ஓங்கி உலகளந்த உத்தமன்!
ஆண்டாளைப் படிக்கும் போது நாம் ஒன்றை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். அவர் காட்டும் உலகம் அவர் மனதில் பிறந்த உலகம். அவர் வாழ்ந்த உலகமும் அவர் பாடல்களில் வருகின்றது. ஆனால் மனதில் பிறந்த உலகமே முதன்மை பெறுகிறது.
“சீர்மல்கும் ஆய்ப்பாடிச் செல்வச்சிறுமிகள்” அவர் கற்பனையின் சிறுமிகள். தான் வாழும் உலகம் எவ்வாறு இருக்க வேண்டும் என்ற கனவை அவர்களோடு சேர்ந்து தன் அழியாப் பாடல்களின் மூலம் நம் கண்முன் நிறுத்துகிறார். ஆண்டாள் தனக்காகப் பாடவில்லை. வையத்தில் வாழ்பவர்களுக்காகப் பாடுகிறார். அவர்களுக்கு இறையருள் கிடைக்கும் என்ற உறுதியோடு பாடுகிறார்.
ஓங்கி உலகளந்த உத்தமன் பேர்பாடி
நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள்மும் மாரி பெய்து
ஓங்கு பெருஞ் செந்நெல் ஊடுகயல் உகளப்
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலைபற்றி
வாங்கக் குடம்நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோ ரெம்பாவாய்!
இன்றையப் பாடல் ஓர் உதாரணம்.
அதாவது சிறுமிகள் பாவை நோன்பிருந்து நீராடினால் உலகமே நீங்காத செல்வம் பெற்று நிறையும் என்று ஆண்டாள் சொல்கிறார். எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற இந்த இழை திருப்பாவை முழுவதும் ஓடிக் கொண்டிருக்கிறது. வாழ்க்கை தரும் துன்பங்களின் நிழல்கள் படாத பருவத்தினர் ஆண்டாளின் சிறுமிகள். அவர்களின் நம்பிக்கை நம்மை வியக்க வைக்கிறது
வைணவர்கள் இறைவனுடைய நிலைகளாக ஐந்தைக் கருதுகிறார்கள். அவை பரம், வியூகம், விபவம், அந்தர்யாமி, அர்ச்சை என்பவை.
“விண்மீதிருப்பாய் மலைமேல் நிற்பாய். கடல்சேர்ப்பாய்!மண்மீதுழல்வாய் இவற்றுளெங்கும் மறைந்துறைவாய்!” என்று நம்மாழ்வார் சொல்கிறார்.
விண்மீது நாராயணனாக பரமபதத்தில் இருப்பது பரம். கடல் சேர்ப்பாய் என்பது வியூகம். பாற்கடலில் பள்ளி கொண்டிருப்பது. மண் மீது உழல்வாய் என்பவது விபவம். அவன் எடுக்கும் அவதாரங்கள். மறைந்துறைவாய் என்பது அந்தர்யாமி. எல்லாவற்றிலும இறைவன் இருக்கிறான் என்று பொருள். மலை மேற் நிற்பாய் என்பது அர்ச்சை. சிலையாக நிற்பது. “கல்லினார்க்கு இறங்கி கல்லிலே இறங்கி நிலையாக கோவிலில் நிற்கின்றாய் கேசவா” என்று ராஜாஜி தன் குறைவொன்றும் பாடலில் இந்நிலையைத்தான் குறிப்பிடுகிறார்.
ஆண்டாள் முதல் பாடலில் நாராயணனே என்று பரமபத நாயகனைக் குறிப்பிடுகிறார். இரண்டாம் பாடலில் பையத் துயின்ற பரமன் என்று வியூக நிலையைக் குறிப்பிடுகிறார். மூன்றாவது பாடலில் ஓங்கி உலகளந்த உத்தமன் என்று விபவ நிலையை அவன் எடுத்த அவதாரத்தைக் குறிப்பிடுகிறார்.
அவன் உத்தமன். ஏன்?
பிறரைத் துன்புறுத்தி தான் வாழ வேண்டும் என்று நினைப்பவன் அதமன். பிறரும் தானும் வாழ வேண்டும் என்று நினைப்பவன் மத்தியமன். தன்னை வருத்தி பிறர் வாழ வேண்டும் என்று நினைப்பவன் உத்தமன். வாமன அவதாரத்தில் இறைவன் தன்னை “ஆலமர் வித்தின் அருங்குறளாக” குறுக்கிக் கொள்கிறான். பிட்சை கேட்கிறான். பிட்சை கிடைத்ததும் மூவுலகையும் தன் காலால் அளக்கிறான். தனக்காக அல்ல, பிறருக்காக. எனவேதான் அவன் உத்தமன்.
உத்தமன் பேர் பாடாமால் வேறு யார் பெயரைப் பாடுவது? வேறு எந்தப் பெயரும் இல்லை. “கங்கையாடப் போமவனுக்கு வேறொரு குழியில் மூழ்கிப் போக வேணுமோ’ என்று ஆறாயிரப்படி சொல்கிறது.
திங்கள் மும்மாரி என்கிறார் ஆண்டாள். “ஒன்பது நாள் வெய்யில் ஒரு நாள் மழை” என்பதுதான் மாதம் மும்மாரி. நமக்குத் தொல்லை கொடுக்காத மாரி. பொறிவண்டு கண்படுப்ப என்ற சொற்றொடருக்கு வண்டுகள் அரசகுமாரர்கள் அன்னத்தின் இறகு பொதிந்த மெத்தையில் உறங்குவது போல பூக்கள் மீது உறங்குகின்றன என்று வியாக்கியானக்காரர்கள் சொல்கிறார்கள்.
வாங்கக் குடல் நிறைக்கும் வள்ளல் பெருபசுக்கள் –கைபட்ட உடனே பாற்குடத்தை நிறைக்கும் பசுக்கள். அவற்றிற்கு வள்ளல்தன்மை எவ்வாறு வந்தது? கண்ணன் அருளால், அவன் குழலோசை கேட்டதால் என்கிறார்கள் உரையாசிரியர்கள்.
சிறுவிரல்கள் தடவிப் பரிமாற ச் செங்கண் கோடச் செய்ய வாய் கொப்பளிப்பக
குறுவெயர்ப் புருவம் குடிலிப்பக் கோவிந்தன் குழல்கொடு ஊதின போது
பறவையின் கணங்கள் கூடு துறந்து வந்து சூழ்ந்து படுகாடு கிடப்ப க்
கறவையின் கணங்கள் கால் பரப்பிட்டுக் கவிழ்ந்து இறங்கிச் செவி ஆட்டகில்லாவே .*
இது ஆண்டாளின் தந்தை பெரியாழ்வாரின் திருமொழி. கண்ணன் குழலூதுவதை அசை போடும் மயக்கத்தில் பால் பெருகுகிறதாம் . “புல்லால் வளருகிறவைன்றே. தீங்குழலோசை அசையிட்டிறே வளருவது” என்று வியாக்கியானம் சொல்கிறது.
P.A. Krishnan's Blog
- P.A. Krishnan's profile
- 17 followers
