P.A. Krishnan's Blog, page 5
January 9, 2022
மாலே மணிவண்ணா!
வைணவ உரையாசிரியர்களைப் படிப்பது என்பது மிகவும் கடினமானது. வடமொழிப் பயிற்சி இருந்தால் ஒழிய அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது புரிவது கடினம். இதைத் தவிர இன்னொரு பிரச்சினையும் எனக்கு இருந்தது. சொன்னவற்றையே அவர்கள் திரும்பச் சொல்கிறார்கள் என்ற எண்ணம் என்னைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு புத்தகத்தில் மதநூல்களுக்கு உரை எழுதுவது embroidering a piece of rag போன்றது என்று படித்தேன். அதாவது கந்தல் துணியில் பின்னல் வேலை செய்வது. இதை என் தந்தையிடம் சொன்னேன். அவர் ‘அது பார்ப்பவர் பார்வையைப் பொறுத்தது. என்னிடம் கேட்டால் உரை வைரக்கற்களுக்கு பட்டை தீட்டுவது போன்றது என்பேன்,’ என்றார். ‘ஆனாலும் திரும்பத் திரும்ப்ச் சொல்வது போல இருக்கிறதே, அயர்ச்சியைத் தருகிறது’ என்று பதில் சொன்னேன். அதற்கு அவர் கோபப்படமால் ‘நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா?’ என்றார். என் பதிலை எதிர்பார்க்காமல் கேள்வியையும் கேட்டார். ‘ஆண் பெண் உறவைப் பற்றி என்ன நினைக்கிறாய்?’ ‘நிச்சயம் தேவை.’ ‘எதற்கு? ‘அதுவும் ஒரே செயலை பலவிதங்களில் செய்வதுதானே? நீ பதினாறு வயதிலிருந்து கலர் கலராக படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய் ( அது விடியோக்களே இல்லாத காலம் – போர்ன் என்றால் படங்கள்தாம்) உனக்கு அலுத்து விட்டதா?” என்னால் பதில் சொல்ல முடியவில்லை. ‘நம்ம ஊர்ப்பக்கம் ஒரு பழமொழி உண்டு – ஆசை தீரப் புணர்ந்தவனும் கிடையாது. அழுக்குத் தீர குளிச்சவனும் கிடையாது’ன்னு. (அவர் புணர்ச்சிக்கு பயன்படுத்திய சொல் வேறு சொல்). இதையே உரையாசிரியர் இறைவனை அணுகும் முறைக்குப் பொருத்திப்பாரு, பதில் கிடைச்சுடும் என்றார். ‘ஆராவமுதன்’ என்று அவனை ஏன் சொல்கிறார்கள்? இதனால்தான். தடித்தனம் குறைந்து பக்தி அதிகரித்தால் இது போன்ற விதண்டாவாதக் கேள்விகளைக் கேட்கத் தோணாது,’ என்றார். ‘அது எப்படி? ஆண் பெண் உறவு இருவருக்கிடையே, கண்ணுக்குத் தெரியும்படி நிகழ்வது. கடவுள் அனுபவம் அப்படியா?’ என்று கேட்டேன். ‘அதை அனுபவித்தவர்களுக்குத் தெரியும். சம்போக இன்பம் என்பதே எல்லோருக்கும் வாய்க்கிறதா? மேலும் வஜ்ரயானிகளைப்போல அதையே தேடி அதில் நிர்வாணத்தை அடைகிறேன் என்று நினைப்பவர்கள் இல்லையா? ஆண்டாள் மாலே மணிவண்ணா பாசுரத்தில் “மேலையார்ச் சொல்வனகள்” என்று தெளிவாகச் சொல்கிறார். அதாவது இறைவனை நினைப்பது, போற்றுவது அவன் அடியை அடைய முயற்சிப்பதெல்லாம், அவளுடைய மூதாதையர் சொன்ன வழிகள். நானும் உனக்கு அவைதான் வழிகள் என்று சொல்கிறேன். வேறு வழி உனக்குக் கிடைத்தால் தேடிக் கொள். நான் உன்னைத் தடுக்கப் போவதில்லை.’
இனி பாடல்!
மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய்! அருளேலோ ரெம்பாவாய்!
நாரயணன், பரமன், தேவாதி தேவன், நெடுமால் என்றெல்லாம் அவனை அழைத்தவர்கள் அடைமொழி இல்லாமல் மாலே என்று அழைக்கிறார்கள். இது அவனுடன் இவர்கள் நெருங்கி விட்டார்கள் என்பதைக் காட்டுகிறது. அவனுடைய சௌலப்யத்தைக் (எளிதாக அணுகக் கூடிய தன்மை) காட்டுகிறது. நீங்கள் என்று அழைப்பது நெருக்கம் ஏற்பட்டால் நீயாக மாறுவதில்லையா, அதே போலத்தான் நெடுமால் வெறும் மாலாக மாறுகிறான். அதே சமயத்தில் மால் என்ற சொல் அவனுடைய பரத்துவத்தையும் காட்டுகிறது. அவன்தான் பரம்பொருள்.
மணிவண்ணா என்பது அவனுடைய சொல்லவொண்ணா அழகு. ஆசைப்பட வைத்து துன்பத்தையும் கொடுக்கும் அழகு.
அவனிடம் உன்னுடைய பாஞ்சஜன்யத்தைப் போல் ஒலிக்கக் கூடிய சங்கைக் கொடு, இடி போல முழங்கக் கூடிய சங்கைக் கொடு, உன் பெயரைப் பாடுகின்ற அரையரைக் கொடு, விளக்கைக் கொடு, கொடியைக் கொடு, நிழல் தரக்கூடிய மேற்கட்டியையும் (அதாவது துணியை நான்கு கம்புகள் மேல் பரப்பி, அதை நால்வர் பிடித்துக் கொண்டுவர, துணியின் கீழ் நடந்து வருவது- பனி விழாமல் இருக்க) கொடு என்று கேட்கிறார்கள். அதற்கு அவன் இவையெல்லாம் தரவேண்டும் என்று எந்த சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது என்று கேட்கிறானாம். அதற்கு சிறுமிகள் “நாஸ்திகரைப் போல் நீ சொல்கின்றதென்? ஆளறிந்து வார்த்தை சொல்லாய்.” என்று பதில் சொல்கிறார்கள் என ஆறாயிரப்படி சொல்கிறது. ‘வியாசர் சொன்னான், மனு சொன்னான்’ என்று ஞானம் படைத்தவர்கள் சொல்வதை ஆதாரமாக எடுத்துக் கொள்வது நீ அறியாததா? அதே போல நாங்கள் கேட்பதெல்லாம் எங்கள் பெரியவர்கள் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தது,’ என்றும் அவர்கள் சொல்கிறார்கள். கண்ணன் அதற்குப் பதிலாக, நீங்கள் கேட்பதை கொடுக்கும் சக்தி எனக்கு இருக்கிறதா என்பதே ஐயம் என்றானாம். ‘உன்னால் முடியாதது எது? ஓர் ஆலிலையில் மேல் கிடந்து உலகங்களை வயிற்றில் வைத்துக் காத்தவன் நீ இல்லையா?’ என்று சிறுமியர் சொல்கிறார்கள். ‘உன்னால் முடியாதது ஒன்றும் இல்லை. நீ அருள் செய்தால் எல்லாம் நடக்கும். செய்யாவிட்டால் உனக்கு எங்கள் மீது இரக்கம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.’
‘என்றும் உன்றனுக்கு எங்கள் மேல் இரக்கம் எழாதது’ என்று நாச்சியார் திருமொழி சொல்கிறது.
January 8, 2022
ஒருத்தி மகனாய் பிறந்து!
நேற்று தமிழ் இலக்கியத்தில் கண்ணன் எவ்வாறு பேசப்படுகிறான் என்பதைப் பார்த்தோம். இன்று சமஸ்கிருத நூல்களில் கண்ணனைப் பற்றி என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதைப் பார்க்கலாம்.
முதன்முதலாக கிருஷ்ணனின் பெயர் சாந்தோக்கிய உபநிஷதத்தில் வருகிறது. அவன் தேவகியின் புதல்வன் என்று குறிப்பிடப்படுகிறான். பாணினியின் அஷ்டத்யாயி வாசுதேவனும் கிருஷ்ணனும் வழிபடப்படுவதைச் சொல்கிறது. பதஞ்சலி தன்னுடைய அஷ்டத்யாயி உரையில் கம்சனைக் கண்ணன் கொன்ற கதையைக் குறிப்பிடுகிறார். மகாபாரதத்தின் கண்ணனையும், கீதை உபதேசம் செய்த கிருஷ்ணனையும் நமக்கு நன்றாகத் தெரியும். மகாபாரத்திற்குப் பின்னால் எழுதப்பட்ட விஷ்ணு புராணம் போன்ற புராணங்களில் கண்ணனின் கதைகள பேசப்படுகின்றன.
பழங்குடி மக்களின் கடவுளான கிருஷ்ணன் இந்துக்கள் அனைவரும் வழிபடும் கிருஷ்ணனாக, விஷ்ணுவின் அவதாரமாக மாறினான் என்று சில வல்லுனர்கள் கருதுகிறார்கள். நாம் அந்த விவாதத்திற்குள் போக வேண்டாம். என்னைப் பொறுத்தவரை உலகில் இன்று வழிபடப்படும் எல்லாக் கடவுள்களும் ஒருகாலத்தில் பழங்குடி மக்களால் வழிபட்டவர்களாக்த்தான் இருந்திருக்கிறர்கள்.
கண்ணன் கோபிகளோடு ராசக்கிரீடை செய்வதும் சமஸ்கிருத இலக்கியங்களில் குறிப்பிடப்படுகின்றன. மகாபாரதத்தின் இணை நூலாக அறியப்படும ஹரி வம்சத்தில் கண்ணன் கோபிகளோடு விளையாடியது சொல்லப்படுகிறது. பாசன் எழுதிய பாலசரித நாடகம் கண்ணன்-கோபிகள் விளையாட்டைப் பேசுகிறது. இளங்கோ அடிகள் மிகத் தெளிவாக பால சரிதத்தில் சொல்லப்பட்ட குரவையை ஆய்ச்சியர்கள் ஆடிக் காட்டுவதாகக் குறிப்பிடுகிறார்: ஆயர் பாடியில், எரு மன்றத்து,/மாயவனுடன் தம்முன் ஆடிய/ வால சரிதை நாடகங்களில்,/வேல் நெடுங் கண் பிஞ்ஞையோடு ஆடிய/ குரவை ஆடுதும் யாம்’ என்றாள்”
இனி பாடல்.
ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில்
ஒருத்தி மகனாய் ஒளித்து வளரத்
தரிக்கிலானாகித் தான்தீங்கு நினைந்த
கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்
நெருப்பென்ன நின்ற நெடுமாலே! உன்னை
அருத்தித்து வந்தோம் பறைதருதியாகில்
திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம்பாடி
வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!
நீ எத்தனை தடைகளையும் துன்பங்களையும் தாண்டி வந்தவன். எங்களுக்குப் பறை தருவது உனக்கு எளிதாக செயல். எங்கள் துன்பமும் பெரிய துன்பமல்ல. எளிதாக மகிழ்வாக மாறக் கூடிய துன்பம் என்று சிறுமியர்கள் சொல்கிறார்கள்.
பன்னீரண்டு மாதம் தேவகியில் வயிற்றில் இருந்தவனுக்கு (பன்னிரு திங்கள் வயிற்றில் கொண்ட – பெரியாழ்வார் திருமொழி) ஓர் இரவு கூட கம்சனின் சிறையில் இருக்க விருப்பமில்லை. நாய் வயிற்றில் நெய் சோறு தங்குமோ என்று வியாக்கியானம் கேட்கிறது. ஓர் இரவு என்றால் அது ஒப்பில்லாத இரவு. அது போன்ற இரவு முன்பும் இருந்ததில்லை பின்பும் இருந்ததில்லை. ஊழி முதல்வனைப் பெற்றதால் அவள் தனி ஒருத்தி. அவனை கம்சன் கண்படாமல் ஒளித்து வளர்த்ததால் மற்றவளும் தனி ஒருத்தி.
‘மடந்தாழும் நெஞ்சத்து கஞ்சனார் வஞ்சம் கடந்தானை’ என்று ஆய்ச்சியர் குரவையில் சொல்வதைத்தான் ஆண்டாளும் சொல்கிறார். கம்சன் அடியார்களின் வயிற்றில் நெருப்பை வைத்தவன். கண்ணனை அவன் என்ன செய்துவிடுவான என்ற நெருப்பைக் கட்டிக் கொண்டு ஆயர்பாடியில் அனைவரும் இருந்தார்கள். ஆனால் அவன் மாறாக கம்சன் வயிற்றில் நெருப்பாக மாறினான். கெடுவான் கேடு நினைப்பான் என்பது பழமொழி அல்ல. யார் அவ்வாறு மாறியவன்? நெடுமால்! விசுவ ரூபம் எடுத்தவன். உலகை அளந்தவன்.
உன்னையே யாசிக்கிறோம் (அருத்தித்து வந்தோம்) என்கிறார்கள் சிறுமிகள். எங்களுக்கு சினிமா காட்டாதே என்கிறார்கள் அவர்கள். ‘எங்களுக்கு பிறந்து காட்டவும் வேண்டா, வளர்ந்து காட்டவும் வேண்டா, கொன்று காட்டவும் வேண்டா, உன்னைக் காட்டவமையும், உன் பக்கலிலே ஒன்று வேண்டி வந்தேமல்லோம். உன்னை வேண்டி வந்தோம்’ என்று ஆறாயிரப்படி சொல்கிறது. இதையே நம்மாழ்வாரும் ‘என்னையாக்கி கொண்டனெக்க தன்னைத் தந்த’ என்று சொல்கிறார்.
நீ பெருஞ்செல்வன். திருமகளுக்குத் தகுதியான செல்வன். ஸ்ரீயப்பதியாக இருப்பதால்தான், திருமகள் கணவனான இருப்பதால்தான் நீ செல்வன் என்று அறியப்படுகிறாய் என்றும் பொருள் கொள்ளலாம். அதிகாலையில் குளிரில் சிறுமிகளான நாங்கள் வந்தோம். உன் அருள் கிடைத்தால் எங்கள் வருத்தம் தீரும். காலைக் குளிர் என்பது ஒன்றுமே இல்லை. எல்லா வருத்தங்களையும் தீர்க்க வல்லது உனக்குத் தொண்டு செய்வது.
January 7, 2022
அன்றிவ் வுலகம் அளந்தாய்!
தமிழருக்கும் கண்ணனுக்கும் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் தொடர்பு இருக்கிறது.
உதாரணமாக ‘வண் புனல் தொழுநை வார் மணல் அகன்துறை/ அண்டர் மகளிர் தண் கழை உடீஇயர்/ மரம் செல மிதித்த மாஅல் போல’ என்று அகநானூறு பேசுகிறது. யமுனை (தொழுனை)க் கரையில் மரத்தழைகளை ஆய்ச்சியர் கட்டிக் கொள்ள கிளையை வளைத்து கண்ணன் (மாஅல்) கொடுத்தான் என்கிறது. இதே போல, ‘மேவார் விடுத்தந்த கூந்தற் குதிரையை/ வாய் பகுத்து இட்டு புடைத்த ஞான்று இன்னன்கொல்/ மாயோன் என்று; உட்கிற்று என்நெஞ்சு’ என்று கலித்தொகை கம்சன் அனுப்பிய குதிரை வடிவமான கேசி அசுரனைக் கொன்றதைக் குறிக்கிறது. ‘மல்லர் மறம் சாய்த்த மால் போல’ என்றும் குறிப்பிடுகிறது.
சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவை எம். எஸ் குரலில் நமக்குப் பரிச்சயமானது. அதுவும் ‘மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்/ தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து/ சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்’ என்று உலகளந்த கதையையும் இலங்கையை அழித்த கதையையும் பேசுகிறது. இதே போன்று ‘கன்று குணிலா கனி உதிர்த்த மாயவன்’ என்று வத்சாசுரனை அழித்த கதையைக் கூறுகிறது. மணிமேகலையும் ‘மாமணி வண்ணனும் தம்முனும் பிஞ்ஞையும்
ஆடிய குரவை’ என்று கண்ணன் பலராமனுடனும் நப்பின்னையுடனும் ஆடிய குரவையைப் பேசுகிறது. ஆண்டாள் இந்தப் பழந்தமிழ் மரபில் வந்தவர்.
இனி பாடல்.
அன்றிவ் வுலகம் அளந்தாய் அடிபோற்றி !
சென்றங்கு தென்னிலங்கை செற்றாய் திறல்போற்றி !
பொன்றச் சகடமுதைத்தாய் புகழ் போற்றி !
கன்று குணிலாவெறிந்தாய் கழல் போற்றி !
குன்று குடையாவெடுத்தாய் குணம் போற்றி !
வென்று பகைகெடுக்கும் நின்கையில் வேல் போற்றி !
என்றென்றும் சேவகமே யேத்திப் பறைகொள்வான்
இன்றுயாம் வந்தோம் இரங்கேலோ ரெம்பாவாய்!
கண்ணன் சிம்மாசனத்தை நோக்கிச் செல்லும் போது அவன் வடிவழகைப் பார்த்து சிறுமிகள் அவனைப் போற்றும் பாடல் இது.
அன்று இரண்டடியால் உலகை அளந்தாய். இன்று எங்களுக்காக பல அடிகள் எடுத்து வைத்து நடக்கிறாய். ‘பிராட்டிமார் பூத்தொடுமாபோலே கூசிப் பிடிக்கும் திருவடிகளைக் கொண்டு காடுமோடையையும் அகப்பட என்கை’ என்று மூவாயிரப்படி சொல்கிறது. அதாவது பூப்போன்று பிராட்டியர் அணுகும் கால்களதாம் உலகை அளக்கும் வலிமை வாய்ந்த கால்கள். இதைத்தான் சிலப்பதிகாரமும் மூவுலகும் ஈரடியாய் தாவிய அடிகள்தாம் சிவக்க சிவக்க காட்டிற்கு ராமாவதாரத்தில் நடந்தன என்று சொல்கிறது. ஆண்டாளின் தந்தை பெரியாழ்வார் உன் செவ்வடி செவ்வித் திருக்காப்பு என்று பாடியது போல சிறுமியர் அவன் அடி போற்றுகிறார்கள்.
தென் இலங்கை செற்றாய் என்று பாடுவதை வியாக்கியானம் இவ்வாறு விளக்குகிறது. ‘அழகுக்கு இலக்காகாதவரை அம்பிற்கு இலக்காக்கினபடி’. எல்லோரும் எல்லாமும் அவனுக்கு இலக்குதான். இன்றில்லையெனில் நாளைக்கு.
பொன்றச் சகடம் உதைத்தாய் – அவன் புகழ் என்ன? குழந்தையாக இருக்கும் போதே யார் உதவியும் இல்லாமல் சகடாசுரனை காலால் உதைத்து அழித்தாய். இராமனுக்கு கையில் வில்லால் ஏற்பட்ட தழும்பு என்றால் கண்ணனுக்கு காலில் தழும்பு. இராமனுக்கு வீரத் தழும்பு அவன் பெரியவனான பின்புதான் ஏற்பட்டது. கண்ணனின் தழும்பு அவன் பால்மணம் மாறாத குழந்தையாய் இருக்கும் போதே ஏற்பட்டு விட்டது. அதுதான் அவன் புகழ்.
கன்று குணிலா எறிந்தாய் – விளா மரமாக நின்ற அசுரனை கன்றாக வந்த அசுரனை வைத்து அழித்த செயல். எதிரியை எதிரியால் அழித்தல்.
குன்று குடையாய் எடுத்தாய் – ஆயர், ஆய்ச்சியர், கால்நடைகளை காப்பாற்ற ஏழு நாட்கள் கோவர்த்தன மலையைக் குடையாய்ப் பிடித்து நின்ற செய்கை. ஏன் அவன் குணத்தைப் போற்றுகிறார்கள்? இந்திரனுக்கு படைத்த உணவை தான் உண்ட விளையாட்டுக் குணத்தால் விளைந்தது பேய் மழை. ஆனால் இவனும் கோபப்பட்டிருந்தால் ஒரு நொடியில் இந்திரன் தலையை அறுத்திருக்க முடியும். ஆனால் ‘அவன் பசியினால் செய்த செயல்’ என்று நினைத்து அவனை மன்னித்து பேரருள் காட்டிய குணம்.
பகை கெடுக்கும் வேல் – ராமனுக்கு வில் போல ஆயர்களுக்கு வேல். நந்தகோபனை ஆண்டாள் கூர்வேல் கொடுந்தொழிலன் என்று முதற்பாட்டிலேயே குறிப்ப்பிடுகிறார். ‘வேலைப் பிடித்தென்னைமார்கள்’ என்று நாச்சியார் திருமொழியும் சொல்கிறது. என் தந்தை ‘நின்று பகை கெடுக்கும் நின் கையில் வேல் போற்றி’ என்று சொல்வது முருகப் பெருமானாகவும் அவன்தான் உருவெடுத்திருக்கிறான் என்பதைக் குறியிடுகிறது’ என்பார். பாரதி ‘சுற்றி நில்லாதே போ, பகையே துள்ளி வருகுது வேல்’ என்று சொன்னது ஆண்டாளின் வேலை நினைத்துத்தான் என்றும் சொல்வார்.
அன்று அடியார்களுக்காக உலகை அளந்தாய். இன்று நாங்கள் அந்த அடிகளுக்குத் தொண்டு செய்து பறை பெற வந்திருக்கிறோம் என்கிறார்கள். எப்படிப்பட்ட இன்று? நீ உறங்க, நாங்கள உறங்காத இன்று. ‘பெருமிடுக்கான விருத்தைகளெல்லாம் ( மூதாட்டிகள்) கிடந்துறங்க குளிர் பொறாத பாலைகளான (சிறுமிகளான) நாங்கள் உன்னைத் தேடி வந்த’ இன்று. இன்றாவது இரங்கு என்கிறார்கள். நிச்சயம் இரங்குவான் என்பது அவர்களுக்குத் தெரியும்.
‘அவனுக்கு என் வருகிறதோ என்று எண்ணி மங்களாசாசனம் ( ஆண்டாளின் தந்தை பெரியாழ்வாரைப் போல) பண்ணுகை இவர்களுக்கு ஸ்வரூபம். இத்தலைக்கு இரங்குகை அவனுக்கு ஸ்வரூபம் ‘ என்கிறது ஆறாயிரப்படி.
January 6, 2022
மாரிமலை முழைஞ்சில்!
தமிழ் இலக்கியப் படைப்பாளிகளை புலியை விட சிங்கம்தான் அதிகம் கவர்ந்திருக்கிறது. ஆண்டாள் விதிவிலக்கல்ல. அவள் இவ்வொப்பற்ற பாடலில் சிங்கத்திற்காக நாலரை அடிகளை ஒதுக்கியிருக்கிறார்.
ஆண்டாள் சிங்கத்தைப் பார்த்திருக்க முடியுமா?
அவள் வாழ்ந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி சமீபத்தில் மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அடர்ந்த காடுகள் இருந்த/இருக்கின்ற மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகளில் சிங்கம் இருந்திருக்க வாய்ப்பில்லை. மேலும் புலிகளும் சிங்கங்களும் ஒரே பரப்பில் இருக்கவே முடியாது என்றும் கூறி விடலாம். சிங்கஙகளுக்கு புல்வெளிகள், ஒரு சில மரங்களே உள்ள சமவெளிகள் தேவை. புலிகள் எங்கும் சமாளிக்கும் திறன் வாய்ந்தவை என்று வல்லுனர்கள் சொல்கிறார்கள். ரஜினிகாந்த் சிங்கம் சிங்கிளாகத்தான் வரும் என்று சொன்னாலும், அது பெரும்பாலும் குழுவாகத்தான் வரும். வேட்டையாடும். புலிதான் தனிமையில் வேட்டையாடும். தனியாகத்தான் அலையும்.
2013ல் வால்மீக் தாபர், ரொமிலா தாபர் மற்றும் யூசப் அன்சாரி The exotic Aliens என்ற தலைப்பில் ஒரு புத்தகம் எழுதினார்கள். அதில் சிங்கமும் சீட்டாவும் இந்தியாவைச் சேர்ந்ததே அல்ல. அலெக்சாண்டர் வருவதற்கு சிறிது முன்னால் அவை மன்னர்களின் வளர்ப்புப் பிராணிகளாக அறிமுகப்படுத்தப் பட்டன என்று சொல்லியிருந்தார்கள்! நாம் அந்த விவாதத்திற்குள் போக வேண்டாம். ஆனால் ஆண்டாள் சிங்கத்தை அது இயற்கையாக வாழும் இடத்தில் பார்த்திருக்கும் வாய்ப்பு மிகவும் குறைவு. சிங்கத்தினால் வேட்டையாடாமல் பல நாட்கள் வாழ முடியாது. எனவே மழைகாலத்தில் அது தூங்கும் என்று சொல்வதும் அறிவியலுக்குப் பொருந்தாது என்றுதான் சொல்ல வேண்டும். Lions do not hibernate.
இனி பாடல்!
மாரிமலை முழைஞ்சில் மன்னிக் கிடந்துறங்கும்
சீரிய சிங்கம் அறிவுற்றுத் தீவிழித்து
வேரிமயிர் பொங்க வெப்பாடும் பேர்ந்துதறி
மூரி நிமிர்ந்து முழங்கிப் புறப்பட்டுப்
போதருமாப் போலே நீ பூவைப்பூவண்ணா! உன்
கோயில் நின்றிங்ஙனே போந்தருளிக் கோப்புடைய
சீரிய சிங்கா சனத்திருந்து யாம்வந்த
காரியமா ராய்ந்தருளேலோ ரெம்பாவாய்!
மலைக்குகையில் பெண் சிங்கத்துடன் ஒட்டி உறங்கிக் கொண்டிருந்த சிங்கம் உணர்வு பெற்று கண்களில் நெருப்புப் பொங்க விழிக்கிறது. பிடரி மயிர்கள் சிலிர்த்துக் கொண்டு எழுகின்றன. நாற்புறங்களுக்கும் சென்று உடலை உதறிக் கொண்டு, சோம்பல் முறித்துக் கொண்டு, நிமிர்ந்து, கர்ஜனை புரிந்து குகையிலிருந்து வெளியே வருகிறது. ‘வர்ஷா காலம் ராஜாக்கள் படைவீடு விட்டுப் புறப்படாதாப்போலே ஸிம்ஹமும் வர்ஷாகாலம் முழைஞ்சு விட்டுப் புறப்படாது,’ என்று வியாக்கியானம் சொல்கிறது.
கண்ணனை ‘யசோதை இளஞ்சிங்கம்’ என்று ஆண்டாள் முன்னமே குறிப்பிட்டிருக்கிறார். இங்கு அவன் மிருகராஜன் மட்டுமல்ல. அரசர்களுக்கெல்லாம் அரசன். அவன் கட்டிலுக்குக் கீழ் உலகின் அரசர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்று ஆண்டாள் முந்தையப் பாட்டில் சொல்லியிருக்கிறார். உரையாசிரியர்கள் கண்ணனுடைய நடையை காளை போன்ற, யானை போன்ற, புலி போன்ற, சிங்கம் போன்ற “சதுர்க்கதி” (நான்கு விதமான) நடை என்று சொல்கிறார்கள்.
‘நான் எவ்வாறு புறப்பட வேண்டும்? சீதையின் கணவனான ராகவ சிம்மம் போலவா அல்லது பிரகலாதனுக்கு அருள் புரிந்த நரசிம்மம் போலவா’ என்று கண்ணன் கேட்டானாம். அதற்குப் பதிலாக இவர்கள் ‘உன்னுடைய கம்பீரத்தைக் குறிக்கும் விதமாக உன்னைச் சிங்கம் என்று அழைத்தோம். எங்களுக்கு நீ பூப்போல மென்மையானவன். உன் வண்ணம் பளபளக்கும் கருநீலக் காயாம் பூ (பூவைப்பூ) போன்றதல்லவா, சிங்கத்தின் அழுக்கான பழுப்பிற்கும் உனக்கும் என்ன தொடர்பு?’ என்கிறார்களாம்.
‘கடற்கரையில் வார்த்தை’ என்று ராமன் சொன்னதையும் ‘தேர்தட்டில் வார்த்தை என்று கிருஷ்ணன் சொன்னதையும் சொல்வார்கள். இங்கு சிம்மாசன வார்த்தை. நீ படுக்கையில் என்ன வேண்டுமானாலும் சொல்வாய். அவற்றையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக் கொள்ள முடியாது. உன்னை நம்ப முடியாது. நீ அரசன் போல உன் சிம்மாசனத்தில் அமர்ந்து கொடுக்கும் வார்த்தை உலகறிந்ததாக இருக்கும். உன்னாலேயே மாற்ற முடியாது’ என்று சிறுமியர்கள் சொல்கிறார்கள். அது கோப்புடைய சீரிய சிம்மாசனம். பரமபதத்தில் உன் இருக்கைக்கு ஒப்பானது. பரமபத சிம்மாசனம் எட்டு கால்கள் கொண்டதாக விவரிக்கப்படுகிறது. தர்மம், அதர்மம், ஞானம், அஞ்ஞானம், வைராக்கியம், வைராக்கியமின்மை, பொருள், பொருளின்மை என்ற எட்டுகால்களைக் கொண்ட தர்மாதிபீடம்.
அங்கு உட்கார்ந்து நாங்கள் எதற்காக வந்திருக்கிறோம் என்பதை ஆராய்ந்து எங்களுக்கு அருள்தர வேண்டும் என்கிறார்கள். கண்ணன் ஏன் ஆராய வேண்டும்? அருள்தருவான் என்பது அவர்களுக்குத் தெரியாதா? சொன்ன சொல்லைக் காப்பாற்ற மாட்டானோ என்ற அடிப்படையற்ற அச்சம்தான் அவர்களை இவ்வாறு கேட்க வைக்கிறது. சிறுமியர்தானே.
இப்பாடலை நாம் தமிழ் மொழியின் வடிவாகவும் உருவகிக்கலாம். தமிழ் மொழியின் அழகையும் மிடுக்கையும் இக்கவிதை காட்டுவது போல மிகச் சில கவிதைகளே காட்டியிருக்கின்றன.
இது தமிழ்ச் சிங்கம்.
January 5, 2022
அங்கண்மா ஞாலத்து!
உலகம் அழகியது. பெரியது. அது தரும் இன்பங்கள் அளவிறந்தாக இருக்கலாம். ஆனால் தனியாக ஒருவர் எவ்வளவு அனுபவித்தாலும், எவ்வளவுதான் தனக்காகச் சேர்ந்தாலும் கடைசியில் தன்னை அறிவதுதான் வாழ்க்கையின் குறிக்கோளை அடைவது. ஆண்டாளின் ‘அங்கண்மா ஞாலத்து’ தன்னை அறிந்து அகங்காரத்தை அழிப்பது பற்றிய பாடல் என்பார் என் தந்தை.
தன்னை எப்படி அறிவது? நம்மாழ்வார் சொல்கிறார்: யானே என்னை அறியகிலாதே,/ யானே என் தனதே என்று இருந்தேன்,/யானே நீ என் உடைமையும் நீயே,/ வானே ஏத்தும் எம் வானவர் ஏறே.
யானே நீ என்றால் அஹம் ப்ரம்மாஸ்மி என்று பொருள் கொள்ளக் கூடாது என்பார். ‘ஒரு பாட்டை உருவி எடுத்துப் படிப்பவர்கள் மட்டுமே அவ்வாறு பொருள் கொள்ளுவார்கள். யானே நீ என்றால் நான் உனக்கு முழு அடிமை. என்னுடையது எல்லாம் உன்னுடையது. நீ என்னுள் இருக்கிறாய். அதனால் நீ எனக்கு உடைமை என்று பொருள் கொள்ள வேண்டும்.’
‘இறையடி அடைவது மட்டும்தான் தன்னையறிதலா? மக்களுக்குத் தொண்டு செய்வது தன்னை அறிதல் இல்லையா? காந்தி தன்னையறிந்தவர் இல்லையா?’
‘நிச்சயம்’, என்பார் என் தந்தை. ‘கடல் வண்ணன் பூதங்கள்’ அனைத்தும் ஒருநாள் தங்களை அறிவார்கள். அது அவனுடைய விருப்பம். ‘என்னைத் தன்னாக்கி என்னால் தன்னை இன் கவி பாடிய ஈசன்’ என்று நம்மாழ்வார் சொன்னபடி அவருள் இருந்து அவரையே தன்னை பாட வைத்தவன் இறைவன். அவனே காந்தியுள்ளும் இருந்து அவரை மக்களுக்காகத் தொண்டு செய்வதே இறைவன் தொண்டு என்று சொல்ல வைத்தான்.’
‘கொலை செய்யுங்கள் என்று சொல்பவன் உள்ளும் அவன் இருக்கிறானா?’ என்று கேட்டால் நிச்சயம் இருக்கிறான் என்று சொல்வார் என்பது எனக்குத் தெரியும். எனவே அக் கேள்வியைக் கேட்கவில்லை.
இனி பாடல்:
அங்கண் மா ஞாலத்து அரசர் அபிமான
பங்கமாய் வந்து நின் பள்ளிக்கட்டிற் கீழே
சங்கம் இருப்பார் போல் வந்து தலைப்பெய்தோம்
கிங்கிணி வாய்ச் செய்த தாமரைப் பூப் போலே
செங்கண் சிறுச் சிறிதே எம்மேல் விழியாவோ?
திங்களும் ஆதித்தியனும் எழுந்தாற் போல்
அங்கண் இரண்டும் கொண்டு எங்கள் மேல் நோக்குதியேல்,
எங்கள் மேல் சாபம் இழிந்து — ஏலோர் எம்பாவாய்!
சென்ற பாடலில் மாற்றான் வலிமையைத் தொலைத்தான். இப்பாடலில் அவர்களை தன் பள்ளிக் கட்டிற் கீழ் வரவழைக்கிறான். ‘தேவரீர் அங்கீகாரம் பெற்றிலேனாகிலும் விட்டுப் போந்தவிடத்திற்கு ஆகாதபடி வந்தேன் என்று விபீஷணன் விண்ணப்பம் செய்தாற்போலே, பிறந்தகத்திற்கு ஆகாதபடி வந்தோம்’ என்று அரசர்கள் சொல்கிறார்களாம். இன்னொரு விதமாகப் பார்த்தால் நாங்கள் ஆட்சி செய்த இடங்களெல்லாம் உன்னுடையது. திரும்பச் சென்றாலும் பரதன் ஆண்டது போலத்தான் நாங்கள் ஆள்வோம் என்று சிலரும், லட்சுமணனைப் போல உன்னைப் பிரியாமல் இருப்போம் என்று சிலரும் சொல்கிறார்களாம். அகந்தை அழிவது பல்வேறு வழிகளில் நடக்கலாம்.
இங்கு இன்னொன்றும் சொல்லியாக வேண்டும். பெண்மை என்றால் அடிபணிதல், ஆணுக்கு அணுக்கமாக இருத்தல் சுதந்திரம் இல்லாமல் இருத்தல் என்ற பொருள்களிலேயே வியாக்கியானங்கள் பேசுகின்றன. சுவாமித்துவம் இருக்கும் இடத்தில் சுதந்திரம் கிடையாது. அது பெண்ணுக்கு தாடி முளைப்பது போல அல்லது ஆணுக்கு மார்பகங்கள் எழுவது போல என்று ஆறாயிரப்படி சொல்கிறது.
பள்ளிக்கட்டிற் கீழ் என்பதை அவன் படுக்கை அருகே என்றும் கொள்ளலாம். அல்லது அவனுடைய அரசு கட்டிலில் கீழ் அல்லது சிங்காசனத்தின் கீழ் என்றும் கொள்ளலாம்.
‘சங்கம் இருப்பார் போல்’ என்றால் கூட்டம் கூட்டமாக வருவது. ‘தலைப்பெய்தோம்’ என்றால் உனக்கு மிக அருகில் வந்து விட்டோம் என்று பொருள். அருகில் இருப்பதால் தான் அவனுடைய கண்களை மிகவும் கூர்ந்து பார்க்க முடிகிறது.
கிண்கிணி என்றால் அரைச் சதங்கை. அது பாதி மூடியும் பாதி திறந்தும் இருக்கும். பாதி மலர்ந்தும் மலராமலும் இருக்கின்ற தாமரை அதை ஒத்திருக்கிறது. இறைவனுடைய கண்கள் தாமரையை ஒத்திருக்கின்றன். கண்களை முழுவதும் திறந்து விடாதே என்கிறார்கள். சிறிது சிறதாகத் திறந்தால் போதும். முழுப் பார்வை தாங்க முடியாது. குளப்படியில் கடலை மடுக்கவொண்ணதிறே என்று ஆறாயிரப்படி சொல்கிறது. அதாவது குளத்திற்குள் கடலைச் செலுத்த முடியாதாம். ஆனால் உன் பார்வை எங்களுக்கு நிச்சயம் தேவை. அது ‘கோடையோடின பயிரில் ஒரு பாட்டம் மழை வர்ஷியாதோ (பொழியாதோ) என்னுமாப் போலே’.
இரு விழிகள் சூரிய சந்திரர்கள். சுடர் விடும் சூரியன் அவன் பெருமையைக் குறிக்கும். சந்திரனின் தண்மை அவன் கருணையைக் குறிக்கும். இன்னொரு விதமாகச் சொல்லப் போனால் இரணியன் மீது சீற்றம் கொண்டு ஒரு கண் நோக்கினால், பிரகலாதன் மீது மிகுந்த அன்போடு இன்னொரு கண் நோக்கியது போல இறைவனின் கண்கள் இருக்கின்றன. ஆனாலும் இறைவன் அருளுக்கு சந்திரனின் தண்மை ஒப்பல்ல, அவன் சீற்றத்திற்கு சூரியனின் வெப்பம் ஒப்பல்ல என்று கூறுவாரும் இருக்கிறார்கள்.
எங்கள் மீது சாபம் இழிந்து என்பதற்கு பிரிவுத் துயர் கழிந்து போகும்படி என்று பொருள் கொள்கிறார்கள். ஆனால் அது அவ்வளவு எளிதாகக் கழிந்து போய் விடுமா? மற்றவர்க்கு உன் கண் பார்வை பட்டாலே போதும். ஆனால் எங்களுக்கு அது போதாது என்று சிறுமியர்கள் சொல்கிறார்கள். ஆறாயிரப்படி நாச்சியார் திருமொழியை மேற்கோள் காட்டுகிறது: வேர்த்து நின்று விளையாடக் காண வேண்டும். பொடித்தான் கொண்டு பூச வேண்டும். திருப்பாவையில் சொல்லியிருக்கிறபடியே இப்போதே எம்மை நீராட்ட வேண்டும்.
January 4, 2022
ஏற்ற கலங்கள்!
ஆண்டாளை ஏன் அப்படியே படிக்கக் கூடாது? தெரியாத வார்த்தைகளை அகராதியில் தேடிக் கொண்டு அவள் என்ன சொல்கிறாள் எனபதை அவளுடைய வார்த்தைகளிலிருந்தே ஏன் புரிந்து கொள்ள முடியாது? நிச்சயம் படிக்கலாம். புரிந்து கொள்ளலாம். இதே கேள்வியை என் தந்தையிடம் நான் கேட்டேன். அவர் ஆச்சாரியன் இல்லாமல் ஆண்டாளைப் படிப்பது அவளுக்குச் செய்யும் அவமானம் என்று சொன்னார். ‘ஆனால் நான் சொல்வது வைஷ்ணவர்களுக்கு. உன்னைப் போலக் கம்யூனிஸ்டு கழுதைகளுக்கு அல்ல’ என்றார்.
மேலும் சொன்னார்: ‘கம்பன் சீதைக்கு தோழியர் ஒப்பனை செய்வதை ‘அமிழ்தினைச் சுவை செய்தென்ன, அழகினுக்கு அழகு செய்தார்’ என்று சொல்கிறான். ஆனால் ஒப்பனை செய்யாமல் விட்டு விடவில்லை. அதே போல அழகிற்கு அழகு செய்வதுதான் ஆண்டாள் பாட்டிற்கு விரிவாக உரை செய்வது. இன்னொன்றும் சொல்கிறேன். வீபிஷணனை விட பெரிய பக்தன் இருந்து விட முடியுமா? அவனே அரக்கர்கள் அளவற்ற பெரும்தவம் செய்தவர்கள் என்று பொறாமை கொள்கிறான்.‘பெருந்தவம் இயற்றினோர்க்கும் பேர்வு அரும் பிறவி நோய்க்கு/மருந்து என நின்றான் தானே வடிக்கணை தொடுத்துக் கொல்வான்/இருந்தனன்; நின்றது, என்னாம் இயம்புவது? எல்லை தீர்ந்த/ அருந்தவம் உடையர் அம்மா, அரக்கர்! என்று அகத்துள் கொண்டான்.’ இது கம்பன் வாக்கு. ஆண்டாளும் இதே போன்றுதான் ஏற்றகலங்கள் பாடலில் சொல்கிறார். “ஆற்றாது வந்து அடிபணியும்’ மாற்றாருக்கு அவன் புரியும் அருளை எங்களுக்குக் கொடு. என்று ஆயர்பாடிச் சிறுமியர் கேட்பது, விபீஷணன் எண்ணுவது போன்றதுதான். அது அருந்தவம் உடையருக்குத் தரும் அருள். இது போன்ற விளக்கம் நீ லெக்சிகனைத் திருப்பிக் கொண்டிருந்தால் கிடைக்காது.’
இவ்விளக்கம் என் தந்தை சொன்னது. உரையாசிரியர்கள் சொன்னதல்ல.
என் தந்தைக்கு மிகப் பெரிய வருத்தம் வைணவ உரையாசிரியர்கள் கம்பனைக் கை விட்டதுதான். ( ‘ஈக்கள் வண்டொடு மொய்ப்ப’ பாடலை பெரியவாச்சான் பிள்ளை மேற்கோள் காட்டுகிறார். இதைத் தவிர வேறு மேற்கோள்கள் ஏதும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை) ‘அதனால் கம்பனுக்குக் குறையில்லை. இவர்கள் உரைகளுக்குத்தான் அது பெரிய குறை’ என்பார் அவர். ‘திருக்குறள், சிலப்பதிகாரம் போன்றவையாவது வைணவ நூல்கள் அல்ல என்று சொல்லலாம். ஆனால் கம்பன் ஆழ்வார்களோடு ஒப்பிடக் கூடிய வைஷ்ணவன். அவனை ஏன் ஒதுக்கினார்கள் என்று தெரியவில்லை.’
இனி பாடல்.
ஏற்ற கலங்கள் எதிர்பொங்க மீதளிப்ப
மாற்றாதே பால்சொரியும் வள்ளல்பெரும் பசுக்கள்
ஆற்றப் படைத்தான் மகனே, அறிவுறாய்
ஊற்றமுடையாய் பெரியாய் உலகினில்
தோற்றமாய் நின்ற சுடரே துயில்எழாய்
மாற்றார் உனக்கு வலிதொலைந்து உன்வாசற்கண்
ஆற்றாது வந்துஉன் அடிபணியுமா போலே
போற்றியாம் வந்தோம் புகழ்ந்தேலோர் எம்பாவாய்!
இப்பாடலில் நப்பின்னைப் பிராட்டியும் சிறுமிகளோடு சேர்ந்து இறைவனைப் புகழ்கிறார் என்று உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். அவர் பக்தைகளிடமிருந்து விலகியிருப்பது என்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியாது.
ஏற்ற கலங்கள் – இதற்கு எழுதப்பட்டிருக்கும் உரை அற்புதமானது. கலமிடுவாரின் குறையிருக்கலமே தவிர பசுக்கள் எந்தக் குறையுமின்றி பாலளிக்கும். ‘சிறிய கலம் (பாத்திரம்) பெரிய கலம் என்னும் வாசியின்றி கடலை மடுத்தாலும் நிறைக்கத் தட்டில்லை’. கடலளவு பாத்திரம் கொண்டு வந்தாலும் அதை நிறைத்து விடுமாம். இதே போன்று மடிக்காம்பைத் தொட்டாலே கலம் வழியும்படி நிறையும் பாலை அளிக்கும் என்பதைத்தான் எதிர் பொங்கி மீதளிப்ப என்ற வரிகள் காட்டுகின்றன. ‘இட்ட கலங்கள் நிரம்பின இனிக் கலமிடுவார் இல்லை’ என்று பால் சொரிவதை நிறுத்தாதை ‘மாற்றாதே பால் சொரியும்’ என்ற சொற்கள் குறிப்பிடுகின்றன. பதினாறாம், பதினேழாம் மற்றும் பதினெட்டாம் பாடல்களின் நந்தகோபனுடைய தலைமையும் அறநெறியும் வீரமும் முறையே புகழப்பட்டன. இங்கு அவனுடைய கறவைச் செல்வம் புகழப்படுகிறது.
அறிஞர்களும் அறிய முடியாதவன் நீ. ஆனால் எங்களுக்காக நீ கண் திறப்பாய் என்பது எங்களுக்குக் கட்டாயம் தெரியும் என்று சிறுமிகள் அறிவுறாய் என்ற சொல்லின் மூலம் நமக்கு அறிவுறுத்துகிறார்கள்.
ஊற்றமுடையாய் – உன் தந்தையின் பசுக்களைப் போல வற்றாத கருணைப் பெருக்குடைய ஊற்று நீ என்று பொருள் கொள்ளலாம் என்று நான் நினைக்கிறேன். உரையாசிரியர்கள் அடியார்களை நோக்குகின்ற திண்மையுடையவனே, வேதங்களின் பொருளாயிருக்கிற திண்மையுடையவனே என்று பொருள் கொள்கிறார்கள். அவன் வேதங்களால் கூட அளவிட முடியாத பெரியவன். அவை ஏடுகள். ஆனால் நீ எங்கள் முன்னால் தோற்றமாய் நிற்கிறாய். மனிதர்கள் பிறவி எடுத்தால் தேய்ந்து மறைந்து போய் விடுவார்கள். ஆனால் நீ பிறவிகள் எடுக்க எடுக்க சாணையில் இட்ட மாணிக்கம் போலச் சுடர் விடுகிறாய்.
‘எதிரிகள் உன் அம்புகளால் துரத்தப்பட்டு -சீதையைத் துன்புறுத்திய காகாசுரனைப் போல – வேறு வழியில்லாமல் உன்னிடம் வந்தார்கள். நாங்கள் உன்னுடைய எல்லையில்லா நற்குணங்களால் கவரப்பட்டு உன்னிடம் வந்தோம். இனி உன் செயல்’ என்கிறார்கள் சிறுமிகள்.
ஆறாயிரப்படி சொல்கிறது: பெரியாழ்வாரைப் போல வந்தோம். (உன்னைப் போற்றி, உனக்கே பல்லாண்டு பாடி). அல்லாதாரைப் போல வந்தோம். நீ பெறிலும் பெறு. இழக்கிலும் இழ.
அதாவது எங்களைப் பெறாவிட்டால் இழப்பு உன்னுடையதுதான்.
இதில் அல்லாதாரைப் போல என்பது மாற்றாரைப் போல. எதிரிகளைப் போல.
விபீஷணன் கண்டு பொறாமைப் படும் அசுரர்களைப் போல.
January 3, 2022
முப்பத்து மூவர்!
நம் வாழ்க்கையில் தினமும் புழங்கும் கண்ணாடி, நம்மை நாமே பார்த்து மகிழ்ந்து கொள்ளும் (அல்லது கவலைப்படும்) கண்ணாடி மனித வாழ்வில் எப்போது வந்தது? மனிதன் தன்னுடைய உருவத்தைத் தண்ணீரில் பார்த்துக் கொள்வது லட்சக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னலேயே நிகழ்ந்திருக்க வேண்டும். உலோகங்களை அவன் பயன்படுத்த துவங்கிய காலத்திலேயே நன்றாக சுத்தம் செய்யப் பட்ட உலோகங்களில் அவன் தன்னைப் பார்த்துக் கொண்டிருக்கலாம். உலோகக் கண்ணாடி 6000 ஆண்டுகளுக்கு முன்னாலேயே துருக்கியில் இருந்தது என்று வல்லுனர்கள் சொல்கிறார்கள். நன்றாகப் பிரதிபலிக்கும் உலோகக் கலவைகள் 4000 ஆண்டுகளுக்கு முன்பேயே பயனில் இருந்திருக்கின்றன. கண்ணாடியின் ஒருபக்கம் உலோகக் கலவையைத் தடவி அதை பிரதிபலிக்க வைக்கும் முறை நமக்கு 1700 ஆண்டுகளாகத் தெரியும். ஆனால் எளிய மக்களும் பயன்படுத்தக் கூடிய கண்ணாடி கண்டுபிடிக்கப் பட்டது 1835ம் ஆண்டுதான். லைபிக் என்ற ஜெர்மனியின் வேதியல் அறிஞர் ஒரு பக்கம் சில்வர் நைட்ரேட் தடவிய கண்ணாடியை அறிமுகப்படுத்தினார். அதுதான் நாம் இன்று பயன்படுத்தும் கண்ணாடியின் முன்னோடி என்று சொல்லலாம். ஆண்டாளின் சிறுமியர் கேட்பது தட்டொளி. உலோகக் கண்ணாடி.
இனி பாடல்.
முப்பத்து மூவர் அமரர்க்கு முன்சென்று
கப்பம் தவிர்க்கும் கலியே, துயில்எழாய்
செப்பமுடையாய், திறலுடையாய் செற்றார்க்கு
வெப்பம் கொடுக்கும் விமலா, துயில்எழாய்
செப்பன்ன மென்முலைச் செவ்வாய்ச் சிறுமருங்குல்
நப்பினை நங்காய், திருவே, துயில்எழாய்
உக்கமும் தட்டொளியும் தந்துஉன் மணாளனை
இப்போதே எம்மை நீராட்டேலோர் எம்பாவாய்!
முப்பத்து மூவர் – மனிதர்களில் பிரிவு இருப்பது போல தேவர்களிலும் பிரிவுகள் இருக்கின்றன. எட்டு வசுக்கள், பதினொன்று ருத்திரர்கள், பன்னீரண்டு ஆதித்தியர்கள் வானுலக மருத்துவர்களான அசுவினி தேவர்கள் என்ற பிரிவுகள். ஒவ்வொருவருக்கும் ஒரு கோடி தேவர்கள் பின்னால் இருக்கிறார்கள். எனவேதான் தேவர்களின் எண்ணிக்கை 33 கோடி என்று சொல்லப்படுகிறது. ‘நீ யாருக்காக உதவுகிறாய்?’ என்று சிறுமியர் கேட்கிறார்கள். ‘அதுவும் துன்பம் வருமுன்னே நீ முன்னே சென்று அவர்களின் (கப்பம்)நடுக்கத்தைப் போக்குகிறாய். (அல்லது) அவர்கள் அசுரர்களிடம் அடிபணிவதைத் தவிர்க்கிறாய். இவர்களுக்கு உன்னுடைய உதவி எதற்குத் தேவை? இவர்கள் அழிக்க முடியாதவர்கள். அமுதத்தை உண்டவர்கள். நோய்களை அறியாதவர்கள். எங்களைப் பார். எங்களை விட நலிந்தவர்களைப் பார்க்க முடியுமா? நலிந்தவர்களுக்கு உதவுவதுதானே உன்னுடைய அடையாளம்? அதை நீ விட முடியுமா?’ என்று கேட்கிறார்கள்.
கலி என்றால் சர்வாதிகன் -மிகையாக உதவுபவன் – என்று உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். அண்ணங்கராச்சாரியர் ‘தவிர்க்க வல்ல வலிமையை உடையவன் என்று பொருள் சொல்கிறார்.
அவன் செப்பமுடையவன். எனக்கு இதன் பொருள் பரிபூர்ணமானவன் என்று தோன்றுகிறது. சுந்தர பரிபூரணன். அழகிய நம்பி. ஆனால் உரையாசிரியர்கள் இதை தன்னையே காத்துக் கொள்ளும் குணம் உடையவன் என்றும் ஆர்ச்சவ குணம் (பக்தர்களுக்கு ஒத்த குணம்) உடையவன் என்று பொருள் கொள்கிறார்கள். எதிரிகளுக்கு பயத்தீயின் சூட்டை அளிக்கும் விமலன் அவன். அழுக்கே இல்லாதவன். அவனை எழுப்புகிறார்கள் சிறுமியர்.
கூடவே பேரழகியான நப்பின்னையையும் துயில் எழுப்புகிறார்கள். சென்ற பாட்டில் அவளைத் தத்துவமன்று தகவு என்று கடிந்து கொண்டவர்கள் இவர்கள். ஆனால் அவளுக்கு இவர்கள் மீது சிறிதளவு கூடக் கோபம் இல்லை. இவர்களுக்காக கண்ணனிடம் பரிந்துரை செய்யும் சமயத்தை நோக்கிப் பள்ளிக் கொண்டிருக்கிறாளாம். எனக்கு மிகவும் பிடித்தது திருவே என்ற சொல்லுக்கு உரையாசிரியர்கள் சொல்லும் விளக்கம்தான். திரு என்பது சிறையிருந்த செல்வியான சீதாப் பிராட்டியைக் குறிக்கிறது என்று அவர்கள் சொல்கிறார்கள். உலக நாயகியான அவள் அடியார்களுக்காக சிறையிருக்கவில்லையா? நாங்கள் உன்னைச் சிறையிருக்கச் சொல்லவில்லை. ஒரு வார்த்தை அவனிடம் சொல் என்றுதான் வேண்டுகிறோம் என்கிறார்களாம் சிறுமிகள்.
உக்கமும் தட்டொளியும் – விசிறியும் கண்ணாடியும் பாவை நோன்பிற்குத் தேவையானவை. இறைவன் உருவத்திற்கு விசிறிகொண்டு வீசுவது போல கண்ணாடி காட்டுவது போல, பாவையின் பதுமைக்கும் சிறுமிகள் இவ்வாறு செய்வார்கள் போலும்.
இப்பாடலில் அவர்கள் கண்ணனையும் நீராட அழைக்கிறார்கள். தூயோமாய் வந்தோம் என்று திரும்பத் திரும்ப முந்தையப் பாடல்களில் சொல்கிறார்கள் என்பதும் அதிகாலையிலேயே நீராடி விட்டோம் என்றும் சொல்கிறார்கள் என்பதும் நமக்குத் தெரியும். இப்போது கண்ணனோடு திரும்ப நீராடுவார்களா? நிச்சயம் என்றுதான் சொல்ல வேண்டும். முந்தைய நீராடல்கள் உடலுக்கான நீராடல்கள். இது இறைவனின் கருணையில் திளைக்கும் உயிரின் நீராடல். அவர்கள் திளைக்கும் போது அவனும் சேர்ந்து திளைப்பான்.
January 2, 2022
குத்து விளக்கெரிய!
தமிழ் இலக்கிய மரபின்படி பெண்களின் பருவங்கள் இவ்வாறு வகைப்படுத்தப்படுகின்றன.
“ஐந்து முதல்ஏழ் ஆண்டும் பேதை; /எட்டு முதல்நான்கு ஆண்டும் பெதும்பை;/ ஆறிரண்டு ஒன்றே ஆகும் மங்கை; /பதினான்கு ஆதிபத் தொன்பான் காறும்/ எதிர்தரும் மடந்தை; மேல் ஆறும் அரிவை. /ஆறுதலை யிட்ட இருபதின் மேல்ஓர்/ ஆறும் தெரிவை; எண் ணைந்துபே ரிளம்பெண் என்று/ ஓரும் பருவத் தோர்க்குஉரைத் தனரே.” என்று இலக்கண விளக்கம் கூறுகிறது.
5-7 பேதை; 8-12 பெதும்பை; 13 மங்கை; 14-19 மடந்தை; 20-26 அரிவை; 27-32 தெரிவை; 33-40 பேரிளம் பெண். சிலப்பதிகாரம் கண்ணகிக்கு திருமணம் ஆகும் போது வயது பன்னீரண்டு (ஈகைவான் கொடியன்னாள் ஈராறாண் டகவையாள்) என்று சொல்கிறது. ஆண்டாள் திருவரங்கனைச் சேர்ந்தபோது அவருக்கு வயது 15 என்று முன்பே சொல்லியிருக்கிறேன். எனவே திருப்பாவையின் சிறுமியர் 13 வயதிற்கு உட்பட்டே இருக்க வேண்டும். நப்பின்னை திருமணம் ஆனவர் என்பதால் அவர் மடந்தைப் பருவத்தில் இருப்பவர் என்று ஊகம் செய்யலாம்.
இனி பாடல்.
குத்து விளக்கெரியக் கோட்டுக்கால் கட்டில் மேல்
மெத்தென்ற பஞ்ச சயனத்தின் மேலேறி
கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல்
வைத்துக் கிடந்த மலர்மார்பா! வாய் திறவாய்
மைத்தடங் கண்ணினாய்! நீயுன் மணாளனை
எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய்காண்
எத்தனை யேலும் பிரிவாற்ற கில்லாயால்
தத்துவமன்று தகவேலோர் எம்பாவாய்.
ஆயர் சிறுமியர் வீடுகளில் குத்து விளக்கெரியலாம். ஆனால் கோட்டுக்கால் (யானையின் தந்தத்தால் செய்யப்பட்ட கால்) கட்டில் இருந்திருக்க வாய்ப்பில்லை. மெத்தென்ற பஞ்சசயனமும் இருக்க வாய்ப்பில்லை. இங்கு நப்பின்னையின் படுக்கையைப் பார்த்ததும் அவர்களுக்குள்ளே எழும் வியப்பின் வெளிப்பாட்டையே இவ்வரிகள் உணர்த்துகின்றன என்று கொள்ளலாம். இன்னொரு கேள்வியும் நம்முள் எழுகிறது. நப்பின்னை கதவைத் திறந்த பிறகுதான் சிறுமிகள் கண்ணன் உறங்கும் கட்டிற்கு வந்திருக்க வேண்டும். அப்போது எப்படி கண்ணன் நப்பின்னையின் மார்பில் தலை வைத்துப் படுத்துக் கிடந்ததைப் பார்த்திருக்க முடியும்? ‘ அவர்கள் அறைக்குள் வந்ததும் கண்ணன் படுத்துக் கிடந்த நிலையையும் பூக்கள் சிதறிக் கிடப்பதையும் பார்த்து அவன் அப்படித்தான் உறங்கியிருப்பான் என்று யூகித்துப் பாடுகிறார்கள் என்று கொள்ளலாம். ‘கிடந்த’ என்பது நிகழ்காலத்தைக் குறிக்காது.
ஆனால் உரையாசிரியர்கள் கண்ணன் நப்பின்னை கதவைத் திறக்க முற்படும் போது திறக்க விடாமல் அவளை மல்லுக்கு இழுக்கிறான் என்கிறார்கள். ஏன் அவ்வாறு செய்கிறான்? நம்மைப் பற்றியவர்களை இவள் தன்னுடைய அடியார்களாகவே நினைப்பது போல இவளைப் பற்றியவர்களை நாம் நம் அடியார்களாகவே நினைப்போம், நாமே திறக்கலாம் என்று கண்ணன் கருதுகிறானாம். ஆனால் இருவருக்கு இடையே நடந்த இழுப்பில் இருவரும் படுக்கையில் விழ நப்பின்னையின் நெருக்கம் அவனை ஆய்ச்சியர் வந்த காரியத்தை மறக்கச் செய்து விட்டதாம். பிராட்டியாரும் கண்ணனின் அணைப்பை விட்டு விலக விரும்பவில்லையாம். அவளும் செய்ய வேண்டிய காரியத்தை மறந்து விட்டதால் ஆய்ச்சியர் நப்பின்னையை மீண்டும் உணர்த்தும் பாசுரம், அவளை உணர்த்துவதால் கண்ணனையும் உணர்த்தும் பாசுரம் என்றும் அவர்கள் சொல்கிறார்கள். இறைவனையும் பிராட்டியையும் சேர்ந்தே பார்க்க வேண்டும். தனித்தனியாகப் பார்ப்பவர்கள் தங்கையும் தமையனும் பட்டபாடு படுவர்கள் என்றும் சொல்கிறார்கள். அதாவது ராவணனும் சூர்ப்பனகையும் பட்டதுபோல.
விடிந்த பிறகு குத்து விளக்கு ஏன் எரிகிறது? கண்ணனை விளக்கொளியில் இரவெல்லாம் கண்ட மகிழ்ச்சியை துறக்க பிராட்டி விரும்பவில்லை. எனவே விடிந்தாலும் அறையை இருட்டாக்கிக் கண்ணனைப் பார்த்துக் கொண்டிருக்கிறாள். பஞ்சசயனம் என்றால் அழகு, குளிர்ச்சி, மென்மை, வாசனை, வெண்மை என்ற ஐந்து குணங்களைக் கொண்ட படுக்கை.
‘வாய் திறவாய்’ என்பதற்கு “அவன் ஊமத்தங்காய் தின்று கிடக்க (நப்பின்னை தந்த மயக்கத்தில் கிடக்க) இவர்கள் யாரை எழுப்புவது?’ என்று வியாக்கியனம் சொல்கிறது. மார்பை அவளுக்குக் கொடுத்தால் பேச்சை எங்களுக்குத் தந்தால் ஆகாதோ என்றும் சொல்கிறது.
‘எத்தனை போதும் துயிலெழ ஒட்டாய் காண்’ -அவன் படுக்கையை விட்டு எழுந்தால் அவன் அணைப்பைப் பெற முடியாது என்பதால்தானே நீ அவனை படுக்கையிலேயே இருத்தி வைத்திருக்கிறாய் இது நியாமாகுமா? ‘எத்தனையேனும் பிரிவு ஆற்றகில்லாய்’- நீ பிரிவைத் தாங்கமாட்டாய் என்பதனால் உன்னைப் பிரிய அவன் விரும்பவில்லை. உன்னை பிரிவது பக்தைகளைப் பிரிவதற்கு ஒப்பதென்று அவன் நினைத்துக் கொண்டிருக்கிறான். இதுவும் நியாயமா?
‘தத்துவம் அன்று தகவு’ – உனக்கு எங்கள் மீது பரிவு உண்டு என்பது உண்மையல்ல என்றும் பொருள் கொள்ளலாம் அல்லது நாங்கள் சொல்வதை வேடிக்கையாக எடுத்துக் கொண்டு விடாதே நாங்கள் உண்மையைத்தான் சொல்கிறேன் என்றும் பொருள் கொள்ளலாம். ஆறாயிரப்படி ‘இது உன் சொரூபத்திற்கும் உன் சுபாவத்திற்கும் பொருத்தமானதன்று’ என்றும் பொருள் கூறலாம் என்கிறது. அதாவது பரிவின் வடிவு நீ. புருஷாகார பூதை. பரிவுதான் உன்னுடைய முதற்தன்மை. இரண்டுக்கும் நீ இப்போது செய்வது பொருந்தி வராது என்று பொருள்.
இது மிகவும் அடர்த்தியான பாடல். ஆனால் எளிதான தமிழில் எழுதப்பட்டிருக்கிறது. எளிமையால் எதையும் சாதிக்கலாம்.
January 1, 2022
உந்து மதகளிற்றன்!
யார் இந்த நப்பின்னை?
ஆழ்வார்களில் ஒன்பது ஆழ்வார்கள் நப்பின்னையைப் பற்றிப் பாடியிருக்கிறார்கள். ‘ஒருமகளாயர் மடந்தை ஒருத்தி நிலமகள் மற்றைத் திருமகளோடும்’ என்று திருமங்கை ஆழ்வார் பாடியிருக்கிறார். ‘பூமகள், மண்மகள், ஆய்மகள்’ என்று நம்மாழ்வாரும் பாடியிருக்கிறார். அவர்கள் ஆயர் மடந்தை, ஆய்மகள் என்று சொல்வது நப்பின்னையைத்தான் என்பது தெளிவு.
திருமாலுக்கு திருமகள், பூமகள் போன்றே மூன்றாவது மனைவியாக நப்பின்னை இருக்கிறார். வடமொழி ஹரி வம்சம் நூலில் அவர் நீளாதேவியாக வருகிறார். கண்ணன் ஏழு ஏறுகளை வென்று அவளை மணமகளாக அடைகிறான் என்று ஹரி வம்சம் சொல்கிறது. அவர் நந்தனின் மைத்துனர் கும்பகன் (கும்பக்கோன்) என்பவரின் புதல்வி. ஆனால் இந்தக்கதை தெற்கில் இருக்கும் பிரதிகளில் மட்டுமே இருக்கிறது. வட நாட்டில் நீளா தேவி என்ற பெயரே தெரியாது என்று ஹார்டி தன் Viraha Bhakti என்ற நூலில் கூறுகிறார். ராமானுஜர் தன் சரணாகதி கத்யத்தில் திருவுக்குத் திருவான, திருவின் மணாளனே, ஸ்ரீ வல்லபனே என்று சொல்லி ‘நீ ஒருவனே பூமி, நீளா நாயகனும் ஆவாய்’ என்று ”ஏவம் பூத பூமி நீளா நாயக’ என்கிறார். பராசரபட்டர் ‘நீளாதுங்க ஸ்தன கிரிதடீஸூப்தம் உத்போத்ய க்ருஷ்ணம்’ என்று நீளா தேவியின் கொங்கைகள் மீது தலை வைத்து உறங்குபவனே என்று ‘கொத்தலர் பூங்குழல் நப்பின்னை கொங்கை மேல் வைத்துக் கிடந்த மலர் மார்பா’ என்ற ஆண்டாளின் சொற்களையே பயன்படுத்துகிறார்.
பண்டைத் தமிழ் இலக்கியத்தில் சிலப்பதிகாரம்” மாயவன்றம் முன்னினொடும் வரிவளைக்கைப் பின்னையொடும்/ கோவலர்தஞ் சிறுமியர்கள் குழற்கோதை புறஞ்சோர” என்று நப்பின்னையைக் குறிப்பிடுகிறது. சீவக சிந்தாமணியில் கோவிந்தையார் இலம்பகத்தில் முருகன் எவ்வாறு வள்ளியை மணந்தானோ, கண்ணன் எவ்வாறு நப்பின்னையை மணந்தானோ அதே போன்று கோவிந்தையாரும் மணக்கப்பட வேண்டும் என்று அவர் தந்தை விரும்பியதாகச் செய்தி வருகிறது.
பின்னை என்றால் பின்னால் வந்தவள், தங்கை, பூமாதேவிக்குத் தங்கை என்று பொருள் கொள்ளலாம். அல்லது அழகிய பின்னலை உடையவள் என்றும் பொருள் கூறலாம். திருவள்ளுவமாலையில் ‘உபகேசி தோள் மணந்தான்’என்று அவள் உபகேசியாக அறியப்படுகிறார்.
இனி பாடல்.
உந்து மதகளிற்றன் ஓடாத தோள்வலியன்
நந்த கோபாலன் மருமகளே நப்பின்னாய்!
கந்தங் கமழும் குழலீ! கடை திறவாய்!
வந்தெங்கும் கோழி அழைத்தன காண்! மாதவிப்
பந்தல்மேல் பல்கால் குயிலினங்கள் கூவினகாண்
பந்தார் விரலியுன் மைத்துனன் பேர்பாடச்
செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப
வந்து திறவாய் மகிழ்ந்தேலோ ரெம்பாவாய்!
வைணவ மரபில் இப்பாடலைப் பற்றி அழகான ஒரு சம்பவம் குறிப்பிடப் படுகிறது.
ராமானுஜர் வைணவத் துறவியாக தினமும் உஞ்ச விருத்தி எடுத்து உண்பது உண்டு. அப்போது திருப்பாவை பாசுரங்களை மனதால் நினைத்தும், வாய்விட்டு பாடியும் வருவார். அப்படிப் பாடிக் கொண்டே, அவரது ஆசார்யனான திருக்கோஷ்டியூர் நம்பியின் திருமாளிகைக்கு வந்து சேர்ந்தார். அப்போது உந்து மத களிற்றன் பாசுரம் பாடி, ‘பந்தார் விரலியுன் மைத்துனன் பேர்பாட செந்தாமரைக் கையால் சீரார் வளையொலிப்ப வந்து திறவாய்!” என்ற வரியை அவர் பாடவும், திருக்கோஷ்டியூர் நம்பியின் மகளான அத்துழாய் அம்மை என்ற சிறுமி வாசற் கதவை திறந்து வெளியே வரவும் சரியாக இருந்தது. ராமானுஜர் அத்துழாய் வருகையைக் கண்டதும் மூர்ச்சித்து விழுந்து விட்டார் – நப்பின்னையையே சேவிக்கும் பாக்கியம் கிடைத்தது என்ற மகிழ்ச்சியில். திருக்கோஷ்டியூர் நம்பி வெளியே வந்து ராமானுஜருக்கு மூர்ச்சை தெளிய வைத்து, ‘என்ன உந்து மத களிற்றன் பாசுரம் செய்த வேலையா? என்றாராம்.
‘உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன்’ என்று நந்தகோபன் அழைக்கப்படுகிறார். மதயானைகள் ஆயர் குடியில் எவ்வாறு வந்தது என்று கேட்டால், அரச வம்சத்தினரான வசுதேவரிடம் யானைகள் இல்லையா, கண்ணன் இருவருக்கும் சொந்தம் போல, அவரிடம் இருப்பவையெல்லாம் இவருக்கும் சொந்தம் என்று உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். ஓடாத தோள் வலியன் என்றால் பகைவனுக்கு அஞ்சாத வலிமையுடையவன் என்று பொருள் கொள்ளலாம் அல்லது வியாக்கினம் சொல்லுகின்றபடி ‘கம்சன் மாளிகையின் நிழற் கீழே கிருஷ்ணனுக்கு ஒரு தீங்கும் வராமல் வளர்க்கவல்ல மிடுக்கை உடையவர்’ என்றும் பொருள் கொள்ளலாம்.
நப்பின்னை நந்தனின் மருமகள். மைத்துனனை (அத்தை மகனை) மணந்தவள். அதாவது யசோதையின் சகோதரன் கும்பகனின் மகள் அவள். எனவே அத்தை மகனான கண்ணனனை மணந்தவள்.
நப்பின்னாய் என்று அழைத்தும் பதில் சொல்லததால் கந்தம் கமழும் குழலீ என்று அழைக்கிறார்கள். ‘நீ இருக்கிறாய் என்பது எங்களுக்குத் தெரியும். உன் கூந்தலில் மணமே காட்டிக் கொடுத்து விடுகிறதே. நீ பின்னை (கேசி – அடர்ந்த கூந்தலை உடையவள்) அல்லவா?’ என்கிறார்கள். கோழிகள் அழைக்கின்றன. குயில்கள் அழைக்கின்றன. விடிந்து விட்டது. அவன் பெயரைப் பாடக் காத்திருக்கிறோம் என்கிறார்கள்.
உன் கைகள் கண்ணனுடைய கண்களின் வண்ணம் கொண்டன. செந்தாமரை போன்றன. அவனோடு பூப்பந்து விளையாடிய விரல்கள் உன் விரல்கள். நீ கைகளை உயர்த்தினாலே வளைகள் குலுங்கும். நாங்கள் அந்த ஒலிக்காகக் காத்திருக்கிறோம். எங்களைக் காக்க வைக்காதே. கதவைத் திற என்கிறார்கள் சிறுமிகள்.
வியாக்கியானம் மிக அருமையான பொருள் ஒன்றைச் சொல்கிறது. நப்பின்னையைப் புருஷாகாரமாகக் கொள்வது -அதாவது இறைவனிடம் அழைத்து சென்று பரிந்துரை செய்பவராகக் -மிகவும் அவசியம் என்கிறது. அவளை விட்டால் அதோகதிதான் என்கிறது. சூர்ப்பனகை பிராட்டியை விட்டு ராமனைப் பற்றிக் கொள்ள நினைத்தாள். அவள் கதி என்னவாயிற்று என்பது நமக்குத் தெரியும். அதே போன்று ராவணன் ராமனை விட்டு சீதையைப் பற்றிக் கொள்ள நினைத்தான் அவன் கதியும் நமக்குத் தெரியும். வீபிஷணனுக்கு அருள் கிடைத்ததற்குக் காரணம் அவன் இருவரையும் பற்றிக் கொண்டதால்தான்.
December 31, 2021
அம்பரமே! தண்ணீரே!
புத்தாண்டு வாழ்த்துகள்!
ஆடை, நீர், உணவு இவை மூன்றும் உலக மக்கள் அனைவருக்கும் தடையின்றி, குறையின்றிக் கிடைக்க வேண்டும் என்ற அறத்தை தூக்கிப் பிடிப்பவன் நான். ஆண்டாளும் அதைத்தான் சொல்கிறார். மக்கள் உடையின்றி, தண்ணீருக்காகத் தவித்துக் கொண்டு, உணவில்லாமல் இருந்தால் இறைவனைத் தேட மாட்டார்கள். இவற்றைத்தான் தேடிக் கொண்டிருப்பார்கள். சிறுமி ஆண்டாளின் உலகத்தில் தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்கிறது. செந்நெல் ஓங்குகிறது. கண்ணனைத் தேட அவகாசம் கிடைக்கிறது. இங்கு இன்னொன்றும் சொல்லியாக வேண்டும். இதே ஆண்டாள் நாச்சியார் திருமொழியில் கூறுகிறார்: ‘மாசுடை யுடம்போடு தலை யுலறி வாய்ப்புறம் வெளுத்து ஒரு போதும் உண்டு/தேசுடைத் திறலுடைக் காமதேவா நோற்கின்ற நோன்பினைக் குறிக்கொள் கண்டாய்’ என்று. அவள் கண்ணனை நினைத்து நோன்பு நோற்கும் போது தூய்மையை பற்றிக் கவலைப்படுவதில்லை. அவள் உலகம் தெரிந்தவள். கலவியின் கந்தங்களைத் தெரிந்தவள். ஆனால் திருப்பாவையின் ஆண்டாள் உண்மையான உலகில் நுழையும் பருவத்தில் இருப்பவள். நம்மை அவள் வசப்படுத்துவதற்கு முக்கியமான காரணம் நம்மில் பலரும் அவளைப் போன்று சிறுமியர்/சிறுவர்களின் உலகத்திற்குத் திரும்பச் செல்ல மாட்டோமா என்று ஏங்குவதால்தான். உரையாசிரியர்கள் கணக்கற்ற உள்ளடக்கங்களைப் பாடல்களில் கண்டு பிடித்தாலும், நம்மை உடனடியாகக் கவர்வது ஆண்டாள் படைத்த தமிழ்ச் சொற்களின் நேரடியான பொருட்களே.
இனி பாடல்.
அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான் நந்தகோபால எழுந்திராய்
கொம்பனார்க்கு எல்லாம் கொழுந்தே, குலவிளக்கே
எம்பெரு மாட்டி யசோதாய் அறிவுறாய்
அம்பரம் ஊடறுத்து ஓங்கி உலகளந்த
உம்பர் கோமானே உறங்காது எழுந்திராய்
செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
உம்பியும் நீயும் உறங்கோலோர் எம்பாவாய்
நேச நிலைக்கதவம் நீக்க வாயில் காப்போன் சம்மத்திருக்க வேண்டும். சிறுமியர் வீட்டிற்குள்ளே வந்து முதற்கட்டில் இருக்கும் நந்தகோபனை எழுப்புகிறார்கள்.
அம்பரம் என்றால் தூய புதிய ஆடை போல என்றுமே பிரகாசமாக இருக்கும் இறைவனின் திருமுக மண்டலத்தின் மலர்ச்சி. அதைக் கண்டுணர மனதில் பிறந்த இறைத்தேடற் குழந்தை முதிர்ச்சி பெற அதற்கு அளிக்கும் தண்ணீர் அடியாரின் மனநிலை. சோறு மற்றைய அடியார்களுக்குச் செய்யும் தொண்டு. இம் மூன்றையும் எவ்வாறு செய்ய வேண்டும் என்பதற்கு வழியைக் காட்டுபவன் ஆசாரியன். அவன்தான் நந்தகோபன். நம்மாழ்வார் அருளிச் செய்தது போல ‘உண்ணும் சோறு பருகுநீர் தின்னும் வெற்றிலையெல்லாம் கண்ணன்’ என்று எங்களுக்குக் காடிக் கொடுத்த வழிகாட்டி நந்தகோபனாகிய நீதான். நீ முதலில் எழுந்திருந்து எங்களை கண்ணனிடம் அழைத்துச் செல்ல வேண்டும் என்று சிறுமியர் கூறுகின்றனர். ஆறாயிரப்படி சொல்கிறது நாட்டில் பெண்களுக்குத் தானம் கொடுப்பாரில்லை என்று. அதாவது தானம் கொடுத்தால் அதை அவர்களால் தனியாக அனுபவிக்க முடியாதாம். கணவனோடுதான் அனுபவிக்க வேண்டுமாம். எனவே நீ அறம் செய்ய வேண்டுமென்றால் எங்களுக்கு முதலில் கண்ணனைக் கொடு. அப்போதுதான் உன் தானத்தை நாங்கள் அனுபவிக்க முடியும் என்கிறர்கள்
அடுத்த கட்டில் யசோதை படுத்திருக்கிறாள். அவர் அழகிலும், அறிவிலும் அன்பிலும் பெண்களிலேயே தலையாயவள். கொம்பனார்க்கெல்லாம் கொழுந்து. ஏனென்றால் கண்ணனை வளர்க்கும் பேறு பெற்றவள். அவள் கணவனுடன் ஒரே கட்டிலில் படுத்திருக்கவில்லை. தனியாகப் படுத்திருக்கிறாள். பர்த்தாவினுடைய படுக்கையையும் ப்ரஜையுனுடைய தொட்டிலையும் விடாத மாதாவைப் போல என்றும் நந்தகோபனையும், ஸ்ரீகிருஷ்ணனையும் விடாத யசோதைப் பிராட்டியைப் போல என்றும் முமுக்ஷூ ப்படி சொல்கிறது என்று அண்ணங்கராச்சாரியர் எழுதியிருக்கிறார். நந்தகோபனின் படுக்கைத்தலையையும் விடாள். பிள்ளைகள் தொட்டில் காற்கடையையும் விடாள் (அலட்சியம் செய்ய மாட்டாள்) என்று ஆறாயிரப்படி சொல்கிறது. இருவரும் வளர்ந்த பிள்ளைகள். ஆனாலும் தாய்க்கு தொட்டிலில் இருக்கும் குழந்தைகள் போலதான். அவன் அணி விளக்கு. கோல விளக்கு. யசோதைப் பிராட்டி குல விளக்கு.
“இருவிசும்பினூடு போய் எழுந்து மேலைத்/ தண் மதியும் கதிரவனும் தவிரவோடி/தாரகையின் புறம் தடவி அப்பால் மிக்கு/ மண் முழுதும் அகப்படுத்து நின்ற எந்தை/மலர் புரையும் திருவடி” என்று மங்கை மன்னனின் திருநெடுந்தாண்டகம் பெருமான் உலகங்களை அளந்ததைக் கூறுகிறது. ஆண்டாளும் அம்பரம் ஊடறத்து ஓங்கி உலகளந்த இறைவனைக் கூறுகிறார். இங்கு அம்பரம் என்றால் ஆகாயம். உறங்குகின்ற குழந்தைகளின் தாயைப் போல நீ உன அடியார்களுக்காக உலகத்திற்காக உறங்காது இருப்பவன். இங்கு மனித வடிவம் கொண்டதால் நித்திரை செய்ய வேண்டிய கட்டாயம். ஆனால் இப்போது காலை வந்து விட்டது. அக்கட்டாயமும் இல்லை. நீ உறங்க வேண்டிய எந்த அவசியமும் இல்லை என்று சிறுமிகள் சொல்கிறார்கள்.
செம்பொற் கழலடிச் செல்வா என்று கண்ணனின் தமையனான பலதேவனை அவர்கள் அழைக்கிறார்கள். ஆதி சேஷனின் அவதாரமாகக் கருதப்படுபவன் அவன். ராமாவதாரத்தில் தம்பி லட்சுமணனாக வந்து சேவை செய்தான். இப்போது அண்ணனாக வந்து கண்ணனுக்கு ஊறு ஏதும் நேராமல் பார்த்துக் கொள்கிறான். அவனிடம் அவர்கள் சொல்கிறார்கள்: ‘நீ லட்சுமணனாக இருந்தபோது உறங்காவில்லி என்ற பெயரைக் கொண்டவன். உறங்காமல், பிராட்டியையும் பெருமானையும் காத்தவன். இப்பிறவியில் உனக்கு உறக்கம் தேவையா? “சென்றால் குடையாம் இருந்தால் சிங் காசனமாம்,/நின்றால் மரவடியாம் நீள்கடலுள், – என்றும்/ புணையாம் மணிவிளக் காம் பூம்பட்டாம் புல்கும்/அணையாம், திருமாற் கரவு” என்று ஆழ்வார் சொன்னபடி நீயே புணை. படுக்கை. படுக்கைக்குப் படுக்கை அவசியமா? உனக்கு உறக்கம் எதற்கு?’
P.A. Krishnan's Blog
- P.A. Krishnan's profile
- 17 followers
