மாலே மணிவண்ணா!

வைணவ உரையாசிரியர்களைப் படிப்பது என்பது மிகவும் கடினமானது. வடமொழிப் பயிற்சி இருந்தால் ஒழிய அவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பது புரிவது கடினம். இதைத் தவிர இன்னொரு பிரச்சினையும் எனக்கு இருந்தது. சொன்னவற்றையே அவர்கள் திரும்பச் சொல்கிறார்கள் என்ற எண்ணம் என்னைச் சுற்றிச் சுற்றி வந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு புத்தகத்தில் மதநூல்களுக்கு உரை எழுதுவது embroidering a piece of rag போன்றது என்று படித்தேன். அதாவது கந்தல் துணியில் பின்னல் வேலை செய்வது.  இதை என் தந்தையிடம் சொன்னேன். அவர் ‘அது பார்ப்பவர் பார்வையைப் பொறுத்தது. என்னிடம் கேட்டால் உரை  வைரக்கற்களுக்கு பட்டை தீட்டுவது போன்றது என்பேன்,’ என்றார். ‘ஆனாலும் திரும்பத் திரும்ப்ச் சொல்வது போல இருக்கிறதே, அயர்ச்சியைத் தருகிறது’ என்று பதில் சொன்னேன். அதற்கு அவர் கோபப்படமால் ‘நான் ஒரு கேள்வி கேட்கட்டுமா?’ என்றார்.  என் பதிலை எதிர்பார்க்காமல் கேள்வியையும் கேட்டார். ‘ஆண் பெண் உறவைப் பற்றி என்ன நினைக்கிறாய்?’ ‘நிச்சயம் தேவை.’ ‘எதற்கு? ‘அதுவும் ஒரே செயலை பலவிதங்களில் செய்வதுதானே? நீ பதினாறு வயதிலிருந்து கலர் கலராக படங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறாய் ( அது விடியோக்களே இல்லாத காலம் – போர்ன் என்றால் படங்கள்தாம்) உனக்கு அலுத்து விட்டதா?”  என்னால் பதில் சொல்ல முடியவில்லை.  ‘நம்ம ஊர்ப்பக்கம் ஒரு பழமொழி உண்டு – ஆசை தீரப் புணர்ந்தவனும் கிடையாது. அழுக்குத் தீர குளிச்சவனும் கிடையாது’ன்னு. (அவர் புணர்ச்சிக்கு பயன்படுத்திய சொல் வேறு சொல்). இதையே உரையாசிரியர் இறைவனை அணுகும் முறைக்குப் பொருத்திப்பாரு, பதில் கிடைச்சுடும் என்றார். ‘ஆராவமுதன்’ என்று அவனை ஏன் சொல்கிறார்கள்? இதனால்தான். தடித்தனம் குறைந்து பக்தி அதிகரித்தால் இது போன்ற விதண்டாவாதக் கேள்விகளைக் கேட்கத் தோணாது,’ என்றார்.  ‘அது எப்படி? ஆண் பெண் உறவு இருவருக்கிடையே, கண்ணுக்குத் தெரியும்படி நிகழ்வது. கடவுள் அனுபவம் அப்படியா?’ என்று கேட்டேன். ‘அதை அனுபவித்தவர்களுக்குத் தெரியும். சம்போக இன்பம் என்பதே எல்லோருக்கும் வாய்க்கிறதா?  மேலும் வஜ்ரயானிகளைப்போல அதையே தேடி அதில் நிர்வாணத்தை அடைகிறேன் என்று நினைப்பவர்கள் இல்லையா? ஆண்டாள் மாலே மணிவண்ணா பாசுரத்தில் “மேலையார்ச் சொல்வனகள்” என்று தெளிவாகச் சொல்கிறார். அதாவது இறைவனை நினைப்பது, போற்றுவது அவன் அடியை அடைய முயற்சிப்பதெல்லாம், அவளுடைய மூதாதையர் சொன்ன வழிகள். நானும் உனக்கு அவைதான் வழிகள் என்று சொல்கிறேன். வேறு வழி உனக்குக் கிடைத்தால் தேடிக் கொள். நான் உன்னைத் தடுக்கப் போவதில்லை.’

இனி பாடல்!

மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்
மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்
ஞாலத்தையெல்லாம் நடுங்க முரல்வன
பாலன்ன வண்ணத்துன் பாஞ்ச சன்னியமே
போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே
சாலப் பெரும்பறையே பல்லாண் டிசைப்பாரே
கோல விளக்கே கொடியே விதானமே
ஆலினிலையாய்! அருளேலோ ரெம்பாவாய்!

நாரயணன், பரமன், தேவாதி தேவன், நெடுமால் என்றெல்லாம் அவனை அழைத்தவர்கள் அடைமொழி இல்லாமல் மாலே என்று அழைக்கிறார்கள். இது அவனுடன் இவர்கள் நெருங்கி விட்டார்கள் என்பதைக் காட்டுகிறது. அவனுடைய சௌலப்யத்தைக் (எளிதாக அணுகக் கூடிய தன்மை) காட்டுகிறது. நீங்கள் என்று அழைப்பது நெருக்கம் ஏற்பட்டால் நீயாக மாறுவதில்லையா, அதே போலத்தான் நெடுமால் வெறும் மாலாக மாறுகிறான். அதே சமயத்தில் மால் என்ற சொல் அவனுடைய பரத்துவத்தையும் காட்டுகிறது. அவன்தான் பரம்பொருள்.

மணிவண்ணா என்பது அவனுடைய சொல்லவொண்ணா அழகு. ஆசைப்பட வைத்து துன்பத்தையும் கொடுக்கும் அழகு.

அவனிடம் உன்னுடைய பாஞ்சஜன்யத்தைப் போல் ஒலிக்கக் கூடிய சங்கைக் கொடு, இடி போல முழங்கக் கூடிய சங்கைக் கொடு, உன் பெயரைப் பாடுகின்ற அரையரைக் கொடு, விளக்கைக் கொடு, கொடியைக் கொடு, நிழல் தரக்கூடிய மேற்கட்டியையும் (அதாவது துணியை நான்கு கம்புகள் மேல் பரப்பி, அதை நால்வர் பிடித்துக் கொண்டுவர, துணியின் கீழ் நடந்து வருவது- பனி விழாமல் இருக்க) கொடு என்று கேட்கிறார்கள். அதற்கு அவன் இவையெல்லாம் தரவேண்டும் என்று எந்த சாஸ்திரத்தில் சொல்லியிருக்கிறது என்று கேட்கிறானாம். அதற்கு சிறுமிகள் “நாஸ்திகரைப் போல் நீ சொல்கின்றதென்? ஆளறிந்து வார்த்தை சொல்லாய்.” என்று பதில் சொல்கிறார்கள் என ஆறாயிரப்படி சொல்கிறது. ‘வியாசர் சொன்னான், மனு சொன்னான்’ என்று ஞானம் படைத்தவர்கள் சொல்வதை ஆதாரமாக எடுத்துக் கொள்வது நீ அறியாததா? அதே போல நாங்கள் கேட்பதெல்லாம் எங்கள் பெரியவர்கள் எங்களுக்குச் சொல்லிக் கொடுத்தது,’ என்றும் அவர்கள் சொல்கிறார்கள். கண்ணன் அதற்குப் பதிலாக, நீங்கள் கேட்பதை கொடுக்கும் சக்தி எனக்கு இருக்கிறதா என்பதே ஐயம் என்றானாம். ‘உன்னால் முடியாதது எது? ஓர் ஆலிலையில் மேல் கிடந்து உலகங்களை வயிற்றில் வைத்துக் காத்தவன் நீ இல்லையா?’ என்று சிறுமியர் சொல்கிறார்கள். ‘உன்னால் முடியாதது ஒன்றும் இல்லை. நீ அருள் செய்தால் எல்லாம் நடக்கும். செய்யாவிட்டால் உனக்கு எங்கள் மீது இரக்கம் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.’

‘என்றும் உன்றனுக்கு எங்கள் மேல் இரக்கம் எழாதது’ என்று நாச்சியார் திருமொழி சொல்கிறது.

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 09, 2022 19:33
No comments have been added yet.


P.A. Krishnan's Blog

P.A. Krishnan
P.A. Krishnan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow P.A. Krishnan's blog with rss.