Jeyamohan's Blog, page 1734

September 7, 2016

அழுக்கு படிந்த கண்ணாடி

1


கேரளத்தின் மெய்ஞானியும் சமூக சீர்திருத்தவாதியுமான நாராயணகுருவின் வழிவந்த நித்ய சைதன்ய யதி அவர்களை என் ஞானகுருவாகக் கொண்டவன். அவர் 1998ல் சமாதியாவது வரை ஊட்டியில் இருந்த அவரது நாராயண குருகுலத்திற்கு மாதந்தோறும் சென்று தங்கி அவருடன் இருக்கும் வழக்கம் இருந்தது. நித்ய சைதன்ய யதியைப்பற்றி நிறையவே எழுதியிருக்கிறேன்.


நித்யாவுக்கு பலவகையான சீடர்கள் உண்டு. அவர் உளவியலில் முனைவர் பட்டம் பெற்றவர். அமெரிக்காவில் போர்ட்லண்ட் பல்கலைக்கழகம் உட்பட பல பல்கலைகழகங்களில் தத்துவம் மற்றும் உளவியல் பேராசிரியராகப் பணிபுரிந்தவர். அவரது ஆசிரியரான நடராஜகுரு பிரான்ஸின் சார்போன் பல்கலைக்கழகத்தில் தத்துவமேதை ஹென்றி பெர்க்ஸனின் மாணவராக ஆய்வுசெய்தவர். ஆகவே மேலைநாட்டு கல்வியாளர்களான மாணவர்களே அதிகம். உள்ளூர் மாணவர்களிலும் கல்வியாளர்களே மிகுதி.


ஆனால் குருகுலமுறை என்பது தொன்மையான இந்திய வழிமுறைகளின் படி அமைந்தது. மாணவர்கள் இருவகை. என்னைப்போன்ற இல்லற மாணவர்களுக்கு நெறிகள் என ஏதுமில்லை. சொல்லப்போனால் நாங்கள் மாணவர்களே அல்ல. ஆன்மீகக் கல்விக்காக பிற அனைத்தையும் துறந்து வருபவர்களே உண்மையான மாணவர்கள். அவர்கள் குருகுலத்தில் வேலைகளைச் செய்தபடி வகுப்புகளை கவனித்தபடி சிலவருடங்களைக் கழிக்கவேண்டும். பிரம்மசாரிகள் என அவர்கள் அழைக்கப்படுவார்கள். அந்நிலையிலேயே பெரும்பாலானவர்கள் ஆரம்ப வேகம் அடங்கி விலகிச்சென்றுவிடுவார்கள்.


அதன்பின்னர் அவர்களுக்கு நித்ய சைதன்ய யதி தனிப்பட்ட கல்வியை அளிப்பார். பலநிலைகள் அதிலுண்டு. அந்த மாணவரின் இயல்புக்கு ஏற்ப ஏதேனும் ஒரு மூலநூல் அவருக்குப் பரிந்துரைக்கப்படுகிறது. விடியற்காலையில் எழுந்து குருவைச் சென்று கண்டு அவரிடமிருந்து அதில் ஒரே ஒரு பாடலை மட்டும் பாடம் கேட்கவேண்டும். அதன்பின் நாள் முழுக்க வேறெதையும் வாசிக்கக்கூடாது. பாட்டு கேட்கக்கூடாது. வானொலி கேட்கக்கூடாது. எவரிடமும் பேசக்கூடாது. முழுத்தனிமையில் வேலைகளைச் செய்தபடி பகலிரவைக் கழிக்கவேண்டும். அவ்வாறு முழுநூலும் கற்கப்படும்போது அது ரத்தத்தில் ஊறிவிடும்


அதன்பின்னர் ஒருநாள் மிகச்சிறிய தொகை ஒன்றை அளித்து நித்யா அவர்களை இந்தியாவைச் சுற்றிவரச்சொல்லி ஆணையிட்டு அனுப்புவார். அவர்கள் பிச்சை எடுத்தபடி, சிறிய தொழில்கள் செய்தபடி இந்தியாவைச் சுற்றிவருவார்கள். இந்தியாவின் நிலப்பகுதியை பார்ப்பதென்பது உண்மையில் இந்த மண்ணில் நிகழ்ந்த ஆன்மீகச்செயல்பாடுகள் அனைத்தையும் நேரில் பார்ப்பதுதான். இந்த மண்ணாகவே ஞானத்தை உருவகிக்கும் வழக்கம் குருமரபுகளில் உண்டு. அதிலிருந்தே பாரததேவி என்னும் கருத்துருவம் உருவாகிவந்தது. விவேகானந்தர் அப்படி பாரதத்தைச் சுற்றிவந்த கதையை நாம் வாசித்திருப்போம். அத்தனை துறவிகளும் அப்படிச் சுற்றிவந்திருப்பார்கள்.


அவ்வாறு கிளம்பிச்செல்லும்போது ஓரிருநாட்களிலேயே கையிலிருக்கும் பணம் தீர்ந்துவிடும். அதன்பின் பிச்சை எடுக்கவேண்டும். பெரும் பதற்றம் உருவாகும். சிலநாட்கள் பட்டினி கிடப்பவர்கள் உண்டு. என்னசெய்வதென்று அறியாமல் பரிதவிப்பார்கள். ஆனால் கொஞ்சம் கொஞ்சமாக ஆணவம் அடங்கி கைநீட்டிப் பிச்சை எடுக்கத் தொடங்குவார்கள். ஒருகட்டத்தில் எப்படியும் உணவு கிடைத்துவிடும் என்னும் நம்பிக்கை வந்துவிடும். அது சிறகு முளைப்பதுபோல. இந்தியாவெங்கும் அலைந்து திரியத்தொடங்குவார்கள்.


அந்தச்சிறகுகள் ஓய்ந்து மீண்டும் வந்தால்தான் ஓர் இடத்தில் அமைதியாக அமரமுடியும். அதன்பின்னரே அவர்கள் யோகசாதனையில் அடுத்த கட்டம்நோக்கிச் செல்கிறார்கள். அப்படி வராமல் கடைசி வரை நாடோடிகளாகவே அமைந்துவிட்டவர்கள் பலர் உண்டு. அது ஒரு பெரும் களியாட்ட நிலை. அப்படி இந்தியா முழுக்க எந்த அடையாளமும் இல்லாமல் சுற்றிவந்தபடி இருக்கும் சில லட்சம்பேர் இருக்கிறார்கள். பயணங்களில் அவர்களை நாம் அடிக்கடிக் காணநேரிடும். நானே ஒருவருடம் அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கையில் இருந்திருக்கிறேன்.


நித்யாவின் மாணவரான பிரபுதத்தா அவர்களிடம் நான் ஒருமுறை கேட்டேன், “இந்தியாவில் அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டால் என்ன செய்வீர்கள்?” என்று. “சிறையில் அடைப்பார்கள். அங்கே வாழவேண்டியதுதான். நமக்கு உள்ளும் புறமும் சமம்தான்” என்றார் சிரித்தபடி. அடையாளத்தை பெரும் சுமையாகக் கருதுபவர்கள் அவர்கள். ஆகாயப் பறவைகளைப்போல என அவர்களைச் சொல்லலாம். விதைப்பதில்லை கொய்வதில்லை. வானமே சொந்தம் அவர்களுக்கு.


நான் என் பயணத்தில் பலமுறை அப்படிப்பட்டவர்களைக் கண்டிருக்கிறேன். ஒருமுறை காசியில் இருந்து டேராடூன் செல்லும் வழியில் ரயிலில் என்னருகே ஒருவர் அமர்ந்திருந்தார். பழைய அழுக்குக் காவி உடை. தலைப்பாகை. கையில் உடைமை என ஒரு சிறிய பை மட்டுமே. நீண்ட நரைத்த தாடி. தோளில் சரிந்த கூந்தல். இருக்கையில் காலைத் தூக்கிவைத்து அமைதியாக வெளியே நோக்கிக்கொண்டு வந்தார். ஏதோ சாமியார் என நான் நினைத்தேன்.


அன்றெல்லாம் பிரெஞ்சுக்காரரான ஜீன் பால் சார்த்ர் மிகப்பிரபலமான தத்துவ ஆசிரியர். இலக்கியவிமர்சகர், அரசியல்போராளி, நாடக ஆசிரியர் என்னும் நிலைகளில் சார்த்ர் உலகமெங்கும அறியப்பட்டிருந்தார். இருத்தலியம் [Existentialism] என்னும் கோட்பாடு சில அறிஞர்களால் முன்வைக்கப்பட்டு உலகசிந்தனையை உலுக்கிக் கொண்டிருந்த காலம். சார்த்ரின் இருத்தலும் இன்மையும் [Being and Nothingness] என்னும் நூல் அத்தத்துவத்தின் மூலநூலாக கருதப்பட்டது. அக்கொள்கையைச் சார்ந்து எழுதிய காஃப்கா, காம்யூ போன்றவர்கள் இளைஞர்களால் பரபரப்புடன் வாசிக்கப்பட்டனர்


நான் சார்த்ர் எழுதிய நாசியா [Nausea] என்னும் சுயகுறிப்புநூலை வாசித்துக்கொண்டிருந்தேன். சாதாரணமாகத் திரும்பிய அந்தச்சாமியார் அதை கண்டு கைநீட்டினார். நான் தயக்கத்துடன் அதை நீட்டினேன். வாங்கி புரட்டிப்பார்த்துவிட்டு புன்னகையுட்ன் திருப்பித்தந்தர். “Being and nothingness” என்றார். வெடித்துச் சிரித்துக்கொண்டு “Do you know there is a way called nothingness and being?” [ஒன்றுமில்லாமல் இருப்பது என்னும் நிலை ஒன்றுண்டு, தெரியுமா?]


நான் அவரை ஆச்சரியத்துடன் பார்த்தேன். “பாவம் சார்த்ர், நல்ல மனிதர்” என்றார் அவர். நான் கொஞ்சம் எரிச்சலுடன் “அவரைத்தெரியுமா?” என்றேன். “நன்றாகவே தெரியும். நான் சார்போனில் அவரது மாணவனாக இருந்தேன். அவர் வீட்டில்தான் இருப்பேன்” என்றார். என்னால் திகைப்பை மறுக்கமுடியவில்லை. சாமியார்களிடம் பூர்வாசிரமத்தைப்பற்றிக் கேட்பது தவறு என்று தெரியும் என்பதனால் நான் மேலே பேசவில்லை.


அவரே மெலே சொன்னார். “ஒரு கூரியஎண்ணம் நமக்குள் வந்ததும் நாம் பரவசம் அடைகிறோம். நம்முள் அது வந்தது என்பதனாலேயே அது அரியது, மகத்தானது, அதை உலகுக்குச் சொல்லிவிட்டுச் செல்லவேண்டும் என பரபரக்கிறோம். ஆகவே கடுமையாக உழைத்து அதை ஒரு கொள்கையாக ஆக்கிக்கொள்கிறோம். அப்படி கொள்கையாக ஆக்கும்தோறும் நாமே அதை நம்புகிறோம். நம் வாழ்க்கையை அப்படி ஆக்கிக்கொள்கிறோம். அது மிகப்பெரிய நடிப்பு. மெல்ல நடிப்பே வாழ்க்கையென்றாகிவிடுகிறது”


“சார்த்ர் நடித்தார் என்கிறீர்களா?” என்றேன். “ஆம். அவரும் அவர் தோழியும் சேர்ந்து நடித்தார்கள். உலகம் கைதட்டியது”. சார்த்ரின் தோழி சிமோங் த பூவா உலகமெங்கும் இன்று பரவியிருக்கும் பெண்ணியச் சிந்தனைகளை உருவாக்கியவர். அவரது இரண்டாம் பாலினம் [The second sex] என்ற நூல் பெண்களின் தன்னுரிமை, விடுதலை, ஆணைச்சாராமல் நின்றிருக்கும் ஆற்றல் ஆகியவற்றை முன்வைப்பது


நான் சீற்றத்துடன் “இருத்தலியலை நீங்கள் நிராகரிக்கலாம், ஆனால் அவர்களை பொய்யானவர்கள் என்று எப்படிச் சொல்லமுடியும்?” என்றேன். “அவர்கள் பொய்யானவர்கள் என்று சொல்லவில்லை. அவர்கள் தங்கள் வாழ்க்கையை வாழவில்லை. தங்கள் கோட்பாடுகளுக்கேற்ப வாழ்க்கையை அமைத்துக்கொண்டார்கள். அதை மட்டுமே சொன்னேன்” என்றார்.


இருத்தலியலை சுருக்கமாக இவ்வாறு சொல்லலாம். காலம் எல்லையற்றது. இங்கே நிகழும் அனைத்துமே தற்செயல்கள். இதில் மனிதவாழ்க்கைக்கு என தனியான அர்த்தம் ஏதும் இருக்கமுடியாது. அனைத்து அர்த்தங்களும் மனிதனால் உருவாக்கப்பட்டவை மட்டுமே. அவற்றை அறியாமல் நம்புபவன் வாழ்க்கையை இயல்பாக வாழ்கிறான். அவற்றின் பொருள் என்ன என்று தேடுபவன் வெறுமையையே சென்றடைகிறான்.


“இங்குள்ள அனைத்தும் வெறுமை அல்ல. நாம் பொருளை அறியவில்லை என்பதனால், அறியமுடியவில்லை என்பதனால் பொருள் இல்லை என்றாவதில்லை” என்றார் அவர். “பொருள் உள்ளது. அதை அறிய வேண்டுமென்றால் நான் என்ற நிலையில் இருந்து அதை அணுகக்கூடாது. சார்த்ர் தேடியது ‘எனக்கான பொருள் என்ன?’ என்ற கேள்விக்கான பதிலை. இதற்கெல்லாம் பொருள் என்ன என்று தேடினால் கண்டுகொள்ளலாம்” என்று அவர் சொன்னார்.


நான் பார்த்துக்கொண்டே இருந்தேன். “மிகமிக எளிது. ஒரு கூழாங்கல்லை எடுத்துப்பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். ஆனால் அதை பார்ப்பதற்கான தடையை அகற்றவேண்டும். அது நான் என்னும் எண்ணத்தின் தடை. அதிலிருந்து உருவாகும் காமம் குரோதம் மோகம் ஆகிய மூன்று அழுக்குகளின் பூச்சு. அதைக்களைந்து உண்மையை அறிவதே ஆன்மீகமான பயணம். இத்தனை அலைச்சலும் இத்தனை பயிற்சிகளும் அதற்கே”


“அது என்ன?” என்றேன். “ஈஸோ வாஸ்யம் இதம் சர்வம்” என்ற உபநிடதவரியை அவர் சொன்னார். [இங்கனைத்திலும் இறை உறைகிறது] ”ஒரு வரியாக மிக எளியது. உண்மையனுபவமாக உணர்வதற்கு தவம் தேவை” அதன்பின் அவர் பேசவில்லை. பேசுவார் என நானும் நெடுநேரம் காத்திருந்தேன். அடுத்த நிறுத்தத்தில் இறங்கிச்சென்றுவிட்டார். நான் அவர் சென்ற பின் எஞ்சிய வெட்டவெளியை பார்த்துக்கொண்டிருந்தேன். ரயில் நகர்ந்தது


நெடுநாட்களுக்குப்பின் சார்த்ரின் அணுக்கமான மாணவி ஒருத்தி அவரைப்பற்றி ஒரு நூலை எழுதினாள். சார்த்ர் கட்டற்ற காம உணர்ச்சி கொண்டவர் என்றும் அவரது ஆய்வுமாணவிகள் அனைவரிடமும் அவர் உறவுகொண்டிருந்தார் என்றும், அதற்காக கட்டாயப்படுத்தி மன்றாடுவார் என்றும் அவள் சொன்னாள்.


அதைவிட முக்கியமானது அவள் சிமோங் த பூவா பற்றி சொன்னது. ஆணைச்சாராது பெண் வாழவேண்டும் என்று வாதிட்டு அவ்வளவு பெரிய நூலை எழுதிய சிமோங் த பூவா அதன்பொருட்டே சார்த்ரை மணம் செய்துகொள்ளாமல் தோழியாக வாழ்ந்தவர். அவர் உண்மையில் சார்த்ரின் விசுவாசமான மனைவியாகவும், அவரது ஆணைக்குக் கட்டுப்பட்ட அடியாளாகவுமே இருந்தார் என்று குறிப்பிட்டிருந்தாள் அம்மாணவி. தன் மாணவிகளையும் பேசி மடக்கி சார்த்ருக்கு பாலியல் தேவைக்காகக் கொண்டுசெல்வது சிமோங் த பூவாவின் வழக்கமாம். பிற மாணவிகளும் அதை உறுதிப்படுத்தினர்


எனக்கு ஆச்சரியமாக இருக்கவில்லை. அகங்காரத்தின் மறுபக்கம் காமமே என நான் அதற்குள் எழுதி எழுதிக் கற்றிருந்தேன். அவை மறைத்து நிற்கும் விழிகளால் அப்பாலுள்ள பிரம்மாண்டத்தைக் காணமுடியாது. அதன்பின் செய்யவேண்டியது எதைக் காண்கிறோமோ அதை கோட்பாடாக ஆக்கி வாதிடவேண்டியதுதான். “பாவம் சார்த்ர்” என அந்த சாமியாரை நினைவுகூர்ந்து சொல்லிக்கொண்டேன்.


தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 07, 2016 11:34

எதிர்மறை மதச்சடங்குகள்

 


 


 


 


 


1


 


 

அன்புள்ள ஜெ


கோரதெய்வ வழிபாடு பற்றிய தங்களது பதிலை படித்தேன். என்னை எப்போதுமே வியப்புக்குள்ளாக்கும் விஷயமே “எதை நீ தேடுகிறாயோ அது உன்னையும் தேடிக்கொண்டிருக்கிறது” என்ற ரூமியின் வாக்கை போல எதைப்பற்றி எனக்கு கேள்வி எழுகிறதோ அதற்கான பதில் உங்கள் பதிவில் அடுத்தடுத்து பார்த்துக்கொண்டே இருக்கிறேன்.


தத்துவரீதியாக உங்களது விளக்கம் நிச்சயம் நாங்கள் யோசிக்காத இன்னொரு கோணம் எப்போதும் போல.


பாதிக்கப்பட்டவர்கள் வெறியிலோ வலியிலோ மற்றவரை பழிவாங்காமல் இருக்கவும் மனசமாதானம் அடையவும் உக்கிர வழிபாடு ஒருவித சமாதானத்தையும் தெம்பையும் தருகிறது என வைத்துக்கொள்ளலாம்.


ஆனால் ஒரு காலத்தில் சிவ ஆஞ்சனேய வழிபாட்டிற்கே பயந்த சமூகத்தில் எப்படி பிரத்யங்கரா, வராகி போன்ற வழிபாடுகள் ஆரம்பித்தன.


என் இஸ்லாமிய பள்ளித்தோழி ஒருத்தி பயமுறுத்துவதற்காக முட்டை வச்சிடுவேன் என்பாள் சின்ன சின்ன சண்டைக்கும் அதற்கே அவளோட வச்சிக்காத என பயப்படுவார்கள்.


இப்போது பத்திரிக்கையுடனே யந்திரம் தருகிறார்கள் ஏதோ ஒரு பத்திரிக்கையுடன் சத்ரு சம்கார திரிசதி மந்திர புத்தகத்தை கொடுத்திருந்தார்கள்.


எதிரிகளை அழிக்கும் மிகவும் உக்ரமானதாக கருதப்படும் ஸ்லோகம் அது. தொழிலில் நட்டத்தை சந்திப்பவர்களும் பில்லி சூனியத்தால் பாதிக்கப்பட்டவர்களுமே யோசித்து செய்த வழிபாடு அது.


மரணமந்திரா சத்ரு சம்காரம் என்றெல்லாம் எளிதில் கிடைக்கிறது யூடியூபில்.


“என்னை ஒருவன் அவமதித்தான் அவனுக்கு தக்க பாடம் கற்பிப்பேன் இந்த மந்திரத்தை வைத்து” என ஒருவர் உள்ளீட்டிருந்தார் அப்படியான ஒரு வீடியோவின் கீழே.


கோர தெய்வ வழிபாட்டை நாடும் மனிதமனம் தான் இங்கு கேள்வியாக இருக்கிறது. போன தலைமுறையில் பொருட்கள் இற்றுப்போனாலும் முடிந்தவரை சரிசெய்து உபயோகப்படுத்துவார்கள் அப்புறம் வந்தது யூஸ் அண்ட் த்ரோ பொருட்கள். பொருட்களை உபயோகிக்க ஆரம்பித்தது போல் மனிதர்களையும் யூஸ் அண்ட் த்ரோவாக நினைக்க ஆரம்பித்திருக்கிறோமோ என்ற மனிதமனம் தான் பயமுறுத்துகிறது.


சின்ன தவறு செய்தாயா சின்னதாக காயப்படுத்தினாயா என எல்லாவற்றுக்கும் பெரிதாக ரியாக்ட் செய்யும் குரோதம்.


இது ஒருபக்கம் இந்த காலத்தின் அதீதமான மனவிகாரத்தை காண்பிக்கறதல்லவா.


மனிதர்களின் மெல்லிய உணர்வுகள் தொலைந்துபோய்க்கொண்டிருப்பதாக இல்லையா?


கோர தெய்வ வழிபாட்டை விட அகோர மனிதமனம் தான் மிகவும் கலவரப்படுத்துகிறது.


ப்ரியமுடன்

ஸ்ரீப்ரியா


***


அன்புள்ள ஸ்ரீப்ரியா,


கோரதெய்வங்களை வழிபடுவது, மாயமந்திரங்கள், அழித்தொழிப்புக்கான சடங்குகள் ஆகியவை எந்தக்காலத்திலும் கூடவோ குறையவோ செய்யாது. ஐரோப்பாவிலேயேகூட அவை இன்றும் வலுவான மறைமுகச் செயல்பாடுகளாகவே உள்ளன. அவை மானுடனின் அடிப்படையான அச்சம், வஞ்சம், ஐயம் ஆகியவற்றைச் சார்ந்தவை. அவை குறையுமென்றால் இவற்றின் இடத்தில் நேரடியான அடிதடி கொலைகளை நிகழ்த்தும் நிழலுலகம் எழுந்துவரவேண்டும்.


கோரதெய்வங்களை வழிபடுவது, மாயமந்திரங்கள், சடங்குகள் போன்றவை வேதங்களிலேயே உள்ளன. அதர்வவேதம் மறைமுகச்சடங்குகளையே பெரும்பாலும் பேசுகிறது. உலகியல் வெற்றிகளுக்காகச் செய்யப்படும் வேள்விகள் பூதயாகங்கள் எனப்படுகின்றன. அவை எப்போதும் இருந்தன. பலவகையான வேள்விகளை மகாபாரதம் சொல்கிறது. அவற்றின் பழங்குடி வேர் வலுவானது


பின்னர் இச்சடங்குகளும் குறியீடுகளும் தாந்த்ரீக முறைமைகளாக வளர்ச்சி பெற்றன. தாந்த்ரீகம் என்பது ‘குறியீட்டுச்செயல்பாடுகளால் மெய்ஞானத்தை அடையும் முறை’ என வரையறைசெய்யலாம். சைவம் சாக்தம் வைணவம் ஆகிய மூன்று மதங்களுக்குள்ளும் தாந்த்ரீகம் உண்டு. இம்மதங்களிலுள்ள வழிபாட்டுச்சடங்குகளில் பல தாந்திரீக மரபிலிருந்து வந்தவை. சிற்பக்கலையில் தாந்திரீகத்தின் செல்வாக்கு அதிகம்


பின்னர் பக்தி இயக்கம் பேரலையாக எழுந்தபோது தாந்த்ரீக முறைமைகள் கடுமையாக நிராகரித்து ஒடுக்கப்பட்டன. பக்தி இயக்கத்தின் ஆசான்கள் தாந்த்ரீகமுறைகளை பயனற்றவை அழிக்கப்படவேண்டியவை என அறிவுறுத்தினர். பரிபூரண சரணாகதி அன்றி எதுவுமே பயனற்றவை என்பது அவர்களின் கொள்கை.


தாந்த்ரீகத்தின் கொள்கைகளையும் உருவங்களையும் புராணங்களைக்கொண்டு மறுவிளக்கம் அளித்து தங்கள் வழிபாட்டுக்குள் சேர்த்துக்கொண்டது பக்தி இயக்கம். தமிழ்நாட்டில் சோழர்கள், குறிப்பாக சிவனருட்செல்வராகிய ராஜராஜசோழன், தாந்த்ரீக முறையை முற்றாகவே ஒழித்து ஆகம வழிபாட்டுமுறையை நிறுவினார். ஆகமமுறை என்பது தெய்வத்திற்கு எளிய பதினாறு உபச்சாரங்களைச் செய்வதுமட்டுமே. [ஷோடச உபச்சாரம்] தாந்த்ரீகமுறையிலுள்ள விரிவான குறியீட்டுச்செயல்பாடுகள் அகற்றப்பட்டன.


கேரளக்கோயில்களிலும் ராஜராஜன் காலகட்டத்தில் ஆகம முறைக்கு மாற்றப்பட்டு சோழர் ஆட்சி முடிந்ததும் தாந்த்ரீக முறைக்கு மீண்டும் சென்றன. இன்று அங்கே தாந்த்ரீக முறைவழிபாடுகள்தான். பலவகையான சைகைகள், ஒற்றை ஒலிகொண்ட மந்திரங்கள், பலிச்சடங்குகள், படையல்கள் அங்கே இருப்பதைக் காணலாம். இவற்றை பஞ்சமகார பூசை என்பார்கள் [மது, மாவு, மைதுனம், மந்திரம், முத்திரை]


பக்தி இயக்கம் காரணமாக தமிழகத்தில் இத்தகைய வழிபாடுகள் அழியவில்லை, தலைமறைவாயின. பலவடிவங்களில் எங்கெங்கோ எஞ்சியிருந்தன. இந்து வழிபாட்டின் மையப்போக்கின் புரோகிதர்களான பிராமணர் இவற்றைச் செய்வதில்லை. ஆனால் வேறுசாதியினர் செய்யத்தொடங்கினர். குறிப்பாக ஊன்பலி கொண்ட கோயில்களில் பூசை செய்யும் சாதியினரான பண்டாரம், யோகீஸ்வரர் போன்றவர்கள்.


அத்துடன் இங்கே நாட்டார் வழிபாடும் என்றும் இருந்தது. அது தாந்த்ரீகவழிபாட்டுமுறையின் ஒரு பழங்குடி வடிவம்தான். அதில் மந்திரம், சைகை போன்றவை இல்லை. பலி, படையல், சன்னதம் உண்டு.


பக்தி இயக்கம் இருபதாம் நூற்றாண்டில் தளர்வுற்றது. காரணம் நாத்திகப்பிரச்சாரம். கூடவே நடைமுறைவாதத்தின் எழுச்சி. பக்தி இயக்கம் முன்வைக்கும் சரணாகதி தத்துவமும், பெருந்தெய்வத்தைச் சார்ந்த பிரபஞ்சக்கொள்கையும், ஊழ்வினைக்கொள்கையும் மக்களிடையே சற்றுசெல்வாக்கிழந்தன.


ஆனால் ஆழ்மன அச்சங்கள், ஐயங்கள் மற்றும் ஆசைகளால் ஆன மதநம்பிக்கை அங்கேயே அப்படியே தீண்டப்படாமல் நீடித்தது. பக்தி இயக்கம் பின்னடைவு கொள்ளக்கொள்ள அது மேலெழுகிறது.


இன்று சிவன், விஷ்ணு போன்ற பெருந்தெய்வக்கோயில்களில் கூட்டம் குறைவு. சரபேஸ்வரர், சனீஸ்வரர் போன்ற தாந்த்ரீகமரபைச் சேர்ந்த சிறுதெய்வக்கோயில்களில் கூட்டம் அம்முகிறது. பக்தி இயக்கம் முன்வைத்த பஜனை, பூசைகள் போன்றவற்றுக்குக் கூட்டம் குறைவு. வாஸ்து, பரிகாரம் போன்றவற்றுக்கு பெருந்திரளென மக்கள் செல்கிறார்கள்.


இந்த மாற்றமே பில்லிசூனியம், ஏவல் போன்ற எதிர்மறை மதச்சடங்குகளை நோக்கியும் மக்கள் செல்வதற்கு வழிவகுக்கிறது. அதற்கு எவ்வகையிலும் கடவுள் எதிர்ப்புப்பிரச்சாரம் எதிர்விசை அல்ல. பக்திசார்ந்த மதநம்பிக்கையின் வளர்ச்சி, தத்துவம்சார்ந்த மதநம்பிக்கையின் வளர்ச்சி, நவீன வரலாற்றுப்பண்பாட்டு நோக்கின் வளர்ச்சி ஆகியவையே எதிர்விசைகளாக அமையமுடியும்


ஜெ


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 07, 2016 11:32

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 51

[ 5 ]


அடுமனைப்பணி உடலின் அனைத்துத் தசைகளையும் களைப்படையச் செய்வதாக இருந்தது. முதல்நாள் புலர்காலை எழுந்ததுமே அடுமனை ஒரு பூசல்களம்போல ஒளியும் ஓசையுமாக இருப்பதை தருமன் கண்டார். எழுந்துசென்று நீராடி வருவதற்குள் அங்கே வேலை நெடுநேரம் கடந்திருந்தது. அடுமனை உதவியாளர்கள் ஒவ்வொருவரும் எதையோ மறந்துவிட்டுத் தேடுபவர்கள்போல, எங்கோ செல்ல விழைபவர்கள் போல, எதையோ முடித்துவிட்டு கிளம்புபவர்கள் போல வெறிகொண்டு சுழன்றனர்.


அங்கிருந்த பெருந்திரளில் அவர்கள் தங்களுக்குத் தேவையானவர்களை மட்டுமே நோக்கினர், பேசினர். கைகளின் வீசலாக கால்களின் அசைவாக அவர்கள் நிறைந்திருந்தனர். சிலகணங்களில் அவர்கள் மறைந்து கலங்களும் அகப்பைகளும் சட்டுவங்களும் தங்கள் விருப்பப்படி முட்டி மோதி ஒலித்து முழங்கி முனகி சுற்றிக்கொண்டிருப்பதாகத் தோன்றியது. தருமன் என்ன செய்வதென்றறியாமல் தயங்கியபடி நின்றிருந்தார். அவரை எவரும் கருத்தில்கொள்ளவில்லை. பீமன் அங்கே நீர்ப்பரப்பில் ஒரு சுழி எனத்தெரிந்தான். அவனை நோக்கியே மானுடரும் கலங்களும் சென்றன, அவனிலிருந்து விலகி வளைந்து ஓடின. அப்பால் இன்னொரு சுழியாக பிரபவர் தெரிந்தார்.


தன்னைச் சூழ்ந்து செல்லும் உடல்களுக்கு விலகி விலகி வழிவிட்டு சுவர் ஓரமாகவே சென்று அசையாமல் நின்றார். அர்ஜுனன் காய்களை நறுக்குமிடத்தில் நான்குவகையான கத்திகளுடன் பணியாற்றிக்கொண்டிருந்தான். அவன் கைகளால் காய்களும் கிழங்குகளும் சீரான துண்டுகளாக மாறி அப்பால் குவிந்தன. நகுலன் பொருட்களை சீராகப் பிரித்து அடுப்புகளுக்கு கொடுத்தனுப்பினான். சகதேவன் அடுமனைக் களஞ்சியத்தில் அமர்ந்து எடுக்கப்படும் பொருட்களை கட்டுப்படுத்தினான். அவர்கள் எவரும் அவர் வந்ததை அறியவில்லை. அவர்களின் கைகள் தாங்களே இயங்க விழிகள் அவற்றுடன் இணைந்து கொண்டன. எங்கிருக்கிறோம் என்பதையே அவர்கள் உணரவில்லை.


வெளியே முந்தையநாள் இரவெல்லாம் வந்துகொண்டிருந்த வணிகர்களும் அந்தணரும் காலையிலேயே எழுந்து நீராடி நீர்வணக்கங்களை முடித்து ஊண்மனைக்குள் குழுமிக்கொண்டிருந்தனர். மைத்ரியக்காட்டின் மரக்கூட்டங்களுக்கு அப்பால் வைதிகர் அமைத்திருந்த வேள்விச்சாலைகளில் புலரியின் எரிகொடை முடிந்து மங்கல வாத்தியங்கள் முழங்கத்தொடங்கின. “விரைவு! விரைவு!” என சரிவிறங்கும் குதிரைப்படைபோல அடுமனை முழங்கிச் சென்றுகொண்டிருந்தது.


தருமன் மெல்ல நகர்ந்து அருகே கலங்களை மூடும் பெரிய செம்புத்தட்டுகளை கழுவிக்கொண்டு வந்துகொண்டிருந்த ஒருவரிடமிருந்து அதை வாங்கினார். ஒருவர் அவரிடம் “அங்கே என்ன பார்வை? மூன்றாவது அடுப்பு… மூன்றாவது அடுப்புக்குப் போ” என்றார். அவர் அதை அங்கே கொண்டுசென்று வைத்து மீள்வதற்குள் மறுபக்கம் மேலும் தட்டுகளுடன் வந்தவர் “விரைவு… விரைவு!” என்றார். தருமன் ஓடிச்சென்று அதை வாங்கிக்கொண்டார். “நாலாவது அடுப்பு… விரைவு!”


நூற்றுக்கணக்கான அடுப்புகளில் தழல்கள் நின்றாடின. அவற்றின் மேலிருந்த செம்புக்கலங்கள் அனல்கொண்டு மெல்லிய விரிசல்மணி ஓசையுடன் செந்நிறமாயின. அவற்றில் குழம்புகளும் அவிநீரும் கொதித்து குமிழியுடைந்து தெறித்தன. வெல்லப்பாகு உருகும் மணம். கிழங்குகள் வேகும் மணம். காய்கறிகளின் கறைமணம். வெந்த அன்னம் பெரிய மரசல்லரிகளால் அள்ளி விரிக்கப்பட்ட ஈச்சம்பாயில் குவிக்கப்பட்டது. அதிலிருந்து எழுந்த புதுஅன்னத்து வெந்தமணம் பிற அனைத்து மணங்களையும் அள்ளி தன்மேல் சூடிக்கொண்டது. ஓர் இடத்தில் நசுக்கப்பட்ட சுக்கின் மணம் கூரிய ஊசி என மூக்கை குத்தியது. தட்டுகள் வந்துகொண்டே இருந்தன. தோள்கள் கடுத்தன. கெண்டைக்கால் தசைகள் இழுபட்டு வலிதெறித்தன.


“அங்கே, விளம்புகலங்கள்!” என ஒருவர் தருமனை நோக்கி கூவினார். “பரிமாறவேண்டியதுதான்! உடனே!” என இன்னொரு குரல். அவர் விளம்புகலங்களை நோக்கி ஓடினார். அப்பால் ஓடைநீரில் கழுவப்பட்ட கலங்கள் வந்துகொண்டிருந்தன. அவற்றைக் கொண்டுசென்று நிறைகலங்கள் அருகே அடுக்கினார். அவற்றில் குழம்புகளையும் அன்னத்தையும் அப்பங்களையும் அள்ளிக்கொண்டு விளம்புகாரர்கள் பந்திகளுக்குச் சென்றனர். “குடிநீர் தொன்னைகள்!” என கூச்சலிட்டபடி ஒருவர் அன்னப்பந்தலில் இருந்து ஓடிவந்தார். தருமன் ஓடிச்சென்று தொன்னைகளை கலவறையிலிருந்து பெற்றுக்கொண்டு அன்னப்பந்தல் நோக்கி சென்றார். “விரைவு… இன்னும் கால்நாழிகையில் முதல்பந்தி!”


அவருடன் எட்டுபேர் வந்தனர். அவர்கள் ஒருவரை ஒருவர் அடையாளம் காணவில்லை. எறும்புகள் போல தலைஎதிர் வந்ததும் ஒற்றைச்சொல் உரைத்து விலகினர். பந்தலில் நீண்ட எட்டு நிரைகளாக ஈச்ச ஓலைப்பாய்கள் சுருள் நீட்டி விரிக்கப்பட்டன. ஆறுநிரை சிவப்பும் இருநிரை வெண்மையும். பாய்களின் அருகே தைக்கப்பட்ட காட்டிலைகள் விழுந்து நீண்டு இலைமாலை போல எழுந்தன. தொன்னைகளில் குடிநீர் வைக்கப்பட்டது. விளம்புபவர்கள் எதையும் எண்ணாத கையுறுதியுடன் பணியாற்றினர். முதலில் உப்பு. பின் இனிப்பு. அதன்பின் ஒரு கனி. எளிய தொடுகறிகள். ஒவ்வொரு இலையும் வண்ணப்பொட்டுகள் கொள்ள நீண்ட இலைமாலையின் வண்ணம் மாறிக்கொண்டே இருந்தது. இளம்பச்சை இலைத்தொடர் வண்ணமலர்மாலை என ஆகியது.


“பந்தி அழைப்பு!” என்றார் ஒரு விளம்புகாரர் ஓடியபடியே. ஒருவர் தருமனை நோக்கி “முதியவரே, பந்தியழைப்பு!” என்று கூவிவிட்டு தொன்னைகளுடன் சென்றார். ஒருகணம் தயங்கிவிட்டு தருமன் வெளியே சென்று அங்கே கூடிநின்று கலைந்த பேரோசையென பேசிக்கொண்டிருந்த கூட்டத்திடம் கைகூப்பி “விருந்தினர்களே, அன்னம் உண்ண வரவேண்டும்… எங்களை வாழ்த்துகொள்ளச் செய்யவேண்டும்” என்றார். ஓர் இளைஞன் சென்று மரத்தாலான மணியை அடித்தான். அவ்வொலி கேட்டதும் அவர்கள் ஒருவர் இன்னொருவரை அழைத்துக்கொண்டு இயல்பாக ஒதுங்கி எட்டு நிரைகளாக அணி வகுத்தனர்.


முதலில் முதியவர்களும் இறுதியாக இளையோருமென அமைந்த அந்த நிரையின் தலையில் நின்றிருந்த முதியவரை பிரபவரின் முதிய மாணவர் ஒருவர் கால்தொட்டு சென்னி சூடி “வந்து அமர்க, மூத்தவரே!” என்றார். அவர் தலைதொட்டு வாழ்த்தியபின் உள்ளே சென்றார். தருமனும் இன்னொரு நிரை நின்ற முதியவரின் கால்தொட்டு பணிந்து உள்ளே அழைத்துக்கொண்டு சென்றார். எட்டு நிரைகளாக உள்ளே வந்தவர்கள் ஓசையின்றி உடை சுருட்டி கால்மடித்து அமர பூவும் சருகுமாக நீர்நிறையும் வயல்போல அன்னசாலை வடக்குமூலையிலிருந்து நிரம்பியபடி வந்தது.


ஒருவர் “ஏன் இங்கே இத்தனை ஆட்கள்? கலங்கள் எங்கே?” என்றார். தருமன் “இதோ” என்று அடுமனை நோக்கி ஓடினார். அங்கே அடுப்பிலிருந்து அடுகலங்களை காதுகளில் கயிறு கட்டி மூங்கில் ஊடே கொடுத்து தூக்கி ஊன்றுகோல் நாட்டி மெல்ல அசைத்து அப்பால் இறக்கிக்கொண்டிருந்தார்கள். அவர்களின் உழைப்புக்கூச்சல் கூரையை முட்டியது. வியர்வை வழியும் முதுகுடன் பீமன் ஒருவனாகவே ஒரு செம்புக்கலத்தை தூக்கி இறக்கிவைத்தான். “மேலும் தட்டுகள்!” என ஒருவர் தருமனை நோக்கி கூவ அவர் ஓடை நோக்கி ஓடினார். “கலங்கள் உடனே வேண்டும்… இரண்டாம்நிலை உணவுகள் சென்றுகொண்டிருக்கின்றன! யாரங்கே?”


பிரபவர் வெளியே சென்று ஓடையருகே நின்று உடலில் இரண்டு தொன்னை நீரை அள்ளிவிட்டு வியர்வையை கழுவிக்கொண்டு இன்னொரு மரவுரி ஆடையை அணிந்தபடி பந்திநோக்கச் சென்றார். அவருடன் சென்றபடி அவருடைய முதன்மை அணுக்கன் “எட்டுநிரைகள், நாநூற்றி எழுபத்தெட்டு இலைகள்… முதல் ஆறு நிரைகள் இரவுண்ணா அருகநெறியினர். ஆகவே அன்னமே போட்டுவிடலாமென எண்ணம்” என்றபடி அவருடன் சென்றார். அவர் தருமனை அறியா விழிகளுடன் நோக்கியபடி கடந்துசென்றார். ஊண்புரைகளில் கலங்கள் முட்டும் ஒலியும் உணவு கலங்கும் ஓசையும் மெல்லும் மூக்குறிஞ்சும் இருமும் கனைக்கும் ஓசைகளுடன் கலந்து ஒலித்தன. உண்ணும் ஒலி. அதை அவர் அப்போதுதான் கேட்பதாக உணர்ந்தார். அப்படி ஓர் ஓசை உலகில் உண்டென்றே அறிவதுபோல.


தருமனை நோக்கி வந்த ஒருவர் “தொன்னைகளும் இலைகளும் பந்திக்குச் செல்லவில்லை!” என்று கூவியபடி அகப்பைகளுடன் ஓடினார். தருமன் தொன்னைகளையும் இலைக்கட்டுகளையும் கொண்டுசென்று ஊண்நிரைகளுக்குப் பின்னால் நின்றிருந்த விளம்புகாரர்களுக்கு கொடுத்தார். “சுக்குநீர்! சுக்குநீர்!” என ஒரு குரல் எழுந்தது. அவர் ஓடிச்சென்று சுக்குநீர்க் குடங்களை தோளில் சுமந்துகொண்டுவந்து வைத்தார். அவை கொதித்துக்கொண்டிருந்தன. கரிந்த வாழையிலைகளைச் சுருட்டிவைத்து தோளில் ஏற்றிக்கொண்டபோதும்கூட தளும்பி தோளில் சொட்டி விதிர்க்கச்செய்தன.


“மறுபக்கம் அமர்வுக்கொட்டகைகளுக்கு வெற்றிலைச்சுருளும் நறுமண வாய்மங்கலங்களும் செல்லட்டும்… இதோ எழப்போகிறார்கள்” என்றபடி ஒருவர் அவரைக் கடந்து ஓடினார். வாய்மங்கலங்களை வெளிக்கொட்டகைக்குள் கொண்டுசென்று அடுக்கிவிட்டு அவர் வரும்போது ஓசையாலேயே முதல்பந்தி முடிந்தது தெரிந்தது. நிறைவான ஏப்பங்களும் மூச்சொலிகளும் எழுந்தன. முதியவர் ஒருவர் மெல்ல கனைத்ததும் அனைவரும் நிரையென எழுந்தனர். தொலைவிலிருந்து பார்த்தபோது அலையொன்று எழுவதுபோல் தெரிந்தது. அவர்கள் ஆடை கலையும் ஒலிகளுடன் எதுவும் பேசாமல் வெளிப்பாதையில் நடந்து கைகழுவும் ஓடையை நோக்கி சென்றனர்.


எச்சில் கைகளை இடைக்குக் கீழாக நீட்டியபடி நிரையாகச் சென்று தோண்டிகளிலும் தொன்னைகளிலும் நீரள்ளி அப்பால் சென்று கழுவினர். கழுவப்பட்ட நீர் வழிந்து அங்கே பாத்திகளாக விரிந்துகிடந்த கீரைக்கொல்லை நோக்கி சென்றது. கலந்து உண்ணப்பட்டதுமே உணவின் மணம் எச்சிலின் மணமாக ஆகிவிட்ட விந்தையை அவர் உணர்ந்தார். எச்சில் இலைகள் சீராக மடிக்கப்பட்டு கிடந்தன. இலைகளை எடுப்பவர்கள் பெரிய கூடைகளுடன் வந்தனர். “விரைவு! இலையகற்றுக!” என கூவியபடி ஒருவர் அப்பால் சென்றார். தருமன் அவர்களுடன் இணைந்துகொண்டார்.


முதல் இலையைத் தொட்டு வணங்கியபின் எடுத்து கூடையிலிட்டார். இருபக்கமும் கை நீட்டி இலைகளை எடுத்து கூடையிலிட்டபடியே சென்றார்கள். இலைகள் நிறைந்ததும் கூடைகளைத் தோளிலேற்றி வெளியே கொண்டுசென்று அங்கே நின்றிருந்த அத்திரிகளின் மேல் கட்டினர். அவை கால்மாற்றி எடை ஏற்றுக்கொண்டபின் தும்மி பிடரி சிலிர்த்து சரிவிறங்கி காட்டுக்குள் செல்லும் பாதையில் சென்றன. தருமன் அடுமனைக்குள் சென்று அங்கிருந்து வந்த முதுமாணவரிடம் “பெரும்பாலும் கீரைக்கூட்டு இலைகளில் எஞ்சியிருந்தது. கிழங்கு அப்பமும் ஓரளவு எஞ்சியிருந்தது” என்றார். “கீரையையும் கிழங்கையும் நோக்குக!” என அவர் அடுமனையாளர்களுக்கு ஆணையிட்டார்.


“இரண்டாம்பந்தி தொடங்குகிறது, வெயில் எழுவதற்குள் மூன்றாம் பந்தி முடிந்தாகவேண்டும்” என்று ஆணை ஒன்று ஒலித்தது. “குந்திரிக்கம் செல்க!” என்று ஒருவர் ஒரு பொட்டலத்தை அளித்தார். தருமன் பந்திக்கு ஓடினார். “குந்திரிக்கமா?” என ஒருவர் அதை பெற்றுக்கொண்டு இலைகளும் பாய்களும் அகற்றி தூய்மைப்படுத்தப்பட்ட பந்தியில் புகையிட்டு உணவுமணத்தை அகற்றினார். உணவுச்சிதறல்களுக்காக தேடிவந்திருந்த ஈக்களும் அகன்றன. “அடுத்தபந்தி தொடங்குகிறது. இலைகள், தொன்னைகள்!” என்றார் ஒருவர். தருமன் மீண்டும் அடுமனை நோக்கி ஓடினார். அவர் எதிரே நகுலன் ஒரு பொதியுடன் வந்து கடந்துசென்றான்.


இலைப்பொதிகளை கொண்டுசென்று முடித்ததும் அடுமனையாளர் அவரிடம் “நான்காம்பந்திக்கு மேலும் கிழங்குகள் தேவைப்படும்” என்றார். அவர் சென்று அர்ஜுனனிடம் அதைச் சொன்னபோது “மூன்றுமூட்டை கிழங்குகள் உடனே வரவேண்டும். இன்கிழங்குகள் வேண்டாம்!” என அவர் முகம் நோக்கி ஆளறியாமல் சொன்னான். அவர் “ஆம்… இதோ” என கலவறை நோக்கி ஓடினார். அடுத்த பந்திக்கான உணவுக்கலங்கள் சென்றுகொண்டிருந்தன. ஒழிந்த அண்டாக்களையும் நிலைவாய்களையும் வளைவாய்களையும் நீர் ஊற்றி அலம்பி அப்பால் சென்ற ஓடையில் கொட்டிவிட்டு மீண்டும் கயிறுகட்டித் தூக்கி அடுப்பில் ஏற்றினர். “விறகு! எரி எழுக!” என்று பீமனின் குரல் கேட்டது. தருமன் வெளியே சென்று விறகுக்குவைகள் அருகே நின்றவர்களிடம் “விறகு!” என்றார். “இதோ” என சொல்லி அவன் விறகுகளை அள்ளி கொண்டுசென்றான். அவரும் உடன் சென்றார்.


ஐந்தாம்பந்தி அரையளவே இருந்தது. அதன் இலைகளை அவரே எடுத்தார். அத்திரிகள் இலைகளுடன் சென்றதை நோக்கிவிட்டு அடுமனைக்கு வந்தபோது அது முழுமையாக ஓய்ந்து அமைதிகொண்டிருப்பதைக் கண்டு திகைத்தார். அத்தனை ஒழிந்த கலங்களும் திறந்து கிடந்தன. உணவுக்கலங்கள் மூடிவைக்கப்பட்டு விளிம்புகளில் ஆவி உமிழ்ந்தன. சற்றுமுன்புவரை சிறுகுன்றென குவிந்து வாழையிலையால் மூடப்பட்டிருந்த அன்னம் இருந்த இடத்தில் ஈச்சையோலைப் பாய் மட்டும் பரந்திருந்தது. உணவின் கலவைமணம். ஆனால் அப்போதுகூட அது எச்சில்மணமாக இல்லை, உண்ணத்தூண்டும் மணமாகவே இருந்தது. அடுப்புகளுக்குள் அனல் இளங்காற்றில் சீறிக்கொண்டிருந்தது.


குறுக்காகச் சென்ற ஒருவன் அவரை அடையாளம் கண்டு “அரசே, நீங்களா? உணவருந்தினீர்களா?” என்றான். “இல்லை” என்றார் தருமன். “அங்கே பின்கொட்டிலில் உணவருந்துகிறார்கள். தாங்கள் உள்ளறையில் அமர்ந்தால் நான் உணவு கொண்டுவருகிறேன்” என்றான் அவன். “நான் பின்கொட்டிலில் உணவருந்துகிறேன்…” என்றபின் அவர் வெளியே சென்று ஓடையில் கைகால்களை கழுவிக்கொண்டார். உடம்பு முழுக்க வியர்வை வழிந்து உப்பரித்திருந்தது. அத்தனை தசைகளும் வலியுடன் தளரத்தொடங்கின. அப்படி ஒரு பசியை அதற்கு முன் உணர்ந்ததே இல்லை என்று தோன்றியது.


பசி என எண்ணியதுமே பசி பற்றி எரியலாயிற்று. அடுமனைப் பின்கொட்டில் நோக்கி செல்லும்போது ஒவ்வொரு காலடிக்கும் பசி மேலெழுந்து உடல் எரிகொள்ளி போல தழல்கொண்டது. கொட்டிலில் அடுமனையில் பணியாற்றிய அனைவரும் கலைந்த நிரைகளாக அமர்ந்திருந்தனர். அன்னமும் அப்பமும் கூட்டும் குழம்புமாக எஞ்சிய உணவு மரக்குடைவுக் கலங்களில் குவிக்கப்பட்டு அவர்கள் நடுவே வைக்கப்பட்டிருக்க அவர்களே அதை நீண்ட அகப்பைகளால் அள்ளி தங்கள் தொன்னைகளில் போட்டு கலந்து உண்டனர். பனையோலையாலும் கமுகுப்பாளையாலும் மரப்பட்டைகளாலுமான பெரிய தொன்னைகளின் குவியல்களில் இருந்து ஒன்றை எடுத்துக்கொண்டு தருமன் உணவுத்தாலத்தை அணுகி அன்னமும் அப்பமும் குழம்பும் கூட்டுமென அனைத்தையும் அள்ளி வைத்துக்கொண்டார்.


வேறு எவரையும் நோக்க விழி கூடவில்லை. சித்தம் ஐம்புலன்களை ஆண்டு உணவின் மேல் படிந்திருந்தது. விரைவாக அள்ளி உண்டபோது அவையனைத்தும் ஒன்றெனக் கலந்தன. தனிச்சுவைகள் மறைய அறியாத புதுச்சுவை ஒன்று நாக்கை துடிக்கச்செய்தது. அனல்மேல் உணவுவிழுந்து அமையும் தண்மை. அதை குருதி உடலெங்கும் கொண்டுசெல்ல பதறித்துடித்த தசைச்சரடுகள் இழுவையிழந்து தளர்ந்தன. அடிபட்ட நாகமென துடித்த அடிவயிற்றுத் தசைகள் சொக்கி சுருளவிழ்ந்தன. உணவை உடலே ஒருங்கிணைந்து உண்ணும் உவகையை அன்று அறிந்தார். கனவு என, ஊழ்கமென.


ஓர் எல்லையில் உணவால் உடல் நிறைந்த உணர்வு எழுந்தது. வெளியே சென்று கைகால்களை கழுவிக்கொண்டு உடம்பின்மேலும் நீரள்ளிவிட்டு உப்பை தூய்மைசெய்துகொண்டார். உணவுண்ட அடுமனையாளர்கள் அனைவருமே மதுக்களிகொண்டவர்கள் போல விழி பாதிமூட கால்கள் தளர நடந்தனர். உள்ளே சென்று அங்கு குவிக்கப்பட்டிருந்த மரவுரிப்பொதிகள், கொடிச்சுருள் கூடைகளின் குவியலை அடைந்து சாய்ந்துகொண்டபோது விழியிமைகள் உருகி வழிந்து ஒட்டிக்கொண்டதுபோல துயில் வந்து அழுத்தியது.


எவரோ “அடுத்த பந்திக்கு பன்னிருநிலவாய் அன்னம் தேவை என்றார் ஆசிரியர்” என்றார். “பிருஹதாரண்யகத்தில் பெருவேள்வி. அங்கு செல்கிறார்கள்” என இன்னொருவர் சொன்னார். அப்பால் கேட்ட ஒரு குறட்டை ஒலி நகுலனுடையது போலிருந்தது. அவர் தன் முகம் மலர்ந்திருப்பதை தானே உணர்ந்தார். ஏன் புன்னகைக்கிறேன்? காட்டுக்குக் கிளம்பியபின்னர் முதல்முறையாக என் முகம் இப்படி மலர்ந்திருக்கிறது. நான் எதை எண்ணிக்கொண்டிருந்தேன்? எண்ணிக்கொள்ளவே இல்லை. விரையும் புரவியை பற்றிக்கொண்டு ஓடிக்கொண்டிருந்தேன். ஒவ்வொரு கணமும் முன்பின் இல்லாதது. எண்ணங்களால் மறைக்கப்படாதபோது கணங்கள் எத்தனை முழுமைகொள்கின்றன! உணவுசூழ இருந்தேன், ஒரு கணமும் பசியை உணரவில்லை.


பசியுடன் உணவுண்பவர்கள் ஏன் அப்படி தவிக்கிறார்கள்? காதலியை காணச்செல்பவர்கள் போல. கண்டு முத்தமிடுபவர்கள் போல. உடல்சேர்ந்து ஒன்றாக விழைபவர்கள் போல. உண்டு எழும் நிறைவில் அவர்கள் மானுடர் அடையும் உச்சமொன்றில் இருக்கிறார்கள். அதுவரை ஒருவரோடொருவர் எத்தனை பேச்சு! எவ்வளவு முறைமைச்சொற்கள்! பிறரை மதித்தல், தான் மதிக்கப்படுகிறோமா என கண்காணித்தல். உண்டபின் முழுத்தனிமை. தனிமையில் மட்டுமே எழும் எண்ணங்கள். தனிமைகொண்டவர்களுக்கு இசைகேட்பவர்களின் முகம் எப்படி அமைகிறது? அல்லது இசைகேட்பவர்கள் தனிமையில் இருக்கிறார்களா என்ன?


சற்றுநேரம்தான் துயின்றிருப்பார். மரத்தாலான மணி ஒலித்து எழுப்பியபோது உடல் மீண்டுவந்திருந்தது. எழுந்தபோது ஊழ்கம் விட்டெழுந்த புத்துணர்வு. “அடுமனையாளர்கள் செல்க!” என்று ஆணை ஒலித்தது. பீமன் மிகப்பெரிய சல்லரி ஒன்றை வலக்கையிலும் மரப்பிடி கொண்ட சட்டுவத்தை இடக்கையிலும் ஏந்தியபடி செல்வதைக் கண்டார். அர்ஜுனன் முன்னரே காய்கறி வெட்டுமிடத்தில் விரைவுகொண்டிருந்தான். வெளியே விறகுடன் நின்றிருந்த அத்திரிகளையும் கழுதைகளையும் வெறும் கையசைவாலேயே நிரைவகுக்கச்செய்து கொண்டுவந்தான் நகுலன். நினைவிலிருந்தே அத்தனை களஞ்சியக் கணக்குகளையும் தொகுத்து ஓலையில் பொறித்து அடுக்கிவிட்டு மீண்டும் பொருள் அளிக்கத் தொடங்கியிருந்தான் சகதேவன். ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்திறன். பாண்டவர்களில் அவர் மட்டுமே பிறர் ஆணைகேட்டு பணியாற்றுபவராக இருந்தார்.


மீண்டும் பணியில் பொருத்திக்கொண்டபோது அனைத்தும் முன்னரே வகுக்கப்பட்டிருந்ததை உணரமுடிந்தது. முந்தையமுறையைவிட உழைப்பு எளிதாக இருந்தது. வெளியே உணவுப்பந்தல் நிறைந்து ஒழிந்து நிறைந்தது. வெயில் சரிந்து நிமிர்ந்து மீண்டும் சரிந்தது. மாலையானதும் அப்பொழுதுக்குரிய அடுமனைப்பணியாளர்கள் துயிலெழுந்து நீராடி வந்துசேர்ந்தனர். முன்பிருந்தவர்கள் களைத்த உடலுடன் அவர்களை நோக்கி வாழ்த்துரைத்தனர். அவர்கள் கேலியுடன் சீண்டி சொல்லாடினர். தருமன் இளையோருடன் காட்டுக்குள் நடந்தார். கால்தளர இருமுறை நிற்கவேண்டியிருந்தது. “இங்கேயே ஏதாவது மரநிழலில் துயிலலாம் என்றுகூட தோன்றுகிறது, இளையோனே. நாகம் ஏறிக் கடந்துசென்றால்கூடத் தெரியாது” என்றார். “உண்ணுதல் இத்தனைபெரிய வேள்வி என இன்றுதான் அறிந்தேன், மூத்தவரே” என்றான் நகுலன். சகதேவன் “உண்ணல் அல்ல சுவை. சித்தமோ நாவோ விழியோ செவியோ சுவை என உள்ளவை அனைத்தும் பெரும் உழைப்பால் உருவாக்கப்படுபவையே” என்றான்.


நகுலன் “ஆம், முரசறைபவர்களை நோக்கும்போது மண்வெட்டி பற்றுபவர்களைவிட மும்மடங்கு உழைப்பு என நான் எண்ணிக்கொள்வதுண்டு” என்றான். “சுவை என்பது என்ன? இப்புவியின் பருப்பொருட்களில் உள்ளுறைந்துள்ள நுண்மை ஒன்றை பிரித்தெடுக்கும் முயற்சி அல்லவா? இந்த புளிக்காயிலிருந்து புளிப்பை. அந்த விளாங்காயிலிருந்து துவர்ப்பை. யாழிலிருந்து இசையை. அவற்றைக் கலந்து கலந்து அவையனைத்துமாகி நின்றிருக்கும் ஒன்றை சென்றடைகிறோம்” என்றான் சகதேவன். அவனே வெடித்துச் சிரித்து “மீண்டும் பிரம்மத்திற்கே வந்துவிட்டோம்!” என்றான்.


நகுலனும் சிரித்து “விளாங்காயின் துவர்ப்பையும் யாழின் செம்பாலைப்பண்ணையும் இணைக்கும் ஒரு கலை உருவாகவேண்டும். அதுதான் பிரம்மத்தை அறியும் வழி” என்றான். “மூத்தவர் பீமனிடம் கேட்டால் சொல்லக்கூடும். ஒருமுறை வங்கநாட்டு இசைஞன் ஒருவனின் குழலோசையைக் கேட்டு மிகவும் புளிக்கிறது இளையோனே என என்னிடம் சொன்னார்” என்றான் சகதேவன். “ஆம், முரசின் ஓசைக்கு மத்தகம் இருக்கிறது என்று ஒருமுறை அவர் சொன்னார். அவர் புலன்களுக்கு சித்தத்தின் துணையில்லாமல் ஒன்றுடன் ஒன்று உரையாடிக்கொள்ளமுடியும்.” அவர்கள் சிரித்துக்கொண்டே வர தருமன் அச்சொற்களைக் கேட்டும் உளம்கொள்ளாமல் நடந்தார்.


சூழ்ந்திருந்த சாறிலைச் செடிகளில் இருந்து குளிர் பரப்பிய சிற்றாறு இருண்ட நீர்கொண்டிருந்தது. அதில் இறங்கியபோதுதான் உடல் எத்தனை வெம்மைகொண்டிருந்தது என புரிந்தது. அத்தனை வெம்மையையும் அது தன்னுள் இருந்தே எடுத்திருக்கிறது. நீராட நீராட உள்ளிருந்து வெம்மை எழுந்து தோலுக்கு வந்துகொண்டே இருந்தது. நெடுநேரம் கழித்து காதுமடல்கள் குளிரத் தொடங்கின. பின்பு மூக்குநுனிகள். அப்போதும் உடலுக்குள் வெப்பமிருந்தது. அதைத் தணிப்பவர்போல அவர் நீரை அள்ளி துப்பிக்கொண்டே இருந்தார். நடுக்கம் தொடங்கியபோதுதான் கரையேறத் தோன்றியது. விழிகள் அனல்கொண்டவைபோல எரிந்தன. அப்பால் காட்டுக்குள் சென்று மீண்ட நகுலன் “அமிலமென வருகிறது சிறுநீர்” என்றான். “நன்று, குருதியிலிருந்து வெம்மை அகல்கிறது” என்றான் சகதேவன்.


கொட்டகையை அடைந்தபோது அவர் அரைத்துயிலில் இருந்தார். அந்தி வணக்கம் முடித்து அந்தணர்கள் வந்துசேரவில்லை. உணவுண்டு ஓய்வெடுத்து மறுநாள் புலரியிலேயே கிளம்ப முனையும் வணிகர்கள்தான் கட்டில்களில் படுத்து துயின்றுகொண்டிருந்தார்கள். அவர்களின் பொதிகளும் கூடைகளும் தரையெங்கும் நிறைந்திருந்தன. அவ்வேளையிலேயே கட்டில்களிலிருந்து குறட்டை ஓசை கேட்டது. தருமன் தன் மஞ்சத்தை அடைந்து உடலை சரித்தார். அக்கணமே அத்தனை மூட்டுகளும் பொருத்து அவிழ்ந்தன. உடல் பல துண்டுகளாக ஆகி மரவுரிமேல் படிந்தது. நகுலன் ஆடைகளை மடித்துவைத்துவிட்டு அருகே கட்டிலில் படுத்தான்.


அருகே கட்டில்களை சேர்த்துப்போட்டு அமர்ந்திருந்த வணிகர்குழு ஒன்று உரத்த குரலில் உரையாடிக்கொண்டிருந்தது. அவர்களின் நடுவே அமர்ந்திருந்த பெரிய வெண்தலைப்பாகை அணிந்த மனிதர் புலவர்போல தெரிந்தார். “மூன்றியல்புகளால் ஆன இவ்வியற்கையின் ஒவ்வொரு பொருளும் முதலியற்கையின் சிறுவடிவே. பொருளென்பது பொருண்மையென்றான நிலை. எதிர், நிகர் இயல்புகளின் தொகைக்குமேல் அமர்ந்த நோக்கன். நோக்கனின் கூறு உள்ளுறையாத பொருள் இல்லை. நோக்கன் விலகுகையில் பொருள் தன் பொருண்மைக்குப் பொருள்கொடுக்கும் அடிப்படையை இழந்துவிடுகிறது.”


“அப்போது பொருள் இருக்குமா?” என்று ஒருவன் கேட்டான். சாங்கியர் “பொருள் என்றுமிருக்கும். ஆனால் அதை பொருளெனக் காட்டும் எவ்வியல்பும் இருக்காது” என்றார். புன்னகையுடன் “அறியப்படாத பொருளின் இருப்பென்பது என்ன?” என்று கேட்டார். சூழ இருந்தவர்கள் அவர் சொல்லுக்காக காத்தனர். “ஒருவராலும் ஒருபோதும் அறியப்படாதது இருப்பா இன்மையா?” என்று மீண்டும் சாங்கியர் கேட்டார். “அது இருப்பு என அறியப்படுவதற்கான வாய்ப்பு” என்றார் அப்பால் ஒருவர். “நீங்கள் சூனியவாதிபோலும்” என்றார் சாங்கியர். “ஆம், என்றோ ஒருநாள் எவ்வண்ணமேனும் இருப்பென அறியப்பட வாய்ப்பற்றதே இன்மை.”


“இன்மையென்பது ஓர் அறிதல். இருப்பென்பதும் ஓர் அறிதலென்பதனால் இன்மையும் ஒரு இருப்பே” என்றார் இன்னொருவர். “வேதாந்திகள் வந்துசேராமல் சொல்லாடல் முழுமையடைவதில்லை” என்று நகுலன் சொன்னான். “சொல்புகாவிட்டால் வேதாந்திகள் இல்லையென்றாகிவிடுவார்கள். கண்ணுக்கு அசைவும் வேதாந்திக்கு சொல்லாடலும்” என்றான் சகதேவன். “சாங்கியரே, அறியும்தன்னிலை பொருளில் கலந்த இயல்பிலியா என்ன? இல்லை எதிர்நிலையை அது காண்கையில் தான் மறுநிலையென்றாகிறதா? அது மறுநிலை என்றாவதனால் அவ்வெதிர்நிலை உருவாகிறதா?” என்றார் வேதாந்தி “அறிபடுபொருளை ஆக்குவது அறிவே. அறிவென்றாகி அதை ஆக்குகிறது அறிபடுபொருள்” அவர் தொடர்ந்தார்.


நகுலன் “இன்னும் எட்டுச் சொற்றொடர்களில் பூனை நான்குகால்களில் நிலம்தொட்டுவிடும்” என்றான். வேதாந்தி “இடக்கையால் அறிபொருளையும் வலக்கையால் அறிபவனையும் ஆக்கி நடுவே நின்றுள்ளது அறிவு” என்றார். நகுலன் “இரண்டு” என்றான். சகதேவன் சிரித்தான். வேதாந்தி “ஆகவே வெறுமையென்றிருப்பதும் அறிவென்றாகும் வாய்ப்புள்ளதே. அறிவென்றாகும் வாய்ப்பில்லாத எதுவும் இங்கு எஞ்சமுடியாது” என்றார். நகுலன் “மூன்று” என்றான். தருமன் “இளையோனே” என்றார். நகுலன் “இல்லை” என்றான். “துயில்கொள். இந்தச் சொற்கள் நமக்கெதற்கு? நாம் நாளை புலரியில் எழுந்து அடுமனைக்குச் செல்லவேண்டியவர்கள்” என்றார் தருமன்.


“அறிவென்றாகி தன்னைக் காட்டுவதனாலேயே முடிவிலிகூட இருப்பு கொள்கிறது” என்று வேதாந்தி சொன்னார். தருமன் கண்களைமூடிக்கொண்டு இமைகளுக்குள் அவ்வோசையை செந்நிறச் சிறுகுமிழிகளாக நோக்கிக்கொண்டிருந்தார். “அறிவென்றாகும்போது அது குறைகிறதா என்பதே அடுத்த வினா.” அறிவு. எவருடையது? நான் அறிந்துகொண்டே இருப்பவை என்னுள் எங்கு செல்கின்றன? திரண்டு புது அறிவை யாக்கின்றன என்றால் நானறியும் அறிவே நான் திரட்டிக்கொள்வதா? தன் குறட்டை ஒலியை தானே கேட்டு விழித்துக்கொண்டு வாயைத் துடைத்தபடி திரும்பிப் படுத்ததையே இறுதியாக அவர் பிரக்ஞை அறிந்தது.


தொடர்புடைய பதிவுகள்

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 42
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 28
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 23
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 17
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 16
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 14
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 12
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 10
வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 5
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 3
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 83
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 79
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 78
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 77
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 56
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 07, 2016 11:30

September 6, 2016

ராமனின் நாடு

IMG_7453


 


 


மணி ரத்னம் இயக்கத்தில் கல்கியின் பொன்னியின் செல்வனை ஒரு சினிமாவாக எடுக்கும் திட்டம் ஆறாண்டுகளுக்கு முன்பு உருவானது. நான் அதற்குத் திரைக்கதை எழுதினேன். ஆனால் தமிழகத்தின் எந்தக்கோயிலிலும் படப்பிடிப்புக்கு அனுமதி கிடைக்கவில்லை. கோயில்களின் சுற்றுச்சுவர்கள் அல்லாமல் தமிழகத்தில் தரைத்தளத்தில் அமைந்த பெரிய கோட்டைகள் இல்லை. வரைகலை இன்றைய வளர்ச்சி அடையாத அன்றைய சூழலில் செட் போட்டு எடுப்பதென்றால் ஐம்பதுகோடி வரை செலவாகுமென கணக்கிடப்பட்டது. ஆகவே திட்டம் கைவிடப்பட்டது.


அந்தத்திரைக்கதையை நான் கோதாவரியின் கரையில் பிரம்மாவரம் அருகே இருந்த எலமஞ்சலி லங்கா என்னும் ஊரில் ஒரு விருந்தினர் மாளிகையில் ஒருமாதகாலம் தங்கி எழுதினேன்.


அற்புதமான சூழல். எலமஞ்சலி ஒரு அழகிய சிற்றூர். வளையோடுவேய்ந்த நீளமான வீடுகள் நிரைவகுத்த சீரான தெருக்கள் கொண்டது. வறுமையோ குப்பைக்கூளமோ இல்லாத சூழல். வீடுகளுக்கு முன்பக்கமாகவே இரு வாசல்கள். ஒன்று ஆண்களுக்கு இன்னொன்று பெண்களுக்கு.


ஊருக்கு அப்பால் பிரம்மாண்டமான தென்னந்தோப்புகள். தென்னங்காடு என்றே சொல்லவேண்டும். நடுவே ஓடும் மண்சாலை இரண்டு கிலோமீட்டர் தூரம் சென்று கோதாவரியை அடையும். கோதாவரிக்கரையின் ஓரமாக செம்படவர்களின் ஊர்கள். மண்ணாலான சுவர்கள் கொண்ட சிறிய வீடுகள். ஆனால் சுத்தமானவை. வாரந்தோறும் செம்மண்ணாலும் சுண்ணத்தாலும் கோலமிட்டு அவற்றை அழகுறச்செய்வார்கள்.


தென்னந்தோப்பு நடுவே இருந்தது நான் தங்கியிருந்த விருந்தினர் மாளிகை. பத்தடி உயரமான சிமிண்ட் தூண்களுக்குமேல் அது நின்றது. அதன் முகப்பு ஊரைநோக்கியிருந்தாலும் ,மறுபக்கம் மிகவிரிவான ஒரு உப்பரிகை கோதாவரியை நோக்கித்திறந்திருந்தது. அங்கிருந்து நோக்கினால் ஏறத்தாழ பத்து கிலோமீட்டர் அகலத்திற்கு கோதாவரி விரிந்து கிடக்கும்.


கோதாவரியின் மிக அதிகமான அகலம் அ%9

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 06, 2016 11:35

சிங்கப்பூர் காவியமுகாம்

index


நண்பர்களே


விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் பல வருடங்களாக இலக்கிய முகாம்களை தொடர்ந்து நடத்திவருகிறது. இச்சந்திப்புகள் புதிய படைப்பாளிகளை பங்கேற்கச் செய்து அறிமுகப்படுத்துவதாகவும், இலக்கிய ரசனையை மேம்படுத்துவதாகவும், மரபிலக்கியத்தை தொடர்ந்து அடுத்த தலைமுறைக்கு அறிமுகப்படுத்துவதாகவும் அமைகின்றன.


2010ம் ஆண்டில் இருந்து விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் “ஊட்டி காவிய முகாம்” என்ற தலைப்பில் தொடர்ந்து ஒவ்வொருவருடமும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த வருட விஷ்ணுபுரம் காவிய முகாம் சிங்கப்பூரில் இந்த மாதம் (செப்டம்பர்) 17,18 சனி,ஞாயிறு கிழமைகளில் நடைபெற இருக்கிறது.


இந்தியாவில் இருந்து முப்பதுக்கும் மேற்பட்ட இலக்கிய ஆர்வலர்கள் இந்நிகழ்வில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட 25 கவிதைகள் வழியாக கம்பராமாயணத்தின்அழகை எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பேச இருக்கிறார்.


எழுத்தாளர் சு வேணுகோபால், எழுத்தாளர். எம்.கோபாலகிருஷ்ணன் (சூத்ரதாரி) போன்றவர்கள் பங்கு கொள்கிறார்கள்


இதுதவிர சிறுகதை, நாவல் மற்றும் கவிதை பற்றி தனித்தனி அமர்வுகளும் அதை தொடர்ந்த விவாதங்களும் நடைபெறும்.


இறுதி நாளில் நாஞ்சில் நாடன், சு வேணுகோபால், எம் கோபாலகிருஷ்ணன் படைப்புகள்பற்றி அவர்களுடனான உரையாடல் நிகழ்வு நடைபெறும்.


மொத்தமாக ஐம்பது பேர்களுக்கு மட்டுமே அனுமதி என்பதால் முதலில் பதிவு செய்பவர்களுக்கே வாய்ப்பளிக்கும் கட்டாயத்தில் இருக்கிறோம்.


நிபந்தனைகள்



சந்திப்பு நிகழும் இரண்டு நாட்களும் வரவேண்டும்.
வரக்கூடியவர்கள் எல்லா அமர்வுகளிலும் முழுமையாகப் பங்கேற்க வேண்டும்.
வரவிரும்புகிறவர்கள் saran76@gmail.com என்னும் மின்னஞ்சலுக்கு தங்களைப்பற்றிய தகவல்களுடன் தெரிவித்தால் அழைக்கப்படுவார்கள். அழைக்கப்படாதவர்களுக்கு அனுமதி இல்லை. அனுமதி இல்லாமல் எவரையும் கூட்டி வரக்கூடாது.
தொடர்பு கொள்பவர்களுக்கு முகாமின் தேவைகளைப்பற்றி தகவல் மின்னஞ்சல் மூலம் தெரிவிக்கப்படும்
பதிவு செய்தபின் வர இயலாத சூழல் நேர்ந்தால் முன்னதாக தகவல் தெரிவிக்கவேண்டும். காத்திருப்பவர்களை அழைக்க ஏதுவாகும்.

முகாம் நடைபெறும் இடம்: Management Development Institute of Singapore (MDIS), Queens Town, Stirling Rd, Singapore


முகாம் நடக்கும் இரண்டு நாட்களுக்கும் காலை மற்றும் மதிய உணவு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.


தொடர்புக்கு saran76@gmail.com


இப்படிக்கு


சரவணன் விவேகானந்தன்


சிங்கப்பூர்

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 06, 2016 11:33

கனவுத்தமிழகம்,கோரதெய்வங்கள் -கடிதங்கள்

1


 


அன்பான ஜெயமோகன்


நலமாயுள்ளீர்களா?


.உங்களின் வலைத்தளம் மூலம் உங்கள் செயற்பாடுகளையும் சிந்தனைகளையும் அறிந்துகொள்கிறேன்


இன்று உங்கள் வலைத்தளத்தில் அகோர தெய்வங்களை வணங்குவதுசம்பந்தமாக நீங்கள் எழுதிய  ஒரு கட்டுரை பார்த்தேன்


மிக நல்ல கட்டுரை


அதனை நான் என் முக நூலில் இன்று பதிந்துமுள்ளேன்


அன்புடன்


மௌனகுரு


***


அன்பின் ஜெ..


உங்களிடம் பகிர்ந்து கொண்டேனா எனத் தெரியவில்லை. தென் ஆஃப்பிரிக்காவில் ஒரு அனுபவம்.


http://solvanam.com/?p=45519


இவர்களின் கனவிலும் தமிழகம் இருக்கிறது. மொழி இவர்களோடு போய்விடும். அடுத்த தலைமுறையை, மதம் இணைத்து நிற்கும்.


பாலா


 


 



 



தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 06, 2016 11:31

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 50

[ 4 ]


தொல்புகழ்கொண்ட இக்‌ஷுவாகு குலத்தில் சுத்யும்னனுக்கு மைந்தனாகப் பிறந்தவன் யுவனாஸ்வன் என்னும் அரசன். குருதி ஓயாத கொடுவாள் கொண்டவன் என அவன் புகழ்பாடினர் சூதர். பாரதவர்ஷத்தின் ஐம்பத்தாறுநாட்டு அரசரையும் அவன் அடிபணியச் செய்தான். அதன்பின்னரும் வெற்றிக்கான விடாய் ஓயாது மேலும் மேலுமென்று எழுந்தது அவன் உள்ளம். இரவுகள்தோறும் தன்னைப் பணியாத அரசர்களை வெல்வதைப்பற்றி கனவு கண்டான். அவர்களை வெல்லும் வழிதேடி போர்சூழ்கைகள் வகுத்தான். பகலில் தான் வென்ற நிலத்தின் மக்களுக்கு நீரும் அறமும் சீராகக் கிடைக்கும்படி கோல் நிறுத்தினான். பிறிதொரு எண்ணமே அவனுக்கு இருக்கவில்லை.


யுவனாஸ்வன் ஒன்பது மனைவியரை மணந்து பன்னிரு ஆண்டுகாலம் இல்லறம் நடத்தியும் அவனுக்கு மைந்தர் பிறக்கவில்லை. மணிமுடிக்கென மைந்தர் வேண்டுமென அவனிடம் அமைச்சர்கள் சொன்னபோது அதை அரசுசூழ்தலென்றே அவன் எடுத்துக்கொண்டான். தங்கள் மடியிலாட மகவுகள் தேவை என்று மனைவியர் சொன்னபோது அதை பெண்டிரின் இயல்பு என்று மட்டுமே புரிந்துகொண்டன். நாளும்பொழுதும் களம் வகுப்பதிலும் அரசு சூழ்வதிலும் அறமுரைப்பதிலுமே ஈடுபட்டிருந்தான். ஓயாது போரை எண்ணியிருந்தமையால் அவன் முகம் கற்சிலை போலிருந்தது. அசைவுகள் இரும்புப்பாவை போலிருந்தன. விழிகளில் முகமறியும் நோக்கே இருக்கவில்லை. குருதிபலி கோரும் கொடுந்தெய்வம் என்றே அவனை உணர்ந்தனர் சுற்றமும் சூழரும்.


கல் கனியாது அனல் பிறப்பதில்லை என்று நிமித்திகர் சொன்னார்கள். அரசனுக்கு மைந்தன் பிறக்கவேண்டுமென்றால் அவன் நெஞ்சு நெகிழவேண்டும். உடல் மென்மை கொள்ளவேண்டும். மண்ணில் பிறக்க விழையும் குழவியர் விண்ணில் நின்று கீழே நோக்குகிறார்கள். அருந்தவம் இயற்றுபவர்களையே அவர்கள் தேர்வுசெய்கிறார்கள். உளம்கனிந்த மடிகளிலேயே வந்து பிறக்கிறார்கள். இப்புவியில் நன்றோ தீதோ கோரப்படாது அளிக்கப்படுவதில்லை. மைந்தருக்கான பெருவிடாயை அவனுள் நிறைக்கவேண்டுமென அமைச்சர் விழைந்தனர். அவன் உடல் வேள்விக்குளமாக வேண்டும். அதில் விழைவெரியவேண்டும். ஆணவம் ஆகுதியாகவேண்டும்.


ஒருமுறை இரவுலாவச் சென்றபோது கால்களைத்து யுவனாஸ்வன் ஓர் அரசமரத்தடியில் தனித்து ஓய்வெடுக்கையில் முன்னரே அமைச்சர்கள் செய்து வைத்திருந்த ஏற்பாட்டின்படி எளிய சூதர்மகள் ஒருத்தி சற்றுமுன் பிறந்த தன் மகனுடன் அப்பால் படுத்திருந்தாள். காய்ச்சலுக்கான நச்சுமருந்து புகட்டப்பட்ட அவள் நோயுற்று மயங்கிக்கிடக்க அந்தக் குழந்தை வீரிட்டழத்தொடங்கியது. அவ்வொலியை முதலில் யுவனாஸ்வன் ஏதோ பறவை ஒலியென எண்ணினான். பின்னரே குழவியின் அழுகையென அறிந்தான். குழவிக்குரல்கள் எப்போதும் மானுடத்தை நோக்கியே எழுகின்றன, வேண்டுகின்றன, ஆணையிடுகின்றன, சீறுகின்றன. அதை ஒவ்வொருவரும் தங்களுக்கான தனிக்குரல் என்றே உணர்கின்றனர்.


செவிகுத்தும் அதன் அழுகையைக் கேட்டு அமர்ந்திருக்கமுடியாமல் அவன் எழுந்துசென்று நோக்கினான். அத்தனை தொலைவுக்கு அச்சிறிய குழந்தையின் குரல் வந்துசேர்ந்திருப்பதை உணர்ந்து வியந்தான். சருகில் கிடந்து குழந்தை செவ்விதழ்ச் செப்பு கோண கூவியழுதது. அங்கே சூதர்மகள் காய்ச்சல்கண்டு சுருண்டுகிடப்பதையும் குழவி அழுகையால் உடல்சிவந்து கைகால்கள் இழுபட்டு அதிர்ந்துகொண்டிருக்க தொண்டைதெரிய ஓசையிடுவதையும் கண்டான். தன் அமைச்சர்கள் வருகிறார்களா என வழிகளை பார்த்தான். அவர்கள் நீர்கொணரச் சென்றிருந்தனர். ஏவலரும் உடனில்லை.


அவன் அச்சூதமகளை காலால் மிதித்து எழுப்பினான். அவள் தன்னுணர்வில்லாத காய்ச்சலில் நடுங்கிக்கொண்டிருந்தாள். உதடுகள் உலர்ந்து ஒட்டியிருந்தன. மூச்சில் முலைக்குவைகள் எழுந்து அடங்கின. மெலிந்த உடல் அலைபாய்ந்தது. அழுது துடித்த குழவி ஓசையின்றி வலிப்புகொள்ளத் தொடங்கியது. யுவனாஸ்வன் அதை கையிலெடுத்தான். வாழைத்தளிர்போல அது கைகளில் குழைந்தது. மென்பட்டென வழுக்கியது. சுடர்துடிக்கும் அகல் என பதறச்செய்தது. அதை கையிலேந்திபோது கைகளுடன் கால்களும் நடுங்கின. அதை கீழே போட்டுவிடக்கூடாதென்று எண்ணி நெஞ்சோடணைத்துக்கொண்டான்.


நெஞ்சில் அதன் நெஞ்சத்துடிப்பை உணரமுடிந்தது. ததும்பும் சிறுகலம் என அதை ஏந்தியபடி அவன் அங்குமிங்கும் நிலையழிந்தான். என்ன செய்வதென்றறியாமல் சூழநோக்கினான். அவன் நெஞ்சத்துடிப்பை உடலால் உணர்ந்த அக்குழவி தன் கைகளால் அவன் மார்பின் முடியைப் பற்றிக்கொண்டது. பறவைக்குஞ்சுபோல நகம் நீண்ட அதன் கைகள் அவன் உடலைப் பற்றியபோது அவன் சிலிர்த்தான். அதை கையிலெடுத்தபோதே கனியும் கொஞ்சும் மன்றாடும் உளக்குரல் தன்னுள் ஊறியதை அறிந்தான். அக்குழவி அதை அறிந்து அழுகையை நிறுத்திவிட்டு தன் உடலை நெளித்து எம்பி தவிக்கும் வாயைக் குவித்து அவன் முலைக்கண்களைக் கவ்வி சப்பியது.


கூசித்திகைத்து அவன் பின்னடைந்தாலும் அது தன் வாயை எடுக்கவில்லை. அவன் மெய்விதிர்க்க சிலகணங்கள் நின்றான். தளர்ந்த கால்களுடன் மெல்ல பின்னடைந்து வேர்களில் அமர்ந்துகொண்டான். அவன் கண்கள் கலங்கி வழியலாயின. உடல் மெய்ப்புகொண்டு குளிர்ந்தடங்கி மீண்டும் அதிர்ந்து எழுந்தது. ஆழப்புண்பட்ட துளைவழியாக தன் குருதி வடிந்தோடுவதைப்போல உணர்ந்தான். முழுக்குருதியும் வழிந்தோட உடல் எடையழிந்து ஒழிவதாகத் தோன்றியது. கைகால்கள் இனிய களைப்பால் தொய்ந்தன. விழியிமைகள் சரிந்து ஆழ்துயில்போல ஒன்று அவனை ஆட்கொண்டது. அதில் அவன் பெண்ணென இருந்தான். அவன் கைகள் குழவியின் புன்மயிர்த்தலையை தடவிக்கொண்டிருந்தன.


அகலே நின்று நோக்கிய அமைச்சர்கள் ஓடி அருகணைந்தனர். முலையுறிஞ்சிக்கொண்டிருந்த குழந்தையை எடுத்து கொண்டுவந்திருந்த பாலை துணியில் நனைத்து ஊட்டினர். அந்நேரமும் அதை பிரியமுடியாதவனாக அவன் எழுந்து அதை நோக்கி கைநீட்டினான். அரண்மனைக்குக் கொண்டுசெல்லும்போது அக்குழவியை தன் கையிலேயே வைத்திருந்தான். அவன் மடியிலேயே அது உறங்கியது. இரவு தன்னருகே படுக்கவைத்து அதை தடவிக்கொண்டிருந்தான். தன் முலைக்கண்கள் ஊறுகிறதா என்றே ஐயம்கொண்டான். மீண்டும் இருளில் அதன் வாயில் முலைக்கண்களை அளித்து உடல் உருகலானான்.


அன்னை நோய்நீங்கி மறுநாள் விழித்ததுமே அக்குழவியை கேட்டாள். அவளை என்னருகே வந்தமர்ந்து முலையூட்டச்சொல் என்றான் அரசன். அவள் தன் குழந்தையைக் காண அரசனின் அறைக்குள் வந்தாள். அங்கு உடல்குறுக்கி அமர்ந்து முலையளித்தாள். குழவியை தன் அருகே இருந்து விலக்க அரசன் ஒப்புக்கொள்ளவில்லை. அரசப்பணியையும் நெறிகாத்தலையும் குழவியை கையிலேந்தியபடியே செய்தான். தனித்திருக்கையில் புவியில் பிறிதொன்றில்லை என்பதுபோல அக்குழவியையே நோக்கிக்கொண்டிருந்தான். கைவிரல்களால் ஓயாது வருடியும் மீளமீள முகர்ந்தும் அதை பார்த்தான். அதன் மென்தசையை முத்தமிட்டுச் சுவைத்தான். அதன் மூச்சொலி காதில்கேட்க காதுகளில் பிஞ்சுவயிற்றை சேர்த்துக்கொண்டான்.


பன்னிரு நாட்களுக்குப்பின் ஒருநாள் அமைச்சர் அக்குழவியையும் அன்னையையும் இரவிலேயே அரசனிடமிருந்து பிரித்து அவர்களின் அரச எல்லைக்கு அப்பால் கொண்டுசென்றுவிட்டனர். முகமறியா மக்கள்திரளில் அவள் முழுமையாக கலந்து மறையும்படி செய்தனர். விடிகாலையில் விழிப்புகொண்ட அரசன் அறியாமலேயே கைநீட்டி குழந்தையைத் துழாவி அதைக் காணாமல் திடுக்கிட்டு எழுந்து அமர்ந்தான். “எங்கே? என் குழந்தை எங்கே?” என்று கூவியபடி அரண்மனை இடைநாழிகளில் பித்தனைப்போல ஓடினான். எதிர்ப்படுபவர்கள் அனைவரிடமும் குழந்தையைப்பற்றி கேட்டு அழுதான். தூண்களை ஓங்கி மிதித்தான். ஏவலரை அறைந்தான்.


குழந்தையும் அன்னையும் மறைந்துவிட்டிருப்பதை உணர்ந்ததும் மேலாடை இல்லாமல் முற்றத்தில் இறங்கி கூவியபடி ஓடிய அவனை அமைச்சர் பற்றிக்கொண்டுவந்தனர். அவனிடம் மெல்ல மெல்ல அவர்களை மீண்டும் காணமுடியாது என்று சொல்லி புரியவைத்தனர். “அது அவள் குழந்தை. அன்னை தன் குழவியை இன்னொருவருக்கு விட்டுத்தரமாட்டாள். அரசன் ஆயினும். பேரன்புடையவன் ஆயினும். அவள் தப்பிச் செல்வது இயல்புதான். அரசே, உங்கள் உடலில் எழுந்த மைந்தரே உங்களுக்குரியவர்கள்” என்றனர்.


அழுது அரற்றியும் பித்தன்போல புலம்பியும் ஏங்கி சொல்லிழந்தும் அவன் அரண்மனையில் இருந்தான். அவன் தேவியர் அவனை தேற்றமுடியவில்லை. அவன் எவரும் தன்னருகே வருவதை விரும்பவில்லை. அக்குழவியின் ஆடைகளை எடுத்து நெஞ்சோடணைத்துக்கொண்டான். அது படுத்திருந்த மெத்தையின் மெல்லிய குழியை வருடி வருடி கண்ணீர்விட்டான். நாளும் அவன் துயர் ஏறிஏறிச் சென்றது. அதன் உச்சியில் அத்துயர் மறுபுரிச்சுழற்சி கொண்டது. ஏழாம்நாள் அவன் அரைத்துயிலில் இருந்தபோது தன்னருகே குழவி இருப்பதை உடலால் உணர்ந்தான்.


விழிதிறந்தாலோ கைநீட்டினாலோ அது கலைந்துவிடுமென்றும் அறிந்திருந்தான். ஆனால் அவன் உள்ளம் உவகையால் நிறைந்தது. உடற்தசைகள் முறுக்கவிழ்ந்து தளர்ந்தன. குழவி மெல்ல அவன் முலைக்கண்ணை சுவைக்கத் தொடங்கியது. அவன் ஆழுணர்வில் அதில் திளைத்தான். குழவி அவனை உண்டபடியே இருக்க அவன் துயிலில் ஆழ்ந்தான். அங்கே அக்குழவியுடன் அறியா நிலங்களில் நடந்தான். விழித்துக்கொண்டபோது அருகே குழவி இல்லை என்னும் தெள்ளிய உணர்வு எஞ்சியிருந்தது, ஆனால் துயர் இருக்கவில்லை. குழவி கிடந்த அந்த மென்மையான மரவுரிக்குவையை கையால் நீவியபடி அவன் விழி கசிந்துவழிய படுத்திருக்கையில் தன் மேலாடை நனைந்திருப்பதைக் கண்டான். அவன் இருமுலைகளும் சுரந்திருந்தன.


யுவனாஸ்வன் மைந்தர் பிறப்பதற்கான வேள்விகளை இயற்றலானான். பிருகுநந்தனர் என்னும் பெருவைதிகர் அவன் அவையிலமர்ந்து அந்த வேள்விகளை அவனுக்காக ஆற்றினார். ஏழு புத்ரகாமேஷ்டிகளை அவன் செய்தான். ஏழாவது வேள்வியனலில் எழுந்த இந்திரன் “ஊழ்வினையின்படி இவ்வரசனுக்கு மைந்தர் இல்லை. இவன் அன்னையின் கருவுக்குள் பார்த்திவப்பரமாணுவாக இருக்கையிலேயே முடிவானது அது. விதைகள் அற்றது இவன் உடல்” என்றான். “ஊழ் பிரம்மனின் நெறி. வேதம் பிரம்மனையும் ஆளும் நெறிகொண்டது” என்றார் பிருகுநந்தனர். “வேள்விக்கு எழும் அத்தனை தெய்வங்களும் இங்கு வருக! பிரம்மனே வருக!”


மீண்டும் ஏழு புத்ரகாமேஷ்டி வேள்விகளை பிருகுநந்தனர் அமைத்தார். அமைச்சர்கள் உளம்சோர்ந்தனர். தேவியர் நம்பிக்கை இழந்தனர். கருவூலம் ஒழிந்துவந்தது. அரசன் படைக்களம் மறந்தான் என்றறிந்து எல்லைகளில் எதிரிகள் கொழுக்கலாயினர். அவன் நெறியவைக்கு வராமையால் குடிகள் கட்டவிழ்ந்தனர். “அரசருக்கு மைந்தர் இல்லை என்பதே ஊழ் என்றால் அவ்வண்ணமே ஆகுக! அரசரின் இளவல்கள் எவரேனும் அவருக்குப்பின் முடிசூடட்டும்” என்றனர் அமைச்சர். “நாங்கள் முதுமைகொண்டுவிட்டோம். எங்கள் வயிறுகள் கருக்கொள்ளும் ஆற்றலிழந்துவிட்டன. இப்பிறவியில் இப்படி என எண்ணி அமையவும் கற்றுவிட்டோம்” என்றனர் அரசியர்.


ஆனால் யுவனாஸ்வன் ஒரு சொல்லையும் செவிகொள்ளவில்லை. “உயிரின் இறுதித்துளி எஞ்சுவதுவரை மைந்தனுக்கான வேள்வியிலேயே இருப்பேன். என் உடல் முளைக்காமல் இங்கிருந்து அகலமாட்டேன்” என்றான். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கணமும் அவன் மைந்தன் என்னும் நினைவிலேயே வாழ்ந்தான். அவன் உறுதிகொண்ட உடல் நெகிழ்ந்து குழைவுகொண்டது. முகத்தில் மயிர் உதிர்ந்து பெண்மை வந்தது. முலைகள் உன்னி எழுந்தன. இடைசிறுத்து தொடைபெருத்து நடை ஒல்கியது. இதழ்கள் நீர்மைகொண்டன. கண்கள் நீண்டு கூர்கொண்டு கனவுசூடின. குரலில் யாழும் குழலும் கலந்தன.


பதினான்காவது வேள்வியில் எழுந்த பிரம்மனிடம் பிருகுநந்தனர் சொன்னார் “இங்கு நிகழும் அனல்வேள்வி என்பது அரசன் தன் உள்ளத்தால் செய்யும் எண்ணவேள்வியின் மறுவடிவே. இவ்வேள்வியைக் கடந்தாலும் அவ்வேள்விக்கு நீங்கள் நின்றாகவேண்டும், படைப்பிறையே. அருள்க!” பிரம்மன் “என் ஊழைக் கடப்பது முனிவரின் தவம். அது துணை செய்க!” என்று அருளினார். “திசைமுகனே, உங்கள் அருள் இந்த கங்கைநீரென்றாகுக! இதை அருந்தி அரசனின் துணைவியர் கருக்கொள்க!” என்றார் பிருகுநந்தனர். “அவ்வாறே” என்று பிரம்மன் சொல்லளித்தார்.


தர்ப்பையால் அனலைத் தொட்டு கங்கை நீர்க்குடத்தை வருடி அதில் நான்முகன் அருளை நிறைத்தனர். முறைமைசெய்து வேள்வி முடிந்து அந்த நீர்க்கலத்துடன் வேள்விச்சாலையிலிருந்து அருகிலிருந்த கொட்டகைக்குச் சென்ற வேதியர் அங்கேயே அமர்ந்தனர். ஆடைகளை மாற்றிக்கொண்டு மஞ்சத்துக்குச் செல்ல விழைந்தவர்கள் களைப்பால் அங்கேயே அவ்வண்ணமே படுத்துத் துயின்றனர். கொட்டகைக்கு நடுவே இருந்த சிறு பீடத்தில் பொற்கலத்தில் அந்த நீர் இருந்தது.


அவ்விரவில் வேள்வி முடிந்த மணியோசைகளையும் சங்கொலிகளையும் கேட்டுக்கொண்டே அருகே இருந்த வேள்விக்காவலனுக்கான பந்தலில் அரைத்துயிலில் இருந்த யுவனாஸ்வன் தன் உடலில் அனல் பற்றி எரிவதுபோல் கனவு கண்டான். உலர்சுள்ளியைப்போல அவன் கை பற்றிக்கொண்டது. கால்களும் தலையும் எரியலாயிற்று. முலைகள் கனலாயின. வயிற்றில் தழல்சுழன்றது. அந்த அனல் அவன் உடலின் கீழ்ப்பகுதியில் மூலாதாரத்தில் இருந்தே எழுந்தது என்றறிந்தான். விழித்துக்கொண்டபோது தன் உடல் விடாயில் தவிப்பதை உணர்ந்தான். அத்தகைய பெருவிடாயை அவன் முன்பறிந்ததே இல்லை. தொண்டையை கைகளால் வருடியபடி எழுந்து ஓடி கொட்டகைக்கு வந்தான். அங்கே பொற்கலத்திலிருந்த கங்கை நீரைக்கண்டு பிறிதொன்று எண்ணாமல் அதை எடுத்துக் குடித்தான்.


ஓசைகேட்டு விழித்துக்கொண்ட பிருகுநந்தனர் கையில் ஒழிந்த குடத்துடன் நின்றிருந்த யுவனாஸ்வனைக் கண்டு திகைத்தார். என்ன நிகழ்ந்ததென்று உடனே புரிந்துகொண்டார். அனைத்து வைதிகரும் பதறி எழுந்து அரசனைச் சூழ்ந்தனர். “என்ன செய்துவிட்டீர்கள், அரசே?” மைந்தனைப் பெறுவதற்கான வேள்விப்பயனை நிறைத்துவைத்த குடமல்லவா இது?” என்றார் பிருகுநந்தனர். “நிகரற்ற வல்லமைகொண்டவனாகிய மைந்தன் இந்த நீரில் நுண்வடிவில் உறைகிறான். பருவுடல் கொள்ள பெருவெளியில் அவன் காத்திருக்கிறான்.” யுவனாஸ்வன் “நான் அறிந்திலேன். இவ்வண்ணம் எப்படி நிகழ்ந்தது என்றே எனக்குத் தெரியவில்லை” என்றான்.


நிமித்திகரை அழைத்து வருகுறி தேர்ந்தனர். பன்னிரு களம் அமைத்து கல்லுருட்டி கணக்கிட்டு நிமிர்ந்த முதுநிமித்திகர் சாந்தர் சொன்னார் “அந்தணரே, தான் எனத் திரண்ட மைந்தன் பருவுடல்கொள்வது உறுதி. தந்தையை வெல்லும் ஆற்றல்கொண்டவன் ஆவான். ஏழு பெருவேள்விகளை நிகழ்த்தி குலம் வாழச்செய்வான்.” பின்னர் எவர் விழிகளையும் நோக்காமல் “நான் சொல்வது குறிகள் காட்டுவதை மட்டுமே. அந்த மைந்தன் அரசரின் உடலிலேயே கருவுறுவான். அங்கு உயிருடல் கொண்டு பிறப்பான்” என்றார்.


ஆனால் பிருகுநந்தனரோ யுவனாஸ்வனோ திகைப்புறவில்லை. அந்தணர் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டனர். “அரசரின் பெருவிழைவு தன் உடல்முளைக்கவேண்டும் என்பதே. அவ்வாறே அருளின தெய்வங்கள்” என்றார் நிமித்திகர். “ஆம், அவ்வண்ணமே ஆகுக! அதுவும் நல்லூழே” என்றார் பிருகுநந்தனர். அரசன் நெடுமூச்செறிந்தபோது முலைகள் எழுந்தமைந்தன. கனவுடன் கண்முனைகள் கசிவுகொண்டன. இடைநலுங்க அணிகள் குலுங்க அவன் நடந்து தன் அறையைச் சென்றடைந்தான். அங்கு மஞ்சத்தில் களைப்புடன் படுத்துக்கொண்டு கண்மூடி புன்னகைக்கும் மைந்தனின் முகத்தைக் கண்டான். மெய்விதிர்ப்பு கொள்ள “என் தெய்வமே” என நெஞ்சில் கைவைத்து அழுதான்.


அரசனின் வயிறு பெருத்தது. வரிகளோடிச் சரிந்தது. அவன் முலைக்கண்கள் கருமைகொண்டன. புதுமணல்போல மென்வரிகளுடன் முலைக்குவைகள் பருத்துச் சரிந்தன. அவன் உதடுகள் கருமைகொண்டு மூச்சில் இனிய ஊன்மணம் கலந்தது. கழுத்தும் கையிடுக்குகளும் கன்றின. கண்வெளுத்து நடை தளர்ந்தது. அரண்மனைச் சுவர்களை உடைவாளால் சுரண்டி சுண்ணத்தை உண்டான். திரி எரிந்த சாம்பலை சுட்டுவிரலால் தொட்டுச் சுவைத்தான். குங்குமத்தையும் களபத்தையும் சிறு இலைப்பொட்டலமாக எடுத்துவைத்துக்கொண்டு தின்றான். சிறு ஒலி கேட்டும் திடுக்கிட்டான். நிற்கையிலும் நடக்கையிலும் தன் வயிற்றையே எண்ணிக்கொண்டான். தனியாக அமர்ந்து வானை நோக்கி கனவுகண்டான். சிறுபறவைகளையும் வண்ணப்பூச்சிகளையும் கண்டு குழந்தைபோல முகம்மலர்ந்து சிரித்தான்.


மாதங்கள் செல்ல அரசனின் வயிறு பெருத்து வலப்பக்கம் சரிந்தது. வலக்கை ஊன்றி பெருமூச்சுடன் எழுந்தான். புரியாத ஐயங்களும் அச்சங்களும் கொண்டு உளம் கலங்கி தனிமையில் அழுதான். மத்தகம் தூக்கி கொம்பு ஒளிவிட இருளிலிருந்து வரும் களிற்றுயானையை மீண்டும் மீண்டும் கனவுகண்டான். இரவில் முழுத்துயில் இல்லாது கண் சோர்ந்து எழுந்தான். கைகள் குடைச்சல்கொள்ள நாளெல்லாம் மஞ்சத்தில் அசைவில்லாது அமர்ந்திருந்தான். கால்கள் வீங்கின. பின் முகம் உப்பி ஒளிகொண்டது. கண்ணிமைகள் கனிந்து தொங்கின. சிறு அசைவுக்கே நெஞ்சு படபடக்கத்தொடங்கியது. மழலைச்சொல் உரைப்பவன் ஆனான். அனைவர்மீதும் கனிவும் அனைத்தின்மீதும் எரிச்சலும் மாறிமாறி வந்து அவனை அலைக்கழித்தன.


அரசன் வயிற்றில் மைந்தன் இருப்பதை மருத்துவர் உறுதிசெய்தனர். அவன் வளர்ந்து கையும் காலும் கொள்வதை தொட்டுப்பார்த்து சொன்னார்கள். முழுவளர்ச்சியடைந்த மைந்தன் ஒலிகளுக்கு செவிகொடுத்தான். காலால் தந்தையின் வயிற்றை உதைத்து உந்தி முழைகாட்டினான். அவன் அசைவை அறிந்து யுவனாஸ்வன் உடல்விதிர்க்க கூசிச்சிரித்து துள்ளினான். அந்த முழைமேல் கைவைத்து கூச்சலிட்டு நகைத்தான். “உயிர்கொண்டிருக்கிறான்! உயிர்!” என்று கூவினான். “என் உயிர்! என் உயிரை நானே தொடுகிறேன்!” ஊழ்கத்தில் என என் உயிர் என் உயிர் என்று சொல்லிக்கொண்டே இருந்தான்.


அம்மைந்தன் எப்படி பிறக்கமுடியும் என மருத்துவர்களுக்கு புரியவில்லை. அரசன் இறக்கக்கூடும் என அவர்கள் அஞ்சினர். பாரதவர்ஷமெங்கும் தூதர்களை அனுப்பினர். அகத்தியரின் வழிவந்த முதுமருத்துவர் ஒருவர் அவர்களின் அழைப்புக்கிணங்கி வந்தடைந்தார். இடையளவே உயரமிருந்த அவர் பெரிய உருண்டை விழிகளும் ஓங்கிய குரலும் கொண்டிருந்தார். “விலாபிளந்து மைந்தன் எழுவான். ஏனென்றால் மண்ணின் விலாபிளந்தே செடிகள் எழுகின்றன.”


அரசனுக்கு மூலிகைகொடுத்து மயங்கவைத்து அவரும் அவருடைய ஏழு மாணவர்களும் அவன் வயிற்றின் தசைகளைக் கிழித்து கனி அகழ்ந்து விதையைப் பிதுக்குவது போல மைந்தனை வெளியே எடுத்தனர். குருதிவழிய குளிர்கொண்டு அவன் அழுதான். அவன் உடலிலக்கணம் நோக்கி “அரியவன். ஆள்பவன்” என்றார் அகத்தியர். அழுகை கேட்டு உள்ளே ஓடிவந்த அமைச்சர்கள் “எங்கே? அரசர் எங்கே? அவர் நலமாக இருக்கிறாரா?” என்றார்கள். தசைகளைப் பொருத்தி குதிரைவால்மயிரால் சேர்த்துத் தையலிட்டு தேன்மெழுகும் அரக்குமிட்ட பட்டுத்துணியால் சுற்றிக்கட்டி பக்கவாட்டில் படுக்கவைக்கப்பட்டிருந்த யுவனாஸ்வன் குருதிமணத்துடன் துயின்றுகொண்டிருந்தான்.


குழந்தையின் அழுகுரல்கேட்டு ஒன்பது அன்னையரும் ஓடிவந்தனர். “அமுது! முதலமுது!” என அகத்தியர் விரைவுபடுத்தினார். சேடியர் ஓடிச்சென்று நறும்பாலை கொண்டுவந்தனர். அதை தூயபஞ்சுத்திரியில் தொட்டு மைந்தன் வாயில் வைத்தனர் அன்னையர். அவன் அதைத் துப்பி வழியவிட்டு செந்நிறக் கைகளைச் சுருட்டி ஆட்டி அடிக்கால்கள் சுருங்க கட்டைவிரல் சுழிக்க அதிர்ந்த வயிற்றுடன் அழுதான். அரியதொன்று இரண்டாகக் கிழிபடும் ஒலியுடன் அழுத அவனைக்கண்டு செய்வதறியாமல் அவர்கள் திகைத்தனர்.


“முலையூட்டும் சேடி ஒருத்தியை கொண்டுவருக!” என அமைச்சர் சாம்யர் ஆணையிட்டார். ஏவலர் ஓடி முலைப்பெண்டிர் எழுவரை கொண்டுவந்தனர். ஆனால் அவர்கள் தங்கள் கைகளால் தொட்டதுமே மைந்தனின் உடல் நீலம்பாரித்து விரைப்புகொண்டது. அவன் உதடுகள் அவர்களின் முலைக்கண்களை கவ்வவில்லை. நாண் இழுபட்ட சிறு வில் என அவன் அவர்கள் கைகளில் இறுகியிருந்தான். ஏழு முலைப்பெண்டிரும் அவனை ஊட்டமுடியவில்லை. முலைப்பாலை அவன் வாயில் பீய்ச்ச வைத்தபோதும் உண்ணாமல் கடைவாய் வழிய அவன் துடித்து நடுங்கினான்.


“குழவி கருவறைக்குள்ளேயே குருதிவழியாக அன்னையின் முலைப்பாலை அறிந்துள்ளது. அந்த மணமே அதை முலைக்காம்பு நோக்கி இழுக்கிறது. இம்மைந்தன் அதை அறிந்திருக்கவில்லை” என்றார் அகத்தியர். “என்ன செய்வது? இறப்புதான் இளவரசரின் ஊழா?” என்றார் அமைச்சர் சாம்யர். “அவ்வாறென்றால் நாம் என்ன செய்வது?” என்றார் அகத்தியர். அப்போது மெல்ல விழி அதிர்ந்து முகம் உயிர்கொண்ட யுவனாஸ்வன் “என்ன ஓசை?” என்றான். “அரசே, தங்கள் உடல்திறந்து வந்த மைந்தன்” என்று தூக்கிக்காட்டினார் அகத்தியர். “மைந்தன் ஏன் அழுகிறான்?” என்றான் யுவனாஸ்வன். “அவனுக்கு அன்னைமுலை உகக்கவில்லை. அவனுக்கு அமுதூட்ட வழியில்லை” என்றார் அமைச்சர்.


இடக்கையை ஊன்றி உடலை அசைத்துத் தூக்கி கைநீட்டிய யுவனாஸ்வன் “மாந்தாஸ்யதி!” என்றான். என்னை உண்ணுக என்றுரைத்து தந்தையால் தூக்கி நெஞ்சோடணைக்கப்பட்ட குழவி அள்ளி அவன் மார்பை பற்றிக்கொண்டது. அவன் முலைகளில் வாய்சேர்த்து உறிஞ்சி உண்ணலாயிற்று. அவனை அன்னையர் மாந்தாதா என்று செல்லப்பெயரிட்டு அழைத்தனர். தாயுமானவன் கையால் வளர்க்கப்பட்ட அவன் பிறரைவிட அரைமடங்கு உயரமானவனாக வளர்ந்தான். மூன்று மாதங்களில் பல் தோன்றியது. ஆறு மாதங்களில் பேசினான். எட்டு மாதத்தில் நடந்தான். ஒரு வயதில் வில்லேந்தினான். ஏழு வயதில் களம்புகுந்தான். பன்னிரு வயதில் பரிதொடர்வேள்வி செய்து மாமன்னன் என புகழ்பெற்றான்.


ஆஜகவம் என்னும் அவன் வில்லின் நாணோசை தீயவருக்கு இடியென்றும் நல்லவருக்கு யாழென்றும் ஒலித்தது என்றனர் சூதர். வெற்றித்தோள்களுடன் எழுந்த மைந்தனை நோக்கி நிறைவுகொண்ட யுவனாஸ்வன் ஒருநாள் கான்புகுதலுக்கு ஒருங்கினான். அவன் கால்களைத் தொட்டு வணங்கி எழுந்த மைந்தனிடம் “நான் உன்னிடம் சொல்வது ஒன்றே. நான் உன்னிடம் சொன்ன முதல் சொல் அது, என்னை உண்ணுக! எப்போதும் உன் நாவிலிருக்கட்டும் அச்சொல்” என்றான். அவனை கானக விளிம்புவரை சென்று வழியனுப்பிவைத்தான் மாந்தாதா.


தந்தை சொன்னதன் பொருளை மறுநாள் முதல் அவன் உணரலானான். காலையில் முதன்முதலாக அவன் கண்ட ஏவலனை நோக்கி சொல்லெடுக்கும் முன் ‘என்னை உண்ணுக!’ என்றது அவன் அகம். அகம்படியாளனை, அணுக்கனை, அமைச்சரை, காவலரை, அவையோரை நோக்கி அவன் எச்சொல் எடுப்பதற்கு முன்னரும் அச்சொல் எழுந்து நின்றது. அவையில் கைவிலங்கு பூட்டப்பட்டு நின்றிருந்த அயல்நாட்டு ஒற்றனின் தலைகொய்ய ஆணையிட எழுந்தபோதும் ஊடாக வந்தது அச்சொல். அருகே சென்று தலையை கையால் வருடி அஞ்சி உணர்வழிந்திருந்த அவன் விழிகளை நோக்கி அதை சொன்னான். அவன் விழிநீர் பெருக அரசனின் கால்களில் விழுந்தான்.


அரசாளும் அன்னை என்று மாந்தாதா மக்களால் அறியப்பட்டான். வற்றாத முலைப்பால் எழும் உடல்கொண்டவன் அவன் என்றனர் சூதர். பல்லாயிரம் ஊற்றுக்கள் எழுந்து ஓடைகளாகவும் ஆறுகளாகவும் பெருகும் வறனுறல் அறியா நறுஞ்சோலை என்றனர் கவிஞர். அவன் கால்பட்ட இடங்களில் பசுமரங்கள் முளைத்தன. அவன் சொல்கொண்டு வாழ்த்திய குழவியர் சொல்பெற்றனர். அவன் கைதொட்ட நோயாளர் ஆறுதல்கொண்டனர். அவன் அரசமுனிவரில் முதல்வனென்றனர் படிவர்.


அவன் உலகுநீத்தபோது விண்ணில் இந்திரவில் எழுந்து கரையாமல் நின்றது. பொற்துருவலென ஒளியுடன் மழைபொழிந்தது. சான்றோர் கூடி அவனை மண்ணில் புதைத்தனர். நிலமென விரிந்தான் அரசன், அவன்மேல் வேர்கொண்டெழுந்தன குடிகள் என்றன கதைகள். அவன் உடல்மேல் எழுந்து விதைத்தொடர் என ஆயிரம் ஆலமரங்கள் எழுந்தன என்றன தொல்குடிச் சொற்கள். இறுதி ஆலமரம் கிளைவிரித்து கனிகொண்டது. பல்லாயிரம் பறவைகள் அதன்மேல் சிறகு குவித்தமர்ந்தன. அதன் கீழ் வந்தமர்ந்த இளஞ்சூதனின் அறிதுயில் செவியில் சென்று யுவனாஸ்வன் உரைத்தான் “என்னை உண்ணுக!”


விழித்தெழுந்து திகைத்து அமர்ந்தான் அச்சிறுவன். அச்சொல்லை அறியாது அவன் வாய் அரற்றத்தொடங்கியது. பின் அவன் ஒவ்வொரு எண்ணத்துக்கு முன்னரும் அச்சொல் இணைந்துகொண்டது. நாளடைவில் அவன் நாவுரைக்கும் எச்சொல்லும் அச்சொல்லென்றே பொருள்கொண்டன. அன்னமெனக் கனிந்தது அவன் கை. ஒருநாளும் ஒழியாது அவனை உண்டு வயிறு குளிர்ந்தனர் மானுடர். முதிர்ந்து முழுமைகொண்டு கடந்துசெல்வதற்கு முன் அவன் அச்சொல்லை தன்னை அணுகிய பிறிதொருவனுக்கு உரைத்தான். நாவிலிருந்து நாவுக்குச் சென்று அச்சொல் அங்கே அழியாது வாழ்ந்தது. வேட்கும் வேள்விநிலைகளுக்கு நடுவே வேதிக்கும் வேதநிலையென அது திகழ்ந்தது. அங்கு அன்னம் ஒழிந்த தருணமே அமையவில்லை.


தொடர்புடைய பதிவுகள்

’வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 4
வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 66
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 16
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 2
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 53
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 43
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 23
‘வெண்முரசு’ – நூல் இரண்டு – ‘மழைப்பாடல்’ – 12
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 25
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 24
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 34
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 8
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 7
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 78
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 72
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 69
’வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 64
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 63
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 62
‘வெண்முரசு’ – நூல் எட்டு – ‘காண்டீபம்’ – 70
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 06, 2016 11:30

September 5, 2016

கனவுத்தமிழகம்

maxresdefault


 


 


சென்ற ஆண்டு கனடாவுக்குச் சென்றிருந்தபோது என்னுடைய நண்பரும் அறிவியலாளருமான வேங்கடரமணனைச் சந்தித்தேன். வேங்கடரமணன் அதற்கு முந்தையவருடம்  வெஸ் இண்டீஸ்  தீவுகளுக்கு ஒரு சுற்றுப்பயணம் செய்து வந்திருந்தார். உங்களுக்குச் சுவாரசியமான ஒரு விஷயத்தைக் காட்டுகிறேன் என்று சொல்லி தன் செல்பேசியில் பதிவுசெய்திருந்த ஒரு பாடலை ஒலிக்கவிட்டார்.


 


முதலில் நான் நன்கு அறிந்த நாட்டுப்புறத் தமிழ்ப்பாடல் போலிருந்தது.அதன்பின் அது வேறு ஏதோ மொழி என்பது தெளிவாகியது. ஒரு சொல்கூட புரியவில்லை. கூர்ந்து கேட்டுக்கொண்டே  இருந்தேன். ஒரு தமிழகப்பூசாரி பாடுவதுபோலவே இருந்தது. எந்த மொழி? ஐரோப்பிய மொழி அல்ல .ஆப்ரிக்க மொழியா? அல்லது ஏதாவது பழங்குடி மொழியா?


 


“தமிழேதாங்க…கேளுங்க” என்றார் வேங்கடரமணன். ”கடைசிவார்த்தைகளை மட்டும் கவனியுங்க”. மெல்ல ஒரு சொல் பிடிகிடைத்தது .”போற்றி!” பின்னர் அடுத்த வார்த்தை “காத்தவராயா”. அப்படி ஓரிரு சொற்கள். “ஓம்” நன்றாகவே கேட்கத்தொடங்கியது. “இதைப் பாடுவது யார்?” என்றேன். சிரித்தபடி அவர் விளக்கினார்.


 


அதைப்பாடியவர் தமிழர். காத்தவராயன் கோயிலின் பூசாரி. உடுக்கடித்து பூசைக்காக அவர் பாடியதுதான் அந்தப்பாடல். ஆனால் அவருக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அவரது முன்னோர் தமிழகத்தைவிட்டுச்சென்று மூன்றுநூற்றாண்டுகள் ஆகிவிட்டன. 1776ல் தமிழகத்தைச் சூழ்ந்த முதல் தாதுவருடப் பஞ்சத்தில்  கோடிக்கணக்கானவர்கள் செத்து அழிந்தனர்.


 


வெள்ளைய அரசின் கொடூரமான வரிவசூல் முறைகளின் விளைவாக நம் ஊர்களில் இருந்த பஞ்சகாலத்துக்கான சேமிப்புகள் முழுமையாகச் சூறையாட்ப்பட்டமையால் அந்த பஞ்சம் ஏற்பட்டது. அப்படி பஞ்சத்தில் சிதறிய மக்களை கூட்டம் கூட்டமாக  விலைக்கு வாங்கி கப்பலில் ஏற்றிக்கொண்டு கிழக்கே நியூசிலாந்து முதல் மேற்கே வெஸ்ட் இண்டீஸ்  தீவுகள் வரை  கொண்டுசென்று தோட்டங்களை உருவாக்கினர். அவர்களில் பத்தில் ஒருவரே உயிர்பிழைப்பது வழக்கம். ஆகவே பத்துமடங்குபேரை கொண்டுசென்றனர்.


 


அப்படிச்சென்ற தமிழர் உலகம் முழுக்கப்பரவியிருக்கிறார்கள். அவர்களில் மலேசியா , இலங்கை தமிழர்களே தமிழ்நாட்டுடன் உறவுடன் உள்ளனர். பர்மா , ஆப்ரிக்கா, நீயூசிலாந்து, செஷல்ஸ், ஃபிஜி, கரீபியன் தீவுகளைச்சேர்ந்தவர்களுக்கு நம்முடன் எந்த உறவும் இல்லை. அவர்களின் மொழி மறைந்துவிட்டது. பெயர்கள் கூட மாறிவிட்டன. ஆனால் பெயரில் இந்துமதம் சார்ந்த சில தடங்கள் மட்டும் எஞ்சியிருக்கும். வெஸ்ட் இண்டீஸின் புகழ்பெற்ற கிரிக்கெட் ஆட்டக்காரர் காளிச்சரண் ஓர் உதாரணம்.


 


அவர்களிடம் மாரியம்மன் வழிபாடு, காத்தவராயன் வழிபாடு போன்றவை சற்று எஞ்சியிருக்கின்றன. அவற்றில் தமிழ் இப்படி நீடிக்கிறது.கரித்தாள் வைத்து பிரதி எடுக்கும்போது மிகமிக அடியிலிருக்கும் பிரதிபோல. தமிழ் என ஊகிக்கமுடியும், அவ்வளவுதான்


 


அத்தகைய ஒரு குடும்பத்தை நான் 1988ல்  ஒருமுறை சந்தித்தேன். பங்களாதேஷ் அருகே உள்ள மாவட்டத்தில் —- என்னும் ஊரில்.  சிறிய ஊர். அருகே கங்கை பெருகி ஓடிக்கொண்டிருந்தது . நான் காசியிலிருந்து படகில் கங்கைவழியாக செல்லவேண்டும் என்பதற்காக அந்தப்பயணத்தைச் செய்தேன். அலகாபாத்தில் ஒரு சரக்குப்படகில் நூற்றைம்பது ரூபாய் கட்டணம் பேசி ஏறிக்கொண்டேன்.


 


என் வாழ்க்கையின் மறக்கமுடியாத நான்கு இரவுகள் கங்கையின் நீரின்மேல் கழிந்தன. அன்றெல்லாம் ஏராளமான சரக்குப்படகுகள் அலஹாபாத் முதல் பங்களாதேஷ் எல்லைவரை  சென்றுகொண்டிருந்தன. பெரும்பாலும் விவசாய விளைபொருட்கள். அந்தப்படகுப்போக்குவரத்து இன்று மிகமிகக்குறைந்துவிட்டது. அந்தப்படகுப்பயணத்தின் பலவகையான சித்திரங்களை என் வெண்முரசு என்னும் மகாபாரத நாவல்களில் விரிவாக விவரித்திருக்கிறேன்


இரவெல்லாம் சுழன்றடிக்கும் காற்றில் அமர்ந்திருந்தேன். விடியற் காலையில் காய்ச்சல் வந்ததுபோல உடல் நடுங்கி கண்கள் எரிந்தன. உதடுகள் உலர்ந்திருந்தன. கரையிலிறங்கியபின்னரும் உடலில் ஆட்டம் எஞ்சியதனால் நடக்கமுடியாமல் தள்ளாடினேன். அங்கே நதிக்கரையோரம் சேறு மிதிபட்டு சாணியுடன் கலந்து வீச்சமடித்தது. எங்கும் பலவண்ணத்தலைப்பாகை கட்டிய மக்கள் கூச்சலிட்டபடியும் சுருட்டு பிடித்தபடியும்  கூடிநின்றனர்.


 


என்னுடன் அந்தப்படகில்  இருபது எருமைகளும் வந்திருந்தன. வயோதிக எருமைகள். அவற்றை கரையிறங்கச்செய்து மந்தையாக்கிக் கூட்டிச்சென்றனர். ஏராளமான எருமைகள் வந்திறங்கியிருந்தன. அவை எல்லைகடந்து பங்களாதேஷுக்கு இறைச்சிக்காகக் கொண்டுசெல்லப்படுபவை. சட்டவிரோத எல்லைகடத்தல் என்பது அங்கே ஒரு வணிகம் அல்ல, வாழ்க்கைமுறை.


 


உள்ளூர் புல் ஒன்றால் கூரையிடப்பட்டிருந்த பெரிய கொட்டகை ஒன்று பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. நடுவே பெரிய ஹூக்கா ஒன்றை வைத்திருந்தார்கள். சுற்றிலும் குந்தி அமர்ந்து அந்த குழாயை வாங்கி மாறி மாறி இழுத்தார்கள். வாயை வைக்கவில்லை. கைகளால் பொத்தியபடி இழுத்து மூக்கு வாய்வழியாக மேகம்போல புகை விட்டனர். மண்கோப்பைகளில் டீ. அது அன்று ஒரு ரூபாய். ஹூக்கா இலவசம்.


 


நான் ஒரு ரூபாய்க்கு டீ வாங்கி குடித்தேன். சமூசா இருந்தது. எனக்கு அன்றுமின்றும் சமூசா அதன் பின்நவீனத்துவ வடிவமான பப்ஸ் போன்றவை கொஞ்சம் கூட பிடிக்காதவை. அந்தக்காலைநேரத்திலேயே சப்பாத்தி சாப்பிடவும் பிடிக்கவில்லை. இன்னொரு டீ குடித்தேன். ஆனால் பால் சற்றுப்ப்ழையது. நன்றாகச் சுண்டவைத்தபோது அது குமட்டல் தரும் கசப்பு கொண்டிருந்தது.


 


நால்வருக்குச் சோறு வந்தது. துணைக்கு மீன்குழம்பு. மீன் தலையை அப்படியே குழம்பில் போடுவது வங்கப்பண்பாடு. மிகப்பெரிய மீன் புன்னகைபுரிந்தபடி உலகை நோக்கியது. பெரிய அலுமினிய ஏனத்தில் மீன்குழம்பு. அதை சுற்றி தட்டுகளுடன் அமர்ந்து சாப்பிட்டனர். நானும் சோறு சாப்பிடலாம் என எண்ணினேன். மீன்குழம்பின் வாசனையின் ஈர்ப்புதான் காரணம்


 


கடைக்காரரிடம் அதைச்சுட்டிக்காட்டி  அது வேண்டும் என்றேன். பங்காளியில் ஏதோ கேட்டார். புரியவில்லை என்றதும் இந்தியில் கேட்டார். இந்தியும் தெரியவில்லை என்றதும் கண்களைச் சுருக்கியபடி “எந்த ஊர் ?” என்றார். “தமிழ்நாடு” என்றேன். அவர் சிலகணங்கல் ஸ்தம்பித்ததுபோலிருந்தார். “தமிழ்நாடா?” என இந்தியில் மீண்டும் கேட்டார். “ஆமாம்” என்றேன்.


 


அவர் தொண்டை ஏறியிறங்கியது. மூச்சிழுக்க சிரமப்படுபவர் போலத்தோன்றினார்.  பின்னர் பொரித்த மீன் தலையுடன் வந்த அவரது மனைவியிடம் வங்காளியில் “இவர் தமிழ்நாட்டுக்காரர்” என்றாள். அந்த அம்மாள் கணீர் குரலில் “தமிழாளா?” என்றார். “ஆமாம்” என்றேன். “நீங்கள் தமிழ்நாடா?”. கடைக்காரர் “ஆமாம், தமிழ்நாடு…” என்றார். நான் ”தமிழ்நாட்டில் எங்கே ?” என்றேன். “தெரியாது” என்றார். “தமிழ்கூட பேசத்தெரியாது” என்று சொல்லி மூச்சிளைத்தார்


 


இருவருக்குமே தமிழில் உதிரிச்சொற்கள் மட்டுமே தெரிந்தன. ”ஆமாவா?” என்றனர். ஆகவே அவர்கள் தமிழகக் கர்நாடக எல்லையில் ஏதோ ஊரைச்சேர்ந்தவர்கள் என்று ஊகித்தேன். பேசினால் புரிந்துகொண்டனர். பேசப்பேச அவர்களுக்குள் இருந்து தமிழ் ஊறிப்பெருகிவந்தது. கொஞ்சநேரத்திலேயே  ஒருமாதிரி சமாளித்துப்பேசத்தொடங்கிவிட்டார்கள்


 


அவர்களுக்கும் தமிழ்நாட்டுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. அவர்களின் முன்னோர் இருநூறாண்டுகளுக்கு முன்பு பர்மாவுக்கு தோட்டத்தொழிலாளர்களாக கொண்டுசெல்லப்பட்டவர்கள். பலமுறை பல தோட்டங்களுக்கு இடம்மாறினர். இரண்டாம் உலகப்போரில் அவர்கள் தோட்டமே அழிந்தது.  அவரது தாத்தா ரங்கூன் அருகே ஒரு சிற்றுரில் கூலித்தொழிலாளராக வந்து குடியேறினார்.


 


போர் முற்றியபோது பர்மா ஜப்பானியரால் கைப்பற்றப்பட்டது. அவரது கொள்ளுத்தாத்தா ஜப்பானிய கூலியாகக் கொண்டுசெல்லப்பட்டார். காட்டில் கடும் உழைப்புமுகாம்களில் குடும்பத்துடன் இருந்தனர். பிரிட்டிஷ் பட குண்டுவீச்சில் அவரது குடும்பம் மீண்டும் சிதறியது .    அங்கிருந்து பங்களாதேஷ் வந்து குடியேறி அங்கே துப்புரவுத்தொழிலாளராக பணியாற்றினார்கள். ஐம்பதுகளில் பங்களாதேஷில் இந்துத்தொழிலாளர்கள் கொல்லப்பட்டபோது அவரது குடும்பம் மீண்டும் சிதறியது.


 


எழுபதுகளில் பங்களாதேஷில் இருந்து அகதியாக இந்தியாவந்தனர். சட்டவிரோதக்குடியேற்றம்தான்.  அந்த ஊரில் கூலிவேலை செய்து மெல்ல வேரூன்றினர். டீக்கடை வைத்து எட்டு ஆண்டுக்காலமாகிறது . நான்கு குழந்தைகள்.மூத்தபெண் ஒரு வங்காளியைத் திருமணம் செய்திருக்கிறாள். இரண்டாவது பையன் வேலைபார்க்கிறான். இரு சிறுவர்கள் படிக்கிறார்கள்.


 


இருநூறாண்டுக்காலமாக அவர்களில் எவருக்கும் தமிழகத்துடன் தொடர்பில்லை. இந்தியாவந்தபின் பிற தமிழருடனும் தொடர்பில்லை. அவர்கள் கிளம்பியபின் இருபெரும்போர்கள் நிகழ்ந்தன. பஞ்சங்கள் வந்தன. தேசங்கள் உடைந்தன. புதியதேசங்கள் பிறந்தன. வரலாறு பெரும்பிரவாகமாக அவர்களைச் சுழற்றியடித்துக்கொண்டுசென்றது. எதுவும் எஞ்சவில்லை.


 


ஆனால் மூதாதையரின் சொற்களாக பிறந்த மண் அவர்களிடம் எஞ்சியிருந்தது. தங்கள் ஊர் அருகே கடல் உண்டு என்றும் சித்ராபௌர்ணமிக்கு வண்டி கட்டிச்சென்று கடலோரம் அமர்ந்து சாப்பிடுவதுண்டு என்றும் சொன்னார்கள். பெரிய கோபுரம் கொண்ட ஒரு கோயிலும் அதேபோல வண்டிகட்டிச் செல்லும் தொலைவில் இருந்தது. இரண்டு கண்மாய்களால் விவசாயம் நிகழ்ந்தது.


 


தீபாவளியும் பொங்கலும் அவர்கள் நினைவில் இருந்தன. இரண்டையும் வங்கமுறைப்படிக் கொண்டாடினர். பிள்ளைகள் அவர்களிடமிருந்து பெற்ற சிலநூறு தமிழ்ச்சொற்களைப் பேசின. ”ஆனால் அவர்கள் வங்காளிகளைத்தான் திருமணம் செய்துகொள்வார்கள்.வேறுவழி இல்லை” என்றார் ரத்தினம். அவர் மனைவில் வள்ளியும் அதையேதான் சொன்னார். அவர்களின் பேரக்குழந்தையின் பெயர் மாணிக். வங்கப்பெயர்


 


“ஊருக்குப்போகலாம்னு தோணும். ஆனா எந்த ஊருக்கு போறது? அங்க யாருக்கு நம்மளத் தெரியும்?” என்றார் ரத்தினம். “அதனால நானே ஒரு ஊரை கற்பனைசெஞ்சுகிடுவேன். அங்க இருக்கிற ஆட்களை எல்லாம் தெளிவா நானே மனசுக்குள்ள உண்டுபண்ணிக்கிடுவேன். ராத்திரி நினைச்சுகிட்டா கண்ணீர் வந்திடும் சார். அழுதிட்டே தூங்கினா ஒரு பெரிய நிம்மதி”


 


நான் அன்று அவர்களுடன் தங்கினேன். வள்ளி சோறும் மீன்குழம்பும் தந்தார்கள். அவர்கள் சுவரில் துர்க்கை படம் வைத்திருந்தனர். அதை கும்பிடும்போது ஓரிருவரிகள் தமிழில் பாடினர். மாரியம்மன் பாட்டு அது. சொல் மழுங்கிப்போய் வங்கம் போல இருந்தது.


 


அன்றிரவு வெளியே கட்டில் போட்டு விண்மீன்களைப்பார்த்தபடி படுத்திருந்தபோது நான் கேட்டேன், “உங்களுக்கு பர்மிய மொழி தெரியுமா?” ரத்தினம் சிரித்துக்கொண்டு “இல்ல சார், அங்க இருந்ததைக்கூட சொல்லிகேட்டுத்தான் தெரியும். ஒரு ஊரோ முகமோ ஞாபகமில்லை” நான்  “பங்களா தேஷுக்கு மறுபடியும் போனீர்களா?” என்றேன். “இல்லசார். அது நமக்கு எதுக்கு? யாருதோ ஊருல்ல அது”


 


ஆனால் தமிழகம் இன்றும் அவர்களின் ஊர்தான். அவர்களுக்குள் நுண்ணிய கனவாக அது மரம்பூத்து  மண்மணக்க வாழ்ந்துகொண்டே இருக்கிறது. அது அழியாது என நினைத்துக்கொண்டேன். அவர்கள் திரும்பி வருவார்கள். தலைமுறைகள் கடந்தாலும்கூட


 


சென்ற ஆண்டு எனக்கு ஒரு மின்னஞ்சல் வந்தது. பர்மாவில் உள்ள தமிழர்களின் கூட்டமைப்பு ஒன்று பொங்கல் கொண்டாடுவதைப்பற்றி அவ்வமைப்பின் செயலாளரான தியாகராஜன் என்பவர் எழுதியிருந்தார்.  உலகம் தொழில்நுட்பத்தால் இணைக்கப்படுகிறது. வரலாற்றால் சிதறடிக்கப்பட்டவர்களும் அதனூடாக இணையக்கூடும்.


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

1 like ·   •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 05, 2016 11:34

கோரதெய்வ வழிபாடு ஏற்புக்குரியதா?

1


 


 


அன்பு ஜெ,


 


சமயம் சார்ந்த வழிகாட்டுகளுக்கு உங்கள் தளம் மிகவும் உகந்ததாக இருக்கிறது. நாளும் சமயம் குறித்தான கேள்விகள் சீடர்கள் தங்களின் குருவிடம் கேட்பது போல உங்களிடம் கேட்டு தெளிவு பெறுகிறோம். படைப்புகளைத் தவிர்த்து இவ்வாறு வாசகர்கள் எங்களுடன் நீங்கள் இணைந்தே இருப்பது. எங்கள் பேரு.


 


உறையூர் குங்குமவல்லித்தாயார் உடனுறை தான்தோன்றீஸ்வரர் கோயிலுக்குச் சென்றிருந்தேன். அக்கோயின் பிரகாரத்திலேயே, கோர தெய்வங்களான பிருத்தியங்கரா தேவி, வராகி, அட்ட பைரவர்கள், ஆகாய காளி, பூமா காளி, பாதாள காளி போன்ற தெய்வங்கள் இருந்தன. அந்த தெய்வங்களில் பிருத்தியங்கரா தேவியின் கோர ரூபம் இன்னும் கண்களிலேயே இருக்கிறது.


 


 


ஒரு காலத்தில் வழிபடப்பட்டதாக கூறப்பட்ட இந்த தெய்வங்கள் மீண்டும் எழுச்சிப் பெற்று பொது மக்களால் வழிபடக்கூடிய அளவிற்கு சென்றுள்ள. சில நாட்கள் முன் முகநூலில் கீழ் இணைத்துள்ள விளம்பரப் பதாகை கண்களில் பட்டது. கோவிலுக்கு வருகின்றவர்கள், வேம்பினை கொண்டுவாருங்கள் என வலியுறுத்தப்பட்டுள்ளது.


 


 


ஆயிரமாயிரம் தெய்வங்கள் உள்ள இந்து சமயத்தில் இந்த கோர தெய்வ வழிபாடு ஏற்புக்குறியதா? தற்போது சிவாலயங்களில் மட்டுமல்லாது, திருமால் ஆலையங்களிலும் சொர்ண ஆகார்சன பைரவரை வைத்து அட்டமி நாளில் சிறப்பு வழிபாடு செய்கின்றனர். மூல நாதனை மறந்து இப்படி ஏவல், காவல் தெய்வங்களை வழிபடும் போக்கு தற்காலத்தில் பெருகியுள்ளது ஆன்மீக எழுச்சியை வலியுறுத்துகிறதா? மக்களின் வாழ்வாதார பிரட்சனைகளுக்கு இறையை தேடுவது காட்டுகிறதா? இதனை எவ்வாறு நீங்கள் காண்கின்றீர்கள் என்பதை அறிந்து கொள்ள ஆவலாக உள்ளேன்.


 


நன்றி.


 


ஜெகதீஸ்வரன் நடராஜன்


1

பிரத்யங்காரா


 


அன்புள்ள ஜெகதீஸ்வரன்


 


தெய்வம் என உருவகிக்கத் தொடங்கிவிட்டபின் பேரியற்கையில் நாம் அறியும் எல்லா ஆற்றல்வடிவங்களையும் தெய்வமாக உருவகிக்கத்தான் செய்வோம். இது உலகம் முழுக்க அனைத்து மதங்களிலும் உள்ளதுதான். தூய தத்துவ மதங்களான சமணம், பௌத்தம், அத்வைதம், கன்ஃபூஷியம், தாவோயியம் போன்றவை விதிவிலக்கு.


 


ஏ.எல்.பாஷாமின் The Wonder That Was India முக்கியமான ஒரு விடையை அளிக்கிறது. இந்தியாவில் வங்கம், ஒரிசா ,கடலோர ஆந்திரம், கேரளம் ஆகிய கடற்கரை மாநிலங்களில் சாக்தம் வலுவாக இருக்கிறது. காரணம், இயற்கையின் கோரத்தாக்குதல் இப்பகுதிகளில் அதிகம். வருடந்தோறும் புயல் வீசும் பகுதிகள் இவை. [கடலோரத் தஞ்சையும் இதில் சேர்க்கலாம்]


 


இயற்கையை கருணைகொண்ட அன்னையாக, அமுதூட்டி காப்பவளாக அறிகிறான் மனிதன். கூடவே இரக்கமே அற்ற கொடூர அழிவுசக்தியாகவும் காண்கிறான். இந்த இரு முகங்களையும் இணைத்துத்தான் காளி என்னும் உருவகம் உருவாகியது. எங்கும் அது உள்ளது, ஆனால் இப்பகுதிகளில் வலுவாக இருக்கிறது.


1

வராஹி


 


ஆக, தெய்வ உருவகம் மனிதனால் திட்டமிட்டு உருவாக்கப்படுவதல்ல. இயற்கையிலிருந்து அவன் தன் ஆதிநுண்ணுணர்வால் அடையப்பெற்றது. தொன்மையான பழங்குடி வாழ்க்கையிலிருந்து மெல்லமெல்ல வளர்த்தெடுத்தது. பழங்குடிவாழ்க்கையில் வேர் இல்லாத தெய்வமே இருக்கமுடியாது.


 


பழங்குடிகளின் பெரும்பாலான தெய்வங்கள் உக்கிரரூபம் கொண்டவை. நோய், இயற்கைச்சீற்றம் ஆகிய வடிவில் தன்னைக் காட்டும் மனிதனை மீறிய பேராற்றலை தெய்வமென உருவகித்தனர். கூடவே அவற்றிலிருந்து காத்து ஆண்டு அருளும் தெய்வங்களையும் உருவகித்தனர். இருவகை தெய்வங்களும் எல்லா தொன்மையான பண்பாடுகளிலும் உள்ளன. சாஸ்தா தவிர நம் நாட்டார் தெய்வங்கள் அனைத்துமெ உக்கிரரூபம் கொண்டவை அல்லவா?


 


பின்னர் அத்தெய்வங்கல் மேலும் மேலும் குறியீட்டு ரீதியாக விரிவாக்கம் செய்யப்பட்டன. அவற்றின் உருவம் முறைப்படுத்தப்பட்டது. அவற்றின் வழிபாடு வகுக்கப்பட்டது. அவற்றுக்கு தத்துவார்த்த விளக்கங்கள் அளிக்கப்பட்டன புராணங்கள் உருவாயின. அவை இன்றைய தெய்வங்களாக மாறின. இன்றைய எல்லா தெய்வங்களும் அவ்வாறு பல்லாயிரமாண்டுகளாகப் பரிணாமம் பெற்றவைதான்.


1


இந்த தொன்மையான தெய்வ உருவகங்கள் பின்னாளில் பெருந்தெய்வமாக மாறியபோதும்கூட அவற்றில் இந்த இரட்டைமுகம் இருப்பதைக் காணலாம். உலகாளும் விஷ்ணு ஒருமுகம் உக்கிரநரசிம்மர் மறுமுகம். ருத்ரனும் உமாமகேஸ்வரனும் ஒரே தெய்வம்தானே?


 


இந்திய புத்தமதத்தில் கோரத்தெய்வம் இல்லை. ஆனால் திபெத்திய பௌத்தம் பலநூற்றாண்டுகளுக்குப்பின் பல கோரத்தெய்வங்களை உருவாக்கிக்கொண்டது. கோரத்தோற்றம் கொண்ட காலதேவர், போதிசத்வர்கள் திபெத்திய, சீன, தாய்லாந்து, கம்போடிய பௌத்தத்தில் உண்டு. திபெத்திய வஜ்ராயன பௌத்தத்தில் கொடூரமான தோற்றம் கொண்ட புத்தரின் தோற்றம்கூட வழிபடப்படுகிறது.


 


கிறித்தவர்களின் ஜெகோவாவும் சரி இஸ்லாமியர்களின் அல்லாவும் சரி சீற்றம் கொண்டு தண்டிக்கும் தெய்வங்களும் கூட. மேலே சொன்ன விளம்பரத்தைப்போலத்தான் குமரிமாவட்ட கிறித்தவர்களின் கன்வென்ஷன் விளம்பரங்களும் இருக்கும். கிட்டத்தட்ட இதே வாசகங்கள் காணப்படும்.


 


இந்த தெய்வங்களின் நடைமுறைப் பயன்கள் என்ன? ஒன்று, மனிதனின் அச்சத்திற்கு இவை காப்பு. மானுடர் மிக எளியவர். தன்னம்பிக்கை, ஆணவம், அறிவுஜீவித்தோரணை ஆகிய அனைத்துக்கும் அடியில் அவர்கள் அஞ்சிக்கொண்டிருக்கிறார்கள். பதற்றத்தில் இருக்கிறார்கள். நிலையின்மையை, நோயை, மரணத்தை, காலப்பெருவெளியை எண்ணி அலைக்கழிகிறார்கள்.


 


index

அகோரநரசிம்மர்


 


 


அந்த அச்சமே தெய்வங்களை நோக்கிச் செலுத்துகிறது. கோரத்தோற்றமுடைய தண்டிக்கும் தெய்வங்கள் தங்களுக்கு காப்பாகும் என அவர்களின் ஆழ்மனம் நம்புகிறது. பெரியபேச்சு பேசியவர்கள்கூட ஒரு இக்கட்டில் சட்டென்று சரணடைந்துவிடுவதை நான் பலமுறை கண்டிருக்கிறேன்.


 


இரண்டாவதாக, இக்கோரதெய்வங்கள் மனிதன் தன் ஆழத்தில் உறையும் உக்கிரத்தை, ஆதிவிசையைக் கண்டடைய உதவிகரமாக உள்ளன. பிரத்யங்காரா போர்த்தெய்வம். உயிர்கொடுக்கக் களம்செல்லும் ஒருவீரனுக்கு அதற்கான வீரியத்தை அளிப்பவள். அவள் சாந்தமாக இருக்கமுடியுமா என்ன?


 


என் அனுபவத்தில் பல நிகழ்வுகளைச் சொல்லமுடியும். ஒன்று ஒருநண்பர் அணுக்கமான இருவரின் அவமரணத்திற்குப்பின் ஆழமான அக அதிர்ச்சிக்கு உள்ளாகி நரம்புப்பதற்றம் அடைந்த நிலையில் இருந்தார். அவர் வைணவப்பின்னணி கொண்டவர், மார்க்சியர். நான் அவரிடம் அவர் அகோரநரசிம்மரை வழிபடலாம் என்றேன். நூல்களில் அதுதான் சொல்லப்பட்டிருக்கிறது என்றேன்.


 


1

திபெத்திய போதிசத்வர்


 


அதை ஒரு சம்பிரதாய வைணவர் சொல்லியிருக்கக்கூடும். நான் சி.ஜி.யுங்கை எல்லாம் மேற்கோள் காட்டி விளக்கினேன். அது ஓர் ஆழ்மனப் பயிற்சி என சொன்னேன். அவர் நூற்றெட்டுநாள் அகோரநரசிம்மரை வழிபட்டார். அவர் மீண்ட விதம் எனக்கே பிரமிப்பூட்டியது. குறியீடுகளின் வல்லமை அப்படிப்பட்டது. அவை நம்மை நாமறியாத வரலாற்று ஆழத்துக்குக் கொண்டுசெல்கின்றன. பண்பாட்டின் விசை முழுக்க அவற்றில் அடங்கியிருக்கிறது.


 


இன்னொரு அனுபவம் பிரத்யங்காரா தேவி. ஒருவரை கும்பகோணம் அருகே உள்ள பிரத்யங்கரா தேவியை  வழிபடும்படி ஓரிரு நூல்களை மேற்கோள்காட்டிச் சொன்னேன். அவர் மரபில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டவர். ஒரு முக்கியமான வணிகமுடிவு எடுப்பதற்கு முன் தயங்கிக்கொண்டிருந்தார் அவர் துணிவுகொள்ளவும் போர்வேகம் கொள்ளவும் அவ்வழிபாடு உதவுவதை கண்டேன்.


 


ஆக கோரதெய்வங்கள் இருந்துகொண்டே இருக்கும். ஏனென்றால் அழகு, அருள்,நன்மை மட்டும் அல்ல இயற்கையில்  தெய்வவெளிப்பாடாக நாம் காண்பது. கோரம், அழிவு, தீமை ஆகியவையும்தான். ஒருவர் தெய்வம் என ஒன்றை மட்டும் பார்த்தார் என்றால் அவர் உண்மையின் ஒருபக்கத்தை மட்டுமே பார்க்கிறார். எங்கோ ஒரு புள்ளியில் அவர் ஏமாற்றத்தில் முட்டிக்கொண்டு மண்டையை உடைத்துக்கொள்வார்


 


1

ஜெஹோவா


 


கடைசியாக இரண்டு விஷயங்கள்.


 


 ஒன்று  : ஒருவருக்கு கோரமாகத் தெரிவது இன்னொருவருக்கு அப்படித்தெரியாமலிருக்கும். நீங்கள் சொல்லியிருக்கும் வராகி பன்றிமுகம் கொண்ட தேவதை. பழங்காலத்தில் மிக மங்கலமான தேவதையாக கருதப்பட்டாள். பன்றி நிலத்தை உழுவது. மேழி போன்ற முகம் கொண்டது. எனவே வளத்தின் குறியீடு.


 


அன்றெல்லாம் பன்றி நாம் இன்றுகொடுக்கும் எதிர்மறை அடையாளம் கொண்டது அல்ல. அன்றைய இந்தியப்பார்வையில் கருமை அழகு எனக் கருதப்பட்டது. பன்றி அழகும் ஆற்றலும் கொண்டது. வளம் நிறைப்பது. ஆகவே வழிபடப்பட்டது. பெருமாள் கூட பன்றியுருவத்தில் வராகராக வழிபடப்படுகிறார்


 


அதேபோல நாம் மங்கலமாகக் கருதும் யானைமுகப் பிள்ளையார், குரங்குமுக அனுமார் போன்ற தெய்வங்கள் ஐரோப்பியருக்கு அச்சமும் அருவருப்பும் ஊட்டும் வடிவங்களாகத் தெரிகின்றன.


 


 


இதைப்பற்றி ஒரு வெள்ளையர் கேட்ட கேள்விக்கு ஓஷோ ஒரு பதிலை அளித்தார். ஒரு கிறித்தவத் தம்பதியினர் சீனாவுக்குச் சென்றார்கள். அங்கே அவர்கள் சீனர்களின் பௌத்த மடாலயங்களில் உள்ள கோரத் தோற்றம் கொண்ட போதிசத்வர்களைக் கண்டு அருவருப்புடன் முகம் சுளித்தார்கள்


 


அன்று மாலையே அவர்களின் சீன வேலைக்காரி தப்பி ஓடிவிட்டாள். என்ன என்று போய் விசாரித்தால் அவள் இவர்கள் ஒரு மரச்சின்னத்தில் தொங்கும் குருதிவடியும் அரைநிர்வாணப் பிணத்தை வழிபடுவதை பார்த்து அருவருப்பு அடைந்துவிட்டாள் என்று தெரியவந்தது.


 


இரண்டு :கோரத் தெய்வங்கள் பெரும்பாலும் மானுடனின் அச்சத்துடன் தொடர்புடையவை. ஆகவே அந்த அச்சத்தையும் ஐயத்தையும் பயன்படுத்திக்கொண்டு வணிகம் செய்யும் பூசாரிகளும் மந்திரவாதிகளும்தான் அவற்றை அதிகமாக பிரச்சாரம் செய்வார்கள் – எல்லா மதங்களிலும். நீங்கள் காட்டிய சுவரொட்டி அத்தகையது.


 


அந்த வணிகத்துக்கு உடன்படுவது வழிபாடல்ல. அது ஒரு மனிதனின் பேராசைக்கோ சுயநலத்துக்கோ நம்மை அர்ப்பணிப்பது. அது பூசாரியாக இருந்தாலும் சரி பாதிரியாக இருந்தாலும் சரி. கடைசியாக எஞ்சுவது துயரமும் ஏமாற்றமும்தான்.


 


ஜெ


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 05, 2016 11:31

‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49

எட்டாம் காடு : மைத்ராயனியம்


[ 1 ]


சாந்தீபனி குருநிலையில் இளைய யாதவர் நான்குமாதங்கள் தங்கியிருந்தார். முதல்சிலநாட்களுக்குப்பின் அக்குருகுலத்தின் பெரும்பாலான மாணவர்கள் அவருக்கு அணுக்கமானார்கள். புலர்காலையிலேயே அவர்களை அழைத்துக்கொண்டு கால்நடைகளுடன் அவர் காட்டுக்குள் சென்றார். பசுக்களை அணிநிரைத்துக் கொண்டுசெல்லவும், தனிக்குழுக்களாகப் பிரித்து புற்பரப்புகளில் மேயவைக்கவும், மாலையில் மீண்டும் ஒருங்குதிரட்டவும் அவர்களுக்கு கற்பித்தார். பசுக்களின் கழுத்துமணி ஓசையிலிருந்தே அவை நன்கு மேய்கின்றனவா என்று அறியவும் அவை நின்றிருக்கும் தொலைவை கணிக்கவும் பயிற்றுவித்தார். அவருடன் பலநாள் பாண்டவர்களும் சென்றார்கள்.


“பசுக்களை நோக்கி புரிந்துகொள்ளுதல் ஆமருவுதலின் முதல்படி. அவற்றின் மீது பெரும் அன்பிருந்தாலொழிய அது கைகூடாது. நம் குரலை நம் அன்பென அது அறிகிறது. அதன் குரலை அதன் அன்பென நாம் அறிகிறோம். அன்புக்குரிய கலமென அங்கிருக்கும் பசு ஓர் அறிவென உள்ளமைதல் அடுத்த நிலை. சிறு ஓசைகளில் அசைவுகளில் மணங்களில் அவை நம்முள் முழுமையாக உருக்கொள்ளும்போது நாம் நம்மை என அதை அறிகிறோம். அறிவென ஆன பசு நம்மை தன்னறிவென அறிகிறது. நாம் அதை நம்மறிவென அறிவதைப்போல. பின்னர் ஒரு கணத்தில் பசு நம் அறிவைவிட்டு அகல்கிறது. அது நாமென ஆகிறது. அதன்பின் நாம் காடுசென்று மேய்ந்து கன்றூட்டுவதற்காக பாலூற தொழுதிரும்புகிறோம்” என்றார் அவர்.


“மாணவர்களே, இவை ஒன்றிலிருந்து ஒன்றென எழும் நிலைகள். சிறுமி முதிர்ந்து கன்னியாவதுபோல. கன்னி கனிந்து அன்னையாவதுபோல. ஒன்றைவிட பிறிது குறைந்தது அல்ல. அறிவென்று மாறாத அன்பு பற்றென்று திரிந்து வலையாகி சூழ்கிறது. அன்பிலிருந்து எழாத அறிவு ஆணவமெனத் திரண்டு பெருஞ்சுமையாகிறது. அறிக, அன்பிலும் அறிவிலும் ஏறியமையாத யோகம் வெறும் உளமயக்கு மட்டுமே. நீர்நிலை நிலவை அள்ளி அள்ளிக் குடிக்கும் மூடர்களின் வழி அது.” ஒருகணம் புன்னகைத்து “நீர்நிலவை மட்டுமே உண்ண இயலுமென அறிந்து அள்ளுபவனோ நிலவை உண்கிறான்” என்றார்.


அவர் எப்போது தத்துவச்சொல்லென உரையாடலை மாற்றுவார் என்று ஒருபோதும் முன்னறிய முடிவதில்லை என்பதே அவருடைய முதன்மைக் கவர்ச்சி என தருமன் எண்ணினார். கன்றோட்டும் கலையை சொல்லிவருபவர் பிறிதொன்றை சொல்லத் தொடங்கும் கணத்தில் கிளையசைய வானிலெழும் பறவையைக் காணும் அச்சிலிர்ப்பால்தான் அவரைச் சூழ்ந்து ஒருசொல்லும் தவறவிடாமல் மாணவர் சென்றுகொண்டிருந்தனர். “அவர் கன்றோட்டுகையில் ஞானி. வேதமேடையில் கன்றோட்டி” என்றான் இளமாணவன் ஒருவன். “எப்போது எவ்வுரு என்றறியாமையால் அனைத்தையும் ஒன்றாக்கிக் காட்டமுடிகிறது அவரால்” என்றான் அவன் தோழன்.


வேதச்சொல் உசாவும் அவையில் முதலாசிரியனாக மேடையமர்ந்து அவர் சொல்நிரை குறித்து சொல்கையில் இயல்பாக ஆவலன் ஆனார். “ஆற்றல்மிக்க பசுக்களை முதலிலும் இறுதியிலும் நிறுத்துக! பிறபசுக்களையும் கன்றுகளையும் நடுவே கொண்டு செல்க! வழிநடத்துவது வல்லமைகொண்டதாகுக! பெருவிழைவு கொண்டது பின்னால் உந்திச்செலுத்துக! நடுவே செல்வது தன் விரைவை தானே காணமுடியாது ஒழுகவேண்டும்.” அவர்கள் அக்கணத்தில் அவையிலிருந்து காட்டுக்குச் சென்றனர். அங்கே அவர் அவர்களுடன் நீராடிய ஓடைகளை, அவருடன் தாவிச்சென்ற கிளைகளை, அவர் அளித்த கனிகளை, அவர் நகையாட்டுகளை எண்ணி முகம் மலர்ந்தனர்.


அவரன்றி பிற எவரும் அங்கில்லை என்று மாணவர் உணரலான ஒருநாளில் அவர் துவாரகைக்கு கிளம்பினார். அச்செய்தியை சாந்தீபனி குருநிலை பெரும்பதற்றத்துடன் எதிர்கொண்டது. அவர் சென்றுவிடுவார் என்பதை அவர்கள் ஒவ்வொருவரும் அறிந்திருந்தனர். அவர் சிலநாட்கள் மட்டுமே அங்கிருப்பார் என்றே அவர்களுக்கு சொல்லப்பட்டது. பேரரசு ஒன்றின் தலைவன் அத்தனை மாதம் அங்கிருந்ததை எப்போதாவது எண்ணிக்கொள்கையில் அவர்கள் வியப்படைந்தனர். ஆனால் மீண்டும் அவர் அங்கிருந்து அகலாதவர் என்னும் மாயையை சூடிக்கொண்டு அதில் ஆடினர்.


அவர் கிளம்புகிறார் என்னும் செய்தி அதை கிழித்தபோது முதலில் அதை அவரது விளையாட்டெனக் கொள்ள முயன்றனர். அது மறையா நனவு என உணர்ந்ததும் அவர் மீண்டு வருவார் என ஆறுதல்கொண்டனர். ஒரேநாளில் சாந்தீபனி கல்விநிலை ஒலியடங்கி சோர்வு பரவி நிழலாடும் நீர்நிலைபோல ஆகியது. “அவர் இங்கிருந்தது ஒரு கனவு. நாம் அதிலிருந்து விழித்தெழுந்தே ஆகவேண்டும்” என்றார் சாந்தீபனி முனிவர். “ஆசிரியர்களின் சொற்களே அவர்கள் என்றுணர்க! இங்கு அவர் சொற்கள் முளைத்தெழுமென்றால் அவர் என்றும் இங்கிருப்பார்.”


அடுமனையிலிருந்து அகப்பையுடன் எழுந்து வந்து சொல்லவை முற்றத்தில் நின்று பத்ரர் கூவினார் “இங்கு அந்த ஆமருவி வந்து என்ன ஆயிற்று? இளையோரே, நீங்கள் கற்றது என்ன? அந்தணரும் ஷத்ரியரும் கன்றோட்டினர். கன்றுவாலிலிருந்து நீங்கள் கற்றறிந்த வேதம் என்ன? இவன் இழிமகன். இழிமக்கள் அணுக்கம் உங்களையும் இழிமக்களாக்குமென்று உணராவிடில் உங்களுக்கு மீட்பில்லை என்றறிக!” மாணவர்கள் வெவ்வேறு இடங்களில் நின்று அவரை நோக்கிக்கொண்டிருந்தார்கள். அவர் மேலும் மேலும் வஞ்சம் கொண்டு கொந்தளித்தபடியே சென்றார்.


“வேதம் மருவ வந்த வீணன். நீங்கள் கற்றவற்றை அவன் மறக்கச்செய்யவில்லை என்று உங்களால் சொல்லமுடியுமா? நான் நூறுமுறை உங்களிடம் கேட்டிருக்கிறேன். ஒவ்வொருமுறையும் ஆமென்று விழிகாட்டி முகம் திருப்பிக்கொண்டீர்கள். இளையோரே, நீங்கள் உணர்ந்தவை அனைத்தும் கலங்கிவிட்டன என்று உணரவில்லையா? அறிக, அவன் வந்தது அதற்காகவே! அவன் குழப்புபவன். கலங்கச்செய்பவன். வேதத்தை அதிலிருந்து உருவாகும் பொய்வேதமே அழிக்கமுடியும், நெருப்பை அதன் புகை அழிப்பதுபோல.”


மூச்சிரைக்க பத்ரர் தன் அகப்பையை தலைக்குமேல் தூக்கினார். “அன்னம் அளித்த கையால் சொல்கிறேன். இவன் அழிவையன்றி எதையும் கொண்டுவரப்போவதில்லை. இவன் தன் குலத்தின் குருதியிலாடி இங்கு வந்தவன். பாரதவர்ஷத்தின் குருதியில் களித்து கடந்துசெல்வான். ஆம், இது உண்மை!” அவர் குரல் உடைந்தது. கண்ணீர் வழிய அவர் சொன்னார் “அழியாதது மாறவும் கூடாது. மாறுவது அழிவது. மாறுவதும் அழிவதும் அடித்தளமாக அமையாது.” அகப்பையை ஆட்டி மேலும் சொல்ல விழைபவர் போல விம்மி பின் அவர் திரும்பினார்.


அவர் செல்வதைப் பார்த்தபடி தருமன் மரத்தடியில் நின்றிருந்தார். பின்னர் குடிலுக்குள் சென்று அர்ஜுனனுடன் உரையாடிக்கொண்டிருந்த இளைய யாதவரைக் கண்டு தயங்கி நின்றார். அவர்கள் இளங்காதலர்போல மென்குரலில் பேசிக்கொண்டு காலமறியாது அமர்ந்திருப்பதை அவர் எப்போதும் காண்பதுண்டு. இருவர் முகங்களும் ஒன்றையொன்று ஆடிகள்போல மாற்றொளித்து முடிவின்மை சூடியிருக்கும். அவர்கள் தாங்கள் மட்டும் தனியாக காட்டுக்குள் சென்று உலாவி விடிந்தபின் வருவதுமுண்டு. இளைய யாதவர் “வருக, அரசே!” என்றார். தருமன் அவர் அருகே அமர்ந்து கொண்டார்.


“விழிகளில் சொற்கள் உள்ளன” என இளைய யாதவர் புன்னகையுடன் சொன்னார். தருமன் “அந்தப் பெருவஞ்சம் பற்றி மட்டுமே நான் பேசவிழைவேன் என நீங்களும் அறிந்திருப்பீர்கள்” என்றார். “ஆம், அதைக் கேட்ட உணர்வு உங்களிடம் உள்ளது” என்றார் இளைய யாதவர். “யாதவரே, அந்தப் பெருவஞ்சத்தின் ஊற்று எது? ஒவ்வொருநாளும் நான் பிருகதரை சந்திக்கிறேன். நீங்கள் இங்கு வந்தநாளில் அவரிலெழுந்த அந்தக் காழ்ப்பு அவருள் வளர்ந்தபடியேதான் செல்கிறது. உங்கள் நல்லியல்புகள் ஒவ்வொன்றும் அவர் காழ்ப்பை வளர்க்கின்றன. அக்காழ்ப்பே அவர் மூச்சென்றாகிவிட்டது. அவர் உடலும்கூட காழ்ப்பின் பருவடிவென்று ஒளிகொண்டிருக்கிறது. காழ்ப்பினாலேயே அவர் ஆற்றல்கொண்டவராகிறார் என்று தோன்றுகிறது.”


“காழ்ப்பின் வழியாக அவர் என்னை அணுகியறியலாமே” என்று இளைய யாதவர் சிரித்தார். “என்னை விரும்புகிறவர் என் வெண்முகத்தை அறிகிறார்கள். வெறுப்பவர் கரியமுகத்தை. சுக்லகிருஷ்ண சாகைகளுடன் என்னை அறிகிறார்கள்.” மேலும் உரக்க நகைத்து “அதில் உங்கள் இடர் என்ன, அரசே?” என்றார். “பிருகதர் எளிய மனிதர். உங்களைப்போல பேருருவம்கொண்ட ஒருவர் மீதான காழ்ப்பு அவரை மேலும் விரிவாக்குகிறது. அது அவர் வாழ்வுக்கு பொருளும் ஆகிறது. ஆனால் பத்ரர் கற்றறிந்தவர். கற்றவற்றை கடந்துசெல்லவும் முடிந்தவர். அவரே உரைப்பதுபோல அன்னமிட்டமைந்த கை கொண்டவர். யாதவரே, அத்தனை கற்றும் தெளிந்தும் சென்றடையக்கூடிய இடம் அந்தக் கடுங்கசப்பின் பீடம்தானா?”


சிலகணங்கள் அவரை கூர்ந்து நோக்கியபின் “அரசே, உங்கள் வினா எழுவது எங்கிருந்து? அவருடன் சேர்ந்து சிலகணங்கள் அக்குரலை ஒலித்த உங்கள் அகத்திலிருந்தா?” என்றார். விழிகளை அவர் மேல் நிலைக்கவிட்டு மாறாமுகத்துடன் “ஆம்” என்றார் தருமன். “அங்கு நின்ற அனைவரும் அச்சொற்களை தாங்களும் சொல்லி திடுக்கிட்டு மீண்டனர். அவர் குரலுடன் வந்து இணையும் ஆயிரம் உளக்குரல்களாலேயே அது வல்லமைகொண்டதாகிறது” என்று இளைய யாதவர் சொன்னார். “அதனாலேயே நான் அதை வீண்குரல் என சொல்லமாட்டேன். அதை கேளாது கடந்துசெல்லவும் மாட்டேன். அரசே, இன்றுமாலை விடைபெறுகையில் முறைப்படி பத்ரரைச் சென்றுகண்டு அவரிடம் சொல்கொண்டபின்னரே கிளம்புவேன்.”


தருமன் அவர் சொல்லப்போவதை காத்திருந்தார். “அவர் அடுமனை மெய்மையின் களம். ஆனால் அவர் அங்கே ஒற்றைச்சுவைக்கு சமைக்கிறார்” என்றார் இளைய யாதவர். “கற்பரசிகள் கட்டுண்டிருப்பவற்றிலிருந்து பரத்தையர் எளிதில் விடுபடுகிறார்கள்.” அவர் அச்சொல்லாட்சியால் உளஅதிர்வு கொண்டார். ஆனால் அவர் முகத்தையே நோக்கிக்கொண்டிருந்தார். “பல காடுகளை கண்டுவிட்டீர்கள், அரசே. அனைத்துக் காடுகளுக்குச் செல்லும் வழிகளும் இணையும் காடு ஒன்றுள்ளது. மைத்ராயனியக் காட்டுக்கு செல்க!” தருமன் “ஆம், தங்கள் சொல் என் வழி” என்றார்.


[ 2 ]


வேதம் வளர்ந்த காடுகள் அனைத்திலும் சென்று கல்விகற்ற லௌபாயனர் என்னும் முனிவரின் கதை ஆரண்யகங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. தன் உள்ளுறைந்த அழலை அவிக்கும் மெய்ப்பொருளைத் தேடி அவர் ஏழு வயதில் உபநயனம் முடிந்ததும் இல்லம்விட்டு கிளம்பினார். பெரும்பசிகொண்டவன் அன்னம்தேடிச் செல்வதுபோல இளம்கால்களால் மலைகளை மிதித்தேறி ஐதரேயக்காட்டுக்கு வந்தார். நான்காண்டுகளுக்குப் பின் அங்கிருந்து தைத்ரியக்காட்டுக்கு சென்றார். துவைதத்திலும் காம்யகத்திலும் பிருஹதாரண்யகத்திலும் நான்காண்டுகள் வாழ்ந்து வேதமெய்மையை கற்றார். அரசே, அவர் கற்காத கல்விநிலைகளே இங்கில்லை என்கிறார்கள். அறியப்படாத காடுகளாகிய ஹிரண்யகேசம், பைப்பாலடம் போன்றவற்றிலும் அவர் கற்றிருக்கிறார்.


தன் அறுபது வயதுவரை அவர் கற்றுக்கொண்டே இருந்தார் என்கிறார்கள். தான் புதைத்து மறந்த செல்வத்தைத்தேடி அகழ்ந்து அகழ்ந்து ஏமாற்றமடையும் கருமியைப்போல அவர் கண்ணீருடன் பதறியபடி குருநிலையிலிருந்து குருநிலைக்கு சென்றார் என்கின்றன நூல்கள். ஒவ்வொன்றிலும் பேரார்வத்துடன் நுழைந்து வெறிகொண்டு கற்றுக் கடந்துசென்று எஞ்சிய உளவினாவுடன் தனித்துவிடப்பட்டு கண்ணீருடன் கிளம்பிச்செல்வதே அவர் வழக்கம். இறுதியாக மாண்டூக்யக் காட்டிலிருந்து கிளம்பி சென்ற வழியில் ஒரு இசைச்சூதனை கண்டார். வேதக்காடுகளை முழுதறிந்திருந்த அச்சூதனிடம் பேசியபோது ஒன்றை அறிந்துகொண்டார், அவர் செல்வதற்கு மேலும் சொல்வளர்காடுகள் இல்லை.


உள்ளம் வெறுமைகொள்ள மகாதலம் என்னும் இடத்திலிருந்த அன்னவிடுதி ஒன்றை அடைந்தார். அங்கு நூறுவயதான சுஃபலர் என்னும் முதிய சூதர் தன்னந்தனியாக அவ்வழிப்போகும் அயலவருக்கு உணவளித்துவந்தார். அவரிடம் உணவு பெற்று உண்டு அங்கு நின்றிருந்த மாபெரும் ஆலமரத்தின் அடியில் இரவு தங்கினார். அந்திக் காற்று குளிருடன் வீசிக்கொண்டிருந்த வேளையில் அவர் அருகே வந்து படுத்துக்கொண்ட சுஃபலர் தன் கதையை சொன்னார்.


அந்த ஆலமரம் அமைந்த காட்டுவழியினூடாக சுஃபலர் இளஞ்சிறுவனாக அவ்வழி சென்றார். அவருடன் வந்த முதியதந்தை காட்டுக்குள் பாம்பு கடித்து இறந்தபோது மேலும் செல்லும் வழியறியாமல் அழுதபடி திரும்பிவந்து பசித்துக் களைத்து அம்மரத்தின் வேர்க்குவையில் சோர்ந்து படுத்துத் துயின்றார். அவ்வழி சென்ற வணிகர்குழு ஒன்று அந்த மரத்தடியில் ஓய்வெடுத்தது. கிளைகளுக்குமேல் அவர்கள் கலங்களை கட்டிவைத்திருந்தனர். மரம் ஏறமுடியாமல் களைத்திருந்தமையால் சுஃபலரிடம் அந்தக் கலங்களை எடுத்துக் கொடுக்கும்படி சொன்னார்கள். அவர் அடிமரத்தின் விழுதுப்புடைப்புகளில் தொற்றி அதன்மேல் ஏறி கிளைக்குவையில் இருந்த கலங்களை எடுக்கையில் அவரிடம் எவரோ எதையோ சொன்னதை கேட்டார்.


அஞ்சி நிலையழிந்து விழப்போனவர் அள்ளிப்பற்றிக்கொண்டார். கலங்களுடன் உடல்தளர கீழே வந்தார். அது கீழே எவரோ பேசியதன் ஒரு கீற்றே என தன்னை ஆறுதல்படுத்திக்கொண்டார். அவர்கள் அவரிடம் “சூதரே, சமைத்துக்கொடுங்கள்” என்றார்கள். சமையலுக்கு அடுப்புமூட்டும்போது அவர் அச்சொல்லை கேட்டார். அது அவர் உதடுகளில் அசைவாக இருந்தது. அச்சொல் தன்னுள் எண்ணச்சரடென ஓடிக்கொண்டிருப்பதை அறிந்தார். அதை வியந்து நோக்கியது பிறிதொரு உள்ளம்.


அவர் சமைத்து அளித்த உணவை அவர்கள் உண்டு எஞ்சியதை அவரிடமே அளித்துவிட்டுச் சென்றனர். அவர் அவ்வுணவை உண்ணும்போது இரு மலைப்பயணிகள் அங்கு வந்தனர். பசித்திருந்த அவர்களுக்கு அவ்வுணவை அவர் பகிர்ந்தளித்தார். அன்றிரவு வணிகர்கள் அளித்த அரிசியும் பருப்பும் எஞ்சியிருந்தது. அதைக்கொண்டு மறுநாள் அவர் சமைக்கும்போது மேலும் சில வணிகர் அவ்வழி வந்தனர். அவர்கள் அளித்துச்சென்ற அரிசியும் பருப்பும் மேலும் சிலநாட்களுக்கு திகைந்தது. அவ்வழி சென்ற அந்தணருக்கு அவ்வுணவை அவர் கொடையாக அளித்தார். சிலநாட்களுக்குள் அது ஓர் உணவுச்சாவடியாகியது. உண்டவரில் உள்ளவர் அளித்துச்சென்றது இல்லாதவருக்கும் அவருக்கும் போதுமான உணவாகியது.


“வேறெங்கும் செல்லவில்லையா?” என்று லௌபாயனர் கேட்டார். “ஆலமரத்தடியிலிருந்து ஆலமரத்தடிக்குச் செல்லலாம். மரங்கள் வேறு, நிலம் ஒன்று” என்றார் சுஃபலர். அந்த மறுமொழி தனக்கேயானது என்று எண்ணியவராக லௌபாயனர் அவரை நோக்கி அமர்ந்திருந்தார். பின்னர் “சூதரே, இதில் நீங்கள் நிறைவுறுகிறீர்களா?” என்றார். “ஆம், நான் முழுமையடைந்துவிட்டேன். இன்று இறப்பினும் விண்ணுலகில் என் மூதாதையரை தேடிச்செல்வேன்” என்றார் சுஃபலர். “ஏனென்றால் நான் இதுவரை அன்னமென பரிமாறியது என் நெஞ்சு அறிந்த ஒற்றைச் சொல்லையே.”


“சுஃபலரே, இப்புவி விரிந்துபரந்தது. ஏராளமான ஊர்கள், எண்ணற்ற மாந்தர். எண்ணித்தீராத மெய்மைகள். இங்கு இவ்வொரு செயலில் அமைந்து நீங்கள் அவற்றை இழந்துவிட்டீர்கள் அல்லவா?” என்றார் லௌபாயனர். “இந்த ஆலமரம் இங்கு மட்டும்தானே நின்றுள்ளது” என்று சுஃபலர் சொன்னார். “சிற்றுயிர்ப்பூச்சிகள் பறந்தலைகின்றன. பறவைகள் ஊர்தேடிச் செல்கின்றன. யானைகளுக்கு ஒற்றைக்காடு மட்டுமே. யானைக்கூட்டங்கள் வந்து நின்று இளைப்பாறும் நிழல்கொண்ட இந்த மரம் எங்கும் செல்வதில்லை.”


அவர் சொல்வனவற்றை உணர்ந்துசொல்கிறாரா அல்லது எங்கோ கேட்டவையா அவை என எண்ணி லௌபாயனர் அவரை நோக்கிக்கொண்டிருந்தார். “ஆனால் இதன்வேர்கள் அங்கே அடிமலைச்சரிவுவரை செல்கின்றன. இதன் மகரந்தம் இக்காடு முழுக்க செல்கிறது. இதன் கொடிவழி ஒருவேளை தென்குமரிவரைக்கும்கூட சென்றிருக்கக் கூடும்.”


லௌபாயனர் நெஞ்சு இளகப்பெற்றார். “நான் இங்குள்ள அத்தனை குருநிலைகளுக்கும் சென்றுவிட்டேன், சுஃபலரே. நான் தேடுவதை கண்டடையவில்லை” என்றார். “அவ்வாறெனில் அது உங்களை தேடிவரட்டும், அந்தணரே. கனிமரங்களைப் பறவைகளும் பூக்களை வண்டுகளும் தேடிவருகின்றன” என்று சுஃபலர் சொன்னார். அவர் சொல்வதை புரிந்துகொண்டு லௌபாயனர் மெய்குளிர்ந்தார்.


“நான் உங்களை நல்லாசிரியனாகப் பணிகிறேன். நான் ஆற்றிய பிழை என்ன?” என்றார். “காட்டுப்பசுக்களின் பாலின் சுவை தொழுவத்துப் பசுக்களுக்கில்லை” என்றார் சுஃபலர். “இந்த ஆலமரத்தை ஒவ்வொருநாளும் நோக்கிக்கொண்டிருக்கிறேன். இங்கு அத்தனை பறவைகளும் கூடணைகின்றன. கிளைவிரித்து இது நின்றிருப்பது அவற்றை வரவேற்பதற்காகவே.”


நெடுநேரம் அந்த ஆலமரத்தையே நோக்கிக்கொண்டிருந்தார் லௌபாயனர். சுஃபலர் விரைவிலேயே துயின்றுவிட்டார். துயிலில் அவர் இதழ்கள் அசைந்துகொண்டிருப்பதை கண்டார். அச்சொல் என்ன என்பதை கூர்ந்து நோக்கினார். விழியுடன் செவி குவியவில்லை. ஆகவே செவிகளை மறந்து விழியால் அதை கேட்கமுயன்றார். விழிகள் அறிந்தது செவிக்குரிய சொல்லாகவில்லை. சலித்து பெருமூச்சுவிட்டு அவரும் படுத்துத் துயின்றார். துயிலில் மணிமுடிசூடிய முதிய அரசர் ஒருவர் தோன்றினார். அவர் விழிகளைக் கண்டதும் அவர் திகைத்து “சுஃபலரே நீங்களா?” என்றார். அவர் அக்குரலை கேட்கவில்லை. ஒருசொல்லை சொன்னார். தெளிவாக அதை அவர் விழிகளும் செவிகளும் அறிந்தன. அவர் அதை திரும்பச் சொன்னார். உடனே விழித்துக்கொண்டார்.


அது புலர்காலை. அவர் எழுந்தபோது அருகே சுஃபலர் இறந்துகிடப்பதை கண்டார். உடல் தளர்ந்திருந்தாலும் முகம் முலையுண்டு நிறைந்து உறங்கும் குழவியைப்போலிருந்தது. அவரை நோக்கிக்கொண்டிருந்தபோது தன் உதடுகள் அசைந்து ஒரு சொல்லை உரைப்பதை அவர் கேட்டார். சுஃபலரை அக்காட்டில் மண்மறைவு செய்துவிட்டு அங்கேயே லௌபாயனர் தங்கிவிட்டார். அங்கிருந்த அன்னச்சாவடியை அவர் தொடர்ந்து நடத்தினார். முதற்புலரியில் எழுந்து கிழங்குகளும் கீரைகளும் காய்களும் சேர்த்துவருவார். சமைத்துவைத்துக்கொண்டு வருவிருந்துக்காக காத்திருப்பார். செல்விருந்து ஓம்பி துயில்வார்.


அவர் எவரிடமும் பேசுவதே இல்லை. ஆயினும் அவர் மெய்ஞானி என்று மெல்ல புகழ்பெறலானார். அவரைத்தேடி மாணவர்கள் வந்தனர். அங்கு எவ்விலக்கும் எந்நெறியும் இல்லை என்பதனால் அத்தனை மெய்யுசாவிகளும் அங்கு வந்து சேர்ந்தனர். அவர்களுக்குள் தொடர்ச்சியான சொல்லாடல்கள் நிகழ்ந்தன. சாங்கியர்களும் வைசேஷிகர்களும் மீமாம்சகர்களும் அமணர்களும் சார்வாகர்களும் வேதாந்திகளும் ஒருவரை ஒருவர் சந்தித்து சொல்மடுக்கும் இடமாக அது மாறியது. பிற எங்காயினும் தவிர்க்கமுடியாதபடி நிகழும் பூசல்கள் அங்கே லௌபாயனரின் இருப்பினால் தவிர்க்கப்பட்டன.


இரவும்பகலும் தத்துவம் பேசப்படும் இடம் என மகாதலம் சூதர்களால் சொல்லப்பட்டது. வணிகர்கள் அங்கு வந்து தங்கி கொடையளித்துச் செல்ல அது வளர்ந்தது. லௌபாயனரின் மாணவர்கள் அவரிடம் அடுமனையாளர்களாக சேர்ந்தனர். அவர் ஒற்றைச் சொற்களில் ஆணையிடும் பணிகளைச் செய்து அவருடன் இருந்தனர். ஆனால் அவர்களிலிருந்தே அனைத்துக் கொள்கைகளையும் நன்கறிந்த அறிஞர்களும் அறிந்ததைக் கடக்கும் படிவர்களும் உருவாகிவந்தனர். அவர்களில் முதல்மாணவரான மாதவர் அதை ஓர் கல்விநிலையாக வளர்த்தெடுத்தார். பலநூறுபேர் அங்கு ஒழியாது தங்கி சொல்லாடினர். ஆனால் அங்கு முதன்மையாக அன்னமே வழங்கப்பட்டது.


லௌபாயனர் தன் எண்பத்தெட்டாவது வயதில் நிறைவடைந்தார். ஆலமரத்தடியில் மலர்ந்த முகத்துடன் மல்லாந்து படுத்து அதன் விரிந்த கிளைகளில் கூடணைந்திருந்த பல்லாயிரம் பறவைகளை நோக்கிக்கொண்டிருந்த அவர் தன் அருகே இருந்த மாதவரிடம் அந்த மரத்தைச் சுட்டி “மைத்ரி” என்று சொன்னார். விழிமூடி நீள்துயில்கொண்டார். அந்த ஆலமரம் அதன் பின்னர் மைத்ரி என்று அழைக்கப்பட்டது. அதன் விதைகள் அக்காடு முழுக்க நட்டு விரிவாக்கப்பட்டபோது அக்காடே மைத்ராயனியம் எனப்பட்டது. ஒருங்கிணைவின் பெருங்காட்டில் எந்தக் கொள்கையும் நிகரான ஏற்புடையதே என்று இருந்தது. ஆனால் அதனாலேயே அங்கு வேதமெய்மை நிலைநின்றது. அது வேதச்சொல் வாழும் காடுகளில் முதன்மையானது என்று அறியப்பட்டது.


[ 3 ]


மைத்ராயனியக் காட்டிற்கு தன் தம்பியருடன் உச்சிப்பொழுதில் தருமன் வந்துசேர்ந்தபோது அதை ஒரு கல்விநிலை என்றே அவரால் எண்ணமுடியவில்லை. நூற்றுக்கணக்கான அத்திரிகளும் குதிரைகளும் மலைக்கழுதைகளும் அங்குள்ள மரநிழல்களில் பொதியவிழ்த்துக் கட்டப்பட்டிருந்தன. அவற்றின் சாணிமணமும் மிதிபட்டு சிறுநீருடன் கலந்த புல்லின் மணமும் அவற்றின் உடலில் எழுந்த வியர்வைமணமும் அங்கு நிறைந்திருந்தன. கனிகொண்ட ஆலமரம்போல அப்பகுதியே ஓசையால் நிறைந்திருந்தது. எவரும் எவரையும் முறைப்படி வரவேற்கவில்லை. முகமன்கள் உரைப்பதற்கு எவருக்கும் நேரமில்லை என்பதுபோல அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள்.


அங்கே ஓடிய நீரோடையில் கைகால்களை கழுவிவிட்டு குடில்வளாகத்திற்குள் நுழைந்தார்கள். மையமாக நின்றிருந்த சாலமரத்தின் அடியில் சுஃபலர், லௌபாயனர், மாதவர் மற்றும் அதன்பின்னர் அமைந்த பதினேழு ஆசிரியர்களின் நினைவாக கல்விளக்குகள் அமைக்கப்பட்டிருந்தன. மைத்ரியன்னை என்னும் அந்த முதல்மரம் அங்கு வருபவர்களின் தெய்வமாக ஆகிவிட்டிருந்ததை அதன் கிளைகளில் தொங்கிய சிறிய மலர்மாலைகள் மற்றும் வேண்டுதல் எழுதி சுருட்டிக்கட்டப்பட்ட ஓலைநறுக்குகள் ஆகியவற்றிலிருந்து உணரமுடிந்தது.


குடில்களின் மையமாக ஒரேபந்தியாக ஐந்நூறுபேர் உண்ணும் அளவுக்கு பெரிய அன்னசாலை அமைந்திருந்தது. அதற்குப் பின்னால் தொலைவில் அணையா அடுப்புகொண்ட அடுமனையிலிருந்து செங்கல்லால் ஆன புகைபோக்கி வழியாக அடுப்புப்புகை எழுந்து வானில் திருநீற்றுக் கீற்றென கரைந்து இழுபட்டு நின்றிருந்தது. அங்கிருந்து ஒரு கூரையிடப்பட்ட நீள்பாதை வழியாக உணவுக்கலங்கள் அன்னசாலைக்கு கொண்டுவரப்பட்டன. உணவுண்டவர்கள் கைகளைக் கழுவுவதற்காக நீரோடையின் ஒரு கிளை வடக்குப் பக்கமாக திருப்பிவிடப்பட்டு வளைந்துசென்றது. அதனருகே எச்சில் இலைகளும் இலைத்தொன்னைகளும் நிறைந்த பெரிய மூங்கில்கூடைகள் நின்றன. அவற்றை பொதியென ஆக்கி எடுத்துச்செல்லும் கழுதைகள் நின்றிருந்தன.


அன்னசாலையைச் சுற்றி நீளமான கொட்டகைகள் அமைந்திருந்தன. மூங்கில்நாராலான நூற்றுக்கணக்கான கட்டில்கள் வரிசையாக போடப்பட்டு ஒவ்வொரு கட்டிலுக்கும் ஒரு பரணும் அமைந்திருந்தது. அவற்றில் வணிகர்களும் வழிப்போக்கர்களும் அமர்ந்து உரத்த குரலில் பேசிச் சிரித்துக்கொண்டிருந்த ஒலி கூரைப்பரப்பை மீறி மேலெழுந்தது. “நாம் உணவு உண்டபின் இவர்களிடம் பேசுவோம்” என்றான் பீமன். “இங்கு மாணவர்கள் தங்குவதற்கான குடில்கள் எங்குள்ளன?” என்று தருமன் கேட்டார்.


அருகே நின்றிருந்த ஒரு சூதர் “இங்கு தனித்தனியான குடில்கள் எவருக்குமில்லை, உத்தமரே. முதலாசிரியர் மகாசங்கரும் கூட கொட்டகைகளில்தான் தங்கிக்கொள்கிறார். பெண்களுக்கு தனியான கொட்டகைகள் உள்ளன” என்றார். “இங்கு தங்குபவர்கள் அனைவரும் அன்னசாலையில் பணியாற்றவேண்டும் என்பது மரபு. இங்கு முதன்மையாக அன்னமே அளிக்கப்படுகிறது.” “இங்கு வேதவேள்விகளும் சொல்லவைகளும் இல்லையா?” என்று தருமன் கேட்டார். “அன்னமே இங்குள்ள வேள்வி. வயிற்றில் அன்னம் நிறைந்தபின் இயல்பாக எழுவதே மெய்ச்சொல்” என்றார் சூதர்.


மைத்ரியக் காடு ஏழு வேதக்காடுகளுக்குச் செல்லும் பாதைகள் சந்தித்துக்கொள்ளும் மையத்தில் இருந்தது. உண்மையில் அவ்விடுதியே அப்பாதைகளை உருவாக்கியது. அங்கு அன்னம் அறாது என்பதை அறியாத பயணிகள் இருக்கவில்லை. பின்னர் வணிகர்கள் சந்தித்துக்கொள்ளவும் அந்தணரும் சூதரும் உரையாடவுமான மையமாக அது ஆகியது. ‘மைத்ரியக்காட்டில் பேசப்படாத செய்தி’ என்ற சொல்லாட்சியே உருவாகி புழக்கத்திலிருந்தது. வெவ்வேறு நாடுகளின் நாணயங்களை உரியமுறையில் மாற்று கொள்வதற்குரிய இடமாகவும் அது காலப்போக்கில் மாறியது.


பந்தியில் ஐவரும் அமர்ந்தனர். திரௌபதி அப்பால் பெண்களுக்கான பந்தியில் அமர்ந்தாள். அங்கே பன்னிரு பெண்களே இருந்தனர். பத்துபேர் தங்கள் பாணர்களுடன் வந்த விறலியர். ஒருத்தி முதுபார்ப்பனி. ஒருத்தி வணிகர்களுடன் வந்த பரத்தை. “தங்கள் குலமறிவித்து பந்தி கொள்க!” என்றான் உணவுபரிமாறுபவன். திரௌபதி விறலியருடன் சென்று அமர்ந்துகொண்டாள். அனைவர் முகங்களிலும் வியப்பு தெரிந்தாலும் அவர்கள் ஒன்றும் கேட்கவில்லை.


தருமன் தன்னை வழிப்போக்கனாகிய சூதன் என்று அறிவித்துக்கொண்டான். பரிமாறுபவன் விழிகளில் ஐயத்துடன் “அப்பேருருவரும் சூதரா?” என்றான். “ஆம்” என்றான் பீமன். “நான் அடுமனைப்பணியாளன். உண்டு பெருத்தவன்.” அவன் புன்னகைத்து “நன்று” என்றான். அவர்களுடன் ஐநூறுபேர் உணவருந்தினர். அது உச்சிப்பொழுதின் நாலாவது பந்தி. ஆயினும் உணவு சூடாகவும் சுவையுடனும் இருந்தது. கீரையும் கிழங்கும் கோதுமை மாவும் சேர்த்து பிசைந்து அவித்த அப்பங்கள். அரிசியுடன் பயறு சேர்த்து பொங்கப்பட்ட அன்னம். பருப்பும் கீரையும் கலந்த கூட்டு. உள்ளே வெல்லம் வைத்து தீயில் சுட்ட கிழங்கு. எண்ணையிட்டு வதக்கப்பட்ட வழுதுணையும் வெண்டையும். புளிக்காய் சேர்த்து கொதிக்கவைக்கப்பட்ட மோர். சுக்கு போட்டு கொதிக்கவைக்கப்பட்ட குடிநீர்.


அவர்கள் உண்ணத்தொடங்கிய சற்றுநேரத்திலேயே பீமன் உண்பதை நோக்கியபடி அனைவரும் விழிமறந்து அமர்ந்திருந்தார்கள். அடுமனைப்பணியாளர் இருவர் அவனுக்காகவே பரிமாறத்தொடங்கினர். தருமன் “மந்தா… சூழை நோக்கு… மந்தா” என பலமுறை மெல்ல இடித்துரைத்தபோதும் அதை பீமன் கேட்கவில்லை. உணவைக் கண்டதுமே அவன் அதனுடன் கலந்துவிட்டிருந்தான். தருமன் தடுமாற்றத்துடன் அப்பாலிருந்த அர்ஜுனனை நோக்க அவன் புன்னகையுடன் “இரண்டின்மை” என்றான். நகுலன் “ஒன்றும் செய்யமுடியாது, மூத்தவரே” என்றான். “அவனை எவர் என அறிந்துவிடுவார்கள்” என்றார் தருமன். “அங்காடியில் யானை என அவரை சற்றுமுன் அந்த சூதன் சொன்னான். எப்படி மறைக்கமுடியும்?” என்றான் சகதேவன்.


சற்றுநேரத்தில் அடுமனைப்பொறுப்பான முதியவர் கரிபடிந்த மரவுரி ஆடையும் வியர்வை வழிந்த உடலுமாக வந்தார். விறகுப்புகை அவருடன் வந்தது. உரத்த குரலில் “நல்லுணவு கொள்பவர் ஒருவர் வந்துள்ளார் என்றனர். தாங்களென அங்கிருந்தே அறிந்தேன், விருகோதரரே. என் கைசமைத்த உணவு இனிது என நம்புகிறேன்” என்றார். “நல்லுணவு என்பதற்கு அப்பால் ஒன்றும் சொல்வதற்கில்லை. எல்லா உணவும் நன்றே” என்றான் பீமன். “ஆம், உண்மை. இதில் கூடுதலாக உள்ளது எங்கள் அன்பு மட்டுமே” என்றார் அடுமனைத்தலைவர்.


“பெரும்பசிக்காக தவம்புரிகின்றன அடுமனைகள். இங்கு நாங்கள் எவரையும் வரவேற்பதோ வழியனுப்புவதோ இல்லை, இளையபாண்டவரே. தங்களுக்காக எழுபவை என் நாவின் தனிச்சொற்கள். தங்களுக்கு என்னவேண்டுமென சொல்லலாம்” என்று அவர் பீமன் அருகே வந்து நின்றார். “மேலும் உணவு!” என உரக்க நகைத்தபடி பீமன் சொன்னான். “ஆம், உணவு உள்ளது. தாங்கள் மகோதரர் ஆனாலும் எங்கள் உணவுக்குவையை ஒழித்துவிடமுடியாது” என்றார் முதியவர். “அதை அறிவேன். ஆனால் என் இருகைகளாலும் ஒருவாயாலும் அதை நிகழ்த்தவே முயல்வேன்” என்றான் பீமன்.


“அடுமனைத்தலைவரை வணங்குகிறேன். நான் மூத்த பாண்டவனாகிய யுதிஷ்டிரன். இவர்கள் என் தம்பியர். அங்கே பெண்கள்நிரையில் என் அரசி அமர்ந்திருக்கிறாள்” என்றார் தருமன். “நன்று, தாங்கள் இவ்வழி செல்லவிருக்கிறீர்கள் போலும்” என்றார் அடுமனைத்தலைவர். “இல்லை, நாங்கள் வேதம் பயிலும் காடுகளினூடாக சென்றுகொண்டிருக்கிறோம். மேலும் மேலும் உண்ணவிழையும் பசிநோய் கொண்டவர்கள்போல. இங்கு வரலாம் என்று எங்கள் தோழர் ஒருவர் சொன்னார். இங்கு தங்கி கற்க விழைகிறோம்” என்றார் தருமன்.


“இங்கே கல்விச்சாலை என ஏதுமில்லை. ஆசிரியர்களும் மாணவர்களும் என எவரும் இல்லை” என்றார் அடுமனைத்தலைவர். “இது ஒரு அடுமனை, ஓர் அன்னசாலை. அதற்குமேல் எதுவும் இங்கு அமைக்கப்படலாகாது என்பது எங்கள் முதன்மையாசிரியரான மாதவரின் ஆணை. அவருடைய ஆசிரியரும் இவ்வன்னசாலையின் மெய்யாசிரியருமான லௌபாயனர் முதல் அனைவருமே இங்கு அன்னம் சமைத்து பரிமாறி நிறைவதை அன்றி எதையும் செய்ததுமில்லை.” பீமனை நோக்கி விழிசுட்டி “இவர் நல்ல அடுமனையாளர் என அறிந்திருக்கிறேன். எனக்கு பெருந்துணையாக இருப்பார். பிறர் விரும்பினால் இங்கு கொட்டகைகளில் தங்கி அடுமனைகளில் பணியாற்றலாம்.”


“அது எங்கள் பேறு” என்று தருமன் சொன்னார். “முகமன் நன்று. ஆனால் அடுமனைப்பணி அத்தனை எளிதல்ல” என்று சொல்லி அடுமனைத்தலைவர் திரும்பினார். “உண்டு ஓய்வெடுத்தபின் அடுமனைக்கு வருக! உங்களுக்கு எவரும் பணி அளிக்கமாட்டார்கள். நீங்களே இங்கு நிகழும் அன்னவேள்வியில் உங்கள் இடத்தை கண்டடையலாம்” என்றபின் அவர் உள்ளே சென்றார். அருகே நின்றிருந்த அடுமனைப்பணியாளன் “அவர்தான் இக்கல்விச்சாலையின் முதலாசிரியர் பிரபவர். அடுமனை பேணலையே கல்வியென செய்துவருகிறார்” என்றான். “ஆம், நான் எண்ணினேன்” என்றார் தருமன்.


உணவுண்டு முடித்து ஓய்வெடுப்பதற்காக அவர்கள் கொட்டகைக்குள் சென்றனர். அங்கே பாதிக்கும்மேலான கட்டில்களில் வணிகர்கள் துயின்றுகொண்டிருந்தனர். அவர்களுடன் வந்த காவல்நாய்கள் அவர்களின் பொதிகளுக்கு அருகே சுருண்டுகிடந்தன. காலடியோசைகளில் அவற்றின் செவிகள் அசைந்து மடிந்து நிமிர்ந்தன. அவற்றின் விழிகள் மட்டும் உருண்டு அவர்களை நோக்கின. கட்டில்களைத் தெரிவுசெய்து படுத்து உடல்தளர்த்திக்கொண்டதுமே தருமன் கண்மயங்கலானார். அவரருகே நகுலனும் சகதேவனும் படுத்தனர். “மந்தன் எங்கே?” என்றார் தருமன். “அவர் அடுமனைக்குள் சென்றுவிட்டார். இளையவரும் உடன் சென்றார்” என்றான் நகுலன். தருமன் கண்களை மூடியபடி “அவர்களுக்கு சோர்வே இல்லை… அவர்கள் உடல்களுக்கு இவ்வுலகு போதவில்லை” என்றார்.


“தாங்கள் அடுமனைப்பணியாளனாக செல்லவேண்டியதில்லை, மூத்தவரே” என்று நகுலன் சொன்னான். தருமன் விழி திறக்காமலேயே புன்னகைத்து “மாறாக இது ஒரு நல்வாய்ப்பென்றே எண்ணுகிறேன். அடுமனைப்பணியில் திறனற்றவை என சில இருக்கும். இசைச்சூதனாகச் செல்வதும் குதிரைச்சூதனாக சாட்டையெடுப்பதும்தான் கடினம்” என்றார். நகுலன் “இங்கு இப்படி ஒரு பெருங்கூட்டத்தில் தத்துவக்கல்வி எப்படி நடக்கமுடியும்? எவர் எதை கற்றுக்கொள்ள முடியும்?” என்றான். சகதேவன் “சந்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 05, 2016 11:30

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.