Pa Raghavan's Blog, page 17

January 30, 2017

பொலிக! பொலிக! 18

காவிரியைக் கடந்து, திருவரங்கத்தின் எல்லையைத் தொட்டபோதே ஏதோ சரியில்லை என்று தோன்றியது. கூட்டம் கூட்டமாகப் போய்க்கொண்டிருந்த மக்களின் பதற்றமும் தவிப்பும் பெரிய நம்பிக்குக் குழப்பம் தந்தது. யாரையாவது நிறுத்தி விசாரிக்கலாம். ஏதாவது தகவல் வரும். ஆனால் அதற்கெல்லாம் நமக்கு அவகாசமிருக்கிறதா, தவிரவும் அது அவசியமானதாக இருக்கும் என்பது என்ன நிச்சயம்?


‘ஆனால் இம்மக்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளாமல் ஒரே துக்கத்தின் ஓரங்களைப் பிய்த்துத் தம் முகங்களில் ஒட்டவைத்துக்கொண்டு போகிறாற்போலத் தெரிகிறது சுவாமி!’ என்றார் ராமானுஜர்.


ஒரே துக்கம்! உணர்வளவில் ஒன்றுதான். ஆனால் அவரவர் துக்கத்தின் கனம் நிச்சயமாக வேறு வேறாக அல்லவா இருக்கும்?


‘எதற்கும் விசாரித்துவிடுவோமே?’


சரி என்று பெரிய நம்பி ஒருவரை அழைத்தார். ‘எல்லோரும் எங்கே போய்க்கொண்டிருக்கிறீர்கள்?’


‘ஐயா உங்களுக்கு விவரம் தெரியாதா? ஆளவந்தார் சுவாமிகள் பரமபதம் அடைந்துவிட்டார்கள். திருக்கரம்பன் படித்துறையில் இறுதிச் சடங்குகள் நடந்துகொண்டிருக்கின்றன.’


ராமானுஜருக்கு நெஞ்சடைத்துப் போனது. பெரிய நம்பி ஐயோ என்று அலறியேவிட்டார். நின்று பேசவோ, அழுது தீர்க்கவோ அவகாசமற்ற தருணம். எய்த அம்பைப்போல் அவர்கள் படித்துறையைப் பாய்ந்து அடைந்தபோது ஆளவந்தாரின் திருமேனி அங்கு கிடத்தப்பட்டிருந்தது. சுற்றிலும் சீடர்கள். சூழ்ந்த பெரும் துயரம். நாலாபுறங்களில் இருந்தும் அவரது பக்தர்களும் அன்பர்களும் அந்த இடத்தை நோக்கி வந்தபடியே இருந்தார்கள்.


‘நாம் மோசம் போய்விட்டோம் நம்பிகளே! ஆசாரியர் நம்மை விட்டுப் பிரிந்துவிட்டார்!’ என்று கதறினார் திருக்கோட்டியூர் நம்பி.


‘அவரது நோயை நான் விரும்பிப் பெற்றதன் காரணமே அவரது மரணத்தை நான் களவாட நினைத்ததுதான். ஆனால் விதி இத்தனைக் குரூரம் காட்டும் என்று எண்ணவில்லை நம்பிகளே!’ மாறனேர் நம்பி சொல்லிச் சொல்லிப் புலம்பிக்கொண்டிருந்தார்.


அரையர் ஒருபுறம் அழுதுகொண்டிருந்தார். திருமாலையாண்டான் மறுபுறம் அழவும் தெம்பற்றுச் சரிந்து விழுந்திருந்தார். ஒவ்வொருவர் மனத்திலும் ஊடுருவியிருந்த அந்த மகான் அத்தனை பேரின் துக்கத்துக்கும் சாட்சியே போல சும்மா கிடந்தார்.


பெரிய நம்பி நம்ப முடியாமல் தமது ஆசாரியரின் திருமேனியைப் பார்த்துக்கொண்டே இருந்தார்.


‘ஐயா, கண்ணைத் திறந்து பாருங்கள். நீங்கள் விரும்பிய மகாபுருஷனைக் காஞ்சியில் இருந்து அழைத்து வந்திருக்கிறேன். நீங்கள் பார்க்க விரும்பியதாகச் சொல்லித்தான் அழைத்து வந்திருக்கிறேன். இப்போது இவருக்கு நான் என்ன பதில் சொல்லட்டும்?’


அங்கிருந்த அத்தனை பேரும் அப்போதுதான் ராமானுஜரை கவனித்துப் பார்த்தார்கள். இவரா? இவரேதானா? இவரைத்தான் நமது ஆசாரியர் தமது வாரிசாக மனத்துக்குள் சுவீகரித்து வைத்திருந்தாரா? ஆளவந்தார் மனத்தையே ஆண்டு வந்தாரென்றால் இவர் எப்பேர்ப்பட்ட யோகியாக இருப்பார்!


ராமானுஜர் யாரையும் பார்க்கவில்லை. எதையும் கவனிக்கவில்லை. யார் பேச்சும் அவர் சிந்தைக்குள் நுழையவில்லை. கிடத்திவைக்கப்பட்டிருந்த ஆளவந்தாரின் திருமேனியையே சலனமின்றிப் பார்த்துக்கொண்டிருந்தார்.


‘குருவே சரணம். உம்மை நான் நேரில் தரிசித்ததில்லை. ஆனால் மனத்தில் எண்ணாதிருந்ததும் இல்லை. மிகச் சிறு வயதில் வீட்டுத் திண்ணையில் பாடம் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிற போது சில சமயம் என் அப்பா உங்களைப் பற்றிச் சொல்லியிருக்கிறார். எப்போதாவது எங்கள் வீட்டுக்கு வருகை தரும் என் மாமா பெரிய திருமலை நம்பி, மூச்சுக்கு மூச்சு உமது திருநாமத்தைத்தான் உச்சரித்துக்கொண்டே இருப்பார். திருக்கச்சி நம்பியுடன் பழக்கமான பிற்பாடு நாளைக்கொரு முறையாவது உம்மைப் பற்றி அவர் பேசாதிருந்ததில்லை. ஞானத்தின் பூரண வடிவான தங்களை என்றேனும் ஒருநாள் தரிசிப்பேன், உங்கள் தாள் பணிவேன் என்று தினமும் எண்ணிக்கொள்வேன். வைணவம் என்னும் பெரும் சித்தாந்தம் இப்பூவுலகில் தழைப்பதற்கு எம்பெருமான் உம்மைத் தேர்ந்தெடுத்து அனுப்பியிருந்தான். இன்று நீங்கள் விடைபெற்று விட்டீர்கள். வீட்டில் தகப்பன் மறைந்தாலே குடும்பம் திண்டாடித் தெருவுக்கு வந்துவிடும். நீங்கள் ஒரு சமூகத்தின் தகப்பன் அல்லவா? இனி எங்களை யார் கரை சேர்ப்பார்?’


பெருகிய கண்ணீரைத் துடைக்கத் தோன்றவில்லை. அப்படியே பார்த்துக்கொண்டு நின்றிருந்தார். சட்டென்று ஏதோ இடறியது. ராமானுஜர் முகத்தில் கணப் பொழுது ஒரு குழப்பம் தோன்றியது.


‘இது விசித்திரமாக இருக்கிறதே? ஆசாரியரின் வலக்கரத்தைப் பாருங்கள். மூன்று விரல்கள் மடங்கியிருக்கின்றன. முன்பே இவை இப்படித்தான் இருந்தனவா?’


அப்போதுதான் மற்றவர்கள் அதைக் கவனித்தார்கள். அவரது வலது கரத்தின் கட்டை விரல், ஆள் காட்டி விரல் தவிர, பிற மூன்று விரல்களும் மடங்கியிருந்தன.


‘இல்லையே, நான் பார்க்கவில்லையே’


‘நானும் கவனிக்கவில்லையே!’


யாரும் பார்த்திருக்கவில்லை. ராமானுஜர்தான் முதலில் கண்டது.


‘ஆசாரியர் திருநாடு அலங்கரித்த நேரம் இம்மாதிரி மூன்று விரல்கள் மடங்கியிருக்கின்றன என்றால் அவை எதையோ உணர்த்தும் குறியீடாக எனக்குத் தோன்றுகிறது. அவரை அறிந்த உங்களில் ஒருவர்தாம் அவர் எதை இப்படி உணர்த்துகிறார் என்று சொல்லவேண்டும்.’


பெரிய நம்பி திடுக்கிட்டுப் பார்த்தார். ‘ஆம் ராமானுஜரே! நீங்கள் சொல்லும்போதுதான் நினைவுக்கு வருகிறது. ஆசாரியருக்கு மூன்று பெரும் விருப்பங்கள் இருந்தன. பிரம்ம சூத்திரத்துக்கு போதாயன மகரிஷி எழுதிய உரையை அடியொற்றி, விசிஷ்டாத்வைத சித்தாந்தப் பிரகாரம் ஓர் உரை எழுதவேண்டும் என்பது அதில் முதலாவது.


‘சரி.’


‘திருவாய்மொழிக்கு மிகத் துல்லியமான ஓர் உரை எழுதவேண்டும். வேதம் தமிழ் செய்த மாறனான நம்மாழ்வாரின் பெயர் விளங்கும்படியாக, தகுதியுள்ள ஒரு நபருக்கு அவரது திருநாமத்தைச் சூட்டவேண்டும் என்பது இரண்டாவது அவா.’


‘அடுத்தது?’


‘விஷ்ணு புராணம் படைத்த பராசர பட்டர், மகாபாரதம் தந்த அவரது புதல்வர் வியாசர் இருவரது பெயர்களையும், காலமுள்ள வரையும் ஏந்திப் பெருமைப்படுத்தும் விதத்தில் வாழப் போகிறவர்களைக் கண்டடைந்து சூட்ட வேண்டும் என்பது மூன்றாவது விருப்பம்.’


ராமானுஜர் ஒரு கணம் கண்மூடி ஆளவந்தாரை தியானித்தார். பிறகு சொன்னார், ‘ஆசாரியரின் ஆசியும் எம்பெருமான் திருவருளும் கூடுமானால் என் வாழ்நாளுக்குள் இம்மூன்று ஆசைகளையும் நான் நிறைவேற்றுவேன்.’


துந்துபி முழங்கியது போல் ஒலித்த அந்தக் குரலின் உறுதியும் ஈர்ப்பும் அங்கு கூடியிருந்தவர்களைச் சிலிர்ப்புற வைத்தது.


இவர்தான், இவரேதான், சந்தேகமில்லை என்று ஒருமித்து முடிவு செய்தார்கள்.


அக்கணம் அது நிகழ்ந்தது. மூடியிருந்த ஆளவந்தாரின் மூன்று விரல்களும் விரிந்தன.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 30, 2017 08:30

January 29, 2017

ருசியியல் – 08

தமிழர்களால் மிக அதிகம் தூற்றப்பட்ட ஓர் உணவு உண்டென்றால் அது உப்புமாவாகத்தான் இருக்க முடியும். எனக்கு உப்புமா பிடிக்கும் என்று சொல்கிற பிரகஸ்பதிகள் ஒப்பீட்டளவில் வெகு சொற்பமே.


உப்புமா மீதான இந்த துவேஷம் நமக்கு எப்படி உண்டானது என்று யோசித்துப் பார்த்தால் கிடைக்கும் பதில்களில் ஒரே ஒரு காரணம்தான் நியாயமானதாக இருக்கும். அது, உப்புமாவை வெகு சீக்கிரம் சமைத்துவிட முடியும் என்பதுதான்! உடனே கிடைத்துவிடும் எதற்கும் அத்தனை மதிப்பு சேராது என்பது இயற்கையின் விதி. அவ்வகையில் உப்புமா ஒரு பாவப்பட்ட சிற்றுண்டி.


ஆனால் முற்றிலும் மாறுபட்ட கல்யாண குணங்களால் வடிவமைக்கப்பட்ட ஜீவராசியான எனக்கு, உப்புமா என்பது மிகவும் பிடித்தமான உணவு. அதன்மீதான நீங்காத விருப்பத்தை மிகச் சிறு வயதுகளில் என் பாட்டி உருவாக்கினார். விடுமுறை நாள்களில் சைதாப்பேட்டை பெருமாள் கோயில் தெருவில் இருந்த பாட்டி வீட்டுக்குப் போகும்போதெல்லாம் உப்புமா ப்ராப்தம் சித்திக்கும்.


பாட்டியானவருக்கு அன்றைய தேதியில் ஒரு டஜனுக்குச் சற்று கூடுதலாகவோ, குறைவாகவோ பேரப் பிள்ளைகள் இருந்தார்கள். நாலைந்து மகள்கள், இரண்டு மூன்று மகன்களைக் கொண்ட பிரம்மாண்ட குடும்ப இஸ்திரி அவர். எப்போதேனும்தான் நடக்கும் என்றாலும் மொத்தக் குடும்பமும் ஒன்றுகூடுகிற நாள்களில் அவருக்கு மூச்சுத் திணறிவிடும். அத்தனை பேரையும் உட்கார வைத்து தோசை வார்த்துப் போடுவதோ, பூரிக் கடை திறப்பதோ நடைமுறை சாத்தியமற்றது. தவிரவும் பகாசுர வம்சத்தில் உதித்தோர் யாரும் ஒன்றிரண்டுடன் திருப்தி கொள்பவர்களும் அல்லர்.


எனவே பாட்டி உப்புமா என்ற ஆயுதத்தைக் கையில் எடுத்துவிடுவார். பிள்ளைகளா, இன்று அரிசி உப்புமா.


பாட்டியின் அரிசி உப்புமா வேள்வியானது அரிசியை நனைத்து உலர்த்தி மாவு மெஷினுக்கு எடுத்துச் செல்வதில் தொடங்கும். அரிசிப் பதமும் இல்லாமல், ரவைப் பதமும் இல்லாமல் அவருக்கென ஒரு திரிசங்கு பதம் உண்டு. காசித் துண்டால் பரபரவென முதுகு தேய்க்கிற பதம் அது. அந்தப் பதத்தில் அதை அரைத்து எடுத்து வருவார். பரம தரித்திர சிகாமணியான என் தாத்தா, வீட்டுச் செலவுக்குப் பத்தொன்பதாம் நூற்றாண்டில் கொடுத்த பணத்தோடு சரி. பாட்டி அதன்பிறகு எப்படிச் சமாளித்து வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தார் என்று எனக்குத் தெரியாது.


எனவே அரிசி உப்புமாவுக்கு அலங்கார விசேஷங்கள் ஏதும் இருக்காது. வெண்கலப் பானையில் அதிகம் எண்ணெய் காணாத, சும்மா தாளித்த வெறும் அரிசி உப்புமா. உண்மையில் அதைத் தின்னுவது சிரம சாத்தியம்தான். ஆனாலும் பாட்டியெனும் புத்திசாலி ஒரு காரியம் செய்வாள். சமைத்து இறக்கிய அரிசி உப்புமாவின் மீது ஒரு சிறு ஸ்பூன் அளவுக்கு நெய்யை ஊற்றி கப்பென்று மூடி வைத்துவிடுவாள்.


பத்திருபது நிமிஷங்களுக்குப் பிறகு அந்த உப்புமா பாத்திரத்தைத் திறந்தால் அடிக்கும் பாருங்கள் ஒரு மணம்! அந்த மணம்தான் அந்த உப்புமாவின் ருசியாகப் பரிமாணம் பெற்றிருக்கிறது என்று இப்போது தோன்றுகிறது. தோட்டத்தில் பறித்த பாதாம் இலைகளைக் கழுவி, ஆளுக்கு இரண்டு கரண்டி உப்புமாவைப் போட்டு, ஓரத்தில் ஒரு துண்டு மாங்காய் ஊறுகாயை வைத்துத் தருவார் பாட்டி.


என் சிறு வயதுகளில் உண்ட அந்த அரிசி உப்புமா இன்று வரை நாவில் நிற்கிறது.


பின்னாளில் வந்து சேர்ந்த என் தர்மபத்தினி, கோதுமை ரவை உப்புமாவில் ஒரு புரட்சி செய்யும் முடிவுடன் வீட்டில் சாம்பார் வைக்கும் அனைத்து தினங்களிலும் இரவு உணவு கோதுமை ரவை உப்புமா என்றொரு சட்டம் கொண்டு வந்தார். இக்கலவரமானது எந்தளவுக்குச் சென்றது என்றால், காலை சமையல் கட்டில் இருந்து சாம்பார் வாசனை வரத் தொடங்கினாலே, ‘அப்பா இன்னிக்கு நைட் டின்னருக்கு ஓட்டலுக்குப் போலாமா?’ என்று என் மகள் கேட்க ஆரம்பித்தாள்.


உண்மையில் கோதுமை ரவை உப்புமாவும் ஒரு நல்ல சிற்றுண்டிதான். சேர்மானங்கள் அதில் முக்கியம். உப்புமாவின் ருசி என்பது அதில் இடித்துச் சேர்க்கப்படும் இஞ்சியால் பூரணமெய்துவது. நீங்கள் எண்ணெயைப் பீப்பாயில் கொண்டு கொட்டுங்கள். மணக்க மணக்க நெய்யூற்றித் தாளியுங்கள். காய்கறிகள் சேருங்கள். வேர்க்கடலையோ, முந்திரியோ வறுத்துத் தூவுங்கள். என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால் உப்புமா ருசிப்பது இஞ்சியால் மட்டுமே. எவ்வளவு அதிகம் இஞ்சி சேருகிறதோ, அவ்வளவு அதிக ருசி.


என் நண்பர் ஈரோடு செந்தில்குமார் ஒரு ருசிகண்டபூரணர். திடீரென்று இருபத்தி நாலு மணிநேர உண்ணாவிரதம், நாற்பத்தியெட்டு மணிநேர உண்ணாவிரதம் என்று அறிவித்துவிட்டு வெறுந்தண்ணீர் குடித்துக்கொண்டு கிடப்பார். விரதம் முடிகிற நேரம் நெருங்குகிறபோது வீறுகொண்டு எழுந்துவிடுவார்.


‘சுவாமி! என்னோட இன்னிய மெனு சொல்றேன் கேளும். ஆறு முட்டை. முன்னூத்தம்பது கிராம் பன்னீர் உப்புமா. நூத்தம்பது கீரை. நூத்தம்பது வாழத்தண்டு. நூறு தயிர், ரெண்டு க்யூப் சீஸ். பத்தாதோன்னு எழுவது கிராம் வெண்ணெயும் முப்பது கிராம் நெய்யும் சேத்துக்கிட்டேன்.’


மனைவியை இம்சிக்காத உத்தமோத்தமர் அவர். தனக்கு வேண்டியதைத் தானே சமைத்துக்கொள்கிற சமத்து ரகம்.


ஒருநாள் நட்டநடு ராத்திரி பன்னெண்டே காலுக்கு போனில் அழைத்தார். அப்போதுதான் விரதம் முடித்து, விருந்தை ருசித்திருப்பார் போலிருக்கிறது.


‘சுவாமி, உமக்கு அமிர்தத்தோட ருசி தெரியுமா? சொல்றேன் கேட்டுக்கங்க. நாலு கரண்டி நல்லெண்ணெய் எடுத்துக்கங்க. கடாய்ல ஊத்திக் காயவிட்டு ரெண்டு கரண்டி சாம்பார் மொளவொடி சேரும். காரம் சுருக்குனு இருந்தாத்தான் ருசிக்கும். ஆச்சா? அப்பறம், வரமொளவொடித் தூள் நாலு கரண்டி. வரமல்லி வாசம் பிடிக்கும்னா சாம்பார்த் தூள் அரகரண்டி எக்ஸ்டிரா. உப்பு பெருங்காயம் உம்ம இஷ்டம். இதெல்லாம் வரிசையா போட்டா தளபுள தளபுளன்னு எண்ண கொதி வந்துரும். அடங்கறப்ப ஆஃப் பண்ணீரும். அஞ்சு நிமிஷம் மூடி வெச்சிட்டு அப்பறம் எடுத்து பன்னீர் உப்புமாவுக்குத் தொட்டு சாப்ட்டுப் பாரும். எங்க ஊர்ல மீன வறுத்து வெச்சிக்கிட்டு இதத் தொட்டு சாப்டுவாங்க. மீனவிட இது பனீருக்குத்தான் அருமையாச் சேரும்.’


பல வருஷங்களுக்கு முன்னால் டெல்லியில் கணபதி என்று எனக்கொரு நண்பர் இருந்தார். இப்போது இல்லை. காலமாகிவிட்டார். யுஎன்ஐ செய்தி நிறுவனத்தில் உத்தியோகம் பார்த்துக்கொண்டிருந்தவர். ஒருநாள் அவர் எனக்கு கீரை உப்புமாவை அறிமுகப்படுத்துகிறேன் என்று சொல்லி ஒரு ஓட்டலுக்கு அழைத்துப் போனார். அது உத்திரபிரதேசத்தில் குருட்சேத்திரத்துக்குப் பக்கத்தில் இருந்த ஒரு சிறு டவுன். இப்போது பேர் மறந்துவிட்டது.


ரவையுடன் பாலக் கீரையைச் சேர்த்து வேகவைத்திருந்தார்கள். மிளகாய் சேர்மானம் கிடையாது. குறுமிளகுதான். நல்லெண்ணெய்க்கு பதில் தேங்காய் எண்ணெய். விசேடம் அதுவல்ல. கேரட்டுடன் பொடிப்பொடியாக நறுக்கிய கொய்யாக்காயை அந்த உப்புமா முழுதும் தூவிக் கொடுத்தார்கள். ருசியென்றால் அப்படியொரு ருசி.


உப்புமாவுக்கு இம்மாதிரியாகக் கொஞ்சம் கேனத்தனமான, அல்லது கலை மனத்துடன் அலங்கார வினோதங்கள் செய்தால் அது ஓர் உன்னதமான பட்சணமாகிவிடுகிறது.


சர்க்கரை தூவிய உப்புமாவை என்றாவது மசால் தோசைக்குள் வைத்து ருசித்துப் பார்த்திருக்கிறீர்களா? அது ஒரு மினியேச்சர் சொர்க்கம்.


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 29, 2017 08:47

பொலிக! பொலிக! 17

ஆளவந்தார் காஞ்சி சென்று திரும்பிய சில காலம் கழித்து இரண்டு சம்பவங்கள் நடந்தன. முதலாவது, ராமானுஜர் நிரந்தரமாக யாதவப் பிரகாசரைவிட்டு வெளியேறியது. மன்னர் மகளின் மனநோய் நீங்கியதை அடுத்து நிகழ்ந்தது அது. இரண்டாவது சம்பவம், ஆளவந்தாருக்கு உடல் நலன் குன்றிப் போனது.


அவருக்குப் புற்றுநோய் இருந்தது. எத்தனைக் காலமாக என்று யாருக்கும் தெரியாது. நோயின் தீவிரம் அதிகரித்தபோது அவர் செயல்பாடற்றுப் போனார். கொல்லும் வலியைக் காட்டிக்கொள்கிற மனிதரில்லை அவர். ஆனால் உடன் இருப்பவர்களுக்கு ஆசாரியரின் அவஸ்தை தெரியாதா?


‘ஆசாரியரே! உமது சீடனுக்கு ஒரு வேண்டுகோள் இருக்கிறது. அளவிட முடியாத ஞானத்தையும் நல்லறிவையும் எனக்கு அள்ளித்தந்த தாங்கள் இதனையும் ஏற்றுக் கொடுத்தருளவேண்டும்!’


கேட்டவர் மாறனேர் நம்பி. மாறன் என்பது நம்மாழ்வாரின் பெயர். நம்மாழ்வாருக்கு நிகராக வைணவ உலகம் கருதி மதித்த மகான் அவர். குரு பக்தியில் ஈடு இணையற்ற பெரியவர். அவர் கேட்கிறார். அதுவும் முதல் முறையாக ‘தன் விருப்பம்‘ என்ற ஒன்று.


‘என்ன வேண்டும் நம்பி?’


‘நீங்கள் கொடுப்பதாக முதலில் வாக்களியுங்கள். அதன்பின் சொல்கிறேன்.’


‘சரி, அப்படியே ஆகட்டும். சொல், என்ன வேண்டும்?’


‘வைணவம் தழைக்க நீங்கள் நீண்ட ஆயுளோடு இருக்க வேண்டியது அவசியம். இந்த நோய் உங்களை விழுங்கிவிட்டால் நாங்கள் அனாதைகளாகிப் போவோம். எனவே உங்களுக்கு வந்திருக்கிற ராஜபிளவைவை ஆசாரியப் பிரசாதமாக நீங்கள் எனக்குத் தந்தருள வேண்டும். நான் இருப்பது என் குடும்பத்துக்கு மட்டுமே நல்லது. நீங்கள் இருந்தால் நாட்டுக்கு நல்லது.’


சிலிர்த்துவிட்டது ஆளவந்தாருக்கு. ஒரு கணம் கண்மூடி யோசித்தார். என்னவென்று கேட்காமல், தருவதாக வாக்களித்துவிட்ட சொல்லும் முக்கியம். நல்ல மனம் கொண்ட சீடனின் நல்வாழ்வும் முக்கியம். எனவே, தனது புண்ணியங்களைப் புண்ணுக்குள் செலுத்தி, அதன் ஒரு பகுதியை மாறநேர் நம்பிக்கு மாற்றினார்.


‘நம்பி! நீங்கள் கேட்டுவிட்டதால் இதனைச் செய்திருக்கிறேன். ஆனால் எனது இறுதி நெருங்கிவிட்டது என்பதை நான் அறிவேன். உமது புகழை உலகறியச் செய்ய இச்சம்பவம் ஒரு சாட்சியாகட்டும்.’


ஆளவந்தார் இறுதியாகப் படுத்தார். அவரது வலியும் வேதனையும் சற்றுக் குறைந்திருந்தது. ஆனால் அவரது சீடர்களுக்கு வருத்தம் மிகுந்திருந்தது.


‘ஆசாரியரே! இப்படி எங்களைத் தனியே விட்டுச் செல்கிறேன் என்கிறீர்களே? இனி எங்களை யார் காப்பார்?’ என்று பெரிய நம்பி அவரது கால்களைப் பற்றிக்கொண்டு கண்ணீர் விட்டு அழுதுகொண்டிருந்தார்.


‘காஞ்சியில் நான் அவரைக் கண்டேன். பார்த்த கணத்திலேயே அவர் ஆதிசேஷனின் அம்சம் என்று என் மனத்தில் பட்டது. ஞானத்தின் செஞ்சுடர் தகதகக்கும் அத்தெய்வீக முகம் இப்போதும் என் கண்ணில் நிற்கிறது நம்பி. ராமானுஜர் இப்போது யாதவப் பிரகாசரை விட்டு விலகி, பேரருளாளனுக்குத் தீர்த்த கைங்கர்யம் செய்துகொண்டிருப்பதாகக் கேள்விப்பட்டேன். வைணவ உலகம் அவரால் தழைக்கும். அடியேன் ஆளவந்தார். அவர் வாழவைப்பார்!’


குருவின் மனம் சீடர்களுக்குப் புரிந்துபோனது. தாமதம் பயனில்லை. இன்றே கிளம்புங்கள் என்று அனைவரும் துரிதப்படுத்தி, பெரிய நம்பியைக் காஞ்சிக்கு அனுப்பிவைத்தார்கள்.


ஒளியின் வேகத்தில் கால்கள் இயங்க முடிந்தால் எத்தனை நன்றாக இருக்கும்! ஆனால் அவர் காஞ்சியைச் சென்றடைய ஒரு வார காலமாயிற்று. திருக்கச்சி நம்பியைச் சந்தித்து ஆசாரியரின் விருப்பத்தைச் சொன்னார்.


‘வைணவ தரிசன பீடம் ராமானுஜருக்காகக் காத்திருக்கிறது நம்பிகளே. நமது ஆசாரியரின் எண்ணம் அதுதான். அவர் வருவாரா? மரணப் படுக்கையில் இருக்கும் ஆளவந்தார் தமது இறுதிக் கணத்துக்கு முன்னால் இளையாழ்வாரைச் சந்தித்துவிட வேண்டும். எப்படியாவது ஏற்பாடு செய்யுங்கள்.’


ராமானுஜரின் தாயார் காந்திமதி அப்போது காலமாகியிருந்தார். அந்தத் துயரின் சுவடுகள் மறைந்திராத நேரம். அருளாளன் திருப்பணியில் மட்டுமே அவர் ஆறுதல் தேடிக்கொண்டிருந்தார்.


‘இது அவர் வரும் நேரம்தான். நீங்கள் முதலில் பெருமாளைச் சேவித்துவிட்டு வாருங்கள். நாம் பேசுவோம்‘ என்றார் திருக்கச்சி நம்பி.


பெரிய நம்பி சன்னிதிக்குச் சென்றார். வையம் காக்கும் வரதராஜப் பெருமாள். கற்பூர வெளிச்சத்தில் கடலெனப் பொங்கிப் பிரவகித்துக்கொண்டிருந்த அவனது பேரருள் தன்னை நெருங்கி வருடுவதாக அவருக்குத் தோன்றியது. ‘பெருமானே! என் வருகையின் நோக்கம் உனக்குத் தெரியும். வேண்டியது உனது அனுமதி ஒன்றே.’


கண்மூடி அவர் சில சுலோகங்களை வாய்விட்டுச் சொல்லத் தொடங்கினார். ஆளவந்தார் இயற்றிய சுலோகங்கள்.


மிகச் சரியாக அந்நேரம் ராமானுஜர் சன்னிதிக்குள் நுழைந்தார். தான் அதுவரை கேட்டிராத அந்த சுலோகங்களின் கம்பீரத்திலும் ஆற்றல் மிக்க ஆராதனைகளிலும் மனம் பறிகொடுத்தவராக, ‘ஐயா! இந்த சுலோகங்களை இயற்றியவர் யார்?’ என்று கேட்டார்.


கண் திறந்து அவரைப் பார்த்தார் பெரிய நம்பி.


‘இவர்தான் ராமானுஜர்.’ என்று திருக்கச்சி நம்பி அறிமுகம் செய்தார்.


பரபரப்பாகிவிட்டது அவருக்கு. எங்கே தொடங்குவது, என்னவென்று சொல்லுவது, எப்படி அழைப்பது என்று கணப் பொழுதில் மனத்தில் எழுந்த நூறு வினாக்களில் எதை முதலில் விடுவிப்பது என்று புரியாமல் குழம்பி நின்ற கணத்தில் திருக்கச்சி நம்பியே எடுத்துக் கொடுத்தார்.


‘அவர் இந்த சுலோகங்களைப் பற்றிக் கேட்டார்.’


‘ஆம். இவை ஆளவந்தார் அருளிய சுலோகங்கள்.’


பரவசமானார் ராமானுஜர். ‘ஆ! ஆளவந்தாரா? வைணவம் தழைக்கப் பரமன் இவ்வையத்துக்கு அளித்த பெருங்கொடை அல்லவா அவர்! வாழ்வில் ஒருமுறையாவது அவரைத் தரிசித்துவிட மாட்டோமா என்று எத்தனைக் காலமாக நான் ஏங்கிக்கொண்டிருக்கிறேன் தெரியுமா?’


‘திருவரங்கத்தில் இருக்கிறார். உடல்நலம் குன்றிய நிலையில், பேசவும் சக்தியற்றவராக…’


அவர் முடிக்கவில்லை. ‘கிளம்புங்கள். நான் உம்மோடு இப்போதே திருவரங்கம் வருகிறேன். எனக்கு அவரைப் பார்த்தே தீரவேண்டும். உடனே. மிக உடனே.’


அது நடந்தது, பேரருளாளன் சித்தம். ராமானுஜர் வீட்டுக்குப் போகவில்லை. மனைவியிடம் சொல்லிக்கொள்ளவில்லை. சன்னிதியில் நின்றிருந்த பெரிய நம்பியை இழுத்துக்கொண்டு அப்படியே வீதிக்குப் பாய்ந்துவிட்டார்.


ஓட்டமும் நடையுமாகக் காஞ்சியில் இருந்து திருவரங்கம் சென்று சேரும் வரை இருவரும் ஆளவந்தாரைத் தவிர வேறு எதையுமே நினைக்கவில்லை.


ஆனால் விதி வேறாக இருந்தது. அவர்கள் திருவரங்கம் சென்று சேர்ந்தபோது ஆளவந்தார் இறந்திருந்தார்.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 29, 2017 08:30

January 28, 2017

பொலிக! பொலிக! 16

அரையர் அப்போதுதான் பாடி முடித்திருந்தார். அரங்கனைச் சேவித்துவிட்டு ஆளவந்தாரின் சீடர்கள் அனைவரும் கருடாழ்வார் சன்னிதிப் பக்கம் வந்துகொண்டிருந்தபோது இரண்டு பேர் ஓடி வந்தார்கள்.


‘பெரிய நம்பிகளே! காஞ்சியில் ஓர் அற்புதம் நிகழ்ந்திருக்கிறது. இது இந்நூற்றாண்டின் அதிசயம். பேரருளாளனின் பெருங்கருணை இதனைச் சாத்தியமாக்கியிருக்கிறது!’


மேல்மூச்சு கீழ்மூச்சு வாங்க, பரவசத்தில் தோய்த்த வார்த்தைகளைக் கோக்கத் தெரியாமல் அவர்கள் அள்ளிக் கொட்டினார்கள்.


பெரிய நம்பிக்குக் காஞ்சி என்றதுமே ராமானுஜரின் நினைவு வந்தது. தமது இறுதி நாள் நெருங்கிய நேரத்தில், ‘அவரை அழைத்து வா’ என்று ஆசார்யர் ஆளவந்தார் தன்னைக் காஞ்சிக்கு அனுப்பிவைத்த சம்பவம் நினைவுக்கு வந்தது. பிறகு ஆளவந்தார் மறைந்த பின்னர் மீண்டும் காஞ்சிக்குச் சென்றது. வழியில் அவரை மதுராந்தகத்தில் சந்தித்தது. ஏரி காத்த ராமர் கோயிலில் அவருக்குப் பஞ்ச சம்ஸ்காரங்களைச் செய்து வைத்தது. ராமானுஜர் வீட்டுக்கே போய்த் தங்கி, பிரபந்தம் சொல்லிக்கொடுத்தது. தஞ்சம்மாவின் தண்ணீர்த் தகராறு. சொல்லிக்கொள்ளாமல் கிளம்பி வந்தது.


‘நம்பிகளே, எந்த உலகில் இருக்கிறீர்? நாங்கள் சொல்வது கேட்கிறதா?’


வந்தவர்கள் கேட்டார்கள். உண்மையில் பெரிய நம்பிக்கு அவர்கள் விவரித்துச் சொன்ன சம்பவத்தில் ஒருவரி கூட மனத்தில் ஏறவில்லை. அவரது எண்ணமெல்லாம் பழைய சம்பவங்களையே சுற்றி வந்தது.


‘என்ன சொன்னீர்கள்?’ என்று திரும்பக் கேட்டார்.


திருவரங்கப் பெருமாள் அரையர் மீண்டும் எடுத்துச் சொன்னார்.


‘யாதவப் பிரகாசர் ராமானுஜரின் சிஷ்யராகி, ஶ்ரீவைஷ்ணவ சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டுவிட்டாராம். ராமானுஜர் அவருக்கு கோவிந்த ஜீயர் என்று பெயரிட்டு புத்தகம் எழுதப் பணித்திருக்கிறாராம்.’


நம்பி புன்னகை செய்தார். ‘இது நடக்காதிருந்தால்தான் வியந்திருப்பேன்!’


‘எப்படி? எப்படிச் சொல்கிறீர்கள்? யாதவரின் மனமாற்றம் எதிர்பார்க்கக்கூடியது இல்லையே?’


‘ஆனால் ராமானுஜரின் பராக்கிரமம் நாம் அறிந்தது அல்லவா? நாமெல்லாம் நமது ஆசாரியரின் கூடவே இருந்தவர்கள். ஆனால் வாழ்வில் ஒருமுறைகூட நேரில் சந்தித்துப் பேசியிராத ராமானுஜரையே அல்லவா அவர் தமக்குப் பிறகு வைணவ உலகின் ஆசார்ய பீடாதிபதியாக எண்ணினார்? ஆளவந்தார் நெஞ்சையே ஆளப் பிறந்தவர் அல்லவா அவர்? யாதவரின் அகந்தை சரியான இடத்தில் நொறுங்கியிருக்கிறது. தமது சீடருக்கே சீடரான குரு இவ்வுலகில் வேறு யாரும் இருக்கமாட்டார்கள். யாதவர் பெயர் இனி ராமானுஜர் பெயருள்ள வரை நிலைத்திருக்கும்.’


அவர்கள் அத்தனை பேரும் பரவச நிலையில் இருந்தார்கள். காஞ்சிக்குச் சென்று வந்தவர்கள் கதை கதையாகச் சொல்லிக்கொண்டிருந்தார்கள். ராமானுஜர் துறவு ஏற்றது குறித்து. முதலியாண்டானும் கூரத்தாழ்வானும் முதல் சீடர்களாகச் சேர்ந்தது குறித்து. அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் மக்கள் திரள் திரளாகப் பெருகி வந்து அவரை தரிசித்து வைணவத்தை வாழ்க்கை முறையாக ஏற்பது குறித்து.


‘ஐயா, காஞ்சி மக்கள் அவரைப் பற்றித் திரும்பத் திரும்பச் சொல்வதெல்லாம் ஒன்றுதான். இப்படியொரு அகந்தையே இல்லாத மனிதன் இப்பூமியில் வாழமுடியுமா என்று அவர்கள் வியக்கிறார்கள். அத்வைதிகளுடன் வாதம் செய்து வெல்லும்போதுகூட கூப்பிய கரங்களை இறக்குவதில்லையாம்.’


‘அரையரே, நமது ஆசாரியர் ராமானுஜரைச் சந்திப்பதற்காகக் காஞ்சி சென்ற தருணம் உமக்கு நினைவிருக்கிறதா?’ என்றார் பெரிய நம்பி.


யாரால் மறக்க முடியும்? சரித்திரம் மறக்காத ஒரு பக்கச் சந்திப்பு அது!


யாதவரின் கொலை முயற்சியில் இருந்து தப்பித்து ராமானுஜர் காஞ்சி வந்து சேர்ந்திருந்த சமயம் அது. அவரைக் காத்ததும் மீட்டதும் கச்சிப் பேரருளாளனே என்கிற தகவல் பனிக் காற்றைப் போல் இண்டு இடுக்கு விடாமல் தேசமெங்கும் பரவிக்கொண்டிருந்தது. ஊர் திரும்பிய யாதவர் மீண்டும் அவரைப் பாடசாலைக்கு வரச் சொன்னார். அதனால் பாதகமில்லை என்று திருக்கச்சி நம்பியும் சொன்னதால் ராமானுஜர் வகுப்புகளுக்குச் செல்ல ஆரம்பித்திருந்தார்.


அந்தச் சமயத்தில்தான் திருவரங்கத்தில் இருந்த ஆளவந்தாரை இந்தத் தகவல் சென்று தொட்டது. அருளாளன் அன்புக்குப் பாத்திரமான ஒரு பிள்ளை யாதவரிடம் வாசித்துக்கொண்டிருக்கிறானா? வியப்பாக இருக்கிறதே. நான் அவனைப் பார்க்கவேண்டும் என்று தீர்மானம் செய்துகொண்டார்.


ஆளவந்தார் திடகாத்திரமாக இருந்த காலம் அது. எனவே நினைத்த மாத்திரத்தில் கிளம்பியும் விட்டார். காஞ்சியில் ஆலவட்ட கைங்கர்யம் செய்துகொண்டிருந்த திருக்கச்சி நம்பியும் அவரது மாணவர்தாம். ஶ்ரீசைல பூர்ணரைத் திருப்பதிக்கு அனுப்பியது போலத்தான் நம்பியை அவர் காஞ்சியில் விட்டிருந்தார். எனவே ஆசார்யர் வருகிறார் என்றதும் நம்பி பரபரப்பாகிவிட்டார். கோயில் மரியாதைகளுடன் ஊர் எல்லைக்கே சென்று அவரை வரவேற்று அழைத்து வந்தார்.


சன்னிதியில் சேவை ஆனதும் ஆளவந்தார் திருக்கச்சி நம்பியுடன் பொதுவாகச் சில விஷயங்கள் பேசியபடி வெளியே வந்தார். அப்போது அது நடந்தது.


யாதவப் பிரகாசர் கோயில் மண்டபத்தை நோக்கி வந்துகொண்டிருந்தார். பின்னால் அவரது மாணவர்கள்.


‘நம்பி, அவர்தானே யாதவப் பிரகாசர்?’


‘ஆம். அவரேதான்.’


‘அவரது குழுவில் அதோ ஒரு பிள்ளை நெடுநெடுவென வளர்த்தியாக, சூரியனைக் கரைத்துச் செய்தாற்போன்ற பொலிவுடன் வருகிறானே, அவன் யார்?’


‘குருவே, அவர் பெயர் ராமானுஜன். யாதவரிடம் வாசிக்கும் அவர்தான் அருளாளனுக்குத் தீர்த்த கைங்கர்யமும் செய்துகொண்டிருக்கிறார்.’


ஆளவந்தார் புன்னகை செய்தார்.


திருக்கச்சி நம்பி ராமானுஜரைப் பற்றிய அனைத்து விவரங்களையும் அவரிடம் எடுத்துச் சொன்னார். ‘சுவாமி சத்யம், ஞானம் அனைத்தும் பிரம்மத்தின் குணங்கள் என்று இவர் சொல்லப் போக, யாதவருக்கு இவரைப் பிடிக்காது போய்விட்டது. அன்று ஆரம்பித்து அவர்களிடையே அடுக்கடுக்காக எத்தனையோ பிரச்னைகள். காசிக்கு அழைத்துச் சென்று கொன்றுவிடவே பார்த்திருக்கிறார் யாதவர். ஆனால் பேரருளாளன் காப்பு உள்ளது இவருக்கு.’


அந்தக் கணத்தில் ஆளவந்தார் முடிவு செய்தார். வைணவ குருபீடம் தனக்குப் பிறகு இவரைச் சேரவேண்டியது.


நம்பி ராமானுஜரை அழைத்து வந்து அறிமுகப்படுத்தத் தயாராகத்தான் இருந்தார். ஆனால் அது அவசியமில்லை என்று ஆளவந்தார் நினைத்தார். விறுவிறுவென்று மீண்டும் சன்னிதிக்குள் சென்றார். ஒரே ஒரு பிரார்த்தனை.


‘இவர் இருக்கவேண்டிய இடம் யாதவரின் குருகுலமல்ல. வைணவ உலகம் இவருக்காகக் காத்திருக்கிறது. மற்றபடி உன் சித்தம்.’


கண்மூடி ஒரு நிமிடம் நின்றவர், உடனே கிளம்பிப் போயேவிட்டார்.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 28, 2017 08:30

January 27, 2017

பொலிக! பொலிக! 15

வழி முழுக்க யாதவப் பிரகாசருக்கு ஒரே சிந்தனைதான். அவர் சடங்குகளை விட்டொழித்தவர். பூரண அத்வைத சித்தாந்தி. தனக்குள் இறைவனைக் காண விரும்பி, தன்னையே இறைவனாகக் கருதிக்கொண்ட அகங்காரத்தின் பிடியில் தன்னைக் கொடுத்தவர். ஆனால் சந்தேகமின்றி சன்னியாசி. அந்தணர்களின் அடையாளங்களாகப் பார்க்கப்பட்ட குடுமியோ, பூணூலோ அவருக்குக் கிடையாது. ஜாதி துறக்க முடிந்தவருக்கு மீதி துறக்க முடியாது போனதுதான் பிரச்னை.


ஆனால் வயோதிகம் அவருக்குச் சற்று நிதானத்தை அளித்திருந்தது. அதுநாள் வரை செய்த காரியங்கள் பற்றிய மீள் பரிசீலனையில் தன்னைத் தானே அவர் வெறுக்கத் தொடங்கியிருந்தார். அவரது ஆணவம், கல்வியால் வந்தது. தானறிந்த வேதமும் தனையறிந்த உலகமும் என்றும் தன்னை உச்சத்தில் உட்கார வைத்திருக்கும் என்று கண்மூடித்தனமாக நம்பிக்கொண்டிருந்தார். ஆனால், வேதத்தின் உச்சத்தில் உள்ளவன் வேறொருவன் அல்லவா? என்றும் உள்ளவனும் எங்கும் உள்ளவனுமான பரம்பொருளை உணர்த்துகிற கருவியல்லவா அது? சாமரத்தை வீச வேண்டிய திருப்பணியில் உள்ளவன், தனக்கே வீசிக்கொள்ள நினைப்பது விபரீதம். ஊர் சிரிக்கும். அதுதான் நடந்தது. உலகு எள்ளி நகையாடும். அதுவும் நிகழ்ந்தது. நேரில் கும்பிட்டு நகரும் ஜனங்கள் முதுகுக்குப் பின்னால் அவரது ஆணவத்தைக் குறிப்பிட்டு இழித்துப் பேசியதை அவர் அறிய நேர்ந்தபோதுதான் அவருக்குத் தனது தவறு புரிந்தது.


மறுபுறம், தன்னிடம் பயில வந்த ராமானுஜன் தனியொரு பாதை அமைத்து மேலே மேலே போய்க்கொண்டிருந்ததையும் அவர் விழிப்புடன் கவனித்துக்கொண்டிருந்தார். ஆணவமற்ற ஆத்மா. அத்தனை பேரையும் அரவணைக்கிற ஆத்மா. ஒரு காழ்ப்புண்டா? சிறு துவேஷமுண்டா? பழி வாங்கும் சிந்தையுண்டா!


‘அம்மா, நான் அவனைக் கொல்ல நினைத்ததை அவன் அறிவான். ஆனாலும் ஏன் இப்படிச் செய்தீர்கள் என்று என்னிடம் அவன் இருந்த இறுதி நாள் வரை கேட்கவில்லை.’


இரவெல்லாம் சொல்லிச் சொல்லி அழுதார்.


‘மகனே, தன்னை மையப்படுத்தி உலகைப் பார்க்கிறவர்களுக்கும் பரம்பொருளான நாரணனை மையமாக்கி அவன் பாதாரவிந்தங்களில் தன்னைச் சேர்க்கத் துடிக்கிறவர்களுக்கும் உள்ள வித்தியாசம் இதுதான். அவர் இல்லாது போனால் உனக்கு நல்லது என்று நீ நினைத்தாய். அவர் இருந்தால் ஊருக்கு நல்லது என்று இறைவன் நினைத்தான். யார் நினைப்பு வெல்லும்?’


அன்றிரவு முழுதும் யாதவர் தூங்கவில்லை. தாம் செய்த பாவங்களுக்கெல்லாம் ஒரே பிராயச்சித்தம் இம்மாபெரும் பூமியை முழுதாக ஒருமுறை பிரதட்சணம் செய்வதுதான் என்று அவருக்குத் தோன்றியது.


விடிவதற்குச் சற்று முன்னால் அவர் கண்ணயர்ந்தபோது ஒரு கனவு வந்தது. கனவில் கேட்ட குரல் திடுக்கிட்டு எழவைத்தது.


‘யாதவப் பிரகாசா! நீ பூமியை வலம் வருவதும் எனது பக்தனான ராமானுஜனை வலம் வந்து பணிவதும் ஒன்றேதான்.’


அதன்பிறகுதான் அவர் கிளம்பினார். ஆனால் அப்போதும் மனத்தில் சிறு குழப்பம். ஒருவேளை பிரமையாக இருக்குமோ? ராமானுஜர் இதனை ஏற்பாரா? தன்னை அங்கீகரிப்பாரா? தனது பாவங்களை மன்னிப்பாரா?


காஞ்சிக்குப் போய்ச் சேர்ந்ததும் அவர் நேரே திருக்கச்சி நம்பியைச் சந்தித்துத் தனது சந்தேகத்தைக் கேட்டார். நேரடியாகக் கூடச் சொல்லவில்லை. அதிலும் பூடகம்.


‘என் மனத்தில் ஒரு சந்தேகம் இருக்கிறது. அது சரியா என்று பெருமாளிடம் கேட்டுச் சொல்வீர்களா?’


என்ன சந்தேகம் என்றி திருக்கச்சி நம்பி கேட்கவில்லை. அத்வைத சிங்கம் இன்று அடிபணிந்து வந்து நிற்கிறது. ஒரு சரித்திரத்தின் தொடக்கப்புள்ளியாக விளங்கப் போகிற சம்பவ நாள் நெருங்கி வருகிறது. நாம் எதற்கு கேள்வி கேட்டுக்கொண்டிருக்க வேண்டும்?


‘ஆகட்டும் சுவாமி. நீங்கள் நாளை வாருங்கள்.’ என்றார் திருக்கச்சி நம்பி.


யாதவர் காஞ்சியிலேயே காத்திருந்தார். மறுநாள் பொழுது விடிந்ததும் அடித்துப் பிடித்துக்கொண்டு திருக்கச்சி நம்பியை ஓடோடிச் சென்று சந்தித்தார். ‘அருளாளனைக் கேட்டீர்களா? உமக்கு என்ன பதில் கிடைத்தது?’


‘அவன்தான் ஏற்கெனவே உமது கனவில் வந்து விடை சொல்லிவிட்டானாமே? அதையே செய்யச் சொல்லி உத்தரவாகியிருக்கிறது.’


ஒரு கணம்தான். கதறிவிட்டார் யாதவப் பிரகாசர். எப்பேர்ப்பட்ட மனிதர் இவர்! சக மனிதனிடம் பேசுவதுபோல இறைவனுடன் பேசுகிற வல்லமையெல்லாம் எத்தனை பேருக்கு சாத்தியம்? அப்படியே கைகூப்பி நின்றார். மேற்கொண்டு எதுவுமே கேளாமல் ராமானுஜரின் மடத்தை நோக்கி நடக்க ஆரம்பித்தார்.


அன்று அது நடந்தது.


‘ராமானுஜரே! நான் யாதவப் பிரகாசன் வந்திருக்கிறேன்.’


மேனி நடுங்க தனது முன்னாள் சீடரின் எதிரே கூனிக் குறுகிப் போய் வந்து நின்றார் யாதவர்.


‘சுவாமி வரவேண்டும். நலமாயிருக்கிறீர்களா?’


சொற்களைத் தேடித் தவித்துக்கொண்டிருந்த யாதவப் பிரகாசர், ஒருவாறு தன்னைத் தேற்றிக்கொண்டு தனது அகங்காரத்தை உருவி எடுத்து ராமானுஜரின் முன்னால் வைத்து வணங்கினார். ‘நான் கதி பெற வழிகாட்டுங்கள். என் சந்தேகங்களைத் தீர்த்து வையுங்கள். சத்யம், ஞானம், அனந்தம் பிரம்மத்திலேயே நாம் மீண்டும் ஆரம்பித்தாக வேண்டும்.’


ராமானுஜர் புன்னகை செய்தார். தன்னருகே இருந்த கூரத்தாழ்வானைப் பார்த்தார். ‘இவர் உமக்கு அனைத்தையும் விளக்குவார்’ என்று சொன்னார்.


ஆழ்வான் ஓர் அறிவுக்கடல். பெரும் பண்டிதர். தனது ஞானம் முழுதும் தன் குரு ராமானுஜரின் ஆசியெனப் பணிந்து வாழ்பவர்.


அன்று கூரத்தாழ்வான் யாதவரின் அனைத்து சந்தேகங்களுக்கும் ராமானுஜரின் சார்பில் பதில் சொன்னார். தத்துவச் சந்தேகங்கள். சிந்தாந்தச் சிடுக்குகளின் மீதான சந்தேகங்கள். வேதாந்த உட்பொருள் சார்ந்த விளக்கங்கள். சத்தியமும் ஞானமும் மட்டுமல்ல. சகலமும் பரம்பொருளின் குணங்கள்தாம். உலகம் ஒரு மாயை அல்ல. ஏன் அப்படி எண்ணிக்கொள்ள வேண்டும்? கயிறு ஏன் பாம்பாகத் தெரியவேண்டும்? கயிறைக் காணும்போதே பாம்பின் தலைமீது நின்று நடமாடியவனின் பேரெழிலும் பெருங்கருணையுமல்லவா நம்மை ஆட்கொள்ள வேண்டும்? மையலேற்றி மயக்க அவன் முகம் மட்டுமே மாயமந்திரம்.


கூரத்தாழ்வான் வைணவத்தின் சகல தரிசனங்களையும் யாதவர் முன் விளக்கி முடித்தபோது யாதவர் கைகூப்பி எழுந்து நின்றார். ‘ராமானுஜரே! நீர் யார் என்பதை உமது சீடரின் விளக்கங்கள் எனக்குப் புரியவைத்துவிட்டன. இனி நான் யாராக இருக்கவேண்டுமென்று நீங்களே தீர்மானம் செய்யுங்கள்’ என்று சொல்லி ராமானுஜரை வலம் வந்து தாள் பணிந்தார்.


ராமானுஜர் அவருக்குப் பஞ்ச சம்ஸ்காரங்களைச் செய்து வைத்தார். கோவிந்த ஜீயர் என்ற பெயர் வழங்கி, தன்னோடு சேர்த்துக்கொண்டார்.


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 27, 2017 08:30

January 26, 2017

பொலிக! பொலிக! 14

யாதவப் பிரகாசரின் தாயார், வீடு சென்றடைய வெகு நேரம் ஆகிவிட்டது. பாடசாலைத் திண்ணையை ஒட்டிய சுவர் மீதிருந்த மாடத்தில் சிறு அகல் ஒன்று எரிந்துகொண்டிருந்தது. யாரோ படுத்திருப்பது தெரிந்தது.


‘யாரப்பா அங்கே?’


குரல் கேட்டு திடுக்கிட்டு எழுந்தது தனது மகனேதான் எனத் தெரிந்ததும் அவளுக்குச் சற்று பயமாகிவிட்டது. யாதவன் திண்ணைக்கு வந்து படுக்கிற வழக்கமில்லையே? அதுவும் விளக்கு வைத்து ஒரு நாழிகைகூட ஆகியிருக்காத சமயம். பெரும்பாலும் அந்நேரத்தில் யாதவர் முற்றத்து நிலவு வெளிச்சத்தில் அமர்ந்திருப்பார். சகாயத்துக்கு ஒரு விளக்கு வைத்துக்கொண்டு ஏதாவது சுவடி புரட்டிக்கொண்டிருப்பார். படிக்கத் தோன்றாத தினங்களில் சாப்பிட்டுவிட்டுப் படுத்துவிடுவதும் உண்டு.


‘மகனே, என்ன ஆயிற்று உனக்கு? எதற்காக வாசலுக்கு வந்து படுத்திருக்கிறாய்?’


‘உள்ளே வரக் காலனும் தயங்குகிறானோ என்று தோன்றியது தாயே. அவனுக்கு வசதியாகத்தான் நானே வெளியே வந்து படுத்தேன்.’


அவள் பெற்றவள். சன்னியாசி என்றாலும் மகன் அல்லவா? விரக்தியின் விதவிதமான வெளிப்பாடுகளை அந்நாள்களில் அவள் யாதவப் பிரகாசரிடம் தினமும் கண்டுகொண்டிருந்தாள். என்ன சொல்லி சமாதானப்படுத்துவது என்று தெரியவில்லை. யோசிக்கத் தெரியாதவன் என்றால் எப்படியும் வளைத்துவிட முடியும். பண்டிதன் என்றாலும் பாசத்தால் வென்றுவிடலாம். ஆனால் துறந்தவனுக்கான சாவித்துவாரம் எது?


சட்டென்று அவள் மனக்கண்ணில் ராமானுஜர் ஒரு கணம் வந்து போனார்.


‘அம்மா நீங்கள் சாப்பிட்டீர்களா?’


‘இல்லையப்பா. நீயும் பசியோடுதான் இருப்பாய். பிரசாதங்கள் இருக்கின்றன. அதைச் சாப்பிடலாமல்லவா?’


தயங்கித்தான் கேட்டாள். துணி சுற்றி எடுத்து வந்த பிரசாதத் தொன்னைகளை முன்னால் எடுத்து வைத்தாள்.


யாதவர் அவற்றைத் தொடவில்லை. எனக்குப் பசியில்லை என்று சொன்னார். ‘காஞ்சிக்குப் போயிருந்தீர்களோ?’


அரைக் கணம் யோசித்த அந்தப் பெண்மணி, இன்று இதற்கு ஒரு முடிவு கட்டிவிடுவது என்று தீர்மானித்துக்கொண்டு, ‘ஆம் மகனே. காஞ்சிக்குத்தான் போயிருந்தேன். ராமானுஜரை தரிசித்துவிட்டு வருகிறேன்’ என்று சொன்னாள்.


‘ராமானுஜரையா?!’


அந்தத் தாய் அப்போது தன் மகனுக்கு ஞானாசிரியனாகிப் போனாள். அத்வைத சித்தாந்தத்தில் ஊறி முறுக்கேறிய கட்டை அது. அகம் பிரம்மம் என்பதை அகம் அழித்துச் சரணாகதி அடைந்தால் மட்டுமே பிரம்மம் என்று புரியவைக்கத் தொடங்கினாள்.


‘மகனே, சாத்திரங்களில் மேலானது, தாழ்வானது என்று ஏதுமில்லை. ஆனால் நீ நிம்மதியாக இருக்கிறாயா என்று யோசித்துப் பார். உன் மனத்தில் அமைதி என்று ஒன்று தென்பட்டு எத்தனை ஆண்டுகள் ஆகிவிட்டன என்று எண்ணிப் பார். துறந்தவனுக்குத் துயரமில்லை என்பது உண்மையானால் உன்னை வாட்டும் கொடுந்துயரங்களின் ஊற்றுக்கண் எது என்று சிந்தித்துப்பார்.’


அம்மா என்று உள்ளுக்குள் உடைந்தார் யாதவப் பிரகாசர்.


‘மூவுலகையும் ஆளும் நாராயணனின் திருவடிக் கமலங்களின் பிரகாசத்தை நான் ராமானுஜரின் முகத்தில் கண்டேன் மகனே. தெளிவு என்றால் அது. தீர்மானம் என்றால் அது. எத்தனை அமைதி, எவ்வளவு விவேகம்! நூறு நூறு பேராக, ஆயிரம் ஆயிரம் பேராக மக்கள் அவரை அண்டிச் சேர்ந்துகொண்டே இருக்கிறார்கள். சாஸ்திரங்களில் நீ ஆண்டுக்கணக்கில் பூச்சி பிடித்து மூளை மரத்துப் போய்விட்டாய். பக்தி எளிமையானது. சாலையில் செல்லும் சிறு குழந்தை தன் தாயின் விரல் பிடித்து நடப்பது போல, அவன் தாளைப் பற்றிக்கொள்ள வழி காட்டுகிறார் ராமானுஜர். சரணாகதிக்குக் கால தேச நியமனங்கள் கிடையாது. நீ தகுதியுள்ளவன், நீ தகுதியற்றவன் என்ற பேதம் கிடையாது. இதற்குத்தான் இறைவனை நாடலாம், இன்னின்ன காரணங்களுக்குக் கூடாது என்ற சட்டதிட்டம் கிடையாது…’


‘ராமானுஜர் அப்படிச் சொன்னாரா?’


‘ஆம் மகனே. உயிர் போகும் நேரத்தில் தன்னைக் கூவியழைத்த கஜேந்திர யானைக்கு அவர் எதைக் கொடுத்தாரோ, அதையேதான் மானம் போகும் நேரத்தில் அழைத்த பாஞ்சாலிக்கும் கொடுத்தார். அது நிபந்தனையற்ற அன்பு. கட்டற்ற பெருங்கருணை.’


‘ஆனால் அம்மா, சாஸ்திரங்கள் போட்டுத்தருகிற பாதையில் போவதுதானே எனது தருமம்? நான் நம்பிய சித்தாந்தத்துக்காக என் குலம் துறந்தவன் நான். எனக்குக் குடுமி கிடையாது. பூணூல் கிடையாது. ஏகதண்ட சன்னியாசியாக எத்தனைக் காலமாக இருந்துவிட்டேன்!’


‘புரிகிறது மகனே. இது எதுவுமே அவசியமில்லை என்கிறார் ராமானுஜர். உன்னால் தலைக்குமேலே கைகளைத் தூக்க முடிந்தால் போதும். தூக்கிய கரங்களைக் குவித்தால் போதும். உற்றோமேயாவோம் உமக்கேநாம் ஆட்செய்வோம் என்று அவன் பாதங்களைப் பற்றிக்கொண்டால் போதும். மற்ற அனைத்தும் அநாவசியம் மகனே.’


யாதவர் குமுறிக் குமுறி அழுதுகொண்டிருந்தார். நினைவு தெரிந்த நாள்முதல் அவர் பின்பற்றிய சித்தாந்தத்தை ஒன்றுமில்லை என்று அவரைப் பெற்ற தாயே விவரித்துச் சொல்லிக்கொண்டிருக்கிறாள். சரிதான். என் சித்தாந்தம் எனக்கு என்ன சேர்த்தது? அகம்பாவத்தையும் பொறாமைத் தீயையும் பொங்கிய துவேஷத்தையும் சுமந்துகொண்டுதானே காலம் முழுதும் திரிந்திருக்கிறேன்? கண்ணெதிரே ராமானுஜர் கடைத்தேற ஒரு வழி காட்டுகிறார். ஜாதி பேதமற்ற ஒரு மாபெரும் சமூகம். திருமால் அடியார் என்னும் ஒற்றை அடைமொழி.


‘அதுதான் மகனே விஷயம். மனத்தைப் பொதி சுமக்கும் கழுதையாக்கிக்கொண்டுவிட்டாய் நீ. அவர் இறக்கி வைத்துவிட்டு சிறகு விரித்துப் பறக்கச் சொல்லுகிறார். என்ன கஷ்டம் உனக்கு?’


அன்றிரவு முழுதும் அந்தத் தாய் தன் மகனுடன் பேசிக்கொண்டே இருந்தார். அவரது விருப்பமெல்லாம் மிக எளிதானது. அந்திமக் காலத்தில் இருக்கிற தனது மகன், கண்மூடும்போதாவது கவலைகளற்று நிம்மதியாக இருக்க வேண்டும்.


‘நாராயணன் உனக்கு அந்த நிம்மதியைக் கொடுப்பான். ராமானுஜர் உன்னை அந்த நாரணனுக்குப் பக்கத்தில் அழைத்துச் சென்று நிறுத்தக்கூடியவர். இது உன்னைப் பெற்றவள் கருத்து. இதற்குமேல் உன் விருப்பம். நேரமாகிவிட்டது. கொஞ்சமாவது தூங்கு.’ என்று சொல்லிவிட்டுத் திரும்பிப் படுத்துக்கொண்டாள்.


மறுநாள் யாதவப் பிரகாசர் விடியும் நேரம் கிளம்பிவிட்டார்.


‘போகிறபோது எங்கே என்று கேட்கக்கூடாது. நீயே சொல்லிவிட்டுப் போ’ என்றாள் அவரது தாயார்.


‘எனக்கு இன்னும் பல சந்தேகங்கள் இருக்கின்றன அம்மா. நான் ராமானுஜரைப் பார்த்து விளக்கம் கேட்கப் போகிறேன்.’


அவளுக்குப் புரிந்துவிட்டது. புன்னகை செய்தாள். ஆசீர்வதித்து அனுப்பி வைத்தாள்.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 26, 2017 08:30

January 25, 2017

ஒரு பிரார்த்தனை

நண்பர்களுக்குக் குடியரசு தின வாழ்த்துகள்.


பிரிவினை சக்திகளின் பிடியில் விழுந்துகொண்டிருக்கும் தமிழ் சமூகத்தின் ஒரு பகுதியினர்மீது பரிவும் பரிதாபமும் எழுகிறது. அவர்களைச் சிந்திக்கவிடாமல் போலி அறச்சீற்ற உணர்வால் தாக்கிக்கொண்டிருக்கும் வெற்றுக் கும்பலைக் காலம் களையெடுக்கும்.


இந்த தேசம் எனக்கு என்ன செய்தது என்று கேட்கிற சுதந்தரத்தைக்கூட இந்த தேசத்தின் ஜனநாயகம்தான் வழங்கியிருக்கிறது என்பதை நினைவுகூர்கிறேன்.


குறைகள் இல்லாமல் இல்லை. அவற்றின் மீதான வருத்தங்களும் கோபங்களும் இல்லாமலில்லை. அக்கோபம் தேசத்தின்மீதான நேசத்தின் வெளிப்பாடாக இருக்கவேண்டும். மகிழ்ச்சிக்குரிய ஒரு தினத்தைக் கறுப்பு தினமாக அறிவிப்பதும் பரப்புவதும் அருவருப்பான செயல். மிக நிச்சயமாக நான் அதனை வெறுக்கிறேன்.


மொழியை முன்வைத்துச் செய்யப்படும் மோசமான பிரிவினை அரசியலின் பிடியில் சிக்கிச் சீரழியாமல் இம்மண்ணைக் காக்க எல்லாம் வல்ல பரம்பொருளை வேண்டுகிறேன்.


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 25, 2017 18:27

பொலிக! பொலிக! 13

யாதவப் பிரகாசரின் தாய் என்னவோ பேசுவதற்காக வந்தாள். ஆனால் என்னென்னவோ பழைய ஞாபகங்களைக் கிளறிவிட்டுப் போய்விட்டாள். ராமானுஜர் வெகுநேரம் அமைதியாகக் கண்மூடி அமர்ந்திருந்தார்.


வாழ்வில் சில சம்பவங்கள் ஏன் நடக்கின்றன என்பதற்கு நமக்குக் காரணங்கள் புரிவதில்லை. நடக்கிற காரியத்தின் சரியான பக்கத்தில் நிற்கிறோமா, எதிர்ப்புறம் இருக்கிறோமா என்று அந்தக் கணத்தில் முடிவு செய்யவும் முடிவதில்லை. மனித வாழ்க்கை என்பதே சம்பவங்களின் சாட்சிக்கூண்டில் ஏறி நிற்பதுதானே?


ராமானுஜருக்கே அந்த வினா இருந்தது. ஒரு பத்து நிமிஷப் பேச்சில் பேய் பிடித்த பெண்ணைச் சரி செய்துவிட முடிகிறது. பூணூல் அறுத்து, சிகை கழித்து சன்னியாசியான பரம அத்வைத சிரேஷ்டரின் தாயாருக்கு, ‘பரம்பொருளை நெருங்கச் சரியான பாதை உமது மகன் காட்டுவதல்ல‘ என்று எடுத்துச் சொன்னால் புரிந்துவிடுகிறது. கோடீஸ்வரரான கூரத்தாழ்வான் தமது சொத்து சுகங்கள் அனைத்தையும் உதறித் தள்ளிவிட்டுத் தன்னிடம் சீடராக வந்து பணிந்து நிற்கிறார். காஞ்சிமாநகரமே கைகட்டி நிற்கிறது. ஆனால், பதினாறு வயதில் மணந்துகொண்டு பன்னிரண்டு வருடங்களுக்கு மேலாக உடன் வாழ்ந்த தஞ்சம்மாவை ஏன் தன்னால் சரி செய்ய இயலவில்லை?


எத்தனையோபேர் என் பேச்சைக் கேட்கிறார்கள். பரம்பொருளான நாரணனின் பாதம் பற்ற முன்வருகிறார்கள். பிறப்பால் ஏற்றத்தாழ்வுகள் இல்லை என்று சொன்னால் சரி என்கிறார்கள். ஆண்டவன் சன்னிதானத்தில் அந்தணனா, பஞ்சமனா என்று கேள்விக்கே இடமில்லை என்றால் ஒப்புக்கொள்கிறார்கள். சரணாகதியை விஞ்சிய உபாயமில்லை என்று சொல்லும்போதெல்லாம் தலைக்குமேலே கரம் கூப்பிக் கண்மூடி நீர் சொரிகிறார்கள்.


தஞ்சம்மாவை ஏன் அது தொடவில்லை? கடைசிவரை தனது குலப் பெருமை ஒன்றைத் தவிர இன்னொன்றை அவள் ஏன் ஏற்க மறுத்துவிட்டாள்? ஒரு முழுநீள வாழ்வில் ஒரு கட்டத்தில்கூடவா தனது அஞ்ஞானத்தை அறிய முடியாமல் போய்விடும்?


அவருக்கு வேதனை சுட்டது. வைணவ சாம்ராஜ்ஜியம் ஒன்றை நாளை நான் கட்டியெழுப்பலாம். அது முடியாத காரியமல்ல. ஆனால் எனது எளிய முயற்சிகள் யாவும் தஞ்சம்மாவிடம் தோற்றுத்தான் போயிருக்கின்றன. இதனை எப்படி விழுங்கி ஜீரணிப்பது?


ராமானுஜருக்கு நினைத்துப் பார்க்கவும் சங்கடமாக இருந்தது. தஞ்சம்மாவை விட்டு விலகுவது, பற்றுகள் அறுத்துத் துறவறம் ஏற்பது என்று முடிவு செய்தபோதுகூட அவர் அவளை நினைத்துக் கொஞ்சம் அஞ்சவே செய்தார். எதுவும் அவளுக்குப் புரியாது என்பதல்ல. எதையும் புரிந்துகொள்ளக்கூடாது என்பதில் தெளிவாக இருப்பவள். காலம் முழுதும் கட்டுண்டு அவதிப்பட்டு மடிவதற்கா இப்பிறப்பு?


அமைதியாக யோசித்தார். ஓர் உபாயம் தோன்றியது. தவறுதானா? சட்டென்று தர்ம சாஸ்திரங்களின் பக்கம் மனம் ஓடத் தொடங்கியது. பொய்மையும் வாய்மை இடத்து. ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் எழுதியவன் என்னமோ ஒரு அவஸ்தைப்பட்ட பிறகுதான் இதைச் சொல்லியிருக்க வேண்டும். ஆயிரம் பேர் வாழ்க்கையை ஒப்பிட்டுப் பாராமல் எழுதி வைக்க வாய்ப்பில்லை.


மனத்தை திடப்படுத்திக்கொண்டு அம்முடிவை எடுத்தார்.


வைணவர் ஒருவரை அழைத்தார். குலத்தால் தாழ்ந்தவர் என்று சொல்லப்பட்டாலும் குணத்தால் உயர்ந்த மனிதர் அவர். ஒரு சமயம் அவருக்குச் சாப்பாடு போட மறுத்து தஞ்சம்மா விரட்டியடித்த சம்பவம் ராமானுஜருக்கு நினைவில் வந்து போனது.


‘ஐயா, இன்று நீங்கள் என் வீட்டுக்கு உணவருந்தச் செல்ல வேண்டும்!’


ராமானுஜர் கேட்டபோது அவர் பயந்தார். ‘ஐயோ திரும்பவுமா? வேண்டாமே?’


‘இல்லை. இம்முறை என் மனைவி உங்களை நடத்துகிற விதமே வேறாக இருக்கும். அதற்கு நான் பொறுப்பு.’


‘புரியவில்லையே.’


ராமானுஜர் விறுவிறுவென்று ஒரு கடிதம் எழுதினார். அது தஞ்சம்மாவுக்கு அவளது அப்பா எழுதுவது போன்ற கடிதம்.


அருமை மகளே, உன் தம்பிக்குத் திருமணம் நிச்சயமாகியிருக்கிறது. மாப்பிள்ளையை அழைத்துக்கொண்டு நீ உடனே ஊருக்கு வந்து சேர். இக்கடிதம் கொண்டு வரும் பாகவதோத்தமர் எனக்கு வேண்டப்பட்டவர்தான். களைப்போடு வருவார். அவரை உபசரித்து அனுப்பிவிட்டு ஊருக்குக் கிளம்பு.


‘இதைக் கொண்டுபோய் தஞ்சம்மாவிடம் கொடுங்கள்.’ என்று ஒரு தட்டு நிறைய பழங்கள், வெற்றிலை பாக்கு, புடைவை, வேட்டியுடன் கொடுத்து அனுப்பி வைத்தார் ராமானுஜர்.


அந்த மனிதர் ராமானுஜரின் வீட்டுக்கு வந்து கதவைத் தட்டினார். ‘அம்மா நான் உங்கள் அப்பாவுன் ஊரில் இருந்து வருகிறேன்.’


தஞ்சம்மாவுக்குக் குழப்பமாக இருந்தது. ஏற்கெனவே விரட்டியடித்த மனிதர். இப்போது பழம் பூ மரியாதைகளோடு வந்து நிற்கிறாரே?


‘உங்கள் தகப்பனார் இக்கடிதத்தை உங்களிடம் கொடுக்கச் சொன்னார்.’


அவள் படித்துப் பார்த்தாள். தம்பிக்குத் திருமணம். உடனே கிளுகிளுப்பாகிவிட்டது. ‘ஐயா நிற்கிறீர்களே, உட்காருங்கள்.’


‘அவகாசமில்லை தாயே. நான் கிளம்பவேண்டும்.’


‘முடியவே முடியாது. அன்று உங்களுக்கு நான் செய்தது பெரும் அபசாரம். அதற்குப் பரிகாரமாக இன்று என் கையால் நீங்கள் சாப்பிட்டுத்தான் போகவேண்டும்‘ என்று சொல்லி கணப் பொழுதில் இலை போட்டாள். பரபரவென்று பரிமாற ஆரம்பித்தாள். அவர் சாப்பிட்டு விடைபெற்றுப் போய்விட்டார்.


அன்று மாலை ராமானுஜர் வீடு திரும்பியபோது தஞ்சம்மா ஓடோடி வந்து வரவேற்றாள். ‘அப்பா கடிதம் அனுப்பியிருக்கிறார். தம்பிக்குத் திருமணம் நிச்சயமாகியிருக்கிறது.’


‘நல்ல விஷயம் தஞ்சம்மா. நீ இன்றே புறப்பட்டுவிடு.’


‘நீங்கள்?’


‘சில வேலைகள் இருக்கின்றன. முடித்துவிட்டு வருகிறேன்.’


அவள் ஊருக்குப் போன மறுகணமே ராமானுஜர் பேரருளாளன் சன்னிதியை நோக்கி ஓடத் தொடங்கினார்.


‘வந்துவிட்டேன் பெருமானே! இதைத் தவிர வேறு உபாயமில்லை என்று தெளிந்தேதான் அவளை ஊருக்கு அனுப்பிவிட்டு உன் தாள்தேடி வந்தேன். இந்தக் கணமே எனக்குத் துறவு தாருங்கள். இனி தாங்கமாட்டேன்.’


அதற்குமேல் அவரைக் கதறவைத்துப் பார்க்கப் பேரருளாளனுக்கும் விருப்பமில்லை. அதனால்தான் அவன் திருக்கச்சி நம்பிக்கு உத்தரவு கொடுத்தான். அதனால்தான் அன்று அது நிகழ்ந்தது.


ஊரே வியந்தது. உறவு துறந்து, பற்று துறந்து, பந்தம் அறுத்து, காஷாயம் தரித்த ராமானுஜரைக் கைகூப்பி வணங்கி நின்றது.


‘தஞ்சம்மாவைப் போன்ற ஒரு பேரழகி இத்தேசத்திலேயே கிடையாது. அவளையே துறக்கிறாரென்றால் இவரது வைராக்கியம் எப்பேர்ப்பட்டது!’ என்று வியக்காத வாயில்லை.


ராமானுஜர் பெருமூச்சு விட்டார். அன்று மறந்த தஞ்சம்மாவை அதற்குப் பிறகு யாதவரின் தாயார் வந்து போனபோதுதான் அவர் நினைக்க நேர்ந்தது.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 25, 2017 08:30

January 24, 2017

பொலிக! பொலிக! 12

யாதவப் பிரகாசரின் தாயார் உள்ளுக்குள் தவியாய்த் தவித்துக்கொண்டிருந்தாள். ஒரு விஷயம் இருக்கிறது. நெடுநாள் உறுத்தல். அதை ராமானுஜரிடம் சொல்லவேண்டும். அதன்மூலம் என்னவாவது நல்லது நடக்கவேண்டும். முடியுமா?


‘அம்மா, உங்கள் மனக்குறையைச் சொல்லுங்கள். எதற்காகத் தயக்கம்?’ என்று ராமானுஜர் திரும்பத் திரும்பக் கேட்டார். ஆனாலும் அவளால் சொல்ல முடியவில்லை. ஏனெனில் சம்மந்தப்பட்டிருந்தது அவளது மகன் யாதவப்பிரகாசர். அவருக்குத் தெரியாமல்தான் அவள் காஞ்சிக்கு வந்திருந்தாள். கேட்டால், கோயிலுக்குப் போனதாகச் சொல்லிக்கொள்வதில் பிரச்னை இல்லை. ஆனால் ராமானுஜரை தரிசிப்பதே அவளது காஞ்சி வருகையின் நோக்கம் என்று சொன்னால் அவன் தாங்குவானா?


யாதவர் சில காலமாக மிகுந்த மனக்குழப்பத்தில் ஆழ்ந்திருந்த தருணம் அது. பாடசாலை சரிவர இயங்கவில்லை. அவரால் முடியவில்லை என்பதுதான் காரணம். வயது கொடுத்த தள்ளாமை ஒருபுறம். குற்ற உணர்ச்சிகள் அளித்த குறுகுறுப்பு மறுபுறம். திருப்புட்குழியில் இருந்தபடிக்கு காஞ்சியில் ராமானுஜரின் செல்வாக்கு வளர்ந்துகொண்டிருந்ததை அவர் கவனித்தபடியேதான் இருந்தார். ராமானுஜரின் செல்வாக்கு வளர்கிறது என்றால் அத்வைதம் என்னும் மகாதத்துவத்தின் ஆணிவேர் அசைக்கப்படுவதாக அர்த்தம். இது சரியா? இப்படித்தான் இது நிகழ்ந்தாக வேண்டுமா? ஜகத்குருவான ஆதிசங்கரரின் தீர்மானங்களையே ஒருவன் நிராகரிப்பானா! அவனது வாதங்களும் வலுவாக இருந்துவிட முடியுமா! அதையும் மக்கள் ஆமோதிப்பார்களா? என்னதான் நடக்கிறது இங்கே?


குழப்பம் அவரைக் கொன்றுகொண்டிருந்தது. நேரே போய் சிண்டைப் பிடித்து ஆட்டிவிட ஒரு நிமிடம் ஆகாது. ஆனால் ராமானுஜரை நினைக்கும்போதெல்லாம் அவருக்கு இரண்டு விஷயங்கள் முதலில் நினைவுக்கு வந்துவிடும். கொல்ல நினைத்த கொடும் தருணம். வெல்ல முடியாமல் வாதங்களில் வீழ்ந்த பல தருணங்கள்.


‘ரொம்ப யோசிக்கவே வேண்டாம் தாயே. நமக்கு அப்பால், நன்மை தீமைகளுக்கு அப்பால், தத்துவங்களுக்கு அப்பால், சித்தாந்தங்களுக்கு அப்பால், வேதாந்தங்களுக்கும் அப்பால் விவரிக்க முடியாத பெரும் பொருளாகப் பரந்தாமன் வீற்றிருக்கிறான். அனைத்தையும் உதிர்த்துவிட்டு அவன் தாள்களை மானசீகத்தில் பற்றிக்கொண்டால் போதும். ஜீவாத்மா துவண்டு விழும் தருணம் உண்டு. அறிவும் ஞானமும் உதிரும் கணம் உண்டு. மாயை கண்ணைக் கட்டுகிறதென்றால், செருக்கே மாயையின் வித்து. சரணாகதி ஒன்றே அனைத்தையும் அகற்றி அவனிடம் கொண்டு சேர்க்கும் வழி.’


அந்தக் கிழவிக்குப் புரிந்தது. ஆனால் அவள் மகனுக்குப் புரியவேண்டுமே?


ஒரு சம்பவம். அவளால் சாகிற வரைக்கும் மறக்க முடியாத சம்பவம்.


அப்போது வட தமிழகத்தில் காஞ்சியின் சுற்றுவட்டாரப் பிராந்தியத்தை ஆண்டுகொண்டிருந்த சோழச் சிற்றரசன் ஒருவனது மகளுக்குப் பேய் பிடித்துவிட்டது என்று எல்லோரும் சொல்லிக்கொண்டிருந்தார்கள். வராத மருத்துவரில்லை, பார்க்காத வைத்தியமில்லை. பூஜைகள், யாகங்கள் ஒரு பக்கம். மந்திர தந்திரவாதிகளின் பேயோட்டப் பிரயத்தனங்கள் ஒரு பக்கம். எதுவும் பலனளிக்காமல் அந்த இளவரசி ஆட்டமான ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தாள்.


யாரோ அரசனிடம் போய்ச் சொன்னார்கள். ‘திருப்புட்குழி யாதவப் பிரகாசர் பெரும் ஞானஸ்தர். தவிரவும் அவருக்கு மந்திரப் பிரயோகங்கள் தெரியும். மாந்திரிகம் அறிந்தவர். அரசர் அவரை அரண்மனைக்கு வரவழைத்து இளவரசியைக் காட்டலாமே?’


உத்தரவு ஊருக்கு வந்து சேர்ந்தபோது யாதவருக்குக் கட்டுக்கடங்காத அகங்காரம் தலைக்கேறிவிட்டது. ‘நான் எதற்கு வரவேண்டும்? யாதவப் பிரகாசன் உன்னைப் போகச் சொன்னான் என்று அந்த பிரம்மராட்சசனிடம் போய்ச் சொல்லுங்கள். ஓடியேவிடுவான்’ என்று அரசு ஊழியர்களிடம் சொல்லி அனுப்பிவிட்டார்.


இது பெரிய இடத்து விவகாரம், நமக்கு பிரம்ம ராட்சசனையும் தெரியாது; யாதவப் பிரகாசரையும் தெரியாது; எதற்கு வம்பு என்று அவர்களும் அதேபோல அரண்மனைக்குத் திரும்பி அவர் சொன்னதை அப்படியே சொன்னார்கள்.


படுத்திருந்த இளவரசி சீறி எழுந்து கத்தினாள். ‘அவனை ஓடிப் போகச் சொல்லுங்கள். நான் அடித்தால் நார்நாராகக் கிழிந்துவிடுவான்.’


செய்தி கேட்டு அதிர்ந்து போனார் யாதவர். இது அவமானமல்லவா? விடமுடியாது.


தனது மாணவர் பரிவாரத்துடன் அரண்மனைக்கு வந்து சேர்ந்தார்.


‘கூப்பிடுங்கள் உங்கள் மகளை’ என்றார் அரசரிடம்.


சேடிகள் இளவரசியை சபைக்கு அழைத்து வந்தார்கள். பேய் பிடித்த இளவரசி. தலைவிரிகோல இளவரசி. சங்கிலி போட்டுப் பிணைத்திருந்தார்கள். அதை அறுத்தெறிந்து சீறிப் பாயும் வேகம் அவளது ஒவ்வொரு அசைவிலும் தெரிந்தது.


யாதவர் அவள் எதிரே வந்து நின்று மந்திரங்களை உச்சரிக்கத் தொடங்கினார்.


‘டேய், எனக்கு உன்னையும் தெரியும், நீ சொல்லும் மந்திரங்களும் பொருளோடு தெரியும். என்னை விரட்ட உன்னால் முடியாது. உயிர்மீது ஆசை இருந்தால் ஓடிவிடு’ என்றது அந்தப் பேய்ப்பெண்.


‘என்னைத் தெரியுமா? என்ன தெரியும் உனக்கு?’


‘போன ஜென்மத்தில் மதுராந்தகம் ஏரிக் கரையில் ஓர் உடும்பாகப் பிறந்தவன் நீ. பரம பக்தர்கள் சிலர் சாப்பிட்டு மீந்த உணவைத் தின்றபடியால் இந்த ஜென்மத்தில் வேதம் சொல்லித்தரும் உயரிய பிறப்பு உனக்கு வாய்த்திருக்கிறது. ஆனால் இந்த ஜென்மத்துப் பாவங்கள் உன்னை இன்னும் இரண்டு ஜென்மங்களுக்கு ஆட்டிப் படைக்கப் போகிறது மூடா! ஓடிப் போ!’


அதிர்ந்துவிட்டார் யாதவர். வந்திருந்த அவரது மாணவர்களுக்குப் பேச்சுமூச்சில்லை. ராமானுஜருக்கு ரொம்ப சங்கடமாகப் போய்விட்டது. குருவல்லவா? மன்னனின் சபையில் அவருக்கு இது எப்பேர்ப்பட்ட அவமரியாதை?


சட்டென்று அவர் முன்னால் வந்து நின்றார். பேயே என்று தொடங்காமல் பெண்ணே என்று பேச ஆரம்பித்தார். ஒரு நிமிடம். ஐந்து நிமிடம். பத்து நிமிடங்கள். மந்திரங்கள் இல்லை. மாயம் ஏதுமில்லை. வெறும் பேச்சு. ஆனால் சாத்விகத்தின் சாறு பூசிய பேச்சு. பரமாத்மாவான நாராயணனின் பாத கமலங்களை முன்வைத்து, அந்தப் பெண் குணமாக மனப்பூர்வமாக வேண்டிக்கொண்டார் ராமானுஜர்.


அன்று அது நடந்தது. அவள் குணமானாள்.


தொண்டை மண்டலம் முழுதும் ராமானுஜரின் புகழ் தீயெனப் பரவத் தொடங்கிய தருணம் அது. ‘செய்தது நானில்லை; நாராயணனே’ என்றார் ராமானுஜர். அந்தப் பணிவு அவரை இன்னும் உயரத்துக்கு எடுத்துச் சென்றது.


யாதவர் மட்டும் புழுக்கத்தில் வெந்துகொண்டிருந்தார். தாங்க முடியவில்லை அவரால். ‘வேண்டாமப்பா! என்னினும் பெரியவன் என்னிடம் படிக்க அவசியமில்லை. இனி பாடசாலைக்கு வராதே’ என்று சொல்லிவிட்டார்.


தன் மகன் தரம் தாழ்ந்து போனது அன்றே அத்தாய்க்குப் புரிந்துவிட்டது.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 24, 2017 08:30

January 23, 2017

பொலிக! பொலிக! 11

 


‘என்னைத் தெரிகிறதா மகனே? நினைவிருக்கிறதா?’


நெருங்கி வந்து கரம் கூப்பிக் கேட்ட அந்தக் கிழவியைக் கண்டதும் துள்ளி எழுந்தார் ராமானுஜர்.


‘அம்மா, வரவேண்டும். நலமாயிருக்கிறீர்களா? யாதவர் நலமாக உள்ளாரா?’


அவள் பதில் சொல்லவில்லை. தன்னெதிரே தகதகவென ஆன்ம ஒளி மின்னப் புன்னகையுடன் நின்றிருந்த ராமானுஜரைத் தலைமுதல் கால் வரை விழுங்கிவிடுவது போலப் பார்த்துக்கொண்டே இருந்தாள்.


‘என்ன அப்படிப் பார்க்கிறீர்கள்? உட்காருங்கள்.’


‘என்னை மன்னிக்க வேண்டும். பழைய நினைவில் உங்களை மகனே என்று அழைத்துவிட்டேன். குரு ஸ்தானத்தில் இருக்கிறவர் தாங்கள். தவிரவும் சன்னியாசி. என்னை ஆசீர்வதியுங்கள்’ என்று தாள் பணியப் போனவரை ராமானுஜர் தடுத்தார்.


‘அப்படிச் சொல்லாதீர்கள் தாயே. இப்பூவுலகைத் தாங்குவதும் பெண்கள்தாம், உலகு தழைப்பதும் பெண்களால்தான். சாட்சாத் பெருந்தேவித் தாயாரேதான் இவ்வுலகில் தோன்றும் அத்தனை பெண்களாகவும் இருக்கிறவள். உமது மகனும் எனது பழைய குருவுமான யாதவரைக் கேட்டுப் பாருங்கள். அவர் நம்பும் அத்வைத சித்தாந்தத்தை வகுத்தளித்த ஆதிசங்கரர், எப்பேர்ப்பட்ட துறவி! ஆனாலும் தமது தாயார் காலமானபோது அவருக்குச் செய்யவேண்டிய அத்தனைச் சடங்குகளையும் சிரத்தையாகச் செய்து முடித்தவர். தாயாரைத் துறக்கத் திருமாலாலும் முடியாது; திருமால் அடியார்களாலும் முடியாது!’


சிலிர்த்துவிட்டது அந்தக் கிழவிக்கு. பேச்செழவில்லை. திருப்புட்குழியில் இருந்து கிளம்பி காஞ்சி வரதராஜ பெருமாள் கோயிலுக்கு வந்திருந்தாள் அவள். கோயிலுக்கு வந்ததாகச் சொன்னது ஒரு பாவனைதான். உண்மையான நோக்கம் ராமானுஜரைச் சந்திப்பதுதான். அவளது மகனுக்கு இருந்ததோ என்னவோ. அவளுக்குக் குற்ற உணர்ச்சி நிறையவே இருந்தது.

ராமானுஜருக்குத் தனது மகன் செய்த கொடுமைகள். சொல்லிக்கொடுக்கிற இடத்தில் இருந்துகொண்டு, எந்த விவாதத்துக்கும் இடம் தர மறுத்த ஏகாதிபத்தியம். சுயமாகச் சிந்திக்கத் தெரிந்த மாணாக்கனைத் தட்டி வைக்க நினைத்த சிறுமை. அது முடியாதபோது கொல்லவே நினைத்த கொடூரம்.


ஆனால் விந்திய மலைக் காட்டில் இருந்து ராமானுஜர் காஞ்சிக்கு வந்து சேர்ந்த கதையை ஊரே வியந்து பேசியபோது அந்தக் கிழவி தன் மகனிடம் எடுத்துச் சொன்னாள். ‘மகனே, நீ செய்தது தவறு. செய்ய நினைத்தது மிகப் பெரிய தவறு. நாள் முழுதும் வேதம் சொல்லிக்கொடுத்துக்கொண்டிருக்கிறவன் இப்படியொரு ஈனச் செயலை மனத்தாலும் நினைப்பது பெரும் பாவம். நீ நினைத்தது மட்டுமின்றி செயல்படுத்தவும் பார்த்திருக்கிறாய். இப்போது இளையாழ்வான் உனக்குப் பல மாதங்கள் முன்னதாகக் காஞ்சிக்கு வந்து சேர்ந்துவிட்டான். பேரருளாளனின் பெருங்கருணைக்குப் பாத்திரமானவன் அவன் என்பது நிரூபணமாகிவிட்டது. எப்படியாவது சென்று மன்னிப்புக் கேட்டுவிடு.’


யாதவர் ஒன்றும் சொல்லவில்லை. கண்மூடி அமைதியாக யோசித்தபடி இருந்தார். நடந்ததை அவரால் நம்பவும் முடியவில்லை; ஜீரணிக்கவும் முடியவில்லை. தமது சீடர்களுடன் அவர் யாத்திரை முடித்து ஊர் திரும்பிக்கொண்டிருந்த அன்றே – ஊர் எல்லையிலேயே ராமானுஜரை அவர் சந்தித்திருந்தார். தன் தாயிடம் அதைப் பற்றி அவர் சொல்லியிருக்கவில்லை.


மறக்கமுடியாத தினம். சாகிற வரை மட்டுமல்ல. எத்தனை பிறப்பெடுத்தாலும் மறக்கக்கூடாத தினமும் கூட.


ராமானுஜர் அப்போது சாலைக் கிணற்றில் இருந்து நீர் எடுத்துக்கொண்டு திரும்பிக்கொண்டிருந்தார். அதே சமயம் யாதவரின் குழு காஞ்சி எல்லையை நெருங்கியிருந்தது.


‘அதோ, அங்கே வருவது யார்? ராமானுஜன் மாதிரி தெரிகிறதே?’ யாதவர் பரபரப்பானார்.


‘ஆம் குருவே. ராமானுஜனேதான். விந்தியக் காட்டில் இறந்துபோனவன் இங்கு எப்படி வந்திருக்க முடியும்? நம்பவே முடியவில்லை.’ மாணவர்கள் வாய் பிளந்தார்கள்.


மேற்கொண்டு ஓரடி எடுத்து வைக்கவும் யாதவரால் முடியவில்லை. கால்கள் உதறின. உதடு உலர்ந்து போனது. நெஞ்சுக்குள் நடுக்கப் பந்தொன்று துள்ளிக் குதித்தது. பேயடித்த மாதிரி நின்றவரை ராமானுஜர் நெருங்கினார்.


ஒரு கணம்தான். சட்டென்று குடத்து நீரைக் கீழே வைத்துவிட்டு அப்படியே தாள் பணிந்தார். ‘குருவே வணக்கம். யாத்திரை முடிந்து நலமாகத் திரும்பினீர்களா?’


‘ராமானுஜா, நீ.. நீயா?!’


ராமானுஜர் எதையும் மறைக்கவில்லை. பேரருளாளனின் கருணையால் தாம் ஊர் திரும்பிய கதையை அவரிடம் அப்படியே விவரித்தார். ‘காட்டில் வழி தவறிய என்னை அருளாளன் உங்களிடம் கொண்டு வந்து சேர்த்திருந்தால் நானும் காசிக்கு வந்திருப்பேன். எனக்கு அந்தக் கொடுப்பினை இல்லாமல் போய்விட்டது.’


மறந்தும் அவரது கொலைத் திட்டம் தனக்குத் தெரிந்துபோனதைப் பற்றி அவர் வாய் திறக்கவில்லை.


யாதவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. அழுகையும் வெட்கமும் அவரைப் பிடுங்கித் தின்றன. மொழி கைவிட்டு நிராயுதபாணியாக நின்றவர் அப்படியே ராமானுஜரைக் கட்டியணைத்துக்கொண்டார். ‘நீ காட்டு மிருகங்களால் வேட்டையாடப் பட்டிருப்பாய் என்று நினைத்துவிட்டோம். நல்லவேளை, நீ சாகவில்லை. உனக்கு மரணமில்லை ராமானுஜா!’


யாதவரின் சீடர்களால் நம்பவே முடியவில்லை. அவர்கள் உண்மையில் பயந்திருந்தார்கள். பேரருளாளனே வேடமிட்டு வந்து காத்திருக்கிறான் என்றால் இவன் சாதாரணமானவனாக இருக்க முடியாது.


ஊர் திரும்பியதும் பிராந்தியம் முழுதும் இதே பேச்சாக இருப்பதை அவர்கள் கவனித்தார்கள். விந்திய மலையில் ராமானுஜர் காணாமல் போனதற்குச் சரியாக மூன்று தினங்களுக்குள் அவர் காஞ்சிக்கு வந்து சேர்ந்த விவரம். எப்படி முடியும், எப்படி முடியும் என்று திரும்பத் திரும்பக் கேட்டுக்கொண்டு, ராமானுஜர் சொன்னதே உண்மை என்ற முடிவுக்கு வந்தார்கள்.


‘நல்லதப்பா! நாளை முதல் நீ மறுபடியும் பாடசாலைக்கு வந்துவிடு. நீ இருந்தால்தான் வகுப்பு களை கட்டுகிறது’ என்றார் யாதவர்.


‘நீ எப்படி அதை அன்று ஏற்றுக்கொண்டு மீண்டும் வகுப்புக்கு வந்தாய் என்பது இப்போதும் எனக்கு வியப்புத்தான்’ என்றாள் யாதவரின் தாயார்.


ராமானுஜர் புன்னகை செய்தார். அது திருக்கச்சி நம்பியின் உத்தரவு.


அன்றைக்கு வீட்டுக்குப் போனதும் நடந்ததை ராமானுஜர் தனது தாயிடம் சொன்னார். ‘என்னிடம் கேட்காதே; திருக்கச்சி நம்பியிடம் கேள்’ என்று அவள்தான் திருப்பிவிட்டது.


‘ராமானுஜரே! உமக்கான பாதை போடப்படும்வரை நீர் எங்காவது வாசித்துக்கொண்டிருப்பதுதான் நல்லது. யாதவர் வேதம்தானே சொல்கிறார்? போய்ப் பாடம் கேளும். அர்த்தம் தவறாகத் தோன்றுமானால் அதை உமக்குள் குறித்துக்கொண்டு வாரும். அவரிடம் விவாதிக்கவேண்டாம்!’


திருக்கச்சி நம்பி சொன்னதை யாதவரின் தாயாரிடம் எப்படிச் சொல்ல முடியும்?


எனவே அவர் புன்னகை செய்தார்.


(தொடரும்)


Copyright © 2008-2015 Pa Raghavan .
This feed is for personal, non-commercial use only.
The use of this feed on other websites breaches copyright. If this content is not in your news reader, it makes the page you are viewing an infringement of the copyright.
)
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on January 23, 2017 08:30