இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 23

August 13, 2024

பீஹார் மாதிரி தமிழ்நாட்டுக் கல்வியை ...

 

திரு ரவி அவர்களுக்கு,

வணக்கம்

தமிழ்நாடு ஏதோ கல்வியில் அதல பாதாளத்தில் இருப்பது போலவும்

ஏதோ இந்தியாவிலேயே நீங்கள்தான் நான்காவது அறிவாளி போலவும் பாவித்துக் கொண்டு

எங்களுக்கு ஞான உபதேசம் செய்வதாக உளறிக்கொண்டிருப்பதையே வைத்துக் கொண்டு இருக்கிறீர்கள்

விஷேஷம் என்னவெனில்,

உளறுகிறபோதுகூட தவறியும் ஒரு துண்டு உண்மையையும் உளறிவிடக் கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறீர்கள்

உண்மையை சொன்னால்

உண்மையோ ஞானமோ துளியும் இல்லாதவர் நீங்கள்

இப்போது ஒரு தகவல் கிடைத்திருக்கிறது

இந்தியாவில் உள்ள 100 சிறந்த கல்லூரிகளில் 37 தமிழ்நாட்டில் உள்ளதாக அந்த தகவல் கூறுகிறது

அந்தப் பட்டியலில் மன்னர் பிறந்த குஜராத் இல்லை, நீங்கள் பிறந்த பீஹார் இல்லை, யோகி பிறந்த உத்திரப் பிரதேசம் இல்லை

இந்த நிலையில் நீங்கள் தமிழ்நாடு குறித்து தொடர்ந்து இப்படி உளறிக்கொண்டே இருப்பதற்கும்

தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களின் நடைமுறைகளில் அசிங்கமாக தலையிடுவதற்கும்

கொண்டுவந்துவிட வேண்டும் என்பதுதான் உங்கள் செயல் திட்டமோ என்ற அச்சம் வருகிறது

உங்கள் ஞானத்தைப் பயன்படுத்தி பீஹாரை வெளிச்சப் படுத்த முயற்சி செய்யக் கிளம்புங்கள்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 13, 2024 19:35

August 11, 2024

ராஜாஜியை வீட்டிற்கு அனுப்பியதுபோல்…

 

 

 

மனம்போன போக்கில், தனக்கு சரி என்று தோன்றியவற்றை எல்லாம் தந்தை பெரியார்செய்துகொண்டிருந்த காலம். ”மைனர் கணக்காக” தான் திரிந்து கொண்டிருந்த காலம் என்று அவரே அந்தக் காலம்குறித்து பலமுறை வெளிப்படையாகக் கூறி இருக்கிறார்.

 

மைனர் கணக்காகஎன்றால் சமூக அக்கறையே இல்லாதவராக பொறுப்பற்று இருந்தார்என்பதெல்லாம் இல்லை. தனக்கு சரி என்று பட்டதை செய்துகொண்டுதான் இருந்தார். ஆனால், ஒரு ஒழுங்கான வரையறையற்று எதையும் செய்தபடி இருந்தார்.

 

ஒரு தெளிவான இலக்கற்று தன்போக்கில் நகர்ந்துகொண்டு இருந்தவரை ஒரு வரையறைக்குள்கொண்டு வந்தவர் ராஜாஜி.

 

சரியாக சொல்வதெனில்ஒரு முழுநேர அரசியல் ஊழியனாக பெரியாரை மாற்றியவர் ராஜாஜி.  பிறகு,அரசியல் வேண்டாம் என்றும் சமூக விடுதலைக்காக மட்டுமே உழைப்பது என்றும் தனது போக்கை அவர் மாற்றிக் கொள்கிறார். சமூக விடுதலைக்கான உழைப்பும் அரசியலின் ஒருகூறுதான். இதை இன்றளவும் பலர் உணராமல் இருப்பதற்காக நாம் துயரப்படப் போவதில்லை.

 

இன்னும் மிகச் சரியாக சொல்வதெனில் பெரியாரின்  உசரத்தை முதன் முதலில் மிகத் துள்ளியமாக கணித்தவர்  ராஜாஜி.

 

பெரியாரின்செயல்பாட்டின் மீதும் தலைமைப் பண்பின்மீதும் வேறு எவரைவிடவும் அதிக நம்பிக்கை கொண்டிருந்தவர்ராஜாஜி.

 

அதனால்தான் அவரை ஈரோடு ஜில்லா காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக்குகிறார்.

 
சிறிது காலத்திற்குள்ளாகவே அவரை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக்கியும்அழகு பார்க்கிறார்.

 

தன்னால் உருவானவர்தானே என்று பெரியாரை ஒருபோதும் அவர் அலட்சியமாகப்பார்த்ததில்லை.

 

அன்றையத் தேதியில் ஒரு சாதாரன, சூத்திர மனிதராக இருந்த பெரியாரை “தலைவர் நாயக்கர்” என்று அழைத்து மகிழ்ந்தவர் ராஜாஜி.

 

அதுமட்டும் இல்லை ,வழக்கமாக சூத்திரர்களை தங்களது அடிமைகளாகவே பாவிக்கும்பார்ப்பனர்களையும் சூத்திரரான பெரியாரை “தலைவரே” என்று அழைக்க வைத்தவர்.

 

இவை அனைத்தையும் தந்தை பெரியார் அவர்களே 26.12.1972 நாளிட்ட ”விடுதலையில்” எழுதுகிறார்.

 

தன் தகுதிக்கு மேலாகத் தம்மைப் பற்றி கவர்னரிடத்திலும் பார்ப்பனர்களிடத்திலும்ராஜாஜி பிரச்சாரம் செய்து வந்ததாகவும் அதே கட்டுரையில் பெரியார் கூறுகிறார்.

 

ஆக,

 
பெரியார் குறித்த ராஜாஜியின் மதிப்பீடும் அதை மற்றவர்களிடத்தில் கொண்டுபோய்சேர்த்த விதமும் பெரியாரை நெகிழச் செய்திருக்கிறது என்பதில் துளியும் அய்யம் இல்லை.

 

தன் வாழ்நாள்முழுவதும் ராஜாஜிக்கு விசுவாசியாக இருந்துவிட வேண்டும் என்று தான்எண்ணியிருந்ததாகக் கூட பெரியார் ஓரிடத்தில் கூறுகிறார்.

 

ராஜாஜி முதலமைச்சர் ஆகிறார் என்ற செய்தி வந்ததும் தமிழ்நாட்டில் அவர்மீதுஒருவித வெறுப்பு ஏற்படுகிறது. கொல்லைப்புற வழியாக ஆட்சிக்கு வருகிறார் ராஜாஜி என்றெல்லாம்அவர்மீது ஒருவிதமான அருவெருப்பான வசைகள்கூட வீசப்பட்டன. அது உண்மையும்கூட.

 

ஆனால் இந்தச் செய்தி தன்னை மகிழ்ச்சியில் ஆழ்த்தியதாக பெரியார் கூறுகிறார்.

 

“தோழர் ஆச்சாரியார் அவர்கள் இந்த ராஜியத்தின் முதலமைச்சர் ஆகிறார் என்ற செய்திவந்தவுடன் உள்ளபடியே மகிழ்ச்சியடைந்தேன். காரணம் என்னவென்றால் உள்ளபடியே ஆட்சியில் நாணயம் இருக்கும்,” என்று 11.08.1953 நாளிட்ட விடுதலையில்பெரியார் எழுதுகிறார்.

 

தன் வாழ்நாள் முழுதும் ஆச்சாரியாருக்கு விசுவாசமாக இருக்க வேண்டும் என்றுஆசைப்பட்ட தந்தை பெரியார்,

 

அவர் முதலமைச்சர் ஆனபோது விமர்சனம் செய்தபோது அது அறத்தின்பாற்பட்ட செயல் அல்லஎன்று பெரும்பான்மையினர் கடும் விமர்சனங்களை வைத்தபோது அவர் பதவி ஏற்பது கண்டுமகிழ்ச்சியடைகிறார் பெரியார்.

 

கொஞ்ச காலத்திற்குள்ளாகவே ஆச்சாரியாரை பெரியவர் என்று அழைப்பதற்கு அவர்வயதானவர் என்பதைத் தவிர வேறெந்தக் காரணமும் தெரியவில்லை என்று கூறுகிறார்.

 

”ஆச்சாரியார் அவர்களை வீட்டிற்கு அனுப்ப வேண்டும். அது நம்மால் கூடுமோ. இல்லை காமராஜரால் கூடுமோ எனக்குத் தெரியவில்லை. ஆனால் இதைத்தவிர வேறுவழி எனக்குத் தெரியவில்லை”

 

என்று குத்தூசி குருசாமி அவர்கள் 28.05.2023 நாளிட்ட “விடுதலை”யில் எழுதுவதை தந்தை பெரியார் அனுமதிக்கிறார்.

 

ராஜாஜி பதவி ஏற்பது அநீதியானது என்று காங்கிரஸ்காரர்களே முகம் சுளித்தபோது அதை ஏன் மகிழ்ந்து கொண்டாடுகிறார் பெரியார்?

 

அப்படி மகிழ்ந்து கொண்டாடிய அவர் சொற்ப காலத்திற்குள்ளாகவே வயதைத் தவிர பெரியவர் என்று மதிப்பதற்கு ராஜாஜியிடம் ஏதும் இல்லை என்று ஏன் விமர்சிக்கிறார்? எந்த அளவிற்கு அவரது விமர்சனம் கடுமை கொள்கிறது என்றால்,

 

19.08.1953 விடுதலைத் தலையங்கத்தில்,

 

“கலெக்டராக இருந்தவன் கர்ணம் வேலையை ஒப்புக்கொண்ட்து போல கவர்னர் ஜெனரலாக இருந்து 1,000 ரூபாய்க்கு பென்ஷனுடன் ரிட்டையரான இவர் கொல்லைப்புறமாக ஏறிக் குதித்து முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்திருப்பதற்கு கொஞ்சமும் வெட்கப்படவில்லை” என்று எழுதுகிறார்.

 

எல்லோரும் ”கொல்லைப்புற வழியாக” பதவிக்கு வருகிறார் என்று முகம் சுளித்ததை ஏற்காமல் அவரது பதவியேற்பைக் கொண்டாடியவர்  இவ்வளவு கடுமையாக சாடும் அளவிற்கு அவ்வளவு மோசமாக ராஜாஜி என்ன செய்தார்.

 

இதுவரை நூற்றுக்கணக்கான இடங்களில் எழுதியும் பேசியும் வந்த்துதான். ஆனால் சொல்லிக் கொண்டே இருக்க வேண்டிய செய்தி இது என்பதாலும் ஏன் ராஜாஜியை இவ்வளவு கடுமையாக பெரியார் எதிர்க்க ஆரம்பிக்கிறார் என்பதற்கான ஆரம்பப் புள்ளி இது என்பதாலும் இதை இங்கும் வைக்க வேண்டியது அவசியமாகிறது.

 

29.06.1952 அன்று திருவாண்மியூரில் சலவைத் தொழிலாளிகள் மாநாடு நடைபெறுகிறது. அதில் ராஜாஜி கலந்து கொள்கிறார். அவரை யாரும் அழைக்கவில்லை என்றும், தனது உரையைக்கூட “அழையா விருந்தாளியாக அந்த மாநாட்டில் தான் கலந்து கொள்வதாகவும்” என்றே தொடங்கியதாகவும் தோழர் சாரோன் கூறுகிறார்.

 

அப்படி அழையா விருந்தாளியாக கலந்து கொண்டவர், “அவனவனும் அவனவன் ஜாதித் தொழிலை செய்ய வேண்டும். வண்ணார் வீட்டுப் பிள்ளைகள் படிக்க வேண்டியது இல்லை” என்றும் பேசியிருக்கிறார் “கிலக்கல்வியை ஒழித்த பெரியார் இயக்கம்” என்ற தமது நூலின் பக்கம் எண் 60 இல் வைத்திருக்கிறார்கள்.

 

அதுவரை ஆச்சாரியார் தமது மக்களுக்கு நல்லது செய்வார் என்று நம்பிக் கொண்டிருந்தவர் பெரியார். ராஜாஜியின் இந்த உரை அவரது நம்பிக்கையை நார் நாராய்க் கிழித்துப் போட்டிருக்கிறது.

 

20.03.1953 நடந்த சட்டசபைக் கூட்டத்தில் அன்றைய கல்வி அமைச்சரான திரு M.V.கிருஷ்ணராவ் அவர்கள் அரசு ஒரு புதியக் கல்விக் கொள்கையை அமல்படுத்த தீவிரமாக வருவதாகக் கூறுகிறார்.

 

அதன்படி கிராமப் புறங்களில் உள்ள பள்ளிகளில் படிக்கும் குழந்தைகள் மூன்று மணிநேரம் பள்ளிக்கு வந்து படித்தால் போதும். மீதி மூன்றுமணி நேரத்தை தங்களது தந்தைகள் செய்து வரும் குலத்தொழிலை அவர்களிடம் கற்றுக்கொள்ள ஏற்பாடு செய்யப்படும் என்று கூறுகிறார்.

 

நகரங்களில் படிக்கும் குழந்தைகள் முழு நேரமும் வழக்கம்போல ஆறுமணி நேரமும் கல்வி பயில்வார்கள் என்றும் கல்வி அமைச்சர் தொடர்ந்து கூறுகிறார்.

 

இதுதான் தந்தை பெரியாரை மிகவும் கொதிப்படையச் செய்கிறது.

 

மேட்டுக் குடிகளின் வீட்டுக் குழந்தைகள் அனைவரும் நகர்ப்புறப் பள்ளிகளில் படிப்பதால் அவர்கள் குழந்தைகளுக்கு கல்வியில் எந்தவிதமான சேதாரமும் ஏற்படப் போவதில்லை.

 

கிராமப்புறத்தில் படிக்கும் குழந்தைகள் பெரும்பாலும் அடிமட்டத்தைச் சார்ந்தவர்களின் குழந்தைகள்.

 

ஆக, செருப்புத் தைக்கும் தொழிலாளியின் குழந்தை ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் செருப்புத் தைக்கும் தொழிலைக் கற்க வேண்டும்.

 

ஏற்கனவே 29.06.1952 அன்று ”அவனவனும் அவனவன் குலத்தொழிலை செய்ய வேண்டும்” என்று ராஜாஜி கூறியதை இந்தக் கல்வித் திட்டத்தோடு பொருத்திப் பார்க்கிறார் பெரியார். இது புதியக் கல்வித் திட்டம் அல்ல. இது குலக்கல்வித் திட்டம் என்பதைப் புரிந்து கொள்கிறார்.

 

தான் பார்க்கும் வேலைக்கு வந்துவிடக் கூடாது என்றுதானே அவனவனும் தன் பிள்ளைகளை பள்ளிகளுக்கு அனுப்புகிறான். அவர்களை அப்பன்மார்கள் பார்க்கும் வேலையையே கற்றுக்கொள்ள ஒரு கல்வித்திட்டம் அனுப்புமானால் அது அயோக்கியத் தனமானது அல்லவா என்று கொதிக்கிறார்.

 

இடதுசாரிகளோடு இணைந்தும் தனித்துமாக தொடர்ந்து இயக்கங்களை முன்னெடுக்கிறார். மாநாடுகளை நட்த்துகிறார்.

 

பள்ளிகளைப் புறக்கணிக்க வைக்கிறார். 

 

காங்கிரஸ் கட்சியில் உள்ள காமராஜர் உள்ளிட்ட தலைவர்களை பையப் பைய இந்தத் திட்டத்திற்கு எதிராகப் போராட வைக்கிறார். சட்டசபை முற்றுகை இடுகிறார்.

 

ராஜாஜியை வீட்டிற்கு அனுப்புகிறார்.

 

அதே குலக்கல்வித் திட்டத்தின் புதிய வடிவம்தான் இன்றையப் புதியக் கல்வித் திட்டமும்.

 

இது ஒரு காரணம் போதும் இன்றைய ஒன்றிய அரசை வீட்டிற்கு அனுப்ப.

 

செய்வோம்

 

உயிர்வனம்
ஆகஸ்ட் 2024

 

 

 

 

 


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 11, 2024 21:06

கடின உழைப்பிற்கு ஊதியமும் இல்லை என்றால் எப்படி?

 
கீழே காணும் ஏழு அரசுக் கல்லூரிகளில் பணியாற்றும் 83 கௌரவ மற்றும் மணிநேர  விரிவுரையாளர்களும் 33 அலுவலகப் பணியாளர்களும் ஆக 116பேர்  கடந்த 14 நாட்களாக உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகிறார்கள் என்ற செய்தி நெஞ்சை அறுக்கிறது.

 

1)  அரசு கல்லூரி, பெரம்பலூர்
2)  அரசு கல்லூரி, லால்குடி
3)  அரசு கல்லூரி,ஒரத்தநாடு
4)  அரசு கல்லூரி, இனாம்குளத்தூர்
5)  அரசு கல்லூரி, வேப்பூர்
6)  அரசு கல்லூரி, அறந்தாங்கி
7)  அரசு கல்லூரி, நன்னிலம்

 

உள்ளிருப்பு போராட்டம் நடத்த வேண்டிய தேவை ஏன் இவர்களுக்கு வந்தது?

 

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பல்கலைக் கழகங்களும் உறுப்பு கல்லூரிகளை நடத்தி வந்தன. இந்த வகையில் 41 உறுப்பு கல்லூரிகள் இயங்கி வந்தன.

 

 

1)  நிரந்தர விரிவுரையாளர்கள்
2)  கௌரவ விரிவுரையாளர்கள்
3)  மணிநேர விரிவுரையாளர்கள்

 

என்கிற மூன்று வகையினராக இந்த கல்லூரிகளில் விரிவுரையாளர்கள் பணியாற்றி வந்தனர். இவர்களில் நிரந்தர விரிவுரையாளர்கள் குறித்து இங்கு பேசுவதற்கு ஏதும் இல்லை.

 

இதில் கௌரவ விரிவுரையாளர்கள் 17,500 ரூபாயில் இருந்து25,000 ரூபாய் வரைக்கும் தங்களது கல்வி தகுதிக்கேற்ப ஊதியம் பெற்று வந்தார்கள்.

 

மணிநேர விரிவுரையாளர்களுக்கு ஒரு மணி நேரத்திற்கு 400ரூபாய், அதிகபட்சமாக ஒரு மாதத்திற்கு 40 மணி நேரம் என்கிற அளவில் பணி வழங்கப்படுகிறது.

 

இதன்படி மணிநேர விரிவுரையாளர் ஒருவர் ஒரு மாதத்திற்கு அதிக பட்சம் 16,000 ரூபாய் மட்டுமே ஊதியமாகப் பெற முடியும்.

 

இதைவிட அதிகமான ஊதியத்தை சில கடை ஊழியர்களே வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

 

மண் எடுக்கும் ஊழியர்களுக்கும் அச்சாபீசில் கம்போசிடர்களாக ஊழியம் பார்ப்பவர்களுக்கும் 4 ரூபாய் தினக் கூலி என்பது அநியாயம் என்றும் கம்போசிடர்களுக்கு அதிகம் வழங்க வேண்டும் என்றும்17.08.1973 அன்று தந்தை பெரியார் பேசியதை 25.08.1973 அன்றைய விடுதலை வைத்திருக்கிறது.

 

எனில், 10 ஆம் வகுப்பு மட்டுமே முடித்த குழந்தைகள் கடைகளில் 15,000 ரூபாய் பெறும்போது, காலத்தையும் பொருளையும் செலவழித்துப் படித்து,Phd முடித்து வரும் விரிவுரையாளர்களுக்கு 16,000 ரூபாய் ஊதியம் என்பதே கண்டிக்கத் தக்கது.

 

இந்த ஊதியம் குறைவானது என்றும் 50,000 ரூபாயாக உயர்த்த வேண்டும் என்றும் UGCஅறிவுறுத்தி உள்ளது. இதை 2019 இல் இருந்து நிலுவைத் தொகையோடு வழங்க வேண்டும் என்றும் அது உத்தரவு பிறப்பித்து உள்ளது.

 

இதன்படி ஊதியம் வழங்க வேண்டும் என்று சிலர் மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்து இருக்கிறார்கள். வழங்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

 

அதை நடைமுறைப் படுத்தாத அரசிற்கு எதிராக நீதிமன்ற வழக்கும் நிலுவையில் உள்ளது.

 

இந்த நிலையில் இவர்கள் உள்ள ஊதியத்தையாவது கொடுங்கள் என்று போராட வைத்தது எது?

 

ஏன் எட்டு மாதங்களாக இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை?

 

2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் அரசாணைஎண் 36 இன்படி 14 கல்லூரிகள் மற்றும் அரசாணை எண்186 இன்படி 27 கல்லூரிகள் என்று  41 உறுப்பு கல்லூரிகளையும் அரசு கல்லூரிகளாக அறிவிக்கிறார் அன்றைய முதலமைச்சர் திரு எடப்பாடி பழனிசாமி அவர்கள்.

 

.இதுவரை பல்கலைக் கழகங்களிடம் இருந்து வந்த இந்த விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்களின் சம்பள செலவினம் நேரடியாக அரசின் கைகளுக்கு செல்கிறது.

 

அதுவரை பல்கலைக் கழகங்களிடம் இருந்து ஊதியத்தை பெற்றுவந்த விரிவுரையாளார்களும் ஊழியர்களும் தங்களது ஊதியத்தை கருவூலம் வழியாக பெறத் தொடங்குகிறார்கள்.

 

இது ஒரு வகையில் மிக நல்லதொரு ஏற்பாடு. இனி அரசாணை எண் 56 மூலமாக நமது பணியிடங்கள் நிரந்தரமாவதற்கு வாய்ப்பு பிறந்திருக்கிறது என்று விரிவுரையாளர்களும் ஊழியர்களும் கொஞ்சம் மகிழ்ந்தும் போனார்கள்.

 

பல்கலைக் கழகத்தின் வசம் இருந்து சம்பள செலவினம் அரசின் கைகளுக்கு மாறுகிறபோது, 

 
1)  கல்லூரிகளின் நடத்தப்படும் பாடப் பிரிவுகள்
2)  பிரிவுகள் வாரியாக பணியாற்றும் விரிவுரையாளர்கள் பட்டியல்
3)  பிரிவு வாரியாகப் பணியாற்றும் ஊழியர்களின் பட்டியல்  

 

போன்ற விவரங்களை பல்கலைக் கழகங்கள் அரசிற்கு வழங்க வேண்டும்.

 

இந்த விவரங்களை அரசிற்கு அனுப்பும்போது பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் உள்ள மேற்காணும் ஏழு கல்லூரிகளும் சில பிரிவுகளை குறிப்பிடத் தவறிவிட்டன. செலவினத்தை திட்டமிடுவதற்கு அனுப்பும் போது இப்படியான தவறுகளைச் செய்வது குற்றம்.

 

தம்மிடம் வழங்கப்பட்ட பட்டியலுக்கேற்றபடி செலவினத்திற்கு அனுமதி அளிக்கிறது.  

 

இந்த இடம் வரைக்கும் இதில் அரசின் தவறும் இருப்பதாகத் தெரியவில்லை.

 

பல்கலைக் கழகத்தன் கவனப் பிசகால் விடுபட்ட பிரிவுகளுக்கு பாடம் எடுக்கும் 83 விரிவுரையாளர்களுக்கும் 33 ஊழியர்களுக்கும் தவிர ஏனைய ஆசிரியர்களுக்கும் ஊழியர்களுக்கும் கருவூலம் வழியாக மாதா மாதம் சரியாக ஊதியம் வந்து விடுகிறது.

 

இதை சரி செய்வதற்கான நடவடிக்கைகளையும் உரிய அவசரத்தில் இந்தக் கல்லூரிகளோ அல்லது பல்கலைக் கழகமோ எடுக்கவில்லை. மாறாக இந்த 116பேருக்குமான ஊதியத்தை பல்கலைக் கழகமே வழங்க ஆரம்பிக்கிறது.

 

பல்கலைக் கழகத்தின் நிதிச்சுமையின் காரணமாகவோ என்னவோ கடந்த எட்டு மாதங்களாக இவர்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை.

 

பல்கலைக் கழகத்தின் முக்கியமான செலவினம் என்பது பாடம் நடத்துபவர்கள் மற்றும் ஊழியர்களின் ஊதியம்தான் என்பதை பல்கலைக் கழகம் மறந்துவிடக் கூடாது.

 

விரிவுரையாளர்களும் ஊழியர்களும் அவரவர் கல்லூரிகளில் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்துகிறார்கள்.

 

அரசிற்கு வந்த செலவினத்தை அரசு விடுவித்திருக்கிறது. இதில் அரசின் பிழை இல்லை என்பதை ஆண்டுக் கணக்காக அரசு கூறக் கூடாது.

 

அதுவும் கல்வியில் மிகுந்த அக்கறையோடு கவனம் குவிக்கும் திரு ஸ்டாலின் அவர்களது அரசாங்கம் இதைத் தவிர்த்தே ஆக வேண்டும்.

 

பிழை பல்கலைக் கழகத்தினுடையது. தவறு இழைத்தவர்களைத் தண்டித்துக் கொள்ளுங்கள்.

 

விரிவுரையாளார்களுக்கும் ஊழியர்களுக்கும் ஊதிய நிலுவையை உடனடியாக வழங்க ஏற்பாடு செய்யுங்கள். மாதா மாதம் இவர்களுக்கு ஊதியம் கிடைப்பதை உத்தரவாதப் படுத்துங்கள்.

 

இவர்களை நிரந்தரப்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள அரசாணை எண் 56 ஐ உடனடியாக நடைமுறைப்படுத்தப் பாருங்கள்.

 

கடின உழைப்பிற்கு ஈடு இணை இல்லை என்பது சரி, ஊதியமும் இல்லை என்றால் எப்படி?
தீக்கதிர்10.08.2024

 


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 11, 2024 20:48

August 7, 2024

கவிதை 086

 


அச்சு அசலாகஎன்னைப் போலவே இருந்தான் அவன்அவனை நானென்று கொண்டுகந்துக்காரன்அவனிடம் போவான்இப்போதைக்கு நழுவித் தப்பலாம்என்றிருந்தேன்அவனுக்கும் கொடுத்திருக்கிறான் கந்து
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 07, 2024 03:35

கவிதை 085

 


காஸா கவிதை 03********************** விளையாடிக் கொண்டிருக்கும்அந்தபாலஸ்தீனக் குழந்தைவளர்ந்துபெரியவனாகப் போவதில்லைஎப்படியும்ஒரு வாரத்திற்குள் கொன்று போடும்இஸ்ரேல் ராணுவம்என்ற துயரத்தைவிடவும்பெருந்துயரம்விளையாடிக் கொண்டிருக்கும்அந்தக் குழந்தைக்கும்அது தெரியுமென்பது
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 07, 2024 03:33

கவிதை 084

 


அவள் என்பதே இந்தக் கவிதைக்கு அவள் பெயராகட்டும்***********************************அவள் தனது பெயரை இழப்பதற்குமுன்யாரோ ஒருவர் இறுதியாய் அவளை பெயர் சொல்லி அழைத்திருப்பார்தான்பெயரென்னவென்று அவளிடமே கேட்கலாமென்றால்மொழி புரியவில்லைஅவள் என்பதே இந்தக் கவிதைக்குஅவள் பெயராகட்டும்அந்தப் பேருந்து நிலையத்தில்தூங்குகிறாள்மீதிநேரம் கத்திக் கொண்டிருக்கிறாள்அவளது சத்தம் பலருக்குஅருவெறுப்பாகவும்சிலருக்கு எரிச்சலாகவும்இருக்கிறதுஎன்ன பேசுகிறாள் என்றுயாருக்கும் புரியவில்லைபுரிந்துகொள்ள மெனெக்கெடவும் இல்லைஒரு கையில் பிஸ்கெட் பாக்கெட்டையும் மறு கையில் அம்மாவையும் பிடித்தபடி அவளைக் கடந்த அந்தக் குழந்தைக்கும் அவள் சத்தம் கேட்கிறதுஅம்மாவின் கை உதறி ஓடுகிறாள்இரு கன்னங்களிலும் கைகளை வைத்தபடி தலையை அப்படியும் இப்படியும் ஆட்டுகிறாள்அவளும் அப்படியும் இப்படியும் தலையை ஆட்டுகிறாள்பிஸ்கெட் பாக்கெட்டை நீட்டுகிறாள்ஒரு கையால் பாக்கெட்டைவாங்கியவள்மறுகையால் தலைநீவி நெட்டி .முறிக்கிறாள்டாட்டா இருபுறத்திருந்தும் பறக்கிறதுஅவளது சத்தம்பசியின் வலிச் சத்தம்குழந்தைக்குப் புரிகிறதுகுழந்தைக்கு மட்டும் புரிகிறது
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 07, 2024 03:31

கவிதை 083




அம்மாவிற்குமுதுகு வலி என்பதற்காகஒட்டடை அடித்துவீட்டைசுத்தம் செய்ய வந்தலட்சுமிப் பாட்டிக்கும்முதுகு வலிதான்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 07, 2024 03:28

July 27, 2024

மருத்துவர் அனிதா… மருத்துவர் ஜெகதீஷ்… மருத்துவர் கீர்த்தனா…

”நான் படித்தேன்
தீட்டென்றான்
மீறிப் படித்தேன்
நீட்டென்கிறான்”

என்ற கபிலனின் கவிதையைக் கொண்டு உரையாடல்களையும் கட்டுரைகளையும் நாம் தொடர்ந்து கட்டமைப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது.

நீட் குறித்தான, அதன் கார்பரேட் குணங்களைக் குறித்தான மிகக் கனமான விஷயங்களையே பேசியும், எழுதியும், கேட்டும், வாசித்தபடியுமாகவே இருக்கிற நமக்கு இந்த ஐந்தாறு சொற்கள் ”நீட்” தரும் வலியை எந்தப் பூச்சுமற்று தருகிறது.

நீயெல்லாம் படிப்பதற்கே தகுதி இல்லை, காரணம் நீ பிறந்த பிறப்பு அப்படி. என்று தடுக்கப்படுகிறார்கள். அந்தக் குழந்தை அந்தத் தடைகளை உடைத்து படித்து நல்ல மதிபெண்ணோடு வந்தால் இந்த மதிபெண்ணெல்லாம் பத்தாது நீட் வேண்டும் என்கிறார்கள்.

அந்தக் குழந்தையின் குரல்தான் கபிலனின் இந்தக் குரல். அதனால்தான் இதை ஒருபோதும் நம்மால் கைநழுவவிட முடியவில்லை.

இவ்வளவு மதிப்பெண் பெற முடிந்த குழந்தையால் நீட்டில் போதுமான மதிப்பெண் பெற முடியவில்லை என்றால் இந்த மதிபெண்ணில் ஊறு இருக்கிறது என்றுதானே கேட்டார்கள்.

குழந்தை அனிதா +2 பொதுத் தேர்வில் 1176/1200 எடுத்திருந்தாள். ஆனால் அவளால் நீட்டில் தேர்ச்சிக்குரிய மதிப்பெண் எடுக்க முடியவில்லை.

எனக்கு நினைவு பிசகாமல் இருக்குமென்றால் சகோதரி தமிழிசையே இதை நக்கல் செய்திருந்தார்.

நீட்டில் நல்ல மதிப்பெண் எடுக்கும் குழந்தையால் பொதுத் தேர்வில் 1176 எடுக்க முடியவில்லை என்றால் நீட்டில் குறைபாடு இல்லையா என்று நாம் திருப்பிக் கேட்டோம்.

நமது குரலை அவர்களது அதிகாரம் பழைய அலுமினியப் பாத்திரத்தை பழைய பாத்திரம் வாங்குபவர் நசுக்கி தனது கூடைக்குள் எறிவதுபோல் எறிந்தது.

அப்போதுதான் நமது கோவத்தை, ஆற்றாமையை இந்த ஐந்தாறு வார்த்தைகளுக்குள் கொண்டு வந்தார்.

1176 மதிப்பெண் எடுக்கும் நம் குழந்தைகளால் ஏன் நீட்டில் சோபிக்க வாய்க்காமல் போனது? நிறைய காரணங்கள் உண்டு. இரண்டை மட்டும் பார்ப்போம்

1) நம் குழந்தைகள் மாநில பாடத் திட்டத்தில் படிப்பவர்கள். நீட் வினாத்தாள் CBSE பாடத்திட்டத்தில் இருந்து எடுக்கப்படுகிறது
2) நீட் வினாத்தாள் OBJECTIVE TYPE முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கும்

இவற்றில் முதல் கூறே போதும் நம் குழந்தைகள் ஏன் நீட்டில் சோபிக்க முடியவில்லை என்று.

ஆனால் இரண்டாவது கூறுதான் மிக முக்கியமானது. நீட்டில் ஒவ்வொரு கேள்விக்கும் நான்கு மதிப்பெண். மொத்தம் 180 கேள்விகள். ஆக, 720 மதிப்பெண்.

ஏதேனும் ஒரு கேள்விக்கு தவறான விடை தந்தால் குழந்தை ஒரு மதிப்பெண்ணை இழக்க நேரிடும்.

எனவே நீட்டை எதிர்கொள்வதற்கு குழந்தைகள் கோச்சிங் வகுப்புகளுக்கு செல்ல வேண்டும். கோச்சிங் வகுப்புகளுக்கு லட்சக் கணக்கில் அழவேண்டியது இருக்கிறது. இதனால் நன்கு படிக்கக் கூடிய நமது ஏழைக் குழந்தைகளுக்கு கோச்சிங்கில் சேர இயலவில்லை. மிகச் சுமாராகப் படிக்கும் குழந்தைகள் பள்ளிகளுக்குப் போகாமல் கோச்சிங் சென்று நல்ல மதிப்பெண் எடுத்துவிடுகின்றனர்.

பல தனியார் பள்ளிகளே கோச்சிங் வகுப்புகளை நடத்துகின்றன. நீட் கோச்சிங்கில் சேரும் குழந்தைகள் பள்ளி வகுப்புகளுக்கு வரத் தேவை இல்லை. நிர்ணயிக்கப்பட்ட குறைந்தபட்ச மதிப்பெண்ணோடு தேர்ச்சி பெறுவதற்கு அவர்களுக்கு ஏற்பாடு செய்யப்படும்.

இதன் விளைவாகத்தான் இந்த ஆண்டு நீட்டில் ஒன்றிய அளவில் சிறந்த இடத்தைப் பெற்றுள்ள ஒரு குழந்தை +2 பொதுத் தேர்வில் இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெறாமல் போயிருக்கிறார்.

அதாவது, +2 வில் தேர்ச்சி பெறாத ஒரு குழந்தையால் ஒன்றிய ரேங்க்கோடு நீட் தேர்வில் வெற்றிபெற முடிகிறது.

இதன் பின்னணியில் தில்லுமுல்லுகள் உள்ளனவா என்றால் நிச்சயம் உண்டு.

இந்த ஆண்டு ஒன்றியத்தில் பெரும்பான்மையற்ற ஒரு அரசு அமைந்திருக்கிற காரணத்தினால் சில நீட் அட்டூழியங்களை நம்மால் வெளிக்கொணர முடிந்திருக்கிறது.

இந்த ஆண்டு நீட் தேர்வில் 67 குழந்தைகள் 720/720 எடுத்திருக்கின்றனர். இவர்களில் ஆறேழு குழந்தைகள் ஒரே மையத்தில் எழுதிய குழந்தைகள் என்பது நிச்சயமாக தற்செயலானது அல்ல.

அதிலும் சிலர் அடுத்தடுத்து அமர்ந்து தேர்வு எழுதியவர்கள்.

சில பிள்ளைகள் 717, 719 என்றெல்லாம் மதிப்பெண் எடுத்திருக்கிறார்கள். இதற்கு வாய்ப்பே இல்லை.

ஒன்று 720 எடுக்கலாம். அல்லது 716 எடுக்கலாம். இல்லை ஒரு கேள்விக்கு தவறான விடை எழுதி இருந்தால் 715 எடுக்கலாம். இரண்டு கேள்விகளுக்கு தவறான விடை அளித்திருப்பின் 710 தான் எடுக்க முடியும்.

அது எப்படி 719 ,718 எல்லாம் எடுக்க வாய்க்கும்?

உச்ச நீதிமன்றத்திற்கு போனால் ஏதோ சில கோளாறுகள் நடந்திருக்கின்றன சரி செய்கிறோம் என்று நிர்வாகம் கூறுகிறது.

கொஞ்ச நேரம் கழித்து இந்த மதிப்பெண் குளறுபடிகள் நாங்கள் சில மாணவர்களுக்குக் கொடுத்த கருணை மதிப்பெண் காரணமாக நிகழ்ந்து விட்டது என்று கூறுகிறது.

இன்னும் கொஞ்சம் நேரத்தில் தாங்கள் கருணை மதிப்பெண் கொடுத்த 1563 குழந்தைகளுக்கும் மறு தேர்வு வைத்து விடுகிறோம் என்கிறார்கள்.

தேர்வுத்தாள் சில இடங்களில் கசிந்திருக்கிறது என்றும் ஏறத்தாழ ஒப்புக் கொள்கிறார்கள்.

தமிழ்நாட்டில் நீட் தேர்வு நடக்கும்போது சட்டையை வெட்டுகிறார்கள், முடியை வெட்டுகிறார்கள், தாலியைக் கழற்றுகிறார்கள். ஏதோ நடக்க இருக்கும் கொலையைத் தடுப்பதற்காக கெடுபிடிகளைக் கட்டவிழ்த்து விடுவதைப்போல் நடந்து கொள்கிறார்கள்.

ஆனால், வடக்கில் என்றால் இவ்வளவு அசட்டை எப்படி.

திராவிடப் பிள்ளைகள் மருத்துவர்களாகிவிடக் கூடாது என்பதுதானா என்ற அய்யம் இயற்கையாகவே ஏற்படுகிறது.

அது சரி, அந்தக் கருணை மதிப்பெண் யார் யாருக்கு வழங்கப் பட்டது?

எவ்வளவு வழங்கப் பட்டது? என்று கேட்டால், விடுங்கள் அதுதான் கொடுத்தவர்களுக்கு மறுதேர்வு வைக்கிறோமே என்கிறார்கள்.

720/720 எடுத்த 67 பேரில் 50 பேருக்கு கருணை மதிப்பெண் வழங்கப் பட்டிருக்கிறது. ஆகவே இப்போது முழு மதிப்பெண் பெற்றவர்களின் எண்ணிக்கை 17 ஆகக் குறைந்துள்ளது.

அய்யத்தைக் கிளப்பாமல் போயிருந்தால் அந்த 50 பேரும் மிகச் சிறந்த கல்லூரிகளுக்குப் போயிருப்பார்கள். அப்படிப் போயிருந்தால் தகுதி வாய்ந்த 50 பேருக்கு உரிய இடம் மறுக்கப் பட்டிருக்கும்.

அந்த 50 பேர் யார்? அவர்கள் குடும்பங்களின் அரசியல் அல்லது சமூகப் பின்னணி என்ன? அவர்கள் எந்தெந்த கோச்சிங் மையங்களில் பயிற்சி பெற்றார்கள்? அந்த கோச்சிங் மையங்களின் அரசியல் மற்றும் சமூகப் பின்னணி என்ன? போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல மறுக்கிறார்கள்.

இப்படி எடுத்ததெற்கெல்லாம் சந்தேகப் படாதீர்கள். கொஞ்சம் நம்புங்கள் என்று சொல்கிறார்கள்.

இதுவே இந்த அரசு முழுப் பலத்துடன் இருந்திருக்குமானால் இந்தக் குழறுபடிகள் குறித்து நம்மால் கேள்வி கூட கேட்டிருக்க முடியாது. ஆமாம் அப்படித்தான் என்ன செய்துவிட முடியும் என்றுகூட கேட்டிருப்பார்கள்.

கோச்சிங் மையம் என்பது தனிப்பயிற்சி செண்டர்தான். ஒரு தனிப்பயிற்சி மையம் கிரிக்கெட் போட்டிக்கு 5000 கோடி ஸ்பான்சர் செய்திருப்பதாக பிரபலமான பத்திரிக்கையாளர் திரு உமாபதி கூறுகிறார்.

ஒரு தனிப்பயிற்சி மையம் 5000 கோடி ரூபாயை ஒரு விளையாட்டிற்கு ஸ்பான்சர் செய்ய முடிகிறது என்று சொன்னால் அதன் வருட வருமானம் எவ்வளவு? அந்த மையத்தின் பின்புலத்தில் இருப்பவர்கள் யார் யார்? அவர்களது அரசியல் பின்னணி என்ன?

ஒரே நாடு ஒரே தனிப்பயிற்சி மையம் என்கிற நிலைக்கு மாறுவதற்கான முயற்சிகள் நடப்பதாகவும் அவர் ஒரு நேர்காணலில் கூறுகிரார்.

இப்படியான, மபியாத்தனமான கட்டமைப்பு உருவாகிக் கொண்டிருப்பது உண்மை எனில் அதன் லாபத்தில் பங்கெடுக்கும் அரசியல் சக்திகள் எவை?

அத்தனையும் வெளி வரும்.

கருணை மதிப்பெண் பெற்றவர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் மீண்டும் தேர்வு நடத்தப்பட வேண்டும் வேண்டும் என்று எழும் கோரிக்கையில் நமக்கு இடைக்கால உடன்பாடுதான்.

நம்மைப் பொறுத்தவரை நீட் முற்றாக ஒழிக்கப்பட வேண்டும்.

பலமற்ற ஒன்றிய அரசு,

பீஹார், கர்நாடகா, மத்தியபிரதேசம், போன்ற மாநிலங்களும் அகிலேஷ் யாதவ் போன்ற தலைவர்களும் இப்போது நீட்டை எதிர்க்கிறார்கள்.

இந்த நிலையில் நீட்டிற்கு எதிரான ஒன்றுபட்ட போராட்டம் நிச்சயமாக வெற்றி பெறும்.

அனிதாக்களும், ஜெகதீஷ்களும், கீர்த்தனாக்களும் மருத்துவர்கள் ஆவார்கள்.

மருத்துவம் மக்களுக்கானதாக மாறும்.

_ புதிய ஆசிரியன் ஜூலை 2024
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 27, 2024 01:13

July 24, 2024

உங்கள் ஆணவத்திற்கான கடிவாளம் எங்கள் நாற்பது

இந்திய நாடாளுமன்றத்திற்கு ஏழு கட்டங்களாக தேர்தல் நடந்து முடிவுகளும் வந்து விட்டன. இந்த முடிவுகளுக்குப் பிறகு இந்தியா கொஞ்சம் விநோதமாக மாறி இருக்கிறது.


காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணிக்கும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையேதான் போட்டி நிகழ்ந்தது. நம்மைப் பொறுத்தவரை மக்கள் மிகத் தெளிவானதொரு தீர்ப்பினை வழங்கி இருக்கிறார்கள்.


தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆட்சியை கொடுத்திருக்கிறார்கள் மக்கள். அவர்களும் ஆட்சியை அமைத்து விட்டார்கள். வென்றவர்கள் ஆட்சி அமைத்திருக்கிறார்கள். இதில் என்ன விநோதம் வந்துவிட்டது என்ற கேள்வி இயல்பாகவே எழும்.


வேறொன்றும் இல்லை,


தோற்றுப் போனவர்கள் சோர்ந்து போவதும் வெற்றி பெற்றவர்கள் மகிழ்ந்து கொண்டாடுவதும்தான் வாடிக்கை. இந்தத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தோற்றுப் போனவர்கள் மகிழ்ச்சியாகவும் வெற்றி பெற்றவர்கள் மிகுந்த சோர்வோடும் இருக்கிறார்கள்.


எண்கள் என்ன செய்து விடும் என்றுதான் பொதுவாகப் பேசுவோம். சில சுயேச்சைகள் காங்கிரசில் சேர்ந்த பிறகு “இந்தியா” கூட்டணியின் எண்ணிக்கை 240 என்ற அளவைக் கடந்திருக்கிறது. இது அசுர பலத்திலான எதிர்க் கட்சியின் எண்ணிக்கை.


ஆளும் தேசிய ஜனநாயக் கூட்டணிக்கு 290 இடங்கள் கிடைத்துள்ளன. ஆட்சி அமைப்பதற்கு குறைந்த பட்சம் 272 இடங்கள் தேவை என்கிற நிலையில் இந்த 290 என்பது போதுமானது என்றாலும் ஒரு பலவீனமான எண்.


ஆக, மிகவும் அசுர பலத்தோடு கூடிய எதிர் வரிசையையும் மிகவும் பலவீனமானதொரு ஆளும் வரிசையையும் நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்திருக்கிறார்கள் மக்கள்.


ஆளும் கூட்டணியில் இப்போதே தள்ளுமுள்ளுகளைப் பார்க்க முடிகிறது. மாறாக நாளுக்கு நாள் எதிர் வரிசை கெட்டிப்பட்டுக் கொண்டே போவதையும் பார்க்க முடிகிறது. இந்த மண்ணை நேசிக்கும் எவரொருவரும் மகிழ்ந்து கொண்டாட வேண்டிய அம்சம் இது.


இது இப்படி இருக்க, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் உள்ள நாற்பது நாடாளுமன்றத் தொகுதிகளையும் திமுக தலைமையிலான “இந்தியா” கூட்டணி அமோகமாக வென்றிருக்கிறது.


23 உறுப்பினர்களை கையில் வைத்திருக்கக் கூடிய திமுக நினைத்திருந்தால் நிச்சயமாக அதிகார பேரத்தில் இறங்கி இருக்கவும் வாய்ப்புகளைப் பெற்றிருக்கவும் முடியும். அதன் மூலம் எஞ்சிய தங்களது ஆட்சிக் காலத்தை இலகுவாகவும் சொகுசாகவும் நகர்த்தி இருக்க முடியும். 


எதிர்ப்பது என்பது அவர்களுக்கு இன்னும் மேலதிகமான குடைச்சல்களைக் கொண்டுவரக் கூடும். இவற்றை நன்கு அறிந்திருந்தாலும் கொண்ட கொள்கையில் திமுக உறுதியோடு நிற்கிறது. கட்சித் தலைமை மட்டுமல்ல அடிமட்டத் தொண்டனும் சலனமே இல்லாமல் உறுதியோடு நிற்பதையும் பார்க்க முடிகிறது.


இதற்காக திமுகவிற்கும் அதன் தலைவர் ஸ்டாலினுக்கும் ஒரு வணக்கத்தையாவது சொல்லாவிட்டால் இந்தக் கட்டுரை நிறைவு பெறாது.  


இந்தத் தேர்தல் இந்திய மண்ணிற்கு சலனமற்று களமாடுகிற  சில தலைவர்களை அடையாளம் காட்டி இருக்கிறது. பல காலம் ”பப்பு” என்று பகடி செய்யப்பட்ட ராகுல் இந்தியாவின் ஆகப் பெரும் இளம் தலைவராக எழுந்து நிற்கிறார். இதை அமித்ஷாவே உள்ளுக்குள் ஒத்துக் கொள்வார்.


அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி, பிரியங்கா போன்ற இளைய தலைவர்களின் வரவு நமக்கு தெம்பைத் தருகிறது. இவர்கள் அனைவரும் தங்களது கூட்டணியின் தலைவராக, மூத்த சகோதரனாக ஸ்டாலின் அவர்களை உச்சி முகர்வதும், இடதுசாரிகளின் பங்களிப்பை உணர்ந்தவர்களாகவும் மதிப்பவர்களகவும் இருப்பதும், தன் உயரம் உணர்ந்தவராக ஸ்டாலின் இருப்பதும் இந்த மண்ணை நேசிப்பவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் செய்திகள்.


இவ்வளவு புளங்காகிதம் அடைவதற்கு கொஞ்சம் இருக்கவே செய்கிறது. இன்னும் ஒரு 25 இடங்களை கூடுதலாக மக்கள் பாஜகவிற்கு வழங்கி இருந்தால் என்ன நடந்திருக்கும்?


சுயேச்சைகளையும் சில அரசியல் சிதறல்களையும் இலகுவாக கொள்முதல் செய்திருப்பார்கள். நினைத்ததை எல்லாம் செய்திருப்பார்கள். என்ன செய்ய நினைத்தார்கள் என்பதை முன்னாள் ஆளுநர் சகோதரி தமிழிசை அவர்களின் தமிழ்நாட்டின் தேர்தல் முடிவுகள் குறித்த ஆதங்கத்தில் இருந்தே தெரிந்து கொள்ளலாம்.


நாற்பது இடங்களையும் திமுக கூட்டணிக்கு அளித்ததன் மூலம் தமிழ்நாட்டு மக்கள் ஒரு மிகப் பெரிய தவறை செய்து விட்டதாக முதலில் கூறினார். ஆட்சி அமைக்க முடியாத ஒரு கூட்டணிக்கு வாக்களித்து விட்டார்கள் என்றார். 


எப்போது பார்த்தாலும் எதிர் நிலையை எடுக்கிற தவறையே செய்வதாக ஸ்டாலினை குறை சொன்னார்.


அதற்கு அடுத்ததாக இந்த நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களும் கேண்டீனில் வடை சாப்பிடுவதைத் தவிர  என்ன செய்துவிட முடியும் என்று புலம்பினார்.


தமிழ்நாட்டின் உறுப்பினர்கள் கடந்த காலத்தில் என்னவெல்லாம் செய்தார்கள் என்பதை கோவையில் நடந்த வெற்றி விழா பொதுக் கூட்டத்தில் பட்டியலிட்டார் ஸ்டாலின். உங்கள் ஆணவத்தை அடக்க அவர்கள் என்னவெல்லாம் செய்வார்கள் என்பதை “Wait and see” என்று அவர் சொன்னபோது நமக்கே கொஞ்சம் சிலிர்க்கத்தான் செய்தது.


தேர்தலுக்கு முன்பு, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ”ஜெய் ஸ்ரீராம்” சொன்னால் நம்மைத் தாக்குவார்கள். உயிருக்கு உயிராக நாம் மதிக்கும் “ஜெய் ஸ்ரீராம்” நாம் உச்சரிக்க வேண்டும் என்றால் தங்களுக்கு வாக்களிக்க வேண்டும் என்று தனது தகுதிக்கு மிகக் கீழே இறங்கி பரப்புரை செய்தார் மோடி.


அயோத்தியே அவர்கள் கையைவிட்டுப் போனதும் அவர் ராமரை உறவு துறப்பு செய்துவிட்டு “ஜெய் ஜெகனாத்” என்று முழங்க ஆரம்பித்து விட்டார். நாளை ஒடிசா அவர்கள் கையை விட்டுப் போனால் ஜெகநாதரையும் அவர் உறவு துறப்பு செய்வார். 


இதன் மூலம் கடவுளும் மதமும்கூட இவர்களது வாக்கிற்கான கருவிகள்தான் என்பது இப்போது வெட்ட வெளிச்சமாக அம்பலப்பட்டு நிற்கிறது.


அனைத்து மதங்களையும் தாங்கள் சமமாகப் பார்ப்பதாக மோடி இப்போது கூறி இருக்கிறார். இந்த மாற்றத்தைக் கொண்டு வந்ததில் ”நாற்பதற்கு நாற்பதின்” பங்கு அதிகம் என்பதை சகோதரி தமிழிசைக்கும் மக்களுக்கும் நாம் தொடர்ந்து  எடுத்து சொல்ல கடமைப் பட்டிருக்கிறோம்.


”இந்திய அரசமைப்பு சட்டப் புத்தகத்தை” பயபக்தியோடு மோடி வணங்கி முத்தமிடுகிற மாதிரி ஒரு புகைப்படம் சமீபத்தில் வைரலானது. 


400 இடங்களில் பாஜக வெற்றி பெற்றால் இந்திய அரசமைப்பு சட்டத்தை மாற்றுவோம் என்று அயோத்தியை உள்ளடக்கிய பைசாபாத் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் கூறினார்.


ஆனால் அதே சட்டப் புத்தகத்தை மோடி பணிந்து வணங்கினார். அப்படி அவரைப் பணிய வைத்தது இந்த நாற்பதுக்கு நாற்பது. 


பாங்குச் சத்தம் குறைந்திருக்கிறது. வெற்றி பெற்றதும் பாங்குச் சத்தமே இல்லாமல் பார்த்துக் கொள்வோம் என்றார் யோகி.


இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை அமல்படுத்துவோம் என்று தமது தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்திருக்கிற சந்திரபாபு நாயுடு ஆதரவோடுதான் இவர்களால் ஆட்சியை அமைக்க முடிந்திருக்கிறது. இந்த நெருக்கடியை பாஜவிற்கு கொடுத்திருப்பது இந்த “நாற்பதுக்கு நாற்பது”


இந்த நாற்பதுக்கு இன்னும் நிறைய வேலை இருக்கிறது.


2010 வாக்கில் அருந்ததி ராய் அவர்கள் மீது போடப்பட்ட ஒரு வழக்கினை தூசு தட்டி கையில் எடுத்திருக்கிறது ஒன்றிய அரசு. இன்னும் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம்கூட எடுக்கவில்லை. அதற்குள் தனது ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறது அரசு.


நாங்கள் மாறவில்லை, மாற மாட்டோம். எங்கள் ஆட்டத்தை தொடர்ந்து ஆடிக்கொண்டே இருப்போம் என்று அவர்கள் உணர்த்தத் தொடங்கி இருக்கிறார்கள்.


கருத்துரிமையின் குரல்வளையில் கையை வைத்து விட்டார்கள். இந்தியா கூட்டணி இதை எப்படி எதிர்கொள்ளப் போகிறது என்பதே மக்களின் எதிர்பார்ப்பு.


குஜராத்தில் ஒரு தொழிற்சாலையை அமெரிக்காவின் நிறுவனத்தோடு இணைந்து நிறுவ இருக்கிறார்கள். 2.5 பில்லியன் டாலர் மதிப்பீடு. இதில் இரண்டு பில்லியன் டாலரை ஒன்றிய அரசும் மாநில அரசும் மானியமாக வழங்கும். எஞ்சிய அரை பில்லியன் டாலரை அந்த அமெரிக்க நிறுவனம் முதலீடு செய்யும்.


ஒரு பில்லியன் என்பது நூறு கோடி. எனில், 250 கோடி டாலர் மதிப்பீட்டில் ஒரு தொழிற்சாலை அமைகிறது. அதில் 200 கோடியை மாநில அரசும் ஒன்றிய அரசும் மானியமாக வழங்குகிறது. 50 கோடியை அமெரிக்க நிறுவனம் முதலீடு செய்கிறது.


அமெரிக்க நிறுவனம் முதலீடு செய்கிறது. நமது அரசுகள் கூட்டாக முதலீடு செய்ய வில்லை. 50 கோடி முதலீட்டிற்கு நாம் கொடுக்கும் நன்கொடை 200 கோடி. 


கேட்டால் 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்கிறார்கள்.


இதைக் கேள்வி கேட்பவர் இன்றைய ஒன்றிய கனரக தொழிற்சாலைகள் துறை அமைச்சர் குமாரசாமி. நன்கொடையாக நாம் தரும் அந்த 200 கோடி டாலரை மட்டும் நாம் முதலீடு செய்தாலே 5,000 பேருக்கு வேலை வாய்ப்பு தரலாமே என்று கேட்கிறார்.


ஆட்சிப் பொறுப்பேற்று அவைக்குள் செல்வதற்கு முன்னமே தொழிலாளிகளின் அடிவயிற்றில் காலை வைத்திருக்கிறது அரசு.


தொழிலாளிகளிடம் பிடிக்கும் பி.எப் தொகையைக் கட்டாமல் வைத்திருந்தால் முதலாளி கட்ட வேண்டிய அபராதத் தொகையை கணிசமாகக் குறைத்திருக்கிறது அரசு. அப்போதுதான் முதலாளிகள் இலகுவாக தொழில் நடத்த முடியும் என்று அரசு கூறுகிறது. 


மாதா மாதம் ஒவ்வொரு ஊழியரிடம் இருந்தும் ஒரு குறிப்பிட்டத் தொகையை அவரது சம்பளத்தில் இருந்து பிடிப்பார்கள். எவ்வளவு பிடிக்கிறார்களோ அதே அளவு தொகையை நிர்வாகம் போடும். அதை பி.எப் அலுவலகத்தில் ஊழியரின் கணக்கில் செலுத்த வேண்டும்.


அதாவது 1,000 ரூபாய் ஊழியரிடம் இருந்து பிடித்தால் 1,000 ரூபாய் நிர்வாகம் போட்டு 2,000 ரூபாயை ஊழியரின் கணக்கில் கட்ட வேண்டும். ஆனால் நடைமுறையில் பெரும்பாலான நிறுவனங்கள் ஊழியரின் சம்பளத்தில் இருந்தே எடுத்துக் கொள்ளும். இந்தத் தொகையை மாதா மாதம் ஊழியரின் கணக்கில் கட்டிவிட வேண்டும்.


இனி இப்படி மாதா மாதம் கட்டத் தேவை இல்லை என்று சட்டம் கொண்டு வந்திருக்கிறது. அதாவது ஊழியனின் பணத்தை வேண்டுமளவிற்கு உருட்டிக் கொள்ளலாம் என்று வாய்ப்பளித்திருக்கிறது.


என்ன செய்துவிட முடியும் என்று கேட்கிறார் சகோதரி தமிழிசை.


உங்களது ஆணவத்திற்கு எங்களது உறுப்பினர்கள் கடிவாளம் போடுவார்கள் என்கிறார் ஸ்டாலின்.


மேற்சொன்னவை அனைத்தும் அவர்களது ஆணவத்தின் தெறிப்புகள்தான் என்பதை ஸ்டாலின் அவர்களுக்கும் இந்தியா கூட்டணி உறுப்பினர்களுக்கும் சொல்லிக் கொள்கிறோம்.


அவர்களைக் கொஞ்சம் பதட்டத்தோடே வைத்திருங்கள். இல்லாது போனால் அவர்கள் மக்களை பதட்டத்தோடு இருக்குமாறு பார்த்துக் கொள்வார்கள் 



 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 24, 2024 23:11

July 22, 2024

கவிதை 82

 

அதிகாலை
உழவர் சந்தைக்கு வந்தவள்

வெண்டைக்காயை
உடைத்துப் பார்த்தும்
ஒவ்வொரு
கத்திரிக்காயையும்
ஏழெட்டுமுறையேனும்
சுத்திப் பார்த்து
சொத்தையற்று பொறுக்கினாள்

சுண்டிப் பார்த்தும்
காதோரமாய் வைத்து
ஆட்டிப் பார்த்து
தேங்காய் வாங்கினாள்

பூச்சியில்லாத
கீரைக்கட்டை எடுத்தாள்

முடித்துவிட்டு
உழவர் சந்தைக்கு எதிரே உள்ள
சாப்பாட்டுக் கடையில்
இடியாப்பம் பாயா வாங்கினாள்

காய்களை
சுவரோரமாக வைத்துவிட்டு
இடியாப்பம் பாயாவை
சாப்பாடு மேசையில் வைத்துவிட்டு வந்தவளிடத்தில்
பழையசோறு பாத்திரத்தை நீட்டினாள்
முதலாளியம்மா

#கவிதை2024edn

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on July 22, 2024 02:51

இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.