Jeyamohan's Blog, page 1732
September 10, 2016
சண்டிகேஸ்வரர் முகங்கள்
வணக்கம் ஐயா,
உங்களுடைய சண்டீசர் பற்றிய பதிவினை இணையத்தில் படித்தேன். முகநூலில் உள்ள ஒரு குழுவில் சண்டிகேஸ்வரர் பற்றிய மேலும் சில தகவல்கள் கிடைத்தன.
சிவகாமபுராணங்களில் யுகத்திற்கு ஒன்றென சண்டிகேசுவரர்கள் உள்ளார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருத யுகம் – நான்கு முக சண்டிகேசுவரர்
திரேதா யுகம் – மூன்று முக சண்டிகேசுவரர்
துவாபர யுகம் – இரண்டு முக சண்டிகேசுவரர்
கலியுகம் – ஒரு முக சண்டிகேசுவரர்
நான்கு முக சண்டிகேசுவரர் – பிரம்மாய
மூன்று முக சண்டிகேசுவரர் – ?
இரு முக சண்டிகேசுவரர் – யமன்
ஒரு முக சண்டிகேசுவரர் – விராசசருமர்..
இப்படி சண்டிகேசுவரியும் உள்ளார் என்பதை கடம்பர் கோயிலில் பார்த்தேன். அவர்களுக்கும் கூட இவ்வாறு யுகத்திற்கு ஒரு கடவுள் இருக்க வாய்ப்பு இருக்கிறதா என தெரியவில்லை. நீங்கள் சண்டீசர் ஒரு தொன்ம தெய்வம் என்று தெரிவித்தீர்கள். உங்களைப் போன்ற வரலாற்று எழுத்தார்கள் இந்த தமிழுக்குத் தேவை நன்றி.
அன்புடன்
தாணுமாலயன்
***
அன்புள்ள தாணுமாலயன்
சண்டை என்ற சொல்லின் வேர் சண்ட என்னும் சம்ஸ்கிருதச்சொல். உக்கிரம், போர்த்தன்மை என்னும் அர்த்தங்கள் கொண்ட பெயர் அது. சண்டப்பிரசண்டம், சண்டமாருதம் போன்ற சொற்கள் அதிலிருந்து வருபவை. சண்டி, சண்டிகை போன்ற சொற்கள் பெண்பால். சண்டியர் சண்டிராணி என்றெல்லாம் நாம் இன்றும் பயன்படுத்துகிற சொற்கள் உள்ளன
அந்தச்சொல்லே சண்டிகேஸ்வரர். பழங்குடித்தெய்வமாக இருக்கலாம். அது சிவனின் காவல்தெய்வமாக, கணதேவதையாக மாறியது.புத்தர் உட்பட பெரும்பாலான பெருந்தெய்வங்களுக்கு இப்படி காவல்தெய்வங்களும் கணதேவதைகளும் உண்டு.
சண்டேஸ்வர நாயனார் கதை அதற்குப்பின்னால் வந்தது. அவர் கன்றோட்டும் குலத்தவர். உக்கிரமான குணம் கொண்டவர் என்பதனால் அப்பெயர் வந்தது.
இப்படி ஒரு தெய்வம் உருவாவது ஒரு குறியீடு பிறப்பதுதான். அக்குறியீட்டை யோகநெறியும் தாந்த்ரீகமுறையும் சிற்பவியலும் பலவகைகளில் வளர்த்தெடுக்கின்றன. அவை ஒவ்வொன்றும் ஒரு கவித்துவ உவமைபோல. கவிதைப்படிமங்களை நாம் கவித்துவமனநிலையில் விரிவாக்கம் செய்கிறோம். இப்படிமங்கள் யோகநிலையில் விரிவுபெறவேண்டும்
ஜெ
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
சண்டிகேஸ்வரர்
அன்புள்ள திரு.ஜெயமோகன் அவர்களுக்கு,
நலமா? போன வாரம் கும்பகோணம் சென்றிருந்தோம். அங்கு சுற்றியுள்ள கோயில்களுக்குச் சென்று வந்தோம். சண்டிகேஸ்வரரை வணங்கும்போது வழக்கம்போலக் கைதட்டினோம். அப்பொழுது என் சித்தி கைதட்டக்கூடாது என்றார். ஏன் என்றால் அவர் கோயிலை நிர்வாகம் செய்பவர் என்றார்.
திடீரென்று இன்று இணையத்தில் தேடிப்பார்த்தபோது நிறையக் கதைகள் கிடைத்தன. எல்லாக் கதைகளும் அவரவர் கற்பனைக்குத் தகுந்தவாறு சொல்லப்பட்டிருக்கின்றன. ஆனால் மையம் ஒன்றுதான். சிவபூஜை செய்து கொண்டிருந்த விசாரசருமருக்கு தந்தை எச்சதத்தன் இடையூறு செய்ய மழுவால் தந்தை காலை விசாரசருமர் வெட்டிவிடுகிறான். உடனே சிவன் பார்வதியுடன் தோன்றி சண்டிகேச பதவியைத் தருகிறார்.
மக்களுடைய நம்பிக்கை
1) சிவனை வணங்கும்போது சண்டிகேஸ்வரரையும் வணங்கினால்தான் பலன் கிட்டும்
2) கைதட்டுவது நூலைப்போடுவது போன்றவைகள், நான் எதையும் கோயிலிலிருந்து எடுத்துச் செல்லவில்லை என்று சொல்வதற்கு.
3) கைதட்டுவதும் நூலைப்போடுவதும் கூடாது என்றும் சிலர்….
4) சண்டிகேஸ்வரர் கோயிலை வலம்வரக்கூடாது என்று சிலர்
ஒரு நம்பிக்கைக்கும் மற்றொரு நம்பிக்கைக்கும் பெரிய முரண் உள்ளது. நம்பிக்கைகள் ஒருமையாக இருந்தால் ஏதோ பின்பற்றலாம்.
இதை எப்படி எடுத்துக் கொள்வது? எது மூலக்கதை? இதைப்பற்றி எந்த நூலாவது சொல்கிறதா? உண்மையில் சண்டிகேஸ்வரரின் தத்துவம் என்ன? தயவுசெய்து விளக்கம் அளிக்கவும். செய்வீர்களா? நன்றி.
இப்படிக்கு
பா.மாரியப்பன்
***
அன்புள்ள மாரியப்பன்,
முதல் குழப்பத்தைக் களையுங்கள். சண்டீச நாயனார் என்ற சிவ பக்தருக்கும் சண்டிகேஸ்வரர் என்ற சைவக்கடவுளுக்கும் சம்பந்தம் இல்லை.
சண்டீசநாயனார் பத்து பன்னிரண்டாம் நூற்றாண்டு வாக்கில் வாழ்ந்தவராக இருக்கலாம். அவரைப்பற்றி இருவேறு கதைகள் உள்ளன. பெரியபுராணத்தின்படி அவர் திருசேஞ்ஞல்லூரில் காசியப கோத்திரத்தில் எச்சதத்தன் என்ற அந்தணரின் மகனாகப் பிறந்தவர். பெயர் விசாரசருமர். சிவரகசியம் என்ற நூலில் கர்க்ககுலத்தில் கணபத்திரன் என்ற அந்தணரின் மகனாகப்பிறந்தார் என்று சொல்லப்பட்டுள்ளது.
பின்னர் வந்த நூல்களில் சண்டீச நாயனார்தான் சண்டிகேஸ்வரர் என்ற கூற்று உள்ளது. ஆனால் அது சரியானதல்ல. சண்டீஸ்வரர் ஒரு தொன்மையான தெய்வம். சண்டீசநாயனாரின் கதை அந்த தெய்வத்துடன் பன்னிரண்டாம் நூற்றாண்டு வாக்கில் இணைக்கப்பட்டது என்றே நினைக்கிறேன். சண்டீஸ்வரர் ஆறாம் நூற்றாண்டுக்கு முன்னரே சைவத்துக்குள் நுழைந்த தெய்வம்.
அதற்கு ஆதாரமாக இன்று சொல்லப்படவேண்டியது ஆகமமுறைப்படி சண்டிகேஸ்வரர் ஒரு பரிவார தேவதை அல்ல என்பதையே. சிவனைப்போலவே அவர் ஒரு தனிக்கடவுள். காமிகஆகமத்தில் அவருக்குத் தனி ஆலயம், கொடிமரம், பூசைவிதிகள், திருவிழா எல்லாமே சொல்லப்பட்டுள்ளன. ஆகவே எப்போதோ ஒரு காலகட்டத்தில் ஒரு தரப்பு மக்களின் தனிப்பெருந்தெய்வமாக இருந்திருக்கிறார். இவருக்கு தேவியும் உண்டு. சண்டிகா தேவி.
ஆகமங்களின் படி இவர் கரியநிறம் கொண்டவர். காளை வாகனம் கொண்டவர். நான்கு கரங்கள். அவற்றில் சூலம் உளியும் கொண்டு அபய, வரத முத்திரைகளுடன் இருப்பார். நான்கு தலைகள். நாகத்தால் உபவீதம் [பூணூல்] அணிந்து நாககங்கணம் அணிந்து வெண்தாமரைப் பீடத்தில் அமர்ந்திருப்பார். ஆனால் சண்டிகேஸ்வரர் ஒரு பெருந்தெய்வமானதனால் அவருக்குப் பல்வேறு தோற்றங்கள் உண்டு. ஆகவே ஊருக்கொரு வடிவில் காணப்படுவார்.
இவர் எந்த மக்கள்குழுவின் தனிக்கடவுளாக இருந்தார் என்று தெரியவில்லை.சைவம் பெருமதமாக எழுந்த காலகட்டத்தில் பல்வேறு தெய்வங்கள் சைவத்துக்குள் இழுக்கப்பட்டன. தட்சிணாமூர்த்தியும் அப்படிப்பட்ட தனிப்பெரும் தெய்வமே. அவை சிவ வடிவங்களாகவோ சிவசம்பந்தம் கொண்ட தெய்வங்களாகவோ உருமாற்றம் பெற்றன. சண்டிகேஸ்வரரும் அப்படி பரிணாமம் கொண்டவர்.
ஆனால் சைவத்துள் நுழையும்போதே சண்டிகேஸ்வரர் முழுமுதல் கடவுளாக இருந்திருக்கிறார், பழங்குடித்தெய்வமாக அல்ல. அதற்கு உதாரணம் அவரது தாமரை இருக்கை. அவரது நாக ஆபரணங்களை வைத்துப் புராதன நாகர்களின் தெய்வம் அவர் என்று சொல்பவர்கள் உண்டு.
சைவம் பெருமதமாக வளர்ந்த காலகட்டத்தில், அதாவது பிற்காலச் சோழர்காலகட்டத்தில், பல்வேறு தெய்வங்களையும் வழிபாட்டுமுறைகளையும் சைவத்துக்குள் கொண்டுவரும்பொருட்டு ஏராளமான புராணங்கள் எழுதப்பட்டன. இவை தவிர தலபுராணங்கள் ஆங்காங்கே இருந்த நம்பிக்கைகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டன. பின்னர் பூசாரிகள் அவரவர்களுக்குத் தோன்றிய சடங்குகளையும் கதைகளையும் சொல்ல ஆரம்பித்தார்கள்.
எனவே சிவவடிவங்கள், உபதெய்வங்கள் சார்ந்த எல்லா வினாவுக்கும் நாம் ஆகமங்களை ஆராய்வதே முறையாகும். ஆகமமுறைகளின்படி அவருக்கு பலிச்சடங்குகள் இல்லை. முதற்பெரும்தெய்வத்துக்குரிய எல்லாப் பூசைகளும் செய்யப்பட்டாகவேண்டும். அதாவது அவர் சிவபரிவாரம் அல்ல சிவ வடிவம்.
சண்டிகேஸ்வரருக்குப் புத்தாடை [வஸ்திரம்] சார்த்தி வழிபடவேண்டும். அதைத்தான் யாரோ எப்போதோ பஞ்சகாலத்தில் நூலே போட்டால் போதும் என மாற்றியிருக்கிறார்கள். ஆனால் அது புதியநூலாக இருக்கவேண்டும். ஆடையில் இருந்து பிய்த்துப்போட எவர் ஆரம்பித்தார்கள் தெரியவில்லை. இந்த அபத்தமான வழக்கத்துக்கு உடனே ஒரு கதையையும் கட்டிவிட்டார்கள். காஞ்சி சந்திரசேகர சரஸ்வதி அவர்கள் இதைப் பல இடங்களில் கண்டித்திருக்கிறார்.
சண்டிகேஸ்வரரை வலம் வருதல் கூடாது என்பதும், கும்பிடும்போது கைதட்டிக்கும்பிடவேண்டும் என்பதும் அத்தெய்வத்தின் மூலமதத்தில் இருந்த நம்பிக்கை, சடங்கு ஆக இருக்கலாம். இப்படி பல தெய்வங்கள் பெரு மதத்தில் இணையும்போது அந்த மூல வழிபாட்டு முறை பெரும்பாலும் அப்படியே நீடிப்பதே வழக்கம். நவக்கிரக வழிபாடு, சக்கர வழிபாடு, சூரிய வழிபாடு, கணபதி வழிபாடு போன்றவை உதாரணம். காரணம் அந்தத் துணைமதப்பிரிவினர் தங்கள் தெய்வத்தை அதே முறைப்படித்தான் பெரும்கோயிலுக்குள் வந்து வழிபட்டுச் செல்கிறார்கள்.
இன்று அவை அப்படியே நீடிப்பது அவசியமும் கூட. ஒன்று, அவை நம் பண்பாட்டின் நுட்பமான பன்மைத்தன்மையின் சின்னங்கள். இரண்டு,அவை தொன்மங்கள், குறியீடுகள். அவை அளிக்கும் ஆழ்மனப்பதிவு முற்றிலும் தனித்தன்மை கொண்டது. தியான மரபில் அவற்றுக்கு வெவ்வேறு அர்த்தம் உள்ளது. ஆகவே சடங்கு நம்பிக்கை இல்லாவிட்டால் கோயிலுக்கே செல்லக்கூடாது. நம்பிக்கை இருந்து கோயிலுக்குள் சென்றால் குறியீட்டுச் சடங்குகளை மாற்றக்கூடாது.
சண்டிகேஸ்வரர் பற்றிய கதைகள் பிற்காலத்தைய அர்ச்சகர்களின் கற்பனை வளமற்ற உருவாக்கங்கள் மட்டுமே. அதாவது சிவன்கோயிலின் காவலர் சண்டிகேஸ்வரர், கோயிலைவிட்டுச் செல்லும்போது ஒன்றும் கொண்டுசெல்லவில்லை என்று கைதட்டிக் காட்டவேண்டும் என்பது. எந்த முக்கியமான நூலிலும் இந்த கதைகள் கிடையாது. ஒரு ஐம்பது அறுபது வருடங்களில் உருவாக்கப்பட்ட அசட்டுக் கதை இது. முன்னரே சொன்னதுபோல காமிக ஆகமப்படி சண்டிகேஸ்வரர் ஒரு காவலர் அல்ல, துணைத்தெய்வமும் அல்ல, இணைத்தெய்வம்.
சண்டிகேஸ்வரர் பற்றிய ஆகம நெறிப்படுத்தல் இவ்வளவே. சிவாலயத்துக்குள் நுழைவதற்கு முன்னரே ஆலயச்சுற்று வரும்போது அவரை வழிபடவேண்டும். ஒரேமுறை கைதட்டி மும்முறை வணங்கவேண்டும். அச்சம், நடுக்கம் தவிர்க்க அவரை வழிபடலாம். அவருக்கான பிற வழிபாடுகள் எல்லாமே சிவனுக்குரியவைதான். அவரை சிவ வடிவமாகவே எண்ணவேண்டும், பரிவார தேவதையாக அல்ல
ஜெ
மறுபிரசுரம் / Sep 23, 2011
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
இணைய எழுத்தாளர்கள்
இணையத்தில் எழுதும் பெரும்பாலான எழுத்தாளர்களின் வலைப்பக்கங்களை ஒரே பக்கமாகத் தொகுத்திருக்கிறார் ஒரு வாசகர். அனைவர் தளங்களுக்கும் சென்று வாசிப்பதற்கு உதவியானது இது
எழுத்தாளர்களின் இணையப்பக்கங்கள்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 54
[ 9 ]
நூறு கிளைகளும் ஆயிரம் விழுதுகளும் கொண்டு தனிமரமே காடென்றான மைத்ரி என்னும் ஆலமரத்தடியில் அமைந்த சிறுகொட்டகையில் திசையாடை அணிந்த சமணப்படிவர் தன் முன் அமர்ந்திருந்த தருமனிடம் அறவுரை சொன்னார். “அரசே, இப்புவியில் அறமென்றும் அன்பென்றும் ஏதுமில்லை. இருப்பது விழைவு ஒன்றே. விழைவுக்குரியதை நாடும் வழியையும் அதை பேணும் முறைமையையும் மானுடர் அறமென வகுத்தனர். விழைவை அன்பென்று ஆக்கி அழகுறச்செய்தனர். விழைவை வெல்லாதவனால் தன் விழைவை அன்றி எதையும் அறியமுடியாது. அறிபடுபொருள் அனைத்தும் விழைவால் உன்னிடம் தொடர்புகொண்டிருக்கையில் வேறெதை அறியும் உன் சித்தம்?”
“கேள், பசிகொண்டவன் அடுமனைப்பணி ஆற்ற முடியுமா? நாவூறுபவனால் அறுசுவை சமைக்கமுடியுமா? பசியும் ருசியும் விலகியபின்னரே நீ அன்னத்தை அறியத்தொடங்குகிறாய். அதன்பின்னரே அருஞ்சுவை உன் கைகளில் வந்தமைகிறது” என்றார் அருகப்படிவர். “விழைவறுக்காது சொல்லப்படும் ஒவ்வொரு சொல்லும் சொல்பவனின் விழைவால் வளைந்தது. விழைவுகொண்டவனின் செயல்களனைத்தும் அவன் விழைவால் திசைமாற்றப்பட்டவை. விழைவுகொண்டவனின் அறிவென்பது அவ்விழைவு கொண்ட ஆயிரம் உருவங்கள் மட்டுமே.”
“மானுடருக்குரிய விழைவுகளில் உயிர்ப்பற்று தெய்வங்களால் பொறுத்தருளப்படுகிறது. அதன்பின்னர் மைந்தருக்கான விருப்பம் அவர்களால் ஏற்கப்படுகிறது. ஆனால் அவையும்கூட உண்மையை மறைப்பவை, உள்ளத்தை திரிப்பவை. முற்றிலும் விழைவை வென்றவனுக்குரியதே முற்றறிவென்று அறிக!” தருமன் அவர் சொற்களைக் கேட்டபடி கைகளை கட்டிக்கொண்டு அமர்ந்திருந்தார். அடுமனைப்புகை கலந்த காற்று மழைநீர்த்துளிகளுடன் வீசியது. ஆலமரத்தின் கிளைகளிலிருந்து பறவைகள் மழையூறிய சிறகுகளை வீசி உலரச்செய்தபடி கிளம்பிச்செல்லும் ஒலி தலைக்குமேல் நிறைந்திருந்தது.
நூறு மைந்தரைக் கண்டு நிறைந்து முதிர்ந்து கம்பூன்றி தளர்ந்து நடந்தார் சோமகன். நூறு மைந்தரின் ஆயிரம் பெயர்மைந்தரைக் கண்டு மேலும் நிறைந்து அவர்களின் பன்னிரண்டாயிரம் மறுபெயர் மைந்தரையும் கண்டு அவர்களின் பெயர்கள்கூட தெரியாமல் முகமும் புரியாமல் ஆனார். நோய்கொண்டு உடல் நைந்து படுக்கையில் கிடந்தார். காலமும் இடமும் அறியாமலாயின. அறிந்த உறவுகள் எவரும் சூழ்ந்திருக்கவில்லை. உடலெங்கும் விடாய் நிறைந்து தவித்தது. ஆனால் வாயில் நீரூற்றப்பட்டபோதுதான் அது நீருக்கான விடாய் அல்ல என்று தெரிந்தது. குரல்வளையில் அனல் எரிந்துகொண்டே இருந்தது. நினைவுகள் முழுமையாக அழிந்தன. தன்னிலை அதன்பின் அழிந்தது. தன்னருகே கிடந்த கை எவருடையதோ எனத் தோன்றியது. அப்போது அவர் அருகே குனிந்த இளமைந்தன் ஒருவன் ‘மூதாதையே, இதோ நீர்’ என்றான்.
அவன் தன் கைகளில் இருந்த மரக்குடுவையிலிருந்து நீரை அவர் நாவில் ஊற்றினான். அந்த நீரை கண்களால் பார்க்கமுடிந்தது. நாவை அது தொடவில்லை. எம்பி எம்பி அந்த நீரை கவ்வ உளம்தவித்தாலும் உடல் உள்ளத்தை அறியவில்லை. ‘இன்னும், இன்னும்’ என்று அவர் கூவினார். அது சொல்லாகவில்லை. பின்பு நடுக்கத்துடன் அவர் அவனை அறிந்தார், அது சௌமதத்தன். ‘ஜந்து!’ என்று அவர் கூவினார். அவன் அவர் குரலைக் கேட்காத நெடுந்தொலைவில் இருந்தான். முகம் ஒளிகொண்டிருந்தது. விழிகள் வேறெங்கோ என திரும்பியிருந்தன. இத்தனை அழகனா இவன் என வியந்தார். ‘ஜந்து!’ என மீண்டும் அழைத்தார்.
ஜந்து புன்னகையுடன் மறைந்தான். நீர்ப்பாவை மீது காற்றுபடிந்ததுபோல அவன் உருவம் கலைந்ததும் அவர் மீண்டும் ‘ஜந்து’ என முனகினார். அருகே நின்றிருந்த அவர் பெயரன் சோமகன் குனிந்து அவர் இதழ்களை நோக்கி ‘எதையோ சொல்கிறார்’ என்றான். ஏவலன் அவர் இதழ்களில் காதுவைத்துக் கேட்டு ‘ஜந்து என்கிறார்’ என்றான். ‘எதை சொல்கிறார்?’ என்று சோமகன் கேட்டான். ஏவலன் மேலே நோக்கி ‘பல்லி ஏதாவது உத்தரத்தில் ஓடியிருக்கலாம்’ என்றான். ‘இங்கு எந்த உயிரும் இல்லையே?’ என்றான் அணுக்கமருத்துவன்.
அவர் மீண்டும் அதையே சொல்ல செவிகொடுத்துவிட்டு ‘ஆம், ஜந்து என்றுதான் சொல்கிறார்’ என்றான் இன்னொரு ஏவலன். ‘பொருளற்ற சொல்… அவர் தன் அழிந்துபோன இளமையில் எங்கோ இருக்கிறார். அதை நாம் இன்று இங்கிருந்து அறியமுடியாது’ என்றார் மருத்துவர். ‘அந்நிகழ்வை எப்படி உள்ளம் மீட்டெடுக்கிறது?’ என்றான் சோமகன். ‘இளவரசே, முதுபிதாமகரின் வாழ்க்கையில் எங்கோ ஏதோ உயிருடன் அவருக்கு ஓர் எதிர்கொள்ளல் நிகழ்ந்திருக்கிறது’ என்றான் ஏவலன்.
மருத்துவர் ‘அது அவ்வண்ணம் முதன்மையான செயலாக இருக்கவேண்டுமென்பதில்லை, இளவரசே. வாழ்க்கையின் அனைத்து நிகழ்வுகளையும் உள்ளம் நீர் கரையோரக்காட்சிகளை என இயல்பாகவே பதிவுசெய்துகொள்கிறது. அந்நிகழ்வுகளில் சிலவற்றில்தான் தெய்வங்கள் நுழைந்தாடுகின்றன. மிக எளிய அன்றாடச் செயலாகவும் இருக்கலாம். அந்நிகழ்வை மட்டும் நீரை பாறைப்பிளவு தேக்கிக்கொள்வதுபோல உள்ளம் காத்துக்கொள்கிறது’ என்றார். சோமகன் ‘ஜந்து என்றால் என்ன பொருள்? வியப்பாக உள்ளது’ என்றான்.
முதிய ஏவலன் ஒருவன் ‘நம் குடிக்குரிய கைவிடப்பட்ட ஆலயம் ஒன்று நகரின் தெற்குமூலையில் உள்ளது. உங்கள் தந்தையார் உயிருடனிருந்த காலம் வரை அங்கே மாதம்தோறும் கருநிலவு ஏழாம் நாளில் குருதிபலி கொடுத்து வணங்கிவந்தார். அரசகுலத்து மைந்தர் ஒருவரின் நடுகல் அது என்பார்கள். அவர் பெயரை ஜந்து என்று சொல்லிக்கேட்டிருக்கிறேன்’ என்றான். ‘ஆம், அந்த ஆலயத்தை நானும் ஒருமுறை பார்த்திருக்கிறேன். அதனருகே நின்ற ஆலமரம் வளர்ந்து அது வெடித்தது. சில ஆண்டுகளுக்கு முன் யானையொன்றின் கால்பட்டு இடிந்தழிந்தது. சிலை சரிந்து பாதி மண்ணில் புதைந்து அங்கே கிடக்கிறது’ என்றான் இன்னொரு ஏவலன்.
‘அந்த ஆலயத்தை சீரமைக்க பிதாமகர் விழைகிறார் போலும். அவ்வாறே செய்வோம்’ என்றான் சோமகன். முதியவரின் செவியருகே குனிந்து ‘ஆலயத்தை மீண்டும் கட்டுகிறோம். ஜந்துவின் ஆலயம் கட்டப்படும்’ என்று கூவினான். அவர் அதை கேளாத் தொலைவிலிருந்தார். எதிரே நின்றிருக்கும் ஒருவரை நிலைகுத்தி நோக்குபவர் போலிருந்தன விழிகள். ‘போதும், அழைத்துச்செல்!’ என அவர் எண்ணினார். அவ்வெண்ணம்கூட அவருக்கு வெளியே எங்கோ எழுந்ததுபோலிருந்தது. அதைக் கேட்டு அக்கணமே அருகே இருந்த நிழல் எருமையாகியது. அதன் மேல் அமர்ந்திருந்த அவன் கயிற்றுச்சுருளை வீசி ‘வருக!’ என்றான்.
நிழலெருமை மீதேற்றி எமன் அவரை அழைத்துச்சென்றான். செல்லும் வழியில் ஒளிமிக்க வானின் நடுவே நிறுத்தி புன்னகையுடன் எமன் கேட்டான் ‘அரசே, சொல்க! இந்த நூறு மைந்தரும் ஆயிரம் பெயர் மைந்தரும் பன்னீராயிரம் மறுபெயரரும் உனக்கு எவ்வகையில் பொருட்டு? எதற்காக இவர்களை இழக்கச் சித்தமாவாய்?’ அவன் கேட்பதன் பொருளுணர்ந்து அவர் தலைகுனிந்து கண்ணீர் சிந்தினார். அவரை அவன் இருண்ட பாதைகள் வழியாக அழைத்துச்சென்றான். அவர் அங்கே விம்மல்களையும் அழுகுரல்களையும் கேட்டார். ‘அவை என்ன?’ என்றார். ‘உடலழிந்த விழைவுகள் அவை. உடல்காத்து இங்கு நின்றுள்ளன.’ அவர் கடந்து செல்கையில் தன் குரலையும் கேட்டார். ‘ஜந்து ஜந்து’ என்று அது அரற்றிக்கொண்டிருந்தது.
“அரசே, இப்புவியில் அனைத்துக் கொடுமைகளும் விழைவின் விளைவாகவே செய்யப்படுகின்றன. இங்கு மெய்மையும் அறமும் விழைவுகளால் விளக்கப்பட்ட வடிவில்மட்டுமே கிடைக்கின்றன. விழைவறுத்து விடுதலை கொள்க! அறிவதறிந்து அமைக! அருகனருள் அதற்குத் துணை கூடுக!” அருகப்படிவரின் குரல் ஓய்ந்தபின்னர் நெடுநேரம் அவர் எஞ்சவிட்ட அமைதியை கேட்டுக்கொண்டு தருமன் அமர்ந்திருந்தார். பின்னர் பெருமூச்சுடன் “நான் என் நினைவறிந்த நாள் முதல் மெய்யையும் அதை பீடமெனக்கொண்ட மாறா அறத்தையும் தேடி அலைந்துகொண்டிருக்கிறேன். நூல்களில், முனிவர் சொற்களில், சொல்வளர்காடுகளில்” என்றார்.
“நானறிந்த ஒவ்வொன்றையும் மேலுமறிந்த ஒன்று கடந்துசென்றதையே உணர்ந்தேன். பிருஹதாரண்யகத்தின் முழுமைக்கல்வியை சாந்தீபனி குருநிலையின் இணைவுக்கல்வி கடந்துசென்றது. அதுவே முழுமை என்றெண்ணி அங்கிருந்தவனை இவ்வடுமனைக்கு வரச்சொன்னவர் இளைய யாதவர். இங்கு வந்து என் சித்தத்தால் அறிந்ததை உடலால் மீண்டும் அறிந்தேன். சொற்கள் சருகென விழுந்து இம்மண்ணில் மட்கியபின் எஞ்சும் உப்பு என்னவென்று இங்கு அறிந்தேன். அத்தனை மெய்யறிதல்களும் ஒன்று பிறிதை நிகர்த்து ஒருமுனையென்றாகும் கணம் வரை வந்தேன். இது விடுதலை என்ற நிறைவுடன் இருந்தேன்.”
“அருகப்படிவரே, அடிகள் பணிந்து கேட்கிறேன். நான் இங்கிருந்து செல்லக்கூடும் இடமென்பதென்ன?” என்று தருமன் கேட்டார். “இங்கிருந்து இதைப்போல பிறிதொரு இடம் சென்று கடந்துசெல்ல நான் விழையவில்லை, அடிகளே. நான் சென்ற இடமே இறுதியென்றாகவேண்டும். நான் அறிந்ததே எனக்கு இறுதிவரை எஞ்சவேண்டும்.” அருகப்படிவர் அவரை நோக்கியபடி விழிநிலைத்து அமர்ந்திருந்தார். காற்று ஓடிச்செல்லும் ஓசையைக் கேட்டபடி தருமன் கைகூப்பியபடி அமர்ந்திருந்தார். அருகர் மீண்டும் பேசத்தொடங்கியபோது ஒரு சொல்கூட நிகழாது சித்தம் அங்கேயே நின்றிருந்ததை உணர்ந்தார்.
“அரசே, இதுவரை நீ தேடிய அறமென்பது என்ன? அது நீ இங்கு நாட்ட விழைந்த அறம். இங்கு தொடரவேண்டியதென நீ நாடிய அறம். அது அறமல்ல, உன் விழைவென்று நீ ஏன் அறியவில்லை?” என்றார். “அருகரே, நான் இவ்வுடலில் இப்பொறிகளுடன் இவ்வுள்ளத்துடன் இக்காலவெளியில் எஞ்சுவதுவரை எனக்குரிய அறத்தை மட்டும்தானே அறியமுடியும்?” என்றார் தருமன். “ஆம், நீ என்பது உன் விழைவல்ல. களிம்பும் துருவுமென படர்பவை ஆணவமும் அறியாமையும் பிறவும். விழைவோ உலோகக்கலவை என உள்கலந்து உருவென்றாகியது. உருகியழிந்து பிறந்தெழாமல் விழைவறுத்து மீளமுடியாது.”
“நீ இங்கு அன்னமளித்து ஆணவத்தை வென்றாய். அனைத்தறிவுகளையும் நிகரெனக்கொண்டு அறியாமையை வென்றாய். ஆனால் உன் கையிலிருந்து விழைவை அறுத்து இங்கு நீ அமைந்துள்ளாய் என எண்ணுகிறாயா?” என்றார் அருகப்படிவர். “இல்லை” என்று தருமன் தலைகுனிந்தார். அருகப்படிவர் அவர் சொல்லப்போவதற்காக காத்திருந்தார். “இல்லை, உத்தமரே” என்று சொல்லி தருமன் பெருமூச்சுவிட்டார். நெடுநேரம் தலைகுனிந்து அமர்ந்திருந்தபின் “இல்லை, நான் இதை பிறிதொருவரிடம் மட்டுமே சொல்லமுடியும். இல்லை” என உடைந்த குரலில் சொன்னார். அருகப்படிவர் அவரை தன் அன்னை விழிகளால் நோக்கியபடி காத்திருந்தார்.
“நான் அவளுக்காக ஏங்கிக்கொண்டிருக்கிறேன்” என்று சொன்னபோது அவர் உடல் நடுங்கத் தொடங்கியது. “நான் அவள் ஒரு சொல்லேனும் என்னிடம் கனிந்து சொல்வாள் என எதிர்பார்க்கிறேன். இக்காட்டுக்குள் நுழைகையில் என் உள்ளம் ஓலமிட்டுக்கொண்டிருந்தது. எரிமேல் மண்ணள்ளிப்போடுவதுபோல சொற்களைக் குவித்து அதை அணைத்தேன். அதன் வெம்மை என் ஆழத்தில் இருந்துகொண்டே இருந்தது. இங்கு வந்தபின் இரவுபகலென ஆற்றிய வெறிகொண்ட உழைப்பில் அது முற்றிலுமாக அணைந்தது. சென்ற மாதங்களில் ஒருகணம்கூட நான் அதை எண்ணியதில்லை.”
“ஆனால் இப்போது நீங்கள் கேட்டதும் என் உள்ளம் கொந்தளித்தெழுந்து ஆம் என்றது. ஒரு அணுவிடைகூட என் ஏக்கம் தீரவில்லை என்று உணர்ந்தேன். ஆம், அது மறைந்தவை மீளவேண்டுமென விழையும் மூடனின் துயரம் மட்டுமே. எதுவும் திரும்பாது என்னும் மாறாநெறியால் கட்டப்பட்டது இப்புவிவாழ்க்கை. ஆயினும் அதுவே விழைவு. ஒருநாள் ஒரு சொல்லால் அவள் என் தலைதொட்டால் போதும். பிறிதொன்றும் வேண்டேன்.” அச்சொற்களை பிறனாகி நின்று அவரே கேட்டு உளமுருகினார். இறுதிச்சொல் மெல்லிய கேவலுடன் வெளிவந்தது. கண்ணீர் தாடிமயிர்களுக்குள் வழிய அவர் உடல்குலுங்கி விசும்பி அழுதார்.
கேவல்களுடனும் மூச்சொலிகளுடனும் அவர் அழுதுமுடிக்கும் வரை மிக இயல்பாக அருகப்படிவர் காத்திருந்தார். நெஞ்சுலையும் நீள்மூச்சுகளுடன் அவர் மெல்ல மீண்டு அமைதியடைந்தார். ஆலமரத்துச் சருகுகள் நிலம்நோக்கி சுழன்றிறங்கிக்கொண்டிருந்தன. மீண்டும் கீழ்த்திசையில் முகில் திரண்டது. அங்கே மின்னல் ஒன்று கிழிபட்டுத் துடித்தணைவதை காணமுடிந்தது. களிற்றின் பிளிறல்போல இடியோசை தொலைவில் ஒலித்தடங்கியது.
“நான் என்ன செய்வது, அருகரே?” என்றார் தருமன். அவர் “அவளை அறிக! அறிதலே கடத்தல். கடப்பதே விழைவை வெல்லும் ஒரே வழி” என்றார். “நான் எப்போதும் அவளை அறியவே முயல்கிறேன்” என்றார் தருமன். “தவமின்றி அறிதலில்லை” என்றார் அருகப்படிவர். “அவளை அறிதலென்பது அவள் அழலை அறிதலே. அழலுக்கு அஞ்சி அப்பால் நிற்பவர்கள் அதை அறிவதில்லை. தீயில் இறங்கி உருகி மாசுகளைந்து வெளிவரும் பொன் அறியும் தீயென்றால் என்னவென்று. ஆகவே பொன்னை ஜடாக்னி என்கிறார்கள். தீயை சுவர்ணதாரா என்கிறார்கள்.”
“ஒவ்வொரு கல்விநிலையிலிருந்தும் கிளம்பும்போதே நீ அடுத்து செல்லவேண்டிய இடமென்ன என்று முடிவுசெய்திருந்தாய். அங்கு அறியக்கூடுவது என்ன என்பதையும் அறிந்திருந்தாய். அறிந்ததை அறிந்து ஆணவம் நிறைந்ததன்றி நீ எதையும் அறியவில்லை. அந்த ஏமாற்றத்தை அக்கல்விநிலைமேல் சுமத்தி அதை நீங்கினாய்” என்றார் அருகப்படிவர். “நீ அறியவேண்டிய மெய்மை உனக்கு முற்றிலும் அயலானதென்றால் உன் ஊழால் மட்டுமே அதை சென்று சேர்வாய்.” சொல் நிறைந்துவிட்டது என்பதற்காக கையால் அருட்குறி காட்டினார். தருமன் தலைவணங்கினார்.
[ 10 ]
மைத்ராயனியத்திலிருந்து கிளம்பும் எண்ணத்தை தருமன் பிரபவரிடம் சொன்னபோது அவர் ஓடையில் இடைவரை நீரில் நின்றிருந்தார். மழைக்காலம் முடிந்து இரண்டாவது இளவேனில் தொடங்கிவிட்டிருந்தது. முகில்கள் வானில் மிதந்து நின்றிருந்தாலும் எப்போதாவது மென்தூறல் சொரிவதற்கப்பால் மழையென ஆகவில்லை. காடு பசுமைகொண்டு தளிர்நிறைந்து கறைமணம் கொண்ட குளிர்காற்றை உயிர்த்தபடி சூழ்ந்திருந்தது. ஓடையின் நீர் கலங்கல் தெளிந்தாலும் சேற்றுமணத்துடன் இருந்தது.
அவரது சொற்களைக் கேட்டு நிமிர்ந்துநோக்கி “எப்போது கிளம்புகிறீர்கள்?” என்றார். “நாளை காலை கருக்கிருட்டில்” என்றார் தருமன். “நன்று!” என்றார் பிரபவர். மேலும் ஒருசொல் உரைக்காமல் நீரில் மூழ்கி எழுந்து குழல்படிவுகளை கையால் அடித்து நீர் களைந்தார். அவர் மேலும் பேசாமலிருந்ததே இயல்பானதென்று தருமனுக்குத் தோன்றியது. மேலும் சற்று நேரம் காத்திருந்தபின் அமைதியாக தலைவணங்கி அவர் தன் மரவுரிச்சுருள்களுடன் திரும்பிநடந்தார்.
நகுலன் “இம்முறை நாம் செல்வதெங்கே?” என்றான். “ஒவ்வொருமுறை நாம் கிளம்புகையிலும் நாம் செல்லவேண்டிய இடம்குறித்து எவரேனும் நமக்கு அறிவுறுத்தியிருக்கிறார்கள்.” தருமன் “இம்முறையும் அறிவுறுத்தல் உள்ளது. ஆனால் அது இடமாக அல்ல, செல்லும் வழியாக” என்றார். நகுலன் அவரை நோக்கிக்கொண்டு நின்றான். அவர் கட்டிலில் படுத்துக்கொண்டு “நாம் நாளை கிளம்புவோம்” என்று சொன்னார். “மூத்தவரே, குறைந்தது நாம் எத்திசை நோக்கி திரும்பவேண்டும் என்றாவது முடிவுசெய்யவேண்டும்” என்றான் நகுலன். “நாம் நாளைவரை பொறுப்போம். இன்னும் ஓர் இரவு எஞ்சியிருக்கிறது” என்றபடி தருமன் கட்டிலில் படுத்து கண்களை மூடிக்கொண்டார்.
முதலில் எழுந்தவன் அர்ஜுனன். அவன் சிற்றகலை ஏற்றும் ஒலிகேட்டு நகுலனும் சகதேவனும் எழுந்துகொண்டார்கள். நகுலன் கால்களைத் தொட்டு “மூத்தவரே!” என்று அழைக்க தருமன் தன் கைகளை விரித்து நோக்கியபடி எழுந்தார். “முதற்புள் ஒலித்தது” என்றான் நகுலன். “திரௌபதியை எழுப்பு. அதற்கு மந்தனை அனுப்பு” என்றார் தருமன். நகுலன் வெளியே சென்று திண்ணையில் வெறும்தரையில் மல்லாந்து படுத்து தூங்கிக்கொண்டிருந்த பீமனின் கால்களைத் தொட்டு உலுக்கினான். “மூத்தவரே! மூத்தவரே” என்றான். “யார்?” என்றான் பீமன். “மூத்தவரே, நாம் இப்போது கிளம்பவேண்டும். முதற்புலரி” என்றான் நகுலன்.
“நீங்கள் கிளம்புங்கள், நான் வந்து சேர்ந்துகொள்கிறேன்” என்றபடி அவன் புரண்டுபடுத்தான். “மூத்தவரே” என நகுலன் மீண்டும் உலுக்கினான். “என்ன வேண்டும் உனக்கு?” என்று சினந்தபடி பீமன் கண்களை திறந்தான். “சென்று அரசியிடம் கிளம்பும்படி சொல்லுங்கள். மூத்தவரின் ஆணை!” பீமன் “ஏன், நீ சொன்னால் என்ன? நீங்கள் கிளம்பும்போது நானும் எழுந்துகொள்கிறேன். செல்லும் வழியில் நீராடுவேன்” என்றான். “மூத்தவரே, நீங்கள் செல்லவேண்டுமென்பது மூத்தவரின் ஆணை.” பீமன் எரிச்சலுடன் எழுந்து ஆடையை சுழற்றி அணிந்துவிட்டு ஒன்றும் சொல்லாமல் இருட்டுக்குள் நடந்து சென்றான்.
அவர்கள் நீராடி வரும்போது பீமன் அதே திண்ணையில் துயிலில் இருந்தான். “மந்தா!” என்று தருமன் சினத்துடன் அவன் தோளை தன் காலால் தட்டினார். “என்ன செய்கிறாய்? எழு!” பீமன் எழுந்து “அரசி கிளம்பிவிட்டாள். நீங்கள் கிளம்பும்போது நானும் உடன்வருவேன். அதுவரை துயிலலாமே என எண்ணினேன்” என்றான். தருமன் ஏதோ சொல்லவந்தபின் அதை வென்று உள்ளே சென்று ஈர ஆடைகளை அகற்றினார். நகுலன் “அவர் நேற்று துயிலவில்லை. காட்டுக்குள் இருந்தார்” என்றான். “ஏன், புதிய குரங்குக்கூட்டம் ஏதாவது வந்ததா?” என்றார் தருமன். நகுலன் புன்னகை செய்தான்.
அவர்கள் வெளிவந்தபோது நகுலன் மீண்டும் பீமனை உலுக்கி “கிளம்புகிறோம், மூத்தவரே” என்றான். அவன் எழுந்து “இத்தனை இருளில் கிளம்பி என்ன செய்யப்போகிறோம்? இது காடு. வெயிலே இருக்காது” என்றான். தருமன் பேசாமல் முன்னால் செல்ல நகுலன் “அவர் எவ்வழி செல்வது என இன்னமும் முடிவுசெய்யவில்லை” என்றான். “நன்று, எவ்வழி சென்றால் உணவு கிடைக்குமென நான் குரங்குகளிடம் கேட்டுச்சொல்கிறேன்” என்றபடி பீமன் பின்னால் வந்தான்.
அருகிருந்த குடிலில் இருந்து திரௌபதி கையில் ஒரு சிற்றகலுடன் நடந்து வந்தாள். அவள் முகம் சிறு சுடருக்குமேல் பெரியதழலெனத் தெரிந்தது. அவர்கள் அவளை நோக்கியபடி நின்றனர். எண்ணியிராது வந்த உளஎழுச்சியால் தருமன் நோக்கை விலக்கி உதடுகளை இறுக்கிக்கொண்டார். அவள் அருகே வந்து அந்த அகல்விளக்கை அருகே இருந்த பிறையில் வைத்தபின் அவர்களுடன் நின்றுகொண்டாள். பீமன் “விடிவெள்ளி வந்துவிட்டது, கிளம்பப்போகிறோம்” என்றான். அவள் தலையசைத்தாள்.
தருமன் கொட்டகையின் முற்றத்திற்கு வந்து நின்றார். பின்கட்டில் அடுமனையாளர்கள் துயிலெழத் தொடங்கியிருந்தனர். மெல்லிய குரலில் பேச்சொலிகளும் பாத்திரங்கள் முட்டிக்கொள்ளும் ஒலியும் கேட்டது. எங்கிருந்தாவது ஏதாவது குரல் வருமென்பதுபோல அவர் தலைகுனிந்து நின்றிருந்தார். நகுலனும் சகதேவனும் அவரை நோக்கியபடி நிற்க அப்பால் நோக்கியபடி அர்ஜுனன் நின்றான். திரௌபதி அங்கில்லாதவள் போலிருந்தாள். பீமன் துயில் முழுக்கக் கலையாதவன் போல் தோன்றினான். மெல்லிய காற்று காட்டின் குளிருடன் வந்து அவர்களின் குழல்களை அசைத்து கடந்துசென்றது. அக்காற்றில் வந்தவைபோல நெடுந்தொலைவில் குரங்குகளின் ஒலி கேட்டது.
பின்கட்டுக்குச் சென்று பிரபவரிடம் விடைபெற்றாலென்ன என்று ஓர் எண்ணம் எழுந்தது. ஆனால் அவர் ஒன்றும் சொல்லப்போவதில்லை என்றும் தெரிந்தது. அங்கு தங்கியிருந்த நாட்களில் எப்போதும் எதையும் அவர் சொன்னதில்லை. நேர் எதிரில் மைத்ரி விழுதுக்காடுகள் சூழ வேர்களால் மண் கவ்வி கிளைகள் இருளில் துழாவிக்கொண்டிருக்க நின்றிருந்தது. அதிலிருந்த பறவைக்குலங்கள் அனைத்தும் முழுதடங்கி அமைதிகொண்டிருந்தன. அதை நோக்கிக்கொண்டிருந்தபோது அங்கு கேட்ட ஒருசொல்லும் நினைவுக்கு வரவில்லை என்பதை எண்ணி வியந்தார். அதை முதன்முதலாகக் கண்டபோது எழுந்த வியப்பு மட்டுமே எஞ்சியிருந்தது.
நெடுமூச்சுடன் அவர் காலெடுத்தபோது “பகா!” என்று ஓர் ஒலி கரியவானில் எழுந்தது. பெரிய பறவை ஒன்று அவர் தலைக்குமேல் மிக அண்மையில் கடந்துசென்றது. அதன் மெல்லிய காற்றசைவைக்கூட அவரால் உணரமுடிந்தது. இருளுக்குள் ஒரு வெண்ணிற இறகு மெல்லச் சுழன்று இறங்கி தரையிலமைவதை கண்டார். குனிந்து அதை எடுத்தார். அது ஒரு வெண்ணிற நாரையின் இறகு. “சாரஸப் பறவை” என்று திரும்பி சகதேவனிடம் சொன்னார். அவன் தலையசைத்தான். “எங்கோ சிறுகுளமொன்றை காக்கின்றது” என்று அவர் மீண்டும் சொன்னார். அது வந்த திசையை நோக்கியபடி ஒரு கணம் நின்றபின் “நாம் அவ்வழி செல்வோம்” என்றார்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 23
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 17
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 16
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 12
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 3
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 79
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 77
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 62
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 56
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 25
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 76
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 71
‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 59
‘வெண்முரசு’ – நூல் ஆறு – ‘வெண்முகில் நகரம்’ – 45
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 91
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 87
‘வெண்முரசு’ – நூல் ஐந்து – ‘பிரயாகை’ – 86
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 52
September 9, 2016
புரட்சி இலக்கியம்
தொ.மு.சி.ரகுநாதன்
ஜெ
வெகு நாட்களாய் ஒரு சந்தேகம் – புரட்சி இலக்கியங்கள் மற்றும் போர் இலக்கியங்கள் குறித்து.
இது போன்ற படைப்புக்கள் ஒரு குறிப்பிட்டச் சமூகத்தின் ஒரு காலக் கட்டத்தை, அவர்களது பாதிப்பினை, அதன் நிகழ்வுகளை, தாக்கங்களை பிரதி பலிக்கும் விதமாகவே இருக்கும். The creations are an expression of their angst & pain. It is created at an inflection point of a time period.
என் சந்தேகம் – ஒரு வலியின், மனவெழுச்சியின், உந்துதலில் உருவாக்கப்பட்டப் படைப்பு அந்தப் புரட்சி முடிந்த சில காலங்களுக்குப் பிறகு அல்லது அந்த movement பொருளிழந்துப் போனப் பிறகு அதன் படைப்பூக்கம் இருக்குமா? ஒரு வாசகனை அதே உச்சநிலைக்குக் கொண்டு செல்லுமா? உதாரணத்திற்கு – ஈழ இலக்கியம். சில நல்ல படைப்புகள் உண்டு – சோபா சக்தி, சேரன், தேவகாந்தன் போன்றோர். (சில அபாரமான படைப்புகள் – ”கொரில்லா”, “ம்”). மீண்டும் தெளிவுப் படுத்துகிறேன் – will a reader be able to reach the same feeling when the context has changed. Will they become in congruent? முதல் முறைப் படிக்கும் போது ஈழம் என்ற ஒரு மன உருவகம் இருந்தது. அதனால், என்னால் அந்தப் படைப்புகளை முழுவதும் உணர முடிந்தது.
என் கேள்வி – ஒரு வாசகன் இதை எவ்வாறு எதிர்க் கொள்ள வேண்டும்? ஒரு படைப்பாளியாய் உங்கள் கருத்து என்ன? ஒரு படைப்பின் time scale ஐ மீறி எப்படி உணர்வது?
(simple answer – மீண்டும் படிக்காமலிருப்பது!!!???)
பதில் கிடைத்தால் மிகுந்த மகிழ்ச்சியடைவேன்..
இதை திரியாக்கினாலும் மகிழ்ச்சியே
சதீஷ் (மும்பை)
அன்புள்ள சதீஷ்
எந்த இலக்கியமும் சமகால முக்கியத்துவம் கொண்டதே. சமகாலத்து அரசியல், சமூகவியல் யதார்த்தங்களில் இருந்தே இலக்கியம் உருவாகிறது. போரும் அமைதியும் நாவலில் தல்ஸ்தோய் எழுதியது ஒரு சமகால யதார்த்ததில் இருந்து தான். அவர் அன்றைய பிரபுகுல வாழ்க்கையை நோக்கித் தன் கசப்பை முன்வைக்க விரும்பினார். ஒரு ஒட்டு மொத்த ருஷ்ய தேசியவாதத்தை உருவாக்க ஆசைப்பட்டார். அன்றைய ருஷ்ய சமூக யதார்த்தத்தை விவரிக்க விரும்பினார். ஆனால் அதன் வழியாக அவர் எப்போதைக்குமான மானுடநிலை நோக்கி தன் பார்வையை விரித்துக் கொண்டு சென்றார். ஆகவே தான் அவர் எதைப் பற்றி, எவரைப் பற்றி எழுதினாரோ அவையெல்லாமே வெறும் வரலாற்றுத் தகவலாக ஆனபின்னரும் அவரது ஆக்கம் இன்றைய யதார்த்தமாக தன்னை நிலை நிறுத்திக் கொண்டிருக்கிறது.
புரட்சியும் அதேபோல ஒரு சமகால யதார்த்தம்தான். அந்த சமகால யதார்த்ததில் இருந்து எழுத்தாளன் என்றுமிருக்கும் மானுட அறச் சீற்றங்களை, அறத் துன்பங்களை, உலகியல் விவேகங்களை, மெய்ஞானத்தை நோக்கிச் சென்றானென்றால் அவன் உருவாக்கும் ஆக்கம் காலத்தில் நிலைத்திருக்கும். அப்புரட்சியின் அன்றாட அரசியலை மட்டுமே கண்டு, அதன் கட்சிக் கட்டுதல்களுக்குள் சிக்கிக் கொண்டு, அதன் மேலோட்டமான கூச்சல்களையும், கோஷங்களையும் மட்டுமே எழுதுவானென்றால் புரட்சி மறைந்ததும் நூலும் மறைந்து விடும்.

மிகயீல் ஷோலக்கோவ்
பெரிய கலை எலியின் துயரையும், பூனையின் பசியையும் சேர்த்தே சொல்லும் என்று ஒரு சொல்லாட்சி உண்டு. அதை நாம் ஷோலக்கோவில் காணலாம். அதில் எதிர்ப் புரட்சியாளர்களின் ஐயங்களும், கொந்தளிப்புகளும் புரட்சியாளர்களின் இலட்சியவேகம் அளவுக்கே உக்கிரமாகச் சொல்லப் பட்டுள்ளன. அப்படி அல்லாமல் ஒருகை ஓசையாக அமைந்தால் அது பிரச்சாரம். அப்படி பிரச்சாரமாக அமைந்த நாவல் என்றால் மக்ஸீம் கோர்க்கியின் தாய் நாவலைச் சொல்லலாம். அதில் புரட்சியாளர்கள் உன்னதமாக்கப் பட்டு எதிர்த் தரப்பு முழுக் கருமையாகச் சித்தரிக்கப் பட்டுள்ளது
இப்படிச் சொல்கிறேனே. ஈழப்போர் பற்றி ஒரு நல்லத் தமிழ் நாவல் எழுதப் படுமென்றால் அதில் சிங்களர்களின் தரப்புக்கும் முழுமையான இடம் அளிக்கப் பட்டிருக்கும். புலிகளால் கொல்லப் பட்ட சிங்களச் சிப்பாய்க்காகவும் அப்படைப்பு கண்ணீர் சிந்தும். கலைஞனுக்கு தம்மவர், அயலவர் என்ற பேதம் இருக்க முடியாது. அந்தப் படைப்பு எந்த உண்மையையும் அசௌகரியமானது என்று மூடி வைக்காது. எதையும் தேவைக்கு மேல் விதந்துரைக்காது. அதில் ஒற்றைப் படையான உணர்ச்சிகர கோஷங்களுக்கு இடமில்லை. எது யதார்த்தமோ அதை அஞ்சாமல் முன் வைக்கும். எல்லா உண்மைகளையும், தனக்குள் அடுக்கியபடி என்றுமுள்ள மானுட உண்மை நோக்கிச் செல்லும்.
அந்நிலையில் அது கண்டடையும் உண்மை முழுமையானதாக இருக்கும். அது தமிழர்களின் அரசியல் உண்மை அல்ல. அந்த காலகட்டத்தில் சொல்லப் பட்ட உண்மை அல்ல. அது இனம், காலம் கடந்ததாக இருக்கும். ஒரு சிங்கள இலக்கிய வாசகன் அதை வாசித்தால் தமிழ் வாசகன் அடைந்த அதே மன எழுச்சியை அவனும் அடைவான். தனக்கும் உரிய ஒரு பேருண்மையின் சன்னிதியில் அவன் சென்று நிற்பான். அத்தகைய ஆக்கம் எந்த மொழியில் எழுதப் பட்டிருந்தாலும் அது மானுட ஆக்கமேயாகும்.
ருஷ்யப் புரட்சி பற்றி நிறைய எழுதப் பட்டுள்ளன. ஆனால் ‘டான் நதி அமைதியாக ஓடுகிறது’ [மிகயீல் ஷோலக்கோவ்] என்ற நாவல் நிலைத்திருக்கும். அது வெறும் புரட்சியின் விவரணை அல்ல. புரட்சியின் கருத்தியலும், உணர்ச்சிகளும் மட்டும் கொண்டது அல்ல. அது மனிதர்களின் கதை. தான் வாழும் காலம் ஒட்டு மொத்தமாக புரட்டிப் போடப் படுகையில் மனிதர்கள் எப்படியெல்லாம் அதை எதிர் கொள்கிறார்கள், எப்படி மாறிக் கொள்கிறார்கள், எப்படி உடைந்து அழிகிறார்கள் என்பதைக் காட்டும் மகத்தான மானுட ஆவணம் அது. ஆகவே அது என்றும் இருக்கும். ருஷ்யப் புரட்சி வெறும் வரலாறாக ஆனப் பின்னரும் வாழும்.
அப்படி நோக்கினால் புரட்சி என்பது அந்நாவலுக்கு தேவையே இல்லை. அது அந்நாவலின் புனைவின் பின்னணி மட்டுமே. அந்த வாழ்க்கை நாடகம் நிகழும் அரங்கு மட்டுமே. அந்த படிமங்களை உருவாக்கும் வயல் மட்டுமே. அந்தப் பின்னணியை நாம் எப்படியும் கற்பனை செய்துக் கொள்ளலாம். இருநூறு முந்நூறு வருடங்கள் கழித்து உலகு தழுவிய ஒரு தொழில் நுட்பச் சிக்கலால் மானுட சமூகம் அதன் அடிப்படைகள் புரட்டப் பட்டு சவால்களைச் சந்திக்கும் என்றால் அந்தச் சித்திரத்தை நாம் டான் நதி அமைதியாக ஓடுகிறது நாவலில் பொருத்தி வாசிக்க முடியும்
இப்படி சமகால யதார்த்தத்தில் இருந்து காலாதீத மானினுட யதார்த்தத்தை எழுதுவதற்கு எழுத்தாளனின் நேர்மையும், கலைத் திறனும் முக்கியமான காரணங்களாக அமைகின்றன. அவன் தன் சமகால யதார்த்தத்தை தன் கோப தாபங்களைக் கொண்டு, தன்னுடைய சொந்த லாபநஷ்ட கணக்குகளைக் கொண்டு புரிந்து கொண்டானென்றால் அவனால் அன்றாட யதார்த்தத்திற்குள் மட்டுமே நிற்க முடியும். அவன் தன் கற்பனையால் தன்னை, அந்தச் சமகால யதார்த்தத்தில் வாழும் எல்லா மனிதர்களாகவும் ஆக்கிக் கொண்டு, எல்லாருடைய வாழ்க்கையையும் வாழ்ந்து ஓர் ஒட்டு மொத்த நோக்கை உருவாக்கிக் கொண்டால் மட்டுமே அவனுடைய கலை காலாதீதமாகும்
அப்படி நிகழாமல் போனமைக்கும் ஷோலக்கோவே உதாரணம். அவரது ’உழுது புரட்டப் பட்ட கன்னி நிலம்’ [தமிழில் கன்னிநிலம்] நாவல் அப்படிப் பட்டது. புரட்சிக்குப் பின்னர் சோவியத் அரசால் உயர்ந்த பதவியில் அமர்த்தப் பட்ட ஷோலக்கோவ் சுய லாபத்துக்காகத் தான் கண்டவற்றை திரித்தும், மறைத்தும் எழுதிய பிரச்சார நாவல் அது. அதில் அந்த மகத்தான கலைஞனின் எல்லா கலைத் திறனும் உள்ளது, ஆனால் காலாதீதமாகச்செல்லும் இலக்கிய விவேகம் இல்லை.
தமிழில் புரட்சிகர இலக்கியம் என்பதும் வழக்கம்போல புதுமைப்பித்தனில் இருந்தே தொடங்குகிறது – பொன்னகரம். ஆனால் அதன் முதல்சரியான வடிவம் தொ.மு.சிதம்பர ரகுநாதனின் பஞ்சும்பசியும். போராட்ட இலக்கியம் என அதைச் சொல்லலாம். அதன்பின் அவ்வகையான எழுத்துக்களுக்கு ஒரு நீண்ட மரபு இங்கே உள்ளது. கெ.முத்தையா, ,கெ.டானியல், டி.செல்வராஜ், கு.சின்னப்ப பாரதி, சு.சமுத்திரம், மேலாண்மை பொன்னுச்சாமி
தவிர்க்கமுடியாதபடி வரலாற்று முக்கியத்துவம் கொண்டவை இவை. அதேசமயம் ஒற்றைப்படையான வாழ்க்கைநோக்கி காரணமாக கலைக்குறைபாடு கொண்டவை. சமீபத்திய உதாரணம் என்றால் இரா பாரதிநாதனின் தறியுடன்.
ஜெ
மறுபிரசுரம் முதற்பிரசுரம் May 15, 2011
தொடர்புடைய பதிவுகள்
ஜெயகாந்தன்,சுந்தர ராமசாமி, வாசிப்பு குறித்து…
சர்மிளா ஸெய்யித்
ஓர் ஈழ எழுத்தாளருக்கு…
தாய்மொழி , செம்மொழி
பெருவலி – நம்பகம் – விவாதம்
வாசிப்பின் பாவனைகள்
கெ.பாலமுருகன்
புலிநகக் கொன்றையை முன்வைத்து ஓர் உரையாடல்
என்றும் வற்றா ஜீவநதி – இந்திய இலக்கியத்தின் சாரம் என்ன?
பெண்களின் காதல்
”என்ன சேறது மாமி, அது அப்டித்தான்!”
பதினெட்டாவது அட்சக்கோடு
அண்ணாச்சி – 4
அண்ணாச்சி – 3
அண்ணாச்சி – 2
அண்ணாச்சி – 1
பிழைத்தல், இருத்தல், வாழ்தல்
கெட்டவார்த்தைகள்
விவாதம் என்னும் முரணியக்கம்
விவேகானந்தர்,ராஜா ரவிவர்மா, நவீன ஓவியம்…
கிருஷ்ண தரிசனம்
ஜெ,
இது நாள் வரை வெண்முரசின் கிருஷ்ணன் சமகால தொன்மமாக, பிறரின் கண்களின் வழியாக வெளிப்பட்டான். சொல்வளர்காட்டில் உருவாகி வரும் கிருஷ்ணன் புரட்சியாளனும், தத்துவ ஞானியும். தேடலால் அலைக்கழிக்கப்படுபவன். நீலத்தில் வந்த கிருஷ்ணனுக்கும், சொல்வளர் காட்டில் உருவாகி வரும் கிருஷ்ணனுக்கும் எவ்வளவு வித்தியாசம்? நீங்கள் பேலூரில் பிரமனின் கையிலிருக்கும் ஒற்றைத் தந்தி யாழையும்,மறு கையிலிருந்த வஜ்ராயுதத்தையும் கவிதையும், தத்துவமும் என விளக்கியது நினைவுக்கு வருகிறது.
கஸந்ஸாகீஸின் ‘இறுதி சபலத்தின்’ தரிசனமாக நான் புரிந்து வைத்திருப்பது, மகத்தான மனிதர்கள் மகத்தான மனிதர்களாக அவதரிப்பதில்லை, எளிய மனிதர்களாக பிறந்து, மகத்தான செயல்களை செய்வதன் வழியாக, அதன் பொருட்டு அனைத்தையும் இழப்பதன் வழியாக, அதன் பொருளையும், பொருளின்மையையும் ஒன்றாக அறிந்து அல்லாடுவதன் வழியாக, சென்று சேர்கிறார்கள். அப்படி சேர்வதன் வழியாகவே அவர்கள் மகத்தானவர்களாக ஆகிறார்கள் என்பது’. கிறிஸ்துவும் கோபம் கொள்கிறார், ‘இந்த மடையர்களுக்கு ஏன் கடவுள் கையில் நெருப்புடன் அல்லது வாளுடன் வருபவராக இருக்க கூடாது’ என்று நினைக்கிறார், பின்பு இவர்களுக்கு நானும் இல்லா விட்டால் வேறு யார்தான் இருப்பார் என்று கண்ணீர் விடுகிறார். தத்துவத்தை அணுகும் ஒருவனே தீயில் நுழைந்து வருவதை போல அணுக வேண்டும் என்கிறது வெண்முரசு. எனில் கீதையை உரைத்தவன் எவற்றில் எல்லாம் ஆடி நின்றிருக்க வேண்டும் என்பதை இந்த அத்தியாயங்கள் காட்டுகின்றன.
*
மேற்கத்திய அறிதல் முறைகள் ஒவ்வொரு துறைக்கும் தனக்கேயான அறிவுத் துறைகளை கொண்டுள்ளது. கலைக்கு அழகியல் போல. இலக்கியத்திற்கு ஹெர்மெனுட்டிக்ஸ் போல. அவற்றின் அறிதல் அந்த எல்லைக்குள் மட்டுமே செயல்படும். அவற்றை கொண்டு கீழை தரிசனங்களை அணுக முயற்சி செய்தால் அனைத்தையும் வடிவமாக குறுக்கும் இடத்திற்கே இட்டு செல்லும்.
லீலை, தாண்டவம் போன்ற இந்திய தரிசனங்களை அணுகுவது அத்தனை அறிதல் முறைகளையும் உள்ளடக்கி செய்ய வேண்டியது. அதனால் தான் கிருஷ்ணனை புரிந்து கொள்ள கீதையின் தத்துவமும், கீதகோவிந்தத்தின் கவிதையும், சிற்றோவிய மரபும், கேளு சரண் நடனமும், ஹரிகோவிந்தனின் கீத கோவிந்தமும், ஜஸ்ராஜின் மதுராஷ்டகமும் கொண்டு நெருங்கி, இவை அனைத்துக்கும் அப்பால் மிதந்து கொண்டிருக்கும் ஒன்றை உணர வேண்டி இருக்கிறது.அப்படி செய்யும் ஒருவனுக்கு இந்த தரிசனங்கள் என்றோ நிகழ்ந்தவை அல்ல, தன் உள்ளுணர்வை திறந்து வைத்திருக்கும் ஒருவனுக்கு, அனைத்தையும் தனித் தனி வடிவமாக அன்றி, அனைத்தையும் ஓன்றாக இணைக்கும் சரடு நோக்கி தேடுபவனுக்கு இன்றும் தொட சாத்தியமானவையே. இதை நான் உணர்ந்தது வெண்முரசு வழியாகவே.
மேற்சொன்ன அனைத்து கலைகளிலும் கிருஷ்ண தரிசனத்தின் ஏதேனும் ஒரு பகுதியே கிருஷ்ணனாக உருவாக்கப்பட்டிருக்கிறது. பாகவதத்தில் வரும் கிருஷ்ணணுக்கும், கீதையின் கிருஷ்ணணுக்கும் உள்ள தூரம் பிற வடிவங்களுக்கிடையிலும் உள்ளது. வெண்முரசு மீண்டும் அவற்றை இணைத்து முழுமையான தரிசனமாக்குகிறது. ஓஷோ கிருஷ்ணன் என்பது ஓர் உணர்வு நிலை (consicousness) என்கிறார், உங்கள் வார்த்தையில் “அது” (That). எனவே அது என்றோ நிகழ்ந்த ஓன்று அல்ல. இன்றும் உணர கூடிய ஒரு நிலையே என்கிறார்.
*
தொடங்கினால் நிறைய எழுத வேண்டும், வெண்முரசின் வழியாக நான் அறிந்தவற்றைக் குறித்து, நான் அறிந்த கிருஷ்ணனை குறித்து. அவனை மதுராவின், பிருந்தாவனின் ஹோலி கொண்டாட்டங்களில் உணரக் கிடைத்த வெவ்வேறு தருணங்கள் குறித்து. ஒரு முழு மாதம் நீடித்த அந்த உணர்வு நிலையை மீண்டும் எதிர் கொள்ள நேரும் என்பதனால் அந்த புகைப்படங்களையே இன்னமும் மறுமுறை பார்க்காமல் இருக்கின்றேன். அந்த கிருஷணனை இந்த அத்தியாயங்கள் காட்டுகின்றன.மதுராவில் இருந்த பதினைந்து நாட்களும், வெண்முரசின் வழியாக நான் அடைந்தவை எவை என்பதை அறிந்து கொண்டேன். இந்த வாழ் நாள் முழுவதும் நான் அளித்தாலும் கூட அவற்றை வெளிப்படுத்திவிட முடியுமா என்று தெரியவில்லை. வெண்முரசிற்காக இதுவரை நான் தங்களுக்கு நன்றி சொன்னதில்லை, இப்பொழுது நான் அங்கு எடுத்த சில புகைப்படங்களை உங்களுக்கு அனுப்புகிறேன். அதை விட வேறு எப்படியும் என்னால் சொல்லி விட முடியாது.
ஏ.வி.மணிகண்டன்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 53
[ 8 ]
கிருதயுகத்தில் கோசலநாட்டில் சோமகன் என்னும் சந்திரகுலத்து அரசன் ஒருவன் ஆண்டிருந்தான். நூறுபெண்களை மணந்து ஐம்பதாண்டுகள் வாழ்ந்தும் அவனுக்கு மைந்தர் பிறக்கவில்லை. மைந்தரின்மை அவனை நோயென பீடித்தது. தன்னை நோக்கும் எவ்விழிகளிலும் தனக்கு மைந்தரில்லை என்பதே தெரிவதாக அவன் எண்ணினான். சூழ்ந்தவர் சொற்களும் சிரிப்புகளும் நச்சு முள்ளென்றாயின. துயிலின் இருண்ட ஆழத்திலிருந்து தன் மூதாதையர் ஏங்கி அழும் குரல் எழுந்துவரக் கேட்டான்.
தன் மைந்தரன்றி பிற மைந்தரால் நிறைந்த புவியை வெறுக்கலானான். பிற மைந்தரைப் பெற்ற தந்தையர்மேல் சினம் கொண்டான். தன் துணைவியரை வசைபாடி அகற்றினான். விழைவொன்றை தொட்ட உள்ளம் அதை ஊதி ஊதி வளர்க்கிறது. அந்த ஐந்தெரி நடுவே ஒற்றைக்காலில் நிற்கிறது. சோமகன் துயிலிழந்தான். உணவை ஏற்க மறுத்தது அவன் உடல். அவன் சித்தம் கொந்தளித்து ஆடி ஓய்ந்து பின் அசைவிழந்தது. உடலும் உள்ளமும் ஆற்றலிழக்கவே படுக்கைவிட்டு எழாதவனாக ஆனான். பித்துபடிந்த விழிகளால் சாளரம் வழியாக தெரிந்த உலகை நோக்கியபடி பிணமெனக்கிடந்தான்.
அவன்முன் எமன் தன் இருளெருமை மேல் ஏறி வந்து நின்றான். “அரசே, மண்ணாள்பவனையும் சொல்லாள்பவனையும் தன்னைக்கடந்தவனையும் தானே சென்று அழைத்து வரவேண்டுமென எனக்கு நெறியுள்ளது. என் கணக்கில் உன் நாள் முடிந்துள்ளது. ஆகவே வந்துள்ளேன், எழுக!” என்றான். சோமகன் கண்ணீர் உகுத்தபடி அவனை நோக்கி மாட்டேன் என தலையசைத்தான். “நீ காம்பு கனிந்து உதிரவேண்டிய வயது இது. கண்ணீர் உகுக்கிறாயே?” என்றான் எமன். அவன் வீசிய பாசக்கயிற்றிலிருந்து உளம் திமிறி விலகியபடி “என்னை விடு, நான் உன்னுடன் வர விரும்பவில்லை” என்று சோமகன் சொன்னான்.
“உவந்து வர விரும்பாதவர்களை கொண்டுசெல்ல என்னால் இயலாது. முதுமையால், நோயால், போர்நிறைவால் மானுடர் இங்கிருந்து விடுபட்ட பின்னரே அவர்களை நான் கொய்கிறேன். விரும்பாமல் எவரும் இறப்பதில்லை என்பதே தெய்வங்களின் நெறி” என்றான் எமன். “நீ முதிர்ந்துவிட்டாய். நோயில் தளர்ந்து பிணம்போலிருக்கிறது உன் உடல். உன் உள்ளம் எண்ணங்களுக்கும் ஆற்றலற்றதாக நீர்வற்றிய ஓடையின் சேற்றுத்தடம்போலிருக்கிறது. இதற்கு அப்பால் நீ இங்கிருந்து அடையப்போவதுதான் என்ன?”
சோமகன் “ஆம், என் ஐம்புலன்களும் அணைந்துவிட்டதை உணர்கிறேன். என் நினைவுகள் உதிர்ந்துவிட்டன. முன்னோக்கிச் செல்லும் ஆற்றல் அழிந்துவிட்டது. நேற்றும்நாளையுமின்றி இன்றில் அமைந்து இங்கிருக்கிறேன். ஆயினும் என் உடலுக்குள் சிறுநெருப்பென எரிவது ஒற்றை விழைவே. எனக்குப் பிறக்கும் ஒரு மைந்தனின்றி நான் விண்ணேக முடியாது” என்றான். “விழைவறாது நான் உடலுதிர்ப்பேன் என்றால் உடல்தேடும் உயிர் என இங்கேயே இருப்பேன். எனக்களிக்கப்படும் அன்னமும் நீரும் கொள்ளப்படா. காலமில்லா வெளியில் அணையாத வெறுந்தவிப்பாக எஞ்சுவேன்.”
எமன் உள்ளமிரங்கினான். “சொல்க, மைந்தனை ஏன் நீ விழைகிறாய்?” என்றான். சோமகன் “ஏனென்றால் மானுடனுக்குரிய இரு முதன்மை விழைவுகளில் ஒன்று அது” என்றான். எமன் புன்னகைத்து “அம்மைந்தனை நீ எதன்பொருட்டு இழக்கச் சித்தமாவாய்?” என்றான். “எதன்பொருட்டும் இழக்கமாட்டேன். என் பொருட்டும் என் குடிபொருட்டும் இப்புவியின் அனைத்தின்பொருட்டும் ஏன் தெய்வங்களின்பொருட்டும்கூட!” எமன் புன்னகைத்து “நன்று, நான் உனக்கு பன்னிரண்டு ஆண்டுகளை அளிக்கிறேன். நீ மைந்தனைப் பெற்று வாழ்ந்து அறிந்தபின் வருகிறேன்” என்றான்.
நோய்ப்படுக்கையிலிருந்து சோமகன் எழுந்தான். அதை மருத்துவர் பெருவிந்தை என்று எண்ணினர். தங்கள் வெற்றி எனக் கொண்டாடினர். சோமகனின் முதல் மனைவி காளிகை கருவுற்று ஒரு மைந்தனைப் பெற்றாள். அவள் கருக்கொண்ட நாளிலேயே தீயகுறிகள் தெரியலாயின. அவள் சோமகனின் பட்டத்தரசி, இளவயதிலேயே அவனை மணந்த முதுமகள். குருதிநாள் நின்றே நெடுங்காலமாகியிருந்தது. கருவுற்றதையே அவள் அறியவில்லை. தலைசுற்றி உணவுமறுத்து அவள் படுக்கையிலிருந்தபோதுதான் மருத்துவச்சி ஐயுற்று உடல்நீர் எடுத்து நோக்கினாள். அவள் கருவுற்றிருப்பதை உணர்ந்ததும் ஐயம்கொண்டு பிற மருத்துவச்சிகளிடம் சொன்னாள். அவர்களும் உறுதிசெய்தபின் அரசனிடம் சொன்னார்கள்.
அரசன் அதைக் கேட்டு உவகையும் கூடவே அச்சமும் கொண்டான். அரசி அக்கருவைச் சுமந்து ஈன்று எழுவாளா என்று மருத்துவரிடம் கேட்டான். “நெய் வற்றும் அகல். திரிகாத்து சுடர்மிகாது சென்றணையவேண்டும்” என்றனர் மருத்துவர். அரசியை படுக்கையிலேயே வைத்து மருத்துவர் பேணினர். அவள் நாளுக்குநாள் குருதியிழந்து வெளிறிக்கொண்டே சென்றாள். நகக்கண்கள் பளிங்கென்றாயின. விழிப்பரப்பு சிப்பிபோல வெளுத்தது. உதடுகள் வாடிய ஆம்பல் போலிருந்தன. மூச்சிலசையும் வறுமுலைகளில் காம்புகள் கருமைகொள்ளவில்லை. அவள் கண்களுக்குக் கீழே தசை தளர்ந்து தொய்ந்தது. புறங்கை வீங்கி குழவியரின் கைபோல ஆகியது. கால்கள் பருத்து ஒளிகொண்டன. பேசவும் ஆற்றலற்று விழிதிறந்து கூரையை நோக்கியபடி அவள் மஞ்சத்தில் படிந்துகிடந்தாள்.
ஏழு மாதம் வரை அவளை அவர்கள் காத்தனர். ஏழாம் மாத முடிவில் குருதிப்போக்கு தொடங்கியது. அதை நிறுத்த அவர்கள் முயன்றபோது கம்பத்தில் கட்டிவைக்கப்பட்ட துணிப்பொதிபோல அவள் மெலிந்த உடலில் தொங்கிய வயிற்றுக்குள் வாழ்ந்த குழவிதசை வாயிலை நோக்கி இறங்கியது. மருத்துவர் அதை வெளியே எடுத்தபோது உயிரற்ற சிறிய தசைப்பாவை போலிருந்தது. தோல்முளைக்காத வெறுந்தசை. அதன் கைகளோ கால்களோ நெளியவில்லை. குரலெழவுமில்லை. விழிகள் மட்டும் அதிர்ந்தன. அரசி தன் மைந்தனை நோக்க தலையைத் தூக்கினாள். குழந்தையைக் காட்டியபோது முகம்சுளித்து பற்களைக் கடித்தபடி “ஜந்து” என்றாள். தலையை மஞ்சத்தில் அமர்த்தி இருமுறை முனகி மூச்சுவிட்டு துயிலில் ஆழ்ந்தாள்.
மைந்தனை மருத்துவர்கள் எண்ணைக்கொப்பரையில் போட்டு இளவெம்மை ஊட்டி நான்கு மாதம் பேணினர். தோலும் முடியும் நகமும் முளைத்தன. இதழ்விரித்து பாலை ஏற்று அருந்தினான். பசிக்கையில் முகம்சிவக்க உடலதிர சீவிடுபோல ஓசையெழுப்பினான். கால்கள் நிலம்பதியும் அதிர்வை அறிந்து வருவது எவரென உணர்ந்தான். பாலளிக்க வரும் சேடியரைக் கண்டதும் மகிழ்ந்து வாய்திறந்தான். ஆனால் அவன் கைகளோ கால்களோ அசையவில்லை. விழிதிறந்து நோக்கு கொள்ளவுமில்லை.
அன்னை இட்டபெயரே அவனுக்கு நீடித்தது. அவனை அனைவரும் ஜந்து என்றே அழைத்தனர். வெற்றுயிர் என அவனை பிறர் எண்ணினாலும் தந்தை அவன்மேல் பேரன்புகொண்டிருந்தான். அவன் பிறந்த நாளில் ஈற்றறைக்கு வெளியே நின்று தவித்தான். மைந்தனை எண்ணைக்கொப்பரையில் குனிந்து நோக்கியதும் உளமுருகி விழிநீர் பொழிந்தான். இரவும் பகலும் ஆதுரசாலையில் மைந்தனுடன் இருந்தான். விழித்திருக்கும் நேரமெல்லாம் அவனை எண்ணிக்கொண்டிருந்தான். துயிலில் அவனையே கனவுகண்டான். மைந்தன் ஒலியெழுப்பத் தொடங்கியதும் அவ்வொலி கேட்பதற்காக அருகிலேயே அமர்ந்திருந்தான். அவன் தந்தையின் காலடிகளை அறிந்ததும் முகம் மலர்ந்து “ஆ!” என ஒசையிடுவான். “என்னை அழைக்கிறான். தந்தையே என அழைக்கிறான்” என்று சோமகன் கூவி கண்ணீர்மல்குவான்.
தந்தையால் சௌமதத்தன் என்று பெயரிடப்பட்டாலும் அரண்மனையில் ஜந்து என்றே மைந்தன் அழைக்கப்பட்டான். மெல்லிய வெறுப்பும் அருவருப்பும் கொண்டு இடப்பட்ட அப்பெயர் நூறு அன்னையரின் நாவில் இனிய செல்லப்பெயராக மாறியது. இரவும் பகலும் அவன் அன்னையரின் கைகளிலும் மடியிலுமே திகழ்ந்தான். அசைவற்ற கைகால்களும் நோக்கில்லா விழிகளும் கொண்ட அந்தத் தசைக்குவை அவர்களின் விழைவால் பேரழகுகொண்டது. எண்ணும்தோறும் இனிமையளிப்பதாகியது. அவர்கள் அதுவரை அடைந்த வெறுமையனைத்தையும் நிரப்பியது. அவர்களை தெய்வமென ஆட்சிசெய்தது.
சோமகன் தன் மைந்தன்மேல் பெரும்பித்து கொண்டிருந்தான். ஒவ்வொருநாளும் காலையில் மைந்தன் முகத்தில் அவன் விழிக்க விரும்புவான் என்பதனால் அன்னை ஒருத்தி மைந்தனுடன் வந்து அவன் மஞ்சத்தறை வாயிலில் காத்திருப்பாள். அரசவை கூடும்போது அருகமைந்த அறையில் அன்னையர் அவனுடன் காத்திருப்பார்கள். சிற்றிடைவேளைகளில் அவன் அழைத்ததும் மைந்தனை அவனிடம் அளிப்பார்கள். அவன் குரல் கேட்டதுமே மைந்தன் துள்ளித் ததும்பத் தொடங்குவான். ஏழு வயதாகியும் “ஆ!” என்ற ஒற்றைச் சொல்லன்றி எதுவும் அவன் நாவில் எழவில்லை. அவ்வொரு சொல்லில்இருந்தே அவன் உணர்வதனைத்தையும் அறிந்துகொள்ளுமளவுக்கு அவர்கள் அவன்மேல் பெருவிருப்பம் கொண்டிருந்தனர்.
ஒருநாள் கீழ்த்திசையிலிருந்து வந்த புலோமர் என்னும் வைதிகர் அவன் அவையிலமர்ந்து அறமுரைத்துக்கொண்டிருந்தார். அவரைச் சூழ்ந்து வைதிகரும் அமைச்சர்களும் அமர்ந்திருந்தனர். தாழ்ந்த குரலில் புலோமர் பேசிக்கொண்டிருக்க அதைக் கேட்கும்பொருட்டு அனைவரும் அவரை நோக்கி சாய்ந்தனர். அப்போது பக்கத்து அறையில் ஜந்து வீரிட்டலறும் ஒலி கேட்டது. அதைக் கேட்டு நூறு அன்னையரும் கூச்சலிடுவதும் அழுவதும் எழுந்தது. சோமகன் அரியணையில் இருந்து இறங்கி “என்ன? என்ன ஆயிற்று?” என்று கூவியபடி பக்கத்து அறைக்குள் ஓடினான்.
அந்தப் பெரிய கூடத்திற்குள் மைந்தன் கதறியழுதுகொண்டிருக்க அரசியர் அவனை கையில் எடுக்கும்பொருட்டு கூச்சலிட்டபடி முண்டியடித்தனர். “அவனை என்னிடம் கொடுங்கள்!” என அவர்கள் கூவி அழுதனர். அவர்களை அதட்டி விலக்கிவிட்டு மைந்தனை தன் கையில் வாங்கிப் பார்த்த சோமகன் அவன் தொடையில் ஓர் எறும்பு கடித்திருப்பதைக் கண்டான். அந்த வடுவில் அவன் கண்ணீர் விட்டபடி முத்தமிட்டான். வலி அமைந்ததும் ஜந்து உடல்கூச நகைக்கலானான். அன்னையரும் நகைத்தபடி அவனைச் சூழ்ந்து வளையல் ஒலிக்க கைதட்டியும் பறவைகள்போலவும் விலங்குகள்போலவும் ஒலியெழுப்பியும் அவனை மகிழ்விக்கத் தொடங்கினர்.
அதன் பின்னரே சோமகன் அரியணையைவிட்டு இறங்கி ஓடியதை உணர்ந்து கூச்சமடைந்தான். மீண்டும் அவைக்குச் சென்றபோது புலோமர் பேச்சை நிறுத்திவிட்டு அவனுக்காகக் காத்திருந்தார். வைதிகரும் அமைச்சரும் அவர் அருகே கைகட்டி நின்றிருந்தனர். சோமகன் புலோமரை வணங்கி “பொறுத்தருள்க அந்தணரே, நான் முதுமையில் தவமிருந்து பெற்ற மைந்தன். அவனன்றி என் உலகம் பொருள்கொள்வதில்லை. அவனுக்காகவே நான் உயிர்வாழ்கிறேன். அவன் அழுமொலி கேட்டபின் நான் இங்கே அமர்ந்திருக்கமுடியாது” என்றான். அங்கே நிகழ்ந்ததை சொன்னான். “பேரன்பு என்பது பெருந்துன்பமே என இன்று உணர்ந்தேன்” என சொல்லி பெருமூச்சுவிட்டான்.
“இந்த மைந்தன் உனக்கு எவ்வகையில் பொருள் அளிக்கிறான்?” என்றார் புலோமர். “இவனே என் அறம்பொருளின்பம். இவனே என் மூதாதையர். இவனே என் தெய்வவடிவம்” என்றான் சோமகன். “இப்புவியில் எதன்பொருட்டு இவனை இழப்பாய்?” என்றார் புலோமர். அவ்வினாவை எமன் கேட்டதை நினைவுகூர்ந்த சோமகன் “எதன்பொருட்டும் இழக்கமாட்டேன். இங்கும் அங்கும் எதுவும் இவனுக்கு நிகரல்ல” என்றான்.
“ஒற்றை ஒரு மைந்தனைப் பெற்ற தந்தை அப்படித்தான் இருக்கமுடியும். அன்பெல்லாம் அந்த ஒரு மைந்தன்மேல் குவிகிறது. நிறைய மைந்தரைப் பெற்றவர்கள் பலமடங்கு அன்புகொண்டவர்கள். பலமடங்கு உவகையும் அடைவார்கள். ஆனால் அவர்களின் துயர் குறைவே” என்றார் புலோமர். “என் ஊழ் ஒரு மைந்தனை மட்டுமே பெறுவேன் என்பது. நூறு மனைவியர் எனக்கு இருந்தாலும் அவர்களின் வயிறு கனியவில்லை” என்றான் சோமகன். “நூறு மைந்தரை நீ பெறமுடியும். நூறுவிழுது விரித்த ஆலமரமாக ஆக முடியும்” என்றார் புலோமர். திகைப்புடன் “அதெப்படி?” என்றான் சோமகன். “அரசே, பிருகத்ஃபலம் என்னும் மகாபூத வேள்வி ஒன்று உள்ளது. இது கிழக்குநாட்டில் பெருநிலம் முழுக்கப் பரவிய அரசுகொண்ட மாமன்னர்களுக்கு மட்டும் செய்யப்படுவது. நூறு புத்ரகாமேஷ்டிகளுக்கு நிகர் அது. அதை ஆற்றுபவன் நூறு நிகரற்ற மைந்தரைப் பெறுவான்” என்றார் புலோமர்.
“நான் அதைச் செய்ய விழைகிறேன். எனக்கு நூறு மைந்தர் வேண்டும்” என்று அரியணைவிட்டு எழுந்து நின்று சோமகன் கூவினான். “அரசே, அது எவ்விலை கொடுத்தேனும் தாங்கள் விழைவதைப் பெறும் துணிவுள்ள சக்ரவர்த்திகளுக்குரிய வேள்வி. அதர்வவேதத்தின் இருண்டபக்கத்தைச் சேர்ந்தது. எளிய உள்ளம் கொண்டோர் அதை எண்ணவும் இயலாது” என்றார் புலோமர். “நான் விரிமண்ணாளும் பேரரசன். என் விழைவோ பாரதவர்ஷத்தை முழுதாள்வது” என்று சோமகன் சொன்னான். “நூறு மைந்தர் எழட்டும். நான் என் அஸ்வமேதப் புரவியை கட்டவிழ்க்கிறேன்.”
“அரசே, இப்புவியில் எதை அடைந்தாலும் நிகராக ஒன்றை இழந்தாகவேண்டும். கையில் கொடைகளுடன் உங்களிடம் விலைபேச வந்திருக்கும் தெய்வங்கள் நீங்கள் எடுத்துவைக்கப்போகும் மாற்றுப்பண்டம் என்ன என்றே நோக்குகின்றன. இந்த வேள்வியில் பன்னிரண்டரை லட்சம் வெண்ணிறமான பசுக்களை பலியிடவேண்டும்” என்றார் புலோமர். சோமகன் திகைத்து அமர்ந்திருக்க “அல்லது அதற்கு நிகராக தன் தந்தையை பலிப்பசுவாக்கி வேள்வியில் அவியிடவேண்டும்” என்று புலோமர் சொன்னார். சோமகன் இமைக்காமல் நோக்கி அமர்ந்திருந்தான். புலோமர் “அல்லது பெற்றெடுத்த முதல் மைந்தனை பலிப்பசுவாக குருதி கொடுக்கவேண்டும். கொடை கொடுப்பவனின் இழப்பால்தான் அளக்கப்படுகிறது” என்றார்.
“அதெப்படி முடியும்? என்ன பேசுகிறீர்கள்?” என்று தலைமை அமைச்சர் சீறினார். “இச்சொல் இந்த அவையில் எழுந்தமையே பெரும்பழி சூழச்செய்வது” என்றார் இணையமைச்சர். “நான் பேரரசர்களின் வழியையே சொன்னேன். பிறருக்குரியவை அல்ல என்றும் எச்சரித்தேன்” என்றார் புலோமர். “ஒரு மைந்தனை இழந்தாலும் நூறு மைந்தரைப் பெறமுடியும். சிம்மம்போல் உடலாற்றல் கொண்டவர்களும் முழுவாழ்க்கை கொண்டவர்களுமான மைந்தர்களையே தெய்வங்கள் அளிக்கும். வேள்வியில் குறைமைந்தர் எழமாட்டார்.”
ஒரு சொல்லும் உரைக்காது சோமகன் எழுந்து தன் அறைக்குள் சென்று கதவை மூடிக்கொண்டான். அவன் தேவியர் வந்து அழைத்தும் திறக்கவில்லை. இரவெல்லாம் துயிலாமல் உலவிக்கொண்டிருந்த ஒலி கேட்டது. அவன் தனக்குத்தானே பேசிக்கொள்வதும் ஓங்கி தூண்களை மிதிப்பதும் ஓலமிடுவதும் கேட்டு வெளியே நின்றிருந்த அமைச்சர்கள் அஞ்சினர். மறுநாள் காலை கதவைத் திறந்து வெளிவந்த முதிய அரசன் இளமைகொண்டவனைப்போல் தோன்றினான். இறுகிய உடலுடன் நடந்து சென்று அவையமர்ந்து புலோமரை அழைத்துவர ஆணையிட்டான். வந்து வாழ்த்திநின்ற புலோமரிடம் “நான் ஏற்கிறேன். வேள்வி நிகழ்க! அதில் என் மைந்தனை பலிப்பசுவாக அளிக்கிறேன்” என்றான்.
அவையினர் திகைத்தனர். அமைச்சர் உரக்க “என்ன சொல்கிறீர்கள், அரசே? உங்கள் உயிருக்கு நிகரான மைந்தர் அவர்” என்றார். ஆனால் இரவிலேயே அனைத்தையும் எண்ணிமுடித்திருந்தான் சோமகன். “ஆம், நான் விழைந்தது மைந்தரை. நான் பேரன்பு கொண்டிருப்பது மைந்தர் மேல். இந்தக் குறிப்பிட்ட மைந்தன் அல்ல” என்று அவன் சொன்னான். “இது அசைவற்ற ஊன்பிண்டம். இது எனக்குப் பின் அரசாளுமா? எந்தையருக்கு நுண்சொல் உரைத்து நீர்க்கடன் இயற்றுமா? வேள்விக்காவலனாக அமர்ந்திருக்குமா? இதை மைந்தன் என எண்ணிக்கொண்டது என் இழிதகு உளமயக்குதான். உண்மையான ஆற்றல்கொண்ட நூறுமைந்தர் பிறப்பாரென்றால் இதை இழப்பதில் பிழையில்லை.”
“ஆம், இவனை இழந்தால் நான் துயர்கொள்வேன். ஆனால் நூறு மைந்தரைப் பெற்று அதை நூறுமடங்கு நிகர்செய்வேன்” என்று சோமகன் சொன்னான். “உண்மை, இது பழிசூழ் செயலே. ஆனால் அரசனாகிய நான் என் மக்களுக்கு கடமைப்பட்டவன். எனக்காக அல்ல, என் அரசுக்காகவே நான் மைந்தனைப் பெற விழைந்தேன். நூறு பெருவீரர் என் குடியில் பிறந்தால் என் அரசு பாரதத்தை ஆளும். என் குடியினர் என்னை வாழ்த்துவர். அச்சொல்லில் இப்பழி கரைந்துபோகும். நூறு மைந்தர் அளிக்கும் நீரையும் அன்னத்தையும் பெற்று என் மூதாதையர் என்னை வாழ்த்துவர். அவ்வருளில் இங்குள்ள இழிசொற்கள் மறையும்.”
“ஆற்றல்மிக்க மைந்தன் ஒருவன் பிறந்தால் அவனை இந்நாட்டின்பொருட்டு களம்புக அனுப்பமாட்டேனா என்ன? அவன் களப்பலியானால் நடுகல் சாத்தி தெய்வமாக்கமாட்டேனா என்ன? நூறு வீரர் தன் குலத்தில் பிறக்கும்பொருட்டு இவன் களப்பலியானான் என்று கொள்வோம். இவன் நூறுமரங்கள் முளைக்கும் கணுக்கள் கொண்ட மரத்தடி. இவன் பிறப்பின் நோக்கமே இதுதான் போலும். அவையோரே, இவன் நோய்கொண்டு நொந்து இறந்தால் விண்புகமாட்டான். ஏனென்றால் இங்கு இவன் நற்செயல் என எதுவும் செய்யவில்லை. ஆனால் வேள்வித்தீயில் அவியானான் என்றால் தேவர்கள் இவனை கைபற்றி விண்ணிலேற்றிக் கொண்டுசெல்வர். அவியென பெய்யப்பட்ட அனைத்தும் தூய்மை அடைகின்றன. விண்வாழும் தெய்வங்களை சென்றடைகின்றன.”
“தன் குடிகாக்கும் நூற்றுவரை எழுப்பிவிட்டு இவன் விண்புகட்டும். இவ்வெளிய ஊன்தடி பிறந்து உண்டு வளர்ந்தமைக்கு இப்பெருஞ்செயலே பொருத்தமான பொருள் அளிப்பது. அறியாமலேயே குலம்காக்கும் வீரனென்றாகிறான் இவன்” என்றான் சோமகன். “இவனுக்கு நம் நகர்நடுவே நடுகல் நாட்டி வணங்குவோம். என்றென்றும் இவன் பெயர் நம் குடிநினைவுகளில் வாழட்டும்.” அரசன் சொல்லிமுடித்தபின் அமைச்சர்களுக்கு சொல் இருக்கவில்லை. அவர்கள் ஒருவரை ஒருவர் நோக்கிக்கொண்டு அமைதியாக நின்றனர்.
செய்தி அறிந்து அன்னையர் நூற்றுவரும் மைந்தனை நடுவே வைத்து உடலால் அரண்கட்டிக் காத்தபடி கதறி அழுதனர். “எங்கள் உயிரை எடுங்கள். எங்களைக் கொன்று அவியிடுங்கள்… எங்கள் மைந்தனை விடப்போவதில்லை” என்று அவர்கள் கூவினர். வாளேந்தி வந்த வீரர்களுக்கு முன்னால் சென்று விழுந்து “இங்கேயே உயிர்துறப்போம். எங்கள் மைந்தனை தொடவிடமாட்டோம்” என்றனர். நெஞ்சிலறைந்து அழுதனர். உடைவாளை எடுத்து தங்கள் கழுத்தில் வைத்து “எங்கள் குருதியை மிதித்துக் கொண்டுசெல்க மைந்தனை!” என்றனர்.
அரசியரின் சினம் அறிந்து புலோமர் அங்கு வந்தார். “அரசியரே, உங்கள் ஒவ்வொருவரின் வயிற்றிலும் பிறக்கவிருக்கும் மைந்தர்களை நீங்கள் தடைசெய்கிறீர்கள். இவ்வூன்தடி உங்கள் கைகளில் தவழ்ந்தது உங்கள் மைந்தர் என மறுபடியும் பிறப்பதற்கே என்று அறிக! இவன்மேல் நீங்கள் காட்டிய பேரன்பு இவன் உங்கள் மைந்தனாகப்போகிறவன் என்பதனால்தான்” என்றார். அவர்கள் கண்ணீர் வழிய அவர் சொற்களைக் கேட்டனர். “உங்களில் எவருக்கு மைந்தன் பிறக்க விருப்பமுள்ளதோ அவர்கள் மட்டும் இப்பால் வருக! பிறர் அங்கு நின்று மைந்தனை காத்துக்கொள்க!” என்றார் புலோமர்.
நூறாவது அரசியான பத்மை கண்ணீருடன் “இவன் என் உயிருக்கு நிகர். ஆனால் பெண்ணென நான் ஒரு மைந்தனில்லாமல் இறக்க விரும்பவில்லை” என்றபடி விலகி நின்றாள். இன்னொரு அரசியும் “ஆம், நான் மைந்தனில்லாமல் இறந்தால் விண்ணுலகு செல்லமாட்டேன்” என்று விலகி வந்தாள். “நான் இக்குழவியில் கண்டது பிறக்க இயலாத என் மைந்தனைத்தான். அவன் வருக!” என இன்னொருத்தி விலகினாள். அனைத்து அரசிகளும் ஜந்துவை விட்டுவிட்டு விலகினர். அவனை வயிற்றில் சுமந்துபெற்ற முதல் அரசி மட்டும் அவனை மடியில் வைத்து அணைத்து கண்ணீர் விட்டபடி உடல்குறுக்கி அமர்ந்திருந்தாள்.
“அரசி, உங்களை அன்னையென்று அழைக்கக்கூட அறியாத இந்த மைந்தனால் என்ன பயன்? முடிசூடி அமர்ந்து கோசலத்தை ஆளும் சக்ரவர்த்தி ஒருவன் எழவேண்டிய வயிறு உங்களுடையது” என்றார் புலோமர். அவள் “விலகுக! என் செவிக்கு நஞ்சாகிய சொற்களை சொல்லாதொழிக!” என்று கூவினாள். “மைந்தன் என்பவன் மைந்தனுக்குரிய இயல்புகளின் தொகுதி அல்லவா? இவன் இயல்புகள் என்ன? உங்கள் கைகளில் வாழும் இந்த ஊன்பொதியால் உங்கள் அன்னையுள்ளம் நிறைவடைகிறதா?” என்றார் புலோமர். “பேசாதே… விலகு!” என்று அன்னை கூவினாள்.
“அரசி, உங்கள் வயிற்றில் இப்போதே கருத்துவடிவாக வந்துவிட்டான் பேராற்றல் மிக்க மைந்தன். உங்கள் கண்களும் கைகளும் அறிந்துவிட்ட இந்த ஊன்குவைக்காக உங்கள் கனவகம் மட்டுமே அறிந்த அம்மைந்தனைக் கொல்ல முடிவெடுக்கிறீர்கள் இப்போது” என்றார் புலோமர். அரசி நிமிர்ந்து தன் நெஞ்சிலும் வயிற்றிலும் ஓங்கி ஓங்கி அறைந்துகொண்டு வீரிட்டலறினாள். பின்னர் மைந்தனை அப்படியே விட்டுவிட்டு ஓடி தன் அறைக்குள் புகுந்து கதவை மூடிக்கொண்டாள். புலோமர் தன் மாணவர்களிடம் “பலிவிலங்கை வேள்விப்பந்தலுக்கு கொண்டுசெல்லுங்கள்” என்றார்.
அவர்கள் ஜந்துவை தூக்கிக்கொண்டு சென்றபோது அவன் அஞ்சி கழுத்து இறுகிய கன்றுபோல அமறல் ஒலியெழுப்பி துடித்தான். “ஆ! ஆ!” என அவன் அழுதது அம்மா அம்மா என்றே அவர்களின் செவிகளுக்கு ஒலித்தது. அரசியரில் மூவர் உள்ளம்பொறாமல் ஓடிவந்து அவன் ஒருகையைப்பற்றி இழுத்தனர். இளவைதிகர் அவனை மறுபக்கம் இழுத்தனர். பிற அரசியர் “வந்துவிடடீ… வேண்டாம்” என்று அவர்களை அழைத்தனர். அழுதபடி கையை விட்டுவிட்டுச் சென்று முழந்தாளிட்டமர்ந்து கதறி அழுதனர் அம்மூவரும். அரசியரின் அழுகைக்குரல் சூழ ஜந்து வேள்விப்பந்தலுக்கு கொண்டுசெல்லப்பட்டான்.
அங்கே வேள்விக்காவலனாக சோமகன் அமர்ந்திருந்தான். தந்தையின் குரலைக் கேட்டதும் ஜந்து மகிழ்ந்து மூக்கை அத்திசை நோக்கி திருப்பியபடி சிரித்து “ஆ! ஆ!” என ஓசையிட்டான். அவனை அவர்கள் கொண்டுசென்று மணைப்பலகையில் அமரச்செய்தனர். அவன் அஞ்சி தலைதிருப்பியபோது சோமகன் அவன் தோளைத்தொட்டு “அசையாதே, ஜந்து” என்றான். அவன் ஒருபோதும் அப்பெயரை சொல்வதில்லை. சௌமதத்தன் என்றே சொல்வது வழக்கம். அப்போது அச்சொல் அவனை வெறுப்புக்குரியவனாக ஆக்க உதவியது. ஜந்து தந்தையின் தொடுகையை உணர்ந்து சிரித்துக்கொண்டே இருந்தான். அவன் கழுத்தில் வேள்விக்கத்தி குளிராகத் தொட்டபோதும் அவன் நகைத்தான்.
அவர்கள் அவன் கழுத்தின் குருதிநாளத்தை அறுத்து பெருகிய குருதியை வேள்விக்குளத்தில் கொட்டினர். முதல்முறையாக ஜந்துவின் கைகளும் கால்களும் துடித்து இழுபட்டு நீண்டன. அவன் இருகைகளையும் விரித்து கால்களை உந்தி சோமகனை நோக்கி தாவினான். “தந்தையே” என்று கூவினான். அதற்குள் மூச்சுக்குழாயும் அறுபட்டதனால் அடுத்த சொல் குருதித்தெறிப்புகளாக அவனை பிடித்துக்கொண்டிருந்த வைதிகர்மீதும் அப்பால் நின்றிருந்த அரசன்மீதும் தெறித்தது. அவன் கைகால்கள் அதிர்ந்துகொண்டே இருந்தன.
அவன் தலையை துண்டித்து அப்பால் எடுத்து வைத்தபின் அவன் உடலை சிறுதுண்டுகளாக வெட்டி எரிகுளத்திலிட்டனர். பாம்புச்சீறல்கள்போலவும் கூகைக்குழறல்போலவும் யானைப்பிளிறல்போலவும் எழுந்த அதர்வம் அப்பலியை ஏற்றுக்கொண்டது. நெய்விழுந்த தீ எழுந்து கூரைதொட்டு நின்று ஆடியது. ஊன் உருகும் வாடை எழுந்து அரண்மனைக்குள் சூழ்ந்தபோது அரசியர் நெஞ்சில் அறைந்தபடி கதறி அழுதனர். சிலர் உப்பரிகைகளிலிருந்து கீழே குதிக்க ஓடினர். அவர்களை பிறர் பிடித்துத் தடுத்தனர். மைந்தனின் குருதியன்னை நினைவிழந்து படுத்திருந்தாள். இறுதியாக தலையையும் அவியிலிட்டபின் நூறு அதர்வச் சொல்நிரையை ஆயிரம் முறை சொல்லி அவ்வேள்வியை புலோமர் நிறைவுசெய்தார்.
அன்னையர் பித்துப்பிடித்தவர்கள்போல பலமாதகாலம் ஆடையணியாமல் அணிபூணாமல் இன்னுணவும் ஏற்காமல் இருந்தனர். சோமகனும் இறுகிய முகமும் வற்றிக்குறுகிய சொற்களுமாக அரசச்செயல்களை மட்டும் செய்து வாழ்ந்தான். ஆறுமாதங்களுக்குப் பின் அரசியர் ஒவ்வொருவராக கருவுறத்தொடங்கினர். ஒவ்வொரு கருவுறுதல் செய்தி வந்தபோதும் பிற அனைவரும் உவகைகொண்டனர். நூறுபேரும் கருவுற்ற செய்தி நூறுமடங்கு களிப்பாகியது. நூறு மடங்கு கொண்டாடிய சோமகன் ஜந்துவை அரிதாகவே எண்ணிக்கொண்டான். நூறு கருச்சடங்குகள் ஆற்றப்பட்டபோது முழுமையாகவே மறந்தான்.
அரசியர் தாங்கள் கருக்கொள்ளும்வரைதான் ஜந்துவை நினைத்திருந்தனர். தங்கள் வயிற்றில் உயிரை உணர்ந்தபின் வேறெதையும் அவர்கள் எண்ணாதவர் ஆயினர். நூறுமைந்தரும் ஒவ்வொருவராக மண்ணுக்கு வந்தபோது அரண்மனையும் அந்நாடும் ஜந்துவை முழுமையாக மறந்தனர். அவனுக்கு நகரின் தெற்குமூலையில் ஓர் ஆலயம் அமைக்கப்பட்டு அங்கே அவன் பலியான அன்று மட்டும் நெய்விளக்கு ஏற்றப்பட்டது. முதல்நாள் விளக்கேற்று விழாவுக்கு அரசியர் சூழ அரசன் வந்திருந்தான். கண்ணீருடன் கைகூப்பி அம்முற்றத்தில் நின்றிருந்தார்கள். அடுத்த ஆண்டு மைந்தர்களை கருவுற்றிருந்தமையால் அரசியர் வரவில்லை. அதற்கடுத்த ஆண்டு அரசனும் அக்கோயிலுக்கு செல்லவில்லை. அவை வைதிகரே உரியமுறையில் பூசனைகளை செய்தார்.
ஜந்து எப்போதாவது அவன் குருதியன்னையின் கனவில் வந்தான். அவன் விழிகள் கொண்டு நோக்கி துயரத்துடன் கைநீட்டி “அன்னையே!” என்று அழைத்தான். அவள் கருநிறைந்திருந்த நாளில் இருமுறை அக்கனவுக்குப் பின் கதறி எழுந்து ஓடமுயன்று கீழே விழுந்தாள். கனவுக்குறி நோக்கும் நிமித்திகர் நோக்கி ஜந்து அவள் வயிற்றில் மீண்டும் மைந்தனாக பிறக்க விழைகிறான் என்பதே அக்கனவின் பொருள் என்று உரைத்தனர்.
அதன்வண்ணமே நீண்ட உடலும் பெரிய கைகளும் அரசனுக்குரிய இலக்கணங்களும் கொண்டு நற்பொழுதில் பிறந்த மைந்தன் ஜந்துவின் இடுப்பில் இருந்த அதே மச்சத்தை தானும் கொண்டிருந்தான். அவன் பேரரசன் ஆவான் என்றனர் நிமித்திகர். அவனுக்கு சௌமதத்தன் என்று அன்னை பெயரிட்டாள். இளமையிலேயே படைக்கலம் கையிலெடுத்த அவன் பெருந்திறல்வீரனாக வளர்ந்தான். தன் உடன்பிறந்தார் துணையுடன் ஆரியவர்த்தத்தை முழுதும் வென்று அஸ்வமேதமும் ராஜசூயமும் நிகழ்த்தி சத்ராஜித் என அறியப்பட்டான். துலா சரியாமல் நெறிகாப்பவன் என குடிக்கு புகழ்சேர்த்தான்.
தந்தையும் அன்னையரும் முற்றிலும் மறந்தாலும் அவன் மட்டும் தன் மூத்தவனை மறக்கவில்லை. ஒவ்வொரு மாதமும் ஜந்துவின் ஆலயத்திற்குச் சென்று வணங்கி படையலும் பூசையும் இட்டு மீள்வது அவன் வழக்கமாக இருந்தது. தன் வாழ்வு என்பது பிறிதொரு விழைவின் ஈடேற்றமே என அவன் அறிந்திருந்தான். சிலையாக நின்றிருந்த ஜந்து கூரிய விழிநோக்கு கொண்டிருந்தான். அவன் முன் நிற்கும் எவரும் அவ்விழிகளை ஏறிடமுடியாமல் விலகிச்செல்வதே வழக்கம். சௌமதத்தன் மட்டுமே அவ்விழிகளை நோக்கியபடி நெடுநேரம் நின்றிருப்பான். “என்னை நான் நோக்கிக்கொண்டிருக்கிறேன் என்று தோன்றுகிறது” என்று அவன் சொன்னான்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 21
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 19
September 8, 2016
ஆல்
என் ஆசிரியர்களில் முதன்மையானவர் என்று எப்போதுமே ஆற்றூர் ரவிவர்மாவைச் சொல்வேன். மலையாளத்தின் நவீனக்கவிஞர்களில் ஒருவர், தமிழிலிருந்து ஏராளமான படைப்புகளை மலையாளத்துக்கு மொழியாக்கம் செய்தவர். அவரது மகள் ரீத்தாவின் கணவர் ஆந்திராவில் மாச்செர்லா என்னும் ஊரில் மின்வாரியத்தில் பொறியாளராகப் பணியாற்றினார். மாச்செர்லாவுக்கு நான் ஒருமுறை பணமே இல்லாமல் சென்று சேர்ந்தேன்
என் பயணங்களில் ஒன்றில் ஹைதராபாத் செல்லும் வழியில் திடீரென்று கையில் பணமில்லாத நிலையை அடைந்தேன். திருட்டுபோகவெல்லாம் இல்லை, கையில் மொத்தம் எவ்வளவு பணமிருக்கிறது என்று கணக்கு வைத்துக்கொள்ளவில்லை. கிளம்பியபோது கணக்கு இருந்தது. சிலநாட்களில் மறந்துவிட்டது. தேவையானபோது எடுத்துச்சாப்பிட்டுக்கொண்டும் பேருந்துச்சீட்டு எடுத்துக்கொண்டும் அவ்வப்போது மலிவான விடுதிகளில் தங்கிக்கொண்டும் போய்க்கொண்டே இருந்தேன். மனம் வெளியிலும் உள்ளிலுமாக அலைந்துகொண்டிருந்தது.
ஒரு பேருந்து நிலையத்தில் ஹைதராபாதுக்கு பேருந்தைப்பிடிக்க நின்றிருக்கும்போதுதான் ஒரு கடும்குளிர்போல அடிவயிறு அதிர என்னிடம் மொத்தமே இருபத்துமூன்று ரூபாய்தான் எஞ்சியிருக்கிறது என்று கண்டுபிடித்தேன். ஹைதராபாத் செல்ல அது போதாது. ஊருக்குத்திரும்பிச்செல்ல கொஞ்சமும் போதாது. கையில் மதிப்புமிக்க பொருள் என ஏதுமில்லை.
என்ன செய்வதென்றறியாமல் அந்தப் பேருந்து நிலையத்தையே நாலைந்து முறை சுற்றிவந்தேன். ஒரு பஸ்ஸின் பெயரைப் பார்த்ததும் மூளை மின்னியது, மாச்செர்லா! அங்கே செல்ல எவ்வளவு டிக்கெட் ஆகும் என கேட்டேன். பதினெட்டு ரூபாய்தான். தொலைவு இல்லை. சாப்பிடவும் பணம் எஞ்சுவது அளித்த பரவசத்துடன் அருகே இருந்த சாலையோர உணவகம் நோக்கிச் சென்றேன்.
அந்தக்கடைக்கும் சாலைக்கும் நடுவே போடப்பட்டிருந்த பெரிய மரத்தடிமேல் ஏறியதும் ஒருவன் என் சட்டையைப் பிடித்துக்கொண்டான். கிசுகிசுப்பாக “பணம் கொடு…ஒருவேளை சாப்பிட பணம் கொடு… நீ மகராஜா. நீ மகாராஜா” என்றான். நான் திகைத்து “பணம் இல்லை” என்றேன். “உன்னிடம் பணமிருக்கிறது. எனக்குத்தெரியும். நான் உன் சகோதரன். ஒருவேளை உணவு மட்டும் வாங்கிக்கொடு. நான் இறந்துவிடுவேன்”.
அவனுடைய இருகால்களுமே மிக ஒல்லியாக, இறாலின் கொம்புகள் போல இருபக்கமும்,வளைந்திருந்தன. அவன் என் இடுப்பளவே இருந்தாலும் கைகள் உறுதியானவை. என்னசெய்வதென்று தெரியாமல் நான் “வேறு யாரிடமாவது கேள். நான் வெளியூர்” என்றேன். “சகோதரா, நானும் மனிதன். நானும் வெளியூர்” எனக்கு தெலுங்கு சரியாகத் தெரியாது. ஆனால் இக்கட்டுகளில் மொழி புரியத்தொடங்கிவிடுகிறது. என் கைகால்கள் நடுங்கின. நான் காலையில் சாப்பிடவில்லை. மாலை ஆகிவிட்டிருந்தது.
“யோசிக்கிறாய் சகோதரா… அத்தனை யோசிப்பது தராமலிருக்கவா? வேண்டாம். நீயே வைத்துக்கொள்… நன்றாக இரு” என்று அவன் என் சட்டையை விட்டுவிட்டு திரும்பினான். அது எனக்குள் மிகப்பெரிய உடைவை உருவாக்கியது. நான் கைநீட்டி அவன் தோளைப்பிடித்தேன். “ஐந்துரூபாய் தருகிறேன்…” என்றேன்.
“போதும்… நான் சாப்பிட்டுவிடுவேன்”. அவன் குரல் மிக ஆழத்திலிருந்து ஒரு நடுக்கத்துடன் எழுந்தது. கழுத்துத்தசைகள் இழுபட்டன. பசி தாளமுடியாமலிருக்கிறான் என்பதை பசியை அறிந்த என்னால் மிக நெருக்கமாக உணர முடிந்தது. ஐந்து ரூபாயை அவன் கிட்டத்தட்ட பறித்துக்கொண்டு அக்கடைக்குள் சென்றான். இரண்டு பெரிய தட்டுகள் நிறைய தக்காளிச்சாதம் வாங்கிக் கொண்டான். வெறிகொண்டு சாப்பிடத் தொடங்கினான்
வெளியே நின்று அவன்சாப்பிடுவதை பார்த்துக்கொண்டிருந்தேன். என் வயிறு பசியில் கொப்பளித்து நெஞ்சை அடைத்தது. பார்க்கக்கூடாது என நினைத்தாலும் பார்க்காமலிருக்க முடியவில்லை. எதற்காக ஒரேசமயம் இரண்டு தட்டு தக்காளிசாதம் வாங்கிக்கொண்டான்? இரண்டாவது தட்டு சாதத்தைப் பார்த்துக்கொண்டே சாப்பிட்டான். ஒருதட்டு தக்காளிச்சாதம் இரண்டரை ரூபாய்தான். இங்கே மலிவான உணவு அதுதான் போல. அப்படியென்றால் பாதிப்பாதியாகக்கூட சாப்பிட்டிருக்கலாம்.
அவன் சாப்பிட்டுவிட்டு வெளியே வந்தான். சட்டை நனைய தண்ணீர் குடித்திருந்தான். என்னைப்பார்த்து புன்னகையுடன் “சாப்பிட்டுவிட்டேன்…” என்றான். அவனுடைய அப்பட்டமான மகிழ்ச்சியைக் காண ஆச்சரியமாக இருந்தது. “என் பெயர் ராமராவ்” என்றான். “சூப்பர்ஸ்டாரின் பெயர்” என்றேன். “ஆம், நானும் அவரும் ஒரே ஊர். நான் அவரைப்போலவே பாடுவேன். என் தொழிலே பாட்டுத்தான்”.
“அப்படியா?” என்றேன். “ஆம், நன்றாகவே பாடுவேன். தெருவில்பாடி பணம் சேகரித்து அண்ணனிடம் கொடுப்பேன். என் வீட்டில் நான் பணம் கொடுத்துத்தான் சாப்பிட்டுவந்தேன். எவர் தயவிலும் இல்லை. ஆனால் என் அண்ணி என்னை துரத்திவிட்டாள். சும்மா துரத்தவில்லை. என்னை அவமதித்துத் துரத்தினாள். நான் செய்யாததைச் செய்ததாகச் சொன்னாள்”.
அவன் மேலே சொல்லட்டும் என நான் காத்திருந்தேன். “அவள் குளிப்பதை நான் பார்த்ததாகச் சொன்னாள். என் அண்ணா என்னை இழுத்துப்போட்டு அடித்தான். என்னை பிடித்து இழுத்து சைக்கிளில் வைத்துக்கட்டி கொண்டுவந்து பஸ்ஸில் ஏற்றி உட்காரவைத்து டிக்கெட் எடுத்து அனுப்பிவிட்டான். எங்கே போகிறோம் என்றே தெரியவில்லை. ஆனால் நான் அழவில்லை. கெஞ்சவும் இல்லை”
“முதலில் அண்ணாவிடம் நடந்ததைச் சொல்லலாம் என நினைத்தேன். திரும்பத்திரும்பச் சொல்ல முயன்றேன். ஆனால் அண்ணா அதைக்கேட்காமல் என்னை அடித்துக்கொண்டே இருந்தார். அப்போது தெரிந்தது, அவர் அண்ணி சொன்னதை நம்பவில்லை என்று. அவருக்கு என்னை வீட்டைவிட்டுத் துரத்தவேண்டிய தேவை இருக்கிறது. ஆகவே அதைச்செய்கிறார். நான் அதன்பின் ஒன்றுமே சொல்லவில்லை”
“பஸ் எடுத்ததும் அண்ணா இனிமேல் இங்கே வராதே என்று கூவினார். நான் வரமாட்டேன் என்று சொல்லிக்கொண்டேன். பஸ் எங்கே போகிறதென்று தெரிந்துகொள்ளக்கூட முயலாமல் அமர்ந்திருந்தேன். இதோ இங்கே வந்ததும் இறங்கு, இனிமேல் டிக்கெட் இல்லை என்றான் கண்டக்டர் .இறங்கிவிட்டேன் நான் நேற்றுகாலை சாப்பிட்டது. அதன்பின் இதுவரை தண்ணீர்கூட குடிக்கவில்லை. என்னால் பசிதாளமுடியாது” அவன் சொன்னான்
நான் புன்னகையுடன் ”இப்போது சாப்பிட்டுவிட்டாய் அல்லவா?” என்றேன். “நீ என் உயிரைக் காப்பாற்றினாய்..” என்று என் கைகளைப்பிடித்தான். “அதெல்லாம் இல்லை, என்னிடம் அதிகப்பணம் இல்லை. நான் மாச்செர்லா போகிறேன்…என் சொந்த ஊர் கேரளா. அங்கே வேலைசெய்கிறேன்” என்னைப்பற்றி விரிவாக அறிமுகம் செய்து கொள்ளவில்லை, ஏனென்றால் அவனிடம் ஒரு ஐந்துரூபாய் கொடுக்கும் அளவுக்குக்கூட என்னிடம் பணம் இருக்கவில்லை.
அவன் என் சட்டையை மறுபடியும் பிடித்துக்கொண்டு “இரு சகோதரா, நான் பாடுவதைக் கேட்டுவிட்டுப்போ. சாப்பிட்டபின்னர்தான் எனக்கு குரல் வந்திருக்கிறது” என்றான். நான் “என் பஸ் போய்விடும்” என்றேன். “நான் பாடுகிறேன்… கேட்டுவிட்டுப்போ…கேட்டுவிட்டுப்போ சகோதரா” அவன் அந்தப்பிடியை விடவே இல்லை. அவன் நினைத்ததை செய்பவன், பிறருக்கு ஆணையிடும் குரல்கொண்டவன். என்னால் மீறமுடியவில்லை “சரி” என்றேன்
அவன் நேராக அந்த பேருந்துநிலைய வாசலில் சென்று நின்று சுற்றுமுற்றும் நோக்கி கீழே கிடந்த தீப்பெட்டி ஒன்றை எடுத்துக்கொண்டான். அவன் விரல்கள் அதில் துடித்தன. சீரான தாளம் எழுந்தது. பலர் திரும்பிப்பார்த்தனர். அவன் பாடிய பாடல் இன்னமும் நினைவிருக்கிறது. “ராகமயி ராவே அனுராகமயி ராவே” நாகேஸ்வரராவ் நடித்தபடம். அஞ்சலிதேவி உடன் ஆடுவார். ஆனால் அப்போது அந்தப்பாடலை முதல்முறையாகக் கேட்டேன்.
மிகச்சில கணங்களிலேயே அவன் குரல் அப்பகுதியை ஆட்கொண்டது. மாசற்ற வெள்ளி ஓடை. செம்பருந்தின் துல்லியமான வட்டங்கள். அது கர்நாடக இசையை அடிப்படையாகக்கொண்ட பாடல். கண்டசாலா பாடியது. கண்டசாலாவிடம் எப்போதுமே ஒரு துயர் உண்டு. அவன் குரலில் துயரமே இல்லை. செம்பருந்தேதான். அதற்கு துயரமே இல்லை. அது துயரமில்லாத வானவெளியைச் சேர்ந்தது. கதிரொளி படும்போது பொன்னென ஆகும் வரம் கொண்டது.
எட்டுபாட்டுகளை அவன் பாடினான். எல்லாமே புகழ்பெற்ற சினிமாப்பாடல்கள். அவன் ஒவ்வொரு பாட்டுக்கு பின்பும் எந்தவகையிலும் கெஞ்சாமல் “பாட்டு பிடித்திருந்தால் மட்டும் நான் சாப்பிட பணம் கொடுங்கள்” என்றான். மக்கள் இருபத்தைந்து பைசா முதல் ஒருரூபாய் வரை கொடுத்தார்கள். பாடிமுடித்தபோது ஒருவர் ஐந்துரூபாய் கொடுத்து இன்னொரு என்.டி.ஆர் பாட்டு பாடும்படிச் சொன்னார்.
ஒன்றரை மணிநேரத்தில் அவன் இருபத்திமூன்று ரூபாய் சம்பாதித்திருந்தான். நான் அவன் கைகளைப்பிடித்துக்கொண்டு “அற்புதமான பாட்டு” என்றேன். அதை தெலுங்கில் “மதுர சங்கீதம்” என்று சொன்னேன். அவன் என்னிடம் “சகோதரா இந்தப்பாடல்கள் நீ அளித்த சோறு. அந்த நன்றியுடன் நான் நீ தந்த பணத்தைத் திருப்பித் தந்துவிடுகிறேன்” என்றான். “இல்லை,வேண்டாம்” என்றேன்.
அவன் “நான் பலரைப்பார்த்தேன். நல்ல உடைகள் அணிந்தவர்கள். பணம் இருப்பவர்கள். இருந்தும் ஏன் உன்னைப்பிடித்தேன்? ஏனென்றால் நீயும் என்னைப்போன்றவன் என்று தோன்றியது. உன்னைத்தான் நான் சகோதரன் என்று அழைக்கமுடியும். என் சகோதரனிடம் நான் சோறு கேட்கவேண்டும். அது பிச்சை இல்லை” என்றான்
நான் அழுதுவிட்டேன். அவன் கைகளைப் பற்றியபடி “அப்படியென்றால் நீ எனக்கு அந்த தக்காளிச்சோறு வாங்கிக்கொடு. நான் சாப்பிட்டு ஒருநாள் ஆகிறது. என்னிடம் ஊருக்குப்போகும் அளவுக்கே பணம் இருக்கிறது” என்றேன். அவன் என் கைகளைப்பற்றி வேகமாக ஆட்டினான். “நீ என் சகோதரன். சொன்னேனே, நீ என் சகோதரன். ஆகவேதான் எனக்கு நீ தந்தாய்…” அவன் என்னை இழுத்தான் “வா, நான் உனக்கு முழுச்சாப்பாடு வாங்கித்தருகிறேன்”.
”இல்லை வேண்டாம். எனக்குத் தக்காளிச்சோறே போதும்“ என்றேன். “வா” என்று என்னை இழுத்துச்சென்றான். “என்னிடம் பணமிருக்கிறது. எல்லாம் உன் பணம்…” ஒர் ஓட்டலில் நுழைந்து சோறும் தீபோல எரிந்த காரக்குழம்பும் கெட்டித்தயிருமாகச் சாப்பிட்டேன். “பீடா போட்டுக்கொள்” என்றான். “போடுவதில்லை” என்றேன். “அப்படியென்றால் லட்டு சாப்பிடு” என்று வாங்கிக்கொண்டுவந்தான். பதிநான்கு ரூபாய்க்குமேல் பில் வந்ததைக் கண்டேன்.
நான் அவனிடம் விடைபெற்றேன். அவன் பத்து ரூபாயை என் கையில் வைத்து “பஸ்ஸுக்கான பணத்தை மட்டும் வைத்துக்கொண்டு எப்படிப்போவாய்… இதை வைத்துக்கொள்” என்றான். நான் மறுக்க மறுக்க என் பையில் போட்டான். “சென்றுவா சகோதரா… என்றைக்காவது பார்ப்போம்” என்றான். நான் அவனைத் தழுவி விடைபெற்று பேருந்தில் ஏறிக்கொண்டேன்.
வெறும் நான்கே ரூபாயுடன் அறியாத ஊரில் அவன் அன்றிரவைக் கழிக்கப்போகிறான். ஆனால் நான் அவனுக்காக வேண்டிக்கொள்ளவில்லை. என் நிலைமைதான் இரக்கத்திற்குரியது. வாழ்க்கையைப்பற்றிய அவநம்பிக்கைகளில் தனிமையில் சோர்வில் சென்றுகொண்டிருந்தன என் நாட்கள். அவன் எங்கும் வெல்பவன். எப்போதும் அவனுக்கு எதுவும் குறையாது.அவனுடைய அந்த கைகளால் அவன் பல்லாயிரம்பேருக்குச் சோறூட்டுவான்.
‘ஆடிக்கொரு மழைபோதும் ஆலமரத்துக்கு’ என்று என் பாட்டி சொல்வாள். ஆலமரம் எங்கும் முளைக்கும், எப்படியும் தழைக்கும், நூறடி ஆழத்திலிருந்து நீர் கொண்டுசென்று கனிகளாக பெருகும். அதில் பல்லாயிரம் பறவைகள் வாழும். அந்த வரத்துடன் மண்ணில் விழுகிறது அதன் சிறியவிதை
[குங்குமம் முகங்களின் தேசம் தொடரில் இருந்து ]
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
இரு இணைப்புகள்
அன்புள்ள ஜெயமோகன்,
சார்த்தர் பற்றிய உங்கள் கட்டுரையைப் படித்தேன். அதில் காஃப்கா பற்றிய குறிப்பையும் கண்டேன்.
இது தொடர்பாக இணையத்தில் கிடைத்த ஒரு கட்டுரையின் லிங்க் கீழே. முடிந்தால் படியுங்கள்.
https://www.cliffsnotes.com/literatur...
அன்புடன்
வ. ஸ்ரீநிவாசன்.
***
ஜெ
இந்தக்குறிப்பை இணையத்தில் வாசித்தேன். உற்றுநோக்கும் பறவையின் சக்ரமூலி நினைவுக்கு வந்தது
http://www.newyorker.com/magazine/2016/09/12/the-ayahuasca-boom-in-the-u-s
அரங்கசாமி
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 52
[ 6 ]
அடுமனை வாழ்க்கை சொல்லற்றதாக இருந்தது. அங்கே ஒற்றைச்சொல் ஆணைகள் இருந்தன. பின்னர் அவையும் மறைந்தன. நாள்முழுக்க சொற்களில்லாமலேயே சென்றது. கைகளும் கால்களும் விரைந்துகொண்டிருந்தபோது உள்ளம் சொற்களை கொப்பளித்துக்கொண்டிருந்தது. செயலும் சொல்லும் இரு தனி ஓட்டங்களாக சென்றன. எப்போதாவது சொற்பெருக்கு செயலை நிறுத்தச்செய்தது. மெல்ல சொற்கள் தயங்கலாயின. ஒரு சொல்லில் சித்தம் நின்று அதுவே குயிலோசை என மாறாது நெடுநேரம் ஒலித்துக்கொண்டிருப்பதை செயலின் நடுவே உணர்ந்து மீளமுடிந்தது. பின்னர் அதுவும் நின்றது. செயல் ஓய்ந்து அமர்கையில் நீராழத்திலிருந்து மீன்கணம் எழுந்து வருவதுபோல சொற்கள் தோன்றின.
ஆனால் அப்போது அவை பெருக்கெடுக்கவில்லை. தயங்கியவையாக எழுந்து தனித்தே மிதந்தன. சொற்கள் கனவிலென ஒலிப்பதுபோல சிலதருணங்களில் தோன்றும். சொல்லடங்கிய உள்ளத்தின் பெரும்பகுதி ஒழிந்துகிடப்பதை கண்டார். காட்சிப்பெருக்காக உணர்வுப்பெருக்காக எண்ணப்பெருக்காக ஓடிக்கொண்டிருந்தவை வெறும் சொற்களே என்றுணர்ந்தது அவரை மீண்டும் மீண்டும் வியப்பிலாழ்த்தியது. அடுமனைப் பணி ஓய்ந்து காட்டில் ஓடைக்கரையிலோ மரத்தடியிலோ அமர்ந்திருக்கையில் தாடியை நீவியபடி வெறுமனே நோக்கியிருப்பது அவர் இயல்பென்றாயிற்று. ஓயாது சொல்முழங்கும் கொட்டகைகளில் அமர்ந்திருக்கையில் அங்கு ஒலிக்கும் சொற்களை தொடாமல் விலகியிருந்தன அவர் செவிகளும் விழிகளும்.
சொல்லில் இருந்து விடுதலை என எப்போதோ ஒருமுறை அவர் எண்ணிக்கொண்டார். நகுலனும் சகதேவனும் வழக்கம்போல தங்களுக்குள் பேசிக்கொண்டிருந்தனர். நகுலன் அவரிடம் “உங்கள் குரல் எழுந்தே நெடுநாளாயிற்று, மூத்தவரே” என்றான். அப்போதுதான் அவரே அதை உணர்ந்தார். “சொல்லற அமர்தல் என்கிறார்கள். அமர்ந்தபின் சொல்லை அறுப்பது இயலாது. அறுத்தபின்னரே அமரவேண்டும்” என்றான் நகுலன். அவர் தாடியை நீவியபடி புன்னகைசெய்தார். “நீங்கள் சொல்லும் முறை இவனுக்கும் கைவந்திருக்கிறது, மூத்தவரே” என்றான் நகுலன்.
அப்போதுதான் தருமன் அது தன்மொழி என நினைவுகூர்ந்தார். எத்தனை சொற்களால் நிறைந்திருந்தது தன் உள்ளம். கற்ற ஒவ்வொன்றுக்கும் நிகரிவடிவை உருவாக்குவதை ஒயாது செய்துகொண்டிருந்தது. அதையே எண்ணத்திறன் என்றும் மெய்மையறிதல் என்றும் மயங்கியது. அவர் சொன்ன ஒவ்வொரு சொல்லும் பிறிதொருவரின் மெய்யறிவு. மொழியென்றானது அதன் தொலைநிழல். அந்நிழலின் நிழலுடன் ஆடி அவர் அமர்ந்திருக்கிறார். அவர் புன்னகைப்பதைக் கண்டு நகுலன் “நீங்கள் சுவடிகளையும் நாடுவதில்லை இப்போது” என்றான். அவர் ஆம் என்பதுபோல தலையசைத்தார்.
ஆனால் சொல்லற்ற வெற்றுப்பரப்பில் ஆழப்பதிந்த சொற்கள் உடல்துடிக்கச்செய்யும் ஆற்றல்கொண்டிருந்தன. சொல் கொதிக்கும்பொருளென தொடமுடியும் என்றும் விடாத பேயெனத் தொடரமுடியும் என்றும் கொடுநோயென கணம்தோறும் பெருகமுடியும் என்றும் அவர் உணர்ந்தார். எரிவைத்து விளையாடும் குழந்தையைப்போல அத்தனைநாட்களும் சொல்லாடிக்கொண்டிருந்தார் என்று தோன்றியது. கூட்டமில்லாத பிற்பகலில் தட்டுகளை கழுவிக்கொண்டிருந்தபோது மூத்த மாணவரான சலபர் உள்ளே அவர் பேசிக்கொண்டிருந்த கதையொன்றின் தொடர்ச்சியுடன் வெளியேவந்தார். முண்டகர் என்னும் முனிவர் காட்டில் சென்றுகொண்டிருந்தபோது யானை ஒன்றால் துரத்தப்பட்டு கால் உடைந்து கடும் மழையில் நொண்டிக்கொண்டே ஓடி ஒரு குகைக்குள் ஒடுங்கிக்கொண்டார்.
“குகைக்குள் இருந்து அவரால் வெளிவரமுடியவில்லை. அவர் கையில் அவர் அகழ்ந்துவைத்திருந்த கிழங்குகள் இருந்தன. அவர் எரிவளர்த்து வேள்விசெய்து அவிமிச்சத்தை மட்டுமே உண்ணும் இயல்புகொண்டவர். அக்குகைக்குள் எரிவதென மரமோ சருகோ ஏதுமில்லை. அங்கு முன்பு தங்கியிருந்த நரிகளின் மலம் புழுதியில் உலர்ந்து சிதறிக்கிடந்தது. முண்டகர் அவற்றை பொறுக்கிச் சேர்த்தார். இரு கற்களை உரசி அனலெழுப்பி அவற்றைப் பற்றவைத்து எரியெழுப்பி வேதம் ஓதி ஆகுதிசெய்தார். அந்த அனலில் சுட்ட கிழங்குகளை அவிமிச்சமென உண்டார். அந்த தூயவேள்விக்கு திசைகாக்கும் தேவர்கள் எண்மரும் வந்திருந்தனர். அவிமிச்சத்தை அவருடன் ஏழு வான்திகழ் முனிவரும் உண்டனர்.”
அவர் அச்சொற்களை செவிமடுக்காமல் வெண்கலத்தட்டுக்களை கழுவி வைத்துக்கொண்டிருந்தார். பதினெட்டுபேர் தட்டுகளை கழுவிக்கொண்டிருந்தமையால அந்த ஓசையே சூழ்ந்திருந்தது. சலபர் “அடிக்கடி ஆசிரியர் அந்தக் கதையை சொல்வதுண்டு. தூய மங்கலப்பொருட்களால் மட்டுமே வேள்விசெய்யப்படவேண்டும். ஆனால் நெருப்புக்கு இனிய அன்னமும் மலமும் ஒன்றே. இங்குள அனைத்தையும் ஒன்றெனவே தீ கருதுகிறது. ஆவலுடன் நா நீட்டி அணுகுகிறது. ஆறாப்பசியுடன் கவ்வி உண்கிறது. பிற பருப்பொருட்கள் நான்கும் அதன் ஆடல் தோழர்கள். அது மண்ணுள் இருந்து எழுகிறது. உயிர்கொண்ட மண்ணை அன்னமென உண்கிறது. நீரில் ஒளிந்துகொள்கிறது. ஐந்து காற்றுகளையும் தோழிகளாகக் கொள்கிறது. விண்ணில் கொடிவிட்டுப் படர்கிறது. அனைத்தையும் இணைப்பது அதுவே. எந்நிலையிலும் தூயது. ஒளியே உடலானது. ஒருகணமும் நில்லாதது. விண்நோக்கிச் செல்வது. அதுவே நம் தெய்வமென்றாகவேண்டும்” என்றார் சலபர்.
“அகல்சுடர் எரிகிறது. மண்ணால் ஆனது அகல். நெய் அதன் ரசம். எரியே அதன் ஆத்மா. ஒளி அதன் அறம்” என்றார் வணிகர்களுடன் வந்த முதியவர். சலபரின் சொற்களிலிருந்து அச்சொல்லுக்கு பலநாட்கள் கடந்து வந்து இணைந்துகொண்டிருந்தார் தருமன். சாங்கியரின் சொல்லில் சொல்லிச்சொல்லி தேர்ந்த கூர்மை இருந்தது. “நெய்தீர்கையில் எங்கு செல்கிறது சுடர்? சுடராகும் முன் எங்கிருந்தது ஒளி? நெய்யென்றான பசுவில் உறையும் அனல் எது?” அவரை நோக்காது அச்சொற்களை கேட்டுக்கொண்டு அவர் இருளுக்குள் படுத்திருந்தார். ஒலிபொருள் படலமென மானுடச்சொற்கள் அனைத்தும் ஆகுமொரு இருள்வெளி. “பொருளின் இருப்பு இருவகை. பருண்மை நுண்மை. அகலென்றும் நெய்யென்றும் அனலென்றுமான பருப்பொருட்களின் இணைவு உருவாக்கும் ஒன்றின் நுண்மையே ஒளி.”
“அனைத்தும் பருப்பொருளே என்றறிந்தவன் மருளிலிருந்து விடுபடுகிறான். ஐம்புலனால் அறிவதும் நாளை அவ்வறிதலாக மாறக்கூடுவதும் என இருபாற்பட்ட இருப்பு கொண்டது பருப்பொருள். ஆடல்மேடையில் கூத்தர் தோன்றி அமைக்கும் நாடகம். அணியறையில் அது அவர்களின் உள்ளத்தில் உறைகிறது. அவர்கள் அணியப்போகும் வண்ணங்கள் காத்திருக்கின்றன. சொற்கள் மூச்சுவடிவில் உருக்கொண்டவாறுள்ளன” என்று சாங்கியமுதியவர் சொன்னார். “இணைந்தும் பிரிந்தும் அவர்கள் ஆடும் அக்கற்பனையை வாழ்த்துக! அணிகளைந்து அவர்கள் மீள்கையில் எங்கு செல்கிறது அரங்கு எழுந்த கூத்து? அது அங்கு விழிகொண்டு செவிதிறந்து அமைந்த பிறரில் மீண்டுமெழும் நிகழ்வாய்ப்பென சென்றமைகிறது. கருப்பொருள் பருப்பொருளென்றும் பருப்பொருள் கருப்பொருளென்றும் மாறிமாறியாடும் இது முடிவிலாப்பெருஞ்சுழல்.”
சொல்லப்பட்ட மறுகணமே அவை முழுமையாக மறைந்துவிடுவதை காலைநீராட்டுக்குச் செல்லும்போது தருமன் உணர்ந்தார். நெஞ்சில் விழுந்த சொற்களை உருட்டு உருட்டி விளையாடும் அந்த இளமைந்தன் எங்கு மறைந்தான்? அவன் அடைந்த உவகைகளுக்கு என்னபொருள். இன்று பிறிதொரு சொல் செவிப்படுகையில் மட்டுமே முந்தைய சொல் நீர்பட்டு எழுப்பப்பட்டு முளைகொண்டு வந்தது. “பொருள் ஒரு நிகழ்வாய்ப்பென இருக்கும் பெருவெளி அறிதலுக்கு அப்பாற்பட்டது. ஆனால் இவை இங்கிருப்பதே அது அங்கிருக்கிறது என்பதற்கான சான்றாகும்.” எவர் சொன்னது? பழுத்த விழிகளும் மணியொலிக்கும் குரலும் கொண்ட சாங்கியரா? தொண்டைமுழை எழுந்த கழுத்தும் தொங்கும் குண்டலங்களின் நிழல்விழுந்த நீள்முகமும் கொண்ட வைசேடிகரா? முகங்களை உதறி குரல்கள் மட்டும் வாழும் காற்றுவெளி சூழ்ந்திருந்தது அவரை.
சாலையின் ஒருநுனியில் தோன்றுகிறார்கள் மனிதர்கள். பொருளோ சொல்லோ கொண்டு வந்தமர்கிறார்கள். பின்பு எழுந்து மறு எல்லையில் மரக்கிளைகளுக்கு அப்பால் சென்று மறைகிறார்கள். முகங்களை அன்னசாலை நினைவுகூர்வதே இல்லை. தொடக்கத்தில் நினைவில் நின்ற முகங்களும் காலப்போக்கில் உருகி பிற முகங்களுடன் கலந்தன. வருவதும் செல்வதுமென காட்டில் என்றுமிருப்பது ஒரு திரள். ஒரே பசி. ஒரே நிறைவு. “பொருட்களில் உறைகின்றன பொருளியல்புகள். அவை பொருளென ஆவதற்கு முன் இயல்புகள் மட்டுமே. பொருட்களில் அவை தங்களை வெளிப்படுத்துகின்றன. கூத்தனில் உறையும் தெய்வம் போல.” சொற்கள் எப்போதுமிருந்தன. அறைந்து மழையெனச் சொட்டி ஓய்ந்து துளித்துளியாக விடுபட்டபின் அவை தூய ஒளிப்பரப்பென சித்தத்தை ஆக்கிச்சென்றன.
“வடிவுகொண்டவை அனைத்தையும் தழுவி உண்டு எழும் நெருப்பு வடிவற்றது. நெருப்பு உண்ட அவ்வடிவங்கள் நெருப்புக்குள் எங்கு உறைகின்றன?” சாங்கியம் பருப்பொருளின் நுண்மையை தேடித்தவிக்கும் பெரும்பதற்றமன்றி வேறில்லை. “கசக்கும் காயை இனிய உணவாக ஆக்கும் நெருப்பில் எங்கு உறைந்திருந்தது அவ்வினிமை?” சொல் தேனீ போல ரீங்கரித்தபடி உள்ளத்தைச் சூழ்ந்து பறந்தது. அரைத்துயிலில் ஒரு சொல் எஞ்சியிருக்க சித்தம் மூழ்கிமறைந்தது. சித்தமழிந்தபின் அச்சொல் எங்கு காத்திருக்கிறது, விழித்தபின் வந்தமர்ந்துகொள்ள? சித்தமே மானுடன். அன்னம் சித்தத்தை சூடியிருக்கிறது, விறகு நெருப்பை என. எரிந்தாடும் சித்தம் உடலை சமைத்துக்கொள்கிறது.
“ஒன்றில் இல்லாதது அதில் வெளிப்படமுடியாது. அதில் வெளிப்படுவதனாலேயே அதனுள் அது உள்ளது என்று பொருள். பொருளில் வெளிப்படும் இயல்புகள் அனைத்தும் அதுவே. பொருள் என்பது அதன் இயல்புகளின் தொகையே.” வைசேடிகர் பொருளை அறியும் பெருந்திகைப்பை அளைபவர். ஒரு சொல் பிறிதொன்றில் இருக்கும் எந்த இடைவெளியை கண்டுகொண்டு தன்னை இணைத்துக் கொள்கிறது? ஒரு சொல் பிறிதொன்றுடன் தன்னை இழக்காது இணைந்துகொள்ள இயலுமா என்ன?
“சொல் உள்ளத்தில் ஒடுங்குக! உள்ளம் ஆத்மனில் ஒடுங்குக! ஆத்மன் பிரம்மனில் ஒடுங்குக! பிரம்மன் தன்னில் ஒடுங்குக!” என்றார் முதியமாணவரான தாலகர். “இங்கு எழும் இத்தனை சொற்களுக்கு நடுவே மூடிக்கொள்பவன் அறிவிலிகளுக்குரிய உவகையை அடைகிறான். திறந்தவன் நோய்கொண்டு பெருந்துன்பத்தை அடைகிறான். அரசே, இந்தக் கல்விநிலையிலிருந்து ஆறுமாதங்களுக்குள் சித்தம் குலைந்து தப்பி ஓடியவர்களே மிகுதி. அம்புகள் பறக்கும் போர்க்களத்து வானம் இது. ஊடே செல்லும் செம்பருந்துகள் சிறகற்று வீழ்கின்றன. கொசுக்களும் ஈக்களும் அம்புகளை அறிவதே இல்லை. ஒடுங்குக! ஒடுங்கலே இங்கு வென்று வாழும் வழி.”
கொதித்துக்குமிழியிட்டுக் கொண்டிருக்கும் கலத்தருகே நின்று அதை நோக்கிக்கொண்டிருக்கையில் உள்ளம் அமைதிகொள்வது ஏன்? எரிந்தாடும் தழலில் இருந்து விழிவிலக்கமுடியாது செய்யும் ஈர்ப்பு எது? கலைந்து பூசலிட்டு கூவி ஆர்த்து அமர்ந்து ஐயம்கொண்டு எழுந்து அமைந்து மெல்ல அனைத்துப்பறவைகளும் கூடணைந்தபின் கருக்கிருட்டினுள் இருந்து இறுதியாக குரலெழுப்பும் தனிப்பறவை எதை வேண்டுகிறது? இருத்தல் என்பது அங்குமட்டுமே வாய்த்தது என அவர் அறிந்தார். உழைத்து உடலோய்ந்தபின் குருதி மெல்ல அடங்கும்போது உள்ளமிருப்பது தெரியும், அது ஏற்கனவே அணைந்துகொண்டிருக்கும்.
சமையலுக்கு அவர் கையும் காலும் பழக பல மாதங்களாயின. முதல்நாள் செய்த அதே உடலுழைப்பில் ஐந்துமடங்கு வேலைசெய்பவராக ஆனார். “பரிமாறக் கற்றுக்கொள்வதற்கு முன் தட்டுகளை கழுவக் கற்றுக்கொள்க! சமைக்கக் கற்றுக்கொள்வதற்கு முன் பரிமாறக் கற்றுக்கொள்க” என்று தாலகர் அவரிடம் சொன்னார். தட்டுகளைக் கழுவி விளிம்பொருமையுடன் அமைக்கத் தொடங்கிய அன்று அடைந்த நிறைவை அவர் அடிக்கடி நினைவுகூர்வதுண்டு. சீராக அடுக்கப்பட்டவை அளிக்கும் உவகைக்கு பொருள் என்ன? அவற்றை அடுக்குவதனூடாக உள்ளம் தன்னை சீரமைக்கிறதுபோலும். அடுக்கப்பட்ட ஒன்றில் படிகையில் உள்ளம் தன் முழுமைநாட்டத்தை கண்டடைகிறதுபோலும்.
காய்கறிகள் நறுக்குவதை கற்றுக்கொள்ள நெடுநாளாயிற்று. ஒவ்வொரு காய்கறியும் ஒவ்வொரு வெளிவடிவில் இருந்தது. வெளிவடிவுக்குத் தொடர்பற்றதெனத் தெரிந்த உள்வடிவின் தொடர்பைத் தெரிந்துகொள்ள கண்கள் உதவாதென்று அறிந்தார். கைதொட்டு அறியமுடிந்தது காய் எனும் உயிர்க்குமிழியை. பின்னர் கைகளே அவற்றை அரிந்தன, பிளந்தன, நறுக்கின. ஒவ்வொரு காயும் மண்ணிலிருந்து உயிர்கொண்டு உப்புகொண்டு அன்னம் கொண்டு தன்னைக் கோத்து அமைத்த வடிவை மீண்டும் இழந்து சீரான துண்டுகளாகப்பிரிந்து அடுத்த இணைப்புக்கென காத்திருந்தன.
“குழம்புகள் கொதிக்கும் மணங்களை நினைவில் கொள்க! உணவின் நுண்வடிவம் மணமே” என்றார் மூத்தமாணவராகிய காலகர். காய்கறிகள் நீர்விட்டு நெகிழத்தொடங்குகையில் கறைமணம். வெந்து குழைகையில் பச்சை மணம். உப்பும்புளியும்காரமும் ஏற்று கறியென்றாகுகையில் அவை முற்றிலும் பிறிதொன்று. சற்று பிந்தினாலும் அவற்றிலிருந்து கரிமணம் எழத்தொடங்கிவிடும். உலை குமிழியிடுகையில் அரிசிமணம். ஏதோ ஒருபுள்ளியில் அன்னத்தின் மணம். அப்பங்களின் நீராவி மணத்தில் எப்போது மாவு அன்னமாகும் மணம் எழுகிறதென்று அறியமுடிந்த நாள் அன்று பிறந்தவரென உணர்ந்தார். “மணம் அறிவிக்கிறது, பிறிதொரு பருப்பொருள் பிறந்திருக்கிறது என்று” என்றார் காலகர்.
“சமையல் என்பது கலவை” என்றார் காலகர். உப்பு, புளி, காரம் என்னும் மூன்று. மாவு, ஊன், நெய் எனும் மூன்று. மூன்றும் நிகரமைகையில் உருவாகின்றது சுவை. ஒவ்வொன்றிலும் அந்த நிகர்ப்புள்ளி ஒவ்வொன்று. அப்புள்ளியில் மிகச்சரியாக அடுசெயல் நின்றால் சுவை.” பீமன் உரக்க நகைத்து கருணைக்கிழங்கு கூட்டை மரப்பிடியிட்ட சட்டுவத்தால் கிண்டியபடி “ஒருகணம் முன்னால் நின்றுவிட்டால் எழாச்சுவை. ஒருகணம் கடந்துசென்றால் மறைந்த சுவை. சுவையற்ற உணவென ஏதுமில்லை” என்றான். காலகர் வெண்டைக்காய் பொரியலை இளக்கியபடி “ஆம், சமையலறிந்தவருக்கு சுவை ஒரு பொருட்டல்ல” என்றார். “சுவை என்பது நாவறிவது. உணவிலிருப்பது சுவைக்கான ஒரு வாய்ப்புமட்டுமே” என்றான் பீமன்.
“ஆம் அரசே. உணவென்றாவது மீண்டும் ஒரு இணைவு வழியாகவே சுவையென்றாகிறது. நாவும் பசியும் உள்ளமும் என மீண்டுமொரு மும்மை. அவைகொள்ளும் ஒருமை” என்றார் காலகர். “இணைவின் கலையை அறிந்தவர்களுக்குரியது அடுமனைத் தொழில்.” முதல்நாள் உப்பும்புளியும் கலந்து கொதிக்கவைத்து காந்தாரத்துப் பசுமிளகாய் உடைத்துச்சேர்த்து அமைத்த எளிய புளிக்காய்ச்சல் மெல்லக்கொதித்து மணமெழுந்தபோது அதை முதலில் நாக்கு அறிந்தது. கிளர்ச்சியுடன் அதில் ஒரு சொட்டை அள்ளி நாவில் விட்டார். அச்சுவையை உள்ளம் அறிந்தபோது உடலெங்கும் அந்த உவகை பரவியது. திரும்பி அருகே நின்றிருந்த மாணவனிடம் “எப்படி இருக்கிறது?” என ஒரு துளியை அளித்தார். “அவ்வளவுதான், இனி சமையலில் அறிவதற்கு ஒன்றும் இல்லை. அடைவன முடிவதே இல்லை” என்று அவன் சொன்னான்.
அதன்பின் சமையல் ஒரு பித்தென்றாகி சூழ்ந்துகொண்டது. ஒவ்வொருநாளும் அன்று சமைக்கவிருப்பதை எண்ணி விழித்துக்கொண்டார். அன்று சமைத்ததை எண்ணியபடி துயின்றார். வெந்து எழுந்த உணவு இறக்கிவைக்கப்பட்டு காத்திருக்கையில் அதனருகே நின்று நோக்கிக்கொண்டிருந்தார். முன்பிலாத ஒன்று. பருப்பொருளில் எங்கெங்கோ எவ்வடிவிலோ இருந்தது. அவர் சித்தத்தில் உறைந்தது. பிறத்தலென்பது ஒன்றிணைதல். ஆதலென்பது மாறுதல். பரிமாறப்படும் போது அவரே பந்திகள் தோறும் சென்று அவை உண்ணப்படுவதை நோக்கினார். கைகளால் கலந்து அள்ளி வாயிலிடப்பட்டு உமிழ்நீருடன் மெல்லப்பட்டு உடல்நுழைந்து உடலென்றே ஆனது அவ்வுணவு. அவரிடமிருந்து எழுந்து அவர்களாக மாறியது. இதோ உண்பவர் அனைவருக்குள்ளும் இருந்துகொண்டிருக்கிறேன். அந்த முகத்தின் நிறைவு நான். இந்த உடலின் இனிய களைப்பு நான்.
சமையல் எங்கோ ஒருபொழுதில் சலிக்கும் என எண்ணியிருந்தார். ஆனால் சலிப்பு எழாது ஆர்வமே மேலும்மேலுமென வளர்ந்துகொண்டிருந்தது. ஒவ்வொரு புதுச்சுவையும் நூறு சுவைகளுக்கான வாய்ப்புகளாகத் தெரிந்தது. ஆக்கி ஆக்கி கைதேரும்போது ஆக்குதல் மேலும் நுண்மைகொண்டது. ஆனால் அவருடைய நாக்கின் சுவை மட்டும் மட்டுப்பட்டது. அவர் சமைத்த எவ்வுணவையும் உண்ண அவருக்குத் தோன்றவில்லை. அவற்றின் மணமே போதுமென்றாயிற்று.
அன்னத்தின் நுண்மை உடலின் நுண்மையால் அறியப்பட்டது. கொதிப்பதும் பொரிவதும் வறுபடுவதும் நொதிப்பதும் உருகுவதும் அவிவதுமான அனைத்தினூடாகவும் மெல்ல நடந்து மீள்கையில் அவர் உண்டு முடித்திருப்பார். நாவுக்கோ வயிற்றுக்கோ சுவை தேவைப்படவில்லை. பசிதீர்க்க மோர்விட்டு நீர்க்கக் கரைத்த அன்னம் மட்டுமே போதுமானதாக இருந்தது. அதை உண்டு எழுந்து ஏப்பத்துடன் கைகழுவச்செல்லும்போது ஒருமுறை இளைய யாதவர் “முனிவரில் நான் கபிலன்” என்று சொன்னதை நினைவுகூர்ந்தார்.
[ 7 ]
சுயம்புவமனு புடவி சமைத்த மன்வந்தரத்தில் பிரம்மன் மண்ணுக்கு வந்து தன் நிழலை சரஸ்வதி நீர்ப்பெருக்கில் நோக்கினார். அந்நிழல் அலைகளில் நெளிந்தமையால் வளைவுகள்கொண்டு பெண்ணென ஆயிற்று. தன்நிழலை பிரம்மன் புணர்ந்தபோது ஒரு மைந்தன் பிறந்தான். அவனை தந்தை கர்தமர் என்றழைத்தார். தந்தையிடம் வேதச்சொல் பெற்ற கர்தமர் சரஸ்வதியின் கரையில் பிந்துசரஸ் என்னும் குளக்கரையில் அவ்வேதச்சொல் ஒவ்வொன்றையும் தன்னுள் முளைக்கவைக்கும்பொருட்டு தவம்செய்தார். தன்னை அறிந்து எழுந்த அவரை “நீ அறிந்தவை இப்புவி திகழ்க!” என்று பிரம்மன் வாழ்த்தினார்.
சுயம்புவமனு ஒரு சொல் நூறெனப்பெருகும் விழைவின் தெய்வம். அவர் துணைவி நூறுமுகம் கொண்ட சதரூபை. அவர்கள் தங்கள் காமத்தை அனலாக்கி பெருவேள்வி ஒன்றை நிகழ்த்தினர். சுயம்புவமனுவின் ஒருநெருப்பைச் சூழ்ந்தெரிந்தது சதரூபையின் நூறு இதழ்கொண்ட நெருப்பு. அவ்வேள்வியில் பிறந்த மகள் தேவாகுதி. பொன்றாப் பெருங்காமமே பெண்வடிவுகொண்டவளாக இருந்தாள் தேவாகுதி. காதல்கொண்டு “நீ விழைவதை கேள்” என்று கூறிய கர்தமரிடம் “காலம் நுழையாத ஓர் இல்லம். கண்கள் இல்லாத ஒளிகொண்ட அறைகள். அங்கே காமம் ஓயாத ஒரு மஞ்சம்” என்று அவள் கேட்டாள். காமரூபம் என்னும் அந்த இல்லம் காலம்திகழ்ந்த மண்ணில் எங்கும் தொடாது விண்ணிலேயே விளங்கியது. அங்கே தவவல்லமையால் காமப்பேருரு கொண்டிருந்த கணவனுடன் அவள் உவந்திருந்தாள்.
உள்ளம் காலமற்றிருந்தது என்றாலும் அவள் உடலில் முதுமை படர்ந்தது. “நிறைவுகொண்டாயா?” என்று கோரிய கணவனிடம் “இல்லை, இன்னும் எனக்கு இளமை வேண்டும்” என்றாள். “சரஸ்வதியில் ஆடுக! இளமை மீளும்” என்றார் கர்தமர். தேவாகுதியின் கைபற்றி நீராடி தானும் இளமைகொண்டார். அவ்வாறு ஏழுமுறை இளமை மீண்டனர். ஏழாவது முறை இளமை மீண்டு காமம் நுகர்ந்து முதுமைகொண்டதும் “நிறைந்தாயா?” என்றார் கர்தமர். “இன்னும் இன்னும் என்றே என் உள்ளம் விழைகிறது” என்றாள் தேவாகுதி. “இக்காமப்பெருவிழைவை வென்று கடக்கவிழைகிறேன்.”
“காமத்தை காமத்தால் வெல்ல இயலாது” என்றார் கர்தமர். “நான் இதை கடப்பதெப்படி?” என்று அவள் கேட்டாள். “பெண்கள் அன்னையராகி காமத்தை கடக்கிறார்கள்” என்று கர்தமர் சொன்னார். “எனக்கு ஒரு மகவு பிறக்கட்டும்” என்று அவள் கேட்டாள். அவள் வயிறு கனிந்து ஒரு பெண்மகவு பிறந்தது. அவள் மதநீர் முலைப்பாலென ஊறி மகவுக்குச் சென்றது. “இன்னும் எஞ்சுகிறது என்னில் மதம்” என்றாள் தேவாகுதி. “பிறிதொரு மகவு எழுக!” என்றார் கர்தமர். அவள் கலை, அனசூயை, சிரத்தை, ஹவிர்ஃபு, கீதை, கிரியை, கியாதி, அருந்ததி, சாந்தி என்னும் ஒன்பது மகள்களை ஈன்றாள்.
“ஒன்பது மகவுக்கும்பின்னர் என்னிடம் எஞ்சும் துடிப்பு என்ன?” என்று அவள் கணவனிடம் கேட்டாள். “உன்னுள் இருப்பது என்னை வெல்லும் விழைவு. என்னை விஞ்சும் ஒரு மைந்தனுக்கு அன்னையாகுக! நீ நிறைவடைவாய்” என்றார் கர்தமர். தேவாகுதி கருக்கொண்டு ஒரு மைந்தனை பெற்றாள். எளிய உருவிருந்தாலும் ஐந்துமடங்கு எடைகொண்டிருந்த அம்மைந்தன் வெளிவந்ததுமே அவள் படுத்திருந்த மஞ்சம் வளைந்தது. அவனை கையிலெடுக்க அவளால் முடியவில்லை. அவன் உதடுகளில் முலைக்காம்பை வைத்த மறுகணமே அவள் உடலெங்கும் குருதி இழுபட்டு தசைகள் இழுபட்டு துடிக்கத் தொடங்கின. மாந்தளிர் நிறம் கொண்டிருந்த அவனை தந்தை கபிலன் என்றழைத்தார்.
மைந்தன் மூன்றுமாதத்தில் முதற்சொல்லை உரைத்தான். ஏழுவயதில் வேதங்களை முற்றோதி முடித்தான். பன்னிருவயதில் வேதமுதன்மையாகிய பெரும்பருக் கொள்கையை பிரம்மனிடமிருந்து தானே அறிந்தான். கற்றவற்றில் ஏறி மெய்மையை தொட்டறிந்து அவர் மீண்டுவந்தபோது அன்னை தேவாகுதி இறப்புக்கிடக்கையில் இருந்தாள். அருகணைந்து அவள் கைகளை பற்றிக்கொண்டார் மைந்தர். “மைந்தா, எனக்கு இனி காலமில்லை. இப்போதும் என்னுள் நிறைவுறாதிருக்கும் விழைவு என்ன?” என்றாள் தேவாகுதி.
“பெண்ணென்றும் அன்னை என்றும் ஆன நீ இப்புவியே. புவியென்றான முதற்பேரியற்கையே. அதிலுறையும் நிறைவின்மையே இவையனைத்தும்” என்றார் கபிலர். “இணைந்து உடலாகிவந்த பருப்பொருட்கள் மீளும். அந்த முதற்பெரும் நிறைவின்மை எப்போதும் வாழும்.” அன்னை விழிநீர் பெருக்கி மைந்தனை நோக்கி கிடந்தாள். பசியென, காமமென, வெற்றியென, புகழென, எஞ்சிநிற்றல் என உருக்கொண்டாடும் அப்பெரும் நிறைவின்மையால் ஆட்டிவைக்கப்படும் பொருண்மையின் அலைக்கழிவையே வெளியே புடவியெனக் காண்கிறோம். உள்ளே சித்தமென அறிகிறோம்.”
“சாங்கியமெய்ப்பொருளை அன்னைக்குரைத்து அவள் துயரழித்து நிறைவுகொள்ளச்செய்தார் கபிலர். அரசே அறிக, இப்புவியில் அன்னமென ஆயிரம் பொருட்கள் உயிர்கொண்டெழுந்தபடியே உள்ளன. அத்தனை அன்னங்களையும் சமைப்பது ஒரே அனல். மெய்ப்பொருட்கள் எதுவும் ஆகலாம், கபிலமெய்மை இணையாமல் அவை பயன்படுவதில்லை” என்றார் குறுகிய உடலும் கூர்ந்த முகமும் சிறிய மணிக்கண்களும் கொண்டிருந்த திரிவக்ரர். கொட்டகையில் அனைத்துக் கட்டில்களும் ஒழிந்துகிடந்தன. சிறிய கட்டில் ஒன்றில் மரவுரி போர்த்தி அவர் படுத்திருந்தார். அருகே தருமன் அமர்ந்திருந்தார்.
“சாங்கியம் தொட்டு தொடங்குக! ஏனென்றால் இதுவே மண். மண்ணை உதறி எழுபவை ஒவ்வொன்றும் மண்ணில்வந்து விழுந்தாகவேண்டும். மண்ணில் வேர்கொள்பவை மட்டுமே விண்ணைச்சூடி நிற்கமுடியும்” என்றார் திரிவக்ரர். “ஒவ்வொரு கொள்கையிடமும் அறிவன் கேட்கவேண்டிய வினா ஒன்றே. இது எவருக்கு அன்னம்? இப்புவியில் உயிருள்ள அனைத்தும் அன்னமே.” தருமன் “ஆம்” என்று தலையசைத்தார். “சாங்கியத்தை அறிய மிகச்சிறந்த வழி அன்னத்தை தொடர்வதே. குருநிலைமாணவனைவிட அடுமனைப் பணியாளன் அதை அணுகமுடியும்” என்று திரிவக்ரர் சொன்னார்.
பயணிகள் மிகவும் குறைந்திருந்த கார்காலம். மலைப்பாதைகள் முழுக்க வழுக்கும் சேறால் ஆனவையாக மாறிவிட்டிருந்தன. மலைக்கு வருவதில் முதன்மையானதாகிய உப்பும் செல்வதில் முதன்மையானதாகிய மரவுரியும் மழைக்கு வீணாகிப்போகின்றவை. அவ்வப்போது அவ்வழி செல்லும் துறவிகளும் இரவலரும் வேதமாணவர்களுமன்றி வணிகர்கள் அரிதாகிவிட்டிருந்தனர். வணிகரில்லாமையால் சூதரும் பாணரும் இல்லாமலாயினர். அடுமனைப்பணிகள் பெரிதும் குறைந்து அனைவரும் கொட்டகைகளில் நாளெல்லாம் ஓய்வுகொள்ளலாயினர்.
ஆனால் அடுமனையாளர்களின் உள்ளத்தில் சொல்லவிந்துவிட்டிருந்தது. ஓய்ந்து சேர்ந்தமர்ந்திருக்கையிலும் அவர்கள் ஏதும் பேசிக்கொள்வதில்லை. ஏதேனும் கைப்பணிகளை அவர்கள் கண்டடைந்திருந்தனர். சலபர் செம்புநிலைவாய்களை உருட்டி ஓடைக்குச் சென்று மணலிட்டு நார்கொண்டு தேய்த்து மின்னும் அனல் என ஆக்கி கொண்டுவந்து வைத்தார். பித்தளை உருளிகள் பொன்னாயின. சட்டுவங்கள் வாளொளி கொண்டன. காலகர் மழைக்குள் சென்று விறகுகொண்டு வந்து கீற்றுகளென்றாக்கி அடுமனையில் அடுப்புகளுக்கு மேல் தொங்கவிட்டார். தருமன் கொடிகளால் கூடைகளும் உறிகளும் பின்னினார். சிலர் மரத்தாலான அகப்பைகளையும் கரண்டிகளையும் செதுக்கினர்.
தொலைவிலிருந்து நோக்குபவர்களுக்கு அன்னசாலை முழுமையாக கைவிடப்பட்டு கிடப்பதாகவே தோன்றியது. களைத்த காலடிகளுடன் அணுகி வருபவர்கள் அங்கே வெவ்வேறு ஒலிகள் கேட்பதைக் கண்டு திகைத்தனர். அருகணைந்து அங்கு வேலைசெய்துகொண்டிருப்பவர்களை நோக்கி அவர்கள் இறந்தவர்களோ என ஐயுற்றனர். அவர்களுக்காக எப்போதும் அடுப்பில் கனலிடப்பட்டு புகையெழும்படி செய்யப்பட்டது. பெருமழைக்குள்ளும் அனல்மணம் எழுந்து அங்கு அன்னமிருப்பதை தொலைவிலேயே பயணிகளுக்கு உணர்த்தியது.
திரிவக்ரர் “பருப்பொருட்களில் வாழ்வது பொருண்மையில் குடிகொள்ளும் முதல்நிறைவின்மை. மூன்றுகுணங்களின் நிகர்நிலை நாடல். ஒவ்வொருவருக்குள்ளும் நின்றிருக்கும் தேடல் அதுவே. இது தன்னை தானென உணர்வது அந்த நிறைவின்மையினால்தான். இவை ஒவ்வொன்றும் ஒவ்வொருவகையில் தனித்தன்மைகொண்டிருப்பது அந்நிறைவின்மையை மையமென சூடியிருப்பதன் வழியாகவே. பொருளின் சாரமென்பது அந்நிறைவின்மை மட்டுமே. எனவேதான் ஒவ்வொரு பொருளும் பிறிதொருபொருளில் இணையத் துடிக்கிறது. பிறிதொன்றாக விழைகிறது. பிறிதொன்றை நிரப்பி பிறிதொன்றில் நிறைந்து நிறைவுகொள்ள வெம்புகிறது. அதுவே புடவிச் செயல்பெருக்கென்றாகி நம்மைச்சூழ்ந்துள்ளது. நாமென்றும் ஆகியுள்ளது.”
“அதற்கப்பால் பொருளுக்கென சாரம் ஏதுமில்லை. பொருளென்றுணரும் பொருளான மானுடனுக்கும் ஆத்மா ஏதுமில்லை” என்றார் திரிவக்ரர். தருமன் தலையசைத்தார். மரவுரியை இழுத்துப் போர்த்திக்கொண்டு “ஆம், ஆத்மா இல்லை. பருப்பொருளின் நிறைவின்மையை பரம்பொருளுக்கான தவிப்பென எண்ணிமயங்கியவர்களால் உருவாக்கப்பட்டது ஆத்மா என்னும் எண்ணம். ஆத்மாவின் தவிப்பைக் கொண்டே உருவகிக்கப்பட்டது பரம்பொருள் என்னும் மையம். ஆத்மா இல்லை என்பதனால் அதுவும் இல்லை என்றாகிறது.” விழிகளை மூடிக்கொண்டு “ஆம், இல்லை” என்றார்.
மழையின் ஓசை அணுகிவந்தது. கூரையை பேரோசையுடன் அறைந்து பெய்யத்தொடங்கியது. பின்னிக்கொண்டிருந்த நாராலான உறிகளை எடுத்துக்கொண்டு தருமன் வெளியே சென்றார். மழைக்காமணத்தை எடுத்து தலையில் அணிந்தபடி அடுமனைக்குச் சென்று அதை அங்கே அடுக்கிவைத்தார். அங்கே அர்ஜுனன் மரம்குடைந்து கலம்செய்துகொண்டிருந்தான். அப்பால் நகுலன் ஈச்சைநாரால் சிறியபெட்டிகளை பின்னிக்கொண்டிருந்தான். அவர்கள் அவரை அறியவில்லை. அவர் மீண்டும் வெளிவந்தபோது மழைக்கு அப்பால் ஒருவர் நனைந்தபடி சீராக நடையிட்டு வருவதைக் கண்டார். ஆடையற்ற உடல்கொண்ட திசையுடலர். மயிர்பிடுங்கப்பட்ட உடலில் மழை வழிந்தது. தருமன் கூப்பிய கைகளுடன் அருகே சென்று “அருகரே, கொட்டகைக்குள் வந்தமரவேண்டும். தங்களுக்கு உணவளிக்கும் பேறுபெற அருளவேண்டும்” என்றார்.
மழைக்குள் மின்னிய அழகிய சீர்பல்நிரையுடன் புன்னகைத்து “நலம்சூழ்க! நீர் அரசரென எண்ணுகிறேன். அருள்நிறைந்த கோல்சூடுக! கோல்துறந்து நிறைவடையும் பேறுசூழ்க!” என அவர் வாழ்த்தினார் “இந்தக் கூரைநீழலில் நான் தங்கிக்கொள்கிறேன். என் வெறும்கையில் ஒருமுறை உண்ணுமளவு அன்னம் எனக்குப்போதும். என் தவநெறி அது.” தருமன் “மரவுரி கொண்டுவருகிறேன். ஈரத்தை துடைத்துக்கொள்ளுங்கள்” என்றார். அவர் மீண்டும் புன்னகைத்து “அந்த ஆலமரத்தை அதில் வாழும் பறவைகளை விரட்டிவிட்டு ஈரம்போக துடைப்பீரா?” என்றார்.
தருமன் வெறுமனே கைகூப்பினார். “இவ்வுடலில் அதைவிட கூடுதலாக உயிர்கள் வாழ்கின்றன. விழிக்குத்தெரியாத சிற்றுயிர்கள். ஒவ்வொன்றும் ஓர் ஆத்மா. இன்பதுன்பங்களும் பிறவிப்பெருஞ்சுழலும் மீட்பும் கொண்டவை.” தருமன் மெல்லிய திகைப்பை அடைந்து “சிற்றுயிர்களுக்கு ஐம்புலன்கள்கூட இல்லை என்பார்களே, உத்தமரே” என்றார். “இக்கல் புலன்களே அற்றது. அந்தமரம் ஒற்றைப்புலன்கொண்டது. அவற்றிலும் ஆத்மா உறைகிறது. ஆத்மா இல்லாத எதுவும் இங்கில்லை” என்றார் அருகப்படிவர். “வட்டமொன்று சுழலுமென்றால் மையமொன்று அமைந்தே தீரும், அரசே.” என்று உரைத்து முடித்தார். தருமன் மீண்டும் தலைவணங்கினார்.
தொடர்புடைய பதிவுகள்
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 51
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 49
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 42
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 28
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 23
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 17
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 16
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 14
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 12
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று – ‘சொல்வளர்காடு’ – 10
வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 5
‘வெண்முரசு’ – நூல் பதினொன்று– ‘சொல்வளர்காடு’ – 3
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 88
‘வெண்முரசு’ – நூல் பத்து – ‘பன்னிரு படைக்களம்’ – 83
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers

