P.A. Krishnan's Blog, page 3
January 2, 2023
ஏழாம் திருமொழி -2
போய்த்தீர்த்தம் ஆடாதே நின்ற புணர் மருதம்
சாய்த்தீர்த்தான் கைத்தலத்தே ஏறிக் குடி கொண்டு
சேய்த்தீர்த்தமாய் நின்ற செங்கண்மால் தன்னுடைய
வாய்த்தீர்த்தம் பாய்ந்தாட வல்லாய் வலம்புரியே!
வலம்புரிச்சங்கே! நெடுந்தூரம் நடந்து கங்கை, காவிரி போன்ற ஆறுகளில் நீராடி புண்ணியம் தேடும் துன்பம் உனக்கில்லை. இரட்டை மருத மரங்களாக நின்றவர்களச் (குபேரனின் சிறுவர்களை) சாய்த்துத் தள்ளிய கண்ணனின் கைத்தலத்தில் நீ இருக்கிறாய். அங்கே நீ என்றும் குடியிருப்பாய். (யாரும் உன்னை வெளியேற்ற முடியாது). நீ குடைந்து நீராடும் தீர்த்தங்கள் வேறு. கருணையின் உருவங்களாக இருக்கும் அவன் சிவந்தகண்களின் ஈரம் உனக்குப் போதும். அதை விட உயர்ந்த தீர்த்தம் எங்கும் கிடையாது. கூடவே இறைவனின் வாயில் சுரக்கும் தீர்த்தத்திலும் நன்றாக மூழ்கி நீராடும் நற்பயன் பெற்றுள்ளாய்.
வைணவ வீடுகளில் எச்சில் என்பது ஏறத்தாழ சயனைடிற்குச் சமானமானது. தண்ணீர் உண்ணும் பாத்திரத்தில் வாய் வைத்துக் குடித்தால் கூட குடித்தவர் கொலை செய்தவரைப் போலப் பார்க்கப்படுவார். ஆண்டாள் மிகவும் கட்டுப்பாடுகள் உள்ள வைணவ குலத்தில் பிறந்தவர். இங்கு இறைவன் வாயின் ஈரம் தீர்த்தங்களை விட உயர்ந்தது என்று தெளிவாகச் சொல்கிறார். பக்தர்கள் எதையும் மீறலாம் என்பது மீற முடியாத விதி.
“தூய்மைகள் அனைத்திலும் சிறந்த தூய்மை கோவிந்தன். புண்ணியங்களில் புண்ணியன். மங்களங்களில் மங்களமானவன்” என்று சொல்லும் வடமொழி சுலோகம் ஒன்றை உரையாசிரியர்கள் மேற்கொள் காட்டுகிறார்கள். எனவே அவனிடம் இருக்கும் எதுவும் ஒதுக்கும்படியாக இருக்காது.
கடலைக் கடைந்து அமுதை எடுக்க தேவர்கள் பெரும்பாடு பட வேண்டியிருந்தது ஆனால் உனக்கோ அது பிறக்கும் இடத்திற்கே சென்று அதை அருந்த முடிகிறது என்று ஆண்டாள் சொல்கிறாராம்.
செங்கமல நாண்மலர் மேல் தேனுகரும் அன்னம் போல்
செங்கட் கருமேனி வாசுதேவனுடைய
அங்கைத் தலம் ஏறி அன்ன வசம் செய்யும்
சங்கரையா! உன் செல்வம் சால அழகியதே
அப்பொழுது அலர்ந்த செந்தாமரைப்பூவில் இருந்து தேனை அருந்தும் அன்னம் போன்று, சிவந்த கண்களையும் கரிய மேனியையும் உடைய வாசுதேவனின் கையில் குடியிருக்கும் சங்குகளின் தலைவா! உன்னுடைய தொண்டுச் செல்வம் மகத்தானது.
சங்கின் வெண்மை அன்னத்தின் நிறம். செந்தாமரை அவன் கண்கள. அவனே கருந்தாமரை.
புள்ளரையன் என்று கருடன் அழைக்கப்படுவது போல சங்கரையன் என்று இங்கு சங்கு அழைக்கப்படுகிறது. இறைவனுக்குத் தொண்டு செய்பவர்கள் அனைவரும் அவர்கள் குழுவிற்குத் தலைவர் ஆகி விடுகிறார்கள்! சடாயுவைப் பற்றிச் சொல்லும் போது கூட கம்பன் “சூழல் யாவையும் கடந்தனர்; கண்டனர் கழுகின் வேந்தையே” என்று கூறுகிறான். கருடன் பறவைகளுக்கு எல்லாம் அரசன். இறைவனைச் சுமப்பவனாக இருப்பதால். சுக்ரீவனையும் குரங்க்குகளின் அரசன் என்று வாலி இருக்கும்போதே ராமன் சொன்னதை உரையாசிரியர்கள் மேற்கோள் காட்டுகிறார்கள்.
அஹமன்னம் அஹமன்னம் அஹமன்னம்/ அஹமன்னாதோ அஹமன்னாதோ அஹமன்னாத: என்று தைத்திரிய உபநிடதம் கூறுகிறது. உணவும் நானே. உண்பவனும் நானே என்று சொல்லும் இறைவனின் வாயமுதத்தை தினமும் உண்ணும் உன்னுடைய செல்வம் மிகவும் மகத்தானது.
ஆண்டாளின் அன்னம் பூவில் தேனுண்ணும் வண்டாக மாறி விடுகிறது!
உண்பது சொல்லில் உலகளந்தான் வாய் அமுதம்
கண்படை கொள்ளில் கடல்வண்ணன் கைத்தலத்தே
பெண்படையார் உன் மேல் பெரும் பூசல் சாற்றுகின்றார்
பண்பல செய்கின்றாய் பாஞ்சசன்னியமே!
பாஞ்சஜன்யமே! நீ உண்பது ஈரடியால் மூவுலகையும் அளந்த பெருமானின் வாயில் ஊறும் அமிர்தம். நீ உறங்குவதோ கடல் நிறத்தவனின் கைகளில். இதனால்தான் பெண் குலத்தவர் எல்லோரும் கூக்குரலிடுகின்றனர். சண்டை போடுகின்றனர். ‘நாங்கள் இங்கு தனிமையில் துயரத்தோடு இருக்கும் போது நீ மட்டும் இறைவனால் உண்பவனாகவும் உண்ணப்படுபவனாகவும் இருப்பது நியாயமா’ என்று கேட்கிறார்கள்.
ஆண்டாள் வெண் சங்கை மகிழ்ச்சிப்படுத்துவது போதும் என்ற முடிவிற்கு வந்து விட்டார். இப்போது நியாயம் கேட்கத் துவங்கி விட்டார்.
வெண் சங்கின் உறக்கத்தைப் பற்றிப் பேசும் போது ‘பிரசாதத்தைச் சூடி கைப்புடையில் கிடப்பாரைப் போலே’ என்கிறார் பெரியவாச்சான் பிள்ளை. அதாவது கோவில் பிரசாதங்களை அளவிற்கு மீறி உண்டு, கிடைத்த மாலைகளையெல்லாம் சூடிக் கொண்டு, உண்ட மயக்கத்தில் கோவில் வாசலில் காவல்காரர்கள் இருக்கும் இடத்தில் சரிந்து கிடக்கும் பிராமணர்களைப் போல நீயும் இருக்கிறாயே என்று ஆண்டாள் சொல்கிறாராம். கைப்புடை என்றால் காவலர் இருக்கும் இடம்.
இன்னொன்றும் ஆண்டாள் சொல்கிறார். உண்மையான பக்தன் யாரும் இறைவனைத் தனியாக அன்பவிக்க விரும்ப மாட்டான். நான் கூடியிருந்து குளிர்வதைத் தான் விரும்புவேன். ஆனால் நீயோ தனியாக அவனுடன் எப்போதும் இருக்க வேண்டும் என்று விரும்புகிறாய் இது நியாயமா? எல்லா பக்தர்களும் இறைவனிடம் சேர வேண்டும் என்பதுதான் உலகின் விதி.
பதினாறாம் ஆயிரவர் தேவிமார் பார்த்திருப்ப
மதுவாயில் கொண்டாற்போல் மாதவன் தன் வாய் அமுதம்
பொதுவாக உண்பதனைப் புக்கு நீ உண்டக்கால்
சிதையாரோ உன்னோடு? செல்வப் பெரும் சங்கே!
இறைவனை என்றும் தொட்டுக் கொண்டிருக்கும் பெருஞ்செல்வத்தைப் பெற்றுள்ள சங்கே! பதினாறாயிரம் தேவிமார்கள் கண்ணனின் வாய்ச்சுவையை வேண்டிப் பார்த்திருக்க, அவன் அடியார்கள் எல்லோரும் பகிர்ந்துண்ணவேண்டிய அவ்வமுதை, நீ மட்டும் வண்டு தனியாக பூவின் தேனை உண்பதுபோல் உண்டால் பெண்கள் உன்னுடன் சண்டைக்கு வராமல் வேறு என்ன செய்வார்கள்?
முன் பாட்டில் சிறிது தணிந்த குரலில் சொன்னதை இங்கு உயர்ந்த குரலில் ஆண்டாள் சொல்கிறார்.
இறைவனுக்கு பதினாறாயிரம் தேவிகள் என்று சொல்வதை அவனை அடைய விரும்புபவர்கள் கணக்கற்ற பாகவதர்கள் என்று பொருள் கொள்ள வேண்டும்.
என் தகப்பனான பெரியாழ்வார் சொன்னது போல ‘கூழாட்பட்டு நின்றீர்களை எங்கள் குழுவினில் புகுதலொட்டோம்’ என்று உன்னை நாங்கள் பாகவதர் குழுவிலிருந்து தள்ளி வைத்து விட்டால் நீ என்ன செய்வாய் என்று ஆண்டாள் கேட்கிறார். பாகவதர் அனுமதியில்லாமல் பகவானை யாரும் அணுக முடியாது, நீ உட்பட என்கிறார்.
உன் செல்வச் செருக்கினால் நீ இப்படிப் பேசாமல் இருக்கிறாய். ஆனால் அவன் செல்வத்திற்கும் மூல காரணம் எங்கள் பக்திச் செல்வம்தான் . நாங்கள் இல்லாமல் அவனும் இல்லை.
பாஞ்சசன்னியத்தைப் பற்பநாபனோடும்
வாய்ந்த பெரும் சுற்றம் ஆக்கிய வண்புதுவை
ஏய்ந்த புகழ்ப் பட்டர்பிரான் கோதை தமிழ் ஈரைந்தும்
ஆய்ந்தேத்த வல்லார் அவரும் அணுக்கரே
பாஞ்சஜன்யத்தை, தாமரை பிறந்த தொப்புளை உடைய இறைவனோடு மிக நெருங்கிய, பெரிய உறவை உடையதாக ஆக்கியவரும் அழகிய வில்லிபுத்தூரில் பிறந்தவரும் நிறைந்த புகழைக் கொண்டவரும் மற்றும் பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளையும் ஆன கோதை இயற்றிய் இத் தமிழ்ப் பாசுரங்கள் பத்தையும் பாடி அவனை துதிக்க வல்லவர்கள் அனைவரும் வெண் சங்கைப் போலவே எம்பெருமானுக்கு நெருங்கிய உறவுடையவர்கள் ஆவர்.
பிராட்டி பரிந்துரைக்காமல் பாஞ்சஜன்யம் இறைவ்ன் அருகில் சென்றிருக்க முடியாது என்று கவிதை சொல்கிறது. ஆண்டாள் பூமித்தாயின் வடிவாகப் பார்க்கப்படுகிறார் என்பதை நாம் மறக்கக் கூடாது.
December 31, 2022
ஏழாம் திருமொழி -1
ஆண்டாள் விழித்துக் கொள்கிறார். கனவில் நிகழ்ந்தவையெல்லாம் நினைவிற்கு வருகிறது. அது உண்மையா என்று இறைவன் கையில் இருக்கும் பாஞ்சஜன்யம் என்ற வெண் சங்கைக் கேட்கிறார்.
உரையாசிரியர்கள் கண்ணனின் வாய்ச்சுவை எவ்வாறு இருக்கும் என்பது ஆண்டாளுக்கு நிச்சயம் தெரியும் என்று கருதுகிறார்கள். ஆனால் இப்போது அவன் மாயமாக விட்டான். அவன் வாயை அடிக்கடித் தொடுவது அவனுடைய சங்கு. பக்தர்களிடம் ‘இதோ வருகிறேன்’ என்ற அழைப்புகளை அதன் மூலமாகத்தான் அவன் விட்டுக் கொண்டிருக்கிறான். ப்ரீதிப்ரகர்ஷமும் அசூயாதிசயமும் ஆண்டாளுக்கு ஏற்பட்டதாம். அதாவது என்ன பாக்கியம் செய்திருக்கிறது இச்சங்கு என்ற அளவு கடந்த மகிழ்ச்சியும் இதற்கு எப்போதும் கிடைப்பது நமக்குக் கிடைப்பதில்லையே என்ற பொறாமையும் சேர்ந்து ஆண்டாளை ஆட்டுவிக்கின்றன.
பெருமாளை விட ஆண்டாள் அதிக பாக்கியம் பெற்றவர் என்று உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். சீதை எப்படி இருக்கிறாள் என்பதை அனுமனிடம் – ஒரு குரங்கிடம் – கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டிய கட்டாயம் ராமனுக்கு ஏற்பட்டது. அனுமன் அவளை பார்த்த நேரமும் அதிகம் இல்லை. சுற்றிலும் அரக்கர் கூட்டம் இருக்கிறதே என்ற பதற்றமும் சீதைக்கும் இருந்தது அனுமனுக்கும் இருந்தது. ஆனால் சங்கு அப்படியல்ல. அவனை எல்லா நேரங்களிலும் சீராகப் பார்த்து அனுபவிக்கும் பாக்கியம் அதற்கு இருக்கிறது.
உலகக் கவிஞர்க்ள் எல்லோரும் வாய்ச்சுவையைப் பற்றியும் முத்தத்தைப் பற்றியும் பேசியிருக்கிறார்கள்.
ஷேக்ஸ்பியரின் புகழ் பெற்ற சானட் (SONNET) ஒன்று இவ்வாறு சொல்கிறது:
Do I envy those jacks that nimble leap,
To kiss the tender inward of thy hand,
Whilst my poor lips which should that harvest reap,
At the wood’s boldness by thee blushing stand!
To be so tickled, they would change their state
And situation with those dancing chips,
O’er whom thy fingers walk with gentle gait,
Making dead wood more bless’d than living lips.
காதலி இசைக்கருவியை (VIRGINAL) வாசிக்கிறார். கவிஞர் காதலி தொட்ட இடங்களை எல்லாவற்றையும் கவனித்து என் உதடுகளுக்கு அந்த இடங்களைத் தொடும் வாய்ப்பு இல்லையே என்கிறார். உயிரில்லாக் கட்டை என் உயிருள்ள உதடுகளை விடப் பாக்கியம் பெற்றது என்கிறார்.
இவரையே போன்று புஷ்கின் தன் யூஜின் ஒனிகின் காவியத்தில் அவள் கால்களைத் தொட்ட அலைகள் என்னையும் தொடாதா என ஏங்குகிறார்.
ஆனால் ஆண்டாளைப் போல இதுதான் என் விருப்பம் என்று கவிதையில் வெளிப்படையாக யாரும் சொன்னதாக எனக்குத் தெரியவில்லை. வெளிப்படையாகச் சொல்லியும் அவற்றிற்கு உயரிய கவிதை வடிவம் பெறச் செய்ததுதான் ஆண்டாளின் மேதைமை.
கருப்பூரம் நாறுமோ? கமலப்பூ நாறுமோ?
திருப்பவளச் செவ்வாய் தான் தித்தித்து இருக்குமோ?
மருப்பொசித்த மாதவன் தன் வாய்ச் சுவையும் நாற்றமும்
விருப்புற்றக் கேட்கின்றேன் சொல்லாழி வெண்சங்கே!
வெள்ளை நிறத்தில் இருக்கும் அழகிய வெண் சங்கமே ! அன்று குவலயாபீடம் என்னும் யானையின் கொம்பை முறித்த கண்ணபிரானின் உதடுகளின் சுவையும் மணமும் எவ்வாறு இருக்கும்? நான் ஆசையுடன் கேட்கின்றேன். அவருடைய பவளம் போன்ற சிவந்த உதடுகள் பச்சைக்கற்பூர மணம் வீசுமா? அல்லது தாமரைப்பூ மணம் வீசுமா? அவை தித்திப்பாக இருக்குமா? நீ எனக்குச் சொல்லு.
கவிஞர்கள் உதட்டின் மணம் தாமரைப் பூவின் மணத்தை ஒத்திருக்கும் என்று பல தடவைகள் சொல்லியிருக்கிறார்கள்.
காளிதாசன் சொல்கிறான்:
And Beneficent Siva,
when the eye on his forehead
was pained by powder from her tresses
as he kissed her,
put it to the breath of Parvati’s mouth
scented like a lotus in bloom
பார்வதியின் வாய் அன்றலர்ந்த தாமரையின் மணத்தைப் பெற்றிருந்தது என்று காளிதாசன் தன் குமார சம்பவம் என்ற காவியத்தில் கூறுகிறார்.
ஆனால் எந்தக் கவிஞனும் அதன் மணத்தை கற்பூரத்தின் மணத்தோடு ஒப்பிட்டதாகத் தெரியவில்லை. அந்த மணம் இனம் தெரியாத மணம். சிறிது அளவிற்கு மீறினாலும் துன்புறுத்தும் மணம். இயறகையில் கிடைக்கும் கற்பூரம் போர்னியோவில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. இந்தியாவில் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தப் பட்டிருக்கிறது. கற்பூரத்தின் சமஸ்கிருத வடிவம் சிறிது மாறுபட்டு திருக்குரானிலும் இடம் பெற்றிருக்கிறது என்று அச்சையா தன் புத்தகத்தில் சொல்கிறார்.
தித்தித்து இருக்குமோ என்ற கேள்விக்கு இல்லை என்ற பதிலை நோக்கித்தான் நம்மைக் கவிதை தள்ளுகிறது. இறைவனின் சுவை எளிய சுவை. ஆனால் நம்மால் தரப்படுத்த முடியாத சுவை.
கவிதையில் வெண்மை உணமையைக் குறிக்கிறது. நீ பொய் பேசமாட்டாய் என்பது எனக்குத் தெரியும் என்று ஆண்டாள் சொல்கிறார்.
இன்னொன்றை உரையாசிரியர்கள் சொல்கிறார்கள்; நீ இறைவனின் அடிமை. அதனால் அவன் பிராட்டியான என் அடிமையும் கூட. எனவே நான் கேட்ட கேள்விக்குச் சரியாக பதில் அளிக்கப்பட வேண்டியது உன் கடமை.
கடலில் பிறந்து கருதாது பஞ்சசனன்
உடலில் வளர்ந்து போய் ஊழியான் கைத்தலத்
திடரில் குடியேறித் தீய அசுரர்
நடலைப்பட முழங்கும் தோற்றத்தாய் நற்சங்கே!
அழகிய சங்கே! நீ பிறந்தது கடலில். வளர்ந்தது பஞ்சசனன் என்ற அசுரனின் உடலில். ஆனாலும் இன்று இருப்பது அண்டங்கள் அனைத்திலும் உயரிய இடமான பெருமாளில் கைத்தலத்தில். தீயவர் துன்பப்பட முழங்கும் ஆற்றலையும் தோற்றத்தையும் கொண்டிருப்பவன் நீ. (எனவே எனக்கு நீ உதவி செய்ய வேண்டும்).
ஒருத்தி மகனாய் பிறந்து ஓரிரவில் ஒருத்தி மகனாய் ஒளிந்து வளர்ந்தவன் இவன். இவன் கையில் இருக்கும் சங்கும் உப்புக் கரிக்கும் கடலில் பிறந்து அசுரன் உடலில் வளர்ந்தது. இவனுக்கு அது சரிதான். அவன் யாரை உவக்கிறானோ அவனுக்கு ஏற்றம் கொடுப்பான், குலப்பெருமை பார்க்க மாட்டான் என்றும் பாடல் சொல்லாமல் சொல்கிறது.
பாஞ்சஜன்யம் பிறந்ததைக் குறித்து பல புராணக் கதைகள் இருக்கின்றன. வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கி அன்று இவன் கடலைக் கடைந்த போது பிறந்த பொருள்களில் இதுவும் ஒன்று என்று சொல்லப்படுகிறது. பின்னால் ஆண்டாள் சொல்வது போல பாஞ்சனன் உடலில் வளர்ந்தது.
ஸ்கந்த புராணம் கிருஷ்ணர் எவ்வாறு அரக்கனைக் கொன்று அவனால் விழுங்கப்பட்ட சிறுவனுக்கு – தன் குருவான சந்தீப முனிவரின் மகன்-மறுபிறவியை எமனிடமிருந்து பெற்றுத் தந்தார் என்பதைச் சொல்கிறது. அரக்கனின் சங்கை தன் சங்காக ஆக்கிக் கொண்டார்.
தடவரையின் மீதே சரற்கால சந்திரன்
இடையுவாவில் வந்து எழுந்தாலே போல் நீயும்
வடமதுரையார் மன்னன் வாசுதேவன் கையில்
குடியேறி வீற்றிருந்தாய் கோலப் பெரும் சங்கே!
அழகிய பெருஞ்சங்கே! இலையுதிர் காலத்துத் திங்கள் முழுமதி நாளில் மலை மீது எழுந்தாற்போல் வடமதுரையில் வசிப்பவர்களுக்குத் தலைவனான வாசுதேவன் கையில் நீயும் குடியேறி மேன்மையோடு வீற்றிருக்கிறாய்.
அழகிய வெண்மையான திங்கள் மேகங்கள் இல்லாத வானில் கரிய மலையில் தோன்றுவது போல கரியவனான வாசுதேவன் கையில் வெண்மையான சங்கு இருக்கிறது. உவா என்று ஆண்டாள் சொல்கிறார். உவா என்பது பௌர்ணமியையும் அமாவாசையையும் குறிக்கும். இங்கு பௌர்ணமி.
சந்திர மண்டலம் போல் தாமோதரன் கையில்
அந்தரம் ஒன்றின்றி ஏறி அவன் செவியில்
மந்திரம் கொள்வாயே போலும் வலம்புரியே!
இந்திரனும் உன்னோடு செல்வத்துக்கு ஏலானே
வலம்புரிச்சங்கே! தாமோதரன் கையில் சந்திர மண்டலம்போலே என்றென்றும் இருந்து கொண்டு அவனுடைய காதில் ரகசியம் பேசுவதைப்போல தோற்றம் அளிக்கிறாய். செல்வத்திற் செழிக்கும் இந்திரனின் செல்வம் கூட நீ செய்யும் பணிவிடை என்ற பெருஞ்செல்வத்திற்கு ஈடு ஆகாது.
சந்திரன் எத்தனை அழகும் வெண்மையும் கொண்டதோ அத்தனை வெண்மையும் அழகும் படைத்தது சங்கு. ஆனால் சந்திரன் தேய்வான், வளர்வான். சங்கோ என்றும் ஒளி விட்டுக் கொண்டிருக்கிறது. அது இறைச்சேவைக்குக் கிடைத்த பரிசு.
இறைவனுக்குப் பணிவிடை செய்பவர்களின் செல்வத்திற்கு இந்திரனின் செல்வம் கூட ஈடாகாது என்று ஆண்டாள் சொல்கிறார். நீ அவன் காதருகில் இருக்கிறாய். காதில் மந்திரம் ஓதுவது போல இங்கு கோதை என்று ஒருவர் உன்னைப் பிரிந்து வாடிக் கொண்டிருக்கிறார் என்று விடாது ஓது என்றும் சொல்கிறார்.
உன்னோடு உடனே ஒரு கடலில் வாழ்வாரை
இன்னார் இனையார் என்று எண்ணுவார் இல்லை காண்
மன்னாகி நின்ற மதுசூதன் வாய் அமுதம்
பன்னாளும் உண்கின்றாய் பாஞ்சசன்னியமே!
பாஞ்சஜன்யம் என்ற சங்கே ! ஒரே கடலில் உன்னோடு கூடவே வாழ்ந்த யாவருக்கும் தனி அடையாளம் இல்லை. நீ ஒருவனே எல்லோருக்கும் அரசனான மதுசூதனன் வாயின் அமுதத்தை தினமும் உண்டு கொண்டிருக்கிறாய். உன்னை விடப் பேறு பெற்றவர் உலகுகள் எங்கும் இருக்க முடியாது.
இப்பாடலும் இறைவன் அருளைப் பெறுவதற்கு பிறப்பிற்கு அளிக்கப்படும் ஏற்றமோ தாழ்வோ ஒரு பொருட்டே அல்ல என்று தெளிவாகச் சொல்கிறது.
மிகவும் எளிமையான இடத்தில் பிறந்த வெண் சங்கம் அவன் கையில் இருந்து காதில் ஓதிக் கொண்டிருக்கிறது. இங்கு அந்தணர் குலத்தில் பிறந்த, அதுவும் ‘வேதாந்த விழுப்பொருளின் மேலிருந்த விளக்கினை விட்டுசித்தன் விரித்தனனே’ என்று பாடிப் பெரும்புகழ் பெற்ற ஆழ்வாரின் மகளாகப் பிறந்தும் நான் அவன் கடைக்கண் பார்வை கிடைக்க படாதபாடு பட வேண்டியிருக்கிறது என்கிறார் கவிஞர்.
December 30, 2022
ஆறாம் திருமொழி – 2
மத்தளம் கொட்ட வரி சங்கம் நின்றூத
முத்துடைத் தாமம் நிரை தாழ்ந்த பந்தற்கீழ்
மைத்துனன் நம்பி மதுசூதன் வந்து என்னைக்
கைத்தலம் பற்றக் கனாக் கண்டேன் தோழீ! நான்
தோழீ! மத்தளங்கள் கொட்ட, கோடுகளை உடைய சங்குகள் விடாமல் ஊத, என்னை மணம் புரியும் அத்தை மகன், குறையில்லாத முழுமையின் இலக்கணமான மதுசூதனன், முத்துக்களால் நிறைந்த மாலைகள் தொங்கும் பந்தலின் கீழே வந்து என் கையைப் பற்றியதாகக் கனவு கண்டேன்.
அத்தை மகனையும் மாமன் மகனையும் மணம் செய்வது தமிழர் வழக்கம். ஆண்டாள் நப்பின்னையைப் போலவே தன்னையும் ஆச்சியர்களில் ஒருவராக, கண்ணனுக்கு முறை கொண்டாடுபவராக மாற்றிக் கொண்டு விட்டார்.
உரையாசிரியர்களுக்கு சந்தேகம். ஆண்டாள் பட்டர் பிரான் மகள். அவளுக்கு வேதம் ஒலிக்க மணம் செய்ய வேண்டியது தானே முறை? இங்கு வாத்தியங்களின் ஓசை கேட்கிறதே ஒழிய, வேதத்தின் பேச்சையே காணோமே? வேதமனைத்திற்கும் வித்து அவள் இல்லையா? அவனும் சந்தீப முனிவரிடம் வேதங்கள் அனைத்தையும் கற்றவன். அவன் ஏன் வேத ஒலி வேண்டும் என்று வலியுறுத்தவில்லை?
சந்தேகத்தை அவர்களே தீர்த்துக் கொள்கிறார்கள். ஆண்டாள் இங்கு ஆயர் சிறுமியாக நினைத்துக் கொள்கிறார். கண்ணன் மாடு பேய்ப்பவன். அவன் ஆசிரமம் சென்று பெரிய ஆளாக ஆகும் முன்னால் இந்தத் திருமணம் நடந்ததாம்!
பாணிக்கிரகணம் என்ற மணப்பெண்ணின் கையைப் பற்றும் சடங்கை கம்பனின் சீதையும் குறிப்பிடுகிறார். ‘வந்து எனைக் கரம் பற்றிய வைகல்வாய், இந்த, இப் பிறவிக்கு இரு மாதரைச் சிந்தையாலும் தொடேன் என்ற, செவ் வரம் தந்த வார்த்தை திருச் செவி சாற்றுவாய்,’ என்பது கம்பனின் வாக்கு.
வாய் நல்லார் நல்ல மறை ஓதி மந்திரத்தால்
பாசிலை நாணல் படுத்துப் பரிதி வைத்து
காய்சினமா களிறு அன்னான் என் கைப் பற்றி
தீ வலம் செய்யக் கனாக் கண்டேன் தோழீ! நான்
தோழீ! கற்றறிந்த வேதியர்கள் உயரிய வேத மந்திரங்களை உச்சரிப்புகளில் பிழை இல்லாமல் இசைக்க, பசுமையான இலைகளுடன் கூடிய நாணற்களைப் பரப்பி வைத்து சுள்ளிகளை இட்டு, பெருஞ்சினம் கொண்ட யானையின் மிடுக்கை உடைய கண்ணன் என் கையைப் பிடித்துக்கொண்டு தீ வலம் வந்ததை நான் கனவில் கண்டேன்.
அடுத்த பாடலிலேயே வேதம் வந்து விடுகிறது! அதைப் பற்றிப் பேசாத உரையாசிரியர்கள் ‘நல்ல மறை’ என்ற சொற்களைப் பிடித்துக் கொண்டுவிடுகிறார்கள். அது என்ன நல்ல மறை, கெட்ட மறை? வேதங்களின் முற்பகுதி இந்திரன் போன்ற தேவர்களையும் யாகங்களையும் பற்றிப் பேசுகின்றதாம். பிற்பகுதியில்தான் இறைவனைப் பற்றிய செய்தி வருகிறதாம் – புருஷ சூக்தம் போன்ற சுலோகங்களில். பிற்பகுதிதான் நல்ல மறை என்கிறார்கள்.
அக்கினியை வேகமாக வலம் வரக்கூடாதாம். யானை நடப்பது போல நிதானமாக சப்தபதி மந்திரத்தைச் சொல்லிக் கொண்டு வலம் வர வேண்டுமாம். அதனாலேயே பாடலில் கண்ணன் யானைக்கு ஒப்பிடப் படுகிறான்.
இப்பாடலின் கண்ணன் சந்தீப முனிவரிடம் வேதங்களைக் கற்றுத் தேர்ந்த கண்ணன்!
இம்மைக்கும் ஏழ் ஏழ் பிறவிக்கும் பற்றாவான்
நம்மை உடையவன் நாராயணன் நம்பி
செம்மை உடைய திருக்கையால் தாள் பற்றி
அம்மி மிதிக்கக் கனாக் கண்டேன் தோழீ! நான்
தோழீ! இந்தப் பிறவிக்கும் இனி எடுக்கக் கூடிய எண்ணற்ற பிறவிகளுக்கும் நாம் இறுக்கமாகப் பிடித்துக் கொள்பவனான நம் தலைவன், நிறைகுணத்தவன், நாராயணன், கண்ணன் தன் சிறப்புவாய்ந்த திருக்கையால் என் காலைப் பிடித்து அம்மியின் மேல் எடுத்துவைப்பதை நான் கனவில் கண்டேன்.
திருப்பாவையில் இற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் என்று சொன்னதையே இங்கு சொல்கிறார். மண்ணில் பல பிறவிகள் பிறந்து அவனையே மணாளனாக அடைய வேண்டும் என்பது ஆண்டாளின் ஆசை. ‘மாமேகம் சரணம் வ்ரஜ’ என்று கீதையில் தன் காலைப் பிடிக்குமாறு சொன்னவன் அவனிடம் சேர்ந்ததும் பக்தர்கள் கால்களை பிடிக்க ஆர்வம் காட்டுவான். பக்தர்களின் கால்களைப் பிடிக்கக் கூட தயங்காதவன் அவன். பிராட்டியின் காலைப் பிடிக்க மாட்டானா?
யாகங்களைச் செய்து கொண்டிருந்தால் ஒரு தடவை மழை பெய்து நின்று விடுவது போல பலன்கள் நீடிக்காதாம். ஆனால் அவன் பெயரைச் சொல்லிக் கொண்டிருந்தால் கணக்கற்ற பிறவிகளுக்குப் பலங்களைப் பெறலாம்.
வரிசிலை வாள் முகத்து என்னைமார் தாம் வந்திட்டு
எரி முகம் பாரித்து என்னை முன்னே நிறுத்தி
அரி முகன் அச்சுதன் கைம்மேல் என் கை வைத்து
பொரி முகந்து அட்டக் கனாக் கண்டேன் தோழீ! நான்
தோழீ! வில்லினை ஒத்த புருவங்களையும் மிளிரும் முகங்களையும் கொண்டவர்களான என் தமையனார்கள் வந்து கொழுந்து விட்டு எரியும்படி வளர்த்த தீயின் முன் என்னை நிறுத்தி சிங்கம் போன்ற கம்பீரமான முகத்தைக் கொண்ட அச்சுதன் தன திருக்கையின் மேலே என்னுடைய கையை வைத்து பொரிகளை அள்ளி நெருப்பில் படைப்பதாக நான் கனவில் கண்டேன்.
இது லாஜஹோமம் என்ற ஓமச் சடங்குகளைக் குறிக்கிறது. அரிசிப் பொரிகளைத் தீயில் இடுதல். அவன் கையை இவர் கையின் மீது வைப்பது அவளை என்றும் விட மாட்டேன் என்று உறுதியளிப்பதைக் குறிக்கிறது.
குங்குமம் அப்பிக் குளிர்சாந்தம்மட்டித்து
மங்கல வீதி வலம் செய்து மண நீர்
அங்கு அவனோடும் உடன் சென்று அங்கு ஆனை மேல்
மஞ்சனம் ஆட்டக் கனாக் கண்டேன் தோழீ! நான்
தோழீ! குங்குமத்தை உடம்பெல்லாம் பூசிக் கொண்டு குளிர்ந்த சந்தனத்தையும் நன்றாகத் தடவிக் கொண்டு, கண்ணனுடன் அலங்கரிக்கப்பட்ட வீதிகளிலே யானை மீது ஊர்வலம் வந்து பின்னால் நாங்கள் நீராட்டப்படுவதாக நான் கனவில் கண்டேன்.
ஆயிரம் யானை சூழ வந்தவன், இவளோடு ஒரு யானை போதும் என்று வருகிறான். நீராட்டப் படுவது இருவரும் கூடிய பிறகு நடக்கிறது என்று உரையாசிரியர்கள் சொல்கிறார்கள்.
ஆயனுக்காகத் தான் கண்ட கனாவினை
வேயர் புகழ் வில்லிபுத்தூர்க் கோன் கோதை சொல்
தூய தமிழ் மாலை ஈரைந்தும் வல்லவர்
வாயு நன்மக்களைப் பெற்று மகிழ்வரே
அந்தணர்களால் புகழப்பட்ட வில்லிபுத்தூர்க்குத் தலைவரான பெரியாழ்வாருடைய மகளாகிய ஆண்டாள் தான் கண்ணனை மணம் செய்து கொண்ட கனவினைப் பற்றிப் பேசும் தூய்மையான இப்பத்துத் தமிழ் பாட்ல்களை நன்றாகச் சொல்ல வல்லவர்கள் நல்ல குணங்கள் கொண்ட பிள்ளைகளைப் பெற்று மகிழ்ச்சி அடைவார்கள்.
December 29, 2022
ஆறாம் திருமொழி – 1
ஆறாம் திருமொழியின் முதல் பாடலான வாரணமாயிரம் தமிழ் அறிந்தவர்கள் அனைவருக்கும் அறிமுகமான பாடல். ஆண்டாளின் நாச்சியார் திருமொழியே பெருங்கனவு. அக்கனவிற்குள் கண்ட உட்கனவில் பிறந்தவை ஆறாம் திருமொழியின் பாசுரங்கள். வைணவத் திருமணங்களில் தவறாமல் பாடப்படுபவை.
“பகவானுக்கு இடாத அன்னமும், வாரணம் ஆயிரம் பாடப்படாத திருமணமும்” எந்தப் பயனையும் தராது என்று வைணவர்கள் நம்புகிறார்கள். வாரணம் ஆயிரம் பாசுரங்கள் திருமணத்தில் பாடப்படும் நிகழ்ச்சியை “சீர் பாடல்” என்று அவர்கள் அழைக்கிறார்கள். பாடல்கள் பாடப்படும் போது மணமகனும் மணமகளும் எதிர் எதிரே உட்கார்ந்து கொண்டு மஞ்சள் தடவிய தேங்காய்களை உருட்டி விளையாடுவார்கள்.
ஆண்டாள் பாசுரங்களில் சொல்லப்படும் திருமண முறைக்கும் சங்ககாலத் திருமண முறைக்கும் தொடர்பே இல்லை என்று சொல்லலாம். இதற்கு ஒரு காரணம் ஆண்டாள் சொல்லும் திருமண முறை பிராமணர்களிடையே மட்டும் பழக்கத்தில் இருந்ததால் என்று சொல்லலாம். வையாபுரிப் பிள்ளை “பாணிக்கிரகணம், ஓமம் தீவலம் வருதல். சப்தபதி முதலியன சங்ககாலத்தில் நிகழ்ந்தன அல்ல. புரோகிதர்கள் மந்திரம் ஓதுதலும் மணவினையில் இல்லை என்றே கூறலாம். தாலிகட்டும் சடங்கும் காணப்படவில்லை’ என்கிறார். ஆனாலும் மு சண்முகம் பிள்ளை ‘ஆரம் தாங்கிய அலர் முலை ஆகத்துப் பின் அமை நெடு வீழ் தாழ’ என்ற நெடுநல்வாடை வரிகளுக்கு ‘முன்பு முத்தாற் செய்த கச்சு சுமந்த பருத்த முலையினுடைய மார்பிடத்தே இப்பொழுது குத்துதல் அமைந்த நெடிய தாலி நாண் ஒன்றுமே தூங்க’என்ற் நச்சினார்க்கினியர் உரையைக் குறிப்பிட்டு சங்ககாலத்திலும் தாலி அணியும் மரபு இருந்தது என்று எடுத்துக் கொள்ளலாம் என்கிறார்.
சங்ககாலத் திருமணங்களில் நல்ல நாள் பார்த்தல், சோதிடம் பார்த்தல், மணமகளுக்குப் பரிசம் கொடுத்தல், சிலம்பு கழற்றுதல், வீட்டை அலங்கரித்து செம்மண் பூசி மாலைகளைத் தொங்கவிடுதல், புதுமணல் பரப்புதல், விளக்குகளை வைத்தல், இல்லுறை தெய்வங்களுக்குச் சிறப்பு செய்தல், முழவை முழக்கி, சுற்றம் கூட, நீராடி, புத்தாடை அணிந்து திருமணச் சடங்குகளைத் துவக்குதல், உளுந்து கலந்த சோறும் இறைச்சி கலந்த வெண்சோறும் அளித்தல் போன்றவை நடைபெற்றதாக நாம் சங்கப் பாடல்களிலிருந்து அறிகிறோம்.
சிலப்பதிகாரம் ‘மாமுது பார்ப்பான் மறைவழி காட்டிடத் தீவலஞ் செய்வது காண்பார்கண் நோன்பென்னை’ என்று மரபு வழியில் கண்ணகியின் திருமணம் நடந்ததைப் பேசுகிறது. இடைப்பட்ட காலத்தில் முறைகள் மாறிவிட்டன போட்லும்.
ஆண்டாள் உண்மையிலேயே கண்ணனோடு சேர்வோம் என்று நினைக்கிறாரா? அல்லது இவையெல்லாம் கனவிலேயே முடிந்து விடும் என்று கருதுகிறாரா? மனித மனம் எளிதில் கிட்டாத ஒன்றைப் பற்றி கனவு காணும் போது அதற்கும் தனக்கும் உள்ள இடைவெளியை நினைப்பதை மறப்பதில்லை.
இந்த அன்னா அக்மதோவாவின் கவிதையைப் படியுங்கள்
In Dream
Black and enduring separation
I share equally with you.
Why weep? Give me your hand,
Promise me you will come again.
You and I are like high
Mountains and we can’t move closer.
Just send me word
At midnight sometime through the stars.
கரிய, தொடரும் பிரிவை
நான் உன்னுடன் சரிபாதியாகப் பகிர்ந்துள்ளேன்.
ஏன் அழ வேண்டும்? கையைக் கொடு
வருவேன் என்ற உறுதிமொழியை அளி.
நீயும் நானும்
பெரிய மலைகள் போன்றவர்கள்.
என்றும் நெருங்க முடியாதவர்கள்
நடு இரவில் நட்சத்திரங்கள்
வழியே உன் செய்தியை அளி.
ஆண்டாளின் கவிதைகள் முழுவதும் நடு இரவில் நட்சத்திரங்களில் வழியே அளிக்கப்பட்ட செய்திகளாக இருக்கின்றன என்று எனக்குத் தோன்றுகிறது. ஆனால் இங்கு இவள் அனுப்புகிறாள். அவன் பதிலளிக்கத் தயங்குகிறான்.
ஆண்டாள் காமனிடம், சின்னக் கண்ணனிடம், இளைய கண்ணனிடம், கூடலிடம் மற்றும் குயிலிடம் பேசிப் பார்த்து விட்டாள். இப்பாசுரங்களில் தோழியிடம் பேசுகிறாள். செய்தி எவ்வாறாவது அவனிடம் சேர வேண்டும்.
இனி பாடல்கள்:
வாரணம் ஆயிரம் சூழ வலம் செய்து
நாரண நம்பி நடக்கின்றான் என்றெதிர்
பூரண பொற்குடம் வைத்துப் புரம் எங்கும்
தோரணம் நாட்டக் கனாக் கண்டேன் தோழீ! நான்
தோழீ! எல்லா உயரிய குணங்களையும் நிரம்பப் பெற்றவனான நாராயணன் ஆயிரம் யானைகள் சூழ வலம் வருகிறான். அவனை வரவேற்பதற்க்காக, பொன்னால் ஆன குடங்களை வைத்து ஊர் எங்கும் தோரணங்கள் நாட்டியிருப்பதை என் கனவில் கண்டேன்.
உரையாசிரியர்கள் இறைவனின் பாராமுகத்தை வேறு விதமாகப் பார்க்கிறார்கள். வெளுத்த புடவையில் சிறிது சிறிதாகச் சாயம் ஏற்றுவதைப்போல பக்தியை உவ்வுலகில் ஏற்றினால் பின்னால் பரமபதத்தில் அவனோடு இருப்பது இயல்பாக இருக்கும். அதனால்தான் அவன் நம்மாழ்வாரிடமே உடனே வருவதற்குத் தயக்கம் காட்டினான். ஆண்டாள் பூமிப் பிராட்டியின் அவதாரம் ஆயிற்றே அவருக்கு ஏன் சாயம் என்றால், மண்ணில் பிறந்து விட்டால் மனிதர்களுக்கு என்ன நியாயமோ அதுதான் அவருக்குமாம். ஆனாலும் பிராட்டி. கனவிலாவது அவருக்கு நம் அனுபவத்தைக் கொடுப்போம் என்று நினைத்தானாம்.
ஆயிரம் யானைகள் ஏன்? ‘தன்னேராயிரம் பிள்ளைகளோடு தளர் நடையிட்டு வருவான்’ என்று ஆண்டாளின் தந்தையான பெரியாழ்வார் சொன்னார். இப்போது அவர்களும் வளர்ந்து விட்டார்கள். கண்ணனின் பெருமையைப் பறை சாற்றுவதற்காக யானைகள் மீது ஏறி வருகிறார்கள்.
நாளை வதுவை மணம் என்று நாள் இட்டு
பாளை கமுகு பரிசுடைப் பந்தற் கீழ்
கோள் அரி மாதவன் கோவிந்தன் என்பான் ஓர்
காளை புகுதக் கனாக் கண்டேன் தோழீ! நான்
தோழீ! நாளை மணப் பெண்ணாகிய நான் அவனை மணம் புரியும் நன்னாள் நாளை(என்று பெரியவர்கள் நிச்சயத்திருக்கின்றனர்). பாளைகள் கொண்ட பாக்கு மரங்களால் அலங்கரிக்கப் பட்ட திருமணப் பந்தலின் கீழே நரசிம்மன் என்றும் மாதவன் என்றும் கோவிந்தன் என்றும் பெயர்களைக் கொண்ட இளைஞன் ஒருவன் நுழைவதை நான் கனவில் கண்டேன்.
நாளையே ஏன் என்றால் அடுத்த இரவைக்கூட அவளால் தாங்க முடியாது. பிரகலாதன் தூணிலும் இருப்பான் என்று சொல்லிய உடனே நரசிம்மாக, செங்கட் சீயமாக, தூணில் தோன்றி அவன் வார்த்தையைக் காப்பாற்றினான். ஆனால் நான் இன்று நாளை என்று கனவுதான் கண்டுக் கொண்டிருக்கிறேன் என்று ஆண்டாள் சொல்கிறார் என்று தோன்றுகிறது.
இந்திரன் உள்ளிட்ட தேவர் குழாம் எல்லாம்
வந்திருந்து என்னை மகள் பேசி மந்திரித்து
மந்திரக் கோடி உடுத்தி மண மாலை
அந்தரி சூட்டக் கனாக் கண்டேன் தோழீ! நான்
தோழீ! இந்திரன் அடங்கிய தேவர்களின் குழு இங்கே வந்து என்னை மணப் பெண்ணாக ஏற்றக் கொண்டு செய்ய வேண்டியவற்றைப் பற்றி ஆலோசனைகள் செய்தனர். துர்க்காதேவி – என் நாத்தனார் – கூறைப் புடவையை நான் உடுத்தும்படி செய்து, மாலைகளையும் சூட்டி அழகு பார்த்தார் எனக் கனவு கண்டேன்.
அந்தரி என்றால் வானத்தில் பறக்கக் கூடியவள். துர்க்கை. ஆண்டாளுக்குத் திருமணம் செய்யப் பறந்து வந்திருக்கிறாள். இவள் தான் பெண் என்று தீர்மானித்து முதலிலேயே கூறைப்புடவையை அவளே வாங்கி வந்து விட்டாளாம்
நால் திசைத் தீர்த்தம் கொணர்ந்து நனி நல்கி
பார்ப்பனச் சிட்டர்கள் பல்லார் எடுத்தேத்தி
பூப்புனை கண்ணிப் புனிதனோடு என்தன்னை
காப்பு நாண் கட்டக் கனாக் கண்டேன் தோழீ! நான்
தோழீ! பிராமணோத்தமர்கள் பலர் நான்கு திசைகளிலும் இருந்து புனித நீரைக் கொண்டு வந்து நன்றாகத் தெளித்து உச்சமான குரலில் வாழ்த்துகளைச் சொல்லிப் பூக்களால் நெருக்கமாகக் கட்டப்பட்ட மாலையை அணிந்தவனான தூயவனான கண்ணனோடு என்னை இணைத்து காப்புக் கயிறு கட்டுவதை நான் கனவில் கண்டேன்.
சிட்டர் என்றால் சிரேஷ்டர். உயர்ந்தவர்கள்.
கதிரொளி தீபம் கலசம் உடன் ஏந்தி
சதிர் இளமங்கையர் தாம் வந்தெதிர் கொள்ள
மதுரையார் மன்னன் அடி நிலை தொட்டு எங்கும்
அதிரப் புகுதக் கனாக் கண்டேன் தோழீ! நான்
தோழீ! அழகிய இளநங்கைகள் கதிரவனைப் போல ஒளி வீசும் விளக்குகளையும் பொற்கலசங்களையும் கைகளில் ஏந்திக்கொண்டு, எதிர் கொண்டு அழைக்க, வடமதுரை மன்னனான கண்ணன் பாதுகைகளை அணிந்துகொண்டு பூமி அதிரும்படி வந்ததை நான் கனவில் கண்டேன்.
பரமபதத்தைப் பக்தர்கள் அடையும் போது “நிறை குட விளக்கமும் மதி முக மடந்தையர் ஏந்தினர் வந்தே” என்று நம்மாழ்வார் சொல்கிறார். எனவே கண்ணனுக்கு பூமியில் பரமபத வரவேற்பு போல வரவேற்பு நடக்கிறதாம். ‘மன்னு வடமதுரை மைந்தனை’ என்று ஆண்டாள் திருப்பாவையில் பாடினார். இன்று அவன் வடமதுரையின் மன்னனாக ஆகி விட்டான். பூமி அதிர வேகமாக வந்தானாம். ஆண்டாளைச் சேரும் ஆசையில். அவனுக்கு உண்மையில் என்னை விட ஆசை என்கிறார் ஆண்டாள்.
December 28, 2022
ஐந்தாம் திருமொழி – 2
எத்திசையும் அமரர் பணிந்து ஏத்தும் இருடீகேசன் வலி செய்ய
முத்தன்ன வெண்முறுவல் செய்ய வாயும் முலையும் அழகழிந்தேன் நான்
கொத்தலர் காவில் மணித்தடம் கண்படை கொள்ளும் இளங்குயிலே! என்
தத்துவனை வரக் கூகிற்றியாகில் தலை அல்லால் கைம்மாறிலேனே
பூக்கள் கொத்துக் கொத்தாக மலரும் சோலையில் உனக்கு உகந்த இடம் ஒன்றைத் தேர்ந்தெடுத்து அங்கு சுகமாக உறங்குகின்ற இளங்க்குயிலே! எத்திசையிலும் இருக்கும் தேவர்கள் வணங்கிப் போற்றும் பெருமை பெற்ற இருடிகேசன் – எல்லா உலகங்களிலும் இருப்பவர்களின் எல்லா அவயவங்களையும் காக்கும் தலைவன் – என் முன்னால் வரமாட்டேன் என்ற மிடுக்கோடு இருந்து எனக்கு மிகுந்த வலியை அளிக்கிறான். என் முத்துக்கள் அனைய முறுவல் காணாமல் போய் விட்டது. சிவந்த வாய் சாம்பலுற்று விட்டது. என மார்பகங்கள் அவற்றின் ஈர்ப்பை இழந்து விட்டன. மொத்தத்தில் நான் அழகழிந்து போய் விட்டேன். ஆனாலும் உயிரோடு இருக்கிறேன் – அவனுக்காக. அவ்வெம்பெருமானை இங்கே வரும்படி நீ கூவு. உன் கூவலைக் கேட்டு அவன் வந்தான் என்றால், என் தலை உன் கால்களில் எப்போதும் பணிந்து இருக்கும் . இதை விடப் பெரிய கைம்மாறு என்னிடம் இல்லை.
அவனுக்காகவே அழகாகப் பிறந்தேன். அவனே வராமல் அழகை அழிக்கிறான். எல்லாவற்றையும் காப்பவன் என்று அவனுக்குப் பெயர் இருப்பது அதிசயம்தான். தத்துவன் என்று ஆண்டாள் சொல்வது அவருடைய ஸத்தைக்குக் காரணாமானவன் என்று உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். அதாவது அவளுடைய இருத்தலுக்குக் காரணமானவன்.
நீ இருக்கும் வரை நான் இருப்பேன். அவ்வளவு சீக்கிரம் தோற்றுவிடுவேன் என்று நினைக்காதே என்றும் ஆண்டாள் சொல்லாமல் சொல்கிறார். சீதைக்கு முன்னால் ராமனைப் போன்ற தோற்றத்தை ராவணன் மாயையினால் சமைத்து அதைக் கொன்றான. சீதை கதறினாரே தவிர உயிரை விடவில்லை. காரணம் அவன் இல்லையென்றால் தன் உயிர் இருக்காது என்ற உறுதி.
பூமிதனில் யார்க்கும் அடிமை செய்யோம் பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்வோம் என்று பாரதி பாடினார். இங்கு ஆண்டாள் பரிபூரணனுக்காக ஒரு குயிலுக்கே அடிமை செய்யத் தயாராக இருக்கிறார்!
பொங்கிய பாற்கடல் பள்ளி கொள்வானைப் புணர்வதோர் ஆசையினால் என்
கொங்கை கிளர்ந்து குமைத்துக் குதுகலித்து ஆவியை ஆகுலம் செய்யும்
அங்குயிலே! உனக்கென்ன மறைந்துறைவு? ஆழியும் சங்கும் ஒண்தண்டும்
தங்கிய கையவனை வரக் கூவில் நீ சாலத் தருமம் பெறுதி
அழகே உருவான குயிலே! நீ மறைந்து, குரல் மட்டும் இடுவதால் என்ன பயன்? அலை மிகுந்த திருப்பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பவனோடு கூட வேண்டும் என்ற ஆசையால் எனது முலைகள் உயிர் பெற்றுப் பருத்து இன்பமுறுகின்றன. ஆனால் உயிரை உருக்கி என்னைக் கலங்கச் செய்கின்றன. சங்கையும் சக்கரத்தையும் கதையையும் தாங்கிக் கொண்டிருக்கின்ற கைகளை உடைய எம்பெருமான் இங்கே வரும்படி நீ கூவு. அவ்வாறு செய்தால் உன்னை விடத் தருமம் செய்தவர்கள் உலகத்திலேயே யாரும் இருக்க மாட்டார்கள்.
சென்ற பாடலில் தளர்ந்த மார்பகங்களைப் பற்றிச் சொன்னவர் இப்பாடலில் திமிர்ந்தெழுந்த மார்பகங்களைப் பற்றிப் பேசுகிறார்! ‘பெருங்காதல் இருந்தாலும் பெண்களுக்கு அடக்கம் வேண்டும்’ என்று பெரியவர்கள் சொன்னது எனக்குத் தெரியும் ஆனால் என் மார்பகங்களுக்குத் தெரியவில்லையே’ என்று ஆண்டாள் சொல்கிறாராம்.
அன்று சீதை சொன்னார்:
பாழிய பணைத் தோள் வீர ! துணை இலேன் பரிவு
தீர்த்த
வாழிய வள்ளலே !யான் மறு இலா மனத்தேன்
என்னின்,
ஊழி ஓர் பகலாய்ஓதும் யாண்டு எலாம், உலகம்
ஏழும்
ஏழும் வீவுற்றஞான்றும், இன்று என இருத்தி’
என்றாள்.’
தன் துன்பத்தைப் போக்கிய அனுமனுக்கு அழியா வாழ்க்கையைக் கொடுத்தார். அதே போல குயிலிடமும் ஆண்டாள் நீ செய்த தருமம் உன்னை நீடுழி வாழ வைக்கும் என்கிறார்.
ஆண்டாள் கவிதைகள் இருக்கும் வரை குயிலும் இருக்கும். இரண்டும் நீடூழி வாழும் என்பது உறுதி.
சார்ங்கம் வளைய வலிக்கும் தடக்கைச் சதுரன் பொருத்தம் உடையன்
நாங்கள் எம்மிலிருந்து ஒட்டியகச்சங்கம் நானும் அவனும் அறிதும்
தேங்கனி மாம்பொழில் செந்தளிர் கோதும் சிறு குயிலே! திருமாலை
ஆங்கு விரைந்து ஒல்லை கூகிற்றியாகில் அவனை நான் செய்வன காணே
தேன் போன்று சுவைக்கும் பழங்களையுடைய மாமரத்தின் சிவந்த தளிர்களை அலகால் கொத்துகின்ற சிறுயிலே! சார்ங்கம் என்னும் வில்லை வளைத்து இயக்கும் திறன் படைத்த கைகளை உடைய அந்தச் சாதுரியம் மிக்கவன் காதலிலும் கில்லாடி. அவனும் நானும் சேர்ந்திருக்கும் சமயத்தில் எங்களுக்குள் யாருக்கும் தெரியாமல் செய்துகொண்ட உறுதிமொழியை நாங்கள் இருவருமே அறிவோம். தொலைவில் இருக்கும் திருமாலை விரைவாக நீ கூவி அழைக்கவில்லை என்றால் அவனை நான் என்னபாடு படுத்தப்போகிறேன் என்பதை நீயே பார்ப்பாய்.
உண்மையிலேயே கூவுதல் வருதல் தொலைவில் வில்லிபுத்தூர் வடபத்ரசாயியாக இருந்தவன் இப்போது தொலைவில் போய் விட்டான். அது அவன் செய்யும் மாயம்.
கச்சங்கம் என்றால் ஒப்பந்தம். கச்சு பிணைப்பது போலப் பிணைப்பது. இங்கு ஆண்டாள் தன்னை சீதையாகக் கருதிக் கொள்கிறார். அனுமனிடம் சீதை சொன்னது போல இருவருக்கும் இடையே நிகழ்ந்ததைக் குயிலிடம் சொல்கிறார். ‘அவன் வராமல் போக மாட்டான். பல நாட்கள் கழித்து வந்தான் என்றால் நான் முகம் கூடக் காட்ட மாட்டேன். பசியில் வருபவன் முன் சோற்றை வைத்து அதை உண்ணக் கூடாது என்று சொன்னால் அவன் படும் பாட்டை விட இவன் படும் பாடு அதிகம் இருக்கும்’ என்கிறார்.
பைங்கிளி வண்ணன் சிரீதரன் என்பதோர் பாசத்து அகப்பட்டிருந்தேன்
பொங்கொளி வண்டிரைக்கும் பொழில் வாழ் குயிலே! குறிக்கொண்டு இது நீ கேள்
சங்கொடு சக்கரத்தான் வரக் கூவுதல் பொன்வளை கொண்டு தருதல்
இங்குள்ள காவினில் வாழக் கருதில் இரண்டத்தொன்றேல் திண்ணம் வேண்ட
பேரொளி வீசும் வண்டுகள் இசை பாடும் சோலையில் வாழும் குயிலே! நான் சொல்லுவதை நீ கவனத்தோடு கேள். பச்சைக்கிளி போன்ற நிறத்தையுடையவனான ஸ்ரீதரன் (திருமகள் கணவன்) என்ற மீளா வலையிலே சிக்கித் தவிக்கிறேன். இச் சோலையில் நீ இருக்க வேண்டும் என்று நினைத்தாயென்றால் ஆழியும் சங்கும் உடைய அவன் இங்கே வரும்படி அழைக்கக் கூவு. இல்லையேல் நான் இழந்த பொன் வளையல்களை மீட்டுத்தா. இவை இரண்டுள் ஏதாவது ஒன்றை நீ செய்தே ஆக வேண்டும்.
இங்கு ஆண்டாள் சொல்வது கவித்துவத்தின் உச்சம்.
அவர் பொன்வளைகளை ஏன் இழந்தார்? பிரிவினால். அவர் கைகள் மெலிந்ததால். வராவிட்டால் மெலிதல் கூடுமே தவிர குறையாது. எனவே வளைகள் தங்காது. கைகள் அவன் வந்தால் பூரிப்பு அடையும். வளைகள் தங்கும்! எனவே ஆண்டாள் குயிலுக்கு இரண்டுள் ஒன்று என்று ஏதும் தரவில்லை. ஒன்றையே இரண்டாகக் கூறுகிறார். அவனைக் கூட்டி வருவதைத் தவிர உனக்கு வேறு வழியில்லை என்கிறார்.
பத்தாம் பாசுரம். எம்பெருமான் இங்கே வரும்படி நீ கூவாமல் இருந்தால் உனக்கு தண்டனை கொடுப்பேன் என்கிறாள்.
அன்றுலகம் அளந்தானை உகந்து அடிமைக்கண் அவன் வலி செய்ய
தென்றலும் திங்களும் ஊடறுத்து என்னை நலியும் முறைமை அறியேன்
என்றும் இக்காவில் இருந்திருந்து என்னைத் ததைத்தாதே நீயும் குயிலே!
இன்று நாராயணனை வரக் கூவாயேல் இங்குத்தை நின்றும் துரப்பன்
குயிலே! நான் சொல்வதைக் கேட்காமல் சோலையில் இருக்கிறேன் என்பதை கூவி அறிவித்துக் கொண்டு என்னைத் துன்பம் அடையச் செய்கிறாய். அன்று இவ்வுலகை அளந்தானுக்கு இன்று தொண்டு செய்ய நான் ஆவலாக இருக்கிறேன். அவன் முகத்தைத் திருப்பிக் கொண்டு என்னைத் துன்புறுத்துகிறான். இப்போது தென்றலும் வானில் ஒளிரும் முழுமதியும் அவனோடு சேர்ந்து கொண்டு துன்புறுத்துகின்றன. துன்பமோ துன்பம் தவிர வேறு ஏதும் அறிந்திலேன். இன்று நாரயணனை இங்கே வரும்படி நீ கூவாமல் இருந்தால், சோலையில் இருந்தே உன்னை விரட்டிவிடுவேன்.
ஆண்டாள் எல்லாம் சொல்லிப் பார்த்தார். குயில் மசிவதாகத் தெரியவில்லை. கடைசியாக உன்னையே விரட்டி விடுவேன் என்கிறார். ‘அவன் தரும் துன்பத்தையும் தென்றல் மற்றும் திங்கள் தரும் துன்பத்தையும் போக்கும் திறன் என்னிடம் இல்லை. ஆனால் நீ இங்கிருந்து கூவுவதால் ஏற்படும் துன்பத்தை நிச்சயம் போக்க முடியும். மூன்றில் ஒன்றாவது குறையும்’ என்கிறார்.
விண்ணுற நீண்டு அடி தாவிய மைந்தனை வேற்கண் மடந்தை விரும்பி
கண்ணுற என் கடல் வண்ணனைக் கூவு கருங்குயிலே! என்ற மாற்றம்
பண்ணுறு நான்மறையோர் புதுவை மன்னன் பட்டர்பிரான் கோதை சொன்ன
நண்ணுறு வாசக மாலை வல்லார் நமோ நாராயணாய என்பாரே
‘கரிய குயிலே! விண்ணையும் தொடும் அளவிற்கு காலை நீட்டி அளந்த கடல் வண்ணனாகிய கண்ணனை நான் விரும்பிப் பார்க்கும்படிக் கூவுவாயாக’ என்று வேல் போன்று நீண்ட கண்களை உடைய ஆண்டாள் பாடினார். அவர் இசையோடு வேதங்களைப் பாடக் கூடிய அந்தணர் வாழும் வில்லிபுத்தூர் பட்டர் பிரானின் புதல்வி கோதை. அவர் சொன்ன பாடல்களைப் பாட வல்லார்கள் என்றும் நமோ நாராயணாய என்று வைகுந்தத்தில் பல்லாண்டு பாடும் பேற்றைப் பெறுவார்கள்.
December 27, 2022
ஐந்தாம் திருமொழி -1
கண்ணனிடம் சென்று தான் படும் துன்பங்களைக் கூறுமாறு ஆண்டாள் இத்திருமொழியில் குயிலிடம் வேண்டுகிறார.
அழகிய குரல் கொண்ட பறவைகள் கவிஞர்களை அதிகம் ஈர்த்திருக்கின்றன. உதாரணமாக, ஷெல்லியில் To a Skylark உலகப் புகழ் பெற்றது. ஸ்கைலார்க் என்ற பறவையின் குரலைக் கேட்டு மயங்கிய அவர் தன் கவிதையில் சொல்கிறார்:
Hail to thee, blithe Spirit!
Bird thou never wert,
That from Heaven, or near it,
Pourest thy full heart
In profuse strains of unpremeditated art.
கட்ட்டற்ற ஆன்மாவே! உனக்கு வாழ்த்துக்ள்!
நீ என்றும் பறவையாக இருந்ததில்லை
சுவர்க்கத்திலிருந்தோ அதன் அருகாமையிலிருந்தோ
உன முழு இருதயத்தையும் உருக்கித் தருகிறாய்
வளமான இசையில் இயல்பாகவே பிறந்த கலை நயத்துடன்
மேலும் சொல்கிறார்:
Like a Poet hidden
In the light of thought,
Singing hymns unbidden,
Till the world is wrought
To sympathy with hopes and fears it heeded not:
எண்ணத்தின் ஒளியில்
மறைந்திருக்கும் கவிஞன் போல்
தானாகவே பாடல்களை இசைக்கிறாய்
இன்று வரை உன்னைக் கவனிக்காத உலகு
உன் ஆசைகளையும் அச்சங்களையும் அன்போடு பார்க்கும் வரை.
சமஸ்கிருதத்தில் ஹம்ச சந்தேசம் வேதாந்த தேசிகரால் இயற்றப்பட்டது. அது சீதையைப் பிரிந்த ராமன் அன்னம் ஒன்றை தூது விடுவதைக் கூறுகிறது. அதில் அழகிய பாடல் ஒன்று. ராமன் கூறுவது:
அழகியே! விதியின் பிழையால் நீ என்னை விட்டுப் பிரிந்து தொலைவில் இருக்கிறாய். இருந்தாலும் உன்னை மேனியைத் தொட்ட காற்று என்னைத் தொடுகிறது. நான் காணும் சந்திரனைத்தான் நீ பார்க்கின்றாய். நம் பார்வை ஒன்றானது. பேரண்டம் என்ற இந்த பெரிய வீட்டில் நாம் வாழ்கிறோம். பூமி என்ற கட்டிலில்தான் நாம் இருவரும் படுத்திருக்கிறோம். நான் வானில் பார்க்கும் தாரகைகள் நம் கட்டிலின் விதானத்தில் (மேற்கூரை)பதித்திருக்கும் ரத்தினங்கள். இச்சிந்தனைகள்தாம் எனக்கு சிறிது ஆறுதலை அளிக்கின்றன.
சமஸ்கிருதத்தில் கோகில சந்தேசம் (குயிலின் தூது) என்ற நூல் ஒன்றும் இருக்கிறது 15ம் நூற்றாண்டில் கொச்சியில் வசித்த தமிழ் பிராமணர் ஒருவரால் இயற்றப்பட்டது. பெயர் உத்தண்ட சாஸ்திரி. அவர் எழுதிய நூலின் நாயகன் ஒரு நாள் திடீரென்று காஞ்சிபுரத்தில் விழித்தெழுகிறார். கேரளத்தில் சேந்தமங்கலம் என்ற இடத்தில் இருக்கும் தன் மனைவிக்கு குயிலிடம் செய்தி சொல்லுமாறு பணிக்கிறார். சில கவிதைகள் வியக்க வைப்பன.
அன்றொரு நாள்
அழகிய தோட்டத்தில்
இளைய மாமரம்
கிளைகளைக் கைகளாக்கி
கணக்கற்ற கொடிகளை
அணைப்பதைப் பார்த்தாய்
கோபத்தில் முகத்தைத் திருப்பிக் கொண்டாய்
கீழ் உதடு துடிக்க
கண்ணீர் பொங்கும் ஓரக்கண்களால்
என்னை முறைத்தாய்!
புகழேந்திப் புலவரின் நள வெண்பாவில் அன்னமே நளனிடம் தமயந்திதான் உனக்கு ஏற்றவள் என்று சொல்லி இருவருக்கும் இடையே தூது செல்கிறது.
திசைமுகந்த வெண்கவிகைத் தேர்வேந்தே உன்றன்
இசைமுகந்த தோளுக் கிசைவாள் – வசையில்
தமையந்தி என்றோதும் தையலாள் மென்தோள்
அமையந்தி என்றோர் அணங்கு.
உன் தோளுக்கு ஏற்றவள் மென்மையான தோள்களை உடைய மூங்கில் அழகி என்ற பெயர் பெற்ற தமயந்திதான் என்று நளனிடம் சொல்கிறது.
அழகர் கிள்ளை விடு தூது பலபட்டைச் சொக்கநாதப் புலவர்
எவ்வண்ணமாய்ப் பறக்கும் எப்பறவை ஆயினும்உன்
ஐவண்ணத் துள்ளே அடங்குமே – மெய்வண்ணம்
பார்க்கும் பொழுதில்உனைப் பார்ப்பதிஎன்பார் என்றோ
மூக்குச் சிவந்தாய் மொழிந்திடாய்
பார்ப்பதி என்றால் பார்வதி. உனக்கும் பச்சை நாயகிக்கும் இடையே உள்ள வேறுபாடு உன் மூக்குதான். அது சிவந்திருக்கும் என்கிறார் சொக்கநாதர்.
பாரதியின் குயில் பாட்டு தூது இலக்கியம் என்று சொல்ல முடியாது. ஆனாலும் அது காதலைப் போற்றுகிறது, “காதல் காதல் காதல்/காதல் போயின் காதல் போயின்/ சாதல் சாதல் சாதல்” என்பதைத்தான் ஆண்டாளும் சொல்கிறார். என் உயிர் போகாமல் இருப்பதற்குக் காரணமே காதல் என்கிறார்.
ஆண்டாள் குயிலின் பாடலைக் கேட்டிருக்கிறார். ஷெல்லிக்கு ஸ்கைலார்க்கின் குரலே கவிதை. ஆண்டாளின் குயில் அவரை அழியாக் கவிதை பாட வைக்க்கிறது. ஆனால் அவர் குயிலைப் பார்த்திருக்கிறாரா? உரையாசிரியர்கள் பார்த்துக் காலில் விழுகிறார்கள் என்கிறார்கள். எனக்கென்னவோ பார்க்கவே இல்லை என்றுதான் தோன்றுகிறது. மறைந்திருந்து வாழும் குயிலே என்று அவரெ ஒரு பாட்டில் சொல்கிறார். ஒருவேளை அது அவர் உள்ளத்தின் குயிலாக இருக்கலாம். நான் முன்பே கூறியபடி ஆண்டாளின் உலகம் அகவுலகம்.
கூடலிழைத்துப் பார்த்தார். அது அசையாப் பொருள்.அது வருவான் என்று ஒரு தடவை சொன்னது. வரமாட்டான் என்று மற்றொரு தடவை சொன்னது. இப்போது குயிலின் உதவியை நாடுகிறார்.
இனி பாடல்கள்:
மன்னு பெரும்புகழ் மாதவன் மாமணி வண்ணன் மணிமுடி மைந்தன்
தன்னை உகந்தது காரணமாக என் சங்கிழக்கும் வழக்குண்டே?
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப் பொதும்பினில் வாழும் குயிலே!
பன்னி எப்போதும் இருந்து விரைந்து என் பவளவாயன் வரக் கூவாய்
சோலையில் – புன்னை, குருக்கத்தி, புலிநகக் கொன்றை, தங்கச் செண்பகம் போன்ற பல தாவரங்கள் நிறைந்த சோலையில் – பொந்து ஒன்றில் வாழும் குயிலே! அவன் இறவாப் பெரும் புகழ் கொண்ட மாதவன், நீல வண்ணன், அழகிய மணிமுடியை அணிந்திருப்பவன். அவன் மீது ஆசைப் பட்டதால் உடல் மெலிந்து என் கைகளின் வளைகள் கழன்று விழுகின்றன. இது போல உலகில் எங்காவது நடக்குமா? பவளம் போல் சிவந்த உதடுகளை உடைய என் தலைவன் என்னிடம் வந்து சேரும்படி எப்பொழுதும் அவன் பெயர்களை இரவு பகல் பாரமல் நீ விடாமல் தொடர்ந்து வேகமாகக் கூவ வேண்டும்.
புன்னையும் (Calophyllum inophyllum) புலிநகக் கொன்றையும் (Cassia Sophera / Senna sophera) மரங்கள். குருக்கத்தி (Hiptage benghalensis) என்பது செடி. செருந்தி ( Ochna squarrosa, Golden champak) என்று அழைக்கப்படும் தங்கச் செண்பகம் புதர் போல நெய்தல் நிலத்தில் வளரும் என்கிறார்கள். வில்லிபுத்தூர் சோலையில் ஆண்டாள் எப்படிப் பார்த்தார் என்பது தெரியவில்லை.
உரையாசிரியர்கள் குயில் என்பது இறைவனிடம் அடைய வழி சொல்லும் ஆசாரியர்களின் உருவகம் என்கிறார்கள்.
அவன் என்னை ஏன் இழக்க வேண்டும் என்று கேட்கிறார் ஆண்டாள். என்னைப் போன்றவளை அடைய அவனுக்கு எல்லாக் குணங்களும் இருக்கின்றனவே? அவன் கூடவே இருக்கும் திருமகள் கூட எந்தத் தடையையும் செய்யமாட்டார். மாறாக எனக்காகப் பரிந்துரைக்கும் பிராட்டி அவர்.
எனக்கே தெரியும் அவன் என்னிடம் வந்து சேருவான் என்று. இருந்தாலும் நான் மெலிகிறேன். கை வளைகள் நழுவுகின்றன. உலகத்தில் இல்லாத வேடிக்கையாக இருக்கிறது. நீ பொந்தின் சுகமான வெப்பத்தில் காலம் தள்ளலாம் என்று நினைக்காதே. எனக்காக இந்த உதவியைச் செய்.
வெள்ளை விளி சங்கு இடங்கையில் கொண்ட விமலன் எனக்கு உருக்காட்டான்
உள்ளம் புகுந்து என்னை நைவித்து நாளும் ஊயிர்ப்பெய்து கூத்தாட்டுக் காணும்
கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக் களித்திசை பாடும் குயிலே!
மெள்ள இருந்து மிழற்றி மிழற்றாது என் வேங்கடவன் வரக் கூவாய்
தேனொழுகும் செண்பக மலரின் சக்கையைத் தள்ளி சாரத்தைக் கொண்டு பெருமகிழ்ச்சியோடு பாடும் குயிலே! அடியார்களை அழைக்கும் வெள்ளைச் சங்கை இடது கையில் ஏந்திக்கொண்டிருக்கும் அத்தூயவன் என் முன் வந்து தன் திருமேனியைக் காட்ட மாட்டான். மாறாக என் உள்ளத்தில் வந்து புகுந்து என்னை நைந்து போக வைக்கிறான். கூடவே என் உயிரைக் கொண்டு போகாமல் இங்கேயே வளர்த்து எனக்குத் துன்பம் அளிக்கிறான். என்னைத் தவிக்க விடுகிறான். நீ என் அருகில் இருந்து உன் மழலைச் சொற்களைச் சொல்லி எனக்கு விளையாட்டுக் காட்ட எந்தத் தேவையும் இல்லை. எனக்காகத் திருவேங்கடமலைக்கு சென்று அங்கு நிற்கிற வேங்கடவன் இங்கே வரும்படி கூப்பிடு.
குயில் இப்பாடலில் செண்பக மலருக்குத் (Magnolia champaca) தாவி விடுகிறது. அது செண்பகப் பூவைச் சுவைக்குமா என்று தெரியவில்லை. ஆண்டாள் அதன் சாரமான மணம் இதற்கு வந்து விட்டது என்று சொல்லி அதை மகிழ்விக்கிறாள் என்று சொல்லலாம்.
முக்கோணத்தில் கட்டி அடித்து உயிர் போகும் தருவாயில் இருக்கும் குற்றவாளிகளை உணவும் தண்ணீரும் கொடுத்து உயிர்ப்பித்து மறுபடியும் அடிப்பார்களாம். அது போன்று இருக்கிறது உன் செயல் என்கிறார் ஆண்டாள்.
“நினைதொறும் சொல்லும் தொறும் நெஞ்சிடிந்து உகும்” என்றும் “நினைந்து நைந்து உள்கரைந்து உருகி” என்றும் நம்மாழ்வாரும் சொல்கிறார்.
அயோத்தியிலிருந்து மிதிலைக்குச் சென்று அங்கு ஒரு சோலையில் விசுவாமித்திர முனிவருடன் தங்கியிருந்தான் ராமன். சீதையின் கரம் பிடிப்பதற்காக. அதைப் போலவே பரமபதத்திலிருந்து எழுந்தருளி என் கரம் பிடிப்பதற்காக வேங்கடத்தில் தங்கியிருக்கிறான். எனவே நீ தொலை தூரம் செல்லத் தேவையில்லை என்று குயிலிடம் ஆண்டாள் சொல்கிறார்.
மாதலி தேர் முன்பு கோல் கொள்ள மாயன் இராவணன் மேல் சரமாரி
தாய்தலை அற்றற்று வீழத் தொடுத்த தலைவன் வரவெங்கும் காணேன்
போதலர் காவில் புது மணம் நாறப் பொறிவண்டின் காமரம் கேட்டு உன்
காதலியோடு உடன் வாழ் குயிலே! என் கருமாணிக்கம் வரக் கூவாய்
பூத்துக் குலுங்கி நறுமணம் தூக்கி அடிக்கும் சோலையில் அழகிய வண்டினுடைய காமரம் என்னும் பண்ணைக் கேட்டுக்கொண்டு உன் துணையோடு வாழும் குயிலே! மாதலி கோல் கொண்டு (குதிரைகளை முன்னேற வைத்து) செலுத்திய தேரில் இருந்து மாயவனான ராவணனின் தலைகளை மறுபடியும் மறுபடியும் அறுத்து வீழ்த்திய என் தலைவன் வருவதாகத் தெரியவில்லை. என் கரிய மாணிக்கத்தை உன் கூவலால் வரச்செய்.
தும்பிகளும் வண்டுகளும் சீகாமரம் என்றும் அழைக்கப்படும் காமரப் பண்ணில் இசைக்கும் என்பது தமிழ் மரபு. “ஏம இன் துணை தழீஇ இறகு உளர்ந்து காமரு தும்பி காமரம் செப்பும் ” -இது சிறுபாணாற்றுப்படை. சீகாமரம் என்றால் நாதநாமக்கிரியை ராகம் என்றும் சொல்கிறார்கள்
என்புருகி இனவேல் நெடுங்கண்கள் இமை பொருந்தா பல நாளும்
துன்பக் கடல் புக்கு வைகுந்தன் என்பதோர் தோணி பெறாது உழல்கின்றேன்
அன்புடையாரைப் பிரிவுறு நோய் அது நீயும் அறிதி குயிலே!
பொன்புரை மேனிக் கருளக் கொடியுடைப் புண்ணியனை வரக் கூவாய்
குயிலே! என் எலும்புகள் உருகி போய் விட்டன. வேல் போன்று காதளவில் நீண்டு இருக்கும் என் கண்கள் இமைக்காமலேயே பல நாட்களைக் கழித்து விட்டன. துன்பக் கடலில் உழல்கிறேன். எனக்கு வேண்டிய படகு வைகுந்தத்தில் உறைபவன். நம்மிடத்தில் மாறாத அன்புடையவர்களைப் பிரிவதால் ஏற்படும நோயை நீயும் நிச்சயம் அறிவாய். பொன்னை நிகர்க்கும் மேனியை கொண்ட கருடனைக் கொடியாகக் கொண்ட அந்தப் புண்ணியவாளனை வரும்படிக் கூவுவாய்.
ராமன் சீதையைப் பிரிந்து தூங்காமலேயே துடித்தான். அதே போன்று ஆண்டாளும் துடிக்கிறார். என்னிடம் அவனுக்கு அன்பு இருக்கிறது. அருகிலேயே இருக்கிறான். ஆனாலும் வர மாட்டேன் என்கிறான்.
“கதிர்சினம் தவிர்ந்த கையறு மாலையும் இரவரம்பாக நீந்தினமாகின எவன் கொல் தோழி” என்று குறுந்தொகை சொல்கிறது. ஆண்டாளுக்குத் தோழி குயில். நானும் மாலைக் கடல்களை மிகுந்த முயற்சி எடுத்தால் நீந்த முடியும் இரவுக் கடல்களைத் தாண்ட வைகுந்தன் என்ற படகு இருந்தால்தான் முடியும் என்கிறாள்.
மென்னடை அன்னம் பரந்து விளையாடும் வில்லிபுத்தூர் உறைவான் தன்
பொன்னடி காண்பதோர் ஆசையினால் என் பொருகயற் கண்ணிணை துஞ்சா
இன்னடிசிலொடு பால் அமுதூட்டி எடுத்த என் கோலக் கிளியை
உன்னொடு தோழமை கொள்ளுவன் குயிலே! உலகளந்தான் வரக் கூவாய்
குயிலே! மென்னடை போடும் அன்னங்கள் எந்தத் தடையும் இன்றி விளையாடடுவதற்கு உகந்த இடமான திருவில்லிபுத்தூரில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானுடைய பொன் போன்ற திருவடிகளைக் காண வேண்டும் என்ற ஆசையினால் யார் அதிக அழகு என்று போட்டியிட்டுக் கொண்டே இருக்கும் என் கெண்டை மீன் கண்கள் உறங்க மாட்டோம் என்கின்றன. உலகத்தையே அளந்த எம்பெருமான் இங்கே வரும்படி நீ கூவு. அவ்வாறு செய்தால் அக்கார அடிசிலையும் அமுது போன்ற பாலையும் ஊட்டி வளர்த்துள்ள என்அழகிய கிளியை உன்னோடு நட்புக் கொள்ள வைப்பேன்.
குயிலே! நீ வேங்கடம் வரை கூடச் செல்ல வேண்டாம். இதோ அருகில் இருக்கும் கோவிலுக்குச் சென்று அங்கு ஆலிலையில் துயில்பவனான வடபத்ரசாயியை எழுப்பினால் போதும். என்னை விட உனக்கு உகந்த நட்பு ஒன்றைப் பெற்றுத் தருவேன். நான் பேசும் மொழி மானுட மொழி. உன் மொழியில், பறவை மொழியில் பேசும் கிளியின் தோழமையை உனக்குப் பெற்றுத் தருவேன் என்கிறார் ஆண்டாள்.
December 25, 2022
நான்காம் திருமொழி -2
அற்றவன் மருதம் முறிய நடை
கற்றவன் கஞ்சனை வஞ்சனையினால்
செற்றவன் திகழும் மதுரைப் பதி
கொற்றவன் வரில் கூடிடு கூடலே!
கூடலே! எனக்காகவே பிறந்தவன் அவன். அவன் தவழ்ந்து தளர் நடை பயிலும் போது இரு மரங்களுக்கிடையே சென்று அம்மரங்களின் வடிவாக வந்த, கம்சனால் அனுப்பப்பட்ட அரக்கர்களை அழித்தவன். மாமன் கம்சனின் வஞ்சனையை வஞ்சனையாலேயே அழித்தவன். சுடர் விடும் வடமதுரை நகரத்தின் அரசன். அந்தக் கண்ணன் என்னிடம் வர வேண்டும் என்று நினைத்தால் அதை நடத்திக்கொடு.
இங்கு மரத்தில் இருந்தவர் நாரதரால் சாபமிடப்பட்ட குபேரனின் மைந்தர்கள் என்றும் சொல்லப்படுகிறது. தன்னைக் கொல்ல நினைத்து விழாவிற்கு அழைத்த கம்சனைக் கண்ணன் அவன் மஞ்சத்தில் ஏறி அவனைக் கீழே தள்ளிக் கொல்கிறான் என்று பாகவத புராணம் சொல்கிறது. கம்சன் அதை எதிர்பார்திருக்க மாட்டான். வஞ்சத்திற்கு எதிர் வஞ்சம்.
அன்று இன்னாதன செய் சிசுபாலனும்
நின்ற நீள் மருதும் எருதும் புள்ளும்
வென்றி வேல் விறல் கஞ்சனும் வீழ முன்
கொன்றவன் வரில் கூடிடு கூடலே!
கூடலே! அன்றொரு நாள் தீச்செயல்களைச் செய்வதையே வாடிக்கையாகக் கொண்டிருந்த சிசுபாலனையும், குழந்தை கண்ணன் தவழ்ந்து சென்று கொண்டிருந்த வழியில் நின்று கொண்டிருந்த நெடிய இரண்டு மருதமரங்களையும் ஏழு எருதுகளையும் கொக்கு வடிவில் வந்த பகாசுரனையும் வென்றவன் அவன். வெற்றியைத் தவிர வேறு எதையும் அறியாத வேல் மற்றும் வெல்ல முடியாப் பலத்தையும் கொண்ட கம்சனை தரையில் வீழ்த்திக் கொன்றவன் அவன். அந்தக் கண்ணன் என்னிடம் வர வேண்டும் என்று நினைத்தால் அதை நீ நடத்திக் கொடு.
இதில் கண்ணனை நப்பின்னையை அடைவதற்காக ஏழு எருதுகளை அடக்கிய கதையைப் பற்றிக் குறிப்பு இருக்கிறது ஏறு தழுவதல் என்பது தமிழர் மரபு. எனவே கண்ணனை இங்கு ஆண்டாள் தமிழனாகவே பார்க்கிறார். (அரிஷ்டாசுரன் என்ற அரக்கன் எருது வடிவில் வந்து கண்ணனைக் கொல்லப் பார்த்தான். அவனைக் கண்ணன் கொம்பை ஒடித்துக் கொல்லும் கதையைச் சொல்வதாகவும் கொள்ளலாம்). நப்பின்னையை அடைவதற்காக ஏழு எருதுகளை அடக்கினான். ஆனால் அவன் செய்த எல்லா சாகசங்களும் என்னை அடைவதற்காக. நான் அவன் மீது காமுறுவதற்காக என்று ஆண்டாள் நினைக்கிறார்.
ஆவல் அன்புடையார் தம் மனத்தன்றி
மேவலன் விரை சூழ் துவராபதிக்
காவலன் கன்று மேய்த்து விளையாடும்
கோவலன் வரில் கூடிடு கூடலே!
கூடலே! அவனை அடைய வேண்டும் என்ற ஆவலையும் அவன் மீது மாறாத அன்பையும் கொண்டவர்கள் மனங்களில் அன்றி வேறு எங்கும் உறைய விரும்பாதவன் அவன். மணம் சூழ்ந்த துவாரகையின் காவலனும் கன்றுகளை மேய்த்து விளையாடும் கோவலனும் அவன். அந்தக் கண்ணன் என்னிடம் வர நினைத்தால் அதை நீ நடத்திக்கொடு.
எல்லோருக்கும் எளியவனாக இருக்க கூடிய, யார் நினைத்தாலும் நினைக்காவிட்டாலும் அவன் நினைத்து விட்டால் வரக்கூடிய இறைவன் அவன் மீது ஆவலும் அன்பும் கொண்டவர்கள் உள்ளங்களில் மட்டும்தான் உறைவானா? இல்லை. ஆனால் அவற்றில் உறைவதுதான் அவனுக்கு அதிக விருப்பமாக இருக்கும் என்று ஆண்டாள் நினைக்கிறாள். என் தந்தை பெரியாழ்வார். நான் ஆழ்வார்கள் அனைவருக்கும் புதல்வி. எங்கள் கூட்டத்தை விட இறைவனிடம் ஆவலும் அன்பும் கொண்டவர்கள் யார்? எனவே அவன் இன்று என் உள்ளத்தில் வந்து இருக்கத்தான் விரும்புவான். காவலன் என்றால் உலகைக் காப்பவனான விஷ்ணுவின் அவதாரம். கோவலன் என்றால் உலகையே ஆளும் திறனுடைய மல்லாண்ட திண்தோள் மணிவண்ணன்.
கொண்ட கோலக் குறள் உருவாய்ச் சென்று
பண்டு மாவலி தன் பெரு வேள்வியில்
அண்டமும் நிலனும் அடி ஒன்றினால்
கொண்டவன் வரில் கூடிடு கூடலே!
கூடலே! பண்டைய காலத்தில் பொம்மைக்கு அலங்கரித்தது போல் அழகிய் ஆபரணங்களை அணிந்து கொண்டு வாமனனாக மஹாபலி சக்கரவர்த்தியின் யாகசாலைக்கு சென்று சிறந்த யாக ஒரே அடியினால் மண்ணையும் விண்ணையும் அளந்த தனதாக்கிக் கொண்ட பெருமான் அவன் அந்தக் கண்ணன் என்னிடம் வர நினைப்பான் என்றால் அதை நீ நடத்திக்கொடு.
உலகை அளந்த போல் அவன் திருவடியால் எல்லோடும் தீண்டப்படும் பேறு பெற்றார்கள் என்பதை ஆண்டாள் சொல்கிறார். என்னைப் பார்க்க அவன் நிச்சயம் தனியாக வருவான்.
பழகு நான்மறையின் பொருளாய் மதம்
ஒழுகு வாரணம் உய்ய அளித்த எம்
அழகனார் அணி ஆய்ச்சியர் சிந்தையுள்
குழகனார் வரில் கூடிடு கூடலே!
கூடலே! வேதம் நான்கிலும் மெய்ப்பொருளாக நிற்பவன் அவன். மதநீர் ஒழுக நின்ற கஜேந்திரனை குறலைக் கேட்டு ஓடி வந்து அதற்கு உய்வளித்தவன் அவன். எங்கள் உள்ளத்தை கவர்ந்த அழகன். , அழகிய ஆய்க் குலப் பெண்கள் எண்ணங்களில் குடிகொண்டிருக்கும் இளைஞன் அவன். அந்தக் கண்ணன் என்னிடம் வர நினைப்பான் என்றால் அதை நீ நடத்திக்கொடு.
குழகன் என்றால் பிறருக்கு இணங்குபவன் என்றும் பொருள் கொள்ளலாம். எளிதாகப் பழகக் கூடியவன். சௌலப்யன்.
ஊடல் கூடல் உணர்தல் புணர்தலை
நீடு நின்ற நிறை புகழ் ஆய்ச்சியர்
கூடலைக் குழற்கோதை முன் கூறிய
பாடல் பத்தும் வல்லார்க்கு இல்லை பாவமே
அவனோடு ஊடல் செய்தல். அவன் அருகில் சென்று அவன் செய்த குற்றங்களை உணர வைத்தல், உணர்ந்த பின் அவனோடு சேர்ந்தல் ஆகிய செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் நீடித்த நிறைபுகழ் அடையப் பெற்ற ஆய்ச்சியர் கூடலிழைத்தனர. அதைப் பற்றி ,அழகிய கூந்தலை உடைய ஆண்டாள் இந்தப் பத்து பாசுரங்களையும் பாடினாள் அவற்றைச் சொல்லும் திறன் படைத்தவர்களுக்கு பாவத்தின் நிழல் கூடப் படாது. அவர்கள் என்றும் எம்பெருமானின் திருவடிகளில் பிறப்பற்று இருப்பார்கள்.
December 23, 2022
நான்காம் திருமொழி – 1
நான் என் திருப்பாவை விளக்கத்தில் சொல்லியது போல ஆண்டாளின் உலகம் அவளாக தனக்குள் சமைத்துக் கொண்ட உலகம். அவளுடைய உரையாடல்களில் பல அவ்வுலகத்திள்ளேயே நடக்கின்றன. ஆனாலும் பருண்மை உலகத்தில் அவளுக்குத் தெரிந்தவற்றை வைத்துத்தான் அவளால் உரையாடல்களை நிகழ்த்த முடியும். அவை கவிதைகளாகப் பிறந்து நமக்கும் ஒரு அசாதாரணமான உணர்வை அளிக்கின்றன. அவள் வாழ்ந்த உலகத்திற்கும் அவள் உள்ளத்தில் பிறந்த கனவு உலகத்திற்கும் இடையில் ஏற்படும் முரண்கள் நம்மை வேறு எங்கோ இட்டுச் செல்கின்றன.
நான்காம் திருமொழி கூடலிழைத்தலைப் பற்றிப் பேசுகின்றது. கூடலிழைத்தல் என்றால் என்ன? ஒரு பெரிய வட்டத்தை வரைந்து, அதற்குள் சிறு சிறு வட்டங்களை (சுழிகள்) வேகமாக இட வேண்டும். பின்னால் கூட்டிப் பார்க்கையில் இரட்டைபடை வந்தால் கூடுதல் நடைபெறும். ஒற்றைப்படை என்றால் நடைபெறாது. இதைப் பெண்கள் மட்டும்தான் செய்ய வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ‘அழைப்பன் திருவேங்கடத்தானைக் காண இழைப்பன் திருக் கூடல் கூட’ என்று திருமழிசை ஆழ்வாரே ஏழுமலையானைக் காண்போமா என்று அறிவதற்குக் கூடலிடுகிறார். கலித்தொகையில் கூடலிழைத்தலைப் பற்றிப் பேசப்படுகிறது. திருமங்கை மன்னனும், திரு நாவுக்கரசரும் கூடப் பேசுகிறார்கள். மாணிக்க வாசகர் தன் திருக்கோவையாரில் கூடலிழைத்தலைப் பற்றி சிறிது விரிவாகவே சொல்கிறார்:
ஆழி திருத்தும் புலியூ ருடையொன் அருளின் அளித்து
ஆழி திருத்தும் மணற்குன்றின் நீத்து அகன்றார் வருக என்று
ஆழி திருத்திச் சுழிக்கணக்கு ஓதி நையாமல், ஐய
வாழி, திருத்தித் தரக்கிற்றியோ உள்ளம் வள்ளலையோ
என்று சுழிக் கணக்கைப் பற்றிச் சொல்கிறார்.
யார் கூடலிழைத்தாலும் அதில் ஐம்பது சதவீதம் வெற்றி அடைய வாய்ப்பிருக்கிறது. ஏனென்றால் மொத்தம் இரட்டைப்படையாகவோ அல்லது ஒற்றைப்படையாகவோத்தான் இருக்க முடியும். உண்மையைப் பேசப் போனால் உலகத்தில் வராதவன் வருவது எப்போதாவது நடக்கும் ஒன்று. அதனால்தானோ என்னவோ உலக இலக்கியம் முழுவதும் காதலன் வருவானா வர மாட்டானா என்ற கேள்வி ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகத் தொடர்ந்து கேட்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. அன்று காத்துக் கொண்டிருந்தவர்களைப் பற்றி இன்று பாடப்படுகிறது. ஹோமரின் ஒடிஸியின் காவியத்தலைவியாகிய பெனலோபி ஒடிசியஸுக்காக போர் முடிந்த பின்னர் இருபது வருடங்கள் காத்துக் கொண்டிருந்ததை அமெரிக்கக் கவிஞரான டோரதி பார்க்கர் பாடுவதைக் கேளுங்கள்:
In the pathway of the sun,
In the footsteps of the breeze,
Where the world and sky are one,
He shall ride the silver seas,
He shall cut the glittering wave.
I shall sit at home, and rock;
Rise, to heed a neighbor’s knock;
Brew my tea, and snip my thread;
Bleach the linen for my bed.
They will call him brave.
வருபவன் வீரன். அவனைப் பற்றி ஊர் பேசும். காத்திருப்பவள் சாதாரணர்களுக்கிடையே காணாமல் போவாள். பல காலமாகத் தொடர்வது இந்தக் கதைதான் என்று கவிதை சொல்கிறது.
ஆண்டாள் கொடுத்து வைத்தவள். அவள் காத்திருத்தலைக் கவிதைகளாகத் தந்தாள் அவற்றை நாம் இன்றுவரை பேசுகிறோம். அவளுக்கு நிச்சயம் வருவான் என்று தெரியும். வைணவம் சொல்கிறது:. வரப்போவது உறுதி. 100 சதவீதம். இன்றில்லையென்றால் நாளை. இப்பிறவியில் இல்லையென்றால் அடுத்த பிறவியில்.
ஆண்டாள் ஏன் கூடலிழைக்கிறாள்?
எல்லாவற்றிற்கும் ஊற்றாக இருக்கும் கண்ணனைப் பற்றியவள், இந்த உயிரில்லா வட்டங்களில் இடையே சிக்கித் தவிக்க ஏன் நினைக்கிறாள்?
உரையாசிரியர்கள் சொல்கிறார்கள்: அவனை அடைவோமோ என்ற கலக்கத்தில் எதையும் செய்யத் தயாராக இருக்கிறாள். அவன் மூப்பற்றவன். இவள் விருத்தவதியாக, மூப்படைந்தவளாக ஆகிய பின் அவன் கிட்டினாலும் அது பரவாயில்லை என்று நினைக்கிறாள். பார்க்கப்போனால் ஆண்டவனையும் அடையும் முயற்சியில் இத்துணை வேகத்தோடு கலங்காவிட்டால் அம் முயற்சிக்குச் சிறப்பே இல்லை என்று ஆகி விடும்!
இப்பாடல்களின் அசையாப்பொருளாக இருந்தாலும் கூடலிடமே ஆண்டாள் பேசுகிறாள். கண்ணனை அடைய வேண்டும் என்ற கலக்கத்தில் அவள் இருப்பதால் கூடல் தானாக ஏதும் செய்ய முடியாது என்ற எண்ணமே அவளுக்கு இல்லை. அவன் சொன்னதை மட்டும் செய். நீயாக ஏதாவது செய்து என் காரியத்தைக் கெடுக்காதே என்கிறாள்
இனி பாடல்கள்:
தெள்ளியார் பலர் கை தொழும் தேவனார்
வள்ளல் மாலிருஞ்சோலை மணாளனார்
பள்ளி கொள்ளும் இடத்து அடி கொட்டிட
கொள்ளுமாகில் நீ கூடிடு கூடலே!
கூடலே! தெளிந்த ஞானம் கொண்டவர்கள், நித்யசூரிகள், வைகுண்டத்தில் உறைபவர்கள் போன்ற பலர் தொழும் தேவன், அடியார்க்கு அள்ளி வழங்கும் திருமாலிருஞ்சோலையில் எழுந்தருளியிருக்கும் வள்ளல் திருவரங்கத்தில் பள்ளி கொண்டிருக்கும் பெருமானின் காலடியில் நான் இருந்து பணி செய்ய வேண்டும் என்பதை நிச்சயம் செய்து விட்டான் என்றால் அதை நடத்திக் கொடு.
நித்யசூரிகள் (பெருமாளுக்குப் பணிவிடை செய்பவர்கள்) வைகுண்டத்தில் உறைபவர்கள் போன்றவர்களைப் பற்றி ஆண்டாள் பேசுவதன் காரணம் அவர்களுக்கு அவன் திருமுக மண்டல தரிசனம் தினமும் கிடைக்குமே எனக்கு கிடைக்கும் பாக்கியம் இன்றுவரை கிட்டவில்லையே என்ற எண்ணத்தில்தான். அவனை எல்லா இடங்களிலும் தேடி திருமாலிருஞ்சோலையில் கண்டு பிடித்து விட்டாள். ஆனால் அங்கு அவனோடு தனியாக இருக்க முடியாது. இரவில் தூங்கும் போது அவன் காலைப் பிடித்துப் பணிவிடை செய்ய ஏற்ற இடம் திருவரங்கம்தான். இன்னொன்றும் உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். பெரும் பணக்காரன் ஒருவன் ஒரு ரூபாய் தொலந்தாலும் அதையே நினைத்து வருத்தப் பட்டுக் கொண்டிருப்பது போல ஒரு பக்தனின் அருகாமையைப் பெற முடியாமல் போனாலும் அதையே அவன் நினைத்துக் கொண்டிருப்பானாம். இங்கு அருகாமையை விரும்புபவள் ஆண்டாள்.
காட்டில் வேங்கடம் கண்ணபுர நகர்
வாட்டம் இன்றி மகிழ்ந்துறை வாமனன்
ஓட்டரா வந்து என் கைப் பற்றி தன்னொடும்
கூட்டுமாகில் நீ கூடிடு கூடலே!
கூடலே! காடுகள் சூழ்ந்த திருவேங்கடமலையிலும் அழகியநகரமான திருக்கண்ணபுரத்திலும் எந்த அயர்ச்சியும் இல்லாமல் மிக்க மகிழ்ச்சியோடு இருந்து கொண்டிருக்கும் அந்த வாமன வடிவமெடுத்த என் பிரான் ஓடிவந்து என் கையைப் பிடித்துத் தன் கையோடு சேர்த்துக்கொள்வேன் என்று நிச்சயம் செய்து விட்டான் என்றால் அதை நீ நடத்திக்கொடு.
தன் சிறிய பாதத்தால் அளக்கக் கூடிய சுண்டைக்காய் அளவில் இருக்கும் மண்ணுக்கு மகாபலிச் சக்கரவர்த்தியைத் தேடி அலைந்தவன் இவன். இவனை மிகப் பெரிய செல்வமாகிய ஆண்டாள் அடையக் காத்துக் கொண்டிருக்கிறார். இவன் விட்டு விடுவானா என்ன?
பூமகன் புகழ் வானவர் போற்றுதற்
காமகன் அணி வாணுதல் தேவகி
மாமகன்* மிகு சீர் வசுதேவர் தம்
கோமகன் வரில் கூடிடு கூடலே!
கூடலே! இறைவனின் உந்தியில் பிறந்த பிரமனும் புகழ்பெற்ற தேவர்களும் பாடித் துதிப்பதற்குத் தகுந்த ஆண்களின் முதல்வனாகிய, அழகிய ஒளி படைத்த நெற்றியை உடைய தேவகியின் சிறந்த பிள்ளையான, மிக்க நற்குணங்களை உடைய வசுதேவரின் மகனான கண்ணன் என்னைத் தேடி வர நிச்சயம் செய்து விட்டால் அதை நீ நடத்திக்கொடு.
ஆற்றில் படகில் சென்று கொண்டிருப்பவனை இருகரைகளிலும் இருப்பவர்கள் எங்களைப் படகில் ஏற்றிக்கொள் என்று அழைப்பது போல மண்ணுலகிலும் விண்ணுலகிலும் இருப்பவர்கள் இவனை அழைக்கிறார்களாம்.
ஆய்ச்சிமார்களும் ஆயரும் அஞ்சிட
பூத்த நீள் கடம்பேறிப் புகப் பாய்ந்து
வாய்த்த காளியன் மேல் நடம் ஆடிய
கூத்தனார் வரில் கூடிடு கூடலே!
ஆய்ச்சியரக்ளும் ஆயர்களும் பயப்படும் போது, பூத்து, நீண்டு வளர்ந்திருக்கும் கடம்ப மரத்தின் மீது ஏறி நீரில் பாய்ந்து அவன் காலடி படும் பாக்கியம் கிடைத்த காளியன் என்ற நாகத்தின் மீது நடனமாடிய அக்கூத்தனார் என்னிடம் வர நிச்சயம் செய்து விட்டால் அதை நடத்திக் கொடு.
மாட மாளிகை சூழ் மதுரைப் பதி
நாடி நன்தெருவின் நடுவே வந்திட்டு
ஓடைமா மத யானை உதைத்தவன்
கூடுமாகில் நீ கூடிடு கூடலே!
மாட மாளிகைகள் சூழ்ந்திருக்கும் வடமதுரை நகரில் நாம் இருக்கும் தெருவை அறிந்து என்னை நாட வேண்டும் என்று நெற்றியில் அணியை உடைய குவலயபீடம் என்ற யானையை உதைத்து அழித்த அவன் நிச்சயம் செய்து விட்டால் அதை நடத்திக் கொடு.
வட மதுரையின் ஒவ்வொரு தெருவிலும் அழகின் இலக்கணமான ஆண்டாளின் வீடு எது என்று கேட்டுத் தெரிந்து கொண்டு கண்ணன் வர வேண்டும் என்று ஆண்டாள் நினைக்கிறாள். அன்பின் மிகுதியினால் மாலை விற்பவர் வீட்டைத் தேடித்தேடி கண்ணனும் பலராமனும் சென்றதை பாகவதம் சொல்கிறது. அவர் குடிசையை அடைந்து அவருக்கு அருள் செய்ததைச் சொல்கிறது. இங்கு காத்துக் கொண்டிருப்பது பூமித்தாய்.
December 21, 2022
மூன்றாம் திருமொழி – 2
காதலனை எத்தனை விதமாகக் காதலிப்பது? எலிசபெத் பேரட் ப்ரௌணிங்க் ஏன்ற பத்த்தொன்பதாம் நூற்றாண்டு கவிஞர் சொல்கிறார்:
How do I love thee? Let me count the ways.
I love thee to the depth and breadth and height
My soul can reach, when feeling out of sight
For the ends of being and ideal grace.
I love thee to the level of every day’s
Most quiet need, by sun and candle-light.
I love thee freely, as men strive for right.
I love thee purely, as they turn from praise.
I love thee with the passion put to use
In my old griefs, and with my childhood’s faith.
I love thee with a love I seemed to lose
With my lost saints. I love thee with the breath,
Smiles, tears, of all my life; and, if God choose,
I shall but love thee better after death.
இக்கவிதையில் சொல்வதெல்லாம் ஆண்டாளுக்கும் அனேகமாகப் பொருந்தும். அவள் கண்ணனை எத்தனை விதங்களில் காதலிக்க முடியுமோ அத்தனை விதங்களில் காதலிக்கிறாள். இக்கவிதையில் I love thee freely, as men strive for right. I love thee purely as they turn from praise. அதாவது மனிதன் இயற்கையாகவே எது சரியோ அதைச் செய்ய விரும்புகிறான். அதே போலத்தான் இவருடைய காதல். இரண்டாம் வரி எந்தப் பலனையும் எதிர்பார்க்காத தூய்மையான காதலைக் குறிக்கிறது. ஆண்டாள் புகழுக்குப் பாடவில்லை. இறைவன் மீது ஏற்பட்ட மாறாக்காதலினால் பாடினாள்.
இனி பாடல்கள்.
தடத்தவிழ் தாமரைப் பொய்கைத் தாள்கள் எம் காலைக் கதுவ
விடத்தேள் எறிந்தாலே போல வேதனை ஆற்றவும் பட்டோம்
குடத்தை எடுத்தேற விட்டுக் கூத்தாட வல்ல எம் கோவே!
படிற்றை எல்லாம் தவிர்ந்து எங்கள் பட்டைப் பணித்தருளாயே
அவிழ்கின்ற பரந்த தாமரை மலர்களைக் கொண்ட பொய்கையில் உள்ள தாமரைத் தண்டுகள் காலைக் கடிக்கின்றன. நஞ்சுடைய தேள் கொட்டியது போலப் படும் வேதனையைத் தாங்க முடியவில்லை. குடங்களை உயரத்தில் எறிந்து கூத்தாடும் திறமை படைத்த என் ராசாவே! நீ செய்யும் சேட்டைகளையெல்லம் துறந்துவிட்டு எங்கள் ஆடைகளைத் திரும்பத் தரவேண்டும்.
தாமரைத் தண்டுகள் கடிக்குமா? நிற்க வேண்டாம் என்று நினைக்கும் இடத்தில் நின்றால் மென்மையானது கூட காலைக் கடிக்கும் தேளாக மாறிவிடும். ‘அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர் அடிக்கு நெருஞ்சிப் பழம்’ என்று வள்ளுவர் சொல்லவில்லையா? தாமரைத் தண்டுகள் பூக்களைப் போலவும் அன்னத்த்தின் இறகுகளைப் போலவும் மெல்லியது அல்லவே. எனவே அவை தேள் கொடுக்குகளாக மாறி விடுகின்றன.
பிராமணனுக்கு செல்வம் வந்தால் யாகம் செய்வது போல ஆயர்களுக்குச் செல்வம் வந்தால் தெருத்தெருவாகச் சென்றுகுடக்கூத்து ஆடுவார்களாம். தலையில் அடுக்குக் குடங்கள் இருதோள்களிலும் இரண்டு குடங்கள். கைகளிலும் குடங்கள். அவற்றை வானத்தில் எறிந்து பிடித்து ஆடுவதே குடக்கூத்து என்கிறார் அண்ணங்கராச்சாரியர். “இதனைப் பதினோராடலி லொன்று என்றும், அறுவகைக் கூத்தில் ஒன்று என்றுங்கூறி, “குடத்தாடல் குன்றெடுத்தோனாடல் அதனுக், கடைக்குபவைந்துறுப்பாய்ந்து” என்று மேற்கோளுங் காட்டினர்; சிலப்பதிகார வுரையில் அடியார்க்கு நல்லார்’ என்றும் அவர் சொல்கிறார்.
நீரிலே நின்று அயர்க்கின்றோம் நீதி அல்லாதன செய்தாய்
ஊரகம் சாலவும் சேய்த்தால் ஊழி எல்லாம் உணர்வானே!
ஆர்வம் உனக்கே உடையோம் அம்மனைமார் காணில் ஒட்டார்
போர விடாய் எங்கள் பட்டைப் பூங்குருந்து ஏறி இராதே
எல்லாம் அழிந்து ஒன்றுமேயில்லாத ஊழிக் காலத்திலேயே (வரப்போகும்) எல்லோரையும் காக்கும் சிந்தனையில் இருப்பவனே, நாங்கள் நீரில் நின்று அயர்ச்சியோடு இருக்கிறோம். எங்களுக்கு அநீதி இழைக்கிறாய். உன்னிடமிருந்து தப்பவும் முடியாது. எங்கள் ஊரும் வீடுகளும் தொலைவில் உள்ளன. ஆனாலும் ஒன்று சொல்ல விரும்புகிறோம். எங்களிடம் இருக்கும் அன்பு அனைத்தும் உனக்குத்தான். உன்னோடு சேர்ந்திருப்பதை எங்கள் தாய்மார்கள் அனுமதிக்க மாட்டார்கள். எங்கள் ஆடையைத் தா. பூத்திருக்கும் குருந்த மரத்தில் ஏறி விளையாட்டுக் காட்டாதே.
ஊழிக்காலத்திற் கூட எங்களையே சிந்தித்துக் கொண்டிருக்கிறேன் என்று பெருமை பேசிக் கொள்கிறாய். இங்கு நாங்கள் உன் முன்னால் உயிரோடு நிற்கிறோம். நீ செய்வது நியாயமா என்று அவர்கள் கேட்கிறார்கள்.
மாமிமார் மக்களே அல்லோம் மற்றும் இங்கு எல்லாரும் போந்தார்
தூமலர்க் கண்கள் வளரத் தொல்லையிராத் துயில்வானே!
சேமமேல் அன்றிது சாலச் சிக்கென நாம் இது சொன்னோம்
கோமள ஆயர் கொழுந்தே! குருந்திடைக் கூறை பணியாய்!
(முன்பெல்லாம்) இரவில் நன்றாக அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்த அழகிய மலர்களைப் போலக் கண்களை உடையவனே! இங்கு இருப்பவர்கள் உன் முறைப்பெண்களான மாமன் மக்கள் மட்டுமல்லர். மற்றைய உறவினரும் இருக்கிறார்கள். அவர்களோடு உறவாட விரும்புவது தகாத செயல். நாங்கள் சொல்வது முழுவதும் உண்மை. ஆயர் குலத்தின் அழகியக் கொழுந்தே! குருந்த மரத்தில் வைத்திருக்கும் உடைகளைத் தந்தருள்வாய்!
முதலில் ஆடைகளை இழந்தவர்கள் இருவர் மட்டுமே. இப்போது பெருங்கூட்டமே ஆடையிழந்து நிற்கிறது! இதில் யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று தெரியுமா? கூடுவதற்கும் தர்மம் வேண்டாமா? முன்பெல்லாம் பகலில் உன் விளையாடடை நடத்தி விட்டு இரவில் அயர்ந்து தூங்குவாய். இன்று நீ இரவிலும் விழித்திருந்து கூடுகிறாய், காலையிலும் பெண்கள் வரவை எதிர்பார்த்து கண் விழித்துக் காத்திருக்கிறாய்.
கஞ்சன் வலை வைத்த அன்று காரிருள் எல்லில் பிழைத்து
நெஞ்சு துக்கம் செய்யப் போந்தாய் நின்ற இக்கன்னியரோமை
அஞ்ச உரப்பாள் அசோதை ஆணாட விட்டிட்டு இருக்கும்
வஞ்சகப் பேய்ச்சி பால் உண்ட மசிமையிலீ! கூறை தாராய்
கம்சன் உன்னை அழிக்க நினைத்த காலத்தில் கன்னங்கரிய இரவிலும் பிழைத்தவன் நீ! இன்று கன்னிமார்களான, வேறு உதவியின்றி நின்று கொண்டிருக்க்கும் எங்கள் நெஞ்சங்களுக்குத் துக்கத்தை அளிக்கப் புறப்பட்டிருக்கிறாய். உன்னை ஒரு சுடுசொல் சொல்லக் கூட யசோதை அஞ்சுவாள். வஞ்சனை உடைய பூதனையின் பாலை உண்டு அவள் உயிரை உறுஞ்சியவனே! எந்த வெட்கமும் இல்லாதவனே! எங்கள் ஆடைகளைக் கொடுத்து விடு.
அன்று கம்சனின் வஞ்ச வலையிலிருந்து நீ தப்பிப் பிழைத்தது எங்களைப் பாதுகாக்க என்று நினைத்தோம். ஆனால் நீயே இன்று எங்களுக்குப் பெருந்துன்பத்தை அளிக்கிறாய். யசோதையிடம் சொல்ல முடியாது. ‘முழுதும் வெண்ணெய் அளைந்து தொட்டு உண்ணும் முகிழ் இளஞ் சிறுத் தாமரைக் கையும் எழில்கொள் தாம்பு கொண்டு அடிப்பதற்கு எள்கு- நிலையும் வெண் தயிர் தோய்ந்த செவ்வாயும் அழுகையும் அஞ்சி நோக்கும் அந் நோக்கும் அணிகொள் செஞ் சிறுவாய் நெளிப்பதுவும் தொழுகையும் இவை கண்ட அசோதை தொல்லை-இன்பத்து இறுதி கண்டாளே’ என்று உன்னைக் கண்டு இன்பம் கிடைத்த அந்நாளையே நினைத்துக் கொண்டிருக்கிறாள். நீ இன்னும் பால் மணம் மாறாத பிள்ளை இல்லை என்பது அவளுக்குத் தெரியவில்லை.
பாண்டவர்களுக்குத் துதி பாடியதால் ஆதரித்தான். சிசுபாலனுக்கு வைததால் மோட்சத்தை அளித்தான். இவனைத் துதித்துப் பார்த்தோம் காரியம் நடக்கவில்லை. வசை பாடினால் ஒரு வேளை நடக்கலாம் என்று ஆயர் பெண்கள் கருதுகிறார்கள்.
கன்னியரோடு எங்கள் நம்பி கரிய பிரான் விளையாட்டை
பொன்னியல் மாடங்கள் சூழ்ந்த புதுவையர் கோன் பட்டன் கோதை
இன்னிசையால் சொன்ன மாலை ஈரைந்தும் வல்லவர் தாம் போய்
மன்னிய மாதவனோடு வைகுந்தம் புக்கு இருப்பாரே
கன்னிகளோடு எங்கள் கரிய அழகனான கண்ணன் செய்த விளையாட்டை தன் இனிய கவிதைகளில் பொன் போன்ற் மாடங்கள் சூழ்ந்த திருவில்லிபுத்தூர் தலைமைப் பட்டரின் புதல்வியான கோதை சொன்னாள். இப்பத்துப் பாட்டுக்களையும் படிப்ப்பவர்கள் மாதவன் என்று அழைக்கப்படும் நாராயணனோடு வைகுண்டத்தில் இருப்பார்கள்.
மூன்றாம் திருமொழி – 1
கண்ணன் கோபிகளின் ஆடைகளை மறைத்து விளையாடும் கதை வடமொழியில் முதன்முதலாக பாகவத புராணத்தில்தான் வருகிறது என்று நினைக்கிறேன். ஆனால் பாகவத புராணம் ஆழ்வார்கள் காலத்திற்குப் பின்னால் எழுதப்பட்டது. எனவே இக்கதை முதலில் தமிழ் வட்டங்களில்தான் எழுந்தது என்று சொன்னால் அது தவறாகாது. மேலும் பாகவத புராணமே தமிழகத்தில்தான் எழுதப்பட்டது என்பதையும் நாம் மறந்து விடக் கூடாது.
அகநானுறு ‘வண் புனல் தொழுநை வார் மணல் அகன் துறை அண்டர் மகளிர் தண் தழை உடீ இயர்மரம் செல மிதித்த மா அல் போல’ என்று பேசுகிறது. இதற்கு ஆயர் மகளிர் தழை உடைகளை அணிவதற்கு வசதியாக மரக்கிளையை வளைத்துக் கொடுத்தவன் என்றுதான் பொருள் கொள்ள முடியும். பாட்டில் கண்ணன் ஆடைகளைக் கவர்ந்த செய்தி வரவில்லை. இதே போல சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவை ‘கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன் எல்லைநம் ஆனுள் வருமேல் அவன்வாயில் முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ” என்று சொல்கிறது. “இறுமென் சாயல் நுடங்க நுடங்கி அறுவை யொளித்தான் வடிவென் கோயாம் அறுவை யொளித்தான் அயர அயரும நறுமென் சாயல் முகமென் கோயாம்” என்று கண்ணன் ஆடையை ஒளித்து வைத்து நப்பின்னையை வெட்கத்தால் நலியச் செய்ததையும் பற்றிப் பேசுகிறது.
ஆண்டாளின் தந்தையான பெரியாழ்வார் “ஆற்றிலிருந்து விளையாடு வோங்களை
சேற்றால் எறிந்து வளை, துகில் கைக்கொண்டு காற்றில் கடியனாய் ஓடி அகம் புக்கு
மாற்றமும் தாரான்” என்று கோபியர் யசோதையிடம் முறையிடுவதைச் சொல்கிறார்.
‘துகில் கைக்கொண்டு’ என்ற சொற்களை விரிவாக்கி ஆண்டாள் இங்கு அழகிய காட்சி ஒன்றைப் படைக்கிறார். ஆடைகளை இழந்த ஆய்ச்சியர் கண்ணனிடம் அவற்றைத் தருமாறு பல விதங்களில் கேட்பதை இப்பாடல்களில்சொல்கிறார்.
இங்கு ஆடைகளை இழத்தல் என்பது கண்ணனோடு நட்பு ஏற்படுவதற்கு முன்னால் இருந்த மற்றைய எண்ணங்களை அடியோடு களைவது. ஆடை பெறுதல் என்பது கண்ணன் எவற்றைத் தருகிறானோ அவற்றைக் கட்டிக் கொள்வது. இடையில் ஏற்படும் ஆடையின்மைதான் நம்மில் பலரின் கண்களை உறுத்துகிறது. Shed old clothes – பழைய துணிகளைக் களைவது என்பது எல்லா மதங்களிலும் சொல்லப்படுவது.
மேலும் ஆடையின்மை என்பது அவ்வளவு வெறுக்கத்தக்கதா என்ன?
கலில் கிப்ரான் சொல்கிறார்:
Your clothes conceal much of your beauty, yet they hide not the unbeautiful.
And though you seek in garments the freedom of privacy you may find in them a harness and a chain.
Would that you could meet the sun and the wind with more of your skin and less of your raiment,
For the breath of life is in the sunlight and the hand of life is in the wind.
Forget not that modesty is for a shield against the eye of the unclean.
And when the unclean shall be no more, what were modesty but a fetter and a fouling of the mind?
And forget not that the earth delights to feel your bare feet and the winds long to play with your hair.
ஆடை என்பது தூய்மையில்லாதவர்களுக்கு எதிரான கேடயம். இறைவன் தூயவன். தூயவன் முன்னால் ஆடை எதற்கு? அவன் படைத்தவன் தானே நாம் எல்லோரும்?
உரையாசிரியர்கள் இவ்வாறு சொல்கிறார்கள்:
கண்ணனுக்கும் ஆயர்குலப் பெண்களுக்கும் உண்டான நெருக்கத்தைக் கண்ட பெற்றோர்கள் இவர்களை இப்படியே பழக விட்டால் அழிவுதான் நேரும் என்று நினைத்தார்கள். எனவே அவர்களை நிலவறைகளிலே அடைத்து விட்டனர். அங்கு அவர்கள் வாட்டத்தைக் கண்டு நொந்த பெற்றோர்கள் ‘இவர்கள் தனிமையில் இறந்து விடுவார்கள். கண்ணனும் வாடுகிறான் சிறிதளவாவது நெருக்கம் ஏற்படட்டும்’ என்ற எண்ணத்தில் பொய்கையில் குளிக்க அனுமதித்தார்கள். கண்ணன் பெண்களை நிச்சயம் அங்கு சந்திப்பான் என்றும் அவர்கள் நினைத்தார்கள். நினைத்தபடியே கண்ணன் அவர்கள் பின்னால் சென்றான். சென்று, குளித்துக் கொண்டிருந்தவர் விட்டுச் சென்ற ஆடைகளைக் கவர்ந்தான்.
எனக்கு இந்த விளக்கம் பொருத்தமாகப் படவில்லை. ஆய்க்குலப் பெண்கள் விட்டு விடுதலையாகி நிற்பவர்கள், அவர்கள் கண்ணனிடம் செல்வதை யாராலும் தடை செய்ய முடியாது என்றுதான் எனக்குத் தோன்றுகிறது. ஆடை கவர்தல் நாடகம் அவர்கள் விரும்பும் நாடகம். விரும்பாதது போல் அவர்கள் நடிக்கும் நாடகம்.
இனி பாடல்கள்.
கோழி அழைப்பதன் முன்னம் குடைந்து நீராடுவான் போந்தோம்
ஆழியஞ் செல்வன் எழுந்தான் அரவணை மேல் பள்ளி கொண்டாய்!
ஏழைமை ஆற்றவும் பட்டோம் இனி என்றும் பொய்கைக்கு வாரோம்
தோழியும் நானும் தொழுதோம் துகிலைப் பணித்தருளாயே
கோழி கூவுவதற்கு முன்பேயே நாங்கள் எழுந்து இங்கு நன்றாக மூழ்கி நீராட வந்தோம். இப்போது அழகிய வட்டமாகக் காட்சிதரும் செல்வனான சூரியனும் எழுந்து விட்டான். பாம்பின் மீது பள்ளி கொண்டவனே! எங்களுக்கு உன்னோடு போட்டி போடும் அளவிற்குத் திறமை இல்லை. நாங்கள் இனி என்றும் இப்பொய்கைக்கு வரமாட்டோம். நானும் என் தோழியும் உன்னை வணங்கிக் கேட்கிறோம். எங்கள் துணிகளைக் கொடுத்து விடு.
நீ ஏற்கனவே பாம்புப் படுக்கையில் தூக்கத்தை விரும்புபவன். மேலும் இரவெல்லாம் பல பெண்களோடு கலவி செய்து களைத்திருப்பாய், விடியற்காலைக்கு முன்னமே எழுந்திருக்க வாய்ப்பே இல்லை என்ற எண்ணத்தில் நாங்கள் குளிக்க வந்தோம் என்கிறார்கள் பெண்கள். இங்கு தொழுதோம் என்பது இரு கரங்களையும் கூப்பித் தொழுதல். மொத்தம் நான்கு கரங்கள். முதலில் ஒரு கையால் உடலை மறைத்துக் கொண்டு தொழுதார்கள். ஆனால் கண்ணன் நான்கு கரங்களாலும் தொழ வேண்டும் என்றான் என்று உரையாசிரியர்கள் சொல்கிறார்கள். தன்னைத் தன்னால் என்றும் காத்துக் கொள்ளமுடியாது என்ற எண்ணம் இறைவனை அடைய விரும்புபவர்களுக்கு முதலில் ஏற்பட வேண்டும்.
இதுவென் புகுந்தது ! இங்கந்தோ! இப்பொய்கைக்கு எவ்வாறு வந்தாய்?
மதுவின் துழாய் முடி மாலே! மாயனே! எங்கள் அமுதே!
விதியின்மையால் அது மாட்டோம் வித்தகப் பிள்ளாய்! விரையேல்
குதிகொண்டு அரவில் நடித்தாய்! குருந்திடைக் கூறை பணியாய்
தேன் சொட்டும் திருத்துழாய் அணிந்த முடியை உடைய திருமாலே! மாயவனே! எங்களுக்கு அமுதம் போன்றவனே! வியப்பூட்டும் செயல்களைச் செய்யக் கூடியவனே! பாம்பின் மீது குதித்து நாட்டியம் ஆடியவனே! இது எவ்வாறு நிழந்தது? அய்யய்யோ! இப்பொய்கையை நீ எப்படிக் கண்டுபிடித்து வந்தாய்? உன்னோடு கூடுவதற்கு நாங்கள் கொடுத்து வைக்கவில்லை. அப்படியே இருந்தாலும் அவசரப்படாதே! குருந்தமரத்தில் வைத்திருக்கும் எங்கள் உடைகளைக் கொடுத்து விடு.
அவனைக் குளிர்விக்க பல பெயர்களைச் சொல்லி அழைக்கிறார்கள். நீ கூப்பிட்ட குரலுக்கு வருபவன்மட்டும் என்று நாங்கள் நினைத்தோம். அன்று கஜேந்திரனுக்கு வந்தது போல ஆனால் நீ கூப்பிடாவிட்டாலும் வருவாய் என்பது எங்களுக்குத் தெரியாது என்கிறார்கள் (வராதாய் போல் வருவாயே – நம்மாழ்வார்). அவசரப்படாதே என்று அவர்கள் சொல்வது அவர்கள் உள்ளத்தில் இருப்பதைக் காட்டுகிறது. நீ அருள் தந்தாலும் அது நாங்கள் எப்போது வேண்டுமோ அப்போதுதான் ஏற்றுக் கொள்வோம் என்கிறார்கள்.
எல்லே! ஈதென்ன இளமை? எம்மனைமார் காணில் ஒட்டார்
பொல்லாங்கு ஈதென்று கருதாய் பூங்குருந்து ஏறி இருத்தி
வில்லால் இலங்கை அழித்தாய்! நீ வேண்டியதெல்லாம் தருவோம்
பல்லாரும் காணாமே போவோம் பட்டைப் பணித்தருளாயே
என்ன விளையாட்டு இது! வில்லால் இலங்கையை அழித்தவனே! இது என்ன! எங்கள் தாய்மார்கள் எங்களின் இந்தக் கோலத்தைக் கண்டால் வீட்டில் சேர்க்க மாட்டார்கள்! இது எவ்வளவு பிரச்சினைகளை எங்களுக்குத் தரும் என்பதைக் கருத்தில் கொள்ளாமல் பூக்கள் நிரம்பிய குருந்தமரத்தின் மீது ஏறி நிற்கிறாய். நீ கேட்பதை எல்லோரும் பார்க்கத் தரமுடியுமா? தனியிடத்திற்குச் செல்லலாம். வேண்டியதைத் தருவோம். ஆனால் இப்படியே செல்ல முடியுமா?எங்கள் ஆடைகளைத் தந்தருள்வாய்.
பெண்களும் கூடலுக்குத் தயார் என்கிறார்கள். ஆனால் எங்களுக்கு வெட்கம் என்று ஒன்று இருக்கிறது என்றும் சொல்கிறார்கள். நீ எதை நினைக்கிறாயோ அதைச் செய்யக் கூடியவன். எங்களால் அவ்வாறு செய்ய முடியாது.
பரக்க விழித்து எங்கும் நோக்கிப் பலர் குடைந்தாடும் சுனையில்
அரக்க நில்லா கண்ண நீர்கள் அலமருகின்றவா பாராய்
இரக்கமேல் ஒன்றும் இலாதாய்! இலங்கை அழித்த பிரானே!
குரக்கரசு ஆவதறிந்தோம் குருந்திடைக் கூறை பணியாய்
இலங்கையை அழித்த பெருமானே! நீ கண்களை எல்லாப்புறமும் விழித்துப் பார்ப்பதால், சுனையில் நீராட வருபவர்களின் வருகை சீக்கிரம் அதிகரிக்கப்போகிறது என்பது தெரிகிறது. ஆனால் எங்கள் கண்களிலிருந்து அடக்கினாலும் நில்லாமல் கண்ணீர் கொட்டுகிறதைப் பார்க்க மாட்டாய். இரக்கம் என்பது கொஞ்சம் கூட இல்லாதவனே! நீ குரங்குகளுக்குத் தலைவன் என்பது எங்களுக்குத் தெரியும். குருந்த மரத்தில் இருக்கும் ஆடைகளை எங்களுக்குத் தா.
குரங்குகளுக்குத் தலைவனான சுக்ரீவனுக்கும் இவன்தான் தலைவன். தலைவனுக்கும் தலைவன் என்பதால் மரத்தில் குரங்குகள் செய்யும் குறும்புகளை விட அதிகக் குறும்புகளை செய்கிறான். அழுதாலும் பிடிவாதம் பிடித்தாலும் அவன் கவலைப்பட மாட்டான். தான் செய்ய நினைத்ததைச் செய்தே தீருவான்.
காலைக் கதுவிடுகின்ற கயலொடு வாளை விரவி
வேலைப் பிடித்து என்னைமார்களோட்டில் என்ன விளையாட்டோ?
கோலச் சிற்றாடை பலவும் கொண்டு நீ ஏறி இராதே
கோலம் கரிய பிரானே! குருந்திடைக் கூறை பணியாய்
கரிய திருமேனியை உடைய பிரானே! கயல் மீன்களும் வாளை மீன்களும் சேர்ந்து எங்கள் கால்களைக் கடிக்கின்றன. நீ இப்படி எங்கள வாட்டுவது தெரிந்து எங்கள் அண்ணன்மார்கள் வேல்களோடு இங்கு வந்து உன்னை விரட்டி விட்டால், அது விபரீத விளையாட்டாக முடிந்து விடும் அல்லவா? நீ அழகிய சிற்றாடைகளை அணிந்துகொண்டு மரத்தின் மேல் ஏறிக்கொண்டு ஏதும் செய்யாமல் இருக்காதே , குருந்த மரத்தில் உள்ள எங்கள் ஆடைகளைக் க் கொடுத்தருள்வாய்.
அன்று முதலை கடித்த யானையைக் காப்பாற்ற ஓடோடி வந்தாய். ஆனால் எங்கள் கால்களை எது கடித்தாலும் அது பற்றி உனக்கு எந்தக் கவலையும் இல்லை. எங்கள் அண்ணன்மார்கள் உன்னை உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்கள் என்று பயமுறுத்தவும் செய்கிறார்கள்- கண்ணனை வெல்ல யாராலும் முடியாது என்பது தெரிந்திருந்தும்.
P.A. Krishnan's Blog
- P.A. Krishnan's profile
- 17 followers
