P.A. Krishnan's Blog, page 6

December 30, 2021

நாயகனாய் நின்ற

ஆண்டாள் தான் தமிழ்க் கவிஞர் என்பதை மிகத் தெளிவாகச் சொல்கிறார். திருப்பாவையில் சங்கத்தமிழ் என்கிறார். நாச்சியார் திருமொழியில் செந்தமிழ் என்றும் தூய தமிழ் என்றும் பாடுகிறார். எனவே அவருடைய கவிதைகளில் அகமும் புறமும் இணைந்து மிகவும் இயற்கையாக இயங்குகின்றன. ஆனால் திருப்பாவையின் அக உலகம் நாச்சியார் திருமொழியின் அக உலகத்திலிருந்து வேறுபட்டது. திருப்பாவையின் பெண்கள் அப்போதுதான் பருவத்தின் வாசற்படியைத் தாண்டியிருப்பவர்கள். அவர்கள் காணும் உலகம் அவர்களுக்கு வியப்பையும், மகிழ்ச்சியையும், கேள்விகளையும் தருகின்றன. அவர்கள் செல்லுமிடமெல்லாம் சேர்ந்தே செல்கிறார்கள். ‘நான்’ காணவே காணோம் என்று சொல்லி விடலாம். ‘நாம்’ என்ற சொல்தான் எங்கும் ஒலிக்கிறது. ஆனால் நாச்சியார் திருமொழியில் ‘கோழியழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம்’ என்று ஆண்டாள் தோழியரையும் சேர்த்துப் பாடினாலும் அது காதலையும் கலவியையும் பற்றி புரிதல் உள்ளவரின், தன்னுடைய பெண்மையை அறிந்தவரின் பாடல். சேர்க்கைக்காக ஏங்குபவரின் பாடல். தனிப்பெண்ணின் பாடல்.

திருப்பாவையின் அடுத்த ஐந்து பாடல்களும் கண்ணனைச் சுற்றியிருப்பவர்களைப் பற்றிப் பேசுகின்றன. வாயிற்காப்போன், கோவில்காப்போன், யசோதை, நந்தகோபன், பலராமன் போன்றவர்கள். ஆனால் முக்கியமானவர் நப்பின்னைப் பிராட்டிதான். இறைவனிடம் சேர அவரிடம் பரிந்துரைப்பவர். இறைவனின் துணைவியான லட்சுமியின் நிலையைப் பற்றி வடகலையாருக்கும் தென் கலையாருக்கும் வேறுபாடுகள் இருக்கின்றன. இருவரும் அவர் பக்தர்களுக்காக இறைவனிடம் பரிந்துரை செய்வார் என்பதை ஒப்புக் கொள்கிறார்கள். ஆனால் வடகலையார் இறைவனுக்கும் தாயாருக்கும் ஒரே இடத்தைத் தருகிறார்கள். இறைவனின் தன்மைகள் அனைத்தும் அவரிடம் இருக்கின்றன. அவரும் பரமாத்மாதான் என்கிறார்கள். தென்கலையார் இறைவனின் பல தன்மைகளை அவர் கொண்டிருந்தாலும் அவர் ஜீவாத்மாதான், அவருக்கு இருக்கும் தன்மைகள் அனைத்தும் -குறிப்பாக பக்தர்களுக்காகப் பரிந்துரைக்கும் தன்மை – இறைவர் அவருக்கு கொடுத்த கொடை என்கிறார்கள்.

இனி பாடல்.

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய

கோயில் காப்பானே கொடித்தோன்றும் தோரண

வாயில் காப்பானே மணிக்கதவம் தாள்திறவாய்

ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை

மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்

தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்

வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே அம்மா நீ

நேய நிலைக்கதவம் நீக்கேலோர் எம்பாவாய்.

‘நாயகனாய நின்ற’ யார் நாயகன்? நந்தகோபனா, கோவில் காப்போனா? வாயிற் காப்போனா? -இருவரும் ஒருவரா? உரையாசிரியர்கள் பாடுபவர்கள் சிறுமிகள் என்பதனால் எல்லோரும் அவர்களுக்கு நாயகர்களாகத் தோன்றுகிறார்கள் என்று சொல்கிறார்கள். அவர்களும் ‘புருஷாகாரமாக’ இறைவனிடம் பரிந்துரைப்பவர்கள். எனவே அவர்களை நாயகன் என்று சொல்லி சிறுமிகள் உற்சாகப்படுத்துகிறார்கள்.

இது யார் வீடு? கண்ணனுடைய வீடா அல்லது நந்தகோபனுடைய வீடா? அவன் உலகுக்கெல்லாம் உரிமை கொண்டவனாக இருந்தாலும், நந்தகோபனின் காவலில் கிருஷ்ணாவதாரம் எடுத்த காலத்தில் இருக்கிறான். அவனுக்கும் நாயகன் நந்தகோபன்தான் என்றும் கொள்ளலாம். உந்தமடிகள் முனிவர் உன்னை நானென்கையில் கோலால்
நொந்திட மோதவும் கில்லேன்
என்று யசோதை கண்ணனிடம் உன்னுடைய சேட்டைகளைக் கேள்விப்பட்டால் உன் தந்தை கோபித்துக் கொள்வார் என்று (பெரியாழ்வார் வாக்கில்) சொல்லவில்லையா? கண்ணனைக் கோபித்துக் கொள்ளும் உரிமை படைத்தவன் கண்ணனுக்கு நாயகனாகத்தானே இருக்க முடியும்?

அவன் மாயன். எங்கள் பக்கம் நின்று கைகால்களைப் பிடித்து பணிவிடை செய்வான். மணிவண்ணன். அருகில் இல்லாவிட்டாலும் நினைவில் வந்து எங்கள் நிலைப்பாட்டைக் குலைக்கும் வடிவழகன்.

நென்னல் என்றால் நேற்று. வள்ளுவர் நெருநல் என்று நேற்றைச் சொல்லியிருக்கிறார். அவன் எங்களுக்குப் பறை தருவோம் என்று நேற்றே வாக்குறுதி கொடுத்து விட்டான் என்று சிறுமியர் சொல்கிறார்கள். தூயோமாய் வந்தோம் என்றும் சொல்கிறார்கள். இவர்கள் நீராடியதாக எந்தப் பாட்டும் சொல்லவில்லையே? இவர்கள் நீராடினார்களா அல்லது கண்ணனைப் பார்க்க வேண்டிய அவசரத்தில் ‘உள்ளபடியே’ வந்து விட்டார்களா? ஆண்டாள் சொல்லாமல் விட்டு விடுகிறார். எப்படி வந்தாலும் அவனுக்கு உகப்புத்தான்.

வாயால் முன்னம் முன்னம் மாற்றாதே என்றால் நீ மறுத்துச் சொல்லி விடாதே என்று பொருள். நீ உள்ளுக்குள் அவ்வாறு நினைத்தாலும் வாயால் மறுத்துச் சொல்லி எங்கள் நெஞ்சில் நெருப்பைக் கொட்டி விடாதே என்கிறார்கள். ஒரு வாய்ச்சொல்லாலே தண்ணீர்ப் பந்தலே வைக்கலாம். அந்த வாய்ப்பை நீ ஏன் இழக்கிறாய் என்று ஆறாயிரப்படி சொல்கிறது.

‘நேச நிலைக்கதவம்’ ஒன்றொடொன்று சேர்ந்து கொண்டிருக்கும் கதவுகள். அவற்றைப் போலவே நாமும் நேசமாக இருக்கலாம். எங்களை உள்ளே விடாமல் பகை காட்டாதே என்கிறார்கள் சிறுமிகள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 30, 2021 21:02

நயம் கம்யூனிஸ்டு, கலப்படக் கம்யூனிஸ்டு

.

திரு விஜயசங்கர் ராமச்சந்திரன் தன் நீண்ட கட்டுரையில் நான் அருஞ்சொல் இணைய இதழுக்கு எழுதிய கட்டுரைகளுக்கு எதிர்வினைகளாக இவற்றைக் குறிப்பிடுகிறார்.

கிருஷ்ணன் சாவர்க்கருக்கு ஆதரவான நிலைப்பாடை எடுக்கிறார் என்று கூற முடியாது. ஆனால் நேருவியராக தன்னை அடையாளப்படுத்திக்கொள்ளும் அவர் சாவர்க்கர் மீது கடுமையான விமரிசனத்தை  முன்வைப்பதைத் தவிர்த்து மழுப்பல், நீட்டல், அனுமானங்கள், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல்களைச் செய்து மல்லிகைப் பூச்செண்டால் அடிக்கிறார்.கிருஷ்ணன் சாவர்க்கரை ஆதரிப்பவர்களையும் எதிர்ப்பவர்களையும் தவறாக ஒற்றுமைப்படுத்தி false equivalence செய்கிறார்.எளிமைக்கும் எளிமைப்படுத்துதலுக்கும் உள்ள வித்தியாசம் அவருக்குத் தெரியும். இருந்தும் இரண்டாவதைத்தான் அவர் செய்கிறார். அவர் A G நூரானி எழுதிய Savarkar and Hindutva என்ற நூலைப் படித்திருந்தால் இந்த்த் தவற்றைச் செய்திருக்கமாட்டார்.வீர சாவர்க்கர் இப்போது கவனப்படுத்தப்படுகிறார் என்று கிருஷ்ணன் சொல்கிறார். ஏன் யாரால், எதற்காக என்று கேட்டால் யாரோ என்று கூற முடியாது. பதில் அவருக்குத் தெரியும். சொல்வதில்தான் தயக்கம்.சாவர்க்கர் படிப்படியாக முஸ்லிம் விரோதியாக மாறினார் என்று கிருஷ்ணன் கூறுவது உண்மையல்ல. சாவர்க்கர் அந்தமான் சிறையில் இருந்தபோதே அவருடைய மதவாதப் பார்வை வெளிப்படத் துவங்கியது.சாவர்க்கரின் சிறை அனுபவங்களைப் பற்றிப் பேசும் போது கிருஷ்ணன் தடுமாறுகிறார். பாதி உண்மைகளை மட்டும் பேசுகிறார்.சாவர்க்கர் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடிவருடி. ஏனென்றால் அவர் இரண்டாம் உலக யுத்த காலத்தில் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு ஆள் சேர்க்கும் வேலையில் ஈடுபட்டார்.

திரு விஜயசங்கரின் கட்டுரை சாவர்க்கரைப் பற்றி விரிவாக பல தகவல்களைத் தருகின்றது என்பது உண்மை. அதற்காக அவருக்கு வாழ்த்துகள். 

அவர் என்னைப் பற்றி எழுதியிருப்பதற்கு எதிர்வினை ஆற்றும் முன்னால் இன்னொன்றைக் குறிப்பிட வேண்டும். திரு ராமச்சந்திரன் மார்க்ஸ் எழுதிய ‘லூயி போனபார்டின் 18ம் ப்ரூமைர்’ கட்டுரையிலிருந்து ஒரு மேற்கோளைக் காட்டுகிறார். மார்க்ஸ் சொல்வதை ஆங்கிலத்தில் படித்தால்தான் சரியாக இருக்கும். Men make their own history, but they do not make it as they please; they do not make it under self-selected circumstances, but under circumstances existing already, given and transmitted from the past. The tradition of all dead generations weighs like a nightmare on the brains of the living. And just as they seem to be occupied with revolutionizing themselves and things, creating something that did not exist before, precisely in such epochs of revolutionary crisis they anxiously conjure up the spirits of the past to their service, borrowing from them names, battle slogans, and costumes in order to present this new scene in world history in time-honored disguise and borrowed language. இதைக் கவனமாகப் படித்துப் பாருங்கள்.  யார் பழைய மரபுகளைத் தூக்கிப் பிடிக்கிறார்கள்? யார் பழைய பெயர்களைப் பயன்படுத்துகிறார்கள்? யார் பழைய போர்க்குரல்களை இன்றும் எழுப்புகிறார்கள்? இன்றைய வரலாற்றை பழைய வரலாற்றின் வடிவத்தை அணிவித்து காட்டுபவர்கள் யார்?  பாஜகவும் இந்துத்துவர்களும் இந்திய அளவில் செய்வதை தமிழகத்தைப் பொறுத்தவரை திமுகவும் திராவிடர் கழகமும் செய்கிறார்கள். ஒரு சாரார் அப்பட்டமான மதவாதிகள் என்றால் இன்னொரு சாரார் அப்பட்டமான இனவாதிகள். தமிழகத்தின் கம்யூனிஸ்டுகள் நயம் கம்யூனிஸ்டுகளாக இருந்தால் இருவரையும் ஒதுக்கித் தள்ளியிருப்பார்கள். ஆனால் தமிழகத்தின் கம்யூனிஸ்டுகள் லும்பன் கலப்படத்தால் பாதிக்கப்பட்ட கம்யூனிஸ்டுகள். இவர்கள் பெரியாரைத் தூக்கிப் பிடிப்பதைப் போல மிகவும் கேவலமான, உழைக்கும் வர்க்கத்திற்குச் செய்யும் துரோகம் வேறு ஏதும் இருப்பது கடினம். பெரியார் லும்பன் வர்க்கத்தின் பிரதிநிதியாகத்தான் தன் வாழ்நாள் முழுவதும் செயல்பட்டார்.   எதையும்  கொச்சைப்படுத்தும் அவருடைய தன்மையை கலகம் என்று கம்யூனிஸ்டுகள் தூக்கிப் பிடிப்பதைவிட பெரிய கயமையைப் பார்ப்பதும் கடினம்.

இனி என் எதிர்வினைகளுக்கு வருவோம்.

ஆங்கிலத்தில் mixed metaphor என்ற சொல்லாடல் உண்டு. உயரம், நீளம் தாண்டி, மழுப்பி, அனுமானங்கள் செய்து, கடைசியில் மல்லிகைச் செண்டு கொண்டு அடிப்பதை mixed metaphor என்று கூடச் சொல்ல முடியாது; மிக்சியில் போட்டு அடித்த metaphor என்றுதான் சொல்ல வேண்டும். நான் சாவர்க்கர் மீது கடுமையான விமரிசனங்களைச் செய்யவில்லை என்கிறார். என்னுடைய கட்டுரைகள் சாவர்க்கரைப் பற்றி வந்த புத்தகங்களில் என்ன சொல்லப்பட்டிருக்கின்றன என்பதை வாசகர்களிடம் கொண்டு செல்வதுடன் அவர் எடுத்த நிலைப்பாடு சரியா தவறா என்பதைப் பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பதையும் தெளிவாகச் சொல்கின்றன. அவர் செய்தவை தவறுகள் என்று நான் நினைத்திருந்தால் தவறுகள் என்று சொல்லியிருக்கிறேன். சரி என்று நினைத்தால் சரி என்று சொல்லியிருக்கிறேன்.  இதைத்தான் இந்திய விடுதலைப் போரின் மீது பேரபிமானம் கொண்ட எவரும் செய்வார்கள். சாவர்க்கரின் வீழ்ச்சியை நான் எந்த சமரசமும் செய்யாமல் குறிப்பிட்டிருக்கிறேன். சாவர்க்கர் சாதிகளை ஒழிக்க வேண்டும் என்று சொன்னார் என்பது உண்மை. அவர் தீண்டாமைக்கு எதிராகக் குரல் கொடுத்தார் என்பது உண்மை. அவரும் ஏற்றதாழ்வற்ற சமுதாயத்தை விரும்பினார் என்பதும் உண்மை. காந்தி படுகொலையில் அவருக்கு விடுதலை அளிக்கப்பட்டாலும் அறத்தின் அடிப்படையில் அவரை மன்னிக்க முடியாது என்பது உண்மை.  அவருடைய அடிப்படையான இஸ்லாமிய எதிர்ப்பும் உண்மை. இவை அனைத்தையும் நான் குறிப்பிட்டிருக்கிறேன். நான் சாவர்க்கரைப் பற்றி புத்தகம் எழுதினால் என்னுடைய விமரிசனங்கள் முழுமையாக வரும். இக்கட்டுரைகள் அவரைப் பற்றி சமீபத்தில் வந்த புத்தகங்களின் அடிப்படையிலேயே எழுதப் பட்டிருக்கின்றன என்பது பற்றிப் புரிதல் இல்லாதவர்களே இது போன்ற விமரிசனங்களை வைப்பார்கள். கலப்படக் கம்யூனிஸ்டுகள் எடுக்கும் நிலைப்பாட்டை நயம் கம்யூனிஸ்டுகள் மீது மரியாதை வைத்திருக்கும் யாரும் எடுக்க மாட்டார்கள்.சாவர்க்கர் மீது தட்டையான நிலைப்பாடுகளை எடுக்கும் இருதரப்பினரையும்தான் நான் பொதுமைப்படுத்தியிருக்கிறேன். மேலும் கலப்படக் கம்யூனிஸ்டுகளுக்கும் சாவர்க்கரை எதிர்ப்பவர்களுக்கும் என்ன கொம்பு முளைத்திருக்கிறதா? ஏன் பொதுமைப் படுத்தக் கூடாது? அவர்கள் நிலைப்பாடுகள் தவறு என்றால் ஏன் தவறு என்று சொல்லக்கூடாது?நூரானி எழுதிய புத்தகத்தை அது வந்த ஆண்டிலேயே படித்து விட்டேன். அவர் என்ன சொல்கிறார் என்பதைப் பார்ப்போம். A fair and definitive biography on Savarkar is yet to appear. The standard work in English is Dhanajay Keer’s which often borders on hagiography.  அவரே சாவர்க்கர் வாழ்க்கையைக் குறித்த தரமான வரலாறு வரவில்லை என்று கூறியிருக்கிறார்.  நூரானி சொன்ன முழுமையான வாழ்க்கை வரலாறு சம்பத் எழுதியது. என்னுடைய Outlook மதிப்புரையில் நான் சொல்லியிருப்பது இது:  Whatever Gandhi was, Savarkar was not. But that could not have been the reason why our historians have consistently ignored him. Sampath deserves our congratulations mainly because he has succeeded in disturbing this silence. His is a sympathetic biography; I am sure others will now write critical ones, enriching our understanding of the freedom movement and possibly its most controversial personality.  சம்பத் செய்திருப்பதை இடதுசாரி வரலாற்றாசிரியர்கள் ஏன் செய்யவில்லை என்பதை திரு விஜயசங்கர் போன்றவர்கள்தாம் பதில் சொல்ல வேண்டும். இன்னொன்றையும் நான் முக்கியமாகச் சொல்ல வேண்டும். என்னை நூரானியின் புத்தக்கதை படிக்கவில்லை என்று தெரியாமல் விமரிசனம் செய்யும் திரு விஜயசங்கர், சம்பத் மற்றும் புரந்தரே எழுதிய புத்தகங்களைப் படிக்கவில்லை என்பது வெளிப்படை. படித்திருந்தால் சாவர்க்கரைப் பற்றி அவர்கள் எழுதியிருப்பற்றைப் பதிவு செய்திருப்பார். குறைந்த பட்சம் சம்பத் புத்தகத்தையாவது படித்திருக்க வெண்டும். நூரானி மேற்கோள் காட்டியிருக்கும் புத்தகங்களில் மிகச் சிலவே சாவர்க்கர் வாழ்க்கையோடு தொடர்பு கொண்டவை. மீதி அனைத்தும் பொதுவாக இந்திய அரசியலையும் இந்திய வரலாற்றையும் பற்றிப் பேசுபவை. சம்பத்தின் சாவர்க்கர் இரண்டாம் பாகம் புத்தகத்தில் மட்டும் Bibliography பகுதி முப்பது பக்கங்கள் இருக்கின்றன. நூரானியை விட குறைந்தது இருபது மடங்குகள் புத்தகங்களையும் ஆவணங்களையும் அவர் படித்து எழுதியிருக்கிறார். எளிதில் ஒதுக்கித் தள்ள முடியாத புத்தகம் சம்பத்துடையது. அதைப் படித்து விட்டு விஜயசங்கர் எழுதியிருந்தால் நன்றாக இருந்திருக்கும்.சாவர்க்கரை யார் கவனப்படுத்துகிறார்கள் என்பது எல்லோருக்கும் தெரிந்த செய்தி. அதை அடிக்கோடிட்டுக் காட்ட வேண்டிய அவசியம் இல்லை என்று நினைத்தேன். இப்போது இவர் கேட்டிருப்பதால் சொல்கிறேன். சாவர்க்கரை இந்துத்துவ வாதிகளும் பாஜகவினரும் அரசியல் காரணங்களுக்காகத் தூக்கிப் பிடிக்கிறார்கள். அதே அரசியல் காரணங்களுக்காக அறவுணர்வை அறவே துடைத்து எறிந்து விட்ட கலப்படக் கம்யூனிஸ்டுகளும், வரலாறு என்றால் என்ன என்று தெரியாத காங்கிரஸ் தற்குறிகளும் அவரை அவதூறு செய்கிறார்கள். இவர்களால்தான் அவர் கவனப்படுத்தப் படுகிறார்.சாவர்க்கரைப் பற்றி நூரானி என்ன சொல்கிறார்? 1910ம் ஆண்டு சாவர்க்கரைப் பற்றி அவர் இவ்வாறு சொல்கிறார்: He keeps returning to this theme of unity between Hindus and Muslims and keeps emphasizing that in the struggle for independence, the two must act as brothers. அந்தமான் சிறையிலிருந்து இந்தியாவிற்கு 1920ல் வந்த போது அவர் முழு இந்துத்துவவாதியாக மாறியிருக்கிறார். அது எப்படி நடந்தது?  இதைதான் நான் என் கட்டுரையில் சொல்லியிருக்கிறேன். “அரவிந்தரின் சகோதரரான பரிந்திர குமார் கோஷ் தன் அந்தமான் அனுபவத்தைப் பற்றி எழுதும் போது இவ்வாறு குறிப்பிடுகிறார்:‘இந்து வார்டர்கள் எங்கள் மீது அனுதாபப்படுவார்கள், எங்கள் நண்பர்கள் ஆகிவிடுவார்கள் என்ற நினைப்பு இருந்தது. அதனால் எங்கள் தலைவிதியை நிர்ணயிக்கும் காவலர்கள் அனைவரும் முகமதியர்களிடமிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். பதான் என்றால் நமக்கு காபூலிருந்து வந்து பழம் விற்பவர்கள் என்ற புரிதல் இருக்கும். ஆனால் இங்கு போர்ட் பிளேர் சிறைச்சாலையில் அவர்கள் எம தூதர்கள். பிடித்துக் கொண்டு வா என்றால் தலையை வெட்டிக் கொண்டு வரக் கூடியவர்கள்.‘சாவர்க்கர் அந்தமானில் இருக்கும் போது இந்துத்துவத்தைப் பற்றி யோசித்திருக்க வேண்டும். அவர் மாற்றத்திற்கு ஒரு காரணம் பரீந்திரர் குறிப்பிட்டது போல அங்குள்ள முஸ்லிம் வார்டர்கள் நடந்து  கொண்ட விதத்தின் மீது வந்த வெறுப்பாக இருக்கலாம்.” இதில் என்ன தவறிருக்கிறது? நூரானி கூட தன் புத்தகத்தின் ஓர் அத்தியாயத்தின் தலைப்பையே Andamans and the Origins of Hindutva என்று வைத்திருக்கிறார். எனவே அவரும் சாவர்க்கருக்கு இந்துத்துவ எண்ணம் தோன்றியது அந்தமானில்தான் என்பதில் தெளிவாக இருக்கிறார். நூரானி இதைச் சொல்கிறார் என்பது உண்மை. It is too much to assert that ill treatment by Muslim warders in Jail shaped Savarkar’s communal outlook. ஆனால் சாவர்க்கர் சொன்னதாக இதையும் சொல்கிறார்: The Hindus suffered terribly, first, from their fellow-prisoners, the Muslims and secondly from their Muslim warders. இஸ்லாமியர்களால் இந்துக்கள் துன்பம் அனுபவித்திருக்கிறார்கள் என்று சாவர்க்கர் வெளிப்படையாகச் சொல்லும் போது அவருடைய சிறை அனுபவம் இஸ்லாமிய வெறுப்பிற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று சொல்வதில் என்ன தவறு? ஏனைய இந்துக்கள் ஏன் இஸ்லாமிய வெறுப்பாளர்களாக மாறவில்லை என்ற கேள்விக்கு விடை இல்லை என்று திரு விஜயசங்கர் எழுதுகிறார். எல்லோரும் ஒரே விதமாக ஒரு பிரச்சினையை எதிர்கொள்வார்கள் என்று அவர் நினைப்பது வேடிக்கையாக இருக்கிறது. ஆங்கிலேய ஒடுக்குமுறையை பலர் எதிர்கொண்டனர். எல்லோரும் ஏன் பகத் சிங் போல தூக்குமேடை ஏறவில்லை?நான் எழுதிய கட்டுரை சாவர்க்கருடைய சிறை அனுபவங்களைப் பற்றி. மற்றவர்கள் அனுபவம் எவ்வளவு கொடுமையாக இருந்தாலும் சாவர்க்கர் மிகுந்த கொடுமையை அனுபவித்தார் என்பதை யாரும் மறுக்க முடியாது.  நூரானியே தெளிவாக இதைச் சொல்கிறார். எனவே நான் பாதி உண்மையைச் சொல்கிறேன் என்று எழுதுவது அடிப்படையில் நேர்மையின்மை.சாவர்க்கரை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தின் அடிவருடி என்று சொல்வது மிகவும் கேவலமான அவதூறு. அது நம் சுதந்திரப் போராட்ட வீர்ர்களுக்குச் செய்யும் அவமானம். இதை ஒரு கம்யூனிஸ்டு செய்வது  படு கேவலம். சாவர்க்கர் மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுத்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால் அதனால் அவரை காந்தி, நேரு, போஸ், பகத் சிங் போன்றவர்கள் குறைத்து மதிப்பிடவில்லை. ஏனென்றால் அவர்களிடம் நேர்மை இருந்தது. அன்றையக் கம்யூனிஸ்டுகள் யாரும் இந்தச் சாக்கடைத்தனமான செயலைச் செய்யவில்லை. ஏகாதிபத்தியத்திற்கு அடிவருடியாக இருந்திருந்தால் சாவர்க்கர் 17 ஆண்டுகள் ரத்னகிரி மாவட்டத்தில் காலத்தை கழிக்க வேண்டிய அவசியம் இருந்திருக்காது. 1942ல் கம்யூனிஸ்டுகள் எப்படி நடந்து கொண்டார்களோ அப்படியே சாவர்க்கரும் நடந்து கொண்டார். கம்யூனிஸ்டுகள் பிரித்தானிய ஏகாதிபத்தியத்தோடு சமரசம் செய்து கொள்ளவில்லையா? அவர்கள் தொழிலாளர்கள் போராடம் நடத்தக் கூடாது என்று அறகூவல் விடுக்கவில்லையா? வெள்ளையனே வெளியேறு போரட்டத்தை எதிர்க்கவில்லையா? இந்திய விடுதலைக்காகப் போராடிய சுபாஸ் போஸை மிகவும் கேவலமான சொற்களால் தாக்கவில்லையா? இந்திய ராணுவத்திற்கு சாவர்க்கர் ஆட்களைச் சேர்த்து விட்டதால் அவர் அடிவருடி ஆகி விட்டார் என்று திரு விஜயசங்கர் எழுதுகிறார். கம்யூனிஸ்டுகளும் இதைத்தான் செய்து கொண்டிருந்தார்கள். சாவர்க்கர் ராணுவத்தில் அதிக இந்துக்கள் சேர்ந்தால் இந்துக்கள் வலிமை பெறுவார்கள் என்று நினைத்தார். கம்யூனிஸ்டுகள் உழைக்கும் வர்க்கத்தினருக்கு ராணுவப் பயிற்சி கிடைத்தால் அது பின்னால் புரட்சிக்கு சாதகமாக இருக்கும் என்று நினைத்தார்கள். அவ்வளவுதான் வித்தியாசம். திரு மோகன் குமாரமங்கலம் பெரம்பூரில் 1944ல் பேசியது இது: At a meeting convened by the Madras and Southern Mahratta Railway Employees’ Union on 24 July 1944 in Perambur, Mohan Kumaramangalam said that the Communist party represented the most progressive section of the Indian people; though the attitude of the British towards it had hitherto been hostile, it was the duty of every citizen to actively co-operate in the war. He also said that if Japan conquered India, only the latter and not British Imperialism would suffer and that the National Movement would be “smashed”. He appealed to his audience to join the army in large numbers. போஸ் 25 ஜூன் 1944ல் சொன்னார்: It is heartening to note that Veer Savarkar is fearlessly exhorting the youth of India to enlist in the Armed Forces. These enlisted youth themselves provide us with trained men from which we draw the soldiers of the Indian National Army. பெரியாரை எடுத்துக் கொள்வோம். 1934ம் ஆண்டு அவர் ஆங்கிலேய அரசிற்கு நான் பொதுவுடமை பிராசரத்தில் ஈடுபட மாட்டேன் என்று மன்னிப்புக் கேட்டுக் கொண்டதாகவும், எழுதிக் கொடுத்ததாகவும் கீதா ராஜதுரை தங்கள் சுயமரியாதை-சமதர்மம் நூலில் குறிப்பிடுகிறார்கள். அவர் மட்டும் மன்னிப்புக் கேட்கவில்லை ஜீவாவையும் மன்னிப்புக் கேட்க வைத்தார். இயக்கத்தின் கட்டுபாடு என்ற பெயரில் மன்னிப்புக் கோர ஜீவா நிர்ப்பந்திக்கப்பட்டார் என்று பொன்னீலன் தன் ஜீவா என்றொரு மானுடன் நூலில் கூறுகிறார். பெரியாரை நான் இதற்காகக் குறை கூற மாட்டேன். தன் இயக்கத்தைக் காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் சமரசம் செய்து கொண்டிருக்கிறார்.  இதே அணுகுமுறையைத்தான் சாவர்க்கர் விஷயத்தில் நேர்மையானவர்கள் கடைப்பிடிப்பார்கள்.

இன்னும் இரண்டு உதாரணங்களைத் தருகிறேன். 1. 1931 ஆண்டு உப்பு சத்தியாக்கிரகத்தில் ஈடுபட்ட சுதந்திரப் போராட்ட வீரர் ஓஜா என்பவர் ரத்னகிரி மாவட்ட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலை அடையும் சமயத்தில் உள்ளூர் கலெக்டர் அங்கு வந்திருந்தார். இவரிடம் என்ன செய்யப்போகிறீர்கள் என்று கேட்டதற்கு, இவர் சாவர்க்கரைப் பார்க்கலாம் என்றிருக்கிறேன் என்று பதில் சொன்னார். உடனே அவரை பத்து போலீஸ்காரர் புடைசூழ கோலாப்பூர் செல்லும் பேருந்து ஒன்றில் அனுப்பி, இடையில் இறங்கினால் நடப்பதே வேறு என்று கலெக்டர் சொன்னாராம். புரந்தரே பதிவு செய்திருக்கிறார்.2. லின்லித்கோவை சாவர்க்கர் சந்தித்தார் என்று திரு விஜயசங்கர் குறிப்பிட்டிருக்கிறார். லின்லித்கோ அவரைச் சந்தித்தப் பின் பிரிட்டனில் இந்திய விவகாரங்களை கவனித்துக் கொண்டிருந்த செயலருக்கு – லார்ட் ஸெட்லாண்ட்- எழுதியது இது: I (met) Mr Savarkar whose somewhat lurid record and alleged connection with the murder of Sir Curzon Wylie will be sufficiently familiar to you. அடிவருடியாக இருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டார் என்பது நிச்சயம். கடைசி வரை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் அவரை எதிரியாகத்தான் பார்த்தார்கள் என்பது நிச்சயம்.

சாவர்க்கரைப் பற்றி நான் இருபது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதியது இது: “இந்தியச் சுதந்திரப் போராட்டம், நீண்ட வளைவுப் பாதைகளைக் கொண்ட வழிதெரியாக் குகை. அதனுள் சென்றவர்களில் மிகச் சிலரே ரத்தக்காயங்களோடும், எலும்பு முறிவுகளோடும் மீண்டனர்- காந்தி, நேரு மற்றும் படேல் போன்றவர்கள். மற்றவர்கள் வழியே தெரியாமல் தடுமாறிக் கொண்டிருந்தனர். சாவர்க்கர் அவர்களில் ஒருவர். இந்த உண்மை அவரை பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் அடிவருடியாக மாற்றி விடாது.”

இன்றும் என்னுடைய நிலைப்பாடு இதுதான்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 30, 2021 04:44

December 29, 2021

எல்லே இளங்கிளியே!

பாடலுக்குள் செல்லும் முன்னர் இன்னொன்றைச் சொல்லியாக வேண்டும். ஆண்டாளின் பாடல்கள் ‘குள்ளக் குளிர்ந்து நீராடச்’ செல்லும் முன் நடந்தவற்றை விவரிக்கின்றனவே, தவிர குளியலைப் பற்றி விவரிக்கவில்லை. தோழியரோடு சேர்ந்து நீராடும் மரபு நிச்சயமாகத் தமிழ் மரபுதான். பரிபாடல் தை நீராடலைப் பற்றிக் குறிப்பிடும் போது இவ்வாறு குளியலைப் பற்றிச் சொல்கிறது:

மையாடல் ஆடல் மழ புலவர் மாறு எழுந்து
பொய் ஆடல் ஆடும் புணர்ப்பின் அவரவர்
தீ எரிப்பாலும் செறி தவம் முன் பற்றியோ
தாய் அருகா நின்று தவத் தைந்நீராடுதல்

”மா இருந் திங்கள் மறு நிறை ஆதிரை” நாளில் தை நீராடல் தொடங்குகிறது. பரிபாடலில் இளம் பெண்கள் கணவர்களுக்காக நீராடுகிறார்கள். தாய்மார்கள் அருகில் இருக்கிறார்கள். ஆண்டாளின் பெண்கள் கண்ணனுக்காக நீராடுகிறார்கள். தாய்மார்கள் கூட இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் ஆயர் குடியின் ஐந்து லட்சம் பெண்கள் கண்ணனை நினைத்து நீராடுவதால் தாய்மார்களும் இருக்கலாம்.

தை நீராடல் எவ்வாறு மார்கழி நீராடல் ஆயிற்று? ராகவய்யங்கார் காலக் கணிப்பு முறை சந்திரமானத்திலிருந்து சூரியமானத்திற்கு மாறியதால் நிகழ்ந்திருக்கக் கூடும் என்கிறார். பாகவதபுராணமும் கோபியர்கள் காலையில் எழுந்து குழுவாக யமுனைக்குச் சென்று மணலில் பாவை பிடித்து நோன்பு நோற்பதைக் குறிப்பிடுகிறது. பாகவத புராணம் தமிழகத்தில் எழுதப்பட்டதாக வல்லுனர்கள் கருதுவதால் அதுவும் தமிழ் மரபையே குறிப்பிடுகிறது என்பது வெளிப்படை. ஆண்டாளின் திருப்பாவையே இம்மரபை பாகவதபுராணம் குறிப்பிடுவதற்கு உந்துகோலாக இருந்திருக்கலாம்.

இனி பாடல்

எல்லே! இளங்கிளியே! இன்னம் உறங்குதியோ?
சில்லென்றழையேன் மின் நங்கைமீர் போதர்கின்றேன்
வல்லையுன் கட்டுரைகள் பண்டே உன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக.
ஒல்லை நீ போதாய் உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ போந்தார் போந்தெண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றானை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடேலொ ரெம்பாவாய்!

ஆறாம் பாட்டிலிருந்து பதினான்காம் பாட்டு வரையும் கூட எழுப்புபவர்களுக்கும் எழுப்பப்படுபவருக்கும் இடையே உரையாடல்கள் நிகழ்கின்றன, ஆனால் அவை கவிதைகளுக்குள் மறைந்து நிற்கின்றன என்று உரையாசிரியர்கள் கருதுகிறார்கள். இப்பாட்டில் உரையாடல் வெளிப்படையாக நிகழ்கிறது. ‘திருப்பாவை ஆகிறது இப்பாட்டிறே’ என்று அழகிய மணவாளப் பெருமாள் நாயனார் குறிப்பிடுகிறார். ஆங்கிலத்தில் இதை dialogue poems என்பார்கள். உதாரணமாக இது அமெரிக்கக் கவிஞன் Shel Silverstein (ஷெல் சில்வர்ஸ்டைன்) எழுதிய The Meehoo with an exactlywatt என்ற கவிதையில் ஒரு பகுதி. What’s what you want to know?/ Me, WHO?/ Yes, exactly!/Exactly what?/ Yes, I have an Exactlywatt on a chain!/Exactly what on a chain?/ Yes!/ Yes what?/ No, Exactlywatt!

எல்லே என்றால் இது என்ன என்று பொருள். இது என்ன, இளங்கிளியே இன்னும் உறங்குகிறாயா என்று தோழியர் கேட்கிறார்கள். இவள் இளங்கிளியென்றால் பாகவத புராணத்தை பரீக்ஷித் அரசனுக்குச் சொல்லும் சுகர் கிழக்கிளி.

‘சும்மா சலம்பிக் கொண்டிருக்காதீர்கள் இதோ வந்து விடுகிறேன்’ என்கிறாள் அவள். இவர்கள் ‘உன்னையும் உன் கதைகட்டும் திறமையும் எங்களுக்குத் தெரியாதா’ என்கிறார்கள். அவள் . ‘நீங்கள்தாம் சாமர்த்தியசாலிகள், நானும் அவ்வாறே இருந்து விட்டுப் போகிறேன்’, என்கிறாள். இதை வைஷ்ணவ லட்சணம் என்று உரையாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். ‘இல்லாத குற்றத்தை சிலர் உண்டென்றால் இல்லை செய்யாமல் இசைகியிறே வைஷ்ணவ லக்ஷணம்’ என்று ஆறாயிரப்படி கூறுகிறது. பிறர் குற்றத்தையும் தன்னுடையது என்று ஏற்றுக் கொள்வது. தோழிகள் இவளுடைய வைஷ்ணவ லக்ஷணத்தைப் பற்றி கண்டு கொண்டதாகத் தெரியவில்லை. ‘சீக்கிரம் வா, நீ என்ன ஸ்பெஷலா?’ என்று கேட்கிறார்கள். ‘எல்லோரும் வந்து விட்டார்களா?’ ‘ வந்து விட்டார்கள். சந்தேகம் என்றால் நீயே வந்து எண்ணிப் பார்த்துக்கொள். சீக்கிரம் சென்று கண்ணன் புகழ் பாட வேண்டும்’.

மிகவும் இயல்பாக இளம்பெண்களுக்கு இடையே நிகழும் உரையாடலை இறைவனைச் சென்றடைய விரும்புவர்களுடன் இணைத்து மிக அழகான கவிதையாக ஆண்டாளால் வடிக்க முடிந்திருக்கிறது.

இப்பாடல் திருவெம்பாவையில் வரும் ‘ஒண்ணித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ’ என்ற பாடலின் பொருள்நடையை அடியொற்றியிருக்கிறது என்று அண்ணங்கராச்சாரியர் குறிப்பிடுகிறார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 29, 2021 18:07

December 28, 2021

உங்கள் புழக்கடை!

ஆண்டாள் ஓர் ஆழ்வாரா?

ஆண்டாளை ஆழ்வார்கள் பட்டியலில் சேர்ப்பாரும் இருக்கின்றனர்; சேர்க்காதவரும் இருக்கின்றனர். நம்மாழ்வார் ஆழ்வார்களின் முதல்வராகவும் (குலபதி) ஆண்டாள் தாயாராகவும் வைணவர்களால் மதிக்கப்படுகிறார்கள். ஆண்டாள் பூமாதேவியாகவே கருதப்படுவதால் அவர் ஆழ்வார்களுக்கும் மேலான இடத்தில்தான் இருக்கிறார் என்று சொல்பவரும் உளர். ஆண்டாளையே மையமாக வைத்துப் பாடல்கள் இயற்றப்பட்டிருக்கின்றன. உதாரணமாக ஆழ்வார்திருநகரியிலிருந்து வெளி வந்த கோதை நாச்சியார் தாலாட்டு ஆண்டாளை

‘எந்தைதந்தை என்று இயம்பும் பெரியாழ்வார்க்கு

மைந்தர் விடாய் தீர்த்த மாதே நீ தாலேலோ

பொய்கை முதலாழ்வார்க்கும் பூமகளாய் வந்துதித்த

மைவிழி சோதி மரகதமே தாலேலோ

என்று புகழ்கிறது.

திருப்பாவை உறக்கத்திலிருந்து எழுப்பும் பாடல்கள் என்றால் இவை ஆண்டாளை மீண்டும் உறங்கச் சொல்லும் பாடல்கள்!

அர்ச்சனா வெங்கடேசன் தன்னுடைய The Secret Garland என்ற புத்தகத்தில் (திருப்பாவை நாச்சியார் திருமொழி ஆங்கில மொழிபெயர்ப்பு) ஸ்ரீரங்கம் அத்யயன உத்சவத்தில் ஆயிரம் கால் மண்டபத்தில் பெருமாளையும் தாயார்களையும் எழுந்தருளப் பண்ணிய பிறகு, ஆழ்வார்களும் சம்பிராதாய முறைப்படி அங்கு கொண்டுவரப்படுகிறார்கள் – ஆண்டாள் நாச்சியாரைத் தவிர – என்று கூறுகிறார். ஆனால் திருப்பாவையும் நாச்சியார் திருமொழியும் பாடப்படுகிறது என்பதையும் சொல்கிறார்.

இனி பாடல்.

உங்கள் புழக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல்வாய் கூம்பினகாண்
செங்கல் பொடிக்கூரை வெண்பல் தவத்தவர்
தங்கள் திருக்கோயில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய் எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்
சங்கொடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானைப் பாடேலோர் எம்பாவாய்!

இவள் வீட்டு வாசலில் நின்று கொண்டு புழக்கடையில் உள்ள சிறிய குளத்தை தோழியரால் எவ்வாறு பார்க்க முடிகின்றது? தினமும் நடப்பதைக் கருத்தில் கொண்டுதான் கூறியிருக்க வேண்டும். இது தாமரை மலரும் நேரம். ஆம்பல் இதழ்களை மூடும் நேரம். கதிரவனின் வெப்பத்தை மலர்களே உணரத் துவங்கி விட்டன. நாங்களும் உணர்கிறோம். உள்ளே இருப்பதால உனக்குச் சுடவில்லை என்கிறார்கள்.

செங்கல் பொடிக் கூரை வெண்பல் தவத்தவர் யார்? இவர்கள் பற்கள் பளீரிடுகின்றன. உடுப்பு காவி நிறம். இவர்கள் சிவபக்தர்கள் என்று ஒரு விளக்கம் இருக்கிறது. சைவர்களைக் கேலி செய்யும் வாய்ப்பாக இச்சொற்றொடரை வியாக்கியானம் பயன்படுத்திக் கொள்கிறது. சோம்பேறிகளான சிவபக்தர்களுக்குக் கூட இது காலை என்ற உணர்வு வந்து விட்டது என்று தோழியர் சொல்கிறார்களாம். ‘அளற்றுப் பொடியில் புடவைப் புரட்டி, இராவெல்லாம் வெற்றிலை தின்று கிடந்து, ப்ரம்ஹ்மசரியமும் விரக்தியுந்தோற்ற பல்லை விளக்கி ஸபையார், பெரியவர்கள் கோமுற்றவர்கள் தண்டம் கொள்வார் என்று தபோவேஷத்தையுடைய சிவத்வஜருங்கூடப் பயப்பட்டுணர்ந்து தங்கள் தேவதைகளை ஆராதிக்கும் காலமாப்த்து’ என்று ஆறாயிரப்படி சொல்கிறது. அளறு என்றால் காவிக்கல். இன்னொரு பாடம் அவர்கள் வைஷ்ணவ சந்யாசிகள்தாம் என்கிறது. சத்வநிஷ்டர்களான (வைஷ்ணவ) சந்யாசிகளைத்தான் சொல்கிறது என்று திருமலை நம்பி சொல்கிறார் என்றும் ஆறாயிரப்படி விவரிக்கிறது. அண்ணங்கராச்சாரியர் “வம்பற்ற அத்தவர்” என்று ஒரு பாடம் இருக்கிறது என்கிறார். அதாவது சம்சார வம்புகளை அற்ற தவத்தவர் என்ற பொருள்படும்படி. ‘சங்கிடுவான்’ என்றால் சங்கை ஊத என்றும் குச்சியிட (திறவுகோல் கொண்டு) கோவிலைத் திறக்க என்றும் பொருள் கொள்ளலாம்.

‘உங்கள்’, ‘தங்கள்’களுக்குப் பின்னால் ‘எங்கள்’ வருகிறது. ‘எங்களை நீ வந்து எழுப்புவேன் என்று வாய் பேசினாயே. இப்போது இப்படி உறங்குகிறாய். வெட்கமாக இல்லையா?’ என்கிறார்கள். ‘நாவுடையாய்’ என்பதற்கு ‘நீ வாய் ஓயாமல் கண்ணனைப் பற்றிப் பேசுவாய். அதற்காகக் காத்திருக்கிறோம். தாமதம் செய்யாதே’ என்று பொருள் கொள்ளலாம். அண்ணங்கராச்சாரியர் இங்கு கம்பனை மேற்கோள் காட்டி இராமன் அனுமனை ‘சொல்லின் செல்வன்’ என்று புகழ்ந்ததைக் கூறுகிறார்.

‘சங்கொடு சக்கரம் ஏந்திய தடக்கையன்’ என்பதற்கு திருமாலே கண்ணனாக வந்திருக்கிறான் என்று பொருள் கொள்ளலாம். அல்லது சங்கு சக்கர ரேகைகள் கொண்ட தடக்கைகளை உடையவன் என்று பொருள் கொள்ளலாம் பெரியாழ்வார் ‘நெய்த்தலை நேமியும்  சங்கும் நிலாவிய கைத்தலங்கள் வந்து காணீரே’ என்று கண்ணனின் குழந்தைப் பருவத்தைப் பாடுகிறார் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். வியாக்கியானமும் இப்பாடலை மேற்கோள் காட்டுகிறது. திருவாழியும் பாஞ்சஜன்யமும் தந்த ஸ்பரிசத்தால் வந்த வளர்த்தியையுடைய திருக்கைகள் உடையவன் என்று அது சொல்கிறது.  

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 28, 2021 20:27

December 27, 2021

புள்ளின் வாய் கீண்டானை!

ஆண்டாளின் காலம் என்ன?

பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண் பிள்ளை ஆண்டாள் என்பதில் எந்த ஐயமும் இல்லை. ‘ஒரு மகள் தன்னை உடையேன், உலகம் நிறைந்த புகழால் திருமகள் போல வளர்த்தேன், செங்கண்மால்தான் கொண்டு போனான்’ என்று பெரியாழ்வாரே பாடுகிறார். பெரியாழ்வார் பாண்டியன் கோச்சடையன் காலத்திற் தொடங்கி சீமாறன் சீவல்லபன் என்று அழைக்கப்படும் பாண்டியன் நெடுஞ்சடையன் காலத்தில் (எட்டாம் நூற்றாண்டு) வாழ்ந்தார் என்று அறிஞர் மு ராகவய்யங்கார் ‘ஆழ்வார்கள் காலநிலை’ புத்தகத்தில் குறிப்பிடுகிறார். ஆண்டாள் காலநிலையை இப்பாடலில் வரும் வரியான ‘வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று’ என்ற வரியின் மூலம் கணக்கிடுகிறார்.

வெள்ளி தோன்றும் நேரத்தை புறநானூறும் சொல்கிறது. ‘வெள்ளி தோன்ற புள்ளுக்குரலியம்ப, புலரி விடியல் பகடு பல வாழ்த்தி’ என்பது புறநானூறு. இப்பாடலில் வெள்ளியும் புள்ளும் வருகின்றன. வெள்ளி எழுவதைப் பார்த்து விட்டு நீராடுவது தமிழர் வழக்கம். ஆனால் ஆண்டாள் வியாழம் உறங்கிற்று என்றும் பாடுகிறார். ‘அறிஞர், கணித வல்லுனர் லூயிஸ் டொமினிக் சுவாமிக்கண்ணுப் பிள்ளை வெள்ளி எழுச்சியும் வியாழன் அஸ்தமனமும் ஒரே சமயத்தில் எட்டாம் நூற்றாண்டில் நிகழ்ந்த நாள் டிசம்பர் 18, 731 என்று சொல்கிறார். எனவே ஆண்டாள் எட்டாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்திருக்க வேண்டும்’ என்று மு ராகவய்யங்கார் கணக்கிடுகிறார். சுவாமிக்கண்ணுப் பிள்ளையைப் பற்றித் தனியாக எழுத வேண்டும்.

இனி பாடல்.

புள்ளின் வாய் கீண்டானை பொல்லா அரக்கனைக்
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப் போய்
பிள்ளைகள் எல்லோரும் பாவைக் களம் புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்றுப்
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்
குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே
பள்ளிக் கிடத்தியோ பாவாய் நீ நன்னாளால்
கள்ளந்தவிர்ந்து கலந்தேலோ ரெம்பாவாய்!

பகாசுரன் என்ற கொக்கு வடிவத்தில் வந்த அரக்கன் வாயைக் கிழித்து அழித்தவன் அவன் என்றால் சென்ற அவதாரத்தில் பத்துதலை கொண்ட இராவணனை, ‘பூச்சிபட்ட இலைகளைக் கிள்ளிப் போடுமாப் போலே’ எளிதாகக் கிள்ளி எறிந்தவன் அவன். அரக்கனை ‘பொல்லா’ என்று ஏன் குறிப்பிடுகிறார் என்றால் தாயையும் தந்தையையும் பிரித்த கொடியவன் அவன் என்பதால் என்று உரையாசிரியர்கள் சொல்கிறார்கள்.

‘பாவைக்களம்’ என்பது மிகவும் அழகிய சொல்லாடல். பெண்கள் கூடும் இடம் என்பது மட்டுமின்றி, கண்ணனுக்காக போட்டிப் போடும் களம் என்றும் பொருள் கொள்ளலாம். பிள்ளைகள் என்று ஆண்டாள் பெண்களை விளிக்கிறார். பருவம் அடைந்தும் குழந்தைத்தன்மை மாறாத வயது. ஆண்டாளும் குழந்தைதான். ‘திருவரங்கச் செல்வரான அழகிய மணவாளன் அப்பிராட்டியை அங்கீகரித்து அருளிய காலத்தே 15 திரு நட்சத்திரத்திற்கு அவர் மேற்படவில்லை என்று நாம் ஒருவாறு அறியக் கூடிதாகிறது’ என்று மு ராகவய்யங்கார் சொல்கிறார். நம்மாலும் முதுமை அடைந்த ஆண்டாளைக் கற்பனை செய்து கூடப்பார்க்கமுடியவில்லை. பெரியாழ்வார் ‘செங்கண்மால்தான் கொண்டு போனான்” என்று சொல்வதும் ஆண்டாள் இளவயதிலேயே மறைந்து போனார் என்பதைத்தான் காட்டுகிறது. உலகப் பெருங்கவிஞர்களில் பலரும் இளவயதில் மறைந்தவர்கள்.

‘புள்ளும் சிலம்பின காண்’ என்ற சொற்களோடு ஆறாம் பாட்டு துவங்குவதைப் பார்த்தோம். அப்போது அவை கூடுகளின் நின்று ஓசையிட்டனவாம். இப்போது இரை தேடச் செல்லும் இடங்களில் உணவிற்காகச் செய்யும் ஓசையாம்.

இப்பாடலில் எனக்கு மிகவும் பிடித்த வரி ‘குள்ளக் குளிரக் குடைந்து நீராடாதே’. திருநெல்வேலி தாமிரபரணி நதியில் மார்கழி மாதம் அதிகாலையில் நீராடியவர்களுக்கு ஆண்டாள் சொல்வது புரியும். தண்ணீரில் தலை மூழ்கியதும், உடலே ஒடுங்குவது போல ஏற்படும் குளிரையே அவர் ‘குள்ளக் குளிர’ குறிப்பிடுகிறார். ஆனால் குளிர் பழக்கப்பட்டதும் தண்ணீருக்குள்ளேயே தலையை எடுக்காமல் நீந்தத் தோன்றும்.அதைத்தான் அவர் குடைந்து என்று சொல்கிறார்.

இவ்வளவு அழகான காலையில் படுக்கையில் கிடக்கின்றாயே. உன் உறக்கம் கள்ள உறக்கம். கண்ணனை நீ மட்டும்தாம் அனுபவிக்க வேண்டும் என்ற பேராசையால் விளைந்த உறக்கம். அதைத் தவிர்த்து எங்களோடு கலக்க வேண்டும். கூடியிருந்து குளிர வேண்டும் என்று ஆண்டாள் சொல்கிறார். உன்னதமான கவிதை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 27, 2021 19:18

December 26, 2021

கனைத்திளங் கற்றெருமை!

ஆண்டாளின் திருப்பாவையில் பால் பெருகி ஓடுகின்றது. ஆனால் அவர் ஒருவர்தான் தமிழ்க் கவிஞர்களில் தமிழ் நாட்டின் பால்வளத்தைப் பேசினார் என்பது இல்லை. கம்பன் நாட்டுப் படலத்தில் ஆண்டாளை ஒத்து ‘ஈர நீர் படிந்து இன்னிலத்தே சில/கார்கள் என்ன வரும் கரு மேதிகள்/ஊரில் நின்ற கன்று உள்ளிட மென் முலை/தாரை கொள்ள தழைப்பன சாலியே’ என்று கன்றுகளை நினைத்து எருமைகள் பால் சொரிவதால் செந்நெற் பயிர்கள் தழைக்கின்றன என்று பாடுகிறார். அவரைப் போன்று திரிகூட ராசப்பக் கவிராயர் சூழ மேதி இலங்குந் துறையிற் சொரியும் பாலைப் பருகிய வாளை/கூழை வாசப் பலாவினிற் பாயக் கொழும்ப லாக்கனி/வாழையிற் சாயவாழை சாய்ந்தொரு/ தாழையில் தாக்கவருவிருந்துக் குபசரிப் பார்போல்/தாழை சோறிட வாழை குருத்திடும்சந்திர சூடர்தென் ஆரிய நாடே’ என்று குற்றாலத்தின் பால் வளத்தைப் பாடுகிறார். இவர்கள் இருவருக்கும் ஆண்டாளின் பாடல்தான் உந்துதலைக் கொடுத்திருக்கும் என்று நம்மால் ஊகிக்க முடியும்.

ஆண்டாள் முழுக்க முழுக்க ஆயர்களின் கவிஞர். முப்பது திருப்பாவைப் பாடல்களில் நெல்லைப்பற்றிய செய்தி ஒரே பாடலில்தான் வருகிறது. ஓங்கு பெருஞ்செந்நெல் என்று ஒரு கவிதையில் கூறியிருக்கிறாரே தவிர தமிழகத்தின் வயல் வளத்தைப் பற்றி திருப்பாவையில் அவர் பேசவில்லை. நான் ஆயர்குலப்பெண். என் குலப்பெருமையையும் வளத்தையும் மட்டும்தான் பேசுவேன் என்பதில் அவர் உறுதியாக இருந்திருக்கிறார்.

இனி பாடல்.

கனைத்திளங் கற்றெருமை கன்றுக்கு இரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழ நின் வாசல் கடைபற்றி

சினத்தினால் தென் இலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக்கு இனியானைப் பாடவும் நீ வாய்திறவாய்
இனித்தான் எழுந்திராய் ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோர் எம்பாவாய்!

மற்ற கவிஞர்களின் எருமைகள் வீட்டை விட்டு வெகுதூரத்தில் இருக்கின்றன. ஆண்டாளின் பாடலில் கன்றை விட்டு சிறிது நேரம் கூடப் பிரிய விரும்பாத எருமை தன் கொட்டிலை விட்டு நீங்கிய உடனேயே பால் சொரிய ஆரம்பித்து விட்டது. ஒரு எருமை சொரிந்த பாலிலேயே வீட்டு வாசல் சேறாகி விட்டது என்று சொல்லும் போது எங்கள் குலத்தின் வளத்தைப் பாரீர் என்று ஆண்டாள் நமக்கு அழைப்பு விடுகிறார்.

இப்பாடலைப் பற்றி பி.ஸ்ரீ எழுதும்போது, ‘தலையில் பனிவெள்ளமிட, கீழே பால் வெள்ளமிட, உள்ளத்தில் காதல் வெள்ளமிடத் தெப்பம் பற்றுவாரைப் போல இவளுடைய தலைவாயிற் மேற்கட்டையைப் பற்றி நின்று அவளைக் கூப்பிடுவது போல் ஓரு உணர்ச்சிச் சித்திரம் உருவாகிறது,’ என்கிறார்.

‘நற்செல்வன் தங்காய்’ என்று ஆண்டாள் பாடும் இந்நற்செல்வன் யார்? உரையாசிரியர்கள் ராமனை விட்டுப் பிரியாத இளையபெருமாளாகிய இலக்குவனைப் போல் கண்ணனை விட்டுப் பிரியாத ஒருவன் என்று சொல்கிறார்கள். அவன் கண்ணன் சேவையில் பால் கறக்க மறந்து விட்டதால் எருமை முலை கடுத்து, கன்றை நினைத்துக் குமுறிப் பால் சொரிகின்றன. முகில் மழையைச் சொரிய நினைத்தால் அதற்குக் கடலுக்குச் செல்ல வேண்டிய கட்டாயம். ஆனால் முகில் போன்ற எருமைகளுக்கு அக்கட்டாயம் இல்லை. கன்றுகளைப் பற்றிய நினைவே அதற்கு ஊற்றாக ஆகிறது. கேட்காமலே சொரிகிறது. ‘அர்ஜுனன் கேட்டா கண்ணன் கீதையைப் பெருக வைத்தான்?’ என்கிறார்கள் உரையாசிரியர்கள். இறைவன் என்றும் நம் நினைவோடுதான் இருப்பான் என்றும் பொருள் கொள்ளலாம்.

‘தண்ணீரைப் போல இருக்கிற சக்ரவர்த்தித் திருமகனுக்கும் சினம் உண்டோ? என்ற கேள்விக்கு உரையாசிரியர்கள் பதில் தருகிறார்கள். ‘அவன் மீது அம்பு பட்ட போது சினப்படவில்லை. ஆனால் சிறிய திருவடியான அனுமன் மீது அம்புபட்ட போது சினப்பட்டான்,’ என்று சொல்கிறார்கள். அவன் மனத்திற்கு இனியவன். எதிரியான இராவணன் கூட ‘நாசம் வந்துற்றபோதும் நல்லதோர் பகையைப் பெற்றேன்’ என்று நினைக்கவில்லையா? ஆனால் பெண்ணாய் இருக்கும் ஆண்டாளுக்கு அவன் ஏகபத்த்தினி விரதன் என்பதால் மனத்திற்கு இனியவன். கண்ணனைப் போல பல பெண்களைத் தேடி அலையாதவன். ‘வேம்பேயாக வளர்த்தாள்’ என்று ஆண்டாளே நாச்சியார் திருமொழியில் சொல்லியபடி இவனுடைய செய்கைகள் பல சமயங்களில் வேப்பங்காயாக இருக்கின்றன, அப்படி யசோதை வளர்த்திருக்கிறாள். ஆனால் அவன் மன்னுபுகழ் கோசலை மணிவயிறு வாய்த்தவன். அவனை அவள் ஒழுங்காக வளர்த்திருப்பதால் அவன் மனத்திற்கு இனியவன்.

‘அனைத்தில்லத்தாரும் அறிந்தார்’ என்பதற்கு இருவகையாகப் பொருள் கொள்ளலாம் என்று அண்ணங்கராச்சாரியார் சொல்கிறார். ‘கண்ணனின் பெருமையை அனைத்து ஆச்சியரும் அறிய வேண்டுமென்று நீ நினைத்தபடியே அறிந்து உன் வாயிலில் காத்துக் கிடக்கிறார்கள். நீ உறக்கத்தில் இருக்கலாமா’என்று பொருள் கொள்ளலாம். அல்லது ‘நாங்கள் எல்லோரும் இங்கு வந்து நின்று கூப்பிடுகிறோம், நீ உன் மதிப்பை எல்லோரும் உணர வேண்டும் என்று நினைத்து பேசாமல் இருக்கிறாய். ஊருக்கெல்லாம் உன் பெருமை தெரிந்து விட்டது. இன்னும் என்ன உறக்கம்’ என்றும் கொள்ளலாம்.

திருப்பாவையின் மிகச் சிறந்த பாடல்களில் இது ஒன்று.

இங்கு உரையாசிரியர்கள் சொன்ன ஒன்றைக் குறிப்பிட்டாக வேண்டும். தென்னிலங்கையை ‘ ‘பறைச்சேரி’ என்பாரைப் போல அத்திக்குங் காணவேண்டாயிதேயிருக்கிறபடி’ என்று நாலாயிரப்படி குறிப்பிடுகிறது.மற்ற உரையாசிரியர்களும் பறைச்சேரி என்று இலங்கையைக் குறிப்பிடுகிறார்கள். ஆண்டாளின் கவிதையில் வெறுப்பு என்பதே கிடையாது. ஆனால் இங்கு உரையாசிரியர்கள் ஒருபுறம் இறைவன் எல்லோருக்கும் இனியவன் என்று சொல்லிக் கொண்டு மறுபுறம் பறைச்சேரி போன்று பிராட்டியைப் பிரித்த படுகொலைக்காரன் இருக்கும் இடம் இலங்கை என்று சொல்வது சாதி வெறி என்பது ஒட்டிக் கொண்டால் எளிதில் விலகாது என்பதைத்தான் காட்டுகிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 26, 2021 19:39

December 25, 2021

கற்றுக் கறவை!

பிராமணப் பெயர்கள் பெரும்பாலும் வடமொழிப் பெயர்களாக இருக்கின்றன என்ற கூற்றில் உண்மையிருக்கிறது. ஆனால் இன்று தமிழ்நாட்டில் தமிழ்ப் பெயர்களைப் பார்ப்பதே அரிதாக இருக்கும்போது பிராமணர்களை மட்டும் குற்றம் சொல்ல முடியாது. வைணவப் பிராமணர்கள் தமிழ்ப் பெயர்களைக் குழந்தைகளுக்கு வைக்கத் தயங்குவதில்லை அலர்மேல் மங்கை, ஆண்டாள், நப்பின்னை, குறுங்குடி, செல்வி போன்ற பல பெயர்கள் வைணவப் பெண் குழந்தைகளுக்கு வைக்கப் படுகின்றன. ஆனால் எனக்குத் தெரிந்து பொற்கொடி இல்லை. சுடர்க்கொடி இல்லை. ஏன் என்று தெரியவில்லை. தங்கப் பெண் உண்டு. ஆனால் செல்வப்பெண் இல்லை.

ஆண்டாள் இப்பாடலில் பொற்கொடி, புனமயில் செல்வப்பெண்டாட்டி என்று மூன்று விதமாக நாயகியை அழைக்கிறார். கண்ணன் ஊருக்கே ஒரு பிள்ளை போல இவள் ஊருக்கே ஒரு பெண்.

பாடலைப் பார்ப்போம்.

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து

செற்றார் திறலழியச் சென்று செருச்செய்யும்

குற்றம்ஒன் றில்லாத கோவலர்த்தம்

பொற்கொடியே புற்றுஅரவு அல்குல் புனமயிலே போதராய்

சுற்றத்து தோழிமார் எல்லாரும் வந்துநின்

முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட

சிற்றாதே பேசாதே செல்வபெண் டாட்டிநீ

எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.pa

‘கன்றுகள் போல இருக்கும் பசு மாடுகள்’ என்கிறார் ஆண்டாள். கண்ணன் இருக்கும் இடம் என்பதால் பசுக்கள் கூட இள்மை மாறாது இருக்கின்றன. வயது குறைந்து கொண்டே போகிறது. வைகுண்டத்தில் நித்ய்சூரிகள் வயது நூறு ஆகியும் பின்னால் குறையத் துவங்கி 25 ஆகுமாம். அவர்களுக்கு நேர்வது பரமனை நாள் தோறும் தொழுவதால் இங்கு பசுக்களுக்கு வயது குறைவது கண்ணனின் கை படுவதால் என்று வியாக்கியானம் சொல்கிறது. அவை அனைத்தும் – கிழப் பசுக்களானாலும்- வற்றாது பால் கொடுக்கின்றன. ‘முலை சரிந்தாரைப் பார்க்காத ராஜகுமாரனைப் போல கன்று மேய்க்கப்பெற்றால் பசுக்களைப் பாரான்’, என்று ஆறாயிரப்படி கூறுகிறது. இதை வியாக்கியானக்காரர்களின் ஆணாதிக்கக் கூற்று என்று எடுத்துக் கொள்ளக் கூடாது. அவனை எண்ணுபவர்களின் எண்ணத்தில் தொய்வு ஏற்படக் கூடாது என்ற நோக்கில் இவ்வாறு கூறப்படுகிறது. அவனே பரிவு கொண்டு வயதானவர்களையும் இறை எண்ணத்தில் இளையவர்கள் ஆக்குவான்.

‘பல’ என்ற சொல்லுக்கு மிகவும் அருமையான விளக்கத்தை ஆறாயிரப்படி அளிக்கிறது. ‘பகவத் குணங்களும் எல்லையுண்டாகினும் இப்பசுக்களுக்கு எல்லையில்லை’. இதற்கு நாம் எண்ணற்ற உலகங்களும் எண்ணற்ற மனிதர்களும், உயிருள்ளவையும், உயிரற்றவையும் இருந்தாலும் இவை எல்லாவும் அவனுக்குப் ஆயர்குலத்துப்பசுக்கள் போன்றவை. எல்லாவற்றையும் கறப்பான். அருள்தருவான்.

ஆயர்களுக்கு யார் எதிரிகள்? கண்ணனின் எதிரிகளே அவர்களின் எதிரிகள். அவர்கள் இருக்கும் இடத்திற்குச் சென்று அவர்களோடு போர் புரிவார்கள். இதை மற்றொரு தளத்தில் பாகவதர்கள் பகவானை பழிப்பவர்களுடன் வாதப் போர்கள் செய்து அவர்களை வெல்வார்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.

இவள் அழகு பெண்களை ஆண்களாக விரும்பச் செய்கிறது என்கிறது வியாக்கியானம். ‘ஆடவர் பெண்மையை அவாவும் தோளினான்’ என்ற கம்பரின் கூற்றிற்கு நேர் எதிர்.

நாங்கள் உன் முன்வாசல் வந்து விட்டோம். கருமுகில் போன்ற நிறமுடைய கண்ணனின் பெயரைப் பாடுகிறோம். (‘பெண்டாட்டி’ என்பது இங்கு பேரழகு பொருந்திய பெண்மையை வாய்க்கப்பெற்றவளே என்று பொருள்.) முகில் வண்ணன் பேரழகிற்கு நீ தான் நிகர். ஆனால் நீ அசையாமல், பேசாமல் உறங்கிக் கொண்டிருக்கிறாய், ஏன் என்று எங்களுக்கு விளங்கவில்லை என்கிறார்கள் ஆய்ச்சியர்கள்.

அவள் உறங்கவில்லை என்பது இவர்களுக்குத் தெரியும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 25, 2021 20:13

December 24, 2021

நோற்றுச் சுவர்க்கம்!

மண்ணில் தெரியுது வானம் அது நம் வசப்படலாகாதோ?

எண்ணி எண்ணி பல நாள் முயன்று இங்கு

இறுதியில் சேர்வோமோ -அட

விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும்

மேவு பராசக்தியே!

இது பாரதியின் ஆத்மஜெயம். நம் கவிஞனின் பராசக்திதான் ஆண்டாளின் கண்ணன். அவனும் விண்ணிலும் மண்ணிலும் கண்ணிலும் எண்ணிலும் கலந்திருப்பான். தான் என்ற அகந்தையை வெற்றி பெற வேண்டும் என்று பாரதி பாடுகிறான். ஆண்டாள் வழியைச் சொல்கிறார். எளிய வழி. மண்ணிலேயே கிடைக்கும் சொர்க்கம். பல ஆண்டுகள் தவமிருந்து நோன்பு நூற்றுக் கிடைக்கும் சுவர்க்கம் அதன் அனுபவம் கண்ணனையே நினைத்துக் கொண்டிருக்கும் ஆய்ச்சிக்கு மிக எளிதாகக் கிடைத்து விடுகிறது.

நான் முன்னால் கூறியது போல ஆண்டாளின் உலகம் பக்தர்கள் கனவுகளின் உலகம். கவிதையில் நமக்குக் காட்டப்படும் மாளிகைகள் உண்மையில் ஏழைகளின் கூரை வீடுகளே. அவற்றில் இருப்பவர்களுக்குக் கிடைத்த ஒரே சொத்து கண்ணன். அவனுக்காக ஒருவருக்கு ஒருவர் போட்டி இருக்கும். ஆனால் நம் எல்லோருக்கும் கிருஷ்ணானுபவம் நிச்சயம் என்பது அவர்கள் நினைக்கிறார்கள்.

“வாழும் வகையறிந்தேன் மைபோல் நெடுவரைவாய்/தாழும் அருவிபோல் தார்கிடப்ப, – சூழும்/திருமா மணிவண்ணன் செங்கண்மால், எங்கள்/பெருமான் அடிசேரப் பெற்று.” இது பேயாழ்வார் வாக்கு. நாங்கள் வாழும் வகையறிந்தவர்கள் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் உறுதியாக இருக்கிறார்கள்.

இது மாயை, மார்க்ஸ் சொன்ன அபின், மக்கள் புரட்சியை மழுங்கச் செய்யும் என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் இறையனுபவம் மண்ணிலேயே வானத்தைக் காட்டுகிறது, எங்கள் வாழ்க்கைகளுக்குப் பொருளை, பிடிப்பைக் கொடுக்கிறது என்று உலகெங்கும் இருக்கின்ற இறை நம்பிக்கை உடையவர்கள் கருதுகிறார்கள். அவர்கள்தாம் இன்று மிகப்பெரும்பாலானவர்கள். அவர்கள் மீது புரட்சியைத் திணிப்பது அவர்கள் வாழ்க்கைகளை நரகமாக ஆக்கும். அவர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். மண்ணில் வானம் வசப்படுவது வறுமையை முற்றிலும் ஒழிந்த பிறகுதான் என்பது முற்றிலும் உண்மை. ஆனால் வறுமை ஒழிவதற்கு பக்தி, இறை நம்பிக்கை இடையூறாக இருக்காது என்று பெரும்பாலான பக்தர்கள் நினைக்கிறார்கள் என்பதும் உண்மை.

இனி பாடல்:

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்!
மாற்றமும் தராரோ? வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால் பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகர்ணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில் தந்தானோ?
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோர் எம்பாவாய்!

“வாசல் செம்மினால் வாயும் செம்ம வேணுமோ? ஐஸ்வரியம் மிக்கால் பந்துக்களை ஏன் என்னலாகாதோ” என்று வியாக்கியானம் பேசுகிறது. “உனக்கு சொர்க்கம் கிடைத்து விட்டது. கதவைத் திறக்க மாட்டேன் என்கிறாய், சரி. ஆனால் பேசுவதற்கு என்ன கொள்ளை. கண்ணன் என்று சொத்து கிடைத்து விட்டதால ஏழைச் சுற்றத்தாரை மறந்து விட்டாயா”, என்று தோழியர் கேட்கிறார்கள். எங்கள் கண்களைத்தான் பட்டினி போட்டு விட்டாய், செவிகளையுமா? ஒன்றாக நோற்போம், ஒன்றாக குளிப்போம், ஒன்றாக கிருஷ்ணானுபவம் பெறுவோம் என்று சொன்னதெல்லாம் பொய்யா, என் அம்மனாய் (எங்கள் அம்மாவே)” என்கிறார்கள். ஏன் பேசவிலை என்பதற்கு அண்ணங்கராச்சாரியார் அழகாக விளக்குகிறார். அனுமனைக் கண்ட மகிழ்ச்சியில் சீதா பிராட்டி ஏதும் பேசாமல் சில நிமிடங்கள் நின்றாளாம். அதே போலத்தான் தோழியர்களின் கண்ணன் பெயரைச் சொல்லியே பாடி மகிழும் குரலைக் கேட்ட பேருவகையில் பேசாமல் நின்றாளாம். மேலும் என்னை அம்மா என்று அழைக்கிறார்களே என்ற கோபமும் சேர்ந்து கொண்டதாம்.

ஆண்டாள் பாடலில் உள்ளுறைந்து இருப்பது அவள் தோழியருக்குச் சொன்ன பதில். கண்ணன் இங்கு இல்லை. வீணாகப் பழி சுமத்துகிறீர்கள் என்று அவள் சொல்கிறாள். துளசியின் வாசனை தூக்குகிறதே என்கிறார்கள் அவர்கள். ‘அட, அவனுடைய பரிமளம் அவ்வளவு எளிதில் போகுமா? என்றோ வந்தவனின் வாசனை இன்று வரை இருக்கிறது’ என்று பதில் வருகிறது. தோழியர்கள் ‘சரி, சரி, இன்னும் கும்பகர்ணனிடம் தூக்கத்தை வாங்கிக் கொண்டவள் போலச் சோம்பேறியாக இருக்காதே அவனிடம் சீக்கிரம் செல்ல வேண்டும்’ என்று சொல்லி விட்டு அவளை ‘அருங்கலமே’ என்று அழைக்கிறார்கள். You, after all, are our megastar என்கிறார்கள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 24, 2021 19:41

December 23, 2021

தூமணி மாடத்து!

உறக்கத்திலிருந்து எழுப்புதல் மற்றும் உறக்கத்திலிருந்து எழுதல் பற்றி பல கவிதைகள் உலக இலக்கியத்தில் இருக்கின்றன. ஆனால் நான் படித்தவரை அவற்றில் பெரும்பாலானவை காதலைப் பற்றியும் மரணத்தைப் பற்றியும் மாற்றி மாற்றிப் பேசுகின்றன. உதாரணமாக ஹவ்ஸ்மன் எழுதிய இக்கவிதையில் தலைப்பு Spring Morning. ஆனால் கவிதையின் வரிகளைப் பாருங்கள்: Half the night he longed to die,/ Now are sown on hill and plain/ Pleasures worth his while to try/ Ere he longs to die again. இதே போன்று ஷேக்ஸ்பியர் பேரொளியோடு துவங்குகிறார்: Full many a glorious morning have I seen/ Flatter the mountain tops with sovereign eye,/ Kissing with golden face the meadows green,/Gilding pale streams with heavenly alchemy; ஆனால் சூரிய ஒளி ஒரு மணி அளவிற்குத்தான், பின்னால் மேகங்கள் மூடி விடும் என்று முடிக்கிறார். மனித வாழ்க்கையில் இன்பமும் துன்பமும் பிறப்பும் மரணமும் மாறி மாறி நடக்கின்றன என்றாலும், இத்தருணம் இனிமையானது, இதைப் பற்றியே பேச வேண்டும், வாழ்க்கையின் எளிய செயல்கள் நமக்கு உயிரையும் உற்சாகத்தையும் அளிக்கின்றன என்று தொடர்ந்து நமக்கு நினைவுறுத்திக் கொண்டிருப்பவர் ஆண்டாள்.

தூங்குபவர்களை எழுப்புவது என்பது தினமும் நடக்கக் கூடியது. ஆனால் விதவிதமாக நடக்கக் கூடியது. உள்ளே தாளிட்டு தூங்கியவரை எழுப்ப முயன்று, முடியாமல் கதவை உடைத்து எழுப்பியதையும் நான் பார்த்திருக்கிறேன். அதே போன்று மெதுவாகக் கூப்பிட்டாலே, அலறிப்புடைத்துக் கொண்டு எழுபவரையும் நான் பார்த்திருக்கிறேன். ஆண்டாளின் கவிதைகளில் எழுப்பப்படுபவர்கள் உண்மையாகத் தூங்குபவர்கள் என்று சொல்ல முடியாது. கண்ணனை நாளும் இரவும் நினைத்துக் கொண்டிருப்பவர்கள் எப்படித் தூங்க முடியும்? ஆனால் கூடவே இருந்தாலும் – எல்லா இடங்களிலும் இருப்பவன்தானே இறைவன்- அவன் விட்டுப் போய் விடுவானோ என்ற அச்சம் பக்தர்களிடம் இருப்பது இயல்பு. அவ்வச்சத்தைப் போக்கத்தான் ஆண்டாளின் பாடல்கள் முயல்கின்றன.

இன்றையப் பாடல்:

தூமணி மாடத்து சுற்றும் விளக்கெரியத்

தூமம் கமழத் துயிலணைமேல் கண்வளரும்

மாமான் மகளே மணிக்கதவம் தாழ்திறவாய்

மாமீர் அவளை எழுப்பீரோ உன்மகள்தான்

ஊமையோ அன்றி செவிடோ அனந்தலோ

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ

மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று

நாமன் பலவும் நவின்றேலோர் என்பாவாய்.

‘தூமணி மாடம்’ என்பதை ‘துவளில் மாமணிமாடம்’ என்ற நம்மாழ்வார் வாக்கோடு ஒப்பிடுகிறார் அண்ணங்கராச்சாரியார். துவள் என்றால் குற்றம்; தோஷம். துவளில் என்றால் குற்றமில்லாத தூய்மையான. ஆண்டாளே தூ என்ற சொல்லை ‘தூமலர்’ என்றும் “தூ சாகும் ” என்று சொல்லியிருக்கிறார் என்பதைப் பார்த்தோம். தமிழில் தூ என்றால் தூய்மை, ஒளி பொருந்தியது, வெண்மை, தசை, இறைச்சி, இறகு போன்ற பல பொருள்கள் உண்டு.

மாடத்தை சுற்றிலும் விளக்குகள் எரிகின்றன. கீழ்வானம் வெளுத்து விட்டது என்று சென்ற பாடலில் ஆண்டாள் அறிவித்து விட்டார். விடிந்து விட்ட பிறகும் விளக்குகள் எரிகின்றனவே என்ற உணர்வு கூட இல்லாமல் உறங்குவதைத்தான் அவர் சொல்கிறார். நாங்கள் இங்கு வெளியே மார்கழிக் குளிரில் நிற்கிறோம் நீ நிம்மதியாக உறங்குகிறாய் என்ற பொறாமை வெளிப்படுகிறதாம்.

தூபம் என்றால் புகை. காலையொளியில் புகை கண்ணுக்குத் தெரியாது. ஆனால் அதன் மணம் இவர்களைச் சென்றடைகிறது. எனவே பார்ப்பது விளக்குகளை. நுகர்வது அவற்றின் புகை தரும் சுகந்தத்தை.

ஆயர் குலத்தில் ஒருவருக்கு ஒருவர் சொந்தக்காரர்கள். பக்தர்கள் குழாமும் அப்படித்தான் அதனால்தான் தூங்குகிறவர் மாமன் மகளே என்று அழைக்கப்படுகிறார். மாமன் மகளுடைய அன்னையும் வீட்டில் இருக்கிறார். ‘பாவம் குழந்தை. தூங்கட்டும்’ என்ற நினைப்போடு இருக்கிறார். ‘நாங்கள் கூப்பிட்டு விட்டோம், காதும் கேட்கவில்லை. வாயும் பேசவில்லை ஒரு வேளை மிகவும் அயர்ச்சியாக இருக்கிறாரோ என்னவோ’, என்று சொல்கிறார்கள். இறையோடு இரவு முழுவதும் நிகழ்ந்த கலவியில் எல்லாம் மறந்த அனந்தல்- அயர்ச்சி. மந்திரத்தால் கட்டுண்ணப் பட்டவள் போல் எழுந்திருக்காமல் இருக்கிறாளே என்று அன்னையிடம் முறையிடுகிறார்கள்.

அவன் மாமாயன் – தன்னுடைய வியக்கத்தக்க குணங்களால் பெண்களை வசீகரிப்பவன். மாதவன் என்ற சொல்லுக்கு திருமகளின் கணவன் என்று பொருள் கொள்ளலாம். வைகுந்தன் – ஸ்ரீயஃபதியாக – திருமகளோடு – வைகுந்தத்தில் இருப்பவன். இப்பெயர்களை மட்டுமல்லாலம் அவனுடைய ஆயிரம் நாமங்களையும் சொல்லி விட்டோம். அவளை எழுப்ப வேறு என்ன செய்வது என்கிறார்கள் மாடத்தின் வாயில் நிற்பவர்கள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 23, 2021 19:46

December 22, 2021

கீழ்வானம் வெள்ளென்று!

காலை நேரத்தை ஆண்டாளைப் போல பாடல்களினால் போற்றிய தமிழ்க் கவிஞர்கள் மிகச் சிலரே. திருப்பள்ளியெழுச்சி பாடிய தொண்டரடிப்பொடி ஆழ்வாரும் மாணிக்கவாசகரும் உடனே நினைவிற்கு வருவார்கள். ஆனால் அவர்கள் பாடல்களில் அதிகாலையோடு இரண்டறக் கலந்த நெருக்கம் வெளிப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மேலும் அவர்கள் காலை ஆண்களின் காலை. பெண்கள் அதிகம் தென்படாத காலை. ஆனால் ஆண்டாளின் காலை பெண்களின் காலை. இளம்பெண்களின் காலை. ‘விருத்தைகள்’ (வயது முதிர்ந்த பெண்கள்) எழுந்து அவர்களை தடை செய்ய முற்படும் முன்னர் கண்ணனை அடைய அவசரப்படும் பெண்களின் காலை.

East is red என்ற குரல் சென்ற நூற்றாண்டின் அறுபதுகளின் எழுந்தது. கிழக்கில் புரட்சிக் கனல் கொழுந்து விட்டு எரியும் என்று அன்றைய இளைஞர்களில் பலர் நம்பினார்கள். இங்கு ‘ஆண்டாள் கிழக்கு வெளுத்தது’ என்கிறார். வெண்மை என்றால் சாத்வீகம். சத்வகுணம் ஓங்குகிறது என்பதற்கு அறிகுறி. ‘அசேதனத்திற்கும் சைதன்யமுண்டாம்படி ஸத்த்தோத்தரமான காலமாயிற்று’ என்று வியாக்கியானம் செய்கிறது. உயிரில்லாதவற்றிற்கும் உயிர் அளிக்கும் காலை. ‘காந்தி வருகிறார் என்று ஆண்டாள் சொல்கிறாரோ?’ என்று என் தந்தையிடம் கேட்டேன். நான் கேலியாகக் கேட்கிறேன் என்று அவருக்குத் தெரிந்திருந்தது. ‘மறுபடியும் இருள் சூழும் என்று ஆண்டாளுக்குத் தெரியாதா? ஆனால் மறுபடியும் காலை வரும் என்பதும் அவளுக்குத் தெரியும். நாங்கள் காலைக்குக் காத்திருப்பவர்கள். உங்களைப் போன்றவர்கள் இருளுக்குக் காத்திருப்பவர்கள்’, என்றார் அவர்.

கீழ்வானம் வெள்ளென்று எருமை சிறுவீடு

மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்

போவான்போ கின்றாரைப் போகாமல்காத்துஉன்னைக்

கூவுவான் வந்துநின்றோம் கோதுகலம் உடைய

பாவாய் எழுந்திராய் பாடிப் பறைகொண்டு

மாவாய் பிளந்தானை மல்லரை மாட்டிய

தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்

ஆவாவென்று ஆராய்ந்து அருளேலோர் எம்பாவாய்.

‘ ‘மேட்டிள மேதிகள் தளை விடும் ஆயர்கள்’ என்று இவருடைய தமப்பன்மார்களில் ஒருவர்- தொண்டரடிப்பொடி ஆழ்வார் – பெரிய பெருமாளை எழுப்பினார். இவருடைய தோழிகள் இவரை எழுப்புக்கிறார்கள். இதுதான் ஆழ்வார்களுக்கும் ஆண்டாளுக்கு இடையே உள்ள வேறுபாடு (வாசி) என்கிறார்கள் உரையாசிரியர்கள். தமப்பன் என்றால் தகப்பன். ஆழ்வார்கள் அனைவருக்கும் புதல்வி ஆண்டாள்.

“சிறு வீடு” என்றால் வீட்டின் முன்னால் இருக்கும் தோட்டம் என்றோ புல் முளைத்திருக்கும் இடம் என்றோ பொருள் கொள்ளலாம். எருமைகளை காலையில் பனிப்புல் மேய விட்டு ஆயர்கள் பால கறப்பார்களாம். பெரியாழ்வார் மகளாய் அக்னிஹோத்திர ஹோமங்களுக்கு உள்ள வேறுபாடுகளை ஆராயாமல் எருமைப் பெரு வீடு சிறு வீடு என்று ஆராயும் ஆய்ச்சியாகவே ஆண்டாள் ஆகி விட்டாளாம்.

‘ஐந்துலட்சம் குடி என்று சொல்லப்படும் ஆய்ச்சியர்கள் பலர் கண்ணனைக் காணச் சென்று விட்டார்கள். நாங்கள் சிலரே உனக்காக காத்திருக்கிறோம், எழுந்திரு’ என்று சொல்லும் தோழியர் ‘பாவாய்’ என்கிறார்கள். ‘ ‘முலை எழுந்தார்படி மோவாயெழுந்தார்க்குத் தெரியாதிறே’ என்பது பட்டர் வாக்கு. அதாவது தாடி வளர்ந்திருப்பவனுக்கும் மார்பகங்கள் வளர்ந்திருக்கும் பெண்ணின் துன்பம் தெரியாது என்றால் சரியென்று சொல்லலாம். ஆனால் நீ பெண்தானே ஆணில்லையே. பெண்படும் பாடு உனக்குத் தெரியாதா?’ என்பது பாவாய் என்ற சொல்லுக்கு உட்பொருள்.

கோதுகலம் என்றால் கண்ணணால் கொண்டாடப் படுபவள் என்று பொருள் கொள்ளலாம். அவன் உனக்காகக் காத்துக் கொண்டிருக்கிறான், நீ இங்கு தூங்கிக் கொண்டிருக்கிறாய் என்று தோழிகள் சொல்கிறார்கள். அவன் சாதரணமானவன் அல்ல. தேவர்களுக்கும் தேவன். இவ்வதாரத்தில் கேசியையும் மல்லர்களையும் வென்றவன்.

‘ஆ ஆ என்று ஆராய்ந்து’ என்ற சொற்றொடர் வைணவ சித்தாந்தத்தின் அடித்தளம். நமக்கு அருள் புரிவது அவன் கடமை. நாம் இருக்கும் இடத்திற்கு வந்து அவன் அருள் செய்ய வேண்டும். ‘நம் சொரூபத்தை குலைத்துக் கொண்டு’ (அண்ணங்கராச்சாரியார்) நாம் அவரிடம் சென்று சேவித்தால். ‘ஐயோ, நம் காரியத்தை நாம் செய்யத் தவறினோமே! இவர்களை இதுவரை கவனிக்காமல் அலைய விட்டு விட்டோமே!’ என்று நினைத்து நமக்கு அருள் புரிவான்.

ஆ ஆ என்று ஆராய்ந்து என்றும் எல்லோருக்கும் அருள் புரிபவன் இறைவன்‘ என்று ஆண்டாள் திண்ணமாகச் சொல்கிறார்.  நாம் அவனிடம் செல்லாவிட்டாலும் அது நடக்கும் என்றும் எடுத்துக் கொள்ளலாம். இறையருள் உலகில் இருக்கும் மனிதர், மிருகம்,
புல், கல் போன்ற அனைத்திற்கும் உறுதி.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 22, 2021 20:06

P.A. Krishnan's Blog

P.A. Krishnan
P.A. Krishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow P.A. Krishnan's blog with rss.