புனைவாகவும் வரலாறுதிரபற்றும்…

 


“கலை கலைக்காக” என்பதை உறுதியாக ஏற்க மறுப்பவர் தோழர் தளபதிராஜ். இன்னும் சரியாக சொல்வதெனில் “கலை மக்களுக்காக” என்பதில்கூட போதாமை இருப்பதாக உணர்பவர் அவர்.

 

“சகலமும் பெரியாருக்கு” என்று கருதும் நானறிந்த தீவிர பெரியார் தொண்டர்களில் தளபதிராஜ் ஒருவர்.

அவரிடமிருந்து வைக்கம் வெற்றியின் நூற்றாண்டுவிழா நேரத்தில் “நாலு தெருக் கத” என்கிற நாவல் ’திராவிடன் குரல்’ வெளியீடாக வந்திருக்கிறது.

”சரி! தூக்கம் வரலைனா அந்த வைக்கம் கதையைச் சொல்லுங்களேன்!” என்று இனியவனிடம் தேன்மொழி கேட்பதாக இந்தநாவலின் இருபத்தி ஆறாவது பகுதி முடியும்.

தூக்கம் வருகிறவரைக்கும் சொல்கிற மாதிரியாகவும் கேட்கிற மாதிரியாகவும் வைக்கம் போராட்டத்தை கதையாக சொல்ல முடியுமா?

’முடியும்’ என்று முயற்சித்து நிறுவி இருக்கிறார் தளபதிராஜ்.

இந்த நாவலில் வரும் அறிவுக்கரசு, பார்வதி, வடிவேலு, முத்தம்மா, இனியவன், தேன்மொழி, எழிலரசி, இளமாறன், மல்லிகா உள்ளிட்ட அனைத்துக் கதாபாத்திரங்களும் அவர்கள் வழியாக ஏதோவொரு வகையில் பெரியாரையும் அவரது சித்தாந்தத்தையும் வாசகர்களிடம் கொண்டு செல்வதற்காக படைக்கப் பட்டவர்கள்.

அதிலுங்குறிப்பாக தேன்மொழி மற்றும் இனியவன் ஆகியோரை அவர்கள் வழியாக வைக்கம் போராட்டத்தை வாசகர்களிடம் கொண்டு செல்வதற்காகவென்றே படைத்திருக்கிறார் ஆசிரியர்.

கதைகளை, புராணங்களை வரலாறாக திரித்துக் கொண்டிருக்கும் இன்றைய போக்கு குறித்து இந்த நாவலின் முன்னுரையில் பழ.அதியமான் மிக அழகாக சொல்கிறார். அவர் சுட்டும் அந்தப் போக்கை முன்னெடுப்பதற்காக எத்தனை லட்சம் கோடிகளை வேண்டுமானாலும் வாரிக்கொட்டுவதற்கு இன்றைய பாஜக அரசு தயாராக இருக்கிறது.

அவர்களுக்கென்ன இருக்கவே இருக்கிறார் நிதியமைச்சர் நிர்மலா மேடம் .ஏதோ ஒரு வரியைப் போட்டு மக்களைச் சுரண்டி அதை இந்தப் பக்கமாக மடைமாற்றி விடுவார்.

கதைகளை வரலாறாகத் திரிப்பதற்கு மெனக்கெடத் தேவை இல்லை. ஆனால் வரலாறு ஒன்றினை கதை ஆக்குவதற்கு தரவுகள் வேண்டும். அதற்காக மெனக்கெட வேண்டும் .தரவுகளைத் திரட்டிவிட்டால் மட்டும் போதாது. அதைக் கதைப்படுத்த வேண்டும்.

புனைவாகவும் இருக்க வேண்டும். வரலாறும் திரபற்று இருக்க வேண்டும்.

இத்தனையையும் ஐந்தாம் பக்கம் தொடங்கி 196 ஆம் பக்கத்திற்குள், அதாவது 192 பக்கங்களுக்குள் தருவதென்பது …

மெனக்கெட்டிருக்கிறார் தளபதிராஜ்.

பிரச்சாரம் கலை ஆகுமா? ஆகும் என்று நிரூபித்திருக்கிறார் தோழர்.

யூனியன் கார்பைடு விஷவாயு கசிந்து கொத்துக் கொத்தாக மக்கள் செத்துக்கிடந்த வேளையில் அதற்கெதிரான பேரணி ஒன்று சென்னையில் நடந்தது. அதற்கான முழக்கத்தில் ஒன்றாக,

 “வானம் வேண்டும்                                               பூமிவேண்டும்                                                     வாழும் உரிமை                                               வேண்டும் வேண்டும்”

என்று எழுதுகிறார் தோழர் இன்குலாப். இது பேரணித் தோழர்களின் முழக்கத்திற்காக எழுதப்பட்ட வரிகள்தான். இதை கவிதை இல்லையென யாரால் மறுக்க முடியும்?

முழக்கத்தை கவிதையாக்கலாம் என்று நிறுவியவர் தோழர் இன்குலாப்.

ஒரு போராட்ட வரலாற்றினை ஒரு நாவலாகத் தரமுடியும் என்று “நாலு தெருக் கத” மூலம் நிறுவியிருக்கிறார் தளபதிராஜ்.

போராட்டத்தை கதைப்படுத்துவதற்காக இவர் உருவாக்கிய கதையையும் இவர் சல்லிசாக விட்டுவிடவில்லை.

இந்தக் கதையில் இரண்டு பெண்பார்க்கும் படலங்கள், இரண்டு இணையேற்புகள், இரண்டு பிள்ளைப்பேறுகள், ஒரு கார் வாங்குதல், ஒரு மரணம், ஒரு படத்திறப்பு என்று நிகழ்வுகள் உள்ளன. அ

அந்த நிகழ்வுகளுக்கான தாயாரிப்புகளையும், நிகழ்வுகளையும் அவற்றின் விளைவுகளையும் எழுதும்போது எனக்கு நான் இன்றைக்கும் வியந்துபார்க்கும் எனது பதினாறு வயதில் வாசித்த வாசந்தி அம்மாவின் எழுத்து வசீகரத்தைக் காணமுடிகிறது.

ஒரு போராட்டத்தை வால்யூம் வால்யூமாக வாசித்து, குறிப்பெடுத்து, திரும்பத் திரும்ப அதை வாசித்தாலும் கொஞ்சம் மறந்து போவதை அனுபவித்திருக்கிறோம்.

கதைவழி வரும்பொழுது அந்த மறத்தலின் அளவு வெகுவாகக் குறையும்.

அதற்கு கேட்கிற மாதிரி கதை சொல்ல வேண்டும். இதில் பெருமளவு வெற்றி பெற்றிருக்கிறார்.

அதுவும் முதலில் திறக்கப்படாத கிழக்குத் தெரு குளத்தில் இனியவன் கால் நனைக்கும் போது நம்மிடம் சிலிர்ப்பைக் கொண்டுவருவதன் மூலம் இரண்டு பகுதிகளையும் நேர்த்தியாக இணைக்கிறார்.

வைக்கத்திற்கு வருமாறு தன்னை ஜார்ஜ் ஜோசப்பும் கேசவமேனனும் கையொப்பமிட்டு கடிதமனுப்பியதாக பெரியார் கூறியதாக ஆசிரியர் வீரமணி “வைக்கம் போராட்ட வரலாறு” நூலில் வைத்திருப்பதாக நியாபகம்.

இந்த நூலில் வேறுமாதிரி இருக்கிறது. சரிபார்க்க வேண்டும்.

இப்படியான நூல்கள் வரவேண்டும்.

வைக்கம் போராட்டத்தை காமிக்சாக கொண்டுவர இருப்பவர் யாராக இருப்பினும் அவருக்கு இப்போதே என் முத்தம்


தீக்கதிர், 20.01.2025

 



 •  0 comments  •  flag
Share on Twitter
Published on March 03, 2025 00:44
No comments have been added yet.


இரா. எட்வின் [R.Edwin]'s Blog

இரா. எட்வின் [R.Edwin]
இரா. எட்வின் [R.Edwin] isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow இரா. எட்வின் [R.Edwin]'s blog with rss.