P.A. Krishnan's Blog, page 4

December 20, 2022

இரண்டாம் திருமொழி – 2

பெய்யுமா முகில் போல் வண்ணா! உன்தன் பேச்சும் செய்கையும் எங்களை
மையல் ஏற்றி  மயக்க உன் முகம் மாய மந்திரம் தான் கொலோ?
நொய்யர் பிள்ளைகள் என்பதற்கு உன்னை நோவ நாங்கள் உரைக்கிலோம்
செய்ய தாமரைக் கண்ணினாய்! எங்கள் சிற்றில் வந்து சிதையேலே

பெய்கின்ற கரு முகிலின் வண்ணமுடையவனே! உன் பேச்சும் செயலும் எங்களுக்கு காதலை ஏற்றி மயக்குறச் செய்வதற்குக் காரணம் உன் முகம் செய்யும் மந்திரம்தானோ? உனனைக் குறை சொன்னால் நாங்கள் வலுவில்லாத சிறுமிகள் என்று நீ எங்களைக் கேலி செய்வாய் என்பது எங்களுக்குத் தெரியும். அதனால் நாங்கள் வாயைத் திறக்க விரும்பவில்லை. சிவந்த தாமரை போல கண்களை உடையவனே! எங்கள் சிற்றில்களைச் சிதைக்காதே.

வாயைத் திறக்க விரும்பவில்லை என்று சொல்லிக் கொண்டே வாய் ஓயாமல் பேசுகிறார்கள் ஆயர்குலச் சிறுமிகள். பெய்யும் மேகத்திற்கு ஈரம் இருக்கும். உனக்கும அதன் வண்ணம் மட்டும் இருக்கிறதே தவிர நீ ஈரமில்லாதவன். உன் பேச்சும் பிடிக்கவில்லை. செய்கையும் பிடிக்கவில்லை. ஆனால் உன் முகத்தைப் பார்த்தால் மனதில் ஆசை ஏறுகிறது. உன் முகம் செய்யும் மந்திரம் என்ன?

உரையாசிரியர்கள் கண்ணன் அம்மான் பொடி போட்டுவிட்டான் என்கிறார்கள். இந்தப் பொடியின் வளையத்திற்குள் வந்தவர்கள் ‘மாமனே, மாமனே’ என்று கூப்பிட்டு கொண்டு பொடி தூவியவர் பின்னால் செல்வார்களாம்.

கண்ணனை Pied Piper of Hamelin என்கிறார்கள்!

வெள்ளை நுண்மணல் கொண்டு சிற்றில் விசித்திரப்பட வீதி வாய்த்
தெள்ளி நாங்கள் இழைத்த கோலம் அழித்தியாகிலும் உன்தன் மேல்
உள்ளம் ஓடி உருகல் அல்லால் உரோடம் ஒன்றுமிலோம் கண்டாய்
கள்ள மாதவா! கேசவா! உன் முகத்தன கண்கள் அல்லவே

திருடனாகிய மாதவனே! கேசவனே! வெண்மையான பொடிமணலைக் கொண்டு ஊரார் வியக்க, தண்ணீர் தெளித்து தெருவைத் தூய்மையாக்கி நாங்கள் செய்த சிற்றில்களையும் இழைத்த கோலங்களையும் அழிக்கிறாய். இருந்தாலும் உன்னைப் பார்த்தால் உள்ளம் உருகுகிறதே தவிர உன் மீது கோபம் துளி கூட இல்லை என்பதை நீயே பார்க்கிறாய். காரணம் உன் முகத்தில் இருப்பவை. அவை கண்கள அல்ல (வேறு எதுவோ.)

நிலவைப் பரப்பியது போல காலில் குத்தாத, சிறு கற்களைத் தவிர்த்த மணலை கொண்டு நாங்கள் இவற்றை வடித்திருக்கிறோம் என்கிறார்கள் ஆய்ச்சியர். அவற்றை அழித்து நீ பாதகம் செய்தாலும் உன் மீது கோபமே வருவதில்லை. அவன் முகத்தில் இருப்பது என்ன? ஆண்டாளே “கார்த்தண் கமலக் கண்ணென்னும் நெடுங்கயிறு” என்று பின்னால் பாடுகிறார். கண்ணனின் கண்கள் கட்டிப்போடும் கயிறு.

முற்றிலாத  பிள்ளைகளோம் முலை போந்திலாதோமை நாள் தொறும்
சிற்றில் மேலிட்டுக் கொண்டு நீ சிறிதுண்டு திண்ணென நாம் அது
கற்றிலோம் கடலை அடைத்து அரக்கர் குலங்களை முற்றவும்
செற்று இலங்கையைப் பூசலாக்கிய சேவகா! எம்மை வாதியேல்

சேதுவில் அணையைக் கட்டி கடலை அடைத்து அரக்கர் குலத்தை அடியோடு அழித்து இலங்கையில் குழப்பம் விளைவித்த, உலகின் காவலனே! நாங்கள் முதிராச் சிறுமிகள். முலைகள் இன்னும் சரியாக எழவில்லை. சிற்றில்களைக் காரணமாக வைத்துக் கொண்டு நீ செய்யும் செயல்களை நாங்கள் இதுவரை கற்றதில்லை. எங்களுக்குத் துன்பம் கொடுக்காதே.

அன்று ஒரு பெண்ணை மீட்பதற்காக கடலைத் தடுத்து அணையைக் கட்டினாய். இன்று பல பெண்கள் மனம் நோகும்படியாக அவர்கள் சிற்றில்களைச் சிதைக்கிறாய். நீ செய்யும் காரியங்களை நாங்கள் வெளியே சொல்ல முடியாது. எங்களாலும் அவற்றை திறனோடு செய்ய முடியாது. உன்னைப் போல நாங்கள் குருகுல வாசம் செய்யவில்லை. அங்கு நீ கற்றது இதுதான் போலிருக்கிறது.

சென்ற பத்தில் இருந்த திமிர்ந்த முலைகள் இப்பத்தில் இல்லாதவையே போல ஆகி விட்டன. இதில் வரும் சிறுமிகள் திருப்பாவையின் சிறுமிகள். திருப்பாவை முடிந்ததும் கண்ணனின் கைவரிசைகளுக்கு இலக்காகித் தவிக்கும் சிறுமிகள்.

பாடல் ஆண் எழுதியது அல்ல. பெண் எழுதியது. அவள் காதல் என்றால் என்ன என்று தெரிந்தபின் எழுதியது. இருந்தாலும் ஆண்டாள் காலத்தில் பெண்களுக்கு பன்னீரண்டு ஆண்டுகளிலேயே திருமணம் நடந்து விடும் என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

பேதம் நன்கறிவார்களோடு இவை பேசினால் பெரிது இன்சுவை
யாதும் ஒன்றறியாத பிள்ளைகளோமை நீ நலிந்து என் பயன்?
ஓதமா கடல் வண்ணா! உன் மணவாட்டிமாரொடு சூழறும்
சேது பந்தம் திருத்தினாய்! எங்கள் சிற்றில்வந்து சிதையேலே

அலைகள் ஓசை செய்யும் கடல் போன்ற வண்ணம் உடையவனே! சேதுவில் அணை கட்டியவனே! உன் மனைவிமார்கள் மீது ஆணை! எது நல்லது எது கெட்டது என்பதைத் தெரிந்தவர்களுடன் நீ வாதம் செய்தால் அது உனக்கு நல்லது. இங்கு அல்ல. நாங்கள் ஏதும் அறியாத சிறுபிள்ளைகள் எங்களை ஏன் துன்புறுத்துகிறாய்? எங்கள் சிற்றில்களைச் சிதைக்காதே.

மனைவிமார்கள் என்றால் திருமகளையும் மண்மகளையும் என்று எடுத்துக் கொள்ளலாம். அல்லது கண்ணனை வரித்த, அவன் வரிந்த கணக்கற்ற பெண்களை எடுத்துக் கொள்ளலாம். இப்பாடலிலும் சேது வருகிறது. “உன்னைப் போல இல்லை சேதுவை அமைத்த ராமன் . ‘இந்த இப்பிறவிக்கு இருமாதரைச் சிந்தையாலும் தொடேன் என்ற செவ்வரம்’ சீதைக்குக் கொடுத்த செல்வன் அவன்” என்று அவனுக்கு நினைவுறுத்துகிறார்கள்.

வட்டவாய்ச் சிறு தூதையோடு சிறு சுளகும் மணலும் கொண்டு
இட்டமா விளையாடுவோங்களைச் சிற்றில் ஈடழித்து என் பயன்?
தொட்டுதைத்து நலியேல் கண்டாய் சுடர்ச் சக்கரம் கையில் ஏந்தினாய்!
கட்டியும் கைத்தால் இன்னாமை அறிதியே கடல் வண்ணனே!

கையில் சுதர்சன சக்கரத்தை ஏந்தியிருப்பவனே! கடலின் நிறமுடையவனே! வட்டமான வாய் கொண்ட சிறிய பானையும், சுளகையும் மணலையும் கொண்டு நாங்கள் எங்களுக்கு விருப்பமான விளையாட்டை விளையாடுகிறோம். நாங்கள் சமைத்த சிற்றில்களை அழிப்பதால் என்ன பயன்? மனம் வருந்தினால் கரும்பும் கசந்து போகும். இப்படி சிற்றில்களை கைகளால் தொட்டும் உதைத்தும் எங்களை நலிய வைக்காதே.

கண்ணன் கையில் இருக்கும் சக்கரம் பகைவர்களுக்கு கொடுக்கும் துன்பத்திற்கும் அவன் இங்கு எங்களுக்கு அளிக்கும் துன்பத்திற்கும் அதிக வேறுபாடில்லை என்கிறார்கள். சிறுமிகள் வண்ணம் கடல் நிறம். சுவையும் கடற்சுவையோ? அதன் தண்ணீரால் முகத்தைக் கழுவ முடியுமா? அதைக் குடிக்க முடியுமா? உன் சொந்தக் கடல் பாற்கடலாக இருக்கலாம். அதனால் நீ கரும்பாக இனிப்பவனாக ஒருவேளை இருக்கலாம். ஆனாலும் உன் செய்கை எங்களைக் கசப்பைக் கொடுக்கிறது.

சிறுமிகள் சிற்றில் செய்வதற்கு எடுத்துச் சென்றவற்றை ஆண்டாள் இப்பாடலில் சொல்கிறாள். வட்டமான வாயை உடைய சிறிய பானையையும் மணலில் இருந்து கற்களை அகற்ற உதவும் சிறிய முறத்தையும் அவர்கள் கொண்டு செல்கிறார்கள்.

முற்றத்தூடு புகுந்து நின் முகம் காட்டிப் புன்முறுவல் செய்து
சிற்றிலோடு எங்கள் சிந்தையும் சிதைக்கக் கடவையோ? கோவிந்தா!
முற்ற மண்ணிடம் தாவி விண்ணுற நீண்டளந்து கொண்டாய்! எம்மைப்
பற்றி மெய்ப்பிணக்கிட்டக்கால் இந்தப் பக்கம் நின்றவர் என் சொல்லார்?

மண்ணிலிருந்து தாவி விண்ணையும் காலால் நீட்டி அளந்து உன்னதாக்கிக் கொண்டவனே! கோவிந்தா! எங்கள் முற்றத்தில் வந்து உன் முகத்தைக் காட்டி புன்னகை செய்து சிற்றில்களைச் சிதைத்தது மட்டுமல்லால் எங்கள் சிந்தையையும் சிதைக்க கங்கணம் கட்டிக் கொண்டிருக்கிறாயா? எங்களைப் பிடித்திழுத்து எங்கள் உடல்களைத் தீண்டினால் சுற்றுப்புறத்தில் இருப்பவர்கள் என்ன சொல்வார்கள்?

உலகில் இருக்கும் மண் மட்டுமன்று, விண்ணும் உன்னுடையது. அப்படி இருக்கையில் எங்கள் முற்றம் புகுந்து எங்கள் மண்வீட்டை கலைப்பது நியாயமா? என்று சிறுமிகள் கேட்கிறாகள் கண்ணன் புணர்ச்சியை (சம்லேஷம்)விரும்புகிறான் என்று சிறுமிகள் சொல்லாமல் சொல்கிறார்கள் உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். இது கண்ணன் விரும்பியதில்லை. கண்ணன் விரும்பினால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்று நினைக்கும் பெண்கள் பாடியது. அவன் மீது கோபம் கொண்டதாக நடித்தாலும் அவனைக் கோவிந்தன் என்று அழைப்பது அவர்களைக் காட்டிக் கொடுத்து விடுகிறது. கோவிந்தனைத் தவிர மற்ற பெயர்கள் எல்லாம் அவனுக்குச் சிறு பெயர்கள் என்று திருப்பாவை சொல்கிறது.

சீதை வாய் அமுதம் உண்டாய்! எங்கள் சிற்றில் நீ சிதையேல் என்று
வீதி வாய் விளையாடும் ஆயர் சிறுமியர் மழலைச் சொல்லை
வேத வாய்த் தொழிலார்கள் வாழ் வில்லிபுத்தூர் மன் விட்டுசித்தன் தன்
கோதை வாய்த் தமிழ் வல்லவர் குறைவின்றி வைகுந்தம் சேர்வரே

‘சீதையின் வாயமுதத்தை உண்டவனே, எங்கள் சிற்றில்களைச் சிதையாதீர்’ என்று ஆயர்பாடித் தெருவில் விளையாடும் சிறுமிகளின் மழலைச் சொற்களை, வேதங்களை ஓதுவதையே தொழிலாகக் கொண்டவர்கள் வாழும் ஊரான வில்லிபுத்தூர் விஷ்ணுசித்தர் மகள் கோதை தமிழ்ப் பாடல்களாகப் படைத்தாள். அவற்றில் தேர்ச்சி பெற்றவர்கள் எந்தக்குறையும் இல்லாமல் திரு வைகுண்டம் அடைவார்கள்.

சீதையை திரும்பத் திரும்ப மேற்கோள் காட்டுவது கண்ணன் ராமன் போன்றவன் அல்லன் என்பதைக் குறிக்க. அவனிடம் பெண்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று ஆயர்பாடிச் சிறுமிகள் சொல்கிறார்கள். ஆனால் ஆண்டாள் நிச்சயமாக எந்தக் கவனத்தையும்க் கொள்ள விரும்பவில்லை.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 20, 2022 02:32

December 19, 2022

இரண்டாம் திருமொழி – 1

இந்தப் பத்து பாசுரங்களில் கண்ணன் சிற்றில் சிதைத்ததைப் பற்றி ஆண்டாள் பேசுகிறார்.

சிற்றில் என்றதும் எனக்கு நினைவிற்கு வருவது என் தந்தையின் அபாரமான ஞாபக சக்திதான். தில்லியில் காரில் சென்று கொண்டிருக்கும் போது நான் என் மனைவியிடம் கலித்தொகையின் மிக அழகிய பாடல் ஒன்றைப் பற்றிப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. “சுடர்த்தொடீஇ! கேளாய்! தெருவில் நாம் ஆடும் மணற் சிற்றில் காலின் சிதையா, அடைச்சிய கோதை பரிந்து, வரி பந்து கொண்டு ஓடி, நோ தக்க செய்யும் சிறு, பட்டி’ என்று தொடங்கும் பாடல் ‘நகைக் கூட்டம் செய்தான் அக்கள்வன் மகன்” என்று முடியும். பாடல் முழுவதும் எனக்கு நினைவில் இல்லை என்பதனால், அதன் உள்ளடக்கத்தை மட்டும் அவளுக்கு விளக்கினேன். என் தந்தை காரின் முன் இருக்கையில் அமர்ந்திருந்தார். அவர் தடுமற்றமேயின்றி பாட்டின் பதினாறு வரிகளையும் சொன்னார். அவருக்கு அப்போது வயது 87. நான் தமிழை அவர் காலடியில் அமர்ந்து கற்றுக் கொண்டதைப் பெரும் பேறாகக் கருதுகிறேன்.

சங்ககாலத்திலிருந்து தமிழ்க் கவிதைகளில் ‘சிற்றில் சிதைத்தல்’ பேசப் படுகிறது. சிற்றில் என்றால் என்ன? பிள்ளைத் தமிழ் மரபு ஆண் குழந்தைகளுக்கு பத்து பருவங்களைச் சொல்கிறது. அவை காப்பு, செங்கீரை, தாலாட்டு, சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி, சிற்றில், சிறுபறை, சிறுதேர் என்பவை. இதில் ஆண் குழந்தை தன் பதினேழாம் மாதத்தில் நடை பயிலும் காலத்தில் பெண் குழந்தைகள் கட்டி வைத்திருக்கும் மணல் வீடுகளை காலால் உதைத்துச் சிதைப்பதே சிற்றில் சிதைத்தல்.

பிள்ளைத்தமிழ் பாட ஆண்டாள் இங்கு முயலவில்லை. அவள் காதல் வயப்பட்டவள். மற்றைய எல்லாப் பத்துகளிலும் அவள் பேரழகனான, பெண்களை மயக்கும் கண்ணனை நினைத்தே பாடுகிறாள். பின் ஏன் இரண்டாம் பத்தில் மட்டும் சிற்றில் சிதைத்தலைக் குறித்துப் பாடினாள்?

மன்மதனை வணங்குகிறார்கள் என்ற வருத்தத்தில் ஆண்டாள் மற்றும் அவர் தோழியரின் சிற்றில்களை கண்ணன் சிதைக்கிறான் என்று பெரியாவாச்சான் பிள்ளை தன் வியாக்கியானத்தில் சொல்கிறார். ‘தன்னைப் பெற வருந்துமதுவும் பொறுக்கமாட்டாதவன் நேர்கொடு நேரே காமன் காலில் விழுந்தால் பொறுக்கமாட்டானிறே’ என்பது அவர் வாக்கு. அதாவது தன்னையே நம்பியிருக்கும் இவர்கள் என்னை அடைய பிற தெய்வங்களிடம் செல்ல நேரிட்டதே என்று வருந்தினானாம். அவர்களைச் சமாதானம் செய்ய வந்தவனிடம் பேசாமல் முகங்களைத் திருப்பிக் கொண்டதால் கோபமடைந்து சிற்றிலைச் சிதைத்தானாம்.

இங்கு கோலங்களை அழித்தான் என்றும் பொருள் கொள்ளலாம் என்கிறார் புத்தூர் சுவாமிகள்.

எனக்கு வேறு விதமாகத் தோன்றுகிறது.

நாச்சியார் திருமொழியின் ஆண்டாள் பருவத்தின் வாயிலில் இருக்கும் சிறுமி அல்ல. அச்சிறுமி திருப்பாவை பாடி முடித்து விட்டார். இவள் சிறு வீடு கட்டி விளையாடும் பருவத்தை என்றோ கடந்து விட்டார். இவர் வேண்டுவது காதல் விளையாட்டு.

சரோஜினி நாயுடு தன் கவிதை ஒன்றில் சொல்கிறார்:

But in the desolate hour of midnight, when
An ecstasy of starry silence sleeps
On the still mountains and the soundless deeps,
And my soul hungers for thy voice, O then,
Love, like the magic of wild melodies,
Let thy soul answer mine across the seas.

(பாழ் சூழ்ந்த நடு இரவு வேளையில், மலைகளும் மடுக்களும் விண்மீன்கள் பதித்த மௌனத்தின் பரவசத்தில் உறங்கிக் கொண்டிருக்கு போது, என் ஆன்மா உன் குரலுக்காக ஏங்குகிறது. காதலே, உன் ஆன்மா வரம்பில்லா இசையின் மந்திரம் போல கடல்களுக்கு அப்பால் இருந்து எனக்குப் பதிலை அளிக்கட்டும்)

இங்கு ஆண்டாள் கண்ணனின் குரலுக்கும் செயலுக்கும் ஏங்குகிறார். சரோஜினி நாயுடுவின் காதலியைப் போல. ஆண்டாளின் கனவுக் கோட்டைகள் கண்ணனை நினைத்துச் சமைக்கப்பட்டவை. அவை அவன் அலட்சியத்தால் சிதைகின்றன.His neglect. ஆண்டாள் அதைக் குறித்துப் பாடுகிறார் என்று நினைக்கிறேன். ‘குழந்தையாக இருக்கும் போது எங்கள் சிறு வீடுகளை நீ சிதைத்தாய் என்று நாங்கள் வருந்தினோம். இன்று எங்கள் கனவுகள் உன் மெத்தனத்தால் சிதைகின்றன’ என்பதைச் சொல்லும் விதமாக கண்ணனுக்கு அன்று நிகழந்ததையும் இன்று நிகழ்வதையும் சேர்த்து நினைவூட்டுகிறார்.

ஆண்டாள் ஆயர் பாடியின் ஆய்ச்சியர்களில் ஒருவராகவும் கண்ணனைத் தனக்காகக் கொள்ள விழையும் இளம் பெண்ணாகவும் நினைத்துக்கொண்டு பாடுகிறார். காதலின் மயக்கத்தில் எழுதிய பாடல்கள நமக்கும் மயக்கத்தைத் தருவது இயற்கையே.

நாமம் ஆயிரம் ஏத்த நின்ற நாராயணா! நரனே! உன்னை
மாமி தன் மகனாகப் பெற்றால் எமக்கு வாதை தவிருமே
காமன்போதரு காலம் என்று பங்குனி நாள் கடை பாரித்தோம்
தீமை செய்யும் சிரீதரா! எங்கள் சிற்றில் வந்து சிதையேலே

ஆயிரம் பெயர்களால் புகழப் பெறும் நாராயணா! இங்கு தரையில் அவதாரம் செய்து விளையாடும் கண்ணனே! எங்கள் மாமியான யசோதையின் மகனாகப் பிறந்திருக்கிறாய், அதனால் எங்கள் துன்பம் நீங்கும் என்று நாங்கள் நினைத்தோம் (அது தவறு என்று இப்போது தெரிகிறது நாங்கள் என்ன செய்தாலும் இடையூறு செய்கிறாய்). காமன் ஊர்வலமாக வருகின்ற பங்குனி மாதத்தில் நாங்கள் எங்கள் சிறுவீட்டுக் கடைகளை விரித்தோம். எங்களுக்குத் தீமை செய்யவே பிறந்திருக்கும் திருமகள் கணவனே! எங்கள் சிற்றில்களைச் சிதைக்காதே.

‘நாராயணா! நரனே!’ என்ற சொற்களுக்கு உரையாசிரியர்கள் இரண்டு பொருள்களைத் தருகிறார்கள்: நர நாராயணராக பூமியில் அவதாரம் செய்தவரை தேவர்கள் ஆயிரம் நாமம் சொல்லித் துதிப்பததாகவும் பொருள் கொள்ளலாம். அல்லது பரமபதத்தில் இருக்கும் நாராயணனே என்றும் இராமன் என்ற நரனாக அவதாரம் செய்தவன் என்றும் நித்யசூரிகள் (இறைவனுக்குப் பணிவிடை செய்பவர்கள் – ஆதிசேஷன், கருடன் போன்றவர்கள்) இறைவனைப் பபோற்றுவதாகவும் பொருள் கொள்ளலாம்.

எனக்கு ஆண்டாள் கண்ணனைத்தான் நரன் என்ற சொல்லால் விளிப்பதாகத்தான் தோன்றுகிறது.

இன்று முற்றும் முதுகு நோவ இருந்திழைத்த இச்சிற்றிலை
நன்றும் கண்ணுற நோக்கி நாங்கொளும் ஆர்வம் தன்னைத் தணிகிடாய்
அன்று பாலகனாகி ஆலிலை மேல் துயின்ற எம் ஆதியாய்!
என்றும் உன்தனக்கு எங்கள் மேல் இரக்கம் எழாதது எம் பாவமே

இன்று காலையிலிருந்து மாலை வரை முதுகெல்லாம் வலிக்க நாங்கள் சிற்றில்களைப் படைத்திருக்கிறோம். இவற்றை நாங்களே நன்றாகப் பார்த்து மகிழ்வடைதற்கு (சிறிது நேரம் கொடுத்து) அருள் செய்வாயாக. (ஆனால் நீ செய்ய மாட்டாய்). அன்று சிறு குழந்தையாக ஆலிலை மீது துயின்றவனே! எங்கள் எல்லோருக்கும் முன்னவனே!எங்கள் மீது நீ இரக்கம் கொள்ளதது எங்கள் தீவினைதான்.

நாங்கள் சிற்றில்களைக் கட்டும் போது அவசரத்தில் அவற்றை முழுவதாகக் கூடப் பார்க்க முடியவில்லை. அதற்கு முன் நீ சிதைத்து விடாதே என்கிறார்கள். எங்கள் காதல் நாங்கள் பார்க்கப்பார்க்கப் பெரிதாக வளர்ந்து விட்டது. வலிக்க வலிக்க மனதில் கட்டியது அது. அதன் பன்மைத்தன்மைகள் முழுவதும் எங்களுக்கு இன்னும் பிடிபடவில்லை. ஆனால் உன் அலட்சியம் அதை ஒரேயடியாக நொடியில் பொடிப்பொடியாக்கி விடுகிறது என்று ஆய்ச்சியர் சொல்கிறார்கள் என்றும் பொருள் கொள்ளலாம்.

‘நீ ஆலிலையில் பாலனாகத் துயின்ற போது, தாயின் பராமரிப்பு இல்லையே தூக்கத்தில் புரண்டு கடலில் விழுந்து விடுவாயோ என்று எங்களுக்கு அச்சம் என்ற துன்பத்தைக் கொடுத்தாய். இன்று சிற்றில்களைச் சிதைத்து துன்பம் தருகிறாய்’ என்று பெரியவாச்சான் பிள்ளை விளக்கம் தருகிறார். மேலும் பக்தர்கள் எங்கள் பாவம் என்று சொல்வது அவருக்கு மிக்க அணுக்கமானவருக்கே நடக்கக் கூடியது என்றும் சொல்கிறார். சீதை ராமன் தன்னை இன்னும் மீட்காமல் இருப்பது தன் தீவினை என்றுதான் சொல்லிக் கொண்டாள். அதே போல பரதன் ராமனுக்கு ஆட்சி மறுக்கப்படது தான் செய்த பாவச்செயல் என்று சொல்லி வருந்தினான்.

குண்டுநீர் உறை கோளரீ! மத யானை கோள் விடுத்தாய் உன்னைக்
கண்டு மாலுறுவோங்களைக் கடைக் கண்களாலிட்டு வாதியேல்
வண்டல் நுண்மணல் தெள்ளி யாம் வளைக் கைகளால் சிரமப்பட்டோம்
தெண்திரைக் கடல் பள்ளியாய்! எங்கள் சிற்றில்  வந்து சிதையேலே

ஆழமான கடலில் உறையும் சிங்கமே! அன்று ஆதிமூலமே என்று அழைத்த மதம் கொண்ட கஜேந்திரனைக் காத்தவனே! உன்னை கண்ணோடு கண் சேர்த்து பார்க்க நினைக்கும் எங்களை கடைக்கண்ணால் பார்த்து நலிய வைக்காதே! நல்ல வண்டல் நுண்மணலை எடுத்து வளைக்கரங்களால் மிகவும் துன்பப்பட்டும் சிற்றில்களைச் செய்திருக்கிறோம். தெளிந்த அலைகளை உடைய கடலில் துயில்பவனே! சிற்றில்களைச் சிதைக்காதே.

கடலில் வாழும் சிங்கம் எனக் கண்ணன் ஆண்டாளால் அழைக்கப்படுகிறான்! யானை கூப்பிடவுடன் வந்து அதன் துன்பத்தைத் தீர்த்தாய். நாங்கள் பல நாட்கள் காத்திருந்தும் எங்கள் நலிவை அகற்ற மறுக்கிறாய். கடைக்கண் பார்வைக்கு ஏங்கிய காலம் எப்பொழுதோ போய் விட்டது. இப்போது திங்களும் சூரியனும் போல இருக்கும் உன் கண்களால் எங்களை நேராகப் பார்க்க வேண்டும். தொலைதூரத்தில் கடலில் துயின்று கொண்டிருந்தவன் இத்துணை தூரம் வந்து விட்டாய். சிற்றில் சிதைப்பது போல சிறிய காரியத்தை எல்லாம் செய்ய வேண்டாம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 19, 2022 00:48

December 17, 2022

முதல் திருமொழி – 2

காம தேவனை (அல்லது தேவியை) பாடிய கவிஞர்கள் இருக்கிறார்கள். பெண் கவிஞர்களும் இருக்கிறார்கள். ஆண்டாளுக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த பெண் கவிஞர் ஸாஃபோ (Sappho). அவர் கிரேக்கக்கடவுளான அஃப்ருடைடியை (Aphrodite)ப் பாடியிருக்கிறார்.

Aphrodite, subtle of soul and deathless,
Daughter of God, weaver of wiles, I pray thee

காதலின் தேவியை, கடவுளின் மகளை வணங்கி, ‘நுண்ணிய மனம் உடையவளே, இறப்பே இல்லாதவளே, பல மாயங்களைச் செய்பவளே’ என்று தன் கவிதையைத் துவங்கி இவ்வாறு முடிக்கிறார்.

Come to me now thus, Goddess, and release me
From distress and pain; and all my distracted
Heart would seek, do thou, once again fulfilling,
            Still be my ally!

என்னிடம் வா. என்னைத் துன்பத்திலிருந்தும் வலியிலிருந்தும் விடுதலை செய். அலைபாயும் என் இதயம் வேண்டுவது ஒன்றைத்தான்: முன் போலவே, நிறைவைத் தரும் துணைவியாக என்னுடன் இரு.

ஸாஃபோவின் காதல் தேர்ந்த காதல். ஆண்டாளின் காதல் முதல் காதல்.

இனி பாடல்கள்.

உருவுடையார் இளையார்கள் நல்லார் ஓத்து வல்லார்களைக் கொண்டு வைகல்
தெருவிடை எதிர் கொண்டு பங்குனி நாள் திருந்தவே நோற்கின்றேன் காம தேவா!
கருவுடை முகில்வண்ணன் காயாவண்ணன் கருவிளை போல் வண்ணன் கமல வண்ணத்
திருவுடை முகத்தினில் திருக்கண்களால் திருந்தவே நோக்கெனக்கு அருள் கண்டாய்

காம தேவா! அழகிய இளைஞர்களை, காமநூல்களை நன்கு பயின்றவர்களை பணிந்து, இப்பங்குனி நாளின் காலையில் உன்னை நான் நல்ல தெளிவோடு வணங்குகிறேன். தண்ணீரைச் சூல் கொண்ட மேகம் போல வண்ணமுடையவன், காயாம் பூ மற்றும் காக்கணம் பூ வண்ணம் உடையவன், தன் தாமரையின் ஒளியைக் கொண்ட முகத்தின் அழகிய கண்களால் என்னைக் கூர்ந்து நோக்கச் செய்யுமாறு அருள் புரிவாய்.

நீங்கள் வேத வித்தகர்களாக இருக்கலாம் என்றால் நான் காம வித்தகியாக இருக்கக் கூடாதா என்று ஆண்டாள் கேட்கிறார். எங்கள் ஊர் இளைஞர்கள் காம சூத்திரங்களைக் கரைத்துக் குடித்தவர்கள்; அவர்களை அடிபணிந்தாலே போதும், எனக்கும் அவர்கள் ஞானம் வந்து விடும் என்கிறார்! கண்ணனிடம் செல்லும் போது அறியாச்சிறுமியாக இருப்பேன் என்று நீ நினைக்க வேண்டாம் என்று காமனுக்கு அறிவுறுத்துகிறார்.

மேக வண்ணன், காயாம்பூ வண்ணன், காக்கணம் பூ வண்ணன், தாமரையின் ஒளிவீசும் முகமுடையவன். மேகத்தின் வண்ணம் வேறு. காயாம் பூவின் வண்ணமும், காக்கணம் பூவின் வண்ணமும் சிறிது மாறுபட்டவை. ஆண்டாள் மூன்றையும் சொல்கிறார். ஒவ்வொரு வெளிச்சத்தில் பார்க்கும்போது அவன் ஒவ்வொரு வண்ணத்தில் தெரிகிறான். ஆனால் அவன் முகத்தாமரையின் ஒளி மாறாதது. இருளிலும் ஒளி வீசும்.

காயாம் பூ – Memecylon umbellatum; காக்கணம் பூ (சங்கு புஷ்பம்) -Convolvulus arvensis

காயுடை நெல்லொடு கரும்பமைத்துக் கட்டி அரிசி அவல் அமைத்து
வாயுடை மறையவர் மந்திரத்தால் மன்மதனே! உன்னை வணங்குகின்றேன்
தேச முன்னளந்தவன் திரிவிக்கிரமன் திருக்கைகளால் என்னைத் தீண்டும் வண்ணம்
சாயுடை வயிறும் என் தடமுலையும் தரணியில் தலைப்புகழ் தரக்கிற்றியே

மன்மதனே! பசுங்காய் நெல்லும் கரும்பும், வெல்லமும் அரிசியும், அவலும் உனக்குப் படைத்து, சிறப்பாக ஓதக் கூடிய அந்தணர்களின் மந்திரங்களினால் உன்னை வணங்குகிறேன். முன்னொரு நாளில் உலகை அளந்த திருவிக்கிரமன் தன் திருக்கரங்களால் என்னை தீண்டச் செய். அவனால் தீண்டப்பட்ட (ஒட்டிய) ஒளிவீடும் வயிறும் பெருத்த முலைகளையும் உடையவள் என்று உலகு முழுவதும் அறியச் செய்.

இங்கு உரையாசிரியர்கள் மந்திரம் என்றால் காமசாஸ்திரத்தின் மந்திரங்கள் என்று பொருள் கொள்கிறார்கள். நான் அவ்வாறு நினைக்கவில்லை. அந்தணர் மந்திரங்கள் ஓதுவதைக் கேட்டுக் கேட்டு ஆண்டாளுக்கு மந்திர ஞானம் பிறந்திருக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆண்டாள் இங்கு பெண்கள் வேதம் ஓதக் கூடாது என்ற கட்டளையை வெளிப்படையாக மீறுகிறார். ‘என் புகழ் உலகெல்லாம் பரவ வேண்டும். இறைவனால் தீண்டப்பட்ட பேரழகி’ என்று உலகம் சொல்ல வேண்டும் என்ற ஆசையை வெளிப்படுத்துகிறார்.

இது இளைமையின் அழகிய பாடல்.

மாசுடை உடம்பொடு தலை உலறி வாய்ப்புரம் வெளுத்தொரு போதுமுண்டு
தேசுடைத் திறலுடைக் காம தேவா! நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்
பேசுவதொன்று உண்டு இங்கு எம்பெருமான்! பெண்மையைத் தலையுடைத்து ஆக்கும் வண்ணம்
கேசவ நம்பியைக் கால் பிடிப்பாள் என்னும் இப்பேறு எனக்கருள்  கண்டாய்

பிரகாசிப்பவனே! வலிமையுடைய காமதேவனே! எனக்கு(இப்போது) பெருமானானவனே! நான் இங்கு குளிக்காமல் அழுக்கோடு இருக்கிறேன். தலைவிரி கோலமாக. (முன்பு சிவந்திருந்த) வாய் வெளுத்து விட்டது. ஒரு வேளைதான் உண்கிறேன். இந்த நோன்பை நூற்பது எதனால்? ஒன்று சொல்கிறேன் கேள்! என் பெண்மைக்கு உயிர் கொடு! கேசவன் என்ற அந்தப் பேரழகனின் காலைப் பிடிப்பவள் இவள் என்ற பேற்றை நான் பெற அருள் செய்வாய்.

முதலில் குளித்து விட்டு உன்னை வழிபடுகிறேன் என்று சொன்னவர் இப்போது அழுக்காக இருக்கிறேன் என்கிறார்! முந்தைய பாடலில் தன் இளைமையின் திமிர்ந்த தன்மையைப் பேசியவர் இப்பாடலில் நான் அழகை இழக்கும் அபாயத்தில் இருக்க்கிறேன் என்கிறார். காதற் கலக்கத்தில் பிறந்த முரண் வெளிப்படும் அற்புதமான பாடல். முந்தைய பாடலில் மார்பால் அணைப்பேன் என்று சொன்னவர் இப்போது காலை வருடும் வாய்ப்புக் கிடைத்தாலும் தயாராக இருக்கிறேன் என்கிறார்.

தொழுது முப்போதும் உன்னடி வணங்கித் தூமலர் தூய்த் தொழுது ஏத்துகின்றேன்
பழுதின்றிப் பார்க்கடல் வண்ணனுக்கே பணி செய்து வாழப் பெறாவிடில் நான்
அழுதழுது அலமந்து அம்மா வழங்க ஆற்றவும் அது உனக்கு உறைக்கும் கண்டாய்
உழுவதோர் எருத்தினை நுகங்கொடு பாய்ந்து ஊட்டமின்றித் துரந்தால் ஒக்குமே

காம தேவனே! மூன்று வேளைகளும் உன் அடிகளைத் தொழுது வணங்கி, தூய மலர்களை, தூய மனதுடன் தூவி உன்னைத் தொழுது உன் புகழ் பாடுகிறேன். உலகைச் சூழ்ந்திருக்கும் கடல் போல வண்ணமுடையவனுக்கு நான் எந்தக் குறையும் இல்லாமல் பணிவிடை செய்து வாழும் பாக்கியம் எனக்குக் கிட்டாவிட்டால், நான் அழுது அழுது தடுமாறுவேன். அம்மா, அம்மா என்று குரலிட்டுக் கொண்டு அலைவேன். அப்போதுதான் உனக்கும் உரைக்கும். என்னைப் பற்றிய நினைவு வரும். நீ செய்வது உழுது உழுது களைத்த எருதை அது சுமந்து கொண்டிருந்த நுகத்தடியாலே தள்ளி அதற்கு உணவு அளிக்காமல் விரட்டுவதற்கு ஒப்பானது.

கண்ணனை மட்டும் புகழாமல் உன்னைப் புகழ்வது எனக்கு பாரமானது. நுகத்தடி போன்றது. அப்புகழை வாங்கிக் கொண்டு உனக்காக உழைத்த என்னை எனக்குத் தேவையான உணவை அளிக்காமல் விரட்டுகிறாயே இது நியாயமா? என்று ஆண்டாள் கேட்கிறார். என் கோரிக்கையை நிறைவேற்றாமல் புறக்கணித்தால் அதை நான் ஊர் முழுவதும் சொல்வேன். என் பாவமும் ஊரார் உன்னை வசைபாடும் பாவமும் உனக்குக் கிட்டும் என்று காமனைப் பயமுறுத்துகிறார்.

கருப்பு வில் மலர்க் கணைக் காம வேளைக் கழலிணை பணிந்து அங்கோர் கரி அலற
மருப்பினை ஒசித்துப் புள் வாய் பிளந்த மணிவண்ணற்கு என்னை வகுத்திடென்று
பொருப்பன்ன மாடம் பொலிந்து தோன்றும் புதுவையர் கோன் விட்டுசித்தன் கோதை
விருப்புடை இன்தமிழ் மாலை வல்லார் விண்ணவர் கோன் அடி நண்ணுவரே

கரும்பு வில்லையும் மலர் அம்புகளையும் உடைய காம தேவனின் இருகால்களையும் வணங்கி, குவலயபீடம் என்ற யானையின் கொம்பை அது அலற அலற முறித்த, பறவையின் வாயைப் பிளந்த கரிய மணி போன்ற வண்ணமுடையவனை தான் சேர வேண்டும் என்ற மலைகள் போன்ற மாடங்களால் மிளிரும் திருவில்லிபுத்தூரின் விஷ்ணுசித்தரின் மகளான் கோதையின் ஆசையால் பிறந்த இன்பத் தமிழ் மாலைகளை பாடுபவர்கள் விண்ணவர் தலைவனான திருமாலின் அடிகளை அடைவார்கள்.

பாடல்களைப் படித்தால் கிடைக்கும் பலன்களைப் பேசும் இது போன்ற பாடல்கள், பாடிய கவிஞர்கள் எழுதியதா அல்லது பின்னால் சேர்க்கப்பட்டதா என்ற ஐயம் இருப்பது இயற்கையே.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 17, 2022 20:27

December 16, 2022

முதல் திருமொழி – 1

ஆண்டாள் வைணவத்திற்குக் கிடைத்த அரிய சொத்து என்பதை வைணவ ஆசாரியர்கள் அறிந்திருந்தார்கள். அவரை பத்து ஆழ்வார்களுக்கும் கிடைத்த ஒரே பெண்ணாகத்தான் என்று அவர்கள் கருதினார். ஒரு மகள் தன்னை உடையேன் என்று பெரியாழ்வார் பாடியது எல்லா ஆழ்வார்களையும் கருத்தில் கொண்டுதான் என்றும் நினைத்தனர். உபதேச ரத்தின மாலையில் மணவாளமாமுனிகள் ஆண்டாளைப் பிஞ்சில் பழுத்தவள் என்று அழைக்கிறார். பல்லாண்டுகள் பெருமுயற்சி செய்தும் கிடைக்கப் பெறாத ஞானத்தை அவளுடைய சுடர்மிகும் அறிவு மிக இளவயதிலேயே அடைந்து விட்டது. இங்கு பழுத்தது என்று மாமுனிகள் சொன்னது அவளுடைய படைப்புக்கனியை. அது வெம்பாத பழம். இன்றும், என்றும் தெவிட்டாத சுவையை கொடுக்கும் பழம்.

முதல் பத்துப் பாட்டுகள் அவள் காமதேவனை வணங்குவதை விவரிக்கின்றன.

மறந்தும் புறம் தொழாத வைணவப்பரம்பரையின் அரிய சொத்து பிற தெய்வ வழிபாடு செய்வதா? இதற்கு பெரியவாச்சான் பிள்ளை பல விளக்கங்களை அளிக்கிறார். அயோத்தியின் குடிமக்கள் ராமனுடைய நன்மைக்காக எல்லா தெய்வங்களையும் வழிபடவில்லையா? அனுமன் கடலைக் கடக்கும் போது “நமோஸ்து வாசஸ்பதயே” (வாசஸ்ல்பதியை வணங்குகிறேன்) என்று சொல்லவில்லையா? என்றெல்லாம் கேட்டு விட்டு இதையும் சொல்கிறார்: ‘இவளுடைய திருத்தமப்பனாரான நம்மாழ்வார் ‘தெய்வங்காள்’ என்று தேவதைகள் முன்னிட்டாற்போலவும் இவளும் அயர்த்து கலங்கினபடி’. அதாவது வைணவகுலத் தலைவரான (ஆண்டாளின் தந்தை என்று அறியப்படுபவரான) நம்மாழ்வாரே பிற தெய்வங்களைத் துணைக்கு அழைக்கும்போது வாழ்க்கையில் வாசலில் நுழையக் காத்திருக்கும் ஓர் இளம் பெண் தன் கலக்கத்தில் காமதேவனை அழைக்கக் கூடாதா?

இனி பாடல்கள்.

ஒவ்வொரு பத்திலும் உள்ள எல்லாப் பாடல்களுக்கும் விரிவான விளக்கம் அளிப்பதற்குப் பதிலாக எனக்குப் பிடித்த பாடல்களைப் பற்றி விரிவாகப் பேசி மற்றைய பாடல்களுக்கு பொருள் மட்டும் அளிக்கலாம் என்று இருக்கிறேன்.

தையொரு திங்களும் தரை விளக்கித் தண் மண்டலமிட்டு மாசி முன்னாள்
ஐய நுண்மணற் கொண்டு தெருவணிந்து அழகினுக்கு அலங்கரித்து அனங்க தேவா!
உய்யவுமாங்கொலோ என்று சொல்லி உன்னையும் உம்பியையும் தொழுதேன்
வெய்யதோர் தழல் உமிழ் சக்கரக் கை வேங்கடவற்கு என்னை விதிக்கிற்றியே.

அனங்க தேவனே! (காமனே!)தைமாதத்தில் ஒவ்வொரு நாளும் தரையைச் சுத்தமாக்கி அழகிய கோலங்களை இட்டேன். மாசி முதல் நாட்களில் மிருதுவான மணலால் தெருவை அழகாக அலங்கரித்து உன்னையும் உன் தம்பியையும் உய்வு கிடைக்குமா என்ற கருத்தில் தொழுதேன். மிகவும் உக்கிரமாக நெருப்பை உமிழும் சக்கரத்தை கையில் ஏந்திக் கொண்டிருக்கும் வேங்கடமுடையானுக்குத் தொண்டு செய்ய எனக்கு நீதான் வழி சொல்ல வேண்டும்.

மார்கழி மாதத்திற்கு முப்பது பாடல்கள் பாடியவர் தை மாதத்தை பாதி வரியில் கடந்து அடுத்த பாதியில் மாசியின் முதல் நாட்களுக்கு வந்து விடுகிறார்! அவர் காமனை மட்டுமன்று அவன் தம்பியான சாமனையும் தொழுகிறார். காமன் வழிபாடு தமிழகத்தில் சங்க இலக்கிய காலத்திலிருந்தே இருக்கிறது. பரிபாடலும் கலித்தொகையும் காமனைப் பற்றிப் பேசுகின்றன. உதாரணமாக கலித்தொகை “காமவேள் விழவு ஆயின் கலங்குவள் பெரிது என” என்று காமவேளைக் குறிக்கிறது. சிலப்பதிகாரம் பெண்கள காமவேள் கோட்டத்தில் தொழுவதைப் பேசுகிறது. காமன் தம்பியான சாமனைப் பற்றியும் கலித்தொகை குறிப்பிடுகிறது; ‘காமர் நடக்கும் நடை காண் கவர் கணை சாமனார் தம்முன் செலவு காண்’.

நுண்மணல் ஏன்? காமன் மிருதுவானவன். அவன் பாதங்கள் பஞ்சு போன்றவை எனவே அவனுக்கு மிருதுவான மணலைப் பரப்புகிறார் ஆண்டாள். ஆனால் அவருக்குத் தெரியும் காமனுக்கு உடல் கிடையாது, அங்கங்கள் கிடையாது என்று. சிவபெருமானின் நெற்றிக்கண்ணால் எரிக்கப்பட்டவன் அவன். எனவே அவனை அங்கங்கள் இல்லாதவன் என்று அழைக்கிறார். நுண்மணல் பரப்பியது ஒரு வேளை அவன் அங்கங்கள் கிடைத்து ஊர்வலம் வந்தால் என்ன செய்வது என்ற அச்சத்தில். காதலின் கலக்கம் அவரை முன்னுக்குப்பின் முரணாகச் செயற்பட வைக்கிறது.

சாமனையும் ஏன் சேர்த்து வணங்குகிறாள்? இராமனை வணங்கும்போது இலக்குவனையும் வணங்கவில்லையா? ‘நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மாணாய’ என்று அனுமன் ராமனையும் இலக்குவனையும் வழிபட்டதைச் சொல்லும் பெரியாவாச்சான் பிள்ளை, ஐயோ, இவளுக்கு இந்த நிலைமையா, ‘தோள் அவனையல்லால் தொழா’ என்று உறுதியாக இருக்கும் வைணவக்குடியில் பிறந்த இவளுக்கு இந்த நிலைமையா என்று வருத்தப்படுகிறார்! யார் காலையெல்லாம் பிடிக்க வேண்டிருக்கிறது?

நீ எனக்காக வெகுதூரம் செல்ல வேண்டியது இல்லை. அவனுடைய வைகுண்டம் செல்ல வேண்டும், பாற்கடல் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அவன் பக்தர்களுக்காகவும் எனக்காகவும் மிக அருகில், திருமலையில் இருக்கிறான். அவனோடு சேர்த்து வை என்கிறார் ஆண்டாள்.

வெள்ளை நுண்மணல் கொண்டு தெருவணிந்து வெள்வரைப்பதன் முன்னம் துறை படிந்து
முள்ளுமில்லாச் சுள்ளி எரிமடுத்து முயன்று உன்னை நோற்கின்றேன் காம தேவா!
கள்ளவிழ் பூங்கணை தொடுத்துக் கொண்டு கடல்வண்ணன் என்பதோர் பேர் எழுதி
புள்ளினை வாய் பிளந்தான் என்பதோர் இலக்கினில் புக என்னை எய்கிற்றியே

காமதேவா! விடியும் முன்னரே நதியில் குளித்து விட்டு, வெள்ளையான கோலப்பொடி கொண்டு தெருவை அலங்கரித்து, முள்ளில்லாத சுள்ளிகளைக் கொண்டு, உன்னை பூசிக்கிறேன். உன்னுடைய தேன் வழியும் மலர் அம்பைத் தொடுத்து அதில் கடல் போல நிறம் படைத்த கண்ணனின் பெயரை எழுதி, அன்று பறவையின் வாயைப் பிளந்தவனை இலக்காகக் கொண்டு எய்வாயாக.

பாடலில் ‘என்னை’ என்பதை அம்போடு என்னையும் சேர்த்து எய். நான் அவனை உடனே சேர வேண்டும் என்றும் பொருள் கொள்ளலாம் அல்லது ‘என்னை’ என்ற சொல்லை ‘எனக்காக’ என்ற சொல்லின் உருபு மயக்கமாகக் கருதி எனக்காக உன் அம்பை எய்ய மாட்டாயா என்று ஆண்டாள் வேண்டுகிறார் என்றும் பொருள் கொள்ளலாம்.

மத்தநன் நறுமலர் முருக்கமலர் கொண்டு முப்போதும் உன்னடி வணங்கி
தத்துவமிலி என்று நெஞ்செரிந்து வாசகத்தழித்து உன்னை வைதிடாமே
கொத்தலர் பூங்கணை தொடுத்துக் கொண்டு கோவிந்தன் என்பதோர் பேர் எழுதி
வித்தகன் வேங்கடவாணன் என்னும் விளக்கினில் புக என்னை விதிக்கிற்றியே.

வாசமிக்க ஊமத்தை மலர், முருங்கை மலர் போன்ற மலர்களைக் கொண்டு மூன்று வேளைகளும் உன்னை வணங்குகிறேன். நீ எதற்கும் ஆகாத உதவாக்கரை, பொய்த்தெய்வம் என்று என் நெஞ்சு எரிய வாய்சொற்களால் உன்னை வையாமல் இருக்க வேண்டுமானால் மலர்ந்த கொத்துக்கொத்தான பூக்களால் கணை தொடுத்து கோவிந்தன் பெயரை எழுதி வியப்பை அளிக்கக் கூடிய வேங்கட வாணன் என்ற விளக்கைச் சென்றடையுமாறு எய்வாயாக.

இங்கு ஆண்டாள் சாபம் அளிப்பேன் என்று மன்மதனைப் பயமுறுத்துகிறார். பூமிப் பிராட்டியின் சாபம் என்பதை அவன் எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. வேங்கடவனை உலகிற்கே ஒளி தரும் விளக்காக ஆண்டாள் இங்கு உருவகப்படுத்துகிறார். ‘வித்தகன் வேங்கடவாணன் என்னும் விளக்கு’ என்ற சொற்றொடர் நம் மொழியின் அழகிற்கு இலக்கணம்.

சுவரில் புராண! நின்  பேர் எழுதிச்சுறவநற் கொடிக்களும் துரங்கங்களும்
கவரிப் பிணாக்களும் கருப்பு வில்லும்
 காட்டித் தந்தேன் கன்டாய் காம தேவா!
அவரைப் பிராயம் தொடங்கி என்றும்
 ஆதரித்து எழுந்த என் தடமுலைகள்
துவரைப் பிரானுக்கே சங்கற்பித்துத்
 தொழுது வைத்தேன் ஒல்லை விதிக்கிற்றியே

புராணங்களில் சொல்லப்பட்டவனே! காமதேவனே! சுவரில் உன் பெயர் எழுதி உன் சுறாமீன் கொடிகள் உன் குதிரைகள், உனக்கு சாமரம் வீசும் பெண்கள் படங்களோடு உன்னுடைய கரும்பு வில்லையும் வரைந்திருக்கிறேன். பிள்ளைப் பிராயத்திலிருந்து (எனக்கு மென் முலைகள் எழுந்த காலத்திலிருந்து) முலைகள் பெத்தம் பெரிதான இன்றுவரை அவற்றின் உரிமையாளன் துவராகையின் நாயகனுக்கே என்று சபதம் எடுத்துக் கொண்டு தொழுது கொண்டிருக்கிறேன். விரைவாக என்னை அவனுக்கு ஆக்க வேண்டும்.

வேங்கடவனும் அவனே கண்ணனும் அவனே என்று ஆண்டாள் திரும்பத் திரும்பச் சொல்கிறார். பெரியவாச்சான் பிள்ளை ஆண்டாள் தொழுவது மன்மதனை அல்ல தன் மார்பகங்களையே என்று பொருள் கொள்கிறார். அவனுக்கு சமர்ப்பணம் செய்யப்பட்டதை வணங்குவதில் என்ன தவறு? அவனுக்கு சமர்ப்பித்த பூக்களை தலைமேல் ஏற்றுக் கொள்வதில்லையா?

வானிடை வாழும் அவ்வானவர்க்கு மறையவர் வேள்வியில் வகுத்த அவி
கானிடைத் திரிவதோர் நரி புகுந்து கடப்பதும் மோப்பதும் செய்வதொப்ப
ஊனிடை ஆழி சங்கு உத்தமர்க்கென்று உன்னித்து எழுந்த என் தடமுலைகள்
மானிடவர்க்கென்று பேச்சுப்படில் வாழகில்லேன் கண்டாய் மன்மதனே!

காமதேவா! வானத்தில் இருக்கும் தேவர்களுக்கு அந்தணர்கள் வேள்வியில் கொடுத்த படையலை (ஹவிஸ்) காட்டில் திரியும் நரி ஒன்று உள்ளே புகுந்து அருகில் வந்து முகர்ந்து பார்ப்பது போலத்தான் தன் திருமேனியில் (கரங்களில்) சக்கரம் சங்கைத் தரித்திருக்கும் உத்தமருக்க்காகவே திமிர்ந்து எழுந்திருக்கும் என் முலைகள் மனிதர்களில் ஒருவருக்கு என்ற பேச்சு வருவது. அப்படி வந்தால் நான் வாழ மாட்டேன்.

யாருக்கு உரித்தானவை யாருக்கு அளிக்கப்படுகின்றன என்ற கோபம் இலக்கியத்தில் பல தடவைகள் எழுந்திருக்கிறது. ஏசு Do not cast your pearls before swine என்று சொல்வதோடு Do not give dogs what is sacred என்றும் சொல்லியிருக்கிறார். “சிங்கக் குருளைக்கு இடு தீம் சுவை ஊனை, நாயின் வெங் கண் சிறு குட்டனை ஊட்ட விரும்பினாளே!” என்று கம்பனின் இலக்குவன் சீறுகிறான். சிங்கக்குட்டிக் கொடுக்க வேண்டிய இனிய மாமிசத்தை நாயின் குட்டிக்கு வழங்க விரும்புகிறாளே என்று கைகேயியை அவன் கடிந்து கொள்கிறான். ஆண்டாள் இப்பாடலில் பெண்ணின் இயலாமையை சொல்கிறார். பெண்ணாய் பிறந்து விட்டேன். எனக்கு திருமணம் செய்ய வைக்க தந்தை நிச்சயம் முயல்வார். அது நடந்தால் நான் உயிர் வாழ மாட்டேன் என்கிறார். ‘பெண் பிறந்தேன் பட்டபிழை’ என்று சூர்ப்பனகையே கதறுகிறாள் என்பதை நாம் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். ‘பெண்ணென்று பூமிதனில் பிறந்து விட்டால் மிகப் பீழை இருக்குதடி’ என்று பாரதி பாடவில்லையா?

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 16, 2022 22:34

December 15, 2022

நாச்சியார் திருமொழி

ஆண்டாளின் நாச்சியார் திருமொழியும் தனித்துவம் கொண்டது – திருப்பாவையைப் போலவே. பதினான்கு பத்துகள். 143 பாடல்கள். வைணவப் பெரியவர்கள் ஆண்டாள் திருப்பாவையில் விட்ட இடத்திலிருந்து துவங்குகிறார் என்கிறார்கள். ஆனால் நாம் இங்கு காணும் ஆண்டாள் வேறொரு ஆண்டாள். குழந்தைப் பருவத்திலிருந்து இளம் பெண்ணாக மாறியவர். திருப்பாவையில் அவளுக்கு தோழியர்கள் தேவையாக இருந்தார்கள். ஆனால் இப்போது அந்தத் தேவை அதிகம் இல்லை. தன்னைப் பெரும்பாலும் தனியளாகவே உணர்கிறார். கூடலை விரும்பும் பெண்ணாக. மார்பகங்கள் பெருத்து விட்டன என்பதை அறிவிக்கத் தயங்கவில்லை. ஆனாலும் அவள் பாடுவது இறைவனைத் தேடும் எல்லோருக்காகவும். இதுதான் தமிழ் மரபு. ஆண்டாளுக்கு முன் தோன்றிய காரைக்கால் அம்மையார் தன் அற்புதத் திருவந்தாதியில் சொல்வதைக் கேளுங்கள்:

யானே தவமுடையேன் என்நெஞ்சே நன்னெஞ்சம்

யானே பிறப்பறுப்பான் எண்ணினேன் – யானேயக்

கைம்மா உரிபோர்த்த கண்ணுதலாண் வெண்ணீற்ற

அம்மானுக் காளாயினேன்⁠

சிவனை அடைந்ததால் நான் மட்டும் தவமுடேயேன் ஆனேன், என் நெஞ்சு மட்டும் நன்னெஞ்சு, எனக்கு மட்டும் பிறப்பிலிருந்து விடுதலை கிடைத்தது என்று பொருள் கொள்ளக் கூடாது. இங்கு யானேயில் வரும் ஏகாரம் நிச்சயத்தைக் குறிக்கிறது. அம்மையார் தான் மட்டும் தனி என்ற எண்ணத்தோடு பாடவில்லை. சிவபெருமானுக்கு ஆளாகி அகந்தை முழுவதும் அகன்ற பின்னர் பாடுகிறார். நான் மட்டும் தனியல்ல, எண்ணற்ற சிவபக்தர்கள் என்னைப் போன்று இருக்கிறார்கள் என்ற பொருள் பாடலில் மறைந்து நிற்கிறது.

பின்னால் அவரே பாடுகிறார்:

காண்பார்க்கும் காணலாம் தன்மையனே கைதொழுது

காண்பார்க்கும் காணலாம் காதலால் – காண்பார்க்குச்

சோதியாய்ச் சிந்தையுளே தோன்றுமே தொல்லுலகுக்கு

ஆதியாய் நின்ற அரன்⁠

காதலோடு காண்பவர்களுக்கெலாம் சோதியாய் மனதில் தோன்றும் எளியவன் என்று அவரே கூறுகிறார்.

அத்தகைய எளியவன் சில தருணங்களில் அரியவனாகவும் மாறுகிறான். இங்கு ஆண்டாளுக்கு அரியவன். திருப்பாவையின் ‘சிற்றம் சிறுகாலே’ பாடலில் ‘இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உந்தன்னோடு உற்றோமே ஆவோம்” என்று பல பிறவிகள் பிறந்து உனக்குத் தொண்டு செய்வேன் என்று சொன்னவர் இங்கு உன்னோடு இரண்டறக் கலக்க வேண்டும் என்கிறார்.

அண்ணங்கராச்சாரியர் – நாயக: என்ற வடசொல் நாயன் என்று தமிழில் மறுவி அதற்குப் பெண்பாலாக நாய்ச்சியார் -நாச்சியார் என்று மாறியது என்கிறார். ஆய்ச்சி ஆச்சியாகவும் பேய்ச்சி பேச்சியாகவும் மாறியது போல. அவர் ஏற்கனவே நாயகிதான். வைணவ மரபின்படி அவர் பூமித்தாயின் அம்சம். தாய் எப்போது தகப்பனிடமிருந்து பிரிந்தாள்? ஸ்ரீதேவி பிரிந்து சீதையாக, சிறைகாக்கும் செல்வியாக ராமனையே நினைத்துக் கொண்டு காலம் தள்ளவில்லையா? அதே பிரிவின் வலியைத் தானும் உணர வேண்டும் என்று இந்தத் தாயும் நினைத்திருக்கலாம். குருபரம்பரைக் கதைகளின்படி ஆண்டாள் அரங்கனின் கர்ப்பக்கிருகத்தில் நுழைந்து பள்ளிகொண்ட பெருமாளைத் தழுவி மறைந்தவர். பிரிவு என்பதை பூமித்தாயார் உணர்ந்து எழுதியிருப்பதுதான் நாச்சியார் திருமொழி என்றும் பக்தர்கள் கருதுகிறார்கள்.

காலத்தையே தன்னுள் இருத்திக் கொண்ட உலக நாயகிக்கு பிரிவு ஒரு பொருட்டாகுமா?

சங்க இலக்கியத்தின் தலைவிக்கு ஒரு இரவே பெரிதாகத் தோன்றுகிறது. “எல்லை கழிய, முல்லை மலர, கதிர்சினம் தணிந்த கையறுமாலை உயிர்வரம்பாக நீந்தினோம் ஆயின் எவன்கொல் தோழி, கங்குல் வெள்ளம் கடலினும் பெரிதே” என்று குறுந்தொகை கூறுகிறது. ஆண்டாள் திருப்பாவையில் ‘எத்தனேயேனும் பிரிவாற்றகில்லையால்’ என்கிறாள். அதாவது நப்பின்னையால் ஒரு நொடி கூட கண்ணனைப் பிரிந்திருக்க முடியாதாம். நாச்சியார் திருமொழியின் ஆண்டாளுக்கும் அதே நிலைமைதான்.

பாடல்களுக்குள் செல்லும் முன்னால் சிலவற்றைப் புரிந்து கொள்ள வேண்டும்.

இறைவனைக் கணவனாக வரித்துக் கொள்வதைத்தான் பக்தர்களும் பக்தைகளும் காலம் காலமாகச் செய்து கொண்டிருக்கிறார்கள். கிறித்துவ மதத்திலும் கன்யாஸ்திரீகளாக மாறுபவர்கள் கிறிஸ்துவின் மணமகள்களாக அறிவிக்கப்படுகிறார்கள் (Brides of Christ). புனிதபால் தன் கடிதம் ஒன்றில் கிறித்துவ மத அமைப்பே(Church) கிறிஸ்துவை மணம் புரிந்ததாகக் கருதபபட வேண்டும் என்கிறார். எனக்கு தெரிந்து இறைவனைப் பெண்ணாக நினைத்து அவளை அடைய வேண்டும் என்று யாரும் கருதியதாகத் தெரியவில்லை. பணிந்து போவது, எதிர்வினை செய்யாதது போன்றவை பெண்மைக்கு அடையாளங்களாகக் கருதுவதால் எல்லோரும் பெண்ணாகத்தான் ஆண்டவனை அணுகுகிறார்கள்.

ஆனால் பெண்ணாகப் பிறந்த கவிஞர்களும் தங்கள் வெளிப்படையான பெண் அடையாளங்களைத் துறந்து விட்டுதான் இறைவனை அணுகுகிறார்கள். ஆடையே வேண்டாம் என்று அலைந்த மகாதேவி அக்கா கூட தன் கவிதைகளில் ஆண்டாளைப் போல தன் இளைமையைப் பற்றிக் கூறியதாகத் தெரியவில்லை. ஆண்டாள் ஒருத்திதான் தன் பெண்மையை இவ்வளவு அழகாக, எந்த ஒளிவும் மறைவும் இன்றிப் பறை சாற்றுகிறார். லஜ்ஜை – வெட்கம் – என்பது மிகைப்படுத்தப்பட்டது என்பதை எந்தத் தயக்கமும் இன்றி அறிவிக்கிறார்.

ஆண்டாளின் நாச்சியார் திருமொழி ஒரு சமயப்பாடற் கொத்தாக, பிரபந்தத்திற்குள் ஏற்றுக் கொள்ளப்பட்டது வியப்புதான்.

நாம் வைணவப் பெரியவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதையும் கவனிப்போம். ஆண்டாளின் அற்புத கவிதைகளையும் அனுபவிப்போம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on December 15, 2022 23:46

September 18, 2022

ஜெயமோகனுக்கு வாழ்த்துகள்!

என் வாழ்க்கையிலேயே மிகவும் நிறைவு தந்த நிகழ்வுகளில் ஒன்று  ஜெயமோகனின் அறுபதாவது ஆண்டு நிறைவு விழா. நினைத்து நினைத்து மனம் பூரித்துப் போகிறது.

கூட்டம் முடிந்ததும் கற்பற்றா நாராயணனுடன் பேசிக் கொண்டிருந்தேன். கேரளத்தின் மிகப்பெரிய எழுத்தாளர் அவர்.

நரகத்தில் ஒரு நாள் என்பது சுவர்க்கத்தில் நூறு வருடம் என்றார் அவர். நிச்சயம். ஜெயமோகன் புகுந்து மீண்ட நரகங்கள் கணக்கற்றவை. ஆனால் மீண்டு வந்த ஜெயமோகன் நரகங்களின் நஞ்சுகளுக்குள்ளும் அமிர்தத்தைத் தேடி நமக்கு தந்தவர். அவருடைய தேடுதல்களே அவர் படைத்த இலக்கியங்கள்.   மீள விரும்பாமல் நரகங்களில் அடைக்கலம் தேடுகிறவர்களும் அல்லது அவற்றின் பெருநெருப்பில் பொசுங்கிப் போனவர்களும் அவருடைய படைப்புகளில் இருந்தாலும் மீண்டு வருவது என்பதே மனித வாழ்க்கையின் குறிக்கோள் என்று அவை சொல்லிக் கொண்டிருக்கின்றன என்றேன் நான்.

 முழுவதும் வற்றிப் போன இடதுசாரி இலக்கியக்கிணறுகளில் இன்னும் தண்ணீர் கிடைக்காதா என்ற எதிர்ப்பார்ப்பில் வாளிகளை தினமும் விட்டுக் கொண்டிருக்கும் மார்க்சிய பக்தர்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது என்றேன். அவர் மிக்கசரி என்றார். உழைக்கும் மக்களையும் கம்யூனிஸ்டு இயக்கத்தில் சேர்ந்து அறவுணர்வையும் மனிதகுலத்தின் மீது கொண்ட மாறாத காதலையும் இழக்காமல் இருந்தவர்களையும் பற்றி அவர் எழுதியவற்றிற்கு ஜெயமோகனின் பாசிச முகம் என்று உளறிக் கொண்டிருக்கும் கோமாளி எழுத்தாளர்களின் மொத்த எழுத்துகளும் ஈடாகாது என்றேன்.  

ஜெயமோகனின் படைப்புகளைப் பற்றி அமைதியாக ஆராய்ந்தால் பல குறைகளைச் சொல்ல முடியும். ஆனால் அவற்றில் இடை இடையே பளீரிடும் சில வரிகளைப் படிக்கும் போது வாசகனுக்கு ஏற்படும் பரவசம் விவரிக்க இயலாதது.   வாழ்க்கையின் எண்ணற்ற தருணங்கள் நமக்கு அளிக்கும் பேரொளிக் கீற்றுகளும், இருண்ட புகைமூட்டங்களும்,  எண்ணற்றவை. ஆனால் அவை சோப்புக் குமிழிகள் போல பிடிக்க முடியாதவை. அவற்றை வார்த்தைகளுக்குள் பிடித்து அடைத்துத் தரும் திறமை மிகச் சிலருக்கே வாய்த்திருக்கிறது. அவர்களே செவ்விலக்கியம் படைக்கிறார்கள். ஜெயமோகன் எழுத்தை அவர் மீது இருக்கும் பொறாமையைத் துடைத்து எறிந்து விட்டு படிக்கும் எந்த எழுத்தாளரும் ஜெயமோகனுக்கு இத்திறமை வாய்த்திருக்கிறது என்பதை அறிவார்கள் என்றும் நான் சொன்னேன். கம்பன் கருடன் வரவைப் பற்றிப் பேசும் போது ‘எல்லைச் சுருட்டி வெயிலை விரித்து’ அவன் வருகிறான் என்கிறான். ஜெயமோகனின் தமிழ் இலக்கிய உலக இருத்தல் அத்தகையது. வெயிலையும் வேண்டுமென்றால் சுருட்டிக் காட்டுவார்.

நாராயணன் சொன்னார்: He is unique in that he is always becoming.

நான் சொன்னேன்: Yes, He will be becoming until the moment he is taken away from this world.

அதற்கு இன்னும் பல ஆண்டுகள் இருக்கின்றன. குறைந்தது ஒரு நூறு ஆண்டுகள்.

ஜெயமோகனுக்கு வாழ்த்துகள்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 18, 2022 22:14

January 13, 2022

வங்கக்கடல் கடைந்த!

திருப்பாவையில் பாவை நோன்பு நோற்பதாக சில ஆய்க்குலத்துச் சிறுமியர் உறுதி கொண்டு இறைவனை முதலில் வணங்கி அவன் புகழ் பாடுகிறார்கள். பின்னால் கூட்டமாகச் சேர்ந்து தோழிகளை எழுப்புகிறார்கள். தோழிகளுடன் நந்தகோபன், யசோதை, நப்பின்னை போன்றவர்களை எழுப்புகிறார்கள். அவர்கள் எழுந்தபின் கண்ணனை எழுப்புகிறார்கள். எழுந்த கண்ணனிடம் எங்களுக்கு பறை கொடு மற்றைய சன்மானங்களைக் கொடு என்கிறார்கள். அவன் கொடுத்ததும் (அல்லது கொடுக்கத் துவங்கியதும்) எங்களுக்கு பறை மட்டும் போதாது. உன்னோடு எப்போது உறவு கொண்டிருக்க வேண்டும், உனக்கு எந்த கவனச்சிதறலும் இல்லாமல் சேவை செய்ய வேண்டும், உனக்கும் எங்கள் உறவு இல்லாமல் இருக்க முடியாது என்பதும் எங்களுக்குத் தெரியும் என்கிறார்கள். கடைசி பாட்டு இக் கிருஷ்ண நாடகத்தை படித்தும், கேட்டும், பாடியும் மகிழ்பவர்களுக்கு கிடைக்கும் பலன்களைக் குறிப்பிடும் பாடல் – பலசுருதிப் பாடல். இது ஆண்டாளின் மற்றும் பெரியாழ்வாரின் திருநாமங்களைத் தெரிவிப்பதால் இதற்கு திருநாமப் பாடல் என்று பெயர்.

இனி பாடல்.

வங்கக் கடல்கடைந்த மாதவனைக் கேசவனைத்
திங்கள் திருமுகத்துச் சேயிழையார் சென்றிறைஞ்சி
அங்கப் பறைகொண்ட வாற்றை, அணி புதுவைப்
பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான் கோதைசொன்ன
சங்கத் தமிழ்மாலை முப்பதும் தப்பாமே
இங்கிப் பரிசுரைப்பார், ஈரிரண்டு மால்வரைத்தோள்
செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்
எங்கும் திருவருள்பெற் றின்புறுவ ரெம்பாவாய்.

வங்கக் கடல் என்பதை கடல் கடையும் போது தோன்றிய மந்திர மலை வங்கம் போல, அதாவது மரக்கலம் (கப்பல்) போலத் தெரிகிறதாம். அவன் மாதவன். ஏன்? கடல் கடைந்த போது அமுதோடு பிறந்த லட்சுமியை அடைந்தவன். ‘அமுதில் வரும் பெண்ணமுது’ என்பது ஆழ்வார் வாக்கு. கேசவன். பெரிய பிராட்டியான லட்சுமி பெருங்காதல் கொள்ளும்படியாக அடர்ந்த கேசம் கலைந்து முகத்தில் அலையாகப் பரவ இறைவன் கடல் கடைந்ததனால் அவன் கேசவன்.

இவர்களுக்குத் ‘திங்கட் திருமுகம்’. அவன் கதிர்மதியம் போல் முகத்தான். அக்கதிர் முகத்தையே பார்த்துக் கொண்டிருக்கும் பேறு கிடைத்ததால் அவன் முகத்தின் ஒளி இவர்கள் முகங்களிலும் பிரதிபலிக்கிறது. சூரியனால் சந்திரன் ஒளி பெறுவது போல.

இவர்கள் இறைவனிடம் இறைஞ்சி பறை பெற்ற கதையை ஆண்டாள் நமக்கு சொல்கிறாள். அவள் கோதை. திருவில்லிப்புத்தூரின் தாமரை மலர்கள் மாலை தரித்திருக்கும் பட்டர்பிரான் என்று அழைக்கப்படும் பெரியாழ்வாரின் திருமகள்.

அவளுடைய தமிழ்மாலை மலர்மாலை அல்ல. அது மணி மாலை. ஈடற்ற கவிதை வைரங்களால், ஈடில்லா மொழியான தமிழில் இறைவனுக்குப் படைக்கப்பட்டிருக்கும் மாலை. சங்கத் தமிழ் என்றால் ஆண்டாளின் தமிழ் தனியாக அனுபவிக்க வேண்டிய தமிழ் அல்ல. சங்கமாக, கூட்டமாக சேர்ந்து ஒருவரை ஒருவர் கலந்து வியந்து அனுபவிக்க வேண்டிய தமிழ். அவள் பாடிய பாடலைப் பாடினால், குறிப்பாக மார்கழி மாதம் தவறாமல் பாடியவர்கள் நான்கு மலைகளைப் போன்ற தோள்களை உடைய, உலகின் எல்லாச் செல்வங்களுக்கு அதிபதியான சிவந்த கண்களை உடைய திருமாலை அருளைப் பெற்று இன்பமாக இருப்பார்கள்.

ஆண்டாளின் அழகிய பாடல்களில் கண்ணனின் பெயரை எடுத்து விட்டு இந்தியாவின் பெயரைப் போடுங்கள். தேசத்தை நேசிப்பவர்கள் தேசத்தின் புகழ் பாடுகிறார்கள். தூங்குபவர்களை தூங்காதே வேலை இருக்கிறது என்று எழுப்புகிறார்கள். நாட்டின் தலைவர்களை எழுப்புகிறார்கள். நாட்டிடம் எங்களுக்கு தாற்காலிக நன்மை போதாது. உனக்கும் எங்களுக்கும் இடையே இருக்கும் உறவு பிரிக்க முடியாதது, அதே போன்று மக்களாகிய நாங்கள் இல்லையென்றால் நீ இல்லை என்கிறார்கள். உன்னிடம் குறையில்லை என்று எங்களுக்குத் தெரியும். உன் செல்வங்களை எங்களுக்கும் எத்தடையும் இல்லாமல் தா என்று வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

இந்தியாவிற்குப் பதிலாக, மனிதகுலம், இயற்கை, உலகம், சுற்றுச்சூழல் போன்ற எந்தக் கருத்திற்கும் உருவம் அளித்து கண்ணனுக்குப் பதிலாகப் பொருத்திப் பாருங்கள். ஆண்டாளின் பாசுரங்களில் உள்ள பேரண்டங்களையும் அரவணைக்கும் தன்மை (universality) புரியும். எதோடும் யாரோடும் உறவு கொள்ள நினைத்தாலும் அவ்வுறவு ஒன்றுக்கொன்று இயைந்து இயங்கினால்தான் அது அடுத்த நிலையை அடையும் சாத்தியக் கூறுகள் இருக்கின்றன் என்பதை ஆண்டாளின் பாடல்கள் மிகத் திறமையாக ஒரு கவிஞனின் பரந்துபட்ட பார்வையோடு சொல்கின்றன. ஆண்டாள் மறுபடியும் மறுபடியும் பிறவி எடுக்க நினைக்கிறாள். அவன் இருக்குமிடமெல்லாம் பிறந்து அவனுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்ற விருப்பத்தை வெளிப்படுத்துகிறாள். மனிதகுலத்திற்கும், இயற்கைக்கும், உலகத்திற்கும், சுற்றுச்சூழலுக்கும் தொண்டு செய்ய நினைப்பவர்களுக்கு ஆண்டாளுக்கு இறைவன் மீது இருந்த பிரியமுடியாத பிடிப்பு அவர்கள் உறவு கொள்ள நினைப்பற்றின் மீது இருந்தால் போதும்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 13, 2022 20:13

January 12, 2022

சிற்றம் சிறுகாலே!

ஆண்டாள் தமிழின் முக்கியமான முதல் கவிஞர் அல்லர். சங்க இலக்கியத்தின் பல பெண் கவிஞர்களை – குறிப்பாக மனிதனை ‘எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே’ என்று பாடிய அவ்வையாரை – நமக்குத் தெரியும். பக்தி இலக்கியத்திலும் ஆண்டாளுக்கு முன்னோடியாக காரைக்கால் அம்மையார் இருந்திருக்கிறார். ஆண்டாள் ‘சிற்றம் சிறுகாலே’ பாசுரத்தில் சொல்வதையே ஏறத்தாழ அவரும் சொல்லியிருக்கிறார். ‘அவர்க்கே எழுபிறப்பும் ஆளாவோம் என்றும்/அவர்க்கேநாம் அன்பாவ தல்லால்- பவர்ச்சடைமேல்/ பாகாப்போழ் சூடும் அவர்க்கல்லால் மற்றொருவர்க்/ காகாப்போம் எஞ்ஞான்றும் ஆள்’, என்று அவருடைய அற்புதத் திருவந்தாதி பேசுகிறது. பிறவிகளெல்லாம் சிவபெருமானுக்கே ‘உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்’ என்று அற்புதத் திருவந்தாதியும் சொல்கிறது. ஆனால் சிவன் பிறவா யாக்கைப் பெரியோன். அவனுடைய விளையாடல்களெல்லாம் கண்ணனுடைய விளையாடல்களும் ராமனுடைய செயல்களும் ஏற்படுத்தும் நெருக்கத்தைப் போல ஏற்படுத்துவதில்லை என்பது உண்மை. திருமாலின் ராமன் மற்றும் கிருஷ்ண அவதாரக்கதைகளும் மக்களைச் சென்றடைந்ததைப் போல அவை சென்றடையவில்லை. கண்ணன் சிறுவனாக, காதலனாக, ஆசிரியனாக, கூட நின்று போர் புரிபவனாக, நண்பனுக்காகத் தூது செல்பவனாக நமது கதைகளில் காட்டப்படுகிறான். அதே போல இராமனும் மனிதர்களுக்காகவும், மிருகங்களுக்காகவும், மனைவிக்காகவும் போர் புரிகிறான். ஓர் அரசனாக மக்களை வழி நடத்துகிறான்.

ஆண்டாளின் கவிதை மிகவும் உயரியது என்பது அவர் திருப்பாவையை எழுதிய நாள் முதலாகவே தமிழையும் வைணவத்தையும் அறிந்தவர்கள் உணர்ந்து விட்டனர். இன்றும் மார்கழி மாதத்தில் திருப்பதி கோவிலில் சுப்ரபாதத்திற்குப் பதிலாக திருப்பாவைதான் பெருமாளை பள்ளி எழச் செய்யப் பாடப்படுகிறது.

இங்கு நான் என் வாழ்வில் நிகழந்த ஒரு சம்பவத்தைக் குறிப்பிட்டாக வேண்டும். நான் அதைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறேன்.

பதினைந்து வருடங்களுக்கு முன்னால் நான் பாலிடானா சென்றிருந்தேன். குஜராத் பாவ்நகர் மாவட்டத்தில் மலை மேல் இருக்கும் ஜைனக் கோவில்களின் தலம். 4000 படிகள் ஏற வேண்டும். ஏறினால் உச்சியில் 800 பெரிய சிறிய கோவில்கள். ஏறும் போதும் கோவிலுக்குள்ளும் உணவோ பச்சைத் தண்ணீரோ குடிக்கக் கூடாது.

என்னை அழைத்துச் சென்றவர் ஒரு அதிகாரி. தமிழ் சுமாராகப் பேசுவார். கூடவே தெலுங்குக்காரர் ஒருவரும் வந்திருந்தார். அதிகம் பேசாதவர். ஆனால் உச்சியை அடைந்ததும் என்னிடம் ஒரு கேள்வி கேட்டார்.

‘சார், கோதா தெரியுமா?”

“எந்தக் கோதா?”

“ஆமுக்த மால்யதா கோதா.”

“ஓ, ஆண்டாளா? தெரியும்”.

“திருப்பாவை தெரியுமா?”

“தெரியும்.”

“சார், எனக்கு ஒரு உதவி செய்ய வேண்டும். இந்தச் ‘சிற்றம் சிறுகாலே’ பாடலை நான் தினமும் கண்ணன் முன்னால் சொல்லிக் கொண்டிருக்கிறேன். சமஸ்கிருத மந்திரம் சொல்வது மாதிரி. பாட்டின் பொருள் தெரியாது. உங்களுக்குத் தெரியுமா? தெரிந்தால் எனக்குச் சொல்லுங்கள். பெரிய உதவியாக இருக்கும்.”

எனக்குள்ளேயே நான் நினைத்துச் சிரித்துக் கொண்டேன். நம்பிக்கை இல்லாத ஒருவன் தமிழ் பக்திப் பாடலின் பொருளை தமிழ்த் தெரியாத, நம்பிக்கையில் ஊறியிருக்கும் ஒருவருக்கு, ஜைனக் கோவில்களின் மத்தியில் நின்று கொண்டு சொல்வது இந்தியாவில் மட்டுமே நடக்கும்.

பாடலின் பொருளைச் சிறிது நேரம் விளக்கிச் சொன்னேன். ஆண்டாளைப் பற்றியும் சொன்னேன். எதுவும் பேசாமல் கேட்டுக் கொண்டார். கண்களிலிருந்து தாரை தாரையாகக் கண்ணீர்.

இறங்கி வரும் போது, நாங்கள் இருவரும் ஒரு வார்த்தை கூட பரிமாறிக் கொள்ளவில்லை.

இனி பாடல்.

சிற்றம் சிறுகாலே வந்துன்னைச் சேவித்துன்

பொற்றா மரையடியே போற்றும் பொருள் கேளாய்;

பெற்றம் மேய்த்துண்ணும் குலத்திற் பிறந்து நீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது;

இற்றைப் பறைகொள்வான் அன்று காண் கோவிந்தா!

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு

உற்றோமே ஆவோம்; உனக்கே நா மாட்செய்வோம்;

மற்றைநம் காமங்கள் மாற்றேலோ ரெம்பாவாய்.

“புலராக்காலையில் உன்னை வந்து தொழுகின்றோம். எங்கள் மத்தியில் பிறந்து நாங்கள் செய்யும் எளிய தொண்டுகளை ஏற்றுக் கொண்டாய். மிகவும் மகிழ்ச்சி. ஆனால் நாங்கள் இதோடு விட்டு விட மாட்டோம். இன்று எடுக்கும் எல்லாப் பிறவிகளிலும் உனக்கு மிகவும் அணுக்கமாக இருப்போம். உன் தொண்டையே செய்து வாழ்வோம். வேறு ஏதும் செய்யாமல் இருக்க நீதான் அருள வேண்டும். “

இப்பாடலுக்கு உரை எழுதுகையில் அண்ணங்கராச்சாரியார் கூறுகிறார்: “ஏழுலகும் தனிக்கோல் செல்ல வீற்றிருக்கு மிருப்பைத் தவிர்ந்து இவ்விடைக்குலத்தில் நீ வந்து பிறந்ததற்கு ஒரு பயன் வேண்டாவோ? எங்களிடத்தில் நீ கைங்கரியம் கொள்ளாதொழிவாயாகில் உன்னுடைய இப்பிறவி பயனற்றதாமான்றோ? “

முந்திய பாடலில் நீ எங்கள் குலத்தில் பிறந்ததால் ‘புண்ணியம் உடையோம்’ என்று சொன்னவள் இந்தப் பாடலில் உனக்கும் இப்பிறவியால் பயன்தான் என்கிறாள்!

பெற்றம் மேய்த்துண்ணும் – இதற்கு ஆறாயிரப்படி தரும் வியாக்கியானம் மகத்தானது. ‘நீ பிறப்பிலியாய் பிறவாதார் நடுவேயிருந்து பிறவியற்றார்க்கு முகம் கொடுத்து நிலத்தில் வந்தோமா? (அதாவது அவன் ஆட்சி நடக்கும் பரமபதத்திற்கு) பிறவிக்கு போரப் பயப்பட்டு உன்னையே கால்கட்டுவாருள்ள விடத்தே வந்தோமா? (அதாவது அவன் அறிதுயில் கொள்ளும் பாற்கடலுக்கு) பிறாவா நிற்க செய்தே ஆசார ப்ராதானர் புகுந்து நியமிக்கும் ராஜ குலத்தில் பிறவியில் வந்தோமா? (அதாவது அரச குலத்தவர் செய்ய வேண்டிய கடமைகளை தவறாமல் செய்யும் ராஜகுலத்துப் (ராமனின் வம்சம்) பிறவியில் வந்தோமா? வாலால் உழக்குக்குப் பசு மேய்த்து வந்து வயிறு வளர்க்கும் எங்கள் குலத்திலே நீ என் செய்யப்பிறந்தாய் என்று விசாரிக்கலாகாதோ?’

‘வாலால் உழக்கிற்கு’ என்றால் ஆயர்களுக்கு எண்ணத் தெரியாது என்ற பொருள். அவர்கள் ஒரு பசுவை மேய்த்தால் ஒரு உழக்கு கூலி என்று வாங்கிக் கொள்வார்களாம். மொத்தம் எத்தனை பசுக்களை மேய்த்தோம் என்ற கணக்கிடத் தெரியாததால், மேய்ந்த ஒவ்வொரு பசுவின் வாலைப் பிடித்து ஒவ்வொரு ஆழாக்காகக் கூலி வாங்குவார்களாம்.

நாங்கள் பறையென்று சொன்னால் அதன் உட்பொருள் வேறு என்பது உனக்குப் புரியாதா? காதலி காதலன் வீட்டிற்குச் சென்று தண்ணீர் தாகமாக இருக்கிறது என்று கேட்டால் தண்ணீர் கொடுத்து அவன் அனுப்பித்து விடுவானா என்று ஆறாயிரப்படி கேட்கிறது.

பாடலில் பிறவி வேண்டாம் என்று ஆண்டாள் சொல்லவில்லை. ‘மனித்தபிறவியும் வேண்டுவதே இம்மாநிலத்தே’ என்று அப்பர்பிரான் சொன்னதை ஆண்டாளும் சொல்கிறார். மறுபடியும் மறுபடியும் பிறக்க வேண்டும் என்கிறார். ஆனால் எல்லாப் பிறவிகளிலும் உன்னையே நினைத்து உனக்குத் தொண்டு செய்ய வேண்டும். எப்படிப்பட்ட தொண்டு? எளிய தொண்டு. முரட்டுத் தொண்டல்ல. தடித்தடிப் புத்தகங்களைப் படித்து அவற்றிற்கு வியாக்கியானம் செய்யும் தொண்டல்ல. சிறிய தொண்டு. குற்றேவல்.

ஆண்டாள் தனக்கு வித்யா கர்வம் போன்ற படிப்பாளிகளின் கர்வம் வந்து விடக்கூடாது என்பதில் தெளிவாக இருக்கிறார். மற்றைக் காமங்கள் எனக்கு மறுபிறவிகளில் வந்தாலும் அதை மாற்றி விடு. என்னை எளிய பக்தையாகவே ஏற்றுக் கொள் என்கிறார்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 12, 2022 19:43

January 11, 2022

கறவைகள் பின் சென்று!

ஆழ்வார்கள் காலத்தில் தமிழுக்கும் சமஸ்கிருதத்திற்கும் உறவு எவ்வாறு இருந்தது? ஆழ்வார்கள் வடமொழி வேதங்களிலும் உபநிடதங்களிலும் சொல்லப்படும் இறைவன்தான் தமிழ்ப் பாசுரங்களின் இறைவன் என்பதில் மிகத் தெளிவாக இருந்தார்கள்.

நம்மாழ்வார் சொல்கிறார்: ‘இல்லை நுணுக்கங்க ளேயிதனில் பிறிதென்னும்வண்ணம் தொல்லைநன் னூலில் சொன்ன வுருவும் அருவும்நியே’. அதாவது ‘மிகப் பழமையான வேதங்களில் உன்னை விட நுணுக்கமானது வேறு ஏதும் இல்லை என்று சொல்லப்பட்டிருக்கின்றது. அவை சொன்ன உருவமும் அருவமும் நீதான்’.

ஆனால் நம்மாழ்வார் நேதி, நேதி என்று உபநிடங்களில் சொல்லப்படும் கடவுளாக அவனைக் காணவில்லை. அடுத்த இரு வரிகளில் ‘அல்லித் துழாயலங் கலணி மார்ப.என் அச்சுதனே, வல்லதோர் வண்ணம்சொன்னாலதுவேயுனக் காம்வண்ணமே.’ என்கிறார். ‘மார்பில் துளசியையும் தாமரையையும் அணிந்தவனே, நாங்கள் உன்னை எதாகச் சொன்னாலும் நீ அதுதான்’. அவன் மொழிக்கும் மனித எண்ணங்களுக்கும் அப்பாற்பட்டவன் அல்ல. எனவே தமிழ் மொழி அவனுக்கு அன்னியமாக இருக்க வாய்ப்பே இல்லை. எந்த மொழியும் அவனுக்கு அன்னியமானதல்ல.

ஆழ்வார்கள் பாடல்களை பிரபந்தமாக ஒன்று சேர்த்தவர்கள் அவை தமிழ் வேதம் என்பதிலும் தெளிவாக இருந்தார்கள். திராவிட வேதம், திராவிட உபநிடதங்கள் என்று பாசுரங்கள் அழைக்கப்பட்டன. ஆனால் வேதங்களை விட இறைவனுக்கு தமிழ்ப் பாசுரங்களே உகந்தது என்று வைணவர்கள் நம்பினார்கள். ஆழ்வார்கள் சொன்னவற்றை பின்னால் வந்த வைணவப் பெரியார்கள் இவ்வாறு விளக்கினார்கள்: கீதை காட்டிய வழிகளான பக்தி, ஞான, கர்ம மார்க்கங்கள் இறைவனை அடையப் போதுமானதல்ல. பிரபத்திதான் – அதாவது முழு சரணாகதிதான்- முழுமையான, ஒரே வழி. அது ஒன்றுதான் அவனிடம் பக்தர்களைக் கொண்டு சேர்க்கும். அதற்கு நீ உயர்ந்த சாதியில் இருக்க வேண்டிய கட்டாயம் இல்லை. பெரிய படிப்புப் படித்தவனாக இருக்க வேண்டியதில்லை. மாறாக அவை தடையாக இருக்க வாய்ப்புகள் இருக்கின்றன. கீதையில் சொல்லபடுவது இறைவனுக்கும் அவனை அடைய விரும்புபவனுக்கும் இடையே இருக்கும் ஒருவருக்கு ஒருவர் உறவு. ஆனால் ஆழ்வார்கள் கூட்டமாகவும் அவனைத் தேடலாம் என்கிறார்கள். தொண்டக்குலத்தைக் குறிப்பிடுகிறார்கள். கடல்வண்ணனை வழிபடுபவர்கள் கூட்டத்தை குறிப்பிடுகிறார்கள் ஆண்டாளின் ஆயர் குலச் சிறுமிகள் தனியாக இறைவனை அடைய விரும்பவில்லை. அவர்கள் குழாமாகத்தான் செல்கிறார்கள். அவர்கள் படிக்காதவர்கள். ஆனால் எங்களுடன் மட்டும்தான் அவன் நெருக்கமாக இருப்பான் என்ற முழு நம்பிக்கை அவர்களுக்கு இருக்கிறது.

இனி பாடல்.

கறவைகள் பின்சென்று கானஞ் சேர்ந்துண்போம்
அறிவொன்று மில்லாத ஆய்க்குலத் துன்றன்னைப்
பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றுமில்லாத கோவிந்தா! உன்றன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினாலுன்றன்னைச்
சிறுபேரழைத்தனவுஞ் சீறியருளாதே
இறைவா நீ தாராய் பறையேலோ ரெம்பவாய்!

கறவைகள் பின் சென்று கானஞ் சேர்ந்துண்போம் – உயர்சாதியினர்கள் குருக்கள் பின்னால் சென்று அறிவைத் தேடுவார்கள். ஆனால் நாங்கள் பசுக்களின் பின் சென்று அவை தேடி உண்பதைப் போல நாங்களும் தேடி கிடைத்ததை உண்போம். நாங்கள் திருப்பதி, திருவரங்கம் போன்ற கோவில்களுக்குச் செல்வதில்லை. நாங்கள் செல்வது காடு. அங்கே குளிக்க முடியுமா, சுத்தத்துடன் கும்பிட முடியுமா?

அறிவொன்றுமில்லாத – அதாவது எது சரி, எது தவறு என்பதை தேர்ந்தெடுக்கக் கூடிய அறிவு இல்லாதவர்கள். எது பாவம் எது புண்ணியம் என்பதைப் புரிந்து கொள்ளக்கூடிய அறிவு இல்லாதவர்கள். உபாய சூன்யம்தான் எங்கள் சொத்து. வழி என்ன என்பதை அறவே அறியாதவர்கள். இதையே தான் நம்மாழ்வார் ‘நோற்ற நோன்பிலேன் நுண்ணறிவுமிலேன்’ என்று சொல்கிறார். அறிவொன்றில்லாமல் இருப்பதே அவனுக்கு உகந்தது.

ஆனால் நாங்கள் செய்த புண்ணியம் எங்கள் குலத்தில் நீ வந்து பிறந்திருக்கிறாய். அது மட்டுமல்ல. நீ பிறந்ததால் எங்கள் குலம் முழுவதும் வீடு பெறும். உய்யும். ‘உய்ய இவ்வாயர் குலத்தினில் தோன்றிய ஒண்சுடர் ஆயர் கொழுந்தே’ என்பது பெரியாழ்வார் வாக்கு. ‘நீ சூக்ருதமாய் நின்று இக்குலத்தை எடுக்கைக்கு ஆண் பெண் சட்டி பானை என்றுண்டோ’ என்கிறது ஆறாயிரப்படி. உன்னுடைய விருப்பம். நீஎங்கள் குலத்தை தேர்ந்தெடுத்தாய்.

குறைவொன்றுமில்லாத கோவிந்தா! – உலகின் எல்லாக் குறைகளும் எங்களிடம் இருக்கின்றன. ஆனால் உலகில் நிறையனைத்தும் உன்னிடம் இருக்கின்றன. குறைக்கு அங்கு இடமேது?

உன்றன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது – பாட்டின் அச்சாணியும் வைணவத் தத்துவத்தின் அச்சாணியும் இதுதான். உனக்கும் எங்களுக்கு இடையே உள்ள உறவை யாராலும் ஒழிக்க முடியாது. எங்களால் முடியாது. உன்னாலும் நிச்சயம் முடியாது. உன்னையும் எங்களையும் கட்டியிருக்கும் கயிறு அறுக்க முடியாதது. ‘நான் உன்னை அன்றி இலேன் கண்டாய் நாரணனே! நீ என்னை அன்றி இலை’ என்பது திருமழிசை ஆழ்வார் வாக்கு.

அறிவின்மை, சிறுபிள்ளைத்தனம், அன்புடைமை – இம்மூன்றின் தாக்கத்தால் சொன்னவற்றை நீ பொருட்படுத்தக் கூடாது என்கிறார்கள் சிறுமிகள். ‘பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும் பத்தர் சொன்னவும் பன்னப் பெருபவோ?’என்று கம்பன் சொல்வதைப் போல.

இங்கு சிறுபேர் என்பது நாராயணன் என்ற நாமத்தை. அவனுக்கு கோவிந்தா, கோபாலா என்று அழைத்தால்தான் பிடிக்குமாம். அவைதாம் பெரும் பேர்களாம். பிராமணர்கள் பழக்கத்தில் நாங்கள் உன்னை நாராயணா என்று தவறுதலாக அழைத்து விட்டால் எங்கள் மீது சீற்றம் கொள்ளாதே என்கிறார்கள்!

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 11, 2022 21:06

January 10, 2022

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!

திருநெல்வேலி சந்திப்பு வரதராஜப் பெருமாள் கோவில் கட்டப்பட்டு முன்னூறு வருடங்களுக்குள்தான் இருக்கும். அப்போது கோவிலுக்கு முன்னால் இருந்த சன்னிதித் தெருவில் ராயர்கள்தாம் அதிகம் இருந்தார்கள். ஆனால் ‘தின்னு கெட்டான் திருநெல்வேலி ராயன்’ என்று ஒரு பழமொழி உண்டு. அவர்கள் சாப்பிட்டே தங்கள் சொத்துக்களை அழித்து விட்டார்களாம். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ராயர்கள் வீடுகளை எல்லாம் சுமார்த்த, வைஷ்ணவ பிராமணர்கள் வாங்கி விட்டார்கள். ஐம்பதுகளிலும் அறுபதுகளிலும் தெரு முழுவதும் வழக்கறிஞர்கள், பிராமண நிலச்சுவான்தார்கள், ஒன்றிரண்டு வீடுகளில் கோவிலில் பெருமாளுக்குச் சேவை செய்யும் அர்ச்சகர்கள். ஆனால் கோவிலில் வேலை செய்பவர்களில் அனைவருக்கும் தெரிந்த பெயர் கோவிந்த ஐயங்கார். அவர் சன்னிதித் தெருவில் இல்லை. கோவிலை ஒட்டிய வீடு ஒன்றில் இருந்தார். அவர்தான் மடப்பள்ளியைக் கவனித்துக் கொண்டிருந்தார். கோவிந்த ஐயங்காருக்கு காது சுத்தமாகக் கேட்காது. அவரை எல்லோரும் செவிட்டு ஐயங்கார் என்று தான் அழைத்தார்கள். ‘கோவிந்த ஐயங்காரின் புளியோதரையும், அக்கார அடிசிலும் வைகுண்டத்தில் பரிமாற வேண்டியது. நம் பாக்கியம் அவர் நமக்குக் கிடைத்து விட்டார்’ என்று என் தந்தை சொல்வார். காது கேட்காததால் உப்பு குறைவு, புளி குறைவு,இனிப்பு குறைவு, நெய் குறைவு என்றெல்லாம் அவரிடம் சொல்வது கடினம். ஆனால் அவர் அவ்வாறு சொல்வதற்கு வாய்ப்பைக் கொடுத்ததாக எனக்குத் தெரியவில்லை. என் மனைவிக்கும் புளியோதரை, அக்கார அடிசில் செய்வதை கற்றுக் கொடுத்தவர் அவர்தான். இன்று வரை என் குடும்பத்தில் ‘கூடாரை வெல்லும் சீர்’ பாட்டு வரும் நாளில் கோவிந்த ஐயங்காரை நினைக்காமல் இருக்க முடியாது. அவருக்கு கூடாரே, எதிரிகளே கிடையாது. வாழ்நாள் முழுவதும் பக்தர்களுக்குத் தொண்டு செய்து காலத்தைக் கழித்த கோவிந்தன் அவர்.

ஆண்டாள் புளியோதரைப் பற்றிப் பேசியிருக்கிறாரா? ‘கண்ணன் என்னும் கருந்தெய்வம்’ (நாச்சியார் திருமொழி) பாடலில் ‘புண்ணில் புளிப்பெய்தார் போல” என்று அவர் சொல்கிறார். ‘நீங்கள் பெருமாள் கோவில் புளியோதரைப் பற்றிப் பேசி என்னை துன்பப்பட வைக்காதீர்கள். அது அவனோடு சேர்ந்து உண்ணக் கூடிய பிரசாதம்.’ என்று பொருள் கொள்ளலாம் என்று என் தந்தை சொல்வார்.

இனி பாடல்!

கூடாரை வெல்லும்சீர் கோவிந்தா உந்தன்னைப்
பாடிப் பறைகொண்டு யாம்பெறும் சம்மானம்
நாடு புகழும் பரிசினால் நன்றாகச் சூடகமே
தோள்வளையே தோடே செவிப்பூவே
பாடகமே என்றனைய பல்கலனும் யாம்அணிவோம்
ஆடை உடுப்போம் அதன்பின்னே பாற்சோறு
மூடநெய் பெய்து முழங்கை வழிவாரக்
கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!

முன்னால் வையத்து வாழ்வீர்கள் பாடலில் நெய்யுண்ணோம் பாலுண்ணோம், மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம் என்று சிறுமியர்கள் சபதம் எடுத்துக் கொண்டார்கள். இந்தப்பாடலில் அவர்கள் கேட்டவையெல்லாம் கிடைத்து விட்டன என்ற மகிழ்ச்சியில் பாடுகிறார்கள்.

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா – எல்லோரையும் வெல்லுவது குணத்தாலே. கூடுவாரைச் சீலத்தால் வெல்லும். கூடாதாரை சௌரியத்தாலே (வீரத்தாலே) வெல்லும். சௌரியம் அம்பிற்கு இலக்காகும். சீலம் அழகிற்கு இலக்காகும் என்று சொல்லும் ஆறாயிரப்படி ‘அம்பிற்கு இலக்கானார்க்கு மருந்திட்டு ஆற்றலாம்’ என்று சொல்கிறது. எல்லோருக்கும் இறைவன் வழி கொடுப்பான். அவனை எதிரியாகக் கருதுவர்களுக்குக் கூட அருமருந்தாவான் என்று பொருள். கோவிந்தன் பசுக்களைப் பராமரிப்பது போல இறைவன் பக்தர்களைப் பராமரிப்பான். கன்றுகளை அவன் மிகவும் கவனமாக, கூடுதலாகப் பார்த்துக் கொள்வான். அதே போல அவனடிக்கு வரும் அறியாத சிறுமிகளை அவன் எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக் கொள்வான்.

சிறுமியருக்குக் கிடைத்த பரிசு கண்ணன். அவர்களிடம் அவன் வருவான் என்று ஊர் எதிர்பார்க்கவில்லை. இப்போது அவன் முந்தைய பாடலில் சொன்னது போல, அழகிய விளக்கு, அரையர்கள் பாட்டு, கொடி, மேற்கட்டி போன்றவையோடு பறையையும் பரிசாக வழங்கி விட்டான். கூடவே கோவிந்தனாக இருந்து அவர்களைப் பார்த்துக் கொள்கிறான். ஊரே வியப்பில் எங்களைப் புகழ்கிறது என்று அவர்கள் சொல்கிறார்கள்.

சூடகமே, தோள்வளையே, தோடே செவிப் பூவே பாடகமே -அவர்கள் அணிந்து கொள்ளும் நகைகள் இவை. சூடகம் என்றால் கையில் அணியும் வளை. செவிப்பூ என்றால் கர்ணபுஷ்பம் என்று அழைக்கப்படும் ஆபரணம். காதில் இருந்து தொங்குவதாக இருக்கலாம். பாடகம் என்றால் பாத கடகம்- சிலம்பு.

நகைகள் அணிந்த பின்னர் அழகான ஆடை. இவற்றை இவர்களுக்கும் மிகுந்த பரிவோடு அணிவிப்பது கண்ணனும் பிராட்டியான நப்பின்னையும் தான் என்று உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். சிறுமிகள் சரியாக அணியமாட்டார்கள் என்ற கவலையாம் அவர்களுக்கு.

பின்னால் விருந்து. பாற் சோறு, முழுக்க நெய் மிதக்கும் சோறு கையில் எடுத்தால் முழங்கை வரையும் நெய் வழிகிறதாம். இவ்வளவு நெய் இருந்தால் எப்படிச் சாப்பிட முடியும், திகட்டி விடாதா என்று பட்டரிடம் பக்தர் ஒருவர் கேட்டாராம். அதற்கு பட்டர் ‘அவர்கள் சாப்பிட்டார்கள் என்று யார் சொன்னார்கள்?’ என்றாராம். கண்ணனைப் பார்த்த மகிழ்ச்சியில் அவர்கள் தங்களை மறந்து விட்டார்கள். நெய் வழிகிறது கூட அவர்களுக்குத் தெரியவில்லை. மேலும் ஆண்டாள் அவர்கள் ‘உண்டார்கள்’ என்று பாட்டில் எங்கும் சொல்லவில்லை என்பதையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.

கூடாரை முதல் வரியில் சுட்டிக் காட்டும் பாடல் கூடியிருந்து குளிர்ந்தோம் என்ற நிறைவோடு முடிகிறது. கண்ணனை வழிபடுபவர்கள் சேர்ந்து இருந்தாலே பசி இருக்காது. பிரிவின் வெப்பம் இருக்காது.

இன்னொரு விதமாகப் பார்க்கப் போனால், எனக்கு மிகவும் பிடித்த காட்சி பெண் குழந்தைள் சேர்ந்து உணவு உண்பது. உலகெஙகிலும் நான் இந்தக் காட்சியை பல இடங்களில் பார்த்திருக்கிறேன். ஏழைகளிடையே, பணக்காரர்களிடையே, பள்ளிப் புல்வெளிகளில் மற்றும் திருமணக் கூடங்களில். கூடியிருந்து உணவு உண்பது அவர்களுக்கு எவ்வளவு மகிச்சியைத் தருகிறது என்ற உணர்வு எப்போதும் தெவிட்டாதது. ஆண்டாளின் தெவிட்டாத பாடலும் அதையே சொல்கிறது என்றும் கொள்ளலாம்.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 10, 2022 20:48

P.A. Krishnan's Blog

P.A. Krishnan
P.A. Krishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow P.A. Krishnan's blog with rss.