சிங்கப்பூர் விஷ்ணுபுரம் இலக்கியவட்டச் சந்திப்பு,2016
வருடந்தோறும் ஊட்டி நித்யா குருகுலத்தில் நடத்தும் குருநித்யா ஆய்வரங்கம் இவ்வருடம் நடத்தப்படவில்லை. இரண்டு காரணங்கள். ஒன்று, இளம்வாசகர்களைச் சந்திப்பதன்பொருட்டு இவ்வருடம் மூன்று சந்திப்புநிகழ்ச்சிகள் நடந்தன. இரண்டு, நான் மே மாதம் முதல் தொடர்ச்சியாகப் பயணத்தில் இருக்கிறேன்.
சிங்கப்பூருக்கு உடனுறை எழுத்தாளர் திட்டப்படி வந்து இரண்டுமாதம் தங்கியிருக்கும் திட்டம் அறிவிக்கப்பட்டதுமே அரங்கசாமிதான் இந்த எண்ணத்தைச் சொன்னார். சிங்கப்பூரில் ஒரு வாசகர் சந்திப்பை நிகழ்த்தினால் என்ன? தமிழகத்திலிருந்து முப்பதுபேர் சிங்கப்பூரிலிருந்து முப்பதுபேர். வருகையாளர்களை அங்குள்ள நண்பர்கள் இல்லத்தில் தங்க வைக்கலாம். சொந்தச்செலவில் வரவேண்டும். நிகழ்ச்சி நடக்குமிடம் மட்டுமே செலவு
பொதுவாக நான் ஏற்பாடுகளில் கலந்துகொள்வதில்லை. ‘உங்களால் முடியுமென்றால் செய்யுங்கள்’ என்று மட்டும்தான் நான் சொன்னேன். சிங்கப்பூர் சரவணன் முன்முயற்சி எடுத்துக்கொண்டார். மெல்ல ஒவ்வொரு ஏற்பாடாக பெரிதாக ஆரம்பித்தன. நண்பர் கணேஷ், கனகலதா ஆகியோர் உதவிசெய்தார்கள்.
முதலில் இல்லங்களில் தங்கவைப்பதாக இருந்த திட்டம் கைவிடப்பட்டு அனைவருக்கும் சிங்கப்பூரின் கேளிக்கைத்தலைநகரான செந்தேசாவிலேயே வசதியான குடில்கள் ஏற்பாடுசெய்யப்பட்டன. கடற்கரை ஓரமாக. விழாக்கூடமும் சிறப்ப்பாக அமைந்தது FMDIS நிர்வாகவியல் கல்லூரியின் சர்வதேசத்தரம் வாய்ந்த அரங்கம்
கிருஷ்ணனும் சந்திரசேகரும் நான்குநாட்களுக்கு முன்னதாகவே வந்து என்னுடன் தங்கியிருந்தனர். சிங்கப்பூரை ‘அத்து அலைந்து’ சுற்றிப்பார்த்தனர். பிறர் 15 அன்று நள்ளிரவில் சென்னையில் கிளம்பி 16 அன்று வந்துசேர்ந்தனர். 16 முழுக்க சுற்றிப்பார்த்தல். பிறநாட்களில் மாலையில் சுற்றிப்பார்த்தல். 19 மீண்டும் முழுநாள் சுற்றுப்பயணம். அன்றே இரவில் திரும்பிச்செல்லுதல். இதுதான் திட்டம்.
நேற்று முழுக்க நண்பர்கள் செந்தேசாவிலேயே சுற்றிப்பார்த்தனர். நல்ல களைப்பும் தூக்கக்கலக்கமும். இரவு ஒன்பதரை மணிவரை நானும் உடனிருந்தேன். அதன்பின் என் அறைக்கு வந்துவிட்டேன். வரும்போது ஒரு கும்பல் நீச்சல்குளத்தில் அருமைக்கூட்டம் போல கிடப்பதைக் கண்டேன். எல்லாருக்கும் பேலியோ உணவு அவசியம் தேவை என நினைத்துக்கொண்டேன்
Jeyamohan's Blog
- Jeyamohan's profile
- 840 followers









