இரா. எட்வின் [R.Edwin]'s Blog, page 21

November 18, 2024

அத்தனை சாபங்களையும்…

 


எத்தனை பொய்கள்? எத்தனை அவதூறுகள்? எத்தனையெத்தனை சாபங்கள்? எந்தவிதமான உச்சவரம்பும் இல்லாமல், எந்தவிதமான வயதுவரம்புமில்லாமல், கூச்சநாச்சம் என்பதே கொஞ்சமும் இல்லாமல் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக பரப்பிக்கொண்டே இருந்தார்கள்.நன்றாக இயங்கிக்கொண்டிருந்த நோக்கியோ தொழிற்சாலையை தமிழ்நாட்டைவிட்டே விரட்டியது CITU என்றார்கள். தொழிலாளிகளின் பாதுகாப்பில் கவனமாக இருந்த ஃபோர்ட் தொழிற்சாலைக்கு மூடுவிழா நடத்தியது CITU என்றார்கள். இதைவிட உச்சம் என்னவென்றால் CITU மூடுவிழாவை நடத்தியதாக அவர்கள் சொன்ன சில தொழிற்சாலைகளில் CITU கிளையே இல்லை. அவர்கள் சொன்ன சில மூடுவிழாக்களின்போது CITU பிறந்திருக்கவே இல்லை.எல்லாவற்றையும்விட உச்சமாக CITU என்பது CPM கட்சியின் தொழிற்சங்கம் என்றும் எனவேதான் அவர்கள் சீனாவின் தொழிற்சாலைகளுக்கு ஆதரவாக சாம்சங் தொழிற்சாலையை எப்படியேனும் மூடிவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுகிறார்கள் என்றும் கூறினார்கள்.வலைதளம் முழுவதும் CITU விற்கு எதிரான வசைகளாலும் சாபங்களாலும் நிரம்பி வழிந்தது. உறக்கத்தில் இருந்து சிறுநீர் கழிப்பதற்காக எழுந்தவர்கள்கூட கழிவறை செல்லும் முன்னர் ஒரு பதிவு கழிவறையில் இருந்து வந்து படுக்கையில் விழுந்ததும் ஒன்று என்று CITU விற்கு எதிரான பதிவுகளை போட்டபிறகுதான் தூங்கினார்கள். மூன்று விஷயங்களை தெளிவுபடுத்திவிட்டு இவைகுறித்து உரையாடுவதே சரியெனப் படுகிறது.1) நோக்கியோ தமிழ்நாட்டில் இருந்த தனது கிளையை மூடியதற்கான காரணங்கள் அதன்மீது சுமத்தப்பட்ட வரி ஏய்ப்பு குற்றச்சாட்டும் அதன்பொருட்டு விதிக்கப்பட்ட அபராதமுமே ஆகும். சரியாக சொல்வதெனில் அந்த நிலையிலும் நோக்கியோவை தக்கவைப்பதற்கான முயற்சியை CITU செய்தது2) ஃபோர்ட் தொழிற்சாலை மூடப்பட்டதற்கு அது தயாரித்த கார்கள் விற்பனையாகமல் நட்டத்தை சந்தித்ததே ஆகும்3) அதன் தலைவர்கள் பலர் அந்தக் கட்சியில் இருக்கிறார்கள் என்பதைத் தவிர CITU என்பது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொழிற்சங்கம் எல்லாம் இல்லை.நோக்கியோ வெளியேறியதற்கு CITU காரணமில்லை என்பதைக்கூட ஏற்கலாம். ஆனால் அதைத் தக்க வைப்பதற்கு அது முயற்சி செய்தது என்பதெல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது என்று சிலர் கேட்கலாம்.அப்போது தமிழ்நாடு சட்டமன்றத்தில் நடைபெற்ற ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம் குறித்த செய்தியை 25.07.2014 அன்று ஒன் இண்டியா வெளியிட்டிருக்கிறது.அப்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினராக இருந்த தோழர் ஆ.சௌந்தரராஜன் நோக்கியாவில் இருந்து இருபத்தி ஐந்து வயதை ஒட்டிய 5600 ஊழியர்கள் விருப்ப ஓய்வு பெற்றிருக்கிறார்கள் என்றும் 50 வயதிற்கு குறைவானவர்கள் விருப்ப ஓய்வு எடுக்க இயலாது என்பது விதி என்றும் குறிப்பிடுகிறார். இது விஷயத்தில் அரசு தலையிட வேண்டும் என்றும் அவர் அரசின் கவனத்தை ஈர்க்கிறார். அன்றைய அதிமுக அமைச்சராக இருந்த திரு தங்கமணி அவர்கள் இதை எதிர்கொள்கிறார்.நோக்கியோ தனது தொழிற்சாலையை மூடிவிட்டு போனதற்கு தாங்கள் எந்த விதத்திலும் பொறுப்பேற்க இயலாது என்றும் அது அப்போது திமுகவும் அங்கம் வகித்த ஒன்றிய அரசின் நடவடிக்கையினால் எடுக்கப்பட்ட முடிவு என்றும் கூறினார். அதுமட்டுமல்ல, விருப்ப ஓய்வு கொடுத்தவர்கள் நான்கு லட்சம் ரூபாய் முதல் பத்து லட்சம் ரூபாய் வரைக்கும் இழப்பீடு பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.சுருக்கமாக சொன்னால் நோக்கியோ வரி ஏய்ப்பு செய்திருந்தது. அதை அன்றைய ஒன்றிய அரசு கண்டுபிடித்தது. உடனடியாக கட்ட வேண்டிய வரியை அபராதத்தோடு கட்டவேண்டும் என்று சொன்னது. அவர்களுக்கிடையில் என்ன பிரச்சினையோ தெரியவில்லை, தனது முடிவில் ஒன்றிய அரசு பிடிவாதமாக இருந்தது. தொழிற்சாலையே கையைவிட்டு போனாலும் பரவாயில்லை வரியையும் அபராதத்தையும் கட்டுவதில்லை என்பதில் நோக்கியோவும் பிடிவாதமாக இருந்தது.அந்த இருவரின் பிடிவாதத்தின் விளைவாக நோக்கியோ ஸ்ரீபெரும்புதூரில் இருந்த தனது தொழிற்சாலையை மூடியது. என்னென்ன வகைகளில் இந்த விஷயத்தில் CITU தலையிட்டது என்றால்,1) வரியையும் அபராதத்தையும் உடனடியாக, ஒரே தவனையில் என்பதை ஒன்றிய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அது கோரியது. குறைந்தபட்சம் ஒரு கால அவகாசத்தையேனும் நோக்கியோவிற்கு ஒன்றிய அரசு வழங்க வேண்டும் என்றும் அது கோரியது2) வேறு வழியே இல்லை, நோக்கியோ தனது தொழிற்சாலையை மூடவே செய்யும் என்ற நிலை வந்தபின் அவர்களுக்கான இழப்பீட்டுத் தொகைக்காகப் போராடி பெற்றுக் கொடுத்ததுஃபோர்ட் விஷயத்தில் அது தொழிலாளிகளின் பாதுகாப்பிற்காக நிறைய ஏற்பாடுகளை செய்தது என்பது உண்மை. ஃபோர்ட் தரமான கார்களுக்காக செயல்பட்டது என்பதும் உண்மை. அதற்காக நிறைய செலவு செய்தது. இதனால் அதன் உற்பத்தி செலவு அதிகரித்தது. எனவே அதன் விலையும் பெருமளவு அதிகமாக இருந்தது. அதன் விளைவாக சந்தையில் விற்பனை மந்தப்பட்டது, நட்டம் ஏற்பட்டது. இந்த நட்டத்தின் காரணமாகத்தான் ஃபோர்ட் தனது தொழிற்சாலையை மூடியது.இப்படி ஒரு போரட்டத்தின் மூலமாகத்தான் CITU சென்னையில் அற்புதமாக இயங்கி வந்த “பின்னி” மில்லை இழுத்து மூடியது என்றவொரு வதந்தியையும் அவர்கள் பரப்பினார்கள். இதுவரை உலகில் பரப்பப்பட்ட மிக உச்சமான பத்து வதந்திகளுள் நிச்சயமாக இதையும் ஒன்றெனக் கொள்ளலாம். உண்மை என்னவெனில் பின்னி மில் பிரச்சினை நடைபெற்றது 1952 ஆம் ஆண்டுவாக்கில். அந்த நேரத்தில் CITU பிறந்திருக்கவே இல்லை. அந்த சம்பவம் நடந்தபோது தோன்றியே இருக்காத ஒரு சங்கம்தான் அதற்கு காரணம் என்று பொய்யைப் பரப்புவதற்கு எவ்வளவு வன்மம் வேண்டும். பின்னி மில்லில் தொழிலாளர்கள் சங்கமென ஒன்றிணைந்ததற்கான காரணம் சுவாரஸ்யமானது.பின்னி தொழிலாளிகள் ஒவ்வொரு நாளும் 14 மணி நேரம் உழைக்கவேண்டி இருந்தது. வீட்டில் இருந்து வீட்டை அடையும் நேரத்தையும் கணக்கில் கொண்டால் 18 மணிநேரம் என்று இருந்தது. வாரத்திற்கு ஆறு நாள் பணி. சொல்லொன்னா துரத்தில் இருந்த தொழிலாளிகள் தங்களது துயரத்தை பகிர்ந்துகொள்ளக்கூட ஆளற்று இருந்தார்கள். அந்த நேரத்தில் தங்களது ஊழியர்களுக்காக ஆன்மீகக் கூட்டங்களை ஆலை நிர்வாகம் ஏற்பாடு செய்கிறது. ஆன்மீக சொற்பொழிவுகளை நிகழ்த்துவதற்காக திரு.வி.க வருகிறார்.அவரிடம் ஊழியர்கள் தங்களது குறைகளைக் கூறினால் மனது ஆறுதலடையும் என்று கருதுகிறார்கள். அப்படித்தான் சாய்ந்து படுக்கக்கூட தங்களுக்கு ஓய்வற்று கிடப்பதாக அவரிடம் புலம்புகிறார்கள்.திரு.வி.க அவர்களது நிலையை சரியாகப் புரிந்துகொள்கிறார். தொழிற்சங்கத்தில் அனுபவம் உள்ள அவரது நண்பர் ஒருவரிடம் விஷயத்தைக் கூறுகிறார். அவரது நண்பரும் திரு.வி.க அவர்களோடு ஆன்மீக சொற்பொழிவுகளுக்கு வருகிறார்.அவரடிம் தங்களது துயரங்களைக் கூறுமாறும் அவர் அவர்களுக்கு மன ஆறுதலைத் தருவார் என்றும் தொழிலாளிகளிடம் திரு.வி.க கூறுகிறார்.அந்த மனிதர்தான் தமக்கு மன ஆறுதலைத் தரவல்ல மானுட ரட்சகர் என்று தொழிலாளார்கள் நம்புகிறார்கள். அவரிடம் தமது மனக்குமுறல்களைக் கொட்டித் தீர்க்கிறார்கள். அவர் மற்றதைப் பார்த்துக் கொள்கிறார்.இதுதான் வரலாறு. இதற்குமேல் இந்த விஷயத்தை நீட்டுவது இந்தக் கட்டுரைக்கு தேவை இல்லை.இப்படியாக ஆன்மீகக் கூட்டங்களின் வழியாக நடந்த ஒரு சம்பவத்திற்கு CITU வை கொண்டுவந்து நிறுத்துவது உள்நோக்கம் கொண்டது என்பதை உணர்த்துவதற்காகத்தான் இதை சொல்லவேண்டி வந்தது.தற்போது சாம்சங் தொழிலாளார்கள் ஒன்றிணைந்து CITU சங்கம் கட்டு தங்களது கோரிக்கைகளைக் கட்டி வேலைநிறுத்தத்தை தொடங்கியதால்தான் இந்த வதந்திகளை அவர்கள் பரப்ப ஆரம்பித்தார்கள். அவர்கள் எரிச்சல் கொள்வதற்கு காரணங்கள் இரண்டு1) அவர்கள் தாராளமயவாதிகள்2) சாம்சங் தொழிலாளர்கள் CITU பதாகையின்கீழ் ஒன்றிணைந்திருப்பதுCITU உள்ளே புகுந்தால் தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொள்ள நேரிடும் என்றார்கள். மோதலும் தாக்குதலும் பூமியை ரத்தக் கறையாக்கும் என்றார்கள். ஒருபோதும் இந்தப் பதாகையின்கீழ் தொழிலாளார்கள் வெற்றிபெற முடியாது என்றார்கள்.அத்தனையையும் பொய்யாக்கி சாம்சங் தொழிலாளர்கள் CITU பதாகையின்கீழ் ஒன்றிணைந்து போராடி வெற்றி பெற்றிருக்கிறார்கள்.சாம்சங் பிளைகளுக்கு CITU கையளித்த நம்பிக்கை வார்த்தைகளில் ஒன்றைக்கூட பூமியின்மேல் சிந்தவிடாமல் பத்திரமாக பாதுகாத்துக் கொடுத்திருக்கிறது.17.10.2024 காலை 10.15 மணிக்கு இந்தப் பகுதியை நான் தட்டச்சு செய்துகொண்டிருக்கிறேன். இந்த நொடியில் சாம்சங்கில் வேலைபார்க்கும் நம் பிள்ளைகள் 38 நாட்களுக்குப் பிறகு மீண்டும் வேலை செய்துகொண்டிருப்பார்கள்.அவர்களது மகிழ்ச்சி நிலைக்கட்டும்.  புதிய ஆசிரியன் நவம்பர் 2024
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on November 18, 2024 21:51

October 22, 2024

ஏன் இன்னும் எங்களை வெட்டாமல் விட்டு வைத்திருக்கிறார்கள்?

 


 

அன்புத் தோழர் ஒருவரின் தாயார் சமீபத்தில் இயற்கையோடு கலந்து விட்டார். அந்தத் தோழருக்கு ஆறுதல் கூறுவதற்காக நண்பர்கள் சிலர் அவரது வீட்டிற்கு சென்றிருந்தோம்.

 

அம்மாவின் இறுதி நாட்கள் குறித்து, துக்கம் விசாரிப்பதற்காக வந்து போனவர்கள் குறித்து என்று சுழன்றுகொண்டிருந்த எங்களது உரையாடல் மெல்ல அரசியல் நோக்கித் திரும்பியதும் அந்தத் தோழர் இன்றைய அரசியலை இப்படியாக நச்சென்று வரையறுத்தார்,

 

“இன்றைய அரசியல் என்பது வேறொன்றும் இல்லை. என்னையும் எட்வினையும் வெட்டிக் கொல்வதற்கு எங்கள் கிராமத்து காலனியில் என் வீடு இருப்பதும், எட்வின் என்று இவனது பெயர் இருப்பதுமே அவர்களுக்குப் போதுமானதாக இருக்கிறது”

 

ஒரு கணம் அதிர்ந்து போனேன். விரித்தால் சில நூறு பக்கங்களுக்கு போகக்கூடிய செய்தியை இருபத்தி மூன்றே வார்த்தைகளில் இந்த மனிதனால் சொல்ல முடிகிறதே என்று வியப்பின் உச்சிக்கே போகிறேன்.

 

கோல்வால்கர் விரும்பிய அரசியல் இது. இன்றைக்கு இவர்கள் நிகழ்த்திக்கொண்டிருக்கும் அரசியலும் இதுதான்.

 

நானும் அந்தத் தோழரும் எங்களால் இயன்ற அளவிற்கு அவர்களுக்கு எதிராகக் களமாடிக் கொண்டிருப்பவர்கள். அவர் காலனியில் பிறந்ததற்காகவும் என் பெயர் எட்வின் என்றிருப்பதற்காகவுமே எங்களை வெட்டியிருக்க வேண்டும் அவர்கள். கூடுதலாக அவர்களுக்கெதிராகக் களமாடிக் கொண்டும் இருக்கிறோம். ஏன் இன்னும் எங்களை வெட்டாமல் விட்டு வைத்திருக்கிறார்கள்?

 

எங்களை இன்னும் அவர்கள் வெட்டாமல் விட்டு வைத்திருப்பதற்குக் ஒரே காரணம்தான். இது தமிழ்நாடு. இங்கு அவர்களுக்கு அது அவ்வளவு சுலபமல்ல.

 

இந்துத்துவம் குறித்து அதிகம் பேசப்பட வேண்டியதும் ஆனால் இன்னும் போதுமான அளவு கண்டுணரப்படாததுமான ஒன்று இருக்கிறது. இந்து மதத்தில் பல தெய்வங்கள் உள்ளதென்ற பொதுப் புத்தியிலிருந்துதான் நாம் இந்துத்துவத்தின் அடையாளத்தை உணரத் தலைப்பட்டவர்களாக இருக்கிறோம். இது போதாமை மிக்கது.

 

கோல்வால்கர் இந்து சமூகத்தையே தமது கடவுள் என்கிறார். இந்த சமூகக் கட்டமைப்பின் வடிவம்தான் இந்துக் கடவுளின் உயிர். ஆகவே இந்தக் கட்டமைப்பின் வடிவம் சிதைந்து போனால் தமது கடவுளின் உயிர் போய்விடும் என்று அச்சம் கொள்கிறார். ஆகவேதான் இந்த இந்தக் கட்டுமானத்தின் வடிவமான நால் வர்ணம் சிதைந்து போகாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்று துடிக்கிறார்.

 

பிரம்மனின் தலையில் இருந்து பிறந்தவர்கள் பிராமணர்கள், அவனுடைய தோளில் இருந்து பிறந்தவர்கள் சத்திரியர்கள், அவனுடைய தொடையில் இருந்து பிறந்தவர்கள் வைசியர்கள், அவனுடைய காலில் இருந்து பிறந்தவர்கள் சூத்திரர்கள் என்றுதான் இந்துத்துவர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறோம்.

 

கோல்வால்கரோ பிராமணர்கள் கடவுளின் தலை என்றும், சத்திரியர்கள் கடவுளுடைய தோள் என்றும், வைசியர்கள் அவனுடைய தொடை என்றும் சூத்திரர்கள் கடவுளுடைய கால் என்றும் கூறுகிறார்.

 

தலை இருக்க வேண்டிய இடத்தில் தலையும், தோள் இருக்க வேண்டிய இடத்தில் தோளும் தொடை இருக்க வேண்டிய இடத்தில் தொடையும் கால் இருக்க வேண்டிய இடத்தில் காலும் அந்த உருவம் அழகோடும் உயிர்ப்போடும் இருக்கும் என்றும் கோல்வால்கர் கூறுகிறார்.

 

சுற்றி வளைத்து கோல்வால்கர் சொல்ல வருவது இதுதான்,

 

தலை இருக்க வேண்டிய இடத்திற்கு செல்வதற்கு தோளோ, தொடையோ காலோ ஆசைப்படக் கூடாது. அவையவை அவையவை இடத்தில் இருப்பதோடு அதனதன் பணிகளை செய்துவர வேண்டும்.

 

கோல்வால்கருக்கும் அவரது சீடர்களுக்கும் இந்த அமைப்பை கீழ்க்காணும் விஷயங்கள் சிதைக்க முற்படும் அல்லது கீழ்க்காண்பவற்றால் நால்வர்ணம் சேதப்படுவதற்கு வாய்ப்புண்டு என்று கருதுகிறார்கள்,

 

1)  நால் வர்ணத்தில் இறுதியாக உள்ள சூத்திரர்களின் எழுச்சி
2)  வர்ண அமைப்பிற்கு நேர் எதிராக கொண்டுவரப்பட்டுள்ள இந்திய அரசமைப்பு சட்டம்
3)  வர்ண அமைப்பினுள் கட்டுப்படாத இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள்

 

எண்ஜான் உடம்பில் சிரசே பிரதானம் என்பது வர்ணம் தரும் கௌரவம். எனவே, வர்ணக் கட்டமைப்பிற்கு எதிராக முதல் வர்ணத்தார் ஒருபோதும் கிளர்ச்சி செய்யப் போவதில்லை. இரண்டு மற்றும் மூன்றாவது வர்ணத்தாராலும் இந்தக் கட்டமைப்பிற்கு எதிராக கிளர்ச்சி வெடிக்காது.

 

வர்ணத்திற்குள் இருந்து வர்ணத்திற்கு எதிராக வெடிப்பு கிளம்ப வேண்டும் என்றால் அது சூத்திரர்களால் எழுந்தால்தான் உண்டு. அதிலும் சூத்திரர்களிலும் சூத்திரர்களாக இருக்கக் கூடிய அவர்ணர்களால்தான் இந்த வெடிப்பு ஏற்படும் என்ற சரியான கணிப்பும் கோல்வால்கரிடம் இருந்திருக்கிறது.

 

மனுநீதி மட்டுமே இந்த ஆபத்தில் இருந்து வர்ணத்தைக் காப்பாற்றும் என்ற தெளிவும் கோல்வால்கருக்கும் அவரைப் பின்பற்றுபவர்களுக்கும் இருந்திருக்கிறது. 

 

”பிலிபைன்ஸ் நீதிமன்றத்தில் மனுவின் பளிங்கு சிலை இருப்பதாகவும், அதன் கீழே ‘மனித குலத்தின் மிகச் சிறந்த, முதன்மையான மற்றும் உன்னத சட்ட அமைப்பாளர்’ என்றும் எழுதப்பட்டிருப்பதாகவும் கூறுகிறார் கோல்வால்கர் *1

 

பிலிபைன்ஸ் போன்ற பிற நாடுகளே மனுவைக் கொண்டாடும் போது நாமும் மனுவைத்தானே ஏற்க வேண்டும் என்கிறார்.

 

”மனுதான் இன்றைய இந்து சட்டம் *2 “ என்று கூறுவதன் மூலம் சவார்கரும் மனுதான் இந்தியாவின் சட்டமாகவும் இருக்க வேண்டும் என்கிறார்.

 

இவர்களது ஆசையில் மண் அள்ளிப் போடுகிறது இந்திய அரசமைப்பு சட்டம். அனைவரும் சம்ம் என்கிறது அது. எனவேதான் இவர்கள் இந்திய அரசமைப்பு சட்டத்தை எதிர்க்கின்றனர்.

 

26.11.1949 அன்று இந்திய அரசமைப்புச் சட்டத்தை இந்திய அரசமைப்புச் சட்ட வரைவுக்குழு ஏற்றது முதல் கோல்வால்கரும் ’ஆர்கனைசர்’ இதழும் கொதிக்கத் தொடங்கினர். இன்றும் அது தொடர்கிறது.

 

“அவர்ணத்தார்” ஒருபோதும் தலையாகிவிடக் கூடாது என்கிற இவர்களது கவனம் மிகத் தொன்மையானது.

 

வர்ணத்திற்குள் கட்டுப்படாத சிறுபாண்மையினரைக் கையாள்வதற்கு அவர்களுக்கு உந்துவிசையாக ஹிட்லரே இருக்கறான். அவனது ஜெர்மெனியை ஒட்டியே இந்தியாவையும் கட்டமைக்க வேண்டுமென்று இவர்கள் வெளிப்படையாக விரும்பினார்கள். இப்போதும் விரும்புகிறார்கள்.

 

அவனது சிந்தனை தொட்டு இந்திய சிறுபாண்மையினர் குறித்து கோல்வால்கர் கூறுகிறார்,

 

“அவர்களுக்கு இருப்பது இரண்டே வழிகள். அவர்கள் தேசிய இனத்தோடு இணைவது. அல்லது தேசிய இனத்தவர் அனுமதிக்கும் வரையில் இங்கு தங்கி இருந்து தேசிய இனத்தவர் வெளியேறச் சொல்லும்போது இந்தியாவை விட்டு வெளியேறுவது” *3

 

இப்போது இரண்டு கேள்விகள் இயல்பாக எழலாம்,

 

1)  இப்படி இருக்கையில் நானும் அந்த நண்பரும் எப்படி இன்னும் வெட்டப்படாமல் இருக்கிறோம்
2)  இந்திய அரசமைப்புச் சட்டத்தை மாற்றுவதற்காகவே பதவிக்கு வந்தவர்கள் அரசமைப்பு சட்டப் புத்தகத்தை வணங்க வேண்டியத் தேவை எப்படி வந்தது

 

காரணம் மிக எளிதானது. கோல்வால்கரின் தோழர்களுக்கு எதிரான கடுமையான போராட்டத்தை இடது சாரிகள், காங்கிரஸ், திராவிட முன்னேற்றக் கழகம், சமூக சக்திகள் யாவரும் ஒன்றிணைந்து களமாடியதுதான் அந்தக் காரணம்.

 

களம் இருக்கிறவரை தொடர்ந்து களமாடுதல் அவசியம் என்பது புரியும் நமக்கு.

 

பின் குறிப்பு : *1, *2, *3 தேவனூர மகாதேவா அவர்களது “ஆர் எஸ் எஸ் ஸின் ஆழமும் அகலமும் நூலில் இருந்து

 

- புதிய ஆசிரியன்    அக்டோபர் 2024

 

 

“   

 

 

    ,  

 


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 22, 2024 04:07

September 29, 2024

இத்தனைக்குப் பிறகும் காந்தி …

 
.

 

 

1982 ஆம் ஆண்டின் சிறந்த படமாக “காந்தி”யையும், சிறந்த இயக்குநராக அந்தப் படத்தை இயக்கிய ஆட்டன்பரோவையும் ஆஸ்கார் தேர்வு செய்கிறது. இவைபோக இன்னும் ஆறு விருதுகள் என்ற வகையில் அந்த ஆண்டு எட்டு ஆஸ்கார் விருதுகளை மொத்தமாக அள்ளுகிறது ”காந்தி” திரைப்படம்.

 

விருதினை வாங்குவதற்காக ஆட்டன்பரோ எழுந்து மேடையை நோக்கி நடக்கிறார். மொத்த திரளும் எழுந்து நின்று கைதட்டி ஆரவாரிக்கிறது. ”ரகுபதி ராகவ” பாடல் பின்னணியில் ஒலிபரப்பாகிறது.

 

விருதினைப் பெற்றுக் கொண்டு, “இந்த விருது உலக மக்கள் அமைதியாக வாழ வேண்டும் என்ற காந்தியின் குறிக்கோளுக்கான நமது மரியாதை” என்று ஆட்டன்பரோ சொல்கிறார்.

 

காந்தி படத்தை இயக்கியதால் ஆட்டன்பரோ உலகம் முழுக்கப் போய் சேர்கிறார். அதைஅவரும் உணர்ந்தவராகவே இருக்கிறார். அதனால்தான் அந்த விருதைகாந்தியின் உயரிய குறிக்கோளுக்கான நமது மரியாதை என்று அறிவிக்கிறார்.

 

உண்மை இப்படி இருக்க ஏதோ, ஆட்டன்பரோ படம் எடுத்ததால்தான் காந்தி உலகத்திற்கு அறிமுகமானதாக 2024 இல் கூறுகிறார் மோடி. இதை அவரது சொந்தக் கருத்தென்றோ அதற்கு தங்களால் பொறுப்பேற்க முடியாதென்றோ RSS அமைப்போ பாஜகவோ இதுவரை அறிவிக்கவில்லை.  எனவே அவர்களின் கருத்துதான் இது என்பது உறுதியாகிறது.

 

உலக வரலாற்றை உற்று நோக்கினால் அது ‘திரிபு’ கலந்ததாகத்தான் இருக்கும். இதை முற்றுமாகத் தவிர்க்கவும் இயலாது. ஆனால், பாஜக ஆட்சி திரிபையே இந்திய வரலாறாக மாற்றுவதற்கு முயற்சி செய்து வருகிறது.

 

அவர்களது நீண்டகால செயல் திட்டங்களில் இரண்டாக கீழ்வருவனவற்றைக் கொள்ளலாம்,

 

1)  என்ன பாடுபட்டேனும் காந்தியின்மீது இருக்கும் மரியாதைக்குரிய பிம்பத்தை சிதைப்பது
2)  காந்தியின் இடத்தில் சவார்க்கரை கொண்டுவந்து இருத்துவது

 

இதன் ஒரு பகுதிதான் மோடி “காந்தி” படம் வந்தபிறகே உலகிற்கு காந்தி அறிமுகமானார் என்று அப்பட்டமாக பொய் சொல்வது.

 

04.09.1888 அன்று சட்டம் பயில்வதற்காக லண்டன் செல்வதற்காக காந்தி கப்பல் ஏறிய செய்தியை “கத்தியவார் டைம்ஸ்” என்ற இதழ் வெளியிடுகிறது. இதுதான் காந்தி குறித்து முதலில் வந்த பத்திரிக்கை செய்தி என்று தனது “தென்னாப்பிரிக்காவில் காந்தி” என்ற நூலில் குறிப்பிடுகிறார் ராமச்சந்திர குஹா.

 

தென்னாப்பிரிக்கா சென்ற காந்தி பொது விஷயங்களில் ஈடுபட ஆரம்பிக்கிறார். அங்குள்ள வட்டார இதழ்களான ‘நோட்டல் மெர்குரி’, ‘ஜோஹன்ஸ்பர்க் ஸ்டார்’ போன்றவை இந்த செய்திகளை வெளியிட ஆரம்பிக்கின்றன.

 

காந்தி விரிய விரிய அவர்குறித்த செய்திகளும் ”The Times of London”, “Newyork Times” என்று விரிய ஆரம்பித்ததாக குஹா அதே புத்தகத்தில் குறிப்பிடுகிறார்.

 

1888 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் காந்தியை பற்றிய செய்திகளை வெளியிட ஆரம்பித்த ஊடகங்கள் இன்றுவரை ஓயாமல் உற்சாகம் குன்றாமல் அந்த வேலையை செய்துகொண்டே இருக்கின்றன.

 

1925 ஆம் ஆண்டுதான் RSS அமைப்பே பிறக்கிறது. ஆக RSS பிறப்பதற்கு 37 ஆண்டுகளுக்கு முன்பே காந்தி உலக மக்களிடம் அறிமுகமாகி இருந்தார்.

 

1888 ஆண்டு தொடங்கிய காந்திக்கும் மக்களுக்குமான உறவை 1982 காந்தி திரைப்படம் வெளியான நாளுக்கு மோடி இழுத்து வருகிறார். அதாவது இடையில் 94 ஆண்டுகளை காணாமல் தொலைக்க அவர் முயற்சிக்கிறார்.

 

அறியாமல் இப்படி உளறுகிறாரா என்றால் நிச்சயமாக இல்லை. அறிந்தேதான், ஒரு திட்டத்தோடுதான் இந்தப் பொய்யை சொல்கிறார். இந்தப் பொய்க்குப் பின்னால் அவர்களின் நுட்பமான அரசியல் இருக்கிறது.

 

எப்படியாவது 94 ஆண்டுகால இந்திய வரலாற்றிலிருந்து காந்தியை அப்புறப்படுத்திவிட்டால் இந்திய வரலாற்றில் ஒரு வெற்றிடம் ஏற்படும் என்று அவர்கள் நம்புகிறார்கள். அந்த வெற்றிடத்தில் புல்புல் பறவையின் மீதேற்றியாவது சவார்க்கரைக் கொண்டுவந்து நட்டு வைத்துவிட வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

 

இனி பிறக்கும் குழந்தைகளுக்கு இது சவார்க்கரின் நாடு என்ற வரலாற்றைக் கொடுப்பதற்காக இவர்கள் துடியாய்த் துடிக்கிறார்கள்.  

 

இந்துக்களுக்கு எதிரானவர் காந்தி என்ற பொய்யை நிறுவிவிட்டால் அவரை இந்தியாவிற்கு எதிரானவர் என்றும் நிறுவிவிடலாம் என்று அவர்கள் நம்புகிறார்கள். எனவே அதற்கான முயற்சியில் அவர்கள்  தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.

 

15.08.1947 அன்று புனாவில் ஸ்வஸ்திக் சின்னத்தைக் கொண்ட RSS கொடி ஏற்றப்படுகிறது. சுமார் 500 பேர் கூடியிருந்த அந்தக் கூட்டத்தில் கோட்சே கீழ்வருமாறு  பேசியதை “கோட்சேயின் குருமார்கள்” என்ற தனது நூலில் வைத்திருக்கிறார் தோழர் அருணன்.

 

“இந்தியப் பிரிவினை என்பது கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு துன்பங்களைத் தந்துள்ள பேரழிவு. இதைச் செய்தது காங்கிரஸ். இதைச் செய்தவர் காந்தி”

 

ஆக, இந்தியப் பிரிவினைக்கு காந்தியையும் காங்கிரசையும் கோட்சே காரணமாகக் கூறுகிறான். இன்னும் ஒருபடி மேலே போய் 01.11.1947 அன்று நடந்த ‘இந்துராஷ்ட்ரா’ இதழின் பங்குதாரர்கள் கூட்டத்தில் கீழ்வருமாறு அவன் பேசியதையும் ‘கோட்சேயின் குருமார்கள்’ நூலில் தோழர் அருணன் வைத்திருக்கிறார்.

 

“தனது பிணத்தின் மீதுதான் இந்தியாவைப் பிளக்க முடியுமென்று காந்தி கூறினார். இந்தியா பிளக்கப்பட்டுவிட்டது. காந்தி இன்னும் உயிரோடு இருக்கிறார்”

 
அவர்கள் விரும்பிய இந்து ராஷ்ட்ரத்தை அடைய முடியாமல் போனதற்கு காந்தியின் பங்கு என்ன என்பதை அவர்கள் உணர்ந்தவர்களாகவே இருந்தார்கள். அதனால்தான் காந்தியைக் கொல்வதற்கு அவர்கள் திட்டம் தீட்ட கோட்சே அதை செய்து முடித்தான்.

 

காந்தியின் நினைவு இனியும் அவர்களது ஆசையைத் தடுக்கும் என்பது அவர்களுக்குத் தெரியும். அதை அழித்துவிடத்தான் இத்தனையையும் செய்துகொண்டு இருக்கிறார்கள்.

 

இவர்கள் மட்டும்தான் இப்படி என்று இல்லை. ஒரு பக்கம் இவர்கள் இந்துக்களிடம் காந்தி ஒரு இந்து விரோதி என்று பிரச்சாரம் செய்கிறார்கள். மறுபக்கம் இஸ்லாமிய தீவிரத்தன்மையாளர்கள் இஸ்லாமியர்களிடம் காந்தியை ஒரு இஸ்லாமிய விரோதியாக அடையாளப்படுத்த முயற்சி செய்கிறார்கள்.

 

19.07.1947 அன்று பாகிஸ்தானில் இருந்து வரும் “The Dawn” இதழில் அதன் ஆசிரியர் கேட்டார்,

 

“ இந்துக்களைத் தாக்குகிற இஸ்லாமியர்களை கட்டுப்படுத்துமாறு ஜின்னாவிடம் பேசும் காந்தி ஏன் இஸ்லாமியர்களைத் தாக்கும் இந்துக்களைத்தடுக்குமாறு நேருவிடம் பேசுவதில்லை”

 

”யாருக்கு எதிராக யார் அநியாயம் செய்தாலும் நான் கேட்பேன், நாம் கேட்க வேண்டும். நான் நேருவிடம் இஸ்லாமியர்களின் பாதுகாப்பிற்காகவும் கேட்பேன், ஜின்னாவிடம் இந்துக்களின் பாதுகாப்பிற்காகவும் பேசுவேன்.” என்று டான் பத்திரிக்கையின் ஆசிரியருக்கு காந்தி பதில் எழுதினார்.

 

தந்தை பெரியார் காங்கிரசில் இருந்து வெளியேறும்போது “காந்தி ஒழிக” என்றும் சொல்லியபடிதான் வந்தார். அப்படி சொன்னவர்தான் இந்தியாவிற்கு “காந்தி தேசம்” என்று பெயர் வைக்க வேண்டும் என்றும் சொன்னார்.

 

மதவெறி சக்திகள் இந்தியாவை செரித்துவிடாமல் பாதுகாக்க வேண்டும் என்றால் காந்தியின் நினைவைப் பாதுகாக்க வேண்டும் என்று. அவர் உணர்ந்திருந்தார்

 

ஊடகங்கள், அதிகாரம், இவர்களிடம் இருக்கும் இன்னபிற எந்த ஆயுதங்களைக் கொண்டும் காந்தியின் நினைவை இவர்களால் ஒருபோதும் கொன்றுவிட முடியாது
தீக்கதிர்29.09.2024

 


 

 

 

 

 

 

 


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 29, 2024 04:23

September 19, 2024

உங்கள் பெயர் என்ன?

 

உங்கள் பெயர் என்ன?” என்று எப்போதாவது அவர்கள் உங்களைக் கேட்டிருக்கிறார்களா?. ஆம் எனில் நீங்கள் அவர்களால் நேர்மையாக பதிலளிக்க முடியாத கேள்வியை அவர்களைக் கேட்டிருக்கிறீர்கள் என்று பொருள். இல்லை எனில் அப்படி ஒரு கேள்வியை  நீங்கள் அவர்களை இதுவரை கேட்டதில்லை என்று பொருள்.

 

வழக்கமாக இந்தக் கேள்வியை அவர்கள் செய்தியாளார்களிடம்தான் வைப்பார்கள். இப்போது தம்மைக் கேள்வி கேட்ட ஒரு ஆசிரியரிடத்தில் அவரது பள்ளியில் வைத்தே கேட்டிருக்கிறார்கள். அவருடன் பணிபுரியும் அத்துணை  நண்பர்கள் முன்னிலையிலும் அவரிடம் படிக்கும் குழந்தைகள் முன்னிலையிலும்தான் ஒருவர் கேட்டிருக்கிறார். துயரம் என்னவெனில் “எங்கு வந்து  யாரைக் கேட்கிறாய்? என்று அவர்களில் எவரும் அவரை நோக்கி ஒரு முனகலைக்கூட வைக்கவில்லை.

 

பெயரைத் தெரிந்துகொள்ள ஆசைப்படுவதில் என்ன பிழை இருக்கிறது என்று சிலர்கேட்கக்கூடும். பெயரைத் தெரிந்துகொள்வதற்கான  கேள்வி அல்ல இது. நம்முடைய சமூக அடையாளத்தைத் தெரிந்துகொள்வதற்கான அவர்களது கூர்மையான முயற்சி இது. 

 

ஒரு நேர்காணலில் சிக்கலான ஒரு கேள்வியை ஒரு பிள்ளை திரு சீமானைக் கேட்டபோது அவர் இதே கேள்வியை அந்தப் பிள்ளையை நோக்கிக் கேட்டார். இஸ்லாமியப் பெயராக இருக்கவே, “அப்ப, அப்படித்தான் கேட்ப நீ” என்கிறார்.

 

இந்த பதிலே அசிங்கமானது. அதைக் கேட்ட தொனியும் அப்போது அவர் வெளிப்படுத்திய உடல்மொழியும் அதைவிடவும் அசிங்கமானது.

 

நீ இஸ்லாமியனா எனில் நீ அந்நியன், அப்படித்தான் கேட்பாய் என்பது அதன் பொருள். தொனியும் உடல்மொழியும் அசிங்கம் எனில் அதன்மூலம் அவர்கள் சொல்ல வருவது இந்திய இறையாண்மைக்கு ஆபத்தானது.

 

இதேதான் சென்னை அசோக்நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்திருக்கிறது.. மகாவிஷ்ணு என்பவர் அந்தப் பள்ளிக் குழந்தைகளின் இறுக்கத்தைக் களைந்து அவர்களை உற்சாகப்படுத்தும் முகத்தான் உரையாற்ற அழைக்கப்பட்டிருக்கிறார்.

 

அவருக்கு RSS மற்றும் பாஜகவின் பின்புலம் இருப்பது தெரிகிறது. அவர் மீதான காவல்துறை நடவடிக்கைகளை முன்வைத்து அவர்களது நடவடிக்கைகள் இதை உறுதிசெய்கின்றன. அவரை “ஆன்மீக உரையாளர்” என்று அழைக்கிறார்கள். 09.09.2024 நாளிட்ட “விடுதலை”கூட அவரை ஆன்மீக உரையாளர் என்றே அழைக்கிறது.

 

நாம் இதிலிருந்து வேறுபடுகிறோம். நாம் ஆன்மீகவாதிகள் இல்லை. ஆனால் ஆன்மீகத்தின்மீது வெறுப்போடு இருப்பவர்களும் இல்லை. எது ஆன்மீகம் என்பதில்தான் நமக்கும் அவர்களுக்கும் இடைவெளி இருக்கிறது.

 

மனிதனை மனிதனோடு இணைப்பது ஆன்மீகம் என்கிறோம். அவர்கள் மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே வெறுப்பை விதைக்கிறார்கள். ஆகவேதான்அவர்களை ஆன்மீகவாதிகள் என்று நம்மால் ஒருபோதும் ஏற்பதற்கு இயலவில்லை.மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையே வெறுப்பை விதைப்பது நல்ல ”நம்பிக்கை”கூட இல்லை.

 

மகாவிஷ்ணு என்ன உரையாற்றுகிறார்?

 

இந்தியாவிற்குவந்த ஆங்கிலேயர்கள் இங்கு இருந்த ஓலைச் சுவடிகளை எல்லாம் தீ வைத்து அழித்துவிட்டதாகக் கூறுகிறார். அவர்கள் அழித்த ஓலைச்சுவடிகளில் நிறைய மந்திரங்கள் இருந்ததாகக் கூறுகிறார்.

 

அப்படி அழிக்கப்பட்ட மந்திரங்கள் இப்போது இருந்திருக்குமானால் அவற்றில் ஒரு மந்திரத்தைச் சொன்னால் நம்மால் பறக்கமுடியும் என்றும்,

 

இன்னொரு மந்திரத்தைச் சொன்னால் சொன்ன மாத்திரத்தில் அக்கினி மழை பெய்யும் என்றும்,

 

நமது இந்தப் பிறவி என்பது நமது முற்பிறப்பில் நாம் செய்த பாவ புண்ணியத்தின் விளைவு என்றும் கூறி இருக்கிறார்.

 

இப்படியாக அவர் அடுக்கிக்கொண்டே சென்றிருக்கிறார். அவர் சொன்னவை அறிவியல் பூர்வமாக இல்லை என்பதைக்கூடவிட்டுவிடலாம். “நம்பிக்கை”க்குள்கூட அடங்காத மூட நம்பிக்கைகளாக அவைஇருப்பதையும், போக, அவரது இந்த உரை
கிறிஸ்தவர்கள்மீதான வெறுப்பினை குழந்தைகளிடம் கொண்டு வரும் என்பதையும்உணர்ந்த அந்தப் பள்ளியின் தமிழாசிரியர் திரு சங்கர் அவர்கள் அவரது உரைக்கு எதிராக் குரல் கொடுக்கிறார்.

 

அரசுப் பள்ளியில் இதுமாதிரி பேசக்கூடாது என்கிறார் ஆசிரியர்சங்கர்.

 

அதற்கு விஷ்ணு கூறியவற்றில் மூன்றை உற்று நோக்குவது அவசியம்,

 

1)  அந்தத் தமிழாசிரியரின் பெயரைக் கேட்டிருக்கிருக்கிறார் விஷ்ணு.
2)  திரு சங்கரது பார்வைக் குறைபாடு என்பது அவரது போன ஜென்மத்து கர்மவினை என்றிருக்கிறார்
3)  தான் பேசியவற்றை எல்லாம் பள்ளிகள் தாமே சொல்லிக் கொடுத்திருக்கும் என்றால் தான் பள்ளிகளுக்கு வரவேண்டிய தேவையே இருந்திருக்காது என்றிருக்கிறார்

 

ஆக, அவரது அந்த உரையை எந்த விதத்திலும் தற்செயலானது என்று கொண்டுவிட இயலாது. திட்டமிட்டு தயாரிக்கப்பட்ட உரை அது.

 

சங்கரது பெயர் ஜான் என்பதாகவோ அல்லதுஇஸ்மாயில் என்பதாகவோ இருந்திருந்தால் அவரை தேசத்துரோகி என்கிற நிலைக்கு நகர்த்தி இருப்பார் விஷ்ணு. அது முடியாமல் போனதும் அவரது உடல் குறைபாட்டை அவரது முற்பிறவியின் பாவத்தின் கொடை என்று கூறுகிறார்.

 

இதை எல்லாம் நீங்கள் சொல்லிக் கொடுத்திருந்தால் எனக்கு இங்கு வரவேண்டிய அவசியமே இருந்திருக்காது என்கிறார்.

 

தமிழ்நாட்டில்பள்ளிகளில் ஆன்மீகத்தின் பெயரில் மூடநம்பிக்கைகளை சொல்லித் தருவதில்லை. இது இவர்களை உறுத்தி இருக்கிறது. ஆகவேதான் தான் உள்நுழைவதாக விஷ்ணு கூறுகிறார். எனில், இதற்குப் பின்னால் ஒரு திட்டமிடல் இருக்கிறது.

 

ஆன்மீகம் என்றால் என்னவென்று இவர்களுக்கு இரண்டு திருவாசகப் பாடல்கள் மூலம் சொல்லலாம் என்று தோன்றுகிறது.

 

”நமச்சிவாயவாழ்க நாதன்தாள் வாழ்க
இமைப்பொழுதும் என்னெஞ்சில் நீங்காதான் தாள்வாழ்க
கோகழி யாண்ட குருமணிதன் தாள்வாழ்க
ஆகமம் ஆகிநின்று அ@ண்ணிப்பான் தாள்வாழ்க
ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க”

 

இதுதான் தமிழ் கையளிக்கும் ஆன்மீகம். எல்லாமதங்களும் தம் கடவுள் மட்டுமே உண்மை என்று பிரச்சாரம் செய்யவும் அப்படியான பிரச்சாரத்தின் மூலம் சங்கடங்களைக் கொண்டுவரவும் முனைகிறபோது தமிழ் வேறுவிதமாக சகலரையும் இணைக்க முயற்சிக்கிறது.

 

“ஏகன் அநேகன் இறைவன் அடிவாழ்க”

 

அநேக பெயர்களில், அநேக வடிவங்களில் இருக்கும் ஒரே இறைவனே உன்னை வணங்குகிறேன் என்கிறது தமிழ் ஆன்மீகம்.

 

இது, இதுதான் ஆன்மீகம்.

 

இதை சொல்லிக் கொடுத்து ஒற்றுமையை வளர்த்தால் கொண்டாடலாம்.

 

 

”தென்னாடுடையசிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”

 

இதுவும் திருவாசகம்தான்.

 

தென்னாட்டில் நாங்கள் சிவனே என்று அன்போடு அழைத்து வணங்கும் உலகின் அனைத்து மக்களுக்குமான இறைவனே உன்னை வணங்கிப் போற்றுகிறோம் என்பதுதானே இதன் பொருள். உலகில் ஒவ்வொரு பிரிவினரும் உன்னை ஒவ்வொரு பெயரால் அழைக்கிறார்கள். நாங்கள் உன்னை சிவனே என்று அழைக்கிறோம் எங்கள் இறைவனே. அவர்களுக்கு நீ ஏசு, இன்னும் சிலருக்கு நீ அல்லா, இன்னும் சிலருக்கு நீ விஷ்ணு, எல்லோருக்கும் நீ இறைவன். இதை சொல்லுங்கள், ஏன் சண்டை வரப்போகிறது.

 
இவைதான் இறை நம்பிக்கை இல்லாத நாத்திக மனிதனையும் முகம் சுளிக்காது புன்னகைக்க வைக்கும் தமிழ் ஆன்மீகம்.

 

வள்ளுவர் இன்னும் ஒரு படி மேலே போகிறார்,

 

”வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும்
தெய்வத்துள் வைக்கப்படும்”

 

இந்த வாழ்க்கையை செம்மையாக, உத்தமமாக வாழ்ந்தால் அவன் வானுறையும் தெய்வமாக்க் கொள்ளப்படுவான் என்கிறார்.

 

இது ஒருவகையான ஆன்மீகம்.

 

இந்த நேரத்து அவசியத் தேவையாக நாம் கருதுவது எது ஆன்மீகம் என்கிற ஒரு உரையாடல்


தீக்கதிர்

12.09.2024


 

 

 

 

 

 

 

 

 


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 19, 2024 02:53

நாகரிக சமூகக் கட்டமைப்பிற்கான முன் நிபந்தனை பெண்கல்வி

 

தந்தை பெரியாரை சிந்தனையாளர் வரிசையில் வைத்து உலகம் கொண்டாடவில்லை. ஆனால்உலகத்தில் எந்த தலைசிறந்த சிந்தனையாளர் அளவிற்கும் கடுகளவு குறைவாகவும் சிந்தித்தவர்இல்லை அவர். பிறகு ஏன் அவரை உலகம் சிந்தனையாளர்கள் அடுக்கு வரிசையில்வைக்கவில்லை.

 

அவரை அப்படி சிந்தனையாளர் அடுக்கில் ஏதேனும் ஒரு இடத்தில் சொறுகிவிடுவதுஎளிதல்ல. காரணம் அவர் களத்தில் தனது சிந்தனைகளை காலம் முழுவதும் செயல்படுத்தியசெயற்பாட்டாளர்.

 

தந்தை பெரியார் எழுத்தாளர் என்று அறியப்பட்டவரும் இல்லை. ஆனால்எழுதிக் குவித்திருக்கிறார். சரியாக சொல்வதெனில் சிறந்த எழுத்தாளர்என்று அறியப்படுபவர் எவரைக் காட்டிலும் அதிகப் பக்கங்களை எழுதிக் குவித்திருக்கிறார்.

 

ஐந்து தொகுதிகளைக் கொண்ட “நான் பேசினால் உனக்குஏன் கோவம் வரவேண்டும்”, இரண்டு தொகுதிகளைக் கொண்ட ”ஈ.வெ.ராமசாமியாகிய நான்”என்று அவரது எழுத்துகளை தொகுத்திருக்கிறார் தோழர் பசு.கவுதமன். இந்த ஏழு நூல்களும்  A4 அளவில் 3648 பக்கங்கள் அளவிற்கு நீள்கின்றன. இவற்றை, சாதாரண, ஒன்றுக்கு எட்டு அளவு புத்தகங்களாக்கினால் குறைந்ததுஏழாயிரம் பக்கங்கள் வரும்.

 

இதுபோக ஆணைமுத்து அய்யா சில ஆயிரம் பக்கங்களை தொகுத்திருக்கிறார். இரண்டுதொகுதிகளை உள்ளடக்கிய “குலக்கல்வி ஒழிந்த கதை” ஒன்றுக்கு எட்டு அளவில் மாற்றினால் 2500 பக்கங்கள் வரும்.1957 சட்ட எரிப்பு போராட்டத்தை ஒட்டிய அவரது எழுத்து இன்னும் சில ஆயிரம்பக்கங்களை எட்டும்.

 

மக்களுக்கான அனைத்தையும் சிந்தித்து இருக்கிறார். அவற்றைஎழுதி இருக்கிறார், பேசியிருக்கிறார், களமாடிஇருக்கிறார். இவை அனைத்திலும் பல இடங்களில் நமக்கு முரண்பாடுகள்இருக்கவே செய்கின்றன. உயிரோடு இருந்த காலத்தில் நமது முரண்பாடுகளைஅவர் அங்கீகரிக்கவும் மதிக்கவும் செய்திருக்கிறார்.

 

தீண்டாமை ஒழிப்பு, சாதி ஒழிப்பு, குலக்கல்விஒழிப்பு, இந்தி எதிர்ப்பு, பல பிரிவுகளில்அவர் இயங்கி இருந்தாலும் பெண்கள் குறித்த அவரது சிந்தனையும் செயல்பாடும் மிக முக்கியமானவை.

 

யாரை விடவும் பெண்களைக் குறித்து குறைவாக சிந்தித்தவரில்லைபெரியார் என்று உறுதியாக சொல்லலாம்.வேறு எந்த விஷயத்தை விடவும் பெண்களைக் குறித்து குறைவாக பெரியார் சிந்தித்ததுஇல்லை என்றும் உறுதியாகக் கொள்ளலாம்.

 

அவர் பெண்களைக் குறித்து எளிய மொழியில் கூறிய மூன்று மிகமுக்கியமானவை

 

1)  பெண்களின் கையிலிருந்து கரண்டியைப் பிடுங்கிவிட்டுபுத்தகத்தைக் கொடுக்க வேண்டும்
2)  துரதிருஷ்டவசமாக நான் தலைமை அமைச்சராகப் பொறுப்பேற்றால்ஐந்து ஆண்டுகளுக்கு பெண்களுக்கு மட்டுமே பள்ளிக்கல்வி என்று ஒரு சட்டத்தைஇயற்றுவேன்
3)  உங்களுக்கு பெண்குழந்தை இருந்து உங்கள் ஊரில் பள்ளி இல்லை என்றால்பள்ளி இருக்கும் ஊருக்கு அவள் படிப்பு முடியும் வரைக்குமாகிலும் குடும்பத்தை மாற்றுங்கள்

 

அந்தக் காலத்தில் கல்வி, அறிவு, சொத்து என எதுவும் பெண்களுக்கு இல்லை என்று இருந்தது. இன்னும் உடைத்து சொல்வதெனில் இவற்றை பெண்கள் பெண்கள் கைகளுக்கு போகாமல் பார்த்துக்கொள்வது ஆண்களின் கடமை என்று சொல்லப்பட்டிருந்தது.

 

கொஞ்சம் கொஞ்சமாக கலகங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக வெடித்துச்சிதற ஆரம்பித்தது. அதன் விளைவாக பிரிட்டிஷ் அரசு பெண்களுக்கு கல்விஅளிப்பது குறித்து ஒரு கருத்துக் கேட்பு நடத்துகிறது.

 

பெண் கல்வியை இனி தடுக்கவே முடியாது என்பது தெளிவாகத் தெரிந்தபின்பும்கூடஅதற்கு தன்னாலான அளாவு முட்டுக்கட்டையைப் போடுவதற்கு அன்றைய சமூகம் முயற்சி செய்தது.

 

பெண்களுக்கு கல்வி தரலாம் என்பதில் தாங்கள் உடன்படுவதாக அவர்கள்இறங்கினார்கள். ஆனால் அதற்காக பெண் பிள்ளைகள் பள்ளிகளுக்குப் போகத் தேவை இல்லைஎன்று வாதிட்டார்கள். பெண்கள் வெளியே போவது என்பது தங்களது சாஸ்திரத்திற்குஎதிரானது என்றும், அது பெண்களது பாதுகாப்பிற்கு ஊறு விளைவிக்கும்என்றும் அவர்கள் சொன்னார்கள்.

 

ஆகவே ஆண்கள் பள்ளியில் படித்து வந்ததை வீட்டில் பெண்களுக்குசொல்லித்தர ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்கள்.

 

ஆண்கள் பள்ளிகளில் பயின்று வந்ததை வீட்டில் தங்கள் பெண்களுக்குசொல்லித் தருவதாக அவர்கள் ஒத்துக் கொண்டதையே ஏதோ பெரிய புரட்சி  என்கிற அளவிற்கு அவர்கள் ஊதிப் பெரிதாக்கமுயன்றார்கள்.

 

பெண்கள் பாதுகாப்பும் ஊனப்படாது, அவர்களுக்குகல்வியும் கிடைக்கும் என்று அவர்கள் ஒரு தற்காப்பு ஆட்டத்திற்கு வந்தார்கள்.

 

இவர்கள் எதை தம் பெண்களுக்கு சொல்லித் தருகிறார்கள் என்பதை யாராலும்சோதிக்க முடியாது. இவர்கள் தங்கள் பெண்களுக்கு சொல்லித் தருகிறார்களாஎன்பதையேகூட யாராலும் ஆய்வு செய்ய முடியாது.

 

இதை நன்கு அறிந்தவராகவே தந்தை பெரியார்  இருந்தார். எனவேதான் அவர்களது சகலவிதமான சனாதன தற்காப்பு தடுப்பு வித்தைகளையும் உடைத்துக்கொண்டு உள்புந்து நடு ஸ்டம்ப்பை வீழ்த்தும் யார்க்கரை வீசினார்.

 

“உன் ஊரில் உன் பெண்குழந்தை படிப்பதற்கு பள்ளிக்கூடம் இல்லை என்றால்பள்ளிக்கூடம் உள்ள ஊருக்கு அவள் படிப்பு முடியும் வரைக்குமாகிலும் புலம் பெயர்ந்துபோ” என்றார்.

 

அடுப்படியே கோவில் என்றார்கள். சரி,கோவிலுக்கு நீயும் போ என்றார். அவள் சமைக்க வேண்டாமாஎன்றார்கள். நீயும் சமை என்றார். கரண்டிஎன்பது பெண்களின் தன்மானத்தை அழித்தொழிக்கும் ஆயுதம் என்பதை தந்தை பெரியார் நன்கு உணர்ந்திருந்தார்.பெண்களுக்கு எதிரான ஆயுதத்தை பெண்களின் கையிலேயே கொடுத்து வைத்திருந்தசமூகத்தின் ஜாலத்தை அவர் உணர்ந்திருந்தார்.

 

ஆகவேதான் பெண்களின் கையில் புத்தகத்தை கொடுக்க வேண்டும்என்பதோடு அவர் நிறுத்திக் கொள்ளவில்லை. கரண்டியைப் பிடுங்கிவிட்டு புத்தகத்தைக்கொடுக்க வேண்டும் என்கிறார்.

 

கரண்டி இருக்கிறவரை எத்தனை புத்தகங்களை அவள் கைகளில்திணித்தாலும் அவளால் படிக்க இயலாது.பெண்கள் கரண்டியைத் தொடக்கூடாது என்று பத்து கட்டை அளவிற்கு குரலெடுத்து உரத்துக்கத்தினால்தான் ஆண்களும் பெண்களும் கரண்டியையும் புத்தகத்தையும் சமமாகப்பகிர்ந்துகொள்ளும் ஒரு நிலை வரும் என்பதை பெரியார் நன்கு உணர்ந்தவராக இருந்தார்.

 

பெண்களைக் கட்டாயம் பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று அவரால்ஏன் நிறுத்திக் கொள்ள முடியவில்லை?.ஐந்து ஆண்டுகளுக்கு பெண்களுக்கு மட்டுமே பள்ளிக் கல்வி என்று சிந்திக்கவேண்டிய அவசியம் ஏன் பெரியாருக்கு ஏற்பட்டது?

 

பெண்களுக்கு மட்டுமே கல்வி என்பதை ஒரு குறிப்பிட்ட காலம்வரைக்குமேனும் நடைமுறைப்படுத்தினால்தான் ஆண் பெண் கல்வி சமத்துவத்தை வருங்காலத்தில்நினைத்துப்பார்க்க முடியும் என்பது அவருக்கு தெளிவாகத் தெரிந்திருந்தது.

 

பெரியாரின்கல்வி குறித்த, குறிப்பாக பெண் கல்வி குறித்த சிந்தனைகளை தமிநாடு கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களே சரியான அலைவரிசையில் உள் வாங்கின. ஆகவேதான் கல்வியும் ஆண் பெண் சமத்துவமும் வேறெந்த இந்தியப் பகுதியிலும் இல்லாத அளவிற்கு இந்தப் பகுதியில் செழித்திருக்கின்றன.

 

 

பெண்களுக்கு நல்ல கல்வியைக் கொடுத்துவிட்டால் தங்களது திருமணம்உள்ளிட்ட சகலத்தையும் அவர்களே பார்த்துக் கொள்வார்கள் என்பதுதான் பெரியாரின் சிந்தனை. இதனைசரியாக உள்வாங்கிய தமிழ்நாடு அரசு அதுவரை பெண்களின் திருமணத்திற்காக கொடுத்து வந்தஉதவித் தொகையை நிறுத்துகிறது.

 

மாராக “மூவாலூர்ராமாமிர்தம் உயர்கல்வி உதவித்தொகை”யாக அதை மாற்றுகிறது. அதன்பிறகு தமிழ்நாட்டில் உயர்கல்விபடிக்கும் பெண்களின் எண்ணிக்கை34 சதவிகிதம் உயர்ந்திருப்பதாக31.05.2024 தமிழ் இந்து கூறுகிறது.

 

நம்பிக்கை இருக்கிறது,

 

பட்டங்கள் ஆள்வதை, சட்டங்கள் செய்வதை நமது பெண்கள் நிகழ்த்துவார்கள்.அதைப் பார்ப்பதற்கு கிழவன் இல்லை. பேரப் பிள்ளைகள்நாம் பார்த்துவிட்டுப் போவோம்.
புதிய ஆசிரியன்செப்டம்பர் 2024

 


 

 


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 19, 2024 02:44

September 12, 2024

கவிதை 103

 
காசா
ஒரு பள்ளியின்
சுற்றுச்சுவருக்கும்
சிதிலமடைந்த
ஒரு கட்டிடத்திற்குமிடையே
பதுங்கிப் பதுங்கி
சிறுநீர் கழித்துக் கொண்டிருந்த சிறுவனை
இஸ்ரேலியத் துப்பாக்கி ஒன்று
சுட்டுத் தள்ளியதை எப்படியோ
மோப்பம் பிடித்து
வந்து சேர்கின்றன
இரண்டு பிணந்தின்னிக் கழுகுகள்
வழக்கமாக
தின்னப் பிணம் கொடுத்த கடவுளுக்கு
நன்றி சொல்லி
தாய்க் கழுகு தொடங்கும் துதிபாடலை
ஆமேன் சொல்லி முடித்துவைக்கும்
இளைய கழுகு
துப்பாக்கியையும் 
ரவைகளையும் தந்த
அமெரிக்காவையும்
குறிபார்த்து சுடும் ஆற்றலை
சுட்டவனுக்கு கொடுத்த 
கடவுளையும் சபித்தது
முதல் கொத்திற்காக 
ஆமேனை எதிர்பார்த்திருந்த
தாய்க்கழுகிற்கு
வரமல்ல
தம் முன்னே கிடக்கும் உணவு 
சாபம் என்று தோன்றியது
போய்விடலமா மகனே என்கிறது
நாம் போனால்
குப்பை வண்டியில்
குப்பையோடு குப்பையாய்
இந்த குழந்தையின் உடலை
கொண்டு போவார்கள்
இந்த உடலை புசிப்பது
இந்த உடலுக்கான நம் மரியாதையும்
கடவுளுக்கான நமது சாபமும் என்றது
இளைய கழுகு
குழந்தையின் உடலில்
அலகை இறக்குகிறது
தாய்க்கழுகு
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 12, 2024 01:45

September 3, 2024

இந்தியாவிற்குமான திருப்பத்தை மக்கள் தருவார்கள்

 

தன்வசம் இருந்த ஆறு இஸ்ரேலிய பிணையக்கைதிகளை ஹமாஸ் கொன்றுள்ளதாக தகவல்கள் வருகின்றனஅப்பாவி மக்களை யார் கொன்றாலும் கண்டனத்திற்கு உரியதுதான்கண்டிக்கிறோம்இந்த நிலைக்கு ஹமாஸைத் தள்ளியதில் இஸ்ரேலின் அணுகுமுறைதான் காரணம்இதை மிகச் சரியாக இஸ்ரேலிய மக்கள் உணர்ந்திருக்கிறார்கள்ஹமாஸ் ஆறு இஸ்ரேலியர்களை கொன்றதற்கு இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகுவின் அலட்சியமும் ஆணவமுமே காரணம் என்றும்ஆகவே நேதன்யாகு பதவி விலகவேண்டும் என்றும் கோரிஐந்து லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தெருவிற்கு வந்திருக்கிறார்கள்இஸ்ரேலின் மக்கள் தொகை 97 லட்சம்தான்இதில் குழந்தைகள், முதியவர்கள், இயலாதவர்கள் கணக்கு 30 லட்சம் வரும்ஆக போராடும் சக்தி கொண்டவர்களில் பன்னிரண்டில் ஒருவர் தெருவிற்கு வந்து விட்டார்கள்இது சிறுகச் சிறுகக் கூடும்கிட்டத்தட்ட ஒரு சதவிகிதம் சீனர்களின் போராட்டம்தான் சீனத்தை மாற்றியதுஎகிப்து இப்படியான கொதிநிலையில்தான் மாறியதுஇலக்கிலும் நெறிப்படுத்துதலிலும் கொண்டிருந்த போதாமை எகிப்தை ஒழுங்கமையாமல் தடுத்தனகிட்டத்தட்ட இலங்கைசமீபத்தில் வங்கதேசம்திருந்தாவிட்டால்மக்களை முன்னிருத்தாவிட்டால்இஸ்ரேலுக்கு மட்டுமல்லஇந்தியாவிற்குமான திருப்பத்தை மக்கள் தருவார்கள்மக்கள் பலம் எதனினும் பெரிது
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 03, 2024 06:19

September 2, 2024

ஹிமந்த பிஸ்வா சர்மா யாருக்கும் இரண்டாம் நபராகத் தெரியவில்லை

 

இஸ்லாமிய எதிர்ப்பில்அசாம் மாநில முதல்வர் இஸ்லாமியர்கள்மீது தனது வன்மத்தைக் காட்ட எந்த அபத்தத்தையும் அசிங்கத்தையும் செய்வதற்கு இவர் தயங்குவதே இல்லைஅசாம் சட்டமன்றம் கூடும் நாட்களில்வெள்ளியன்று மதியம் 12 மணிமுதல் 02 மணிவரை தொழுவதற்காக இடைவேளை விடப்பட்டு வந்ததை ரத்து செய்திருக்கிறார்பாஜக கூட்டணிக் கட்சிகளான ஐக்கிய ஜனதா தளமும் லோக் ஜனசக்தியும்கூட கடுமையாக எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 02, 2024 00:04

September 1, 2024

நடைமுறையில் பொய் கவிதை 102

 



நான் செத்துப்போன செய்திகுறுஞ்செய்தியில் வருவதற்கும்
அண்ணே டீ என்றுகலியன் சொல்வதற்கும்சரியாக இருந்தது
கல்லுமாதிரிநிற்கும் நான்
கலியன் கடையில்ஒரு கிளாஸ் தேநீர் பருகியபடிஒன்றரை பேரல்அரசியல் பேசும் நான்
செத்ததாக நம்பமுடியவில்லைதானே
ஆனால்,
அனிதாசெத்துப்போனதாகவும்
மருத்துவம் இல்லைனாபடிக்க ஏதும் இல்லையா என்ன என்றுபிள்ளையின் மரணத்தைஏளனித்தவர்கள்
காரில் போவதாகவும்சாமி போவதாகவும்நம்பமுடியவில்லைதானே
செத்தவர்களைத்தான்புதைப்போம் என்பதும்
செத்தவர்களால்காரில் போகவோகறி வாங்கப் போகவோமுடியாது என்பதெல்லாம்
நடைமுறையில் பொய்


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 01, 2024 23:47

August 26, 2024

கவிதை 089

 

முகில்கள்என் தலைக்குமேல்உரசிக்கொள்ளத் துவங்கும்ஒவ்வொரு முறையும்நீ உரையாடத் துவங்குவதுதற்செயலாகத்தான்
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on August 26, 2024 00:47

இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.