்பனாவாதத்தன்மை உள்ளது. அதில் பாவனைகளோ தன்னலமோ இல்லை. ஆனால் அது கொண்டாடத்தக்கதுதானா? உலகை அந்த கட்டற்ற விசைவெளிப்பாடு ஆட்டுவிக்குமென்றால் அது உகந்ததுதானா? இந்நாவல் முழுக்க பாவெல் ஒரு தக்கைபோல சாகச உணர்ச்சியால் அடித்துக்கொண்டு செல்லப்படுகிறான். அது முடியும்போது அவன் வாழ்க்கையும் முடிந்துவிடுகிறது

இந்நாவலில் ஆசிரியரால் நையாண்டியுடன் சொல்லப்படும் ஒரு சித்திரம் உள்ளது. ’புரட்சிகரப்’பார்வையில் அப்படி அது தோன்றவும்கூடும். ஆனால் இன்றைய உலகில், புரட்சிகரம் என்பது ஒருவகை அபத்தமான வன்முறை என்று தோன்றுவதாக வரலாறு உருமாறியிருக்கையில், அமைதியான ஆக்கபூர்வமான வாழ்க்கை வாழும் எளியவர்களின் அவலம் என்றே அதை பார்க்கமுடிகிறது

நகரத்தை ஒரு படை கைப்பற்றுகிறது. உடனே ஊரிலிருப்பவர்கள் அந்தப் படை என்ன, அதன் சின்னம் என்ன என்று ஆராய்ந்து அவசரமாக அதை தங்கள் வீடுகளுக்கு முன் மாட்டிக்கொள்கிறார்கள். ஏதேனும் வகையில் முந்தைய அதிகாரத்துடன் ஒத்துழைத்தவர்கள் கடுமையாக பழிவாங்கப்படுகிறார்கள். புதிய ராணுவத்துடன் ஒத்துழைக்காதவர்கள் தண்டிக்கப்படுகிறார்கள்.

போர் திசைமாறுகிறது. இந்த ராணுவம் நகரை கைவிட்டு செல்கிறது. அதன் ஆதரவாளர்கள் எதிரிகளிடம் மாட்டிக்கொள்ளவேண்டியதுதான். மக்கள் அவசரமாக வென்று உள்ளே நுழையும் ராணுவத்தின் அடையாளங்களை வீடுகளில் மாட்டிக்கொள்கிறார்கள். ஆனாலும் முந்தைய ராணுவத்துடன் ஒத்துழைத்தவர்கள் பிடிபட்டு தண்டிக்கப்படுகிறார்கள். தங்களுக்கு வேறுவழியில்லை என அவர்கள் முறையிட்டாலும் பயனில்லை.

ராணுவங்கள் நகரை பிடிக்கின்றன, மக்களை கொள்ளையிடுகின்றன, கைவிட்டுவிட்டுச் செல்கின்றன, அடுத்த ராணுவம் வருகிறது. முந்தைய ராணுவத்தால் கொள்ளையிடப்பட்டு ஒன்றுமே இல்லாமல் மக்கள் இருந்தால் அவர்களை அதற்காக தண்டிக்கிறது. ஆகவே எத்தனை அடிவாங்கினாலும் மக்கள் வரும் ராணுவத்துக்காக கொஞ்சம் பதுக்கி வைத்தேயாகவேண்டும். இதில் செம்படையும் எதிர்ப்படையும் எல்லாம் ஒன்றுதான்.

போல்ஷெவிக் பார்வையில் ஒரு ‘மாபெரும் நன்மைக்காக’ மக்கள் படவேண்டிய சிறுதுயரம் என இதை சொல்லிவிடலாம்தான். ஆனால் அந்த மாபெரும் நன்மை என்பது வரலாறுகண்ட கொடிய சர்வாதிகாரியின் அடக்குமுறை ஆட்சி. உக்ரேன் மக்களுக்கு ஸ்டாலினிஸ்ட் ருஷ்யா  ஆதிக்கம் செலுத்தும் அன்னிய சக்தியும்கூட. அவர்களால் சுரண்டப்பட்டு கோதுமைக்களஞ்சியமான உக்ரேனில் மாபெரும் பஞ்சம் வந்து லட்சக்கணக்கானோர் மாண்டனர்.

இன்று வரலாறு சோவியத் ருஷ்யாவின் எழுபதாண்டு கம்யூனிசமே ஒரு மாபெரும் அவப்பிழை என காட்டுகிறது. உக்ரேனியர்களுக்கு அது ஒரு கெட்ட கனவு. அப்படியென்றால் மாறிமாறி சூறையாடப்பட்ட அந்த போர்க்காலத்தின் பொருள் என்ன? எந்தப்போருக்குப்பின்னும் எதுவும் நல்லது நிகழ்வதில்லை. போரை நிகழ்த்திய ஆதிக்கசக்திகளில் ஒன்று வலுப்பெற்று அதிகாரம் அடையலாம், அவ்வளவுதான். மக்களைப்பொறுத்தவரை போரின் அழிவுகள் அழிவுகள் மட்டுமே.

இந்நாவலை இன்று நாமறியும் வரலாற்றுடன் இணைத்து வாசிக்கையில் வரலாற்றுப்பெருக்கின் பொருளின்மை அளிக்கும் பெருஞ்சலிப்பே எஞ்சுகிறது. ”மாஸ்கோவின் மைய வீதிகளில் ஒன்றாகிய கோர்க்கிய் வீதியில் 14 ஆம் எண் கொண்ட வீட்டில் நிகலாய் ஒஸ்திரோவ்ஸ்கியின் மியூசியம் அமைந்திருக்கிறது. அது இவ்வெழுத்தாளரின் இல்லமாக இருந்தது” என தொடங்கும் குறிப்பு ஒன்று இந்நூலின் தமிழ் வடிவில் உள்ளது.

“…இங்குள்ள நூல்கள் பல குண்டுகளால் துளைக்கப்பட்டவை. இரத்தத்தில் ஊறியவை. இவை ஃபாசிசத்துக்கு எதிராக போரிட்டவர்களின் கைகளில் கொண்டவை.. இங்குள்ள புத்தகங்கள் ஆயிரம் ஆடிரம் கைகள் மாறியவை, உருக்குலையும்வரை படிக்கப்பட்டவை.”இது 1950களில் சோவியத் வெளியீடாக இந்நாவல் வந்தபோது எழுதப்பட்டதாக இருக்கலாம்

ஆனால் நிகலாய் ஒஸ்திராவ்ஸ்கி இன்று அவருடைய சொந்த நாடான உக்ரேனில் தேசத்துரோகியாக கருதப்படுகிறார். உக்ரேனை ருஷ்யர்களுக்கு காட்டிக்கொடுத்தவர். உக்ரேனின் கம்யூனிச நீக்கச் சட்டப்படி அவருடைய பெயரை எந்த அமைப்புக்கும் ,இடத்திற்கும் போடுவது குற்றம். ஆகவே உக்ரேனில் பழைய சோவியத் காலகட்டத்தில் நிகலாய் ஒஸ்ரோவ்ஸ்கியின் பெயர் போடப்பட்ட அத்தனை இடங்களும் பெயர்மாற்றம் செய்யப்பட்டுள்ளன. அவரைப்பற்றிய தடமே அங்கில்லை

[image error]சைமொன் பெட்லியூரா

இன்னொரு பக்கம் உண்டு. இந்நாவலில் எதிர்ப்புரட்சிக்காரராக, உக்ரேனிய தேசிய ராணுவத்தலைவராக வருபவர் சைமன் பெட்லியூரா. அவரை ஒன்றும்தெரியாத அசடனாக, குரூரமானவனாக, ஒருவகை ராணுவப் பொம்மையாக இந்நாவல் காட்டுகிறது. அவருடைய படைகள் அவரை எவ்வகையிலும் மதிக்கவுமில்லை என்கிறது. அவலட்சணமானவர் என்றும் காட்டுகிறது

ஆனால் உண்மையான சைமன் பெட்லியூரா  உக்ரேனின் தேசியப்பெருந்தலைவர். கம்பீரமானவர். இதழாளர், எழுத்தாளர், மாபெரும் அறிஞர். உக்ரேனியப் பண்பாடு, வரலாறு, இலக்கியம் பற்றி அவர் எழுதி இன்று தொகுக்கப்பட்டுள்ள கட்டுரைகளே இருபதாயிரத்திற்கும் மேல். உக்ரேனியப் பண்பாட்டின் கலைக்களஞ்சிய தொகுதிகள் போல அவை மதிக்கப்படுகின்றன. ருஷ்யபுரட்சிக்கு இருபதாண்டுகளுக்கு முன்னராகவே பெட்லியூரா உக்ரேனிய பண்பாட்டு அடையாளத்தை நிறுவும் 15000 கட்டுரைகளுக்குமேல் எழுதியிருக்கிறார்.

உக்ரேனின் தனி அரசியலுரிமைக்காக போராடியவர் பெட்லியூரா. ஜாரின் ஆதிக்கத்துக்கு எதிராக போரிட்டவர் செம்படையினருக்கு எதிராகவும் போரிட்டார். போலந்துடன் அதற்காக படையொப்பம் செய்துகொண்டார். உக்ரேன் நிலமானது  பண்பாடு சார்ந்தும் அரசியல் சார்ந்தும் ஒரு தனித்தேசியம் என நிலைபாடு கொண்டிருந்தார்

செம்படைகளுடனான போரில் பெட்லியூரா தோற்கடிக்கப்பட்டார். போலந்திலிருந்து பாரீஸ் வந்து அங்கே தங்கியிருந்தார். அங்கிருந்துகொண்டு உக்ரேனின் பண்பாட்டு அடையாளத்தை தக்கவைப்பதற்கான பெருமுயற்சிகளில் ஈடுபட்டார். உக்ரேனிய மொழிக்கான அகராதிகளை உருவாக்கினார். உக்ரேனிய நாட்டாரியல் பாடல்களையும் கதைகளையும் தொகுத்தார்.

இன்று உக்ரேன் ஒரு நவீன பண்பாட்டுத்தேசியமாக முன்வைக்கும் அடையாளம் முழுக்க பெட்லியூரா தனியொருவராக எழுதி உருவாக்கியது.இன்று வாசிக்கும்போது அந்த மாபெரும் அறிவுப்பணி பிரமிப்படையச் செய்கிறது.

1926ல் பெட்லியூரா பாரிஸில் ஷாலோம் ஷ்வாட்ஸ்ஃபார்ட் என்னும் யூதனால் சுட்டுக்கொல்லப்பட்டார். அவருடைய கொலை பற்றிய விசாரணையில் பெட்லியூரா உக்ரேனில் யூதர்களின்மேல் பொக்ரம் என்னும் ராணுவக்கொள்ளைகளுக்கு ஆணையிட்டதனால் பாதிக்கப்பட்டவர்களில் ஒருவனாகிய ஷாலோம் அவரை பழிவாங்கியதாக வாதிடப்பட்டது. ஜூரிகளால் ஷாலோம் விடுதலை செய்யப்பட்டான்

ஆனால் பின்னர் ருஷ்ய உளவுப்படையிலிருந்து விலகிய பீட்டர் டெரியாபின் என்பவரால் ஷாலோம் உண்மையில் ருஷ்ய உளவுப்படையான NKVDயால் தெரிவுசெய்யப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டு பெட்லியூராவை கொல்லும்பொருட்டு அனுப்பப்பட்டவன் என்பது வெளிப்படுத்தப்பட்டது. கன்னியாஸ்த்ரீகளாக இருந்த பெட்ல்யூராவின் சகோதரிகள் ஸ்டாலினால் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இன்று பெட்லியூரா உக்ரேனின் தேசியத்தலைவராக மீண்டெழுந்துவிட்டிருக்கிறார். உக்ரேனின் நகர்கள் அனைத்திலும் அவருக்கு நினைவகங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. அவருடைய எழுத்துக்கள் அச்சாகி படிக்கப்படுகின்றன. வரலாறு தலைகீழாகத் திரும்பியிருக்கிறது. இன்றைய பார்வையில் நிகலாய் ஒஸ்த்ரோஸ்வ்கி உளவுத்துறையின் கைப்பாவையாக எழுதிய ஒரு பயில்முறை எழுத்தாளர். உலகம் முழுக்க பொய்யாகக் கொண்டு செல்லப்பட்ட ஒரு வெறும் ‘பிராண்ட்’. பெட்லியூரா வரலாற்று நாயகன்.

இந்நாவலில் ஒஸ்திரோவ்ஸ்கி பெட்லியூராவை கிட்டத்தட்ட மனம்பிறந்த ராணுவக்கோமாளியாக சித்தரிக்கிறார். பெட்லியூராவின் படை பொக்ரம்களில் ஈடுபட்டதற்குச் சான்றுகள் இல்லை. பெட்லியூரா அதற்கு ஆணையிட்டார் என்பதற்கும் சான்றுகள் இல்லை. ஆனால் சோவியத் முகாம் அந்த சித்திரத்தை தெளிவாகவே கட்டமைத்தது.இந்நாவல் பெட்லியூரா கொல்லப்பட்டு எட்டு ஆண்டுகளுக்குப்பின் எழுதப்பட்டது. இதில் பெட்லியூரா பற்றிய சோவியத் ருஷ்யாவின் உளவுப்படையின் சித்திரத்தையே ஒஸ்திரோவ்ஸ்கி அளிக்கிறார். நாவலில் பெட்லியூரா பற்றிய ஒரே தெளிவான சித்திரம் என இருப்பது அவர் பொக்ரம்களுக்கு அனுமதி அளித்தார் என்பதும் அதைப்பற்றி ஒரு யூதர் முறையிட்டதும் அந்த யூதர்களையே தண்டிக்க ஆணையிட்டார் என்பதும் மட்டும்தான்.

உக்ரேனிய அதிபர் பெட்ல்யூராவின் சமாதிக்கு அஞ்சலி செலுத்துகிறார் 2005

இலக்கியம் அதிகாரத்தின் கையில் ஆயுதமாக பயன்பட்டதன் மிகச்சிறந்த சான்றாவணம் இந்த நாவல். உளவுத்துறை அளித்த அப்பட்டமான பொய்கள் ஆசிரியரால் எழுதவைக்கப்பட்டு உலகமெங்கும் கொண்டு செல்லப்பட்டன. பெட்லியூரா எவரென்று உலகில் எவருக்கும் தெரியாது, அவர் அயோக்கியக்கோமாளி என்று இந்நூல் உலகம் முழுக்க சென்று இருநூறு மொழிகளில் கூவியிருக்கிறது. எஸ்.ராமகிருஷ்ணன் போன்ற ஒரு பேரரறிஞரால் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது.

இத்தனை பிரச்சாரம், இத்தனை ஒருங்கிணைக்கப்பட்ட உலகுதழுவிய அமைப்பு வல்லமை, இன்றும் தொடரும் கண்மூடித்தனமான விசுவாசிகளின் அணி ஆகியவற்றைக் கடந்து உண்மை நிலைகொண்டுவிட்டிருக்கிறது. உக்ரேன் சென்றால் பெட்லியூராவின் நினைவகத்திற்குச் சென்று ஒரு மலர் வைக்கவேண்டும்– இந்நாவலை வாசித்த இருபது அகவைகளில் இது சொல்லும் சித்திரத்தை நான் நம்பியமைக்காக மன்னிப்பு கோரவேண்டும்.

”கடவுள் எல்லாவற்றையும் காண்கிறார், ஆனால் மிகத்தாமதமாக’ என்று ஒரு சொல்லாட்சி உண்டு. வரலாறும் எல்லாவற்றையும் சரிசெய்கிறது, எல்லா உண்மைகளையும் வெளிக்கொண்டுவந்து நிலைநாட்டுகிறது. ஆனால் மிகமிக தாமதமாக.

சைமன் பெட்லியூரா

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 11, 2021 10:35

எண்ணும்பொழுது- கடிதங்கள்

எண்ணும்பொழுது [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

நூறு கதைகளுக்குப் பிறகும் நீங்கள் கதைகள் எழுதமுடியும் என்பதே ஆச்சரியமாக இருக்கிறது. எல்லா கதைகளையும் எழுதிவிட்டீர்கள், எழுதுவதற்கு மேற்கொண்டு கருக்களே இல்லாமல் இருப்பீர்கள் என்று நினைத்தேன். அதிலும் எழுதிய கதை முற்றிலும் புதியதாகவும் இருப்பது திகைப்பை அளிக்கிறது.

இந்தகதை உங்கள் தலைமுறையில் இல்லாத ஒரு பிரச்சினை, இந்த தலைமுறையின் பிரச்சினை. ஐந்தாண்டுகளுக்கு முன்பு இந்தப்பிரச்சினையை கொஞ்சம் கோடிகாட்டி நான் ஒரு கடிதம் எழுதினேன் என்று ஞாபகம். வேறு சிலரும் உங்களுக்கு எழுதியிருக்கலாம். அதை பழைய ஒரு கதையுடன் இணைத்து எழுதியிருக்கிறீர்கள் என நினைக்கிறேன். விடைதேட அந்த பழைய கதைக்குள் செல்கிறீர்கள். ஆனால் விடைக்குப்பதிலாக ஒரு cosmic question தான் அந்த பழைய கதையிலிருந்து எழுந்து வருகிறது.

கணவன் மனைவி நடுவே ஈகோ பிரச்சினை எப்போதுமே இருந்திருக்கும். ஆனால் அறிவு சார்ந்த ஈகோ பிரச்சினை முன்பு இல்லை என்று நினைக்கிறேன். கணவன் கொஞ்சம் கூடுதலான அறிவு கொண்டவனாக இருந்தால் அதை சாதாரணமாக ஏற்றுக்கொண்டார்கள். அல்லது வெளியுலக அறிவு என்பதே ஆண்களின் ஏரியா என்ற எண்ணம் இருந்தது.அதில் போட்டி ஏதும் இல்லை.

ஆனால் இன்றைக்கு அதிலும் கடுமையான ஈகோ உள்ளது. கணவனின் அறிவுலகம் பற்றி ஒன்றுமே தெரியாதவளாக இருந்தாலும் மனைவி அது ஏதோ தனக்கு எதிரானது, தன்னை மட்டம்தட்டுவது என்று நினைக்கிறாள். அதை திருப்பி மட்டம்தட்டுகிறாள். அதற்கு பலவகையான பாவனைகள் உண்டு. அதிலொன்று அதை ஒரு விளையாட்டுத்தனமாக எடுத்துக்கொண்டு கேலியாகவே அணுகுவது. ஆரம்பத்தில் அது விளையாட்டாகவே இருக்கும். ஆனால் அந்த கேலி ஒரு டிஃபென்ஸ் என்று தெரியும்போது, அதை உடைக்கவே முடியாது என்று தெரியும்போது நாம் பயங்கரமாக எரிச்சலடைவோம்

அதை பொருட்படுத்தாமல் இருந்துவிடலாம் என்று சொல்லலாம். ஆனால் அது வாய்பேசாத-காதுகேளாத ஒருவருடன் புழங்குவதுபோலத்தான். என் நண்பர் ஒருவர் சொல்வார் ‘மண்மாண்புனைபாவை’யுடன் வாழ்வது என்று.உங்கள் வாசகர்தான் அவரும். அது பழையகாலத்தில் இயல்பாக இருந்தது. பலர் அப்படித்தான். என் அப்பாகூட அப்படித்தான். பேச்சுவார்த்தையே கிடையாது. உறுமல், ஒற்றைவார்த்தை மட்டும்தான். இன்றைக்கு அது சாத்தியமில்லை. அதைவிட இன்றைக்கு இந்த கேலியும் புறக்கணிப்பும் உள்ளது. ஈகோ மோதல் ஒவ்வொருநாளும் நடக்கிறது.

அவர்கள் நடுவே என்னென்ன நாடகம் நடக்கிறது என்பதை மிக நுட்பமாக எழுதிச்செல்கிறீர்கள். அவள் அவன் ஒரு அறிவார்ந்த ரொமாண்டிக்கான மூடில் இருக்கிறான் என்று தெரிந்துகொண்டே சாதாரணமான உலகவிஷயங்களைப் பேசுகிறாள். வேண்டுமென்றே கீழே கீழே இழுக்கிறாள். எல்லா ரொமாண்டிக் மூடுகளையும் கீழே கொண்டுவந்தே ஆகவேண்டும் என்று குறியாக இருக்கிறாள். அவனுடைய சிந்தனைகளை ‘தலைசூடாகி ஃப்யூஸ் ஆகிவிடும்’ என்று சொல்லி கேலி செய்கிறாள். அந்தக்கேலியை நிலையான ஒரு கவசம் மாதிரி வைத்திருக்கிறாள்.

அவனால் நேரடியாக ஒரு விஷயத்தைச் சொல்லமுடியாது. ஆகவேதான் அவன் அந்தக்கதையைச் சொல்கிறான். அந்தக்கதையில்கூட அவன் சொல்ல வருவது இல்லை. மாறிமாறி எண்ணிக்கணக்கிட்டுக்கொண்டிருந்தால் விரிசல் பெரிசாகிவிடும் என்கிறான். நடுவே முடிவில்லா தூரமும் மடங்காத காலமும் வந்துவிடும் என்கிறான். அவள் அதையும் கேட்பதே இல்லை.

இந்த பதிலே இல்லாத முடிச்சை மட்டும் சொல்லிவிட்டு நின்றுவிடுகிறது கதை. உண்மையில் இதற்கு பதிலென்று ஒன்றும் இல்லை. எண்ணும்பொழுது வரும் சிக்கல். எண்ணாமலிருந்தால்போதும்

எம்.சந்திரசேகரன்

 

அன்புள்ள ஜெ

எண்ணும்பொழுது ஒரு கூர்மையான கதை.  நான் அந்தக்கதையை வாசித்துமுடித்து பலவகையான சிந்தனைகளுடன் அதை மீண்டும் புரட்டிக்கொண்டிருந்தேன். அப்போதுதான் ஒரு நுட்பமான விஷயம் என் கவனத்துக்கு வந்தது. போம்பாளர் தெற்குதிருவீட்டில் கன்னியை  நீர்ப்பிம்பத்தில்தான் முதலில் பார்க்கிறார். அதைப்பார்த்துத்தான் ஆசைப்பட்டு அடைகிறார். அதன்பிறகு கூட அவளை கண்ணாடியில்தான் விரும்பிப்பார்த்துக்கொண்டிருக்கிறார்.

அதேபோல கதைசொல்லியும் தன் மனைவியை கண்ணாடியில்தான் பார்க்கிறான். கண்ணாடியில் அவளுடைய நகைகள் இருக்கும்போது அவளே இருக்கும் தோற்றம் உருவாகிறது. கண்ணாடியின் ஆழத்திலிருந்து அவள் தோற்றமளித்து அருகே வருகிறாள். அவர்கள் பெண்ணைப்பார்க்கிறார்களா அல்லது பெண்ணைப்பற்றிய தங்கள் எண்ணத்தை பார்க்கிறார்களா?

அந்த பிம்பம் கலைவதுதான் இந்தக்கதையின் சாராம்சம் என்று சொல்லமுடியுமா? அவன் அவளுடைய பிம்பத்துடன் தான் உறவுகொள்கிறான். அவள் கண்ணாடியிலிருந்து விலகிச்சென்றபின் கண்ணாடியில் தோன்றுவது அவளுடைய பிம்பம்தான் என்று சொல்லலாமா?

உறவுபிரிவு பற்றியெல்லாம் நிறைய எழுதப்பட்டுள்ளது. ஆனால் உறவை கணக்கிட்டுப்பார்த்தாலே பிரிவுதான் மிஞ்சும் என்ற பார்வை கொஞ்சம் துணுக்குற வைக்கிறது. எண்ணி எண்ணிப்பார்த்தால் எண்ணியவை குறைந்துவிடும் என்பதை நினைக்கையில் ஆம் என்றுதான் சொல்லத்தோன்றுகிறது.

 

ஆர்.செந்தில்குமார்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 11, 2021 10:32

சென்ற ஆண்டின் கதைகள்

அன்புள்ள ஜெ

என் வாழ்கையில் 2020ஆண்டில் நூறு கதைகளையும் இரண்டுமுறைக்குமேல் வாசித்ததுதான் மறக்கமுடியாத நிகழ்வு. அற்புதமான ஆண்டு என்று நான் எதிர்காலத்தில் நினைக்கப்போகிறேன் என்று தோன்றுகிறது. எல்லா கதைகளுமே பாஸிட்டிவான உணர்ச்சியை உருவாக்கின. வாழ்க்கையை பற்றிய நம்பிக்கையை ஏற்படுத்தின. மிகப்பெரிய விஷயங்கள் நம்மைச்சூழ்ந்து உள்ளன, நாம் அதற்கு தகுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்று எண்ணச் செய்தன.

ஒவ்வொரு கதையாக வாசித்துக்கொண்டே இருந்தேன். தீர்ந்தபோது மறுபடியும் வாசித்தேன். இன்னும் வாசிப்பேன் என நினைக்கிறேன். தொன்மங்களைப்பற்றிய கதைகள் எல்லாமே மிகச்சிறப்பானவை. ஆனால் நற்றுணை கதை சாதாரண கதை அல்ல. என்னைப்போல போராடும் ஒரு பெண்ணுக்கு அது ஒரு பெரிய வரம்போன்ற கதை

எஸ்.திவ்யா

அன்பின் ஜெ,

வணக்கம்!

அருமணிகளை போன்ற கதைகள். வெண்முரசுக்காக இரவு 12 வரை காத்திருக்கும் பொழுதுகளை தற்காலிகமாக எடுத்துகொண்ட நாட்கள். எந்த புள்ளியில் ஆரம்பித்த வட்டம் என்று உய்த்துணரவும் யோசிக்க அவகாசம் இல்லாமல் முழுமையடைந்துவிட்ட வட்டம்.

மூன்று பறவைகளின் வருகை உங்களுக்கு கொடுத்த சந்தோசத்தை போலவே , அன்றாடம் படித்த கதையை அசைபோட்டபடி, காலை நடையில் தினம் தினமும் பார்த்துசெல்லும் பருத்தி செடிகள். அறுவடை முடிந்த நிலத்தை திருத்தி, பண்படுத்தி, பருத்தி விதைகளை விதைத்தது முதல், பஞ்சு வெடித்து நின்றிருக்கும் இச்சமயம் வரை, அனுதினமும், விதையாய், செடியாய், காயாய், பூவாய் பல பருவங்களை கண்கூடாய் பார்க்கும் வாய்ப்பு கிடைத்த நாட்கள். “ஏமானே… மொதலாளி எப்பவுமே தெக்கு பக்கமே மட திறந்து தண்ணி வைக்கிறாரு… தெக்கேருந்து வடக்க வாறதுக்குள்ள வெய்யில் கேறிப்போயி ஈரப்பதம் சீக்கிரம் காஞ்சிபோவுது…. தெக்கு பக்க செடில்லாம் எப்படி செழிப்பா காச்சிருக்கு… . வடக்கு பக்கமிருக்குற நாங்க எப்படி சோம்பி போயி இருக்கம் பாருங்க…. எங்களுக்கும் பசிக்கும்ல… கொச்சேமான் மனசுவச்சி அந்தாக்குல நிக்குற மொதலாளிக்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிட்டு அப்புறமா நடைய தொடரணும்னு” மனதால் பேசுகிற அளவுக்கு நெருக்கமாகி போன பருத்தி செடிகள்.

”அவங்கெட்டவன்னு அப்பவே சொன்னேன், கேட்டீங்களா தம்பி.. இப்ப பாருங்க சாத்யகிய வெட்டிபுட்டாங்க… நா போயி சாவுதேன்…” என்று அலைபேசியில் அழைத்து பிராது சொல்லும் லோகமாதேவிக்கு சமாதானம் சொல்லிவிட்டு ஆரம்பிக்கும் அன்றைய கதைக்கான உரையாடல்கள்.

அலுவலக சகாக்கள் முதல், ஆல் இண்டியா ரேடியோ அறிவிப்பாளர்கள் வரை , கொரோனா கால சிறுகதைகளின் வாசகர்கள் ஆகிவிட்டார்கள். காரைக்கால் பண்பலை நிகழ்ச்சிகளின் ஒருங்கிணைப்பாளரிடம் கதைகளை பற்றி சொல்லியிருந்தேன். கதைகளின் லிங்கை, அறிப்பாளர்களுக்கான குழுமத்தில்  அனுப்பிவைத்து படிக்கச்சொல்கிறார். லூப் கதை அவர்கள் மத்தியில் மிகவும் விரும்பப்பட்ட ஒன்று.

”ஆட்டோ கண்ணாடிய திருப்புனா எப்படிங்க இந்த பிரச்சினை சரியாகும்…?” அலுவல நண்பர்கள் மத்தியில் அடிக்கடி புழங்கும் ஒரு திரைப்பட வசனம் .

’ஆனையில்லா’கதையின் சுருக்கத்தை , அலுவலக நண்பர்கள் சிலரிடம் சொல்லி, கதையின் லிங்கை அனுப்பி, படிக்க சொல்லியிருந்தேன். “ஆனைக்கி கிரீஸ் பூசுனா எப்டி இந்த ப்ராப்ளம் சால்வ் ஆகும்…?” என்ற வாசகம் இப்போது அந்த இடத்தை பிடித்துக்கொண்டது.

இன்று காலை வழக்கம்போல புலரியில் உதயத்தை பார்க்க நின்றிருக்கையில், மேக மூட்டங்கள் இல்லாமல், வெகுவாய் துலங்கி நின்றிருந்த கீழ்வானில், மெதுவாய் எட்டிபார்த்து,
கீற்றாய் ஆரம்பித்து, சடுதியில் முழுமைபெற்றது உதயம். கண்கூசா கதிரவனை, முழுமையாய் உள்வாங்கிய திருப்தி. இன்றைய நடையில் அசைபோட கதை இல்லை, ஆனால் முழுமையின் தித்திப்பு நிறைந்திருக்றது.

நிறைவின் தித்திப்பை,  மீள்வாசிப்பாக மாற்றிக்கொண்டிருக்கும் அறுபத்தி ஒன்பது கதைகள்.

நட்புடன்,
யோகேஸ்வரன் ராமநாதன்.

அன்புள்ள ஜெ எம்

நலமா?

மிகச்சிறியவர்கள்… ஆம், தனிப்பட்ட பண்புகளில் அவர்கள் நம்மைவிட மேலானவர்கள். நான் மறுக்கவில்லை. ஆனால் அவர்கள் தாங்களே வெட்டிக்கொண்ட குழிகளுக்குள் நிற்கிறார்கள். நாம் குன்றின்மேல் நிற்கிறோம். நம்முடைய கல்வியால், பிரிட்டிஷ் அரசு நமக்கு அளிக்கும் உலகப்பார்வையால். நாம் இவர்களை எறும்புகளைப் பார்ப்பதுபோல குனிந்து பார்க்கிறோம். சிலசமயம் பரிதாபப்படுகிறோம். நம் காலைக் கடிக்கும்போதும் பூட்ஸால் ஒரே நசுக்காக நசுக்கிவிடுகிறோம்.”

மிகச் சரியான துல்லிய வரைவு.  இன்று அமெரிக்கா ஏகாதிபத்தியம் செய்து கொண்டு இருக்கிறது. மெல்ல சீனா ஆரம்பிக்கிறது.

“இவர்களின் தன்முனைப்பு. தாங்கள் சரித்திர புருஷர்கள் என்னும் மிதப்பு. அப்படி நினைக்க ஆரம்பிக்கும் எவரும் அதன்பின் மனிதர்களாக இருப்பதில்லை. தெய்வங்களாக தங்களை நினைக்கிறார்கள். மனிதர்கள் கூட்டத்தோடு அழிக்க தெய்வங்களுக்கு எந்த தயக்கமும் இல்லை”

உண்மைதான்.  சரித்திரத்தில் செங்கிஸ்க்கான் , அலெக்சாண்டர்,  நெப்போலியன்  ஆகிய புருஷர்கள்.ஆயினும் தெய்வத்தின் பெயரால் உலகில் நடந்த மனித குல அழிவுகள் இன்னும் மிக அதிகம்.

அன்புடன்

சிவா சக்திவேல்

100. வரம் [சிறுகதை] 99. முதலாமன் [சிறுகதை] 98. அருகே கடல் [சிறுகதை] 97. புழுக்கச்சோறு [சிறுகதை] 96.  நெடுந்தூரம் [சிறுகதை] 95. எரிமருள் [சிறுகதை] 94. மலைவிளிம்பில் [சிறுகதை] 93. அமுதம் [சிறுகதை] 92. தீவண்டி [சிறுகதை] 91. பீடம் [சிறுகதை] 90. சிந்தே [சிறுகதை] 89. சாவி [சிறுகதை] 88. கழுமாடன் [சிறுகதை] 87. கீர்ட்டிங்ஸ் [சிறுகதை] 86. தூவக்காளி [சிறுகதை] 85. சிறகு [சிறுகதை] 84. வண்ணம் [சிறுகதை] 83. ஆபகந்தி [சிறுகதை] 82. ஆமை [சிறுகதை] 81. கணக்கு [சிறுகதை] 80. சுக்ரர் [சிறுகதை] 79. அருள் [சிறுகதை] 78. ஏழாவது [சிறுகதை] 77. மணிபல்லவம் [சிறுகதை] 76. மூத்தோள் [சிறுகதை] 75. அன்னம் [சிறுகதை] 74. மலையரசி [சிறுகதை] 73. குமிழி [சிறுகதை] 72. லட்சுமியும் பார்வதியும் [சிறுகதை] 71. செய்தி [சிறுகதை] 70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல்]- 2 70. ‘தங்கப்புத்தகம்’ [குறுநாவல் -1 69. ஆகாயம் [சிறுகதை] 68. ராஜன் [சிறுகதை] 67. தேனீ [சிறுகதை] 66. முதுநாவல்[சிறுகதை] 65. இணைவு [சிறுகதை] 64. கரு [குறுநாவல்]- பகுதி 1 64. கரு [குறுநாவல்]- பகுதி 2 63. ‘பிறசண்டு’ [சிறுகதை] 62. நிழல்காகம் [சிறுகதை] 61. லாசர் [சிறுகதை] 60. தேவி [சிறுகதை] 59. சிவம் [சிறுகதை] 58. முத்தங்கள் [சிறுகதை] 57. கூடு [சிறுகதை] 56. சீட்டு [சிறுகதை] 55. போழ்வு [சிறுகதை] 54. நஞ்சு [சிறுகதை] 53. பலிக்கல் [சிறுகதை] 52. காக்காய்ப்பொன் [சிறுகதை] 51. லீலை [சிறுகதை] 50. ஐந்து நெருப்பு[ சிறுகதை] 49. கரவு [சிறுகதை] 48. நற்றுணை [சிறுகதை] 47. இறைவன் [சிறுகதை] 46. மலைகளின் உரையாடல் [சிறுகதை] 45. முதல் ஆறு [சிறுகதை] 44. பிடி [சிறுகதை] 43.. கைமுக்கு [சிறுகதை] 42. உலகெலாம் [சிறுகதை] 41. மாயப்பொன் [சிறுகதை] 40. ஆழி [சிறுகதை] 39. வனவாசம் [சிறுகதை] 38. மதுரம் [சிறுகதை] 37. ஓநாயின் மூக்கு [சிறுகதை] 36. வான்நெசவு [சிறுகதை] 35. பாப்பாவின் சொந்த யானை [சிறுகதை] 34. பத்துலட்சம் காலடிகள் [சிறுகதை] 33. வான்கீழ் [சிறுகதை] 32. எழுகதிர் [சிறுகதை] 31. நகைமுகன் [சிறுகதை] 30. ஏகம் [சிறுகதை] 29. ஆட்டக்கதை [சிறுகதை] 28. குருவி [சிறுகதை] 27. சூழ்திரு [சிறுகதை] 26. லூப் [சிறுகதை] 25. அனலுக்குமேல் [சிறுகதை] 24. பெயர்நூறான் [சிறுகதை] 23. இடம் [சிறுகதை] 22. சுற்றுகள் [சிறுகதை] 21. பொலிவதும் கலைவதும் [சிறுகதை] 20. வேரில் திகழ்வது [சிறுகதை] 19. ஆயிரம் ஊற்றுக்கள் [சிறுகதை] 18. தங்கத்தின் மணம் [சிறுகதை] 17. வானில் அலைகின்றன குரல்கள் [சிறுகதை] 16. ஏதேன் [சிறுகதை] 15. மொழி [சிறுகதை] 14. ஆடகம் [சிறுகதை] 13. கோட்டை [சிறுகதை] 12. விலங்கு [சிறுகதை] 11. துளி [சிறுகதை] 10. வேட்டு [சிறுகதை] 9. அங்கி [சிறுகதை] 8. தவளையும் இளவரசனும் [சிறுகதை] 7. பூனை [சிறுகதை] 6. வருக்கை [சிறுகதை] 5. “ஆனையில்லா!” [சிறுகதை] 4. யா தேவி! [சிறுகதை] 3. சர்வ ஃபூதேஷு [சிறுகதை] 2. சக்தி ரூபேண! [சிறுகதை] 1. எண்ண எண்ணக் குறைவது [சிறுகதை]
1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 11, 2021 10:31

வெண்முரசின் நிலமும் மக்களும்

ஓவியம்: ஷண்முகவேல்

அன்புள்ள ஜெ,

வெண்முரசின் மலர்கள், வெண்முரசின் போர்க்கலை என்று பல்வேறுவகையில் இன்று பார்வைகள் வந்துகொண்டிருக்கின்றன. இந்தவகையான வாசிப்பு வெண்முரசுக்கு சிறப்புசெய்வதாகுமா? வெண்முரசை இப்படி வெறுமே தகவல்களுக்காக வாசிக்கமுடியுமா? தகவல்களுக்காக வாசிப்பதென்றால் வெறும் தகவல்கள் மட்டுமே நிறைந்த ஏராளமான நூல்கள் இருக்கின்றன அல்லவா?

வெண்முரசு அடிப்படையில் தத்துவார்த்தமான தேடல்களை கொண்டது. மனிதமனம் கண்டடையும் உச்சங்கள் அதில் நிகழ்கின்றன. ஞானமும் உயர்ந்த உணர்ச்சிகளும் மட்டுமல்ல கீழ்மையும் தீமையும்கூட அதில் உச்சமாக வெளிப்படுகின்றன. தமிழில் நவீன இலக்கியத்தில் இன்றைக்கு வேறொரு படைப்பில் அவற்றை நாம் வாசிக்க முடியாது. தமிழின் அழகும் வீச்சும் வெளிப்படும் இடங்கள் நிறைந்தது வெண்முரசு.

இவை அனைத்தையுமே பொருட்படுத்தாமல் வெறுமே செய்திகளை மட்டும் பொறுக்கிச்சேர்ப்பது சரியான வாசிப்பாக அமையுமா?

என்.ராமச்சந்திரன்

 

அன்புள்ள ராமச்சந்திரன்,

வெண்முரசு ஓர் இலக்கியப்படைப்பாக இலக்காக்குவதென்ன என்று வகுத்துக்கொண்டால் இந்தவகையான வினாக்களுக்கான பொதுப்புரிதலை அடையமுடியும்

வெண்முரசு முதன்மையாக ஆன்மிகமான ஒரு தேடலையே முன்வைக்கிறது. மானுடவாழ்க்கையின் ஒட்டுமொத்தம் குறித்து, சாராம்சம் குறித்து அது உசாவிச்செல்கின்றது. அதற்கான தரிசனத்தை கண்டடைகிறது. அந்தப்பயணம் ஒரு பக்கம் நூலாசிரியரின் தனிப்பட்ட வாழ்க்கை அனுபவங்களில் இருந்தும் மெய்த்தேடலில் இருந்து அது எழுகிறது. மகாபாரதம் வழியாக வேதாந்தத்தை, இந்தியாவின் தொன்மப்பெருவெளியை உடன் இணைத்துக்கொள்கிறது. மகாபாரதத்தினூடாக இந்த யுகத்தின் வாழ்க்கையை, என்றுமுள்ள மெய்மையை கண்டடைவது அதன் செயல்பாடாக உள்ளது.

ஒரு வாசகன் வெண்முரசில் முதன்மையாக நாடவேண்டியதும் அதுவே. அவனறிந்த வாழ்க்கைநுட்பங்கள், உணர்வுநிலைகள், தரிசனங்கள் இப்புனைவின் களங்களில் எப்படி மறுஆக்கம் செய்யப்பட்டுள்ளன, எப்படி கூர்கொண்டு தரிசனமாகின்றன என்று. மகாபாரதம் அளிக்கும் கதைமாந்தர், கதைத்தருணங்கள், தொல்படிமங்கள் எப்படி அந்த தனிப்பட்ட அனுபவத்தை என்றுமுள்ள மானுட அனுபவமாகவும் ஆக்கிக்காட்டுகின்றன என்று. இங்கு தானறிந்த ஒரு யதார்த்தவாழ்க்கையில் அறியத்தக்கவற்றுக்கு மிகமிக அப்பால் சென்று ஒரு மெய்நிகர்த்த புனைவுவெளியில் வாழ்க்கையின் பேருருவை தொகுத்துக்காண வெண்முரசினூடாக அவனால் இயலவேண்டும்.

ஆனால் வெண்முரசின் நோக்கம் அது மட்டும் அல்ல. அந்த தரிசனவெளி அந்தரத்தில் கட்டிநிறுத்தப்படவுமில்லை– அப்படி கட்டி நிறுத்தப்படவும் இயலாது. வெறும்புராணமாக, நிலமோ காலமோ அற்றதாக, இதை எழுதியிருந்தாலும்கூட நுண்குறிப்பாக ஏதாவது நிலமும் காலமும் அதில் வந்து அமையும்.

உதாரணம் டோல்கினின் லார்ட் ஆஃப் த ரிங்ஸ். அது தூய புராணம் – ஆனால் தெளிவாகவே அதில் மையகாலகட்ட ஐரோப்பா உள்ளது. வெண்முரசு தெளிவாகவே காலம் நிலம் ஆகியவற்றை வரையறைசெய்து அதன்மேல் தான் அந்த புனைவுவெளியை நிறுவுகிறது

வெண்முரசின் நோக்கங்களில் ஒன்று பண்டைய பாரதநிலத்தை முழுமையாக புனைவில் உருவாக்கிக் காட்டுவது. அதன் நிலம், வாழ்க்கைமுறை அனைத்தையும். இந்தியவரலாற்றை அறிந்த அனைவரும் உணர்ந்த ஒன்று, மகாபாரதம் வரலாற்றுக்கு முந்தைய காலகட்டத்தில் நிகழ்ந்தது. நாம் சற்றேனும் வகுத்துக்கொண்டிருக்கும் வரலாறு மௌரியர் காலம் முதல்தான் தொடங்குகிறது.

மகாபாரதக் காலகட்டம் சார்ந்த தொல்லியல் சான்றுகள் பெரும்பாலும் ஏதுமில்லை. இலக்கியச்சான்றுகளோ தொடர்ச்சியான இடைச்செருகல்கள், மறுவிளக்கங்கள் ஆகியவற்றின் வழியாக தொகுத்தறிவதற்கு இயலாதபடி கிடக்கின்றன. ஆய்வாளார் நடுவே இன்றும் அவற்றில் எந்த தெளிவும் உருவாகவில்லை. அவற்றைப்பற்றி ‘தெளிவுடன்’ பேசுபவர்கள் அறியாமைநிறைந்த அடிப்படைவாதிகள் மட்டுமே

ஆகவே மகாபாரத யதார்த்தத்தை உருவாக்குவதற்கான வழியாக புனைவாளன் முன் இருப்பது ஒரு வழிதான். இன்றைய நிலத்தையும், பண்பாட்டையும் கற்பனையால் பின்னோக்கிக்கொண்டு சென்று அன்றைய நூல்களில் எஞ்சியிருக்கும் செய்திகளுடன் பொருத்த முயல்வது. வெண்முரசில் செய்யப்பட்டிருப்பது அதுதான். வாசகனும் வாசிப்பில் அதையே செய்கிறான். அவன் அறிந்த செய்திகள் நீண்டு பரிணாமம் கொண்டு அறியாத இறந்தகாலத்தில் படர்வதை அறிகிறான். வெண்முரசு வாசிப்பின் அனுபவங்களில் அது முக்கியமானது

ஆகவே வெண்முரசின் தகவல்களை ஆராய்பவர்கள் இயல்பாக ஒரு வாசகர் செய்யும் ஒன்றையே செய்கிறார்கள். அவர்கள்  செய்திகளை முறையாக திரட்டுவதன் வழியாக இந்த புனைவுப்பரப்பு எப்படி செய்தியும் கற்பனையுமாக நெசவுசெய்யப்பட்டுள்ளது என்பதை அறிகிறார்கள். அதன் வழியாக அப்புனைவை மேலும் நுணுக்கமாக உணர்கிறார்கள். எல்லா புனைவுகளும் இவ்வண்ணம்தான் வாசிக்கப்படுகின்றன

தகவல்களாலான ஒரு நூலை வாசிப்பதற்கும் புனைவை வாசிப்பதற்குமான வேறுபாடு இதுதான். தகவல்களாலான நூலில் தகவல்களை தெரிந்துகொள்ள, சரிபார்க்க வாசகன் முற்படுகிறான். புனைவில் தகவல்களும் கற்பனையும் ஊடாடுவதை அறிய முயல்கிறான். ‘நாவல் என்பது தகவல்களின் புனைவுவடிவம்’ என ஒரு வரையறை உண்டு. எல்லா புனைகதைகளும் தகவல்களையே கட்டுமானப்பொருட்களாக கொண்டுள்ளன. ஆனால் கற்பனையால் அவற்றை கட்டுகின்றன.

வெண்முரசு பாரதநிலத்தையே ஒரு பெரிய நிகழ்வெளியாக காட்டும் நோக்கம் கொண்டது. அதன் பிரம்மாண்டமான பண்பாட்டுவெளியை ஒருங்கிணைவுநோக்குடன் அது அணுகுகிறது—அனைத்தையும் உள்ளடக்கிய ஒரு சித்திரத்தை அளிக்கிறது. குமரிமுதல் இமையம் வரையிலான அதன் மண், ஆறுகள், நகரங்கள், தொன்மையான பாதைகள். அவற்றை காணும்பொருட்டு தொல்நூல்களிலும் நேரிலுமாக அலைந்தபடியே இருக்கும் ஒரு வாழ்க்கை என்னுடையது. வெண்முரசின் வாசகனிடமும் அந்த பாரததரிசனத்தை நான் எதிர்பார்க்கிறேன்

ஜெ

 

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 11, 2021 10:30

January 10, 2021

வடக்கு- சாவு,மீட்பு


வணக்கம் ஜெ


நம் பழைய இலக்கியங்களில் ‘வடக்கிருத்தல்’ பற்றி வருகிறது. இதற்கு ‘வட திசை நோக்கி உண்ணா நோன்பிருந்து உயிர்விடல்’ என்றே பொருள் கொள்ளப்படுகிறது. அதேபோல் ‘தென்புலத்தார்’ என்பது ‘இறந்த மூதாதையர்கள்’ என்று தென்திசை மரணத்தோடு  (யமன்) தொடர்புபடுத்தப்படுகிறது. இதற்கான காரணங்கள் யாது ?


தற்போது நான் ந.சுப்பிரமணியனின் ‘சங்ககால வாழ்வியல்’ நூல் வாசித்துக் கொண்டிருக்கிறேன். அதில் அவர் கூறுகிறார்:


“வட மொழியில் வடதிசை புண்ணியதிசை. உலகத்தைத் துறந்து இறக்கத் துணிந்தவர்களை வடக்கு நோக்கிக் கிடத்தினர். இது வடமொழியில் மஹாபிரஸ்தானம் அல்லது உத்தரகமனம் எனப்படும். ஒருவேளை, ஆரியர்கள் தெற்குதிசையை காலனோடு பொருத்தி அமங்கலமாகக் கருதியதுபோல, பண்டைத் தமிழர் தொடக்க காலத்தில் வடதிசையை காலன் திசையென்று கொண்டு சாவதற்கு வடக்கு நோக்கினார் ஆகலாம்.”


தமிழர்கள் வடதிசையை இறப்புக்கு உரியதாகக் கருத்தியிருப்பின், ஏன் தென்திசையை இறந்தவர்களுக்கு குறிப்பிட வேண்டும் ?


மேலும், முதற்சங்க இடைச்சங்க காலத்தில் தென்திசையில் இருந்ததாகக் குறிப்பிடப்படும் தென்மதுரை, கபாடபுரம் கடல்கோளால் அழிந்துபட்டதாகச் சொல்லப்படுகிறது. அதாவது, தமிழகத்தின் தென்பகுதியில் உள்ள நிலம் கடல்கோளால் அழிந்ததால் தமிழர்கள் தென்திசையை மரணத்தின் திசையாகக் கருதினர் என்று எப்போதோ படித்த ஞாபகம்.


ஆரியவர்தத்தின் தென் எல்லையான தண்டக வனம் (Dandaka Forest) அடர்த்தியான  நாகர்கள் வாழும் காட்டுப்பகுதியாக, ‘துர்’பிரதேசமாக, அப்பகுதிக்கோ அல்லது அதைத்தாண்டி தென்பகுதிக்கோ மக்கள் செல்லக்கூடாது என்றும் அமிஷ் திரிபாதியின் நாவலில் வருகிறது.


இதற்கெல்லாம் அடிப்படை எது ? திசைகள் குறித்த இந்த குறியீட்டுத் தன்மைக்கு வெறும் இயற்கைசார்ந்த விஷயங்கள் (கடல்கோள் அல்லது அடர்வனம்) தான் காரணமா அல்லது வேறு காரணம் உள்ளதா ?


விவேக்



அன்புள்ள விவேக்,


பொதுவாகவே தொன்மங்கள் எப்படி உருவாயின என்பதை புரிந்துகொள்ள முடியாது. சமூகவியல் விளக்கம், உளவியல் விளக்கம், ஆன்மிகவிளக்கம் என பலவகையில் நாம் அளித்துப்பார்க்கலாம். எவையுமே அவற்றின் தோற்றுவாய்க்கான முழுமையான விளக்கமாக அமைவதில்லை.


அப்படியென்றால் இந்த விளக்கங்கள் ஏன் அளிக்கப்படுகின்றன? அவை இந்த தொன்மங்களை விளக்குவதற்குரியன அல்ல. இந்த தொன்மங்களைக்கொண்டு வேறுசிலவற்றைப் புரிந்துகொள்வதற்கான வழிமுறைகள் மட்டுமே


தொன்மங்கள் போன்றவற்றை சமூகவியல் போன்ற புறவயமான நோக்கில் விளக்கிக்கொள்வது மிகப்பெரிய பிழையாக அமையும் என்பதை நித்யா உரைகளில் வேடிக்கையாகச் சொல்வதுண்டு. மனிதன் பாம்பை அஞ்சினான், ஆகவே தெய்வமாக்கினான் என்றால் ஏன் அதை விட அஞ்சப்பட்ட முதலை தெய்வமாக ஆகவில்லை என்று அவர் கேட்டதை நினைவுறுகிறேன்.


டி.டி.கோசாம்பி வேதங்களை ஆராய்ந்த வழிமுறையைப் பயன்படுத்தி தமிழ் நவீனக்கவிதைகளை ஆராய்ந்தால் தமிழர்களின் முதன்மையான தொழிலும் பொழுதுபோக்கும் பறவைவளர்ப்பும் பட்டாம்பூச்சி பிடிப்பதும்தான் என்று முடிவுக்கு வரவேண்டியிருக்கும் என நண்பர்களுடனான ஓர் உரையாடலில் சொன்னார்


ஆகவே இந்தவகையான பார்வைகளை மிகுந்த எச்சரிக்கையுடன், நாம் செய்யும் சமூகவியல் ஆய்வுக்கான தேவையைச் சார்ந்து மட்டுமே முன்வைக்கவேண்டும். முடிவான கூற்றாகச் சொல்லிவிடக்கூடாது.


திசைகளை எவ்வண்ணம் மூதாதையர் கண்டனர் ஏன் என்பதை நூல்கள் காட்டுகின்றன. கிழக்கு இந்திரனுக்குரியது. மேற்கு வருணனுக்கு. வடக்கு குபேரனுக்கு தெற்கு யமனுக்கு. எட்டுதிசைகளாக கொண்டால் வடகிழக்கு ஈசானனுக்கு.தென்கிழக்கு அக்னிக்கு.வடமேற்கு வாயுவுக்கு.தென்மேற்கு நிருதிக்கு


இந்த எட்டு திசைத்தெய்வங்களுமே இன்று மையவழிபாட்டில் இல்லை. எட்டுமே வேதகால தெய்வங்கள். ஈசானனும் நிருதியும் எவரென்றே இந்துக்களுக்கு பெரும்பாலும் தெரியாது. இதிலிருந்து இந்த திசைத்தெய்வங்கள் மிகத்தொல்காலத்திலேயே உருவகிக்கப்பட்டுவிட்டன என்பதைக் காணலாம்.


வாஸ்துசாஸ்திரம் போன்றவற்றில் நடைமுறை சார்ந்தும், தாந்த்ரீக துறையில் குறியீடு சார்ந்தும் இத்தெய்வங்கள் இத்திசைகளுக்குரியவையாக இருப்பதற்கு பொருள்கொள்ளப்படுகிறது.முடிவான பொருள் இன்னதென ஊகிக்கமுடிவதில்லை


திரு சுப்ரமணியன் அவர்களின் கருத்து சரியானது அல்ல. அவருடைய பார்வையில் உள்ளது அக்காலத்தில் பழக்கத்திலிருந்த ஒரு கோணம். அதாவது எல்லாவற்றையும் ஆரியருக்கு நேர்எதிராக தமிழர் அல்லது திராவிடர் செய்தனர் என்பது. இதைச் சொல்வதற்கு முன் தமிழ் செவ்வியல்மரபும் நாட்டார்மரபும் என்ன சொல்கின்றன, கேரள மரபு என்ன சொல்கிறது என்றெல்லாம் அவர்கள் ஆராய்வதில்லை. ஊகங்களை அப்படியே சொல்லிவிட்டுச் செல்கிறார்கள்


இந்து தொல்நூல்களிலும் மகாபாரதத்திலும் தெளிவாகவே சொல்லப்பட்டுள்ளது. மூதாதையர் திசை தெற்குதான். அதுதான் யமனுக்குரியது. நீத்தோருக்கான திசை.


தென்புலத்தார் தெய்வம் விருந்து ஒக்கல் தான் என்று


ஐம்புலத்தார் ஓம்பல் தலை


என்று குறள் சொல்கிறது. தென்புலத்தார் என்பது நீத்தாரை. நீத்தாரின் திசை தெற்கே. குறள் சமணரால் இயற்றப்பட்ட ஆக்கம் என நான் நினைக்கிறேன். அவர்களுக்கும் நீத்தார் திசை தெற்கே. அவர்கள் ஆலயங்களின் சிற்பங்களிலும் அப்படித்தான் உள்ளது.


சுடலைமாடசாமி கதை, மாயாண்டிக்கதை போன்றவற்றிலும் தெற்கே சாவின் திசை. ‘தெக்கோட்டு போறான்’ என நாட்டார் பாடலில் வந்தாலே சாவுக்குச் சென்றான், செத்தான் என்று பொருள். ‘உன்னை தெக்கோட்டு எடுக்க’ என்ற சாபமும் நாட்டார் கதைகளில் உண்டு.


ஆனால் மீட்புக்கான திசை வடக்கு. அதுவே கயிலை இருக்கும் திசை. நாட்டார்பாடல்களில் தெய்வங்களாக ஆகும் நீத்தோர் வடக்குசென்றுதான் சிவனை சந்தித்து அழிவிலா வரம், பலிகொள்ள வரம் பெறுகிறார்கள். தெய்வமாக ஆகிறார்கள். நாட்டார் தெய்வங்களின் வடதிசைப் பயணம் அடிக்கடி காணக்கிடைக்கிறது


மீட்பு ,சாவு இரண்டும் வேறுவேறு. திரு சுப்ரமணியன் அவர்கள் இரண்டையும் ஒன்றென காண்கிறார். பழைய நம்பிக்கை அப்படி அல்ல. பழைய நூல்களின்படி விண்புகுவது இருவழிகளில். மனிதர்கள் பொதுவாக உடல்நலிந்து சாவு எய்தி நீத்தோர் உலகு சென்று, அங்கே நீர்க்கடன்களுக்காக காத்திருந்து பெற்றுக்கொண்டு,நிறைவடைந்து முழுமைநிலை அடைகிறார்கள். அவர்கள் செல்லும் திசை தெற்கு


இன்னொருசாரார் நேராகவே முழுமைநிலை அடைகிறார்கள். யோகிகள், துறவிகள் போன்றோர். அவர்கள் செல்லும் வழி வடக்கு. அதாவது இறந்து விண்புகும் வழி தெற்கு. விடுதலைபெற்று விண்புகும் வழி வடக்கு என்று கொள்ளலாம்


உயிர்துறக்கும் நோன்பை மட்டும் அல்ல எல்லா நோன்புகளையும் வடக்குநோக்கி அமர்ந்தே செய்யவேண்டும் என்று ஆசாரம் சொல்கிறது. மங்கலச் செயல்களுக்கு கிழக்கு நோக்கியும் தவம்,நோன்பு ஆகியவற்றுக்கு வடக்குநோக்கியும் அமரவேண்டும். படிப்பும் ஒரு நோன்பு என்பதனால் படிப்பதற்கு வடக்குநோக்கி அமர்வதே சிறந்தது. கலைகள், கைத்தொழில்கள் ஆகியவற்றுக்கும் வடக்குநோக்கி அமரவேண்டும். உணவுண்பதை மட்டும் வடக்குநோக்கி அமர்ந்து செய்யக்கூடாது.


இதெல்லாம் நெடுங்காலமாக கேரளத்திலுள்ள வழக்கங்கள்தான். இதற்கு பலவகை சோதிட விளக்கங்களும் உண்டு.அதெல்லாம் மிகவும் சிக்கலானவை.


ஜெ

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 10, 2021 10:35

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.