Jeyamohan's Blog, page 1730
September 19, 2016
சிங்கப்பூருக்கு விடைகொடுத்தல்
கோபாலகிருஷ்ணன், சௌந்தர், அருணாச்சலம் மகராஜன் ஆகியோருக்கு சு வேணுகோபால் எதையோ நடித்துக்காட்டுகிறார்
இன்று காலையிலேயே சந்திப்பு நிகழ்ச்சிக்கு வந்தவர்கள் கிளம்பி செந்தேசாவிலுள்ள யூனிவெர்சல் ஸ்டுடியோ அரங்குக்கு சென்றார்கள். அது ஒரு மாபெரும் களியாட்ட மையம். அறிவியலும் கலையும் கேளிக்கையாகும் அற்புதம் . நான்கு பரிமாணக் காட்சிகள், விழிகளை ஏமாற்றும் பல்வேறு காட்சியமைப்புகள்
நான் கல்லூரிக்குச் சென்றுவிட்டேன். மாலை என் துறைத்தலைவர் சிவகுமார் என்னை அருகிலுள்ள அறிவியல் மையத்தில் இருக்கும் மேக்னாதியேட்டருக்கு அழைத்துச் சென்றார். மிகப்பிரம்மாண்டமான அரைக்கோளவடிவத் திரையில் அறிவியல் படம் ஒன்றை பார்த்தேன். மிக நுண்ணிய, மிகப்பிரம்மாண்டமான, மிக மெதுவான ,மிக விரைவான தளங்களில் இவ்வுலகில் என்னென்ன நிகழ்கிறது என்பதைக் காட்டும் படம். ‘அலகிலா விளையாட்டு’ என தலைப்புவைக்கலாம்
சு வேணுகோபால் அவர் எகிப்திய மம்மிகளைப்பார்த்த அனுபவத்தைச் சொல்கிறார். விமானநிலையம் சாங்கி
வீட்டுக்கு வந்து குளித்து சித்தமானபோது சரவணன் வந்தார். அவருடன் சென்று விமானநிலையத்தைச் சென்றடைந்தேன். பலகுழுக்களாகக் கிளம்பிச்சென்றவர்களில் எஞ்சியவர்கள் இருந்தார்கள். அவர்களுடன் அரைமணிநேரம் பேசிச்சிரித்து விடையளித்தேன். அன்னியநாடு ஒன்றில் நான் நண்பர்களை வரவேற்று திருப்பியனுப்பியது விசித்திரமான அனுபவமாக இருந்தது
சிங்கப்பூர் நினைவுகள் நெடுநாட்கள் அழகிய நினைவாக எஞ்சுமென நினைக்கிறேன்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
September 18, 2016
சிங்கப்பூர் நாட்கள்
சிங்கப்பூரில் சந்திப்பு அதுவும் முப்பதுபேர் என்றதுமே ஒன்றை முடிவுசெய்துவிட்டோம், தங்குமிடம் ஏற்பாடுசெய்து விழாவை ஒருங்கிணைப்பது மட்டுமே நம் வேலை.முப்பதுபேரையும் ‘கட்டி மேய்ப்பது’ சாத்தியமல்ல ஆகவே இங்கு வந்தபின் அவர்களைப்பற்றிக் கவலைப்படப்போவதில்லை. தாங்களே சிறிய குழுக்களாக செல்லவேண்டியதுதான். செந்தேசா கேளிக்கைத்தீவு. விரும்பியதைச் செய்யலாம்
ஆகவே நான்கு நான்குபேராகப்பிரிந்து டாக்ஸியில் செல்வதாகவும் தனித்தனிக் குழுக்களாகவே சுற்றுவதாகவும் திட்டம். நான் எல்லா நாட்களிலும் கலந்துகொள்ள முடியவில்லை. எனக்கு கல்லூரி வகுப்புகள் இருந்தன. எனக்கு அனுப்பப்பட்ட படங்கள் இவை. மேலும் பதிவுகளை நண்பர்கள் எழுதக்கூடும்
அனைவரையும் கூட்டிச்செல்ல திரும்பிக்கொண்டுவிட ஒரு வேன் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்தது. அதற்கான காத்திருப்பு. இத்தகைய சந்திப்புகளில் அரட்டையே எப்போதும் முக்கியமான நிகழ்வு
எம் ஐ டி எஸ் வளாகம். உயர்தர நிர்வாகவியல் கல்லூரி. சர்வதேச அளவில் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்தலைவர்களின் பிள்ளைகள் இங்கே படிக்கிறார்கள் என்பதனால் கல்வி அளவுக்கே தொடர்புகளும் கிடைக்கின்றன. ராபர்ட் முகாபேயின் மகள் சென்ற ஆண்டு பட்டம்பெற்றவர்களில் ஒருவர். தமிழக அரசியல்பெருந்தலைவர்கள் பலரின் பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் கொள்ளுப்பேரரர்கள் இங்கே படிக்கிறார்கள்
எம் ஐ டி எஸுக்குள் நுழைதல். என்னதான் இலக்கியக்கூட்டம் என்றாலும் கல்லூரி என்பதனால் ஒரு வகுப்பு மனநிலை வந்துவிட்டது. அதிலும் தோளில் பையுடன் கடைசியாக பேராசிரியர் சு வேணுகோபால் ‘பயல்களை பத்திக்கொண்டு’ செல்லும்போது
எம்.ஐ.டி.எஸ் அரங்கு. எண்பதுபேர் அமரலாம். எழுபதுபேர் வரை கலந்துகொண்டார்கள். ஒரே பிரச்சினை குளிர். 23 டிகிரி ஆக ஏஸி வைக்கப்பட்டிருந்தது. கூட்டவோ குறைக்கவோ முடியாது. மொத்தவளாகமும் ஒரே தட்பவெப்பநிலை.
மீனாம்பிகை ,சரவணன், அருணாச்சலம் மகராஜன்
மகராஜன் அருணாச்சலம், அரங்கசாமி, கணேஷ், அருண் மகிழ்நன், சரவணன்
ஈரோடு கும்பல். வழக்கமாக ஒரு பதினைந்துபேர் வருவார்கள். சிங்கப்பூர் ஆகையால் நான்குபேர் மட்டும். கிருஷ்ணன் , செந்தில், சிவா. படத்தில் இல்லாத இன்னொருவர் விஜயராகவ்ன்.
புத்தர் கோயிலின் காவல் போதிசத்வர்
இளம் தஸ்த்யாயெவ்ஸ்கி அல்லது முற்றாத ஓஷோ – டாக்டர் வேணு வெட்ராயன்
வேணு வெட்ராயன், ராஜகோபாலன், சரவணன், சௌந்தர், விஜயராகவன்
கருத்தரங்குக்கு வந்தவர்கள் தங்கவைக்கப்பட்ட குடில். செந்தேசா தீவின் கடற்கரை ஓரமாக நட்சத்திர விடுதிக்குரிய வசதிகளுடன் அதேசமயம் காட்டுக்குள் அமைந்த பாவனையும் கொண்ட விடுதி. இப்பயணத்தின் முக்கியமான அம்சமே இந்த விடுதிதான்
கலந்துகொண்டவர்கள். நிகழ்ச்சியின் நிறைவில் ஒரு படம்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
கோப்ரா
எங்கள் கோதாவரிப்பயணம் இணையம் வழியாகப் புகழ்பெற்றது. இன்னொரு கோதாவரிப்பயணம் செய்தேயாகவேண்டும் என்றனர் நண்பர்கள். குறிப்பாக எங்களுடன் சமணக் கோயில்களுக்கெல்லாம் வந்த நண்பர் லண்டன் முத்துக்கிருஷ்ணன் அடம்பிடித்தார். ஆகவே இன்னொரு பயணத்துக்கு நண்பர் சேலம் பிரசாத் ஏற்பாடு செய்தார். ராமச்சந்திர ஷர்மா அப்போது அமெரிக்கா சென்றுவிட்டிருந்தார்.
முத்துக்கிருஷ்ணன் இதற்கென லண்டனிலிருந்து கிளம்பி வந்தார். நாங்கள் பெங்களூரில் இருந்து கும்பலாக கோதாவரிக்குக் கிளம்பும் நாளில் செய்திவந்தது. படகுப்பயணம் செய்யமுடியாது. ஏனென்றால் கோதாவரியில் பெருவெள்ளம். கோதாவரி வெள்ளம் என்பது சாதாரணமானது அல்ல. சும்மாவே பெருவெள்ளம் பெருக்கெடுக்கும் நதி அது.
எல்லாம் திட்டமிட்டாகிவிட்டது. கிளம்பும் மனநிலை வந்துவிட்டது. என்ன செய்வது? கிருஷ்ணன் ஒரு மாற்றுத்திட்டம் சொன்னார். பெங்களூரிலிருந்து மங்களூர் செல்லும் பாதையிலுள்ள ஆகும்பே என்னும் ஊருக்குச் செல்லலாம். தென்னாட்டிலேயே அதிகமான மழைபெய்யும் ஊர் அதுதான். வெள்ளத்தால் தடையான பயணத்தை மழையில் கொண்டாடுவோம்
ஆகவே உடனே ஒரு வேன் ஏற்பாடுசெய்துகொண்டு கூட்டமாக ஆகும்பே சென்றோம். அதற்குமுன் அந்த ஊரைப்பற்றிக் கேள்விப்பட்டதே இல்லை. சுற்றுலா மையமாக இருக்கும் என நம்பினோம். செல்லும்போதே மழை பெய்துகொண்டிருந்தது. ஆகும்பே சென்றடைந்தபோது மழை பேருருக்கொண்டு எங்களைச் சூழ்ந்திருந்தது. அந்த நீர்த்திரைக்கு அப்பால் ஊர் இருக்கிறதா என்றே சந்தேகமாக இருந்தது.
ஆகும்பேயில் ஒரே ஒரு தங்கும்விடுதிதான். அதில் பயணிகள் என எவருமே இல்லை. எல்லா அறையும் காலி. அகவே பேரம்பேசி மிகக்குறைவான கட்டணத்துக்கு அறைகளை அமர்த்திக்கொண்டோம். மழைச்சாரலில் சுவர்கள் ஈரம்படிந்திருந்தன. போர்வைகளில் கூட மெல்லிய நீர்த்துளிப்படலம். தலையணை ஈரத்துணியாலானதுபோலிருந்தது. தரையில் நடந்தால் காலடிகள் ஈரத்தடமாக விழுந்தன
“மழைக்குப் பயப்படக்கூடாது. நாம் வந்திருப்பதே மழைநனையத்தான்” என்றார் கிருஷ்ணன். “ஆமாம்” என்று முத்துக்கிருஷ்ணன் பரிதாபமாகச் சொன்னார். லண்டனின் வருடத்தில் முந்நூறுநாள் மழைபெய்யும். மிஞ்சியநாட்களில் புயல். ”அதுக்கு முன்னாடி சாப்பிடலாமே” என ராஜமாணிக்கம் மென்மையாகக் கேட்டார். அதை அனைவரும் ஏற்றுக்கொண்டனர். கடுமையான பசி. வரும் வழியெங்கும் ஒரு டீக்கடை கூட திறந்திருக்கவில்லை
வெளியே நல்ல இருட்டு. மழை இருட்டுக்குள் ஓலமிட்டுக்கொண்டிருந்தது. மழைக்கோட்டுகள் அணிந்துகொண்டு சேற்றிலும் பெருகி ஓடிய நீரிலுமாக நடந்து சென்று விடுதி நடத்துபவரிடம் “இங்கே சாப்பிட என்னென்ன கிடைக்கும்?” என்றோம். “அதோ அந்த தெருமுனையில் ஷேனாய் ஒருவர் சிறிய மெஸ் நடத்துகிறார். இங்கே வேலைபார்க்கும் வாத்தியார்கள் தான் அங்கே சாப்பிடுவார்கள். அனேகமாக கடையை மூடியிருப்பார்” என்றா
பதறியடித்துக்கொண்டு அங்கே சென்றோம். கடையை சாத்திவிட்டிருந்தனர். “இந்தமழையிலே பட்டினியா? இதுக்காய்யா வந்தோம்?” என முத்துக்கிருஷ்ணன் கேட்கவில்லை, முகம் அதைக்காட்டியது. நம்பிக்கை இழக்காத கிருஷ்ணன் கதவைத்தட்டினார். அரைவாசி திறந்த ஒரு வயதான பிராமணர் “கடை மூடிவிட்டோம்” என கன்னடத்தில் சொன்னார்
”நாங்கள் தமிழ்நாட்டிலிருந்து வருகிறோம். மதியமே கூட சாப்பிடவில்லை. வேறு கடையே இல்லை” என தமிழில் சொன்னோம். ஷேனாய் கதவைத்திறந்து “வாங்க” என்றபின் “ரவா மட்டும்தான் இருக்கிறது. உப்புமா சாப்பிடுவீர்களா?” என்றார். “கொண்டாடுவோம்” என்றார் கிருஷ்ணன்.
அவர் உள்ளே சென்று படுத்துவிட்டிருந்த தன் மனைவியை எழுப்பும் ஒலி கேட்டது. அந்தப்பெண்மணி எழுந்து அடுப்பு மூட்டினாள். புகையின் மணம். அதன்பின் உப்புமாவின் மணம். பசி என்பது எவ்வளவு இனிய உணர்வு என அப்போதுதான் அறிந்தோம்.
ஷேனாய் உப்புமாவை எங்களுக்குக் கொண்டுவந்து பரிமாறினார். தேய்ந்துபோன பற்கள். ஒருவார வளர்ச்சிகொண்ட நரைத்தாடி. குட்டையான உடல். ஆனால் நான் பார்த்த மிக அழகிய சிரிப்புகளில் ஒன்று அது. சிலர் எதற்கும் வாய்விட்டு உரக்கநகைப்பார்கள். ஷேனாய் அத்தகையவர்.
”நன்றாக நனைந்துவிட்டீர்களா? இங்கே நனையாமல் வாழவே முடியாது” என்றார். “இங்கே இதுதான் மழைக்காலமா?” என்றார் கிருஷ்ணன். “இங்கே வேறு காலமே இல்லையே” என்றார் ஷேனாய். “தென்னிந்தியாவிலேயே மழை மிகுந்த இடம் என்றார்கள்” என்றேன். “ஆமாம்… அதனால்தான் இங்கே நிறைய மழைபெய்கிறது” என்று சொல்லி வெடித்துச்சிரித்தார்.
சாப்பிட்டுவிட்டு கிளம்பும்போது “காலையில் வாருங்கள். இட்லி தோசை எல்லாம் உண்டு” என்றார் ஷேனாய். “கர்நாடக இட்லி உண்டா?” என்றார் ராஜமாணிக்கம். “உண்டு, செய்து தருகிறேன்” என்றார் ஷேனாய்
மழை நின்றுபெய்தது. எங்கும் மழையின் ஓலம். “சார், மழைக்காக வந்தாச்சு. வயிறும் நிறைஞ்சாச்சு. ஒரு மழைநடை போவமா?” என்றார் கிருஷ்ணன். மழையில் இருண்ட சாலைவழியாக கூட்டமாக நடந்தோம். “கதை சொல்லுங்க சார். இந்த மூடுக்கேத்த கதை” என்றார் கடலூர் சீனு. நான் பேய்க்கதைகள் சொல்லத் தொடங்கினேன்
முதலில் கேலி சிரிப்பு என அதைக்கேட்டவர்கள் மெல்ல ஒரு மந்தையாக திரண்டு கைகளைப் பற்றிக்கொண்டார்கள். மழையிலேயே நடுங்கிக்கொண்டு திரும்பிவந்தோம். விடுதிக்குள் நுழையும்போது கடலூர் சீனு “தலையை எண்ணிக்கிடுங்க. ஒண்ணு குறைஞ்சாலும் தப்பு. கூடினாலும் தப்பு” என்றார். சிரித்துக்கொண்டே மழையின் குரல்கேட்டுக்கொண்டு தூங்கினோம்
காலையில் ஷெனாயின் ஓட்டலில் இட்லி தோசை என ஆளாளுக்கு வெறிகொண்டு சாப்பிட்டார்கள். “இந்த சிரிப்புக்காகவே நாலு தோசை ஜாஸ்தியா சாப்பிடலாம் சார்” என்றார் ராஜகோபாலன். “மழையைப்பாக்க இந்த தூரம் வரை ஏன் வரணும்? உங்க ஊர்ல மழை இல்லியா?” என்றார் ஷேனாய். “அது வேற மழை” என்றார் கிருஷ்ணன்
ஆகும்பே விசித்திரமான ஊர். மழைக்குள் நின்றபடி மாடுகள் மேய்ந்துகொண்டிருந்தன். மழைக்குள் பையன்கள் கால்பந்து விளையாடினார்கள். மழைநனைந்தபடி பிள்ளைகள் பள்ளிக்கூடம் சென்றன. மழைக்குள்ளேயே நனைந்துசொட்டியபடி ஓர் அம்மாள் காய்கறிகளைப் பரப்பி வைத்து விற்றாள். மழை அவர்களுக்கு வெயில்போல. அது பாட்டுக்கு பொழியும், அவ்வளவுதான்
நாங்கள் இரவு நடந்து சென்ற காட்டுவழியாக அருவி ஒன்றைப் பார்க்கச்சென்றோம். கிருஷ்ணன் தான் முதலில் அந்த படத்தைப்பார்த்தார். “சார்!” என அலறினார். ஆகும்பே ராஜநாகத்தின் சரணாலயம் என அறிந்துகொண்டோம். அந்தக்காடு முழுக்கவே ராஜநாகங்கள் உள்ளன. ஆகவே இருட்டில் நடமாடவேண்டாம் என்றும் புதர்களுக்குள் செல்லக்கூடாதென்றும் அறிவிக்கப்பட்டிருந்தது!
அதன்பின்னர்தான் கிருஷ்ணனுக்கும் ராஜமாணிக்கத்திற்கும் நினைவுச்சுரப்பிகள் ஊறி ஆகும்பே ராஜநாகச் சரணாலயம் பற்றி வாசித்தவை நினைவுக்கு வரத்தொடங்கின. அங்கே இரண்டு மாதங்களுக்கு முன்னால்கூட ஒருவர் நச்சுக்கடி பட்டு இறந்திருக்கிறார். ஆகும்பேயில் ராஜநாகத்திற்கு வருடம்தோறும் பல பலிகள் உண்டு
”காலெல்லாம் கூசுது சார்” என்றார் ராஜகோபாலன். அத்தனைபேரும் நடுங்கிக்கொண்டிருந்தனர். ராஜநாகம் கடித்தால் இறப்பு உறுதி. அதன் குட்டியே ஒரு யானையைக்கொல்லக்கூடிய நஞ்சு கொண்டது. உலகின் மிக நஞ்சுள்ள விலங்குகளில் ஒன்று அது. நேராக நரம்புகளை தாக்குவது அதன் விஷம்
“நேத்து இந்தப்பாதையிலதான் போனோம் சார்” என்றார் கிருஷ்ணன். “சொல்லாதீங்க” என்றார் சிவராமன். அருவியைப்பார்த்தபோது அது படமெடுத்த ராஜநாகம் போலத் தோன்றியது. எதைப்பார்த்தாலும் ராஜநாகம். கால்கள் தரையை தொட்டதுமே உலுக்கிக்கொண்டன.
மதியச் சாப்பாட்டுக்குத் திரும்பி வந்தோம். வழியில் ஒருவர் அறிமுகமானார். ஆசிரியர். வேற்றூர்க்காரர் “எங்க சாப்பாடு? கோப்ரா கடையிலயா?” என்றார். புரியவில்லை. “கொங்கணி பிராமணர் என்பதன் சுருக்கம்சார்” என சிரித்தார். “ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?” என்றார் கிருஷ்ணன் சிரித்துக்கொண்டு. “சும்மா, சுவாமியை கிண்டல்செய்வதற்காக. ஆனால் அவரை எவரும் கோபப்படவைக்கமுடியாது” என்றார் அவர்
மதியம் சாப்பிடும்பொது மிகப்பெரிய நகைச்சுவையை சற்றுமுன் கேட்டவர்போல சிரித்துக்கொண்டிருந்த ஷேனாயிடம் “உங்களை கோப்ரா என்கிறார்கள்” என்றேன். “இது கோப்ரா சரணாலயம். கடிச்சா கேஸில்லை” என்று அவர் உரக்கச் சிரித்தார். “இந்தக் கோப்ராவுக்கு விஷம் இல்லை” என்றார் அங்கிருந்த ஒருவர்.
கிளம்பும்போது கிருஷ்ணன் சொன்னார். “கிங் கோப்ரா சாங்சுவரின்னு தெரிஞ்சப்பவே இந்த ஊர் பயங்கரமா ஆயிட்டுதுசார். இதோட இயற்கை அழகுகள் கூட கண்ணில படாம ஆயிட்டுது. ஆனா இப்ப இந்த கோப்ராவோட சிரிப்பப் பாத்தப்ப எல்லாமே மாறிட்டுது. ஊரே அழகா தெரியுது”
ஷேனாயிடம் விடைபெற்றுக் கிளம்பினோம். மழை சற்று விட்டு இளவெயில் நிறைந்தது வானில். இலைகள் ஒளிசொட்டின. காற்று நீர்த்துளிகளை அள்ளி தூவியது. என் மனதில் கோப்ரா என்றால் ஓர் இனிய அழகிய விலங்கு என எப்படி ஒரு மனச்சித்திரம் உருவாகியது, எப்படி அது இன்றும் நீடிக்கிறது என்பதை நீண்டநாட்களுக்குப்பின் நினைத்துக்கொண்டபோது ஆச்சரியமாக இருந்தது.
[குங்குமம் முகங்களின் தேசம் தொடரில் இருந்து ]
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
சிங்கப்பூர் விஷ்ணுபுரம் இலக்கியவட்டச் சந்திப்பு,2016 – 3
இன்று இரண்டாவது நாள் அமர்வு. நேற்று மாலை வளைகுடாப்பூந்தோட்டம் பார்த்துவிட்டு திரும்பியபோது கிருஷ்ணனும் சந்திரசேகரும் வந்தார்கள். சப்பாத்தி சுட்டு சாப்பிட்டுவிட்டு தூங்க இரவு பன்னிரண்டு மணி ஆகிவிட்டது. காலையில் ஏழுமணிக்கே ரெடியாகிவிடவேண்டும் என சரவணன் சொல்லியிருந்தார்.
இருந்தும் இரவு நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். இத்தகைய நிகழ்ச்சிகளின் பிரச்சினையே இதுதான் நீண்ட அரங்குகள் நம்மை மேலும் பேசவைக்கின்றன. உள்ளம் கொப்பளிப்பதைப் பேசாமல் தூங்கமுடியாது
ஏழரைக்கு அவர் வந்தார் . எட்டேகால் மணிக்கெல்லாம் நாங்கள் எம்டிஐஎஸ் வளாகத்திற்குச் சென்றுவிட்டோம். செந்தேசாவில் தங்கிய கும்பல் அங்கே முன்னரே வேனில் வந்திறங்கி சாப்பிட்டுக்கொண்டிருந்தது.
காலையுணவுக்குப்பின் அரங்கு தொடங்கியது. விஜயராகவன் முன்னுரை சொல்லி விழாவைத் தொடங்கிவைத்தார்.
[image error]
விஜயராகவன் வரவேற்புரை
முதல் அமர்வில் கவிதைகளைப்பற்றி வேணு வெட்ராயன் பேசினார். தேவதேவன் கவிதைகளை முன்வைத்து கவிதை உருவாகும் கணம், கவிதை வாசகனில் நிகழும் கணம் பற்றி விளக்கினார். இந்திய அறிதல்முறைகளின் வழியாக, குறிப்பாக பௌத்த மெய்யியலின் கோணத்தில் அவர் அணுகியது மாறுபட்டதாக இருந்தது.
தேவதேவனின் கூழாங்கற்கள் என்னும் கவிதையை எடுத்துக்கொண்டு அதிலுள்ள கவிதையாக்கம் கூழாங்கல் என்று மூளை அறியும் அனைத்தையும் அழித்து ஒரு திகைப்பை உருவாக்குவதும் அதன் வழியாக புதிய அனுபவத்தை அளிப்பதும்தான் என விளக்கினார்
[image error]
கவிதை முகிழ்ப்பதும் அறியப்படுவதும் – வேணு வெட்ராயன்
அடுத்ததாக சிங்கப்பூரைச்சேர்ந்த செல்வி கனகலதா கவிதைகளைப்பற்றிப் பேசினார். அவர் இலங்கையைச் சேர்ந்தவர் என்பதனால் இலங்கைக் கவிதைகளைச் சார்ந்தே அவரது விவாதம் அமைந்திருந்தது. கவிதை வாசிப்பின் படிநிலைகளைப்பற்றி பேசினார். கவிதைகளை வாசகன் வரிகளை மட்டும் கொண்டு வாசிப்பது, கவிஞனின் வாழ்க்கையைக் கொண்டு வாசிப்பது என்னும் இரு வகை வாசிப்புகள் சாத்தியமாவதைப்பற்றிப் பேசினார்
[image error]
ராஜகோபலன் ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி பற்றிப் பேசுகிறார்
தேநீர் இடைவேளைக்குப்பின்னர் புனைவுகளைப்பற்றிய விவாத அரங்கில் கிருஷ்ணன் அவரைக் கவர்ந்த ஏழு புனைவுத்தருனங்களைச் சார்ந்து ஒரு தீவிரமான தருணம் எப்படி ஒரு மனிதனை முன்பில்லாதவனாக மாற்றுகிறது, தன்னைக் கண்டடையச்செய்கிறது, ஒன்றுமே செய்வதில்லை என்னும் கோணத்தில் விளக்கினார்.
[image error]
செல்வி கனகலதா. கவிதையின் வாசிப்புமுறைகள் பற்றிப்பேசுகிறார்
அசடன் [தஸ்தயேவ்ஸ்கி] ஃபாதர் செர்ஜியஸ் [தல்ஸ்தோய்] ஃபாதர் [ ] தந்தை கோரியா [ பால்சாக்]சதுரங்க குதிரைகள் [ கிரிராஜ் கிஷோர்]காமினி மூலம்[ ஆ. மாதவன்] நிழலின் தனிமை[தேவி பாரதி] ஆகிய புனைவுகளை அவர் தெரிவுசெய்திருந்தார்
பொதுவாக நிகழ்வதுபோல விவாதத்தில் இக்கதைகளுடன் இணைந்துகொள்ளும் கதைகளும் நாவல்தருணங்களும் நினைவுகூரப்பட்டன். ஏனஸ்டோ டல்லாஸின் வெறும்நுரைதான், பிரேம்சந்தின் லட்டு, அனந்தமூர்த்தியின் சம்ஸ்காரா, சாமர்செட் மாமின் ரெயின் என . இவ்வாறு ஒரு கதை பலகதைகளை தன்னுடன் இணைத்துக்கொள்ளும் அனுபவமே இலக்கிய அனுபவமாக் ஆகியது.
[image error]
சு வேணுகோபால் இடையீடு
மதிய அமர்வில் சௌந்தர் தாராசங்கர் பானர்ஜியின் ஆரோக்கியநிகேதனம் நாவலைப்பற்றிப் பேசினார். பழைமைக்கும் புதுமைக்குமான போராட்டமும் பரஸ்பர அங்கீகாரமும் ஆக அந்நாவலைப் பார்க்கலாம் என்றார். இந்தியாவுக்கு மேற்குலகுக்குமான இணக்கும் பிணக்குமாகவும் அந்நாவலைப்பார்க்கலாம் என்றார்
தொடர்ந்த விவாதத்தில் ஆயுர்வேதம் அலோபதி ஆகிய முறைமைகளைப்பற்றிய விவாதமாக மரபு நவீனம் ஆகியவற்றுக்கிடையே இருக்கும் ஒத்திசைவு மற்றும் முரண்பாடு பற்றி பேசப்பட்டது
‘[image error]
புனைவின் திருப்புமுனைத் தருண்ங்கள் – கிருஷ்ணன்
ராஜகோபாலன் ப.சிங்காரத்தின் புயலிலே ஒரு தோணி நாவலைப்பற்றிப் பேசினார். சிங்காரத்தின் சாகச சித்தரிப்பு, மொழிநடை அங்கதம் ஆகியவற்றைப்பற்றி குறிப்பிட்டார்.
விவாதத்தில் உலகளாவிப் பரந்துள்ள தமிழ்ச்சமூகம் மிகக்குறைவாகவே உலகம் பற்றி எழுதியிருக்கிறது, காரணம் வெளிநோக்கிப்பார்க்கும் பார்வையே இல்லாததுதான் என குறிப்பிடப்பட்டது.
[image error]
எம் கோபாலகிருஷ்ணனுடன் நேர்முகம்
எம்.கோபாலகிருஷ்ணனுடன் அவருடைய புனைவுலகம் அவர் எழுதிவரும் படைப்புகளைப்பற்றி வாசகர்கள் கேள்வி கேட்க அவர் பதிலிறுத்தார். மிகப்பெரிய சமூக இடப்பெயர்வுகள் நிகழ்ந்துள்ள தமிழில் அனேகமாக அதைப்பற்றி பெரிதாக ஏதும் எழுதப்படவில்லை என்று சொல்லப்பட்டது. அப்படி எழுதும் எண்ணம் அப்போது உருவாவதாக கோபாலகிருஷ்ணன் சொன்னார்
முடிவில் சிங்கப்பூர் இலக்கியச்சூழலைப்பற்றியும் அங்கு தமிழ் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைப்பற்றியும் பேரா அருண் மகிழ்நன் பேசினார்.
[image error]
ஆரோக்கியநிகேதனம் – சௌந்தர் பேசுகிறார்
மாலை ஐந்துமணிக்கு நிகழ்ச்சி நிறைவடைந்தது. அதன்பின் புத்தரின் பல் வைக்கப்பட்டிருக்கும் ஆலயத்திற்குச் சென்றோம். சீனக் கடைகள் வழியாக நடந்து சிங்கப்பூரின் சிங்கச் சிலை அமைந்திருக்கும் சதுக்கத்திற்கு வந்தோம். இரவு ஒன்பது மணிவரை அங்கே சுற்றிக்கொண்டிருந்தோம். ஒரு கோஷ்டி ஷாப்பிங் என்று தேக்கோ சென்றது. இன்னொரு கோஷ்டி வேறு இடங்களில் சுற்றுவதற்காகச் சென்றது.
[image error]
பேரா அருண் மகிழ்நன் அவர்களுடன்
படங்கள் வெங்கடாச்சலம் ஏகாம்பரம்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
சயாம் – பர்மா ரயில் பாதை
அன்பு நண்பர்களே வணக்கம்,
எதிர்வரும் சனிக்கிழமை மாலை சயாம் – பர்மா ரயில் பாதை என்ற ஆவணப் படத்தை மதுரையில் திரையிடுகிறோம்.
இந்நிகழ்விற்கு உங்களையும், குடும்பத்தினரையும், நண்பர்களையும் உரிய நேரத்திற்கு முன்பாக வருகை தரும்படி அன்புடன் அழைக்கிறோம்.
தமிழர்களது வரலாற்றை மீட்டெடுக்கும் முயற்சியின் தொடர்ச்சியே இந்த ஆவணப்படம். பத்தாண்டு கடின உழைப்பினால் உருவான இப்படத்தை தோழர். குறிஞ்சி வேந்தன் இயக்கியுள்ளார். இயக்குநரும் இந்நிகழ்விற்கு பங்கேற்கிறார்.
நேரில் சந்திப்போம்.
நன்றி
அன்புடன்
வே. அலெக்ஸ்
தலித் விடுதலை இயக்கம்
நாள் 24-9-2016 சனிக்கிழமை
இடம் தமிழ்நாடு இறையியல் கல்லூரி அரசரடி மதுரை
மாலை 5 மணி
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
September 17, 2016
அங்குள்ள அழுக்கு
வங்காள அரசகுடும்பத்தைச்சேர்ந்தவர் ராணி சந்தா. நூறாண்டுகளுக்கு முன்பு அவர் காசிக்கு ஒரு கும்பமேளாவுக்குச் சென்றார். அப்பயண அனுபவங்களை அவர் பூர்ண கும்பம் என்னும் பெயரில் நூலாக எழுதினார். தமிழில் நேஷனல் புக் டிரஸ்ட் வெளியீடாக வந்த அந்நூலை நான் முப்பதாண்டுகளுக்கு முன்பு வாசித்தேன். அது கும்பமேளாவுக்குச் செல்லவேண்டும் என்ற என்னுடைய கனவைத் தூண்டிவிட்டது
2010ல்தான் அந்தக்கனவு நடைமுறைக்கு வந்தது. கும்பமேளா பற்றிய செய்தியை கேட்டதுமே கிளம்பிவிடவேண்டியதுதான் என முடிவுசெய்தேன். உடனே நண்பர்களிடம் கூப்பிட்டுச் சொன்னேன். என் பதிப்பாளர் வசந்தகுமார், எழுத்தாளர் யுவன் சந்திரசேகர், நண்பர்கள் அரங்கசாமி, கிருஷ்ணன், அருண் உள்ளிட்ட ஒரு குழு உடனே விமானம் பதிவுசெய்து டெல்லிக்கு கிளம்பினோம். டெல்லிவழியாக ஹரித்வார்
ஆனால் கும்பமேளா என்றதுமே நண்பர்கள் தயங்கினர். கிருஷ்ணன் “சார் அங்கே பெருங்கூட்டமா இருக்குமே. குப்பையும் பீயுமா குவிஞ்சு கிடக்கும்னு நினைக்கிறேன்…” என்றார். எனக்கும் அந்தத் தயக்கமிருந்தது. டெல்லியைக் கடக்கும்போது யமுனைக்கரையில் கண்டபெரும் குப்பைமலைகள் அரைத்தூக்கத்தில் தலைமேல் மலைபோலக் கொட்டின
நாங்கள் ஹரித்வாருக்கு வந்திறங்கியபோது அதிகாலை மூன்று மணி. பனி கொட்டிக்கொண்டிருந்த ஒரு பொட்டல்வெளியில் விளக்கொளியில் புழுதிப்படலம் தங்கச்சல்லாபோல ஜொலித்துக்கோண்டிருந்தது. புழுதிபடிந்த கார்கள் விலாநெருங்கி நிறைந்திருந்தன. புழுதித்தரை மீது விரிக்கப்பட்ட சாக்குகளில் ஏராளமானவர்கள் கம்பிளிக்குவியல்களாகப் படுத்து தூங்கிக்கொண்டிருந்தார்கள். தூக்கமிழந்த போலீஸ்காரர்கள் கைகளில் ஸ்டென் மெஷின் கன்களுடன் சுற்றிவர ஒரு தீதி உற்சாகமாக டீத்தூள் பால் சர்க்கரை எதுவுமே இல்லாத டீ போட்டு விற்றுக்கொண்டிருந்தாள். குளிருக்கு அதுவும் நன்றாகவே இருந்தது.
நாங்கள் வரும்போது ஹரித்வரில் தங்க பலவகையான ஏற்பாடுகளுடன் வந்திருந்தோம். வரும் வழியிலேயே அந்த எந்த ஏற்பாடும் வேலை செய்யவில்லை என்ற தகவல் வந்தது. ஹரித்வாரில் எங்குமே தங்க இடமில்லை. ரிஷிகேஷ் போய் தங்குங்கள் என்றார்கள். எழுத்தாளர் கரு.ஆறுமுகத்தமிழன் வழியாக ரிஷிகேஷில் ஒரு இடம் ஏற்பாடு செய்திருந்தோம். அங்கே இடமிருப்பதாகச் சொன்னார்கள். ஆகவே ரிஷிகேஷுக்கே செல்வதென்று முடிவுசெய்தோம்.
அது கோயிலூர் மடம் என்று அழைக்கப்படும் ஒரு சத்திரம். அதிகமும் நகரத்தார் சமூகம் தங்குவது. ஆனால் அனைவருக்கும் பொது. அங்கிருக்கும் நிர்வாகியம்மாளை அனைவரும் ஆச்சி என அழைத்தனர். அங்கேயே தங்கி விருந்தினர்களை உபசரிப்பதை ஒரு யோகமாகச் செய்துவருகிறார்கள். அழகான சூழல். வசதியான அறைகள்.
காலையில் எழுந்ததுமே குளித்துவிட்டு சாப்பிட அமர்ந்தோம். நல்ல சாம்பார், சாதம். பசியில் ருசி பெருகும் விந்தை எத்தனை அனுபவித்தாலும் சலிக்காத அற்புதம். கோயிலூர் மடத்தின் தலைவர் நாச்சியப்ப சுவாமிகளின் படம் சுவரில் இருந்தது. பசி தணிந்து சுவாமிகளின் முகத்தை பார்க்க மகிழ்ச்சியாக இருந்தது.
ரிஷிகேஷ் ஊரைச் சுற்றிப்பார்க்கக் கிளம்பினோம். விடுதிகள், கோயில்கள் வழியாக நடந்து லட்சுமண் ஜூலா சென்றோம். கங்கையை மிகச்சிறந்த கோணத்தில் பார்ப்பதற்கான இடங்களில் ஒன்று லட்சுமண் ஜூலா. ஜூலா என்றால் தொட்டில் அது ஒரு கம்பிப்பாலம். வெள்ளையர் ஆட்சியில் கட்டப்பட்டது. ஐந்தடி அகலம். அதன் வழியாக சாரி சாரியாக மறுகரைக்குச் சென்றுகொண்டிருந்தார்கள். கங்கையின் இருபக்கமும் உள்ள நூற்றுக்கணக்கான கோயில்களில் தீபங்கள் ஒளிர்ந்தன. மணியோசை ஒலித்துக்கொண்டே இருந்தது. அந்தப்பகுதியிலிருந்த விழாக்கோலம் மனதை மயக்குவதென உணர நாம் மனிதர்களை நேசிக்க வேண்டும். அந்த மனிதர்களை முடிவிலாத இறந்த காலத்துடன் பிணைக்கும் பண்பாடு மீது நமக்கு ஒரு பற்று இருக்க வேண்டும்.
வியர்க்கத்தொடங்கியது. கங்கையில் குளிக்கப்போகலாம் என்று சரியான இடம் தேடினோம். கூட்டம் இல்லாத படித்துறைக்காக தேடிச்சென்றுகொண்டே இருந்தோம். “ஊரே கூட்டமா இருக்கு சார். எங்கபாத்தாலும் காலவைக்க முடியாதபடித்தான் இருக்கும்” என்றார் கிருஷ்ணன். ரிஷிகேஷ் தெருக்களில் சுற்றி நடந்து திரிவேணிகட் என்ற படித்துறையை அடைந்தோம். உக்கிரமான வெயில் இருந்தாலும் இமயமலைக்காற்று கொஞ்சம் குளுமை அளித்தது.
திரிவேணி கட் செயற்கையாக சிவப்புக்கற்களால் உருவாக்கப்பட்ட பெரிய படித்துறை. குளிப்பதற்காக கங்கையின் நீர்ப்பெருக்கை வெட்டி கிளை ஒன்று அமைத்திருந்தார்கள். தண்ணீர் பனிக்குளிருடன் விரைக்க வைத்தது. சற்று முன்னர்தான் வெயிலில் வெந்தோம் என்பதே மறந்து விட்டது. ஆச்சரியமாக மிகமிகச் சுத்தமாக இருந்தது. இத்தனைக்கும் அப்பகுதியெங்கும் பெருங்கூட்டம்.
கங்கையில் கண்சிவக்க நீராடி விட்டு கிளம்பினோம். படித்துறை சுத்தமாக இருந்தது. ஏராளமான கோயில்களில் இருந்து பஜனை ஒலி கேட்டபடியே இருந்தது. கான்கிரீட்டில் கட்டப்பட்ட பெரிய சிவன் சிலையும் கீதோபதேசம் சிலையும் வழக்கமான கான்கிரீட்தனம் இல்லாமல் உயிரோட்டமாக இருந்தன. அதற்குக்கீழே விதவிதமான ராஜஸ்தானி தொப்பி அணிந்த வயோதிகர்கள் வழிபட்டுக்கொண்டிருந்தனர்.
அந்த முகங்களை நோக்கிக்கொண்டிருந்தேன். வயோதிகமுகங்களில் தெரியும் ஒரு கனிவும் சோர்வே இல்லாத அமைதியும் இந்தியாவுக்கே உரியவை என்று தோன்றும். இழந்தவை குறித்த ஏக்கமும் வரும் இறப்பு குறித்த அச்சமும் இல்லாமல் முதுமையில் வாழ்வதற்கு ஆழ்ந்த மனநிலை ஒன்றுதேவை. அதை இந்தியாவில் வேரூன்றியிருக்கும் கர்மா கொள்கை அவர்களுக்கு அளிக்கிறது. அனைத்தும் நம்மைமீறிய பெருநியதி ஒன்றின் ஆடல், நாம் அப்பெருங்காற்றில் தூசுத்துளிகளே என்னும் தன்னுணர்வு. அதை சுருக்கங்களோடிய முகங்களில் தெளிவாகவே காணமுடியும்.
நான் தனியாக துண்டைக்காயவைத்துக்கொண்டு நின்றிருந்தேன். ஒரு தலைப்பாகை முதியவர் எழுந்துவந்து எனக்கு இலைத்தொன்னையில் ஊறவைத்த பொரியும் வெல்லமும் கலந்த பிரசாதத்தைக்கொடுத்தார். முகம் சுருக்கங்கள் இழுபட்டு வலையாக விரிய புன்னகையில் ஒளிவிட்டது. “சிவா கி பிரசாத்” என்றார். வாங்கி சாப்பிட்டேன். அப்பால் நண்பர்கள் படியில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள். அனிச்சையாக இலையை கீழே போட்டுவிட்டு அவர்களை நோக்கிச் சென்றேன்
அந்த முதியவர் கையை ஊன்றி எழுந்து வந்து அந்தத் தொன்னையை எடுத்தார். உடலே கூசிவிட்டது. ஓடிவந்து “மன்னிக்கவும்… மன்னிக்கவும்” என்று சொல்லி அதை எடுக்கப்போனேன். “பரவாயில்லை” என்று சொல்லிவிட்டு அவரே எடுத்துக்கொண்டார். “கங்கையன்னையின் கரை… தெய்வங்களின் இடம்” என்றார். நான் மீண்டும் மன்னிப்பு கோரினேன். ஏன் அதைச்செய்தேன் என்றே புரியவில்லை. உண்மையில் குப்பைபோடுவது என் வழக்கமே அல்ல. வெளிநாடுகளுக்குச் சென்றுவந்தபின் மறந்தும் குப்பையை கீழேபோடுவதில்லை. அது ஒரு பழக்கமாகவே ஆகிவிட்டிருந்தது. அன்று என்ன ஆயிற்றென்று இன்றும் எனக்குத்தெரியாது.
நண்பர்கள் அருகே சென்று அமர்ந்துகொண்டேன். கங்கையில் குளிப்பதற்காக ஒரு தமிழ்க்கூட்டம் வந்திருந்தது. கட்டான உடல்கொண்ட, பதினாறிலிருந்து இருபதுக்குள் வயதுள்ள கரிய இளைஞர்கள். எல்லாருமே குடுமி வைத்து பூணூல் போட்டவர்கள். அங்குள்ள ஏதோ மடத்தில் வேதம் பயில்பவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் நீராடி கூச்சலிட்டு கும்மாளமிடுவதை பார்த்துக்கொண்டு பேசிக்கொண்டிருந்தோம்
சட்டென்று அவர்களில் ஒருவனை அந்தப்படிகளில் வந்துகொண்டிருந்த ஒரு வடஇந்திய மனிதர் ஓங்கி கன்னத்தில் அறைந்தார். பெரிய தலைப்பாகை கட்டிய அறுபது வயது மனிதர். கைநீட்டியபடி இந்தியில் உரக்க வசைபாடினார். தமிழகர்கள் தாக்கப்படுவதைக் கண்டு கோவை நண்பர் அருண் ஓடிப்போய் “என்ன? என்ன நடந்தது? ஏன் அடித்தீர்கள்?” என்று கேட்டார். அரங்கசாமியும் ஓடிச் சென்றார்.
எல்லாரும் சென்று குழுமவேண்டாம் என்று பார்த்துக்கொண்டிருந்தோம். அரங்கசாமி உரத்தகுரலில் அந்த தலைப்பாகைக்காரரிடம் ஏதோ கேட்டார். அவர் உதிரிச் சொற்களில் இவர்களுக்குப் புரியும்படி விளக்கினார். சில நிமிடங்களில் இருவரும் சாந்தமாக திரும்பிவிட்டனர். “என்ன?” என்று நான் கேட்டேன். “ஒண்ணுமில்ல சார் விடுங்க” என்றார் அரங்கசாமி. “ஏன் அடித்தார்?” என்று நான் மீண்டும் கேட்ட்டேன். “ஒண்ணுமில்ல சார், நம்ம பசங்க” என்றார் அரங்கசாமி
ஆனால் அருண் கோபத்துடன் நடந்தது என்ன என்று சொன்னார். அடிவாங்கிய அந்தத் தமிழ் இளைஞன் கங்கையின் நடுவே இருந்த மணல்திட்டு மேல் ஏறிச்சென்று மலம் கழித்திருக்கிறான். அறைந்தவர் அந்தப் படித்துறையின் காவலர். “கங்கையன்னையின் மடி.. கங்கையன்னையின் மடி” என்று சொல்லிக்கொண்டே இருந்தார் அவர். அருண் “அடிக்க வேண்டியதுதான் சார். காவாலிப்பசங்க. மானத்தை வாங்கிட்டாங்க’’ என்றார்
அந்த அடிவாங்கிய இளைஞன் ஒன்றும் நடக்காதது போல நண்பர்களுடன் குளிக்க ஆரம்பித்தான். தமிழகத்தின் ஏதாவது கிராமத்தைச்சேர்ந்த வறிய குடும்பத்து இளைஞனாக இருப்பான். ஊரில் மிகச்சாதாரணமாக நிகழ்வது இது. உண்மையிலேயே அவனுக்கு அவன் செய்த பிழை என்ன என்றே புரிந்திருக்காது.
நான் அந்த முதியவரின் முகத்தைப்பார்க்கக் கூசினேன். தலைகுனிந்தபடி நடந்து கடந்தேன். உண்மையில் அது ஒரு பெரிய சுயதரிசனம். அங்குள்ளவர்கள் அழுக்கானவர்கள், குப்பைபோடுபவர்கள் என எப்படி இயல்பாகவே நம் மனம் நம்புகிறது? ஏனென்றால் அவர்கள் நம்மவர்கள் அல்ல. நம் குறை நமக்குக் கண்ணில்படுவதில்லை. அறைவிழுந்தாலொழிய.
அவர்களும் நம்மைப்போலத்தான். குப்பையும் அழுக்கும் குறித்த பிரக்ஞை இந்தியாவில் சர்வதேச விமானநிலையங்களில் பயணம்செய்யும் உயர்குடிப்பயணிகளிடம்கூட இல்லை. ஆனால் நம்மைவிட மேலாக ஒன்று அவர்களிடம் உள்ளது. ஆழ்ந்த மதநம்பிக்கை. அது சூழலையும் நீரையும் காத்துவந்தது இன்றுவரை. நாம் அதையும் இழந்துவிட்டோம்.
[குங்குமம் முகங்களின் தேசம் தொடரில் இருந்து ]
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
சிங்கப்பூர் விஷ்ணுபுரம் இலக்கியவட்டச் சந்திப்பு,2016 – 2
இன்றுகாலை சரியாக ஒன்பது மணிக்கு சிங்கப்பூர் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டம் சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட இலக்கிய அரங்கு தொடங்கியது. இந்தியாவிலிருந்து 27 பேர் கலந்துகொண்டார்கள். சிங்கப்பூரிலிருந்து 30 பேர். தேசிய கலைக் கழகம் சார்பில் கவிதாவும் சிங்கப்பூர் தேசிய கல்வி நிலையம் சார்பில் முனைவர் சிவக்குமாரன் அவர்களும் சிறப்புவிருந்தினர்களாக வந்து கலந்துகொண்டார்கள்.
[image error]
விஜயராகவன் சுருக்கமாக வரவேற்புரை அளிக்க நிகழ்ச்சி தொடங்கியது. முதல் அரங்கு கம்பராமாயணம். ஆனால் நேற்று வந்திறங்கியபோதே நாகர்கோயிலில் இருந்து நாஞ்சில்நாடனின் தாயார் இறந்துவிட்ட தகவல் வந்தது. கிட்டத்தட்ட நூறு வயதானவர். சிலநட்களாகவே நோயுற்றிருந்தார். ஆகவே நாஞ்சில்நாடன் நேற்றி மாலையே விமானத்தில் கிளம்பி கொச்சி வழியாக ஊருக்குச் சென்றார். நாஞ்சில் கொண்டுவந்திருந்த கம்பராமாயணக் கவிதைகளையும் அறிமுகக்குறிப்பையும் ராஜகோபாலன் முன்வைத்து அரங்கை நடத்தினார்
[image error]
வழக்கம்போல கம்பராமாயணம் அரங்கை ஆட்கொண்டது. சு.வேணுகோபால், எம்.கோபாலகிருஷ்ணன், சிவகுமரன், அருணாச்சலம் மகராஜன் உட்பட பலர் தீவிரமாக விவாதங்களில் கலந்துகொண்டனர். விஷ்ணுபுரம் அமைப்பின் அனைத்து நிகழ்ச்சிகளையும் போலவே கொண்டாட்டமும் சிரிப்பும் குறையாத தீவிரமுமாக நிகழ்ச்சி நடைபெற்றது
[image error]
மதிய உணவுக்குப்பின் சிறுகதை அரங்கில் தி.ஜானகிராமனின் சிறுகதைகளை முன்வைத்து அருணாச்சலம் மகாராஜன் பேசினார். தி/ஜானகிராமனின் பாயசம், கங்காஸ்நானம் ஆகிய கதைளை விரிவாக முன்வைத்து தன் அவதானிப்புகளை நிகழ்த்தினார்.பலகோணங்களிலான விவாதம் நிகழ்ந்தது
[image error]
ராஜகோபாலன்
சு. வேணுகோபாலின் புனைகதைகளில் உள்ள உளம் சார்ந்த பாலியல் அம்சத்தைப்பற்றி அரங்கசாமி பேசினார். தொடர்ந்து சு.வேணுகோபால் தன் சிறுகதைகளைப்பற்றிப் பேசி அவற்றின் உருவாக்கத்தை பற்றிய செய்திகளைப் பகிர்ந்துகொண்டார். மிகத்தீவிரமான குரலில் அவர் தன்னை முன்வைத்தது ஆழமான உணர்வுநிலைகளை உருவாக்கியது
[image error]
அருணாச்சலம் மகராஜன்
ஐந்துமணிக்கு அரங்கு முடிந்தது. நகர்மையத்தில் உள்ள Gardens By the Bay சென்றோம். இரவு ஒன்பது மணிவரை அங்கே பிரம்மாண்டமான கண்ணாடி கூடாரத்திற்குள் செயற்கைச் சூழலில் அமைக்கப்பட்ட அனைத்துவகையான நிலப்பரப்புகளை சேர்ந்த மரங்களையும் தாவரங்களையும் பிரம்மாண்டமான செயற்கைமரங்களையும் கண்டோம்.
மீண்டுமொரு கொண்டாட்டமான நாள்.
[image error]
[image error]
[image error]
[image error]
[image error]
புபுகைப்படங்கள் வெங்கடாச்சலம் ஏகாம்பரம்
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
சிங்கப்பூர் கடலோரப்பூங்கா
இன்று விஷ்ணுபுரம் இலக்கிய முகாமின் முதல்நாள். காலையில் ஏழுமணிக்கு எழுந்து சில குறிப்புகளை எடுத்துக்கொண்டு உடனே கிளம்பி அரங்குக்குச் சென்றேன். செந்தேஸாவில் தங்கியிருந்த கும்பலும் வந்தது. அரங்கிலேயே காலைச்சிற்றுண்டி. ஒன்பது மணிக்கு நிகழ்ச்சி.
மாலை ஐந்துமணிக்கு நண்பர்களுடன் கிளம்பி கடலோர செயற்கைப்பூங்கா. மானுடனின் கலைத்திறமும் இயற்கையின் அற்புதங்களும் கலந்த ஓர் அழகிய உலகம்.
September 16, 2016
சிங்கப்பூர் விஷ்ணுபுரம் இலக்கியவட்டச் சந்திப்பு,2016
வருடந்தோறும் ஊட்டி நித்யா குருகுலத்தில் நடத்தும் குருநித்யா ஆய்வரங்கம் இவ்வருடம் நடத்தப்படவில்லை. இரண்டு காரணங்கள். ஒன்று, இளம்வாசகர்களைச் சந்திப்பதன்பொருட்டு இவ்வருடம் மூன்று சந்திப்புநிகழ்ச்சிகள் நடந்தன. இரண்டு, நான் மே மாதம் முதல் தொடர்ச்சியாகப் பயணத்தில் இருக்கிறேன்.
சிங்கப்பூருக்கு உடனுறை எழுத்தாளர் திட்டப்படி வந்து இரண்டுமாதம் தங்கியிருக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டதுமே அரங்கசாமிதான் இந்த எண்ணத்தைச் சொன்னார். சிங்கப்பூரில் ஒரு வாசகர் சந்திப்பை நிகழ்த்தினால் என்ன? தமிழகத்திலிருந்து முப்பதுபேர் சிங்கப்பூரிலிருந்து முப்பதுபேர். வருகையாளர்களை அங்குள்ள நண்பர்கள் இல்லத்தில் தங்க வைக்கலாம். சொந்தச்செலவில் வரவேண்டும். நிகழ்ச்சி நடக்குமிடம் மட்டுமே செலவு
பொதுவாக நான் ஏற்பாடுகளில் கலந்துகொள்வதில்லை. ‘உங்களால் முடியுமென்றால் செய்யுங்கள்’ என்று மட்டும்தான் நான் சொன்னேன். சிங்கப்பூர் சரவணன் முன்முயற்சி எடுத்துக்கொண்டார். மெல்ல ஒவ்வொரு ஏற்பாடாக பெரிதாக ஆரம்பித்தன. நண்பர் கணேஷ், கனகலதா ஆகியோர் உதவிசெய்தார்கள்.
முதலில் இல்லங்களில் தங்கவைப்பதாக இருந்த திட்டம் கைவிடப்பட்டு அனைவருக்கும் சிங்கப்பூரின் கேளிக்கைத்தலைநகரான செந்தேசாவிலேயே வசதியான குடில்கள் ஏற்பாடுசெய்யப்பட்டன. கடற்கரை ஓரமாக. விழாக்கூடமும் சிறப்ப்பாக அமைந்தது FMDIS நிர்வாகவியல் கல்லூரியின் சர்வதேசத்தரம் வாய்ந்த அரங்கம்
கிருஷ்ணனும் சந்திரசேகரும் நான்குநாட்களுக்கு முன்னதாகவே வந்து என்னுடன் தங்கியிருந்தனர். சிங்கப்பூரை ‘அத்து அலைந்து’ சுற்றிப்பார்த்தனர். பிறர் 15 அன்று நள்ளிரவில் சென்னையில் கிளம்பி 16 அன்று வந்துசேர்ந்தனர். 16 முழுக்க சுற்றிப்பார்த்தல். பிறநாட்களில் மாலையில் சுற்றிப்பார்த்தல். 19 மீண்டும் முழுநாள் சுற்றுப்பயணம். அன்றே இரவில் திரும்பிச்செல்லுதல். இதுதான் திட்டம்.
நேற்று முழுக்க நண்பர்கள் செந்தேசாவிலேயே சுற்றிப்பார்த்தனர். நல்ல களைப்பும் தூக்கக்கலக்கமும். இரவு ஒன்பதரை மணிவரை நானும் உடனிருந்தேன். அதன்பின் என் அறைக்கு வந்துவிட்டேன். வரும்போது ஒரு கும்பல் நீச்சல்குளத்தில் அருமைக்கூட்டம் போல கிடப்பதைக் கண்டேன். எல்லாருக்கும் பேலியோ உணவு அவசியம் தேவை என நினைத்துக்கொண்டேன்
பரப்பிலக்கியம்- இலக்கியம்
அன்புள்ள ஜெயமோகன்
என்னுடைய முந்தைய கடிதத்தில் மிக முக்கியமாக நான் நினைத்த ஒரு கேள்வியைக் கேட்டிருந்தேன். அந்தக்கேள்வியை தவிர்த்துவிட்டு நீங்கள் பதில் எழுதியிருந்தீர்கள். அதாவது பரப்புக்கலைகளில் ஒன்றாகிய பரப்பிலக்கியத்தை நீங்கள் எந்த அளவுகோல்களின்படி பார்க்கிறீர்கள்? நீங்களும் பரப்புக்கலையை செவ்வியல்கலையை வைத்து மதிப்பிடக்கூடிய பிழையைத்தானே செய்கிறீர்கள்? பாலகுமாரனை நீங்கள் தி.ஜானகிராமனை அளவுகோலாகக் கொண்டுதானே மதிப்பிடுகிறீர்கள்? இது மட்டும் எப்படி நியாயமாக ஆகும்? ஜெமினி கணேசனுக்கு கொடுக்கப்படும் முழுமையான கவனம் ஏன் பாலகுமாரனுக்கு அளிக்கப்படவில்லை?
சரவணன்,சென்னை
அன்புள்ள சரவணன்,
முந்தைய கடிதம் மீதான என் பதிலே மிகப்பெரிதாக ஆகிவிட்டது. அதனுடன் வேறு விஷயங்களை கலக்கவேண்டாம் என நான் நினைத்தேன். உங்கள் கேள்வி முதலில் யார் மனத்திலும் எழுவதுதான். ஆனால் அதற்கான பதில் மிக எளியது. பாலகுமாரனை அல்லது சுஜாதாவை பரப்பிலக்கியத்தின் நாயகர்களாகக் கொள்வதை, அவர்களின் எழுத்த அந்த தளத்தில் முழுமையாக ஆராய்வதை, நானோ அல்லது வேறெந்த இலக்கியவாதிகளோ மறுக்கப்போவதில்லை. நானே அத்தகைய ஆய்வுகள் செய்யப்படவேண்டும் என்றே சொல்கிறேன்.
இங்கே பிரச்சினை என்னவென்றால் அவர்களை இலக்கியவாதி என அடையாளப்படுத்துவதுதான். பரப்பிலக்கியம் இலக்கியம் என்பதன் எல்லைக்கோட்டை அழிப்பதில்தான் முரண்பாடே எழுகிறது. டி.எம்.எஸ் பற்றி ஆராய்வது அவசியம். ஆனால் எம்.டி.ராமநாதனும் டி.எம்.எஸ்ஸும் ஒரே வரிசையில் வைக்கப்பட்டால் ஒரு இசை விமர்சகன் அவர்கள் நடுவே உள்ள வேறுபாட்டைக் கவனப்படுத்தவே முயல்வான்.
அதுதான் இலக்கியத்தில் எ.வி.சுப்ரமணிய அய்யர் ,க.நா.சு காலம் முதல் இன்றுவரை நிகழ்கிறது. என்னுடைய விமர்சனங்கள், ஒப்பீடுகள் அனைத்துமே அந்த வேறுபாட்டை முன்வைக்கதற்காக மட்டுமே. தி.ஜானகிராமன் வேறு பாலகுமாரன் வேறு என்று சொல்லவே அவர்களை நான் நான் ஒப்பிடுகிறேன்.
இந்த வேறுபாடழிதல் எப்படி நிகழ்கிறது. இங்கே பாமரன்கூட பரப்பிசைக்கும் மரபிசைக்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்திருக்கிறான். அதேபோல பரப்பிலக்கியத்துக்கும் மரபிலக்கியத்துக்கும் உள்ள வேறுபாடு அவனுக்கு தெரியும். அவை நம் நீண்டகால மரபு ஒவ்வொருவருக்கும் இயல்பாகவே அளிக்கும் பண்பாட்டுப் பயிற்சி.
ஆனால் நவீன இலக்கியம், நவீனக் கலைகள் சார்ந்து அத்தகைய பயிற்சி நமக்கு இல்லை. நாம் நவீன இலக்கியம், நவீனகலைகளை நோக்கி பத்தொன்பதாம் நூற்றாண்டில்தான் கண் திறந்தோம். அப்போது விடுதலை தவறிக்கெட்டு, பஞ்சத்தில் வாழ்விழந்து, பாழ்பட்டு நின்ற சமூகமாக இருந்தோம். நமக்கு சோறுதான் முக்கியமாக இருந்தது , கல்வியும் ஞானமும் அல்ல.
ஆகவே நமக்கு சிலதனிநபர்களைச் சார்ந்தே நவீனச் சிந்தனை, நவீன இலக்கியம், நவீனக் கலைகள் அறிமுகமாயின. மிகச்சிறிய வட்டத்தில்தான் அவை நிகழ்ந்தன. ஒரு பெரிய சக்தியாக விளங்கிய பாரதியேகூட 1500 பிரதிகள் விற்ற இதழ்களில்தான் எழுதினான். அந்த நிலை இன்றும் நீடிக்கிறது.ஒரு சமூகமாக நாம் இன்னமும்கூட அவற்றை நோக்கிச் செல்லல்லை
தமிழில் இதழியல் ஆரம்பத்தில் தேசிய இயக்கத்தின் ஒருபகுதியாக, இலட்சியவாத நோக்குடன் உருவாக்கப்பட்டது. அந்த காலத்தை நாம் பாரதிகாலகட்டம் எனலாம். அக்காலகட்டத்தின் மையமும் சிறந்த உதாரணமும் அவர்தான். ராஜம் அய்யர், அ. மாதவையா ஆகியைருவரையும் அந்த யுகத்தின் முக்கியமான அறிஞர்கள் என சொல்வது வழக்கம்.
அவர்களால் உருவாக்கப்பட்டதே நவீன இலக்கியம். ஆனால் மிகச்சீக்கிரத்திலேயே நம் இதழியல் அதன் வணிகச் சாத்தியங்களைக் கண்டுகொண்டது. உடனடியாக இன்றும் நம்மிடம் பெரும்செல்வாக்கு செலுத்திவரும் இரு விஷயங்கள் இதழியலில் நுழைந்தன. ஒன்று போலிமருத்துவ விளம்பரங்கள். இரண்டு, குலுக்கல்கள் மற்றும் போட்டிகள்.
இதழியல் வணிகமாக ஆனபோது அதற்குரிய எழுத்தும் உருவாகியது. இவ்வாறு தமிழில் நவீன இலக்கியம் உருவான சிலவருடங்களிலேயே வணிக இலக்கியம் உருவாகிவிட்டது. வடுவூர் துரைசாமி அய்யங்கார், வை.மு.கோதைநாயகி அம்மாள், – ஆகிய மூவரும் அந்தக்காலத்தின் வணிக எழுத்தின் முகங்கள்.
இன்றும் அவர்கள் உருவாக்கிய மூன்று முகங்கள்தான் நம் வணிக இலக்கியத்தை ஆள்கின்றன. கல்கி, அகிலன்,நா.பார்த்தசாரதி, பாலகுமாரன் போன்றோரை வடுவூரார் வழிவந்தவர்கள் எனலாம். அநுத்தமா, லட்சுமி, ரமணிசந்திரன் போன்றோரின் தொடக்கப்புள்ளி வை.மு.கோதைநாயகி அம்மாள். மேதாவி, தேவன், சுஜாதா, ராஜேஷ்குமார் வரையிலானவர்கள் – வழி வந்தவர்கள்
இந்த வணிக எழுத்த்தாளர்கள் பெரும்புகழும் அபாரமான செல்வமும் ஈட்டினார்கள். வடுவூரார் சென்னையில் பங்களா கட்டி தொழிலதிபர் போல வாழ்ந்தவர். இந்த பேரலைக்கு எதிராக டி.எச்.சொக்கலிங்கம் போன்றவர்களால் உருவாக்கப்பட்ட மாற்று இயக்கமே மணிக்கொடி முதலிய இலக்கிய இதழ்கள். அதில் எழுதிய புதுமைப்பித்தன், கு.ப.ரா, ந.பிச்சமூர்த்தி, மௌனி போன்றவர்களால் நவீன இலக்கியம் தமிழில் முதிர்ச்சியை அடைந்தது. ஆனால் அது பரவலாக வாசகர்களுக்குச்சென்று சேரவில்லை.
தமிழகத்தில் பொதுக்கல்வி பரவி, எழுத்தறிவுள்ள நடுத்தரவற்கம் உருவாகி, வாசிக்கும் பழக்கம் ஆரம்பமாகி வந்தபோது அவர்களுக்கு அறிமுகமானது பரப்பிலக்கியம் மட்டுமே. அந்த வாசிக்கும் வற்கத்தின் வணிகசாத்தியங்களை கண்டுகொண்டு ஆனந்தவிகடன் போன்ற இதழ்கள் உருவாயின. அவற்றில் கல்கி , தேவன் போன்ற பரப்பிலக்கியவாதிகள் எழுத ஆரம்பித்து பெரும்புகழ் பெற்று தமிழில் எழுத்தாளர் என்றாலே அவர்கள்தான் என்ற இடத்தை அடைந்தார்கள்.
பரப்புக்கலை என்பது சமூகத்தில் இருந்து அதன் தேவைக்காக உருவாகி வருவது. ஆகவே அதில் அச்சமூகத்தின் எல்லா கூறுகளும் கலந்திருக்கும். அதன் ரகசிய ஆசைகள், அதன் இலட்சியக்கனவுகள், அதன் சபலங்கள், அதன் தடுமாற்றங்கள், அதன் பாரம்பரியக்கூறுகள், அதன் அன்றாட வாழ்க்கை எல்லாமே. ஆகவே அது எங்கும் மிக விரைவில் ஒரு மாபெரும் நிறுவனமாக ஆகிவிடும். தமிழிலும் அப்படித்தான். ஐம்பதுகளிலேயே தமிழ் பரப்பிலக்கியம் தமிழ் வணிகசினிமா இரண்டுமே ஆழமாக வேரோடிவிட்டன.
தமிழ்பரப்பிலக்கியம் அக்காலத்தில் தமிழ்நாட்டில் உருவாகிவந்த பண்பாட்டு அலைகளையும் உள்ளடக்கிய ஒன்று. தேசியப்பெருமிதம், தமிழ்ப்பெருமிதம் போன்றவற்றை நாம் கல்கி ,நா.பார்த்தசாரதி, அகிலன் போன்றவர்களின் எழுத்தில் காணலாம். அன்று உருவாகி வந்த தமிழ்ப்பொதுச்சமூகம் ஜனநாயக அடிப்படைகளுக்கான போராட்டத்தில் இருந்தது. அந்த அம்சங்களை நாம் இப்படைப்புகளில் காணலாம். பெண்விடுதலை, கல்வி ஆகியவற்றுக்கான குரலை அவை எதிரொலித்தன. இவை அவற்றின் இலட்சியவாத முகம்
இன்னும் நுட்பமான ஒருதளத்தில் கூட நாம் பரப்பிலக்கியத்தின் சமூகப்பங்களிப்பை காணலாம்., எதிர்வினைகளை அவதானிப்பதன் வழியாகவே நம் சமூகத்தின் பலவகையான அந்தரங்கத்தேவைகளை தமிழ் பரப்பிலக்கியம் கண்டடைந்தது. அவற்றை அது சொல்லிச் சொல்லி வளர்த்தது.
உதாரணமாக அன்றுமுதல் இன்றுவரை நம் பரப்பிலக்கியத்தில் காதலுக்கு இருக்கும் இடம். தமிழ்ச்சமூகத்தில் நெடுங்காலமாகவே ஆணும் பெண்ணும் சந்தித்துப் பேசும் வாய்ப்புகள் இல்லை. அன்றெல்லாம் திருமணம் ஆனபின்னரும்கூட வெளிப்படையாக ஆணும் பெண்ணும் சந்திக்க முடியாது. இருளில் ரகசிய உடலுறவே ஆண்பெண் உறவாக இருந்த காலம் அது. அந்த சமூகத்துக்குத்தான் தமிழ் பரப்பிலக்கியமும் அதை ஒட்டி எழுந்த தமிழ் பரப்புசினிமாவும் காதலை மீண்டும் மீண்டும் சித்தரித்தன.
இன்றும்கூட காதல் இல்லாமல் நமக்கு பரப்புக்கலை இல்லை! நம் பரப்புக்கலையின் மிகப்பெரிய சிக்கலே காதல் இல்லாமல் எதையுமே சொல்லமுடியாது என்பதுதான். காதலர்களை துரத்தித்துரத்திக்கொல்லும் சமூகமாக நாம் இருக்கும் வரை அப்படித்தான் இருக்கும்!
பெரும்பாலும் இத்தகைய கருக்கள் மொழியாக்கம் மூலம் வெளியே இருந்து கொண்டுவரப்பட்டு முன்வைக்கப்படுகின்றன. அவற்றுக்கான எதிர்வினைகள் அவதானிக்கப்பட்டு அந்த கருக்கள் நமக்கே உரிய முறையில் மேம்படுத்தப்படுகின்றன. காதல் என்ற கரு தமிழ்புனைகதை இலக்கியத்தில் ஆரம்பத்தில் ஆங்கில நாவல்களின் தழுவல்கள் வழியாகவே முன்வைக்கப்பட்டது. அவற்றில் உள்ள காதல் அப்பட்டமாக ஆங்கிலேயக் காதலாக இருந்தது. ஆணும் பெண்ணும் ஆங்கில மனமும் ஆங்கில பழக்க வழக்கங்களும் கொண்டவர்கள்.
சிறந்த உதாரணம் டி.எஸ்.துரைசாமி எழுதிய ’கருங்குயில் குன்றத்துக்கொலை’ என்ற நாவல். வால்டர் ஸ்காட்டின் ஒரு நாவலின் தழுவல் அது அந்நாவலின் கதாநாயகி தனியாக கொழும்புவில் இருந்து இந்தியா வந்து விடுதியில் அறை எடுத்து தங்குகிறாள். தனியாக சென்று துப்பறிகிறாள். மாறுவேடங்கள் போடுகிறாள். விருந்துகளில் பங்கெடுக்கிறாள்.
அவ்விருந்துகள் முடிந்தபின் ஆண்களுடன் பூங்காக்களில் நடக்கச் செல்கிறாள். அங்கே அவள் ஆண்களிடம் சமத்காரமாக பேசுகிறாள். ஆண்கள் அவளிடம் மரியாதையாகவும் சம்பிரதாயமாகவும் பேசுகிறார்கள். அவள் அழகை புகழ்கிறார்கள். அவளிடம் ஆண்கள் தங்கள் காதலை தெரிவிக்கிறார்கள். ‘உன் காதல் கிடைத்தால் உலகிலேயே பாக்கியமானவன் நானே’ என்ற வகையில்!
இதெல்லாம் இந்தியாவில், தமிழகத்தில் எங்கே சாத்தியம்? எந்தப் பெண் குடும்பத்தை விட்டு வெளியே செல்ல முடியும்? தாசிகுலப்பெண்கள் கூட அப்படி ஆண்களுடன் பழக முடியாது. அது வாசகர்களுக்கும் தெரியும். ஆனாலும் அவர்கள் அதை விரும்பினார்கள். நம் ஆழ்மனதில் உள்ள ஆசை அது.
ஏனென்றால் வேறுஎங்கும் பெண் அடிமையாக இருந்தால் நமக்கு சுகம். காதலில் அவள் சமமானவளாக இருந்தால்தான் சுகம். தமிழ் ஆண்மனம் தேடிய ரகசியக்காதலி ஆணுக்கு நிகராக தன்னை நிறுத்திக்கொள்ளும் சுதந்திரமான அறிவார்ந்த பெண். ஆனால் மனைவி என்பவள் அடக்கமே உரிவானவள் !
அந்தக்காலத்தில் அத்தனை நாவல்களிலும் இந்த வகையான பெண் சித்திரம் முன்வைக்கப்பட்டது. அந்த குணச்சித்திரம் ‘வொர்க் அவுட்’ ஆனதுமே நம் பரப்பிலக்கியம் அதை பற்றிக்கொண்டது.
’கருங்குயில் குன்றத்துகொலை’ தமிழில் சினிமாவாக வந்து பெருவெற்றி பெற்றது. அதில் பானுமதி அந்தப்பெண் கதாபாத்திரத்தைச் செய்திருந்தார். அதே குணச்சித்திரத்தையே அவர் ‘மலைகள்ளன்’ உட்பட பல படங்களில் செய்திருந்தார்.
பானுமதி அந்தக் குணச்சித்திரத்தின் வடிவமாக ஆகி பலவருடங்கள் நம் திரையுலகை ஆண்டார். இன்றுகூட பானுமதி பாணியிலான ஒரு நடிகை நம்மிடம் இருப்பார். ஜெயலலிதா பானுமதியேதான். ஏன், ஜோதிகாகூட ஒருவகை பானுமதியே.
இருவகை பெண்சித்திரங்களை நாம் நம் காதல்கதைகளில் காணலாம். ஒன்று, ஏற்கனவே சொன்ன சுதந்திரமான அறிவார்ந்த பெண். இன்னொருத்தி அடக்கமான, பொறுமையே உருவான, காதலை உள்ளே புதைத்துக்கொண்ட, பேரன்பும் நெகிழ்ச்சியும் கொண்ட, மரபான பெண். முதலில் உள்ளவள் காதலி இரண்டாமவள் மனைவி. ஒரே பெண்ணே மணமானதும் இப்படி ஆகிவிடுவாள்!
இந்த இரண்டாம் சித்திரம் சரத்சந்திரர் போன்றவர்களின் வங்கநாவல்களில் இருந்து கொண்டுவரப்பட்டது. அ.கி.கோபாலன், ஆர்.ஷண்முகசுந்தரம், த.நா.சேனாபதி, த.நா.குமாரசாமி ஆகியோரால் மொழியாக்கம் செய்யப்பட்டது. இதுவும் நம் பரப்பிலக்கியப் காதல்கதைகளிலும் பின்னர் சினிமாக்களிலும் பரவலாகக் கையாளப்பட்டது.
இதைப்போலவே குடும்பம், சகோதர பாசம், நட்பு, தேசப்பற்று என பல விழுமியங்களை பேசிப்பேசியே கோடிக்கணக்கான மக்களுக்கு உகந்த முறையில் தன்னை உருவாக்கிக் கொண்டு மெல்ல எழுந்து வந்த ஒன்றுதான் பரப்பிலக்கியமும் பரப்பு சினிமாவும். ஆகவே நம் சமூக மனம் அவற்றில் இயல்பாக படிகிறது, ரசிக்கிறது, சொந்தம் கொண்டாடுகிறது.
ஆனால் நவீன இலக்கியம் அப்படி அல்ல. அது தன்னிச்சையானது. அது அந்தந்தக் கலைஞர்களின் அந்தரங்கத்தேடலையும் அந்தரங்க மனஎழுச்சியையுமே ஆதாரமாகக் கொண்டுள்ளது. அந்த அந்தரங்கம் என்பது அக்கலைஞன் நின்று எழுதும் பண்பாட்டின் அந்தரங்கமும்கூட என்பதனால் அதற்கு ஒரு பொதுத்தன்மை உண்டு. அதுவும் மிகநுட்பமான ஒரு சமூக நிகழ்வே.
ஆனால் அந்த சமூக அம்சம் வெளிப்படையானதோ நேரடியானதோ அல்ல. நவீன இலக்கியம் மேற்தளத்தில் வாசகனுக்கு ஒரு பிற மனிதனின் அந்தரங்க உலகில் நுழையும் துணுக்குறலையே அளிக்கும். ஆகவே அதை ஒரு ரசிகன் இயல்பாக ரசிக்க முடியாது. அவனுக்கு கொஞ்சம் பயிற்சி தேவை. அப்பயிற்சியை அடைய அவனுக்கு ஆர்வமும் பொறுமையும் இருந்தாகவேண்டும்.
ஆகவே வணிகஎழுத்து பெரும்செல்வாக்கு பெற்றது. அது இயல்பே, உலகில் எங்குமே இலக்கியம் வணிகஎழுத்தின் புகழை அடைவதில்லை. ஆனால் இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை அச்சமூகத்தின் பண்பாட்டு மையத்தில் இருப்பவர்கள் அறிவார்கள். அவர்கள் பரப்பிலக்கியத்தை ஒரு எளிய சமூகப்பிரதிபலிப்பாக மட்டுமே கருதுவார்கள்.
அவர்கள் இலக்கியமே சமூகத்தின் ஆழத்தைக் காட்டுவது என எண்ணி அதையே ஆராய்வார்கள். தங்கள் சமூகத்தின் ஆன்மவெளிப்பாடாக இலக்கிய ஆக்கங்களையே முன்வைப்பார்கள். ருஷ்யாவிலும் பிரான்ஸிலும் அமெரிக்காவிலும் நம்மைவிட பலமடங்கு பிரம்மாண்டமான வணிக இலக்கியம் உண்டு. ஆனால் அந்த பண்பாடுகளில் இருந்து அவற்றின் குரலாக நமக்கு வந்து சேர்பவை அவர்களின் சீரிய இலக்கியங்களே.
தமிழில் என்ன நிகழ்ந்தது என்றால் நம்முடைய பண்பாட்டின் மையமாக இருந்தவர்களுக்கு இந்த வேறுபாடு தெரியாமல் போயிற்று என்பதே. நான் முதன்மையாகக் குற்றம்சாட்டுவது ராஜாகோபாலாச்சாரி அவர்களை. பலவகையிலும் அறிஞர் என்று சொல்லத்தக்க அவரது இலக்கியரசனை மிகச்சாதாரணமானது என்பது ஆச்சரியமாக இருந்தாலும் அபூர்வம் அல்ல. தனக்கு உவப்பான தேசியவாத, சீர்திருத்தவாத கருத்துக்கள் இருக்கும் ஆக்கங்கள் சிறந்த இலக்கியங்கள் என அவர் நினைத்தார்.
கல்கி முதல் மீ.ப.சோமு, கு.ராஜவேலு, அகிலன் வரையிலான பரப்பிலக்கியவாதிகளை இலக்கியக்கலைஞர்களாக அங்கீகாரம் பெறச்செய்தது ராஜகோபாலாச்சாரி அவர்கள் தலைமை தாங்கிய அதிகார மையமே. தமிழில் உருவாகி வந்து சாதனைகளை நிகழ்த்திக்கொண்டிருந்த நவீன இலக்கியம் ஒட்டுமொத்தமாகவே இந்த மையத்தால் நிராகரிக்கப்பட்டது. இவர்களே அன்று தமிழின் ஊடகங்களை, அரசை வழிநடத்திய சக்தி என்பதை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்
பின்னர் அதையே சி.என்.அண்ணாத்துரை அவர்களும் நிகழ்த்தினார். அவரது ரசனையை அவரது நூல்களில் வாசிக்க மிக ஏமாற்றமாக இருக்கிறது. மேலைநாட்டு வணிகக்கேளிக்கை நூல்களையே அவர் வாசித்திருக்கிறார். அவற்றை முன்னுதாரணமாகக் கொண்டே ரங்கோன்ராதா போன்ற பரப்பிலக்கிய நாவல்களை எழுதியிருக்கிறார். திராவிட இயக்கமும் ஒட்டுமொத்தமாக நவீன இலக்கியத்தை புறக்கணித்தது. திராவிட இயக்கமே ஒரு பரப்பிய இயக்கம். ஆகவே அது பரப்பிலக்கியம் பரப்புசினிமாவை ஆயுதமாகக் கொண்டதில் ஆச்சரியமே இல்லை.
ஆக, தமிழ்ச் சமூகத்தின் சிந்தனையை ஐம்பதாண்டுகளாக ஆண்டுவரும் இரு பேரியக்கங்களும் சீரிய இலக்கியத்தை முற்றாகவே நிராகரித்தன. கல்விநிறுவனங்கள் இலக்கியத்தை பொருட்படுத்தவில்லை. பாடங்களில் இலக்கியம் பயிற்றப்படவில்லை. இலக்கியத்தை ஒருவர் தற்செயலாக, தன்னிச்சையாக படித்தால்தான் உண்டு. அவற்றின் அடிப்படைகளை ஒரு மூத்த வாசகர் சொல்லிக்கொடுத்தால்தான் கிடைக்கும். இல்லையேல் தட்டுத்தடுமாறி அவரே புரிந்துகொள்ள வேண்டும்
புறக்கணிப்புக்கும் இருட்டடிப்புக்கும் உள்ளான இலக்கியம் சிற்றிதழ்கள் வழியாகவே தன்னை நிலைநிறுத்திக்கொண்டது. க.நா.சுப்ரமணியம், சி.சு.செல்லப்பா, சாலிவாஹனன் போன்ற சிற்றிதழ் முன்னோடிகள் சொந்தவாழ்க்கையை முற்றாகவே தியாகம் செய்து ஒருவகை தற்கொலைப்போராளிகள் போல இலக்கியம் என்ற இயக்கத்தை முன்னெடுக்க உழைத்தார்கள். விடாப்பிடியான அவர்களின் முயற்சியால்தான் இலக்கியம் இன்றளவும் நீடிக்கிறது.
இந்தக்காலகட்டத்தில் தமிழில் வணிகஇதழ்களின் பொற்காலம் ஆரம்பித்தது. ஏராளமான வார இதழ்கள் வெளிவந்து பலலட்சம் மக்களை சென்றடைந்தன. அவற்றின் வழியாக பரப்பிலக்கியவாதிகள் மாபெரும் நட்சத்திரங்களாக ஆனார்கள். அகிலன், நா.பார்த்தசாரதி இருவரும் இருந்த உச்சத்தில் எவருமே இருந்ததில்லை. அனைத்து அமைப்புகளாலும் அவர்களே பேரிலக்கியவாதிகளாகக் கருதப்பட்டார்கள்.
இந்நிலையில்தான் க.நா.சு போன்றவர்கள் பரப்பிலக்கியம் வேறு இலக்கியம் வேறு என்ற பிரிவினையை தொடர்ந்து முன்வைத்து விவாதித்தார்கள். அகிலன் ,நா .பார்த்தசாரதி போன்றவர்களின் வாசகர்களிடமிருந்து மிகமிகக் கடுமையான எதிர்ப்புகளை, வசைகளச் சம்பாதித்தார்கள். க.நா.சு சென்னைத்தெருவில் நடமாட முடியாத நிலையே உருவானது. அவர் தமிழகத்தைவிட்டே செல்ல நேர்ந்தது.
நான் எழுதவந்த எண்பதுகளின் இறுதிவரைக்கும்கூட இலக்கியம் என்றால் அது முழுக்க முழுக்க சிற்றிதழ்களைச் சார்ந்து சிறிய வட்டத்துக்குள் மட்டுமே ஒடுங்கியதாகவே இருந்தது. சுஜாதா, பாலகுமாரன், வாசந்தி, சிவசங்கரி, இந்துமதி ஆகியோர் உச்சநட்சத்திரங்களாக விளங்கிய காலகட்டம் அது. நல்ல இலக்கிய நூல்கள் 300 பிரதிகள் அச்சிடப்பட்டன. நல்லவாசகர்களுக்கு கூட புதுமைப்பித்தன் அறிமுகமில்லாத காலம். சுந்தர ராமசாமி என கேள்விப்படாமலேயே இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்று வெளிவரலாமென்ற நிலைமை இருந்த காலகட்டம்.
இரு காரணிகளால் வணிகஎழுத்தின் வேகம் மட்டுப்பட்டது. ஒன்று, தொலைக்காட்சி. தொடர்கதை வாசகர்களை அது எடுத்துக்கொண்டமையால் வணிக இதழ்களில் வெளிவந்துகொண்டிருந்த தொடர்கதைகள் காணாமலாயின. தொடர்கதை நட்சத்திரங்கள் மறைந்தார்கள். இரண்டு, ஐராவதம் மகாதேவன் தினமணி ஆசிரியராக வந்தார். இலக்கியத்தை தினமணி பக்கங்கள் வழியாக பல லட்சம் வாசகர்களுக்கு கொண்டுசென்றார்.
அதன்பின்னர் நடுத்தர இதழ்கள் வெளிவந்தன. இணைய ஊடகம் வலுப்பெற்றது. புத்தகச் சந்தைகள் வந்தன. இன்று இலக்கியம் முழுமையான புறக்கணிப்புக்குள் இல்லை. இன்று கல்விநிறுவனங்களில் ஆங்காங்கே நவீன இலக்கியம் சென்று சேர்ந்துள்ளது. ஒரு நல்ல நூல் சாதாரணமாக சில ஆயிரம்பேரால் வாசிக்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தின் மக்கள்தொகையை வைத்துப்பார்த்தால் புறக்கணிக்கத்தக்க சிறிய எண்ணிக்கைதான் இது.
நமது கல்விநிறுவனங்களில் இலக்கியம் என்பது சமூகத்துக்கு தேவையான உயரிய கருத்துக்களைச் சொல்வது என்றே கற்பிக்கப்படுகிறது. அந்த மனநிலையில் வந்த ஒருவருக்கு பரப்பிலக்கியமே இலக்கியம் என்று தோன்றும். ஏனென்றால் அதுதான் மிகச்சரியாக சமூக மனநிலையை பிரதிபலிக்கிறது. அந்தப்பிரதிபலிப்பு மேலோட்டமானது, மேற்தளத்தை மட்டுமே சார்ந்தது என்பதை அவர் உணர்வதில்லை.
இலக்கியம் என்பது கருத்துக்களால் ஆனதல்ல. அகஅனுபவங்களால் ஆனது என நம் கல்வித்துறை இன்னமும் உணரவில்லை. இலக்கியம் சமூகமனநிலைகளின் கண்ணாடி அல்ல. அது அச்சமூகத்தின் ஆழ்மனத்தின் வெளிப்பாடு. ஒருசமூகத்தின் பேச்சு அல்ல அது, அச்சமூகத்தின் கனவு.
சாதாரணமான பேச்சுகளில் நம் கல்விநிறுவனங்கள் அளிக்கும் எளிய வாய்ப்பாடுகளைக் கொண்டே இலக்கியங்கள் மதிப்பிடப்படுகின்றன. ஆகவே இன்னமும் பெருவாரியான எளிய வாசகர்களுக்கு இலக்கியம் பரப்பிலக்கியம் ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு தெரியாது. இரண்டையும் ஒரே நோக்கில் வாசிப்பவர்கள்கூட உண்டு. ஆகவேதான் இன்றும் மீண்டும் மீண்டும் க.நா.சு சொன்னதையே சொல்லவேண்டியிருக்கிறது – இலக்கியமும் பரப்பிலக்கியமும் வேறு வேறு.
அந்த வேறுபாட்டை நிறுவியபின் பரப்பிலக்கியத்தை பரப்பிசையை ஆராய்வதுபோலவே நுட்பமாக, அறிவார்ந்த அளவுகோல்களுடன் ஆராய்வதிலும் மதிப்பிடுவதிலும் எனக்கு மாற்றுக்கருத்து இல்லை. அதை நானே செய்யவேண்டுமென்றே ஆவலுண்டு.
உதாரணமாக, தமிழில் எப்படி காதல் என்ற கருத்து இந்த அளவுக்கு முக்கியத்துவம் பெற்றது என்று சொன்னேன். ஆங்கிலநாவல்களில் இருந்து இறங்கி வந்த அந்த விடுதலைபெற்ற ‘நவநாகரீக வனிதை’ எப்படியெல்லாம் தமிழ் பரப்பிலக்கியத்தில் இடம்பெற்றாள் என ஒருவர் ஆராய்ந்தால் நம் சமூகமனம் பற்றிய மிகப்பெரிய வெளிச்சங்கள் கிடைக்கும். ஆர்வி,எல்லார்வி, பி.வி.ஆர் வழியாக பாலகுமாரன் வரை அந்த பெண்சித்திரம் ஒரு நேர்கோடாக எப்படியெல்லாம் வளர்ந்து வந்தது என்பதை ஆச்சரியத்துடன் உணரலாம்.
பாலகுமாரன் ஆர்வியின் மிக நெருக்கமான வாரிசு. விடுதலைபெற்ற பெண் ஆர்வியில் ஆண்களுக்கு பிரியமானவளாக ஆக்கப்பட்டிருக்கையில் பாலகுமாரனில் அவள் பெண்களுக்கு பிரியமானவளாக மாறியிருக்கிறாள். காரணம் வேலைக்குப்போகும் நடுத்தரவற்கப் பெண்களுக்காக எழுதப்பட்டவையே பாலகுமாரனின் ஆக்கங்கள்.
தமிழ் வணிக எழுத்தில் பல நட்சத்திரங்கள் இருந்தன. அவர்களின் எழுத்துக்களுக்கான தேவை இருக்கும் வரை வணிக இதழ்கள் அவர்களைப்பற்றி பேசுகின்றன. அவர்கள் மறைந்ததும் அல்லது எழுதாமலானதும் அவை அவர்களை முழுமையாகவே மறந்துவிடுகின்றன. அவர்களும் அடையாளமே இல்லாமல் போய்விடுகிறார்கள். ஆர்வி, பிவிஆர் போன்றவர்கள் இருந்த உச்சபுகழில் ஒருபோதும் பாலகுமாரன் இருந்ததில்லை.
ஆனால் ஆர்வி, பிவிஆர் போன்றவர்களை இன்று பொருட்படுத்தவே யாருமில்லை. அது வணிகஎழுத்தின் இயல்பு, அது ‘நுகர்ந்துவீசு’ பண்பாட்டை சேர்ந்தது.. சமகாலத்தன்மையே அதன் வலிமை. சினிமாவும் அப்படித்தான். அது சென்றுகொண்டே இருக்கும். இன்று பல வணிகஎழுத்துக்கள் கிடைப்பதே இல்லை
நம் பரப்பிலக்கியத்தின் வரலாறு எழுதப்படவேண்டும். பரப்பிலக்கியமும் இலக்கியமே. அதுவும் நம் இலக்கியத்தின் ஒருபகுதியே. ஆகவேதான் நான் நவீனத்தமிழிலக்கிய அறிமுகம் நூலில் பரப்பிலக்கியத்தையும் ஒரு பகுதியாகச் சேர்த்து அதன் வரலாற்றையும் எழுதியிருக்கிறேன்.
பல இலக்கியவாதிகள் அதைப்பற்றி என்னிடம் குறை சொன்னதுண்டு. அந்நூலை பிழைசரிபார்த்த யுவன் சந்திரசேகர் அப்பகுதிகளை எடுத்துவிடவேண்டும் என அடம்பிடித்தான். அவனிடம் நான் விரிவாக விவாதிக்கவேண்டியிருந்தது.
பரப்பிலக்கியத்தை இலக்கியமாகக் கொண்டால் நம் இலக்கியரசனை மழுங்கும். நம் இலகிய இலக்குகள் சிறியனவாகும். நமக்கு பேரிலக்கியங்களை அளித்த முன்னோடிகளை அவமதித்தவர்களும் ஆவோம். எந்த பண்பாடு தன் கலைஞர்களையும் சிந்தனையாளர்களையும் போற்றி அவர்களிடம் மேலும் மேலும் எதிர்பார்க்கிறதோ அதுவே வளரும். ஆகவேதான் பரப்பிலக்கியத்தை இலக்கியத்தில் இருந்து வேறுபடுத்தி அடையாளம்காட்ட எப்போதுமே முயல்கிறேன்.
ஆனால் பரப்பிலக்கியத்தின் வரலாறு முறையாக எழுதப்படவேண்டும் என்றும்,பரப்பிலக்கியத்தின் சமூகப்பங்களிப்பு விரிவாக ஆராயப்படவேண்டும் என்றும் நினைக்கிறேன். அது நம் சமுகத்தை நாம் அறிவதற்கான ஒரு வழியாகும். கோடானுகோடி பேர் வாசித்து ரசிக்கும் பரப்பிலக்கியம் ஒரு மாபெரும் நிறுவனம் என்பதே காரணம்
ஜெ
மறுபிரசுரம் முதற்பிரசுரம் Sep 25, 2010
தொடர்புடைய பதிவுகள்
தொடர்புடைய பதிவுகள் இல்லை
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers















