Jeyamohan's Blog, page 1728

September 22, 2016

வம்புகளின் சிற்றுலகம்

 


index


கமலாதேவி அரவிந்தன் திண்ணை இணையதளம் வழியாக எனக்கு முன்னரே அறிமுகமானவர். திண்ணையின் எழுத்துக்குப்பைகளில் ஓரிரு வரிகள் வாசித்து கவனத்தைக் கவரும் சிலவற்றை மட்டுமே மேற்கொண்டு வாசிப்பது என் வழக்கமாக இருந்தது. ஆகவே அவரது எழுத்தைக் கவனித்ததில்லை. இப்போது சிங்கப்பூர் வந்தபின்னர்தான் சிங்கப்பூரின் மூத்த எழுத்தாளர்களில் ஒருவராக அவர் கருதப்படுகிறார் என்பதை அறிந்துகொண்டேன். அவரது கதைகளை தொகுதிகளாக வாசித்தேன்.


கமலாதேவி அரவிந்தன் இருமொழிகளில் எழுதுபவர். மலையாளம் அவரது தாய்மொழி. இருமொழி இலக்கியமரபிலிருந்தும் அவர் ஒரு துளியையேனும் கற்றுக்கொள்ளக்கூடாது எனமிகப்பிடிவாதமாக இதுநாள் வரை இருந்திருக்கிறார் என்னும் எண்ணமே எழுகிறது. முதிரா எழுத்து என நெடுங்காலமாக எழுதிவரும் இவ்வெழுத்தாளரின் படைப்புலகைச் சொல்வது சங்கடமளிப்பது, ஆனால் அதுவே உண்மை.


மலேய, சிங்கப்பூர் முன்னோடி எழுத்தாளர்களான இளங்கண்ணன், கண்ணபிரான் முதலியவர்களின் கதைகள் பலவகையான கலைக்குறைபாடுகள் கொண்டவை. ஆனாலும் அவை நேர்மையான நோக்கம் கொண்டவை. இங்கு ஒரு பண்பாட்டு அடையாளத்தை உருவாக்கவும் நிலைநிறுத்தவும் முயல்பவை. கமலாதேவி அரவிந்தனின் உள்ளம் வம்புகளில் மட்டுமே ஆழ்வது. அது ஒருபக்கம் இலக்கிய வம்புகளை தன் கோணத்தில் நோக்குகிறது. இன்னொருபக்கம் பாலியல் சார்ந்த குடும்ப வம்புகளை நோக்குகிறது


வம்புகள் இலக்கியத்தின் மூலப்பொருட்கள் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் வம்புகளை அணுகும் இலக்கியவாதி அதற்குள் புழங்குபவன் அல்ல. மானுடரை அறிவதற்கான ரத்தமாதிரிகளாகவே அவன் அவற்றை அணுகுவான். விருப்புவெறுப்புகளால் அல்ல, நுணுக்கமான உளவியல்பார்வையுடனும், விலகல்நோக்குடனுமே ஆய்வுசெய்வான். கமலாதேவி அரவிந்தன் அக்கப்போரையே மீண்டும் மீண்டும் திறனற்ற உரைநடையுடன் எழுதிவைத்திருக்கிறார்.


தலைப்பே சொல்வதுபோல ‘கரவு’ தான் கமலாதேவியின் இக்கதைகளின் பொதுப்பொருள். முதற்கதையான ‘அடோஜோபில’ மனைவியுடன் பூசலிட்டு தற்கொலை செய்துகொள்ள கேரளத்தின் கடற்கரை ஊருக்கு வருபவனைப்பற்றிச் சொல்கிறது. அங்கு ஓர் இளம்பெண்ணைப்பார்க்கிறான். உடனே ஒரு மாதிரியான காதல், உடலுறவு. அவனிடமிருந்து பணம் பறித்தபின் அவள் அவனை விட்டுவிடுகிறாள். அவன் மனம்திரும்பி மனைவியிடமே வருகிறான். உண்மையில் அவனுக்கு என்னவேண்டுமென்று கிளம்பிச்சென்றான் என்று எண்ணத்தோன்றுகிறது


சிங்கப்பூர் விமானநிலையத்தில் இறங்கி சொந்த வீட்டுக்குச் செல்கிறான் கதாநாயகன். மனைவி தூங்கிக்கொண்டிருக்கிறாள். அடுக்களைக்குச் சென்று அவளுக்கும் சேர்த்து காபி போடுகிறான். மனம்திருந்திவிட்டான் அல்லவா? ‘ஏன் கோபமே வரவில்லை என்று புரியவில்லை. அலுங்காமல் குலுங்காமல் வேணி இன்னமும் தூங்கிக்கொண்டிருந்தாள். பொழுதுதான் விடியட்டுமே, அப்படி என்ன அவசரம்? ரங்கராஜன் காத்திருந்தான்’ என முடிகிறது கதை. இந்தக் கருவுக்கு கோவளம் வர்ணனை, மீன்குழம்பு வர்ணனை, மீனவர்களின் கூப்பாடு என என்னென்னவோ சேர்க்கப்பட்டு குத்துமதிப்பாக கதை சமைக்கப்பட்டுள்ளது.


அதோடு மொழி. ‘கிடைப்பேனா என்று ஆலவட்டம் போட்டது அந்தப்புத்தகம்’ என்ற வரியை வாசித்து திகிலாகிவிட்டேன். ஆலவட்டம் என்பது துணியால் செய்யப்பட்டு சாமி ஊர்வலங்களில் இருபக்கமும் பிடித்துக்கொண்டு போகப்படும் வட்டவடிவமான அலங்காரம். காற்றில் சிலுசிலுக்கும். தமிழிலும் மலையாளத்திலும் ஆலவட்டம்தான். பாவாடை ஆலவட்டம் போடுவதை சினிமாவில் எழுதிவிட்டார்கள். புத்தகம் ஆலவட்டம் போடுவது எப்படி என எண்ண எண்ண மண்டை குழம்புகிறது


அந்தக்கதை ‘எங்கேயும் மனிதர்கள்’ ஓர் இலக்கிய வம்பு. எவரெனத் தெரியவில்லை, அனேகமாக அது ஆசிரியையின் உள்ளம் உருவாக்கிக்கொண்ட சூழலாக இருக்கவேண்டும். நம்பீசன் என்னும் பெரும் படைப்பாளி சாதிபார்ப்பவராக இருக்கிறார். தூய உள்ளமும், சமரச நோக்கமும், படைப்பு வீரியமும், நேர்மையும் கொண்ட சுமி என்னும் சிங்கப்பூர்க் கதாசிரியை [இருக்காதா பின்னே?] அந்த தாழ்ந்த சாதி இலக்கியவாதியை இரக்கம்கொண்டு பாராட்டுகிறார். சுமி கதை எழுதவும் கொஞ்சம் கற்றுக்கொண்டிருக்கலாம்.


தலைப்புக்கதையான கரவு மணஒப்பந்தம் மீறிய ரகசிய உறவின் கதை. ராமலிங்கத்தின் மனைவி புவனியை தாமஸ் காதலிக்கிறான். அவர்களுக்குள் ஒரு மெல்லிய காமப்பரிமாற்றம். ஆனால் உடலுறவு இல்லை. புவனியின் மகன் வளர்கிறான். தாமஸ் செத்துப்போகிறான். புவனி தன் மகன் ராஜாவை காதலன் பொருட்டு குளிக்கச் சொல்கிறாள். ‘தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட சாம்பலாகிப்போன தாமஸின் ஜீஸஸ் லாக்கெட்டை என்ன செய்வதென்று அவனுக்குப்புரியவில்லை’ என கதை முடிகிறது


கு.ப. ராஜகோபாலன் தமிழிலும் காரூர் நீலகண்டபிள்ளை மலையாளத்திலும் பாலியல்மீறல்களின் நுண்ணிய தளங்களை எழுதி முக்கால்நூற்றாண்டு கடந்தபின் வரும் கதை இது என எண்ணிப்பார்க்கவே ஆச்சரியமாக இருக்கிறது. வேறு எந்தத் தொழிலிலாவது அந்தத்தொழிலின் அடிப்படைகள் தெரியாமல் அதில் இறங்கமுடியுமா என வியக்கிறேன்


இத்தொகுதியின் அனைத்துக்கதைகளுமே இப்படி எளிய வம்புகள் மட்டுமே. ஒரு சிறிய வேறுபாடு என்றால் கண்ணிநுண்சிறுதாம்பு என்னும் கதையைச் சொல்லலாம். மனநலவிடுதியின் பெண்களைபற்றிய அச்சித்திரமே சினிமாவில் வரும் ‘பைத்தியங்களின்’ சேஷ்டைகளைப்பார்த்து எழுதப்பட்டது. ஆனாலும் மிக எளிதாக முறிந்துவிடும் பெண்களைப்பற்றிய எளிய குறிப்புகள் ஒருவகையில் உள்ளத்தை தாக்குகின்றன. கண்ணிநுண்சிறுதாம்பு என்னும் தலைப்பும் நன்று


கமலாதேவி அரவிந்தனின் இத்தொகுதியின் கதைகளில் அவர் தன்னை ஒரு பெரிய இலக்கியச்சாதனையாளராக எண்ணி கதைக்குள் வாதிடுவதை உணரமுடிகிறது. அவர் தன்னைப்பற்றிய விமர்சனத்தை தானே கடுமையாக உருவாக்கிக்கொள்ளலாம். அது அவரை நல்ல கதைகள் சிலவற்றை எழுதச்செய்யக்கூடும். கதை என்னும் வடிவை இன்னமும்கூட அவர் கற்றுக்கொள்ளலாம். ஏனென்றால் பெரும் படைப்பாளிகள் எழுதிச்சென்ற மொழி இது.


*


பின்னட்டையே இந்நூலை ஒரு சிறந்த நகைச்சுவை நூலாக ஆக்குகிறது. அந்தக்கோணத்தில் வாசிப்பவர்களுக்கு மிகுந்த கொண்டாட்டத்திற்குரியது இது. ‘வை.மு.கோதைநாயகி அம்மாள் காலந்தொட்டு இன்றைய உமா மகேஸ்வரி வரை பெண்ணெழுத்து என்பது வாழ்வியல் பிரச்சினைகளை, அறச்சீற்றங்களைக்கூட, இணைமுரணில், பாதரசக்குண்டுகளாய், பெண்மொழியில் சொல்லத்தெரிந்தவர்களாகவே வாசகனைக் கவர்கிறார்கள். கணநேர அதிசயங்களைக்கூட சுவையான சிந்தனையில் ஊடுபாவி கட்டமைக்கப்பட்டக் கதைகளின் மூலம் இயங்காற்றலால் எழுதி வென்ற கதைகள் நிதர்சனச் சான்றாக இங்குண்டு. பரிசுபெற்ற கதைகள் என்பதனால் சொகுசாய் சொல்லவரவில்லை. உச்சபட்ச சிந்தனையைக்கூட மொழிநடைக்கும் அப்பாற்பட்ட செவ்வியல் பாணியில் எழுதும்போது கருத்தியல்தளம் அசாத்திய கேள்விக்குறியோடு எம்மைத் திகைக்க வைத்துள்ளது’ என தன் கதைகளைப்பற்றி மிகுந்த அவையடக்கத்துடன் சொல்லும் கமலாதேவி நம்மை இறும்பூது களியுவகை போன்றவற்றை எய்தவைக்கிறார்.


அவர் மேலும் மனம் கனிந்து ‘தமிழ் மலையாளம் என இரண்டு மொழிகளிலும் எழுதும்போது நான் கற்றவை ஏராளம். அமைப்பியல் வாதக்கோட்பாடுகள் உளப்பகுப்பாய்வுக் கோட்பாடு லக்கானின் உளவியல் கோட்பாடு என நுட்பமாக மலையாள வகுப்பில் கற்றுக்கொண்டதை எல்லாம் எனது பல மலையாளக்கதைகளின் வழியாக நான் பரிசோதித்ததுண்டு. கருத்துக்களால் ஆன கதைகளை stories of ideas என்றும் புனைவின்வழி வயப்படுத்தும் எழுத்துக்களை fiction of ideas என்றும் விமர்சகர் வாதிட்டார்கள். ஆங்கும் வாழ்க்கையை அதன் அனைத்து அழுக்காறுகளோடும் [!] அந்தரங்க முணுமுணுப்புகளோடும் மானுடம்தழுவிய அகச்சிக்கலோடு கூடிய மீட்சிப்பெட்டகம் நிஜமாக வெளிப்படும்போது உண்மையும் கற்பனாவாதத்தோடும் கூடிய கதைகளை விகாசத்தின் கிரகிப்பில் உன்னதமாக எடுபட்டன. அத்தகைய கதைகளே முதன்மைப்பரிசுக்கு தேர்வுசெய்யப்பட்டன என்பதைச் சிறு வெட்கத்துடன் இங்கு பதிவுசெய்கிறேன்’ எனும்போது தமிழில் உயர்தர நகைச்சுவை இல்லை என்று சொன்னவர் யார் என்று கேட்கத்தோன்றுகிறது


 


[கரவு, கமலாதேவி அரவிந்தன். தங்கமீன் பதிப்பகம்]


சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் செல்நெறிகள்


இராம கண்ணபிரான் கதைகள் பற்றி

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 22, 2016 11:34

சிங்கப்பூர் இலக்கியம் -கடிதங்கள்

பெருமதிப்பிற்குரிய எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களுக்கு


அன்பான வணக்கம்.


வெண்முரசின் பல்லாயிரக்கணக்கான எளிய வாசகர்களுள் ஒருத்தி நான். அது குறித்துதான் முதன்முதலில் உங்களுக்கு மிக நீண்டதொரு கடிதம் எழுதுவேன் என்று எண்ணியிருந்தேன். குறிப்பாக மழைப்பாடல், நீலம், சொல்வளர்காடு ஆகிய நூல்களில் குறிப்புகள் எடுத்து வைத்திருக்கிறேன். உள்ளூர், வெளியூர் படைப்பாளிகளுடைய ஆக்கங்களையும் காலச்சுவடு, உயிர் எழுத்து, கணையாழி, உயிர்மை போன்ற இதழ்களில் பிரசுரமாகும் தீவிர எழுத்துக்களையும் விடாமல் பல்லாண்டுகளாக வாசித்து வருகிறேன். உங்களுடைய சிங்கப்பூர் இலக்கியக்கூட்டங்களுக்கு வர மிக ஆசையுடன் திட்டமிட்டிருந்தேன். என் துரதிருஷ்டம், மாமனார் திடீரென்று இயற்கை எய்தியதால் மதுரை செல்லும்படியானது. சிங்கப்பூர் திரும்பியதும் இக்கடிதத்தை எழுதுகிறேன். சிங்கப்பூரில் பதினாறு ஆண்டுகளாக வசிக்கிறேன். கணினி தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுகிறார் என் கணவர். நானும் அதே துறை. எங்களுக்கு ஐந்து வயது மகள் இருக்கிறாள்.


சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் மரபும் செல்திசையும் என்ற உங்களுடைய பதிவினை வாசித்தேன். மிக விரிவான மிகவும் அவசியமான பதிவு. முல்லைவாணன் கரையிலிருந்து மூட்டைகளை தோளில் தூக்கிக் கொண்டு பலகை வழியாக நடந்து சென்று படகுகளில் ஏற்றும் பணியைச் செய்து வந்ததைக் குறித்து அறிந்தபோது எனக்கு சி.சு.செல்லப்பா நினைவுக்கு வந்தார். சிற்றிதழை நடத்துவதற்காக பொம்மைகள் செய்து கூடையில் வைத்துக் கொண்டு தெருவெங்கும் திரிந்து விற்ற கதைகள் கேட்டு மிக வேதனை அடைந்ததுண்டு. பதிவு குறித்து எனக்குச் சொல்ல நிறைய உண்டு. அது ஒருபுறமிருக்க, காதால் கேட்டதை மட்டும் மேம்போக்காகக் கோர்த்து விமர்சனம் என்ற பெயரில் அரைவேக்காட்டுத் தனமாக உள்ளூரில் எழுதப்படுபவற்றை ஒப்பிடும்போது உங்களுடைய அலசல் விரிவானதாக சிறப்பாகவே இருக்கிறது என்று நினைக்கிறேன். மகிழ்ச்சி.


எனினும், இக்கடிதத்தின் நோக்கம் வேறொன்று. நேற்றைக்கு ஒரு சிறுகதை எழுத‌ முயற்சி செய்து மகிழ்ந்த உமாவாகிய என்னை பெரிய போற்றுதற்கு உரிய எழுத்தாளர் ஜெயமோகனுடன் பட்டியலில் சேர்த்தால் எத்தனை அபத்தம், இல்லையா? புனைவு, அபுனைவு, மொழிபெயர்ப்பு, சிறார் இலக்கியம் என்று அமைதியாக 22 ஆண்டுகளாக தொடர்ந்து பங்களித்து வரும் ஜெயந்தி சங்கரை நீங்கள் இவ்வாறு போகிற போக்கில் குறிப்பிடுவதோ அல்லது தொடக்க நிலையில் எழுதிக் கொண்டிருக்கும், எழுதுவதாக வெறும் டம்பம் அடித்துக் கொண்டிருக்கும், வாயாலேயே வடை சுட்டுக் கொண்டிருக்கும், சுய அட்சதை போட்டுக்கொண்டிருக்கும், எழுத முயற்சித்துக் கொண்டிருக்கும் பலருடன் சேர்த்து அவர் பெயரை எழுதியது அவருடைய நெடுநாள் வாசகி என்ற அளவில் என்னை மிகவும் துணுக்குறச் செய்தது. இது அவருக்கு மட்டும் அநியாயம் இல்லை அவரது பெரும்பங்களிப்புக்கும் அவமதிப்பு. மட்டுமல்லாது, உங்களுடைய மேன்மைக்கும்கூட இது பங்கமாகும். Sweeping/name dropping statement. இந்தக் கடிதம்தே வையா என்றுதான் முதலில் எண்ணினேன். என்னால் சொன்னாமல் இருக்க முடியவில்லை. இது ஒரு தவறான பிம்பத்தை எடுத்து இயம்பும். உயிரோடு இருந்து கொண்டு தொடர்ச்சியாக‌ இயங்கி வரும் ஒரு படைப்பாளியின் அருமை தெரியக் கூடாதோ!? மண்டையைப் போட்டால்தான் அவருடைய சிறப்பு எல்லோர் கண்ணுக்குமே தெரியும் போல. சாபக்கேடுதான். மிகுந்த வருத்தமடைந்தேன். அவருடைய சமீபத்தைய சிறுகதைத் தொகுப்பான ‘நகரெங்கும் சிதறிய சுழிகள்’ வாசித்தவர் எத்தனை பேர்? மின்னஞ்சலில் சில ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு சிறுகதை குறித்து அவரோடு பேசியதுண்டு. ஆனால் சந்தித்ததில்லை. ஓரிரு மாதங்களில்நாங்கள் அமெரிக்காவுக்கு குடிபெயர்வதற்கு முன்னர் வாய்ப்பு அமையும் என்று நம்புகிறேன்.


http://jeyanthisankar.blogspot.sg/


http://jeyanthisankar.com/


http://solvanam.com/?p=5868


நன்றி. தாழ்மையுடன்,


உமாஸ்ரீ பஞ்சு


***


அன்பான ஜெ.


நீங்கள் சிங்கப்பூருக்கு வந்தது முதல் உங்களிடமிருந்து எதிர்ப்பார்த்தது இவ்வாறான சில விமர்சனங்களைதான். விமர்சனங்கள் மூலமே உரையாடல்கள் சாத்தியம். உரையாடல்கள் இல்லாமலேயே மலேசிய – சிங்கை இலக்கியம் தேங்கி விட்டது. தொடர்ந்து உங்கள் பார்வையை வாசிக்க முடியும் என நம்புகிறேன். இவை வல்லினத்தில் வெளிவந்த சிங்கை எழுத்தாளர் லதாவின் சிறுகதை. அவர் தொகுப்பில் உள்ள கதைகளை விட பல மடங்கு சிறப்பானவை என எனக்குத் தோன்றியது. உங்கள் வாசிப்புக்கு.


http://vallinam.com.my/version2/?p=2839

http://vallinam.com.my/version2/?p=2185


அதேபோல் அழகுநிலாவின் ‘அலையும் முதல் சுடர்’ என்னை அதிகம் கவர்ந்தது. ஷநாவாஸ் சுவாரசியமான கதைச் சொல்லி. உங்கள் பார்வையில் எப்படியும் அவர்கள் படுவார்கள். மகிழ்ச்சியான தருணம்தான்.


ம.நவீன்


web site : www.vallinam.com.my


blog : www.vallinam.com.my/navin/

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 22, 2016 11:31

விஷ்ணுபுரம் காவிய முகாம் 2016 -ஒரு பதிவு

 


 


விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் செப்டம்பர் 17 மற்றும் 18 தேதிகளில் நடைபெற்ற காவிய முகாம் என்னுடைய வாசிப்பு உலகில் எண்ணற்ற திறப்புகளை அளித்தது. இதுவரையிலான என்னுடைய வாசிப்பின் வழிகளும் அதன்வழி நான் கண்டடைந்த அறிதல்களையும் மீட்டெடுத்துப் பார்த்துக் கொள்ளவும் அதன் சரி தவறுகளை மறுமதிப்பீடு செய்து கொள்ளவும் அந்தரங்கமாக இந்த முகாம் எனக்கு உதவியது. வருடாவருடம் ஊட்டியில் நடக்கும் முகாம், இந்த முறை சிங்கப்பூரில் நடைபெற்றது என் போன்ற தீவிர இலக்கிய வாசகர்களுக்கு அமைந்த நல்லூழ். நீரிழுவையில் அடித்துச் செல்லப்பட்டவன் கால்களுக்குக் கீழ் தட்டுப்படும் பாறையைப் போல சிக்கெனப் பற்றிக் கொள்ள வேண்டியதுதான்.


செப்டம்பர் 17 சனிக்கிழமை காலை, கம்பராமாயண வாசிப்புடன் முகாம் துவங்கியது (“என்ன ஒரு இனிய ஆரம்பம்! புரட்டாசி முதல் நாள் பெருமாளின் ராம காதையுடன் துவங்குகிறது முகாம்”, பக்திப்பெருக்கில் என் மனைவி என்னிடம் சொன்னது). நாஞ்சில் நாடன் நடத்த வேண்டிய அமர்வு. அவரது தாயார் காலமானதால் அவரால் வர இயலவில்லை. நண்பர் ராஜகோபாலன் இந்த அமர்வை நன்கு வழிநடத்தினார். ஒவ்வொரு பாடலையும் பங்கேற்பாளர்கள் வாசித்ததும் ஜெயமோகன் சுருக்கமாகவும் நுட்பமாகவும் பாடலின் அர்த்தத்தை விவரித்தார். சு.வேணுகோபால், பேராசிரியர் சிவக்குமரன் ஆகியோரும் தங்கள் கருத்துகளால் பங்களித்தனர். பெரும்பாலானவர்களுக்கு கம்பராமாயண அறிமுகமும் விளக்கமும் கிடைக்கப் பெறுவது பள்ளிகளிலும், கோயில் உபன்யாசகர்கள் மூலமாகத்தான். இவ்விரு அரங்குகளிலும் மரபான முறையிலேயே கம்பராமாயணப் பாடல்களை விளக்குவார்கள். பெரும்பாலான சமயங்களில் அது கேட்பவனை ஒருவகை மனவிலக்கத்தை நோக்கியே தள்ளிச் செல்லும். ஆனால், விஷ்ணுபுரம் காவிய முகாமில் வாசிக்கப்படும்/விவாதிக்கப்படும் கம்பராமாயணப் பாடல்கள் வாழ்நாள் முழுக்க ஒரு வாசகனுக்கு நினைவிருக்கும் வகையில் அமைந்திருக்கின்றன. கம்பராமாயணத்தின் பக்தி சார்ந்த புனித அரிதாரங்கள் களையப்பட்டு, தமிழின் பேரிலக்கிய கவிதை என்ற வகையிலேயே கம்பரின் பாடல்கள் அணுகப்படுகின்றன. இந்த அணுகுமுறையே வாசகனை முதலில் ஈர்க்கின்றது.


முதல் பாடலான “உலகம் யாவையும்” துவங்கி பாலகாண்டம் மற்றும் அயோத்தி காண்டத்தில் சில முக்கியமான, உணர்வெழுச்சியூட்டும் விதிமுகூர்த்தங்கள் அடங்கிய நாற்பது பாடல்களை இந்த அமர்வில் பொருள் கேட்டோம். மறக்க முடியாத பாடல்கள். இரண்டு மூன்று முறை பொருளுணர்ந்து படித்தால் மனப்பாடம் ஆகிவிடுமளவுக்கு எளிமையான பாடல்கள். அதற்கு ஜெயமோகன் சொன்ன விளக்கமும் மறக்க முடியாதது.  கம்பராமாயண வாசிப்பு சார்ந்து ஜெயமோகன் சில முக்கியமான அடிப்படைகளை விவரித்தார். முதலில், கம்பரின் இவ்விருத்தங்களை மனதில் வாசியாமல், வாய்விட்டு வாசிக்க வேண்டும். அக்காலத்தில் கவிதைகள் வாசிப்பவனுக்காக அல்லாமல் செவியால் கேட்பவனுக்காக இயற்றப்பட்டமையால், நாமும் வாய் விட்டு வாசிக்கும்போது கவிதையின் ஓசைநயம் நம்மையறியாமல் பாடலை நம் அகத்தின் ஆழத்திற்கு இட்டுச் செல்லும். இன்னும் சொல்லப் போனால், இப்பாடல்களை வாசிப்பதைக் காட்டிலும் பாடுவதே இதன் அர்த்தத்தை அனுபவிக்க மிகச்சிறந்த வழியென்றார் (இதையே டி.கே.சி தன்னுடைய “கம்பர் தரும் ராமாயணம்” என்ற புத்தக முன்னுரையில் அறிமுகத்தில் குறிப்பிட்டிருந்ததை நினைவுகூர்ந்தேன்). கம்பராமாயணம் போன்ற காவியங்களுக்கு கூட்டு வாசிப்பின் முக்கியத்துவத்தையும் பற்றி விளக்கினார். மேலும், ஒரு காவியம் என்பது விதை போல. ஒரு குறிப்பிட்ட பண்பாடு முழுக்க அழிந்தாலும், அந்தக் காவியத்தை வைத்தே அந்த பண்பாட்டை மீண்டும் மலர வைக்க முடியும் என்ற எலியட்டின் கருத்தை முன்வைத்தார்.


கம்பராமாயணத்தின் பாயிரம் பகுதியை வாசிக்கையில் பெரும்பாலான காவியங்களில் “உலகம்” என்ற வார்த்தையே முதல் வார்த்தையாக வருவதை ஜெயமோகன் சுட்டிக்காட்டினார். காவியத்தின் முதல் வார்த்தை என்பது பார்த்திவப் பரமாணு போல (பிண்டத்தில் தன்னைத் தானிருக்கிறேன் என்று உணரும் முதல் அணு. தன்னைத் தானே பெருக்கி உயிராக ஆகும் விதை). அந்த முதல் சொல் பெருகிப் பெருகி மகா காவியமாக ஆவதாலேயே காவியங்களின் முதல் சொல் மிகுந்த கவனத்துக்குரியதாக ஆகிறது என்றார்.


கம்பராமாயண அமர்வில் கம்பனின் பாடல்களை வாசிக்க வாசிக்க நெகிழ்வூட்டும் பரவச நிலைக்குள்ளானேன். தசரதன் கைகேயி உரையாடல், கைகேயி ராமனிடம் காடேகச் சொல்வது (ஆழிசூழ் உலகமெலாம் பரதனே ஆள ..) ராமன் கைகேயிடம் சொல்வது (மன்னவன் பணி அன்றாகின்…), கோசலை ராமன் உரையாடல் (முறைமை அன்று என்பது ஒன்று உண்டு..), ராமன் இலக்குவனிடம் விதியின் பிழையைச் சொல்லும் இடம் (நதியின் பிழையன்று நறும்புனலின்மை..), பரதனின் குழாம் கண்டு குகன் வெகுண்டெழுவது (ஆழ நெடுங்திரை ஆறு கடந்திவர் போவாரோ?..) போன்ற பாடல்களின் இனிமை இன்னும் செவியிலறைகிறது.


அன்றிரவு உறக்கத்தில் கனவிலென சில பாடல்களின் வரிகள் மனதில் ஓடியபடியிருந்தன. “என் மகன், என் கண், என் உயிர், எல்லா உயிர்கட்கும் நன்மகன், இந்த நாடு இறவாமை நய…, மன்னவன் பணி அன்றாகின் நும் பணி மறுப்பெனோ? என் பின்னவன் பெற்ற செல்வம் அடியனேன் பெற்றது அன்றோ.., தோழமை என்றவர் சொல்லிய சொல்லொரு சொல்லன்றோ.. போன்ற வரிகளின் ரீங்காரத்தின் மையத்தில்தான் அன்றிரவு துயில முடிந்தது.


கம்பராமாயணம் காட்டும் லட்சிய அரசன், லட்சிய மகன், லட்சிய மனைவி, லட்சிய தம்பி, லட்சிய தூதன் என்று ராமாயணத்தின் மைய கதாபாத்திரங்கள் அனைவரும் உச்ச கதாபாத்திரங்களாக இருப்பது ராமாயணத்திற்கே உரிய தனிச்சிறப்பென்றார் ஜெயமோகன்.


மதிய உணவிற்குப் பின் மகாராஜன் அருணாச்சலம் தி.ஜானகிராமனின் “பாயசம்” மற்றும் “கங்காஸ்தானம்” சிறுகதைகளை விமர்சித்து உரை நிகழ்த்தினார். இந்த இரு கதைகளின் நுட்பங்கள், சிறப்புகள் என நீண்டு சென்றது விவாதம். பாயசம் கதையில் பெரும்பாலானவர்களுக்குப் பிடி கிடைக்காத நவீன ஓவியங்கள் வரும் பகுதியைப் பற்றி ஜெயமோகன் விளக்கினார். முக்கிய கதாபாத்திரத்தின் (சாமிநாது) எதிர்மறை மனவோட்டத்தை மேலும் தூண்டிவிடும் குறியீடுகளாக நவீன ஓவியங்கள் இக்கதையில் இடம்பெறுகின்றன என்றார். அதைத் தொடர்ந்து தி.ஜாவிற்கு நவீன ஓவியங்களின் மீது இருந்த மனவிலக்கத்தைப் பற்றியும் ஜெயமோகன் பேசினார். கங்காஸ்தானம் கதையில், கதாநாயகனின் மனைவி அவனை ஏமாற்றிவனுக்கும் சேர்த்து கங்கையில் பாவமுழுக்கிடச் சொல்லும் இடம் அக்கதையின் உச்சம் என்றார். அந்த உச்சத்தைத் தவற விட்டு குதர்க்கமாக கதையைப் புரிந்துகொள்வது கதையின் மீது செலுத்தப்படும் அறிவார்ந்த வன்முறை என்றார்.


கதையில் இடம்பெறும் சில நுண்சித்திரங்களைக் கூட நேர்த்தியாக, இயல்பாக அமைப்பதுதான் நல்ல எழுத்தாளனின் வெற்றி என்றார் ஜெயமோகன். அத்தகைய நம்பகமான நுண்சித்திரங்கள் தி.ஜாவின் கதைகளில் அதிகம் இடம்பெறும் என்றார்.


அதனைத் தொடர்ந்து சு.வேணுகோபால் கதைகளில் காணப்படும் உளம் சார்ந்த பாலியல் சிக்கல் குறித்து அரங்கசாமி பேசினார். சு.வேணுகோபால் வாசகரின் கேள்விகளுக்கு பதிலளிக்கையில், தன்னுடைய கதைகளின் பின்புலத்தில் விரிந்திருக்கும் அவரது பால்யம் சார்ந்த சில நினைவுகளையும் சுவாரஸ்யமாகப் பகிர்ந்து கொண்டார்.


இரண்டாம் நாள் காலை முதல் அமர்வில் வேணு வெட்ராயன் தேவதேவன் கவிதைகளை முன்வைத்து ஒரு உரை நிகழ்த்தினார். தத்துவத்தின் பார்வையில் கவிதை, வாசகன் மனதில் “நிகழும்” கணத்தைப் பற்றிப் பேசினார். இது ஒரு முக்கியமான உரையாக அமைந்திருந்தது. பௌத்த தத்துவச் சொற்களின் ஒளியில் கவிதை, வாசகன் மனதில், அறிமுகமாகி, நிகழ்ந்து, பின் அறிதலாகக் கடந்து செல்லும் பயணத்தைப் பற்றி விளக்கினார் வேணு. விருத்தி, விகல்பம், ஆத்மவசியம், அகப் பிரபஞ்சம், புறப்பிரபஞ்சம், அந்தகாரண விருத்தி, சப்தகாரணவிருத்தி, ததாகாரணவிருத்தி போன்ற பௌத்த சொற்களை இந்த உரையின் மூலம் அறிமுகம் செய்து கொள்ள முடிந்தது.


அதனைத் தொடர்ந்து பேசிய ஜெயமோகன், கவிதையின் சொற்சேர்க்கை, சொல்லின்பம் பற்றி விளக்கமளித்தார். “மந்திரம் போல் வேண்டும் சொல்லின்பம்” என்ற பாரதியின் வரியைத் தொடர்ந்து, கவிதை வாசிப்பென்பது மனதில் ஒரு தியானத்தன்மையைக் கொடுக்கும் அனுபவம் என்றும், கவிதை என்பது மந்திரத்துக்கு இணையானது என்றும் சொன்னவர், மந்திரம் என்பது மனித மனதின் ஜாக்ரத், ஸ்வப்னம், சுஸுப்தி..நிர்வாணத்தைத் தாண்டி உள்ளே பயணிக்கக் கூடியது, அதற்கிணையான இயல்புடையதே நல்ல கவிதை என்றார். சில கேள்விகளுக்கு புத்தரிடமே மௌனம் மட்டும்தான் பதிலாகக் கிடைத்தது என்றும் அதனை “Golden silence of Buddha” என்பார்கள். கடவுள் இருக்கிறாரா? இல்லையா?, உயிர்கள் மறைந்ததும் எங்கு போகின்றன? இங்கு நடப்பவற்றுக்கெல்லாம் என்ன அர்த்தம்? போன்ற கேள்விகளுக்கு புத்தரே மௌனம் சாதித்தார் போன்ற தகவல்களை அறிந்து கொள்ள முடிந்தது.


அடுத்து சிங்கப்பூர் எழுத்தாளர் கனகலதா, தனக்குப் பிடித்த இலங்கைக் கவிதைகளைக் குறித்துப் பேசினார். அதனைத் தொடர்ந்து பேசிய ஜெயமோகன் இயல்பாகவே கலாபூர்வம் மிளிரும் கவிதைகளையும், கலாபூர்வமாகத் தென்படும் வகையில் ‘போல’ச் செய்யும் செயற்கையான கவிதைகளையும் இனம்கண்டுகொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பற்றிப் பேசினார். பிரமிளின் கவிதை வரியான “ வழிதொறும் நிழல்வெளிக் கண்ணிகள், திசை தடுமாற்றும் ஆயிரம் வடுக்கள்..” தன் வாழ்வின் துக்ககரமான நாட்களில் அவரை அலைக்கழித்ததைப் பற்றிப் பகிர்ந்து கொண்டார். அதனைத் தொடர்ந்து சு.வேணுகோபால் தனக்குப் பிடித்த சேரனின் கவிதை வரிகளை நினைவு கூர்ந்தார், “முகில்களின் மீது நெருப்பு தன் சேதியை எழுதிவிட்டது, இன்னும் எதற்காக கைகளைக் கட்டிக் கொண்டு நின்றிருக்கிறீர்கள், சாம்பல் பூத்த தெருக்களிலிருந்து எழுந்து வருக..” (இதே கவிதை வரிகளை ஜெயமோகன் குமரகுருபனின் கவிதைத் தொகுப்பை வெளியிட்டுப் பேசிய நிகழ்ச்சியிலும் பேசியதை நினைவு கூர்ந்தேன்). கவிதை என்பது சொற்சேர்க்கையின் அழகியலையும் ரசிப்பது என்ற முக்கியமான கருத்தும் சொல்லப்பட்டது. அரவிந்தரின் “Supreme Poetic Utterance” , “Rational Intelligent work”, “Irrational Intelligent work” போன்ற சொற்பதங்களை விளக்கி, கலை அழகுள்ள கவிதையையும், போலச் செய்யும் போலியான கவிதையையும் குறித்த மேலதிகமான விபரத்தையும் ஜெயமோகன் கொடுத்தார்.


தேநீர் இடைவெளிக்குப் பின் கிருஷ்ணன் சில இலக்கியப் படைப்புகளை முன்வைத்து அவற்றில் வரும் முக்கிய கதைமாந்தர்கள் ஒரு இக்கட்டான சூழ்நிலையை எப்படிக் கடக்கிறார்கள்? அதன் பின் அவர்கள் என்னவாக மாறுகிறார்கள்? அந்த சூழலைக் கடந்தபின் தன் இயல்பிலிருந்து திரிகிறார்களா அல்லது தன் ஆளுமையை அதன்பின் மலரச் செய்கிறார்களா? என்பதைப் பற்றி செறிவாகப் பேசினார்.


தன் உரைக்காக அவர் எடுத்துக் கொண்ட படைப்புகள்: அசடன் நாவல் (தஸ்தயேவ்ஸ்கி), துறவியின் மோகம் நாவல் (தல்ஸ்தோய்), தந்தை கோரியா (பால்சாக்), சதுரங்க குதிரைகள் (கிரிராஜ் கிஷோர்), காமினி மூலம் சிறுகதை( ஆ. மாதவன்), நிழலின் தனிமை நாவல் (தேவி பாரதி). இதனைத் தொடர்ந்து கேள்வி பதில் பகுதி சிறப்பாக இருந்தது. கிருஷ்ணனும், ஈரோடு செந்திலும் தங்கள் வழக்கறிஞர் தொழிலில் தாங்கள் சந்தித்த குற்றவாளிகளையும், குற்றச்செயல்களையும், அதன் பின் குற்றவாளிகளின் மனநிலை, குற்றவாளிகளின் குடும்பத்தாரின் மனநிலை குறித்தும் விரிவாகப் பேசினார். மனித மூளையின் இயல்பைப் பற்றியும், மூளையின் இயல்பான அமைப்பிலேயே குற்றவாளிகளின் இயல்புகள் நிறுவப்பட்டுவிடுகின்றன என்ற புதிய தகவலையும் அறிந்து கொள்ள முடிந்தது.


மதிய உணவு இடைவெளிக்குப் பின் சௌந்தர், தாராசங்கர் பானர்ஜியின் ஆரோக்கிய நிகேதனம் நாவலைப் பற்றிப் பேசினார். ஆயுர்வேதம், அலோபதி இரண்டிற்குமான விவாதங்களும், அவற்றின் வெற்றி தோல்விகளையும் மையமாக அமைந்த நாவல் என்று மேலோட்டமாகத் தோன்றினாலும், உண்மையில் இந்த நாவல், இறப்பை இயல்பாக ஏற்றுக் கொள்ளும் மருத்துவ முறையையும், இறப்போடு போராடித் தோற்கும் மருத்துவ முறையையும் பற்றிய நாவல். நாவலில் வரும் ஜீவன் மஷாய் என்ற கதாபாத்திரத்தைப் பற்றி பலரும் பேசியது, நாவல் படிக்காமலே, அவரை நான் விரும்பச் செய்து விட்டது. இந்திய இலக்கிய விமர்சகர்கள் பலரும் இந்திய அளவில் முதன்மையான நாவலாக இந்த நாவலை அங்கீகரித்துள்ளார்கள் என்ற செய்தி, இந்த நாவலை வாசிக்கும் ஆசையை என்னுள் தூண்டிவிட்டிருக்கிறது. மனிதர்கள் தாம் இறக்கும் காலத்தை அறிந்த பின்னர் இயல்பான அமைதியுடன் கடவுள் நாம சங்கீர்த்தனத்திலும், ஆன்மீக விஷயங்களில் ஆழ்ந்து விடுவதும் இந்திய மனதுக்கே வாய்த்த அருங்குணமாகத்தான் தோன்றுகிறது.


அதனைத் தொடர்ந்து ராஜகோபாலன், ப.சிங்காரத்தின் “புயலிலே ஒரு தோணி” நாவலைப் பற்றி விரிவாகப் பேசினார். நாவலின் களம், ப.சிங்காரத்தில் வெளிப்படும் நுட்பமான தெரு/இடக் காட்சிகள், பகடி, மொழி ஆளுமை, தமிழ் குறித்தும் தமிழர்களின் இனப்பெருமை குறித்தும் மார்தட்டும் பேர்வழிகளை பகடி செய்வது போன்ற காட்சிகள் குறித்துப் பேசினார்.


ஜெயமோகன், இந்நாவலின் பலம் குறித்துப் பேசும் அதே வேளையில் இதன் பலவீனம் குறித்தும் அறிந்திருக்க வேண்டும் என்றார். வடிவ ரீதியாக இது தோல்வியடைந்த நாவல் என்றார். இந்த நாவலில் நெகிழ்வூட்டும் காட்சிகள் இல்லை என்ற கேள்விக்கு, ஆண்டியப்ப பிள்ளை “வளவி” கேட்ட தன் மகளுக்கு வளவி செய்து போட முடியாத ஒரு துயரம் மட்டுமே இந்த நாவலில் வரும் நெகிழ்வூட்டும் காட்சி என்றார். (எனக்கு, பினாங் செல்லும் பாண்டியனிடம் ரத்தினம் என்ற பையன் தன் தந்தையைத் தேடி அவர் இருக்குமிடம் தெரிவிக்க வேண்டும் காட்சி கூட நெகிழ்வூட்டும் காட்சியாகத்தான் தோன்றியது, பின்னாளில் ரத்தினம் என்ற அந்தப் பையன் ஐ.என்.ஏ-வில் சேர்ந்து அதன்பின் எங்கு சென்றான் என்றே தெரியவில்லை என்று பாண்டியன் நினைத்துப் பார்க்கும் சித்திரம் மட்டும் வருகிறது.) துயரத்தைக் கூட பகடியின் மொழியில் சொல்லிச் செல்கிறார் சிங்காரம். இந்தோநேசியாவின் “சைலேந்திரர்களை” வென்ற ராஜேந்திர சோழனின் படைகளைப் பற்றிச் சொல்லிச் செல்லும் இடத்தில் (இந்த இடத்தில் மட்டும்தான் தமிழரின் வீரத்தை/ பெருமையை அவர் மெச்சுகிறார் எனத் தெரிகிறது), அந்த வீரத் தமிழர்கள் சென்ற அதே கடல் பகுதியில் அவர்கள் வம்சாவளியைச் சேர்ந்த தமிழர்கள் செல்கிறார்கள், படையெடுப்புக்காக அல்ல.. வயிற்றுப் பிழைப்புக்காக.. என்று எழுதுகிறார், சிங்காரம்.


அடுத்த அமர்வில், எழுத்தாளர் எம்.கோபாலகிருஷ்ணனுடம் ஒரு உரையாடல் நிகழ்ந்தது. திருப்பூர் என்ற தொழில்நகரம் காலமாற்றத்தில் இப்போது எவ்வாறு உருமாறியிருக்கிறது என்று பேசினார் கோபாலகிருஷ்ணன். கலை ரீதியாக, வடிவ ரீதியாக, தனக்குப் பிடித்த நாவலாக ஜெயமோகனின் “பின் தொடரும் நிழலின் குரல்” நாவலைச் சொன்ன அவர், அந்த நாவலில் இரு இடங்கள் (ஏசு கிருஸ்து வரும் இடம், தல்ஸ்தோய் மற்றும் தஸ்தாயெவ்ஸ்கி இடையே நிகழும் உரையாடல்) தனக்கு மிகவும் பிடித்திருப்பதாகவும், அந்தப் பகுதிகளை அடிக்கடி வாசிப்பதாகவும் சொன்னார்.


இறுதி அமர்வில் சிங்கப்பூர் தமிழிலக்கிய சூழலையும், சிங்கப்பூரில் தமிழ் சந்திக்கும் நெருக்கடிகளையும், பல்வேறு நெருக்கடிகளுக்கிடையே தமிழை வளர்த்தெடுக்க அரசின் ஆதரவோடு இங்குள்ள தமிழ் அமைப்புகள் மேற்கொள்ளும் முயற்சிகளையும், சிங்கப்பூரில் ஜெயமோகன் போன்ற ஒரு ஆசானின் தேவையைப் பற்றியும் விரிவாகப் பேசினார். இதன் மூலம் சிங்கப்பூரில் தமிழ் வளர்ச்சியைப் பற்றிய ஒரு சுருக்கமான சித்திரத்தை சென்னை நண்பர்களுக்கு தொகுத்தளித்தார் திரு அருண் மகிழ்நன்.


நிகழ்ச்சி நடந்த இரு நாட்களும் சில முக்கியமான விஷயங்களைக் கவனிக்க முடிந்தது. அறிவார்ந்த விவாதங்களையெல்லாம் தாண்டி எல்லோரும் சிரிக்கச் சிரிக்க, கேலியும், அங்கதமுமாக சபை நிறைந்திருந்தது. ஜெயமோகன் இருக்கும் அவைகளில் இது வியப்பளிக்கும் விஷயமல்ல என்றாலும், இரு நாட்களும் அவையில் குன்றாமல் இருந்த நகைச்சுவையும், அடிக்கடி எழும் வெடிச்சிரிப்புகளும், மனதை மலர்த்தியவாறு இருந்தன. அடுத்து விவாதங்களின் மையம். ஜெயமோகன் ஒரு மூத்த மாணவரைப் போல அவையை நடத்திச் சென்றதும், விவாதம் திசை திரும்பும் போதெல்லாம் மீண்டும் சுக்கானைப் பிடித்து வழிக்குக் கொண்டு வருவதும் இப்படி ஒருவரின் அவசியத்தை உணர்த்தியது. இந்த மையம் இல்லாவிட்டால், விவாதம் வீரியமாக நடைபெற முடியாது என்றே தோன்றுகிறது. அடுத்து மரியாதை நிமித்தமான Protocol-கள் இல்லாமல் சகஜமான ஒரு மனோபாவமே அனைவரிலும் தென்பட்டது மிக ஆரோக்கியமான விஷயம். ஜெயமோகனிடம் ஒரு நிமிடம் பேசினாலும், ஒரு புதிய தகவல் கிடைப்பதும், இலக்கியம் சார்ந்து சில திறப்புகள் கிடைப்பதும் வாடிக்கையாகிவிட்டது எனக்கு. அவரிடம் விடைபெறும் கணத்தில் கூட சித்ராவிடம் அவர் நாவலின் அழகியல் பற்றியதான உரையாடலில் “நாவல் என்பது தத்துவத்தின் கலை வடிவம்” என்று ஒரு வரியைச் சொன்னார். இந்த வரியை அப்படியே மனதில் அள்ளிக் கொண்டு வீடு திரும்பினேன். நிறைவான இரு நாட்கள். இனி ஒருபோதும் இப்படி அமையுமா என்ற கேள்வியை எழுப்பிய இரு நாட்கள்.


 


– கணேஷ் பாபு


சிங்கப்பூர்


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 22, 2016 11:31

September 21, 2016

பிரம்பும் குரலும்

MG_1657-1-273x300


 


சிங்கப்பூர் இலக்கிய உலகத்தை அறிந்துகொள்ளும் முயற்சியில் வாசித்த முப்பதுக்கும் மேற்பட்ட நூல்களில் இராம கண்ணபிரானின்   ‘சோழன் பொம்மை’ ‘இருபத்தைந்து ஆண்டுகள்’ என்னும் இரு சிறுகதை நூல்களும் அடங்கும் . இவை முறையே 1980, 81 ஆண்டுகளில் வெளியாகிய நூல்கள்.


 


இராம கண்ணபிரான் சிங்கப்பூர் இலக்கியத்தின் இலக்கிய முன்னோடிகளில் ஒருவராக கணிக்கப்படுபவர். சிங்கப்பூர் இலக்கியச்சூழலின் பிரச்சினைகள் மற்றும் எல்லைகளைக் கணக்கில் கொண்டே இப்படைப்புக்களை நாம் மதிப்பிட முடியும் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். முற்றிலும் அன்னிய நிலம். பல்லினப்பண்பாடுள்ள தேசம். குறிப்பாக குடும்பத்திற்கு வெளியே தமிழ் காதில் விழாத சூழல்.


 


ஆகவே இருவகையான இழப்புகள் ஏற்படுகின்றன. ஒன்று எழுதுவதற்கான வாழ்க்கைக்களங்கள் மிகக்குறுகிவிடுகின்றன. இரண்டு தமிழ்நடை உருவாகி வரமுடிவதில்லை.


 


நடை என்பது செவியால் உருவாக்கப்படுவது. மக்கள் பேசும் மொழி செவிவழியாக ஆசிரியன் மனத்துக்குள் புகுந்து தேங்கி ,விசைகொண்டு, நுட்பங்கள் அடைந்து நடையாக ஆகிறது. மொழிநடையின் அடிப்படை என்பது செவியே. வாழ்க்கையில் பல்வேறு அன்றாடக்களங்களில் புழங்கும் மொழியின் கசங்கலும் கொப்பளிப்புகளுமே நடையை உருவாக்குகிறன. வசைபாடவும், கொஞ்சவும் ,சட்டம் பேசவும், சாத்திரம் பேசவும் ஒருமொழி பயன்படுத்தப்படும்போதே அது மாறுபட்ட மொழிநடைகளை உருவாக்குகிறது. மொழி என்னும் அலைப்பரப்பின் நுரை என நடையைச் சொல்லமுடியும்.


 


அந்த வாய்ப்பு அன்னியமொழிச்சூழலில் வாழும் எழுத்தாளருக்கு அருகிப்போகிறது. அதன்பின் எஞ்சியிருப்பது பிறமொழிகளின் முயங்கலால் அமையும் சில புத்தழகுகள் மட்டுமே.  ஆனால் அன்றைய சிங்கப்பூரின் எழுத்து என்பது தமிழ் அடையாளத்தை வகுத்துக்கொள்வதிலும் தமிழ்ப்பண்பாட்டை நிலைநாட்டுவதிலும் மையக்கவனம் கொண்டது.  அவ்வாறு தமிழடையாளம் நோக்கிக் குறுகும்போது பிறமொழியின் சாயல்கள் கவனமாகத் தவிர்க்கப்படுகின்றன. ஆகவே நடை உருவாகும் ஒரே வாய்ப்பும் அடைக்கப்படுகிறது.


 


உண்மையில் சீன,மலாய் இனங்களை நோக்கி பார்வையைத் திருப்பிக்கொண்டு விரிந்த நோக்கைக் கொள்ளமுடியும் என்றால் வாழ்க்கைக்களங்கள் முடிவிலாது பெருகும்.  ஆனால் மறுபடியும் தமிழ்ப்பண்பாட்டுச் சீர்திருத்தம் என வரையறைசெய்துகொள்ளும்போது ஆகவே எழுதுவதற்கு இருந்த களம் என்பது தமிழ்மக்களின் குடும்பவாழ்க்கை மட்டுமே.


 


இராம.கண்ணபிரானின் இவ்விரு தொகுப்புகளில் உள்ள கதைகளின் முதன்மையான குறைகள் மேலே சொல்லப்பட்ட எல்லைகள் வழியாக உருவாகி வருபவை. இவை வண்ணங்களும் நுட்பங்களும் இல்லாத பள்ளியாசிரிய மொழிநடையில் அமைந்துள்ள கதைகள். இவற்றின் களம் திரும்பத்திரும்ப குடும்ப உறவுகள்.


 


இராம கண்ணபிரான் ‘கோபு என்னை மன்னி’ என்னும் கதை இப்படி ஆரம்பிக்கிறது. ‘பொறிதட்டியது அருணகிரிக்கு. தன் காதுகளை அவனால் நம்பமுடியவில்லை. கணக்கர் கலிப்பகையார் பொய்சொல்லியிருப்பாரோ என ஐயுற்றான்’ . கலிப்பகையார், மணக்குடவர்,  இளங்கீரன்,திருமங்கை போன்ற பெயர்கள் கதாபாத்திரங்களுக்குச் சாதாரணமாக வருகின்றன. உரையாடல்களும் அச்சுநடையிலேயே உள்ளன.உதாரணமாக அக்கதையின் உரையாடல்பகுதி இப்படி இருக்கிறது.


 


‘நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இருங்கள். அருணகிரி, தொடர்ந்து நீ பண்ணையைப்பார்த்துக்கொள். கோபு, நீ அருணகிரிக்கு உதவியாக இரு. நம் குடும்ப உறுதிமொழியை என்றும் காப்பாற்று. ஒழுக்கம் இன்றியமையாதது’ என்று முடித்தார்.


 


இவ்விரு கூறுகளும் இலக்கியத்திற்கு எவ்வகையில் முக்கியமானவை என வாசகர்கள் உணரமுடியும். கதைமாந்தரின் பெயர் வேறு எந்த அடையாளமும் இல்லாமலேயே வாசகனுக்கு எவ்வளவோ நுணுக்கமான சித்திரங்களை உருவாக்கக்கூடியது. கதாபாத்திரத்தின் வயது, ஊர், சாதி, சமூகப்படிநிலை என. எழுத்தாளன் அதை யோசித்துப்போடமுடியாது, அனிச்சையாகவே அது அமையும். அவ்வாறு அமைவது இலக்கியவாதியின் முக்கியமான நுண்ணுணர்வு


 


இன்னொன்று பேச்சுநடை. அச்சுநடை இருக்கலாமா என்றால் இருக்கக்கூடாது என்ற நெறி ஏதுமில்லை. ஆனால் ஒரு கதாபாத்திரம் பேசும்போது நாம் அதை கேட்பதுபோலத் தோன்றவேண்டும். அக்கதாபாத்திரத்தின் முகபாவனைகளும் உணர்வுகளும் நம்மை வந்தடையவேண்டும். அதற்குத்தான் பேச்சுமொழி. பேச்சுமொழியாக இருந்தால் மட்டும்போதாது, அந்தப்பேச்சேகூட நம்பும்படியாக இருக்கவேண்டும். கதாபாத்திரங்களின் இயல்புக்கு ஏற்ப, தருணத்திற்கு ஏற்ப.


 


மேலே சொன்ன இருகூறுகளையும் புனைவின் ‘நம்பவைத்தல் கலை’ க்கு இன்றியமையாதவை என்று சொல்லலாம். இராம கண்ணபிரானின் கதைகள் அவ்வகையில் முதல்படியிலேயே தோல்வியடைந்துவிடுகின்றன.


 


புனைவெழுந்த்து தொடங்கிய காலகட்டத்தில் இத்தகைய கதைகள் ஏராளமாக வெளிவந்தன. புதுமைப்பித்தன் இத்தகைய கதைகளை கிண்டலடித்து ‘இந்தப்பாவி’ என்னும் கதையை 1935லேயே எழுதிவிட்டார். மேலும் அரைநூற்றாண்டுக்குப்பின் இராம கண்ணபிரானின் இக்கதைகள் வெளிவந்துள்ளன.


 


இக்கதைகளுக்கு முன்னுதாரணமாக இருந்தவை மு.வரதராசனார், கு.ராஜவேலு போன்றவர்களின் கதைகள் என ஊகிக்கலாம். உண்மையில் திருமங்கை அமைதி பிறந்தது போன்ற கதைகள்மு.வரதராசனாரின் கதைகளின் வலுவான சாயல்கொண்டவை. ஆனால் புதுமைப்பித்தனின் கிண்டல் வந்தபின் கால்நூற்றாண்டு காலம் கழித்து எழுதிய மு.வரதராசனாரின் படைப்புகள் காலாவதியாகி மேலும் கால்நூற்றாண்டுக்குப்பின் இக்கதைகள் எழுதப்பட்டிருக்கின்றன


 


இவை எழுதப்பட்ட காலகட்டத்தில் தமிழில் புதுமைப்பித்தன் மௌனி குபரா காலகட்டமும் லா.ச.ரா. க.நா.சு காலகட்டமும் சுந்தர ராமசாமி, அசோகமித்திரன் காலகட்டமும் முடிந்து வண்ணதாசன் வண்ணநிலவன் காலகட்டம் ஆரம்பித்துவிட்டிருந்தது என்பதை ஓர் ஒப்பீட்டுக்காகச் சொல்லவிரும்புகிறேன்.


 


மு.வரதராசனார் உள்ளிட்ட இந்த மரபுசார் எழுத்தின் இன்னொரு பிரச்சினை என்னவென்றால் மரபின் அத்தனை பிற்போக்கு, ஏன் மானுட விரோத நோக்கும்  மண்டிக்கிடக்கும் என்பதே. உதாரணமாக திருமங்கை என்னும் கதை. மனைவியை கொடூரமாக நடத்துகிறான் கதாநாயகன். அவன் தன் கர்ப்பிணி மனைவியை அடித்தே கொல்கிறான். அவள் தன் அழகிய தங்கையை அவனுக்கு இரண்டாம்தாரமாக ஆக்கிவிட்டு மடிகிறாள். அவன் மனம்திரும்பி அவளுக்கு வாழ்க்கை கொடுக்கிறான்.


 


இன்னொரு கதை கோபுரநிழல் கணவனிடம் கோபித்துக்கொண்டு ஒரு பெண் ரயிலில் தன் அக்கா வீட்டுக்குச் செல்கிறாள். கணவன் வந்து அழைத்தபோது அவள் அவனுடன் வர மறுக்கிறாள். அதைக் கேட்டு ஒரு ஹிப்பி அவளை ‘அழைக்கிறான்’. அவள் அவனை கன்னத்தில் அறைகிறாள். அங்கே படுத்திருந்த ஒரு ‘பெரியவர்’ எழுந்து அவளுக்கு கணவனே கண்கண்ட தெய்வம் என்றும் அவனை பொதுஇடத்தில் சண்டைபோட்டு அனுப்பியதனால்தான் அப்படி நிகழ்ந்தது என்றும் அறிவுரைகூறுகிறாள். அவள் திருந்துகிறாள். கோபுரநிழல் என்னும் தலைப்பைக் கவனியுங்கள். கணவன் கோபுரமாகக் காட்டப்படுகிறான் இங்கு.


 


சிங்கப்பூர் இலக்கியப்போக்கின் இரண்டாவது காலகட்டம் என நான் நினைக்கும் சீர்திருத்தக் காலகட்டக் கதைகள் இவை. சீர்திருத்தக்கருத்துக்களைச் சொல்லும் நோக்கமே ஓங்கியிருக்கிறது. ‘ நாடோடிகள்’ என்னும் கதை   ‘தன் இனத்தின் மொழி  மற்றும் பண்பாட்டைத் துறந்து’ அன்னியநாடுகளுக்குச் செல்பவர்களை நேரடியாகக் கண்டிக்கிறது. சிங்கப்பூர்த் தமிழர்களின் பண்பாட்டைக் காப்பாற்றும் பார்த்திபன் இச்சிந்தனைகளை எண்ணிக்கொள்வதாக  அது எழுதப்பட்டிருக்கிறது.


 


பெரும்பாலான கதைகள் செயற்கையான ஒரு களத்திலேயே நிகழ்கின்றன. மிகச்செயற்கையான திருப்பங்கள். முடிச்சுகள் போன்றவை அமைக்கப்பட்டிருக்கின்றன.  ஒரு பெண் ‘லாரன்ஸ் கம்பெனி எங்குள்ளது? தெரிந்தால் சொல்லுங்கள்’ என்று கேட்கிறாள். கேட்கப்பட்டவன் அவளை ‘அந்தக்கம்பெனி எங்குள்ளது என்று எனக்குத்தெரியும் .காட்டுவேன்’ என்று சொல்லிக் கூட்டிக்கொண்டு வருகிறான். உடனே அவள் அவனுக்கு மனைவி ஆகிறாள் . அவள் சிறுவயதில் காணாமல் போன அவன் அத்தைமகள். அது முடிச்சு.


 


இன்று இலக்கியரீதியாக இக்கதைகளை ஒருகாலகட்டத்தில் என்ன சிந்தனையோட்டம் சிங்கப்பூரில் இருந்தது என்பதை அறியும் ஆவணங்களாக மட்டுமே கொள்ளமுடியும். அன்றைய சீர்திருத்தக்கதைகளின் பாணியில் கருக்கள் நிகழ்வதற்கான செயற்கையான ஒரு சூழல் கட்டமைக்கப்பட்டிருந்தாலும் அவற்றுக்குள் ஊடாகத்தெரியும் சமூகசித்திரத்தை ஒரு வாசகன் தொட்டறியமுடியும்


 


உதாரணமாக, நாடோடிகள் கதையில் தமிழ்ப்பண்பாட்டை நிலைநிறுத்தப்போராடும் பார்த்திபன் உயர்சாதியினன். அவனால் நாட்டைவிட்டு ஓடும் பண்பாடற்ற செயலைச் செய்பவன் என வரையறை செய்யப்படும் தனபால்  மலவண்டி ஓட்டிக்கொண்டிருந்த குடும்பத்தில் பிறந்தவன். படித்து உயர்நிலையை அடைகிறான் தனபால். முழுக்கமுழுக்க ஆங்கிலேய வாழ்க்கையைத் தெரிவுசெய்கிறான். அந்த வெள்ளைய மோகத்தை பார்த்திபன் வெறுக்கிறான். தனபால் தமிழ்ப்பண்பாட்டை உதறிவிட்டு ஆஸ்திரேலியாவுக்கு ஓடிப்போகிறான். அதற்குக் காரணம் பணம் அல்ல, தன் பின்னணியை மறைத்து சமூகஅவமதிப்பைக் கடப்பது. அங்கே அவன் மனைவி மறைகிறாள். ‘பண்பாட்டை’ உதறிவிட்டுச் சென்றது தப்பு என்று கடிதம் மூலம் பாவமன்னிப்பு கோரும் தனபாலைக் காட்டி முடிகிறது கதை.


 


இந்தக்கதையில் ஆசிரியர் கடைசியில் தன்பாலைக் கண்டித்து ஒரு பெரிய சீர்திருத்தச் சொற்பொழிவையே தனபாலின் வார்த்தைகளாகவே எழுதிச்சேர்த்திருக்கிறார். அதை ஆசிரியரின் கோணம் என அப்படியே தள்ளிவிட்டு தனபாலின் இக்கட்டை, தவிப்பை நோக்கி நாம் சென்றோம் என்றால் ஆசிரியர் எழுதத்தவறிய ஒரு கதையைச் சென்றடைகிறோம். மொரிஷஸில் கூலி வேலைசெய்து, சிங்கப்பூரில் மலவண்டி ஓட்டி, ஆஸ்திரேலியாவுக்கு ஓடிப்போய், அமெரிக்காவை நாடும் தலித் குடும்பம் ஒன்று நாடுநாடாகத் தன் அடையாளத்தைத் துறப்பதற்காகத் தவித்தலைவது மிகப்பெரிய ஒரு காவியத்துயர். அடையாளத்தைக் காப்பாற்றத் துடிக்கும் தமிழ்ச்சமூகத்தின் இன்னொரு பக்கம் அது.  இன்றைய ஒரு எழுத்தாளன் அதை ஒரு பெருநாவலாகவே எழுதிவிடமுடியும்.


 


இன்னொரு உதாரணம் ‘புதிய உலகு’. மிக உயர்பதவிக்குச் சென்ற கனகு என்னும் பெண் குடும்பத்தலைவியாக இல்லாமலாகிவிட்டோமா என அடையும் குற்றவுணர்ச்சியையும் அதற்கு ஆசிரியர் நேரடியாக வந்து அவள் கணவன் வாய் வழியாகச் சொல்லும் தீர்வும் கொண்டது இக்கதை. ஆனால் சிங்கப்பூர் சூழலில் பெண்கள் அடைந்த, அடையும் அடிப்படையான ஒரு அறத்தடுமாற்றத்தைச் சொல்லும் கதை ஒன்றை நாம் வெளியே எடுக்கமுடியும்


 


கையில் பிரம்புடன் வகுப்புக்கு வந்து மேஜைமேல் தட்டி ‘அமைதி! அமைதி!’ என்று கூவிவிட்டு பேசத்தொடங்கும் ஆசிரியரின் குரலில் அமைந்த கதைகள் இவை. சிங்கப்பூரின் ஒருகாலகட்டத்தின் வாழ்க்கைச்சிடுக்குகள் அறியாமலேயே வெளிப்பட்ட கதைகளைக்கொண்டு இத்தொகுப்புகளை இலக்கியவரலாற்றில் இடம்பெறச்செய்யமுடியும்.


 


[இருபத்தைந்து ஆண்டுகள் இராம கண்ணபிரான். தமிழ்ப்புத்தகாலயம்சென்னை 1980


சோழன் பொம்மை தமிழ்ப்புத்தகாலயம் சென்னை 1981]

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 21, 2016 11:34

புண்படுதல் – கடிதங்கள்

monkey laughing 2


 


அன்புள்ள திரு.ஜெயமோகன்!
 
புண்படுதல் வாசித்தேன்

நகைச்சுவை என நினைத்து ஏதோ கூறிவிட்டு இரண்டுமுறை உதை பட்டிருக்கிறேன்.


 


முதல் முறை,கோவில் வாசலில் விட்டிருந்த நண்பரின் காலணி காணாமல் போய்விட்டது.’பரதாழ்வான் வந்துவிட்டுப் போயிருக்கிறான்’என்று கூறினேன்.


நண்பர் வைணவர். வந்தது பாருங்கள் அவருக்குக் கோபம்.காலணி தொலைந்த‌


ஆதங்கமும் சேர்ந்து என்னை காய்ச்சி எடுத்துவிட்டார்.இராமாயணம் , பரதன், ஆழ்வார்கள் அனைவரையும் நான் கேவலப்படுத்தி விட்டேன் என்று கத்திவிட்டு கையையும் ஓங்கிவிட்டார்.


 


நாய் பிரியரான நண்பர் மூன்று நாய்களுடன் காலையில் நடைப்பயிற்சிக்கு வந்தார். எதிரே வந்த நான் ‘குட் மார்னிங், பைரவ சுவாமி’ என்றேன். கோபம் தலைக்கேறி கன்னத்தில் அறைந்து விட்டார்.


 


அன்புடன்,


கே.முத்துராமகிருஷ்ணன்


ஆங்கரை,லால்குடி


 


அன்புள்ள ஜெ


 


புண்படுதல் பற்றிய உங்கள் கட்டுரை முற்றிலும் உண்மை. இதை நான் பார்த்துக்கொண்டே இருக்கிறேன். கடுமையான கிண்டல்கள் மட்டும் அல்ல சாதாரணமான வரிகளேகூட பலரையும் இங்கே புண்படுத்துகின்றன. சாதி மதம் எல்லாம் மிகக்கவனமாகத் தெரிந்துகொண்டுதான் பேசவேண்டியிருக்கிறது.


 


இதற்குப் பலகாரணங்கள் இருக்கலாம். இங்கே மக்களுக்கிடையே உரையாடலே முன்னர் நிகழ்ந்ததில்லை. சாதி சாதியாக ஒரு கூட்டுக்குள்தான் வாழ்ந்திருக்கிறார்கள். ஆகவே கிண்டல்கள் புரிந்துகொள்ளப்படுவதில்லை.


 


நான் ஒரு நண்பரிடம் பேசிக்கொண்டிருந்தேன். அவர் தன் மனைவியை என்னிடம் ‘உன் தங்கச்சி’ என்று சொல்லிக்கொண்டே இருந்தாள். நான் வேடிக்கையாக ‘நான் அப்டி நினைக்கலை மாப்ள’ என்று சொன்னேன். இருபதாண்டுக்கால நட்பு அப்படியே முறிந்தது


 


ராம்சங்கர்



தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 21, 2016 11:31

சிங்கை சந்திப்பு -கடிதம்

1 (1)


 


அன்புள்ள ஜெயன்


 


 


வேணுவும் நானும் இன்று மதியம் கோவை வந்து சேர்ந்தோம். குறுமுனியை பத்திரமாக அவருக்கான பேருந்தில் ஏற்றிய பிறகே எனக்கான இடத்துக்கு நான் புறப்பட்டு வந்தேன்.


 


 


சென்ற புதன்கிழமை வரையிலும் புறப்படுவதைப் பற்றிய நிச்சயம் இல்லாதிருந்தவன் நான்கு நாட்கள் சிங்கப்பூரில் இருந்துவிட்டு திரும்பியதை மகிழ்வுடனும் வியப்புடனும் நினைத்துக் கொள்கிறேன்.


 


 


எப்போதும் போல நிகழ்ச்சிகள் திட்டமிட்டபடி கச்சிதத்துடன் செறிவுடன் அமைந்திருந்தன. கவிதையைப் பற்றிய உரையாடலின்போது நான் சொல்ல நினைத்தது இது.


 


 


கூட்டுவாசிப்பின்போது அதிலும் தரமான கவிஞர்களின் முன்னிலையில் அவ்வாறு நிகழும்போது ஒரு மொழியின் கவிதைப் போக்கே மாறிப் போயிருக்கிறது. மலையாளக் கவிதையின் சமீபகால வரலாற்றை அறிந்தவர்களுக்குத் தெரியும், அம் மொழியின் கவிதைப் போக்கை இரண்டாகப் பிரிக்கிறார்கள் – குற்றாலம் இருமொழி கவிதையரங்குக்கு முன்னும் பின்னும் என. தமிழில் இருந்து சுந்தர ராமசாமி, கலாப்ரியா, மனுஷ்யபுத்திரன், யுவன், மோகனரங்கன் போன்றவர்களும் மலையாளத்திலிருந்து ஆற்றூர் ரவிவர்மா, கல்பற்றா நாராயணன், டி.பி.ராஜீவன், அன்வர் அலி, ராமன் போன்றவர்களும் கலந்துகொண்டிருந்தார்கள். ஒவ்வொரு கவிஞருக்கும் ஐந்து கவிதைகள். தமிழ் கவிதைகளை மலையாளத்திலும், மலையாளக் கவிதைகளை தமிழிலும் மொழிபெயர்த்துத் தந்திருந்தீர்கள்.


 


 


இதன் தொடர்ச்சியாக ஊட்டியில் இரண்டாம் அரங்கும் நடந்தது. இரு மொழியிலிருந்தும் இன்னும் சில புதிய கவிஞர்கள் கலந்து கொண்டனர்.


 


 


இந்த அமர்வுக்குப் பின்னர் மொத்த மலையாளக் கவிதைப் போக்கே மாறிப்போய்விட்டது.


 


 


இதைப் பற்றிச் சொல்லவேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் அவகாசம் கிடைக்கவில்லை. இன்று வேணுவுடன் ரயிலில் வரும்போது இதைப் பற்றி விரிவாகப் பேசிக்கொண்டிருந்தேன்.


 


 


உங்களுடனும் நண்பர்களுடனும் கழித்த இந்தப் பொழுதுகள், குறிப்பாக லேசர் காட்சியைக் காண்பதற்காக நடந்தோடிச் சென்ற அன்றைய இரவு மறக்க முடியாத ஒன்று. எங்கள் மீது நீங்கள் காட்டிய தனிப்பட்ட அக்கறையும் கவனமும் எப்போதும்போல உவகையையும் கூடவே பொறுப்பையும் கூட்டுவதாகவே உணர்கிறேன்.


 


 


இன்னும் ஒன்றை நான் இந்த நான்கு நாட்களில் கவனித்தேன் ஜெயன், நீங்கள் மெத்தக் கனிவுற்று இருக்கிறீர்கள். சினந்து கடிந்த பொழுதுளே இல்லை. சிங்கப்பூரின் ஆசிரியப் பணி அப்படியொரு ஆசிரியப் பக்குவத்தை அளித்திருக்கிறதா?


 


 


நிறைவுடன்


 


கோபாலகிருஷ்ணன்


 


 


1 (2) 

அன்புள்ள கோபால்


 


 


அப்படி ஒரு கனிவு கூடியிருந்தால் நல்லது. உண்மையில் நாவல் எழுதிமுடிந்த இடைவேளை. ஆகவே விடுதலையாக உணர்ந்தேன். கொந்தளிப்போ எரிச்சலோ இல்லாமலிருந்தேன். இதுதான் சொல்லத்தோன்றியது.


 


 


உங்கள் வருகையும் பங்கேற்பும் முக்கியமானதாக இருந்தது. சு வேணுகோபாலின் கொந்தளிப்பும் கொப்பளிப்பும் ஒரு பக்கம் மறுபக்கம் உங்கள் அமைதியும் மிகையற்ற தன்மையும் கொண்ட உரையாடல்


 


 


அரங்கில் ஒரு பெரிய exodus நாவல் பற்றிப்பேசினோம். அது நினைவிலிருக்கட்டும். எதிர்பார்க்கிறேன்


 


 


ஜெ





தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை
 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 21, 2016 11:31

September 20, 2016

பிரேமையின் நிலம்


 


 


காங்க்டாக்கில் இருந்து அதிகாலை ஆறுமணிக்கு சிலிகுரிக்குக் கிளம்பினோம். அங்கிருந்து பூட்டான் செல்வதாக திட்டம். 2012 மே மாதம் 22 ஆம் தேதி. வடகிழக்கு மாவட்டங்களைப் பார்ப்பதற்காக நானும் நண்பர்களும் கிளம்பி வந்திருந்தோம். சிலிகுரி வடகிழக்கை இந்தியாவுடன் இணைக்கும் புட்டிக்கழுத்துப் பகுதி. அங்கிருந்துதான் பூட்டானுக்கும் செல்லவேண்டும்.


 


சிலிகுரிவரை அரிய காட்சி என்பது சமவெளியில் உள்ள தேயிலைத்தோட்டங்கள். அஸாமிய தேயிலை ஒரு காலத்தில் பிரபலமாக இருந்தது. நாம் சோவியத் ருஷ்யாவிடமிருந்து ஆயுதங்களை வாங்கத்தொடங்கியபோது பதிலுக்கு தேயிலையை கொடுக்க ஆரம்பித்தோம். ஒப்பந்தப்படி அவர்கள் அதை மறுக்கமுடியாது. வேண்டாம் என்று சொல்வதற்கான உரிமையும் அன்று அம்மக்களுக்கு இல்லை.


 


ஆகவே நம்மவர்கள் தளிருடன் இலைகளையும் அரைத்துசேர்க்கத் தொடங்கினர். இந்திய டீயின் சர்வதேச மதிப்பு தரைமட்டமாக ஆயிற்று. இன்றும் இந்தியத்தேயிலை நன்மதிப்பை மீளப்பெறவில்லை. இந்திய நிறுவனங்கள்தான் இலங்கை தேயிலைத் தோட்டங்களை நடத்துகின்றன. இலங்கை தேயிலை உலகப்புகழுடன் உள்ளது.


 


சிலிகுரியிலிருந்து பூட்டானுக்குச் செல்ல ஒரு டாட்டா சுமோ வண்டியை வாடகைக்குப் பிடித்தோம். அதில் நெருக்கியடித்து அமர்ந்தோம். நெருக்கம் செலவைக்குறைப்பது மட்டும் அல்ல குளிருக்கும் நல்லது.


 


மலையிறங்கியதும் இளவெயில். இருபக்கமும் வளமான மண். மழைபெய்திருந்தமையால் பச்சை போர்த்தியிருந்த்து.தீஸ்தாவின் கரையோரமாகவே சென்றோம். பூட்டானில் நுழையும் வாசல் புயூச்சோலிங் என்ற ஊர்.  இது வங்காளத்தில் இருக்கிறது. குப்பை மலிந்த ஊர். ஆனால் நல்ல சாலையை எல்லைக்காவல்படை போட்டிருக்கிறது.


 


பூட்டான் நாட்டு நுழைவாயிலில் பூட்டானியக்  கட்டிடப்பாணியில் அமைந்த ஓர் அழகிய தோரணமுகப்பு உள்ளது. நாங்கள் செல்லும்போது தாமதமாகிவிட்ட்து. மதிய உணவு இடைவேளை. ஆகவே நாங்களும் குப்பை மண்டிய தெருவழியாகச் சென்று வங்க ஓட்டல் ஒன்றைக் கண்டுபிடித்து சாப்பிட்டுவிட்டு ஒன்றரை மணிக்கு உள்ளே சென்றோம்.


 


பூட்டானில் நுழைய விசா வேண்டாம். ஆனால் அனுமதிச்சீட்டு வேண்டும். அதற்கு இந்திய பாஸ்போர்ட் அல்லது இந்திய வாக்காளர் அடையாளச்சீட்டு இருக்க வேண்டும் .  பூட்டானின் அரசு அலுவலர்கள் அனைவரும் பூட்டானியமுறைப்படி கிமோனோ போன்ற கருஞ்சிவப்பு ஆடைகளைத்தான் அணிந்திருந்தனர். போருக்குச் செல்வதுபோன்ற தோற்றம். பெண்களின் உடை இன்னும் கொஞ்சம் நளினமானது


 


எங்களுக்கு அனுமதி அளித்த ஊழியையின் பெயர் பேமா. பிரேமா என்ற பெயரின் பூட்டானிய வடிவம் என்று கொஞ்சம் கழித்தே புரிந்தது. அழகான மங்கோலிய முகம். கொஞ்சம் தாய்லாந்து சாயல். செக்கச்சிவந்த முகம். பிரேமை வழியும் நாணம் நிறைந்த சிரிப்பு. பூட்டானிய மொழியில் ஏதோ சொன்னாள். மீண்டும் சொன்னபோதுதான் அது ஆங்கிலம் என்றும் வெல்கம் டு பூட்டான் என்றும் சொல்கிறாள் என்பதே புரிந்தது.


 


அனுமதிகள் பெற்று மாலைமூன்றரை மணிக்கு இரு வண்டிகளில் பூட்டானுக்குள் நுழைந்தோம். ஒரு சிறு எல்லைதான் நமக்கும் பூட்டானுக்கும். இப்பால் குப்பைக்குவியல்கள். எல்லைக்கு அப்பால் பூட்டான் மிகமிகச் சுத்தமான நாடாக இருந்தது. அற்புதமான சாலைகள்.


 


பூட்டானில் மலை ஏற ஏற மீண்டும் குளிர் நெஞ்சை அடைக்க ஆரம்பித்தது. வழியில் ஒரு ராணுவச் சிற்றுண்டிச்சாலையில் சாம்பார்வடையும் பருப்புவடையும் கிடைத்த்து. அங்கே பொறுப்பில் இருந்தவர் காயங்குளத்தைச் சேர்ந்த ஒரு மலையாளி. ஏஷியாநெட் பார்த்துக்கொண்டிருந்தார்.


 


இரவு ஒன்பது மணிக்கு பூட்டானுக்குள் நுழைந்தோம். பூட்டானின் தெருக்களும் கட்டிடங்களும் அவர்களுக்கே உரிய தனித்தன்மையான கட்டிடக்கலை கொண்டவை. எல்லா கட்டிடங்களிலும் பௌத்த மடாலயங்களுக்குரிய செந்நிறச் சாய்வுக்கூரையும் முனைவளைவும் இருந்தன. சட்டென்று ஓர் அன்னிய நாட்டுக்குள் நுழைந்த நிறைவு கிடைத்த்து.


 


திம்புவில் ராவன் ஓட்டலில் எங்களுக்காக அறை முன்பதிவுசெய்திருந்தோம். மூன்று நட்சத்திர விடுதி. அது சுற்றுலாப்பருவமல்ல என்பதனால் வாடகை மிகக்குறைவு.மொத்த விடுதியுமே பெண்களால்தான் நிர்வாகம் செய்யப்படுகிறது. வெயிட்டர்கள் சமையல்காரர்கள் எல்லாருமே பெண்கள். அதுதான் இங்கே வழக்கம்.


 


உற்சாகமான அழகிய இரு இளம்பெண்கள் பணிவுடன் வரவேற்று அறையைச் சரிசெய்துகொடுத்தார்கள். ஒருத்திக்கு டிப்ஸ் கொடுக்கும்போது பெயரென்ன என்று கேட்டேன். பேமா. இன்னொருத்தி? அவள் நாணத்துடன் பேமா என்றாள். பூட்டானில் எவர் பெயருடனும் நான்கு அலகுகள் இருக்கும். பெயர், தந்தைபெயர், குடும்பப்பெயர், பழங்குடிப்பெயர், ஊர்ப்பெயர். பெயரைக்கேட்டாலே அவர்களின் வீட்டுக்குச் சென்றுவிடலாம்


காலை ஐந்து மணிக்கு எழுந்து திம்புவின்  நகரவீதிகள் வழியாக காலைநடை சென்றோம். அங்கே அரசுவேலைகள், கல்விநிலையங்களுக்குப் பாரம்பரிய உடை கட்டாயமென்பதனால் ஊரே விசித்திரமாக இருந்தது. படங்களில் பார்த்த திபெத்துக்கு வந்துசேர்ந்தது போல. பெரும்பாலும் அழகிய புதிய பெரிய கட்டிடங்கள். வறுமை இருப்பதாகத் தெரியவில்லை. சுத்தமாகக் கூட்டப்பட்ட தெருக்கள். நல்ல குளிர் இருந்தது.


ஒரு டீக்கடைக்குள் நுழைந்து டீ குடித்தோம். சிக்கிம் பூட்டான் போன்ற நாடுகளின் சிறப்பம்சம் என்னவென்றால் எல்லா டீக்கடைகளும் மதுக்கடைகளும்கூட என்பதே. எல்லாவகையான மதுக்கோப்பைகளும் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. பெரிய நன்னீர்மீன்கருவாடு பொரித்து வைக்கப்பட்டிருந்தது. கறுப்பு டீ இங்கெல்லாம் மிக அருமையாக இருக்கும். பால் என்றால் யாக்கின் பால் . அது நல்ல மிருகம்தான். ஆனாலும் கறுப்பு டீ நமக்கு நல்லது. டீக்கடை நடத்துவதெல்லாமே பெண்கள். அந்த டீக்கடை உரிமையாளரின் பெயர், ஆம், பேமாவேதான்.


 


நடுவே ஒரு சந்தை இருந்தது. அதைச்சுற்றிச் சென்றவழி முழுக்கப் பிள்ளைகள் பள்ளிக்கூடம் சென்றுகொண்டிருந்தார்கள். பாரம்பரிய உடையில் பெண்கள் விசுக் விசுக் என்று சென்றார்கள். ஒரு பெண்ணிடம் இந்த அதிகாலையிலேயே பள்ளியா என்று விசாரித்தோம். அதீத வெட்கத்துடன் ஆமாம் என்று சொல்லிச்சென்றாள்.  பெயர் கேட்கவில்லை. பேமாதான், வேறென்ன இருக்கப்போகிறது?


 


பள்ளிக்கூடமும் பௌத்தமடாலயம்போலவே இருந்தது. பிலுபிலுவென பிள்ளைகள். ஒருவனிடம் பெயர் கேட்டோம். கிம் சுங் என தொடங்கி ஒரு சொல்வரிசையைச் சொல்லி இடுப்புவரை வளைத்து வணங்கி சிறுமணிக்கண்களால் சிரித்தான். அவனை கொஞ்சி விட்டு திரும்பிப்பார்த்தால் பெயரைச் சொல்வதற்காக ஒரு நாற்பது பூட்டானியக்குழந்தைகள் நின்றிருந்தன. எல்லா முகங்களிலும் பரவசச்சிரிப்பு


 


பள்ளிக்கு அப்பால் ஒரு பெரிய கோயில். அது சோர்ட்டன் நினைவகம் என்று அழைக்கப்படுகிறது. பூட்டானின் மூன்றாம் மன்னர் டிக்மே டோர்ஜி வான்சக் [ 1928 –1972]அவர்களின் நினைவாகக் கட்டப்பட்டது அது. அவர் வாழ்ந்த போதே தன் நினைவுச்சின்னத்தை புத்தரின் மனமாக உருவகித்து ஓர் ஆலயம் எழுப்பவேண்டுமெனக் கோரியிருந்தாராம். இது திபெத்திய மரபுப்படி கட்டபட்டு  டங்சே ரிம்போச்சே அவர்களால் பிரதிஷ்டைசெய்யப்பட்டது.


 


1974ல் கட்டப்பட்ட இது பல முறை விரிவாக்கம் செய்யப்பட்டது. நடுவில் பூட்டான் பாணியிலான உயரமான கோபுரம். சுற்றும் வட்டப்பாதை. அதை நோக்கிச்செல்லும் வழிக்கு இருபக்கமும் பிரார்த்தனைக்கான பெரிய அலங்கார உருளைகள் கொண்ட  கட்டிடங்கள் .


 


காலைநேரத்திலேயே அங்கே ஏராளமான பக்தர்கள் வந்து கூப்பிய கைகளுடன் வலம் வந்துகொன்டிருந்தனர். சிறிய உடுக்கை போல ஒன்றைச் சுழற்றியபடி பௌத பிட்சுக்கள் சுற்றிவந்தார்கள். பல வகையான உடைகள் கொண்டவர்கள். ரத்தச்சிவப்பு ஆடையணிந்தவர்கள் திபெத்திய லாமாக்கள் என்று தோன்றியது. சுட்ட வாழையிலை போலச் சுருக்கம் பரவிய மஞ்சள்முகங்கள்.


 


பிரார்த்தனை உருளைகள் அருகே மிக வயதான ஒரு லாமா அமர்ந்திருந்தார். அவற்றை மும்முறை சுற்றும்படி கண்கள் இடுங்க சிரித்துக்கொண்டே சொன்னார். புத்தரின் தர்மசக்கரத்தின் ஒரு வடிவம் அது. புத்தர் அதை முதலில் சுழலச்செய்தாராம். அதைப் பல்லாயிரம் கரங்கள் விடாது சுற்றவைக்கவேண்டும் என்பது மரபு. அவற்றில் பொன்னிற எழுத்துக்களில் மந்திரங்கள் எழுதப்பட்டிருக்கும். பெரும்பாலும் செந்நிறமான உருளைகள். அவற்றுக்குரிய போதிசத்வர் அல்லது லாமாவின் பெயரோ உருவமோ பின்பக்கம் இருக்கும். அந்த உருளையைச் சுற்றினால் அந்த குருநாதரின் அருள் கிடைக்கும் என்பது நம்பிக்கை.


 


திரும்ப அறைக்கு வரும் வழியில் கலைமணி என்பவரை சந்தித்தோம். விசித்திரமான மனிதர். கார்கிலுக்குப் போய் அங்கிருந்து பூட்டான் வந்திருக்கிறார். ஓய்வுபெற்ற பள்ளி ஆய்வாளார். முழுநேர வேலையே இந்தியாவைச் சுற்றி வருவது. கறுப்பான குள்ளமான மணிக்குரல்கொண்ட மனிதர்.அவர் கையில் இருந்த மஞ்சள்பையில் தமிழ் இருப்பதைப்பார்த்துத்தான் அவரிடம் பேசப்போனோம். அதை அந்த நோக்கத்துக்காகவே வைத்திருப்பதாகச் சொன்னார். தனியாக வேறு விடுதியில் அறை போட்டிருந்தார்.


 


எங்களுடன் எங்கள் விடுதிக்கும் வந்தார். தான் சென்ற ஊர்களைப்பற்றிச் சொல்லிக்கொண்டே இருந்தார். “இந்தியாவுக்குள்ள போய்ட்டே இருப்பேன் சார். ஒரு நாலு மாசம் ஊர்ல இருந்தா அபூர்வம். பென்ஷன் வருது. வைஃப் இல்ல. பசங்கள்லாம் நல்லா இருக்காங்க. அப்றம் என்னத்துக்கு ஊர்ல? இந்தியா அப்டியே விரிஞ்சு பரந்து கெடக்கு. எல்லாமே நம்ம மண்ணுன்னு நெனைச்சா பாக்கப்பாக்க சலிக்காது. எவ்ளவு எடம்? லடாக் போனீங்களா சார்?”


 


“இல்லை” என்றேன். ”போகணும் சார். லடாக் நம்ம ஊர்லயே அற்புதமான எடம். எல்லா எடங்களிலயும் ஜனங்க என்ன ஒரு அன்பா இருக்காங்க. இந்தியாவப்பாக்க ஆரம்பிச்சா இந்த தமிழன் மலையாளிங்கிற உணர்வெல்லாம் போயிரும். சாதிப்புத்தி போயிரும். சாமியப்பாக்கிற மாதிரி சார்”


 


அன்றுமுழுக்க கலைமணி எங்களுடன் இருந்தார். “சினிமா பாத்தீங்களா சார்?” என்றார். “இல்லை, நாங்க ஊரப்பாக்க வந்திருக்கோம்” என்றேன். “சினிமாத்தியேட்டருக்குப் போகணும் சார். அங்க என்ன படம் ஓடுது, எப்டிப்பட்ட ஆளுங்க வந்து பாக்கிறாங்க, எல்லாம் ரொம்ப முக்கியம்”


 


அங்கே அனேகமாக எல்லாமே நேப்பாளி மொழிப் படங்கள். பூட்டான் மொழியிலும் படங்கள் உண்டு. அரசு மானியத்தில் எடுக்கப்படுபவை. பொதுவாக இந்திப்படங்களை அப்படியே திரும்ப எடுத்துவிடுகிறார்கள். மிகமிகச்சிறிய பட்ஜெட். அனேகமாக ஐம்பதுலட்சம் ரூபாயில் ஒரு படம் எடுக்கப்பட்டுவிடும். இந்திப்படங்கள் இங்கே ஓடுவதுண்டு, ஆனால் அதேகதையில் ஒரு மஞ்சளினக் கதாநாயகி நடித்து மீண்டும் பார்க்க ஆசைப்படுகிறார்ர்கள்.


 


“நேத்து அந்தப்படத்தைப் பாத்தேன் சார்” என்றார் கலைமணி. “என்ன படம்?” என்றேன். ஏதோ ஒரு ஒலியை எழுப்பி “ஷாரூக் நடிச்ச படம்தான் சார். திரும்ப எடுத்திருக்காங்க” நான் வேடிக்கையாக “கதாநாயகிபெயர் பேமாவா?” என்றேன். “ஆமா சார்” என்றார் கலைமணி. ”அவங்க ராணிபேரும் பேமாதான்”.


 


பூட்டான் அரசரின் பெயர் ஜிக்மே கேசர் நாம்கியால் வாங்சக். இளைஞர். 2011ல் தான் மணமுடித்திருந்தார். மனைவியின்பெயர்  ஜெட்சன் பேமா. பூட்டானுக்கு ராணுவமில்லை. இந்தியா அதன் பாதுகாப்புநாடு. முக்கியமான வருமானமே சுற்றுலாவும் லாட்டரியும்தான்.


 


மறுநாள் கலைமணி மறைந்துவிட்டார். அவர் அப்படி மறைவார் என நான் எண்ணியிருந்தேன். அபாரமான தனிமை கொண்ட மனிதர். ஓர் எல்லைக்குமேல் எவரையும் அனுமதிக்கமாட்டார். பெரிய பயணிகளெல்லாம் அப்படி தனிமையானவர்கள்தான்


 


பூட்டானில் நாலைந்துநாள் இருந்தோம். அங்குள்ள பௌத்த மடாலயங்களைப் பார்த்தோம். குன்றின் உச்சியிலிருக்கும் புலிக்கூடு மடாலயம் இந்தியாவின் அற்புதங்களில் ஒன்று. அங்குள்ள அருங்காட்சியகம் பூட்டானின் வாழ்க்கையை முழுமையாகக்காட்டுவது. அங்கும் ஒரு பேமா வழிகாட்டியாக வந்தார். இன்னொரு பேமா சிறுசட்டை அணிந்து அம்மாவின் கைப்பிடித்து இடுங்கிய கண்களால் எங்களை நோக்கிச் சிரித்தபடி வந்தாள்.


 


திரும்ப ப்யூச்சேலிங்க்குக்கு காரில் வந்துகொண்டிருந்தோம். ஒருகிழவி அழகிய குழந்தையுடன் வந்துகொண்டிருந்தாள். சுட்டபழம் போல சுருங்கிய முகம். இடுங்கியகண்களுக்குள் நீர்த்துளிவிழிகள். பெரிய பற்களுடன்கூடிய சிரிப்பு. “பூட்டானைவிட்டுக் கெளம்பறோம். பேமாகிட்ட பை சொல்லிருவோம்” என்று காரை நிறுத்தினோம்


 


குழந்தையின் பெயர் பேமாவேதான். கிழவிக்கு தன் பேத்தி புகைப்படம் எடுக்கப்படுவதில் பெருமகிழ்ச்சி. பூட்டானை நிறைத்துள்ள பிரேமையிடம் விடைபெற்றுக்கொண்டோம். அந்த வெள்ளிமலைகள், மகத்தான மலைச்சரிவுகள், பொன்னொளிர் முகில்கள், மௌனம் தேங்கிய வெளிநிலங்கள் பிரேமையை மட்டுமே அளிக்கக்கூடியவை.


 


 


 


 

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 20, 2016 11:35

இந்திரா பார்த்தசாரதியின் பெயர்

1


 


மனைவியின் பெயரில் எழுதும் எழுத்தாளர்களில் முக்கியமானவர் இந்திரா பார்த்தசாரதி. 1990 ல் எனக்கு அகிலன் நினைவுப்பரிசு ரப்பர் நாவலுக்காகக் கிடைத்தபோது இந்திரா பார்த்தசாரதி நடுவர்களில் ஒருவராக இருந்தார். விழாவுக்கு அவரும் அவர் துணைவியும் வந்திருந்ததை நினைவுகூர்கிறேன்


 


முருகபூபதி இந்திரா பார்த்தசாரதி மற்றும் இந்திரா பற்றி எழுதிய கட்டுரை

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 20, 2016 11:31

September 19, 2016

சிங்கப்பூர் தமிழிலக்கியத்தின் மரபும் செல்திசையும்

 


 


வணக்கம்,


 


சிங்கப்பூர் இலக்கிய மரபைப்பற்றி தேசியக்கல்விக்கழகத்தின் இணைப்பேராசிரியர்  சிவகுமாரன் அவர்களுடன் உரையாடிக் கொண்டிருந்தபோது ஒரு செய்தியைச் சொன்னார். சிங்கப்பூரின் தொடக்ககாலத் தமிழ் எழுத்தாளர்களில் ஒருவரான முல்லைவாணன்  கரையிலிருந்து மூட்டைகளை தோளில் தூக்கிக் கொண்டு பலகை வழியாக நடந்து சென்று படகுகளில் ஏற்றும் பணியைச் செய்துவந்தார். அவர் சொன்னபோதே ஒரு சின்ன திடுக்கிடலுடன் அந்தக் காட்சியை நான் என் கற்பனையில் பார்த்தேன்.


 


மக்களுடன் மக்களாக இருந்து எழுதுவதாக எல்லாம் சொல்லிக் கொள்ளலாம். ஆனால் கடுமையான உடலுழைப்பு என்பது அறிவுசார்ந்த செயல்பாட்டுக்கு முற்றிலும் எதிரானது. உடலூக்கம் அறிவுச்செயல்பாடுக்கு மிக இன்றியமையாத ஒன்று. எட்டு மணி நேரம் சுமை தூக்கிக் களைத்த ஒருவரால் அதன் பிறகு தசைகளைத் தளர்த்தி ஓய்வெடுக்க மட்டுமே முடியும். மூளையை இயக்கும் உயிர் விசை மிகவும் குறைந்திருக்கும். அதற்குப்பின்னரும் அவர் எழுதினாரென்றால்  ‘போரும் அமைதியும்’ எழுதிய டால்ஸ்டாய் பிரபுவின் உயிர்ஆற்றலுக்கு நிகரான ஆற்றல் அவருக்கு இருந்தது என்றுதான் அர்த்தம்.  மகா காவியங்களை எழுதும் முனிவர்களுக்கு நிகரான தவவல்லமையைக் கொண்டது அச்செயல். இந்த மேடையில் அந்த முன்னோடிக்காக எழுத்தாளன் என்ற முறையில், அவருடைய வழி வந்தவன் என்ற முறையில் தலை வணங்குகிறேன்.


 


அன்றைய படைப்பாளிகள் எப்படிச் செயல்பட்டார்கள் என்பதை ஒரு உரைச்சித்திரமாகவே பேராசிரியர் சிவகுமாரன் சொன்னார். புத்தகங்களைத் தாங்களே அச்சிட்டு அவற்றை சைக்கிளில் கட்டிக் கொண்டு தொழில் சார்ந்து செல்லும் இடங்களில் எல்லாம் வீடுகளுக்குச் சென்று விற்றிருக்கிறார்கள். ஓய்வு நேரத்தில் பேருந்து தரிக்கும் இடங்களில் நின்று கூவி விற்றிருக்கிறார்கள். பொங்கலுக்கும் தீபாவளிக்கும் புத்தகங்களுடன் வீடு வீடாகச் சென்று கதவைத் தட்டி  நன்கொடை பெற்று கூட்டங்கள் நடத்தியிருக்கிறார்கள். அப்போது கூட அதிகபட்சம் முன்னூறு பிரதிகள் விற்றிருப்பார்கள். ஒவ்வொரு வருடமும் அவர்கள் கணிசமான பணத்தை இழந்திருப்பார்கள். அவர்கள் செய்த தொழிலை வைத்து பார்த்தால் அந்தப்பணம் என்பது எளிய தொகை அல்ல, அவர்களின் ரத்தம்..


 


பிறிதொரு எழுத்தாளரைப்பற்றி கேள்விப்பட்டேன். பரணன் என்ற பெயரில் அவர் கவிதைகள் எழுதினார். பிறப்பால் மலையாளி. தென்கிழக்குஆசியநாடுகளின் பெரிய விருதான ஆசியான் விருது பெற்ற கவிஞராயினும் ஒரு உணவகத்தில் தட்டு கழுவி மேசை துடைக்கும் பணியைத்தான் இறுதி வரை செய்து வந்தார். அந்த உணவகத்திலேயே உயிர் துறந்தார்.   அந்த சென்ற காலப் படைப்பாளியைப்பற்றி எண்ணியபோது ஒன்றிலிருந்து ஒன்றாக பல வாயில்கள் எனக்குத் திறந்து கொண்டன. முதற்கேள்வி பிறப்பால் மலையாளியாகிய அவர் ஏன் தன்னை தமிழ் அடையாளத்திற்குள் செலுத்திக் கொண்டார்? இரண்டாவதாக பரணன் என்ற பெயரை ஏன் அதற்கு அவர் தேர்ந்தெடுத்தார்?


 


பரணன் தளைதட்டாது மரபுக்கவிதையின் அனைத்து வடிவங்களையும் எழுதுவதில் தேர்ச்சி பெற்றவர் என்றார்கள். அப்படியென்றால் தனக்கு அரிதாகக் கிடைக்கும் ஓய்வு நேரத்தில் பெரும்பகுதியை அவர் அதற்காகச் செலவிட்டிருக்கிறார். அவருடைய வாழ்க்கைத் தரத்தில் உள்ள ஒருவருக்கு கல்வி நிலையங்களின் முறையான கல்வி கிடைத்திருக்க வாய்ப்பில்லை. ஆசிரியர்கள் அமைந்திருக்க மாட்டார்கள். நூலகங்கள் கூட அரிதாகவே கிடைத்திருக்கும் அன்றைய சூழலில். சுயமுயற்சியால் தேடி அலைந்து அந்த தேர்ச்சியை அவர் அடைந்தார். அவரை செலுத்திய அந்த விசை எது?


 


அக்கேள்விக்கான விடைகளைக் கண்டுகொண்டோமென்றால் சிங்கைத் தமிழிலக்கியத்தின் விதை திறந்து முதல் முளை வெளிவந்த தருணத்தை தொட்டு அறிந்துவிடலாம். பரணர் சங்க இலக்கியத்தை சார்ந்த ஒரு பெயர். கபிலரும் பரணரும் அவர்களின் கவிதை சார்ந்த ஒரு குறிப்பிட்ட அடையாளம் உடையவர்கள். அவர்கள் எழுதிய நிலப்பகுதியில் பெரும்பகுதி குறிஞ்சி. அதாவது இன்றைய கேரளப்பெருநிலம். சங்க இலக்கியத்திற்குள் புகும் மலையாளிகளுக்கு மிக உவப்பான கவிஞர்களாக இருப்பவர்கள் இவர்கள் இருவருமே. காடு நாவலில் கபிலரின் சொல் வழியாகவே நான் பிறந்து வளர்ந்த கேரள எல்லையோரக்காடுகளைக் நான் காட்டியிருக்கிறேன். வறனுறல் அறியாச்சோலை என்று கபிலர் சொல்லும் அந்த நிலமே நான் பிறந்து வளர்ந்து வாழ்வது.


 


நெடுந்தொலைவில் இங்கே இந்த நெரிசலான துறைமுக நகரத்தில் வாழ்ந்த அந்த முன்னோடிக் கவிஞன் பரணன் என்ற பெயரைத் தனக்கு சூட்டிக் கொள்ளும் போது சங்க காலத்து குறிஞ்சி நிலத்திற்கு மட்டும் செல்லவில்லை, தான் விட்டு வந்த கேரள நிலத்திற்கும் தான் செல்கிறான். மலையாளத்திற்கும் தமிழிற்கும் பொதுவான ஓர் இறந்த காலத்திற்கு செல்கிறான். அங்கு தன்னுடைய அடையாளத்தை அவன் கண்டடைகிறான். அதை மரபுசார்ந்த கவிதைகள் வழியாக நிகழ்காலத்திற்கு கொண்டுவந்து நிறுவுகிறான்.


 


கவிஞர் பரணனிடம் எவரும் புதுக்கவிதையைப்பற்றிப் பேசியிருக்க முடியாது. அது அவருக்கு மிகப்பெரிய ஒவ்வாமையைத்தான் அளித்திருக்கும். ஏனெனில் அவர் நிகழ்காலத்திலிருந்து இறந்தகாலத்திற்கு சென்று கொண்டிருந்தார். தான் வாழ்ந்த மண்ணைத் தோண்டித் தோண்டி மூதாதையர் வாழ்ந்த நிலத்திற்கு செல்வதைப்போல. அங்கொரு முதுமக்கள் தாழியைக் கண்டடைந்து அதற்குள் உறங்கிக் கிடக்கும் எலும்பு ஒன்றில் தன் மூதாதையைக் கண்டடைவது போல.


 


 


இங்கே சிங்கப்பூர் மண்ணில் நின்று கொண்டு ஒருவன் சங்க இலக்கியத்தில் தனக்கொரு முன் தொடர்ச்சியைக் கண்டு கொள்வதில் இருக்கும் கனவும் ஏக்கமும் தனிமையும் என்னை உலுக்குகின்றன. அந்த ஆதி உள எழுச்சியின் முன் மிகச்சிறியவனாக மாறுகிறேன். அனைத்தையும் இழந்தாலும் இப்படி ஒரு ரகசியச் சுரங்கம் மூலம் தன் மூதாதையரைச் சென்று அடையும் வழி ஒரு திறந்து கிடக்கிறதே என்று எண்ணி மனநிறைவு கொள்கிறேன். நான் செய்து கொண்டிருப்பதும் அதுவல்லவா என்று எண்ணி பெருமிதம் அடைகிறேன்.


 


பிறிதொரு முன்னோடியைப்பற்றி எனக்குச் சொன்னார்கள். அ.நா. மொய்தீன் என்று அவருக்குப்பெயர். ஒற்றைக்காசுகளாகவே பணம் திரட்டி உமறுப்புலவர் பெயரில் ஒரு பள்ளியை ஆரம்பித்தார். ஓர் எளிய வாயிற்காவலராகவே தன் வாழ்க்கையை வாழ்ந்தவர் அவர். இன்றும் இந்த சிங்கப்பூர் மண்ணில் தமிழர்களின் அடையாளமாக நின்றிருக்கும் உமறுப்புலவர் மையத்தின் தொடக்கப்புள்ளி அவர். தனது வேரை அவர் எட்டயபுரத்தில் பள்ளி வாசலுக்குப்பின்னால் அமைந்துள்ள கபரிடத்தில் துயிலும் தமிழின் பெருங்கவிஞரிடம் கண்டு கொண்டது, பரணன் தன் வேரைக் கண்டு கொண்டதற்கு நிகரானது.


 


சிங்கப்பூர் இலக்கியத்தின் தொடக்கத்தை இவ்வாறு வகுக்கலாம். அந்நிய நாடொன்றில் தன் வேர்களை கண்டு கொள்ளுதல் அதை சமகாலத்தில் வைத்து வரையறுத்துக் கொள்ளுதல்.


 


எந்த ஒரு பண்பாட்டிலும் இலக்கியம் அடையாளத்தை தேடுவதாகவும் வரையறுப்பதாகவுமே தொடங்கும். பலசமயம் இனம் ,வட்டாரம், குருதியுறவுகள் சார்ந்து ஒருவகையான குறுக்கல் போக்காகவே அது அமையும். சென்றகாலத்திற்குள் ஊடுருவி தனக்கென ஒரு தொப்புள் கொடித் தொடர்ச்சியை உருவாக்கிக் கொள்ளவே அது எத்தனிக்கும். அதில் வியப்பதற்கு ஏதுமில்லை. ஏனெனில் இலக்கியம் என்பதே தன்னளவில் மனிதகுலம் தனக்கு உணர்வு ரீதியான ஒரு தொடர்ச்சியை கட்டமைத்துக் கொள்ளும் பொருட்டு கண்டுபிடித்ததே. தொல்பழங்காலத்தில் தனது மூதாதையரின் கதைகளை தன் வாரிசுகளுக்குச் சொல்லி ஒரு தலைமுறைத் தொடர்ச்சியை உருவாக்கிய ஆதிக் கதைசொல்லிதான் அனைத்து இலக்கியத்திற்கும் தொடக்கம்.


 


உலகம் முழுக்க சொல்லப்படும் கதைகள் பெரும்பாலும் குலவரிசைக்கதைகளாக இருப்பதைப்பார்க்கலாம். மகாபாரதத்தில் கணிசமான பகுதிகள் குலவரிசைப்பட்டியல்களாகவே அமைந்துள்ளன. அனைத்து வகைகளிலும் அறுபடாத ஒரு தொடர்ச்சியை மொழிக்குள் நீடிக்க வைப்பது இலக்கியத்தின் கடமை. வேரிலிருந்து இலைநுனி வரைக்கும் செல்லும் ஒரு ரசஓட்டமே இலக்கியம் என்று கூட சொல்லலாம். தொன்மையான இலக்கியங்களை எடுத்துக் கொண்டால் கூட   பழங்காலத்திலிருந்து ஒரு வேர்த்தொடர்ச்சி எடுத்துக் கொண்டு ஒரு அடையாளத்தை சமைக்கும் தன்மை அவற்றுக்கு இருப்பதைக்காணலாம்.


 


உதாரணமாக, சங்கப்பாடல்களை எடுத்துக் கொண்டால் நமக்குக் கிடைக்கும் மிகத் தொன்மையான பாடல்களிலேயே


வடாது பனி படு நெடுவரை வடக்கும்


குடாது குமரியின் குடக்கும்


என ஒரு இந்திய அடையாளத்தை அது உருவாக்கிக் கொள்வதை பார்க்கலாம். அதற்குள் மன்னர்கள் ,குடிகள், நிலம் என பல அடையாளங்களை அவை கட்டமைத்துக் கொள்கின்றன. இந்த அடையாளங்களுக்கு தங்களுக்கு முந்தைய பழங்குடி மரபிலிருந்து ஆதாரங்களை உருவாக்கிக் கொள்கின்றன.


 


நவீன இலக்கியமும் அவ்வாறுதான். தமிழில் நவீன இலக்கியத்தின் தொடக்கம் என்பது பாரதி. அதை அவன் எழுதப்புகும்போதே ’யாமறிந்த புலவரிலே கம்பரைபோல வள்ளுவரைப்போல் இளங்கோவைப்போல்” என்றொரு பட்டியலை முன்வைக்கிறான். அவர்களின் தொடர்ச்சியாக தன்னைப்பற்றி சொல்லும் போது ’சொல்புதிது பொருள்புதிது நவகவிதை’ என்று தன் கவிதையை அடையாளப்படுத்துகிறான்.


 


மலேசியாவின் மூக்கு நுனியாக இருந்த இந்த மண்ணில் பல்வேறு வழிகளூடாக இங்கு வந்து சேர்ந்து கடும் உழைப்பினூடாக வாழ்க்கையை உருவாக்கிக் கொண்ட நமது முன்னோடிகள்  தங்களுக்கு ஒரு வேர்த்தொடர்ச்சியை  தமிழகத்தில் கண்டடைந்தனர். அவற்றை இங்கு நட்டு தங்கள் குருதியை ஊற்றி வளர்த்து ஓர் அடையாளத்தை உருவாக்கினர்.


 


ஆரம்பகாலச் சிங்கப்பூர் கதைகள் அனைத்திலுமே இந்த அடையாள உருவாக்கம் ஒரு பெரும்பங்கை வகிப்பதை நான் பார்க்கிறேன். இங்கு அவர்கள் வரும்போது அவர்களின் இன அடையாளமும் இந்திய தேசமென்ற அடையாளமும் வலுவாக இல்லை. மாறாக மொழியே தூலமான அடையாளமாக இருந்தது. ஆகவே தங்களை மொழி சார்ந்து அவர்கள் அடையாளப்படுத்துகிறார்கள். அதன் தொடர்ச்சியாகவே மொழிசார்ந்த அடையாள அரசியலை  தமிழகத்தில் முன்னெடுத்த திராவிட இயக்கத்துடன் அவர்களுக்கான தொடர்பு உருவாகியது.


ma

மா இளங்கண்ணன் [புகைப்படம் :நன்றி தேசிய கலைக்கழகம் சிங்கப்பூர்]


சிங்கை படைப்புகளை கால வரிசைப்படி அடுக்கும்போது மிக எளிதாக தமிழ்நாட்டில் உருவாகி வந்த தமிழியயக்கக் கொள்கைகளுடன் சிங்கப்பூர் எழுத்துகள் தங்களை இணைத்துக் கொள்வதைக்  கண்டேன். அங்கிருந்த தமிழறிஞர்களையும் தமிழியக்க அரசியல்வாதிகளையும் இங்கு அழைத்துவந்து அவர்களிடம் இந்த வழிகாட்டுதலைப் பெற்றிருக்கிறார்கள். உண்மையில் அது ஓர் அடையாளம் பெற்றுக்கொள்ளுதலே ஒழிய அவர்களின்  தேசிய உருவகத்துடன் தன்னை இணைத்துக்கொள்ளுதல் அல்ல. அப்படி நிகழவுமில்லை. இங்குள்ள மூன்றுபட்டைகொண்ட பண்பாட்டுத்தேசியத்துடன்தான் சிங்கைத் தமிழர்கள் தங்களை இணைத்துக்கொண்டார்கள். அதற்குள் தங்கள் தனித்தன்மையை வரையறுக்கவே தமிழியக்கத்தின் தொடர்பு பயன்பட்டது என நினைக்கிறேன்.


 


இவ்வாறு  வேர் தேடிச்சென்று அடையாளத்தை நிறுவி தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும் படைப்புகளுக்கு சில அழகியல் தனியியியல்புகள் உண்டு.


 


ஒன்று: நான் ஏற்கனவே சொன்னது போல பழமை நாட்டம். அவர்களின் கனவுகளும் ஏக்கங்களும் இறந்தகாலம் நோக்கியவை. ஆகவே அவர்கள் பழைமையை சார்ந்தே சிந்திப்பார்கள். முற்போக்கான கொள்கைகளுக்குக்கூட தொல்பழங்காலத்தில் இருந்த ஒரு பொற்காலத்திலிருந்து சான்று தேடுவார்கள்.


 


இரண்டு: ஒரு பண்பாட்டை சில அடிப்படைக்கூறுகளைக் கொண்டு சுருக்கும் ஒரு முயற்சி. அதாவது பண்பாட்டின் உள்முரண்பாடுகளையோ உள்விவாதங்களையோ கணக்கில் கொள்ளாமல் சில அடிப்படைப் புள்ளிகளை மட்டும் கண்டடைந்து அவையே தமிழ்ப் பண்பாடு என்றும் தமிழ் மரபு என்றும் நிரூபிக்கும் ஒரு குறுக்கல் போக்கு. (Reductionism).


 


மூன்று: இவ்வடையாளங்களை வலியுறுத்திக் கூறும் நோக்கம் கொண்டமையால் உருவாகிவரும் ஒருவகையான முழக்க குரல் , அறைகூவும் பாணி, பிரச்சாரம் செய்யும் போக்கு. ஆகவே இப்படைப்புகள் அனைத்துமே ஒருவகையான மேடைமுழக்கத்தன்மை கொண்டுள்ளன.


 


மரபுக்கவிதை இயல்பாகவே பழமையான மொழியைக் கொண்டது. அம்மனநிலையிலிருந்து நவீன இலக்கியத்திற்கு வரும்போது இன்றைய யதார்த்த மொழிக்குள் வருவதற்கு இவர்களுக்கு சங்கடம் இருக்கிறது. யதார்த்த மொழியில் கதைகளை எழுதும்போது கூட ஆசிரியர்கூற்றாக வரும் மொழியானது அணிகளும் அலங்காரங்களும் கொண்டதாகவும், மிகையுணர்ச்சி சார்ந்ததாகவும் உள்ளது. தமிழ்ப்பண்பாடு என்று சிலவற்றை அவர்கள் உருவகித்துக் கொள்கிறார்கள். அன்றைய திராவிட இயக்கம் முன்வைத்த காதல்,மானம்,வீரம் ஆகியவை. இங்கு சிங்கப்பூரில் அவற்றை முன்வைக்கும்போது கூடுதலாக தமிழ் ஒழுக்கம் என்பதையும் பேசுகிறார்கள்என்று தோன்றுகிறது. காரணம் இங்கு அவர்கள் கண்ட சீன, மலேய ஒழுக்கவியல் சற்று மாறுபட்டது.


 


இந்த ஆரம்ப காலக் கதைகள் அனைத்தையுமே  அழகியல் ரீதியாக ‘பிரச்சார இலக்கியம்’ என்று வரையறுத்துவிட முடியும் பிரச்சார இலக்கியத்தின் அடிப்படைப்பண்பு என்னவென்றால் அப்பிரச்சார நோக்கத்துக்கு அப்பால் அவற்றால் செயல்பட முடியாது என்பதுதான். ஒரு பிரச்சார இலக்கியத்தை நோக்கி  ‘ஆம், நீ சொல்வதை நான் முழுமையாக ஏற்றுக் கொள்கிறேன்’ என்று ஒருவாசகன் சொல்லிவிடுவானென்றால் அதன்பிறகு அந்தப்பிரச்சார இலக்கியத்துக்கு அவனிடம் சொல்வதற்கு ஏதுமில்லை. பிரச்சாரம் செய்யப்பட்ட விஷயங்கள் சமூகத்தில் பரவலாக ஏற்கப்படுமென்றால் அப்படைப்புகள் வரலாற்றுத் தடயங்களாக மாறி பின்னால் நின்றுவிடும்.


 


கலைப்படைப்புகள் அப்படி அல்ல. அவை முடிவிலாது முளைக்கக்கூடியவை. அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு வெவ்வேறு அர்த்தங்களை அளித்தபடி தன்னைப் புதுப்பித்துக் கொள்பவை. அவை ஆசிரியனுக்கும் வாசகனுக்கும் தெரிந்த தளத்தில் நிற்பவை மட்டும் அல்ல. முழுக்க முழுக்கப் பேசிய பிறகும் கூட பேசப்படாத ஒரு பக்கம் அவற்றில் எப்போதுமே இருக்கும். இன்னும் சொல்லப்போனால் கலைப்படைப்புகள் கலைஞனின் சிந்தனையும் செயலூக்கமும் வெளிப்படுபவை அல்ல. அவனுடைய ஆழ்மன வெளிப்ப்பாடுகள் அவை. மொழி வழியாக வெளிப்படும் கனவுகள் அவை.


 


பிரச்சார இலக்கியத்தில் எவை பிரச்சார நோக்கத்தை கடந்து செல்கின்றனவோ அவை மட்டுமே கலைபடைப்புகளாக எஞ்சுகின்றன. அவ்வாறான படைப்புகள் மேலே சொன்னதுபோல அடையாளத்தேடலும்  அடையாள வலியுறுத்தலும் ஓங்கி நிற்கும் காலத்தில் மிகக் குறைவாக இருக்கும். அது இயல்பானதே. இன்று அந்தக்காலகட்டத்தின் ஆழ்மனவிசையை நாம் ஏற்றுக் கொள்ளும் போதே அவற்றை விமர்சன பூர்வமாக அணுகி அவற்றில் எது கலை எது பிரச்சாரம் என்பதை சுட்டிக் காட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்தப் பார்வையை தெளிவாக உருவாக்கிக் கொள்ளவில்லையென்றால் நாம் கலையின் தொடர்ச்சியை இழந்துவிடுவோம்.


 


வரலாறென ஒரு படைப்பை மதிப்பிடுவது வேறு ,கலை ரீதியாக மதிப்பிடுவது வேறு. இங்கு உருவான தமிழ் அடையாளக் கண்டடைதலும் அது உருவாக்கிய இலக்கிய அலைகளும் என் வணக்கத்துக்குரியவை. இலக்கிய வரலாற்றில் தவிர்க்கக்கூடாதவை. அதேசமயம் அவற்றில் ஓரிரு படைப்புகளையே கலை ரீதியான் பெறுமானம் உள்ளவை, இன்றும் நம்முடன் பேசுபவை என்று சொல்வேன். இங்கு அவற்றை சார்ந்த விமர்சனத்தை நான் முன் வைக்க விரும்பவில்லை. அத்தகைய ஒரு கறாரான விமர்சனப்பார்வையை இங்குள்ள இன்றைய தலைமுறையினர் உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்று மட்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பிறிதொரு தருணத்தில் ஒவ்வொரு படைப்பாக எடுத்து இதை நான் ஏன் சொல்கிறேன் என்று என்னால் விளக்க முடியுமென நினைக்கிறேன்.


 


அடையாள உருவகத்தின் அடுத்த கட்டமாக அமைவது சீர்திருத்தப் பார்வை. இயல்பான பரிணாம வளர்ச்சி அது. ஒரு குறிப்பிட்ட அடையாளத்தை உகந்தது என நீங்கள் பண்பாட்டுக்கு முன்னால் வைத்தீர்கள் என்றால் அந்த அடையாளத்துக்கு ஒவ்வாத அனைத்தையும் மாற்றி அமைக்க முயலுவீர்கள். அதுவே சீர்திருத்த நோக்கு. சீர்திருத்தநோக்கு எப்போதும் எதிர்கால நோக்கு கொண்டதாக அமையவேண்டுமென்பதில்லை. எதிர்காலத்தை இறந்தகால மாதிரியில் அமைக்கவிரும்புபவர்கள் திரும்பிப்பார்த்து சீர்திருத்தம்பேசுபவர்களாகவும் இருப்பார்கள்.


 


இந்தியாவில் மூன்று வகையான சீர்திருத்தப் பேரியக்கங்கள் நவீன காலகட்டத்தில் ஆரம்பித்தன. ஒன்று மதச்சீர்திருத்த இயக்கம். தயானந்த சரஸ்வதியின் ஆரிய சமாஜம், ராஜாராம் மோகன்ராய் உருவாக்கிய பிரம்ம சமாஜம், விவேகானந்தரின் பேரியக்கம் என தொடங்கி முதல் காந்திய இயக்கம் வரை ஒரு வரலாற்றுத்தொடர்ச்சி அது. அறிஞர்களும் ஞானிகளும் இந்து மதத்தின் முரண்பாடுகளையும் மூட நம்பிக்கைகளையும் சீர்திருத்த முயன்றார்கள். அவ்வலை இந்தியா முழுக்க பரவவே கேரளத்தின் நாராயணகுரு போன்று தமிழகத்தில் வள்ளலார் போன்று வெவ்வேறு மதச் சீர்திருத்தவாதிகள் உருவாயினர்.


MG_1657-1-273x300

கண்ணபிரான்


 


இதன் விளைவாக உருவான சமூக சீர்திருத்த அலை இரண்டாவது. மரபார்ந்த சமூக கட்டுமானத்தை உடைத்து மறுஆக்கம் செய்து நவீன காலகட்டத்துக்கு கொண்டு வரும் பெருமுயற்சி இது. மகாத்மா புலேயிலிருந்து கேரளத்தின் அய்யங்காளி, ஈ.வெ.ரா வரைக்கும் ஒரு பெரும் பட்டியலை நாம் போட முடியும் . சாதிய ஒழிப்பு, பெண்விடுதலை, பண்ணையடிமை மனநிலை அகற்றல் போன்ற தளங்களில் பெரும்பணி நிகழ்ந்தது.


 


மூன்றாவதாக பண்பாட்டுச் சீர்திருத்தம்.சென்றகாலப்பண்பாட்டிலிருந்து சாராம்சமான பகுதிகளிலிருந்து மீட்டுக் கொண்டு வந்து அவற்றை முன்னிறுத்தி தேவையற்ற பகுதிகளை களைவதற்கான ஒரு முயற்சி அது.  இந்தியசிந்தனை மரபு இவ்வியக்கத்தால்தான் மீட்டு எடுக்கப்பட்டது. ஈஸ்வர சந்திர வித்யாசாகரிலிருந்து சுப்ரமணிய பாரதி வரை பல்லாயிரம் அறிஞர்களை நாம் வரிசையாகச் சொல்லமுடியும்


 


தமிழில் பண்பாட்டு சீர்திருத்தத்திற்குள் மூன்று சரடுகள் உண்டு.


 


ஒன்று : மொழிச் சீர்திருத்தம் இதைத் தனித்தமிழ் இயக்கம் என்று சொல்வோம். தமிழின் பிற மொழிக்கலப்பைக் களைவது, தமிழைச் செம்மைப்படுத்தி ஒரு தகுதர அமைப்பை உருவாக்குவது ஆகியவை  நம்முடைய முதன்மை இலக்காக இருந்தது. பரிதிமாற்கலைஞர் மறைமலையடிகள் தொடங்கி மொழிச் சீர்திருத்தவாதிகளின் பட்டியல் நமக்குத் தெரியும்


 


இரண்டு: தமிழிசை இயக்கம். சங்ககாலத்திலிருந்து உருவாகி வளர்ந்து ,சிலப்பதிகார காலத்தில் குறிப்பிடப்பட்டு, ஆழ்வார்களின் வழியாக பண்ணிசையாக நீடித்த தமிழிசை  இந்தியாவின் பிற இசை மரபுகளுடன் கலந்து ஒட்டுமொத்தமாக தென்னிந்திய இசையென்று இன்று அறியப்படுகிறது. கர்நாடக சங்கீதம் என்று அதற்கு இன்னொரு பெயர் உண்டு. இந்த இசையின் தமிழ்வேர்களை முன்னிறுத்துவதும் அதன் தமிழ்த்தனித்தன்மையை மீட்டு எடுப்பதுமே தமிழிசை இயக்கம். தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் அதன் தொடக்கப்புள்ளி


 


மூன்றாவது : தமிழ்ப் பதிப்பியக்கம். தமிழின் அனைத்துத் தொன்மையான நூல்களையும் பிழையற அச்சிட்டு தமிழுக்கு கொண்டு வருவதும், அதற்கு சமகால உரை எழுதுவதும் இவ்வியக்கத்தின் நோக்கம். உ.வே.சாமிநாதய்யர், சௌரிப்பெருமாள் அரங்கன், சி.வை தாமோதரம்பிள்ளை என இதன் முன்னோடிகள் பலர்


 


சிங்கப்பூர் இலக்கியத்தின் இரண்டாம் காலகட்டம் என்பது சீர்திருத்தநோக்கை முன்வைப்பது என்று நூல்களின் வழியாகத் தெரிகிறது. ஆனால் பொதுவாகக் கவனிக்கும்போது மேலே சொல்லப்பட்ட சீர்திருத்த அலைகளில் மதச்சீர்திருத்த இயக்கம் மிகக்குறைவாகவே இங்கு நிகழ்ந்திருப்பதாக தெரிகிறது. இங்குள்ள படைப்புகளில் அதன் தடையங்கள் இல்லை. வெளியே என்ன நிகழ்ந்தது என்பதை எவராவது ஆய்வுநோக்கில் சொல்லவேண்டும். சைவ வைணவ வழிபாடுகள், சிறுதெய்வ வழிபாடுகள் அதன் பழைமையான வடிவில் அப்படியே இங்கே நீடிக்கின்றன. வள்ளலார் இயக்கத்தின் செல்வாக்கு சிங்கையில் பெரிய அளவு இருந்ததாகத் தெரியவில்லை.


 


சொல்லப்போனால் இங்குள்ள சைவ இயக்கங்களைப்பார்க்கையில் சைவமதம் பலவகையான சீர்திருத்த இயக்கங்களால் மறுவார்ப்பு செய்யப்பட்ட பத்தொன்பதாம் நூற்றாண்டுக்கு முந்தைய கண்மூடித்தனமான உணர்வுநிலைகள், ஆசாரங்கள் இங்கே நீடிப்பதைக் காணமுடிகிறது. பிற மதங்களுடனும் இந்துமதத்தின் பிற வழிகளுடனும் அனைத்து வாயில்களையும் மூடிக்கொண்ட சில அமைப்புகளைக்கூட நான் பார்த்தேன்.


 


சமூக சீர்திருத்த அலை மிகுந்த வீச்சுடன் பல புனைகதைகளில் வெளிப்பட்டுள்ளது.  இளங்கண்ணன், புதுமைதாசன் போன்றவர்களின் கதைகளைப் பார்க்கையில் தமிழகத்தின் சமூக சீர்திருத்த இயக்கங்களின் கருத்துகள் நேரடியாக வெளிப்படுவதைக் காண்கிறேன். சமூக உறவுகளின் இறுக்கங்கள், பழைமையான ஆசாரங்கள் மற்றும் மூடநம்பிக்கைகளுக்கு எதிரான குரல் ஓங்கி ஒலிக்கிறது. சமூகக் கட்டுப்பாடுகளை மறு அமைப்பு செய்யும் விழைவு வெளிப்படுகிறது. திராவிட இயக்கத்தின் சமூக சீர்திருத்தக் கருத்துகள் எழுபதுகள் வரைக்கும் கூட இங்குள்ள இலக்கியத்தில் ஓங்கி ஒலிப்பதை என்னால் காண முடிகிறது.


 


பண்பாட்டுச் சீர்திருத்தத்தைப் பொறுத்தவரை சிங்கப்பூரில் தமிழிசை இயக்கத்தின் செல்வாக்கு பெருமளவு தென்படவில்லை என்னும் மனப்பதிவே எனக்குள்ளது. தமிழ் பதிப்பியக்கம் சார்ந்தும் இங்கு போதுமான அளவுக்கு ஊக்கம் தென்படவில்லை. காரணம் சிங்கப்பூரின் தொன்மை என்று ஒன்று இல்லை. ஆயினும் கூட சிங்கப்பூர் நாட்டுப்புற பாடல்களைத் தொகுப்பதோ சிங்கப்பூர் வாய்மொழி மரபுகளைத் தொகுப்பதோ குறைவாகவே நிகழ்ந்துள்ளது.  சிங்கப்பூரில் முன்னரே அச்சிடப்பட்டு மறைந்து போன நூல்களை அச்சுக்குக் கொண்டு வருவதுகூட ஓர் இயக்கமாக இங்கு நிகழவில்லை என்று தான் தோன்றுகிறது. இவ்வகையில் மறைந்த நண்பர் ஈழநாதன் சிலமுயற்சிகளை மேற்கொண்டதை நான் அறிவேன். இன்னமும் கூட அதில் பெரும்பணி ஆற்றப்படலாம்.[பேரா அருண் மகிழ்நன் முன்னெடுப்பில் இப்போது சிங்கை இலக்கியங்களை வலையேற்றும் முயற்சி நிகழ்ந்துவருகிறது]


 


ஆனால் தமிழ்ப் பண்பாட்டுச் சீர்திருத்த அலையின் மூன்று கூறுகளில் ஒன்றாகிய தனித்தமிழ் இயக்கம் ஒரு வலுவான செல்வாக்கை இங்கு செலுத்தியிருப்பதை இங்கு காணமுடிகிறது. மொழித் தூய்மைக்கான குரல், மொழி பேணப்படுவதற்கான குரல் தொடர்ச்சியாக இங்கு ஒலித்து வருகிறது. இன்றும்கூட சிங்கையில் இலக்கியச்சூழலில் ஓங்கி ஒலிக்கும் முக்கியமான கருத்துத் தரப்பாக இது உள்ளது.


 


இந்த இரண்டாவது காலகட்டம், அதாவது சீர்த்திருத்த அலை ஏறத்தாழ எண்பதுகள் வரைக்கும் நீடிப்பதை பார்க்க முடிகிறது. பொதுவான என் நோக்கில் இளங்கண்ணன், இராம.கண்ணபிரான் போன்றவர்களை உதாரணமாக காட்டுவேன். ஒருவகையில் இதுவும் ஒரு பிரச்சார தன்மை கொண்ட எழுத்துக்களை உருவாக்கும் காலகட்டம் தான். சமூக சீர்திருத்தமும் மொழிச் சீர்திருத்தமும் அறிவார்ந்தவை. ஆகவே ஆசிரியனின் அறிவிலிருந்து எழக்கூடியவை .வாசகனை மாணவனாகக் கண்டு அவனுக்கு அறிவுறுத்தும் தோரணை கொண்டவை. இன்றும் கூட இம்மரபின் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும் கவிதைகளிலும் கதைகளிலும் வாச்கனை நோக்கி எழுத்தாளனோ கவிஞனோ ஒர் உயரத்தில் நின்று கொண்டு பேசுவதை நாம் பார்க்கலாம். ஆகவே இவற்றுக்கு ஒரு மேடைப்பேச்சின் தோரணையும் வந்து விடுகிறது.


 


சமூக அவலங்களை நோக்கிய அக்கறையும் அவற்றை மாற்றியமைக்க வேண்டுமென்ற தீவிரமும் இப்படைப்புகளில் வெளிப்படுகின்றன. ஆகவே இவற்றுக்கான சமூக முக்கியத்துவம் மறுக்க முடியாதது. இவை எழுப்பும் குரல்கள் தவிர்க்கப்படமுடியாதவை ஆனால் அதே சமயம் இவை தீர்வுகளையும் முன் வைக்கின்றன. அத்தீர்வுகளை யார் உருவாக்கினார்கள் என்று பார்த்தால் தத்துவ வாதிகளோ அரசியல்வாதிகளோதான். அவர்களுக்கு பின்னால் சென்று அவர்களின் பிரச்சாரகர்களாகவே எழுத்தாளன் செயல்படுகிறான்.


 


அவ்வாறு பின்செல்வது முதன்மை எழுத்தாளனின் இயல்பல்ல. அவனுடைய ஆய்வுக்கூடம் வேறு. அங்குள்ள ஆய்வு முறைமைகளும் வேறு. ஒர் எழுத்தாளன் காந்தியாலோ ஈ.வெ.ராவாலோ, கார்ல் மார்க்ஸாலோ செலுத்தப்படுவான் என்றால் அவன் பிரச்சாரகன். தன் உள்ளுணர்வால் மட்டும் செலுத்தப்படுவான் என்றால் மட்டும்தான் அவன் கலைஞன். சீர்திருத்தப் படைப்புக்ளை மதிப்பிடும்போது இந்த அளவுகோலை பயன்படுத்த மீண்டும் வலியுறுத்துகிறேன். அந்த தெரிவில் எவை கலைப்படைப்புகள் என்பதை விமர்சன நோக்குடன் விவாதித்து தொகுத்துக்கொள்ளும் சூழலிலேயே மேலும் கலைப்படைப்புக்கள் எழமுடியும். சிங்கப்பூருக்கு இன்று தேவை என நான் நினைப்பதே இந்த வரலாற்றுப் பொறுப்புள்ள அதேசமயம் கறாரான விமர்சன நோக்குதான்.


 


1992-ல் சுந்தர ராமசாமி இல்லத்தில் நா. கோவிந்தசாமியின்  ‘தேடி’ என்ற சிறுகதைத் தொகுதி இருப்பதை பார்த்தேன். அதைப்பற்றிக் கேட்டபோது “என் நண்பர். சிங்கப்பூர் நவீன இலக்கியத்தின் முதற்புள்ளி இவரே” என்று சு.ரா சொன்னார். அன்று நான் எனக்கான விடைகளை அளிக்கும் எழுத்தாளர்களை தேடி தாகத்துடன் ஓடிக்கொண்டிருந்ததனால் அந்நூலை படிக்கவில்லை. மீண்டும் எட்டாண்டுகள் கழித்து நான் மருதம் என்ற பெயரில் ஒரு இணைய தளம் தொடங்கினேன். அதற்குரிய தகுதர எழுத்துக்கள் விலை கொடுத்து வாங்குவதற்கான பண வசதி அன்று இருக்கவில்லை. அதை நா.கோவிந்தசாமியிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம் என்று அமெரிக்க நண்பர் கோபால் ராஜாராம் அறிவுறுத்தியதன் பேரில் நான் அவருக்கு ஒரு மின்னஞ்சல் அனுப்பினேன். அப்போதுதான் தேடி என்ற தொகுப்பை   படித்து பார்த்தேன்.


img-425145800-0001


சிங்கப்பூர் நவீன இலக்கியத்தின் தொடக்கப்புள்ளியென்று அந்நூலை சு.ராவைப்போல நானும் சொல்வேன். அதுவரைக்கும் எந்த நவீன இலக்கியமும் இல்லையா என்றால் நவீன காலகட்டம் தொடங்கிவிட்டிருந்தது, நவீனப்படைப்புகள் வரவில்லை என்றே என் பதில் அமையும். நவீன உரைநடை, நவீன இலக்கியவடிவங்கள் வந்துவிட்டிருந்தன. ஆனால் நவீன இலக்கியம் என்பது மேலும் சில பண்புக்கூறுகள் கொண்டது. அதைத்தொடங்கிவைத்தவர் நா.கோவிந்தசாமி


 


அவை இவை.


 


ஒன்று: சமூகத்தையும் பண்பாடையும் தனி மனிதனாக எதிர் நிலையிலிருந்து நின்று பார்க்கும் பார்வை. சமூகப் பண்பாட்டுக்கட்டமைப்பின் ஒரு பகுதியாக தன்னை வைத்துக் கொள்வதற்கு மாறாக விலகி நின்று அதை விமர்சனத்துடன் நோக்கும் பார்வை அது. நவீன இலக்கியத்தின் அடிப்படைப் பண்புகளில் ஒன்று என அந்த விலகலைச் சொல்வேன். அதை நாம் புதுமைப்பித்தனிடம் பார்க்கலாம். அவர் சமகாலத்து பொதுச்சிந்தனையின் அலைகள் எதிலும் அடித்துச்செல்லப்பட்டவர் அல்ல. அரசியலிலோ தத்துவத்திலோ அவருக்கு வழிகாட்டிகள் இல்லை. அவர் தனி அலை


 


இரண்டு: அடையாளங்களை சூடிக் கொள்வதற்கு பதிலாக அடையாளங்களை அவிழ்த்துப்பார்க்கும் பார்வை. இரக்கமற்ற ஒரு சுயவிமர்சனம் அது. தன்னை வெவ்வேறு வகையில் தொகுத்துக்கொள்வது அல்ல, தன்னை உடைத்து உடைத்து விரிப்பது அது


 


மூன்று: மூளை சார்ந்து எழுதாமல் தன்னுடைய ஆழ்மனத்தவிப்புகளையும் கண்டடைதல்களையும் ஏதோ ஒரு வகையில் மொழியில் முன்வைக்கக்கூடிய ஒரு எத்தனம். இம்மூன்று அம்சங்களும் கூடும்போது நவீன இலக்கியத்தின் தனித்தன்மை அமைகிறது.


 


ஏன்? நவீன இலக்கியவாசிப்பு என்பது அரங்கவாசிப்பு அல்ல. கூட்டுவாசிப்பு அல்ல. அது அந்தரங்க வாசிப்பு. எழுத்தாளனுடன் வாசகன் மிகுந்த தனிமையில் உரையாடுவது அது. ஆகவேதான் சபைகளில் முன்வைக்கப்படும்போது நவீன இலக்கியப்படைப்புகள் வெளிறியதுபோலத் தெரிகின்றன. மேடையில் முழங்கும் படைப்புகள் நவீன இலக்கியத்தின் இயல்புகள் இல்லாமல் இருக்கின்றன. தமிழில் இன்றுகூட இவ்விரு இலக்கிய வகைபாடுகளும் மிகத்தெளிவாக வெவ்வேறாகவே உள்லன


 


இக்காரணத்தால் ஒரு பொதுவெளியில் நின்று வாசிக்கும் வாசகன் நவீன இலக்கியத்தை புரியாதது என்று நிராகரிப்பான். அதேசமயம் அந்தரங்கமாக வாசிப்பவன் மிக எளிதாக அதை நெருங்கிச் செல்வான். ஒரு காதல்முத்தம் போல மிக அந்தரங்கமாக நிகழ்வது இலக்கியத்தின்  தொடர்புறுத்தல். எனவே ஓர் இலக்கியப்படைப்பு சொல்ல வருவது என்ன என்று மேடையில் விளக்கச்சொன்னால்  அது தயங்கி நின்றுவிடும்.  இலக்கியப்படைப்பு பிரச்சாரம் செய்யாது. வாசகனை தனது மாணவனாக அல்ல சகஹிருதயனாக கருதுவது அது. சஹ- ஹிருதயன் என்றால் இணையான இதயம் கொண்டவன்.  எழுத்தாளனின் நேர்மறுபக்கம். எழுத்தாளனை நிரப்புபவன் அவன்


 


வாசகன் அங்கு புனை கதையை தெரிந்து கொள்பவனல்ல. தானும் சேர்ந்து கற்பனைசெய்து விரிவாக்கம் செய்பவன். ஆகவே சகபடைப்பாளி அவன். அவனுடைய தகுதியை முன்னரே உணர்ந்த ஆசிரியன் அவனிடம் எதை சொல்ல வேண்டுமோ அதை மட்டும் தான் சொல்வான். அவனே மேற்கொண்டு கற்பனை செய்ய விட்டுவிடுவான். வாசகனே சிந்திக்க அனுமதிப்பான். அதற்குத் தடையாக நிற்கும் எதுவும் தன்னுடைய படைப்பில் இருக்கக்கூடாது என்று நினைப்பான். ஆகவே அவனுடைய படைப்பு அமைதி கொண்டதாக இருக்கும். இடைவெளிகள் நிறைந்ததாக இருக்கும். முடிந்தபின்னரும் புதிதாக தொடங்குவது போல் இருக்கும். சொல்வதைவிட உணர்த்துவது அதிகமாக இருக்கும். உட்குறிப்புகள் நிறைந்ததாக இருக்கும்.


 


அத்தகைய ஒரு இலக்கியத்துக்கான தொடக்கம் என்று நா.கோவிந்தசாமி அவர்களைச் சொல்வேன் அவர்களுக்கு நான் இரு கடிதங்களை போட்டிருக்கிறேன். நேரில் சந்திக்க அமையவில்லை. சிங்கப்பூர் இலக்கியத்தில் கோவிந்தசாமி அவர்கள் ஒரு ஆழமான பாதிப்பை உருவாக்கினார் என்பார்கள். எனது நண்பர் ரெ.பாண்டியன் கோவிந்தசாமியைப்பற்றி நிறையவே சொன்னார். அலைக்கழிப்பும் கொந்தளிப்பும் நிறைந்த ஒரு ஆளுமையாக இருந்தார். ஒரு மருத்

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 19, 2016 11:33

பாலாவின் காட்சிமொழி

 


10slde1


தேசியக்கல்விக் கழக சீன மாணவர்களுக்காக இன்று சினிமா எழுத்துக்கும் இலக்கியத்துக்குமான உறவைப்பற்றி ஒரு வகுப்பு எடுக்கவேண்டும்.  அதற்காக நான் எழுதிய சினிமாக்களில் இருந்து சில கிளிப்பிங்குகளைக் காட்டலாமென முடிவுசெய்தேன். யூடியூபில் நான் கடவுள் கிடைத்தது


 


நான்கடவுளின் காட்சிகள் வியப்பூட்டின. நான் எழுதியபோது என் மனதில் ஒரு சித்திரம் இருந்தமையால் சரியாகக் கவனிக்கப்படாதுபோன காட்சிகள் இவை. இன்று மிக விலகிவந்தபின் பார்க்கும்போது அவற்றின் மொழி ஆச்சரியமளிக்கிறது. இது முதல்காட்சி



முதலில் கங்கையில் ஒரு தீபம். பின்னர் புனிதமும் கோலாகலமுமான கங்கா ஆரத்தி. அழகு, மங்கலம். சட்டென்று தலைகீழாக கதாநாயகன் அறிமுகமாகிறான். முற்றிலும் வேறு உலகம். தலைகீழ் உலகம். அவன் விழிகள் திறந்து உலகைப்பார்க்கின்றன. படம் தொடங்குகிறது. பாலா காட்டவருவது அது


 



இன்னொரு காட்சி. ‘ஏழாம் உலகம்’. தாண்டவன் நாம் வாழும் உலகில் காரிலிருந்து இறங்குகிறான். நடந்து நடந்து பாதாளம் நோக்கிச் செல்கிறான். இருட்டு. அதிலிருந்து வெளிவருபவன் பாதாளத்துக்குள் செல்கிறான். அங்கே விபரீதமான உருப்படிகள். அவர்களின் முகங்கள். உணர்ச்சியற்று தாண்டவனை வெறிக்கும் ஒருமுகம் சொல்லிக்கொண்டே இருக்கிறது, அவர்களுக்கு அவன்கூட ஒரு பொருட்டே அல்ல என்று.

தொடர்புடைய பதிவுகள்

தொடர்புடைய பதிவுகள் இல்லை

 •  0 comments  •  flag
Share on Twitter
Published on September 19, 2016 11:32

Jeyamohan's Blog

Jeyamohan
Jeyamohan isn't a Goodreads Author (yet), but they do have a blog, so here are some recent posts imported from their feed.
Follow Jeyamohan's blog with rss.