இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 19
March 3, 2025
100 நாள் வேலைக்கு ...
ஆண்டுக்கு நான்கு லட்சம் கோடி ஒதுக்க வேண்டும்பொன்னமராவதி பேரூராட்சி விவசாயிகளுக்கு 100 நாள் வேலை வழங்க வேண்டும்100 நாள் வேலைத்திட்டத்தை 200 நாட்களாக மாற்ற வேண்டும்பொன்னமவாராவதிப் பகுதியில் நிலுவையில் உள்ள கூலியை வழங்க வேண்டும்என்ற கோரிக்கைகளோடு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தோழர்கள் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் சட்டமன்ற உறுப்பினர் தோழர் சின்னதுரை தலைமையில் இன்று பெருந்திரள் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தி உள்ளனர் என்ற தகவல் கம்யூனிஸ்ட் எங்கே இருக்கிறது என்று தேடிக்கொண்டிருக்கும் சீமானுக்கு என்று யாரேனும் கருதினால் அதற்கு நான் பொறுப்பேற்க முடியாது
03.03.2025
புனைவாகவும் வரலாறுதிரபற்றும்…
“கலை கலைக்காக” என்பதை உறுதியாக ஏற்க மறுப்பவர் தோழர் தளபதிராஜ். இன்னும் சரியாக சொல்வதெனில் “கலை மக்களுக்காக” என்பதில்கூட போதாமை இருப்பதாக உணர்பவர் அவர்.
“சகலமும் பெரியாருக்கு” என்று கருதும் நானறிந்த தீவிர பெரியார் தொண்டர்களில் தளபதிராஜ் ஒருவர்.
அவரிடமிருந்து வைக்கம் வெற்றியின் நூற்றாண்டுவிழா நேரத்தில் “நாலு தெருக் கத” என்கிற நாவல் ’திராவிடன் குரல்’ வெளியீடாக வந்திருக்கிறது.
”சரி! தூக்கம் வரலைனா அந்த வைக்கம் கதையைச் சொல்லுங்களேன்!” என்று இனியவனிடம் தேன்மொழி கேட்பதாக இந்தநாவலின் இருபத்தி ஆறாவது பகுதி முடியும்.
தூக்கம் வருகிறவரைக்கும் சொல்கிற மாதிரியாகவும் கேட்கிற மாதிரியாகவும் வைக்கம் போராட்டத்தை கதையாக சொல்ல முடியுமா?
’முடியும்’ என்று முயற்சித்து நிறுவி இருக்கிறார் தளபதிராஜ்.
இந்த நாவலில் வரும் அறிவுக்கரசு, பார்வதி, வடிவேலு, முத்தம்மா, இனியவன், தேன்மொழி, எழிலரசி, இளமாறன், மல்லிகா உள்ளிட்ட அனைத்துக் கதாபாத்திரங்களும் அவர்கள் வழியாக ஏதோவொரு வகையில் பெரியாரையும் அவரது சித்தாந்தத்தையும் வாசகர்களிடம் கொண்டு செல்வதற்காக படைக்கப் பட்டவர்கள்.
அதிலுங்குறிப்பாக தேன்மொழி மற்றும் இனியவன் ஆகியோரை அவர்கள் வழியாக வைக்கம் போராட்டத்தை வாசகர்களிடம் கொண்டு செல்வதற்காகவென்றே படைத்திருக்கிறார் ஆசிரியர்.
கதைகளை, புராணங்களை வரலாறாக திரித்துக் கொண்டிருக்கும் இன்றைய போக்கு குறித்து இந்த நாவலின் முன்னுரையில் பழ.அதியமான் மிக அழகாக சொல்கிறார். அவர் சுட்டும் அந்தப் போக்கை முன்னெடுப்பதற்காக எத்தனை லட்சம் கோடிகளை வேண்டுமானாலும் வாரிக்கொட்டுவதற்கு இன்றைய பாஜக அரசு தயாராக இருக்கிறது.
அவர்களுக்கென்ன இருக்கவே இருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா மேடம் .ஏதோ ஒரு வரியைப் போட்டு மக்களைச் சுரண்டி அதை இந்தப் பக்கமாக மடைமாற்றி விடுவார்.
கதைகளை வரலாறாகத் திரிப்பதற்கு மெனக்கெடத் தேவை இல்லை. ஆனால் வரலாறு ஒன்றினை கதை ஆக்குவதற்கு தரவுகள் வேண்டும். அதற்காக மெனக்கெட வேண்டும் .தரவுகளைத் திரட்டிவிட்டால் மட்டும் போதாது. அதைக் கதைப்படுத்த வேண்டும்.
புனைவாகவும் இருக்க வேண்டும். வரலாறும் திரபற்று இருக்க வேண்டும்.
இத்தனையையும் ஐந்தாம் பக்கம் தொடங்கி 196 ஆம் பக்கத்திற்குள், அதாவது 192 பக்கங்களுக்குள் தருவதென்பது …
மெனக்கெட்டிருக்கிறார் தளபதிராஜ்.
பிரச்சாரம் கலை ஆகுமா? ஆகும் என்று நிரூபித்திருக்கிறார் தோழர்.
யூனியன் கார்பைடு விஷவாயு கசிந்து கொத்துக் கொத்தாக மக்கள் செத்துக்கிடந்த வேளையில் அதற்கெதிரான பேரணி ஒன்று சென்னையில் நடந்தது. அதற்கான முழக்கத்தில் ஒன்றாக,
“வானம் வேண்டும் பூமிவேண்டும் வாழும் உரிமை வேண்டும் வேண்டும்”
என்று எழுதுகிறார் தோழர் இன்குலாப். இது பேரணித் தோழர்களின் முழக்கத்திற்காக எழுதப்பட்ட வரிகள்தான். இதை கவிதை இல்லையென யாரால் மறுக்க முடியும்?
முழக்கத்தை கவிதையாக்கலாம் என்று நிறுவியவர் தோழர் இன்குலாப்.
ஒரு போராட்ட வரலாற்றினை ஒரு நாவலாகத் தரமுடியும் என்று “நாலு தெருக் கத” மூலம் நிறுவியிருக்கிறார் தளபதிராஜ்.
போராட்டத்தை கதைப்படுத்துவதற்காக இவர் உருவாக்கிய கதையையும் இவர் சல்லிசாக விட்டுவிடவில்லை.
இந்தக் கதையில் இரண்டு பெண்பார்க்கும் படலங்கள், இரண்டு இணையேற்புகள், இரண்டு பிள்ளைப்பேறுகள், ஒரு கார் வாங்குதல், ஒரு மரணம், ஒரு படத்திறப்பு என்று நிகழ்வுகள் உள்ளன. அ
அந்த நிகழ்வுகளுக்கான தாயாரிப்புகளையும், நிகழ்வுகளையும் அவற்றின் விளைவுகளையும் எழுதும்போது எனக்கு நான் இன்றைக்கும் வியந்துபார்க்கும் எனது பதினாறு வயதில் வாசித்த வாசந்தி அம்மாவின் எழுத்து வசீகரத்தைக் காணமுடிகிறது.
ஒரு போராட்டத்தை வால்யூம் வால்யூமாக வாசித்து, குறிப்பெடுத்து, திரும்பத் திரும்ப அதை வாசித்தாலும் கொஞ்சம் மறந்து போவதை அனுபவித்திருக்கிறோம்.
கதைவழி வரும்பொழுது அந்த மறத்தலின் அளவு வெகுவாகக் குறையும்.
அதற்கு கேட்கிற மாதிரி கதை சொல்ல வேண்டும். இதில் பெருமளவு வெற்றி பெற்றிருக்கிறார்.
அதுவும் முதலில் திறக்கப்படாத கிழக்குத் தெரு குளத்தில் இனியவன் கால் நனைக்கும் போது நம்மிடம் சிலிர்ப்பைக் கொண்டுவருவதன் மூலம் இரண்டு பகுதிகளையும் நேர்த்தியாக இணைக்கிறார்.
வைக்கத்திற்கு வருமாறு தன்னை ஜார்ஜ் ஜோசப்பும் கேசவமேனனும் கையொப்பமிட்டு கடிதமனுப்பியதாக பெரியார் கூறியதாக ஆசிரியர் வீரமணி “வைக்கம் போராட்ட வரலாறு” நூலில் வைத்திருப்பதாக நியாபகம்.
இந்த நூலில் வேறுமாதிரி இருக்கிறது. சரிபார்க்க வேண்டும்.
இப்படியான நூல்கள் வரவேண்டும்.
வைக்கம் போராட்டத்தை காமிக்சாக கொண்டுவர இருப்பவர் யாராக இருப்பினும் அவருக்கு இப்போதே என் முத்தம்
தீக்கதிர், 20.01.2025
வைக்கம் 100
நீங்கள் வந்துதான் இதற்கு உயிர்கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் மன்னிப்புக் கேட்டுக் கொள்வதைத்தவிர வேறு வழியில்லை. அப்படி மன்னிப்புக் கேட்பதால் எங்களுக்கு ஒன்றும் நட்டமில்லை. பெரிய காரியம் கெட்டுப்போகுமே என்றுதான் கவலைப்படுகிறோம்” என்று பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப்பும் கேசவமேனனும் அனுப்பிய கடிதம் பெரியார் கைகளுக்கு 12.04.1924 அன்று வந்தபோது அவர் பண்ணைபுரத்தில் பேசிக்கொண்டிருந்தார்.
அப்போது அவர் வயிற்று வலியால் சிரமப்பட்டுக் கொண்டிருந்ததாக 12.12.2024 நாளிட்ட ”விடுதலை” தலையங்கம் சொல்கிறது. அனைத்து நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு ஈரோடு செல்கிறார். தனது வயிற்றுவலிக்கான சிகிச்சைக்காக சென்னை செல்வதாக நாகம்மையாரிடம் பொய் சொல்லிவிட்டு புறப்பட்டவர் அடுத்தநாளே அதாவது 13.04.1924 அன்று வைக்கம் வந்து சேர்கிறார்.பன்னிரெண்டாம் தேதி செய்தி வருகிறது உடனே புறப்பட்டு 13 ஆம் தேதி வைக்கம் வருகிறார் என்று மேலோட்டமாகப் பார்த்தால் இது ஒரு சாதாரண செய்தி. அப்போது அவர் காங்கிரஸ் கட்சியின் மாநிலத் தலைவர். பண்ணைபுரத்தில் நிகழ்ச்சி ஒன்றில் இருக்கிறார். நிகழ்ச்சிகளை ஒத்திவைக்க வேண்டும், அல்லது மாற்று ஏற்பாடு செய்ய வேண்டும் தன்னிடம் இருக்கும் கட்சியின் மாநிலப் பொறுப்பை தான் வரும் வரைக்கும் பார்த்துக் கொள்ளுமாறு பொறுப்பான இன்னொருவரிடம் மாற்றிக்கொடுக்க வேண்டும் பண்ணைபுரத்தில் இருந்து ஈரோட்டிற்கு சென்று வீட்டில் சொல்லிவிட்டு தனக்கான துணிகளை, மருந்துகளை மற்ற பொருட்களை எடுத்துசெல்ல வேண்டும் ஈரோட்டில் இருந்து வைக்கம் செல்ல வேண்டும்இத்தனை காரியங்களும் 24 மணிநேரத்தில் நடந்தேறிவிட்டன. தீராத வயிற்று வலியோடு இருந்த ஒரு மனிதர் இவ்வளவு விரைவாக இத்தனை காரியங்களையும் செய்துமுடிக்கிறார் என்றால் அந்தக் காரியத்தின்மீது அந்த மனிதருக்கு எப்படியொரு அக்கறை இருந்திருக்கும் என்பதை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது.இவ்வளவு விரைவாக, தான் வகித்துக்கொண்டிருந்த மாநிலத் தலைவர் பொறுப்பைக்கூட தற்காலிகமாக இன்னொருவரிடம் ஒப்படைத்துவிட்டு செல்லவேண்டிய அளவிற்கு வைக்கத்தில் இருந்த பிரச்சினைதான் என்ன?அன்றைய தேதியில் கேரளாவில் சாதியக் கொடுமைகள் உச்சத்தில் இருந்தன. நம் மண்ணில்கூட உயர்ந்த சாதிக்காரனாக தன்னை நினைத்துக் கொண்டிருந்தவன் தன்னைவிட தாழ்ந்த சாதிக்காரன் என்று தான் கருதுகிற மனிதனைத் தொடமாட்டான். இது தீண்டாமை. ஆனால் கேரளாவில் கீழானதாகக் கருதப்படுபவன் மேலானவனாகக் கருதப்படுபவன் பார்வையில் படுவதே குற்றம்.தீண்டுதல் ஒரு பாவம் என்று நம் மண்டையில் ஏற்றி வைத்திருந்தார்கள். அவர்களைத் தீண்டுவது ஒரு பாவச்செயல் என்று பயந்து அவர்களை நாம் தீண்டுவதை மட்டுமல்ல தவறுதலாக அவர்களது நிழலும் நம்மைத் தீண்டிவிடாமல் பார்த்துக் கொண்டோம். அவர்களைத் தீண்டுதல் பாவம் அல்லது குற்றம் என்று நமக்கு அவர்கள் கற்பித்ததற்கு எதிர்வினைதான் தீண்டாமை (Untouchability) ஒரு குற்றம் என்ற இன்றைய சட்டம்.தீண்டாமையே ஒரு குற்றம் என்றால் அவர்கள் பார்வையில் படுவதே குற்றம் என்று கேரளத்தில் அன்றைக்கு இருந்த நடைமுறையை என்னவென்று சொல்வது.1924 வரைக்கும் வைக்கத்தில் உள்ள சில தெருக்களில் ஆதிக்க சாதியினரால் தாழ்த்தப்பட்டவர்கள் என்று சொல்லப்பட்டவர்களான ஈழவர்கள், தீயர்கள், புலையர்கள் நடப்பது தடை செய்யப்பட்டிருந்தது. இருபது அடி சாலையைக் கடந்து போனால் இவர்கள் பொருட்கள் வாங்க வேண்டிய கடைகள் இருக்கும். ஆனால் இவர்கள் அந்த சாலையைக் கடக்க முடியாது. இருபது அடி தூரத்தில் இருக்கும் கடைகளுக்குப் போக இவர்கள் இரண்டு கிலோமீட்டர் தூரம் சுற்றிக்கொண்டு போக வேண்டும். கிட்டத்தட்ட கேரளம் முழுக்க இதுதான் நிலை.இந்த நிலையில் மார்ச் 1925 இல் மன்னருடைய பிறந்த நாள் வருகிறது. எனவே அரண்மனையில் ஒரு பிரமாண்டமான விழா ஏற்பாடாகிறது. அரண்மனைதான் நீதிமன்றமும் என்பதால் ஒரு வழக்கிற்காக அரண்மனைக்கு சென்றுகொண்டிருந்த மாதவன் என்ற ஈழவ வழக்கறிஞரை அரண்மனை தீட்டுப்பட்டுவிடும் என்று தடுத்து நிறுத்துகிறார்கள். டி.கே மாதவன், கே.பி கேசவ மேனன், கிருஷ்ணசாமி அய்யர், ஏ.கே.பிள்ளை, பத்மநாப்பிள்ளை, கேளப்பன் போன்றோரால் 30.03.1924 அன்று போராட்டம் தொடங்குகிறது. தினம் ஓரிரு தலைவர்களாக கைது செய்யப்படுகிறார்கள். இப்படியாக 19 தலைவர்கள் கைது செய்யப்பட்டு போராட்டத்தைக் கொண்டு செல்வதற்கு ஆட்கள் இல்லை என்ற நிலை வந்துபோதுதான் பெரியாருக்கு கடிதம் வருகிறது.கட்சியின் தலைமை பொறுப்பை தான் திரும்ப வரும் வரைக்கும் பார்த்துக் கொள்ளுமாறு ராஜாஜிக்கு எழுதி வைத்துவிட்டு கிளம்புகிறார் பெரியார்.காந்தி போராட்டத்தின் வழியாக இதற்கு தீர்வு காண முடியாது என்றும் மனமாற்றத்திற்கான வேலையை முன்னெடுக்க வேண்டும் என்கிறார். ராஜாஜியோ அடுத்த நாட்டில் உனக்கென்ன வேலை உடனே நாடு திரும்பு என்று பெரியாருக்கு கடிதம் எழுதுகிறார். இவை எதையும் சட்டை செய்யாதவராக பெரியார் 13..4.1924 அன்று வைக்கம் வந்துவிட்டார்.மன்னர் டில்லி போகும்போதெல்லாம் வழியில் பெரியார் வீட்டில் தங்கி செல்லும் வழக்கம் கொண்டவர். எனவே வைக்கத்தில் இறங்கியதும் மன்னரால் பெரியாருக்கு மரியாதையன வரவேற்பு அளிக்கப்பட்டு விருந்தினர் மாளிகை ஒன்றில் அவர் தங்க வைக்கப்படுகிறார். மன்னரது விருந்தினர் மாளிகையில் இருந்துகொண்டே ஆர்ப்பாட்டதிற்கு ஊர் ஊராக சென்று சென்று மக்களை சந்தித்து போராட்டத்திற்கு ஆதரவு திரட்டுகிறார் பெரியார். போராட்டத்திற்கு ஆதரவு பெருகுகிறது. வேறு வழியின்றி மன்னர் பெரியாருக்கு ஒருமாதம் வெருங்காவல் சிறைத் தண்டனை விதிக்கிறார். வெளியே வந்ததும் மீண்டும் போராட்டத்தை ஆரம்பிக்கிறார். மீண்டும் ஆறுமாத காலத்திற்கு கடுங்காவல் தண்டனை விதித்து சிறையில் அடைக்கிறார் மன்னர். இந்தமுறை கால்கள் கட்டப்பட்ட நிலையில், கைதிகளுக்கான உடையில் கழுத்தில் கைதியின் பெயர் குறிக்கப்பட்ட அட்டையோடு கொலைக் குற்றவாளிகளோடு ஒருவராக சிறையில் பெரியாரை வேலை வாங்கியதாக 11.12.2024 விடுதலை தலையங்கம் கூறுகிறது.பெரியார் சிறைக்கு சென்றதும் அவரது இணையரும் சகோதரியும் போராட்டத்தைத் தொடர வைக்கம் வந்துவிடுகிறார்கள்.பெரியார் சாகட்டும் என்று வேள்வி ஒன்றினை மன்னர் எடுக்கிறார். ஆனால் வெகு விரைவில் மன்னரே இறந்து போகிறார். மன்னர் இறந்ததும் ராணியார் இந்தப் பிரச்சினையை முடித்துவைக்கும் முகத்தான் பெரியாரை விடுதலை செய்கிறார். போரடுபவர்களோடு உரையாட விரும்புகிறார் ராணி. எல்லோரும் பெரியாரோடு ராணியார் உரையாடலை ஆரம்பிப்பார் என்று எதிர்பார்த்திருந்த நிலையில் ராஜாஜி ஒரு சூழ்ச்சி செய்கிறார். இந்தப் பெருமை பெரியாருக்கு போய்விடக் கூடாது என்று நினைத்த ராஜாஜி, இந்தப் போராட்டமே கூடாது என்று இந்தப் போராட்டத்தை நிறுத்திவிட முயன்ற காந்தியை மற்ற மதத்துக்காரர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கக் கூடாது என்று உத்தரவிட்டதன் மூலம் சீக்கியர்களிடமிருந்து வந்துகொண்டிருந்த பண உதவி நின்றுபோகக் காரணமாக இருந்த காந்தியைராணியோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அழைத்து வருகிறார். தெருக்களை அனைவருக்கும் திறந்துவிடுவதாகக் கூறுகிறார் ராணி. ஆனால் இதை வைத்துக்கொண்டு கோவிலை அனைவருக்கும் திறந்துவிடக் கோரக்கூடாது என்கிறார்.காந்தி பெரியாரிடம் வருகிறார். இப்போதைக்கு வேண்டுமானால் அந்தக் கோரிக்கையை தான் வைக்கவில்லை என்றும் ஆனால் எதிர்காலத்தில் அப்படி ஒன்று நடக்காது என்று தான் உறுதி கூற முடியாது என்றும் பெரியார் மிகக் கறாராகக் கூறிவிட்டார்.ஒரு வழியாக வைக்கம் போராட்டம் நிறைவிற்கு வருகிறது. இதற்காக பெரியார் சிறையில் 74 நாட்கள் இருந்திருக்கிறார்.இப்போது இதை வைத்து இரண்டுவிதமாக அரசியல் நடந்துகொண்டே இருக்கிறது. வைக்கம் போராட்டத்திற்கு பெரியார் மட்டுமே காரணமல்ல என்பது ஒன்று. காந்தி இந்தப் போராட்டத்தை முற்றாக முடக்கிவிட முயன்றார் என்பது இரண்டு.பெரியார் தலைமை ஏற்றபிறகுதான் போராட்டம் உச்சத்திற்கு வந்தது. அவர்தான் முழுமுதற் காரணம் என்பது வரலாறு.காந்தி எப்போதும் தனக்கு எது சரி என்று படுகிறதோ அதை சொல்வது வழக்கம். சில நேரங்களில் அவருக்கு சரி எனப் படுவது தவறாக இருக்கும். இதுவும் அவைகளில் ஒன்று.காந்திக்கும் பெரியாருக்கும் உள்ள மிகப் பெரிய வேறுபாடே இதுதான். தனக்கு சரியெனப் படுவதை அனைவரும் சரியென ஏற்க வேண்டும் என்ற பிடிவாதம் கொண்டவர் காந்தி. “எனக்கு சரின்னு படுது, சரியான்னு யோசிச்சு பாரு” என்பார் பெரியார்.புதிய ஆசிரியன்ஜனவரி 2025
போராடிக்கொண்டே இருப்போம்

ஒரு சாதாரண வழக்கு
தங்களுக்கு வரவேண்டிய கல்வி உதவித் தொகையை பள்ளி நிர்வாகம் உரிய நேரத்தில் வாங்கித் தர மறுப்பதாகவும் பள்ளியில் கழிவறை வசதிகள் போதுமான அளவு இல்லை என்றும் பால்ராஜ் மற்றும் விக்னேஷ் என்ற இரண்டு மேல்நிலைப்பள்ளிக் குழந்தைகள் அன்றைய மார்க்சிஸ்ட் கட்சியின் பெரம்பலூர் வட்ட செயலாளர் தோழர் வடுகநாதனையும் அன்றைய இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் தோழர் ரமேஷையும் அணுகுகிறார்கள்இவர்கள் பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியரை சந்திக்கிறார்கள்உடனடியாக பள்ளியின் தலைமை ஆசிரியர் அந்த இரண்டு பிள்ளைகளுக்கும் மாற்றுச் சான்றிதழ் கொடுத்து விடுகிறார்தொடர் ஆர்ப்பாட்டம் நடக்கிறதுஆர்ப்பாட்டம் என்றால் ஏதோ பள்ளியின் வழக்கமான நடவடிக்கைகளுக்கு எந்தவித குந்தகமும் இல்லாமல் கணியமான ஆர்ப்பாட்டம்தலைமை ஆசிரியர் காவல் நிலையத்திற்கு புகாரளிக்கிறார்பால்ராஜ் விக்னேஷ் ஆகிய இரண்டு குழந்தைகள்விக்னேஷின் அம்மா பூங்கொடிதோழர்கள் பூங்கொடி ஆகியோர்மீது வழக்கு போடுகிறார்கள்அந்த ஆண்டே பிள்ளைகள் இருவரும் வயதின்பொருட்டு விடுவிக்கப்படுகிறார்கள்பூங்கொடி இறந்துபோகிறார்மாணாவர் சங்கத்தில் இருந்த Ramesh Perumaldyfi கட்சியின் மாவட்டச் செயலாளராகிவிட்டார்அப்போது கட்சியின் எங்கள் மாவட்டத்திற்கான பொறுப்பாளராக இருந்த தோழர் Shanmugam Perumal இப்போது மாநிலப் பொதுச் செயலாளராகிவிட்டார்மாணவர் அமைப்பின் எங்கள் மாவட்ட பொறுப்பாளராக இருந்த தோழர் G Selva இன்று ஒரு மாவட்டத்தின் கட்சி செயலாளர்இன்று முகாந்திரம் இல்லை என்று வழக்கில் இருந்து தோழர்கள் விடுவிக்கப்படீருக்கிறார்கள்வாழ்த்துகள்21 வருடங்களாகப் போராடிய வழக்கறிஞர்கள் தம்பி Stalin Stalin மற்றும் அருண் ஆகியோருக்கு புத்தகமும் லட்டும் தந்தோம்லெனின் ... என்று கைகளைப் பிடிக்கிறேன்இதுக்கு என்னோட காண்ட்ரிப்யூஷன் என்னண்ணே என்கிறார் லெனின்இன்னும் அவரை இறுகப் பற்றிக்கொள்கிறேன்இந்த ஈரம் இருக்கும்வரை ஜனங்களுக்காக போராடிக்கொண்டே இருப்போம்30.01.2025
கூட்டணில இருந்துகொண்டே ,,,
04.02.2025s
LikeCommentShare
திருப்பரங்குன்றமும் சேகர்பாபுவும்
திருப்பரங்குன்றத்தில் 05.02.2025 புதனன்று பாஜகவும் அதன் தோழமைகளும் நிகழ்த்திய மதவெறி அழிச்சாட்டியத்தைஇந்த மண்ணின் அமைதியை, மக்களின் ஒற்றுமையை ஊறுசெய்யும் மதவெறிக் கும்பலின் அற்பத்தனமான செயல் இது என்று திருப்பரங்குன்றத்து மக்கள் சொல்கிறார்கள்"திமுக ஆட்சிக்கு அபாயத்தை ஏற்படுத்துவதற்கான பாஜகவின் திட்டம் என்கிறார் அமைச்சர் சேகர்பாபுஇந்த செயல் அளவிற்கு மோசமானது அமைச்சரின் கூற்றுமுதல்வர் வெளிப்படையாகப் பேசவேண்டும்
06.02.2025
சேலம் துப்பாக்கி சூடு
07.02.1950
சேலம் கிளைச் சிறை
”டேய்,
நம்பர் கட்டைய மாட்டு, குல்லாவப் போடு”
என்று காட்டுக் குரலில் கத்துகின்றனர் சிறைத்துறை அதிகாரிகள்
“நாங்கள் கிரிமினல்கள் அல்ல. அரசியல் கைதிகள் நாங்கள். உன் ஆணவ மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம்”
எதிர்த்து கர்ஜிக்கின்றனர் அந்தக் கம்யூனிஸ்ட்கள்
மலபார் விவசாயிகள் போராட்டத்தில் கலந்து கொண்டு நேரு அரசாங்கத்தால் சிறைபிடிக்கப்பட்ட,
ஆந்திரப் பகுதியில் பஞ்சாலைப் போராட்டத்தில் பங்கேற்று நேரு அரசாங்கத்தால் சிறைபிடிக்கப்பட்ட,
மற்றும் தமிழ்ப் பகுதியில் போராட்டத்தில் கலந்துகொண்டு நேரு அரசாங்கத்தால் கைதுசெய்யப்பட்ட
ஏறத்தாழ 350 கம்யூனிஸ்டுகள்
தண்ணீர் இறைப்பதற்கு மாடுகளுக்குப் பதில் கைதிகளை கட்டி இறைத்ததை எதிர்த்து
ரோடு ரோலர்களை இழுக்க வைத்ததை எதிர்த்து
வழங்கப்பட்ட மோசமான உணவை எதிர்த்து பட்டினிக் கிளர்ச்சியைத் தொடங்குகிறார்கள்
கிளர்ச்சித் தொடரத் தொடர அரசின் அடக்குமுறை அதிகரிக்கும் என்பதையும் சரியாக கணிக்கிறார்கள்
தாக்குதலுக்கு எதிர்வினையாற்ற தயாராகிறார்கள்
செங்கற்கள் உள்ளிட்டவற்றை தாக்குதலுக்காக சேமித்து வைக்கின்றனர்
இளைஞர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு முதியவர்கள் பலியாக முடிவெடுக்கிறார்கள்
11.02.1950
இன்றும் மிரட்டுகிறார்கள்
மறுக்கிறார்கள்
250 காவலர்கள் தடிகொண்டு அடிக்கிறார்கள்
துப்பாக்கிச் சூடு நடக்கிறது
திருச்செங்கோட்டைச் சேர்ந்த காவேரி முதலியார்
கடலூர் ஷேக் தாவூத்
சேலம் ஆறுமுகம் மற்றும்
கேரளாவைச் சேர்ந்த 19 தோழர்கள் உள்ளிட்டு 22 பேர் பலியாகிறார்கள்
எங்கள் தோழர்களின் 74 நினைவு நாளில்
கடந்த கால வரலாறுகளை எங்கள் இளந் தலைமுறையினருக்கு வருங்காலத்திலாவது முறையாக எடுத்துச் சொல்ல முயற்சிப்போம்
என்று உறுதி எடுக்கிறோம்
March 2, 2025
சீமான் வழக்கில் உச்சநீதிமன்றம்
சீமானது வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று என்ன வேண்டுமானாலும் சொல்லலாம்
சொல்லட்டும்
ஆனால்,
இன்று வரும் தீர்ப்பைப் பொறுத்து பாதிக்கப்படும் பெண்களின் நிலை தீர்மானிக்கப்படும்
பார்ப்போம்
03.03.2025
கூட்டணில இருந்துகொண்டே....
ஒரு புத்தக வெளியீட்டு விழா
அருகில் என் நீண்டகால நண்பர்”ஏன் எட்வின் இப்படி செய்றீங்க?” என்று தன் உரையாடலை ஆரம்பிக்கிறார்என்ன செஞ்சோம்?அவ்வளவு வம்படியா சாம்சங் விஷயத்துல போராடனுமா?ஆமாம், போராடத்தான் வேண்டும்கூட்டணில இருக்கீங்க எட்வின்அதனால?இல்ல கூட்டணில இருந்துகொண்டே....ஊழியர்களுக்கு விரோதமா அரசு செயல்படுது. எடுத்துச் சொல்கிறோம். கேட்கவில்லை. சத்தமா சொல்கிறோம். கேட்கவில்லை . நீண்டு போராடுகிறோம். பலனில்லை. நீதிமன்றம் போகிறோம். சரி செய்கிறோம்இதில் ஒன்றும் தவறில்லை. கூட்டணியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்களுக்காக அரசோடு போராடுவது எங்கள் வேலை. அதை செய்துகொண்டிருக்கிறோம்இப்படிப்பட்ட கட்சியோடு வெட்கமேயில்லாமல் ஏன் கூட்டணியில் ?சரியா சொல்லு மாப்ள.., சாம்சங்கிற்காக நாங்க போராடியது உனக்குப் பிரச்சினையா? இல்லை கூட்டணியில் இருப்பது பிரச்சினையா?மௌனமாக மாறிவிட்டார்தொடர்ந்தேன்மாப்ள, ஜனங்களுக்காக மாநில அரசை எதிர்த்தும் போராடறோம்.அதுதான் அப்புறம் அந்த கட்சியோடு ஏன் கூட்டணிங்கறேன்?கொஞ்சம் சத்தமாகவே கேட்கிறார்அதுவும் மக்களுக்காகத்தான்குழப்பறடாமக்களுக்காக திமுக அரசை எதிர்க்கிறோம். அதே மக்களுக்கு எதிரான ஒன்றிய அரசின் ”ஒரே நாடு ஒரே தேர்தல்” பிரச்சினையில் ஒன்றிய அரசை எதிர்க்கிறோம்.திமுகவும் இணைகிறது. பலமாக எதிர்க்கிறோம்உங்கூட இனி பேசிப் புண்ணியமில்லை என்கிறார்பேசுவார்பேசுவோம்65/66, காக்கைச்சிறகினிலே, பிப்ரவரி 2025
இந்த ஆண்டில் இதுவரை நான்கு மரணங்களைப் பார்த்தாயிற்று. அவற்றில் பால்ய நண்பன் பொன்மலை ராஜாவினுடைய அம்மாவின் மரணமும் என்னுடைய அம்மாயி மரணமும் இயல்பான மரணங்கள்.அதுபோக அம்மாவின் வயது 86, அம்மாயி வயது 103 என்பதால் இந்த இரண்டு இழப்புகளையும் கொஞ்சம் இயல்பாக எடுத்துக்கொள்ள முடிகிறது.மற்ற இரண்டில் ஒன்று தற்கொலை, மற்றொன்று கொலை.இருவரும் இப்போதுதான் முப்பதைக் கடந்திருக்கும் இளைய பிள்ளைகள். இந்த இரண்டு மரணங்களையும் ஜீரணிப்பதும் எளிதாக கடந்து செல்வதும் இயலாததாக இருக்கிறது.எங்கள் கிழவிக்கான காரியத்திற்கான வேலைகளில் மூழ்கிக் கிடந்த நேரத்தில் தோழர் முத்தையாவிடம் இருந்து அழைப்பு.துர்கா அச்சக உரிமையாளர் நண்பர் சரவணன் அவர்களின் மைத்துனர் சதீஷ் கள்ளக்குறிச்சியில் தற்கொலை செய்துகொண்ட தகவலைத் தருகிறார்.சரவணனும் இறந்துபோன சதீஷின் சகோதரியும் கள்ளக்குறிச்சி வந்துகொண்டிருப்பதாகவும் கூறுகிறார்.கள்ளக்குறிச்சி எங்கு இருக்கிறது என்பதையே அவர்கள் நிலவரைபடம் பார்த்துதான் வந்துகொண்டிருக்கிறார்கள் என்றும் அனைத்து நடைமுறைகளையும் முடித்துக்கொடுத்து உடலை விரைவாக வாங்கிக் கொடுத்து அனுப்பிவைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறார்.உடனே கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் CPM செயலாளர் தோழர் ஜெய்சங்கரைத் தொடர்புகொண்டு விவரங்களை சொல்கிறேன். தான் வேறு ஒரு முக்கியமான வேலையில் இருப்பதாகவும் கள்ளக்குறிச்சி ஒன்றிய செயலாளர் தோழர் ஏழுமலையைத் தொடர்புகொள்ளுமாறும் அவர் சொல்கிறார்.நான் ஏழுமலையைத் தொடர்புகொள்வதற்குள் ஜெய்சங்கரே அவரைத் தொடர்புகொண்டு விவரத்தை சொல்லி இருக்கிறார்.”வரும் தோழர் சரவணனுக்கு கள்ளக்குறிச்சியில் யாரையும் தெரியாது தோழர்…” என்று முடிப்பதற்குள் “என்ன தோழர், இப்படி சொல்றீங்க. எத்தனைபேர் இருக்கோம் இங்க. தோழர் வரட்டும். நாங்க பார்த்துக்கறோம். நீங்க பாட்டி காரியத்தைப் பாருங்க.” என்று இடைமறித்த ஏழுமலை சரவணனுடைய அலைபேசி எண்ணை வாங்கிக் கொள்கிறார்.கள்ளக்குறிச்சி தோழர் சுதாவை அழைத்து விவரத்தை சொல்லி கூடவே இருக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.அரைமணி நேரம் கழித்து சரவணனோடு பேசுகிறேன். தோழர் ஏழுமலையும் சுதாவும் பேசியதாகவும் கொஞ்சம் நம்பிக்கை வந்திருப்பதாகவும் சொல்கிறார். ஒரு ஆளாகமட்டும் அவர்கள்கூட இருந்தால் போதும் மற்றதை தோழர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்று கூறுகிறேன்.சரவணனை காத்திருந்து சந்தித்த தோழர்கள் காவல் நிலையத்தில் புகார்கொடுப்பதில் இருந்து, மருத்துவமனை டீனைப் பார்ப்பதில் இருந்து, ஆம்புலன்சிற்கு ஏற்பாடு செய்வதுவரைக்கும் அனைத்தையும் செய்கிறார்கள்.“ஏம்பா… யாருப்பா இவங்க. ஏம்பா இப்படி யாருன்னே தெரியாத எனக்காக இவ்வளவு மெனக்கெடறாங்க. செத்தவனுக்காககூட அழல. இவங்களோட அக்கறை அழவைக்குதுப்பா…” என்று அலைபேசியில் தழும்புகிறார் சரவணன்.எமோஷனாகாதீங்க, கட்சித் தோழர்கள் அப்படித்தான் இருக்கனும் என்று சொல்கிறேன்.அடுத்த நாள் மார்ச்சுவாரிக்குப் போகிறேன். ஏழுமலை, சுதா, இன்னும் சில தோழர்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள்.ஆம்புலன்ஸ் தாயாராக நிற்கிறது. ஓடிவந்து கட்டிப்பிடித்துக் கொள்கிறார் சரவணன். அங்கு நின்றுகொண்டிருந்த இறந்துபோன பிள்ளையின் சகோதரியிடம் “இவர்தான் எட்வின்” என்று அறிமுகப்படுத்துகிறார்கள்.ஓடிவந்த அந்தக் குழந்தை “அப்பா” என்று கத்தியவாறு என் காலில் விழுந்து கதறுகிறாள். கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்பதால் தடுக்க யாராலும் இயலவில்லை. குனிந்து தூக்குகிறேன். “என்ன சாமி இது…” என்று நானும் விசும்புகிறேன்.நீங்க செஞ்ச உதவிக்காக காலுல விழலப்பா. நீங்க கம்யூனிஸ்ட்தான. நீங்க இவன மாதிரி சின்னப் பசங்ககிட்ட போய் இவனமாதிரி ஆன்லைன் கேம்ப்ளிங் ஆடாதிங்கன்னு சொல்லுங்கப்பா…” என்று கதறுகிறாள்.பார்க்கிறேன் , சரவணன், அவரது தம்பி, ஏழுமலை, சுதா என்று எல்லோருமே அழுதுகொண்டிருக்கிறார்கள்எல்லோருக்குமாகப் போராடுவது மட்டுமல்ல யாருக்காவும் அழுவதும்கூட கம்யூனிஸ்டுகளின் லட்சணம்தான்.அந்தக் குழந்தை எல்லோரிடமும் பேசச் சொன்னாள். அதை செய்ய வேண்டும்.செத்துக் கிடக்கும் அவளது தம்பி பெயர் சதீஷ். வயது 31. கள்ளக்குறிச்சி இந்தியன் வங்கியில் துணை மேலாளர். கைநிறையசம்பளம். வங்கி நண்பர்களிடம் விசாரித்ததில் அற்புதமான ஊழியர். வங்கியின் மிகச்சிறந்த ஊழியர்களில் அவரும் ஒருவர்.ஏதோ ஒருவகையில் இணையச் சூதாட்டத்தில் விழுந்திருக்கிறார். கடன் வருகிறது. தோழர் சரவணன் கடனில் இருந்து அவரை மீட்கிறார். மீண்டும் சூதில் சிக்குகிறார். மீண்டும் கடன்.இந்த இளவயதில் விவாகரத்தாகிறது. உளைச்சல்…, உளைச்சல் இறுதியாக தற்கொலையில் வந்து முடிந்திருக்கிறது. இணையச் சூது கொடூரமானது.“ப்ளீஸ்… சின்னப் பசங்ககிட்ட பேசுங்கப்பா. சின்னப் பசங்க சூதாட்டத்தால செத்துடக்கூடாதுப்பா.நீங்க கம்யூனிஸ்ட்தான பேசுங்கப்பா” என்ற அந்தக் குழந்தையின் குரல் என்னைப் பிசைந்துகொண்டே இருக்கிறது.பேசவேண்டும். உரத்துப் பேசவேண்டும். ஓய்வற்றுப் பேசவேண்டும்.அடுத்தது 17.01.2025 அன்று காலை கைகளத்தூரில் நடந்த கொலை. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலச் செயலாளார் தோழர் சாமுவேல்ராஜோடு போகிறோம்.முதல் நாளே எங்கள் மாவட்டச் செயலாளர் தோழர் ரமேசும் மாவட்டக்குழுத் தோழர் சக்திவேலும் அங்கு சென்றுவிட்டனர்.அகப்படுகிறவர்களிடமெல்லாம் விசாரிக்கிறோம். அந்தக் கொலைக்கான காரணம் என்னவென்று முழுவதுமாகத் தெரியவில்லை.செத்துப்போன மணிகண்டனும் அவனைக் கொலை செய்த தேவேந்திரனும் ஒரே முதலாளியிடம் வேலைபார்க்கும் ஓட்டுநர்கள். இருவருக்கும் தொழில் ரீதியாக அவ்வப்போது சண்டை வந்து மறையும் என்று சொல்கிறார்கள்.சம்பவம் நடந்த அன்று காலை ஒரு தேநீர்க் கடையில் நின்று தேநீர் குடித்துக் கொண்டிருக்கிறார்கள் தேவேந்திரனும் மணிகண்டனும்.அப்போது அந்தப் பக்கமாக வந்துகொண்டிருந்த பூமாலையை ”பூமாலண்ணே டீ சாப்பிடலாமா?” என்று கேட்டிருக்கிறான் மணிகண்டன். அப்போதுதான் தேநீர் குடித்ததாகக் கூறி கடந்து போகிறார் பூமாலை.அவர்கள் இருவரும் அவனும் வேலைபார்க்கும் இடத்தில்தான் பூமாலையும் வேலை பார்க்கிறார்.ஏற்கனவே அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளை மனதிற்குள் ஓடவிட்ட தேவேந்திரன்,“ஏண்டா எவ்வளவு தைரியம் இருந்தா குடியான மனுஷன நீ பேர்சொல்லிக் கூப்பிடுவ?” என்று சண்டைக்குப் போயிருக்கிறான். கூப்பிடத்தான பேரு என்று அவனும் மல்லுக்கு நிற்க கொஞ்சம் தள்ளுமுள்ளு நிகழ்ந்திருக்கிறது.அதன்பிறகு காவலர் ஸ்ரீதரோடு வண்டியில் வந்துகொண்டிருந்த மணிகண்டன் வழியில் அமர்ந்திருந்த தனது முதலாளியைப் பார்த்ததும் இறங்கியபோது தேவேந்திரன் கழுத்தை அறுத்துக் கொன்றதாக தகவல் வருகிறது.காலையில் டீக்கடையில் அவர்களுக்கிடையே நடந்த தள்ளுமுள்ளு உண்மை என்றே எல்லோரும் சொல்கிறார்கள்.மணிகண்டனை தேவேந்திரன் கொன்றதையும் அப்போது அந்தக் காவலர் உடன் இருந்ததையும் எல்லோரும் சொல்கிறார்கள்.அந்த இடத்தில் எப்படி அந்த காவலர் வந்தார் என்பதற்கான காரணம் தெளிவாக இல்லை.1) அன்று காலை சாதியின் பெயரால் இருவருக்கும் தள்ளுமுள்ளு நடந்திருக்கிறது2) வழக்கமாக கஞ்சா போதையிலேயே இருக்கும் தேவேந்திரன் அப்போதும் கஞ்சா போதையில்தான் இருந்திருக்கிறான்சாதியும் கஞ்சாவும் விரவிக் கிடக்கிறது என்பது உண்மை. இதை மறுத்து முட்டுக் கொடுக்காமல் இரண்டிற்கெதிராகவும் நடவடிக்கை எடுப்பதுதான் திராவிடத்தின் கூறு என்பதை மாநில அரசு இப்போதாவது உணர்ந்து கொள்ளவேண்டும்.
காக்கைபிப்ரவரி 2025
இரா. எட்வின் [R.Edwin]'s Blog
- இரா. எட்வின் [R.Edwin]'s profile
- 1 follower
![Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.](https://s.gr-assets.com/assets/links/rss-d17345b73ab0388f7a23933239a75efb.gif)