P.A. Krishnan's Blog, page 7

December 21, 2021

கீசுகீசென்று!

தில்லியில் காலையில் கீசுகீசென்று பறவைகள் பேசும் பேச்சரவம் இன்றும் எனக்குக் காலையில் கேட்கிறது. ஆனால் அறுபது ஆண்டுகளுக்கு முன்னால் திருநெல்வேலி வரதராஜப் பெருமாள் சன்னிதித் தெருவில் எனக்கு பறவைகளின் அரவத்தைக் கேட்ட ஞாபகமே இல்லை. அன்று காலையின் அரவங்கள்- ஓசைகள்- வேறு. கனத்த, கறுப்புப் போர்வையையும் துளைத்துக் கொண்டு திண்ணையில் படுத்துக் கொண்டிருந்த என்னை எழுப்பியது, பெண்கள் திருப்பாவையை முணுமுணுத்துக் கொண்டு கோலம் போடுவதற்காக வாசலைப் பெருக்கித் தெளிக்கும் ஓசை. எதிர்த்த வீட்டின் முன்னால் பால்காரர் பசுமாட்டைக் கொண்டு வந்து பால் கறக்கும் ஓசை, சிறிது தொலைவில் பஜனைக் கோஷ்டி பாடும் ஓசை போன்றவை. இவற்றின் கலவைதான் தூக்கத்தைப் போக்கியதாக நினைவு. ஆண்டாள் காலத்திலும் தூங்கியவர்கள் காதுகளின் விழும் ஓசைகள் எல்லாம் கலந்து விழுந்திருக்கும்.

கீசு கீசு என்று எங்கும் ஆனைச்சாத்தன்  கலந்து
பேசின பேச்சு-அரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே?
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர்  மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய் நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய் திற — ஏலோர் எம்பாவாய்.

ஆனைச்சாத்தன் பறவையை பரத்வாஜப் பறவை என்றும் ஆங்கிலத்தில் Greater Coucal என்றும் சொல்வார்கள். சிவப்பு, ஊதா, கறுப்பு கலந்து மின்னுவது. கோவை வடவள்ளி அருகே இருக்கும் நானா நானியிலிருந்து காலையில் நடக்கும் போதெல்லாம் இப்பறவையைப் பார்க்கத் தவறியதில்லை. ஆனால் ஜோடியாகப் பார்த்ததில்லை. சிலர் ஆனைச்சாத்தன் என்பது வலியன் பறவையைக் குறிக்கும் என்பார்கள். வாலில் இருக்கும் இறகு ஆங்கில v எழுத்தைத் தலைகீழாகக் கவிழ்த்தது போல இருக்கும் இரட்டைவால் குருவி. Drongo என்று நினைக்கிறேன். கரிய பறவை. இதை நான் தில்லியில் பலதடவைகள் பார்த்திருக்கிறேன். தமிழில் பறவைகளைச் சரியாக அடையாளம் காட்ட பெயர்கள் இல்லை என்பது வருந்தத் தக்கது. திரு ஜெகநாதன் போன்றவர்கள் இக்குறையைச் சரி செய்ய முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள் என்று அறிகிறேன். பறவைகளைப் பற்றி அறிய விரும்புபவர்கள் க்ரியா பதிப்பித்திருக்கும் ‘பறவைகள் (அறிமுகக் கையேடு)’ என்ற அழகிய புத்தகத்தை உடனே வாங்குங்கள். ஆசை மற்றும் ப. ஜெகநாதன் எழுதியது.

வியாக்கியானக்காரர்கள் இறைவனைப் பற்றியே (பகவத் விஷயம்) சிந்தித்துக் கொண்டு மெய்மறந்து கிடப்பவரை தோழிகள் அவர் வீட்டு வாசலில் திரண்டு எழுப்ப முயல்வதாகச் சொல்கிறார்கள். இறைவனை நினைத்து கொண்டிருப்பவர்கள் இறையடியார்கள் கூட்டத்தோடு இருப்பதையே விரும்புவார்கள். இதை அறிந்துதான் ஆண்டாள் பாகவதைகளைத் திரட்டிக் கொண்டு தோழியை எழுப்புகிறார். பாகவதைகள் கூட்டம் கூடியும் எழுந்து வராததால் பேய்ப்பெண்ணே என்று செல்லமாகக் கடிந்து கொள்கிறார்.

‘காசும் பிறப்பும்’ என்பது அச்சுத்தாலியும் ஆமைத்தாலியும் என்பார்கள். அதாவது இறைவனின் சின்னங்களான சங்கும் சக்கரமும் அச்சிட்ட தாலி. மற்றது ‘அக்குவடமுடுத்து ஆமைத்தாலிபூண்ட அனந்தசயனன்’ என்று பெரியாழ்வார் குறிப்பிட்ட ஆபரணமாக இருக்கலாம். கண்ணனுக்கு பிடித்த ஆபரணத்தை ஆய்ச்சியர்கள் அணிந்து கொண்டிருப்பது இயற்கைதானே. அவர்கள் தாலிகள் உரசி கலகல என்று சப்தமிட, மத்தினால் தயிர் கடையும் வேகத்தால் கட்டியிருந்த கூந்தல் அவிழ, தயிர் கடையும் போது எழும் முடை நாற்றத்தையும் மீறி பரிமளம் பரவுகிறதாம். கூடவே மத்தின் ஓசை.

நாயகப் பெண் பிள்ளாய் என்பதன் பின்னால் எல்லோருக்கும் முன்னால் நிற்கக் கூடிய நீ இப்படிப் படுத்துக் கொண்டிருக்கிறாயே இது நியாயமா என்ற கேள்வி மறைந்திருக்கிறது.

கேசவன் என்ற சொல்லிற்கு கேசி என்ற குதிரை வடிவத்தில் வந்த அரக்கனை அழித்தவன் என்றும் பொருள் கொள்ளலாம். கேசம் அடர்ந்தவன் என்றும் பொருள் கொள்ளலாம். இங்கு ஆய்ச்சியர்களின் அவிழ்ந்த கூந்தலுக்கு இணையாக அடர்ந்த கேசம் உடையவன் என்று பொருள் கொள்வதுதான் சரியாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்.

தேசம், தேசு – தேஜஸ் – பளீரென்று ஒளி வீசுவது. ‘திருமா மணிவண்ணன் தேசு’ என்பது பேயாழ்வார் வாக்கு. பேய்ப் பெண் தேசமுடையவளாக மாறி விட்டாள் என்பதைக் கவனிக்க வேண்டும். என்ன சொல்லியாவது அவளை எழுப்ப வேண்டும் என்ற உந்துதலை கவிதை மிக அழகாகக் கொண்டு வந்திருக்கிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 21, 2021 20:25

December 20, 2021

புள்ளும் சிலம்பினகாண்!

இறைவன் தூங்குவானா?

இஸ்லாமிய மரபில் அல்லா உறங்குவதாகக் குறிப்பிடப் படவில்லை. ஆனால் கிறித்துவ மரபில் இறைவனை உறங்காதே எழுந்திரு என்று குறிப்பிடும் வாசகங்கள் இருக்கின்றன. பைபிளில் ஏழு இடங்களில் இருக்கின்றன.

உதாரணமாக, “என் தேவனே, என் ஆண்டவரே, எனக்கு நியாயஞ்செய்யவும் என் வழக்கைத் தீர்க்கவும் விழித்துக்கொண்டு எழுந்தருளும்,’ என்று சங்கீதம் 35:23 சொல்கிறது. “ஆண்டவரே, விழித்துக்கொள்ளும்; ஏன் நித்திரை பண்ணுகிறீர்? எழுந்தருளும், எங்களை என்றைக்கும் தள்ளிவிடாதிரும்,” என்று சங்கீதம் 44:23 சொல்கிறது.

ஆனால் இந்து மரபில் உறங்கும் இறைவனை எழுப்பும் பாடல்கள் எண்ணற்றவை.

திருப்பாவையிலும் இறைவன் எழுப்பப்படுகிறான். ஆனால் அவன் எழுந்திருப்பதற்கு முன்னால் தோழியரை, நந்தகோபனை, யசோதையை, பலராமனை மற்றும் நப்பின்னையை ஆண்டாள் எழுப்புகிறாள். அடுத்த பத்து பாடல்கள் தோழியரை எழுப்பும் விதமாக அமைகின்றன.

கிருஷ்ணானுபவத்தை தனியாகவன்றோ அனுபவிக்க வேண்டும்? தோழிகளோடு சேர்ந்து அனுபவிக்க வேண்டிய அவசியம் என்ன? இக் கேள்விகளுக்கு அண்ணங்கராச்சாரியார் மிக அழகாகப் பதிலளிக்கிறார். கண்ணன் பெருங்காற்று. பெருங்காற்றில் “காலாழும், நெஞ்சழியும், கண்சுழலும்” (பெரிய திருவந்தாதி- நம்மாழ்வார்). எனவே தனியாகச் செல்ல முடியாது. பெருந்துணை அவசியம். இன்னொருவிதமாகச் சொல்லப்போனால் ஆண்டாள் ‘இன்கனி தனியருந்தான்’ என்ற கோட்பாட்டில் பிடிவாதமாக இருப்பவர். கூடி இருந்து குளிர விரும்புபவர். அவர் எல்லோரையும் எழுப்புவதில் வியப்பில்லை.

இனி பாடல்:

புள்ளும் சிலம்பின காண் புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்
மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்

மார்கழி மாதக் குளிரில் அதிகாலையில் இழுத்துப் போர்த்திக் கொண்டு தூங்கத் தோன்றுவது இயற்கை. ஆண்டாள் தன் தோழியிடம் ‘உலகம் விழித்துக் கொண்டு விட்டது, நீ உறங்காதே என்கிறார்’. ‘நீ கண்ணனையே நினைத்துக் கொண்டு உறங்காதிருக்கிறாய். உனக்கு இரவே கிடையாது. காலை வந்து விட்டது என்று எப்படி நம்புவது’ என்று தோழி கேட்க ஆண்டாள் யார் யாரெல்லாம் விழித்து கொண்டு விட்டார்கள் என்று சொல்கிறாராம்.

புள்ளரையன் கோவில என்றால் பக்ஷிராஜன், கருடனின் திருக்கோவில். புள் என்றால் கருடன் என்று பொருள் கொண்டு, கருடனுக்குத் அரையனான -தலைவனான- விஷ்ணுவின் கோவில் என்றும் பொருள் கொள்ளலாம். சங்கு என்றாலே வெள்ளை தானே? அது ஏன் வெள்ளை விளி சங்கு என்றால் விடிந்து விட்டதால் அதன் வெள்ளை நிறம் பளீரென்று தெரிகிறதாம். பூதனை உயிரை உறிஞ்சியும் வண்டியைக் காலால் உதைத்து முறித்த கண்ணன் தான் பாம்பின் மேல் அறிதுயில் கொண்டிருக்கும் வித்து. சகடத்தை, வண்டியை ஏன் கண்ணான் காலால் உதைக்கிறான்?மூவாரியப்படி கூறுகிறது: முலை வரவு தாழ்த்ததென்று மூரி நிமிர்த்த திருவடிகள் பட்டு முறிந்தது. அதாவது தாய்ப்பால் வருவதற்கு தாமதமானதால் கால்களை உதைத்து கண்ணன் வீறிடுகிறானாம். அவன் ‘வித்து’. உழவர்கள் விதைக்கும் வித்து பயிராக மாறி பலன் தருவது போல, திரும்பத் திரும்ப அவதாரம் செய்து உலகிற்கு பலனளிக்கும் வித்து இறைவன். தானே தன்னை விதைத்துக் கொள்பவன். அவனை உள்ளத்தில் கொண்டவர்கள் முனிவர்களும் யோகிகளும். முனிவர்கள் இறைவன் பெயரை என்று நினைத்துக் கொண்டிருப்பவர்கள். யோகிகள் இறைவனை நினைத்துக் கொண்டு பக்தர்களுக்கும் தேவையானவற்றை தயராது செய்து கொண்டிருப்பவர்கள். ராமனுக்கு பணிவிடை செய்து கொண்டிருந்த இலக்குவனையும் அவன் நினைவாகவே இருந்து ஆட்சி செய்துக் கொண்டிருந்த பரதனையும் போன்றவர்கள். அவர்கள் ஏன் மேல்ல எழுந்திருக்கிறார்கள்? பிள்ளைத்தாய்ச்சியாக இருப்பவர் குழந்தைக்கு ஊறு ஏற்பட்டு விடக் கூடாதே என்று மெல்ல எழுவது போல, இவர்கள் உள்ளத்தில் எம்பெருமான் இருப்பதால் அவன் ‘தளும்பாதபடி’ எழுந்திருப்பார்களாம். ஆய்ப்பாடியில் முனிவர்களும் யோகிகளும் எங்கு வந்தார்கள்? கண்ணன் பிறந்த இடமானதால் அவர்கள் மாட்டுக் கொட்டில்களில் பாடு கிடக்கின்றார்களாம். கண்ணனின் தரிசனத்தை வேண்டி.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 20, 2021 20:09

December 19, 2021

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை!

ஆண்டாளின் ஐந்தாவது பாட்டை நினைக்கும் போதெல்லாம் அண்ணங்கராச்சாரியார் நினைவும் கூடவே வரும். அவரைச் சந்திக்க என் தந்தை கூட்டிச் சென்ற போது அவர் உடல்நலம் வெகுவாகக் குன்றியிருந்தது. பேச்சு மெல்லிதாக இருந்தது.

“சுவாமி திருமேனி இன்னும் க்ஷீணமாகத்தான் இருக்காப்பல தோன்றதே.”

“வாசித்தும் கேட்டும் வணங்கி வழிபட்டும் பூசித்தும் போக்கினேன் பொழுதுன்னு ஆழ்வார் சாதிச்சிருக்கார். வாசிக்கறத்துக்கு கண்ணு சரியாத் தெரியல்ல. கேக்கறத்துக்கு காதில்ல. சாஷ்டாங்கமா பெருமாளைச் சேவிக்கறத்துக்கு கால் முட்டு இடம் கொடுக்க மாட்டேங்கறது. ஆண்டாள் சொன்ன மாதிரி வாயினால் பாடி மனதினால் சிந்தித்து பெருமாளைப் பூசிக்கறேன். அதையாவது செய்ய முடியற பாக்கியத்தைக் கொடுத்திருக்காரேங்கிற சந்தோஷத்தோடு இருக்கேன்.” பக்தி கொடுக்கும் சமன்பாடு எல்லாப் பக்தர்களுக்கும் வாய்க்காது.

இப்பாடலை பெரியவர்கள் விளக்கம் சொல்லிக் கேட்டால்தான் அதன் உள்ளே பொதிந்திருக்கும் ரத்தினங்கள் வெளிப்படும். “பெரிய திருமொழில திருமங்கை மன்னன் ‘உணர்ந்து உணர்ந்து உரைத்து உரைத்து இறைஞ்சுமின்’ னு சாதிக்கறார். ஆனால் ஆண்டாள் “வாயினால் பாடி மனதினால் சிந்திக்க”ங்கறா. முதல்ல பாடுங்கறா. பின்னால்தான் உணர வேணும் சிந்திக்கணும்னு சொல்றா. அது ஏன்?” என்று என் தந்தை கேட்டார். நான் எப்போதும் போல முழித்துக் கொண்டிருந்தேன். “திருமங்கை ஆழ்வார் வாழ்க்கையில் அடிப்பட்டவர். அவர் யோசிச்சு, ஆராயஞ்சப்பறம்தான் பாட்டெழுதி பெருமாளைச் சேவிப்பர். ஆனா ஆண்டாள் குழந்தை. குழந்தை முதல்ல யோசிக்காது. அதுக்குன்னு ஒரு spontaneity. முதல்ல உரக்கப் பாடும். அப்பறம்தான் சிந்தைனையெல்லாம்.’

இன்றையப் பாடல்:

மாயனை மன்னு வடமதுரை மைந்தனைத்  தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் அணி-விளக்கைத்  

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனை

தூயோமாய் வந்து நாம் தூமலர் தூவித் தொழுது  

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க 

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்  

தீயினில் தூசு ஆகும் செப்பு-ஏலோர் எம்பாவாய்.

பரமபதத்திலிருந்து வடமதுரையில் தேவகிக்குப் பிறந்து ஆயர் குலத்தில் அணி விளக்காகத் தோன்றினான். அதாவது அரச மைந்தனாக உலகின் இருளைப் போக்கவில்லை. ஓர் ஆயனாகத்தான் அவன் அந்தகாரத்தைத் துரத்தி அடிக்கும் அணி விளக்காக ஆனான். ‘அந்தகாரத்தில் தீபம் போல் தாழ்ந்தார் பக்கலிலேயிறே குணம் பிரகாசிப்பது” என்று வியாக்கியானம் கூறுகிறது. அவன் இருக்கும் இடத்தில் இருப்பவர்கள் அனைவரும் ஆயர்கள்தாம். பிராமணத்தியும் ஆய்ச்சி ஆகிறாளாம். அகங்காரத்தைத் துடைத்தால்தான் இருளை விலக்கும் இறையொளி தெரியும்.

‘தூய பெருநீர் யமுனை” – யமுனை எப்படித் தூய்மை பெற்றது? அது வாசுதேவனுக்கு வழி விட்டது மட்டுமல்லாமல், கண்ணனும் ஆய்ச்சியரும் அதன் தண்ணீரைக் குடித்து திரும்பக் கொப்பளித்ததால் அது தூய்மையானதாம். இறைவனின் எச்சிலும் பக்தர்களின் எச்சிலும் அதைத் தூய்மை ஆக்குகிறது. இன்னொன்றும் உரையாசிரியர் சொல்கிறார்கள்: “ராவண பயத்தால் அஞ்சியிருந்த கோதாவரி போலன்றிக்கே கம்சன் மாளிகைநிழல் கீழே வற்றிக் கொடுத்தபடி.” அதாவது ராவணபயத்தால் கோதாவரி நதி சீதையைக் காப்பாற்ற முடியவில்லையாம். யமுனைக்குத் தைரியம் இருந்ததாம்.

தாயைக் குடல் விளக்கம் செய்த தமோதரன் – இவனைப் பெற்ற வயிற்றுடையாள் என்ன நோன்பு நோற்றாள் கொலோ’ என்று பெற்ற தாயாரான தேவகிக்கும் வளர்த்து கண்ணினுண் சிறுத்தாம்பினால் கட்டிய யசோதைக்கும் பெருமை அளித்தவன். பக்தர்களின் கட்டு அவனால் கூட அவிழக்க முடியாத கட்டு.

தூயோமாய் என்ற சொல்லுக்கு வியாக்கியனங்கள் கூறும் விளக்கம் அற்புதமானது. அவர்கள் புறத்தூய்மையை ஒதுக்கித் தள்ளி விடுகிறார்கள். விபீஷணன் கடலில் குளித்து விட்டா இராமனிடம் வந்தடைந்தான்? திரௌபதி ஒற்றை ஆடையுடன்தானே இரு கையையும் தூக்கி இறைவனைக் கூப்பிட்டாள்? எனவே பக்தர்கள் உள்ளபடியே வந்தால் போதும். இதைத்தான் ரவீந்திரநாத் தாகூர் “Come as you are, tarry not over your toilet என்று தன் The Garderner நூர்லில் சொல்கிறார். இப்பாடலை ஆ.சீ.ரா என்று அழைக்கப்படும் ஆ சீனிவாச ராகவன் அழகாக மொழிபெயர்த்திருக்கிறார் – “உள்ளபடியே வா, ஒப்பனையில் பொழுதை ஓட்டி விடாதே”.

இதே போன்று தூமலர். எந்த மலராக இருந்தாலும் அது அநன்ய ப்ரயோஜனர் கை பட்டால் போதும். அதாவது அவனடியை அடைவதைத் தவிர வேறு குறிக்கோள் இல்லாத அடியார்கள்.

பகவத் ஞானம் வருகிறதற்கு முன் செய்த பிழைகளும் பக்தையான பின் அறியாமல் செய்த பாவங்களும் (அறியாத பிள்ளைகள் என்று ஆண்டாள் பின்னால் பாடுகிறாள்) இவன் பெயரைச் செப்பினால் தீயும் எரியும் பஞ்சுபோல உடனடியாக மறைந்து விடும் என்கிறாள்.

‘செப்பு’ என்பது தமிழில் இன்று புழங்குவதில்லை. தெலுங்கு மொழியில் இருக்கிறது. இதே போன்று பெருமாளைச் சேவிக்கிறோம் என்று வைணவர்கள் சொல்வார்களே தவிர தொழுகிறோம் என்று சொல்வதில்லை. தொழுகை இன்று இஸ்லாமியர் பயன்படுத்தும் சொல். பாலக்காட்டு பிராமணர்கள் பயன்படுத்தும் சொல்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 19, 2021 19:14

December 18, 2021

ஆழி மழைக் கண்ணா!

சில வருடங்களுக்கு முன்னால் என் மகனும் நானும் போர்னியோ (மலேசியப் பகுதி) சென்றிருந்தோம். ஸபா மாநிலத்தில் கினபடாங்கன் என்ற நதியில் படகுப் பயணம். எல்லாம் நன்றாக சென்று கொண்டிருக்கும் போது, மழை வரும் அறிகுறிகள் தென்பட்டன. வானம் கறுத்துக் கொண்டே வந்தது. கண்ணுக்கு எதிரே, மிக அருகாமையில், பளீரென்று இதுவரை நான் கண்டிராத பிரகாசத்துடன், மின்னல் ஆற்றில் இறங்கியது. உடனே பெரும் சத்தம். இடிமுழக்கம் என்பதின் முழுப் பொருளை அன்றுதான் உணர்ந்தேன். இன்னும் அருகே மின்னல் இறங்கியிருந்தால் ஒரு நொடியில் கருகியிருப்போம் என்று படகோட்டி சொன்னார். மயிரிழையில் தப்பித்தோம். பெருத்த மழையினூடே ஒருவழியாக சேர வேண்டிய கரைக்குச் சேர்ந்தோம். தங்கியிருந்த அறையின் பாதுகாப்பைத் தழுவிக் கொண்ட பிறகுதான் பதட்டம் அடங்கி, உயிர் திரும்பியது. அப்போதுதான் ஆண்டாளின் பாசுரம் நினைவிற்கு வந்தது. “ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி” என்ற வரியின் உண்மையான பொருள் உறைத்தது. கண்ணுக்கு நேரே மின்னல் இறங்கி இடி முழங்கி, கரிய கடவுள் ஆற்று நீரை முகந்து கொண்டு சென்றிருக்கிறார் என்று தோன்றியது. நான் பார்த்தது ஒரு நதிப்பரப்பில் மின்னல்-இடி நாடகம். ஆண்டாள் சொல்வது ஆழியை. உலகைச் சுற்றியிருக்கும் பெரும் கடலை. கடலில் கண்ணன் செய்யும் விந்தையை.

ஆண்டாளின் பாடல்

ஆழிமழைக்கண்ணா! ஒன்றுநீகைகரவேல்
ஆழியுள்புக்குமுகந்துகொடார்த்தேறி,
ஊழிமுதல்வன்உருவம்போல்மெய்கறுத்து
பாழியந்தோளுடைப்பற்பநாபன்கையில்
ஆழிபோல்மின்னி, வலம்புரிபோல்நின்றதிர்ந்து,
தாழாதேசார்ங்கம்உதைத்தசரமழைபோல்
வாழஉலகினில்பெய்திடாய், நாங்களும்
மார்கழிநீராடமகிழ்ந்தேலோரெம்பாவாய்.

தமிழ் இலக்கியத்தின் அரிய செல்வங்களில் ஒன்று ஆண்டாளின் இப்பாடல். கவிஞர்கள் கண்ணுக்கு தெரியும் இயற்கையின் வடிவங்களையும் நிகழ்வுகளையும் உதாரணமாகக் காட்டி இறையிருவின் பரிமாணங்களை நமக்குக் காட்ட முயல்வார்கள். “கார்மேகம் போன்றவன்” “கடலினும் பெரிய கண்கள்” “பவளச் செவ்வாய்” போன்ற உதாரணங்கள். ஆனால் ஆண்டாள் இப்பாடலில் நேர் எதிராகச் செல்கிறார். மேகத்தின் வண்ணம்- ஊழி முதல்வன் உருவம்;. மின்னலின் ஒளி – இறைவன் கையில் இருக்கும், ஆழியின் (சக்கரத்தின்) ஒளி; இடிமுழக்கம்- இறைவனின் இன்னொரு கையிலில் இருக்கும் வெண்சங்கின், பாஞ்சஜன்யத்தின் அதிர்வு. மழை பொழிவது- சார்ங்கம் என்ற இறைவனின் வில்லில் இருந்து புறப்பட்ட அம்புகள்.

இங்கு ‘வாழ’ என்ற சொல் முக்கியமானது. இயற்கை வாழவும் வைக்கும். உயிர்களையும் வாங்கும். இறைவன் கையில் இருக்கும் ஆயுதஙகளும் அவ்வாறுதான். ஆண்டாள் இங்கு தெளிவாக வாழ்விற்காக, மகிழ்ச்சிக்காகப் பாடுகிறார். மக்களை வாழ வைக்க மழை பெய்தால்தான் நாங்கள் மகிழ்வோம் என்று சொல்கிறார். உலகம் முழுவதும் மழை பெய்ய வேண்டும் என்கிறார்.

‘மழைக்கண்ணா’ என்று ஆண்டாள் சொல்வது வருணதேவனை என்று உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். அவன் கண் மட்டும் மழையன்று. ” ‘ஜகத்தை ஈரக்கையாலே தடவி நோக்கவல்லன்’ என்று ஈஸ்வரனலே மதிக்கப்பட்டவனல்லையோ நீ” என்றும் அவர்கள் சொல்கிறார்கள். எனவேதான் ‘கைகரவேல்’ என்றும் ஆண்டாள் சொல்கிறாள். கொடுக்க வேண்டியதை தாராளமாகக் கொடு குறைத்துக் கொடுத்து விடாதே என்கிறார். இது இறைவனின் ஔதார்யத்தை, வள்ளல்தன்மையைக் காட்டுகிறது என்றும் சொல்லலாம்.

இன்னொன்றும் சொல்லப்படுகிறது. எல்லையில்லாக் கடவுளான இறைவனின் குணக்கடலில் புகுந்து, அனுபவித்து, அதை உள்ளே அடக்கி கொண்டு உலகம் முழுவதும் சென்று மற்றவர்களுக்கு வழங்கும் அறிஞர்கள்தான் மேகம். ‘திருமாலின் திருமேனி ஒக்கும்’ பேறு பெற்று எங்கும் செல்பவர்கள் அவர்கள். இறைவனிடம் சிலர் கேட்டார்களாம்: “நீயே பிரபு என்றிருந்தோம், உன்னையொழியவும் சிலருண்டோ?” அதற்கு கண்ணன் கூறிய பதில்: “சோறும் தண்ணீரும் தாரகமாக இருப்பார்க்கு நான் பிரபு, ஸ்ரீவைஷ்ணவர்கள்தான் எனக்குப் பிரபுக்கள்”. உங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று வருணன் வேண்டிக் கேட்க இவர்கள் அவன் தொண்டு செய்ய அனுமதித்தார்களாம். ‘இவர்களை வர்ஷதேவதை அடியேனுக்கு ஒரு கிஞ்சித்காரம் நியமித்தருள என்று பிரார்த்திக்க, இவர்கள் அவனுக்குக் கைங்கர்யம் நியமித்தபடியைச சொல்கிறது’ என்று ஸ்வாபதேச வியாக்கியானம் சொல்கிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 18, 2021 18:16

December 17, 2021

ஓங்கி உலகளந்த உத்தமன்!

ஆண்டாளைப் படிக்கும் போது நாம் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அவர் காட்டும் உலகம் அவர் மனதில் பிறந்த உலகம். அவர் வாழ்ந்த உலகமும் அவர் பாடல்களில் வருகின்றது. ஆனால் மனதில் பிறந்த உலகமே முதன்மை பெறுகிறது.

 “சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச்சிறுமிகள்” அவர் கற்பனையின் சிறுமிகள்.  தான் வாழும் உலகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற கனவை அவர்களோடு சேர்ந்து தன் அழியாப் பாடல்களின் மூலம் நம் கண்முன் நிறுத்துகிறார். ஆண்டாள் தனக்காகப் பாடவில்லை. வையத்தில் வாழ்பவர்களுக்காகப் பாடுகிறார். அவர்களுக்கு இறையருள் கிடைக்கும் என்ற உறுதியோடு பாடுகிறார்.

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!

இன்றையப் பாடல் ஓர் உதாரணம்.

அதாவது சிறுமிகள் பாவை நோன்பிருந்து நீராடினால் உலகமே நீங்காத செல்வம் பெற்று நிறையும் என்று ஆண்டாள் சொல்கிறார். எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற இந்த இழை திருப்பாவை முழுவதும் ஓடிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கை தரும் துன்பங்களின் நிழல்கள் படாத பருவத்தினர்  ஆண்டாளின் சிறுமிகள். அவர்களின் நம்பிக்கை நம்மை வியக்க வைக்கிறது

வைணவர்கள் இறைவனுடைய நிலைகளாக ஐந்தைக் கருதுகிறார்கள். அவை பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்பவை.

“விண்மீதிருப்பாய் மலைமேல் நிற்பாய். கடல்சேர்ப்பாய்!மண்மீதுழல்வாய் இவற்றுளெங்கும் மறைந்துறைவாய்!” என்று நம்மாழ்வார் சொல்கிறார்.

விண்மீது நாராயணனாக பரமபதத்தில் இருப்பது பரம். கடல் சேர்ப்பாய் என்பது வியூகம். பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பது. மண் மீது உழல்வாய் என்பவது விபவம். அவன் எடுக்கும் அவதாரங்கள். மறைந்துறைவாய் என்பது அந்தர்யாமி. எல்லாவற்றிலும இறைவன் இருக்கிறான் என்று பொருள்.  மலை மேற் நிற்பாய் என்பது அர்ச்சை. சிலையாக நிற்பது. “கல்லினார்க்கு இறங்கி கல்லிலே இறங்கி நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா” என்று ராஜாஜி தன் குறைவொன்றும் பாடலில் இந்நிலையைத்தான் குறிப்பிடுகிறார்.

ஆண்டாள் முதல் பாடலில் நாராயணனே என்று பரமபத நாயகனைக் குறிப்பிடுகிறார். இரண்டாம் பாடலில் பையத் துயின்ற பரமன் என்று வியூக நிலையைக் குறிப்பிடுகிறார். மூன்றாவது பாடலில் ஓங்கி உலகளந்த உத்தமன் என்று விபவ நிலையை அவன் எடுத்த அவதாரத்தைக் குறிப்பிடுகிறார்.

அவன் உத்தமன். ஏன்?

பிறரைத் துன்புறுத்தி தான் வாழ வேண்டும் என்று நினைப்பவன் அதமன். பிறரும் தானும் வாழ வேண்டும் என்று நினைப்பவன் மத்தியமன். தன்னை வருத்தி பிறர் வாழ வேண்டும் என்று நினைப்பவன் உத்தமன். வாமன அவதாரத்தில் இறைவன் தன்னை “ஆலமர் வித்தின் அருங்குறளாக” குறுக்கிக் கொள்கிறான். பிட்சை கேட்கிறான். பிட்சை கிடைத்ததும் மூவுலகையும் தன் காலால் அளக்கிறான். தனக்காக அல்ல, பிறருக்காக. எனவேதான் அவன் உத்தமன்.

உத்தமன் பேர் பாடாமால் வேறு யார் பெயரைப் பாடுவது? வேறு எந்தப் பெயரும் இல்லை. “கங்கையாடப் போமவனுக்கு வேறொரு குழியில் மூழ்கிப் போக வேணுமோ’ என்று ஆறாயிரப்படி சொல்கிறது.

திங்கள் மும்மாரி என்கிறார் ஆண்டாள். “ஒன்பது நாள் வெய்யில் ஒரு நாள் மழை” என்பதுதான் மாதம் மும்மாரி. நமக்குத் தொல்லை கொடுக்காத மாரி.  பொறிவண்டு கண்படுப்ப என்ற சொற்றொடருக்கு வண்டுகள் அரசகுமாரர்கள் அன்னத்தின் இறகு பொதிந்த மெத்தையில் உறங்குவது போல பூக்கள் மீது உறங்குகின்றன என்று வியாக்கியானக்காரர்கள் சொல்கிறார்கள்.

வாங்கக் குடல் நிறைக்கும் வள்ளல் பெருபசுக்கள் –கைபட்ட உடனே பாற்குடத்தை நிறைக்கும் பசுக்கள். அவற்றிற்கு வள்ளல்தன்மை எவ்வாறு வந்தது? கண்ணன் அருளால், அவன் குழலோசை கேட்டதால் என்கிறார்கள் உரையாசிரியர்கள்.

சிறுவிரல்கள் தடவிப் பரிமாற ச்   செங்கண் கோடச் செய்ய வாய் கொப்பளிப்பக

குறுவெயர்ப் புருவம் குடிலிப்பக்   கோவிந்தன் குழல்கொடு ஊதின போது

பறவையின் கணங்கள் கூடு துறந்து   வந்து சூழ்ந்து படுகாடு கிடப்ப க்  

கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக்   கவிழ்ந்து இறங்கிச் செவி ஆட்டகில்லாவே .*

இது ஆண்டாளின் தந்தை பெரியாழ்வாரின் திருமொழி. கண்ணன் குழலூதுவதை அசை போடும் மயக்கத்தில் பால் பெருகுகிறதாம் . “புல்லால் வளருகிறவைன்றே. தீங்குழலோசை அசையிட்டிறே வளருவது” என்று வியாக்கியானம் சொல்கிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 17, 2021 19:18

December 16, 2021

வையத்து வாழ்வீர்காள்!

நேற்று இதை மறந்து விட்டேன்.

ஆண்டாள் பறை என்ற சொல்லை பல தடவைகள் பயன்படுத்துகிறார்.  வியாக்கியானக்காரர்கள் அதை வியாஜம் என்கிறார்கள். அதாவது ஒரு pretense. ஒரு காரணம். போலிக்காரணமாகக் கூட இருக்கலாம். இறைவனுக்கு அருள் புரிய ஒரு வாய்ப்புக் கொடுப்பது. ஆனால் தென்கலையாருக்கு அதுவும் தேவையில்லை என்று நினைக்கிறேன். நீ செய்ய வேண்டியதைச் செய்து கொண்டிரு அவன் நிச்சயம் பறைதருவான், அருள்புரிவான் என்று ஆண்டாள் சொல்கிறதாகவும் கொள்ளலாம். நம்மாழ்வர் அருளிச்செய்தபடி “வைகுண்டம் புகுவது மண்ணவர் விதியே”.

பாவை நோன்பு என்பது கூட ஒரு வ்யாஜம்தான்.

இனி அடுத்த பாட்டு.

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்கு
செய்யும் கிரிசைகள் கேளீரோ! பாற்கடலுள்
பையத்துயின்ற பரமனடி பாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டெழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமாறெண்ணி உகந்தேலோரெம்பாவாய்!

ஆண்டாள் திருப்பாவை முழுவதும் எல்லோரையும், வையத்தில் வாழ்பவர்கள் எல்லோரையும், கருத்தில் கொண்டுதான் பேசுகிறார். அவருடைய தந்தை  “தொண்டக்குலம்” (வைணவ அடியார்கள் கூட்டம்) என்று சொன்னால், இவர் ஒருபடி மேலே சென்று வையம் முழுவதையும் சேர்த்துக் கொள்கிறார்.

 எல்லோராலும் வேதம் ஓதமுடியாது, எல்லோராலும் நித்தியானுசந்தானம் (தினப்படிச் சொல்லும் பாடல்கள்) செய்ய முடியாது. மார்கழி மாத்த்தில் கூட செய்ய முடியாது. ஆனால் இறைவனைத் தொழ முடியும், காலையில் நீராட முடியும். தானம் செய்ய முடியும், ஆந்தனையும் என்றால் முடிந்த அளவு. இதேயே திருமூலரும் சொல்கிறார்:

 யாவர்க்குமாம் இறைவற்கு ஒரு பச்சிலை
யாவர்க்குமாம் பசுவுக்கு ஒரு வாயுறை
யாவர்க்குமாம் உண்ணும் போதொரு கைப்பிடி
யாவர்க்குமாம் பிறர்க்கு இன்னுரை தானே.

“இன்னுரைதான். தீக்குறள் அன்று, கடுஞ்சொற்களைச் சொல்ல மாட்டோம்.” என்று ஆண்டாள் சொல்கிறார்.

ஏன் மையிடக் கூடாது? ஏன் மலர் சூடக் கூடாது? கண்ணனைக் காணாமல் கண்கள் அழகு பெறக் கூடாது. அவன் காலடியில் கிடந்த மலரைத்தான் முதலில் சூடிக் கொள்ள வேண்டும். ஆண்டாள் மட்டும்தான் சூடிக் கொடுத்த சுடர்க்கொடி. இங்கு அவர் தன்னைப் பற்றிப் பேசவில்லை. வையத்தில் வாழ்பவர்கள் அனைவரையும் பற்றிப் பேசுகிறார் என்பதை மீண்டும் நினைவில் கொள்ள வேண்டும்

ஐயம் என்றால் தகுதியுடைய பெரியவர்களுக்கு வேண்டும் காலத்தில் உதவுவது. பிச்சை என்றால் வேண்டி வருபவர்களுக்கு கொடுப்பது என்று பெரியவர்கள் சொல்கிறார்கள். மேலும் ‘ஆந்தனையும் கைகாட்டி’ என்பதற்கு பொருள் பெறுபவர்கள் மனநிறைவு பெறும் வரையில் கொடுக்க வேண்டும் என்பது மட்டுமல்ல, நாம் நிறையக் கொடுத்து விட்டோம் என்ற நிறைவு நமக்கு வந்து விடக்கூடாது என்பதும்தான்.

ஐயம் என்றால் பெருமானின் புகழ் பாடுதல் என்றும் பொருள். பிச்சை என்றால் பாகவதர்களின், அதாவது அடியார்களின் புகழ் பாடுதல். இரண்டையும் முடிந்த அளவிற்குச் செய்ய வேண்டும் என்றும் அறிஞர்கள் சொல்கிறார்கள்

ஆண்டாள் ப்ரவிருத்தி, நிவிருத்தி என்பதைப் பற்றியும் சொல்கிறார் என்று வியாக்கியானக்காரர்கள் கருதுகிறார்கள். பிரவித்தி என்றால் பற்றிக் கொள்ள் வேண்டியவை. பரமன் அடி பாடுதல். காலையில் நீராடுதல். ஐயம், பிச்சையிடுதல். நிவிருத்தி என்றால் விட வேண்டியவை. “நெய், பாலுண்ணாமை. கண்மையிடாமை. பூச்சுடாமை. செய்யத்தகாதவை என்று கருதுப்படுபவற்றைச் செய்யாமை. தீய சொற்களைப் பேசாமை.

இவையெல்லாம் நிச்சயம் செய்ய வேண்டுமா? நிச்சயம் என்று ஆண்டாள் சொல்லவில்லை என்றுதான் நினைக்கிறேன். முடிந்த அளவு – ஆந்தனையும் – என்றுதான் ஆண்டாள் சொல்கிறார். விரத நாட்களில் குழந்தைகள் விரதம் இருந்தாலும், பசி தாங்காதே என்று அன்னை ரகசியமாக தந்தைக்குத் தெரியாமல் குழந்தைகளுக்கு தின்பண்டங்கள் கொடுப்பதில்லையா? அதே போலத்தான் ஆண்டாள் சொல்பவையும். முடியாவிட்டால் இறைவன் அளிப்பான் என்பது உட்பொருள்.

என் தந்தை சொல்வார். “ஆயர் குலத்தவர் என்று தங்களை எண்ணிக் கொண்டிருப்பவரை பாலும் நெய்யும் உண்ணாதே என்று சொல்வது, ஐயங்கார்களை புளியோதரை பக்கம் போகாதே என்று சொல்வதைப் போன்றது. அது நடக்கக் கூடியதா?”

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 16, 2021 19:09

October 15, 2021

October 14, 2021

Exchange of Mail – Wolverhampton University

My mail dated 06 October 2021:

“I am aghast that your university is running a programme on Periyar who had made many statements that were akin to what were made by Nazis when Hitler was ruling in Germany. His speeches asking people to murder the Brahmins are freely available on the YouTube and I can provide you the links. Are you discussing this aspect of Periyar? The speakers are all Periyar apologists and they will be silent on this aspect. If you really are for academic freedom, you must add a speaker who will speak about the Nazi racist ideas of Periyar.”

The response dated 13 October 2021:

We thank you for your interest in our conference. We would like to highlight that this is a purely academic conference, involving both young and well-established scholars, which aims to discuss their research on anti-caste thinkers in South Asia. The conference seeks to contribute to established studies on caste and to make valuable additions to emerging new themes in these studies.

My reply dated 13 October 2021:

Really? The Keynote address is this: ‘Denying and defying power – Periyar’s approach to politics’. This has nothing to do with caste. On the other hand,  Periyar’s politics was dripped with hate – hate for Brahmins, hate for India, hate for Gandhi and hate for North-Indians. The speaker is a known Periyar admirer and I don’t think he is going to talk about these aspects. My request is simple. Please engage a speaker who will speak about the Nazi facet of Periyar, in order that a complete picture of the person emerges. Or at least give a promise that the conference will discuss Periyar’s frequent threats to annihilate a minority group – the Brahmins of Tamil Nadu. 

The Response dated 13 October 2021:

The papers in this conference are based on an open call for papers. All scholars have had a fair opportunity to participate. The papers were selected after rigorous review and represent a wide breadth of points of view. The conference will be conducted in the best spirit of protecting academic freedom and respectful dialogue.

My reply dated 14 October 2021:

Thanks for the prompt response. Your reply is unfortunately vague. What I need is just an assurance that Periyar’s repeated calls for the annihilation of Brahmins will also be discussed and criticized in the conference. Otherwise, it is like discussing Hitler without mentioning the persecution of the Jews. 

The University hasn’t yet responded, but in the meantime several persons have written to the University and requested that the real version of Periyar be discussed and not the sanitized one. One advantage of such conferences is that Periyar’s Nazi facet will now be known internationally. Oh, yes, there will be justifications and fob-off attempts, but truth will stick out like a sore thumb.


 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 14, 2021 18:26

October 11, 2021

The NTK is vile, but what about the DMK?

The Hindu dated 11 October 2021 carries an article titled ‘A Lengthening Shadow of Tamil Nativism’, written by two apologists of the DMK masquerading as impartial researchers. The Dravidian movement, we all know, doesn’t even have a passing acquaintance with honesty, but this piece is breathtaking in its deception. Here is a link to the article: https://www.thehindu.com/opinion/op-ed/a-lengthening-shadow-of-tamil-nativism/article36933400.ece

The Naam Tamizhar Katchi (NTK) is without doubt a brazenly Fascist organization. It leader Seeman is a clear danger to the unity of India. He and his set of rabble rousers have as their patron-saint Prabhakaran, a ruthless killer and one of the most heinous terrorists the world has ever known. But Seeman is only a modern version of Periyar E. V. Ramasamy, the first Nazi ideologue of Tamil Nadu. His party is almost a mirror-image of the early Dravidian movement when it was sowing the seeds of racist hate.

Now, what are the charges made against Seeman by these authors?

The NTK seems to downplay the central role of Periyar in modern Tamil politics.The NTK seeks to foreground only those who can claim to belong to a native caste, determined by birth in a Tamil clan. Their targets for attacks are C N Annadurai and M Karunanidhi on the specious claim that they belong to non-Tamil immigrant castes.Chauvinistic Tamil nationalism, upheld by Seeman, has historically a marginal place in modern Tamil politics. The DMK, on the other hand, has a composite and pluralistic approach to politics and identity.Dravidian rule also prevented the rise of violent elements threatening the sovereignty of India.While BJP tries to unite castes on the religious plank, the NTK does the same on the nativist plank.The TMK’s Tamil nativism addresses the grievances of certain castes with theories of a Dravidian conspiracy.Seeman’s sympathizers are characterized by abusive language and aggressive machismo and rooted in an aggravated sense of Tamil victimhood.

Really?

Periyar was less than a marginal player when he was active. It was because of the DMK’s sponsorship and the visceral, anti-Brahmin, Nazi hatred of some Tamil intellectuals and their camp followers that Periyar has gained a larger-than-life image. The NTK is dismantling it for its own chauvinistic motives, but it cannot be disputed that Periyar should be analyzed critically, which the Dravidian theorists have manifestly failed to do.  The NTK is only following the footsteps of Periyar and the Dravidian Nazis. In fact he has a long way to go. Periyar wanted to murder all Brahmins for the sin of having born Brahmins. Seeman doesn’t seem to advocate the mass murder of ‘Non-Tamil’ castes. Periyar viciously attacked the Brahmins because they were supposed to be immigrants. The DMK too indulges in this sordid exercise with no shame. In Seeman’s case the victims are different but the tactics are identical to those of Periyar and the DMK.Yes, chauvinistic Tamil nationalism has a historically marginal place in the modern Tamil politics. But we should not forget the first person who raised the chauvinistic slogan ‘Tamil Nadu for Tamils’ was none other than Periyar. It is a lie to claim that the DMK has a composite and pluralistic approach to politics and identity. It is Stalin who claims that he belongs to Dravidian stock- whatever it means. It was Stalin who spoke about the 3% in a sinister, Nazi way. Seeman has constricted the circle and excluded whom he considers non-Tamils, that is about all.It was during Karunanidhi’s regime that the LTTE roamed freely in Tamil Nadu and indulged in nefarious, anti-Indian activities, to which the DMK leader turned a blind eye. The result was the horrendous murder of Rajiv Gandhi and several bystanders. It was during the DMK’s rule that Keelvenmani happened. Above all, the blasts in Coimbatore which killed over 50 persons happened during the DMK’s regime. Thus it is ridiculous to claim that DMK prevented violent elements form raising their heads.Yes. The BJP and the NTK try to unite castes on religious and nativist planks. The DMK has managed a broad alliance of comprador bourgeois, rural landlords, rent-seekers, liquor barons, real-estate sharks, czars of education, lumpen riff raff and a rabble of dishonest intellectuals without a moral compass, but its main plank remains Dravidian chauvinism. The party makes no secret of it, though the intellectuals supporting the party pretend that it doesn’t exist or give it a different name.Seeman is only imitating the DMK. The DMK has openly announced that it upholds the racist, divisive and anti-human ideas of Periyar. Its leaders keep  blaming the Brahmins for all the ills of Tamilnadu. The Dravidian hate circle is as virulent in its toxicity as the Tamil hate circle.The father of racist abuse in Tamil Nadu is Periyar. He had splendid disciples. The film dialogues of Anna and Karunanidhi are the very definitions aggressive machismo. The nutrient that continues to nurture the poison-tree of Dravidian ideology is a hugely exaggerated sense of victimhood.

So, what is the difference between the DMK and the NTK? The only difference is that the DMK is in power and that makes the party restrained. There are in the DMK several chauvinists and separatists. The DMK’s MLA, Dr Ezhilan proudly proclaimed that his party had driven out many Brahmins from Tamil Nadu. Stalin said this in 2018.: At a press conference addressed by Mr. Stalin in Erode, a journalist said an idea was gaining ground that the southern States should come together to demand Dravida Nadu. To this Mr. Stalin responded, “If it (such a situation) comes, it would be welcome. We hope that such a situation arises.” Thus even though the DMK today stands by the idea of united India, there are solid grounds to make a surmise that this stand is tactical and temporary and the party may not hesitate to revive its separatist demands, if the situation changes.

The NTK is what DMK was a few decades ago and what the DMK will be if it is denied power.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on October 11, 2021 20:00

September 13, 2021

ஆற்றங்கரை நாகரிகமா?

தமிழக அரசு ‘பொருநை ஆற்றங்கரை நாகரிகம்’ என்ற தலைப்பில் புத்தகம் ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அழகிய புத்தகம். ஆனால் அறிவியலுக்குச் சற்றும் தொடர்பில்லாதது. அரசியல் கட்சி அறிக்கைள் போன்று உண்மைகளை மறைத்து, பரப்புரையில் ஈடுபடுகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் மழையை நம்பியிருக்கும், 250 கிலோமீட்டர்களே ஓடும் சிறிய நதியான வைகையின் பெயரில் ஒரு நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டது, இப்போது அதிலிருந்து 150 கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் 125 கிலோமீட்டரே ஓடும் மிகச் சிறிய நதியான பொருநை நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. உலகத்திலேயே எதிரும் புதிருமாக இருக்கும் இரு நதி நாகரிகங்கள் தமிழகத்தில் மட்டுமே இருக்கும். இது கோமாளித்தனத்தின் உச்சம் என்பது குறுங்குழு இனவாத நஞ்சின் தாக்கம் இல்லாத எவருக்கும் எளிதில் புரிந்திருக்கும்.

சென்ற அரசு வெளியிட்ட புத்தகத்திலாவது பல அறிவியற் தகவல்கள் இருந்தன. இப்புத்தகம் தனக்கும் அறிவியலுக்கும் தீராப்பகை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளது. 

திரு ஸ்டாலின் தனது சட்டப் பேரவை அறிக்கையில் சொல்கிறார் (புத்தகத்தில் பதிக்கப்பட்டுள்ளது):

கீழடியில் , சூரியன் , நிலவு மற்றும் வடிவியல் முத்திரைகளுடன் கூடிய வெள்ளிக்காசு ஒன்று கண்டெடுக்கப்பட்டது . இதை ஆய்வு செய்த தலைசிறந்த நாணயவியல் நிபுணரும் , கொல்கத்தா பல்கலைக்கழகப் பேராசிரியருமான சுஷ்மா பாசு மஜும்தார் , இந்த வெள்ளி முத்திரைக்காசு கிமு நாலாம் நூற்றாண்டிற்கு முற்பட்டது , அதாவது மௌரியப் பேரரசர் அசோகர் காலத்திற்கு முற்பட்டது என்று கருத்துத் தெரிவித்துள்ளார் .

மஜூம்தார் என்ன சொல்கிறார்?

“However the other one which is recently found in 2021 is an imperial Silver Punch Marked coins of Gupta Hardekar series IV no.418 XX1G2. Similar coin is also reported in the Amaravati hoard.”

அமராவதியில் ஒரு நாணயம் அல்ல. ஆயிரக்கணக்கில் நாணயங்கள் கிடைத்தன. அதனால் அமராவதி அசோகருக்கு முந்தி இருந்த்து என்று யாரும் சொல்வதில்லை.  பழங்கால நாணயங்கள் பல நூற்றாண்டுகள் புழக்கத்தில் இருந்தன. சென்னை அருங்காட்சியகம் சொல்வது இது:

Puranas  or Punch-Marked Coins
(circa 600 BC – circa 300 AD)

        Puranas are the earliest money coined in India . They were in circulation during the centuries long before the beginning of the Christian era. Sanskrit writers such as Manu and Panini, and the Buddhist Jataka stories have made mention of these coins.

        An interesting feature of these coins is that they bear neither date nor any name of kings. We only find a number of symbols punched on the face of these coins.

        The symbols found on these coins are religious, mythological or astronomical in character. Among the marks commonly found are the sun, the elephant, cow, chariot, horse, bull, jackal, tree, tiger or lion and dharmachakra.

       The punch-marked coins were in circulation in Northern India up to the beginning of the Christian era. In Southern India they continued to be in use for three centuries more.

எனவே  கிபி மூன்றாம் நூற்றாண்டின் வரை புழகத்திலிருந்த நாணயத்தை வைத்துக் கொண்டு கீழடியின் வயது கிமு ஆறாம் நூற்றாண்டு என்று கதை விடுவது அறிவியலுக்குப் பொருந்தாது.

இது அவ்வளவு அரிதான நாணயம் கூட அல்ல.  சில நூறு டாலர்களில் வாங்கி விடலாம்.

https://www.megaministore.com/coins/asia/india/punch-marked-coins-karshapana#sales

அடுத்து சிவகளைக்கு வருவோம்.

“இந்த அகழ்வாய்வில் கண்டெடுக்கப் பட்ட நெல்லினை கனிமப் பகுப்பாய்வு செய்த்தில் இதனின் காலம் கிமு 1155 என காலவரையறை செய்யப்பட்டுள்ளது.”

கிடைத்த  நெல்லின் வயது இன்றைக்கு 3200 ஆண்டுகள் என்ற தகவலை மட்டுமே இந்தச் செய்தி தருகிறது. நெல் பயிரிடப்பட்டதா (cultivated) அல்லது தானே விளைந்ததா (wild) என்ற செய்தி இல்லை.  புதிய கற்கால மனிதனுக்கும் நெல் பயிரிடுவது தெரிந்திருந்தது. பயிரப்படாத நெல் வகைகள் இந்தியாவில் நெல் எப்போது வந்தது என்பதை ricepedia விளக்குகிறது:

The earliest remains of the grain in the Indian subcontinent have been found in the Indo-Gangetic Plain and date from 7000–6000 BC though the earliest widely accepted date for cultivated rice is placed at around 3000–2500 BC with findings in regions belonging to the Indus Valley Civilization. Perennial wild rices still grow in Assam and Nepal. It seems to have appeared around 1400 BC in southern India after its domestication in the northern plains.

எனவே  3200 வருட்த்திற்கு முந்தைய நெல் கிடைத்து விட்டது என்பதை வைத்துக் கொண்டு அன்று நதிக்கரை நாகரிகம் இருந்தது என்று நம்மால் சொல்லி விட முடியாது. அதற்கு மிகவும் அடிப்படையான சான்றுகள் தேவை. ஒன்று கூட இதுவரை வைகைக்கரையிலும் பொருநைக்கரையிலும்  கிடைக்கவில்லை என்பதுதான் உண்மை.

கொற்கைத் துறைமுகம் கிமு எட்டாம் நூற்றாண்டிற்கு முன் இயங்கிக் கொண்டிருந்தது என்பது உண்மை. ஆனால் அதை வைத்துக் கொண்டு பின்புலத்தில் நகர நாகரிகம் இருந்த்து என்று சொல்லி விட முடியாது. இதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும் நமக்குக் கிடைத்திருப்பது, வடநாட்டு நாணயம், கங்கை நதிக்கரையில் செய்யப்பட்ட பானைகள், வெளிநாட்டு மணிகள், இந்தியாவின் மற்றைய பகுதிகளில் புழங்கிய பொருட்கள். தமிழரின் நாணயங்கள் ஏன் கிடைக்கவில்லை?  சம்பகலட்சுமி சொல்வதில் உண்மையிருக்கலாம்:  the urbanization of the Sangam age did not take place in a context of a state polity, and  this was an age of tribal chiefdoms or at the most ‘potential monarchies’. பல இடங்களில் புதிய கற்காலத்திலிருந்து வெளியே வந்து கொண்டிருக்கும் குழுக்களையே அன்றைய தமிழகம் கொண்டிருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. நகர நாகரிகம் என்பது சில நூற்றாண்டுகளாவது தொடர்ந்திருக்கும். அதற்கான எந்தச் சான்றுகளும் கீழடியிலும் பொருநை நதிக்கரையிலும் கிடைக்கவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக்க் கிடைத்திருக்கும் மக்கள் வாழ்விடங்களை வைத்துக் கொண்டு அவை நகரங்கள் என்று சொல்லி விட முடியாது.

எல்லாவற்றிற்கும் மேலாக குறுங்குழு இனவாதக் கண்ணோட்டத்தோடோ அல்லது தேசிய மேலாண்மைக் கண்ணோட்ட்த்தோடோ அகழ்வாராய்ச்சியை அணுகுவது அறிவியலுக்குப் புறம்பானது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 13, 2021 21:25

P.A. Krishnan's Blog

P.A. Krishnan
P.A. Krishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow P.A. Krishnan's blog with rss.