Jeyamohan's Blog, page 1737
August 29, 2016
லவ்வுல்லா!
எழுத்தாளர்கள் தங்கள் எழுத்தின் வழியாக உண்மையிலேயெ தங்களை கண்டடைகிறார்களா என்ற சந்தேகம் எனக்கு அடிக்கடி எழுவதுண்டு. அந்த சந்தேகத்தை எனக்கு உருவாக்கியது சுந்தர ராமசாமியிடம் நான் நெருங்கி பழகியதுதான். எழுத்தினூடாக இயல்பாக வெளிப்பட்ட சுந்தர ராமசாமிக்கும் அவர் தன்னை புரிந்துகொண்டு முன்வைத்த விதத்திற்கும் இடையே மிகப்பெரிய இடைவெளி இருந்தது. அவருடைய மொத்தப்புனைவுலகையும் அவர் வெளிப்பட்டவை அவர் வெளிப்பட விரும்பியவை என இரண்டாகப்பிரித்துவிடலாம்.
முதிராஇளமையில் அன்றைய இடதுசாரிக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டவர் சுந்தர ராமசாமி அவருடைய இலட்சிய மனிதர் ஜீவா. எளிய மனிதருள் இருந்து எழுந்து வந்த மாபெரும் மனிதாபிமானி. தத்துவம் வழியாக ஜீவா கார்ல்மார்க்ஸைச் சென்றடையவில்லை, மனிதாபிமானம் வழியாகச் சென்றடைந்தார். சொல்லப்போனால் இறுதிவரை அவருக்கு ஐரோப்பிய தத்துவ மரபில் இருந்து உருவாகி வந்த மார்க்சியத்தின் வரலாற்று முரணியக்கப் பொருள்முதல்வாத நோக்கு பிடிபடவே இல்லை. மாறாக தன் முன் காலுக்குச் செருப்புமில்லாமல்கால்வயிற்றுக் கூழுமில்லாமல் பாழுக் கு உழைத்து பசையற்றுப் போன எளிய மக்களைப்பார்த்து எழுந்த கனிவும் கோபமும் அவரை மார்க்ஸ் நோக்கி கொண்டு சென்றது.
உண்மையில் மார்க்ஸை தத்துவவாதிகள் அணுகியதைவிட இன்னும் அணுக்கமாக அணுகி பார்க்கவைத்தது அந்த அணுகுமுறை. மார்க்சியத்திலிருந்து சுந்தர ராமசாமி கணக்கு பேசி முடித்து துண்டை உதறி தோளில்போட்டு வெளிவந்ததை ஒரு புளியமரத்தின் கதையின் முன்னுரையில் அவர் எழுதியிருக்கிறார். உண்மையில் அது அவர் விரும்பிய ஒரு குடும்பமுறிவு. ஆனால் இறுதிவரை அது நிகழவே இல்லை. நானறிந்த சுந்தர ராமசாமி இறுதி மூச்சுவரை அந்தப்பழைமையான மார்க்ஸிஸ்ட்டாகவே வாழ்ந்து மறைந்தார்.
மார்க்சியத்தின் அரசியல் செயல்திட்டங்களில் அவருக்கு சந்தேகம் எழுந்தது. அதன் பொருளியல் மேல் அவர் நம்பிக்கை இழந்தார். ஆனால் அதன் லட்சியவாதமான மனிதாபிமானத்திலிருந்து அவர் விலகிச் செல்லவே இல்லை. அவருடைய மிகச்சிறந்த படைப்புகள் அனைத்திலுமே வெளிப்படுபவர் இந்த சுந்தர ராமசாமி தான். ’பிரசாதம்’, ’வாழ்விலே ஒரு முறை’, ‘கோயில்காளையும் உழவு மாடும்’, ‘ரத்தினாபாயின் ஆங்கிலம்’ என அவரது அனைத்து சிறுகதைகளையும் இணைக்கும் கருத்தியல் பொதுச்சரடு இதுதான்.
ஆனால் அவர் ஒரு மௌனி ஆகிவிடமாட்டோமா என்று ஏங்கினார். என் கணிப்பில் மௌனி சுந்தர ராமசாமியைவிட ஓரிரு படிகள் கீழே நின்றிருக்கும் ஒருவர். மௌனியின் உலகில் ஆன்மீகமான அம்சங்கள் எதுவுமே இல்லை. பெரும்பாலும் உணர்வு ரீதியான உலகியல் அவருடையது. அவ்வுலகியலை எதிர்கொள்ளும் திகைப்பை எழுத முடிந்ததமையாதான் அவரது சிலகதைகள் கலையாகின்றன. சுந்தர ராமசாமியின் மனிதாபிமானத்தில் உள்ள ஆன்மிகத்தன்மை பல மடங்கு மேலானது.
ஆனால் எழுபதுகளின் இலக்கியச் சூழலில் மேலோங்கியிருந்த ஒருவகையான நவீனப் பிராமண மனம் உருவாக்கிக்கொண்ட பிரமை அவரை மௌனியை நோக்கித் தள்ளியது. நாரணோ ஜெயராமன் ‘பல்லக்குத் தூக்கிகளி’ன் முன்னுரையில் எழுதிய ஒரு வரி மிகச்சிறந்த உதாரணம். ‘சுவாரசியமான எழுத்தாளராக இருந்தவர் இப்போது தான் கலைஞனாக மாறியிருக்கிறார்’ என்று சுந்தர ராமசாமியை அவர் மதிப்பிட்டார். நாரணோ ஜெயராமனால் சிலாகிக்கப்பட்ட் பல்லக்குத் தூக்கிகளில் உள்ள வாசனை, அழைப்பு போன்ற பெரும்பாலான கதைகள் இன்றைய வாசகனுக்கு அலுப்பூட்டக்கூடிய உருவகக்கதைகள் மட்டுமே. ஆனால் ‘பிரசாதம்’ தொகுப்பின் பல கதைகளை இன்றைய வாசகன் பெரும்பரவசத்துடன் புதிதாக கண்டுபிடிக்கமுடியும். உதாரணம் லவ்வு.
ஜீவானந்தம்
ஒரு எளிய நகைச்சுவைக் கதையாகவே படிக்கப்பட்டு வந்த கதை அது. எண்பத்தெட்டில் சுந்தர ராமசாமியிடம் அவர் எழுதிய மிகச்சிறந்த கதைகளில் ஒன்று என நான்சொன்னபோது அவர் உண்மையில் எரிச்சல் அடைந்தார். தனது பெறுமானத்தை நான் குறைத்து மதிப்பிடுகிறேன் என்றுதான அவருக்கு அன்று தோன்றியது. எனது விளக்கங்கள் அவருக்கு நிறைவளிக்கவும் இல்லை.
நீண்ட காலத்துக்கு இப்பால் நின்று அக்கதையை மறுபடியும் படிக்கும்போது கணிப்பு மீண்டும் உறுதியாகிறது. சுந்தர ராமசாமியின் கதைகளில் மட்டுமல்ல தமிழில் எழுதப்பட்ட நல்ல கதைகளில் ஒன்று லவ்வு. பிரமு ஆச்சி தன் பேரப்பிள்ளை அணைஞ்ச பெருமாளுடன் வசித்து வருகிறாள். அணைஞ்ச பெருமாள் கொஞ்சம் அணைந்து கரிபடிந்த ஆள்தான். தூக்குப்போசியுடன் தறி நெசவுக்கு சென்றுவிட்டு மாலையில் திரும்பிவருவான். போசியில் பிழிந்த பழைய சாதமும் துவையல் உருண்டையும் இருக்கும். பொரிகடலை வாங்கித் தின்பதற்கு கிழவியிடம் பத்துக் காசு சண்டை போட்டு வாங்கிக் கொள்வான்.
திரும்ம்பும்போது நாகர்கோவிலில் இருந்து வரும் ஏதேனும் ஒரு மாட்டுவண்டியை பிடித்துக் கொண்டு நடந்து வருவது வழக்கம். மாட்டுவண்டி கிடைக்கவில்லையென்றால் அவன் திரும்பி வருவதற்கு நெடுநேரம் ஆகும். கேட்டால் வண்டி கிடைக்கவில்லை என்று சொல்வான். கிழவிக்கு அது புரியாது, “சவம் ஏதோ பினாத்துது” என்று எடுத்துக் கொள்வாள். இப்படிப்பட்ட அணைஞ்ச பெருமாள் திடீரென்று ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு வந்துவிடுகிறான். பெரியவர்களாகப் பார்த்து திருமணம் செய்துவைத்தார்களாம். தாலி கட்டச்சொன்னார்களாம் “கெளவி கோசலை அளகுபோல இருக்கா பாரு” என்கிறான்
”அடப்பாவி. இது யாருலே? என்னலே செய்தே?” என பிரமு ஆச்சி பதறித் துடித்தாலும் பக்கத்துவீட்டு கிழவி சொல்கிறாள் “எது எப்படி இருந்தாலும் அவனுக்கும் திருமணம் ஒன்று ஆகிவிட்டது. நீ இந்த வயசில் எங்கே போய் பெண் பார்த்து வைக்கப்போகிறாய்?” பிரமு ஆச்சி ”அதுவும் உண்மைதான்” என்கிறாள் சமாதானமாகி.
ஆனால் கோசலை ஆறாவது மாதத்தில் திண்டோதரன் மாதிரி ஒரு மகனைப் பெறுகிறாள். கிழவிக்கு இடி விழுந்தது போல் ஆகிறது. என்ன சொல்வதென்று தெரியவில்லை. “இப்படி உண்டா?” என்று அலமலந்துபோகிறாள். “யாருடி அது ? எவன் பிள்ளைடி அது?” என்று திருப்பி திருப்பி கோசலையிடம் கேட்கிறாள். அவளோ வந்த நாள் முதல் எதுவுமே பேசுவதில்லை. மூர்க்கமான வெறியுடன் வீட்டு வேலைகள் செய்வாள். எஞ்சின நேரம்முழுக்க தன்னந்தனியாக படுத்து தாலியில் இருக்கும் ஊசியால் பல்லைக் குத்திக் கொண்டிருப்பாள். கிழவி நூறு முறை கேட்டும் அவள் ஒன்றும் சொல்வதில்லை.
அணஞ்ச பெருமாளிடம் “ஏலே மோணையா, ஆருன்னு கேளுலே” என்று கிழவி சொன்னால் ”சும்மா போட்டு பினாத்தாதே, அறஞ்சே கொன்னுடுவேன், நான் பிள்ளையப்பாப்பேனா உன்னை பாப்பேனா?” என்று அவன் திட்டுகிறான்.
நிலையழிந்திருக்கும்போதுதான் அங்கு புலவர் கோலப்பன் வருகிறான். கோலப்பன் வில்லுப்பாட்டு பாடுபவன். பரம ஆபாசமான விஷயங்களையும் முகஞ்சுளிக்காமல் சொல்லும் திறமை படைத்தவன் என்று ஆசிரியரால் வர்ணிக்கப்படுகிறான். வெற்றிலை போட்டுப் போட்டு வாயில் ஒரு பகுதி கிழிந்திருக்கும் என்று அவனது தோற்றத்தை காட்டுகிறார் ஆசிரியர். புலவர் கேட்கிறான் ” என்ன பேசுதே நீ? நீ எந்தக் காலத்தில் இருக்கே? இது லவ்வுல்லா?”
”என்னது?” என்று கிழவி பீதியடைகிறாள். ”இது லவ்வு! வெள்ளைக்காரன் கண்டுபிடிச்சது, லவ்வுன்னாலே இப்படி ஆகும்” என்று கோலப்பன் சொல்கிறான். கிழவிக்கு ஆச்சரியம் தாளவில்லை “லவ்வு” என்று சொல்கிறாள். “அழுத்திட்டியே… இந்தா இந்த மாதிரி சொல்லு, லவ்வு” என்கிறான். “இந்தா பூ மாதிரி சொல்லுதேன் பாத்துக்கொ.. லவ்வு லவ்வு” என்று கிழவி சிறுமியை மாதிரி முகத்தை வைத்துக் கொண்டு சொல்கிறாள்.\
“ஆ! சொல்லியாச்சில்ல இதுதான். அணஞ்ச பெருமாள் சந்தைக்கு போன இடத்தில் லவ்வாகியிருக்கும். இது அவனுடைய குழந்தைதான் லவ்விருந்தா இப்படி தான் குழந்தை பிறக்கும்” என்கிறான். கிழவிக்கு மனநிறைவு. ”நானும் என்னமோ ஏதோன்னு நினைச்சேனே கோலப்பா. நல்ல வேளை தெய்வமா வந்து நீ எனக்கு எல்லாத்தையும் தெளிவுபடுத்திட்ட” என்கிறாள். தன் கிழவித்தோழி வந்தவுடன் இந்த விஷயத்தை சொல்வதற்காக ”லவ்வு” என்று அந்த வார்த்தையை சொல்லிக் கொண்டு கிழவி காத்திருக்க ஆரம்பிக்கிறாள். பூரிப்புடன் சொல்லிக்கொள்கிறாள் “லவ்வுல்லா!”
ஒரு புன்னகையுடன் படித்து முடிக்க்கூடிய கதை. சுந்தர ராமசாமியின் மிகச்சிறந்த படைப்பு. மகாபாரதத்தில் தந்தைக்கு எவரெல்லாம் மைந்தராக முடியும் என்கிற பட்டியலை போட்டிருக்கிறார்கள். கானீனன் என்றால் மனைவி பிறிதொருவனிடமிருந்து தெரியாமல் பெற்றுக் கொண்ட குழந்தை. குமரி மாவட்ட வழக்கில் மிகச்சரியாக அதைக் காட்டுக்குட்டி என்று மொழிபெயர்ப்பார்கள். காட்டில் சென்று உறவு கொண்டதால் வந்த பிள்ளை. அவனும் அந்த தந்தையின் மைந்தன்தான்.
எல்லாவகையான குழந்தைகளையும் ஏதேனும் ஒரு பெயரிட்டு மகன் என்று அடையாளப்படுத்துகிறது மகாபாரத அறம். எந்தக் குழந்தையுமே அந்தச் சமுதாயத்திலிருந்து தந்தை இல்லாதவன் என்று புறக்கணிக்கப்படுவதில்லை. தொன்மையான ஒரு பழங்குடிச் சமுதாயத்தில் குழந்தைகள் அத்தனை மதிப்பு மிகுந்தவை. அதிலிருந்த அந்த மிகப்பெரிய மனிதாபிமானத்தின் ஒரு நவீன முகம் என்று இந்தக் கதையைச் சொல்ல முடியும்.
கேலியாகவே கிழவியை ”லவ்வுல்லா..” என்று சொல்ல வைக்கிறார் சுந்தர ராமசாமி. ஆனால் அந்த்க பிரியமான கேலிக்குப் பின்னால் இருந்து கொண்டு மாபெரும் பொதுவுடமை ஆசானாகிய ஜீவா ”அன்பல்லவா..” என்று சொல்லும் குரல் எனக்குக் கேட்கிறது. சுந்தர ராமசாமியின் ஒரு அதிகாரபூர்வமான கொள்கை விளக்கமாக இந்த வரியை நான் சொல்வேன். லவ்வுல்லா!
தோழர் ஜீவா -ஒரு கட்டுரை
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
காஷ்மீரும் பி.ஏ.கிருஷ்ணனும்
பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு ,
வணக்கம்.
தற்போது காஷ்மீரில் நடந்து வரும் வன்முறை நிகழ்வுகள் தங்கள் அறிந்ததே.50 நாட்களுக்கு மேலாக ‘ஊரடங்கு சட்டமும்’,70 பேருக்கு மேலாக உயிரிழப்பும் நடந்துள்ளது.மத்தியில் உள்ள மோதி அரசும்,மாநிலத்தில் உள்ள மெஹ்பூபா கூட்டணி அரசும் எவ்வளவு முயற்சித்தும் ‘கல்லெறி’ சம்பவங்களை தடுக்க முடியவில்லை. பிரிவினைவாதி குழுக்கள் கலவரத்தை மேலும் தூண்டுவதும்,பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தையும் முறிந்து அந்தரத்தில் நிற்கிறது.இந்நிலையில் நேருவும்,காங்கிரஸும்தான் இந்த அவல நிலைக்கு காரணம் என்ற கூக்குரல் வழக்கம் போல் எழுந்துள்ளது.இந்நிலையில் இந்த மாத ‘காலச்சுவடு‘ இதழில் தங்களின் மதிப்பிற்குரிய திரு.பி .ஏ.கிருஷ்ணன் “காஷ்மீர் 1947-48 சில உண்மைகள்
என்ற கட்டுரையில் நேருவின் காஷ்மீர் பற்றிய நிலைப்பாடுகளை தெளிவாக எழுதியுள்ளார்.இது பற்றி தங்களுக்கு வேறேதும் மாற்று கருத்துக்கள் உள்ளதா?
அன்புடன்,
அ .சேஷகிரி.
அன்புள்ள சேஷகிரி,
வலதுசாரி இடதுசாரி ‘மப்பு’கள் ஏதுமில்லாமல் தெளிந்த மண்டையுடன் எழுதப்பட்ட தகவல்பூர்வமான கட்டுரை.
மேலதிகமாக இரண்டு விஷயங்களை மட்டுமே சேர்த்துக்கொள்ள விரும்புவேன். ஒன்று, சிகந்தர் புட்சிகான் ஆட்சிக்காலத்தில் காஷ்மீரின் இந்துப்பண்பாடு மற்றும் பௌத்தப்பண்பாடு மீது தொடுக்கப்பட்ட நிகரில்லாத வன்முறை. உலக அற்புதங்களில் ஒன்றான மார்த்தாண்டர் ஆலயம் உட்பட காஷ்மீரின் அத்தனை பேராலயங்களும் அழிக்கப்பட்டன. பல்லாயிரக்கணக்கானவர்கள் கொன்றழிக்கப்பட்டனர். கட்டாயமதமாற்றம் செய்யப்பட்டனர். காஷ்மீரின் ஷா மீரி வம்சத்தின் இரண்டாவது சுல்தான்[ 1389–1413] இவர் ‘சிலையுடைப்பு சிக்கர்ந்தர்’ என்றே வரலாற்றில் அழைக்கப்படுகிறார். [ (“Sikandar the Iconoclast”] மதகுருவான மீர் முகமது ஹமதானி என்பவரின் ஆணைப்படி அவர் இதைச்செய்தார்.இது அவர்களாலேயே முறையாகப்பதிவுசெய்யப்பட்ட வரலாறு.
இன்றும் அங்குள்ள சுன்னிகள் ஹமதானியை மாபெரும் ஆன்மிக ஞானியாகக் கொண்டாடுகிறார்கள். சிக்கந்தரை நவீன காஷ்மீரின் பிதா என்கிறார்கள். அருந்ததி ராய் போன்ற முற்போக்காளர்கள் ஹமதானியின் சமாதிக்குச் சென்று வீரவணக்கம் செலுத்துகிறார்கள்.இந்த ஒருசெயலே காஷ்மீரின் சுன்னி இஸ்லாமியப் பெரும்பான்மையின் பிரிவினைவாத அரசியல் கட்சிகளை ஒரு நவீன தேசியமாக அங்கீகரிப்பதற்கான அடிப்படைத்தகுதியை இல்லாமலாக்கிவிடுகிறது. அது ஐ.எஸ்.எஸ் போன்ற ஒரு மானுடவிரோத மதவெறிக்கும்பல் அன்றிவேறல்ல.அன்று இந்துக்களுக்கு நடந்தது, இன்று ஷியாக்கள் அதே அழித்தொழிப்பின் விளிம்பில் வாழ்கிறார்கள் அங்கு.
இரண்டாவதாக காஷ்மீரின் நிலம் மூன்றுபகுதிகளால் ஆனது. இந்துக்கள் ஜம்முவிலும் பௌத்தர்கள் லடாக்கிலும் பெரும்பான்மை. சீக்கியர் கணிசமான அளவு அங்குள்ளனர். சுயநிர்ணயம் என்னும்பேரால் காஷ்மீர் சமவெளியில் மட்டும் பெருமளவில் உள்ள சுன்னிகளிடம் ஒட்டுமொத்த காஷ்மீரையும் அளிக்கமுடியுமா என்ன?
காஷ்மீரி சுன்னிகள் தங்கள் பெரும்பான்மையை பயன்படுத்தி அந்நிலத்தை தங்கள் தேசமாக அடைந்தால் அங்குள்ள சிறுபான்மையினர் கதி என்ன என்னும் கேள்விக்கு விடை இல்லாமல் இந்த விஷயத்தைப்பற்றி எவர் பேசினாலும் அது கயமை என்பது மட்டுமே என் எண்ணம்.
காஷ்மீரில் மத அடிப்படையிலான ஒரு தேசியத்தை ஒப்புக்கொள்வதென்பது சுன்னிகள், முஸ்லீம்கள் தனித்தேசியம் என்பதை ஏற்பதற்குச் சமம். அந்தக்கோரிக்கை இந்தியா முழுக்க எழும். சென்ற முப்பதாண்டுக்காலத்தில் தெற்கு அஸாமில் வங்கத்திலிருந்து சட்டவிரோதமாகக் குடியேறி காங்கிரஸின் மோசடியால் குடியுரிமைபெற்ற வங்கமுஸ்லீம்கள் கூட அங்கே பிரிவினைக்கோரிக்கையை போஸ்டர் அடித்து ஒட்டியிருப்பதை நான் பார்த்தேன். அப்பகுதி வங்கதேசத்துடன் சேரவேண்டுமென அவர்கள் கோருகிறார்கள். இந்தியாவின் ஒடுக்குமுறை ஒழிக என கூவுகிறார்கள்.
மத அடிப்படையிலான தேசப்பிரிவினை என்னும் எண்ணமே இந்தியா என்னும் இந்த அமைப்பையே சிதறடித்துக் குருதிப்பெருக்கை உருவாக்குவது. நம் குழந்தைகளின் எதிர்காலத்தை முழுமையாக அழிப்பது. அதைப்பேசுபவர்கள் ஒன்று இந்ததேசம் உடைந்து சிதறி உருவாகும் அகதிப்பெருக்கில் தங்கள் அதிகாரத்தைக் கண்டடையமுடியுமென நினைக்கும் சுயநலக்கூட்டம். இன்னொன்று அவர்களை நம்பும் மூடர்கூட்டம்.
மதவெறியை தேசியமென அங்கீகரிக்கும் நாடு எதுவாக இருந்தாலும், அது தற்கொலைசெய்துகொள்கிறது. நாம் ரஷ்யாவையும் சீனாவையும் பார்த்து மதவெறியை எதிர்கொள்வது எப்படி என கற்றுக்கொள்ளவேண்டும்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 42
[ 11 ]
சாந்தீபனிக் கல்விநிலையின் முகப்பில் நின்றிருந்த சுஹஸ்தம் என்னும் அரசமரத்தின் அடியில் தருமன் இளைய யாதவரை எதிர்கொள்ளக் காத்திருந்த மாணவர்களுடன் நின்றிருந்தார். பீமனும் நகுலனும் சகதேவனும் அவருக்கு இருபக்கமும் நின்றிருந்தனர். மங்கல இசையும் வாழ்த்தொலிகளும் இருக்கலாகாது என்று சொல்லப்பட்டிருந்தமையால் ஒரு இளம் மாணவன் கையில் வைத்திருந்த பெரிய நீள்வட்ட மரத்தாலத்திலிருந்த எட்டுகான்மங்கலங்கள் அன்றி வேறு வரவேற்புமுறைமைகள் ஏதுமிருக்கவில்லை.
தொலைவில் பறவைகள் எழுந்து ஓசையிடுவதைக் கேட்டதும் தருமன் அவர்கள் அணுகிவிட்டதை உணர்ந்தார். அதற்குள் அங்கிருந்த வீரன் ஒருவன் சங்கொலி எழுப்பினான். காத்து நின்றிருந்தவர்களில் ஒருவன் மறுசங்கொலி எழுப்பினான். குதிரைக்குளம்படிகள் கேட்கத்தொடங்கின. ஈரமுரசில் கோல்கள் விழுவதுபோல சருகுகள் மேல் அவை ஒலித்தன. பின்னர் பசுந்தழைப்புக்கு அப்பாலிருந்து வண்ணங்கள் கசிந்து இணைந்து அவர்கள் தோன்றினர்.
முதலில் அர்ஜுனனும் இளைய யாதவரும் இணையாக புரவியில் வந்தனர். அவர்களுக்குப் பின்னால் சாத்யகி வந்தான். இறுதியாக இரு காவல்வீரர்கள் வந்தனர். ஒருவன் கையில் சங்கு வைத்திருந்தான். அவர்களைப் பார்த்ததும் அவன் மீண்டும் சங்கொலி எழுப்பினான். காத்து நின்றிருந்தவர்கள் எதிர்ச்சங்கம் முழக்கினர். இளைய யாதவரின் புன்னகை வெண்மலர் போல கரிய முகத்தில் தெரிந்தது. அவர் சுரிகுழல்கற்றைகள் தோளில் சரிந்திருந்தன. தலையிலணிந்திருந்த மயிற்பீலி அப்போது எடுத்து வைத்ததுபோலிருந்தது. கரியபுரவிமேல் அவர் அமர்ந்திருந்தார். காட்டின் நிழலுக்குள் அது மறைந்துவிட்டிருந்தமையால் அவர் மிதந்து வருவதுபோலத் தோன்றியது.
முதன்மை மாணவன் இளையோனிடமிருந்து தாலத்தை வாங்கிக்கொண்டு முன்னால் சென்றான். தாலத்திலிருந்த மலர்மாலையை எடுத்து இன்னொரு மூத்தமாணவன் இளைய யாதவருக்கு சூட்டினான். இளையமாணவர்கள் அவர் மேல் பொன்னிற மலர்களைத் தூவி வேதச்சொல் உரைத்து வரவேற்றனர். அவர்கள் விலகியதும் தருமன் இரு கைகளையும் விரித்தபடி அணுகிச்சென்று இளைய யாதவரை தழுவிக்கொண்டார். “நன்று, தவக்கோலம் தங்களுக்கு அழகு” என்று சொல்லி அவர் தோள்களைப் பற்றி அழுத்தினார் இளைய யாதவர். தருமன் “ஆம், இங்கு உவகையுடன் இருக்கிறேன்” என்றார்.
பீமனை நோக்கி “காடாளத் தொடங்கிவிட்டீர், மந்தரே. வரும் வழியிலேயே சில குரங்குகளைப் பார்த்தபோது அவை உங்கள் நண்பர்கள் என உணர்ந்தேன்” என்றார். “ஆம், அங்கே இருப்பவை குறியன் கூட்டம். அவற்றின் ஒலியைக் கேட்டேன்” என்றான் பீமன். பீமனின் பெரிய கைகளைப் பற்றியபடி “குறியன் என்பவன் வால்குறுகிய முதுகுரங்கா? என்னிடம் அவன் வரவேற்புரைத்தான்” என்றார் இளைய யாதவர். “ஆம், அவன் எனக்கும் உங்களைப்பற்றி சொன்னான்” என்றான் பீமன்.
பீமனிடம் “தங்கள் தோள்கள் மேலும் பருத்திருக்கின்றன, நன்று” என்றபின் நகுலனையும் சகதேவனையும் நோக்கி கைகளை விரித்தார் இளைய யாதவர். அவர்கள் ஒரேஅசைவாக வந்து அவர் கால்தொட்டு சென்னி சூடினர். “இளையோர்தான் சற்று களைத்திருக்கிறார்கள்” என்றார் இளைய யாதவர். “ஆம், என்ன இருந்தாலும் காடு கொடிது” என்றார் தருமன். “வருக அரசே, தங்களுக்காக ஆசிரியர் காத்திருக்கிறார்” என்றான் முதுமாணவன்.
அவர்கள் இன்மொழி பேசியபடி இருபக்கமும் அசோகமும் மந்தாரையும் நிரைவகுத்த கல்விநிலைப் பாதை வழியாக சென்றனர். இளைய யாதவர் “இங்கு அனைத்தும் மாறிவிட்டன. மரங்கள், குடில்கள், முகங்கள்…” என்றார். “அவை மாறாமலிருக்காது என்று நன்கறிவேன். ஆயினும் மாறியிருப்பதைப் பார்க்க உள்ளம் பரபரப்படைகிறது.” தருமன் “ஆம், நானும் எங்கும் மாற்றங்களையே முதலில் பார்ப்பேன். அது முதுமைகொள்வதன் அடையாளம் போலும்” என்றார். சிரித்தபடி “இல்லை, அந்த மாற்றத்தின் நடுவே மாறாதிருக்கும் ஒன்றைக் கண்டு நிறைவடைவதற்கான முயற்சி அது. அனைத்தும் மாறுவது நாம் மறக்கப்படுவோம் என்பதற்கான சான்று. மாறாமலிருக்கும் ஒன்று நாம் எஞ்சவும் கூடும் என்பதற்கான நம்பிக்கை” என்றார் இளைய யாதவர்.
தருமன் விழிகளையே நோக்கிக்கொண்டு நடந்தார். அவரிடம் இளைய யாதவரைப்பற்றி சினம்கொண்டு பேசிய இளமாணவர்களில் பலர் அங்கிருந்தனர். அனைவர் விழிகளும் வியப்பால் விரிந்து இளைய யாதவரையே நோக்கிக்கொண்டிருந்தன. அவர்கள் என்ன உணர்கிறார்கள் என தருமனால் உணரமுடிந்தது. அவரைக் கண்டதும் முதலில் எழும் எண்ணம் அவர் உருவம் மிகச்சிறியது என்பதே. அவர் பேருடலன் அல்லர். ஆனால் குறியவனும் அல்லர். அவர்கள் விழிகளுக்கு முன் முதற்கணம் அவர் இயல்புருவைவிட குறுகிச் சிறுக்கிறார்.
ஏனென்றால் அவர்கள் அவரை குழந்தைவயதில் கதைகளாக அறிந்தவர்கள். குழந்தைகளின் தன்னுணர்வில் முதன்மையானது தாங்கள் சிறியவர்கள் என்பதே. ஆகவே அவர்கள் எப்போதும் மேலே பார்க்கிறார்கள். மேலே ஏற முயல்கிறார்கள். அண்ணாந்து சொல்கேட்கிறார்கள். அவர்களின் உலகம் மேலேதான் உள்ளது. அவ்வுலகில் அவர்கள் அவரை அறிந்தனர். அண்ணாந்தே அவரை நோக்கினர். அவர்களின் அறியா உள்ளத்தில் அவர் உருவம் கதைகளால் விரித்து பெரிதாக்கப்பட்டது.
அக்கதைகளுக்கு அயலானவராக அவர் எளிய உடலுடன் தென்படுவார். ‘இவரா? இவரேதானா?’ என நெடுநேரம் சித்தம் திகைக்கும். பின்னர் ‘இத்தனை எளியவரா? எப்படி?’ என வியக்கத் தொடங்குவார்கள். அவர் அசைவுகள் சொற்கள் சிரிப்புகள் அனைத்திலும் அது எவ்வண்ணம் நிகழ்ந்தது என்பதற்கான சான்றுகளை தேடுவார்கள். கூர்ந்து நோக்கப்படுவதனாலேயே அவர் பெரிதாகத் தொடங்குவார்.
மானுடப் பெருவெள்ளத்தில் கூர்ந்து நோக்கப்படுபவர்கள் மிகமிகச் சிலரே. காதலின் போது காதலர் கூர்ந்து நோக்கிக் கொள்கிறார்கள். நோக்கி நோக்கி ஒருவரை ஒருவர் வளர்க்கிறார்கள். ஆனால் அது காலநுரை. இருவருக்குள் நிகழ்ந்தழியும் கனவு. அவரோ பல்லாயிரம் விழிகளால் நோக்கப்படுகிறார். நோக்குகளை சேர்த்துக் கோக்கின்றன சொற்கள். அவர்கள் விழிகளில் ஏறி அவரைக் கூர்ந்து நோக்குவது அவர்களின் உள்ளம். அவ்வுள்ளம் அவரில் தன்னை படியச்செய்கிறது.
பின்னர் அவர் அவர்களின் வடிவாகிறார். அவரை வளர்த்தெடுப்பது அவர்கள் தங்களைப்பற்றிக் கொள்ளும் விழைவுக் கற்பனைகளின் வளர்ச்சி. அவரைப் பற்றிய கதைகள் புத்துருக் கொள்கின்றன. அக்கதைகளை அவர்கள் மேலும் வளர்த்தெடுக்கிறார்கள். அவர் பேருருக்கொள்ளத் தொடங்குகிறார். அவ்வுருவுக்குத் தொடர்பே இல்லாமல் அவர் எளிய மானுடனாகச் சிரித்து புழங்குகையில் தொன்மத்திற்கும் மானுடனுக்கும் நடுவே மயங்கித் தவிக்கிறது அவர்களின் சித்தம். அந்த மாயத்தால் அவர் ஒருபோதும் சித்தம்விட்டு இறங்காதவராகிறார்.
அவர்களின் விழிநடுவே சென்றுகொண்டிருக்கும்போது ஒரு நாடகத்தில் கூத்தர்கள்போல அணிகொண்டு வந்து நின்றிருப்பதாகத் தோன்றியது. விழாக்களிலும் அவைகளிலும் எப்போதும் தோன்றும் உணர்வுதான். ஆனால் மிகச்சில கணங்களிலேயே அதை வென்றுவிடமுடியும். ஏனென்றால் அங்கு அத்தனைபேருமே நடிகர்களாக இருப்பார்கள். இங்கு நோக்கும் விழிகள் உணர்வெழுச்சிகளால் நிறைந்திருந்தன. அத்துடன் அவை நிகழின் விழிகள் அல்ல. வரும் தலைமுறைகளின் விழிகள். அறியாத காலமடிப்புகளில் எங்கெங்கோ நின்றுகொண்டு நோக்கிக்கொண்டிருக்கிறார்கள்.
அசைவுகள் பொய்யென ஆகாதிருக்க தருமன் தன்னை இறுக்கிக்கொண்டார். அது செயற்கையான மிடுக்காக தன் உடலில் தோன்றக்கண்டார். தளர்த்தியபோது அது செயற்கையான புறக்கணிப்பாகத் தோன்றியது. இயல்புநிலை என்பது இரண்டுக்கும் நடுவே ஒரு நடிப்பா என்ன என நினைத்துக்கொண்டபோது புன்னகை ஏற்பட்டது. அப்புன்னகை அவரை சற்று இயல்பாக ஆக்கியது. அவரை பார்த்தார். அவர் புல்லும் கல்லும் மண்டிய ஓடையின் மீன் போல மிக இயல்பாக அவர்களினூடாக சென்றுகொண்டிருந்தார். வாழ்த்துக்களை புன்னகையுடன் ஏற்றுக்கொண்டார். இறுகிய முகங்களையும் அதே புன்னகையுடன் எதிர்கொண்டார்.
எதிரே மாணவர்கூட்டத்திற்குள் பாதி புதைந்தவராக பிருகதர் நின்றுகொண்டிருந்தார். சேற்றுக்குள் உடல்புதைத்து மூச்சுக்கு முகம் மட்டும் நீட்டி ஒடுங்கியிருக்கும் விரால்மீன் போல. அவர் விழிகள் அவரில் கூர்ந்திருந்தன. சிறிய சுருக்கத்துடன். ஐயமா ஆர்வமா வெறுப்பா என்றறிய முடியாத சுருக்கம். கூட்டம் நெரிபட்டதனால் அவர் சற்று ததும்பிக்கொண்டிருந்தார். அவரை இளைய யாதவர் கடந்துபோகும் கணத்தில் கண்டுவிட்டார். முகம் மலர்ந்து புன்னகைத்து கைகளைக் கூப்பியபடி “வணங்குகிறேன், ஆசிரியரே” என்றபடி அவரை நோக்கி சென்றார். அறியாது அவர் உடல் பின்னடைவின் அசைவை காட்டியது. இளைய யாதவர் குனிந்து அவர் கால்களை சென்னி சூடினார். “வாழ்த்துங்கள்” என்றார். அவர் தலைமேல் வெறுமனே கைவைத்தார்.
எழுந்து “நீண்டநாள் ஆயிற்று பார்த்து. நலமாக இருக்கிறீர்கள் அல்லவா?” என்றார். “ஆம்” என்று பிருகதர் சொன்னார். மேலும் பின்னடைய அவர் விழைவதுபோல் தோன்றியது. மாணவர்கள் இளைய யாதவரைச் சூழ்ந்து உடல்களால் அலையடித்தனர். அர்ஜுனன் அவர் தோளில் தொட்டு “செல்வோம், யாதவரே” என்றான். “தங்கள் குடிலுக்கு பின்னர் வந்து சந்திக்கிறேன், ஆசிரியரே” என்றபின் அவர் முன்னால் சென்றார். திரும்பி பிருகதரைப் பார்த்த தருமன் அவர் விழிகளில் அதே சுருக்கம் நீடிப்பதை கண்டார்.
சாந்தீபனி முனிவர் தன் குடிலின் வாயிலிலேயே கைகளைக் கூப்பியபடி வந்து நின்று இளைய யாதவரை வரவேற்றார். “உங்கள் ஆசிரியரின் இல்லத்திற்கு வருக, யாதவரே” என்றார். இளைய யாதவர் குனிந்து அவர் கால்களைத் தொட்டு சென்னிசூடினார். அவர் அதில் ஒரு கணம் திகைத்ததுபோல் தோன்றியது. “அழிவற்றதாகுக உங்கள் மெய்யறிதல்!” என்று முணுமுணுத்தபின் “வருக!” என்று அவர் தோளைத்தொட்டார். அவர்கள் உள்ளே நுழைந்ததும் அர்ஜுனன் தலைவணங்கி வாயிலிலேயே நின்றான். நகுலன் “நாம் கூடத்திற்குச் சென்று காத்திருப்போமே!” என்றான். “ஆம்” என்றார் தருமன்.
அவர்கள் மாணவர்களினூடாக கூடம் நோக்கி சென்றனர். மாணவர்களின் ஓசை அதற்குள் பெருகி அப்பகுதியை சூழ்ந்திருந்தது. ஒரு சொல்லவை உச்சத்தில் முடிந்தபின்னர் அச்சொல்லாடலை ஒவ்வொருவரும் முன்னெடுப்பதுபோல் தோன்றியது. “நடிகன்!” என ஒரு குரல் கேட்டது. தருமன் அறியாது திரும்பிப்பார்த்தார். புன்னகையுடன் கண்ணொளிரத் தெரிந்த அத்தனை விழிகளில் எது அதைச் சொன்னது என்று அறியமுடியவில்லை. அவர் தலைதிருப்பியதுமே “பொய்ப்பணிவே ஆணவத்தின் உச்ச வெளிப்பாடு” என அக்குரல் சொன்னது. அவன் தனக்குள் மகிழ்கிறான் என தருமன் எண்ணினார். மீண்டும் திரும்பிநோக்கி அவனுக்கு அந்த உவகையை அளிக்கலாகாது என கழுத்தை இறுக்கிக் கொண்டார்.
கூடத்தில் புல்பாய்களில் அவர்கள் அமர்ந்தனர். நகுலன் “இளைய யாதவர் சற்று தளர்ந்திருக்கிறார்” என்றான். “ஆம், நடையிலும் தளர்வுள்ளது. நான் இன்றுவரை அவரை இத்தகைய தளர்வுடன் பார்த்ததே இல்லை” என்றான் சகதேவன். அர்ஜுனன் “துவாரகையில் நிகழ்ந்தவற்றைத்தான் சொல்லிக்கொண்டு வந்தார். அவர் உள்ளம் தளர்வதில் பொருளிருக்கிறது” என்றான். தருமன் அவனை திரும்பிப் பார்த்தார். “யாதவர்களின் உட்பூசல்… அது உச்சத்தை அடைந்திருக்கிறது” என்றான் அர்ஜுனன்.
“யாதவர்குலங்கள் பூசலிடாமலிருந்ததே இல்லையே?” என்றார் தருமன். “ஆம், ஆனால் முன்பு அவர்களை இணைக்கும் சரடாக இளைய யாதவர் இருந்தார். இன்று அப்பூசலை உருவாக்குவதாகவே அவரது இருப்பு மாறிவிட்டது. அதைத்தான் எண்ணி துயர்கொள்கிறார்” என்று அர்ஜுனன் சொன்னான். “இன்று அவர் நம்பிய அனைவருமே அப்பூசலில் அவருக்கு எதிராக அமர்ந்திருக்கிறார்கள்.” அச்சொற்களைக் கேட்டு சற்று அதிர்ந்த தருமன் அவன் விழிகளை நோக்கி “அக்ரூரருமா?” என்றார். “பலராமரும்” என்றான் அர்ஜுனன். தருமன் சிலகணங்களுக்குப்பின் பெருமூச்சு விட்டு “ஆம், அவ்வாறே அது ஆகும். அவர்கள் கருமையும் வெண்மையும்” என்றார்.
[ 12 ]
அவை நிரம்பி நீராவி வெம்மையும் வியர்வை வாடையும் கொள்ளத்தொடங்கியது. தருமன் கைகளைக் கட்டியபடி தலைகுனிந்து அமர்ந்திருந்தார். வெளியே சங்கு முழங்க உள்ளிருந்தவர்கள் அமைதியாயினர். வெளியே இருந்து ஒரு மாணவன் சிற்றகல் ஒன்றை ஏந்தியபடி கூடத்திற்குள் நுழைந்தான். பிறிதொருவன் சங்குடன் தொடர்ந்தான். அவனுக்குப் பின்னால் இளைய யாதவரும் சாந்தீபனி முனிவரும் இணையாக கூடத்திற்குள் நுழைந்தனர். அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று அவர்களை வணங்கினர். அவர்களை கைதூக்கி வாழ்த்தியபடி சாந்தீபனி முனிவர் தன் பீடத்தை அடைந்தார்.
விளக்கேந்திய மாணவன் சிற்றகலால் அங்கிருந்த பிற நெய்யகல்களை ஏற்றியதும் தர்ப்பை போடப்பட்டிருந்த பீடம் ஒளிகொண்டது. சாந்தீபனி முனிவர் அவை நோக்கி திரும்பி “இன்று இங்கு நுண்வடிவாக இருக்கும் எந்தை மகிழ்வுகொள்கிறார். அவருக்கு உகந்த முதல்மாணவர், அவர் எண்ணிய இரண்டாவது மைந்தர், இன்று இக்கல்விநிலைக்கு வந்திருக்கிறார். இக்கல்விநிலையின் தலைவரென அவர் அமர்ந்து இதை வழிநடத்தவேண்டுமென எந்தை விழைந்திருக்கிறார். என்றாயினும் அவர் பெயருடன் இணைந்தே இது நினைக்கப்படுமென்றே என் உள்ளம் சொல்கிறது” என்றார்.
மாணவர்கள் விழிவிரித்து அமர்ந்திருந்தனர். அவர்கள் எண்ணுவதென்ன என்று உணரமுடியவில்லை. அகல்சுடர்களை ஏற்றி முடித்து மாணவன் பின்னால் சென்று அமைந்தான். “எந்தை அமர்ந்த இந்த ஆசிரியபீடத்தில் இன்று இளைய யாதவர் அமர்ந்து நமக்கு அவர் அருளிய சொற்களை சொல்லவேண்டுமென விழைகிறேன்” என்றார் சாந்தீபனி முனிவர். இளைய யாதவர் அதை மறுப்பார் என தருமன் எண்ணினார். ஆனால் புன்னகையுடன் இளைய யாதவர் அவையை நோக்கி “ஆசிரியர்களின் சொற்கள் மாணவர்களில் வாழ்கின்றன, விதையின் உயிர் மரத்தில் சாறெனத் திகழ்வதுபோல” என்றார். “நான் எண்ணுவதை சொல்கிறேன். ஒவ்வொரு சொல்லுக்கும் நான் அவருக்கு கடன்பட்டிருக்கிறேன்.” சாந்தீபனி முனிவர் அவர் கைகளைப்பற்றி பீடத்தில் கொண்டுசென்று அமர்த்தினார். அருகே இருந்த பீடத்தில் தான் அமர்ந்துகொண்டார்.
“இளையோரே, அந்த அழகிய மரம் தன் கிளைகளை மண்ணில் விரித்துள்ளது. வேரை விண்ணில் பரப்பியிருக்கிறது” என்று அவர் சொன்னார். “விண்ணகம் தூயநீர் ஒன்றால் நிறைந்துள்ளது என்கின்றன நூல்கள். அப்பாற்கடலின் திவலையையே நாம் மழை என்கிறோம். விசும்பின் துளி இங்கு பசும்புல் தலையாகிறது. பருப்பொருள் அன்னமாகிறது. அன்னம் அன்னத்தை வளர்க்கிறது. அன்னத்தின் ஆடலையே இங்கு இயல்வாழ்வு என்கிறோம். ஆயிரம் கிளைகள். பல்லாயிரம் சிறுகிளைகள். பற்பலப் பல்லாயிரம் சில்லைகள், முடிவிலா இலைகள்.”
“அனைத்திலும் பெருகும் சாறு ஒன்றே. அது விண்ணில் ஊறுவது. இளையோரே, வேர் அங்கிருக்கிறதென்றால் அதன் விதை எங்கிருந்தது? விண்ணகத்தில் நுண்வடிவாக இருந்தது அவ்விதை. முளைத்த பின்னரே தன்னை கண்டுகொண்டது அது. இலைகளின் காரணமென சில்லைகளும் சில்லைகளின் காரணம் என கிளைகளும் கிளைகளின் காரணமென மரமும் மரத்தின் காரணமென வேர்களும் வேர்களின் காரணமென விதையும் என்றால் அவ்விதையின் காரணமென அமைவது எது? அதுவே இங்குள அனைத்தும். அதை வணங்குக!”
“முடிவற்றுத் தளிர்ப்பதே அதன் விழைவென்பதனால்தான் அது இங்கு இவ்வண்ணம் உருக்கொண்டது. இங்கிருந்து வளர்ந்தெழுகிறது. அவ்வண்ணமென்றால் அதன் அழியாச்சொல் உயிர்த்திருப்பது தடியிலா, கிளையிலா, சில்லையிலா, இலையிலா? இல்லை எழுந்து ஒளிகொள்ளும் புதுத்தளிரில் மட்டுமே. உறுதியும் வண்ணமும் கொண்டவை மரமும் கிளைகளும். ஆனால் தளிருக்கு மட்டுமே பொன் அளிக்கப்பட்டுள்ளது” என்று அவர் சொன்னார். தனக்குள் என அவர் சொல்லிக்கொண்டே சென்றபோது அவரும் அங்கின்றி அச்சொற்கள் முழங்குவதுபோல் தோன்றியது.
“தளிரென எழுந்த ஒவ்வொன்றுக்கும் நிகராக அறியாத வானத்து ஆழங்களில் அதன் வேர்நுனி முளைகொள்கிறது என்றறிக! இங்கு ஒரு தளிரை கிள்ளுபவன் அங்கு ஒரு வேர்முளையின் பழிகொள்கிறான். இளையோரே, தடியால் இலையால் முள்ளால் தளிரை காத்துக்கொள்கிறது மரம். ஏனென்றால் தளிரிலேயே அது வாழ்கிறதென அது அறிந்துள்ளது.” அவர் விழிகள் பாதி மூடியிருந்தன. இதழ்கள் அசைகின்றனவா என்னும் உளமயக்கு ஏற்பட்டது. “இலைகளின் அலைகளாக ஒரு பெருவெள்ளம். புவிமூழ்கடித்து அது எழுகிறது இன்று. அதன் நுரைகள் அறைகின்றன இமயமலைமுடியை. அதன் ஆழிப்பேரோசை சுமந்த சங்குகள் ஆகின்றன நாம் உரைக்கும் ஒவ்வொரு சொல்லும்.”
“இனியவர்களே, பெருவெள்ளம் எழுகையில் உங்கள் தனிக்கிணறுகளால் என்ன பயன்? அவை விண்ணில் ஊற்று கொண்டவை ஆயினும்?” என்று அவர் சொன்னார். அச்சொற்கள் மீண்டும் மீண்டும் முழங்கும் அமைதியொன்றினூடாக கடந்து சென்றார். “ஊற்றென்பதும் உள்ளுறைந்த பெருவெள்ளமே. அதை அறிந்தவன் வெள்ளத்தைக் கண்டு அஞ்சுவதில்லை. இன்று தேவை அஞ்சாமை. நொய்மையான இல்லங்களை, ஒழுகும் களஞ்சியங்களை, நீச்சலறியாத இளமைந்தரை கொண்டுள்ள இல்லறத்தாரின் அச்சத்தால் எதிர்கொள்ளப்படுகிறது இன்றைய பெருவெள்ளம். மலைவிளிம்பில் நின்று அலைவெளிச்சம் கண்டு உவகையுடன் கைவிரித்து எழும் இளையோர் வருக! அவர்கள் இப்பெருவெள்ளத்தின் பொருளுணர்க! அவர்கள் சொல்லில் எழுக மேலும் புதுமழை!”
அவர் கைகூப்பினார். சாந்தீபனி முனிவர் கைகூப்பி முழுமைப்பாடலை பாடினார். அதன் பின்னரும் அவை ஓசையில்லாமல் அமர்ந்திருந்தது. அவ்வசைவின்மையில் மெல்லிய நிழலாட்டமென வாயிலுக்கு அப்பால் பத்ரர் தோன்றினார். அந்த நாடகத்தனமான தோன்றுதலுக்காகவே அவர் அங்கு காத்திருந்ததை உடனே தருமன் உணர்ந்தார். அவர் அடுமனையிலிருந்து வருபவர்போல கையில் ஒரு மரச்சட்டுவத்தை ஏந்தியிருந்தார். இடையில் தோலாடை நனைந்திருந்தது. உடலெங்கும் வியர்வை வழிந்தது. “இளையோனே, நான் உன் அணிச்சொற்களைக் கேட்க வரவில்லை. நீ இங்கு வந்துள்ளாய் என்றறிந்தேன். உன்னைக் காணும்பொருட்டே வந்தேன். உன் சொற்களைக் கேட்டேன்.”
இகழ்ச்சியுடன் உதடுவளைத்து “சொற்களின் அரசவைநடனம். நன்று!” என்றார். “அணியும் ஆடையும் இன்றி அவை ஆடினால் மேலும் காமத்தை தூண்டக்கூடும்…” இளைய யாதவர் “தங்கள் சொற்களுக்கு நன்றியுடையேன், பத்ரரே” என்றார். கைகளைத் தூக்கி உரத்த குரலில் கூவியபடி அவர் அணுகினார். “நான் கேட்பதொன்றே. எனக்கு அணிகளில்லாமல் அவைநிற்கும் ஆண்மகனாக மறுமொழி சொல். நீ வேதத்தை ஏற்பவனா? மறுப்பவனா?” அவர் முகம் சினத்தால் இழுபட்டு நெளிந்தது. “எந்த வேதம் என்று தொடங்கவேண்டியதில்லை. எலி தப்பிச்செல்லும் வளைகளை எல்லாம் மூடியபின் தடியெடுத்தவன் நான். நால்வேதமென இன்று அமைந்து இப்புவியை ஆளும் மெய்ச்சொல்லை நீ ஏற்றவனா? மறுப்பவனா? அதைமட்டும் சொல்!”
“நான் வேதமறுப்பாளன் இல்லை” என்றார் இளைய யாதவர். “பத்ரரே, மலர்கொண்டு நிற்கும் மரத்திலிருந்து மகரந்தத்தை கொண்டுசெல்கிறது சிறுவண்டு. வேரும் கிளைகளும் இலைகளும் மலர்களும் கொண்ட அந்த மரத்தை அது மறுக்கவில்லை. அம்மரத்தின் நுண்சாரத்தையே அது கொண்டுசெல்கிறது. அந்த மரத்தை அது அழிவற்றதாக்குகிறது.” பத்ரர் கைகளை ஓங்கி அறைந்து சினமும் ஏளனமும் கலக்க நகைத்தார். “வேதத்தை அழிவற்றதாக்க வந்துள்ளான் யாதவன். மகிழ்ந்திருங்கள், முனிவர்களே. களிகொள்ளுங்கள், மாணவர்களே. உங்கள் வேதம் இனி அழியாது. இதோ அதைக் காக்கும் தெய்வம் எழுந்தருளியுள்ளது.”
“மெல்லிய சிறுவண்டுகளே மரத்தைக் காப்பவை, பத்ரரே” என்றார் இளைய யாதவர். “ஆகவேதான் யானை உண்ணும் கிளையிலும் மான் உண்ணும் இலைகளிலும் பறவைகள் உண்ணும் கனிகளிலும் தன் சாறை மட்டும் வைத்திருக்கும் மரம் வண்டுகள் நாடிவரும் மகரந்தத்தில் தன் கனவை வைத்திருக்கிறது. வெளியே சென்று பாருங்கள், தான் செல்லவிரும்பும் திசைநோக்கி கைநீட்டி மலர்க்குவளைகளில் மகரந்தப்பொடி ஏந்தி நின்றிருக்கும் பெருமரங்களை காண்பீர்கள்!” பத்ரர் உச்சகட்ட வெறுப்புடன் “போதும்!” என்றார். “நான் உன்னிடம் ஒப்புமைகளால் விளையாட இங்கு வரவில்லை. இதுவரை நீ இயற்றிய வேள்விகள் என்ன? அதைமட்டும் சொல்!”
“நான் தேவர்களிடம் வேட்பதில்லை” என்றார் இளைய யாதவர். “அவ்வண்ணமென்றால் நீ வேள்விச்செயல்களை மறுக்கிறாயா?” இளைய யாதவர் “இல்லை” என்றார். “வேண்டுபவர்கள் வேட்கலாம். பெற்று நிறையலாம். வேள்வி பிழையென்று நான் ஒருபோதும் சொன்னதில்லை. அது இகம். வேதம் பரத்திற்கும் உரியது என்று மட்டுமே சொல்கிறேன்.” பத்ரர் “மண்ணில் உள்ளது விண் என உணர்ந்தோர் அருளியது வேதம். மண்ணின்றி நிற்கும் திறன்கொண்டதாகையால் அது மானுடம் கடந்தது. அதை இங்கமர்ந்து சொன்னவர் நீ துறந்து சென்ற உன் ஆசிரியர்” என்றார். இளைய யாதவர் “ஆம், நான் அவர் சொல்லை துறக்கவில்லை. நான் வேதகாவலன். வெண்ணை உண்பவன், எனவே ஆகாவலன்” என்றார்.
“இனி நீ ஒன்றும் சொல்லவேண்டியதில்லை. இதோ இந்த அவையிலேயே சொல்லிவிட்டாய், வேள்வி புரப்பவன் அல்ல நீ என்று. இது வேதநிலம். வேள்வி புரக்காதவனுக்கு இங்கு முடியும் கோலும் இல்லை. வேதமறுப்பாளனைக் கொன்று அவன் குடிவெல்வது ஷத்ரியரின் கடமை. எண்ணிக்கொள் நாட்களை, அவர்கள் எழுந்து வருவார்கள். உன் நகரும் கோட்டையும் கொடியும் வீழும் தருணம் நெருங்கிக்கொண்டிருக்கிறது” என்று பத்ரர் கூவினார். “என்ன சொன்னாய், மூடா? நீ வேதசாரம் நாடுபவனா? மலமுருட்டிச் செல்லும் வண்டுக்கு மகரந்தச்சுவை தெரியுமா? இழிமகனே, என் ஆசிரியர் அமர்ந்த பீடத்திலிருந்து இக்கணமே இறங்கு!”
“அதைச் சொல்லவேண்டியவன் நான்” என்றார் சாந்தீபனி முனிவர். “பத்ரரே, உம்மை இங்கு நான் பேசவிட்டதே நீர் உச்சகட்டமாக என்ன பேசிவிட முடியுமென்று இந்த அவை அறியட்டும் என்றுதான். கற்றும் தெளிந்தும் ஒருவன் அடைந்தவற்றுக்கெல்லாம் அடியிலிருப்பது தன் பிறப்பின் மீதான வெற்றுப்பெருமைதான் என்றால் அவனே இழிந்தோனினும் இழிந்தோன். இங்கு நீர் இழிவுசூடவில்லை, உமக்குள் சென்ற வேதமெய்மையையும் இழிவு செய்கிறீர். உம்மை கீழ்மகனாகக் காட்ட வேண்டிய அத்தனை சொற்களையும் சொல்லிவிட்டீர்… நீர் செல்லலாம்!”
“ஆம், செல்கிறேன். உங்கள் இழிந்த அவையில் நான் சொல்லாட வரவில்லை. என் செயல்களம் அடுமனை. இங்குள்ள அனைவருக்கும் பசியாற்றும் கை இது. உங்கள் கைகளின் வேள்விக்கரண்டிக்கு நிகரானது இது.” அவர் தன் சட்டுவத்தை தூக்கிக் காட்டினார். “ஏனென்றால் வேதத்திற்கு என்னை முற்றளித்தவன் நான். எனவே செய்வதெல்லாம் எனக்கு வேள்வியே. என் ஆசிரியர் அமர்ந்த பீடத்தில் அமரத் துணிவுகொண்ட இவ்விழிமகனிடம் அவன் யார் என்று சொல்லிச்செல்லவே வந்தேன். யாதவா, உன் சொல்லை உன் குடியினர்கூட செவிகொள்ளப்போவதில்லை. வேதமென்பது பல்லாயிரம் முனிவர் கொண்ட அருந்தவத்தின் அமுது நனைந்தது. உன் வீண்சொற்களால் அதை நீ தொடவும் முடியாது.”
அவர் போகத் திரும்பியதும் “பத்ரரே” என இளைய யாதவர் மெல்ல அழைத்தார். அவர் அறியாது நோக்கித் திரும்ப அவரை கூர்ந்து நோக்கி மெல்லிய குரலில் இளைய யாதவர் சொன்னார் “தவத்துக்கு நிகரானது போர்க்களக்குருதி என நூல்கள் சொல்கின்றன. என் சொல் ஒவ்வொன்றையும் குருதியால் ஆயிரம் முறை நீராட்டி எடுத்து வைக்கிறேன். அவை வேதச்சொல் அளவுக்கே ஒளிகொள்வதை காண்பீர்கள்!” பத்ரர் மெய்சிலிர்ப்பதை காணமுடிந்தது. அவையினர் அனைவரும் கொண்ட விதிர்ப்பை தன் உடலால் தருமன் உணர்ந்தார். “ம்ம்” என உறுமிவிட்டு பத்ரர் வெளியே சென்றார்.
அவை பெருமூச்சொலிகளுடன் மெல்ல மீண்டது. சாந்தீபனி முனிவர் “இளையோரே, எந்தை சொன்ன சொல்லை மறுத்துச்சென்றவர் இவர் என்று நாம் அறிவோம். ஆயினும் எந்தை இவரையே தன் மாணவர் என்று எண்ணினார் என நான் அறிவேன். மறுப்பதனூடாக இவர் அவர்சொல்லை வாழவைக்கலாம். தொகுத்து முன்செல்லலாம். யோகியரின் பாதையை நாம் அறியோம். இதோ, உலகச்செயலனைத்தையும் ஒருங்குசெய்து ஓயாது அமைந்திருக்கும் இவரை மாபெரும் யோகி என்றே என் உட்புலன்கள் சொல்லிக்கொண்டிருக்கின்றன. இன்று அவர் அறியாப்புதிர். நாளை அவர் சொற்களினூடாக அப்புதிர் அழியலாம். இவர் எவரென்று நாம் அறியலாம். நன்று, அதுவரைக்கும் பின்பும் சாந்தீபனிக் கல்விநிலையின் முதலாசிரியர் அவரே. இது எந்தைவடிவென்று இங்கிருந்து நான் இடும் ஆணை. ஆம் அவ்வாறே ஆகுக!” என்றார்.
அவர் எழுந்து இளைய யாதவரை வணங்கினார். அதன்பின் மூத்தமாணவர்கள் ஒவ்வொருவராக வந்து அவரை வணங்கி விலகினர். அனைவருக்கும் மலரளித்து “மெய்மை கைவருக!” என இளைய யாதவர் வாழ்த்தினார். தருமன் எழுந்து இளைய யாதவரை அணுகியபோது அவர் விழிகளை நோக்கினார். அவரறிந்த களிச்சிறுவன் அங்கிருக்கவில்லை. யோகத்திலாழ்ந்த விழிகள். கடந்துசென்றமையால் கனல்கொண்டவை. அவர் காலடியில் தலை வணங்கியபோது தன் வாழ்நாளில் முதல்முறையாக ஆணவம் முழுதடங்கி சித்தம் அவிந்து பணிந்தது அகம். “வெல்க, நிறைக!” என்றார் இளைய யாதவர். தருமன் ஒருகணம் நெஞ்சுவிம்ம கண்ணீர் கொண்டார்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 41
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 28
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 71
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 45
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 3
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 91
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 87
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 86
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 40
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 25
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 23
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 22
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 17
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 16
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 14
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 12
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 10
வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 5
August 28, 2016
கிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா?
அன்புள்ள ஜெ,
இன்று கிருஷ்ண ஜெயந்தி இதை ஒட்டி முகநூலில் எங்களுக்குள் ஒரு உரையாடல் நடந்தது. கிருஷ்ணன் எந்த வகையில் ஒரு தெய்வம் என்று ஒருவர் கேட்டார். கிருஷ்ணனின் குணாதிசயங்களாக சொல்லப்படுபவை திருட்டுத்தனம், பெண்பித்து, சூது ஆகியவை மட்டுமே. அத்தகைய ஒரு மனிதரை எப்படி தெய்வமாக வழிபட முடியும்? அவனை அணுகித் துதிப்பவர்களுக்கு அவன் பல நன்மைகளை செய்வதாகவும் மாயமந்திரங்களைச் செய்ததாகவும் கதைகள் உள்ளன. அத்தனை குணக்கேடுகள் உள்ள ஒருவன், தன்னை வணங்குபவர்களுக்கு நன்மை செய்தால் மட்டும் அவன் தெய்வமாகிவிடுவானா என்ன? இதற்கு உங்கள் விளக்கம் என்ன?
சத்யா
***
அன்புள்ள சத்யா,
மிக எளிமையான இந்தக் கடிதத்தை கூட ஆங்கிலத்திலேயே நீங்கள் எழுதியிருப்பதிலிருந்து உங்கள் வாசிப்பின் இடம் என்ன என்று தெரிகிறது. மூடபக்தி என்று ஒன்று உண்டு. மறுபக்கமாக மூடநாத்திகம் என்று ஒன்றும் உண்டு. எந்த வகையிலும் வரலாற்று உணர்வோ பண்பாட்டுப் புரிதலோ தத்துவ அறிவோ இல்லாத ஒரு மூர்க்கமாக அது எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது. அதைப்பேசுகிறவர்கள் ஐம்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு அவர்களுக்கு இருந்த அறிவுஜீவி பட்டத்தை இன்று பெறுவதில்லை என்பதை அவர்கள் அறிவதில்லை
ஒரு வாரம் ஒரு நாளுக்கு இரண்டு மணிநேரம் வீதம் படிக்க முடியுமென்றால் மிக விரிவான வரலாற்று சித்திரத்தை உருவாக்கிக் கொள்ளும் அளவுக்கு இன்றைக்கு நல்ல நூல்கள் உள்ளன. கிருஷ்ணனை, புத்தரை, யேசுவை பல கோணங்களில் இன்று அறிய முடியும். அவ்வாறு வரலாற்று ரீதியாக பண்பாட்டு ரீதியாக தத்துவார்த்த ரீதியாக அறிந்த பின் ஏற்பதும் மறுப்பதும் ஓர் அறிவு நிலைபாடு.
கிருஷ்ணன் இந்தியா உருவாக்கிய மாபெரும் ரகசியம் என்று நடராஜ குரு சொல்கிறார். ஒருவகையில் வெண்முரசு அந்த ரகசியத்தின் வரலாற்று பண்பாட்டு தத்துவ விரிவுகளை நோக்கித் திறக்கும் ஒரு படைப்பு. அது தன்னை அனைத்து வகையிலும் தயார் செய்து கொண்டு தொடர்ச்சியான கவனத்தையும் உழைப்பையும் அளிக்கும் கூர்ந்த வாசகர்களுக்கு உரியது. அதற்கப்பால் இருக்கும் எளிய பொது வாசகர்களுக்காக ஒரு சித்திரத்தை அளிக்கிறேன். ஆம் இது பொது சித்திரம் மட்டுமே.
தெய்வ உருவகங்கள் எதுவும் ஒரு நோக்கத்துடன் திட்டமிட்டு சிலரால் உருவாக்கப்படுபவையோ, நிலைநிறுத்தப்படுபவையோ அல்ல. ஏனென்றால் அது சாத்தியம் அல்ல. அவற்றை ஏற்பவர்களும் அறிவும் சிந்தனையும் உடைய மக்களே. அவை ஏற்கப்படுவதன் கூட்டுஉளவியல், பண்பாட்டு உள்ளடக்கம் ஆகியவை கூர்ந்து பார்க்கவேண்டியவை, குறைந்தபட்சம் அறிவார்ந்த விவாதத்திற்குவரும் ஒருவரால்.
தெய்வ உருவங்கள் பயன்பாட்டுக்கு என வடிவமைக்கப்படும் கருவிகள் அல்ல அவை. மாறாக கண் போல கை போல பரிணாமத்தில் படிப்படியாக உருவாகி வருபவை. ஒன்றிலிருந்து பிறிதொன்று முளைப்பதாக. ஒன்றை உண்டு பிறிதொன்று எழுவதாக. முந்தைய ஒன்றை நினைவுறுத்தும் புதிய ஒன்றாக. ஆகவே மிகச் சிக்கலான உள்ளோட்டங்கள் கொண்டவை. மிக நுட்பமான பல்லாயிரம் காரணிகள் கொண்டவை. எந்த தெய்வ உருவகத்துக்கும் இது பொருந்தும், கிருஷ்ணனுக்கும்.
கிருஷ்ணன் என்று இன்று நமக்குக் கிடைக்கும் தெய்வஉருவகத்தின் வேர்த்தொடக்கத்தை தேடிச்சென்றால் வேதங்களில் உள்ள இந்திரனைச் சென்றடைவோம். இந்திரன் மூன்று முகங்கள் கொண்டவனாக வேதங்களில் தென்படுகிறான். ஒன்று அவன் வேந்தன். ஆகவே எதிரிகளை அழித்து குடிகளைக் காப்பவன். இரண்டு, அவன் தன் குடிகளிடம் தொடர்ந்து விளையாடிக் கொண்டிருப்பவன். அவர்களை வைத்து விளையாடுகிறான். அவர்களுக்குள் ஊடாடி விளையாட்டுக் காட்டுகிறான். அவர்களை ஏமாற்றுகிறான். அவர்களிடம் பலிபெற்றுக்கொள்கிறான். மூன்று, அவன் பெரும் காதலன். தீராத வீரியம் கொண்ட ஆண்மகன்.
மானுடப்பண்பாடு தொடங்கிய காலகட்டத்தில் உருவான தெய்வ உருவகம் இது. வேந்தனும் தெய்வமும் ஏறத்தாழ ஒரேகாலகட்டத்தில் உருவான உருவகங்களாக இருக்கலாம். அவை ஒன்றெனவே பல பண்பாடுகளில் உள்ளன. உலகம் முழுக்க தொன்மையான மதங்களிலும் பண்பாட்டிலும் இதே வகையான தெய்வ – அரச உருவகம் இருப்பதை நீங்கள் பார்க்கலாம். ஆப்பிரிக்க பழங்குடிப் பண்பாடுகளில் இன்றும் கூட அரசன் அல்லது தலைவன் என்பவன் இப்படிப்பட்டவன்தான். கிறிஸ்தவத்துக்கு முந்தைய பேகன் வழிபாடுகளில் தெய்வங்கள் இப்படித்தான் உள்ளன. கிரேக்கத் தொன்மங்களில் அரசனும், வீரனும், காதலனும், விளையாட்டுத் தோழனுமாகிய தெய்வங்களை நாம் காணலாம். பைபிளில் வரும் ஞானியும் அரசனுமாகிய சாலமோனும்கூட இதே ஆளுமையுடன் காட்டப்படுகிறார்.
ஏன், இன்றும் கூட நம்முடைய நாட்டார் மரபில் இருக்கும் பெரும்பாலான தெய்வங்களின் குணாதிசயங்கள் மேலே சொன்ன மூன்று முகங்களைக் கொண்டவை. ஐயனார் அல்லது கருப்பசாமி அல்லது மாயாண்டிசாமி அல்லது சங்கிலிக்கருப்பன் அல்லது மாடசாமி கதைகளைப் பாருங்கள். அவர்கள் இன்றைய அறவியலுக்கு நன்றா தீதா என்று சொல்ல முடியாத ஆளுமை கொண்டவர்கள். கொடூரமும் கருணையும் கலந்தவர்கள். பார்க்கும் பெண்களை எல்லாம் மயக்கி கவர்ந்து சென்று உடலுறவு கொள்ளக்கூடியவர்களாகத்தான் சங்கிலிக் கருப்பசாமியும், மாடசாமியும், மாயாண்டிசாமியும் நாட்டார் பாடல்களில் காணப்படுகிறார்கள். இன்றைய பாணியில் சொல்லப்போனால் அவர்கள் செய்வதெல்லாம் நேரடிக் கற்பழிப்புகள் மட்டுமே.
மனித வாழ்க்கையுடன் நம் குடித்தெய்வங்கள் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். அண்டுபவர்களை ஆதரித்து காத்து அருள் புரிபவர்களாகவும் இருக்கிறார்கள். சாதாரணமாக நம் அப்பா தாத்தாக்கள் சொல்வார்கள், “மாடசாமிக்கு கெடா குடுத்து மூணுவருசமாச்சு. போட்டு படுத்துதான் தாயளி. ஒரு கெடாவுக்க வெல என்னன்னு அவனுக்குத்தெரியுமா? செரி, கடன வாங்கி குடுக்கவேண்டியதுதான்”. படுத்தி எடுத்து ஆடோ கோழியோ பலி வாங்கிக்கொள்கின்றன நம் தெய்வங்கள். வேதங்களில் வரும் வருணனும் இந்திரனும் இதேகுணங்கள் கொண்டவர்கள். ஒரு மாற்றமும் இல்லை
இந்த முப்பட்டைக் குணத்தை புரிந்து கொள்வதற்கு ஒட்டுமொத்த மனிதவாழ்க்கையை ,மனித பண்பாட்டுப் பரிணாமத்தை கணக்கில் எடுத்துக் கொண்டு விவாதிக்கும் ஒரு பெரிய பண்பாட்டு நோக்கு தேவை. அசட்டு நாத்திகம் அதற்கு எந்த வகையிலும் உதவாது.
எது இந்திரனை பெண்களைக் கவர்பவனாக்குகிறது? எது அப்பல்லோவை அப்படி ஆக்குகிறது? எது மாயாண்டி சாமியை அப்படி ஆக்குகிறது? அதற்கான பண்பாட்டு வேர்களைத் தேடி ஜோசப் கேம்பல் போன்றவர்கள் விரிவான ஆய்வுகளைச் செய்திருக்கிறார்கள். ஆண்மை, வளம், மக்கட்செல்வம் ஆகிய மூன்றும் ஒன்றாக கருதப்பட்ட ஏதோ ஒரு தொல்பழங்காலம் இருந்திருக்கிறது. அரசனின் கருணையும், வீரமும், அவன் காமத்திறனும் ஒன்றே என்று அவர்கள் எண்ணியிருந்தார்கள்.
ஐரோப்பாவில் தொன்மையான பாகன் சடங்குகளில், விளைச்சலுக்கு செய்யும் வளச்சடங்குகளில், அரசனின் விறைத்த ஆண்குறிக்கு மலர்மாலை அணிந்து பூசை செய்யும் வழக்கம் இருந்திருக்கிறது. அரசன் விறைத்த குறியுடன் நிர்வாணமாக வயல்களில் நடந்து செல்லும் வழக்கம் சில இடங்களில் இருந்திருக்கிறது. ஆண்குறியை வயல்களில் கல்வடிவில் நாட்டி பூசைசெய்திருக்கிறார்கள். அவை இன்றும் காணக்கிடைக்கின்றன.
ஓர் அரசன் அக்குடியின் தகுதி வாய்ந்த அனைத்துப் பெண்களையும் தன் மனைவியாக எடுத்துக் கொள்ளும் வழக்கம் பல்வேறு தொல்குடிகளில் சமீப காலம் வரைக்கும் கூட தொடர்ந்திருக்கிறது. வீரியம் மிக்க கணவனாகவும் ,அக்குடிகளில் பெரும்பாலானவர்களுக்கு பெருந்தந்தையாகவும் அவன் ஆகிறான். கடவுள் பல மதங்களில் தந்தையாக உருவகிக்கப்படுகிறார்.அதைப் புரிந்து கொள்வதற்கான இடம் இது. அப்பா என கடவுளை அழைப்பதன் உட்பொருள் இந்தப் பண்பாட்டுப் பின்புலமே. தொன்மையான பழங்குடிகளில் அரசனே கடவுள். உண்மையிலேயே அவன்தான் அக்குடிகளில் பெரும்பாலானவர்களுக்குத் தந்தை. அந்தப்பிதா வடிவம் தான் பரமண்டலத்தில் இருக்கும் பிதாவாக உருவக வளர்ச்சி அடைந்தது.
இதை இன்னும் பின்னால் சென்று பார்ப்போம் என்றால், குரங்குகளில் தாட்டான் குரங்கு எனப்படும் Alpha Male அக்குடியை தன் கட்டுக்குள் வைத்திருப்பதைச் சென்றடைவோம். தன் உடல் ஆற்றலால், மதிநுட்பத்தால் அக்குடியை அது அடக்கி ஆள்கிறது. அக்குடியில் அத்தனை பெண்களுடனும் அது உறவு வைத்து தன் குழந்தைகளை உற்பத்தி செய்கிறது. அது ஒரு பெருந்தந்தை. அரசன் என்னும் தொல்வடிவம் இதிலிருந்து உருவாகி வந்ததாக இருக்கலாம். அது உயிரியல் சார்ந்த ஒண்றாக இருக்கலாம். அதிலிருந்து இந்திரன் போன்ற விண்ணாளும் அரச தெய்வங்கள் உருவாகி வந்திருக்கலாம். வேதங்களில் பெருங்காமத்தின் வடிவமான தீர்க்கதமஸ் போன்ற பெருந்தந்தைகள் பலவடிவில் வந்துகொண்டே இருக்கிறார்கள். வெண்முரசில் அத்தகைய பலகதைகள் உள்ளன.
வேதங்களிலும் சரி ,தொல்தமிழ் நூல்களிலும் சரி ,இந்திரன் ’வேந்தன்’ எனும் வார்த்தையாலேயே சுட்டப்படுகிறான். அரசன் இந்திரனேதான். பழைய குடிகளில் அரசனுக்கு இருந்த இடம் அது. கண்கூடான தெய்வமாகத்தெரியும் அரசனிலிருந்து ஓர் உருவக அரசனை நோக்கி சென்றபோது அவர்கள் இந்திரனை உருவாக்கிக் கொண்டார்கள். அரசனைப்போன்றே அவன் காக்கும் தெய்வமாகவும் விளையாடும் தெய்வமாகவும் காதலனாகவும் ஆகவே தந்தையாகவும் அவன் விளங்கினான். தொல்தமிழகத்தில் இந்திரன் காமத்தின் களமகிய மருதநிலத்தின் தெய்வம். இந்திரனை நன்னீராட்டும்விழா அன்றைய காதல்பெருவிழா.
நெடுங்காலத்துக்கு பிறகுதான் கிருஷ்ணன் என்னும் யாதவன் வரலாற்றில் எழுந்து வருகிறான். அவன் இளவயதுச் சாதனைகளில் ஒன்றாக பாகவதம் குறிப்பிடுவது வருடம்தோறும் இந்திரனுக்கு அளிக்கப்பட்டு வந்த பசு பலியிடும் வேள்வியை அவன் தடுத்ததுதான். முகிலின் மேய்ப்பன், புல்வெளிகளின் காவலன் ஆகையால் இந்திரன் யாதவர்களின் தொல்தெய்வம். கிருஷ்ணன் யாதவர்களின் இந்திர வழிபாட்டை நிறுத்தினான். இந்திரனை வழிபடுவதற்குப் பதிலாக மந்தர மலையை வழிபடலாம் என்று அவன் சொன்னான். ஆகவே சினந்து இந்திரன் மழை பொழிந்து யாதவ குடிகளை அழிக்க முயன்றபோது மந்தரமலையைத் தன் கைகளில் தூக்கி தன் குடிகளைக் காத்தான் என்கிறது பாகவதம்.
குறியீட்டு ரீதியான ஒரு விளக்கம் இது. இந்திரனுக்குப் பதிலாக அவனே காவலன் ஆனான். இந்திரன் என்னும் தொன்மையான தெய்வம் மெல்ல வழக்கொழிந்து அந்த இடத்தில் கிருஷ்ணன் என்னும் புதிய தெய்வம் உருவாகி வருவதை மகாபாரதத்தில் இருந்து பாகவதம் வரைக்குமான காலகட்டத்தில் நாம் பார்க்க முடியும்.
கிருஷ்ணன் என்ற ஆளுமை இரண்டு அம்சங்கள் கொண்டதாகத்தான் மகாபாரதத்தில் உள்ளது. அன்றைய ஷத்ரிய மேலாதிக்கத்திற்கு எதிராக அடித்தள மக்களாகிய யாதவர்களிடமிருந்து எழுந்து வந்த ஒரு பெருந்தலைவன் அவன். பழைய அமைப்பை கட்டிக் காத்து வந்த ஷத்ரிய அரசர்களின் ஆதிக்கத்தை உடைத்து புதியதோர் அரசை உருவாக்கியவன். அத்துடன் பழைய அமைப்பின் தத்துவக் கட்டுமானமாக விளங்கிய அனைத்தையும் உடைத்து அவை அனைத்திலிருந்தும் சாரத்தை எடுத்து தொகுத்து புதிய தத்துவ தரிசனம் ஒன்றை உருவாக்கினான். அதுவே பகவத் கீதை எனப்படுகிறது.
கிருஷ்ணனின் வெற்றி மகாபாரதப்போரால் அறுதியாக நிறுவப்பட்டது. பதினாறு ஜனபதங்களாகவும், பின்னர் ஐம்பத்தாறு நாடுகளாகவும் வகுக்கப்பட்டு பாரத வர்ஷத்தை அடக்கி ஆண்டிருந்த ஷத்ரியர்கள் தளர்வுற்றனர். பின்னர் குறைந்தது ஐநூறு ஆண்டுகாலம் பாரதவர்ஷத்தில் யாதவர்களின் கொடி பறந்தது. அந்தக் காலத்தில் தான் கிருஷ்ணன் என்ற தத்துவ ஞானியாகிய அரசன் தெய்வ வடிவமாக ஆக்கப்பட்டான். விடுதலைக்கு வழி வகுத்த ஒரு மாவீரன், பெரும் ஞானி மெல்ல தெய்வம் என்று ஆன பரிணாமம் அது.
அப்படி ஒரு வரலாற்று மாற்றம் நிகழ்ந்ததனால் தான் மூரா என்ற பழங்குடிகளிலிருந்து மௌரியர் உருவாகி வர முடிந்தது. பாரதத்தின் மாபெரும் பேரரசொன்றை அமைக்க அவர்களால் இயன்றது. இந்திய வரலாறே புதிய ஒரு திசைக்கு நகர்ந்தது. அதன் பின் பல யாதவப்பேரரசுகள் .இறுதியாக நாயக்கப்பேரரசு வரை இந்தியா அடித்தள மக்களிலிருந்து எழுந்துவந்த அரசகுடிகளாலேயே விரிவும் வீச்சும் பெற்றது. அந்த திருப்புமுனைப் புள்ளி கிருஷ்ணன்.
கிருஷ்ணன் தெய்வமாக்கப்பட்டபோது இந்திரனுக்குரிய அனைத்து குணங்களும் கிருஷ்ணன் மேல் ஏற்றப்பட்டதை நாம் பார்க்கலாம். அவ்வாறு தான் இந்திரனுக்குரிய காத்தருளும் அரசன், மனிதருடன் விளையாடும் திருடன், பெண்களுடன் ஆடும் பெருங்காதலன் என்ற பிம்பங்கள் கிருஷ்ணனுக்கும் அளிக்கப்பட்டன. மகாபாரதத்தின் கிருஷ்ணன் தத்துவ ஞானியாகிய பேரரசன். தன் அரசியல்நோக்குக்காக வெவ்வேறு குடிகளைச் சேர்ந்த எட்டு அரசியரை மணந்தவன். காதலனோ கள்வனோ ஒன்றும் அல்ல. இந்திரனுக்குரிய அந்த குணங்களை எல்லாம் கிருஷ்ணனுக்கு அளிக்கும் பலநூறு கதைகள் தன்னிச்சையாக உருவாகி நிலைநின்றபின் அவற்றைத் தொகுத்து உருவானதே பாகவதம்
அதன் பின் கிருஷ்ணன் வெவ்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு தெய்வங்களின் பண்பாட்டு அடையாளங்களை தான் ஏற்றுக் கொண்டு வளர்ந்து இன்று நம் பெருந்தெய்வமாக நின்றிருக்கிறான். பாகவதத்தில் ராதை இல்லை. அதன்பின் மேலும் சிலநூறாண்டுகளுக்குப்பின்னரே ராதாகிருஷ்ணன் என்னும் உருவகம் பிறந்துவந்தது. அரசனும் காதலனும் தந்தையும் ஆன தெய்வம் கைக்குழந்தையாகவும் ஆகி மண்ணைத்தின்றது. ஓர் உருவகத்தின் வளர்ச்சி அது. அது குறிக்கும் தத்துவத்தின் பரிணாமம்.
ஆக, எந்தக் காரணத்துக்காக கிருஷ்ணனை நீங்கள் முத்திரை குத்துகிறீர்களோ அதே காரணத்துக்காக மாயாண்டிச் சாமியையும், முனியப்பனையும், ஐயனாரையும் நிராகரிக்க முடியும் அவர்களும் அதே குணாதிசயங்கள் கொண்டவர்கள் தாம். எந்த ஒரு தெய்வத்தை எடுத்துப் பார்த்தாலும் நினைப்பறியாத ஒரு பழங்காலத்திலிருந்து பல்வேறு பண்பாட்டு உருவகங்களை அது தன்மேல் ஏற்றிக் கொண்டு வளர்ந்து வந்திருப்பதைப் பார்க்க முடியும்.
அந்த வடிவத்தை ஏன் வழிபடவேண்டும்? ஒரு தெய்வவடிவம் நம்மை நாமறியாத தொல்பழங்காலத்துடன் இணைக்கிறது. நாம் வாழும் இந்தக் காலகட்டத்தால் நாம் சூழப்பட்டுள்ளோம். நமது அன்றாடக்காட்சி நம்மைத் துண்டித்து நிகழ்காலத்தில் வாழவைக்கிறது. நம்முடைய தனியாளுமை இந்த துண்டுபட்ட காலத்துடன் முழுமையாக கட்டப்பட்டுள்ளது. இன்றைக்குள்ள அரசியல், இன்றைக்குள்ள தொழில்நுட்பம் இன்றைய பண்பாட்டுச் சூழல் என நாம் சிறையுண்டிருக்கிறோம்.
இது நமது பிரக்ஞை வாழும் உலகம். ஆனால் நமது ஆழ்மனம் இங்கு இப்போது இதில் முழுமையாக சிக்கிக் கொண்டது அல்ல. அது நமது மூதாதையிடமிருந்து நமக்கு வந்தது. நம்முடைய பாரம்பரியத்திலிருந்து நாம் பெற்றுக் கொண்டது. அதற்கு ஆயிரம் பல்லாயிரம் ஆண்டு வரலாறு இருக்கிறது. அதற்கு பற்பல அடுக்குகள். இன்று இந்தக் கணிப்பொறி யுகத்தில் வாழும் ஒருவன் தன்னுடைய ஆழ்மனத்தில் வேதகாலத்தில் வாழ்ந்த ஒருவனோடு இணைக்கப்படுகிறான். ஆதிச்சநல்லூரில் புதையுண்ட பெருங்கலங்களுக்குள் வாழ்ந்த மனிதனுடன் பிரிக்க முடியாதபடி இணைந்துள்ளான். அந்த இணைப்பு தான் உண்மையில் ஆன்மீகம் எனப்படுகிறது.
தெய்வ உருவங்கள் அவ்வகையில் காலமற்றவை. அவை நின்றிருக்கும் அகாலத்தில் சமகாலத்தின் ஒழுக்க நெறிகளையோ அறநெறிகளையோ முழுமையாக அவற்றின் மேல் போட முடியாது. இதுவும் எந்த தெய்வத்துக்கும் பொருந்தும். கிருஷ்ணனை அல்லது கருப்பனை அல்லது முனியனை ஏன் வழிபடுகிறோம் என்றால் அந்த தொன்மையான வடிவம் சுமந்து நின்றிருக்கும் அத்தனை பண்பாட்டுக் கூறுகளையும் அந்த வடிவம் வழியாகவே நம் ஆழ்மனம் சென்றடைய முடியும் என்பதனால்தான்.
கிருஷ்ணனை தியானிக்கும் ஒருவன் இந்திரனை, வேதங்களை, வேதமுடிவாகிய வேதாந்தத்தை அனைத்தையும் சென்று அடைய முடியும். தன் ஆழ்மனதால் கிருஷ்ணனை அணுகுபவனால் மேலே நான் சொன்ன வரலாற்றுத் தர்க்கங்கள் எதுவுமே தேவையில்லாமலேயே இவற்றை நன்கு புரிந்து கொள்ள முடியும். ஆகவேதான் அவர்களுக்கு இந்தச் சிக்கல்கள் எதுவுமே இல்லை. முற்றிலும் ஒழுக்கவாதியான ஒருவர் கிருஷ்ணனை தன் தெய்வமாக எப்படி ஏற்றுக் கொள்கிறார் என்று கேட்டால் அதற்கான விடை இதுதான். இந்த ஒழுக்கங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு ஆன்மீக நிலையில், ஓர் ஆழ்மனத் தளத்தில், ஓர் காலமற்ற வெளியில் அவர் கிருஷ்ணனை அடைகிறார்.
ஆக, ஒருவருக்கு இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று ஆன்மீகத்தின் பாதை. அதை தேர்ந்தெடுத்து கிருஷ்ணன்மேல் படிந்துள்ள அனைத்து வரலாற்று அடுக்குகளையும் ஊடுருவிச்சென்று ஒட்டுமொத்தமாக தன் ஆழ்உள்ளத்தால் அவனை அறியலாம். அப்படிமம் அளிக்கும் முழுமையறிவை அடையலாம். அதற்கு பக்தி என ஒருவழி. ஞானம் என இன்னொருவழி. அறிதலும் ஆதலும் ஒன்றே ஆகும் ஒருநிலை அது. முற்றிலும் தத்துவமே அறியாமல், எவ்வகையிலும் ஆழுள்ளம் திறக்காமல் சுயநலத்துக்காக மட்டுமே சடங்குகளில் ஈடுபடும், தெய்வங்களிடம் பேரம்பேசும் பக்தி ஒன்றுண்டு, அதுவே மூடபக்தி.
இன்னொன்று, அறிவார்ந்த வரலாற்றுநோக்கின் பாதை. இன்றைய காலத்தில் இருந்து பின்னால் சென்று வல்லபராலும் சைதன்ய மகாபிரபுவாலும் கட்டமைக்கப்பட்ட ராதாமாதவனாகிய பெருங்காதலன் என்னும் கிருஷ்ணனை சென்றடையலாம். மேலும் பின்னால் சென்று பாகவதத்தின் தெய்வவடிவமான கிருஷ்ணனை அறியலாம். இன்னும் பின்னால் சென்று கீதையின் கிருஷ்ணனை, யாதவர்களின் விடுதலைத் தலைவனை அறியலாம். மேலும் பின்னால் சென்று இந்திரனை அறியலாம். அதற்கும் பின்னால் சென்று தொல்பழங்குடிமரபிலுள்ள தந்தையும் காதலனும் வளம் கொழிக்கச் செய்பவனும் காவலனுமாகிய அரசனை சென்றடையலாம். அதற்கும் பின்னால் சென்று அந்த தொல்குரங்கின் தலைவனாகிய தாட்டானை சென்றடையலாம்.
அப்படி அறிந்தபின்னர் தன் விமர்சனங்களை முன்வைக்கலாம். இப்படி ஒரு தெய்வப்படிமம் உருவாகி வந்ததன் விளைவை மறுக்கலாம். அதன் தத்துவங்களை எதிர்த்து வாதிடலாம். அதுதான் உண்மையான நாத்திகத்தின் பாதை. நானறிந்த பெரும்நாத்திகர்களான மார்க்சிய ஆசான்களின் நோக்கு.
இவ்விரு பயணங்களுக்கும் உரிய அறிவோ நுண்ணுணர்வோ இல்லாமல் தட்டையாக ஓங்கிப் பேசும் குரல்களைத்தான் தமிழகத்தில் இருபக்கங்களிலும் கேட்கிறோம். ஏனென்றால் இரு தரப்பிலுமே இன்று தத்துவநோக்கு அருகிவிட்டிருக்கிறது. பக்தியின் தரப்பில் இன்று வேதாந்தத்தைப் பேச ஆளில்லை. ஆகவே மூடபக்தி. நாத்திகத்தின் தரப்பில் வரலாற்றை தத்துவநோக்குடன் அணுகும் மார்க்சிய மெய்யியல் மறைந்து திராவிட இயக்கத்தின் மூடக்குரலே எங்கும் ஒலிக்கிறது. மார்க்ஸியம் பேசுபவர்களிடமும் கூட.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
பாகவதமும் பக்தியும்
திரு. ஜெயமோகன் அவர்களுக்கு,
தங்களது பதிவுகளை இணையத்தின் மூலமாக கடந்த ஆறு மாதங்களாக படித்து வருகிறேன். குறிப்பாக, இந்திய ஞான மரபு பற்றிய உங்களது பதிவுகள் மீது எனக்கு தனி ஆர்வம் உண்டு. வேதாந்தம் குறித்த தங்களது பார்வை ஆழமானது. தமிழில் இது போன்ற எழுத்துக்கள் மக்களிடையே சனாதன தர்மம் குறித்தும், நமது பண்பாடு குறித்தும் சரியான புரிதலை அளிக்கும் என்பது திண்ணம்.
எனக்கு கடந்த பத்து வருடங்களாக கீதை, பாகவதம், அத்வைதம் குறித்த அறிமுகம் உண்டு. திரு. நொச்சூர் வெங்கட்ராமன் அவர்களின் சொற்பொழிவுகளின் மூலமே இவ்வறிமுகம். அவர் ஒரு அத்வைத வேதாந்தி. ரமண மகரிஷியின் சம்பிரதாயத்தை பின்பற்றுபவர். அவரது சொற்பொழிவுகளில் இருந்து நான் அறிந்து கொண்டது, பக்தியும், ஞானமும் வெவ்வேறு பாதைகளானாலும் அதன் இலக்கை அடையும் முன், பக்தி மார்க்கம் ஞானத்தையும், ஞான மார்க்கம் பக்தியையும் அடைந்தே தீரும் என்பதே. அவர் ரமணரின் வாக்கை இதற்கு மேற்கோள் காட்டுவார். அவரின் வாக்கின் படி “அறிந்தவன் அடங்கியாகணும், அடங்கினவன் அறிந்தாகணும்”. அதாவது ஞானம் அடைந்தவன் பக்தியை உணர்கிறான், பக்தியுடையவன் ஞானத்தை அடைவான். இவ்வாறே சாதாரணமாக பக்தி நூலாக கருதப்படும் பாகவதம் கூட உயர்ந்த அத்வைத ஞான கருத்தை தன்னகத்தே கொண்டது என்பார் நொச்சூர் வெங்கட்ராமன். அவருடைய பாகவத சொற்ப்பொழிவு ஒலிப்பதிவின் ஒரு பகுதியை இங்கே இணைத்துள்ளேன். ( shared in google drive)
நான் உங்கள் எழுத்துக்களை படித்தவரை தங்களது பார்வையில் பாகவதம் ஒரு பக்தி நூலாகவே தெரிகிறது. நான் அறிந்த வரை தர்ம சாஸ்திரம் குறித்த விஷையங்கள் சில பகுதியில் இருந்தாலும், பெரும்பாலும் பக்தி கலந்த ஞான நூலாகவே பாகவதம் உள்ளது. பாகவதம் குறித்த அறிமுகம் தமிழகத்தில் சாதாரண மக்களிடையே இல்லாத நிலையில் தாங்கள் அது குறித்து எழுதவேண்டும் என்பது என் விருப்பம், அதற்காகவே இக்கடிதம். தவறிருந்தால் திருத்தவும்.
ராஜேஷ்
கோவை
அன்புள்ள ராஜேஷ்
பாகவதம் ஒரு பக்திநூல்தான், ஐயமே தேவையில்லை. பக்திநூலுக்கு இரு வடிவங்கள் உண்டு. ஒன்று,புராணங்கள். பாகவதம் அவ்வகைப்பட்டது. இன்னொன்று, பக்திப்பாமாலைகள். நாலாயிரத் திவ்யபிரபந்தம்போல. அஷ்டபதி போல. புராணங்கள் உருவகங்களாகவும் குறியீடுகளாகவும் தத்துவத்தையும் வரலாற்றையும் அவற்றினூடாக ஓடும் மெய்யறிதல்களையும் சுட்டக்கூடியவை. எல்லா புராணங்களும் அல்ல. புராணங்களில் கணிசமானவை சாரமற்ற வெற்று உருவாக்கங்கள் என்பதும் ஓர் உண்மை
பக்திவழியைச் சேர்ந்தவர்கள் பிடிவாதமாக பக்தியை ஒரு நிபந்தனையாக முன்வைப்பார்கள். ரமணரின் வாயிலிருந்தே அதை வரவழைக்காமல் அடங்கமாட்டார்கள். அவர்களுக்கு ரமணர் அதை அளித்துவிட்டிருப்பார். பொதுவாக ஞானவழியை தேர்வுசெய்பவர்கள் பக்தியைப் பழிப்பதில்லை.
பக்தி உறுதியான நம்பிக்கையைச் சார்ந்தது என்பதனால் அதை மீளமீள வலியுறுத்தவேண்டியிருக்கிறது. ஒப்புநோக்க எளிய மனிதர்களுக்குரியது என்பதனால் அதை எளிமைப்படுத்தவேண்டியிருக்கிறது. தீவிரம் தேவையானது என்பதனால் அதை ஒற்றைப்படையாக ஆக்கவேண்டியிருக்கிறது. ஆலயம் போன்ற பெரிய அமைப்புக்கள் பக்தியைச் சார்ந்தவை என்பதனால் அதற்கான களங்கள் மிகமிகப்பெரியவை
வேதாந்தம் போன்ற அறிவுமரபு சார்ந்தவர்கள் தெய்வ உருவகங்களை தியானவடிவங்களாகக் கொள்வதற்கும் பக்திமரபின் வழிபாட்டுப்போக்குக்கும் பெரியவேறுபாடுண்டு. ஆனால் பொதுவாக பக்திமரபைச் சேர்ந்தவர்கள் உறுதியான நம்பிக்கை கொண்டவர்கள் என்பதனால் அவர்களிடம் எந்த விவாதமும் சாத்தியமில்லை. எந்த மதமானாலும்
எனக்கு இத்தகைய பக்தியில் நம்பிக்கை இல்லை, என் ஆசிரியமரபுக்கும். ஆகவே பக்திமரபினரின் பேச்சுக்களை கொஞ்சம் விலகியே செவிகொள்கிறேன்.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 41
[ 9 ]
அர்ஜுனன் குடிலுக்குள் வந்து வணங்கி கைகட்டி நின்றான். அவர் சுவடிக்கட்டை கட்டி பேழைக்குள் வைத்தபின் நிமிர்ந்து பார்த்தார். அருகே தெரியும் எழுத்துக்களுக்காக கூர்கொண்ட விழிகள் சூழலை நோக்கி தகவமைய சற்று நேரம் ஆகியது. அவன் உருவம் நீருக்கு அப்பாலெனத் தெரிந்து மெல்ல தெளிவடைந்தது. அவனைச் சூழ்ந்திருந்த குடிலின் தூண்களும் மரப்பட்டைச் சுவர்களும் சாளரங்களுக்கு அப்பால் மரங்களும் உருக்கொண்டன.
அர்ஜுனன் அவர் நோக்கு மீள்வதற்காகக் காத்து நின்றிருந்தான். சுவடிகளை வாசிக்கையில் அவர் விழிகள் பிற உலகங்களை கரைத்து அகற்றிவிடுவதை அவன் அறிந்திருந்தான். சுவடிகளிலிருந்து எழும்போது விழியிழந்தவர் போல் முகம் கொண்டிருப்பார். அந்தத் திகைப்பு மெல்ல விலகி அவர் விழிகளில் நோக்கு திரும்பியபின்னரே அவர் அவன் தமையன் என்று மீண்டு வருவார். “ம்?” என்று அவர் கேட்டார். “இளைய யாதவர் அணுகிவிட்டார்” என்றான்.
தருமன் மேலாடையைச் சீரமைத்து கையூன்றி எழுந்தார். அவர் மூட்டுகளில் முதுமையின் தளர்ச்சி ஒலித்தது. “இன்று பின்னுச்சி வேளை இங்கு வந்தடையக்கூடும் என்றார்கள். காட்டுக்குள் அவர் நுழைந்ததை அறிவித்து முரசு எழுந்தது.” தருமன் “இங்கு ஏற்பாடுகள் தொடங்கிவிட்டனவா?” என்றார். “இல்லை மூத்தவரே, அவர் சாத்யகியை மட்டும் அழைத்துக்கொண்டு தனியாகத்தான் வருகிறார். இங்கு வரவேற்புகள் ஏதும் தேவையில்லை என அறிவுறுத்தியிருக்கிறார்.” தருமன் வியப்புடன் நோக்கி “தனியாகவா?” என்றார். “ஆம்” என்றான் அர்ஜுனன். “நெடுநாட்களுக்குப்பின் வருகிறார் என்றார்கள்” என்றார் தருமன். “அதனால்தான் அப்படி வருகிறார் போலும்” என்றபின் அர்ஜுனன் தலைதாழ்த்தி வெளியே சென்றான்.
முகம் கழுவி குழல் திருத்தி தருமன் வெளியே வந்தார். சாந்தீபனி குருநிலை முழுக்கவே இளைய யாதவர் வரும் செய்தி பரபரப்பை உருவாக்கியிருந்தது. ஆனால் அவர்கள் அப்படி கிளர்ச்சிகொள்ளவில்லை என்று காட்ட விரும்பினர். ஆகவே மிகையான இயல்புணர்வை நடித்தபடி மெல்ல நடந்தனர். சிறிய செய்திகளை உரக்கச் சொல்லி தேவையின்றி சிரித்தனர். தருமன் அவர்களை நோக்கியபடி நடந்தார். அவரை நோக்கி தலைவணங்கி முகமன் உரைத்தபடி மாணவர்கள் சிறுவேலைகளை ஆற்றியபடி கடந்துசென்றனர். காலைவேள்விக்கென கொண்டுசெல்லப்பட்ட பசுவையும் கன்றையும் இருவர் ஓட்டிக்கொண்டு சென்றனர். பெரிய பித்தளை அண்டாக்களுடன் மூவர் சென்றனர். அனைவர் விழிகளிலும் அத்தருணம் இருந்தது.
சாந்தீபனி முனிவர் அவரது குடிலை விட்டு வெளியே வந்து திண்ணையில் நின்றபடி நெய்ப்பானைகளை கொண்டுசென்றவர்களுக்கு ஏதோ ஆணையிட்டுக்கொண்டிருப்பதை தருமன் பார்த்தார். அவர் கிளர்ச்சி கொண்டிருந்தார், அதை அவ்வண்ணமே அவர் உடலும் முகமும் வெளிப்படுத்தவும் செய்தன. அவர் முனிவரை தொலைவிலிருந்தே வணங்க அவர் உரக்க “இளையோன் வருகிறான், அரசே” என்றார். “ஆம், அறிவேன்” என்றார் தருமன். “நெடுநாட்களுக்குப்பின் வருகிறான். எந்தை மகிழ்வார்” என்றார் சாந்தீபனி முனிவர். “இது அவன் ஆசிரியனாக அமர்ந்திருக்கவேண்டிய இடம்” என்றபின் புன்னகைத்து உள்ளே சென்றார்.
குருநிலைக்கும் இளைய யாதவருக்குமான உறவை அங்கு வந்தநாள் முதலே தருமன் கூர்ந்து நோக்கிக்கொண்டிருந்தார். அங்குள்ள ஒவ்வொருவரும் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு உரையாடலிலும் அவரைப் பற்றியே எண்ணிக்கொண்டும் பேசிக்கொண்டும் இருந்தனர். அவர் ஆசிரியராக அமர்ந்த குருநிலை என்று அவர்கள் எண்ணுவதாகத் தோன்றும். ஆனால் அவர் அக்குருநிலையை முற்றிலுமாகத் துறந்து சென்றார் என்பதை அவர்கள் எப்போதும் நினைவில்கொண்டிருந்தனர். தன் ஆசிரியரைத் துறந்து சென்றார் என்றும் அவரை வாழ்வு துறக்க வைத்தார் என்றும் அறிந்திருந்தனர். இளைய யாதவரை எண்ணுவது தங்கள் ஆசிரியருக்குச் செய்யும் பிழை என்றும் உள்ளம்கொண்டிருந்தனர்.
ஆகவே ஒவ்வொரு உரையாடலும் இயல்பாக இளைய யாதவரைப் பற்றியதாக மாறும். அவர் எண்ணங்களையும் செயல்களையும் தொட்டுத்தொட்டுச் சென்ற ஒரு கட்டத்தில் ஒரு மூத்த மாணவன் “நாம் ஏன் அவரைப்பற்றி பேசவேண்டும்? அவர் சாந்தீபனி குருநிலையின் ஆசிரியர் அல்ல” என்று உரக்க சொல்வான். அத்துடன் அவ்வுரையாடல் அறுபட்டு நிற்கும். பெருமூச்சுடன் ஒவ்வொருவரும் சுக்கான் பற்றி கலம் திருப்புவதுபோல தங்கள் எண்ணச்செலவை மாற்றியமைப்பார்கள்.
ஆனால் அங்கு பேசப்படும் ஒவ்வொன்றும் இளைய யாதவருக்குரிய மறுமொழிகள் என்பதை சிலநாட்கள் அச்சொற்களனுக்குள் அமைந்ததுமே தருமன் புரிந்துகொள்ளத் தொடங்கினார். அவர் அங்கிருந்த நாட்களே குறைவானவை. அவர் சொல்லி அங்கு எஞ்சியவையும் சிலவே. ஆனால் அவர்கள் உசாவியும் எண்ணிப்பெருக்கியும் அவர் தரப்பை மிகவலுவாக உருவாக்கிக்கொண்டிருந்தனர். அவர் பெயரைச் சொல்லாமல் அவரை மறுத்தனர், அவருடன் சொல்லாடினர். வென்று கடந்ததுமே அவர்கள் அவராக மாறி அவர் தரப்பை மேலும் உருவாக்கிக்கொண்டு அதனுடன் பொருதலாயினர்.
தத்துவம் பிசிறின்றி கோக்கப்படும்போதே அதைச் சார்ந்தவர்களின் நாளுள்ளம் ஐயம்கொள்ளத் தொடங்குகிறது. எனவே நாளுண்மையைச் சொல்லும் ஒருவன் அதன் உயிர்நிலையைச் சுண்டி அதிரச் செய்துவிடமுடியும். நாளுண்மையில் வலுவாக நின்றிருக்கும் தத்துவம் எப்போதும் தன் இயல்பான சிறுமையை உணர்ந்தபடியே இருக்கிறது. பறக்கும் கவிச்சொல் ஒன்று அதை எழுச்சிகொள்ளச் செய்கிறது. கவ்விய அனைத்தையும் கைவிட்டு அது தானும் சிறகு விரிக்கிறது. உலகியலே தத்துவத்தின் எதிரி. தத்துவம் உலகியலின் பிடிபடாக் கனவு. அவர் ஒருதருணம் நாளுண்மையென வந்து நின்றார். மறுகணமே கவிச்சொல்லென ஆகி அதை வென்றார்.
தத்துவத்தை அணுகும்தோறும் ஒவ்வொரு மானுடரும் மெல்லிய திரிபுகொள்ளத் தொடங்குவதன் விந்தையை தருமன் எண்ணிக்கொண்டே இருந்தார். தாளாப்பேருண்மை ஒன்றை சுமந்தவர்கள் போல ஒரு முகம். புரிந்துகொள்ளப்படாதவர்களாக, தனியர்களாக, ஒவ்வொன்றையும் பொருளின்மையெனக் கண்டு நகைப்பவர்களாக, எக்கணமும் உதிரக்காத்து அதிர்பவர்களாக அதன் நூறாயிரம் பாவனைகள். அப்படியே மறுபக்கமென உண்மையென்பதை முற்றிலும் மறுத்து எளியோரில் எளியோனாக மண்ணில் நின்றிருக்கும் ஒரு தரப்பு. வியர்வை கொட்ட தோட்டத்தில் உழைப்பவர்கள், கன்றோட்டுபவர்கள், அடுமனையில் பணியாற்றுபவர்கள், சொல்லவைகளில் விழிதிருப்பி எங்கோ என அமர்ந்திருப்பவர்கள், அரிய சொல்லாட்சி எழுகையில் தனக்குள் என மெல்ல நகைத்துக்கொள்பவர்கள், அனலெழும் சொல்லாடல்களில் கடந்து எளிய இளிவரலொன்றை சொல்பவர்கள் என அது முகம்பெருகுகிறது.
சாந்தீபனி குருநிலையை சுற்றி வருகையில் தருமன் மாணவர்களையே நோக்கிக் கொண்டிருந்தார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு தோற்றத்தில் நடமாடிக்கொண்டிருந்தனர். தத்துவம் கற்றபின் அக்கல்வியென்றே ஆகி இயல்பாக அமைந்த எவருமே இல்லையா என்று வியந்தார். தத்துவம் மானுட ஆணவத்துடன் மட்டும்தான் நேரடியாக உரையாடுகிறதா? அந்த இயல்பான பாதையை வெட்டி அதை உள்ளிருக்கும் பசிக்கு உணவாக்குவதற்கான பயிற்சிதான் என்ன? தத்துவம் அனலெரியும் உலைமையம். அதை அணுகும்தோறும் ஒவ்வொன்றும் உருகி உருக்கலைந்தாகவேண்டும். புடமிடப்பட்டு மாசுகளைந்து மறுபக்கம் எழுபவனே தத்துவத்தைக் கடந்தவன். தத்துவத்தைக் கடக்காதவனுக்கு அதனால் பயனேதுமில்லை.
அவர் ஓடைக்கரையை அடைந்தபோது அங்கே பெரிய செம்புக்கலங்களை நீரிலிட்டு தேய்த்துக்கொண்டிருந்தனர். கலவளைவுக்குள் நீர் சுழித்து எழுந்து சென்றது. நீண்ட குழலை நாரால் முடிந்து தோளில் இட்டிருந்த நடுவயதான ஒருவர் கலங்களை நாரால் தேய்த்துக்கொண்டிருந்தார். அவரைச் சூழ்ந்து இளமாணவர்கள் கலம் தேய்த்தனர். தருமன் அருகே வந்ததும் அவர் நோக்கி “வருக, அரசே!” என்றபின் விழிகளால் அப்பால் கிடந்த நாரை சுட்டிக்காட்டிவிட்டு திரும்பி மாணவர்களிடம் “தேர்ந்த வேதிக்கூட்டு என்பது அக்கலத்தின் பங்கில்லாது நிகழ்வது” என்றார்.
தருமன் என்ன செய்யப்போகிறார் என்பதையே அனைத்து மாணவர்களும் ஓரவிழியால் நோக்கிக்கொண்டிருந்தனர். அவர் தன் ஆடையை மடித்து மேலேற்றிவிட்டு அந்த நார்ச்சுருணையை எடுத்துக்கொண்டு நீரில் இறங்கினார். அருகே ஊறிக்கொண்டிருந்த கலத்தை தேய்க்கத் தொடங்கினார். அவர் அவரை முற்றிலும் அறியாதவர் போல பேசிக்கொண்டே சென்றார். “ஆகவே கலம் தேர்வதே வேதியியலின் முதல் பணி. அத்தனை உலோகங்களும் வேதிச்செயலில் பங்குகொள்ளும் வேதிப்பொருட்களே. மண் நன்று. ஏனென்றால் அது அன்னையென நின்றுள்ளது. ஆயினும் அது சிலவற்றுடன் இணைந்தாடும் தன்மைகொண்டது.”
“கல்குடுவைகள் மேலும் நன்று” என்று அவர் சொன்னபடியே சென்றார். “அவையும்கூட பொன்மாற்று வேதியியலுக்குப் பயனற்றவை. பீதர்களின் பளிங்குக்குடுவைகளே இதுகாறும் வந்தவற்றில் மிக உகந்தவை. அவை ஈடுபடுகின்றனவா என்று இனிமேல்தான் முற்றுறுதி செய்யவேண்டும்.” காலால் நீரைத் தள்ளி தான் தேய்த்த கலத்தை அவர் கழுவினார். அங்கே தருமன் நிற்பதைக்கண்ட மாணவர்கள் பலர் அருகே வந்தனர். இயல்பாகவே பலர் கலம் கழுவத்தொடங்கினர். ஓடை இடமின்றி ஆனதும் எஞ்சியவர்கள் கரையில் கைகட்டி நின்றனர்.
“அனைத்து வேதிக்கலவைகளும் சமன்வயங்களே” என்று அவர் தொடர்ந்தார். “எந்த சமன்வயத்திலும் அதை நிகழ்த்தும் கலத்தின் இயல்பு கலந்துள்ளது. முற்றிலும் அவ்வாறு கலக்காத ஒரு சமன்வயம் இங்கு நிகழமுடியுமா என்பதே ஐயம்தான்.” அவர் உடல் இறுகி நார்நாராக அசைந்தது. கடுமையான உடலுழைப்பை மேற்கொள்பவர் என தருமன் எண்ணிக்கொண்டார். வெண்மயிர் கலந்த தாடியில் நீர்த்துளிகள் ஒளிர்ந்து ஆடிச் சொட்டின. “ஆகவே கலம் ஏது என்பது முதற்கேள்வி. அதைவிடுத்துப் பேசுவதெல்லாம் பொய்யே.”
தருமன் தனக்குள் ஒரு புன்னகை எழுவதை உணர்ந்தார். அதை முகத்தில் எழாது காத்தபடி “அப்படியென்றால் இளைய யாதவர் தத்துவ சமன்வயம் செய்யும் ஆற்றலற்றவர் என நீங்கள் எண்ணுகிறீர்களா, உத்தமரே?” என்றார். அங்கிருந்த அனைவருமே அதிர்ச்சிகொள்வது உடலசைவுகளாகவே தெரிந்தது. அத்தகைய நேரடியான வினாவை எப்போதுமே எதிர்கொண்டிராத அவர் சிலகணங்கள் நிலைகுலைந்துபோனார். அவர் கைகள் பதறுவதையும் விரல்களால் சுருணையை இறுகப்பற்றுவதையும் தருமன் கண்டார். அவர் விழிகள் நிலையழிந்து உருண்டன. உதடு ஒருமுறை சொல்லின்றி திறந்து மூடியது. மறுகணம் உரத்த குரலில் “என்ன சொல்கிறீர்? இளைய யாதவனா? அவனைப்பற்றி இங்கு என்ன?” என்றார்.
“இங்கு பேசப்படுவது அவரைப்பற்றித்தான் என்று எண்ணினேன்” என்றார் தருமன். “நான் பிழையாகப் புரிந்துகொண்டேன் என்றால் பொறுத்தருளவேண்டும்… ஆனால் எனக்கு அதையே எண்ணத் தோன்றியது.” அவர் கையை வீசி “அறிவின்மை!” என்றபின் குனிந்து நீரை காலால் தள்ளி கலம்மீது வீசினார். “நான் பேசிக்கொண்டிருப்பதே வேறு. இது தத்துவத்தின் கூர்முனை. அன்றாட அரசியலுக்கு இதனுடன் தொடர்பு ஏதுமில்லை.” தருமன் “ஆம், புரிந்துகொள்கிறேன். நான் அரசன், அன்றாட அரசியலை என்னால் தவிர்க்கமுடிவதில்லை” என்றார்.
“அறியாமையை என்னால் பொறுத்துக்கொள்ள முடிவதில்லை” என்றார் அவர். “நான் பேசிக்கொண்டிருப்பதே வேறு.” தருமன் “ஆம், ஆனால் என் பொருட்டு நான் கேட்ட வினாவுக்கே நீங்கள் மறுமொழியிறுக்கலாமே” என்றார். “என் பணி அதுவல்ல” என்ற பின் அவர் கலத்தை விசையுடன் தேய்க்கத் தொடங்கினார். “தத்துவம் அரசியலும் ஆகவேண்டுமல்லவா?” என்றார் தருமன். தன் புன்னகையை முழுமையாகவே உள்ளே மறைத்துக்கொள்ள முடிந்தது அவரால். அவர் தேய்ப்பதை நிறுத்திவிட்டு “நான் பேசிக்கொண்டிருந்த தளமே வேறு” என்றார். “அச்சம் கொள்ளவேண்டியதில்லை, நேரடியாகவே நீங்கள் இளைய யாதவரைப்பற்றி என்னிடம் பேசலாம்” என்றார் தருமன்.
அவர் சுருணையை வீசிவிட்டு “அச்சமா, எனக்கா? என்னை என்னவென்று எண்ணினீர்? நான் இப்போதிருக்கும் ஆசிரியரின் தந்தை இங்கிருந்தபோது வந்தவன். இவரை களித்தோழனாகவே அறிந்தவன். நீங்கள் சொல்லும் இளைய யாதவனை சொல்திருந்தா சிறுவனாகக் கண்டவன்” என்றார். “ஆம், நேரடியாகவே சொல்கிறேன். தத்துவ சமன்வயம் செய்ய இவன் யார்? இவன் அரசன். அரசமுனிவரான ஜனகர்கூட அவை கூட்டி அங்கு முனிவர்கள் அனைவரையும் அவையமரச்செய்து வேதச்சொல் ஆய்ந்தார். இவன் கற்ற நூல்கள் என்ன? இவன் கொண்ட ஆசிரியர்கள் எவரெவர்? சாந்தீபனி குருநிலை இவனை இன்னமும் ஏற்கவில்லை. எங்கள் ஆசிரியரின் பழிச்சொல் அவன் மேல் உள்ளது.”
“இவன் இன்னமும் ஆணிவேர் அமையாத யாதவகுலத்தின் அரசன். பாலைநிலத்திற்கு அப்பாலிருப்பதனாலேயே இன்னமும் ஷத்ரியர்களால் வெல்லப்படாதிருக்கிறான். ஆனால் இவன் தேன்தட்டில் தேன் நிறைகையில் கரடிகள் தேடி வரும்… அதன்பின் காட்டுக்குள் ஓடி ஒளிந்து தத்துவ சமன்வயம் செய்யட்டும். தன் எட்டு மனைவியருக்கும் அவற்றை சொல்லிக்கொடுக்கட்டும்.” அவர் விழிகள் ஈரமணிந்தன. முகம் வெறுப்பால் சுளித்து கழுத்துத்தசை இழுபட்டது. “அரசன் என இவன் ஆற்றிய வேள்வி எது? இவன் வென்ற களங்கள் எவை? சொல்லுங்கள்!”
“இனிமேல் வெல்லலாம் அல்லவா?” என்றார் தருமன். “ஆம் வெல்லவும் கூடும். அவன் தத்துவம்பற்றி பேசுவதெல்லாம் அவ்வாறு வெல்லும்பொருட்டே. குலம்கொண்டு படைசேர்க்க இயலாதவன் வேதச்சொல் கொண்டு சேர்க்க முயல்கிறான். அதனால்தான் அவன் கலம் மாசுடையது என்கிறேன். அவன் நோக்கம் அதுவாக இருக்கையில் நிரைநிரையென வரும் தலைமுறைகளுக்கான ஐந்தாவது வேதத்தை அவன் எப்படி அமைக்க முடியும்? அவன் எண்ணுவது ஓர் எளிய போர்ச்சூழ்கை என்றால் அதை சொல்லுங்கள். அதற்கு தத்துவ சமன்வயம் என்றெல்லாம் பெரிய சொற்களை அளிக்க வேண்டியதில்லை.”
அவர் சுருணையை தூக்கி வீசிவிட்டு நடந்துசென்றார். தருமன் அவரை நோக்கி நின்றார். ஒரு மாணவன் “அவர் பெயர் பத்ரர். இங்குள்ள மூத்த ஆசிரியர்” என்றான். “சொல்லவைகளில் நான் அவரைக் கண்டதே இல்லையே?” என்றார் தருமன். “அவர் எங்கும் வருவதில்லை. அடுமனையில் பணியாற்றுவார். தொழுவில் கன்றுகளுடன் துயில்வார். விழைபவர்கள் அவரைத் தேடிச்சென்று சொல்கேட்கலாம்” என்றான் ஒருவன். இன்னொருவன் “அவர் ஆசிரியரை விழிதொட்டுப் பேசுவதே இல்லை. மையக்குடில் பக்கமாகவே செல்வதில்லை” என்றான். “உண்மையில் இங்கு வேதமுழுதறிந்தவர் இவரே என்கிறார்கள். ஆசிரியர் தன் மைந்தரென்பதனால்தான் சாந்தீபனி குருநிலைக்கு அவரை ஆசிரியராக ஆக்கினார்” என்றான்.
அவ்விழிகளை தருமன் மாறிமாறி நோக்கினார். மீறலை விழையும் இளம் நெஞ்சங்கள். கற்பிக்கப்பட்டவை அனைத்தும் பிழையென்றும் தங்கள் நுண்ணறிவால் அதற்கப்பால் சென்று கற்கப்போவதாகவும் எண்ணிக்கொள்வதில் கிளர்ச்சி அடைபவர்கள். தாங்கள் அறியாத ஏதோ ஒன்று தங்களைச் சூழ்ந்துள்ளதாகவும் எச்சரிக்கையுடனும் கூர்மதியுடனும் அவற்றைக் கடந்துசென்று நோக்கும் திறன் தங்களுக்கு மட்டுமே உள்ளதாகவும் கற்பனை செய்துகொள்பவர்கள். தருமன் புன்னகையுடன் “ஆனால் அவர் ஆசிரியருக்குரிய நிகர்நிலை கொண்டவராகத் தெரியவில்லையே?” என்றார்.
இளமாணவன் ஒருவன் கிளர்ந்து முன்வந்து “அவர் இங்கு சொன்னவையே உண்மை. இளைய யாதவர் ஒரு சிற்றரசன். சூதர்பாடல்களின் வழியாக அவர் தன்னை ஒரு கதையாக மாற்றிக்கொண்டிருக்கிறார். தவளை நுரைகிளப்புவதுபோல. அக்கதைகள் அவரை தகுதிகொண்டவராக ஆக்குவதில்லை” என்று கூவினான். இன்னொருவன் “எவரும் உருவாக்கலாம் வேதத்தை. எவர் ஏற்பார்கள்? இவர் செய்யும் தத்துவ சமன்வயத்தை யாதவர்களின் குலங்களனைத்தும்கூட ஏற்கப்போவதில்லை. ஷத்ரிய குலங்களுக்கு இவர் எளிய ஆமருவி மட்டுமே” என்றான். “தன் ஆசிரியரின் பழிசுமந்த ஒருவரால் பயனுள்ள எதை சொல்லிவிடமுடியும்?” என்றான் வேறொருவன்.
தருமன் அவர்களை நோக்கிக்கொண்டு நின்றார். அவர்கள் ஒற்றைக்குரலில் கூவத்தொடங்கினர். இளமைந்தரானதனால் அவர்களின் உணர்வுகள் அவர்களின் குரலை அவர்கள் கேட்கும்தோறும் பெருகின. “ஒருபோதும் அவர் சாந்தீபனி குருநிலையின் பெயரை பயன்படுத்தலாகாது” என்று ஒருவன் சொன்னான். “அவர் சால்வருடன் களத்தில் தோற்றவர். வங்கரையும் கலிங்கரையும் எப்படி அவரால் எதிர்கொள்ளமுடியும்?” என்றான் இன்னொருவன். “தலையில் அடிபட்ட பாம்பின் இறுதிப்படம். இறுதிச்சீறல்” என்று மற்றொருவன் கூச்சலிட்டான்.
அவர்கள் அத்தனைபேரும் இளைய யாதவராக மாறி தங்களுக்குள் நூறாயிரம் முறை நடித்தவர்கள் என தருமன் எண்ணிக்கொண்டார். அப்படி நடிக்காத இளையோர் எவரும் பாரதவர்ஷத்தில் இன்றிருக்க வழியில்லை. அந்நடிப்பின் உச்சியில் அவர்கள் ஒவ்வொரு முறையும் அறியும் உண்மை ஒன்றுண்டு, அவர்கள் அவர் அல்ல. வீடுதுறந்து காடேகி குருநிலைகள்தோறும் சென்று வேதச்சொல் கற்றுத்தேர்ந்தாலும் அவர்கள் சென்றடையும் இடம் ஒன்றுண்டு. அதற்கப்பாலொரு பீடத்தில் அவர் அமர்ந்திருக்கிறார். அது அவர் வருவதற்கு முன்னரே அவருக்காக போடப்பட்ட பீடம். வந்ததுமே அவ்வண்ணம் இயல்பாக தன் பீடத்திலமர்பவனே அதற்குரியவன். படிப்படியாக ஏறிச்சென்று அடைவதென ஏதுமில்லை இங்கு.
வேறுவழியே இல்லை. வாழ்நாளெல்லாம் நீங்கள் அவரை ஊடியும் நாடியும் ஆடிக்கொண்டிருக்கவேண்டியதுதான் என தருமன் எண்ணிக்கொண்டார். அவ்வெண்ணம் ஒரு புன்னகையாக விரிய அவர்கள் குழப்பத்துடன் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டார்கள்.
[ 10 ]
நகுலன் அருகே வந்து வணங்கி “அவர்கள் காட்டை கடந்துவிட்டனர். இன்னும் அரைநாழிகைக்குள் நுழைவார்கள்” என்றான். தருமன் “அர்ஜுனன் எங்கே?” என்றார். “அவர் தங்களிடம் செய்தியைச் சொன்னதுமே கிளம்பி தன் தோழரை எதிர்கொள்ளச் சென்றுவிட்டார். இந்நேரம் அவர்கள் தோள்தழுவியிருப்பார்கள். அவர்களுக்கு இடையே எப்போதும் சொல்லப்படாத ஏதும் இருப்பதில்லை.” தருமன் “அப்படி ஒரு மானுட உறவு நிகழமுடியுமா, இளையோனே?” என்றார். நகுலன் “மானுட உறவுகள் தூயவை என்றுதான் காவியங்கள் சொல்கின்றன” என்றான். “ஆம், காவியங்கள் மானுடரை தேவர்களாக்க விழைபவை” என்றார் தருமன்.
சகதேவன் உள்ளே வந்து “மூத்தவரே, அனைவரும் முகப்புக்குச் செல்கிறார்கள்” என்றான். “அரசி?” என அவனைப் பார்க்காமல் கேட்டார் தருமன். “அவளுக்கு நானே சென்று செய்தி சொன்னேன். முறைமைப்படி அவள் முகப்புக்குச் சென்று வரவேற்க வேண்டியதில்லை. வரவேற்புச்சடங்குகள் முடிந்தபின்னர் இளைய யாதவரே வந்து அவளைப் பார்க்கவேண்டும். அதற்கு அவள் குடிலில் இடமில்லை. ஆகவே தென்கிழக்கு மூலையில் நின்றிருக்கும் அரசமரத்தடி மேடையில் சந்திக்கும்படி சொல்லலாமா என்று கேட்டேன். அவ்வண்ணமே என்றாள். அதை இளைய யாதவரிடம் முறைப்படி நானே தெரிவிக்கலாமென எண்ணுகிறேன்.”
“நான் நேற்றிரவும் அவள் குடிலைச்சுற்றி நடந்துகொண்டிருந்தேன். கருக்கிருட்டு வரை” என்றார் தருமன். “மூத்தவரே…” என்ற நகுலன் “இங்கு இரவில் நாகங்கள் அலைவதுண்டு. புலிகளும் நுழைவதுண்டு என்கிறார்கள்” என்றான். தருமன் “அதை நான் எண்ணவில்லை அப்போது” என்றார். “சில தருணங்களிலாவது ஏதேனும் நிகழ்ந்து இறந்தாலும் நன்றே என்று தோன்றும், அதைப்போன்ற கணம் அது. நான் நேற்று இறப்பை அவ்வளவு விரும்பினேன். அதிலிருந்து என்னை மீட்டது ஓர் எளிய நினைவு. சூக்தன் எனும் அக்குரங்குக்குட்டி. அதை உளம்கனிந்து எண்ணிக்கொண்டபோது உறவுகளின் இனிமைக்குள் மீண்டும் அமிழ்ந்தேன். அதில்தான் நான் சுருண்டு துயில முடிகிறது.”
அவர்கள் பேசாமல் நின்றனர். “இளையோனே, நேற்று என்னை அலைக்கழித்த எண்ணம் இதுதான். மீளமீள ஒரே வினாதான். அரசியிடம் நான் கொண்ட அணுக்கம்போல இப்புவியில் எனக்கு பிறிதொன்று அமைந்ததில்லை. என் இளையோராகிய நீங்கள் என் உடல். நான் உங்கள் தந்தைநிலை கொண்டவன் என்பதனாலேயே நான் உங்களுக்கு அணுக்கமானவன் அல்ல. அவளிடம்தான் நான் அனைத்து வாயில்களையும் திறந்தேன். இளையோனே, அவள் எனக்குள் சென்ற தொலைவுக்கு தெய்வங்களும் சென்றதில்லை. அவளிருக்கும்வரை நான் மந்தணங்கள் அற்றவன் என எண்ணியிருந்தேன். அவள் முன் மட்டுமே அந்த விடுதலையில் திளைத்தேன்” என்றார் தருமன். “இளையோனே, ஒருநூலின் வரியை இருவரும் ஒரேகண்ணால் கண்டடையும் தருணத்தின் பேருவகை. ஒரே எண்ணத்தை இருவரும் ஒரேசமயம் அடைவதன் பெருவியப்பு. அறிவென உணர்பவன் தன்னை அனைத்திலிருந்தும் பிறிதென ஆக்கிக்கொள்பவன். மீதமின்றி பகிர பிறிதொரு அறிவைக் கண்டடைவான் என்றால் அவன் தேவர்களுக்குரிய இன்பத்தை அடைகிறான்.”
“அப்படி இருந்தேன். எத்தனை பகலிரவுகள். எத்தனை ஆயிரம் சொற்கள். மகத்தான தருணங்கள்…” என அவர் சொன்னபோது குரல் இடறியது. “நிகழ்ந்தது இழிவின் எல்லை. அங்கு நான் நின்றிருந்த இடம் சிறுமையின் உச்சம். ஒன்றையும் மறுக்கவில்லை. ஆனால் அது அவையனைத்தையும் இல்லையென்று ஆக்கிவிடுமா? ஒரே கணத்தில் நான் அவளுக்கு யாருமில்லை என்றாகிவிடுவேனா? எண்ணி எண்ணி நோக்கினாலும் என்னால் சென்றடைய முடியவில்லை. அதெப்படி அதெப்படி என்றே என் உள்ளம் மருகிக்கொண்டிருக்கிறது. இனி அவையெல்லாம் வெறும் நினைவே என்றால் நான் வாழ்ந்திருந்த ஓர் உலகமே கனவென்றாகிறது.”
அவர்கள் ஏதேனும் சொல்வார்கள் என அவர் எண்ணினார். அவர்கள் பேசாமல நிற்பதைக் கண்டு “இளையோனே, நீ அனைத்தையும் அறிந்து அமைந்தவன். நீ சொல். இது ஒரு சிறிய இடைவெளிதானே? என்றோ ஒருநாள் இதை எண்ணி இப்படியும் இருந்தோமா என்று நாம் வியக்கப்போகிறோம்தானே? இன்று நான் இழந்து நிற்கும் அனைத்தையும் பிழையீடு செய்து மீண்டும் எய்தமுடியும் அல்லவா?” என்றார். சகதேவன் பேசாமல் நின்றான். “சொல்” என்றார் தருமன். “இல்லை மூத்தவரே, அது முடிந்துவிட்டது. இனி அது எவ்வகையிலும் மீளாது” என்று அவன் சொன்னான். “அந்நினைவுகளும் மெல்ல அழியும். அவ்வுணர்வுகள் அனலவிந்து மறையும். அதை வேண்டுமென்றால் இத்தருணத்திற்கான ஆறுதலாகக் கொள்ளலாம்.”
விழித்து தருமன் அவனைப் பார்த்திருந்தார். “ஆண்பெண் உறவின் இயல்பே அதுதான், மூத்தவரே. எத்தகைய மேன்மைகொண்டது என்றாலும் அது கனவென்றே அழிந்து மறையும். இவ்வுலகில் எளிதில் மறையாதது குருதியுறவு மட்டுமே. அதுவும் குருதியால் அழிக்கப்படக்கூடும். மானுடர் கொள்ளும் எவ்வுறவிலும் இறுதிச்சொல் என ஒன்று சொல்லப்படாது எஞ்சும். நஞ்சென்று எங்கோ கரந்திருக்கும்.” தருமன் நோக்கிக்கொண்டே இருந்தார். பின்னர் ஆமென தலையசைத்து மீண்டார். பெருமூச்சுடன் “ஒன்றும் எஞ்சாதா, இளையோனே? அத்தனை பழிகொண்டவரா மானுடர்?” என்றார். சகதேவன் மறுமொழி சொல்லவில்லை. “சொல்” என்றார் தருமன். அவன் சிலகணங்கள் நின்றபின் திரும்பி நடந்து சென்றான்.
அவனையே நோக்கிக்கொண்டிருந்தபின் கையூன்றி எழுந்த தருமன் கால்கள் நிலைகொள்ளும்வரை தூணைப் பற்றிக்கொண்டு நின்றார். பின்னர் நகுலனிடம் “நேற்று எண்ணினேன், அவள் குடிலின் கதவைத் தட்டி அவள் முன் நின்று எச்சமின்றி என்னுள் உள்ள அனைத்தையும் இழுத்து வெளியே போட்டாலென்ன என்று. அவளுக்கு என் விழிநீர் புரியும் என்று தோன்றியது” என்றார். “அதை நீங்கள் ஏன் செய்யவில்லை?” என்றான் அவன். “அதை அவள் மறுதலித்தாள் என்றால் அங்கே நான் இறந்தாகவேண்டும்” என்றார் தருமன். “அல்லது அங்கு அவளை நான் கொன்றாகவேண்டும்…”
“ஆம், அதனால்தான் மானுடர் அந்த எல்லைவரை செல்வதில்லை” என்றான் நகுலன். “மூத்தவரே, ஆனால் அது நீங்கள் எண்ணுவதுபோல எளிதும் அல்ல. அவள்முன் சென்று நிற்பதை அதைச் செய்வதற்கு முன்னரே நீங்கள் பலமுறை நடித்துவிடுவீர்கள். ஒவ்வொரு முறையும் அது வளர்ந்து உருமாறும். அங்கே நீங்கள் நிற்கையில் நீங்கள் விழைந்த ஒன்றை நடிக்க முயல்வீர்கள். விரும்பாததையும் சேர்த்து நடிப்பீர்கள். உங்களை நீங்களே விலகி நின்று வியந்து நோக்கிக்கொண்டிருப்பீர்கள்.”
“அது பொய்யென்று நீங்கள் அறிவீர்கள். ஆகவே நீங்கள் அந்தத் தருணத்திற்காக நாணுறுவீர்கள். அன்று அப்படி அங்கு நின்ற உங்களை நீங்களே வெறுப்பீர்கள். அப்படி தன்னைத்தானே வெறுக்கும் ஓர் உச்சத்தருணமாவது வாழ்க்கையில் நிகழாத மானுடர் எவருமிருக்கமாட்டார்கள்” என்று நகுலன் சொன்னான். “மூத்தவரே, உச்சத்தருணங்களில் வாழ்வது மிகமிகக் கடினம். மாபெரும் யோகியரே அங்கு இயல்பாக இருக்கமுடியும். அல்லது அறிவிலா மூடர். பிறர் அங்கே நடிக்கமட்டுமே முடியும்.”
அவன் புன்னகைத்து “ஆகவே மாவீரனாகவோ மாபெரும் தொன்மமாகவோ ஆகாது எளிய தருணங்களினூடாகவே வாழ்ந்து முடிபவன் மகிழ்வுடன் இருக்கிறான். தன்னைத்தானே வெறுக்கவும் ஏளனம் செய்யவும் நேர்வதில்லை அவனுக்கு” என்றபின் தலைவணங்கி “தங்களுக்காகக் காத்திருக்கிறார்கள் அங்கே” என்றான்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 28
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 25
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 22
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 71
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 45
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 3
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 91
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 87
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 86
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 40
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 34
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 27
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 24
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 23
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 18
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 17
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 16
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 14
August 27, 2016
ஆத்மாநாம் பதிப்புச்சர்ச்சை
மை டியர் ஜெமோ,
நலம்தானே நண்பரே?
காலச்சுவடு 200-ஆவது சிறப்பிதழில் ‘ஆத்மாநாம் முழுத்தொகுப்பு’ சார்ந்து ‘சூனியத்தில் வெடித்த முற்றுப்புள்ளி’ என்ற கட்டுரை வெளிவந்துள்ளது.
பிரம்மராஜன் தொகுத்த ஆத்மாநாம் கவிதைகளில் சில ஐயங்களைக் கட்டுரையாளர் கல்யாணராமன் எழுப்பி இருக்கிறார்.
http://www.kalachuvadu.com/current/issue-200/சூனியத்தில்-வெடித்த-முற்றுப்புள்ளி
இதுசார்ந்து முகநூலில் பகிர்ந்தபோது கே.என். சிவராமன் மாற்றுக் கருத்தை முன்வைத்தார்.
காலச்சுவடு பிரம்மராஜனை அழிக்க நினைக்கிறதா? / தாக்க நினைக்கிறதா? என்ற விவாதத்தை முன்னெடுத்தார். ஆத்மாநாம் கவிதை இரண்டாம் பட்சமாகி, #isupportbrammarajan என்ற முழக்கம் நண்பர்களிடம் கிளம்பியது.
தமிழ் இலக்கியப் போக்கில் ஒரு பாய்ச்சலை நிகழ்த்தியவர் பிரம்மராஜன், அவரது பங்களிப்பைத் தெரிந்துகொள்ளாமல் பேசாதீர்கள் என்றும், பிரம்மராஜனின் பெயருக்குக் கலங்கம் கற்பிக்காதீர்கள் என்றும் ஒருசேரக் குரல் எழுப்பினார்கள்.
இடையில் ‘காலச்சுவடு அரசியல்’ செய்கிறது என சிவராமன் குரலெழுப்ப, இதெல்லாம் ‘காலச்சுவடு வெறுப்பரசியல்’ என நான் குரலெழுப்ப விஷயம் ஆத்மாநாம் கவிதை சர்ச்சையிலிருந்து விலகி வேறெங்கோ சென்றுவிட்டது.
அப்படிச் செல்லக் காரணம்…
இணையத்தில் பிரம்மராஜனைப் பற்றித் தேடியதில் – ஜேமோ இணையப் பக்கத்தில் – ‘நிழல் நாடுவதில்லை நெடுமரம்’ என்ற பதிவை வாசித்தேன். அதை முகநூலில் பகிர்ந்தேன். அதற்கு மேல் சொல்ல வேண்டுமா?
இலக்கிய கர்த்தாக்களின் சாதியை நான் தோண்டிப் பார்ப்பதாகக் குறைபட்டுக் கொண்டார்கள். சுபமங்களாவில் பிரம்மராஜன் கவித்துவம் பற்றி நீங்கள் கிண்டலடித்ததை இப்பொழுதும் எனது நண்பரொருவர்களில் ஒருசிலர் கண்களில் குரோதம் பொங்கப் பகிர்வார்கள். ஜெமோ அப்படிச் சொல்லியிருக்கக் கூடாது என்பார்கள்.
பிரம்மராஜனை நான் அதிகம் படித்ததில்லை எனினும் படைப்பாளியாக, இலக்கிய ஆர்வலர்ராக அவரை மதிக்கிறேன்.
வன்னிய இலக்கியப் பாசரையில் இலக்கியவாதிகளுக்கு என்ன வேலை? ஜெமோ இப்படி எழுதியிருக்கிறாராரே என்றுதான் பகிர்ந்தேன். தமிழ்ச் சூழலே பொங்கி எழுகிறது. இதுவரை மெளனம் காத்த பிரம்மராஜனே கூட ‘நான் வன்னிய குல ஷத்ரியந்தான். அதனால் யாருக்கென்ன?’ என்று முகநூலில் எழுதினார்.
என்னுடைய எதிர்பார்ப்பு ஒன்றுதான். ஆத்மாநாம் கவிதையில் வார்த்தைகள் மாறி இருப்பதற்கு பிரம்மராஜனின் பதில் என்ன என்பதுதான்.
ஆனால், 2008-ல் அப்படி ஒன்றும் பெரிதாக நடக்கவில்லை, ஜெமோ எழுதியது எப்பொழுதும் போலப் புறந்தள்ள வேண்டியது என்கிறார்கள்.
வைக்கம் போராட்டத்தில் கலந்துகொள்ள பெரியார் வந்தார், பங்கெடுத்தார், சென்றார் என்று நீங்கள் சொல்லுவது போல, ராமதாஸ் உருவாக்க நினைத்த இலக்கிய பாசரைக்கு பிரம்மராஜன் வந்தார், இருந்தார், சென்றார் (12 மணி நேரம் கூட அங்கு இல்லை) என்கிறார்கள்.
உங்களுடைய பதிவில் பிரம்மராஜன் துணைத் தலைவராகக் கலந்துகொண்டார் என்று இருக்கிறது. எனக்கு ஒரே குழப்பமாக இருக்கிறது.
விளக்கம் தர முடியுமா?
கிருஷ்ணப்பிரபு
அன்புள்ள கிருஷ்னப்பிரபு,
சரிதான் மறுபடி ஒரு ஃபேஸ்புக் கும்மி.
இந்தவிஷயத்தை ஃபேஸ்புக்கில் விவாதிக்கும்போதுள்ள சிக்கல் என்னவென்றால் நீங்கள் அனுப்பிய ஸ்கிரீன் ஷாட்களில் உள்ளதுபோல சம்பந்தமில்லா சத்ரியர்கள் எல்லாம் கிளம்பிவந்து கருத்துச்சொல்ல ஆரம்பிப்பார்கள் என்பதே
மறைந்த ஆசிரியர்களைப் பதிப்பிப்பது, பிரதிசெம்மையாக்குவது போன்றவை தொடர்ச்சியாக நிகழவேண்டிய பண்பாட்டுப்பணிகள். பாரதி முதல் அனைவருக்கும் அது நிகழட்டும் . அதிலுள்ள பண்பாட்டுச் சிக்கல்கள், நடைமுறைப்பிரச்சினைகள், மொழிச்சிக்கல்கள் ஆகியவை அனைத்தும் பேசப்படவேண்டியவை. ஆனால் இப்படி அக்கப்போராக அல்ல
அக்கப்போரை தொடங்கிவைத்திருப்பது காலச்சுவடு கட்டுரைதான். அதிலுள்ள சிக்கல்களை இவ்வாறு சொல்வேன். அறியாத ஒரு புதுவாசகருக்கு ஏட்டைக்கெடுத்தவரே பிரம்மராஜன்தான் என்னும் சித்திரம் வரும்படி அது எழுதப்பட்டுள்ளது. இது எவ்வகையிலும் ஆரோக்கியமான மனநிலை அல்ல.
சிற்றிதழ்ச்சூழலில் கவிஞர்களின் படைப்புக்கள் சீந்துவாரின்றிக் கிடந்த காலம் – இப்போதும் பெரிய மாற்றம் இல்லைதான், ஆனால் இணையம் இருக்கிறது- ஒன்றிருந்தது. அன்று தனிப்பட்ட ஈடுபாட்டால் படைப்பாளிகளைத் தேடித்தொகுத்து நூலாக்கி நிலைநாட்டியவர்கள் சிலர் உண்டு. மௌனிக்கு கி.ஆ.சச்சிதானந்தம், பிரமிளுக்கு கால சுப்ரமணியம் போல. அவர்களின் பங்களிப்பை மறுத்தோ மறைத்தோ புதிதாகக் கிளம்பிவந்தவர்கள் பேச ஆரம்பிப்பது ஒரு பண்பாட்டியக்கத்தை சிறுமைசெய்வது
பிரம்மராஜன்
ஆத்மாநாம் அவரது மறைவுக்குப்பின் பிரம்மராஜனால்தான் நினைவில் நிறுத்தப்பட்டார். நான் அவரை பிரம்மராஜன் வழியாகவே அறிந்தேன். தமிழ்ச்சூழலில் பிரம்மராஜன் பதிப்பித்த ஆத்மாநாம் கவிதைகளின் பெருந்தொகைதான் ஆத்மாநாமின் இடத்தை நிலைநாட்டியது. ஒன்று, அன்றையசூழலில் அந்நூலின் அழகிய அமைப்பு. இன்னொன்று, அன்றைய சூழலில் அந்நூலின் அளவு. பிரம்மராஜன் தன் நண்பருக்காகச் சொந்தச்செலவில் செய்த முயற்சி அது.
காலச்சுவடு கட்டுரையாளர் இதைப்பற்றி எழுதி, ஆத்மாநாமின் வாசகர் என்னும் நிலையில் பிரம்மராஜனின் பங்களிப்புக்கு ஒரு வணக்கத்தைச் சொல்லிவிட்டு மேலே எழுதியிருந்தால் அது பதிப்புலக நாகரீகம். முப்பதாண்டுக்காலமாக பிரமிளை நிலைநிறுத்திவருபவர் கால சுப்ரமணியம். நாளை ஒரு தொழில்முறை தொகுப்பாளர் கால சுப்ரமணியத்தின் தொகுப்புமுறையில் பிழைகாணலாம். கால சுப்ரமணியம் பிரமிளுக்கு துரோகமிழைத்ததாக ஒரு அவர் போகிறபோக்கில் ஒரு கட்டுரையை எழுதினால் ஏற்கமுடியுமா என்ன?
கல்யாணராமனின் அந்தக்கட்டுரையை ஒரு நல்ல செம்பதிப்பின் ஆய்வுப்பின்னுரையாக அமைத்திருக்கவேண்டும். ஒரு வம்புக்கட்டுரையாக தனியாகப் பிரசுரிக்கையிலெயே இச்சிக்கல்கள் எழுகின்றன. ஏனென்றால் இவற்றையெல்லாம் முழுமையாக வாசிப்பவர்கள் குறைவு. வம்பை மட்டும் வாசிப்பவர்கள் ‘பிரம்மராஜன் ஆத்மாநாமை தப்பா அச்சடிச்சிட்டாராமே என்ன கொடுமை!’ என்று சூள்கொண்ட்டிக்கொண்டு செல்ல வாய்ப்பிருக்கிறது
இதுதான் பிரச்சினை. இதை முன்வைக்கையில் வழக்கமான காலச்சுவடு வெறுப்பாளர்களும் வந்துகலந்துகொள்கிறார்கள்.அவர்களின் அஜெண்டா வேறு, காலச்சுவடு ஒரு பிராமணர்குடும்பம் நடத்தும் இதழ் என்பதற்குமேல் அதை வாசிக்கவேண்டிய அவசியமே கூட அவர்களுக்கு இல்லை. இந்தக்கும்பல்தான் நீங்கள் சொன்னது போல இலக்கியவிமர்சனத்தை ‘குரோதம்பொங்க’ எடுத்துக்கொள்பவர்கள்.இவர்களுடன் இலக்கியவாசகனோ எழுத்தாளனோ பேச ஏதுமில்லை
*
கி ஆ சச்சிதானந்தம்
அத்துடன் ஒன்று, போகிறபோக்கில் சாதகமான வரலாறுகளை ‘உருவாக்குவதும்’ காலச்சுவடு கட்டுரையின் உள்ளடக்கமாக உள்ளது. ‘நல்லவேளையாக’ புதுமைப்பித்தனுக்கு ஆ.இரா.வெங்கடாசலபதி வந்தார், இல்லையேல் இழந்துவிட்டிருப்போம் என்னும் வரி இன்றைய தலைமுறைக்கு ஒரு போலிவரலாற்றைச் சொல்கிறது. புதுமைப்பித்தன் படைப்புகளைத் தேடித்தொகுக்கும் பெரும்பணியை குறைவான வசதிகளுடன் பத்தாண்டுகளுக்கும் மேலாகச் செய்தவர் எம்.வேதசகாயகுமார். அவருடைய ஆய்வின் தொடர்ச்சியே ஆ.இரா.வெங்கடாசலபதி செய்தது.
வேதசகாயகுமாரின் முனைவர் பட்ட ஆய்வேடு சுந்தர ராமசாமியின் இல்லத்திலேயே பல்லாண்டுக்காலம் கிடந்தது. அதில் இருந்த பின்னிணைப்பில் புதுமைப்பித்தன் கதைகளின் கிட்டத்தட்ட முழுமையான பட்டியல் இருந்தது. அதை நான் பலமுறை பார்த்திருக்கிறேன். புதுமைப்பித்தன் பல்வேறு பெயர்களில் எழுதிய கதைகளைத் தேடி எடுத்ததில், அவை அவரால் எழுதப்பட்டவை என உறுதிசெய்ததில் வேதசகாயகுமாரின் பங்களிப்பு முக்கியமானது. நேரடியாகவே பி.எஸ்.ராமையா போன்றவர்களுடன் உரையாடி தகவல்களை சேர்க்கும் வாய்ப்பும் வேதசகாயகுமாருக்கு அமைந்தது.
காலச்சுவடு செம்பதிப்புக்கு ஆ.இரா.வெங்கடாச்சலபதியை ஆசிரியராக்கியபோது அதற்கு ஒத்துழைக்க வேதசகாயகுமார் மறுத்ததாகக் கூறப்படுகிறது. வேதசகாயகுமாரின் ஆய்வுப்பட்டியலில் இருந்து மேலும் முன்சென்று ,மேலும் துல்லியப்படுத்தி, இன்னமும் முறைமைசார்ந்து ஆய்வுசெய்து உருவாக்கப்பட்டதே ஆ.இரா.வெங்கடாச்சலபதியின் ஆய்வுப்பதிப்பு. கண்டிப்பாக அது ஒரு பெரும்பங்களிப்பே. ஆனால் அது சூனியத்தில் நிகழவில்லை. முன்னோடி ஆய்வாளர்களை மட்டம்தட்டிவிட்டோ கண்டுகொள்லாமலோ ஆய்வுகளைச்செய்யும் முறைமை மிகப்பிழையானது.
வேதசகாயகுமாரின் பட்டியலை தான் பார்க்கவில்லை, ஆகவே ஆய்வை தானே ‘ஒரிஜினலாக’ செய்தேன், ஆகவே அவரை குறிப்பிடவேண்டியதில்லை என்று ஆ.இரா.வெங்கடாச்சலபதி சொன்னார். அப்படி இருந்தால்கூட வேதசகாயகுமாரின் ஆய்வு இல்லாமலாவதில்லை. எந்த ஆய்வாளனும் அதற்கு முன்னிருந்த ஆய்வாளர்களை முழுக்க வாசித்துவிட்டு மேலே செல்லவேண்டும் என்பதே நெறி. முந்தைய ஆய்வாளர்களின் பிழைகளை சுட்டிக்காட்டுவதும், மட்டம்தட்டி எழுதுவதும் ஆய்வுமனநிலையே அல்ல. முந்தையது முழுமையானதல்ல என்பதனால்தான் அடுத்த பதிப்பு தேவையாகிறது. தொடர்ச்சியான பிழைமேம்படுத்தல் வழியாகவே ஆய்வுகள் முன்னகர்கின்றன.
காலச்சுவடு கட்டுரையில் உள்ள இந்த மனநிலையே சிற்றிதழ்சார்ந்தவர்களைச் சினம்கொள்ளச் செய்கிறது. மற்றபடி ஆத்மாநாம் கவிதைகளுக்கு ஆதாரபூர்வமான பிழைதிருத்தங்களுடன் ஒரு நல்ல பதிப்பை கல்யாணராமன் கொண்டுவருவார் என்றால் அது ஓர் அரும்பணி. அவருக்குத் தமிழ் வாசகனாகக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் நாளை ஆத்மாநாம் கவிதைகளின் பதிப்பு பற்றிப் பேசும்போது அவரை ஆத்மாநாமின் ரட்சகன் என்று எவரேனும் சொன்னார் என்றால் இல்லை அவர் பிரம்மராஜனின் தொடர்ச்சியாக வந்தவர், ஆத்மாநாம் பதிப்பை மேம்படுத்திப் பிரசுரித்தவர் என்றுதான் சொல்வேன்.
*
கால சுப்ரமணியம்
நான் பிரம்மராஜன் கவிதைகளைப்பற்றிச் சொன்ன விமர்சனம் விரிவாகவே எழுதப்பட்டிருக்கிறது. தமிழில் அது புதிய கருத்தும் அல்ல, பிரமிள் முதல் முதன்மையான கவிதை விமர்சகர்கள் பலர் சொன்னதுதான். அது இப்பிரச்சினையுடன் சம்பந்தப்பட்டது அல்ல
நிழல்நாடுவதில்லை நெடுமரம் கட்டுரையும் இப்பிரச்சினையுடன் இணைந்தது அல்ல. நான் என் தம்பியான கண்மணி குணசேகரனுக்கு எழுதியது. அவருக்கு என் அறிவுறுத்தல் அது. அதையே முன்னர் நாஞ்சில்நாடனுக்கும் சொல்லியிருந்தேன். சுயசாதி அமைப்புகளில் பங்கெடுப்பதென்பது எழுத்தாளனின் ஆன்மாவைக் கறைபடியச்செய்கிறது என்பது என் எண்ணம். ஆனால் கண்மணி அதை பொருட்படுத்தவில்லை. அது அவரது சொந்த விஷயம் என நானும் விட்டுவிட்டேன்.
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
இலக்கியத்தில் இன்று …
சீன ஞானமரபின் சிறப்பான பங்களிப்பாகக் கருதப்படுவது யின் – யாங் என்ற அவர்களின் இயங்கியல் கருதுகோள். அதை எளிதில் விளக்கமுடியாது. ஒன்றை ஒன்று நிரப்பக்கூடிய ஒன்றை ஒன்றுசெயல்படச்செய்யக்கூடிய ஒன்றை ஒன்று விளக்கக்கூடிய இரு எதிரீடுகள் என்று சொல்லலாம். இரவுபகல் போல. ஆண்பெண் போல. மின்சாரத்தில் நேர் எதிர் போல.
எல்லாவற்றுக்கும் சீனர்கள் அதைபயன்படுத்துகிறார்கள். அதாவது நன்மை உள்ளுறையாத தீமையோ தீமை உள்ளுறையாத நன்மையோ இல்லை. வீழ்ச்சி இல்லாத எழுச்சி இல்லை. அறம் இல்லாத மறம் இல்லை. அழகு இல்லாத அசிங்கம் இல்லை. இருட்டுக்குள் ஒளியும் ஒளிக்குள் இருட்டும் உண்டு.
மானுட உணர்ச்சிகளுக்குக் கூட சீனர்கள் அதைப் போட்டுப்பார்ப்பதுண்டு. உணர்ச்சி உச்சங்கள் அனைத்தும் நேர் எதிரான உணர்ச்சிகளாலும் சமன்செய்யப்பட்டவை. ஒன்றைநாம் பார்க்கும்போது பிறிதொன்று மறைந்து விடுகிறது. பெருங்கருணைக்குள் கொடுமையும் கொடுமைக்குள் கருணையும் இருந்தாகவேண்டும்.
சமீபத்தில் சு.வேணுகோபால் எழுதிய வெண்ணிலை என்ற தொகுதியில் வரும் தொப்புள்கொடி என்ற கதையை வாசித்தபோது இதையே எண்ணிக்கொண்டேன். அது கார்த்திகா என்ற பெண்ணின் கதை. அவள் அம்மா பெயர் தவமணி. சாதாரண விவசாயக்குடும்பம். திடமான உழைக்கும்பெண் கார்த்திகா. ஒருமுறை நெல்லறுவடைக்காக குத்தகைதாரருடன் ஒரு குழுவாக பக்கத்து ஊருக்குச் செல்கிறாள். அங்கே எதையோ கண்டு பயந்திருக்கலாம். மனம் கலங்கிவிடுகிறது
முதலில் பேசிக்கொண்டே இருக்கிறள். பேச்சு அர்த்தமில்லாமல் செல்லும்போது வேறுபாட்டைக் கவனிக்கிறார்கள். பின்பு பாட்டு. சினிமாப்பாட்டும் தாலாட்டும் ஒப்பாரியும் மாறிமாறிக் கலந்த தடையற்ற பிரவாகம். காடுமேடென கட்டில்லாமல் அலைந்த விவசாயிமகளை அடைத்துப்போட முடியவில்லை. கேலிசெய்பவர்களை காதுகூசும் கெட்டவார்த்தைகளால் வசைபாடுகிறாள். ஆழ்மனதுக்குள் உள்ள அத்தனை வக்கிரங்களும் சொல்வடிவம் கொண்டு பீரிடுகின்றன
வேலைகள் செய்வாள். கொடுத்தால் சாப்பிடுவாள். மெல்லமெல்ல அதுவும் இல்லாமலாகிறது. சொல்லப்படும் எதுவும் அவளுக்குள் சென்று சேர்வதில்லை. காட்டிலேயே தங்கிவிடுகிறாள். எதையாவ்து பொறுக்கி உண்பதுடன் சரி. பசிக்கையில் தன் வீட்டுக்குவந்து கழனிபபனையில் நீர் குடித்து அடியில்தங்கும் சோற்றுவண்டலை அள்ளி தின்கிறாள். தட்டில்வைத்து ஊட்ட அம்மா முன்வந்தாலும் சாப்பிடுவதில்லை. மனிதர்கள் எவரையுமே அடையாளம் காண்பதில்லை
ஒருநாள் ஊரிலே கவனிக்கிறார்கள், அவள் கர்ப்பமாக இருக்கிறாள். அம்மாவும் அப்பாவும் அண்ணனும் அவளை அடிஅடியென அடித்து துவைக்கிறார்கள். ‘என்ன பண்ணினே, யாருடி அவன், சொல்லு’ என்று துவைத்து எடுக்கிறார்கள். அவள் சொல்வதில்லை. அவளுக்கு தெரிவதே இல்லை. அடிகள் கூட வேறு எவருக்கோதான் விழுகின்றன
அவள் கரும்புக்கொல்லையில் குழந்தைபெற ஆரம்பிக்கும் இடத்தில்தான் வேணுகோபாலின் கதை தொடங்குகிறது. குருதியும் சலமும் கொட்டி நனைந்த சேலை குடல்போல பின்னால் இழுபட தாள முடியாத வலியுடன் கதறி ஊளையிட்டபடி அவள் ஊருக்குள் வருகிறாள். ஊரார் கூடி அவளை ஒரு மாட்டுத்தொழுவுக்கு இட்டுச்செல்கிறார்கள். கேலிசெய்த வாய்கள் கூட அனுதாபம் உதிர்க்கின்றன. ஊரே அவளுக்காக பிரார்த்தனைசெய்கிறது. மரணம் பிறப்பு இரண்டும் மானுடத்தின் ஆதாரப்புள்ளிகள் அல்லவா?
குழந்தை பிறக்கிறது. அழகான ஆண்குழந்தை. அதைக்கண்டு ஏனோ ஊர் கண்ணீர் வடிக்கிறது. எதுவுமே தெரியாத பித்திக்கு அந்தக்குழந்தை தன்னுடையதென மட்டும் தெரிந்துவிடுகிறது. அள்ளி மார்போடணைத்துக்கொள்கிறாள். சுரக்கும் முலைகளை அதன் வாயில் வைத்து அழுத்துகிறாள். பால்குடி பால்குடி என்று போட்டு படுத்தி எடுக்கிறாள். ’குழந்தைக்கு சப்ப தெரியவில்லைடீ..இங்கே கொடு’ என்று கேட்டு அருகே வரும் தவமணிக்கு இடுப்பைச்சேர்த்து ஓர் உதை விழுகிறது. தெறித்து விழுகிறாள் அவள்.
எவரும் கார்த்திகா அருகே நெருங்கமுடிவதில்லை. குழந்தையை மூர்க்கமாக அணைத்துக்கொண்டு கரும்புக்காட்டுக்குள் செல்கிறாள். அது அழுது அழுது நீலமாகிறது. இரவில்வந்து கழனிப்பானை வண்டலை அள்ளி குழந்தைக்கு ஊட்டுகிறாள். குழந்தை அலறி விரைத்திருக்கிறது. தவமணி தூரத்தில் நின்று கொன்னுடாதடீ என்று கதறுகிறாள்
குழந்தை மறுநாள் இறக்கிறது. இறந்துவிட்டதென்பதை அவளால் புரிந்துகொள்ள முடிவதில்லை. குழந்தையை கொஞ்சியபடி அலைகிறாள். எவரும் நெருங்கமுடிவதில்லை. மூன்றாம்நாள் குழந்தை உப்பி வெடித்து ஒழுக ஆரம்பிக்கிறது. அப்போதும் பிடியை விடுவதில்லை. வேறுவழியில்லாமல் வீட்டில் ஓர் முடிவெடுக்கிறார்கள். தவமணி அதற்குச் சம்மதிக்கிறாள். ஆனால் கடைசியில் ’வேண்டாங்க வேண்டாங்க’ என்று மனம் பொறாது கதறுகிறாள்
கழனிப்பானை நீரில் முழுப்புட்டி பாலிடாலைச் சரிக்கிறார்கள். அன்று அவர்கள் காத்திருக்கையில் அவள் வந்து அதை அள்ளி உண்கிறாள். அறைக்குள் அடைக்கப்பட்டிருக்கும் தவமணி எப்படியோ வந்து ‘என்னைபெத்த மகளே’ என்று கதறுகிறாள். வாயில் நுரைதள்ளும்போது கார்த்திகாவுக்கு ஓர் உணர்ச்சி எழுகிறது ’அம்மா’ என்று அழைக்கிறாள். இறந்துவிடுகிறாள்.
தாய்மை என்ற பெரும்பித்தின் கொடூரத்தைச் சித்தரிக்கும் கதை இது. இதன் யின் யாங் மிகச்சிக்கலானது. நுட்பமாகப் பாருங்கள். கார்த்திகா மட்டுமல்ல கொலைகாரத்தாய், தவமணியும்கூடத்தான்! பேரரருளே பெரும் கொடூரமாக எப்படி மாறுகிறது? ஒன்றுக்குள் ஒன்று உறைகிறதா என்ன?
சு.வேணுகோபால் சமகால எழுத்தாளர். என் பிரியத்திற்குரிய இளவல். என் பெருமதிப்புக்குரிய மூதாதை கி.ராஜநாராயணன் இதேபோன்றதொரு கதையை எழுதியிருக்கிறார். ‘பேதை’ 1966ல் , சு.வேணுகோபாலின் கதைக்கு சரியாக நாற்பதாண்டுகளுக்கு முன்பு, சாந்தி இதழில் அக்கதை வெளியானது.
அவள்பெயர் பேய்ச்சி. அப்பெயருக்கே உரியவள். பித்தி. பருத்தி அறுவடைக்காக ஊர்ஊராகச்செல்லும் வரண்டநிலத்து நாடோடிகளில் ஒருத்தி. இயற்கை அவளுக்கு ஓர் அருளை கொடுத்திருந்தது, ஓர் அப்சரஸுக்குரிய மார்பகங்களை’ என்கிறார். அவளுக்கு மனம் மிக மங்கல். சொன்னால்புரியும் ஆனால் சொல்லிப்புரியவைப்பது கடினம். இரவுபகல் பார்க்காத கடும் உழைப்பு. அதற்கான சிறு கூலியில் சீனிக்கிழங்கையே முக்கியமான உணவாக உண்டு வாழ்கிறார்கள் அவளும் அவள் சுற்றமும்.
உழைப்பின் உச்சியில் பிணம்போல அவள் தூங்குவாள். வேப்பமரத்தடியில் அவள் தூங்கும்போது ஓர் அழகான கனவு. ஒரு குழந்தை கதவை சற்றே திறந்து அவளைப்பார்க்கிறது, ஒளிந்துகொள்கிறது. பளபளவென அழகான குழந்தை. அவள் முகத்தில் வேப்பமரக்கிளை அசைய நிலவொளி மறைந்து மறைந்து விழுந்துகொண்டிருக்கிறது. அவள் குழந்தையை சட்டென்று பிடித்து ஆவிசேர கட்டிக்கொள்கிறாள். குழந்தை கனக்கிறது, வேப்பமரமே அவள் மேல் விழுந்துவிட்டது போல.
பேய்ச்சி கருவுறுகிறாள். ஊரே அதிர்ந்து போகிறது. அவளுடைய ஊர்க்காரர்கள் அவளை போட்டு அடித்து உதைத்து விசாரிக்கிறார்கள். அவளுக்கு தெரியவில்லை. மெல்ல வயிறு வளர்கிறது. ஊர்ப்பெண்களின் கருணை காரணமாக சோறும் கூழும் கிடைக்கிறது. வயிறு தழையத்தழைய அவள் முகத்தில் ஓர் ஒளி கூடுவது போலிருக்கிறது. அந்த வேப்பமரத்தடியில் வந்தமர்ந்து கனவுக்குள் மூழ்கும்போது அவள் முகம் இனிதாகவும் ஆகிறது
குழந்தை பிறக்கிறது. ஊர்கூடி பிரசவம் பார்க்கிறார்கள். செக்கசெவேலென ஒரு அழகான குழந்தை. குழந்தையில்லாதவர்கள் பார்த்து பெருமூச்சுடன் கண்ணீர்விடுகிறார்கள். பேய்ச்சிக்கு அபாரமான தாய்ப்பால். ஒரு முலையில் குழந்தை பருகும்போது குருதிகொட்டும் காயம்போல மறுமுலை சொரிந்து துணியை நனைக்கிறது. எப்போதும் அவளிடம் ஒரு தாய்ப்பால்கெச்சை அடிக்கும்
குழந்தை திண்திண்ணென வளர்கிறது. குழந்தையுடன் அவள் வேலைகள் செய்தாள். ஒருவரும் அதை தொட அனுமதிப்பதில்லை. எந்நேரமும் அது அவள் உடலுடன் இருந்தது. அதனுடன் மட்டுமே அவள் பேசினாள். அதனிடம் மட்டுமே சிரித்தாள். ஒருநாள் டிப்தீரியா கண்டு அது இறந்து போகிறது. அது இறந்தது அவள் உள் சென்றுசேரவில்லை. அவள் எப்போதும்போல குழந்தையுடன் இருந்தாள், சிரித்து பேசி பாலூட்டி
குழந்தையை பிரிக்க முயல்கிறார்கள். அவள் காட்டுக்குள் தப்பி ஓடுகிறார்கள். பன்றி பிடிக்கும் ஆட்களை வரவழைத்து சுற்றிவளைத்து மூன்றாம்நாள் குழந்தையை பிடுங்கும்போது அது மட்க ஆரம்பித்திருந்தது. அதை சுடுகாட்டில் அடக்கம்செய்தபின் அவளை கைகால் கட்டி அவளது ஊருக்கே கொண்டுசென்றுவிடுகிறார்கள்.
ஆனால் தன் வீட்டின் கூரையைப் பிய்த்துக்கொண்டு அவள் வெளிவந்து ஓடியே இடைச்செவல் வருகிறாள். கோயில்பட்டிக்குச் செல்லும் சாலையில் விளக்குகள் ஆட மணியோசையுடன் செல்லும் மாட்டுவண்டிகளின் வண்டிக்காரர்கள் புதர்களை காற்று போல ஊடுருவி அவள் செல்வதைக் கண்டு அலறுகிறார்கள். அவள் சுடுகாட்டில் நுழைது பிணம் எரியும் ஒளியில் தன் மகனின் குழிமாடத்தை கண்டு வெறும் கைகளால் தோண்டி பிணத்தை எடுத்து பேரலறலுடன் மார்போடணைக்கிறாள்
பசியில் அருகே எரியும் பிணத்தை பிய்த்து தின்கிறாள். அந்த சடலத்துடன் காட்டுள் நுழைந்து ஒரு கருவேலமரத்தின் மீது அமர்ந்துகொள்கிறாள். அதன்பின் சுடுகாட்டில் பிணங்களைத் தின்றும் பாம்புகளையும் பல்லிகளையும் உண்டும் அவள் காட்டில் இருக்கிறாள். பகலில் வெளிவருவதேயில்லை. இரவில் தெரு வழியாக ஒரு தாலாட்டுப்பாட்டுடன் அவள் செல்லும்போது உக்கிரமான நாற்றம் ஊரையே மூழ்கடிக்கிறது. அந்த நாற்றம் கனவுகளுக்குள் புகுந்து அங்கே கொடூரமான நிகழ்ச்சிகளை பிறக்கச்செய்கிறது.
அவளை துரத்தவேண்டுமென ஊரார் முடிவெடுக்கிறார்கள். ஒருவழியாக பெரும் படை திரண்டு அவளிடம் இருந்த அந்த மட்கிய தோல் மூடிய எலும்புக்கூட்டை பிடுங்கி எரிக்கிறார்கள். அவளை பிடித்து கட்டி வெகுதூரம் எங்கோ கொண்டு சென்று விட்டு விடுகிறார்கள். பின்பு அவள் வரவில்லை
ஆனால் ஒருவருடம் மாதம் கழித்து அவள் திரும்பி வந்தாள். மதிய வெயிலில் முழுநிர்வாணமாக நிறைமாத வயிற்றை தூக்கியபடி அந்த கோட்டிக்காரி திண்திண் என காலெடுத்து வைத்து நான் நான் என்ற நிமிர்வுடன் அந்த ஊர்த்தெருவழியாக நடந்துசென்றுகொண்டிருந்தாள்
கி.ராஜநாராயணனின் கதை வேறு ஒருதளத்தில் உள்ளது. ஓர் உக்கிரமான நாட்டார்கதையின் சாயல் இதில் உள்ளது. ’பொன்னிறத்தாள் அம்மன்’ கதை போல ஒரு பயங்கரக்கதை. அனைத்துவகையான குறியீட்டு நுட்பங்களும் உள்ள ஆக்கம் இது. அவள் பெயர் பேய்ச்சி. பித்தனின் பேயனின் துணைவி. அவள் முலைகளும் பாலும் வர்ணிக்கப்படும் விதமும் நேரடியாக நம் மரபின் மகத்தான ஆழ்படிமம் ஒன்றுக்குள் கொண்டு செல்கிறது – காளி! மரணமுகியான பைரவி, சுடுகாட்டில்வாழும் சாமுண்டி, பேரருள் சுரக்கும் துர்க்கை.
கி.ராஜநாராயணனின் கதை மரபில் இருந்து தொப்புள்கொடியுடன் நவீனக் கதையுலகுக்குள் வந்து அமர்ந்திருக்கிறது. ஆனால் சு.வேணுகோபாலின் கதை யதார்த்தத்தில் நிற்கிறது. குறியீட்டுத்தளம் மூலம் மரபின் எந்த நுண்மையான நரம்பையும் அது சீண்டவில்லை. அப்படி அப்படியே சொல்ல அது முயல்கிறது.
வேணுகோபாலின் கதையில் யின் யாங் இரண்டும் இயல்பான முரண்பாட்டுடன் உள்ளன. கி.ராவின் கதையில் அந்த முரணியக்கம் சென்ற காலத்தில் கண்டடைந்த மகத்தான சந்திப்புப்புள்ளி ஒன்று நிகழ்ந்திருக்கிறது. நிறைவயிறுடன் செல்லும் பேய்ச்சி என்ற அந்த உச்சம் சு.வேணுகோபாலின் கதையில் இல்லை. அது யதார்த்தமான ஓர் முடிவை மட்டுமே அளிக்கிறது
சு.வேணுகோபால் இப்போது எழுதிவரும் ஒரு முக்கியமான புதுத்தலைமுறை எழுத்தாளர்களின் பிரதிநிதி. கண்மணி குணசேகரன், சொ.தருமன், சு.வெங்கடேசன் என யதார்த்தத்தை யதார்த்தமாகவே எழுதும் ஒரு இலக்கிய இயக்கம் இன்று வலுவாக உள்ளது. தமிழில் நிகழும் இரண்டாவது யதார்த்த அலை. ஆ.மாதவன்,நீலபத்மநாபன்,பூமணி போன்றவர்களின் எழுத்து முதல் யதார்த்தவாதம். இதை நான் புதுயதார்த்தவாதம் என்பேன். நவீனத்துவ அலையின் இலக்கணங்களை அறிந்தபின் எழுத வந்த யதார்த்தவாதிகள் இவர்கள்.
கி.ராஜநாராயணன் என்ற செவ்வியல் எழுத்தாளருக்கும் சு.வேணுகோபாலுக்கும் நடுவே உள்ள இடைவெளி நவீனத்துவ எழுத்தாளர்களால் உருவாக்கப்பட்டது. ஜி.நாகராஜன், அசோகமித்திரன்,சுந்தர ராமசாமி போன்றவர்கள். அவர்கள் மரபுக்கும் புத்திலக்கியத்துக்குமான உறவை வெட்டினார்கள். நேற்று இல்லாமல் நின்று எழுதமுயன்றார்கள். அந்த இடைவெளியே புதுயதார்த்தவாதத்தை உருவாக்கியது
இன்னொருவகை எழுத்து உள்லது. மேலும் ஒரு கதை. ஒரு பெண் தன் கைக்குழந்தையுடன் வீட்டுக்குள் தூங்கிக்கொண்டிருக்கிறாள். ஒரு கனவுகண்டு விழித்துக்கொள்கிறாள். அக்கனவில் இளம்பெண்ணாக அவள் ஒரு ஆற்றுக்கு படியிறங்கிச்செல்லும்போது துர்நாற்றத்தை உணர்கிறாள். படியோரமாக ஒரு பன்றி து குட்டி போட்டு படுத்திருக்கிறது. அக்குட்டிகளில் ஒன்றை அது உதிரம் வழிய தின்றுகொண்டிருக்கிறது
அவள் விழித்துக்கொள்கிறாள். அவள் கனவில் கெட்டவாசனையாக உணர்ந்தது ஒரு செண்பகப்பூ வாசனை. அந்த வாசனை அவளை அச்சுறுத்துகிறது. அவள் கதவுகளை மூட மூட அந்த வாசனை அதிகரிக்கிறது. அச்சம் தாளாமல் அவள் குழந்தையை எடுத்துக்கொண்டு பக்கத்து அறைக்கதவை திறக்கிறாள். ஆனால் அது பக்கத்து அறை அல்ல – வெளியே
நிலவு விரிந்த வெளியில் அவள் கனவென நடக்கிறாள். மெல்லமெல்ல உடைகள் கழல்கின்றன. நிர்வாணமாக ஒளியில் மிதப்பது போலச் செல்கிறாள். அடந்த காட்டுக்குள் செல்கிறாள். அங்கே ஓர் இடிந்த கோயில். பாழடைந்த கருவறை. அதில் காலியான பீடம். அவள் அந்த பீடத்தில் ஏறி நிற்கிறாள். அவள் உடலில் பற்பல கைகள் முளைக்கின்றன – சப்பாத்திக்கள்ளிச்செடி போல. அவள் ஒரு பெரும் உறுமலுடன் அந்தக்குழந்தையை எடுத்து தன் வாயில் வைத்துக் கடிக்கிறாள்.
இந்தக்கதை மேலேசொல்லப்பட்ட அதேகதையின் உலகைச்சேர்ந்தது. நான் எழுதிய ’அன்னை’. இது சித்தரிப்பின் மூலமல்லாது முழுக்க முழுக்க கவித்துவம் மூலமே இலக்கியமாக ஆகிறது. இதன் இலக்கணம் கதையுடையதல்ல கவிதையுடையது. இது ஒரு கவியுருவகம் [ மெட்டஃபர் ] மட்டுமே. இந்தவகை எழுத்தை நவீனத்துவத்துக்குப் பின் தமிழில் வந்த எழுத்துமுறை எனலாம். இன்றைய எழுத்தாளர்களில் பா.வெங்கடேசன், பா.திருச்செந்தாழை போன்ற பலரை இவ்வகையில் எழுதும் படைப்பாளிகள் என்று சொல்லலாம்.
இவ்விரு மரபுகளும் தமிழில் வலுவான ஆக்கங்களை இன்று அளித்துக்கொண்டிருக்கின்றன. இதுவே இன்று தமிழிலக்கியத்தில் நிகழும் மாற்றம் என்று சுருக்கமாகச் சொல்லி முடிக்கிறேன்
நன்றி
[2-09-10 அன்று மதுரை ஃபாத்திமா மகளிர் கல்லூரியில் பேராசிரியைகள் திருமதி எம்.ஏ.சுசீலா மற்றும் ஃபாத்திமா அவர்களின் அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்த சொற்பொழிவு]
மறுபிரசுரம்/முதற்பிரசுரம் Sep 6, 2010
தொடர்புடைய பதிவுகள்
சு.வேணுகோபால், ஒரு கடிதம்
பாலுணர்வெழுத்து தமிழில்…
கதைகளின் வழி
பதாகை – சு வேணுகோபால் சிறப்பிதழ்
மின்தமிழ் பேட்டி 4
மின் தமிழ் பேட்டி 3
கூந்தப்பனை
இன்று விஷ்ணுபுரம் விழா சந்திப்புகள். . .
விஷ்ணுபுரம் விழா பங்கேற்பாளர்கள், சந்திப்புகள்
எரியும் தேர்
வசைகளின் நடுவே…
வாழும் கரிசல் – லட்சுமணப்பெருமாளின் புனைவுலகம்
சு.வேணுகோபாலுக்கு பாஷா பரிஷத் விருது
பூமணியின் நிலம்
கரிசலின் ருசி – பூமணியின் படைப்புலகுக்கு ஒரு நுழைவாயில்
ஆர்.கே.நாராயணன், மீண்டும்
சு.வேணுகோபால், கடிதங்கள்
சு.வேணுகோபாலின் மண் 2
சு.வேணுகோபாலின் மண்-1
‘வெண்ணிலை’,’காவல்கோட்டம்’—விருதுகள்
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 40
[ 7 ]
கருணன் வருவதை தருமன் தொலைவிலேயே பார்த்துவிட்டார். அவனை அப்போது அவர் விரும்பவில்லை. அவர் முகக்குறியிலேயே அதைப்பார்த்துவிட்ட அர்ஜுனன் புன்னகையுடன் “சூதர்கள் நம் எதிர்காலம், மூத்தவரே. அவர்கள் நம்மைத் தொடர்வதை நாம் தடுக்கமுடியாது. அவர்கள் நம்மைப்பற்றி சொல்வது நமக்கு அதிர்ச்சியளிப்பதாகவே இருக்கும். ஆனாலும் அதுவே நாம் என்று நெடுமூச்சுடன் அமையவேண்டியதுதான்” என்றான். நகுலன் “அவர்களின் இளிவரல் பலசமயம் உளம் சோரச்செய்கிறது” என்றான். “அவர்கள் அனைத்தையும் மாபெரும் கேலிக்கூத்தாக ஆக்கிவிடுகிறார்கள்”
தருமன் “சூதர்களின் நிலை இரக்கத்திற்குரியது” என்றார். “இங்கு மலைக்குடிகளையும் செம்படவர்களையும் பார்க்கிறோம். அவர்கள் தங்கள் உலகில் தங்களைவிட மேலானவர்களென எவரையும் பார்ப்பதே அரிது. அவ்வப்போது வந்துசெல்லும் விருந்தினருக்கு அவர்கள் எவ்வகையிலும் கட்டுப்பட்டவர்கள் அல்ல. ஆகவே அவர்கள் எங்கும் தலைவணங்காமல் எந்த இழிவையும் எதிர்கொள்ளாமல் காட்டுமரங்களென வான்நோக்கி நிமிர்ந்திருக்கிறார்கள். ஆனால் சூதர்கள் பாடகர்களாகவும் தேரோட்டிகளாகவும் அடுமனையாளர்களாகவும் மருத்துவர்களாகவும் முனிவர்களையும் அந்தணரையும் அரசர்களையும் சார்ந்தே வாழவேண்டியிருக்கிறது. அரசு நிகழுமிடங்களில் வரலாறு சமைக்கப்படும் தருணங்களில் உடனிருக்கிறார்கள். ஆனால் உலைக்களத்துப்பூனை என வெறும் சான்றாகவே எஞ்சுகிறார்கள்.”
“அவர்களைச் சூழ்ந்துள்ள ஒவ்வொரு தருணமும் அவர்களிடம் நீ எளியவன், நீ வெறும் விழியும்சொல்லும் மட்டுமே என்று சொல்லிக்கொண்டிருக்கின்றது. அவ்விழிவுணர்வை அவர்கள் தங்கள் அங்கதத்தைக்கொண்டு கடந்துசெல்கிறார்கள்” என்று அவர் தொடர்ந்தார். “அவர்களின் வழி ஒன்றே, அவர்கள் எளியவர்கள் என்பதனால் அனைத்தையும் அவர்கள் அளவுக்கே எளிமையாக்கிவிடுகிறார்கள். மகாவியாசன் அவர்களுக்கு சொல்தடுமாறும் முதியவனாகத் தெரிகிறான். அரசமுனிவர் யயாதி காமம் கொண்டலைபவர். பெருந்தோள் ஹஸ்தி உணக்குவையில் முளைத்தெழுந்த குடைக்காளான்…”
அர்ஜுனன் புன்னகைத்து “அல்லது, அவர்களுள் இருந்து எளியமனிதர்களை வெளியே எடுத்துவைக்கிறார்களோ?” என்றான். தருமன் முகம் சுளித்தபின் அப்பேச்சைத் தவிர்த்து நகுலனிடம் “மந்தன் எங்கே?” என்றார். “இங்கும் காடுதான். அவர் இருந்தால் இந்தச் சூதனின் எட்டிச்சாறை தன் நவச்சாரக்குழம்பால் எதிர்கொண்டிருப்பார்” என்றான் நகுலன். “இரு நாட்களுக்கு முன் இருவரும் அடுமனைத் திண்ணையில் சொல்கோத்தனர். அவர் வென்று வென்று சென்றார். அவர் தொடையிலும் தோளிலும் அறைந்து சிரிப்பதைக் கண்டு நான் அருகே சென்றேன். இவன் முகம் சிறுத்து கண்கலங்கி நின்றிருந்தான். அவரிடமிருந்து விடுபட்டதும் நேராகச்சென்று மூக்கு தளும்ப குடித்துவிட்டு வந்து என் சொல்லையெல்லாம் கசக்கவைத்துவிட்டீரே இளையபாண்டவரே, நீர் உண்பதெல்லாம் நஞ்சாகிறதா என்ன என்று அடுமனை வாயிலைநோக்கி புலம்பிக்கொண்டிருந்தான்.”
சகதேவன் “ஆம், மூத்தவர் அதைக் கேட்காதவர் போல உள்ளே பெருங்கலத்தில் அஷ்டமதுரத்தை பெரிய சட்டுவத்தால் கிளறிக்கொண்டிருந்தார். அன்று அதை இங்குள அனைவரும் சொல்லோடு சொல் சேர்த்து புகழ்ந்தபடியே உண்டனர்.” தருமன் முகம் மலர்ந்து “ஆம், இளையவன் கைபட்ட உணவில் அவன் இருப்பான். அதில் ஒரு விள்ளலை வாயில் இட்டதுமே அதை உணர்ந்தேன்” என்றார். நகுலன் “அவருடைய பசி அதிலிருக்கிறது. அவர் சமைக்கும் உணவை உள்ளத்தால் உண்டுவிடுகிறார். அவருள் அது சமைக்கப்பட்டு நம் நாவுக்கு இனிதாக மீண்டு வருகிறது. உண்டுபுறந்தருதலால்தான் அவர் ஓநாய்வயிற்றர் எனப்படுகிறார்” என்றான்.
அர்ஜுனன் கண்களில் சிரிப்புடன் “அதில் அவருடைய நஞ்சு கலந்திருக்காதா என்ன?” என்றான். தருமன் “அன்னையின் வயிறு அது, பார்த்தா. அழுகிய ஊனுண்ணும் ஓநாயின் முலைப்பாலை ஜடரன் எழாத கைக்குழந்தைக்கு மருந்தெனக் கொடுப்பதுண்டு. அது அமுது” என்றார். அப்பேச்சால் மெல்ல அவர்கள் மலர்ந்து இயல்புநிலையை அடைந்தனர். அவர்கள் அமர்ந்திருந்த சிறுமேட்டின்மேல் அரசமரம் பச்சைநிறக் காசுகள் என இலைகள் பளபளத்துத் திரும்ப காற்றொலிசீறியபடி பசுஞ்செண்டு போல நின்றிருந்தது. தருமன் கால்களை நீட்டி இளைப்பாறிக்கொண்டார். அர்ஜுனன் சிறியபுற்களைப் பறித்து காற்றில் வீசி ஒன்றை பிறிதொன்றால் தைத்தான்.
மூச்சிரைக்க மேலேறி வந்த கருணன் மதுவருந்தியிருப்பது தெரிந்தது. ஆகவே மிகையான பணிவுடன் கைகளைக் கட்டி உடலை வளைத்து அருகணைந்தான். அவன் இடப்புருவம் மட்டும் மேலேறி துடித்துக்கொண்டிருந்தது. அவன் தருமனிடம் “அஸ்தினபுரியின் பேரரசரை நான் இன்று வணங்க முடியாது. ஏனென்றால் அவர் இன்று பேரரசர் இல்லை. நாளைதான் பேரரசர். இந்திரப்பிரஸ்தத்தின் பேரரசரையும் நான் வணங்க முடியாது. ஏனென்றால் அவர் நேற்று பேரரசர். என்னைப்போன்ற எளிய சூதன் எப்படி நிகழ்காலத்தில் நின்று தங்களை வணங்குவதென்று தெரியவில்லை. ஆகவே குருகுலத்தில் சொல்லாராய வந்த நெறியுடையோனை வணங்குகிறேன்” என்றபின் சகதேவனிடம் “நான் சரியாகத்தானே பேசுகிறேன்?” என்றான். சகதேவன் சலிப்புடன் “ஆம்” என்றான்.
“நன்று” என்றபடி கருணன் கையூன்றி பெருமூச்சுடன் அமர்ந்தான். “உண்மை, நான் ஒப்புக்கொள்கிறேன். நான் மது அருந்திவிட்டே வந்திருக்கிறேன். காலையிலேயே சென்றேன். அங்கே ஏழுகளிமகன்கள் ஒரு குழுவாக மதுவருந்த வந்திருந்தனர். ஒருவன் கேட்டான் ஏழுபேருக்கும் கள் கொடுங்கள் என்று. பனையர் கள்ளை எடுத்ததும் இன்னொருவன் எழுந்து பூசலிட்டான். அதெப்படி அத்தனை பேருக்கும் நீயே கள் சொல்லலாம், எனக்கு கள் போதும் என்றான். மூன்றாமவன் பற்களைக் கடித்தபடி வஞ்சத்துடன் ஆமாம் நான் எனக்குப்பிடித்ததையே அருந்துவேன், எனக்கு கள்தான் வேண்டும் என்றான்.”
“நான்காமவன் பூசலிடவேண்டாம், கள் அருந்தினால் என்ன பிழை என்றான். கடும்சினத்துடன் நிலத்தை அறைந்து நான் கள் மட்டும்தான் அருந்துவேன், எவன் தட்டிக்கேட்பது என்றான் ஐந்தாமவன். ஆறாமவன் அவரவருக்கு வேண்டியதை கேட்டு குடிப்போம் நண்பர்களே, எனக்கு கள் சொல்கிறேன் என்றான். ஏழாமவன் சற்று முதிர்ந்தவன். என்ன பூசல் இங்கே, அனைவருக்கும் பொதுவாக ஒரு முடிவுக்கு வருவோம், நாம் கள் அருந்துவோம் என்றான். சீறி எழுந்து ஒப்புக்கொள்ளமுடியாது, நான் கள்தான் அருந்துவேன் என்று கூவினான் முதலாமவன். இரண்டாமவன் கைகளை சுருட்டிக்கொண்டு முன்னெழுந்து நான் கள் அருந்துகிறேன் ஆண்மையிருந்தால் நீ தடுத்துப்பார் என்றான். பெரிய அடிதடி. ஒருவன் மேல் இன்னொருவன் கலத்தை எடுத்து அடித்தான். இருவர் கட்டிப்புரண்டனர். ஒருவன் நெஞ்சில் அறைந்து அலறினான். இன்னொருவன் தரையில் உருண்டு ஆடையின்றி எழுந்து நின்று அழுதான்.”
சிறிய ஏப்பம் விட்டு “பூசல் பெருகிக்கொண்டே சென்றது. நான் உள்ளே நுழைந்து நாம் இனிய கள்ளை அருந்துவோம் நண்பர்களே. இதிலென்ன பூசல்? நாம் என்ன வேதமெய்மையா ஆராய்கிறோம் என்றேன். ஆம் உண்மை என்று எழுவரும் கண்ணீருடன் என்னை தழுவிக்கொண்டார்கள்” என்றான் கருணன். “அவர்கள் வணிகர்களுக்கு பொதிசுமப்பவர்கள். பொதிகளில் என்ன இருக்கிறது என்று அவர்கள் கேட்டுக்கொள்வதே இல்லை. அதை அறிந்தால் அந்த அறிவையும் சேர்த்து அல்லவா சுமக்கவேண்டும்? நல்ல மனிதர்கள். அவர்களிடம் நான் ஆணித்தரமாக கேட்டேன், நண்பர்களே சூதனுக்கு கள்வாங்கிகொடுக்கும் நல்லூழ் உங்களில் எவருக்கு உள்ளது என்று. எழுவரின் மூதாதையரும் நற்செயலாற்றி பயனீட்டி வைத்திருந்தார்கள்.” பெரிய ஏப்பம் வெடிக்க ஒருமுறை உலுக்கிவிட்டு “உயர்ந்த கள்” என்றான்.
“நாம் பிறிதொரு தருணத்தில் பேசுவோமே” என தருமன் எழப்போனார். “இருங்கள் அரசே, நான் எங்கே செல்வேன்? நான் சற்று முன் அடைந்த மெய்யறிதலை உங்களிடம் சொல்லவேண்டும் என்றுதான் குடிலுக்குச் சென்றேன். அங்கே நீங்கள் இல்லை. இங்கிருக்கலாம் என்று தேடிவந்தேன்” என்று அவன் அவர் கால்களை பிடித்தான். “மெய்யறிவைத்தேடி இத்தனை தொலைவுக்கு காட்டுக்குள் வந்திருக்கிறீர்கள். நான் அறிந்த மெய்யறிவை உங்களிடமன்றி எவரிடம் சொல்வேன்? சாதகப்பறவைக்கு மழைபோல தவம்செய்தவனுக்கு மெய்யறிவை வழங்குக என்றுதானே பராசரமாலிகை சொல்கிறது?”
தருமன் சலிப்புடன் தலையசைத்து “சொல்லும்” என்றார். அர்ஜுனன் முகத்தில் எழுந்த புன்னகை அவனை சினம்கொள்ளச் செய்தது. “அதாவது ஒரு காடு. அடர்காடு. ஆயிரக்கணக்கான மரங்கள் கொண்டது அது. அங்கே எட்டியும் பலாவும் நின்றிருக்கின்றன. பிணம்நாறிப்பூவும் செண்பகமும் பூக்கின்றன. அங்கே நின்றிருப்பனவற்றில் ஒன்றை மட்டும் மூதாதையர் அடையாளம் காண்கிறார்கள். அது பனை” என்றான் கருணன். “ஆ! எத்தனை அழகிய மரம். கரியது. உறுதியான உடல்கொண்டது. முள்சூடி சிலிர்த்து நிற்பது. தெய்வங்கள் உறுமிச்சூழும் தலைகொண்டது. கருமுலைக்கொத்து கனிந்த அன்னைப்பன்றி அல்லவா பனை? அன்னை இக்காடெங்கும் பேருடல்கொண்டு நின்று முழங்கும் சொல் என்ன?”
“என்ன?” என்றார் தருமன் புரியாதவராக. “அந்தப்பனையில் எழுகின்றன நீள்முலைக்காம்புகள். அன்னையின் வேர்கள் மண்ணுக்குள் அறிந்த கனிவு கிளையிடுக்குகளில் முலைக்காம்புகள் என வளர்கின்றன. அவற்றை எடுத்து மெல்லச்சீவி கலங்களுக்குள் வைக்கவேண்டும். கலங்கள்… என்ன சொன்னேன்? ஆம், கலங்கள் தூயவையாக இருக்கவேண்டும். அன்னையின் முலைச்சாறு தேங்குபவை அவை. தூய பால். இனியது, சிற்றுயிர்கள் தேடிவந்து விழுந்து சாகுமளவுக்கு அரியது…” என அவன் தொடர்ந்தான். “அதை அப்படியே அருந்துபவரும் உண்டு. ஆனால் அதை எடுத்து முந்தைநாள் கள்ளின் ஓரிரு துளியை ஊற்றி உறைகுத்தி, இருங்கள் அவ்வாறு முன்னிருந்ததை உறைகுத்துவதை என்னவென்று சொல்வீர்கள்? நீங்கள் கற்றறிந்தவர் அல்லவா? நான் எளிய களிமகன், தெருமுனைச்சூதன்…”
சுருங்கிய விழிகளுடன் தருமன் நோக்கி அமர்ந்திருந்தார். “ஆ, நினைவுக்கு வந்துவிட்டது. சுருதி. சுருதிப்பிரமாணம்” என்றான் அவன். “நான் பொதுவாக எதையும் மறப்பதில்லை” என்று சொல்லி தலையசைத்தான். “என்ன சொன்னேன்! உறைகுத்தி மண்ணில் புதைத்திட்டு காத்திருக்கவேண்டும். நான்கு நாட்கள்… இல்லை ஏழு. அல்லது இன்னமும்கூட. உண்மையில் அதுவே சொல்லும், நறுமணம் நுரையென எழுந்து தான் கனிந்துவிட்டதை அறிவிக்கும். அரசே, இதை நோக்கியிருப்பீர்கள்… தான் கனிந்ததை அறிவிக்காத கனியென்று உலகில் ஏதுமில்லை.”
“பொறுத்திருக்கவேண்டும். நாவில் எச்சில் எழ நாளுக்கு நான்குமுறை திறந்துபார்க்கக்கூடாது. சுட்டுவிரல் விட்டு தொட்டு நாவில் வைத்து சுவைபார்க்கக்கூடாது. ஆசைமீதூறி அரைச்சமையலிலேயே எடுத்து மாந்தலாகாது. அதற்குள் தேவர்கள் புடமிடப்படுகிறார்கள். பித்தின் தெய்வமாகிய சோமன். மின்னலுக்குரிய இந்திரன். அலைகளின் அரசனாகிய வருணன். எரிந்தெழும் அக்னி. அரசே, நோயாற்றும் அஸ்வினிதேவர்கள், வழித்துணையாகிய பூஷன், உலகு துலக்கும் சூரியன், ஏன் இருளேறி வரும் எமனும்கூடத்தான். அவர்களை நுரைக்கவும் குமிழிகளாகி வெடிக்கவும் விட்டுவிடவேண்டும்.”
“பின்பு அதை மெல்ல காய்ச்சுகிறோம். மிகமென்மையாக. எரிந்தெழுந்தால் அமுதை தேவர்கள் உண்டுவிடுவார்கள். அடிமண்டியே நமக்கு எஞ்சும். ஆவியெழவில்லை என்றால் அசுரர்களுக்குரிய மதுவாக ஆகும் அது. தூய மது எழும்போது மூன்று தெய்வங்களும் வந்து சூழ்ந்துகொள்கிறார்கள். படைப்பவன், காப்பவன், அழிப்பவன். அவர்களருகே நின்று குற்றம்குறை சொல்லும் அவர்களின் துணைவியரும் வருவார்கள். கல்வி, செல்வம், வீரம். நாம் அதை அருந்தும்போது அத்தனை தெய்வங்களையும் மும்முறை வணங்கவேண்டும்.”
“இனிய மதுவாக நமக்குள் இறங்குவது என்ன? கரும்பனை அல்லவா? அரசே, அந்தப்பனை நின்றிருக்கும் பெருங்காடே அல்லவா? அதன்பின் நகரங்கள் நமக்கு வெறும் குப்பைக் குவியல்களாகிவிடுகின்றன. கல்விநிலைகள் ஓசையிடும் கிள்ளைக்கூட்டங்கள். அரசுகள் விழியிழந்தோர் விரல்தொட்டு ஆடும் விளையாட்டுக்கள். போர்க்களங்கள் கலங்கள் ஒலிக்கும் அடுமனைப்புழக்கடைகள். இல்லங்கள் புதைகுழிகள். நாம் பேருருக்கொண்டு எழுகிறோம். நம் கால்களால் மலைகளையும் ஆறுகளையும் கடந்துசெல்கிறோம். நம் மூச்சுக்காற்றில் கடல்களில் அலைகள் சுருளக்காண்கிறோம். பாலைவனங்களில் புயல் கிளப்புகிறோம்.”
அவன் கைகளை விரித்தான் “காட்டை உண்டவன். காடுறையும் தொல்தெய்வங்கள் அனைத்தும் குடியேறிய உடல்கொண்டவன். அவர்களின் எடை தாளாமல் அவன் தள்ளாடி நடக்கிறான். எதிரே யார்?” கோணலாக சிரித்துக்கொண்டு அவன் கேட்டான் “யார்?” அர்ஜுனன் புன்னகையுடன் “யார்?” என்றான். “பிரம்மன்! அவன் கேட்டான், யார் நீ என்று. நான் சொன்னேன், அகம் பிரம்மாஸ்மி! ஆம். அதைத்தான் சொன்னேன். ஏனென்றால் நானே அது. அவன் திகைத்து நின்றான். அப்போது அப்பால் ஒருவன். யார் அவன்?”
“சிவன்” என்றான் நகுலன். “ஆம், அவனேதான். நான் யார் தெரிகிறதா என்றான். நான் சொன்னேன், தெளிவாகச் சொன்னேன். ஆம், நான். அகம் பிரம்மாஸ்மி. அவன் சினம்கொண்டு நோக்கினான். அப்போது வந்தது யார்? ஆம், விஷ்ணு. சங்காழிகதைமலர் கொண்டு வந்து நின்றான். இவை என்ன என்றான். இவையனைத்தும் நானே. அகம் பிரம்மாஸ்மி என்றேன். அவன் சிரித்து ஆம் அவ்வாறே என்றான்” என்றான் கருணன். “அரசே, இதோ என் வாயில் நறுமணமிக்க ஆவியாக எழுவதே அம்மெய்ப்பொருள். அது கரும்பனைகளில் உறுமப்படுவது. காட்டில் முழங்குவது. மண்ணின் ஆழத்தில் அமைதியாவது. அகம் பிரம்மாஸ்மி! ஆம்!”
அவன் சுட்டுவிரலைக் காட்டி ஒருகணம் அசைவிழந்தான். கண்ணிமைகள் சரிந்து வந்தன. உடல் தளர்ந்தபடியே செல்ல அவன் தன்னை பிரக்ஞையால் உந்தி நிமிரச்செய்தான். “அகம் பிரம்மாஸ்மி என்று உணர்வது மிக எளிது. கையளவு தெளிகள்ளே போதும். அந்தச்சொல் ஏதாவது தொந்தரவுசெய்தால் பிரக்ஞானம் பிரம்மாஸ்மி என்பதை எடுத்து அதன்மேல் வீசுவேன். அது உடைந்தால் தத்வமசி. அவற்றின் மேல் ஒவ்வொன்றாக எடுத்து வீசிக்கொண்டே இருக்கவேண்டும். எழுவதற்கு தருணமே அளிக்கக்கூடாது. ஈஸோவாஸ்யம் இதம் சர்வம். ஏகம் ஏவத்விதீயம் பிரம்ம. சர்வகல்விதம் பிரம்ம. அவ்வளவுதான். மெல்ல அடங்கி ஒருவகையான நிறைநிலை ஏற்படும். அதைத்தான் யோகம் என்கிறார்கள்.”
“போதும்” என்று முகம் சிவக்கச் சொன்னபடி தருமன் எழுந்தார். “இளையோரே, இப்படியே நீங்கள் சென்றால் நான் எப்படி என் குடிலுக்குச் செல்வது?” என்றான் கருணன். “நாளை காலையில் செல்லலாமே” என்றபடி நகுலன் எழுந்தான். கருணன் “இது முறையல்ல. நான் மெய்ச்சொற்களை ஊழ்கத்திலறிந்த சூதன்” என்றான். தருமன் விரைவாக நடந்து சரிவிலிறங்க அவருடன் இளையோர் சென்றனர். “மூடன்” என்றார் தருமன் பற்களைக் கடித்தபடி. “கருத்துக்களின் லீலை” என்றான் அர்ஜுனன். சினந்து திரும்பி நோக்கியபின் ஒன்றும் சொல்லாமல் தருமன் நடந்து சென்றார். அர்ஜுனன் இளையவர்களை நோக்கி புன்னகைசெய்தான்.
[ 8 ]
“ஒரு சொல் இன்னொன்றாக மாற ஆயிரமாண்டுகாலம் ஆயிற்று என்பதே வேதமெய்மையின் சுருக்கமான வரலாறு” என்றார் சாந்தீபனி முனிவர். அவர்முன் அவரது மாணவர்கள் நிரைவகுத்து அமர்ந்திருந்தனர். “ஈராயிரமாண்டுகளுக்கு முன்பு வேதமுனிவர் கண்டடைந்தார்கள். அறியமுடியாமையாகவே தன்னை உணர்த்தும் ஒன்றை. அதை அது என்றல்லாமல் எச்சொல்லாலும் குறிப்பிடமுடியாதென்று அறிந்தனர். தத் என்னும் சொல்லே வேதமெய்ச்சொல் என விளங்கியது அன்று.”
“ஒன்றேயான அது என அதை அறிந்தனர். அதுவன்றி ஏதுமிருக்கவில்லை என உணர்ந்தனர். ஒருமையான அது மேலே உள்ளதா இல்லை கீழே உள்ளதா, அங்கு படைப்பாற்றல் உண்டா, அது முன்னால் உள்ளதா இல்லை பின்னால் உள்ளதா, அது எப்படி பிறந்தது, அதை யார் உருவாக்கினர், அல்லது உருவாக்கவில்லை என பல்லாயிரம் வினாக்களாக அதை அணுகினர். வான் வடிவமான அதுவே அறியும், அல்லது அதுவுமறியாது என்று வகுத்தனர்” என்று சாந்தீபனி முனிவர் தொடர்ந்தார். “ஆயிரமாண்டுகளுக்குப்பின் அது ஒரு பெயரை சூடிக்கொண்டது, பிரம்மம்.”
“வியப்பின் ஒலி அது. பெரிது என்றும் முழுமை என்றும் பிறிது என்றும் பெருகுவது என்றும் உறுதி என்றும் அழிவற்றது என்றும் பல பொருள் கொள்வது. விரிந்துபெருகும் அத்தனை பொருள்களையும் அச்சொல் தன்னில் சூடிக்கொண்டது. அச்சொல் ஆண்டது வேதம்விளைந்த தொல்காடுகளை” சாந்தீபனி முனிவர் சொன்னார். “தைத்ரியம் சொல்கிறது ரிக் எல்லையுள்ளது, சாமம் எல்லையுள்ளது. யஜூர் எல்லையுள்ளது. பிரம்மமோ எல்லையற்றது.”
.
“எல்லையற்றதைச் சொல்லும் சிறு சொல். அச்சொல் ஒவ்வொரு பொழுதும் ஓர் தனியறிதலாயிற்று. அவ்வறிதல்களின் தொகைக்குமேல் விண்மீன் என அண்மையும் சேய்மையுமாகி நின்றது. இவையனைத்தும் ஆகும் ஒன்று. இவையனைத்துக்கும் அப்பால் எஞ்சும் ஒன்று. அதுவே இவையனைத்தும். அந்த மெய்மையை அச்சொல் குறிக்கத் தொடங்கியதும்தான் அது முளைத்துத் தீராத விதையென்றாகியது. நிலமனைத்தையும் பசுமைகொள்ளச் செய்யும் பெருநதி என இம்மண்ணில் பெருகலாயிற்று” என்றார் சாந்தீபனி முனிவர்.
“இங்குள்ள அனைத்தும் அச்சொல்லின் முடிவிலா தோற்றங்களே என்றுணர்க! குடிநெறியும் கோல்முறையும் வேள்வியும் ஊழ்கமும் அதுவே. மேழியும் துலாவும் வாளும் தர்ப்பையும் அதுவே. உருவற்றது ஆயிரமாயிரம் தெய்வங்களாக ஆலயங்கள்தோறும் விழிதிறந்தது. பெயரற்றது பல்லாயிரம் பெயர்களாக மொழிநிறைத்தது. அறியப்படாதது அன்னையென்றும் தந்தை என்றும் கன்னி என்றும் மைந்தன் என்றும் வந்து நம்மருகே அமர்ந்தது. கழனியில் உணவும் களத்தில் குருதியும் கல்விச்சாலையில் மொழியும் ஊழ்கத்தில் ஒளியும் ஆகியது. அதை வணங்குக!”
“சென்ற ஆயிரமாண்டுகாலமாக அச்சொல் தன்னை பிறிதொன்றாக ஆக்கிக்கொண்டிருக்கிறது. நாம் காடுகளில் காண்பது அந்தப் பெருந்தவிப்பையே” என்று சாந்தீபனி முனிவர் சொன்னார். “அத்தனை மெய்ச்சொற்களும் வேதங்களில் உள்ளன. அவை தங்கள் யுகம் எழுகையில் முளைத்துப் பெருகி எழுகின்றன. வேதங்களில் இருந்து எழுந்தது ஆத்மா என்னும் சொல். அகம் என்றும் பிரக்ஞானம் என்றும் இதம் என்றும் எழுந்துவந்த பலநூறு சொற்கள் சென்று சூழ்ந்து பறந்து ரீங்கரித்து அச்சொல்லை துயிலெழுப்பின. வேதமெய்மையைக் கற்க வருபவன் அது எழுந்து வந்த பாதையை மொழியில் காணக்கூடும்.”
“ஒன்றே பிரம்மம், பிறிதில்லை என்று முழங்கினர் படிவர். இவையனைத்தும் பிரம்மமே என்று அறிந்தனர். அதிலமர்ந்தனர். யானைமேல் ஏறுபவன் யானையாகிறான். இளையோரே, முகில்மேல் ஏறிக்கொள்பவன் தேவனாகிறான். பேரறிவின்மேல் ஏறிக்கொண்டவன் என்னாவான்? அறிவென்று தன்னை உணர்ந்து அவன் சொன்னான் அதுவே நான். அவ்வுணர்வை நோக்கியபின் பிரக்ஞையே பிரம்மம் என்று அவன் கூறினான். தன் வடிவிடம் சுட்டினான் அது நீ. தனக்குத்தானே சுட்டி ஆத்மனே பிரம்மன் என்றான். பின் எழுந்து விண்ணை தலைசூடி நானே பிரம்மம் என்றான்.”
சாந்தீபனி முனிவர் கைகூப்பி நிறுத்தியதும் அவரது மாணவர்கள் “ஏகம் ஏகத்விதீயம் பிரம்ம”, “சர்வகல்விதம் பிரம்ம”, “சோஹம்”, “பிரக்ஞானம் பிரம்மாஸ்மி”, “தத்வமசி”, “அயம் ஆத்ம பிரம்ம”, “அகம் பிரம்மாஸ்மி” என்னும் ஏழு பெருஞ்சொற்றொடர்களை ஏழுமுறை ஓதினர். அவை ரீங்கரித்து சொல்லவையை நிரப்பி அமைதியென்றாயின.
“அங்குளதை இங்குளதாகக் காணும் பெருந்தவமே இன்று நிகழ்கிறது” என்றார் சாந்தீபனி முனிவர். “மாண்டூக்யர்களின் சொற்கள் இவை. காணமுடியாதவன், செயல்களுக்கு அடங்காதவன், பற்றற்கரியவன், உய்த்தலுக்கு அப்பாற்பட்டவன், எண்ணம் கடந்தவன், சொல்கடந்தவன், நுண்ணுணர்வின் உட்பொருள், பெருவெளியை தன்னுள் அடக்கியவன், நீடித்த அமைதிகொண்டவன், இரண்டற்றவன், இனியவன், நான்காவதாக நின்றிருப்பவன், அவனே ஆத்மன், அவனே அறியத் தகுந்தவன். அத்தனை வேதமெய்மரபுகளும் இன்று அளாவிக்கொண்டிருப்பது இந்த ஒளியிருள்பெருவெளியையே.”
“அழிவற்றதை கணம்நில்லாது உருமாறும் இவ்வுடலுக்குள் காண்கிறார்கள். நோயும் மிடிமையும் ஐயமும் அச்சமும் விழைவும் துயரும் கொந்தளிக்கும் இதனுள் அலையற்றது அமைந்துள்ளது எங்ஙனம் என விளக்க முனைகிறார்கள்” என்ற சாந்தீபனி முனிவர் புன்னகைத்தார். “குடுவையில் பயனுள்ளதாக இருக்கும் மருந்துக்கலவை போலிருக்கிறது இவர்களின் மெய்யறிதல். உடலுக்குள் அது நஞ்சோ மருந்தோ என்று இன்னும் முடிவாகவில்லை. காடுகளில் மெய்மை என்பது சொல்லில் நின்றிருந்தால் போதும். கழனியில் அது மேழியென உழுது விதையென முளைத்து கதிரென அறுவடை ஆகவேண்டும்.”
“கட்டிறந்த பாழ்வெளியில் களித்திருக்கும் முனிவருக்குரிய மருந்து எங்ஙனம் கூடுகட்டி குஞ்சுகளை ஊட்டும் குடித்தலைவனுக்கு உகந்ததாகும்?” என்று சாந்தீபனி முனிவர் தொடர்ந்தார். “எங்கும் எழுவது அவ்வினாவே. முன்பு ஒரு விடுகதையை கேட்டேன். பிரம்மன் படைத்தவற்றில் பெரிய காளைக்களிறொன்று இருந்தது. அதன் ஒரு கொம்பிலிருந்து மறுகொம்பு வரைக்கும் ஆயிரம்கோடிக் காதம் தொலைவு. அப்படியென்றால் அதன் வலக்கொம்பிலிருந்து எழுந்து பறக்கும் செம்பருந்து எத்தனை காலம் கழித்து இடக்கொம்பை சென்றணையும்?”
சிலகணங்கள் அமைதி. இளைய மாணவன் ஒருவன் “புலரிஎழுந்து அந்திக்குள்” என்றான். முகம் மலர்ந்து “நன்று” என்றார் சாந்தீபனி முனிவர். “கதிரவன் கடக்கும் வானம் அது. அதைத்தான் இங்கும் சொல்வேன். இங்கிருந்து அங்குவரை ஒற்றைச் சிறகடிப்பில் செல்லும் ஒரு பறவையால் மட்டுமே இங்கு எழும் அத்தனை எண்ணங்களையும் ஒன்றெனத் தொகுக்க முடியும்.” அவையை நோக்கியபடி சிலகணங்கள் தன்னுள் ஆழ்ந்தவராக அமர்ந்திருந்தபின் மெல்ல கலைந்து “மானுடம் காட்டும் உண்மை ஒன்றுண்டு, தேவையானது நிகழும். எண்ணங்கள் கோடி ஒன்றை ஒன்று தொடுத்து ஒன்றுடன் ஒன்று முரண்பட்டு பெருகலாம். அனைத்தையும் கடந்து நோக்கும் ஒன்றுள்ளது, மானுடனின் தேவை. அது ஒவ்வாததை தள்ளி உரியதை அள்ளும். தொடுக்கும். உருக்கி ஒன்றாக்கும்.”
சாந்தீபனி முனிவர் பற்கள் தெரிய நகைத்து “பலசமயம் அது வேள்விக்கரண்டியால் மண்ணள்ளலாம். கூர்வாளால் கதிர்கொய்யலாம். பொற்பட்டால் மீன் துழாவலாம். அவ்வண்ணமென்றால் அதுவே தெய்வங்கள் எண்ணிய பயன் என்றுதான் பொருள்” என்றார். “விளைந்துபெருகும் அனைத்தையும் இணைக்கும் கொள்கையை முன்வைத்தது சாந்தீபனி குருநிலை. சமன்யவம் ஒன்று நிகழ்ந்தாகவேண்டும்.”
குரல் மெல்ல மேலெழ “இளையோரே, என்றும் அது நிகழ்ந்துகொண்டேதான் உள்ளது. நால்வேதம் அமைத்த வேதவியாசர் செய்தது சப்த சமன்வயம். இனி ஒரு தத்துவ சமன்வயம் நிகழ்ந்தாகவேண்டும். இந்த ஆறு ஓடிஓடி ஆழத்திற்கு சென்றுவிட்டது. அணைகட்டி நீரை மேலெடுத்து கழனி நிறைத்தாகவேண்டும்” என்றார் சாந்தீபனி முனிவர். கைகூப்பி அவர் தன் உரையை முடித்தபோது அவை ஒலியடங்கி நோக்கிக்கொண்டிருந்தது.
“ஓம் அது முழுமை. இது முழுமை.
முழுமையிலிருந்து முழுமை எழுகிறது
முழுமையிலிருந்து முழுமை பிறந்தபின்னரும்
முழுமையே எஞ்சியிருக்கிறது”
சாந்தீபனி முனிவர் கைகூப்பி அவ்வேதச்சொல்லை உரைத்தபோது அவரது மாணவர்களும் இணைந்துகொண்டனர். அவர் தன் வலப்பக்கம் திரும்பி அங்கிருந்த தன் தந்தையின் மரமிதியடிகளைத் தொட்டு சென்னிசூடிவிட்டு எழுந்து கூப்பிய கைகளுடன் வெளியே சென்றார். ஒரு மாணவன் எழுந்து சங்கை முழக்கினான். மெல்லிய பேச்சுக்குரல்களுடன் மாணவர்கள் கலைந்து செல்லத் தொடங்கினர்.
தருமன் எண்ணங்களில் ஆழ்ந்தவர் போல தலை கவிழ்ந்து அமர்ந்திருந்தார். “மூத்தவரே” என்றான் நகுலன். திடுக்கிட்டு அவனை நோக்கியபின் தருமன் கையூன்றி மெல்ல எழுந்தார். தாடியை கையால் தடவியபடி அவர் நடக்க அவர்கள் கொண்டுவந்திருந்த சுவடிகளை எடுத்துக்கொண்டு நகுலன் உடன் சென்றான். வெளியே முன்னிரவின் இருள் நிறைந்திருந்தது. தொலைவில் அகல்சூடி அமைந்திருந்த குடில்திண்ணைகள் இருளில் மிதந்தவைபோல் தெரிந்தன.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 25
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 35
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 34
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 28
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 27
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 24
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 23
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 22
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 18
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 17
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 16
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 14
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 12
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 10
வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 5
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 3
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 83
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 79
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 78
August 26, 2016
கோவை – வெண்முரசு கலந்துரையாடல்
“சொல்வளர் காடு ” இதுவரை வந்த அத்தியாயங்களில் இருந்து வேத கல்வி நிலையங்களின் தத்துவ வேறுபாடுகள் ,மற்றும் சொல்வளர் காடு பகுதியில் விதுரர் என்னும் தலைப்புகளில் கலந்துரையாடல் நாளை 28-08-16 ஞாயிறன்று 1 மணி வரை கீழ்க்கண்ட முகவரியில் ‘நடைபெறும் .
வெண்முரசு வாசகர்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம்.
முகவரி மற்றும் தொடர்பு எண்
SURIYAN SOLUTIONS
93/1, 6TH STREET EXTENSION ,100 FEET ROAD ,
NEAR KALYAN JEWELLERச், GANTHIPURAM, COIMBATORE
விஜய் சூரியன் 99658 46999 , ராதா கிருஷ்ணன் -7092501546
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

